Tuesday 27 March 2018

புனித வியாழன்

பெரிய வியாழன்
இன்றைய வாசகங்கள்
விப 12:1-8; 1 கொரி 11:23-26; யோவா 13:1-15
வழிபாட்டு நிகழ்வுகளுக்கு அன்பின் மடல் இணயத் தளத்த்தைப் பார்வையிடவும்


மறையுரை மொட்டுக்கள்

அருள்பணி Y.இருதயராஜ்


ஒரு சிறுவன் தன் அப்பாவிடம், "அப்பா! காக்கா கத்தினால் விருந்தாளிகள் வருவார்களா?" என்று கேட்டான். அப்பா அவனிடம். "ஆமா, காக்கா கத்தினால் விருந்தாளிகள் வருவார்கள். உன் அம்மா கத்தினால், வந்த விருந்தாளிகள் போய்விடுவார்கள்' என்றார். விருந்தோம்பல் சிறந்த நற்பண்பு, திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்" (உரோ 12:13). நமக்குள்ள உணவை பலருடன் பகுத்து உண்பது தலையாய அறம் என்கிறார் வள்ளுவர்.
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள் 322)

கிறிஸ்து உணவுத் தோழமையைப் பெரிதும் விரும்பினார், ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கும் (மத் 14:13-21), ஏழு அப்பங்களைக் கொண்டு நாலாயிரம் பேருக்கும் (மத் 15:32-39) உணவு அளித்தார். அனைவரும் வயிராற உண்டனர். வரி தண்டுவோரான மத்தேயு வீட்டில் பலருடன் சேர்ந்து விருந்துண்டு மகிழ்ந்தார், சீமோன் வீட்டில் உணவு அருந்தினார் (லூக் 7:36). வரிதண்டுவோரின் தலைவரான சக்கேயு வீட்டில் விருந்துண்டார் (லூக் 19:1-10).

தம் சீடர்களோடு இறுதிப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிகமிக ஆவலாய் இருந்தார் (லூக் 22:15). சீடர்களுடன் பந்தியில் அமர்ந்திருந்த போதுதான் அவர் புதிய உடன்படிக்கையின் அன்பு விருந்தாகிய நற்கருணையை ஏற்படுத்தி, அதைத் தம் நினைவாகச் செய்யும்படி சீடர்களிடம் கேட்டுக் கொண்டார் (லூக் 22:19-20).

பெரிய வியாழன் ஆகிய இன்று கிறிஸ்து திருச்சபைக்கு நற்கருணைத் திருவிருந்தை அளித்ததை நன்றியுடன் நினைவுகூர்கிறோம். இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தாதர் பவுல் ஆண்டவரின் திருவிருந்தைப்பற்றிய தொன்மை வாய்ந்த மரபை நமக்கு விவரிக்கின்றார் (1 கொரி 11:23-26).


அன்பின் அருளடையாளமாகிய நற்கருணை உலகிற்காகப் பிட்கப்படும் அப்பம்; அன்பின் மூலக் கூறு பகிர்வு, கிறிஸ்து தம்மையே பிட்டுக் கொடுத்தார், 'அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள்." கிறிஸ்து தம்மையே பிழிந்து கொடுத்தார். "அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள்."


முதல் கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் 'அப்பம் பிட்டனர்', அதாவது, நற்கருணை விருந்தில் பங்கேற்றனர் (திப 2:46), அதே நேரத்தில் வீடுகளிலும் அப்பத்தைப் பிட்டு, மனமகிழ்வோடும் கபடற்ற உள்ளத்தோடும் பகிர்ந்து கொண்டனர் (திப 2:26), அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை. எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை (திப 4:32,34). இவ்வாறு அவர்கள் பொதுவுடமை வாழ்க்கை நடத்தினர். 


திருச்சபை ஒரு சமத்துவபுரமாகத் திகழ, அதில் சமபந்தி நடைபெற்றது. கிறிஸ்தவர்களுடைய வாழ்வுக்கும் வழிபாட்டுக்கும் இடையே எத்தகைய முரண்பாடும் இல்லை. வாழ்க்கை வழிபாடாகவும், வழிபாடு வாழ்க்கையாகவும் மாறியது. தொடக்கக்காலச் கிறிஸ்தவர்கள் நடத்திய அன்பு வாழ்க்கையை இன்றைய அன்பியங்கள் பிரதிபலிக்கின்றன. இக்கால அன்பியங்களில் இறைவார்த்தையைப் பகிர்கின்றனர். ஆனால் உணவை, குறிப்பாக ஏழைகளுடன் பகிர்கின்றார்களா என்பது பெரிய கேள்விக் குறியாக உள்ளது.

