Friday, 23 February 2018

தவக் கால 2-ஆம் ஞாயிறு

தவக் கால 2-ஆம் ஞாயிறு
தொநூ 22:1-2, 9-13, 15-18; உரோ 8:31ஆ-34; மாற் 9:2-10

கீழ்ப்படிதலே பெரிது !
குடந்தை ஆயர் அந்தோணிசாமி.

கடவுளின், பரமதந்தையின் அன்புக்குரியவர்களாக வாழ விரும்பினால் நாம் என்ன செய்யவேண்டும்? என்பதற்கு இன்றைய வாசகங்கள் பதில் தருகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் எப்படி இறைவனின் அன்புக்கு உரியவரானார் என்பதைப் பற்றி நாம் படிக்கின்றோம். அவர் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்ததால், இறைவனுடைய விருப்பத்தின்படி அவர் நடக்க முன்வந்ததால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவரானார்.

இன்றைய நற்செய்தியிலே இறைத் தந்தை, இயேசுவைக்குறித்து, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" (மாற் 9:7) என்கின்றார். இதற்குக் காரணம் இயேசு சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார் (பிலி 2:8). இயேசு, என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பது மே என் உணவு (யோவா 4:34) என்கின்றார். யோவா 5:30-இல் "என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகின்றேன்” என்கின்றார் இயேசு.

கடவுளுக்கு மிகவும் பிரியமானது கீழ்ப்படிதலே (1 சாமு 15:22). பரம தந்தை விரும்பிய கீழ்ப்படிதலை அவருக்குக் கொடுத்த இயேசு, அவரின் அன்புக்குரியவரானார்.

கீழ்ப்படிதலின் தாயாக விளங்குவது எது? நம்பிக்கைதான் கீழ்ப்படிதலின் தாய். நம்பிக்கை என்றால் என்ன? இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடிகளார் கேட்பதுபோல, "கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ?" (உரோ 8:31-32) என்று கேட்பதற்குப் பெயர்தான் நம்பிக்கை. பால் குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கியவள் தன் பிள்ளை மீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கமாட்டேன் (எசா 49:15) என்ற இறைவார்த்தைகளை நமது வாழ்வின் மையமாக்கிக்கொள்வதற்குப் பெயர்தான் நம்பிக்கை.

கடவுள்மீது நம்பிக்கை வைப்பவர்களை எந்தச் சக்தியாலும் எதிர்க்க முடியாது !

ஓர் அடர்ந்த காட்டின் வழியே ஒரு வழிப்போக்கன் சென்றுகொண்டிருந்தான். திடீரென அவன் முன்னே வந்த ஒரு பெரிய பூதம் அந்த மனிதனைப் பார்த்து, "உன்னை நான் ஒரு கேள்வி கேட்பேன். அதற்குச் சரியான பதிலைச் சொன்னால் உன்னை விட்டுவிடுகின்றேன்” என்றது. அதற்கு அந்த மனிதன், "சரி, கேள்" என்றான். அந்தப் பூதம் அவனைப் பார்த்து, இந்த உலகத்திலேயே மிகவும் பலம் வாய்ந்த மனிதன் யார்?” என்றது.

"கடவுள் மீது முழுநம்பிக்கை வைத்திருப்பவனே, இந்த உலகத்திலேயே பலம் வாய்ந்த மனிதன்” என்று பதில் வந்தது. அதைக் கேட்டதும், அந்தப் பூதம், “இவன் மீது கைவைத்தால், என் மீது கடவுள் கைவைத்துவிடுவார்” எனச் சொல்லி அந்த இடத்தைவிட்டு மறைந்துவிட்டது.

நம்பிக்கை என்பது கடையில் கிடைக்கும் பொருள் அல்ல; மாறாக, அது ஒரு தெய்வீக வாழ்வு (1 கொரி 12:9): அது கேட்பவர்களுக்குக் கொடுக்கப்படும் (லூக் 11:9-13).
நமது மனத்திலே நம்பிக்கை விதை முளைக்குமானால், அது செடியாக வளருமானால், அச்செடியில் கீழ்ப்படிதல் என்னும் மலர் மலர்வது உறுதி !
கீழ்ப்படிதல் இருக்கும் இடத்திலே இறை அன்பு
பாரங்களுக்குப் பாதமாக வரும்!
தோல்விகளுக்குத் தோளாக வரும்!
பாமரர்க்குப் பாரியாக வரும்!
இறை அன்பு - அது
நிழலை நிஜமாக்கும்!
சோதனையைச் சாதனையாக்கும்!
துயரத்தை மகிழ்ச்சியாக்கும்!

மேலும் அறிவோம் :
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் ; அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை (குறள் : 985).
பொருள் : செயல் திறமை என்று போற்றப்படுவது எல்லாருக்கும் பணிந்து நடக்கும் பண்பாகும்! அந்தப் பணிவே சால்புடைய பெருமக்களின் பகைவரையும் நண்பராக மாற்றும் ஆற்றல் வாய்ந்த படைக் கருவியும் ஆகும்!
உருமாற்றத் திருக்காட்சி- 

அருள்பணி லூர்துராஜ் -பாளை மறைமாவட்டம்
என்றோ எங்கோ படித்த புதுக்கவிதை இது!
''இன்றுகூட எல்லாரும்
அரிச்சந்திரன்களாக இருக்க முடியும்.
இறுதியில் இறைவன் வந்து
அருள் புரிவதாய் இருந்தால்!”

ஆபிரகாமின் விசுவாசம் அப்படி ஒரு நம்பிக்கையையா அடிப்படையாகக் கொண்டது? இறுதியில் இறைவன் தன் மகனைப் பரிகொடுக்க விடமாட்டார் என்ற எதிர்பார்ப்பா ஒரேப் மலையை நோக்கி அரை நடக்க வைத்தது?

இருட்டிலே நடந்தார் - எது நேர்ந்தாலும் சரி, இறை விருப்பப்படி எல்லாம் நடக்கட்டும் என்ற மனத் தெளிவோடு! நீதிமானை வாழ பாவக்கும் விசுவாச உறுதியோடு!

அவர் கண்முன்னே நம்பிக்கை ஒளி!

விசுவாசத்தால் மலைகளை அசைக்கலாம், பெயர்க்கலாம், அகற்றலாம், மலைபோல துன்பங்களையும் சோதனைகளையும் கடுகளவு நம்பிக்கை காணாமல் செய்து விடும்.

ஆபிரகாமைப் பொருத்தவரை - கண்ணால் காண முடியாததை யெல்லாம் காண வைக்கும் கண் விசுவாசம், காதால் கேட்க முடியாததை யெல்லாம் கேட்கச் செய்யும் காது விசுவாசம். கரத்தால் தொட்டு உணர முடியாததையெல்லாம் தீண்ட வைக்கும் கரம் விசுவாசம். இயலாது, நடக்க முடியாது என்று எண்ணுவதையெல்லாம் சாத்தியமாக்கும் ஆற்றல் விசுவாசம்.

பறவைகளால் பறக்க முடிகிறது. நம்மால் முடிவதில்லை. ஏன் தெரியுமா? பறவைகளுக்கு நிறைய விசுவாசம் உண்டு. விசுவாசம் என்பது இறக்கையாகும். To have faith is to have wings. விசுவாசமுள்ள மனிதனுக்கு விடிவதெல்லாம் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளில்! அவன் விழித்து எழுவதெல்லாம் புத்துணர்வு கலந்த எதிர்பார்ப்புக்களில்!

வானத்து விண்மீன்கள் போல உன் இனம் பலுகும் பெருகும் என்பது வாக்குறுதி. ஆனால் இருக்கும் ஒரே மகனையும் எனக்குப் பலிகொடு என்பது எதார்த்தம். இது எப்படி?

கடவுள் என்ன நரபலி கேட்கும் பயங்கரப் பேர் வழியா? ஆபிரகாம் வாழ்ந்த காலத்தில் பல சமயங்களிலும் தங்கள் தெய்வங்களுக்கு நரபலி கொடுக்கும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் இறைவன் ஆபிரகாமின் நம்பிக்கையைச் சோதிக்க அவர் மகனைப் பலியிட வேண்டும் என்று கேட்ட போது அது அவருக்குப் பெரும் சோதனையாகத் தோன்றியதே தவிர பெரிய தவறாகத் தோன்றவில்லை.

முடிவில் கதையின் கருவும் நிறைவும் முற்றிலும் வேறுபட்டவை. அதன் உச்சம் ஈசாக் பலியாகவில்லை என்பது தானே! நெஞ்சுருக்கும் அந்த நிகழ்வின் நோக்கம் என்ன?

ஆபிரகாம் எவ்வளவு உண்மையும் நம்பிக்கையும் உள்ளவர், எவ்வளவு பிரமாணிக்கமானவர் என்பதை அறிந்து கொள்ள அல்ல; (முக்காலமும் உணரும் கடவுளுக்கு அது முன்கூட்டியே தெரியும்) மாறாகக் கடவுள் எவ்வளவு பிரமாணிக்கம் உள்ளவர், வார்த்தை தவறாதவர் என்பதை ஆபிரகாமுக்கு உணர்த்தவே இந்தச் சோதனை. ஒவ்வொரு சோதனையிலும் சோதிக்கப்படுவது மனிதன் மட்டுமல்ல, கடவுளும் தான்!

ஈசாக்கை எரிபலியாக்கும் நிகழ்வு தந்தையான கடவுளின் பேரன்புப் பிரதிபலிப்பு. இறைமகன் இயேசு சிலுவையில் பலியான மீட்பு வரலாற்று நிகழ்ச்சிக்கு ஒரு முன்னோட்டம். அதனால்தான் "தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள்" (உரோமை 8:32) ஆபிரகாமின் பலியை மறுசிந்தனை செய்தார். மாற்றுப் பலிப்பொருளுக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் தன்மகன் இயேசு கல்வாரியில் பலியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கு மாற்றுப் பலிப்பொருள் பற்றி சிந்திக்க விரும்பவில்லை. சாவிலும் கூடத் தன் உடன்படிக்கையை முறிக்காத அன்பு இது. இப்படிப்பட்ட அன்பு எப்படி சாக முடியும்? அதனால்தான் அது உயிர்த்தெழுந்தது. அன்பே நிரந்தரம் என்பதற்குச் சாட்சியாக நம் நடுவே அது உயிர் வாழ்கிறது.

மீட்புப் பயணம் சிலுவை வழியே - இறைமகன் இயேசுவுக்கு மட்டுமல்ல, அவரது சீடர்களுக்கும் கூட.
சிலுவை இயேசுவுக்குச் சுமையாகக் கனத்தது;
சீடர்களுக்கு இடறலாக இருந்தது!
இயேசு தபோர் மலையேற... இரு நோக்கங்கள்:

தன் சிலுவையைச் சுமக்க இறையாற்றல் தேடி... தன் தந்தையைப் பார்த்துச் செபிப்பதற்காக. விண்ணரசுக்குக் குறுக்கு வழியில்லை. குறுகிய வழிதான் உண்டு. குறுக்கு வழி சிலுவையைத் தவிர்ப்பது; குறுகிய வழி சிலுவையைச் சந்திப்பது! சவாலாக ஏற்பது! துன்பத்தைக் குடித்துச் சமாளி - இது பாமரன் நிலை! துன்பத்தைச் சிரித்துச் சமாளி! (“இடுக்கண் வருங்கால் நகுக”) - இது வள்ளுவர் தத்துவம் (திருக்குறள் 621) துன்பத்தைச் செபித்துச் சமாளி - இது கிறிஸ்தவ வாழ்க்கை முறை.
சிலுவையின் இடறலை நீக்கித் தன் சீடர்களை நம்பிக்கை வாழ்வில் வலுப்படுத்த... அனுபவிக்கப் போகும் எதிர்கால மகிமையை அவர்களுக்கு உணர்த்தி அவர்களை உறுதிப்படுத்த. சிலுவை யூதர்களுக்கு இடறல். கிரேக்கர்களுக்கு மடமை. அழைக்கப்பட்ட நமக்கோ கடவுளின் ஞானமல்லவா! தெய்வ வல்லமையல்லவா! இறைவனின் பேரன்பு அல்லவா! (1 கொரி.1:2329). சிலுவையின்றி மகிமை ஏது? தியாகமின்றிச் செழுமை ஏது? "அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும். அப்போது தான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்". (ரோமை 8:17).


மறையுரைமொட்டுக்கள்
அருள்பணி இருதயராஜ்


சிறுவன் ஒருவன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்போது, பெரியவர் ஒருவர் அவனிடம், 'பள்ளிக்குச் செல்ல உனக்குப் பிடிக்கிறதா?' என்று கேட்டதற்கு, அச்சிறுவன், "பள்ளிக்குச் செல்லவும், பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பவும் பிடித்திருக்கிறது. ஆனால், இந்த இரண்டிற்கும் இடையே நடப்பதுதான் {வகுப்புகள்) எனக்குப் பிடிக்கவில்லை" என்றான்.

