Friday, 28 July 2017

30 ஜூலை 2017: ஆண்டின் பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு


30 ஜூலை 2017: ஆண்டின் பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு
I.                    1 அரசர்கள் 3:5,7-12
II. 
உரோமையர் 8:28-30
III. 
மத்தேயு 13:44-52

மறையுரை-வழங்குபவர் :
அருள்பணி ஏசு கருணாநிதி-மதுரை மறைமாவட்டம்
முழுமையாக, முதன்மையாக, மேன்மையாக!
இன்றைய திருப்பலியில் நாம் பயன்படுத்தும் சபை மன்றாட்டின் மூன்று கூறுகள் இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் சாரத்தை நமக்கு முன்வைக்கின்றன:
அ. உம்மையன்றி மேலானது ஏதுமில்லை. புனிதமானது ஏதுமில்லை.
ஆ. இந்த மெய்யறிவால் நாங்கள் வழிநடத்தப்பட வேண்டும்.
. நிறைவாழ்வின் மதிப்பீடுகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்
ஆக, நன்மையானது, தீமையானது அல்லது மேன்மையானது, மேன்மையற்றது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி அறியும் அறிவு மெய்யறிவு. அந்த மெய்யறிவால் உந்தப்பட்டு மேன்மையற்றதைத் தள்ளிவிட்டு, மேன்மையானதைத் தழுவிக்கொள்ள வேண்டும்.
இருபது வருடங்களுக்கு முன்பாக ஒன்றும், ஒன்றும் இரண்டு என்று சொல்லும் அறிவு இருந்தால் போதுமானதாக இருந்தது. இன்று அறிவில் நிறைய பிரிவுகள் வந்துவிட்டன. கணித அறிவு, உணர்வு அறிவு, சமூக அறிவு, நுண்ணறிவு, செயற்கை நுண்ணறிவு. இந்த பிரிவுகளுக்குள் மெய்யறிவை எங்கே புகுத்துவது? மெய்யறிவு என்பதை நாம் ஞானம் என்று எடுத்துக்கொள்ளலாமா
'நாமாக அனுபவித்து அறியும் அறிவு மட்டுமே அறிவு என்றும், மற்றதெல்லாம் தகவல்' எனவும் சொல்கின்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.மெய்யறிவு நம் அனுபவத்தில்தான் ஊற்றெடுக்கின்றது. 'நெருப்பு சுடும்' என்று நாம் நம் குழந்தைக்குச் சொன்னாலும், நெருப்பின் சுவாலைகளின் கவர்ச்சியினால் இழுக்கப்பட்டு அது நெருப்பு நோக்கி செல்கிறது. தானாக, அது நெருப்பு நோக்கிச் சென்று, நெருப்பினால் சுடப்பட்டு, தன் கையை பின்னிழுத்து, 'இனிமேல் நெருப்பைத் தொடமாட்டேன்!' என குழந்தை முடிவெடுப்பதற்குப் பெயர்தான் மெய்யறிவு.
மெய்யறிவுதான் விண்ணரசுக்கு முதற்படி என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 13:44-52).
நல்ல புதையல், நல்ல முத்து, நல்ல மீன்' என மூன்று நல்லவைகளைச் சுற்றிச் சுழல்கிறது இன்றைய நற்செய்தி. நல்ல புதையல், நல்ல முத்தை, நல்ல மீன் இந்த மூன்றையும் அடையும் நிகழ்வே விண்ணரசு என உருவகம் செய்கிறார் இயேசு. இந்த அடைதல் மூன்று படிகளாக நிகழ்கிறது:
அ. தேடுதல்
ஆ. கண்டடைதல்
இ. கீழானவற்றை இழத்தல்
புதையலை ஒருவர் தேடுகிறார். அதைக் கண்டடைகிறார். கண்டவுடன் மீண்டும் அதைப் புதைத்துவிட்டுப் போய் தன்னிடம் உள்ள அனைத்தையும் இழந்து புதையலைப் பெற்றுக்கொள்கின்றார்.
முத்தை ஒருவர் தேடுகிறார். அதைக் கண்டடைகிறார். கண்டவுடன் தன் சொத்துக்களை எல்லாம் விற்று அந்த முத்தைப் பெற்றுக்கொள்கின்றார்.
வலையை வீசி ஒருவர் மீன்களைப் பிடிக்கின்றார். நல்ல மீன்களைக் கண்டடைகின்றார். கண்டவுடன் வலையைக் கரைக்கு இழுத்து கெட்ட மீன்களை எல்லாம் அகற்றிவிட்டு நல்ல மீன்களை வைத்துக்கொள்கின்றார்.
இந்த மூன்று படிகள்தாம் மெய்யுணர்வின் படிகள். ஆக, இந்த மூன்று படிகளைக் கொண்ட ஒருவர் கண்டுபிடிப்பதே விண்ணரசு. அல்லது விண்ணரசைக் கண்டுபிடிக்க இந்த மூன்று படிகள் அவசியம்.
இந்த மெய்யறிவு இறைவனின் கொடை என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது இன்றைய முதல் வாசகம் (காண். 1 அர 3:5,7-12):
'சாலமோன் கடவுளிடம் ஞானத்தைக் கேட்டார். அதைக் கடவுள் தந்தார்' என நாம் மிகவும் எளிதாகச் சொல்லிவிடுகிறோம். ஆனால், இந்த நிகழ்வின் பின்புலத்தோடு பார்த்தால் இந்த நிகழ்வின் அழகு இன்னும் சிறப்பாகத் தெரியும்.
தாவீது இறந்துவிடுகிறார். சாதாரண வீடுகளில் தந்தை இறந்துவுடன் பிள்ளைகள் அடித்துக்கொள்கிறார்கள். அரச குடும்பத்திற்கும் இது விதிவிலக்கு அல்ல. தாவீதுக்கு எபிரோனில் பிறந்த பிள்ளைகள் ஆறு: அம்னோன், கிலயேபு, அப்சலோம், அதோனியா, செபதியா, இத்ரேயம். எருசலேமில் பிறந்த பிள்ளைகள் ஐந்து: பிறந்தவுடன் இறந்த பெயரில்லா குழந்தை, சிமயா, ஷோபாப், நாத்தான், சாலமோன். மேலும் மற்ற மனைவியர் வழியாக பிறந்த ஒன்பது பிள்ளைகள். இப்படியாக 20 பிள்ளைகளின் தந்தை தாவீது. 20 பிள்ளைகளில் சாலமோன் மட்டும் அரியணை ஏறுகின்றார். தனக்கு முன் பிறந்த பெயரில்லாத குழந்தை பிறந்த ஓரிரு நாள்களில் இறந்துவிட்டது சாலமோனின் மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது. தானும் சீக்கிரம் இறந்துவிடுவோமோ என்ற பயத்தில் இருந்தார் சாலமோன்.
இரண்டாவதாக, வறுமை. தாவீது தன் இறுதிக்காலத்தில் தனக்கு இஷ்டம்போல செலவழித்ததாலும், போர் மற்றும் அழிவு போன்ற காரியங்களை முன்னெடுத்ததாலும் அரசின் கருவூலம் தரைதட்டிக்கொண்டிருந்தது.
மூன்றாவதாக, சாலமோன் இஸ்ரயேலின் அரசனாகப் பொறுப்பேற்ற காலம் இஸ்ரயேலுக்கு மிகவும் போதாத காலம். ஒருங்கிணைந்த இஸ்ரயேல் நாடானது வடக்கே இஸ்ரேல் எனவும், தெற்கே யூதா எனவும் பிளவுபட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறாக, அரசியலிலும் அமைதி இல்லாத நிலை.
