Thursday 23 November 2017

கிறிஸ்து அரசர் பெருவிழா


கிறிஸ்து அரசர் பெருவிழா

எசேக்கியேல் 34:11-12, 15-17; 1 கொரிந்தியர் 15:20-26, 28; மத்தேயு 26:31-46

மறையுரை மொட்டுக்கள்-அருள்பணி இருதயராஜ்
ஓர் ஊரில் இரண்டு பைத்தியங்கள் இருந்தன. முதல் பைத்தியம் இரண்டாம் பைத்தியத்திடம், "நான் உலகத்தையே விலைக்கு வாங்கப் போகிறேன்" என்றது. அதற்கு இரண்டாவது பைத்தியம், "நான் உலகை விற்றால்தானே நீ அதை வாங்க முடியும்? இப்போதைக்கு உலகை விற்கும் எண்ணம் எனக்கு இல்லை" என்றதாம்!
இன்று ஒவ்வொரு நாடும் வல்லரசாக மாறவேண்டும் என்ற மமதைப் பிடித்துச் செயல்படுகிறது. அவ்வாறே அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் நாட்டை ஆளவேண்டும் என்ற நப்பாசையில் ஆதிக்க வெறிபிடித்து அலைகின்றனர். தனி மனிதர்களையும் இத்தகைய தலைக்கணம் விட்டுவைக்கவில்லை.
அலெக்சாண்டர் உலக நாடுகளையெல்லாம் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். அவர் இறந்து அடக்கம் செய்யப்பட்டபோது ஒரு தத்துவமேதை கூறினார். "நேற்றுவரை அலெக்சாண்டர் மண்ணை ஆண்டார். இன்று மண் அலெக்சாண்டரை ஆண்டுகொண்டிருக்கிறது." "மனிதனுக்கு மண்மேல் ஆசை மண்ணுக்கு மனிதன் மேல் ஆசை கடைசியில் மண்தானே ஜெயித்தது" என்று திரைப்படப் பாடல் கூறுகிறது.
இப்பின்னணியில் இன்று நாம் திருவழிபாட்டு ஆண்டின் சிகரமாகக் கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடு கின்றோம். கிறிஸ்து அரசரா? ஆம், அவர் ஒருவர் மட்டுமே உண்மையான அரசர், படைப்பிலும் மீட்பிலும், இம்மையிலும் மறுமையிலும் அவர் அரசர், அவர் மூலமாகவே அனைத்தும் உண்டாயின (யோவா 1:37). "அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது" (லூக் 1:33), "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கின்றவர் எங்கே?" (மத் 2:12) "ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக" (லூக் 19:38). "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசர்" (யோவா 19:19), "இயேசுவே நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற் கொள்ளும்" (லூக்கா 23:42),
இயேசு கிறிஸ்து உண்மையான அரசர், ஆனால் அவரது அரசு வித்தியாசமான அரசு, இன்றைய திருப்பலியின் தொடக்கவுரை அவருடைய அரசின் தனிப்பண்புகளைப் பின்வருமாறு பட்டியலிட்டுக் காட்டுகிறது: "உண்மையின் அரசு நீதியின் அரசு அருளின் அரசு புனிதத்தின் அரசு; அன்பின் அரசு அமைதியின் அரசு வாழ்வின் அரசு, கிறிஸ்து ஆயுத பலத்தால் அல்ல. அன்பின் பலத்தால் ஆட்சி செய்கிறார். மாமன்னன் நெப்போலியன் கூறினார்: "நானும் அலெக்சாண்டரும் ஆயுத பலத்தால் அடக்கி ஆள முயன்றோம் எங்கள் அரசு நிலைக்கவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்து அன்பினால் ஆட்சி செய்கின்றார். அவரது அரசு என்றும் நிலைத்திருக்கும்."
மண்ணக அரசர்கள் மக்களைப் பயன்படுத்தி தங்களுடைய வாழ்வை மேம்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் நல்ல மேய்ப்பர்கள் அல்ல. மாறாக, கிறிஸ்து நல்ல மேய்ப்பர் என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. அவர் மந்தையை மேய்த்து இளைப்பாறச் செய்கிறார் காணாமற்போன ஆடுகளைத் தேடிச் செல்கிறார்; காயப்பட்டதற்குக் கட்டுப்போடுகிறார். நலிந்தவற்றைத் திடப்படுத்துகிறார். நீதியுடன் ஆடுகளை மேய்க்கின்றார் (எரே 34:11-17) ஆடுகள் வாழ்வு பெறவும் அதை நிறைவாகப் பெறவும் அவர் தமது உயிரையே கொடுக்கிறார் (யோவா 10:10).
இன்றைய பதிலுரைப் பாடல் நல்லாயன் திருப்பாடல் (திபா 23). கிறிஸ்து நல்லாயர் நமக்குக் குறை ஏதுமில்லை. நம்மைப் பசும்புல் தரைக்கும் அமைதியான நீர் நிலைக்கும் அழைத்துச் செல்கிறார் நமக்கு விருந்தளிக்கிறார். அருள்வாக்காலும் அடையாளங் களாலும் நமக்கு அவர் புத்துயிர் அளிக்கிறார். அவரால் வழிநடத்தப்படும் நாம் எதற்கும் பயப்படத் தேவையில்லை, ஓர் அப்பா தம் மகளிடம், "ஆங்கிலத் தேர்வில் எத்தனை கேள்விகள் கேட்டிருந்தார்கள்? நீ எத்தனை கேள்விகளுக்குப் பதில் எழுதினாய்?" என்ற கேட்டதற்கு அவன், "ஆறு கேள்விகள் இருந்தன. முதல் நான்கு கேள்விகளுக்கும் கடைசி இரண்டு கேள்விகளுக்கும் பதில் எழுதவில்லை" என்றான். இறுதித் தேர்வில் நம்மிடம் கிறிஸ்து கேட்கப்போகும் ஆறு கேள்விகளையும் வெளியிட்டுவிட்டார். அவை: 1.நான் பசியாய் இருந்தேன், உணவளித்தாயா? 2. நான் தாகமாய் இருந்தேன், தண்ணி கொடுத்தாயா? 3.நான் ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினாயா? 4.நான் அன்னியனாய் இருந்தேன். எனக்கு உன் வீட்டில் இடம் கொடுத்தாயா? 5 நான் நோயுற்று இருந்தேன், என்னைக் காண வந்தாயா? 8.நான் சிறையில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தாயா? இக்கேள்விகளுக்கு "ஆம்" என்று பதில் சொன்னால், விண்ணகமும் 'இல்லை" என்றால் நாகமும் கிடைக்கும். ஏழைகளுக்குச் செய்யும் உதவி இயேசுவுக்குச் செய்யும் உதவி, மக்கள் பணி மகேசன் பணி ஒருவன் தேர்வில் தோற்றுவிட்டான். ஏன்? என்று கேட்டதற்கு அவன் கூறியது "நான் கடினமான கேள்விகளைப் படித்தேன், ஆனால் தேர்வில் எளிதான கேள்விகளைக் கேட்டுவிட்டார்கள்." அவனுடைய கதியே நம்முடைய கதியாகிவிடும். ஏனெனில் விண்ணகம் செல்வதற்குக் கிறிஸ்து நமக்குக் காட்டிய எளிய வழிகளைப் பின்பற்றாமல், மிகவும் கடினமான வழிகளைப் பின்பற்றி இறுதித் தேர்வில் கோட்டைவிடப் போகிறோம் பிறரிடம் பெறுவது நல்லது என்றாலும் அது தவறு. ஆனால் விண்ணகமே இல்லையென்று வைத்துக்கொண்டாலும் பிறர்க்கு ஈதல் நன்று.
 "நல் ஆறுஎனினும் கொளல்த்து மேலுலகம்
இல்எனினும் சுதலே நன்று" (குறள் 222)
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுவது நிறைவேறும் "எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும்வரை அவர் (கிறிஸ்து) ஆட்சி செய்ய வேண்டும்" (1 கொரி 15:25). "ஏனெனில் அரசும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.”



இறைவனின் இல்லத்திற்குள் நுழைய பேறுபெற்றவர்கள் யார்?

குடந்தை ஆயர் அந்தோணிசாமி


நமது கிறிஸ்து அரசரின் ஆசி பெற நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை இன்றைய நற்செய்தி நமக்குத் தெளிவுப்படுத்துகின்றது.

ஆறுவகையான மக்களுக்குஆண்டவரின் ஆசிகிடைப்பது விண்ணகம் கிடைப்பது உறுதியார்அந்தஅறுபேர்? பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பவர்கள். தாகமாக இருப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பவர்கள். அன்னியராக இருப்போரை ஏற்றுக் கொள்பவர்கள்.ஆடையின்றி இருப்பவர்களுக்கு ஆடைஅணிவிப்பவர்கள், நோயுற்றோரைக் கவனித்துக் கொள்கின்றவர்கள், சிறையிலிருப்பவர்களைத் தேடிச்செல்கின்றவர்கள் ஆகிய ஆறு பேரும் கடவுள் வாழும் இல்லத்திற்குள் நுழையும்பேறுபெறுவார்கள்.

