Saturday 28 October 2017

பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு 

விடுதலைப் பயணம் 22:20-27, 1 தெசலோனிக்கர் 1:5–10, மத்தேயு 22:34-40

 

மறையுரை மொட்டுக்கள்-அருள்பணி Y இருதயராஜ்

வின்செண்ட் சர்ச்சிலைப் பற்றி இரண்டே வரிகளில் எழுதுக என்ற கேள்விக்கு ஒரு மாணவன் "அவர் இறந்துவிட்டார் இப்போது உயிரோடில்லை" என்று எழுதியிருந்தான் இரண்டாம் குலோத்துங்க சோழனைப் பற்றி இரண்டே வரிகளில் எழுதுக என்ற கேள்விக்கு ஒரு மாணவன் எழுதிய பதில்:"இரண்டாம் குலேத்துங்க சோழன் முதலாம் குலோத்துங்கசோழனுக்கு பின்னால் வந்தவன் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு முன்னால் இருந்தவன்" அமெரிக்காவை ஒரே வார்த்தையில் விவரிக்கும்படி அபிரகாம் லிங்கனைக் கேட்டதற்கு அவர் கூறியது: உழைப்பு.

ஒருவரைப் பற்றிச் சுருக்கமாக விளக்குவது என்பது மிகவும் கடினம் அப்படியானால் 73 புத்தகங்களைக் கொண்ட விவிலியத்தை முழுவதுமாக இரண்டே வரிகளில் விளக்க முடியுமா? இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து விவிலியம் முழுவதையும் இரண்டே வரிகளில் சொல்லி விட்டார். "கடவுளை முழு மனத்துடன் அன்புசெய் உன்னை நீ அன்பு செய்வதுபோல உனக்கு அடுத்து இருப்பவரையும் அன்பு செய் (மத்தேயு 5 22:37-38):

கடவுளை முழுமையாக அன்பு செய் (இச 3:5) என்று இணைச்சட்ட நூலில் கூறப்பட்டுள்ளதையும், உனக்கு அடுத்து இருப்பவரை அன்பு செய் (லேவி 19:18) என்று லேவியர் நூலில் சொல்லப்பட்டிருப்பதையும் கிறிஸ்து இணைத்துக் கூறியுள்ளார். இறையன்பும் பிறரன்பும்தான் சட்டம் மற்றும் இறைவாக்குகள் அனைத்தின் அச்சாணி.

நலமுடன் இருந்த ஒருவர், மேலும் உடல் நலம் பெற விரும்பி பல மருத்துவர்களிடம் செல்ல, அவர்கள் வெவ்வேறு மருந்துகளை கொடுக்க, அவர் அவற்றையெல்லாம் சாப்பிட்டு இறக்கும் தருவாயில் இருந்தார். அவர் தமது உறவினர்களிடம் அவரது கல்லறையில் பின்வரும் வரிகளை எழுதும்படி கேட்டுக்கொண்டு கண்ணை மூடினார்: "நான் நலமுடன் இருந்தேன். மேலும் நலம்பெற விரும்பி பல மருத்துவர்களிடம் சென்றேன். அதனால் இப்போது இக்கல்லறையில் இருக்கிறேன்."

அவ்வாறே இன்று விவிலியததைக் கரைத்துக் குடித்துவிட்ட ஒரு சில கத்தோலிக்கர் பின்வருமாறு கூறுகின்றனர்: "எனக்கு ஓரளவு விவிலியம் தெரிந்திருந்தது விவிலியத்தைப் பற்றி மேலும் அறிய விரும்பினேன் பல விவிலிய விளக்கக் கூட்டங்களுக்குச் சென்றேன். அதன் விளைவாக நான் இப்போது கததோலிக்கத் திருச்சபையைவிட்டு வெளியேறி பெந்தகோஸ்து சபையில் இருக்கிறேன்."

விவிலியத்தை விலா வாரியாகப் படித்து என்ன பயன்? விவிலியப் பட்டிமன்றங்கள் கருத்தாங்குகள் நடத்தி என்ன பயன்? இன்று பெத்தகோஸ்து சபைகளில் நடப்பதெல்லாம் "விவிலிய சிலை வழிபாடு" என்று கூறுகிறார் ஒரு விவிலியப் பேராசிரியர் விவிலியம். கூறும் சாரத்தை விட்டுவிட்டு வெறும் சக்கையைச் சாப்பிடுகின்றனர் விவிலியத்தை ஒரு சிலையாக வழிபடுகின்றனர்.

விவிலியத்தின் சுருக்கம் கடவுளை அன்பு செய் உனக்கு அடுத்திருப்பவரை அன்பு செய். விவிலியத்தில் உள்ள மற்ற அனைத்தும் இந்த இரண்டு கட்டளைகளின் விளக்கமும் விரிவாக்கமும் என்பதை அறிக.

கடவுளை அன்பு செய்வது எளிது. ஆனால் அவரை முழுமையாக அன்பு செய்வது கடினம் கடவுள் நமது முழு அன்பை பிளவுபடாத அன்பை எதிர்பார்க்கின்றார். ஆனால் நாம் கடவுளையும் இவ்வுலகையும் அன்பு செய்கிறோம். இவ்வுலகச் செல்வங்களுக்கு அடிமையாகின்றோம். உலக மாயையில் நம்மை இழந்து விடுகிறோம். இருமனப்பட்ட உள்ளத்தினராய் வாழ்கின்றோம். இத்தகைய நிலையில் கிறிஸ்து நமக்குக் கூறுவது நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (மத் 6:24)

நாம் பிறரை அன்பு செய்ய வேண்டும். பிறரன்பு இறையன்பின் வெளி அடையாளம். அன்பு செய்யாதவர் கடவுளை அறிய முடியாது. ஏனெனில் கடவுள் அன்பாயிருக்கிறார் (1 யோவா 4:16). பகலில் பசுமாடு தெரியாதவனுக்கு இரவில் எருமைமாடு தெரியுமா? அவ்வாறே. நாம் கண்ணால் காணாத அடுத்திருப்பவரை அன்பு செய்ய முடியவில்லையென்றால், கண்ணால் காணாத கடவுளை எவ்வாறு
அன்பு செய்யமுடியும் என்றுவினவுகிறார் புனித யோவான் (1 யேவா 4:20)

இன்றைய முதல் வாசகம் நாம் பிறக்கு குறிப்பாக விதவைகளுக்கும் அனாதைகளுக்கும் தீங்கிழைக்கக் கூடாது எனக் கூறுகிறது. ஏழைகளுடைய குரலைக் கடவுள் கேட்கிறார். பிறர்க்கு இப்போதே நன்மை செய்ய வேண்டும்.

ஒரு பசுவிடம் பன்றி கேட்டது உன்னை மட்டும் மக்கள் வரவேற்கின்றனர் என்னை ஏன் அவர்கள் விரட்டுகின்றனர்? அதற்குப் பசு கூறியது: "நான் உயிரோடு இருக்கும்போதே மக்களுக்குப் பயன்படுகிறேன். ஆனால் நீ செத்த பிறகுதான் மக்களுக்குப் பயன்படுகிறாய்." செத்த பிறகு நமது சொத்துக்களை பிறர்க்கு எழுதி வைப்பதால் பயனில்லை. உயிரோடு இருக்கும்போதே நம் சொத்துக்களை ஏழை எளியவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். இளமைப் பருவத்திலேயே பிறர்க்கு உதவ வேண்டும் முதுமைக் காலத்தில் தானதர்மம் செய்யலாம் என்று தள்ளிப் போடக்கூடாது. நாம் பிறர்க்குச் செய்த உதவிதான் நாம் சாகும்போது நமக்குக் கைகொடுக்கும் என்கிறார் வள்ளுவர்.

 அன்றுஅறிவாம் என்னாது ஆறஞ்செய்க மற்றுஅது
பொன்றும் கால்பொன்றாத்துணை. (குறள் 36) 
என்றும் ஒன்றே செய்க .
ஒன்றும் நன்றே செய்க .
நன்றும் இன்றே செய்க .


தன்னலமே அன்பாய்!

அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை


கொரிந்து நகர திருச்சபைக்கு தான் எழுதும் முதல் கடிதத்தில் அன்பிற்குப் பாடல் இசைக்கும் தூய பவுல், அன்பின் ஒரு பண்பாய், 'அன்பு தன்னலம் நாடாது' (13:5) என்கிறார். ஆனால், 'உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக!' மற்றும் 'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து' என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் கேட்கும் இயேசுவின் வார்த்தைகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் முரண்பட்டு நிற்கின்றன. எப்படி? 'தன்னை அன்பு செய்யும் ஒருவரால் தான் பிறரை அன்பு செய்ய முடியும்' என்பதும், 'தன் முழு இதயத்தையும், உள்ளத்தையும், மனத்தையும் அறிந்து கொண்ட ஒருவரால்தான் கடவுளை அன்பு செய்ய முடியும்.' ஆக, அன்பின் முதற்படி தன்னலம்.

தன்னலத்தில் தொடங்கி அது பிறர்நலம், இறையன்பு என ஆறாக ஓடினால் அது அன்பு.

மாறாக, தன்னலத்தில் தொடங்கி தன்மையமாகவே அது முடிந்துவிட்டால் அது தேங்கிநிற்கும் குட்டை.

திருச்சட்ட நூல் முழுமைக்கும், இறைவாக்கு நூல்களுக்கும் அடிப்படையாக இருக்கின்ற 'இறையன்பு,' மற்றும் 'பிறரன்பு' என்னும் இரண்டு கட்டளைகளை இன்று நாம் எப்படி புரிந்துகொள்வது?

'தன்னலம்' என்ற வார்த்தையிலிருந்தே நம் தேடலைத் தொடங்குவோம்.

'தன்னலம் ஒழிய வேண்டும்' அல்லது 'தன்னலம் கூடாது' என்று பல சிந்தனை ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருந்த வேளையில், 'தன்னலம் என்னும் மதிப்பீடு' ('The Virtue of Selfishness') என்று 'தன்னலத்திற்கு' புதிய தேடலைக் கொடுத்தவர் அய்ன் ரென்ட் (Ayn Rand) என்ற அமெரிக்க நாவல் ஆசிரியை. இவரின் கருத்திற்குப் பின்புலமாக இருப்பது இவரின் சமகாலத்து மார்க்சிய வெறுப்பு மற்றும் முதலாளித்துவ ஆதரவு என்பதாக இருந்தாலும், இவரின் கருத்து நம்மைச் சற்றே யோசிக்க வைக்கிறது. தன்னலம் ஏன் மதிப்பீடாக இருக்கக்கூடாது?

தன்னலம் என்பது என்னைப் பொறுத்தவரையில் நம் பரிமான வளர்ச்சியின் எச்சம்.

'ஆபத்து காலத்தில் முதலில் நீங்கள் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து கொண்டு, பின் அருகிலிருப்பவருக்கு, அல்லது அருகிலிருக்கும் உங்கள் குழந்தைக்கு உதவுங்கள்' என்று விமானத்தில் பாதுகாப்பு எச்சரிக்கை செய்வதை நீங்கள் கவனித்துள்ளீர்களா?

ஆபத்து என்று வரும்போது ஒவ்வொரு உயிரும் தன்னைத் தான் முதலில் காத்துக்கொள்கிறது. இது இயற்கையின் எதார்த்தம். இதை விட்டுவிட்டு, 'நான் ஒரு தியாகி, பிறர்நலம் பேணுபவன்' என்று என் அருகிருப்பவருக்கு உதவி செய்ய முனைந்தால், அவரும் அழிந்து, நானும் அழிந்துவிட வாய்ப்பு உண்டு.

தன்னலம் என்பது நம் வாழ்வில் மூன்று நிலைகளில் வெளிப்படுகிறது:

அ. எனக்கென்று ஒரு அளவுகோல். எனக்கு பிடித்தது, பிடிக்காதது, நல்லது, கெட்டது என நான் எனக்கென ஓர் அளவுகோலை வைத்துக்கொள்கிறேன். இந்த அளவுகோல்தான் சரி என்றும் நான் வாதாடுகிறேன்.

ஆ. என் மனம் விரும்புவதை நான் செய்கிறேன். என் மனதின் விருப்பங்கள், என் எண்ண ஓட்டங்கள் அனைத்தும் சரியானவை என நான் எண்ணுகின்றேன்.

இ. என் உடலையும், மனத்தையும் பற்றி நான் அதிகம் அக்கறை கொள்கிறேன். என் பிறப்பிலிருந்து இறப்பு வரை என் உடலோடும், மனத்தோடும் பயணிப்பது நான் மட்டுமே. ஆக, இந்த இரண்டையும் பார்த்துக்கொள்ளும் கடமை எனக்கு நிறைய உண்டு.

இந்த மூன்று நிலைகளிலும் நான் என்னையே அன்பு செய்கிறேன். அல்லது என்னை நான் அன்புசெய்யும்போது எனக்கென்று ஒரு அளவுகோலை வைத்துக்கொள்கிறேன், என் மனம் விரும்புவதைச் செய்கிறேன், என் உடலையும், மனத்தையும் பற்றி நிறைய அக்கறை கொள்கிறேன்.

