Saturday 24 March 2018

திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

  திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு
 எசா 50:4-7; பிலி 2:6-11; மாற் 14:1-15:47

ஓசான்னாவின் உட்பொருள் என்ன?

மகிழ்ச்சியூட்டும் மறையரை

ஒருமுறை எங்கள் குருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் இவ்வாறு கூறினார்: "நற்செய்தியை எடுத்துரைக்க ஏழை எளியவர்கள் வாழ்ந்த கலிலேயாவிற்கு இயேசு சென்றார். சிலுவையிலே அறையப்பட பணக்காரர்களும், படித்தவர்களும் வாழ்ந்த யூதேயாவிற்குச் சென்றார். உங்கள் வாழ்க்கையிலே நீங்கள் நற்செய்தியைப் போதிக்க விரும்பினால் ஏழைகளைத் தேடிச்செல்லுங்கள்; சிலுவையிலே அறையப்படவேண்டும் என விரும்பினால் பணக்காரர்களைத் தேடிச்செல்லுங்கள்.”
எருசலேம் பெருநகர். அது பணம் படைத்தவர்கள் நிறைந்த நகர். குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்தவர்கள் வாழ்ந்த நகர் அது! அங்கே "தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு சூழ்ச்சியாய் பிடித்துக் கொலை செய்யலாம் என்று வழிதேடிக்கொண்டிருந்தனர்" (மாற் 14:1).
எருசலேமில் படப்போகும் பாடுகள் அனைத்தையும் பற்றி இயேசு மூன்று முறை முன் அறிவித்திருந்தார் (லூக் 22:15; 24:26; 24:46). தமக்கு நடக்கப்போவது அனைத்தையும் அறிந்துதான், தெரிந்துதான் இயேசு எருசலேமுக்குள் நுழைந்தார்.
இதோ இன்று தன்னையே சிலுவைச் சாவுக்குக் கையளிக்க இயேசு எருசலேம் நகருக்குள் நுழைகின்றார்.
ஏன் இந்தச் சாவு? (முதலாம், இரண்டாம் வாசகங்கள், மாற் 11:9-10).
இன்று ஓசான்னா பாடுகின்றவர்கள் நாளை இவனைச் சிலுவையில் அறையும் (மாற் 15:14) என்று கூக்குரலிடுவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டவா?
இன்று நமது பாத்திரத்தில் தொட்டு உண்பவன் (மாற் 14:20) நாளை காட்டிக்கொடுப்பான் (மாற் 14:44) என்பதை எடுத்துரைக்கவா?
சீடன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்யத் துணிவான் (மாற் 14:66-72) என்பதைப் படம்பிடித்துக்காட்டவா?
பதவியிலிருப்பவர்கள் தங்கள் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள கடவுளைக் கூட கல்லறைக்கு அனுப்பத் தயங்கமாட்டார்கள் (மாற் 15:15) என்பதைப் பறைசாற்றவா?
எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு மாபெரும் உண்மைகளை உலக மக்களுக்கு எடுத்துரைக்க இயேசு இன்று எருசலேம் நகருக்குள் நுழைந்திருக்கின்றார்.
முதல் உண்மை : கடவுள் இந்த உலகத்தை எவ்வளவு அன்பு செய்கின்றார் என்பதை இயேசு தம் மரணத்தின் வழியாக உலகிற்குப் போதிக்க விரும்பினார். உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு ஒன்று இருக்க முடியாது. தம் உயிரைக் கொடுத்து, இதுதான் அன்பின் ஆழம், அகலம் என்கின்றார் இயேசு.
இரண்டாவது உண்மை : "தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை ” (லூக் 23:34) எனச் சொல்லி ஒரு மனிதன் எந்த அளவுக்கு இந்த உலகை அன்பு செய்ய முடியும் என்பதை இயேசு சிலுவையில் தொங்கியபோது அவர் நிகழ்த்திய மறையுரை வழியாக சுட்டிக்காட்ட விரும்பினார்.
இன்றைய ஆரவாரத்திற்குள் மறைந்திருக்கும் அர்த்தத்தைக் கண்டுபிடித்து நமது ஆன்மிக வாழ்வை அர்த்தமுள்ளதாக அமைத்துக்கொள்வோம்.
மேலும் அறிவோம் :
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் : 72).
பொருள் : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமை பாராட்டுவர். அன்பு உள்ளம் கொண்டவர் தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் பிறர்க்கு வழங்குவர்.

