Monday, 16 July 2018

பொதுக்காலம் ஆண்டின் 16-ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 16-ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்:
எரேமியா. 23:1-6
எபேசியர் 2:13-18
மாற்கு 6:30-34இயேசு என் மீட்பர் அருள்பணி முனைவர் ம. அருள்


நியூயார்க் நகரிலே எலினா என்ற கிராமப் பகுதியிலே ஒரு நீக்ரோ பெண்மணி தன் 4 வயது குழந்தையை வைத்துக் கொண்டு மணிக்கணக்காகக் காத்து நிற்கிறாள். சிறிய பையனுக்கோ ஒன்றுமே புரியவில்லை . ஓடியாடி விளையாடும் சிறுவன் அம்மாவின் முகத்தைப் பார்க்கிறான். தாயோ சோக நிலையில் ஆவலோடு எதையோ எதிர்நோக்கி காத்திருக்கிறாள். அம்மா ஏன் இங்கு நிற்கிறீர்கள்? வாங்கம்மா வீடு போவோம் எனக் கூப்பிடுகிறான். அதேநேரத்தில் அவள் எதிர்பார்த்த புகைவண்டி நிலையம் வந்து சேர்ந்தது. ஆவலோடு நெருங்குகிறாள். மகனே இங்கே பார்! இங்கே இறந்து கிடக்கும் ஆப்ரகாம் லிங்கன் இவர்தான் உன்னையும் என்னையும் உரிமையோடு இந்த நாட்டிலே வாழ வைக்க உயிர் கொடுத்த மகான். நமக்கு உரிமை பெற்றுத்தர தன் உயிரையே பலியாக்கத் துணிந்துவிட்டார் என்று கண்ணீர் மல்கத் தாய் தன் மகனிடம் கூறினாள். உடலைத் தொட்டு முத்தமிட்டு இடம் நகர்ந்தாள்.

இதேபோல் உலகிலே எத்தனையோ தலைவர்கள் உயிர் கொடுத்துள்ளார்கள். பாரத நாட்டின் உரிமைக்காக உயிர் கொடுத்தார் காந்திமகான் . மாந்தருள் மாணிக்கமாய்த் திகழ்ந்த ஜான் கென்னடி நீதிக்குச் சான்று பகரத் தன் உயிரையும் கொடுத்தார். தென் அமெரிக்காவில் எல் சால்வடோர் மறைமாவட்ட பேராயர் ஆஸ்கார் ரோமோரோ அந்த மறைமாவட்ட ஏழை மக்களுக்கு குரல் கொடுத்ததால் பலி பீடத்தில் நிற்கும்போதே சுட்டுக்கொல்லப் பட்டார். இவர்கள் எல்லாம் நாட்டின் அரசியல் விடுதலைக்காக, உரிமைக்காக உயிர் கொடுத்தவர்கள். ஆனால் சரித்திரத்தில் ஒரே ஒருவர் தான் உலகின் பாவங்களைப் போக்க உயிர் கொடுத்துள்ளார். இவர்தான் இயேசு என்ற நாமம் கொண்ட பெருமகான். 


இவரைப் பற்றி இன்றைய நற்செய்தியிலே புனித மாற்கு என்பவர் 6-ஆம் அதிகாரத்தில் 34- ஆம் வசனத்தில் குறிப்பிடுவதுபோல் ஆடுகளின் மேல் அக்கறையும் இரக்கமும் கொண்டவராக காட்சி தருகின்றார். நெடுநேரம் போதிக்கின்றார். பழைய ஏற்பாட்டிலே இஸ்ரயேல் மக்கள் ஆட்டின் தலையிலே கை நீட்டி தங்கள் பாவங்களை அதன் மேல் சுமத்தி காட்டுக்குள்ளே விரட்டி விடுவார்கள். அது அவர்களின் பாவங்களைச் சுமந்து போகும் பலி ஆடாகும். அதேபோல் அனைத்துப் பாவங்களையும் தன் மேல் சுமந்தவராய் யோர்தான் நதிக்கரையிலே நடந்து வர இவரே உலகின் பாவங்களைப் போக்க வந்த உன்னத செம்மறி என திருமுழுக்கு யோவானால் (யோவா. 1:29) சுட்டிக்காட்டப்படுகிறார். இவர் சென்ற இடமெல்லாம் நன்மையே செய்துகொண்டு சென்றார். எப்படி சந்தனக் கட்டையானது அரைக்கப்பட்டுத் தண்ணீரில் கலக்கப்பட்டால் தன் மணத்தைப் பரப்புகின்றதோ அதேபோல் நல்லாயன் இயேசு ஆடுகளின் மேல் அக்கறை கொண்டவராய் போதிக்கின்றார். ஆடுகளுக்காக உயிர் கொடுக்கும் ஆயனாக மாறிவிட்டார்.

பன்றியும் பசுவும் நடத்திய உரையாடலை கற்பனையாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கேட்க விரும்புகிறீர்களா? அன்றொரு நாள் பன்றியானது பசுவை நோக்கி பேசியது: ஓபசுவே! எத்தனையோ மக்கள் என்னை வெட்டி சமைத்து நாட்கணக்காக சாப்பிடுகிறார்கள், ஊறுகாய் உண்டாக்கி உலகம் முழுவதும் அனுப்புகிறார்கள். ஆனால் மக்களோ சீ பன்றி என்று கூறி என்னை வெறுக்கிறார்கள். ஆனால் உன்னை ஓ பசுவே என்று பெருமதிப்போடும் பெருமிதத்தோடும் அழைக்கிறார்கள். ஏன் இந்த பாரபட்சமான வித்தியாசம்! சிறிது நேரம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த பசு பேச ஆரம்பித்தது : ஓ பன்றி! நீயும் நானும் மிருகங்கள் தான். ஆனால் ஒன்று, நீ இறந்த பின் மக்களுக்கு பயன்படுகின்றாய். நானோ உயிரோடு இருக்கும்போதே பயன்படுத்தப்படுகின்றேன். எனவே என்னை மக்கள் மதிக்கிறார்கள், விரும்புகிறார்கள் என்று பதில் உரைத்தது. ஆம் அன்புக்குரிய வர்களே நல்லாயனாகிய இறைவன் நமக்குத் தரும் பாடம் உயிரோடு இருக்கும்போதே நல்ல ஆடுகளாக, ஆயனின் குரலுக்குச் செவிமடுக்கும் ஆடுகளாக, ஏன் பலி ஆடாக கூட மாற வேண்டும். அப்போது நாம் நிறை வாழ்வு பெறுவோம். மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்  - குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி


நற்செய்தியாளர்களாக மாறுவோம்.
 

எதற்காகத் தனிமையான இடத்திற்குச் சென்று திருத்தூதர்களை இயேசு ஓய்வெடுக்கச் சொன்னார்? இதற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கலாம். அதில் ஒரு தலையாய காரணம் அவர்கள் இறைவனை அன்பு செய்ய வேண்டும் என்பதற்காக!

ஒவ்வொரு செயலுக்கும் நேரம் ஒதுக்குவதுபோல, இறைவனோடு தனித்திருக்கவும் நாம் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற உண்மையை இயேசு நமக்கு இன்று சுட்டிக்காட்டுகின்றார்.

ஞான முத்துக்கள் (Pearls of Wisdom) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட உவமை இது.

எல் பெத்தேல் (EI Bethel) என்பவர் ஒரு மடாதிபதியைச் சந்தித்தார். அவருக்குத் துறவியாக ஆசை. அவர் துறவற மடத்திற்குள் நுழைவதற்கு முன்னால் ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள விரும்பினார். எல் பெத்தேல் மடாதிபதியைப் பார்த்து, ஏன் துறவிகள் தனிமையில் வாழ வேண்டும்? கடவுள்தான் எல்லா இடங்களிலும் இருக்கின்றாரே! அவரை எங்கு வேண்டுமானாலும் அன்பு செய்யலாமே! என்றார்.

மடாதிபதி பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு மெழுகுதிரியை ஏற்றி அதை எல் பெத்தேலிடம் கொடுத்து, குடிசைக்கு வெளியே நின்று இதை அணையாமல் பார்த்துக்கொள் என்றார்.

எத்தனை முறை ஏற்றினாலும் அத்தனை முறையும் மெழுகுதிரி காற்றில் அணைந்துவிட்டது. அப்போது எல் பெத்தேல், இது குடிசைக்குள் மட்டுமே அணையாது எரியும் என்றார். அதற்கு மடாதிபதி, நீ கேட்ட கேள்விக்கு நீயே பதில் சொல்லிவிட்டாய். இறை அன்பு என்பது இந்த மெழுகுதிரியைப் போன்றது. சத்தமும், சந்தடியும், பராக்குகளும், சோதனைகளும் நிறைந்த உலகத்திலே அதனால் எளிதாக எரிய முடியாது; அமைதியில்தான் அது எரிய முடியும் என்றார். எல் பெத்தேல் ஞானம் பெற்று துறவற மடத்தில் சேர்ந்தார்.

சீடர்கள் மனத்தில், இதயத்தில் இறை அன்பு சுடர்விட்டு எரிய வேண்டும். அந்த இறை அன்பில் அவர்கள் மனம், இதயம் வெதுவெதுப்பாகி இறை அன்பை உலகுக்கு அவர்கள் பிரதிபலிக்க வேண்டும் என இயேசு விரும்பினார். இதனால்தான் தனிமையான இடத்திற்குச் செல்லுமாறு அவர்களுக்கு அன்புடன் கட்டளையிட்டார். அவரே தனிமையை நாடி, அவரது சீடர்களுக்கு முன்மாதிரியாய் விளங்கினார் (மாற் 1:35).

தனிமையில் நமது மனமும், இதயமும் இறை அன்பால் பற்றி எரியும்போது நாம் உள்ளொளி பெற்று நீதி நிறைந்த ஆயர்களாக (முதல் வாசகம்), அமைதி நிறைந்த நற்செய்தியாளர்களாக (இரண்டாம் வாசகம்) மாறுவோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை !

மேலும் அறிவோம் :
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்(கு)
என்புதோல் போர்த்த உடம்பு (குறள் : 80).

பொருள் : அன்பு நிறைந்த உள்ளத்துடன் இயங்குவதே உயிருடன் கூடிய உடலாகும். அன்பு நெஞ்சம் இல்லாத உடல், உயிரற்ற எலும்புக்கூட்டைத் தோலால் போர்த்திய வெற்றுடல் ஆகும்.


மறையுரை மொட்டுக்கள் அருள்பணி Y. இருதயராஜ்


பங்குத் தந்தை ஞாயிறு திருப்பலியில் மறையுரை ஆற்றிக் கொண்டிருந்தபோது மக்கள் தங்குவதைக் கண்டு, "ஐயோ! தீ. தீ" என்று கத்த, மக்கள் கோவிலைவிட்டு ஓட ஆரம்பித்தனர், ஆனால், எங்குமே தீயைக் காணாத அவர்கள் பங்குத் தந்தையிடம், 'சாமி, தீ எங்கே?' என்று கேட்க, அவர், "நரகத்தில் " என்று அமைதியாகச் சொன்னார். மக்கள் கோபமும் ஆத்திரமும் அடைந்து அவரை மனதாரத் திட்டினார்கள். அப்போது பங்குத் தந்தை அவர்களிடம், “நான் பிரசங்கத்தில் உண்மையைச் சொல்லும்போது தூங்கி விழுகிறீர்கள்; பொய் சொன்னால் விழித்துக் கொள்கிறீர்கள்" என்றார்.

ஆம், இன்றைய உலகில் பொய்க்கு இருக்கிற வரவேற்பு உண்மைக்குக் கிடையாது. இன்றைய விளம்பர உலகில் பொய் மெய்யாகி விடுகிறது; மெய் பொ யயாகி விடுகிறது. பழங்காலத் தமிழ்ப்பாடல் பின்வருமாறு உள்ளது:
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையால்
மெய்போலும்மே மெய்போலும்மே
மெய்யுடை ஒருவன் சொல்லமாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே

ஒருவர் பேசுவதெல்லாம் பச்சைப்பொய்; ஆனால் அவர் கவர்ச்சியாகப் பேசுகிறார். எனவே அவரது பொய்யையும் மக்கள் மெய்யென நம்புகின்றனர். மாறாக, மற்றொருவன் உண்மை பேசினாலும், அவருடைய பேச்சில் கவர்ச்சி இல்லாததால், அவருடைய மெய்யும் பொய்யாகிவிடுகிறது. வழியும் வாழ்வும் உண்மையும் உயிருமான இயேசு கிறிஸ்து (யோவா 14:6) உண்மையை எடுத்துரைக்கவே இவ்வுலகிற்கு வந்த இயேசு கிறிஸ்து (யோவா 3:37). உண்மையினால் தம் சீடர்களை இறைவனுக்கு அர்ப்பணமாக்கிய இயேசு கிறிஸ்து (யோவா 17:17-19), இன்றைய தற்செய்தியில், மக்கள், 'ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார் (மாற் 6:34) என்று வாசிக்கிறோம்,

இன்றைய உலகம் பொய்யாலும் பொய்மையின் பிறப்பிடமான சாத்தான் பிடியிலும் (யோவா 8:44) சிக்கித் தவிக்கின்றது. எனவே, இன்றைய உலக மக்களுக்குத் தேவை உண்மை, முழுமையான உண்மை. திருமேய்ப்பர்கள் மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்க வேண்டும். இன்றைய முதல் வாசகத்தில். ஆடுகளை மேய்க்காமல், அவற்றைச் சிதறடிக்கும் போலி மேய்ப்பர்களைக் கடவுள் சபிக்கின்றார். ஆனால், அதே நேரத்தில் ஆடுகளின்மேல் உண்மையான அக்கறை கொண்டுள்ள நல்ல மேய்ப்பர்களை மக்களுக்குக் கொடுக்கப் போவதாகவும் வாக்களிக்கின்றார் (எரே 23:1-4).