ஆதிக் கிறிஸ்தவர்களிடையே நிலவிய உணவுத் தோழமை வெறும் மனித நேய அடிப்படையில் அல்ல, நம்பிக்கை அடிப்படையில் நடைபெற்றது. ஏனெனில், ஏழைகளில் இயேசு இருக்கின்றார். ஏழைகளுக்கு நாம் உணவு கொடுக்கும்போது இயேசுவுக்கே உணவளிக்கிறோம். “நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்" (மத் 25:35). கிறிஸ்துவின் உடனிருப்பை நற்கருனையில் மட்டுமல்ல, ஏழை எளியவர்களிடத்திலும் காணவேண்டும். ஏழைகளின் உடலிலும் இரத்தத்திலும் உள்ள கிறிஸ்துவை மதிக்காதவர், நற்கருணையில் உள்ள இயேசுவை மதிக்க முடியாது,


பணக்காரர் ஒருவர் வாழைப் பழத்தைத் தின்று அதன் தோலைச் சன்னல் வழியாக வீசி எறிந்தார். அத்தோலை எடுத்துத் தின்ற ஒரு பிச்சைக்காரனை அவன் முதுகில் தொடர்ந்து குத்தினார். அப்பிச்சைக்காரன் சிரித்துக்கொண்டு, “தோலைத் தின்னவனுக்கு இந்தத் தண்டனை என்றால், பழத்தைத் தின்னவனுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ?" என்றான். ஏழைகளுக்கு உணவளிக்காதவர்களுக்கு நரகத் தண்டனை காத்திருக்கிறது (மத் 25:41 - 45).
பிச்சை கேட்பவர்களுக்கு பிச்சை கொடுக்கும் நல்ல உள்ளத்தையும், அவ்வாறு கொடுக்காமல் உணவைப் பதுக்கி வைப்பவர்களுக்கு நரகத்தையும் கடவுள் வைத்திருக்கிறார் என்று பாடியுள்ளார் அப்பர் அடிகளார்.


“இரப்பவர்க்கு ஈய வைத்தார்;
கரப்பவர்க்கு கடும் நரகம் வைத்தார்."



மகிழ்ச்சியூட்டும் மறையுரை

குடந்தை ஆயர் - அந்தோணிராஜ்


நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன் அழுக்காக இருக்கும் பாதங்களைக் கழுவுவது அன்பின் அறிகுறிதானே! (யோவா 13:1-15). பசியாயிருப்பவர்களுக்கு உண்ண உணவும் குடிக்கப் பானமும் தருவது அன்பின் அறிகுறிதானே! (1 கொரி 11:23-26). இறையன்பைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்கும் குருத்துவத்தைக் கொடுப்பது அன்பின் அறிகுறிதானே!


இன்று இயேசு அன்புக்கு இலக்கணம் வகுத்த ஓர் இலக்கியவாதியாக, இலட்சியவாதியாகக் காட்சியளிக்கின்றார். அன்பே உருவான அவர் நம்மைப் பார்த்து: நான் உங்களுக்கு முன் மாதிரி காட்டினேன். நான் செய்தது போலவே நீங்களும் செய்யுங்கள்; நான் அன்பு செய்தது போலவே நீங்களும் அன்பு செய்யுங்கள் என்கின்றார் (யோவா 13:34). இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நாம் பிறரை அன்பு செய்தால் நமக்கு என்ன கிடைக்கும்? என்பதைச் சுட்டிக்காட்ட ஒரு கதை:


ஒருநாள் வானதூதர் ஒருவர் ஒரு பட்டணத்தில் வந்து இறங்கினார். அவரைச் சுற்றி ஒரே கூட்டம். அந்த வானதூதர் அங்கே கூடியிருந்தவர்களைப் பார்த்து: "நான் வேற்றுக் கிரகத்திலிருந்து வந்திருக்கின்றேன். பாலும் தேனும் ஓடும் அதிசய உலகம் அது! அங்கே துன்பம் இருக்காது, துயரம் இருக்காது. அங்கே உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கின்றேன். என் சிறகுகளில் நான்கு பேரை சுமந்து அங்கே செல்ல விரும்புகின்றேன். யாராவது நான்கு பேர் வாருங்கள்” என்றார்.


