Sunday, 30 December 2018

01 ஜனவரி 2019 புத்தாண்டு நாள் - அன்னை மரியாள் இறைவனின் தாய்

 இறைவனின் அன்னை பெருவிழா
புத்தாண்டு மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்

எண். 6:22-27
கலா . 4:4-7
லூக். 2:16-21


 
 

இன்று இறைவனின் தாயை நினைவுகூர்கின்றோம். தாய் என்ற சொல்லைக் கேட்டவுடன் நமது நினைவிற்கு வருவது அன்பு!

இதோ ஒரு தாயின் அன்பு எப்படிப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்ட ஓர் உண்மை நிகழ்ச்சி .

1980 - ஆம் ஆண்டு தென்கொரியாவிலுள்ள சியோல் என்னும் நகரிலே வீரத் தாயொருத்தி! அவள் பெயர் கிம் மிஸ். ஒரு மாடி வீட்டில் 13-வது மாடியில் அவள் குடியிருந்தாள். அவளுக்கு இரண்டு வயது குழந்தை ஒன்று.

ஒருநாள் அந்த வீட்டிலிருந்த காசோலை ஒன்று ஜன்னல் வழியாகக் கீழே விழுந்துவிட்டது. அதன் மதிப்பு ரூ.126. அதைக் கவனித்த கிம் மிஸ், தனது குழந்தையை வீட்டில் விட்டு விட்டுக் கீழே விழுந்த காசோலையை எடுப்பதற்காக மாடியிலிருந்து கீழே இறங்கினாள்.

கீழே கிடந்த காசோலையை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தாள். அங்கே அவள் காணக்கூடாத காட்சி ஒன்றைக் கண்டாள்.

வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எப்படியோ வீட்டைவிட்டு வெளியேறி, மதிலேறியது ! தவறியது. 13- வது மாடியிலிருந்து கீழே விழுந்தது. விழுந்து கொண்டிருந்த குழந்தையைத் தாய் பார்த்தாள்.

அபயக்குரல் எழுப்பி ஆட்களை அழைக்க அங்கே நேரமில்லை ! விழுந்த குழந்தைக்கு முன்னால் நின்று தனது இரண்டு கைகளையும் விரித்தாள். குழந்தை கைகளில் விழுந்தது. குழந்தைக்கு எந்த ஆபத்துமில்லை!

குழந்தை தன் மீது விழுந்தால் தனது நிலை என்னவாகும் என அந்தத் தாய் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை!

அவளுடைய இதயத்திலிருந்ததெல்லாம் அவள் குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான்! அவள் அன்பைக் கடவுள் தமது வல்லமையால் ஆசீர்வதித்தார். அவளது கைகள் தெய்வீகச் சக்தியைப் பெற்றன! குழந்தை காப்பாற்றப் பட்டது!

தாய் என்பதற்கு மறுபெயர் அன்பு; தாய் என்பதற்கு மறுபெயர் பரிவு; தாய் என்பதற்கு மறுபெயர் பாசம்; தாய் என்பதற்கு மறுபெயர் நேசம்; தாய் என்பதற்கு மறுபெயர் கருணை .

ஒரு மனிதன் வாழ்க்கையில் தேடி அலைவதெல்லாம் அன்பே! அந்த அன்பை அர்த்தமுள்ள முறையில் மனித குலத்திற்குத் தருபவள் தாய்! இதனால் தான் இயேசு தனது தாயையே நமக்குத் தாயாகக் கொடுக்க கல்வாரியில் முன் வந்தார்!

நமது உலகத் தாய்களுக்கு உள்ள அத்தனை நல்ல பண்புகளும் நமது தேவதாய்க்கு உண்டு. மேலும் மற்ற தாய்களிடம் நின்று நிலவும் பண்பைவிட மேலான பண்பு ஒன்று மரியிடம் உண்டு! அதுதான் அவளிடம் நின்று நிலவும் வல்லமை!

உலகப் பெண்களில் கடவுளுக்குத் தாயாகும் பெருமை மரியாவுக்கு மட்டுமே கிடைத்தது.

கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை இன்றைய மூன்று வாசகங்களும் நமக்குத் தெளிவாக்குகின்றன. அனைவருக்கும் ஆசி வழங்குபவர் கடவுள்; கருணை பொழிபவர் கடவுள் ; அமைதி தருபவர் கடவுள் (முதல் வாசகம்) நம்மை எல்லாத் துன்பங்களில் இருந்தும் மீட்கும் கடவுள் ; நம்மீது ஒளியைப் பொழியும் கடவுள் ; பிள்ளைகளாக்கும் உரிமையை அளிக்கும் கடவுள் (இரண்டாம் வாசகம்) மீட்பர் என்ற பெயர் கொண்ட கடவுள் (நற்செய்தி) - இவை யாவும் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை நமக்கு உணர்த்துகின்றன. கடவுளிடம், இறைமகன் இயேசுவிடம், மரியா கேட்டால், அவர் ஒருபோதும் அவள் கேட்பதை மறுக்கப் போவதில்லை (யோவா. 2:1-11). ஆகவே ஒரு வகையில் மரியாவால் ஆகாதது ஒன்றுமில்லை !

இதை நினைத்து இன்று நாம் பெருமகிழ்ச்சி அடைவோம். நமது விண்ணகத் தாயிடம் அன்பும் உண்டு, வல்லமையும் உண்டு. இதை மனதில் கொண்டு நமக்கு வேண்டிய வரங்களையெல்லாம் கன்னித்தாய் வழியாக இறைவனிடம் வேண்டிப் பெறுவோம்.


சன-1. மரியா இறைவனின் அன்னை


கடவுள் தேடிய பெண் : மரியா துறவி ஒருவருக்குக் கடவுளோடு பேசும் வரம் இருக்கின்றது என்று சொல்லி பலர் அவரிடம் சென்று ஆசி பெற்று வந்தனர்.
ஓர் இளைஞனுக்குத் துறவி கடவுளோடு பேசுவது உண்மையா என்பதை அறிந்து கொள்ள ஆசை! அந்த இளைஞன் துறவியைத் தேடி காட்டுக்குச் சென்றான்.
துறவியிடம், உங்களுக்குக் கடவுளோடு பேசும் வரம் இருப்பதாக எல்லாரும் சொல்கின்றார்கள். அது உண்மையா? என்றான்.

ஆம். கடவுளோடு பேசுகின்றேன், கடவுள் என்னோடு பேசுகின்றார் என்றார் துறவி.

அப்படியானால், நீங்கள் அடுத்த முறை அவரைப் பார்க்கும்போது, நான் செய்த பாவங்கள் என்னென்ன என்று கேட்டுச் சொல்லுங்கள் என்றான் இளைஞன்.
துறவி, சரி என்றார்.

மறுநாள் இளைஞன் துறவியிடம் சென்று, என்ன! கடவுளைச் சந்தித்தீர்களா? அவர் என்ன சொன்னார்? என்றான்.

அதற்கு அந்த முனிவர், சந்தித்தேன் மகனே! உன் பாவங்களைப் பற்றியும் கேட்டேன். அதற்குக் கடவுள், அந்த இளைஞனுடைய பாவங்களை எல்லாம் மன்னித்து மறந்துவிட்டேன். இப்போது அவனுடைய பாவங்கள் எதுவும் என் ஞாபகத்திலில்லை என்று சொல்லிவிட்டார் என்றார்.

அதைக் கேட்டு அந்த இளைஞன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

ஆம். நமது கடவுள் நமது பாவங்களை மன்னித்து, அவற்றை மறந்துவிடும் கடவுள்.

இப்படிப்பட்ட கடவுள் தமது நிபந்தனையற்ற ஆழமான அன்பை உலக மக்களுக்கு வெளிப்படுத்தத் திருவுளமானார்.

தமது திருவுளத்தை நிறைவேற்றிக் கொள்ள, மனிதனாகப் பிறந்து, மனிதர்களை நேருக்கு நேர் சந்தித்து அவர்கள் பாவங்களை மன்னித்து, மறந்து அவர்களை வளமுடன் வாழவைக்க, மக்களினத்தைக் காப்பாற்ற, அனைவர் மீதும் அருள்பொழிய, தம் திருமுகத்தை உலகின் பக்கம் திருப்ப (முதல் வாசகம்) தாயொருவர் தேவைப்பட்டார். அவரைக் கடவுள் தேடினார். தேடிய பெண் (இரண்டாம் வாசகம்) கிடைத்தார். அவர்தான் மரியா! மேலும் அறிவோம்:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).

பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.


 

வேண்டும் மூன்றுவித நம்பிக்கைகள்


இயேசு ஒருநாள் பேதுருவோடு பூமிக்கு வந்து உலகைச் சுற்றிப் பார்க்க விரும்பினார். இருவரும் புறப்பட்டனர். இறைமக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க ஆசை.

போகிற வழியில் எதிரே ஒரு குதிரைவண்டி மணலில் சிக்கிக் கொண்டதைப் பார்த்தனர். வண்டியை அப்படியே விட்டுவிட்டுப் பாதையோரத்தில் வண்டிக்காரன் முழந்தாளிட்டுச் செபித்துக் கொண்டிருந்தான்: “இறைவா, என் வண்டியை ஓடவிடு. நீ நினைத்தால் இந்த அற்புதத்தைச் செய்யலாம். உன்னால் முடியாதது உண்டா என்ன?" உருக்கமான அவன் செபத்தைக் கேட்டதுமே செப வேளையில் தூங்கியே பழக்கப்பட்ட பேதுருகூடச் சிலிர்த்துப் போனார். இயேசுவைப் பார்த்து "ஆண்டவரே, அவனுடைய செபம் உம் மனத்தைத் தொட வில்லையா? உதவி செய்யும்" என்று கெஞ்சினார். இயேசுவோ பேதுருவை முறைத்து அமைதியாக இரு' என்ற சொல்லிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்.

சிறிது தொலைவு சென்றதும் இன்னொரு குதிரை வண்டி தலைகீழாக உருண்டு கிடந்ததைக் கண்டனர். வண்டிக்காரனோ சொல்லக்கூடாத பொல்லாத வார்த்தைகளைச் சொல்லித் திட்டிக் கொண்டும் தெய்வ நிந்தனை செய்து கொண்டும் விழுந்து கிடந்த வண்டியை நிமிர்த்தப் பாடுபட்டுக் கொண்டிருந்தான். வேர்த்து விறுவிறுக்க அவன் உழைக்கும் உழைப்பெல்லாம் பயனற்றுப் போகிறதே என்று பேதுரு பரிதாபப்பட்டு “ஆண்டவரே, இவன் இப்படிப் பாடுபடுகிறானே, பயனளியும்" என்று மன்றாடினார். இரவு முழுவதும் உழைத்தும் எதுவும் கிடைக்காத நிலையில் விடியல் வேளையில் கரைமேல் நின்று கொண்டே வலைகிழிய மின்படச் செய்தவர் அல்லவா இயேசு என்ற நினைவு பேதுருவுக்கு வந்தது. “பேதுரு, பேசாமல் இருக்க மாட்டே” என்று இயேசு கடிந்ததும் வாயடங்கி நின்றார் பேதுரு.

கொஞ்சத்தூரம் போனதும் இன்னொரு குதிரை வண்டி சேற்றில் மாட்டிக் கொண்டதைப் பார்த்தனர். வண்டிக்காரனோ கடவுள் உதவி செய்வார் என்ற உறுதிப்பாட்டோடு 'இயேசுவே' என்று இறைவன் நாமத்தைத் துதித்துக் கொண்டு நுகத்தடியைப் பிடித்து அசைத்து இழுக்க முயன்று கொண்டிருந்தான். அதைக்கண்ட பேதுருவுக்கு இயேசுவிடம் உதவி கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் கேட்கும் துணிவில்லை. முந்தைய அனுபவங்களின் காரணமாக பேசவே பயந்தார். ஆனால் இயேசுவோ பேதுருவைப் பார்த்து “நீ அந்தச் சக்கரத்தைப் பிடி, நான் இந்தச் சக்கரத்தைப் பிடித்துக் கொள்கிறேன், இரண்டு பேரும் அவனோடு சேர்ந்து தள்ளுவோம்" என்றார். வண்டி நகர்ந்தது.

பேதுருவுக்கு ஒன்றுமே புரியவில்லை. மூன்று நிகழ்ச்சிகளிலும் இயேசு நடந்து கொண்ட முறை புதிராக இருந்தது. வியப்பாகவும் இருந்தது. விளக்கம் கேட்க விரும்பினார். தயங்கினார். அவரது கலக்கத்தைப் பார்த்த இயேசு விளக்கத் தொடங்கினார்.

"முயற்சி எதுவுமின்றி முதல் வண்டிக்காரன் செபித்துக் கொண்டிருந்தான். திண்ணையில் இருந்து கொண்டே தெய்வத்தை நினைப்பவனுக்கு நான் எப்போதும் படியளக்க விரும்புவதில்லை. இரண்டாவது வண்டிக்காரனோ தெய்வ சிந்தனை இன்றியே உழைத்ததனால் அவன் உழைப்பு வெறுமையைக் கண்டது. அவனன்றி அணுவை அசைக்க முயன்றவன் அவன். ஆனால் மூன்றாவது மனிதனோ தன்னம்பிக்கையோடும், தெய்வ நம்பிக்கையோடும் செயல்பட்டவன். தெய்வ நம்பிக்கையோடும் தன்னம்பிக்கையோடும் எவன் உழைக்கிறானோ அவனுக்கு வலிய தேடிச் சென்று உதவக் காத்திருக்கிறேன்”

கடவுளால் மட்டுமே முடியும் என்பது போல செபித்திடு மனிதனால் மட்டுமே முடியும் என்பது போல உழைத்திடு

வெற்றி உனதே! அத்துடன் நல்லது நடக்கும் என்ற பொது நம்பிக்கையை வளர்த்துக் கொள். இறைவா, நீயும் நானும் இணைந்து கையாள முடியாத எதுவும் எனக்கு இந்த ஆண்டில் நடக்கப் போவதில்லை என்பதை எனக்கு நினைவூட்டிக் கொண்டே இரும்!

ஆக, வாழ்க்கைக்கு வேண்டும் மூன்று நம்பிக்கைகள்:

தெய்வ நம்பிக்கை: கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்ற உணர்வு - மத்.19:26.
தன்னம்பிக்கை : எனக்கு உறுதியூட்டும் இறைவனருளால் என்னால் சாதிக்க இயலாதது எதுவுமில்லை என்ற உறுதி - பிலி.4:13.
பொது நம்பிக்கை : என்ன ஆனாலும் நல்லது நடக்கும் என்ற எண்ணம் -1 தெச.5:18

நம்புங்கள். செபியுங்கள். நல்லது நடக்கும். நம்பிக்கை என்பதே மனிதனுக்கு உயிரூட்டும் உயிர்ச்சத்து.

“ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களேயன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல என்கிறார் ஆண்டவர் (எரேமி.29:11).

புத்தாண்டில் மூன்று விதமான இறையாசீர் நம்மோடு இருக்க வேண்டுமென்று எண்ணிக்கை நூலாசிரியர் வாழ்த்துகிறார் (எண்.6:2426):
1. ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
2. ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன் மீது அருள் பொழிவாராக!
3. ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! இன்பமாயிருக்கப் போதுமான இனிமைகளும் உறுதியாயிருக்கப் போதுமான முயற்சிகளும் இதயத்துடன் இருக்கப் போதுமான துக்கங்களும் துள்ளிப்பாடப் போதுமான தன்னம்பிக்கையும் ஆண்டவனை நேசிக்கவும் அயலானை நேசிக்கவும் போதுமான இறையருளும் புத்தாண்டு அருளட்டும்!
மரியன்னை இறைவனின் தாய்


புத்தாண்டின் முதல் நாள் உலக அமைதி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அமைதி எங்கே இருக்கிறது என்பதை ஓர் ஓவியர் பின்வருமாறு படம் வரைந்து காட்டிப் பரிசு பெற்றார். மரங்கள் நிறைந்த அடர்த்தியான காடு; அமாவாசை இருட்டு; கோடை இடி; கண்ணைப் பறிக்கும் மின்னல்; சிங்கம், சிறுத்தைப்புலி மற்றும் கொடிய விலங்குகளின் சீற்றம்; பேய் மழை. இப்பயங்கரமான காட்டில் ஒரு பெரிய மரம்: அம்மரத்தின் நடுவில் ஒரு பொந்து: அப்பொந்தில் ஒரு தாய்ப்பறவை; அதன் இறக்கைக்கு அடியில் ஒரு சேய்ப்பறவை பயமின்றி நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது. அப்பொந்துக்குக் கீழ் : “இங்கேதான் அமைதி தவழ்கின்றது" என்று ஓவியர் எழுதியுள்ளார்.

காரிருள் சூழ்ந்த பயங்கரமான காட்டில் ஒரு சேய்ப்பறவை அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம்: அது தன் தாயின் இறக்கைக்கு அடியில் உள்ளது. அச்சமும் திகிலும் நிறைந்த நம் வாழ்வில் நாம் அமைதியுடன் வாழவேண்டுமென்றால், நாம் இறைவனில் நம்பிக்கை கொண்டு, அவரது அன்பான அரவணைப்பில் இருப்பதை உணர வேண்டும். திருப்பா 91 கூறுவதை இப்புத்தாண்டின் தாரக மந்திரமாகக் கொள்வோம்: “அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின் கீழ் நீர் புகலிடம் காண்பீர் - தீங்கு உமக்கு நேரிடாது. வாதைஉம் கூடாரத்தை நெருங்காது" (திபா 91:1, 10),

புத்தாண்டாகிய இன்று குழந்தை இயேசு பிறந்த எட்டாம் நாள், இன்று குழந்தை இயேசுவுக்கு அதன் பெற்றோர்கள் விருத்தசேதனம் செய்து, இயேசு என்ற பெயரைச் சூட்டியதாக இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். அக்குழந்தை இந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் கூறுவது: "நான்தான்: அஞ்சாதீர்கள்" (யோவா 6:20). இன்பமோ துன்பமோ, வெற்றியோ தோல்வியோ, அழுகையோ சிரிப்போ, உடல் நலமோ நோயோ - எத்தகைய சூழலிலும் குவலயம் போற்றும் குழந்தை இயேசு நம்முடன் இருந்து, நம்மை வழிநடத்திக் காத்து வருகிறார்,

இன்று திருச்சபை, "மரியா இறைவனின் தாய்" என்ற பெருவிழாவைக் கொண்டாடுகிறது. மரியா மீட்பரின் தாய் மட்டுமல்ல, நம்முடைய தாயும்கூட, எனவே, இறைவனின் தாயும் நமது தாயுமான மரியன்னையின் பாத கமலத்தில் இப்புத்தாண்டை வைப்போம். அந்த அன்பு அன்னை நம்மை கரம்பிடித்து, கவலைகளைப் போக்கி, கண்ணீரைத் துடைத்து, நம்மைக் கரைசேர்ப்பார் என்பது உறுதி.