நல்லாயர் தனது ஆடுகளைப் 'பசும்புல் வெளிக்கும். அமைதியான நீர் நிலைக்கும் அழைத்துச் செல்வார்; புத்துயிர் அளிப்பார்; நீதி வழி நடத்துவார், சுவையான விருந்தளிப்பான் (பதிலுரைப்பாடல், திபா 23:1-5).

நல்லாயர் கிறிஸ்துவைப் பின்பற்றி, திருமேய்ப்பர்கள் மக்களுக்குச் சுவையான விருந்தை நலமிக்கப்போதனையை வழங்க வேண்டும். இறைவார்த்தையில் வேரூன்றியிராத எவ்விதப் போதனையும் போலியானது; பொய்யானது: வஞ்சகமானது. அத்தகைய மறையுரை. மக்களைத் தவறான வழியில் இட்டுச் செல்லும்; மனமாற்றத்திற்கும் புதுவாழ்வுக்கும் வழிவகுக்காது. வாழ்வு தரும் வார்த்தையைத் தேடி வருகிற மக்களுக்கு வெறும் தவிட்டைக் கொடுத்து ஏமாற்றுவது அநீதியாகும்.

இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுகிறது : "இறைமக்களுக்கு இறைவார்த்தைப் பந்தியில் நிறைவான 2,ணவு வழங்கப்பட வேண்டும். விவிலியத்தின் கருவூலம் தாராளமாகத் திறந்து விடப்படவேண்டும். மறையுரை திருவழிபாட்டின் ஒரு பகுதி: இதில் நம்பிக்கையின் மறை பொருளும் வாழ்க்கை நெறிகளும் விளக்கப்பட வேண்டும்" (திருவழிபாடு. 51-52)

நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் பங்குத் தந்தையை எழுப்பி, *சுவாமி, உடனடியாக எங்க வீட்டுக்கு வாங்க; என் மகள் நீங்கள் இல்லாமல் தூங்கமாட்டேன் என்று அடம்பிடிக்கிறாள்" என்றார், பங்குத் தந்தை அதிர்ச்சியுற்றவராய், "ஏன் அவ்வாறு சொல்லுகிறாள்?" என்று கேட்டதற்கு அப்பெண், "சாமி நாங்கள் அவளுக்கு எத்தனையோ தக்க மாத்திரைகள் கொடுத்தும் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. நீங்கள் வந்து ஐந்து நிமிடம் பிரசங்கம் வைத்தால், உடனடியாகத் தூக்கம் வந்துவிடும் என்கிறாள்" என்றார்,

பங்குத் தந்தையர்களின் மறையுரை மக்களைத் தூங்க வைக்கும் தூக்க மாத்திரையாக அமையாமல். சமுதாயத் தீமைகளுக்கு வேட்டு வைக்கும் வெடி மருந்தாகவும், பாவ நோய்ககுக் குணமளிக்கும் அருமருந்தாகவும் அமைய வேண்டும்.

இன்றைய உலகிற்குத் தேவை 'அமைதியின் நற்செய்தி. இயேசு கிறிஸ்துவே நமது அமைதி : அவர் யூத இனத்திற்கும் பிற இனத்திற்கும் இடையே இருந்த பகைமை என்ற தடைச் சுவரைத் தமது சிலுவையால் தகர்த்துவிட்டு, இரு இனத்திலுமிருந்து புதியதொரு மனித குலத்தைப் படைத்து, அமைதியை நற்செய்தியாக அறிவித்தார் (எபே 2:13-14) என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்துரைக்கிறார் புனித பவுல். திருப்பணியாளர்கள் திரும்பத் திரும்ப அமைதியின் நற்செய்தியைத் தங்களது மறையுரையில் விளக்க வேண்டும்,

கடவுள் மனிதரைக் கிறிஸ்து வழியாகத் தம்முடன் ஒப்புரவாக்கி, அந்த ஒப்புரவுச் செய்தியைத் திருச்சபையிடம் ஒப்படைத்துள்ளார் (2 கொரி 5:19-20), திருச்சபை ஒரே நேரத்தில் ஒப்புரவு அடைந்த சமூகமாகவும், ஒப்புரவை வழங்கும் சமூகமாகவும் திகழ்கிறது.

இன்று எங்கும் எதிலும் போர். கடமைக்கும் உரிமைக்கும் இடையே போர்: காமத்திற்கும் காதலுக்கும் இடையே போர்; கொள்கைக்கும் நடத்தைக்கும் இடையே போர், தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே போர், இவ்வுலகே ஒரு போர்க்களம். இன்று மனிதன் சமுதாயம் என்ற நிலத்தில் பகைமை என்ற விதையை ஊன்றி, வெறுப்பு என்ற திரைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறான். அதன் விளைவாக வேற்றுமை என்ற மரம் வளர்ந்து, பொறாமை என்ற பூ பூத்து. கலகம் என்ற காய் காய்த்து. வன்முறை என்ற பழம் பழுத்துக் கொண்டிருக்கிறது.

"மங்கை தீட்டுப்பட்டால் கங்கையில் நீராடலாம்; கங்கையே தீட்டுப்பட்டால் எங்கே நீராடுவது? ஆம், உலகம் பிளவுபட்டால் திருச்சபை அப்பிளவைச் சரி செய்யலாம். திருச்சபையே பிளவுபட்டு நின்றால், பிளவுபட்ட திருச்சபை அமைதியின் நற்செய்தியை எவ்வாறு உலகிற்கு அளிக்க முடியும்?

திருப்பணியாளர்களும் மக்களும் இனம், மொழி, நிறம், சாதி அடிப்படையில் மக்களை, அரசியல்வாதிகள் போல், பிளவுபடுத்தாமல் ஆடுகளைச் சிதறடிக்காமல் திருச்சபையை மாபெரும் அன்பியமாகக் கட்டி எழுப்பத் தங்கள் சொல்லாலும் செயலாலும் உழைக்க வேண்டும்.

வேற்றுமை வேலிகளை வேரறுப்போம்;
பிரிவினைக் கவர்களைப் பிளந்தெரிவோம்;
ஒற்றுமையை உருவாக்குவோம்
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போர் புரியும் உலகை வேரோடு சாய்ப்போம்,
பொய்மையின் முகமூடியைக் கிழித்தெறிவோம்;
ஆவியிலும் உண்மையிலும் கடவுளைத் தொழுவோம்.Tuesday, 10 July 2018

ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்
ஆமோஸ் 7:12-15
எபி. 1:3-14
மாற்கு 6:7-13

ஞாயிறு இறைவாக்கு- அருள்பணி முனைவர் ம.அருள்
குடும்பத்தைக் கட்டி எழுப்பு


நாம் வாழும் இன்றைய காலக் கட்டத்திலே திறமையும், சக்தியும் வாய்ந்த மனிதர்களைத் தேடிச் செல்கின்றது இன்றைய சமுதாயம். திறமை மிக்க ஆசிரியர்களைத் தேடுகிறார்கள் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க சக்தியும், திறமையும் வாய்ந்த மருத்துவரை நாடுகின்றான் ஒரு நோயாளி. திறமை வாய்ந்த சமையல் கலைஞனை தேடுகின்றான் ஓர் உணவக உரிமையாளன். திறமை வாய்ந்த ஓட்டுநரை நாடுகின்றான் ஒரு அதிகாரி தன் காரை ஓட்ட. இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் திறமையை நாடுகின்றோம். ஆனால் திறமையானது பிறப்பிலே வந்துவிடுவதும் இல்லை. புத்தக அறிவால் நிறைவு பெறுவதும் இல்லை. மாறாக மனிதனின் அன்றாட அனுபவத்தில் நிறைவு காண்பதுதான் திறமை. பழமொழி ஆகமம் 24- ஆம் அதிகாரம், 3-4 வசனங்கள் தருவது போல எந்த ஒரு செயலும் முதலில் ஞானத்தோடு திட்டமிடுவதால், அறிவோடு செயல்படுவதால், காலக்குறிகளுக்கு ஏற்றவாறு அமைப்பதால் திறமை மிக்க செயலாகும் என்று நிரூபிக்கப்படுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஞானத்தின் இருப்பிடமாகத் திகழ்ந்த இயேசு என்ற திறமை மிக்க ஒப்பற்ற தலைவர் திறமை மிக்கவர்களைத் தேடவில்லை. ஆனால் சாதாரண, படிப்பறிவில்லா பாமரராக கடலிலே தொழில் நடத்திய மீனவர்களை அழைத்தார். தன் ஞானத்திலே பயிற்சி கொடுத்தார். ஆவியின் சக்தியிலே பலப்படுத்தினார். திறமை மிக்க சீடர்களாக உருவாக்கினார். தான் கொடுத்த நற்செய்தியை அறிவிக்க இருவர் இருவராக அனுப்பினார். நற்செய்தியை அறிவிக்க திறமை மிக்க பாத்திரங்களாக மாறினார்கள். சாட்சி பகரும் உண்மை வீரர்களாக மாறினார்கள். இவர்கள் ஆற்றிய அரும்பெரும் செயல்களை நற்செய்தி ஏட்டிலே நாம் காணலாம். வாசித்து மகிழலாம்.

இன்றைய நாட்களிலே இறைவன் உன்னையும் அழைக்கலாம். தனியாக அல்லது குடும்பமாக . எதற்காக? குடும்பங்களைக் கட்டி எழுப்ப உன்னை அழைக்கலாம். இன்று எத்தனையோ குடும்பங்கள் பிளவுபட்டுக் கிடக்கின்றன. கணவன் மனைவிக்குள்ளே பிரிவு. பெற்றோர் பிள்ளைகளுக்குள்ளே விரிசல். திருமணத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்படுகின்றன அல்லது மறைக்கப்படுகின்றன. கணவன் குடித்து குடும்பத்தின் பொறுப்பற்ற நிலையிலே வாழும் காட்சி. அதனால் மனைவி கண்ணீர் கடலிலே தவிக்கும் காட்சி. மனைவி கணவனை மதிக்காத நிலையிலே தான்தோன்றித் தனமாக மாறும் காட்சி. பணம், பதவி, இன்பம் இவைகளுக்கு இடம் கொடுத்து, உண்மை அன்புக்கு இடமின்றி வறண்ட பாலைவனமாக இன்று எத்தனையோ குடும்பங்கள் காட்சித் தருகின்றன. இத்தகைய குடும்பங்களைக் கட்டி எழுப்ப இறைவன் உன்னையும் உன் வாழ்க்கை துணைவர், துணைவியையும் அழைக்கலாம்.

சென்னை மாநகரத்திலே எனக்குத் தெரிந்த சாதாரண கூலி வேலை செய்யும் ஒரு குடும்பம் உண்டு. நல்லதோர் குடும்பம். கணவனும் மனைவியும் இன்பத்திலும், துன்பத்திலும் ஒன்றுபட்டு வாழும் தம்பதிகள். என்னைச் சந்தித்தபோது அவர்களின் பணி வாழ்வில் ஒன்றை என்னிடம் மகிழ்ச்சியோடு கூறினார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் மாலையில் சில குடும்பங்களை நாங்கள் கணவன் மனைவியுமாக சந்திக்கின்றோம். இறைவன் அன்றாட வாழ்வில் எங்களுக்குச் செய்த இணையற்ற கொடைகளை எடுத்துச் சொல்லுகின்றோம். எப்படி எங்கள் வாழ்வில் துன்பங்களையும், சவால்களையும் சந்திக்கின்றோம் என்பதையும் பகிர்ந்து கொள்ளுகிறோம். நாங்கள் சந்திக்கும் குடும்பங்கள் எங்களிடம் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சிகளைக் கவனத்தோடு நாங்கள் செவிமடுக்கின்றோம். இறுதியாக எங்களுக்குத் தெரிந்த சிறிய செபத்தால் குடும்பத்தோடு சேர்ந்து செபிக்கின்றோம். இது எங்களைப் பலப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்கள்.