இந்தப் பின்புலத்தில், கிபயோனில் சாலமோனுக்குக் கனவில் தோன்றும் ஆண்டவர், 'உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!' என்கிறார். சாலமோன் உண்மையில் புத்திசாலிதான். எப்படி? 'ஞானம் வேண்டும்' என நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. 'உன் மக்களுக்கு நீதி வழங்க, நன்மை தீமைகளை பகுத்தாய' என தான் கேட்டதன் காரணத்தையும் கடவுளுக்குத் தெளிவாக்குகின்றார் சாலமோன். இங்கே சாலமோன் தன் மக்களை கடவுள் மக்களாக ஏற்றுக்கொள்கின்றார். மேலும், இவ்வாறு 'உன் மக்கள்' என்று சொல்வதன் வழியாக அவர் தன் பொறுப்புணர்வை தட்டிக் கழிக்கவில்லை. மாறாக, 'நீரே இம்மக்களின் கடவுள். நான் உன் பிரதிநிதி' என தன்னையே ஒரு படி கீழே இறக்கிக்கொள்கின்றார். ஆக, ஞானம் இருக்கும் இடத்தில் தாழ்ச்சி தானாகவே வந்துவிடுகிறது. அல்லது தாழ்ச்சியின் வழியே ஞானம் வருகிறது. மேலும், சாலமோன் முதலில் 'பிறர்நலத்தையும்' (மக்களுக்கு நீதி வழங்க), பிறகு 'தன்னலத்தையும்' (நன்மை தீமைகளைப் பகுத்தாய) பார்க்கின்றார்.
ஆனால், கடவுள் சாலமோனுக்கு தேவையான மூன்றை நினைவுபடுத்துகிறார்:
அ. நீடிய ஆயுள். ஓர் அரசனுக்கு தேவை நீடிய ஆயுள்தான். நம்ம வாழ்க்கையிலேயே பாருங்களேன். ஒன்னும் இல்லாதவர் இறப்பை பற்றி அதிகம் கவலைப்பட மாட்டார். ஏனெனில் அவர் விட்டுச் செல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் செல்வம் படைத்தவர் சாவைக் கண்டு ரொம்ப பயப்படுவார். ஏனெனில் அவர் விட்டுச் செல்ல நிறைய இருக்கிறது. மேலும், செல்வம் வந்துவிட்டால் கல்வி, மருத்துவம் என எல்லாவற்றையும் வாங்கிவிடலாம். உயிரை மட்டும் விலைகொடுத்து வாங்க முடியாது. ஆக, கடவுள் ஆயுளையும் வரமாகக் கொடுத்துவிட்டால் சாலமோன் கவலை இன்றி வாழலாம். தன் மூத்த சகோதரனைப் போல மிக குறைந்த வயதில் இறந்துவிடுவோம் என்ற பயம் இருக்காது.
ஆ. செல்வம். தாவீது விட்டுச்சென்ற காலியான கருவூலத்தை நிரப்பும்படி கேட்டிருக்கலாம். கருவூலம் நிறைந்தால் மனம் நிறையும். கருவூலம் நிறைந்தால் பலர் நம் நாடு தேடி வருவர். நமக்குத் தேவையானதைச் சாதித்துக்கொள்ளலாம். பணம் இருக்கும் இடத்தில்தான் பணம் கிடைக்கும். இல்லையா? நான் குருமாணவராக இருந்தபோது என் சக குருமாணவர் ஒருவரின் தந்தையின் மருத்துவத்திற்காக பணம் தேவைப்பட்டது. அதைத் தன் மறைமாவட்டத்தில் கேட்க அவர் விரும்பினார். அப்படி அவர் ஆயரிடம் கேட்கலாமா, வேண்டாமா என ஆலோசனை கேட்க அவர் ஓர் அருள்பணியாளரை அணுகினார். அருள்பணியாளர் சொன்னார்: 'தம்பி, 'உன் வீட்டில் பணம் இருக்கிறது. உன் அப்பாவின் செலவை நீங்களே சமாளித்துக்கொள்ளலாம்' என்று இருந்தால் மறைமாவட்டம் பணம் கொடுக்கும். 'இல்லை. முடியாது!' என்றால் மறைமாவட்டமும், 'இல்லை. அப்படி எல்லாம் கொடுக்க முடியாது!' என்று பாலிசி பேசும்' என்றார். அதே போலவே நடந்தது. மறைமாவட்டம் அவருக்கு உதவ முன்வரவில்லை. அந்த சகோதரரின் அப்பாவும் இறந்துவிட்டார். கடவுளைப் பணம் இருந்தால் மட்டும்தான் பார்க்க முடியும் என்பது இன்று நாம் காணும் எழுதப்படாத உண்மை. ஒரு பங்கு அலுவலகத்திற்கு எல்லா மக்களும் வருவார்கள். பணம் அல்லது செல்வாக்கு படைத்தவர் வந்தால் அவரை கேட் வரை சென்று வழியனுப்பும் நான், சில நேரங்களில், ஒன்றும் இல்லாத ஒருவர் வரும்போது என் இருக்கையைவிட்டு கூட எழுவதில்லையே. எனக் கேட்கிறேனே! ஏன்?
இ. எதிரிகளின் சாவு. சாலமோன் இதையாவது கேட்டிருக்கலாம். தனக்கு எதிராக கிளர்ந்து நிற்கும் தன் 18 சகோதரர்களின் மரணத்தையாவது அல்லது தன்னைச் சுற்றி இருக்கும் எதிரி நாடுகளின் அழிவையாவது கேட்டிருக்கிலாம். ஏனெனில் அரசர்களின் தூக்கத்தைக் கெடுப்பவர்கள் எதிரி நாட்டினர். அவர்கள் அழிந்துவிட்டால் அரசர் நிம்மதியாக இருக்கலாம்.
இந்த மூன்றையும்தான் ஓர் அரசன் கேட்டிருக்க வேண்டும் என வரையறை செய்கின்ற ஆண்டவராகிய கடவுள், சாலமோன் இவற்றிற்கு மாறாக ஞானத்தைக் கேட்டதால், அதை அவருக்கு வழங்கியதோடல்லாமல், 'உனக்கு நிகராக உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப்போவதுமில்லை' என வாக்களிக்கிறார்.
சாலமோன் தான் பெற்ற இந்த ஞானத்தால் மெய்யறிவு பெருகின்றார். இந்த மெய்யறிவுதான் இறைவனின் அரசுதான் தன் வழியாகச் செயல்படுகிறது என்பதை சாலமோனுக்கு உணர்த்துகிறது.
இந்த மெய்யறிவு என்ற வார்த்தையை 'ஒருங்கியக்கம்' (சினர்கெயோ) என்ற வார்த்தையின் வழியாக இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 8:28-30) விளக்குகிறார் தூய பவுல். கடந்த வார மறையுரைக் குறிப்பில் நாம் குறிப்பிட்ட ஸ்டீஃபன் கோவே அவர்களின் 'ஏழு பண்புகளில்' ஆறாவதாக அவர் குறிப்பிடுவது, 'சினர்ஜைஸ்' (ஒருங்கியக்கு அல்லது ஒருங்கமை) என்ற சொல். சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமானால், நான் இந்த மறையுரையை தட்டச்சு செய்ய என் பத்து விரல்களைப் பயன்படுத்துவதும், நீங்கள் இதை உங்கள் கைபேசியில் வாசிக்க ஐந்து விரல்களைப் பயன்படுத்துவதும் 'சினர்ஜிஸம்' (கூட்டியக்கம் அல்லது ஒருங்கியக்கம்). அதாவது ஐந்து விரல்கள் சேர்ந்து ஒரு வேலையைச் செய்யும் போது அந்த வேலையின் ஆற்றல் ஐந்து விரல்களின் கூட்டுத்தொகையைவிட அதிகமாக இருக்கும். 
