Tuesday, 16 October 2018

பொதுக்காலம் ஆண்டின் 29-ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 29-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்


எசா 53:10-11
எபிரேயர் 4:14-16
மாற்கு 10:35-45


சாய்ந்து கொள்ள தேவை ஒரு தோள் !


ஓர் ஊரிலே எல்லாருக்கும் நல்லவராக மனிதநேயம் மிகுந்த பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். காலையிலே சூரியோதயமாகவும், மாலையிலே சந்திரோதயமாகவும் விளங்கிய அவருக்கு ஒரு மகன். அவனுக்கு வயது பத்து இருக்கும். ஒருநாள் அவன் அவனது தாயைப் பார்த்து, அம்மா, அப்பாவைப்போலவே நானும் ஒருநாள் எல்லாராலும் போற்றப்படும் பெரிய மனிதராக வாழ விரும்புகின்றேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்றான்.
தாய் மகனைப் பார்த்து, "மகனே, நான் உன்னை ஒரு கேள்வி கேட்கின்றேன். நீ சரியான பதிலைச் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்கின்றேன்” என்றாள். "சரி" என்றான் மகன். "உன் உடலிலே உள்ள உறுப்புகளில் மிகவும் உயர்ந்தது எது?" மகன் சொன்ன எந்த பதிலையும் தாய் சரியானது என ஏற்றுக்கொள்ளவில்லை. மகன் தோல்வியை ஏற்றுக்கொண்டு, "நீங்களே பதிலைச் சொல்லி விடுங்கள் அம்மா” என்றான்.
தாய் மகனைப் பார்த்து, "மனித உடலிலே மிகவும் உயர்ந்த உறுப்பு அவனது தோள்தான். காரணம் அதுதான் சோர்ந்துகிடக்கும் மனிதர்களையெல்லாம் தாங்கிப்பிடித்து ஆறுதல் அளிக்கின்றது. நீ உயர்ந்த மனிதனாக வாழ விரும்பினால், ஆறுதல் தேடும் தலைகளுக்கு உனது தோள்கள் மீது சாய அனுமதி அளி. அப்போது ஊரும், உலகும் உன்னைப் போற்றும் " என்றாள். இதே உண்மையைத்தான் இன்றைய நற்செய்தியிலே இயேசு சுட்டிக் காட்டுகின்றார். தொண்டுகளிலே சிறந்த தொண்டு துவண்டு விழும் தலையை நமது தோள் மீது சுமப்பதாகும் (முதல் வாசகம்).
இயேசு, தொண்டர்களாக வாழ முன் வாருங்கள், அப்போது உலகம் உங்களை வணங்கும் என்று போதித்ததோடு நிறுத்திக்கொள்ளவில்லை. போதித்ததைச் சாதித்தும் காட்டினார். "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத் 11:28) என்று சொன்ன இயேசு, வார்த்தையை வாழ்வாக்கி, வலுவற்றவர்களின் மீது இரக்கத்தைப் பொழிந்து (இரண்டாம் வாசகம்) மக்களின் உடல் பாரத்தை (மத் 9:27-31), மன பாரத்தை (லூக் 7:36-50) இறக்கி வைத்தார். இயேசு பலரின் பாவத்தைச் சுமந்தார் (எசா 53:12). "சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே (இயேசுவே), சுமந்தார்” (1 பேதுரு 2:24) என்கின்றார் புனித பேதுரு. "எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார். நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார் என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது" (மத் 8:16இ-17) என்கின்றார் புனித மத்தேயு.

இதுவே நமது செபமாக இருக்கட்டும்:
“இறைவா, நடந்து, நடந்து கால்கள் களைத்துவிட்டன ! ஏந்தி, ஏந்தி கைகள் சோர்ந்துவிட்டன!
பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துவிட்டன!
இப்போது எங்களுக்குத் தேவையானதெல்லாம்
சாய்ந்துகொள்ள ஒரு தோள்! ஒரு தொண்டர்! என்று சொல்லி அழுகின்ற இடிந்துபோன இதயங்களுக்கு நான் இதம் தர,
நான் தோள் கொடுக்க, எனக்கு
உமது இரக்கத்தையும், ஆசியையும் தந்தருளும். ஆமென்."

மேலும் அறிவோம் !

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7). 


பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.


பள்ளி ஆய்வாளர் ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவர்களிடம், "எந்தப் பாடத்திலும் 'பெயில்' ஆகாத மாணவர்கள் மட்டும் வலது கையை உயர்த்திப் பிடியுங்கள்" என்றார். ஒரே ஒரு மாணவன் மட்டும் கையை உயர்த்தினான், அதைப்பார்த்த மற்ற மாணவர்கள் சிரித்தனர், அவர்கள் ஏன் சிரிக்கின்றனர்? என்று ஆய்வாளர் கேட்டார். அதற்கு மாணவர்கள், "சார், அவன் ஒரு பாடத்திலும் தேர்வு எழுதவில்லை " என்றனர். ஒரு பாடத்திலும் தேர்வு எழுதவில்லை யென்றால், 'பெயில்' ஆகமுடியாது. ஆனால் அது ஒரு சாதனையா?

துறைமுகத்தில் இருக்கும் கப்பல் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக இருக்கும். ஆனால் துறைமுகத்தில் இருப்பதற்காக எத்தக் கப்பலும் செய்யப்படுவதில்லை , கப்பல் கடலில் பயணம் செய்யவேண்டும்: கடல் கொந்தளிப்பு, புயல், பனிப்பாறை முதலிய பல்வேறு தடைகளையும் மேற்கொள்ள வேண்டும், தனது இலக்கை அடைந்து சாதனை படைக்க வேண்டும், அவ்வாறே மனிதர்களும் தங்கள் வாழ்வில் எழும் பல்வேறு சவால்களைச் சமாளித்து சாதனை புரிய வேண்டும்.

பறவை பிறந்தது பறப்பதற்காக: மனிதன் பிறந்தது துன்புறுவதற்காக (யோபு 5:7). கிறிஸ்துவும் துன்புறுவதற்காகவே இவ்வுலகிற்கு வந்தார். அவர், "எல்லாவகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர், எனினும் பாவம் செய்யாதவர்” (எபி 4:15) என்று. இன்றைய இரண்டாவது வாசகம் தெளிவாகக் கூறுகிறது.

இறைவாக்கினர் எசாயா என்பவர் கிறிஸ்துவைத் 'துன்புறும் ஊழியனாகச் சித்தரித்து நான்கு கவிதைகள் எழுதியுள்ளார், துன்புறும் ஊழியனைப் பற்றிய நான்காம் கவிதையின் ஒருபகுதி இன்றைய முதல் வாசகமாக அமைந்துள்ளது. கடவுள் கிறிஸ்துவைப் பலருடைய பாவங்களுக்காக வதைத்தார்; கிறிஸ்து பிறருடைய பாவங்களுக்காகத் தம்மைப் பரிகாரப்பலியாக்கினார். ஆனால் இறுதியில் உயர்வடைந்து. தமது வாழ்வின் நிறைவை எய்தினார், சிலுவை அவரை வீழ்த்தவில்லை, மாறாக, சிலுவையைக் கொண்டே பாவத்தையும் பாவத்திற்குக் காரணமான அலகையையும் அவர் வீழ்த்தினார்.

கிறிஸ்துவின் சீடர்களுக்குச் சிலுவை விருப்பப்பாடமல்ல), கட்டாயப்பாடம், "என்னைப் பின்பற்ற விரும்புவர் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (லூக் 9:23). தமது சிலுவைச் சாவைக் கிறிஸ்து மூன்று முறை முன்னறிவித்தார். மூன்று முறையும் சீடர்கள் அதைப்புரிந்து கொள்ளவில்லை. முதன்முறை. பேதுரு கிறிஸ்துவிடம், "ஆண்டவரே, இதுவேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" (மத் 16:22) என்றார், இரண்டாம் முறை, சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று வாதாடினர் (மாற 9:34), மூன்றாம் முறை, யாக்கோபும் யோவானும் விண்ணகத்தில் தங்களுக்கு முதல் இரண்டு இடங்களை ஒதுக்கீடு செய்து கொடுக்கும்படி கிறிஸ்துவிடம் விண்ணப்பித்தனர் (மாற் 10:37) வீடுபற்றி எரியும்போது பீடிக்கு நெருப்புக் கேட்ட கதை!

கிறிஸ்து தம் சீடர்களின் மடமையைக் கண்டு மனவருந்தி, அவரோடு விண்ணக மகிமையில் பங்குபெற விழைகின்றவர்கள் அவருடைய துன்பக் கலத்தில் பருக வேண்டுமென்றும், அவருடைய பாடுகளின் திருமுழுக்கைப் பெறவேண்டுமென்றும் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், கிறிஸ்துவின் சீடர்கள் மற்றவர்களிடமிருந்து பணிவிடை ஏற்காமல், மற்றவர்களுக்குப் பணிபுரிய வேண்டும் என்றும் சீடர்களுக்கு அறிவுறுத்தினார்.

இன்றைய காலக்கட்டத்தில் இல்லறத்தாரும் துறவறத் தாரும் ஆடம்பர வாழ்வையும் சொகுசு வாழ்வையும் விரும்புகின்றனர், இறையரசுக்காகவோ மற்றவர்களுடைய நலனுக்காகவோ உழைக்கவும் ஊழியம் புரியவும் விரும்புவதில்லை . பணிவிடை பெறவே விரும்புகின்றனர்: பணிவிடை புரிய முன்வருவதில்லை . சுருக்கமாக, கிறிஸ்துவின் மனநிலை (பிலி 2:5) நம்மிடம் இல்லை .

ஒரு குடும்பத்தில் கணவர் தம் மனைவியிடம் சமைக்கும் படி கேட்டதற்கு அவர், "நான் உங்கள் மனைவி மட்டுமே; சமையல்காரி அல்ல" என்று நறுக்கென்று பதில் சொன்னார். அன்று இரவு திருடன் வீட்டில் புகுந்து மனைவியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்தான். கணவர் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தார், மனைவி அவரிடம், "என்னங்க, சும்மா பார்த்துக்கொண்டு இருக்கிறீங்க; திருடனை அடிச்சு விரட்டுங்க” என்றதற்கு. கணவர், "நான் உனக்குக் கணவன் மட்டுமே; காவற்காரன் அல்ல; போலிசைக் கூப்பிடு" என்று பதிலடி' கொடுத்தார்!

கணவனும் மலைவியும் கடமை, உரிமை என்ற குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டு, ஒருவர் மற்றவர் மீது வஞ்சகம் தீர்த்துக் கொள்ள விரும்பினால், இல்லறம் நரகமாகி விடும். பழி வாங்குவதில் அல்ல, பணிவிடை புரிவதில் ஒருவர் மற்றவருடன் போட்டிபோட வேண்டும். "உணவு விடுதியில் சாப்பிடும் இட்லிக்கும் வீட்டில் சாப்பிடும் இட்லிக்கும் உள்ள வேறுபாடு என்ன?" என்று ஒரு கணவரிடம் கேட்டதற்கு அவர், உணவு விடுதியில் இட்லி சாப்பிட்ட பிறகு மாவு ஆட்டுவேன்: வீட்டில் மாவு ஆட்டியபின் இட்லி சாப்பிடுவேன்" என்றார் வீட்டு வேலையில் மனைவிக்கு உதவி செய்வது கணவனுக்கு இழிவு அல்ல. அது அவருடைய கடமையாகும்,

பயிற்சி காலத்தில் குருவானவர்களும் நவகன்னியர்களும் கிராமங்களுக்குக் களப்பணிபுரிய மகிழ்ச்சியுடன் செல்வர். ஆனால் குருக்களாகவும் கன்னியர்களாகவும் மாறியபின் அவர்கள் அத்தகைய பணிகளை மேற்கொள்ளவதில்லை. தாழ்ச்சி அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறது; தலைக்கனம் ஏறிவிடுகிறது. இருப்பினும், வித்தியாசமான துறவிகளும் இருக்கின்றனர். ஓர் அருள்சகோதரி ஒரு பணக்காரரிடம் சென்று தனது அனாதைக் குழந்தைகளுக்காக நன்கொடை கேட்டார். அப்பணக்காரர் அந்த அருள்சகோதரி முகத்தில் காரித் துப்பி, அவருடைய கன்னத்தில் அறைந்தார். ஆனால் அந்த அருள்சகோதரியோ மிகவும் பணிவுடன், புன்னகை பூத்த முகத்துடன் பணக்காரரிடம், "இது நீங்கள் எனக்கு அளித்த பரிசு; என் அனாதைக் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்” என்று கேட்டார். பணக்காரர் அச்சகோதரியிடம் மன்னிப்புக் கேட்டு, அவருக்குத் தேவையான பணத்தைக் கொடுத்தார், அவர் தான் அன்னை தெரசா!

தாழ்ச்சியின் அவசியத்தைப் பற்றிக் கிறிஸ்து தமது சீடர்களுக்குப் பலமுறை "கொள்கை விளக்கம்" (Theory) அளித்தார். அது அவர்களது மரமண்டையில் ஏறவில்லை . இறுதியாக அவர் "செய்முறைப் பயிற்சி" (Practical) செய்து காட்டினார், இறுதி இரவு உணவின்போது அவர்களுடைய பாதங்களைக் கழுவி, "நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” (யோவா 13:15) என்றார். இல்லறத்தாரும் துறவறத்தாரும் மற்றவர்மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, மற்றவருக்கு ஊழியம் புரிய முன்வந்தால் இவ்வையகம் வானமாக மாறாதா?

"அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தாளே வந்து எய்தும் பராபரமே" - தாயுமானவர்


Thursday, 11 October 2018

பொதுக்காலம் ஆண்டின் 28-ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 28-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்


சாலமோனின் ஞானம் 7:7-11
எபிரேயர் 4:12-13
மாற்கு 10:17-30
 
 
 
 

கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனுக்கு திடீரென ஒரு அச்சம் தோன்றியது: கடலில் விழுந்து விட்டால் தான் எப்படி உயிர் பிழைப்பது என்ற எண்ணம் அவனை வாட்டியது. கப்பல் தலைவனிடம் சென்று தன் அச்சத்தை விளக்கினான். கவலைப்படாதே , உனக்குத்தான் நன்கு நீந்தத் தெரியுமே என்றான் கப்பல் தலைவன். உடனே அவன், இல்லை ! நேற்று கூட நன்கு நீந்தத் தெரிந்த ஒருவன் கடலில் விழுந்து மூழ்கி இறந்து போனானே என்றதற்கு கப்பல் தலைவன் அம்மனிதன் கடலில் வீழ்ந்தபோது தன்னுடைய பொருட்கள் அடங்கிய இரண்டு பெட்டிகளை தன் இரு கைகளிலும் பிடித்திருந்தான். அப்பெட்டிகளின் எடை அவனை நீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. எனவேதான் எங்களால் கூட அம்மனிதனைக் காப்பாற்ற இயலவில்லை என்று சொன்னான். இக்கதை தரும் பாடத்தை நமக்கு அளிப்பதே இன்றைய வாசகங்கள். மனிதன் படைக்கப்பட்ட போது கள்ளங்கபடம் இல்லாமல் (Innocence) இருந்தான். அவன் வளர வளர அவனுக்குள் பல மூட்டைகள் ஏறிக் கொண்டன. நல்லவைகள் பஞ்சு மூட்டையைப் போல இலேசாக இருந்தன. தீயவையே பாறாங்கற்களைப்போல கடினமாயின. இதுபோன்ற மூட்டைகள் அவனுக்குள் இருக்கும் வரை குழப்பம்தான்.

