Wednesday 30 January 2019

ஆண்டின் பொதுக் காலம் நான்காம் ஞாயிறு

ஆண்டின் பொதுக் காலம் நான்காம் ஞாயிறு 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-

ஏரேமியா1:4-5, 17-19
1 கொரிந்தியர் 12:12-31, 13:13
லூக்கா  4: 21-30




 


இன்றைய திருவழிபாட்டின் மையப்பொருளாக இன்றைய இரண்டாம் வாசகம் அமைகிறது (1 கொரி. 13). அன்பு இல்லாமல் வேறு திறமைகள் இருந்தால் அதனால் பயன் ஒன்றுமில்லை என்றும், அன்பின் பண்புகள் எப்படிப்பட்டவை என்றும் எடுத்துக்காட்டுகிறார் பவுலடியார்.

ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோது அவரைத் திட்டியவர்களில் அவரது கட்சியைச் சார்ந்த ஸ்டாண்டன் என்பவரைப் போல, வேறு யாரும் இருக்க முடியாது. ஆப்ரகாம் லிங்கனை தந்திரகாரக் கோமாளி என்றும், ஆப்பிரிக்கா கொரில்லா போன்ற வார்த்தைகளாலும் வசை பாடினார் ஸ்டாண்டன். இதற்காக லிங்கன் இவரை ஒதுக்கவில்லை. மாறாக உயர்ந்த பதவியைத்தான் கொடுத்தார். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவரது உடல் ஒரு அறையில் கிடத்தப்பட்டு கிடந்தது. அப்போது ஸ்டாண்டன் கண்ணீரோடு இதோ உலகம் இதுவரைக் காணாத மாபெரும் தலைவர் இங்கே கிடத்தப்பட்டு இருக்கிறார் என்றார்.

புனித பவுல், அன்பின் பரிமாணங்கள் பற்றிக் கூறும்போது, அன்பு பொறுமையுள்ளது அன்பு அழுக்காறு கொள்ளாது, பெருமை பேசாது, இறுமாப்பு அடையாது, இழிவானதைச் செய்யாது, தன்னலத்தை தேடாது சீற்றத்திற்கு இடந்தராது, வன்மம் வைக்காது; அநீதியைக் கண்டு மகிழ்வுறாது, உண்மையைக் கண்டு உளம் மகிழும், அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் (1 கொரி. 13:4-7) என்று கூறுகிறார். இந்த அன்பின் பரிமாணங்கள் அனைத்தும் ஆப்ரகாம் லிங்கனிடம் இருந்தது என்றால் மிகையாகாது.

அன்பைவிடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை . ஒருவருக்கு பல மொழி பேசும் திறமை இருக்கலாம். இறைவனுடைய திட்டத்தை முன்னறிவிக்கும் வரம் இருக்கலாம். ஆழ்ந்த விசுவாசம்
இருக்கலாம். ஆனால் இவையனைத்தும் அன்பின் அடிப்படையிலே அமையாவிட்டால், போட்டி, தற்புகழ்ச்சி, பெருமை இவற்றிற்கு இட்டுச் செல்லும் (1 கொரி. 13:1-3).

இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும் இறைவாக்கினர் பணி எவ்வளவு துன்பங்கள் நிறைந்தது என்றும், ஓர் உண்மையான இறைவாக்கினருக்கு அளவற்ற பிறரன்பு தேவைப்படுகின்றது என்பதையும் உணர்த்துகின்றது. இறைவனின் அன்பை எடுத்துரைக்கின்றபோது அளவற்ற பொறுமை, சகிப்புத் தன்மை, மன்னிப்பு போன்ற அன்பின் பரிமாணங்கள் நம்மில் இடம் பெற வேண்டும் என்பதையே இவை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

அன்பை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கு இயேசு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். எனவே, நான் உங்களிடம் அன்புகூர்ந்தது போல. நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகூர வேண்டுமென்பதே எனது கட்டளை (யோவா. 13:34) என்று உறுதியாக அவரால் கூற முடிந்தது.

இயேசு எல்லாரையும் அன்பு செய்து, பாவிகளைத் தேடிச் செல்லும் நல்ல ஆயனாக திகழ்கிறார். பாவிகளை மன்னிக்க தந்தையிடம் மன்றாடுகிறார். யூதாஸ் தன்னைக் காட்டிக் கொடுத்தபோதும், அவனின் தவறுகளைச் சுட்டிக்காட்டினாரே தவிர, எதிரியாகப் பாவிக்கவில்லை . தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு இல்லை (யோவா. 15:13) என்று கூறிய இயேசு அதைத் தன் வாழ்வாக நிகழ்த்தினார். நம் பாவங்களுக்காக உயிரையே கொடுத்தார். இயேசுவின் அன்பு மன்னிக்கும் அன்பு. தியாகத்தின் அன்பு. நிபந்தனையற்ற நிலையான அன்பு. ஆம்! அன்பர் இயேசுவின் அன்பைக் கடைப்பிடித்து அவரின் சாட்சிகளாகத் திகழ்வோம்.



 

நம்பிக்கையால் எல்லாம் முடியும்..


ஒரு சந்தேகம்! ஒரு சிலர் வாழ்க்கையிலே புதுமை நடக்கின்றது. ஒரு சிலர் வாழ்க்கையிலே புதுமை நடப்பதில்லை! இது ஏன்? இந்தக் கேள்விக்கு இன்றைய நற்செய்தியில் இயேசு பதில் கூறுகின்றார்.

ஒரு சிலர் ஆழமாக நம்புகின்றார்கள்! ஆகவே அவர்கள் வாழ்க்கையில் புதுமை நடக்கின்றது (நற்செய்தி).

நம்பிக்கை என்றால் என்ன? இதைச் சுட்டிக்காட்ட இதோ ஓர் அருமையான உதாரணம்.

ஜப்பான் நாடு. அங்கே ஒரு பெரிய இலட்சாதிபதி. அவரிடம் ஒரு தொழிற்சாலை! அந்தத் தொழிற்சாலைக்குத் தேவையான ஓர் இராட்ச்ச இயந்திரத்தை அமெரிக்காவிலிருந்து வரவழைத்திருந்தார். அந்த இயந்திரத்தில் திடீரென்று கோளாறு.