நம்மில் பலருக்குக் கிறிஸ்துவின் பிறப்பும் உயிர்ப்பும் பிடித்திருக்கிறது, ஆனால், இந்த இரண்டிற்கும் இடையே நடந்த அவருடைய பாடுகளும் சிலுவை மரணமும் பிடிக்கவில்லை. கிறிஸ்து முதன் முறையாகத் தமது பாடுகளை முன்னறிவித்தபோது, அவருடைய சீடர்களுக்கு அது பிடிக்கவுமில்லை, விளங்கவுமில்லை. எனவேதான் பேதுரு கிறிஸ்துவைத் தனியாக அழைத்து அவரைக் கடித்து கொன்டார் (மாற் 8:32). மெசியாவின் சிலுவையும் சிலுவை மரணமும் சீடர்களுக்கு மாபெரும் இடறவாக இருந்தன.

எனவே, சிலுவையின் இடறலைச் சீடர்களுடைய மனதிலிருந்து அகற்ற, இயேசு பேதுரு, யாக்கோப்பு, யோவான் ஆகிய மூவருடன் ஒக் உயர்ந்த மலைக்குச் சென்று அவர்கள் முன்பாகத் தோற்றம் மாறி, தமது தெய்வீக மாட்சிமையை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். இந்த மூன்று சீடர்கள் தான் இயேசு கெத்சமனித்தோட்டத்தில் இரத்த வேர்வை வேர்க்கும்போதும் இயேசுவுடன் இருக்கப் போகின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்ந்த மலையும் ஒளிரும் மேகமும் இறைப்பிரசன்னத்தின் வெளிப்பாடாகும். இயேசுவுடன் மோசேயும் எலியாவும் தோன்றுகின்றனர், பழைய உடன்படிக்கையில் சட்டமும் இறைவாக்குகளும் முக்கியத்துவம் பெறுகின்றன, சட்டத்தின் பிரதிநிதியாக மோசேவும் இறைவாக்கினார்களின் பிரதிநிதியாக எலியாவும் தோன்றுகின்றனர். இவ்வாறு சட்டமும் இறைவாக்கும் இயேசுதான் மெசியா என்று சான்று பகர்கின்றன. அத்துடன் தந்தையாகிய கடவுளும் இயேசு தம் அன்பார்ந்த மகன் எனச் சான்று பகர்கிறார். உயர்ந்த மலையில் நிகழ்ந்தது ஓர் இறைத் தோற்றம் அல்லது திருக்காட்சியாகும் (Theophathy).

மோசேயும் எலியாவும் இயேசுவுடன் அவர் எருசலேமில் படவேண்டிய அவருடைய பாடுகளைப் பற்றிச் பேசினர் என லூக்கா குறிப்பிடுகின்றார் (லூக் 9:31). மெசியா பாடுபட்டே மாட்சிமை அடைய வேண்டும் (லூக் 24:26) என்ற இறையியல் உண்மை அப்போது வெளிப்படுத்தப்படுகிறது,

தவக்காலத்தில் சிலுவையின் மறைபொருளை நன்குணரவேண்டும். இறைவனுடைய மீட்புத் திட்டம் இயேசுவின் சிலுவை வழியாகவே நிறைவேறுகின்றது. இயேசுவைப் பின்பற்ற விரும்புவோர் சிலுவை சுமந்தே அவரைப் பின்பற்ற வேண்டும். இயேசுவின் சீடர்களுக்குச் சிலுவை விருப்பப்பாடமில்லை, கட்டாயப்பாடமாகும். ஒருவர் தம்மை இழந்தால்தான் வாழ்வு பெறமுடியும், தம் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புபவர் அதை இழந்துவிடுவார் (மத் 16:24-25).
இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் தமது ஒரே மகன் ஈசாக்கை இழக்க முன்வந்தார். எனவேதான் அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார் இயற்கையில் எந்தவொரு பொருளும் தனது பழைய உருவத்தை இழந்த பின்னர்தான் புதிய உருவைப் பெற இயலும். கோதுமை மணி முளைப்பதற்குமுன் அது மண்ணில் விழுந்து மடிய வேண்டும். சந்தனக் கட்டை மணம் கொடுப்பதற்கு முன் அது அரைக்கப்படவேண்டும், கரும்பு வெல்லமாக மாறுவதற்கு முன், அது பிழியப்படவேண்டும். மெழுகுதிரி ஒளி தருவதற்கு முன் அது கரைந்து உருகவேண்டும், பால் சுவை தருவதற்குமுன் அது காய்ச்சப்பட வேண்டும், தங்கம் ஆபரணமாவதற்குமுன் அது நெருப்பில் சுடப்பட வேண்டும். பெண் பிள்ளைப்பேறு அடைவதற்குமுன் அவர் பேறுகால வேதனையுற வேண்டும். அவ்வாறே நாம் கிறிஸ்துவில் புதுப்படைப்பாக மாறுவதற்குமுன், நமது ஆனவமும் சுயநலமும் இறத்து புதைக்கப்பட வேண்டும்.

அரச பக்திமிக்க ஓர் இளைஞன் ஒவ்வொரு நாளும் தனது உடலிலிருந்து பல துளி இரத்தமெடுத்து, அதைக் கொண்டு அரசருடைய உருவப்படத்தை வரைந்து, அதை அரசருடைய பிறந்த நாளன்று பிறந்தநாள் பரிசாக அவருக்குக் கொடுத்தான். நாமும் அவ்வாறே இரத்தம் சிந்தி, அதாவது தியாகங்கள் செய்து தியாக இரத்தத்தைக் கொண்டு இயேசுவின் உருவத்தை வரைய வேண்டும், அதாவது இயேசுவின் சாவுக்கு ஒத்தவர்களாக உருமாற்றமடைய வேண்டும். " இப்போது நாம் அனைவரும் , ஆண்டவரின் மாட்சிமையைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சிமை பெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம்." ( 2கொரி 3:18).

காக்கா என்றும் கறுப்பாக இருப்பதற்குக் காரணம் என்ன? அது இன்னும் உஜாலாவுக்கு மாறவில்லையாம்! உஜாலா சொட்டு நீலம் ஆடைகளை வெண்மையாக்குகிறது, இயேசு உருமாற்றமடைந்தபோது, அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்தச் சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெண்மையாக ஓளிவீசின (மாற் 8:4),

நாம் திருமுழுக்குப் பெற்றபோது நமது மேன்மையின் அடையாளமாகத் திருச்சபை நமக்கு ஒரு வெண்ணிற ஆடையைக் கொடுத்து அதை மாசு படாமல் விண்ணக வாழ்வுக்குக் கொண்டு, போகும்படி பணித்தது, மீட்படைந்தோர் விண்ணகத்தில் வெண்ணிறஆடை அணிந்திருப்பர். (திவெ 7:9), இவர்கள் தங்கள் ஆடைகளைச் செம்மறியின் இரத்தத்தில் தோய்ந்து வென்மையாக்கிக் கொண்டனர் (திவெ 7:14), இயேசுவின் இரத்தம் நம்மை எல்லாவிதப் பாவங்களிலிருந்தும் விடுவித்து நம்மைத் தூய்மையாக்க வல்லது. இத்திருப்பலியில் நாம் இயேசுவின் திருவுடலை உட்கொள்ளும் போதெல்லாம் திடமடைகிறோம், அவரது இரத்தத்தைப் பருகும்போதெல்லாம் கழுவப்படுகிறோம். இதன் விளைவாக நாம் இயேசுவின் சாயலுக்கு ஒத்தவர்களாய் உருமாறவேண்டும். ஒவ்வொரு நாளும், நமது வாழ்க்கைச் சூழலில், தன்னலம் மறந்து பிறருக்காக வாழ்ந்து நம்மையே நாம் இழக்கும்போது நாம் இயேசுவாக மாறுகிறோம். அந்நிலையில் வாழ்வது நாமல்ல, கிறிஸ்துவே நம்மில் வாழ்கிறார் (கலா 2:20).
நாம் சாவுக்குப் பயப்படத் தேவையில்லை, ஏனெனில், நாம் சாகமாட்டோம், வேற்றுருப் பெறுவோம், அழிவிற்குரிய நம் உடல் அழியாமையையும், சாவுக்குரிய நம் உடல் சாகாமையையும் அணிந்து கொள்ளும் (1 கொரி 15:51-54), இயேசுவின் இரண்டாம் வருகையின்போது, படைப்பனைத்தும் புத்துயிர் பெறும்போது, நாமும் அவரைப்போலவே இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோலவே அவரைக் காண்போம் (1 யோவா 3:2).


சுற்றுமுற்றும் பார்த்தார்கள்!
அருள்பண் ஏசு கருணாநிதி - மதுரை

இன்றைய முதல் வாசகத்தில் மோரியா நிலப் பகுதியின் மலையில் நடக்கும் ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடும் நிகழ்வும், நற்செய்தி வாசகத்தில் எருசலேமிற்கு அருகில் உள்ள ஒரு மலையில் நெருங்கிய அன்புச் சீடர்கள் முன்னிலையில் நடக்கும் இயேசுவின் உருமாற்ற நிகழ்வும் நமக்கு வாசகப் பகுதிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இன்றைய நம் சிந்தனைக்கு இரண்டு பேரை எடுத்துக்கொள்வோம்: (அ) ஆபிரகாம், (ஆ) சீடர்கள்: பேதுரு, யாக்கோபு, யோவான். முதலாம் நபர் தனிநபராகவும், இரண்டாம் நபர் ஒரு குழுவாகவும் இருக்கின்றார். இவர்களுக்கு குறிப்பிட்ட இந்த நாளில் நடந்தேறிய நிகழ்வின்போதும், நிகழ்விற்குப் பின்னும் உள்ள கடவுள் அனுபவம் நம் சிந்தனையின் மையப்பொருளாக இருக்கட்டும்.

'கடவுள் அனுபவம்'

'அந்த அனுபவம்தான் நான்' என்று கடவுள் சொல்வதாக வாழ்வின் அனைத்து அனுபவங்களிலும் கடவுள் இருப்பதாக பதிவு செய்கின்றார் கவிப்பேரரசு கண்ணதாசன்.

இத்தவக்காலத்தில் நாம் தொடங்கியுள்ள தவமுயற்சிகளின் இறுதி இலக்காக இருப்பது கடவுள் அனுபவமே. நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் கடவுள் அனுபவம் பெற ஏங்கிக்கொண்டிருக்கின்றோம். ஆலயத்திற்குச் செல்வதும், செபிப்பதும், நோன்பு இருப்பதும், பிறரன்புச் செயல்கள் செய்வதும், நம் வேலையை இன்னும் அதிக பொறுப்புடன் செய்வதும் என எண்ணற்ற நிலைகளில் கடவுள் அனுபவம் பெற்றுக்கொண்டிருக்கின்றோம். இவைகள்வழியாக கடவுள் அனுபவம் கிடைக்குமா? அல்லது இவைகள் வழியாக மட்டுமே கடவுள் அனுபவம் கிடைக்குமா? என்றும் ஏங்கிக்கொண்டிருக்கின்றோம்.

கடவுள் அனுபவம் என்பது கடவுளின் வெளிப்பாடு வழியாகவும் கிடைக்கலாம் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன. இந்த வெளிப்பாடு எங்கே நிகழ்கின்றன:

1. 'ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார்'

'கடவுள் ஆபிரகாமை சோதித்தார்' என்று இன்றைய முதல் வாசகம் தொடங்குகின்றது. கடவுள் மனதரைச் சோதிக்கும் நிகழ்வுகள் எல்லாமே கடவுளின் வெளிப்பாட்டு நிகழ்வுகளாகவே அமைகின்றன. அப்படித்தான் இங்கும் நடக்கின்றது. 'உன் மகனை, நீ அன்புகூறும் ஒரே மகன் ஈசாக்கை அழைத்துக்கொண்டு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின்மேல் எரிபலியாக அவனை நீ பலியிட வேண்டும்!' என்று கடவுள் ஆபிரகாமிடம் சொல்கின்றார்.

'நீ அன்பு கூறும் ஒரே மகன்' என்ற சொல்லாடலில்தான் கடவுளின் சோதனை அடங்கியுள்ளது: 'உனக்கு எது பெரிது? நீ என்மேல் வைக்கும் அன்பா? அல்லது ஈசாக்கின்மேல் வைக்கும் அன்பா?' தான் கடவுள்மேல் வைத்துள்ள அன்பே என்று கடவுளைக் கட்டிக்கொள்கின்றார் ஆபிரகாம். அவர் எடுக்கும் அந்த முடிவே அவரின் தொடர் செயலாக மாறுகின்றது. குழந்தைகளை எரிபலியாகக் கொடுக்கும் சமய வழக்கம் கீழைத்தேய மற்றும் மெசபதோமிய நாடுகளில் நிலவியுள்ளது என்பதற்கு தொல்லியல் சான்றுகள் நிறைய உள்ளன. ஆக, இந்த நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆபிரகாம் மலைக்கு தன் மகனை அழைத்துச் செல்கின்றார். தன் மகனையே விறகுகளைச் சுமக்க வைக்கின்றார். கட்டைகளின் மேல் கிடத்துகின்றார். வெட்டுவதற்கு கையை நீட்டி கத்தியை எடுக்கின்றார். 'எரிபலியாகத்தானே கேட்டார் கடவுள். அப்புறம் ஏன் ஆபிரகாம் வாளை எடுத்து வெட்டினார்?' என்ற கேள்வி உங்களுக்கும், எனக்கும் எழலாம். வெட்டியபின்தான் பலியை எரிப்பது என்பது எரிபலியின் ஒரு கூறு (காண். 1 அரசர்கள் 18:33, 38). கையை உயர்த்தும்போதுதான் அந்த அதிசயம் நடக்கிறது: 'பையன்மேல் கையை வைக்காதே. அவனுக்கு எதுவும் செய்யாதே. உன் ஒரே மகனையும் நீ பலியிட தயங்கவில்லை என்பதிலிருந்து கடவுளுக்கு நீ அஞ்சுபவன் என இப்போது நான் அறிந்துகொண்டேன்' என்று கடவுள் பலியைத் தடுக்கின்றார். அதிசயம் இதுவல்ல. இதற்குப் பின் வருவதுதான்: 'ஆபிரகாம் கண்களை உயர்த்திப் பார்த்தார். முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் காண்கின்றார். தன் மகனுக்குப் பதிலாக அதை பலியிடுகின்றார்.'