கிறிஸ்தவ மறையைப் பொறுத்தவரையில் இறைவனின் ஆசிபெற நம்மிடமுள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழி கிடையாது.

நம்மிடமுள்ளதைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவிடாமல் நம்மைத் தடுப்பது எது? நமது சுயநலம். சுயநலம் என்றால் என்ன? என்பதைச் சுட்டிக்காட்ட ஒரு கதை!

ஒரு பெரிய பணக்காரருக்கு மூன்று மகன்கள் அந்தப்பணக்காரரிடம் நிறைய சொத்து இருந்தது அவருக்கு வயதாகிவிட்டது அவர் மரணப் படுக்கையில் படுத்திருந்தார் அப்போது அவர் இறந்த பிறகு எப்படி அவரை கல்லறைக்குத் தூக்கிச்செல்வது என்பதைப் பற்றி மூன்று மகன்களும் தங்களுக்குள்ளேபேசிக்கொண்டனர்.

மூத்தவன் "கல்லறைக்கு தூக்கிச்செல்ல வாடகைக் கார் ஒன்றை வைத்துக்கொள்ளலாம்" என்றான்.

இரண்டாமவன் "காருக்கு அதிக செலவாகும் இறந்த பிறகு எதில் தூக்கிச்செல்கின்றோம் என்பது அவருக்குத் தெரியவாபோகின்றது ஒரு மாட்டு வண்டிபோதும்" என்றான்.

மூன்றாமவன் : "மாட்டுவண்டி எதற்கு நம்ம ஊர் சவ வண்டி இருக்கின்றது அது இனாமாகக் கிடைக்கும்" என்றான்.
இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கிழவர், "எங்கே என் செருப்பும், கைத்தடியும்?" என்றார்.

மகன்கள் "இப்போது அவை உங்களுக்கு எதற்கு?" என்றார்கள்.

தகப்பனோ, "நீங்கள் எனக்காக எந்தச் செலவையும் செய்ய வேண்டாம் நான் நடந்தே கல்லறைக்குச் சென்று விடுகின்றேன்" என்றார்.

இந்தக் கதையில் வந்த மூன்று மகன்களும் கொண்டிருந்த மனநிலைக்குப் பெயர்தான் சுயநலம்! சுயநலம் என்பது, தான் வாழவேண்டும், தான் மட்டுமே வாழவேண்டும் என்று எண்ணுவது.

இந்தச் சுயநலத்தை அழிக்க வழி ஏதாவது உண்டா? உண்டு என்கின்றது முதல்வாசகம்! நல்லாயனாம் கடவுள் காணாமல் போன நமது நல்ல வாழ்க்கையை நமக்குக் கண்டுபிடித்துத் தருவார் என்கின்றது. தீயவை அனைத்தையும் அழிக்கும் ஆற்றல் கடவுளுக்கு உண்டு.

நமது வாழ்க்கை இந்த உலகத்தோடு முடிந்து போகும் ஒன்று அன்று நாம் அனைவரும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் (இரண்டாம் வாசகம்). அப்படி உயிர்தெழும்போது கிறிஸ்து அரசரால் விண்ணகத்திற்குள் நாம் வரவேற்கப்பட தகுதியுள்ளவர்களாகத் திகழ்வோமா? திகழ்வோம். எப்போது? நம்மிடம் உள்ளதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது...

மேலும் அறிவோம்:
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் (குறள் : 229).

பொருள் பெரிதும் தேடித்திரட்டிய பொருள் அனைத்தையும் பிறருக்குக் கொடுத்தால் குறையுமோ என்றுதாமே சுவைப்பது, பிறரிடம் கையேந்திக் கெஞ்சிக் கேட்பதைக் காட்டிலும் கொடிய செயலாகும்.


 கிறிஸ்து அரசர் பெருவிழா

அருள்பணி ஏசு கருணாநிதி - மதுரை

அரசர் -
சின்னஞ்சிறியவர்களின்,
சின்னஞ்சிறியவர்களோடு,
சின்னஞ்சிறியவர்களுக்காய்

கிறிஸ்து அரசர் பெருவிழா அன்று எதற்காக இறுதித் தீர்ப்பு பற்றிய நற்செய்தி பகுதி (மத் 25:31-46) கொடுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்வி நமக்கு எழலாம். உலக முடிவின் பின் இப்படித்தான் நடக்குமா? கடவுள் நம்மை இப்படித்தான் இருபுறமும் பிரித்து நிறுத்துவாரா? இந்த இரண்டு புறங்களையும் தாண்டி மூன்றாவது புறம் ஒன்று இருக்க வாய்ப்பிருக்கிறதா? நாம் வலப்பக்கம் அனுப்பப்படுவோமா? அல்லது இடப்பக்கம் அனுப்பப்படுவோமா? முடிவில்லாத வாழ்வா? முடிவில்லாத நெருப்பா?

இறப்புக்குப் பின் அல்லது எல்லாரும் இறந்தபின் நடக்கும் இறுதித் தீர்ப்பு உண்டு என விளக்க அல்லது மெய்ப்பிக்கப் பயன்படும் நற்செய்திப் பகுதியே மத் 25:31-46. இந்த நற்செய்திப் பகுதிக்கும் இன்று நாம் கொண்டாடும் கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கும் என்ன தொடர்பு?

அரசர் அல்லது அரசர் தொடர்புடைய நேரடி சொல்லாடல்கள் மூன்றை இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம்:

அ. 'அரியணை'
'வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்' (மத் 25:31) என்று தொடங்குகிறது நற்செய்திப் பகுதி. அரசர்களின் இருக்கைகளில் கைபிடிகளாக இரண்டு சிங்கங்கள் ('அரிமா') இருக்கும். மற்ற இருக்கைகளில் அவை இருக்காது. அல்லது சிங்க உருவங்கள் உள்ள இருக்கையில் அரசன் மட்டுமே அமர உடையும். சிங்க உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால், இவை 'அரிமா ஆசனங்கள்' அல்லது 'அரியாசனங்கள்' அல்லது 'அரியணைகள்' என அழைக்கப்படுகின்றன. 'சிங்கம்' என்பது அதிகாரம் மற்றும் ஆற்றலைக் குறிக்கும் ஒரு உருவகம்.
மேலும், 'அமர்வது' என்பதும் அதிகாரத்தைக் குறிக்கிறது. பட்டினத்தார் பாடல் ஒன்றில் பட்டினத்தார் அரசனைப் பார்த்து, 'நீ நிற்க நான் அமர' என்று இருக்கும். அதாவது யார் அமர்கிறாரோ அவர் அதிகாரம் கொண்டிருக்கின்றார். ஆகையால்தான், இன்றும் விசுவாச பிரகடனங்களை அதிகாரப்பூர்வமாக திருத்தந்தையர் அறிவிக்க வேண்டியிருந்தால் அவர்கள் உரோம் தூய லாத்தரன் பேரலாயத்தில் உள்ள அரியணையில் 'அமர்ந்து' அறிவிக்க வேண்டும். அதிகாரம் கொண்டிருக்கும் ஒருவர் எந்நேரமும் அமர்ந்துகொள்ள முடியும். அல்லது எந்நேரமும் அமர்ந்திருக்கும் ஒருவர் அதிகாரம் கொண்டிருக்கின்றார் - அரசராக இருக்கின்றார்.

ஆ. 'அரசன்'
'அரசன்' (பஸிலேயோஸ்) என்ற வார்த்தை இரண்டு வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது (25:34, 40). இங்கே நன்றாகக் கவனிக்க வேண்டும். 'அரசர்' என்ற வார்த்தையை நற்செய்தியாளர் நேர்மையாளர்களோடு  (வலப்பக்கம் உள்ளவர்களோடு) உரையாடும் இடங்களில் மட்டுமே பதிவு செய்கின்றார். இடப்பக்கம் உள்ளவர்களோடு உள்ள உரையாடலில் அரசன் என்ற வார்த்தை இல்லை. மேலும், இருதரப்பினரும் அவரை 'ஆண்டவர்' என அழைக்க முடிந்தாலும், வலப்பக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அவர் அரசராக இருக்கின்றார்.

இ. 'அரசாட்சி' அல்லது 'அரசுரிமை'
'அரசாட்சியை' (பஸிலேயோ) உரிமையாக்கிக்கொள்ளுமாறு அரசர் வலப்பக்கம் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். 'அரசாட்சி' என்றால் என்ன என்பது இங்கே தெளிவாகக் குறிக்கப்படவில்லை என்றாலும், இந்த அரசாட்சி உலகின் தொடக்கமுதல் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று என்பது மட்டும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் மூன்று சொல்லாடல்களை வைத்து இந்த நற்செய்தி வாசகத்திற்கும், இன்றைய பெருவிழாவுக்கும் தொடர்பு இருக்கிறது என முதற்கட்ட முடிவுக்கு நம்மால் வர முடிகிறது.

