Thursday 28 June 2018

ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு



ஆண்டின் பொதுக்காலம்  13-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்
சா.ஞா. 1:13-12:23-24
2 கொரி. 8:7,9,13-15
மாற். 5:21-43

ஞாயிறு இறைவாக்கு - அருள்பணி முனைவர் ம. அருள்


திருமணம் முடித்த ஒரு வாரம் கடந்து முல்லா என்பவர் தன் மனைவியோடும், உறவினர்களோடும் ஒரு தீவைக் கடக்க படகில் பயணம் செய்து கொண்டிருந்தான். திடீரென புயல் அடித்து படகு திக்கு முக்காடியது. அனைவரும் அஞ்சி நடுங்கினர். ஆனால் முல்லா மட்டும் கவலைப்படாமல் மகிழ்ச்சியோடு இருந்தான். உமக்கு பயமில்லையா? என்று அவன் மனைவி கேட்டாள். அதற்கு முல்லா ஒரு கத்தியை உருவி தன் மனைவியின் கழுத்தை நோக்கி ஓங்கினான். மனைவியோ எவ்வித பயமுமின்றி இருந்தாள். உனக்கு பயமில்லையா? என்று முல்லா கேட்டபோது, கத்தி பயமானதுதான். ஆனால் அதைத் தாங்கி இருக்கும் கரம் என் ஆருயிர் கணவரின் கரம் அல்லவா என்று கூறினாள். ஆம்! இந்த அலைகள் ஆபத்தானவை தான். ஆனால் அதை ஆட்டுவிப்பவர் இறைவன் அல்லவா! அவர் அன்புமயமானவர். எனவே எனக்கு பயமில்லை என்றார் முல்லா.
ஆம்! நம்பிக்கைதான் மனித வாழ்வுக்கு மகிழ்ச்சியும் வெற்றியும் தருகிறது. இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மனிதனுக்குப் பயமும், பதற்றமும் தேவை இல்லை என்பதை இன்றைய இறைவார்த்தை நிகழ்ச்சிகள் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதோ இன்றைய இறை வார்த்தையில் இயேசு மரணத்தின் மீது வெற்றி கொண்டவராக, தன்னை மீறிய சக்தி ஒன்று இவ்வுலகில் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.

செபக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயீர் என்பவரின் மகள் இறந்துவிடுகிறாள். இறந்தாள் என்ற செய்தி இயேசுவுக்கு அறிவிக்கப்படுகிறது. இயேசு சிறுமியின் தகப்பனைப் பார்த்து, அஞ்சாதீர் நம்பிக்கையை மட்டும் விடாதீர் (மாற் . 5:36) என்று கூறிவிட்டு யார் வீட்டுக்குச் சென்று சிறுமி சாகவில்லை உறங்குகிறாள் (மாற் 5:39) என்கிறார். அவர் சொன்னதைக் கேட்ட அனைவரும் அவரை ஏளனம் செய்தனர். ஏனெனில் உலக முறைப்படி அவள் ஏற்கெனவே இறந்துவிட்டாள். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும், மாண்டவர் வருவாரோ இம்மாநிலத்தில் என்று ஒளவையார் பாடிய பாட்டிற்கு ஏற்ப இது நடக்காது என்று நினைத்து ஏளனம் செய்தனர். ஆனால் எது நடக்காது என்று நினைத்தார்களோ அது நடந்தது. இயேசு, "தாலித்தாகூம்” "சிறுமியே எழுந்திரு” என்றதும் எழுந்து அமர்ந்தாள்.

அருமையான சகோதரனே! சகோதரியே! நாம் சாகமாட்டோம். ஆம்! நாம் சாகவே மாட்டோம். காரணம், இன்றைய முதல் வாசகத்திலே சாலமோன் நூலில் வாசித்ததுபோல (சா.ஞா. 1:13-14) நாம் சாக வேண்டும் என்பது கடவுள் விருப்பம் அல்ல. சாவையும் கடவுள் படைக்கவில்லை. அவர் வாழ்வைத்தான் படைத்தார். நாம் வாழ வேண்டுமென்று விரும்புகிறாரேயொழிய, நாம் அழிய வேண்டும் என்று அல்ல. அப்படி நாம் சாக மாட்டோம் என்றால் அன்றாடம் நிகழும் சாவுக்கு விவிலியம், வேதம் தரும் விளக்கம் என்ன?

இயேசு இந்த உலகச் சாவை உறக்கம் என்று அழைக்கின்றார். ஏனெனில் ஆண்டவர் தரும் வாக்குறுதி, புனித பவுல் (1 கொரி. 15:22) கூறுவதுபோல ஒரு நாள் நாம் எல்லோரும் உயிர்ப்பிக்கப் படுவோம். ஏனெனில் ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்கு வருவது போல கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர் என்கிறார் பவுல் அடிகளார். இதை உணர்ந்துதான் மீட்பின் வரலாற்றில் எத்தனையோ மறைசாட்சியர்கள் துணிந்து சாவை எதிர் கொண்டார்கள்.

ஆண்டவர் இயேசு கூறுகிறார்: “என்னை நம்புவோர் என்றுமே சாகமாட்டார்" (யோவா. 6:47). திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார் : (தி.பா. 121:3-4) உம் கால் இடறாதபடி அவர் உன்னைப் பார்த்துக் கொள்வார். உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிட மாட்டார். இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை. உறங்குவதும் இல்லை .

முடிவுரை
உங்கள் சிந்தனைக்காக இறுதியாக இதைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு துறவியிடம் சீடன் ஒருவன் இறந்த பிறகு 
வாழ்க்கை தொடருமா? என்று கேட்டான். அதற்குத் துறவி அருகில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைக் காட்டி, இதில் நெருப்பு வைக்கும் முன் தீ எங்கிருந்தது என்று கேட்க, விடை தெரியாமல் திகைத்தான் சீடன். தீயை அணைத்துவிட்டு, இப்போது தீ எங்கே போனது என்றும் கேட்டார் துறவி சீடனை நோக்கி. தெரியவில்லை என்றான் சீடன். அதேபோல நாம் எங்கிருந்தோம், இறந்த பிற்பாடு எங்கே செல்லுகிறோம் என்றெல்லாம் சிந்தித்து தடுமாறுவதை விட்டு, பயனுள்ள வகையில், மற்றவரின் வளர்ச்சிக்காக உழைப்பால், உணர்வால், உடைமைகளால் என்ன செய்கிறோம் என்று சிந்திப்பதே சிறந்தது என்றார் துறவி. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்திலே புனித பவுல் அடிகளார் (2 கொரி. 8:13,14) இல்லாதவர்களை இருப்பவர்களாக மாற்றும் வாழ்க்கையில் இறங்கி மற்றவர்களையும் சமநிலைக்குக் கொண்டு வர அன்புத் தொண்டு புரிய அழைக்கிறார். எனவே இயேசுவைப்போல நாமும் உறவுக்குக் கரம் கொடுத்து இல்லாதவர்களை இருப்பவர்களாக்கி, சொத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உயிர் கொடுக்கப் புறப்படுவோம்.


மகிழ்ச்சியூட்டும் மறையுரை -குடந்தை ஆயர் F. அந்தோனிசாமி

சொர்க்க வாசல் திறக்கும் இது ஒரு கற்பனை. விண்ணகத்திலே எங்கு பார்த்தாலும் தோரணங்கள்! ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நிறைந்த பெரிய விழா ஒன்றிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது அந்தப் பக்கமாக வந்த கடவுள் வானதூதர்களைப் பார்த்து, எதற்கு இந்த ஏற்பாடுகள்? என்றார். அதற்கு அவர்கள், இஸ்ரயேலரைத் துரத்தி வந்த எகிப்தியர்கள் அனைவரும் கடலிலே மூழ்கி இறந்துவிட்டார்கள். அந்த வெற்றியைக் கொண்டாடத்தான் இந்த ஏற்பாடுகள் என்றனர். அதற்குச் கடவுள், என் மக்கள் அங்கே இறந்து கிடக்கின்றார்கள். நீங்கள் இங்கே விழாவிற்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கின்றீர்களா? நிறுத்துங்கள் உங்கள் ஏற்பாடுகளை என்றார்.
இது ஒரு கற்பனையாக இருந்தாலும் ஒரு பெரிய பாடத்தை நமக்குக் கற்றுத்தருகின்றது. என்ன பாடம்? மனிதர்கள் அழிந்து போவதை கடவுள் ஒருபோதும் விரும்புவதில்லை. இந்த உண்மையைத்தான் முதல் வாசகம் நமக்குக் கற்றுத்தருகின்றது. சாலமோனின் ஞானம், சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை ; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை (சாஞா 1:13) என்று கூறுகின்றது.
சாலமோனின் ஞானம் கூறுவது முற்றிலும் உண்மை என்பதை ஆண்டவர் இயேசு நிரூபித்துக்காட்டினார். எங்கெல்லாம் அழிவின் அறிகுறி தெரிந்ததோ அங்கெல்லாம் இயேசு தோன்றி அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றினார்.
அழிந்து கொண்டிருந்த உடலுக்கு இயேசு சுகமளிப்பதையும், பிரிந்த உயிரை மீண்டும் உடலோடு சேர்த்துவைத்து சிறுமிக்கு 
உயிர்கொடுப்பதையும் இன்றைய நற்செய்தியிலே வாசிக்கின்றோம்.

நமது கடவுள், இயேசு ஆண்டவர் ஏழைகளுக்கு ஏழையாகி (இரண்டாம் வாசகம்), அழுவாரோடு அழுது பாவம் தவிர (எபி 4:15) மற்ற அனைத்திலும் மனிதரைப் போல வாழ்ந்து, மனிதர்கள் நலமுடன் வாழ வலம் வந்தார்.

எந்த இயேசு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மக்களை எல்லாவிதமான வேதனைகளிலிருந்தும் விடுவித்தாரோ (மாற் 1:32-34) அதே இயேசு நற்கருணை வழியாக இன்றும் நம்மைச் சந்திக்கின்றார். அவர்மீது நம்பிக்கை வைத்து ஒவ்வொரு திருப்பலியிலும் வாழ்வு பெறுவோம்.
நம் இயேசுவை நாம் நம்பிக்கையோடு சந்திக்கும்போது நமது இதயப் பறவைக்கு சிலிர்க்கும் சிறகுகள் முளைக்கும்! நமது மின்னல் மனத்திற்கு இனிய கனவுகள் கிடைக்கும்! நமது வழிதேடும் வாழ்விற்கு சொர்க்க வாசல்கள் திறக்கும்!

மேலும் அறிவோம் :
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (குறள் : 8). 
பொருள் : அறக்கடலாகத் திகழும் சான்றோனாகிய இறைவன் அடியொற்றி நடப்பவர், ஏனைய பொருளும் இன்பமும் ஆகிய கடல்களை எளிதாகக் கடந்து செல்வர்; ஏனையோர் பிற துன்பங்களிலிருந்து மீள முடியாது தவிப்பர்.



மறையுரை மொட்டுக்கள் -அருள்பணி Y. இருதயராஜ்

மறைக்கல்வி ஆசிரியர், "விண்ணகம் செல்ல விரும்புவோர் கையை மேலே உயர்த்துங்கள்" என்றார், மோகன் என்ற ஒரு மாணவனைத் தவிர மற்றளைவரும் கையை மேலே தூக்கினர், ஆசிரியர் மோகனிடம். "விண்ணகம் செல்ல உனக்கு விருப்பமில்லையா?" என்று கேட்டார். மோகன், "விண்ணகம் செல்ல விருப்பம்தான். ஆனால் இன்று நான் பள்ளிக்கு வரும்போது என் அப்பா, பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்கு நேராக வந்துவிடவேண்டும்; வேறு எங்கும் போகக்கூடாது என்று சொல்லி அனுப்பினார்" என்று பதில் சொன்னான், எல்லாரும் விண்ணகம் செல்ல விரும்புகின்றனர். ஆனால் எவருமே சாக விரும்புவதில்லை ,
சாவை எவரும் தவிர்க்க முடியாது: வேண்டுமானால் அதைக் கொஞ்சக்காலம் தள்ளிப் போடலாம். "நேற்று உயிரோடு இருந்தவள் இன்று இல்லை" என்று கூறும் நிலையாமைதான் இவ்வுலகின் பெருமை என்கிறார் வள்ளுவர்.
நெகுநெல்உள்ஒருவன் இன்றஇல்லை என்னும் பெருமை) 94% அது இவ்வுலகு
(குறள் 3.36). சாவை மனிதர் மட்டுமல்ல, கடவுளும் விரும்புவதில்லை , அவருடைய சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர் சாகா மல் வாழ்வதையே கடவுள் விரும்புகிறார், அலசையில் பொறாமையால்தான் சாவு உலகில் நுழைந்தது. எனத் தெளிவுபடக் கூறுகிறது முதல் வாசகம் (சாஞா 2:23-24).
கிறிஸ்து சாவை அளித்து விட்டார், இன்றைய அல்லேலூயா பாடல் கூறுகிறது: "நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்" (2 திமொ 1:10). கிறிஸ்து நாம் அனைவரும் சாகாமல் இருக்க அவர் சாவை ஏற்றார், தமது சாவினால் நமது சாவை அழித்தார்,
இன்றைய நற்செய்தியில் தொழுகைக்கூடத் தலைவர் யாயிர் என்பவருடைய பன்னிரண்டு வயது நிரம்பிய மகள் இறந்துவிட்டார், அவளுடைய வீட்டில் அனைவரும் ஓலமிட்டு அழுகின்றனர். ஆனால் கிறிஸ்துவோ, "சிறுமி இறக்கவில்லை ; உறங்குகின்றாள்" என்கிறார். அதைக்கேட்டு மற்றவர்கன் ஏ ளளமாகச் சிரிக்கின்றனர், பெத்தானியாவில் இலாசர் இறந்து அவரைக் கல்லறையில் அடக்கம் செய்துவிட்டனர். அந்நிலையிலும் இயேசு தம் சீடர்களிடம், 'நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்" (யோவா 11:11) என்கிறார் கிறிஸ்து சாவை ஒரு நெடிய தூக்கமாகவே கருதுகிறார். வள்ளுவரும் இறப்பைத் தாக்கத்திற்கும், பிறபைத் தூக்கத்திலிருந்து விழிப்பதற்கும் ஒப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உறங்குவது போலும் சாக்காடு; 
உறங்கி விழிப்பது போலும் பிறக்க
(குறள் 369) 
இறந்தவர்கள் கல்லறையில் துயில் கொள்கின்றனர். கடவுள் அவர்களை எழுப்பி வாழ வைக்கிறார் என்கிறார் கிறிஸ்து (யோவா 5:21), 12 வயது சிறுவன் பாம்பு கடித்து இறந்து விட்டான். அவன் அடக்கத்தில் நான் கலந்து கொண்டேன், அவனுடைய அம்மா என் காலைப் பிடித்து. "சாமி! இலாசரைக் கிறிஸ்து உயிர்த்தெழச் செய்ததுபோல் என் மகனையும் உயிர்த்தெழச் செய்யுங்கள்” என்று கதறினார். ஆனால் என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை. ஆனால் அவளைக் கல்லறையில் வைத்து பின்வரும் செபத்தைத்தான் சொல்ல முடிந்தது : "இவர் உருவான மண்ணிற்கே திரும்பிச் செல்லும்படி நிலத்திற்கு கையளிக்கிறோம். இறந்தோரிடமிருந்து தலைப்பேறாக உயிர்த்தெழுந்த கிறிஸ்து தாழ்வுக்குரிய உடலை) மாட்சிக்குரிய தம் உடலின் சாயலாக உருமாற்றுவார் .... இவரது உடலையும் இறுதி நாளில் மகிமையுடன் உயிர்த்தெழச் செய்வார்."
ஒரு சிறுவனிடம் "உனக்கு சாகப் பயமில்லையா?" என்று கேட்டதற்கு அவன் அமைதியாக, "நேரம் வந்தால் போக வேண்டியது தான் என்றான். எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு, பிறக்க ஒரு காலம் உண்டு; இறக்க ஒரு காலம் உண்டு, ஆனால் "காலம் வருகிறது அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர், நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர். தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்" (யோவா 5:28-29). அல்லவை அகற்றி நல்லவை செய்தால், நாம் வாழ்வு பெற உயிர்த்தெழுவோம்.
இன்றைய பதிலுரைப்பாடல் கூறுகிறது: "ஆண்டவரே நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர். சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர்” (திபா 30:3), சாவு என்ற படகு இம்மை வாழ்வின் இக்கரையிலிருந்து மறுமை வாழ்வு என்ற அக்கரைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.)
தொழுகைக்கூடத் தலைவரிடம் கிறிஸ்து. “அஞ்சாதீர், நம்பிக்கை மட்டும் விடாதீர்" (மாற் 5:36) என்கிறார். கிறிஸ்து தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டுக்கு வரும் வழியில் பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் அவதியுற்ற பெண் கிறிஸ்துவின் ஆடையைத் தொட்டு குணமடைகிறார். கிறிஸ்து அவரிடமும், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று" (மாற் 5:34) என்கிறார், இதிலிருந்து கிறிஸ்து நமக்குக் கூறுவது என்ன? எங்கே நம்பிக்கை இல்லையோ அங்கே கடவுள்கூட புதுமை செய்ய முடியாது, கிறிஸ்து நாசரேத் ஊர் மக்களிடம் நம்பிக்கை இல்லாததால் அவரால் அங்க புதுமை செய்ய முடியவில்லை என்கிறது நற்செய்தி. "அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்கு பல வல்லச் செயல்களைச் செய்யவில்லை " (மத் 13:5-8). நமது நம்பிக்கையின்மையால் வல்லமைமிக்கக் கடவுளின் கரங்களைக்கூட நாம் கட்டிப்போடுகிறோம். அவரைச் செயல் இழக்கச் செய்கிறோம். உடற்பிணயிலிருந்து குணம் பெறுவதற்கும் மனநலம் பெறுவதற்கும் வேறுபாடு உண்டு. லூர்து நகருக்குச் செல்லும், அனைவருமே உடற் பிணியிலிருந்து குணம் பெறுவதில்லை. ஆனால் அங்கு செல்லும் அனைவருமே மனநலம் பெறுகின்றனர், உடலரீதியான புதுமைகளைவிட மனரீதியான புதுமைகளே பெரியது. மனமாற்றமே மாபெரும் புதுமை.
கிறிஸ்துவை நற்கருணை வழியாக நம்பிக்கையுடன் தொடுவோம்; நலம் பெறுவோம்.