  நிறம் மாறுவதும்

. குன்று நோக்கி -அருள்பணி லூர்துராஜ்


குருத்து ஞாயிறு நிகழ்வு மக்களின் நிலையற்ற தன்மையின் தெளிவான வெளிப்பாடு. ஒருநாள் ஓசன்னா' பாடி வாழ்த்தும் மந்தைத்தன மக்கள் கூட்டம் மறுநாளே ஒழிக' என்றும் கூச்சலிடத் தயங்காது.
ஆனால் கிறிஸ்துவின் பாடுகளோ அவரது நெஞ்சுறுதியின் நிலைப்பாடு. தலைமைக் குருக்களின் சதித்திட்டமாகவோ அல்லது ஏதோ தற்செயலாக நிகழ்ந்த விதியின் விளையாட்டாகவோ பார்த்தல் தவறு. சிலுவை மரணம் என்பது தந்தை கடவுளின் நித்திய திட்டம். அதனால்தான் இயேசு சிலுவைப் பாடுகளை, கல்வாரி மரணத்தை - 1. மனமுவந்து ஏற்றார் இறைவாக்கினர் எசாயாவின் துன்புறும் ஊழியனாக. இறைவாக்கு அவரில் நிறைவு காண வேண்டும். நெஞ்சுறுதியுடன் ஏற்றார் இலக்குத் தெளிவு இருந்த காரணத்தால். இறைவனின் திருவுளம் அவரில் நிறைவு பெற வேண்டும். "ஆயிரக்கணக்கான வருடங்களாய் - எம் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம் இஸ்ரயேல் மக்களை ஆளவாரும்- எம்
இயேசுவே தேவனே எழுந்தருளும்" - பட்டி தொட்டிகளில் எல்லாம் இன்று ஒலிக்கும் பழந்தமிழ்ப் பாடல் இது! "ஓசன்னா, தாவீதின் புதல்வா ஓசன்னா" உலகின் மூலை முடுக்கெல்லாம் முழங்கிக் கொண்டிருக்கும். இந்த ஓசன்னாவின் பின்னணி என்ன?
அன்று யூதர்களுக்குக் கூடாரத் திருவிழா. வீதியெல்லாம் விழாக்கோலம். விண்ணைப் பிளந்தன வெற்றி முழக்கங்கள். அந்த வெற்றி முழக்கச் சுலோகம் என்ன? “ஆண்டவரே, மீட்டருளும். ஆண்டவரே, வெற்றி தாரும்" (தி.பா.118:25). ஆண்டவரே மீட்டருளும் என்பதற்கு எபிரேயச் சொல் "ஓசன்னா"
 போருக்குப் புறப்படும் போது ஓசன்னா ' அபயக் குரலாக எழும்பும். வெற்றி பெற்றுத் திரும்பும் போது ஒசன்னா' வெற்றி முழக்கமாக அதிரும். ஆக ஓசன்னா என்பது ஒரு செபம், ஓர் அபயக் குரல், ஒரு வெற்றியின் வீரமுழக்கம், மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு, புகழ்ச்சியின் கூக்குரல்.
அந்நியர் ஆட்சியில் அடிமைகளாக அல்லலுக்கும் அவலத்துக்கும் ஆளாகிய சூழலில் இறைவன் தலையிட்டுத் தங்களைக் காப்பாற்றுவார் என்பது இஸ்ரயேலரின் நம்பிக்கை அனுபவம். எகிப்தில் மோசே வழியாக விடுதலை கண்ட பாலஸ்தீனப் பாமரர்கள் இயேசுவின் உருவில் புதிய மோசேயைக் கண்டார்கள். இயேசுவின் பணிவாழ்வுக் காலமாகிய மூன்று ஆண்டுகளும் அந்த எளிய மக்களின் உள்ளத்தின் ஆழத்தில் பூத்திருந்த அரசியல் மெசியா' என்ற எதிர்பார்ப்பு, திடீரென உணர்ச்சிப் பிழம்பாகக் கொப்பளித்ததன் விளைவுதான் குருத்தோலைப் பவனி.
ஆன்மீக மீட்பராக அல்ல, அரசியல் மீட்பராக, பலியாகும் தியாகச் செம்மலாக அல்ல, பவனி வரும் மகிமையின் மன்னராக அரச மரியாதையைச் செலுத்தினர். 'தாவீதின் மகனுக்கு ஓசன்னா! யூதர்களின் அரசே வாழி!” (இவைகள் எல்லாம் மெசியாவுக்கான அடைமொழிகள்) என்று விண்ணதிர முழங்கினர். இந்த மக்களின் எதிர்பார்ப்பும் ஆர்ப்பாட்டமும் நமது உள்ளத்தையும் நெகிழ வைக்கின்றன. இயேசு கூட இந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்து கல்வாரிச் சிலுவையைத் தவிர்த்து அரசியல் அரியணை நோக்கிச் சென்றிருக்கலாமோ என்று நினைக்கக் கூடத் தோன்றுகிறது.
இயேசுவைப் பொருத்தவரை அவரது மகிமை, மாண்பு, உயர்வு எல்லாம் கோதுமை மணியாக மடிவதில் மட்டுமே, எனவே எருசலேம் நோக்கிய இயேசு இறுதிப் பயணத்தில், மக்களுக்காகத் துன்புறும் ஊழியனாக, பலருடைய பாவங்களைச் சுமந்து செல்லும் செம்மறியாக, நம்மை நலமாக்கும் தண்டனையைத் தன்மேல் ஏற்றுக் கொள்பவராக வருகிறார். இது இஸ்ரயேல் மக்களின் எண்ணத்தைக் கடந்தது, எற்றுக் கொள்ளக் கடினமானது. எனவே பெரிய வெள்ளி அன்று ஓசன்னா பாட இயலவில்லை, கொல்லும் கொல்லும் என்று தான் கூக்குரலிட முடிந்தது.
இயேசுவை மூன்று நிலைகளில் தொடக்கக் காலத் திருச்சபை காண்கிறது. (பிலிப்.2:5-11)
1, தந்தைக்கு ஈடான தெய்வீக நிலை. விண்ணகத் தந்தையோடு தெய்வீக சமத்துவத்தில் வாழ்ந்த நிலை.
2. அடிமையின் தன்மை பூண்டு சிலுவைச் சாவு வரை அர்ப்பணித்துத் துன்புறும் மண்ணக வாழ்வு நிலை.
3. மூவுலகும் மண்டியிட இயேசுவே ஆண்டவர் என்று எல்லா நாவும் அறிக்கையிடத் தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கும் மகிமை நிலை .
இவற்றில் முதலாவது, மூன்றாவது நிலைகளில் இயேசுவைக் கண்டு பெருமிதம் கொள்ள நாம் தயார்; ஆனால் இரண்டாவது நிலையை ஏற்றுக் கொள்ளத் தயக்கம்!
முதல் உலகப் போர் முடிந்த நேரம். பிரான்சும் இங்கிலாந்தும் பயங்கரமாக மோதிக் கொண்ட போர் அது. பிரான்சு நாட்டு வீரன் ஒருவன் காயமுற்று இங்கிலாந்து மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தான். சிகிச்சை பெறும் வீரர்கள் தனது நாட்டினர்தானா என்று அறிய ஒவ்வொரு வீரனையும் உன் தலைவன் யார்?' என்று கேட்டான் இங்கிலாந்து நாட்டுத் தளபதி. பிறநாட்டு வீரன் என்றால் அந்த இடத்திலேயே அந்தக் கணத்திலேயே கொன்றுவிடக் கட்டளையிட்டான், பிரான்சு நாட்டு வீரனிடம் கேட்ட போது அவனது பதில் இங்கிலாந்து நாட்டுத் தளபதியை வியக்க வைத்தது. “எனது நெஞ்சைக்குத்திப் பிளந்து பாருங்கள் அங்கே என் தலைவன் நெப்போலியன் இருப்பான்” என்று கூறினானாம். அவனது அரச பக்தியை, அசாத்தியத் துணிவைக் கண்டு அவனை விடுவித்து விட்டனராம்.
தன் உயிர் போய்விடும் என்ற நிலையிலும் கூட, தன் தலைவன் நெப்போலியன் என்று நெஞ்சுறுதியுடன் சொன்ன வார்த்தைகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன. ஓசன்னா என்று உண்மையில் பாடினால் இயேசுவின் பாடுகளிலும் பங்கேற்க வேண்டும் அவருடைய சீடன்!