கொம்பு மாட்டிக்கொண்டு கிடந்த இந்த ஆடு - இதை ஆபிரகாம் கண்டுகொள்வதுதான் கடவுள் அனுபவம். 'கண்களை உயர்த்திப்பார்க்கும் ஆபிரகாம்' அதைக் கண்டுகொள்கின்றார். அப்படி என்றால் இவ்வளவு நேரம் இவர் அதைப் பார்க்கவில்லையா? இல்லை.

கொம்பு மாட்டிக்கொண்டு கிடக்கும் ஆடு கத்திக்கொண்டே இருக்கும். மலையின்மேல் ஆபிரகாம் மற்றும் ஈசாக்கைத் தவிர வேறு யாருமில்லை. அங்கு நிலவிய மௌனத்தில் கண்டிப்பாக ஆபிரகாமின் காதில் ஆட்டுக்குட்டியின் கதறல் குரல் விழுந்திருக்கும். ஆனால், அந்தக் குரல் அவருடைய சோகத்தை ஊடுருவ முடியவில்லை. நாமும் ரொம்ப சோகமாக அமர்ந்திருக்கும்போது அருகில் கிடக்கும் செல்ஃபோன் அழைப்பு சத்தம்கூட நம் காதுகளில் விழுவதில்லை. இல்லையா?

ஆபிரகாமின் சோகம் கடவுளின் வார்த்தையைக் கேட்டவுடன் மறைகிறது. நம் வாழ்வில் இயல்பாக எழும் ஓர் உணர்வு சோகம். இந்த சோகம் நாம் எதையாவது இழந்தால் அல்லது இழந்துவிடுவோமோ என்ற பயந்தால் வந்து நம்மைத் தொற்றிக்கொள்கிறது. தன் மகன் தன்னைவிட்டுப் பிரியப்போகிற சோகத்தில் குனிந்துகொண்டே நடந்த ஆபிரகாமின் கண்களுக்கு ஆடு தெரியவில்லை. சோகம் மறைந்தவுடன் மலையில் இருக்கும் அனைத்தும் தெரிகிறது. ஆக, ஆபிரகாம் மலையின் இந்தப் பக்கத்தில் தன் மகனை ஏற்றிக்கொண்டு வரும்போது, கடவுள் மலைக்கு அந்தப் பக்கத்தில் ஓர் ஆட்டை ஏற்றிக்கொண்டுவருகின்றார். இதுதான் வாழ்வின் ஆன்மீகம். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் பாருங்களேன். நாம் பாதியைத்தான் செய்கிறோம். மற்ற பாதியை கடவுள் செய்கிறார்.

நான் அரிசி வாங்க கடைக்குச் செல்கிறேன். கடவுள் யார் வழியாகவோ அந்த அரிசியை விளையச் செய்து அங்கே கொண்டுவந்திருக்கின்றார்.

நான் பேருந்தில் ஏறச் செல்கிறேன். கடவுள் யார் வழியாகவோ அந்தப் பேருந்தை இயக்கி அந்த இடத்திற்குக் கொண்டுவருகின்றார்.

நான் தேவை என்று தேடுகிறேன். 'இதுவா என்று பார்!' என்று கடவுள் யார் வழியாகவோ என் தேவையை நிறைவு செய்கின்றார்.

ஆனால், நான் அரிசி வாங்க வேண்டும், பேருந்தில் ஏற வேண்டும், தேவை நிறைய இருக்கிறது என்று மலையின் இந்தப் பக்கத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கின்றேன். ஆனால், மலைக்கு அந்தப் பக்கம் நடக்கும் நிகழ்வுகளைக் கண்களை உயர்த்திப்பார்க்க மறந்துவிடுகின்றேன்.

ஆக, கடவுள் அனுபவம் என்பது கண்களை உயர்த்திப் பார்த்து கொம்பு மாட்டியிருக்கும் ஆட்டை அடையாளம் கண்டுகொள்வது.

கடவுள் அனுபவம் பெற்ற ஆபிரகாம் உடனடியாக அந்த ஆட்டைப் பலியிடுகின்றார்.

இதுதான் கடவுள் அனுபவத்தின் இரண்டாம் நிலை.

'மகனும் கிடைத்தான். வந்ததற்கு ஒரு ஆடும் கிடைத்தது' என்று ஆபிரகாம் ஆட்டையும், மகனையும் கூட்டிக்கொண்டு கீழே இறங்கவில்லை. வாழ்வின் அடுத்த முடிவை எடுக்கின்றார். 'ஆடா?' 'மகனா?' என்று கேட்டு, மேலானதைப் பெற கீழானதை இழக்க வேண்டும் என்று தான் கண்ட ஆட்டைப் பலியிடத் துணிகின்றார் ஆபிரகாம்.

இவ்வாறாக, முதல் வாசகத்தில் கடவுள் அனுபவம் என்பது 'கண்களை உயர்த்திப் பார்ப்பதிலும்,' 'தான் கண்ட முக்கியமில்லாத ஒன்றை, தான் கருதும் முக்கியமான ஒன்றிற்காக தியாகம் செய்வதும்' ஆகும்.

2. 'அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள்'

உருமாற்ற நிகழ்வில் வரும் சீடர்கள் என்னுள் எப்போதும் ஒரு பாவ அல்லது பரிதாப உணர்வையே தூண்டுகின்றனர். திடீர்னு உங்களையும் எங்களையும் ஒருத்தரு மலைக்குக் கூட்டிப்போய் திடீரென அவர் ஒரு பெரிய அமெரிக்க அதிபர் போல மாறி, அவருக்கு அருகில் பழைய அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர்கள் நின்றிருந்தால் எப்படி இருக்கும்?

'யார்ரா இவரு?' 'இவரா அமெரிக்க அதிபர்?' 'அமெரிக்க அதிபரை நாம ஏன் பார்க்கணும்?' இப்படி நிறைய கேள்விகள் நம்முள் எழும்.

இயேசுவின் உருமாற்ற நிகழ்வை ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் பதிவு செய்ய, இதை நேரில் கண்ட யோவான் பதிவு செய்யாமல் விடுவது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

இயேசுவின் உருமாற்றம் மூன்று அடையாளங்களில் நடந்தேறுகிறது: (அ) யாரும் வெளுக்க முடியாத வெள்ளை வெளேரென ஒளி வீசும் ஆடைகள், (ஆ) எலியா மற்றும் மோசேயின் உரையாடல், (இ) மேகத்தினின்று குரல். இந்த மூன்றும் இயேசுவின் உருமாற்றத்தை அல்லது வெளிப்பாட்டை அடையாளப்படுத்துகின்றன. இந்த அடையாளங்களை சீடர்கள்தாம் விரைவில் புரிந்துகொள்ள வேண்டும். 'ஒளி வீசும் ஆடை' சீயோன் மலையை நிரப்பும் யாவே இறைவனின் பிரசன்னம் என்றும், எலியா மற்றும் மோசே அனைத்து இறைவாக்கு மற்றும் சட்டங்களின் திலகம் என்றும், அவற்றை நிறைவு செய்ய வந்திருப்பவர் இயேசு என்றும், தந்தையின் குரல் இயேசுவின் அப்பா அனுபவத்தின் முன்னோடி என்றும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அவர்களின் புரிதல்கள் வேறு மாதிரியாக இருக்கின்றன: (அ) சீமோன் பேதுரு முந்திக்கொண்டு, 'நாம் இங்கேயே இருப்பது நல்லது' என்கிறார். (ஆ) 'இறந்து உயிர்த்தெழுதல்' என்றால் என்ன? என்று பேசிக்கொள்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரையில் சீடர்களின் கடவுள் அனுபவம் வெளிச்சத்திலும், புதிய நபர்களின் வருகையிலும், தந்தையின் குரலிலும் இல்லை. பின் எதில் இருக்கிறது?

'அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தபோது தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை'

இதுதான் அவர்களுக்குக் கிடைத்த கடவுளின் வெளிப்பாடு.

வெளிச்சமும், புது நபர்களும், தந்தையும் மறைத்து இயேசு தனியாக நிற்பவராக வெளிப்படுத்தப்படுகின்றார். ஆபிரகாம் எப்படி கொம்பு மாட்டிக்கொண்டிருந்த ஆட்டைக் கண்டாரோ அப்படியே அவர்கள் இயேசுவையும் கண்டுகொள்கின்றனர். அவர்கள் கண்முன் இருந்தவை மறைந்துபோகின்றன. மற்றவைகள் மறைந்துபோன பின் தோன்றும் 'ப்ளைன்' இயேசுதான் அவர்களின் அனுபவம்.

இங்கே சீடர்களின் எண்ணம், ஏக்கம் அனைத்தும் ஒன்றாக இருக்கிறது: 'இயேசுவோடு நாம் தங்க வேண்டும். அல்லது இயேசு நம்மோடு தங்க வேண்டும்.' 'இங்கே கூடாரம் அமைப்போம்' என்று பேதுரு சொல்லும்போது தான் பெற்ற கடவுள் அனுபவத்தை அவர் அப்படியே உறைபனியாக்க நினைக்கின்றார். ஆனால், இயேசு அவரின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை.

'இங்கேயே இருப்பது நல்லது. மூன்று கூடாரங்கள் அமைப்போம்' என்று சொன்னவர்தான் மூன்றுமுறை இயேசுவை மறுதலிக்கின்றார். சில நேரங்களில் கடவுள் அனுபவத்தை நாம் அதிகமான வெளிச்சத்திலும், அந்த வெளிச்சம் நடத்தும் அற்புதங்களிலும் காண நினைக்கின்றோம். ஆனால் இது எல்லாவற்றையும் விட தனிமையில்தான் இறைவன் தெரிகின்றார். முதல் வாசகத்தில் சோகத்தில் தன் கடவுள் அனுபவத்தை இழந்த ஆபிரகாம் போல, நற்செய்தி வாசகத்தில் தனிமையில் இறைவனனின் அனுபவம் பெறுகின்றனர்.

இந்த இரண்டும் நமக்கு உந்துசக்தியும், ஊக்கமும் தருகின்றன. இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் அடிகளாரும், 'கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக யார் வாதாட முடியும்?' என்று கேட்கின்றார்.

இவ்வாறாக, கடவுள் அனுபவம் நம்மை அவரோடு மட்டுமல்லாமல் ஒருவர் மற்றவரோடும் ஒன்றிணைக்கச் செய்கிறது.

இன்று நாம் நம் கடவுளை எப்படி தேடுவோம்?

அ. ஆபிரகாம் போல கண்கள் உயர்த்தி

ஆ. சீடர்கள்போல சுற்றுமுற்றும்

'மேலே உயர்த்துவதும்,' 'சுற்றுமுற்றும் பார்ப்பதும்' சிலுவையின் இரண்டு மரத்தண்டுகள் போல இருக்கின்றன. மேல் நோக்கி இருக்கும் மரத்துண்டு நாம் அவரை நோக்கி உயர்த்துவதையும் (இறையன்பு), சுற்றுமற்றும் பார்ப்பது ஒருவர் மற்றவரை நோக்கி கரம் நீட்டுவதையும் (பிறரன்பு) குறைக்கிறது.

மேலே பார்க்க நமக்குத் தடையாக இருப்பது சோகம்.

சுற்றுமுற்றும் பார்க்க நமக்குத் தடையாக இருப்பது அச்சம் மற்றும் அவசரத்தனம்.

இவ்விரண்டும் களைதலே தவக்காலத்தின் இரண்டாம் வாரத்தின் நம் செயல்களாக இருக்கட்டும்!

இயேசுவின் உருமாற்றம் நிகழ்ந்த அதே நிகழ்வில் சீடர்கள் உளமாற்றம் அடைகின்றனர். ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடும் நிகழ்வில் அவர் தன்னையே கடவுளுக்கு உகந்த பலிப்பொருளாக மாற்றுகின்றார். ஆக, கடவுள் அனுபவம் நாம் பெறும் உளமாற்றத்திலும், நாம் பலிப்பொருளாக மாறுவதிலும் இன்னும் சிறப்படைகிறது.

இயேசுவின் ஆடை கறுப்பாக மாறினாலும், சிவப்பாக மாறினாலும், அல்லது மோசேக்குப் பதிலாக யோசுவாவும், எலியாவுக்குப் பதிலாக எலிசாவும் வந்தாலும், கடவுளின் குரல் ஆண்பிள்ளைக் குரலாகவோ, பெண்பிள்ளைக் குரலாகவோ மாறினாலும் இயேசுவின் உருமாற்றம் நிகழும்.