ஏன் இந்த அமளி?
அருள்பணி ஏசு கருணாநிதி

'ஏன் இந்த அமளி?' - இயேசு தொழுகைக்கூடத் தலைவர் யாயிரின் வீட்டிற்கு வெளியே அவரின் இறந்த மகளுக்காக அழுது புலம்பிய மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கேட்ட இந்தக் கேள்வியோடு இன்றைய சிந்தனையை நாம் தொடங்குவோம்.

'ஏன் இந்த அமளி?' என்ற இந்தக் கேள்வியை ஒற்றை எழுத்தை மாற்றி, 'ஏன் இந்த அமலி?' என்று கேட்டுவிட்டால், 'அமலி' என்ற பெயர் கொண்டவர்கள் எல்லாம் சண்டைக்கு வந்துவிடுவார்கள். 

'அமளி' என்றால் கூச்சல் அல்லது குழப்பம் அல்லது புலம்பல். கூச்சல் மற்றும் குழப்பத்தைவிட புலம்பல் என்ற பொருளே இந்த வார்த்தைக்குச் சரியாகப் பொருந்தும். அதாவது, நடக்கக்கூடாத ஒன்று அல்லது நம் மனதிற்கு ஏற்பில்லாத ஒன்று நடந்துவிடும்போது நம் மனமும், நம் வாயும் உச்சரிக்கும் வார்த்தைகள்தாம் அமளி. ஆக, அமளியில் ஒரு வகையான சோகம், விரக்தி, ஏமாற்றம், சோர்வு இருக்கும். ஆனால் இந்த அமளியினால் ஒரு நன்மையும் இல்லை. இந்த மாதிரியான அமளி என்னும் புலம்பல் நிலை நம்மில் உருவாகப் பல காரணிகள் இருக்கலாம். அவற்றில் மூன்று காரணிகளை முன்வைக்கின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு:

இன்றைய முதல் வாசகத்தில் (காண். சாஞா 1:13-15,2:23-24) ஆசிரியர், 'இறப்பு' எழுப்பும் அமளி பற்றியும்,

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 கொரி 8:7,9,13-15) தூய பவுல், 'குறைவு' எழுப்பும் அமளி பற்றியும்,

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 5:21-43) மாற்கு, 'நலமின்மை' எழுப்பும் அமளி பற்றியும் குறிப்பிடுகின்றார்.

'இறப்பு,' 'குறைவு,' 'நலமின்மை' - இந்த மூன்று காரணிகளால் நாமும்கூட நம் வாழ்வில் இன்று புலம்பிக்கொண்டிருக்கலாம். இப்படிப் புலம்பிக் கொண்டிருக்கும் நம்முன் இயேசு வந்து நம்மிடம் கேட்பதெல்லாம் இந்த ஒற்றைக் கேள்விதான்: 'ஏன் இந்த அமளி?' 'ஏன் இந்தப் புலம்பல்?'

அமளி மற்றும் புலம்பல் வரக் காரணம் நாம் கடவுளின் இருப்பை மறந்துவிடுவதுதான் என்பது இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கின்ற பாடமாகவும் இருக்கிறது.

அ. இறப்பும் கடவுளின் இருப்பும்

'இந்த உலகில் இறப்பு ஏன்?' 'வாழ்வோர் ஏன் இறக்கின்றனர்?' என்று கேள்விகள் எழுப்பும் சாலமோனின் ஞானநூல் ஆசிரியர், 'அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது' என்றும், 'கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்றே படைத்தார்' என்றும் எழுதுகின்றார். ஆக, இன்று சாவு நம்மைத் தழுவினாலும் கடவுள் நம்மை அழியாமைக்கென்று படைத்திருப்பவர். அவருடைய சாயலில் படைக்கப்பட்டுள்ள நாம் ஒருபோதும் அழிவதில்லை. நாம் பிறந்தது முதல் ஒவ்வொரு நொடியும் இறப்பை நோக்கியே அடியெடுத்து வைக்கின்றோம். இறப்பை நோக்கித்தான் நாம் நகர்கிறோம் என நினைக்கத் தொடங்கினால் நாம் ஒருபோதும் வாழ மாட்டோம். எல்லாம் இறக்கத்தானே போகிறோம் என நினைத்து ஒன்றும் செய்யாமல் ஓய்ந்திருப்போம். ஆனால், இறவாமைக்கான ஆவல்தான் நம்மை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி நோக்கி உந்தித் தள்ளுகிறது. 'இல்லை, உனக்கு எல்லாம் முடிந்துவிட்டது, நீ ஒன்றும் செய்யாதே' என்று நம் உள்ளம் நம்மிடம் பேச ஆரம்பித்தால் அது நமது குரல் அல்ல. மாறாக, பேயின் அல்லது அலகையின் குரல். நம் உள்ளத்தில் ஒலிக்கும் கடவுளின் குரல், 'பரவாயில்லை. தொடர்ந்து செல். போராடு' என்று மட்டும் சொல்லி நம்மை முன்நோக்கித் தள்ளும். ஆக, நாம் உடல் அளவில் இறப்பதற்கு முன் சில நேரங்களில் மனதளவில் இறந்துவிடுகிறோம். நாம் கடவுளின் உடனிருப்பை நம்மில் உணரும்போது இறப்பு என்ற அமளி அடங்கிவிடுகிறது.

ஆ. குறைவும் கடவுளின் இருப்பும்

மாசிதோனிய திருச்சபைக்காக கொரிந்து மக்களிடம் பொருள்கள் சேகரிக்கும் தூய பவுல், அவர்கள் 'நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகியவற்றில் வளர்வதோடு அன்பிலும், அறப்பணியிலும் வளர வேண்டும்' என அறிவுறுத்துகின்றார். இதை வலியுறுத்த பவுல் இரண்டு மேற்கோள்களைக் காட்டுகின்றார்: (1) இயேசுவின் பிறப்பு - 'அவர் செல்வராயிருந்தும் (கடவுளாயிருந்தும்) உங்களுக்காக ஏழையானார் (மனிதரானார்), (2) 'மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை. குறைவாகச் சேகரித்தவருக்கு எதுவும் குறைவுபடவில்லை' (விப 16:18). ஆக, கடவுளின் இருப்பு குறைவானவர்களை நிறைவாக்குகிறது. பசி என்னும் குறையால் வாடி இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவராகிய கடவுள் மன்னா வழங்கியபோது, சிலர் அடுத்த நாளைக்குரிய கவலையினால் மன்னாவைச் சேகரித்து வைத்தபோது, அப்படி வைக்கப்பட்ட மன்னா புழுவாகிவிடுகிறது. மிகுதியாகச் சேர்த்ததால் அவர்களுக்கு எதுவும் மிஞ்சவில்லை. அதேபோல ஒன்றும் சேர்த்து வைக்காதவர்களுக்கு எந்தவொரு குறையும் இல்லை. இவ்வாறாக, நம்மிடம் உள்ள குறைவை நிறைவு செய்வது கடவுளின் இருப்பாகவும், அவரின் அரும்செயலாகவும் இருக்கிறது.

இ. நலமின்மையும் கடவுளின் இருப்பும்

இன்றைய நற்செய்தியில் நலமற்றிருக்கும் இரண்டு மகள்களைப் பற்றி வாசிக்கின்றோம். முதல் மகள் 12 வயதான யாயிரின் மகள். இவள் நலமற்றிருப்பதாகவும், இயேசு வந்து அவள் மீது கைகளை வைக்க வேண்டி அவளுடைய தந்தை இயேசுவிடம் விண்ணப்பிக்கின்றார். இரண்டாம் மகள் 12 ஆண்டுகள் இரத்தப்போக்கினால் நலமற்று இருப்பவள். இவள் தானே வந்து இயேசுவின் மேலாடையைத் தொடுகிறாள். இருவருமே இறப்பு நோக்கிய பயணத்தில் இருக்கின்றனர். சிறுமி சீக்கிரம் இறந்துவிடுகிறாள். பெண்மணி கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருக்கிறாள். இந்த இருவரும் இயேசுவைச் சந்திக்கும் நிகழ்வை மாற்கு மிக அழகாக பதிவு செய்கின்றார்

'இரத்தப்போக்குடைய பெண் நலம் பெறுதலும், சிறுமி உயிர்பெற்றெழுதலும்' என்னும் நிகழ்வை மூன்று ஒத்தமைவு நற்செய்தியாளர்களும் (மத் 9:18-26, மாற் 5:21-43, லூக் 8:40-56) பதிவு செய்கின்றனர். ஆனால், இந்த நிகழ்வில் பிரசன்னமாகியிருந்த யோவான் (காண். மாற் 5:37) இதை பதிவு செய்யவில்லை. மத்தேயு நற்செய்தியாளர் யாயிரின் மகள் முதலிலேயே இறந்துவிடுவதாக எழுதுகின்றார் (மத் 9:18-19). சிறுமிக்கு பன்னிரண்டு வயது என்பது மாற்கு இறுதியில் சொல்கின்றார் (5:42). ஆனால், லூக்கா அதை முதலில் சொல்கின்றார் (8:42). மாற்கு நற்செய்தியில் இயேசு உயிர்பெற்ற குழந்தைக்கு கடைசியாக சாப்பாடு கொடுக்கச் சொல்கின்றார் (8:43). ஆனால் லூக்காவில் அவள் உயிர்பெற்றவுடன் சாப்பாடு கொடுக்கச் சொல்கின்றார் (8:55). ஆக, ஒத்தமவு நற்செய்தியாளர்களின் பதிவு ஒன்றுக்கொன்று மாறுபடுகிறது.

இந்த நற்செய்திப் பகுதியை வெறும் இலக்கியப் பகுதியாக வாசித்தாலும் அங்கே ஒரு பிரச்சினை இருக்கிறது. என்ன பிரச்சினை? இயேசுவின் இரண்டு புதுமைகள் (பெண் நலம் பெறுதல், சிறுமி உயிர்பெறுதல்) வௌ;வேறு இடத்தில் சொல்லப்பட்டவை, பிற்காலத்தில் பிரதி எடுப்பவர்களின் தவற்றால் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டதா? அல்லது வேறு வேறு வாய்மொழியாக வந்த கதைகளை நற்செய்தியாளர்கள் ஒன்றாக இணைத்துவிட்டனரா? இயேசுவோடு பயணம் செய்த பெரிய கூட்டம், யாயிரின் வீடு வரவர குறைந்து போவதன் காரணம் என்ன? கதைத்தளமும், அந்தத் தளத்தில் பிரசன்னமாகியிருக்கும் நபர்களும்கூட மாறுபடுகின்றனர். சாலை, கூட்டம், நெரிசல் என இருந்த கதைதளம், திடீரென வீடு, மூன்று சீடர்கள், சிறுமி என மாறிவிடுவதன் பொருள் என்ன?

இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்?

அ. மாற்கு நற்செய்தியாளரின் இலக்கிய உத்தி. என்ன இலக்கிய உத்தி? ஒப்புமை. அதாவது, ஒற்றுமை-வேற்றுமையின் வழியாக ஒரு பொருளை உணர்த்துவது. இந்த நற்செய்திப் பகுதியில் இரண்டு அறிகுறிகள் அல்லது புதுமைகள் நடக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை - ஒருவர் நலம் பெறுகிறார். மற்றவர் உயிர் பெறுகிறார். இரண்டு பேரும் பெண்கள். ஒருவர் வறுமையில் வாடியவர். மற்றவர் செல்வச் செழிப்பில் திளைத்தவர். இருவருக்குமே பொதுவாக இருப்பவை 12 ஆண்டுகள் - முதல் பெண்ணுக்கு 12 ஆண்டுகள் துன்பம், இரண்டாம் பெண்ணுக்கு 12 ஆண்டுகள் மகிழ்ச்சி. முதல் பெண்ணுக்கு பரிந்து பேச எவரும் இல்லை. ஆனால் இரண்டாம் பெண்ணுக்கு பரிந்து பேச தந்தை, இறந்த நிலையில் அழ வந்திருந்த நண்பர்கள், உறவினர்கள். இருவரையும் குணமாக்குவது இயேசுவின் தொடுதல்: முதல் நிகழ்வில் பெண் இயேசுவைத் தொடுகின்றார். இரண்டாம் நிகழ்வில் இயேசு சிறுமியைத் தொடுகின்றார். முதல் நிகழ்வில் கூட்டம் மௌனம் காக்கிறது. இரண்டாம் நிகழ்வில் கூட்டம் மலைத்துப் போகிறது. 

ஆ. இரண்டாம் நிகழ்வு நடப்பதற்கு முதல் நிகழ்வு தளத்தைத் தயாரிக்கிறது. அல்லது முதல் நிகழ்வின் தாமதம்தான் இரண்டாம் நிகழ்வு நடக்க காரணமாக அமைகிறது. முதல் நிகழ்வு நடப்பதற்கு முன் சிறுமி உடல்நலம் இல்லாமல் இருக்கிறாள். ஆனால், அந்தச் சிறுமி இறக்கவும், இறப்பு செய்தி அவளின் அப்பாவைத் தேடி வருவதற்கும், இறந்தவுடன் அழுவதுற்கு அவளின் குடும்பத்தார் கூடி வருவதற்கும் நேரம் தேவைப்படுகிறது. இந்த நேரத்தை உருவாக்கிக்கொடுக்கிறது முதல் நிகழ்வு. ஆக, முதல் நிகழ்வில் வரும் இரத்தப்போக்குடைய பெண், கூட்டம், நெரிசல் அனைத்தும் கதையின் கரு வளர்ச்சிக்கு உதவி செய்கின்றன. 

இ. பயணநடை இலக்கிய உத்தி. நற்செய்தியாளர்கள் பயன்படுத்தும் மற்றொரு உத்தி 'பயணநடை'. அதாவது, இயேசுவின் வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் அவரின் பயணத்தில் நடப்பதாக எழுதுவது. மிக நல்ல உதாரணம், இயேசுவின் எம்மாவு பயணம். இந்த நடையின் உட்கூறுகள் என்ன? பயணத்தின் தொடக்கம், பயணம், மற்றும் பயணத்தின் முடிவு. இன்றைய நற்செய்தியில் இயேசு மறுகரையிலிருந்து யாயிரின் இல்லத்திற்குப் பயணம் செய்கிறார். பயணத்தின் தொடக்கத்தில் சீடர்கள் அல்லது கூட்டம் இயேசுவின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றது. பயணத்தின் இறுதியில் கூட்டம் இயேசுவைக்கண்டு மலைத்துப்போய் அவரில் மேல் நம்பிக்கை கொள்கிறது. ஆக, நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு இயேசு மக்களை பயணம் செய்ய வைக்கின்றார். இந்தப் பயணத்தின் மையமாக இருப்பது நம்பிக்கை பற்றிய இயேசுவின் வார்த்தைகள்: குணம்பெற்ற பெண்ணிடம் இயேசு, 'மகளே, உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று!' என்கிறார் (5:34). உயிர்பெற வேண்டிய மகளின் தந்தையிடம், 'அஞ்சாதீர். நம்பிக்கையை மட்டும் விடாதீர்!' என்று கூறுகிறார் (5:36). ஆக, இந்த மையம் தெளிவானால், பயணநடை தெளிவாக விளங்குகிறது.

ஆக, இலக்கிய அடிப்படையில் அல்லது கதையியல் அடிப்படையில் பார்த்தால் ஒரே நிகழ்வுதான் இரண்டு தளங்களில் வளர்ச்சி பெறுகின்றது. ஆக, இவைகள் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.

முதல் புதுமை: இரத்தப்போக்குடைய பெண் நலம் பெறுதல் (5:24-34). 