இயேசுவின் போதனை என்னவென்றால், இந்த நிலை உன் தொடக்கமாக இருக்கட்டும். இதிலிருந்து உன் ஓட்டம் இறைவனை நோக்கியும், பிறரை நோக்கியும் இருக்கட்டும். இறைவனின் அளவுகோல் என்ன? இறைவன் விரும்புவது என்ன? பிறரின் அளவுகோல்கள், விருப்பங்கள் எவை? பிறரின் உடல், மனம் இவை பற்றிய என் அக்கறை என்ன? என அழைப்பு விடுக்கின்றார். 'இறையன்பு,' 'பிறரன்பு' என்னும் இரண்டு கட்டளைகளை நினைவுறுத்துகின்றார்.

இறையன்பு எப்படி இருக்க வேண்டும்?

'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் ஒருவர் ஆண்டவரை அன்பு செய்ய வேண்டும்.' கிரேக்கத்தில் 'கார்டியா' (kardia) (இதயம்), 'ப்சுகே' (psyche) (உள்ளம்), மற்றும் 'டியனோயா' (dianoia) (மனம்) என்னும் மூன்று வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. 'கார்டியா' (இதயம்) என்பது இங்கே நம் இரத்த ஓட்டத்தை ஒருங்கமைக்கும் உடல் அல்லது பொருள்தன்மையைக் குறிக்கவில்லை. மாறாக, 'உணர்வுகள்' என்பதன் உருவகமாக இருக்கின்றது. கிரேக்கர்கள் உணர்வுகளின் பிறப்பிடம் இதயம் என்றே கருதினர். எபிரேயர்களைப் பொறுத்தமட்டில் உணர்வுளின் பிறப்பிடம் வயிறு என்று இருந்தாலும், சில நேரங்களில் இதயம் என்றும் கருதினர். இரண்டாவதாக, 'ப்சுகே' (உள்ளம்) என்றால் 'ஆவி' அல்லது 'ஆன்மா' அல்லது 'உயிர்'. வழக்கமாக விலங்குகள் மற்றும் தாவரங்களின் உயிரை 'ப்சுகே' என்னும் இந்தச் சொல்லால் குறிப்பர். மனிதர்களின் உயிரைக் குறிக்க 'ப்னெயுமா' (pneuma) அல்லது 'ஸோயே' (zoe) என்னும் சொல்லாடல்கள் வழக்கமாகப் பயன்படுத்தப்பட்டாலும், எல்லா உயிர்களுக்கும் பொதுவான 'ப்சுகே' என்னும் சொல்லாடலைப் பயன்படுத்துவதன் வழியாக, நாம் மற்ற விலங்குகள் அல்லது தாவரங்களோடு கொண்டிருக்கின்ற ஒற்றுமையை நமக்கு நினைவுறுத்துகின்றார் ஆசிரியர். மூன்றாவதாக, 'டியனோயா' (மனம்) என்றால் எண்ணம், சிந்தனை, கற்பனை, அல்லது புரிந்துகொள்ளுதல் என்று பொருள்.

'இதயம்,' 'உள்ளம்,' 'மனம்' என்னும் மூன்றும் இயல்பாகவே நம்மை தன்னலம் கொண்டவர்களாகவே வைத்திருக்கின்றன. என்னதான் நான் பிறர்நலம் கொண்டவர் என்றாலும் என் இதயத்தால் என் இரத்தத்தை மட்டுமே ஒருங்கியக்க முடியும். என் உயிரைக் கொண்டு நான் இன்னொருவருக்கு உயிர் கொடுக்க முடியாது. என் கற்பனையை எனக்கு அடுத்திருப்பவருக்குப் புரிய வைக்க முடியாது. இருந்தாலும், இந்த மூன்றையும் கொண்டு ஆண்டவராகிய கடவுளை அன்பு செய்யச் சொல்கிறது முதல் கட்டளை. அதாவது, நான் என் இதயம், உள்ளம், மனம் அனைத்திலும் இறைவனை மட்டுமே நிரப்பினேன் என்றால் அங்கே நான் இறைவனை அன்பு செய்கிறேன்.

இந்த நிலையைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் பார்க்கின்றோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த தெசலோனிக்க திருச்சபைக்குத் தன் மடலை எழுதுகின்ற பவுல், அவர்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை வெகுவாகப் பாராட்டுகின்றார்:

'நீங்கள் எவ்வாறு சிலைகளை விட்டுவிட்டு, உண்மையான, வாழும் கடவுளுக்கு ஊழியம்புரியக் கடவுளிடம் திரும்பி வந்தீர்கள்.'

ஒவ்வொரு நம்பிக்கைப் பயணமும் ஒரு திரும்பிவருதலே ('homecoming'). அதாவது, கடவுளை விட்டுத் தொலைவில் சென்ற நாம் திரும்பி வருகிறோம். இயல்பிலேயே நமக்கும் இறைவனுக்கும் ஒரு தொப்புள்கொடி இருக்கின்றது. அந்தக் கொடி சில நேரங்களில் தானாக அறுகின்றது. சில நேரங்களில் நாம் அறுத்துக்கொள்கின்றோம். எப்படி என்றாலும் அவரிடம் திரும்பிவருவதற்கான ஒரு ஈர்ப்பு நம்மிடம் இருக்கின்றது. அந்த ஈர்ப்பிற்கு தடையாக இருப்பது நமக்கென நாம் வைத்துக்கொள்ளும் சிலைகள். மனிதர்களாகிய நம்மால் எதையாவது பற்றிக்கொள்ளாமல் இருக்க முடியாது. இறைவனைப் பற்றிக்கொள்ளத் தவறும்போது நாம் ஏதாவது சிலைகளைப் பற்றிக்கொள்கிறோம். 'சிலைகள்' என்பது இங்கே ஓர் உருவகம். 'இறைவன்' தவிர மற்ற அனைத்துமே பவுலைப் பொறுத்தமட்டில் 'சிலைகளே.' ஆக, இறைவனை அன்பு செய்வது என்பது என் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆன்மாவோடும் அவரிடம் திரும்பி வருவது. திரும்பி வருதலோடு மட்டுமல்ல. மாறாக, திரும்பி வந்தவுடன், அவருக்கு ஊழியம் புரிதல். ஊழியம் புரிதல் என்றால் அவரின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளுதல். தன் விருப்பம், தன் தேர்வு, தன் நிலைப்பாடு அனைத்தையும் ஒதுக்கிவிட்டு அவரின் விருப்பம், அவரின் தேர்வு, அவரின் நிலைப்பாட்டைச் சிரமேற்றல்.

பிறரன்பு என்றால் என்ன? அதை எப்படி புரிந்துகொள்வது?

இன்றைய முதல் வாசகத்தில் விடுதலைப் பயண நூல் வாசகத்தில் சில பிறரன்பிற்கான சில ப்ராக்டிகல் அட்வைஸ் கொடுக்கின்றார் ஆசிரியர்.

பிறரன்பு என்று சொல்லும்போது, யார் அந்த 'பிறர்' என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 'பிறர்' அல்லது 'அயலார்' அல்லது 'அடுத்திருப்பவர்' என்பதைக் காலங்காலமாக யூதர்கள் தன் சக யூத ஆண் என்றே நினைத்தனர். ஆனால் நல்ல சமாரியன் எடுத்துக்காட்டின் வழியாக இயேசு, 'பிறர்' என்பவர் 'தேவையில் இருக்கும் எல்லாரையும்' அடையாளம் காட்டுகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் மூன்று வகையான பிறரைப் பார்க்கின்றோம்:

அ. அந்நியன். அதாவது, மொழி, இனம், கலாச்சாரம், உணவுப்பழக்கம், சமயம் என அனைத்திலும் என்னிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பவன்.

ஆ. கைம்பெண் மற்றும் அநாதை. கணவன் மற்றும் பெற்றவர் இல்லாதவர். ஆதரவு இல்லாதவர். வாழ்வாதாரம் இல்லாதவர்.

இ. கடன் வாங்கிய ஏழை. ஏதோ ஒரு காரணத்திற்காக கடனை வாங்கிவிட்டு - கல்வி, மருத்துவம், உணவு - இன்று அதை திருப்பி செலுத்தும் நிலையில் இல்லாத ஒருவர்.

இந்த மூன்றுபேருக்கும் பொதுவான ஓர் உணர்வு 'உடைந்து நிற்தல்' அல்லது 'நிர்வாணமாயிருத்தல்.' மற்றவர்கள் முன் இவர்கள் நாதியற்றவர்கள். இவர்கள்மேல் அன்பு காட்ட ஆசிரியர் அழைப்பு விடுக்கின்றார். இங்கே அன்பை விட முதன்மையானதாக இருக்க வேண்டியது 'பரிவு' அல்லது 'திறந்த உள்ளம்' அல்லது 'கனிவு.' முதலில் இது இருந்தால் தான் அங்கே அன்பு பிறக்க முடியும்.

'பரிவு' என்றால் 'அடுத்தவரின் இடத்தில் என்னை நிரப்பி பார்ப்பது.' என் கண் முன்பாக இருக்கும் தண்ணீர் தொட்டியில் ஒருவர் மூழ்கிக்கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவரை நான் மாற்றானாகப் பார்க்காமல், அந்த இடத்தில் நானே மூழ்கிக்கொண்டிருப்பதுபோல நினைக்கும்போது தோன்றும் உணர்வே பரிவு. இந்த உணர்வு வந்துவிட்டால் எல்லாரையும் எனதாகப் பார்க்கும் உள்ளம் பிறந்துவிடும்.

ஆகையால்தான் இயேசுவும், 'உன்னை அன்புசெய்வதுபோல' என்கிறார். அதாவது, தன்னலம் இல்லாமல் அன்பு இல்லை. தன்னலம் கொண்டிருக்கும் ஒருவர்தான் பிறர்நலமும் கொண்டிருக்க முடியும்.

இன்று நான் என் அன்பை எனக்கு அடுத்திருப்பவரோடு எப்படிக் காட்டலாம்?

1. உடன்பயணித்தல் (accompaniment)

பிறக்கும் போது தனியாகப் பிறந்து, இறக்கும்போதும் தனியே மரணத்தைச் சந்திக்கும் நாம் வாழ்வு முழுவதும் பிறரின் உடனிருப்பை நாடுகிறோம். நான் எப்படி பிறரின் உடனிருப்பை நாடுகிறேனோ, அந்த அளவிற்கு பிறரோடு உடனிருக்கவும் எனக்குக் கடமை உண்டு. ஆக, என்னோடு எத்தனைபேர் உடன்பயணிக்கிறார்கள் என நினைப்பதைவிட்டு, நான் எத்தனைபேரோடு உடன்பயணிக்கிறேன் எனக் கேட்டுப்பார்க்கலாம்.

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் வத்தலக்குண்டு பகுதியில் பணியாற்றி வந்த அருள்சகோதர் ஜேம்ஸ் கிம்டன் அவர்களின் நல்லடக்கத்திற்குச் சென்றிருந்தேன். ஏறக்குறைய 15000 குழந்தைகள் அவரின் உதவியால் படித்தார்கள், படிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. தன் நாடு, தன் மொழி, தன் உறவு, தன் மக்கள், தன் உணவுப் பழக்கம் என எல்லாவற்றையும் இங்கிலாந்தில் விட்டுவிட்டு இங்கே வந்து அந்நியராகிய இக்குழந்தைகளோடு இவர் செய்த பயணமே பிறரன்பு. இதுவே உடன்பயணித்தல்.

இன்று பெரிய அளவுகளில் நாம் உடன்பயணிக்கமுடியவில்லை என்றாலும் வாழ்க்கை நமக்கு வைத்திருக்கும் வரையறைக்குள்ளாவது பயணம் செய்யலாமே.

2. பொறுப்பேற்றல் (responsibility)

அன்பு செய்வது என்பது பொறுப்பேற்றல். 'நான் உன்னை அன்பு செய்கிறேன்' என்று சொல்லிவிட்டு, 'உனக்கு நான் பொறுப்பில்லை' என்று சொல்வது முரணானது. நான் அன்பு செய்யும் ஒருவருக்கு நான் பொறுப்பேற்கிறேன். பொறுப்பேற்கும்போது அங்கே மனிதர்களை நான் முழுமையாக உள்வாங்கிக்கொள்கிறேன். அவர்களின் தேவைகளையும், விருப்பங்களையும் என் தேவைகளாக, விருப்பங்களாகப் பார்க்கிறேன். பொறுப்பேற்கும்போது நான் அவர்கள் இருப்பதைவிட இன்னும் ஒரு நல்ல நிலைக்கு நான் அவர்களை உயர்த்துகிறேன். 'நான் என்ன என் சகோதரனுக்கு காவலாளியா?' என்ற காயினின் கேள்வி அவனது பொறுப்பின்மையின் வெளிப்பாடாக இருக்கிறது.

3. இலக்கு நிர்ணயித்தல் (goal setting)

நான் பல நேரங்களில் என் இலக்கு அல்லது என் நோக்கம் பற்றியே சிந்திக்கிறேன். இத்தோடு சேர்ந்து மற்றவரின் இலக்கையும், நோக்கத்தையும் நான் சிந்திக்க வேண்டும். மனிதர்கள் எல்லாருமே நல்லவர்கள்தாம். 'நான் பிறரைக் கெடுக்க வேண்டும்' என்று யாரும் கண்விழிப்பது கிடையாது. 'நன்றாக இருக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும்' என்றே நாம் துயில் எழுகின்றோம். எனவே, என்னால் பிறரின் இலக்கை நோக்கி அவர்களை ஒருபடி முன்னால் தள்ள முடிகிறதா என்று பார்த்தல் சால்பு.

