Saturday 31 March 2018

ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா

1 ஏப்ரல் 2018


ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா


பாஸ்காத் திருவிழிப்பு (புனித சனி) 
தொநூ 1:1-2:2; விப 14:15-15:1; எசே 36: 16-17ஆ, 18-28; உரோ 6:3-11; மாற் 16:1-7
 


மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்

குடந்தை ஆயர் F. அந்தோனிசாமி

உயிர்க்க வேண்டிய உணர்வுகள் இது ஒரு போர் வீரனின் வாழ்க்கையிலே நடந்த உருக்கமான நிகழ்வு! அவன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவன். போர்க்களத்திலே காயப்பட்டான். அவன் வாழ்க்கையின் கடைசி அத்தியாயம் எழுதப்படப் போகும் நேரம். மரணம் அவனை அழைத்தது. பயங்கரக் காயம். ஊர்ந்து, ஊர்ந்து அவனுடைய கூடாரத்தை அடைந்துவிட்டான். முகம் குப்புறக் கிடந்தவன், தட்டுத்தடுமாறி அவன் பொன்னென போற்றிய விவிலியத்தை எடுத்தான். இரத்தக்கறைப் படிந்த விரல்களால் விவிலியத்தின் பக்கங்களைப் புரட்டினான். அவனுடைய கண்கள் யோவான் எழுதிய நற்செய்தியிலுள்ள பதினோராம் இயலைத் தேடின. அவன் கண்கள் அந்த இயலைக் கண்டுகொண்டன. அவனுடைய இரத்தம் தோய்ந்த விரல் அந்த இயலின் இருபத்தைந்தாவது இறைவாக்கியத்தின்மீது பட்டது. இதோ அந்த அற்புத இறைவாக்கியம்: "'இயேசு அவரிடம், உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்' என்றார்.” இயேசுவின் இணையில்லா வாக்குறுதியை இதயத்தில் ஏந்தியவனாய் அந்தப் போர்வீரன் கல்லறைக்குள் சென்றான்.

நிச்சயமாக அமைதி நிறைந்த மனத்தோடு அவன் இறந்திருப்பான். மரண நேரத்தில் அவன் அழுது புலம்பவில்லை . ஆண்டவனைச் சபிக்கவில்லை. மாறாக இயேசு என்னை உயிர்ப்பிப்பார் என்ற ஆழமான, அழியாத, மாறாத, மங்காத நம்பிக்கை நிறைந்த கடைசி மூச்சோடு அவன் இவ்வுலக வாழ்விற்கு விடை கொடுத்திருப்பான்.
நாம் உயிர்ப்போமா? உயிர்க்க மாட்டோமா? என்ற கேள்விக்குப் பதில் சொல்லவே இன்று இயேசு நம்முன் உயிர்த்து நிற்கின்றார். செங்கடலை இரண்டாகப் பிளந்து மரணத்திலிருந்து இஸ்ரயேல் மக்களைக் காப்பாற்றிய இறைவன் (விப 14:15-15:1) இன்று கல்லறையைப் பிளந்து உயிர்த்த இயேசு கிறிஸ்துவாய் நம்முன்னே காட்சி அளிக்கின்றார்.
இன்று இவர்மீது நம்பிக்கை வைக்கும் அனைவருக்கும் வாழ்வு உண்டு, உயிர் உண்டு, உயிர்ப்பு உண்டு (உரோ 6:3,7).

இன்று நம்மைச் சுற்றி எத்தனையோ கல்லறைகள்! நாம் உயிரோடு இருக்கும்போதே நமக்குக் கல்லறை கட்டப்படுகின்றது ! கல்லறையை உடைக்க நமக்குச் சக்தியும் இல்லை; நமக்காகக் கல்லறையை உடைக்க நம் அருகில் ஆள்களுமில்லை!

இதோ நம் கண்முன்னேயுள்ள புதிய சிந்தனைகள் நமக்குப் புத்துயிர் ஊட்டட்டும்.
மரணம் வந்தாலும் நாம் மரிக்க மாட்டோம்! எப்போது?

நம்பிக்கை என்னும் நங்கூரத்தோடு நம் வாழ்க்கைக் கப்பல் கட்டப்பட்டிருக்கும்போது! இன்று நாம் நமது உயிருக்குள் நம்பிக்கையை ஊற்றிவைப்போம்! நம்பிக்கையில் உயிரை ஊற வைப்போம்! சாவை, சாவு தீர்மானித்துக்கொள்ளட்டும்! வாழ்வை - மறுவாழ்வை - உயிர்ப்பை நாம் தீர்மானித்துக்கொள்வோம்! சுடும்வரை நெருப்பு ! சுற்றும் வரை பூமி! நம்பும் வரை வாழ்வு!
மேலும் அறிவோம் :

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
ஆழி எனப்படு வார் (குறள் : 989).

பொருள் : சால்பு ஆகிய நிறை பண்புக்குக் கடல் போன்று திகழும் சான்றோர் இறுதிக் காலத்தில் இயற்கையே நிலை குலைந்தாலும் தாங்கள் தங்கள் நிலையிலிருந்து மாறாதிருப்பர்!
சாவின் கொடுக்கு முறிந்தது

கல்லறைக்கு அப்பால்

அருள்பணி இ.லூர்துராஜ்


'வார்த்தை மீது வாசல்கள்” (Windows on the Word) என்ற ஆங்கில நூலில் காணும் நிகழ்ச்சி இது.

டாக்டர் தேஹான் என்பவர் தனது இரு மகன்களுடன் பசுமையான வயல்வெளி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். எங்கிருந்தோ வேகமாகப் பறந்து வந்த தேனீ ஒன்று மூத்தமகன் ரிச்சர்டின் கண்களுக்குமேல் - கண்ணிமையில் கொட்டி விட்டது. அந்தத் தேனீயைக் கீழே உதறித் தள்ளிவிட்டு அங்கிருந்த புல்தரையில் ரிச்சர்ட் விழுந்து கதறினான், அலறினான் வலி தாங்க இயலாமல்.
அதையெல்லாம் கண்டு அதிர்ந்து நின்றான் சின்னவன் மெர்வின். சிறிதுநேரத்தில் அதே தேனி அவனைச் சுற்றி வட்டமிட்டது. தன் அண்ணன் துடித்த துடிப்பை நினைத்தான். அழத் தொடங்கினான். அது தன்னைக் கொட்டிவிடுமோ என்று மிரண்டான். அதே புல்தரையில் உருண்டான், புரண்டான். அப்போது அவனுடைய தந்தை ஓடிவந்து மெர் வினைக் கைகளில் அணைத்துக் கொண்டு “மெர்வின், பயப்படாதே. தைரியமாயிரு. அந்தத் தேனீ உன்னை ஒன்றும் செய்ய முடியாது. அது ஏற்கனவே தன் கொடுக்கை இழந்து விட்டது. அந்தத் தேனீ உன்னை வளைய வளைய வட்டமிடலாம். அச்சுறுத்தலாம். உன் அண்ணனைக் கொட்டியபோதே அதன் கொடுக்கு முறிந்து விட்டது" என்றார்.

நம்மைப் பொறுத்தவரை இயேசு சாவின் கொடுக்கை முறித்து விட்டார். ''சாவு, வீழ்ந்தது. வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே? (1 கொரி. 15;55) என்ற திருத்தூதர் பவுலின் ஆவேச வார்த்தைகள் எவ்வளவு ஆழமானவை! அர்த்தமுள்ளவை!

கிறிஸ்துவின் உயிர்ப்பில் திருத்தூதர் வைத்துள்ள நம்பிக்கை, உறுதிப்பாடு வியப்புக்குரியவை. “பாவமே சாவின் கொடுக்கும். ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி" என்று திருத்தூதர் பவுலோடு கிறிஸ்தவ உலகமே ஆர்ப்பரிக்கும் பாஸ்கா இரவு இது!

சாவின் மீது வெற்றி, சாவுக்குக் காரணமான பாவத்தின் மீது வெற்றி, பாவத்துக்குக் காரணனான சாத்தானின் மீது வெற்றி, இம்முப்பெரும் வெற்றிக்காக உயிர்த்த ஆண்டவரைக் கைகுலுக்கிப் பாராட்டுவோம். இயேசு பெற்ற அம்முப்பெரும் வெற்றியில் நமக்கும் பங்களிப்பதற்காக அவருக்கு நன்றி கூருவோம்.

1. இயேசு பாவத்தை வென்றார். அவரது உயிர்ப்பு பாவத்தின் மயக்கத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. கல்வாரிப் பலியே பாவப் பரிகாரப் பலிதான். கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே, மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே இருந்த உறவுக்கான தடைச் சுவர்களை உடைத்தெறிந்த பலி, "கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால் பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்'' (எபி.9:28)

2. இயேசு சாவை வென்றார். அவரது உயிர்ப்பு சாவின் தூக்கத்திலிருந்து நம்மை எழுப்புகிறது. "பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு. மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு” (உரோமை 6:23). "எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும் அவரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன். அதுவும் அழிக்கப் படும்” (1 கொரி.15:25, 26) திருத்தூதர் உரத்துச் சொன்ன வார்த்தைகள் இவை. இயேசு வந்ததே, வாழ்வு சாவை விட வலிமையானது என்பதை உணர்த்தவே!

3. இயேசு அலகையை வென்றார். அவரது உயிர்ப்பு அலகையின் மாயையிலிருந்து நம்மைத் தெளிவிக்கிறது. ''கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது... ஊனும் இரத்தமும் கொண்ட அப்பிள்ளைகளைப் போல் அவரும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின் மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார். வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப் பட்டிருந்தவர்களை விடுவித்தார்” (எபி.2:9, 14, 15). ஏற்கனவே பாலை வனத்திலும் தொழுகைக் கூடத்திலும் சாத்தானை விரட்டியடித்தவர் தானே இயேசு!

"உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். முடிவில்லா வாழ்வை நம்புகிறேன்” - இது நமது நம்பிக்கைக் கோட்பாட்டின் தெளிவு. உயிர்ப்பு என்பது கிறிஸ்தவக் கோட்பாட்டின் மையம். கிறிஸ்தவ நம்பிக்கைக்கும் வாழ்வுக்கும் ஓர் உந்துசக்தி.

சிறந்த கிறிஸ்தவரும் அறிவியல் அறிஞருமான மைக்கேல் பாரடே மரணப்படுக்கையில் இருந்தார். "சாவுக்குப் பிறகு கிடைக்கும் வாழ்வு எப்படியிருக்கும்?" என்று கேட்டபோது அவர் சொன்னார்: "எனக்குத் தெரியாது. ஆனால் நான் நிலையானவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளேன். காரணம், நான் நம்பும் மீட்பர் உயிர்த்து இன்றும் வாழ்கின்றார். எனவே நான் வாழ்வேன் என்பது உறுதி ". உயிர்ப்பு என்பது மேலோட்டமாகப் பார்த்தால் புரியாத புதிராக, அறிவுக்குப் புலப்படாததாகத் தோன்றும். ஆழமான நம்பிக்கை கொண்டு பார்த்தால் இம்மறைபொருள் காட்டும் மேன்மையை உணர முடியும்.

திருத்தூதர் தெளிவுபடுத்துவது இதுதான்: “இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார் எனில் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகி விடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்” (1கொரி. 15:13,14)

ஆம், இயேசு உயிர்த்து விட்டார். நமது உயிர்ப்பு வாழ்வுக்கும் உறுதி தந்துவிட்டார். அவரோடு நாமும் உயிர்க்கின்றோம்.
- பொய்யைவிட உண்மை மேலானது என்பதை இயேசுவின் உயிர்ப்புஎண்பிக்கிறது.
- தீமையைவிட நன்மை உறுதியானது என்பதை இயேசுவின் உயிர்ப்பு எடுத்து இயம்புகிறது.
- பகைமையை விட அன்பு, மன்னிப்பு உயர்ந்தது என்பதை இயேசுவின் உயிர்ப்பு உணர்த்துகின்றது. 
- சாவை விட வாழ்வு சக்தியானது என்பதை இயேசுவின் உயிர்ப்பு உறுதிசெய்கின்றது.

உயிர்ப்பு நமக்கு அனுபவமாகட்டும். அல்லேலூயா!


மறையுரை மொட்டுக்கள் 

அருள் பணி Y. இருதயராஜ்.


பிரான்சு நாட்டில் வாழ்ந்த ஓர் இளைஞர் ஒரு புதிய சமயத்தை நிறுவ விரும்பி, அதைக்குறித்து ஒரு பெரியவரிடம் ஆலோசனை கேட்டபோது, அப்பெரியவர் அந்த இளைஞரிடம், "நீ நிறுவவிருக்கும் புதிய சமயம் நீ இறந்த பிறகும் நிலைத்திருக்க வேண்டுமென்றால், நீ ஒரு வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அறையப்பட்டுச் சாக வேண்டும்; மறுநாள் சனிக்கிழமை கல்லறையில் அடக்கம் செய்யப் பட்டு, மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழ வேண்டும்" என்றார், அப்பெரியவர் சொன்னதில் பொதிந்திருந்த உண்மையை உணர்ந்த அந்த இளைஞர் தனது என்னத்தைக் கைவிட்டு விட்டார்.

கிறிஸ்துவ சமயம் கடந்த இருபது நூற்றாண்டுகள் எத்தனையோ சவால்களையும் வேதகலாபனைகளையும் கடந்து வந்து, இன்றும் உயிர்த் துடிப்புடன் இருப்பதற்குக் காரணம் அது கிறிஸ்துவின் உயிர்ப்பை அடித்தளமாகக் கொண்டுள்ளது. நற்செய்தியானது கிறிஸ்துவின் உயிர்ப்பை விளக்குகிறது என்பதைவிட, கிறிஸ்துவின் உயிர்ப்புத் தான் நற்செய்திக்கே விளக்கமளிக்கிறது. ஏனெனில் புனித பவுல் சுட்டிக் காட்டியுள்ளது போல், கிறிஸ்து உயிர்க்கவில்லை என்றால் நற்செய்தியும் பயனற்றது, நமது நம்பிக்கையும் பயனற்றது (1கொரி 15:14).

கிறிஸ்து தமது அதிகாரத்திற்கும் போதனைக்கும் தமது உயிர்த்தெழுதலைத்தான் சான்றாக முன்வைத்தார். “இக்கோவிலை இடித்து விடுங்கள், நான் மூன்று நாளில் இதைக்கட்டி எழுப்புவேன் (யோவா 2:19). அவர் குறிப்பிட்ட கோவில் அவர் உடல் என்பதை அவரின் சீடர்கள். அவர் உயிர்த்தபின் நினைவு கூர்ந்து, அவரில் நம்பிக்கை கொண்டனர் (யோவா 2:21-22).

திருத்தூதர்களுடைய போதனையின் மையக்கருவாக விளங்கியது கிறிஸ்துவின் உயிர்ப்பாகும், வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார், இதற்கு நாங்கள் சாட்சிகள்" (திப 3:15-16).

கடைக்குச் சென்ற ஒருவர், அக்கடையிலிருந்த காலியான டின்னிலிருந்து 1/2 கிலோ கொடுக்கும்படி கடைக்காரரிடம் கேட்டபோது, கடைக்காரர் அவரது அறியாமையை எண்ணி விழுந்து விழுந்து சிரித்தார். காலியான டின்னிலிருந்து எதையாவது எடுக்க முடியுமா? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!

ஆனால், காலியாகக் கிடந்த இயேசுவின் கல்லறை இயேசுவின் உயிர்ப்பை எடுத்துரைத்தது. அதிகாலையில் இயேசுவின் கல்லறைக்குச் சென்ற பெண்கள் காலியாகக் கிடந்த கல்லறையைக் கண்டனர். வானதூதர் அவர்களுக்குக் கொடுத்த விளக்கம்: "சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் இங்கே இல்லை " (மாற் 18:6).

பேதுருவுடன் இயேசுவின் கல்லறைக்குச் சென்ற அன்புச் சிடர் யோவான், கல்லறைக்குள் சென்றார், கண்டார், நம்பினார்" (யோவா 20:8), அவர் கண்டதோ காலியான கல்லறை: ஆனால் அவர் நம்பியதோ உயிர்த்த இயேசுவை. எனவே, காலியான கல்லறையே இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சியம் பகர்ந்தது.

இயேசுவின் உயிர்ப்பு நமது உயிர்ப்புக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. இறந்தவர்கள் உயிர்க்கவில்லை என்றால் இயேசுவும் உயிர்க்கவில்லை (1கொரி 15:13). கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோம் இறப்பினும் வாழ்வர் (யோவா 11:25). கிறிஸ்துவின் திருவுடலை உண்டு அவரது இரத்தத்தைப் பருகுவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர் (யோவா 6:54), அவர்கள் ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்து விட்டார்கள் (யோவா 5:24).

ஒருவர் குளவியால் கொட்டப்பட்டு இறந்து விட்டார். அவரைக் கொட்டிய அதே குளவி அவரது மகனை ஒரு வாரம் கழித்து கொட்ட வந்தபோது, அவன் அலறிக் கொண்டு அவன் அம்மாவைக் கட்டிப் பிடித்தான். அவன் அம்மா அவளிடம், "நீ பயப்படாதே! இக்குளலி உன் அப்பாவைக் கொட்டிய போது அது தன் கொடுக்கை இழந்து விட்டது. இனிமேல் அதனால் உன்னை ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.

ஆம், இயேசு இறந்தபோது அவர் தமது சாவினால் சாவின் கொடுக்கை முறித்து விட்டார், சாவு தனது கொடுக்கை இழந்து விட்டது. "சாவு முற்றிலும் ஒழிந்தது. வெற்றி கிடைத்தது. சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?" (1கொரி 15:54-55).

நாம் திருமுழுக்குப் பெற்றபோது இயேசுவின் சாவிலும் உயிர்ப்பிலும் பங்கு பெற்றுள்ளோம். அவரோடு நாம் இறந்து விட்டோம் என்றால், அவரோடு உயிர்ப்பது நிச்சயமாகி விட்டது (உரோ 6:3-11).

கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது வாழ்வுக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. கிறிஸ்துவின் கல்லறைக்குச் சென்ற பெண்கள் கல்லறை வாயிலை மூடியிருந்த பெரிய கல்லை (எவ்வாறு அகற்றுவது என்ற கவலையுடன் சென்றனர், ஆனால் அக்கல்லானது ஏற்கெனவே, புரட்டப்பட்டிருந்தது (மாற் 16:3 4), அவ்வாறே நமது வாழ்வில் வரும் பெரிய இடர்களையும் உயிர்த்த இயேசு அகற்றி விடுவார். நாம் அஞ்சத் தேவையில்லை. மலைகள் போலத் தடைகள் வந்தாலும் நாம் மலைத்திடாது நமது வாழ்வுப் பயணத்தைத் தொடர்வோம். ஏனெனில் உயிர்த்த ஆண்டவர் உலகம் முடியும் வரை எந்நாளும் நம்மோடு இருக்கிறார் (மத் 28:20). நாம் உயிர்ப்பின் மக்கள்; தம் கீதம் அல்லேலூயா!
பெரிய கொடிமரத்தில் ஏறிய ஒருவர் கீழே இறங்கியபோது மிகவும் பயந்தார். கீழே இருந்தவர்கள் அவரிடம், கீழே பார்க்காமல் மேலே வானத்தைப் பார்த்துக் கொண்டே இறங்கும்படி கேட்டனர். அவரும் மண்ணைப் பார்க்காமல் விண்ணைப் பார்த்த வண்ணம் கீழே இறங்கினார். நாமும் நம்மையும் நமது பிரச்சினைகளையும் மட்டும் பார்த்தால் நமது தலை சுற்றும்; மயக்கமும் தயக்கமும் வரும். எனவே, நாம் மேலுலகைப் பார்த்த வண்ணம் வாழ வேண்டும். ஏனெனில், அங்குதான் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கம் அமர்ந்துள்ளார் (கொலோ 3:1-3).

பாஸ்காத் திருவிழிப்பில் நாம் காண்பது புதிய நெருப்பு, புதிய ஒளி. புதிய தண்ணீர், புதுப்படைப்பு, புதுவாழ்வு. பழையன கழிந்து, புதியன புகுந்தன. இவை யாவும் கடவுளின் செயலே (2 கொரி 5:17-18).

“ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்" (திபா 118:24).


கல்லை நமக்கு யார் அகற்றுவார்?

அருள்பணி ஏசு கருணாநிதி


இந்த ஆண்டு திருநீற்றுப் புதன் மற்றும் பாஸ்கா ஞாயிறு வருகின்ற தேதிகள் உலகின் பார்வைக்கு சற்றே வித்தியாசமாக உள்ளன.

