Monday, 30 April 2018

பாஸ்கா காலம் 6-ஆம் ஞாயிறுபாஸ்கா காலம் 6-ஆம் ஞாயிறு


திப 10:25-26, 34-35, 44-48; 1யோவா 4:7-10; யோவா 15:9-17
மறையுரை மொட்டுக்கள் -அருள்பணி இருதயராஜ்


கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் பலர் விண்ணகம் சென்றனர், அங்கு அவர்கள் இந்துக்களையோ முகமதியர்களையோ அல்லது வேறு கிறிஸ்துவச் சபையினரையோ காணவில்லை, அதனால் அவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் விண்ணகத்தின் நடுவே ஒரு பெரிய குறுக்குச்சுவர் இருப்பதைக்கண்டு, அவர்கள் பேதுருவிடம், "இக்குறுக்குச்சுவரின் மறுபக்கம் வேறுயாராவது இருக்கிறார்களா?" என்று கேட்டனர், அதற்குப் பேதுரு, "ஆம், நீங்கள் யாரெல்லாம் விண்ணகத்திற்கு வரமாட்டார்கள் என்று நினைத்தீர்களோ அவர்களை யெல்லாம் இக்குறுக்குச் சுவரின் மறுபக்கம் உங்கள் கண்ணில் படாமல் வைத்திருக்கிறோம்" என்றார். ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தான் விண்ணம் செல்வார்கள் என்னும் தவறான கருத்தைக் கொண்டவர்கள் சிந்திப்பதற்காக உருவாக்கப்பட்ட கதை இது!

மீட்பு என்பது யூதர்களுக்கு மட்டும் உரித்தான தனி உடமை அல்ல; அது எல்லா இனத்தாருக்கும் உரிய பொது உடமை என்பது. இன்றைய முதல் வாசகத்தில் தெளிவாக உணர்த்தப்படுகிறது. கொர்னேலியு என்பவர் யூத இனத்தைச் சேராத பிற இனத்தவர், ஆனால் கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர். கடவுளுடைய ஆணையின் படி பேதுரு அவர் வீட்டிற்குச் சென்று மீட்பின் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருந்தபோதே தூய ஆவியார் கொர்னேலியு மீதும் அவர் வீட்டிலிருந்த அனைவர் மீதும் இறங்கிவர, அவர்கள் அனைவரும் அயல்மொழிபேசி ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்தனர். திருமுழுக்குப் பெறுவதற்கு முன்னரே உறுதிப்பூசுதல் பெற்று விட்டனர்! இந்நிகழ்வு மூலம் பேதுரு அறிந்து, அறிவித்த உண்மை : "கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை. எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்" (திப 10:34).

மீட்படைய இயேசுவின் பெயரைத் தவிர வேறுபெயர் கிடையாது (திப 4:12) என்று ஆணித்தரமாக எடுத்துரைத்த பேதுரு, நல்மனம் கொண்ட அனைவரும் மீட்படைய இறைவன் வழிவகுத்துள்ளார் என்பதையும் அறிவித்துள்ளார். விண்ணகப் பேரின்பத்திற்கு எல்லா இனத்தவரும் அழைக்கப்பட்டுள்ளனர். விண்ணகத்தில் "யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன், அவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார் திருத்தூதர் யோவான் (திவெ 7:9).

ஆவியானவர் தாம் விரும்பியபடி செயல்படுகிறார். அதாவது அவருடைய செயல்பாட்டை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது (யோவா 3:8), மேலும், "கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது" (2தீமோ 2:9), "இறைவன் மீட்பைத் திருமுழுக்கு என்னும் அருள் சாதனத்துடன் கட்டுண்டிருக்கச் செய்துள்ளார், ஆனால் அவரோடு தமது அருள்சாதனங்களால் கட்டுண்டவர் அல்லர்" என்று 'கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்லி' (எண் 257) குறிப்பிட்டுள்ளது நமது கவனத்தை ஈர்க்கின்றது. ஆம், கடவுளின் கரங்களை எவரும் கட்டுப்படுத்த முடியாது.

தங்களுடைய குற்றமின்றி கிறிஸ்துவையும் திருச்சபையையும் அறியாதவர்கள், நேரிய உள்ளத்துடன் மனச்சான்றின் குரலைக்கேட்டு. கடவுளுடைய திருவுளத்தை நிறைவேற்றினால், அவர்களும் இறையருளால் மீட்புப் பெறமுடியும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. இரண்டாம் வத்திக்கான் வங்கம் (திருச்சபை, எண் 18) எங்கெல்லாம் உண்மையும் நன்மையும் காணப்படுகிறதோ அவை அனைத்துமே உண்மைக்கும் நன்மைக்கும் காற்றாகிய கடவுளிடமிருந்தே வருகிறது என்பதை ஏற்று, பிறசமயத்தாரோடு நல்லுறவை வளர்ப்பது காலத்தின் கட்டாயமாகும்.

ஒருமுறை ஒரு சிறுவனிடம், "இந்துக்கள் விண்ணகம் செல்வார்களா?" என்று நான் கேட்டதற்கு, அச்சிறுவன், "நிச்சயமாகச் செல்வார்கள். ஏனென்றால், நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தும் கெட்டவர்களாக இருக்கின்றோம், ஆனால் இந்துக்கள் கிறிஸ்துவை அறியாதிருந்தும் நல்லவர்களாக இருக்கிறார்கள்" என்றான். அவன் சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது.

இந்துக்கள் மீட்படையலாம்; கிறிஸ்துவர்கள் மீட்படையாது போகலாம், புனித அகுஸ்தீனாரின் கூற்றை மேற்கோள்காட்டி இரண்டாம் வத்திக்கான் சங்கம் பின்வருமாறு கூறுகிறது, "திருச்சபையில் இணைந்திருந்தும், அன்பில் நிலைத்திராது, 'உள்ளத்தாலன்றி', 'உடலால் மட்டும் அதன் மடியில் தவழ்கின்றவர்கள் மீட்படைவதில்லை (திருச்சபை, எண் 14).

எனவே நாம் திருமுழுக்குப் பெற்றிருக்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் மீட்படைய முடியாது. திருச்சபையில் இருந்தால் மட்டும் போதாது, அன்பில் நிலைத்திருக்க வேண்டும். சென்ற ஞாயிற்றுக்கிழமை நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியின் தொடர்ச்சியான இன்றைய நற்செய்தியில் தம் ஆண்டவர் அன்பை வலியுறுத்துகின்றார், "என் அன்பில் நிலைத்திருங்கள்... நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை" (யோவா 15:10,12)

இன்றைய இரண்டாவது வாசகத்திலும் திருத்தூதர் யோவான் பிறரன்பை முன்னிலைப்படுத்துகிறார். அன்பு செய்யாதவர்கள் கடவுளை அறியமுடியாது. ஏனெனில் அன்பே கடவுள் (1 யோவா 4:7-8). 7).

தெரு நடுவில் கீழே விழுந்து கிடந்த ஊனமுற்ற ஒருவரை மற்றொருவர் தூக்கிவிட்டு, அவருக்குப் பணமும் கொடுத்து உதவினார். ஊனமுற்றவர் தன் கண்களில் கண்ணீர் மல்க அவரிடம், "நீங்கள் இயேசு ஆண்டவரா?" என்று கேட்டார். அதற்கு அவர், “நான் இயேசு ஆண்டவர் அல்ல; ஆனால் அவரைப் பின்பற்றும் சீடர்களில் ஒருவர் நான்" என்றாம். இவ்வாறு தான் நாம் இக்காலத்தில் இயேசுவின் அன்பு நற்செய்தியின் சாட்சிகளாகத் திகழ வேண்டும்.

கடவுள் நமது அன்பிற்காகக் காத்திராமல், அவரே முதன் முதல் நம்மை அன்பு செய்து, நமது பாவங்களுக்குக் கழுவாயாகத் தமது மகனை அனுப்பினார், அவ்வாறே நாமும் பிறருடைய அன்பிற்காகக் காத்திராமல், பிறரை அன்பு செய்ய முன்வருவோம். ஏனெனில் கிறிஸ்துவின் பேரன்பு நம்மை ஆட்கொண்டு, நம்மை உந்தித் தள்ளுகிறது (2 கொரி 5:14).கடவுளின் குழந்தைகளுக்கு எது அழகு?

மகிழ்ச்சியூட்டும் மறையுறைகள் - குடந்தை ஆயர் அந்தோனிசாமி


இன்றைய அருள்வாக்கின் மையக் கருத்து சகோதர அன்பு. நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை (யோவா 15:12) என்கின்றார் இயேசு.

பத்திரிகை ஒன்றில் வெளிவந்த நெஞ்சைத் தொடும் ஓர் உண்மைச் சம்பவம். அது ஓர் இரயில் பயணம். அந்த இரயில் நாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டது. அந்த இரயிலில் பயணம் செய்தவர்களுள் வயதான இரண்டு தம்பதியரும் இருந்தனர்.

உறங்கும் நேரம் பிறந்தது. வயதான அந்தப் பெண் உறங்கச் செல்வதற்கு முன்னால் கணவரது கையை ஒரு நாடாவால் கட்டி மறுமுனையை தனது கையில் கட்டிக்கொண்டார். அப்படி அவர் செய்ததற்குக் காரணம் என்ன?

அவரது கணவர் ஒரு மன நோயாளி. அவர் மத்திய அரசுத் துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஆனால் எப்படியோ அவரது மனநிலை பாதிக்கப்பட்டு, அவர் ஒரு குழந்தையைப் போல் ஆனார். பாவம்! அவரது மனைவியைக் கூட அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அந்த மனைவிக்கு கணவரின் வாழ்விலே புதுமை நடக்கும் என்ற நம்பிக்கை!

நிகழ்ச்சியிலே வருகின்ற அந்தப் பெண் வாழ்ந்த வாழ்வுக்குப் பெயர்தான் அன்பு வாழ்வு! உறக்கத்தில்கூட நான் உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கின்றேன் என்று அவரது கணவருக்கு அவருடைய கையைக் கட்டியிருந்த நாடா வழியாக எடுத்துச்சொன்ன அந்த மனைவி ஓர் அன்பு மனைவி

அன்பிலே மூன்று வகையான அன்பு உண்டு :
1. நம்மை அன்பு செய்பவர்களை மட்டும் அன்பு செய்வது.
2. நம்மை அன்பு செய்யாதவரையும் அன்பு செய்வது.
3. நமது பகைவர்களையும் அன்பு செய்வது.

நம்மை அன்பு செய்பவர்களை மட்டும் அன்பு செய்வது எல்லாரும் செய்யக்கூடிய ஒன்று. தம்மை அன்பு செய்யாதவரையும் அன்பு செய்பவர்கள் புனிதர்கள். நமது பகைவர்களையும் அன்பு செய்வது இயேசுவின் அன்பு; அது நம்மை இயேசுவுக்குள் வாழவைக்கும் (இரண்டாம் வாசகம்). ஆள் பார்த்துச் செயல்படாத கடவுளைப் போல் (முதல் வாசகம்) வாழ முற்படுவதே கடவுளின் குழந்தைகளுக்கு அழகு.
மேலும் அறிவோம்:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு (குறள் : 992).

பொருள் : அன்புடையவராக வாழ்தலும் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவராகத் திகழ்தலும் பண்புடைமை என்று சான்றோர் போற்றும் நெறிமுறைக்கு உரிய இரண்டு நல்ல வழிகள் ஆகும்!ஒரு மெளன அலறல்

கல்லறைக்கு அப்பால் ... அருள்திரு இ. லூர்துராஜ்


கருச்சிதைவுக்கு எதிராக எழுதிய மனித உயிரின் மாண்பு பற்றிய ஆங்கில நூல் “The silent Scream" அதாவது "ஒரு மௌன அலறல்” கவிதை நயம், கற்பனை வளம் நிறைந்த, ஆனால் நெஞ்சத்தை முள்ளாக உறுத்தும், நெருப்பாகப் பொசுக்கும் ஒரு மெளன அலறல். அதில் இப்படி ஒரு சில வரிகள்.

“உலகில் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு மனித உயிரும் சிறப்பான ஒரு செய்தியைச் சொல்ல, சிறப்பான ஒரு பாடலை இசைக்க சிறப்பான ஓர் அன்பைப் பகிர வருகிறது. அதற்குத் தாயின் கருவறையே கல்லறையாகிற போது, அல்லது தவிர்க்க இயலாத சூழல் காரணமாகப் பிறந்ததும் குப்பைத் தொட்டியோ முட்புதரோ அதற்குப் புகலிடமாகிற போது மனிதன் சொல்கிறான்: “கடவுளே, உனது சிறப்பான அந்தச் செய்தி எனக்கு வேண்டாம், சிறப்பான அந்தப் பாடல் வேண்டாம், சிறப்பான உமது அன்பு வேண்டாம்" என்று,

"கொலை செய்யாதே" என்கிறது ஐந்தாம் கட்டளை. ஏன்? உயிர் இறைவனுக்கு உரியது. அதை எடுக்க எவருக்கும் உரிமையில்லை என்பதால் மட்டுமா? அன்பு வேண்டாம் என்ற உறவின் முறிவால் இல்லையா?

திருமுழுக்கு மட்டும் போதாது இறைவனுக்கு உகந்தவர்களாக அன்பில் நிலைப்பது இன்றியமையாதது. அதுவும் "என் அன்பில் நிலைத்திருங்கள் என்கிறார் இயேசு.
“எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்” (1 தெச.5:16) இது நமக்காகக் கிறிஸ்து வழியாகக் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் என்கிறார் திருத்தூதர் பவுல். “உள்ள மகிழ்ச்சியே மனிதரை வாழ வைக்கிறது. அகமகிழ்வே மானிடரின் வாழ்நாளை வளரச் செய்கிறது" (சீராக்.30:22) மகிழ்ச்சியின் தேவையை வலியுறுத்தும் வசனம் இது!

அன்பு ஒன்றே மகிழ்வைத் தரும். மனநிறைவைத் தரும். "என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்” (யோவான் 15:11) என்கிறார் இயேசு. மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமாயின் அவர் சொல்வது: “நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்து இருப்பதுபோல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்" (யோவான் 15:10).

இயேசு குறிப்பிடும் கட்டளை என்ன? “நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” (யோவான் 13:34) இயேசு தன் இரத்தத்தால் முத்திரை யிட்டுத்தந்த புதிய கட்டளை. புதிய உடன்படிக்கை இவ்வன்பின் தனித்தன்மை .

''தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை (யோவான் 15:13) அன்பின் ஆழத்தை உணர்த்த இயேசு நட்பை எடுத்துக்காட்டாகக் கையாளுகிறார். ''உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு இது நட்புக்கு வள்ளுவர் தரும் இலக்கணம். ஆனால் இயேசு அதற்கும் மேலே சென்று "நண்பர்களுக்காக உயிர் கொடுத்தல்” என்பதை முன்வைக்கிறார்.

இயேசு சொன்னது போலவே நமக்காக உயிரைக் கொடுத்தார். நாம் அவரது நண்பர்கள் என்பதற்காகவா? பாவிகள், பகைவர்கள் என்பதால் அன்றோ ! ''நாம் பாவிகளாய் இருந்த போதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்'' (உரோமை 5:8). பகைவர்களையும் நண்பர்களாகக் கருதியன்றோ உயிரைக் கொடுத்தார்!. அந்த அன்புக்கு கைமாறாக நாமும் உயிர்த்தியாகம் செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை. மாறாக “நான் கட்டளையிடுவது எல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாக இருப்பீர்கள்" (யோவான் 15:14) என்றார்.

பலனை எதிர்பாராமல் பிறரை அன்பு செய்ய வேண்டும் என்பதுதான் அவருடைய கட்டளை. நீ என்னை அன்பு செய்தால் நான் உன்னை அன்பு செய்வேன் என்று சொல்பவன் மனிதன். நீ என்னை அன்பு செய்யாவிட்டாலும் உன்னைத் தேடிவந்து அன்பு செய்வேன் என்பவர் இறைவன். (2 கொரி.5:14,15).

பத்துக் கட்டளைகளின் சாரமாக இரண்டு கட்டளைகள் நமக்குத் தரப்பட்டுள்ளன. இரண்டு கட்டளைகளுக்குமே அடிப்படை அன்புதான். அன்பை விதைப்போம். அன்பை அறுவடை செய்வோம்.

"நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்''. (யோவான் 15:14)

இன்றைய மனிதனின் மன நிலை? பிறர் ஆணையிடப் பணிவதா? இதைச் செய் அதைச் செய்யாதே என்று பிறர் கட்டளை தந்து என் வாழ்க்கையை வழிப்படுத்துவதா? விடுதலை, சுதந்திரம், மக்களாட்சி என்ற உணர்வில் வளரும் தலைமுறையில்லவா இது!

கட்டளைகள் எல்லாம் வாழ்வின் வளத்தையும் நலத்தையும் நோக்கமாகக் கொண்டவை. வாழ்க்கையைத் தடையோட்டமாக்கி குறுக்கே தடைகளை வைத்து அவற்றில் மனிதன் தடுக்கித் தட்டுத் தடுமாறி விழுவதைப் பார்த்து மகிழ்பவர் அல்ல நம் கடவுள்.