இரண்டாம் கட்டமாக, இயேசுவே தன் வாயிலிருந்து தன்னை 'அரசர்' என்று சொல்வது இந்த நிகழ்வில் மட்டுமே:

இயேசுவை இரண்டு பேர் அரசர் என்று நேரிடையாக மொழிந்திருக்கிறார்கள்:

ஒன்று, நத்தனியேல். 'பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்' என்று இயேசு நத்தனியேலைப் பார்த்துச் சொன்னபோது, 'ரபி, நீர் இறைமகன். நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்' என்கிறார் நத்தனியேல். (காண். யோவா 2:48-49)

இரண்டு, பிலாத்து. தன்முன் கைதியாக நிறுத்தப்பட்ட இயேசுவை விசாரித்து மரண தண்டனை அளித்த பிலாத்து, இறுதியாக, எல்லாரும் பார்க்குமாறு இயேசு அறையப்பட்ட சிலுவையின் உச்சியில், 'இவன் யூதரின் அரசனாகிய இயேசு' (மத் 27:37) என எழுதி வைக்கின்றார்.

நல்ல கள்வன்கூட 'நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது' (லூக் 23:42) என்று சொல்கிறானே தவிர, 'அரசராக' என்று சொல்லவில்லை.

இயேசு தன்னையே 'அரசர்' என்று வெளிப்படையாகச் சொல்லும் நிகழ்வு இன்றைய நற்செய்தி வாசகத்தில் மட்டுமே. அவரின் 'அரசர்' தன்மை எப்படிப்பட்டது என்பது இன்றைய நற்செய்தியிலிருந்து நாம் எடுத்துக்கொள்வோம்:

1. அதிகாரம் என்பது தன்னுள்ளே ஊற்றெடுப்பது.
'அதிகாரம்' என்றவுடன் நாம் அது வேறொருவரால் நமக்குத் தரப்பட வேண்டும் என நினைக்கிறோம். அது தவறு. ஏன்? நாம் ஓட்டுப்போட்டு அரசாட்சி செய்யத் தேர்ந்தெடுத்துள்ள நம் தலைவர்களை எடுத்துக்கொள்வோம். அவர்களின் அதிகாரம் எங்கிருந்து வருகிறது. மக்களாகிய நம்மிடமிருந்து. இந்த அதிகாரம் ஐந்து வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இந்த அதிகாரத்தை எந்நேரமும் மக்கள் அவர்களிடமிருந்து பிடுங்கிவிட முடியும். மேலும் இந்த அதிகாரத்தில் ஒரு கட்டு இருக்கும். அதாவது, அவர்களால் சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. இந்த அதிகாரம் இடத்திற்கும், நேரத்திற்கும் கட்டுப்பட்டது. மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அதிகாரம் தமிழகத்திற்குள் இருக்கும் வரைதான். அதிமுக ஆட்சியில் இருக்கும் வரைதான்.
ஆக, வெளியிலிருந்து வரும் அதிகாரம் ஒருவரை உண்மையான அரசராக ஆக்குவதில்லை.

எந்த அதிகாரம் ஒருவருக்கு உள்ளிருந்து ஊற்றெடுக்கிறதோ அதுவே ஒருவரை அரசர் ஆக்குகிறது. எடுத்துக்காட்டாக, நாசரேத்தூர் இயேசு, திருத்தூதர் பவுல், மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா, நீங்கள், நான் என எல்லாரும். அதாவது, தன்னை வெல்பவர் தனக்குள் அதிகாரத்தைக் கண்டுகொள்கிறார். அதிகாரம் என்பது மற்றவர்கள்மேல் செலுத்துவதல்ல. அது தன்னை வெல்வதில்தான் அடங்கியிருக்கிறது. நான் எந்த எதிர்மறை நிகழ்வுகள் அல்லது உணர்வுகளால் ஆட்கொள்ளப்படாத போது நான் அரசராக இருக்கிறேன்.

இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1 கொரி 15:20-26,28) பார்க்கின்றோம். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது என்ன நடக்கும் என்பதை விளக்குகின்ற பவுல், அங்கே அதிகாரம் மற்றும் ஆட்சி செலுத்துதல் மறைந்து, 'கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருப்பார்' என விளக்குகின்றார். ஆக, எல்லாரும் தங்களை வென்றவர்களாக, தங்களிடம் கடவுள் தன்மையைக் கண்டவர்களாக, அதே கடவுள் தன்மையை மற்றவரிடம் பார்ப்பவர்களாக மாறுவர். அப்படி இருப்பதுதான் உண்மையான அரச நிலை.
நாம் யாரும் யாரையும் ஆளப்பிறக்கவில்லை? எதற்காக நாம் மற்றவர்களை அரசாள வேண்டும்? மற்றவர்களை அரசாள நான் முயலும்போது நான் அவரை அடிமையாக்கி அவரின் இயல்பை நான் மறுதலிக்கிறேன். மாறாக, கடவுள் அனைத்திலும் அனைவரிலும் இருப்பதை நான் கண்டுகொள்ளும்போது எல்லாருடைய கட்டின்மையையும் நான் மதிக்கத் தொடங்குகிறேன். அதைத்தான் இயேசுவும் செய்தார்.

மனித உணர்வுகளில் எப்போதும் தலைதூக்கும் தலைவன் உணர்வைச் சரி செய்யத்தான் இயேசு இன்னொரு எக்ஸ்ட்ரீம் எல்லைக்குச் செல்கின்றார்: 'நீ மற்றவரின் பாதங்களைக் கழுவு'. நான் மற்றவரின் பாதங்களைக் கழுவும்போது நான் எவ்வளவு உயரமானவராக இருந்தாலு; என் தலை மற்றவரின் தலைக்குக் கீழ் வந்துவிடுகிறது. அதிகாரம் மறைந்துவிடுகிறது.

ஆக, எல்லாரிடமும் இருக்கும் கடவுள்தன்மையைக் கண்டுகொள்ளும்போது, எல்லாரையும் அரசர் என்று நினைக்கும்போது நாமும் அரசராகிறோம்.

2. சின்னஞ்சிறியவர்களின் சகோதரர்

இன்று அரசு அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரோடு தங்களை ஒன்றிணைத்துக்கொள்கிறார்கள்? தங்கள் உறவினர்களோடு, தங்களைவிட அதிக பணம் அல்லது அதிகாரம் கொண்டிருப்பவர்களோடு. ஆனால் இயேசு இங்கே முற்றிலும் மாறுபடுகின்றார். தன் அதிகாரத்தை அல்லது அரசதன்மையை தன்னைவிட சின்னஞ்சிறியவர்களோடு ஒன்றிணைப்பதில் வரையறுக்கின்றார்.

ஆறு சொல்லாடல்கள் வழியாக சின்னஞ்சிறியவர்களைக் குறிப்பிடுகின்றார். ஆனால் இந்த ஆறு சொல்லாடல்களுமே அரசத்தன்மைக்கு எதிர்மறையானவை:
அ. 'பசி' - அரசன் பசியாய் இருந்ததாக அல்லது இருப்பதாக நாம் கேள்விப்பட்டதில்லை. அரசன் அதிகம் சாப்பிட்டதால் அவதிப்படுவானே தவிர அவன் என்றும் பசியோடு இருப்பதில்லை. அவனது உணவுமேசை எப்போதும் நிரம்பியே இருக்கும். ஊரில் கொடும் பஞ்சம் நிலவினாலும் அரசன் உண்பதற்குச் சோறு இருக்கும்.
ஆ. 'தாகம்' - ஊரெல்லாம் வறட்சி என்றாலும் மினிஸ்டர் வீட்டு தண்ணீர் பைப் ஓடிக்கொண்டுதான் இருக்கும். தனக்கென குளம், ஏரி, ஆறுகளைத் திருப்பிக்கொண்ட அரச வரலாறுகள் அதிகம்.
இ. 'ஆடையின்மை' - அரசன் பல்வேறு ஆடைகள் அணியக்கூடியவன். அரசவைக்கு ஒன்று, போருக்கு ஒன்று, அந்தப்புரத்திற்கு ஒன்று, பொழுதுபோக்கிற்கு ஒன்று என எண்ணற்ற ஆடைகளை வைத்திருப்பவன் அவன்.
ஈ. 'அந்நியம்' - அரசன் யாருக்கும் அந்நியம் இல்லை. அவனை எல்லாருக்கும் தெரியும். அவன் முன்பின் பாhத்திராதவர்கள் கூட அரசன் என்றவுடன் அவனைக் கண்டுகொண்டு வரவேற்று உபச்சாரம் செய்வர்.
உ. 'நோய்' - எடப்பாடியாருக்கும், ஓபிஎஸ்சுக்கும் டெங்கு காய்ச்சல் வருவதில்லை. ஊரெல்லாம் டெங்கு பரவினாலும் அது ஒன்றும் செய்யாது.
ஊ. 'சிறை' - சிறை என்பது கட்டு. ஆனால் அரசனை யாரும் சிறையிட முடியாது. அவன் தான் நினைத்த இடத்திற்கு, நினைத்த நேரத்திற்குச் செல்வான். அவன் மற்றவர்களைச் சிறையிடுவானே தவிர அவனை யாரும் சிறையிட முடியாது.

