Tuesday 27 November 2018

திருவருகைக்கால முதல் ஞாயிறு - மூன்றாம் ஆண்டு





                                  

 திருவருகைக்கால முதல் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு.



இன்றைய வாசகங்கள்

எரேமி. 33:14-16
1 தெச. 3:12- 4:2
லூக். 21:25-28,34-36
 



நடுக்கடலில் பாய்மரக் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்த போது, திடீர் என்று சூறாவளி... கப்பல் திக்குமுக்காடுகிறது .... திசைமாறுகிறது. இறுதியில் ஒரு பாறை மீது மோதி நொறுங்குகிறது. நம்பிக்கையுள்ள, விழிப்புள்ள ஒருவன் மட்டும் தப்பிப் பிழைக்கிறான். ஒரு மரத்துண்டைப் பற்றிக் கொண்டு நீந்திக் கரையேறுகிறான். ஒரு சிறிய தீவு அவன் கண்ணில் பட்டது. பரவாயில்லை கடவுள் காப்பாத்திட்டார் என்று சந்தோஷப்பட்டான். அவன் கரையேறிய தீவில் எந்த மனிதனும் இல்லை . கிடைத்த இலை தழைகளைக் கொண்டு ஒரு குடிசையை உருவாக்கினான். அங்கே கிடைத்ததை உண்டான். சொந்த இடத்தை அடைவோம் என்ற நம்பிக்கை அவனில் நிலையாக இருந்தது. ஒரு நாள் வெளியே சென்றபோது அந்த குடிசை தீப்பற்றி எரிந்தது. மூங்கில்களின் உராய்வினால் ஏற்பட்ட தீயால் குடிசை சாம்பலானது. சற்று நேரத்தில் நாலைந்து பேர் அங்கே வந்தார்கள். நாங்கள் மீன் பிடிக்க, படகிலே இந்த பக்கமா வந்துகிட்டிருந்தோம். இந்த தீவிலே புகை தெரிந்தது. யாரோ இருக்காங்க, பார்க்கலாம்னு வந்தோம். அப்போது அவன், எனது நம்பிக்கையும், விழிப்பும் வீண் போகவில்லை என்று கடவுளுக்கு நன்றி கூறினான்.

பல்லாண்டு காலமாகக் காத்திருந்த இஸ்ரயேல் மக்களின் கனவு நனவாக தாவீதின் தளிராக இயேசு இம்மண்ணில் உதயமானார். காத்திருத்தல் என்பது கனவு கண்டு கொண்டிருப்பது அல்ல. நம்பிக்கையோடு நமது கடமைகளை, விழிப்போடு நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகும். மரத்தின் ஆணிவேர் உறுதியாக இருந்தால், அந்த மரம், பல ஆண்டுகள் நிலைத்திருக்கும். எந்த அளவுக்கு நம்பிக்கையோடும், விழிப்போடும், காத்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு மனுமகனோடு இறையரசில் சேர தகுதி பெறுவோம். நாளும் நேரமும் நமக்குத் தெரியாது (மத். 24:36 - 44). ஆனால் நம்பிக்கையோடு இருப்போர் வரவேற்கப்படும் தகுதியைப் பெறுவார்கள். மனுமகனைத் தரிசிப்பார்கள் (மத். 25:10).


முதல் வாசகத்தில் யூதா விடுதலைப் பெறும், எருசலேம் விடுதலையோடும், பாதுகாப்போடும் வாழும் (எரே. 33:16) என்ற வார்த்தைகள் நம்பிக்கை கொடுத்து, வாழ்வு கொடுத்தது, விடுதலை தந்தது. நம் ஆண்டவர் இயேசு நம் தந்தையாம் கடவுளின் முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக (1 தெச. 3:13) என்று புனித பவுல் வாழ்த்துகிறார். நம்பிக்கையோடும், விழிப்போடும் நிலைத்திருப்பவர்களுக்கு மீட்பு நெருங்கி வருகிறது. இதற்கு இயேசு கூறும் வழிமுறை , உங்கள் உள்ளம் குடிவெறியிலும் களியாட்டத்திலும் மந்தமடையாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள் (லூக். 21:34-35) என்பதே.

ஒரு முனிவர் தனது சீடனிடம் கடவுளின் ஞானம் உன்னிலே மாற்றத்தை தருகிறதா...? என்றார். சீடர், நான் கடவுளைப்போல மாறவில்லை என்றார். முனிவர், நீ ஒரு புனிதனாக மாறியிருக்கிறாயா...? என்று கேட்டார். சீடன், இல்லை , நம்பிக்கையுள்ளவனாக மாற முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன் என்றான். முனிவர், பின் எதற்கு இருக்கிறாய் இங்கு ? சீடன், நான் விழிப்புடன் வாழக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்றான். விழிப்பு என்பது விழிகளைத் திறந்து வைத்திருப்பது மட்டுமல்ல. ஒரு மனிதனுடைய எண்ணங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதே முக்கியம். இன்றையச் சூழலில் மனிதன் சுய சிந்தனையை இழந்து, தீமையைக் கூட நன்மையானது என்று நினைக்கிறான். அவனின் ஆன்மீக வாழ்வும், தேக்க நிலையாகவே உள்ளது. பாவம் பற்றிய பயமும், மனசாட்சியைப் பற்றிய அக்கறையும் இருப்பதில்லை . இப்படிப்பட்ட சூழலில் வாழும் மனிதனை, விழிப்போடு வாழ இன்றைய நாள் வழிபாடு அழைக்கின்றது.

கிறிஸ்து எங்கோ இருக்கிறார் என்று எண்ணி அவரது வருகைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக நமக்குள்ளே, நம்மோடு நம்மில் ஒருவராக இருக்கிறார் என்பதை உணர்வோம். ஆனால் நாம் தேடும் கிறிஸ்து நம்மில் குடிகொள்ளாமல் போகத் தடையாக இருப்பது குடிவெறி, களியாட்டம். இவைகள் நமக்குள் இருக்கும் கிறிஸ்துவையும், அவரின் சாயலையும் சிதைத்துவிடுகிறது.

சிந்தனைக்கு

வேலைக்காரச் சிறுவனிடம் ஆற்றுக்குச் சென்று இந்தப் பானையில் தண்ணீர் கொண்டு வா , தவறுதலாகக் கீழே போட்டு உடைத்தால், கடுந்தண்டனை கிடைக்கும் என்று சொல்லி அவன் தலையில் ஓங்கி கொட்டினார் முல்லா. இதைக் கண்ட நண்பர் பானையை உடைக்கும் முன்பே ஏன் அடித்தீர் என்று கேட்க பானை உடைந்தப் பின் தண்டித்து என்ன பயன்? பானையும் உடைந்து, தண்ணீரும் வீணாகிப் போன பின், தண்டித்து ஒரு பயனும் இல்லை. முன்னரே தண்டித்தால், பயத்துடன், கவனத்துடன், விழிப்பாக இருந்து பானையை உடைக்காமல் தண்ணீரோடு கொண்டு வந்து சேர்ப்பான் என்றார் முல்லா.






காத்திரு


"சித்தார்த்தா” - ஆங்கில நாவல் இது. அதில் இப்படி ஒரு காட்சி. சித்தார்த்தா என்ற அந்த இளைஞன் ஒருத்தியைக் காதலிக்கிறான். அவள் எங்கே சென்றாலும் பின்னாலேயே சுற்றுகிறான். திடீரென்று ஒருநாள் தன்னைச் சுற்றித் திரியும் அவனைப் பார்த்து அவள் கேட்கிறாள்: "என்னைக் காதலிக்க உனக்கு என்ன அருகதை உண்டு?” ஒருகணம் அதிர்கிறான். "என்ன கேள்வி இது? என்றாலும் இதோ பதில்" என்று அவளைக் காதலிக்கத் தனக்கு உள்ள தகுதியைப் பட்டியலிடுகிறான்.
1. என்னால் உன்னை நேசிக்க முடியும். I can love you. 2. என்னால் உன்னை நினைக்க முடியும். I can think of you,
3. எல்லாவற்றிற்கும் மேலாக என்னால் உனக்காகக் காத்திருக்க முடியும். Above all I can wait for you.
இறைவனை அன்பு செய்கிறேன் என்பதற்கான அடையாளங்களில் ஒன்று அவனுக்காகக் காத்திருத்தல். அன்பு இல்லையென்றால் காத்திருத்தல் எரிச்சலாக இருக்கும். அன்புடன் என்றால் அதில் ஒரு 'த்ரில்' இருக்கும். காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு. காக்க வைப்பதில் சுகம் உண்டு',
நம் வாழ்வில் பெரும்பகுதி காத்திருக்கிறோம் - பயணத்தில் பஸ்ஸுக்காக, படுக்கையில் உறக்கத்துக்காக, வாசலில் நண்பனுக்காக, வரிசையில் (Q) திரைப்பட நுழைவுச் சீட்டுக்காக... இப்படி ஏதோ ஒன்றுக்காக, யாரோ ஒருவருக்காக.

ஆனால் இறைவனுக்காக எந்த அளவு, எவ்வளவு நேரம் காத்திருக்கிறோம்?

"ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப் போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்த (லூக்.2:26),

சிமியோன் எப்படியெல்லாம் இஸ்ராயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலுக்காகக் காத்திருந்தார்! “உமது மீட்பை என் கண்கள் கண்டு கொண்டன” என்ற அவரது உற்சாக வார்த்தைகளில் எத்துணை மகிழ்ச்சி, மன நிறைவு! மீட்பர் அரசியல் தலைவன் அல்ல துன்புறும் ஊழியன் என்ற உண்மையின் வெளிப்பாடு அல்லவா அன்றே அவர் கண்டது!

அன்னை மரியா எப்படியெல்லாம் காத்திருந்தாள்?
- மனிதர் அவளுக்கு வழங்கும் அடை மொழிகள் எத்தனை எத்தனை! விண்ணகத்தின் வாயிலே, விடியற்கால விண்மீனே, நீதியின் கண்ணாடியே, மறைபொருளின் ரோஜா மலரே இப்படியாக.
- கடவுள், தூதன் கபிரியேல் வழியாக வழங்கிய அடைமொழி அருள்மிகப் பெற்றவரே, இறையாசி நிறைந்தவரே என்பது
- மரியா தனக்குத் தானே வழங்கிக் கொண்ட அடைமொழி: 'இதோ ஆண்டவருடைய அடிமை .
அடிமை என்பவன் யார்?
- தலைவனுக்காகக் காத்திருப்பவன். - தலைவனுக்குத் தன்னையே அர்ப்பணித்தவன். - தலைவனுக்கு அனைத்து வகையிலும், பணிவிடை புரிபவன் - தலைவனுக்குக்காகத் தன்னையே இழப்பவன்.
அடிமை என்ற சொல்லில் காத்திருத்தல் மட்டுமல்ல வெறுமையாக்குதலைப் பார்க்கிறோம்.

மனிதனோடு இணைய இறைவன் தன்னையே வெறுமையாக்கினார். (பிலிப்.2:7) இறைவனோடு இணைய மனிதன் தன்னையே வெறுமையாக்க வேண்டும்.
வெறுமையாக்குவது இறைவன் தன் அருளை, மீட்பை, நிறைவைப் பெற மிகவும் இன்றியமையாதது.

''உன் பாத்திரம் களிமண்ணால் நிறைந்திருந்தால் இறைவன் மாற்றும் பால் அதில் விழும் போது தெறித்துச் சிதறும். எவ்வளவுக்கு எவ்வளவு அது காலியாக, வெறுமையாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு இறைவன் ஊற்றும் பாலால் நிரம்பும்" என்ற சிலுவை அருளப்பரின் கூற்று திருவருகைக்காலச் சிந்தனைக்கு ஏற்றது.

அயர்லாந்து நாட்டில் ஒரு கிறிஸ்துமஸ் பழக்கம் உண்டு. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னிரவு வீட்டில் உள்ள கதவுகளையெல்லாம் திறந்து வைப்பார்கள். முன் கதவுக்கருகில் ஒரு மெழுகுதிரியை ஏற்றி வைப்பார்கள். பெத்லகேமில் அன்று இரவு மரியாவும் சூசையும் வீடுதேடி அலைந்ததன் நினைவாக அவர்களை வரவேற்க ஆயத்தமாக இருப்பது போல இப்பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

திருவருகைக் காலத்தில் மீட்பரின் வருகைக்காக நமது இதயக் கதவு திறந்திருக்கிறதா? அருள்வாழ்வு என்னும் விளக்கு அங்கு ஒளிர்கிறதா? “இதோ நான் கதவருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால் நான் உள்ளே சென்று அவர்களோடு உணவருந்துவேன். அவர்களும் என்னோடு உணவருந்துவார்கள்” (தி.வெ.3:20) என்கிறார் ஆண்டவர்.

வர இருப்பவர் எரேமியா பார்வையில் நீதியின் தளிர். (எரே.33:15)
எசாயா பார்வையில் அமைதியின் ஊற்று. (எசா.9:6)

 அந்த நீதியின் தளிர் செழித்து வளர, அந்த அமைதியின் ஊற்று சுரந்து பாய நம் வாழ்வில் “ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்”. (புலம்பல் 3:26)

"கலைமானைக் கண்ணியில் சிக்க வைத்துப் பிடிக்க முடியாது. ஏனெனில் அதற்குக் கூர்மையான பார்வை உண்டு. ஒரு பறவை விழிப்பாய் இருந்தால் வெகு எளிதில் வலையில் சிக்காமல் தப்பித்துக் கொள்ள முடியும். இவ்வாறு மிருகங்களெல்லாம் தங்களையே காத்துக் கொள்ள விழிப்பாய் இருக்கின்றபோது நீ மட்டும் ஏன் விழிப்புடன் இருப்பதில்லை ?" - புனித பசிலியார்.

 



கிறிஸ்து பிறக்கும்போது அவர் நம்மிடம் என்ன கேட்பார்?

இது திருவருகைக் காலம்!
நம்மைத் தேடி வரும் இயேசு நமக்கு அருளைத் தருவாரா?
பொருளைத் தருவாரா?
உடல் நலத்தைத் தருவாரா?
உள்ள அமைதியைத் தருவாரா?
உண்ண உணவைத் தருவாரா?
உடுக்க உடையைத் தருவாரா?
இருக்க இடத்தைத் தருவாரா?
இறைவாக்கினர் எரேமியா போல் நீதியைத் தருவாரா?

அவர் கேட்கப்போகும் கேள்விக்கு நாம் சரியான பதிலைச் சொன்னால் நாம் கேட்பதை அவர் நமக்குத் தருவார்!