அந்தக் கூட்டத்திலிருந்த பெரிய பணக்காரன் அவன் செல்வாக்கைப் பயன்படுத்தி சிறகின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். ஏறியதும் கையிலே கட்டியிருந்த தங்கக் கடிகாரத்தை எடுத்து எறிந்துவிட்டு ஒரு பழைய கடிகாரத்தைக் கட்டிக்கொண்டான். வானதூதர், "பற்றற்ற உன் நிலை கண்டு உன்னைப் பாராட்டுகின்றேன்" என்றார். அதற்கு அந்தப் பணக்காரன், "ஐயோ ! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இந்தக் கடிகாரத்துக்குள்ளேதான் சுவிஸ் பேங்க் கணக்கு இருக்கின்றது" என்றான்.


இரண்டாமவன் ஓர் இளைஞன். அவன் கையிலிருந்தது. அவனுடைய அன்புடையாளுக்கு அவன் எழுதிய முதல் அன்புக் கடிதம். மூன்றாமவர் ஒரு தாத்தா. அவர் கையிலே இருந்தது டி.ஏ.எஸ். இரத்தினம் பொடி.
நான்காவதாக ஏற விரும்பியது ஒரு சிறுமி! அவள் கையிலே ஒரு நாய்க்குட்டி! வானதூதர் அந்தச் சிறுமியைப் பார்த்து, ஓர் இடம்தான் இருக்கின்றது! என்றார். அதைக் கேட்டதும் அந்தச் சிறுமி, அப்படியானால் என் நாய்க்குட்டியைக் கொண்டு போ, நான் வரவில்லை என்றாள் சிறுமி.
அதைக் கேட்டதும் அந்த வானதூதரின் சிறகுகள் சிலிர்த்தன! அந்தச் சிலிர்ப்பில் சிறகுகளின் மீதிருந்த மூன்று பேரும் கீழே விழுந்தனர். அந்தச் சிறுமியையும், நாய்க்குட்டியையும் சுமந்து கொண்டு வானதூதர் மேலே பறந்தார்.


நாம் அன்பு செய்தால் நாம் உயரமான இடத்திற்கு, வளமும், நலமும் நிறைந்த புதிய பூமிக்கு அழைத்துச் செல்லப்படுவோம் (மத் 25:31-40).
வாழ்வை இனிதாக்குவது அன்பு. வாழ்க்கையைச் சுவையாக்குவது அன்பு. அழகற்றதை அழகுள்ளதாக்குவது அன்பு. கசப்பானதை இனிப்பாக்குவது அன்பு. தடுமாற்றத்தை அமைதியாக்குவது அன்பு. சுதந்தரத்தைப் பெற்றுத் தருவது அன்பு. எல்லாவற்றையும் அள்ளிக்கொடுப்பது அன்பு. எதிர்நோக்கைவிட உயர்ந்தது அன்பு. நம்பிக்கையைவிடச் சிறந்தது அன்பு. கைம்மாறு கேட்காதது அன்பு. இமயத்தைத் தொடவைப்பது அன்பு.
இறைவனை அடைய வைப்பது அன்பு. இப்படிப்பட்ட அன்பு கேட்பவர்களுக்கு இறைவனால் அருளப்படும் (லூக் 11:9-13). 


மேலும் அறிவோம்:
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு   (குறள் : 347).
பொருள்: அகப்பற்றையும் புறப்பற்றையும் விடாமல் மேற்கொள்வோரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு அவர்களைத் தொடர்ந்து அல்லல்படுத்தி அலைக்கழிக்கும்.

--------------------------------------------------

குன்று நோக்கி

அருள்பணி லூர்துராஜ்-பாளைமறைமாவட்டம்.

தியாகமான பணி


இங்கிலாந்து நாட்டில் ஒரு காதல் இணைக்கு மணஒப்பந்த விழா நடந்தது. நிச்சயம் முடிந்த நிலையில் நாட்டில் எதிர்பாராத போர். எல்லா இளைஞர்களும் போர் முனைக்குச் செல்ல அரசு பணித்தது. மண ஒப்பந்தமாகியிருந்த அந்த இளைஞனும் போக நேர்ந்திட திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.

இளைஞன் கடிதத் தொடர்பு வழித் தன் காதலை வெளிப்படுத்தி வந்தான். மணமகளும் அந்தக் கடிதங்களைப் படித்துப் படித்தே தன் மனத்தில் நிறைந்தவன் விரைவில் வருவான் என்று காத்திருந்தாள்.