பவுல்தான் இந்த வார்த்தையை முதன்முதலாகக் கையாளுகின்றார். எப்படி? 'கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு, அதாவது அவருடைய திட்டத்திற்கு ஏற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் சினர்கெயோ (ஒருங்கியக்கம்) செய்கிறார்.' இதையே பவுலோ கோயலோ தனது 'இரசவாதி' (தி ஆல்கமிஸ்ட்) என்ற நூலில், 'நீ உன் கனவைப் பின்பற்றிச் சென்றால், இந்த பிரபஞ்சமே உனக்கு ஒத்துழைக்கும்' என்கிறார். அதாவது, கடவுளை நாம் அன்பு செய்தோம் என்றால், நம்மைச் சுற்றி இருக்கும் புள்ளிகள் எல்லாம் தானாவே கனெக்ட் ஆகும்.
இன்றைய நற்செய்தியின் முதல் உவமை வாசித்துக்கொண்டிருந்தபோது எனக்கு ஒரு டவுட் வந்தது.

ஒரு நிலத்தில் புதையலைப் பார்த்துவிட்டு, அதை வேகமாக மூடிவைத்துவிட்டு, அந்த நிலத்தை வாங்குவதற்காக ஒருவன் செல்கின்றான். அப்படி செல்லும் அவன் தனக்குள்ள எல்லாவற்றையும் விற்கிறான். ஒருவேளை அவன் விற்றுவிட்டு வருவதற்குள் அந்த புதையலை வேறு ஒருவன் எடுத்துச் சென்றாலோ, அல்லது வேறு ஒருவருடைய கைக்கு நிலம் சென்றுவிட்டாலோ அவன் என்ன செய்வான்? உள்ளதும் போய்விட்டது! என வருந்துவானே என்று நான் நினைத்தேன். என் டவுட்டிற்கு விடை இரண்டாம் வாசகத்தில் கிடைத்தது.
ஒருவன் மெய்யறிவு பெற்று முழுமையாக விண்ணரசைத் தேடினால் அவன் வரும்வரை அவனது நிலம் அவனுக்காக காத்திருக்கிறது. இதுதான் சினர்கெயோ. இதுதான் ஒருங்கியக்கம். அதாவது நம் எண்ணம் நேர்முக எண்ணமாக இருந்தால் அது நம்மைச் சுற்றி ஒரு நல்ல வட்டத்தை அமைத்து நம்மையும், நம்மைச் சுற்றி இருப்பவற்றையும் பாதுகாத்துக்கொள்கிறது. இதைச் செய்பவர்தான் ஆவியானவர். இதே கருத்தைத்தான் 'ஆழ்மனத்தின் சக்தி' என்று உளவியலில் சொல்கிறார்கள். என் ஆழ்மனம் பிரபஞ்சத்தின் ஆழ்மனத்தோடு தொடர்பில் இருக்கிறது. அந்த ஆழ்மனத்திடம் என் தேவையை சொல்லும்போது அது பிரபஞ்சத்திடம் சொல்லி அதை எனக்குக் கொடுக்கிறது.
மேலும், பவுலின் கிரேக்க மொழிநடைக்கு இன்றைய இரண்டாம் வாசகத்தில் சான்று ஒன்று உள்ளது. இதை 'ஸ்பைரல் நடை' அல்லது 'படிக்கட்டு நடை' என்பார்கள். அதாவது முதல் வாக்கியத்தில் உள்ள இறுதி வார்த்தையை எடுத்து அடுத்த வாக்கியத்தில் முதல் வார்த்தையாகப் பயன்படுத்துவது:
'தாம் முன்குறித்துவைத்தோரை அவர் அழைத்தார்.
தாம் அழைத்தோரை தமக்கு ஏற்புடையவராக்கினார்.
தமக்கு ஏற்புடையவர் ஆனோரை தம் மாட்சியில் பங்கு பெறச்செய்தார்.'
ஆக, நம் வாழ்வில் மெய்யறிவு நாம் பெற்று, நம் கடவுளை தேடினால், கண்டடைந்தால், அவருக்காக கீழானவற்றை இழந்தால் நமக்காக ஆவியார் ஒருங்கியக்கம் செய்வார்.
இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?
1. முழுமையாக, முதன்மையாக, மேன்மையாக
நம் வாழ்வில் நாம் தேடுபவை எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் இங்கே கற்றுக்கொள்ளலாம். பல நேரங்களில் வாழ்க்கை நமக்கு எதைக் கொடுக்கிறதோ அதுவே போதும் என நாம் வாழ்க்கையோடு சமரசம் செய்து கொள்கிறோம். புதையலைத் தேடியவரிடமும், முத்தை தேடியவரிடமும், மீனைத் தேடியவரிடமும் எல்லாம் இருந்தது. இருந்தாலும் ஏன் முதலாமவரும் இரண்டாமவரும் தமக்குள்ள அனைத்தையும் விற்க வேண்டும்? ஏன் மீன் தேடியவர் கெட்ட மீன்களை கடலுக்குள் வீசி எறிய வேண்டும்? வாழ்க்கையில் டூப்ளிகேட் அல்லது டபுளிங் இருக்கவே கூடாது. 'புதையலா? அல்லது சொத்தா?' 'முத்தா? அல்லது சொத்தா?' 'நல்ல மீனா? கெட்ட மீனா?' என்ற கேள்வி வரும்போது, நல்லது எது கெட்டது எது என்று தரம்பார்க்கும் உள்ளமும், தரம் பார்த்துப் பிரித்தவுடன் தாழ்வானதை அகற்றிவிட்டு மேலானதைப் பற்றிக்கொள்ள துணிச்சலும் வேண்டும். அப்படி இருந்தால்தான் விண்ணரசைப் பெற முடியும். ஆக, விண்ணரசு என்பது முழுமையாகவும், முதன்மையானதாகவும், மேன்மையாகவும் தேடப்படவும், கண்டுகொள்ளப்படவும், அடையப்படவும் வேண்டும். ஃபிஃப்டி - ஃபிஃப்டி மனநிலை ரொம்ப ஆபத்து.
2. அவசியம் - அவசரம்
கடந்த வாரத்தில் 'அவசியம் - அவசரமில்லை' என்பதே விண்ணரசு என்றோம். இன்று நாம் பார்வை சற்று மாறுகிறது. சில நேரங்களில் 'அவசியம் - அவசரம்'கூட விண்ணரசாகிறது. புதையலைக் கண்டவரும், முத்தைக் கண்டவரும், நல்ல மீனைக் கண்டவரும் உடனடியாக செயல்படுகின்றனர். 'சின்ன வேலைதான். நாளைக்குப் பார்த்துக்கலாம்!' என அவர்கள் ஓய்ந்திருக்கவில்லை. ஓய்ந்திருப்பது புதையலுக்கும், முத்துக்கும், மீனுக்கும் ஆபத்தாக முடியலாம். ஆக, விண்ணரசைப் பொறுத்தமட்டில் அவசரமும் அவசியம்.