மரியாவின் படத்திற்கு முன் ஒருவர் மண்டியிட்டு, “அம்மா! உம்மை எனக்குத் தாயாகக் காட்டமாட்டாயா?" என்று கேட்க, மரியா அவரிடம், "மகனே! உன்னை எனக்குப் பிள்ளையாக காட்டமாட்டயா?" என்று கேட்டார். மரியா என்றும் நமக்குத் தாயாக இருக்கிறார். ஆனால் நாம் என்றும் அவருடைய பிள்ளைகளாக இருக்கின்றோமா? என்பதுதான் பிரச்சினை!

| மரியன்னையின் பிள்ளைகளாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? "என் ஆண்டவரின் தாய்" (லூக் 1:42) என்று மரியாவை அழைத்த எலிசபெத் அவரிடம், "ஆண்டவர் உமக்குச் சென்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" (லூக் 1:45) என்று கூறினார், மரியா பேறு பெற்றவர்; ஏனெனில் அவர் கடவுளின் வார்த்தையை நம்பினார். "கன்னி நம்பினார்; நம்பி கருவுற்றார். உடலால் கருவுறுமுன் உள்ளத்தால் கருவுற்றார்" (புனித அகுஸ்தின்).

எனவே, மரியாவின் உண்மையான பிள்ளைகளாக நாம் நடக்க வேண்டுமென்றால், நாமும் அவரைப்போல் கடவுளை முற்றிலும் நம்பி, கடவுளிடம் சரண் அடைய வேண்டும். மரியா கடவுளை நம்பியதால் கடவுள் அவருக்குத் துன்பம் வராமல் பாதுகாக்கவில்லை . மரியாவைக் கடவுள் சென்மப்பாவம் தீண்டாமல் பாதுகாத்தார்; ஆனால் துன்பம் தீண்டாமல் பாதுகாக்கவில்லை. கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது மரியா சிலுவை அருகில் நின்றுகொண்டிருந்தார் (யோவா 19:25). அப்போது சிமியோன் கூறிய இறைவாக்கு, "உமது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" (லூக் 2:35) நிறைவேறியது. ஆனால் மரியா சிலுவை அடியில் விசுவாசத்தால் நிமிர்ந்து நின்றார். இத்தகைய வீரத் தாயின் புதல்வர்களாகிய நாம் துன்பத்தைக் கண்டு துவண்டு போகலாமா ?

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நாம் அடிமைகள் அல்ல; பிள்ளைகள்" (கலா 4:7). அதே திருத்தூதர் கூறுகிறார்: “கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையைப் பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், அப்பா, தந்தையே என அழைக்கிறோம்" (உரோ 8:15), எனவே, நாம் கோழைகள் அல்ல; கடவுளின் பிள்ளைகள் அவ்விதமே அச்சமின்றி வாழ்வோம்.

மரியா எலிசபெத்தைச் சந்தித்தபோது அவருடைய வயிற்றில் இருந்த திருமுழுக்கு யோவான் பேருவகையால் துள்ளினார் (லூக் 1:44). மரியா நமது மகிழ்ச்சியின் காரணம், மரியாவைப் பின்பற்றி நாமும் இப்புத்தாண்டில் பிறரை மகிழ்விப்பதில் கருத்தாய் இருப்போம். பிறரை நமது சொல்லாலோ செயலாலோ புண்படுத்தாதபடி கவனமாய் இருப்போம். அகம் மலர்ந்து தருமம் செய்வதைவிட, முகம் மலர்ந்து இனிய சொல் கூறுவது சிறந்தது.

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின் (குறள் 92)

இறைவன் உங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்துப் பாதுகாப்பாராக! அவரின் உடனிருப்பு என்றும் உங்களை வழிநடத்தவதாக! உலகம் தரமுடியாத அமைதியால் கிறிஸ்து உங்கள் உள்ளத்தையும் இல்லத்தையும் நிரப்புவாராக!
வாழ்க புனித மரியே! விண்ணையும் மண்ணையும் எக்காலத்தும் ஆளுகின்ற அரசரை ஈன்றவரே வாழ்க!

தாய்மையோடு புத்தாண்டில்


கிரகோரியன் காலண்டரின் படி இன்று ஆண்டின் முதல் நாள். கிரேக்க கடவுள் Janus போல இரண்டு தலை கொண்டவர்களாக - பின்னோக்கியும், முன்னோக்கியும் - நன்றி மற்றும் நம்பிக்கை கொண்டவர்களாக  இன்றைய நாளில் நிற்கின்றோம். ஆக, (1) இன்று புத்தாண்டுப் பெருநாள். (2) இந்த ஆண்டின் தலைநாளான இன்று திருஅவை மரியாளை இறைவனின் தாயாக (2) கொண்டாடுகிறது. மேலும், (3) இந்த நாள் தான் 'இயேசுவுக்கு' பெயர் சூட்டப்பட்ட நாள். (4) இந்த நாள் தான் கிறிஸ்துபிறப்பின் எட்டாம் திருநாள். ஆக, இது கிறிஸ்து பிறப்பின் எட்டாம் திருவிழா. இவ்வாறாக, நான்கு நிலைகளில் முக்கியத்துவம் பெறும் இந்நாளில், 'தாய்மையோடு புத்தாண்டில்' என்ற தலைப்பில் உங்களோடு சிந்திக்க விழைகின்றேன்.

ஐசக் நியூட்டனின் 'அப்சலூட் தியரி' மறைந்து, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் 'ரெலடிவிட்டி தியரி' மேலோங்கி நிற்கும் காலத்தில், எல்லாமே சார்பு அல்லது ரெலடிவ் என்ற நிலைதான் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இன்று 'தாய்மையைக் கொண்டாடுவோம்' என்று நான் சொன்னால், அது சார்பு நிலையில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது அல்ல. ஏனெனில், நான் இப்படிச் சொல்லும்போது, தாய்மையை உடல் அளவில் அடைய முடியாத ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலினர், தாய்மையை தாங்களாகவே துறந்த பெண் துறவியர், தாய்மையை அடைய முடியாத நிலையில் உள்ள பெண்கள், வன்புணர்வால் தாய்மை புகுத்தப்பட்டுத் துன்புறும் பெண்கள், குழந்தைகள், மற்றும் வாடகைத் தாய்மார்கள் என பலரை நான் சிந்தனையிலிருந்து அகற்றிவிடுவேன். ஆக, 'தாய்மை' என்ற வார்த்தையை நான் இங்கே உருவகமாகவே பயன்படுத்துகிறேன். அதே போல, 'புத்தாண்டு' என்ற வார்த்தையும் தனிநபர் சார்ந்ததே. கிரகோரியன் காலண்டர் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே இன்று புத்தாண்டு நாள். தமிழ், தெலுங்கு, சீன, ஆப்பிரிக்க, யூத போன்ற பிற காலண்டர்களைப் பின்பற்றுபவர்களுக்கு இதே ஆண்டின் இன்னொரு நாளே தவிர புத்தாண்டு நாள். ஆக, 'புத்தாண்டு' என்ற வார்த்தையையும் நான் இங்கே உருவகமாகவே பயன்படுத்துகிறேன்.

'தாய்மையோடு புத்தாண்டில்' நுழைவது எப்படி?

இன்று மரியாளை இறைவனின் தாயாக அழைத்து, அவரின் தாய்மையைக் கொண்டாடுகிறோம். 'இறைவனின் தாய்' என்றால், அவர் 'இறைவனையே பெற்றெடுத்தார்' என்ற பொருளில் அல்ல. ஏனெனில், 'படைக்கப்பட்டவர்' 'படைத்தவரை' பெற்றெடுக்க முடியாது. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நெஸ்டோரியஸ் என்ற கீழைத்திருஅவை (கான்ஸ்டான்ட்டிநோபில்) ஆயர் மற்றும் அவரது சீடர்கள் இயேசுவின் மனித தன்மையை மட்டுமே ஏற்றுக்கொண்டு, மரியாளை 'கிறிஸ்துவின் தாய்' அல்லது 'இயேசுவின் தாய்' என அழைத்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடிய எபேசு பொதுச்சங்கம் (431), 'இம்மானுவேல்தான் கடவுள். இந்த இம்மானுவேலின் தாய் இறைவனின் தாய். இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சபிக்கப்படுக!' என்று அறிவித்தது. ஆக, 'இறைவனின் தாய்' என்னும் தலைப்பு மரியாளுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்பதைவிட, இயேசுவின் இறைத்தன்மைக்கு கொடுக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும். மரியாள் எலிசபெத்தைச் சந்திக்கச் சென்றபோது, அவரை வாழ்த்தி வரவேற்கும் எலிசபெத்து, 'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?' (லூக் 1:43) என்று கேட்கின்றார். 'ஆண்டவரின் தாய்' என்ற இந்தச் சொல்லாடல்தான் 'இறைவனின் தாய்' என்று வந்தது என்றும் நாம் சொல்ல முடியாது. ஆனால், எலிசபெத்து மரியாளை 'ஆண்டவரின் தாய்' என்று அழைக்கின்றார். மற்றபடி மரியாளை இறைவனின் தாய் என அழைக்க வேறு குறிப்புக்கள் விவிலியத்தில் இல்லை.

தாய்மை என்றால் என்ன?

தாய்மைக்கான மிகச் சிறந்த வரையறை விவிலியத்தின் முதல் பக்கங்களில் உள்ளது. தொடக்கப் பெற்றோர் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்து, அவர்கள் கடவுளால் தண்டிக்கப்பட்டபோதுதான் அந்த இனிய நிகழ்வு நடக்கிறது. விவிலிய ஆசிரியர் இப்படிப் பதிவு செய்கிறார்: 'மனிதன் தன் மனைவிக்கு 'ஏவாள்' என்று பெயரிட்டான். ஏனெனில், உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்' (தொநூ 3:20). கொஞ்சப் பகுதிக்கு முன்னால் - அதாவது, பாவம் செய்வதற்கு முன், 'ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால் இவள் 'பெண்' (ஈஷா) என அழைக்கப்படுவாள்' (தொநூ 2:23) என்று வேறு ஒரு பெயர் கொடுக்கப்படுகிறது. ஆக, தாய் என்ற பெயர் ஒரு ரொமான்டிக் பெயர் அல்ல. மாறாக, மனுக்குலத்தின் முதல் தாய் ஏவாள் தாய்மை என்ற பேற்றை அடைவது பிள்ளைப் பேற்றினால் அல்ல. மாறாக, தான் செய்த தவற்றினால்.

இதைக் கொஞ்சம் புரிந்துகொள்வோம். ஏவாளிடம் எனக்குப் பிடித்தவை மூன்று: (அ) பாம்பை எதிர்கொள்ளும் துணிச்சல், (ஆ) கணவனுடன் பகிர்தல், மற்றும் (இ) பொறுப்புணர்வு. முதலில், மனுக்குலத்தின் எதிரியாகிய பாம்போடு நேருக்கு நேர் நின்று உரையாடிவள் ஆண் அல்ல. மாறாக, பெண். விவிலியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் உரையாடலும் இதுவே. மேலும், அவளின் உரையாடல் வெறும் பழத்தைப் பற்றியது அல்ல. மாறாக, உண்மை, நன்மை, தீமை போன்ற பெரிய கருத்தியல்கள் பற்றியது. பாம்பு பெண்ணிடம், 'நீங்கள் சாகவே மாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்' என்றது (தொநூ 3:4-5). பாம்பின் இந்த வார்த்தைகளை நம்பி பெண் பழத்தை உண்ணவில்லை. பின் எதற்காக உண்டாள்? 'அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்கு களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாவும் இருந்ததைக் கண்டு பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள்' (தொநூ 3:6). ஆக, பாம்பு சொல்லவில்லையென்றாலும் ஏவாள் அந்தப் பழத்தை உண்டிருப்பார். ஆக, தானே விரும்பி தன் முடிவை எடுக்கின்றார் ஏவாள். மேலும், தீமையை நேருக்கு நேர் எதிர்கொள்கின்றார். இரண்டாவதாக, 'அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்' (தொநூ 3:6) என்கிறது விவிலியம். தான் செய்த செயலைத் தன் கணவனோடு பகிர்கிறாள். மூன்றாவதாக, தான் உண்டதற்குப் பொறுப்பேற்கிறார் ஏவாள். 'பாம்பு என்னை ஏமாற்றியது. நானும் உண்டேன்' (தொநூ 3:13) என தன் செயலுக்குப் பொறுப்பேற்கிறார் ஏவாள்.

இந்த மூன்று குணங்களும்தான் அவரைத் தாய்மை நிலை அடைய வைக்கிறது. ஆக, தாய்மை என்பது, (அ) தீமையை நேருக்கு நேர் எதிர்கொள்ளுதல், (ஆ) தன்னிடம் உள்ளதைப் பகிர்தல், (இ) பொறுப்புணர்வோடு இருத்தல். இந்த மூன்றிலும் ஒன்று புலப்படுகிறது. அது என்ன? தாய்மை என்பது ஒரு தயார்நிலை. தாய்மை ஒரு இலக்கு அல்ல. மாறாக, இனி வருபவற்றை எதிர்கொள்வதற்கான தயார்நிலை என்னும் வழிமுறை. மரியாளின் தாய்மையும் ஒரு தயார்நிலையே. அத்தயார்நிலையில் (அ) அவர் தீமையை நேருக்கு நேர் எதிர்கொண்டு வெற்றி பெறும் மீட்பரைப் பெற்றெடுத்தார், (ஆ) 'உம் சொற்படியே ஆகட்டும்' என்று தன்னிடம் உள்ளதைக் கடவுளோடு பகிர்ந்தார், (இ) பெத்லகேம் முதல் நாசரேத்துக்கு, நாசரேத்து முதல் எருசலேமுக்கு, நாசரேத்து முதல் கானாவுக்கு, கானா முதல் கல்வாரிக்கு எனத் தன் மகனைப் பொறுப்புணர்வோடு வழிநடத்தினார். இன்று புத்தாண்டில் நுழையும் நமக்கு மரியாள் வைக்கின்ற பாடம் இதுவே: 'தாய்மை என்னும் தயார்நிலை.' மேலும், இத்தாய்மை (அ) பொறுப்புணர்வு (interactive responsibility), (ஆ) அர்ப்பணம் (commitment), (இ) தோல்வி தாங்கும் உள்ளம் (resilience) என மூன்று மதிப்பீடுகளாக வெளிப்பட வேண்டும்.

தாய்மை என்பது எப்படி தயார்நிலையோ, அதுபோல புத்தாண்டு என்பதும் தயார்நிலையே. புத்தாண்டு என்பது நம் இலக்கு அல்ல. மாறாக, நம் இலக்கை அடைவதற்கான வழியே புத்தாண்டு. புத்தாண்டை நாம் கொண்டாடக் காரணம் நாம் காலத்திற்கு உட்பட்டிருப்பதால்தான். காலத்திற்கு உட்படாத கடவுளுக்கும், வானதூதர்களுக்கும், இறந்த நம் முன்னோர்களுக்கும் புத்தாண்டு இல்லை. ஆக, நம் வரையறையை நினைவுகூறும், கொண்டாடும் நாள்தான் இந்நாள்.

காலத்தின் வரையறைக்குள் கடவுளும் வந்ததால், காலம் புனிதமாக மாறியது. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். கலா 4:4-7), புனித பவுல், 'காலம் நிறைவேறியபோது, திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகளாக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்' என மொழிகிறார். காலத்தையும் இடத்தையும் கடந்தவர் கடவுள். காலத்திற்குள்ளும், இடத்திற்குள்ளும் இருப்பவர்கள் நாம். நம் இருப்பிற்குள் கடவுள் வரவேண்டுமென்றால், அவருக்கு நேருமும் இடமும் தேவை. இந்த நேரத்தையே, பவுல், 'காலம் நிறைவுற்றபோது' என்றும், இந்த இடத்தையே, 'பெண்ணிடம்' என்றும் குறிப்பிடுகிறார். மேலும், திருச்சட்டம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டது என்பதால், கடவுளின் மகனும் திருச்சட்டத்திற்கு உட்படுகின்றார். 'கடவுளின் மகன்' என்று இயேசுவைச் சொல்வதன் வழியாக, மறைமுகமாக மரியாளை 'கடவுளின் தாய்' எனச் சொல்கின்றார் பவுல். மேலும், காலத்திற்கு உட்பட்ட கடவுள், 'இனி நீங்கள் அடிமைகள் அல்ல. பிள்ளைகள்தாம்' என்று கடவுளின் பிள்ளைகளுக்குரிய உரிமைப்பேற்றைக் கொடுக்கின்றார்.

கடவுளே நுழைந்த காலத்தின் நீரோட்டத்தின் ஒரு பகுதியே 2019ஆம் ஆண்டு. இந்த ஆண்டிற்குள் நுழையும் நமக்கு கடவுள் தரும் ஆசீரைப் பட்டியலிடுகின்றது இன்றைய முதல் வாசகம் (காண்.எண் 6:22-27). 'யோம் கிப்பூர்' நாளில் பரிகாரப் பலி செலுத்திவிட்டு, திருத்தூயகத்திலிருந்து வெளிவரும் தலைமைக்குரு அங்கே கூடியிருக்கும் மக்களுக்கு வழங்கும் ஆசியுரையே இது. இந்த ஆசீரின் இரண்டு முக்கிய கூறுகள் அருளும், அமைதியும். இந்த ஆசீரை இறைவனே மோசே வழியாக ஆரோனுக்கு கற்றுத் தருகின்றார். எபிரேயத்தில் 'ஆசீர்' என்றால் 'செல்வம்' அல்லது 'வளமை' என்பது பொருள். ஆக, ஒருவர் செல்வந்தராக இருக்கிறார் என்றால் அவர் இறைவனின் ஆசீர் பெற்றவர் என்று நாம் சொல்லலாம். அதற்காக செல்வம் இல்லாதவர்கள் எல்லாம் ஆசீர் இல்லாதவர்கள் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

தமிழ் மொழிபெயர்ப்பில் சின்ன சிக்கல் இருக்கிறது. அதாவது, 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!' என்பது 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!' என்று இருக்க வேண்டும். ஒருவேளை எபிரேயத்தின் மொழிநடை எல்லாவற்றையும் பிரித்து எழுதுகிறதோ என்னவோ. மேலும், எபிரேய வாக்கிய அமைப்பில் முதல் ஆசியில் மூன்று வார்த்தைகளும், இரண்டாம் ஆசியில் ஐந்து வார்த்தைகளும், மூன்றாம் ஆசியில் ஏழு வார்த்தைகளும் இருக்கின்றன. மூன்று - ஐந்து - ஏழு என ஆசீர் வளர்கிறது. ஆக, இது சும்மா 'நல்லா இரு!' என்று சொல்லப்பட்ட ஆசீர் அல்ல. மாறாக, யோசித்து, நிறுத்தி, நிதானமாக எழுதப்பட்டுள்ளது.