இறுதியாக, இன்றைய பதிலுரைப் பாடல் வரிகளோடு நிறைவு செய்கிறேன்: திபா 18:1 'என் ஆண்டவரே, நான் உம்மிடம் அன்புகூர்கின்றேன்'. இந்தவரியின் தனித்துவம் என்னவென்றால், விவிலியத்திலேயே மனிதர்கள் கடவுளைப் பார்த்து, 'ஐ லவ் யு' சொல்கின்ற ஒரே இடம் இதுதான். எப்போதெல்லாம் என் பேட்டரி லோ ஆகின்றதோ, அப்போதெல்லாம் நான் வாசிக்கும் விவிலியப் பகுதிகளில் திபா 18ம் அடங்கும்.

அவரிடம் இன்று நான் 'ஐ லவ் யு' சொல்கிறேன் என்றால், அதற்கு முன் நான் எனக்கு நானே 'ஐ லவ் யு' சொல்ல வேண்டும். அந்த 'ஐ லவ் யு' எனக்கு அடுத்திருப்பவரை நோக்கிச் செல்ல வேண்டும்.

தன்அன்பு - பிறர் அன்பு - இறையன்பு என அனைத்தையும் ஒரே தளத்தில் நிற்க வைத்ததே இயேசுவின் புரட்சி.


                             ஆக, தன்னலமும் அன்பாய் இருத்தல் சாத்தியமே!







Friday 20 October 2017

பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு


எசா 45: 1, 4-6, 1 தெச1:1-5; மத் 22: 15-21

மறையுரை மொட்டுக்கள்-அருள்பணி Y இருதயராஜ்



ஓர் ஊரில் ஓர் இந்து கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார். அவர் இறந்தபோது கிறிஸ்தவர்கள் அவரைக் கிறிஸ்தவ மரபுப்படி புதைக்க வேண்டும் என்றார்கள். ஆனால் அவருடைய இந்து உறவினர்களோ அவரை இந்து மரபுப்படி எரிக்க வேண்டும் என்றனர். இரு சமூகத்தினரிடையே சண்டை மூண்டது சிக்கலைத் தீர்த்து வைக்க ஊர் நாட்டாண்மையிடம் சென்றனர் நாட்டாண்மை பின்வருமாறு தீர்ப்பு வாங்கினார்: "இறந்தவர் உடலை முதலில் கிறிஸ்தவ முறைப்படிக் கல்லறையில் புதையுங்கள், பிறகு அதைக் கல்லறையிலிருந்து எடுத்து இந்து முறைப்படி எரித்துவிடுங்கள்" நாட்டாண்மையின் தீர்ப்பை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டு அவரின் புத்திக்கூர்மையை பெரிதும் பாராட்டினர். சிக்கலைத் தீர்த்து வைப்பது எளிதல்ல.

பரிசேயர் கிறிஸ்துவை சிக்கலில் மாட்டிவிட விரும்பினர். "சீசருக்கு வரி செலுத்துவது முறையா?" என்று பரிசேயர்கள் கிறிஸ்துவிடம் கேட்டபோது தம்மைச் சிக்க வைக்க வேண்டும் என்ற தீய உள்நோக்கத்துடன் என்பதைக் கிறிஸ்து நன்கு புரிந்து கொண்டார். "சீசருக்கு வரி செலுத்தலாம்" என்று கிறிஸ்து கூறினால், அவர் யூதர்களுக்கு எதிரியாகிவிடுவார், ஏனெனில் யூதர்கள் உரோமையருடைய ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வில்லை. "சீசருக்கு வரி செலுத்தக் கூடாது" என்று கிறிஸ்து கூறினால், அவர் உரோமை ஆட்சிக்கு எதிராளி என்று கருதப்படுவார். அவர் எந்தப் பதில் கூறினாலும் அது அவருக்கு வினையாக அமைந்துவிடும்.

ஆனால் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார் (1 கொரி 124). அவர் பரிசேயரிடம் கூறியது: "நீங்கள் சீசருடைய உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை ஏற்றுக்கொண்டு அதைப் பயன்படுத்துகிறீர்கள். அப்படியானால், சீசருக்கு உரியவற்றைச் சீருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்." இவ்வாறு பதிலளித்து அவர்களது தீய உள் நோக்கத்தைத் தவிடு பொடியாக்கிவிட்டார் மக்கள் அவருடைய பதிலைக் கேட்டு வியப்படைந்தனர்.

அரசும் சமயமும் மோதத் தேவையில்லை. இரண்டுமே மக்களின் நலனை மையப்படுத்தி இயங்குகின்றன. அரசு மக்களின் பொருளாதாரத் தேவைகளுக்கு முன்னுரிமைக் கொடுக்கிறது. சமயமோ மக்களின் ஆன்மிகத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. அரசு ஊர்களைச் சாலைகளால் இணைக்கிறது. கடவுள் ஒரு புள்ளி, மனிதர் ஒரு புள்ளி இவ்விரு புள்ளிகளையும் இணைக்கும் நேர்கோடுதான் சமயம், புனித பவுல் கூறுவதுபோல, "கடவுள் ஒருவரே கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்" (1 திமொ 2:5) கிறிஸ்து ஆற்றிய அதே இணைப்பாளர் பணியை அவருடைய திருச்சபையும் மனித வரலாற்றில் ஆற்றி வருகிறது.

கிறிஸ்தவர்கள் நமது நாட்டில் இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதப்படுகின்றனர். இரண்டாம் நூற்றாண்டில் உரோமையில் வாழ்ந்த தெர்த்துல்லியன என்ற அறிஞர் உரோமை வாழ் மக்களிடம் கூறினார்: "உங்கனைப்போல் எங்களுக்கும் அறிவும் ஆற்றலும் உண்டு உங்களைப்போல் எங்களுக்கும் நாட்டுப் பற்று உண்டு. ஆனால் நாங்கள் சிலுவையைப் பின்பற்றுகிறோம்" ஆம் கிறிஸ்தவர்களுக்கும் நாட்டுப் பற்று உண்டு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

முறையான அரசின் அதிகாரத்திற்குக் கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிய கடமைப்பட்டுள்ளனர் ஏனெனில் முறையான எல்லா அதிகாரமும் கடவுளிடமிருந்தே வருகிறது (யோவா 19:11) புனித பேதுரு கூறும் அறிவுரை "அனைத்து மனித அமைப்புகளுக்கும் ஆண்டவரின் பொருட்டுப் பரிந்திருங்கள்" (1 பேதுரு 213) புனித பவுல் கூறும் அறிவுரை "ஆளும் அதிகாரம் உள்ளவர்களுக்கு எல்லாரும் பணிந்திருங்கள் ஏனெனில் கடவுளிடமிருந்து வாத அதிகாரம் எதுவுமில்லை (உரோமை 13:1)


இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. பிற இனத்தவாகிய சைரசு மன்னருடைய கைகளைக் கடவுள் பலப்படுத்துகிறார். அவரும் யூதர்களுக்கு ஓர் ஆலயம் கட்டித் தருகிறார் நமது நாடு சமய சார்பற்ற நாடு. எனவே எல்லா சமயத்தினரையும் அது சமமாக நடத்த வேண்டும். கிறிஸ்தவர்களுடைய உரிமைகளைப் பறிக்கக் கூடாது அவர்களுடைய ஆலயங்களையும் நிறுவனங்களையும் சமய வெறியர்கள் அழிப்பதைப் பார்த்துக் கொண்டு செயலற்று இருக்கக்கூடாது சிறுபான்மையினர் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்வது அரசின் கடமையாகும்.

18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆப்பிரிக்காவுக்குச் சென்று அந்நாட்டைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். அப்போது ஆப்பிரிக்க ஒருவர் ஆங்கிலேயர்களைப் பார்த்து, நீங்கள் எங்கள் நாட்டுக்கு வந்தபோது நாடு எங்கள் கையில் இருந்தது. பைபிள் உங்கள் கையில் இருந்தது. இப்போது பைபிள் எங்கள் கையில் இருக்கிறது; நாடு உங்கள் கையில் இருக்கிறது என்றாம்!

சமயத்தைப் பரப்பி மக்களை அடிமைப்படுத்துவது கிறிஸ்தவப் பண்புக்கு எதிரானது கட்டாய மனமாற்றம் மனித மாண்புக்கும் மனச்சாற்றுக்கும் எதிரானது என்று திருச்சபைச் சட்டமே தெளிவாகக் கூறியுள்ளது (திச. 748 2). அதே நேரத்தில் ஒரு சமயத்தை ஏற்க, போதிக்க பரப்ப அனுமதி உண்டு என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 25 தெளிவாகக் கூறுகிறது. சமய சுதந்திரத்தை மறப்பதும் தவறு கட்டாயப்படுத்தி அல்லது ஆசைகாட்டிமதம் மாற்றம் செய்வதும் தவறு.
கிறிஸ்துவைப்போல் ஞானமும் விவேகமும் உள்ளவர்களாக வாழக் கற்றுக் கொள்வோம். நல்ல சமயப் பற்றும் நல்ல நாட்டுப் பற்றும் இணைந்து செல்ல வேண்டும். கிறிஸ்தவர்கள் எவ்விதத்திலும் மற்றவர்களுக்கு இளைத்தவர்கள் அல்ல என்பதை எண்பித்துக் காட்ட வேண்டும்.

கடவுளுக்கு உரியதும், உரியவர்களும்!


அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை
'மனிதர்களுக்கு அதிகமாக பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்துவதில் மூன்றாவது இடம் வகிப்பது கேடராக்ட் எனப்படும் கண்புரை நோய். முதல் இரண்டு இடங்களை சமயமும், அரசியலும் பிடித்துள்ளன.'

பெர்ட்ரன்ட் ரஸ்ஸல் என்னும் மெய்யியலாளர் சொன்னதாக சமீபத்தில் டுவிட்டரில் வெளிவந்த இந்த கீச்சு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. சமயமும் அரசியலும் அல்லது ஆன்மீகமும் அரசியலும் மனிதர்களை ஏன் குருடாக்குகின்றன? நம் மனதின் எண்ண ஓட்டங்களை, நம் கட்டின்மையைத் தடை செய்வன சமயமும், அரசியலுமே. எப்படி?

'திருவிவிலியம்' என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். இது மற்ற எல்லா வார்த்தைகளையும் போல ஒரு வார்த்தைதான். ஆனால், இனிமேல் 'திருவிவிலியம்' என்னும் வார்த்தை பயன்படுத்தப்படாமல் 'விவிலியம்' என்றே பயன்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது என வைத்துக்கொள்வோம். உடனடியாக என் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது? என் நூல் புனித நூல். அதற்கு எப்படி 'திரு' சேர்க்காமல் இருக்க முடியும் என மனம் அங்கலாய்க்கிறது. அது புலம்பலாக, ஆர்ப்பாட்டமாக, போராட்டமாக மாறுகிறது. இது ஒரு இந்துத்துவ முயற்சி, ஆர்எஸ்எஸ் பின்புலம் இருக்கிறது என்றெல்லாம் நான் பேச ஆரம்பித்துவிடுகிறேன். அதாவது, என்னைத் தவிர மற்ற எல்லாரையும் நான் எதிரியாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறேன். ஆனால், இந்த வார்த்தை மாற்றம் என் வீட்டிற்கு அருகில் உள்ள மற்ற நபருக்கு எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.

கிரிக்கெட் பார்க்கிறேன் என வைத்துக்கொள்வோம். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் மேட்ச். மேட்ச் தொடங்குமுன் வீரர்கள் அணிவகுத்து நிற்க, இரண்டு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்படுகின்றன. இந்திய நாட்டின் பண் இசைக்கப்படும்போது எழுந்து நிற்கும் அல்லது அமைதியாக நிற்கும் நான் பாகிஸ்தான் நாட்டு பண் இசைக்கப்படும்போது ஏன் அவ்வாறு செய்வதில்லை? இரண்டுமே பாடல்கள்தாம். இரண்டுமே ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் இசைக்கப்படுகின்றன. மற்ற பாடலுக்கு என் காதுகள் செவிடாவது ஏன்?

சமயமும், அரசியலும் இன்று மட்டுமல்ல. அவை தொடங்கிய நாள்களிலிருந்து நம் கண்களைக் கட்டியே வைத்திருக்கின்றன. சமயத்தால், அரசியலால் மக்கள் முன்னேறியிருக்கிறார்கள் அல்லது மாற்றம் பெற்றிருக்கிறார்கள் என்பதற்குச் சில உதாரணங்கள் இருந்தாலும், பெருவாரியாக மக்களின் கட்டின்மை இழப்பிற்கும், தன்னலத்திற்கும், குறுகிய மனப்பான்மைக்கும் காரணம் சமயமும் அரசியலுமே என்பது என் கருத்து.

சரி. இந்த இரண்டையும் சரி செய்வது எப்படி? கட்டின்மையோடு கூடிய ஆன்மீகமும், அரசியலும் உருவாவது எப்போது?