இயந்திரம் வேலை செய்யவில்லை. உடனே அந்த ஜப்பான் நாட்டு இலட்சாதிபதி அமெரிக்காவிற்குச் செய்தி அனுப்பினார். தகவலைப் பெற்ற உடனே இயந்திரத்தை விற்ற கம்பெனி ரிப்பேர் செய்ய ஆள் அனுப்பிவைத்தது. அனுப்பப்பட்ட ஆள் சில மணி நேரங்களில் ஜப்பானை அடைந்தார்.

அவர் ஓர் இளைஞர். வயது இருபதுதான் இருக்கும்; அவர் கையில் ஒரு பெட்டி இருந்தது.

ஜப்பான் நாட்டு இலட்சாதிபதி அந்த இளைஞரைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். கைதேர்ந்த என்ஜீனியர் ஒருவரை அனுப்பாமல் சின்னப்பையன் ஒருவரை அனுப்பி வைத்திருக்கின்றார்களே என்று எண்ணி, அமெரிக்காவிலிருந்த, இயந்திரத்தை விற்ற கம்பெனியோடு தொடர்பு கொண்டு பேசினார். தொலைபேசியில் பதில் வந்தது. கம்பெனிக்காரர்கள் ஜப்பான் நாட்டு இலட்சாதிபதியிடம், அங்கே வந்திருப்பவர் பார்ப்பதற்கு சிறியவராக, இளைஞராக இருக்கலாம். ஆனால் அவரைவிட உங்கள் இயந்திரத்தைச் சரிபார்க்க வேறு ஒரு சிறந்த ஆள் இந்த அமெரிக்காவில் கிடையாது என்றனர்.

ஜப்பான் நாட்டுக்காரர், ஏன் இப்படிச் சொல்லுகின்றீர்கள்? என்றார். அந்தக் கேள்விக்கு பதில் வந்தது. இதுதான் பதில்: அங்கு வந்திருப்பவர்தான் அந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர். அவரால் எப்படிப்பட்ட குறைகளையும் கண்டுபிடித்து தீர்த்துவைக்கமுடியும், நம்புங்கள்.

வந்த செய்தியை ஜப்பான் நாட்டுக்காரர் நம்பினார். ஓரிரு நிமிடங்களில் இயந்திரம் ஓடத்துவங்கியது.
நாம் ஒவ்வொருவரும் ஜப்பான் நாட்டுக்கார இலட்சாதிபதி போன்றவர்கள். அதைப் பழுது பார்க்க வந்த அந்த இளைஞரைப் போன்றவர் கடவுள்.

நம்மை உருவாக்கிய கடவுளால் (முதல் வாசகம்) நமக்குள் ஏற்படும் எந்தக் கோளாறையும் சரிசெய்ய முடியும் என்று சொல்லி அவரிடம் நம்மையே நாம் அர்ப்பணிப்பதற்குப் பெயர்தான் நம்பிக்கை.

நாம் வணக்கம் செலுத்தும் மரியாவைப் போன்று, என்னைப் படைத்த கடவுளால் ஆகாதது எதுவுமில்லை என்று நம்பி, இதோ ஆண்டவருடைய அடிமை; உமது வார்த்தையின்படியே ஆகட்டும் என்று சொல்வதற்குப் பெயர்தான் நம்பிக்கை.

எங்கே நம்பிக்கை இருக்கின்றதோ அங்கே உடல் நலம் இருக்கும். எங்கே நம்பிக்கை இருக்கின்றதோ அங்கே உள்ள அமைதி இருக்கும்.

கிறிஸ்து பிறப்புக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் இஸ்ரயேல் நாட்டிலே எலியா என்னும் இறைவாக்கினர் காலத்திலே ஊரெல்லாம், நாடெல்லாம் பஞ்சம் (1 அர 17:8-16).

அப்பொழுது சாரிபாத்து என்னும் நகரிலிருந்த ஒரு கைம்பெண்ணின் வீட்டில் மட்டும் பஞ்சமில்லை ; எடுக்க எடுக்க எண்ணெயும் குறையவில்லை; அள்ள அள்ள மாவும் மறையவில்லை. காரணம் அந்தக் கைம்பெண் நம்பினார். இஸ்ரயேல் நாட்டிலே எத்தனையோ தொழுநோயாளிகள் இருந்தார்கள் (2 அர 5:1-14). ஆனால் நாமான் என்பவர் மட்டும்தான் குணமானார். காரணம் அந்த நாமான் மட்டும்தான் நம்பினார்.

எங்கே நம்பிக்கை இருக்கின்றதோ அங்கே புதுமை நடக்கும்.
பழைய ஏற்பாட்டில், செங்கடல் இரண்டாகப் பிரிந்தது நம்பிக்கையினால்!
வானத்திலிருந்து மன்னா பொழிந்தது நம்பிக்கையினால்! கற்பாறை இரண்டாகப் பிளந்து தண்ணீர் வந்தது நம்பிக்கையினால்!

புதிய ஏற்பாட்டில்,
நோயாளிகள் உடல் நலம் பெற்றது நம்பிக்கையினால்!
பாவிகள் பாவமன்னிப்பு பெற்றது நம்பிக்கையினால் இறந்தவர்கள் உயிர்பெற்று எழுந்தது நம்பிக்கையினால்!
இன்று நம்மைச் சுற்றி எத்தனையோ துன்பங்களும் துயரங்களும்.

இதோ ஒரு புதுக்கவிதை!
தாயின் பாசத்தைப் பற்றி
மகன் மேடையிலே அருமையாக
சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தான். அதை டி.வி.யில் கேட்டுக்கொண்டிருந்தார் தாய்.
எங்கிருந்து? முதியோர் இல்லத்திலிருந்து!

இதோ இன்னொரு புதுக்கவிதை!
வடக்கே கங்கை!
தெற்கே காவிரி!
இரண்டு நதிகளுக்குமிடையே ஒரு தொட்டி!
குப்பைத் தொட்டி!
அதற்குள்ளே தாகத்தால் ஒரு குழந்தை
அழுதுகொண்டிருந்தது!

ஒரு பக்கம் பாசத்திற்காக ஏங்கும் பெற்றோர்கள் !
மறு பக்கம் பாதுகாப்பிற்காக ஏங்கும் குழந்தைகள்!

இன்று ஆபத்து நேரத்திலே உதவி செய்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

அன்றொரு நாள் தனது தம்பி ஆபேலைக் கொன்றவனைப் பார்த்து, உன் தம்பி ஆபேல் எங்கே? என்று கேட்டார் கடவுள் (தொநூ 4:9).

காயினோ ஒரு கேள்விக்கு, மற்றொரு கேள்வியால் பதில் சொன்னான். என் தம்பிக்கு நானென்ன காவலாளியா? என்றான். அந்தக் கேள்வி இன்று மூலைமுடுக்கெல்லாம் எதிரொலிக்கின்றது.

