Monday 29 January 2018

பொதுக் காலம் ஐந்தாம் ஞாயிறு

பொதுக் காலம்  ஐந்தாம் ஞாயிறு

யோபு 7:1-4, 6-7; 1 கொரி 9:16-19, 22-23 மாற் 1:29-39

 

மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி – குடந்தை ஆயர் அந்தோணிசாமி


இன்றும் வரம் தந்துகொண்டிருக்கின்றேன் என்கின்றார் இயேசு. அன்று யோபு புலம்பியது போல (முதல் வாசகம்) இன்றும் புலம்புகின்ற மனிதர்கள் நம் நடுவே உண்டு மலருக்கு மணமழகு தேனுக்குச் சுவையழகு கடலுக்கு நீரழகு நீருக்கு மீனழகு! மீனுக்குக் கண்ணழகு! கண்ணுக்கு இமையழகு என் வாழ்வில் எந்த அழகும் இல்லை! நான் செல்லும் பயணத்தில் பாதுகாப்பு இல்லை! நான் நடத்தும் குடும்பத்தில் சமாதானம் இல்லை! இதோ ஒரு புதுக்கவிதை விதை விதைத்தான் விவசாயி வளர்ந்தது - விதையல்ல வாங்கிய கடனுக்கு வட்டி கடன் தொல்லை! கற்பனை தொல்லை! நான் என்ன செய்வேன்? எங்கு செல்வேன்? ஒன்றுமே புரியவில்லை!


எல்லாவற்றிற்கும் மேலாக
உடலிலும் நோய்!
உள்ளத்திலும் நோய்!
ஒரு பக்கம் நோயின் தொல்லை!
மறு பக்கம் பேயின் தொல்லை! 


இதோ இப்படி அழுது புலம்புகின்றவர்களுக்கு அன்று மட்டுமல்ல (நற்செய்தி) இன்றும் வரம் தந்துகொண்டிருக்கின்றேன் என்ற நற்செய்தியை இயேசு தருகின்றார் (இரண்டாம் வாசகம்). 


இதோ ஆண்டவராம் இயேசு இன்றும் மக்களின் பிணிகளைக் (நற்செய்தி) குணமாக்குகின்றார் என்பதற்கு ஓர் உதாரணம்.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்பர் பிலிப்பைன்ஸ் நாட்டில் வாழும் திருமதி மேரி சரோஜா என்பவர் பாவம் அந்தப்பெண் எல்லா வசதிகளும் இருந்தும் உடலிலே நோய்! என்ன நோயென்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை! எத்தனையோ மருத்துவர்கள், எத்தனையோ மருந்துகள்! எந்தப் பலனும் இல்லை! இறுதியாக மேரி சரோஜாவின் கண்கள் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதாவின் பக்கம் திரும்பின.

பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து தம் கணவரோடு மேரி சரோஜா வேளாங்கண்ணிக்கு வந்தார். அன்னையை நோக்கி உருக்கமாகச் செபித்தார். அம்மா ஆரோக்கிய மாதாவே வெகுதூரத்திலிருந்து உமது உதவியை நாடிவந்திருக்கும் என்னை கடைக்கண் பாருமம்மா! எனக்கு என்ன வியாதி என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை தாயே! உன்னையன்றி எனக்கு வேறு தஞ்சமில்லை தாயே! எப்படியாவது என்னை குணமாக்குமம்மா! உமது திருமகன் இயேசுவிடம் எனக்காகப் பரிந்துபேசுமம்மா என்று மெழுகாக உருகிச் செபித்தார்.

செபித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு தீய ஆவி அவரைவிட்டு ஓடியது. புனித ஆரோக்கியமாதா மேரி சரோஜாவிற்காகப் பரிந்து பேச, மன்றாட செபிக்க, வல்லமை மிக்க இயேசு மேரி சரோஜாவைப் பிடித்திருந்த தீய ஆவிக்கு ஆணையிட்டார்.

தீய ஆவி மேரி சரோஜாவை மேலே தூக்கி கீழே போட்டது. கீழே விழுந்த மேரி சரோஜா எழுந்தார். கொஞ்ச நேரம் மூச்சுத்திணறல் மூடியிருந்த கண்கள் மெதுவாகத் திறந்தன பூரண சுகம். ஆம். இன்றும் இயேசு நம் நடுவே அரும் அடையாளங்களைச் செய்துகொண்டுதான் இருக்கின்றார். இன்று நமக்கு வேண்டியதெல்லாம் அன்று இயேசுவைத் தேடிவந்த மக்களிடம் நின்று நிலவிய ஆழமான, மறையாத மங்காத நம்பிக்கையொன்றே!

மேலும் அறிவோம் :
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (குறள் 8).

பொருள்:
அறக்கடலாகத் திகழும் சான்றோனாகிய இறைவன் அடியொற்றி நடப்பவர், ஏனைய பொருளும் இன்பமும் ஆகிய கடல்களை எளிதாகக் கடந்து செல்வர் ஏனையோர் பிற துன்பங்களிலிருந்து மீள முடியாது தவிப்பர்.



மறையுரை மொட்டுக்கள் – அருள்பணி இருதயராஜ்

வீதிவழியாகச் சென்று கொண்டிருந்த ஒருவர் தவறி ஒரு குழியில் விழுந்து விட்டார். அவ்வழியே மூவர் சென்றனர். முதலாவது நபர் குழியில் விழுந்துகிடந்தவரைப்பார்த்து, "உனக்கு இரண்டு கண்கள் இருந்தும் பார்த்துப்போகத் தெரியலையே! இனிமேலாவது பார்த்துப் போகக் கற்றுக்கொள்' என்று அறிவுரை வழங்கி அகன்று விட்டார். இரண்டாவது நபர், ஐயோ சகோதரா குழியில் விழுந்து விட்டாயா? எப்படியாவது வெளியே வர முயற்சி செய்யேன்" என்று கூறி அவர்மேல் தமக்கு இருந்த பரிவைக் காட்டி நழுவிவிட்டார். மூன்றாவது நபரோ குழியில் இறங்கி அவரை வெளியே தூக்கிவிட்டார். அந்த மூன்றாவது நபர்தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவர் மக்களுக்கு அறிவுரை மட்டும் வழங்கி அகன்று போகவில்லை; மக்கள் மீது பரிவு காட்டியதோடு நழுவவில்லை. மாறாக, அவரே மக்களுடைய நிலைக்கு இறங்கி வந்து அவர்களை எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும் விடுவித்தார். உண்மையில், அவர் நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார் (எசாயா 53:4). 

இன்றைய நற்செய்தியில் இயேசு கிறிஸ்து சீமோன் பேதுருவின் மாமியாரைக் குணப்படுத்தியதுடன், பல்வேறு பிணிகளாலும் தீய சக்திகளாலும் துன்புற்ற பலரையும் குணப்படுத்துகிறார். அவர் எல்லா மக்களுக்கும், எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும், எல்லாவிதங்களிலும் உதவிக்கரம் நீட்டினார். சுருக்கமாக, அவர் எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். (திப 19:38). 


கிறிஸ்து செபத்தையும் செயலையும் வெவ்வேறாகப் பிரிக்காமல், அவை இரண்டையும் ஒன்றிணைக்கிறார். இரவில் மலைக்குச் சென்று தனிமையில் இறைவேண்டல் செய்கின்றார். பகலில் மக்களிடம் சென்று அவர்களுக்குப் பணிபுரிகிறார். அவர் எந்த அளவுக்கு செபத்தில் ஈடுபட்டாரோ அந்த அளவுக்கு மக்கள் பணியிலும் ஈடுபட்டார். அவருடைய செபவாழ்வு அவருடைய செயல்வாழ்வுக்கு எவ்விதத்திலும் தடையாக அமையவில்லை. அவ்வாறே அவரது பணிவாழ்வு அவரது செபவாழ்வுக்கு எவ்விதத்திலும் இடையூறாக அமையவில்லை. கிறிஸ்து மனிதருடைய ஆன்மீகத் தேவைகளையும் உடல் சார்ந்த தேவைகளையும் வெவ்வேறாகப் பிரிககாமல், அவை இரண்டையும் ஒன்றிணைக்கிறார். மக்களுடைய உடற் பிணிகளைக் குணமாக்கியதோடு அவர்களுடைய பாவங்களையும் மன்னிக்கிறார்.

ஆன்மா - உடல் என்று மனிதனைக் கூறுபோடாமல் முழுமனிதனுக்கும் நலமளிக்கிறார்.


கிறிஸ்து இம்மை வாழ்வையும் மறுமை வாழ்வையும் வெவ்வேறாகப் பிரிக்காமல், அவை இரண்டையும் ஒன்றிணைக்கிறார். ஐந்து அப்பங்களைக் கொண்டு மக்களுக்கு உணவளித்த அவர், 'நானே உயிர் தரும் உணவு' என்பதை உணர்த்தினார். பார்வையின்றிப் பிறந்த ஒருவருக்குப் பார்வை அளித்த அவர் 'நானே உலகின் ஒளி' என்பதைச் சுட்டிக் காட்டினார். இறந்துபோன இலாசரை உயிர்த்தெழச் செய்த அவர் 'நானே உயிரும் உயிர்ப்பும்' என்பதை உணர்த்தத் தவறவில்லை. இயேசுவின் அடியொற்றி நாமும் செபத்தோடு செயலையும், ஆன்மீகத் தேவைனளுடன் உடலின் தேவைகளையும், இம்மை நலன்களோடு மறுமை நலன்களையும் ஒன்றிணைத்து, எல்லாருக்கும் எல்லாவிதத்திலும் பணிபுரிவோம். சுருககமாக, எல்லாருக்கும் எல்லாம் ஆகுவோம் (1 கொரிந்தியர் 9:22)


இயேசுவைப் போலவே திருச்சபையும் மக்களின் துயர்துடைக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துள்ளது. இருப்பினும் துன்பம் ஒரு தொடர் கதையாகவே உள்ளது. துன்பமே இல்லாதவர் இரண்டே பேர் ஒருவர் இன்னும் பிறக்கவில்லை; மற்றொருவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். அப்படியானால் மண்ணில் வாழும் அனைவரும் துன்புறுகின்றனர். இது இயற்கையின் நியதி. பறவை பிறந்தது பறப்பதற்காக. மனிதன் பிறந்தது துன்புறுவதற்காக.


இன்றைய முதல் வாசகத்தில் யோபு துன்பத்தின் சுமை தாங் முடியாமல் நெஞ்சம் குமுறுகிறார்.அவருக்கு அமைதியில்லை, தூக்கமில்லை; கண்களில் ஒளியில்லை; வாழ்வில் நம்பிக்கையில்லை. ஆனால் இறுதியில் துன்பம் அவருடைய கடவுள் நம்பிக்கையை வலுப்பெறச் செய்கிறது. காயப்படுத்தினாலும் கட்டுப்போடுபவர் அவரே; அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே (யோபு 5.18) என்ற ஆழமான இறையியல் உண்மையை அவர் உணர்ந்தார்.


 ஒர் இளைஞன் தன் பங்குத்தந்தையிடம், 'நாள் முழுவதும் என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்க, அவர் கோபத்துடன் 'என் வீடடில் நான் இருக்கிறேன்: நடப்பேன், உட்காருவேன். படுப்பேன், சுருட்டுப் பிடிப்பேன், குடிப்பேன் அதைப்பற்றிக் கேட்பதற்கு நீ யாருடா? என்று கேட்டார். சிறிதுநேரம் கழித்து பங்குத் தந்தை அந்த இளைஞனிடம், 'நாள் முழுவதும் கடவுள் என்னடா செய்துகொண்டிருக்கிறார்? என்று கேட்டதற்கு, அவன் 'கடவுள் அவர் வீட்டில் இருக்கிறார். அவர் நடப்பார். உட்கார்வார். படுப்பார், சுருட்டுப் பிடிப்பார். குடிப்பார் அதைப்பற்றிக் கேட்க நாம் யாரு சாமி? : பதிலடி கொடுத்தான்.


இவ்வாறு தான் நாம் கடவுளைப் பற்றி நினைக்கிறோம். அவர் வானகத்தில் நிம்மதியாயிருக்க, நாமோ வையகத்தில் துன்பம் தாங்காமல் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம். கடவுள் இருக்கின்றாரா அவருக்கு உண்மையிலேயே நம்மீது அக்கறை உண்டா? என்று வினவுகின்றோம்.


நம் கடவுள் நம்மோடு இருக்கிறார். நம்மோடு வெயிலில் காய்கிறார். மழையில் நனைகிறார். நம் துன்பத்தைத் தாங்கிக் கொள்வதற்குச் சக்தியையும் கொடுக்கிறார். நம் சக்திக்கு அப்பாற்பட்ட துன்பத்தை ஒரு போதும் அவர் நம்மீது சுமத்தமாட்டார். நம்மைக் குழியில் விழச் செய்பவர் கடவுள் அல்ல; குழியில் விழுந்து விட்ட நம்மை வெளியே துக்கி விடுகின்றவரே கடவுள்!


அவரே நம் பிணிகளை ஏற்று, நம் நோய்களைச் சுமந்து கொள்கிறார். அடித்தாலும் அரவணைக்கிறார். காயப்படுத்தினாலும் குணமாக்குகிறார். இவ்வுண்மையானது நம் துன்பத்தில் நமக்கு ஆறுதல் அளிப்பதாக அவர் என்னைக் கொன்றாலும் அவரிடத்தில் நம்பிக்கை வைப்பேன்" என்ற யோபுவின் நம்பிக்கையுணர்வு நம் உள்ளத்தில் வேரூன்றி வளர்வதாக துன்பம் நம்மைத் தூய்மைப்படுத்தி நமது விசுவாசப் பார்வையை மேலும் கூர்மைப்படுத்துவதாக.


துன்பம் தொடர்ந்துவந்தபோதும்-நாம்
சோர்ந்துவிடலாகாது பாப்பா
அன்பு நிறைத் தெய்வம் உண்டு துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா - (பாரதி)



ஞாயிறு இறைவாக்கு – அருள்திரு முனைவர் ம.அருள்

குணமளிக்கும் ஆண்டவர்

கதை

வீதி வழியாக சென்றுகொண்டிருந்த ஒருவன் தவறி ஒரு ஆழமான குழியில் விழுந்துவிட்டான். அவ்வழியே சென்ற ஒருவன் குழியில் விழுந்து கிடப்பவனைப் பார்த்து உனக்கு இரண்டு கண்கள் இருந்தும் பார்த்துப் போகத் தெரியலையா! இனிமேலாவது பார்த்துப் போகக் கற்று கொள் என புத்தி சொல்லி நகர்ந்துவிட்டார். இரண்டாவது அதேவழியே வந்த ஒருவன் ஐயோ சகோதரா! குழியில் விழுந்துவிட்டாயா? எப்படியாவது கற்களைப் பிடித்து வெளியே வர முயற்சி செய் என்று கூறி அவனும் நகர்ந்து விட்டான். மூன்றாவதாக வந்தவரோ, கீழே இறங்கி அந்த மனிதனை மேலே தூக்கிக் கொண்டு வந்தார். 

ஆம்! அவர்தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அவர் அறிவுரை மட்டும் கூறவில்லை. விலகிச் செல்லவில்லை. மக்கள் மீது பரிவுகாட்டியதோடு நழுவவில்லை. மாறாக மக்களின் நிலைக்கு இறங்கி வந்து அவர்களை எல்லாவிதத் துன்பங்களிலும் இருந்துவிடுவித்தார். எனவே எசாயா மிகத் தெளிவாகச் சொல்கிறார்: அவர் நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார். நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார் (எசாயா 53:4).


இன்றைய நற்செய்தியில் இயேசு கிறிஸ்து சீமோன் பேதுருவின் மாமியாரைக் குணப்படுத்துகிறார். பல்வேறு பிணிகளால் அவதிப்பட்ட மக்களையும் குணப்படுத்துகிறார். எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் உதவிக்கரம் நீட்டுகிறார். எனவே திருத்தூதர் பணியிலே புனித லூக்காஸ் கூறுகிறார்:
அவர் எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் (தி.ப. 10:38):


இரண்டாவது, இயேசு செபத்தையும், செயலையும் இணைப்பதைப் பார்க்கிறோம். இவை இரண்டும் நாணயத்தின் பிரிக்க முடியாத இரு பக்கங்கள் போல இயேசுவின் வாழ்வில் வெளிப்படுகிறது. நன்மையான காரியங்களை ஓய்வின்றி செய்து கொண்டே போகிறார். அதே நேரத்தில் தனிமையான இடம் தேடிச்சென்று இரவில் மலையில் இறை வேண்டல் செய்கிறார். எந்த அளவுக்கு செபத்தில் ஈடுபட்டாரோ அந்த அளவுக்குப் பணியிலும் ஈடுபட்டார்.


மூன்றாவது, கிறிஸ்து மனிதருடைய ஆன்மீகத் தேவை களையும், உடல் சார்ந்த தேவைகளையும் வெவ்வேறாகப் பிரிக்காமல் இரண்டையும் ஒன்றாக இணைக்கிறார்.