இயேசுவின் உருமாற்றம் இயேசுவுக்கு அல்ல. மாறாக, சீடர்களுக்கு.

ஆபிரகாமின் பலி கடவுளுக்கு அல்ல. மாறாக, ஆபிரகாமுக்கு.

நம் உருவத்தை மாற்றிக்கொள்வதில் காட்டும் அக்கறையை நம் உள்ளத்தை நோக்கி சற்றே திருப்புவோம். அங்கே ஓர் ஆடு கொம்பு மாட்டி நிற்கும். அங்கே ஒரு இயேசு தனியே நின்றுகொண்டிருப்பார்.


Saturday, 17 February 2018

தவக்காலம் முதல் ஞாயிறு

தவக்காலம் முதல் ஞாயிறு

தொநூ 9:8-15;1 பேது 3:18-22; மாற் 1:12-15

மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்
குடந்தை ஆயர் அந்தோணிசாமி

பாவம் என்றால் என்ன ? இயேசு சோதிக்கப்பட்டதாக புனித மாற்கு இன்றைய நற்செய்தியிலே கூறுகின்றார். ஆம். சாத்தான் இயேசுவைச் சோதித்தான். புனித மத்தேயு எழுதிய நற்செய்தியின்படி இயேசுவை மூன்றுமுறை சாத்தான் சோதித்தான். முதல் சோதனை வெளிப்புலன்களுக்கு, குறிப்பாக வாய்க்கு எதிரான சோதனை (மத் 4:3). இரண்டாவது சோதனை உள்புலன்களுக்கு, குறிப்பாக அறிவுக்கு எதிரான சோதனை (மத் 4:6). மூன்றாவது சோதனை இறைநம்பிக்கைக்கு எதிரான சோதனை (மத் 4:9).

| “அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது" என்று புனித லூக்கா கூறுகின்றார் (லூக் 4:13). அலகை ஏற்ற காலத்திற்காகக் காத்திருந்தது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் காத்திருந்தது. இயேசு பாடுபடப்போவதற்கு முன்னால் சிலுவையைச் சுமக்கப்போவதற்கு முன்னால் அவரை அலகை சோதித்தது. இயேசு, தான் துன்பப்பட வேண்டும் என்பதைத் தமது சீடர்களிடம் கூறியிருந்தார் (லூக் 9:22, 17:25, 24:26, 24:46). இயேசு துன்பப்படக்கூடாது, கொலை செய்யப்படக்கூடாது என்று புனித பேதுரு கூறியபோது, இயேசு அவரைப் பார்த்து, "என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கின்றாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகின்றாய்" (மத் 16:23) என்றார். ஆனால் அவரோ லூக் 22:42-இல், "தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும் ..." என்று கூறுகின்றார். ஆம். சாத்தான் இயேசுவை நான்கு முறை சோதித்தான்.


சாத்தான் யார்?


பாவத்தின் மறு உருவம்தான் சாத்தான். சாத்தான் எங்கு இருக்கின்றானோ, அங்கே பாவமிருக்கும்; எங்கே பாவமிருக்கின்றதோ அங்கே சாத்தான் இருப்பான்.


பாவம் என்றால் என்ன? இறையாட்சிக்கு எதிராகச் செயல்படுவதே பாவம். சாத்தானின் வேலை, இறையாட்சிக்கு எதிராகச் செயல்பட நம்மைத் தூண்டுவதாகும். இறையாட்சி என்றால் என்ன? இறையாட்சி என்பது நாம் உண்பதையும், குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவியார் அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய இறையாட்சி மனப்பான்மையோடு கிறிஸ்துவுக்குப் பணிபுரிவோர் கடவுளுக்கு உகந்தோராயும், மக்களின் மதிப்புக்கு உரியோராயும் இருப்பர் என்று புனித பவுலடிகளார் கூறுகின்றார் (உரோ 14:17-18).


இன்றும் நாம் சாத்தானால் சோதிக்கப்படுகின்றோம்.
பாவச் சோதனைகளிலிருந்து விடுதலை பெற வழி ஏதும் உண்டோ? உண்டு என்கின்றார் இயேசு.


இதோ இயேசு நம்மோடு பேசுகின்றார் : நோவா காலத்துத் தண்ணீர் (முதல் வாசகம்) மக்களை அழித்தது. நான் தரும் தண்ணீரோ உங்களை வாழ வைக்கும் (இரண்டாம் வாசகம், யோவா 7:37-39). தூய ஆவியாரே நான் தரும் தண்ணீர். அவரால் உங்களை அருள்பொழிவு செய்துகொள்ளுங்கள்; அவரில் திருமுழுக்குப் பெற்றுக்கொள்ளுங்கள்.


நான் முதல் மூன்று சோதனைகளையும் வென்றது எப்படி? தூய ஆவியாரால் நான் பாலைநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டேன் (மாற் 1:12). அவர் எப்போதும் என்னோடு இருந்தார். அவரை எதிர்க்கும் சக்தி இந்த உலகத்தில் எந்த சாத்தானுக்கும் கிடையாது. நான்காவது சோதனையை விண்ணகத் தந்தை மீது நான் வைத்திருந்த அளவிடமுடியாத அன்பால் (கலா 5:22-23) வென்றேன். என் வழியில் நடங்கள். உங்களை எந்தத் தீய சக்தியும் தீண்டாது; எந்தப் பாவமும் நெருங்காது.


இயேசுவின் இந்த வார்த்தைகளின்படி நடந்தால் “பேய்களின் விருந்து மண்டபமாய் உன் மனசு மாறியதெப்படி? மூளையில் எப்போது
முள் முளைத்தது உனக்கு?” என்று இறைவனோ, இறையடிகளார்களோ நம்மைக் கேட்கமாட்டார்கள். மாறாக இறைவனும், இறையடியார்களும் நம்மைப்பார்த்து, "நீ செல்லும் பாதை சரியான பாதை ... சிகரங்களில் வசிக்க சிங்காரமாய் நடந்துசெல்” என்பார்கள்.


மேலும் அறிவோம் :
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது ( குறள் : 865).


பொருள் : செயலுக்குரிய நல்ல வழியினை நாடாமலும் வெற்றிக்குரிய செயலைச் செய்யாமலும் தன்மீது வரும் பழிக்கு நாணாமலும் பண்பாடு இல்லாமலும் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்!குன்று நோக்கி..அருள்திரு இ.லூர்துராஜ்
இந்தச் சோதனை எதற்கு?


 நடுக்கடலில் ஒரு பயணிகள் கப்பல். பயணிகளில் ஒருவர் துறவி - சாது. பெரும்பாலோனோர் இளைஞர் பட்டாளம். சாதுவைக் கேலி செய்து கிண்டல் அடித்தது அக்கூட்டம். சிலர் தங்கள் காலணிகளைக் கூட கழற்றி சாது மீது வீசி விளையாடினர். ஆனால் சாதுவோ அமைதியாய் இருந்தார். புன்னகை பூத்திருந்தார்.

திடீரென ஓர் அசரீரி கேட்டது. "சாதுவே, நீ விரும்பினால் இந்தக் கப்பலை மூழ்கடிக்கிறேன். உன்னை அவமானப்படுத்தியவர்களை இந்த ஆழ்கடலில் அமிழ்த்தி சாகடிக்கிறேன்” இதைக் கேட்ட கப்பலில் இருந்த அத்தனை பேரும் கதிகலங்கி சாதுவின் காலில் சரணாகதி அடைந்தனர். சாதுவானவர் வான் நோக்கிக் கைகளை உயர்த்தி, "என் அன்பான கடவுளே, நீர் ஏன் சாத்தானின் மொழியில் பேசுகிறீர்? கப்பலைக் கவிழ்த்து என்ன பயன்? முடிந்தால் இவர்களின் மனத்தை மாற்றும்”. வானிலிருந்து கடவுள் பதிலளித்தார்: “என் அன்பு மகனே, உன்னில் நான் மகிழ்கிறேன். முன்பு ஒலித்தது என் குரல் அன்று! உண்மையிலேயே அது சாத்தானின் குரல் தான்! எவன் ஒருவன் சாத்தானின் குரலை இனம் கண்டுகொள்ள முடிகிறதோ, அவனே என்னுடைய குரலையும் புரிந்து கொள்ள முடியும்”.

கடவுளின் குரலையும் அலகையின் குரலைஸயம் தரம் பிரித்துக் காட்டும் கண்ணாடியே தவக்காலம்.

பேய் பேயாக வருவதில்லை. எடுத்த எடுப்பில் தீயவற்றில் வீழ்த்த தோன்றும் விதங்களிலும் சொல்லும் வார்த்தைகளிலும் உருமாறி, முகமூடி அணிந்துதான் வருகிறான். அந்தநேரத்தில் நம் அறிவு என்ன சொல்கிறது?
ஒவ்வொரு கணமும் நமது செயல், சொல், சிந்தனை அனைத்திற்குப் பின்னும் நம் உள்ளத்திலிருந்து எழும் ஒரு குரல் இருக்கும். இதனை உடல் ரீதியாக, அறிவியல் ரீதியாக மூளை கட்டளை இடுகிறது, உடலின் உறுப்புகள் இயங்குகின்றன என்பார்கள். இதை அப்படியே ஏற்றுக் கொள்வதனால் தன் வீட்டைத் தானே இடிக்கிறது போல் (தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப் போகும், லூக்.11:17) நமது உடலையும், மூளை உட்பட அனைத்து உறுப்புகளையும் நாசப்படுத்திக் கொள்ளும் ஒரு கட்டளையை நமது மூளை கொடுக்கக் கூடுமோ?

ஆன்மீகத்துக்கு முன்னே அறிவியல் கேள்விக்குறியாகிறது!
சிலர் குடிபோதைக்கு அடிமையாகிறார்கள். மற்றும் சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வேறு சிலரோ தங்களது தீய செயலால் பிறரையும் கெடுத்துத் தாங்களும் அழிந்து போகிறார்கள். ஆகவே நம் செயல்கள் அனைத்தும் வெறும் மூளையின் கட்டளைகள் 11ன்று அல்லாது அதற்கும் மேற்பட்ட ஏதோ ஒன்று செயல் ஊக்கியாக இருப்பதை உணர முடிகிறது. பலரை வாழ வைக்கும் செயல்களைச் சிலர் செய்வதைக் காண்கிறோம். தாங்கள் நல்வழியில் நடப்பதோடு பிறரையும் நல்வழிப்படுத்துவதைக் காண்கிறோம். காரணம்? நம் உள்ளத்திலிருந்து இருவிதமான குரல்கள் எழும்புகின்றன. ஒன்று நற்செயல்களைச் செய்ய வைத்து நம்மை வாழவைக்கும் இறைவனின் குரல்! மற்றொன்று திசெயல்கள் மூலம் பிறரையும் நம்மையும் அழிவுக்கு இட்டுச் செல்லும் இலகையின் குரல்!
எனவேதான் “இதோ பார், வாழ்வையும் நன்மையையும் சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன் (இ.ச.30;15)... அவரது குரலுக்குச் செவிகொடு" என்கிறார் மோசே வழியாக இறைவன்!
மத்தேயுவோ லூக்காவோ போல இயேசுவின் சோதனைகளைப் பட்டியலிடாமல், இயேசு சோதிக்கப்பட்டார் என்று பொதுவாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் மத்தேயுவோ லூக்காவோ குறிப்பிடாத ஒன்றை மார்க் மட்டும் குறிப்பிடுகிறார். "பாலை நிலத்தில் இயேசு காட்டு விலங்குகளிடையே இருந்தார்” (மார்க்.1:13)

நாம் எதிர்த்துப் போராட வேண்டிய தீய சக்திகளான காட்டு விலங்குகள் நமக்கு வெளியே மட்டுமன்றி நமக்குள்ளேயும் இருக்கின்றன.
உயிரினங்களைப் படைத்த இறைவன் அவை ஒவ்வொன்றுக்கும் ஆயுள் காலத்தை 30 ஆண்டுகளாக நிருணயித்தார். அதில் திருப்தி அடையாத கழுதை, நாய், குரங்கு, மனிதன் மட்டும் திருப்தியின்றி முறையிட்டன.
கழுதை கடவுளிடம் "தினம் தினம் பொதிசுமக்கிற எனக்கு 30 ஆண்டுகள் என்பது வேதனையானது" என்றது. சரி என்று 18 ஆகக் குறைத்தார். "குரைத்துக் குரைத்து தொண்டை காய 30 வயதா?” என்ற நாய்க்கு ஆயுளை 12 ஆக்கினார். பிறகு குரங்கு "மரத்துல தொங்கித் தொங்கி ஆடுற என் பொழைப்புக்கு 30 தேவையா?” என்று கேட்க அதை
 10 என்றாக்கினார்.
இறுதியாக வந்த மனிதன் “அனைத்தையும் அனுபவிக்க எனக்கு 30 ஆண்டுகள் எப்படிப் போதும்? அதனால் கழுதையில் ஒதுக்கிய 12, நாயில குறைத்த 18, குரங்கில் குறைத்த 20 எல்லாத்தையும் எனக்குச் சேர்த்துக் கொடுத்தா நல்லா இருக்கும்” என்று கெஞ்ச “சரி அப்படியே ஆகட்டும்” என்றாராம் கடவுள்.
அதனால்தான் மனிதன் 30 ஆண்டு ஓரளவு மகிழ்ச்சியாக இருந்துவிட்டு அடுத்த 12 ஆண்டு கழுதை மாதிரி குடும்பப் பாரத்தை சுமக்கிறான். அடுத்த 18 ஆண்டு நாய் மாதிரி சொத்துச் சேர்க்கவோ, சேர்த்ததைக் காக்கவோ அலையோ அலையின்னு அலைகிறான். பிறகு 20 ஆண்டு வயதாகி வீட்டில் மரியாதை போய் யார் என்ன சொன்னாலும் குரங்காட்டம் ஆடித் தவிக்கிறான்.