கட்டளைகளை யெல்லாம் கடைப்பிடித்த இளைஞன் ஒருவனுக்குத் தனக்கு நிலைவாழ்வு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆண்டவர் இயேசுவிடம் சென்று வினவினான். பாதி கிணற்றைத் தாண்டும் சக்தி கொண்ட அவுனுக்கு மீதிப் பாதி கிணற்றைத் தாண்ட ஆண்டவர் வழிவகைச் சொன்னார். உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் (மாற்.10:21) என்றார். ஆண்டவர் காட்டிய வழி அவனுக்கு உகந்ததாக இல்லை. நீ கட்டளைகளையெல்லாம் கடைப்பிடிப்பதால் மீட்பு அடைந்துவிட்டாய் என்று இயேசு சொல்வார் என்று எண்ணி வந்த இளைஞனுக்கு, இன்னும் அதிகமாக, எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்தையும் இழக்கச் சொல்கிறாரே என்று முகம் வாடி வருத்தத்தோடு சென்றான்.

நாமும் மீட்படைய வேண்டும் என்று விரும்புகிறோம். நம்மை மீட்க வேண்டும் என்பது இறைத்தந்தையின் விருப்பம். அவ்விருப்பத்தை நிறைவேற்ற இயேசு தன்னுயிரைத் தந்தார். இன்னும் குறைவாக இருப்பது என்ன? நம் ஒத்துழையாமை. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நாம் சேகரித்தவற்றை, நாம் அடைந்தவற்றைக் காப்பாற்றுவதற்காக நாம் நடத்துகின்ற போராட்டம் பெரிது. நாம் சேர்த்தவைகள்: பணம், பதவி, படிப்பு, பட்டம், பகைமை, சொத்து, சொந்தம்... போன்ற சுமைகளே நம்மை மூழ்கடிக்கும். இவற்றையெல்லாம் விடுத்துக் கள்ளம் கபடற்ற முதல் நிலைக்கு நாம் செல்ல வேண்டும். அறிவு நம்மை அனைத்தையும் துறக்க வைக்கும். வளர்ந்தாலும், பெரியவரானாலும் ஞானம் என்கிற கொடை நம்மைக் குழந்தைகளாக்கும். இது தனி மனித முயற்சியால் இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் (மாற் 10:27). பின்பு வந்து என்னைப் பின்பற்றும் (மாற் 10:21) என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து ஞானத்தைப் பெறுவோம். இலவசமாய் இறைவன் தரும் நிறை வாழ்வைப் பரிசாகப் பெற்றுக்கொள்வோம்.
 
 
 

 


கிரேக்க நாட்டுத் தத்துவமேதை ஒருவர் தம் வீட்டிற்கு முன்புறம், "ஞானம் இங்கே விற்கப்படும்" என்று ஒரு விளம்பரப் பலகையில் எழுதி வைத்திருந்தார், இந்த நூதனமான விளம்பரத்தைப் படித்த ஒரு பணக்காரர் தமது வேலைக்காரரிடம் பணம் கொடுத்து, ஞானம் வாங்கி வரும்படி அவரை அம்மேதையிடம் அனுப்பினார். அம்மேதை அப்பணத்தை வாங்கிக் கொண்டு, ஒரு காகிதத் துண்டில், "நீ எதைச் செய்தாலும் தன் இறுதி முடிவை நினைத்துக்கொள்” என்று எழுதிக் கொடுத்தார், அப்பணக்காரர் அவவாக்கியத்தைப் பொன் எழுத்துக்களால் பொறித்து, சட்டம் கட்டி, தம் வீட்டின் மையப் பகுதியில் தொங்கவிட்டு, நாள்தோறும் படித்து, வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, தம் செல்வத்தின் பெரும் பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்து உதவி, உண்மையில் ஞானியாக வாழ்ந்து நல்ல மரணமடைந்தார்.

நாம் எதைச் செய்தாலும் நம் வாழ்வின் இறுதி முடிவை நம் கண்முன் நிறுத்த வேண்டும். “இருப்பது பொய், போவதுமெய்." இதுதான் வாழ்வு. "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள் ளை, கடைசிவரை யாரோ?" திலையற்ற வாழ்வை எண்ணிப்பார்த்ததால்தான் பலர் ஞாளிகளாக மாறினர். இன்றைய பதிலுரைப் பாடலும், "எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்போது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்" (திபா 30:12) எனக் கூறுகிறது.

இன்றைய முதல் வாசகம் ஞானத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றது. ஞானத்திற்கு ஈடு இணையானது இவ்வுலகில் வேறெதுவுமில்லை. ஞானத்திற்கு முன் வெள்ளி வெறும் களிமண்; தங்கம் வெறும் தவிடு; செல்வம் வெறும் குப்பை: அழகு வெறும் மாயை; புகழ் வெறும் புகை.

அறிவு ஞானமாகக் கனிய வேண்டும். அறிவைப் புத்தகம் வாயிலாகவும் பல்கலைக் கழகங்கள் மூலமாகவும் பெற முடியும். நவீனக்கலையைக் கலைக்கணிப் பொறிவாயிலாகக் கற்றுக் கொள்ள முடியும், இவ்வுலகம் முழுவதையும் இணையதளம் மூலமாக இணைக்க முடியும். சின்னத் திரைகளும் பெரிய திரைகளும் நமக்குக் கேளிக்கைகளை வழங்க முடியும். ஆனால் ஞானமானது கடவுள் நமக்கு அளிக்கும் மேலான கொடை; தூய ஆவியார் நம் மீது பொழியும் ஒப்புயர்வற்ற வரம் சாலமோன் அரசர் கடவுளிடமிருந்து செல்வத்தையோ புகழையோ ஆயுளையோ கேட்காமல் ஞானத்தைக் கொடையாகக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். பகுத்தறிவு இறைஞானமாகக் கனிய வேண்டும். மெய்யறிவு சூன்யத்தில் அல்ல, பூரணத்தில் சங்கமிக்கும்: கடவுளிடம் சரண் அடையும்.
பழங்காலத்தில் அறுவது வயது நிறைவடைந்த கணவனும் மனைவியும் இல்லறம் துறந்து வனவாசம் மேற்கொள்ளக் காட்டுக்குச் சென்றனர். முன்னே சென்ற கணவர் தரையில் கிடந்த ஏதோ ஒரு பொருளைக் காலால் மணலைக் கொண்டு மறைத்தார். அதைக் கவனித்த மனைவி அவரிடம், "எதைக் காலால் மூடி மறைக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு, கணவர், "தரையில் மாணிக்கக் கல் ஒன்று கிடக்கிறது. அதை உன் கண்களில் படாதபடி மூடி மறைத்தேன்" என்றார், அதற்கு மனைவி, “ என்னங்க, துறவறம் மேற்கொண்ட பிறகும், உங்களுக்கு மண்ணுக்கும் மாணிக்கத்திற்கும் வேறுபாடு தெரிகிறதா?" என்று கேட்டார். ஞானத்தில் தம் கணவரையே விஞ்சி விட்டார் அந்த மனைவி!

கடவுளை யார் தேடுவர் ? மண்ணையும் மாணிக்கத்தையும் சமமாகப் பார்ப்பவர்கள். ஒட்டையும் செல்வத்தையும் ஒன்றாகக் காண்பவர்கள் தான் கடவுளை நாடுவர் என்கிறார் தாயுமானவர்.
"ஓடும் இருநிதியம் ஒன்றாகக் கண்டவர்கள் நாடும் பொருளான நட்பே பராபரமே".

இன்றைய நற்செய்தியில், கடவுளுடைய ஞானம் எனப்படும் கிறிஸ்துவை (1கொரி 1:24) பணக்கார வாலிபர் ஒருவர் மேலோட்டமாகப் பின்பற்ற விரும்பினார். ஆனால் கிறிஸ்துவோ தம்மை வேரோட்டமாக, நெருக்கமாகப் பின்பற்ற அவருக்கு அழைப்பு விடுத்தார், அவருடைய உடமைகளை எல்லாம் விற்று, அவற்றை ஏழைகளுக்கு வாரி வழங்கிவிட்டு, வெறுங்கையுடன் தம்மைப் பின்பற்ற அழைத்தார், ஆனால் அப்பணக்கார வாலிபர் தமது உடமைகளைத் துறக்க மனமின்றி முகவாட்டத்துடன் போய் விட்டார், அவருக்கு மண்ணக அறிவு இருந்தது. ஆனால் விண்ணக ஞானமில்லை . கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் புரிய அவர் விரும்பினார். ஆனால் கிறிஸ்துவோ, "எவரும் கடவுளுக்கும் செல்வத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது" (மத் 6:24) என்பதை அவருக்குத் திட்டவட்டமாக உணர்த்தினார்.

கிறிஸ்து இவ்வுலகச் செல்வத்தின் அவசியத்தை மறுக்க வில்லை. பொருட்பால் இல்லை என்றால், காமத்துப் பாலும் வாங்க முடியாது. ஏன், ஆவின்பால் கூட வாங்க முடியாது என்பது கிறிஸ்துவுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், கிறிஸ்துவோடு ஒப்பிடும் போது, இவ்வுலகச் செல்வங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இரண்டாம் நிலையை அடைகின்றன, கிறிஸ்து எல்லாவற்றையும் இரண்டாம் நிலைக்குத் தள்ளி விடுகிறார். இவ்வுண்மையைத் திருத்தூதர் பவுல் தன்குனர்ந்திருந்தார், எனவே தான் அவர், “கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பையாகக் கருதுகிறேன்” (பிலி 3:8) என்றார். இவ்வுலக செல்வங்களுக்கு அடிமை ஆகிறவர்கள் கடவுளுக்கு அடிமை ஆகமுடியாது.

அரிது, அரிது, பணக்காரர் விண்ணரசில் நுழைவது அரிது என்று ஆணித்தரமாக அறிக்கையிடும் கிறிஸ்து, பணக்காரர்களும் இறையருளால் விண்ணகம் செல்ல முடியும் என்பதையும் எடுத்துக்கூறத் தயங்கவில்லை , பணக்கார சக்கேயு ஓர் ஊழல் பெருச்சாளி: இறையருளால், அதாவது கிறிஸ்துவின் பிரசன்னத்தால் மனமாற்றம் அடைந்தார். அதன் விளைவாகத் தாம் இழைத்த அநீதிகளுக்கு நான்கு மடங்கு ஈடு செய்யவும், தமது செல்வத்தில் பாதியை ஏழைகளுக்கு வழங்கவும் முன் வந்தார்; மீட்படைந்தார் (லூக் 19:8-10).
எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் செல்வப் பெருக்கால் வாழ்வு வந்துவிடாது. (லூக் 12:15). நிலையற்ற செல்வத்தை ஏழைகளுக்குக் கொடுத்து அதன்மூலம் நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் (லூக் 18:9), உலகச் செல்வத்தைப் பயன்படுத்தும் போது அவற்றில் மூழ்கி ஆன்மாவை இழக்காமல் இருக்கக் கற்றுக்கொள்வதுதான் வாழ்க்கைக் கலையாகும் (1 கொரி 7:31).

கணவர் ஒருவர் தம் மனைவிக்குக் குடைபிடித்துக் கொண்டு போனார், ஏன் அவர் அவ்வாறு செய்தார்? என்று அவரைக் கேட்டதற்கு அவர் தந்த பதில்: "போகும் வழியில் துணிக்கடை, நகைக்கடைகள் உள் ளன், அக்கடைகளை என் மனைவி பார்க்காதப்டி கு கடை யை இருபக்கங்களிலும் வளைத்துப்பிடித்து மிகவும் தந்திரமாக அவளை வீட்டிற்குத் தள்ளிக்கொண்டு போய் விடுவேன்."
இவ்வுலக மாயை நமது கண்களில் பட்டு நம்மைத் திசை திருப்பாமல் செய்ய நமக்கொரு குடை தேவைப்படுகிறது. அதுதான் கடவுளுடைய வார்த்தை : உயிருள்ள, ஆற்றல்மிக்க, இருபக்கமும் வெட்டக்கூடிய கூர்மையான வாளான, உள்ளத்தை சாடுருவுகிற கடவுளுடைய வார்த்தையால் மெய்யறிவும் ஞானமும் பெற்று ஞானிகளாக வாழக் கற்றுக் கொள்வோம். பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களால் நாம் நசுக்கப்பட்டு, பிழியப்பட்டு பெறுகின்ற பட்டறிவினால் நாம் ஞானிகளாக மாறவேண்டும், வாழ்க்கை அனுபவம்தான் நமது சிறந்த ஆசான். கெட்ட பின்னாவது ஞானியாக வேண்டாமா?

தொட்டிலுக்கு அன்னை, கட்டிலுக்குக் கன்னி, பட்டினிக்குத் தீனி, சுட்டபின் நெருப்பு, கெட்டபின் ஞானி! "நீ எதைச் செய்தாலும் உன் இறுதி முடிவை நினைத்துக் கொள்"
 

 எப்படி பணத்தைப் பயன்படுத்துவது?

அந்தப் பள்ளிக்கூடத்தில் அந்த வகுப்பில் அவன்தான் கணக்கில் முதல் மாணவன். அவன் 99 மதிப்பெண் பெற்று முன்னிலையிலிருந்தான். ஆனால் அவனுடைய கணித ஆசிரியர் அவனைக் கடுமையாகக் கண்டித்தார். கண்டிக்கப்பட்டவன் கண்டிப்புக்குக் காரணம் கேட்டான். ஆசிரியரோ ஒரு வெள்ளைத்தாளில் ஒரு கரும்புள்ளியை வைத்துவிட்டு, மாணவனைப் பார்த்து, நீ பெற்றிருக்கின்ற மதிப்பெண் இந்த வெள்ளைத் தாளிலுள்ள கருப்புப் புள்ளி போல் இருக்கின்றது. நீ முழுவதும் வெள்ளையாக இருப்பதையே நான் விரும்புகின்றேன் என்றார். இயேசு இன்றைய நற்செய்தியிலே அவரைச் சந்திக்க வந்த மனிதரிடம் ஒரு கறுப்புப் புள்ளி இருப்பதை, ஒரு குறை இருப்பதைக் கண்டார். நிலை வாழ்வை, இறைவனுடைய நிறை ஆசியை உரிமையாக்கிக்கொள்ள விரும்பிய அந்தச் செல்வர் மோசே கொடுத்திருந்த கட்டளைகளை அப்பழுக்கில்லாமல் பின்பற்றியவர். இருப்பினும் இயேசுவின் சீடத்துவத்துக்கு ஒவ்வாத ஒன்று அவரிடமிருந்தது. அது என்ன? அவருக்கு அடிமையாக இருக்க வேண்டிய சொத்து அவரை அடிமைப்படுத்தி வைத்திருந்தது.

ஞானம் நிறைந்த (முதல் வாசகம்), உயிருள்ள, ஆற்றல் மிக்க (இரண்டாம் வாசகம்) இயேசுவின் வார்த்தைகள் அந்தப் பணக்காரரின் மனத்துக்குள் புகாதவாறு அவருடைய பண ஆசை அவரைத் தடுத்து நிறுத்திவிட்டது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் பணம் ஒன்றுதான். இயேசுவின் அறிவுரை, விண்ணகம், விண்ணக வாழ்வு போன்ற மதிப்பீடுகளெல்லாம் அவருடைய அகராதிக்கு அப்பாற்பட்டவை. அவர் பணம் பந்தியிலே குணம் குப்பையிலே இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே என்று பாடித்திரிந்தவர். இயேசுவின் சீடர்களாக வாழ விரும்புகின்றவர்கள் நூற்றுக்கு நூறு அவருடைய வார்த்தைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
எவ்வளவுக்கு எவ்வளவு நாம் பற்றற்றவர்களாகத் திகழ்கின்றோமோ அந்த அளவுக்கு அம்மையும், அப்பனுமாகிய கடவுள் நம்மைத் தாங்கிப்பிடித்து வாழவைப்பார். பணத்தைச் சோற்றுக்கு ஊறுகாய் போலப் பயன்படுத்துவது நல்லது.