  • ஐந்து அப்பங்களைக் கொண்டு மக்களுக்கு உணவளிக்கிறார். தானே உயிர்தரும் உணவு என்பதையும் உணர்த்துகிறார்.
  • பார்வை இன்றி இருந்த குருடனைப் பார்க்க வைக்கிறார்.
  • உடன் தானே உலகின் ஒளி என்பதையும் வெளிப்படுத்துகிறார்.
  • இறந்துபோன லாசரை உயிர் பெற்று எழச் செய்கிறார். தானே உயிர்த்து எழுதலும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
  • (இயேசுவைப்போல திருச்சபையும் மக்களின் துயர் துடைக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துள்ளது)
இன்றைய முதல் வாசகத்திலே யோபுவைப் பாருங்கள். துன்பச் சுமை தாங்க முடியாமல் நெஞ்சம் குமுறுகிறார். அமைதியில்லை. தூக்கம் இல்லை. கண்களில் ஒளியில்லை. வாழ்வில் நம்பிக்கை இல்லை. ஆனால் இறுதியில் துன்பம் அவருடைய நம்பிக்கையை வலுப்பெறச் செய்கிறது. காயப்படுத்தினாலும் கட்டுப் போட்டவர் அவரே! அடித்தாலும் ஆற்றுகின்றவர் அவரே (யோபு5:18) என்ற ஆழமான உண்மையை உணர்ந்தார் யோபு.

ஓர் இளைஞர் ஒரு பங்கு தந்தையிடம், நாள் முழுவதும் என்ன செய்கிறீர்கள் என்று கேட்க, அவர் கோபத்துடன் என் வீட்டில் இருக்கிறேன், நடப்பேன், உட்காருவேன், சாப்பிடுவேன், படுப்பேன், சுருட்டு பிடிப்பேன் அதைக் கேட்பதற்கு நீர் யார்? என்று கேட்டார். சிறிது நேரம் சென்று பங்குத் தந்தை அந்த இளைஞனிடம், நாள் முழுவதும் கடவுள் என்னப்பா செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டார். அவனோ, கடவுள் அவர் வீட்டில் இருப்பார் - நடப்பார் - உட்காருவார் - சாப்பிடுவார் - படுப்பார் அதை கேட்க நாம் யாரு சாமி? என்றான்.


ஆம், இவ்வாறுதான் நாம் கடவுளைப் பற்றி நினைக்கிறோம். அவரோ வானகத்தில் நிம்மதியாக இருக்க, நாமோ வையகத்தில் துன்பம் தாங்காமல் பெருமூச்சு விடுவதாக நினைக்கிறோம்.


அன்பார்ந்தவர்களே! கடவுள் நம்மோடு இருக்கிறார். நம்மோடு வெயிலில் காய்கிறார். மழையில் நனைகிறார். அவரே நம் பிணிகளை ஏற்று, நம் நோய்களைச் சுமந்துகொள்கிறார்.


உங்கள் கவலைகளை எல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனென்றால் அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார் (1 பேதுரு 5:7).


இந்த உண்மையானது நமது துன்பத்தில் நமக்கு ஆறுதல் தருகிறது. குழியில் விழுந்துவிட்ட நம்மைத் தூக்கி எடுப்பவர் அவரே.


ஆனால் ஓர் உண்மையை நாம் நன்கு உணர வேண்டும். அமெரிக்காவில் ஜனாதிபதியாக ஆப்ரகாம் லிங்கன் இருந்த போது உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. சோகமான முகத்தோடு காணப்பட்ட லிங்கனைப் பார்த்து அமைச்சர் ஒருவர் - நீங்கள் ஒன்றும் பயப்படாதீர்கள். கடவுள் நம் பக்கம் இருக்கிறார். வெற்றி நமதே, தோல்வி நம்மை அணுகாது என்றார்.


 அதற்கு லிங்கன் அமைதியாக, கடவுள் நம் பக்கம் இருக்கிறாரோ, இல்லையோ அது எனக்குத் தெரியாது. ஆனால் நானும் இந்த நாடும் அவர் பக்கம் இருக்க வேண்டுமே. நாம் அவர் அருகில் இருந்தால்தான் நமக்குத் தோல்வி அணுகாது என்றார்.


முடியுரை:

செபிப்பவர் பக்கத்தில் கடவுள் இருப்பார். செபத்தால் இறைவனோடு இணைகிறோம்.
நானே திராட்சைச் செடி, நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும், நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னை விட்டுப் பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது (யோவா. 15:5) என்றார் இயேசு. 


எனவே காலையிலும், மாலையிலும், பகலிலும், இரவிலும் எப்போதும் செபிப்போம். இறைவல்லமையைப் பெறுவோம் (1 தெச. 5:17). ஆமென்.





தறியின் ஓடுகட்டை

அருள்பணி ஏசு கருணாநிதி

உருவகங்கள் என்றும் ஆச்சர்யம் தருபவவை. உருவகங்கள் அதை உருவாக்கியரின் கைகளில் இருந்து விலகியவுடன் அது தனக்கென்று ஒரு பொருளை கைக்கொள்ளும் ஆற்றல் பெற்றுவிடுகிறது. அதைப் பயன்படுத்தும் இடம், நபர், காலம், சூழல் பொறுத்து அது தன் பொருளை அழகாக விரித்துக்கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக, 'ஆண்டவர் என் ஆயர். எனக்கேதும் குறையில்லை' (திபா 23:1) என்ற இறைவசனத்தில் 'ஆயர்' என்பது 'ஆண்டவருக்கான' ஓர் உருவகம். மகிழ்ச்சியில், நன்றியில் திக்குமுக்காடும் ஒருவர் இதை வாசித்தால் 'ஆயர்' என்ற உருவகம் அவருக்குள் நேர்முகமான உணர்வைத் தட்டி அவருக்கு இன்னும் உற்சாகம் அளிக்கிறது. அதே வேளையில் இழப்பு, கவலை, வெறுமை என சோர்ந்து நிற்கும் ஒருவருக்கு இதே உருவகம் அவருக்குள் எதிர்நோக்கையும், 'அனைத்தும் மாறிவிடும்' என்ற நம்பிக்கை உணர்வையும் தருகிறது. நாம் ஒவ்வொருவருமே ஏதோ ஒரு உருவகமாக ஏதோ ஒரு உருவகத்தை வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதே நம் வாழ்வியில் எதார்த்தம்.

இன்றைய முதல் வாசகத்தில் (யோபு 7:1-4, 6-17) நாம் காணும் ஓர் உருவகம் என்னை மிகவும் கவர்கின்றது. அதிலிருந்து நம் சிந்தனையை இன்று தொடங்குவோம்: 'என் வாழ்நாள்கள் தறியின் ஓடுகட்டையிலும் விரைந்தோடுகின்றன!' (யோபு 7:6). எந்நேரமும் கைத்தறிகளின், விசைத்தறிகளின் சத்தங்களுக்கு நடுவில் நான் பிறந்த வளர்ந்ததால் என்னவோ இந்த உருவகம் என்னை மிகவும் கவர்கின்றது. தறியில் ஓடுகட்டை மிக முக்கியமான ஒன்று. கைத்தறியின் அந்தப் பக்கத்தில் நூல் பாவு இருக்கும். தறியின் இந்தப் பக்கம் அதை தன் கைகளால் இயக்குபவர் அமர்ந்திருப்பார். அவரின் ஒரு கை நூல் கோர்க்கும் கட்டையையும் மறு கை ஓடு கட்டையையும் இயக்கும். இந்த ஓடு கட்டையின் நடுவில் நூல்கண்டு இருக்கும். ஓடுகட்டையின் இரு முனைகளிலும் உலோக மூக்கு இருக்கும். ஓடு கட்டையின் சக்கரங்கள் வழுவழுப்பான சக்கரத்தில் இருக்கும். ஓடுகட்டைக்கு சரியான வேகம் தரப்பட வேண்டும். அதிகமான வேகம் தந்தால் அது தறியைவிட்டு வெளியே பாய்ந்துவிடும். குறைவான வேகம் தந்தால் பாதியில் நின்றுவிடும். சீரான வேகத்தில் இயங்கும் இந்த தறிகட்டைதான் ஒரு கைத்தறியின் இயக்கத்தின் அடையாளம்.

தன் வாழ்நாள்களை தறியின் ஓடுகட்டையோடு ஒப்பிடுகின்றார். ஏன்? தன் வாழ்வின் வேகம் அப்படி இருப்பதாக அவர் எழுதுகின்றார். இந்த ஒப்பீட்டுக்கு முன் அவர் மேலும் இரண்டு உருவகங்களைப் பயன்படுத்துகின்றார்:

அ. நிழலுக்கு ஏங்கும் அடிமை
ஆ. கூலிக்கு காத்திருக்கும் வேலையாள்

வெயிலில் வேலை செய்யும் அடிமை நிழலுக்காக ஏங்குவான். அப்படி அவன் நிழலில் சற்றுநேரம் இளைப்பாறினாலும் அவன் இன்னும் பார்க்க வேண்டிய வேலை வயலில் இருப்பதால் அவன் மீண்டும் வெயிலுக்கே செல்வான். வெயிலில் நிற்கும் அவன் மீண்டும் நிழல் தேடுவான். ஒரு பக்கம் தான் தேடி அலையும் நிழல். மறுபக்கம் தான் பார்க்க வேண்டிய வேலை. இந்த இரண்டிற்கும் இடையே அவன் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

அதே போல, கூலிக்கு காத்திருக்கும் வேலையாள். இது எனக்கு தனிப்பட்ட அனுபவமாகவே இருந்திருக்கிறது. என் அம்மாவுக்கு பள்ளிக்கூடத்தில் சமையலுக்கு வேலை கிடைக்காத நாள்களுக்கு முன் அவர் பருத்தி எடுக்க காட்டுக்குச் செல்வார். மாலையில் 5 மணிக்கு 6 ரூபாய் கூலி தரப்படும். 6 ரூபாய் கைகளில் ஏந்தி வீட்டிற்கு வருவதற்குள் பால், எண்ணெய், காய்கறி, அரிசி என அன்றைய இரவுக்கும், அடுத்தநாள் காலைக்குமான உணவிற்கான பொருள்களை வாங்க வேண்டியிருப்பதால் வீட்டிற்குள் நுழையும்போது வெறும் 20, 50 சில்லறைக்காசுகளே மிஞ்சும். உடனே அடுத்த நாள் தேவை என்னும் கவலை பற்றிக்கொள்ளும். இரவு தூங்கும்போதுகூட அடுத்தநாள் தனக்கு அதே பருத்திக்காட்டில் வேலை கிடைக்குமா? அல்லது இன்னும் தூரம் செல்ல வேண்டுமா? என்ற கவலை வந்துவிடும் அவருக்கு. ஆக, ஒரு வேலையின் அல்லது உழைப்பின் கனியை இரசித்து ருசிப்பதற்குள் அடுத்த நாள் வேலை அல்லது கவலை வந்துவிடுகிறது.

இதே கவலைதான் தனக்கும் இருப்பதாக யோபு எழுதுகின்றார்: 'இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன். இரவோ நீண்டிருக்கும். விடியும்வரை புரண்டு உழல்வேன்.'

இரவில் கவலைகள். பகலில் உழைப்பு. மாலையில் கூலி. மறுபடி கவலைகள். மறுபடி உழைப்பு. மறுபடி கூலி. இப்படி சுழன்றுகொண்டிருக்கும் வாழ்க்கை என்றுமே மாறாது என்ற நம்பிக்கையின்மை வந்துவிடுகிறது யோபுவிற்கு. 'என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா!' என விரக்தியடைகின்றார்.

கொஞ்சம் நம் வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திப்பார்க்கவே நமக்கு பயமாக இருக்கிறது. இல்லையா? நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். பகல் முழுவதும் வேலை. வேலை பார்த்துவிட்டு ஓய்ந்திருக்கலாம் என இரவில் தூங்க வீட்டிற்கு வந்தால், 'அடுத்த நாளிலிருந்து பேருந்து கட்டணம் உயர்வு, டீசல் கட்டணம் உயர்வு, மின் கட்டனம் உயர்வு' என டிவி செய்தியில் வயிற்றில் புளியைக் கரைத்து தூங்கவிடாமல் ஆக்கிவிடுகிறார்கள். மேலும், அடுத்த நாளைப் பற்றிய திட்டமிடலில் ஆழ்ந்துவிடுகிறோம். இன்று இந்த உலகம் நம்மை 'பிஸியாகவே' இருக்க வேண்டும் எனச் சொல்கிறது. நாம் 'பிஸியாக இருந்தால்தான்' நாம் 'ப்ரொடெக்டிவாக' இருக்கிறோம் என்ற கற்பனையையும் இத்தோடு கட்டிவிடுகிறது. நாள்காட்டி, திட்டமிடல், வேக் அப் டைமர், ஸ்டாப் வாட்ச் என சின்னஞ்சிறியவற்றிலும் நாம் திட்டமிடத் தொடங்கிவிட்டோம். நம் குழந்தைகள் நமக்குமேல் பிஸியாக இருக்கிறார்கள். காலையில் யோகா அல்லது கராத்தே. பகல் முழுவதும் பள்ளி. மாலையில் டியூஷன், வீட்டுப்பாடம். இரவில் ப்ராஜக்ட். வீக்எண்டில் ஸ்விம்மிங், ஸ்கேடிங், கர்ஸிவ் ரைட்டிங் என நிறைய செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்தி அவர்களின் விளையாட்டு, கற்பனைத்திறன், படைப்பாற்றல் என அனைத்தையும் இழக்கச் செய்கிறோம்.

நாம் இப்படி பிஸியாக இருக்க என்ன காரணம் என்பதை யோபுவைப் போன்ற ஞானநூல் அறிஞர் சபை உரையாளர் இப்படி பதிவு செய்கிறார்:

'மனிதர் ஏன் இவ்வளவு பாடுபட்டு உழைக்கின்றனர் என்பதையும் கண்டறிந்தேன். இதற்குக் காரணம் மனிதரிடையே காணப்படும் போட்டி மனப்பான்மையாகும். இது வீண் செயல். காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும். தம் கைகளைக் கட்டிக்கொண்டு பட்டினிகிடந்து மடிகிறவர் மடையர் எனச் சொல்லப்படுகிறது.' (சஉ 4:4-5).

ஆக, அடுத்தவர் என்னை 'மடையன்' என்று சொல்லிவிடுவார்கள் என்ற பயத்தில் நான் ஓடி ஓடி உழைக்கின்றேன். என் வேலைகளை விறுப்பாகச் செய்கின்றேன். அடுத்தவரை நான் 'மடையர்' என்று சொல்லாதவண்ணம் அவரும் ஓடிக்கொண்டே இருக்கின்றார்.

இந்த ஓட்டத்திற்கான, பரபரப்புக்கான தீர்வை யோபு தரவில்லை. ஆனால், சபை உரையாளர் தொடர்ந்து எழுதுகின்றார்: 'உழைப்பு இரு கை நிறைய இருப்பதைவிட மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்.'

இவ்வாறாக, யோபுவின் வாழ்க்கை ஓட்டம் தறியின் ஓடுகட்டை போல இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த முனையை தொடும் ஓடுகட்டை நின்று ஓய்வெடுக்காமல் மீண்டும் அடுத்த முனை நோக்கி ஓடுகிறது. 'நிழல்' என்று கொஞ்ச நேரம் நிற்கவும் முடியவில்லை. 'வேலை' என்று வெயிலில் நின்றுகொண்டே இருக்கவும் முடியவில்லை.

இதுதான் மனிதரின் உழைப்பா? இவ்வளவுதான் மனித வாழ்க்கையா? நம் உழைப்பு வெறும் காற்றா? நம் உழைப்பு பயனற்றதா? நம் வாழ்வு பொருளற்றதா? உழைப்பில் மகிழ்ச்சி என்பதே இல்லையா?

இப்படி எல்லாம் நமக்கு இப்போது கேள்விகள் எழலாம். இப்படிக் கேள்விகள் கேட்டு விரக்திக்கு நாம் உள்ளாகிக்கொள்ள வேண்டாம்.

ஏனெனில், இந்தக் கேள்விகள் தரும் விரக்தியை அப்படியே நம்பிக்கைத் துளிகளாக மாற்றி நம்மேல் தூரல் பெய்யச்செய்கிறது இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற் 1:29-39). இயேசுவின் ஒரு நாள் புரோகிராமை அல்லது அவருடைய ஒருநாள் டாஸ்க் லிஸ்டை மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார்.இன்றைய நற்செய்தி வாசகத்தை கால அட்டவணையாக இப்படி போடலாம்:
இடம்: கப்பர்நகூம்

நாள் 1
காலை 09:00 மணி தொழுகைக்கூடத்தில் போதனை, தீய ஆவி பிடித்தவர் நிகழ்வு
மாலை 03:00 மணி தேநீர், பேதுருவின் இல்லம்
மாலை 03:30 மணி பேதுருவின் மாமியாருக்கு காய்ச்சலிலிருந்து நற்சுகம் தருதல்
மாலை 03:45 மணி மாமியாரின் பணிவிடை, இயேசுவும் சீடர்களும் ஓய்வெடுக்கின்றனர். (மாமியார் அவர்களுக்கு பணிவிடை புரிந்தார் என பதிவு செய்கின்றார் மாற்கு. ஒருவேளை சீடர்கள் குளிப்பதற்காக அல்லது பாதங்கள் கழுவுவதற்காக சுடுதண்ணீர் வைத்திருப்பார் மாமியார். இது மிகவும் சாத்தியம். ஏனெனில் காய்ச்சலில் தண்ணீரைத் தொட முடியாமல் இருந்த மாமியார் இப்போது தண்ணீர் காய்ச்சுகின்றார். ஆக, அவருக்கிருந்த காய்ச்சல் தண்ணீருக்கு வந்ததால் தண்ணீர் கொதிக்கிறது!)
மாலை 06:00 மணி பேதுருவின் வீட்டின்முன் கூட்டம். பலர் நலம் பெறுகின்றனர்
மாலை 09:00 மணி இரவு உணவு

நாள் 2
காலை 03:00 மணி துயில் எழுதல், இயேசு செபிக்கச் செல்லுதல்
காலை 06:00 மணி சீடர்கள் தேடி வருதல்
காலை 09:00 மணி 'நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம்'

இவ்வாறாக இயேசுவின் நாள் தறியின் ஓடுகட்டைபோல ஓடுகின்றது.