யாயிரின் வேண்டுதலுக்கு இணங்கிய இயேசு அவரின் இல்லம் நோக்கிப் புறப்படுகிறார். வாசகரின் மனம் யாயிரின் மகளுக்கு என்ன ஆகுமோ என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், புதிய கதாபாத்திரத்தை உள்நுழைக்கின்றார் மாற்கு. இரத்தப்போக்கினால் வருந்திய பெண்ணின் பெயர் குறிப்பிடப்படவில்லை. கூட்டத்தில் ஒருவராக அவர் நிற்கிறார். கூட்டத்தில் நிற்கும்போது நமக்கு பெயர் தேவைப்படுவதில்லைதானே. அவரைப் பற்றி மூன்று விடயங்களைக் குறிப்பிடுகிறார் மாற்கு: அவள் பன்னிரண்டு ஆண்டுகளாய் அவதிப்படுகிறாள், மருத்துவரிடம் தன் பணத்தையெல்லாம் இழந்துவிட்டாள், இப்போது இன்னும் கேடுற்ற நிலையில் இருக்கிறாள். இப்படிப்பட்ட ஒரு பெண் மற்றவர்களைத் தொடுவது தீட்டு என்று சொன்னது லேவியர்நூல் 15:19-33. 'இயேசுவைத் தொட்டால் நலம் பெறுவேன்!' என அவள் சொல்லிக்கொள்கிறாள். ஒருவரின் தொடுதல்கூட குணமாக்க முடியும் என அக்காலத்தவர் நம்பினர். ஏன் ஒருவரின் நிழல் பட்டால்கூட நலம் பெற முடியும் என அவர்கள் நம்பியதால் தான் பேதுருவும், யோவானும் சாலையில் செல்லும்போது நோயுற்றவர்களை கட்டிலில் கொண்டுவந்து கிடத்துகின்றனர் (காண். திப 5:15). கூட்டத்தின் நடுவே வந்து தொடும் அவளின் துணிச்சல் அவள் எந்தவிதத் தடைகளையும் தாண்டத் தயாராக இருந்தாள் என்பதையும், எந்த அளவிற்கு தன் நோயினால் கஷ்டம் அனுபவித்திருப்பாள் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. இயேசு தன் உடலிலிருந்து ஆற்றல் வெளியேறுவதை உணர்கிறார். வழக்கமாக, மற்றவர்களின் மனதில் இருப்பவற்றை இயேசு உணர்வார் என்று சொல்லும் மாற்கு, இங்கு இயேசு தன்னில் நடப்பதை தான் உணர்வதாகச் சொல்கின்றார். 'யார் என்னைத் தொட்டது?' என்ற இயேசுவின் கேள்விக்கு, சீடர்கள், 'இவ்வளவு கூட்டம் நெரிசலாக இருக்கிறது! இங்க போய் யார் தொட்டது? யார் இடிச்சதுன்னு? கேட்குறீங்களே?' என்று பதில் சொல்கின்றனர் சீடர்கள். இயேசுவின் சீடர்கள் அமளி கொள்கின்றனர். புலம்புகின்றனர்.இது ஒரு 'முரண்பாடு' - என்ன முரண்பாடு? இயேசுவுக்கு அருகில் இருக்கும் சீடர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், தூரத்தில் இருக்கும் ஒரு பெண் அவரைக் கண்டுகொள்கின்றார். பயம் தொற்றிக்கொள்கிறது அந்தப் பெண்ணை. இரண்டு வகை பயம்: ஒன்று, தான் 'திருடியது' கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பது. மற்றொன்று, தான் இயேசுவைத் தீட்டாக்கிவிட்டோம் என்பது. ஆனால், இயேசு தூய்மை-தீட்டு பற்றி கவலைப்படுபவர் அல்லர். இயேசு அந்தப் பெண்ணை இப்போது அடுத்தநிலை குணமாக்குதலுக்கு அழைத்துச் செல்கின்றார். அவரின் நம்பிக்கையைப் பாராட்டுகின்றார். 'மகளே' என்று அவரை அழைப்பதன் வழியாக தன் இறையரசுக் குடும்பத்தில் உறுப்பினராக்குகின்றார் இயேசு. 

முதல் புதுமையில் இந்தப் பெண்மணி இரண்டு தடைகளைக் கடக்கின்றார்: (அ) முதலில் கூட்டம் என்னும் தடை. (ஆ) இரண்டாவது, அச்சம் என்னும் தடை.

இரண்டாம் புதுமை. யாயிரின் மகள் உயிர் பெறுதல். தன் மகளுக்கு சுகம் வேண்டி வந்தவர், தன் மகளின் உயிர் பெறுகிறார். இரத்தப்போக்குடைய பெண்ணின் எதிர்ப்பதமாக நிற்கிறார் யாயிர். தொழுகைக்கூடத் தலைவர். ஆக, கடவுளை யார் பார்க்கலாம், பார்க்கக்கூடாது என்று சொல்லக்கூடியவர் இவர். நிறைய பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர். தனக்கென வேலையாட்களையும் வைத்திருக்கின்றார். ஆனாலும், எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு தன் மகளுக்கு நலம் கேட்டு இயேசுவின் காலடியில் கிடக்கின்றார். தொழுகைக்கூடத்தலைவர் இயேசுவின் காலில் விழுகிறார் - இயேசு உயிர்த்த சில ஆண்டுகள் கழித்து, புதிய நம்பிக்கை கொண்டவர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் யூதர்களின் தொழுகைக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். மாற்கு நற்செய்தியாளரின் திருச்சபையும் இப்படி வெளியேற்றப்பட்டிருக்கலாம். ஆனால், தொழுகைக்கூட தலைவரையே இயேசுவின் காலில் விழ வைப்பதன் வழியாக இயேசுவை தொழுகைக்கூடத்தை விட மேலானவர் என்றும், இயேசுவைச் சந்திக்கு தொழுகைக்கூடம் தேவையில்லை, சாலையோரம் கூட அவரைச் சந்திக்கலாம் என்ற மாற்று சிந்தனையை விதைக்கின்றார் மாற்கு. முதல் புதுமை இரண்டாம் புதுமையின் இடையில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் யாயிரின் மகள் இறந்து, அந்த இறப்பு செய்தி யாயிரின் காதுகளையும், இயேசுவின் காதுகளையும் எட்டுகிறது. 'துணிவோடிரும்! நம்பிக்கை கொள்ளும்!' என தைரியம் தருகிறார் இயேசு. யாயிரின் வீடு வருகிறது. தன் நெருக்கமான மூன்று சீடர்களுடன் (காண். 9:2, 14:33) உள் நுழைகிறார். இடையில் கூட்டத்தினரின் தடை - அதாவது, அவர்களின் கிண்டல். சிறுமியைத் தொட்டு எழுப்புகிறார். மக்கள் வியக்கின்றனர்.

இரண்டாம் புதுமையில் யாயிர் தன் உள்ளே அச்சம் கொண்டிருந்தாலும் அவருக்கு வெளியேயும் இரண்டு தடைகள் இருக்கின்றன: (அ) முதலில், வேலையாள்கள். 'உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் தொந்தரவு செய்கிறீர்?' இவர்களின் வேலை மகளின் இறப்பு செய்தியை சொல்வது மட்டும்தான். ஆனால், 'போதகரை தொந்தரவு செய்யாதீர்' என தம் தலைவருக்கே அறிவுறுத்துகின்றனர். மேலும், இவர்கள் இயேசுவை நலம் தரும் கடவுளாகப் பார்க்காமல் வெறும் போதகராக மட்டுமே பார்க்கின்றனர். (ஆ) யாயிரின் வீட்டு வாசலில் இருந்த கூட்டம். இந்தக் கூட்டத்தினர் அழுது ஓலமிட்டுப் புலம்புகின்றனர். ஓலம் என்பது உச்சதொனியின் குரல். இறந்தவுடன் நம்மை விட்டுத் தூரப் போகும் ஒருவரிடம் மெதுவாக பேசினால் அவருக்குக் கேட்காது. ஆகையால்தான் நாம் ஓலமிட்டு, கூக்குரலிட்டு அவர்களை அழைக்கிறோம். இந்த ஓலத்தைக் கடிந்து கொள்கின்ற இயேசு, 'சிறுமி தூங்குகிறாள்' என்கிறார். கூட்டம் நகைக்கிறது. 'என்னப்பா இவ்வளவு சத்தத்திலா ஒருவர் தூங்க முடியும்!' என்று கேட்பதுபோல இருக்கிறது அவர்களின் நகைப்பு. இந்த இரண்டு தடைகளும் கடவுளின் இருப்பை உணர்ந்துகொள்ள யாயிருக்கு தடையாக இருக்கின்றன.

இவ்வாறாக, 'இறப்பு,' 'குறைவு,' 'நலமின்மை' என்ற மூன்று காரணிகளால் எழும் அமளி மற்றும் புலம்பலுக்கு கடவுளின் இருப்பு விடையாக இருக்கிறது.

கொஞ்ச நேரம் மௌனமாக அமர்ந்து நான் என்னையே ஆராய்ந்து பார்த்தால், எனக்குள்ளும் அந்த அமளி இருப்பது தெரியும். நூலகம்போல அமைதியாக இருக்க வேண்டிய நம் மனம் மீன் மார்க்கெட் போல கூச்சல் குழப்பமாக இருக்கிறது. நம் மூளை சில நேரங்களில், 'இது இப்படித்தான். போதகரை ஏன் தொந்தரவு செய்கிறீர்?' என்று கடவுளிடமிருந்து நம்மை அந்நியமாக்கிவிடத் தூண்டும். ஆனால், இந்தப் போதகரை நாம் தொந்தரவு செய்வோம். அவர் கூட்டத்தின் நடுவே இருந்தாலும். அல்லது தனியே இருந்தாலும். நாம் அவரைத் தேடிச் செல்லும் நாம் அவரின் இருப்பை நம்மில் உணர்ந்தோம் என்றால் அந்த இருப்பை இறப்பு, குறைவு, நலமின்மை கொண்டிருக்கும் மற்றவர்களை நாடிச் சென்று அவரின் இருப்பை அவர்களுக்கு நம் இருப்பால் உறுதி செய்யவேண்டும்.

சின்னச் சின்ன சீண்டல்கள் என்னுள்ளும், வெளியிலிருந்தும் வந்தால், நான் இன்று கேட்பது,

'ஏன் இந்த அமளி?'





Sunday 17 June 2018

திருமுழுக்கு யோவான் பிறப்புப் பெருவிழா

திருமுழுக்கு யோவான் பிறப்புப் பெருவிழா


What’s in a name?... Plenty! பெயரில் என்ன பெரிதாக உள்ளது?
அருள்பணி  L.X. ஜெரோம். சே.ச

 திருஅவையின் பாரம்பரியத்தில் ஆயிரக்கணக்கான புனிதர்களின் திருநாட்களை நாம் கொண்டாடுகிறோம். இப்புனிதர்களின் திருநாட்களெல்லாம் அவர்கள் விண்ணுலகில்
பிறந்தநாளன்றே கொண்டாடப்படுகின்றன. திருஅவையில் மூவருக்கு மட்டும் மண்ணுலகில் அவர்கள் பிறந்தநாட்கள் கொண்டாடப்படுகின்றன. இயேசுவின் பிறந்தநாள்,
அன்னை மரியாவின் பிறந்தநாள், திருமுழுக்கு யோவானின் பிறந்தநாள்.
இன்று திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். திருமுழுக்கு யோவான் ஒரு வைரம்... பாலை நிலத்தில் தவத்திலும், துன்பத்திலும் தன்னைத்தானே
பட்டைத் தீட்டிக்கொண்ட ஒரு வைரம். இயேசு என்ற ஒளியில் இந்த வைரம் பல கோணங்களில், பல வண்ணங்களில் மின்னியது. மனிதராய்ப் பிறந்தவர்களுள்
யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை. (லூக்கா 7:28) என்று இயேசுவால் புகழப்பட்ட வைரம் இவர். இந்த வைரத்திலிருந்து சிதறும் பல வண்ண ஒளிக்கீற்றுகளில்
ஒன்றை மட்டும் இன்று சிந்திப்போம்.
திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளன்று நமக்குத் தரப்பட்டுள்ள முதல் வாசகத்திலும், நற்செய்தியிலும் பெயர் சூட்டுதல், பெயர் சொல்லி அழைத்தல் ஆகிய எண்ணங்கள்
மேலோங்கியுள்ளன. இவ்வெண்ணங்களை மையப்படுத்தி, நமது ஞாயிறு சிந்தனைகளைத் தொடர்வோம்.
“What’s in a name? that which we call a rose 
By any other name would smell as sweet;”
"பெயரில் என்ன பெரிதாக உள்ளது? ரோசா என்று நாம் அழைக்கும் அந்த மலருக்கு வேறு எந்தப் பெயர் இருந்தாலும், அந்த மலரின் மணம் மாறப்போவதில்லை."
'ரோமியோ அண்ட் ஜூலியட்' என்ற நாடகத்தில் ஷேக்ஸ்பியர் எழுதியுள்ள வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகளை மேலோட்டமாக, ஒரு மேற்கோளாகப் பார்க்கும்போது,
ஒருவருக்கு வழங்கப்படும் பெயர் ஒன்றும் முக்கியமல்ல என்ற எண்ணம் உருவாகும். ஆனால், நாடகத்தில் இந்த வரிகள் சொல்லப்படும் சூழலைச் சிந்தித்தால், வேறுபட்ட
எண்ணங்கள் தோன்றும். இந்த எண்ணங்கள் இன்றும் நம் உலகை ஆட்டிப் படைக்கின்றன என்ற துயரமும் விளங்கும்.
நாடகத்தில் இந்த வரிகளை ஜூலியட் பேசுகிறார். ரோமியோவும் ஜூலியட்டும் ஒருவரை ஒருவர் மனதாரக் காதலிக்கிறார்கள். ஆனால் இவர்கள் இணைந்து வாழ்வதற்குத்
தடையாக உள்ளவை இவ்விருவரும் பிறந்த குடும்பங்கள். பகைமையில், வெறுப்பில் நீண்டகாலமாய் வாழ்ந்துவரும் குடும்பங்கள் இவை. தாங்கள் இணைந்து வாழ்வதற்கு
Capulet, Montague என்ற குடும்பப் பெயர்களே தடையாக உள்ளன என்று எண்ணும் ஜூலியட், "ரோமியோ, உன் குடும்பப் பெயர்தான் என்னுடைய எதிரி. நம் குடும்பப்
பெயர்களை நீக்கிவிட்டால், பகையும், வெறுப்பும் இல்லாமல் நாம் இணைந்து வாழ முடியும்... பெயரில் என்ன பெரிதாக உள்ளது?" என்ற பாணியில் பேசுகிறார். பகையுள்ள
இரு குடும்பப் பெயர்களைத் தாங்கியதால், ரோமியோவும் ஜூலியட்டும் இவ்வுலகில் இணையமுடியாமல் மரணத்தில் இணைந்தனர் என்று ஷேக்ஸ்பியரின் இந்த நாடகம்
துயரத்தில் முடிகிறது. பெயர்கள் வாழவும் வைக்கும், வன்முறைகளையும் தூண்டும் என்பதை நாம் வாழும் காலத்திலும் சந்தித்து வருகிறோம்.
இஸ்ரயேல் மக்கள் மத்தியில் பெயர்களுக்குத் தனி மதிப்பு இருந்தது. ஒருவருக்கு மற்றொருவர் பெயர் சூட்டினால், அந்தப் பெயரைத் தாங்கியவர்மீது பெயர் சூட்டியவருக்கு
அதிகாரம் உண்டு என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் இருந்தது. எனவேதான், இறைவனைப் பெயர் சொல்லி அழைக்க அவர்கள் தயங்கினார்கள். இறைவனுக்கு மக்கள்
பெயர் சூட்டினால், அவர் தங்கள் சக்திக்கு உட்பட்டவராகிவிடுவார் என்ற தயக்கம் அது.
அதேவேளையில், இறைவன் அவர்களுக்குப் பெயர் சூட்டியதைப் பெருமையாக அவர்கள் எண்ணிவந்தனர். விவிலியத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து முக்கியமான
பெயர்களும் இறைவன் தந்த பெயர்கள்தாம். ஆபிரகாமில் துவங்கி, ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, மோசே என்று தொடர்ந்து, யோவான், இயேசு என்று அனைத்து
பெயர்களும் இறைவன் தந்த பெயர்கள். ஒவ்வொரு பெயருக்கும் ஓர் அர்த்தமும் உண்டு. வயதுமுதிர்ந்த காலத்தில், செக்கரியா, எலிசபெத்து இருவருக்கும் இறைவனின்
கருணையால் குழந்தை பிறந்ததால், இக்குழந்தைக்கு 'யோவான்' என்று பெயரிடும்படி தலைமைத் தூதர் கபிரியேல் பணித்திருந்தார். இறைவன் இக்குழந்தைக்கு தந்த
'யோவான்' என்ற பெயருக்கு 'யாவே அருள் வழங்கினார்' "Graced by Yahweh" என்று பொருள்.
குழந்தைக்குப் பெயர்சூட்டுவது இஸ்ரயேல் மக்கள் மத்தியில் முக்கியமான ஒரு நிகழ்வு. திருமுழுக்கு யோவான் வாழ்வில் நடந்த அந்த முக்கியமான நிகழ்வு இன்றைய
நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிகழ்வும் நமக்குள் சிந்தனைகளை எழுப்புகின்றது. பெயர்சூட்டும் விழாவுக்கு வந்திருந்த அக்கம் பக்கத்தினர் குழந்தைக்குத்
செக்கரியா என்ற தந்தையின் பெயரையேச் சூட்டவேண்டும் என்று கூறினர். அதுவே அங்கு நிலவிய பாரம்பரியம். பாரம்பரியத்திற்கு மாறாக, கடவுள் தந்த 'யோவான்' என்ற
பெயர் குழந்தைக்குச் சூட்டப்பட்டது. யோவான் பிறந்ததே இயற்கையின் நியதிகளைத் தாண்டிய ஒரு செயல்... அவருக்குத் தரப்பட்ட பெயர் பாரம்பரியத்திற்குப் புறம்பான ஒரு
பெயர். 'இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ' என்று ஊர் மக்கள் அனைவரும் வியந்ததற்கு ஏற்ப, யோவான் வாழ்ந்த வாழ்க்கையும் வழக்கத்திற்கு மாறாக இருந்தது.
இப்படி பாரம்பரியங்களையும், பழக்க வழக்கங்களையும் தாண்டி, யோவானின் வாழ்க்கை இறைவனின் அருளால் முற்றிலும் வழிநடத்தப்பட்ட வாழ்க்கையாக அமைந்தது.
உலகில் பிறக்கும் நம் ஒவ்வொருவருக்கும் பிறப்பில் தரப்படும் ஒரு முக்கிய அடையாளம்... நமது பெயர். நாம் அனைவரும் வாழ்நாள் முழுவதும் தாங்கிச்செல்லும்
அடையாளம் இது. பெயர் சொல்லி அழைப்பதிலேயே, இரு விதங்கள்... இரு பக்கங்கள் உள்ளன. ஒருவருக்குரிய உண்மை மதிப்பளித்து, பெயர் சொல்லி அழைக்கும்
ஒளிமயமான பக்கம். ஒருவர் அவமானத்தால் குறுகிப்போகும் வண்ணம், பெயர் சொல்லி அழைக்கும் இருள்சூழ்ந்த பக்கம்.
பிறக்கும்போது, வளரும்போது, படிக்கும்போது, பலவிதமானப் பெயர்கள் நமது அடையாளங்களாகச் சூட்டப்படும். நம்மில் பலருக்கு நாம் செய்யும் தொழிலே நமது
அடையாளங்களாக மாறிவிடும். செய்யும் தொழில் உயர்வானதாகக் கருதப்பட்டால், அந்த அடையாளங்களை நாம் மகிழ்வோடு ஏற்றுகொள்வோம். உதாரணமாக, 
மருத்துவர், ஆசிரியர், பேராசிரியர், அருள்பணியாளர் ஆகியோரைப் பெயர் சொல்லி அழைப்பதைவிட, doctor, teacher, professor, father,  சாமி என்றெல்லாம்
அழைக்கும்போது, சொல்வதற்கும் பெருமையாக இருக்கும், கேட்பதற்கும் பெருமையாக இருக்கும். இன்று நாம் கொண்டாடும் யோவான் என்ற குழந்தை, இயேசுவுக்குத்
திருமுழுக்கு வழங்கியதால், திருமுழுக்கு யோவான் என்று திருஅவையால் தனிப்பட்ட மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்.
இதுவரை நாம் சிந்தித்தது, பெயர் சொல்லி அழைப்பதன் ஒளிமயமான பக்கம். இனி சிந்திக்க இருப்பது... இருளான பக்கம். நாம் வாழும் சமுதாயத்தில், தெருக்களைச் சுத்தம்
செய்வோர், காலணி தைப்பவர், வீட்டுவேலை செய்பவர்... இவர்களை நாம் எப்படி அழைக்கிறோம்? இவர்களை நாம் அழைக்கும் தொனியில் மரியாதை ஒலிக்காது. பல
ஆண்டுகள் இவர்களை நமக்குத் தெரிந்திருந்தாலும்,  இவர்களின் பெயர்களை நாம் கற்றுக்கொள்வதில்லை. அதற்குப் பதிலாக, "ஏய், டேய், அடியே, இவளே..." என்ற ஏக
வசனங்களே அவர்கள் பெயர்களாக மாறும் அவலம் நம்மிடையே உள்ளது. மனித சமுதாயத்தில் மட்டுமே காணக்கிடக்கும் மற்றொரு சாபம்... நமது இன வேறுபாடுகள்,
சாதி வேறுபாடுகள். இவற்றின் அடிப்படையில் ஒரு சிலர் அவர்கள் பிறந்த குலத்தின் பெயரிடப்பட்டு கேவலமாக அழைக்கப்படுகின்றனர். இவை இருள் சூழ்ந்த பக்கங்கள்...
நம்மைக் குருடாக்கும் பழக்கங்கள்.
நான் பணி செய்து வந்த ஒரு அலுவலகத்தில் எங்களுக்குக் காபி கொண்டுவரும் ஓர் இளைஞர் என் நினைவுக்கு வருகிறார். மற்ற எல்லாரும் அவரைக் கூப்பிட்ட ஒரே
பெயர் "டேய்". நான் அவரது பெயரைக் கற்றுக்கொண்டு, "சங்கர்" என்று அழைத்தேன். என்னைப் பார்க்கும்போதெல்லாம் அந்த இளைஞர் முகத்தில் புன்னகை ஒளிரும்.
என்னைத் தனிப்பட்ட விதத்தில் கவனித்துக்கொள்வார். அவரிடம் அந்த சலுகையைப் பெறுவதற்காக நான் அவரைப் பெயர் சொல்லி அழைக்கவில்லை. "சங்கர்" என்று
அவரை அழைக்கும்போது, அவர் தோள்களை உயர்த்தி சிரித்தது எனக்கு முக்கியமாகப் பட்டது. அதேபோல், நான் தங்கியிருந்த குருக்கள் இல்லங்களில் எளிய பணிசெய்யும்
எல்லாருடைய பெயரையும் கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்வேன். அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதனால், நான் எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை. மாறாக,
அவர்கள் நிமிர்ந்து நின்றதை, நிறைவாகச் சிரித்ததை இரசித்துப் பார்த்திருக்கிறேன்.
திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளன்று, அவருக்குப் பெயர் சூட்டும் நிகழ்வைச் சிந்திப்பதன் பயனாக, தனி மனிதர்களுக்கு தரப்படும் தனித்துவமான அடையாளமான
பெயர்களின் உண்மைப் பொருளைக் கற்றுக்கொள்ள முயல்வோம். நாம் மற்றவர்களை ஏகவசனத்தில், அல்லது தரம் குறைந்த அடைமொழிகளால் அழைப்பதை
நிறுத்திவிட்டு, அவர்களுக்கு உரிய மரியாதைத் தரும் பெயர்களால் அழைப்பதற்கு முயற்சிகள் எடுப்போம். ஒருவரது உண்மை அழகைப் பார்க்க வேண்டுமானால், அவர்மீது
நாம் வழக்கமாகச் சுமத்தும் ஏகவசனங்களையும், அடைமொழிகளையும் கிழித்துவிட்டு அவரது பெயர் சொல்லி அழைப்போம். அவர் உருமாறும் அழகை, புதுமையைக்
காண்போம்.
'யாவே அருள் வழங்கினார்' என்ற பொருள்படும் 'யோவான்', தன் பெயருக்கேற்ப வாழ்ந்தார். அவர் மட்டும் அருளால் நிறையவில்லை. அவர் பணிகளால், நாம் அனைவரும்
அருளுக்கு மேல் அருள் பெற்றுள்ளோம் (யோவான் 1:16). இறையருளை மக்களுக்கு அள்ளித்தந்த திருமுழுக்கு யோவான், நமக்கும் இறைவனிடமிருந்து அருள்வளங்களைப்
பெற்றுத்தர மன்றாடுவோம்.