ஆன்மீகம், அரசியல் என்ற இரண்டு தளங்களையும் மிக நேர்த்தியாக ஒன்றாக்கி, கட்டின்மையோடு கூடிய மக்களாக, முழுப்பார்வை பெற்றவர்களாக வாழ இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

நம் சிந்தனையை இன்றைய நற்செய்தி வாசகத்தோடு (காண். மத் 22:15-21) தொடங்குவோம். 'சீசருக்கு உரியதை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்' என்று நிறைவுபெறகிறது இன்றைய நற்செய்தி வாசகம். இதை வாசித்தவுடன், இயேசு அரசியலுக்குரியதை அரசியலுக்கும், ஆன்மீகத்திற்குரியதை ஆன்மீகத்திற்கும் கொடுங்கள் என்று சொல்லி, அரசியலையும் ஆன்மீகத்தையம், இவ்வுலகத்தையம் மறுவுலகத்தையும் சமமாக்கிவிட்டார் என்று பல நேரங்களில் என் சிந்தனையை நான் சுருக்கியிருக்கிறேன். ஆனால், இந்த வார்த்தைகளின் அர்த்தம் இவ்வளவு எளிதானது அல்ல.

இந்த நற்செய்தி வாசகத்தை எப்படி புரிந்துகொள்வது?

இயேசுவின் இவ்வுலக வாழ்க்கை ஏறக்குறைய முடிவுறும் நேரம். அவர் எருசலேமில் இருக்கிறார். அவரை எப்படி அழிக்கலாம் அல்லது அவரை குற்றத்திற்கு உள்ளாக்க என்ன செய்ய முடியும் என்ற பல்வேறு மக்களும், குழுக்களும் பல்வேறு நிலைகளில் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஒரு குழுவினர் பரிசேயர்கள். அதாவது, தாங்கள் மட்டுமே கடவுளால் தேர்வுசெய்யப்பட்டவர்கள் என்ற மனம் கொண்டிருந்தவர்கள். இவர்கள் பேச்சில் கில்லாடிகள். ஆகையால்தான் தங்கள் பேச்சையே ஆயுதமாக எடுத்து, அந்தப் பேச்சில் இயேசுவைச் சிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். இவர்கள் இந்த முயற்சிக்குத் துணையாக அழைத்துக்கொள்வது ஏரோதியர்களை. 'ஏரோதியர்கள்'. ஏரோதியர்கள் என்பவர்கள் அந்தக் காலத்து 'ரெண்டுங்கெட்டான்கள்'. தங்களை ஒரு யூதர் தான் ஆள வேண்டும் என்று விரும்பியவர்கள். ஆகையால் தங்கள் பிரமாணிக்கத்தை ஏரோதுக்கு மட்டும் அளித்தனர். அதே நேரத்தில் உரோமை அரசுக்கு வரிகட்டுவதிலும், அவர்களுக்குக் கடை விரிப்பதிலும் மும்முரமாய் இருந்தனர். ஆகையால் தான் எந்நேரமும் சீசரின் முகம் பதித்த நாணயத்தை தூக்கிக் கொண்டு திரிகின்றனர்.

இவர்களில் சிலரும், பரிசேயரின் சீடர்களில் சிலரும் இணைந்து இயேசுவிடம் வருகின்றனர். 'போதகரே' எனத் தொடங்குகிறது இவர்களின் உரையாடல். இந்த வார்த்தையில் ஒரு கேலி ஒழிந்திருக்கிறது. இந்த வார்த்தையைச் சொல்வதன் வழியாக இயேசுவின் மேல் மற்றவர்கள் வைத்திருந்த மரியாதையை கேலி செய்கின்றனர். மேலும், இந்த வார்த்தை இயேசுவுக்கு பொருத்தமானதா? அவரின் வார்த்தை எந்த அளவுக்கு உண்மையானது? என்று சோதிக்கின்றனர். இவர்கள் முகஸ்துதியோடு தங்கள் உரையாடலைத் தொடர்கின்றனர்:

'நீர் உண்மையுள்ளவர், கடவுளின் நெறியை உண்மைக்கேற்ப போதிப்பவர், ஆள்பார்த்து செயல்படாதவர்' என்று அப்படியாக்கும், இப்படியாக்கும் என்று இயேசுவைப் புகழ்கின்றனர். ஆனால், இந்த மூன்று வார்த்தைகளும் இவற்றைச் சொல்லும் பரிசேயர்களுக்குப் பொருந்தாதவை. ஏனெனில் அவர்களிடம் உண்மையில்லை. அவர்கள் கடவுளின் நெறியை தங்களுக்கு ஏற்ப போதிப்பவர்கள். அவர்கள் பாரபட்சம் காட்டுபவர்கள்.

'சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர்? - இதுதான் அவர்கள் இயேசுவிடம் வைக்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கு 'ஆம்' என்று சொன்னால், 'இயேசு மெசியா அல்ல!' என்று இவர்கள் சொல்லத் தொடங்குவார்கள். 'இல்லை' என்று சொன்னால், 'உரோமைக்கு எதிரான தீவிரவாதி!' என்று இவர்கள் பட்டம் கட்டுவர். பழிதீர்ப்பர். இப்படி எந்தப் பதில் சொன்னாலும் அவர் அகப்பட்டு விடுவார்.

'போதகரே' என்று தன்னை அழைத்தவர்களை 'வெளிவேடக்காரர்களே' என அழைக்கிறார். 'ஆசிரியரே' என அழைத்தால் 'மாணவர்களே' என்றுதானே அழைக்க வேண்டும்? இயேசுவின் இந்த ஒரு வார்த்தையை அவர்களுக்குப் பதிலாக அமைந்துவிடுகிறது. வெளிவேடம் என்றால் டபுள் ஸ்டேன்டர்ட். அதாவது ஒரு வகையான ஸ்கிஸோஃபிரேனியா வாழ்க்கை. உள்ளே ஒன்றும் வெளியே மற்றொன்றுமாக வாழ்வதுதான் வெளிவேடம். பரிசேயர்கள் வெளிவேடக்காரர்கள் ஆனது எப்படி? அவர்கள் தாங்கள் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் அல்லது உள்ளத்தில் தங்களையே இறைவனுக்கு அர்ப்பணமாக்கியவர்களாக இருந்தாலும், அவர்களின் வெளி செயல்பாடுகள் எல்லாம் அதற்கு புறம்பானதாக இருக்கிறது. அதாவது, உலகியல், பொருளியல், அரசியல் ஆதாயங்களுக்காக தங்களின் உள்ளார்ந்த அர்ப்பணத்தோடு சமரசம் செய்துகொள்கிறார்கள். ஏரோதியர்கள் வெளிவேடக்காரர்கள் ஆவது எப்படி? தங்களின் அரசன் தங்கள் நாட்டு அல்லது தங்களின் மண்ணின் மைந்தன் ஏரோது என மார்தட்டிக்கொள்ளும் இவர்கள் ஒரே நேரத்தில் தங்களை ஆட்சி செய்யும் பிலாத்துவுக்கும், சீசருக்கும், ஒட்டுமொத்த உரோமை இனத்திற்கும் அடிபணிபவர்கள். அதாவது, இடத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றபடி தங்கள் அர்ப்பணத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்திகள்.

'ஏன் என்னை சோதிக்கிறீர்கள்?' - பாலைவனத்தில் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளை 'சோதித்ததை' சுட்டிக்காட்ட விவிலியம் பயன்படுத்தும் அதே வார்த்தையே இங்கும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது அன்று தங்கள் முரட்டுத்தனத்தாலும், பிடிவாத குணத்தாலும் மக்கள் கடவுளைச் சோதித்தனர். இன்று அதே வேலையை பரிசேயர்களும், ஏரோதியர்களும் செய்கின்றனர்.

'வரி கொடுப்பதற்கான நாணயம்' - இயேசுவின் காலத்தில் இரண்டு வகை நாணயங்கள் பயன்பாட்டில் இருந்தன. உரோமையர்கள் கொண்டுவந்த தெனாரியம் என்னும் நாணயம். இஸ்ரயேல் மக்கள் பயன்படுத்தி வந்த செக்கேல் என்னும் நாணயம். செக்கேல் நாணயங்கள் ஆலயத்திற்கு மட்டுமே பயன்படும். மற்ற எல்லா இடங்களுக்கும் அவர்கள் உரோமையரின் நாணயத்தையே பயன்படுத்த வேண்டும். இதன் காரணமாகத்தான் ஆலயத்தில்கூடி அன்று நாணயமாற்றுவோர் இருந்தனர். 'டேய் வெளிவேடக்கார பசங்களா! ஒரே நேரத்தில் ரெண்டு நாணயங்களைத் தூக்கிக்கொண்டு போகும் பசங்களா!' என கிண்டல் அடிக்கின்றார் இயேசு. 'அவர்கள் ஒரு தெனாரியத்தை இயேசுவிடம் கொண்டுவருகின்றனர்.' தெனாரியம் என்பது ஒருவரின் ஒருநாள் கூலி.

'இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?' - கேட்கின்றார் இயேசு. இயேசுவுக்குத் தெரியாமல் இல்லை இது. தெரிந்தும் கேட்கிறார். 'சீசருடையவை' என்கிறார்கள் வந்தவர்கள். அதாவது, சீசரின் முகமும், அவர் பேசும் இலத்தின் மொழியின் சொற்களும் அங்கே பதிக்கப்பட்டிருக்கும். நாணயத்தில் அல்லது ரூபாய் நோட்டில் என்ன எழுதியிருக்கிறது என்பது மிக முக்கியம். ஆகையால்தான் நம்ம ஊருல புதிய 2000 மற்றும் புதிய 500 தாள் வந்தபோது நாம் எல்லாரும் அதில் தமிழ்மொழி இடம்பெற்றிருக்கிறதா? அது சரியாக இருக்கிறதா? என்று பார்த்துக்கொண்டிருந்தோம். அதாவது, ஒரு இனமும் ஒரு மொழியும் இங்கே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என இது சுட்டிக்காட்டுகிறது. செக்கேல் நாணயத்தில் (பிற்காலத்தில்) எபிரேய எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

'சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள்' - இவைதாம் இயேசுவின் இறுதி வார்த்தைகள். இவற்றை மேலோட்டமாக வாசித்தால் இயேசு சீசரையும் கடவுளையும் ஒரே இடத்தில் ஒரே தளத்தில் வைப்பது போல இருக்கிறது. அதாவது, 50 சதவிகிதம் இவருக்கும் 50 சதவிகிதம் அவருக்கும் அர்ப்பணத்தைப் பிரித்துக்கொள்ளுங்கள் என்று அவர் சொல்வதுபோல இருக்கிறது. இயேசு அப்படிச் செய்வாரா? 'ஒருவர் இரண்டு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அவர் ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்' என்று சொல்லிய இயேசு, 'நீங்கள் சீசருக்கும், கடவுளுக்கும் பணிவிடை செய்யுங்கள்' என்று சொல்வாரா? நிச்சயமாக இல்லை.

இங்கே சீசருக்கும், கடவுளுக்கும் என்ற இணைப்பு 'ம்க்காக' கிரேக்கத்தில் பயன்படுத்தப்படும் சொல்ல 'kai' ('மற்றும்') என்பது. இந்த 'மற்றும்' என்ற சொல் இணைப்புச் சொல் அல்ல. மாறாக, ஒன்றிலிருந்து அடுத்ததுக்கு எடுத்துச் செல்லும் ப்ரொக்ரெஸிவ் சொல். 'வாழைப்பழம் மற்றும் மாம்பழம் வாங்கி வா' என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளாமல், 'படிக்க மற்றும் விளையாடவும் செய்!' - அதவாது 'முதலில் படி, பின் விளையாடு' என எடுத்துக்கொள்ள வேண்டும்.

உரோமையின் அடிமைத்தளத்திலிருந்து யாராவது நம்மை விடுவிக்க மாட்டார்களா என இயேசுவின் காலத்தவர் எல்லாரும் எண்ணிக் கொண்டிருந்தனர். 'தீவிரவாதிகள்' என்று அழைக்கப்பட்ட ஒரு குழுவினர், தீவிரவாதத்தின் வழியாகவும், வன்முறையின் வழியாகவுமே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என நினைத்தனர். இயேசுவும் அவர்களின் சிந்தனையைப் பகிர்ந்தவர் தான். 'சீசருக்கு உரியதை சீசருக்கு கொடுங்கள், கடவுளுக்கு உரியதை கடவுளுக்குக் கொடுங்கள்' என்று சொல்வதில் ஒரு கோபம் ஒளிந்திருக்கிறது. அதாவது, சீசருக்கு உரியது உரோம். அதை விடுத்து விட்டு அவன் இங்கே என்ன செய்கிறான். இந்த மண்ணும், மக்களும் கடவுளுக்கு உரியது. அதை கடவுளுக்குக் கொடுத்துவிட்டு அவன் தன் ஊர் திரும்ப வேண்டும் என்ற தன் கருத்தை நாசுக்காகச் சொல்கின்றார் இயேசு. இவ்வாறாக, இங்கே ஆட்சி செய்ய வேண்டியர் இறைவன். இது இறைவனின் நாடு. இங்குள்ள மக்கள் இறைவனின் மக்கள். இவர்களை எப்படி சீசர் ஆட்சி செய்ய முடியும்?