மறையுரை மொட்டுக்கள்அருள்பணி இருதயராஜ்

ஒர் அப்பா தனது சிறிய மகனைத் தன் வீட்டிற்கு முன் இருந்த மரத்தின் மேல் ஏறி, அதன் கிளை ஒன்றில் உட்காரச் சொல்லி, அவனிடம், "மகனே! கீழே குதி! நான் உன்னைப் பிடித்துக் கொள்வேன்” என்றார். அவன் முதலில் மறுத்தாலும், அப்பாவின் வாக்குறுதியை நம்பி கீழே குதித்தான். ஆனால் அப்பா அவனைப் பிடித்துக் கொள்ளாமல் விட்டு விட, அவள் தரையில் விழுந்து கால் பிசகிக் கொண்டு அழுதான், அப்பா அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, "மகனே, உலகில் யாரையும் நம்பாதே; உன் அப்பனையும் நம்பாதே" என்றார்.
இவ்வுலகில் நாம் யாரையும் எளிதில் நம்பிவிட முடியாது. உன் பகைவன் உன்னைக் கைகூப்பி வணங்கினால் அவனை நம்பாதே; ஏனெனில் அவனுடைய கூப்பிய கைகளிலே கத்தியை வைத்திருப்பான் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர், "தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்” (குறள் 828),
கிறிஸ்து பல அற்புதங்களையும் அருங்குறிகளையும் செய்தபோது பலர் அவரை நம்பினர், ஆனால் கிறிஸ்துவோ அவர்களை எளிதில் நம்பிவிட வில்லை. "இயேசு அவர்களை நம்பி விடவில்லை. ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும். மனிதர் உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்” (யோவா 2:25),
மனிதர்களைப் பற்றிய இயேசுவின் கணிப்புச் சரியானதே. ஏனெனில், குருத்து ஞாயிறு அன்று. "ஓசன்னா; ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக' (மாற் 11:9) என்று ஆர்ப்பரித்த அதே மக்கள், பெரிய வெள்ளிக்கிழமையன்று, 'அவனைச் சிலுவையில் அறையும்" (மாற் 15:13) என்று கூச்சல் இட்டனர், எலும்பில்லாத நாக்கு எப்படியும் பேசும், "போற்றலும் தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன" (யாக் 3:10).
கிறிஸ்துவோ, “போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும்" என்ற மனநிலையுடன் புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் சமச்சீர்நிலையில் வாழப் பழகிக் கொண்டார். இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா சித்தரிக்கும் துன்புறும் இறை ஊழியனாக, கிறிஸ்து தம்மை அடிப்போர்க்கு முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்குத் தாடையையும் கையளித்தார்; நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் தமது முகத்தை மறைக்க வில்லை (எசா 50:6). அவர் மனிதர் தருகின்ற மகிமையைத் தேடாமல் (யோவா 5:41), அவரது தந்தை அவருக்கு அளிக்கவிருந்த மகிமை ஒன்றையே நாடினார் (யோவா 8:54), இன்றைய இரண்டாம் வாசகத்தில் சொல்லப்பட்டுள்ளது போல, கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி, சாவை ஏற்கும் அளவுக்கு. அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்தார். எனவேதான் கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்து மாட்சிமைப்படுத்தினான் (பிலி 2:6-11).
உலக வாழ்வின் எதார்த்தநிலை: பாளையிலே ரோறு இருந்தா பூனைகளும் சொந்தமடா; வேதனையைப் பங்கு வைச்சா சொந்தமில்லை பந்தமில்லை " (திரைப்படப்பாடல்), நாம் வசதியாக வாழும்போது நமக்கு நெருக்கமாக இருந்தவர்கள், நாம் நொடித்துப் போகும்போது தலை மறைவாகிவிடுகின்றனர். எனவே, இன்பத்தில் தலை கால் தெரியாமல் அலையவோ, துன்பத்தில் மனமுடைந்து போகவோ கூடாது." வளமையிலும் வாழத் தெரியும்; வறுமையிலும் வாழத் தெரியும். திறைவோ குறைவோ, எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்" (பிலி 4:12) என்று கூறிய புனித பவுலின் மனநிலையைப் பெறவேண்டும்.
இன்றைய நற்செய்தியில் மாற்கு எழுதியுள்ள படி நமது ஆண்டவரின் பாடுகள் வாசிக்கப்பட்டன. இந்நற்செய்தியில் வருகின்ற இருவர் நாம் இயேசுவை எப்படி பின்பற்றக்கூடாது, எப்படிப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றனர்,
இயேசு பிடிபட்டபோது, ஓர் இளைஞர் வெறும் உடம்பின் மீது ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு இயேசுவின் பின்னே சென்றார். அவரைப் பிடித்தபோது, அவர் போர்வையை விட்டுவிட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார் (மாற் 14:51-52). இந்த இளைஞரைப் போல நாம் இயேசுவைப் பின்பற்றக்கூடாது.
சிலர் இயேசுவின்மீது உண்மையான பற்றுறுதியின்றி. ஒருசில கொள்கைகள், இலட்சியங்கள், இலக்குகள் என்னும் போர்வையைப் போர்த்திக் கொண்டு இயேசுவைப் பின்பற்றுகின்றனர். ஆனால், அவர்களுடைய உயிருக்கு ஆபத்து வரும்போது, அக்கொள்கைகளையும் இலக்குகளையும் தூக்கி எறிந்துவிட்டுத் தப்பி ஓடிவிடுகின்றனர்.
இன்று ஒரு சில போலி இறையியலார் உள்ளனர். இவர்கள் இறையியல் சந்தையில் பேரம் பேசுகின்றவர்கள்: மலிவுச் சரக்குகளை விலைக்கு வாங்குபவர்கள், விற்பவர்கள், பங்குதாரர்கள், இவர்களின் இறையியல் அங்காடி இறையியல்" (ஆயசமநவ கூாநடிட்டிபல) ஓர் இறையியல் சந்தையில் சரிவு ஏற்பட்டால், தயங்காமல் மற்றோர் இறையியல் சந்தையைத் தேடிச் செல்வார்கள்.
பொதுநிலையினர்களிலும் ஒருசிலர் பல்வேறு பிரிவினைச் சபைகளுக்கு மாறிக்கொண்டே இருக்கின்றனர். இவர்களுக்கு உறுதியான நிலைப்பாடில்லை. திசைமாறிய பறவைகள், இவர்களுக்கு இயேசு கூறுவது: “கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" (லூக் 9:62) 46
கிறிஸ்து சிலுவையில் உரக்கக் கத்தி உயிர் நீத்த போது, அவருக்கு எதிரே நின்று கொண்டிருந்த நூற்றுவர் தலைவர், "இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்" என்றார் (மாற் 15:39). இவர் பிற இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரயேல் மக்களும், மறைநூல் அறிஞர்களும், மக்களின் மூப்பர்களும், தலைமைச் சங்கமும், ஆளுநரும், ஏன், வானகத் தந்தையும் கூட இயேசுவைக் கைவிட்ட நிலையில், (என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?), நூற்றுவர் தலைவர் இயேசுவைக் கடவுளின் மகன்' என்று அறிக்கையிட்டார்.
'கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்' (மாற் 1:1) என்று தமது நற்செய்தியைத் தொடங்கிய மாற்கு, "இயேசு கடவுளின் மகன்" (மாற் 15:39) என்ற நூற்றுவர் தலைவரின் விசுவாச அறிக்கையுடன் தமது நற்செய்தியை முடிக்கிறார்.
இயேசுவின் இறைத்தன்மையைக் கூட மறுதலிக்கும் இறையியலார் வாழும் இக்காலத்தில், நூற்றுவர் தலைவரைப் பின்பற்றி இயேசுவின் இறைத்தன்மையில் அசையாத நம்பிக்கை வைப்போம், வேதனையோ நெருக்கடியோ, பசியோ ஆடையின்மையோ, சாவோ வாழ்வோ, வேறு எந்தச் சக்தியோ இயேசுவிடமிருந்து ஒருபோதும் நம்மைப் பிரிக்கவிடக் கூடாது (உரோ 8:38-39),
"இறக்கும் வரை நம்பிக்கையோடு இரு, அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன்" (திவெ 2:10).