இறைக் கட்டளைகளை எல்லாரும் கடைப்பிடித்தால் ஊர் எப்படி இருக்கும்! உலகம் எப்படி இருக்கும்! கற்பனை செய்து பாருங்கள். உங்கள் ஊரில் ஒருவர்கூடப் பொய் பேசுவதில்லை, பொறாமைப் படுவதில்லை, திருடுவதில்லை, பிறர் பொருளுக்கு ஆசைப்படுவதில்லை. பிறர் வளர்ச்சி கண்டு வயிறு எரிவதில்லை. எல்லாரும் எல்லாரையும் தன்னலமின்றி அன்பு செய்கிறார்கள்... இப்படிக் கூட ஓர் ஊர் இருக்குமா என்று நினைக்காதீர்கள். சும்மா கற்பனை செய்து பாருங்கள். அந்த ஊர் எப்படி இருக்கும்? அங்கே காவல் நிலையம் இருக்குமா? சிறைச்சாலை இருக்குமா? மருத்துவமனை இருக்குமா? அவைகள் எல்லாம் கடவுள் படைத்த அற்புத உலகில் மனிதனால் படிந்த கறைகளின் அடையாளங்கள்!

“கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை ” (தி.ப.10:34). பொதுமைப் பண்பு வாய்ந்த அன்பை அடிப்படையாகக் கொண்ட புதியதொரு சமுதாயமாக விளங்குவதே, விளங்க வேண்டியதே திருச்சபை.

“அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் அவர்களே கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார்”. (1 யோவான் 4:7,8).

உறவின் சமநிலை

அருள்பணி  ஏசு கருணாநிதி

யூவல் நோவா ஹராரி என்ற இஸ்ரயேல் நாட்டு எழுத்தாளர் எழுதி வெளிவந்த (2014) நூல் 'சேபியன்ஸ். மனுக்குலத்தின் ஒரு சிறு வரலாறு'. இந்த நூலின் ஓரிடத்தில் மனித வாழ்வில் நாம் ஏற்றுக்கொள்ளும் இரண்டு பொய்களைக் குறிப்பிடுகின்றார். முதல் பொய்: 'எல்லா மனிதர்களும் சமம்.' இந்தப் பொய்யை நமக்கு அறிவுறுத்துவது உலக நாடுகளின் பிரகடனம். கொஞ்சம் கண்களைத் திறந்து பாருங்கள். எல்லா மனிதர்களும் சமமா? ஆண் வேறு, பெண் வேறு, மூன்றாம் பாலினம் வேறு. குழந்தை வேறு. முதியவர் வேறு. இளைஞன் வேறு. இளம்பெண் வேறு. மனித உயரத்தில் வேற்றுமை. தோலின் நிறத்தில் வேற்றுமை. மொழியில் வேற்றுமை. மதத்தில் வேற்றுமை. பொருளாதாரத்தில் வேற்றுமை. இப்படி நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி வேற்றுமை நிறைந்த உலகில் 'எல்லா மனிதர்களும் சமம்' என்று சொல்வது முதல் பொய்.  இரண்டாவது பொய்: 'மனிதர்களில் பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு இருக்கிறது.' இந்தப் பொய்யை நமக்கு அறிவுறுத்துவது நம் மண்ணில் ஆரியர்கள் கொண்டுவந்து நம்மேல் திணித்த மனுசாஸ்திரம். இந்த நூலின் படி பிரம்மாவின் தலை, வயிறு, தொடை, கால் ஆகிய நான்கு இடங்களிலிருந்து மனிதர்கள் பிறப்பெடுக்கின்றனர். இந்த நால்வருக்குள்ளும் பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு இருக்கிறது.

நிற்க.

சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு பேருந்தில் நம்மால் எப்படி ஏறி பயணம் செய்ய முடிகிறது? அந்தப் பேருந்தை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர், நம் சீட்டில் நமக்கு அருகில் நம் சட்டைப்பையில் உள்ளது என்ன என்று தெரியும் அளவிற்கு, நம் ஃபோனில் அடுத்தவர் பேசுவதைக் கேட்கும் அளவுக்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும் நபர் இவர்களை எல்லாம் நமக்குத் தெரியாது. இருந்தாலும் எப்படி நம்மால் அவர்கள் அருகில் அமர்ந்து, ஏன் தூங்கி, பயணம் செய்ய முடிகிறது?

பயணத்தின்போது ஒரு ஓட்டலுக்குச் செல்கிறோம். ஏற்கனவே நிறையப்பேர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாமும் ஒரு நாற்காலியில் அமர்ந்து உணவை ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம். சாப்பிட்டுவிட்டு பில் கட்டிவிட்டு வெளியே வந்துவிடுகிறோம். எவரோ சமைத்த உணவை, எவரோ வைத்து நடத்தும் உணவகத்தில், முன்பின் தெரியாத ஒருவர்முன் அமர்ந்து நாம் எப்படி சாப்பிடுகிறோம்?

20 வருடங்களாக யார், எவர் என்று தெரியாத ஒருவர் 20 வயதில் அப்படி தெரியாத ஒருவரை திருமணம் செய்து 80 வயது வரை 60 ஆண்டுகள் எப்படி இணைந்து வாழ முடிகிறது?

மனிதர்கள் பிரிந்து கிடந்தாலும் அவர்களை இணைக்கின்ற பிணைப்பு எது?

பிணைப்பு ஏற்படுவதுற்கு சமதளம் அவசியம். ஒரு மரத்துண்டை மற்றொரு மரத்துண்டோடு இணைக்க வேண்டும் என்றால் அவை இரண்டும் சம தளத்தில் இருக்க வேண்டும். ஒன்றோடொன்று பொருந்தும் தன்மை கொண்டிருக்க வேண்டும். பென்சிலும் மரத்துண்டுதான். விறகுக்கட்டையும் மரத்துண்டுதான். இரண்டையும் ஒன்றோடொன்று ஃபெவிகால் போட்டு இணைத்துவிட முடியுமா? ஒருவேளை இணைத்தாலும் அந்த இணைப்பு நீண்டதாக இருக்குமா?

கணித, இயற்பியல், வேதியியல் பாடங்களில் சமன்பாடு என்ற ஒன்று உண்டு. அதாவது அம்புக் குறிக்கு இருபக்கமும் இருக்கின்ற கூறுகள் சமமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் இந்தச் சமன் வெளிப்படையாக இருக்கும். சில நேரங்களில் மறைந்து கிடக்கும்.

மனித உறவுகளில் சில நேரங்களில் வெளிப்படையாக, சில நேரங்களில் மறைந்து கிடக்கும் சமன்பாடு அல்லது சமநிலை பற்றிப் பேசிகின்றன இன்றைய இறைவாக்கு வழிபாட்டு வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 10:25-26,34-35,44-48) விருத்தசேதனம் செய்த கிறிஸ்தவர்களுக்கு - அதாவது யூதராய் இருந்து கிறிஸ்தவர்களாக மாறிய (பேதுரு உள்பட) - ஒரு கேள்வி எழுகின்றது: 'விருத்தசேதனம் செய்யாத கிறிஸ்தவர்கள் - அதாவது, பிற இனத்தவராய் இருந்து கிறிஸ்தவர்களாய் மாறியவர்களோடு நாம் எப்படி உறவாடுவது? அவர்களைவிட நாம் மேலானவர்கள் இல்லையா?

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 யோவா 4:7-10) யோவானின் திருச்சபையில் ஒரு கேள்வி எழுகிறது: இயேசு அன்புக்கட்டளை கொடுத்துச் சென்றாரே. இந்த அன்புக்கட்டளையை நாம் எப்படி வாழ்வது? கடவுள் நம்மைவிட பெரியவர். அவரை நம்மால் அன்பு செய்ய முடியுமா? கடவுள் நம்மைவிட பெரியவர் இல்லையா?

இன்றைய மூன்றாம் வாசகத்தில் (காண். யோவா 15:9-17) தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி அவர்களோடு பந்தியில் அமர்ந்திருக்கும் இயேசு தனக்கும் தன் சீடர்களுக்கும் உள்ள உறவு தலைவர்-பணியாளர் உறவு அல்ல என்று சொல்வதோடு, இருவருக்குமான உறவு நண்பர்கள் உறவு என்கிறார். 'சீடர் குருவைவிட மேலானவர் அல்ல' (லூக் 6:40) என்று சொல்லும் இயேசுவால் எப்படி சீடர்களைத் தனக்கு இணையாக அழைக்க முடிந்தது?

ஆக,

பிற இனத்து கிறிஸ்தவர்களும் யூதர்களும் சமமா? - இது முதல் கேள்வி.

கடவுளும் மனிதர்களும் சமமா? - இது இரண்டாம் கேள்வி.

இயேசுவும் சீடர்களும் சமமா? - இது மூன்றாம் கேள்வி.

இந்த மூன்று கேள்விகளுக்கும் இன்றைய வாசகங்களே விடைகளையும் தருகின்றன. இந்த விடைகள் 'அழைத்தல்' மற்றும் 'மறுமொழி' என்ற இரண்டு நிலைகளில் உள்ளன.

1. பிறஇனத்து கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் இணைக்கும் 'அழைத்தல்' தூய ஆவி. இந்த அழைத்தலுக்கு பேதுருவும், மற்ற யூத கிறிஸ்தவர்களும் அளிக்க வேண்டிய 'மறுமொழி' எல்லாரையும் ஏற்றக்கொள்வது. இதை நாம் பேதுருவின் வார்த்தைகளில் பார்க்கிறோம். கொர்னேலியு என்ற புறவினத்து அன்பருக்கு நற்செய்தி அறிவிக்கச் செல்லும் பேதுருவின் காலடிகளில் விழுந்து பணியும் கொர்னேலியுவைத் தூக்கிவிடும் பேதுரு, 'எழுந்திடும், நானும் ஒரு மனிதன்தான்' என்கிறார். தொடர்ந்து பேதுரு பேசிக்கொண்டிருந்தபோதே தூய ஆவி புறஇனத்தார் மேல் இறங்கி வருகின்றது. இதைக் கண்ட பேதுரு அவர்களுக்கு திருமுழுக்கும் கொடுக்கின்றார். இவ்வாறாக, தூய ஆவியார் சமநிலைக்கு 'அழைக்கின்றார்.' அந்த அழைத்தலுக்கு 'மறுமொழியாக' யூதகிறிஸ்தவர்கள் பிறஇனத்து கிறிஸ்தவர்களை ஏற்றுக்கொள்கின்றனர்.

2. 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக' என்று தன் திருச்சபைக்கு அறிவுறுத்துகின்ற திருத்தூதர் யோவான், 'நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல. மாறாக, அவர் நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது' என்கிறார். ஆக, கடவுளையும் மனிதர்களையும் இணைக்கும் அழைத்தல் 'அன்பு.' இந்த அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. இந்த அழைத்தலுக்கு மனிதர்கள் தரவேண்டிய மறுமொழி 'பிறரன்பு.'

3. தன் சீடர்களோடு பந்தியில் அமர்ந்திருக்கும் இயேசு, 'உங்களை நான் நண்பர்கள் என்றேன்' என்கிறார். இது 'அழைத்தல்.' தொடர்ந்து, 'நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்' என்கிறார். ஆக, அவரின் அழைத்தலுக்கு ஏற்ற மறுமொழியை சீடர்கள் தந்தால்தான் நண்பர்கள் நிலையில் அவர்களால் தொடர்ந்து நிற்க முடியும்.

இயேசு நண்பர்களைப் பற்றி இங்கே பேசுகிறார்கள் என்றவுடன் இது வேற டாபிக் என நினைத்துவிட வேண்டாம். அன்பில் நிலவும் இரண்டு நிலைகளைத்தான் இங்கே சொல்கின்றார்: (அ) பணியாளர் நிலை, (ஆ) நண்பர் நிலை.

அ. பணியாளர் நிலை. இந்த நிலையில் ஒருவர் மேலிருப்பார். மற்றவர் கீழிருப்பார். மேலிருப்பவர் கொடுத்துக் கொண்டிருப்பார். கீழிருப்பவர் பெற்றுக்கொண்டிருப்பார். கீழிருப்பவர் தான் நினைப்பது போல இல்லையென்றால் மேலிருப்பவர் அவர் மேல் கோபப்படுவார். அவரைத் தனக்கு வேண்டாம் என சொல்லி விடுவார். கீழிருப்பவர் தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாது. எப்போதும், 'மேலிருப்பவருக்கு இது பிடிக்குமா!' என்று நினைத்துக் கொண்டேதான் செய்ய வேண்டும். மேலிருப்பவரின் மனம் குளிருமாறே இவர் நடந்து கொள்ள வேண்டும். 'நீ எனக்கு மட்டும்தான்!' என்று மேலிருப்பவர் கீழிருப்பவரிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். 'தலைவர் செய்வது இன்னதென்று பணியாளருக்குத் தெரியாது!' என்கிறார் இயேசு. இந்த உறவில் அப்படித்தான் மேலிருப்பவர் எந்த மூடில் இருப்பார். எப்படி ஃபோன் எடுப்பார். என்ன நேரத்தில் கடிந்து கொள்வார் என்று எதுவும் கீழிருப்பவருக்குத் தெரியாது.

ஆ. நண்பர் நிலை. இந்த நிலையில் இரண்டு பேரும் ஒரே தளத்தில் இருப்பார். இருவரும் கொடுத்துக்கொள்வர். வாங்கிக்கொள்வர். என்னுடையது என் உரிமை, அவருடையது அவர் உரிமை என்று ஒருவர் மற்றவர் மேல் மதிப்பும், சுதந்திரமும் இருக்கும். 'உனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக எனக்குப் பிடித்த ஒன்றை செய்யாமல் இருக்க என்னால் முடியாது!' என்று சொல்லும் உரிமை இந்த நிலையில் உண்டு. 'நான் உனக்கு தான். நீ எனக்கு தான். ஆனால், நான் உனக்கு மட்டும் அல்ல. நீ எனக்கு மட்டும் அல்ல' என்று அடுத்தவருக்கும் இடம் கொடுத்த அரவணைத்துக்கொள்வது இந்த நிலை. நண்பர்கள் நிலையில் ஒளிவு மறைவு இருக்காது.

இவ்வாறாக, 'தூய ஆவி,' 'அன்பு,' 'நண்பர் நிலை' என்ற மூன்று இடங்களிலுமே அழைத்தல் என்பது மேலிருந்து கீழ்நோக்கியதாக இருக்கிறது. இந்த மூன்றும் மேலிருந்து கீழ்நோக்கி வரும்போது நாம் தரவேண்டிய மறுமொழியும் - 'ஏற்றுக்கொள்ளுதல்,' 'பிறரன்பு,' 'கனிதருதல்' - இருந்தால்தான் உறவின் சமநிலை கிடைக்கிறது.

உறவின் சமநிலை அடைதலை நாம் எப்படி அறிந்துகொள்வது? கனிதருதலில்.

கனி என்றால் என்ன? மரத்தின் உச்சகட்ட வளர்ச்சி தான் கனி. இலை - பூ - காய் என தொடரும் மரத்தின் பயணம் கனியில் முற்றுப்பெற்றுவிடுகிறது. கனிதான் மரத்தின் நோக்கம். ஆக, உறவில் கனி என்று சொல்லும்போது, உறவில் வளர்தல் அவசியம் - நீங்களும், நானும் அவரில்.
இறுதியாக,

'மனிதர்கள் அனைவரும் சமம்' என்ற பொய்யை நாம் நம்பினாலும், 'மனிதர்கள் பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு கொண்டவர்கள்' என்ற பொய்யை நம்பினாலும், ஒருவர் மற்றவரோடு நாம் கொண்டிருக்கும் சமநிலையே நம்மை வளரச் செய்கிறது.

நம்மில் குடிகொண்டிருக்கும் ஆவியும், அடுத்தவரில் குடியிருக்கும் ஆவியும் கடவுளின் ஆவியே எனில், அங்கே அன்பு சாத்தியமே. இந்த அன்பினால்தான் இயேசுவும் நம்மைத் தேர்ந்துகொண்டு நம்மேல் உரிமை கொண்டாடுகின்றார்.

ஒருவர் மற்றவர்மேல் உரிமைகொள்ளும் சமநிலையே நம் அழைத்தலும் மறுமொழியாகட்டும் - இன்றும், என்றும். இந்த மறுமொழியே நாம் பேருந்தில் பயணம் செய்யவும், ஓட்டலில் உணவருந்தவும், அருள்பணி, திருமண உறவுகளில் நிலைக்கவும் தூண்டுகிறது.


“நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல, நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ளுங்கள்”

அருள்பணி ஏசு கருணாநிதி

ஒபேரா நடனத்தில் உலகப்புகழ் பெற்ற கலைஞர் எர்னஸ்டைன் ஸ்கூமென் (Ernestine Schumann) அவருடைய கலையுலகின் தொடக்க காலகட்டத்தில் அவரது கணவர் அவரைவிட்டுப் பிரிந்துபோனார். இதனால் அவர் தன்னுடைய நான்கு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டுப்பட்டார். கையில் ஒரு பைசாகூட இல்லாத சூழ்நிலையில் தன்னுடைய வாழ்வையே முடித்துக்கொள்ளலாம் என அவர் தீர்மானித்தார்.
எனவே அவர் தன்னுடைய நான்கு பிள்ளைகளுடன் ஓடும் இரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவுசெய்துகொண்டு தண்டவாளத்தில் பிள்ளைகளோடு அமர்ந்திருந்தாள். அப்போது எர்னஸ்டைன் ஸ்கூமெனின் மகள்களில் ஒருத்தி, “அம்மா! நான் உன்னை மிகவும் அன்பு செய்கின்றேன்” என்று மெல்லிய குரலில் சொன்னார். இக்கட்டான அந்த சூழ்நிலையில் மகளின் குரல் கடவுளின் குரலை போன்று அவருக்குக் கேட்டது. இதனால் அவர் தன்னுடைய தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டு வாழத் தொடங்கினார். ஒருசில ஆண்டுகள் கடினமான போராட்டத்திற்குப் பிறகு அவர் உலகப் புகழ்பெற்ற ஒபேரா நடனக் கலைஞர் ஆனார். எர்னஸ்டைன் ஸ்கூமென் அடிக்கடி சொல்கின்ற வார்த்தைகள் இதுதான், “அன்றைக்கு மட்டும் கடவுள் என் மகள் வழியாக ‘நான் உன்னை மிகவும் அன்பு செய்கின்றேன்’ என்று சொல்லவில்லை என்றால், என்றைக்கோ நான் தற்கொலை செய்து இறந்திருப்பேன்”. ஆம், கடவுள் எர்னஸ்டைன் ஸ்கூமெனை மட்டும் அல்ல, நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்கின்றார்,
பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் கடவுள் நம்மீது கொண்டிருக்கின்ற அன்பையும், நாம் ஒருவர் மற்றவரிடம் எத்தகைய அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதை நமக்கு எடுத்துக்கூறுகின்றன. நாம் அதனைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம். இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகின்றார் “என் தந்தை என்மீது அன்புகொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன்” என்று. தந்தையாய் கடவுள் இயேசுவின் மீதுகொண்ட அன்பை வார்த்தைகளால் விவரித்துச் சொல்லமுடியாது. ஏனென்றால், இயேசு தந்தையாம் கடவுளுக்கு அன்பார்ந்த மகனாக இருந்திருக்கின்றார் என்று விவிலியம் நமக்குச் சான்று பகர்கின்றது (மத் 17:5). அப்படியென்றால் தந்தைக் கடவுள் இயேசுவின்மீது எத்தகைய அன்புகொண்டிருந்தாரோ, அத்தகைய அன்பை இயேசு நம்மீது கொண்டிருக்கின்றார் என்பதுதான் உண்மை.
இயேசு நம்மீதுகொண்ட அன்பு எத்தகையது என்று இப்போது பார்ப்போம். முதலாவதாக, இயேசு நம்மீது கொண்ட அன்பு ஒரு நண்பன் இன்னொரு உயிர் நண்பன்மீது கொள்ளும் அன்பிற்கு இணையானது ஆம், இயேசு எல்லாம் வல்லவர், தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆள். அதையெல்லாம் அவர் கணக்கில் கொள்ளாமல், தாழ்நிலையில் இருக்கின்ற நம்மீது அன்புகொள்கின்றார், அன்பு கொள்வதோடு மட்டுமல்லாமல், நம்மைத் தன் நண்பராகக் கருதி நமக்காக தன்னுடைய உயிரையும் தர முன்வருபவராகவும் இருக்கின்றார். இதன்மூலம் அவருடைய அன்பு எத்துணை உயர்ந்தது என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.
இரண்டாவதாக இயேசுவின் அன்பு பாரபட்சம் இல்லாத அன்பாக இருக்கின்றது. இயேசு ‘இவர் யூதர் அதனால் இவரை அன்பு செய்வேன் என்றோ, அல்லது அவர் புறவினத்தார், அதனால் அவருக்கு என்னுடைய அன்பு கிடையாது’ என்று இருக்கவில்லை, மாறாக அவர் எல்லாரையும் அன்பு செய்தார். அதுதான் அவருடைய அன்பாக இருந்தது. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் புறவினத்தாராகிய கொர்னலேயு வழியாக செயல்படுகின்றார். அப்போது திருத்தூதர்களின் தலைவராகிய பேதுரு, “கடவுள் ஆள் பார்த்து செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கின்றேன்” என்கின்றார். இந்த நிகழ்விற்கு முன்பு பேதுரு, ‘இயேசு யூதர்களுக்குத்தான்’ என்று நினைத்திருந்தார். ஆனால் இந்த நிகழ்வுக்குப் பின் அவருடைய பார்வையில் மாற்றம் வருகின்றது. ஆகவே, இயேசு எல்லா மனிதர்கள் வழியாகவும் செயல்படுகின்றார், அவருடைய அன்பு எல்லாருக்கும் உண்டு, அவருடைய அன்பில் பாரபட்சம் இல்லை என்பதை நாம் மிகத் தெளிவாக அறிந்துகொள்ளவேண்டும்.
மூன்றாவதாக இயேசுவின் அன்பு மன்னிக்கின்ற அன்பாக இருக்கின்றது. விவிலியத்தில் வருகின்ற பல நிகழ்வுகள் அவருடைய மன்னிக்கும் அன்பிற்கு சான்றாக இருக்கின்றது. தன்னைச் சிலுவையில் அறைந்து சித்ரவதை செய்தவர்களுக்காக தந்தையிடம் ‘தந்தையே இவர்களை மன்னியும்’ என்று சொல்லி ஜெபிப்பதன் வழியாக, இயேசு தன்னுடைய மன்னிக்கும் அன்பினை வெளிப்டுத்துகின்றார்.
இவ்வாறு ஓர் உயிர் நண்பனைப் போன்று நம்மீது அன்பு காட்டும், பாரபட்சமில்லாமல், மன்னிக்கின்ற அன்பினைப் நம்மீது பொழியும் இயேசுவைப் போன்று நாம் நம்மோடு வாழக்கூடியவர்கள்மீது அன்பு காட்டுகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் நம் அருகில் வாழ்பவர்கள்மீதே அன்பு காட்டாமல், கண்டும் காணாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றோம், இந்நிலை மாறவேண்டும். நாம் ஒவ்வொருவரும் இயேசு நம்மை அன்பு செய்ததைப் போன்று ஒருவர் மற்றவரை அன்பு செய்யவேண்டும்.
இயேசு நம்மை அன்பு செய்ததுபோன்று ஒருவர் மற்றவரை அன்புசெய்கின்றபோது இறைவன் நமக்கு எத்தகைய கைம்மாறு தருவார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் சுட்டிக்கட்டத் தவறவில்லை. “அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்; அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள்” என்கிறார் தூய யோவான். ஆம். நாம் அன்பு செலுத்தும்போது கடவுளை அறிந்தவர்களாக மட்டுமல்லாமல், கடவுளின் மக்களாகின்றோம்.
இந்த இடத்தில் தூய அகுஸ்தினார் உண்மையான அன்பு என்பதற்கு கூறுகின்ற விளக்கத்தினை நம்முடைய சிந்தனைக்கு உட்படுத்திப் பார்ப்போம். “அன்புக்குக் கைகள் உண்டு, அவை அழுவோரின் கண்ணீர் துடைப்பதாக இருக்கும்; அன்புக்குக் கால்கள் அவை அவலநிலையில் இருப்போருக்கு உதவிட விரைவதாக இருக்கும். அன்புக்குக் கண்கள் உண்டு; அவை அல்லல்படுவோர்மீது பரிவு கொள்வதாய் இருக்கும்; அன்புக்கு காதுகள் உண்டு. அவை அண்டிவருவோரின் குறைகள் கேட்பதாய் இருக்கும். அன்பிற்கு இதயம் உண்டு. அது அயலானுக்காகவும், அடுத்திருப்பவருக்காக துடிப்பதாக இருக்கும்” என்று அவர் கூறுவார். ஆம், உண்மையான அன்பு என்பது வெறும் சொல்லல்ல, அது செயல்.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று ஒருவர் மற்றவரை அன்பு செய்வோம், எல்லாருக்கும் இரங்குவோம், அதன்வழியாக இறைவனின் அன்பு மக்களாக வாழ்வோம்.


Tuesday, 24 April 2018

பாஸ்கா காலம் 5-ஆம் ஞாயிறு

பாஸ்கா காலம் 5-ஆம் ஞாயிறு
திப 9:26-31; 1யோவா 3:18-24; யோவா 15:1-8

 

மறையுரை மொட்டுக்கள் – அருள்பணி இருதயராஜ்


ஓர் ஊரில் விவசாயி ஒருவர் வேளாண்மையில் தலைகீழ் புரட்சியை ஏற்படுத்த விரும்பினார் வெங்காயத்தை  நறுமணமிக்க வாசனைப் பொருளாக மாற்ற நினைத்தார். எனவே கற்பூரத்தினால் பாத்திகட்டி, கஸ்தூரியை உரமாகப்போட்டு, பன்னீரைப் பாய்ச்சி வெங்காயத்தை நட்டார். வெங்காயம் தனக்குரிய நாற்றத்தை இழந்து விட்டு, கற்பூரம், கஸ்தூரி, பன்னீர் ஆகியவற்றின் வாசனைகளை ஈர்த்து ஒருவாசனைப் பொருளாக அது உருவெடுக்கும் என்று கனவுகண்டார். வெங்காயம் நன்றாக உருண்டு, திரண்டு வளர்ந்தது. ஆனால், அதைப்பிடுங்கி முகர்ந்து பார்த்தபோது, அதில் கற்பூரத்தின் வாசனையோ கஸ்தூரியின் வாசனையோ பன்னீரின் வாசனையோ கடுகளவும் காணப்பட வில்லை, மாறாக, வெங்காயத்தின் இயல்பான நாற்றம் இம்மியளவும் குறையவில்லை. 'சென்மப் புத்தியைச் செருப்பால் அடித்தாலும் போகாது' என்ற பழமொழி உண்மையானது.

கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் எவ்வளவோ செய்தும் அவர்களது திமிர்பிடித்த குணம் சிறிதளவும் மாறவில்லை , இந்த அவலநிலையைக் கடவுள் திராட்சைத் தோட்டக் கவிதை வாயிலாக இறைவாக்கினர் எசாயா நூலில் எடுத்துரைக்கிறார். ஒருவர் தனது திராட்சைத் தோட்டத்தை நன்றாகப் பண்படுத்தி, நல்ல இனத் திராட்சைக் கொடியை நட்டு, அது நற்கனிகளைத் தரும் என்று எதிர்பார்த்தார், ஆனால் திராட்சைக் கொடியோ காட்டுக் கனிகளைக் கொடுத்தன. இஸ்ரயேல் மக்கள்தான் அத்திராட்சைத் தோட்டம், கடவுள் அவர்களிடம் எதிர்பார்த்த கனிகள் நீதியும் நேர்மையும்; ஆனால் அவர்கள் கொடுத்த கனிகளோ இரத்தப்பழியும் முறைப்பாடு(எசா 5:1-7).

இப்பின்னணியில் நாம் இன்றைய நற்செய்திக்கு விளக்கம் காணவேண்டும். இஸ்ரயேல் மக்கள் உண்மையான திராட்சைக் கொடி அல்ல. இயேசு, “நானே உண்மையான திராட்சைச்செடி" என்கிறார். (யோவா 15:1). அவர் தான் கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றி, மீட்பின் கனியை வழங்கினார், இயேசுவின் சீடர்கள் அவரில் நிலைத்திருந்து, அவரோடு இணைந்திருந்து நற்கனி தரவேண்டும். அவரை விட்டுப் பிரிந்து அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.

இயேசுவின் சீடர்களாகிய நாம் அவருடைய அன்பில் நிலைத்திருந்து, அவருடைய வார்த்தைகள் நமக்குள் நிலைத்திருந்து மிகுந்த கனிதர வேண்டும். அக்கனி நிலைத்திருக்க வேண்டும். இவ்வாறு நாம் கடவுளை மாட்சிமைப்படுத்த வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாகும்.

நாம் தரவேண்டிய கனியோ அன்பின் கனியாகும். “நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே எள் கட்டளை” (யோவா 15:17). இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யோவான் கூறுவது போல, நாம் இயேசுவில் நம்பிக்கை வைத்து, அவருடைய அன்புக் கட்டளையைக் கடைப்பிடித்தால் நாம் கடவுளோடு இணைந்து வாழ முடியும், கடவுளும் நம்மோடு இணைந்திருப்பார் (1 யோவா 3:23-24).

நாம் இயேசுவோடும் இயேசு நம்மோடும் நாம் விண்ணகப் புனிதர்களுடனும் ஒருவர் மற்றவருடனும் இணைந்திருப்பது தான் 'புனிதர்களின் தோழமை' என்னும் கோட்பாடாகும். திராட்சைக் கொடி உருவகமானது புனிதர்களின் தோழமைக்கு இறையியல் அடிப்படையாகும். திராட்சைக் கொடியின் உயிர்தான் அதன் எல்லாக் கிளைகளிலும் உள்ளது. எனவே நாமனைவரும் கிறிஸ்துவோடு இணைந்து ஒரே திருச்சபையின் உறுப்பினர்கள். நாம்! இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள். கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்" (எபே 2:19), எனலே மனிதநேய அடிப்படையில் மட்டுமல்ல, புனிதர்களுடைய தோழமையின் அடிப்படையிலும் ஒருவர் மற்றவர்க்கு உதவிசெய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். "எல்லாருக்கும். சிறப்பாக, நம்பிக்கைக் கொண்டோரின் குடும்பத்தினருக்கும் நன்மை செய்ய முன் வருவோம்" {கலா 6:10).

மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வழி என்ன என்பதை அன்னைத் தெரசா பின்வருமாறு கூறியுள்ளார்; "மெளனத்தின் கனி செபம்; செபத்தின் கனி அன்பு; அன்பின் கனி சேவை; சேவையின் கனி மகிழ்ச்சி." அழகான, ஆழமான வாழ்க்கை நெறி!

தாயுமானவரும் பிறரன்புப் பணியில்தான் இன்பநிலை அடங்கியுள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார்.

“அன்பர் பணிசெய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலைதானே வந்து எய்தும் பராபரமே."
“பெறுவதைவிடதருவதே இன்பம்"  (திப 20:25)

 பிறர்க்குக் கொடுத்துக் கொடுத்து இன்பம் பெறத் தெரியாத சுல்நெஞ்சம் உடையவர்கள், தமது உடமையை வைத்து வைத்து இறுதியில் இழந்து விடுவர் என எச்சரிக்கிறார் வள்ளுவர்,
”கத்துலக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடமை
வைத்து இழக்கும் வன் கணவர்” (குறள் 228)

அன்பு இல்லாமல் பிறர்க்குக் கொடுக்கமுடியும். ஆனால் கொடுக்காமல் அன்பு செய்ய முடியாது. எனவேதான் அன்பே உருவான கடவுள் நம்வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் கொடுப்பதோடு, நமது மீட்புக்காகத் தமது ஒரே மகனையும் கொடுத்தார் (யோவா 3:18) அம்மகன் தம்மையே நமக்காகப் பலியாக்கித் தமது உடலையும் இரத்தத்தையும் நமக்குப் பிட்டுக் கொடுத்தார், பிழிந்து கொடுத்தார்.

”பசுவின்பால் முழுவதும் கன்றிற்கில்லை;
பூவின் நறுமணம் முழுவதும் சோலைக்கில்லை ,
நெற்கதிர் முழுவதும் வயலுக்கில்லை,
குளத்துநீர் முழுவதும் குளத்திற்கில்லை ,
மரத்தின் கனி முழுவதும் மரத்திற்கில்லை,
யாழின் இசை முழுவதும் யாழிற்கில்லை”
இவ்வாறு இயற்கையிலே எல்லாமே தனக்காக மட்டும் பயன்படாது பிறர்க்காகப் பயன்படும்போது, நாம் மட்டும் நமக்காகவே வாழ்வது முறையா?

பிறரிடம் வாங்கி வாங்கி வாழ்ந்தார் என்ற நிலைமாறி, பிறர்க்குக் கொடுத்துக் கொடுத்துச் செத்தார் என்ற நிலையை அடைவோமாக. நாளை அல்ல, இன்றே அன்பென்னும் நற்கனி தருவோம், "நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்" (1 யோவா 3:18)நாம் புல்லாங்குழல் ஆவோம்.

மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்.
குடந்தை ஆயர் அந்தோனிசாமி


இன்றைய நற்செய்தியிலே, நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் கிடைக்கும் (யோவா 15:7) என்கின்றார் இயேசு. இயேசுவின் வார்த்தைகளைக் கூட்டி, பெருக்கி, வகுத்து, கழித்துப் பார்த்தால் மூன்றெழுத்து மிஞ்சும். இயேசுவுக்கு மூன்றெழுத்து; அவர் போதித்த வேதத்திற்கும் மூன்றெழுத்து. அந்த மூன்றெழுத்துதான் அன்பு என்னும் மூன்றெழுத்து. இந்த அன்பு நமக்குள்ளிருந்தால் நாம் விரும்பிக் கேட்பதையெல்லாம் அன்பே உருவான கடவுள் (1 யோவா 4:8) நமக்குத் தருவார்.