இன்று இதுவே நமது மன்றாட்டாக இருக்கட்டும் :
இறைவா!
இன்று எனக்குப்
பொன்னும் வேண்டாம், பொருளும் வேண்டாம்.
மண்ணும் வேண்டாம், மணியும் வேண்டாம்.
பட்டமும் வேண்டாம், பரிசும் வேண்டாம்.
அழகும் வேண்டாம், அந்தஸ்தும் வேண்டாம்.
நீர் விரும்பும், நம்பிக்கையை எனக்குத் தாரும்.
காரணம், நம்பிக்கை
கடலை விட ஆழமானது,
இமயத்தை விட உயரமானது,
நைலை விட நீளமானது.
தாஜை விட அழகானது.
நம்பிக்கையால்
முள்ளை மலராக்க முடியும்,
தேளை தேனாக்க முடியும்,
கல்லை கனியாக்க முடியும்.
முடியும், முடியும், முடியும், நம்பிக்கையால் எல்லாம் முடியும்.

மேலும் அறிவோம்:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு (குறள் : 788)..

பொருள் : இடுப்பில் உடுத்தியுள்ள ஆடையைப் பறிகொடுப்பவனின் கை விரைந்து சென்று ஆடையைச் சரி செய்யப் பெரிதும் உதவும் ; அதுபோன்று, நண்பனுக்குத் துன்பம் வரும் போது துடித்தெழுந்து சென்று அத்துன்பத்தைப் போக்குவது உயரிய நட்பாகும்!



ஒரு கிராமத்துக்கு அருகாமையில் ஒரு மாபெரும் கூடாரத்தில் 'சர்க்கஸ்' நடந்து கொண்டிருந்தது. அக்கூடாரம் திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. 'சர்க்கஸில்' கோமாளியாக நடித்த குள்ளன் ஒருவன் கிராமத்துக்கு ஓடிப்போய் மக்களிடம், "சர்க்கஸ் கூடாரம் தீப்பிடித்து எரிகிறது. தீயை அணைக்க உதவுங்கள்" என்று கேட்டான். ஆனால் ஊர் மக்கள் அவனை நம்ப மறுத்தனர். ஏனெனில் அவன் ஒரு கோமாளி, ஒரு குள்ளன். அதன் விளைவு என்ன? சர்க்கஸ் கூடாரம் மட்டுமல்ல, ஊர் முழுவதும் தீயினால் நாசமடைந்தது. ஒருவருடைய உருவத்தைக் கண்டு அவரைக் குறைவாக எடைபோடக் கூடாது. ஏனெனில் ஒரு மாபெரும் தேருக்கு ஒரு சிறிய அச்சாணி போன்று அவர் சமுதாயத் தேர் இயங்குவதற்கு அவசியமானவராக இருக்கலாம்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சு ஆணி அன்னார் உடைத்து  (குறள் 667)

நாசரேத்து ஊர் மக்கள் கிறிஸ்துவின் போதனையைக் கேட்டு வியப்படைந்தாலும் அவரை நம்ப மறுத்தனர். ஏனெனில் அவர் தச்சரான யோசேப்பின் மகன்; அவர் எந்தப் பள்ளியிலும் பயிலாதவர், பட்டம் பெறாதவர். அவரது எளிய பின்னணியை வைத்து அவரை மட்டமாக எடை போட்டனர். அவரை மனித முறையில் பார்த்தனர். முகக்கண் கொண்டு பார்த்தனர்; அகக்கண் கொண்டு பார்க்கவில்லை. திருத்தூதர் பவுல் கூறுகிறார்: “இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி (ஊனக் கண் கொண்டு) மதிப்பிடுவதில்லை. முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படி தான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும் போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார் , பழையன கழிந்து புதியன புகுந்தன் அன்றோ " (2 கொரி 5:16-17).

திருப்பணியாளர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம்? மனித முறையிலா? அல்லது விசுவாசத்தின் அடிப்படையிலா? ஓர் இளைஞனிடம், "நீ ஏன் பூசைக்குப் போவதில்லை?" என்று கேட்டதற்கு அவன் கூறியது: "அவன் பூசைக்கு எவன் போவான்?" அந்த இளைஞன் தனது பங்குப் பணியாளரை மனித முறையில் மதிப்பிட்டான். அவரைக் கிறிஸ்துவின் பதில்- ஆளாகப் பார்க்கவில்லை , திருப்பணியாளர்களைக் கிறிஸ்துவின் பதில் - ஆளாகப் பார்த்த புனித அகுஸ்தினார் பின்வருமாறு கூறியுள்ளார்: “பேதுரு திருமுழுக்கு அளிக்கட்டும், கிறிஸ்துதான் திருமுழுக்கு அளிக்கிறார். யூதாசு திருமுழுக்கு அளிக்கட்டும், கிறிஸ்து தான் திருமுழுக்கு அளிக்கிறார்”, எவ்வாறு கடவுள் கிறிஸ்துவில் செயல்பட்டாரோ அவ்வாறே கிறிஸ்து திருப்பணியாளர்களிடம் செயல்படுகிறார். திருப்பணியாளர்கள் கடவுளின் இணையற்றச் செல்வத்தைக் கொண்டுள்ள மண்பாண்டங்கள். அவர்கள் தகுதி அவர்களிடமிருந்து வரவில்லை . அது கடவுளிடமிருந்தே வருகிறது (2 கொரி 4:7). கடவுள் தகுதியுள்ளவர்களை அழைப்பதில்லை ; மாறாகத் தாம் அழைத்தவர்களைத் தமது திருப்பணிக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகிறார். நாம் கருவியைப் பார்க்காமல் கருவியைப் பயன்படுத்தும் கடவுளைப் பார்க்கவேண்டும். நற்கருணை அருள் அடையாளம் விசுவாசத்தின் மறைபொருள் என்றால், குருத்துவமும் விசுவாசத்தின் மறைபொருள் என்பதில் ஐயமில்லை.