பிப்ரவரி 14 உலகமே வாலன்டைன் டே (காதலர் தினம்) கொண்டாடும் நாளன்று திருநீற்றுப் புதன் வந்தது. ஏப்ரல் 1 உலகமே முட்டாள்கள் தினம் கொண்டாடும் அன்று பாஸ்கா பெருவிழா வருகிறது. தமக்குரியவர்களை இறுதிவரை அன்பு செய்த மனுக்குலத்தின் காதலன் இயேசுவின் உயிர்ப்பு ஆள்வோரின் பார்வையில் ஒரு முட்டாள்தனமான நிகழ்வாக இருந்திருக்கலாம். 'இயேசு உயிர்த்துவிட்டார்' என்ற செய்தி 'ஏப்ரல் ஃபூல்' செய்தியாக இருந்திருக்கலாம். அல்லது 'ஏப்ரல் ஃபூல்' என எல்லாரையும் ஏமாற்றிவிட்டு அந்த மாபரன் உயிர்த்துவிட்டார் என வைத்துக்கொள்ளலாம்.

இயேசுவின் உயிர்ப்பை அவரோடு இருந்தவர்களைத் தவிர எல்லாரும் நம்பி எதிர்நோக்கினர்.

இயேசுவின் எதிரிகளும் அவரை சிலுவையில் அறைந்தவர்களும் அவர் உயிர்த்துவிடுவார் என்று நம்பியதால் கல்லறைக்குக் காவல் வைக்கின்றனர். இயேசு உயிர்த்துவிடுவார் என்ற நம்பிக்கை இல்லாததால் என்னவோ சீடர்களும், சீடத்திகளும், நலவிரும்பிகளும் நறுமணப்பொருள்களை எடுத்துக்கொண்டு கல்லறை நோக்கி விரைகின்றனர். அவர்களின் எண்ணம் மற்றும் ஏக்கம் இயேசுவின் உயிர்ப்பு அல்ல. மாறாக, 'கல்லை நமக்கு யார் அகற்றுவார்?' என்ற கவலையே அவர்களின் உள்ளங்களில் இருந்தது.

'கல்' - இயேசுவுக்கும் வெளியில் இருப்பவர்களுக்கும் நடுவில் இருக்கும் தடை. இந்த தடை அகன்றால்தான் அவர்கள் அவரின் உடலை நெருங்க முடியும். 



'கல் அகற்றப்பட்டது இயேசுவை வெளியேற்றுவதற்கு அல்ல. மாறாக, சீடர்களை உள்ளே அனுப்புவதற்கு' என்கிறார் தூய அகுஸ்தினார். ஆக, கல் அகற்றப்படவில்லையென்றாலும் இயேசுவால் உயிர்க்க முடியும். அதைத்தான் அவருடைய உயிர்ப்புக்குப் பின் நிகழ்வுகளும் காட்டுகின்றன. பூட்டிய அறைக்குள் அப்படியே நுழையும் இயேசுவால் பூட்டிய கல்லறையிலிருந்து வெளியேற முடியும்.

தன் உயிர்ப்பு அனுபவத்தை 'உள்ளே சென்றார், கண்டார், நம்பினார்' என்ற மூன்று வார்த்தைகளால் பதிவு செய்கிறார் யோவான் (காண். யோவா 20:8).

'இயேசு இல்லை' என்பதைக் கண்டு அவர் உயிர்த்துவிட்டார் என நம்பினார்.

ஆக, இல்லாத ஒன்று இருக்கின்ற மற்றொன்றை அவருக்குச் சொல்லிவிடுகிறது. இவ்வாறாக, இல்லாமையும்கூட இருத்தலைச் சொல்லிவிட முடியும்.

பாஸ்கா இரவுத் திருப்பலியில், ஏழு முதல் ஏற்பாட்டு வாசகங்களும், ஒரு திருமுகமும், ஒரு நற்செய்தி வாசகமும் என மொத்தம் ஒன்பது வாசகங்கள் வாசிக்க வேண்டிய அறிவுறுத்தல் இருந்தாலும், இவற்றில் ஐந்து வாசகங்களையாவது வாசிக்க வேண்டியது கட்டாயம்.

ஒளி, இறைவார்த்தை, திருமுழுக்கு, நற்கருணை என இன்றைய வழிபாடு ரொம்ப கலர்ஃபுல்லாக இருக்கிறது. இந்த இரவு திருவிழிப்புதான் எல்லா திருவிழிப்புகளுக்கும் தாய் என்றும் அழைக்கப்படுகின்றது. முதல் ஏற்பாட்டு நிகழ்வான விடுதலைப்பயணத்தையும், இயேசுவின் உயிர்ப்பையும் இணைத்து இன்றைய வழிபாடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (தொடக்கநூல்) 'இல்லாமையிலிருந்து' 'இருப்புக்கும்', 'குழப்பத்திலிருந்து,' 'தெளிவுக்கும்,' 'இருளிலிருந்து,' 'ஒளிக்கும்' உலகம் கடந்து வருகிறது. இதுதான் படைப்பு.

இரண்டாம் வாசகத்தில் (விடுதலைப்பயணம்) 'எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து,' 'வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கும்,' 'பாரவோனை அரசனாகக் கொண்டதிலிருந்து,' 'யாவேயை அரசனாகக் கொள்வதற்கும்,' 'வாக்குறுதிக்கான காத்திருப்பிலிருந்து,' 'வாக்குறுதியின் நிறைவேறுதலுக்கும்' கடந்து செல்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். இதுதான் விடுதலைப்பயணம்.

மூன்றாம் வாசகத்தில் (எசேக்கியேல்) 'உலர்ந்த நிலையிலிருந்து,' 'உயிர்பெற்ற நிலைக்கு' எலும்புகளும், 'நாடுகடத்தப்பட்ட நிலையிருந்து,' 'சொந்த நாடு திரும்பும் நிலைக்கு' இஸ்ரயேல் மக்களும் திரும்புகின்றனர். இது அவர்களுக்கு இரண்டாம் மீட்பு.

நான்காம் (உரோமையர்) மற்றும் ஐந்தாம் வாசகங்களில் (லூக்கா), இயேசுவின் உயிர்ப்பு மையமாக இருக்கின்றது. 'இறப்பிலிருந்து,' 'உயிர்ப்புக்கு' இயேசு கடந்து போனதை கிறிஸ்தவ வாழ்வின் உருவகமாக பவுலும், 'உயிரற்ற அவர்,' 'உயிரோடிருக்கும் நிலைக்கு' என நேரிடையாக லூக்காவும் சொல்கின்றனர்.

ஆக, மேற்காணும் இந்த ஐந்து நிலைகளிலும், முன்னால் இருந்தது இப்போது இல்லை.

முன்னால் இருந்த குழப்பம் இல்லை.

முன்னால் இருந்த அடிமைத்தனம் இல்லை.

முன்னால் இருந்த நாடுகடத்தல் இல்லை.

முன்னால் இருந்த பாவ இயல்பு இல்லை.

முன்னால் இருந்த இறப்பு இல்லை.

'முந்தைய நிலை' மாறிவிட்டது. அல்லது 'கடந்து விட்டது'.

முந்தைய நிலையை மறைத்திருந்த கல் புரட்டப்படுகிறது.

எதற்காக மனித மனம் இந்த கடத்தலை அல்லது மாற்றத்தை விரும்புகிறது? இந்த ஐந்து நிகழ்வுகளும் அறிவியல் கோட்பாட்டிற்கும், லாஜிக்கிற்கும் அப்பால் இருக்கின்றன. இருள் ஒளியாகிறது. தண்ணீர் வறண்ட நிலமாகிறது. எலும்பில் சதையும் உயிரும் பிறக்கிறது. பாவம் புதுவாழ்வாகிறது. உயிரற்ற உடல் உயிர் பெறுகிறது.

முந்தைய நிலையிலிருந்து பிந்தைய நிலைக்கான மாற்றம் கல் நகர்த்தலில் இருக்கின்றது.

'அவர்கள் நிமிர்ந்து நோக்கியபோது'

- இதுவரை தங்கள் துக்கத்தால் முகத்தை கவிழ்த்து வைத்தவர்கள் நிமிர்ந்து பார்க்கும்போது தங்கள் கண்களுக்கு முன் அந்த அதிசயம் நடந்தேறியிப்பதைப் பார்க்கிறார்கள். 'கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்' அவர்கள். 'அது பெரியதொரு கல்' என கல்லுக்கு வர்ணனை தருகின்றார் மாற்கு நற்செய்தியாளர்.

உள்ளே செல்கிறார்கள். இன்னொரு ஷாக் அங்கே அவர்களுக்குக் காத்திருக்கிறது. 'வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கிறார்.'

'அவர் இங்கே இல்லை ... அவர் சொன்னது போலவே உயிர்த்தெழுந்தார்' என்கிறார் இளைஞர்.

ஆக, இயேசுவின் உயிர்ப்பை நம்பவேண்டுமென்றால் அவருடைய வார்த்தைகளை நம்ப வேண்டும்.

இந்த மகிழ்ச்சி செய்தியைக் கேட்ட அவர்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள். 'எல்லாரிடமும் கூறுங்கள்' என்று சொன்னாலும் அவர்கள் சொல்லாமல் மெய்மறந்தவர்களாகின்றனர். 'அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள்.'

அதிகாலையில் விடியலுக்கு முன்பே எழுந்த வந்த மூன்ற பெண்கள் அடுத்தடுத்து அச்சத்தால் ஆள்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறாக, மாற்கு நற்செய்தியில் இறுதிவரை இயேசுவை அவருடைய சீடர்கள் புரிந்துகொள்ளாமலேயே இருந்துவிடுகின்றனர்.

இந்த புரிந்துகொள்ளாமைக்கு முதல் காரணம் அச்சம்.


கல் பற்றிய அச்சம், வானதூதர் பற்றிய அச்சம், இளைஞர் பற்றிய அச்சம், உயிர்ப்பு பற்றிய அச்சம் என வரிசையாக இவர்கள் அச்சத்தால் பீடிக்கப்படுகின்றனர்.

பல நேரங்களில் கல் தானாகவே அகன்றுவிடும் - அது எவ்வளவு பெரிய கல் என்றாலும் - என்பதை நாம் மறந்துவிடுகிறோம். அதற்குக் காரணம் நம்மிடம் இருக்கும் அச்சம்.

'அச்சம்' - இந்த ஒன்று நமக்கும் நம் எதார்த்தத்திற்கும் இடையே ஒரு பெரிய கல்லை நகர்த்திவைத்துவிடுகிறது.

ஆக, கல்லறையின் வெளியே இருந்த பெரிய கல் அகற்றப்பட்டாலும் அவர்கள் கண்களுக்கு முன் இருந்த கல் அகற்றப்படவில்லை. இன்று நம்மிடம் துலங்கும் அச்சங்களை நினைத்துப் பார்ப்போம்.

கல்லை நமக்குப் புரட்ட இறைவன் இருக்கிறார் என்றாலும், நமக்கு நாமே வைத்துள்ள கல்லை நாம் அகற்ற முன்வருவோம்.

நம் பாதைக்கு தடைக்கல்லாக இருந்த கெட்ட பழக்கங்கள், எண்ணங்கள் ஆகியவற்றை கஷ்டப்பட்டு 40 நாள்கள் தள்ளி வைத்திருந்தோம். இனியும் அவைகள் கற்களாக நம்முன் நிற்க வேண்டாம். கல் விலகியது. கட்டின்மை பிறந்தது.

என் கண்முன் நிற்கும் கற்கள் புரட்டப்பட அருள்தாரும் இறைவா!




கிறிஸ்து உயிர்த்தார் அல்லேலூயா!

அருள்பணி மரிய அந்தோனிராஜ்


இரண்டாம் உலகப் போர் மிகத் தீவிரம் அடைந்திருந்த தருணம். அந்த ஆண்டில் வந்த புனித வாரத்தின் புதன்கிழமை அன்று, அதிகாலை வேளையில், பிரான்சு நாட்டில் இருந்த ஒரு பிரசித்த பெற்ற தேவாலயத்தில் பெண்ணொருத்தி கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தாள். அவளுடைய அழுகைச் சத்தம் ஆலயத்தின் பின்னால் இருந்து ஜெபித்துக்கொண்டிருந்த குருவானவரை ஏதோ செய்தது.

உடனே குருவானவர் அழுதுகொண்டிருந்த பெண்மணியின் அருகே வந்து, “ஏனம்மா! இந்த அதிகாலை வேளையில் இப்படி அழுதுகொண்டிருக்கின்றாய்? உனக்கு ஏதாவது பிரச்சனையா? உன்னுடைய பிரச்னையை என்னிடம் சொல். என்னால் முடிந்த மட்டும் உனக்கு நான் உதவி செய்கிறேன்” என்றார். அந்தப் பெண்மணியோ அழுகையை அடக்கமுடியாதவளாய், தன்னுடைய கையில் வைத்திருந்த தந்தியை எடுத்து, குருவானவரிடம் கொடுத்து, “என் மகன் நாட்டிற்காக இராணுவத்தில் பணியாற்றிக்கொண்டு வருகின்றான். ஆனால், போர்க்களத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை. நேற்று இரவு ‘என் மகனைக் காணவில்லை, அவனை எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை’ என்று தந்தி வந்திருக்கின்றது. அந்தத் தந்திதான் உங்களுடைய கையில் இப்போது இருப்பது. என்னுடைய ஒரே மகனும் என்னைவிட்டுப் போய்விட்டானே, இப்போது நான் என்ன செய்வேன்?” என்றாள். அதற்கு குருவானவர் அந்தத் தாயிடம், “கவலைப்படாதீர்கள் அம்மா! உங்களுடைய மகனுக்கு ஒன்றும் ஆகியிருக்காது. நீங்கள் கவலைப்படாமல் வீட்டிற்குச் செல்லுங்கள்” என்று சாந்தப்படுத்தி, குருவானார் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள் பெரிய வியாழன். அன்றைய தினத்தில் குருவானவர் திருப்பலியை நிறைவேற்றும்போது தற்செயலாக முன்வரிசையில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். அங்கு முந்தைய தினத்தில் மகனைக் காணவில்லை என்று அழுத பெண்மணி, அன்றைக்கும் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தார். அந்தத் தாயின் நிலை கண்டு, அவளுக்காகத் திருப்பலியில் மிக உருக்கமாக ஜெபித்தார். திருப்பலி முடிந்த பிறகும்கூட குருவானவர் அந்த தாயினை சந்தித்து, அவரைத் தேற்றினார். மறுநாள் பெரிய வெள்ளி. அன்றைக்கும் அந்தத் தாயானவள் ஆலயத்தில் அமர்ந்து அழுதுகொண்டே இருந்தாள். அன்றைய நாளில் அவளுடைய அழுகையில் அதிகமான வேதனை வெளிப்படுவதை அறிந்து குருவானவர் அவளுக்காகவும், அவளுடைய மகனுக்காகவும் வழிபாட்டில் மிக உருக்கமாக ஜெபித்தார்.

மறுநாள் சனிக்கிழமை. அதாவது உயிர்ப்புப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒருசில மணித்துளிகளுக்கு முன்பாக, உயிர்ப்புப் பெருவிழா வழிபாட்டிற்கு எல்லாம் தயாராக இருக்கின்றதா? என்று குருவானவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுது மகனைக் காணவில்லை என்று மூன்று நாட்களாக அழுதுகொண்டிருந்த தாயானவள் அவரிடம் வந்தாள். ஆனால், அவள் முன்பு இருந்ததைப் போன்று இல்லை, அவளுடைய முகத்தில் ஒருவிதமான மாற்றம் பிறந்திருந்தது. அவள் குருவானவரிடம் ஒரு தந்தியைக் கொடுத்து, “சுவாமி! போர்க்களத்தில் என் மகன் காணாமல் போய்விட்டதாகச் சொன்னேனே. அவன் இப்போது கிடைத்துவிட்டான் என்று தந்தி வந்திருக்கின்றது. அந்தத் தந்திதான் இது” என்று அந்தத் தாயானவள் தன்னிடம் இருந்த தந்தியை எடுத்து, குருவானவரிடம் படிக்கக் கொடுத்தார். தந்தியைப் படித்துப் பார்த்த குருவானவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
“இயேசு கிறிஸ்து இறந்து உயிர்த்தெழுந்ததுபோல், உங்களுடைய மகனும் உயிர்த்தெழுந்திருக்கின்றான் – காணாமல் போய் கிடக்கப்பெற்றிருகின்றான். அதனால் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். இந்த உயிர்ப்புப் பெருவிழா உங்களுக்குத்தான் மிகவும் பொருள் நிறைந்தது” என்று வாழ்த்தி, அவரை அனுப்பி வைத்தார்.

போர்க்களத்தில் காணாமல் போன அந்தத் தாயின் மகன் கிடைக்கப் பெற்றதைப் போன்று – உயிர்த்தெழுந்ததைப் போன்று – நம் ஆண்டவர் இயேசுவும் சாவை வென்று வெற்றிவீரராக உயிர்த்தெழுந்துள்ளார். ஆகையால், நாம் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். அது மட்டுமல்லாமல் இந்த உயிர்ப்புப் பெருவிழாவில் உயிர்த்த ஆண்டவர் இயேசு நமக்குத் தரும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசுவின் உயிர்ப்பு ஒரு கட்டுக்கதையோ அல்லது ஒரு பொய்யான பரப்புரையோ அல்ல. அது உண்மையிலும் உண்மையானது. இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.
இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்தார் என்பதற்கு நம்மிடம் இருக்கும் முதன்மையான சான்று வெற்றுக் கல்லறையாகும். ஆம், வாரத்தின் முதல்நாளில் இயேசு அடக்கம் செய்துவைப்பட்ட கல்லறைக்கு வந்த மகதலா மரியா, அங்கு கல்லறையை மூடியிருந்த கல் அகற்றப்பட்டு, கல்லறை வெறுமையாக இருப்பதைப் பார்த்தார். ஆனால், அவரால் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்று நம்பமுடியவில்லை. அவரோ திகைத்துப் போய், நடந்தவற்றை எல்லாம் திருத்தூதர்களிடம் எடுத்துச் சொல்ல விரைகின்றார். அவர் திருத்தூதர்களிடம் நடந்தவற்றைச் சொன்னதும், பேதுருவும் யோவானும் கல்லறைக்கு விரைந்து வருகின்றார்கள். பேதுரு முதலில் கல்லறைக்குள் செல்கின்றார். அவருக்குப் பின்னால் யோவான் கல்லறைக்குள் செல்கின்றார். கல்லறையில் இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டு, மற்ற துணிகளோடு இல்லாமல், தனியாக சுருட்டி வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கின்றார். கண்டார், ஆண்டவர் இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்துவிட்டார் என்று நம்புகின்றார். அந்த வகையில் வெற்றுக் கல்லறை ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்கு முதன்மையான சான்றாகத் திகழ்கின்றது.

இயேசுவின் உயிர்ப்புக்கு இரண்டாவது சான்றாக இருப்பது திருத்தூதர்களின் சான்றுகள்தான். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் பேதுரு, “இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார், யூதர்களோ அது பிடிக்காமல், அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள். ஆனால், கடவுளோ அவரை மூன்றாம்நாள் உயிர்த்தெழச் செய்தார். இதற்கு அவரோடு இருந்த நாங்கள் சாட்சிகள்” என்கிறார். எனவே, திருத்தூதர்களின் சான்றுகளை வைத்து இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என நாம் உறுதியாக நம்பலாம். ஆண்டவர் இயேசுகூட, “இக்கோவிலை இடித்து விடுங்கள். நான் இதை மூன்று நாட்களில் கட்டி எழுப்புவேன்” என்று கூறி, தான் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று தன்னுடைய உயிர்ப்பைக் குறித்து முன்கூட்டியே சொல்கின்றார்.

ஆகையால், வெற்றுக் கல்லறை, சீடர்களின் சான்றுகள், இயேசுவின் வார்த்தைகள் இவையெல்லாம் வைத்து இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்துவிட்டார் என்று நாம் உறுதிபடச் சொல்லச் சொல்லலாம். பவுலடியார் இன்னும் ஒரு படி மேலே சென்று, “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் அறிவித்த நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் வீண்: ( 1கொரி 15:14) என்று சொல்லி, இயேசுவின் உயிர்ப்பில்தான் திருச்சபை கட்டியெழுப்பப் பட்டிருக்கின்றது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். எனவே, இயேசுவின் உயிர்ப்பு கட்டுகதையோ, பொய்யான பரப்புரையோ அல்ல, மாறாக அது உண்மையானது என்பதை உறுதியாக நம்பலாம்.