இது ஆண்டவருக்குத் தேவை!

அருள்பணி ஏசு கருணாநிதி - மதுரை,


இயேசு எருசலேம் நகருக்குள் ஆர்ப்பரிப்போடு நுழையும் நிகழ்வை எல்லா நற்செய்தியாளர்களும் பதிவு செய்கின்றனர். யோவான் தவிர மற்ற மூன்று நற்செய்தியாளர்களும் தங்கள் பதிவில் கழுதையைப் பற்றிய வர்ணனையை வைக்கின்றனர். அவர்களின் பின்வரும் சொல்லாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்: 'இது ஆண்டவருக்குத் தேவை.' என் அருள்பணி வாழ்வின் விருதுவாக்காக இந்த வாக்கியத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று நான் முன்னால் நினைத்ததுண்டு.

'பேனா எதற்குப் பயன்படும்?' என்று ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களிடம் கேட்டார். எல்லாரும் சேர்ந்து, 'எழுத' என்றனர். 'அவ்வளவு தானா?' என்றார். 'அவ்வளவுதான்' என்றனர் மாணவர்கள். ஒரு மாணவி மட்டும் எழுந்து நின்று, 'இல்லை. பேனா எழுத மட்டுமல்ல. அது இன்னும் நிறைய பயன்படும். படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தின் நடுவில் அடையாளமாக வைக்க, ஃபேன் காற்றில் பறக்கும் தாளின் மேல் வைக்கும் பேப்பர் வெயிட்டாக, சட்டைப் பையில் குத்தி வைத்து ஒருவரின் அந்தஸ்தைக் காட்டும் அடையாளமாக, பிறருக்கு அளிக்கும் பரிசுப்பொருளாக, பள்ளியின் இறுதிநாளில் ஒருவர் மேல் ஒருவர் இன்க் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த, முன்பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஒருவரின் முதுகில் தட்டி அவரைத் திரும்பிப் பார்க்க வைக்க, ஆடியே கேசட்டின் சக்கரப்பற்களில் நடுவே விட்டு சக்கரங்களை வேகமாகச் சுழற்ற,' என்று சொல்லிக்கொண்டே போனார்.

'கழுதை எதற்குப் பயன்படும்?' என்று நம்மிடம் யாராவது கேட்டால், 'பொதி சுமக்க' என்று சொல்லி அமைதி காத்துவிடுவோம். ஆனால், விவிலியத்தில் 'கழுதையின் தாடை' எதிரியை அழிக்க, 'கழுதை' மற்றவர்களைச் சபிக்க, 'கழுதை' அரசர்களைச் சுமந்துவர, 'கழுதை' அமைதியின் இறைவாக்கின் அடையாளமாக என நிறையப் பயன்பாடுகள் உள்ளன.

'இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை!' - இங்கே ஆண்டவர் என்பது இயேசுவையும், தந்தையாகிய இறைவனையும் குறிக்கின்றது. இயேசு இக்கழுதையைப் பயன்படுத்தி எருசலேம் ஆலயம் நுழைகிறார். இறைவன் இக்கழுதையைப் பயன்படுத்தி இயேசுவின் எருசலேம் பயணத்தை, பாடுகள் மற்றும் இறப்பை துவங்கி வைக்கின்றார். இன்னும் கொஞ்சம் தாராளமான உருவகமாகப் பார்த்தால், 'ஆண்டவர்' என்பது தந்தையாகிய இறைவனையும், 'கழுதை' என்பது இயேசுவையும் குறிக்கிறது என வைத்துக்கொள்ளலாம். மேலும், இந்தக் கழுதை நம் ஒவ்வொருவரையும் குறிக்கும் உருவகமாகவும் இருக்கிறது.

எப்படி?

இன்றைய நற்செய்தி வாசகமாக இயேசுவின் பாடுகளை மாற்கு நற்செய்தியாளரின் பதிவிலிருந்து வாசிக்கக் கேட்டோம்.

ஒட்டுமொத்த வாசகத்தின் பின்புலத்தில் இழையோடும் செய்தி ஒன்றுதான்:

'இந்தக் கழுதை (இயேசு) எங்களுக்குத் தேவையில்லை!'

இயேசு என்பவர் சீடர்களுக்கு, தலைமைச் சங்கத்தாருக்கு, பிலாத்துவிற்கு, ஏரோதுவிற்கு தேவையில்லாமல் போகின்றார். ஆகையால் அவரை தீர்ப்பிட்டு, வதைத்து, அழித்துவிடுகின்றனர்.

ஆக, மனிதர்கள், 'இது எங்களுக்குத் தேவையில்லை' என்று சொன்னதை, இறைவன், 'இது ஆண்டவருக்குத் தேவை' என்று புரட்டிப் போடுகின்றார்.

கடந்த வாரத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் என்ற அறிவியலாளர் இறந்துபோனார். உடல் செயலாற்றாமல் மூளை மட்டுமே செயலாற்றியது இவருக்கு. 'எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்' என்று நூலின் வழியாக அறிவியல் அறிவையும் சாமானியருக்கும் கொண்டுவந்ததோடு, 'கருந்துளை,' 'கடவுள் துகள்' என்னும் தன் ஆராய்ச்சியின் வழியாக ஐன்ஸ்டைன் போன்றதொரு அழியாத இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

'இவர் எனக்குத் தேவையில்லை' என்று மற்றவர் தன்னைச் சொன்னாலும், 'என்னாலும் ஒரு பயன் உண்டு' எனத் தன் இருப்பை பதிவு செய்தார் ஹாக்கிங்.

நிற்க.

உலகப்போரின்போது நாசிச ஜெர்மனி நாட்டில் ஹிட்லர் முதியவர்கள், நோயுற்றவர்கள், கைகால் இழந்தவர்கள், பேச்சற்றவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டோர் அனைவரையும் கொன்றுவிடுமாறு கட்டளையிட்டார். 'இவர்களால் நமக்கு ஒரு தேவையும் இல்லை' என்பது ஹிட்லரின் வாதம்.

'இவர் எங்களுக்கு தேவை இல்லை' என்று இயேசுவைப் பார்த்து மற்றவர்கள் சொல்லி அவரை கொல்லும் அளவிற்குச் சென்றதன் காரணம் என்ன?

அவர் இவர்களுக்கு தொந்தரவாக இருந்தார்.

அவர் இவர்களைப் போல பேசவில்லை, செயல்படவில்லை.

இவர்கள் நிறைய தன்னிறைவு கொண்டிருந்தனர். இவர்களுக்கென்று வேறெதுவும் தேவையில்லை.

இப்படி நிறைய சொல்லலாம்.

ஆனால், இந்த உலகமே தன்னைத் தேவையில்லை என்று சொன்னாலும் இயேசு தளர்ந்து போகவில்லை. அதுதான் குருத்து ஞாயிறு சொல்லும் பாடம்.

ஆபிரகாம் மாஸ்லோ என்ற உளவியல் அறிஞர் மனித தேவைகளை ஐந்தடுக்குகள் கொண்ட பிரமிடாக முன்வைத்து, 'உடல்சார்ந்த தேவைகள்,' 'பாதுகாப்பு தேவைகள்,' 'அன்புத் தேவைகள்,' 'தன்மதிப்பு தேவைகள்,' 'தன்நிர்ணய தேவைகள்' என வரையறுக்கின்றார். மனித உறவுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் தேவை சார்ந்தே இருக்கின்றது என்பது நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய எதார்த்தம்.

'தேவைக்காகவாவது என்னிடம் பேசுகிறார்களே' என்று மகிழ வேண்டும். ஏனெனில், 'தேவையில்லை என்று பேச மறுக்கிறார்களே' என்பது அதனிலும் கொடிய வேதனை.

ஆக, இந்த உலகமே, 'இவர் எனக்குத் தேவையில்லை' என்று சொன்னாலும், இயேசு, 'இது ஆண்டவருக்குத் தேவை' என்று தன் உள்ளத்தில் துணிவோடு இருக்கின்றார். இந்த துணிச்சல்தான் அவரை எதையும் எதிர்கொள்ள வைக்கிறது. 'தைரியம் இழந்தவன் எல்லாம் இழப்பான்' என்பது முதுமொழி.

இன்றைய நாளின் கழுதைக்குட்டியிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப்பாடங்கள் மூன்று:

அ. இறைவனின் அல்லது தேவையில் இருப்பவரின் திருவுளம் நிறைவேற்ற எப்போதும் தயார்நிலை.

ஆ. அடுத்த என்ன நடக்கும் என்பதை நாம் அறியாததால் நடப்பதை அப்படியே புன்முறுவலோடு எதிர்கொள்வது.