ஆக, நாம் நம் அர்ப்பணத்தில் பிளவுபட்டிருந்தால், ஒன்றை அழித்துவிட்டு அடுத்ததில் முழுமையான அர்ப்பணம் செலுத்த அழைக்கிறார் இயேசு. அதாவது, அரசியல் மற்றும் உலகியல் அர்ப்பணத்தையும் தாண்டிய ஒன்று இருக்கிறது என்றும், அதுவே ஆன்மீகம் அல்லது கடவுள் என்றும் சொல்லி, 'கடவுளுக்கு உரியதை' மட்டும் தேர்ந்துகொண்டு, 'கடவுளுக்கு உரியவர்களாக' மட்டும் வாழ நம்மை அழைக்கிறார் இயேசு.

'கடவுளுக்கு உரியது' என்றால் என்ன? என்பதை இன்றைய  இரண்டாம் வாசகமும், 'கடவுளுக்கு உரியவர்கள்' என்றால் என்ன? என்பதை இன்றைய முதல் வாசகமும் வாசகமும் நமக்குச் சொல்கின்றன:

கடவுளுக்கு உரியது எது? (1 தெச 1:1-5)

புதிய ஏற்பாட்டில் முதன் முதலாக எழுதப்பட்ட நூல் என்று சொல்லப்படுகின்ற தெசலோனிக்கருக்கு தூய பவுல் எழுதிய முதல் திருமுகத்தின் தொடக்கமே இன்றைய இரண்டாம் வாசகம். தன் மற்றும் தன் உடன் பணியாளரின் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட பவுல் தொடர்ந்து அவர்களை நினைக்கும் ஒவ்வொரு பொழுதும் தான் கடவுளுக்கு நன்றி சொல்வதாக எழுதுகின்றார். இந்த நேரத்தில் அவர்களிடமிருந்த மூன்று பண்புகளைச் சுட்டிக்காட்டுகின்றார். இந்த மூன்று பண்புகள்தாம் கடவுளுக்கு உரிய வாழ்வைச் சுட்டிக்காட்டுகின்றன. அவை யாவை?

அ. செயலில் வெளிப்பட்ட நம்பிக்கை
ஆ. அன்பினால் உந்தப்பட்ட உழைப்பு
இ. எதிர்நோக்கி இருப்பதால் பெற்றுள்ள மனவுறுதி

இந்த மூன்று பண்புகள் இருந்தால் நாமும் கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்குக் கொடுக்க முடியும். அல்லது இந்த மூன்று பண்புகளில்தாம் கடவுளுக்கு உரியது அடங்கியிருக்கிறது. எப்படி?

வெறும் நம்பிக்கை மட்டும் இருந்தால் என்ன பயன்? அந்த நம்பிக்கை அதைக் கொண்டிருப்பவரோடு மடிந்துவிடும். ஆனால் அந்த நம்பிக்கை செயல்களோடு கைகோர்க்கும்போது மானுடமும் வளம் பெறும். கடவுளைத் தந்தை என நான் நம்புகிறேன் என்றால், அந்த நம்பிக்கை செயலாக - அதாவது, ஒருவர் மற்றவரை சகோதர, சகோதரியாக ஏற்றுக்கொள்வதில் வெளிப்பட வேண்டும். அதுவே செயல். அப்படி இல்லாமல், நான் கடவுளை மட்டும் தந்தை என்று சொல்லிவிட்டு மற்றவர்கள்மேல் அக்கறையே இல்லாமல் இருந்தால், அல்லது மற்றவர்களை அந்நியமாக்கி வைத்தால் என்னிடம் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் செயல்கள் இல்லாமல் போய்விடும்.

அடுத்ததாக, உழைப்பு. இந்த உழைப்பு வெறும் உழைப்பாக மட்டும் இருந்தால் அங்கே தேய்மானமும், சோர்வும்தான் இருக்கும். கால்நடைகள் அல்லது எந்திரங்களின் உழைப்பு இப்படித்தான். அவைகளால் மற்றவர்களுக்குப் பயன் இருந்தாலும், நாளின் இறுதியில் அவர்களுக்கு மிஞ்சுவது சோர்வும் தேய்மானமும்தான். ஆனால், அந்த உழைப்போடு அன்பு கலந்தது என்றால், அங்கே சோர்வும் தேய்மானமும் இருப்பதில்லை. தாய் தன் குழந்தையின் மேல் கொண்டுள்ள அக்கறையை எடுத்துக்கொள்வோம். அந்த அக்கறை என்ற உழைப்பில் அவள் தன் அன்பைக் கலப்பதால் ஒவ்வொரு நாளும் அவள் தாய்மையில் வளர்கிறாள். அவளிடம் சோர்வும், தேய்மானமும் இருப்பதில்லை.

மூன்றாவதாக, எதிர்நோக்கி இருப்பதால் பெறும் மனவுறுதி. மனவுறுதி என்பது பல ஏமாற்றங்களின் இறுதி வடிவம். அதாவது, நாம் எதிர்பார்த்து அது கிடைக்காமல் ஏமாந்து, ஏமாந்து போகும்போது நம் மனம் உறுதி பெறுகிறது. அதாவது, இது இல்லாமலும் என்னால் வாழ முடியும் என்ற உறுதியை அது பெற்றுக்கொள்கிறது. ஏமாற்றத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு அதை மனவுறுதியாக மாற்றிக்கொள்வது மூன்றாவது பண்பு.

கடவுளுக்கு உரியவர்கள் யார்? (எசா 45:1,4-6)

இஸ்ரயேல் மக்கள் நெபுகத்னேசர் அரசனின் ஆட்சிக்காலத்தில் பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக்கிடந்தபோது அவர்களின் மீட்பராக வருபவர் பாரசீக நாட்டு அரசன் சைரசு. இந்த சைரசு இஸ்ரயேல் மக்களை தங்கள் நாட்டிற்குத் திரும்பச் சொன்னதோடல்லாமல், இடிந்து கிடந்த நகரையும் எருசேலம் ஆலயத்தையும் புதிதாய்க் கட்டிக்கொடுக்க முன்வருகிறார். இந்த நற்செயலைச் செய்த சைரசு அரசனைத் தானே திருப்பொழிவு செய்ததாகவும், தானே அவருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்குவதாகவும், தானே அவரை வழிநடத்துவதாகவும் சொல்கின்றார் ஆண்டவராகிய கடவுள். அத்தோடல்லாமல் 'கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை' என்று சொல்லி அனைவரையும், அனைத்தையும் தன் உரிமையாக்கிக்கொள்கிறார் கடவுள்.

அவரை அன்றி வேறு எவரும் இல்லை எனில் அவரே அனைத்துமாய் இருக்கிறார்.

ஆக, அவரவருக்குரியதைக் கொடுத்துவிட்டு இறுதியாக அவருக்குரியதை அவருக்கு வழங்குவதே சால்பு.

இறுதியாக,

ஒன்றே ஒன்று. அவருக்குரியதை நான் அவருக்குக் கொடுக்க எனக்கு குறுக்கே நிற்கும் என் சீசர் யார்? அவரின் உருவம் என்ன? அவரின் எழுத்துக்கள் எவை?

நான் அவருக்குரியதை அவருக்குக் கொடுக்க நான் அவருக்குரியவர் என்ற நம்பிக்கையைப் பெற வேண்டும். அந்த நம்பிக்கை என் அன்பில் மலர்ந்து மனவுறுதியாகக் கனிந்தால் எத்துணை நலம்!


  ‘கடவுளுக்கு உரியதை கடவுளுக்குக் கொடுங்கள்’

அருட்பணி மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை


ஒரு கிராமத்திலிருந்த விவசாயிக்கு தீராத வயிற்றுவலி. அவர் எவ்வளவோ வைத்தியர்களை சென்று பார்த்தபோதும் அவருடைய வயிற்றுவலி தீரவில்லை. இந்த நேரத்தில் அவ்வூரில் இருந்த ஒருவர் வயிற்றுவலிக்காரரைச் சந்தித்து, பக்கத்துக்கு ஊரில் ஒரு கோவில் இருப்பதாகும், அக்கோவிலுக்குச் சென்று ஓர் ஆட்டை காணிக்கையாக தந்தால் வயிற்றுவலி முற்றிலும் தீரும் என்று சொல்லிவிட்டு வந்தார். எனவே அந்த பெரியவர் சொன்னதைக் கேட்டு, வயிற்றுவலிக்காரரும் அவருடைய மனைவியும் அந்தக் கோவிலுக்குச் சென்று சாமியை வணங்கிவிட்டு வரச் சென்றனர்.

அவர்கள் இருவரும் கோவிலுக்குச் சென்று சாமியை வணங்கினார்கள். அப்பொழுது வயிற்றுவலிக்காரர், “சாமி! நான் நீண்ட நாட்களாக தீராத வயிற்றுவலியினால் அவதிப்படுகிறேன். நீர் மட்டும் என்னுடைய நோயைக் குணப்படுத்திவிட்டால், நான் ஓர் ஆட்டையே கோவிலுக்கு நேர்ந்துவிட்டு, அதிலிருந்து வரக்கூடிய காணிக்கையை உமக்குப் படைக்கிறேன்” என்று வேண்டினார். பின்னர் அவரும் அவருடைய மனைவியும் கோவிலிலிருந்து வந்துவிட்டார்கள். அவர்கள் கோவிலுக்குச் சென்று, கடவுளிடம் வேண்டிய இரண்டு நாட்களிலே அவருடைய வயிற்றுவலி நீங்கியது. அப்பொழுது அந்த வயிற்றுவலிக்காரர், “இன்னும் இரண்டுநாட்கள் பொறுத்திருந்தால் வயிற்றுவலி தானாக விலகியிருக்குமே, இப்படித் தேவையில்லாமல் ஆட்டை விற்று, கோவிலில் காணிக்கையாகப் போடுவதாக வாக்குறுதி தந்துவிட்டோமே’ என்று வருந்தினார். இருந்தாலும் எப்படியும் ஆட்டை விற்று கோவிலில் காணிக்கை போடவேண்டுமே என்று வித்தியாசமான ஒரு முயற்சியில் இறங்கினார்.

அடுத்தநாள் அவர் தன்னுடைய ஆட்டையும், கூடவே தன்னுடைய வீட்டில் வளர்ந்த பூனையையும் கூட்டிக்கொண்டு சந்தைக்குச் சென்றார். சந்தையில் மக்கள் அனைவரும் கூடியிருந்த இடத்தில், “ஆட்டின் விலை ஒரு ரூபாய், ஆட்டின் விலை ஒரு ரூபாய்” என்று ஏலம்விடத் தொடங்கினார். இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மக்கள் நான், நீ என்று அந்த ஆட்டை வாங்கப் போட்டிபோட்டார்கள். அப்பொழுது அவர் மக்களைப் பார்த்துச் சொன்னார், “இந்த ஆட்டின் விலை ஒரு ரூபாய்தான், ஆனால் ஆட்டின் பாலைக் குடித்து வளர்ந்த பூனையின் விலை பத்தாயிரம் ரூபாய். பூனையும் சேர்த்து வாங்குவோருக்கே ஆட்டினைத் தருவேன்” என்றார். உடனே கூட்டம் சிறுது பின்வாங்கினாலும், அதிலிருந்த ஒருவர், சரி பத்தாயிரம்தானே என்று சொல்லி ஆட்டையும் கூடவே பூனையும் வாங்கிக்கொண்டு போனார்.

வயிற்றுவலிக்காரரோ ஆட்டை விற்ற காசான ஒரு ரூபாயை கோவில் உண்டியலில் போட்டுவிட்டு, “சாமி! இதோ ஆடுவிற்ற காசு” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தார். அவர் வீட்டுக்கு வந்த நேரம் அவர் விற்ற பூனை அவருடைய வீட்டில் நின்றுகொண்டிருந்தது. அந்தப் பூனைக்கு எதிரே அதை விலைகொடுத்து வாங்கியவர் நின்றுகொண்டிருந்தார். அவர் வயிற்றுவலிக்காரரிடம், “உங்களுடைய பூனை உங்களுடைய வீட்டிற்கே வந்துவிட்டது, ஆகையால் அதைப் பிடித்துத் தாருங்கள்” என்றார். “ஓ இவ்வளவுதானா?” என்று சொல்லிக்கொண்டு அவர் பூனையைப் பிடிக்க ஓடினார். ஆனால் அந்த பரிதாபம். அவருடைய கால் வழுக்கி கீழே விழுந்தார். காலில் பலத்த காயம். எனவே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்தவர்கள் பத்தாயிரம் மருத்துவக் கட்டணமாக விதித்து, ஒருமாத காலம் எங்கேயும் நடக்கக்கூடாது” என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். அப்பொழுது வயிற்றுவலிக்காரர், ‘பேசாமல் அந்த பத்தாயிரம் ரூபாயை கோவிலில் உண்டியிலில் போட்டிருந்தால், இப்படி நேர்ந்திருக்காதே’ என்று சொல்லி தன்னுடைய விதியை நொந்துகொண்டார்.

கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்குக் கொடுக்கமால், நாம் அபகரிப்பதால் விளையும் தீமை என்ன என்பதை இந்த நிகழ்வு நமக்கு அழகுபட எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலம் இருபத்தி ஒன்பதாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் ‘கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்குக் கொடுங்கள்’ என்று சிந்தனையை வழங்குகின்றது. எனவே நாம் அதனைக் குறித்து சற்று விரிவாக சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தி வாசகத்தில் பரிசேயர்கள் சிலர் இயேசுவை சோதிக்கும் நோக்குடன், ‘சீசருக்கு வரிசெலுத்துவது முறையா? இல்லையா? என்று கேட்கின்றார்கள். இயேசு சீசருக்கு வரிசெலுத்தவேண்டும் என்று சொன்னால், சமயப்பற்றுள்ள யூதர்களை இயேசுவுக்கு எதிராகத் தூண்டிவிடலாம் என்பது அவர்களுடைய நோக்கமாக இருந்தது. ஏனென்றால் யூதர்கள் உரோமையர்களுக்கு அடிமைகளாக இருந்தார்கள். அவர்கள் உரோமையரின் ஆட்சியை எதிர்த்தார்கள். இந்தப் பின்னணில் இயேசு, சீசருக்கு வரி செலுத்தவேண்டும் என்று சொன்னால், யூதர்களின் எதிர்ப்பை இயேசு சந்திப்பார் என்று நினைத்தார்கள். அதேநேரத்தில் இயேசு, ‘சீசருக்கு வரிசெலுத்தக்கூடாது’ என்று சொன்னால் உரோமை அரசாங்கத்தை இயேசுவுக்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற உள்நோக்கத்தில் இயேசுவிடம் அவர்கள் இப்படிப்பட்ட ஒரு குதர்க்கமான கேள்வியைக் கேட்கிறார்கள். இயேசு அவர்களுடைய உட்நோக்கத்தை அறிந்துகொண்டவராய், நாணயம் ஒன்றைக் கேட்டுவாங்கி, பின்னர் அதில் பொறிக்கப்பட்ட உருவத்தை யாரெனக் கேட்டு, “சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள்” என்கிறார்.

பரிசேயர்களின் கேள்விக்கு இயேசு கொடுத்த பதில் நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது. இயேசு ‘கடவுளுக்கு உரியதை கடவுளுக்குக் கொடுங்கள்’ என்கிறார். இதில் நிறைய உண்மைகள் இருக்கின்றது. ‘கடவுளுக்கு உரியது’ என்று சொன்னால், இந்த உலகத்தில் இருக்கின்ற படைப்புகள், அதில் வாழும் உயிரினங்கள், மனிதர்கள் அவர்கள் கொண்டிருக்கின்ற அதிகாரம் அனைத்தும் அவருக்குச் சொந்தம். காரணம் அவரால்தான் அனைத்தும் உண்டாயின. அவரால் அன்றி வேறுஎதுவும் உண்டாகவில்லை. அப்படியிருக்கும்போது மனிதருக்கு என்று எதுவுமே சொந்தமில்லை. எனவே இயேசு கடவுளுக்கு உரியதை கடவுளுக்குக் கொடுங்கள் என்று சொல்லியதன் வழியாக சீசரே கடவுளுக்குச் சொந்தம் என்று அவர்களுடைய அதிகாரத்திற்கே ஒரு குட்டு வைக்கிறார்.

எல்லாமே கடவுளுக்குச் சொந்தம் என்னும்போது நாமெல்லாம் யார் என்று சிந்தித்துப் பார்ப்பது நமது கடமையாகும். தூய பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “சகோதர சகோதரிகளே! நீங்கள் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள்’ என்கிறார். ஆம், நாம் ஒவ்வொருவருமே கடவுளுடைய பணியை செய்ய தேர்ந்துகொள்ளப்பட்ட பணியாளர்கள் – கருவிகள். அவ்வளவுதான். எனவே நாம் நம்முடைய பணியைச் செய்யாமல், கடவுள் நமக்கு என்ன பணியைக் கொடுத்திருக்கிறாரோ அந்தப் பணியை அவருடைய விருப்பத்தின்படி முழுமையாகச் செய்வதுதான் கடவுளுடைய விருப்பமாகும். இங்கே நான் பெரியவன், அதிகாரம் படைத்தவன், பணக்காரன் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனென்றால் எல்லாமே கடவுள் கொடுத்திருக்கும்போது நாம் அதில் பெருமைபாராட்டுவதற்கு இடமில்லை.

இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் சைரசு என்ற மன்னர் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டு, கடவுளது பணியை சிறப்பாக செய்கின்றார். சைரசு யூதரல்லாத ஒரு புறவினத்தார். இருந்தாலும்கூட கடவுள் அவரைத் தன்னுடைய கருவியாகத் தேர்ந்துகொண்டு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்களை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு கூட்டிப்போக உதவுகிறார். ஆகவே நாம் யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட பதவி, பொறுப்புகளில் இருந்தாலும் எல்லாமே இறைவன் கொடுத்தது, நாம் அவருடைய கருவிகள் என்ற மனநிலையோடு நம்மையே முழுமையாக கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, அவருக்கு உகந்த வழியில் நடக்கவேண்டும். அதைவிட்டு நான் பெரியவன், அதிகாரம் படைத்தவன் என்ற ஆணவத்தோடு வாழ்ந்தோம் என்றால் நாம் கடவுளைப் பழிக்கிறோம் என்று அர்த்தமாகும்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் (1890- 1964) அமரிக்கா நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் ட்விட் ஈசன்ஹோவேர் (Dwight Eisenhower) என்பவர். அவர்மீது பல்வேறு விதமான விமர்சனக் கருத்துகள் விழுந்தன. குறிப்பாக ‘சரியாகப் பேசத் தெரியாதவர், மக்களை நன்றாக வழிநடத்தத் தெரியாதவர்’ என்ற விமர்சனங்கள் எல்லாம் விழுந்தன. அவற்றை எல்லாம் அவர் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்தார்.

ஒருநாள் மக்கள் அதிகமாகத் திரண்டிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசத் தொடங்கினார் “அன்பான மக்களே உங்களிடத்தில் நான் என்னுடைய சிறுவயதில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். அப்போது நான் என்னுடைய பள்ளிப்படிப்பை படித்துக்கொண்டிருந்தேன். எங்களுடைய குடும்பம் விவசாயம் குடும்பம்.

ஒருநாள் என்னுடைய தந்தையானவர் மாடு பிடிப்பதற்காக பக்கத்து ஊரில் இருந்த ஒரு விவசாயிடம் என்னை கூட்டிக்கொண்டு போனார். அந்த விவசாயி பார்ப்பதற்கு மிகவும் பாமரர் போன்று இருந்தார். அவரிடத்தில் என்னுடைய தந்தையானார் அருகே இருந்த ஒருமாட்டிச் சுட்டிக்காட்டி, “இந்த மாடு எந்த சாதியினம்?” என்று கேட்டார். அதற்கு அவர், “தெரியாது” என்று பதிலளித்தார். அதன்பிறகு என்னுடைய தந்தை அவரிடம், “இந்த மாடு ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு இலாபம் தரும்?” என்று கேட்டார். அதற்கும் அவர் தெரியாது என்று பதிலளித்தார். தந்தையானவர் மேலும் சில கேள்விகளை அவரிடத்தில் கேட்டார். அவர் எதற்கும் பதில் சொன்னதாகத் தெரியவில்லை. இறுதியாக அந்த விவசாயி என்னுடைய தந்தையைப் பார்த்துச் சொன்னார், “ஐயா! நீங்கள் கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை, ஆனால் ஒன்றுமட்டும் தெரியும், இந்த மாடு தன்னிடம் இருக்கும் எல்லா பாலையும் எனக்குக் கொடுத்துவிடும்” என்றார். இதைக் கேட்ட என்னுடைய தந்தையும், நாமும் ஆச்சரியப்பட்டு நின்றோம்.

இந்த நிகழ்ச்சியைச் சொல்லிவிட்டு ட்விட் தொடர்ந்தார், “அன்பான மக்களே, நீங்கள் எனக்கு பேசத் தெரிவில்லை, பழகத் தெரியவில்லை என்று சொல்லலாம். அது உண்மையாகும் கூட இருக்கலாம். ஆனால் நான் அந்த மாட்டினைப் போன்று என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும், ஏன் என்னையே முழுவதும் இந்த நாட்டிற்காக ஒப்படைத்து, இந்த நாடு சிறப்பாக வளர உழைப்பேன்” என்றார். இதைக் கேட்டு மக்கள் கூட்டம் கைகளைத் தட்டி ஆர்பரித்தது. ட்விட் தான் சொன்னது போன்று தன்னையே நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக முழுவதும் கையளித்தார். அதனால்தான் அமெரிக்காவை ஆண்ட அதிபர்களுள் ட்விட்டும் சிறந்த ஓர் அதிபர் என்று கருதப்படுகின்றார்.

ஆம், ஒவ்வொருவரும் நம்மையே இறைப்பணிக்காக, மக்கள் பணிக்காக முழுவதும் கையளிக்கவேண்டும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, எல்லாமே இறைவனுக்கு சொந்தம், நாம் அனைவரும் அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட கருவிகள் என்ற மனநிலையோடு வாழ்வோம். அப்படி வாழும்போது நம்மையே முற்றிலுமாக இறைவனுடைய கைகளில் கையளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

Friday 13 October 2017

பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு
எசாயா 25:6-10. பிலி 4:12-14, 19-20; மத் 22:1-14


மறையுரை மொட்டுக்கள்-அருள்பணி Y இருதயராஜ்


கர்த்தர் கற்பித்த செபத்தை இரண்டு விதமாகச் சொல்ல உங்களுக்குத் தெரியுமா? சாதாரண சாப்பாடு சாப்பிட்டால், "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்" என்றும் ஆனால் விருந்து சாப்பிட்டால், "எங்கள் இன்றைய உணவை அனுதினமும் அளித்தருளும்" என்றும் சொல்ல வேண்டும் பொதுவாக அனைவருமே விருந்துண்டு மகிழ்வதை விரும்புகின்றனர்.

இன்றைய அருள்வாக்கு வழிபாடு இறைவன் நமக்கு அளிக்கும் விருந்தினைப் பற்றிக் கூறுகிறது. இன்றைய முதல் வாசகம் கூறுகிறது "ஆண்டவர் இந்த மலையில் (சீயோன் மலையில்) மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருத்தை ஏற்பாடு செய்வார்" (எசா 25:8) இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது "என் எதிரிகள் காண நீர் எனக்கு விருந்தைத் தயாரித்துள்ளீர்" (திபா 23:5). இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து விண்ணரசை திருமண விருந்திற்கும் நம்மை மணமகனுக்கும் ஒப்பிடுகிறார். கடவுள் நமக்குத் தரும் விருந்து மீட்பின் விருந்து.

இன்றைய நற்செய்தியில் அரசர் தமது மகனுடைய திருமண விருத்தில் கலந்து கொள்ளும்படி பலருக்கு அழைப்பு விடுக்கிறார். ஆனால் அழைக்கப்பட்டவர்களோ பல்வேறு சாக்குப்போக்குகளைக் கூறித் திருமண விருந்தைப் புறக்கணிக்கின்றனர். விருந்துக்கு வராததற்கு அவர்கள் கூறும் காரணங்கள்: "நான் என் வயலுக்குப் போக வேண்டும் நான் வியாபாரம் செய்ய வேண்டும் நான் தேனிலவுக்குச் செல்ல வேண்டும்."

ஒவ்வொரு ஞாயிறும் திருச்சபை நம்மைச் செம்மறியின் திருவிருந்துக்கு நற்கருணைக் கொண்டாட்டத்திற்கு அழைக்கின்றது. ஆனால் அதில் பங்கேற்க நமக்கு நேரமில்லை. அதற்கு நாம் 1008 சாக்குப் போக்குகள் சொல்லுகிறோம். பொதுவாக மக்கள் கூறும் காரணங்கள் "விருந்தாளிகள் வந்துள்ளனர் மழை பெய்கிறது உடம்புக்கு முடியவில்லை; புதுப்படம் பார்க்க வேண்டும் கிரிக்கெட் விளையாட்டுப் பார்க்க வேண்டும் தேர்வுக்குப் படிக்க வேண்டும்; திருப்பலி விறுவிறுப்பாக இல்லை; மறையுரை தூக்க மாத்திரை."

நாம் பல காரியங்களில் பரபரப்பாகச் செயல்படுகிறோம். ஆனால் தேவையான ஒன்றை மட்டும் (லூக் 10:41-42) மறந்து விடுகிறோம்.  "மனிதர் உலக முழுவதையும் ஆதயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?" (மத் 18:26) என்ற ஆண்டவரின் அருள்வாக்கைப் புறக்கணிக்கிறோம். மீட்பின் பயனை நாம் பெறாவிடில் பிறந்ததால் எப்பயனும் இல்லை என்பதையும் மறந்து விடுகிறோம்.