3. நிறைய இருப்பது நிறைவன்று
நம் வாழ்வில் நிறைவு என்று எதைப் பார்க்கிறோம்? நிறைய வைப்பதால் வருவதா நிறைவு? இல்லை. நிறைவாக வைத்திருப்பதே நிறைவு. நிறைய நிலம் வைத்திருந்தால் அது நிறைவல்ல. ஆனால் கையில் ஒரு புதையல் வைத்திருந்தால் நிறைவு. நிறைய செல்வம் வைத்திருந்தால் அது நிறைவல்ல. ஆனால் ஒரே ஒரு முத்து வைத்திருந்தால் அது நிறைவு. வலை நிறைய மீன்கள் வைத்திருந்தால் அது நிறைவல்ல. கூடையில் சில நல்ல மீன்கள் வைத்திருந்தாலே அது நிறைவு. இன்று சிறுநுகர் வாழ்வு பற்றி நிறையப்பேர் பேசுகிறார்கள். அதாவது, சிலவற்றை மட்டும் வைத்துக்கொண்டு நிறைவாக வாழ்வது. ஒரு பெட்டி எடுத்துக்கோங்க. நீங்க பயன்படுத்தமாட்டோம் என நினைக்கிற ஃபோன், டிரஸ், மேக்அப் திங்ஸ், பேனா, பென்சில் என அனைத்தையும் ஒரு பெட்டிக்குள் போட்டு 30 நாள் என ஸ்டிக்கர் ஒட்டி விடுங்க. 30 நாள்கள் நீங்கள் அந்தப் பொருள் இல்லாமல் வாழ்ந்துவிட்டால் அந்தப் பொருள் உங்களுக்கு தேவை அல்ல என்பது பொருள். 'எப்பயாவது தேவைப்படும்!' என நாம் நம் வீடுகளிலும், அறைகளிலும் நிறைய சேர்த்துக்கொள்கிறோம். ஆனால், அவற்றை நாம் ஒருபோதும் பயன்படுத்தப்போவதில்லை. சில நேரங்களில் இன்னும் மேன்மையானவை வீட்டிற்குள் வர அவை தடையாகக் கூட இருக்கின்றன. இதே போல நம் ஃபோன்களையும், நம் கணிணியின் மெமரியையும், ஏன் நம்மளோட மெமரியையும் நிறைத்துக் கொண்டே இருக்கிறோம். நிறைய தெரிந்து கொள்வது அறிவு அல்ல. நிறைவானதை தெரிவது அறிவு. நிறைய வைத்திருப்பது செல்வம் அன்று. நிறைவை வைத்திருப்பதே செல்வம். ஆக, நம் வாழ்வில் நிறைய இருப்பவற்றை குறைக்க முன்வருவோம். சாலமோன் இதைத்தான் செய்தார். நிறைய செல்வம், நிறைய ஆயுள், நிறைய எதிரிகளின் அழிவு அவருக்கு நிறைவைத் தரவில்லை. கடவுளின் ஞானம் மட்டுமே நிறைவு தந்தது. அதை இறுக்கமாகப் பற்றிக்கொண்டார்.
4. தேடுதல், கண்டடைதல், கீழானதை இழத்தல்
நம்ம வாழ்க்கையில் முதல் தேடிடுவோம், கண்டுபிடிச்சிடுவோம். ஆனால், கீழானதை இழப்பதுதான் நமக்கு கஷ்டமாக இருக்கிறது. மது அருந்தக் கூடாது, கோபப்படக்கூடாது, புறணி பேசக்கூடாது என எல்லா நல்லதும் நமக்குத் தெரியும். ஆனால், இந்தக் கீழானவைகளை இழப்பதுதான் நமக்கு கஷ்டமாக இருக்கிறது. இது கரடி போல. எப்படி? கரடி நம்ப பிடிச்சுகிட்ட இருக்குதுன்னு நினைப்போம். ஆனா நல்லா பார்த்தா நாமதான் கரடியைப் பிடித்துக்கொண்டு விடாமல் இருப்போம். நல்ல புதையலுக்காக, நல்ல முத்துக்காக, நல்ல மீனுக்காக தங்களின் கீழானவற்றை இழக்கத் துணிகிறார்கள் நம் கதைமாந்தர்கள்.
5. ஒருங்கியக்கம்
சாலமோன் செய்ததுபோல, பவுல் அறிவுறுத்துவதுபோல 'கடவுளிடம் அன்பு கூர்வோம்.' நாம் எல்லாருமே காலிக்குடங்கள். தூய அகுஸ்தினார் சொல்வது போல, 'காலிக்குடமாகிய நான் என் தாகத்தை யாராவது தீர்ப்பார்களா என்று எல்லாரிடமும் ஓடினேன். ஆனால் எல்லாருமே காலிக்குடங்கள் என்பதை நான் இப்போது கண்டுகொண்டேன். காலிக்குடங்கள் மற்றொரு காலிக்குடத்தை எப்படி நிரப்ப முடியும்? காலிக்குடங்களைத் தேடியதில் நான் வற்றாத ஜீவ நதியாகிய உன்னை நான் மறந்துவிட்டேனே!' ஆக, கடவுளையும் அவருடைய அரசிற்குரியவற்றையும் தேடினால், வாழ்வில் உள்ள மற்ற அனைத்தையும் ஆவியார் ஒருங்கியக்கம் செய்துவிடுவார்.
இறுதியாக,
முழுமையாக, முதன்மையாக, மேன்மையாக - விண்ணரசு!இழத்தலில்தான் வாழ்வு உள்ளது

மறையுரை-வழங்குபவர் :
அருள்பணி மரிய அந்தோணிராஜ்-பாளை மறைமாவட்டம்

ஹாலந்து நாட்டில் உள்ள ஒரு கடற்கரைக் கிராமம். அந்த கிராமத்தில் மீன்பிடித் தொழில்தான் மிகப்பிரதான தொழிலாக இருந்து வந்தது.
ஒருமுறை கடலுக்குச் சென்ற சில மீனவர்கள் ஒருவார காலம் ஆகியும் கரை திரும்பவே இல்லை. அதனால் அந்த ஊரே கண்ணீரில் மூழ்கியது. மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அழுதார்கள். அப்போது அந்த கிராமத்தின் தலைவர் ஊர்மக்களைக் கூட்டி, கடலுக்குள் சென்ற மீனவர்களை எப்படி மீட்டுக்கொண்டு வருவது என்று ஆலோசனை செய்தார். அதற்கு அந்தக் கூட்டத்திலிருந்த இளைஞன் ஒருவன், “கடலுக்குள் சென்றவர்களை தேடிக் கண்டுபிடித்து, மீட்டுக்கொண்டு வரவேண்டுமென்றால் அதற்கு குறைந்தது ஐந்துபேர் கொண்ட குழு தேவைப்படுகின்றதுஎன்றான். உடனே ஊர்த்தலைவர், “கடலுக்குள் செல்ல முன்வரும் அந்த ஐந்து நபர்கள் யார்?” என்று கேட்டார். நான்கு இளைஞர்கள் நாங்கள் தயார் என்று மனமுவந்து தங்களுடைய கைகளைத் தூக்கினார்கள். ஒரே ஒரு நபர் மட்டும் தேவைப்பட்டது. அந்த ஒரு நபர் யார் என்ற நிசப்தம் நிலவியது.