இ. அடுத்தவரின் சத்தம் ஓங்கி ஒலிக்கும் நேரத்தில் நாம் மௌனம் காப்பது

அ. தயார்நிலை

இந்தக் கழுதை எத்தனை மாதங்கள் அல்லது எத்தனை நாள்கள் அங்கு நின்றது என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், அவிழ்த்தவுடன் அவிழ்த்தவரோடு சென்றுவிடுகிறது. 'இல்ல, நான் அப்புறம் வர்றேன்!' என்றோ, 'இல்ல எனக்கு வேற வேலை இருக்கிறது' என்றோ சொல்லவில்லை. இந்த மனநிலை இருந்தால் நாம் எந்த விரக்தியையும் வென்றுவிடலாம். என்னைப் பொறுத்தவரையில், திட்டமிடுதலும், முதன்மைப்படுத்துதலும், டாஸ்க் லிஸ்ட் போடுவதும் பல நேரங்களில் செயற்கைத்தனத்தையும், விரக்தியையும், ஏமாற்றத்தையும் உருவாக்குகிறது. தயார்நிலை நமக்கு சுதந்திரத்தையும், கட்டின்மையையும் தருகிறது. இயேசு தனக்கு என்ற எந்த அஜென்டாவையும் வைத்திருக்கவில்லை.

ஆ. புன்முறுவல்

கழுதை தன்னை அவிழ்த்தவர்மேல் எந்த எதிர்பார்ப்பும் வைத்திருக்கவில்லை. தன்னை அடிக்க கொண்டு செல்கிறார்களா, அல்லது வேலைக்கு கூட்டிச் செல்கிறார்களா என்று எதுவும் அதற்குத் தெரியாது. இருந்தாலும் அடுத்த வேலைக்கு அப்படியே செல்கிறது. அதுதான் அதன் இருப்பின் நோக்கம். ஆக, கழுதையின் நோக்கம் கட்டிக் கிடப்பதற்கு அல்ல. கட்டிக்கிடத்தலில் சுகம் இருக்கும். உணவு நேரத்திற்கு கிடைக்கும். நிழல் இருக்கும். எந்த தொந்தரவும் இருக்காது. ஆனால், கட்டிக்கிடப்பதற்காக கழுதை பிறக்கவில்லையே. என் வாழ்வின் நோக்கம் என்ன என்பது நான் அறியவில்லை என்றாலும், வாழ்க்கை அடுத்தடுத்து அழைக்கும்போது புன்முறுவலோடு நகர்ந்து செல்வதே சிறப்பு.

இ. மௌனம்

வாழ்க்கையில் பல நேரங்களில் நம் பேச்சு அதிக பேச்சையே வளர்க்கும். ஆனால் மௌனம் எல்லாவற்றையும் வென்றுவிடும். தன்னை நோக்கி எதிர் மற்றும் பொய்ச்சான்றுகளைச் சொன்னவர்கள்மேல் இயேசு கோபப்பட்டு எதிர்த்துப் பேசவில்லை. பேச்சு பேச்சையும், எதிர்ப்பு எதிர்ப்பையும் வளர்க்கும் என்பது அவருக்குத் தெரிந்ததால் அடுத்தவரின் பேச்சு அதிமாகும் பட்சத்தில் அவர்களுக்கு மேல் தன் குரலை ஓங்காமல் தன் குரலைத் தாழ்த்திக்கொள்கின்றார்.

இறுதியாக,

'எல்லாரும் என்னை பயன்படுத்துகிறார்கள்' என்ற கோபத்திற்கும்,

'என்னை யாராவது தேவையில்லை என்று சொல்லிவிடுவார்களோ' என்று பயத்திற்கும்

மேலே பயணம் செல்கிறது மனித வாழ்க்கை என்ற இரயில்.

ஆனால், 'இந்த இரயில் ஆண்டவருக்குத் தேவை' என்ற மனநிலை மட்டும் வந்தால் கோபமும், பயமும் தண்டவாளம் போல தரையோடு தரையாய் மறைந்து போகும்.






 நமக்காகப் பாடுகள் பட்ட இயேசு கிறிஸ்து!
அருள்பணி  மரிய அந்தோனிராஜ்எ-பாளை மறைமாவட்டம்
மார்செல்லெஸ் (Marseilles) என்னும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் வாழ்ந்த நகரில் கயோட் (Guyot) என்னும் பெரியவர் ஒருவர் வசித்து வந்தார். அவர் திருமணமாகாதவர்; உணவுக்காகவோ, உடுத்தும் உடைக்காகவோ அதிகமாக செலவு செய்யாதவர். அவர் மிகவும் கடினமாக உழைத்து ஒரு பெரிய மண்டபத்தைக் கட்டிக்கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்து மார்செல்லெஸ் நகரில் இருந்த மக்கள் எல்லாம் ‘இவர் ஒரு சரியான கஞ்சப் பேர்வழி’, ‘இவருக்குத்தான் குடும்பமோ, குழந்தையோ இல்லையே. பிறகு எதற்கு இவர் இவ்வளவு பெரிய மண்டபத்தைக் கட்டிக்கொண்டிருக்கின்றார்?; எதற்காக இவர் இப்படி பணத்தை சேமித்து வைக்கின்றார்’ என்று கேலி செய்தார்கள். சில நேரங்களில் அந்நகரில் இருந்த இளைஞர்களில் ஒருசிலர் அவர்மீது கல்லெறிந்து சீண்டிப் பார்த்தார்கள். அப்போதெல்லாம் அவர் எந்தவொரு எதிர்வினையும் ஆற்றாமல் அப்படியே இருந்தார்.

நாட்கள் நகர்ந்தன. அவர் தான் கட்டிக்கொண்டிருந்த மண்டபத்தைக் கட்டி முடித்தார். அந்த சந்தோசத்திலே அவர் சிறுதுகாலம் திளைத்திருந்தார். இப்படியான சமயத்தில் அவர் நோய்வாய்ப்பட்டு, படுக்கையில் விழுந்து கவனிப்பார் யாருமின்றி அப்படியே இருந்து போனார்.