திடீரென்று கடிதத் தொடர்பு நின்றுவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கடிதம் வந்தது. முற்றிலும் பழக்கப்படாத கையெழுத்து. “கடுமையான போர் ஒன்றில் என் இரண்டு கைகளையும் இழந்து விட்டேன். என்னால் எழுத இயலாது. ஒரு நண்பரைக் கொண்டு எழுதுகிறேன். நீ எனக்கு மிகமிக அருமையானவள். எனினும் இந்த நிலையில் உன்னை மணந்து கொள்வது என்பது உனக்கு இழைக்கின்ற மிகப்பெரிய கொடுமையாகும். எனவே மணஒப்பந்தக் கட்டிலிருந்து உன்னை மனதார விடுவிக்கிறேன். ஏற்ற ஒரு துணையைக் கண்டு நீ மகிழ்ச்சியோடு இருக்கிறாய் என்ற செய்தியே எனக்கு நிறைவு தரும்",

அடுத்த கணமே அந்த இளம்பெண் புறப்பட்டாள். போர்ப் படை சார்ந்த அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தாள். தன் காதலனைக் கண்டதும் கண்களில் நீர் மல்க அவனைக் கட்டி அணைத்து முத்தமிட்டுச் சொன்னாள்: “உங்களை விடமாட்டேன். இந்த என் இரு கைகளும் உங்கள் கைகளாக இயங்கும்"
என்னே அவளுடைய தியாக அன்பு! இயேசு காட்டிய பேரன்பின் மங்கிய சாயல் அது! மனித அன்புக்கு வரம்பு உண்டு. இறைவன் அன்புக்கு எல்லை ஏது?

"மானிட மகன் தொண்டு ஏற்பதற்கல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்குமே வந்தார்”. (மத்.20:28) “எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" (போ.6:51) என்ற இயேசுவின் கூற்றுக்கள் பெரிய வியாழனன்று இறுதி இரவு உணவுவேளையில் செயல்வடிவம் கண்ட நிகழ்வுகள் தாம். நற்கருணையை நிறுவியதும் சீடர்களின் காலடிகளைக் கழுவியதும். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற இரு வேறு நிகழ்வுகள் அல்ல. ஒரே அர்ப்பண அன்பின் வெளிப்பாடு.
இயேசுவின் அன்புக்கு 2 பக்கங்கள்: 1) தியாகமான பணி, 2. தாழ்ச்சியான பணி.

பணி இணையாத அன்பு போலித்தனம்; அன்பு கலவாத பணி அடிமைத்தனம்! நற்கருணையில் இயேசுவோடு ஒன்றிப்பு என்பது அன்புப் பணியால் மட்டுமே சாத்தியமாகும். அதற்கு இன்றைய வழிபாடு கொடுக்கும் அழைப்பு, விடுக்கும் சவால்:

- நற்கருணையாக வாழுங்கள் (Be Eucharists) - பணியாளர்களாகச் செயல்படுங்கள் (Be Servants)
நற்கருணையில் இது இயேசுவின் உடல், இது இயேசுவின் இரத்தம் என்று அன்று, இது எனது உடல் என்று நொறுக்கப்படும். இது எனது இரத்தம் என்று சிந்தப்படும். இது குரு என்ற தனி மனிதனின் வார்த்தை அன்று. இயேசுவின் மறைஉடலான திருச்சபையின் வார்த்தை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த கல்வாரிப் பலிக்கும், அதன் மறுபதிப்பாக இன்று ஆலயப் பீடத்தில் நடைபெறும் திருப்பலிக்கும் முக்கிய வேறுபாடு உண்டு. அங்கே இயேசு தனியாகத் தனது ஊனுடலில் பலியானார். அது இயேசுவின் பலி. இங்கோ தனது மறையுடலில் பலியாகிறார். அதாவது இயேசு நம்மில் பலியாகிறார். நாம் இயேசுவில் பலியாகிறோம். எனவே இது நமது பலி. இந்த உண்மைக்கு நம் வாழ்வில் எப்படிச் செயல் வடிவம் கொடுக்கிறோம்?

என் உடலை உண்டு என் குருதியைக் குடியுங்கள் என்று இயேசு சொன்னதும் கசாப்புக் கடைதான் யூதர்களின் நினைவுக்கு வந்தது. இன்றுகூட இயேசுவின் உடல் குருதி என்றதும் அப்பமும் இரசமும் மட்டும் தானே நம் நினைவுக்கு வருகின்றன. அதோடு சேர்ந்து மண்ணில் வதைக்கப்படுவோரின் சிதைத்த உடலும் சிந்தும் இரத்த வியர்வையும் நம் உணர்வுகளில் எழுந்தால் அப்போது வாழ்வோடு இணைந்த பலியாகும்.


"ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றொருவருடைய காலடிகளைக் கழுவ கடமைப்பட்டிருக்கிறீர்கள்” (யோ.13;14) என்றார் இயேசு. இந்த நிகழ்வில் பேதுரு தயங்கினார். தன் தகுதியற்ற நிலையை வெளிப்படுத்தினார். யூதாசு தயங்கவில்லை. மறுப்புச் சொல்லவில்லை. இயேசு அந்தத் துரோகியின் காலடிகளையும் கழுவினார். அப்படி ஒரு தியாகமான, தாழ்ச்சியான பணிக்காகவே அந்த இரவில் பணிக் குருத்துவத்தை ஏற்படுத்தினார்.

இயேசுவின் திருச்சபையில் தலைமை என்பது தொண்டு (மார்க்.10:41-45). பதவி என்பது பணி என்பது மறைந்து, பணி ஒரு பதவியாகி விட்ட காலம் இது. “குருக்கள் தங்களைப் பணியாளர்கள் என்று இப்போது கூறிக் கொள்வது ஒரு மாய்மாலம், ஒரு பாசாங்கு என்றே எனக்குப் படுகிறது. குருக்களிடையே நிலவும் பதவிப் போட்டி அப்படி ஒன்றும் பரமரகசியம் அல்ல" என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டது நெஞ்சத்தை வேல் கொண்டு குத்துகிறது.
என் கடன் பணி செய்து கிடப்பதுவே யல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே என்றார் தாயுமானவர். 


எவ்வாறு நற்கருணையில் இயேசு உடனிருந்து நமக்கு உணவளிக்கிறோரோ, அதேபோன்று நாமும் வாழ்விழந்து தவிப்பவர்களோடு உடனிருந்து, பயணித்து உயிரளிக்கும் ஆற்றலாக மாறுவோம்.




உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்

 அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை


நற்கருணை, பணிக்குருத்துவம், அன்புக் கட்டளை - இந்த மூன்றையும் இன்றைய நாளில் கொண்டாடுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு வினைச்சொற்கள் இரண்டு முறை கையாளப்படுகின்றன: 'அறிதல்', 'புரிதல்.'

அ. தன் நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருக்கிறார் (13:1)
ஆ. அனைத்தையும் தந்தை தன் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் அறிந்திருக்கிறார் (13:3)
அ. நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது. பின்னரே புரியும். (13:7)
ஆ. நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? (13:12)

'அறிதல்' எப்போதும் இயேசுவுக்கு மட்டுமே சாத்தியமாகிறது. புரிதல் எப்போதும் நமக்கு தாமதமாகவே நடக்கிறது.

நற்கருணை, குருத்துவம், அன்பு - இந்த மூன்றையும் அறிந்தவர் இயேசு. இது இறுதிவரை நமக்குப் புரிந்தும் புரியாமலும் இருப்பதே வாழ்வியல் எதார்த்தம்.

இந்த மூன்றையும் இணைக்கின்ற மூன்று வாழ்க்கைப் பாடங்களை இன்றைய நாள் நமக்குக் கற்றுத்தருகிறது:

1. 'தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார்'

இந்த வரி உண்மையிலேயே எனக்கு ஆச்சர்யம் தருகிறது. அதாவது, இயேசுவைச் சுற்றி இன்னும் சில மணி நேரங்களில் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். இருந்தாலும் அவரிடம் 'அனைத்தும் தம் கையில் உள்ளன' என்ற நிறைவு மனப்பான்மை இருக்கிறது.

ஒரு ஊரில் ஏழை ஒருவன் இருந்தானாம். அவனுக்கு நிறைய தங்கக் காசுகள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. அவனது ஆசையை நிறைவேற்ற நினைக்கின்ற தேவதை ஒரு பை நிறைய தங்கக்காசுகளை அவனது வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டு மறைந்துவிடுகிறது. காலையில் துயில் எழுந்து கதவு திறக்கும்போது இவனது கண்களில் அந்தப் பை படுகின்றது. வேகமாக பையை எடுத்து வீட்டிற்குள் ஓடி நாணயங்களைக் கொட்டி எண்ணுகின்றான். '99 நாணயங்கள்' இருக்கின்றன. அவனுக்குள் சின்ன நெருடல்: '100 நாணயங்கள் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே!' 'அந்த 100வது நாணயத்தை ஒருவேளை பக்கத்து வீட்டுக்காரன் எடுத்திருப்பானோ?' 'வீடு பெருக்க வந்த மனைவி எடுத்திருப்பாளோ?' அல்லது 'மகன் எடுத்திருப்பானோ' அவனுடைய மகிழ்ச்சி கொஞ்ச நேரத்தில் மறைந்துவிடுகிறது. தன்னிடம் இருக்கின்ற ஒன்றை மறைந்து இல்லாத ஒன்றை கற்பனை செய்து வாழ்தல் நமக்குள் குறைவு மனப்பாங்கை உருவாக்கிவிடுகிறது.