அந்நேரத்தில் ஹான்ஸ் (Hans) என்ற இளைஞன் கடலுக்குள் செல்ல தான் முன்வருவதாக தன்னுடைய கையை உயர்த்தினான். அப்போது அவனுடைய தாயானவள், “அன்பு மகனே, தயவு செய்து நீ மட்டும் கடலுக்குள் போகவேண்டாம். ஏனென்றால் சில ஆண்டுகளுக்கு முன்புதான் உன் தந்தை ஜான் கடலுக்குள் சென்று, இறந்துதான் வந்தார். உன் சகோதரன் பவுல் கடலுக்குள் சென்று, இன்னும் திரும்ப வில்லை. இத்தகைய சூழலில் உன்னையும் நான் இழக்கத் தயாராக இல்லைஎன்று சொல்லி கதறி அழுதாள்.அம்மா எனக்கு ஒன்றும் ஆகாது, நான் உயிரோடு திரும்பி வருவேன்என்றான் ஹான்ஸ். பின்னர் அரை மனதாய் அவள் தன்னுடைய மகன் கடலுக்குள் செல்ல அனுமதித்தாள்.
ஊர் மக்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு அந்த ஐந்துபேர் கொண்ட குழு கடலுக்குள் சென்றது. கடலுக்குள் சென்ற அந்த ஐந்து பேரும் தேடுதல் வேட்டையில் மிக மும்முரமாக ஈடுபட்டார்கள். அந்த நேரத்தில் ஊர் மக்கள் யாவரும் கரையில் மிகவும் ஏக்கத்தோடு காத்திருந்தார்கள். இரண்டு நாட்களுக்குக் பிறகு அந்த மீட்புக் குழு ஓரிடத்தில் கப்பலொன்று மூழ்கும் நிலையில் இருப்பதைக் கண்டார்கள். அந்தக் கப்பல் தங்களுடைய ஊரிலிருந்து புறப்பட்ட கப்பல்தான் என்பதைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு நீண்ட நேரம் பிடிக்கவில்லை. எனவே ஐவரும் வேகமாகச் சென்று, மூழ்கும் நிலையில் இருந்த கப்பலிலிருந்தவர்களைக் காப்பாற்றி தங்களுடைய படகில் கொண்டு வந்து போட்டார்கள். அந்தக் கப்பலில் இருந்தவர்கள் உணவுண்ணாமல் இருந்தததாலும், கடல் தண்ணீரை அதிகமாகக் குடித்திருந்ததாலும் மயக்கமுற்றுக் கிடந்தார்கள்.. எனவே மீட்புக் குழுவினர் அவர்களுக்குத் தங்களோடு கொண்டுவந்திருந்த உணவைக் கொடுத்து, அவர்களைத் தெளிர்ச்சி பெறச் செய்து, படகை கரைக்கு ஓட்டிக்கொண்டு வந்தார்கள்.
கரையில் ஊரே திரண்டிருந்தது. அவர்கள் தூரத்தில் படகு வருவதைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஹான்சின் தாய் தன்னுடைய மகன் திரும்பி வருவதை நினைத்து பெருமகிழ்ச்சி அடைந்தாள். அவள் ஹான்சுக்கு பக்கத்தில் அவனுடைய சகோதரன் பவுல் இருப்பதைக் கண்டு இன்னும் சந்தோசப்பட்டாள். அப்போது அவள் நினைத்துப் பார்த்தாள், தன்னுடைய மகன் ஹான்சை கடலுக்குள் அனுப்பாதிருந்தால் இறந்துபோய்விட்டதாக நினைத்த தன்னுடைய இன்னொரு மகனான பவுல் திரும்பக் கிடைத்திருக்க மாட்டான்என்று. தன்னுடைய இரண்டு மகன்களும் திரும்பக் கிடைத்ததை நினைத்து அவள் நிம்மதிப் பெரு மூச்சுவிட்டாள்.
தம்மை இழக்க நினைக்கும் எவரும் வாழ்வடைவார்என்ற இயேசுவின் கூற்றை மேலே சொல்லப்பட்ட நிகழ்வு அருமையாக மெய்ப்பிப்பதாக இருக்கின்றது.
பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் சிந்தனை இழத்தலில் தான் வாழ்வு உள்ளதுஎன்பதாகும். நிறைய நேரங்களில் பெறுவதும், பெற்றுக்கொள்வதும் தான் வாழ்வு என நினைக்கின்றோம். ஆனால் உண்மையில் இழத்தலில்தான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு அடங்கியிருக்கிறது என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துகூறுகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விண்ணரசை நிலத்தில் மறைந்திருக்கும் புதையலுக்கும் நல்முத்துவுக்கு ஒப்பிடுகின்றார். எப்படியென்றால் நிலத்தில் புதையல் இருப்பதை அறிந்த மனிதர் தன்னிடம் இருக்கின்ற அனைத்தையும் விற்றுவிட்டு அந்த நிலத்தை வாங்குகிறார். வணிகரோ நல்முத்தைக் கண்ட உடன் தன்னிடம் இருக்கின்ற அனைத்தையும் விற்றுவிட்டு அந்த நல்முத்தை வாங்கிக்கொள்கிறார். அதைப் போன்றுதான் விண்ணரசு என்பது ஒப்பற்ற செல்வமாகிய (புதையல், நல்முத்து) ஆண்டவர் இயேசுவை அடைவதற்கு உலக செல்வமாகிய பணம், பொருள், இன்பம் எல்லாவற்றையும் நாம் துறக்கவேண்டும். இவற்றையெல்லாம் துறக்காத ஒரு மனிதரால் இயேசுவையோ அல்லது அவர் தரக்கூடிய விண்ணரசைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பது உண்மையிலும் உண்மை.
இன்றைக்கு நம்மால் இறைவன் அளிக்கக்கூடிய விண்ணரசைப் பெறுவதற்கு நம்மிடம் இருக்கின்ற உலகு சம்பந்தப்பட்ட ஆசைகளை, காரியங்களை, செல்வங்களை இழக்கத் தயாராக முடிகிறதா? அல்லது நம்மையே நாம் இழக்கத் தயாராக முடிகிறதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பெரும்பாலான நேரங்களில் லூக்கா நற்செய்தியில் வரும் அறிவற்ற செல்வந்தனைப் போன்று பணத்தை, பொருளை மேலும் மேலும் சேர்த்துக்கொள்ள நினைக்கிறோம்; அதனால் நாம் வாழ்வினைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கின்றோம். ஆனால் வேடிக்கை என்னவென்றால் நம்மிடம் இருப்பதும் போய் நம்முடைய வாழ்வையே தொலைத்துக்கொண்டவர்கள் ஆகின்றோம்.
ஆண்டவர் இயேசு கூறுவார், “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்என்று (யோவான் 12: 24). அதுபோன்றுதான் கிறிஸ்தவர்களாகிய நாம் விண்ணரசை உரிமைச் சொத்தாகப் பெறுவதற்கு நம்மிடம் இருப்பதை ஏன் நம்மையே இழக்கத் தயாராகவேண்டும். அப்போதுதான் நாம் விண்ணரசைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஓர் ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். பணத்தினால் பெறக்கூடிய எல்லா சுகங்களும் அவனுக்கு இருந்தும் மகிழ்ச்சியின்றி இருந்தான். நிம்மதியையும் சந்தோஷத்தையும் தேடி இறுதியாக ஒரு ஞானியிடம் வந்தான்.
அவரிடம் தன் குறையைச் சொன்னான். அதற்கு அவர், “ஏராளமான செல்வம் படைத்த நீங்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம், எங்கு வேண்டுமானாலும் போகலாம். அப்படியிருக்க உங்களுக்கு என்ன பிரச்னை?” என்று கேட்டார். எனக்கு உடனடியாக மகிழ்ச்சி தேவை. அதை வாங்க முடியுமா?” என்றான் பணக்காரன். ஞானி அவனை கால்பந்து விளையாட்டு பார்க்க அழைத்துச் சென்றார். மைதானத்தை அடைந்து பந்தயத்தைக் கவனிக்கத் தொடங்கினர். இரு அணிகளூம் உற்சாகமாக ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது ஞானி அவனிடம் எவ்வளவு நன்றாக விளையாடுகிறார்கள். ஒருவருக்கொருவர் சளைக்காமல் வெற்றி ஒன்றையே லட்சியமாகக் கொண்டு விளையாடுவதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கிறதுஎன்றார்.