மேலும் அறிவோம் :
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (குறள் : 341).

பொருள் : ஒருவன் எத்தகைய பொருள்களில் இருந்து வேண்டாம் என்று விட்டு விலகுகிறானோ, அந்தப் பொருள்களால் அவனுக்குத் துன்பம் எதுவும் நேராது!Friday, 5 October 2018

ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

 

இன்றைய வாசகங்கள்


I. தொடக்கநூல் 2:18-24 
II. எபிரேயர் 2:9-11  
III. மாற்கு 10:2-16

 

 "கடவுள் தரும் சோதனைக்கும் மனைவி தரும் சோதனைக்கும் உள்ள வேறுபாடு என்ன?" என்று ஒருவரிடம் கேட்டதற்கு அவர், "மனைவியே கடவுள் தந்த சோதனை தானோ!" என்றார், திருமண வாழ்வு ஒரு சிலருக்குச் சோதனையாகவும் வேறு சிலருக்கு வேதனையாகவும் உள்ளது. இச்சோதனையையும் வேதனையையும் சாதனையாக மாற்றுவதில்தான் திருமண வாழ்வின் வெற்றி அமைந்துள்ளது. திருமணத்தின் மாண்பையும் அதன் முறிவுபடாத தன்மையையும் இன்றைய அருள்வாக்கு வழிபாடு எடுத்துரைக்கிறது.

திருமணம் மனிதத் தன்மையை மட்டுமல்ல, தெய்வீகத் தன்மையையும் உடையது. அது படைப்பின் தொடக்கத்திலிருந்தே கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு புனிதமான அமைப்பு, கடவுள் தாம் படைத்த அனைத்தும் நன்றாக இருந்ததைக் கண்டார். ஆனால் மனிதன் தனிமையாக இருப்பது நன்றன்று (தொநூ 2:18) என்பதைக்கண்ட அவர், ஆணுக்குச் சரிநிகராகப் பெண்ணைப் படைத்தார். மனித இனம் ஆணினமோ பெண்ணினமோ அல்ல; மாறாக ஆணினமும் பெண்ணினமும் இணைந்த கலப்பினமே மனித இனமாகும், ஆறும். பெண்ணும் ஒன்றாக இணைந்தே கடவுளின் சாயலைப் பிரதிபலிக்கின்றனர். ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவரைச் சார்ந்தும் தழுவியும் செயல்படுவதே கடவுளின் திட்டமாகும்,

"நட்பு நட்புதான், காதல் காதல்தான்; காதல் மாறலாம், நட்பு மாறுமா?" என்ற திரைப்படப் பாடலுக்கிணங்க, தம்பதியர்கள் என்றென்றும் நண்பர்களாகத் திகழ வேண்டும். ஒவ்வொருவரும் தம் இதயக் கிடக்கையில் உள்ள ஆழமான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நண்பர்கள் காதலர்களாக மாறுவதைவிட, காதலர்கள் நண்பர்களாக மாறுவதே முக்கியம், கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள உறவு மிகவும் நெருக்கமானது, பிரிக்க இயலாதது. அதன் தன் காதலனிடம், "எனக்காக இருப்பீர்களா?" என்று கேட்டதற்கு அவள், "நம் காதல் இறவாக்காதல்" என்றான், உண்மையான அன்பு நிரந்தரமானது, சாகாத் தன்மையுடையது கிறிஸ்து தம்மவரை இறுதிவரை அன்பு செய்தார் (யோவா 1:3; 1 ); தம்மவருடன் உலகம் முடியும் வரை எந்நாளும் உடனிருக்கிறார் (மத் 24:30),

மணமுறிவு கடவுளின் திட்டத்திற்கு முரணானது. மணமுறிவை வெறுப்பதாகக் கடவுள் பழைய உடன் படிக்கையில் குறிப்பிடுகிறார் {மலா 2:15-16) மணவிலக்குச் சான்றிதழ் கொடுத்து மனைவியை விலக்கிவிட மோசே அனுமதி வழங்கியது மக்களின் கடின உள்ளத்தின் பொருட்டேயாகும். மணமுறிவினால் தடம்புரண்ட திருமண வாழ்வைக் கிறிஸ்து மீண்டும் அதன் தொடக்க நிலைக்குக் கொண்டுவந்து, "கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" (மாற் 10:9) என்று கண்டிப்பான கட்டளையைக கொடுத்தார்,

கடவுள் மனிதரை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். இது படைப்பின் மறைபொருள், ஆண் கிறிஸ்துவாகவும் பெண் திருச்சபையாகவும் மாறுகின்றனர், இது மீட்பின் மறைபொருள், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உடன்படிக்கை கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையே உள்ள உடன்படிக்கையில் ஊன்றி, அதற்குச் சாட்சியம் பகர்கிறது (எபே 5:25-32). இவ்வாறு படைப்பிலும் மீட்பிலும் திருமண அன்பு கடவுளின் நிலையான அன்பிற்கு இலக்கணமாய் அமைந்துள்ளது. மணமுறிவை நாடும் தம்பதியர் கடவுளின் உடன்படிக்கையை முறித்து கடவுளுக்கே துரோகம் செய்கின்றனர், திருமண அன்பு கணவன் - மனைவி என்ற குறுகிய வட்டத்தில் முடிவடையாது. அதன் மூன்றாம் பரிமாணமாகிய குழந்தைச் செல்வத்தில் முழுமையடைகிறது. குழந்தையானது மணமக்களின் கூட்டொருமை; அவர்களுடைய அன்பின் நிலையான நினைவுச் சின்னம். நல்ல மனைவியும் நல்ல மக்களும் ஆண்டவர் தமக்கு அஞ்சி நடப்போருக்கு அருளும் பேறு என்று இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது (திபா 128:3). திருமணத்தின் முறிவுபடாத தன்மையைப் பறைசாற்றிய உடனே, கிறிஸ்து குழந்தைகளை அரவணைத்து அவர்களுக்கு ஆசி வழங்குவது குறிப்பிடத்தக்கது (மாற் 10:13-18).

ஒரு கணவர் தம் மனைவியை என்னிடம் காட்டி, "சாமி! இவளுடன் 43 வருஷமா நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்றார். அதற்கு அவருடைய மனைவி, "சாமி, நரகத்தில் இருந்து கொண்டே 6 பிள்ளைகளைப் பெத்த இவரு. மோட்சத்தில் இருந்தாருனா எத்தனை பிள்ளைகளைப் பெற்றிருப்பாரோ?" என்றார். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்டாலும் நரகத்தில் வாழப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது, அன்பு உள்ள இல்லறம் சொர்க்கம்; அன்பு இல்லாத இல்லறம் நரகம்.

அன்பிலே இருவகை உண்டு. ஒன்று ஆள விரும்புகின்ற அன்பு, மற்றொன்று ஆட்பட விரும்புகிற அன்பு, ஆள விரும்புகிற அன்பு தன்னலமிக்க அன்பு, பிறரைப் பயன்படுத்தும் அன்பு, ஆட்பட விரும்புகிற அன்பு தியாகமிக்க அன்பு, பிறருக்குப் பயன்படுகின்ற அன்பு. கிறிஸ்துவின் அன்பு ஆளவிரும்புகிற அன்பு அல்ல, ஆட்பட விரும்புகின்ற அன்பு, "மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொன்பாடு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" (மாற் 10:45), தம்பதியர்களிடையே கிறிஸ்துவின் தியாகமிக்க அன்பு இருந்தால், நீதிமானின் பொறுமையையும் கடவுள் பக்தியையும் கடவுள் பயமற்றவர்கள் இழித்துரைக்கின்றனர், நீதிமானுக்கு எதிர் காலம் இல்லை என்று ஏளனம் செய்கின்றனர். ஆனால் சுடவுள் நீதிமான்களை எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார். "செருக்குற்றோர் எனக்கு எதிராக எழுத்து என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர், கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கிறார்" (திபா 54:3-4), தீமைக்குத் தீமை செய்பவர்களுக்கு கிடைப்பது ஒரு நாள் இன்பம், தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களுக்குக் கிடைப்பதோ நிரந்தர இன்பம்.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம், பொறுத்தார்க்குப்
பொன்றும் துரைசாம் புகழ் (குறள் 15)

 

 

 


மதிப்பிற்குரிய மறுபாதி

'தெ சிம்போசியம்' (The Symposium) என்ற தனது உரையாடலில், அரிஸ்டோஃபேனஸ் என்ற கதைமாந்தர் வழியாக, பிளேட்டோ 'உயிர்த்துணை' (soulmate) பற்றிய ஒரு கதையைப் பதிவுசெய்கின்றார். தொடக்கத்தில் மனிதர்களுக்கு நான்கு கைகள், நான்கு கால்கள், இருபக்கம் பார்க்கின்ற ஒரே தலை, மற்றும் ஆண், பெண், ஆண்-பெண் என்ற மூன்று பாலினம் இருந்ததாம். 'ஆண்,' சூரியனிடமிருந்தும், 'பெண்,' பூமியிடமிருந்தும், 'ஆண்-பெண்' நிலவிலிருந்தும் வந்தவர்களாம். மனிதர்கள் நிறைய ஆற்றலைக் கொண்டிருந்ததால் கடவுளர்கள் அவர்களைத் தங்களின் எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கினர். இவர்களை அழிக்க விரும்பிய கடவுளர்களுக்கு 'சேயுசு' ஒரு அறிவுரை கூறுகின்றார்: 'மனிதர்களை அழிக்க வேண்டாம். அவர்கள் ஒவ்வொருவரையும் இரண்டாக வெட்டி விடுவோம். தங்களின் மறுபாதியைத் தேடிக்கொண்டிருப்பதிலேயே அவர்கள் வாழ்க்கை கழிந்துவிடும். அவர்கள் அதிலேயே தங்கள் ஆற்றலை இழந்துவிடுவார்கள். நமக்கு எதிராக கிளர்ச்சி செய்ய மாட்டார்கள்.' கடவுளர்களுக்கு இந்த சேயுசின் இந்த அறிவுரை பிடித்திருக்க, மனிதர்களை இரண்டாக வெட்டிவிடுகின்றனர். அன்றுமுதல் இன்றுவரை ஒவ்வொருவரும் தன் உயிர்த்துணையை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

நிற்க.

மனிதர்கள் ஒவ்வொருவரும் தேடிக்கொண்டே இருக்கும் மறுபாதியே உயிர்த்துணை. இந்த உயிர்த்துணையின் மதிப்பையும், அதன் இன்றியமையாத நிலையையும் நமக்கு முன்வைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. ஒவ்வொருவரையும் அவரவர் மறுபாதியை மதிப்பிற்குரியதாக நடத்த உதவுவது நிரப்புதன்மை.

உயிர்த்துணை (soulmate), மறுபாதி (the other half), நிரப்புதன்மை (complementarity) என்ற மூன்று சொல்லாடல்களை முதலில் வரையறை செய்துகொள்வோம்.

1. உயிர்த்துணை

நம் தமிழ்மொழியில், திருமணத்தால் இணைக்கப்பெற்ற மனைவியை கணவரும், கணவரை மனைவியும், 'வாழ்க்கைத்துணை' என அழைக்கிறோம். 'உயிர்' மற்றும் 'வாழ்க்கை' என்னும் இரண்டு சொற்களுமே ஓரளவு மாற்றி பயன்படுத்தப்படக்கூடியவையே. 'துணை' ('help' or 'helper') எப்போது நமக்குத் தேவைப்படுகிறது? நம்மால் ஒன்றை நாமே செய்ய முடியாதபோது, அல்லது பயணம் செய்ய முடியாதபோது துணைக்கு ஒருவரை அழைக்கிறோம். ஆக, வாழ்வில் சேர்ந்து சுமக்கவும், சோர்ந்து விழாமல் பயணம் செய்யவும் உடன் வருபவர் வாழ்க்கைத் துணை. இவரை நாம், 'நுகத்தடித்துணை' என்றும் அழைக்கலாம். அதாவது, ஒரு கலப்பையை அல்லது வண்டிய இழுக்க இரண்டு மாடுகள் நுகத்தில் பூட்டப்பட வேண்டும். நுகத்தில் பூட்டப்படும் இரண்டு மாடுகளுமே ஒரே அளவு, வலிமை, நகர்வு கொண்டிருக்க வேண்டும். ஆக, வாழ்க்கை என்ற வண்டியை இழுக்க, நுகத்தோடு இணையும் துணையே உயிர்த்துணை.

2. மறுபாதி

'பகுதி' என்பதுதான் 'பாதி' என மருவி வந்திருக்கிறது என்கிறது தமிழ் இலக்கணம். 'மறுபாதி' அல்லது 'மறு பகுதி' என்று சொல்லும்போது, அதில் 'ஒருபாதி' அல்லது 'ஒரு பகுதி' மறைந்திருக்கிறது. 'ஒரு பகுதியின்' மீதியே 'மறு பகுதி.' ஆக, கணவர் 'ஒருபாதி' என்றால், மனைவி 'மறுபாதி.'

3. நிரப்புதன்மை

பகல்-இரவு, ஒளி-இருள் என்ற இருதுருவங்களை எடுத்துக்கொள்வோம். இத்துருவங்கள் ஒன்றோடொன்று எதிர்த்து நிற்பவை அல்ல. மாறாக, ஒன்றோடொன்று பொருந்தக்கூடியவை. அல்லது ஒன்றையொன்று நிரப்பக்கூடியவை. பகல் இரவையும், ஒளி இருளையும் நிரப்புவதுபோல, ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் நிரப்புகின்றனர்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு, மேற்காணும் மூன்று சொல்லாடல்களைக்கொண்ட ஒரு முக்கோணமாக நகர்கிறது.

முதல் வாசகத்திலிருந்து (காண். தொநூ 2:18-24) நம் சிந்தனையைத் தொடங்குவோம்.

இன்றைய முதல் வாசகத்தை நான்கு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

1. ஆதாமை வாட்டும் தனிமை
2. இந்த தனிமைக்கு இறைவனே தன் படைப்புப் பொருளில் ஆள் தேடுகின்றார்
3. தனிமை போக்க பெண்ணைப் படைக்கின்றார்
4. ஆண்-பெண் இணைந்திருத்தலின் நோக்கம் கற்பிக்கப்படுகின்றது

கடவுள் தான் படைத்த அனைத்தையும் பெயரிடுமாறு ஆதாமிடம் கொண்டு வருகின்றார். பெயரிடுதல் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு: ஒன்று, பெயரிடுதல் ஒருவர் மற்றவர்மேல் கொண்டிருக்கின்ற அதிகாரத்தைக் குறிக்கின்றது. இரண்டு, பெயரிடுதல் ஒருவர் மற்றவருக்கு மேல் உள்ள உரிமையை அல்லது உறவைக் குறிக்கின்றது. இதில் என்ன விந்தை என்றால், எல்லாவற்றிற்கும் பெயரிடும் ஆதாமால் தான் உறவுகொள்ள தனக்கேற்ற துணை எதுவும் இல்லை என்பதுதான். ஆதாமுக்கு ஆழ்ந்த தூக்கம் வரச்செய்த இறைவன் அவனது உடலிலுள்ள விலா எலும்பில் ஒன்றை எடுத்து பெண்ணாகப் படைக்கின்றார். பெண்ணைக் கண்டவுடன், 'இவளே என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள். 'ஈஷ்'இடமிருந்து எடுக்கப்பட்டதால் 'ஈஷா' என்றழைக்கப்படுவாள் என்று பெண்ணுக்கு பெயர் கொடுக்கின்றான் ஆதாம். இறுதியாக, ஆண்-பெண் இணைந்திருப்பதின் நோக்கம் என்ன என்பது கற்பிக்கப்படுகின்றது.