இப்படியாக, அரசனுக்கு முற்றிலும் தொடர்பு இல்லாத ஆறு சொல்லாடல்களைக் கையாண்டு தன் அரசத்தன்மையை வரையறுக்கின்றார் இயேசு. 'பசித்திருப்போர்,' 'தாகமுற்றோர்,' 'ஆடையின்றி இருப்போர்,' 'அந்நியர்,' 'நோயுற்றோர்,' 'சிறையிலிருப்போர்' என அனைவரையும் தன் சகோதர, சகோதரிகள் என்று சொல்வதன்வழியாக அவர்களும் அரசர்கள் என வரையறுக்கின்றார் இயேசு.
இயேசுவின் இந்த வரையறை அரசத்தன்மையை எல்லாருக்கும் பொதுவானதாக்குகின்றது.

3. சின்னஞ்சிறிய செயல்களைச் செய்பவர்கள் அரசர்கள்

இன்றைய முதல்வாசகத்தில் தன் கடவுள் அல்லது ஆண்டவர் தன்மையை மிக எளியை வார்த்தைகளில் விளக்குகின்றார் கடவுள். எப்படி? தன்னை ஓர் ஆயனாக உருவகம் செய்து, 'சிதறுண்ட ஆடுகளைத் தேடுவேன்,' 'மந்தாரமான நேரத்தில் மீட்டு வருவேன்,' 'மேய்ப்பேன்,' 'இளைப்பாறச் செய்வேன்,' 'காணாமல் போனதை தேடுவேன்,' 'அலைந்து திரிவதை திரும்ப கொண்டு வருவேன்,' 'காயத்திற்கு கட்டுப்போடுவேன்,' 'நலிந்தவற்றை திடப்படுத்துவேன்' என ஓர் ஆடுமேய்ப்பவர் செய்யும் சாதாரண செயல்களைச் செய்பவராகக் காட்டுகின்றார்.
ஆக, அரசர்நிலை அல்லது அரசத்தன்மை என்பது போருக்குச் செல்வதிலும், பிற உயிர்களை அழிப்பதிலும், அணுஆயுதங்கள் தயாரிப்பதிலும், அமைதி உடன்படிக்கைகளில் கையெழுத்து இடுவதிலும், நிறைய இயற்கை வளங்களை வளைத்துப் போடுவதிலும், கோடிக்கணக்காக சொத்து மட்டும் நிலங்களை உடைமையாக்குவதிலும் இல்லை. உண்மையில் இவைகள் எல்லாம் அடிமையின் தன்மைகள்.
பின் எதில் அடங்கியிருக்கின்றன?
நாம் செய்யும் எல்லா சின்னஞ்சிறு செயல்களிலும்: பிறரைப் பார்த்துப் புன்னகைப்பதில், வீணாக எரிந்து கொண்டிருக்கும் விளக்கு அல்லது மின்விசிறியை அணைப்பதில், வழிதெரியாத ஒருவருக்கு வழி சொல்வதில், சாப்பாட்டை வீணாக்காமல் சாப்பிடுவதில், மற்றவருக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதில், தேவையில் இருப்பவர்களோடு பகிர்ந்து கொள்வதில், அலைபேசியில் உள்ள மிஸ்டு கால்களை திரும்ப அழைப்பதில், நாம் வைக்கும் அலார்மிற்கு சரியாக எழுவதில் என சின்னஞ்சிறியவைகளைச் செய்வதில்தாம் அரசத்தன்மை நிரம்பி வழிகின்றது.

கிறிஸ்துவை அரசராகக் கொண்டாடும் நாம் இன்று அண்ணாந்து பார்க்க வேண்டும். சற்றே குனிந்து பார்ப்போம்.
நாம் அண்ணாந்து பார்த்து பிரமித்த அரசர்கள் எல்லாம் நம்மை அடிமையாக்கிவிட்டனர் அல்லது அடிமையாக்குகின்றனர். சற்றே குனிந்து நம்மையும், நமக்கு கீழ் இருப்பவர்களையும் பார்ப்போம். எல்லாரும் எழுந்துவிட்டால், யாரும் யாரையும் அண்ணாந்து பார்க்கத் தேவையில்லை.
நீங்களும், நானும் அரசர்களே!
'ஆளுநன் இயேசுவை நோக்கி, 'நீ யூதரின் அரசனா?' என்று கேட்டான்.
அதற்கு இயேசு, 'அவ்வாறு நீர் சொல்கிறீர்' என்று கூறினார்.' (மத் 27:11) 



Wednesday 15 November 2017

பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறு



இன்றைய வாசகங்கள்


நீதிமொழி 31:10-13, 19-20, 30-31, | 1 தெசலோனிக்கர் 3:1-6  |  மத்தேயு 25:14-30




மறையுரை மொட்டுக்கள் அருட்பணி Y. இருதயராஜ்


அமெரிக்க நாட்டவர் ஒருவர் கடவுளிடம் அறிவியல் மூளையைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார். அவ்வாறே ஜப்பான் நாட்டவர் ஒருவர் கடவுளிடம் தொழில்நுட்ப மூளையைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார். ஆனால் இந்திய நாட்டவர் கடவுளிடம் சென்றபோது கடவுள் அவரிடம் "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டற்கு அவர், "சும்மா வந்தேன்" என்றார். கடவுளும் அவரிடம், "அப்படியானால் சும்மாவே போ" என்றாராம்

இந்திய நாடு பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறது. 2020ஆம் ஆண்டில் இந்தியா ஒரு வல்லரசாக உருவாக வேண்டும் என்பது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவு இருப்பினும் நம்மில் பலர் சும்மா இருந்துகொண்டு. உழைக்காமல் ஊதியம் பெற விரும்புகிறோம். தமிழக அரசு பல இலவசத் திட்டங்களை வகுத்து மேலும் மேலும் மக்களைச் சோம்பேறிகளாக மாற்றிக்கொண்டு வருகிறது என்று ஒருசிலர் ஆதங்கப்படுகின்றனர். தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை அண்மையில் இருக்கின்றது என்று நினைத்துக் கொண்டு வேலை செய்யாமல் பிறர் வேலைகளில் தலையிட்டுக் கொண்டிருந்தனர். இப்பின்னணியில் திருத்தூதர் பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுகிறார்: கிறிஸ்துவின் வருகை பேறுகால வேதனை போன்று திடீரென்று வரும் கிறிஸ்துவின் சீடர்கள் என்றும் விழிப்போடும் அறிவுத் தெளிவுடனும் இருக்க வேண்டும் (1 தொ 5:1- 6) அதே திருத்தூதர் மேலும் கூறுகிறார்:"உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது" (2 தெச 3:10). எந்தவொரு வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்கு உண்ண உரிமை இல்லை. "சேற்றில் கால் வைக்காதவன் சோற்றில் கை வைக்கக் கூடாது" என்பது பழமொழி "உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே" என்பது திரைப்பாடல் வரி, "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். வீனில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்" என்பது பாரதியார் மொழி "செய்யும் தொழிலே தெய்வம்" என்பது பட்டுக்கோட்டையார் மொழி, இன்றைய நற்செய்தியிலே கிறிஸ்து தாலந்து உவமையைக் கூறுகின்றார். ஒரு தாலந்து 10000 ரூபாய் மதிப்புள்ள பொன் நாணயம் தலைவரிடமிருந்து ஐந்து தாலந்து பெற்றவர் மேலும் ஐந்து தாலந்து ஈட்ட, இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டுகிறார். இருவரும் தங்களது தலைவரது பாரட்டுதலைப் பெற்றதுடன் பதவி உயர்வு பெறுகின்றனர். ஆனால் ஒரு தாலந்து பெற்றவர் அதைக்கொண்டு இலாபம் ஈட்டாமல் அதை அப்படியே தலைவரிடம் திருப்பிக் கொடுத்தார். தலைவர் அவரைத் தண்டித்து, அவருடைய தாலந்தைப் பிடுங்கி, பத்து தாலந்து ஈட்டியவரிடம் கொடுக்கிறார்.