பொதுப்பணியில், குறிப்பாக நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் கட்டாயம் எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். ஆனால் அவர்கள் கிறிஸ்துவின் மன உறுதியைக் கொண்டிருக்கவேண்டும். நாசரேத்து ஊர் மக்கள் கிறிஸ்துவை ஊருக்கு வெளியே துரத்தி, மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட முயற்சித்தனர். ஆனால் அவர் அச்சமின்றி அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார் (லூக் 4:28-30). இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இறைவாக்கினர் எரேமியாவுக்கு அளிக்கும் வாக்குறுதி நமக்குத் தெம்பு, ஊட்ட வேண்டும்: "அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள், எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன் (எரே 1:19),

கடவுளுக்காக உண்மையாகவே உழைப்பவர்களைக் கடவுள் ஒருபோதும் கைவிட மாட்டார். "கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்" (உரோ 8:31), எனவே, "போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும், எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்" என்ற மனத் துணிச்சலுடன் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நாம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கவேண்டும். வாழ்க்கையில் எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் நாம் நம் கண்முன் நிறுத்த வேண்டியது: "இதுவும் கடந்து போகும்". பிரச்சனைகள் நிரந்தரமானவை அல்ல. 10-ஆம் வகுப்பு ஆசிரியர் மாணவர்களிடம்: "ஒவ்வொரு மாணவனும் குறைந்தது இரண்டு மொழிகள் கற்றிருக்க வேண்டும்” என்றார். அதற்கு ஒரு மாணவன், "சார். எனக்கு இரண்டு மொழிகள் தெரியும், ஒன்று கனிமொழி, மற்றொன்று தேன்மொழி" என்றான்.

ஆனால், இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் அடிகளார், "எல்லார்க்கும் ஒரே ஒரு மொழி மட்டும் கட்டாயம் தெரிய வேண்டும்; அதுதான் அன்பு மொழி" என்கிறார். கடப்பாறைக்குக் கூட மசியாத பாறை அப்பாறையின் மேல் வளரும் பசுமரத்து வேருக்குப் பிளந்து விடும். "பாறைக்கு (கடற்பாறைக்கு) நெக்குவிடாப் பாறை பசுமரத்து வேருக்கு நெக்குவிடும்". அவ்வாறே, அதிகாரத்தால்
சாதிக்க முடியாததை அன்பினால் சாதிக்க முடியும், "அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும் அனைத்திலும் உறுதியாய் இருக்கும்” (1 கொரி 13:7). "அன்பு அனைத்தையும் மேற்கொள்ளும்: எனவே நாம் அன்புக்கு அடிபணிவோமாக" என்கிறார் இத்தாலியக் கவிஞர் தாந்தே. அகிலத்தில் சக்தி வாய்ந்த ஆயுதம் அணுகுண்டல்ல, மாறாக அன்பேயாகும்! கிறிஸ்து மண்ணுலகில் அன்புத் தீயை மூட்ட வந்தார். அது எப்போதும் பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாகும் (லூக் 12:49).


இயேசு எல்லாருக்குமான இறைவன்


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளை மறைமாவட்டம். நிகழ்வு

கிராசியன் வாஸ் எழுதிய “Little things about Great People” என்ற நூலில் இடம்பெறும் ஒரு நிகழ்வு. ஒருநாள் சுவாமி விவேகானந்தர் ஒரு கிராமத்துச் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பசியெடுத்தது. யாராவது உணவு தருவார்களா? என்று அவர் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, பெரியவர் ஒருவர் தன்னுடைய வீட்டுக்கு முன்பாக இருந்த திண்ணையில் உணவு உண்டுகொண்டிருந்தார். அவரிடத்தில் சென்று உணவு கேட்போம் என்று விவேகானந்தர் அவரருகே சென்றார்.

“ஐயா! எனக்கு மிகவும் பசிக்கிறது... சாப்பிடுவதற்கு கொஞ்சம் உணவு தந்தால், நான் என்னுடைய பசியாற்றிக் கொள்வேன்” என்றார் விவேகானந்தர். அவரை மேலும் கீழுமாகப் பார்த்த அந்த பெரியவர், “உங்களுக்கு உணவுக்கு தருவதில் எனக்கொன்றும் ஆட்சோபனை இல்லை... ஆனால் நான் ஒரு துப்புரவுப் பணியாளன்; தீண்டத்தகாதவன். அப்படியிருக்கும்போது, நான் கொடுக்கிற உணவை நீங்கள் உண்பீர்களா? என்றுதான் நான் யோசிக்கிறேன்” என்றார்.

பெரியவர் இவ்வாறு சொன்னதுதான் தாம்தான், ‘ஒரு தீண்டத்தகாதவரிடமிருந்து உணவை வாங்கி உண்பதா?’ என்று விவேகானந்தர் வேகமாக நடக்கத் தொடங்கினார். சிறிதுதூரம் சென்றிருப்பார். அப்போது அவருடைய குருநாதர் சொன்ன ‘எல்லாரிடத்திலும் கடவுள் இருக்கிறார், அதனால் யாரும் யாருக்கும் கீழானவர்கள் அல்ல’ என்ற வார்த்தைகள் அவருக்கு நினைவுக்கு வந்தன. உடனே விவேகானந்தர் தன்னுடைய தவற்றை உணர்ந்து, அந்த பெரியவரை நோக்கி ஓடினார்.

“ஐயா! என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்... என்னை உயர்வாகவும் உங்களைத் தீண்டத்தகாதவராகவும் நினைத்து, நீங்கள் கொடுத்த உணவை சாப்பிடாமல் உதாசீனப்படுத்திவிட்டேன்... இப்போது என்னுள் இருக்கின்ற அதே இறைவன்தான் உங்களுக்குள்ளும் இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்துகொண்டேன்” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து உணவை வாங்கி உண்ணத் தொடங்கினார்.

எல்லாரும் இறைவனின் மக்கள்; மக்கள் எல்லாருக்குள்ளும் இறைவன் இருக்கின்றார். அப்படி இருக்கும்போது பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பது நல்லதல்ல என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.

பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிற்றுகிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளில், நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், இயேசு யூதருக்கு மட்டுமல்ல, அவர் எல்லாருக்குமான இறைவன் என்றொரு செய்தியைத் தருகின்றது.

1. இயேசுவின் அமுதமொழியைக் கேட்டு வியப்புற்ற மக்கள்

இயேசு, தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்து, அங்குள்ள தொழுகைக்கூடத்தில், இறைவாக்கினர் எசாயாவின் சுருளேட்டை எடுத்து வாசிக்கத் தொடங்குகிறார். மக்களோ அவருடைய வாயிலிருந்து வந்த அமுத மொழிகளைக் கேட்டு வியக்கின்றார்.

இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது, இயேசு பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் போலன்றி அதிகாரத்தோடு போதித்தார் என்பதாகும். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும், திருச்சட்டம் ‘இப்படிச் சொல்கிறது’ என்று போதித்து வந்தார்கள். இயேசுவோ அப்படியில்லாமல், “நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அதிகாரத்தோடு போதித்தார். ஒருவர் அதிகாரத்தோடு போதிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான ஒரு காரியமில்லை. உள்ளத்தில் உண்மையும் செயலில் நேர்மையும் இருக்கின்ற ஒருவரால் மட்டுமே அப்படிப் போதிக்க முடியும். இயேசுவிடம் உண்மையும் நேர்மையும் குடிகொண்டிருந்தன. அதனால்தான் அவரால் அதிகாரத்தோடு போதிக்க முடிந்தது.

2. இயேசுவைப் புறக்கணித்த மக்கள்

இயேசு, எசாயாவின் சுருளேட்டை வாசித்தபோதும் அதற்கு விளக்கம் தந்த தும் வியப்புற்ற மக்கள், அவர் இறைவாக்கினர்கள் எலியாவைப் போன்று, எலிசாவைப் போன்று புறவினத்து மக்களுக்குப் பணிசெய்யப் போகிறேன் என்று சொன்னதும், தொழுகைக்கூடத்தில் இருந்த மக்கள் அவர்மீது சிற்றம் கொள்ளத் தொடங்குகிறார்கள்.

இஸ்ரயேலில் மூன்றரை ஆண்டுகள் வானம் பொய்த்து, கடுமையான பஞ்சம் ஏற்பட்ட சமயத்தில், கைம்பெண்கள் பலர் இருந்தார்கள். ஆனால் இறைவாக்கினர் எலியா சீதோனைச் சார்ந்த சாரிபாத்துக் கைம்பெண்ணிடம் அனுப்பப்பட்டார். (1அர 17:8-16) இறைவாக்கினர் எலிசாவோ இஸ்ரயேல் குடிகளில் தொழுநோயாளர்கள் பலர் இருந்தபோதும், புறவினத்தாராகிய சிரியாவைச் சார்ந்த நாமானின் தொழுநோயையே நீக்கினார் (2 அர 5: 1-15). இப்படி இரண்டு இறைவாக்கினர்களும் இனம் கடந்து, குறுகிய எல்லைகளைக் கடந்து, எல்லா மக்களுக்கும் பணிசெய்ததைப் போன்று, தானும் பணிசெய்யப் போகிறேன் என்று சொன்னதால், மக்கள் அவர்மீது சீற்றம் கொள்ளத் தொடங்குகிறார்கள்.

புறவினத்தாரை நாயினும் கீழென நினைத்த யூதர்கள் மத்தியில், அவர்களைப் பற்றிப் பேசினாலோ அல்லது அவர்களது மத்தியில்தான் தான் பணிசெய்யப் போகிறேன் என்று சொல்வதனாலோ, தனக்கு மிகப்பெரிய பிரச்சினை வரும் என்று இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இருந்தாலும் இயேசு தன் இலக்கு என்ன, இலக்கு மக்கள் யார், யார் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லி, தான் யூதர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்குமான இறைவன் என்பதை எடுத்துச் சொல்கிறார்.

இயேசு யூதர்கள் மட்டுமல்ல, எல்லாருக்குமான இறைவன் என்பதை, அவர் இறப்பின்போது, எருசலேம் திருக்கோவிலின் திரைச் சீலை இரண்டாகக் கிழிந்தததும் விண்ணேற்றம் அடையும்போது தன் சீடர்களிடம் சொன்ன, “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” (மத் 28:19) என்ற வார்த்தைகளும் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன.

3. இயேசுவைக் கொலை செய்யவும் துணிந்த மக்கள்

இயேசு, தான் யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுடைய மீட்புக்காகவும் வந்திருக்கிறேன் என்று சொன்னதும், தொழுகைக்கூடத்தில் இருந்த யூதர்கள், அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் இருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட முயல்கிறார்கள். இயேசுவின் அமுதமொழியைக் கேட்டு வியந்த மக்களா, சிறிதுநேரத்தில் அவரை மலை உச்சிலிருந்து கீழே தள்ளிவிடப் பார்க்கிறார்கள்! என நினைக்கும்போது நமக்கு வியப்பாக இருக்கிறது... அந்தளவுக்கு அவர்கள் இனவெறியில் ஊறிப்போனவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கின்றபோதுதான் வேதனையாக இருக்கின்றது.

பலநேரங்களில் நாமும்கூட யூதர்களைப் போன்று கடவுள் ‘எங்கள் இனத்திற்கு அல்லது குலத்திற்குத்தான் சொந்தம்’ என்று உரிமை கொண்டாடுவது நம்முடைய குறுகிய மனப்பான்மையைக் காட்டுவதாக இருக்கின்றது. ஆகவே, கடவுளை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக் கொள்ளாமல், அவர் எல்லாருக்கும் பொதுவானவர் என்ற பரந்த பார்வையோடு பார்ப்பது நல்லது.

சிந்தனை

“எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவர்; அவர் எல்லாருக்குள்ளும் இருப்பவர்” என்பார் தூய பவுல் (எபே 4:6). ஆம், எல்லாருக்கும் தந்தை ஒருவராக இருக்கின்ற போது... அவர் எல்லாருக்குள்ளும் இருக்கும்போது இங்கே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டிற்கு வழியே இல்லை.

ஆகவே, இயேசுவை எல்லாருக்குமான இறைவன் என்பதையும் உணர்ந்து, நாம் அனைவரும் அவருடைய சகோதர, சகோதரிகள் என்பதை உணர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