ஆம் நண்பா! நீயும் உன் மனைவியும் இதற்குச் சான்றாகத் திகழலாம் அல்லவா! சகோதரியே! நீயும் உன் கணவனும் இதற்குச் சான்று பகரலாமே! என்ன தகுதி எனக்கு உண்டு? என்ன திறமை எனக்கு உண்டு என்று திகையாதே! இறைவனுக்குத் தகுதியுள்ளவர்கள் தேவையல்ல. தகுதியற்ற உன்னை தகுதியுள்ளவராக்குவார். உறுதியூட்டும் இறைவனால் எனக்கு எதையும் செய்ய ஆற்றல் உண்டு என்று புனித பவுல் அடிகளார் பிலிப்பியருக்கு எழுதிய மடலிலே 4-ஆம் அதிகாரம் 13 - ஆம் வசனத்தில் குறிப்பிடுவது போல் தேவன் உன்னை ஆற்றல் மிக்க பாத்திரமாக மாற்றுவார். ஆனால் ஒன்று, நீ பிற குடும்பங்களுக்கு திருத்தூதராக மாறும்போது முதலில் நீ உன் குடும்பத்திற்கு திருத்தூதராக மாறுவாய். அது உன்னைப் பலப்படுத்தும். உன் குடும்பம் நிறைவும் மகிழ்ச்சியும் பெறும். பலப்படுத்தும் தேவன் உன்னை வழிநடத்துவாராக.
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் - குடந்தை ஆயர் F. குழந்தைசாமி
துறவு மனத்தவரின் தூயவாழ்வு எப்படி இருக்க வேண்டும்?


இயேசு அவருடைய சீடர்களுக்கு அளித்த அறிவுரை வழியாக மனத் துறவைப் பற்றிய விளக்கமொன்றை நமக்குத் தருகின்றார். அவர் தம் சீடர்களைப் பார்த்து, பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையிலே செப்புக்காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம். அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும் (மாற் 6:8-9) என்கின்றார்.

துறவின் மையம் வெறுமை போல தோன்றும்! ஆனால் துறவு உண்மையிலேயே நிறைவானது, வல்லமை மிக்கது, ஆற்றல் வாய்ந்தது.

இரு நண்பர்கள்! இருவரும் துறவிகள்! ஒருவர் முற்றிலும் துறந்தவர்! மற்றொருவர் சற்றே மாறுபட்டவர். இருவரும் ஓர் ஆற்றைக் கடக்க வேண்டிய சூழ்நிலை! மாலை நேரம்!

முற்றிலும் துறந்தவர், "ஓடக்காரருக்குக் கொடுக்க, என்னிடம் பணமில்லை ; இங்கேயே தங்குவோம். காலையில் யாராவது நமக்கு உதவிசெய்வார்கள்” என்றார். மற்றவரோ, "இது காடு. மிருகங்களால் நமக்கு ஆபத்து ஏற்படலாம். என்னிடம் பணமிருக்கின்றது. ஆற்றைக் கடந்து விடுவோம்" என்றார்.

இருவரும் அக்கரையை அடைந்தார்கள். அப்போது முற்றும் துறந்தவரைப் பார்த்து அவருடைய நண்பர், "உம்மைப்போல நானும் முற்றும் துறந்திருந்தால் ஆற்றைக் கடந்திருக்க முடியாதே" என்றார்.

அதற்கு முற்றும் துறந்தவர் சொன்னார் : "உன் துறவு மனப்பாங்குதான் நம்மை இக்கரை சேர்த்தது. நீ பொருளைப் படகோட்டிக்குக் கொடுக்காமல் இருந்திருந்தால் நாம் வந்து சேர்ந்திருக்க முடியாது. மேலும் என் பையில் பணமில்லாதபோது உன்னுடையது என்னுடையதாயிற்று. எனக்குத் தேவையானது எனக்கு எப்படியும் கிடைத்துவிடுகின்றது. பொருள் இல்லாததால் ஒருபொழுதும் நான் துன்புற்றதில்லை” என்றார்.

இதனால்தான் இயேசு பற்றற்ற வாழ்வுக்கு, துறவு வாழ்வுக்கு நம்மை அழைக்கின்றார். இல்லறத்தில், தனியறத்தில் வாழ்பவர்கள் கூட துறவை மேற்கொள்ளலாம். மனத் துறவு - இது எல்லாருக்கும் பொதுவானது. துறவு மனம் படைத்தோர் ஒருபோதும் ஏமாறுவதில்லை - ஏனென்றால் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை!
துறவு மனம் படைத்தோர் எதையும் இழப்பதில்லை - ஏனென்றால் அவர்கள் எதையும் பற்றிக்கொள்வதில்லை! ( முதல் வாசகம் ).

மேலும் அறிவோம் :
பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள் : 350).

பொருள் : எவற்றின் மீதும் பற்று வைக்காமல் இருப்பவரிடம் பற்று வைக்கலாம். உலகச் செல்வங்கள் மீது பற்றுக்கொள்வோர் அவை நிலையற்றவை என்பதை உணர்ந்து, பற்றற்றான் ஆகிய இறைவன் மீது பற்று வைப்பர்.
மறையுரை மொட்டுக்கள் -அருள்பணி Y. இருதயராஜ்

பெந்தக்கோஸ்து சபையைச் சார்ந்த கிறிஸ்துவர்கள், "இயேசு வருகிறார் என்ற தலைப்பில் பல துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து அவற்றை ஒரு பேருந்து நிலையத்திலிருந்த பயணிகளுக்குக் கொடுத்தனர். மேலும், ஒரு பேருந்து நடத்துனரிடம் அதைக் கொடுக்க, அவர் அதைப் படித்துப் பார்த்துவிட்டு, "இயேசு வருகிறாரா? யார் வந்தாலும் வரட்டும்; ஆனால், மரியாதையாக 'டிக்கட்' வாங்கிக் கொண்டுதான் பேருந்தில் ஏறவேண்டும்" என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இன்று இயேசுவே வந்தாலும், அவர் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டுதான் பேருந்தில் ஏறமுடியும்: பயணம் செய்ய முடியும், அப்படியிருக்க, இன்றைய நற்செய்தியில், இயேசு தம் சீடர்களை நற்செய்திப் பணிக்காக அனுப்பும்போது, அவர்கள் தங்களுடன் உணவோ, பையோ, காசோ எதுவுமே எடுத்துச் செல்லவேண்டாம் என்று கட்டளையிடுகிறாரே; இது நடைமுறைக்கு ஒத்துவருமா? என்று நாம் கேட்கலாம்,

இன்றைய நற்செய்தியில் இயேசு இரண்டு உண்மைகளை வலியுறுத்துகிறார். ஒன்று, நற்செய்தியை அறிவிப்பவர்கள் பணத்தை அல்ல, கடவுளையே நம்பித் தங்கள் தாதுரைப் பணியை மேற்கொள்ள வேண்டும். இரண்டு, நற்செய்தியைக் கேட்பவர்கள் அதை அறிவிப்பவர்களின் இன்றியமையாத் தேவைகளை நிறைவு செய்யக் கடமைப்பட்டுள்ளாளர்.

நற்செய்தியை அறிவிப்பவர்கள் கடவுளை மட்டுமே நம்பித் தங்கள் பணியை ஆற்றவேண்டும், செல்வமும் சொத்துக்களும் நற்செய்திப் பணிக்கு மாபெரும் இடையூறாகவும் வேகத் தடைகளாகவும் உள்ளன. நற்செய்திப் பணிக்காகச் சொத்துக்களைக் குவிப்பவர்களுக்கு. இறுதியில் அச்சொத்துக்களைக் கட்டிக் காப்பதற்குத்தான் நேரமிருக்கும்; நற்செய்திப் பணிக்கு நேரமிருக்காது.

நற்செய்தி அறிவிப்பவர்கள் ஊர் ஊராகச் செல்லவேண்டும். எவ்வளவுக்கு அதிகமாகப் பொருள்கள் அவர்களிடம் உள்ளதோ, அவ்வளவுக்கு அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லத் தயங்குவார்கள்.

தனது பங்கிலே 100 தென்னம்பிள்ளைகளை நட்டுவளர்த்த பங்குத்தந்தை. அம்மரங்கள் காய்க்கும்வரைத் தன்னை அப்பங்கிலிருந்து மாற்றக்கூடாது என்கிறார். கட்டடம் கட்டிக் கொண்டிருக்கும் பங்குத்தந்தை. அக்கட்டடம் கட்டி முடியும்வரை பணிமாற்றத்தை எதிர்க்கிறார், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, பல இலட்சங்களைத் தனியார் நிறுவனத்தில் கொடுத்து வைத்த துறவறச் சபைக் குரு. அந்நிறுவனம் திவ்லாகி, 'மஞ்சள் நோட்டீஸ் அனுப்பியவுடன் மாரடைப்பால் மரணமடைகிறார்!

"எவரும் இருதலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. நீங்களும் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது” (மத் 8:24). ஆண்டவரின் இவ்வருள் வாக்கை மறந்தத் திருப்பணியாளர்கள் காலப்போக்கில் திருவாளர்களாக மாறிவிடுவதில் வியப்பொன்றுமில்லை, பொருளாளர்கள் அருளாளர்களாக இருப்பது ஒருபோதும் இயலாது. புனித சாமிநாதர் மூன்றாம் 'இன்னசென்ட்' என்ற திருத்தந்தையைச் சந்தித்தபோது, திருத்தந்தை அவரிடம், "பேதுரு தன்னிடம் பொன்னோ வென்ளியோ இல்லை என்றார். ஆனால் நான் அவ்வாறு கூற முடியாது. ஏனெனில் என்னிடம் ஏராளமாகப் பொன்னும் வெள்ளியும் உள்ளன என்றார். அதற்குச் சாமிநாதர் திருத்தந்தையிடம், "உங்களிடம் பொன்னோ வெள்ளியோ இல்லை என்று கூறமுடியாது. ஆனால் நீங்கள் முடவனைப் பார்த்து எழுந்து நட' என்றும் சொல்ல முடியாது" என்று பதிலடி கொடுத்தார். பேதுருவும் ஏனைய திருத்தத்தங்களும் புதுமை செய்தனர்; ஏனெனில் அவர்களிடம் பொன்னும் வெள்ளியுமில்லை. இக்காலத்தில் திருப்பணியாளர்களிடம் ஏராளமாகப் பொன்னும் வெள்ளியும் இருப்பதால் அவர்களால் புதுமை செய்ய இயலவில்லை .
திருப்பணியாளர்கள் தங்கள் அருள் பணிக்குப் பணம் வாங்கக் கூடாது. ஏனெனில் கொடையாக, அதாவது, இலவசமாகப் பெற்றுக் கொண்டதைக் கொடையாக, இலவசமாகவே வழங்க வேண்டும் (மத் 10:8) என்பதுதான் இயேசுவின் விருப்பம்

ஒரு பங்கிற்கு உறுதிப்பூசுதல் கொடுப்பதற்காக ஆயர் சென்ற போது, உறுதிப்பூசுதல் பெறும் சிறுவர்கள் ஓர் உறையுள் 10 ரூபாய் வைத்து ஆயருக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டுமென்று பங்குத்தந்தைக் கேட்டிருந்தார், ஓர் உறையுள் 10 ரூபாய் இருந்தது: அத்துடன் ஒரு காகிதத்துண்டில், “பரிசுத்த ஆவியைப் பெறுவதற்குமா இலஞ்சம் கொடுக்க வேண்டும்?" என்று எழுதப்பட்டிருந்தது.

திருப்பலி நிறைவேற்றுவதற்கும் திருவருள் சாதனங்களை வழங்குவதற்கும் இறைமக்களிடமிருந்து பெறப்படுவது இலஞ்சமோ கட்டாயக் கட்டணமோ அல்ல; மாறாக, திருப்பணியாளர்களைப் பராமரிப்பதற்காக இறைமக்கள் கொடுக்கும் விருப்பக் காரிக்கையாகும், திருப்பணியாளர்கள் இழிவான ஊதியத்திற்காகப் பணி செய்யலாகாது (1பேது 5:2). ஆனால், பங்கு மக்கள் தங்களது பங்குப்பாரியாளரைப் பராமரிக்க வேண்டிய கடமையும் உரிமையும் கொண்டுள்ளனர். இக்கடமையை இயேசுவும் புனித பவுலும் வலியுறுத்துகின்றனர்.

'வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே' (மத் 10:10 இயேசு வின் சீடருக்கு ஒரு கிண்ணம் குளிர்ந்த நீர் கொடுப்பவரும் கைமாறு பெறுவார் (காண்க: மத் 10:42) "நற்செய்தியை அறிவிக்கிறவர்கள் அந்நற்செய்தியின் மூலமாகவே பிழைப்புக்கு உரியவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நம் ஆண்டவர் பனரித்திருக்கிறார்" (1கொரி 9:14), “இறைவார்த்தையைக் கற்றுக் கொள்வோர் அதைக் கற்றுக் கொடுப்போருக்குத் தமக்குள்ள நலன்கள் அனைத்திலும் பங்கு அளிக்க வேண்டும்" (கலா 6:6).
ஞாயிறு திருப்பலி முடிந்து, தனது சிறிய மகனுடன் வீடு திரும்பிய ஒரு பெண்மணி, பங்குத் தந்தையின் பிரசங்கத்தைப் பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்து. கண்டபடி அவரைத் திட்டினார். அவருடைய சிறிய மகன் அவரிடம், "ஆமா, நீ போட்ட 10 பைசாவுக்கு இதைவிட நல்ல பிரசங்கம் வேணுமா? பேசாம வாங்கம்மா" என்றாள், 10 பைசா உண்டியலில் போட்டுவிட்டு, 10,000 கேள்விகள் கேட்பார் பலர் உண்டு ,

ஒவ்வொருவரும் தங்கள் மாதவருமானத்தில் 1/10 பகுதியை கொடுக்கவேண்டாம்: 1/100 பகுதியாவது கொடுத்தாலே போதும். பங்குத் தந்தையைக்கூடப் பராமரிக்காத பங்கு மக்கள் கடவுளிடமிருந்து கொடைகளை எதிர்பார்க்க முடியுமா?


*கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்" (லூக் 6:33) "மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலேயோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்குரியவர், கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்பவல்லவர்" (2கொரி 9:7-8),
ஆண்டவரின் பேரன்ப - அருள்பணி  ஏசு கருணாநிதி.
ஒரு நிகழ்வைக் கற்பனை செய்வோம். தீபாவளி நேரம். பேருந்துகள் மற்றும் இரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. மதுரையில் இருக்கும் எனக்கு அன்று காலையில் செய்தி வருகிறது. சென்னையில் இருக்கும் என் நண்பர் ஒருவர் ரொம்பவும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். நான் அவரைக் காண விழைந்து புறப்படுகிறேன். பேருந்துகளில் நெரிசல் அதிகம் இருப்பதால் வைகை எக்ஸ்பிரஸ் எடுத்து செல்லலாம் என நினைத்து இரயில் சந்திப்பு வருகிறேன். கரன்ட் டிக்கெட் எடுக்கும் இடத்திலும் நீண்ட கூட்டம். கூட்டத்தில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து டிக்கெட்டும் வாங்கிவிடுகிறேன். பிளாட்ஃபார்முக்கு வேகமாக செல்கிறேன். எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் என அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. கூட்டம் அதிகமாக இருப்பதால் எல்லாரையும், எல்லா டிக்கெட்டுகளையும் பரிசோதிக்கிறார்கள். அப்படி பரிசோதிப்பவரிடம் என் டிக்கெட்டையும், அடையாள அட்டையையும் காட்டியவுடன், அவர் ஒரு நொடி யோசித்துவிட்டு, 'சார், நீங்க தான் அவரா! வாங்க சார். உங்களுக்காக ஒருத்தர் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏசி புக் பண்ணியிருக்கார். லக்கேஜ் இவ்ளோதானா!' என்று தொடர்ந்தவர், 'தம்பி, வா, சாரோட லக்கேஜ் எடுத்துட்டுப் போ!' என்று போர்ட்டருக்குக் கட்டளையிடுகிறார். நான் ஒன்றும் புரியாமல் நிற்கிறேன். 'சார்! ரொம்ப ஆச்சர்யப்படாதீங்க! உங்க டிக்கெட், போர்ட்டர் கூலி, நீங்க சென்னையில் பயணம் செய்வதற்குக் கார் என அனைத்தையும் அவர் உங்களுக்காக புக்கிங் செய்துவிட்டார். பணமும் கொடுத்துவிட்டார்! நீங்க போய் உங்க சீட்ல உட்காருங்க!' என்கிறார்.

நான் என் இருக்கை நோக்கிச் செல்லும்போது என்னில் எழும் அந்த உணர்வைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 1:3-14) தருகின்றார் தூய பவுல். அதாவது, 'நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாக தேர்ந்தெடுத்தார் ... ... தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்துவைத்தார்' என்கிறார் பவுல். நம் நிலை என்ன என்றே தெரியாதபோது, நம் நிலை இப்படித்தான் இருக்கும் என்று கடவுள் நம்மை மேன்மைப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார் பவுல். இரயில் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே இரயிலில் பயணம் முன்பதிவு செய்துள்ளார் இறைவன். இது இறைவனின் பேரன்பையே காட்டுகிறது.

'ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்' என்று இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 85) திருப்பாடல் ஆசிரியர் வேண்டுகிறார். அதாவது, என்னை அன்பு செய்யும் ஒருவர் என் தேவை அறிந்து எனக்கு இரயிலில் முன்பதிவு செய்கிறார். இந்த செயல் அவரது அன்பின் வெளிப்பாடு என்றால், நான் இந்த உலகில் படைக்கப்பட்டதும், கடவுளால் வழிநடத்தப்படுவதும், அவரது மகனால் மீட்கப்படுவதும் கடவுளின் பேரன்பின் வெளிப்பாடு அன்றோ!

கடவுளின் பேரன்பு இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸின் வாழ்விலும், இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருத்தூதர்களின் வாழ்விலும் செயல்படுவதைப் பார்க்கிறோம். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் சாதாரண ஒரு நிலையிலிருந்து மனிதர்கள் அசாதாரண நிலைக்கு உயர்த்தப்பெறுகின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். ஆமோ 7:12-15) இறைவாக்கினர் ஆமோஸ் பெத்தேலின் குருவாக இருந்த அமட்சியாவின் எதிர்ப்பை சம்பாதிக்கின்றார். இறைவாக்கினர் பணி என்பது காசுக்கான அல்லது பதவிக்கான பணி என எண்ணிய அமட்சியாவுக்குப் பதிலடி கொடுக்கின்ற ஆமோஸ், 'நான் இறைவாக்கினனும் அல்ல. இறைவாக்கினனின் மகனும் அல்ல. ஓர் ஆடு மேய்ப்பவன். தோட்டக்காரன்' என்கிறார். அதாவது, தன் இறைவாக்குப் பணியால் தான் தன் ஆடுகளையும், தன் தோட்டத்தையுடம் இழந்தவன் என்றும், இறைவனின் அழைப்பினால்தான் தான் இறைவாக்குப் பணியை செய்வதாகவும் சொல்கின்றார். ஆக, என் அழைப்பும், என் அனுப்பப்படுதலும் என் சொந்த விருப்பு வெறுப்பினாலோ, என் மனத்தின் உள்ளாசைகளாலோ தோன்றியது அல்ல. மாறாக, என்னை அழைத்தவர் என்னைத் தேர்ந்தெடுத்து, ''என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று இறைவாக்கு உரை' என அனுப்பினார்' எனச் சொல்கின்றார். சாதாரண ஆடு, மாடு மேய்க்கும், தோட்டக்கார வேலையிலிருந்து இறைவாக்கினர் நிலைக்கு ஆமோஸை உயர்த்துகிறது ஆண்டவரின் பேரன்பு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 6:7-13) இயேசு பன்னிருவரை தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்புகின்றார். இயேசுவின் சமகாலத்து ரபிக்கள் தங்களுக்கென சீடர்களை வைத்திருந்தாலும் அவர்களைத் தனியாக பணிக்கு அனுப்புவதில்லை. தங்கள் பெயரே எல்லா இடத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் தாங்களே பணிக்குச் செல்வர். அப்படி தங்கள் சீடர்களை அழைத்துச் சென்றாலும், அவர்களை வெறும் ஏவல் வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார். ஆனால், இயேசு பன்னிருவரை தனியாக அனுப்புவதன் வழியாக அவர்களை தன் உடன்பணியாளர்கள் ஆக்குகிறார். மேலும், ரபிக்கள் தாங்கள் பணிக்குச் செல்லும்போது, தங்களுக்குத் தேவையான உணவு, துணி, பணம் அனைத்தையும் தங்களுடன் எடுத்துச் செல்வர். ஒரே வீட்டில் தங்க மாட்டார்கள். போய்க்கொண்டே இருப்பார்கள். இதற்கெல்லாம் ஒரு மாற்றுக் கலாச்சாரத்தைத் தன் சீடர்களுக்கு இயேசு கற்றுக்கொடுக்கின்றார்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் செயல்களை மூன்று வினைச்சொற்களில் பதிவு செய்கின்றார் மாற்கு:

அ. அனுப்பத் தொடங்கினார்
ஆ. அதிகாரம் அளித்தார்
இ. கட்டளையிட்டார்

அ. 'அனுப்புதல்'. நாணயத்தின் ஒரு பக்கம் 'அழைத்தல்' என்றால், அதன் மறுபக்கம் 'அனுப்புதல்.' இறையழைத்தலின் மறுபக்கம் இறைப்பணி. எனக்கு இறையழைத்தல் இருக்கிறது என்றால், அது வெறுமனே நான் அமர்ந்து அதில் இன்புறுவதற்காக அல்ல. மாறாக, அனுப்பப்படுதலில்தான் அழைத்தல் நிறைவுபெறுகிறது. 'தம்மோடு இருக்க பன்னிருவரை தேர்ந்தெடுத்த இயேசு' (காண். மாற் 3:14) இப்போது அவர்களை இருவர் இருவராக அனுப்புகின்றார். ஆக, இதுவரை பயிற்சி பெற்றவர்கள் இப்போது பணிக்குச் செல்கிறார்கள். கல்லூரிக்கல்வி முடிந்து வேலை அல்லது வாழ்க்கைப்பணி தொடங்குகிறது இவர்களுக்கு.

ஆ. 'அதிகாரம் அளித்தார்'.
'தீய ஆவிகளின்மேல் அதிகாரம் அளிக்கின்றார்' இயேசு. இது இயேசு தீய ஆவிகளின்மேல் கொண்டிருந்த அதிகாரத்தையும் குறிக்கிறது. அதிகாரம் வைத்திருப்பவர் தானே அதை மற்றவர்களுக்கு அளிக்க முடியும். ஆக, அதிகாரம் என்பதன் பொருளை மாற்றுகிறார் இயேசு. அனுப்பப்படுபவர் கொண்டிருக்க வேண்டிய அதிகாரம் மக்கள்மேலோ, பணத்தின் மேலோ, இடத்தின் மேலோ அல்ல. மாறாக, தீய ஆவிகளின்மேல். ஆக, என் அதிகாரத்தைக் கண்டு தீய ஆவிகள் பயப்படலாமே தவிர, நான் பணிசெய்ய செல்லுமிடத்தில் உள்ளவர்கள் பயப்படக்கூடாது.


இ. 'கட்டளையிட்டார்'. என்ன கட்டளை? 'உணவு,' 'பை,' 'செப்புக்காசு' எடுத்துச் செல்ல வேண்டாம் என்னும் கட்டளை. 'உணவு' என்பது இவர்களின் 'உடல் தேவைகளையும்,' 'பை' என்பது இவர்களின் 'அன்புத் தேவைகளையும்,' 'செப்புக்காசு' என்பது இவர்களின் 'பாதுகாப்புத் தேவைகளையும்' குறிக்கிறது. அதாவது, சாதாரணமாக நாம் தேடும் உடல், அன்பு, மற்றும் பாதுகாப்புத் தேவைகள் நம்மை ஒரு இடம் அல்லது நபரோடு கட்டிவைத்துவிடுகின்றன. நாம் எதற்காக நம் வீட்டில் இருக்கிறோம்? உணவுக்காக, உறவுக்காக, பாதுகாப்புக்காக. ஆக, வீடு உணவையும், உறவையும், பாதுகாப்பையும் தந்தாலும், அது அதே நேரத்தில் என்னைக் கட்டியும் வைத்துவிடுகிறது. என் வீட்டைவிட்டு என்னால் வெளியே செல்ல என்னால் முடிவதில்லை. ஆனால், இயேசுவின் கட்டளை திருத்தூதர்களைக் கட்டின்மைக்கு அழைத்துச் செல்கிறது. ரோட்டில் ஒரு நாயை அழைத்துச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். நாய்க்குட்டியின் கழுத்தில் பெல்ட் போட்டு, சங்கிலியின் மறுபக்கத்தை நாம் பிடித்திருந்தாலும், நாம் நாய்க்குட்டியைப் பிடித்திருப்பதுபோல, நாய்க்குட்டியும் நம்மைப் பிடித்துக்கொள்கிறது. நம்மை விட்டு அது எப்படி ஓட முடியாதோ, அதுபோலவே அதைவிட்டும் நான் ஓட முடியாது.

இந்த மூன்று சொல்லாடல்கள் - 'அனுப்புதல்,' 'அதிகாரம் அளித்தல்,' 'கட்டளையிடுதல்' - இயேசு தன் திருத்தூதர்களை சாதாரண நிலையிலிருந்து அசாதாரண நிலைக்கு உயர்த்துகிறார். இது இயேசுவின் பேரன்பிற்குச் சான்றாகத் திகழ்கிறது. இப்படி உயர்த்தப்பட்டவர்கள் தங்கள் வேலைகளைச் சரியாகச் செய்துமுடிக்கின்றனர் எனவும் மாற்கு பதிவு செய்கின்றார்.