ஆனால், யோபுவைப் போல ஏன் இயேசு விரக்தி அல்லது சோர்வு அடையவில்லை? இயேசுவால் எப்படி ஒவ்வொரு நாளையும் இனிமையாக வாழ முடிந்தது? ஆக, பிஸியாக இருந்தாலும் அதை நல்லதாக மாற்றிக்கொள்ளலாம் என்பது இயேசுதரும் படிப்பினையாக இருக்கிறது.

யோபுவிடம் இருந்த பரபரப்பு இயேசுவிடம் சாந்தம் என்ற நிலையாக எப்படி மாறியது? இயேசுவால் எப்படி நிழலையும், வேலையையும் சமமாகப் பார்க்க முடிந்தது. இதற்கு நாம் மூன்று காரணங்களை இன்றைய நற்செய்தி வாசகத்தில் கண்டுகொள்ள முடிகிறது:

அ. மனித உறவுகளோடு நேரம் செலவிட்டு அவர்களின் நலம் நாடுதல்

மனிதர்களோடு செலவிடும் நேரம் ஒருபோதும் செலவல்ல, அது ஒரு முக்கியமான முதலீடு என்பதை அறிந்திருந்தார் இயேசு. இதை மாற்கு நற்செய்தியாளரும், 'இயேசுவும் மற்ற சீடர்களும் தொழுகைக்கூடத்தைவிட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன், சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்' என பதிவு செய்கின்றார். இயேசுவை எப்போதும் மக்கள் சுற்றிக்கொண்டே இருக்கின்றனர். யாக்கோபு, யோவான், சீமோன், அந்திரேயா ஆகிய நால்வரும் ஒரே ஊர்க்காரர்கள். ஆக சீமோனின் மாமியார் இவர்கள் 4 பேருக்கும் நன்கு அறிமுகமானவர். சீமோனின் மாமியாரைக் குணமாக்குவதற்காக இயேசு அவரின் வீட்டிற்குச் செல்கின்றார். மாமியார் நோயுற்றிருப்பது அங்குதான் அவரிடம் சொல்லப்படுகின்றது. இதைச் சொன்னவர்கள் தயங்கி தயங்கித்தான் சொல்லியிருப்பார்கள். அல்லது 'தீய ஆவியை விரட்டிய இவரால் நோயை விரட்ட முடியுமா?' என்று சோதித்துப்பார்ப்பதற்காகக் கூட அவர்கள் இப்படிச் சொல்லியிருப்பார்கள். சொல்லப்பட்ட உடன் இயேசு அருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்குகிறது. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்கிறார்.

இவ்வாறாக, இயேசுவின் பிரசன்னம் அடுத்தவரின் குறையை நிறைவு செய்கிறது. மனித உறவுகளில் நாம் செய்ய வேண்டியது இதுதான். 'இவன் நம்ம சீடன்தான! இவருடைய வீட்டிற்கெல்லாம் ஏன் போகணும்?' என நினைக்கவில்லை இயேசு. ஒருவரின் வீட்டிற்குள் நுழைவது எப்பது ஒருவரின் வாழ்க்கைக்குள் நுழைவது. எல்லாரையும் நாம் நம் வீட்டிற்குள் வரவிடுவதில்லை. இந்த நேரத்தில் என் அருள்பணி நிலையின் மேன்மை புரிகிறது. 'அருள்பணியாளர்' என்று நான் என்னை அறிமுகப்படுத்தினால் அடுத்தவர் என்னை உடனே தன் வீட்டிற்குள் அழைக்கின்றார். இப்படி அழைக்கப்படுவது எனக்கு தரப்படும் மேன்மைதானே! இதில் மிகப்பெரிய பொறுப்புணர்வு இருக்கிறது. இல்லையா?

சீமோனின் மாமியாரின் வீட்டிற்குள் செல்கின்ற இயேசு அங்கே இருக்கின்ற குறையை நிறைவு செய்கின்றார். ஆக, நான் அடுத்தவரின் வீட்டிற்குள் செல்லும் என் பிரசன்னமும் அடுத்தவரின் குறையை நிறைவுசெய்வதாக இருக்க வேண்டும். நாம் மற்றவரோடு கொண்டிருக்கின்ற உறவு, 'அருகில் செல்லுதல்,' 'கையைப் பிடித்தல்,' 'தூக்குதல்' என்ற மூன்று நிலைகளாக இருக்க வேண்டும். இன்று நம் உறவுகள் நம்மிடம் பணம், பொருள் என எதுவும் எதிர்பார்ப்பதில்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம், 'அருகில் இருப்பதும்,' 'அரவணைப்பதும்,' 'கைதூக்கிவிடுவதும்' தான்.

இவ்வாறாக, தன் உழைப்பையும், நேரத்தையும், ஆற்றலையும் நாம் அடுத்தவரின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தினால் அது ஒருபோதும் வீணாகவும், விரக்தியாகவும் மாறாது.

ஆ. திரும்ப எதிர்பார்க்காத உழைப்பு

கடந்த மாதம் அருள்பணியாளர் பேராசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் ஒரு துறவற சபையைச் சார்ந்தவர். அவர் மாதம் 2 லட்சம் சம்பளம் வாங்குவதாகச் சொன்னார். அப்படிச் சொன்னவர் என்னைப் பார்த்து, 'நீ மறைமாவட்டக் குருவாய் இருப்பதால் வெறும் பூசை மட்டும்தான் வைக்க முடியும்!' என்று நக்கலாகச் சொன்னார். இரண்டு மூன்று நாள்களாக என் சிந்தனை அவர் சொன்னதை வைத்தே ஓடியது. நாள் முழுவதும் நான் பிஸியாக இருக்கிறேன். திருப்பலி வைக்கிறேன். மக்களை சந்திக்கிறேன். நோயுற்றவர்களைத் தேடிச் செல்கிறேன். இறந்தவர்களை அடக்கம் செய்கிறேன். ஆனால், மாத இறுதியில் எனக்கென்று சம்பளம் 2 லட்சம் இல்லை. அப்படி என்றால் என் உழைப்பு வீணா?

என் கேள்விக்கான பதில் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இருக்கிறது. இயேசு நிறைய வேலைகளைச் செய்கிறார். 'பலரை குணமாக்குகின்றார். பல பேய்களை ஓட்டுகின்றார்.' இவர் இதற்கென்று எந்த கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. தன் நல்ல உள்ளத்திற்கு மக்களால் ஒருபோதும் கூலி தரமுடியாது என நினைக்கின்ற இயேசு அனைத்தையம் இலவசமாகக் கொடுக்கின்றார். ஆக, இங்கே இயேசுவின் தன்மதிப்பையும் பார்க்கலாம். அவரின் உழைப்பை அவர் ஒருபோதும் விலைபேசவில்லை. நான் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும்போது என்னை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் என் நண்பருக்கு நான் ஊதியம் கொடுக்க முடியுமா? அல்லது நான் அப்படிச் செய்யும்போது அதற்கு கூலி பெற முடியுமா?

இயேசு ஒருபோதும் தன் வாழ்வை கூலிக்காக வாழவில்லை. இதே மனநிலை இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 9:16-19, 22-23) தூய பவுலிடமும் விளங்குவதைப் பார்க்கின்றோம்: 'அப்படியானால், எனக்கு கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதில் உள்ள மனநிறைவே அக்கைம்மாறு. நான் நற்செய்தி அறிவுப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம்கூட பயன்படுத்திக்கொள்ளவில்லை.' என்ன ஒரு பெரிய மனது பவுலுக்கு? தான் உழைப்பின் கூலிக்கு உரிமையுடையவர் என்றாலும், தான் பெறும் மனநிறைவே அக்கைம்மாறு அல்லது கூலி என நினைக்கின்றார். இப்படி நினைப்பதற்கு நிறைய துணிச்சலும், அதைவிட நிறைய கடவுள் பராமரிப்பின்மேல் நம்பிக்கையும் வேண்டும்.

ஆக, நான் செய்யும் எந்த நற்செயல்களுக்கும் அதற்குரிய கூலியை திரும்ப எதிர்பார்க்காமல் நான் உழைக்கும்போது என் உழைப்பு விரக்தி தருவதில்லை.

இ. முதன்மையானதை முதன்மையானதாக வைப்பது

'நாம் ஒருநாளில் செய்யும் செயல்களில் முக்கியமானவற்றை நாளின் முதலிலேயே செய்துவிட வேண்டும்' என்றும், 'அடுத்தவருக்கான நேரத்தை நாம் அடுத்தவருக்குக் கொடுப்பதைவிட நமக்குரிய நேரத்தை நமக்குக் கொடுக்க வேண்டும்' என்றும் சொல்கிறது மேலாண்மையியல். தன் வாழ்வில் முக்கியம் என கருதும் இறைவேண்டலை நாளின் முதல் வேலையாக வைத்திருக்கின்றார் இயேசு. இயேசு தன் பேட்டரியை சார்ஜ் செய்யும் நேரம் இதுதான். மேலும் இயேசு தனக்குரிய ஓய்வைக்கூட தனக்குக் கொடுக்காமல் தன் வானகத்தந்தைக்காக கொடுக்கின்றார். இயேசுவான் இந்த ஓய்வை எடுக்க முடிந்ததால்தான் நாள்முழுவதும் அவரால் படைப்பாற்றலோடு செயல்பட முடிகிறது.

ஈ. அடுத்தவருக்காக உன்னை மாற்றிக்கொள்ளாதே

இது மிக முக்கியமான பாடம். தனியாக மலையில் செபித்துக்கொண்டிருக்கின்ற இயேசுவைச் சந்திக்கின்ற சீடர்கள், 'எல்லாரும் உம்மைத் தேடுகிறார்கள்' என்கிறார்கள். இயேசு இதைக் கேட்டு மகிழ்ச்சியடையவில்லை. 'அப்படியா, எங்கே அவர்கள்?' என்று அவர்களைத் தேடிச்செல்லவில்லை. அருள்பணியாளர் வாழ்வில் வரும் மிகப்பெரிய சோதனை இதுதான். 'ஃபாதர் உங்கள எல்லாரும் எங்க ஊர்ல தேடுறாங்க!' என்றும், 'நீ நல்லா வேலை செய்ற! உன்னைவிட்டால் யாரால் இந்த வேலையை செய்ய முடியும்?', 'நீங்கதான் பூசைக்கு வரணும். எல்லாரும் மீட்டிங்ல உங்க பேரைத்தான் சொன்னாங்க!,' 'உங்களாலதான் இந்த ஸ்கூல நடத்த முடியும்!' இதெல்லாம் சீடர்களின் வார்த்தைகளைப் போல வரும் சோதனைகள்.

மக்களின் மனது மாறக்கூடியது என்றும், அவர்களின் விருப்பங்கள் மாறிக்கொண்டே இருக்கும் என்றும், தன்னைவிட மற்றொருவர் தன்வேலையை நன்றாகச் செய்வார் என இயேசு அறிந்திருந்ததாலும்தான், 'அடுத்த ஊருக்குப் போவோம்!' என்கிறார் இயேசு. நம் வாழ்வில் 'போர் அடிக்குது!' என்று சில நேரங்களில் சொல்வதற்குக் காரணம் நாம் ஒரே வேலையைச் செய்வதுதான். அல்லது ஒரே ஊருக்குள் இருப்பதுதான். 'அடுத்த ஊருக்குப் போவோம்!' என்று நான் துணிந்தால் எத்துணை நலம்.

இறுதியாக,

நாம் எல்லாருமே தறியின் ஓடுகட்டைகள்தாம்! விரைவாக ஓடிக்கொண்டிருக்கிறோம்தான்!

ஆனால், நமக்குள்ளேயே ஓடினால், ஊதியம் தேடி ஓடினால், நீடித்த நிழல்தேடி அமர்ந்தால் நம் வாழ்வு யோபுவின் வார்த்தைகள் போல் விரக்தியாகும்.

ஆனால், அடுத்தவரை நோக்கி, அடுத்தவரின் நலன்நோக்கி, முதன்மையானது நோக்கி நகர்ந்தால் அது நிறைவே - இயேசுவின் வாழ்வு போல!







Sunday 21 January 2018

பொதுக் கால 4-ஆம் ஞாயிறு

பொதுக் கால 4-ஆம் ஞாயிறு

இச18:15-20: 1கொரி 7 - 32 -35; மாற்கு 1:21-28


சோதனைகளை வெல்லுவது எப்படி?

மகிழ்ச்சியூட்டும் மறையுரை - குடந்தை ஆயர் அந்தோணிசாமி


இன்றைய நற்செய்தி தீய ஆவியைப் பற்றி பேசுகின்றது.

ஒருமுறை கர்தினால் சுவெனென்ஸ் தலைமை தாங்கிய கூட்டமொன்றில் நான் கலந்துகொண்டேன். அந்தக் கூட்டத்திலே ஒருவர் எழுந்து, கர்தினால் அவர்களே, தீய ஆவிகள், பேய்கள் இருக்கின்றனவா? என்று கேட்டார். அதற்கு கர்தினால் அவர்கள். நான் தீய ஆவியைப் பார்த்ததில்லை; ஆனால் பாவத்தை எல்லா இடங்களிலும் பார்க்கின்றேன் என்றார். இதற்கு என்ன அர்த்தம்? எங்கே பாவமிருக்கின்றதோ, அங்கே பேயிருக்கின்றது: எங்கே பேயிருக்கின்றதோ அங்கே பாவமிருக்கின்றது.
தீய ஆவி இரண்டு பாவங்களைச் செய்ய நம்மைத் தூண்டும்: 1. நம்மை நமது அழைத்தலுக்கு எதிராகச் செயல்படத் தூண்டும். 2. உண்மையே உருவான தூய ஆவியாருக்கு எதிராகப் பொய் சொல்லத் தூண்டும்.
யூதாஸ் அப்பத்துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். இயேசு அவனிடம், நீ செய்யவிருப்பதை விரைவில் செய் என்றார் (யோவா 13:27) என்றும், புனித பேதுரு, அனனியா, நீநிலத்தை விற்ற தொகையின் ஒரு பகுதியை உனக்கென்று வைத்துக்கொண்டு தூய ஆவியாரிடம் பொய் சொல்லும்படி சாத்தான் உன் உள்ளத்தை ஆட்கொண்டதேன்? என்று கேட்டார் (திப 5:3) என்றும் நற்செய்தியிலும், திருத்தூதர் பணிகளிலும் பழக்கின்றோம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார் கூறுவது போல சாத்தான் நமது மனத்தைப் பிளவுப்படுத்துவான். இன்றைய முதல் வாசகம் கூறுவதுபோல கடவுள் கட்டளையிடுவதைக் கேட்கவிடாமல் நம்மைத் தடுப்பான். தீய ஆவியின் சோதனைகளிலிருந்து நாம் விடுபட்டு வாழ வழி உண்டா?

நான் அமைதி தேடி ஒருமுறை ரிஷிகேஷ் சென்றிருந்தேன். அங்கே மூன்று வாரங்கள் தங்கியிருந்தேன். நான் தமிழகம் திரும்புவதற்கு முன்னால் ஒரு யோகியைச் சந்தித்தேன். அவரிடம் சோதனைகளை வெல்வது எப்படி? என்றேன். அதற்கு அவர், சோதனைகள் எல்லாருக்கும் வரும்
அந்தச் சோதனைகளை வெல்ல இரண்டு வழிகள் உள்ளன: 1. எல்லாம் வல்ல இறைவனின் அருளை வேண்டலாம். 2. உங்களது மறைநூல் - திருவிவிலியம் சொல்கின்றபடி வாழலாம்
என்றார்.
இன்றைய நற்செய்தியிலே இறைமகன் இயேசுவுக்குத் தீய ஆவி அடிபணிவதைப் பார்க்கின்றோம். ஆகவே நாம் தீய ஆவியால் சோதிக்கப்படும்போது இயேசுவின் அருளுதவியை நாடலாம்.
புனித பவுலடிகளார், மீட்பை தலைச்சீராகவும், கடவுளின் வார்த்தையைத்தூய ஆவிஅருளும்போர்வாளாகவும் எடுத்துக்கொள்ளுங்கள் என்கின்றார் (எபே 6:17). ஆக, இறைவார்த்தையைக் கையிலேந்தி சாத்தானோடு போர்தொடுத்து, சோதனைகளை வெல்லலாம்.

மேலும் அறிவோம் :

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த(து) ஒழித்து விடின் (குறள் : 280.)

பொருள் : உயர்ந்தோர் தவத்திற்குப் பொருந்தாதவை என்று விலக்கியவற்றை விட்டுவிட்டால், மொட்டையடித்தல், சடை வளர்த்தல் போன்ற புற வேடங்கள் தேவையற்றவை ஆகும்.

மறையுரைமெட்டுக்கள்

அருள்பணி .இருதயராஜ்

ஒரு மனைவி தன் கணவரிடமிருந்து மணமுறிவு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அதற்கு அவர் கூறியிருந்த காரணம் அவருடைய கணவர் கடந்த மூன்று ஆண்டுகளாக அவருடன் பேசுவதில்லை. வழக்கை விசாரித்த நீதி அரசர் கணவரிடம், "உங்கள் மனைவியுடன் நீங்கள் ஏன் பேசுவதில்லை?" என்று கேட்டதற்கு அவர் "அவள் என்னைப் பேசவிட்டால்தானே காலை முதல் இரவு வரை அவளே பேசிக்கொண்டிருக்கிறாள்" என்றார்.