அன்பு என்றால் என்ன? என்பதற்கு இதோ ஒரு சிறு விளக்கம்.
அப்போது நான் 9-ஆம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். ஆண்டுத் தேர்வு எழுதும் நேரம். திடீரென டைஃபாய்ட் காய்ச்சல். படுத்த படுக்கையானேன். 21 நாள்கள். நிலமை மோசமாகிக்கொண்டே சென்றது. ஒரு நாள் இரவு! அது மறக்கமுடியாத இரவு! மணி 12 இருக்கும். என்னால் மூச்சுவிட முடியவில்லை! நான் செத்துவிடுவேனோ என்று பயந்தேன். அஞ்சி, அம்மா என்றேன். உடனே என்னப்பா? என்ற பதில் வந்தது! எல்லாரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் என்னுடைய அன்னை மட்டும் உறங்கவில்லை. என் பக்கத்திலேயே படுத்திருந்தார்கள். நான், செத்துவிடுவேனோ என்று பயமாக இருக்கின்றது என்றேன். என் தாயோ, நீ சாகமாட்டாய் பயப்படாதே என்றார்கள்.

அமைதியாக குழந்தை உறங்க தாய் உறங்காமலிருப்பதற்குப் பெயர்தான் அன்பு! அஞ்சுகின்றவர்களைப் பார்த்து, அஞ்சாதே! என்று சொல்வதற்குப் பெயர்தான் அன்பு! ஆறுதல் தேடுகின்றவர்களின் அருகிலிருப்பதற்குப் பெயர்தான் அன்பு!

அச்சப்பட்ட இடையர்களைப் பார்த்து, அஞ்சாதீர்கள் (லூக் 2:10) என்ற வானதூதரைப் போல வாழ முன்வருவதற்குப் பெயர்தான் அன்பு!

தம்மை நோக்கி மன்றாடுகின்றவர் அனைவரின் பக்கத்திலும் இருக்கும் ஆண்டவரைப் போல வாழ முன்வருவதற்குப் பெயர்தான் அன்பு!

யாரால் அன்பு செய்ய முடியும்? ஒரு கோழையால் ஒருபோதும் அன்பு செய்யமுடியாது! அன்பு செய்ய ஆசைப்படுகின்றவர்களுக்கு சவுலிடமும், பர்னபாவிடமும் நின்று நிலவிய துணிச்சல் வேண்டும்.

கடவுளிட மிருந்து நமக்கு வேண்டிய அருளாதாரத்தையும், பொருளாதாரத்தையும் நாம் பெற்று வாழ ஓர் அழகான வழி அன்பு வழி (1 யோவா 3:22-23).

நாம் அன்பினால்
வார்க்கப்பட்ட புல்லாங்குழலாவோம்!
இறைவன் அவரது தெய்வீகக் கீதத்தை
அதன் வழியாக இசைக்கட்டும்!

மேலும் அறிவோம் :
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்(கு)
என்புதோல் போர்த்த உடம்பு (குறள் : 80).

பொருள் : அன்பு நிறைந்த உள்ளத்துடன் இயங்குவதே உயிருடன் கூடிய உடலாகும். அன்பு நெஞ்சம் இல்லாத உடல், உயிரற்ற எலும்புக்கூட்டைத் தோலால் போர்த்திய வெற்றுடல் ஆகும்.

 

சாலையோரம் ஒரு தடாகம்.

கல்லறைக்கு அப்பால்
அருள்பணி இ.லூர்துராஜ்

சாலையோரத்தில் ஒரு தடாகம். தடாகம் முழுவதும் பூத்துக் குலுங்கும் தாமரை மலர்கள். இந்த மலர்களுக்கு உயிர் அளிப்பது எது? ஒளி. உயிர் வளர்ப்பது எது? நீர். ஒருவர் தடாகத்தில் இறங்குகிறார். தண்டோடு இரு மலர்களைக் கொய்கிறார். ஒன்றைத் தண்ணீரிலும் இன்னொன்றைத் தரையிலும் வீசி எறிந்து விட்டுப் போய் விடுகிறார். மறுநாள் அதேவழியில் திரும்பும்போது பார்க்கிறார். தண்ணீரில் போட்ட மலர் அழுகிக் கிடக்கிறது. தரையில் வீசிய மலர் உலர்ந்து கிடக்கிறது. அதை அழுகச் செய்தது எது? நீர்தான். உலரச் செய்தது எது? ஒளி தான். உயிர் அளிக்கும் ஒளியே உலரச் செய்யுமா? உயிர் வளர்க்கும் நீரே அழுகச் செய்யுமா?

தடாகத்தில் வேரூன்றி நிற்கும் போது உயிர் வளர்க்கும் ஒளியே தடாகத்தோடு தொடர்பற்றுப் போகிறபோது மலரை உலரச் செய்கிறது. அதேபோல் உயிர் வளர்க்கும் நீரே, மலரை அழுகச் செய்கிறது. அவ்வாறே இறைவனை நினைப்பதும், இறைவனில் நிலைப்பதும்.

இறைவனை நினைப்பது, இறைவனில் நிலைப்பது என்பதுதான் எவ்வளவு கடினம்! கல்லூரி மாணவன் ஒருவன் இப்படிச் செபிப்பானாம்: "இறைவா, என்னால் உன்னை எங்கே நினைக்க முடிகிறது? தெருவெல்லாம் ஒரே சந்தடி ஆலயத்திற்குள் நுழைந்தாலோ பார்வையை இழுக்கும் பாவையர்!... இந்நிலையில் நான் உன்னை நினைக்கா விட்டால் என்ன, பொருட்படுத்தாதே. ஆனால் நீ மட்டும் என்னை நினைக்கத் தவறாதே".

வறுமையில், பிணியில், வாழ்க்கையின் மாயக் கவர்ச்சியில் கடவுளை நினைப்பது, கடவுளில் நிலைப்பது கடினம்தான். ஆனால் அந்தக் கடவுள் நம்மை நினைத்தால்...

படுக்கையிலிருந்து எழுந்ததும் புனித பிலிப்பு நேரி சொன்ன காலைச் செபம் என்ன தெரியுமா? “இறைவா, உன் கைகள் இன்று முழுவதும் என் தோள் மேல் இருக்கட்டும். இல்லையெனில் நான் உன்னைக் காட்டிக் கொடுத்து விடுவேன்" இது கடவுளுக்கு விடுத்த சவால் அல்ல. தனக்குத்தானே விடுத்துக் கொண்ட எச்சரிக்கை.

'Nothing good without God' என்பார்கள். GOOD என்ற நான்கெழுத்தில் GOD என்ற மூன்றெழுத்தை நீக்கினால் எஞ்சி இருப்பது என்ன? வெறும் '0'.

With Christ you are a hero. Without him just a zero. கிறிஸ்து இன்றி நமது வாழ்க்கை வெறும் சீரோ, சைபர், கூமுட்டை. கிறிஸ்து ஒருவரே மதிப்புள்ளவர். நமக்கு மதிப்பு ஊட்டுபவர். யார் முதலில் என்பதைப் பொருத்தது அது. எத்தனை பூஜ்யங்களை முதலில் அடுக்கிக் கடைசியில் இறைவன் என்ற ஒன்றை வைத்தால் அந்த ஒன்றுக்கு மட்டுமே மதிப்பு. பூஜ்யங்கள் வெறும் பூஜ்யங்களே! முதலில் ஒன்றை வைத்து அடுத்துப் பூஜ்யங்களை அடுக்கினால் ஒவ்வொரு பூஜ்யமும் மதிப்புப் பெறும், அந்த ஒன்றுக்கும் கூட மதிப்பூட்டும் - ஒன்று பத்தாக, ஒன்று நூறாக, ஒன்று ஆயிரமாக, ஒன்று இலட்சமாக, ஒன்று கோடியாக.

பம்பலூனா போரில் காயமுற்று இஞ்ஞாசியார் மருத்துவமனை யில் இருந்தபோது பொழுது போக்குக்காகப் படிக்க வீரர் வரலாறு கேட்டார். கிடைத்ததோ புனிதர் வரலாறு. "இவர்களால் முடிந்தால் என்னால் ஏன் முடியாது?' அப்பொழுது உணர்ந்தார்: “Nothing good without God", இறைவனிலன்றி நன்மையானது எதுவும் இல்லை . எல்லாம் தீமைகளே! இறைவனிலன்றி புனிதமானது எதுவும் இல்லை. எல்லாம் பாவங்களே! இறைவனிலன்றி வீரமானது எதுவும் இல்லை. எல்லாம் கோழைத்தனங்களே! “இறைவனின் அதிமிக மகிமைக்காகத்" தன்னையே அர்ப்பணித்தார். அவர் எழுதிய "மன்ரேசா' என்ற தியான நூலைப் பற்றிப் புனித சலேசியார் சொல்கிறார்: "அந்த நூலில் எத்தனை எழுத்துக்கள் உள்ளனவோ அதற்கும் அதிகமான புனிதர்களை உருவாக்கியுள்ளது".

மனித வாழ்க்கையில் இன்பங்களும் துன்பங்களும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல, தவிர்க்க முடியாதவை. இன்பங்கள் சூழும் நேரம் கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என நினைக்கும் நாம், துன்பங்கள் வந்தால் மட்டும் கடவுள் நம்மை நாம் செய்யாத தவறுகளுக்காகத் தண்டிக்கிறார் என நினைத்து வருந்துகிறோம். திராட்சைக் கொடிக்கு உரமிட்டுத் தண்ணீர் ஊற்றும் போது மட்டுமல்ல, அதைக் கழித்துவிடும் போது கூட அதன் முழுமையான பலனை எதிர்பார்த்துத்தான் அவ்வாறு செய்கிறார். "கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனிதருமாறு கழித்து விடுவார் (யோவான் 15:2). கழிப்பதும் தறிப்பதும் திராட்சைக் கொடியின் நன்மைக்கே, ஆகவே இன்பங்களிலும் துன்பங்களிலும் இறைவன் நம்மைச் சமமாகவே அன்பு செய்கிறார் என்பதை உணர்ந்து இறைவனில் நிலைத்து நற்கனிகள் கொடுப்போம்.

திராட்சைக் கொடி செடியோடு இணைந்திருக்கவும், கனிதரவும் வேண்டும் என்ற இரு கருத்துக்கள் உவமையில் வலியுறுத்தப்படுகின்றன.

கனி தருவது இன்றியமையாதது. "கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்து விடுவார் . கொடி கனி தருவதற்குச் செடியோடு இணைந்திருத்தல் வேண்டும். இவ்வாறு கனி தருதல், இணைந்திருத்தல் இரண்டும் முக்கியமானவை. எனினும் கனி தருவதே முதன்மையானது. ஆக, கொடியின் குறிக்கோள் செடியோடு இருப்பதல்ல, மாறாகக் கனி கொடுப்பதே! கிறிஸ்தவச் செயல்பாட்டை முதன்மைப்படுத்தாது, கிறிஸ்தவராய்ப் பெயரளவில் இருப்பதிலே நிறைவு காண்பவர் இயேசுவின் சீடரல்லர்.

கிளைகளாகிய நாம் திராட்சைச் செடியான இயேசுவோடு மூன்று வழிகளில் இணையலாம்.

1. இயேசுவின் பெயரால் ஒன்று கூடும் போது, அவர் நம்மோடு, நம் மத்தியில் இருப்பதாக வாக்களித்திருக்கிறார். "இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூட்டியிருக்கிறார்களோ, அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்” (மத்-18:20)

2. இயேசுவின் வார்த்தைக்குச் செவி மடுக்கும் போது, நாம் கேட்பதையெல்லாம் தருவதாக வாக்களிக்கிறார். “நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்" (யோவான் 15:7) காண்க லூக்.10:16.

3. இயேசுவின் திரு உடலையும் தீரு இரத்தத்தையும் பகிர்ந்திடும் போது, "எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்' (யோவான் 6:56).  நாம் இயேசுவின் மறையுடலின் உறுப்புக்கள். உடலை பிரிந்து உறுப்புக்கள் ஒன்றும் செய்ய இயலாது. அதுபோல் இயேசுவில் இணைந்து நாம் நற்கனிகள் தர வேண்டும் என்பதே தந்தையின் விருப்பம்.

 என்னைவிட்டு பிரிந்து

அருள்பணி ஏசு கருணாநிதி

உயர்ந்த மரம் ஒன்று. அந்த மரத்தில் நிறைய இலைகள் தளிர்த்திருந்தன. எல்லா இலைகளும் காற்றில் சலசலத்துக்கொண்டிருக்க ஒரு இலை மட்டும் சலசலக்காமல் விறைப்பாக நின்றது.
மரம் கேட்டது, 'எல்லாரும் காற்றில் சலசலக்க நீ மட்டும் விறைப்பாக இருப்பதேன்?'
இலை சொன்னது, 'நான் கோபமாக இருக்கிறேன்?'
... 'ஏன் கோபம்?'
... 'எனக்கு ஒரே இடத்தில் இப்படி ஒட்டிக்கொண்டு இருப்பது பிடிக்கவில்லை.'
... 'அப்படியா? நீ ஒட்டிக்கொண்டு இருப்பதுதானே உனக்கு நல்லது'
... 'எனக்கு இப்படி இருக்க விருப்பமே இல்லை'
மரம், 'சரி நீ உனக்கு விருப்பம்போல் செய். இப்போது நான் வேகமாக என்னையே ஆட்டுகிறேன். நீ தனியே பிய்ந்து போவாய். சந்தோஷமாக இரு!'
அப்படியே மரம் வேகமாக ஆட்ட, இந்த இலை மரத்திலிருந்து பிரிந்துவிடுகிறது. அப்படியே ஒய்யாரமாக அது கீழே விழ ஆரம்பித்தது. 'ஆஹா, நான் பறக்கிறேனே!' என்று சொல்லிக்கொண்டு மற்ற இலைகளையும், மரத்தையும் ஏளனமாகப் பார்த்தது. கீழே விழ ஆரம்பித்த இலை சற்று நேரத்தில் தரையைத் தொட்டது. தரையின் மண் உடலில் பட்டவுடன், 'ஐயோ, உடம்பெல்லாம் அழுக்காயிடுச்சே' என்று வருத்தப்பட்டது. சற்று நேரத்தில் இன்னொரு காற்றடிக்க, அது மறுபடியும் பறக்க ஆரம்பித்தது. 'அழுக்கானால் என்ன? நாம்தான் பறக்கிறோமே!' என்று மகிழ்ச்சி கொண்டது. சற்று நேரத்தில் சாலை, மனிதர்களின் மிதி, வாகனங்களின் சுமை, என அனைத்தையும் தாங்கி சாலையில் ஒதுங்கியது. காலையில் சாலையைக் கூட்ட வந்த குப்பை வண்டிக்குள் சிக்கி சில மணி நேரங்களில் நெருப்புக்கு இரையாகியது.

நிற்க.

கடந்த வாரம் ஒரு ஆலயத்தில் திருப்பலி முடிந்து அங்கிருந்த ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் அந்த ஆலயத்தில் அருள்சகோதரராக வார இறுதி பணி செய்திருப்பதால் அவரை அப்போதிருந்தே தெரியும். தன் குடும்பம், வேலை, குழந்தைகள் பற்றி பேச ஆரம்பித்த அவர், 'என் வாழ்க்கை ஓடாத பஸ்சில் ஏறி அமர்ந்துகொண்டு டிக்கெட் எடுப்பது போல இருக்கிறது' என்றார். அவர் பேசிய அந்த நேரத்தில் அவரின் வார்த்தைகள் என்னில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், மாலையில் வீடு வந்தவுடன் அதைப் பற்றி யோசித்தேன். 'ஓடாத பஸ்சில் ஏறி அமர்ந்து டிக்கெட் எடுப்பது' - பஸ் ஓடாது என்று தெரிந்தும் ஏன் அதில் ஏற வேண்டும்? அப்படி ஓடாது என்று தெரிந்தும் ஏன் டிக்கெட் எடுக்க வேண்டும்? பஸ்சில் ஏறி டிக்கெட் எடுப்பதன் நோக்கமே அதோடு ஓடி இலக்கை அடைவதுதான். அப்படி என்றால் இலக்கை அடைய உதவாத பேருந்தில் ஏறி அமர்வதால் என்ன பயன்? டிக்கெட் எடுப்பதால் யாருக்கு லாபம்?

இப்படி நிறைய கேள்விகள்.

ஆக, இருபது நிமிடம் ஏறி அமர்கின்ற பேருந்தில் நாம் அமர்வதன் நோக்கமே நம் இலக்கை அடைவதுதான். இவ்வாறாக, 'பேருந்தில் ஏறுதல்,' 'இலக்கை அடைதல்' என்னும் இரண்டு நிகழ்வுகள் இங்கே நடந்தேறினால்தான் நாம் வாங்கும் டிக்கெட்டிற்கு மதிப்பு இருக்கிறது. இல்லையா?