மூன்று ஆசிகள். ஒவ்வொரு ஆசியிலும் இரண்டு கூறுகள்: (1) 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!' இதில் ஆண்டவர்தான் செயலாற்றுபவர். ஆண்டவர் தான் ஆசீர் அளிப்பவர். 'உனக்கு' என்பது இரண்டாம் நபர் (முன்னிலை) ஒருமை. ஆக, இது மொத்தமாக கூட்டத்தின்முன் வழங்கப்பட்டாலும், ஆசி ஒவ்வொரு தனிநபருக்கும் உரியது. ஆக, ஆண்டவரின் பிரசன்னத்தில் கூட்டம் போடுவதற்கே இடமில்லை. ஒவ்வொருவரும் அவரின் பார்வையில் விலைமதிப்பு உடையவர். 'பராகா' என்பது இறைவன் மனிதர்களுக்கு ஆசீர்வதிப்பதையும் குறிக்கிறது. 'காத்தல்' என்பதை 'கண்களைப் பதித்தல்.' ஒரு ஆயன் தன் மந்தையைக் காக்கிறான் என்றால், அவன் தன் மந்தையின் மேல் தன் கண்களைப் பதிய வைக்கிறான். (2) 'ஆண்டவர் அவர் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்வாராக! உனக்கு அருள்கூர்வாராக!' 'ஒளி' என்பது விவிலியத்தில் வாழ்வைக் குறிக்கும். ஆண்டவரின் முகம் எப்போதும் ஒளிரக் கூடியது. இந்த முகம் மனிதர்கள்மேல் படும்போது அவர்களும் ஒளி பெறுகின்றனர். வாழ்வு பெறுகின்றனர். மேலும், உருவகத்தின் அடிப்படையில் 'திருமுகம் ஒளிர்தல்' என்பது 'அருள்கூர்தல்' என்றும் பொருள் படும். 'ஹனான்' ('அருள்') என்ற வார்த்தை 'தன் குழந்தையை கூர்ந்து பார்க்கும் தாயின்' செயலைக் குறிக்கிறது. (3) 'ஆண்டவர் தன் திருமுகத்தை உயர்த்துவாராக! உனக்கு அமைதி தருவாராக!' மீண்டும் ஆண்டவரின் திருமுகமே இங்கு செயலாற்றுகிறது. 'தாழ்ந்து போன முகம்,' அல்லது 'குனிந்த முகம்' அவமானத்தை அல்லது கோபத்தைக் குறிக்கும் (தொநூ 4:6,7). மேலும், வேறுபக்கம் முகத்தை திருப்பிக் கொள்ளுதல் கோபத்தையும், ஒருவரிடமிருந்து விலகி நிற்பதையும், கண்டுகொள்ளாததையும் குறிக்கும் (இச 31:18, திபா 30:8, 44:25). ஆண்டவர் தன் முகத்தை தாழ்த்திக் கொள்ளாமல், வேறு பக்கம் திருப்பிக் கொள்ளாமல் உன் பக்கம் திருப்புகிறார். இறுதியாக அவர் 'ஷலோம்' ('அமைதி, நிறைவு, நலம்') தருகிறார்.

இந்த மூன்று ஆசிகளையும் ஒருசேர வாசிக்கும்போது என்ன தோன்றுகிறது? எனக்கு வெளியில், என்னில், எனக்கு உள்ளே என்று மூன்று எதார்த்த நிலைகள் உள்ளன. இறைவனின் ஆசிமொழி எனக்கு வெளியே தொடங்கி, என்மேல் ஒளிர்ந்து, எனக்குள் பாய்கின்றது. ஆக, இறைவனின் ஆசி முழுமையான ஆசியாக இருக்கிறது. புத்தாண்டு தரும் தயார்நிலையை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் (லூக் 2:16-21) பின்புலம் இதுதான்: இயேசு பெத்லகேமில் பிறந்துவிட்டார். இந்த பிறப்பு செய்தி வானதூதர் ஒருவரால் இடையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. பின் வானதூதர் அணி வானில் பாடல் பாடுகின்றது. இந்த பாடல் முடிந்தவுடன், இடையர்கள் என்ன செய்தார்கள் என்பதும், இடையர்களின் வருகை மரியாவில் ஏற்படுத்திய மாற்றம் என்ன என்பதுமே இன்றைய நற்செய்தி வாசகம். இன்றைய நற்செய்தி வாசகத்தை நான்கு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) இடையர்களின் வருகை, (ஆ) இடையர்களின் வியப்பு, (இ) மரியாளின் பதிலுணர்வு, (ஈ) இடையர்களின் செல்கை, மற்றும் (உ) இயேசுவின் விருத்தசேதனம். இவற்றில் மையமாக இருப்பது மரியாளின் பதிலுணர்வு.மரியாளின் பதிலுணர்வு மௌனமும், தியானமும். எல்லா யூதர்களையும்போல மரியாளுக்கும் மெசியா பற்றிய காத்திருத்தல் இருந்திருக்கும். இந்தக் காத்திருத்தல் நிறைவு பெற்றதை தன் உள்ளத்தில் உணர்ந்தவராய் அப்படியே உறைந்து போகின்றார்.இங்கே 'சும்பல்லூசா' என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு 'தியானித்தில்' அல்லது 'உள்ளத்தில் இருத்துதல்' அல்லது 'மனனம் செய்தல்' என்பது பொருள் அல்ல. மாறாக, 'ஒன்றுகூட்டுதல்' என்பதே பொருள். அதாவது, ரெவன்ஸ்பர்கர் ஆட்டத்தில், சிதறிக்கிடக்கும் படத் துண்டுகளை ஒவ்வொன்றாக அதனதன் அடத்தில் சேர்த்து பெரிய படத்தை உருவாக்குவதுபோல, மரியாள் இப்போது தன் கையில் கிடைக்கப்பட்டுள்ள புதிய துண்டை ஆச்சர்யமாக பார்க்கிறாள்.

ஆக, இன்று நாம் கொண்டாடும் மரியாளின் தாய்மை, புத்தாண்டில் நுழையும் நமக்கு, தாய்மை என்ற தயார்நிலையைத் தருகின்றது. ஏவாளின் தாய்மையும், மரியாளின் தாய்மையும் 'ஸ்மைல்' (smile) மற்றும் 'ஸைலன்ஸ்' (silence) என்ற இரண்டு 'எஸ்' ('s') களில் அடங்கியுள்ளன. பாம்பைப் பார்த்துச் சிரித்தார் ஏவாள். வானதூதரைப் பார்த்துச் சிரித்தார் மரியாள். தான் சபிக்கப்பட்டவுடன் மௌனம் காக்கிறார் ஏவாள். இடையர்கள் வாழ்த்தியபோது மௌனம் காக்கிறார் மரியாள்.

தாய்மையும், புத்தாண்டும் இலக்குகள் அல்ல. மாறாக, என் வாழ்வின் நிறைவை நான் அடைய திறக்கப்படும் வழிகள். இவ்வழிகளில் 'ஸ்மைல்' - அது இல்லாதபோது 'ஸைலன்ஸ்' என இரண்டு கால்களால் நடந்தால் பயணம் இனிதாகும். 2019 என்னும் இரயில் நம் வாழ்க்கை என்னும் நடைமேடைக்கு வர சில மணித்துளிகளே உள்ளன.

'உங்கள் கவலைகள் எல்லாம் உங்கள் புத்தாண்டு வாக்குறுதிகள் போல மறைந்துபோவனவாக' என்பது இத்தாலியப் பழமொழி. மரங்கள், மனிதர்கள், கவலைகள், வாக்குறுதிகள் மறைய இரயில் வேகமாக ஓடும். ஓட்டத்தின் இறுதியில் இலக்கை அடையும்.

உங்கள் பயணம் சிறக்க இனிய வாழ்த்துக்கள்!

 அன்னையின் வாக்கு வலிக்கும்


  மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். www.arulvakku.com

         உலகப் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோ. அவருடைய சிறுவயதில் அவரது தாயார் அவரிடம், “என் அன்பு மகனே! நீ வளர்ந்து பெரியவனாகும்போது, ஒரு படைவீரன் ஆனாயெனில், பின்னாளில் இந்த உலகமே கண்டு வியக்கும் மாவீரன் ஆவாய். ஒருவேளை நீ துறவியானாய் எனில், பின்னாளில் அகில உலகத் திருஅவையையே தலைமை தாங்கி வழிநடத்தும் திருத்தந்தை ஆவாய். ஒருவேளை நீ வளர்ந்து பெரியவனாகும்போது ஓர் ஓவியனானாய் எனில், பின்னாளில் நீ படிப்படியாக வளர்ந்து உலகம் போற்றும் ஓவியனாவாய்” என்றார்.
 
பிக்காசோவும் வளர்ந்து ஓர் ஓவியரானார். பின்னாளில் படிப்படியாக வளர்ந்து உலகம் போற்றும் ஓவியரானார். ஆம், அன்னையின் வாக்கு பொய்யாகாது, அவளுடைய வாக்கு நிச்சயம் பலிக்கும்; அவளுடைய ஆசிர்வாதம் தன் பிள்ளைகளுக்கு எப்போதும் உண்டு.

மரியா இறைவனின் தாய் 
         ஆண்டின் முதல் நாளான இன்று, அன்னையாம் திரு அவை, மரியா இறைவனின் தாய் என்றொரு விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நொஸ்டோரியஸ் என்றொரு ஆயர், மரியா இயேசுவின் தாய்தானே ஒழிய, இறைவனின் அல்ல என்று சொல்லிவந்தார். இவருடைய கருத்தை 431 ஆம் ஆண்டு, எபேசு நகரில் கூடிய பொதுச்சங்கமானது கடுமையாக எதிர்த்து, ‘மரியா இறைவனின் தாய்’ என்று பிரகடனம் செய்தது. அன்று முதல் இன்றுவரை மரியா இறைவனின் தாய் என்று திரு அவை கொண்டாடி மகிழ்கின்றது.

ஆண்டின் தொடக்கத்தில் அன்னையின் ஆசிர்வாதம்
         பொதுவாக நல்ல நாட்களின்போதும், குடும்பத்தில் நடைபெறுகின்ற முக்கியமான நிகழ்வுகளின்போதும் நாம் நம்முடைய குடும்பங்களில் இருக்கின்ற பெரியோர்களிடமிருந்தும் பெற்றோரிடமிருந்தும் ஆசிர்வாதம் பெறுவது வழக்கம். நாம் ஆசிர்வாதம் பெறுகின்றபோது, அவர்கள் நம்மை நிறைவாக ஆசிர்வதித்துவிட்டு (சில சமயங்களில்) கையில் பணம்கூடத் தருவார்கள். ஆண்டின் முதல் நாளான இன்று, அன்னைக்கு விழாக்கு விழாக் கொண்டாடுகின்ற இந்த மகிழ்ச்சியான தருணத்தில், நம் அன்னையானவள் நமக்கு என்னென்ன ஆசிர்வாதங்களைத் தருகின்றார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
 
  1. தீமையிலிருந்து காக்கின்றார்

பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா, நம்முடைய நாட்டில் நாம் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பது பற்றிச் சொல்லும்போது, “கண்ணிவெடிகள் இருக்கின்ற பகுதியை எப்படி நாம் கவனமாகக் கடந்துசெல்லவேண்டுமோ, அது போன்று நம்முடைய இந்திய நாட்டில் ஒவ்வொருநாளையும் மிகக் கவனமாகக் கடத்தவேண்டி இருக்கின்றது” என்று குறிப்பிட்டார். இது அப்பட்டமான உண்மை. இது நம்முடைய நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் இதுதான் நடந்துகொண்டிருக்கின்றது.

  எப்போது என்ன நடக்குமோ, யார் யார்மீது சண்டை செய்வார்களோ என்ற அச்சத்தில்தான் ஒவ்வொருநாளும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அன்னையின் விழாவைக் கொண்டாடுகின்ற இந்த நேரத்தில், ஆண்டவர் நமக்கு பாதுக்காப்பைத் தருவதாக வாக்குறுதி வழங்குகின்றார். எண்ணிக்கை நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக” என்று கடவுள், ஆரோன் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு பாதுகாப்பை – காக்கின்ற பணியைச் செய்வதாக – வாக்குறுதி வழங்குகின்றார். அன்று இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கிய ஆசிர்வாதத்தை, இறைவன் இன்று தன் திருத்தாய் வழியாக நமக்கு வழங்குகின்றார். ஆகவே, இறைவன் நம்மைக் காத்திடுவார் என்ற நம்மையோடு வாழ்வோம்.
 
  1. அருளை பொழிகின்றார்

அன்னையானவள், தம் பிள்ளைகளாகிய நமக்கு தருகின்ற இரண்டாவது ஆசிர்வாதம், அவர் தன்னுடைய அருளைப் பொழிவதுதான். முதல் வாசகத்தில் ஆண்டவர் தொடர்ந்து கூறும்போது, “ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து, அருள் பொழிவாராக” என்பார். இதையே நாம் அன்னையானவள் இன்று நமக்குத் தருகின்ற ஆசிர்வாதமாக எடுத்துக்கொள்ளலாம். மரியா, வானதூதரால் ‘அருள்மிகப் பெற்றவளே’ என்று வாழ்த்தப்பட்டவள். அப்படிப்பட்ட அன்னை நமக்கு தன்னுடைய அருளை நிறைவாகப் பொழிவது  உறுதி.


சில நாட்களுக்கு முன்பாக, ஒரு காவல்த்துறை அதிகாரி, காட்டில் விவசாய வேலை பார்த்துக்கொண்டிருக்கும் தன்னுடைய தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகின்ற மாதிரியான ஒரு படம் இணையத்தில் ட்ரென்டிங்கானதை  பார்த்திருப்போம். இந்தப் படத்தில் வருகின்ற காவல்துறை  அதிகாரி கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் தன்னுடைய பணியில் பதவி உயர்வு பெற்றார் என்றும் செய்திகள் சொல்கின்றன. அன்னையின் ஆசீர்வாதம் ஒருவருக்கு இருக்கும்போது அவர் தன்னுடைய வாழ்வில் மேலும் மேலும் உயர்வார் என்பதுதானே உண்மை.

  அன்னை மரியா இன்று நம்மீது பொழிகின்ற அருள், நம்மை மேலும் மேலும் உயர்வடையச் செய்யும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

  1. அமைதியை அருள்கின்றார்
பாதுகாப்பையும் அருளையும் தருகின்ற மரியன்னை, நிறைவாக நமக்கு அமைதியையும் அருளுகின்றார். முதல் வாசகத்தில், “ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக” என்று ஆண்டவர் சொல்வதாக வாசிக்கின்றோம். ஆம், ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதியை - வெளி அமைதி மட்டுமட்ல்ல, மன அமைதியையும் – நிறைவாகத் தருகின்றார். இதே அமைதியை மரியன்னை நமக்குத் தருகின்றார். இத்தகைய அமைதி நமக்குக் கிடைக்கின்றபோது நம்முடைய வாழ்வில் என்பதும் மகிழ்ச்சிதான்.

நிறைவாக 

‘அன்னை என்றால் ஒரே அன்னைதான், உன் அன்னை, என் அன்னை என்ற வேறுபாடு இல்லை” என்பார் லா.சா.ரா என்ற தமிழ் சிறுகதை எழுத்தாளர். ஆமாம், நமக்கு மரியா என்ற அன்னை இருக்கின்றார். அவர் நமக்கு பாதுகாப்பையும் அருளையும் அமைதியையும் இன்னும் பல்வேறு நலன்களையும் வழங்குகின்றார். ஆகவே, அப்படிப்பட்ட அன்னையின் பெருவிழாவைக் கொண்டாடும் நாம், அவர் நமக்குச் சொல்வதுபோல், ‘இயேசு சொல்வதுபோல செய்வோம், வாழ்ந்து காட்டுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Wednesday, 26 December 2018

திருக்குடும்பப் பெருவிழா - மூன்றாம் ஆண்டு


திருக்குடும்பப் பெருவிழா

 

 


இன்று, நாசரேத்தில் வாழ்ந்த திருக்குடும்பத்தை நினைவு கூறுகிறோம். தேவ ஆவியால் நிரப்பப் பெற்று கருவுற்று ஆண்டவர் இயேசுவை, குழந்தையாகப் பெற்ற மரியாவும், வளர்ப்புத் தந்தையாகத் தரப்பட்ட புனித சூசையப்பரும் குழந்தையைத் தாலாட்டி, சீராட்டி கையில் எடுத்து ஏந்தி, ஏரோதிடம் தப்புவிக்க எகிப்துக்கு ஓடி, பின் திரும்ப எருசலேம் வந்து, இறுதியாக நாசரேத்தில் அன்பால், பாசத்தால் இயேசுவை உடல் வளர்ச்சியில் மட்டுமல்ல் ஞானத்திலும், அறிவிலும் வளர்த்து, 12 வயதில் எருசலேமில் தவறவிட்ட போதும் ஏக்கத்தோடு இருவரும் தேடிக் கண்டடைந்த பின், 30 வயது வரை வளர்த்து உருவாக்கி, மனித குலத்திற்காக மகனையே பலியாக அர்ப்பணித்த குடும்பம் தான் இந்த திருக்குடும்பம் (லூக். 2:40 - 52).
இத்திருக்குடும்பத்தில் மூவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து செயல்பட்டார்கள். நீ பெரியவனா, அல்லது நான் பெரியவனா என்ற பட்டிமண்டபத்திற்கே இடம் தரவில்லை. இந்தக் குடும்பத்தின் வெற்றிக்கு அடித்தளமே கூட்டு முயற்சியும், விட்டுக் கொடுக்கும் மனநிலையும் ஆகும். இறைவார்த்தையை ஆழ்ந்து சிந்திக்கும் உள்ளம் கொண்டவர்கள் (லூக். 2:19). இறைமகன் பிரசன்னம் இருக்க, இவர்களில் நிறை அன்பும், நிறை மகிழ்ச்சியும் உன்னதமான அர்ப்பணமும் வெளிப்பட்டது.

தாய் தந்தையைப் போற்றி மதித்து வாழ்பவன் எல்லா ஆசீரையும் பெற்றவன். தாய் தந்தையை மதித்து நடப்பது பாவ மன்னிப்புக்குச் சமம். அவர்கள் எல்லா செல்வங்களையும் நிறைவாகப் பெற்று, நீடூழி வாழ்வர் எனக் கூறுகிறது (சீரா: 3:3-6) முதல் வாசகம். மனத்தாழ்ச்சி, கனிவு, பொறுமை குடும்பத்தில் மேலோங்கி நிற்க வேண்டியவை. இவை அனைத்திற்கும் மேலாக நிறை அன்பு தேவை என்பதை (கொலோ 3:12-14) இரண்டாம் வாசகம் எடுத்துரைக்கிறது. கணவன் மனைவியை அன்பு செய்தல், மனைவி கணவனுக்குப் பணிந்து நடத்தல், பெற்றோருக்குப் பிள்ளைகள் கீழ்ப்படிதல் குடும்பத்தை நிறைவு செய்யும் எனத் திருத்தூதர் பவுல் கூறுகிறார் (கொலோ 3:18-21).

குடும்பம் என்பது அன்பு உள்ளங்களின் சங்கமம். பின் ஆழமான உறவுகளின் அர்ப்பணம். சமுதாய கூட்டமைப்பின் அடிப்படையான ஓர் அங்கம். குடும்பம் ஒரு கோயில். அங்கே இறைவன் பிரசன்னமாகிறார். பாலோடு கலந்த நீர் பாலாகுவது போல, ஆணும், பெண்ணும் திருமணத்தால் ஓருடலாகிறார்கள். இது இறைவனால் அமைக்கப்பட்ட ஒரு தெய்வீக அமைப்பு.

ஒரு மனிதன் கடைக்குச் சென்று தலைக் கவசம் (Helmet) ஒன்று வாங்கி வந்தான். "ஏனப்பா இந்தக் கவசம் ? மோட்டார் சைக்கிள் வாங்கி விட்டாயா?" என்று கேட்டார் வழியில் சந்தித்த நண்பர். "இல்லையடா! நேற்று என் மனைவி பூரிக்கட்டை வாங்கி வந்து விட்டாள். அதனால் தான் இந்த ஹெல்மட் வாங்கினேன்" என்றான் இந்த மனிதன். இப்படி வாழ்வது அல்ல குடும்ப வாழ்வு!