"உன் நாவு உன்னைச் செவிடமாக்கிவிடும்" என்று எச்சரிக்கின்றார் ஓர் அறிஞர் ஆம், பிறரைப் பேசவிடாமல் நாமே பேசிக்கொண்டிருந்தால், மற்றவர்கள் பேசுவது நம் காதில் விழாது. நாம் செவிடர்களாகிவிடுவோம். இன்றைய அருள்வாக்கு வழிபாடு கடவுளுடைய வார்த்தைக்குச் செவிமடுக்க நம்மை அழைக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் மோசேவுக்குக் கூறுகிறார்: "உன்னைப்போல் ஓர் இறைவாக்கினரை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன் என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். என் பெயரால் அவன் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவனை நான் வேறுப்பேன்" (இச 13:18-19)

கிறிஸ்து தோற்ற மாற்றம் அடைந்தபோது தந்தையாகிய கடவுள் உலக மக்களுக்குக் கூறியது: "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்" (மத் 17:5). கிறிஸ்துவினுடைய வார்த்தைகளுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். ஏனெனில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாகப் பேசிய கடவுள் இவ்விறுதி நாள்களில் தம் மகன் வாயிலாக நம்மிடம் பேசியுள்ளார் (எபி 1:1-2). இன்றைய நற்செய்தியில், மக்கள் கிறிஸ்துவின் போதனையைக் கேட்டு வியப்படைந்தனர். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார் (மாற் 1:22). அவருடைய போதனை அவருடைய போதனை அன்று அது அவருடைய தந்தையின் போதனை (யோவா 7:16).
ஞானம் பெறவேண்டுமென்றால், சீடர் குருவைக் கண்டு, அவருடைய வார்த்தையைக் கேட்டு, திரும்பத் திரும்ப அவருடைய பெயரை உச்சரித்து, அவருடைய உருவத்தையே என்றும் சிந்திக்க வேண்டும் என்கிறார் திருமூலர்

"தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல்; தெளிவு குருவின் திருவார்ததைக் கேட்டல்: தெளிவு குருஉருவின் சிந்தித்தல்தானே"

பெத்தானியா மரியா, கிறிஸ்துவில் மிகச்சிறந்த சீடர், ஏனெனில், அவர் ஆண்டவருடைய காலடியில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார் (லூக் 10:39)

ஆன்றோர்களின், சான்றோர்களின் வார்த்தைகளைக் கேட்காதவர்களின் காதுகள் கேட்டாலும் அது செவிட்டுத் தன்மையுடையது என்கிறார் வள்ளுவர்.

"கேட்பினும் கேளாத்தகைலவே கேள்வியால்
தோட்கப்படாத செவி' (குறள் 418)

இஸ்ரயேல் மக்கள் தங்கள் பாலுறுப்புகளை விருத்தசேதனம் செய்வதில் குறியாக இருந்தனர். ஆனால், அவர்கள் கடவுளுடைய வார்த்தையைக் கேட்க காதையோ, கேட்ட வார்த்தையை கடைப்பிடிக்கத் தேவையான இதயத்தையோ விருத்தசேதனம் செய்யவில்லை. எனவேதான் ஸ்தேவான் அவர்களைப் பார்த்து, "திமிர்வாதம் பிடித்தவர்களே, இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும் ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே" (திப 7:51) என்று கூறி அவர்களை வன்மையாகக் கண்டனம் செய்தார்.

ஒரு தாய்க்கோழியிடம் கடவுள் கேட்டார். "நீ எங்கே போனாலும் உன் குஞ்சுகள் உன்னைப் பின்பற்றி வருகின்றன. ஆனால் மனிதர்கள் ஏன் என்னை அவ்வாறு பின்தொடர்வதில்லை. கடவுளிடம் தாய்க்கோழி கூறியது: "நீ உன் பிள்ளைகளை வளர்த்த இலட்சணம் அப்படி?" இது கசப்பான உண்மை. இந்த உண்மையைக் கிறிஸ்து பின்வருமாறு தெரிவித்துள்ளார்: "எருசலேமே, எருசலேமே. கோழி தன் குஞ்சுகளை தன் இறைக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக் கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே" (மத் 23:37),

இன்றைய பதிலுரைப்பாடல் கூறுகிறது: "உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர். ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்" (திபா 957-8). கடவுளுடைய வார்த்தை தம்மை என்றும் மனமாற்றத்திற்கு அழைக்கிறது. மனமாற்றத்திற்கு நம்முன் வைக்கப்படும் சவால் கடவுளா? செல்வமா? "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (மத் 6:24).

இன்றைய சமூக ஊடகங்களின் தாக்கத்தாலும், போலியான சபைகளாலும் மக்கள் ஏமாந்து போகிறார்கள். திருத்தூதர் பவுல் தமது சீடர் திமொத்தேயுவுக்கு வழங்கிய அறிவுரையும் எச்சரிக்கையும் இக்கால மக்களுக்கும் திருப்பணியாளர்களுக்கும் மிகவும் பொருத்தமானது; இன்றியமையாதது: "ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலம் தரும் போதனையைக் கேட்காமல், உண்மைக்குச் செவிகொடுக்காமல் புனைக்கதைகளை நாடிச் செல்வார்கள். ஆனால் நீ இறைவார்த்தையை, வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அறிவி" (2 திமொ 4:2-4).

அசல் தங்க நகைகளும் உண்டு போலியான "கவரிங்" நகைகளும் உண்டு. இன்று மக்கள் போலியான சபைகளைத் தேடிச்சென்று தங்கள் நம்பிக்கையை இழக்கின்றனர். இந்நிலையில் "உண்மைக்குத் தூணும் அடித்தனமுமான" (1 jpnkh 4:15) திருச்சபையின் போதனைக்கு செவிசாய்க்க வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் தீய ஆவிகூடக் கிறிஸ்துவை அடையாளம் கண்டுகொண்டு அவரிடம்: "நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கூறி கத்தியது. ஆனால், "தந்தையால் mர்ப்பணிக்கப்பட்டு அவரால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட கிறிஸ்துவை" (யோவா 10:36) மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் எற்றுக்கொள்ளவில்லை. காரணம், அவர்களுடைய இதயக் கடினம். இதயக் கடினம் பாவங்களிலெல்லாம் டிய பாவம்; தூய ஆவியைப் புறக்கணிக்கும் செயல். எனவே, கடவுள் நமக்கு இன்று கூறும் அறிவுரை வேண்டுகோள். எச்சரிக்கை "உங்கள் இதயங்களைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்"(திபா 95:7-8).

கோணலானவை நேராக. 

அருள்பணி முனைவர் அருள்


எங்கெல்லாம் பாவச் சூழல் நிறைந்திருக்கிறதோ அங்கெல்லாம் அசுத்த ஆவி செயல்படுகிறது என்பது தெளிவு. வன்முறை, வரதட்சணை, ஊழல், அடிமைத்தனம், சுயநலம், மதவெறி, காம வெறி, ஏற்றத் தாழ்வுகள் போன்றவைகள் நிறைந்த இடங்களிலும் அசுத்த ஆவி குடிகொண்டிருக்கிறது.

"பேசாதே! இவனை விட்டுப் போ" (மாற்கு 1:25) என்று இயேசு அதிகாரத்தோடு சொல்லும் வார்த்தைகளை இன்றைய நற்செய்தி நமக்குத் தருகிறது. இயேசுவின் போதனை அதிகாரம் நிறைந்தது. அவரது வார்த்தைகள் உயிருள்ள ஆற்றல் மிக்க வார்த்தைகள் (எபி. 4:12). ஏன் அதிகாரத்தோடு போதித்தார் என்றால், தன் தந்தையோடு கொண்டுள்ள நிரந்தரமான உறவாலும் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கறையின் பிடிப்பாலும் துணிவோடு போதித்தார். பாவ நிலைகளை எதிர்த்தார். மனித மாண்புகளைச் சிதைக்கும் சக்திகளைக் களைந்தார். ஓய்வு நாள் சட்டத்தை மீறினார். இறையாட்சியின் மதிப்பீடுகளை மலைப்பொழிவில் தொடங்கித் தன் வாழ்வின் இறுதிவரை துணிவுடன் போதித்தார். இத்தகைய துணிவோடு போதித்த இயேசுவைத்தான், பாவக்கறை போக்கும் செம்மறி இவரே (யோவா. 1:29) என்று சுட்டிக்காட்டினார் திருமுழுக்கு யோவான். இத்தகைய இயேசுவின் அதிகாரப் போதனையை இனங்கண்டு கொண்ட அசுத்த ஆவி, இயேசுவே எங்கள் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர்? எங்களைத் தொலைக்க வந்தீரோ? நீர் யாரென்று எனக்குத் தெரியும். நீர் கடவுளின் பரிசுத்தர் (மாற். 1:24) என்றும் கூறியது. ஆம்! அசுத்த ஆவிக்கே தெரிகிறது தனது ஆட்சிக்கு முடிவு வந்து விட்டதென்று. ஏனெனில் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மீட்பர் இவர்தான். அசுத்த ஆவியின் ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு, இறையாட்சியைக் கட்டி எழுப்ப வந்தவர். மக்களை பாவ வாழ்விலிருந்து விடுவித்து அருள் ஒளி தரும் தூய வாழ்வுக்கு அழைத்துச் செல்ல வந்தவர் தான் என்பதை நிலைநாட்டுகிறார் இயேசு.

இன்றையச் சூழ்நிலையில் எதுவெல்லாம் மனிதனின் மாண்புகளைக் குறைத்து, உறவுகளைச் சிதைத்து அடிமைப்படுத்தி, விடுதலை பெற்ற மனிதனாக வாழத் தடையாக இருக்கிறதோ அவைகள் எல்லாம் அசுத்த ஆவியின் செயல்பாடுகள்தான். அதை முறியடிக்க முடியுமா?

ஆம்! முடியும். தந்தையோடு இயேசு இணைந்திருந்தார். அவரது ஆற்றலால் அசுத்த ஆவியின் செயல்பாடுகளைத் தகர்த்தெறிந்தார். அதே ஆற்றலை தன் சீடர்களுக்கும் கொடுத்தார். அவர்களும் அவரது பணியைத் தொடர்ந்தார்கள் (லூக். 10:22). நாமும் திருமுழுக்கு வழியாக இவ்வாற்றலைப் பெறுகிறோம். இறைவனின் உறவில் நாம் நிலைத்திருந்தால் அசுத்த ஆவியின் செயல்பாடுகளை அகற்றி, அருள் ஒளி நிறைந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். கிறிஸ்தவ வாழ்வு குறுக்கு வழிகளைக் கொண்டதல்ல. சரிக்கட்டி வாழும் சமுதாயமும் அல்ல. மாறாகக் கோணலான வழிகளைக் கூட செப்பனிட்டுப் புதிய பாதையை உருவாக்குவதே. இயேசு தொடங்கிய இறையாட்சியை நிறைவாக்குவதே திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமையாகும். இயேசுவைப்போல நாமும் அதிகாரத்தோடு இறையாட்சியை உருவாக்க முயற்சி செய்தால் பாவ இருள் மறைந்து அருள் ஒளி உதயமாகும்.

பாவச் சோதனையால் கடவுளுக்குக் கீழ்ப்படிய மறுத்த ஆதாமைப்போல அல்லாது, பணத்திற்காக இயேசுவை விலை பேசிய யூதாசைப்போல் அல்லாது, இயேசுவின் சந்திப்பால் புதுவாழ்வு பெற்ற சக்கேயுவைப்போல இந்தச் சமுதாயத்தை மாற்றப் புறப்படுவோம். நாமும் மனம் மாறுவோம்.

அதிகாரம் - யாருக்கு? யார்மேல்?

அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை

மனித உள்ளுணர்வுகளைப் பற்றிப் பேசுகின்ற ஆஸ்திரிய நாட்டு உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்டு அவர்கள், 'மனித மனத்தில் மேலோங்கி இருக்கும் உள்ளுணர்வுகள் இரண்டு எனவும், அவை வன்முறை மற்றும் பாலுணர்வு' என்றும் குறிப்பிடுகின்றார். ஆனால் இவை இரண்டையும்விட ஓர் உள்ளுணர்வு நமக்கு அடிப்படையாக இருக்கிறது. அதுதான் 'அதிகாரம்.' இந்த 'அதிகாரம்' அல்லது 'ஆற்றல்' உணர்வு நமக்கு பிறப்பிலேயே இயல்பாக வருகிறது. மேலும், பரிணாம வளர்ச்சியில் மனிதர்கள் 'ஹோமோ ஸேபியன்ஸ் ஸேபியன்ஸ்' என தனித்;து, உயர்ந்து நிற்பதற்குக் காரணமும் இந்த 'அதிகாரமே.'

இன்றைய இறைவாக்கு வழிபாடு 'அதிகாரம்' என்ற இந்த ஒற்றைச் சொல்லின் மூன்று பரிமாணங்களை - யாருக்கு? யார்மேல்? யாரால்? - நமக்கு எடுத்தியம்புகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்திலிருந்து (காண். 1 கொரி 7:32-35) தொடங்குவோம்.

'மணமாகாதவர்களும், கைம்பெண்களும்' என்ற கருத்துருவோடு கொரிந்து நகரத் திருச்சபைக்கு அறிவுரை வழங்கும் பவுலடியார் 'அக்கறை கொள்வதிலும், அடுத்தவருக்கு உகந்தவற்றைச் செய்வதிலும் அதிகாரம் இருக்கிறது' என பதிவு செய்கின்றார். மணமானவர் உலகிற்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார். தன் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்கின்றார். மணமாகாதவர் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார். தன் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்கின்றார். பவுலின் விருப்பத்தேர்வு ரொம்ப சிம்பிள்: 'நீ இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் தேர்வு செய்ய முடியும். இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும் என்ற நிலை கூடாது!' ஏனெனில், மணமானவர் தன் மனைவியின்மேல் கொள்ளும் அக்கறையும், அவருக்கு உகந்தவற்றைச் செய்வதும் தன் மனைவியின்மேல் அவருக்கு அதிகாரம் அளிக்கிறது. அதே போல மணமாகாதவர் ஆண்டவர்மேல் கொள்ளும் அக்கறையும், அவருக்கு உகந்தவற்றைச் செய்வதும் ஆண்டவரின்மேல் அவருக்கு அதிகாரம் அளிக்கிறது. ஆக, அதிகாரத்தின் ஊற்று அக்கறை கொள்வதிலும், அடுத்தவருக்கு உகந்தவற்றைச் செய்வதிலும் அடங்கியிருக்கிறது. ஏன் இரண்டு பேர்மேல் - மனைவிமேல், ஆண்டவர்மேல் - ஒரே நேரத்தில் அதிகாரம் கொள்ள முடியாது என்றால், யார் ஒருவர் பிளவுபடா உள்ளம் கொண்டிருக்கிறாரோ அவர்தான் அதிகாரம் காட்ட முடியும். மனைவிக்கும், ஆண்டவருக்கும் இடையே உள்ளம் பிளவுபட்டிருக்கக் கூடாது.

இதை எப்படி புரிந்துகொள்வது?

இன்றைய நற்செய்தி வாசகத்தின் (காண். மாற் 1:21-28) ஒரு பகுதி நமக்கு இதற்கு உதவி செய்கிறது.

இயேசுவின் போதனையைப் பற்றிய மக்களின் வியப்பை பதிவு செய்கின்ற நற்செய்தியாளர் மாற்கு, 'அவர் மறைநூல் அறிஞர் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்கு கற்பித்து வந்தார்' என்று பதிவு செய்கின்றார். ஆக, இயேசுவின் போதனையில் அதிகாரம் இருந்தது. ஆனால் மறைநூல் அறிஞரின் போதனையில் அதிகாரம் இல்லை.

தொழுகைக்கூடத்தில் பேய்பிடித்த ஒருவர் இருக்கிறார். மறைநூல் அறிஞர் இவரை ஒருவேளை தொழுகைக்கூடத்தைவிட்டு வெளியேற்றி இருப்பார். ஆனால், இயேசுவோ தீய ஆவியை விரட்டுகின்றாரே தவிர, தீய ஆவி பிடித்திருந்த நபரை வெளியேற்றவில்லை. மறைநூல் அறிஞர் தன்மையம், இறைமையம் என இரண்டு மையங்களைக் கொண்டிருந்தார். ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும் தனக்கு எது ஏதாயம் அல்லது உகந்தது என்ற எண்ணத்தோடு இருந்தார். அதே வேளையில் மறைநூலைக் கற்றறிந்ததால் இறைமையமும் கொண்டிருந்தார். ஆனால், இயேசுவிடம் மையங்கள் பிளவுபடவில்லை. அவர் ஒரே மையத்தைக் கொண்டிருந்தார். அதுதான் இறைமையம். இவர் இத்தகைய இறைமையம் கொண்டிருந்தார் என்பதை தீய ஆவியும்கூட அறிக்கையிடுகின்றது: 'நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்.' இவ்வாறாக, பிளவுபடா உள்ளம் கொண்டிருப்பவரே அதிகாரம் கொண்டிருக்க முடியும் என்பது தெளிவாகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். இச 18:15-20), 'உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன்' என்று மோசேயிடம் முன்னுரைக்கின்ற கடவுள், உடனடி இலக்கிய சூழலில் இறைவாக்கினர் எரேமியாவைக் குறித்தாலும், தொலைதூர சூழலில் மெசியாவாகிய இயேசுவைக் குறிக்கின்றது. இந்த இறைவாக்கினன் தன் அதிகாரத்தை கடவுளிடமிருந்து பெறுகிறான். அவரது பெயராலேயே அவன் இறைவாக்குரைக்க முடியும்.

ஆக, இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் பின்புலத்தில் அதிகாரம் 'யாருக்கு' இருக்கிறது?

அ. கடவுளின் கட்டளைப்படி பேசும் இறைவாக்கினன் (முதல் வாசகம்).