தனிமை என்பது 'துணையின்மை' என்று கொடுக்கப்பட்டுள்ளது. தனிமை என்பது ஒரு உணர்வு. தனித்திருப்பது என்பது ஒரு எதார்த்தம். உதாரணத்திற்கு, நான் வேலையினிமித்தம் சென்னை செல்கிறேன் என வைத்துக்கொள்வோம். மதுரையில் என் வீட்டோடு தங்கியிருக்கும் நான் சென்னைக்குச் சென்று ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்குகிறேன். ஆக, சென்னையில் நான் தனித்திருக்கிறேன். ஆனால், நான் தனிமையாய் உணரத் தேவையில்லை. என் வீட்டில் இருப்பவர்களோடு ஃபோனில் பேசலாம். டிவி பார்க்கலாம். தூங்கலாம். புத்தகம் வாசிக்கலாம். புதிய மனிதர்களோடு அறிமுகம் செய்து கொள்ளலாம். தனிமையில்லாமலும் தனித்திருக்கலாம். தனித்திருக்காமலும் தனிமை இருக்கலாம். சில நேரங்களில் என் வீட்டில் எல்லாரும் சூழ்ந்திருந்தாலும் தனிமை என்ற உணர்வு என்னை வாட்டி எடுக்கலாம். இதுவரை தான் படைத்த அனைத்தும் 'நன்று', 'நன்று' என்ற கடவுள், முதன் முறையாக 'மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதன்று!' என்று வருத்தப்படுகின்றார். ஆக, தனிமை என்ற உணர்விற்கு மருந்தாக முன்வைக்கப்படுபவர் பெண்.

அடுத்ததாக, 'தனக்கு தகுந்த துணையை மனிதன் காணவில்லை' என்கிறது பாடம். ஆக, ஆதாம் இதுவரை பெயரிட்ட மரங்கள், விலங்குகள் அனைத்தும் அவனுக்கு கீழே இருப்பவை. அவனுக்கு நிகராக இருக்கும் 'துணை' அங்கு இல்லை. இந்தத் துணையை ஆணின் விலா எலும்பிலிருந்து உருவாக்குகிறார் கடவுள். மேலும், எடுத்த இடத்தை சதையால் அடைக்கிறார். என்ன ஒரு விந்தை? 'எலும்பு சதையால் அடைக்கப்படுகிறது. எலும்பு ஒரு சதையாக உருப்பெறுகிறது.' அதாவது, 'கடினம்' என்னும் இயல்பு, 'மென்மை' என்ற இயல்பாக மாறுகிறது. மேலும், 'கடினம்' என்ற இயல்பை, 'மென்மை' என்ற இயல்பு நிரப்புகிறது. ஆணின் தலையிலிருந்து பெண் எடுக்கப்படவில்லை. ஆகவே, அவள் ஆணை ஆட்சி செலுத்த முடியாது. ஆணின் காலிலிருந்து அவள் எடுக்கப்படவில்லை. ஆகவே, அவள் ஆணுக்கு அடங்கி இருக்க முடியாது. மாறாக, அவள் விலா எலும்பிலிருந்து, இதயத்திற்கு அருகில் இருந்து எடுக்கப்படுகிறாள். ஆகவே, அவள் ஆணுக்குச் சமமாக இருக்கிறாள். ஆண் அவளை இதயத்திற்கு அருகில் வைக்க வேண்டும். பெண் அந்த இதயத்தைக் காப்பாற்ற வேண்டும்.

இறுதியாக, திருமணத்தின் நோக்கம். 'கணவன் தன் தாய் தந்தையை விட்டு' (தொநூ 2:24) என்ற இந்த வசனம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இங்கே ஆதாம்-ஏவாள்தான் முதற்பெற்றோர். இவர்களுக்குத் தாய் தந்தையர் யாருமில்லை. திருமணத்தில் ஆண் தன் பெற்றோரை விட்டு பெண்ணோடு சேரும் பழக்கம் நம் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. நம் கலாச்சாரத்தில் பெண்தான் தாய் தந்தையைவிட்டு தன் கணவனோடு கூடி வருகின்றார். திருமண உறவில் நிகழும் பெரிய மாற்றம் என்னவென்றால் ஆணும், பெண்ணும் புதிதாய்ப் பிறக்கின்றனர். இனி பழைய உறவுகளை அவர்கள் பிடித்துக் கொண்டிருத்தல் கூடாது. ஆக, ஒருவர் மற்றவரை அன்பு செய்யத் தங்களையே அவர்கள் முழுவதுமாக ஒருவர் மற்றவருக்குக் கையளித்தல் வேண்டும்.

முதல் வாசகத்தின் பின்புலத்தில் பார்க்கும்போது, 'ஆணுக்கு' ஏற்ற உயிர்த்துணையாக 'பெண்' இருக்கிறாள். ஒரே உடலிலிருந்து எடுக்கப்பட்டதால், 'ஆண்' என்ற ஒருபாதியின் மறுபாதியாக இருக்கிறார் 'பெண்.' மேலும், இங்கே ஒருவர் மற்றவரின் தனிமையை நிரப்புவதால், ஆண்மையும், பெண்மையும் நிரப்புதன்மை கொண்டிருக்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபி 2:9-11) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களுக்கு இத்திருமடலிலிருந்துதான் வாசகங்கள் தொடரும். 'வானதூதர்கள்,' 'மனிதர்கள்' என்ற இரண்டு பரந்த வகையினத்தைப் பற்றிப் பேசுகின்ற திருமடலின் ஆசிரியர், 'வானதூதர்களுக்கு மேலாக' இருந்த இயேசு, தான் மனித உரு ஏற்றபோது, அந்த நிலையிலிருந்து 'தாழ்ந்தவராக' இருக்கிறார் என்று முன்வைக்கின்றார். இவரின் இந்த இறங்கிவருதலே, அவர் மனிதர்களை, 'சகோதரர், சகோதரிகள்' என்று அவர் அழைக்கக் காரணமாக இருக்கிறது. அதாவது, 'இயேசு இவர்களைச் சகோதரர், சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை' என பதிவு செய்கிறார் ஆசிரியர். 'கடவுளாக' இருந்த இயேசு, 'மனித' உரு ஏற்றதால், மனிதர்களை அவர் தம் 'உயிர்த்துணையாக' ஏற்றுக்கொள்கின்றார். மனிதராக அவர் மாறியது எதற்காக? மனிதர்களைத் தூய்மையாக்கவதற்காக. அதாவது, மனிதத்தின் மறுபாதியான தூய்மையை அவர்கள் கண்டுகொள்வதற்காக. இறுதியாக, இயேசுவின் மனித உரு ஏற்ற நிலை அவரை - கடவுளை - மனிதர்களோடு நிரப்புகிறது. இவ்வாறாக, கடவுளும் மனிதர்களும் ஒருவரையொருவர் எதிர்த்து நிற்பவர்களாக அல்லாமல், நிரப்புபவர்களாக மாறுகின்றனர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தை (காண். மாற் 10:2-16) இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்:

1. மணவிலக்கு பற்றிய இயேசுவின் போதனை (10:2-12)
2. இயேசு சிறுபிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல் (10:13-16)

1. மணவிலக்கு அல்லது மணமுறிவு

இயேசுவின் காலத்தில் புழக்கத்தில் இருந்த மணமுறிவு பற்றி கட்டளை அல்லது விதிமுறை ஆணைக் காப்பாற்றும் முகமாகவும், பெண்ணை இழிவுபடுத்தக்கூடியதாகவும் இருந்தது. இயேசு அந்த விதிமுறை கொண்டிருந்த அவலத்தை தோலுரிக்கின்றார். மணவிலக்கு என்பது பற்றிய இயேசுவின் போதனை படைப்புத் திட்டத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. படைப்புத் திட்டத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிய இடம் இருக்கிறது என்றும், இதில் தடுமாற்றம் நிகழும்போது மனிதர்கள் கடவுளின் படைப்புத் திட்டத்தோடே விளையாடுகிறார்கள் என்று மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றார் இயேசு. மேலும், மணமுறிவு விபச்சாரத்திற்கு வழிவகுக்கிறது என்பதும் இயேசுவின் போதனை. விபச்சாரத்தில் பெண் விலை பேசப்படுகின்றார். விபச்சாரத்தில் பெண் வெறும் மோகப்பொருளாகப் பயன்படுத்துகின்றார். அன்பு செய்யப்படுவதற்காக படைக்கப்பட்ட ஒன்றை பொருள் போல பயன்படுத்தத் துவங்குவது படைத்தவரையே இழிவு செய்வதாகும்.

ஆண் மற்றும் பெண் படைக்கப்பட்டது ஒருவருக்கொருவர் உயிர்த்துணையாக இருப்பதற்குத்தானே தவிர, ஒருவர் மற்றவரின் 'உடல்துணையாக' இருப்பதற்கு அல்ல. வெறும் உடல்துணையாக தன் மறுபாதியை கருதும்போதுதான், மணமுறிவு, விபச்சாரம், திருமணத்திற்குப் புறம்பே உறவு போன்றவை தோன்றுகின்றன. மேலும், இப்படிப்பட்ட பிறழ்வுகளில் மனிதர்கள் தங்களுக்கான மறுபாதியை பல மறுபாதிகளில் தேடி அங்கலாய்க்கின்றனர். இறுதியில், ஒருவருக்கொருவர் உள்ள நிரப்புதன்மை மறைந்து, எதிர்தன்மை வளர ஆரம்பிக்கிறது.

2. குழந்தைகள் ஆசீர் பெறுதல்

இயேசு குழந்தைகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வையும் மாற்கு நற்செய்தியாளர் தொடர்ந்து பதிவு செய்வது, திருமணத்தின் நிறைவு குழந்தைப்பேறு என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

'குழந்தைகள்' திருமண உறவின் நீட்சிகள். 'பெற்றோர்' என்பவர்களின் 'வாழ்க்கைத்துணை' 'குழந்தைகள்.' 'பெற்றோர் நிலையின்' மறுபாதிதான் 'பிள்ளைநிலை'. மேலும், பெற்றோர் பிள்ளைகளை, பிள்ளைகள் பெற்றோரை நிரப்புகின்றனர்.

இவ்வாறாக, இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும், ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள மறுபாதி நிலை மற்றும் நிரப்புதன்மையையும், இரண்டாம் வாசகம், கடவுளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள மறுபாதி நிலை மற்றும் நிரப்புதன்மையையும், நற்செய்தி வாசகம், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள மறுபாதி நிலை மற்றும் நிரப்புதன்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

இன்றைய நம் வாழ்க்கைச் சூழலில், இம் மறுபாதி நிலையும், நிரப்புதன்மையும் முன்வைக்கும் சவால்கள் எவை?

ஒரே பாலின திருமணம், திருமணம் தவிர்த்த குழந்தைப்பேறு, தனக்குத்தானே திருமணம், தனிப்பெற்றோர், இணைந்து வாழ்தல், ஒப்பந்த திருமணம் என இன்று திருமணம் பல பரிமாணங்களை எடுத்துவிட்டது. மேலும், திருமணத்திற்கு புறம்பான உறவு 'பிரமாணிக்கமின்மையாக' பார்க்கப்பட்ட நிலை மாறி, 'விருப்பநிலை' என்று ஏற்றுக்கொள்ளும் நிலை வந்துவிட்டது. காலப்போக்கில், அறிவியில் மற்றும் விஞ்ஞான மாற்றத்தால் ஒருவேளை மனிதர்கள் இறவாநிலையை அடைந்தார்கள் என்றால் - அதாவது, இயற்கை மரணத்தை தள்ளிப்போடுவது - முதலில் உடையும் நிறுவனம் திருமணமாகத்தான் இருக்கும். ஏனெனில், 200 அல்லது 300 ஆண்டுகள் வரை வாழும் மனிதர் ஒரே வாழ்க்கைத் துணையோடு வாழும் நிலை எப்படி இருக்கும்? மேலும், இன்று ஆண்-பெண், கணவன்-மனைவி உறவு நிலையில் சகிப்புத்தன்மை குறைந்துகொண்டே வருவதும் கண்கூடு.

நாம் இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் பேசும் 'உயிர்த்துணை,' 'மறுபாதி,' 'நிரப்புதன்மை' ஆகியவை சாத்தியமா?

முதலில், இந்த மூன்று சொற்களுக்கும் மையமாக இருக்க வேண்டிய வார்த்தை மதிப்பு. அது என்ன மதிப்பு?

ஆண்-பெண் திருமண உறவில், நீதி மற்றும் அன்பைவிட முக்கியமானதாக இருக்க வேண்டிய ஒரு பண்பு என்னவென்றால் மதிப்பு. அதாவது, ஒருவர் மற்றவரை மதித்தல். மதித்தால்தான் நீதிக்கும் அன்புக்கும் அடித்தளமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, நான் சாலையில் நடந்து செல்கிறேன். வழியில் ஒருவர் கேட்பாரின்றி படுத்திருக்கிறார். அவரை நான் மதித்தால்தான் அவருக்கு அருகில் சென்று அவரை நான் அன்பு செய்யவும், அவருக்கான நீதியை நான் பெறவும் முடியும். 'அவர் யாரே' என நான் வெறும் பிளாஸ்டிக் பேப்பர் போல அவரை நினைத்துக்கொண்டு கடந்து சென்றால், அவரை நான் மதிப்பதில்லைதானே.

ஆக, 'மதிப்பு' இருக்கும் இடத்தில் பிரமாணிக்கமின்மை மறையும். 'மதிப்பு' இருக்கும் இடத்தில் புரிதல் இருக்கும். இன்று, திருமண உறவோ, அல்லது துறவற உறவோ, அல்லது நட்பு உறவோ, அங்கே நம்மோடு உறவில் இருப்பவர் நம் மறுபாதியாக, நம் உயிர்த்துணையாக, நம்மை நிரப்புபவராக இருக்கிறார். அவருக்கு நான் கொடுக்க வேண்டியதெல்லாம் மதிப்பு மட்டுமே. அவர் 'என் மதிப்பிற்குரிய மறுபாதி' என்ற நிலை வந்தால் பாதி பிரச்சினை முடிந்துவிடும்.

இரண்டாவதாக, கண்ணுக்குப் புலப்படாத இறைத்தன்மை. நம் சக பாதியை, சக உயிர்த்துணையை நாம் வெறும் புறக்கண்களால் பார்த்தால் அவருடைய மனிதத்தன்மையும், குறைவும்தான் நம் கண்களில் படும். மாறாக, மற்றவரில் இருக்கும் இறைத்தன்மையை, அல்லது இறைவனின் கண் கொண்டு மற்றவரைப் பார்க்கும்போது, நாமும் ஆதாம்போல, 'இதோ, இவர் என் எலும்பின் எலும்பு, சதையின் சதை' என்று நாமும் சொல்ல முடியும்.

மூன்றாவதாக, ஒருவர் மற்றவரின் கைப்பாவை என்ற நிலை மாற வேண்டும். எப்படி?