கயோட் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு, அக்கம் பக்கத்துக்கு வீட்டார் அனைவரும் அவருடைய வீட்டுக்கு வந்தார்கள். அப்போது அவருடைய இறந்த உடலுக்கு அருகே ஓர் உயில் இருந்தது. அந்த உயிலில், “மார்செல்லெஸ் நகர மக்களே! வணக்கம். நான் உங்களிடம் ஒருசில வார்த்தைகள் பேசவேண்டும். இங்கு இருக்கின்ற மக்களின் வாழ்வை என்னுடைய சிறுவயதிலிருந்தே நான் கவனித்து வருகின்றேன். இங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை, மட்டுமல்லாமல், மக்கள் தங்குவதற்கு போதிய வீடு இல்லை. நிறையப் பேர் ஓலைக் குடிசைகளில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அதனால்தான் நான் மக்கள் தங்குவதற்காகவே ஒரு மண்டபத்தைக் கட்டி எழுப்பினேன். மேலும் மக்கள் தங்களுடைய அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்துகொள்வதற்குத்தான் சரியான உணவுகூட உண்ணாமல் பணத்தைச் சேமித்து வைத்தேன். நான் இந்நாள் வரை சேமித்த பணமெல்லாம் அருகேயுள்ள பெட்டியில் இருக்கின்றது. அதை எடுத்துக்கொண்டு உங்களுடைய அடிப்படை வசதிகளைப் பூர்த்திசெய்துகொள்ளுங்கள்” என்று எழுதி இருந்தது.

அவர் எழுதிய உயிலைப் படித்துப் பார்த்த மக்கள், “இந்தப் பெரியவர் இத்தனை ஆண்டுகளும் மக்களுக்காகத்தான் வாழ்ந்திருக்கின்றார், நாம்தான் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை’ என்று மிகவும் வருந்தினார்கள். மார்செல்லெஸ் நகர மக்களுக்காக கயோட் தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்ததுபோன்று ஆண்டவர் இயேசுவும் நம்முடைய மீட்புக்காக தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார், அதற்காகப் பாடுகளையும், சிலுவையும் சுமந்து கொண்டார் என்று நினைத்துப் பார்க்கின்றபோது நமக்குப் பெருமையாக இருக்கின்றது.

பாடுகளின் குருத்து ஞாயிறான இன்று நாம் படிக்கக் கேட்ட வாசகங்கள், ‘நமக்காக இயேசு பட்ட பாடுகளை நமக்குக் எடுத்துக்கூறுகின்றன.. நாம் நமது மீட்புக்காக இயேசு பட்ட பாடுகளை சிந்தித்துப் பார்த்து, அவருடைய வழியில் நடக்க முயற்சி எடுப்போம்.

இயேசு நமக்காகப் பட்ட பாடுகள், அடைந்த அவமானங்கள், இழந்த இழப்புகள் எல்லாம் கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றையெல்லாம் நாம் வார்த்தையால் விளக்கிச் சொல்ல முடியாது. பிலிப்பியருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் இயேசு கிறிஸ்து நமது மீட்புக்காக எந்தளவுக்கு பாடுகள் பட்டார் என்பதை விளக்கிச் சொல்கின்றது. “கடவுள் தன்மையில் விளங்கிய அவர்... தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார்”. என்று நாம் அங்கு வாசிக்கின்றோம்.

இங்கே நாம் இயேசுவின் வாழ்வில் இருக்கும் ஐந்து நிலைகளைப் பார்க்கின்றோம். ஒன்று தம்மையே வெறுமையாக்குதல். இரண்டு. அடிமையின் நிலையை ஏற்றல். மூன்று. சாவை அதுவும் சிலுவைச் சாவை ஏற்றல். நான்கு கீழ்ப்படிதல். ஐந்து தம்மையே தாழ்த்திக்கொள்ளுதல். இந்த ஐந்து நிலைகளையும் நாம் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கின்றபோது இயேசு செய்த செயல் மிகவும் வியப்புக்குரியதாக இருப்பதை அறிந்துகொள்ளலாம்.

இந்த உலகத்தில் யாரும் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்ததாகத் தெரியவில்லை. ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், ஆண்டவர் இயேசுவோ கடவுள் வடிவில் இருந்தவர். அப்படிப்பட்டவர் ஓர் அடிமையைப் போன்று தம்மையே தாழ்த்தி, சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டார் என்றால் அங்குதான் நாம் இயேசுவின் அன்பைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் துன்புறும் ஊழியன் படுகின்ற பாடுகளை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இங்கே சொல்லப்படும் துன்புறும் ஊழியன் என்பவர் ‘ஆண்டவரின்மீது நம்பிக்கை கொண்ட மக்களினமாக’ இருக்கலாம் (எசா 49:1-5) அல்லது இறைவாக்கினர் எசாயவோ அல்லது அவரைப் போன்று துன்பங்களை அனுபவித்த இறைவாக்கினர் எரேமியாவாகவோ இருக்கலாம் என்று சொல்வர். ஆனால், இவர்கள் எல்லாரையும் விட இயேசுவோடுதான் மேலே சொல்லப்பட்ட வார்த்தைகள் மிகவும் பொருந்துவதாக இருக்கின்றன. ஏனெனில், அவர்தான் அடிப்போருக்கு முதுகையும், தாடியைப் பிடுங்குவோருக்குத் தாடியையும் கொடுத்தார்; நிந்தனை செய்வோருக்கும் காரி உமிழ்வோருக்கும் தன்னுடைய முகத்தை மறைக்கவில்லை. ஆகையால், இறைவாக்கினர் சொல்கின்ற துன்புறும் ஊழியன் இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு இல்லை என்று உறுதியாக நாம் நம்பலாம்.

பாடுகளின் குருத்து ஞாயிறான இன்று, நமக்காக இயேசு எவ்வளவு துன்பங்களை அனுபவித்தார் என்று சிந்தித்துப் பார்த்த நாம், இவ்விழா நமக்கு உணர்த்தும் மூன்று முக்கியமான செய்திகளை/ உண்மைகளைச் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

குருத்து ஞாயிறு நமக்குச் சொல்லும் முதலாவது செய்தி. நற்செய்திக்காக/ இறைவனுக்காக நாம் படும் துன்பங்களை ஒருபோதும் அவமானமாகப் பார்க்கக்கூடாது என்பதாகும். முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் ‘ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்” என்று கூறுகின்றார். ஆம், நாம் ஒன்றும் இழிவான செயலைச் செய்யவில்லை. இன்றைக்கு இழிவான செயலைச் செய்கின்றவர்களே அவமானப்படாதபோது ஆண்டவருடைய பணியைச் செய்கின்ற நாம் எதற்கு அவமானம் அடையவேண்டும் என்பதுதான் நாம் நம்முடைய மனதில் வைத்துக் கொள்ளவேண்டிய முதன்மையான செய்தியாக இருக்கின்றது.