ஒரு மாணவன் ஆசிரியரிடம் சொன்னான், "சார் எங்க அப்பா ஆபிசிலே ரொம்ப பெரியவர். ஏனெனில் 5000 பேருக்கு போலீஸ் அதிகாரி அவர். ஆனால் எங்க வீட்டிலே எங்க அம்மாதான் பெரியவங்க. ஏன்னா, எங்க அப்பாவையே எங்க அம்மா அடக்கிவிடுவாங்க!" இதுவும் சரியல்ல!

ஒரு ஆசிரியர் மாணவன் ஒருவனிடம், "தம்பி! பரிணாம வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு கூறு" என்றார். "சார்! நான் சிறுவனாக இருந்த போது என் அப்பா என்னைப் பார்த்து வாடா கன்னுக்குட்டி என்று செல்லமாகக் கூப்பிடுவார். ஆனால் இப்போ போடா எருமை மாடு என்று திட்டுகிறார். இதுதான் பரிணாம வளர்ச்சியென்றான்" மாணவன். இதுவும் சரியல்ல!

மாறாக குடும்பம் மனித மாண்பை வளர்க்க வேண்டும் அன்பும், அரவணைப்பும், நிலையான பண்புகள் என்பதை குடும்பம் எண்ணிப்பார்க்க அழைக்கப்படுகிறது. அதற்கு திருக்குடும்பம் நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்கு!

கடவுள் மீது நம்பிக்கை வைக்கும் குடும்பம் வாழ்வாங்கு வாழும்.


நமது குடும்பங்கள் நாளும் நம்பிக்கையில் வளர இன்று திருச்சபை திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகின்றது.
இன்று இயேசு, மரியா, யோசேப்பு ஆகிய மூன்று பேரும் நமக்குத் தரும் அருள்வாக்கு என்ன ?

மூன்று பேரும் நம் குடும்பங்களைப் பார்த்து, நீங்கள் எங்களைப்போல, உங்களை அன்பு செய்யும் கடவுள் மீது முழு நம்பிக்கை வையுங்கள் ! வாழ்வாங்கு வாழ்வீர்கள் என்கின்றார்கள். இதோ மூன்று பேரின் வாழ்க்கையிலிருந்தும் மூன்று நிகழ்வுகள்.

அன்று மங்கள் வார்த்தைத் திருநாள்.

லூக் 1: 26 - 35 : கபிரியேல் தூதர் மரியாவின் முன் தோன்றி, வாழ்க என்ற போது அன்னையின் மனம் சிறகடித்துப் பறந்தது. ஆனால் ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார் என்ற போது அவர் மனம் கலங்கினார்.

காரணம், கன்னிப்பெண் ஒருத்தி குழந்தைக்குத் தாயானால் அவளைச் சட்டப்படி கல்லால் எறிந்து கொன்றுவிடுவார்கள்.

ஆனால் தூதர் , கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்ற போது மரியா அந்த வானதூதரின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து, நான் ஆண்டவரின் அடிமை உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் என்றார் (லூக் 1:38).

இந்த நிகழ்ச்சிக்குப் பின் மரியா ஒருபோதும் கலங்கியதில்லை. மகன் காணாமல் போன போது மாதா கவலையோடு தேடினார் (நற்செய்தி). ஆனால் அருள் நிறைந்த மரியா கலக்கத்தோடு தேடவில்லை !

இதோ யோசேப்பு வாழ்க்கையில் ஒரு நாள் . மத் 1: 19 - 24 முடிய உள்ள பகுதி.


திருமணம் ஆவதற்கு முன்னால் திருமண ஒப்பந்தம் மட்டும்தான் நிகழ்ந்திருந்தது. மரியா கருவுற்றிருப்பது யோசேப்பிற்குத் தெரியவருகின்றது. யூத சமுதாயம் இப்படிப்பட்டவருக்கு எப்படி நீ அடைக்கலம் கொடுக்கலாம்? என்று கேட்டு தன்னைத் தண்டிக்கக்கூடும் என்ற அச்சம் அவர் மனத்தில் எழுந்திருக்கும்! அப்போது அவர் ஒரு கனவு கண்டார். கனவிலே வானதூதரைக் கண்டார். வானதூதர், மாதா கருவுற்றிருப்பது கடவுளால்தான் என்றார்.

கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்து மரியாவை யோசேப்பு ஏற்றுக்கொண்டார்.

இறுதியாக மத் 26 : 36 - 46 முடிய உள்ள பகுதி.

இயேசுவின் வாழ்க்கையில் வேதனைக்கு மேல் வேதனை, சோதனைக்கு மேல் சோதனை ; அடிதாங்கும் உள்ளம் இது இடிதாங்குமா? என்ற நிலை.

அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவர் விண்ணகத் தந்தையே! எனது விருப்பத்தின்படி அல்ல உமது விருப்பப்படியே ஆகட்டும் என்றார். சிறுவயதில் தன் பெற்றோருக்குள் கடவுளைக் கண்டு அவர்களுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார் (லூக் 2:52).

தன் மீது முழு நம்பிக்கை வைத்த இயேசுவை உயிர்த்தெழச் செய்து விண்ணகத் தந்தை தமது வலப்பக்கத்தில் அமரவைத்தார்.

ஆம். ஒரு குடும்பம் கடவுள் மீது நம்பிக்கை வைத்தால் அது வாழ்வாங்கு வாழும். இதோ நம்பிக்கை என்றால் என்ன? என்பதை இந்த நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகின்றது.

இரண்டாவது உலகப்போர் நடந்துகொண்டிருந்தது.

ஒரு பெண் மட்டும் எந்தச் சுரங்கத்தையும் எந்தப் பாதுகாப்பான இடத்தையும் தேடிச் செல்லவில்லை. அவர் வீட்டில் அமைதியாக உறங்கி, அமைதியாக எழுந்தார்.
நான் உறங்கினாலும் என் ஆண்டவர் இயேசு உறங்குவதில்லை என்றார்.

இந்த மனநிலைக்குப் பெயர்தான் நம்பிக்கை.
கடவுளின் அருளை நாம் பெற ஓர் அழகான வழி உண்டு. அதுதான் அவர்மீது நமது முழு நம்பிக்கையை வைப்பதாகும். நம்பிக்கை இருக்கும் இடத்திலே
வாழ்வு இருக்கும்!
வழி இருக்கும்! ஒளி இருக்கும்!
உயிர் இருக்கும்!
பூக்கள் இருக்கும்!
காய்கள் இருக்கும்!
கனிகள் இருக்கும்!
30 மடங்கு, 60 மடங்கு, 100 மடங்கு பலன் இருக்கும்!

எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கை இருக்கும் இடத்தில் அன்பு இருக்கும். நாம் கடவுளையும் மனிதரையும் (இரண்டாம் வாசகம்) நம்மையும் இயற்கையையும் அன்பு செய்து வாழ்வாங்கு வாழ்வோம்.

மேலும் அறிவோம் :
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா (து) உலகு (குறள் : 670).

பொருள் : ஒருவர் எவ்வளவு வலிமை வாய்ந்தவராக விளங்கினாலும், அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், உலகோர் அவரை மதித்துப் போற்ற மாட்டார்!

பெற்றோரும் பிள்ளைகளும்

.
மேலை நாடு ஒன்றில் தொலைக்காட்சி நிலையத்தில் இப்படி ஒரு வழக்கம். இரவு 8 மணிச் செய்தியைப் படிக்குமுன் ஒரு கேள்வியை எழுப்புவார்களாம். "இப்போது நேரம் இரவு 8 மணி. பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள் இப்போது எங்கே இருக்கின்றனர், என்ன செய்கின்றனர் என்று உங்களுக்குத் தெரியுமா?”

நல்ல பெற்றோர்கள் கூட இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டிய நிலைக்கும் கட்டாயத்துக்கும் தள்ளப்படுகின்றனர்.

எருசலேம் சென்று திரும்பிய முதல் நாள் மாலையிலேயே யோசேப்பும் மரியாவும் இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க நேரவில்லையா? இயேசு எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் கவலைக்கும் சஞ்சலத்துக்கும் ஆளாகவில்லையா?

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் உடல் அளவில், உள்ளத்தளவில், ஆன்ம அளவில் எங்கே இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

1. உடலளவில் : லூக்.2:44 சொல்கிறது "பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். நமது பிள்ளை கோவிலில் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்போம். அதுவோ கோமதி திரைப்பட அரங்கிலோ, கிரிக்கெட்டு விளையாடுத் திடலிலோ, அடுத்த வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டி முன்னோ , யார் கண்டது? அவன் படிக்கும் புத்தகம் என்ன? பழகும் நண்பன் யார்? பார்க்கும் திரைப்படம் எது? என்பதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டாமா? பெற்றோரின் ஆதிக்க உணர்வான அடக்குமுறை அன்று, அக்கறை கலந்த ஈடுபாடு மிகவும் இன்றியமையாதது.

புகழ்வாய்ந்த கவிஞர் கோல்ரிட்சு என்பவரைக் காண அவருடைய இரசிகர் வந்திருந்தார். உரையாடலில் குழந்தை வளர்ப்புப் பற்றிய பேச்சு எழுந்தது. ''சிறுவர்கள் சுயமாகச் சிந்திக்கவும் சுதந்திரமாகச் செயல்படவும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அவர்கள் இளம்பருவத்திலேயே தாங்களாகவே தக்க முடிவெடுக்கக் கற்றுக்
கொள்ள வேண்டும்" என்றார் நண்பர். அதற்குக் கவிஞர் ''எனது தோட்டத்தில் உள்ள மலர்களைக் கண்டுகளிக்க சற்றே என்னோடு வாருங்கள்” என்று அவரைத் தனது தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். சுற்றுமுற்றும் பார்த்த நண்பர் ''தோட்டமா இது? எங்கும் களைகள் தானே மண்டிக் கிடக்கின்றன" என்றார். கவிஞரோ அவரை நோக்கிச் சொன்னார். "நண்பரே உண்மையில் இந்தத் தோட்டம் உரோசா மலர்கள் நிறைந்ததாகக் காட்சி அளிக்க வேண்டும். ஆனால் சென்ற ஆண்டு நான் அவை தானாகவே வளரட்டும் என்று நிலத்தைக் கொத்தி உரமிடாமலும், நீர் பாய்ச்சாமலும் விட்டுவிட்டேன். அதன் விளைவு தான் இது”. ஒடித்து வளர்க்காத முருங்கையும் அடித்து வளர்க்காத குழந்தையும் உருப்படாது, உறுபயன் தராது.

2. உள்ளத்தளவில் : லூக் 2:45, 46. இரண்டு நாட்கள் உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் தேடி அவரைக் காணாததால் கோவில் என்பது தேடலின் கடைசி இடமாக இருந்தது. சிறுவன் இயேசுவின் எண்ண ம், எழுச்சி, இலட்சியம், ஈடுபாடு, விருப்பம் ஆர்வம் இவை பற்றிய சரியான, தெளிவான பார்வை மரியாவுக்கும் யோசேப்புக்கும் இருந்ததுபோல் தெரியவில்லையே! ''நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” (லூக் 2:49) என்ற இயேசுவின் கேள்விக்கு வேறு என்ன பொருள்?

3. ஆன்ம அளவில் : இறைவன் சாயலாகப் படைக்கப்பட்ட காரணத்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் இறைவன் தொடர்பானவற்றில் இயல்பான ஓர் ஈர்ப்பு இருக்கும். நன்மையானவற்றில் தனி நாட்டம் இருக்கும். அதற்குக் காரணம் அவர்கள் கடவுளின் கறைபடியாச் சாயல்கள். அதனால் திருத்தூதர் பவுல் அறிவுறுத்துவார்: "தந்தையரே உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி அறிவு புகட்டி வளர்த்து வாருங்கள்” (எபேசி.6:4)

அறிவுரை மட்டுமல்ல பெற்றோரின் நடத்தையே முக்கியம். அறிவுரை வலியுறுத்தித் திணிக்கும் உணவு போன்றது. செரிப்பது கூடச் சிரமம். நடத்தையோ விரும்பி உண்ணும் உணவு போன்றது.
ஒரு குழந்தையின் வாழ்வில் மிகக் கடினமானது என்ன? அது தன் பெற்றோரின் முன்மாதிரி இன்றி நல்லவனாக முயல்வது.

விவேகானந்தருக்குப் பெற்றோர் வைத்த பெயர் நரேந்திரன். ஒருநான் தன் தந்தையைப் பார்த்து நரேந்திரன் கேட்கிறான் : "அப்பா, எனக்காக என்ன தயாரித்து வைத்திருக்கிறீர்கள்?" தந்தை சொல்கிறார்: "போய், அதோ இருக்கிறதே அந்தக் கண்ணாடியில் பார்”, பார்க்கிறான். அறிவும் ஆற்றலும் சுடரும் அழகான தோற்றம். "ஆம் உன்னைத்தான் தயாரித்திருக்கிறேன்", வீடு வாசல் சொத்து இவற்றைத் தயாரித்து வைத்திருக்கிறேன் என்பது நிறைவான பதிலாக இருக்காது. பொருள் தேடி வைப்பதை விட நல்ல பழக்க வழக்கங்கள் உண்டாகுமாறு வளர்ப்பதே தேடி வைக்கும் உன்னத செல்வமாகும்.

நிறைவாக, முப்பரிமாண வளர்ச்சியே குழந்தையின் முழுமனித வளர்ச்சி என்பார் மார்ட்டின் லூத்தர்கிங்.

எந்த வேலையில் இறங்கினாலும் உள்ளம் உடல் இரண்டையும் ஈடுபடுத்திச் செயல்பட்டால் அது நீளத்தில் வளர்ச்சி. அது கடமை உணர்வு. தன து, தனக்கு என்ற தன்னல உணர்வின்றி, சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்பவனாக வாழ்ந்தால் அது அகலத்தில் வளர்ச்சி. அது மனித நேயம். தன்னைப் படைத்த ஆண்டவனை மறவாமல் வழிபட்டு வாழ்ந்தால் அது உயரத்தில் வளர்ச்சி. அது இறைபக்தி.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் இறைவன் படைப்பினிலே
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் பெற்றோர் வளர்ப்பினிலே.

குழந்தை எழுதப்படாத ஒரு காகிதம் - அதில் அழகான ஓவியத்தை வரைவது பெற்றோரே!

குழந்தை செதுக்கப்படாத ஒரு பளிங்குக்கல் - அதில் எழில்மிக்க சிற்பத்தைச் செதுக்குவது பெற்றோரே!

குழந்தை அரியதோர் இசைக்கருவி - அதில் அதிசய, அபூர்வ | இராகத்தை மீட்டுவது பெற்றோரே!

ஒரு வீட்டில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே எப்போதும் பயங்கர சண்டை நடக்கும், ஒருநாள் சண்டை உச்சக்கட்டத்தை அடைந்தது, மருமகள் தன் கணவரிடம், "இந்தாங்க! இந்த வீட்டில் ஒன்று நான் இருக்க வேண்டும், அல்லது உங்கள் அம்மா இருக்க வேண்டும். உடனடியாக முடிவு சொல்லுங்கள் " என்றாள். அதற்குக் கணவர், "நீயும் வேண்டாம்; என் அம்மாவும் வேண்டாம், வேலைக்காரி மட்டும் இருந்தால் போதும்" என்றார். இதைக்கேட்டு மாமியார், மருமகள் இருவருமே அதிர்ச்சியுற்றனர்.

இன்று பல குடும்பங்களில் மகிழ்ச்சி இல்லை. கணவரும் மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர்; அல்லது மணமுறிவு பெற்று மறுமணம் புரிகின்றனர். இவற்றிற்கு உளரீதியான. பொருளாதார f"தியான, சமூக ரீதியான பல காரணங்கள் இருந்தாலும், அடிப்படையில் இறையியல் ரீதியான காரணங்களை ஆராய வேண்டும்,

ஆண்டின் இறுதிக் கட்டத்தில் திருக்குடும்பப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். அக்குடும்பத்தில் வளமை பொங்கவில்லை; செல்வம் கோலோச்சவில்லை, இருப்பினும் அக்குடும்பத்தில் மகிழ்ச்சி இருந்தது. ஏனென்றால் அக்குடும்பத்தில் கடவுளின் பிரசன்னமும் கடவுள் பயமும் இருந்தது,

| இன்றைய பதிலுரைப் பாடல் கூறுவதுபோல, ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவருக்கு நல்ல மனைவியும் நல்ல குழந்தைகளும் இருப்பர், நிலவுலகில் நீண்ட காலம் வாழ்ந்து, தங்களின் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பார்கள் (திபா 128), கடவுள் பயமே ஞானத்தின் ஆரம்பமாகும். கடவுளை மையப்படுத்தாத எந்தக் குடும்பமும் மகிழ்வுடன் வாழ இயலாது. "ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில் அதைக் கட்டுவோர் உழைப்பு வீணாகும்" (திபா 127:1).

திருக்குடும்பத்தில் கடவுளின் பிரசன்னம் என்றும் இருந்தது. அருளும் 2.காமையும் நிறைந்து விளங்கிய இயேசுவிடம் கடவுளின் மகிமை குடி கொண்டிருந்தது (யோவா 1:14) அருள் மிகப் பெற்ற மரியாவுடன் கடவுள் இருந்தார் (லூக் 1:28). நேர்மையாளரான யோசேப்பு (மத் 1:19) கடவுளின் திட்டத்தை அறிந்து தூய ஆவியாரால் கருவுற்றிருந்த மரியாவைத் தமது மனைவியாக ஏற்றுக்கொண்டார்,

ஒரே ஒருமுறை மட்டும் திருக்குடும்பத்தைச் சோகம் கவ்வியது. | மரியாவும் யோசேப்பும் இயேசுவை இழந்து துயரத்தில் மூழ்கினர்.
ஆனால், இழந்த இயேசுவை மூன்றாம் நாள் மீண்டும் கோவிலில் கண்டு அளவற்ற ஆனந்தம் அடைந்தனர் (லூக் 2:41-46). நமது வீட்டில் எல்லா நவீன வசதிகளும் இருந்தும் நாம் நிம்மதியாக இல்லை , ஏனெனில் நாம், கடவுளையே தொலைத்து விட்டோம்.

ஒருவர் தமது வீட்டின் சாவியைத் தொலைத்துவிட்டு அதை ஒரு மின் விளக்குக் கம்பத்தின் அடியில் தேடினாராம். ஏனெனில் அங்குதான் வெளிச்சம் இருந்ததாம். சாவியைத் தொலைத்தது ஓரிடம், அதைத் தேடுவது வேறோரிடம்! நாம் இவ்வுலகக் கவர்ச்சியில் கடவுளைத் தேடுகிறோம். அதில் நாம் கடவுளைக் காண முடியாது. மரியாவும் யோசேப்பும் இயேசுவைப் பல இடங்களில் தேடியும் அவரைக் காண முடியவில்லை, இறுதியில் அவரைக் கோவிலில் கண்டு அகமகிழ்ந்தனர் (லூக் 2:44 - 46).

