Monday, 12 March 2018

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு 18-03-2018
இன்றைய வாசகங்கள்

எரே 31:31 - 34; எபி 5:7-9; யோவா 12:20-33மறையுரை மொட்டுக்கள் –

அருள்பணி Y.இருதயராஜ்


இமயமலையின் மீது ஏறிய இரு நண்பர்கள், கடுமையான குளிர்காற்று வீசியதால், மேற்கொண்டு மலைமேல் ஏற முடியாமல் தரையில் அமர்ந்தனர். அவ்வேளையில் சற்றுத் தூரத்திலிருந்து, "ஐயோ! நான் சாகிறேன். என்னைக் காப்பாற்றுங்கள்" என்னும் அபயக் குரல் கேட்டது. இருவரில் ஒருவர் மட்டும் அபயக்குரல் எழுப்பியவருக்கு உதவி செய்யப் புறப்பட்டார்; மற்றவரோ அவருடன் செல்ல மறுத்து விட்டார். உதவி செய்யச் சென்றவர் அபயக் குரல் எழுப்பினவரின் உடலை நன்றாகத் தேய்த்து விட்டார். அதன் விளைவாக அவரது உடல் சூடேறியது: அவருக்குப் புத்துயிர் வந்தது. தன்னிடமிருந்த சூடான காப்பியையும் அவருக்குக் கொடுத்து, அவரைத் தன் தோள்மேல் சுமந்துகொண்டு மற்ற நண்பரிடம் வந்தபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். இது கதையல்ல. நிஜம்! இந்நிகழ்வு நமக்கு விடுக்கும் செய்தி: "தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பியவர் அதை இழந்து விட்டார். பிறருக்காகத் தன் உயிரை இழக்க முன் வந்தவர் அதைக் காத்துக் கொண்டார் "

மன்னுயிரை மீட்பதற்காகச் சிலுவைச் சாவை ஏற்க முன் வந்த கிறிஸ்து. மண்ணக மாந்தர் வாழ்வு பெற கோதுமை மணியென மண்ணிலே புதைக்கப்பட்டுத் துன்பங்கள் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்று. தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவருக்கும் முடிவில்லா மீட்பின் காரணமான கிறிஸ்து (எபி 5:8-9), இன்றைய நற்செய்தியில் நமக்கு வழங்கும் செய்தி: "தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்" (யோவா 12:25-28).

பிறருடைய துன்பத்தைத் தனது துன்பமாகக் கருதாவிட்டால் பகுத்தறிவினால் என்ன பயன்? என்று வினவுகிறார் வள்ளுவர்,
'அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை! (குறள் 315).

மிருகத்திற்கும் மனிதருக்குமிடையே உள்ள வேறுபாட்டை பின்வருமாறு விளக்குகிறார் தத்துவமேதை சாக்கரட்டீஸ்: "ஒரு மாடு மற்றொரு மாட்டைப் பற்றி அக்கறை கொள் ளாது. ஆனால் ஒரு மனிதன் அடுத்த மனிதனைப் பற்றி அக்கறை கொள்வான் - அடுத்தவனைப் பற்றி அக்கறை கொள்ளாதவன் நன்றாகத் தின்று கொழுத்த பன்றி."

பன்றியும் பசுவும் சந்தித்தன. பன்றி பசுவிடம், "உன்னை எல்லாரும் வீட்டில் வரவேற்கின்றனர். என்னையோ துரத்துகின்றனர் " என்றது. அதற்குப் பசு பன்றியிடம், "நான் உயிருடன் இருக்கும் போதே மக்களுக்குப் பால் தந்து பயன்படுகிறேன். நீயோ செத்த பிறகு தான் மக்களுக்குப் பயன்படுகிறாய்" என்றது.

உயிரோடு இருக்கும்போதே நாம் பிறர்க்குப் பயன்பட வேண்டும். செத்த பிறகு நாம் தேடி வைத்த செல்வம் யாருக்குப் போகும்? "அறிவிலியே, இன்றிரவே உன்னுயிர் உன்னை விட்டுப் பிரிந்து விடும். அப்போது நீர் சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?" (லூக் 12:20).
"உலகிற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது" (1திமொ: 6:8), எனவே, செல்வம் உள்ளவர்கள், "நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்ப்பார்களாக, தங்களுக்கு உள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்து கொள்வார்களாக" (1திமொ 8:18).

"இவ்வுலகை அழிக்க முடியாது; ஏனெனில் இவ்வுலகை அழிக்கும் அளவுக்குப் பெரிய 'ரப்பரை' இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை" என்றாராம் ஒரு மாணவர், இவ்வுலகம் ஏன் இன்றும் அழியாமல் இருக்கிறது? *உண்டாலம்ம இவ்வுலகம்" என்ற கேள்வியைப் புறநானூற்றுப் பாடல் எழுப்பி, அக்கேள்விக்கு அப்பாடல் தரும் பதில்: "இவ்வுலகில் தமக்கென வாழாமல் பிறருக்காக வாழ்கின்றவர்கள் ஒருசிலர் இன்றும் இருப்பதால்தான்." "தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மையானே' (புறம் 182)

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் புதியதோர் உடன்படிக்கையைச் செய்யப் போவதாக இறைவாக்கினர் எரேமியா வாயிலாக வாக்களிக்கின்றார் (எரே 31:31). இந்தப் புதிய உடன் படிக்கையானது கிறிஸ்துவின் இரத்தத்தில் நிறைவேறியது (லூக் 22:20). இப்புதிய உடன்படிக்கையின் தனி முத்திரை பிறரன்புக் கட்டளையாகும். கிறிஸ்து நம்மை அன்பு செய்தது போலவே தாமும் பிறரை அன்பு செய்ய வேண்டும் (யோவா 13:34). கிறிஸ்து தம்மவர்களை இறுதிவரை அன்பு செய்தார் (யோவா 13:1). அன்பின் உச்சக்கட்டம் உயிர்த்தியாகம் (யோவா 15:13),