நமக்குள்ளே மிருகக்குணம் நிறையவே இருக்கு. கடித்து குதறாத அளவுக்கு காட்டு விலங்குகளாக எதிர்த்து நிற்கும் தீய சக்திகளுக்கு முன்னே நிராயுதபாணியாக நிற்பதா? அந்தப் போராட்டச் சோதனைக் களத்தில் ஏந்த வேண்டிய ஆயுதங்கள் என்ன? எபேசியருக்கு எழுதிய திருமடலில் (6:11-17) தூய பவுல் இடைக்கச்சையாக உண்மை, மார்புக் கவசமாக நீதி, நற்செய்தி அறிவிப்பின் ஆயத்த நிலையாக மிதியடி, தலைச்சீராக மீட்பு, போர் வாளாக இறைவார்த்தை என்று பட்டியலிடுவார். இவற்றில் முதல் நான்கும் தற்காப்புக்கானவைகள். எதிரியை வீழ்த்தக் கூடிய போர் வாளாக இருப்பது இறைவார்த்தை ஒன்றே!

மனம் மாறும், மாற்றும் கடவுள் 

அருள்பணி ஏசு கருணாநிதி


'மனம்தான் எல்லாம்' என்று புத்தமதம், 'உங்கள் மனத்தை விழித்திருந்து காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அங்கிருந்துதான் உங்கள் எண்ணங்கள் ஊற்றெடுக்கின்றன' என்று கிறிஸ்தவமும் சொல்கிறது. 'மனமாற்றம்' என்பது நாம் அதிகம் கேட்டு அர்த்தம் இழந்த சில வார்த்தைகளில் ஒன்று.

இன்று காலை 8:30 மணிக்கு நாகமலை செல்வதற்காக ஓலா டேக்ஸி பதிவு செய்கிறேன் என வைத்துக்கொள்வோம். பதிவு செய்துவிட்டு முகம் கழுவ வேகமாக செல்கிறேன். கழுவிக்கொண்டிருக்கும்போதே, 'நாளை போகலாம்!' என மனம் சொல்கிறது. வேகமாக ஓடி வந்து ஈரக்கைகளுடன் ஃபோனில் பின் கோடு இட்டு, ஓலா ஆப்பைத் திறந்து 'கேன்சஸ் ரைட்' என கொடுக்கிறேன். உடனடியாக அது ஐந்து காரணங்களைப் பட்டியலிடுகிறது. அதில் இரண்டாவது காரணமாக 'ஐ சேன்ஜ்ட் மை மைன்ட் - நான் எனது மனதை மாற்றிக்கொண்டேன்' என்ற சொல்கிறது. அதற்கு நேர் புள்ளி வைத்து 'சப்மிட்' கொடுத்துவிட்டு முகம் துடைக்க டவல் தேடுகிறேன். 8:30க்கு நாகமாலை செல்ல வேண்டும் என நினைத்த மனம் 8:32க்கு மாறிவிடுகிறது. இது ஒரு வகையான மனமாற்றம்.

என் நண்பர் என்னிடம் கடன் வாங்குகிறார். ஐம்பதாயிரம் வாங்குகின்றார். 'எப்போது கொடுப்பார்?' என நான் காத்துக்கொண்டிருக்க, 'உன்னிடம் வாங்கிய பணத்தை அன்றே கொடுத்துவிட்டேன்' என்கிறார். பணமா? நட்பா? என்ற கேள்வியில், 'இனிமேல் இவருக்கு பணம் கொடுக்கக்கூடாது' என்றும், 'இனிமேல் இவரிடம் நட்பு பாராட்டக்கூடாது' என்றும் முடிவு செய்கிறேன். இவரின் அம்மாவுக்கு ஒருநாள் உடல்நலம் சரியில்லாமல் போய்விடுகிறது. அவசரமாக பணம் தேவைப்படுகிறது. அவர் கேட்காமலேயே நான் போய் பண உதவி செய்து, 'உன்னிடம் பணம் இருக்கும் போது கொடு' என்று சொல்லிவிட்டுவருகின்றேன். இது இன்னொரு வகையான மனமாற்றம்.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் முதல் வாசகத்தில், 'இனி உலகை அழிக்கமாட்டேன்' என கடவுள் மனம் மாறுகிறார். நற்செய்தி வாசகத்தில் 'மனம் மாறுங்கள்' என்று இயேசு அழைப்பு விடுக்கின்றார். மேற்காணும் இரண்டு மனம் மாற்றங்கள்போல்தான் இந்த மனம் மாற்றமா? அல்லது இதன் பொருள் வேறா?

மனம் மாறுதல் என்பது ஒரு பெரிய போராட்டத்தின் கனியாக இருப்பதை முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் குறிப்பிடுகின்றன. 'மனம் மாற்றம்' என்பது விவிலியத்தைப் பொறுத்தமட்டில் மனத்தை இறைவனை நோக்கி மாற்றுவது. அதாவது, சாலையில் செய்யும் பயணம்போல. இலக்கினை உறுதியாக வைத்துக்கொண்டு அதை நோக்கி பயணம் செய்வது.

இந்தப் புரிதலை இன்றைய வாசகங்களுக்கான விளக்கத்தின் பின்புலத்தில் பார்ப்போம்:

முதல் வாசகம்: தொடக்கநூல் 9:8-15

பெருவெள்ளத்திற்குப் பின் நோவோவுடன் கடவுள் பேசும் வார்த்தைகளே இன்றைய முதல் வாசகம். வாசகத்தின் மையப் பொருள் உடன்படிக்கை. உடன்படிக்கை என்ற சொல்லாடல் ஒரு அசீரியக் கலாச்சாரத் தாக்கம். ஒரு நாட்டை அல்லது ஊரை வெற்றிகொள்கின்ற அரசன் அந்த ஊர் மக்களோடு செய்து கொள்ளும் உறவு நிலைக்குப் பெயர்தான் உடன்படிக்கை. உடன்படிக்கையில் இருவர் இருப்பர்: ஒன்று செய்பவர், மற்றொன்று செய்யப்படுபவர். இதில் உடன்படிக்கை செய்பவர் எப்போதும் தலைமை நிலையிலும், செய்யப்படுபவர் பணியாளர் நிலையிலும் இருப்பர். மேலும், உடன்படிக்கை செய்யும் தலைவர், உடன்படிக்கை செய்யப்படும் தனக்குக் கீழிருப்பவருக்கு பாதுகாப்பை வாக்குறுதியாகத் தருகின்றார். அதே போல கீழிருப்பவர் மேலிருப்பவர் சொல்வதையெல்லாம் கேட்டு நடப்பதாக வாக்குறுதி தருகின்றார். இந்த இருவரும் தங்கள் உடன்படிக்கையின் நினைவாக கல்தூண், மரம் போன்றவற்றை அடையாளமாக ஏற்படுத்திக் கொள்வர். இந்தப் பின்புலத்தோடு இன்றைய முதல்வாசகத்தைப் பார்த்தால் அர்த்தம் தெளிவாகிறது: (அ) பெருவெள்ளத்திலிருந்து நோவாவின் குடும்பத்தைக் காப்பற்றியதன் வழியாக நோவாவை வெற்றி கொள்கின்றார் இறைவன் (9:8). (ஆ) உடன்படிக்கை செய்பவர் - கடவுள். செய்யப்படுபவர் - நோவா, அவரது சந்ததியினர் மற்றும் எல்லாரோடும் (9:9-10). (இ) உடன்படிக்கையின் மையப்பொருள் - இனி உயிர்கள் மீண்டும் அழிக்கப்படாது, மண்ணுலகில் அழிக்கும் வெள்ளப்பெருக்கு மீண்டும் வராது (9:11) (ஈ) உடன்படிக்கையின் அடையாளம் - வானவில் (9:12). 9:13-15ல் கடவுள் தான் 8-12ல் சொன்னதையே திரும்பவும் சொல்கின்றார். கடவுளின் இந்த செயல்பாடு 'உன்னுடனோ என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்' (6:18) என்று அவர் முன் சொன்ன வார்த்தைகளின் நிறைவாக இருக்கின்றது.

வானவில் - இது ஒரு இயற்கை நிகழ்வு. மழைபொழிந்த ஈரக் காற்றுவெளியில் சூரியனின் கதிர்கள் படுவதால் ஏற்படும் ஒளிப்பிறழ்வே வானவில். இந்த இயற்கை நிகழ்வை எடுத்து அதற்கு ஆன்மீகப்பொருள் தருகின்றார் ஆசிரியர். இயற்கையின் நிகழ்வுகள் கடவுளின் செயல்பாடுகளாகச் சித்தரிக்கப்படுவதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன (காண். எரே 31:35-36, 33:19-26). 'வில'; கடவுளைச் சுட்டிக்காட்டும் அடையாளமாக விப 12:13லும் உள்ளது. பழைய ஏற்பாட்டு காலத்தில் வானவில் கடவுளின் ஆயுதமாகவும் கருதப்பட்டது (திபா 7:12-13, 18:14, 144:6, புலம்பல் 2:4, 3:12, எபி 3:9-11). உடைந்த வில் சமாதானத்தின் அடையாளமாகவும் இருக்கிறது (திபா 46:9). ஆக, இனி மனுக்குலத்திற்காக கடவுள் தாமே போரிடுவார் எனவும், இதனால் கடவுளின் வல்லமையை அவரது சொந்த மக்கள் உணர்ந்து கொள்வார்கள் எனவும், இனி மனுக்குலம்; கடவுளின் கைகளில் அமைதியாக ஓய்வெடுக்கலாம் எனவும் குறித்துக்காட்டுகிறது இந்த உருவகம்.

நினைவுகூர்வது - 'நான் இந்த வானவில்லைப் பார்க்கும் போதெல்லாம் நினைவுகூர்வேன்!' என்கிறார் கடவுள். அப்படியென்றால் அதைப் பார்க்காதபோது கடவுள் மனுக்குலத்தை மறந்துவிடுவாரா? இல்லை. இந்த வானவில் கடவுள் நம்மை நினைவுகூர்வதை நமக்குக் காட்டும் ஒரு அடையாளம். ஆக, யார் கண்ணுக்கும் எளிதாய்த் தெரிகின்ற ஒரு அடையாளம் என்பதால் இது கடவுள் நம்மை நினைவுகூர்கிறார் என்பதை நமக்கு நினைவூட்டுவதாகவும் இருக்கிறது.

நான் அழிப்பதில்லை - கடவுள் தரும் வாக்குறுதி இதுதான். 'கொல்பவரும் நானே, உயிரளிப்பவரும் நானே! காயப்படுத்துபவரும் நானே! குணமாக்குபவரும் நானே!' (இச 32:39) என்று சொல்லும் இறைவன் தன்னை வாழ்வின் காரணியாக மட்டும் இங்கே காட்டுகின்றார்.

ஆக, கடவுள் நமக்கு வாழ்வின் காரணியாக இருக்கிறார் என்றால், அந்த உடன்படிக்கையின் பங்கேற்பாளராக இருக்கும் நாம் சாவின் காரணிகளுக்குத் துணைபோகலாமா?

இரண்டாம் வாசகம்: 1 பேதுரு 3:18-22

இந்த இரண்டாம் வாசகத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் அதன் முன்னும், பின்னும் உள்ள வசனங்களையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். 'நீதியின் பொருட்டுத் துன்புறுதல்' (3:8-22) என்ற தலைப்பில் தன் திருஅவைக்கு எழுதும் பேதுரு நம் துன்புறுதலைப் பற்றி எழுதிவிட்டு, நம் துன்பங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இயேசு அடைந்த துன்பங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என இயேசுவை மாதிரியாக வைப்பதோடு மட்டுமல்லாமல், இயேசுவை வானதூதர்க்கும் மேலாக உயர்த்திக் காட்டுகின்றார். ஒருபக்கம் துன்புறுதல் பற்றிப் பேசும் பேதுரு திடீரென நோவாவின் தண்ணீரைப் பற்றிப் பேசும் போது கிறிஸ்தவர்களின் திருமுழுக்கிற்கு (3:21) முடிச்சுப் போடுவது நம் புரிதலை இன்னும் கடினமாக்குகிறது.