இவ்வாறாக, ஆண்டவரின் பேரன்பு,

முதல் வாசகத்தில், ஆமோஸை 'ஆடுமேய்ப்பவர்' நிலையிலிருந்து 'இறைவாக்கினர்' நிலைக்கும்,
இரண்டாம் வாசத்தில், நம்பிக்கையாளரை 'ஒன்றுமில்லாதவர்' நிலையிலிருந்து 'கடவுளின் மகன்-மகள்' நிலைக்கும்,
மூன்றாம் வாசகத்தில், திருத்தூதர்களை 'உடல்-உறவு-பாதுகாப்பு தேவை கட்டுகள்' நிலையிலிருந்து 'கட்டின்மை' நிலைக்கும் அழைத்துச் செல்கிறது.

இந்த அழைப்பு அல்லது உயர்த்துதல் மற்றொன்றையும் நமக்குச் சொல்கிறது. முழுக்க, முழுக்க இது இறைவனின் அருள்செயலே அன்றி, இதில் மனித முயற்சிக்கும், மனித அறிவுக்கும், மனித ஆற்றலுக்கும் பங்கில்லை. இது ஒருபோதும் உயர்த்தப்படுபவரின் தெரிவு அன்று. மாறாக, உயர்த்தப்படுபவர்மேல் கடவுளே வலிந்து திணிக்கும் ஒரு நிலை.

கடவுளின் பேரன்பிற்கு நாம் தகுதியாக்கிக்கொள்ளத் தேவையில்லை. மாறாக, அவரே அதைக் கொடையாகக் கொடுக்கின்றார்.

அதே வேளையில் கடவுள் காட்டும் பேரன்பை நாம் நம் வாழ்வில் அனுபவிக்க அதற்கேற்ற சூழலை உருவாக்கவேண்டும். இச்சூழலை உருவாக்குவது எப்படி?

1. வேர்களும், விழுதுகளும்
ஆமோஸின் இறைவாக்குப் பணி என்னும் விழுது அமட்சியா என்ற பெத்தேல் அருள்தலக் குருவால் கேள்விக்குட்படுத்தப்படும்போது, ஆமோஸ் ஆடுமேய்க்கும் பணியாகிய தன் வேரை மனத்தில் கொள்கின்றார். விழுது பரப்புவதற்கு, இறைவாக்கு பணி செய்வதற்கு ஆண்டவர்தாம் அனுப்பினார் என்றாலும், இந்த அனுப்புதல் ஆமோசுக்குத் தெரியுமே தவிர, அமட்சியாவுக்குத் தெரியாது. இவ்வாறாக, நாம் அனுப்பப்படும் நிலையை மற்றவர்கள் தங்கள் அறியாமையால் உதறித் தள்ளும்போது நாம் நம் வேர்களைப் பற்றிக்கொள்ள வேண்டும். நம் வேர்களை நாம் நினைத்துப் பார்க்கும் போது நம் இயலாமை நமக்குப் புரியத் தொடங்குகிறது. அதே நேரத்தில் நம் வேர்கள் நம்மைப் பின் நோக்கி இழுக்காவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆமோஸ் அதைச் சரியாகச் செய்கிறார். 'நீ இறைவாக்குரைக்க வேண்டாம்' என்று அமட்சியா சொன்னவுடன், அவர் உடனடியாகத் தன் ஆடுமேய்க்கும் பணிக்குத் திரும்பிவிடவில்லை. கடவுளின் பேரன்பு தன்னை ஆட்கொண்டு தன்னை உயர்த்தியது. தான் கடந்து வந்த நிலை கண்முன் நின்றாலும், கடந்து வந்த பழைய நிலைக்கே திரும்பத் தேவையில்லை. தொடர்ந்து அவர் இறைவாக்குப்பணியைச் செய்கின்றார். ஆக, கடவுளின் பேரன்பை உணர்ந்த ஒருவர் தன் வேர்களை மறக்கவும், அதே வேளையில் தன் கடந்த காலம் நோக்கி பின்செல்லவும் கூடாது.

2. புள்ளிகளை இணைத்தல்

நாம் ஒரு புள்ளியில் பிறந்து மறு புள்ளியில் இறக்கின்றோம். ஒரு நாளில் பிறந்து இன்னொரு நாளில் இறக்கின்றோம். நாம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு வாழ்கின்றோம். பிறக்கும்போது ஒரு ஊர், வளரும்போது இன்னொரு ஊர், பணி செய்ய இன்னொரு ஊர், இறக்கும்போது இன்னொரு ஊர் என நம் வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இடமும், ஒவ்வொரு மனிதரிடமும் நாம் நகரும்போது நாம் ஒவ்வொரு புள்ளியை விட்டுக்கொண்டே செல்கின்றோம். கொஞ்ச நேரம் உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் அந்தப் புள்ளிகள் மிக அழகாக இணைவதை நம்மால் பார்க்க முடியும். நமக்கு நடந்தது எதுவும் விபத்தில்லை. எல்லாமே ஏதோ ஒரு திட்டத்தில்தான் நடந்திருக்கிறது என்றும் தோன்றும். இதுதான் நம் வாழ்க்கை நிலை. இந்த நிலையை அப்படியே இன்னும் கொஞ்சம் உயர்த்துகிறார் தூய பவுல். நம் பிறப்பை உலகின் தொடக்கம் என்ற புள்ளியோடு இணைக்கின்றார். ஆக, உலகின் தொடக்கத்திலேயே நம் வாழ்க்கைப் புள்ளியும் தொடங்கி தொடர்கிறது. படைப்பு என்ற தாயோடு உள்ள தொப்புள்கொடி நம்மில் நீண்டுகொண்டே இருக்கிறது. அந்த தொப்புள்கொடிதான் நம் வாழ்வின் இலக்கோடு நம்மை இணைக்கின்றது. நம் வாழ்வில் இறைவன் வைத்திருக்கும் நோக்கம் என்னவென்றால், 'நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் அவர் திருமுன் விளங்குவது, அவரின் பிள்ளைகளாக இருப்பது'. அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு கடிகாரம் அதை வடிவமைத்தவரின் திறமையைக் காட்டுகிறது. அதுபோல, நாம் வாழ்கின்ற நல்ல வாழ்க்கை நம்மை உருவாக்கிய இறைவனுக்குப் புகழ்சேர்க்கிறது. ஆக, இத்தகைய புகழுக்குரிய வாழ்வை வாழ்வது நம் கடமையாக இருக்கிறது. இவ்வாறாக, கடவுளின் பேரன்பு நமக்குக் கொடையாக வந்தாலும், அதற்கேற்ற வாழ்வை வாழ்வது நம் கடமையாகவும், நம்மேல் சுமத்தப்பட்ட பொறுப்பாகவும் இருக்கிறது. கொடை என்ற புள்ளியை, நம் பொறுப்புணர்வு என்ற புள்ளியோடு இணைக்கும்போது நாம் இறைவனோடு இன்னும் நெருக்கமாகின்றோம்.

3. தங்குங்கள், உதறுங்கள்
'அழைக்கப்பட்ட' திருத்தூதர்கள் இயேசுவால் 'அனுப்பப்படுகின்றனர்,' 'அதிகாரம் கொடுக்கப்படுகின்றனர்,' மற்றும் 'உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றனர்'. இவ்வாறாக, அவர்களின் இந்த முன்னேற்றம் அவர்கள் விருப்பத்தால் நிகழ்வது அல்ல. மாறாக, அது அவர்கள் மேல் திணிக்கப்படுகிறது. அவர்களின் விருப்பு வெறுப்பு இங்கே கருத்தில் கொள்ளப்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் இயேசுவின் அழைப்புக்கு 'ஆம்' சொன்ன அந்த நிமிடமே தங்கள் விருப்பங்களை இயேசுவிடம் ஒப்படைத்துவிடுகின்றனர். இயேசுவின் அன்பு தங்களை ஆட்கொள்ள விட்டுவிடுகின்றனர். இப்படி ஆட்கொள்ளப்பட்டவர்களுக்கு இயேசு இரண்டு வார்த்தைகளில் அறிவுறுத்துகின்றார்: 'ஏற்றுக்கொண்டால் தங்குங்கள்,' 'ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் உதறுங்கள்.' இந்த இரண்டையும் மாற்றிப் போட்டால் எப்படி இருக்கும்? நம்மை ஏற்றுக்கொள்கிறவரை நாம் உதறவும், நம்மை ஏற்றுக்கொள்ளாதவரிடம் நாம் தங்கவும் செய்தால் வாழ்க்கை ரொம்பவும் கலவரமாகிவிடும். மற்றவரோடு தங்குவதற்கு நிறைய பொறுமையும், தாராள உள்ளமும் தேவை. மற்றவரிடமிருந்து விலகிச் செல்வதற்கு நிறைய துணிச்சலும், மனத்திடமும் தேவை. இந்த இரண்டு செயல்களின் ஊற்றாக அல்லது அளவுகோலாக ஒருவர் வைத்துக்கொள்ள வேண்டியது இறைவனின் பேரன்பு.

இறுதியாக,

நம் வாழ்வை ஒரு நொடியில் புரட்டிப்போடும், பறக்க வைக்கும் இறைவனின் பேரன்பிற்கு நன்றிகூறும் இந்நாளில், அவர் விடுக்கும் அழைப்பு ஒவ்வொருவரையும் நோக்கி வருகிறது. அந்தப் பேரன்பே நம்மை ஆட்கொண்டுள்ளதால் அவர் அனுப்பும்போது அவரின் பேரன்பு நம் வழியாக யாவரையும் ஆட்கொண்டால், நாம் எல்லாரும் தூயோராய், மாசற்றோராய், அவரின் பிள்ளைகளாய் அவர்முன் இருப்போம்.

அவர் அன்பு நம்மை ஆட்கொண்டால் அன்றாடம் வளர்ச்சியே, வெற்றியே, மகிழ்ச்சியே!

'ஆண்டவரே, உமது பேரன்பை உங்களுக்குக் காட்டியருளும்!'Wednesday, 4 July 2018

ஆண்டின் பொதுக்காலம் 14-ம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 14-ம் ஞாயிறு

எசே 2:23-24: 2கொரி 12:7-10; மாற் 6:1-6


மகிழ்ச்சியூட்டும் மறையுரை -குடந்தை ஆயர் F. அந்தோனிசாமி

எது அர்த்தமுள்ள வழிபாடு?

இயேசுவின் காலத்தில் அவரைப் பார்த்து எத்தனையோ பேர் ஆச்சரியப்பட்டார்கள்.

இயேசு அப்பங்களைப் பலுகச் செய்தபோது (யோவா 6:1-13) மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

இயேசு நோயாளிகளைக் குணமாக்கியபோது (மத் 9:27-31) மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

இயேசு ஊமைகளைப் பேசவைத்தபோதும் (மத் 9:32-33), முடவர்களை நடக்க வைத்தபோதும் (மத் 9:1-7), பாவங்களை மன்னித்தபோதும் (லூக் 7:36-50), பேய்களை ஓட்டியபோதும் (மாற் 1:21-28), இறந்தவர்களை உயிர்ப்பித்தபோதும் (யோவா 11:1-44) மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

ஆனால் இப்படி ஆச்சரியப்பட்டவர்கள் அத்தனை பேரின் வாழ்விலும் இயேசு புதுமை செய்யவில்லை. யார் யார் இயேசுவை ஆண்டவராக, கடவுளாக ஏற்றுக்கொண்டார்களோ அவர்கள் வாழ்க்கையில் மட்டும்தான் அற்புதங்கள் புரிந்தார்.

இன்றைய நற்செய்தியிலே நாசரேத்து மக்கள் இயேசுவைப் பார்த்து ஆச்சரியப்படுவதைப் பார்க்கின்றோம். ஆனால் அவரைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள பலர் மறுத்ததால் அங்கே அவர் அதிகமான புதுமைகளை நிகழ்த்தவில்லை.

இயேசுவின் மீது நம்பிக்கை வைக்காதது மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டு மக்களின் குணம் படைத்தவர்களாய் (முதல் வாசகம்) அவரைக் கொலை செய்யவும் நாசரேத்து மக்கள் துணிந்தார்கள் (லூக் 4:28-30). இயேசுவைக் கண்டு மக்கள் வியப்புற்றார்கள்; இயேசுவோ அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு வியப்புற்றார் (மாற் 6:6அ).

நாமெல்லாம் இயேசுவைக் கடவுளாக ஏற்றுக்கொள்கின்றவர்கள்தான்! ஆனால் இன்னலிலும், நெருக்கடியிலும் நாம் தத்தளித்துத் தடுமாறும்போது இயேசுவைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றோம்.

கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பிய ஒருவர் தனது விருப்பத்தை அவரது கிறிஸ்தவ நண்பரிடம் தெரிவித்தார். அவரது நண்பர் அவரை கோயிலுக்கு அழைத்துச்சென்று சிலுவையிலே தொங்குகின்ற இயேசுவை சுட்டிக்காட்டி, இவர்தான் நீ வழிபட விரும்பும் இயேசு என்றார். அவரது நண்பரோ அதிர்ச்சி அடைந்து, இயேசுவுக்கே இந்தக் கதி என்றால், எனக்கு என்னென்ன நேருமோ! இப்படி சிலுவையிலே இறந்து கிடக்கும் இயேசுவை வழிபட நான் விரும்பவில்லை என்று சொல்லிச் சென்றுவிட்டார்.