அல்லது வாரநாளுக்குரிய வாசகம்

ஆண்டின் பொதுக் காலம் 12-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்

யோபு 38:1,8-11
2 கொரிந்தியர் 5:14 - 17
மாற்கு 4:35 - 41




ஞாயிறு இறைவாக்கு- அருள்பணி முனைவர் ம.அருள்



விசுவாசம்.

இறையேசுவில் அன்புக்குரியவர்களே !
ஆண்டவர் இயேசு மாலைப் பொழுதிலே, கடலிலே பயணம் செய்வதாகப் பார்க்கிறோம். அதுவும் புயலும், காற்றும், சூறாவளியும் சூழ்ந்த கொந்தளிப்பில் தூங்கிக் கொண்டிருக்கிறார். நற்செய்தி ஏட்டிலே இந்த ஓர் இடத்தில் மட்டும்தான் இயேசு தூங்கியதாக வாசிக்கிறோம். அதேநேரத்தில் அமைதியிலே ஆண்டவர் இயேசு நித்திரை கொள்ள, சீடர்கள் படபடத்து, திக்குமுக்காடி, நாங்கள் மடியப் போகின்றோம், எங்களைக் காப்பாற்றும் என்று கதற இயேசு காற்றையும் கடலையும் கடிக்கிறார். அங்கே பேரமைதி உண்டாகிறது. சீடர்கள், இவர் யார்? என்னே இவரது வலிமை என்று வாயிலே கை வைத்து வியந்து நிற்கிறார்கள். இயேசுவோ ஏன் இந்தப் பயம். உங்கள் விசுவாசம் எங்கே? என்று கடிந்துகொண்டார்.

ஆண்டவர் இயேசு சொன்னார்: "இரையாதே சும்மா இரு ; காற்று நின்றது. பேரமைதி உண்டாயிற்று.''

அன்று இறந்த லாசரை நோக்கி வெளியே வா என்றார், வந்தான் அல்லவா!

உலகத்தின் ஆரம்பத்திலே இறைவன் ஒளி உண்டாகும் என்றார். ஒளி உண்டாயிற்று.

நான்கு நிலைகள் :

 
1. மாலைப் பொழுதில் அக்கரைக்குப் போவோம் என்றார்.
2. இருட்டு. அலைகள் எழுந்ததால் கண்டுகொள்ள முடியாத நிலை. பகல் நேரத்தில் போய் இருக்கலாமே! ஏன் இந்த இரவுப் பயணம்? இதேபோல் நாம் காலத்தைக் கணக்கிடுவ தில்லையா? ஒருவர் சொன்னார்: சுவாமி இந்த 20 - ஆம்  திருச்சபைக் கெட்டுவிட்டது என்று. நான் அவரைப் பார்த்து நீ 18, 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தீரா என்று கேட்டேன். பதில் இல்லை.
3.கடலில் சென்ற படகு அங்கே அலைகளால் அலைமோத தண்ணீர் உள்ளே பாய, ஐயோ நாங்கள் மடியப் போகின்றோம் என்று அபயக் குரல் எழுப்புகிறார்கள் சீடர்கள்.

அதேபோல் இன்றைய உலகில் திருச்சபை கெட்டுவிட்டது. குருக்கள் சரியில்லை , கன்னியர் சரியில்லை , இவன் சரியில்லை . அவன் சரியில்லை . ஆம் உண்மைதான். ஆனால் நீ சரியாக இருக்கிறாயா? ஏதோ திருச்சபை கெட்டுவிட்டதாகவும், ஆவியானவர் ஏதோ ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பது போலவும், இயேசு தூங்குவது போலவும் நினைப்பவர் பலர் உண்டு.

உலகம் முடிவுவரை உங்களோடு எந்நாளும் இருக்கிறேன் (மத். 28:20) என்றாரே இயேசு. இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். நரகத்தின் வாயில்கள் மேற்கொள்ளா என்றாரே (மத். 16:18).

ஆலமரத்தின் அடியிலே துண்டு விரித்துப் படுத்திருந்த வியாபாரி, ஆலமரமோ பெரிது. அதன் விதையோ சிறிது. இது கூடவா இறைவனுக்குத் தெரியாது. இந்தப் பெரிய மரத்திற்கு ஏற்ற விதையாக உண்டாக்கி இருக்க வேண்டாமா? என்று சொன்னான். அதன்பின் அயர்ந்து தூங்கினான். பழம் அவன் கண்ணில் விழ, விழித்தான். ஆம் கடவுளின் ஞானம் அளவு கடந்தது. பெரிய பழமாக இருந்திருந்தால் என் நிலை என்னவாயிருக்கும்! என்றான்.

உங்கள் விசுவாசம் எங்கே? என்று கேட்கிறார் சீடர்களைப் பார்த்து. ஏனெனில் ஐந்து அப்பங்கள் கொண்ட புதுமையைக் கண்டவர்கள், கானாவூரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைக் கண்டவர்கள், 38 ஆண்டுகளாக ஆட்டுக் குளத்தில் நடக்காத மனிதனை நடக்க வைத்தது, விதவையின் மகனுக்கு உயிர்கொடுத்த நிகழ்ச்சி இவையெல்லாம் கண்ட சீடர்கள், இயேசு இந்தக் கடலில் மூழ்கி சாகமாட்டார் என்பதை உணர முடியவில்லையே!

நமது வாழ்வில் நம் விசுவாசம் எந்த நிலையில் உள்ளது? ஒரு சிறு துன்பம், நோய் வந்தால் எங்கேயோ ஓடுகிறோம்! நம் விசுவாசம் எங்கே? எப்படியெல்லாம் புலம்புகிறோம்!

உங்கள் கவலைகள் அனைத்தையும் அவர் மேல் சுமத்தி விடுங்கள். உங்கள் மீது அவருக்கு அக்கறை உண்டு. (1 பேதுரு 5:7).

4. ஏனெனில் நம் கண்களுக்கு நீ விலையேறப் பெற்றவன். மதிப்புக்குரியவன். உன்மேல் மிகுந்த அன்பு கொண்டோம் (எசாயா 43:4).

இவர் யார்? என்று வியந்து கேட்டார்கள். நீர் யார் என்று கேட்க துணிவில்லை. சமமானவரைத் தனக்குக் கீழ்ப்பட்டவனை பார்த்துதான் ஒருவன் நீ யார்? என்று கேட்பான். ஆனால் இங்கே துணிவற்ற நிலையில் இவர் யாராக இருக்கலாம் என்று வியந்த காட்சி. உங்களையும் என்னையும் பார்த்து, இவர் யாராக இருக்கலாம், என்னே இவரிடம் உள்ள வல்லமை என்று சொல்வார்களா?

கதை:


ஒரு தோட்டத் தொழிலாளி தான் பயிரிட்ட தோட்டத்தில் ஒரு செடியின் பூவை விரும்புகிறான். தினமும் அதைப் பார்த்து ரசித்தான். ஆனால் ஒரு நாள் அந்தப் பூவைக் காணோம். வந்தது எரிச்சல், கோபம் தோட்டக்காரனுக்கு. ஆனால் தோட்டத்தின் உரிமையாளர் நான்தான் அந்தப் பூவைக் கொய்து கொண்டேன் என்றார். ஆம் இயேசு கிறிஸ்து உலகத்திற்குச் சொந்தமானவர். சில நேரங்களில் நம்மிடத்தில் சிலவற்றைக் கேட்கலாம், எதிர்பார்க்கலாம். துன்பத்தைத் தரலாம். நாம் கொடுக்கத் தயாராக இருக்கிறோமா?


 



மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் -குடந்தை ஆயர் F. அந்தோனிசாமி


நம்புவோம் நலம் பெறுவோம் புயலோடு துவங்கி புயலோடு முடிகின்ற வாழ்க்கை நமது வாழ்க்கை ! புயல் என்றால் துன்பம், துயரம், சோதனை, வேதனை, விபத்து, ஆபத்து!

குழந்தை பிறக்கின்றது! மூச்சுத் திணறலால் அழுகின்றது! கடைசி நேரம்! அங்கேயும் மூச்சுவிட முடியாமல் மனிதன் அழுகின்றான்!

வளர்ந்த குழந்தை பள்ளிக்கூடம் செல்லும் முதல் நாள் ! அங்கே ஒரு புயல்! மீண்டும் அழுகைப் புயல்!

வளர்ச்சி அடைந்த இளைஞன் : வெட்டவெயில்! பட்டப்பகல்! என் வாழ்க்கையோ இருட்டறையில்! என்கின்றான்! இளம்பெண்ணோ : பல்லவி இல்லாமல் பாடுகின்றேன்! பாதை இல்லாமல் ஓடுகின்றேன்! ஊமைக் காற்றாய் வீசுகின்றேன்! உறங்கும்போது பேசுகின்றேன் என்கின்றாள்!

இளமை இல்லறத்தையோ, துறவறத்தையோ, தனியறத்தையோ, தேடுகின்றது! பெரும்பாலானோர் திருமணம் செய்துகொள்கின்றார்கள்!

திருமண வீட்டில் அழுத மணமகளைச் சுட்டிக்காட்டி சிறுவன் ஒருவன் அவனுடைய தாயிடம், ஏம்மா பொண்ணு அழுவுது? என்றான். அதற்குத் தாய், அது ஆனந்தக் கண்ணீர் கண்ணா என்றாள். அதற்குச் சிறுவன், ஏம்மா மாப்பிள்ளை அழலே? என்று கேட்டான். அதற்குத் தாய், அவரு இனிமேதாண்டா அழுவாரு என்றாள்.

கணவன் மனைவியைப் பார்த்து, சொர்க்கத்திலே கணவன், மனைவி சொந்தம் இருக்காதாமே! என்றான். அதற்கு மனைவி, அதனாலேதான் அதை சொர்க்கம்னு அழைக்கிறாங்க என்றாள்.

வீட்டுக்குள் வீசும் புயல் நாட்டுக்குள்ளும் எதிரொலிக்கின்றது.

இல்லாமை, கல்லாமை, அறியாமை போன்ற எல்லாவிதமான புயல்களிலிருந்தும் விடுபட்டு நாம் அமைதியான வாழ்க்கை வாழ வழியே இல்லையா?
ஏன் இல்லை? இருக்கின்றது வழி! உங்கள் நம்பிக்கை நிறைந்த கண்களை காற்றையும், கடலையும் அடக்கிய இயேசுவின் பக்கம் திருப்புங்கள் என்கின்றது இன்றைய நற்செய்தி.

இந்த உலகம் முழுவதும் இறைவன் கையில் (முதல் வாசகம்) (திபா 107:28-29) உள்ளது. அவரின்றி எதுவும் இந்த உலகத்தில் நடக்காது. இப்படிப்பட்ட இறைவன் தன் மகன் இயேசு வழியாக இந்த உலகத்தின் மீது அவரது பேரன்பைப் பொழிந்துகொண்டிருக்கின்றார். (இரண்டாம் வாசகம்). நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே!
இயேசுவின் ஆற்றல் மீது. வல்லமை மீது, சக்தி மீது நாம் முழு நம்பிக்கை வைக்க வேண்டும்.