இந்த வாசகத்தில் உள்ள இரண்டு கருத்தியல் பிரச்சனைகளை மட்டும் பார்ப்போம்:

அ. இயேசு காவலில் இருந்த ஆவிகளிடம் போய் நற்செய்தியை அறிவித்தார் (3:19). இயேசு ஆவிகளுக்குப் போதித்ததாக எழுதுகிறார் பேதுரு. இந்த ஆவிகள் யார்? இவர்கள் நோவாவிற்கு முன் வாழ்ந்தவர்களாக இருக்கலாம், அல்லது நோவாவின் காலத்தில் வாழ்ந்த தீயவர்களாக இருக்கலாம் அல்லது தொநூ 6:2-4ல் சொல்லப்படும் தெய்வப்புதல்வர்கள் அல்லது அரக்கர்களாக இருக்கலாம். இப்படி இயேசு போதித்தார் என்று சொல்வது இயேசு இவர்களுக்கும் முற்காலத்தில் இருந்தார் என்று இயேசுவின் இருப்பை படைப்பின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்கிறது. இந்த ஆவிகளிடம் அவர் என்ன போதித்திருப்பார்? இன்று நாம் நம் சக மனிதர்களுக்குப் போதிப்பதே பெரும்பாடாக இருக்க, ஆவிகளிடம் போதிப்பது எவ்வளவு கடினமாக இருக்கும்? ஆனால், இயேசு பாலைநிலத்தில் ஆவியால் சோதிக்கப்பட்ட நிகழ்வை அருகில் வைத்துப் பார்த்தால் அலகையோடு இயேசு பேசும் சொற்கள் கடவுள் பற்றிய போதனையாகவே இருக்கிறது.

ஆ. நோவா காலத்துப் பெருவெள்ளம் மற்றும் திருமுழுக்குத் தண்ணீர். நோவாவின் குடும்பம் தண்ணீரிலிருந்து காப்பாற்றப்படுகிறது. திருமுழுக்குப் பெறும் கிறிஸ்தவர் தண்ணீரின் வழியாக மீட்பைப் பெறுகின்றார். ஆக, தண்ணீரிலிருந்து, தண்ணீர் வழியாக என்று நாம் பிரித்துப் பார்க்க வேண்டும்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 1:12-15

மாற்கு 1:12-15 என்னும் இறைவாக்குப் பகுதியை 12-13, 14-15 என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். 12-13ல் இயேசு சோதிக்கப்படுகின்றார் (காண் மத் 4:1-11, லூக் 4:1-13). 14-15ல் கலிலேயாவில் இயேசு தன் பணியைத் தொடங்குகின்றார் (காண் மத் 4:12-17. லூக் 4:14-15).

முதல் பிரிவிலிருந்து தொடங்குவோம் (12-13):

இயேசு சோதிக்கப்படும் நிகழ்வு ஒத்தமைவு நற்செய்திகள் என்று சொல்லப்படும் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா நற்செய்திகளில் மட்டும் தான் உள்ளன. இயேசுவின் வாழ்வில் இது உண்மையாகவே நடந்ததென்றால் அவருடைய அன்புச் சீடர் யோவான் மட்டும் ஏன் இந்த நிகழ்வு குறித்து மௌனம் காக்கின்றார். இது ஒரு வரலாற்று நிகழ்வா? அல்லது இறையியல் நிகழ்வா? இது ஒரு இறையியல் நிகழ்வே.

இது இறையியல் நிகழ்வு என்பதற்கு காரணங்கள் இரண்டு:

அ. விவிலிய இலக்கியத்தில் கடவுளால் தேர்ந்தெடுக்கும் நபர் 'சோதிக்கப்படுதல்' என்பது ஒரு எழுத்தியல் நடை - காண். ஆபிரகாம் (தொநூ 22), சிம்சோன் (நீத 13-16). இவர்களைப் போலவே கடவுளின் மகனாகிய இயேசுவும் சோதிக்கப்பட வேண்டும்!

ஆ. பழைய இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குச் செல்லும் வழியில் 40 ஆண்டுகள் கடவுளால் பாலைவனத்தில் சோதிக்கப்படுகின்றனர். புதிய இஸ்ரயேலின் தலைமகனாய் இருக்கும் இயேசுவும் 40 நாட்கள் பாலைவனத்தில் சோதிக்கப்படுகின்றார்.

12-13 என்ற இறைவாக்குகளை இன்னும் இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

அ. பாலைநிலத்தில் இயேசு நாற்பது நாள் இருந்தார். அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்.

ஆ. அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.

பாலை நிலம் - காட்டு விலங்கு, சாத்தான் - வானதூதர் என்று சோதிக்கப்படுதலை இரட்டைப்படையில் எழுதுவது மாற்கு நற்செய்தியாளரின் எழுத்துக் கலை.

அ. பாலைநிலம் உடனடியாக நமக்கு பழைய ஏற்பாட்டு இஸ்ராயேல் மக்களை நினைவுபடுத்துகின்றது.

ஆ. காட்டு விலங்குகளிடையே இருக்கும் இயேசு பழைய ஆதாமை நமக்கு நினைவுபடுத்துகின்றார் (காண் தொநூ 2:19). ஆதாம் இறந்தபின் அவனது உடலை வானதூதர்கள் எடுத்துச் சென்றதாக யூத ரபிகள் போதிப்பது வழக்கம். ஆக, காட்டு விலங்குகள் மற்றும் வானதூதர்கள் பழைய ஆதாமைச் சுற்றி இருந்தது போல, புதிய ஏற்பாட்டு ஆதாமாகிய இயேசுவைச் சுற்றியும் இருக்கின்றனர். மேலும் பாலைநிலங்கள் மெசியாவின் வருகையினால் உயிரினங்கள் அமைதியாகக் கூடிவாழும் இடமாக மாறும் எசாயாவின் இறைவாக்கும் இங்கே நிறைவுபெறுகிறது (காண் எசா 11:6-9, 32:14-20, 65:25).

மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் இயேசுவிற்கும், சாத்தானுக்கும் இடையே நடக்கும் போரட்டத்தை வர்ணிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் மாற்கு அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றார். ஏனெனில் மாற்கு நற்செய்தியாளரைப் பொறுத்தவரையில் இயேசுவின் பணித்தொடக்கத்திலேயே சாத்தான் அமைதியாக்கப்படுகின்றான் (காண் 1:21-27).

இரண்டாம் பிரிவு (14-15):

இதிலும் இரட்டைத்தன்மையைக் காணலாம்:

அ. காலம் நிறைவேறி விட்டது. இறையரசு நெருங்கி வந்துவிட்டது.

ஆ. மனம் மாறுங்கள். நற்செய்தியை நம்புங்கள்.

இவற்றில் 'அ' வெறும் கருத்து வாக்கியமாகவும், 'ஆ' கட்டளை வாக்கியமாகவும் இருக்கிறது.

'காலம்' என்பதற்கு 'க்ரோனோஸ்' மற்றும் 'கைரோஸ்' என்னும் இரண்டு கிரேக்க வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. 'க்ரோனோஸ்' என்றால் வரலாற்று நேரம் - எகா. பிப்ரவரி 17 மாலை 5:50 மணி. 'கைரோஸ்' என்பது மீட்பு நேரம் - அதாவது கடவுள் வரலாற்றில் செயலாற்றும் நேரம். இங்கே இயேசு குறிப்பிடும் காலம் இரண்டாம் வகை.

இறையரசு - இறையரசு என்றால் என்ன? பழைய ஏற்பாட்டில் கடவுள் தாமே மக்கள் மேல் அரசாள்வார் என்பது ஆழமான நம்பிக்கையாக இருந்தது (காண் 1 குறி 28:5, 2 குறி 13:8, சாஞா 10:10, 2 சாமு 7:12-26, திபா 132:11). இந்த இறையரசு ஒரு அரசியல் நிகழ்வோ, இடம்சார்ந்த ஆட்சியோ அல்ல. இது ஒரு ஆன்மீக அனுபவம். 'நான் கடவுளின் மகள் அல்லது மகன்' என்று உணரும் ஒவ்வொருவருக்குள்ளும் தொடங்கும் ஒரு உள்ளொளிப் பயணம். இந்தப் பயணத்தின் நிறைவில் நமக்கு அருகில் இருப்பவர் எந்த நிறத்தை, மொழியை, மதத்தை, நாட்டை, இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் நம் சகோதரன், சகோதரியாகத் தெரிய ஆரம்பிக்கின்றார். பரந்த மனப்பான்மை, சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் என்னும் மதிப்பீடுகளில் இறையரசின் பிம்பங்கள் தெரியும்.

மனம் மாறுங்கள் - 'மெட்டாநோயா' எனப்படும் கிரேக்கச் சொல்லுக்கு ஆங்கிலத்தின் 'யு' டர்ன் எடுத்தல் என்பது பொருள். கடவுளை விட்டு நம் முகம் திரும்பியிருந்தால், அவரை நோக்கி மீண்டும் திரும்புதல் மனம் மாறுவது.

நற்செய்தியை நம்புங்கள் - இந்த நற்செய்தி வெறும் வார்த்தை அல்ல. மாறாக, இயேசுவே (காண். மாற்கு 1:1).

வார்த்தையிலிருந்து வாழ்க்கைக்கு:

அ. பழைய ஏற்பாட்டில் நோவாவோடு உடன்படிக்கை செய்வதன் வழியாக தன் உடனிருப்பை காலங்காலமாக மனுக்குலத்திற்கு வாக்களிக்கும் இறைவன் புதிய ஏற்பாட்டு இயேசுவில் அதை முழுமையாக்குகின்றார். கடவுளின் காணக்கூடிய முகமாக வரும் இயேசு வாழ்வில் நம்மைப்போல பாலைநிலங்களைக் கடந்து சென்றாலும் நம்மோடு ஒன்றிணைந்து நிற்கின்றார்.

ஆ. வானதூதரும், சாத்தானும் நம் வாழ்வின் இரு பக்கங்கள். 'கடவுள் பாதி - மிருகம் பாதி' என்று நாம் நமக்குள் பிளவுபட்டு நிற்கின்றோம். மற்றொரு பக்கம் இன்பமும், துன்பமும் நம் வாழ்வில் மாறி மாறி வந்தாலும் நம் மனம் அவற்றை எப்படி எடுத்துக்கொள்கின்றது. இன்பத்தால் ஏமாற்றப்படவும் வேண்டாம், துன்பத்தால் கலக்கமடையவும் வேண்டாம்.

இ. நாம் பெற்ற திருமுழுக்கு கிறிஸ்தவர் என்ற அடையாளத்தை மட்டும் நமக்குத் தருவதில்லை. மாறாக, மனம் மாறும் கடமையையும் நம்மேல் சுமத்துகிறது. மனமாற்றம் பெற்ற நாம் ஆவிகளுக்குப் போதிக்கும் அளவிற்குப் போகவில்லையென்றாலும், அன்றாடம் நாம் சந்திக்கும் சக உயிர்களுக்கு நம் புன்சிரிப்பையும், இனிமையான வார்த்தையையும் போதனையாக முன்வைக்கலாமே!

இறுதியாக, மனம் மாறும் கடவுள், மனம் மாற்றத்திற்கு நம்மை அழைக்கின்றார். இன்று என் மனம் எதை நோக்கி இருக்கிறது என்பதைப் பொறுத்தே என் வாழ்க்கை பயணம் இருக்கிறது. நோக்கம் சரியாக இல்லாதபோது, பாதையைவிட பாதையின் ஓரத்திலிருக்கும் பூக்கள்தாம் கவர்ச்சியாக இருக்கும். பூக்கள் இல்லாத பாலைவனங்களும், நம் வாழ்வின் காய்ந்த பொழுதுகளும்கூட மனமாற்றத்தின் ஊற்றாக இருக்க முடியும்.
Wednesday, 7 February 2018

பொதுக் கால 6-ஆம் ஞாயிறு

பொதுக் கால 6-ஆம் ஞாயிறு

லேவி 13:1-2, 44-46; 1 கொரி 10:31-11:1; மாற் 1:40-45


மகிழ்ச்சியூட்டும் மறையுரை - குடந்தை ஆயர் அந்தோணிசாமி

இயேசுவைப்போல வாழ முடியுமா? ஏழை எளியவரோடு தம்மையே ஐக்கியப்படுத்திக்கொண்டவர் இயேசு. ஏழ்மையிலே பிறந்து, ஏழ்மையிலே வாழ்ந்து, ஏழ்மையிலே இறந்தவர் இயேசு. அவர் பிறந்தபோது பிறப்பதற்கு இடமில்லை; வாழ்ந்தபோது தலைசாய்க்க இடமில்லை; அவர் இறந்தபோது அவருக்கென்று ஒரு சொந்தக் கல்லறை இல்லை! ஓர் ஏழைப்பங்காளனாகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவர் இயேசு (லூக் 4:16-22).

பணமில்லாதவர்கள் மட்டும் ஏழைகள் அல்ல! உடல் நலம் இல்லாதவர்களும் ஏழைகள்தான். இல்லை என்ற சொல்லுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரும் ஏழைகள்தான்! இதோ இன்றைய நற்செய்தியிலே உடல் அழகு இல்லாத ஒரே காரணத்திற்காக சமுதாயத்தைவிட்டுத் தள்ளிவைக்கப்பட்டிருந்த, அனைவராலும் புறக்கணிக்கப்பட்டிருந்த (முதல் வாசகம்) தொழுநோயாளிகளைத் தேடிச்சென்று அவர்களை இயேசு குணமாக்குவதைப் பார்க்கின்றோம்!