"என் தந்தையின் இல்லம்' (லூக் 2:43) என்று இயேசு கோவிலைக் குறிப்பிடுகிறார். ஆண்டவரின் நாள் என்று அழைக்கப்படும் ஞாயிறு அன்றாவது குடும்பமாகக் கோவிலுக்குச் செல்வோம். எல்லா இறைமக்களுடன் இணைந்து. இறைவார்த்தையைக் கேட்டு, திருவிருந்தில் பங்கேற்று, கடவுளின் அருளையும் மன்னிப்பையும் பெற்று மகிழ்வோம், கோவிலில் மட்டுமல்ல, 'இல்லத் திருச்சபை' என்று அழைக்கப்படும் நமது குடும்பத்தில் திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுவோம் (கொலோ 3:16),

கலகலப்பில் தொடங்கிய திருமண வாழ்வு கைகலப்பில் முடிவடைகிறது. திருமணத்திற்கு முன் அவள் ஒர் "ஏஞ்சல்;" திருமணத் திற்குப்பின் அவள் ஓர் "இடைஞ்சல்;" திருமணத்திற்கு முன்பு, "உனக்கும் எனக்கும் Sorictlu Sontling திருமணத்திற்குப் பின்பு உனக்கும் எனக்கும் Notting, Naling." காரணம், தலைக்கனம், ஆணவம், தான் என்ற அகந்தை; விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லை .
ஒரு பங்குத் தந்தையிடம் ஒரு கணவர் வந்து, "என் மனைவி என்னை மதிப்பதில்லை; எனக்குக் கீழ்ப்படிவதில்லை; அவளை அடக்குவது எப்படி என்று சொல்லித்தாங்க சாமி!” என்று கேட்டார், அதற்கு அவர், “அது தெரிஞ்சா நான் எப்பா சாமியார் ஆனேன்?" என்றாராம்!
"அவளை அடக்கு, அல்லது அவளுக்கு அடங்கு" என்ற நிலைப் பாட்டை எடுக்காமல், "அவளுக்கு விட்டுக் கொடு; அவளுக்கு அதிகாரத்தைப் பிட்டுக்கொடு" என்ற நிலைப்பாட்டை எடுப்பதுவே சாலச் சிறந்தது.
திருக்குடும்பத்தில் ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்த வில்லை , ஒருவர் ஒருவரை மதித்து அன்புக்கு அடிமையாகினர்,
தொண்டு ஏற்பதற்கல்ல. தொண்டு ஆற்றுவதற்கே கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார் (மாற் 10:45). கிறிஸ்துவின் மனநிலை நம்மை ஆட்கொள்வதாக.

குடும்பத்தில் பிள்ளைகள், கணவர்-மனைவி ஆகிய இருவரின் அன்புக் கனிகள்; அன்பின் நீங்காத நினைவுச் சின்னங்கள், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாமல் இருக்க வேண்டும்; பிள்ளைகளும் பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டும் (கொலோ 3:20-21),

மகள் தன் அப்பாவிடம், "நான் ஒரு பையனைக் காதலிக்கின்றேன்" என்றாள். அப்பா அவளிடம், "பையன் எப்படி இருக்கிறான்?" என்று கேட்டதற்கு அவள், "பையன் வயிற்றுக்குள்ளே உதைக்கிறான்" என்றாள். வேடிக்கையல்ல, வேதனை; கதையல்ல, உண்மை! இன்றைய இளைஞரும் இளம் பெண்களும் சமூக ஊடகத்தின் தாக்கத்தால், தங்கள் பாலுணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் திருமணத்திற்கு முன்பே பாலுறவு கொண்டு, தங்கள் வாழ்வைப் பாழ்படுத்துவதுடன், வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டித் தங்களை வளர்த்தப் பெற்றோர்களுக்கு அவமானத்தைத் தேடித் தருகின்றனர். இந்நிலையில் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு உற்ற நண்பர்களாகவும் சிறந்த வழிகாட்டிகளாகவும் திகழ அழைக்கப்படுகின்றனர்.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விவிலியம் காட்டும் தீர்வு தன்னலமற்ற அன்பு, "அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்: அனைத்தையும் எதிர் நோக்கியிருக்கும் ... அன்பு ஒருபோதும் அழியாது" (1 கொரி 3:7-8)

எங்கே அன்பு உண்டோ அங்கு சுமையில்லை; அப்படியே சுமையிருந்தாலும் அது சுகமான சுமையாக மாறிவிடுகிறது.குழந்தையே தந்தை


நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம் உலகின் ஏதோ ஒரு மூலையில் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும்: ஒரு ஆணும், இன்னொரு ஆணும் அல்லது ஒரு பெண்ணும். இன்னொரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டிருப்பர். அல்லது இன்னொரு பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதாக டுவிட் செய்து கொண்டிருப்பார். அல்லது நாம் இருவரும் நண்பர்களாகவே இருப்போம் என ஓர் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ முடிவெடுத்துக்கொண்டிருப்பர். அல்லது நம் சேர்ந்து வாழ்தலை இன்றோடு முடித்துக்கொள்வோம் என்ற இருவர் தத்தம் வீடுகள் நோக்கிச் செல்வர். அல்லது ஒரு பெண் தன் நண்பனுக்கு வாடகைத் தாயாக இருக்க முன்வருவதாக வாக்குறுதிப் பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொண்டிருப்பாள்.

'இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்' என்று ஆண் பெண் ஏற்றுக்கொண்டு, 'ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். அவள், 'ஆண்டவரின் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்'' என்று சொன்ன மனிதக் குடும்பம் கடந்து வந்த பாதையை நினைக்கும்போது, குடும்பம் என்ற நிறுவனம் இன்று தேவையற்ற சுமையாக, அல்லது தேவைக்கேற்ற சுகமாகப் பார்க்கும் நிலையில் வந்து நிற்கிறது.

இந்தப் பின்புலத்தில் இன்று நாம் கொண்டாடும் 'திருக்குடும்ப திருவிழா'வை எப்படிப் பொருள் கொள்வது? கடவுளால் படைப்பின் தொடக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பம் ஒரு தோல்வியா?

'குழந்தையே தந்தை' என்ற மையக்கருத்தில் இன்றைய நாளில் சிந்திப்போம்.

ஆங்கிலத்தில், 'தெ சைல்ட் இஸ் த ஃபாதர் ஆஃப் தெ மேன்' (குழந்தையே மனிதனின் தந்தை) என்ற ஒரு சொல்லாடல் உண்டு. இது ஆங்கில ஆல்பம் பாடல் ஒன்றின் வரிதான். இதை எழுதியவர்கள் பிரயன் வில்சன் மற்றும் ஃபான் டைக் பார்க்ஸ். இதன் பொருள் என்ன? 'குழந்தை எப்படி மனிதனின் தந்தையாக இருக்க முடியும்? மனிதன் தான் குழந்தையின் தந்தை' என நினைக்கிறீர்களா? நீங்கள் நினைப்பது சரிதான். ஆனால், இந்தச் சொல்லாடலின் பொருள் வேறு. குழந்தையாக இருக்கும்போது ஒருவர் கற்றுக்கொள்ளும் பழக்கங்களும், பண்புகளுமே ஒருவரை மனிதனாக உருவாக்குகின்றன. இந்த நிலையில் குழந்தை மனிதனின் தந்தையாக இருக்கிறது. குழந்தையின் பழக்கங்களும், பண்புகளும் எங்கிருந்து வருகின்றன? குடும்பத்திலிருந்துதான். குழந்தையை தந்தையாக மாற்றுவது குடும்பம்.

திருக்குடும்பத் திருவிழாவின் வாசகங்கள் நம்மை குழந்தை பிறப்பு நிகழ்வுகளிலிருந்து குழந்தை வளர்ப்பு நிகழ்வுக்கு அழைத்துச் செல்கின்றன. குழந்தைகள் தந்தையர்களாக உருவெடுக்க குடும்பம் அவசியமானது என்பதை இன்றைய மூன்று வாசகங்களும் நமக்குச் சொல்கின்றன.

இன்றைய முதல் வாசகம் (காண். 1 சாமு 1:20-22, 24-28) சாமுவேல் நூலின் முதல் பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. சாமுவேலின் பிறப்பு மிகவும் சோகமான பின்பலத்தோடு தொடங்குகிறது. எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த எல்கானாவுக்கு இரண்டு மனைவியர் - அன்னா ('அருள்'), பெனின்னா ('விலைமதிப்பில்லாத கல்' 'முத்து' 'மாணிக்கம்' 'மரகதம்'). பெனின்னாவுக்கு குழந்தைப்பேறு இருக்கிறது. அன்னாவுக்கு இல்லை. இதை ஒரு குறையாக அன்னாவிடம் சுட்டிக்காட்டுகிறார் பெனின்னா. ஆக, வீட்டில் அவருக்கு மிஞ்சியதெல்லாம் கண்ணீரும், கேலிப்பேச்சும்தான். இதை கடவுளிடம் முறையிட சீலோவில் அமைந்திருந்த ஆண்டவரின் ஆலயத்திற்கு செல்கின்றார். அங்கிருந்த ஏலி என்னும் குரு அன்னாவின் செபத்தை குடிவெறி என தவறாகப் புரிந்து கொண்டு அவரைக் கடிந்து கொள்கிறார். அதே நேரத்தில், 'மனநிறைவோடு செல்ல. இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளை கேட்டருள்வார்' என்று நல்ல வார்த்தையும் சொல்கிறார். மேலும், அன்னா ஆண்டவருக்கு ஒரு வாக்குறுதியும் கொடுக்கிறாள். அன்னாவின் எதிர்பார்ப்புக்களைவிட  கடவுளின் அருள் மிகுதியாக இருக்கிறது. அன்னா ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததோடல்லாமல், அந்தக் குழந்தை இஸ்ரயேலின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக மாறுகிறது.

சாமுவேல் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு அன்னா மிக முக்கியக் காரணம். முதலில், அன்னா குழந்தையின் உடல் ஊட்டத்திற்கு உதவுகிறார். மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் பால் கொடுக்கிறார். அடுத்து, தன் குழந்தையைச் சரியான பாதையில் தூக்கி நிறுத்துகின்றார். 'நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்' என்று சொல்லி, குழந்தைக்கு 'சாமுவேல்' எனப் பெயரிடுகிறாள். இவள் பெயரிட்டது போலவே, குழந்தையும் வளர்ந்து தன் வாழ்க்கை முழுவதும் கடவுள் சொல்வதைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. மேலும், அன்னா தன் கணவரிடம், 'பையன் பால் குடி மறந்ததும் அவனை எடுத்துச் செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான்' என்கிறாள். இவ்வாறாக, குழந்தையின் வாழ்க்கைக்கான முடிவை தானே எடுக்கின்றாள். அக்காலச் சமுதாயம் அத்தகைய உரிமையை தாய்க்கு வழங்கியது. 'மேமல்ஸ்' என்று சொல்லப்படும் பாலூட்டி இனம் (சில விலங்குகள் மற்றும் மனிதர்கள்) தன் குழந்தைக்கு கொடுக்கும் மார்பகப் பாலை நிறுத்தும், அல்லது குழந்தை தாயிடம் பால் குடிக்கும் நேரம்தான் பால்குடி மறக்கும் பருவம். இது குழந்தையின் வாழ்வில் மிக முக்கியமான பருவம். இந்த பருவத்தில்தான் குழந்தை சார்புநிலையிலிருந்து, தனித்தன்மை (அடானமி) நிலைக்கு கடந்து போகின்றது. ஆங்கிலத்தில் இந்த பருவத்தை 'வீனிங் பிரியட்' என அழைக்கின்றனர். 'வீன்' என்ற ஆங்கில வார்த்தைக்கு 'பழுத்தல்' (அதாவது, பழம் பழுத்தல்) என்பது பொருள். திராட்சை செடியில் பழுத்த கனிக்கு இனி அந்தச் செடியில் வேலையில்லை. அது தன் தாயாகிய செடியை விட்டு விடைபெறும் நேரம் வந்துவிட்டது. இனி அது தாயோடு ஒட்டிக்கொண்டிருந்தால், புழு வைத்து தாய்க்கும் ஆபத்தாகிவிடும். தனக்கும்; ஆபத்தாகிவிடும். பால்குடி பருவத்தில் தாய் என்னும் திராட்சைச் செடியிலிருந்து உறவுநிலை மாறத் தொடங்குகிறது குழந்தைக்கு. ஒரு உறவிலிருந்து அடுத்த உறவுக்கு மாறும் பாதைதான் இந்தப் பருவம். ஆனால் இதை தாயின் உறவின் முறிவு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. உளவியல் அடிப்படையில் எந்த ஒரு குழந்தை இந்த பருவத்தை சரியாக கடக்கிறதோ, அந்தக் குழந்தையே 'நிறைவு பெற்ற குழந்தை' (ஃபுல்பில்ட்) என்று அழைக்கப்படுகிறது. ஏன்? ஒரு குழந்தை அதிக நாள் பால் குடித்தது என்றால் அது பிற்காலத்தில் அடுத்தவர்களை சார்ந்தே நிற்கும் அல்லது அடுத்தவர்களைக் கேட்டே முடிவெடுக்கும் மனிதராக உருப்பெறுகிறது. குறைந்த நாளே பால் குடித்தது என்றால், அடிப்படையிலேயே பாதுகாப்பற்ற, யாரிடமும் ஒட்டிக்கொள்ளாத, தன்னை மட்டுமே மையப்படுத்துகின்ற மனிதராக உருப்பெறுகிறது. சாமுவேலின் தாய் தன் குழந்தையை ஒரு நிறைவுபெற்ற குழந்தையாக ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்ய விழைகிறாள்.

ஆண்டவரின் இல்லத்திற்கு குழந்தையை அழைத்துச் செல்கின்ற அன்னா, 'அவன் தன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்' என்று கடவுளுக்கான நாசீராக ஒப்படைக்கின்றாள். அவன் 'ஆண்டவருக்கு' அல்ல, 'ஆண்டவருக்கே' அர்ப்பணிக்கப்பட்டவன். ஆக, அவனுடைய அர்ப்பணம் இனி வேறு யாருக்கும் இல்லை. ஆண்டவருக்கு மட்டுமே. இப்படியான கடினமான, தூய்மையான அர்ப்பண வாழ்வு மற்ற இஸ்ரயேலருக்கு ஒரு பாடமாக இருந்தது. அவர்களைத் தூய்மை வாழ்வுக்குத் தூண்டியது. இத்தகைய உயர்ந்து அர்ப்பணத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கிறாள் அன்னா. தன் ஒரே மகனை, கடவுள் கொடுத்த கொடையை அவருக்கே கொடுக்கிறாள். இதுவே அன்னாவின் உயர்ந்த தியாகம். தன் மகனைத் தனக்கென வைத்துக்கொள்ளாமல் ஆண்டவரின் இல்லத்தில் அவன் வளர, அவருடைய அழைப்பைக் கேட்டு இஸ்ரயேலின் நடுவராக, ஆள்பவராக, அருள்பணியாளராக மாற விட்டுவிடுகின்றாள்.

சாமுவேல் என்ற குழந்தை இத்தகைய தந்தை என்ற நிலை அடையக் காரணம் அன்னாவும் அவருடைய கணவரும்தான், அதாவது, அவருடைய குடும்பம்தான். அன்னா தன் குழந்தையை உச்சி முகர்ந்து கொண்டாடிவிட்டு, ஆண்டவரிடம் கொடுத்துவிடுகிறார். இதுதான் முழுமையான அர்ப்பணம். அதாவது, எதையும் திரும்ப எதிர்பார்க்காத அர்ப்பணம். இந்த அர்ப்பணம்தான் குடும்பத்தில் கணவனையும், மனைவிiயும் இணைக்கிறது. சேர்ந்து வாழ்தல் அல்லது ஒரேபாலினத் திருமணம் அல்லது வாடகைத் தாய்-தந்தை - இந்த எல்லாவற்றிலும் ஒருவர் மற்றவருக்கு சொல்வது என்ன? 'உன் இடத்தில் நான் யாரையும் வைக்க முடியும்!' ஆனால், திருமணம் என்ற உறவில் மட்டும்தான், 'நீ எனக்கு மட்டும்தான்' என்ற நிலை உருவாகிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 யோவா 3:1-2, 21-24) கடவுளின் குடும்பம் என்ற பெரிய குடும்பத்தைப் பற்றிப் பேசுகிறது. 'கடவுளின் மக்கள்' என அழைக்கப்படும் மக்கள், அந்த நிலையில் நிலைத்திருக்க, 'நம்பிக்கை,' 'அன்பு' என்ற இரண்டு பண்புகள் தேவைப்படுகின்றன. அல்லது, 'நம்பிக்கை' என்ற கணவனும், 'அன்பு' என்ற மனைவியும் இணைந்து 'கடவுளின் மக்களை' பெற்றெடுக்கின்றனர். இந்த இரண்டும் கடவுளின் மக்களை அவர்கள் தொடர்ந்து அதே நிலையில் நிலைத்திருக்க உதவி செய்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 2:41-52) திருக்குடும்பம் ஒரு பிரச்சினையைச் சந்திக்கிறது. சிறுவன் இயேசுவைக் காணவில்லை. திருக்குடும்பம் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேம் செல்கிறது. அந்த நேரத்தில் இயேசுவுக்கு வயது 12. யூத சமூகத்தில், 12 வயதில்தான் ஒரு குழந்தை முழுப்பருவம் அடைகிறது. இந்த வயதிலிருந்து அக்குழந்தை யூதச் சட்டங்களைத் தெரிந்துகொள்ளவும், அவற்றின்படி நடக்கவும் வேண்டும் என்பது வழக்கம். அந்தச் சட்டங்களில் ஒன்றுதான் எருசலேமுக்குத் திருப்பயணம் செல்வது. இந்த வழக்கப்படியே, இயேசுவை அழைத்துக்கொண்டு தங்களின் ஆண்டு ஆன்மீகக் கடமைகளை நிறைவேற்ற திருக்குடும்பம் எருசலேமுக்கு வருகிறது.

இங்கே நற்செய்தியாளர் லூக்காவின் நோக்கம் இயேசுவைக் கடவுளின் மகன் என்று முன்வைப்பதாகவும், இயேசு செய்ய வேண்டிய பணிக்கான அர்ப்பணத்தை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது. தன் பெற்றோருடன் ஆலயம் வரும் இயேசு, அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தன் தந்தையின் இல்லத்தில் தங்கிவிடுகின்றார். அந்த இல்லத்தில்தான் அவர் மறைநூல் வல்லுநர்கள் மறைநூலைப் புரிந்துகொள்ளும் விதம் பற்றிக் கேள்வியெழுப்புகின்றார். சிறுவனாய் இருந்தாலும், அவருக்குத் தன் பயணம் முழுவதும் இந்த ஆலயத்தை மையப்படுத்தியதே என்று அவர் அறிந்திருந்தார்.

இயேசுவின் பெற்றோர்களின் நிலை மிகவும் கடினமானதாக இருக்கிறது. இது மரியாவின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. இருந்தாலும், தாங்கள் செய்ய வேண்டிய வேலையைச் சரியாகச் செய்கிறார்கள். முதன் முதலாக இயேசுவை எருசலேமுக்கு அழைத்து வந்து அவருக்கு அந்த நகரையும், ஆலயத்தையும் அறிமுகம் செய்கின்றனர். காணாமல்போன இயேசுவைக் கண்டுபிடித்தபின் அவரைக் கடிந்துகொள்ளும் மரியா இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டவுடன் மௌனம் காக்கிறார்: 'இந்நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.'