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து தனது நேரம்' (யோவா 12:27) என்று குறிப்பிடுவது அவர் சிலுவையில் மானிட மீட்பிற்காகத் தம் உயிரைக் கையளித்த நேரமாகும். நாமும் கிறிஸ்துவைப் பின்பற்றி எல்லாரையும் அன்பு செய்ய, இறுதிவரை அன்பு செய்ய, தேவையானால் பிறருக்காக நமது உயிரையும் கையளிக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

நம்மால் நமது வீட்டுக்கும் நாட்டுக்கும் தினையளவாவது நன்மை கிடைக்குமென்றால், நாம் இறக்கும் நாளைத் துக்கநாளாக அல்ல. திருநாளாகக் கொண்டாட வேண்டும்,

எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
தமையீன்ற தமிழ்நாடு நாக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்,
செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும், -
-பாரதிதாசன்

பெரிய வியாழனன்று பசிப்பிணி ஒழிப்பிற்காகச் சிறப்புக் காணிக்கை எடுக்கப்படும், தவக்காலத்தில் தேவையற்றச் செலவினங்களைக் குறைத்துக் கொண்டு நாம் சேமிக்கும் பணத்தை அந்த நல்ல காரியத்திற்காகத் தாராளமாகக் கொடுக்க மனமுவந்து முன்வருவோமாக, தியாக உணர்வு இல்லாத வழிபாடு நாட்டுக்குச் சாபக் கேடாகும்
- காந்தி அடிகள்

குன்று நோக்கி

அருள்பணி லூர்துராஜ் பாளை மறைமாவட்டம்


உடன்படிக்கை ஆன்மீகம்
“கல்வாரி மருத்துவமனை " ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. சாதாரண நோயாளிகளையெல்லாம் அங்கே அனுமதிப்பதில்லை. ஆறு வார காலத்திற்குள் நிச்சயமாய் மரணமடையப் போகும் நோயாளிகள் மட்டுமே அதில் சேர்க்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனையில் நுழையும் போது வாழ்வு முடியப் போகிறது என்ற துயரத்துடன் சேருபவர்கள் ஒரு சில நாட்களுக்குள் தங்கள் மரணத்தைப் பக்குவமான மனநிலையில் எதிர்நோக்கி இருப்பவர்களாகி விடுகின்றனர். இத்தகைய மாற்றம் எவ்வாறு ஏற்படுகிறது என்பது வியப்பானது.

அம்மருத்துவமனையின் உள்சுவர்களில் ஆண்டவர் இயேசுவின் கல்வாரிப் பயணத்தைக் காட்டும் படங்கள் வெளிக் கோடுகளால் (Line drawing) வரையப்பட்டிருக்கின்றன. படத்தின் சித்திரங்கள் கோட்டுக்குள் காலியாக இருக்கின்றன. அப்படங்களுக்கு அடியில் “இயேசுவின் பாடுகளில் இன்னும் குறைவாய் இருப்பதை நிறைவு செய்" என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆம், அந்த மருத்துவமனையில் சேருகின்றவர்கள் அப்படங்களைப் பார்க்கின்றனர். தங்கள் உடல் வேதனைகளையும் நெருங்கிக் கொண்டிருக்கும் மரணத்தையும் இன்முகத்துடன் ஏற்று இயேசுவின் பாடுகளோடு ஒப்புக் கொடுத்து இயேசுவின் பாடுகளை நிறைவு செய்கின்றனர்.

இவ்வாறுதான் மரணத்தின் வாயிலில் நிற்பவனை மகிழ வைத்து சொல்லொண்ணா வேதனையுறுபவனைச் சிரிக்க வைத்து அனைவரையும் தம்பால் ஈர்த்துக் கொள்கிறார்.

திருவிவிலியம் முழுவதுமே இரு உடன்படிக்கைகளின் வரலாறாகும். ) பழைய உடன்படிக்கை - மோசே வழியாக, 2) புதிய உடன்படிக்கை - இயேசு வழியாக.

1. அனைவரையும் ஈர்க்க ஓர் உடன்படிக்கை. (முதல்வாசகம் எரே 31:31). அது சீனாய் மலையில் செய்ததுபோல கற்பலகைகளில் அல்ல, மனிதனின் இதயப் பலகையில் எழுதப்படும். அதன் முக்கிய சிறப்பு இனி இறைவாக்கினர் வழியாக அல்ல இறைவனே முன் வந்து போதிப்பார். இன்னொரு சிறப்பு மக்கள் கடவுளை முழுமையாக அறிந்து கொள்வார்கள். “நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்”. நெருக்கமான நேரடி உறவு!
2. அனைவரையும் ஈர்க்க ஒரு சிலுவைப்பலி (நற்செய்தி: பழைய உடன்படிக்கை விலங்குகளின் இரத்தத்தால் முத்திரையிடப்பட்டது. (வி.ப.24:3-8). புதிய உடன்படிக்கையோ பாவ மன்னிப்புக்காக இயேசுவின் இரத்தத்தில் நிலைப்படுத்தப்படுவது (லூக்.22:20, 1 கொரி.11:25), புதிய இஸ்ரயேலைப் பிறப்பிக்கும் புதிய உடன்படிக்கை இயேசுவின் இறப்பும் உயிர்ப்புமே! 
"என் இரத்தத்தின் ஒவ்வொரு துளியையும் என் நாட்டுக்காகச் சிந்துவேன்” என்று சொன்ன ஓரிரு நாட்களில் இந்திரா காந்தி கொடுமையாகக் கொல்லப்பட்டார். தன் சாவை நினைத்துத்தான் இந்த வார்த்தைகளைச் சொன்னாரா? சந்தேகம்தான். ஆனால் இயேசு “நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் சர்த்துக் கொள்வேன்" (யோ.12:32) என்றார். அடுத்துவரும் வசனத்திலேயே தாம் எவ்வாறு இறக்கப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார் என்பார் யோவான்.