கண்ணாடிப் பொருள்களை நாம் இடமாற்றம் செய்யும்போது, அவற்றை நாம் பொதியம் செய்து, அதன் மேல், 'உடையும் பொருள் - கவனம்' என எழுதுகிறோம். ஆனால், இப்படி எழுதப்படாத ஒட்டி ஒன்றை ஒவ்வொரு மனிதரும் தன்மேல் ஒட்டிக்கொண்டிருக்கிறார். மனிதர்கள் தங்களுக்குள்ளே உணர்ந்த முதல் எதிர்மறை உணர்வு 'தனிமை.' இந்தத் தனிமையே மனிதரின் 'வடுப்படும்நிலை' ('vulnerability') அல்லது 'நொறுங்குநிலை' (fragility) இந்த நொறுங்குநிலையில் இருக்கும் ஒரு ஆண், இதே நொறுங்குநிலையில் இருக்கும் பெண்ணின் துணையை நாடுகிறான். படைப்பின் தொடக்கத்தில் அனைத்தையும் நல்லதெனக் கண்ட கடவுள், 'மனித தனிமையை மட்டும் நல்லதன்று' (முதல் வாசகம்) என அறிகிறார். இத்தனிமையைப் போக்க தக்க துணை ஒன்றை படைக்கின்றார். பெண் ஆணிடமிருந்து எடுக்கப்பட்ட விலா எலும்பில் உருவாக்கப்பட்டவள் என்று உருவகப்படுத்துவதன் வழியாக, உடைத்து எடுக்கப்பட்ட விலாவிலிருந்து எடுக்கப்பட்ட பெண் தானும் உடைந்திருப்பதால், உடைந்திருக்கும் ஆணை உறுதிப்படுத்துவது தொடர் போராட்டமாகவே இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. 'இதோ, இவளே என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள்' என ஆண் அவனை அரவணைத்துக்கொண்டாலும், 'இருவரும் ஒரே உடலாய் இருந்தாலும்,' 'எப்போது நாம் பிரிந்துவிடுவோமோ?' என்ற பயம் இருவரிடமும் இருந்துகொண்டே இருக்கும். மோசேயின் சட்டம் 'மணவிலக்குச் சான்றிதழ் கொடுத்து மனைவியை விலக்கிவிடலாம்' (நற்செய்தி வாசகம்) என்று ஆணுக்கு அதிகாரம் கொடுத்திருந்ததால், பெண் ஆணின் இரக்கத்திலேயே இருக்க வேண்டிய பொம்மை ஆனாள். பாவை (பெண்) ஆணின் கைப்பாவை ஆனாள். தன் மனைவியை விலக்கிவிடும் ஆண் மீண்டும் தனிமை ஆகிறான். அந்தத் தனிமை என்னும் உடைந்த நிலைக்கு முட்டுக்கொடுக்க வேறொரு பெண்ணை நாடுகிறான். அங்கே வேறொரு பெண்ணும் பொருளாக பயன்படுத்தப்படுகிறாள். ஆண்-பெண் உறவு தனிமை போக்கும் இனிமையாக மாறுவது எப்படி? இருவர் உறவில் இருக்கும் பயன்பாட்டுநிலை மறைந்து அன்பு உருவாவது எப்படி? இரண்டு வழிகள்: (அ) ஒருவர் மற்றவரின் 'நொறுங்குநிலையை' புரிந்துகொள்வது. இறைமகன் இயேசுவே மனித 'நொறுங்குநிலையை' புரிந்துகொள்ள மனிதராக வருகின்றார். மனிதர்களை தன் 'சகோதர, சகோதரிகள் என அழைக்க அவர் வெட்கப்படவில்லை' (இரண்டாம் வாசகம்). (ஆ) கணவன் மனைவியை, மனைவி கணவனை தன் குழந்தைபோல ஏற்றுக்கொள்வது. குழந்தைகளின் நொறுங்குநிலையை நாம் எப்படி மதிக்கிறோமோ, அப்படி ஒருவர் மற்றவரின் நொறுங்குநிலையை மதிப்பது. இம்மேலான புரிதலில் இருப்பவர்களுக்கு ஆண்டவர் வாழ்நாளெல்லாம் ஆசி வழங்குவார் (திபா 128).

இறுதியாக, பாதியாக இருக்கும் நம்மை வாட்டுவது தனிமையும், சோர்வும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம் மறுபாதிகள். இவர்களை மதிப்புற்குரியவர்கள் என நாம் எண்ணி செயலாற்றும்போதும், நாம் ஒருவர் மற்றவரை நிரப்ப முடியும். 'என் சுண்டுவிரலை நகர்த்தும்போது எங்கோ தெரியும் நட்சத்திரத்தை நகர்த்துகிறேன்' என்ற நிலையில் நான் மற்றவரோடு இணைந்திருக்கிறேன். இந்த இணைந்திருத்தலில் மதிப்பு இருந்தால் அங்கே நிரப்புதன்மை நிரம்பி வழியும்.

Monday, 24 September 2018

ஆண்டின் பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்


எண். 11:25-29
யாக். 51-6
மாற் 8:38-48

தூய ஆவியானவரின் செயல்பாடு


ஜோசப், மேரி என்ற படித்த பட்டதாரிகள் இருவரும் திருமண வாழ்வில் கணவன் மனைவியாக தங்களை இணைத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்களின் திருமண வாழ்வு நீடிய நாட்கள் நிலைக்கவில்லை. காரணம் ஜோசப் பரம்பரை சம்பிரதாயத்தில் கலந்தவர், பழமைவாதி. எப்போதும் ஆண் அதிகாரம் காட்டுபவர். ஆனால் மேரியோ காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்ளும் புதுமைப்பெண். அடிக்கடி ஜோசப் சொல்வான்: நான் உன் கணவன். நீ என் மனைவி. நீ எனக்குக் கட்டுப்பட்டுத்தான் இருக்க வேண்டும். இந்த நிலை மேரியைப் பொறுமையற்ற, சகிக்க இயலா நிலைக்கு இட்டுச் சென்றது. 

இதனால் சில மாதங்களிலே திருமண முறிவுக்கு இட்டுச் செல்லப்பட்டார்கள்.
இன்று சகிக்க இயலா நிலைக்குச் சமுதாயத்தில் பலர் தள்ளப்படுகிறார்கள். குடும்பத்திலே கணவன், மனைவி, பெற்றோர் பிள்ளைகள், மாமி, மருமகள் எல்லாரிடமும் இந்த நிலை அதிகமாக நிற்கிறது. இன்றைய இந்தியாவிலே பரம்பரைவாதிகள் தான் பெரும்பான்மையினர், சக்தி வாய்ந்தவர்கள் என்பதை நினைத்து சிறுபான்மையோருக்கு உரிமை கிடையாது என்கின்ற மனநிலை உருவாவதைப் பார்க்கிறோம். இதனால் சிறுபான்மையோரின் உரிமையைப் பறிக்கப் பார்க்கிறார்கள். அரசியலிலும், கலாச்சாரத்திலும் சாதிக் குருக்கள், மற்றவர்களைத் தடை செய்வதை நாம் பார்க்கிறோம்.

காரணம் என்ன?

இதற்கெல்லாம் அடிப்படையாக அமைவது நான் என்ற அகந்தை. அகந்தையான மனிதன் தான் நினைப்பதும், செய்வதும் சரிதான் என கருதுகிறான். என்னை எதிர்ப்பவர் எல்லாம் தவிடுபொடியாவார்கள் என்ற நிலைக்கு இவன் தள்ளப்படுகிறான். 

இதைத்தான் புனித யாகப்பர் ஒரு மனிதனின் துருப்பிடித்த இதயம் அவனை அணு அணுவாகக் கொல்லும் (யாக. 5:3) என்று அழகாக எச்சரிக்கை தருகின்றார். அகங்காரம் கொண்டவன் ஆவியின் தூண்டுதலுக்குத் தன்னை ஆளாக்குவதில்லை (தி. பாடல் 19:13).

இன்றைய நற்செய்திக்கு வாருங்கள். இரண்டுபேர் கூடாரத்தில் இறைவாக்கு உரைத்தபோது ஒருவனைத் தடுக்க யோசுவா மோயீசனைக் கேட்டார். மோயீசனோ அதைக் கடிந்து கொண்டார் (எண் 11:25-29). ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தூதர்கள் மட்டும்தான் பேய்களை ஓட்ட வேண்டும். மற்றவர் கூடாது எனத் தடை போட்ட சீடர்களைப் பார்த்து: தடுக்காதீர்கள், ஆவியானவர் எங்கும் ஆற்றல் புரிபவர் என்றார். நற்செய்தியிலே இரு இடங்களில் ஆண்டவர் இயேசுவின் பெரும் பாராட்டைப் பெற்றவர்கள் யார் தெரியுமா? புறவினத்தார்கள் தான். இஸ்ரயேல் மக்களிடத்தில் இத்தகைய விசுவாசத்தை நான் கண்டதே இல்லை. ஆனால் என்னே இந்த செந்தூரியன் விசுவாசம் (மத். 8:10) என்றார் இயேசு. அம்மா உன் விசுவாசம் பெரிது என்று கனானியப் பெண்ணைப் பார்த்து இயேசு பாராட்டவில்லையா (மத். 15:28).

அன்பார்ந்தவர்களே ஆவியானவரால் நிரப்பப்பட்டு அப்போஸ்தலர்களின் வாரிசான ஆயர்கள், உரோமையில் கூடிய இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் முழக்கமிட்ட ஓர் உண்மையை நாம் மறந்து விடக்கூடாது. அதாவது, மற்ற மறைகளில் மனித மீட்புக்காகச் சிதறிக்கிடக்கும் உண்மைகளைத் திருச்சபை என்றும் ஏற்க மறுக்காது.

ஏன்! நம் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் கடந்த காலங்களில் சகிப்புத் தன்மையற்ற நிலையிலே, ஆணவத்தால் எடுத்த சில நிலைகளுக்குப் பொது மன்னிப்பு கேட்கும் நிலைக்குத் தன்னைத் தாழ்த்தினார் அல்லவா. நாம் இன்று ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்க வேண்டும். நாம் புனித பவுல் அடிகளார் கூறுவதுபோல இயேசுவின் மனநிலையை (பிலி. 2:5) கொண்டிருக்கிறோமா? தன்னையே வெறுமையாக்கி, சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்த நம் ஆண்டவரின் மனநிலை நம்மிடம் உண்டா! அல்லது நம் மனித ஆவியின் தூண்டுதலுக்கு அடிமையாகி அடுத்தவனை வரவிடாது, வாழவிடாது நாம் நினைப்பதும் செய்வதும் தான் சரி என்ற நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறோமா?

கொடுப்பவர்களுக்குக் கொடுக்கப்படும்.


இன்றைய நற்செய்தியின் வழியாக, கொடுப்பவர்களுக்குக் கடவுள் தவறாது கைம்மாறு, பரிசு தருவார் என்ற உண்மையை ஆணித்தரமாக இயேசு நமக்குக் கற்பிக்கின்றார். மீட்பின் வரலாற்றிலே, கொடுத்தவர்கள் அத்தனை பேரையும் கடவுள் தவறாது ஆசிர்வதித்திருக்கின்றார். இதோ சில விவிலியச் சான்றுகள். தொநூ 18:1-14 : ஆபிரகாமுக்கும், சாராவுக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் கொஞ்சி விளையாட பிஞ்சு நெஞ்சம் ஒன்று அந்த வீட்டில் பிறக்கவில்லை ! ஒரு நாள் கவலையால் கலங்கி நின்ற ஆபிரகாம் மூன்று மனிதர்களைக் கண்டார். கூடாரத்தை விட்டு வெளியே சென்று அந்த மூன்று மனிதர்களையும் கூடாரத்திற்கு அழைத்து வந்தார். அவர்களது களைப்பு நீங்க அவர்களுக்கு விருந்து படைத்தார். அந்த மனிதர்கள் மூவரும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள், தங்கள் மீது அன்பைப் பொழிந்த ஆபிரகாமைப் பார்த்து, ஆண் ட வரால் ஆகாதது எதுவும் உண்டோ ? சாராவுக்கு ஒரு மகன் பிறப்பான் என்றார்கள். கடவுளால் வாக்களிக்கப்பட்ட படியே ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் ஈசாக்கு பிறந்தார் (தொநூ 21:1-8). ஆம். கொடுப்பவர்களுக்குக் கொடுக்கப்படும்.

1 அர 17:8-16 : ஊரெல்லாம், நாடெல்லாம் பஞ்சம் ! அப்போது இறைவாக்கினர் எலியா ஒரு கைம்பெண்ணிடம் கொஞ்சம் அப்பமும், தண்ணீரும் கேட்டார். அந்தக் கைம்பெண்ணோ , வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை : பானையில் கையளவு மாவும், கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே உள்ளன. இதோ,

இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன்பின் சாகத்தான் வேண்டும் என்றாள். ஆனால் எலியாவோ, கொடு, உனக்குக் கொடுக்கப்படும் என்றார். அவள் கொடுத்தாள். பானையிலிருந்த மாவும் தீரவில்லை. கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை. ஆம், கொடுப்பவர்களுக்குக் கொடுக்கப்படும்.

யோவான் 2:1-11: கானாவூர் திருமண வீட்டார் இயேசுவிடம் தண்ணீரைக் கொடுத்தார்கள். அவர்களுக்குத் திராட்சை இரசம் கிடைத்தது. யோவான் 6:1-13: கூட்டத்திலிருந்த சிறுவன் ஒருவன் ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொடுத்தான். கூட்டத்திலிருந்த எல்லாருக்கும் உணவு கிடைத்தது. ஆம். கொடுப்பவர்களுக்கு கொடுக்கப்படும். கொடுக்கப்படாதவை அனைத்தும் அழிந்து போகும் ; அழிந்து போனவை கொடுக்காதவர்களின் உயிருக்கு உலை வைக்கும் (இரண்டாம் வாசகம்). நமது கடவுள் எடுக்கின்ற கடவுள் அல்ல ; கொடுக்கின்ற கடவுள். தனது ஒரே மகனையே உலகுக்குக் கொடுத்தவர் நம் கடவுள் (யோவா 3:16). தமது ஆவியை அனைவர் மீதும் பொழிந்தவர் நம் கடவுள் (முதல் வாசகம்). சுயநலவாதிக்கும் சொர்க்கத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.

மேலும் அறிவோம் :
கொடுப்பதூம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் (குறள் : 1005).

பொருள் : பிறருக்கு வழங்கவும் தாம் நுகர்வதும் ஆகிய செல்வத்தின் இரு பயன்பாடும் இல்லாதவரிடம் கோடிக்கணக்கில் பொருள் குவிந்திருந்தாலும் அவை செல்வமாக மதிக்கப்படாமல் போகும்!


கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கும் லூத்தரன் சபைக் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியைக் காண்பதற்காகக் கிறிஸ்துவும் வந்திருந்தார், முதலில் லூத்தரன் சபையினரும் பின்னர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும் 'கோல்" போட்டபோது கிறிஸ்து பலமாகக் கைதட்டி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் அவரிடம், "ஆண்டவரே! நீங்கள் எந்த சபையில் இருக்கிறீர்கள்? கத்தோலிக்க சபையிலா? அல்லது லூத்தரன் சபையிலா?" என்று கேட்டனர், அதற்குக் கிறிஸ்து, "நான் இப்போது கால்பந்து விளையாட்டை ரசித்துக் கொண்டிருக்கிறேன். எந்தச் சபை 'கோல்' போட்டாலும் எனக்கு மகிழ்ச்சியே" என்றார்.

இக்கதை நமக்கு உணர்த்தும் உண்மை ; "கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர், உண்மையும் நன்மையும் எங்கிருந்தாலும் அவை கடவுளுக்கே உரித்தானவை. அவற்றைக் கண்டு கடவுள் மகிழ்ச்சி அடைகிறார்," சுருக்கமாக, "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை. எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்" (திப 10:34). கடவுளின் செயல்பாட்டை ஒரு குறுகிய வட்டத்திற்குள் வரையறுக்க முடியாது என்ற கருத்தை இன்றைய அருள்வாக்கு வழிபாடு உணர்த்துகிறது.