பிறவியிலிருந்து பார்வையற்றவர்களின் வாழ்க்கையில் வீசிய நோய் என்னும் புயல் (மத் 9:27-31) இயேசுவின் மீது நம்பிக்கை வைத்ததால் ஓய்ந்தது.
இயேசுவின் மீது நம்பிக்கை வைத்த பாவியொருத்தியின் வாழ்க்கையில் வீசிய பாவம் என்னும் புயல் ஓய்ந்தது (லூக் 7:36-50).
இயேசுவின் மீது நம்பிக்கை வைத்த மார்த்தா, மரியா வாழ்க்கையில் வீசிய மரணம் என்னும் புயல் ஓய்ந்தது (யோவா 11:1-44).
எந்தப் புயலாலும் இயேசுவை எதிர்த்து நிற்க முடியவில்லை!
ஆகவே நாமும் அவரை நம்புவோம் ; நாளும் நலம் பெறுவோம்!

மேலும் அறிவோம் :
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (குறள் : 3).
பொருள் :
அன்பால் இறைவனை நினைந்து போற்றுபவர் உள்ளமாகிய தாமரையில் வீற்றிருப்பவன் இறைவன். அந்த இறைவன் திருவடிகளைப் பின்பற்றி, நல்ல நெறியில் செல்வோர் பூவுலகில் நெடுங்காலம் புகழுடன் வாழ்வர்.

மறையுரை மொட்டுக்கள் -அருள்பணி Y. இருதயராஜ்


கணக்குப் பாடத்திற்கும் வரலாற்றுப் பாடத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? என்று ஒரு மாணவனை ஆசிரியர் கேட்டதற்கு அவன் கூறிய பதில்; "கணக்குப் பாட வகுப்பில் விட்டுவிட்டுத் தூங்குவேன், வரலாற்றுப் பாட வகுப்பில் விடாமல் தாங்குவேன்," ஆம், வாழ்க்கையில் சிலர் விட்டுவிட்டுத் தாங்குகிறார்கள்; வேறு சிலர் விடாமல் தூங்குகின்றனர், மனிதருடைய வாழ்வு தாக்கத்தில் பாதி, ஏக்கத்தில் பாதியாகக் கழிகிறது.
மனிதர் தூங்கினால் பரவாயில்லை ; ஆனால் கடவுள் தூங்கலாமா? இன்றைய நற்செய்தியில் இயேசுவும் அவர் சீடர்களும் சென்ற படகு கடல் கொந்தளிப்பால் அலைக்கழிக்கப்பட்டு, சீடர்கள் சாவின் பயத்தில் இருக்கும் வேளையிலும் கிறிஸ்து படகில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார். சீடர்கள் அவரை எழுப்பி விடுகின்றனர்.
கடவுள் தூங்குவாரா ? பேருந்தில் நடத்துனர் தூங்கினால் பயணிகள் எவரும் பயணச் சீட்டு வாங்கமாட்டார்கள்; ஆனால் ஓட்டுனர் தாங்கினால் அனைவரும் பயணச்சீட்டு வாங்கிவிடுவார்கள்; எமலோகம் சென்றுவிடுவார்கள், அப்படியானால் கடவுள் தூங்கினால் இவ்வுலகின் கதி என்ன ஆகும், இக்கேள்விககுத் திருப்பா 121 கூறும் பதில் "இஸ்ரயே லைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதுமில்லை ." (திம 121:4). கடவுள் தூங்கினால் இவ்வுலகமே இயங்காது.

அடுத்து, கடவுளுக்கு மனிதர்மேல் கவலை உண்டா ? சீடர்கள் இயேசுவிடம், "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?" என்று கேட்கின்றனர், இதே கேள்வியை பலரும் கேட்கின்றனர். இக்கேள்விக்கு, பேதுரு கூறும் பதில்: "உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனெனில் அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார்” (1 பேது 5:7).

எங்கள்மேல் கவலையில்லையா? என்ற தம்மைக் கேட்ட சீடர்களிடம் இயேசு கேட்ட கேள்வி: "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? (மாற் 4:40) என்று கேட்கிறார். கடவுளுக்கு நம்மேல் அக்கறை உண்டு. ஆனால் நமக்குத்தான் கடவுள் மேல் நம்பிக்கையில்லை. கடவுளிடம் நமக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும், பிள்ளைக்குரிய நம்பிக்கை இருக்க வேண்டும்.

'காசாபியான்கா' என்ற சிறுவனைப் பற்றிய ஓர் ஆங்கிலக் கவிதையுண்டு. அதன் சுருக்கம் வருமாறு: பிரஞ்சு கப்பல் ஒன்று கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அக்கப்பல் திடீரென்று தீப்பிடித்துக் கொள்ள, பயணிகள் உயிர்காக்கும் கருவியாகிய "லைப் போட்" மூலம் கரைக்குச் செல்ல, 'காசாபியான்கா' கப்பலின் மேல் தட்டில் கவலையின்றி விளையாடிக் கொண்டிருக்கிறான், அவன் கூறியது "என் அப்பா இக்கப்பலின் மாலுமி; எனக்கு எந்த ஆபத்தும் வராது." இதுதான் பிள்ளைக்குரிய நம்பிக்கை.
அஞ்சி அஞ்சிச் சாகும் நமக்குக் கடவுள் கொடுக்கும் துணிவு: *அஞ்சாதே! நான் உன்னோடு இருக்கிறேன், கடலில் நடந்தாலும் நீ மூழ்கிப் போகமாட்டாய்; தீயும் உன்னைச் சுட்டெரிக்காது" (எசா 43:1-2). எனவே, நமக்கு இருக்க வேண்டிய மனநிலை; "ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு: யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம், யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும் ?" (திபா 27:1).

அதே நேரம், கடவுள் மனிதர்கள் வழியாகத்தான் நமக்கு உதவி செய்கிறார், அவைகளைப் பெறாமல் நாம் துன்புற்றால், அது கடவுளைச் சோதிப்பதாகும், ஓர் ஊரிலே பேய்மழை பெய்து ஒரு கைம்பெண் வீட்டைச் சூழ்ந்து கொண்டது. அவரை மீட்பதற்காக படகோட்டி இருமுறை முன்வந்தும் அப்பெண், "கடவுள் என்னைக் காப்பாற்றுவார்" என்று கூறி படகில் ஏற மறுத்துவிட்டார், வெள்ளம் உயர உயர, அவர் வீட்டு மாடியில் நின்றார். சிறிய வானவூர்தி ஒன்று அவரைக் காப்பாற்ற முன்வந்தும் அப்பெண், "கடவுள் என்னைக் காப்பாற்றுவார்" என்று கூறி அதில் ஏற மறுத்துவிட்டார், வெள்ளம் அவர் தலைக்கு மேல் செல்ல, அவர் இறந்து விண்ணாகம் சென்று பேதுருவிடம், "கடவுள் ஏன் என்னைக் காப்பாற்றவில்லை?" என்று கேட்டார், பேதுரு அவரிடம், "கடவுள் உன்களைக் காப்பாற்ற இரு முறை தொகையும், ஒருமுறை வானவூர்தியையும் அனுப்பினார், நீதான் அவற்றைப் பயன்படுத்தவில்லை" என்று கூறி அவரைக் கடிந்து கொண்டார். அக்கைம்பெண்ணின் நம்பிக்கை மூட நம்பிக்கை, அது உண்மையான நம்பிக்கை இல்லை.

கடவுளே, எங்கள்மேல் அக்கறை இல்லையா? இது போன்று கடவுளைக் கேள்வி கேட்க நமக்கு உரிமை உண்டா? இக்கேள்விக்கு முதல் வாசகம் பதில் தருகிறது. யோபு மகான் தனது உடைமை அனைத்தும் இழந்து, சுகத்தை இழந்த நிலையில், தன்னை நிரபராதி என்று வாதிட்டு கடவுளிடம் பல கேள்விகளைக் கேட்கிறார். ஆனால் கடவுள் அவரிடம் திருப்பிக் கேட்கிறார்; நான் கடலைப் படைத்து அதன் எல்லையை வரையறுத்தபோது நீ எங்கிருந்தாய்? தான் இயற்கைக்கு ஒழுங்குமுறைகளைப் படைத்தபோது நீ எங்கிருந்தாய்? என்று கேட்கிறார், யோபு தன் தவற்றை உணர்ந்து கடவுளிடம், "என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன். இனிப் பேசவே மாட்டேன்" (யோபு 40:4-5) என்று கூறிக் கடவுளிடம் சரனடைகிறார்.

திருத்தூதர் பவுல் கூறுகிறார்: களிமண்பாண்டம் தன்னை உருவாக்கிய குயவனை எப்படி கேள்வி கேட்க முடியாதோ, அதுபோல, மனிதரும் கடவுளை கேள்விகேட்க முடியாது (உரோ 8:20); ஏனெனில் கடவுளுடைய செயல் முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை (உரோ 11:32), இருப்பினும், கடவுளிடம் ஒரு சில விளக்கம் தேடுவது குற்றமில்லை, மரியா கன்னியாக இருந்துபொடே மீட்பரின் தாயாக வேண்டும் என்று வானதுதம் கபிரியேல் கூறியபோது: "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே" (லூக் 1:34) என்று விளக்கம் கேட்டார். வானததம் கொடுத்த விளக்கத்தை ஏற்று, கடவுளுடைய திட்டத்திற்குத் தன்னைக் கையளித்தார் மரியா.

புனித அகுஸ்தினார் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் கூறுகிறார்; “விளக்கம் பெறவேண்டும் என்பதற்காக நம்புகிறேன்; நம்பிக்கை பெறவேண்டும் என்பதற்காக விளக்கம் தேடுகிறேன், " முதலில் நம்புகிறோம்; அதன் பிறகு விளக்கம் தேடுகிறோம், தமது நம்பிக்கைக்கு விளக்கம் தருவதே இறையியல், "உங்கள் நம்பிக்கை குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள்" (1 பேது 3:15). இக்கால அறிவியல் விடும் சவால்களைச் சமாளிக்கத் தேவையா என விவிலிய மறைக்கல்வி காலத்தின் கட்டாயமாகும். -

இன்றையப் பதிலுரைப் பாடல் கூறுகிறது: "புயல் காற்றையும் பூந்தென்றலாக்கினார், கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன (திபா 107:29). கிறிஸ்து கடலைப் பார்த்துக் கூறினார்: "இரையாதே, அமைதியாயிரு" (மாற் 4:39). கடவுள் புயல் காற்றையும் பூந்தென்றலாக்க வல்லவர் என்று நம்புவோம். நமது வாழ்வில் அலைகள் ஓய்ந்து அமைதி குடிகொள்ளும்!


இக்குழந்தையின் பெயர் யோவான்! -அருள்பணி ஏசு கருணாநிதி


இயேசு, அன்னை கன்னி மரியாள் ஆகியோரைத் தொடர்ந்து திருஅவை வழிபாட்டு ஆண்டில் பிறந்தநாள் கொண்டாடப்படுவது திருமுழுக்கு யோவானுக்கு. 'மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை' (லூக் 7:28) என்று இயேசுவால் புகழாரம் சூட்டப்பட்ட இவரின் பிறப்பு இன்று நமக்குச் சொல்வது என்ன என்பதை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தின் ஒரு வரியாக வருவதை எடுத்து அதையே மையக்கருத்தாக்கிக் கொள்வோம்: 'இக்குழந்தையின் பெயர் யோவான்!' வாய்பேச முடியாத தந்தை சக்கரியா சிலேட்டில் எழுதுகுச்சி கொண்டு எழுதிய முதல் மற்றும் இறுதிச் சொற்றொடர் இதுவே.

லூக்கா நற்செய்தியாளரின் நிகழ்வுகள் பதிவின்படி மனித வரலாற்றில் கடவுள் எழுதிய முதல் மூன்றுவார்த்தைகள்தாம் இவை: 'இக்குழந்தையின் பெயர் யோவான்!' கடவுள் இம்மூன்று வார்த்தைகளை எழுதுவதற்கு முன் சமூகமும் மூன்று வார்த்தைகளை எழுதி வைத்திருந்தது: 'இவர்களுக்குக் குழந்தை இல்லை!' 'இவர்களுக்குக் குழந்தை இல்லை' என்னும் மூன்று வார்த்தைகளை, 'இக்குழந்தையின் பெயர் யோவான்' என அழித்து எழுதுகின்றார் கடவுள். 'இல்லை' என்ற இடத்தில் 'கடவுளின் அருள்' பொங்கி வருகிறது.

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலம் 'செயற்கை கருத்தரித்தல் காலம்' என்று சொல்லலாம். சில ஆண்டுகளுக்கு முன் வெறும் ஆராய்ச்சி வடிவத்திலும், இலைமறை காயாகவும் ஒளிந்திருந்த செயற்கை கருத்தரித்தல் இன்று மூலைக்கு மூலை மருத்துவமனைகளாக, விளம்பரப் பதாகைகளாக மண்டிக்கிடக்கின்றன. தமிழகத்தில் 10க்கு 4 குழந்தைகள் 'செயற்கை கருத்தரித்தல் வழியாக' பிறந்தவை என்று சொல்லப்படுகின்றன. குழந்தை இல்லாதவர்களுக்கு அல்லது இயலாதவர்களுக்கு இது அறிவியலின் கொடை என்றாலும், இவ்வகை கருத்தரித்தலில் இருக்கின்ற செயற்கைத்தனமும், தாய்-சேய், தந்தை-செய் அந்நியமயமாதலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. 'பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம். மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில்' (திபா 127:3) என்பதுதான் விவிலிய மரபின் புரிதலாக இருக்கிறது. குழந்தைப்பேறு இல்லாத சக்கரியாவும், எலிசபெத்தும் குழந்தைப் பேறு அடைகின்றனர்.

திருமுழுக்கு யோவானின் பிறப்பு நிகழ்வு என்பது முதல் ஏற்பாட்டின் 'மலடி பிள்ளைப்பேறு அடைதல்' என்னும் இலக்கிய யுக்தியைப் பின்பற்றியே அமைந்திருக்கிறது. நீதித்தலைவர் சிம்சோனின் பிறப்பு, இறைவாக்கினர் சாமுவேலின் பிறப்பு போன்ற பிறப்பு நிகழ்வுகளின் பின்புலத்தில் உருவானதே 'திருமுழுக்கு யோவான் கதையாடல்' என்பது விவிலிய ஆசிரியர்களின் கருத்து. இந்த யுக்தியின்படி, 'ஒருவர் பிள்ளைப்பேறு இல்லாமல் இருப்பார். சுற்றத்தார் அவரைக் கேலி பேசுவர். அவர் கடவுளிடம் முறையிடுவார். கடவுள் அவரின் விண்ணப்பத்தைக் கேட்பார். கருவுற இயலாதவர் கருத்தாங்கி குழந்தை பெறுவார். அந்தக் குழந்தை மீண்டும் கடவுளுக்கே அர்ப்பணம் செய்யப்படும்' - இந்த ஃபார்முலாவை நாம் சிம்சோன், சாமுவேல், திருமுழுக்கு யோவான் கதையாடல்களில் பார்க்கிறோம். இந்தப் பின்புலத்தில் பார்த்தால் திருமுழுக்கு யோவானின் பிறப்பு என்பது விவிலிய ஆசிரியரின் கற்பனைப் படைப்பு என்று நாம் சுருக்கிவிட வாய்ப்பு இருக்கிறது. இங்கே ஆசிரியர் தன் கதையாடல் வழியாக எதைச் சொல்ல விரும்புகிறார் என்பதை நாம் கவனித்தல் அவசியம்.

குழந்தையற்று இருந்த சக்கரியாவும், எலிசபெத்தும் குழந்தை பெற்றெடுக்கின்றனர்.
'இல்லை' என்ற நிலை மாறி, 'இருக்கு' என்ற நிலை உருவாகிறது.
ஊராரின் கேலிப்பேச்சு அடங்குகிறது.
சுற்றத்தாரின் பார்வையில் எலிசபெத்து உயர்த்தப்படுகிறார்.
அழுகை மறைந்து மகிழ்ச்சி பிறக்கிறது.
மூடியிருந்த வாய் கட்டவிழ்க்கப்படுகிறது.

திருமுழுக்கு யோவானின் பிறப்பை நாம் மனித பார்வையில் பார்த்தோமென்றால் மேற்காணும் சிந்தனைகள் நம்மில் எழுகின்றன. ஆனால், கடவுளின் பார்வையில் திருமுழுக்கு யோவானி; பிறப்பு இவற்றையெல்லாம் கடந்த செய்தியைக் கொண்டுவருகிறது. அது என்ன? 'இக்குழந்தையின் பெயர் யோவான்'

இதை நாம் எப்படி புரிந்துகொள்வது?

எலிசபெத்தின் சுற்றத்தார் தந்தையின் பெயரான 'செக்கரியா' என்ற பெயரைக் குழந்தைக்குச் சூட்ட நினைக்கின்றனர். (எலிசபெத்தும் இதற்கு மறுப்பு தெரிவிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. 'யோவான்' என்ற பெயரை சக்கரியா எலிசபெத்துக்கு எப்படிச் சொல்லியிருப்பார்?) 'செக்கரியா' என்றால் 'ஆண்டவர் நினைகூறுகின்றார்' அல்லது 'ஆண்டவர் நினைவுகூர்ந்தார்' என்பது பொருள். இந்தப் பெயரை எலிசபெத்து மறுக்கக் காரணம் 'ஆண்டவர் நினைவுகூர்வதோடு' நில்லாமல் 'ஆண்டவர் செயலாற்றினார்' என்று அவர் உணர்ந்ததே. 'இன்று மாலை நான் மாத்திரை எடுக்க வேண்டும்' என்பது 'நினைவுகூர்தல்' என்றால், 'இன்று மாலை நான் மாத்திரை எடுப்பது' செயல். ஆக, கடவுள் நினைவுகூர்பவர் மட்டுமல்ல. மாறாக, அவர் செயலாற்றுபவர். அவரின் செயல் எப்படி இருக்கிறது? 'யோவான்' என்ற பெயரில் இக்கேள்விக்கான பதில் இருக்கிறது.