ஆக, இயேசுவின் பெற்றோர் இயேசு என்னும் குழந்தையை அறிவு, கட்டின்மை, ஞானம், உடல்வளர்ச்சி பெற்ற தந்தையாக மாற்றுகின்றனர்.

இவ்வாறாக, குழந்தையே தந்தையாக மாறுவதற்கு அதன் குடும்பம் மிக அவசியம். அது சாமுவேல், இயேசுவின் சிறிய குடும்பமாக இருந்தாலும் சரி. அல்லது, கடவுளின் மக்கள் என்ற பெரிய குடும்பம் என்றாலும் சரி. தன்னலமில்லாத் தாயாக தன் ஒரே மகனைத் தயாரித்துக் கடவுளுக்குக் கொடுத்தாள் அன்னா. நம்பிக்கை மற்றும் அன்பின் வழியே கடவுளின் குழந்தையாக மாற முடியும் என தன் குழுமத்திற்கு அறிவுறுத்துகிறார் யோவான். தங்களின் இரத்த உறவுக் குடும்பத்தைக் கடந்த ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர் தன் மகன் என அறிந்துகொள்கின்றனர் இயேசுவின் பெற்றோர். இவ்வாறாக, பெற்றோர்கள் தங்கள் வாழ்வின் சூழல்கள் வௌ;வேறாக இருந்தாலும் தங்களின் தாராள உள்ளத்தாலும், தியாகத்தாலும் தங்கள் குழந்தைகளைத் தந்தையராக்குகின்றனர். அத்தந்தையர்கள், 'ஆண்டவரின் இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்' (திபா 84) என்ற நிலையை அடைகின்றனர்.

இப்படியான ஒரு ரொமான்டிக் குடும்பமாக இன்றைய நம் குடும்பங்கள் இருப்பதில்லை.

கணவன்-மனைவி சண்டை, திருமணத்திற்குப் புறம்பே உறவு, அவ்வுறவைத் தக்க வைக்க தன் துணையையும், பிள்ளைகளையும் கொல்லும் நிலை, குடும்ப வன்முறை, மணமுறிவு, உடைந்த குடும்பங்கள் என நிறைய எடுத்துக்காட்டுகளை நாம் அன்றாடம் செய்தித்தாள்களிலும், மற்ற ஊடகங்களிலும் பார்க்கிறோம். நம் குடும்பமும் இந்த ஒரு இக்கட்டான நிலையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது. தங்கள் குழந்தைகள்மேல் பொறுப்புணர்வு குறைந்த பெற்றோர்களையும், தங்கள் பெற்றோர்களை மதிக்காத குழந்தைகளையும்தான் இன்று நாம் அதிகம் பார்க்கிறோம். இந்தப் பின்புலத்தில் திருக்குடும்பம் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறது.

பெற்றோர்களின் வாழ்க்கைமுறை குழந்தைகளை நிறையப் பாதிக்கிறது. 'நண்டு புறாவைப் பெற்றெடுப்பதில்லை' என்பது ஆப்பிரிக்க பழமொழி. ஆக, பெற்றோர்களைப் போலவே பிள்ளைகளும் இருக்கிறார்கள், இயங்குகிறார்கள். ஒரு சமூகத்தின் வளர்ச்சியின் அளவுகோலாக இருப்பது குடும்பமே.

இன்று நாம் நம் இருப்பில் இருக்க நம் குடும்பங்கள் காரணமாக இருப்பதுபோல, நம் குழந்தைகளின் இருப்பு இருக்க நம் குடும்பங்கள் காரணமாக இருத்தல் வேண்டும். மனுக்குலத்தின் மிகத் தொன்மையான இந்த நிறுவனத்திலிருந்தே மனுக்குலம் தழைக்கிறது. இந்நிறுவனம் வழியாகவே குழந்தை தந்தையாகிறது.

ஏனெனில், குழந்தையே தந்தை.

அன்னாவின் தியாக உள்ளம், எல்கானாவின் மனைவியை மதிக்கும் குணம், சாமுவேலின் நீடித்த அர்ப்பணம், யோசேப்பின் தேடல், மரியாளின் ஏக்கம், இயேசுவின் பணித்தெளிவு ஆகிய அனைத்தும் நம் குடும்பங்களுக்கும் ஊக்கம் தருவனவாக.

இன்றைய நாளில் நம் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, நம் உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் அனைவரையும் எண்ணிப்பார்த்து இவர்களின் இருப்பிற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். இவர்களே நம் ஒவ்வொருவரின் வேர்கள்.

குழந்தையரைத் தந்தையர்களாக, தாயார்களாகக் கனவு கண்டவர்களும், அந்தக் கனவுகளை நனவுகளாக்கியவர்களும் இவர்களே!
 

அன்பில் மலரும் குடும்பங்கள்

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,-arulvakku.com
 

தாய் தந்தை அவர்களுடைய ஒரே செல்ல மகள் என்றிருந்த குடும்பத்தில் ஒரு நாள் மகள் தந்தையிடம் சென்று, “அப்பா! எனக்கு ஒரு சந்தேகம்... மனித இனம் எப்படித் தோன்றியது? சொல்லுங்கள்” என்று கேட்டாள். அதற்குத் தந்தை, “கடவுள் ஆதாமையும் ஏவாளையும் படைத்தார், அவர்களிடமிருந்து பிள்ளைகள் தோன்றினார்கள். அவர்களுடைய பிள்ளைகளிலிருந்து பிள்ளைகள் தோன்றினார்கள். இப்படித்தான் மனித இனம் தோன்றியது” என்றார். மகளும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து நகர்ந்து சென்றார்.

பின்னர் சமயலறையில் வேலைபார்த்துக் கொண்டிருந்த தாயிடம் சென்ற மகள் தந்தையிடம் கேட்ட அதே கேள்வியை கேட்டாள். அவளோ, “மனித இனம் குரங்கிலிருந்து தோன்றியது” என்றாள்.

இருவர் சொன்ன பதிலையும் கேட்டுக் குழம்பிப்போன மகள் மீண்டுமாக தந்தையிடம் சென்று, “அப்பா மனித இனம் எப்படித் தோன்றியது என்ற ஒரு கேள்விக்கு இருவரும் இருவேறு விதமாகப் பதில் தருகின்றீர்கள். இதில் எது உண்மை?” என்று கேட்டார். அதற்கு அவளுடைய தந்தை, “நான் என்னுடைய முன்னோர் எப்படித் தோன்றினார்கள் என்று சொன்னேன். உன் தாயோ அவளுடைய முன்னோர்கள் எப்படித் தோன்றினார்கள் என்று சொல்கின்றார். இதில் குழம்புவதற்கு என்ன இருக்கின்றது?” என்றார்.

இதைக் கேட்டு சமையறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மனைவி தன்னுடைய கணவன்மீது செல்லமாய் கோபம் கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள். உடனே கணவன் மனைவிடத்தில் சென்று, அவளை சமாதானப்படுத்தி ஒரு வழிக்குக் கொண்டுவர அக்குடும்பத்தில் இன்பம் கரைபுரண்டு ஓடியது.

சிறு சிறு சண்டைகள், ஒருவர் ஒருவர்மீதான உள்ளார்ந்த அன்புப் பரிமாற்றங்கள். இவைகள்தான் ஒரு குடும்பத்தை இன்னும் உறவில் வலுப்பெறச் செய்கின்றன. “நெருப்பில்லாமல் மனித முன்னேற்றமில்லை, குடும்ப உறவில்லாமல் வாழ்க்கை இல்லை” என்பார் ராபர்ட் இங்கர்சால் என்னும் எழுத்தாளர். ஆம், மனித முன்னேற்றத்திற்கான விதை குடும்பத்தில்தான் விதைக்கப்படுகின்றன. பின்னர் அது வளர்ந்து நிறைந்த பலனைக் கொடுக்கின்றது.

இன்று நாம் திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகின்றோம். இந்த நல்ல நாளில் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

‘கல்லாலும் மண்ணாலும் செங்கற்களாலும் மட்டும் ஒரு வீடானது கட்டப்படுவதில்லை, அன்பினாலேயே ஒரு வீடு கட்டப்படுகின்றது” என்பார் மறைந்த நா. முத்துக்குமார் என்ற கவிஞர். ஆம், அன்பில்தான் ஒரு வீடானது கட்டப்படுகின்றது. அப்படி அன்பில் கட்டப்படாத வீடானது ஒருபோதும் உறுதியாக இருக்காது என்பதுதான் உண்மை.

நற்செய்தி வாசகத்தில் அன்பில் கட்டப்பட்ட ஒரு வீட்டைக் குறித்துப் படிக்கின்றோம். அக்குடும்பம் வேறெதுவும் கிடையாது இயேசு மரி சூசையை உள்ளடக்கிய திருக்குடும்பம்தான். இக்குடும்பத்தில்தான் எத்துணை அன்பு கரைபுரண்டு ஓடியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கும்போது உண்மையிலே மெய்சிலிர்க்கின்றது. குறிப்பாக அன்னை மரியா தன்னுடைய கணவர் சூசையப்பர் மீதும், இயேசுவின் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருப்பார்; ஒருசிறந்த மனைவிக்குரிய, தாய்க்குரிய இலட்சணங்களோடு விளங்கி இருப்பாள் என்று சொன்னால் அதில் மாற்றுக் கருத்து கிடையாது. இத்தனைக்கும் மரியா தன்னுடைய கணவராகிய யோசேப்பு தன்னைவிட நிறைய வயது மூத்தவராக இருந்தாலும்கூட அவர்மீது மிகுந்த அன்பு காட்டியிருப்பார். அந்த அன்பில் யோசேப்பும் மகிழ்ந்திருப்பார்.

ஆகையால், ஒவ்வொரு மனைவிமாரும் மரியாவைப் போன்று தன்னுடைய கணவர்மீதும் பிள்ளைகள் மீதும் மிகுந்த அன்பு காட்டி அவர்களை சிறந்த விதமாய் பராமரிக்கவேண்டும் என்பதுதான் நம்முடைய மனதில் பதிய வைக்கவேண்டிய முதன்மையான செய்தியாக இருக்கின்றது.

யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம், “கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, (அவருடைய மகன் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு) ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும். கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கின்றார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கின்றார் ” என்று. ஆம், அன்னை மரியா கடவுளின் கட்டளையான அன்பினை தன்னுடைய கணவர்மீதும், மகன்மீது காட்டி அதனைக் கடைப்பிடித்துவந்தார். அதனாலேயே கடவுளின் அன்பு அக்குடும்பத்தில் என்றும் குடிகொண்டிருந்தது. (மரியா சூசையப்பர்மீது அன்பு காட்டினார் என்று சொல்லும்போது, சூசையப்பர் மரியாவின் மீதும் இயேசுவின் மீதும் அன்பு காட்டவில்லை என்று அர்த்தம் கிடையாது. அவரும் மரியாவின் மீது மிகுந்த அன்பு காட்டினார் என்பதே உண்மை)

ஒரு குடும்பம் சிறந்த, முன்மாதிரியான குடும்பமாக விளங்குவதற்கு அந்த குடும்பத்தில் இருக்கின்ற மனைவி மட்டும் அன்புள்ளம் கொண்டவராக இருப்பது போதாது. அக்குடும்பத்தில் இருக்கின்ற கணவனும் அன்புள்ளம் கொண்டவராக இருக்கவேண்டும். அதிலும் குறிப்பாக கணவர் தன்னுடைய மனைவிக்கு மிகுந்த மதிப்பளிப்பவராகும் அவருக்கு முன்னுரிமை கொடுப்பவராகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் அந்தக் குடும்பம் முன்மாதிரியான குடும்பமாய் விளங்கமுடியும். இயேசு, மரி, சூசையைக் கொண்ட குடும்பம் திருக்குடும்பமாக துலங்கியதற்கு சூசை தன்னுடைய மனைவி மரியாவுக்கு மிகுந்த மதிப்பளித்ததை ஒரு காரணமாகச் சொல்லலாம். இன்றைய நற்செய்தி வாசகம் சூசை தன்னுடைய மனைவி மரியாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்ததற்கு மிகச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.

நற்செய்தி வாசகத்தில் சூசையும் மரியாவும் குழந்தை இயேசுவும் பாஸ்கா விழாவிற்காக எருசலேம் செல்கின்றார்கள். சென்ற இடத்தில் குழந்தை இயேசுவோ தொலைந்து போய்விடுகின்றார். மூன்று நாட்களாக அவரை சூசையும் மரியாவும் தேடி, இறுதியில் எருசலேம் திருக்கோவிலில் கண்டு கொள்கின்றார்கள். இங்கே ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும், எருசலேம் திருக்கோவிலானது எல்லாரும் குழுமி இருக்கக்கூடிய ஒரு பொதுவான இடம். பொது இடத்தில் பெண்கள் பேசுவதற்கு உரிமை மறுக்கப்பட்ட காலம் அது. அக்காலத்திலும் கூட சூசை தன்னுடைய மனைவி மரியாவைப் பேச அனுமதிக்கின்றார். அதனால்தான் மரியா, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோம்” என்கின்றார். மரியா பொது இடத்த்தில் இவ்வாறு பேசியது, சூசை தன்னுடைய மனைவி மரியாவுக்கு மிகுந்த முக்கியத்துவமும் மதிப்பும் அளித்து வந்தார் என்பதைத்தான் காட்டுகின்றது. ஆகையால், ஒவ்வொரு கணவரும் தன்னுடைய மனைவிக்கு மிகுந்த மதிப்பளித்து, அவருக்கு தன்னுடைய வாழ்வில் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

இன்றைக்கு நிறைய குடும்பங்களில் மனைவிக்கு மதிப்பில்லாத சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கின்றது. மனைவியை ஏதோ போகப் பொருளாகவும் குழந்தை பெற்றெடுக்கின்ற எந்திரமாகவும் பார்ப்பதுகூட நிறைய குடும்பங்களில் நிலவும் அவல நிலையாகத்தான் இருக்கின்றது. இந்த நிலை மாறவேண்டும், சூசையைப் போன்று ஒவ்வொரு கணவரும் தன்னுடைய மனைவிக்கு மிகுந்த மதிப்பளிப்பவராக இருக்கவேண்டும்.

மனைவியும் கணவனும் ஒரு திருக்குடும்பத்தைக் கட்டி எழுப்புவதற்கு எப்படி இருக்கவேண்டும் என்று சிந்தித்த நாம், ஒரு குடும்பத்திற்கு கிடைக்கின்ற மிகப்பெரிய சொத்தாகிய பிள்ளை(கள்) எப்படி இருக்கவேண்டும், அது எப்படி வளர்க்கப்படவேண்டும். குடும்பத்தில் அதனுடைய பங்கு என்ன என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகின்றோம்.

இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் பெற்றோர்கள் தன்னுடைய பிள்ளைகளை இறைவழியில் எப்படி வளர்த்தெடுக்கவேண்டும் என்பதைக் குறித்துப் பேசுகின்றன. முதல் வாசகத்தில் அன்னா தனக்குப் பிறந்த சாமுவேலை ஆண்டவரின் ஆலயத்தில் ஒப்புக்கொடுத்து, அவரை கடவுளின் பிள்ளையாகவே வளர்த்தெடுக்கின்றாள். நற்செய்தி வாசகத்தில் சூசையும் மரியாவும் பனிரெண்டு வயது நிரம்பிய இயேசுவை எருசலேமில் நடந்த பாஸ்காவிற்கு அழைத்துச் சென்று, அவரை இறைவழியில் வளர்த்தெடுத்து, கடவுளுக்கு உகந்தவராக மாற்றுகின்றார்கள். இவ்வாறு சூசையும் மரியாவும் குழந்தை இயேசுவை நல்வழியில் வழிநடத்திச் சென்ற மிகச் சிறந்த பெற்றோரை விளங்குகின்றார்கள்.

இன்றைக்கு உள்ள பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை இறைநெறியில் வளர்கின்றார்களா?, அவர்கள்மீது உண்மையான அன்பு காட்டுகின்றார்களா? அவர்களுக்கு போதுமான நேரத்தை ஒதுக்கின்றார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது.

குருவானவர் ஒருவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையிலும் அருகாமையில் இருக்கும் சிறைச்சாலைக்குச் சென்று, அங்கிருக்கும் கைதிகளுக்கு ஆற்றுப்படுத்தும் பணியினைச் (Counselling) செய்வது வழக்கம். ஒருநாள் அவர் அங்கு சென்றபோது ஒரு சிறைக்கூடத்தில் பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறுவன் ஒருவன் இருந்தான். அவர் அவனைத் தன் அருகே அழைத்து, அவன் தோள்மேல் கைகளைப் போட்டு வாஞ்சையோடு பேசியபோது அவன் கண்ணீர்விட்டு அழுது தன்னுடைய கதையை குருவானவரிடம் சொல்லத் தொடங்கினான். “என்னுடைய குடும்பம் வசதியான குடும்பம், என்னுடைய அப்பா எப்போதும் வேலை வேலை என்று அலையக்கூடியவர், அம்மாவோ என்னை எதற்கும் கண்டுகொள்ளவே மாட்டார். அதனால்தான் இந்த சிறிய வயதிலேயே கெட்டு, இந்த சிறைச்சாலையில் கிடக்கின்றேன். ஒருவேளை என்னுடைய தந்தையும் தாயும் உங்களைப் போன்று என் தோள்மீது கைகளைப் போட்டு வாஞ்சையோடு பேசி என்னுடைய தவற்றைச் சுட்டிக்காட்டியிருந்தால், இன்றைக்கு நான் இந்த நிலை ஆளாகியிருக்க மாட்டேன்” என்றான்.

ஆம், நிறைய குழந்தைகள் இன்றைக்குக் கெட்டுப்போவதற்குக் காரணமே பெற்றோர்களின் சரியான வளர்ப்பு இல்லாமையால்தான். ஆனால், சூசையும் மரியும் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் இயேசுவை இறைவனுக்கு உகந்த வழியில் வளர்த்தெடுத்து, உலகம் போற்றும் பிள்ளையாக மாறினார்கள்.

ஆகவே, திருக்குடும்பப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நம்முடைய குடும்பங்கள் திருக்குடும்பமாக விளங்க இயேசு மரி, சூசையை நம்முடைய முன்மாதிரியாகக் கொண்டு வாழ்வோம். ஒருவர் மற்றவர்மீது உண்மையான அன்பு காட்டுவோம், ஒருவர் மற்றவருக்கு உகந்த மதிப்பளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். 


Monday, 24 December 2018

கிறிஸ்து பிறப்பு பெருவிழா

கிறிஸ்து பிறப்பு பெருவிழா (நள்ளிரவுத் திருப்பலி)

இன்றைய வாசகங்கள்
I. எசாயா 9:2-7  II. தீத்து 2:11-14  III. லூக்கா 2:1-14ஒரு பள்ளியின் மாடிப்படியின் மேல்படியில் நான் நின்று கொண்டிருந்தேன், கீழ்ப்படியில் இருந்த கவிதா என்ற சிறுமியைப் பார்த்து, "கவிதா மேலே ஏறிவா” என்று அழைத்தேன். அவளால் ஏறி வர முடியவில்லை. அவள் என்னைப் பார்த்து, "நீங்க கீழே இறங்கி வாங்க" என்றாள். நானும் கீழே இறங்கி வந்து அவளை மேலே தூக்கிச் சென்றேன்.