இயேசு மாட்சிபெறும் நேரம் வந்துவிட்டது. அந்த நேரம் விந்தையானது. அந்த நேரத்தில் எல்லாமே எதிர்மாறான முரண்பாடாகவே பொருள்படும். இறப்பு என்பது வாழ்வாகும். இழப்பு என்பது ஆதாயமாகும். ஒன்றின் இறப்பு என்பது இன்னொன்றின் பிறப்பு என்பது இயற்கை நியதி. மலரின் மரணம் கனியின் பிறப்பு. “கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்”.

மரணத்தின் வழியாக மாட்சி பெறும் அந்த நேரத்தைச் சந்திப்பது இயேசுவுக்கு எளிதாகப்படவில்லை. யோவானின் பார்வையில் இது கெத்சமெனிப் போராட்டம். “இப்பொழுது என் உள்ளம் கலக்க முற்றுள்ளது” (யோ.12:27). தான் மடிந்தால்தான் மனித இனம் வாழ்வு பெறும் என்ற உணர்வில் இறைத் திருவுளத்திற்குத் தன்னையே கையளிக்கிறார்.

கிறிஸ்துவின் மீட்பை உலகம் தனதாக்கிக் கொள்ள வேண்டும். அங்கு அநீதி ஒழிந்து நீதி நிலவ வேண்டும். பாவம் மறைந்து அன்பு அரியனை ஏறவேண்டும். துக்கம் நீங்கி மகிழ்ச்சி பொங்க வேண்டும். பகைமை வற்றிப் பாசம் துளிர்க்க வேண்டும். அடிமைத்தனம் அகன்று விடுதலை மலர வேண்டும். இதற்கு விதையாக நாம் மண்ணில் விழுந்து மடிய வேண்டும். தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்து இறப்பதுதான் கிறிஸ்தவம். இதுவே புதிய உடன்படிக்கையின் சாரம்.

அந்தியோக்கு நகரின் ஆயரான தூய இஞ்ஞாசியார் கி.பி.108இல் காட்டு விலங்குகளுக்கு இரையாகி இயேசுவின் இரத்த சாட்சியான கதை நாம் அறிந்ததே. ஒருவேளை ரோமையில் இருந்த சில கிறிஸ்தவர்களின் செல்வாக்கால் தான் விடுதலை பெற்று இயேசுவுக்காக உயிர்ப்பலியாகும் பொன்னான வாய்ப்பை இழக்க நேருமோ என்று அஞ்சி ஆதிக் கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதம் புகழ் பெற்றது: "காட்டு விலங்குகளுக்கு இரையாகும்படி என்னை விட்டுவிடுங்கள். என் இறைவனைச் சென்றடைய எனக்குள்ள வழி அது ஒன்றே. இறைவனுக்குரிய கோதுமை மணி நான். காட்டு விலங்குகளின் பற்களால் நன்றாக அரைக்கப்பட்டு நான் கிறிஸ்துவுக்கு எற்ற தூய அப்பமாக (பலிப் பொருளாக) மாற வேண்டும். இக்காட்டு விலங்குகளே எனக்குக் கல்லறையாகுமாறு அவற்றைத் தூண்டிவிடுங்கள்', இத்தகையோரது இரத்தத்தில் செழித்ததே தொடக்க காலத் திருச்சபை.
நமது மன அரியணையில் சுயம் அமர்ந்திருந்தால் இயேசு சிலுவையில் தொங்குவார். இயேசு நம் மன அரியணையில் அமர வேண்டுமா? சுயம் சிலுவையில் தொங்க வேண்டும்!

மகிழ்வுட்டும் மறையுரை:

குடந்தை ஆயர் அந்தோணிசாமி


துன்பத்தின் வழியாய் இன்பம்
அது ஒரு மலையடிவாரம். அங்கு அந்த ஊர் மக்கள் ஆண்டவனுக்கு ஓர் அழகான கோயிலைக் கட்டினார்கள். அந்தக் கோயிலுக்குள் வைக்க கடவுளின் சுரூபம் ஒன்று தேவைப்பட்டது. சுரூபம் செய்யும் பணியை ஒரு சிற்பியிடம் ஒப்படைத்தார்கள்.

அந்தச் சிற்பி சுரூபம் செய்யப் பொருத்தமான கல்லைத்தேடி அலைந்தான். அவனுடைய கண்களிலே அந்த மலையடிவாரத்தில் கிடந்த இரண்டு கற்கள் தென்பட்டன. முதல் கல்லிடம் தனது விருப்பத்தைச் சொல்லி, அதன் சம்மதத்தைக் கேட்டான். அந்தக் கல்லோ: என்னை நீ உளியால் உடைப்பாய். நீ அப்படிச் செய்யும்போது என் உருவமும் சிதைந்து போகும். எனக்கு வலியும் ஏற்படும். நான் மிகுந்த வேதனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும். நான் மடிய வேண்டியிருக்கும். இதற்கெல்லாம் நான் தயாராக இல்லை. நானிருக்கும் நிலையிலேயே சுகமாக வாழ விரும்புகின்றேன். என்னை விட்டுவிடு என்றது. ஆகவே அந்தக்கல்லின் மீது அந்தச் சிற்பி கைவைக்கவில்லை. பக்கத்தில் கிடந்த கல்லோ: என்னை நீ பயன்படுத்திக்கொள். எனக்காக நான் வாழவிரும்பவில்லை ! இந்த ஊர் மக்களுக்காக நான் வாழ ஆசைப்படுகின்றேன். என் மீது உன் உளி விழட்டும்! வலியால் என் உடல் அழலாம்; ஆனால் என் உயிர் அழாது என்றது. இப்படிச் சொன்ன கல்லிலிருந்து ஓர் அழகான கடவுளின் சுரூபம் உருவானது; அது கோயிலின் மையப் பகுதியில் வைக்கப்பட்டது.