தன்னிடம் உள்ளது அனைத்தும் எடுக்கப்படும் என்பதை இயேசு அறிந்திருந்தும் எப்படி அவரால் தன் கையில் தந்தை அனைத்தையும் ஒப்படைத்துள்ளார் என்று நினைக்க முடிந்தது. இதுதான் உண்மையான மனச்சுதந்திரம் அல்லது கட்டின்மை. இயேசு ஒருபோதும் குறைவு மனப்பான்மை கொண்டிருக்கவில்லை. ஆகையால்தான் யாரையும் அவரால் குறைத்துப் பார்க்க முடியவில்லை.

நற்கருணை - இங்கே அப்பத்திலும், இரசத்திலும் இறைமை நிறைகின்றது.
குருத்துவம் - 'எனக்கு எதுவுமே வேண்டாம்' என முன்வரும் அருள்பணியாளர் தன் நிறைவை இறைவனில் காண்கின்றார்.
அன்பு - அடுத்தவரிடம் நிறைவை பார்க்கிற அன்பு மட்டுமே நீண்ட பயணம் செய்கிறது.

2. தற்கையளிப்பு

தன்னிடம் அனைத்தும் கையளிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்கின்ற இயேசு அப்படியே தன்னிடம் உள்ளது அனைத்தையும் இழக்கின்றார். தன்னிடம் உள்ளது அனைத்தையும் அவர் இழந்தாலும் தன்னிடம் நிறைவு இருக்கும் என்ற மனநிலையில் இருந்தார் இயேசு.

யோவான் நற்செய்தியாளர் மட்டும் இயேசு நற்கருணையை ஏற்படுத்தும் நிகழ்வை பதிவு செய்யாமல் விடுகின்றார். அல்லது மற்ற நற்செய்தியாளர்கள் அப்பம், இரசம் கொண்டு நற்கருணையை ஏற்படுத்த யோவான் மட்டும் அதை தண்ணீர்-துண்டு என மாற்றிப் போடுகின்றார்.

பந்தியிலிருந்து எழுந்து - அப்பத்தை எடுத்து
தம் மேலுடையைக் கழற்றிவிட்டு - நன்றி செலுத்தி
துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு - வாழ்த்துரைத்து
தண்ணீர் எடுத்து சீடர்களின் பாதங்களைக் கழுவினார் - அதைப் பிட்டு அவர்களுக்கு வழங்கினார்.

'எழுதல்' என்பது புதிய செயலின் அடையாளம். அல்லது புதிய செயலைத் தொடங்குவதற்கான தயார்நிலையை இது குறிக்கிறது.
'மேலுடை' என்பது பாதுகாப்பு. இயேசு தன் வெளிப்புற பாதுகாப்பை அகற்றுகின்றார்.
'துண்டு' என்பது 'குறைவு' - பட்ஜெட்டில் துண்டு விழுந்தது என்கிறோம். நீண்ட துணியில் குறைவான பகுதியே 'துண்டு' - குறைவை அணிந்துகொண்டு
'தண்ணீர் எடுத்து சீடர்களின் பாதங்களைக் கழுவித் துடைக்கின்றார்.'

குருத்துவத்தில் ஓர் அருள்பணியாளர் செய்வதும் இதுவே.

தன் குடும்பத்திலிருந்து எழுகின்றார். தன் குடும்பம், தன் படிப்பு, தன் பின்புலம் என்னும் மேலுடையை அகற்றுகின்றார். தன்னிடம் உள்ள வலுவின்மை என்ற துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, தான் செல்லும் இடங்களில் பணிசெய்யத் தொடங்குகின்றார்.

அன்பிலும் இதுவே நிகழ்கிறது.

ஒருவர் தன் உறவுநிலையிலிருந்து எழ வேண்டும். தன் பாதுகாப்பு வளையத்தை அகற்ற வேண்டும். தன்னிடம் உள்ள குறைவை அடுத்தவரின் நிறைவு கொண்டு நிரப்பிக்கொள்ள வேண்டும்.