'யோவான்' என்றால் 'ஆண்டவர் இரக்கம் காட்டினர்' அல்லது 'ஆண்டவர் இரக்கமுடையவர்' அல்லது 'ஆண்டவர் இரங்கினார்' என்பது பொருள். 'ஹனான்' என்றால் வயிறு. இரக்கம், கனிவு, பரிவு போன்ற உணர்வுகள் வயிற்றில் பிறப்பதாக எண்ணியது எபிரேய இலக்கியம். நம் உடலில் நாம் குனிந்து பார்க்கும்போது நம் கண்களில் தெரிவது வயிறு. ஆக, 'கடவுள் மனுக்குலத்தின்மேல் குனிந்து பார்க்கும்போது அந்த வயிற்றில் பிறப்பது இரக்கம்.' விவிலிய எடுத்துக்காட்டுக்களிலும் இதைப் பார்க்கலாம். நல்ல சமாரியன் அடிபட்டுக் கிடந்தவனைக் 'குனிந்து பார்க்கிறான்' - 'இரக்கம் பிறக்கிறது.' ஊதாரி மகன் எடுத்துக்காட்டில் தந்தை தன் இளைய மகனைக் 'குனிந்து பார்க்கிறார்' - 'இரக்கம் பிறக்கிறது.'

கடவுள் குனிந்து பார்த்தல் கடவுளுக்குக் தாழ்ச்சி. ஆகையால்தான், தாழ்ச்சி என்ற மதிப்பீட்டை தன் மேலாடையாக அணிந்துகொள்கிறார் யோவான். இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். திப 13:22-26) தூய பவுலின் போதனையின் ஒரு பகுதியாக நாம் பார்க்கிறோம்: 'நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ எனக்குப்பின் ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை.'

இரண்டாவதாக, சக்கரியாவின் வாய் கட்டவிழ்வதிலும் ஒரு உருவகம் இருப்பதை நாம் பார்க்கிறோம். 'இக்குழந்தையின் பெயர் யோவான்' என்று சக்கரியா எழுதியவுடன், அவரின் நா கட்டவிழ்கிறது. இங்கே கட்டவிழ்வது சக்கரியாவின் நா மட்டுமல்ல. யோவானின் நாவும்தான். ஏனெனில் ஆண்டவரின் வருகைக்காக பாலைநிலத்தில் ஒலிக்கப்போகும் 'குரல்'தான் யோவான். தான் யோவான் என்ற பெயர் ஏற்கும்போதே தன் பணியும், வாழ்வும் என்ன என்பதை உணர்ந்துகொள்கிறார் யோவான். ஆக, 'இக்குழந்தையின் பெயர் யோவான்' என்பது சக்கரியா மற்றவர்களுக்குச் சொன்ன வார்த்தைகள் அல்ல. மாறாக, அவை குழந்தைக்குச் சொன்ன வார்த்தைகள். இவ்வாறாக, தன் பணியின் அழைப்பு பெயர்சூட்டும் விழாவில் பெறுகிறார் யோவான். வரவிருக்கும் மெசியா இன்றைய முதல்வாசகத்தில் (காண். எசா 49:1-6) முன்னுரைக்கும் இறைவாக்கினர் எசாயா, 'கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார். என் தாய் வயிற்றில் இருக்கும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்' என்று சொல்வது இத்தகைய அழைப்பைத்தான். ஆண்டவரால் தெரிந்துகொள்ளப்பட்டவரின் மேலான நிலையை தொடர்ந்து இறைவாக்கினர் இப்படி எழுதுகிறார்:

'தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்' - பேருந்துக்காக காத்திருக்கும் நிறுத்தத்தின் மேற்கூரை ஓட்டை வழியும் வரும் சூரியக் கதிர் தன் குழந்தையின் முகத்திற்கு நேரே விழும்போது அதைத் தடுக்க தன் உள்ளங்கையைக் குடையாக விரித்துக் குழந்தைக்கு நிழல்தரும் அன்னை போல. கொஞ்ச வெயில்கூட நம்மைச் சுட்டுவிடக்கூடாது என்பது கடவுளின் ஆதங்கமாக இருக்கிறது.

'என்னைப் பளபளபாக்கும் அம்பாக்கினார்' - பளபளப்பான அம்பு கூர்மையாக இருக்கும். தான் எதற்காக செய்யப்பட்டதோ அந்த வேலையைச் செய்து முடிக்கும். அந்த அம்பை அவர் 'அம்பறாத் தூணியில் மறைத்துக்கொண்டார்'. 'அம்பறாத் தூணி' என்பது அம்புகள் ஒன்றாக வைக்கப்பட்டு தோளில் தொங்கவிடப்படும் ஒரு நீள்குடுவை. எதிரியை இறுதியாகவும், ஒரேயடியாகவும் அழிக்கப் பயன்படும் அம்பு இங்கேதான் மறைத்துவைக்கப்படும். இவ்வாறாக, 'தேர்ந்தெடுக்கப்பட்டவரின் மதிப்பு' (காண். 49:3) இங்கே சொல்லப்படுகிறது.

இவ்வாறாக, கடவுளின் பார்வையில் திருமுழுக்கு யோவானின் பிறப்பு ஓர் அழைத்தல் நிகழ்வாகவும், தன் ஒரே மகனின் வருகைக்கான தயாரிப்பு நிகழ்வாகவும் இருக்கிறது.

இன்றைய பிறந்தநாள் நமக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

'இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், கடவுள் இந்த உலகை இன்னும் வெறுத்துவிடவில்லை' என்று காட்டுகிறது என்கிறார் தாகூர். திருமுழுக்கு யோவான் பிறந்தபோது, 'இக்குழந்தையின் பெயர் யோவான்' என்று சொல்லப்பட்டது. நீங்களும், நானும் பிறக்கும்போதும் 'இக்குழந்தையின் பெயர் ....' என்று சொல்லப்பட்டது. 'யோவான்' என்ற பெயர் உருவகமாக உங்களுக்கும், எனக்கும் பொருந்துகிறது. ஏனெனில் நீங்களும், நானும் இருக்கக் காரணம் 'கடவுளின் இரக்கமே.' நாம் நம் வாழ்வில் நகர்த்தும் ஒவ்வொரு தருணமும் அவரின் இரக்கத்தின் கொடையே.

1. ஆண்டவரின் கைவன்மை
'அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது' என்கிறார் லூக்கா. ஒரு அழகிய ஓவியத்தை அல்லது புத்தகத்தை அல்லது தோட்டத்தைப் பார்க்கும்போது, 'இது யாருடைய கைவண்ணம்?' என நாம் கேட்கின்றோம். உருவாக்குபவரின் கைவண்ணம் உருவாக்கப்பட்ட பொருளில் பதிகிறது. குறைகளுள்ள கைகளே நிறைவான பொருள்களைப் படைக்க முடிகிறது என்றால், குறைகளற்ற கடவுளின் கைகள் எவ்வளவு அழகான பொருளை உருவாக்கும்? 'ஆண்டவரின் கைவன்மை' யோவானோடு இருந்ததுபோல நம்மிடமும் இருக்கிறது. இதை நாம் இரண்டு வார்த்தைகளில் புரிந்துகொள்வோம்: முதலில், 'இலக்கு' ('goal'). 'இலக்கு' என்பது நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் நாமே தேர்ந்துகொள்வது. நாம் செய்யும் பணிகள் பெரும்பாலும் நம்முடைய இலக்குகள் ஆகின்றன. 'நல்ல ஆசிரியராக இருப்பது,' 'நல்ல அருள்பணியாளராக துறவியாக இருப்பது,' 'நல்ல மருத்துவராக இருப்பது,' 'நல்ல மனையாளாக இருப்பது' என நாம் இலக்குகள் நிர்ணயம் செய்கிறோம். இந்த இலக்குகளை நோக்கி நாம் பயணம் செய்கிறோம். ஆனால், இலக்கையும் தாண்டிய ஒன்று இருக்கிறது. அதுதான் இரண்டாவது வார்த்தை: 'நோக்கம்' ('purpose'). இது கடவுளின் பார்வையில் நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. இந்த நோக்கத்தை நாம் 'அழைத்தல்' ('vocation') என்றும் சொல்லலாம். யோவான் தன் பிறப்பின் இலக்கையும், நோக்கத்தையும் அறிந்திருந்தார். பல நேரங்களில் நம் வாழ்க்கையில் நமக்கு இலக்கு தெளிவாக இருக்கும் அளவிற்கு நோக்கம் தெளிவாக இருப்பதில்லை. நோக்கம் தெளிவாக இருக்க வேண்டுமெனில் ஆண்டவரின் கைவன்மையை நான் உணர வேண்டும். ஆக, என்னோடு இருக்கும் ஆண்டரின் கைவன்மைக்கு நன்றி கூறவும், அவரின் கைவன்மையில் நான் தொடர்ந்து வழிநடத்தப்படவும் என்னை அழைக்கிறது யோவானின் பிறப்பு பெருவிழா.

2. மனவலிமை

நாம் குழந்தையாக இருக்கும்போது நம் உடல் வலுவற்று இருப்பதுபோல நம் மனமும் வலுவற்று இருக்கிறது. வளர வளர நாம் உண்ணும் உணவும், நாம் செய்யும் உடற்பயிற்சிகளும், மேற்கொள்ளும் உழைப்பும் நம் உடலுக்கு வலுசேர்க்கின்றன. அதுபோல நம் மனதை வலிமையாக்கவது நம் வாழ்வியல் அனுபவங்கள். மனம் வலிமையாவது என்பது நேர்முகமானது. ஆனால் மனம் கடினமாவது என்பது எதிர்மறையானது. விடுதலைப்பயண நூலில் எகிப்தில் பாரவோனின் மனம் கடினமாகிறது. கடினமாகும் மனம் கண்டிக்கப்பட வேண்டியது. மனவலிமை என்பதை நாம் உளத்திடம் என்று சொல்லலாம். அதாவது, 'ஆம் என்றால் ஆம் என்று சொல்லவும், இல்லை இல்லை என்றால் இல்லை' என்று சொல்லவும் தயங்காத பக்குவம்தான் மனவலிமை. காலையில் வைக்கும் 5 மணி அலார்முக்குக்கூட சரியா எழ முடியாத மனவலிமை கொண்டவன் நான் என்று சில நேரங்களில் என்னையே நினைத்ததுண்டு. யோவானின் இந்த மனவலிமையே அவரை ஏரோதிடம் நேருக்கு நேர் நின்று பேச துணிவைத் தருகிறது. இன்று நான் எந்த நேரங்களில் எல்லாம் மனவலிமை குன்றியுள்ளேன்?

3. பாலைநிலத்தில் வாழ்தல்

'ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு' என்பதை உணர்ந்தவர் திருமுழுக்கு யோவான். திடீர்னு வந்து திடீர்னு மறைய அவர் மின்மினிப்பூச்சி அல்ல. மாறாக, நின்று ஒளிரும் விண்மீன். ஆகையால்தான் தன்னையே பாலைநிலத்தில் மறைத்துக்கொள்கின்றார். இன்று சின்ன சின்ன விடயங்களுக்கெல்லாம் நாம் பதாகையைத் தூக்கிக்கொண்டு, 'இதுதான் நான்' என முன் நிற்கின்றோம். ஆனால், 'இது நானல்ல' என்று தெரிந்து வாழ்வதுதான் ஞானம். 'இது நானல்ல. எது நானோ அதுவரை நான் காத்திருக்கிறேன்' என்கிறார் யோவான். இன்று நம்மில் வேகமாக மறைந்துவருவது பொறுமை. ஒன்றைப் பார்த்தவுடன், 'இதுதான் அது' என்று சொல்லி முத்திரையிட்டு அதை மூடிவிடுகிறோம். நம் உள்ளத்தின் பாலைநிலம், வெறுமை, தனிமை, விரக்தி நம்மைத் தீண்டும்போது நாம் சினிமா, போதை, நண்பர்கள் என ஓடிப்போகின்றோம். ஆனால், பாலைநிலத்தின் வெறுமை, தனிமை, விரக்திதான் நாம் 'இதுவல்ல' என்பதை நமக்குக் காட்டுகிறது.

'இக்குழந்தையின் பெயர் யோவான்'

ஆம். அவர், நீங்கள், நான் என எல்லாரின் பெயரும் 'யோவான்'தான். 'ஆண்டவர் நமக்கு இரக்கம் காட்டியதால்' நாம் இன்று இருக்கிறோம். இந்த இருப்பிற்காக நன்றி கூறுகின்ற வேளையில் இந்த இருப்பில் இறைவனின் பெயரைப் பதிய வைப்போம்.

ஆண்டவரின் இரக்கம்தான் நான் என எண்ணும் நான், ஒருவர் மற்றவரை கொஞ்சம் குனிந்து இரக்கத்தோடு பார்த்தால் எத்துணை நலம்!





Tuesday 12 June 2018

ஆண்டின் பொதுக்காலம் 11-ஆம் ஞாயிறு



பொதுக்காலம் 11-ஆம் ஞாயிறு 17/06/2018


எசே 17:22 -24: 2 கொரி 5:6-10; மாற் 4:26-34



மறையுரைமொட்டுக்கள்
அருள்பணி Y. இருதயராஜ்

பிரஞ்சு புரட்சி பற்றி ஒரு நூல் வெளியிடும் எண்ணத்துடன் 'ஸ்டுவர்ட் மில்' என்பவர் அதற்கான கைப் பிரதிகளைத் தயாரித்தார். அவற்றை தன் அறையில் ஒரு மூலையில் வைத்திருந்தார். அவருடைய வீட்டு வேலைக்காரி அப்பிரதிகளைப் பழைய காகிதம் என்று நினைத்து அடுப்பில் போட்டு எரித்து விட்டார், பல ஆண்டுகளின் உழைப்பு சாம்பலாகிவிட்டது. இருப்பினும் அவர் மனம் உடைந்து போகாமல், மீண்டும் கைப் பிரதிகளைத் தயாரித்து, அவற்றை நூலாக வெளியிட்டு உலகப் புகழ்மிக்க வரலாற்று ஆசிரியர் என்ற பெருமையை அடைந்தார்.
வாழ்க்கையில் நாம் தோல்வியைத் தழுவும்போது. துவண்டு விடாமல் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும். இன்றைய முதல் வாசகம் நம்பிக்கை இழந்து போன இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறது, அவர்கள் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு அடிமைகளாக அல்லற்பட்டனர், அம்மக்கள் மீண்டும் தங்கள் தாயகம் திரும்புவர் என்ற நம்பிக்கையை முதல் வாசகம் அளிக்கிறது. ஒரு மரத்தை வெட்டி விட்டாலும் , அதன் அடிமரம் துளிர்விட்டு மீண்டும் மரமாகும். அவ்வாறே இஸ்ரயேல் மக்கள் பல்வேறு நாடுகளில் சிதறுண்டு போனாலும் அவர்களில் 'எஞ்சி இருப்பவர்கள் கடவுளுடைய திட்டத்தை நிறைவேற்றுவர் என்பது இறைவாக்கினர் எசாயாவின் இறையியல் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது: "ஆண்டவர் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவது" (திபா 92:13).  நம்புவோர் செழித்தோங்குவர், அவர்கள் பட்டமரம் தளிர்ப்பதுபோல் புத்துயிர் பெறுவர். இது கடவுளின் செயல்; நமது கண்ணுக்கு வியப்பளிக்கும் செயல்.

இன்றைய நற்செய்தியில், இறை ஆட்சியின் வளர்ச்சியைக் கிறிஸ்து விதை உவமை மூலம் விளக்குகிறார். இந்த குறிப்பிட்ட உவமை மாற்கு நற்செய்தியில் மட்டும் காணக்கிடக்கிறது. நிலத்தில் விதைக்கப்பட்ட விதை முளைத்து, வளர்ந்து, பலன் தருவது அவ்விதையை விதைத்தவரைப் பொறுத்ததன்று. அது தன் இயல்பிலேயே வளர்ந்து பலன் தருவது உறுதி. அவ்வாறே இறையரசின் வளாச்சியை எவரும் தடைசெய்ய முடியாது.

சிறையில் அடைக்கப்பட்ட திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "கடவுளின் வார்த்தையைர் சிறைப்படுத்த முடியாது." (2 திமொ 2:9). திருப்பலியாளர்களை, நற்செய்தியாளர்களைச் சிறைப்படுத்த முடியும்: ஆனால் நற்செய்தியை எவரும் சிறையிட முடியாது. காற்று அது விரும்பும் திசையில் வீசுவதுபோல, ஆவியாரும் அவர் விரும்பும் திசையில் வீசுவார், ஆவியாசின் செயல்பாட்டை எவரும் தடைசெய்ய முடியாது (காண், யோவா 3:8), எனவே, எத்தகைய எதிர்ப்பையும் கண்டு அஞ்சாமல், நற்செய்தியை நாம் அறிவிக்கவேண்டும்.