பல நேரங்களில் இயேசுவின் பொருட்டும், நற்செய்தியின் பொருட்டும் பிறர் நம்மைத் துன்புறுத்தலாம், வசைபாடலாம், இழிவாக நடத்தலாம். அத்தகைய தருணங்களில் மனம் உடைந்து, அவமானம் அடையத் தேவையில்லை என்பதுதான் நாம் கருத்தில் கொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது.

குருத்து ஞாயிறு நமக்கு உணர்த்தும் இரண்டாவது முக்கியமான செய்தி நற்செய்தியின் பொருட்டும், இயேசுவின் பொருட்டும் நாம் அடையும் துன்பங்களுக்கு இறைவன் தக்க கைம்மாறு தருவார் என்பதாகும். இரண்டாம் வாசகத்தில் ‘தம்மை வெறுமையாக்கி, அடிமையின் கோலம் பூண்டு, சிலுவை சாவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவை ஆண்டவராகிய கடவுள் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார் என்று நாம் வாசிக்கின்றோம். ஆம், ஆண்டவருடைய பணியைச் செய்வோருக்கு ஆண்டவர் தக்க கைமாறு தருவார் என்பதில் எந்தவொரு ஐயப்பாடும் கிடையாது என்பதுதான் உண்மை. மத்தேயு நற்செய்தி 5:11 ல் நாம் அதைத்தான் வாசிக்கின்றோம், “என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை, பொல்லாதவை எல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள்! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும் என்று.

ஆகவே, இறைப்பணி செய்யும் ஒவ்வொருவருக்கும், இயேசுவின் பொருட்டுத் துன்ப துயரங்களை அனுபவிக்கும் ஒவ்வொருவருக்கும் இறைவன் தக்க கைம்மாறு தருவார் என்ற உண்மையை நம்முடைய மனதில் பதிய வைத்துக்கொள்வோம்.

குருத்து ஞாயிறு நமக்கு உணர்த்தும் மூன்றாவது முக்கியமான செய்தி ஆண்டவரின் துணை எப்போதும் நம்மோடு இருக்கின்றது என்பதாகும். முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் கூறுகின்றார், “ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்” என்று. யோவான் நற்செய்தி 16: 32 ல் இதைத்தான் வாசிக்கின்றோம். “இதோ காலம் வருகின்றது, ஏன் வந்தே விட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே விட்டுவிடுவீர்கள். ஆனால், நான் தனியாய் இருப்பதில்லை, தந்தை என்னோடு இருக்கின்றார்” என்று. ஆகையால், நம்முடைய வாழ்வில் வரும் இன்னல் இக்கட்டுகளில் இறைவன் நம்மோடு இருக்கின்றார், நமக்குத் துணையாக இருந்து வழி நடத்துகின்றார் என்னும் செய்தியை நாம் உணர்ந்துகொண்டு வாழவேண்டும்.

இளைஞர்களின் பாதுகாவலர் என்று அழைக்கப்படுகின்ற தொன் போஸ்கோ தீய வழியில் வாழ்ந்து வந்த ஏராளமான இளைஞர்களை ஆண்டவர் இயேசுவுக்குள் கொண்டுவந்து அவர்கள் தூய வாழ்க்கை வாழக் காரணமாக இருந்தார். இதனால் அவருக்கு நிறைய எதிரிகள் உருவானார்கள்.

சில நேரங்களில் அவருடைய எதிரிகள் அவரைச் சூழ்ந்துகொண்டு அவரைக் கொல்வதற்கு முயற்சி செய்தார்கள். இன்னும் சில நேரங்களில் அவருடைய எதிரிகள் அவரை இருள் மண்டிக்கிடக்கும் பகுதிக்குத் தூக்கிச்சென்று அவர்மீது தாக்குதல் நடத்த முயற்சித்தார்கள். அப்போதெல்லாம் ஒரு நாய் அங்கு வந்து, தொன் போஸ்கோவை எதிரிகளிடமிருந்து காப்பாற்றும். அந்த நாய் எங்கிருந்து வருகின்றது, எங்கு செல்கின்றது என்று யாருக்கும் தெரியாது. ஏன் தொன் போஸ்கோவிற்குக்கூடத் தெரியாது. அவர் அந்த நாயை கிரிகியோ (Grigio) என்று அழைத்து வந்தார். தொன் போஸ்கோவிற்கு ஆபத்து வருகின்ற சூழலில் எல்லாம் கிரிகியோ என்னும் அந்த நாய் திடிரென்று தோன்றி, அவரை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிவிட்டு, மாயமாக மறைந்துவிடும் சம்பவம் பல முறை அவருடைய வாழ்க்கையில் நடந்திருக்கின்றது.

கரிகியோ என்னும் அந்த நாய் வேறு யாரும் கிடையாது, தொன் போஸ்கோவின் காவல்தூதர்தான் என்று சொல்வர்.

துன்ப நேரத்தில் இறைவன் நம்மைக் கைவிட்டுவிட மாட்டார். அவர் நமக்குத் துணையாக (காவல் தூதர்கள் வழியாக) நம்மைக் காத்திடுவார் என்னும் உண்மையைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, இயேசுவின் பாடுகளின் குருத்து ஞாயிரை சிறப்பிக்கும் நாம் இயேசுவை போன்று மானுட மீட்புக்காக துன்பங்களை துணிவோடு ஏற்போம். துன்பங்களை அவமானமாகப் பார்க்காமல், அவையே நம்மையே இறைவனிடம் சேர்க்கும் கருவி என்பதை உணர்வோம். இறைவனின் துணை எப்போதும் நம்மோடு இருக்கின்றது என்பதை உணர்ந்து, இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.




No comments:

Post a Comment