அந்தக் கடவுளுக்கு காணிக்கை செலுத்த வந்தவர்கள் தேங்காய் உடைப்பதற்காக உளி விழ மறுத்த, சிற்பிக்கு ஒத்துழைப்பு தர விரும்பாத முதல் கல்லைப் பயன்படுத்திக்கொண்டார்கள்! ஒரு கல்லிலே கலை வண்ணம் பிறக்கவேண்டுமானால் அந்தக் கல் தன்னையே ஒரு வகையிலே அழித்துக்கொள்ள முன்வரவேண்டும். இந்த உண்மையைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியிலே, கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும்; அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கின்றேன்; தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர்; இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர் (யோவா 12:24-25) என்ற வார்த்தைகளால் சுட்டிக்காட்டுகின்றார்.

இறப்பிற்குப் பிறகுதான் உயிர்ப்பு! துன்பத்திற்குப் பிறகுதான் இன்பம்! இரவுக்குப் பிறகுதான் பகல்!

இது இயற்கையின் சட்டம், இறைவனின் திட்டம். இயற்கையின் சட்டத்திற்கும், இறைவனின் திட்டத்திற்கும் எதிராகச் செயல்படுகின்றவர்களுக்குப் புதுவாழ்வு, நிலைவாழ்வு கிடைக்காது !

துன்பத்தின் வழியாகத்தான் இன்பம் என்ற இறைத்திட்டத்தை நிறைவேற்ற இயேசு கடைசி மூச்சுவரை துன்பப்பட, பாடுபடத் தயாராக இருந்தார் (எபி 5:8). இந்தத் தவக்காலத்தில் துன்பங்களை உதறித்தள்ளிய, துன்பங்களை விட்டு ஓடிய, துன்பங்களுக்காக இறைவனைத் தூற்றிய நேரங்களுக்காக மனம் வருந்துவோம். மனம் வருந்தும் நமது பாவங்களை மன்னிக்கவும், மறக்கவும் இறைவன் தயாராக இருக்கின்றார் (எரே 31:34).

மேலும் அறிவோம் :
துன்பத்திற்கு யாரே துணைஆவார் தாம் உடைய
நெஞ்சம் துணைஅல் வழி (குறள் : 1299).

பொருள் : ஒருவருக்குத் துன்பம் வரும்போது தம்முடைய நெஞ்சமே துணை புரியவில்லை என்றால், அவருக்கு வேறு யார் துணைபுரிவார்? எவரும் துணைபுரியார்!
.இயேசுவைக் காண விரும்புகிறோம்!

அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை


இயேசுவும் அவருடைய திருத்தூதர்களும் பாஸ்கா விழாவுக்காக எருசலேம் வந்திருக்கின்றனர். அதே நேரத்தில் அதே திருவிழாவுக்கு சில கிரேக்கர்களும் வந்திருக்கிறார்கள். கிரேக்கர்கள் ஏன் யூதர்களின் திருவிழாவுக்கு வந்திருந்தார்கள் என்பது தெரியவில்லை. இந்த கிரேக்கர்கள் ஒருவேளை எல்லா மதங்களையும் ஏற்றுக்கொள்பவர்களாக இருந்திருக்கலாம். அல்லது அந்த திருவிழாவில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்தில் வந்திருக்கலாம். அல்லது வேறு வேலையாக வந்திருக்கலாம். வந்த இடத்தில் திருவிழா நடந்து கொண்டிருக்கலாம். எது எப்படியோ இவர்கள் வந்த நேரம் திருவிழா நடக்கிறது. திருவிழா நடக்கிற நேரம் இவர்கள் வருகிறார்கள்.

இப்படி வந்த கிரேக்கர்கள் பெத்சாய்தா ஊரைச் சார்ந்த பிலிப்பிடம் - அவரை ஒரு பி.ஆர்.ஓ என நினைத்திருக்கலாம் - 'ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்!' என்கின்றனர்.

இவர்களின் இந்தத் தேடலை, விருப்பத்தை நாம் நமது இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்'

இந்த ஆண்டு பேராயரின் செயலராக நான் ஏற்ற தொலைபேசி அழைப்புகளில், அல்லது மக்களின் வருகையில் நான் கேட்ட வார்த்தைகளும் இவையே:

'ஃபாதர், நாங்கள் பேராயரைக் காண விரும்புகிறோம்'

மக்கள் பேராயரைக் காண ஏன் விரும்புகின்றனர்?

'தங்கள் குறைகள் தீர்க்கப்பட,' 'குறைகள் தீர்க்கப்பட்டதற்கு நன்றி சொல்ல,' 'உதவி கேட்க,' 'அவரை வாழ்த்த,' 'பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்க,' 'முடிவுகள் எடுப்பதில் அறிவுரை கேட்க' -

இப்படியாக ஒவ்வொரு விருப்பத்தின் பின்னாலும் ஒரு நோக்கம் இருக்கும்.

நோக்கம் இல்லாத விருப்பம் மிகக் குறைவே.

'சும்மா பார்க்க வந்தேன்' என்று சொல்வதெல்லாம் சும்மா சொல்வதாக இருக்கிறது.