பதில்களிலே இரண்டு வகையான பதில்கள் உள்ளன! ஒன்று சரியான பதில் ; மற்றொன்று தவறான பதில்!

ஓர் ஆசிரியர் மாணவனைப் பார்த்து, எத்தனைக் கடவுள் இருக்கின்றார்? என்றார். அந்த மாணவனோ, ஒரே கடவுள் என்றான்.

அவர் எங்கே இருக்கின்றார்? என்றார் ஆசிரியர். மாணவனோ, எங்கும் இருக்கின்றார் என்றான். இன்னொரு கடவுள்

இருக்கமுடியாதா? என்றார் ஆசிரியர்.

ஒரு கடவுள்தான் எல்லா இடங்களிலும் இருக்கின்றாரே! இரண்டாவது கடவுள் இருக்க எங்கே இடமிருக்கும்? என அந்த

மாணவன் கேட்டான்! ஒரு கேள்விக்கு ஒரு கேள்வியால் அந்த மாணவன் பதில் சொன்னான்.

இது சரியான பதில்!

தவறான பதிலுக்கு ஓர் உதாரணம்!

ஓர் ஆசிரியை!

அவருக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் ஒரு மாணவனைப் பார்த்து, நீ தேறவே மாட்டே என்றார். உங்க கிளாசிலே இருக்கும்

வரை நான் எப்படித் தேறுவேன்? என்றான் மாணவன். இது தவறான பதில்!

நாம் இயேசுவுக்குத் தவறான பதிலை அல்ல சரியான பதிலைத் தந்து நாம் கேட்கும் வரங்களை இயேசுவிடமிருந்து பெற்று

பெருவாழ்வு வாழலாம்.

கிறிஸ்துமஸ் நாளன்று நம்மைப் பார்த்து இயேசு என்ன கேள்வி கேட்பார்?

இன்று குழந்தை இயேசுவாகிய என்னைத் தொட்டுத் தொட்டு கும்பிடுகின்றீர்களே! மண்ணுக்குள் நான் இருப்பதாக நம்பி

தொட்டுக்கும்பிடும் நீங்கள், மண்ணைவிட உயர்ந்த கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களுக்குள் நான் இருக்கின்றேன்

என்பதை நம்பி திருவருகைக் காலத்தில் அவர்களைத் தொட்டு வணங்கினீர்களா ? என்று கேட்பார்.

பொழுது விடிந்ததும் மனைவி கணவரே கண்கண்ட தெய்வம் எனச் சொல்லி அவரைத் தொட்டு வணங்கவேண்டும். கணவரோ,

மனைவி கொடுக்கின்ற உணவை உண்டு, அவருடைய திருக் கைகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு இந்தக் கைகளால்தானே

இப்படிப்பட்ட சுவையான உணவைப் படைத்தாய் எனச் சொல்லி அவரது கைகளை முத்தமிட வேண்டும்.

பேரனும், பேத்தியும், போட்டி போட்டுக்கொண்டு, தாத்தா பாட்டியின் கண்ணங்களிலே முத்தமிட வேண்டும்.

இன்றைய இரண்டாவது வாசகத்தில் புனித பவுலடிகளார் கூறுவது போல அன்பு நமது இல்லங்களையும், உள்ளங்களையும்

ஆட்சி செலுத்தவேண்டும். நாம் ஒருவரையொருவர் மதிப்போடும், மரியாதையோடும் நடத்த வேண்டும். மனிதனை மனிதனாக

மதிக்கவேண்டும். இந்தத் திருவருகைக் காலத்தில் மனிதநேயம் நமக்குள் வளரவேண்டும்.

அண்மையிலே புதுக்கவிதை ஒன்றைப் படித்தேன்.

ரோஜா சொல்கின்றது!

என் செடியிலிருந்த முள்கள் என்னைக் காப்பாற்றும் என நினைத்தேன்!
அவைகளால் என்னைக் காப்பாற்ற முடியவில்லை!
ஆகவே நான் முள்ளாக மாறிவிட்டேன்.

இந்த உலகில் எந்த ரோஜாவும் முள்ளாக மாறக்கூடாது! ஒருவரையொருவர் மதிப்போடும், மரியாதையோடும் நடத்தி, பெற்றோரும்,

குழந்தைகளும், தலைவர்களும், சீடர்களும், நீங்களும், நானும் ஒருவரையொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு அன்பு செய்வோம்.

இன்றைய நற்செய்தி கூறுவதுபோல அன்பு செய்வதில் எல்லாரும் விழிப்பாயிருப்போம்! அப்போது நாம் தேடும் புதுவாழ்வை,

புத்துயிரை பிறக்கப் போகும் குழந்தை இயேசு நமக்களித்து நம்மை வாழ்வாங்கு வாழவைப்பார்.

மேலும் அறிவோம் :
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் (குறள் : 91).
பொருள் : அன்பு கலந்து, வஞ்சகம் எதுவுமின்றி மெய்ப்பொருளாம் அறம் உணர்ந்த பெருமக்கள் வாயிலிருந்து வருவதே

இனிய சொல் ஆகும்.








இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய முக்காலங்களைப் பற்றி விளக்கியபின் தமிழ் ஆசிரியர் மாணவர்களிடம், "நாளை மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். இது என்ன காலம்?" என்று கேட்டதற்கு மாணவர்கள், "சார்! இது எங்கள் போதாத காலம்" என்று பதிலுரைத்தனர்.
உண்மையில் நம்மில் பலருக்குப் போதாத காலம். தனி வாழ்விலும், குடும்ப வாழ்விலும், பொது வாழ்விலும் பல்வேறு பிரச்சினைகள் நம்மைக் கசக்கிப் பிழிந்தெடுக்கின்றன. நிம்மதியாக இருப்பவர் இரண்டே பேர், "ஒருவர் இன்னும் பிறக்கவில்லை ; மற்றவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். " உயிருடன் இருப்பவர்களுக்கெல்லாம் போதாத காலம். மனிதர் மட்டுமல்ல, இயற்கை அனைத்தும் பேறுகால வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது (உரோ 8:22-23).

இப்போதாத காலத்தில் திருச்சபை இன்று திருவருகைக் காலத்தைத் தொடங்குகிறது. திருவருகைக் காலம் எதிர்பார்ப்பின் காலம், நம்பிக்கையின் காலம், திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கக் காலம். கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவிற்காக நம்மைத் தயாரிக்கும் காலம்.
அன்று இஸ்ரயேல் மக்கள் கிறிஸ்துவின் முதல் வருகைக்காக வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருந்தனர். மெசியா நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார் என்று ஏங்கினர் (முதல் வாசகம்). தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கினர் (இரண்டாம் வாசகம்).
உலக நாடுகளைச் சமாதானத்தில் ஒன்று சேர்க்க கிறிஸ்து வந்து, தமது சாவினாலும் உயிர்ப்பினாலும் வான்வீட்டின் கதவுகளத் திறந்து விட்டார். அவரது இறுதி வருகையின்போது நமக்கு நிறைவான மீட்பை அளிப்பார். ஆனால், நிகழ்காலத்தில் அருள்வாக்கு அருள் அடையாளங்கள்.

அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் ஆகியவற்றின் வாயிலாக அவர் வந்து கொண்டு இருக்கிறார்.

ஆடி மாதத்தில் ஏன் பலத்த காற்று வீசுகிறது? புதிதாக திருமணம் செய்த தம்பதியர்களை ஆடி மாதத்தில் பிரித்து விடுகின்றனர். இவ்வாறு பிரிக்கப்பட்டவர்கள் ஒருவர் மற்றவரை நினைத்து விடுகின்ற ஏக்கப் பெரு மூச்சு பலத்த காற்றாக வீசுகிறதாம்! அவ்வாறே, மண மகனாம் கிறிஸ்துவைப் பிரிந்த மணமகளாம் திருச்சபையும் அவரது இரண்டாவது வருகையை நினைத்து ஏக்கப் பெரூமூச்சு விடுகிறது. "மாரனாத்தா, ஆண்டவரே வருக" (1 கொரி 16:22): "ஆண்டவராகிய இயேசுவே வாரும்" (தி வெ 22:20) என்று திருச்சபை இயேசு கிறிஸ்துவைக் கூவி அழைக்கிறது. "எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையை மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கின்றோம்” என்று திருவழிபாட்டில் திருச்சபை உருக்கமாக மன்றாடுகிறது.

இயேசுவின் இரண்டாம் வருகை எப்போது நிகழும்? அந்த நாளும் வேளையும் எவருக்கும் தெரியாது (மத் 24:36), காலங்களையும் நேரங்களையும் அறிவது நமக்கு உரியது அல்ல (திப 1:7),
இறுதி நாள்களில் இயற்கையில் பல்வேறு குழப்பங்களும் கொந்தளிப்பும் நிகழும் என்பதை முன்னறிவித்து, எப்போதும் விழிப்பாக இருந்து மன்றாடும்படி இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து அறிவுறுத்துகிறார். நாம் தூங்கக் கூடாது; நமக்கு விழிப்புணர்வு தேவை.

ஒரு மாணவன் தேர்வில் தூங்கிக் கொண்டிருந்தான். ஏன் அவன் தூங்குகிறான்? என்று அவனைக் கேட்டதற்கு, "தேர்வில் கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை என்றால் முழிச்சிக்கிட்டு இருக்காதே" என்று அவர் அப்பா சொன்னாராம்.

வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாதவர்கள் அவற்றிலிருந்து தப்பி ஓடுகின்றனர். குடிவெறியிலும் களியாட்டத்திலும் ஈடுபடுகின்றனர், குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவர் திருப்பலியில் "அல்லேலூயா" என்று பாடுவதற்குப் பதிலாக, "கள்ளே லூயா, கள்ளேலூயா கள்ளேலூயா. பத்து ரூபாய்க்குக் கள் குடித்தேன். போதை வரவில்லை . மேலும் பத்து ரூபாய்க்குக் கள் குடி என்கிறார் ஆண்டவர்" என்று பாடினாராம்.

ஒரு பாம்பு சிறிது நேரத்திற்கு முன் ஒரு தவளையைப் பிடித்து வாயில் வைத்துக் கொண்டிருக்கிறது. அத்தவளையோ சற்று நேரத்திற்குமுன் ஒரு வண்டைப் பிடித்து தனது வாயில் வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வண்டோ சற்று நேரத்திற்கு முன் ஒரு பூவிலிருந்து சிறிது தேனை உறிஞ்சி வாயில் வைத்துக் கொண்டிருக்கிறது. அத்தவளை தனக்கு வரப்போகிற ஆபத்தை உணராது தனது வாயில் இருக்கும் வண்டைச் சுவைத்து மெய் மறந்த நிலையில் உள்ளது. அவ்வாறே, நாமும் நமக்கு வரவிருக்கிற பேரழிவை உணராது இவ்வுலக இன்பங்களைச் சுவைத்து நினைவிழந்த நிலையில் இருக்கிறோம். தொலைநோக்குடன் வாழ வேண்டியவர்கள் தொலைக் காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து நமது முகவரியைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இவ்வுலக இன்பங்களைத் துய்ப்போர் அவற்றிலேயே மூழ்கி விடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறார் திருத்தூதர் பவுல் (1 கொரி 7:29-30).

"நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிட மகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும், எப்போதும்
விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" (லூக் 21:36) என்று இன்றைய நற்செய்தியில் அறிவுறுத்துகிறார் நம் ஆண்டவர்.
நாம் செபிக்க வேண்டும், செபத்திற்கும் வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாம் எப்படி செபிக்கின்றோமோ அப்படியே வாழ்கிறோம். நாம் எப்படி வாழ்கின்றோமோ அப்படியே செபிக்கின்றோம். நன்றாக செபிக்கவில்லை என்றால், நாம் நன்றாக வாழவில்லை. நன்றாக வாழவில்லை என்றால் நாம் நன்றாகச் செபிக்கவில்லை.

ஒரு மருத்துவர் ஒரு நோயாளியை ஆறாவது படுக்கையிலிருந்து நூறாவது படுக்கைக்கு மாற்றினார். ஏன்? என்று கேட்டதற்கு, "ஆறிலும் சாவு, நூறிலும் சாவு" என்றார். ஆம், நாம் எப்போது சாவோம் என்பது நமக்குத் தெரியாது. எனவே நாம் எப்போதும் விழிப்பாக இருந்து செபிப்போம்.
ஆபத்து வருமுன் அதைத் தடுத்து நிறுத்தாதவருடைய வாழ்வு நெருப்பு முன் வைக்கோல் போல் எரிந்து சாம்பலாகவிடும் என்று அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தாறு பேலக் கெடும்   (குறள் 435)


பசித்திரு! தனித்திரு! விழித்திரு! செபித்திரு! இதுவே இத்திருவருகைக் காலம் முழுவதும் நம்மை நெறிப்படுத்தும் தாரக மந்திரமாக அமையட்டும்.




உம்மை நோக்கியே உள்ளம்



கார்த்திகை மாதம் பாதிக்கடக்குமுன்னே மார்கழிக் குளிர் நம் உடலைத் தழுவ ஆரம்பித்துவிட்டது. குளிர்காலத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இலைகளை உதிர்த்து குளிரை எதிர்கொள்ள வேண்டிய மரங்கள், இலைகளை உதிர்க்கவா, தளிர்களைத் துளிர்க்கவா என்று குழம்பிக் கொண்டிருக்கின்றன. காலநிலைகள் மாற்றங்கள் நம் ஊரில் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அமெரிக்கா, ஐரோப்பாக் கண்டங்களில் இவை தெளிவாகத் தெரியும். இலையுதிர் காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும் நேரம் இது. மரங்கள் வெறும் குச்சிகளாக நின்று குளிரை, 'வந்து பார்' என எதிர்நோக்கியிருக்கும் இக்காலத்தை நம் தாய்த்திருச்சபை, 'மாரநாதா, என் ஆண்டவரே வாரும்' என்று கிறிஸ்துவின் வருகைக்கு எதிர்நோக்கியிருக்கும் திருவருகைக்காலமாகக் கொண்டாடுகிறது.



ஒளி அல்லது வெப்பம் என்றால் உயிருக்கு வளர்ச்சி. இருள் அல்லது குளிர் என்றால் உயிருக்குத் தளர்ச்சி. தளர்ச்சி, சோர்வு, மதமதப்பு, நீண்ட இரவு, நடுக்கும் குளிர், உடல்நலத்தில் தேக்கம் அல்லது பின்னடைவு என்று மனித உடலும், உயிரும் கலங்கும் குளிர்காலத்தில் திருவருகைக்காலம் ஏனோ?