கடவுள் கட்டளையிட்டதை மட்டும் சொல்லும் இறைவாக்கினன். கடவுள் கட்டளையிடுவது நன்மைக்காகவோ அல்லது தீமைக்காகவோ, அந்தக் கட்டளையைக் கூட்டாமல் குறைக்காமல் அப்படியே சொல்லும் இறைவாக்கினன். இத்தகையை பணியை மோசே செய்தார். இப்போது இதே பணி புதிய இறைவாக்கினன்மேல் சுமத்தப்படுகிறது.

ஆ. பிளவுபடா உள்ளம் கொண்டிருப்பவர் (இரண்டாம் வாசகம்)

உலகமா? அல்லது கடவுளா? ஆண்டவரா? அல்லது மனைவியா? என்ற கேள்வியும், அந்தக் கேள்விக்கு 'ஆம்' என்று விடை வந்தால் ஏற்படும் பிளவும் இல்லாமல் இருப்பவர். இப்படிப்பட்ட பிளவற்ற நிலைக்கு மிகவும் அடிப்படையானது 'தேர்வு.' அதாவது, நல்லது எது, அல்லாதது எது என தேர்ந்து தெளிந்து, அந்தத் தேர்வில் நிலையாய் இருப்பதுதான் பிளவுபடா உள்ளம். முன்னுக்குப் பின் பயணம் செய்யும் மனம், தெளிவான முடிவை எடுக்கத் தயக்கம் காட்டும் மனம், தெரிந்தபின் வருந்தும் மனம் ஆகியவை பிளவுபடாமல் இருக்க முடியாது.

இ. கடவுளுக்கு அர்ப்பணமானவர் (நற்செய்தி வாசகம்)

'கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என்ற மொழிபெயர்ப்பு கிரேக்கத்தில் 'ஹோ ஹாகியோஸ் தூ தெயூ' என்று உள்ளது. அதாவது, 'கடவுளின் தூயவர்' அல்லது 'கடவுளின் புனிதமானவர்.' புனிதம் அல்லது தூய்மை நிலை என்பது எந்தவொரு கலப்பும், பாரபட்சமும், தன்னலமும், கலக்கமும், பயமும் இல்லாதது.

இன்று நான் என் தனிப்பட்ட வாழ்விலும், என் நட்பு வட்டத்திலும், என் குடும்பத்திலும், என் பங்கு, பணியிடம், என் அருள்பணி வாழ்க்கை நிலையிலும் கையாளும் அதிகாரம் மேற்காணும் மூன்று நிலைகளில் ஊற்றெடுக்கிறதா? அல்லது 'என் கட்டளைப்படி,' 'பிளவுண்டு,' 'தூய்மையற்ற' நிலையில் ஊற்றெடுக்கிறதா?

அதிகாரம் 'யார்மேல்' இருக்கிறது?

அ. வார்த்தைகளின்மேல் (முதல் வாசகம்)

வார்த்தைகளின்மேல் அதிகாரம் கொண்டிருப்பது என்பது வார்த்தைக்கும், செயலுக்கும் இருக்கின்ற இடைவெளியைக் குறைப்பது. 'நான் காலையில் 5 மணிக்கு எழுந்திருப்பேன்' என்று நான் சொல்கிறேன் என வைத்துக்கொள்வோம். என் இந்தச் சொற்களும், காலையில் 5 மணிக்கு எழும் என் செயலும் இணைந்து சென்றால்தான் என் வார்த்தைகளின்மேல் எனக்கு அதிகாரம் இருக்கிறது என்று அர்த்தம். '5 மணிக்கு எழுந்திருப்பேன்' என்று சொல்லிக்கொண்டு 7 மணிக்கு எழுந்தால் என் வார்த்தைகளின்மேல் எனக்கு அதிகாரம் இல்லை என்றும், என் வார்த்தைகள் வெறும் சப்தமே என்றும் பொருள்.

ஆ. மனைவி அல்லது ஆண்டவர்மேல்

இங்கே 'அக்கறை,' மற்றும் 'உகந்ததைச் செய்வது' மேலோங்கி நிற்கிறது. மனைவி அல்லது ஆண்டவர்மேல் அதிகாரம் கொண்டிருப்பது என்பது, தான் அவர் மேல் காட்டிய அக்கறையால் அல்லது அவருக்கு உகந்ததைச் செய்ததால் அவரிடமிருந்து தேவையானதைப் பெற்றுக்கொள்வது. தன் தந்தை விரும்பியவாறு வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் குழந்தை தன் தந்தையிடம் பரிசாக சைக்கிள் ஒன்றைக் கேட்டுப்பெறுதல்கூட இவ்வகையில் அதிகாரம் ஆகிறது.

இ. தீயஆவியின் மேல்

இயேசுவின் அதிகாரம் தீய ஆவியின் மேல் இருக்கிறது. 'நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என்ற தீய ஆவியின் நம்பிக்கை அறிக்கையில் அல்லது முகஸ்துதியில் இயேசு மயங்கிவிடவில்லை. 'பரவாயில்லை. நீ இங்கேயே இரு!' என்று தீய ஆவியைத் தங்கவிடவில்லை. மாறாக, எந்தவித சமரசமும் இல்லாமல் அதை வெளியே துரத்துகின்றார். சில நேரங்களில் தீமையின் மாயக் கவர்ச்சி அதன்மேல் நாம் அதிகாரம் செலுத்துவதைத் தடுக்கின்றது. ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் எல்லாருக்குமே இலஞ்சம், ஊழல் ஆகியவை தீமை என்றும், அவற்றை அழிக்கத் தங்களுக்கு அதிகாரம் உண்டு என்பதும் தெரியும். இருந்தாலும் அவர்கள் தீமை மேலோங்குவதையும், வளர்வதையும் கண்டுகொள்வதில்லை. ஏனெனில், தொழுகைக்கூடத்தின் தீய ஆவி போலவே இவ்வகைத் தீமைகளும் மாயக் கவர்ச்சி வலையை விரிக்கின்றன.

இன்று நம் வாழ்வில் எழும் வாழ்வியல் மற்றும் உறவு பிரச்சினைகளுக்கு மேற்காணும் இரண்டு கேள்விகளே காரணமாக அமைகின்றன: 'யாரால் அதிகாரம்?' 'யார்மேல் அதிகாரம்?'

ஆனால், இன்று என் அதிகாரம் யாரால் வருகிறது? என் அதிகாரம் யார்மேல் வருகிறது?

பேருந்தில் காலியாக இருக்கும் ஓர் இருக்கையில் அமர வேகமாக நகர்வதிலிருந்து,

திருமண நிகழ்ச்சியில் முன்னால் இருக்கையில் அமர்வது தொடர்ந்து,

ஒவ்வொரு நாளும் நம் மனதிற்குள்ளேயே அதிகாரத்திற்கான போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. இன்று என் அதிகாரம் அடுத்தவர்களுக்கு வாழ்வு கொடுக்கிறது என்றால், அடுத்தவர்களை மையமாக வைத்திருக்கிறது என்றால் எத்துணை நலம்!

இறுதியாக,

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் உள்ள சின்னஞ்சிறு வார்த்தைகளை இறுதிப்பாடமாக எடுத்துக்கொள்வோம்:

அ. 'அவர் விரும்பும் இறைவாக்கினன்'

ஆண்டவரின் இதயத்திற்கு உகந்த இறைவாக்கினன், மோசே போன்ற இறைவாக்கினன் யார்? என்ற கேள்வி இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. யோசுவா, எரேமியா, இயேசு கிறிஸ்து என பல விடைகள் இதற்குச் சொல்லப்பட்டாலும், உறுதியான விடை நம்மிடம் இல்லை. அந்த இறைவாக்கினர் நீங்கள் மற்றும் நானாகக் கூட இருக்கலாம். இந்த இறைவாக்கினருக்குத் தேவையான தகுதி ஒன்றே: 'அவரின் கட்டளைகளைக் கேட்டு அடுத்தவருக்குச் சொல்வது.' இன்று அவரின் வார்த்தைகளைக் கேட்க பலர் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால், அவருக்கும் இவர்களுக்கும் இடையே உள்ள இந்த இடைவெளியைக் குறைக்க ஆள்கள் தேவை. இதற்கான அழைப்பை நாம் நம் அன்றாட வாழ்வில் ஏற்றுக்கொள்தல் முதல் பாடம்.

ஆ. 'மணமானவர், மணமாகாதவர்'

'நீங்கள் கவலைகளின்றி வாழ நான் இதை எழுதுகிறேன்' என தொடங்குகின்ற பவுலடியார் மணமானவர்கள் மற்றும் மணமாகாதவர்கள் பற்றிப் பதிவு செய்கின்றார். பவுல் எழுதுவதுபோல பல நேரங்களில் எதார்த்தம் இல்லை. மணமானவர் தன் மனைவி மேல் அக்கறை கொண்டிருப்பதும், அவருக்கு உகந்ததைச் செய்வதும் பல நேரங்களில் நம் குடும்பங்களில் நடப்பதில்லை. அதுபோல, மணமாகாதவர் ஆண்டவர்மேல் அக்கறை கொண்டிருப்பதும், அவருக்கு உகந்ததைச் செய்வதும் அருள்பணி வாழ்வில் நடப்பதில்லை. சில நேரங்களில் மணமானவர் ஆண்டவர்மேல் அதிக அக்கறை கொண்டிருப்பதையும், அவருக்கு உகந்ததை இன்னும் அதிகமாகச் செய்வதையும் காண்கிறோம். ஆக, இன்று நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ, அந்த நிலைக்குரிய வாழ்வை முழுமையாக வாழ்தல் அவசியம் என்பது இயேசு தரும் இரண்டாம் பாடம்.

இ. 'வாயை மூடு!'

தொழுகைக்கூடத்தில் இருக்கின்ற தீய ஆவியை 'வாயை மூடு!' என அதட்டுகின்றார். அதட்டுவது என்பது அதிகாரத்தைக் குறிக்கிறது. 'வாயை மூடுவதும்' அதிகாரத்தின் வெளிப்பாடுதான். அதிகாரம் கொண்டிருப்பவர்கள் அதிகம் பேசுவதில்லை. வாழ்க்கையின் இரகசியம் இரண்டு 'எஸ்'களில் உள்ளது: 'ஸைலென்ஸ்,' 'ஸ்மைல்.' வாயை மூடிவிட்டாலே வாழ்வின் பாதி பிரச்சினைகள் முடிந்துவிடுகின்றன. பல அதிகார பிரச்சனைகள் வருவதை தவிர்க்க நல்ல வழியும் 'வாயை மூடுவதே!'

நிற்க.

அதிகாரம் அது கடவுளால் தரப்பட்டது என்றாலும் அதற்கும் வரையறை உண்டு.

'வாயை மூடு!' என்று தொழுகைக்கூடத்தில் தீய ஆவிக்கு கட்டளையிட்ட இயேசு, தான் தலைமைச்சங்கத்தின்முன்னும், பிலாத்தின்முன்னும் நிறுத்தப்பட்டபோது, அங்கே நிலவிய கூச்சலைப் பார்த்து, 'வாயை முடு!' என ஏன் சொல்ல முடியவில்லை?

 


இயேசு என்னும் இறைவாக்கினர்களுக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினர்!

அருள்பணி மரிய அந்தோன்ராஜ் பாளையங்கோட்டை

Tales to Hoffman என்னும் நூலில் இடம்பெறுகின்ற ஒரு நிகழ்வு.

ஒரு சமயம் கடலில் ஓர் அமெரிக்கக் கப்பல் போய்க்கொண்டிருந்தது. அந்தக் கப்பலின் மேல் தளத்தில் இருந்த குருவானவர் அங்கிருந்த மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். மக்களும் அவருடைய போதனையை வியந்து கேட்டனர்

அவருடைய போதனை முடிந்ததும் அவருடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த கப்பல் பயணி ஒருவர் அவரிடம் வந்து, “தந்தையே! உங்களுடைய போதனை மிக அருமையாக இருந்தது” என்றார். “எதை வைத்து அவ்வாறு சொல்கின்றீர்?” என்று குருவானவர் அவரிடம் கேள்வி கேட்க அவர், “உங்களுடைய போதனை உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்தாக இருந்தது. மேலும் அது என்னுடைய உள்ளத்தைத் தொடுவதாக இருந்தது” என்றார்.

உள்ளத்திலிருந்து போதிக்கப்படும் எந்தவொரு போதனையும் / மறையுரையும் எப்போதும் பிறருடைய உள்ளத்தைத் தொடுவதாகவே இருக்கும்.

இப்படி சாதாரண இறையடியார்களின் போதனையே உள்ளத்தைத் தொடுவதாக, வியந்து பார்க்கக்கூடியதாக இருக்கும்போது இறைவாக்கினர்களுக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினராகிய இயேசுவின் போதனை எந்தளவுக்கு வல்லமையுள்ளதாக இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்.

பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் ‘இயேசு என்னும் இறைவாக்கினருக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினர்’ என்னும் சிந்தனையைத் தருகின்றன. நாம் அதனைக் குறித்து சில மணித்துளிகள் சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று போதிக்கத் தொடங்குகின்றார். அவருடைய போதனையைக் கேட்ட மக்கள் வியந்துபோய் நிற்கின்றார்கள். மக்கள் வியந்து பார்க்கின்ற அளவுக்கு இயேசுவின் போதனை இருந்ததற்குக் காரணம் என்ன என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசுவின் போதனை மக்களால் வியந்து பார்க்கக்கூடிய அளவுக்கு இருந்ததற்கு மூன்று முக்கியமான காரணங்களை நாம் சொல்லலாம். ஒன்று அவருடைய போதனை அதிகாரம் கொண்டதாக இருந்தது. பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் போதித்தபோது ‘அவர் சொன்னார்’, ‘இதில் இப்படி இருக்கின்றது’ என்றுதான் போதித்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ ‘நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்று போதிக்கின்றார். அதனாலே அவருடைய போதனை அதிகாரம் கொண்ட போதனையாகவும், மக்களால் வியந்து பார்க்கின்ற போதனையாக இருந்தது.

இரண்டாவது காரணம் ஆண்டவர் இயேசுவுக்கு அலகையும் கட்டுப்பட்டது. யூத போதகர்கள், சமயத் தலைவர்கள் மாய வித்தைகளை வைத்துக்கொண்டு அலகையை ஒட்டிவந்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ அப்படி இல்லை. அவர் தூய ஆவியின் துணையைகொண்டு அலகையை ஒட்டி வந்தார். திருத்தூதர் பணிகள் நூல் 10 ஆவது அதிகாரம் 38 ஆவது இறைவார்த்தை இதை மிக அழகாக எடுத்துரைக்கின்றது, “கடவுள் நாசரேத்து இயேசுவின் மேல் தூய ஆவியின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால், அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்”. ஆகையால், இயேசுவின் போதனைக் கேட்டு வியப்பதற்கு காரணமாக அவர் அலகையின் மீது அதிகாரம் கொண்டிருந்ததையும் சொல்லலாம்.

மூன்றாவது காரணம் அவர் ஆண்டவர் சொன்னதையே போதித்தார் என்பதாகும். இஸ்ரயேலில் ஒரு சில (போலி) இறைவாக்கினர்கள் இருந்தார்கள். அவர்கள் கடவுள் சொல்லாதையும் கடவுள் சொன்னதாகப் போதித்தார்கள். இதனால் மக்கள் அந்த போலி இறைவாக்கினர்களின் போதனையால் தவறாக வழிநடத்தப்பட்டார்கள். ஆனால், ஆண்டவர் இயேசுவோ தந்தையாம் கடவுள் எதைப் போதிக்கச் சொன்னாரோ அதையே போதித்தார். அதைவிடவும் இயேசு தான் போதித்ததை வாழ்வாக்கினர், வாழ்ந்ததைப் போதித்தார். அதனாலேயே மக்கள் அவருடைய போதனையை வியந்து பார்த்தார்கள். ஆகையால், இயேசுவின் போதனை மக்களால் வியந்து பார்க்கக்கூடிய அளவுக்கு இருந்தது என்று சொன்னால் அவருடைய பேச்சில் அதிகாரம் இருந்தது, அவருடைய போதனைக்கு அலகையும் கட்டுப்பட்டது; அவர் வாழ்ந்ததையோ போதித்தார், போதித்ததையே வாழ்ந்தார் என மிக உறுதியாகச் சொல்லலாம். ஓர் உண்மையான இறைவாக்கினர் என்பவர் இறைவாக்கினருக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினராகிய இயேசுவைப் போன்று இருக்கவேண்டும் என்பதுதான் நாம் நம்முடைய மனதில் பதிய வைக்கவேண்டிய செய்தியாக இருக்கின்றது.

இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், ஓர் இறைவாக்கினர் என்பவர் யார்? அவருடைய பணிகள் என்ன? என்பதைக் குறித்து மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. நாம் அதனைக் குறித்து சிந்தித்துப் பார்த்துவிட்டு பெரிய இறைவாகினராகிய இயேசுவின் வழியில் எப்படி நடக்கலாம் என்ற முயற்சிப்போம்.

“ஓர் இறைவாக்கினனை உங்களுடைய (அவர்களுடைய) சகோதரர்களினின்று நான் உங்களுக்கு ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என் பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்கு செவிகொடுக்காதவனை நான் வேரருப்பேன்” என்று இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிக்கின்றோம்.

ஆம், ஓர் இறைவாக்கினன் என்பவர் மனிதரால் தேர்தெடுக்கப்படுகின்றவர் அல்ல, அவர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றவர்; கடவுளின் வார்த்தைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றவர். எனவே, அவரை ஏற்றுக்கொள்வது கடவுளை ஏற்றுக்கொள்வதற்கும், அவரைப் புறக்கணிப்பது கடவுளைப் புறக்கணிப்பதற்குச் சமமாக இருக்கின்றது. மத்தேயு நற்செய்தியில் இதைத்தான் ஆண்டவர் இயேசு, “உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கின்றார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கின்றார்” (மத் 10: 40) என்கிறார்.