கிரேக்கர்கள் இயேசுவைக் காண்பதற்காக தெரிவிக்கும் விருப்பத்திற்கு எந்தவொரு நோக்கமும் இல்லாமல் இருப்பது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

ஆக, 'நோக்கத்தோடு கூடிய விருப்பத்திலிருந்து' 'நோக்கம் இல்லாத விருப்பத்தை நோக்கி' செல்வதற்கான அழைப்பாக இருக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

ஒரு குழந்தை தன் தாயைக் காண விருப்பம் தெரிவிக்கிறது என்றால், அந்த விருப்பத்திற்கென நோக்கம் எதுவும் இருப்பதில்லை.

ஒரு தந்தை தன் குழந்தையைக் காண குழந்தை படிக்கும் விடுதிக்குச் செல்கிறார் என்றால் அந்த விருப்பத்திற்கென நோக்கம் எதுவும் இருப்பதில்லை.

கடவுளைத் தேடுவதிற்கான நம் விருப்பம் பல நேரங்களில் நோக்கம் கொண்டதாக இருக்கிறது. இப்படி இருப்பது ஒரு தொடக்க நிலையே தவிர முதிர்நிலை அல்ல என்பதை இன்று நாம் உணர்ந்துகொள்வோம்.

எப்படி?

இன்றைய பதிலுரைப்பாடலாக திருப்பாடல் 51ன் ஒரு பகுதியை வாசிக்கின்றோம்.

'தாவீது பத்சேபாவிடம் முறைதவறி நடந்தபின் இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் வந்தபோது அவர் பாடியது' என்று திருப்பாடல் 51க்கு முன்னுரை தரப்பட்டுள்ளது.

தன் பாவத்தால் தான் தன் இறைவனிடமிருந்து அந்நியமாக்கப்பட்டுவிட்டதையும், தன் திருப்பொழிவு நிலை மாசுபட்டதையும் எண்ணுகின்ற தாவீது மனம் வருந்தி இறைவனின் இரக்கத்தை மன்றாடுகின்றார்.

கடவுளை தாவீதுக்கு ரொம்ப பிடிக்கும். கடவுளுக்கும் தாவீதை ரொம்ப பிடிக்கும். ஆக, எந்நேரமும் அவரைக் காண்பதையே தன் விருப்பமாகக் கொண்டிருந்த தாவீது தான் பத்சேபாவிடம் கொண்ட தவறான உறவினால் அந்த விருப்பத்திற்கு திரையிட்டுக்கொள்கின்றார். தாவீது பத்சேபாவை அடைய நினைத்தது அக்கால வழக்கப்படி தவறு அல்ல. ஏனெனில் அரசனுக்கு அவனது நாட்டில் உள்ள எல்லாரும், எல்லாமும் சொந்தம். கடவுளின் முறைப்பாடு என்னவென்றால், 'உன்னிடமிருந்து நிறைவைக் காண்பதை விட்டு, உன்னிடம் இல்லாத ஒன்றை அல்லது உனக்கு வெளியே இருக்கும் ஒன்றை நீயாக அடைய நினைத்தது' என்பதுதான். 'நீ என்னிடம் கேட்டிருக்கலாமே!' என்றுதான் கடவுள் வருத்தப்படுகின்றார்.

இந்தத் தவற்றால் கடவுளிடமிருந்து விலகிப்போன தாவீது கடவுளிடம் நான்கு விருப்பங்களை முன்வைக்கின்றார்:

அ. தூயதோர் உள்ளம்
ஆ. உறுதிதரும் ஆவி
இ. மீட்பின் மகிழ்ச்சி
ஈ. தன்னார்வ மனம்

இந்த நான்கும் இருந்தால் கடவுளைக் காண தாவீது மட்டுமல்ல. நாம் எல்லாருமே விருப்பம் கொள்வோம். ஏனெனில் இந்த நான்கிற்கும் கடவுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எப்படி?

அ. தூயதோர் உள்ளம் - 'தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்' (மத் 5:8) என்பது இயேசுவின் மலைப்பொழிவு. தூய்மை என்பது முழுமை. வெள்ளைத் துணியை தூய்மையாக இருக்கிறது என நாம் எப்போது சொல்கிறோம்? துணி முழுவதும் வெண்மையாக இருக்கும்போது. ஆக, ஒன்றின் இயல்பின்மேல் மற்றது படிந்திருந்தால் அது தூய்மையற்றதாகிறது. லட்டு வாங்கி வருகிறோம். சிகப்பு கலரில் இருக்கிறது. நான்கு நாள்கள் கழித்து அதன் மேல் வெள்ளையாக அல்லது பழுப்பு நிறத்தில் ஏதோ ஒன்று படிகிறது. உடனே 'கெட்டுவிட்டது' என நாம் அதை தூக்கி வெளியே போடுகிறோம். முழுமையான உள்ளம் கடவுளை மட்டுமே தேடும். ஆகையால்தான் 'பிளவுண்ட மனம்' தவறு என பவுலடியார் சொல்கின்றார் (காண். 1 கொரி 7:34).

ஆ. உறுதிதரும் ஆவி - தவறு செய்யும் மனம் தவறுக்கான வாய்ப்பு இல்லாதவரை உறதியாக இருக்கும். எனக்கு ஃபோர்னோகிராஃபி பார்க்கும் பழக்கம் உள்ளது என வைத்துக்கொள்வோம். கணிணி இல்லாதவரை, அல்லது இணைய இணைப்பு இல்லாத வரை என் மனம் 'அதை பார்க்கக்கூடாது' என உறுதியாக இருக்கும். ஆனால், கணிணியும், இணையமும், தனிமையான இடமும் கிடைத்தவுடன் முதல் வேலையாக 'அதைப் பார்க்கும்.' ஆக, உறுதியாக இருந்த மனம் சூழல் மாறியவுடன் உறுதியை இழந்துவிடுகிறது. தாவீது கேட்கும் ஆவி உறுதியை தரக்கூடிய ஆவி.