கடவுள் நமக்கு பல்வேறு தாலந்துகளை, அதாவது திறமைகளைக் கொடுத்துள்ளார். அவற்றை நமது நலனுக்காகவும் பொதுநலனுக்காகவும் பயன்படுத்த வேண்டும் பயன்படுத்தாத திறமைகள் காலப்போக்கில் அழிந்துவிடும். மணற்கேணியைத் தோண்டத் தோண்டத் தண்ணி ஊறும் அவ்வாறே கற்க கற்க நமது அறிவு வளரும்,

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு (குறள் 396)

சித்திரத்தை வரைய வரைய ஓவியக்கலை வளரும் பேச்சுப் போட்டியில் அடிக்கடி கலந்து கொண்டால் பேச்சுக்கலை வளரும், "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" என்பது முதுமொழி. ஓவிய ஆசிரியர் மாணவர்களிடம் மாடு புல் மேய்வது போலப்படம் வரையச் சொன்னார். அவ்வாறே மாணவர்கள் படம் வரைந்து காட்டினர். ஆனால் ஒரு மாணவன் மட்டும் வெறும் பேப்பரை ஆசிரியரிடம் கொடுத்தான் ஆசிரியர் கோபத்துடன் அவனிடம், "மாடு எங்கே?" என்று கேட்டதற்கு "மாடு மேயப் போயிடுச்சு சார்" என்றான். "புல் எங்கே?" என்று கேட்டதற்கு, "மாடு மேய்ந்து விட்டது" என்றான். வடிகட்டிய முட்டாள் கடைந்தெடுத்த சோம்பேறி! திருவழிபாட்டு ஆண்டின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நம்மிடம் கடவுள் கணக்கு கேட்கின்றார். நாம் கடவுள் நமக்குக் கொடுத்துள்ள திறமைகளை வளர்த்துள்ளோமா? நாம் நமது திறமைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பேதுரு நமக்கு அறிவுரை வழங்கியுள்ளார். "நீங்கள் கடவுளுடைய பல்வகை அருள் கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள். எனவே உங்களுள் ஒவ்வொருவரும் தாம் பெற்றுக்கொண்ட அருள் கொடைகளைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள். இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார் " (1 பேது 4:10-11). பெண்கள் தங்களைக் குறைவாக மதிப்பீடு செய்து தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகின்றனர். "நான் மயிலாகப் பிறந்திருந்தால் ஆடியிருப்பேன்; குயிலாகப் பிறந்திருந்தால் கூவியிருப்பேன். ஆனால் நான் பெண்ணாகப் பிறந்துவிட்டேன்; என்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்கிறார் ஓர் இளம் பெண். ஆனால் இன்றைய முதல் வாசகம் வீரமிக்க ஒரு பெண்ணின் மனைவியின் பெருமையைப் பறைசாற்றுகின்றது. அப்பெண் எப்பொழுதும் அயர்வின்றி வேலை செய்கிறார். அவரால் அவரது கணவர் பெருமை அடைகின்றார் ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் உணவளிக்கிறார். அழகு நிலையற்றது. ஆண்டவரில் அச்சம் கொண்டுள்ள பெண்னே புகழத்தக்கவர். புகழ்மிகு மனைவியைப் பெறாத கணவர் தம் பகைவர்முன் ஏறுபோல் பீடுநடை போடமுடியாது என்கிறார் வள்ளுவர்.

புகழ்புரிந்த இல் இலோர்க்கு இல்லை

இகழ்வார்முன் ஏறுபோல்பீடுநடை (குறள் 59)

பெண்ணாகப் பிறப்பது சாபமல்ல, மாறாக பெரும் பேறு. பெண்ணாகப் பிறப்பதற்குத் தவம் செய்ய வேண்டும். ஏனெனில் பெண்களின் தாமரைக் கைகளால் தரணியில் அறங்கள் வளரும் பெண்கள் படித்துப் பட்டங்கள் பெறலாம்; சட்டங்கள் இயற்றலாம்; அறிவைப் பொருத்தமட்டில் பெண்கள் ஆண்களுக்கு எவ்விதத்திலும் இளைத்தவர்கள் அல்ல என்று பாடியுள்ளார் பாரதி

முடிவாக, கடவுள் நமக்குக் கொடுத்துள்ள திறமைகளைப் புதைக்காமல், அவற்றைப் பன்மடங்குப் பலுகச் செய்வோம். மனித உழைப்பின் பயனாள அப்பமும் இரசமும்தான் திருப்பலியில் கிறிஸ்துவின் உடலும் இரத்தமுமாக மாறுகின்றன. நமது வேலைகளைச் செவ்வனே செய்தால் கடவுள் இறுதி நாளில் நம்மைப் பார்த்து, "நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியனே விண்ணக மகிழ்ச்சியில் நுழைவாயாக" என்று கூறுவார்.


மகிழ்ச்சியூடும் மறையுறை


குடந்தை ஆயர் பி. அந்தோனிசாமி


முயற்சி செய்வோம் இன்றைய நற்செய்தியிலுள்ள ஓர் அழகான உவமையின் வழியாக நமக்குக் கடவுள் தந்துள்ள வரங்களையும், கனிகளையும் மூலதனமாக வைத்து வாழ்க்கையில் முன்னேற முயற்சிசெய்ய வேண்டும் என்ற உண்மையை இயேசு கற்பிக்கின்றார். வாழ்க்கையில் முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார். இந்த உண்மையை எடுத்துச் சொல்ல இதோ ஒரு கதை பரம ஏழை ஒருவர் ஒரு சாலை வழியே சென்றுகொண்டிருந்தார். ஒரு வீட்டிலிருந்து வெளியே வந்த ஒருவர் செத்த எலி ஒன்றை சாலையோரமாக எறிய வெளியே கொண்டுவந்தார். பரம ஏழை அதைப் பார்த்துவிட்டார். அதை எறிந்துவிடாதீர்கள். அதை என்னிடம் கொடுங்கள் என்றார் ஏழை. வீட்டுக்காரர் செத்த எலியை வாங்கி இவர் என்ன செய்யப்போகின்றார்? என்று தன்னையே கேட்டுக்கொண்டு எலியை ஏழையிடம் கொடுத்தார். அந்த ஏழை, எலி வேண்டுமோ எலி என்று சாலையிலே கூவிச்சென்றார். ஒரு வீட்டிலிருந்தவர்க்கு பூனைக்குப் போட எலி தேவைப்பட்டது! ஏழை, எலியை அந்த வீட்டுக்காரரிடம் விற்றார். விற்ற காசுக்கு அந்த ஏழை ஒரு தூண்டிலை வாங்கினார். அந்தத் தூண்டிலை வைத்து ஆற்றிலே மீன் பிடித்தார். பிடித்த மீனை விற்றார். விற்ற பணத்தில் கோழிமுட்டைகளை வாங்கி விற்றார். கிடைத்த பணத்திலே கோழிகள் வாங்கினார். கோழிகளை விற்ற பணத்தில் ஒரு சிறிய கோழிப்பண்ணை வைத்தார். நிறைய பணம் சேர்ந்தது; பெரும் பணக்காரரானார். தன்னிடமிருந்த பணத்தை வைத்து ஒரு பள்ளிக்கூடம் கட்டினார். அதில் ஏழைப் பிள்ளைகளுக்கு முதலிடம் கொடுத்தார்.



முயற்சி திருவினையாக்கும், உழைப்பால் உயரலாம் என்ற உண்மையை எல்லா மாணவ மாணவிகளுக்கும் கற்றுத்தரும்படி எல்லா ஆசிரிய, ஆசிரியைகளையும் கேட்டுக்கொண்டார். அந்தப் பள்ளிக்கூடம் ஒரு பல்கலைக்கழகமாக மாறியது நாடே அந்த ஏழையை, இல்லை, இல்லை அந்தப் பணக்காரரைக் கொண்டாடியது.

இந்தக் கதையின் கருவைத்தான், அதாவது முயற்சி திருவினையாக்கும் என்ற உண்மையைத்தான் இன்று இயேசு நமக்கு எடுத்துரைக்கின்றார்.

இன்றைய முதல் வாசகம் தன் வேலை அனைத்தையும் தானே செய்துகொள்ளும் மனையாளை நமக்குச்சுட்டிக்காட்டி, அவள் உழைப்பைப் பாராட்டுகின்றது

முயற்சியின் ஆணிவேராக அமைவது உழைப்பு உழைக்கப் பயந்தவர்கள் எந்த முயற்சியையும் எடுப்பதில்லை. கடவுள் தன்னை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்திக்கொண்டபோது ஓர் உழைப்பாளியாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ஆறுநாள்கள் உழைத்துவிட்டு, ஒருநாள் ஓய்வெடுத்தார். ஆகவே உழைக்காதவர்கள், முன்னேற முயற்சி செய்யாதவர்கள் கடவுளின் நண்பர்களாக இருக்க முடியாது!

அறிவுத்தெளிவு விழித்தெழுவோம்!

பெறுவோம் (இரண்டாம் வாசகம்),

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்: உழைப்பே உயர்வுதரும் என்ற உண்மைகளை உள்வாங்கி சிகரமென உயர்வோம்!

மேலும் அறிவோம்:

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் (குறள்:616)
பொருள் முயற்சி மிகுந்தால் பல்வேறு செல்வங்களும் வந்து குவியும்; முயற்சி இல்லாது போனால் இல்லாமையுள் ஆழ்ந்து அழிய நேரும்.!




ஞாயிறு இறைவாக்கு

அருள்திரு முனைவர் ம.அருள்

ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். அவனுக்குச் செல்வன் என்ற ஒரு மகன். செல்வன் வளர்பிறை போல் வளர்ந்தான். ஆனால் எந்த வேலையும் செய்வதில்லை. பணக்காரனுக்கு இறுதி காலம் நெருங்கியது. மகனை அழைத்து, மகனே! நமக்குச் செல்வம் மிகுதியாக இருப்பது உண்மைதான். ஆனால் உழைத்து சம்பாதிப்பதுதான் நம்மோடு தங்கும். எனவே சோம்பித் திரியாதே. உழைக்கக் கற்றுக் கொள். இந்த மூன்று நாட்களுக்குள் பத்து ரூபாய்க்கு இணையான சம்பாத்தியத்தைக் கொண்டு வரவில்லை என்றால் என் சொத்து முழுவதையும் தர்ம மடத்திற்கு எழுதிவிடுவேன் என்றார். மகனோ! தந்தையின் வார்த்தைக்குச் செவி கொடுக்கவில்லை.