நற்கருணையிலும் இது நடந்தேறுகிறது.
அப்பமும், இரசமும் கோதுமை மற்றும் திராட்சைத் தோட்டத்திலிருந்து எழுகின்றன. தங்கள் இயல்பைக் களைகின்றன. ரொட்டியும், திராட்சை இரசமும் என புதிய உருப் பெறுகின்றன.

3. 'உன் காலடிகளைக் கழுவாவிட்டால்'

இயேசுவைப் போல பாதம் கழுவுவதைவிட அவரை நோக்கி பாதத்தை நீட்டுவது அடுத்த பாடம். சீமோன் பேதுரு தன் பாதத்தை நீட்ட மறுக்கின்றார்.

புதிதாக குருத்துவ அருள்பொழிவு செய்யப்படுபவர், அந்த அருள்பொழிவு நிகழ்வில், தன் பெயர்  வாசிக்கப்பட்டவுடன், 'இதோ வருகிறேன்' என்று சொல்லிவிட்டு, தன் பாதத்தை ஒரு அடி முன்னால் நகட்டி வைக்கின்றார். அந்த ஒற்றை அடி முன்னால் வைத்ததில் அவரின் நீண்ட பயணம் தொடர்கின்றது. சீமோன் பேதுருவின் இந்த தயக்கத்தைக் கடிந்துகொள்கின்றார் இயேசு.

புதிதாக காலடியை எடுத்வைத்து நாம் செல்லும் பயணத்தில்தான் அன்பும் அடங்கியுள்ளது.

மேலும் நற்கருணையில் இயேசு தன் உடலையும் இரத்தத்தையும் கொடுக்கும் நிகழ்விலும் அவரின் அந்த ஒற்றை அடியை நாம் பார்க்கிறோம்.

இந்த மூன்றிலும், 'நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்' என்கிறார் இயேசு.

'நான் உங்களுக்கு செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு' - என தன்னைப் பற்றிய நினைவை நீங்காத ஒன்றாக ஆக்குகின்றார் இயேசு.