எதிராளியாய்

நான் பள்ளிப்பருவத்தில் 11ஆம் வகுப்பில் ஆங்கில வகுப்பில் கற்ற பல பாடங்களில் ஒன்று ஜெஸி ஓவன்ஸ் பற்றியது. ஒரு அடிமையின் பேரனான இவர் 1936ஆம் ஆண்டு நாசி ஜெர்மனி நகர் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்கள் வென்றவர். இவர் தன் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை இப்படிப் பதிவு செய்கிறார்: '1928ஆம் ஆண்டு ஒஹையோவில் நான் அன்றாடம் உடற்பயிற்சி செய்யச் செல்வேன். தொடக்கத்தில் எனக்கு மிகவும் சோம்பலாக இருந்தது. சோம்பலைக் காரணம் காட்டி நான் சில நாள்கள் பயிற்சியைத் தள்ளிப் போட்டேன். பின் தட்ப வெப்பநிலையைக் காரணம் காட்டினேன். பின் என் உடல் வலியைக் காரணம் காட்டினேன். ஆனால், பறிற்சிக்கு என்னைத் தினமும் அழைத்த என் கோச் எனக்கு ஒரு எதிராளியாகத் தோன்றினார். அவரை இதற்காகவே வெறுத்த நான் ஒரு கட்டத்தில் அவர் சொல்வதுபோல செய்ய ஆரம்பித்தேன். ஒலிம்பிக் போட்டிகள் அறிவிக்கப்பட்டன. என் உடற்பயிற்சி மேல் நான் நம்பிக்கை கொண்டிருநதாலும், கொஞ்சம் கொஞ்சமாக நாசிச 'ஆரிய மேட்டிமை' மேலாண்மை என் மனத்தில் பயத்தை உண்டாக்கியது. அந்த நாள்களில் என் உடல்நலமும் குன்றியது. ஆனால், 'என்னை மற்றவர்கள் ஒதுக்கி வைக்கும்' மனப்பான்மைக்கு நான் என்றும் எதிரானவன் என்று பதிவு செய்ய ஓடினேன்.'

இன்று அவருடைய சாதனைகள் முறியடிக்கப்பட்டாலும், அவர் அன்று தனக்கெனப் பதித்த முத்திரை அவருக்கானதே.

மனித வாழ்வின் தனி மனித வெற்றியும், குழும வெற்றியும் அடையும் வழி எதிராளியாக மாறுவதே. எதிராளியாக மாறுவது என்பது எதிர்த்து நிற்பது அல்லது எதிர்நீச்சல் போடுவது. எதிராளி என்பவர் பகையாளி அல்ல. பகையாளி என்பது ஒரு முடிந்த நிலை. ஆனால், எதிராளி என்பது ஒரு தொடர்நிலை.

'இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்' என்ற என் காலை எண்ணத்திற்கு எதிராளியாக நிற்கும்போதுதான், நான் சுறுசுறுப்பாக வேலைகள் செய்ய முடிகிறது. 'கொஞ்சம் இனிப்பு சாப்பிடு. அப்புறம் மாத்திரை போட்டுக் கொள்ளலாம்' என்ற என் எண்ணத்திற்கு எதிராளியாக நிற்கும்போதுதான், நான் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க முடிகிறது. ஆங்கிலேயேர்க்கு எதிராளியாய் நம் முன்னோர்கள் நின்றதால்தான் இன்று நாம் விடுதலைக் காற்றை சுவாசிக்க முடிகிறது. இப்படியாக கறுப்பின மக்கள் எழுச்சி, அடக்குமுறைகளுக்கு எதிரான எழுச்சி என சமூக நிகழ்வுகளிலும், இராஜாராம் மோகன்ராய், மார்ட்டின் லூத்தர் போன்றவர்கள் எடுத்த நிலைப்பாடுகளிலும், 'எதிராளியாய்' இருப்பதன் அவசியம் புரிகிறது. குடும்பத்தில் நடக்கும் இழப்புக்களையும் தாண்டிக் குடும்பத்தை எழுப்பும் அப்பாக்கள், அம்மாக்கள், வறுமையிலும், இயலாமையிலும் சாதிக்கும் குழந்தைகள் என எல்லாருமே 'எதிராளியாய்' இருப்பதால்தான் சாதிக்க இயல்பவர்கள் ஆகிறார்கள்.

மொத்தமாகச் சொன்னால், 'ஓடுகின்ற தண்ணீரின் ஓட்டத்திற்குத் தன்னையே கையளிக்கின்ற படகு கரை ஒதுங்குகிறது. ஓட்டத்திற்கு எதிராளியாய் நிற்கிற படகு மறுகரை சேர்கிறது.'

இன்றைய இறைவாக்கு வழிபாடு, 'எரேமியா,' 'பவுல்,' 'இயேசு' என்ற மூன்று எதிராளிகளின் நிலைப்பாட்டைப் பதிவு செய்து, நம்மையும் எதிராளிகளாய் வாழ அழைக்கிறது. எப்படி?