இயேசுவின் உயிர்ப்பு மெய்யானது என்பதை பல்வேறு சான்றுகளின் சான்றுகளின் வழியாக அறிந்த நாம், இயேசுவின் உயிர்ப்பை எப்படி அர்த்தமுள்ளதாக்கப் போகின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின் உயிர்ப்பை மக்களுக்கு அறிவிக்கின்றபோது திருத்தூதர்கள் குறிப்பாக பேதுரு, ‘இவற்றிற்கு நாங்கள் சாட்சிகள்” என்பார். சாட்சிகள் என்று சொல்லும்போது அதில் மூன்று முக்கிய உண்மைகள் உள்ளடங்கி இருக்கின்றன. ஒன்று இயேசுவை முழுமையாக அறிதல். இரண்டு அறிந்ததை மக்களுக்கு அறிவித்தல். மூன்று அதற்காக உயிரைத் தருதல் என்பதாகும். பேதுரு உட்பட திருத்தூதர்கள் அனைவரும் இயேசுவை முழுமையாக அறிந்து, அறிந்தததை மக்களுக்கு அறிவித்து, அதற்காக தங்களுடைய உயிரையும் தந்தார்கள். நாம் இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகளாகச் திகழவேண்டும் என்றால், இயேசு உயிர்த்துவிட்டார் என்று அறிந்திருப்பது மட்டும் போதாது, அறிந்ததை அடுத்தவருக்கு அறிவிக்கவேண்டும். அதனை நம்முடைய வாழ்வாக்கவேண்டும். அப்போதுதான் நாம் இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சிகளாகத் திகழ முடியும்.

ஒரு சமயம் ஒரு குருவானவரும், சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தவரும் காலார நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள். இரண்டாமவருக்கு கடவுள்மீது நம்பிக்கை கிடையாது. அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு போகும்போது, வழியில் அப்பாவி மனிதன் ஒருவனை முரடர்கள் சிலர் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரையும் பார்த்த முரடர்கள் அங்கிருந்து ஓடிவிட்டார். அப்போது சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் குருவானவரிடம், “இந்த உலகத்தில் கடவுள் என்ற ஒருவர் கிடையவே கிடையாது. அவர் மட்டும் இருந்திருந்தால் இந்தக் கொடுமைகள் எல்லாம் நடக்காது அல்லவா?” என்றார். அதற்கு குருவானவர் பதில் ஒன்றும் சொல்லாமல், அப்படியே சென்றார்.

சிறுது தூரத்தில் அழுக்குத் துணியுடன் சிறுவன் ஒருவன் எதிரே நடந்து வந்துகொண்டிருந்தான். அவனைப் பார்த்த குருவானவர், சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவரிடம், “இந்த உலகத்தில் சோப்பு என்ற ஒன்று கிடையாது என்றார். அதற்கு அவர், ஏன் அப்படிச் சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார். “சோப்பு என்ற ஒன்று இருந்திருந்தால், இந்தச் சிறுவன் இப்படி அழுக்குத் துணியுடன் திரியமாட்டான் அல்லவா” என்றார் குருவானார். “அழுக்குப் போகவேண்டும் என்றால், சோப்பினைப் பயன்படுத்தவேண்டும். அதைவிடுத்து, சோப்பைப் பயன்படுத்தாமல், உலகத்தில் சோப்பே இல்லை என்று எப்படிச் சொல்லலாம்” என்றார்.

உடனே குருவானவர் அவரிடம், “இப்போது சொன்னீர்களே அழுக்குப் போகவேன்றால் சோப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று, அது போன்றுதான் உலகில் உள்ள தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகவேண்டும் என்றால், மக்கள் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழவேண்டும். அப்படி வாழாமல், கடவுள் இந்த உலகத்தில் இல்லவே இல்லை என்று ஒருபோதும் சொல்ல முடியாது” என்றார்.

ஆம், கடவுள் இந்த உலகத்தில் இருக்கின்றார் என்பதை நம்முடைய வாழ்வால் நிரூபிக்கவேண்டும் என்பதைப் போன்று, ஆண்டவர் இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்து விட்டார் என்பதை நம்முடைய சாட்சிய வாழ்வால் நிரூபிக்கவேண்டும்.
இயேசு இந்த உலகிற்கு அன்பையும், உண்மையான அமைதியையும், மன்னிப்பையும் கொண்டு வந்தார். நாம் அவருடைய விழுமியங்களின் படி நடக்கும்போது இயேசு உண்மையாகவே உயிர்த்துவிட்டார் என உறுதிபடச் சொல்லலாம். மட்டுமல்லாமல், இன்றைய இரண்டாம் வாசகத்தில் (கொலோசையருக்கு எழுதப்பட்ட திருமுகம்) பவுலடியார், “கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றையே நாடுகள்” என்பார். கடவுளுக்கு உகந்த வாழ்ந்த வாழ்வதே மேலுலகு சார்ந்த வாழ்க்கையாகும்.

ஆகவே, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் நாம், அவருடைய உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொள்வோம், அவருடைய உயிர்ப்புக்கு சாட்சிகளாகத் திகழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

அன்பின் மடல் சார்பில் அனைவருக்கும் உயிர்ப்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்!




Tuesday 27 March 2018

புனித வெள்ளி

புனித வெள்ளி
எசா 52:13 - 53 :12; எபி 4:14-16; 5:7-9; யோவா 18:1-19:42





சிலுவை கற்றுக்கொடுக்கும் பாடம் என்ன?

மகிழ்ச்சியூட்டும் மறையுரை. குடந்தை ஆயர் அந்தோணிசாமி


சில ஆண்டுகளுக்குமுன் அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் வாழ்ந்த மனிதர் ஒருவர் ஏதோ ஒன்றைத் தேடி எண்ணற்ற செப் வழிபாடுகளில் பங்குகொண்டார். வழிபாடு நடத்தியவர்களெல்லாம் மிக அருமையாக அறிவுரை வழங்கினார்கள். ஆனாலும் அவர் தேடியது அவருக்கக் கிடைக்கவில்லை! தான் தேடியது கிடைக்கவில்லையே என்ற கவலையில் படுத்தபடுக்கையானார். அவர் மரண வேளையிலிருந்தபோது அவருக்காகச் செபிக்க போதகர் ஒருவர் அவர் வீட்டுக்குச் சென்றார். அவரது படுக்கையின் பக்கத்தில் மண்டியிட்டு மன்றாடினார். அப்பொழுது அவருடைய கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் கீழே விழுந்தன. ஆண்டவரே இந்த அன்பு மகனை எடுத்துக்கொள்ளாதேயும் என உருக்கமாக செபித்தார். அதைப் பார்த்த படுக்கையிலே படுத்திருந்த மனிதர், இத்தனை ஆண்டுகளாக, நான் எதைத் தேடினேனோ அது இன்று எனக்குக் கிடைத்துவிட்டது. மற்ற போதகர்களெல்லாம் அவர்கள் விரும்பியதை எனக்குக் கொடுத்தார்கள். ஆனால் இவரோ நான் விரும்பியதை எனக்குக் கொடுத்திருக்கின்றார். என்னை அன்பு செய்யும் ஒருவரைத் தேடினேன். இனி எனக்குக் கவலையில்லை எனச் சொல்லி எழுந்து அமர்ந்தார்; அவரும் மாபெரும் போதகரானார்.

இதோ நமக்காக கண்ணீரைச் சிந்தி, நமக்காகத் தம் உயிரைத் தந்து நம்மீது அளவில்லா அன்பைப் பொழிந்திருக்கும் இயேசுவை ஒருமுறை உற்றுப்பார்ப்போம். மனம் திரும்ப விரும்பாத எருசலேமைப் பார்த்து அழுதவர் இவர்! (லூக் 19:41-44). இலாசரின் இறப்பைக் கண்டு அழுதவர் இவர்! (யோவா 11:35). நமது வேண்டுதல்கள் கேட்கப்படவேண்டும் என்பதற்காக கண்ணீர் சிந்தி கதறி மன்றாடியவர் இவர்! (எபி 5:7).

நமது ஆண்டவராகிய இயேசு நம்மீது அவர் கொண்டிருக்கும் ஆழமான அன்பை வெளிப்படுத்த கண்ணீரை மட்டுமல்ல, தமது உயிரையே நமக்குக் கொடுத்திருக்கின்றார் (யோவா 19:30).
எனக்காகக் கண்ணீர் சிந்தி, தம் உயிரையே கொடுத்த ஆண்டவர் இயேசு என்னோடு இருக்கும்போது எனக்கு எந்தக் குறையும் இருக்காது; அப்படியே
என் வாழ்க்கையில்,
முள் குறுக்கிட்டால் அதை அவர் மலராக மாற்றிடுவார்;
தேள் குறுக்கிட்டால் அதை அவர் தேனாக மாற்றிடுவார்;
சாவு குறுக்கிட்டால் அதை அவர் வாழ்வாக மாற்றிடுவார்
என நம்பி நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவோம். தம் உயிரையே எனக்காகக் கொடுக்க முன்வந்திருக்கும் இயேசு. சாதாரண வரங்களை நான் கேட்கும்போது அவற்றை எனக்குக் கொடுக்காமலிருப்பாரோ? என நம்மையே நாம் கேட்டுக்கொள்வோம்.
மேலும் அறிவோம் :
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் : 228).
பொருள் : வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் மகிழ்வதைக் கண்டு அருளுடையவர் அடையும் இன்பம் பெரிதாகும். அத்தகைய இன்பத்தைப் பற்றித் தெரியாதவரே தாம் சேர்த்த பொருளை ஏழை எளியோருக்கு வழங்காது பிறர் கொண்டு போக இழக்கும் இரக்கம் அற்றவர் ஆவர்!




சிலுவையடிக்கு வரட்டும் - அருள்பணி லூர்துராஜ்

இரவாகட்டும் பகலாகட்டும் எப்பொழுதெல்லாம் என்னைச் சுற்றிலும் அமைதி தவழ்கிறதோ, நிம்மதி நிலவுகிறதோ, அப்பொழுதெல்லாம் எங்கிருந்தோ வரும் ஒரு சோகக்குரல் - துயரக் குரல் என்னை உலுக்குகிறது. முதன்முறையாகக் கேட்ட போது குரல் வந்த திசை நோக்கிச் சென்றேன். குரலுக்குரியவரைத் தேடினேன். அக்குரல் சிலுவையிலிருந்து வந்தது. குரலுக்குரியவர் பாடுகளின் எல்லையிலே வேதனையின் விளிம்பிலே மரச்சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார், மண் புழுவாய்த் துடித்துக் கொண்டிருந்தார். அருகிலே சென்று “இறக்கி விடுகிறேன்" என்று சொல்லி கால்களில் துளைத்திருந்த ஆணிகளைக் கழற்ற முயன்றேன். ஆனால் அவரோ விட்டு விடு. உன்னால் மட்டும் முடியாது. உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு குழந்தையும் ஒன்று திரண்டு வந்தால் அன்றி, என்னைச் சிலுவையினின்று இறக்க முடியாது. என் வேதனையைக் குறைக்க முடியாது' என்றார். உடனே நான் “உலகம் முழுவதும் என்றைக்கு உம் சிலுவையடிக்கு வரப்போகிறது? உம் வேதனை தீரப் போகிறது? உலகம் கிடக்கட்டும். இதோ நான் இருக்கிறேன். என்னால் ஏதாவது செய்ய முடியும் என்றால் சொல்லும்” என்றேன். “அப்படியா?” அவர் சொன்னார் “முதலில் இந்த இடத்தை விட்டுப் போ. உலகெங்கும் போ. ஊர் ஊராகப் போ. உன்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் சொல். உனக்காக ஒரு மனிதன் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறான் என்று".

எனது கற்பனை அன்று; ஓர் ஆங்கிலக் கவிஞன் காவியமாக்கிய கடவுளின் சோகக்கதை. கல்வாரி என்பது என்றோ ஒருநாள் நடந்து முடிந்த பழைய நிகழ்ச்சி அல்ல. இன்றும் ஒவ்வொரு மனித வாழ்விலும் நடந்து கொண்டிருக்கும் தெய்வத்தின் துயர நிகழ்ச்சி என்பதை அழகாகச் சித்தரிக்கும் அற்புதமான கவிதை,

உனக்காக, எனக்காக, ஒவ்வொரு மனிதனுக்காக அங்கே இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார். வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறார்.
ஏன் இந்த நிலை? வாய் திறந்து சொல்லும் நிலையில் அவர் இல்லை. அதோ இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறதே அந்த இதயத்தில் சாய்ந்து உற்றுக்கேள். அவரது இதயம் இப்படித் துடித்துக் கொண்டிருக்கும்... அன்பு, பாவம்... பாவம், அன்பு, அன்பு பாவம் என்று. ஆம் அனைத்துக்கும் காரணம் 1.பாவம் - அன்பு என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்தால் என்றோ உலகை அழித்திருக்கக் கூடிய மனிதனின் பாவம். 2. அன்பு - பாவத்தால் உலகம் அழிவதைப் பார்த்துச் சகிக்காத கடவுளின் அன்பு.

ஆம், பாவம் கடவுளைப் பழிவாங்கிவிட்டது. அன்பு கடவுளைப் பலியாக்கிக் கொண்டது. தெய்வத்தைப் பொருத்தவரை அது அன்புப் பலி. மனிதனைப் பொருத்தவரை அது கடவுள் கொலை. பாவம் அன்புக்கு இழைத்த கொடுமை சிலுவை.

அதோ சிலுவையில் இருகைகள் விரித்த நிலையில் இயேசு இருப்பது ஏன் தெரியுமா? இத்தாலிக் கவிஞர் தாந்தேயின் பார்வையில் அன்புக்கும் பாவத்துக்குமிடையே நடந்த போராட்டத்தின் விளைவாம்!

ஆதியில் மனிதன் கடவுளோடு கைகோர்த்துத் திரிந்தானாம். பாவம் நுழைந்தது. அன்புறவு அறுந்தது. பிரிவு. பிளவு. பாவம் மலிய மலிய இடைவெளியும் விரிந்தது. கடவுளை விட்டு மனிதன் ஒடினான். ஓடினான். ஓடிக்கொண்டே இருந்தான். அவனைத் தடுத்து ஆட்கொள்ள கடவுள் துரத்தினார். துரத்தினார். துரத்திக் கொண்டே இருந்தார்.

மனிதனோ அழிவின் வாசலுக்கே சென்று விட்டான். நரகம் எங்கே இருக்கிறது? கல்வாரிக்குப் பின்னேயாம்! பாவப்படுகுழியில் புரண்டு நரகத்தில் விழப்போகும் மனிதனைத் தடுப்பதற்காகத் தன் சக்தியை எல்லாம் - அன்புதானே அவரது சக்தி - ஒன்று திரட்டி அவனுக்கு முன்னே ஓடிச்சென்று தன் இரு கைகளையும் விரித்தார்.

விரித்த அந்த அன்புக் கைகளைச் சிலுவையில் அறைந்துவிட்டு - ஆணி கொண்டு பிணைத்துவிட்டுக் கீழே குனிந்து தன் இச்சைப்படி சென்றான் மனிதன்.

கடவுள் கைகளை விரித்தது மனிதன் தன் பாவத்தால் அவரைச் சிலுவையில் அறைந்து கொல்வதற்காகவா? அழிவை நோக்கிச் செல்லும் மனிதனைத் தடுத்து ஆட்கொள்வதற்காகவன்றோ!

கடவுளின் விலை என்ன? 30 வெள்ளிக் காசுகள் என்கிறான் மனிதன். மனிதனின் விலை என்ன? என் குருதி, என் உயிர் என்கிறார் இறைவன்.
இரு ஒருபுறம் இருக்கட்டும். இன்று இயேசுவைச் சிலுவையில் இருந்து இறக்க வேண்டுமா? “ஒவ்வொரு மனிதனும் கல்வாரியின் உச்சிக்கு வந்தால் ஒழிய...” ஆண்டவர் அழைக்கிறார்.

வாருங்கள் சிலுவையடி நோக்கி மலை ஏறுவோம். ஆனால் யாரைப்போல? பரிசேயர், படைவீரர், பொதுமக்கள் என்று எத்தனையோ பேர் அங்கே சென்றார்கள். ஆறுதலாக நின்றவர்கள் மூன்று பேர் மட்டுமே. களங்கமின்மைக்குச் சின்னமான அன்னை மரியா. அர்ப்பணத்துக்கு அடையாளமான திருத்தூதர் யோவான். தவறான வாழ்க்கைக்காக மனத்துயர் கொண்ட மகதலா மரியா. இந்த மூன்று பேரில் ஒருவராக மாறாதவரை, சிலுவையடிக்குச் செல்ல எவருக்கும் உரிமையில்லை ; தகுதியும் இல்லை !

நாம் அத்தனை பேரும் அன்னை மரியா போல மாசற்றவர்கள் அல்லர்; யோவான் போல முழுநேர இறையாட்சி ஊழியர்கள் அல்லர்; நம் சார்பாக, நம் பதிலாள் போல் நிற்பவர் மகதலா மரியா, பாவியாக வாழ்ந்து இயேசுவின் கனிந்த பார்வையில் மனமுருகி மனம் மாறியவர்.
மலை ஏறுவது கடினமாயிற்றே, பழக்கமில்லையே என்ற தயக்கமா? மலையேறுவது கடினம் தான். பாவத்தை நினைப்பது, வருந்துவது, திருந்துவது, அறிக்கையிடுவது அனைத்துமே கடினம்தான். ஆனால் எந்தப் பாவத்துக்காக மன்னிப்புப் பெறுவதும், விட்டுவிலக உறுதிபூணுவதும் கடினமாக இருக்கிறதோ, அந்தப் பாவத்துக்காக - அதே பாவத்துக்காக - அதோ அங்கே சிலுவையில் தொங்கிக் கொண்டிருப்பது இன்னும் அதிகக் கடினமாக இருக்கிறது!




மறையுரை மொட்டுக்கள்-அருள்பணி Y.இருதயராஜ்

இயேசு கிறிஸ்து மூன்று ஆண்டுகள் பல்வேறு இடங்களில் போதித்தார். வீட்டிலே போதித்தார்; வீதியிலே போதித்தார்; மலையிலிருந்து போதித்தார்: பாலைநிலத்தில் போதித்தார்; ஆலயத்தில் போதித்தார். ஆனால், இறுதியாக அவர் சிலுவையிலிருந்து போதித்தலை ஈடு இணையற்ற போதனை. சிலுவையில் தொங்கிய அவர் வாயிலிருந்து உதிர்ந்த ஏழு முத்துக்களைப் பெரிய வெள்ளியாகிய இன்று கவனமுடன் கேட்போம்: ஆழ்ந்து சிந்திப்போம், செயல்வடிவம் கொடுப்போம்.

1. முதல் முத்து "தந்தையே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக் 23:34).

தம்மைச் சிலுவையில் அறைந்த கொலைபாதகர்களுக்காகத் தந்தையிடம் மன்னிப்புக் கேட்கின்றார். நமக்குத் தீமை செய்தவர்களைச் சபிக்கின்றோம்; பழிக்குப் பழிவாங்கத் துடிக்கின்றோம் ஆனால் இயேசுவோ தீமை செய்கிறவர்களுக்காகப் பரம தந்தையிடம் பரிந்து பேசுகிறார். இயேசுவைப் பின்பற்றி நம் பகைவர்களை மன்னித்து, அவர்கள் புரிந்த குற்றங்களை மறந்து, அவர்களுக்கு நன்மை செய்வோம். பிறர் குற்றங்களை மனத்திலே நீண்டகாலம் வைத்திருந்தால், நமது மனம் புண்ணாகிச் சீழ்வடியும். நாம் குணமடைய பிறருடைய பிழைகளை மன்னிப்பது அவசியமாகும், "உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்” (லூக் 6:27), "இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்,”

2. இரண்டாம் முத்து "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” (லூக் 23:43).

இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட இருகள்வர்களில் ஒருவர் இயேசுவிடம், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்று மன்றாடினான். இயேசுவின் அரசு ஒருநாள் நிறைவாக வரும் என்று அவன் நம்பினான். இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார்.
வாழ்நாள் முழுவதும் கொலையும் களவும் செய்த கள்வனுக்கு இயேசு பேரின்ப வீட்டை வாக்களிக்கிறார். இவ்வாறு அவனுக்கு நம்பிக்கை அளித்து, அவன் மூலமாக நமக்கும் நம்பிக்கை அளிக்கிறார்,
ஒருவர் தமது வாழ்க்கையில் எந்தக் கட்டத்திலும் மனம் மாறலாம் எனக்கு வயதாகிவிட்டது: நான் பாவப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன், இனி என்னைத் திருத்திக்கொள்ள முடியாது, எனது வாழ்ககை அஸ்தமாகிவிட்டது; எனக்கு இனி விடியல் இல்லை என்று அவநம்பிக்கை அடையக்கூடாது. இயேசுவிடம் சென்று, இதயம் திறந்து பேசுவோம். அவர் நிச்சயமாக நமது குணத்தை மாற்றி, வாழ்வை மாற்றுவார். நமக்குப் புதுப் பொலிவும் வலிவும் கிடைக்கும். "நம்பிக்கை வேண்டும் நம் வாழ்வில். இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்,"

3. மூன்றாம் முத்து 'அம்மா, இவரே உம் மகன்; இவரே உம் தாய்" (யோவா 19:26)

இயேசு தமது இறுதிக்களி இரத்தம்வரை சிந்தி எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டார். அவருடைய ஆடைகளைப் படைவீரர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். எஞ்சி இருந்தது சிலுவை அருகில் நின்று கொண்டிருந்த அவரது தாய் மட்டுமே. அத்தாயையும் "இதே உம் தாய்" என்று கூறி யோவாளிடம் ஒப்படைத்து, அதன் மூலம் அத்தாயை உலக மக்கள் அனைவாக்கும் தாயாகத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார். யோவான் மரியாவை ஏற்றக்கொண்டதுபோல, நாமும் அவரை நம் தாயாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், இயேசுவின் உயிலை, இறுதி விருப்பத்தை நாம் ஏற்றக்கொள்ளாதவர்கள் ஆகிறோம். இயேசு தம்மையும் தமது தாயையும் நமக்களித்ததுபோல், நாமும் நமக்குள்ள அனைத்தையும் பிறர்க்கு அளிக்க முன்வர வேண்டும்.

4. நான்காம் முத்து “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?"

இயேசு சிலுவையில் அடைந்த கொடிய வேதனை, எல்லாராலும் தனிமைப்படுத்தப்பட்டது "எல்லாரும் என்னைவிட்டு ஓடிவிடுவீர்கள். இருப்பினும் நான் தனியாக இல்லை. என் தந்தை என்னோடு இருக்கிறார்” என்று ஆணித்தரமாகக் கூறிய இயேசு "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று எவ்வாறு கூறலாம்? இயேசு கூறிய இவ்வாக்கியம் திருப்பா 22-இன் தொடக்கம். இத்திருப்பாவில் கூறப்பட்டது அவரில் நிறைவேறியது. அவர் இத்திருப்பா முழுவதையும் சொல்லிச் செபித்திருப்பார். இத்திருப்பா அவநம்பிக்கையின் வெளிப்பாடு அல்ல, மாறாக நம்பிக்கையின் வெளிப்பாடு.
நம் வாழ்க்கையில் நாம் எல்லாராலும் ஏன் கடவுளாலும்கூட கைவிடப்பட்ட ஒரு கசப்பான உணர்வை அடையலாம், ஆனால் நாம்ஒருபோதும் அவநம்பிக்கை அடையலாகாது. "அடிப்பவரும் அவரே. அணைப்பவரும் அவரே, காயப்படுத்துகிறவரும் அவரே, காயத்தைக் குணப்படுத்துபவரும் அவரே" என்ற மன உறுதிப்பாடு தமக்கு வேண்டும்.

5. ஐந்தாம் முத்து "நான் தாகமாயிருக்கிறேன்" (யோவா 19:28)

"யாராவது தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும், என்னில் நம்பிக்கை கொள்பவன் குடிக்கட்டும்.* மற்றவர்களின் தாகத்தைத் தனளிக்க வந்த இயேசு தமது தாகத்திற்குத் தண்ணீர் கேட்கிறார், அவரது தாகம் உடல் தாகம் என்பதைவிட, இதயத் தாகம், ஆன்மத் தாகமாகும். அனைவரையும் மீட்க வேண்டும் என்ற தாகம். அவருக்குப் கசப்பு கலந்தக் காடியைக் கொடுத்தார்கள், ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை, இயேசுவின் தாகத்தைத் தணிக்க வேண்டுமென்றால், தண்ணீர் இல்லாமல் தவிப்போர்க்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும். "தாள் தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்."

6. ஆறாம் முத்து "எல்லாம் நிறைவேறிற்று” (யோவா 19:30)

இயேசு எந்த நோக்கத்திற்காக இவ்வுலகத்திற்கு வந்தாரோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. சிலுவைச் சாவின் வழியாக அவர் உலகை மீட்க வேண்டுமென்ற கடவுளுடைய திட்டத்தை நிறைவேற்றிய நிலையில் "எல்லாம் நிறைவேறிற்று" என்று மறைநூல் நிறைவேறும் வண்ணம் மனநிறைவுடன் கூறினார். அவருடைய பகைவர்கள் அவருடைய சாவுடன் அவர் கதை முடிந்துவிட்டது என்று அக்களித்தனர். ஆனால் இயேசுவோ தமது சாவால், *எல்லாம் நிறைவேறிவிட்டது, அதாவது, முழுமை பெற்றுவிட்டது" என்று பெருமிதத்துடன் கூறுகின்றார், கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள கடமையைச் செய்து முடிக்கும்போது, நாமும், "எல்லாம் நிறைவேறியது” என்று மன நிறைவுடன் கூறமுடியும்.
மனிதரின் பார்வையில் இயேசுவின் இறப்பு ஒரு படுதோல்வி; ஆனால் கடவுளின் பார்வையில் அது மாபெரும் வெற்றி. அவ்வாறே, நமது வாழ்வும் மனிதரின் பார்வையில் ஒரு படுதோல்வியாகக் காட்சி அளிக்கலாம், ஆனால் கடவுளோடு இணைந்து நமது கடமையைச் செய்யும்போது, தோல்வியும் வெற்றியாக மாறும். பிறர்க்காக நாம் வாழும்போது, நமது சாவு முடிவில்லா வாழ்வாகிறது.

7. ஏழாவது முத்து "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" (லூக் 23:46).

இயேசு உயிர் விட்டபோது கதிரவன் ஒளி கொடுக்க மறுத்துவிட்டது; புவியெங்கும் இருள் பரவியது: கற்பாறைகள் வெடித்தன; நிலம் நடுங்கியது. இயற்கையின் தலைவர் இறப்பதைக் கண்டு இயற்கையே அழுதது. இயேசுவின் சாவை ஒரு சிலர் வேடிக்கைப் பார்த்தனர்; ஒருசில பெண்கள் அழுதனர், ஒரு சிலர் மார்பில் அறைந்து கொண்டனர். ஆனால் இயேசுவோ, ஒரு குழந்தை தன் தாயின் மடியில் கண்மூடி அமைதியாய் உறங்குவதுபோல, கடவுளின் கரங்களில் தமது ஆவியை ஒப்படைத்து இறுதி மூச்சை விடுகிறார். நாமும் கடவுளின் அரவணைப்பில் உயிர் விடும் வரம் வேண்டுவோம்,
இயேசு உயிர் நீத்ததைக் கண்ட, சிலுவை அடியில் நின்ற நூற்றுவர் தலைவன், "உண்மையில் இவர் கடவுளின் மகன்" என்று அறிக்கையிட்டார், நாமும் அவருடன் சேர்ந்து விசுவாச அறிக்கையிடுவோம். இயேசுவின் சாவு கடவுளின் சாவு: இயேசுவின் சாவு மனிதரின் மீட்பு.






நமக்காகப் பலியான இயேசு

அருள்பணி மரிய அந்தோனிராஜ்

ஜப்பானில் உள்ள கடற்கரைக் கிராமம் அது. அந்தக் கிராமத்தில் நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் எல்லாம் அடிக்கடி ஏற்படும். மக்களும் அவையெல்லாம் தங்களுடைய வாழ்வில் ஓர் அங்கம் என்பதுபோல் வாழப் பழகிக்கொண்டார்கள்.
இவற்றுக்கிடையில் ஒருநாள் அந்தக் கிராமத்தில் இருந்த மலை உச்சியில் நெல் பயிரிட்டு சாகுபடி செய்துவந்த பெரியவர் ஒருவர் கடல் நோக்கி தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்தார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை ஒரு கணம் நிலைகுலைய வைத்தது. ஏனென்றால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடலில் அலைகள் கொந்தளித்துக் கொண்டு வந்தன. உடனே அந்தப் பெரியவர் ‘இச்செய்தியை மக்களுக்கு எப்படியாவது அறிவிக்கவேண்டும், இல்லையென்றால் கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்து மக்கள் எல்லாரையும் கொன்றொழித்துவிடும்’ என்று யோசித்தவாறு, பரபரப்பானார். பின்னர் ஏதோ சிந்தனைவயப்பட்டவராய், ஒரு தீப்பந்தத்தைப் பொருத்தி, தனது வயலுக்குத் தீ வைத்தார். அவர் வைத்த தீயில் வயல் கொழுத்துவிட்டு எரிந்தது.
இதனைக் கீழேயிருந்து பார்த்த மக்கள், வாளியில் நீரை ஏந்திக்கொண்டு தீயை அணைப்பதற்காக மேலே ஓடிவந்தார்கள். எல்லாரும் மேலே ஓடி வருவதற்குள் வயற்காடு முழுவதும் எரிந்து சாம்பலாயிருந்தது. வந்தவர்கள் அனைவரும் அந்தப் பெரியவரிடம், “வயலில் எப்படி தீப்பற்றியது?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெரியவரோ, “நான்தான் தீ வைத்தேன்” என்றார். அவர் எதற்காகத் தீ வைத்தார் என்று சொல்வதற்குள் மக்கள் அனைவரும், “இந்த ஆள் சரியான லூசாக இருப்பாரோ” என்று திட்டத்தொடங்கினார்கள். அவர் அவர்களை அமைதிப் படுத்திவிட்டு தொடர்ந்து பேசினார், “நான் காரணமில்லாமல் என்னுடைய வயலைக் கொழுத்தவில்லை... தொலைவில் பாருங்கள். கடல் அலைகள் எப்படி கொந்தளித்துக் கொண்டு வருகிறன என்பதை. நான் உங்கள் அனைவரையும் இந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற நினைத்தேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் நான் என்னுடைய வயலைக் கொழுத்தி, உங்களை இந்த மலை உச்சிக்குக் கொண்டு வந்தேன்”.
பெரியவர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே கொந்தளித்துக் கொண்டு வந்த கடல் அலைகள் ஊருக்குள் புகுந்து, வீடுகளையெல்லாம் தரைமட்டம் ஆக்கிவிட்டு, வந்த வேகத்தில் அப்படியே திரும்பிச் சென்றது. இதைப் பார்த்த மக்கள் அனைவரும், மிகப்பெரிய அழிவிலிருந்து தங்களைக் காப்பாற்றிய அந்த பெரியவருக்கு பெரிய நன்றிசொல்லிவிட்டு கீழே இறங்கிச் சென்றார்கள்.
ஊர் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, தன்னுடைய வயலையே தீயிட்டுக் கொழுத்திய பெரியவரைப் போன்று, நம் ஆண்டவர் இயேசுவும் நாம் அனைவரும் வாழ்வு பெறும்பொருட்டு தன்னையே சிலுவையில் கையளித்தார். அந்த நிகழ்வினைத்தான் இன்று நாம் அனைவரும் ‘பெரிய வெள்ளியாக’ நினைவுகூர்ந்து பார்க்கின்றோம். ஆண்டில் எத்தனையோ வெள்ளிகள் வந்தாலும், ஆண்டவர் இயேசு மரித்த வெள்ளி போன்று வராது என்பதால்தான் இதனை பெரிய வெள்ளி என்று சிறப்பித்துக் கொண்டாடுகின்றோம்.
ஆண்டவராகிய கடவுள் இந்த உலகின் மேல்கொண்ட பேரன்பினால் மக்களை பாவத்திலிருந்தும் சாவின் பிடியிலும் மீட்க நினைத்தார். அதற்காக தன்னுடைய ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை இந்த உலகிற்கு அனுப்பினார். இயேசுவோ தன்னுடைய பாடுகளாலும் சிலுவைச் சாவினாலும் தந்தைக் கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேற தன்னை முற்றிலும் கையளித்தார். ஆகவே, இயேசு பாடுகள் பட்டதும் கொடிய சிலுவைச் சிலுவைச் சாவை அனுபவித்ததும் நம்மீது கொண்ட அன்பினால்தான் என நாம் உறுதியாகச் சொல்லலாம். இதைத் தான் இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில், “அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிலைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்” என்கின்றார்.
இயேசு நமக்காக பாடுகளையும் துன்பங்களையும் பட்டதுபோன்று, நாமும் ஒருவர் மற்றவருக்காக, இந்த மானுட விடியலுக்காக துன்பங்களைத் துணிவோடு ஏற்க என்பதைத்தான் இந்த நாள் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நாம் பிறருக்காக, நாம் மானுட விடியலுக்காக துன்பங்களை ஏற்றுக்கொள்ள முன்வருகின்றோமா? அல்லது நாம் உண்டு, நம்முடைய வேலையுண்டு, குடும்பமுண்டு என்று இருக்கின்றோமா? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
வள்ளலார் ஒருமுறை குறிப்பிடுவர், “அடுத்தவரின் துன்பம் தீர்க்கத் துடிக்கும் அருட்கருணையே உண்மையான மனித நேயம்” என்று. நாம் இயேசு கிறிஸ்து போன்று மனிதநேய மிக்கவர்களாக வாழ, அவரைப் போன்று அடுத்துவரின் துன்பம் துடைக்க முயற்சி செய்வோம். இறைத்திருவுளம் நிறைவேற நம்மையே முற்றிலும் கையளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



இதோ மனிதன்!

அருள்பணி  ஏசு கருணாநிதி


'இயேசு முள்முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார்.

பிலாத்து அவர்களிடம், 'இதோ! மனிதன்!' என்றான்.' (யோவான் 19:5)

இன்று நாம் வாசிக்கக் கேட்ட யோவான் நற்செய்தியாளர் எழுதிய பாடுகளின் வரலாற்றில் மையமாக இருப்பவை 'இதோ! மனிதன்' என்னும் இரண்டு வார்த்தைகள்தாம். கிரேக்கத்தில் 'இட்து ஹோ ஆன்த்ரபோஸ்' என இருக்கின்றது. 'மனிதன்' என்ற வார்த்தை தமிழில் 'ஆண்' என்று பாலினத்தை வேறுபடுத்துகிறது. ஆனால், கிரேக்கத்தில் இது பொதுவான பாலினம். ஆக, 'மனிதன்' என்ற இந்த வார்த்தை பெண் பாலினத்தையும் தன்னகத்தை வைத்துள்ளது என்பதை மனதில் கொள்வோம்.

யோவான் நற்செய்தி நூலில் யாரெல்லாம் இயேசுவைச் சந்திக்கிறார்களோ அவர்கள் எல்லாருமே இயேசுவைப் பற்றிய அறிக்கையையும் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக,

'இதோ, கடவுளின் ஆட்டுக்குட்டி!' என்கிறார் திருமுழுக்கு யோவான் (யோவா 1:36)

'ரபி, நீர் இறைமகன். நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்' என்கிறார் நத்தனியேல் (1:49)

'ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர்' என்கிறார் நிக்கதேம் (3:2)

'இவர் மெசியாவாக இருப்பாரோ' என்கிறார் சமாரியப் பெண் (4:29)

'ஆம் அண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர்' என்கிறார் மார்த்தா (11:27)

இந்த வரிசையில் பிலாத்து செய்யும் அறிக்கைதான், 'இதோ! மனிதன்!'

இந்த இரண்டு வார்த்தைகளை நாம் இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

பிலாத்துவின் இந்த அறிக்கை இயேசுவின் பாடுகள் வரலாற்றில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், பிலாத்து இப்படி சொல்லி முடித்தவுடன், 'சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்!' என மக்கள் குரல் எழுப்புகின்றனர். அதன் பின் நிகழ்வுகள் வேகமாக ஓடுகின்றன.

பிலாத்துவின் இந்த வார்த்தைகளை நாம் இரண்டு விதங்களில் புரிந்துகொள்ளலாம்:

அ. படைப்பு மற்றும் மீட்பின் துவக்கம்

படைப்பின் தொடக்கத்தில் விண், மண், கதிரவன், நிலவு, கடல், தாவரம், உயிரினம் என உலகைப் படைத்து அணி செய்த கடவுள் இறுதியாக ஆதாமைப் படைத்து இவ்வுலகில் வைத்தபோது, 'இதோ! மனிதன்!' என்கிறார். படைப்பு அப்போதுதான் அழகும் நிறைவும் பெறுகிறது. இவ்வாறாக, படைப்பின் சிகரமாக, மாண்பாக மனிதன் படைக்கப்படுகின்றார். அங்கே கடவுள், 'இதோ! ஆண்!' என்று சொல்லவில்லை. மாறாக, 'இதோ! மனிதன்!' என்று ஆண், பெண், மூன்றாம் பாலினம் என அனைத்தையும் ஒற்றைச்சொல்லில் சொல்லிவிடுகின்றார்.

'இதோ! மனிதன்!' - இனி இவன் இந்த உலகைப் பார்த்துக்கொள்வான் என்று கடவுள் முன்மொழிகின்றார். மனிதன் படைக்கப்பட்டவுன் படைப்பு உயிர்கொண்டு இயங்க ஆரம்பிக்கிறது.

அன்று கடவுள் செய்ததுபோலவே, இன்று பிலாத்து மீட்பு என்ற இரண்டாம் படைப்பைத் தொடங்கி வைக்கின்றார். அங்கே முதல் ஆதாம் 'இதோ மனிதன்' என்று காட்டப்பட்டார். இங்கே இரண்டாம் ஆதாம் அப்படியே காட்டப்படுகின்றார். 'இதோ மனிதன்' என்று இயேசு முன்வைக்கப்பட்டவுடன் மீட்பின் இயக்கம் உயிர்பெறுகிறது.

ஆ. நிர்வாணம்-வெறுமை-தனிமை-கையறுநிலை

'இதோ மனிதன்' - என்னும் வார்த்தைகள் மிகவும் சோகமான வார்த்தைகள். இந்த வார்த்தை நம் எல்லாருக்கும் பொருந்தும். மருத்துவமனையில் சிகிச்சைக்காக யாரும் உடனில்லாமல் படுத்திருக்கும்போது, கையில் காசு இல்லாமல் வயிற்றில் பசியோடு ஓட்டலைக் கடந்து செல்லும்போது, நீண்டதூர பயணத்தை தனியாக மேற்கொள்ளும்போது, திருமணம் நடக்கும்போது, அருள்பணி மற்றும் துறவற வாழ்விற்குள் அடியெடித்து வைக்கும்போது என வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும், இந்த உலகமே நம்மை பார்த்து 'இதோ மனிதன்' என்று சொல்வதாக நாம் உணர்ந்திருப்போம்.

'இதோ மனிதன்' என்பது பிலாத்து பயன்படுத்தும் உச்சகட்ட கேலிச்சொல். எப்படி? யோவா 18:28-40ல் இயேசுவை, 'இதோ அரசன்' என்று சொல்லி மக்கள் பிலாத்துவிடம் கையளிக்கிறார்கள். யோவா 19:7ல் இயேசுவை, 'இதோ இறைமகன்' என்று மக்கள் சொல்கிறார்கள். ஆக, மக்களின் இந்த இரண்டு சொற்களையும் கேலி செய்து, 'இதோ மனிதன்' என்கிறார் பிலாத்து.

'அரசன் என்றால் இயேசு தனக்காக போரிட்டிருக்கலாம்!' 'இறைமகன் என்றால் பிலாத்து உட்பட அங்கே கூடியிருக்கிற எல்லா மக்களையும் அழித்திருக்கலாம்!' என்ற நினைப்பில் பிலாத்து இயேசுவை வெறும் 'மனிதன்' என்று சொல்கின்றார். இது இயேசுவைச் சீண்டிப் பார்க்கும் வார்த்தையாகவும் இருக்கிறது. பாலைநிலத்தில் 'நீ இறைமகனாய் இருந்தால்' என அலகை இயேசுவைச் சோதிக்கின்றான். இங்கே பிலாத்து, 'நீ மனிதன்தான்! நீ வேறொன்றுமில்லை! ரொம்ப ஆடாத!' என்று இயேசுவிற்கு கோபமூட்டி அவரைச் சோதிக்க நினைக்கின்றார் பிலாத்து.

'இதோ மனிதன்' என்ற பிலாத்துவின் வார்த்தை ஒரே நேரத்தில் இயேசுவின் நிர்வாணம், வெறுமை, தனிமை, மற்றும் கையறுநிலையைக் காட்டுகின்றது. 'இதோ மனிதன் - இவரை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்' என்று இயேசுவை மக்கள் கூட்டத்திடம் கையளிக்கின்றார் பிலாத்து. தான் மனுவுரு எடுத்த வலியைவிட இயேசுவுக்கு இந்த வலிதான் அதிகமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

இவ்வாறாக, 'இதோ மனிதன்' என்ற சொல்லாடல் ஒரே நேரத்தில் நம் மாண்பையும், நம் கையறுநிலையையும், நம் அழகையும், நம் அழுகையையும், நம் மதிப்பையும், நம் அவமானத்தையும் சொல்லிவிடுகிறது.