புனித பவுலடிகளாரைப் போல கிறிஸ்துவோடு (இரண்டாம் வாசகம்) பாடுபடத் தயாராக இருப்பவர்களால் மட்டுமே இயேசுவை ஆண்டவராகவும் கடவுளாகவும் ஏற்றுக்கொள்ள முடியும். அவர்கள் வாழ்வில் மட்டுமே புதுமைகள் நடக்கும்.

இதுவே நமது செபமாக இருக்கட்டும்: இயேசுவே! உம்மீது நாங்கள் கொண்டிருக்கும் பக்தி முழுமையானதாக அமைய, எங்கள் வழிபாடு அர்த்தமுள்ளதாக அமைய, எங்கள் நம்பிக்கையை விசாலப்படுத்தும். உம்மைப் பெரிய இறைவாக்கினராக மட்டுமல்ல, இறைவனாகவும் ஏற்று வாழ வரம் தாரும். ஆமென்.

மேலும் அறிவோம் :

கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (குறள் : 2).

பொருள் : நூல்கள் பலவற்றைக் கற்று அறிஞராக விளங்குபவர், தூய தத்துவப் பேரறிஞனாகிய இறைவனது திருவடிகளைத் தொழுது பயன்பெற வேண்டும். அத்தகைய பணிவு இல்லையென்றால் கல்வியறிவால் உரிய பயன் கிடைக்காது.மறையுரை மொட்டுக்கள் - அருள்பணி Y. இருதயராஜ்


ஒரு கிராமத்திற்கு அருகில் 'சர்க்கஸ்' நடந்து கொண்டிருந்தது. 'சர்க்கஸ்' கூடாரம் ஒருநாள் திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. அந்த 'சர்க்கஸில்' கோமாளியாக நடித்தவன் உருக்குள் ஓடி வந்து, தீயை அணைக்கும்படி ஊர் மக்களைக் கெஞ்சிக் கேட்டான். ஆனால் அவ்வூர் மக்கள் அவனை நம்ப மறுத்தனர். அந்தக் குள்ளன் தங்களை ஏமாற்றுவதாக நினைத்தனர். சிறிது நேரத்தில் தீயானது ஊருக்குள் பரவி, ஊரில் பெரும்பகுதியை எரித்துவிட்டது. அவ்வூர் மக்கள் கோ மாளியின் வெளித்தோற்றத்தை வைத்து அவனை எடைபோட்டதால் ஏமாந்தனர்.

ஒருவருடைய வெளித்தோற்றத்தைக் கண்டு அவரை ஏளனம் செய்யலாகாது. ஏனெனில், அவர் மாபெரும் தேரிலே சிறிய அச்சாணி போன்று இருக்கலாம், பிரமாண்டமான தேரும் அச்சாணி இல்லாமல் முச்சாணும் ஓடாது. இது வள்ளுவரின் வாய்மொழி.

"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து" (குறள் 667)

இன்றைய நற்செய்தியில், கிறிஸ்து தம் சொந்த ஊராகிய நாசரேத்தில், ஓய்வு நாளன்று, தொழுகைக் கூடத்தில் மக்களுக்குப் போதிக்கிறார், அவரது போதனையைக் கேட்ட மக்கள் வியப்படைந்த போதிலும், அவர்கள் அவரை ஓர் இறைவாக்கினராகவோ மெசியாவாகவோ ஏற்க மறுத்தனர், ஏனெனில் அவர் ஒரு தச்சர்: அவருக்குப் படிப்போ, பட்டமோ, பதவியோ ஏதுமில்லை, அவரது உறவினர்களும் சாமானிய மக்கள்.

நாசரேத்தூர் இயேசுதான் மெசியா என்று பிலிப்பு நத்தானியேலிடம் கூறியபோது, "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமா?" (யோவா 1:46) அன்று அவர் ஏளனமாகக் கேட்டார். இயேசுவின் ஊரை வைத்து அவரை எடைபோட்டார் நத்தானியேல்.

"எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" (குறள் 355)
என்ற உண்மையை மறந்துவிட்டார் அவர்,

கடவுளுடைய எண்ணங்களும் வழிமுறைகளும் மனிதருடைய எண்ணங்களிலிருந்தும் வழிமுறைகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டவை (எசா 55:8-9). மேலும், மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; கடவுளோ அகத்தைப் பார்க்கின்றார் (1சாமு 16:13). மக்களுக்கு முன்பாகத் தங்களை நேர்மையாளர்களாகக் காட்டிக் கொண்ட பரிசேயர்கள் கடவுளின் பார்வையில் அருவருப்புக்குரியவர்கள் (லூக் 16:14).

கலக்காரர்களும் வணங்காக்கழுத்தினரும் கடின இதயம் கொண்டவர்களுமான இஸ்ரயேல் மக்களுக்கு, அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும், இறைவாக்கு உரைக்கும்படி கடவுள் எசேக்கியேலை இன்றைய முதல் வாசகத்தில் கேட்கிறார் (எசே 2:2-5) இறைவன் பெயரால் இறைவாக்குரைப்பது இறைவாக்கினரின் கடமை. அதை ஏற்பதும் ஏற்காதிருப்பதும் மக்களைப் பொறுத்தது. நாற்பது ஆண்டுகளாக இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் கடவுளுடைய குரலைக் கேட்டும் தங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டனர் (திபா 95:8-10).

இருப்பினும், கடவுள் தாம் பேசுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. முற்காலத்தில் முன்னோர்களிடம் இறைவாக்கினர் வாயிலாகப் பேசிய கடவுள், இறுதியாகத் தம் மகன் வாயிலாகப் பேசினார் (எபி 1:1). ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடவுள் மகன் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்குரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை " (யோவா 1:11), ஏனெனில், அவர்கள் அவரை ஊனக்கண்கொண்டு. அதாவது, மனித முறையில் பார்த்தனர்; எடைபோட்டனர்: புறக்கணத்தனர்.

நமது பார்வை எத்தகைய பார்வை? நாம் மற்றவர்களை எப்படிப் பார்க்கிறோம்? மதிப்பீடு செய்கிறோம்? மனித முறையிலா? அல்லது நம்பிக்கை அடிப்படையிலா? திருத்தூதர் பவுல் கூறுகிறார். "இனிமேல் தாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை . முன்பு தாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை " (2கொரி 5:16).

நாம் இன்னும் மனித முறைப்படிதான் மற்றவர்களைப் பார்க்கிறோம், ஒருவருடைய பணம், பதவி, பட்டம், ஊர், சாதி ஆகியவற்றைக் கொண்டே அவரை மதிப்பிடுகிறோம். ஏழைகளுக்கு ஒருவிதமான வரவேற்பும் பணக்காரர்களுக்கு ஒருவிதமான வரவேற்பும் கொடுத்து. ஆள் பார்த்துச் செயல்படாதிருக்க நமக்கு அறிவுறுத்துகிறார் யாக்கோபு (யாக். 2:1-4),

திருப்பணியாளர்களையும் நாம் மனித முறையில் தான் காண்கிறோம். ஓர் இளைஞனிடம், "நீ ஏன் பூசைக்குச் செல்வதில்லை" என்று கேட்டதற்கு, “அவன் பூசைக்கு எவன் போவான்?' என்றான், அவன் தனது பங்கு குருவை மனித முறையில் பார்த்ததால், அவருடைய குறைகளைத்தான் கண்டான், அந்தப் பங்கு குரு வழியாகக் கடவுள் செயல்படுவதை அவனால் பார்க்க முடியவில்லை .

குருக்களின் தகுதியுடமை அவர்களிடமிருந்து வரவில்லை : அது கடவுளிடமிருந்தே வருகிறது, அவர்களுடைய வலுவின்மையில் கடவுளுடைய வல்லமை நிறைவாய் வெளிப்படுகிறது (2கொரி 12:9). "பேதுரு திருமுழுக்குக் கொடுக்கட்டும்; இயேசுதான் திருமுழுக்குக் கொடுக்கிறார்; யூதாசு திருமுழுக்குக் கொடுக்கட்டும், இயேசுதான் திருமுழுக்குக் கொடுக்கிறார்" என்ற புனித அகுஸ்தீனாரின் கூற்றை நாம் மறந்து விடக்கூடாது.

"முகத்தில் கண் கொண்டு காணும் மூடர்காள், அகத்தில் கண்கொன்டு காண்பதே ஆனந்தம்" என்கிறார் திருமூலர், முகக்கண் கொண்டு பார்ப்பது முட்டாள் தனம்; அகக்கண் கொண்டு. அதாவது. நம்பிக்கைக் கண்கொண்டு காண்பதே அறிவுடமை; அதுவே கடவுளைக் காணும் பேரின்பத்திற்கு வழிவகுக்கும்.

பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் தலைக்கனம் கொண்டவர்களாய், தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மமதை கொண்டவர்களாய், இயேசுவைத் தச்சனான யோசேப்பின் மகன் என்று ஏளனம் செய்து, அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருளிலே மடிந்தனர். அத்தகைய ஆபத்திற்கு நாம் இலக்காகாமல் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் வாழக் கற்றுக்கொள்வோமாக.

மன்றாட்டு

எல்லா உண்மைகளும் எனக்குத் தெரியும் என்ற தலைக்கனத்திலிருந்தும், புதிய உண்மைகளைக் கண்டு பின் வாங்கும் கோழைத்தனத்திலிருந்தும். அரைகுறை உண்மைகளுடன் திருப்தி கொள்ளும் அசட்னடத் தளத்திலிருந்தும் உண்மையின் இறைவா! எங்களை விடுவித்தருளும்.ஞாயிறு இறைவாக்கு - அருள்பணி முனைவர் ம. அருள்

உன்னை அழைக்கிறார்.

1993-ஆம் ஆண்டிலே நம் பாரத பூமியிலே மகாராஸ்டிரா மாநிலத்தில் லாத்தூர் என்ற மாவட்டத்தில் நடந்த பூகம்பம் நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. 50,000-க்கு மேற்பட்ட மக்கள் உயிர் இழந்தார்கள். மரங்கள் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு எல்லாம் சுடுகாடாய் மாறிய சம்பவம் நம்மை எல்லாம் அதிர வைத்தது. மக்கள் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் அதிகாலை நேரம். அந்த நேரத்தில் பூமியானது அதிர்ந்தது, பிளந்தது, மக்கள் மடிந்தார்கள். இப்படிப்பட்ட ஒரு கோர நிகழ்ச்சி நடக்கும் என்று மட்டும் அவர்கள் தெரிந்து அல்லது உணர்ந்து இருப்பார்கள் என்றால் ஒரு வேளை விழிப்போடு காத்திருந்து தங்கள் உயிரையாவது காப்பாற்றி இருக்கலாம். இப்படிப்பட்ட நிகழ்ச்சி நடக்கும் என்றும் அங்கும் இங்கும் வதந்திகள் பரவின. முன் அறிவிப்புக்களும் தரப்பட்டன. ஆனால் அவைகள் எல்லாம் இவர்களின் உணர்வுக்கு எட்டவில்லை. இப்படிப்பட்ட நிகழ்ச்சி இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இன்று நடப்பவை.

மனிதன் கடந்த கால நிகழ்ச்சி பற்றிக் கவலை கொள்வதில்லை. இன்றைய நிகழ்ச்சியும் இவனது கவனத்தில் இடம் பெறுவதில்லை. நாளைய வாழ்வு எனக்கு எப்படி இருக்கும் என ஆவலோடு நோக்குகிறான். வான நட்சத்திரங்கள் என்ன சொல்லுகின்றன? என் கைரேகையில் எனக்கு என்ன எழுதியுள்ளது? இந்த சோசியன் என்ன சொல்லுகிறான்? இந்தப் பறவை, கிளி எடுக்கும் பகுதியில் என்ன எழுதியுள்ளது என்று படித்தவனும் சரி, படியாதவனும் சரி இன்று தேடும் படலம் குறைந்தபாடில்லை. இப்படிப்பட்ட சோசியங்கள் எல்லாம் வாழ்வின் நிகழ்ச்சிகளோடு முழுமையாக நிறைவு பெறுவதில்லை.