ஏழைகளின் மீதும், இல்லாதவர்கள் மீதும் இயேசுவுக்கு எப்பொழுதுமே தனிப் பிரியம்! இதை தெள்ளத்தெளிய அவர் மத்தேயு 25:30-41-இல் வெளிப்படுத்தியுள்ளார்.

இயேசுவிடமிருந்து வரம்பெற ஓர் அழகான, எளிய வழி அவர் வழியில் நடக்க முன்வருவதாகும்! கிறிஸ்துவைப் போல நம்மால் வாழமுடியுமா? இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார்: நான் கிறிஸ்துவைப்போல் நடப்பது போன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள் (1 கொரி 11:1) என்கின்றார். ஆக, கிறிஸ்துவைப்போல் வாழ்ந்தவர்கள் இந்த உலகத்திலே வாழ்ந்திருக்கின்றார்கள்!


அன்று மட்டும் அல்ல, இன்றும் கிறிஸ்துவின் மதிப்பீடுகளை தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து, ஏழைகளோடு தங்களையே சங்கமமாக்கிக்கொள்ளும் உயர்ந்த மனிதர்கள் நம் நடுவே இல்லாமலில்லை!

இதோ ஓர் உண்மை நிகழ்வு!
பொள்ளாச்சியிலே இந்திய - சோவியத் நட்புறவு பற்றிய ஒரு பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த தலைவர்களுக்குக் கூட்டத்தை நல்லமுறையில் நடத்தப் போதிய நிதி இல்லை. ஆகவே பி.எம்.சுப்ரமணியம் என்பவர் பேசியபோது, தோழர் மா.வேலாயுதம் துண்டு ஏந்தி வருவார். உங்களால் முடிந்த அளவு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திரு.மா.வேலாயுதம் அவர்களுக்கு நிதி வசூலிக்க ஒரு துண்டு தேவைப்பட்டது. மேடையில் இருந்தவர்களில் திரு .பி.எம். சுப்ரமணியத்திடம் மட்டும்தான் ஒரு துண்டு இருந்தது. ஆகவே மா.வேலாயுதம் அவர்கள் அவரிடம் சென்று துண்டைக் கொடுங்கள். நிதி வசூலித்துவிட்டு திருப்பித் தருகின்றேன் என்றார். பி.எம்.சுப்பிரமணியம் துண்டைக் கொடுக்க மறுத்துவிட்டார். பிறகு எப்படியோ ஒரு மஞ்சள் பையைக் கொண்டு நிதி வசூலைச் செய்தார் திரு.மா.வேலாயுதம்.
பொதுக்கூட்டம் முடிந்தது. திரு. பி.எம்.சுப்ரமணியம் திரு. மா.வேலாயுதத்தைப்  பக்கத்தில் அழைத்து, தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து, விரித்து உதறிக் காட்டினார். துண்டில் ஆயிரம் கண்கள். ஆம், அத்தனைக் கிழிசல்கள். அதைப் பார்த்தவரின் கண்கள் குளமாயின.
இன்று உலகில் பலகோடி மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இன்று எய்ட்ஸால் பாதிக்கபட்டவர்களின் கண்களில் ஒன்று கங்கை, மற்றொன்று காவிரி! அவர்களை ஆற்றுவாருமில்லை, தேற்றுவாருமில்லை!
இயேசுவைப் போல வாழ நமது மனத்தை பதப்படுத்திக்கொள்வோம். பழுத்த தென்னங்கீற்றை தண்ணீர் பதப்படுத்துகின்றது. தூண்டில் கம்பை நெருப்பு பதப்படுத்துகின்றது.
ஆன்மிக வாழ்வைப் பொறுத்தவரையில் நமது மனத்தை பதப்படுத்தும் தெய்வீகத் தண்ணீர், தெய்வீக நெருப்பு, தெய்வீகக் காற்று தூய ஆவியார்.
தூய ஆவியாரே உண்மையான அன்பால் என்னை அருள்பொழிவு செய்தருளும்.

மேலும் அறிவோம் :
மனத்தான்ஆம் மாந்தர்க்(கு) உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல் ( குறள் : 453).

பொருள் : மனிதர் ஒவ்வொருவருக்கும் தோன்றும் உணர்வு அவரவர் உள்ளத்தைச் சார்ந்து அமையும் ! ஆனால், அவர் தம் பண்பு அவர் பழகும் கூட்டத்தாரைச் சார்ந்ததாகவே விளங்கும்!

மறைமொட்டுகள் -அருள்தந்தை இருதயராஜ்


இளவரசி ஆலிசின் மகள் 'டிப்தீரியா" என்னும் தொண்டை அழற்சி நோயால் புழுவாகத் துடித்தாள், இந்நோய் ஒரு பயங்கரத் தொற்று நோய், எக்காரனாத்தை முன்னிட்டும் தன் மகளைக் கட்டிப் பிடிக்கவோ முத்தமிடவோ கூடாது என்று மருத்துவர் ஆலிசை எச்சரித்திருந்தார், ஆனால், ஆலிசின் மகள: மூச்சு விடமுடியாமல் திணறிக் கொண்டு, 'அம்மா, என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடும்மா' என்று கதறி அழுதபோது, ஆலிசு மருத்துவரின் எச்சரிக்கையையும் மறந்து, தன் மகளைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான், அத்நோய் அந்நேரமே அவரைத் தொற்றிக் கொள்ள ஒரு சில நாள்களில் ஆவிசு இறந்தார். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!

தொழுநோயாளிகளைத் தொடக்கூடாது என்ற சட்டத்தை மீறி இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து ஒரு தொழுநோயாளியைத் தொட்டுக் குணமளிக்கிறார். அவ்வாறே இரத்தப் போக்கினால் துன்புற்ற ஒருவர் தன்னைத் தொட்டுக் குணமடைய அவர் அனுமதித்தார் (மாற் 5:24- 20), கிறிஸ்து பாவிகளையும் பிணியாளர்களையும் தொட்டார், பாவிகளும் பிணியார்களும் அவரைத் தொட அனுமதித்தார், அவர் எவரையும் தீண்டத்தகாதவராகக் கருதவில்லை. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!

இக்காலத்தில் தொழுநோய் ஏறக்குறைய ஒழிக்கப்பட்டு விட்டது, தொழுநோயாளிகளுக்கு, மருத்துவ மனைகளும் புனர்வாழ்வு மையங்களும் உள்ளான, ஆனால் கிறிஸ்துவின் காலத்தில் தொழுநோய் ஒரு வியாதியாக மட்டுமல்ல, தீட்டாகக் கருதப்பட்டது, தொழு நோயாளிகள் ஊரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார்; தீண்டத் தகாதவம்யாகக் கருதப்பட்டனர். ஆனால் கிறிஸ்து அவர்களை மனித நேயத்துடன் பார்க்கிறார். அவர்களும் இறைவனுடைய சாயலாகப் படைக்கப்பட்டவர்கள், மனித மாண்புக்குரியவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வண்ணம் அவர்களைத் தொட்டுக் குணமாக்கி, மீண்டும் மனித சமுதாயத்துடன் இணைக்கிறார்.

ஒருமுறை பள்ளி மாணவிகள் என்னிடம், 'காலாண்டுத் தேர்வு பாவம், அரையாண்டுத் தேர்வு குற்றம்: முழு ஆண்டுத் தேர்வு மனித நேயமற்ற செயல் என்றனர். ஆனால் உண்மையில், 'தீண்டாமை ஒரு பாவம்; தீண்டாமை ஒரு குற்றம்; தீண்டாமை மனித நேயமற்றச் செயல்,' இதை நாம் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டாலும், நடைமுறையில் தீண்டாமை முற்றிலும் வேரறுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது,

ஓர் உணவகத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்காகத் தனிப்பட்ட "டம்ளர்கள்' இருந்தன, அங்கு வந்த தாழ்த்தப்பட்ட ஒருவர், "இவ்வுணவகத்திற்கு வரும் ஈக்கள் எல்லா டம்ளர்களிலும்' உரிமையுடன் உட்காருகின்றன. இந்த மக்களுக்கு இருக்கின்ற உரிமை கூட தாழ்த்தப் பட்டவர்களுக்கு இல்லையே'' என்று ஆதங்கப்பட்டார், பசுக்களைத் தெய்வமாகக் கருதும் இப்பாரதநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்கள் உயிருடன் தோலுரிக்கப் படுகின்றனர், மனிதக் கழிவைச் சாப்பிடும் இழிநிலைக்குத் தள்ளப்படுகின்றனர், நெஞ்சுப் பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மானிடரை நிணைந்துவிட்டால்! -

தன் சிறிய மகனுடன் ஆலயத்திற்குச் சென்ற ஒரு தாய், அவனிடம் அங்கிருந்த சிலையைத் தொட்டுக் கும்பிடும்படி கேட்டபோது, அச் சிறுவன், 'அது சாமியில்லை களிமண் பொம்மை" என்றான். அம்மா கோபத்துடன் அவனைக் கன்னத்தில் அறைந்து, 'உன் வயசுக்கு மேலே பேசுற: அதுதான் நம்ப குலதெய்வம், தொட்டுக் கும்பிடு' என்றார். வேறுவழியின்றி அச்சிறுவன் அச்சிலையைத் தொட்டு வணங்கினான். ஆலயத்திலிருந்து வெளியே வந்தபோது அவனுடன் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்த 'நவீன்' என்ற பையனைப் பார்த்தவுடன் அவனுடன் விளையாடச் சென்றான். அம்மா அவனைப் பார்த்து, 'டேய் அவனுடன் விளையாடாதே; அவன் கீழ் சாதிப். பையன்; தீட்டு ஒட்டிக்கும்' என்றார், அதற்கு அவன், 'என்னம்மா களிமண் பொம்மையிலே சாமி இருக்குதுன்னு சொல்றே, மனிதனைத் தொடாதே என்று சொல்றே' என்று கேட்டான், நமது வழிபாட்டிற்கும் வாழ்க்கைக்கும் இடையேயுள்ள முரண்பாடுதான் இன்று பலர் கடவுளை மறுப்பதற்குக் காரணமாக உள்ளது.
ஏழைகளின் உடலிலும் இரத்தத்திலும் உள்ள கிறிஸ்துவை மதிக்காதவர் நற்கருணையிலுள்ள கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் மதிக்கமுடியாது.
கிறிஸ்துவே ஏழையிலே ஏழையாக, தொழுநோயாளியிலே தொழுநோயாளியாக இருக்கிறார், புனித பிரான்சிஸ் அசிசியார் ஒரு தொழுநோயாளியை ஆரத்தழுவி முத்தம் கொடுத்தபோது, அத்தொழுநோயாளியின் முகம் கிறிஸ்துவின் முகமாக மாறியதைக் கண்டார், தொழுநோயால் பீடிக்கப்பட்ட ஓர் இந்து பூசாரியை, அன்னை தெரசா தன் மடியில் வைத்து முத்தம் கொடுத்தபோது, அந்த அன்னையின் முகத்தில் காளி தேவதையைப் பார்த்தார் அத்தொழுநோயாளி!

மற்றவர்களை நாம் தொடவேண்டும்; மற்றவர்களும் தம்மைத் தொடவிட வேண்டும், நமது தொடுதலானது குண மளிக்கும் தொடுதலாக இருக்கவேண்டும். தீண்டத்தகாதவர்கள் என்று யாரும். நமது அகராதியில் இருக்கக்கூடாது. கிறிஸ்துவர்களுக்குத் தீண்டாமை ஒருபாவம் மட்டுமல்ல; அது ஒரு தெய்வ நிந்தனையுமாகும்.

உடலை அழுகச் செய்யும் தொழுநோயைவிட ஆன்மாவை அழுகச் செய்யும் பாவத் தொழுநோய் மிகவும் பயங்கரமானது. அதற்கு மருந்து என்ன? தொழுநோயாளியிடம், 'உம்மைக் குருவிடம் காட்டு' என்கிறார் கிறிஸ்து. ஆம், பாவத்தொழுநோயினின்று விடுதலைபெற குருவிடம் செல்ல வேண்டும், அதாவது ஒப்புரவு அருள் அடையாளத்தை அணுக வேண்டும். இக்காலத்தில் மக்கள் இந்த அருள் அடையாளத்தைத் தவிர்க்கின்றனர், உடலில் தொழுநோய் கண்ட இடத்தில் உணர்வு மழுங்கிவிடும், அவ்வாறே ஒப்புரவு அருள் அடையாளத்தை அணுகாதவர்களிடம் காலப்போக்கில் பாவ உணர்வு மழுங்கிவிடும்.