ஆனால் பணக்காரன் கண்களிலோ பந்து உதைபட்டு இங்கும் அங்கும் அலைக்கழிக்கப் படுவதுதான் விழுந்தது. அவன் ஞானியிடம் சொன்னான். இந்தப் பந்தைப் போன்றதுதான் என் நிலையும், வருமான வரிக்காரர்கள் தொழிலாளிகள், பிள்ளைகள் என்று நாலா பக்கமும் எனக்கு இடிதான்என்று மிக வருத்தத்தோடு சொன்னான்.
சரி இது வேண்டாம் வேறு ஓர் இடத்துக்குப் போகலாம்என்று சொல்லி ஞானி ஒரு சங்கீத கச்சேரிக்கு அவனை அழைத்துப் போனார். அங்கு ஒரு புல்லாங்குழல் வித்வான் ஆனந்தமாக இசைமழை பொழிந்து கொண்டிருந்தார். அவர்கள் அமைதியாக இசையை ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் வரும்வழியில் ஞானி கேட்டார்பந்துக்கும் குழலுக்கும் என்ன வேற்றுமை?” என்று.இதென்ன கேள்வி? ஒன்று இசைக்கருவி மற்றொன்று விளையாட்டு சாதனம்என்றான் பணக்காரன்.
ஞானி விளக்கினார். இவை இரண்டுக்கும் தேவைப்படுகிறது காற்று ஒன்றுதான். ஆனால் பந்து தான் வாங்கிய காற்றைத் தனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறது. அது காற்றை இழக்கத் தயாராகயில்லை. அதனால்தான் அது அப்படி உதைபடுகிறது. மாறாக புல்லாங்குழல் உள்வாங்கிய காற்றைத் தனக்குள் வைத்துக்கொள்ளவில்லை. அது தகுந்த இடத்தில் தக்க அளவில் வெளியே விட்டுவிடுகிறது. அதனால்தான் அற்புதமான இசை உருவாகிறது. அதைப் போன்றுதான் நீயும் உன்னிடம் இருக்கும் பணத்தை, சொத்துகளை உனக்குள்ளே வைத்துக்கொண்டால் நிம்மதியின்மையும், தூக்கமின்மையும்தான் கிடைக்கும். மாறாக என்றைக்கு நீ உன்னிடம் இருக்கும் பணத்தை பிறருக்குக் கொடுத்து, அவற்றை இழக்கத் துணிகிறாயோ அப்போது நீ நிம்மதியும், மகிழ்ச்சியும் பெறுவாய்என்றார்.
பணக்காரன் ஞானி எல்லா உண்மைகளையும் உணர்ந்துகொண்டவனாய் மகிழ்வோடு தன்னுடைய இல்லம் சென்று, அதன்படி வாழத் தொடங்கினான். என்றைக்கு நாம் நம்மிடம் இருப்பதை இழக்கின்றோமோ அன்றைக்குத் தான் நாம் வாழ்வடைகிறோம் என்ற உண்மையை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.
இப்படிப்பட்ட ஒரு தெளிவை, ஞானத்தை நம்முடைய சுய ஆற்றலால் பெற்றுக்கொள்ள முடியாது. அதற்கு இறைஞானம் தேவைப்படுகின்றது. இறைஞானம் தான் நாம் எந்த வழியில் நடக்கவேண்டும், எப்படிப்பட்ட காரியத்தைச் செய்யவேண்டும் என்ற தெளிவைத் தருகிறது. அதற்கு நாம் இறைவனிடத்தில் இறைஞானத்தை பொழியுமாறு கேட்கவேண்டும். இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் அரசர் பொன்னோ, பொருளோ கேட்கவில்லை, மாறாக ஞானத்தைக் கேட்டார். அதனால் இறைவனும் அவருக்கு நிறைவான ஞானத்தைத் தருகின்றார்.
ஆகவே நாம் பெறுவதில் அல்ல, இழப்பதில்தான் வாழ்வு இருக்கிறது என்பதை உணர்வோம். அப்படிப்பட்ட தெளிந்த வாழ்க்கை வாழ இறைஞானத்தைக் கேட்போம். இறைவனுக்கு உகந்த மக்களாக வாழ்வோம் அதன்வழியாக இறையருள் பெறுவோம்.எல்லா தியாகங்களையும் விட மதிப்புமிக்கது.

மறையுரை-வழங்குபவர்: அமெரிக்காவிலிருந்து

Fr. Freddy is a Redemptorist priest belonging to the Province of Bangalore. Currently he is attached to the Archdiocese of St. Louis, Missouri state, U.S.A.

44 "ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.
45 "வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார்.
46 விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.
முன்னுரை:
ஏமன் நாட்டில் மறைப்பணியாளராக நான் இருந்தபோது, துறைமுக நகரமான ஏடன் நகரிலுள்ள ஒரு ஆலயத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஒருநாள் மாலை நேரத்தில் ஒரு குடும்பத்தினர் தங்களோடு இரவு உணவு அருந்தவருமாறு என்னை அழைத்தார்கள். அவர்களுடைய வீட்டிற்குச் சென்று உரையாடிக் கொண்டிருக்கும்போது, அந்தக் குடும்பத்தைப் பற்றிய விவரங்களைக் கேட்டேன். அந்தக் குடும்பத்தில் தாயார் ஒரு கத்தோலிக்கர். தந்தை ஒரு இஸ்லாமியர். அவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருந்தனர்.  ஒரு உல்லாச விடுதியில் (Resort) பணியாற்றிக் கொண்டிருந்த அந்த மகன், வீட்டிற்கு வருவதே இல்லை. அவர் ஒரு இஸ்லாமியராக மதம் மாறிவிட்டிருந்தார். இரண்டாவது மகளும் ஒரு உல்லாச விடுதியில் மிக சொற்ப ஊதியத்திற்கு வேலைசெய்து கொண்டிருந்தார். அவர்களுடைய முதல் மகள் ஒரு கிராமத்தில் மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
 இந்தத் தாயையும், இரண்டு மகள்களையும் இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்ய முடியாததால், அந்த தந்தை அவர்களை கைவிட்டுவிட்டார். அவரும் வீட்டிற்கே வருவதில்லை. அந்த இரண்டு இளம்பெண்களும் கிறிஸ்தவர்கள் என்பதால் அவர்களுக்கு திருமணம் நடக்காமல் இருந்தது. ஏதாவது வெளிவேலை இருந்தாலன்றி, அந்த அன்னையும், இரு மகள்களும் வீட்டைவிட்டு வெளியே செல்வதில்லை. எப்போதாவது அவர்கள் வெளியே சென்றபோதெல்லாம், "இஸ்லாமியராக மதம் மாறாவிட்டால், மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று அச்சுறுத்தப்பட்டார்கள். "இயேசுவை புறக்கணித்துவிட்டால் அவர்களுக்கு எல்லாமே கிடைக்கும்" என்ற ஒரு நிலை அங்கே இருந்தது.