'பேருந்தில் ஏறுதல்,' 'இலக்கை அடைதல்' - இந்த இரண்டு வார்த்தைகளை, 'இணைந்திருத்தல்,' 'கனி தருதல்' என்னும் இரண்டு வார்த்தைகளாக நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் படிக்கின்றோம். இயேசு தன்னை திராட்சைக் கொடியாகவும், தன் சீடர்களை அதன் கிளைகளாகவும் உருவகித்துப் பேசுகின்ற இந்த நற்செய்திப் பகுதியை நாம் பலமுறை வாசித்திருக்கின்றோம். பல நேரங்களில் இங்கே 'இணைந்திருத்தல்' என்ற ஒன்றை மட்டுமே நாம் சிந்திக்கின்றோம். ஆனால், அதையும் தாண்டி மற்றொரு பரிமாணம் இருக்கிறது. அதுதான் 'கனி தருதல்.'

'இணைந்திருத்தல்' மற்றும் 'கனிதருதல்' என்னும் சொல்லாடல்களை இன்றைய நற்செய்தியின் பின்புலத்தில் புரிந்துகொள்வோம்:

அ. இணைந்திருத்தல். 'திராட்சைச் செடியொடு அதன் கொடி இணைந்திருப்பதுபோல இணைந்திருக்க வேண்டும்' என்கிறார் இயேசு. 'செடி' - 'கொடி' என்று புதிய மொழிபெயர்ப்பில் இருப்பது குழப்பத்தைத் தருகிறது. ஏனெனில் நம் பேச்சுவழக்கில் 'செடி-கொடி' என்று நாம் சொல்வது இரண்டு வேறுபட்ட தாவர வகைகளைக் குறிக்கிறது. பழைய மொழிபெயர்ப்பில் இருக்கும், 'கொடி-கிளை' சொல்லாடல்தான் தெளிவான பொருளைத் தருகிறது. மேலும், திராட்சை தானாக நின்று வளரும் செடி அல்ல. மாறாக, தூணிலோ, குச்சியிலோ, வேலியிலோ, பந்தலிலோ படரும் ஒரு கொடிதான். திராட்சைக்கொடி என்பது யூதர்களின் காதுகளுக்குப் பரிச்சயமான ஒரு உருவகம். முதல் ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்கள் 'யாவே இறைவனின் திராட்சைத் தோட்டம்' என்று அழைக்கப்பட்டனர் (காண். எரே 2:21, எசே 19:10-14, ஒசேயா 10:1, திபா 80:8-19, எசா 27:2-6). ஆக, முதல் ஏற்பாட்டில் யாவே இறைவனுக்கும், இஸ்ராயேல் மக்களுக்குமான உறவைக் குறித்துக்காட்டிய ஒரு உருவகத்தை, இரண்டாம் ஏற்பாட்டில் இயேசுவுக்கும், சீடர்களுக்கும் குறித்துக்காட்டுவதன் வழியாக, இயேசுவை புதிய இறைவன் என்றும், சீடர்களை புதிய இஸ்ரயேல் என்றும் முன்மொழிகின்றார் யோவான் நற்செய்தியாளர். இந்த இணைந்திருத்தல் மேல்நோக்கியும் இருக்க வேண்டும். கீழ் நோக்கியும் இருக்க வேண்டும். செடியோடு இணைகின்ற கொடி மேல்நோக்கி செடியோடும், கீழ்நோக்கி இலைகளோடும் இணைதல் வேண்டும். மேல்நோக்கிய இணைதல் இல்லையென்றால் கொடி காய்ந்துவிடும். கீழ்நோக்கிய இணைதல் இல்லையென்றால் இலைகள் வாடிவிடும். இவ்வாறாக, இயேசுவின் சீடர்கள் இயேசுவோடும், ஒருவர் மற்றவரோடும் இணைந்திருக்க வேண்டும்.


ஆ. கனிதருதல். கனிதராத மரத்தால் யாருக்கும் பலனில்லை. ஒரு மரத்தில் நிறைய கிளைகள் இருந்து அவற்றில் ஒன்றில்கூட கனிகள் இல்லையென்றால் அந்தக் கிளைகள் மரத்திற்குச் சுமையாகவே கருதப்பட்டு காலப்போக்கில் தறித்துவிடப்படும். இணைந்திருப்பதன் நோக்கம் கனிதருதலில் இருக்கின்றது. 'நீங்கள் கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது' என்று சொல்கிறார் இயேசு. ஏனெனில் மரத்தின் கனி மரத்திற்கு மட்டுமல்ல, மரத்தை நட்டவருக்கும், மரத்தின் உரிமையாளருக்கும் பெருமை சேர்க்கிறது. சீடர்கள் எத்தகைய கனிகளைக் கொடுக்க வேண்டும் என்பது பற்றி இயேசு சொல்லவில்லை. சீடர்களின் நல்வாழ்வு, மகிழ்ச்சி, இறைவார்த்தைப் பணி, அமைதி, பொருளாதார முன்னேற்றம், இவை அனைத்துமே இயேசு விரும்பும் கனிகளாக இருக்கலாம்.

'என்னைவிட்டுப் பிரிந்து' உங்களால் இணைந்திருக்கவும் முடியாது, கனிதரவும் முடியாது என்கிறார் இயேசு. இவ்வாறாக, இணைந்திருத்தலுக்கும், கனிதருதலுக்கும் முதற்பொருளாய் இருப்பவர் இயேசுவே.

நாம் ஒருவர் மற்றவரோடு உள்ள தொடர்பு கம்பித் தொடர்பிலிருந்து கம்பியில்லாத் தொடர்பாக இன்ஃப்ரா ரெட், ப்ளுடீத், ஏர், வைஃபை என மாறிக்கொண்டிருக்கிறது. கம்பியில்லாத் தொடர்பும் தொடர்புதான். இன்று கடவுளோடு இணைந்திருப்பதையும், ஒருவர் மற்றவரோடு இணைந்திருப்பதையும் இன்று சில நேரங்களில் சுமையாகப் பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டோம். செடி கொடியைத் தாங்குவது அதற்கு வலிக்கத்தான் செய்யும். கொடி செடியோடு இணைந்திருப்பதால் அதன் சுதந்திரம் பறிபோய்விட்டதாக அது சில நேரங்களில் நினைக்கும். ஆனால், செடியும், கொடியும் இந்த வலியை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

இன்று கடவுளோடு நாம் இணைந்திருக்கத் தடையாக இருப்பது எது?

சில நேரங்களில் கடவுள் நம்மைவிட்டுத் தூரமாக இருக்கிறார். அவருக்கும் நமக்குமான இணைப்பை ஏற்படுத்துகின்ற வைஃபை பாஸ்வேர்ட் நமக்குத் தெரியாததுபோல இருக்கிறது. 'அன்பு' என்ற வார்த்தையே நம்மைக் கடவுளோடும் ஒருவர் மற்றவரோடும் இணைக்கிறது என்று சொல்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 யோவா 3:18-24): 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துபவர் ... கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.' அன்பு என்பது மிகப்பெரிய அல்லது மிக அகலமான வார்த்தை. இது நட்பு, கனிவு, பரிவு, துணிவு, பணிவு, கருணை, பாசம், தாராள உள்ளம், பொறுமை, அமைதி என பல சிறுசிறு நிலைகளில் தன்னை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறாக, இன்று 'என்னைப் பிரிந்து இணைந்திருக்கவும், கனிதரவும் உங்களால் முடியாது' என்று சொல்கின்ற இயேசு அன்பை நமக்கு வாழ்வாக்கிச் சென்றுள்ளார். அந்த வாழ்வையொட்டி நம் வாழ்வை அமைத்துக்கொள்ளுதல் நலம்.

இது சாத்தியமா? என்று கேட்டால், 'சாத்தியம்' என்று விடை தருகிறது இன்றைய முதல் வாசகம் (காண். திப 9:26-31). இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கடவுளுக்கும் (தந்தைக்கும்) சீடர்களுக்கும் நடுவே நின்று இணைப்பை ஏற்படுத்துகின்றார். அந்த இணைப்பின் விளைவாக சீடர்கள் கனிதருகின்றனர். தந்தையும் மாட்சி பெறுகின்றார். அதே போல இன்றைய முதல் வாசகத்தில் பர்னபா சவுலுக்கும் திருச்சபைக்கும் நடுவே நின்று இணைப்பை ஏற்படுத்துகின்றார்.

பர்னபா.'பர்னபா' என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் கொடுக்கலாம். அரமேயத்தில் 'பர் நப்யா' என்று பிரித்தால் 'இறைவாக்கினரின் மகன்' அல்லது 'இறைவாக்கின் மகன்' என்றும், கிரேக்கத்தில் 'ஹ்யோஸ் பராக்ளேசேயுஸ்' எனப் பிரித்தால் 'ஆறுதலின் அல்லது தேற்றரவின் மகன்' என்றும் மொழிபெயர்க்கலாம் (காண். திப 4:36). சைப்பிரசு நாட்டைச் சார்ந்த யோசே என்ற இவரைத்தான் 'பர்னபா' என்று மாற்றுகின்றனர் திருத்தூதர்கள். திப 14:14ல் இவரும் திருத்தூதர் என அழைக்கப்படுகின்றார். பவுலின் தூதுரைப் பயணங்களில் உடனிருந்த உற்ற தோழர் பர்னபா.

பர்னபாவின் ஆளுமை நமக்கு மூன்று விதங்களில் இங்கே வெளிப்படுகிறது:

1. இணைப்புக்கோடு. பர்னபா ஒரு இணைப்புக் கோடு - பவுலுக்கும், மற்ற தூதர்களுக்கும். இணைப்புக் கோடாக இருக்க வேண்டியவர் இரு தரப்பினரையும் அறிந்தவராக இருக்க வேண்டும். அறிமுகம் செய்து வைப்பது ஒரு கலை. எல்லாருக்கும் இது வந்துவிடாது. அறிமுகம் செய்து வைக்க நமக்கு இரண்டு அறிமுகங்கள் தேவை: முதலில் நாம் யாரை அறிமுகம் செய்து வைக்கிறோமோ அவரைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும். இரண்டு நாம் யாரிடம் அறிமுகம் செய்து வைக்கிறோமோ அவர்களைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். மேலும், இந்த இரண்டு பேருக்கும் இடையே இருக்கின்ற பொதுவான குணம் என்ன என்பதை அறிந்து, இடம், பொருள், ஏவல் உணர்ந்துதான் அறிமுகம் செய்து வைக்க முடியும். சவுலைப் பற்றி மூன்று விடயங்களைச் சொல்கின்றார்: (அ) சவுல் ஆண்டவரைக் கண்டார், (ஆ) ஆண்டவர் அவரோடு பேசினார் ('அவர் ஆண்டவரோடு பேசினார்' என்றும் மொழிபெயர்க்கலாம்), (இ) தமஸ்குவில் நற்செய்தியை அறிவித்தார். ஆக, நீங்கள் இயேசுவைக் கண்டது போல அவரும் கண்டார். நீங்கள் அவரோடு, அல்லது அவர் உங்களோடு உரையாடியது போல இவரோடும் உரையாடினார். உங்களைப் போல இவர் பணியும் செய்கின்றார். ஆக, 'உங்களுக்கு சரி சமமானவர் இவர்' என்று அறிமுகத்தை நிறைவு செய்கின்றார்.

2. நம்பிக்கை. 'ஆண்டவர் பவுலுக்குத் தோன்றினார்' என்பதை நம்புகிறார். ஆச்சர்யமாக இருக்கிறது? கேள்வி கேட்கும் மனம் அல்ல, சரணடையும் மனமே நம்பிக்கையை நம்மில் வளர்க்கும். 'அப்படியா? ஆண்டவரைப் பார்த்தீங்களா? எங்கே? எப்போ? என்ன சொன்னார்?' என்ற எந்த கேள்வியும் இல்லாமல் நம்பும் துணிச்சல் இவருக்கு எங்கிருந்து வந்தது?

3. 'அவர் வளர வேண்டும். நான் குறைய வேண்டும்.' பர்னபாவால் அறிமுகம் செய்யப்பட்ட பவுலே காலப்போக்கில் பர்னபாவைவிட மிக முக்கியத்துவம் பெறுகின்றார். 'உன் வளர்ச்சிக்கு நான்தான் காரணம்' என்று சொல்லிக் காட்டவோ, அல்லது 'அவன் வளர்ந்து விட்டான், நான் அப்படியே இருக்கிறேன்' என்று பவுல் மேல் பொறாமைப்படவோ இல்லை பர்னபா. அடுத்தவரை வளரவிட்டுப் பார்க்கின்றார்.

பர்னபாவின் இந்தப் பண்பால் இன்றைய முதல் வாசகம் தொடர்ந்து, திருச்சபை வளர்ச்சி பெற்றது (திப 9:31) என நிறைவு பெறுகிறது.

இவ்வாறாக, இயேசுவைப்போல நாம் இணைந்திருத்தலும், கனிதருதலும் இயலும் என்பதை நமக்கு முன் பர்னபா என்னும் ஆளுமை வாழ்ந்துகாட்டிவிட்டது.

இறுதியாக, இந்தப் பர்னபாவின் பண்போ, அல்லது இயேசுவின் அன்போ நம்மிடம் இருந்தது என்றால்,

நாமும் அவரோடு இணைந்திருக்கவும், கனிதரவும் முடியும்.

ஏனெனில் அவரைப் பிரிந்து ... அவரைப் பிரிந்தால் வெற்றிடமே!இறைவனோடு இணைந்திருப்போம், மிகுந்த கனிதருவோம்!

அருள்பணி   மரிய அந்தோனிராஜ்


டைட்டானிக் கப்பலைக் குறித்துச் சொல்லப்படும் மிக முக்கியமான செய்தி. அந்தக் கப்பலை வடிவமைத்த பொறியாளர்கள் ‘டைட்டானிக் கப்பலுக்கு இணையான கப்பல் இந்த உலகத்தில் எங்கும் கிடையாது, இதனை இயேசு கிறிஸ்து நினைத்தாலும்கூட மூழ்கடிக்க முடியாது’ என்ற ஒருவிதமான ஆணவத்தில் வடிவமைத்தார்கள். அதனால் அதன் பக்கவாட்டில் ‘NOT EVEN CHRIST COULD MAKE IT SINK, NO GOD, NO POPE, NEITHER EARTH NOR HEAVEN CAN SWALLOW HER UP’ என்று எழுதி வைத்தார்கள்.
இதனைப் பார்த்த அந்தக் கப்பலில் பணியாற்றிய ஒருசில இறை நம்பிக்கையாளர்கள், “இப்படியெல்லாம் தயவு செய்து எழுதவேண்டாம், இறைவனுக்கு முன்பாக நாமெல்லாம் ஒன்றுமில்லை” என்றெல்லாம் அவர்களிடம் எடுத்துச் சொன்னார்கள். அவர்களோ, அதையெல்லாம் கேட்காமல், “நாம் யாரென்று இந்த உலகத்திற்குக் காட்டுவோம், அதனால் எழுதியது எழுதியதாகவே இருக்கட்டும்” என்று சொல்லி அப்படியே விட்டுவிட்டார்கள்.
குறிப்பட்ட நாளில் டைட்டானிக் கப்பல் கடலில் பயணமானது. தொடக்கத்தில் எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் உலகத்தில் இருக்கும் மிகப்பிரமாண்டமான கப்பலில் பயணிக்கின்றோம் என்ற ஒருவிதமான மமதையோடு பயணம் செய்தார்கள். திடிரென்று கப்பல் பனிப்பாறையின் மீது மோதி மூழ்கத் தொடங்கியது. கப்பல் பனிப்பாறையில் மோதிய பகுதியில்தான் ‘NO GOD NO POPE’ என்று எழுதப்பட்டிருந்தது. ஆம், ‘கடவுளே வேண்டாம், ஏன் கடவுளைவிட நாங்கள் பெரியவர்கள் என்ற ஆணவத்தோடு செயல்பட்டதால், உலகத்திலே மிகப்பெரிய சொகுசுக் கப்பல் என்று மார்தட்டுக்கொண்டு பயணப்பட்ட டைட்டானிக் கப்பல், கடைசியில் பனிப்பாறையில் மோதி கடலுக்குள் மூழ்கும் அவலத்திற்குத் தள்ளப்பட்டது.
‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்று சொல்வார்கள். ஆம், ஆண்டவரின் துனையின்று நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் யாராலும் மறுக்கமுடியாத உண்மை. பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் ‘இணைவனோடு இணைந்திருப்போம், மிகுந்த கனிதருவோம் என்னும் சிந்தனையைத் தருகின்றது. நாம் அதனைக் குறித்து ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.
நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து கூறுவார், “உண்மையான திராட்சைக் கொடி நானே... நான் உங்களோடு இணைந்திருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திரட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனிதர இயலாது. அது போல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது”. ஆம். நாம் மிகுந்த கனிதரவேண்டும் என்றால் இறைவனோடு/ இயேசுவோடு இணைந்திருக்கவேண்டும். இறைவனோடு எந்தெந்த வழிகளில் இணைந்திருக்கலாம் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவனோடு எப்போதும் இணைந்திருப்பதற்கான முதன்மையான வழி இறைவேண்டல் அல்லது ஜெபம் செய்வது ஆகும். ஆண்டவர் இயேசு சென்ற இடங்களில் எல்லாம் நன்மைகள் பலபுரிந்து, ஆண்டவருடைய வார்த்தையை மிகத் துணிச்சலோடு எடுத்துரைப்பதற்கு மிக முக்கியமான காரணியாக இருந்தது அவர் அனுதினமும் செய்துவந்த ஜெபம்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் நாள்முழுவதும் செய்துவந்த பல்வேறு பணிகளுக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் கொடுத்தது அவர் செய்துவந்த ஜெபம்தான். ஆகையால், நாம் இறைவனோடு இணைந்திருப்பதற்கு எப்போதும் ஜெபம் செய்யக்கூடிய மக்களாக இருக்கவேண்டும்.
இறைவனோடு இணைந்திருப்பதற்கான இரண்டாவது வழி இறைவார்த்தையைக் கேட்டு நடப்பது ஆகும். யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “கடவுளுடைய கட்டளையைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கின்றார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கின்றார்” என்கின்றார். இதுதான் உண்மை. யாராரெல்லாம் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்ந்தார்களோ/ வாழ்கின்றார்களோ அவர்களோடு கடவுள் இருந்தார்/ இருப்பார் என்று உண்மையிலும் உண்மை.
இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்ந்தபோது அவர்களோடு கடவுள் இருந்தார். என்றைக்கு அவர்கள் கடவுளின் கட்டளையை மறந்து, அதாவது யாவே கடவுளை மறந்துவிட்டு பாகாலை வழிபடத் தொடங்கினார்களோ அன்றைக்கே கடவுள் அவர்களை விட்டுப் பிரிந்து போனார்(?), அதனால் அவர்கள் வேற்று நாட்டவரால் நாடுகடத்தப்பட்டார்கள். ஆகவே, இஸ்ரயேல் மக்கள் கடவுளோடு இருந்தபோது, கடவுள் அவர்களோடு இருந்தார் என்பதையும், அவர்கள் கடவுளை விட்டுப் பிரிந்து சென்றபோது, கடவுள் அவர்களை விட்டுப்போனார் என உறுதியாகச் சொல்லலாம்.
கடவுளோடு ஜெபத்தின் வழியாகவும், அவருடைய கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வதன் வழியாகவும் அவரோடு இணைந்திருக்கலாம் என்று சிந்தித்துப் பார்த்த நாம், கடவுளோடு இணைந்திருப்பதால் என்ன நன்மை கிடைக்கின்றது என்று சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். நற்செய்தியில் இயேசு கூறுவார், ‘ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்” என்று. ஆம், நாம் கடவுளோடு இணைந்திருக்கின்றபோது நாம் மிகுந்த கனிதருவோம் என்பது ஆழமான உண்மை. நிறையப் புனிதர்கள், இறையடியார்கள் யாவரும் மிகுந்த கனிதரும் வாழ்க்கை வாழ்ந்ததற்குக் காரணம் அவர்கள் கடவுளோடு இணைந்திருந்ததே என்று நாம் உறுதிபடச் சொல்லலாம்.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும்போது நாம் ஜெபத்தின் வழியாகும், இறைவார்த்தையைக் கேட்டு நடப்பதன் வழியாகவும் இறைவனோடு இணைந்திருப்போம், அதன்வழியாக மிகுந்த கணிதருகின்றவர்களாவோம், இறையருளை நிறைவாய் பெறுவோம்.