பழைய உடன்படிக்கையில் மோசேவுக்கு உதவி செய்வதற்காக 70 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அவர்களும் மோசேயிடம் இருந்த கடவுளின் ஆவியில் பங்கு பெற்று இறைவாக்கு உரைத்தனர். ஆனால் இக்குழுவைச் சாராத இருவர் இறைவாக்கு உரைத்தபோது, யோசுவா அவர்களைத் தடை செய்யும்படி மோசேயிடம் கேட்டார், மோசே அவ்வாறு தடை செய்யாமல், எல்லாருமே கடவுளுடைய ஆவியைப் பெற்று இறைவாக்கு உரைத்தால் நலமாயிருக்கும் என்றார் (எண்11:2529). தமக்கிருந்த வல்லமை மற்றவர்களிடமும் விளங்கியதைக் கண்டு மோசே பொறாமை அடையாது மகிழ்ச்சி அடைகிறார், அவரிடம் குறுகிய மனப்பான்மை இல்னல்), "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த மனப்பான்மை கொண்டு விளங்கினார்.

இன்றைய நற்செய்தியில், கிறிஸ்துவின் சீடர்களைச் சாராத ஒருவர் கிறிஸ்துவின் பெயரால் பேயோட்டுவதைக் கண்ட சீடர்கள் அவரைத் தடை செய்ய முயன்றனர், ஆனால் கிறிஸ்துவோ அவ்வாறு தடைசெய்ய வேண்டாம் என்று கூறியதோடு, தமக்கு எதிராக இல்லாதவர் தமக்குச் சார்பாக இருக்கின்றார் என்றும் கூறினார் (மாற் 1:39-40),

குருக்கள் மட்டும் தானே நோயாளிகா மீது கைகளை விரித்துக் செபிக்கலாம், ஆனால், இப்போது பொதுநிலையினரும் அவ்வாறு செய்கின்றார்களே என்று ஒரு சிலர் ஆதங்கப் படுகின்றனர். அவர்களுடைய ஆதங்கம் தேவையற்றது. கடவுள் தமது வல்லமையை அருள்பணியாளர்கள் வாயிலாக மட்டுமல்ல, பொதுநிலையினர் வாயிலாகவும் வெளிப்படுத்தலாம். திருமுழுக்குப் பெற்ற அனைவரும் தூய ஆவியால் திருநிலைப்படுத்தப்பட்டு, கிறிஸ்துவின் பொதுக்குருத்துவத்தில் பங்கு பெறுகின்றார், 'நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினார்' (1பேது 2:9), “நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவு உங்களுள் நிலைத்திருக்கிறது" (1 யோவா 2:27), தூய ஆவியாரையும் கடவுளுடைய வார்த்தையையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்த இயலாது. க சற்று தாம் விரும்பும் திசையில் வீசுகிறது. ஆவியின் செயல்பாடும் அவ்வாறே உள்ளது (யோவா 3:8) கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது (2 திமொ 2:9). கடவுள் எல்லாருக்கும் தந்தை; இயேசு கிறிஸ்து எல்லாருக்கும் மீட்பர்,

ஓர் ஊரில் இரண்டு பைத்தியங்கள் இருந்தன. முதல் பைத்தியம், "நான் உலகத்தையே விலைக்கு வாங்கப் போகிறேன்" என்றதற்கு, இரண்டாவது பைத்தியம், "நான் இப்போதைக்கு உலகத்தை விற்கிற மாதிரி இல்லை " என்றது. உலகமெல்லாம் எள் னு டையது என்று நினைப்பது பைத்தியக்காரத்தனம், அவ்வாறே உண்மையெல்லாம் என்னுடையது என் று மார் தட்டுவதும் பைத்தியகாரச் செயலாகும். "மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்" என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சமயங்கள் தங்களிடையே பிணக்குகளை வளர்த்துக் கொள்ளாமல் மனித நேயத்தை வளர்க்க வேண்டும்,

ஓர் இந்து ஆசிரமத்தில் இருந்த தலைமைச் சந்நியாசி முதுமை அடைந்து விட்ட நிலையில், தமது மறைவுக்குப் பிறகு தம்முடைய பத்து சீடர்களில் யாரை ஆசிரமத் தலைவராக நியமனம் செய்வது என்பதை முடிவு செய்ய விரும்பினார். தமது 13 சீடர்களையும் அழைத்து, அவர்களிடம் உணவுப் பொட்டலங்களைக் கொடுத்து, பக்கத்து ஊருக்குச் சென்று, அவ்வூரில் பட்டினியாகக் கிடந்த இந்துக்களுக்கு மட்டும் உணவுப் பொட்டலங்களை வழங்கிவிட்டு வரும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஒன்பது சீடர்கள் இந்துக்களுக்கு மட்டும் உணவு வழங்கினர். பத்தாவது சீடரோ முகமதியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் கூட உணவுப் பொட்டலங்களை வழங்கினார். ஏன் அவ்வாறு செய்தார்? என்று அவரைக் கேட்டதற்கு அவர் கூறிய பதில்: "பசியாய் இருந்தவர்களை நான் இந்துக்களாகவோ முகமதியர்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ பார்க்கவில்லை. அவர்களை மனிதர்களாக மட்டுமே பார்த்தேன்." உடனே அச்சீடரை ஆசிரமத்தின் தலைமைச் சந்நியாசியாக அந்த வயதான சந்நியாசி நியமித்தார்,

மதம், மொழி, இனம், சாதி ஆகிய வேறுபாடுகளைக் கடந்து எல்லாரையும் மனிதர்களாகப் பார்க்கக் கற்றுக் கொள்வதுதான் காலத்தின் கட்டாயம். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" (திருமூலர் ); "யாதும் ஊரே யாவரும் கேளிர்" (கனியன் பூங்குன்றனார்], ஏழைகளை வாழவைப்பதுதான் உண்மையான சமயப்பற்று. உழைப்பவர்களின் கூலியைக் கொடுக்காமல், செல்வத்தை சேமித்து வைக்கும் பணக்காரர் களுக்குப் பேரழிவு காத்துக் கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கிறார் திருத்தூதர் யாக்கோபு (இரண்டாம் வாசகம், யாக் 5:1-5).

நாம் நமது செல்வத்தை வங்கியில் அல்ல, ஏழைகளின் வயிற்றில் சேமித்து வைக்கவேண்டும், ஏழைகளின் வயிறே நமது பொருளைக் காக்கும் வங்கி, பாதுகாப்புப் பேழை என்கிறார் வள்ளுவர்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அல்லது ஒருவன் 
பெற்றான் பொருள்வைப்புழி (குறள் 226)Monday, 17 September 2018

ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்

சாலமோனின் ஞானம்  2:12,17-20; 
யாக்கோபு  3:16-4:3;
 மாற்கு 8:30-37
துன்பம் இன்பம் 

அன்புக்குரிய சகோதரர்களே!

ஒரு நாள் இயேசு தன் சீடர்களைப் பார்த்து நான் கொல்லப்பட வேண்டும். ஆனால் என்னை அடக்கம் செய்த மூன்று நாட்களுக்குப் பின் (மாற். 9:13) உயிர்த்தெழுவேன் என்றார். அப்படி இயேசு சொன்னது சீடர்களுக்கு விளங்கவில்லை. ஆனால் நமக்கு விளக்கம் தேவை இல்லை. ஏனெனில் இயேசு உயிர்த்து நம்மோடு வாழ்கின்றார்.

ஆனால் இன்று அந்த இயேசுவின் பாடுகள் நம் வாழ்வில், உடல் நோயாலோ, எதிர்பாராத ஆபத்தாலோ, உறவுகள் முறிவுகளாலோ, பொறாமையின் சக்தியாலோ, நம் வாழ்வில் குறிக்கிடுகின்றன. நாம் அனைவரும் இதற்கு உட்பட்டவர்கள் தான். ஆனால் அதை நாம், எவ்வாறு எதிர்நோக்குகிறோம் என்பதில்தான் வித்தியாசம் உண்டு.

ஒரு சிலர் துன்பங்களால், வெட்கத்திற்குரிய வேதனைகள், தாங்க முடியாத மனநிலையில் தள்ளப்பட்டு, மனத்தளர்ச்சி அடைந்து, குறை கூறும் நிலைக்குச் செல்லலாம். ஒரு சிலருக்குத் துன்பங்கள் தைரியத்தையும், சகிப்புத் தன்மையையும் சவாலாக ஏற்றுக்கொள்ளச் செய்யலாம். இன்னும் சிலர் துன்பத்தை அமைதியுடனும், சாந்தமுடனும் எதிர்நோக்கி, பதில் காண நுழையலாம். முடியாதெனில், பொறுமையுடன் மனம் தளராமல், குழப்பத்திற்கும் கீழ்த்தர ஆசைகளுக்கும் இடம் தராது ஏற்று நடக்க முயற்சி எடுப்பார்கள்.

அரபு நாட்டிலே ஒரு நினைவாலயம். அது புனித ஜெரோனிமாவின் கல்லறை. 1569 - ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி. அவனை நாயைப் போலக் கட்டி இழுத்து வாருங்கள் என்றான் அரசன்.

உன்னை நாயைப்போல இழுத்துச் செல்ல எனக்கு அதிகாரம் - உண்டு என்றான் அரசன் - அங்கே அமைதி.

உன்னைக் கொன்று பிணமாகப் புதைக்க எனக்கு அதிகாரம் உண்டு - அங்கே அமைதி.

சாட்டை அடிகள் அவர் மேல் விழுந்தன. கைகள் கட்டப்பட்டன. எட்டி உதைத்தனர். ஏளனம் செய்தனர். ஆலயத்தை விட்டு வெளியே இழுத்துச் செல்லப்பட்டார் - இறுதியாக அரசன் கேட்டான்: " நீ உயிர் வாழ விரும்பினால் உன் கடவுளை விட்டுவிடு." ஜெரோனிமா : இயேசுவே உயிரும் உயிர்ப்பும். அவரை இழந்த பிறகு என்னில் உயிர் எப்படி இருக்க முடியும் என்றார். நீங்கள் எனக்குக் கல்லறை கட்டுங்கள். இயேசுவே என் கல்லறை. அவரில் நான் இன்று அடக்கம் செய்யப்படுவேன். அவரைப் போல நானும் உயிர்த்தெழுவேன், வாழ்வேன் என்று புன்னகை பூத்தார். ஆனால் அவருக்கு உயிரோடு சமாதி கட்டியது அரபு நாடு. ஆனால் சாவே உனக்கு சாவு வராதோ என்று குமுறிய ஆன்றோர் மொழிக்கேற்ப,

அவர் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டார்;
அவர், கல்லறையில் பூத்த உயிருள்ள மலர்.

முடிவுரை
இன்றைய முதல் வாசகத்திலே கூறப்பட்ட ஞானியைப்போல் (ஞானா. 2:2-17, 20) நாமும் நமது வாழ்வு தரும் உன்னத இறைவனை நம்புவோம். இதுதான் ஜெரோனிமா நமக்குக் காட்டிய பாதை. அவர் இறைமகனாக இருந்தாலும் துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். தமக்குக் கீழ்ப்படிபவர் அனைவருக்கும் என்றென்றும் மீட்படையக் காரணமானார் (எபி. 5:8-9).உண்மையான தொண்டர் யார் ?
இன்றைய நற்செய்தியின் வழியாக , ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவருக்கும் தொண்டராக இருக்க முன்வர வேண்டும் என்கின்றார் இயேசு.

ஓர் உண்மையான தொண்டர் எப்படியிருக்க வேண்டும் ? என்பதை இந்தக் கதை நமக்குச் சுட்டிக்காட்டும்.
அது ஓர் அழகான கிராமம். அந்தக் கிராமத்திற்குப் பக்கத்திலே ஓர் அழகான மாமரம். அந்தக் கிராமத்திலிருந்த சிறுவன் ஒருவன் அந்த மாமரத்தடியில் வந்து விளையாடுவான். அவனைக் கண்டதும் அந்த மரம் பெரும் மகிழ்ச்சி அடையும். ஒவ்வொரு நாளும் அந்த மரம் அவன் வரவுக்காகக் காத்திருக்கும்.
திடீரென ஒரு வாரம் அச்சிறுவன் மரத்தடிக்கு வரவில்லை ! மரம் சோகமானது ! ஒரு நாள் திடீரென அச்சிறுவன் வந்தான் . அவன் முகத்திலே சோகம் 1 அவன் பொம்மை வாங்க வேண்டும் என்றான். மரம் தனது பழங்களைக் கொடுத்தது. அவற்றை விற்று அவன் பொம்மை வாங்கிக்கொண்டான்.

சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அவன் முகத்தில் சோகம் ! அந்த மரம் அவனுக்கு அதன் கிளைகளைக் கொடுத்தது. அதைப் பயன்படுத்தி அவன் விரும்பிய வீட்டைக் கட்டிக்கொண்டான்.
மீண்டும் சில ஆண்டுகள் கழித்து அவன் முகத்தில் சோகம் ! பழுதடைந்திருந்த அவனுடைய படகைச் சரிசெய்து கொள்ள மரம்
தேவைப்பட்டது. அந்த மரமோ அவனைப் பார்த்து, உனக்காக என் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கின்றேன். என்னை அடியோடு பெயர்த்து எடுத்துச்செல் என்றது. அவனும் அப்படியே செய்தான்.

கதையில் வந்த மரம் வாழ்ந்த வாழ்வுக்குப் பெயர்தான் தொண்டு வாழ்வு. அயலாருக்காக நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் கையளிக்க முன்வருவதில்தான் உண்மையான தொண்டு வாழ்வு அடங்கியுள்ளது.

பதுங்கியிருந்து (முதல் வாசகம்) மற்றவர்களுக்கு உரியதை எடுப்பவர்கள் உண்மையான தொண்டர்கள் அல்ல; மாறாக அமைதி பெற்றெடுக்கும் நீதி வழி நின்று (இரண்டாம் வாசகம்) அவரவர்க்கு உரியதை அவரவர்க்குக் கொடுப்பவர்களே உண்மையான தொண்டர்கள்.

மேலும் அறிவோம் :
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் : 228).
பொருள் : வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் மகிழ்வதைக் கண்டு அருளுடையவர் அடையும் இன்பம் பெரிதாகும். அத்தகைய இன்பத்தைப் பற்றித் தெரியாதவரே தாம் சேர்த்த பொருளை ஏழை எளியோருக்கு வழங்காது பிறர் கொண்டு போக இழக்கும் இரக்கம் அற்றவர் ஆவர்!  ஒரு வீட்டில் அப்பா சாகக் கிடக்கிறார்; மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார். மூச்சுவிட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய கூறு கெட்ட பிள்ளைகள் அவருடைய சொத்துக்காகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர், கிறிஸ்து இரண்டாம் முறையாகத் தமது பாடுகளை முன் அறிவிக்கிறார். ஆனால் சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டைபோட்டுக் கொண்டிருக்கின்றனர்,

முதலிடத்திற்காகச் சண்டையிட்டுக் கொண்டிருந்த தம் சீடர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்கிறார் கிறிஸ்து (மாற் 9:35). பெரியவர்களையும் சிறியவர்களையும் வேறுபடுத்திக் காட்டும் பண்பு பணிவுடமையாகும், பெரியவர்கள் என்றும் பணிவுடன் வாழ்வர்; சிறியவர் என்றும் செருக்குடன் வாழ்வர்,
பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து (குறள் 978).