"நான் நட்டேன். அப்பொல்லோ நீர் பாய்ச்சினார். கடவுளே விளையச் செய்தார்" (1 கொரி 3:8). எனவே நடுவதும், நீர் பாய்ச்சுவதும் நமது கடமை; விளையச் செய்வது கடவுளின் செயல், மருந்து கொடுப்பது மருத்துவர் பணி, குணப்படுத்துவது கடவுளின் செயல். அவ்வாறே நற்செய்தியை அறிவிப்பது நமது பணி: இறை ஆட்சியின் வளர்ச்சி கடவுளின் செயல்,

இன்றைய நற்செய்தியில் இறை ஆட்சியின் வளர்ச்சியை கடுகு விதை உவமை மூலம் கிறிஸ்து விளக்குகிறார். அது சிறிய விதையானாலும், பெரியதாக வளர்த்து வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளை விடுகிறது. கிறிஸ்து பன்னிரண்டு சீடர்களுடன் இறை ஆட்சியைத் தொடங்கினார். அவர்கள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது. அவர் விண்ணகம் சென்றபின். தூய ஆவியின் வருகைக்காக மன்றாடிய சீடர்களின் எண்ணிக்கை 120. தூய ஆவியாரின் பெருவிழாவில் திருமுழுக்குப் பெற்றவர்களின் எண்ணிக்கை 3000. பின் அது 5030 ஆனது. இன்று எல்லா நாடுகளிலும், எல்லா மொழிகளிலும், எல்லாப் பண்பாட்டிலும் நற்செய்தி வேருன்றியுள்ளது. இது கடவுளின் செயல்; நமது கண்ணுக்கு வியப்பளிக்கும் செயல்.

விண்ணகத்தில் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இஸ்ரயேல் மக்களிடமிருந்து மட்டும் 1,44,000 பேர். இந்த எண்ணிக்கை எப்படி வந்தது? 12 123 1000 1,44,000, பன்னிரண்டு முழுமையைக் காட்டும்; அது இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களையும் குறிக்கும். அவர்களுடன் எல்லா நாட்டையும் குலத்தையும் இனத்தையும் சார்ந்த எண்ண இயலாத பெருந்திரளான மக்கள் இருந்தனர் என்று திகுவெளிப்பாடு நூல் கூறுகிறது (திவெ 4:9), எனவே பலர் மீட்கப்படுவர். இது கடவுளின் செயல், நமக்கு வியப்பூட்டும் செயல்.

நற்செய்தி நம்பிக்கையில் நற்செய்தி, நாம் மற்றவர்களுக்கு, குறிப்பாக நமது பிள்ளைகளுக்கு, இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும், அவர்களை மட்டம் தட்டி மனம் உடைந்துபோகச் செய்யக்கூடாது. பரிணாம வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆசிரியர் கேட்டார், அசோக் என்ற மாணவன் எழுந்து கூறியது: நான்தான் பரிணாம வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஏனெனில் நான் சிறுவனாக இருந்தபோது என்னை "வாடா, கண்ணுக்குட்டி" என்று அழைத்த என் அப்பா, இப்போது 'வாடா எருமைமாடு" என்று அழைக்கிறார், பிள்ளைகளை நாயே, பேயே. எருமைமாடு என்று கூப்பிடுவது பெரிய அநீதியாகும்.
இக்காலத்துப் பிள்ளைகள் நம்மைவிட பல துறைகளில் அறிவுமிக்கவர்களாய் உள்ளனர். அதைக்கண்டு நாம் பெருமிதம் அடைய வேண்டும் என்கிறார் வள்ளுவர்,

உணவு உட்கொள்வதில்லையா? திரும்பத் திரும்பக் குளிப்பதில்லையா? திரும்பத் திரும்பப் பார்த்துப் பார்த்து, திரும்பத் திரும்பப் பேசிப் பேசிக் காதலிப்பதில்லையா? திரும்பத் திரும்பப் பாவம் செய்வது மனிதப் பலவீனம்; திரும்பத் திரும்ப மன்னிப்பது இறைவனின் இரக்கம்.
ஒப்புரவு அருள் அடையாளத்தை அணுகும் ஒவ்வொரு முறையும் நாம் நாம் எவ்வளவு தீயவர்கள் என்பதை உணர்வதைவிட, கடவுள் எவ்வளவு நல்லவர் என்பதை உணர வேண்டும். 'ஆண்டவரைப் போற்றுங்கள், ஏனெனில் அவர் நல்லவர்'.

"தவறு என்பது தவறிச் செய்வது,
தப்பு என்பது தெரிந்து செய்வது,
தவறு செய்தவன் வருந்தி ஆகனும்,
தப்பு செய்தவன் திருந்தப் பார்க்கணும்





மகிழ்ச்சியூட்டும் மறையுரை
குடந்தை ஆயர் F. அந்தோனிசாமி

நாம் தேடும் இறையரசு எங்கேயிருக்கின்றது?

இறைவனுடைய ஆட்சி என்பதுதான் இறையாட்சி! இறையாட்சியை ஒரு மரத்திற்கு ஒப்பிடலாம். இந்த மரம் தரும் கனிகள்தான் அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை , கனிவு, தன்னடக்கம் (கலா 5:22-23) ஆகியவையாகும்.


கடவுள் நமது மீட்பை நாமே சம்பாதித்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகின்றவர் ! ஆகவே கடவுள் நமது உள்ளங்களில் மரங்களை நடாமல், விதைகளை விதைத்திருக்கின்றார்!


நமது உள்ளத்திற்குள்ளே திருமுழுக்கு நாளன்று கடவுள் அவரது தூய ஆவியாரை பொழிந்திருக்கின்றார் ! அவரது கனிகளை நாம் துய்க்க வேண்டுமானால், ஆவியார் நமக்குள் விதைத்திருக்கும் விதைகள் முதலில் முளைக்க வேண்டும்!


ஒரு விதை எப்போது முளைக்கின்றது? என்பது நமக்குத் தெரியும்! அமைதியில்தான் எப்போதும் விதைகள் முளைக்கின்றன என்பதை நாம் நன்கு அறிவோம்! அமைதி தேவை, மண் தேவை, தண்ணீர் தேவை, ஒளி தேவை; இவை அனைத்தும் ஒன்றுபட்டு செயல்படும்போது நமக்குள் விதைகள் முளைத்து, விருட்சங்கள் வளரும், கனிகள் பிறக்கும்!


ஓர் ஊரில் நீண்டகாலமாக மழை பெய்யவில்லை! நிலங்கள் வரண்டுவிட்டன! மரங்கள் பட்டுப்போகத் துவங்கின! விதைக்கப்பட்ட விதைகள் முளைக்கவில்லை! ஆகவே அந்த ஊர் மக்கள் காட்டில் வாழ்ந்த முனிவர் ஒருவரிடம் சென்று முறையிட்டார்கள்!

அந்த முனிவர் ஒரு நிபந்தனை விதித்தார்! “திறந்தவெளியில் ஒரு குடிசை கட்டித்தர வேண்டும்! பின் மூன்று நாள்கள் நான் தனியாயிருக்க உதவ வேண்டும்! உணவும் தண்ணீரும் தேவையில்லை! அப்போதுதான் என்னால் மழையை வரவழைக்க முடியும்" என்றார். மக்கள் அந்த முனிவர் சொன்னபடியே செய்தனர். மூன்றாவது நாள் மழை பெய்தது!

நன்றி சொல்ல அவர் குடிசை முன்னால் பெருங்கூட்டம் கூடியது! அவர்கள் அந்த முனிவரைப் பார்த்து, "மழையை எப்படி வரவழைத்தீர்கள்?” என்று கேட்டனர்!


அதற்கு முனிவர் சொன்னார், "மழையை வரவழைப்பது மிகவும் எளிது! மழை வேண்டும் என்ற எண்ணத்திற்கு மட்டும் மனத்தில் இடம் கொடுத்து, மற்ற எண்ணங்களையெல்லாம் மறந்துவிட வேண்டும்! நான் மூன்று நாள்களும் மழையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். என் எண்ணங்கள் வானத்தில் மிதந்து சென்ற வெள்ளை மேகங்களைப் பாதித்தன ! என் மனத்திலிருந்து, இதயத்திலிருந்து பிறந்த அதிர்வுகள் மேகங்களை அதிர வைத்தன; மழை பெய்தது " என்றார்.
நமது இதயத்திலிருந்து, மனத்திலிருந்து பிறக்கும் அதிர்வுகளால் வானத்தைக்கூட புரட்டிப்போட முடியும்!

நமக்குள்ளே தூய ஆவி என்னும் ஆற்றல்மிகு சக்தி உண்டு! அந்த சக்தியால் விதைகளை முளைக்க வைக்க முடியும்! தூய ஆவியால் எல்லாம் ஆகும் என்று நாம் எண்ணத்துவங்கினால் அந்த எண்ணம் மிக எளிதில் செயல்வடிவம் பெறும்! நாம் எதை எண்ணுகின்றோமோ அதுவாக நாம் மாறிவிடுவோம்!
நாம் அடைய விரும்பும் இறையரசை நினைத்து அமைதியாக அமர்ந்திருந்தால் நாம் தேடும் இறையரசு நமக்குள் மலரும்!

நம் வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் கனிகளை நாம் என்ன செய்வது? இந்த உலகில் நாம் படைக்கப்பட்டதே மற்றவர்களுக்கு உதவி செய்யத்தான் என்பதை உணர்ந்து பழுத்த மரமாக வாழ நாம் முன்வரவேண்டும்! இன்றைய இரண்டாம் வாசகம் கூறுவதுபோல இந்த உலகிலே நாம் செய்யும் நற்செயல்கள் மறு உலக வாழ்வை நிர்ணயிக்கும் (2 கொரி 5:10).
நாம் விதைக்கப்படாத நிலமல்ல; விதைக்கப்பட்ட நிலம்! கடவுளின் உதவியோடு இன்றைய முதல் வாசகத்தில் எசேக்கியேல் கூறுவது போல கனிதரும் மரங்களாக நம்மால் வாழமுடியும், பறவைகளின் சரணாலயங்களாக நம்மால் திகழமுடியும்.
விதைக்கு உயிர்தரும் கடவுளுக்கு நாம் ஆழ்ந்த அமைதியையும், நல்ல ஆன்மிக அதிர்வுகளையும் தந்தால் போதும்.

நாம் கடுகு விதைபோல இருக்கலாம் (நற்செய்தி). ஆனால் கடவுள் காட்டும் அமைதி வழியில், ஆன்மிக வழியில் நடந்தால் நாம் வானத்துப் பறவைகள் தங்கும் அளவுக்கு வளர்வோம்; நமது உறவுகள் என்னும் கிளைகள் சிறகுகளாக விரியும்!
மேலும் அறிவோம் :

வெள்ளத்(து) அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து) அனையது உயர்வு (குறள் : 595).

பொருள் : நீரின் மிகுதிக்கு ஏற்றவாறு நீர்ப்பூவாகிய தாமரைத் தண்டின் நீளம் அமையும்; அதுபோன்று மக்கள் ஊக்கத்திற்குத் தக்கவாறு வாழ்வின் உயர்வு விளங்கும்!




ஞாயிறு இறைவாக்கு
அருள்பணி  முனைவர் அருள்.


பெருஞ்செல்வந்தன் ஒருவனுக்கு வாழ்வில் மகிழ்ச்சியும் இல்லை. நிம்மதியும் இல்லை. தனக்கு எல்லாம் இருந்தும் ஏன் நிம்மதி இல்லை என்று யோசித்துக் கொண்டு தன் செல்வங்கள் அனைத்தையும் ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்று. அதனை ஒரு துறவியின் காலடியில் வைத்து, அவரிடம் இதயத்தில் மகிழ்ச்சி காண வழியைக் கேட்டான். துறவியோ அந்த மூட்டையை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடத் தொடங்கினார். போலி துறவியிடம் ஏமாந்துவிட்டதாக நினைத்த அச் செல்வந்தன் அவரை துரத்திக்கொண்டே ஓடினான். திடீரென ஓட்டத்தை நிறுத்திய துறவி, என்ன! பயந்துவிட்டாயா...? இந்தா உன் செல்வம். நீயே வைத்துக்கொள் என்று கூறி அவனிடம் கொடுக்க, அவனோ இழந்த செல்வத்தைப் பெற்றதால் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். அப்போது துறவி அவனிடம் இங்கு வருவதற்கு முன்னால் கூட இந்தச் செல்வம் உன்னிடம்தான் இருந்தது. இருந்தும் அப்போது உனக்கு மகிழ்ச்சி இல்லை. இப்போது உன்னிடம் இருப்பதும் அதே செல்வம்தான். ஆனால் இப்போது உனக்குள் மகிழ்ச்சி இருக்கிறது. எனவே மகிழ்ச்சி என்பது, நிம்மதி என்பது, வெளியே இல்லை. அது எங்கு கிடைக்கும் என்று தேட வேண்டியதும் இல்லை. அது உனது இதயத்துக்குள்ளே தான் இருக்கிறது. அதை நீயே கண்டுபிடித்தால் உனக்குள் நிம்மதி நிரந்தரமாக இருக்கும் என்றார் துறவி.

இறையரசு என்பது மனித இதயம் என்னும் நிலத்தில் நீர் பாய்ச்சி, அதில் அன்பு, அமைதி, நீதி போன்ற விதைகளைப் பயிரிட்டு, இறுதியில் மகிழ்வை அறுவடை செய்வதாகும். மனிதன் தேடும் அமைதியும், மகிழ்வும் அவன் இதயத்துக்குள்ளேதான் இருக்கிறது. மனித இதயத்தில் தான் விதைக்கப்படுகிறது (கலா. 5:22). எந்த மனிதன் நான், எனது, எனது குடும்பம், நமது சமூகம் என்பதை இதயத்தில் பதியம் போடுகிறானோ, அங்கே, தானாக முளைத்து வளர்ந்து, பலருக்கும் பயன்தரும் மரம் போல இறையரசு உதயமாகிறது. இறைவனையும், இறைச்சிந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளத் தொடங்கும்போதே, இறையரசு இதயத்தில் குடிகொள்ள தொடங்குகிறது என்றே கூறலாம்.
மகிழ்ச்சி. நம்பிக்கை என்ற விதைகளை விதைக்கிறார் இயேசு. கடுகு விதையின் தோற்றத்தை வைத்து, தீர்க்கமாக தீர்மானிக்க முடியாது. இறையரசு தோற்றத்தில் எளிமையாக இருந்தாலும், அதன் வளர்ச்சி நம்மை வியக்கச் செய்கிறது. காரணம், அது கடவுளின் செயல்திட்டமாகும். இறையரசு என்பது இறைச் சிந்தனைகளை செயலாக்கம் பெற வைப்பதேயாகும். இறையரசின் பண்புகள் இதயத்தில், மனித உறவுகளில் நிலைத்திருக்க வேண்டுமானால், நாம் இறை நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும். நன்மைகளை, உண்மைகளை, நேர்மை யானவைகளை தன்னிலே கொண்டவர்கள் இறையரசுக்கு உரியவர்கள் ஆவார்கள். இதற்கு எதிராகச் செயல்படக்கூடியவர்கள் இறையரசை இதயத்தில் காணாது இருட்டடிப்பு செய்கிறார்கள் என்றே கூற வேண்டும். இன்றைய முதல் வாசகம் கூறுவதுபோல, மனித வாழ்க்கை வளர்ந்து அது பூக்களாகவும், காய்களாகவும், கனிகளாகவும் பல மடங்கு பயன் தரும் மரமாக வேண்டும் (முதல் வாசகம்). நம்பிக்கை இழந்த இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கை என்னும் விதையை அவர்களின் இதயங்களில் விதைத்தார் இறைவாக்கினர் எசேக்கியேல்.
இயேசுவின் உவமையில் வரும் விவசாயி, விதைகளை விதைத்துவிட்டு, நிம்மதியாக இரவில் தூங்குகிறான். நாட்கள் நகர விதைகள் தானாக முளைத்து வளர்கிறது (மாற். 4:27). விதையானது தன்னகத்தே கொண்ட ஆற்றலால் தானாக வளர்ந்து பலன் தருகிறது. இயற்கையாக நிகழும் விதையின் வளர்ச்சியை இறையரசின் வளர்ச்சிக்கு இயேசு ஒப்பிடுகிறார். இறை வார்த்தைகளை இதயத்தில் விதைத்துவிட்டு, பலனுக்காகப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என்று இயேசு உணர்த்துகிறார்.
விதையோ சிறிது, மரமோ பெரிது.

இயேசு தொடங்கிய இறையரசு கடுகுமணிபோல் சிறிதாக இருந்தும், அவரது போதனைகள், புதுமைகள், வழியாக நன்கு வளரத் தொடங்கியது. கடுகுமணி போல் இருந்த இறையரசு அவரின் உயிர்ப்புக்குப் பிறகு பெரிதும் வளரத் தொடங்கியது. கடுகு விதை சிறிதாக இருந்தாலும், அது விதைக்கப்பட்ட பின், வளர்ந்து, பெரிதாகி பலருக்கும் பயன் தருகிறது. வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் கொண்டது (மாற். 4:32). தொடக்க கால திருச்சபை கடுகுமணி போல் உதயமானாலும், காலப்போக்கில் பல நாட்டவருக்கும், இனத்தவருக்கும் அடைக்கலம் கொடுக்கும் வகையில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில்
இருள் முழுவதையும் உடனே ஒளியாக்க வேண்டும் என்று நினைக்காமல், சிறிய விளக்கில் முதலில் ஒளியேற்றுவோம். அது சுடர்விட்டுப் பிரகாசித்து இறுதியில் இருள் முழுவதையும் வெல்லும் என்பதை உணர்வோம்.
நமது இதயத்தில் வேற்றுமை, சுயநலம் போன்ற கிளைகளைக் களைந்துவிட்டு, அதை நீதி, அன்பு, மகிழ்ச்சி போன்ற இறையரசின் கூறுகனை உள் வாங்கி, பூத்துக் குலுங்கும் பூக்காடாக்குவோம். அவ்வாறு செயல்பட்டால், நமது இதயம் இறையரசுக்கு உரிய , பக்குவப்பட்ட, பண்பட்ட, பயனுள்ள, தோட்டமாக மலர்ந்து மணம் வீசும். அப்போது நாம் தேடும் இறையரசு நமது இதயத்துக்குள் வசப்படும்.