ஆனால் தாயோ! தன் மகனை அழைத்து அப்பாவை பற்றி உனக்குத் தெரியாதா, சொன்னபடி செய்துவிடுவார். எனவே நீ சம்பாதித்து வருவது நல்லது என்றாள். தாய் சொல்லையும் கேட்கவில்லை. 50 தங்க நாணயத்தைக் கொடுத்து மலையடிவாரம் சென்று தூங்கிவிட்டு, சாயும் வேளையிலே நாணயத்தைக் கொண்டு வந்து கொடு மகனே என்று கெஞ்ச, இறுதியாக அப்படியே செய்தான் . தகப்பன் இருமுறை திருப்பிப் பார்த்துவிட்டு நெருப்புக்குள் எரிந்தான். நீ சம்பாதிக்கவில்லை. ஏனெனில் நீ உடுத்திய ஆடை அப்படியே உள்ளது. உன் தலை சீவிய நிலையிலும் மாற்றமில்லை. நீ திருடி வந்து விட்டாய் என்றார். மறுநாள் தாய், மகனை ஓடி வரச்சொன்னாள். மறுபடியும் நெருப்புக்குள் காசை எரிந்தான் தந்தை. நீ நாள் முழுவதும் உழைத்திருந்தால் உன்னால் இப்படி ஓடி வரமுடியாது. நீ தள்ளாடித்தான் வந்திருக்க முடியும் என்றான். தாய் தன் முயற்சியைக் கைவிடவில்லை. மகனை எப்படியாவது உழைத்து ஐந்து ரூபாய் கொண்டு வரும்படிச் செய்தாள். தகப்பனிடம் கொடுத்தான். நெருப்புக்குள் மறுபடியும் எரிந்தார். ஓடி உடனே காசை எடுத்தான் மகன். அப்போது தகப்பன் முதல் நாளும், இரண்டாவது நாளும் பேசாமல் நின்றாய். இன்றோ ஓடிப் போய்க் காசை எடுத்தாய். ஏனெனில் இது நீ உழைத்துச் சம்பாதித்தது. அன்றிலிருந்து மகன் உழைக்கத் தொடங்கினான். அவனுக்குத் தன் சொத்து முழுவதையும் எழுதி வைத்தார்.
இந்தக் கதைபோல, இறைவன் உழைப்பவர்களுக்குப் பரிசளிக்கிறார். உழைப்பவனுக்கு மென்மேலும் கொடுக்கப்படும். உழைக்காதவனிடம் உள்ளதும் எடுக்கப்படும். உழைப்ப வர்களுக்கே ஊதியம் தருகிறார் இறைவன்.
சிலரைப் பார்த்துச் சற்று சிரித்தால் என்ன? என்று கேட்டால், வாய் வலிக்குமே என்று சொல்லும் அளவிற்குச் சோம்பேறித்தனம் இன்று தலைவிரித்தாடுகிறது.
 நான் காயாக மாட்டேன். ஆனால் மரமே எனக்குக் கனி வேண்டும். இது விதையின் கதை.
 நான் எரிய மாட்டேன். ஆனால் உலகமே எனக்கு ஒளி வேண்டும்.இது விளக்கின் கதை.
நான் உழைக்க மாட்டேன். ஆனால் இறைவா! எனக்கு உன்னருள் வேண்டும். ஒரு பக்தனின் கதை.
இப்படி முரண்பாடான தத்துவங்கள் இந்த இந்திய மண்ணிலே உள்ளன. .

ஓர் அலுவலகத்தில் அதிகாரியைப் பார்த்து அவருடைய நண்பர், உங்கள் அலுவலகத்தில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்? எனக் கேட்டார். பதில் பாதிபேர். மீதிப் பேர்?
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி. மிஞ்சுவது பசி, பஞ்சம், கொலை கொள்ளை மதச் சண்டை, இனச்சண்டை ஜாதிச் சண்டை, லஞ்சம், பகை, பொறாமை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்தையும் பெற்றெடுப்பது சோம்பேறித் தனமே ஏழைகள் சுரண்டப்படுகிறார்கள். நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். நீதிமன்றங்கள் விலை போகின்றன. காவல்துறை தபால் நிலைக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் கிறிஸ்தவர்களின் நிலை என்ன? மூன்று வகையான கிறிஸ்தவர்களைப் பார்க்கலாம்.
அநீதியான சமுதாயத்தைப் பார்க்கும் கிறிஸ்தவம். பார்த்தும் ஒன்றும் செய்யாத ஊமையான கூட்டம்,
அநீதியான நிலையைப் பார்க்க விரும்பாத தான் தன் குடும்பம் என்ற குறுகிய உலகத்தில் ஒழிந்து கொள்ளும் கூட்டம்.
அநீதியான சமுதாயத்தைக் கண்டு வெகுண்டெழுந்து, ஊமையாய் இராது அதைச் சரிசெய்யப் புறப்படும் சமுதாயம். எதிலே நாம் உள்ளோம்.
கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் கொடைகளைத் தந்துள்ளார். ஒரு சிலருக்கு எழுத்து மூலம் கருத்துகளை வழங்க. ஒரு சிலருக்குத் தலைமை ஏற்றுப் போராட்டம் நடத்த, ஒரு சிலருக்கு மேடை ஏறி முழங்க, ஒரு சிலருக்கு உதவி செய்ய, ஒரு சிலருக்குப் பிறரின் துன்ப துயரங்களைக் காது கொடுத்துக் கவனமாகக் கேட்டு ஆறுதல் கூற…. 

 

ஒற்றைத் தாலந்து



அருள்பணி ஏசு கருணாநிதி - மதுரை
இன்று முதல் ஒவ்வொரு ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறும் அகில உலக ஏழையர் ஞாயிறாகக் கொண்டாடப்படும் என அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முதல் ஏழையர் ஞாயிறாகிய இன்று நமக்கு 'தாலந்து எடுத்துக்காட்டு' நற்செய்தி வாசகமாக வருகின்றது. மேலோட்டமாகப் பார்த்தால் ஏழையர் ஞாயிற்றின் சிந்தனைக்கு எதிர்மாறாக இருக்கின்றது இன்றைய நற்செய்தி வாசகம். எப்படி?

'இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்' என்று சொல்கின்ற தலைவன் ஒரு தாலந்து உள்ளவனிமிருந்து அதைப் பறித்து பத்து தாலந்து உள்ளவனிடம் கொடுக்கின்றான். அப்படி என்றால் இல்லாதவர்கள் இல்லாதவர்களாகவே இருக்க வேண்டும், இருப்பவர்கள் இன்னும் அதிகம் பெறவேண்டும் என்பது தலைவனின் ஆசையாக இருக்கிறது.

மேலும், ஐந்து, மூன்று, ஒன்று என்று மனிதர்களைப் பிரிப்பதே அவர்களுக்குள் வேறுபாட்டை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஆக, விண்ணரசு என்ற ஒரு நிகழ்வு இயல்பாகவே சமத்துவம் இல்லாத ஒரு நிலையில்தான் தொடங்குகிறது. இப்படி வேறுபாடுகள் அல்லது ஏற்றத்தாழ்வுகளை வைத்துக்கொண்டு விண்ணரசு பற்றி எப்படி பேச முடியும்?

'இருப்பவனுக்குத்தான் எல்லாம் இருக்கணும். இல்லாதவனுக்கு ஒன்னும் இருக்கக்கூடாது' என்று நினைத்த யாரோ ஒருவர் இந்த தாலந்து உவமையை எழுதி இயேசுவே இதைச் சொன்னதாக இடைச்செருகியிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

தமிழகத்தில் ஆளும் கட்சியினரைச் சார்ந்த சிலரின் வீடுகளை வருமான வரித்துறையினர் சோதனையிட்டு கோடிக்கணக்கான சொத்துக்களைக் கண்டறிந்துள்ளனர். இவர்கள் எதற்காக இவ்வளவு சொத்துக்களைச் சேர்க்க வேண்டும்? என்ற கேள்வி பாமரனின் மனதில் எழுகின்றது. அதிக சொத்து அதிக அதிகாரம் என்பது எழுதப்படாத நியதியாக இருப்பதாலும், மனித மனம் இயல்பாகவே அதிகாரத்திற்கு ஏங்குவதாலும் சொத்து சேர்த்தல் அதிகமாகிறது.

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீயிட்டு இறந்துபோன குடும்பத்தினர் இக்கதையாடலில் வரும் 'தலைவனை' எப்படி புரிந்து கொள்வர்? 'என் பணத்தை நீ கந்துவட்டிக்கு கொடுத்திருக்கக்கூடாதா?' என்ற அவனது கேள்வியை இந்தக் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்களா?