தன்னையே உணவாகத் தரும் இயேசு 

அருள்பணி மரிய அந்தோனிராஜ்

முன்பொரு காலத்தில் சிபிச் சக்ரவர்த்தி என்றொரு சோழ மன்னன் இருந்தான். அவன் மக்களிடத்தில் மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களிடத்தும் மிக்க அன்பு பாராட்டி வாழ்ந்து வந்தான்.
ஒருநாள் மாலைநேரம் சிபி அரண்மனை மேல்மாடத்தில் உலவிக்கொண்டு இருந்தார். அப்போது பறவை ஒன்று உயிருக்குப் பயந்து கிரீச்சிடுவதுபோல் சத்தம் வந்தது. திடுக்கிட்டுத் தலையை உயர்த்தி ஆகாயத்தைப் பார்த்தார். அங்கே ஒரு வல்லூறு ஒரு புறாவைத் துரத்திக் கொண்டு செல்வதையும் உயிருக்குப் பயந்து புறா கத்தியபடி பறப்பதையும் கண்டார். இன்னது செய்வது என அறியாது திகைத்தபடி நின்றிருந்த சிபியின் முன் வந்து விழுந்தது அந்தப் புறா. அதைக்கையில் எடுத்து அன்புடனும் ஆதரவுடனும் தடவிக் கொடுத்தார் சிபிச் சக்ரவர்த்தி. சற்றுநேரத்தில் அதைத் துரத்திவந்த வல்லூறும் அங்கு வந்து அரசர் முன் அமர்ந்தது. அதைக் கண்டு திகைத்த சிபி தன் கையில் இருந்த புறாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். வல்லூறு வாய் திறந்து பேசியது.
"அரசே! இந்தப் புறா எனக்குச் சொந்தம். இதை என்னிடம் கொடுத்துவிடுங்கள்". மன்னன் ஆச்சரியத்துடன் பார்த்தான். மீண்டும் வல்லூறு அரசனிடம் பேசியது, "இந்தப் புறா இன்று எனக்கு உணவாக வேண்டும். நான் பசியால் தவிக்கிறேன்". அதை சிபி அன்புடன் பார்த்தான். "ஏ! பறவையே உன் பசிக்காக இந்த சாதுவான பறவையை உனக்கு உணவாகத் தரமாட்டேன்” என்றான். "அப்படியானால் என் பசிக்கு என்ன வழி அரசே?" என்றது வல்லூறு. சக்ரவர்த்தி சற்று நேரம் சிந்தித்தான். ஊனுக்கு ஊனைத்தான் தரவேண்டும். வேறு உயிர்களையும் துன்புறுத்தக் கூடாது. என்ன வழி என் சிந்தித்தான். சற்று நேரத்தில் முகம் மலர்ந்தான். "உனக்கு உணவாக என் மாமிசத்தையே தருவேன் உண்டு பசியாறுவாய்" என்று சொன்னவன் காவலரை அழைத்து ஒரு தராசு கொண்டு வரச் சொன்னான். ஒரு தட்டில் புறாவை வைத்தான். அடுத்த தட்டில் தன் உடலிலிருந்து மாமிசத்தை அரிந்து வைத்தான். ஆச்சரியம் என்னவென்றால் எவ்வளவு தசையை அரிந்து வைத்தாலும் புறாவின் எடைக்கு சமமாகவில்லை. எனவே சிபிச் சக்ரவர்த்தி தானே அந்தத் தராசில் ஏறி அமர்ந்தான். தட்டு சமமாகியதும் மன்னன் மகிழ்ந்தான். “ஏ பறவையே இப்போது நீ என் தசையை உனக்கு உணவாக்கிக் கொள்" என்றவுடன் அங்கிருந்த வல்லூறும் புறாவும் மறைந்தன.
மறுகணம் அங்கே இறைத்தூதர்கள் இருவர் தோன்றினர். அவர்கள் மன்னனிடம், "சிபிச் சக்ரவர்த்தியே! உமது நேர்மையையும் கருணை உள்ளத்தையும் பரிசோதிக்கவே நாங்கள் பறவையாக வந்தோம். உமது உள்ளம் புரிந்தது. உலகம் உள்ளளவும் உமது புகழ் நிலைப்பதாக. நீர் பல்லாண்டு வாழ்க" என வாழ்த்தி மறைந்தனர். அழகிய உடலை மீண்டும் பெற்ற மன்னன் பல்லாண்டு புகழுடன் வாழ்ந்தான்.
சங்ககால இலக்கியங்களுள் ஒன்றான புறநானுற்றில் இடம்பெறக்கூடிய இந்த நிகழ்வு ஒரு சாதாரண புறாவிற்காக தன்னையே தந்த சிபிச்சக்கரவர்த்தி என்ற சோழ மண்ணின் கருணை உள்ளத்தை நமக்குத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. ஆண்டவர் இயேசுவும் நம்மீது கொண்ட பேரன்பினால் தன்னையே உணவாக, நற்கருணை வடிவில் தருகின்றார். அதைத்தான் இன்று ‘பெரிய வியாழனாக’ வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றோம்.
தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் - இன்றைய இரண்டாம் வாசகத்தில் – கூறுவதுபோல, ஆண்டவர் இயேசு தான் காட்டிக்கொடுப்பதற்கு முந்தின இரவு, அப்பத்தைக் கையில் எடுத்து, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். பின்னர் கிண்ணத்தை எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைநிறுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்கின்றார். ஆண்டவர் இயேசு தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் நமது உணவாகவும் பானமாகவும் தருகின்றபோது, இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்கின்றார். அப்படியானால், இயேசுவைப் போன்று நாமும் நம்முடைய உடல் பொருள் ஆவி அத்தனையும் மானுட மீட்புக்காகத் தரவேண்டும் என்பதுதான் இங்கே சொல்லப்படுகின்ற செய்தியாக இருக்கின்றது. ஆகவே, ஆண்டவர் இயேசுவின் நற்கருணை விருந்தில் பங்குகொள்ளக்கூடிய நாம் ஒவ்வொருவரும் அவரைப் போன்று நம்மையும் பிறருக்காகக் கையளிக்கத் தயாராக இருக்கவேண்டும். அதுவே சரியான செயல்.
“தன்னலம் மறுத்துப் பொதுநலத்துக்காகத் தன்னையே கையளிப்பவர்கள்தான் ஒப்பற்ற தலைவர்கள்” என்பார் சேகுவேரா. அந்த வகையில் பார்க்கும்போது இந்த மானுட சமூகம் வாழ்வுபெற என்பதற்காக தன்னையே உணவாகத் தந்த இயேசுவும் ஒப்பற்ற தலைவர்தான்.
எனவே நாமும் இயேசுவைப் போன்று பிறர் வாழ நம்மைக் கையளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.




No comments:

Post a Comment