இ. மீட்பின் மகிழ்ச்சி. அதாவது, தான் பத்சேபா வழியாக பெற்றது இன்பம் என்றும், இறைவனிடமிருந்து வரும் மீட்பால் கிடைப்பது மகிழ்ச்சி என்றும் சொல்கிறார் தாவீது. ஒருமுறை தவறு செய்துவிட்டு அந்தத் தவறிலிருந்து வெளிவந்து கடவுளின் மன்னிப்பை பெற்றவுடன் மனதில் ஒருவிதமான பெருமிதம் அமர்ந்துகொள்கிறது. அந்த பெருமிதமே மகிழ்ச்சி. மேலும் தாவீது, 'மீண்டும் எனக்குத் தந்தருளும்!' என்று தான் இழந்ததை திரும்ப பெற்றுக்கொள்ள விழைகின்றார்.

ஈ. தன்னார்வ மனம். கடந்த வாரம் என் நண்பர் ஒருவரிடம் அருள்பணி வாழ்வு கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் சொன்னார்: 'நீயா விரும்பித்தானே வந்தாய்!' அவ்வளவுதான். நான் ஞானம் பெற்றேன். யாரும் நிர்பந்தித்து நான் இந்த வாழ்வைத் தேர்ந்துகொள்ளவில்லை. ஆக, நான் ஏன் நிர்பந்திக்கப்படுவதாக உணர வேண்டும். தன்னார்வ மனம் என்பது நிர்பந்தம் இல்லாத மனம்.

இந்த நான்கு பண்புகள் வழியாக நாமும் அந்த கிரேக்கர்களைப் போல, 'ஐயா, நாங்கள் கடவுளை (இயேசுவை) காண விரும்புகிறோம்' என்று சொல்ல முடியும்.

கடவுளைக் காண விரும்புகிறோம் என்றால் அவர் எங்கே இருக்கிறார்?

இந்தக் கேள்விகளுக்கான விடை இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்களில் இருக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 31:31-34) புதிய உடன்படிக்கை பற்றி பேசுகின்ற எரேமியா இறைவாக்கினர், இறுதியாக, 'இனிமேல் எவரும் 'ஆண்டவரை அறிந்துகொள்ளும்' எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில் அனைவரும் என்னை அறிந்துகொள்வர்' என்று யாவே இறைவன் சொல்வதாக இறைவாக்குரைக்கின்றார். இவ்வாறாக, கடவுளை வெளியே தேடும் நிலை மறைந்து, கடவுள் ஒவ்வொருவரின் உள்ளத்தில் தோன்றும் நிலை உருவாகிறது. ஆக, கடவுளை அறிவது என்பது அவர் நம் உள்ளத்தில் எழுதியிருக்கும் சட்டத்தை, உடன்படிக்கையை அறிவது மட்டுமல்ல. அதற்கு மேலும், 'நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்' என்ற உணர்வை பெற்றுக்கொள்வது. அதாவது, ஒரு தாயின் கருவறைக்குள் இருப்பது போன்றது. தாயின் கருவறைக்குள் இருக்கும் குழந்தை கேட்கும் ஒலி தன் தாயின் ஒலி மட்டுமே. மேலும், கருவறையில் இருக்கும் குழந்தை தன் தாயின் ஒரு பகுதியாகவே நினைக்கும். அங்கே தாய்க்கும், சேய்க்கும் வேற்றுமை இல்லை.

இயேசு கொண்டுவந்த மீட்பின் இரகசியம் இதுதான். கடவுளுக்கும் மனிதருக்கும் உள்ள தூரத்தை இல்லாமல் செய்துவிட்டார்.

ஆக, கடவுளைக் காண்பதற்கு நாம் கண்களைத் திறக்கத் தேவையில்லை. கண்களை மூடினாலே போதும். அவரை நாம் நம் அகத்துள் உணர்ந்துகொள்ள முடியும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளைப் பற்றிய தேடல் நம் அன்றாட வாழ்க்கை நிலைகளிலும் தெரிகிறது என்பது தெளிவாகிறது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைப்பதற்கு முன் அவர் பெற்றிருந்த நிறைவை, 'அவர் இறைமகனாயிருந்தும் துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவரானார்' என எழுதுகிறார். ஆக, கடவுளுக்கான விருப்பம் நம் வாழ்வின் துன்பங்களிலிருந்தும் ஊற்றெடுக்கும்.

இவ்வாறாக, கடவுளை நோக்கிய நம் தேடல் நமக்கு வெளியிலிருந்தும், நமக்கு உள்ளிருந்தும் வருகிறது.

மீண்டும், கிரேக்கர்களின் வார்த்தைகளுக்கே வருவோம்:

'ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்'

இந்த வார்த்தைகளோடு நம் சிந்தனையை நிறைவு செய்வோம்:

இயேசுவை அவரின் வாழ்நாளில் மூன்று வகையான மக்கள் காண விரும்புகின்றனர்:

1. ஏரோது வகையினர். இயேசுவை தந்தை ஏரோதும் தேடுகிறார். மகன் ஏரோதும் தேடுகிறார். இயேசு பிறந்த போது யூதேயாவை ஆட்சி செய்த தந்தை ஏரோது இயேசுவைக் கொல்லத் தேடுகிறார் (மத்தேயு 2:16). இயேசுவின் பாடுகளின் போது கலிலேயாவை ஆண்ட மகன் ஏரோது அவரிடம் அறிகுறி எதிர்பார்த்துக் காண விரும்புகின்றார் (லூக்கா 23:8).