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 1:4-5, 17-19) யாவே இறைவன் எரேமியாவை அழைக்கின்றார். எருசலேமின் அழிவையும், பாபிலோனியாவுக்கு மக்கள் நாடுகடத்தப்பட்டதையும் நேருக்கு நேர் பார்த்த இறைவாக்கினரும் எரேமியாவே. ஆக. இவருடைய வாழ்வு ஒரு முள்படுக்கையாகவே இருந்தது. 'நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்' என்னும் வாக்கியத்தில் எரேமியாவின் தேர்ந்துகொள்ளப்பட்ட நிலையையும், ஒரு குறிப்பிட்ட பணிக்கென 'ஒதுக்கிவைக்கப்பட்ட' நிலையையும் பார்க்கின்றோம். 'திருநிலைப்படுத்துதல்' என்பது பொறுப்புமிக்க வார்த்தை. ஏனெனில், திருநிலைப்படுத்தப்படும் பொருளும், நபரும் சிறப்பான பணி ஒன்றிற்காக ஒதுக்கிவைக்கப்படுகிறார். அவர் அச்சிறப்பான பணியிலிருந்து கொஞ்சம் விலகிவிடவோ, அதே நேரம் தானே மற்ற பணிகளைத் தேடிச் செல்லவோ கூடாது. எரேமியாவின் அழைப்பு இறைவாக்குரைக்கவும், அதிலும் யூதாவின் தலைவர்களுக்கும், அரசர்களுக்கும், குருக்களுக்கும் இறைவாக்குரைக்கவுமாக இருக்கிறது. சாதாரண நபர்களுக்கு ஒன்றைச் சொல்லி நம்பவைத்துவிடலாம். ஆனால், மேற்கண்ட மூவருக்கும் சொல்வது மிகப்பெரிய சவால். அதுவும் நல்ல செய்தி என்றால் பரவாயில்லை. அவர்களின் பிரமாணிக்கமின்மையையும், உடன்படிக்கைக்கு எதிராக அவர்கள் செய்த தவறுகளையும், அவர்களின் சிலைவழிபாட்டையும் சுட்டிக்காட்டுவது எரேமியாவுக்குப் பெரிய சவாலாக இருந்தது. மேலும், அவர்கள் ஆட்சி செய்த 'எருசலேமின் அழிவையும்' அவரே முன்னுரைக்கவும் வேண்டியிருந்தது. இவரின் இந்த இறைவாக்கு அவரைப் பொதுவான எதிரியாக்கிவிடுகிறது. அவர் ஏளனத்திற்கும், கேலிப் பேச்சிற்கும், வன்முறைக்கும், சிறைத்தண்டனைக்கும் ஆளாகின்றார். ஆனாலும், தன் இறைவாக்குப் பணியில் அவர் பின்வாங்கவே இல்லை. ஒரு கட்டத்தில், 'ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர், நான் ஏமாந்து போனேன்' (20:7) என்று விரக்தி அடைந்தாலும், 'சுற்றிலும் ஒரே திகில்! அவன் மேல் பழிசுமத்துவோம்' (20:10) என்று மக்களின் கிளர்ச்சி பயத்தைத் தந்தாலும், 'உம் சொற்களை என்னால் அடக்கி வைக்க முடியாது' (20:9) என்றும் 'ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கிறார்' (20:11) என்று நம்பிக்கை கொள்ளவும் செய்கிறார் எரேமியா. இவ்வாறாக, தவறான சமய எண்ணங்களிலும், தங்களின் மேட்டிமைப் போக்கிலும் மூழ்கி இருந்த தலைவர்களுக்கும், மக்களுக்கும் 'எதிராளியாய்' நிற்கிறார் எரேமியா. இவரின் இந்தத் துணிவிற்குக் காரணம், 'உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்' (1:19) என்ற ஆண்டவரின் வாக்குறுதியே.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:31-13:13) பவுல் 'பல்வேறு கொடைகள்' பற்றிய தன் போதனையை நிறைவு செய்கிறார். கொரிந்து நகர திருஅவை உறுப்பினர்கள் தாங்கள் பெற்றிருந்த அருள்கொடைகள் பற்றியும், செயல்பாடுகள் பற்றியும், தொண்டுகள் பற்றியும் அதிகம் பெருமை பாராட்டிக்கொண்டும், தாங்கள் பெற்றிருந்த ஞானம் நிறைந்த சொல்வளம், அறிவு சார்ந்து சொல்வளம், நம்பிக்கை, பிணிதீர்க்கும் கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்குரைக்கும் ஆற்றல், பரவசப் பேச்சு, அதை விளக்கும் ஆற்றல் போன்ற கொடைகளை முன்னிறுத்தி, ஒருவர் மற்றவரை ஒப்பீடு செய்துகொண்டு, பொறாமைப்பட்டு, தங்களுக்குள் கட்சி மனப்பான்மை கொண்டு பிளவுபட்டிருந்தனர். கடந்த வார வாசகத்தில் 'ஒரே உடல் பல உறுப்புகள்' என்று அவர்களை அறியாமையிலிருந்து அறிவுக்கு அழைத்த பவுல், இன்னும் ஒரு படி போய், 'எல்லாவற்றையும் விட சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்' (12:31) என்று சொல்லி அன்பை முன்வைக்கிறார். அவர்கள் தாங்கள் பெருமை கொண்டிருந்த - பரவசப் பேச்சு, இறைவாக்குரைக்கும் ஆற்றல், மறைபொருள்கள் விளக்கும் ஆற்றல், மலைகளை இடம் பெயரச் செய்யும் நம்பிக்கை, தன்னையே எரிக்கும் அளவிற்கு தற்கையளிப்பு - அனைத்தும் அன்பை ஊற்றாகக் கொண்டிருக்கவில்லை என்றால் அவற்றால் ஒரு பயனும் இல்லை என்கிறார். ஏனெனில், அன்பு இல்லாத இடத்தில் இவை யாவும் தனி மனித பெருமைக்காகவும், புகழுக்காகவும், பண ஈட்டிற்காகவும் மட்டுமே பயன்படும்.

கிரேக்க மொழியில் அன்பு என்பதற்கு நான்கு வார்த்தைகள் உள்ளன: (அ) அகாபே (மேன்மையான அன்பு), (ஆ) ஈரோஸ் (உடல் சார்ந்த அன்பு, காமம்), (இ) ஃபிலியா (நட்பு அல்லது நலம்விரும்புதல்), (ஈ) ஸ்டோர்கே (பெற்றோர்-பிள்ளை பாசம்). பவுல் பயன்படுத்தும் வார்த்தை, 'அகாபே.' மூன்று நிலைகளில் அன்பு முக்கியத்துவம் பெறுகின்றது: (அ) மேன்மையான அருட்கொடையை விட அன்பு சிறந்தது. (ஆ) முதன்மையான திறன்களைவிடச் சிறந்தது.(இ) கதாநாயக வெற்றிச் செயல்களைவிடச் சிறந்தது. தொடர்ந்து அன்பு இப்படி இருக்கும், அப்படி இருக்காது என நேர்முக மற்றும் எதிர்மறை வார்த்தைகளில் பட்டியலிடுகின்றார் பவுல். மேலும், அன்பின் குணத்தை பெரிதுபடுத்தியும் காட்டுகின்றார்: 'எல்லாவற்றையும்' பொறுத்துக்கொள்ளும். 'எல்லாவற்றையும்' நம்பும். 'எல்லாவற்றையும்' எதிர்நோக்கி இருக்கும். 'எல்லாவற்றிலும்' மனஉறுதியாய் இருக்கும். மேலும், இந்த அன்பு அழியாதது என்கிறார் பவுல். ஏனெனில், இவ்வன்பு கடவுளில் ஊற்றெடுக்கிறது. கடவுள் அழிவில்லாதவர். எது எப்படியோ அன்பு இருந்தால் சரி! எல் கிரேக்கோ என்பவர் 'நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு' என்ற மூன்று மதிப்பீடுகளையும், மூன்று பெண்களாக உருவகித்து (மோதெனா ட்ரிப்டிக்) ஒரு படம் வரைந்துள்ளார். இதில் அன்பு என்ற பெண்ணின் காலைப் பிடித்துக்கொண்டு நிறைய குழந்தைகள் இருக்கும். ஆம், அன்பின் குழந்தைகள் கணக்கிலடங்காதவை! அன்பு என்றும் மேலனாது.