ஒருவர் கடற்கரையில் மணிக்கணக்காக நின்று கொண்டிருந்தார். ஏன்? கடல் அலைகள் ஓய்ந்தபின் கடலில் குளிக்கக் காத்துக் கொண்டிருந்தார். கடல் அலைகள் ஓய்வது எப்போது? அவர் குளிப்பது எப்போது? அலைகள் ஓய்வதில்லை. அவ்வாறே நமது வேலைகளும் கவலைகளும் ஓய்ந்தபின் கடவுளை நினைப்பது ஒருபோதும் நடக்காத காரியம். எனவே காலம் உள்ளபோதே நாம் ஆன்ம காரியங்களில் அக்கறை செலுத்த வேண்டும்.

திருமணத்திற்கு வந்தால் மட்டும் போதாது திருமண உடை அணிந்திருக்க வேண்டும். நாம் திருமுழுக்குப் பெற்றபோது நமது புதுப் பிறப்பின் அடையாளமாக நமக்கு வெண்ணிற ஆடை அளிக்கப்பட்டது. விண்ணுலகில் மீட்படைந்தவர் வெண்ணிற ஆடை அணிந்திருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது (திவெ34, 4:4)

பெண்கள் விதவிதமாகப் புடவை அணிய விரும்புகின்றனர் "முன்பெல்லாம் பெண்களுக்கு இடையே இல்லாதது போன்று இருந்தது. ஆனால் இப்பொழுது அவர்களுக்கு உடையே இல்லாதது போலிருக்கிறது" என்று ஆதங்கப்படுகிறார் ஒருவர் பாகவதற்கும் சினிமா நடிகைக்கும் உள்ள வேறுபாடு என்ன? "பாகவதர் அங்கவஸ்திரம் அணிந்தள்ளார். சினிமா நடிகையோ அங்கங்கே வஸ்திரம் அணிந்திருக்கிறார்" என்று கடிக்கின்றார் மற்றொருவர். நாம் அணிய வேண்டிய ஆடை என்ன? "அன்பை ஆடையாக அணிந்து கொள்ளுங்கள்" (கொலோ 3:14) என்று அறிவுறுத்துகின்றார் புனித பவுல் அகத்தில் அன்பு இல்லாதவர்கள் அந்த அன்பை நற்செயல்கள் வழியாக வெளிப்படுத்தாதவர்கள் நற்கருனைத் திருவிருந்தில் பங்கேற்கத தகுதியற்றவர்கள். அன்பில்லாதவர்கள் வெறும் சதைப் பிண்டங்கள் என்று கடிந்துரைக்கிறார் வள்ளுவர்.

அன்பின் வழியாது உயர்நிலை அஃது இலார்க்கு
என்புதோல் போர்த்த உடற்பு (குறள் 80)

இம்மை வாழ்வுக்கு உணவு தேவை. ஆனால் உணவுக்கு நாம் அடிமைகள் அல்ல. இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகிறார் "வயிறார உண்னவோ பட்டினி கிடக்கவோ நான் பயிற்சி பெற்றிருக்கிறேன்" (பிலி 4:12). மண்ணக உணவைவிட விண்ணக உணவு நமக்குத் தேவை. கிறிஸ்து நம்முடன் உண்ண விரும்புகிறார் "இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன்.

யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவர்கள்" (திவெ 3: 20) கிறிஸ்து நம் உள்ளக் கதவைத் தட்டும்போது கதவைத் திறப்போமா? அல்லது தட்டிக் கழிப்போமா?

"செம்மறியின் திருமண விருந்துக்கு
அழைக்கப்பெற்றோ பெறுபெற்றோர்" (திவெ 19:9)



எல்லாம் தயாராய் உள்ளது!


அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை

மேற்கத்திய நாடுகளில் உள்ள உணவகங்களுக்கு அல்லது நம் நகரங்களில் உள்ள நட்சத்திர அந்தஸ்து உணவகங்களுக்குள் செல்லும்போது, யாரும் உள்ளே இல்லை என்றாலும், நாம்தான் முதல் விருந்தினர்கள் என்றாலும், எல்லா மேசைகளிலும் நேர்த்தியாக விரிக்கப்பட்ட மேசைவிரிப்பு, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நாப்கின், ஸ்பூன், ஃபோக், கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி டம்ளர் ஆகிய அனைத்தும் நம்மிடம் ஏதோ பேசுவதுபோல இருக்கும். 'வா...என்னருகில் வா...இது எல்லாம் உனக்குத்தான்!' என்று தன்னையே விரித்துக்கொடுப்பது போல இருக்கும்.

கல்யாண வீடுகளுக்கோ, விஷேச நிகழ்வுகளுக்கோ செல்வது நமக்குப் பிடித்திருக்கிறது. ஏன்? ஒரு காரணம் என்னவென்றால், திருமண தம்பதியரை மேல்மாடியில் வாழ்த்திவிட்டு, அப்படியே கீழ்தளத்திற்குச் சென்றோமென்றால், 'வாங்க, வாங்க' என அழைக்க ஒருவர் நிற்பார். 'இந்தா வாப்பா...இங்க ஒரு இலையைப் போடு...உக்காருங்க மேடம்...டேய்...தண்ணி கொண்டு வா...சாதமா? குஸ்காவா? பிரியாணியா? ... முதல்ல ஸ்வீட் வைப்பா...சாம்பார்...ரசம்...மோர்...பாயாசம்...குளோப் ஜாமுன்...பீடா...கேக்...பழம்' என வரிசை நீண்டுகொண்டே போகும். சாப்பிட்டு முடித்தவுடன் அப்படியே கொஞ்சம் எட்டி பார்த்தால் தூரத்தில் கைகழுவும் இடம் தெரியும். ஆக, விருந்தில் நாம் செய்யும் அதிக பட்ச வேலை கைகழுவுவது மட்டும்தான். மற்ற எல்லா வேலைகளையும் மற்றவர்கள் நமக்காக செய்துவிடுகிறார்கள். நம்ம வீட்டுல மேலே உள்ள எல்லா அயிட்டங்களையும் சமைக்க வேண்டுமென்றால் எவ்வளவு நேரம் ஆகும்?

அ. விருந்தில் நமக்கு எல்லாம் தயார்நிலையில் இருக்கிறது.
ஆ. விருந்தில் நம்மை அழைக்க, ஏற்றுக்கொள்ள ஒருவர் காத்திருக்கிறார்.
இ. விருந்தில் பங்கேற்க நமக்கு உழைப்பேதும் தேவையில்லை. அது நமக்கு மற்றவர்கள் கொடுக்கும் முழுமையான பரிசு.

இந்தக் காரணங்களுக்காக விருந்தை நமக்குப் பிடிக்கிறது.

இப்படி தயார்நிலையில் உள்ள விருந்து பற்றித்தான் அல்லது விருந்துக்கான தயார்நிலை பற்றித்தான் இன்றைய இறைவாக்குவழிபாடு நம்மிடம் பேசுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசாயா 25:6-10) எசாயா இறைவாக்கினர் மெசியாவின் விருந்து அல்லது சீயோன் மலையில் ஆண்டவர் படைக்கும் விருந்து பற்றி இறைவாக்குரைக்கின்றார். விருந்தின் பின்புலம் பாபிலோனிய அடிமைத்தனம். பசி, வறுமை, பட்டினி, நோய் என்று அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்த மக்களுக்கு பண்டம், பழரசம், பானம், இறைச்சி, திராட்சைரசம் என உணவு பரிமாறுகிறார் ஆண்டவராகிய கடவுள்.

விருந்தில் தயார்நிலையில் இருக்கும் பண்டங்கள் நான்கு:

அ. சுவைமிக்க பண்டம் - ரொட்டி
ஆ. பழரச பானம்
இ. கொழுப்பான இறைச்சி துண்டு
ஈ. வடிகட்டி பக்குவப்படுத்திய திராட்சை இரசம்

இந்த நான்கு உணவுப்பொருள்களையும் தயாரிக்க அதிக காலம் எடுக்கும். இந்த நான்கு பொருள்களும் அவசரத்தில் தயாரிக்கக்கூடியவை அல்ல. ஆக, இவற்றைத் தயாரிக்கின்ற காலம் முழுவதும் விருந்து அளிப்பவர், விருந்திற்கு வருபவரையும், விருந்தையும் நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆக, 'எங்களைக் கடவுள் மறந்துவிட்டார்' என்ற இஸ்ரயேல் மக்களின் புலம்பலை ஆண்டவராகிய கடவுள் மாற்றி, 'உங்களை நான் என்நேரமும் நினைவில் கொண்டுள்ளேன்' எனச் சொல்கின்றார். மேலும், இந்த உணவுப் பொருள்கள் டயட்டரி உணவுப்பொருள்கள் அல்லது பத்தியச் சாப்பாடு கிடையாது. மாறாக, இது விருந்து உணவு. இரசிக்கவும், ருசிக்கவும் பட வேண்டியவை.

இவைகள் உணவுப்பொருள்கள் என்றால், மற்றொரு பக்கம், ஆண்டவராகிய கடவுள்

அ. முகத்தை மூடியுள்ள முக்காட்டை அகற்றிவிடுவார் - துன்பத் துகிலைத் தூக்கி எறிவார்
ஆ. சாவை ஒழித்துவிடுவார் - கண்ணீரைத் துடைத்துவிடுவார் என்கிறார்.

வீட்டில் இறந்த அல்லது நோயுற்ற ஒருவரை வைத்துக்கொண்டு எவரும் விருந்துக்கு வருவதில்லை. அப்படி வந்தாலும் விருந்து எதிலும் அவர்களின் மனம் பதிவதில்லை. இப்படி தனது விருந்து அமைந்துவிடக்கூடாது என்பதற்காக ஆண்டவராகிய கடவுள் முகத்தை மூடியுள்ள துன்பத்தின் முக்காட்டை தூக்கி எறிகிறார். சாவை ஒழித்துவிடுகிறார். தங்கள் உள்ளத்தில் துக்கம் கொண்டாடுபவர்கள் தங்களின் வெளி அடையாளமாக முகத்தில் முக்காடிட்டுக் காட்டுவர். இப்படிப்பட்டவர்கள் இனி சோகமும், துன்பமும் கொண்டிருக்கத் தேவையில்லை என்று சொல்கின்றார் இறைவாக்கினர்.

இவ்வாறாக, இஸ்ரயேல் மக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பும்போது எல்லாம் தயார்நிலையில் உள்ளது என்கிறார் இறைவாக்கினர் எசாயா.

நாடு திரும்பியவர்களுக்கு ஆண்டவர் வைக்கும் விருந்திலிருந்து நாம் இன்றைய நற்செய்தி வாசகம் காட்டும் திருமண விருந்து எடுத்துக்காட்டிற்குள் செல்வோம் (காண். மத் 22:1-14).

விண்ணரசு பற்றிய மேலும் ஒரு எடுத்துக்காட்டைத் தருகின்றார் இயேசு: திருமண விருந்து. மத்தேயு நற்செய்தியில் நாம் வாசிக்கும் உவமைக்கும், லூக்கா நற்செய்தியில் வாசிக்கும் உவமைக்கும் (லூக்கா 14:15-24) நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இரண்டின் பின்புலங்களும் வேறு. இந்த உவமையை புரிந்து கொள்ள யூதர்களின் திருமண நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். முந்தின நாள் நிச்சயதார்த்தம் வைத்து அடுத்த நாள் காலையில் தாலி கட்டி, அவசர அவசரமாய் வந்திறங்கும் கேட்டரிங் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, 'சரி நல்லா இருங்க!' என்று வாழ்த்திவிட்டு ஓடும் நம்ம ஊர் திருமணம் போல அல்ல அது. திருமண நிகழ்வு ஏறக்குறைய ஆறுமாதங்கள் நடக்கக் கூடிய நிகழ்வு. பெற்றோர் பெண் பார்த்தல், பையனும், பெண்ணும் ஒருவருக்கொருவர் விருப்பம் தெரிவித்தில், நிச்சயதார்த்தம் என முதல் படலம் நடந்தேறும். பையன் தன் வீடு திரும்ப, பெண்ணும் அவள் வீடு திரும்புவாள். முதல் படலம் நடந்தேறினாலே திருமணம் நடந்து விட்டதாகத்தான் அர்த்தம். பையன் தன் வீட்டில் இருக்கும் போது தந்தை தன் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு விருந்தளிப்பது மரபு. நம் கதையின் மகன் இளவரசன். தடபுடலாக விருந்தை ஏற்பாடு செய்கின்றார் தந்தை. விருந்து தயாராகிவிட்டதும் 'எல்லாரும் வந்தாச்சா!' என்று பார்க்கின்றார். யாரையும் காணோம்! முதல் அவமானம்! 'என்ன ஆயிற்று' என்று பார்க்க ஆள் அனுப்புகிறார். அழைக்கப்பட்டவர்கள் வர முடியவில்லை என்று சொல்வதை விட, 'வர விருப்பம் இல்லை!' என்றே சொல்கிறார்கள். உவமையை வாசிக்கும் போதே அவர்கள் மேல் நமக்கு கோபம் வருகிறது. அரசன் கூப்பிடுகிறான். அங்கே போனால் நன்றாக இருக்குமே. அரசனை வைத்து நாளைப்பின்னே நாலு காரியம் சாதிக்கலமே. பாவம் பிழைக்கத் தெரியாதவர்கள்.