2. சக்கேயு வகையினர். சக்கேயு (லூக்கா 19:1-10) இயேசுவைக் காண விரும்பியதன் நோக்கம் ஒரு பேரார்வம். மனமாற்றம் இயேசுவைச் சந்தித்தபின் வந்ததுதான். இயேசுவைத் தேடி வந்த நோயுற்றோர், பேய்பிடித்தவர், தொழுநோயாளர், பார்வையற்றவர் எல்லாரும் இவ்வகையில் அடங்குவர்.

3. கிரேக்கர் வகையினர். இவர்களைத் தான் இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கின்றோம். தங்களின் முகத்தை மறைத்துக் கொண்டு இயேசுவின் முகத்தைத் தேடியவர்கள். இயேசுவிடமிருந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதவர்கள். இயேசுவை தங்கள் எதிரியாகவோ, உபகாரியாகவோ பார்க்காதவர்கள்.

இன்று நாம் நம்மைப் பார்த்துக் கேட்க வேண்டிய முதல் கேள்வி: நான் இயேசுவைக் காண விரும்புகிறேனா? விரும்புகிறேன் என்றால், நான் இந்த மூன்றில் எந்த வகையைச் சார்ந்தவர். முதல் இரண்டு வகைத் தேடலிலும், இயேசுவைக் கண்டவுடன் பயணம் முடிந்து விடுகிறது. ஆனால், மூன்றாம் வகையில் மட்டும் தான் பயணம் தொடர்கிறது. முதல் வகையினர், எதிரிகள். இரண்டாம் வகையினர் பக்தர்கள். மூன்றாம் வகையினர் சீடர்கள். இன்று இயேசுவுக்கு நாம் எதிரிகளா, பக்தர்களா அல்லது சீடர்களா? எதிரிகளாகக் கூட இருந்துவிடலாம். ஆனால், பக்தர்களாக இருப்பதுதான் மிகவும் ஆபத்தானது. ஆலயத்திற்கு வந்தோம், மெழுகுதிரி ஏற்றினோம், கைகளைக் கும்பிட்டோம், வழிபட்டோம், சென்றோம் என்று நாம் இருக்கும் போது இயேசுவை நம்மிடமிருந்து, அல்லது நம்மை இயேசுவிடமிருந்து அந்நியப்படுத்திவிடுகிறோம். நாம் சீடர்களாக அல்லது கிரேக்க வகையினராக இயேசுவைத் தேட வேண்டும்.

இரண்டாம் கேள்வி: இந்தக் கிரேக்கர்களைப் போலத் தேடுவது என்றால் எப்படி?

இயேசுவே இதற்கான பதிலை மூன்று நிலைகளில் தெரிவிக்கின்றார்:

1. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிய வேண்டும்.
2. தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதவராக இருக்க வேண்டும்.
3. என்னை (இயேசுவை) பின்பற்ற வேண்டும்.

1. கோதுமை மணி

இயேசு சொல்லும் இந்த உருவகம் ஒரு விவசாய உருவகம். நாம் விவசாயம் செய்து விதைகள் விதைக்கும் போது, நாம் செய்யும் விவசாயத்தின் நோக்கம் நாம் தெளிக்கும் விதைகள் எல்லாம் நம் வயலின் மேல் கிடந்து அதை அலங்கரிக்க வேண்டும் என்பதா? இல்லை. விதைக்கப்படுகின்ற விதைகள் போராட வேண்டும். முதலில் விதை மண்ணோடு போராட வேண்டும். மண்ணைத் துளைத்து உள்ளே சென்று தன்னையே மறைத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, தன்னை மறைத்துக் கொள்ளும் விதை மடிய வேண்டும். தன் இயல்பை முற்றிலும் இழக்க வேண்டும். மூன்றாவதாக, அதே போராட்டத்துடன் மண்ணை முட்டிக் கொண்டு மேலே வர வேண்டும். இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் விதையின் போராட்டம் தடைபட்டாலும் விதை பயனற்றதாகிவிடுகிறது. 'இல்லை! நான் என்னை மறைக்க மாட்டேன். கீழே போக மாட்டேன். என்னை எல்லாரும் பார்க்க வேண்டும்!' என்று அடம்பிடித்தால் வானத்துப் பறவைக்கு உணவாகிவிடும். அல்லது கதிரவனின் சூட்டில் கருகிவிடும். மடிய மறுத்தாலோ அல்லது போராடி உயிர்க்க மறுத்தாலோ அது மட்கிப்போய் விடுகிறது. இயேசுவின் வாழ்வையும் விதையின் இந்த போராட்டத்தைப் போலத்தான் இருக்கிறது: பாடுகள் படுகின்றார், இறக்கின்றார், உயிர்க்கின்றார். இயேசுவைக் காண விரும்பும் நம் மனநிலையும் இப்படித்தான் இருக்க வேண்டும். கோதுமை மணி போல மடிவது என்றால் நம் உயிரை மாய்த்துக்கொள்வது அல்ல. நாம் எதற்காக படைக்கப்பட்டோமோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவது. நாம் விதியினாலோ. இயற்கையின் விபத்தினாலே வந்தவர்கள் அல்லர். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. வெறும் 10 ரூபாய் கொடுத்து 10 நிமிடம் செல்லும் பயணத்திற்கே இலக்கும் நோக்கமும் இருக்கிறது என்றால் பல வருடங்கள் பயணம் செய்கின்ற நம் வாழ்க்கைப் பயணத்திக்கு இலக்கும், நோக்கமும் இல்லாமல் இருக்குமா? இயேசுவின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வாழ்க்கை 'சராசரி' வாழ்க்கையாக இருந்துவிடக் கூடாது. நம் முழு ஆற்றலும் வெளிப்படுகின்ற வகையில் நம் வாழ்க்கை ஓட்டம் அமைய வேண்டும். மாணவராக இருக்கிறோமா! முழு அர்ப்பணத்துடன் படிக்க வேண்டும். டாக்டராக, ஆசிரியராக, அன்றாட கூலியாக நாம் என்னவாக இருந்தாலும் அதில் நாம் முழுமையாக மடிய வேண்டும். பலன் தர வேண்டும்.