மனிதன் கடவுளுடைய நிலையை எட்டிப் பிடிக்க முயன்றான். அந்நிலையில் கடவுளே மனிதனுடைய நிலைக்குத் தாழ்ந்து வந்து அவனைக் கடவுளுடைய நிலைக்கு உயர்த்தினார். மனிதனைத் தெய்வமாக்க தெய்வம் மனிதரானது. மனிதர் இறைத்தன்மையில் பங்குபெற்றுள்ளனர் (1 பேது. 1:4).

கிறிஸ்து பிறப்பு விழா உணர்த்தும் உண்மைகள்: கடவுள் மனிதரானார்; கடவுள் குழந்தையானார்; கடவுள் ஏழையானார்,
முதலாவதாக "வாக்கு மனிதரானார்; நம்மிடையே குடிகொண்டார்" (1 யோவா 1:14). நாம் கடவுளைக் கண்ணால் கண்டோம்; அவரைக் கைாயல் தொட்டோம்; அவரது வாக்கைக் காதால் கேட்டோம் (1 யோவா 1:1). இனி கடவுள் நமக்கு அந்நியர் அல்ல; மாறாக, நம்மிலே ஒருவர்; நமது இரத்தத்தின் இரத்தம்; நமது தசையின் தசை.

கடவுள் மனிதரானது நமக்காகவும் நமது மீட்புக்காகவும். "இன்று மீட்பர் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார் ” (லூக் 2:10). “குழந்தை நமக்காகப் பிறந்துள்ளார்; ஓர் ஆண் மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார் " (எசா 9:6). மானிடராகிய நமக்காகவும் நமது மீட்புக்காகவும் வானகமிருந்து வையகம் வந்தார். தமது ஒரே மகனை கையளிக்கும் அளவுக்கு கடவுள் நம்மீது அன்பு கூர்ந்துள்ளார் (யோவா 3:16). இன்று ஆண்டவர் பிறந்த நன்னாள், எனவே அகமகிழ்வோம்: அக்களிப்போம்.

கடவுள் மனிதராகப் பிறந்தார் என்னும் இறையியல் உண்மையைத் திருத்தூதர் பவுல், "நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டது” (தீத் 3:4) என்று கூறுகிறார். கிறிஸ்துவில் கடவுளுடைய இரக்கமும் மனித நேயமும் ஊன் உடல் எடுத்தன. ஊன் உடல் எடுத்த கிறிஸ்து நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார் (எசா 53:4). கிறிஸ்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் (திப 10:38).

நம்மிடத்தில் மனித நேயம் மலர்ந்துள்ளதா? மாட்டுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு என்ன? “மாட்டுக் கழுத்தில் தொங்குவது "பெல்" மனிதர் கழுத்தில் தொங்குவது "செல்”; என்று சொல்லப்படுகிறது. "ஒரு மாடு அடுத்த மாட்டைப் பற்றி அக்கறை
கொள்ளாது. ஒரு மனிதர் அடுத்த மனிதரைப் பற்றி அக்கறை கொள்வார். அடுத்தவனைப் பற்றி அக்கறை கொள்ளாதவன் நன்றாகத் தின்று கொழுத்த பன்றி" (சாக்ரட்டீஸ்). இன்றைய அறிவியல் பலவற்றைப் புதிதாகக் கண்டுபிடித்துள்ளது. ஆனால் மனித நேயத்தைத் தொலைத்து விட்டது. இந்நிலையில் கிறிஸ்துவின் மனித நேயம் நம்மை ஆட்கொள்வதாக. அதன் விளைவாக அழுவாரோடு அழுது. மகிழ்வாரோடு மகிழ்வோம் (உரோ 12:15).

இரண்டாவதாக, கடவுள் குழந்தையானார். கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்த வானதூதர், "குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள், இதுவே லடங்களுக்கு அடையாளம் என்றார்" (லூக் 2:12)

குழந்தை வலுவற்றது. தனக்குத்தானே எந்த உதவியையும் அதனால் செய்துகொள்ள முடியாது: தனது தேவைகள் அனைத்துக்கும் மற்றவர்களையே சார்ந்துள்ளது. உலகை மீட்க வந்தவர் ஒரு குழந்தையாக அதாவது, வலுவற்றவராகப் பிறந்தார். "மனித வலிமையைவிட கடவுளுடைய வலுவின்மை வலிமை மிக்கது" (1 கொரி 1:25) என்பதை உணர்ந்த வலிமை மிக்க கடவுள் வலுவற்றவராகப் பிறந்தார், மடமை எனக் கருதப்பட்ட சிலுவையால் உலகை மீட்டார்.

மதம் பிடித்த யானை வீதியின் நடுவே அமர்ந்திருந்த ஒரு குழந்தையைத் தன் தும்பிக்கையால் தொட்டு, அக்குழந்தை அருகே படுத்துக் கொண்டது. ஒரு குழந்தையின் முன்பு யானையின் வெறிகூட மாயமாக மறைந்துவிட்டது, குழந்தையைப் பற்றிப் பாரதி. "முல்லைச் சிரிப்பால் என் மூர்க்கம் தவிர்த்திடுவாய்” என்று பாடியுள்ளார். குழந்தையின் சிரிப்பு நமது மூர்க்கக் குணத்தை நிர்மூலமாக்கி விடுகிறது.
ஆணவத்தினால் பிரிந்து வாழும் குடும்பங்களும் தனி நபர்களும் குழந்தை இயேசுவின் முன்னால் மீண்டும் ஒன்று சேர வேண்டும். பெத்லகேமில் இயேசு பிறந்த இடத்திற்குச் செல்லத் தலை குனிய வேண்டும், தம்மைத் தாழ்த்தாத எவரும் கடவுளை அணுக முடியாது. குழந்தை இயேசுவிடமிருந்து "கனிவையும், மனத்தாழ்மையையும்" (மத் 11:29) கற்றுக்கொள்வோம். நாம் குழந்தைகளாக மாறாவிட்டால் விண்ண ரசில் நுழைய முடியாது (மத் 18:3).

| மூன்றாவதாக, கடவுள் ஏழையானார். விண்ணுக்கும் மண்ணுக்கும் சொந்தக்காரர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் (லூக் 2:7). செல்வந்தராக இருந்தும் நமக்காக ஏழையானார் (2 கொரி 8:3). மண்ணிலே அவருக்குத் தலைசாய்க்கக்கூட இடமில்லை (லூக் 9:8). ஏழைகளுக்கு அவர் நற்செய்தி அறிவித்தார் (லூக் 4:18). ஏழைகள் பேறுபெற்றவர்கள் என்று அறிக்கையிட்டார் (லுக்: 6:20).

ஏழையாகப் பிறந்த கடவுள் ஏழைகளின் கடவுள். திக்கற்ற ஏழையின் குரலுக்குச் செவிமடுக்கும் கடவுள் (திப 34:6),
நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கி, அங்காடியின் சிலைவழிபாட்டில் ஈடுபட்டுள்ளது இன்றைய உலகம். திருச்சபை இதற்கு விதிவிலக்கல்ல. நோவாவின் பேழையைக் கட்ட வேண்டிய திருச்சபை 'டைட்டானிக்' கப்பலைக் கட்டிக்கொண்டிருக்கிறது. டைட்டானிக் கப்பலைத் திருச்சபை கட்டினால் நுகர்வுக் கலாச்சாரம் என்னும் பனிப்பாறையில் மோதி மூழ்கிவிடும். மாறாக, நோவாவின் பேழையைக் கட்டினால் தன்னையும் உலகையும் காப்பாற்றும். இன்றைய உலகை அச்சுறுத்தும் நுகர்வுக் கலாச்சாரமாகிய கோலியாத் என்னும் அரக்கனைத் தாவீதின் எளிமை என்னும் கவணால் மட்டுமே வீழ்த்த முடியும். குழந்தை இயேசு நமக்கு விடுக்கும் செய்தி, "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது” (மத் 6:24).

கிறிஸ்து பிறப்பு விழாவில் ஏழை எளியவர்களைத் தேடிச் செல்வோம். குறிப்பாக, ஏழை மற்றும் அனாதைக் குழந்தைகளுக்கு உணவும் உடையும் கொடுத்து அவர்களை மகிழ்விப்போம், ஏழைகளுக்கு நாம் செய்யும் உதவி இயேசுவுக்கே செய்யும் உதவி என்பதை நினைவுகூர்வோம் (மத் 25:40).

முடிவாக, கடவுள் மனிதரானார்; நாம் மனிதராவது எப்போது? கடவுள் குழந்தையானார்; நாம் குழந்தையாவது எப்போது? கடவுள் ஏழையானார்; நாம் ஏழையாவது எப்போது?
விண்ணகத்தில் கடவுளுக்கு மகிமையும் மண்ணகத்தில் மாந்தர்க்கு அமைதியும் உரித்தாகுக! கிறிஸ்து பிறப்பு இனிய நல்வாழ்த்துக்கள்!

இதுவே உங்களுக்கு அடையாளம்
அருள்பணி :- ஏசு கருணாநிதி

இன்றைய ஜிபிஎஸ் கட்டுப்படுத்தும் உலகில் நாம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல ஒரு ஓலா அல்லது ஊபர் டாக்ஸி பதிவு செய்தாலோ, அல்லது ஸ்விக்கி, ஸ்ஸேமாட்டோ போன்ற உணவு கொணரும் செயலிகளில் உணவு பதிவு செய்தாலோ, அவர்கள் கேட்கும் சில கேள்விகளுள் ஒன்று: 'உங்கள் இருப்பிடத்திற்கான அடையாளம் (லேன்ட்மார்க்) என்ன?' அடையாளங்கள் அல்லது லேன்ட்மார்க்குகள் பெரும்பாலும் பெரியனவையாகவே இருக்கின்றன - பலரும் வந்து போகும் வங்கி, குழந்தைகள் படிக்கும் பள்ளி, ரவுண்டானா வலது புறம், ஆஞ்சநேயர் கோவில், மருத்துவனை பின்புறம் என நாம் நம் அடையாளங்களை வரையறுத்துக்கொள்கின்றோம். அல்லது இந்த அடையாளங்களே நம்மை வரையறை செய்ய நாம் அனுமதித்துவிடுகின்றோம். அடையாளங்கள் இல்லாமல் நம்மால் வாழ முடிவதில்லை. ஃபோனில் 'லோ பேட்டரி' என்ற எச்சரிக்கை வந்தால், அது ஃபோன் அணைந்து போவதற்கான அடையாளம். வாட்ஸ்ஆப்பில் 'ஆன்லைன்' என வந்தால், அடுத்த நபர் இணைப்பில் இருக்கிறார் என்று அடையாளம். நம் தகவலுக்கு மேலே 'டைபிங்' என்று வந்தால், அவர் உரையாடலைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றார் என்று அடையாளம். கதவில் பூட்டு தொங்கினால் 'வீட்டில் யாரும் இல்லை' என்று அடையாளம். 'கறுப்பு' சோகத்திற்கான அடையாளம். 'வெள்ளை' அமைதிக்கான அடையாளம். 'பச்சை' பசுமைக்கான அடையாளம். இப்படி அடையாளங்களை நாம் அடுக்கிக்கொண்N;ட போகலாம்.

ஆனால், இந்த அடையாளங்கள் அடையாளங்களே தவிர அவை தாங்கள் குறித்துக்காட்டுவதைச் செய்ய முடிவதில்லை. எடுத்துக்காட்டாக, சாலையில் சிகப்பு விளக்கு என்பது 'நில்' என்பதற்கான அடையாளம். 'நில்' என்பதற்கான அடையாளமாக அது இருக்கிறதே தவிர, அது ஒருபோதும் நம் வாகனத்தின் முன்னால் வந்து நின்று, 'போகாதே' என்று சொல்வதில்லை. 'தண்ணீர்' தூய்மையின் அடையாளம். ஆனால், அத்தண்ணீரை நாம் பயன்படுத்தினால்தான் தூய்மை ஆவோமே தவிர, வெறும் தண்ணீரை வைத்திருப்பதால் நமக்குத் தூய்மை வந்துவிடாது. 'பேட்டரி லோ' என்று நம் மொபைல் காட்டுமே தவிர, அதுவே சார்ஜரில் ஏறி உட்கார்ந்து தன்னைச் சார்ஜ் செய்து கொள்ளாது. நாம்தான் சார்ஜரில் போட வேண்டும். இவ்வாறாக, அடையாளங்கள் தங்களிலேயே வலுவற்றவை.

கிறிஸ்து பிறப்பு செய்தியை இடையர்களுக்கு அறிவிக்கும் வானதூதர், 'இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்' (லூக் 1:11-12) என்கிறார். இதற்கு மேலும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை வானதூதர்.

பிறந்திருப்பவர் யார்? ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர்.

எங்கே? தாவீதின் ஊரில் (பெத்லகேம்)

என்ன அடையாளம்? 'குழந்தை' 'துணிகளில் சுற்றி' 'தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருக்கும்'

ஒரு நட்சத்திரத்தைப் பார்த்துக்கொண்டே எருசலேம் வந்து சேர்ந்த ஞானியர்களின் அறிவு ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த இடையர்களுக்கு இருந்திருக்குமா? 'மெசியா' பற்றி புரிதல் இருந்திருக்குமா? 'தாவீதின் ஊர்' என்றால் 'பெத்லகேம்' என்று தெரிந்திருக்குமா? அந்த இரவில் எத்தனை குழந்தைகளை அவர்கள் தேட முடியும்? பெரியவர்கள் சிறியவர்கள் வீட்டின் கதவுகளை எளிதாகத் தட்ட முடியும். இவர்களோ சமூகத்தில் சிறியவர்கள். இவர்களால் எத்தனை பேர் வீட்டுக் கதவுகளைத் தட்ட முடியும்?

மரியாவுக்கு வானதூதர் கபிரியேல் இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தபோது, 'அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார். அவர் உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது' (லூக் 1:31-32) என்று சொல்கிறார். ஆனால், அங்கே சொன்ன ஒரு வார்த்தைகூட இடையர்களுக்குச் சொல்லப்படவில்லை. வானதூதர்களுக்குள் கம்யூனிகேஷன் இடைவெளி இருந்ததா? ஒருவேளை இவ்வார்த்தைகள் எல்லாம் இடையர்களுக்குச் சொல்லப்பட்டால் அவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியிருப்பார்கள்.

- 'இயேசு' என்று அங்கே பெயர் 'ஆண்டவர், மெசியா, மீட்பர்' என இங்கே தரப்படுகிறது.
- 'பெரியவராயிருப்பார்' என்று அங்கே சொல்லப்பட்டது, 'குழந்தை' என்று இங்கே சொல்லப்பட்டுள்ளது.
- 'தாவீதின் அரியணை' என்று அங்கே இருப்பது, 'தாவீதின் ஊர்' என்று இங்கே இருக்கிறது.
- 'கடவுளின் மகன்' என்று அங்கே சொல்லப்பட்டது, பாவத்தின் விளைவால் வந்த 'துணிகளால் சுற்றப்பட்டு' என்று இங்கே உள்ளது.
- 'அவர் ஆட்சி செய்வார்' என்று அங்கே இருப்பது, 'தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பார்கள்' என்று இருக்கிறது.

வானதூதர் அங்கே மரியாவுக்கு முன்மொழிந்ததற்கும், இங்கே இடையர்களுக்கு முன்மொழிந்ததற்கும் ஏன் முரண்பாடு?

மேலோட்டாகப் பார்த்தால்தான் இவை முரண்பாடுகள். ஆனால், கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இங்கே அடையாளங்களாகச் சொல்லப்படுபவை அங்கே நேருக்கு நேராகச் சொல்லப்படுகின்றன. ஆக, மற்ற அடையாளங்களுக்கும் இயேசு என்ற அடையாளத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான். இந்த அடையாளம் தான் சுட்டிக்காட்டுவதை அப்படியே வாழும்.

எப்படி?

- 'இயேசு' என்றால் 'மீட்பர்' - 'பாவங்களிலிருந்து இவர் மீட்பார்;'
- 'குழந்தை' தன் வலுவின்மையில் 'பெரியவராகும்'
- 'தாவீதின் ஊரில்' இவர் சிலுவை என்னும் 'அரியணை ஏறுவார்'
- 'துணிகளால் சுற்றப்பட்ட' மனுக்குலத்தை தன் நிர்வாணத்தினால் மீட்டு 'கடவுளின் மகன்' என்ற நிலைக்கு உயர்த்துவார்.
- 'தீவனத் தொட்டியில்' பிறந்ததால் என்னவோ, தன் உணவு நிகழ்வுகள் வழியாக (உணவுப் பகிர்வு, உணவுப் பலுகச் செய்தல், விருந்துக் கொண்டாட்டங்கள், நற்கருணை) என உறவாடி, தன்னையே பிறருக்கான உணவாக வழங்குவார்.

இவைகள் இடையர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதல் கிறிஸ்து பிறப்பு கொண்டாடப்பட்ட அன்றைய நாளில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், வானதூதர்களின் வார்த்தைகளுக்குள் முரண்கள் இல்லை.

இன்றைய முதல் வாசகத்தை (எசாயா 9:2-7) எடுத்துக்கொள்வோம். எபிரேய இலக்கியத்தில், குறிப்பாக செய்யுளில், அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு இலக்கியப் பண்பின் பெயர் 'இருசொல் இயைபணி' அல்லது 'இணைவாக்கியம்.' அதாவது, முதல் வாக்கியத்தில் சொல்லப்படும் கருத்தே இரண்டாம் வாக்கியத்திலும் வேறு வார்த்தைகளில் சொல்லப்படுவது. இன்றைய முதல் வாசகத்தில் நான்கு இடங்களில் இது பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

- காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல்சூழ் நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. (இந்த இரண்டு வாக்கியங்களின் பொருள் ஒன்றே)
- அவர்கள் பலுகிப் பெருகச் செய்தீர். அவர்கள் மகிழ்ச்சியை பெருகச் செய்தீர்.
- நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். தடியைத் தகர்த்துப் போட்டீர். கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.
- ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளது. ஓர் ஆண்மகவு நமக்கு தரப்பட்டுள்ளது.

மெசியாவின் வருகை தரும் மகிழ்ச்சிக்கு இங்கே இரண்டு அடையாளங்கள் தரப்படுகின்றன: (அ) அறுவடை நாள், (ஆ) கொள்ளைப் பொருளைப் பங்கிடும் நாள். (அ) அறுவடை நாளில் எதற்கு நிறைவு கிடைக்கிறது? அன்ற, உண்பதற்கான உணவு கிடைத்துவிடுகிறது. (ஆ) போரின் வெற்றி நாளில் கிடைப்பது என்ன? பாதுகாப்பு. அன்று, எதிரிகள் அழிகிறார்கள். 'அறுவடை நாளில் மகிழ்வது போல' 'கொள்ளைப் பொருளைப் பங்கிடுவது போல' என மகிழ்ச்சிக்கு இரண்டு உருவகங்களைத் தருகின்றார் எசாயா. 'கொள்ளைப் பொருள்' என்பது இங்கே திருடிய பொருள் அல்ல. மாறாக, எதிரி நாட்டை வெற்றி கொண்டு, அந்நாட்டில் உள்ளவர்களின் உரிமைப் பொருள்களை நம் உரிமைப்பொருள்கள் ஆக்குதல். நம் உழைப்பு இல்லாத பொருளைக் குறிப்பிடவில்லை எசாயா. மேலும், சார்புநிலையும், அடிமைத்தனமும் ஒழிகிறது. பழையன அனைத்தும் நெருப்பில் இடப்படுகின்றன.