 ஆக, அவர்களுடைய தந்தையிடமிருந்தோ, சகோதரனிடமிருந்தோ அவர்களுக்கு ஆதரவு இல்லை; அவர்களுடைய பணியில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இல்லை; வாழ்க்கையில் பாதுகாப்பில்லை; எதிர்கால வாழ்வு குறித்த நிச்சயத்தன்மையும் இல்லை. இத்தனை தியாகங்களையும் அவர்கள் செய்தது, இயேசு என்ற ஒருவருக்காக! "எங்கள் திருமணத்திற்காகவோ அல்லது வேலையில் முன்னேறும் வாய்ப்புகளுக்காகவோ எங்கள் விசுவாசத்தை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்று அந்த மூத்த மகள் என்னிடம் கூறினார். அவர்களை பொருத்தவரையில், "இயேசு என்னும் மாபெரும் செல்வம், அவர்கள் எதிர்கொள்ளுகின்ற எல்லா தியாகங்களையும் விட மிகவும் மேலானது; மதிப்புமிக்கது".
 இறைவார்த்தை:
"நாம் செய்யக் கூடிய எல்லா தியாகங்களை விடவும் இயேசு மதிப்புமிக்கவர்" என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்திலுள்ள உவமைகள் எடுத்துரைக்கின்றன.
1. நிலத்தில் மறைந்திருக்கும் புதையல்: நிலத்தினடியில் பொக்கிஷங்களை மறைத்து வைப்பது, பண்டைய நாள்களில் வழக்கத்திற்கு மாறானதல்ல. பாலஸ்தீன நாட்டு மக்கள் தங்களிடமிருந்த காசுகளையும், ஆபரணங்களையும் பாதுகாப்பதற்காக நிலத்தில் புதைத்து வைப்பதற்கு, அங்கே அடிக்கடி நடைபெற்ற போர்களும், அந்நிய நாட்டு படையெடுப்புகளும் காரணமாக இருந்தன. இரண்டாயிரம் ஆண்டுகளாக கும்ரான் (Qumran) குகைகளில் மறைத்து வைக்கப்பட்டு, 1947-ல் கண்டெடுக்கப்பட்ட, மாபெரும் பொக்கிஷமாகிய "சாக்கடல் சுருள்"களை (The Dead Sea Scrolls) இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
நற்செய்தி வாசகத்தின் உவமையில், புதையலைக் கண்டுபிடித்த அந்த நபர் அதனை மூடி மறைத்துவிடுகிறார். புதையல் பலநாட்களாக அந்த இடத்திலேயே இருந்தது. ஆயினும், நிலத்தின் உரிமையாளருக்கு புதையல் அங்கு இருப்பது தெரியாது. நிலத்தை உழுகின்றவரும் புதையலை கண்டெடுக்க பெருமுயற்சி செய்து உழைத்திடவுமில்லை. தற்செயலாகவே அந்தப் புதையலை அவர் கண்டுபிடிக்கிறார். அவ்வாறு கண்டுபிடித்த பிறகு, அந்தப் புதையலைக் குறித்த எண்ணம் மட்டுமே அவர் மனதில் நிறைந்திருந்தது. "மிகச்சிறந்த பெரும் மதிப்பு வாய்ந்த ஏதோ ஒன்று அங்கே இருக்கிறது; ஆயினும் அது அங்கே இருப்பது யாருக்கும் தெரியாது" என்பதையே, அதனை மூடிமறைக்கின்ற நிகழ்வு சுட்டிக்காட்டுகின்றது. இயேசு நம்மிடையே பிரசன்னமாயிருக்கிறார்; ஆயினும் அவரை நாம் புரிந்துணர்வதில்லை. மறைந்துள்ள புதையலை வெளிப்படுத்தாமல் அந்த நிலத்தை வாங்கிக்கொள்வதிலுள்ள ஒழுக்க நெறி பிறழ்வு பற்றி இந்த உவமையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இங்கு சுட்டிக்காட்டப்படுகின்ற கருத்து ஒன்றே ஒன்று தான்: "எல்லாவற்றையும் விட, எல்லா தியாகங்களையும் விட, இயேசு மதிப்பு மிக்கவர்".
2. விலையுயர்ந்த முத்து: விவிலிய சம்பவங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில், முத்துக்களே மிக விலையுயர்ந்ததாகவும், மக்களால் பொன்னை விட அதிகமாக விரும்பப்பட்டதாகவும் இருந்தன. முதலாம் நூற்றாண்டில் மத்தியத் தரைக் கடல் நாடுகளில் மிகவும் மதிப்பு வாய்ந்த செல்வத்திற்கு அடையாளமாக முத்துக்கள் கருதப்பட்டன. பண்டைய கிரேக்க மதச்சுவடிகளில், மீட்பின் சின்னமாக முத்துக்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. மிகவும் மதிப்புடைய ஒன்றைத் தீவிரமாக முயன்றுத் தேடிக்கொண்டிருந்த அந்த வணிகர், இறுதியாகத் தான் எதிர்பார்த்ததை விட சிறப்பானதைக் கண்டுகொண்டார். எல்லாவற்றையும் தியாகம் செய்து அடைவதற்கு தகுதியானதாக, அவர் கண்டுபிடித்த முத்து இருந்தது.
மேற்சொன்ன இரண்டு உவமைகளும் விண்ணரசைக் குறித்தே பேசுகின்றன. விண்ணரசு என்பது இயேசுவைத் தவிர வேறொன்றும் இல்லை. விண்ணரசின் நிறைவான இயேசுவோடு ஒன்றித்திருப்பதற்கு எதையும் தியாகம் செய்தல் தகுமே. வாழ்க்கையில் எல்லாவற்றையும் தியாகம் செய்து அடைவதற்கு இயேசு தகுதியானவரே.
 பயன்பாடு:
மாபெரும் அரசர் சாலமோன் கடவுளிடமிருந்து ஞானத்தையே கேட்டார். ஞானம் என்பது என்ன? இந்தக் கேள்விக்கான பதிலை தனது "சபை உரையாளர்" என்னும் நூலில் அவரே விவரிக்கிறார். வாழ்வின் பொருளை அறிந்துகொள்ள சாலமோன் முயன்றார். ஞானத்தையும், அறிவையும் பற்றித் தெரிந்து கொள்வதில் சிந்தையை செலுத்திய அவர், "ஞானம் பெருகக் கவலை பெருகும்; அறிவு பெருகத் துயரம் பெருகும்" (சபை உரையாளர் 1:18) என்று கண்டுகொண்டார். அதன் பிறகு, வாழ்வில் இன்பத்திற்கான அர்த்தத்தையும், தன்னுடைய செயல்களுக்கான அர்த்தத்தையும் தேடினார். முடிவில், "அவை யாவும் வீண் என்பதைக் கண்டேன். அவை அனைத்தும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்; முற்றும் பயனற்ற செயல்களே" (சபை உரையாளர் 2:11) என்று உணர்ந்தார். அவருடைய அனைத்து தேடல்களுக்கும் பின்னர், "இவையனைத்திற்கும் முடிவுரையாக ஒன்று கூறுகிறேன்; கடவுளுக்கு அஞ்சி நட; அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. இதற்காகவே மனிதர் படைக்கப்பட்டனர்" (சபை உரையாளர் 12:13) என்று அவர் கூறுகிறார். இன்றைய முதல் வாசகத்தில், சாலமோன் "ஞானம் வேண்டும்" என்று கேட்டபோது, அவர் யாவே கடவுளே வேண்டுமென்று கேட்டார். அதுவே சாலமோனுக்கு மதிப்பு மிக்க புதையலாகவும், விலையுயர்ந்த முத்தாகவும் அமைந்தது.