2. தமக்கென்று வாழ்வோர் - தமக்கென்று வாழாதோர்

இரண்டாவதாக, இயேசு இரண்டு வகை மனிதர்களைக் குறிப்பிடுகின்றார்: 'தமக்கென்று வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுகின்றனர்', 'தம் வாழ்வை ஒருபொருட்டாகக் கருதாதவர் நிலைவாழ்வு பெறுகின்றனர்'. இரண்டும் ஒன்றிற்கொன்று தொடர்பு இல்லாததுபோல இருக்கிறது. இரண்டாவது வாக்கியம் லாஜிக் படி பார்த்தால், 'தமக்கென்ற வாழாதோர்' என்றுதானே இருக்க வேண்டும். இயேசுவின் இந்தப் போதனையின் நோக்கம் நாம் நமக்காக வாழ வேண்டுமா அல்லது பிறருக்காக வாழ வேண்டுமா என்பதல்ல. மாறாக, வாழ்வின் மேலான நம் கண்ணோட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதுதான். 'ஒருவர் உலகம் முழுவதும் தமதாக்கிக் கொண்டாலும், தன் வாழ்வை இழந்து விட்டால் அதனால் வரும் பயன் என்ன?' (மத்தேயு 16:26) என்னும் இயேசுவின் போதனை இப்போது முரண்படுகிறது போல தெரிகிறதல்லவா! வாழ்வை ஒரு பொருட்டாகக் கருதாதது என்றால் சரியாகக் குளிக்கக் கூடாது, நல்ல டிரஸ் போடக்கூடாது, எம்.பி.3 ப்ளேயரில் பாட்டுக் கேட்கக் கூடாது என்பதல்ல. மாறாக, எதற்கும் நான் உரிமையாளன் அல்ல என்ற நிலையில் வாழ்வது. நாம் நம் வாழ்விற்கும், நம் உயிருக்கும், நம் உறவுகளுக்கும் கண்காணிப்பாளர்கள் தாம். நம் மேலும், நம் உறவுகள் மேலும் நமக்கு உரிமையில்லை. நம் வாழ்வில் அருட்பணி நிலையில் ஒரு பங்கோ, பொதுநிலை வாழ்வில் கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ தரப்பட்டிருக்கிறது என்றால் அவர்கள் மேல் ஆட்சி செலுத்துவதற்கும், உரிமை கொண்டாடுவதற்கும் அல்ல. மாறாக, கண்காணிப்பதும், பராமரிப்பதும் தான் நம் வேலை. 'எது இன்று உன்னுடையதோ, அது நாளை வேறொருவனுடையது!' என்ற கீதையின் சாரமும் இங்கே நினைவுகூறத்தக்கது. எதன்மேலும் உரிமையில்லை என்பதற்காக, 'வந்த மாட்டையும் கட்ட மாட்டேன், போன மாட்டையும் தேட மாட்டேன்' என்ற கண்டுகொள்ளாத மனநிலையிலும் இருந்துவிடக்கூடாது.

3. எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும்

இயேசுவின் சீடரோ அல்லது இயேசுவைக் காண விரும்புவரோ இருக்க வேண்டிய இடம் இயேசு இருக்கும் இடம்தான். ஒழுக்கம் என்றால் என்ன? 'இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டிய பொருள் இருப்பதும், செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டிய வேலையைச் செய்வதும்தான்!' உதாரணத்திற்கு, படிக்கின்ற மாணவர்கள் திங்கள் கிழமை காலை 10 மணிக்கு வகுப்பறையில் இருக்க வேண்டும் என்பது ஒழுக்கம். அதே மாணவர்கள் திங்கள் கிழமை 10 மணிக்கு தியேட்டரில் இருந்தால் அது ஒழுங்கீனம். இயேசு இருக்க வேண்டிய இடத்தில் அவரைத் தேடுவோரும் இருப்பதும், இயேசு கொண்டிருந்த மனநிலையைக் கொண்டிருப்பதும் தான் ஒழுக்கம். இயேசுவைப் பின்பற்றுவது என்றால் என்ன? பின்பற்றுவது அல்லது ஃபாலோ செய்வது என்றால் உடனடியாக நம் நினைவிற்கு வருவது டுவிட்டர்தான். டுவிட்டரில் நாம் சிலரைப் பின்பற்றுகிறோம். அல்லது சிலர் நம்மைப் பின்பற்றுகிறார்கள். நாம் யாரைப் பின்பற்றுகிறோமோ அவர்களின் கருத்தியலைப் பகிர்ந்து கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், படிப்பு, வேலை என எல்லாத் தளங்களிலும் நாம் சிலரைப் பின்பற்றுகிறோம். நாம் பின்பற்றும் நபர்கள் நம்மையறியாமலேயே நம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். டுவிட்டரில் அடுத்தவர்களைப் பின்பற்றுவதற்கு மெனக்கெடும் நாம் இயேசுவைத் தேடுவதற்கும், பின்பற்றுவதற்கும் மெனக்கெடுவதில்லை என்பதுதான் வேதனையான விஷயம். அன்று கிறிஸ்தவராக மாறுவது கடினம். ஆனால் வாழ்வது எளிது. இன்று, கிறிஸ்தவராக மாறுவது எளிது. ஆனால், வாழ்வதுதான் கடினம்.

'நான் இயேசுவைக் காண விரும்புகிறேன்!' - இது ஒன்றே இன்று என் மன்றாட்டாக, ஆசையாக, தேடலாக இருந்தால் எத்துணை நலம்!
No comments:

Post a Comment