இதுவே வாழ்வின் மறைபொருளும்கூட.

சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்ப்பார் என்று வேகமாக நம்பிக்கை செய்தியைச் சொல்லிவிட வேண்டாம். ஏனெனில், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவும் நம் நம்பிக்கையே. உயிர்ப்பின் நம்பிக்கையைவிட சிலுவைதரும் நம்பிக்கை ஆழமானது.

'இதோ மனிதன்' என்று நாம் உணர்ந்த நேரங்களையும், நம்முன் நம் சக மனிதர்கள் உணரும் நிகழ்வுகளையும் எண்ணிப்பார்ப்போம். இந்த நிலையில் நாம் மௌனம் மட்டுமே காட்ட முடியும்.

அந்த மௌனத்தில் நாம் மெய்ஞ்ஞானம் பெறுவோம்.


புனித வியாழன்

பெரிய வியாழன்
இன்றைய வாசகங்கள்
விப 12:1-8; 1 கொரி 11:23-26; யோவா 13:1-15
வழிபாட்டு நிகழ்வுகளுக்கு அன்பின் மடல் இணயத் தளத்த்தைப் பார்வையிடவும்


மறையுரை மொட்டுக்கள்

அருள்பணி Y.இருதயராஜ்


ஒரு சிறுவன் தன் அப்பாவிடம், "அப்பா! காக்கா கத்தினால் விருந்தாளிகள் வருவார்களா?" என்று கேட்டான். அப்பா அவனிடம். "ஆமா, காக்கா கத்தினால் விருந்தாளிகள் வருவார்கள். உன் அம்மா கத்தினால், வந்த விருந்தாளிகள் போய்விடுவார்கள்' என்றார். விருந்தோம்பல் சிறந்த நற்பண்பு, திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்" (உரோ 12:13). நமக்குள்ள உணவை பலருடன் பகுத்து உண்பது தலையாய அறம் என்கிறார் வள்ளுவர்.
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள் 322)

கிறிஸ்து உணவுத் தோழமையைப் பெரிதும் விரும்பினார், ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கும் (மத் 14:13-21), ஏழு அப்பங்களைக் கொண்டு நாலாயிரம் பேருக்கும் (மத் 15:32-39) உணவு அளித்தார். அனைவரும் வயிராற உண்டனர். வரி தண்டுவோரான மத்தேயு வீட்டில் பலருடன் சேர்ந்து விருந்துண்டு மகிழ்ந்தார், சீமோன் வீட்டில் உணவு அருந்தினார் (லூக் 7:36). வரிதண்டுவோரின் தலைவரான சக்கேயு வீட்டில் விருந்துண்டார் (லூக் 19:1-10).

தம் சீடர்களோடு இறுதிப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிகமிக ஆவலாய் இருந்தார் (லூக் 22:15). சீடர்களுடன் பந்தியில் அமர்ந்திருந்த போதுதான் அவர் புதிய உடன்படிக்கையின் அன்பு விருந்தாகிய நற்கருணையை ஏற்படுத்தி, அதைத் தம் நினைவாகச் செய்யும்படி சீடர்களிடம் கேட்டுக் கொண்டார் (லூக் 22:19-20).

பெரிய வியாழன் ஆகிய இன்று கிறிஸ்து திருச்சபைக்கு நற்கருணைத் திருவிருந்தை அளித்ததை நன்றியுடன் நினைவுகூர்கிறோம். இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தாதர் பவுல் ஆண்டவரின் திருவிருந்தைப்பற்றிய தொன்மை வாய்ந்த மரபை நமக்கு விவரிக்கின்றார் (1 கொரி 11:23-26).


அன்பின் அருளடையாளமாகிய நற்கருணை உலகிற்காகப் பிட்கப்படும் அப்பம்; அன்பின் மூலக் கூறு பகிர்வு, கிறிஸ்து தம்மையே பிட்டுக் கொடுத்தார், 'அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள்." கிறிஸ்து தம்மையே பிழிந்து கொடுத்தார். "அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள்."


முதல் கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் 'அப்பம் பிட்டனர்', அதாவது, நற்கருணை விருந்தில் பங்கேற்றனர் (திப 2:46), அதே நேரத்தில் வீடுகளிலும் அப்பத்தைப் பிட்டு, மனமகிழ்வோடும் கபடற்ற உள்ளத்தோடும் பகிர்ந்து கொண்டனர் (திப 2:26), அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை. எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை (திப 4:32,34). இவ்வாறு அவர்கள் பொதுவுடமை வாழ்க்கை நடத்தினர். 


திருச்சபை ஒரு சமத்துவபுரமாகத் திகழ, அதில் சமபந்தி நடைபெற்றது. கிறிஸ்தவர்களுடைய வாழ்வுக்கும் வழிபாட்டுக்கும் இடையே எத்தகைய முரண்பாடும் இல்லை. வாழ்க்கை வழிபாடாகவும், வழிபாடு வாழ்க்கையாகவும் மாறியது. தொடக்கக்காலச் கிறிஸ்தவர்கள் நடத்திய அன்பு வாழ்க்கையை இன்றைய அன்பியங்கள் பிரதிபலிக்கின்றன. இக்கால அன்பியங்களில் இறைவார்த்தையைப் பகிர்கின்றனர். ஆனால் உணவை, குறிப்பாக ஏழைகளுடன் பகிர்கின்றார்களா என்பது பெரிய கேள்விக் குறியாக உள்ளது.

ஆதிக் கிறிஸ்தவர்களிடையே நிலவிய உணவுத் தோழமை வெறும் மனித நேய அடிப்படையில் அல்ல, நம்பிக்கை அடிப்படையில் நடைபெற்றது. ஏனெனில், ஏழைகளில் இயேசு இருக்கின்றார். ஏழைகளுக்கு நாம் உணவு கொடுக்கும்போது இயேசுவுக்கே உணவளிக்கிறோம். “நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்" (மத் 25:35). கிறிஸ்துவின் உடனிருப்பை நற்கருனையில் மட்டுமல்ல, ஏழை எளியவர்களிடத்திலும் காணவேண்டும். ஏழைகளின் உடலிலும் இரத்தத்திலும் உள்ள கிறிஸ்துவை மதிக்காதவர், நற்கருணையில் உள்ள இயேசுவை மதிக்க முடியாது,


பணக்காரர் ஒருவர் வாழைப் பழத்தைத் தின்று அதன் தோலைச் சன்னல் வழியாக வீசி எறிந்தார். அத்தோலை எடுத்துத் தின்ற ஒரு பிச்சைக்காரனை அவன் முதுகில் தொடர்ந்து குத்தினார். அப்பிச்சைக்காரன் சிரித்துக்கொண்டு, “தோலைத் தின்னவனுக்கு இந்தத் தண்டனை என்றால், பழத்தைத் தின்னவனுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ?" என்றான். ஏழைகளுக்கு உணவளிக்காதவர்களுக்கு நரகத் தண்டனை காத்திருக்கிறது (மத் 25:41 - 45).
பிச்சை கேட்பவர்களுக்கு பிச்சை கொடுக்கும் நல்ல உள்ளத்தையும், அவ்வாறு கொடுக்காமல் உணவைப் பதுக்கி வைப்பவர்களுக்கு நரகத்தையும் கடவுள் வைத்திருக்கிறார் என்று பாடியுள்ளார் அப்பர் அடிகளார்.


“இரப்பவர்க்கு ஈய வைத்தார்;
கரப்பவர்க்கு கடும் நரகம் வைத்தார்."



மகிழ்ச்சியூட்டும் மறையுரை

குடந்தை ஆயர் - அந்தோணிராஜ்


நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன் அழுக்காக இருக்கும் பாதங்களைக் கழுவுவது அன்பின் அறிகுறிதானே! (யோவா 13:1-15). பசியாயிருப்பவர்களுக்கு உண்ண உணவும் குடிக்கப் பானமும் தருவது அன்பின் அறிகுறிதானே! (1 கொரி 11:23-26). இறையன்பைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்கும் குருத்துவத்தைக் கொடுப்பது அன்பின் அறிகுறிதானே!


இன்று இயேசு அன்புக்கு இலக்கணம் வகுத்த ஓர் இலக்கியவாதியாக, இலட்சியவாதியாகக் காட்சியளிக்கின்றார். அன்பே உருவான அவர் நம்மைப் பார்த்து: நான் உங்களுக்கு முன் மாதிரி காட்டினேன். நான் செய்தது போலவே நீங்களும் செய்யுங்கள்; நான் அன்பு செய்தது போலவே நீங்களும் அன்பு செய்யுங்கள் என்கின்றார் (யோவா 13:34). இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நாம் பிறரை அன்பு செய்தால் நமக்கு என்ன கிடைக்கும்? என்பதைச் சுட்டிக்காட்ட ஒரு கதை:


ஒருநாள் வானதூதர் ஒருவர் ஒரு பட்டணத்தில் வந்து இறங்கினார். அவரைச் சுற்றி ஒரே கூட்டம். அந்த வானதூதர் அங்கே கூடியிருந்தவர்களைப் பார்த்து: "நான் வேற்றுக் கிரகத்திலிருந்து வந்திருக்கின்றேன். பாலும் தேனும் ஓடும் அதிசய உலகம் அது! அங்கே துன்பம் இருக்காது, துயரம் இருக்காது. அங்கே உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கின்றேன். என் சிறகுகளில் நான்கு பேரை சுமந்து அங்கே செல்ல விரும்புகின்றேன். யாராவது நான்கு பேர் வாருங்கள்” என்றார்.


அந்தக் கூட்டத்திலிருந்த பெரிய பணக்காரன் அவன் செல்வாக்கைப் பயன்படுத்தி சிறகின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். ஏறியதும் கையிலே கட்டியிருந்த தங்கக் கடிகாரத்தை எடுத்து எறிந்துவிட்டு ஒரு பழைய கடிகாரத்தைக் கட்டிக்கொண்டான். வானதூதர், "பற்றற்ற உன் நிலை கண்டு உன்னைப் பாராட்டுகின்றேன்" என்றார். அதற்கு அந்தப் பணக்காரன், "ஐயோ ! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இந்தக் கடிகாரத்துக்குள்ளேதான் சுவிஸ் பேங்க் கணக்கு இருக்கின்றது" என்றான்.


இரண்டாமவன் ஓர் இளைஞன். அவன் கையிலிருந்தது. அவனுடைய அன்புடையாளுக்கு அவன் எழுதிய முதல் அன்புக் கடிதம். மூன்றாமவர் ஒரு தாத்தா. அவர் கையிலே இருந்தது டி.ஏ.எஸ். இரத்தினம் பொடி.
நான்காவதாக ஏற விரும்பியது ஒரு சிறுமி! அவள் கையிலே ஒரு நாய்க்குட்டி! வானதூதர் அந்தச் சிறுமியைப் பார்த்து, ஓர் இடம்தான் இருக்கின்றது! என்றார். அதைக் கேட்டதும் அந்தச் சிறுமி, அப்படியானால் என் நாய்க்குட்டியைக் கொண்டு போ, நான் வரவில்லை என்றாள் சிறுமி.
அதைக் கேட்டதும் அந்த வானதூதரின் சிறகுகள் சிலிர்த்தன! அந்தச் சிலிர்ப்பில் சிறகுகளின் மீதிருந்த மூன்று பேரும் கீழே விழுந்தனர். அந்தச் சிறுமியையும், நாய்க்குட்டியையும் சுமந்து கொண்டு வானதூதர் மேலே பறந்தார்.


நாம் அன்பு செய்தால் நாம் உயரமான இடத்திற்கு, வளமும், நலமும் நிறைந்த புதிய பூமிக்கு அழைத்துச் செல்லப்படுவோம் (மத் 25:31-40).
வாழ்வை இனிதாக்குவது அன்பு. வாழ்க்கையைச் சுவையாக்குவது அன்பு. அழகற்றதை அழகுள்ளதாக்குவது அன்பு. கசப்பானதை இனிப்பாக்குவது அன்பு. தடுமாற்றத்தை அமைதியாக்குவது அன்பு. சுதந்தரத்தைப் பெற்றுத் தருவது அன்பு. எல்லாவற்றையும் அள்ளிக்கொடுப்பது அன்பு. எதிர்நோக்கைவிட உயர்ந்தது அன்பு. நம்பிக்கையைவிடச் சிறந்தது அன்பு. கைம்மாறு கேட்காதது அன்பு. இமயத்தைத் தொடவைப்பது அன்பு.
இறைவனை அடைய வைப்பது அன்பு. இப்படிப்பட்ட அன்பு கேட்பவர்களுக்கு இறைவனால் அருளப்படும் (லூக் 11:9-13). 


மேலும் அறிவோம்:
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு   (குறள் : 347).
பொருள்: அகப்பற்றையும் புறப்பற்றையும் விடாமல் மேற்கொள்வோரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு அவர்களைத் தொடர்ந்து அல்லல்படுத்தி அலைக்கழிக்கும்.

--------------------------------------------------

குன்று நோக்கி

அருள்பணி லூர்துராஜ்-பாளைமறைமாவட்டம்.

தியாகமான பணி


இங்கிலாந்து நாட்டில் ஒரு காதல் இணைக்கு மணஒப்பந்த விழா நடந்தது. நிச்சயம் முடிந்த நிலையில் நாட்டில் எதிர்பாராத போர். எல்லா இளைஞர்களும் போர் முனைக்குச் செல்ல அரசு பணித்தது. மண ஒப்பந்தமாகியிருந்த அந்த இளைஞனும் போக நேர்ந்திட திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.

இளைஞன் கடிதத் தொடர்பு வழித் தன் காதலை வெளிப்படுத்தி வந்தான். மணமகளும் அந்தக் கடிதங்களைப் படித்துப் படித்தே தன் மனத்தில் நிறைந்தவன் விரைவில் வருவான் என்று காத்திருந்தாள்.

திடீரென்று கடிதத் தொடர்பு நின்றுவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கடிதம் வந்தது. முற்றிலும் பழக்கப்படாத கையெழுத்து. “கடுமையான போர் ஒன்றில் என் இரண்டு கைகளையும் இழந்து விட்டேன். என்னால் எழுத இயலாது. ஒரு நண்பரைக் கொண்டு எழுதுகிறேன். நீ எனக்கு மிகமிக அருமையானவள். எனினும் இந்த நிலையில் உன்னை மணந்து கொள்வது என்பது உனக்கு இழைக்கின்ற மிகப்பெரிய கொடுமையாகும். எனவே மணஒப்பந்தக் கட்டிலிருந்து உன்னை மனதார விடுவிக்கிறேன். ஏற்ற ஒரு துணையைக் கண்டு நீ மகிழ்ச்சியோடு இருக்கிறாய் என்ற செய்தியே எனக்கு நிறைவு தரும்",

அடுத்த கணமே அந்த இளம்பெண் புறப்பட்டாள். போர்ப் படை சார்ந்த அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தாள். தன் காதலனைக் கண்டதும் கண்களில் நீர் மல்க அவனைக் கட்டி அணைத்து முத்தமிட்டுச் சொன்னாள்: “உங்களை விடமாட்டேன். இந்த என் இரு கைகளும் உங்கள் கைகளாக இயங்கும்"
என்னே அவளுடைய தியாக அன்பு! இயேசு காட்டிய பேரன்பின் மங்கிய சாயல் அது! மனித அன்புக்கு வரம்பு உண்டு. இறைவன் அன்புக்கு எல்லை ஏது?

"மானிட மகன் தொண்டு ஏற்பதற்கல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்குமே வந்தார்”. (மத்.20:28) “எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" (போ.6:51) என்ற இயேசுவின் கூற்றுக்கள் பெரிய வியாழனன்று இறுதி இரவு உணவுவேளையில் செயல்வடிவம் கண்ட நிகழ்வுகள் தாம். நற்கருணையை நிறுவியதும் சீடர்களின் காலடிகளைக் கழுவியதும். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற இரு வேறு நிகழ்வுகள் அல்ல. ஒரே அர்ப்பண அன்பின் வெளிப்பாடு.
இயேசுவின் அன்புக்கு 2 பக்கங்கள்: 1) தியாகமான பணி, 2. தாழ்ச்சியான பணி.

பணி இணையாத அன்பு போலித்தனம்; அன்பு கலவாத பணி அடிமைத்தனம்! நற்கருணையில் இயேசுவோடு ஒன்றிப்பு என்பது அன்புப் பணியால் மட்டுமே சாத்தியமாகும். அதற்கு இன்றைய வழிபாடு கொடுக்கும் அழைப்பு, விடுக்கும் சவால்:

- நற்கருணையாக வாழுங்கள் (Be Eucharists) - பணியாளர்களாகச் செயல்படுங்கள் (Be Servants)
நற்கருணையில் இது இயேசுவின் உடல், இது இயேசுவின் இரத்தம் என்று அன்று, இது எனது உடல் என்று நொறுக்கப்படும். இது எனது இரத்தம் என்று சிந்தப்படும். இது குரு என்ற தனி மனிதனின் வார்த்தை அன்று. இயேசுவின் மறைஉடலான திருச்சபையின் வார்த்தை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த கல்வாரிப் பலிக்கும், அதன் மறுபதிப்பாக இன்று ஆலயப் பீடத்தில் நடைபெறும் திருப்பலிக்கும் முக்கிய வேறுபாடு உண்டு. அங்கே இயேசு தனியாகத் தனது ஊனுடலில் பலியானார். அது இயேசுவின் பலி. இங்கோ தனது மறையுடலில் பலியாகிறார். அதாவது இயேசு நம்மில் பலியாகிறார். நாம் இயேசுவில் பலியாகிறோம். எனவே இது நமது பலி. இந்த உண்மைக்கு நம் வாழ்வில் எப்படிச் செயல் வடிவம் கொடுக்கிறோம்?

என் உடலை உண்டு என் குருதியைக் குடியுங்கள் என்று இயேசு சொன்னதும் கசாப்புக் கடைதான் யூதர்களின் நினைவுக்கு வந்தது. இன்றுகூட இயேசுவின் உடல் குருதி என்றதும் அப்பமும் இரசமும் மட்டும் தானே நம் நினைவுக்கு வருகின்றன. அதோடு சேர்ந்து மண்ணில் வதைக்கப்படுவோரின் சிதைத்த உடலும் சிந்தும் இரத்த வியர்வையும் நம் உணர்வுகளில் எழுந்தால் அப்போது வாழ்வோடு இணைந்த பலியாகும்.


"ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றொருவருடைய காலடிகளைக் கழுவ கடமைப்பட்டிருக்கிறீர்கள்” (யோ.13;14) என்றார் இயேசு. இந்த நிகழ்வில் பேதுரு தயங்கினார். தன் தகுதியற்ற நிலையை வெளிப்படுத்தினார். யூதாசு தயங்கவில்லை. மறுப்புச் சொல்லவில்லை. இயேசு அந்தத் துரோகியின் காலடிகளையும் கழுவினார். அப்படி ஒரு தியாகமான, தாழ்ச்சியான பணிக்காகவே அந்த இரவில் பணிக் குருத்துவத்தை ஏற்படுத்தினார்.

இயேசுவின் திருச்சபையில் தலைமை என்பது தொண்டு (மார்க்.10:41-45). பதவி என்பது பணி என்பது மறைந்து, பணி ஒரு பதவியாகி விட்ட காலம் இது. “குருக்கள் தங்களைப் பணியாளர்கள் என்று இப்போது கூறிக் கொள்வது ஒரு மாய்மாலம், ஒரு பாசாங்கு என்றே எனக்குப் படுகிறது. குருக்களிடையே நிலவும் பதவிப் போட்டி அப்படி ஒன்றும் பரமரகசியம் அல்ல" என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டது நெஞ்சத்தை வேல் கொண்டு குத்துகிறது.
என் கடன் பணி செய்து கிடப்பதுவே யல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே என்றார் தாயுமானவர். 


எவ்வாறு நற்கருணையில் இயேசு உடனிருந்து நமக்கு உணவளிக்கிறோரோ, அதேபோன்று நாமும் வாழ்விழந்து தவிப்பவர்களோடு உடனிருந்து, பயணித்து உயிரளிக்கும் ஆற்றலாக மாறுவோம்.




உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்

 அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை


நற்கருணை, பணிக்குருத்துவம், அன்புக் கட்டளை - இந்த மூன்றையும் இன்றைய நாளில் கொண்டாடுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு வினைச்சொற்கள் இரண்டு முறை கையாளப்படுகின்றன: 'அறிதல்', 'புரிதல்.'

அ. தன் நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருக்கிறார் (13:1)
ஆ. அனைத்தையும் தந்தை தன் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் அறிந்திருக்கிறார் (13:3)
அ. நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது. பின்னரே புரியும். (13:7)
ஆ. நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? (13:12)

'அறிதல்' எப்போதும் இயேசுவுக்கு மட்டுமே சாத்தியமாகிறது. புரிதல் எப்போதும் நமக்கு தாமதமாகவே நடக்கிறது.