மேற்காணும் தொடக்கக் கேள்விகளை ஒதுக்கிவிட்டுக் கதையாடலைக் கையாள்வோம்: விண்ணரசு பற்றிய இயேசுவின் தாலந்து உவமை நாம் பலமுறை கேட்ட ஒன்று. இந்த உவமை லூக்கா மற்றும் மத்தேயு நற்செய்திகளில் மட்டும் உள்ளது. மாற்கு நற்செய்தியாளாரின் கைக்கு எட்டாத ஒரு பாரம்பரியத்தை லூக்காவும், மத்தேயும் பெற்றதால் அவர்கள் மட்டும் இதை எழுதுகின்றனர். ஆனால் இந்த இருவரின் பதிவுகளும் பல முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. மத்தேயு நற்செய்தியாளரில் வரும் வீட்டுத்தலைவன் தன் பணியாளர்களில் மூவருக்கு தலா ஐந்து, மூன்று மற்றும் ஒன்று என தாலந்துகளைக் கொடுத்து விட்டுப் பயணம் மேற்கொள்கிறான். ஐந்து பெற்றவன் மேலும் ஐந்து, மூன்று பெற்றவன் மேலும் மூன்று என ஈட்டினாலும், ஒன்று பெற்றவன் அதை நிலத்தில் புதைத்து வைக்கிறான். லூக்கா நற்செய்தியாளரில் அரசன் தன் பணியாளர்களுக்குச் சொத்தைப் பிரித்துக் கொடுக்கின்றார். பத்துப் பேருக்கு தலா ஒரு தாலந்து என பத்துத் தாலந்துகள் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றன. அரசுரிமை பெற வெளியூர் செல்கின்றான் தலைவன். இதற்கிடையில் 'இவன் எங்களுக்கு அரசனாக வேண்டாம்!' என ஒரு சிலர் தூது அனுப்புகின்றனர். இருந்தாலும் அரசுரிமை பெற்றுத் திரும்புகின்றான் தலைவன். அவன் திரும்பியபோது பணியாளர்களில் ஒருவன் ஒரு தாலந்தைக் கொண்டு பத்து சம்பாதித்ததாகவும், இரண்டாமவன் ஒன்றைக் கொண்டு ஐந்து சம்பாதித்ததாகவும், மூன்றாமவன் தலைவனுக்குப் பயந்து அதை கைக்குட்டையில் முடிந்து வைத்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் மற்ற ஏழு பேர் என்ன செய்தார்கள் என்பது பற்றி உவமையில் ஒன்றும் இல்லை. மத்தேயு மற்றும் நற்செய்தியாளர்களில் பொதுவாகக் காணப்படுவை மூன்று: அ. முதல் இரண்டு பேர் நன்றாக சம்பாதிக்கின்றனர், மூன்றாமவன் சம்பாதிக்கவில்லை. ஆ. அதிகம் பெற்றவர்கள் இன்னும் அதிகம் பெறுகிறார்கள். இ. பொல்லார் தண்டிக்கப்படுகின்றனர்.

'தாலந்து உவமை'யை நாம் மூன்று விதங்களில் காலங்காலமாக 'தவறாக' புரிந்துகொள்கிறோம்:

அ. தாலந்து என்றால் ஆங்கிலத்தில் 'டேலன்ட்' ('திறன்'). கடவுள் நமக்கு நிறைய திறன்களைக் கொடுத்திருக்கின்றார் எனவும், அத்திறன்களை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும் அல்லது பெருக்க வேண்டும் என்று பொருள் கொள்வது.

ஆ. வட்டிக்குக் கொடுத்துவைப்பதை அல்லது வங்கியில் கொடுத்து வைப்பதை சரி என்று இயேசு சொல்வதாகப் புரிந்து கொள்வது.

இ. 'புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள்' என்ற சொல்லாடல் உத்தரிக்கிற நிலை அல்லது நரகத்தைக் குறிக்கிறது என்று பொருள்கொள்வது.

தாலந்து உவமையின் நோக்கம் இந்த மூன்றும் அல்ல. பின் என்ன?

இயேசு உவமையின் தொடக்கத்தில் சொல்வது போல, 'விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்.' ஆக, 'தாலந்து உவமை' முழுக்க முழுக்க விண்ணரசு பற்றியது. தாலந்து உவமையிலிருந்து விண்ணரசை நாம் எப்படி புரிந்து கொள்வது?

அ. தலைவர் தான் விரும்பியதைச் செய்கின்றார். யாருக்கு எவ்வளவு தாலந்து கொடுக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்பவர் அவரே. 'ஏன் இப்படிச் செய்கிறீர்?' என்று அவரை யாரும் கேட்க முடியாது.

ஆ. இருப்பது பெருகும், இல்லாதது தேயும். இதை ஆங்கிலத்தில் 'ஸ்னோபால் இஃபெக்ட்' என்கிறார்கள். சின்னதாக உருட்டி மேலே இருந்து உருட்டிவிடப்படும் பனிக்கட்டி கீழே வர, வர தன்னோடு மற்ற பனித்துகள்ளையும் சேர்த்துக்கொண்டு பெரிதாகிக்கொண்டே வருகிறது. ஆக, இருப்பது வேகமாக நகரும்போது இன்னும் பலவற்றைதன் தன்னோடு அணைத்துக்கொள்ளும்.

இ. பரிசும், தண்டனையும் தருபவர் தலைவரே. ஏன் இந்தப் பரிசு? ஏன் இந்த தண்டனை? என யாரும் தலைவனைக் கேள்வி கேட்க முடியாது. மேலும், என்ன செய்தால் பரிசு, என்ன செய்தால் தண்டனை என்பதும் பணியாளர்களுக்கு மறைபொருளாக இருக்கிறது.

ஒரு தாலந்து என்பது 6000 தெனாரியங்களுக்குச் சமம். அதாவது 6000 நாள்கள் (ஏறக்குறைய 20 ஆண்டுகள்) ஒருவன் செய்யும் வேலையின் கூலி இது. ஒரு நாளைக்கு ஒருவருக்கு ஐநூறு ரூபாய் சம்பளம் என வைத்துக்கொண்டால், இதன் தாலந்து மதிப்பு 30 இலட்சம். இவ்வளவு பெரிய தொகை பணியாளர்களுக்கு ஐந்து, இரண்டு, ஒன்று என்ற அளவில் தரப்படுகிறது. அ. எதற்காக தலைவன் ஐந்து, மூன்று, ஒன்று என தாலந்துகளைக் கொடுக்க வேண்டும்? ஐந்து பெற்றவன் ஐந்து கொண்டு வந்தான், மூன்று பெற்றவன் மூன்று கொண்டு வந்தான். ஒன்று பெற்றவன் ஒன்று கொண்டு வந்தான். லாஜிக் சரிதானே! பின் ஏன் அவனுக்கு மட்டும் தண்டனை. ஆ. ஒன்றை மட்டும் கொண்டுவந்தவன் அதையாவது கொண்டு வந்தானே. அவன் ஊதாரித்தனமாகச் செலவழிக்கவில்லை. அல்லது அதைத் தொலைத்துவிடவில்லை. பத்திரமாகத்தானே வைத்திருந்தான். அதற்காகவாவது அவனைப் பாராட்ட வேண்டமா? இ. நிலத்தில் புதைத்து வைப்பது சாதாரண காரியம் அல்ல. நம் அலமாரியில் இருந்தால் கூட திறந்து பார்த்து 'ஆ! இருக்கிறது!' என்று சொல்லிக்கொள்ளலாம். நிலத்தில் புதைப்பதால் அவன் இன்னும் அதிக அலர்ட்டாக இருக்க வேண்டும். நிலத்தில் புதைத்து வைத்து அதைக் காவல் காப்பதும் பெரிய வேலைதானே!

இன்றைய நற்செய்தியில் வரும் மூன்றாம் நபர் அல்லது ஒற்றைத் தாலந்தை மட்டும் வைத்து நாம் சிந்திப்போம்:

1. கோபம். மூன்றாம் பணியாளனுக்குத் தன் தலைவன் மேல் ஏதாவது கோபம் இருந்திருக்க வேண்டும். 'மற்றவர்களுக்கு ஐந்து, மூன்று எனக் கொடுத்துவிட்டு எனக்கு ஒன்றா கொடுக்கிறாய்!' என உள்ளத்தில் கொதித்திருக்கலாம். 'நீ என்னடா கொடுக்கிறது! நான் என்னடா உழைக்கிறது!' என்று நினைத்திருக்கலாம். சமூகத்தில் நடைபெறும் பல தீமைகளுக்குக் காரணம் கோபம்தான். திருடர்கள் திருடுவது எதற்காக? பணம் வைத்திருப்பவர்கள் மேலும், அல்லது தாங்கள் வாழும் சமூகத்தின் கட்டமைப்பின் மீதும் கோபம். தங்களின் கையாலாகாத நிலையில் அந்தக் கோபத்தைத் திருட்டாகக் காட்டுகின்றனர். ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்ட ஒருவன் காலப்போக்கில் பாலியல் பிறழ்வுகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த பெண் இனத்தின் மேல் பழிதீர்த்துக்கொள்ள நினைக்கிறான். நாம் கையாள முடியாத கோபம் எல்லாம் எதிர்வினைகளாக மாறிவிடுகின்றன. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு புற்றுநோய். என்னை விட கொஞ்சம் கூட வயது. நன்றாக மருத்துவம் பார்த்திருந்தால் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். ஆனால் அவனுக்கு கடவுளின் மேல் ஒரு கோபம்: ஏன் இது எனக்கு மட்டும் வருகிறது? என்ற சதா கேட்டுக் கொண்டிருந்தவன், புற்றுநோய் தன்னை ஏன் அழிக்க வேண்டும்? நானே அழித்துக்கொள்கிறேன் என்னை என அதிக மதுஅருந்தவும், மாத்திரைகளைப் புறக்கணிக்கவும் தொடங்கினான். விளைவு, விரைவில் இறந்துவிட்டான். நம் வாழ்வில் நாம் வாழ்வை முழுமையாக வாழத் தடையாக இருப்பது நம்மிடம் இருக்கும் கோபம். பெற்றோரிடம் கோபப்பட்டு வீட்டுக்கு வெளியே தங்கும் இளைஞர்கள், கணவன் மனைவியாக வீட்டில் தங்கியிருந்தாலும் ஒருவருக்கொருவர் வருடக்கணக்காக பேசமால் இருக்கும் நிலைகள், 'ஏதோ! குழந்தை இருக்குன்னு பார்க்கிறேன்! அல்லது எப்பவோ முறிச்சிறுப்பேன்!' என்று சண்டைபோட்டுக் கொள்ளும் தம்பதியினர், அருட்பணி நிலையிலும் தலைமையில் இருப்பவர்கள் மேல் கோபப்பட்டுக் கொண்டு, 'எனக்கு அந்த இடம் கொடுத்தால் தான் பணி செய்வேன். அல்லது தினமும் பூசை மட்டும் வைப்பேன். வேறு ஒன்றும் செய்ய மாட்டேன்!' என ஓய்ந்திருக்கும் நிலை என அனைத்திலும் நம் கதையின் மூன்றாம் கதைமாந்தர் ஒளிந்திருக்கிறார்.