 

Thursday, 19 April 2018

பாஸ்கா காலம் 4-ஆம் ஞாயிறு


பாஸ்கா காலம் 4-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்

திப 4:8-12; 1யோவா 3:1-2; யோவா 10:11-18


மறையுரை மொட்டுக்கள் - இருதயராஜ்


ஒரு பங்குத் தந்தை தனது பங்கிலே தங்குவதில்லை, ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றியபின் உடனடியாக 'மோட்டார் சைக்கிளில்' மாயமாக மறைந்து விடுவார். ஒரு ஞாயிறு அன்று திருப்பலி திறைவேற்றிய உடனே "மோட்டார் சைக்களில் வழக்கம் போல் பறந்து சென்ற அவர், ஒரு பெரிய குழியில் விழுந்து விட்டார்; வெளியே வரமுடியாமல் திணறினார். அவ்வழியே சென்ற பங்கு மக்கள், "இவர் அடுத்த ஞாயிற்றுக்கிழமை தான் நமக்குத் தேவைப்படுவார், அதுவரை அவர் இக்குழியிலேயே கிடக்கட்டும்" என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.

இன்று கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து மக்கள் பல்வேறு சபைகளுக்குச் செல்வதற்குப் பல காரணங்கள் கூறுகின்றனர். அக்காரணங்களில் ஒன்று. "பங்குத் தந்தைக்கு மேய்ப்புப்பணி சார்ந்த அக்கறையில்லை, அவர் பங்கில் தங்குவதில்லை, பங்கு மக்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்திப்பதில்லை."
இப்பின்னணியில் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் 'நல்லாயன் உவமை” முக்கியத்துவம் பெறுகிறது. பழைய உடன்படிக்கையில், கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நிலவிய உறவு ஓர் ஆயனுக்கும் அவருடைய ஆடுகளுக்கும் இடையே நிலவிய உறவுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது (எசா 40:11; எரே 23:3-4; எசே 34:11-16: திபா 23).
நல்லாயனுடைய தனிப்பண்புகள்: “அவர் இரவும் பகலும் தன் ஆடுகளுடன் இருக்கிறார். அவற்றின்மீது அக்கறை கொண்டு, அவற்றின் தேவைகளை நிறைவுசெய்து, அவற்றிற்காகத் தம் உயிரையும் கொடுத்து, அவற்றைக் கொடிய விலங்குகளிடமிருந்து பாதுகாக்கிறார்.”

ஆனால், போலி ஆயர்கள் தங்கள் ஆடுகளை மேய்க்காமல் தங்களையே மேய்த்துக் கொண்ட அவலநிலையில் (எசா 24:7-8). 'என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன்' என்று கடவுள் வாக்களித்தார் (எரே 3:15), கடவுளால் வாக்களிக்கப்பட்ட ஒப்புயர்வற்ற ஆயர் இயேசு கிறிஸ்துவே. அவர்தம் ஆடுகள் ஒவ்வொன்றையும் தனிப்பட்ட முறையில் அறிந்து, அன்புசெய்து. அவற்றிற்காகத் தன் இன்னுயிரையும் கையளிக்கிறார். மேலும் அவரது மந்தையைச் சாராத மற்ற ஆடுகளையும் கூட்டிச் சேர்த்து ஒரே மேய்ப்பன் கீழ் ஒரே மந்தையை உருவாக்குகிறார் (யோவா 10:14-16).

நல்லாயன் கிறிஸ்துவைப் பின்பற்றி, திருப்பணியாளர்கள், குறிப்பாக பங்குத்தந்தையர்கள், தங்களுடைய பங்கில் தங்கியிருந்து, பங்குமக்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அறிந்து, அன்பு செய்து, வீடுகளில் அவர்களைச் சந்தித்து, இயன்ற மட்டும் அவர்களுடைய தேவைகளை நிறைவுசெய்து, அவர்கள் மந்தையை விட்டு விலகாமல் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். கட்டாயத்தினாலோ இழிவான ஊதியத்திற்காகவோ பணிபுரியாமல் ஆர்வத்துடன் பணியாற்ற வேண்டும். மக்களை அடக்கி ஆளாமல் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருத்தல் அவசியம் (1 பேது 5:2-3).

காணாமற்போன தனது ஒரே ஆட்டைத் தேடிச் சென்றவர், பல இடங்களில் ஆட்டைக் காணாத நிலையில், ஒரு பூங்காவிற்குச் சென்றார். இரு காதலர்கள் இப்பூங்காவில் மெய் மறந்து பேசிக் கொண்டிருந்தனர். காதலன் காதலியிடம், "மானே! உன் முகத்தில் உலகமே தெரிகிறது” என்றான், உடனே ஆட்டைத் தேடிச் சென்றவர் அக்காதலனிடம், "தம்பி, அந்தப் பெண் முகத்தில் உலகமே தெரிஞ்சா, என் ஆடு எங்கே நிற்கிறது? என்று தயவு செய்து சொல்லப்பா' என்றார். இது பழைய கதை என்றாலும், ஓர் ஆயனுக்குத் தன் ஆட்டின் மீது இருக்கவேண்டிய அக்கறையை எடுத்துக்காட்டுகிறது. திருப்பணியாளர்கள் ஆலயத்திற்கு வருகின்றவர்களுக்கு மட்டும் பணிபுரியாமல், ஆலயத்திற்கு வராதவர்களையும் தேடிச் செல்லவேண்டாமா?

திருமேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை அக்கறையுடன் கண்காணிக்க வேண்டும், அவ்வாறே ஆடுகளும் தங்களுடைய மேய்ப்பர்களுடைய குரலுக்குச் செவிமடுத்து, மந்தையில் திருட்டுத்தனமாக நுழைந்து ஆடுகளைப் பறித்துக் கொண்டுபோகும் ஓநாய்களான போலிப்போதகர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் விழிப்பாயிருக்க வேண்டும்,
"ஆண்டவர் என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை " என்னும் 23-ம் திருப்பாவைக் குருக்கள், கன்னியர், பொதுநிலையினர் உண்மையிலேயே இன்று பாட முடியுமா? நமது நல்ல ஆயன் இயேசு கிறிஸ்துவா? அல்லது டி.வி. யா?

23-வது திருப்பாவை இக்காலத்தில் பின்வருமாறு தான் பாடமுடியும்: "டி.வி, என் ஆயன்; ஆகவே எனக்கொரு குறையுமிராது. அது என்னை பஞ்சுமெத்தையில் படுக்கச் செய்கிறது விசுவாச வாழ்விலிருந்து விலகச்செய்கிறது. என் ஆன்மாவைக் கொலை செய்கிறது, சிற்றின்பத்திற்கும் வன்முறைக்கும் அது என்னை அழைத்துச் செல்கிறது. தனிமையைக் கண்டு நான் பயப்படவே மாட்டேன். ஏனெனில் என் டி.வி, என்றும் என்னுடன் இருக்கின்றது. உலக மனப்பான்மையாலும் நுகர்வுப் பொருள் கலாசாரத்தாலும் டிவி, என்னைத் திருநிலைப்படுத்துகிறது. என் பேராசைப் பொங்கிவழிகிறது. சோம்பலும் அறியாமையும் என்னைப் பின்தொடரும். வாழ்நாள் முழுவதும் டி.வியைப் பார்த்த வண்ணம் என் இல்லத்தில் குடியிருப்பேன்."

இது வெறும் கற்பனையல்ல, முழுக்க முழுக்க உண்மை . துறவறத்தாரும் இல்லறத்தாரும் டி.வி.-யின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். டி.வி. நம்மை அடிமைப்படுத்தி, நமது மூளையைச் சலவை செய்து, சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலைப் பறித்து விட்டது. இப்பேராபத்திலிருந்து நாம் நம்மையும் நம்மைச் சார்ந்திருப்போரையும் காத்துக் கொள்ளவேண்டும்,
'நல்லாயன் ஞாயிறு' என்றழைக்கப்படும் இந்த ஞாயிறு இறை அழைத்தல் நாளாகவும் கொண்டாடப்படுகின்றது. பெரிய திரையிலும் சின்னத்திரையிலும் சிக்கித் தவிக்கும் இன்றைய இளைய சமுதாயம், "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" (மாற் 1:17) என்னும் நல்லாயன் குரலைக் கேட்டு. விசுவாசம் மற்றும் அர்ப்பண உணர்வுடன் அவரைப் பின்பற்றத் துணிச்சலுடன் முன் வரவேண்டும், கடலுக்குத் தேவை 'மீன்வலை' (fishing net), காதலுக்குத் தேவை 'இணையக வலை' (internet), ஆனால் இறை அழைத்தலுக்குத் தேவை 'விசுவாச வலை' (Faith net).
'ஆப்பிள் பெண்ணே நீயாரோ? ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ? உன்னைக்காணும் முன்னே கடவுளே வந்தாலும் தொழமாட்டேன்" எனப்பாடுகிறது திரைப்பட உலகம். "ஆண்டவரே நாங்கள் யாரிடம் செல்வோம்? வாழ்வளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" (யோவா 6:68) என்றழைக்கிறது விவிலிய உலகம். முந்தைய உலகம் நிழல் உலகம்; பிந்தைய உலகம் நிஜ உலகம், இன்றைய இளைஞர்கள் நிழல் உலகத்திலிருந்து நிஜ உலகத்திற்கு வருவார்களா?
"இளைஞரே, நீங்கள் வலிமை வாய்ந்தவர்கள், கடவுளின் வார்த்தை உங்களுள் நிலைத்திருக்கிறது. தீயோனை நீங்கள் வென்று விட்டீர்கள்" (1 யோவா 2:14),
கல்லறைக்கு அப்பால்...

அருள்னணி இ.லூர்துராஜ்


குருவுக்கான வரைபடம்


பழைய ஏற்பாட்டில் கடவுள் தன் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கை உறவை மூன்று விதங்களில் பார்க்கலாம்.
1, தந்தை - மக்கள் உறவு 
2. கணவன் - மனைவி உறவு
 3. ஆயன் - மந்தை உறவு
இந்த மூன்று வகை உறவுகளில் ஆயன் - மந்தை உறவு சிறிது அதிக அழுத்தம் பெறுவதை விவிலியத்தில் உணரலாம். (தி.பா.23, எசா.40,  எரேமி.23, எசேக்.34, யோவான் 10)

இந்த அடிப்படையில் இறைமகன் இயேசுவோடு அவரது அடிச்சுவட்டில் திருத்தூதர் வழிமரபினரும் ஆயர்பணி செய்ய அழைக்கப்படுகிறார்கள். அந்த வகையில் இன்று பங்குக் குருக்களும் ஆயர்களாகக் கருதப்படுகிறார்கள்.

இங்கெல்லாம் பணித்தளம் ஒன்றுக்குப் பங்குக்குரு வேண்டுமா? பங்கு மக்களின் தலையெழுத்தோ, பணியேற்கும் குருவின் தலையெழுத்தோ ஆயரின் கையெழுத்தைப் பொறுத்தது.

அமெரிக்காவில் ஒரு பங்கில் அப்படி இல்லையாம். குரு இல்லாத காலியிடத்தை நிரப்ப நேர்ந்தால் மறைமாவட்ட அலுவலகத்திலிருந்து மூன்று நான்கு பெயர்ப் பட்டியலும் அவர்களது தகுதிகள் திறமைகள் பற்றிய விவரங்களும் அனுப்பப்படும். பங்குப் பேரவை அதனை அலசி ஆராயும். வேண்டுமானால் ஒவ்வொருவரையும் அழைத்து நேர்முகப்  பேட்டி காணும். பங்கின் வளர்ச்சிக்கு, மக்களின் ஆன்மிக வாழ்வுக்கு, அவர்கள் என்ன திட்டம் வைத்துள்ளார்கள் என்பதை அறிந்து திருப்தியானால் ஒருவரை மேலிடத்திற்குப் பரிந்துரைக்கும். இல்லை  யென்றால் புதிய பட்டியலைக் கோரும். அப்படி ஒரு முதிர்ச்சியான  செயல்பாடு. ஆனால் அதுவெல்லாம் நமது மண்ணுக்கும் மனநிலைக்கும்  ஒத்துவருமா என்பது வேறு கேள்வி.

இப்படி ஒரு பங்குப் பேரவைக்கு வந்த பட்டியல்களில் உள்ள  எந்தக் குரு பற்றியும் மக்களுக்குத் திருப்தி இல்லை. நெடு நாட்களாக  அங்கு நிரந்தரப் பணியாளர் நியமிக்க முடியாமல் இருந்தது. பேரவைத் தலைவர் பொறுமை இழந்தார். எரிச்சலடைந்தார். ஒருநாள் திடீரென்று பேரவையைக் கூட்டினார். தனக்கு வந்த ஒரு விண்ணப்பத்தைப்
பேரவையில் சமர்ப்பித்துப் படித்தார்.

“பெரு மக்களே, உங்கள் பங்கின் காலியிடத்தில் என்னை ஏற்றுக் கொள்ளும்படி விண்ணப்பிக்கிறேன்.

"எனக்கெனச் சிறப்புத் தகுதிகள் சில உண்டு. நல்ல மறையுரையாளர், நல்ல எழுத்தாளர் என்றெல்லாம் சொல்வார்கள். நல்ல நிர்வாகி என்பவர்களும் உண்டு. நான் சென்ற பல இடங்களிலும் உறுதியான தலைமைப் பண்போடு செயல்பட முனைந்துள்ளேன். எனக்கு வயது ஐம்பதுக்கு மேல். ஒரே இடத்தில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருந்ததில்லை. இருந்த இடங்களிலும் என் பணி குழப்பங்களையும் கலவரங்களையும் எழுப்பியதால் வெளியேற நேரிட்டது.