நற்கருணை, குருத்துவம், அன்பு - இந்த மூன்றையும் அறிந்தவர் இயேசு. இது இறுதிவரை நமக்குப் புரிந்தும் புரியாமலும் இருப்பதே வாழ்வியல் எதார்த்தம்.

இந்த மூன்றையும் இணைக்கின்ற மூன்று வாழ்க்கைப் பாடங்களை இன்றைய நாள் நமக்குக் கற்றுத்தருகிறது:

1. 'தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார்'

இந்த வரி உண்மையிலேயே எனக்கு ஆச்சர்யம் தருகிறது. அதாவது, இயேசுவைச் சுற்றி இன்னும் சில மணி நேரங்களில் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். இருந்தாலும் அவரிடம் 'அனைத்தும் தம் கையில் உள்ளன' என்ற நிறைவு மனப்பான்மை இருக்கிறது.

ஒரு ஊரில் ஏழை ஒருவன் இருந்தானாம். அவனுக்கு நிறைய தங்கக் காசுகள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. அவனது ஆசையை நிறைவேற்ற நினைக்கின்ற தேவதை ஒரு பை நிறைய தங்கக்காசுகளை அவனது வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டு மறைந்துவிடுகிறது. காலையில் துயில் எழுந்து கதவு திறக்கும்போது இவனது கண்களில் அந்தப் பை படுகின்றது. வேகமாக பையை எடுத்து வீட்டிற்குள் ஓடி நாணயங்களைக் கொட்டி எண்ணுகின்றான். '99 நாணயங்கள்' இருக்கின்றன. அவனுக்குள் சின்ன நெருடல்: '100 நாணயங்கள் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே!' 'அந்த 100வது நாணயத்தை ஒருவேளை பக்கத்து வீட்டுக்காரன் எடுத்திருப்பானோ?' 'வீடு பெருக்க வந்த மனைவி எடுத்திருப்பாளோ?' அல்லது 'மகன் எடுத்திருப்பானோ' அவனுடைய மகிழ்ச்சி கொஞ்ச நேரத்தில் மறைந்துவிடுகிறது. தன்னிடம் இருக்கின்ற ஒன்றை மறைந்து இல்லாத ஒன்றை கற்பனை செய்து வாழ்தல் நமக்குள் குறைவு மனப்பாங்கை உருவாக்கிவிடுகிறது.

தன்னிடம் உள்ளது அனைத்தும் எடுக்கப்படும் என்பதை இயேசு அறிந்திருந்தும் எப்படி அவரால் தன் கையில் தந்தை அனைத்தையும் ஒப்படைத்துள்ளார் என்று நினைக்க முடிந்தது. இதுதான் உண்மையான மனச்சுதந்திரம் அல்லது கட்டின்மை. இயேசு ஒருபோதும் குறைவு மனப்பான்மை கொண்டிருக்கவில்லை. ஆகையால்தான் யாரையும் அவரால் குறைத்துப் பார்க்க முடியவில்லை.

நற்கருணை - இங்கே அப்பத்திலும், இரசத்திலும் இறைமை நிறைகின்றது.
குருத்துவம் - 'எனக்கு எதுவுமே வேண்டாம்' என முன்வரும் அருள்பணியாளர் தன் நிறைவை இறைவனில் காண்கின்றார்.
அன்பு - அடுத்தவரிடம் நிறைவை பார்க்கிற அன்பு மட்டுமே நீண்ட பயணம் செய்கிறது.

2. தற்கையளிப்பு

தன்னிடம் அனைத்தும் கையளிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்கின்ற இயேசு அப்படியே தன்னிடம் உள்ளது அனைத்தையும் இழக்கின்றார். தன்னிடம் உள்ளது அனைத்தையும் அவர் இழந்தாலும் தன்னிடம் நிறைவு இருக்கும் என்ற மனநிலையில் இருந்தார் இயேசு.

யோவான் நற்செய்தியாளர் மட்டும் இயேசு நற்கருணையை ஏற்படுத்தும் நிகழ்வை பதிவு செய்யாமல் விடுகின்றார். அல்லது மற்ற நற்செய்தியாளர்கள் அப்பம், இரசம் கொண்டு நற்கருணையை ஏற்படுத்த யோவான் மட்டும் அதை தண்ணீர்-துண்டு என மாற்றிப் போடுகின்றார்.

பந்தியிலிருந்து எழுந்து - அப்பத்தை எடுத்து
தம் மேலுடையைக் கழற்றிவிட்டு - நன்றி செலுத்தி
துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு - வாழ்த்துரைத்து
தண்ணீர் எடுத்து சீடர்களின் பாதங்களைக் கழுவினார் - அதைப் பிட்டு அவர்களுக்கு வழங்கினார்.

'எழுதல்' என்பது புதிய செயலின் அடையாளம். அல்லது புதிய செயலைத் தொடங்குவதற்கான தயார்நிலையை இது குறிக்கிறது.
'மேலுடை' என்பது பாதுகாப்பு. இயேசு தன் வெளிப்புற பாதுகாப்பை அகற்றுகின்றார்.
'துண்டு' என்பது 'குறைவு' - பட்ஜெட்டில் துண்டு விழுந்தது என்கிறோம். நீண்ட துணியில் குறைவான பகுதியே 'துண்டு' - குறைவை அணிந்துகொண்டு
'தண்ணீர் எடுத்து சீடர்களின் பாதங்களைக் கழுவித் துடைக்கின்றார்.'

குருத்துவத்தில் ஓர் அருள்பணியாளர் செய்வதும் இதுவே.

தன் குடும்பத்திலிருந்து எழுகின்றார். தன் குடும்பம், தன் படிப்பு, தன் பின்புலம் என்னும் மேலுடையை அகற்றுகின்றார். தன்னிடம் உள்ள வலுவின்மை என்ற துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, தான் செல்லும் இடங்களில் பணிசெய்யத் தொடங்குகின்றார்.

அன்பிலும் இதுவே நிகழ்கிறது.

ஒருவர் தன் உறவுநிலையிலிருந்து எழ வேண்டும். தன் பாதுகாப்பு வளையத்தை அகற்ற வேண்டும். தன்னிடம் உள்ள குறைவை அடுத்தவரின் நிறைவு கொண்டு நிரப்பிக்கொள்ள வேண்டும்.

நற்கருணையிலும் இது நடந்தேறுகிறது.
அப்பமும், இரசமும் கோதுமை மற்றும் திராட்சைத் தோட்டத்திலிருந்து எழுகின்றன. தங்கள் இயல்பைக் களைகின்றன. ரொட்டியும், திராட்சை இரசமும் என புதிய உருப் பெறுகின்றன.

3. 'உன் காலடிகளைக் கழுவாவிட்டால்'

இயேசுவைப் போல பாதம் கழுவுவதைவிட அவரை நோக்கி பாதத்தை நீட்டுவது அடுத்த பாடம். சீமோன் பேதுரு தன் பாதத்தை நீட்ட மறுக்கின்றார்.

புதிதாக குருத்துவ அருள்பொழிவு செய்யப்படுபவர், அந்த அருள்பொழிவு நிகழ்வில், தன் பெயர்  வாசிக்கப்பட்டவுடன், 'இதோ வருகிறேன்' என்று சொல்லிவிட்டு, தன் பாதத்தை ஒரு அடி முன்னால் நகட்டி வைக்கின்றார். அந்த ஒற்றை அடி முன்னால் வைத்ததில் அவரின் நீண்ட பயணம் தொடர்கின்றது. சீமோன் பேதுருவின் இந்த தயக்கத்தைக் கடிந்துகொள்கின்றார் இயேசு.

புதிதாக காலடியை எடுத்வைத்து நாம் செல்லும் பயணத்தில்தான் அன்பும் அடங்கியுள்ளது.

மேலும் நற்கருணையில் இயேசு தன் உடலையும் இரத்தத்தையும் கொடுக்கும் நிகழ்விலும் அவரின் அந்த ஒற்றை அடியை நாம் பார்க்கிறோம்.

இந்த மூன்றிலும், 'நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்' என்கிறார் இயேசு.

'நான் உங்களுக்கு செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு' - என தன்னைப் பற்றிய நினைவை நீங்காத ஒன்றாக ஆக்குகின்றார் இயேசு.




தன்னையே உணவாகத் தரும் இயேசு 

அருள்பணி மரிய அந்தோனிராஜ்

முன்பொரு காலத்தில் சிபிச் சக்ரவர்த்தி என்றொரு சோழ மன்னன் இருந்தான். அவன் மக்களிடத்தில் மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களிடத்தும் மிக்க அன்பு பாராட்டி வாழ்ந்து வந்தான்.
ஒருநாள் மாலைநேரம் சிபி அரண்மனை மேல்மாடத்தில் உலவிக்கொண்டு இருந்தார். அப்போது பறவை ஒன்று உயிருக்குப் பயந்து கிரீச்சிடுவதுபோல் சத்தம் வந்தது. திடுக்கிட்டுத் தலையை உயர்த்தி ஆகாயத்தைப் பார்த்தார். அங்கே ஒரு வல்லூறு ஒரு புறாவைத் துரத்திக் கொண்டு செல்வதையும் உயிருக்குப் பயந்து புறா கத்தியபடி பறப்பதையும் கண்டார். இன்னது செய்வது என அறியாது திகைத்தபடி நின்றிருந்த சிபியின் முன் வந்து விழுந்தது அந்தப் புறா. அதைக்கையில் எடுத்து அன்புடனும் ஆதரவுடனும் தடவிக் கொடுத்தார் சிபிச் சக்ரவர்த்தி. சற்றுநேரத்தில் அதைத் துரத்திவந்த வல்லூறும் அங்கு வந்து அரசர் முன் அமர்ந்தது. அதைக் கண்டு திகைத்த சிபி தன் கையில் இருந்த புறாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். வல்லூறு வாய் திறந்து பேசியது.
"அரசே! இந்தப் புறா எனக்குச் சொந்தம். இதை என்னிடம் கொடுத்துவிடுங்கள்". மன்னன் ஆச்சரியத்துடன் பார்த்தான். மீண்டும் வல்லூறு அரசனிடம் பேசியது, "இந்தப் புறா இன்று எனக்கு உணவாக வேண்டும். நான் பசியால் தவிக்கிறேன்". அதை சிபி அன்புடன் பார்த்தான். "ஏ! பறவையே உன் பசிக்காக இந்த சாதுவான பறவையை உனக்கு உணவாகத் தரமாட்டேன்” என்றான். "அப்படியானால் என் பசிக்கு என்ன வழி அரசே?" என்றது வல்லூறு. சக்ரவர்த்தி சற்று நேரம் சிந்தித்தான். ஊனுக்கு ஊனைத்தான் தரவேண்டும். வேறு உயிர்களையும் துன்புறுத்தக் கூடாது. என்ன வழி என் சிந்தித்தான். சற்று நேரத்தில் முகம் மலர்ந்தான். "உனக்கு உணவாக என் மாமிசத்தையே தருவேன் உண்டு பசியாறுவாய்" என்று சொன்னவன் காவலரை அழைத்து ஒரு தராசு கொண்டு வரச் சொன்னான். ஒரு தட்டில் புறாவை வைத்தான். அடுத்த தட்டில் தன் உடலிலிருந்து மாமிசத்தை அரிந்து வைத்தான். ஆச்சரியம் என்னவென்றால் எவ்வளவு தசையை அரிந்து வைத்தாலும் புறாவின் எடைக்கு சமமாகவில்லை. எனவே சிபிச் சக்ரவர்த்தி தானே அந்தத் தராசில் ஏறி அமர்ந்தான். தட்டு சமமாகியதும் மன்னன் மகிழ்ந்தான். “ஏ பறவையே இப்போது நீ என் தசையை உனக்கு உணவாக்கிக் கொள்" என்றவுடன் அங்கிருந்த வல்லூறும் புறாவும் மறைந்தன.
மறுகணம் அங்கே இறைத்தூதர்கள் இருவர் தோன்றினர். அவர்கள் மன்னனிடம், "சிபிச் சக்ரவர்த்தியே! உமது நேர்மையையும் கருணை உள்ளத்தையும் பரிசோதிக்கவே நாங்கள் பறவையாக வந்தோம். உமது உள்ளம் புரிந்தது. உலகம் உள்ளளவும் உமது புகழ் நிலைப்பதாக. நீர் பல்லாண்டு வாழ்க" என வாழ்த்தி மறைந்தனர். அழகிய உடலை மீண்டும் பெற்ற மன்னன் பல்லாண்டு புகழுடன் வாழ்ந்தான்.
சங்ககால இலக்கியங்களுள் ஒன்றான புறநானுற்றில் இடம்பெறக்கூடிய இந்த நிகழ்வு ஒரு சாதாரண புறாவிற்காக தன்னையே தந்த சிபிச்சக்கரவர்த்தி என்ற சோழ மண்ணின் கருணை உள்ளத்தை நமக்குத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. ஆண்டவர் இயேசுவும் நம்மீது கொண்ட பேரன்பினால் தன்னையே உணவாக, நற்கருணை வடிவில் தருகின்றார். அதைத்தான் இன்று ‘பெரிய வியாழனாக’ வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றோம்.
தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் - இன்றைய இரண்டாம் வாசகத்தில் – கூறுவதுபோல, ஆண்டவர் இயேசு தான் காட்டிக்கொடுப்பதற்கு முந்தின இரவு, அப்பத்தைக் கையில் எடுத்து, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். பின்னர் கிண்ணத்தை எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைநிறுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்கின்றார். ஆண்டவர் இயேசு தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் நமது உணவாகவும் பானமாகவும் தருகின்றபோது, இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்கின்றார். அப்படியானால், இயேசுவைப் போன்று நாமும் நம்முடைய உடல் பொருள் ஆவி அத்தனையும் மானுட மீட்புக்காகத் தரவேண்டும் என்பதுதான் இங்கே சொல்லப்படுகின்ற செய்தியாக இருக்கின்றது. ஆகவே, ஆண்டவர் இயேசுவின் நற்கருணை விருந்தில் பங்குகொள்ளக்கூடிய நாம் ஒவ்வொருவரும் அவரைப் போன்று நம்மையும் பிறருக்காகக் கையளிக்கத் தயாராக இருக்கவேண்டும். அதுவே சரியான செயல்.
“தன்னலம் மறுத்துப் பொதுநலத்துக்காகத் தன்னையே கையளிப்பவர்கள்தான் ஒப்பற்ற தலைவர்கள்” என்பார் சேகுவேரா. அந்த வகையில் பார்க்கும்போது இந்த மானுட சமூகம் வாழ்வுபெற என்பதற்காக தன்னையே உணவாகத் தந்த இயேசுவும் ஒப்பற்ற தலைவர்தான்.
எனவே நாமும் இயேசுவைப் போன்று பிறர் வாழ நம்மைக் கையளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.




Saturday 24 March 2018

திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

  திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு
 எசா 50:4-7; பிலி 2:6-11; மாற் 14:1-15:47

ஓசான்னாவின் உட்பொருள் என்ன?

மகிழ்ச்சியூட்டும் மறையரை

ஒருமுறை எங்கள் குருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் இவ்வாறு கூறினார்: "நற்செய்தியை எடுத்துரைக்க ஏழை எளியவர்கள் வாழ்ந்த கலிலேயாவிற்கு இயேசு சென்றார். சிலுவையிலே அறையப்பட பணக்காரர்களும், படித்தவர்களும் வாழ்ந்த யூதேயாவிற்குச் சென்றார். உங்கள் வாழ்க்கையிலே நீங்கள் நற்செய்தியைப் போதிக்க விரும்பினால் ஏழைகளைத் தேடிச்செல்லுங்கள்; சிலுவையிலே அறையப்படவேண்டும் என விரும்பினால் பணக்காரர்களைத் தேடிச்செல்லுங்கள்.”
எருசலேம் பெருநகர். அது பணம் படைத்தவர்கள் நிறைந்த நகர். குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்தவர்கள் வாழ்ந்த நகர் அது! அங்கே "தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு சூழ்ச்சியாய் பிடித்துக் கொலை செய்யலாம் என்று வழிதேடிக்கொண்டிருந்தனர்" (மாற் 14:1).
எருசலேமில் படப்போகும் பாடுகள் அனைத்தையும் பற்றி இயேசு மூன்று முறை முன் அறிவித்திருந்தார் (லூக் 22:15; 24:26; 24:46). தமக்கு நடக்கப்போவது அனைத்தையும் அறிந்துதான், தெரிந்துதான் இயேசு எருசலேமுக்குள் நுழைந்தார்.
இதோ இன்று தன்னையே சிலுவைச் சாவுக்குக் கையளிக்க இயேசு எருசலேம் நகருக்குள் நுழைகின்றார்.
ஏன் இந்தச் சாவு? (முதலாம், இரண்டாம் வாசகங்கள், மாற் 11:9-10).
இன்று ஓசான்னா பாடுகின்றவர்கள் நாளை இவனைச் சிலுவையில் அறையும் (மாற் 15:14) என்று கூக்குரலிடுவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டவா?
இன்று நமது பாத்திரத்தில் தொட்டு உண்பவன் (மாற் 14:20) நாளை காட்டிக்கொடுப்பான் (மாற் 14:44) என்பதை எடுத்துரைக்கவா?
சீடன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்யத் துணிவான் (மாற் 14:66-72) என்பதைப் படம்பிடித்துக்காட்டவா?
பதவியிலிருப்பவர்கள் தங்கள் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள கடவுளைக் கூட கல்லறைக்கு அனுப்பத் தயங்கமாட்டார்கள் (மாற் 15:15) என்பதைப் பறைசாற்றவா?
எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு மாபெரும் உண்மைகளை உலக மக்களுக்கு எடுத்துரைக்க இயேசு இன்று எருசலேம் நகருக்குள் நுழைந்திருக்கின்றார்.
முதல் உண்மை : கடவுள் இந்த உலகத்தை எவ்வளவு அன்பு செய்கின்றார் என்பதை இயேசு தம் மரணத்தின் வழியாக உலகிற்குப் போதிக்க விரும்பினார். உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு ஒன்று இருக்க முடியாது. தம் உயிரைக் கொடுத்து, இதுதான் அன்பின் ஆழம், அகலம் என்கின்றார் இயேசு.
இரண்டாவது உண்மை : "தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை ” (லூக் 23:34) எனச் சொல்லி ஒரு மனிதன் எந்த அளவுக்கு இந்த உலகை அன்பு செய்ய முடியும் என்பதை இயேசு சிலுவையில் தொங்கியபோது அவர் நிகழ்த்திய மறையுரை வழியாக சுட்டிக்காட்ட விரும்பினார்.
இன்றைய ஆரவாரத்திற்குள் மறைந்திருக்கும் அர்த்தத்தைக் கண்டுபிடித்து நமது ஆன்மிக வாழ்வை அர்த்தமுள்ளதாக அமைத்துக்கொள்வோம்.
மேலும் அறிவோம் :
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் : 72).
பொருள் : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமை பாராட்டுவர். அன்பு உள்ளம் கொண்டவர் தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் பிறர்க்கு வழங்குவர்.