பின் அழைப்பு பொதுவாக்கப்படுகிறது. வருவோர், போவோர், நல்லவர், கெட்டவர் என அனைவரும் வருகின்றனர். மண்டபம் நிறைந்து விட்டது. விருந்து பரிமாறத் தயாராகி விட்டது. அரசன் வந்திருந்தோரைப் பார்க்க வருகிறான். 'திருமண ஆடை அணியாத ஒருவன்' அங்கே அமர்ந்திருப்பது அவரின் கண்களில் படுகிறது. 'வெளியே எறியுங்கள் இவனை!' - இது அரச கட்டளை. இந்த இடத்தில் அரசன் மேல் தான் நமக்குக் கோபம் வரகிறது! 'நீ கூப்பிட்டவங்க வரலை. சரி நாங்களாவது வந்தோமே என்று சும்மாயிருப்பதை விட்டு விட்டு, சட்டை ஏன் போடலை! வேட்டி ஏன் கட்டலை?' என்று கேட்டிருப்பார் அந்த திருமண ஆடை இல்லாதவர். இங்கே ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். 'திருமண ஆடை' என்பது திருமண விருந்திற்கு வரும் அனைவருக்கும் விருந்து வைப்பவர் கொடுக்கும் பரிசு. மண்டபத்திற்குள் நுழையும் போது அவர்களின் உடல் அளவிற்கேற்ப உடைகள் கொடுக்கப்படும். நம்ம ஊரில் திருமணம் முடிந்து, மொய் எழுதும் போது கொடுக்கும் 'தாம்பூலப் பை' போல என வைத்துக் கொள்ளலாம். அப்படிப் பரிசாகக் கொடுக்கப்பட்ட ஆடையைத் தான் அந்த நபர் அணிய மறுத்திருக்கிறார். எதற்காக மறுத்தார் என்பதற்கு உவமையில் பதில் இல்லை. 'அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும்' என அவசர அவசரமாக உவமை முடிகிறது. இந்த வார்த்தைகளை வைத்துத்தான் கொஞ்சப் பேர் நரகம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இயேசுவின் உவமையின் நோக்கம் நரகத்தைப் பற்றியதோ, உத்தரிக்கிற நிலையைப் பற்றியதோ அல்ல. சரியா?

இந்த உவமையை 'தயார்நிலை' என்ற வார்த்தையை வைத்து மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்:

அ. விருந்து தயாராக இருக்கிறது.
ஆ. அழைக்கப்பட்டவர்கள் தயார்நிலையில் இல்லை.
இ. வந்திருந்தவர்கள் தயார்நிலையில் இல்லை.

இதில் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் வேறு. வந்திருந்தவர்கள் வேறு. அழைக்கப்பட்டவர்கள் விருந்திற்குச் செல்ல தங்களையே தயாரிப்பதற்குப் பதிலாக என்ன காரணம் சொல்லி தப்பிக்கலாம் என்று காரணம் தேடுகின்றனர். மேலாண்மையியலில் இப்படிச் சொல்வார்கள்: 'வெற்றியாளர்கள் காரியங்களைச் செய்கிறார்கள். தோல்வியாளர்கள் காரியங்களைச் செய்யாமல் இருக்கக் காரணங்களைக் கண்டுபிடிக்கிறார்கள்.' நம்ம கதை மாந்தர்களில் (அ) ஒருவர் தம் வயலுக்குச் செல்கின்றார், (ஆ) வேறு ஒருவர் தம் கடைக்குச் செல்கிறார், (இ) மற்றவர்களோ அவர்களின் பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்துகின்றனர். என்ன கொடுமை இது?

அதாவது, தாங்கள் அரசர்கள் போல நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இருந்தும் அந்த வாய்ப்பைத் தட்டிவிடுகின்றனர் இவர்கள். அரசனைவிட வயல் பெரிதா? அல்லது அரசனைவிட கடை பெரிதா?

இவர்கள் சாக்குப் போக்குச் சொல்லி வர மறுத்ததால் அழைப்பு மற்றவர்களுக்குத் திறந்துவிடப்படுகிறது. விருந்திற்கு இப்போது அழைக்கப்படுபவர்கள் யாரென்றால் கண்களில் தட்டுப்படுவோர். இப்படி வந்தவர்கள் அனைவருக்கும் திருமண உடை தரப்படுகிறது. அதையும் அணியத் தயாராக இல்லாமல் இருக்கிறார் ஒருவர். அவர் விருந்திலிருந்து அகற்றப்படுகின்றார். ஆக, தயார்நிலைக்கான வாய்ப்பு இருந்தும் இவர் தட்டிக் கழிக்கின்றார்.

ஆக, இந்த இடத்தில் வாசகர்களாகிய நாம் இரண்டு கேள்விகள் கேட்க வேண்டி உள்ளது:

அ. கடவுளின் அழைப்பு எனக்கு வரும்போது அதை ஏற்க நான் தயார்நிலையில் இருக்கின்றேனா? அல்லது அந்த அழைப்பைத் தட்டிக் கழிக்கின்றேனா?
ஆ. அவர் என்னை அழைக்கும்போது அவரால் தெரிந்துகொள்ளப்பட நான் என்ன முயற்சிகள் செய்திருக்கிறேன்? என் ஆடையைக் கழற்ற நான் ஏன் மறுக்கிறேன்?

இவ்வாறாக இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் விருந்து பற்றி இருக்க, விருந்து மட்டுமே வாழ்க்கை இல்லை என வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தை இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 4:12-14, 19-20) விரித்துக்காட்டுகிறார் பவுல்: 'எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும். வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ, குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்' என மார்தட்டுகிறார் பவுல். இந்த பயிற்சி அல்லது தயார்நிலை வர பவுலுக்கு உந்துசக்தியாக இருப்பது கிறிஸ்துவே. ஆகையால்தான் அவர் தொடர்ந்து, 'எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு' என்கிறார்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு முன்வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் ஐந்து:

அ.முதன்மைப்படுத்துதல். 'மோரியுடன் செவ்வாய்க்கிழமைகள்' என்ற திரைப்படத்தில் ஒரு இடத்தில் மோரி கதாநாயகனைப் பார்த்து இப்படிச் சொல்வார்: 'நம் தோள்பட்டையில் ஒரு குருவி அமர்ந்திருப்பது போல நாம் நினைத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குருவியிடம் நாம் தினமும் ஒன்று கேட்க வேண்டும். என் அருமைக் குருவியே! இந்த நாள்தான் என் வாழ்வின் இறுதி நாளா? அப்படியென்றால் என் வாழ்வின் முக்கியமானவற்றை நான் இன்று செய்கிறேனா?' விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் கொடுக்கும் காரணங்கள் விநோதமாக இருக்கின்றன: ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன், வயல் வாங்கியிருக்கிறேன், புதிதாக திருமணம் ஆகியிருக்கிறது. கடைக்குப் போகிறேன். ஆகையால் வர முடியாது. அரசன் நினைத்தால் இந்த மூன்றையும் அழித்து விடலாம். நம் வாழ்வில் பல நேரங்களில் நாம் கண்ணீர்விடக் காரணம் என்ன? நாம் முதன்மைப்படுத்துதலில் தவறுவதுதான். அன்பு, ஆன்மீகம், கரிசணை, பகிர்வு, விழிப்பு நிலை - இவைதான் நம் வாழ்வில் என்றும் நம் உடன் இருப்பவை. இவைகளை விட்டுவிட்டு மற்றவைகளை நாம் தேடும்போது நாம் அரைத்தூக்கத்தில் இருப்பது போலத்தான் இருக்கிறோம். நம்மிடம் 'எப்படி இருக்கிறீர்கள்?' என்று யாராவது கேட்டால் உடனே பதில் சொல்கின்றோம். அதே நபர் நம்மிடம் 'ஏன் இருக்கிறீர்கள்?' என்று கேட்டால் நம் பதில் என்னவாக இருக்கும். பதிலுக்குப் பதில் நமக்குக் கோபம் தானே வரும்!

ஆ. எல்லாரும் வாருங்கள். தொடக்கத் திருச்சபையின் காலத்தில் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்த போது, நற்செய்தி புறவினத்தாருக்கு அறிவிக்கப்படுகிறது. யூதர்களே விருந்திற்கு வர மறுத்தவர்கள். புறவினத்தார்தான் மண்டபத்தில் இறுதியாக உணவருந்தியவர்கள். நற்செய்தி ஏற்றுக்கொள்ளப்படாதபோது அது மற்றவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. வாழ்வின் எதார்த்தமும் இதுதான். கடவுளின் அன்பையும், மற்றவர்களின் அன்பையும் நாம் ஏற்றுக்கொள்ளாதபோது அது மற்றவர்களுக்குத் திருப்பிவிடப்படுகின்றது. வாழ்வில் சிலவற்றை நாம் இழந்துவிட்டால் அதை நம்மால் திரும்பவும் பெற முடிவதேயில்லை. கண்ணீர் விட்டாலும், விழுந்து புரண்டாலும் சென்றது சென்றதுதான். ஆகையால் இருக்கும் போதே, இருக்கின்ற ஒன்றை, இருப்பது போல ஏற்றுக்கொண்டு அனுபவிக்கும் மனப்பக்குவம் அவசியம்.

இ. அழைக்கப்பட்டவர்களோ பலர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர். திருமண ஆடை என்பது இயேசு கொண்டு வந்த மீட்பு. திருமுழுக்கு வழியாக நாம் கிறித்தவர்களாக மாறினால் மட்டும் விருந்தில் பங்கேற்றுவிடலாம் என்று சொல்லி விட முடியாது. இறைவன் தரும் மீட்பு என்னும் ஆடையை நாம் அணிந்து கொள்ள வேண்டும். கடவுளின் பரிசாக வரும் அந்த ஆடையை நாம் மாசுபடாமல் வைத்திருப்பதும் அவசியம். அருட்பணியாளராக திருநிலைப்படுத்தப்படும் போது அருட்பணியாளருக்குத் திருவுடை அணிவிக்கும் சடங்கு நடைபெறும். அந்தச் சடங்கின் அர்த்தம் இந்த உவமையின் பின்புலத்தில் இன்னும் ஆழமான அர்த்தத்தைத் தருகின்றது. இறைவனின் விருந்தை, நற்கருணைப் பலியை, கொண்டாடும் போதெல்லாம் அருட்பணியாளர் இதை அணிகிறார். உடல் இதை அணிந்து கொண்டாலும், உள்ளம் அணியவில்லையென்றால், திருமண விருந்தில் நமக்கு இடமில்லை தானே! 'நண்பா! உன் ஆடை எங்கே?' என்று ஒருநாள் அவர் நம்மைக் கேட்டுவிட்டால்...! விருந்திற்கு வந்திருந்த நபருக்கு புதிய திருமண உடை கிடைத்திருந்தாலும் தனது பழைய உடையைக் கழற்றுவதற்கு அவர் மறுக்கிறார். 'பழையதே போதும்!' என தன்னிலேயே தேங்கிக்கொள்கிறார். இன்று நான் கழற்ற மறுக்கும் ஆடை எது?

ஈ. விருந்து வையுங்கள். இன்று நாம் நமக்குத் தெரியாத முன்பின் ஒருவரோடு அமர்ந்து ஏதாவது ஒன்று சாப்பிடுவோம். நான் ரோமில் படித்துக்கொண்டிருந்தபோது அங்கே மக்கள் காலையிலேயே காஃபிக் கடையில் கூட்டமாக அமர்ந்திருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டதுண்டு. காஃபிக் கடையில் தங்கள் நண்பரைக் கண்டுவிட்டால் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லி அப்படியே அமர்ந்து கதைபேசும் நபர்களை அங்கே காணலாம். அங்கே அப்படி நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தாலும் வழியில் செல்லும் பிச்சைக்காரர்கள், அல்பேனிய நாட்டுச் சிறார்கள், சிறுமியர் அனைவருக்கும் யாராவது ஒருவர் காஃபி வாங்கிக் கொடுப்பார். இன்று நான் அப்படி முன்பின் தெரியாத ஒருவரோடு உணவருந்தவோ, ஒரு கப் காஃபி குடிக்கவோ தயாரா?

உ. சமநிலை மனநிலை. பசி - நிறைவு, விருந்து - வெறுமை, நிறைவு - குறைவு, வறுமை - வளமை என எல்லாவற்றையும் ஒரே மனநிலையில் எடுத்துக்கொள்கின்றார் பவுல். இந்த மனநிலையைத்தான் நாம் புறநானூற்றில், 'மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' (எண். 192) வாசிக்கின்றோம். பெரியவரும் சிறியவரும், வல்லவரும் வறியவரும், இருப்பவரும் இல்லாதவரும் ஒன்றே என்ற சமநிலை. தன்னையும், தன் விருப்பு வெறுப்புக்களையும் வென்ற ஞானிதான் இந்த மனநிலை பெற முடியும். இந்த மனநிலையை பவுல் பெற்றதால் அவர் ஞானியே.

இறுதியாக, தயார்நிலையில் இருக்கும் விருந்தில் பங்குகொள்ள நமக்குத் தேவை தயார்நிலை.

தயார்நிலையில் விருந்து உள்ளது. ஆனால் நான் தயார்நிலையில் இருக்கின்றேனா? மேலும்,

வாழ்க்கை விருந்தாய்ச் சுவைக்காதபோது என் தயார்நிலை என்ன?