குளிர் என்பது குறுகிய இறப்பு. குளிரில் இக்குறுகிய இறப்பை அனுபவிக்கும் உயிர்களுக்குள் இறக்காமல் இறப்பது நம்பிக்கையே - வசந்தம் வரும் என்ற நம்பிக்கையே. இந்த நம்பிக்கைக்கான காத்திருத்தல் எதிர்நோக்காக மாறி, இந்த எதிர்நோக்கு நம்மை அன்பில் உந்தித் தள்ளுகிறது. நம் கண்களுக்குத் தெரியும் எல்லா மரங்களிலும் மூன்று கூறுகள் உள்ளன: வேர், தண்டு, கிளைகள். இந்த மூன்றில் ஒன்று இல்லை என்றாலும் மரம் இறந்ததாகவே கருதப்படும். நம் ஒவ்வொருவரின் வாழ்வையும் மரத்திற்கு ஒப்பிட்டால், நம்மில் வேராக நம்பிக்கையும், தண்டாக எதிர்நோக்கும், கிளைகளாக அன்பும் இருக்கின்றன. இம்மூன்றும் இருந்தாலும், சில நேரங்களில் நாமும் குளிர் தாங்கும் குச்சி மரமாக நிற்கத்தான் செய்கின்றோம். இப்படி நிற்கும் நமக்கு ஊட்டம் தருவதே திருவருகைக்காலம்.



இன்றைய பதிலுரைப்பாடலோடு (திபா 25) நம் சிந்தனையைத் தொடங்குவோம்:



'ஆண்டவரே, உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்' என்று பாடுகிறார் தாவீது.



குளிரில் தவிக்கும் தாவரங்களும், உயிர்களும் கதிரவனின் வருகையை நோக்கிக் கண்களை உயர்த்துவதுபோல, துன்பத்தில் இருக்கும் தாவீது ஆண்டவரை நோக்கித் தன் உள்ளத்தை உயர்த்துகின்றார்.



திருவருகைக்காலத்தில் ஆண்டவரை நோக்கி நம் உள்ளம் மூன்று நிலைகளில் உயர்ந்து நிற்கின்றது:



ஒன்று, அவரது முதல் வருகையின் நினைவுகூர்தலை நோக்கி நெஞ்சம் நிறை நன்றியோடும், மகிழ்ச்சியோடும்,



இரண்டு, அவரது இரண்டாம் வருகையை எதிர்பார்த்து கண்கள் நிறை விழிப்போடும், கவனமோடும்,



மூன்று, அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலும், நபர்களிலும் வரும் அவரின் உடனிருப்பு நோக்கி எண்ணம் நிறை பரிவோடும், பகிர்வோடும்.



திருவருகைக்காலத்தின் ஒற்றைச் செய்தியும் இதுதான்: 'அவரை நோக்கி நம் உள்ளம்'



அவரை நோக்கி நம் உள்ளம் இருக்க வேண்டும் என்றால், முதலில் இப்போது நம் உள்ளம் எதை நோக்கி இருக்கிறது என்று காணுதல் அவசியம். நாம் எதை நோக்கி இருக்கிறோமோ நாம் அதன் பிரதிபலிப்பாக மாறுகிறோம். இல்லையா?



இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 33:14-16) இறைவாக்கினர் எரேமியா இஸ்ரயேல் மக்களுக்கான ஆறுதல் செய்தியைத் தருகின்றார். எரேமியா இறைவாக்கினர் நூலில் மட்டும்தான் நாம் அழிவு மற்றும் ஆறுதல் என்ற இரண்டு செய்திகளையும் பார்க்கிறோம். பாபிலோனிய அடிமைத்தனத்தால் யூதா அழியும் என்று இறைவாக்குரைக்கும் அவரே, இன்று, 'தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன்' என்று ஆறதலும் தருகின்றார். அந்நாளில் எருசலேம் புதிய பெயரைப் பெறும். 'யாவே சித்கேனூ' என்பதே அப்பெயர். 'யாவே சித்கேனூ' என்றால் 'ஆண்டவரே நமது நீதி' என்று பொருள். 'தளிர்' என்பது இறைவாக்கினர் நூல்களில் மெசியாவின் வருகையைக் குறிக்கும் (காண். செக் 3:8). இஸ்ரயேல் மக்களை வழிநடத்த வரும் மெசியாவின் முதல் பண்பு 'நீதி' என முன்வைக்கிறது இன்றைய முதல் வாசகம்.



'ஆண்டவரே நமது நீதி' - எதற்காக இந்தப் புதிய பெயர்?



வேப்பமரத்திலிருந்து புதிய தளிர் வந்தால் அதை நாம் புளிய மரம் என்று வேறு பெயர் சூட்டுவதில்லையே. அப்படி இருக்க, ஏன் இங்கே புதிய பெயரைக் கொடுக்கின்றார் இறைவாக்கினர்?



யூதாவை செதேக்கியா மன்னன் ஆண்டபோதுதான் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். 'செதேக்கியா' என்றால் 'யாவே நீதியானவர்' என்பது பொருள். அதே பெயரின் மூலத்தை எடுத்து, 'யாவே நமது நீதி' எனப் பெயர் மாற்றுகின்றார் இறைவன். ஏன்? ஆண்டவரின் முதல் நீதி தண்டனையாக இஸ்ரயேல் மக்களுக்கு வெளிப்பட்டது. அவரின் இரண்டாம் நீதி இரக்கமாக பொழியப்படுகிறது. ஆக, முதல் தண்டிலிருந்து புதிய தளிர் வந்தாலும், அது புதிய பெயரைப் பெற்றுக்கொள்கிறது.



இரக்கத்தில் கனியும் நீதி - இதுதான் வரவிருக்கும் மெசியாவின் பண்பு.



இதையே தாவீதும், 'ஆண்டவரே, உமது இரக்கத்தையும் உமது பேரன்பையும் நினைந்தருளும்' (திபா 25:6) என்று உரைக்கின்றார்.



'இரக்கத்தில் கனியும் நீதி' என்ற மெசியாவின் பண்பு இயேசுவுக்கு வடிவாகப் பொருந்துவதை நாம் நற்செய்தி நூல்களில் பார்க்கிறோம். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண், சக்கேயு, பாவியான பெண், தொழுநோயாளர், பேய்பிடித்தோர் போன்றோரை இயேசு எதிர்கொள்ளும் நிகழ்வுகளில் எல்லாம் நீதி என்பது இரக்கத்தில் கனிகிறது. 'தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என்பது நீதியாக இருந்தாலும், 'அவர்களை இரக்கத்தால் மன்னிப்பதும் நீதியே' என்கிறது இயேசுவின் செயல்பாடு.



மத்தேயு நற்செய்தியாளரின் பதிவின்படி உள்ள இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்படும், யோசேப்பும் இத்தகைய நீதியைக் கொண்ட நேர்மையாளராகவே காட்டப்படுகின்றார். சட்டத்தை மதிக்கும் நேர்மையைவிட இறைத்திருவுளம் நிறைவேற்றும் நேர்மையைத் தழுவி, நீதிக்குப் புதிய பரிமாணம் கொடுக்கிறார் யோசேப்பு.



'அவரை நோக்கி நம் உள்ளம்' இருக்கும்போது நாம் பெறுகின்ற முதல் கொடையும் இதுவே: 'இரக்கத்தில் கனியும் நீதி.'



இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 தெச 3:12-4:2) புனித பவுல் தெசலோனிக்கியருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டு நூல்களில் முதன்மையாக எழுதப்பட்ட நூல் இந்நூலே. தெசலோனிக்கா நகரில் பவுல் மூன்றே முறைதான் (மூன்று ஓய்வுநாள்கள்) நற்செய்தி அறிவிக்கிறார் (காண். திப 17:1). ஆனால், அந்த மூன்று நாள்களிலேயே நிறையப்பேரைக் கிறிஸ்துவை நோக்கித் திருப்புகின்றார். அவர்கள் மீண்டும் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்பாவண்ணம் அவர்களை மீண்டும் சந்திக்கவும், அவர்களுக்கு கடிதங்கள் (இரண்டு) எழுதவும் செய்கின்றார். இக்கடிதங்களில் மேலோங்கி நிற்கும் கருத்துரு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. பவுலும், அன்றைய திருச்சபையாரும் கிறிஸ்துவின் வருகை மிக அருகில் இருப்பதாகவும், அது தங்கள் காலத்திலேயே நடந்தேறும் என்று நம்பினர். இந்தப் பின்புலத்தில்தான், அவரின் வருகைக்கான தயாரிப்பை அறிவுரையாகத் தருகின்றார் பவுல்: '... நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு, அவர்கள் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!'



இவ்வாறாக, 'அவரை நோக்கி இருக்கும் உள்ளம்' தூய்மையில் உறுதியாக இருக்கும் என்கிறார் பவுல். இத்தூய்மை எதில் ஊற்றெடுக்கும்? 'ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பு ஆண்டவரால் வளர்க்கப்படும்போது.' இங்கே அன்பிற்கான புதிய பொருளை பவுல் தருகின்றார்: 'அன்பை ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக!'



மனிதர்களிடமிருந்து மனிதர்களை நோக்கிப் புறப்படும் அன்பு நாளாக நாளாக வேகமும், ஆழமும் குறைந்துவிடும். ஏனெனில், ஒரு குறைகுடத்தால் இன்னொரு குறைகுடத்தை நிரப்பவே முடியாது. ஆண்டவரால் வளர்க்கப்படும் அன்பு நிறைவிலிருந்து புறப்படுவதால் அது எங்கு சென்றாலும் எல்லாரையும் நிறைத்துக்கொண்டே செல்லும். இந்த அன்பு யாரையும் பயன்படுத்தாது, யாரையும் பயமுறுத்தாது, எதையும் எதிர்பார்க்காது, எதையும் பொறுத்துக்கொள்ளும், எல்லாவற்றையும் நேர்முகமாகப் பார்க்கும்.



'அவரை நோக்கி நம் உள்ளம்' இருக்கும்போது நாம் பெறுகின்ற இரண்டாவது கொடை இதுவே: 'ஆண்டவர் வளர்த்தெடுக்கும் அன்பு.'



இன்றைய நற்செய்தி வாசகம் (காண். 21:25-28, 34-36) நாம் மூன்று நாள்களுக்கு முன் கேட்ட நற்செய்தி வாசகமும், அதன் நீட்சியுமே. மானிட மகனின் வருகையின்போது கதிரவனிலும், நிலவிலும், விண்மீன்களிலும், வான்வெளிக் கோள்களிலும் நிகழும் மாற்றங்களைப் பட்டியலிடும் இயேசு (லூக்கா), 'உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது' என்ற அவசரமான ஆறுதலையும், ஆறுதலான அவசரத்தையும் தந்து, 'உங்கள் உள்ளங்கள் குடிவெடி, களியாட்டம், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினால் மந்தம் அடையாதவாறு காத்துக்கொள்ள' அறிவுறுத்துகின்றார்.



நம் உள்ளம் 'குடிவெறி, களியாட்டம், கவலை' ஆகியவற்றை நோக்கி இருக்கும்போது மந்தம் அடைகிறது. எப்படி? 'மந்தநிலை' என்பதை நாம் தேக்கநிலை என்று அறிகிறோம். தட்பவெப்பநிலை மந்தமாக இருக்கக் காரணம் கதிரவனின் ஒளி தேக்கநிலை அடைவதுதான். பங்குச்சந்தை மந்தமாக இருக்கக் காரணம் நிறுவனங்களின் விற்பனை தேக்கநிலை அடைவதுதான்.



ஆக, நகர்ந்து கொண்டிருக்கும் நம்மைத் தேங்க வைப்பவை மேற்காணும் மூன்றே: 'குடிவெறி, களியாட்டம், கவலை.' நாம் குடிவெறியில் இருக்கும்போது அல்லது நிறைய மது அருந்தும்போது நம் மூளை இருப்பை அப்படியே தக்க வைக்க நினைக்கிறது. முன்னும், பின்னும் நகராமல் தடுக்கப் பார்க்கிறது. ஆனால், அப்படி ஒரு நிலை சாத்தியமே அல்ல. ஏனெனில், குடி போதை இறங்கியவடன் நாம் மீண்டும் எதார்த்தத்தiயும் அதன் மாற்றத்தையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். 'களியாட்டம்' என்பது எல்லாவகை நுகர்வு இன்பங்களையும் இங்கே குறிக்கிறது. நுகர்வு இன்பங்கள் நம்மை நிகழ்காலத்தில் வாழ விடாமல் எதிர்காலத்திற்குக் கூட்டிச்சென்றுவிடுகின்றன. எடுத்தக்காட்டாக, ஒரு திரைப்படம் பார்க்கும்போது இருக்கும் இன்பம், அத்திரைப்படம் காட்டும் நல்உலகம் இன்றே வந்துவிட்டதுபோன்ற ஒரு பிரம்மையை உருவாக்கி நம்மை இரண்டு மணிநேரங்கள் எதிர்காலத்தில் வாழச் செய்கிறது. 'கவலை' இதற்கு நேர்மாறானது. இது நம்மை நம் கடந்தகாலத்தோடு கட்டிவிடுகிறது.



இவ்வாறாக, 'குடிவெறி' நம்மை நிகழ்காலத்திலும், 'களியாட்டம்' நம்மை எதிர்காலத்திலும், 'கவலை' நம்மை இறந்தகாலத்திலும் நம்மைக் கட்டிவிடுவதால் நாம் அப்படியே தேங்கி விடுகிறோம். இதுதான் நம் வாழ்வின் மந்தநிலை. இந்த மந்தநிலையின் எதிர்ப்பதம்தான் 'விழிப்பாயிருந்து மன்றாடுதல்.' மற்ற நற்செய்தியாளர்கள் எல்லாம், 'விழிப்பாயிருங்கள்' என்று பதிவு செய்ய, லூக்கா மட்டும், 'விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்' என்று இறைவேண்டலையும் உடன் நிறுத்துகின்றார். போதை மறுவாழ்வ மையங்களில் சொல்லப்படும் முதல் பாடமே, 'இறைவனின் துணையை நாடுங்கள்' என்பதுதான். எதற்காக? சில நேரங்களில் நம் மனம் உறுதியில்லாமல் இருக்கிறது. தடுமாறும் மனத்திற்கு உறுதியைத் தருவது இறைவனே. ஆக, 'குடிவெறி, களியாட்டம், கவலை' ஆகியவற்றை எதிர்கொள்ள ஒரே வழி விழிப்பாயிருத்தல். அவ்விழிப்பு கண் அசரும்போது அவரை நோக்கிய நம் மன்றாட்டு.