“மூன்று நான்கு முறை நான் சிறைவைக்கப்பட்டேன். நீதி மன்றத்துக்குக் கூடச் சென்றதுண்டு. தற்காப்புக்காக உச்ச நீதி  மன்றத்துக்கே அப்பீல் செய்த வரலாறு உண்டு. என் உடல் நிலையும்  மிகச் சீரானது என்று சொல்வதற்கில்லை. என் உள்ளமோ... ஏதோ ஒன்று முள்போல் குத்திக் கொண்டே இருக்கிறது என்றாலும், இயன்ற வரை நிறையவே உழைக்கிறேன்.

"மற்றொன்றும் மறுப்பதற்கில்லை. பணியாற்றிய இடங்களில் எல்லாம் மதத் தலைமைப் பீடமும் என்னோடு எப்போதும் ஒத்துப் போனதும் இல்லை. புரிந்து கொண்டதும் இல்லை. இதையெல்லாம் அறிந்தும் நீங்கள் என்னைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், என்னால் முடிந்த அனைத்தையும் அர்ப்பண உணர்வோடு உங்களுக்காகச் செய்வேன் என்று வாக்களிக்கிறேன்..."

விண்ணப்பம் படிக்கப்படும் போதே பலப்பல முணுமுணுப்புக்கள்,கண்டனக் கனைகள், எதிர்க்குரல்கள். "என்ன கிண்டலா? கோர்ட்,சிறை என்று சுற்றுபவனா நமக்குப் பங்குக் குரு? உடலும் சரியில்லை, மனமும் சரியில்லை என்பவனா நமக்குப் பங்குக்குரு? இருந்தஇடமெல்லாம் கலாட்டா, கலவரம் என்கிறான். இங்கேயும் இரண்டு படுத்தவா அந்தக்குரு?...

பொறுமையாக இருந்த தலைவர் அமளி சிறிது ஓய்ந்ததும் நிமிர்ந்து பேசினார்: “நண்பர்களே, விண்ணப்பத்தை இன்னும் படித்து முடிக்கவில்லை. எழுதியவர் யார் என்று கேட்கக்கூட எவரும் நினைக்கவில்லை . அதற்குள் இப்படியா?...” என்றதும் தான் வியப்புடன் யார் அது என்ற கேள்வியை எழுப்பினர்.

“இதை எழுதியவர் ஆனானப்பட்ட திருத்தூதர் பவுல். திருச்சபையின் வரலாற்றிலேயே தனக்கு ஈடாக, இணையாகத் தோன்றிய நற்செய்திப் பணியாளர் யார் என்று சவால் விடும் புரட்சியாளர் பவுல்''.

"புனித பவுலா!” வாயடைத்து நின்றனர். அத்தனை பேரும் தொடர்ந்து பேச ஒன்றும் தோன்றாதவர்களாய்.

நகைச் சுவைக்காகவோ, இப்படியும் நடந்திருக்குமோ என்ற கேள்வியை எழுப்புவதற்காகவோ, கத்தரிக்காயாகட்டும் அல்லது கருவாடாகட்டும், நல்லதா சிறந்ததா என்று சோதித்து வாங்குவது தானே மனித இயல்பு, அதன்படி குறையில்லாத குரு வேண்டும் என்று எதிர்பார்க்கும் மக்களுக்கு அறிவுரையாகவோ இந்தக் கதையைச் சொல்லவில்லை.

குரு என்பவர் யார்? குருத்துவ அழைப்பும் நிலையும் எத்தகையது? அதன் வாழ்வும் பணியும் எத்தகையது? என்பதற்கெல்லாம் ஒரு வரைபடம் வேண்டுமென்றால் அது திருத்தூதர் பவுலின் வரலாறாகத்தான் இருக்கும்.

இயேசு தன்னை ஓர் ஆயனாக வெளிப்படுத்தித் தன்னைப் பற்றிச் சொன்ன வார்த்தைகளை ஒவ்வொரு பங்குக் குருவும் தன்னைப் பற்றிச் சொல்ல முடியுமா? மக்களிடையே இருந்து எடுக்கப்பட்ட மனிதன்தான் குரு. தான் பெற்ற குருத்துவத் திருநிலையால் தன் மனிதத் தன்மையை இழந்து விடுவதில்லை, திடீரென்று சம்மனசாகி விடுவதும் இல்லை என்றெல்லாம் குறைகளுக்குச் சப்பை கட்டி வாழ முடியாது!

நம் தமிழகத்தில் பெரும்பான்மையான பங்குகளில் பங்குக் குருக்களுக்கும் பங்கு மக்களுக்கும் நல்ல உறவு இல்லை என்பது கசப்பான எதார்த்தம். இந்தச் சூழலில் நல்லுறவுக்கான வழி ஒன்றே ஒன்று தான். அது ஒருவர் மற்றவரை அவர் இருப்பது போல் ஏற்றுக் கொள்வதே!

பொறுமையாக இருந்த தலைவர் அமளி சிறிது ஓய்ந்ததும் நிமிர்ந்து பேசினார்: “நண்பர்களே, விண்ணப்பத்தை இன்னும் படித்து முடிக்கவில்லை. எழுதியவர் யார் என்று கேட்கக்கூட எவரும் நினைக்கவில்லை . அதற்குள் இப்படியா?...” என்றதும் தான் வியப்புடன் யார் அது என்ற கேள்வியை எழுப்பினர்.
“இதை எழுதியவர் ஆனானப்பட்ட திருத்தூதர் பவுல். திருச்சபையின் வரலாற்றிலேயே தனக்கு ஈடாக, இணையாகத் தோன்றிய நற்செய்திப் பணியாளர் யார் என்று சவால் விடும் புரட்சியாளர் பவுல்''.
"புனித பவுலா!” வாயடைத்து நின்றனர். அத்தனை பேரும் தொடர்ந்து பேச ஒன்றும் தோன்றாதவர்களாய்.

நகைச் சுவைக்காகவோ, இப்படியும் நடந்திருக்குமோ என்ற கேள்வியை எழுப்புவதற்காகவோ, கத்தரிக்காயாகட்டும் அல்லது கருவாடாகட்டும், நல்லதா சிறந்ததா என்று சோதித்து வாங்குவது தானே மனித இயல்பு, அதன்படி குறையில்லாத குரு வேண்டும் என்று எதிர்பார்க்கும் மக்களுக்கு அறிவுரையாகவோ இந்தக் கதையைச் சொல்லவில்லை,
குரு என்பவர் யார்? குருத்துவ அழைப்பும் நிலையும் எத்தகையது? அதன் வாழ்வும் பணியும் எத்தகையது? என்பதற்கெல்லாம் ஒரு வரைபடம் வேண்டுமென்றால் அது திருத்தூதர் பவுலின் வரலாறாகத்தான் இருக்கும்.
இயேசு தன்னை ஓர் ஆயனாக வெளிப்படுத்தித் தன்னைப் பற்றிச் சொன்ன வார்த்தைகளை ஒவ்வொரு பங்குக் குருவும் தன்னைப் பற்றிச் சொல்ல முடியுமா? மக்களிடையே இருந்து எடுக்கப்பட்ட மனிதன்தான் குரு. தான் பெற்ற குருத்துவத் திருநிலையால் தன் மனிதத் தன்மையை இழந்து விடுவதில்லை, திடீரென்று சம்மனசாகி விடுவதும் இல்லை என்றெல்லாம் குறைகளுக்குச் சப்பை கட்டி வாழ முடியாது!
நம் தமிழகத்தில் பெரும்பான்மையான பங்குகளில் பங்குக் குருக்களுக்கும் பங்கு மக்களுக்கும் நல்ல உறவு இல்லை என்பது கசப்பான எதார்த்தம். இந்தச் சூழலில் நல்லுறவுக்கான வழி ஒன்றே ஒன்று தான். அது ஒருவர் மற்றவரை அவர் இருப்பது போல் ஏற்றுக் கொள்வதே!


 


மகிழ்சிசியூட்டும் மறையுறைகள்

குடந்தை ஆயர் அந்தோனிசாமி


நாம் மீட்புப் பெற என்ன செய்யவேண்டும்?


சென் மாஸ்டர் சோயென் ஷாக்கு அறுபத்தோரு வயதுவரை இந்த உலகத்திலே வாழ்ந்தார். இவர் வாழ்ந்த காலத்திட்டத்தில் அவர் மிகவும் அரிய போதனைகளை இந்த உலகுக்குத் தந்தார். இவருடைய வாழ்க்கையிலே நடந்த நிகழ்ச்சி இது!

சோயென் சிறுவனாக இருந்தபோது அவருடைய சென் மாஸ்டர் வெளியே சென்றிருந்தபோது கால்களை நீட்டி, பகலில் படுத்துத் தூங்கிவிட்டார்: சுமார் மூன்று மணி நேரம் சென்ற பிறகு அவர் திடீரென கண்விழித்தபோது அவருடைய சென்மாஸ்டர் உள்ளே நுழைவதைப் பார்த்துவிட்டார். என்னை மன்னித்துக்கொள் என்னை மன்னித்துக்கொள் என்று மெல்லக்கூறிவாறு, யாரோ ஒரு புகழ்பெற்ற விருந்தாளியைக் கடந்துசெல்லுவது, போல, சொயென் மீது கால்கள் படாதவாறு மிகவும் எக்சரிக்கையாக சென்மாஸ்டர் சோயெனைத் தாண்டி உள்ளே சென்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சோயென் பகலில் தூங்குவதே இல்லை. ஒரு சென்மாஸ்டாரின் அன்பு ஒரு சீடனை பகல் தூக்கத்திலிருந்து விடுவித்ததை மீட்டதை இங்கே காண்கின்றேன்.

நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்கந்தத் தம் உயிரைக் கொடுப்பார். அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கின்றேன்" (யோவான்10:11,15) என்று சொன்னபடியே இயேசு அவரது உயிரை உலக மக்களுக்குக் கொடுத்தார். இப்படி உயிரைக் கொடுத்ததின் வழியாக ஒரு மனிதன் எந்த் அளவுக்கு இந்த உலகத்தை அன்பு செய்ய வேண்டும் என்பத்தை உலகுக்குக் கட்டிக்காட்டி, உலகத்தை இயேசு சுயநலத்திலிருந்து மீட்டார்.

நாம் உண்மையிலேயே கடவுளின் மக்களாக (இரண்டாம் வாசகம்) வாழ விரும்பினால், இயேசுவின் அன்பு நிறைந்த பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு இவற்றின் உள் பொருளை உணர்ந்து. சுயநலத்திலிருந்தும் அது பெற்றெடுக்கும் பாவங்களிலிருந்தும் நம்மையே நாம் விடுவித்துக்கொண்டு மீட்கப்பட்டவர்களாக வாழ முன்வர வேண்டும்.

நாம் மீட்பு பெறுவதற்காகவே (முதல் வாசகம்) இயேசு அவருடைய வாழ்க்கையை ஒரு முன் உதாரணமாக்கினார். இந்த உண்மையைப் உணர்ந்து, செயல்பட நமக்குத் தேவையான ஞானத்தைக் கேட்டு இறைவனிடம் மன்றாடுவோம்.

இறைவன் இயேசுவின் ஆழமான அன்பைப் பார்த்துப் பாராட்டுகின்ற பாராட்டாளர்களாக மட்டுமல்ல, இயேசுவின் வாழ்க்கையைப் படிக்கும் மாணவர்களாக மட்டுமல்ல, இயேசுவின் தியாகத்தை அறிக்கையிடும் நற்செய்தியாளர்களாக மட்டுமல்ல; இயேசுவின் சொல்லாலும், செயலாலும் தொடப்பட்டவர்களாய் விடுதலை அடைந்தவர்களாய் மீட்கப்பட்டவர்களாய் வாழ எங்களுக்கு அருள்தாரும். ஆமென்.

மேலும் அறிவோம்
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் (குறள்: 228)

பொருள் : வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து. இவர் மகிழ்வதைக் கண்டு அருளுடையவர் அடையும் இன்பம் பெரிதாகும். அத்தகைய இன்பத்தைப் பற்றித் தெரியாதவரே தாம் சேர்த்த பொருளை ஏழை எளியோருக்கு வழங்காது. பிறர் கொண்டு போக இழக்கும் இரக்கம் அற்றவர் ஆவர்.Friday, 13 April 2018

பாஸ்கா கால 3-ஆம் ஞாயிறு

பாஸ்கா கால 3-ஆம் ஞாயிறு 


இன்றைய வாசகங்கள்
திப 3:13-15, 17-19; 1 யோவா 2:1-5; லூக் 24:35-48


மகிழ்ச்சியூட்டும்  மறையுரைகள்


குடந்தை ஆயர் அந்தோனிசாமி
ஆண்டவரை அறிந்துகொள்வோம்.


சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க நாட்டிலே நடந்த ஓர் உண்மை நிகழ்ச்சி. உலகப் புகழ்பெற்ற மாபெரும் நயாகரா நீர்வீழ்ச்சி! அதன் மீது கயிறு ஒன்று கட்டப்பட்டது. அதன் நீளம் ஆயிரத்து நூறு அடிகள். கையிலே எந்தக் கம்பும் இல்லாமல் அக்கயிற்றின் மீது பிரான்ஸ் நாட்டு நிபுணர் பிளாண்டைன் என்பவர் நடந்து காட்டினார்.

அவர் நடந்து சென்றதைப் பார்க்க பெரிய கூட்டம்! அந்தக் கூட்டத்தைப் பார்த்து பிளாண்டைன், "உங்களில் யாராவது முன்வந்தால், அவர்களை நான் என் தோள் மீது சுமந்துகொண்டு இந்தக் கயிற்றின் மீது நடந்து காட்டுகின்றேன்” என்றார். ஹாரி கால்கார்டு என்பவர் முன்வந்தார். ஹாரி கால்கார்டைச் சுமந்து கொண்டு பிளாண்டைன் கயிற்றின் மீது நடக்கத் துவங்கினார். கயிறு ஆடத்துவங்கியது. ஹாரி கால்கார்டின் மனத்துக்குள் அச்சம் புகுந்தது: கீழே பார்த்தார்.

பயணத்தைத் துவங்குவதற்கு முன் கயிற்றின் மறுபக்கம் போய் சேரும்வரை கீழே பார்க்கக்கூடாது என்று பிளாண்டைன் ஹாரி கால்கார்டை எச்சரித்திருந்தார். அதை மறந்து ஹாரி கால்கார்டு கீழே பார்த்தார். அவர் கண்கள் முன்னே சீறிப்பாய்ந்து கீழே விழுந்து கொண்டிருந்த மாபெரும் ஆறு! அவர் பயங்கரமான பள்ளத்தாக்கிற்குள், கற்பாறைகள் மீது விழுந்து கொண்டிருந்த தண்ணீரைப் பார்த்தார். அவர் நெஞ்சம் படபடத்தது, உடல் நடுங்கியது.

அப்போது பிளாண்டைன் தம் தோள் மீது சுமந்து சென்றவரிடம், கீழே பார்க்காதே! பார்த்தால் உன்னைக் கீழே போட்டுவிடுவேன் என்றார். அதன் பிறகு சுமக்கப்பட்டவர் கீழே பார்ப்பாரா? கீழே பார்க்கவில்லை ! மேலே பார்த்தார். அவரது அச்சம் அவரைவிட்டு அகன்றது ; நடுக்கம், குழப்பம், மயக்கம் அனைத்தும் மறைந்து போயின! வெற்றிகரமாக பிளாண்டைன் கயிறின் மறுபக்கத்தை அடைந்தார்.

இன்று நம் நடுவே உயிர்த்திருக்கும் இயேசு நம் ஒவ்வொருவரையும் பார்த்து : "உங்களை நான் சுமந்து செல்கின்றேன்! நீங்கள் என் தோள் மீது இருக்கின்றீர்கள். என் மீது நீங்களிருக்கும்போது உங்கள் பாவப் பள்ளத்தாக்குகளை, பயங்கரக் குற்றங்களை, ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் அவமானச் செயல்களைப் பார்க்காதீர்கள். மேலே பாருங்கள். அன்பும், அருளும் மிக்க என் விண்ணகத் தந்தையைப் பாருங்கள். இரக்கமே உருவான அவரிடம் உங்களுக்காகப் பரிந்து பேசுகின்றேன் (இரண்டாம் வாசகம்). அவர் ஒருபோதும் உங்களை உதறித் தள்ளமாட்டார்" என்கின்றார்.

இயேசுவும் (நற்செய்தி), அவருடைய சீடர்களும் (முதல் வாசகம்) நம்மிடம் எதிர்பார்ப்பது மனமாற்றம் ! அவர்கள் விரும்பும் மனமாற்றத்தை நாம் அடைய ஓர் அருமையான வழி விண்ணகத் தந்தையை நம்பிக்கையோடு நோக்குவதாகும்.