கடவுளுடைய எண்ணங்களும் வழிமுறைகளும் மனிதருடைய எண்ணங்களிலிருந்தும் வழிமுறைகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டவை (எசா 55:8-9). மனிதனின் வழி ஆணவத்தின் வழி; கடவுளுடைய வழியோ தாழ்ச்சியின் வழி. முதல் பெற்றோரின் பாவம் ஆணவம், அவர்கள் மனிதர்களாக இருந்தும் கடவுளுடைய நிலையைத் தட்டிப்பறிக்க விரும்பினர். எனவேதான் விலக்கப்பட்ட. கனியை உண்டு, பாவத்தையும் சாவையும் இவ்வுலகில் புகுத்தினர், அவர்களின் ஆணவ வழிக்கு மாற்று வழியாகக் கிறிஸ்து தாழ்ச்சியின் வழியைப் பின்பற்றினர். அவர் கடவுள் நிலையிலிருந்தும் மனித நிலைக்குத் தாழ்ந்து வந்தார் (பிலி 2:6-8).

பாவமே அறியாத அவர் உலகின் பாவ மூட்டைகளை எல்லாம் சுமந்து கொண்டு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெறச் சென்றார். அதைக் கண்ட திருமுழுக்கு யோவான் அதிர்ச்சி அடைந்தார். இறுதி இராவுணவின் போது சீடர்களுடைய காலடிகளைக் கழுவினார். அதைக் கண்டு பேதுரு அதிர்ச்சி அடைந்தார், நமது ஆணவத்திற்குத் தேவையான அதிர்ச்சி வைத்தியத்தை (shock treatment) அவர் அளித்தார். நாம் பெரியவர்களாக அல்ல, குழந்தைகளாக மாறவேண்டும்; இல்லையென்றால், விண்ணரசில் நுழைய முடியாது என்றும், ஒரு குழந்தையைப் போலத் தன்னைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் பெரியவர் என்ற புரட்சிகரமான போதனையையும் வழங்கினார் (மத் 18:3-4), "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்" (மத் 11:29) என்று தம்முடைய தனிப்பட்ட பண்பைக் போட்டுக் காட்டினார்.

ஒரு கணவன் தமது பங்குத் தந்தையிடம் சென்று, "சாமி! இந்நாள் வரை எனது மனைவி என்னை வாயால் திட்டிக் கொண்டிருந்தான். ஆனால், இப்போ கையை நீட்டி என்னை அடிக்க வருகிறாள் அவளை எப்படி அடக்குவது என்று கற்றுக் கொடுங்கள்' என்று கேட்டார். அதற்குப் பங்குத்தந்தை, அது தெரிஞ்சா நான் என் மியாராய் வந்தேன்" என்றாராம்! ஒரு கணவர் ஓர் அறிஞரிடம் சென்று, "நான் கிழித்த கோட்டை என் மனைவி தாண்டக்கூடாது. அதற்கு நீங்கள் என்ன ஆலோசனை கூறுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, அந்த அறிஞர், கோட்டை எங்கே கிழிப்பது என்று (முதலில் உங்கள் மனைவியைக் கேட்டுக கிழியுங்கள்" என்றாராம்!

இன்றைய குடும்ப வாழ்விலும் சமுதாய வாழ்விலும் ஒருவர் மற்றவரை அடக்கி ஆள விரும்புகின்றனர். இதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம். அடக்குமுறை மனிதத் தன்மை கொண்டது அல்ல, அது மிருகத் தன்மை வாய்த்தது. காட்டிலே கொடிய விலங்குகள் சாதுவான விலங்குகளை வேட்டையாடுகின்றன. மனிதன் என்பவன் பிறரை அடக்கி ஆளாமல் பிறருக்கு விட்டுக் கொடுக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்த வேண்டும் (கலா 5:15), பிறரை அடக்கி ஆளும் முறை பிற இனத்தாரின் முறை என்றும், இயேசுவின் சீடர்கள் பிறரை அடக்கி ஆனாமல் பிறருக்குத் தொண்டு ஆற்ற வேண்டும் (மத் 20:25-28) என்றும் போதிக்கிறார் கிறிஸ்து.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித யாக்கோபு விண்ணக ஞானத்தையும் மண்ணக ஞானத்தையும் வேறுபடுத்திக் காட்டுகின்றார் (யாக் 3:13-18), மண்ணக ஞானம் பேய்த்தன்மை கொண்டது: அது பொறாமை, மனக்கசப்பு, கட்சி மனப்பான்மை ஆகிய தீய பண்புகளைக் கொண்டது. ஆனால் கடவுளிடமிருந்து வரும் விண்ணக ஞானம் தெய்வத் தன்மையுடையது. அது அமைதி, பொறுமை, இணங்கிப் போகும் தன்மை ஆகிய நற்பண்புகளைக் கொண்டது. கடவுள் தன்மை கொண்டவர்கள் பிறருடன் இணங்கிப் போவர்.

பிறரை அடக்கி ஆள்பவர்கள் தற்காலிகமாக வெற்றி அடைந்தாலும் நிரந்தரத் தோல்வியைத் தழுவுவர், மாறாக, பணிந்து போகிறவர்கள் தற்காலிகமாகத் தோல்வி அடைந்தாலும் நிரந்தரமான வெற்றியை அடைவர் என்று இன்றைய முதல் வாசகமும், பதிலுரைத் திருப்பாவும் சுட்டிக் காட்டுகின்றன.

நீதிமானின் பொறுமையையும் கடவுள் பக்தியையும் கடவுள் பயமற்றவர்கள் இழித்துரைக்கின்றனர், நீதிமானுக்கு எதிர்காலம் இல்லை என்று ஏளனம் செய்கின்றனர். ஆனால் கடவுள் நீதிமான்களை எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார். "செருக்குற்றோர் எனக்கு எதிராக எழுந்து என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர். கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கிறார்” (திபா 54:3-4), தீமைக்குத் தீமை செய்பவர்களுக்கு கிடைப்பது ஒருநாள் இன்பம். தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களுக்குக் கிடைப்பதோ நிரந்தர இன்பம்,

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம், பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ் (குறள் 156)


யார் பெரியவர்?

'நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல நன்மை தீமை அறிவீர்கள்' (தொநூ 3:5) என்று அலகை 'உயிர் வாழ்வோர் அனைவருக்கும் தாயான' ஏவாளிடம் சொன்ன முதல் வார்த்தைகள், அவருடைய உள்ளத்தில் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஆழப் பதிந்துவிட்டது. எப்படி? அலகையின் இவ்வார்த்தைகள் பெண்ணின் வயிற்றுப் பசியைத் தூண்டுவதாக இல்லை. மாறாக, அவரின் உள்ளத்து வேட்கையை, உள்ளத்து உந்துணர்வைத் தட்டி எழுப்புவதாக இருக்கிறது. அது என்ன உந்துணர்வு? சிக்மண்ட் ஃப்ராய்ட் என்ற ஆஸ்திரிய உளவியல் அறிஞர், 'மனிதர்களின் அடிப்படையான உந்துணர்வாக வன்முறையையும், பாலியல் உணர்வையும்' முன்வைக்கிறார். இந்த இரண்டு அடிப்படை உந்துணர்வுகளையும் உந்தித் தள்ளுகிற ஓர் உணர்வு இருக்கிறது. அதுதான், 'தன்னை பெரியவர் அல்லது முக்கியமானவர் என்று நினைக்கும் உந்துணர்வு' (basic instinct to feel important).

'நீங்கள் கடவுளைவிட பெரியவராக அல்லது கடவுளைப் போல பெரியவராக இருப்பீர்கள்' என்பதுதான் விவிலியத்தில் மனுக்குலம் எதிர்கொள்ளும் முதல் சோதனை.

காயின் ஆபேலைத் தாக்கக் காரணமாக இருந்தது, 'யார் பெரியவர்?' என்ற உந்துணர்வே.

மக்கள் பாபேல் கோபுரம் கட்ட முனைந்ததும்,

யாக்கோபு ஏசாவை ஏமாற்றி தலைப்பேறு உரிமையைப் பெற்றுக்கொண்டதும்,

யோசேப்பின் சகோதரர்கள் அவரை மிதியானியர்கள் கையில் விற்றதும்,

பாரவோன் இஸ்ரயேல் மக்களை அடிமைப்படுத்தியதும்,

பாரவோன் இஸ்ரயேல் மக்களை மோசே தலைமையில் விடுவிக்க மறுத்ததும்,

... ... ...

சவுல் தாவீது மேல் பொறாமை கொண்டு அவரை அழிக்க விரும்பியதும்,

தாவீதின் மகன்களே ஒருவருக்கு ஒருவர் அரியணை சண்டை இட்டதும்,

சாலமோன் ஞானியாக இருந்தாலும் சிலைவழிபாட்டுக்கு தன்னையே கையளித்ததும்

என எல்லா நிகழ்வுகளிலும் கதைமாந்தர்கள் தங்களுக்குள் எழுப்பிய கேள்வி, 'யார் பெரியவர்?' என்பதுதான்.

இந்தக் கேள்விதான் இந்த உலகின் பெரிய நாடுகள் எடுக்கும் முடிவுகளிலிருந்து, நம் வீட்டிற்குள் நடக்கும் சின்னச் சண்டை வரை அனைத்தின் பின்புலத்தில் இருக்கிறது. 'பெரியவராக' அல்லது 'முக்கியத்துவம்' பெற்றவராக இருக்க நாம் அனைவரும் விரும்புகிறோம். அதைவிட வெறிகொண்டு இருக்கிறோம்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குள் இருக்கும் இந்த 'சிற்றின்ப நாட்டத்தை' சுட்டிக்காட்டுவதோடு, 'பெரியவராக இருப்பது' எதில் அடங்கியிருக்கிறது என்பதையும் அறிவுறுத்துகிறது.

சாலமோனின் ஞானநூல் அலெக்ஸாந்திரியாவில் வாழ்ந்த யூத குழுமத்திற்கு எழுதப்பட்டது. அலெக்ஸாந்திரியா நகரம் கிரேக்க கலாச்சாரத்தை மிகவும் உள்வாங்கி செல்வச் செழிப்பிலும், கல்வி அறிவிலும் மேலோங்கி நின்றது. அந்நகரில் வாழ்ந்த யூதர்கள் கிரேக்க கலாச்சாரத்தினால் ஆச்சர்யப்பட்டு, தங்களின் 'திருச்சட்டம் பின்பற்றும் வாழ்வை' காலாவதியானதாக, உலகிற்கு ஒவ்வாத ஒன்றாகக் கருதினார்கள். காலப்போக்கில், அவர்கள் கிரேக்க கலாச்சாரத்தை ஒட்டி வாழவும் தொடங்கினார்கள். இதே நேரத்தில் மற்றொரு யூதக் குழுமம் கிரேக்க கலாச்சாரத்திற்கு உட்படாமல் தங்களின் சட்டங்களையும், மரபுகளையும் பின்பற்றுவதிலும், தாங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தினர் என்ற சிந்தனையிலும் வாழ்ந்தனர். இந்த இரு குழுமங்களுக்கு இடையே அடிக்கடி கருத்து மோதல்களும், சண்டைகளும் வந்தன. தங்களின் திருச்சட்டத்தை மட்டும் பிடித்துக்கொண்டவர்கள் மற்றவர்களை 'நம்பிக்கையை மறுதலித்தவர்கள்' என்று குற்றம் சாட்டினார்கள். ஆனால், இப்படி குற்றம் சாட்டப்பட்ட முதல் குழுவினர் - அதாவது, யூதர்களாக இருந்தாலும் கிரேக்க கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டவர்கள் - திருச்சட்டத்தைப் பின்பற்றியவர்களின் செய்கை தவறு என்றும், அவர்கள் வைத்திருக்கும் கடவுள் நம்பிக்கை என்பது மூடநம்பிக்கை எனவும் நிரூபிக்க விரும்பினார்கள். எனவே, அவர்கள் கடவுளையும், கடவுளைப் பின்பற்றுபவர்களையும் சோதிக்க விரும்பினார்கள். இப்படி இவர்களைச் சோதிக்கும்போது கடவுள் வருவாரா என்று பார்த்து, கடவுளையும் பொய்யராக்க நினைத்தார்கள். இந்நிகழ்வையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். சாஞா 2:17-20) வாசிக்கின்றோம்: 'நீதிமான்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம். முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால் அவர் அவர்களுக்கு உதவி செய்வார்.'

கிரேக்க கலாச்சாரத்தைப் பின்பற்றிய 'பொல்லாதவர்கள்' தங்கள் அடையாளத்தை வெளிப்புற கிரேக்க சின்னங்களில் தேடுகின்றனர். தாங்கள் கிரேக்கர்களைப் போல இருப்பதால் இவர்கள் தங்களை 'பெரியவர்கள்' என நினைத்தார்கள். மேலும், இதனால் தங்களைச் சாராத மற்றவர்களைப் பழிதீர்க்கவும் விரும்பினார்கள். ஆனால், கடவுளின் திருச்சட்டத்தையும், அவர் தந்த கடவுளின் பிள்ளைகள் என்னும் அடையாளத்தையும் பின்பற்றிய 'நீதிமான்கள்' தங்கள் அடையாளத்தை தங்களுக்கு உள்ளே கண்டனர். இந்த நீதிமான்கள் தங்கள் நீதியான வாழ்வின் வழியாக தாங்கள் 'பெரியவர்கள்' என நினைத்தார்கள்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். யாக் 3:16-4:3) தன் திருச்சபையின் அடுத்த பிரச்சினையான 'பிளவு மற்றும் கட்சி மனப்பான்மையை' கையாளுகின்றார். யாக்கோபின் திருச்சபை பொறாமை மற்றும் தன்னல எண்ணங்களால் துன்பற்றது. பொறாமை மற்றும் தன்னல மையப்போக்கின் வழியாக தங்களையே 'பெரியவர்கள்' என நினைத்துக்கொண்டனர் அத்திருச்சபையில் உள்ள சிலர். ஆனால், இந்த இரண்டிற்கும் மாறாக, 'கடவுளின் ஞானத்தை' அவர்களுக்கு முன்வைக்கிறார் யாக்கோபு: 'ஞானத்தின் பண்பு தூய்மை. அது அமைதியை நாடும். பொறுமை கொள்ளும். இணங்கிப் போகும். இரக்கமும் நற்செயல்களும் கொண்டிருக்கும். நடுநிலை தவறாது. வெளிவேடம் கொண்டிராது.' எல்லாவற்றிற்கும் மேலாக, ஞானத்தின் கனி அமைதி.  யாக்கோபின் திருச்சபையின் பிரச்சினை நம்பிக்கையாளர்களுக்கு வெளியிலிருந்து வரவில்லை. மாறாக, அவர்கள் உள்ளத்தில் உதிக்கிறது. 'நாட்டம்' என்பதும், 'இன்பம்' என்பது ஒரே கிரேக்க வார்த்தையால் குறிக்கப்படுகிறது. ஆக, 'நாட்டம்' என்ற ஒன்று இருக்கக் காரணம் அந்த நாட்டம் கொண்டுவரும் இன்பமே. நாட்டம் கொண்டுள்ள மனிதர் தன்னுள்ளே பிளவுபட்டிருக்கிறார். அது அவருக்கு பெரிய போராட்டமாக இருக்கிறது. இந்தப் பிளவை நிரப்ப அவர் தன் அந்தஸ்து, அதிகாரம், புகழ், அறிமுகம் ஆகியவற்றை நாடுகிறார். இது தொடர் போராட்டத்திற்கும், சண்டை சச்சரவுகளுக்கும், கொலைக்கும் வழிவகுக்கிறது.