  நிறம் மாறுவதும்

. குன்று நோக்கி -அருள்பணி லூர்துராஜ்


குருத்து ஞாயிறு நிகழ்வு மக்களின் நிலையற்ற தன்மையின் தெளிவான வெளிப்பாடு. ஒருநாள் ஓசன்னா' பாடி வாழ்த்தும் மந்தைத்தன மக்கள் கூட்டம் மறுநாளே ஒழிக' என்றும் கூச்சலிடத் தயங்காது.
ஆனால் கிறிஸ்துவின் பாடுகளோ அவரது நெஞ்சுறுதியின் நிலைப்பாடு. தலைமைக் குருக்களின் சதித்திட்டமாகவோ அல்லது ஏதோ தற்செயலாக நிகழ்ந்த விதியின் விளையாட்டாகவோ பார்த்தல் தவறு. சிலுவை மரணம் என்பது தந்தை கடவுளின் நித்திய திட்டம். அதனால்தான் இயேசு சிலுவைப் பாடுகளை, கல்வாரி மரணத்தை - 1. மனமுவந்து ஏற்றார் இறைவாக்கினர் எசாயாவின் துன்புறும் ஊழியனாக. இறைவாக்கு அவரில் நிறைவு காண வேண்டும். நெஞ்சுறுதியுடன் ஏற்றார் இலக்குத் தெளிவு இருந்த காரணத்தால். இறைவனின் திருவுளம் அவரில் நிறைவு பெற வேண்டும். "ஆயிரக்கணக்கான வருடங்களாய் - எம் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம் இஸ்ரயேல் மக்களை ஆளவாரும்- எம்
இயேசுவே தேவனே எழுந்தருளும்" - பட்டி தொட்டிகளில் எல்லாம் இன்று ஒலிக்கும் பழந்தமிழ்ப் பாடல் இது! "ஓசன்னா, தாவீதின் புதல்வா ஓசன்னா" உலகின் மூலை முடுக்கெல்லாம் முழங்கிக் கொண்டிருக்கும். இந்த ஓசன்னாவின் பின்னணி என்ன?
அன்று யூதர்களுக்குக் கூடாரத் திருவிழா. வீதியெல்லாம் விழாக்கோலம். விண்ணைப் பிளந்தன வெற்றி முழக்கங்கள். அந்த வெற்றி முழக்கச் சுலோகம் என்ன? “ஆண்டவரே, மீட்டருளும். ஆண்டவரே, வெற்றி தாரும்" (தி.பா.118:25). ஆண்டவரே மீட்டருளும் என்பதற்கு எபிரேயச் சொல் "ஓசன்னா"
 போருக்குப் புறப்படும் போது ஓசன்னா ' அபயக் குரலாக எழும்பும். வெற்றி பெற்றுத் திரும்பும் போது ஒசன்னா' வெற்றி முழக்கமாக அதிரும். ஆக ஓசன்னா என்பது ஒரு செபம், ஓர் அபயக் குரல், ஒரு வெற்றியின் வீரமுழக்கம், மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு, புகழ்ச்சியின் கூக்குரல்.
அந்நியர் ஆட்சியில் அடிமைகளாக அல்லலுக்கும் அவலத்துக்கும் ஆளாகிய சூழலில் இறைவன் தலையிட்டுத் தங்களைக் காப்பாற்றுவார் என்பது இஸ்ரயேலரின் நம்பிக்கை அனுபவம். எகிப்தில் மோசே வழியாக விடுதலை கண்ட பாலஸ்தீனப் பாமரர்கள் இயேசுவின் உருவில் புதிய மோசேயைக் கண்டார்கள். இயேசுவின் பணிவாழ்வுக் காலமாகிய மூன்று ஆண்டுகளும் அந்த எளிய மக்களின் உள்ளத்தின் ஆழத்தில் பூத்திருந்த அரசியல் மெசியா' என்ற எதிர்பார்ப்பு, திடீரென உணர்ச்சிப் பிழம்பாகக் கொப்பளித்ததன் விளைவுதான் குருத்தோலைப் பவனி.
ஆன்மீக மீட்பராக அல்ல, அரசியல் மீட்பராக, பலியாகும் தியாகச் செம்மலாக அல்ல, பவனி வரும் மகிமையின் மன்னராக அரச மரியாதையைச் செலுத்தினர். 'தாவீதின் மகனுக்கு ஓசன்னா! யூதர்களின் அரசே வாழி!” (இவைகள் எல்லாம் மெசியாவுக்கான அடைமொழிகள்) என்று விண்ணதிர முழங்கினர். இந்த மக்களின் எதிர்பார்ப்பும் ஆர்ப்பாட்டமும் நமது உள்ளத்தையும் நெகிழ வைக்கின்றன. இயேசு கூட இந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்து கல்வாரிச் சிலுவையைத் தவிர்த்து அரசியல் அரியணை நோக்கிச் சென்றிருக்கலாமோ என்று நினைக்கக் கூடத் தோன்றுகிறது.
இயேசுவைப் பொருத்தவரை அவரது மகிமை, மாண்பு, உயர்வு எல்லாம் கோதுமை மணியாக மடிவதில் மட்டுமே, எனவே எருசலேம் நோக்கிய இயேசு இறுதிப் பயணத்தில், மக்களுக்காகத் துன்புறும் ஊழியனாக, பலருடைய பாவங்களைச் சுமந்து செல்லும் செம்மறியாக, நம்மை நலமாக்கும் தண்டனையைத் தன்மேல் ஏற்றுக் கொள்பவராக வருகிறார். இது இஸ்ரயேல் மக்களின் எண்ணத்தைக் கடந்தது, எற்றுக் கொள்ளக் கடினமானது. எனவே பெரிய வெள்ளி அன்று ஓசன்னா பாட இயலவில்லை, கொல்லும் கொல்லும் என்று தான் கூக்குரலிட முடிந்தது.
இயேசுவை மூன்று நிலைகளில் தொடக்கக் காலத் திருச்சபை காண்கிறது. (பிலிப்.2:5-11)
1, தந்தைக்கு ஈடான தெய்வீக நிலை. விண்ணகத் தந்தையோடு தெய்வீக சமத்துவத்தில் வாழ்ந்த நிலை.
2. அடிமையின் தன்மை பூண்டு சிலுவைச் சாவு வரை அர்ப்பணித்துத் துன்புறும் மண்ணக வாழ்வு நிலை.
3. மூவுலகும் மண்டியிட இயேசுவே ஆண்டவர் என்று எல்லா நாவும் அறிக்கையிடத் தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கும் மகிமை நிலை .
இவற்றில் முதலாவது, மூன்றாவது நிலைகளில் இயேசுவைக் கண்டு பெருமிதம் கொள்ள நாம் தயார்; ஆனால் இரண்டாவது நிலையை ஏற்றுக் கொள்ளத் தயக்கம்!
முதல் உலகப் போர் முடிந்த நேரம். பிரான்சும் இங்கிலாந்தும் பயங்கரமாக மோதிக் கொண்ட போர் அது. பிரான்சு நாட்டு வீரன் ஒருவன் காயமுற்று இங்கிலாந்து மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தான். சிகிச்சை பெறும் வீரர்கள் தனது நாட்டினர்தானா என்று அறிய ஒவ்வொரு வீரனையும் உன் தலைவன் யார்?' என்று கேட்டான் இங்கிலாந்து நாட்டுத் தளபதி. பிறநாட்டு வீரன் என்றால் அந்த இடத்திலேயே அந்தக் கணத்திலேயே கொன்றுவிடக் கட்டளையிட்டான், பிரான்சு நாட்டு வீரனிடம் கேட்ட போது அவனது பதில் இங்கிலாந்து நாட்டுத் தளபதியை வியக்க வைத்தது. “எனது நெஞ்சைக்குத்திப் பிளந்து பாருங்கள் அங்கே என் தலைவன் நெப்போலியன் இருப்பான்” என்று கூறினானாம். அவனது அரச பக்தியை, அசாத்தியத் துணிவைக் கண்டு அவனை விடுவித்து விட்டனராம்.
தன் உயிர் போய்விடும் என்ற நிலையிலும் கூட, தன் தலைவன் நெப்போலியன் என்று நெஞ்சுறுதியுடன் சொன்ன வார்த்தைகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன. ஓசன்னா என்று உண்மையில் பாடினால் இயேசுவின் பாடுகளிலும் பங்கேற்க வேண்டும் அவருடைய சீடன்!



மறையுரை மொட்டுக்கள்அருள்பணி இருதயராஜ்

ஒர் அப்பா தனது சிறிய மகனைத் தன் வீட்டிற்கு முன் இருந்த மரத்தின் மேல் ஏறி, அதன் கிளை ஒன்றில் உட்காரச் சொல்லி, அவனிடம், "மகனே! கீழே குதி! நான் உன்னைப் பிடித்துக் கொள்வேன்” என்றார். அவன் முதலில் மறுத்தாலும், அப்பாவின் வாக்குறுதியை நம்பி கீழே குதித்தான். ஆனால் அப்பா அவனைப் பிடித்துக் கொள்ளாமல் விட்டு விட, அவள் தரையில் விழுந்து கால் பிசகிக் கொண்டு அழுதான், அப்பா அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, "மகனே, உலகில் யாரையும் நம்பாதே; உன் அப்பனையும் நம்பாதே" என்றார்.
இவ்வுலகில் நாம் யாரையும் எளிதில் நம்பிவிட முடியாது. உன் பகைவன் உன்னைக் கைகூப்பி வணங்கினால் அவனை நம்பாதே; ஏனெனில் அவனுடைய கூப்பிய கைகளிலே கத்தியை வைத்திருப்பான் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர், "தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்” (குறள் 828),
கிறிஸ்து பல அற்புதங்களையும் அருங்குறிகளையும் செய்தபோது பலர் அவரை நம்பினர், ஆனால் கிறிஸ்துவோ அவர்களை எளிதில் நம்பிவிட வில்லை. "இயேசு அவர்களை நம்பி விடவில்லை. ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும். மனிதர் உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்” (யோவா 2:25),
மனிதர்களைப் பற்றிய இயேசுவின் கணிப்புச் சரியானதே. ஏனெனில், குருத்து ஞாயிறு அன்று. "ஓசன்னா; ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக' (மாற் 11:9) என்று ஆர்ப்பரித்த அதே மக்கள், பெரிய வெள்ளிக்கிழமையன்று, 'அவனைச் சிலுவையில் அறையும்" (மாற் 15:13) என்று கூச்சல் இட்டனர், எலும்பில்லாத நாக்கு எப்படியும் பேசும், "போற்றலும் தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன" (யாக் 3:10).
கிறிஸ்துவோ, “போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும்" என்ற மனநிலையுடன் புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் சமச்சீர்நிலையில் வாழப் பழகிக் கொண்டார். இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா சித்தரிக்கும் துன்புறும் இறை ஊழியனாக, கிறிஸ்து தம்மை அடிப்போர்க்கு முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்குத் தாடையையும் கையளித்தார்; நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் தமது முகத்தை மறைக்க வில்லை (எசா 50:6). அவர் மனிதர் தருகின்ற மகிமையைத் தேடாமல் (யோவா 5:41), அவரது தந்தை அவருக்கு அளிக்கவிருந்த மகிமை ஒன்றையே நாடினார் (யோவா 8:54), இன்றைய இரண்டாம் வாசகத்தில் சொல்லப்பட்டுள்ளது போல, கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி, சாவை ஏற்கும் அளவுக்கு. அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்தார். எனவேதான் கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்து மாட்சிமைப்படுத்தினான் (பிலி 2:6-11).
உலக வாழ்வின் எதார்த்தநிலை: பாளையிலே ரோறு இருந்தா பூனைகளும் சொந்தமடா; வேதனையைப் பங்கு வைச்சா சொந்தமில்லை பந்தமில்லை " (திரைப்படப்பாடல்), நாம் வசதியாக வாழும்போது நமக்கு நெருக்கமாக இருந்தவர்கள், நாம் நொடித்துப் போகும்போது தலை மறைவாகிவிடுகின்றனர். எனவே, இன்பத்தில் தலை கால் தெரியாமல் அலையவோ, துன்பத்தில் மனமுடைந்து போகவோ கூடாது." வளமையிலும் வாழத் தெரியும்; வறுமையிலும் வாழத் தெரியும். திறைவோ குறைவோ, எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்" (பிலி 4:12) என்று கூறிய புனித பவுலின் மனநிலையைப் பெறவேண்டும்.
இன்றைய நற்செய்தியில் மாற்கு எழுதியுள்ள படி நமது ஆண்டவரின் பாடுகள் வாசிக்கப்பட்டன. இந்நற்செய்தியில் வருகின்ற இருவர் நாம் இயேசுவை எப்படி பின்பற்றக்கூடாது, எப்படிப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றனர்,
இயேசு பிடிபட்டபோது, ஓர் இளைஞர் வெறும் உடம்பின் மீது ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு இயேசுவின் பின்னே சென்றார். அவரைப் பிடித்தபோது, அவர் போர்வையை விட்டுவிட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார் (மாற் 14:51-52). இந்த இளைஞரைப் போல நாம் இயேசுவைப் பின்பற்றக்கூடாது.
சிலர் இயேசுவின்மீது உண்மையான பற்றுறுதியின்றி. ஒருசில கொள்கைகள், இலட்சியங்கள், இலக்குகள் என்னும் போர்வையைப் போர்த்திக் கொண்டு இயேசுவைப் பின்பற்றுகின்றனர். ஆனால், அவர்களுடைய உயிருக்கு ஆபத்து வரும்போது, அக்கொள்கைகளையும் இலக்குகளையும் தூக்கி எறிந்துவிட்டுத் தப்பி ஓடிவிடுகின்றனர்.
இன்று ஒரு சில போலி இறையியலார் உள்ளனர். இவர்கள் இறையியல் சந்தையில் பேரம் பேசுகின்றவர்கள்: மலிவுச் சரக்குகளை விலைக்கு வாங்குபவர்கள், விற்பவர்கள், பங்குதாரர்கள், இவர்களின் இறையியல் அங்காடி இறையியல்" (ஆயசமநவ கூாநடிட்டிபல) ஓர் இறையியல் சந்தையில் சரிவு ஏற்பட்டால், தயங்காமல் மற்றோர் இறையியல் சந்தையைத் தேடிச் செல்வார்கள்.
பொதுநிலையினர்களிலும் ஒருசிலர் பல்வேறு பிரிவினைச் சபைகளுக்கு மாறிக்கொண்டே இருக்கின்றனர். இவர்களுக்கு உறுதியான நிலைப்பாடில்லை. திசைமாறிய பறவைகள், இவர்களுக்கு இயேசு கூறுவது: “கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" (லூக் 9:62) 46
கிறிஸ்து சிலுவையில் உரக்கக் கத்தி உயிர் நீத்த போது, அவருக்கு எதிரே நின்று கொண்டிருந்த நூற்றுவர் தலைவர், "இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்" என்றார் (மாற் 15:39). இவர் பிற இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரயேல் மக்களும், மறைநூல் அறிஞர்களும், மக்களின் மூப்பர்களும், தலைமைச் சங்கமும், ஆளுநரும், ஏன், வானகத் தந்தையும் கூட இயேசுவைக் கைவிட்ட நிலையில், (என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?), நூற்றுவர் தலைவர் இயேசுவைக் கடவுளின் மகன்' என்று அறிக்கையிட்டார்.
'கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்' (மாற் 1:1) என்று தமது நற்செய்தியைத் தொடங்கிய மாற்கு, "இயேசு கடவுளின் மகன்" (மாற் 15:39) என்ற நூற்றுவர் தலைவரின் விசுவாச அறிக்கையுடன் தமது நற்செய்தியை முடிக்கிறார்.
இயேசுவின் இறைத்தன்மையைக் கூட மறுதலிக்கும் இறையியலார் வாழும் இக்காலத்தில், நூற்றுவர் தலைவரைப் பின்பற்றி இயேசுவின் இறைத்தன்மையில் அசையாத நம்பிக்கை வைப்போம், வேதனையோ நெருக்கடியோ, பசியோ ஆடையின்மையோ, சாவோ வாழ்வோ, வேறு எந்தச் சக்தியோ இயேசுவிடமிருந்து ஒருபோதும் நம்மைப் பிரிக்கவிடக் கூடாது (உரோ 8:38-39),
"இறக்கும் வரை நம்பிக்கையோடு இரு, அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன்" (திவெ 2:10).



இது ஆண்டவருக்குத் தேவை!

அருள்பணி ஏசு கருணாநிதி - மதுரை,


இயேசு எருசலேம் நகருக்குள் ஆர்ப்பரிப்போடு நுழையும் நிகழ்வை எல்லா நற்செய்தியாளர்களும் பதிவு செய்கின்றனர். யோவான் தவிர மற்ற மூன்று நற்செய்தியாளர்களும் தங்கள் பதிவில் கழுதையைப் பற்றிய வர்ணனையை வைக்கின்றனர். அவர்களின் பின்வரும் சொல்லாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்: 'இது ஆண்டவருக்குத் தேவை.' என் அருள்பணி வாழ்வின் விருதுவாக்காக இந்த வாக்கியத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று நான் முன்னால் நினைத்ததுண்டு.

'பேனா எதற்குப் பயன்படும்?' என்று ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களிடம் கேட்டார். எல்லாரும் சேர்ந்து, 'எழுத' என்றனர். 'அவ்வளவு தானா?' என்றார். 'அவ்வளவுதான்' என்றனர் மாணவர்கள். ஒரு மாணவி மட்டும் எழுந்து நின்று, 'இல்லை. பேனா எழுத மட்டுமல்ல. அது இன்னும் நிறைய பயன்படும். படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தின் நடுவில் அடையாளமாக வைக்க, ஃபேன் காற்றில் பறக்கும் தாளின் மேல் வைக்கும் பேப்பர் வெயிட்டாக, சட்டைப் பையில் குத்தி வைத்து ஒருவரின் அந்தஸ்தைக் காட்டும் அடையாளமாக, பிறருக்கு அளிக்கும் பரிசுப்பொருளாக, பள்ளியின் இறுதிநாளில் ஒருவர் மேல் ஒருவர் இன்க் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த, முன்பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஒருவரின் முதுகில் தட்டி அவரைத் திரும்பிப் பார்க்க வைக்க, ஆடியே கேசட்டின் சக்கரப்பற்களில் நடுவே விட்டு சக்கரங்களை வேகமாகச் சுழற்ற,' என்று சொல்லிக்கொண்டே போனார்.

'கழுதை எதற்குப் பயன்படும்?' என்று நம்மிடம் யாராவது கேட்டால், 'பொதி சுமக்க' என்று சொல்லி அமைதி காத்துவிடுவோம். ஆனால், விவிலியத்தில் 'கழுதையின் தாடை' எதிரியை அழிக்க, 'கழுதை' மற்றவர்களைச் சபிக்க, 'கழுதை' அரசர்களைச் சுமந்துவர, 'கழுதை' அமைதியின் இறைவாக்கின் அடையாளமாக என நிறையப் பயன்பாடுகள் உள்ளன.

'இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை!' - இங்கே ஆண்டவர் என்பது இயேசுவையும், தந்தையாகிய இறைவனையும் குறிக்கின்றது. இயேசு இக்கழுதையைப் பயன்படுத்தி எருசலேம் ஆலயம் நுழைகிறார். இறைவன் இக்கழுதையைப் பயன்படுத்தி இயேசுவின் எருசலேம் பயணத்தை, பாடுகள் மற்றும் இறப்பை துவங்கி வைக்கின்றார். இன்னும் கொஞ்சம் தாராளமான உருவகமாகப் பார்த்தால், 'ஆண்டவர்' என்பது தந்தையாகிய இறைவனையும், 'கழுதை' என்பது இயேசுவையும் குறிக்கிறது என வைத்துக்கொள்ளலாம். மேலும், இந்தக் கழுதை நம் ஒவ்வொருவரையும் குறிக்கும் உருவகமாகவும் இருக்கிறது.

எப்படி?

இன்றைய நற்செய்தி வாசகமாக இயேசுவின் பாடுகளை மாற்கு நற்செய்தியாளரின் பதிவிலிருந்து வாசிக்கக் கேட்டோம்.

ஒட்டுமொத்த வாசகத்தின் பின்புலத்தில் இழையோடும் செய்தி ஒன்றுதான்:

'இந்தக் கழுதை (இயேசு) எங்களுக்குத் தேவையில்லை!'

இயேசு என்பவர் சீடர்களுக்கு, தலைமைச் சங்கத்தாருக்கு, பிலாத்துவிற்கு, ஏரோதுவிற்கு தேவையில்லாமல் போகின்றார். ஆகையால் அவரை தீர்ப்பிட்டு, வதைத்து, அழித்துவிடுகின்றனர்.

ஆக, மனிதர்கள், 'இது எங்களுக்குத் தேவையில்லை' என்று சொன்னதை, இறைவன், 'இது ஆண்டவருக்குத் தேவை' என்று புரட்டிப் போடுகின்றார்.

கடந்த வாரத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் என்ற அறிவியலாளர் இறந்துபோனார். உடல் செயலாற்றாமல் மூளை மட்டுமே செயலாற்றியது இவருக்கு. 'எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்' என்று நூலின் வழியாக அறிவியல் அறிவையும் சாமானியருக்கும் கொண்டுவந்ததோடு, 'கருந்துளை,' 'கடவுள் துகள்' என்னும் தன் ஆராய்ச்சியின் வழியாக ஐன்ஸ்டைன் போன்றதொரு அழியாத இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

'இவர் எனக்குத் தேவையில்லை' என்று மற்றவர் தன்னைச் சொன்னாலும், 'என்னாலும் ஒரு பயன் உண்டு' எனத் தன் இருப்பை பதிவு செய்தார் ஹாக்கிங்.

நிற்க.

உலகப்போரின்போது நாசிச ஜெர்மனி நாட்டில் ஹிட்லர் முதியவர்கள், நோயுற்றவர்கள், கைகால் இழந்தவர்கள், பேச்சற்றவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டோர் அனைவரையும் கொன்றுவிடுமாறு கட்டளையிட்டார். 'இவர்களால் நமக்கு ஒரு தேவையும் இல்லை' என்பது ஹிட்லரின் வாதம்.