பல நேரங்களில் கடவுளின் வார்த்தையை மக்களுக்கு எடுத்துச் சொல்கின்ற இறைவாக்கினர்கள்/ இறையடியார்கள் மக்களால் புறக்கணிக்கப்படுவது மிகவும் வேதனை தரக்கூடியதாக இருக்கின்றது.

1960 - களின் தொடக்கத்தில் ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள சூடானில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிகப்பெரிய மதக்கலவரம் வெடித்தது. அப்போது அங்கிருந்த கிறிஸ்தவர்கள் எல்லாரும் தங்களுடைய உயிரை காத்துக்கொள்ள அண்டை நாடான உகாண்டாவிற்குத் தப்பி ஓடினார்கள். அப்படித் தப்பி ஓடிய கிறிஸ்தவர்களில் பாரிட் தபான் (Paride Thapan) என்ற சிறுவனும் அடங்கும். அவர் உகாண்டாவிற்கு சென்று, அங்கிருந்த குருமடத்தில் குருத்துவக் கல்வி பயின்று குருவாக மாறினார். ஒருசில ஆண்டுகளுக்குப் பிறகு சூடானில் அமைதி திரும்பியபோது அருட்தந்தை தபான் தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பினார்.

சூடானுக்குத் திரும்பிய பிறகு அருட்தந்தை தபானை பலோடகோ என்னும் பங்கில் பங்குத்தந்தையாக நியமித்தார்கள். அவரும் அந்தப் பங்கில் சிறப்பான பணிகளைச் செய்ய வேண்டும் என்று மிக ஆர்வமாகச் சென்றார். ஆனால், அவருக்கு அங்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அது என்ன அதிர்ச்சி என்றால், பலோடகா பங்கில் இருந்தவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்கள், இவரோ கருப்பினத்தைச் சார்ந்தவர். ஒரு கறுப்பினத்தைச் சார்ந்தவரை எப்படி பங்குக் குருவாக ஏற்றுக்கொள்வது என்று மக்கள் அவரைப் புறக்கணித்தார்கள். இதற்கிடையில் இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருச்சபையில் மிகப்பெரிய மறுமலர்ச்சியையும், மாற்றத்தையும் கொண்டு வந்தது. அவற்றையெல்லாம் அருட்தந்தை தபான் அமல்படுத்த முயன்றபோது, மக்களிடமிருந்து அவருக்கு அளவுக்கு அதிகமாக எதிர்ப்புகள் வந்தன. அவற்றையெல்லாம் தாங்கிகொண்டு இறைப்பணியை அவர் செவ்வனே செய்தார்.

ஒருகட்டத்தில் பங்கு மக்கள் அவர் செய்து வந்த நற்பணிகளைப் பார்த்து, அவரை மெல்ல ஏற்றுக்கொள்ளத் தொடங்கினார்கள்.

இறைப்பணியாளர்களும் இறையடியார்களும் எப்படி இன ரீதியாக, சாதிய ரீதியா மொழி ரீதியாக ஒதுக்கப்படுகின்றார்கள், புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்பதற்கு அருட்தந்தை தபான் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இன்றைக்கும் ஏராளமான இறையடியார்கள், குருக்கள் மக்களால் புறக்கணிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதைப் பார்க்கின்றபோது நெஞ்சம் கனக்கின்றது.

இந்த இடத்தில் நாம் ஒரு முக்கியமான உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும். அது என்னவென்றால் இறைப்பணியாளர்களை வெறுப்பவர்களுக்கு, ஒதுக்கின்றவர்களுக்கு இறைவன் கொடுக்கின்ற தண்டனை. இன்றைய முதல் வாசகம் ஓர் இறைவாக்கினர் என்பவர் யார் என்பதை எடுத்துக்கூறுகின்ற அதே வேளையில் இறைவாக்கினரைப் புறக்கணிக்கின்றவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. “என் பெயரால் இறைவாக்கினர் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்காதவனை நான் வேரருப்பேன்” (இச 18:19) என்று ஆண்டவர் மிகக் கண்டிப்பாய் கூறுகின்றார். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூட இதை ஒத்த கருத்தினைத் தான் சொல்கின்றார், “உங்களை எவராவது ஏற்றுக்கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றிற்கு செவி சாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை அல்லது நகரைவிட்டு வெளியேறும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதவி விடுங்கள். தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப் பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையைவைத் அந்த நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்” (மத் 10: 14 -15).

ஆகையால், இறைப்பணியைச் செய்யும் இறைவாக்கினர்கள் இறைவனின் அடியார்கள் என்பதை உணர்வது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது. அது நேரத்தில் இறைவாக்கினர்களுக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினராகிய இயேசுவை ஏற்றுக்கொள்வதைக் கொண்டே நம்முடைய வாழ்வும் மீட்பும் அடங்கி இருக்கின்றது.

ஆகவே, நம் மத்தியில் இறைப்பணி செய்யும் இறையடியார்களுக்கு உரிய முக்கியத்துவம் தருவோம், இயேசுவே உண்மையான இறைவன், இறைவாக்கினருக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினர் என்பதை உணர்வோம். அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். 

.

 

Tuesday 16 January 2018

பொதுக் கால 3- ஆம் ஞாயிறு

பொதுக் காலம் 3- ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி

யோனா 3:1-5, 10 கொரி 7: 29-31: மாற் 1:14-20


அருள்பணி Y.இருதயராஜ் - மறையுரை மொட்டுக்கள்

தகப்பன் ஒருவர் 10-வது படிக்கும் தன் மகனிடம், "உன்னை இந்த ஜென்மத்தில் திருத்த முடியாது என்றார். அதற்கு அவன், நான் என்ன பரிட்சைப் பேப்பரா திருத்துவதற்கு உங்க வேலையைப் பாத்துக்கிட்டு போப்பா" என்றான். விடைத்தாள் களைத்தான் திருத்த முடியும், மனிதர்களைத் திருத்த முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டான் அந்த இளைஞன். மனிதர்கள் திருந்த வேண்டும், மனிதர்கள் மனமாற்றம் அடைய வேண்டும். இன்றைய அருள்வாக்கிள் மையக்கருத்து மனமாற்றமாகும்.

இறைவாக்கினர் யோனாவின் எச்சரிக்கைக்குச் செவிமடுத்து, நினிவே நகர மக்கள் சாக்கு உடுத்தி, சாம்பலில் அமர்ந்து உண்ணாமலும் குடியாமலும் நோன்பு இருந்தனர். அவர்கள் மனமாறியதைக் கண்ட கடவுள் அவர்களை அழிக்காமல் பாதுகாத்தார். பிற இனத்தைச் சார்ந்த நினிவே மக்களும் கடவுளுக்கு அஞ்சி மனமாறினர். மனிதர் மனமாற முடியும், மனமாறவும் வேண்டும்

"காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி விட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" (மாற் 1:15) தமது நற்செய்திப் பணியின் தொடக்கத்தில், கிறிஸ்து மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தார்.

மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை, "என் பின்னே வாருங்கள்" (மாற் 1:17) என்று அழைத்தார். அவர்களும் உடனே தங்கள் படகுகளையும் வலைகளையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர், அவர்கள் நம்பியிருந்த கடலை விட்டுவிட்டு முன்பின் தெரியாத கிறிஸ்துவைப் பின்பற்ற முன் வந்தது மனமாற்றமல்லவா? மனிதர் மனமாறவேண்டும், மனமாறவும் முடியும்,

விவிலியம் சுட்டிக்காட்டும் மனமாற்றம் ஆழமான அடிப்படையான மனமாற்றம் அது உள்மனமாற்றம், இதயமாற்றம், "நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ளவேண்டாம் இதயத்தைக் கிழித்துக் கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்" (யோவே 2:13). கடவுள் ஒருவரையே நமது வாழ்வின் மையமாகவும் ஒப்பற்ற செல்வமாகவும் கருதி வாழ்வதே உண்மையான மனமாற்றம் கடலையும் மீனையும் நம்பி வாழ்ந்த மீனவர்கள் இயேசுவைப் பின்பற்றத் துணிவுடன் முன்வந்தனர். இனி அவர்கள் வாழ்வின் மையம்கடல் அல்ல. கடவுளே!

இன்றைய மனிதரின் மையம் பணமே, இன்றைய உலகின் பாவத்தை "அங்காடியின் சிலைவழிபாடு" என்கிறார் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், உலகச் சந்தையும் உலக வங்கியும் தான் இன்று நாடுகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. ஒருவர் எப்படி இருக்கிறார் என்பதைவிட அவர் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்பதே முக்கியம். சமூக ஊடகங்களும் தேவையற்ற தேவைகளை உருவாக்கி, நுகர்வுக் கலாசாரத்திற்கு மனிதரை அடிமையாக்கிவிட்டது.
பணம் வாழ்வுக்குத் தேவைதான் "இனிமையான இல்லறத்திற்குத் தேவையானது பணமா? பாசமா?" என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில், பணம்தான் தேவை என்று பேசியவர், "பொருட்பால் இல்லையென்றால், காமத்துப்பாலும் வாங்கமுடியாது. ஏன், ஆவின்பால் கூட வாங்கமுடியாது" என்று அடித்துப் பேசினார். கணவனிடம் பணம் இருந்தால்தான் அவன் 'அத்தான்", இல்லையென்றால் அவர் செத்தான்!

இவ்வுலகச் செல்வங்களை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அறிவுறுத்துகின்றார் புனித பவுல், "உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர்போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பதுபோல் நெடுநாள் இராது" (1கொரி 7:31)

இவ்வுலக இன்பங்களைத் துய்க்கும்போது அதிலே மயங்கி விடலாகாது ஒரு பாம்பின் வாயில் ஒரு தவளை. அத்தவளையின் வாயில் ஒரு வண்டு; அந்த வண்டு சிறிது நேரத்திற்கு முன்பு பூவிலிருந்து தேனை எடுத்துத் தன்வாயில் வைத்துக் கொண்டிருக்கிறது. தான் தவளை வாயிலும், தவளை பாம்பின் வாயிலும் இருப்பதை உணராமல், தனக்கு வரவிருக்கும் பேராபத்தைப் பற்றிச் சற்றும் எண்ணாமல், அந்த வண்டு தன் வாயில் இருக்கும் தேனைச் சுவைத்து மயங்கி இருக்கிறது. அவ்வாறு நாமும் இருப்பது அறிவுடமையாகுமா?

இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து விடுவிக்கக் கடவுளுக்கு ஒரு இரவு மட்டும் தேவைப்பட்டது. ஆனால் எகிப்தை அவர்களது இதயத்திலிருந்து விடுவிக்கக் கடவுளுக்கு 40 ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆம், எகிப்து நாட்டின் வெள்ளரிக்காய், வெங்காயம், வெள்ளைப்பூண்டு. இறைச்சி அம்மக்களின் இதயத்தை விட்டு அகலவே இல்லை. ஏனெனில், "வயிறே அவர்கள் தெய்வம்" (பிலி 319) எனவே இவ்வுலகச் செல்வங்களை ஞானத்துடன் பயன்படுத்தி விண்ணக நலன்களைப் பெறவேண்டும். "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (மத் 6:24). ஆண்டவரின் இந்த அருள்வாக்கு நமது மனமாற்றத்திற்கு ஓர் அறை  கூவல்

ஒவ்வேர் ஆண்டும் நமது நாட்டின் குடியரசு விழா கொண்டாடும் பொழுது நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே மற்றவர்களை  விட நாட்டுப்பற்று அதிகம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். "இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள்" (திமோ 2:2)
இரண்டு ஆண் குழந்தைகளுக்கு இலஞ்சராஜ் - ஊழல் ராஜ் என்றும், இரண்டு பெண் குழந்தைகளுக்கு சுரண்டல் ராணி - சுருட்டல்ரானி என்றும் ஒரு பெரியவர் பெயர் சூட்டினார். இலஞ்சமும் ஊழலும், சுரண்டலும் சுருட்டலும் பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்து நமது நாட்டையே உலுக்கி, நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டைகளாக உள்ளன.

நாட்டுத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மனமாற்றம் அடையவேண்டும். அடுத்தத் தேர்தலைப் பற்றிக் கவலைப்படுகிறவன் அரசியல்வாதி அடுத்தத் தலைமுறையைப் பற்றிக் கவலைப்படுகிறவன் தேசீயவாதி, அரசியல் தலைவர்கள் தங்களது கட்சியின் நலனை நாடாது. நாட்டின் நலனை நாட வேண்டும். வன்முறையும் பயங்கரவாதமும் முடிவுக்கு வந்து, அன்பும் சகோதரத்துவமும் தழைத்தோங்க மன்றாடுவோம்.

பாரதப் பூமி பழம்பெரும்பூமி
நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர் - பாரதி
 



மனம் திரும்புவோம்

குடந்தை ஆயர் அந்தோணிராஜ் - மகிழ்ச்சியூடும் மறையுரைகள்


பாவி ஒருவன் இறந்த பிறகு விண்ணகம் சென்றான். அங்கு செல்பவர்களுக்கு தீர்ப்பு வழங்க கடவுளால் நியமிக்கப்பட்ட நான்கு பேர் இருந்தார்கள்.
ஒருவர் ஆபிரகாம், மற்றொருவர் தாவீது, இன்னொருவர் புனித பேதுரு, நான்காமவர் புனித லூக்கா. பாவிதன் பாவங்களுக்காக வருந்தி
அழுது கொண்டு அவர்கள் முன்னால் நின்றான். அவர்கள் பாவியைப் பார்த்து, நீ செய்திருக்கும் பாவங்கள் பத்துக் கற்பனைகளுக்கு எதிரான பயங்கரப் பாவங்கள். அதனால் உன்னை மோட்சத்திற்குள்ளே விடமுடியாது என்றார்கள்.


உடனே அந்தப்பாவி, ஆபிரகாம், உங்களைப் பற்றி கொஞ்சம்  நினைச்சுப் பாருங்க அரசனிடம் உங்கள் மனைவியை உங்க சகோதரின்னு சொல்லி நீங்க பொய் சொல்லலெ என்றான்.

தாவீதைப் பார்த்து, தாவீதே, நீங்க மாற்றான் மனைவியை உங்க மனைவியாக்கிக்கொண்டு, அவளது கணவனைப் போர்க்களத்திற்கு அனுப்பி கொலை செய்யலெ. அதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் என்றான்.

பேதுருவே, நீங்க மூன்று முறை ஆண்டவர் இயேசுவை மறுதலிக்கலெ என்றான் பாவி,

லூக்கா, நீங்கள் உங்க நற்செய்தியிலே ஊதாரிப் பிள்ளை உவமையை எழுதி வச்சிருக்கலெ என்றான்.

அந்த சமயம் பார்த்து, கடவுள் அந்தப் பக்கமாகச் சென்றார். அங்கே என்ன நடக்குது? அப்படின்னு  கேட்டாரு. நீதிபதிகள் நான்கு பேரும், அந்தப் பாவியோட பாவங்களைப் பட்டியல் போட்டு காட்டினாங்க.

அப்போது கடவுள், உங்க நாலுபேரையும் நான் மோட்சத்துக்குள்ளே விட்டப்போ, நான் எதுவுமே கேட்கலியே, சொல்லலியே அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு.

அந்த நாலு பேரும் ஒரே குரலில் பாவியைப் பார்த்து, நீ மோட்சத்துக்குள்ளே வரலாம் அப்படின்னாங்க. 

மேலும் அறிவோம் :
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு?   (குறள் 436).

பொருள்: முதலில் தன் குறையை அறிந்து அதனைப் போக்கிக்கொண்டு, பிறகு பிறர் குறையைக் காணும் வல்லமை வாய்ந்த ஆட்சியாளர்க்கு எந்தக் குறையும் வராது...


அருள்திரு முனைவர் ம. அருள் 

 

எரியும் புதரில் மோயீசனை அழைத்தார் இறைவன்.

மெல்லிய காற்றில் எலியாசை அழைத்தார் இறைவன்

இடியின் ஒலியில் பவுலை அழைத்தார் இறைவன்

கடலில் வலை விரித்த அந்திரேயா, பேதுரு இவர்களை அழைத்தார் இயேசு!

மீன்பிடித்துக் கொண்டிருந்த சாதாரண மக்களாகிய இவர்களை அழைத்த உடன் அவர்களும் உடனே தம் படகையும், வலைகளையும் விட்டு முன்பின் தெரியாத இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அலெக்ஸ், ஷிலா என்ற இரு இளம் மருத்துவர்கள் வாழ்க்கைக்கு ஒப்பந்தம் செய்து கணவன் மனைவியாகத் தங்களை அர்ப்பணிக்க முடிவெடுத்தார்கள், பெற்றோர் இந்தத் திருமணத்தை ஆடம்பரமாகக் கொண்டாடத் திட்டமிட்டனர். பலரும் இந்த ஆடம்பரத் திருமணத்திற்காக ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக மருத்துவத் துறையில் இருந்து ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. 40 மருத்துவர்கள் கொண்ட ஒரு குழு மலேரியாக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்கா மக்களுக்கு மருத்துவப் பணி புரிய ஆறு மாதம் தங்க வேண்டும். அதில் இவர்கள் இருவர் பெயரும் இடம் பெற்றன. எனவே ஆடம்பரத் திருமணத்தை ரத்து செய்து தாங்கள் பணி புரிந்த மருத்துவமனை சிற்றாலயத்தில் அருட்தந்தை ஒருவரால் எளிமையாகத் திருமணம் நிறைவேற்றி, குறிப்பிட்டத் தேதியில் ஆப்பிரிக்கா புறப்பட்டார்கள் இந்த இளம் தம்பதிகள்.