இறைவனைப் பார்க்கும்போது அவரின் மூன்று முக்கியமான குணங்களை நமது மனக்கண் முன்னால் நிறுத்திக்கொள்வது நல்லது :
1, கடவுளின் பாசம்: நாம் கடவுளின் உருவிலே படைக்கப்பட்டவர்கள் (தொநூ 1:27]. ஆகவே அவர் நம்மை ஒருபோதும் வெறுப்பதில்லை (எசா 49: 15-16).
2. கடவுளின் ஒப்பந்தம்: "இஸ்ரயேல்! முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்; நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன். மாறாத அன்புடன் உன்னோடு மலர் ஒப்பந்தம் செய்துகொள்வேன்; ஆண்டவராம் என்னை நீயும் அறிந்து கொள்வாய்" (ஓசே 2:19-20) என்கின்றார் நம் இறைவன்.
3. கடவுளின் பொறுமை : "ஆண்டவர் ... உங்களுக்காகப் பொறுமையோடிருக்கின்றார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாற வேண்டுமென விரும்புகின்றார்” (2 பேது 3:9) என்கின்றார் புனித பேதுரு.

மேலும் அறிவோம் :
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (குறள் : 3). 

பொருள் : அன்பால் இறைவனை நினைந்து போற்றுபவர் உள்ளமாகிய தாமரையில் வீற்றிருப்பவன் இறைவன். அந்த இறைவன் திருவடிகளைப் பின்பற்றி, நல்ல நெறியில் செல்வோர் பூவுலகில் நெடுங்காலம் புகழுடன் வாழ்வர்.

உயிர்ப்பின் சாட்சிகள்

கல்லறைக்கு அப்பால்

அருள்பணி இ.லூர்துராஜ்


1941 ஜனவரித் திங்கள். ஒருநாள் இங்கிலாந்து நாட்டுக் கடலில் சென்று கொண்டிருந்த கப்பலை ஆர்த்தெழுந்த புயற்காற்று அலைக் கழித்தது. இரவு நேரம், கப்பலை இருள் கவ்வியது. கப்பல் புயற்காற்றில் அலைமோத பொருட்கள் அனைத்தும் வெளியில் நாலாபக்கங்களிலும் வீசி எறியப்பட்டன. தங்கள் உயிரைக் காப்பாற்ற பயணிகள் பாய்மரக் கம்பத்தோடு தங்களைப் பிணைத்துக் கொண்டார்கள். பிணைத்துக் கொண்டபோது உடலில் காயம் அடைந்தார்கள். உடலில் காயம் பட்டாலும், இரத்தம் கசிந்தாலும், பாய்மரத்தோடு பிணைத்துக் கொண்டால் உயிர் பிழைப்போம் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது.

பொழுதும் புலர்ந்தது. புயலும் ஓய்ந்தது. புதுத்தெம்பும் மலர்ந்தது.

திருத்தூதர்கள் வாழ்விலும் இயேசுவின் மரணம் ஒரு சூறாவளியையே கிளப்பிவிட்டது. அந்நேரத்தில் இவர்கள் தங்களை மெசியாவின் பாடுகள் பற்றிய இறைவாக்குக்களோடு பிணைத்துக் கொண்டு இருந்திருந்தால் தங்களுடைய வாழ்வில் அலைக்கழிக்கப்  பட்டிருக்க மாட்டார்கள்.

தம்முடைய சீடர்களுக்குத் தெளிவைத் தந்து நம்பிக்கைக்கு இட்டுச் செல்ல எப்படியெல்லாம் முயற்சிக்கிறார் உயிர்த்த இயேசு! கலங்கிய உள்ளங்களுக்கு அமைதி அளிக்கிறார்: "உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று அவர்களை வாழ்த்தினார்" (லூக்.24:36). பல்வேறு வழிகளில் அவர்களுடைய நம்பிக்கைக்கு வலுவூட்டுகிறார்: "நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள். எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே, இவை ஆவிக்குக் கிடையாதே என்று அவர்களிடம் கூறினார்" (லூக்.24:39) எம்மாவு சீடர்கள் போல, இறைவார்த்தை அவர்களது மனக் கண்களைத் திறக்கிறது: “அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார்” (லூக்.24:45) சீடர்களுடைய பணியை, பொறுப்பை நினைவூட்டுகிறார்: "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும் பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள். என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும்... இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்" (லூக்.24:46-48)

இயேசுவின் சீடர்கள் அவரது உயிர்ப்புக்குச் சாட்சிகள்! எனவேதான் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட பேதுரு வீறுகொண்டு வீரியத்தோடு முழங்குகிறார்: “வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்று விட்டீர்கள். ஆனால், கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள்" (தி.ப.3:15)

இயேசுவின் உயிர்ப்பில் இரண்டு கோணங்கள் உண்டு.
1. இயேசுவின் உயிர்ப்பு ஒரு வரலாற்று நிகழ்வு என்பது. இது கல்லறைக் காவலர்களுக்குக் கூடத் தெரியும்.
2. இயேசுவின் உயிர்ப்பு மனிதகுல மீட்பு என்பது. இது அந்த நிகழ்ச்சியின் உட்பொருள். அதைத் திருத்தூதர்கள் மட்டுமே அனுபவ அறிவாகப் பெற்றனர். எனவேதான் அவர்கள் சாட்சிகள்.
உயிர்ப்பின் சாட்சிகள் என்பவர்கள் இயேசு உயிர்த்தார் என்பதைச் செய்தியாகச் சொல்பவர்கள் அல்ல. இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொண்டவர்கள். உயிர்த்த இயேசு உயிர்ப்பின் ஆற்றலைத் தம்மோடும், தம் வழியாகப் பிறரோடும் பகிர்ந்து கொள்கிறார் என்பதை உணர்ந்தவர்கள்.

உலகக் கண்ணோட்டத்தில் சாட்சி என்பவர் தான் கண்டதும் கேட்டதும் உண்மை என்று உறுதிமொழி கொடுப்பவர். ஆனால் விவிலியப் பார்வையில் தான் கண்டதற்கும் கேட்டதற்கும் தன்னையே அர்ப்பணிப்பவரே சாட்சி. கடந்த கால நிகழ்வாக அல்ல, இன்றைய எதார்த்தமாக வெளிப்பட வேண்டும் இயேசுவின் உயிர்ப்பு. கடந்த காலத்தைக் காட்டியே எந்தச் சமயமும் காலந்தள்ள முடியாது. அப்படி யென்றால் என்றோ ஒருநாள் சாவை வென்று கல்லறையினின்று இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதற்கு அல்ல, இன்று என் இதயக் குகையில் இயேசு எப்படி உயிரோட்டத்தோடு இயங்குகிறார் என்பதற்கு நான் சாட்சி. இயேசு பாவத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்பதற்கல்ல, 

அவர் என் வாழ்வில் பாவத்தின் சக்திகளை வென்றுயிர்த்தார் என்பதற்கு நான் சாட்சி. உயிர்ப்பில் இயேசுவுக்கு என்ன நிகழ்ந்தது என்பதல்ல, உயிர்ப்பால் சீடர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதே சாட்சியத்திற்கான அடித்தளம். இயேசுவின் உயிர்ப்பால் மனிதன் பெறும் விடுதலை, காணும் மாற்றம், வாழ்க்கைத் திருப்பம் இவைதாம் நாம் சாட்சியா, எதிர் சாட்சியா என்பதை உணர்த்தும்.

இயேசு இயக்கம் பரவ உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாக நாம் திகழவேண்டியது தேவை. அதற்காக எங்கோ ஓர் இடறல், எவரோருவர் எதிர்சாட்சி என்பதால் இயேசுவைப் பற்றி அறிந்திருந்தும் அவரோடு இணைய மறுப்பது எந்த வகையில் நியாயம்? நாட்டின் தந்தை vப் போற்றப்படும் அண்ணல் காந்தி சொன்னார், “நான் கிறிஸ்துவை நேசிக்கிறேன், ஆனால் கிறிஸ்தவர்களை வெறுக்கிறேன்” என்று.
தனக்கு ஆசை இருந்தும் கிறிஸ்தவச் சமயத்தைத் தழுவத் தடையாக இருந்ததாம். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவைப் போல் வாழ வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அடையாளங்களாக அமையப் பெற்றவை என்றைக்கும் உண்மைப் பொருளுக்குப் பதிலாக அமைய முடியாது. "அந்த நிலாவைத் தான் என் கையிலே புடிச்சேன்” என்று தண்ணீரில் நிழலாய்ப் படிந்த நிலவைக் கையிலே தாங்கிப் பாடினாளே, அது உண்மையான நிலவாக முடியுமா? அதுபோல அறிவை வளர்த்துக் கொள்ளப் பலமுறை விவிலியத்தைப் படிக்கலாம். ஆனால் படித்தபின் அந்தக் கருத்து சூப்பர் என்று சொல்லிவிட்டு, அதில் உள்ள உண்மையை எதிர்கொள்ள, ஏற்றுக் கொள்ள மறுப்பவரை என்ன வென்பது?

"இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற் காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன'' (யோவான் 20:31) வாழ்வு தரும்படியாக வாழ்வுக்கு உயிர்த்தெழுந்த கிறிஸ்து உண்மையான இறைமகன் என்பது அவரது உயிர்ப்பில்தான் தெளிவாகிறது. இந்த வரலாற்று உண்மையை ஏற்றுக் கொள்ள, கிறிஸ்தவன் சரியில்லை என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. இந்தச் சிந்தனை, கிறிஸ்தவன் வாழுகிற தவறான வாழ்க்கைக் கான சப்பைக் கட்டு அல்ல!மறைமொட்டுக்கள்
அருள்பணி இருதயராஜ்


இரண்டுபேர் கிணற்றில் குதித்தனர், அவர்களில் ஒருவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்; மற்றவரோ தண்ணீர் மேல் மிதந்தார். காரணம் என்ன? தண்ணீரில் மூழ்கி இறந்தவர் தலைக்கனம் பிடித்தவர், தண்ணீர்மேல் மிதந்தவர் மர மண்டையர்.

மெசியா பாடுபட்டு, சிலுவையில் இறந்து, உயிர்த்தெழுந்து உலகை மீட்க வேண்டும் என்னும் கடவுளின் மீட்புத் திட்டத்தைப் பரிசேயர்கள் புரிந்து கொள்ளவில்லை; ஏனெனில் அவர்கள் தலைக்கனம் பிடித்தவர்கள். இயேசுவின் சீடர்களும் புரிந்து கொள்ள வில்லை; ஏனெனில் அவர்கள் மரமண்டையினர். உண்மையில், உயிர்த்த ஆண்டவர் எம்மாவுக்குச் சென்றுகொண்டிருந்த இரு சீடர்களையும் 'அறிவிலிகளே, மந்த உள்ளத்தினரே' என்று கடித்துகொண்டார். (லூக் 24:25).

இன்றைய நற்செய்தியில் உயிர்த்த இயேசுவைக் கண்ட சீடர்கள் திகிலும் அச்சமும் கொண்டவர்களாய். ஏதோ ஓர் ஆவியைக் காண்பதாக நினைத்தனர். இயேசுவோ, "நான்தான்" என்றுகூறி, அவர்கள் கண்டது ஓர் ஆவியல்ல, மாறாக எலும்பும் தசையும் கொண்ட, ஊனுடல் எடுத்த அதே நாசரேத்து இயேசு என்பதை எண்பித்தார்.

கடவுள் ஒருவருக்குத்தோன்றி, "நான் தான் கடவுள்" என்று கூறியபோது, அம்மனிதர், "நீங்கள் கடவுள் என்பதை எண்பிக்க அடையாள அட்டை காட்டுங்கள்" என்று கேட்டாராம்.

உயிர்த்த ஆண்டவர் தம் சீடர்களுக்குக் காட்டிய அடையாள அட்டை என்ன? "என் கைகளையும் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள். எனக்கு எலும்பும் தசையும் இருப்பதைக் காண்கிறீர்களே. இவை ஆவிக்குக் கிடையாதே” என்றார் (லூக் 24:39).

'என் முகத்தைப் பாருங்கள்' என்று இயேசு கூறாமல், தமது கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் ஏற்பட்டத் தழும்பைப் பார்க்கும்படி கேட்கிறார். மகிமையுடன் உயிர்த்த இயேசு பாடுகளின் தழும்புகளுடன் உயிர்த்தெழுந்தார் என்பதை நாம் ஒருபோதும் மறக்கமுடியாது, வீர மரணம் அடைந்த அதே இயேசு விழுப்புண்களுடன் உயிர்த்தெழுந்தார்,

சிலுவையில் அறையப்பட்ட 'வரலாற்று இயேசுவும்' (Jesus of 
history), மாட்சியுடன் உயிர்த்தெழுந்த விசுவாச இயேசுவும் (Jesus of faith) ஒரே ஆள் தான் என்பதை ஐயத்திற்கு இடமின்றி எண்பிக்கிறார் நற்செய்தியாளர் லூக்கா, எனவேதான், உயிர்த்த இயேசு சீடர்களுக்கு முன்பாக வேகவைத்த மீனை உண்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார் . (லூக் 24:42-43). இயேசுவின் உயிர்ப்பு வரலாற்றிற்கு அப்பாற்பட்டது என்றாலும்கூட, அது உண்மை நிகழ்வு ஆகும்.

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு இயேசு உண்மையிலே உயிர்த்தார் எனச் சான்று பகர்கிறார் (திப 3:13-15). திருத்தூதர் யோவானும், "தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்; கண்ணால் கண்டோம், கையால் தொட்டுணர்ந்தோம்" என்கிறார் (1யோவா 1:1). எனவே திருத்தாதர்கள் இயேசுவைக் கண்டு, கேட்டு அவருடன் உண்டு. உற்று உணர்ந்தனர், அவர்கள் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் தான் (திப 4:20) நமக்கு அறிவித்துள்ளனர். அவர்களுடைய சாட்சியத்தை ஏற்று, நிலைவாழ்வும் நிறைமகிழ்ச்சியும் அடைய நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
இயேசு உயிர்த்தெழுந்தது மண்ணாக வாழ்வுக்குத் திரும்புவதற்காக அன்று, மாறாக விண்ணக மகிமையில் நுழைவதற்காகவே. அவர் விண்ணகத் தூயகத்தில் அமைந்து விட்டார். (எபி 9:24), அவ்வாறு அவர் விண்ணகம் செல்லுமுன், மறைநூலைச் சரியாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் தம் சீடர்களின் மனக்கண்களைத் திறந்தார். அவர்கள் மீது தூய ஆவியைப் பொழியப் போவதாக வாக்களித்தார், "பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என்று அனைத்துலக மக்களுக்கும் போதிக்கும்படி  போரித்தார் (லூக் 24:4549).

தூய ஆவியாரின் வல்லமையுடன், மறைநூலை மையமாகக் கொண்டு, அனைத்து நாட்டு மக்களுக்கும் 'மனமாற்றத்தின் நற்செய்தியை அறிவிப்பது திருச்சபையின் கடமையும் உரிமையுமாகும். இக்கடமையை ஆற்ற, விண்ணகத்தில் கடவுளின் வலப்பக்கம் அமர்ந்து நமக்காகப் பரிந்துபேசும் கிறிஸ்து (உரோ 8:34), உலகு முடியும் வரை எந்நாளும் நம்மோடு இருக்கிறார் (மத் 28:20) என்பதை நாம் உணர்ந்து வாழ்கிறோமா?

'நாயினும் கடையேன்', அதாவது 'நாயை விட நான் கேடுகெட்டவன்' என்ற தம் நாட்டு ஞானிகள் கூறுவர். ஏனெனில், நாயானது தனது தலைவர் மாறுவேடத்தில் வந்தாலும், தனது மோப்ப சக்தியால் அவரை அடையாளம் கண்டுகொள்ளும் ஆனால், கடவுள் பல்வேறு வடிவங்களில் வரும்போது அவரை அடையாளம் கண்டு கொள்ளும் ஆற்றல் மனிதருக்கு இல்லையே! எனவே, அவர்கள் நாயினும் கேடு கெட்டவர்கள் என வருந்துகின்றனர் ஞானிகள்.

உயிர்த்த இயேசு சீடர்களுக்கு வேற்றுருவில் (மாற் 16:12) தோன்றினார். ஆனால், எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை (லூக் 24:18). மகதலா மரியாவோ அவரைத் தோட்டக்காரர் என நினைத்தார் (யோவா 20:15).

திபேரியாக் கடல் அருகே அவர் தோன்றியபோது சீடர்கள் அவரை அறியவில்லை (யோவா 21:4).
இன்றும் இயேசு நம் வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளில், பல்வேறு வடிவங்களில் தோன்றி, "நான்தான்" என்கிறார். நாமே அவரை அடையாளம் கண்டு கொள்ளாதவாறு நமது பயஉணர்வு, பகைமை உணர்வு, தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு. தன்னலம், ஆணவம், முன் சார்பு எண்ணங்கள் போன்றவை நமது விசுவாசப் பார்வையை மறைக்கின்றன.

இயேசுவின் இரண்டாம் வருகைவரை, அவரை மறைநூலிலும் அருளடையாளங்களிலும் அப்பம் பிடுவதிலும் இன்னும் சிறப்பாக ஏழை எளிய மக்களிலும் நமது இன்பதுன்பங்களிலும் கவலை கண்ணீரிலும் ஏக்கங்கள் ஏமாற்றத்திலும் அடையாளம் கண்டு கொள்ளப்பழகிக் கொள்வோம்,

அன்றாட வாழ்வும் ஓர் அருளடையாளமே!