'இவர் எங்களுக்கு தேவை இல்லை' என்று இயேசுவைப் பார்த்து மற்றவர்கள் சொல்லி அவரை கொல்லும் அளவிற்குச் சென்றதன் காரணம் என்ன?

அவர் இவர்களுக்கு தொந்தரவாக இருந்தார்.

அவர் இவர்களைப் போல பேசவில்லை, செயல்படவில்லை.

இவர்கள் நிறைய தன்னிறைவு கொண்டிருந்தனர். இவர்களுக்கென்று வேறெதுவும் தேவையில்லை.

இப்படி நிறைய சொல்லலாம்.

ஆனால், இந்த உலகமே தன்னைத் தேவையில்லை என்று சொன்னாலும் இயேசு தளர்ந்து போகவில்லை. அதுதான் குருத்து ஞாயிறு சொல்லும் பாடம்.

ஆபிரகாம் மாஸ்லோ என்ற உளவியல் அறிஞர் மனித தேவைகளை ஐந்தடுக்குகள் கொண்ட பிரமிடாக முன்வைத்து, 'உடல்சார்ந்த தேவைகள்,' 'பாதுகாப்பு தேவைகள்,' 'அன்புத் தேவைகள்,' 'தன்மதிப்பு தேவைகள்,' 'தன்நிர்ணய தேவைகள்' என வரையறுக்கின்றார். மனித உறவுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் தேவை சார்ந்தே இருக்கின்றது என்பது நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய எதார்த்தம்.

'தேவைக்காகவாவது என்னிடம் பேசுகிறார்களே' என்று மகிழ வேண்டும். ஏனெனில், 'தேவையில்லை என்று பேச மறுக்கிறார்களே' என்பது அதனிலும் கொடிய வேதனை.

ஆக, இந்த உலகமே, 'இவர் எனக்குத் தேவையில்லை' என்று சொன்னாலும், இயேசு, 'இது ஆண்டவருக்குத் தேவை' என்று தன் உள்ளத்தில் துணிவோடு இருக்கின்றார். இந்த துணிச்சல்தான் அவரை எதையும் எதிர்கொள்ள வைக்கிறது. 'தைரியம் இழந்தவன் எல்லாம் இழப்பான்' என்பது முதுமொழி.

இன்றைய நாளின் கழுதைக்குட்டியிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப்பாடங்கள் மூன்று:

அ. இறைவனின் அல்லது தேவையில் இருப்பவரின் திருவுளம் நிறைவேற்ற எப்போதும் தயார்நிலை.

ஆ. அடுத்த என்ன நடக்கும் என்பதை நாம் அறியாததால் நடப்பதை அப்படியே புன்முறுவலோடு எதிர்கொள்வது.

இ. அடுத்தவரின் சத்தம் ஓங்கி ஒலிக்கும் நேரத்தில் நாம் மௌனம் காப்பது

அ. தயார்நிலை

இந்தக் கழுதை எத்தனை மாதங்கள் அல்லது எத்தனை நாள்கள் அங்கு நின்றது என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், அவிழ்த்தவுடன் அவிழ்த்தவரோடு சென்றுவிடுகிறது. 'இல்ல, நான் அப்புறம் வர்றேன்!' என்றோ, 'இல்ல எனக்கு வேற வேலை இருக்கிறது' என்றோ சொல்லவில்லை. இந்த மனநிலை இருந்தால் நாம் எந்த விரக்தியையும் வென்றுவிடலாம். என்னைப் பொறுத்தவரையில், திட்டமிடுதலும், முதன்மைப்படுத்துதலும், டாஸ்க் லிஸ்ட் போடுவதும் பல நேரங்களில் செயற்கைத்தனத்தையும், விரக்தியையும், ஏமாற்றத்தையும் உருவாக்குகிறது. தயார்நிலை நமக்கு சுதந்திரத்தையும், கட்டின்மையையும் தருகிறது. இயேசு தனக்கு என்ற எந்த அஜென்டாவையும் வைத்திருக்கவில்லை.

ஆ. புன்முறுவல்

கழுதை தன்னை அவிழ்த்தவர்மேல் எந்த எதிர்பார்ப்பும் வைத்திருக்கவில்லை. தன்னை அடிக்க கொண்டு செல்கிறார்களா, அல்லது வேலைக்கு கூட்டிச் செல்கிறார்களா என்று எதுவும் அதற்குத் தெரியாது. இருந்தாலும் அடுத்த வேலைக்கு அப்படியே செல்கிறது. அதுதான் அதன் இருப்பின் நோக்கம். ஆக, கழுதையின் நோக்கம் கட்டிக் கிடப்பதற்கு அல்ல. கட்டிக்கிடத்தலில் சுகம் இருக்கும். உணவு நேரத்திற்கு கிடைக்கும். நிழல் இருக்கும். எந்த தொந்தரவும் இருக்காது. ஆனால், கட்டிக்கிடப்பதற்காக கழுதை பிறக்கவில்லையே. என் வாழ்வின் நோக்கம் என்ன என்பது நான் அறியவில்லை என்றாலும், வாழ்க்கை அடுத்தடுத்து அழைக்கும்போது புன்முறுவலோடு நகர்ந்து செல்வதே சிறப்பு.

இ. மௌனம்

வாழ்க்கையில் பல நேரங்களில் நம் பேச்சு அதிக பேச்சையே வளர்க்கும். ஆனால் மௌனம் எல்லாவற்றையும் வென்றுவிடும். தன்னை நோக்கி எதிர் மற்றும் பொய்ச்சான்றுகளைச் சொன்னவர்கள்மேல் இயேசு கோபப்பட்டு எதிர்த்துப் பேசவில்லை. பேச்சு பேச்சையும், எதிர்ப்பு எதிர்ப்பையும் வளர்க்கும் என்பது அவருக்குத் தெரிந்ததால் அடுத்தவரின் பேச்சு அதிமாகும் பட்சத்தில் அவர்களுக்கு மேல் தன் குரலை ஓங்காமல் தன் குரலைத் தாழ்த்திக்கொள்கின்றார்.

இறுதியாக,

'எல்லாரும் என்னை பயன்படுத்துகிறார்கள்' என்ற கோபத்திற்கும்,

'என்னை யாராவது தேவையில்லை என்று சொல்லிவிடுவார்களோ' என்று பயத்திற்கும்

மேலே பயணம் செல்கிறது மனித வாழ்க்கை என்ற இரயில்.

ஆனால், 'இந்த இரயில் ஆண்டவருக்குத் தேவை' என்ற மனநிலை மட்டும் வந்தால் கோபமும், பயமும் தண்டவாளம் போல தரையோடு தரையாய் மறைந்து போகும்.






 நமக்காகப் பாடுகள் பட்ட இயேசு கிறிஸ்து!
அருள்பணி  மரிய அந்தோனிராஜ்எ-பாளை மறைமாவட்டம்
மார்செல்லெஸ் (Marseilles) என்னும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் வாழ்ந்த நகரில் கயோட் (Guyot) என்னும் பெரியவர் ஒருவர் வசித்து வந்தார். அவர் திருமணமாகாதவர்; உணவுக்காகவோ, உடுத்தும் உடைக்காகவோ அதிகமாக செலவு செய்யாதவர். அவர் மிகவும் கடினமாக உழைத்து ஒரு பெரிய மண்டபத்தைக் கட்டிக்கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்து மார்செல்லெஸ் நகரில் இருந்த மக்கள் எல்லாம் ‘இவர் ஒரு சரியான கஞ்சப் பேர்வழி’, ‘இவருக்குத்தான் குடும்பமோ, குழந்தையோ இல்லையே. பிறகு எதற்கு இவர் இவ்வளவு பெரிய மண்டபத்தைக் கட்டிக்கொண்டிருக்கின்றார்?; எதற்காக இவர் இப்படி பணத்தை சேமித்து வைக்கின்றார்’ என்று கேலி செய்தார்கள். சில நேரங்களில் அந்நகரில் இருந்த இளைஞர்களில் ஒருசிலர் அவர்மீது கல்லெறிந்து சீண்டிப் பார்த்தார்கள். அப்போதெல்லாம் அவர் எந்தவொரு எதிர்வினையும் ஆற்றாமல் அப்படியே இருந்தார்.

நாட்கள் நகர்ந்தன. அவர் தான் கட்டிக்கொண்டிருந்த மண்டபத்தைக் கட்டி முடித்தார். அந்த சந்தோசத்திலே அவர் சிறுதுகாலம் திளைத்திருந்தார். இப்படியான சமயத்தில் அவர் நோய்வாய்ப்பட்டு, படுக்கையில் விழுந்து கவனிப்பார் யாருமின்றி அப்படியே இருந்து போனார்.

கயோட் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு, அக்கம் பக்கத்துக்கு வீட்டார் அனைவரும் அவருடைய வீட்டுக்கு வந்தார்கள். அப்போது அவருடைய இறந்த உடலுக்கு அருகே ஓர் உயில் இருந்தது. அந்த உயிலில், “மார்செல்லெஸ் நகர மக்களே! வணக்கம். நான் உங்களிடம் ஒருசில வார்த்தைகள் பேசவேண்டும். இங்கு இருக்கின்ற மக்களின் வாழ்வை என்னுடைய சிறுவயதிலிருந்தே நான் கவனித்து வருகின்றேன். இங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை, மட்டுமல்லாமல், மக்கள் தங்குவதற்கு போதிய வீடு இல்லை. நிறையப் பேர் ஓலைக் குடிசைகளில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அதனால்தான் நான் மக்கள் தங்குவதற்காகவே ஒரு மண்டபத்தைக் கட்டி எழுப்பினேன். மேலும் மக்கள் தங்களுடைய அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்துகொள்வதற்குத்தான் சரியான உணவுகூட உண்ணாமல் பணத்தைச் சேமித்து வைத்தேன். நான் இந்நாள் வரை சேமித்த பணமெல்லாம் அருகேயுள்ள பெட்டியில் இருக்கின்றது. அதை எடுத்துக்கொண்டு உங்களுடைய அடிப்படை வசதிகளைப் பூர்த்திசெய்துகொள்ளுங்கள்” என்று எழுதி இருந்தது.

அவர் எழுதிய உயிலைப் படித்துப் பார்த்த மக்கள், “இந்தப் பெரியவர் இத்தனை ஆண்டுகளும் மக்களுக்காகத்தான் வாழ்ந்திருக்கின்றார், நாம்தான் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை’ என்று மிகவும் வருந்தினார்கள். மார்செல்லெஸ் நகர மக்களுக்காக கயோட் தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்ததுபோன்று ஆண்டவர் இயேசுவும் நம்முடைய மீட்புக்காக தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார், அதற்காகப் பாடுகளையும், சிலுவையும் சுமந்து கொண்டார் என்று நினைத்துப் பார்க்கின்றபோது நமக்குப் பெருமையாக இருக்கின்றது.

பாடுகளின் குருத்து ஞாயிறான இன்று நாம் படிக்கக் கேட்ட வாசகங்கள், ‘நமக்காக இயேசு பட்ட பாடுகளை நமக்குக் எடுத்துக்கூறுகின்றன.. நாம் நமது மீட்புக்காக இயேசு பட்ட பாடுகளை சிந்தித்துப் பார்த்து, அவருடைய வழியில் நடக்க முயற்சி எடுப்போம்.

இயேசு நமக்காகப் பட்ட பாடுகள், அடைந்த அவமானங்கள், இழந்த இழப்புகள் எல்லாம் கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றையெல்லாம் நாம் வார்த்தையால் விளக்கிச் சொல்ல முடியாது. பிலிப்பியருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் இயேசு கிறிஸ்து நமது மீட்புக்காக எந்தளவுக்கு பாடுகள் பட்டார் என்பதை விளக்கிச் சொல்கின்றது. “கடவுள் தன்மையில் விளங்கிய அவர்... தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார்”. என்று நாம் அங்கு வாசிக்கின்றோம்.

இங்கே நாம் இயேசுவின் வாழ்வில் இருக்கும் ஐந்து நிலைகளைப் பார்க்கின்றோம். ஒன்று தம்மையே வெறுமையாக்குதல். இரண்டு. அடிமையின் நிலையை ஏற்றல். மூன்று. சாவை அதுவும் சிலுவைச் சாவை ஏற்றல். நான்கு கீழ்ப்படிதல். ஐந்து தம்மையே தாழ்த்திக்கொள்ளுதல். இந்த ஐந்து நிலைகளையும் நாம் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கின்றபோது இயேசு செய்த செயல் மிகவும் வியப்புக்குரியதாக இருப்பதை அறிந்துகொள்ளலாம்.

இந்த உலகத்தில் யாரும் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்ததாகத் தெரியவில்லை. ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், ஆண்டவர் இயேசுவோ கடவுள் வடிவில் இருந்தவர். அப்படிப்பட்டவர் ஓர் அடிமையைப் போன்று தம்மையே தாழ்த்தி, சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டார் என்றால் அங்குதான் நாம் இயேசுவின் அன்பைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் துன்புறும் ஊழியன் படுகின்ற பாடுகளை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இங்கே சொல்லப்படும் துன்புறும் ஊழியன் என்பவர் ‘ஆண்டவரின்மீது நம்பிக்கை கொண்ட மக்களினமாக’ இருக்கலாம் (எசா 49:1-5) அல்லது இறைவாக்கினர் எசாயவோ அல்லது அவரைப் போன்று துன்பங்களை அனுபவித்த இறைவாக்கினர் எரேமியாவாகவோ இருக்கலாம் என்று சொல்வர். ஆனால், இவர்கள் எல்லாரையும் விட இயேசுவோடுதான் மேலே சொல்லப்பட்ட வார்த்தைகள் மிகவும் பொருந்துவதாக இருக்கின்றன. ஏனெனில், அவர்தான் அடிப்போருக்கு முதுகையும், தாடியைப் பிடுங்குவோருக்குத் தாடியையும் கொடுத்தார்; நிந்தனை செய்வோருக்கும் காரி உமிழ்வோருக்கும் தன்னுடைய முகத்தை மறைக்கவில்லை. ஆகையால், இறைவாக்கினர் சொல்கின்ற துன்புறும் ஊழியன் இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு இல்லை என்று உறுதியாக நாம் நம்பலாம்.

பாடுகளின் குருத்து ஞாயிறான இன்று, நமக்காக இயேசு எவ்வளவு துன்பங்களை அனுபவித்தார் என்று சிந்தித்துப் பார்த்த நாம், இவ்விழா நமக்கு உணர்த்தும் மூன்று முக்கியமான செய்திகளை/ உண்மைகளைச் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

குருத்து ஞாயிறு நமக்குச் சொல்லும் முதலாவது செய்தி. நற்செய்திக்காக/ இறைவனுக்காக நாம் படும் துன்பங்களை ஒருபோதும் அவமானமாகப் பார்க்கக்கூடாது என்பதாகும். முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் ‘ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்” என்று கூறுகின்றார். ஆம், நாம் ஒன்றும் இழிவான செயலைச் செய்யவில்லை. இன்றைக்கு இழிவான செயலைச் செய்கின்றவர்களே அவமானப்படாதபோது ஆண்டவருடைய பணியைச் செய்கின்ற நாம் எதற்கு அவமானம் அடையவேண்டும் என்பதுதான் நாம் நம்முடைய மனதில் வைத்துக் கொள்ளவேண்டிய முதன்மையான செய்தியாக இருக்கின்றது.

பல நேரங்களில் இயேசுவின் பொருட்டும், நற்செய்தியின் பொருட்டும் பிறர் நம்மைத் துன்புறுத்தலாம், வசைபாடலாம், இழிவாக நடத்தலாம். அத்தகைய தருணங்களில் மனம் உடைந்து, அவமானம் அடையத் தேவையில்லை என்பதுதான் நாம் கருத்தில் கொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது.

குருத்து ஞாயிறு நமக்கு உணர்த்தும் இரண்டாவது முக்கியமான செய்தி நற்செய்தியின் பொருட்டும், இயேசுவின் பொருட்டும் நாம் அடையும் துன்பங்களுக்கு இறைவன் தக்க கைம்மாறு தருவார் என்பதாகும். இரண்டாம் வாசகத்தில் ‘தம்மை வெறுமையாக்கி, அடிமையின் கோலம் பூண்டு, சிலுவை சாவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவை ஆண்டவராகிய கடவுள் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார் என்று நாம் வாசிக்கின்றோம். ஆம், ஆண்டவருடைய பணியைச் செய்வோருக்கு ஆண்டவர் தக்க கைமாறு தருவார் என்பதில் எந்தவொரு ஐயப்பாடும் கிடையாது என்பதுதான் உண்மை. மத்தேயு நற்செய்தி 5:11 ல் நாம் அதைத்தான் வாசிக்கின்றோம், “என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை, பொல்லாதவை எல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள்! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும் என்று.

ஆகவே, இறைப்பணி செய்யும் ஒவ்வொருவருக்கும், இயேசுவின் பொருட்டுத் துன்ப துயரங்களை அனுபவிக்கும் ஒவ்வொருவருக்கும் இறைவன் தக்க கைம்மாறு தருவார் என்ற உண்மையை நம்முடைய மனதில் பதிய வைத்துக்கொள்வோம்.

குருத்து ஞாயிறு நமக்கு உணர்த்தும் மூன்றாவது முக்கியமான செய்தி ஆண்டவரின் துணை எப்போதும் நம்மோடு இருக்கின்றது என்பதாகும். முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் கூறுகின்றார், “ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்” என்று. யோவான் நற்செய்தி 16: 32 ல் இதைத்தான் வாசிக்கின்றோம். “இதோ காலம் வருகின்றது, ஏன் வந்தே விட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே விட்டுவிடுவீர்கள். ஆனால், நான் தனியாய் இருப்பதில்லை, தந்தை என்னோடு இருக்கின்றார்” என்று. ஆகையால், நம்முடைய வாழ்வில் வரும் இன்னல் இக்கட்டுகளில் இறைவன் நம்மோடு இருக்கின்றார், நமக்குத் துணையாக இருந்து வழி நடத்துகின்றார் என்னும் செய்தியை நாம் உணர்ந்துகொண்டு வாழவேண்டும்.

இளைஞர்களின் பாதுகாவலர் என்று அழைக்கப்படுகின்ற தொன் போஸ்கோ தீய வழியில் வாழ்ந்து வந்த ஏராளமான இளைஞர்களை ஆண்டவர் இயேசுவுக்குள் கொண்டுவந்து அவர்கள் தூய வாழ்க்கை வாழக் காரணமாக இருந்தார். இதனால் அவருக்கு நிறைய எதிரிகள் உருவானார்கள்.

சில நேரங்களில் அவருடைய எதிரிகள் அவரைச் சூழ்ந்துகொண்டு அவரைக் கொல்வதற்கு முயற்சி செய்தார்கள். இன்னும் சில நேரங்களில் அவருடைய எதிரிகள் அவரை இருள் மண்டிக்கிடக்கும் பகுதிக்குத் தூக்கிச்சென்று அவர்மீது தாக்குதல் நடத்த முயற்சித்தார்கள். அப்போதெல்லாம் ஒரு நாய் அங்கு வந்து, தொன் போஸ்கோவை எதிரிகளிடமிருந்து காப்பாற்றும். அந்த நாய் எங்கிருந்து வருகின்றது, எங்கு செல்கின்றது என்று யாருக்கும் தெரியாது. ஏன் தொன் போஸ்கோவிற்குக்கூடத் தெரியாது. அவர் அந்த நாயை கிரிகியோ (Grigio) என்று அழைத்து வந்தார். தொன் போஸ்கோவிற்கு ஆபத்து வருகின்ற சூழலில் எல்லாம் கிரிகியோ என்னும் அந்த நாய் திடிரென்று தோன்றி, அவரை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிவிட்டு, மாயமாக மறைந்துவிடும் சம்பவம் பல முறை அவருடைய வாழ்க்கையில் நடந்திருக்கின்றது.

கரிகியோ என்னும் அந்த நாய் வேறு யாரும் கிடையாது, தொன் போஸ்கோவின் காவல்தூதர்தான் என்று சொல்வர்.

துன்ப நேரத்தில் இறைவன் நம்மைக் கைவிட்டுவிட மாட்டார். அவர் நமக்குத் துணையாக (காவல் தூதர்கள் வழியாக) நம்மைக் காத்திடுவார் என்னும் உண்மையைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, இயேசுவின் பாடுகளின் குருத்து ஞாயிரை சிறப்பிக்கும் நாம் இயேசுவை போன்று மானுட மீட்புக்காக துன்பங்களை துணிவோடு ஏற்போம். துன்பங்களை அவமானமாகப் பார்க்காமல், அவையே நம்மையே இறைவனிடம் சேர்க்கும் கருவி என்பதை உணர்வோம். இறைவனின் துணை எப்போதும் நம்மோடு இருக்கின்றது என்பதை உணர்ந்து, இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.