2. பயம். 'ஐயா, நீர் கடின உள்ளத்தினர். நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர். தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவர்' என்று தன் தலைவனைப் பற்றிச் சொல்லும்போது இவன் கொண்டுள்ள பயம் தெரிகிறது. இதைவிடப் பெரிய பயம் அல்லது இதை ஒட்டிய பயம் என்னவென்றால், இவன் தான் தன் தாலந்தை இழந்துவிடக்கூடாது என பயப்படுகின்றான். ஒருவேளை இவன் ரொம்ப ஏழையாக இருந்திருப்பான். போதுமான பாதுகாப்பு இல்லாத வீட்டில் குடியிருப்பவனாக இருந்திருக்கலாம். ஆகையால்தான் தாலந்தை தன் வீட்டில் வைப்பதற்குப் பதிலாக நிலத்தைத் தோண்டி புதைக்கிறான். இவனது பயமே இவனைச் செயல்படாமல் ஆக்கிவிட்டது.

3. தேக்கம். இவன் தண்டிக்கப்பட்டது எதற்காக? தாலந்தைப் பெருக்காத குற்றத்திற்காக. இவன் மற்றவர்களையும், தன் தலைவனையும் ஆராய்ச்சி செய்வதிலேயே தன் நேரத்தைக் கழித்தானே ஒழிய தான் ஒன்றும் உருப்படியாகச் செய்யவில்லை. இதைவிட மேலாக, தவைன் இவனை பொறுப்பாளனாக அல்லது கண்காணிப்பாளனாக மாற்ற நினைத்தான். ஆனால் இவனோ தான் பணியாளனாக இருந்தாலே போதும் என்ற தேக்கநிலையில் இருந்தான். மூன்றாம் பணியாளனை நம் 'சோம்பேறி!' என்று அழைக்கிறோம். அவன் சோம்பேறி இல்லை. சோம்பேறியாக இருந்தால் பணம் கொடுக்கப்படும் போதே, 'ஐயா! நம்மால எல்லாம் இத வச்சு ஒன்னும் செய்ய முடியாது. அவன்கிட்டே சேர்த்துக் கொடுங்க!' என்று சொல்லியிருப்பான். செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் தன் ஆற்றலை பிறழ்வுபடுத்துவதுதான் அவனின் தவறு. நாணயத்தைப் பத்திரப்படுத்தியதில் செய்த வேலையை அவன் வட்டிக்கடைக்குச் செல்வதற்குப் பயன்படுத்தியிருக்கலாமே என்பதுதான் தலைவனின் ஆதங்கம். 'நான் டெய்லி பிஸியாகவே இருக்கிறேன்! எதையாவது செய்து கொண்டே இருக்கிறேன்!' என்று ஒருசிலர் பெருமையாகச் சொல்வார்கள். 'எதையாவது செய்து கொண்டே இருப்பது முக்கியமல்ல. எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறோமா?' என்பதுதான் முக்கியம்.

இந்த மூன்று எதிர்மறையான பாடங்களுக்கு மாற்றாக மூன்று நேர்முகமான பாடங்களையும் இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குக் கற்றுத்தருகிறது:

1. பார்வை மாற்றம். ஐந்து மற்றும் இரண்டு தாலந்து பெற்றவர்களின் பார்வை மற்றவனின் பார்வையைவிட வித்தியாசமாக இருந்தது. தன் தலைவரின் கடின உள்ளம் தெரிந்திருந்தாலும் அந்தக் கடின உள்ளத்தை மாற்றக்கூடிய மருந்து ஒன்று இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார்கள். ஒரே தலைவன் தான். ஆனால் பணியாளர்கள் அவனை எப்படி பார்க்கிறார்களோ அதைப் பொறுத்து அவர்களின் வாழ்க்கை நிலையும் மாறுகிறது. இன்று நாம் பார்க்கும் பார்வைதான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது. ஆக, இந்தப் பார்வை நேர்முகமாக இருக்கிறதா அல்லது எதிர்மறையாக இருக்கிறதா?

2. திறமை. திறமை வாய்ந்த மனையாள் எப்படி இருப்பாள் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. திறமையும், உழைப்பும் அவளை உயர்த்துவதுடன், அவள் மேற்கொள்ளும் அனைத்துக் காரியங்களிலும் அவளுக்கு வெற்றியைக் கொடுக்கின்றன.

3. விழிப்பு. 'ஆகவே மற்றவர்களைப் போல நாம் உறங்கலாகாது. விழிப்போடும் அறிவுத்தெளிவோடும் இருப்போம்' என தெசலோனிக்க நகர் திருச்சபைக்கு அறிவுறுத்துகின்றார் தூய பவுல் (இரண்டாம் வாசகம்). ஒற்றைத் தாலந்து பெற்றவன் தன் தாலந்தைக் காக்க விழித்திருந்தானே தவிர, அதைப் பெருக்க அல்ல. விழிப்பு நிலை என்பது இருப்பதை அப்படியே வைத்திருத்தல் அல்ல. மாறாக, தொடர்ந்து முன்னேறுதல்.

இறுதியாக,

இன்றைய 'ஏழையர் தினத்திற்கும்,' 'இறைவாக்கு வழிபாட்டிற்கும்' எப்படி முடிச்சு போடுவது?

ஏழைகளுக்கு இருக்கும் மூன்று உணர்வுகளை ஒற்றைத் தாலந்து நமக்கு உணர்த்துகிறது: (அ) பயம், (ஆ) சோம்பல், (இ) பயனறு மனம். இந்த மூன்று உணர்வுகள் நம்மிலும் சில நேரங்களில் துலங்கலாம். 'எனக்கு இன்னும் வேண்டும்' என்ற ஆலிவர் டுவிஸ்ட் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய சமுதாயம், 'அதிகம் வைத்திருத்தலே நலம்' என்று கற்பிக்கிறது. 'இன்னும் அதிகம்,' 'இன்னும் அதிகம்' என நம்மை ஓடச் செய்கிறது. கதையில் வரும் தலைவனும் இதே ஓட்டத்தோடுதான் இருக்கிறான். இன்று இவ்வாறு ஓட முடியாமல் நிற்பவர்களே ஏழைகள். இவ்வாறு ஓட முடியாதவர்களும் மதிப்பிற்குரியவர்களே என்பதை நாம் ஏற்றுக்கொள்வோம்.

இன்றும் இவர்களிடமிருந்து பறிக்கப்படுகின்ற ஒற்றைத் தாலந்துகள் ஏராளம்.

ஒற்றைத் தாலந்தும் இல்லாமல் கலங்கி நிற்பவர்களை, அழுகையிலும் அங்கலாய்ப்பிலும் இருப்பவர்களைத் தேடிச் செல்ல இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

வாழ்க்கை எல்லாரையும் ஒரே போல நடத்துவதில்லை.
சிலரை மயிலிறகால் வருடிக் கொடுக்கிறது.
சிலரை செங்கல்லால் முகத்தில் அறைகிறது.
வாய்ப்புக்களும், வசதிகளும், தாலந்துகளும் எல்லாருக்கும் பொதுவானதும், சமமானதும் அல்ல.
அவர் நினைக்கிறார். அவர் கொடுக்கிறார். அவர் எடுக்கிறார்.
'எல்லாம் அவருடையதே' - இந்த மனநிலையோடுதான் ஒற்றைத்தாலந்து பெற்றவன் வாழ்ந்தான்.
இதுதான் ஏழைகளின் மனநிலை.
இந்த மனநிலையே மகிழ்ச்சி தரும் மனநிலை.