ஆம் அன்புக்குரியவர்களே! எதிர்காலம் எனக்கு எப்படி இருக்கும் என அறிய ஆசிக்கிறீர்களா? இதற்குத் தகுந்த பதில் தருவதுதான் விவிலியம். பழைய ஏற்பாட்டில் எத்தனையோ இறைவாக்கினர்கள் தோன்றினார்கள். இன்றைய வார்த்தை வழிபாட்டிலே தரப்பட்டிருப்பதுபோல, எசேக்கியேல் என்பவரும் ஓர் இறைவாக்கினர்தான். இந்த இறைவாக்கினர்கள் எல்லாம் இறைவனுக்கும் மக்களுக்கும் பாலமாக வாழ்வைக் கட்டி எழுப்பும் கலைஞர்களாக இருந்தார்கள். காலத்தின் குறிகளைச் சரியாகக் கணக்கிட்டு இறைவனின் குரலுக்குச் செவிமடுத்தார்கள். வீரத்தோடும் மனபலத்தோடும் மக்களிடம் எடுத்துரைத்தார்கள். மக்களின் கடின உள்ளத்தைக் கடிந்துகொண்டார்கள். மக்களின் இன்ப துன்பத்தில் பங்கெடுத்தார்கள். நீதிக்கும், உண்மைக்கும் சான்றாகத் திகழ்ந்தார்கள். இதனால் உலகம் இவர்களை வெறுத்தது. ஆனால் யாருக்கு அழிவு? பூமியானது அதிரும் என்று கூறியவர்களுக்கா? அல்லது ஆழ்ந்த நித்திரையில் இருந்தவர்களுக்கா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாசரேத் என்ற சிற்றூரிலே மனிதனாகத் தோன்றினார் இயேசு என்ற நாமம் கொண்ட இந்தப் பெரிய இறைவாக்கினர். இறைவாக்கினர்கள் எல்லாம் இவரைப் பற்றித்தான் முன் அறிவித்தார்கள். மனிதனை இறைமயமாக்க மனிதனாகத் தோன்றினார். வீரத்தோடு போதித்தார். உண்மைக்குச் சான்று பகர்ந்தார். இருட்டடிப்பு வாழ்க்கை நடத்தும் பணக்காரர், பதவிக்காரர், அதிகாரம் படைத்தோர், உயர்ந்தோர் எனத் தன்னையே உயர்த்திய தன்னலவாதிகள் அனைவரையும் சாடினார். அவரது ஞானத்தைக் கண்டு வியந்தது ஒரு மக்கள் கூட்டம். ஆனால் உண்மையை ஏற்க மறுத்த கூட்டத்திற்கு இயேசு தடைக்கல் ஆனார். இதைப் பற்றித்தான் மாற்கு நற்செய்தியிலே 6ஆம் அதிகாரத்திலே ஒன்று முதல் 6 வசனங்கள் அழகாக விவரிக்கின்றன. வாசித்துப் பாருங்கள். உலகம் வாழ்வு பெறத் தன்னையே பலியாக்கியவர் இந்த இயேசு பெருமான்

இன்றைய திருவார்த்தைக்குச் செவிமடுக்கும் நண்பனே! உன்னிடம் இன்று ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். இறைவன் உன்னை அழைக்கலாம். எதற்காக? ஒரு இறைவாக்கினராக! இத்தகைய அழைப்புக்கு நீ உரியவன் என்றால் நீ தயார்தானா? உண்மைக்கு, நீதிக்குச் சான்று பகர நீ தயார்தானா?

இறைவன் தன் அன்பை உன் மூலமாக மக்களுக்குத் தர விரும்பினால் அதை மறுக்காதே! மறுத்தால் உன் வாழ்வில் மாபெரும் கொடையை இழந்து நிற்பாய்! நீ ஒரு இறைவாக்கினராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தேவன் உன்னை இறைவாக்கினரின் குரலுக்குச் செவிமடுக்க அழைக்கலாம். உன் இருண்ட வாழ்வில் இருந்து உன்னை ஒளிமிக்க வாழ்வுக்குக் கொண்டு வர அழைக்கலாம். அசட்டையாக இராதே! காலமும் தாழ்த்தாதே! லாத்தூர் மாவட்டத்தில் நடந்த பூகம்பத்தை உன் நினைவுக்குக் கொண்டு வா! உலக வாழ்வை அதன் இன்பத்தைக் கண்டு மதி மயங்கி ஆழ்ந்த நித்திரையில் இருந்துவிடாதே. இறைவன் உன்னை இன்று அழைக்கிறார் எதற்காக? நாம் பரிசுத்தராய் இருப்பதுபோல நீங்களும் இருங்கள் (1 பேதுரு 1:15. 16) என்று புனித பேதுரு மூலமாக அறிவிக்கும் செய்திக்குச் செவிமடுப்போம்.உடலில் தைத்த முள்
அருள்பணி ஏசு கருணாநிதி
காலில் முள் குத்திய அனுபவம் உங்களுக்கு உண்டா? கிராமத்தில் பிறந்த எனக்கு நிறையவே உண்டு. உள்ளங்கால் என்றால் முள் குத்துவதும், முன்னங்கால் என்றால் கல் எத்துவதும், பின்னங்கால் என்றால் அம்மி உரசுவதும் சகஜம்தானே என்பது கிராமத்தில் வளர்ந்த குழந்தைகளுக்குத் தெரியும். செருப்பு அணியாதவர்களுக்கு இந்தப் பிரச்சினை என்றால், செருப்பு அணிந்தவர்களுக்கு மற்றொரு பிரச்சினை உண்டு. அதுதான், காலணிக்குள் கல். வேகமாக நடந்து செல்லும்போது நம் காலணிக்குள் நுழையும் கல் நம் வேகத்தைக் குறைப்பதுடன், நம் காலைiயும், காலணியையும் பதம் பார்த்துவிடுகிறது. காலணிகள் ஷூ போன்று இருந்தால் நிலை இன்னும் ரொம்ப மோசம். நம் உடலுக்கு வெளியே உள்ள பொருள் உடலுக்குள் நுழைய முற்பட்டால், அல்லது உடலைக் கிழித்தால், தைத்தால் (தமிழில் பாருங்களேன்: முள் குத்தும்போது கால் கிழிபடுவதை அழகாக, 'முள் தைத்தது' என்று சொல்கிறார்கள். 'முள்' ஆக்சுவலா 'கிழிக்கத்தானே' செய்கிறது!)  எவ்வளவு துன்பமாக இருக்கிறது!

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 கொரி 12:7-10) தூய பவுல் தன் உடலில் தைத்த முள் போல் ஒன்று தன்னை வருத்திக்கொண்டிருப்பதாகப் பதிவு செய்கின்றார். பவுல் சொல்வது உடலுக்குள்ளே சதையைத் தைத்துக்கொண்டிருக்கும் ஒரு முள். அதாவது, நாம மீன் சாப்பிட முயற்சி செய்து ஒரு முள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டு உள்ளேயும் போகாமல் வெளியேயும் வரமால் இருப்பது போல. இப்படி அனுபவப்பட்டவர்கள் வாழ்க்கையில் மீண்டும் மீனே சாப்பிடாமல் இருந்திருக்கிறார்கள்.

பவுலின் வார்த்தைகளில் நிறைய சோகம் தெரிகின்றன. அதை அவருடைய வார்த்தைகளிலேயே கேட்போம்:

அ. என்னிடம் பெருங்குறை ஒன்று - உடலில் தைத்த முள்போல - என்னை வருத்திக்கொண்டே இருக்கிறது.

ஆ. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு நான் மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன்.

இ. ஆனால் அவர் அதை எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, 'என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்' என்றார். (இந்தக் கடவுள் இப்படித்தான். பல நேரங்களில் நாம் கேட்பது எதையும் செய்யமாட்டார். அவரே தான் செய்வதற்கு ஒரு காரணமும் சொல்வார். ஆனால் பரவாயில்லை. பவுலின் செபத்தைக் கேட்கவாவது செய்தாரே!)

பவுல் இதை எழுதும்போது நிறைய கண்ணீரோடு எழுதியிருப்பார் என்றே என் கற்பனையில் தோன்றுகிறது. 'என் சதையில் தைத்த முள்போல' என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு. நம் காலில் குத்தும் முள் தரும் வலியும், கன்னத்தில் அல்லது உதட்டில் குத்தும் முள்ளும் ஒரே வலியையா தருகிறது. இல்லை. முள் குத்தும்போது அல்லது நம் உடலில் ஊசி போடும்போது நமக்கு ஏன் வலிக்கிறது? மென்மையான ஒன்றின் மேல், வன்மையான ஒன்று பாயும் போது அங்கே வலி வருகிறது. இரண்டும் மென்மையாக இருந்தால் வலி இருப்பதில்லை. ஊசி போடுவதற்கு முன் உடலில் தேய்க்கப்படும் பஞ்சு நமக்கு வலி தருவதில்லை. இரண்டும் வன்மையாக இருந்தால் சத்தம் மட்டும்தான் வரும். வலி வராது. நம் உடலின் நகத்தின்மேல், இன்னொரு நகத்தைத் தேய்க்கும்போது அங்கே சத்தம்தான் வருகிறது. ஆக, எதிரெதிர் குணங்கள் கொண்டவை ஒன்றுக்கொன்று மோதும்போது வலி வருகிறது. நாம் இறுக்கமாக பேண்ட் அணியும்போது அதன் பொத்தான்கள் நம் இடுப்பு பகுதிக்கு கொடுக்கும் வலியையே நம்மால் தாங்க முடிவதில்லை. அப்படியிருக்க அதே இடுப்பு பகுதியில் ஒரு முள் அமர்ந்து நம்மை குத்திக்கொண்டிருந்தால் நம்மால் தாங்க முடியுமா?

பவுலடியாரின் சதையில் குத்திய முள்ளாக அவர் எதைச் சொல்ல வருகிறார் என்பதற்கு பல யூகங்கள் இருக்கின்றன. இது அவரை வாட்டி வந்த உடல் நோயைக் குறிக்கிறது, அல்லது அவருடைய உள்ளத்தில் உள்ள ஏதோ ஒரு குற்ற உணர்வாக இருக்கலாம் அல்லது தன் எதிரியாக தான் நினைக்கும் ஒரு நபராக இருக்கலாம் அல்லது அவரின் திருச்சபையில் நிலவிய ஏதோ ஒரு பெரிய பிரச்சினையைக் குறிக்கிறது, அல்லது கொரிந்து மக்களால் ஒதுக்கப்பட்ட எதிர்மறை உணர்வைக் குறிக்கிறது என்று பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. உடலில் உள்ள நோய், மனதில் உள்ள வருத்தம், வெளியில் உள்ள குறை என எதுவாக இருந்தாலும், வலி என்னவோ பவுலடியாருக்கு அதிகமாகவே இருக்கிறது. இந்தக் குறை அல்லது வலிக்கு ஒரு நோக்கம் இருப்பதாகவும் சொல்கிறார் அவர். என்ன நோக்கம்? 'நான் இறுமாப்பு அடையாதவாறு!' சின்னக் குழந்தைக்கு அல்லது திருமண மணப்பெண்ணுக்கு நன்றாக அலங்காரம் செய்துவிட்டு, கன்னத்திற்கும், நாடிக்கும் இடையே வைக்கப்படும் திருஷ்டி பொட்டு போல! ஆக, எல்லாம் நல்லாயிருக்கக் கூடாது என்பதற்காக தானாக ஏற்படுத்திக்கொண்ட அல்லது ஏற்றுக்கொண்ட ஒரு குறை. மேலும் இந்தக் குறையை சாத்தான் அனுப்பியதாகவும் சொல்கிறார் பவுலடியார்.

தன் சதையில் குத்திய முள்ளை எடுக்க கடவுளிடம் பவுலடியார் முறையிட, கடவுளும் முள்ளை எடுப்பதற்குப் பதிலாக, 'என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையால்தான் வல்லமை வெளிப்படும்' என்கிறார். அதாவது, நிறைய மழை பெய்கிறது என வைத்துக்கொள்வோம். மேடுகளில் பெய்யும் மழை அப்படியே வழிந்து ஓடிவிடுகிறது. ஆனால் பள்ளங்களில், குண்டும், குழியுமான இடங்களில் பெய்யும் மழை அப்படியே ஆங்காங்கே தேங்குகிறது. ஆக, பள்ளங்களும், குண்டும் குழிகளும்தான் அருளைச் சேர்த்துவைக்கும் கலயங்கள். பவுலைப் பொறுத்தவரையில் இந்த வலுவின்மையில்தான் இறைவன் தன் அருளைத் தருவதாக உணர்கின்றார். மேலும், இந்த உணர்வினால் அவருடைய உள்ளத்தில் மகிழ்ச்சி பிறக்கிறது. ஆகையால்தான், 'என் வலுவின்மையிலும், இகழ்ச்சியிலும், இடரிலும், இன்னலிலும், நெருக்கடியிலும் நான் அகமகிழ்கிறேன்' என்கிறார் பவுல்.

இவ்வாறாக, ஒரு பக்கம் வலி, மறு பக்கம் அருள். ஒரு பக்கம் வலுவின்மை, மறு பக்கம் மகிழ்ச்சி என வாழ்வின் இருதுருவ அனுபவங்களை மிக அழகாகப் பதிவு செய்கிறார் பவுல். இரண்டாம் வாசகத்தில் நாம் காணும் இந்த இருதுருவ அனுபவமே இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்களிலும் இருக்கின்றது.

இன்றைய முதல் வாசத்தில் (காண். எசே 2:2-5) இறைவாக்கினர் எசேக்கியேலை இறைவாக்குரைக்க கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் அனுப்புகிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 6:-16) இயேசு ஓர் இறைவாக்கினராக தன் பிறந்தகம் வருகின்றார். இருவரும் எதிர்கொள்ளும் அனுபவங்களை இன்றைய வாசகங்கள் பதிவு செய்கின்றன.