'யாரும் பயணம் செய்யாத பாதை' என்ற நூலின் ஆசிரியர் ஸ்காட் பெக் 'க்ராட்டிஃபிகேஷன்' என்ற வார்த்தையை அறிமுகம் செய்தார். இவர் யாக்கோபின் திருமடலில்தான் இந்த சிந்தனையைக் கண்டறிந்திருக்க முடியும். அதாவது, நீண்டகால மதிப்பீடுகள் தரும் மகிழ்ச்சிக்கு காத்திராத மனம், சின்னச் சின்ன சிற்றின்பங்களை நாடி, தன்னையே 'கிராட்டிஃபை' செய்து செய்துகொள்ள நினைக்கிறது. உதாரணத்திற்கு, குழுவாழ்வு என்பது ஒரு நல்ல மதிப்பீடு. எல்லாரும் சேர்ந்து வாழ்வது, சேர்ந்து உழைப்பது, சேர்ந்து சாப்பிடுவது என்பது. ஆனால், இந்த மதிப்பீடு ஒரே நாளில் நாம் அடையக்கூடியதா? இல்லை. இதற்கு பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம். ஆனால், இவ்வளவு நாட்கள் பொறுமையாக இருந்தால் இத்தகைய வாழ்வை நாம் கண்டிப்பாக அடைந்துவிட முடியும். ஆனால், இவ்வளவு நாட்கள் பொறுமை காக்க மறுக்கும் மனம் என்ன செய்கிறது? சிறு சிறு குழுக்களாக மக்கள் பிரிந்து வாழ்வதில் சிற்றின்பம் தேடுகிறது. சாதி அடிப்படையில், மொழி அடிப்படையில், மதம் அடிப்படையில், இன அடிப்படையில், உறவு அடிப்படையில் என சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து இந்தக் குழு தரும் சின்னச் சின்ன பாதுகாப்பு உணர்வில் இன்பம் அடைகிறது. ஆனால், இந்தப் பாதுகாப்பு எந்நேரமும் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பதை அது மறந்துவிடுகிறது. சிற்றின்ப நாட்டம் (செக்ஸ் என்று மட்டும் இதை நினைக்க வேண்டாம்!) உடனடி தீர்வைத் தருகிறது. ஆனால், உடனடித் தீர்வுகள் எப்போதும் நல்ல தீர்ப்புகளாக இருப்பதில்லையே. மேலும், சிற்றின்ப எண்ணங்கள் கொண்டவர்கள் கடவுளிடமிருந்துகூட உதவி பெற முடியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பதுதான் சோகத்தின் உச்சம்.

இப்படியான வாழ்வு ஒருவரின் ஆன்மீக வாழ்வையும் அழித்துவிடுகிறது. இப்படி பிளவுபட்டிருப்பவர்கள், தங்கள் நாட்டங்களால் அலைக்கழிக்கப்படுவதால், கடவுளைச் சார்ந்திருப்பதிலிருந்து முற்றிலும் விலகி விடுகிறார்கள். இவர்கள் கடவுளிடம் 'கேட்பதற்குப்' பதிலாக அவரிடமிருந்து 'பறித்துக்கொள்ள' விரும்புகிறார்கள். மற்றும் சிலர் கடவுளிடம் தவறானவற்றைக் கேட்கின்றனர். தன்மையம் கொண்ட விண்ணப்பங்களுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில் தன் திருச்சபையினர் கடவுளின் ஞானத்தை மட்டும் கேட்கவும், அந்த ஞானத்தின் கனியாக அமைதியை அவர்கள் சுவைக்கவும் அழைப்பு விடுக்கிறார் யாக்கோபு.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற் 9:30-37), 'யார் பெரியவர்?' என்ற கேள்வியை இரண்டு படிநிலைகளில் அணுகுகிறது. நற்செய்தி வாசகத்தில் முதல் பகுதியில் இயேசு தன் இறப்பை இரண்டாம் முறை முன்னறிவிக்கின்றார். ஆனால் அவர் சொன்னது அவரின் சீடர்களுக்கு விளங்கவில்லை. அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. இரண்டாம் பகுதியில் அவர்கள் புரிந்துகொள்ளாததற்கான காரணம் நமக்குத் தெரிகிறது.

இயேசுவும் அவருடைய சீடர்களும் கப்பர்நகூமிற்கு வருகிறார்கள். பல சீடர்களின் சொந்த ஊரும் அதுதான். ஆக, சீடர்கள் தங்கள் சொந்த ஊருக்கு வருகின்றனர். வரும் வழியில் தங்களுக்குள் 'யார் பெரியவர்?' என்று விவாதிக்கின்றனர். தங்கள் சொந்த ஊரில் தாங்கள் பெரியவர் என அவர்கள் காட்ட விரும்பினர். ஒவ்வொருவரும் தாங்கள் செய்த போதனைகள், புதுமைகள், இயேசுவுக்கும் தங்களுக்கும் உள்ள நெருக்கம், தங்களின் இன்றியமையாமை குறித்து தங்களின் அடையாளத்தை மற்றவர்களுக்கு உறுதி செய்ய விரும்பினார்கள். தங்கள் உற்றார், உறவினர், நண்பர்களிடம் தங்களைப் பற்றிச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள விரும்பினார்கள். இயேசு தன்னுடைய தற்கையளிப்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது சீடர்கள் தங்களின் அடையாளத்தையும், தகுதியையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். தன் சீடர்களை வெளிப்படையாகக் கடிந்துகொள்ளாத இயேசு அவர்களுக்கு இந்த நேரத்தில் 'யார் பெரியவர்?' என்று கற்பிக்கிறார்.

முதலில், 'பெரியவராக' இருப்பது என்பது 'பணி ஆற்றுவது' அல்லது 'சேவை செய்வது.' இயேசுவின் இப்போதனை அவரின் சமகாலத்து சிந்தனையை தலைகீழாகப் புரட்டியது. ஏனெனில், சீடர்களைப் பொறுத்தவரையில் 'பெரியவராக' இருப்பது என்பது 'பணிவிடை பெறுவது' என்ற நிலையில்தான் இருந்தது. இரண்டாவதாக, சீடத்துவம் என்பது குழந்தைகளை ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது. குழந்தைகள் அடிமைகளைப் போல அக்காலத்தில் எந்தவொரு அடையாளமும் இல்லாமல் இருந்தவர்கள். தங்களின் பெற்றோர்களின் விருப்பங்கள் மற்றும் தெரிவுகளைச் சார்ந்தே வாழ்ந்தனர். இன்றுதான் நாம் குழந்தை என்றால் 'இன்னசன்ஸ்', 'தாழ்ச்சி', 'இயல்பானவர்கள்' என்று ரொம்ப ரொமான்டிக்காக சொல்கிறோம். குழந்தைகள் என்பவர்கள் யூத மரபில் 'மனிதர்கள் நிலையை அடையாதவர்கள்'. அவர்கள் வெறும் 'பொருட்கள்'. அவர்கள் 'வலுக்குறைந்தவர்கள்'. ஆக, இப்படிப்பட்டவர்களை ஏற்றுக்கொள்ள நிறைய தாழ்ச்சி தேவை. ஆக, குழந்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இயேசு சொல்லும்போது, அவர் தாழ்ச்சியைக் கற்பிக்கின்றார் என்றும் நாம் புரிந்து கொள்ளலாம். ஆக, பெரியவர் என்பவர் யார்? கடைசியில் இருப்பவர். அல்லது தொண்டராக இருப்பவர். இவரால் மட்டும்தான் வலிமையற்ற குழந்தையையும் ஏற்று அரவணைத்துக் கொள்ள முடியும். ஆக, 'பெரியவர் நிலை' என்பது 'தனியே நிற்க முடியாதவர்களுக்கு உறுதுணையாக இருப்பதில்தான் இருக்கிறது' என்றும், சீடர்கள் தங்களுக்குள் படிநிலையை வகுத்து அதில் 'பெரியவர் நிலையை' அடைதலை விடுத்து, தற்கையளிப்பு, பணிவிடைபுரிதல், மற்றவர்கள்மேல் அக்கறை போன்றவற்றில் அதைக் கண்டுகொள்ளவும் அழைக்கின்றார் இயேசு.

இவ்வாறாக, 'முதன்மையாக இருப்பது' அல்லது 'பெரியவராக இருப்பது' என்பது நமக்குள் பரவலாக இருக்கும் ஒரு உந்துணர்வு. இந்த உந்துணர்வின் நேர்முகமான பகுதிதான் நம்மை முன்னேறத் தூண்டுகிறது. ஆனால், இதன் எதிர்மறையான பகுதி அடுத்தவர்களை அழிக்கவும், அடுத்தவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கவும் செய்துவிடுகிறது. ஆகையால்தான், அலெக்ஸாந்திரியாவில் இருந்து யூதர்கள் தங்கள் இனத்தாருக்கு எதிராகவே பழிதீர்க்க முனைந்தார்கள். தங்கள் தெரிவுகளைச் சரி என்று காட்டும் முகத்தான் மற்றவர்கள்மேல் வன்முறையும், கோபமும் காட்டினார்கள். அடுத்ததாக, தனிநபரின் நாட்டம் மையப்படுத்தப்பட்டால் அது ஒட்டுமொத்த குழுமத்தின் நலனைப் பாதிக்கும் என அறிந்திருந்த யாக்கோபு ஒவ்வொருவரும் தங்கள் உள்மனப் போராட்டங்களை வெல்ல அழைக்கின்றார். தொடர்ந்து, சீடத்துவம் பற்றிய தவறான புரிதலைக் கொண்டிருந்த தன் சீடர்களுக்கு 'பெரியவர்நிலை' என்பது 'சிறிதினும் சிறிதில்' இருக்கிறது எனக் காட்டுகிறார் இயேசு. இயேசுவின் இப்புதிய புரிதலை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே, 'என் ஆண்டவரே என் உதவி. அவரே என் வாழ்வுக்கு ஆதாரம்' (காண். திபா 54) என்று பாட முடியும்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு முன்வைக்கும் சவால்கள் எவை?

1. பெரிதினும் பெரிது

நமக்கு இன்பம் தரும், நலம் பயக்கும் அனைத்தையும் நாம் நாடுகிறோம். 'வாழ்க்கை மிகவும் குறுகியது. எனவே உனக்குத் தேவையானதை பெரிய கரண்டியில் எடுத்துக்கொள். ஏனெனில் திரும்ப உனக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது' என்று நமக்கு போதிக்கிறது இன்றைய உலகம். ஆக, நம் வேலை, பதவி, படிப்பு, சமூக நிலை என அனைத்தையும் நாம் பெரிய கரண்டியில் அள்ளிக்கொள்ளவே விரும்புகிறோம். பெரியவராக மாற நினைப்பது தவறா? நம் வாழ்வை நாம் முன்னேற்றிக் கொள்ள விரும்புவது தவறா? இல்லை. பெரியவராக மாற நினைக்காவிட்டால் மனிதன் குரங்காகவே இருந்திருப்பான். ஆக, பெரியவராக மாற நினைப்பதும், முக்கியத்துவம் அல்லது முதன்மைத்துவம் பெற விரும்புவதும் தவறல்ல. ஆனால், அது எப்போது தவறாகிறது என்றால், நான் என்னையே மையப்படுத்தி வாழும்போதும், என் நாட்டங்களுக்கு மற்றவரைப் பயன்படுத்தும்போதும்தான். அடுத்தவரைப் பயன்படுத்தி நான் முன்னேற நினைப்பது தவறு. எடுத்துக்காட்டாக, எனக்கு பணம் நிறையவும், வேகமாகவும் வேண்டும் என்பதற்காக நான் போதைப்பொருள் விற்றால், அது தவறு. நான் அப்படி விற்கும் போது, என் சகோதர, சகோதரிகளை என் தன்னல நோக்கத்திற்காக பயன்படுத்துகிறேன்.

ஆக, பாரதி சொல்வதுபோல, 'பெரிதினும் பெரிது கேள்' என நாம் பெரியவற்றை, மேன்மையானவற்றை விரும்பலாம். ஆனால், அந்த விருப்பம் தன்மையம் கொண்டதாகவும், என் உடன்வாழ்பவரைப் பயன்படுத்துவதாகவும் இருக்கக் கூடாது.

2. பொறாமையும் கட்சி மனப்பான்மையும்

நான் பெரியவர் ஆகும் முயற்சியில் எனக்கு எதிராக அல்லது என்னைவிட பெரிதாக இருப்பவரை நான் பொறாமையுடன் பார்ப்பதோடு, என்னைப் போல பார்ப்பவர்களை ஒரே குழுவாக இணைத்து கட்சி மனப்பான்மையை உருவாக்குகிறேன். என் குழுமத்தில், 'நாம் - அவர்கள்' என்ற பேதத்தை நான் உருவாக்கிவிடுகிறேன். இந்த நிலையில் நான் அவர்களை அழிக்கவும் துணிந்துவிடுகிறேன். ஒருபக்கம் நான் குழுமத்தைச் சார்ந்திருப்பது போலவும் இருந்துகொண்டு, மற்றொரு பக்கம் குழுமத்திற்கு எதிராக செயல்படுகிறேன். இந்தப் போக்கு தவறு என்பதை இரண்டாம் வாசகம் சுட்டிக்காட்டுகிறது. 'நானும் பெரியவர்', 'அவரும் பெரியவர்' என அடுத்தவரின் முக்கியத்துவத்தையும் ஏற்றுக்கொள்ள ஞானம் தேவை. இந்த ஞானம் ஒருவர் மற்றவரோடு நாம் வாழும் வாழ்வில் அமைதியை நமக்கு அளிக்கிறது.

3. கடிவாளம் இல்லா நாட்டம்

நம் நாட்டங்களை நாம் குறைக்க வேண்டும். நாட்டங்கள் இல்லாதவர்கள்தாம் குழந்தைகள். அவர்களுக்கென்று ஆசைகள் இருந்தாலும் அவர்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்ற அடுத்தவர்களை அழிக்க முனைவதில்லை. இயேசு தன் இறப்பை பற்றி சொல்லும்போது, அதைக் கண்டுகொள்ளாத சீடர்கள் தங்களின் நாட்டங்களை மட்டுமே மையப்படுத்தியவர்களாக இருக்கின்றனர். முதன்மைநிலை என்பது படிநிலையில் இல்லை என்றும், அது தாழ்ச்சியிலும், பிளவுபடாத அர்ப்பணத்திலும் இருக்கிறது என்கிறார் இயேசு. 'எனக்கு என்ன கிடைக்கும்' என்ற மனநிலையில் இருந்து, 'நான் எப்படி பணிவிடை புரியலாம்' என்று நினைப்பதே முதன்மைநிலை. 'கடலளவு கிடைத்தாலும் மகிழ்ந்துவிடாமல், அல்லது கையளவே கிடைத்தாலும் வாடிவிடாமல்' இருப்பதே மேன்மை. இயேசுவுக்கு தன் இலக்கும், இறைத்திட்டமும் தெளிவாக இருந்ததால், வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும், இந்த இரண்டின் ஒரு அங்கமாக பார்க்கின்றார். இந்த மனநிலை நமக்கும் இருந்தால் எத்துணை நலம்!

ஆக,

நாம் நமக்குள் எழும் 'முதன்மைநிலை' என்ற உந்துணர்வை ஆய்வுசெய்து பார்ப்போம்.

என் முதன்மைநிலையால் நான் இழந்தவை எவை?
என் முதன்மைநிலைக்காக நான் பொறாமை மற்றும் கட்சி மனப்பான்மை கொண்ட நேரங்கள் எவை?
இயேசு சுட்டிக்காட்டும் முதன்மைநிலைக்கு என்னையே தாழ்த்த தடையாக உள்ள காரணிகள் எவை?

இறுதியாக,

'காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே' (புறநானூறு 192)

என்பது நம் இன்றைய செபமாக, செயலாக இருக்கட்டும்.