தற்பெருமை, சுய சார்பு எண்ணங்கள், பொறாமை, போட்டி மனப்பான்மை போன்ற தீய வலைகளைக் கிழித்துவிட்டு, பகிர்வு,

பாசம், தியாகம், தாழ்ச்சி போன்ற வலைக்குள், நாம் நுழையும் போதுதான் இயேசுவை நாம் பற்றிக்கொள்ள முடியும். இவ்வாறு தான் சீடர்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். உள் மாற்றத்தையே பெற்று சாதாரண மீனவர்களாக கடலில் உயிரோடு இருந்த மீன்களை கரையிலே கொண்டு சாகடித்தவர்கள், பாவத்தால் இறந்த மனிதர்களை, உயிருள்ள வாழ்வுக்குக் கொண்டு வர உயர்த்தப்பட்டார்கள். மனமாற்றம் அடைந்தார்கள். இதனால் கடல் அல்ல எங்கள் வாழ்வு, கடவுள்தான் எங்கள் வாழ்வின் மையம் என்பதை உணர்ந்தார்கள்.

'ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா'

இறைவன் ஒருவரே நிலையானவர். எதை எதைப் பெற வேண்டும் எனத் திட்டமிடாதே. மாறாக எதை எதை இழக்க வேண்டும் என்று சிந்தித்துப் பார்!




போகிற போக்கு

அருள்பணி ஏசு கருணாநிதி - மதுரை


நம் தமிழ் மரபில் நாம் சந்திக்கும் யாரையும், 'நீங்க நல்லா இருக்கீங்களா?' எனக் கேட்கிறோம். விவிலிய எபிரேய மரபில் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போது, 'நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?' என்று கேட்பார்கள் (காண். தொநூ 16:18, நீத 19:17). இக்கேள்வியின் பின்புலம் இரண்டு: (அ) எபிரேயர்கள் அல்லது இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் குடியிருந்தனர். வீடுகள் மிகவும் தூரமாக இருந்தாலும், ஒருவர் மற்றவரோடு உள்ள தொடர்பு மிகக் குறைவாக இருந்ததாலும், ஒருவரின் வருகையையும், செல்கையையும் கேட்கும்போது அவரின் தொடக்கம் மற்றும் முடிவை அறிந்து கொண்டனர். வருகின்ற நபர் தங்களுக்கு ஆபத்து எதுவும் தராதவர் என்பதை இவ்வாறு உறுதி செய்துகொண்டனர். (ஆ) இவர்கள் தங்கள் வாழ்வை ஒரு பயணமாககே கருதினர். ஒவ்வொரு பயணத்திற்கும் இந்த இரண்டு கேள்விகளும் அவசியம். இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை தெரியாதவர் சும்மா உழன்றுகொண்டே இருப்பர். ஆக, வாழ்வின் எந்த நிலையிலும் இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை அவசியம் என்பதை இவர்கள் உறுதியாக நம்பினர்.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டு சிந்தனைக்கு, 'போகிற போக்கு' என்று தலைப்பிட்டுக்கொள்வோம். 'போக்கு' என்றால் 'போகுதல்' அல்லது 'செல்லுதல்.' 'போகுதல்' என்பது ஒரு வழியை உள்ளடக்கியிருக்கிறது. இந்த வழிக்கு தொடக்கம் ஒன்று உண்டு, இலக்கு ஒன்று உண்டு. இந்த இரண்டும் தெளிவாக இருக்கும்போது போதல் எளிதாகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். யோனா 3:15,10) நினிவே மக்கள் 'போகிற போக்கை' இறைவாக்கினர் யோனா மாற்றிப் போடுகின்றார்.

இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 7:29-31) வாழ்வின் இயலாமை பற்றிப் பேசுகின்ற தூய பவுலடியார் நாம் 'போகிற போக்கு' நிலையானது அல்ல என்றும், அது மிக வேகமாக மாறக்கூடியது என்றும் அறிவுறுத்துகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 1:14-20), 'காலம் நிறைவேறிவிட்டது' என்று தன் பணிவாழ்வைத் தொடங்கும் இயேசு, அனைத்து மக்களின் 'போகிற போக்கை' மனமாற்றத்தின் வழியாகவும், முதற்சீடர்களின் 'போகிற போக்கை' சீடத்துவ அழைப்பின் வழியாகவும் மாற்றிப் போடுகின்றார்.

'போகிற போக்கை' ஒவ்வொரு வாசகத்திற்கும் சென்று சற்று விரிவாகப் பார்ப்போம்:

முதல் வாசகம்: 'யோனாவின் போக்கும், நினிவேயின் போக்கும்'

இறைவாக்கினர் யோனாவின் பணி பயணத்தில்தான் தொடங்குகிறது. ஆண்டவர் அவருக்கு அருளும் முதல் வாக்கே, 'நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய்' என்றுதான் இருக்கிறது. ஆனால் யோனா தன் போக்கில் பயணம் செய்ய முற்படுகின்றார். ஆண்டவர் வடக்கு நோக்கி இவரை அனுப்ப, அதற்கு எதிர்திசையில் தெற்கு நோக்கி பயணம் தொடங்குகின்றார் யோனா. விளைவு கடல் கொந்தளிப்பு. கொந்தளிப்பின் இறுதியில் கடலின் மீனின் வாய்க்குள் விழ, இரண்டாம் முறையாக மீண்டும் அழைப்பு பெற நினிவேக்கு வருகின்றார் யோனா. 'நினிவே ஒரு மாபெரும் நகர். அதை கடக்க மூன்று நாள்கள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்தபின்' என பதிவு செய்கிறார் ஆசிரியர். வேண்டா வெறுப்பாக நினிவேக்குச் செல்கின்ற யோனா, மூன்று நாள் கடக்க வேண்டிய நகரின் தூரத்தை ஒரே நாளில் கடக்கின்றார். அப்படி என்றால் இவர் நடந்திருக்க மாட்டார். ஓடியிருப்பார். வேண்டா வெறுப்பாக, ஓட்டமும் நடையுமாக இறைவாக்குரைத்து முடிக்கின்றார் யோனா. மேலும், மனமாற்றம் பற்றி அவர் போதிக்கவில்லை என்றாலும், நினிவே மக்கள் யோனாவின் செய்தியை மனமாற்றத்திற்கான அழைப்பாக ஏற்று உடனடியாக செயல்படத் தொடங்குகின்றனர். 'இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்' என்ற மொட்டையான செய்தியை 'போகிற போக்கில்' சொல்லிவிடுகின்றார் யோனா. ஆனால், 'போகிற போக்கில்' சொல்லப்பட்ட செய்திதானே என போகிற போக்கில் அதை விட்டுவிடாமல், தாங்கள் போகின்ற போக்கை மாற்ற முடிவு செய்கின்றனர். அந்த மாற்றத்தை உடனே செயல்படுத்துகின்றனர். ஆண்டவரும் அவர்கள் தங்கள் தீய வழியை மாற்றிக்கொண்டதால் தம் மனத்தை மாற்றிக் கொள்கின்றார்.

இரண்டாம் வாசகம்: 'வெளி நோக்கும் போக்கிலிருந்து உள் நோக்கும் போக்கு'

திருமண வாழ்வு பற்றி கொரிந்து நகர திருச்சபைக்கு அறிவுறுத்துகின்ற பவுல் தொடர்ந்து, 'மணமாகாதவர்களும் கைம்பெண்களும் கொண்டிருக்க வேண்டிய வாழ்க்கை முறை' பற்றிப் பேசுகின்றார். பவுல் இந்தக் கடிதத்தை எழுதும் காலத்தில் (கி.பி. 60 - 100) 'பருசியா' என்று சொல்லப்படும் 'இரண்டாம் வருகை' அல்லது 'உலக இறுதி' மிக அருகில் இருப்பதாக மக்கள் நம்பினர். இந்தப் பின்புலத்தில் திருமணம் முடித்தலும், பெண் கொள்தலும், கொடுத்தலும், திருமண உரிமையால் வரும் மகிழ்ச்சியும், பிரிவால் வரும் அழுகையும் என எல்லாம் மாறிப்போகும் அல்லது அழிந்து போகும் என எண்ணுகின்ற பவுல், 'இனியுள்ள காலம் குறுகியதே' என்று தொடங்கி, 'இப்போது இருப்பதுபோல நெடுநாள் இராது' என நிறைவு செய்கிறார்.

குறுகிய காலம்தான் எல்லாம் இருக்கிறது என்றால் நாம் தேவையற்றவைகளை விடுத்துவிட்டு, தேவையானவற்றை மட்டும் பற்றிக்கொள்ள வேண்டும் என்பது பவுலின் அழைப்பாக இருக்கிறது. நாம் நம் வீட்டில் இருக்கும் போது பெரிய வீடு, இடம், தோட்டம் என எல்லாவற்றையும் பயன்படுத்துகிறோம். நம்முடைய ஒருநாள் வாழ்விற்கு மேசை, நாற்காலி, கைகழுவும் இடம், கட்டில், டிவி என நிறைய பயன்படுத்துகிறோம். ஆனால், ஒருநாள் பயணமாக நாம் அமெரிக்க ஐக்கிய நாடுகள் செல்ல விமானம் ஏறும்போது இவை எல்லாவற்றையும் விமானத்தின் ஒற்றை நாற்காலியில் அமர்வதன் வழியாக முடித்துக்கொள்கிறோம். ஆக, நம் வாழ்விற்கு ஒற்றை நாற்காலி இருந்தால் போதுமானதுதான். ஒருநாள் விமானத்தில் இந்த ஒற்றை இருக்கையோடு வாழும் நமக்கு ஓராண்டு முழுவதும் வாழ்வது சாத்தியமில்லையா? ஆக, நம் வாழ்வின் மகிழ்ச்சி என்பது நாம் நிறைய கொண்டிருப்பதிலும், நிறைய அனுபவத்திலும் இல்லை. மாறாக, அது நம் ஒவ்வொருவருக்கும் உள்ளே பொதிந்து இருக்கிறது. ஆக, வெளி நோக்கி நாம் செல்லும் போக்கை உள்நோக்கி திருப்ப வேண்டும் என்பது இரண்டாம் வாசகத்தின் பாடம்.

நற்செய்தி வாசகம்: 'இயேசுவின் போக்கும், சீடர்களின் போக்கும்'

மாற்கு நற்செய்தியாளரின் இயேசுவின் பணி வாழ்வு தொடக்கத்தைப் பதிவு செய்யும்போது, 'யோவான் கைதுசெய்யப்பட்ட பின்' என்று தொடங்குகின்றார். ஆக, 'யோவானுக்கு திரை விழுந்து' 'இயேசுவுக்கு திரை விலகுகிறது.' இதுதான் 'காலம் நிறைவேறிவிட்டது' என்பதன் பொருள். 'யோவானின் காலம் நிறைவேறிவிட்டது,' 'மீட்பற்ற நிலையின் காலம் நிறைவேறிவிட்டது,' 'இனி தொடர்வது எல்லாம் புதிய காலமே' என 'இறையாட்சியின் வருகையை அறிவிக்கின்றார்' இயேசு. இந்த இறையாட்சியை அறிந்து கொள்வது என்பது 'மனம் மாறி நற்செய்தியாகிய இயேசுவை நம்புவதில்' அடங்கியிருக்கிறது. இயேசுவின் போக்கு தன் வாழ்வின் கூட்டு நிலையிலிருந்து வெளியேறி பணி வாழ்வுக்குள் நுழைவதாக இருக்கிறது.

போகிற போக்கில் நற்செய்தி அறிவித்த யோனா போல அல்லாமல், தம் சீடர்களின் 'போக்கை மாற்றுகின்றார்' இயேசு. இயேசுவுக்கும், யோனாவுக்கும் இன்னும் சில வித்தியாசங்களும் உள்ளன. தம்மிடம் அறிகுறி கேட்பவர்களுக்கு யோனாவின் அறிகுறியை வழங்கும் இயேசு, 'இங்கிருப்பவர் யோனாவைவிட பெரியவர் அல்லவா!' (மத் 12:41) என முழங்குகின்றார். யோனா நகரத்தில் தன் பணியைச் செய்தார். இயேசுவோ கிராமத்தில் செய்தார். யோனாவின் பயணம் மையம் நோக்கி இருந்து. இயேசுவின் பயணமோ விளிம்பி நோக்கி இருந்தது. யோனா ஓட்டமும் நடையுமாக பணி செய்கிறார். இயேசு ஆற அமர பணி செய்கிறார்.யோனா வேண்டா வெறுப்பாகச் செய்கிறார். இயேசு மக்கள் மேல் கொண்ட பரிவினால் செய்கிறார்.இவ்வாறாக, அவர் 'யோனாவைவிட பெரியவராக' இருக்கின்றார்.

இயேசு திருத்தூதர்களை அழைக்கும் நிகழ்வு மாற்கு 3:14-15ல் இருந்தாலும், முதற்சீடர்களை அழைக்கும் நிகழ்வை நாம் மாற்கு 1:14-20ல் வாசிக்கின்றோம். சீமோன் - அந்திரேயா, யாக்கோபு - யோவான் என்னும் இரண்டு ஜோடி சகோதரர்களை அழைக்கின்றார் இயேசு. நான் இந்த நிகழ்வை ஓர் உருவகமாக பார்க்கிறேன். எப்படி?

கடல் என்பது இவ்வுலகில் உள்ள எல்லாரையும் குறிக்கிறது. இவ்வுலகில் உள்ள எல்லாருமே நாம் கடலோரமாய் தான் நின்றுகொண்டிருக்கிறோம். இந்த நின்றுகொண்டிருத்தலில் ஒருவகையான காத்திருத்தலும், எதிர்நோக்கும் இருக்கிறது. இவ்வாறு, காத்திருக்கும் நாம் நம் வாழ்வு என்னும் கடலில் நம் பணிகள், பயணங்கள், படிப்பு, உறவுநிலைகள் வழியாக 'கடலில் வலை வீசிக்கொண்டிருக்கிறோம்.' அதாவது, நம் அன்றாட அலுவல் ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறோம். பிறந்த குழந்தைக்கும்கூட ஏதோ ஒரு அலுவல் அல்லது ஒரு கவலை இந்த உலகில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படி நம் வேலையில் மும்முரமாக இருக்கும் நம்மை நோக்கி கடவுளின் அழைப்பு வருகிறது. ஆக, அந்த அழைப்பு வரும் கணப்பொழுதில் நாம் சட்டென முடிவு எடுக்க வேண்டும். அந்த முடிவிற்காக நாம் பெரிய விலையைக் கொடுக்க வேண்டும். நம் வலைகளை விட்டுவிட வேண்டும். கடலை நோக்கி நம் முதுகைத் திருப்ப வேண்டும். இனி கடல் நம்மிடமிருந்து விடைபெற வேண்டும். பாதி கடல், பாதி கடவுள் என்று நம்மால் பயணம் செய்ய முடியாது. சீமோன் - அந்திரேயா போல வலைகள் என்னும் வேலைகளை விட வேண்டும். யாக்கோபு - அந்திரேயா போல நம் அப்பாவை, உறவுகளை, கூலியாள்களோடு விட வேண்டும். கூலியாள் என்பவர் நம் ஆடம்பரம். நம் வேலையை நாம் செய்வதற்குப் பதிலாக நமக்கு நம் வேலையை செய்யும், நம் அதிகாரத்திற்கு தூபம் போடுபவர்கள்தான் கூலியாள்கள். கூலியாள்களை விட்டுவிடுவது என்பது நம் அதிகாரத்தையே விட்டுக்கொடுப்பது. அப்பாவை விடுவது என்பது எல்லா உறவுகளையும் விடுவது. ஆக, வேலை, உறவு, அதிகாரம் என்ற மூன்றை நோக்கிய நம் போக்கை மாற்றிப்போடுகிறது இயேசுவின் அழைப்பு.

இவ்வாறாக, இன்றைய நம் போக்கு (வழி) என்ன? நாம் போகிற போக்கு சரிதானா? என்பதை மறுஆய்வு செய்ய நமக்கு அழைப்பு விடுக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

இவ்வாறாக, நாம் நம் போக்கை மாற்றுவதால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் எவை?

முதல் வாசகத்தில், தங்கள் போக்கை மாற்றிய நினிவே மக்கள், தங்கள் ஓட்டத்தை நிறுத்தி சாம்பலில் அமர்ந்த நினிவே மக்கள் கடவுளின் தீர்ப்பு அல்லது தண்டனைக்குத் தப்பியவர்களாய் அவரது இரக்கத்தைப் பெறுகின்றனர். இரண்டாம் வாசகத்தில், தங்கள் போக்கை மாற்ற அறிவுறுத்தப்படும் கொரிந்து நகர மக்கள் நிலையான மகிழ்ச்சியாம் ஆண்டவருக்குப் பணிபுரிதலைக் கண்டுகொள்கின்றனர். நற்செய்தி வாசகத்தில், தங்களின் வேலை, அப்பா, வேலையாள்கள் ஆகியவற்றிலிருந்து தங்கள் போக்கை மாற்றும் முதற்சீடர்கள் நற்செய்தியாம் இயேசுவைப் பற்றிக்கொள்கின்றனர்.

இந்த மூன்று போக்கு மாற்றங்களுக்கும் இவர்கள் பெரிய விலையைக் கொடுக்க வேண்டும். அந்த விலை என்னவென்றால், 'ஒருமுறை விட்ட வழியில் அவர்கள் மீண்டும் செல்லக்கூடாது.' நினிவே மக்கள் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்புதல் கூடாது. கொரிந்து நகர மக்கள் இவ்வுலக வாழ்வின் கவலைகளில் தங்களை ஆழ்த்தக் கூடாது. முதற்சீடர்கள் தங்கள் வலைகளையும், அப்பாவையும், கூலியாள்களையும் நாடிச் செல்லக்கூடாது. (இந்த சோதனை சீடர்களுக்கு இயேசுவின் இறப்பிற்குப் பின் வருகிறது - காண். யோவா 21:3. ஆனால் இந்த சோதனையும் அவர்களின் கடவுளின் பிரசன்னம் வெளிப்படும் நிகழ்வாக மாறுகிறது).