அதே வேளையில், 'குழந்தை பிறந்துள்ளது' என்று சொல்லப்படுகிறது. இந்தக் குழந்தைக்கு நான்கு பெயர்கள் தரப்பட்டிருக்கின்றன. அதாவது, அரசர்கள் தலைப்புகள் இட்டு அழைக்கப்படுவது மரபு - இராஜாதி ராஜ, இராஜ குலோத்துங்க, இராஜ குலதிலக என்பதுபோல. மேலும், 'எதிரிகளை நீ புறமுதுகிட்டு ஓடச் செய்ததால் இன்றுமுதல் நீ ...' என்று அரசனுக்கு பட்டங்கள் கொடுப்பதும் வழக்கம். இங்கே குழந்தைக்கு நான்கு பட்டங்கள் சூட்டி மகிழ்கின்றார் எசாயா:

- வியத்தகு ஆலோசகர். அதாவது, எங்கே போக வேண்டும் என்ற வழியைக் காட்டுபவர்.
- வலிமைமிகு இறைவன். இங்கே இறைவன் என்பதற்கு 'எலோகிம்' அல்லது 'யாவே' பயன்படுத்தப்படவில்லை. 'ஏல்' என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. 'ஏல்' என்றால் 'பெருமான்' அல்லது 'பெருமகனார்' என மொழிபெயர்க்கலாம். இங்கே இந்த குழந்தையை எசாயா கடவுளாக்கவில்லை. மிக நேர்த்தியாக வார்த்தையை கையாளுகின்றார்.
- என்றுமுள தந்தை. ஒரு குழந்தை எப்படி தந்தையாகும்? இது ஒரு வித்தியாசமான தலைப்பு. ஒரு குடும்பத்தின் தந்தை தன் குடும்பத்திற்கு தரும் உணவையும், பாதுகாப்பையும் இது குறிக்கிறது.
- அமைதியின் அரசர். அடிமைத்தனம் மற்றும் போர் நீக்கி அமைதி தருகிறார்.

இந்த இறைவாக்கு மெசியா இறைவாக்காக இயேசுவின் பிறப்பை முன்னறிவிக்கிறது.

ஆக, மெசியா என்பதற்கு குழந்தை ஒரு அடையாளமாகத் தரப்படுகிறது. அந்தக் குழந்தையின் பிறப்பின் பின்புலத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கிறது. இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி' என்றும் 'உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி' என்றும் வானதூதர்கள் அக்களிக்கிறார்கள்.

மெசியா, தான் எதை அடையாளப்படுத்துகிறாரோ, அதை அப்படியே தரவும் செய்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (தீத்து 2:11-14), 'வெளிப்படுத்துதல்' என்ற முக்கியமான வார்த்தையைக் கொண்டிருக்கிறது. இவ்வுலகம் சார்ந்தவற்றை - புவிஈர்ப்பு விசை, அமெரிக்கா, செல்ஃபோன், எலெக்ட்ரிசிட்டி - இவ்வுலகில் இருப்பவர்களே கண்டுபிடிக்க முடியும். ஆனால், இவ்வுலகம் சாராதவை வெளிப்படுத்தப்பட்டால் ஒழிய அவைகள் பற்றி நமக்குத் தெரியாது. ஆக, கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தது, இவ்வுலகம் சாராத 'கடவுளின் அருளையும், மாட்சியையும்' வெளிப்படுத்தவே என்கிறார் புனித பவுல். இதையே நாம் கிறிஸ்து பிறப்பு திருப்பலியின் தொடக்கவுரையில், 'வாக்கு மனிதர் ஆனார் என்னும் மறைநிகழ்வின் வாயிலாக உமது மாட்சியின் ஒளி எங்கள் மனக் கண்களுக்குப் புதிதாய் ஒளி வீசியது. இதனால் கண் காணாத கடவுளை நாங்கள் காண்கின்றோம். கண் காணாதவை மீதுள்ள பற்று எங்களை ஆட்கொள்கிறது' எனப் பாடுகிறோம். கடவுளின் வெளிப்படுத்துதல் இயேசுவில் இரண்டுமுறை நிகழ்கிறது: (அ) அவரது பிறப்பில். (ஆ) அவரது உயிர்ப்பில். (அ) பிறப்பு என்னும் வெளிப்படுத்துதல் நம் இம்மை வாழ்வுக்கு பயன்தருகிறது. அதாவது, கட்டுப்பாட்டுடனும், நேர்மையுடனும், இறைப்பற்றுடனும் வாழ இவ்வருள் பயிற்சி அளிக்கிறது. (ஆ) உயிர்ப்பு என்னும் வெளிப்படுத்துதல் நம் மறுமை வாழ்வுக்கு பயன்தருகிறது. அதாவது, மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருக்க அது கற்றுத்தருகிறது. இவ்வாறாக, தான் எதை அடையாளப்படுத்தினாரோ அதையே வாழ்ந்து காட்டுகிறார் இயேசு.

'இதுவே உங்களுக்கு அடையாளம்' என்று வானதூதர் இடையர்களுக்கு மூன்று அடையாளங்களைக் கொடுக்கின்றனர். (அ) குழந்தை - வலுவின்மையின், சார்புநிலையின், பாதுகாப்பின்மையின் அடையாளம். (ஆ) துணிகள் - மனித வரலாற்றுக்குள் பாவம் நுழைந்ததன் அடையாளம் (காண். தொநூ 2:25, 3:21). (இ) தீவனத் தொட்டி - வெறுமையான தீவனத்தொட்டி வறுமையின் அடையாளம். நிறைவான தீவனத்தொட்டி மகிழ்வின் அடையாளம். இங்கே குழந்தை தீவனத்தொட்டியின் வெறுமையை நிறைக்கிறது. இவை குழந்தையை அடையாளம் காண காட்டப்பட்ட அடையாளங்கள் மட்டுமல்ல. இந்த அடையாளங்களே இயேசுவின் வாழ்க்கையாக மாறுகின்றன. தானே வலுவின்மையில், சார்புநிலையில், பாதுகாப்பின்மையை உணர்ந்ததால் அந்த உணர்வோடு இருக்கிறவர்களோடு நெருக்கமாகிறார். பாவத்தால் வந்த ஆடையை சிலுவையில் தன் நிர்வாணத்தால் களைகிறார். தன் வாழ்வு முழுவதும் தன்னிடம் வந்தவருக்கு நிறைவு தந்து, இன்றும் நற்கருணையில் நமக்க ஆன்மீக விருந்தளிக்கிறார். அவரின் அடையாளங்கள் அவரின் வாழ்க்கை நிலைகள்.

இன்று, நாம் குடில், நட்சத்திரம், கேரல், கேக், கிஃப்ட், புத்தாடை என கிறிஸ்து பிறப்பு விழா அடையாளங்களைப் பார்க்கிறோம். ஆனால், இந்த அடையாளங்கள் தாங்கள் சுட்டிக்காட்டுவதை ஒருபோதும் நமக்குத் தருவதில்லை. கிறிஸ்துவைப் பற்றிய அடையாளத்தை நாம் கிறிஸ்து பிறப்பில் கண்டுகொண்டால் மட்டுமே நாம் மகிழ்ச்சியும், நிறைவும் பெறுவோம். இரண்டாவதாக, கிறிஸ்து பிறப்பின் அடையாளம் நாம் பெறுவதற்கு நாம் அரிய பெரிய காரியங்களைச் செய்ய வேண்டியதில்லை. ஒரு சிறிய இடையராய், நம் ஆடுகளுக்குக் காவல் காத்துக்கொண்டு, நம் அன்றாட வேலைகளைப் பொறுப்புணர்வோடு செய்துகொண்டு, விழித்துக்கொண்டிருந்தாலே போதும். மூன்றாவதாக, இன்று நான் எதன் அடையாளமாக இருக்கிறேன்? என்னைப் பற்றி ஒருவர் மற்றவரிடம் சொன்னால் என்ன அடையாளத்தைக் கொண்டு என்னைச் சொல்வார்?

'இதுவே உங்களுக்கு அடையாளம்' - கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துக்களும், செபங்களும்.


கிறிஸ்து பிறப்பு பெருவிழா 

அருள்பணி :- மரிய அந்தோனிராஜ்

இந்த மண்ணில் எத்தனையோ மனிதர்கள் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள். ஆனால் எல்லாரையும் நாம் நினைவுகூர்ந்து பார்ப்பதில்லை. அவர்களுடைய பிறப்பை நாம் விழாவாகக் கொண்டாடுவதில்லை. ஆனால் இயேசுவின் பிறப்பைப்பைத்தான் ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். காரணம் அவருடைய பிறப்பு அன்று மட்டுமல்ல இன்றும் கூட மகிழச்சியான ஒரு செய்தியாக இருக்கிறது (லூக் 2:10).
ரோம் நகரிலே ஒரு பெரிய அரண்மனை இருக்கிறது. அந்த அரண்மணையிலே பெரிய கோபுரமும் ஒன்று இருக்கிறது. அந்த கோபுரத்தில் குய்டோ ரெனி அவர்கள் தீட்டிய ஓர் ஒவியம் இருக்கிறது. பார்ப்பதற்கு அவ்வளவு அற்புதமாக இருக்கும். ஆனால் அது உயரத்திலே இருப்பதால் சரியாகப் பார்க்கமுடியாது. எனவே அதனை எளிதாகப் பார்ப்பதற்கு அந்த கோபுரத்திற்குக் கீழே ஒரு மேசை. அதிலே ஒரு கண்ணாடி வைக்கப்பட்டிருக்கிறது. யாராரெல்லாம் அந்த கண்ணாடியைப் பார்க்கிறார்களோ அவர்களால் மேலே உள்ள அந்த ஒவியத்தின் அழகைப் பார்த்து ரசிக்க முடியும். இந்த கண்ணாடியைப் போலத்தான். இயேசுவும் கண்ணாடியைப் பார்ப்பவர்கள் மேல உள்ள ஓவியத்தை காண்பதுபோல இயேசுவைப் பார்ப்பவர்கள் கடவுளைக் கண்டுகொள்கிறார்கள். இயேசுவைக் காண்பவர்கள் கடவுளே காண்கிறார்கள் (யோவா 14:7-9)
கிறத்து பிறப்பு விழாவிலே பரம்பொருள் பருப்பொருளாய் காட்சியளிக்கிறார். இந்த நாளிலே இவ்விழா நமக்குச் சொல்லும் செய்திகளை சிந்தித்துப் பார்ப்போம்.
1. ஏன் பெத்லேகம்?
எல்லா வல்ல இறைவன் இந்த மண்ணுலகில் பிறக்கும்போது பெரிய ஒர் ஊரிலே பிறந்திருக்கலாமே? ஏன் பெத்லகேமை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேள்வி எழுகிறது. விவிலியத்தில் குறிப்பாக பழைய ஏற்பாட்டில் கூட பெத்லகேமைக் குறித்து அதிகமான குறிப்புகள் இல்லை. இரண்டு இடங்களைத் தவிர. ஆனால் இந்த இரண்டு இடங்களில் வரும் குறிப்புகள் இயேசுகிறித்து எப்படிப்பட்டவர் என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. முதலாவதாக பெத்லகேமைக் குறித்து தொநூ 35:17 ல் வாசிக்கிறோம். அங்கே ராகேல் பெஞ்சமினைப் பெற்றெடுத்துவிட்டு இறந்துபோய்விடுகிறார். அவள் இறந்த இடம் பெத்லகேம். தன்னுடைய தன் தாயின் உயிரையே வாங்கிப் பிறந்தக் குழந்தை துன்பத்தின் மகன் என்று அழைக்கப்படுகிறார்.
அதே வேளையில் இந்த பெஞ்சமின் யாக்கோபிற்கு வலதுகரமாக இருக்கிறார். இதனை இயேசுவோடு ஒப்பிட்டுப் பார்க்கிறதுபோது ஒருசில ஒற்றுமைகள் விளங்கும். குழந்தை இயேசுவை மரியாவும் யோசேப்பும் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும்போது இறைவாக்கினர் சிமியோன் மரியாவைப் பார்த்துக் கூறுவார், “உம் உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும்”. இது இயேசுவின் பொருட்டு மரியா அனுபவிக்கக்கூடிய இன்னல்களைச் சுட்டிக் காட்டுகிறது. அதே வேளையில் இயேசு கடவுளின் வலது கரமாகவும் இருப்பார் என்று உண்மையாகிறது.
அடுத்ததாக பெத்லகேமைப் பற்றி வரக்கூடிய குறிப்பு ரூத் புத்தகத்திலே வருகிறது. ரூத் போவாசை பெத்லகேமில் மணக்கிறார். ஆனால் போவாசு இறந்தபிறகு ரூத் தன்னுடைய மாமியாரான நாகோமியின் வீட்டிற்கு வருகிறார். இந்த ரூத் ஒபேது என்பவரைப் பெற்றெடுக்கிறார். ஒபேதுவுக்கு ஈசா பிறக்கிறார். ஈசாவுக்குத்தான் தாவீது அரசர் பிறக்கிறார். எனவே ரூத் தாவீது அரசனுக்கு பாட்டியாக வருகிறார். இயேசு என்னும் மெசியா தாவீதின் வழிமரபில் பிறக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம்.
எனவே இயேசுவின் பிறப்பு என்பது கடவுள் எளியோரை, தாழ்நிலையில் உள்ளோரை உயர்த்துவார் என்பதற்குச் சான்றாக அமைகிறது.

2. எங்கே பெத்லகேம்?
பெத்லகேம் எங்கே இருக்கிறது என்பது நிலவியல் அடிப்படையில் அன்று ஆன்மீக அளவிலே அது எங்கே இருக்கிறது என்று பொருள்படுவதாக இருக்கிறது. மீக் 5:2 ல் படிக்கிறோம். யூத நாட்டுப் பெத்லகேமே நீ யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியது எனினும் உன்னிடமிருந்தே மெசியா தோன்றுவார்” என்று. கடவுள் எளியவர்கள் தாழ்ச்சியுள்ளவர்கள், நல்லவர்கள் மத்தியில்தான் இருக்கிறார் என்பதற்கு இது சான்றாக இருக்கிறது. எசா57:6 ல் நொறுங்கிய, நைந்த உள்ளத்தினர் நடுவிலே வாழ்கிறேன் நான் என்கிறார் கடவுள். நாம் எளிய உள்ளத்தினராக இருக்கிறோமா? தாழ்ச்சி நிறைந்தவர்களாக இருக்கிறோமா என்று சிந்தித்துப் பார்ப்போம். பெரும்பாலும் நம்மிடைய தோன்றக்கூடிய பெரும்பாலான சண்டைகளுக்குக் காரணம் நான் என்ற அகந்தைதான். அதுவே நமது அழிவுக்கு இட்டுச்செல்கிறது.
காட்டிலே ஒரு முறை சிங்கம், “இந்த காட்டிற்கு யார் ராஜா” என்று எல்லா மிருகங்களையும் அழைத்துக் கேட்டதாம். எல்லா விலங்குகளுமே சிங்கம் தான் இந்த காட்டிற்கு ராஜா என்று சொன்னாதாம். அந்த கூட்டத்தில் யானை மட்டும் இல்லை. எனவே அதனை அழைத்துக் கொண்டுவர சிங்கம் முயலுக்குக் கட்டளையிட அதுவும் யானையை அழைத்துக் கொண்டுவந்ததாம். வுந்த யானையிடம் சிங்கம் மீண்டுமாக அதே கேள்வியைக் கேட்டதாம். யானைக்கு கோபம். தன்னுடைய தும்பிக்கை வைத்து ஓங்கி சிங்கத்தை ஒரு போடு போட்டதாம். யானை அடித்த அடியில் சிங்கம் ஒரு மரத்தில் மோதி விழுந்ததாம்.
அப்போது சிங்கம் யானையைப் பார்த்துச் சொன்னதாம், “தெரியலனா சொல்லவேண்டியதுதானேஅதுக்காக இப்படியா அடிக்கிறது’ என்று. பல நேரங்கில் இந்த சிங்கத்தின் நிலைதான் நமக்கும். நான்தான் பெரியவன் என்று நினைக்கிறோம். ஆனால் அதுவே நமது அழிவுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. ஆனால் இயேசு ஆவணத்தை அல்ல அன்பை விரும்புகிறார். தாழ்ச்சியை எளிய உள்ளத்தை விரும்புகிறார். நாம் எளிய உள்ளத்தினராக வாழும்போது இறைவன் நம் மத்தியில் குடிகொள்வார்.
3. பெத்லகேமில் என்ன செய்தார்?
கவிஞர் கண்ணதாசனின் கவிதை
இயேசுவின் பிறப்பில் நடந்த விந்தைகளைச் சுட்டிக்காட்டும்

“தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே
சத்திய வேதம் நின்று நிலைத்தது
தரணி மீதினிலே
எத்துணை உண்மைகள் வந்து பிறந்தது
இயேசுவின் பிறப்பினிலே
இத்தனை நாளும் மானிடர் வாழ்ந்தது
இயேசுவின் வார்த்தையினிலே’
இயேசுவின் பிறப்பினிலே எல்லாம் மலர்ந்தது. ஞானம் பிறந்தது.

யோவா 1:14 ல் படிக்கிறோம் “வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடிகொண்டார்”.
இயேசுவின் பிறப்பு எளிய மனிதருக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது. மூன்று ஞானியர்கள், இடையர்கள் இவர்கள் எல்லாம் நல்மனதோடு இயேசுவைத் தேடிச் சென்றார்கள் மகிழ்ச்சி பெற்றார்கள். ஆனால் ஏரோது பரிசேயர்கள் மறைநூல்கள் இவர்களுடைய கண்களுக்கு இயேசு புலப்படவில்லை. காரணம் அவர்கள் இயேசுவைக் கொள்ளவேண்டும் என்று அலைந்தார்கள். நாமும் நல் மனத்தோடு ஆண்டவரைத் தேடினால் அவர் நமக்கு அருள்தருவார்.
சர் ஜேம்ஸ் சிம்சோன் என்பவர் மிகப்பெரிய விஞ்ஞானி. குளோரோபார்ம் என்ற கண்டுபிடிப்பிற்காக 1847ல் விருது பெற்றவர். ஒருமுறை அவரிடம் மாணவர் ஒரு கேள்வியைக் கேட்டார், “நீங்கள் கண்டுபிடித்ததிலேயே சிறந்த கண்டுபிடிப்பு எது” என்று. அதற்கு அவர் சொன்னார் “நான் பெரும் பாவி, இயேசுகிறித்துவே இவ்வுலகின் மீட்பர்” என்று. இயேசுதான் இவ்வுலகின் மீட்பர். இதனை அறிவதுதான் பெரிய ஞானம்.
எனவே நாம் இயேசுவின் பிறப்பு அர்த்தமுள்ளதாக்க வேண்டுமென்றால் எளிய, தாழ்ச்சியுள்ளவர்களாக, நல்ல மனத்தினராக வாழ்வோம். இயேசு நம் உள்ளத்திலும் இல்லத்திலும் பிறப்பார்.