எசேக்கியேல் இறைவாக்கினர் இறைவாக்குரைக்க வேண்டிய மக்களை மூன்று அடைமொழிகளால் அழைக்கிறார் யாவே இறைவன்: (அ) வன்கண்ணுடையோர் (2:4), (ஆ) கடின இதயம் கொண்டோர் (2:4), (இ) செவிசாய்க்காத செவிகள் கொண்டோர் (2:5). (அ) வன்கண்ணுடையோர்: எபிரேயத்தில் கடினமான அல்லது இறுகிய முகம் கொண்டோர் எனத் தரப்பட்டிருக்கிறது. வன்கண் அல்லது கடுமையான முகம் என்பது நம் முன் இருக்கும் நல்லவற்றை அல்லது நிறைவைப் பார்ப்பதற்குப் பதிலாக, நம் முன் உள்ள கெட்டவற்றையோ அல்லது குறையையோ மட்டும் பார்ப்பது. (ஆ) கடின இதயம் கொண்டோர். இதயத்தின் இயல்பு மென்மையாக இருப்பது, அல்லது வலுவற்று இருப்பது. வலுவற்று இருந்தால்தான் அது இரத்தத்தை சீர் செய்ய விரிந்து, சுருங்க முடியும். வலுவாகிவிட்டால் விரிந்தது சுருங்க முடியாது, சுருங்கியது விரிய முடியாது. ஆக, இயக்கம் இல்லாமல் இருக்கும் இதயமே கடின இதயம். (இ) செவிசாய்க்காத செவிகள்.செவிகளைத் திருப்பி கொண்டவர்கள் என்று எபிரேயம் சொல்கின்றது. ஆக, செவியில் விழாதவாறு பார்த்துக்கொள்வது. அல்லது கீழ்ப்படிய மறுப்பது.

இவ்வாறாக, எசேக்கியேல் உடலில் தைத்த முள்ளாக இருப்பவர்கள் 'வன்கண்ணுடைய,' 'கடின இதயம் கொண்ட,' 'செவிசாய்க்காத செவிகள் கொண்ட' இஸ்ரயேல் மக்கள். இப்படி ஒரு பக்கம் முள் இருந்தாலும் அவரும் மறுபக்கம் கடவுளின் அருளை உணர்கின்றார். எப்படி? 'ஆண்டவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது' என்கிறார் எசேக்கியேல். இவ்வாறாக, தனக்குள் உள்ள ஆண்டவரின் ஆவியில் தன் இறைவனின், தன்னை அனுப்பியவரின் அருளைக் கண்டுகொள்கிறார் எசேக்கியேல். ஆக, 'முள்ளும் அருளும்,' 'வலுவின்மையும் மகிழ்ச்சியும்' இணைந்தே இருக்கின்றன எசேக்கியேலின் வாழ்வில்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சொந்த ஊருக்கு வருகின்றார். இயேசு தம் சொந்த ஊரான நாசரேத்தூரில் புறக்கணிக்கப்படுவதை மத்தேயு (13:53-58), மாற்கு (6:1-6) மற்றும் லூக்கா (4:16-30) என்ற மூன்று ஒத்தமைவு நற்செய்தியாளர்களும் பதிவு செய்கின்றனர். யோவான் இந்த நிகழ்வை பதிவு செய்யவில்லை என்றாலும், 'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார், அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை' (1:11) என்று இயேசு நிராகரிக்கப்பட்டதை ஒரு இறையியலாகப் பதிவு செய்கின்றார். மாற்கு நற்செய்தியாளரின் பதிவையே இன்றைய நற்செய்தி வாசகமாக வாசிக்கின்றோம்.

நற்செய்தியாளர்களின் பதிவுகளில் மாற்கு நற்செய்தியாளரின் பதிவுதான் ரொம்ப கரடுமுரடாக இருக்கின்றது. மத்தேயு கொஞ்சம் மெருகூட்டி எழுதுகின்றார். லூக்கா இதையே ஒரு இறையியல் நிகழ்வாக்கி இயேசுவை எசாயா போல ஒரு இறைவாக்கினர் எனச் சொல்லிவிடுகின்றார். 'இவர் தச்சன்' என்று மாற்கு சொல்வதை, 'இவர் தச்சனின் மகன்' என்று மத்தேயு சொல்கின்றார். மேலும், 'இயேசுவால் அறிகுறி செய்ய முடியவில்லை!' என்று மாற்கு சொல்ல, மத்தேயுவோ, 'இயேசு அறிகுறி ஒன்றும் செய்யவில்லை!' என்று எழுதுகின்றார். மேலும், இயேசுவின் சகோதரர்கள் பற்றி குறிப்பிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த நிகழ்வு நாசரேத்தூரின் செபக்கூடத்தில் நடக்கின்றது. நாசரேத்தூரில் செபக்கூடம் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இல்லை. இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் முதல் கிறிஸ்தவர்கள் செபக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை ஒருவேளை பின்புலமாக மையப்படுத்தி, தலைவராம் இயேசுவே வெளியேற்றப்பட்டார் அல்லது ஒதுக்கப்பட்டார் என நற்செய்தியாளர்கள் பதிவு செய்திருக்கலாம்.

இயேசு தொழுகைக்கூடத்தில் கற்பித்ததைக் கேட்ட அவருடைய சித்தப்பா, பெரியப்பா, மாமா, சித்தி, பெரியம்மா, அத்தை வகையறாக்கள் ஒருசேர மூன்று உணர்வுகளை எழுப்புகின்றனர்: (அ) வியப்பு. (ஆ) தயக்கம். (இ) நம்பிக்கையின்மை.

முதலில் அவர்கள் கொள்ளும் வியப்பு கல்லின்மேல் விழுந்த விதைபோல இருக்கிறது. கல்லின் மேல் விழுந்த விதை சட்டென முளைக்கும். ஆனால் ஒரு நாளில் அது வாடி வதங்கிவிடும். இவர்களின் வியப்பு சட்டென்று தயக்கமாக மாறுகிறது. இந்தத் தயக்கத்தில் அவர்கள் மூன்று கேள்விகளை எழுப்புகின்றனர்: (அ) இவர் தச்சர் அல்லவா? (இயேசுவின் தொழில் - இங்கே 'டெக்னோன்' என்னும் கிரேக்க வார்த்தை 'கைவேலை செய்பவர்' என்ற பொருளையே தருகின்றது). ஆ. மரியாவின் மகன் தானே? (இயேசுவின் பிறப்பு - நாசரேத்தூர்காரர்கள் இயேசுவின் இயற்கைக்கு அப்பாற்பட்ட பிறப்பைப் பற்றி கேட்டிருக்கலாம். ஆகையால்தான், கணவன் துணையில்லாமல் மரியாளுக்குப் பிறந்த 'தவறான' குழந்தை என நையாண்டி செய்கின்றனர்). இ. இவரின் சகோதர, சகோதரிகள் நம்மோடு இல்லையா? (இயேசுவின் உறவினர்கள் - இங்கே சகோதர, சகோதரி என்பது உடன்பிறப்பைக் குறிக்கும் சொல்லாடல் அன்று. 'அதெல்ஃபோஸ்' என்ற கிரேக்கச் சொல்லாடல் நண்பர்கள், உறவினர்கள் என்ற பரந்த பொருளைக் கொண்டது. இதை வைத்து இயேசுவுக்கு நிறைய உடன்பிறந்தவர்கள் இருந்தார்கள் என்று சொல்வது ஏற்புடையது அல்ல.)

இந்தத் தயக்கம் நம்பிக்கையின்மையாக உருவெடுக்கிறது. அவர்களின் நம்பிக்கையின்மையால் இயேசுவால் 'வல்ல செயல் எதையும் அங்கே செய்ய இயலவில்லை' எனப் பதிவு செய்கிறார் மாற்கு. ஆக, நம் நம்பிக்கையின்மை கடவுளின் கைகளையும் கட்டிப்போட்டுவிடும் என்பதற்கு இந்த நிகழ்வு சான்றாக இருக்கிறது.

இங்கே, நாசரேத்தூர் மக்களின் 'வியப்பு,' 'தயக்கம்,' மற்றும் 'நம்பிக்கையின்மை' தன் உடலில் தைத்த முள்ளாக இயேசுவுக்கு இருந்தாலும், அவர் தன் தந்தையின் அருள் தன்னோடு இருப்பதை உணர்ந்ததால் தொடர்ந்து சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பிக்கின்றார்.

'உடலில் தைத்த முள் போல' உணர்வு பவுலுக்கும், எசேக்கியேலுக்கும், இயேசுவுக்கும் இருந்ததுபோல நமக்கும் இன்று இருக்கிறது. ஆனால், இந்த உணர்வோடு சேர்ந்து கடவுளின் அருளும், அந்த அருள்தரும் மகிழ்வும் முன்னவர்களுக்கு இருந்தது என்பதை நாம் மறுக்க இயலாது.

இந்த இரட்டை உணர்வுகளோடு நம் வாழ்வை நாம் முன்நோக்கி நகர்த்துவது எப்படி? இன்றைய இறைவாக்கு வழிபாடே அதற்கான வழிமுறைகளையும் நமக்குச் சொல்கிறது:

1. இருப்பை உறதி செய்வது

அதாவது, உடலில் தைத்த முள் ஒருபோதும் நம்மை அழித்துவிடாமல் பார்த்துக்கொள்வது. எப்படி? எசேக்கியேல் என்னதான் கிளர்ச்சி செய்யும், கலக வீட்டாருக்கு அனுப்பப்பட்டாலும், அவர்கள் வன்கண்ணுடையோராய், கடின இதயத்தோடு, செவிசாய்க்காதவர்களாக இருந்தாலும், எசேக்கியேல் செய்ய வேண்டியதெல்லாம், 'தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளச் செய்வது.' அப்படியானால், அவர் ஓர் இறைவாக்கினர் போல வாழவும், பணி செய்யவும், இருப்பை உறுதி செய்யவும் வேண்டும். ஆக, எனக்கு உள்ளே இருக்கும் முள்ளோ, அல்லது எனக்கு வெளியே இருக்கும் தடையோ என் இருப்பை உறுதி செய்யுமாறு நான் அவற்றுக்கு என்னை விற்றுவிடக்கூடாது. ஆக, அவற்றைப் பொருட்படுத்தாமல் நான் என் பணியைச் செய்ய வேண்டும். என் வேலையை வாழ வேண்டும்.

2. அகமகிழ்வது

உள்ளுக்குள்ளே வலி இருக்கும்போது எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? எனக் கேட்கலாம். முள் உள்ளே இருப்பது போல அருள் உள்ளே இருப்பதும் நிச்சயம்தானே. அப்படியிருக்க, அந்த அருளை நினைத்து நாம் மகிழ்ச்சி அடையலாமே. தன் தந்தையின் சொத்துக்களை எல்லாம் அழித்த இளைய மகனுக்கு, தான் அந்நிய நாட்டில் பட்ட கஷ்டம் முள்போல குத்தியபோது, தன் தந்தையின் இருப்பை நினைத்துப்பார்த்து பிறந்தகம் புறப்படவில்லையா? முள் குத்திய அதே நேரத்தில்தானே அவன் தன் தந்தையின் பெருந்தன்மையையும் எண்ணிப்பார்த்தான். ஆக, அவன் முள்ளுக்காக வருந்தாமால், தந்தையின் பெருந்தன்மையில் மகிழ்ந்து இல்லம் விரைகிறான். ஆக, நம் மகிழ்வை நம்முள் இருக்கும் கடவுளின் அருளில் கண்டுகொள்வது.

3. முள்ளுக்கும் நன்மை செய்வது

தன் சொந்த ஊரார் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்தாக இயேசு யாரையும் சபிக்கவில்லை. அவர்கள் அப்படித்தான் என ஏற்றுக்கொள்கிறார். அங்கே உடல்நலமற்றிருந்தவர்களையும் குணமாக்குகிறார். ஆக, 'என்னைப் பார்த்து அவர்கள் வியக்கிறார்கள்! என் போதனையையும், என் அறிவையும் பாராட்டுகிறார்கள்' என்று அவர் குதிக்கவும் இல்லை. 'என்னைப் பற்றி தயக்கம் காட்டுகிறார்கள்' என்று அவர் வாடி வதங்கவும் இல்லை. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதுபோல தன் இயல்பை மாற்றிக்கொள்ள மறுக்கின்றார் இயேசு.

முள்ளும் அருளும், வலுவின்மையும் அகமகிழ்வும் இணைந்தே இருக்கும் என்பதுதான் வாழ்வியல் எதார்த்தம். முள்ளோடும் அருளோடும், வலுவின்மையோடும் அகமகிழ்வோடும் இணைந்தே நகரட்டும் நம் நாள்கள்.

'ஐயோ கால்ல முள் குத்திடுச்சு!' என்று யாரோ எங்கோ எழுப்பும் ஒலி இன்றும் நம் காதுகளில் விழத்தான் செய்கின்றன.