'அவரை நோக்கி நம் உள்ளம்' இருக்கும்போது நாம் பெறுகின்ற மூன்றாவது கொடை இதுவே: 'விழித்திருத்தல்.'



ஆக,



திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு வழியாக புதிய திருவழிபாட்டு ஆண்டுக்குள் நுழையும் நம் எண்ணம் இது ஒன்றாக இருக்கட்டும்: 'அவரை நோக்கி என் உள்ளம்.'



புதிய வீட்டிற்குள் நுழையும்போது நாம் எப்போதும் கண்களை கதவுநிலைகளை நோக்கி உயர்த்தியே நுழைகிறோம். அப்படியே இப்புதிய ஆண்டிற்குள் நுழைதலும் இருக்கட்டும்.



திருப்பாடல் ஆசிரியர்போல, 'உம்மை நோக்கியே என் உள்ளம் ஆண்டவரே' என்று அவரைப் பார்க்க, அவர் நமக்கு, 'இரக்கத்தில் கனியும் நீதி,' 'அவர் வளர்க்கும் அன்பு,' 'விழிப்பு' என மூன்று கொடைகளால் நம்மை அணி செய்வார். தளர்ச்சியில், குளிர்ச்சியில் நிற்கும் நம் வேர், தண்டு, கிளை இம்மூன்று கொடைகளால் தளிர்க்கட்டும்.


'ஆண்டவரே, உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்.' (திபா 25:1)

Wednesday 21 November 2018

கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா




கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா



இன்றைய வாசகங்கள்


தானியேல் 7:13-14
திவெ 1:5-8 
யோவா 18:33-37




கிறிஸ்து அரசர் பெருவிழா


நான் சிறுவனாக இருந்த காலத்தில் எனக்குப் பெரியோர்கள் சொன்ன கதையெல்லாம், ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு ராணி இருந்தாள் என்றுதான் தொடங்கக் கேட்டிருக்கிறேன். நாடக மேடைகளில் நடிக்கப்பட்ட நாடகங்கள் எல்லாம் ராஜா, மந்திரி, அரண்மனை காட்சிகளாகத்தான் அமைந்தன. நமது நாட்டிலும் 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயர் காலத்தில் நடந்ததும் முடியாட்சிதானே! பேரரசு என்று கூறப்படும் இங்கிலாந்தில் முடியாட்சி என்பது பெருமைப்படும் ஒரு காரியமாக இருந்து வந்துள்ளது. பல்லாண்டு வாழ்க எம் பேரரசு, எம் பேரரசி என்றெல்லாம் பெருமை கொண்டார்கள் மக்கள். இங்கிலாந்து மட்டுமல்ல, உலகமேதான். ஏனெனில் முடியாட்சி என்பது ஜனநாயம்  அற்ற ஒரு நிலை. இருந்தாலும் முடியாட்சிக்கு உரியவர்கள் நல்லவர்களாக வாழ, வழிநடத்த உருவாக்கப்பட்டு வந்ததாகத்தான் சரித்திரம் கூறுகிறது. ஆனால் இன்று முடியாட்சிக்கு உரியவர்கள் எத்தனையோ விதத்தில் தங்கள் மானம், மரியாதை, மதியை இழந்து வெறுப்பைச் சம்பாதிக்கும் நிலையைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மக்கள் விழிப்புணர்வு பெற்ற இந்த காலகட்டத்தில் முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துக் குடியாட்சிக்கு வித்திட்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அகில உலக அரசராகப் போற்றி இன்று விழா எடுத்துக் கொண்டிருக்கிறோம். 


இயேசு வாழ்ந்த காலத்தில் தான் ஒரு அரசர் என்றே காட்டிக் கொள்ளாது எளிமையிலே வாழ்ந்து தன் அரசு உடைமை இன்றி, அரசத் தன்மையையே மறைத்தவராக வாழ்ந்துள்ளாரே. அப்படி என்றால் அவரது  அரசின் பொருள் என்ன?

பிலாத்தின் முன்பாகக் கூறுகிறார் என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று. இவ்வுலகைச் சார்ந்ததாக இருந்தால் நான் யூதரிடம் கையளிக்கப்படாதபடி என் காவலர்கள் எனக்காகப் போராடி இருப்பார்கள். உண்மைக்குச் சாட்சியம் கூறுவதே என் அரசு. அதற்காகவே வந்தேன். உண்மையைச் சார்ந்தவன் எவனும் என் குரலுக்குச் செவி கொடுக்கிறான் (யோவா. 18:36).

மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும் பலருடைய மீட்புக்கு விலையாகவும் தன் உயிரை அளிக்கவுமே வந்தேன் (மத். 20:28) என்றார்.

எபிரேயருக்குத் திருமடலை வரைந்தவர் கூறும் வார்த்தைகள்: இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் (எபி. 13:8). மற்றவர்கள் எல்லாம் மாறி, மறையும் தன்மை உடையவர்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவோ என்றுமே மாறாதவர். எனவேதான் கபிரியேல் தூதர் அவர் யாக்கோபின் குலத்தின் மீது என்றும் அரசாள்வார். அவரது ஆட்சிக்கு என்றுமே முடிவு இராது (லூக். 1:33) என்றார். 


இந்த அரசராம் இயேசுவைப் பற்றிப் புனித பவுல் அடிகளார் மிக அழகாகச் சித்திரிக்கின்ற வார்த்தைகளைக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
கடவுள் தன்மையில் விளங்கிய அவர் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார். 


சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குத் தன்னைத் தாழ்த்திக் கீழ்ப்படிந்தார்.


தந்தை அவரை உயர்த்தியதால் விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிட இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று எல்லா நாவுகளும் அறிக்கையிடும் (பிலி. 2:6-11) என்று விவரிக்கிறார்.

இந்த அன்பின் பிணைப்பால், ஆட்சி புரியும் இந்த ஒப்பற்ற அரசராம் இயேசுவின் பரமத் திருநாட்டின் குடிமக்களாக இருப்பதில் நாம் பெருமைப்படுகின்றோம். பெருமையால் நம் இல்லமும் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது.

விழாக் கொண்டாடும் நாம் என்ன செய்ய வேண்டும்?


அவரது குரலைக் கேட்கும் ஆடுகளாக நாம் இருக்க வேண்டும். நீங்கள் என் கட்டளையைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் நண்பர்களாக இருப்பீர்கள் (யோவா. 15:10).

செய்தியிலே வாசிக்கின்றோம். ஜான் டேவிட் , இவன் ஒரு கிறிஸ்தவனா? இவனா இப்படிப்பட்ட இழிச் செயலைச் செய்தான்?

அன்றொரு நாள் கற்பழிப்பு கொலைக் குற்றத்திற்கு ஆளாகிய ஒருவன் நீதிபதி முன்பாக நிறுத்தப்பட்டான். கழுத்திலே சிலுவையை அணிந்திருந்த அந்தக் கைதியை நோக்கி நீ ஒரு கிறிஸ்தவனா? சிலுவை அணியும் நீயா இப்படிச் செய்தாய் என்று கேட்டார் நீதிபதி.

அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

நீதிபதியாரே என் கழுத்தில் இருக்கும் சிலுவைக் கல்வாரியின் நடுவில் தொங்கிய இயேசுவின் சிலுவை அல்ல. வலது புறத்தில் தொங்கினானே கள்ளன் அவனது சிலுவையும் அல்ல. ஆனால் இடது புறத்து கள்ளனின் சிலுவை என்றான். இது எப்படி இருக்கு!

புறமுதுகு காட்டி ஓடிய அலெக்சாண்டர் என்ற போர் வீரனை நோக்கிக் கூறினாரே பேரரசர் : 'நண்பா! நீ என்னோடு இருக்க வேண்டுமென்றால் உன் நடத்தையை மாற்றிக் கொள். இல்லையேல் உன் பெயரை மாற்றிவிடு' என்றாரே! அந்தச் சிந்தனையை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.







உண்மையே விடுதலை அளிக்கும்!


இன்றைய நற்செய்தியிலே இயேசு இவ்வுலகத்தில் எதற்காகப் பிறந்தார் என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி; இதற்காகவே பிறந்தேன், இதற்காகவே உலகிற்கு வந்தேன்: உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர் (யோவா 18:37) என்கின்றார் இயேசு.

ஒரு நாட்டைப் பேரரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் வாரிசு இல்லா அரசன்! அவனுக்குப் பிறகு நாட்டை ஆள ஆண் வாரிசு ஒருவனைத் தேர்ந்தெடுக்க நாட்டிலிருந்த தலைசிறந்த பன்னிரெண்டு இளைஞர்களை அழைத்துவரச் சொன்னான். பன்னிரெண்டு பேரும் வந்து நின்றனர். அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான்.

விதைகள் நிரம்பிய கூடையைக் காட்டி :
"இளைஞர்களே, ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதையைப் பொறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் விதையைக் கொண்டு செழிப்பான செடியை யார் வளர்த்துக்காட்டுகின்றீர்களோ அவரே அடுத்த அரசர். மூன்று மாதங்கள் கழித்துச் சந்திப்போம்" என்றான்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு பதினோரு தொட்டிகளில் அழகான செடிகள் காணப்பட்டன. ஒரே ஒரு தொட்டி மட்டும் வெற்றுத் தொட்டியாக இருந்தது! அந்தத் தொட்டிக்குச் சொந்தமான இளைஞனைத் தனது வாரிசாகத் தேர்ந்தெடுத்தான் அரசன். மற்ற பதினோரு பேரும் திகைத்து நின்றார்கள். 

அவர்களைப் பார்த்து அரசன், "நான் தந்த விதைகள் அனைத்துமே வேகவைத்துக் காயவைத்த விதைகள். பின் எப்படி உங்கள் தொட்டிகளில் செடிகள் முளைத்தன? வாய்மையே வெல்லும். நீங்கள் வீட்டுக்குப்போகலாம்” என்றான்.

இந்தக் கதையில் வந்த அரசனைப் போன்றவர்தான் நமது கிறிஸ்து அரசர். இயேசு, வழியும், உண்மையும், வாழ்வும் நானே (யோவா 14:6) என்கின்றார். தந்தையே! உண்மையினால் அவர்களை (அவரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை) உமக்கு அர்ப்பணமாக்கியருளும் (யோவா 17:17) என்று இயேசு மன்றாடுகின்றார்.

இயேசுவுக்கு உண்மையை மிகவும் பிடிக்கும்.

காரணம் உண்மை அழிந்து போகாத அரசுக்கு நம்மை அழைத்துச் செல்லும் (தானி 7:14). உண்மை அகரமும், னகரமுமான (இரண்டாம் வாசகம்) இயேசுவுக்கு நம்மை செவிசாய்க்க வைக்கும் (யோவா 18:37). உண்மை நமக்கு விடுதலை அளிக்கும் (யோவா 8:32).

மாறாக பொய் கடவுளிடமிருந்து மனிதனைப் பிரிக்கும் (தொநூ 3:1-12). பொய் தூய ஆவியாருக்கு எதிராக நம்மைச் செயல்படத் தூண்டும் (திப 5:1-10).
இன்று இயேசு உண்மையையும், பொய்யையும் சுட்டிக்காட்டி நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கப்போகின்றீர்கள்? என்று கேட்கின்றார். நாம் என்ன பதில் சொல்லப்போகின்றோம்? '

மேலும் அறிவோம்:
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று (குறள் : 297). 

பொருள் : ஒருவன் பொய் பேசாமையினை இடைவிடாது தொடர்ந்து மேற்கொண்டால், அதுவே அவனுக்குப் பேரறமாகும்! செய்யக்கூடாதவற்றைச் செய்யாதிருத்தல் மேலும் பெருமைதரும்.
 





இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா



மாமன்னன் நெப்போலியன் மமதையில் இருந்த காலத்தில் பின்வருமாறு கூறினார்; "உலக வரலாற்றில் மகான்கள் என்று அழைக்கப்படத் தகுதியுடையவர்கள் மூவர் மட்டுமே; மாமன்னன் அலெக்சாண்டர், நெப்போலியனாகிய நான், நாசரேத் ஊர் இயேக கிறிஸ்து." ஆனால், அவர் 'வாட்டர்லூர்' என்ற இடத்தில் நடந்த போரில் படுதோல்வி அடைந்து, 'கெலேனா' என்ற தீவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவ்வேளையில் ஒருவர் அவருடைய பழைய மகிமையை நினைவூட்டியபோது, நெப்போலியன் கூறினார்: “அதிகாரம், மகிமை எல்லாம் வெறும் புகை. ஒரு காலத்தில் அலெக்சாண்டரை மகான் என்று அழைத்தேன். இப்போது அவருடைய எலும்புகளைக்கூட காண முடியவில்லை. என்னையே மகான் என்ற அழைத்துக் கொண்டேன், இப்போது அந்நிய நாட்டில் ஆரியணையோ, போர் வீரர்களோ இன்றி சிறைக் கைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன், நாசரேத்தூர் இயேசு கிறிஸ்து இறந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆன பின்னும், அவரது அரசு மறையவில்லை, அலெக்சாண்டரும் நானும் ஆயுத பலத்தால் ஆட்சி செய்தோம். எங்கள் ஆட்சி நிலை பெறவில்லை. ஆனால் கிறிஸ்து அன்பினால் ஆட்சி செய்கிறார், அவரது அரசு என்றும் நீடிக்கும்,"
திருவழிபாட்டு ஆண்டிகள் சிகரமாக இன்று கிறிஸ்து அரசருடைய பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். கிறிஸ்து உண்மையிலேயே ஓர் அரசர். அரசர்களுக்கெல்லாம் அரசர், அவராலேயே அனைத்தும் படைக்கப்பட்டன. அவராலேயே அனைத்தும் மீட்கப்பட்டன, படைப்பாலும் மீட்பாலும் அனைத்தும் அவருக்கு உரியன. இன்றைய முதல் வாசகம், கிறிஸ்து அரசர் என்றும், அவரது ஆட்சிக்கு முடிவு இராது என்றும் கூறுகிறது (தானி 7:13-14). இரண்டாம் வாசகம், கிறிஸ்துவுக்கு மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன என்று அறிக்கையிடுகிறது (திவெ 1:6), நற்செய்தியில், கிறிஸ்து தாம் அரசர் என்றும், ஆனால் அவரது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல என்றும் தெளிவுபடுத்துகிறார்,
கிறிஸ்துவின் அரசு எல்லா நாடுகளையும் மக்களையும் அரவனைக்கும் அரசு, இன்றைய பெருவிழாவின் தொடக்கவுரை அறிக்கையிடுவதுபோல, கிறிஸ்துவின் அரசு, 'உண்மையின் அரசு, வாழ்வுதரும் அரசு, புனிதமும் அருளும் கொன்ட அரசு, நீதியும் அன்பும் அமைதியும் கொண்ட அரசு." கிறிஸ்துவின் அரசு இவ்வுலகைச் சார்ந்தது என்று யூத மக்கள் எண்ணினார்கள். அவரை அரசியல் மெசியாவாகக் கருதினர். ஆனால் கிறிஸ்து அவர்களது எண்ணம் தவறானது என்று தெளிவுபடுத்தினார் கிறிஸ்து. அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அளிக்க வரவில்லை , மாறாக, மக்களைப் பாவத்திலிருந்து விடுவிக்க வந்தார். பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை; கிறிஸ்து ஒருவரே பாவத்திலிருந்து விடுவிக்க வல்லவர் (யோவா 8:34-36).
கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்ட இரு கள்வர்கள் அவரின் அரசைப்பற்றி மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர், ஒரு கள்வன் கிறிஸ்துவிடமிருந்து உடனடியாக விடுதலையை எதிர்பார்த்து. "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று" (லூக் 23:39) என்றான். ஆனால், மற்றொரு கள்வன் கிறிஸ்துவின் அரசு நிறைவுகால அரசு என்பதை உணர்ந்து, " இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவுகூர்ந்தருளும் (லூக் 23:42) என்றான். கிறிஸ்துவில் அரசு இவ்வுலகைச் சார்ந்த அரசாக இருந்திருப்பின், அவர் சாவுக்கு உள்ளாகாதவாறு, அவருடைய காவலர்கள் போராடியிருப்பர் (யோவா 18:36).
தம்முடைய சீடர்களை எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும் உடனடியாக விடுவிக்கப் போவதாக கிறிஸ்து ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை, மாறாக, அவர்கள் துன்புற்று இன்புறுவார்கள் என்றுதான் வாக்களித்தார். 'நீங்கள் அழுவீர்கள். புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும் நீங்கள் துயருறுவீர்கள், ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்" (யோவா 16:20).
கிறிஸ்துவின் அரசு வல்லரசு அல்ல, மாறாக வாய்மையின் அரசு. உண்மையை எடுத்துரைக்கவே கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார் (போவா 18:37). கிறிஸ்துவே உண்மை; அவர் வழியாகவே நாம் தந்தையை அடைய முடியும் (யோவா 14:6), உண்மையால் கிறிஸ்து தம் சீடர்களை அர்ப்பணமாக்குகின்றார் (யோவா 17:17),
உண்மையா? அது என்ன? (யோவா 18:23), உள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது ஊமை, சொல்லில் வருவது பாதி; நெஞ்சில் தங்கிக் கிடப்பது மீதி: முழு உண்மையைப் பேசுவோர் யாருமில்லை. "வாய்மையே வெல்லும்" என்பது நமது நாட்டின் விருதுவாக்கு, ஆனால் அரசியல் தலைவர்கள் எல்லாம் அண்டப் புளுகர்களும், ஆகாசப் புளுகர்களாகவும் இருந்து. பொய்யானத் தகவல்களைக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர், இக்கட்டத்தில் முழு உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது நமது கடமையாகும். உண்மை பேசுவோர் வேறு எந்த அறத்தையும் செய்யத் தேவையில்லை என்கிறார் வள்ளுவர்,
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று (குறள் 297)

ஓர் அரசியல்வாதி கூறுகிறார்; கொலை செய்தேன், என்னைக் கொலைக்காரன் என்றனர்: திருடினேன், என்னைக் கொள்ளைக்காரன் என்றனர்; இலஞ்சம் வாங்கினேன், என்னை ஊழல் பேர்வழி என்றனர், இம்மூன்றையும் செய்தபோது, என்னைத் தலைவன் என்கின்றனர். கொலை, கொள்ளை, இலஞ்ச ஊழல் பெருகிவரும் இக்காலத்தில் நம் நாட்டில் நல்லாட்சி மலர்ந்திட உழைப்போம்; மன்றாடுவோம்.
ஒரு மகன் தன் அப்பாவிடம், "அப்பா, என் எதிர்காலம் பற்றி என்ன கனவு காண்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு, அப்பா கூறிய பதில்: “நீ பிறந்ததிலிருந்து எனக்குத் தாக்கமே இல்லை. அப்படியிருக்க கனவு எப்படி வரும்?" கடவுள் மனிதரைப் படைத்ததற்காக வருந்தினாலும் (தொநூ 8:6), கடவுள் இவ்வுலகிற்காக ஒரு கனவு கண்டுள்ளார். அதுதான் இறை அரசின் கனவு. அக்களவு என்ன? வாள் எடுத்துப் போர் புரியாத உலகம் போர்க் கருவிகளை விவசாயக் கருவிகளாக மாற்றும் உலகம் (எசா 2:4), சிங்கமும் செம்மறி ஆடும் ஒன்றாகப் படுத்துறங்கும் உலகம் (எசா 11:6) ஆம், இறை அரசு அமைதியின் அரசு: கிறிஸ்து அமைதியின் அரசா (எசா 11 9:8),
வன்முறையும் பயங்கரவாதமும் முடிவுக்கு வந்து, மனித சமுதாயத்தில் அமைதி நிலவ அயராது உழைப்போம். அமைதிக்காக உழைப்பவர்களே கடவுளின் மக்கள்."
கிறிஸ்து ஆட்சி செய்தாக வேண்டும் (1கொரி 15:25), ஏனெனில், அரசும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் அவருடையது.




நீ அரசன்தானோ?

இன்று கிறிஸ்துவை அனைத்துலகிற்கும் அரசராகக் கொண்டாடுகிறோம். உலகின் பல இடங்களில் அரசாட்சி இன்று மறைந்துவிட்டாலும், 'அரசன்' என்பது நமக்கு ஒரு வார்த்தை-உருவகமாகவே இருக்கிறது. 'அரசன்' என்ற வார்த்தையைக் கேட்டவுடன், பகட்டான ஆடை, தலையில் மணிமுடி, கையில் செங்கோல், பெரிய அரியணை, காலில் பெரிய காலணி, சாமரம் வீசும் இரண்டு பெண்கள், கம்பீரமான பார்வை என எல்லாம் நம் உள்ளத்தில் தோன்றி மறைகின்றன. 'கிறிஸ்து அரசர்' உருவப்படங்களைப் பார்த்துப் பழகிய நம் மனம், கிறிஸ்துவையும் மேற்காணும் உருவத்திலேயே பார்க்கின்றது.

'அரசன்' என்ற சொல்லாடல் அல்லது 'அரசாட்சி' என்ற சொல்லாடல் இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் சாமுவேலின் காலத்தில்தான் வருகின்றது. '... அனைத்து வேற்றினங்களிடையே இருப்பதுபோல ஓர் அரசனை நியமித்தருளும்' (1 சாமு 8:5) என்று இஸ்ரயேல் மக்கள் சாமுவேலிடம் முறையிட்டபோது, '... அவர்கள் உன்னைப் புறக்கணிக்கவில்லை. அவர்கள் நான் ஆளாதபடி என்னைத்தான் புறக்கணித்துவிட்டனர்' (1 சாமு 8:7) என்கிறார் ஆண்டவராகிய கடவுள். ஆண்டவராகிய கடவுளே அரசாண்ட நிலையில் அவருடைய அரசாட்சியைப் புறக்கணிக்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். ஆண்டவர் சாமுவேல் வழியாக அவர்களை எச்சரித்தது போலவே அரசர்கள் அவர்களுக்குத் தோல்வியாகவே முடிகின்றனர். இந்தப் பின்புலத்தில் எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாக இறைவாக்குரைக்கின்ற கடவுள், 'நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன்' (எசே 34:11) என்கிறார். அன்று முதல் மெசியா அரசராக வருவார் என்ற நம்பிக்கை இஸ்ரயேல் மக்கள் நடுவில் வளரலாயிற்று. இயேசுவின் சமகாலத்தில் விளங்கிய எஸ்ஸீனியர்கள் என்ற அமைப்பினரும் 'அரச மெசியாவை' எதிர்பார்த்துக் காத்திருந்ததை அவர்களின் குழும வாழ்வு ஏடுகள் காட்டுகின்றன. இந்தப் பின்புலத்தில்தான் இயேசு பிறக்கின்றார்.

மரியாளுக்கு மங்கள வார்த்தை சொல்லும் கபிரியேல், 'அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது' (லூக் 1:33) என்று உரைத்து, இந்த எதிர்பார்ப்பைக் கூட்டுகின்றார். இயேசுவின் பணிவாழ்வு முழுவதும் அவருடன் இருந்தவர்களும், அவரால் பயன்பெற்றவர்களும் இந்த எதிர்பார்ப்பிலேயே வளர்கின்றனர். உண்டு பசியாறியவர்கள் அவரை அரசராக்கிவிடத் துடிக்கின்றனர் (யோவா 6:15). அவரோடு உடனிருந்தவர்கள் அவரின் அரியணையின் அருகில் அமர ஆசைப்படுகின்றனர் (மாற் 10:35-45). ஆனால், கழுவுற மீனில் நழுவுற மீனாக ஓடுகிறார் இயேசு.

இருந்தாலும், இயேசு தன்னை அரசன் என்று சொன்னாரா? ஆம். எப்போது? ஐந்து முறை தன்னை அரசன் என்று சொல்லாமல் சொல்கின்றார்:

1. 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' (மத் 2:2) என்று தேடி வரும் மூன்று ஞானியருக்கு இயேசு மறுப்பு சொல்லவில்லை. அவர் ரொம்ப குட்டிக் குழந்தையாய் இருந்ததால் அவர் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

2. 'ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களதே' (மத் 5:3) என்று தொடங்கி, தன் போதனை, தன் உருவகம், தன் அறிகுறிகள் அனைத்திலும் விண்ணரசை (அல்லது இறையரசு) மட்டுமே முன்னிறுத்துவதன் வழியாக, தன்னை அரசன் என்று மறைமுகமாகச் சொல்கின்றார்.

3. 'ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக!' (லூக் 19:38) என்று எருசலேம் மக்கள் வெற்றி ஆரவாரம் செய்தபோது மறுப்பேதும் சொல்லவில்லை.

4. 'அப்படியானால் நீ அரசன்தானோ?' (யோவா 18:37) என்று பிலாத்து விசாரித்தபோதும், 'யூதரின் அரசரே வாழ்க!' (யோவா 19:3) என்று பிலாத்தின் அரண்மனை படைவீரர்கள் கன்னத்தில் அறைந்த போதும், 'இதோ, உங்கள் அரசன்!' (யோவா 19:14) என்று மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டபோதும், தன் மௌனத்தால் 'ஆம்' என மொழிகின்றார் இயேசு.

5. 'இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்' (லூக் 23:42) என்ற நல்ல கள்வனுக்கு உடனடியாக பேரின்ப வீட்டில் இடம் தந்ததும் இயேசுவை அரசனாகத்தான் காட்டுகிறது.

மேற்காணும், ஐந்து நிகழ்வுகளில் நான்காம் நிகழ்வின் ஒரு பகுதியைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம்.

பிலாத்து இயேசுவை விசாரிக்கும் நிகழ்வை நற்செய்தியாளர் யோவான் மிக நீண்டதாகவும், ஆழமாகவும் பதிவு செய்கின்றார். பிலாத்துவின் முன் இயேசு மட்டும் விசாரிக்கப்படுவதாக நினைக்க வேண்டாம். இயேசுவைக் காட்டிக் கொடுத்ததால் இப்போது காட்டிக்கொடுத்தவர்களும் விசாரணை வளையத்திற்குள் வருகின்றனர். இதைப் புரிந்துகொண்டால் நமக்கு இன்றைய திருநாளின் பொருள் புரிந்துவிடும்.

பிலாத்து உரோமை ஆளுநன். யூதேயா, கலிலேயா, சமாரியா போன்ற பகுதிகளுக்கு அரசன் இருந்தாலும், இவர்களை நிர்ணயிக்கும் பொறுப்பை பிலாத்து பெற்றிருந்தார். அன்றைய அகில உலகப் பேரரசின் பதிலி பிலாத்து. ஆக, எங்கும் சீசர்தான் அரசராக இருக்கிறார் என்பதை உறுதி செய்ய வேண்டியவர் பிலாத்து. ஆனால், உரோமையின் ஆட்சி யூதர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவ்வப்போது சிலர் எழும்பி உரோமைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வர். அவர்களை அடக்க வேண்டியதும், அழிக்க வேண்டியதும் ஆளுநரின் பொறுப்பு. பிலாத்துவிடம் இயேசுவை ஒப்படைக்கும் அவர்கள் அவர்மேல் எந்தவொரு குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. 'இவன் குற்றம் செய்யாதிருந்தால் இவனை நாங்கள் உம்மிடம் ஒப்புவித்திருக்கமாட்டோம்' (யோவா 18:30) என்று மொட்டையாகச் சொல்கின்றனர். ஆனால், மற்ற நற்செய்தியாளர்களின் கருத்துப்படி, 'இவன் தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக்கொள்கிறான்' (காண். லூக் 23:2) என்று இயேசுவைக் குற்றம் சாட்டுகின்றனர். இயேசுவிடம் பிலாத்து கேட்கும் முதல் கேள்வியே, 'நீ யூதரின் அரசனா?' (யோவா 18:33) என்பதுதான். இந்தக் கேள்வியின் ஊற்று என்ன? என்று பிலாத்தை விசாரிக்கிறார் இயேசு: 'நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி சொன்னதை வைத்து கேட்கிறீரா?' பிலாத்து புத்திசாலி. இயேசுவின் கேள்விக்கு மற்றொரு கேள்வியால் விடை தருகிறார்: 'நான் ஒரு யூதனா, என்ன?' இப்படியே விசாரணை நகர, இயேசுவும், 'எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல' என்கிறார். பிலாத்துவுக்கு பாதி சந்தேகம் தீர்ந்துவிட்டது. இயேசுவால் சீசரின் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. ஏனெனில், 'மறுவுலகில் யார் ஆட்சி செய்தால் என்ன? இந்த உலகில் சீசர் தான் ஆள வேண்டும்' என நினைத்தார் பிலாத்து. மீதிச் சந்தேகத்தைத் தீர்க்க, 'அப்படியானால் நீ அரசன் தானோ?' என்று பிலாத்து கேட்க, 'அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன். வளர்ந்தேன். பணி செய்தேன்' என்கிறார். ஆக, அரசன் என்ற டைட்டிலை விடுத்து தன் அரச நிலையைப் பணியாக முன்வைக்கிறார் இயேசு. மீதி சந்தேகமும் தீர்ந்தது. இயேசு யூதர்களின் அரசன் இல்லை.