பல்வேறு வகையில் பாவமன்னிப்பு அடைய முடியும் என்றாலும், பாவ மன்னிப்பிற்காக இயேசு வழங்கியுள்ள சாதாரண வழி ஒப்புரவு அருள் அடையாளமாகும். 'எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ அவை மன்னிக்கப்படும்' (யோவா 20:23). 'திருச்சபையில் தண்ணீரும் உண்டு; கண்ணீரும் உண்டு' (புனித அம்புரோஸ்), தண்ணீர் திருமுழுக்கையும், கண்ணீர் ஒப்புரவு அருள் அடையாளத்தையும் குறிக்கிறது,

போலியான காரணங்களைக் காட்டி ஒப்புரவு அருள் அடையாளத்தைத் தவிர்க்காமல், அதை அடிக்கடி அணுகுவோம். இந்த அருள் அடையாளத்தில் கிறிஸ்து நம்மைத் தொடுகிறார்; அன்புடன் அரவணைத்து முத்தமிடுகிறார், 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' (லூக்கா 7:48) என்றும், 'அமைதியுடன் செல்க' (லூக் 7:50) என்றும் உறுதியளிக்கின்றார், உலகம் தர முடியாத அமைதியை அவர் நமக்கு வழங்குகிறார்.
தொழுநோயாளர் இருவர்
அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை

'தொழுநோயாளர் ஒருவர்' என்று இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற்கு 1:40-45) தொடங்குகிறது. ஆனால், நற்செய்தி வாசகத்தில் இறுதிக்கு வரும்போது 'தொழுநோயாளர் இருவர்' என்று இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்கியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

யார் அந்த இரண்டாவது தொழுநோயாளர்?

நிற்க.

புத்தமதத்தில் 'போதி சத்துவா' என்ற கருதுகோள் உண்டு. 'போதி சத்துவா' என்பவர் ஏற்கனவே மீட்படைந்தவர். இவரின் பணி என்னவென்றால் மீட்படைய கஷ்டப்படுகின்ற ஆன்மாக்களுக்காக இவர் முயற்சி செய்து மீட்பைப் பெற்றுக்கொடுப்பார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் சர்க்கஸ் போடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். சர்க்கஸ் பார்க்க 500 ரூபாய் தேவை. என்னிடம் 500 ரூபாய் இல்லை. ஆனால் சர்க்கஸ் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆக, நான் கேட்டிற்கு முன் நின்று எட்டி எட்டி பார்க்கிறேன். என்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்ற 'போதி சத்துவா' என்ன செய்வார் தெரியுமா? தன்னிடம் இருக்கும் நிறைய 500 ரூபாய் நோட்டுக்களில் ஒன்றை எடுத்து என்னிடம் கொடுத்து டிக்கெட் எடுக்கச் சொல்லி உள்ளே அனுப்பிவிடுவார். என்னிடம் அல்லது எனக்காக கொடுப்பதால் 500 ரூபாய் அவரிடம் குறைவுபட்டாலும் அதை என் மீட்புக்காக செலவிடுவதால் அந்த செலவை பெரியதாக எடுத்துக்கொள்ளமாட்டார். இப்படி நிறைய பேருக்கு உதவி செய்தவுடன் தன் கடைசி 500 ரூபாயை வைத்து இவரும் சர்க்கஸ்க்குள் வந்துவிடுவார்.

இவ்வாறாக, அடுத்தவரின் நலனுக்காக தன் நலனை விட்டுக்கொடுக்கும் அல்லது தியாகம் செய்யும் நிலையின் பொருளை போதி சத்துவா நமக்கு உணர்த்துகிறார். புத்த மதத்தின் போதி சத்துவா தான் இறந்தபின்தான் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும். ஆனால், தான் வாழும்போதே அத்தகைய உதவியைச் செய்கிறார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்கிறது.

'தொழுநோய்' என்ற வார்த்தையை மையமாக வைத்து இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் சுழல்கின்றன. 'தொழுநோய்' இன்று பூமித்தாயின் முகத்திலிருந்து முற்றிலம் துடைத்தெடுக்கப்பட்ட நோய் என்றாலும் இங்கொன்றும், அங்கொன்றும் சிலர் இந்த நோயினால் அவதிப்படுவதை நாம் பார்க்கிறோம். மருத்துவ வார்த்தைகளால் சொல்லப்போனால் இது ஒரு தோல் நோய். இந்தத் நோய் தோலின் அடுத்தடுத்த அடுக்குகளுக்குள் பரவி தொடு உணர்வு இல்லாமல்போகச் செய்கிறது. ஒருவர் மற்றவர்மேல் உள்ள தொடுதலால், அவர்கள் பயன்படுத்திய பொருள்களைப் பயன்படுத்துவதால் பரவக்கூடியது. இது பார்வை, கேட்கும்திறன் என அனைத்தின்மேலும் பாதிப்பை ஏற்படுத்தவல்லது. இதன் கனாகனத்தை நாம் 'ரத்தக்கண்ணீர்' திரைப்படத்தில் பார்க்கலாம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். லேவி 13:1-2,44-46) தொழுநோய் பிடித்தவர் செய்ய வேண்டியதும், தொழுநோய் பிடித்தவருக்கும் செய்ய வேண்டியது என்ன என்பதை மோசே ஆரோனுக்கு அறிவுறுத்துகின்றார். எதற்காக மோசே ஆரோனிடம் சொல்ல வேண்டும்? ஆரோன்தான் தலைமைக்குரு. இஸ்ரயேல் சமூக அமைப்பில் குரு தான் எல்லாம். மேலும், தூய்மை - தீட்டு என்றால் என்ன என்பதை தீர்மானித்து முன்வைப்பவரும் குருவே. தொழுநோய் வரக் காரணம் பாவம் என்ற சிந்தனை விவிலிய மரபில் இருந்தது.

தொழுநோய் பிடித்தவர் மூன்றுவகை அந்நியப்படுத்துதலை அனுபவிக்கின்றார்:

அ. தன்னிலிருந்து அந்நியப்படுதல்

தொழுநோய் பிடித்தவர் 'கிழிந்த ஆடை அணிந்து தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக்கொண்டு 'தீட்டு, தீட்டு' என்று கத்த வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்றையாவது நம்மால் செய்ய முடியுமா? சட்டையில் சிறு பகுதி கிழிந்திருந்தாலே அதை உடனடியாக மாற்றவிட நினைக்கின்றோம். தலை வாராமல் நம்மால் இருக்க முடியுமா? தூங்கும்போது கூட நம் சிகை சரியாக இருக்கிறதா என்று கண்ணாடி முன் நின்று சரி செய்துகொள்கிறோம். 'நான் தீட்டு, நான் தீட்டு' என்று என்னால் கத்த முடியுமா? கண்டிப்பாக இல்லை. ஆக, இந்த மூன்று காரியங்களையும் செய்யும் தொழுநோய் பிடித்தவர் எந்த அளவிற்கு தன்னிலிருந்தே அந்நியப்படுத்தப்படுகின்றார்.

ஆ. குடும்பம், உறவினர்கள், நண்பர்களிடமிருந்து அந்நியப்படுதல்

'தீட்டுள்ள அவர் பாளையத்திற்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்' என்கிறார் மோசே. மோசேயின் இந்த அறிவுரையில் பிறர்மேல் கொண்டிருக்கின்ற அக்கறை இருந்தாலும், பாளையத்தில் குடியிருக்கும் அடுத்தவர்கள்மேல் உள்ள நலனின் அக்கறை இருந்தாலும், அவர் இவரை மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறார் என்பதை நாம் மறுக்க முடியாது. பாளையத்திற்கு வெளியே தனியாகவோ அல்லது தன்னைப்போல நோய்பிடித்தவர்களோடோதான் இவர் தன் வாழ்வைக் கழிக்க வேண்டும்.

இ. இறைவனிடமிருந்து அந்நியப்படுதல்

'அவர் நோய் அவர் தலையில் உள்ளது' என்கிறார் மோசே. தலை என்றால் என்னைப் பெற்றவர். வாழையடி வாழையாக அல்லது என் முன்னோர் மற்றும் பெற்றவர் செய்த பாவம் தொழுநோயாக மாறுகிறது. நாம் பேச்சுவழக்கில் ஒருவர் பாவம் செய்யும்போது, 'இப்படிச் செய்யாதே! ஒருநாள் இது உன் தலையில் விழும்!' என்று சாடுகின்றோம். தொழுநோய் பாவத்தின் விளைவு என்பதால் இறைவனிடமிருந்தும் அந்நியப்பட்டவராகின்றார் தொழுநோயாளர்.

இந்த மூன்றுவகை அந்நியப்படுத்துதல் அவசியம் என்பது இன்றைய முதல் வாசகம் அறிவுறுத்துகின்றது.

லேவியர் நூலில் உள்ள சட்டங்களும், விதிமுறைகளும், ஒழுங்குகளும் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்று கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிச் சுற்றிக்கொண்டிருந்த குருக்கள், மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் வாழ்ந்த வந்த காலத்தில்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தின் நிகழ்வு நடந்தேறுகிறது:

தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். 'தொழுநோயாளர் தன் உதடுகளை மறைத்துக்கொண்டு 'தீட்டு,' 'தீட்டு' எனக் கத்தவில்லை.' மாறாக, 'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்' என்று கனிந்த குரலில் மொழிகின்றார். இந்த உரையாடலை வைத்துப் பார்க்கும்போது ஒருவேளை இயேசு தொழுநோயாளர்கள் தங்கியிருக்கும் பகுதியில் உலா வந்தாரோ என்று கேட்கத் தோன்றுகிறது. தொழுநோயாளர் உறைவிடப்பகுதிக்குதான் அவர் வந்திருக்க வேண்டும். ஏனெனில், குணமாக்குதலின் இறுதியில், 'நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டும்' என்று ஊருக்கு வெளியே இருந்த அவரை ஊருக்கு உள்ளே அனுப்புகின்றார்.

இயேசுவின் குணமாக்குதல் இரண்டு நிலைகளில் நடந்தேறுகிறது:

அ. அவரின் அந்நியப்படுதலிலிருந்து விடுதலை

'இயேசு அவர் மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு' என பதிவு செய்கிறார் மாற்கு நற்செய்தியாளர். அவர்மீது கொண்ட பரிவால் இறைவனுக்கும் அவருக்கும் இடையே இருந்த அந்நியப்படுத்துதலிலிருந்தும், அவரை நோக்கி கையை நீட்டியதால் பிறருக்கும் அவருக்கும் இடையே இருந்த அந்நியப்படுத்துதலிலிருந்தும், அவரைத் தொட்டதால் அவர் தன்னிடமிருந்து அந்நியப்பட்டதிலிருந்தும் விடுவிக்கின்றார் இயேசு.

ஆ. தொழுநோயிலிருந்து விடுதலை

தொடர்ந்து, 'நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக!' என்று அவரது நோயிலிருந்து அவரை விடுவிக்கின்றார் இயேசு.

இயேசுவின் இந்தக் குணமாக்குதல் அவரின் உடல்நலத்தை மட்டுமல்லாமல், சமூகம் மற்றும் சமயம் அவர்கள்மேல் சுமத்தியிருந்த தேவையற்ற சுமைகளையும் இறக்கி வைப்பதாக இருக்கிறது.

விளைவு என்ன?

இயேசு தொழுநோயாளர் ஆக்கப்படுகின்றார். எப்படி?

தொழுநோய் குணமானவர் ஊருக்குள் சென்று எல்லாருக்கும் செய்தியை அறிவிக்க அந்த ஊர் மக்கள் இயேசுவைப் பாராட்டுவதற்குப் பதிலாக, 'ஓ நீ அவனைத் தொட்டு குணமாக்கினாயா?' என்று சொல்லி, இயேசுவை அந்நியப்படுத்துகின்றனர்.

முதல் தொழுநோயாளர் குணமடைந்தார்.

இரண்டாமவர் தொழுநோய் ஏற்றார்.

இந்த நிலையை இயேசுவால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிந்தது?

அதற்கான விடை இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1 கொரி 10:31-11:1) இருக்கிறது: 'நான் எனக்குப் பயன் தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன்.'

இயேசு தனக்குப் பயன்படுவதை நாடியிருந்தால் தொழுநோயாளர் உறைவிடத்திலிருந்தும், அவரின் பிரசன்னத்திலிருந்தும் விலகிச் சென்றிருப்பார். ஆனால், அவர் தன் பயன் நாடாது பிறர்பயன் நாடுகின்றார். அது தன் பயனுக்கு குறைவு ஏற்படுத்தினாலும்கூட.

இந்த மனநிலை நம்மில் வளர நாம் என்ன செய்ய வேண்டும்?

இயேசுவிடமிருந்த மூன்று பண்புகள் நமதாக வேண்டும்: 'பரிவு,' 'அருகில் செல்லுதல்,' 'தொடுதல்.'

இறுதியாக, இன்று தொழுநோய் நம்மிடமிருந்து துடைத்தெடுக்கப்பட்டாலும், நம்மை அறியாமலேயே தொழுநோயின் மறுஉருவங்கள் வலம் வருகின்றன: பாலியல் நோய், சாதியம், நிறப் பாகுபாடு, மொழிப் பாகுபாடு, மாற்றுக் கலாச்சாரம். இதில் என்னவொரு கொடுமை என்றால், இவர்களோடு நாம் வாழ்ந்து, பழகி, உணவு உண்டாலும்கூட ஏதோ ஒரு நிலையில் நான் இவர்களைவிட பெரியவராக, நல்லவராக, தூய்மையானவராக நினைத்துக்கொள்கிறேன். அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் நான் வாழ என்னில் தடையாக இருப்பது எது? அந்த நிலைக்கு நான் கடந்து செல்ல, இரண்டாம் தொழுநோயாளராய் நான் ஆக்கப்பட்டாலும், என்னிடம் துணிச்சல் குறைவுபடுவது ஏன்?