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?

1. நாம் 'போகிற போக்கில்' வாழ்கிறோமா? அல்லது 'போக்கையே மாற்றி' வாழ்கிறோமா?

யோனாவிடம் ஓர் இனம்புரியாத கோபம் இருக்கிறது. தன்மேல், தன்னைச் சுற்றியிருப்பவர்கள்மேல், தன் கடவுள்மேல். இந்தக் கோபம் இருப்பதால் அவரால் வாழ்வை முழுமையாக வாழ முடியவில்லை. ஆனால், அதற்கு எதிர்மாறாக இயேசுவிடம் பரிவு மட்டுமே இருக்கிறது. கோபம் குடிகொள்ளும் யோனா தன்னை மையப்படுத்தியவராக இருக்கிறார். பரிவு குடிகொள்ளும் இயேசு பிறரை மையப்படுத்தியவராக இருக்கிறார். இன்று என் வாழ்வை முழுமையாக வாழ்வதற்கு தடையாக இருக்கும் காரணி எது? அது எங்கே இருக்கிறது?

2. 'எங்கள் சொல்லும் செயலும் உமக்கு உகந்தனவாக அமைய எங்களுக்கு வழிகாட்டும்'

இன்றைய சபை மன்றாட்டில் நாம் இப்படித்தான் செபிக்கின்றோம். நம் சொற்களும், செயல்களும் அவருக்கு உகந்தனவாக இருக்க அவர் தான் வழிகாட்ட வேண்டும். ஆக, நம் வாழ்வின் ஓட்டம் அவர் கைகளில் இருக்கிறது. இதுவே இன்றைய பதிலுரைப்பாடலில் திருப்பாடல் ஆசிரியரின் செபமாக இருக்கிறது: 'ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும். உம் வழிகளை எனக்கு கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்கு கற்பித்தருளும்' (திபா 25:4-5). ஆண்டவரின் வழிகளை நம்மால் கற்றுக்கொள்ள முடியுமென்றால் நாம் திறந்த உள்ளம் கொண்டிருக்கிறோமா?

3. 'பொருள்களை வாங்குவோர் அது இல்லாதவர் போலவும் இருக்கட்டும்'

இருந்தாலும் இல்லாதவர் போல, இல்லை என்றாலும் இருப்பவர் போல வாழ்வது என்றால் என்ன? இப்படி இருப்பதாக நடிப்பது அல்லது யூகிப்பது அல்ல. மாறாக, நாம் கொண்டிருக்கும் பொருள்கள் அல்லது நபர்கள் நம் வாழ்வைக் கூட்டுவதோ, குறைப்பதோ இல்லை என உணர்வது. பவுல் 'மனைவி உள்ளவர் மனைவி இல்லாதவர்போல' இருக்கட்டும் என்கிறார். பவுல் அளவிற்கு நம்மால் புரட்சிகரமாக எல்லாவற்றையும் ஒதுக்கிவைக்க முடியவில்லை என்றாலும், கொஞ்சம் கொஞ்சமாக பற்றுக்களை குறைத்துக்கொள்தல் நலம். இதைப் புரிந்துகொள்ளவே கடவுளின் தூண்டுதல் அவசியம் என நினைக்கிறேன். நம்ம வாழ்வையே நினைத்துப் பார்ப்போம். ஒவ்வொரு கால கட்டத்தில் நாம், 'இதுதான் உலகம்' என பிடித்துக்கொண்டிருந்தது, அடுத்த கட்டத்திற்குள் நுழையும்போது நம்மை அறியாமலேயே நம் கை நழுவிப் போய்விடுகிறது. வாழ்வின் போக்கிற்கு ஏற்ப நம் போக்கை அமைத்துக்கொள்வது.

இயேசு வருவார் என்று சீமோனும், பேதுருவும், யாக்கோபும், யோவானும் வழிமேல் விழி வைத்து ஓய்ந்திருக்கவில்லை. வலைகளை வீசிக்கொண்டும், படகுகளை பழுதுபார்த்துக்கொண்டும்தான் இருந்தனர். அதே வேளையில் இயேசு வந்தவுடன் தங்கள் உலகமாக அவர்கள் நினைத்த வலைகளையும், படகுகளையம், அப்பாவையும், கூலியாள்களையும் விட தயாராக இருந்தனர். ஆக, எல்லாவற்றிற்கும் 'ஆம்' என்று சொல்லும் தயார் மனநிலை இது. அவ்வாறே, யோனாவின் வருகையை நினிவே மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் வந்தவுடன் மனமாற்றத்திற்கு தாமதிக்கவில்லை. வாழ்க்கை சில நேரங்களில் எல்லாவற்றையும் settle செய்வதற்கு நமக்கு நேரம் கொடுப்பதில்லை. இருக்கும்போதே அப்படியே போட்டுவிட்டு அடுத்த நிலைக்குச் செல்ல அழைக்கிறது. இப்படி செல்வதற்கு கட்டின்மை வேண்டும்.

அவரின் வழி என் வழியாக, அவரின் போக்கே நான் போகிற போக்காக இருந்தால் எத்துணை நலம்!





மனம் மாறுங்கள் நற்செய்தியை நம்புங்கள்!

அருள்பணி மரிய அந்தோனிராஜ்


ஓர் ஊரில் ஜாக் என்னும் இளைஞன் இருந்தான். ஆலயங்களுக்கு வண்ணம் பூசுவதுதான் அவனுடைய பிரதான வேலையே. அவன் ஆலயங்களுக்கு வண்ணம் பூசுகின்றபோது அதிக விலைக்குப் பொருட்கள் வாங்குவதாகச் சொல்லிக்கொண்டு, மிகவும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி வண்ணம் பூசி வந்தான்.


ஒரு சமயம் அவனுக்கு மிகப்பெரிய ஆலயத்திற்கு வண்ணம் பூசக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. வழக்கம் போல அவன் மிகவும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி, வண்ணம் பூசிக்கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் ஆலயத்தின் மேல் கூரையில் வண்ணம் பூசிக்கொண்டிருந்தபோது திடிரென்று இடி இடித்தது. இதனைச் சிறிதும் எதிர்பார்த்திராத ஜாக், நிலை தடுமாறு கீழே விழுந்தான். அதிஷ்டவசமாக அவருடைய உடலில் பெரும் காயங்கள் எதுவும் ஏற்படாமல், சிறு காயங்களோடு உயிர் தப்பினான்.


அப்போது அவன் அண்ணார்ந்து பார்த்து, “ஆண்டவரே! நான் செய்த தவறுகளுக்கு இது தேவைதான். இப்போது நான் என்னுடைய குற்றங்களை உணர்கின்றேன். அடுத்து நான் என்ன செய்வது?” என்று கேட்டான். அதற்கு மேலிருந்து, “மனமாறு! மலிவான விலைவில் தரம் குறைந்த பொருட்களைப் பயன்படுத்தி வண்ணம் பூசாதே! நல்ல முறையில் வண்ணம் பூசு” என்று ஒரு குரல் ஒலித்தது. அன்றிலிருந்து ஜாக் மனம்மாறி, கடவுளுக்குப் பயந்து தன்னுடைய தொழிலை மிக நேர்த்தியாக செய்யத் தொடங்கினான்.


பாவ வழியில் நடக்கும் ஒவ்வொருவரும் மனம்மாறவேண்டும். அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை வாசகங்கள் அனைத்தும் ‘மானமாற்றம்’ என்னும் செய்தியைத்தான் தாங்கி வருகின்றன. நாம் அதனைக் குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.


மனமாற்றத்தைக் குறித்து சொல்கின்றபோது மாக்சிமுஸ் என்னும் புனிதர் இவ்வாறு சொல்வார், “கடவுள் நாம் ஒவ்வொருவரும் மீட்படையவேண்டும் என்றுதான் விரும்புகின்றார். எனவே, நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, மனம்மாறி அவரிடம் திரும்பி வருகின்றபோது அவர் அடைகின்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆம், பாவி ஒருவர் மனம்மாறி ஆண்டவரிடத்தில் செல்கின்றபோது கடவுளுக்கு அதைவிட மகிழ்ச்சி தரக்கூடிய காரியம் வேறொன்றும் இல்லை.


நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு நாற்பது நாட்கள் நோன்பிருந்து தன்னைத் தயாரித்துக்கொண்டு தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்குகின்றார். அப்படி அவர் தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்குகின்றபோது போதிக்கின்ற முதல் போதனை ‘காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்பதுதான். இயேசு கிறிஸ்து இந்த பூவுலகில் பிறந்ததே இறையாட்சியின் தொடக்கம்தான். எனவே, மக்கள் அவருடைய வருகைக்காகத் தங்களையே தயாரிப்பது அவருக்கு ஏற்ற செயலாகும். ஆகையால், காலத்தை விரையமாக்காமல், கடவுளிடம் திரும்பி வருவதுதான் கடவுளுக்கு ஏற்ற செயலாகும்.


தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (இரண்டாம் வாசகம்) காலம் எத்துணை குறுகியது என்று சொல்கின்றபோது இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இருக்காது” என்கின்றார். ஆகையால், குறுகிய காலத்தில் நாம் கடவுளிடம் திரும்பி வருபது என்பதுதான் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.


இறையாட்சி வருவதற்கான காலம் எத்துணை குறுகியது என்று சிந்தித்துப் பார்த்த நாம், எது உண்மையான மனமாற்றம்?, நாம் ஏன் மனமாறவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்போம். மனமாற்றம் என்று சொல்கின்றபோது ஒருமனிதன் அதுவரை வாழ்ந்து வந்த பாவ வழியிலிருந்து முற்றிலுமாக திரும்பி வருவது. ஆங்கிலத்திலே U turn என்று சொல்கின்றோம். ஆம், பாவ வழியில் நடக்கின்ற ஒருவர் தன்னுடைய குற்றங்களை உணர்ந்து, கடவுளிடத்தில் திரும்பி வரவேண்டும். அதுதான் மனமாற்றத்திற்கான முதல்படியாக இருக்கின்றது.


இறைவாக்கினர் யோனா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் யோனா கடவுளால் இரண்டாம் முறையாக அழைக்கப்படுகின்றார். கடவுளால் அழைக்கப்பட்ட அவர் பாவ வழியில் வாழ்ந்து வந்த நினிவே நகர மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பப்படுகின்றார். நினிவே நகரோ யூதர்கள் வாழ்ந்த நகரம் கிடையாது. அது புறவினத்தார் வாழ்ந்த நகரம். அப்படிப்பட்டவர்களிடம்தான் இறைவாக்கினர் அனுப்பப்படுகின்றார். இங்கே நாம் இன்னொரு உண்மையை உணர்ந்துகொள்ளவேண்டும். அது என்னவென்றால், யூதர் மட்டும்தான் மீட்படைய வேண்டும் என்பதல்ல, எல்லா மக்களும் மீட்படைய வேண்டும் என்பதுதான் கடவுளின் கடவுளின் விரும்பம். அதனால்தான் புறவினத்தார் வாழ்ந்த பகுதியாக நினிவே நகருக்கு இறைவாக்கினர் யோனாவை அனுப்பி வைத்து, அவர்களுக்கு மனமாற்றச் செய்தியை அறிவிக்கச் செய்கின்றார்.


யோனானின் செய்தியைச் கேட்ட நினிவே நகர மக்கள் - சிறுவர் முதல் பெரியவர் வரை - சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து நோன்பிருக்கின்றார்கள். இறைவன் அவர்களுடைய செயல்பாடுகளைப் பார்த்து, தன்னுடைய முடிவினை மாற்றிக்கொண்டு அவர்களை அழிக்காமல் விட்டுவிடுகின்றார். இறைவனின் விரும்பம் நாம் அழிந்து போகவேண்டும் என்பதல்ல, மாறாக நாம் அனைவரும் மனம்மாறி, அவரிடம் திரும்பி வரவேண்டும் என்பதே ஆகும். அதனை இன்றைய முதல் வாசகம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. ஆகையால், ஓர் உண்மையான மனமாற்றம் என்பது வெறுமனே பேச்சுக்காக மனம்மாறிவிட்டேன் எனச் சொல்வதாக இருக்காமல், செயலில் வெளிப்படுவதாக இருக்கவேண்டும். அதுதான் உண்மையான மனமாற்றம் ஆகும்.


திருமுழுக்கு யோவான் தன்னிடம் திருமுழுக்கு பெற வருகின்றவர்களிடம், “நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயலில் காட்டுங்கள்” (மத் 3: 8) என்பார். ஆம், மனமாற்றம் என்பது செயலில் வெளிப்படவேண்டும். பேச்சளவில் தங்கிவிட்டால் அது ஒருபோதும் உண்மையான மனமாற்றமாக இருக்காது.


சில ஆண்டுகளுக்கு முன்பாக பசிபிக் தீவுப் பகுதியில் ஒரு குருவானவர் தங்கி, அங்கிருந்த மக்களுக்குப் போதித்து வந்தார்.


ஒருநாள் அவரைப் பார்க்க அந்தப் தீவில் வாழ்ந்து வந்த ஓர் இளம்பெண் தன்னுடைய இரண்டு கைகளிலும் கடற்கரை மணலை அள்ளிக்கொண்டு வந்தார். அந்த மணல் மிகவும் ஈரமாக இருந்தது, மட்டுமல்லாமல் அதிலிருந்து தண்ணீர் மெல்ல வடிந்துகொண்டிருந்தது. நேராக வந்த அந்தப் இளம்பெண் குருவானவரிடம் சென்று, “இது என்ன?” என்று கேட்டார். அவர் “கடற்கரை மணல்” என்றார். “எதற்காக இந்த மணலை அள்ளிக்கொண்டு வந்திருக்கின்றேன் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். குருவானவர் தெரியாது என்று சொல்ல, அதன் இளம்பெண், “இந்த கடற்கரை மணல்தான் என்னுடைய பாவங்கள். இந்த மணலை எப்படி எண்ண முடியாது. அந்தளவுக்கு நான் பாவங்கள் செய்திருக்கின்றேன். நான் செய்த இவ்வளவு குற்றங்களையும் இறைவன் மன்னிக்கவே மாட்டார்” என்றார்.


அதற்குக் குருவானவர் அவரிடம், “அப்படி நினைக்காதே! இறைவன் நீ செய்த குற்றங்கள் அனைத்தையும் மன்னிப்பார்” என்று சொல்லிவிட்டு, அவர் அந்த இளம்பெண்ணிடம், “இந்த மணலை கடற்கரையிலிருந்து தானே எடுத்துவந்தாய்?” என்று கேட்க, அவர் ஆம் என்று பதில் சொன்னார். “அப்படியானால், இந்த மணலை வைத்து கடற்கரையில் ஒரு சிறிய வீடு கட்டினால், அது என்னவாகும்?” என்று கேட்டார். அந்த இளம்பெண்ணோ, “அந்த வீட்டை சிறிது நேரத்திலே கடல் அலை வந்து அடித்துக்கொண்டு போய்விடும்” என்றார்.


“நீ சொல்வது மிகச் சரி. எப்படி கடற்கரையில் கட்டப்படும் வீட்டை கடலலை வந்து அடித்துக்கொண்டு போய்விடுமோ, அது போன்றுதான் நீ செய்த குற்றங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்துப் போக்கிவிடுவார். ஏனென்றால், கடவுளின் இரக்கமும் அன்பும் கடலைவிடப் பெரியது. அதற்கு முன்பாக உன்னுடைய குற்றங்கள் எல்லாம் ஒன்றமில்லை” என்றார். குருவானவர் இவ்வாறு சொன்னதைக் கேட்ட அந்த இளம்பெண் தன்னுடைய குற்றங்களுக்காக மனம் வருந்தி, மனம் திரும்பிய பெண்ணாக வாழத் தொடங்கினார்.


ஆம், உண்மையான மனமாற்றம் செயலில் வெளிப்படவேண்டும்.


நிறைவாக நாம் மனமாறுவதால் என்ன நடக்கின்றது என்றும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். லூக்கா நற்செய்தியில் ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாக எடுத்துக்கூறுவார், “மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்” (லூக் 15: 7) என்று. இது முற்றிலும் உண்மை. எப்படி என்றால் பாவ வழியில் வாழக்கூடிய ஒருவன் மனமாற்றம் அடைகின்றபோது முதலில் அவனுக்கு அது நலம் பயப்பதாக இருக்கின்றது, அடுத்ததாக அவனைச் சார்ந்த அவனுடைய பெற்றோர், உற்றார், உடன்பிறப்புகள் ஆகியோருக்கும் நலம் பயப்பதாக இருக்கின்றது. அதை விடவும் ஆண்டவருக்கும், அவருடைய வானதூதர்களுக்கும் நலம் பயப்பதாக இருக்கின்றது. ஏனென்றால் கடவுள் தீயோரின் அழிவில் மகிழ்கின்ற கடவுள் அல்ல, அவர் அவனுடைய மனமாற்றத்தில் மகிழ்கின்ற கடவுள். ஆகையால், தீய வழியில் நடக்கின்ற நாம் மனமாற்றம் அடைகின்றபோது அது எல்லாருக்கும் நல்லது.


எனவே, மனமாற்றம் அடைவதற்கான காலம் மிகக் குறுகியது என்பதை உணர்வோம். கடவுளின் மேலாக அன்பையும், இரக்கத்தையும் எப்போதும் நினைத்துப் பாப்போம். மனம் மாறிய மக்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.