இப்போது பிலாத்துவுக்கு சந்தேகம் மக்கள் மேல் திரும்புகிறது: 'நீ யூதர்களுக்கு அரசன் இல்லை' என்பது தெளிவாகிறது என்று இயேசுவைப் பற்றி முடிவெடுத்த பிலாத்து, 'இந்த மக்களுக்கு யார் அரசன்?' என்பதை உறுதி செய்ய, இப்போது மக்களை விசாரிக்கிறான். நேருக்கு நேர் விசாரிக்காமல் மற்றொரு யுக்தியைக் கையாளுகின்றார். இயேசுவை நன்றாக அடித்து, மேலுடை, முள்முடி அணிவித்து அவரை வெளியே கொண்டு போய் மக்களிடம், 'இதோ, உங்கள் அரசன்' (யோவா 19:15) என, அவர்கள், 'எங்களுக்கு சீசரைத் தவிர வேறு அரசர் இல்லை' என்று சொல்கின்றனர். மறைமுகமாக மக்களையும் விசாரித்தாயிற்று. சீசரின் அரச நிலையை உறுதி செய்தாயிற்று. உடனே நிகழ்வை முடிக்கின்றார் யோவான்: 'அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தங்கள் பொறுப்பில் ஏற்றுக்கொண்டனர்' (யோவா 19:16). 'ஆண்டவரே எங்கள் அரசர்' (திபா 47:7) என்று வாய்நிறையப் பாடிய இஸ்ரயேல் மக்கள், 'சீசரைத் தவிர எங்களுக்கு வேறு அரசர் இல்லை' என்று பொய்யுரைக்கின்றனர். இயேசு, 'உண்மை' என்ற வார்த்தையால் தன் அரச நிலையை உறுதி செய்தார். ஆனால், மக்கள், 'பொய்' ஒன்றைச் சொல்லி ஆண்டவராகிய கடவுளின் அரச நிலையை மறுதலிக்கின்றனர். இதுதான், யோவான் நற்செய்தியாளரின் இலக்கியத்திறன்.

ஆக, 'இயேசு அரசரா? யூதர்களின் அரசரா?' என்பது இன்றைய கேள்வி அல்ல.

மாறாக, 'எனக்கு அவர் அரசரா?' என்பதுதான் இன்றைய திருநாள் முன்வைக்கின்ற கேள்வி. நாம் ஏற்கனவே கண்ட ஐந்து நிலைகளில் மக்கள் தங்களுக்கு இயேசுவை அரசராக ஏற்றுக்கொண்டனர். அந்த நேரங்களில் அவர் அந்த டைட்டிலை மறுக்கவில்லை. மாறாக, அது தன்னை மையப்படுத்தியதாக இருந்தபோதுதான் இயேசு அதை மறுக்கிறார்.

'எனக்கு அவர் அரசராக இருக்க வேண்டும்' என்றால் நான் சில பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று பட்டியலிடுகின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

1. உண்மையை எடுத்துரைத்தல்

'உண்மையா? அது என்ன?' என்ற பிலாத்துவின் கேள்வி இன்றுவரை நாம் விடை காண இயலாத கேள்வி. ஏனெனில், உண்மை என்பது தனிநபர் சார்ந்தது. இடத்திற்கு இடம், சூழலுக்குச் சூழல் மாறுபடுவது. தண்ணீரின் மூலக்கூறுகள் 2 ஹைட்ரஜன், 1 ஆக்ஸிஜன் என்னும் உண்மை எல்லா இடத்திற்கும், எல்லா சூழலுக்கும் பொருந்தும். ஆனால், உறவுநிலை, அறநெறி, தனிநபர் வாழ்வு, சமூகம் என்று வரும்போது உண்மை எப்போதும் இடம் சார்ந்தே இருக்கிறது. அதனால்தான், ஒரு நபர் கீழிருந்து பார்க்கப்படும்போது போராளியாகவும், மேலிருந்து பார்க்கப்படும்போது தீவிரவாதியாகவும் தெரிகின்றார். இந்த சார்புநிலையைத்தான் பிலாத்து, 'உண்மையா? அது என்ன?' என்று கேட்கிறார். 'உண்மை' என்பதை இயேசுவே மற்றொரு இடத்தில் வரையறை செய்கிறார். 'உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை' (17:17) எனத் தமது சீடர்களுக்காகச் செபிக்கிறார் இயேசு. இங்கே, உண்மை என்பது இறைவனுக்கு ஒருவரை அர்ப்பணமாக்குகிறது என்றும், இறைவனின் பார்வையில் ஒன்றைப் பார்ப்பதே உண்மை என்பதும் பொருளாகிறது. ஆக, ஒரு நிகழ்வை அல்லது நபரை இறைவன் பார்ப்பதுபோல நான் பார்க்கும்போது நான் உண்மை உடையவன் ஆகிறேன். இறைவன் என்றும் மாறாதவர். ஆக, இந்த உண்மையும் சார்புநிலை அற்றது. இறைவன் எப்படிப் பார்க்கிறார்? 'மனிதர் பார்ப்பதுபோல இறைவன் பார்ப்பதில்லை. மனிதர் புறத்தைப் பார்க்கின்றனர். இறைவனோ அகத்தைப் பார்க்கின்றார்' (1 சாமு 16:7). புறத்தையும் தாண்டி அகத்தைப் பார்த்து, அகத்தை நிறைவாகப் பார்த்து, அதில் நிறைவைக் காண்பதே உண்மை. ஆக, நான் என் புறம்சார்ந்த நிறம், உடை, அழகு, ஆபரணம், செயல் ஆகியவற்றை விடுத்து, என் அகத்தில் இருக்கும் இறைவனைக் கண்டு, அதே மனநிலையில் எனக்கு அடுத்திருப்பவரின் இதயத்தின் இறைவனையும் நான் கண்டால் நான் உண்மை உள்ளவன் ஆகிறேன்.

2. பணி செய்தல்

இயேசுவைப் பொறுத்தவரையில் அரசர் என்பவர் பணியாளர். பணியாளருக்கு என்று எந்தவொரு விருப்பு வெறுப்பும் இருக்க முடியாது. அவர் முழுக்க முழுக்க தன் தலைவருக்கு உரியவராக இருக்கிறார். இந்த நிலையை அடைய நிறைய சரணாகதி வேண்டும். ஏனெனில், இயல்பாகவே நம் உடலில் உள்ள ஜீன்கள் ஆளப்பிறந்தவை. அவை எவ்வழியிலும் தங்களைக் காத்துக்கொள்ளும் துணிவு பெற்றவை. அவை தன்னலம் ஆனவை. எந்நேரமும் அவை தங்களை மட்டுமே முன்நிறுத்துபவை. ஆக, நம் உடலின் ஜீன்களுக்கும், உள்ளத்தின் பேரார்வத்திற்கும் எதிர்திசையில் செல்வதுதான் பணியாளர் நிலை. ஏனெனில், பணியாளர் நிலை என்பது ஒரு நொறுங்குநிலை உணர்வு. இங்கே, ஒருவரின் விருப்பு, வெறுப்பு, நல்லது, கெட்டது எதுவும் மதிக்கப்படாது. ஒருவர் எந்நேரமும் கடிந்துகொள்ளப்படலாம், சந்தேகப்படப்படலாம், குற்றம் சுமத்தப்படலாம், பணிநீக்கம் செய்யப்படலாம், தண்டிக்கப்படலாம். அரசநிலைக்கு எதிர்நிலை இது. ஏனெனில், அரசரை யாரும் கடிந்துகொள்ளவோ, சந்தேகப்படவோ, குற்றம் சுமத்தவோ, தண்டிக்கவோ, பணிநீக்கம் செய்யவோ முடியாது. இப்படியாக, பணியாளர் நிலையோடு தன் அரசநிலையைப் பொருத்திப்பார்க்கிறார் இயேசு. என்னை அரசனாக்கும் இரண்டாவது பண்பும் இதுவே.

3. அவரின் குரலுக்குச் செவிமடுத்தல்

'உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்' (யோவா 18:38). மெல் கிப்ஸன் அவர்கள் இயக்கிய தெ பேஸ்ஷன் ஆஃப் தெ க்ரைஸ்ட் என்ற திரைப்படத்தில் பிலாத்துவுக்கும், அவருடைய மனைவி கிளவுதியாவுக்கும் இடையே ஓர் உரையாடல் நடக்கும்: பிலாத்து: 'உண்மையா அது என்ன கிளவுதியா? எனக்கு நீ அதைச் சொல்வாயா?' கிளவுதியா: 'அதை நீங்களாகக் கேட்கும் வரை உங்களுக்கு யாரும் சொல்ல முடியாது.' ஆக, நானாகக் கேட்காமல் உண்மையை நான் அறிந்துகொள்ள முடியாது. அவரின் குரலே என் மனத்தில் உண்மையாக ஒலித்துக் கொண்டிருந்தால்தான் வெளியில் இருக்கும் உண்மை எனக்குத் தெரியும். இன்று நான் விரும்பிக் கேட்கும் அலைபேசி அல்லது நேரடி உரையாடல்கள், விரும்பாமல் கேட்கும் காணொளி, இசை என குரல்கள் என் காதுகளில் விழுந்துகொண்டே இருக்கின்றன. இந்தக் குரல்களும் என் உள்ளத்தில் கேட்கும் அவரின் குரல்களும் எதிரெதிரே இருக்கின்றன. நான் எக்குரலுக்குச் செவிமடுக்கிறேனோ, அக்குரலைப் பொறுத்தே என் உண்மையை நிர்ணயம் செய்கிறேன். அவரின் குரலை நான் கேட்பதும் அரச நிலைக்கு என்னை உயர்த்தும்.

இறுதியாக,

'அவரை அரசர்' எனக் கொண்டாடும் நான், 'அவரை நான் என் அரசராக ஏற்கிறேனா?' எனக் கேட்டு, அதற்குரிய பண்புகளை என் வாழ்வில் செயல்படுத்தினால், எனக்கும், என் குடும்பம், பணியிடம், சமூகம் என அனைத்து நிலைகளிலும் நான் அரசராக இருக்க முடியும். அவரைக் கொண்டாடும் நான் இன்று என்னையே கொண்டாடுகிறேன். அவரை அரசராக ஏற்கும் நானும் அரசராகிறேன். இதுதான் அவருடைய அரசின் மாற்றம், ஏற்றம், தோற்றம் - இதையே காட்சியில் காண்கின்றனர் தானியேலும் (முதல் வாசகம்), யோவானும் (இரண்டாம் வாசகம்).

 


Wednesday 14 November 2018

பொதுக்காலம் ஆண்டின் 33-ஆம் ஞாயிறு



பொதுக்காலம் ஆண்டின் 33-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்

தானியேல் 12:1-3
எபிரேயர் 10:11 -14 
மாற்கு 13:24-32






இறுதித் தீர்ப்பு என்று சொன்னதும் நமக்கு மரண பயம்தான் ஏற்படும். இறுதித் தீர்ப்பு என்பது இயேசுவை நாம் முகமுகமாக தரிசிப்பதே ஆகும். மரண பயத்தை அகற்றிவிட்டால் இறுதித் தீர்ப்பைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

அறுவை சிகிச்சை அறைக்கு அடுத்த அறையில் 48 வயது மதிக்கத்தக்க நோயாளி ஒருவர் இருந்தார். அவரது கையில் இரத்தம் ஏறிக் கொண்டிருந்தது. மூக்கின் வழியாய் நன்றாய் சுவாசிக்க பிராணவாயு கொடுக்கப்பட்டது. உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கை யாருக்குமே இல்லை. சிறிது நேரத்தில் கண் விழித்த அவர், உதவிக்கு பக்கத்தில் இருந்த நர்ஸைப் பார்த்து இதையெல்லாம் எடுத்துவிடுங்கள் என்றார். ஆனால் அந்த நர்ஸ் அவரிடம், இவற்றை எடுத்துவிட்டால் நீங்கள் இறந்துவிடுவீர்கள், நான் அந்த காரியத்தை செய்ய மாட்டேன் என்று மறுத்தார். அதற்கு அந்தப் பெரியவர், ஒரு மணி நேரத்துக்கு முன்னே நான் இயேசுவைக் காணச் செல்வது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? என்று கேட்டாராம்.

இந்த பெரியவர், தனது இறப்பை, இயேசுவை நேரடியாக காண்பதற்கு ஒரு வாய்ப்பாக எண்ணினார். அதனால்தான் அவரிடம் மரண பயமே இல்லை. இறுதி என்னும் சொல் நமது வாழ்வில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. திருவிழாவின் இறுதி நாளில்தான் மிக சிறப்பான நிகழ்ச்சிகள் அரங்கேறும். மாணவன் தனது இறுதித் தேர்வைத் தான் நன்றாக எழுத வேண்டும் என்ற திட்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். விளையாட்டு வீரன் தனது இறுதியாட்டத்தில்தான் தனது திறமைகள் அத்தனையும் பயன்படுத்துகிறான். ஏன்? மனிதனின் இறுதி ஊர்வலத்தில்தான் நீண்ட அமைதி நிலவுகிறது.

இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும் இறுதித் தீர்ப்பு சீக்கிரமாக நம்மை வந்து சேரும் என்றும், நமது இறப்பிற்குப் பின் நாம் அனைவருமே தீர்ப்புக்கு உள்ளாக்கப்படுவோம் என்றும் கூறுகின்றன. மரணத்தை அடுத்தே இறுதித் தீர்ப்பு வரும். எனவே மரண பயத்தை அகற்றி நல்மரணமடைய நாம் இப்போதிருந்தே நற்காரியங்கள் பல செய்ய வேண்டும்.

மரணத்தை எப்படிப் புரிந்து கொள்வது! இந்த உலகிற்கு வழிப்போக்கர்களாக வந்த நாம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிப் போக வேண்டும். கல்லறைத் தோட்டத்திலே இருந்த ஒரு கல்லறையில் நான் ஒரு வழிப்போக்கன் என்று எழுதியிருந்தது. இவர் தமது வாழ்வையும், மரணத்தையும் புரிந்து கொண்டவர். முதலில் நாம் நமது சிந்தனையைச் சீர்படுத்த வேண்டும். உலகத்தில் நான் ஒரு வழிப்போக்கன் என்ற சிந்தனை வேண்டும்.