சிந்தனைக்கு
இறையரசு இங்குள்ளது, அங்குள்ளது என்று தேடிக் கொண்டிருக்காமல், நமது இதயத்துக்குள் உள்ளது என்பதை உணர வேண்டும். அதை உள்வாங்கி, எப்படி வெளிப்படுத்துவது என்பதை பற்றிச் சிந்திக்க வேண்டும். சூழ்நிலை அமைந்தால் குயில் பாடுகிறது, முள் மரத்தில் இருந்தாலும் குயில் குயில் தான். அது போலதான் இறையரசு சூழ்நிலைக்கு ஏற்ப வளர்கிறது. உன்னால் முடியும் தம்பி எல்லாம் உனக்குள் இருக்கும் உன்னை நம்பி என்ற திரைப்படப் பாடலுக்கு ஏற்ப நமக்குள் இருக்கும் இறையரசைக் கண்டுபிடித்து அதில் நிறைவான மகிழ்ச்சி காண முயல்வோம்.


வலிமையற்ற வலிமை, உருவற்ற உரு - இறைவனால், என்னால்!
அருள்பணி ஏசு கருணாநிதி

கடந்த சில நாள்களுக்கு முன்பாக என் நண்பர் ஒருவருக்கு பிறந்த குழந்தையைப் பார்க்கச் சென்றிருந்தேன். பிறந்து 9 நாள்கள் ஆகியிருந்த அந்த ஆண் குழந்தையை நாங்கள் போவதற்குச் சற்று நேரத்திற்கு முன் குளிப்பாட்டி, சாம்பிராணி புகை போட்டு, பிங் கலரில் னாட்-பிஹைன்ட் போட்டு, கைக்கு கருப்பு வளையல், வசம்புக் கயிறு, சின்ன டயப்பர் அணிவித்து 'ஐ லவ் யு சோ மச்' என்று சின்ன சின்னதாய் பிரின்ட் போட்ட மஞ்சள் கலர் துண்டில் கிடத்தியிருந்தார்கள். என் உடன் நண்பர் அந்தக் குழந்தையைப் பார்த்தவுடன் அப்படியே வாரி எடுத்துக்கொண்டார். 'கழுத்து, கழுத்து' என்ற மற்றவர்கள் கத்தினார்கள். ஆனால், வெகு இலகுவாக பிறந்த குழந்தையின் கழுத்தை அசையாமல் சேர்த்துப் பிடித்துக்கொண்டார் அவர். கையில் எடுத்தவர் குழந்தையை இரசக்க ஆரம்பித்தார். 'சின்ன உதடு, சின்ன விரல், சின்ன நகம், சின்ன மூக்கு' என வர்ணனை நீண்டுகொண்டே வந்தது. 'இறைவனின் படைப்பே அற்புதம். நமக்குத் தேவையான எல்லாவற்றையும் எப்படி குட்டி குட்டியாக வைத்திருக்கின்றார்' என ஆச்சர்யப்பட்டார் அவர். நாம் பிறந்தபோது நமக்கு இல்லாமல் பாதியில் வருவது பல் மட்டும்தான் என நினைக்கிறேன். பாதியில் வருவதால் தான் என்னவோ அது பாதியிலேயே போய்விடுகிறது.

'மனிதன் மனிதனாகப் பிறக்கிறானா?' அல்லது 'அவன் மனிதனாக மாறுகிறானா?' என்பது சமூகவியலில் கேட்கப்படும் கேள்வி. அதாவது, ஒரு மனிதனின் சூழல்தான் அவனை உருவாக்குகிறது என்பது சமூகவியலின் வாதம். இயல்பாக விட்டுவிட்டால் மனிதர்கள் மனிதர்களாக உருவாவதில்லை என அவர்கள் சொல்வதுண்டு.

வலுவற்ற ஒரு குழந்தை வலுவான ஓர் ஆணாக, பெண்ணாக வளர்ச்சி அடைய எது காரணம்? பெற்றோர், சுற்றத்தார், பின்புலம், பணம், உணவு போன்றவை காரணமாக இருந்தாலும் மனிதர்கள் தாங்களாகவே தங்கள் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் பெற்றிருக்கிறார்கள் என்பதே உண்மை.

ஆக, வலுவற்றவை வல்லமை பெறுவதற்கு வெளிப்புற ஆற்றல் கொஞ்சம் தேவைப்பட்டாலும், அவை தங்களுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொணர்ந்தால் அவை வல்லமை பெற முடியும்.

இன்று நாம் பல நேரங்களில் - நம் உடல் நோய்வாய்ப்படும்போது, நம் இல்லத்தில் வசதி குறைவுபடும்போது, நம் உறவுநிலைகள் நம்மைவிட்டுப் பிரியும்போது, நமக்கப் பிடித்த ஒருவர் இறக்கும்போது, நம் வீடு அல்லது தொழில் ஆகியவற்றை இழக்க நேரும்போது, நாம் எதிர்பாராத விபத்தை சந்திக்கும்போது - நம் வலுவற்ற நிலைகளை உணரலாம். இப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு வலிமையையும், நம் உருவற்ற நேரங்களில் நமக்கு உருவையும் தருவது எது என்பதை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

நேரிடையாகப் பார்த்தால் இன்றைய முதல் வாசகம் (காண். எசே 17:22-24) இஸ்ரயேலின் வளர்ச்சி பற்றியும், இரண்டாம் வாசகம் (காண். 2 கொரி 5:6-10) மனித உடலின் உயிர்ப்பு பற்றியும். மூன்றாம் வாசகம் (காண். மாற் 4:26-34) இறையாட்சி பற்றியும் பேசுகிறது.

ஆனால் இந்த மூன்றின் - இஸ்ரயேல், உடல், இறையாட்சி - பின்னணியில் இருப்பவை எது? அல்லது இந்த மூன்றிற்கும் பொதுவாக இருக்கும் காரணி எது? வலுவின்மை. எப்படி?

பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் தன் மண்ணை இழந்து, தன் ஆலயத்தை இழந்து, தன் திருச்சட்டத்தை இழந்து, தன் கடவுளை இழந்து அநாதையாக வலுவற்று நிற்கிறது.

நாம் இந்த உலகத்தில் குடியிருக்கும் உடல் நோய்வாய்ப்பாட்டு, குறைவுபட்டு, இப்பவோ பிறகோ என்று நம்மைச் சுமந்து சோர்வுற்று வலுவற்று நிற்கிறது.

இயேசு கொண்டு வந்த இறையாட்சி அவரின் இறப்புக்குப் பின் உயிர் பெறுமா? இல்லையா? என்று தயங்கி நிற்கிறது.

இந்த மூன்று நிலைகளும் மாறிப்போகும்: இஸ்ரயேல் வளர்ச்சி பெறும். உயிர் குடிபெயரும். இறையாட்சி வேரூன்றிப் பரவும்.

இப்படியான நம்பிக்கையை இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் உருவகங்கள் நமக்குச் சொல்கின்றன.

உருவகம் 1: நுனிக்கிளை

'தலைவராகிய ஆண்டவர் கூறுவது: உயர்ந்
து கேதுரு மரத்தின் நுனிக்கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன்' எனத் தொடங்குகிறது இன்றைய முதல் வாசகம். கேதுரு மரம் என்பது ஒரு ஊசியிலைத் தாவரம். நம்ம ஊர் நெட்லிங்கம், யூகலிப்டஸ், சவுக்கு மரம் போல. இவைகள் புதிதாக வளர்க்க வேண்டுமென்றால் இதன் தண்டுப்பகுதியை வெட்டி சாணம் பூசி சாக்கில் சுற்றி வைக்க வேண்டும். வெறும் நுனிக்கிளையை வைத்தால் இவை வளர்வதில்லை. ஆனால் ஆண்டவரின் செயல் வித்தியாசமாக இருக்கிறது. அவர் நுனிக்கிளையை வைக்கின்றார்.


நுனிக்கிளை என்பதன் பொருள் மூன்று:

ஒன்று, நுனிக்கிளை வலுவற்றது. நாம் குளிக்கப் போகும் போது, அல்லது நடக்கும்போது வேப்பமரம் கைக்கு எட்டும் தூரத்தில் கிளைபரப்பி இருந்தால் அதைச் சற்றே வளைத்து நுனிக்கிளையை நாம் உடைத்து பல் துலக்கவோ, அதன் கொழுந்தைச் சாப்பிடவோ செய்கின்றோம். இப்படியாக எந்தவொரு ஆயுதமும் இன்றி நாம் வெறும் விரல்களால் ஒடிக்கும் அளவிற்கு வலுக்குறைந்து இருப்பது நுனிக்கிளை.

இரண்டு, நுனிக்கிளை தேவையற்றது. நம் வீடுகளின் ஜன்னல்களை ஏதாவது ஒரு மரம் உரசினால் அந்த மரத்தின் நுனிக்கிளையை நாம் தறித்துவிடுகிறோம். நுனிக்கிளையை இழப்பதனால் மரம் ஒன்றும் அழிந்து விடுவதில்லை. ஆக, தேவையற்றது என நாம் ஒதுக்குவது நுனிக்கிளையைத்தான்.

மூன்று, நுனிக்கிளைகள் யாரின் பார்வைiயும் இழுப்பதில்லை. நம் கண்முன் நிற்கும் மரத்தைப் பார்த்து, 'எவ்ளோ பெரிய மரம்!' என வியக்கும் நாம், ஒருபோதும் அதன் நுனிக்கிளையைப் பார்த்து, 'எவ்ளோ அழகான நுனிக்கிளை!' என்று நாம் வியப்பதில்லை. நுனிக்கிளைகள் ஒருபோதும் நம் பார்வையை ஈர்ப்பதில்லை.

இப்படித்தான் வலுவற்றதாக, தேவையற்றதாக, யாரின் பார்வையையும் ஈர்க்காததாக இருக்கிறது இஸ்ரயேல். ஆனால் அது இறைவனின் கை பட்டவுடன் எப்படி மாறிப்போகிறது? 'கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மரமாகத் திகழும். அனைத்து வகை பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாக்கிக்கொள்ளும்' என்கிறார் எசேக்கியேல் இறைவாக்கினர். ஆக, தலைவராகிய ஆண்டவரின் கரம் பட்டவுடன் எந்தவித வெளிப்புற சூழலின் உதவியும் இல்லாமல் மரமானது வலுப்பெறுகிறது. தேவையுள்ளதாகிறது. பறவைகளின் கவனத்தை ஈர்க்கிறது.

இறுதியில், 'நானே செய்து காட்டுவேன்' என்று தன் செயலின் ஆற்றலை உலகறியச் செய்கின்றார் இறைவன்.

உருவகம் 2: குடி பெயர்தல்

வாடகை வீட்டில் இருப்பவர்களின் வலி தெரியுமா? அவர்கள் அந்த வீட்டிற்கு எவ்வளவுதான் வாடகை கொடுத்தாலும், எவ்வளவு உரிமையோடு பயன்படுத்தினாலும், அதை தங்களின் முகவரியாகக் கொண்டாலும் அந்த வீட்டின் மேல் அவர்களுக்கு உரிமை இருப்பதில்லை. அவர்கள் அந்த வீட்டைவிட்டு ஒருநாள் வெளியேறியே ஆக வேண்டும்.

நம் உடலை இப்படிப்பட்ட வாடகை வீட்டிற்கு உருவகம் செய்கின்றார் பவுல். நம் உயிர் வாடகைக்கு இருக்கும் வீடுதான் இந்த உடல். இந்த உடலின் நிலையாமை நாம் வளரும்போதும், நோயுறும்போதும், முதுமை அடையும்போதும், இறக்கும்போதும் நமக்குத் தெரிகிறது. காண்கின்ற உடலாக இருப்பதால் இது நிலையற்றதாக இருக்கிறது. நம்பிக்கை உடல் அல்லது காணாத உடல் நிலையானது. ஆக, நாம் இறக்கும்போது நம் உயிர் காண்கின்ற இந்த உடலிலிருந்து காணாத அந்த உடலுக்கு, நிலையற்ற இந்த உடலிலிருந்து நிலையான அந்த உடலுக்கு குடிபெயர்கிறது. ஆக, வாடகை வீட்டிலிருந்து நாம் சொந்தவீட்டிற்குப் போகின்றோம். வலுவற்ற நிலையிலிருந்து வலுவான நிலைக்குப் போகின்றோம். மனிதத்தில் இருந்து இறைமைக்குச் செல்கின்றோம்.

ஆக, இங்கேயும் இறைவனின் கரம்தான் செயலாற்றுகிறது. உயிரை இந்த உடலில் வாடகைக்கு வைத்த இறைவன் அதை ஒரு நேரத்தில் எடுத்து வேறு ஒரு உடலில் வைத்துவிடுகின்றார். நிலையற்ற ஒன்றை நிலையானதாக்குகின்றார்.

இவ்வாறாக, இங்கே செயலாற்றுபவர் இறைவன்.

உருவகம் 3: தானாக வளரும் விதை, கடுகு விதை

இரண்டு உருவகங்களாக இவை தெரிந்தாலும் 'தானாக வளரும் கடுகு விதை' என இதைச் சுருக்கிவிடலாம். கடுகை விதைத்த விதைப்பவர் அதை அப்படியே மறந்துவிடுகின்றார். அது சிறியதாக இருந்தாலும், அதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அது வளர்கிறது - தளிர், கதிர், தானியம் என விரிகிறது. 'பயிர் விளைந்ததும் அரிவாளோடு புறப்படுகிறார் விதைப்பவர்.'

இங்கே விதைப்பவர் விதைப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. விதை தான் பெற்றிருக்கின்ற ஆற்றலால் அப்படியே வளர்கிறது. ஆற்றல் உள்ள விதையைக் கண்டுபிடித்து விதைத்தவர் அதன் உரிமையாளர். ஆக, உருவம் சிறியதாக இருந்தாலும், அது வித்திடப்பட்டதை  உரிமையாளரே மறந்து போனாலும், அல்லது அதன் இருப்பை 'சிறிது' என்று மற்றவர்கள் ஒதுக்கிவிட்டாலும் அது வளர்கிறது. தான் பெற்றிருக்கின்ற தன் ஆற்றலின் முழு வளர்ச்சியை அது உணர்ந்துகொள்கிறது.

இவ்வாறாக, கடந்த உருவகங்களில் இறைவனின் அருள்கரமும், இங்கே வலிமையற்றது தான் இயல்பாகவே பெற்றிருக்கின்ற உள்ளாற்றலும் செடியின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைகின்றன.

இவ்வாறாக, வலிமையற்றது வலிமை பெற இரண்டு காரணிகள் அவசியம்: (அ) இறைவன், (ஆ) விதை.

இந்த விதையை நான் என் வாழ்வின் வலுவின்மைக்கு ஒப்பிடுகிறேன் என வைத்துக்கொள்வோம். என் வாழ்வை நுனிக்கிளையாக ஊன்றி வைத்தவரும், இந்த உடல் என்னும் வாடகை வீட்டில் என்னைக் குடிவைத்தவரும் இறைவன். அதே நேரத்தில் நான் உருவில் சிறியதாக இருந்தாலும், என் உரு மற்றவர்களின் பார்வையில் சிறியதாக இருந்தாலும் வளர்ந்து கிளை பரப்பி, அடுத்தவரை என்னிடம் ஈர்த்துக்கொள்ளும் ஆற்றல் என்னகத்தே உண்டு.

இவ்வாறாக, வலிமையற்றது வலுப்பெறுதலும், உருவற்றது உருப்பெறுதலும் இறைவன் கையிலும், என் கையிலும் உள்ளது.

இதன் உள்பொருள் அல்லது வாழ்வியல் சவால்கள் மூன்று:

அ. நான் இறைவனின் கையில் என்னை சரணாகதி ஆக்க வேண்டும். அவர் என்னை எங்கே நட விரும்புகிறாரோ அங்கே அவர் என்னை நட என் கைகளை விரித்துக்கொடுக்க வேண்டும்.

ஆ. என் பின்புலம், என் சூழல், என் நட்பு வட்டம், என் அழைப்பு எனக்கு சில மேலோட்டமான அடையாளங்களைத் தந்தாலும் அவற்றையும் தாண்டி என்னை உந்தித் தள்ளுவது என்னுள் இருக்கும் ஆற்றலே. இந்த ஆற்றலை நான் அடையாளம் கண்டு அதை முழுமையாகச் செயல்படுத்துதல் அவசியம்.

இ. வளர்ச்சி என்றால் வலியும் அங்கே சேர்ந்தே இருக்கும். விதை தன் சொகுசான கூட்டை உடைக்க வேண்டும். வேர் மண்ணைக் கீறி உள்ளே செல்ல வேண்டும். வாடகைக்கு இருந்து விட்டு மாறிச் செல்லும்போது நிறைய சுமக்க வேண்டும். உடைதல், கீறுதல், சுமத்தல் அனைத்தும் வலி தருபவை. ஆனால், வலி மறைந்துவிடும். அந்த வலியினால் வந்த வளர்ச்சி நிலைத்து நிற்கும்.

வலுவற்ற, உருவற்ற என்னை, உங்களை அவர் கைகளில் சரணாகதி ஆக்குவோம். அவரின் கை பட்டவுடன் நம் ஆற்றல் நம்மை அறியாமலேயே நம்மிலிருந்து வெளிப்படும்.

அவரின் கரமும், என் ஆற்றலும் இணைந்தால் வலுவற்றவை வலிமை பெறும், உருவற்றவை உருவம் பெறும்.