 திருத்தூதர் புனித பவுல், "உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்" (பிலிப்பியர் 3:8) என்று கூறுகிறார். இயேசு ஒருவரையே மதிப்புமிக்க புதையலாகவும், விலையுயர்ந்த முத்தாகவும்  புனித பவுல் காண்கிறார்.
 நமது புதையலையும், விலையுயர்ந்த முத்தையும் நாம் கண்டுகொண்டோமா? அதிகாரம், செல்வம் மற்றும் அறிவு - இந்த மூன்று அம்சங்களுமே நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கின்ற காரணிகளாக அமைகின்றன. நமது வாழ்க்கையின் எந்தவொரு கட்டத்திலும் இந்த மூன்றையும்  நாம் தேடியலைந்துகொண்டே இருக்கிறோம். நாம் இறந்திடும்போது, நாம் சேர்த்து வைத்த பணம் நமது வங்கி கணக்கிலேயே தங்கிவிடுகிறது. ஆயினும், நாம் வாழும் நாள்களில் நமது செலவுக்கு போதுமான பணம் நம்மிடம் இல்லை என்று நாம் நினைக்கிறோம். நமது இறப்புக்கு பிறகும் கூட, இன்னும்  செலவிடப்படாத நமது பணம் ஏராளமாக இருக்கிறது. சீனாவில் ஒரு பிரபல தொழிலதிபர் இறந்து போனார். அவருடைய வங்கிக் கணக்கிலிருந்த 1.9 மில்லியன் டாலர் தொகை விதவையான அவருடைய மனைவிக்கு உரித்தானது. அவருடைய வீட்டில் வாகன ஓட்டுனராகப் பணியாற்றியவரை அந்த விதவை மணந்துகொண்டார். அந்த வாகன ஓட்டுனர், "என்னுடைய எஜமானருக்காகத் தான் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்று இத்தனை நாள்களாக நான் நினைத்தேன். ஆனால், என் எஜமானர் தான் எனக்காக இத்தனை காலம் உழைத்திருக்கிறார் என்பதை இப்போது தான் புரிந்துகொண்டேன்" என்று கூறினாராம்.
 திறன்மிகு நமது கைபேசிகளிலுள்ள 70% செயல்பாட்டு அம்சங்கள் பயனற்றவையாகவே இருக்கின்றன. மிகவும் விலையுயர்ந்த வாகனங்களில் 70% வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகளும் மற்ற உபகரணங்களும் தேவையற்றவையாகவே உள்ளன. ஒரு ஆடம்பரமான தனிவீடோ அல்லது மாளிகையோ உங்களுக்கு சொந்தமானதாக இருந்தால், அதில் 70% இடம் பயன்படுத்தப்படாமல் தான் இருக்கிறது. நாம் அடுக்கி வைத்திருக்கும் ஆடைகளின் நிலை என்ன? அவற்றில் 70% ஆடைகளை நாம் உடுத்துவதே இல்லை. நமது வாழ்நாளின் மொத்த உழைப்பின் வருமானத்தில்  70% மற்றவர்களின் செலவுக்கே பயன்படுகிறது.
 ஹெஜாஸி என்ற ஞானியிடம் ஒரு சீடர், "மனிதர்களை குறித்த மிகவும் வேடிக்கையான விஷயம் என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த ஞானி "மனிதர்கள் எப்போதும் தவறான போக்கிலே சிந்தனை செய்கிறார்கள். தங்கள் வளர்ச்சியில் அவசரம் காட்டும் இவர்கள், பிறகு தங்கள் குழந்தை பருவத்தை தொலைத்துவிட்டதை எண்ணிப் புலம்புகிறார்கள்; தங்கள் உடல்நலத்தைப் பேணிக்காத்திட தேவையான பணத்தையும் இழந்துவிடுகிறார்கள். தங்கள் எதிர்காலத்தைக் குறித்து கவலைகொள்ளும் இந்த மனிதர்கள், தங்களுடைய நிகழ்காலத்தை உதாசீனம் செய்வதால், அவர்களுடைய நிகழ்காலம் - எதிர்காலம் இரண்டிலும் நல்வாழ்வு வாழ்வதில்லை. நாம் இறக்கப்போவதில்லை என்ற நினைப்பில் வாழ்கின்ற இவர்கள், எப்போதும் நன்றாக வாழாத நிலையில் மரித்துப் போகிறார்கள்" என்று பதில் சொன்னார். (“That which is funny about man” by Paulo Coelho, Paulo Coelho's Blog, 27 August 2008)
 நமது புதையல் என்பது என்ன?
நமது விலையுயர்ந்த முத்து என்பது யாது?
நம்முடைய எல்லாவற்றையும் தியாகம் செய்து, வாழ்வில் நாம் அடைந்திட விழைகின்ற முக்கியமான ஒன்று எது?
 முடிவுரை:
இன்றைய நாளில் இயேசு நம்மிடம், "உங்கள் வாழ்வில் எல்லா தியாகங்களையும் செய்து அடைவதற்கு நானே தகுதியானவன்; நானே மதிப்பு மிக்க புதையல்; நானே விலையுயர்ந்த முத்து" என்று சொல்கிறார். இறுதித் தீர்வை நாளன்று நீங்களும் நானும் அவர் முன்னே நிற்கும்போது,
நாம் அவரிடம் காட்டப் போகின்ற புதையல் எது?
விலையுயர்ந்த முத்து எது?
இயேசுவே எல்லா தியாகங்களையும் விட மேலான மதிப்புமிக்கவர்.


The goal of my life is to be with God for ever
 The sole goal of my life: St Ignatius of Loyola writes in his Spiritual Exercises (‘Principle and Foundation’ that has influenced the 2nd question of the Catechism of the Catholic Church - here paraphrased by David Fleming SJ):
The goal of our life is to live with God forever.  God, who loves us, gave us life. Our own response of love allows God’s life to flow into us without limit. All the things in this world are gifts of God, presented to us so that we can know God more easily and make a return of love more readily. As a result, we appreciate and use all these gifts of God insofar as they help us develop as loving persons. But if any of these gifts become the centre of our lives, they displace God and so hinder our growth toward our goal.
In everyday life, then, we must hold ourselves in balance before all of these created gifts insofar as we have a choice and are not bound by some obligation. We should not fix our desires on health or sickness, wealth or poverty, success or failure, a long life or short one. For everything has the potential of calling forth in us a deeper response to our life in God.
Our only desire and our one choice should be this: I want and I choose what better leads to God’s deepening his life in me.
 St Ignatius is attempting to offer a commentary on the dictum that Jesus had proclaimed in the Sermon on the Mount, “Set your hearts on his kingdom first… and all these other things will be given you as well” (Mt 6:33). These lines were so literal for Solomon as we heard in the first reading of today. 
Unless you sell all that you have:  In the gospel text of today, Jesus elaborates by means of two parables his own injunction to seek first the Kingdom of God.  The Kingdom of God is like  treasure hidden in a field, you cannot attain it unless you sell all you have in order to take possession of the field, thus you show how much you value that treasure (Mt 13:44).  The Kingdom of God is like a precious pearl, you cannot possess it unless you sell all you have in order to be with it, thus you show how much the pearl is important for you (Mt 13:45).   
I am created in the image of God (Gen 1:27).  And my heart is constantly thirsting to be one with its Origin. Therefore, the goal of my life is to be with God for ever – to be part of the Kingdom of God.  I need to prioritise this.  All things – my wealth and possessions, my family and relationships, my degrees and achievements – are only the means to reach this goal of my life: To be one with God for ever.  And the ‘ever’ begins now!  It is already here!

Fr.Sahaya G. Selvam, sdb-Nairobi