நான் ஒரு பயணி . நாம் அனைவரும் பயணம் செய்து கொண்டே இருக்கிறோம். சிலர் சின்ன வயதிலேயே தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்வதுண்டு. சிலருக்கு 55 வயதில் பயணம் முடியும். வேறு சிலருக்கு 90ம் 100மாக வாழ்நாள் அமையும். எத்தனை நாள் வாழ்கிறோம் என்பது இங்கு முக்கியமல்ல. எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.

நாம் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களல்ல என்றே நமது வாழ்நாளைக் கழிக்க வேண்டும் (பிலி 3:20). இதைத்தான் இயேசு யோவா. 18:38-இல் அருமையாகக் கூறுகிறார்: என் அரசு இவ்வுலக அரசைப் போன்றதல்ல என்று. கிறிஸ்தவர்களாகிய நாம், நமதாண்டவர் இயேசுவை நேரடியாகச் சந்திக்க நம்மை நாமே தயாரிக்க வேண்டும். நாம் கிறிஸ்துவுக்கே சொந்தம். ஒரு நாள் அழிந்து போகும் இந்த உலகிற்குச் சொந்தமல்ல. வள்ளுவர் இதைத்தான் பற்றற்றது பற்றுக என்று இந்த உலகைப் பற்றிக் கூறுகிறார்.

சிலுவையில் தொங்கி, நம்மையெல்லாம் மீட்ட அதே இறைவன்தான் நற்கருணை வழியாக நம்முள்ளத்தில் எழுந்து வரவிருக்கிறார். மரணம் என்பது வானக வாழ்வுக்கு முகவுரை என்பதை உணர்ந்து மரண பயத்தை அகற்றி, இறுதித் தீர்ப்பை எதிர்கொள்ள அவரிடம் திடன் கேட்போம்.







வாழ ஆசை!

நமது எதிர்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ள நம் எல்லாருக்குமே ஆசை உண்டு! நமது எதிர்காலத்தைப் பற்றிய நற்செய்தி ஒன்று இன்று நமக்கு அறிவிக்கப்படுகின்றது : "இயேசு மீண்டும் வருவார். அவர் வரும்போது தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்."
நம்மை தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாக மாற்றப்போவது எது? இயேசுவின் விருப்பம். இயேசு அவருக்குப் பிரியமானவர்களைத் தேர்ந்தெடுப்பார்.
இயேசு யோவான் 15:16-இல் "நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்" என்கின்றார். யாரைக் கடவுள் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ள விரும்புகின்றாரோ அவர்களை இயேசு தேர்ந்தெடுத்து, அவர்களது பாவங்களையெல்லாம் மன்னித்து, அவர்களைப் புனிதராக்கி, அவர்களைக் கடவுளுக்கு ஏற்புடையராக்குவார் (எபே 1:3-10).

கடவுள் யாருமே அழிந்துபோகக்கூடாது என்று விரும்புகின்றவர் (யோவா 17:12). அனைவரையும் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ள அவர் ஆசைப்படுபவர். அவரது ஆசையோடு ஒத்துழைப்பவர்கள் அத்தனைபேரும் அழியா வாழ்வைப் பெறுவர்.

ஒரு மனிதன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான்!

இளகிய மனம் கொண்ட இறைவன் அவன் முன்னால் தோன்றி, பக்தா! உன் தவத்தை மெச்சினோம். உனக்கு என்ன வேண்டும்? என்றார். இறைவா இரண்டே இரண்டு வரங்கள் வேண்டும். இரண்டே இரண்டு வரங்கள்தானே! தந்தோம். என்ன வரங்கள்? ஒன்று, நான் தூங்கும்போது சாகும் வரம் வேண்டும். சரி, இன்னொன்று? நமட்டுச் சிரிப்புடன் சொன்னான் பக்தன் : நான் தூங்காமல் வாழும் வரம் வேண்டும்.

மனிதனுக்கு இந்த உலகத்திலே உயிரோடு வாழ எவ்வளவு ஆசை பாருங்கள்! இம்மையில் நாம் வாழ ஆசைப்படும் அளவுக்கு மறுமையிலும் நாம் வாழ ஆசைப்படுவது நல்லது! நாம் இயேசுவால் | தேர்ந்துகொள்ளப்பட்டால் நமக்கு முடிவில்லா காலத்திற்கும் ஒளி வீசும் வாழ்வு கிடைக்கும் (முதல் வாசகம்). | தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாக மாற நாம் செய்ய வேண்டியது என்ன? இயேசு நம்மைத் தேடிவரும்போது அவருடைய விருப்பத்தோடு, மரியாவைப் போன்று (லூக் 1:38), திருத்தூதர்களைப் போன்று (லூக் 5:11) ஒத்துழைக்கவேண்டும்.

மேலும் அறிவோம் :

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும் (குறள் : 367).

பொருள் : ஆசை உண்டாகாதபடி ஒருவன் அதனை முழுமையாக அகற்றிவிட்டால், எப்போதும் அழியாமல் நிலைத்திருக்கும் ஆற்றல் பெறுவான்!




கிறிஸ்துவின் இரண்டாம் வருகை உடனடியாக திகழப் போகிறது என்பதை வலியுறுத்தி, "இயேசு வருகிறார்" என்ற தலைப்பைத் தாங்கிய துண்டுப் பிரசுரங்களைப் பெந்தகோஸ்து சபையினர் ஒரு பேருந்து நடத்துனரிடம் கொடுத்தார். அவரோ, "யார் வந்தாலும் வரட்டும்; ஆனால் மரியாதையாய் பயணச் சீட்டு வாங்கிய பிறகே பேருந்தில் பயணம் செய்ய முடியும்" என்றார்.

பேருந்தில் பயணம் செய்யப் பயணச்சீட்டுத் தேவைப்படுவது போல, விண்ணகப் பேருந்தில் பயணம் செய்யவும் பயணச் சீட்டுத் தேவை. அப்பயணச் சீட்டு: நம்பிக்கையும் அன்புமாகும். ஆனால் காலம் செல்லச் செல்ல இந்த இரண்டு தற்பண்புகளும் மக்களிடம் இல்லாமற்போகும் அல்லது குறைந்து போகும் என்று கிறிஸ்துவே முன்னறிவித்துள்ளார், "மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையை காண்டாரோ?" (லூக் 18:8). "நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும்" (மத் 24:12).

உலகம் எப்போது எப்படி முடியும் என்று பலர் இன்று கேட்கின்றனர், வாழ்க்கையின் உண்மைத் தன்மையை (நிலையாமையை) ஆராயாதவர்கள், கோடிக்கணக்கான எண்ணங்களை எண்ணுவா் என்கிறார் வள்ளுவர்.

ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப்
கோடியும் அல்ல பல (குறள் 337)

இருப்பினும் திருவழிபாட்டு ஆண்டின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் நமக்கு இன்றைய திருவழிபாடு உலக முடிவைப் பற்றியும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியும் எடுத்துரைக்கிறது,

இன்றைய முதல் வாசகமாகிய தானியேல் நூலில் சொல்லப்பட்டுள்ள வைகளும், நற்செய்தியில் கிறிஸ்து கூறியுள்ளவைகளும் திருவெளிப்பாடு இலக்கிய வகையைச் சார்ந்தவை. அவற்றைச் சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ளாமல், அவற்றில் பொதிந்துள்ள உண்மைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும், அவ்வுண்மைகளில் சில பின்வருமாறு: "இவ்வுலகு இப்போது இருப்பதுபோல் நெடுநாள் இராது" (1 கொரி 7:21), இவ்வுலகம் ஒரு முடிவுக்கு வரும். அதற்குமுன் கிறிஸ்துவின் சீடர்கள் துன்புறுத்தப்படுவர், போலி இறைவாக்கினர்கள் தோன்றி மக்களை ஏமாற்றுவர், இயற்கையில் அச்சத்துக்குரிய மாற்றங்கள் பல நிகழும். ஆனால் கிறிஸ்துவின் சீடர்கள் அச்சமடையக்கூடாது. ஏனெனில், எல்லாம் கடவுளின் கையில்தான் உள்ளது. கிறிஸ்துவே வரலாற்றின் நாயகன். உலகின் கதியையும் மனிதரின் கதியையும் நிர்மாணிப்பவர் அவரே. அவர் மீண்டும் வருவார்: நீதி வழங்குவார், புதிய வானகமும் புதிய வையகமும் மலரும் கிறிஸ்துவின் சீடர்கள் நம்பிக்கை இழுக்கலாகாது, "இறுதிவரை உறுதியாய் இருப்பவர் மீட்புப் பெறுவர்" (மத் 24:13).

கிறிஸ்து தமது இரண்டாம் வருகையைக் காலம் தாழ்த்துவதாக நாம் கருதலாம். ஆனால், பேதுரு கூறுகிறார்: ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் உள்ளது (2 பேது 3:8) கிறிஸ்து இன்னும் வராததால் அவர் வர மாட்டார் என்று நினைப்பது அபத்தமாகும். திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "விண்ணகமே நமது தாய்நாடு. அங்கிருந்து கிறிஸ்து வருவார் எனக் காத்திருக்கின்றோம்* (பிலி 3:20). கோடைகாலத்தில் மரங்களின் இலைகள் உதிர்ந்த பிறகு புதிய தளிர்கள் தோன்றுவது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியானது கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. இதுதான் அத்திமரம் உவமை உணர்த்தும் உண்மை .
உலகம் எப்பொழுது முடியும் என்பது நமக்குத் தெரியாது என்று கிறிஸ்து கூறுவதன் நோக்கம்: உலக முடிவைப்பற்றித் தெரிவது நமக்கு நன்மை பயக்காது. நாம் எப்போதும் விழிப்புடன் இருந்து நமது கடமையைச் செய்ய வேண்டும்,

வாக்குரிமை இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இல்லையென்றால், நாம் தேர்தலின்போது வாக்களிக்க முடியாது. அவ்வாறே "வாழ்வு நுலில்" நமது பெயர் இல்லையென்றால் நம் மீட்படைய முடியாது. "நூலில் யார்யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்” (தானி 12:1) என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. கிறிஸ்து தம் சீடர்களிடம், "உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்" (லூக் 10:20) என்கிறார். "வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாதோர் தெருப்பு ஏரியில் எறியப்பட்டார்கள்" (திவெ 20:15) என்று திருவெளிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது,
வாழ்வு நூலில் இடம்பெற வேண்டுமென்றால் , நம்மிடம் நம்பிக்கையும் அன்பும் செயல்வடிவம் பெற வேண்டும். கிறிஸ்தவ வாழ்வு என்பது “அன்பின் வழியாகச் செயலாற்றும் நம்பிக்கை ” (கலா 5:3). "அன்பு செய்பவர்கள் சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளனர்" (1 யோவா 3:10) நமது இறுதித் தீர்ப்பு அன்பின் அடிப்படையில் அமையும் (மத் 25:34-40),
ஒரு காலத்தில் அன்புக்கு அழுத்தம் கொடுத்து நீதியைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. தற்போது நீதிக்கு அழுத்தம் கொடுத்து அன்பு ஓரம் கட்டப்பட்டுள்ளது, நீதி இருக்கும் இடத்தில் அன்பு இல்லாமற்போனாலும், அன்பு உள்ள இடத்தில் நீதி கட்டாயம் இருக்கும். ஏனெனில் நீதி என்பது குறைந்த அளவு அன்பு என்பதை உணர்க, அன்பைச் செயலில் காட்ட வேண்டும் (1 யோவா 3:18). அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக, நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும் (1 யோவா 4:18)

அன்பில் நாம் வாழும்போது உலக முடிவைப்பற்றி நாம் அச்சம் அடையத் தேவையில்லை . உலக முடிவு என்பது படைப்பின் அழிவாக இருக்காது, மாறாக அதன் நிறைவாக இருக்கும். கிறிஸ்துவின் முதல் வருகையை ஏற்று, அவரது இரண்டாம் வருகையை எதிர்பார்த்துள்ள நாம், வாரும் ஆண்டவராகிய இயேசுவே வாரும்' (திவெ 22:20) என்ற மன்றாட்டுடன் இத்திருவழிபாட்டு ஆண்டை நிறைவு செய்வோம்.


உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள்!

'பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்.
நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்' (சஉ 3:2) என்று சொல்லும் எபிரேயக் கவிஞர் சபை உரையாளர் என்றாலும் சரி,

'பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்' என்று சொல்லும் தமிழ் ஞானி பட்டினத்தார் என்றாலும் சரி,

வாழ்வின் இருதுருவ நிலைகளை மிக அழகாக உணர்ந்தவர்களாகவும், உணர்த்தியவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்த உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

நாம் இரண்டு மணி நேரங்கள் பார்க்கும் சினிமா, அல்லது இரண்டு நாள்கள் படிக்கும் நாவல் கூட, 'முடிவு எப்படி இருக்கும்?' என்ற ஆவலை நம்மில் எழுப்பிவிடும்போது, நாம் 70 ஆண்டுகள், 80 ஆண்டுகள் வாழும் வாழ்க்கை, 'என் முடிவு எப்படி இருக்கும்?' என்ற கேள்வியையும், பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்துவரும் இப்பிரபஞ்சத்தின் முடிவு எப்படி இருக்கும்? என்ற கேள்வியையும் நம்மில் எழுப்பாமல் இருக்காதா?

உலகம் முடியுமா? முடியாதா? எப்போது முடியும்? எப்படி முடியும்? மனித இனம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளுமா? அல்லது அண்ட சராசரத்தின் ஆக்கம், அழிவு போல பூமி தானாகவே அழிந்து விடுமா? கடவுள் வருவாரா? எப்படி வருவார்? எல்லாருக்கும் தீர்ப்பு வழங்குவாரா? நம் இந்தியப் பின்புலத்தில் கேள்விகள் இன்னும் அதிகமாகின்றன: எந்தக் கடவுள் வருவார்? கிறிஸ்தவரல்லாதவருக்கு என்ன நடக்கும்? ஒருவேளை எல்லாக் கடவுளர்களும் சேர்ந்து வருவார்களா?

'சட்டென்று மாறுது வானிலை' என்பதுபோல, 'இதெல்லாம் பார்க்க நாம இருக்க மாட்டோம்' என்ற எண்ணமும் நம் மூளையில் மின்னி மறைகின்றது.

ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் என அழைக்கப்படுகின்ற மத்தேயு, மாற்கு, லூக்கா என்னும் மூவரும் உலகின் இறுதி பற்றியும், மானிடமகனின் இரண்டாம் வருகை பற்றியும் பதிவு செய்கின்றனர். யோவான் இறுதி நாட்கள் பற்றியும், செம்மறியின் இரண்டாம் வருகை பற்றியும் திருவெளிப்பாடு என்ற புதிய நூலையே படைக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 13:24-32) காணப்படும் பகுதி 'வெளிப்பாட்டு நடை' என்னும் இலக்கியக் கூற்றைப் பயன்படுத்தி எழுதப்பட்டடிருந்தாலும், இப்பகுதியில் வரும் நிகழ்வுகள் அனைத்தும் தனி மனித வாழ்வில் நடக்கின்றன என்றும் நாம் உருவகித்துக்கொள்ள முடியும்.

'அந்நாள்களில்' - 'நம் வாழ்வின் இறுதி நாள்களில்'

'வேதனைகளுக்குப் பிறகு' - 'நாம் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பிறகு'

'கதிரவன் இருண்டுவிடும்' - 'நம் கண்கள் மூடிவிடும் அல்லது மங்கிவிடும்'

'நிலா ஒளிகொடாது' - 'நம் உடலில் வெப்பம் இருக்காது'

'விண்மீன்கள் வானத்திலிருந்து விழும்' - 'நாம் பெற்ற அனைத்து உறவுகளும் நம்மைவிட்டு அகலும்'

'வான்வெளிக் கோள்கள் அதிரும்' - 'நாம் வாழும் குடும்பத்தில், சமூகத்தில் ஒரு வெற்றிடம் ஏற்படும்'

'மானிடமகன் மாட்சியோடு மேகங்கள் மீது வருவார்' - 'நம் உயிர் தன்னைப் படைத்த இறைவனிடம் திரும்பிச் செல்லும்'

இந்த உருவகம் சாத்தியமா என்று நாம் கேட்கலாம்?

சாத்தியம். ஏனெனில், இத்தகைய உருவகத்தைத்தான் நாம் சஉ 12:1-6ல் வாசிக்கின்றோம்.

ஆக, இயேசு குறிப்பிடும் நிகழ்வுகள் எல்லாம் என் வாழ்விலும், உங்கள் வாழ்விலும் நடந்தேறும் நிதர்சனமான நிகழ்வுகள்.

இவ்வறிகுறிகளைச் சொல்லிவிட்டு, 'அத்திமரத்திலிருந்திலிருந்து உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள்' என்கிறார். அந்த உண்மை என்ன?

இலையுதிர்காலத்தில் தன் இலைகளை எல்லாம் இழந்து, பனிக்காலத்தில் வெறும் குச்சிகளாக நின்று பனியைத் தாங்கி, வசந்தகாலத்தில் மெதுவாக தளிர்விட்டு, கோடைகாலத்தில் பச்சைப் பசேலென இருக்கிறது அத்திமரம். ஆனால், இப்பச்சை இலைகள் நிரந்தரமல்ல. மீண்டும் சக்கரம் சுற்றும். இலைகள் உதிரும், மலரும், மலரும், உதிரும். வாழ்க்கையின் ஓட்டத்தை 'ஃப்ரீஸ்' செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அது இறந்துவிடும். (இறந்ததை மட்டும்தான் நாம் ஃப்ரீஸ் செய்கிறோம். இல்லையா?)

ஆக, அத்திரமரம் நமக்கு உணர்த்தும் உண்மை என்ன?

'மாற்றம் ஒன்றே நிலையானது'

மாற்றத்திற்கு ஒத்துழைக்கும் உயிர்தான் வாழ முடியும். மறுவாழ்விற்குப் பிறக்க முடியும்.

மேலும், என் உடலின், மனதின் மாற்றம் என்னைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. ஆக, மாற்றம் என்பது ஒரு தனிநபர் அனுபவம்.

இறந்தன உயிர்க்கும், இருப்பன இறக்கும் என்ற இதே செய்தியைத்தான், இதே மாற்றத்தைத்தான் இன்றைய முதல் வாசகத்திலும் (காண். தானி 12:1-3) நாம் வாசிக்கிறோம். பல்த்தசார் என்று அழைக்கப்பட்ட தானியேல், பாரசீக மன்னன் சைரசின் காலத்தில் காட்சி ஒன்று காண்கின்றார். அந்தக் காட்சியில் முடிவின் காலம் அவருக்கு அறிவிக்கப்படுகிறது. அந்த முடிவின் காலம் எப்படி இருக்கும் என்று தென்திசை மன்னனுக்கு (பெயரில்லாத மன்னன்!) தானியேல் அறிவிப்பதே இன்றைய முதல் வாசகம். இன்றைய முதல் வாசகம் இறுதிநாளைப் பற்றிச் சொல்லும்போது ஐந்து கூறுகளைக் குறிப்பிடுகிறது: (அ) தலைமைக் காவலர் மிக்கேல் எழும்புவார், (ஆ) துன்ப காலம் வரும், (இ) வாழ்வின் நூலில் பெயர் எழுதப்பட்டவர்கள், (ஈ) நல்லவர்கள் பரிசு பெறுவர், மற்றும் (உ) கெட்டவர்கள் தண்டனை பெறுவர். இன்ப காலம் மறைந்து துன்ப காலமும், அது முடிந்து மீண்டும் இன்ப காலமும் வருவதைச் சொல்கிறது தானியேலின் காட்சி.

'பிறப்பு இறப்பு' 'வளர்ச்சி தளர்ச்சி' 'இன்பம் துன்பம்' எனச் சுற்றிவரும் வாழ்க்கைச் சக்கரத்தை நாம் எப்படி நகர்த்துவது?

இன்றைய இரண்டாம் வாசகமும் (காண். எபி 10:11-14,18), பதிலுரைப் பாடலும் (திபா 16:5) நமக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றன:

1. 'ஒரே பலியைச் செலுத்துவது'

கடந்த 6 வாரங்களாக நாம் வாசித்துக்கொண்டுவரும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடல் பகுதி இன்று நிறைவு பெறுகிறது. இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் ஆசிரியர், பழைய ஏற்பாட்டுக் குரு நாள்தோறும் செலுத்தும் பலியையும், இயேசுவின் ஒரே பலியையும் ஒப்பிடுகின்றார். இந்த ஆன்மீகச் செய்தியை நம் வாழ்வுப் பாடமாக எப்படி மாற்றுவது? நம் வாழ்க்கையை இரண்டு நிலைகளில் வாழ நம்மால் முடியும்: (அ) நாள்தோறும் ஒரே மாதிரி வாழ்வது - இவ்வகை வாழ்வில் புதுமை இருக்காது. எல்லாரையும் போல மற்றவர்கள் எதிர்பார்ப்பதை மட்டும் நாம் செய்துவிட்டு ஓய்ந்திருப்போம். (ஆ) ஒரே முறை வாழ்வது - இனிமையாக, முழுமையாக வாழ்வது. இவ்வகை வாழ்வில் புதுமையும், புத்துணர்ச்சியும் இருக்கும். இந்த வாழ்க்கை நம் கையெழுத்தைப் போல நமக்கே உரிய தனிப்பட்ட ஒன்றாக இருக்கும்.

நாள்தோறும் ஒரே மாதிரி வாழ்வது எளிது. ஏனெனில் இத்தகைய வாழ்வு சாவி கொடுத்த பொம்மை போல ஒரே இடத்தில் ஆடிக்கொண்டிருப்பது போல, அல்லது ஒரே இடத்தில் ஆடிக்கொண்டிருக்கும் ஓய்வுநாற்காலி போல இருக்கும். ஓய்வுநாற்காலி விடிய விடிய ஆடினாலும் ஒரு இன்ச் கூட நகர்வதில்லை. ஆனால், ஒரே முறையில் தள்ளப்படும் நடைவண்டி புதிய இடத்திற்குப் போவது மட்டுமல்லாமல், அது குழந்தை நடை பழகுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. மேலும், நாம் ஒரே முறை செய்யும் செயலில் நம் முழு மனம், சிந்தனை, மற்றும் ஆற்றலைப் பயன்படுத்துகிறோம்.

ஆக, நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி: 'நாள்தோறும் போல வாழ்கிறேனா?' அல்லது 'ஒரே முறை போல வாழ்கிறேனா?'

2. 'நிறைவுள்ளவரா(க்கு)தல்'

செடியில் மலரும் ஒரு பூ அப்படியே வாடிவிட்டால் அது வாடிவிட்டது என்கிறோம். ஆனால், அது பிஞ்சாகி பழுத்துவிட்டால் வெம்பிவிட்டது என்கிறோம். ஆனால், முழுவதும் கனியானால் அதை இரசிக்கிறோம். ஆக, கனி என்பது வேரின் நிறைவு. அதுபோலவே, இறப்பு என்பது பிறப்பின் நிறைவு. இந்த நிறைவு உண்மையிலேயே நிறைவாக இருத்தல் வேண்டும். 'இறப்பு உன்னிடம் வரும்போது உயிரோடு இரு' என்பது ஆப்பிரிக்க பழமொழி. அதாவது, வாழும்போதே இறந்துவிடாதே! அல்லது உன்னை நீயே அழித்துவிடாதே! அல்லது வெறும் நடைபிணம் போல வாழாதே!

நேற்றைய என் நாளை விட நான் இன்று நிறைவுள்ளவனாக இருக்க வேண்டும். அதுதான் வளர்ச்சி. நேற்று நான் எடுத்த முடிவுகள் இன்று நான் எப்படி இருக்கிறேன் என்பதை உறுதி செய்கின்றன. அதுபோல, இன்று நான் எடுக்கும் முடிவுகள் நாளை நான் எப்படி இருப்பேன் என்பதை உறுதி செய்கின்றன. அப்படி என்றால், என் முடிவுகளும், தெரிவுகளும் சரியானதாக இருக்க வேண்டும். நேற்றைய காரணத்தால் இன்றைய காரியம் நடக்கிறது. காரியத்தை நான் கட்டுப்படுத்த காரணத்தைக் கட்டுப்படுத்த வேண்டும. இறப்பு என்னும் காரியத்தை நான் கட்டுப்படுத்த வாழ்க்கை என்ற காரணத்தை நான் கட்டுப்படுத்த வேண்டும். ஆக, ஒவ்வொரு பொழுதும் நான் நிறைவு பெறுகிறேனா? என்று கேட்க வேண்டும். அதே நேரத்தில், நம் குறைவுத்தன்மையை அறிந்து உணர்ந்து, அதை நிறைவின் காரணியாகப் பார்த்தல் நலம்.

3. 'ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து. அவரே என் கிண்ணம். எனக்குரிய பங்கைக் காப்பவர் அவரே.'

நம் வாழ்க்கை இனிமையான அனுபவமாக இருக்க கடவுள், விதி, மறுபிறப்பு என எதையாவது ஒன்றை நம்பியே ஆக வேண்டும். இந்த நம்பிக்கையில் நாம் திரும்பிப் பார்க்கும்போதுதான் வாழ்வின் ஒவ்வொரு புள்ளிகளும் மிக அழகாக இணையும். என் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புள்ளியாக வளர்ந்துகொண்டே வரும். அது கடவுள், விதி, மறுபிறப்பு என்னும் ஒற்றைப் புள்ளியில் இணையும். வெறும் கோலமாவை அள்ளித் தெளிப்பதால் கோலம் வந்துவிடுமா? இல்லை. நிதானமாக, அளந்து, பொருத்தி வைக்கப்படும் புள்ளிகளே கோலத்தை உருவாக்கும்.

என் வாழ்வின் சொத்து என நான் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொன்றை நினைக்கிறேன். சிறு குழந்தையாக இருந்தபோது நிறைய சிகரெட் அட்டைகள் வைத்திருக்கும் சிறுவன் விளையாட்டில் பணக்காரன் எனக் கருதப்படுவான். ஆனால், வயது வந்து நான் வளர்ந்தவடன் சிகரெட் அட்டைகள் சேகரித்தால் அது விளையாட்டுத்தனமாகத் தெரியும். வளர்ந்த நான் நிறைய ரூபாய் நோட்டுக்களைச் சேகரிக்க ஆரம்பிக்கிறேன். மற்றவர்கள் என்னைப் பணக்காரன் என்று சொல்வார்கள். ஒரு காலத்தில் நானே எண்ணிச் சேகரித்த சிகரெட் அட்டைகளை இன்று நான் ஏன் குப்பையில் போடுகிறேன்? வாழ்வில் சேகரிக்கும் சொத்துக்கள் அனைத்தும் மாறக்கூடியவை. என் உடல் நலம், அழகு, படிப்பு, வேலை, பதவி, சமூக நிலை, உறவு என நான் சேகரிக்கும் அனைத்தும் ஒருநாள் காலாவதியாய்ப் போகும். நான் ஓடி ஓடி நிறைக்கும் கிண்ணம் கடைசியில் வெறுமையாய் இருக்கும். நான் இவ்வளவு நாள் போட்டது இந்த ஓட்டைக் கிண்ணத்திலா? என்று மனம் குற்றவுணர்வு கொள்ளும். ஆனால், ஆண்டவரை உரிமைச் சொத்தாகவும், அவரைத் தன் கிண்ணமாகவும் கொண்டிருப்பவர் பேறுபெற்றோர். அவர் ஏமாற்றமடையார். ஏனெனில் அவரின் பங்கைக் காப்பவர் கடவுள்.

உலகம் முடியுமா? முடியாதா? மானிட மகன் வருவாரா? வரமாட்டாரா? என்ற கவலையும், ஏக்கமும் வேண்டாம். 'இதோ சீக்கிரம் வருகிறார்' என யாராவது தெருவில் முழக்கமிட்டுப் போனால், நீங்கள் பதற வேண்டாம். 'மனம் மாறு. அவரிடம் திரும்பி வா' என எவராவது கத்தினால் பயப்பட வேண்டாம். நிதானமாகவும், பொறுமையாகவும் நம் வாழ்வு முடிவு பெறுவதை எண்ணிப் பார்ப்போம்.

'நன்றாக நல்ல வேலை செய்த நாள் நல்ல தூக்கத்தைத் தருவதுபோல, நன்றாக நல்ல நிலையில் வாழ்ந்த வாழ்க்கை நல்ல இறப்பைத் தரும்' என்பார் டாவின்சி.

வரட்டும் அவர் எப்போது வேண்டுமானாலும்! அவருக்கே தெரியாது அவரின் வருகை!
பின் ஏன் நாம் கவலைப்பட வேண்டும்?

அத்திமரத்திலிருந்து நாம் கற்கும் உண்மை இதுதான்: தளர்வன வளரும், வளர்வன தளரும்!