பவுல் இப்படி கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதிய அன்பின் பாடல் கேட்பதற்கு நமக்கு இனிமையாக இருக்கிறது. ஆனால், பவுலின் திருச்சபைக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஏனெனில், அவர்கள் கொண்டிருந்த அனைத்துப் பிரச்சினைகளையும் - பொறாமை, தற்புகழ்ச்சி, இறுமாப்பு, இழிவான ஊதியம், தன்னலம், எரிச்சல், தீவினை, பொய் - சுட்டிக்காட்டு, இச்செயல்கள் அன்பிற்கு இல்லை என்று சொல்வதன் வழியாக, 'உங்களிடத்தில் அன்பு இல்லை' என மறைமுகமாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுகின்றார் பவுல். பவுலின் இந்த மடலுக்காக கொரிந்து நகர மக்கள் அவரை நிராகரித்தார்கள் என்பதை நாம் அவரின் இரண்டாம் மடலில் வாசிக்கிறோம். இவ்வாறாக, பவுல், அன்பு பற்றிய போதனையால், அன்பை மற்ற எல்லாவற்றையும் விட உயர்த்தியதால், கொரிந்து நகரத் திருச்சபையின் 'எதிராளியாக' மாறுகின்றார். பவுலின் துணிவிற்குக் காரணம், இவர் கடவுளின் உடனிருப்பை அனுபவித்த விதமே. ஆகையால்தான், 'இப்போது நான் அறைகுறையாய் அறிகிறேன். அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்' (13:12) என உறுதியாகக் கூறுகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 4:21-30), இயேசுவின் நாசரேத்துப் போதனை அதைக் கேட்டவர்களின் நடுவில் ஏற்படுத்திய எதிர்வினையைப் பதிவு செய்கிறது. எசாயா இறைவாக்கினரின் பகுதியை வாசித்தவர், 'இது ஆண்டவரின் அருள்வாக்கு!' என்று இயேசு சொல்லியிருந்தால், எல்லாரும், 'ஆகா, ஓகோ, நல்லா வாசிக்கிற தம்பி!' என்று உச்சி முகர்ந்து கொண்டாடியிருப்பார்கள். ஆனால், இயேசு அப்படிச் சொல்லவில்லையே. 'நீங்கள் கேட்ட இறைவாக்கு இன்று நீங்கள் கேட்டதில் நிறைவேறியது!' என்கிறார். 'என்னது மெசியா பற்றிய எசாயா இறைவாக்கு நிறைவேறுகிறதா?' 'யார்ட்ட?' 'இவர்ட்டயா?' 'தம்பி, ஆர் யு ஓகே?' 'என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறீங்களா?' 'இவர் யோசேப்போட பையன்தான!' என ஆளாளுக்கு பேச ஆரம்பிக்கின்றனர். 'இவர் யோசேப்பின் மகன் அல்லவா?' (லூக்கா 1:22) என்ற அவர்களின் வார்த்தைகள் இயேசு தூய ஆவியின் ஆற்றலால் பிறந்தார் என்பதைக் குத்திக் காட்டி, அவரின் பிறப்பைக் கேலி செய்வதாகக் கூட இருந்திருக்கலாம். சில நொடிகளில் எல்லாம் மாறிப்போனது. இயேசுவின் போதனையும், பணியும் புறவினத்தாரையும் உள்ளடக்கும் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எலியா மற்றும் எலிசா போல தன்னுடைய இறைவாக்குப் பணியும் எல்லாருக்கும் உரியது என்பதில் தெளிவாக இருக்கிறார் இயேசு. அவர் தங்களின் எதிர்பார்ப்பிற்கு முரணாக இருந்ததால் அவரைப் புறக்கணிக்கின்றனர் மக்கள். அவரைப் பாராட்டிய சில நொடிகளில் அவர்மேல் சீற்றம் (கோபத்தின் கொடூர வடிவம்) கொண்டு அவரை ஊருக்கு வெளியே துரத்தி மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிக் கொன்றுவிட முனைகின்றனர். ஆக,

இயேசு தன் போதனையின் வழியாக தன் சொந்த ஊர் மக்களுக்கு 'எதிராளியாக' மாறினார். தன் இலக்கோடு சமரசம் செய்துகொள்ளாத இயேசு தன்னலம் மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட அந்த மக்களிடமிருந்து விலகித் தன் வழியே செல்கின்றார்.

இவ்வாறாக, எரேமியா தன் இனத்து அரசர்களுக்கும், மக்களுக்கும் தன் இறைவாக்குப் பணியால் எதிராளியாகவும், பவுல் தன் கொரிந்து நகர திருஅவைக்குத் தன் 'அன்பு' பற்றிய போதனையால் எதிராளியாகவும், இயேசு அனைவரையும் உள்ளடக்கிய இறைவார்த்தைப் பணியால் தன் சொந்த ஊர் மக்களுக்கு எதிராளியாகவும் மாறுகின்றனர். ஆனால், இவர்களை எதிர்த்தவர்கள் நடுவில் இவர்கள் பின்வாங்கவில்லை. இன்றைய பதிலுரைப் பாடல் (திபா 71) சொல்வதுபோல, 'என் தலைவரே, நீரே என் நம்பிக்கை. இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்' என்று துணிந்து முன்செல்கின்றனர்.

இன்று நம் தனிப்பட்ட வாழ்விலும், சமூக, மற்றும் அரசியல் வாழ்விலும் எதிராளியாக இருக்க இன்று நாம் அழைக்கப்படுகிறோம். எதிராளியாக மாறுவதற்கு மூன்று குணங்கள் அவசியம் என்பதையும் இன்றைய வாசகங்கள் குறித்துக்காட்டுகின்றன:

(அ) 'என்னால் முடியும்' என்ற தன்னம்பிக்கை. தான் சிறுவன் என்ற நிலையில் இருந்தாலும் எரேமியாவும், தான் அறிமுகமில்லாதவன் என்ற நிலையில் இருந்தாலும் பவுல், தான் சொந்த ஊர்க்காரன் என்றாலும் இயேசுவும், தங்களால் முடியும் எனத் தங்கள் மேல் முழு நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். ஆக, என்னிடம் உள்ள தேவையற்ற ஒரு பழக்கத்திற்கோ அல்லது குணத்திற்கோ நான் எதிராளியாக மாற வேண்டும் என்றால், 'என்னால் முடியும்' என்ற மனவுறுதியும் அதற்கான தன்னம்பிக்கையும் அவசியம்.

(ஆ) 'என் கடவுள் என்னோடு' - தன்னம்பிக்கை நம்மை விடப் பெரிய ஒன்றோடு கட்ட வேண்டும். அது விதியாகவோ, கடவுளாகவோ, கொள்கையாகவோ இருக்கலாம். மனிதர்கள்மேலும், இடங்களின் மேலும் கட்டவே கூடாது. ஏனெனில் அவர்களும், அவைகளும் மாறக்கூடியவை. ஆனால், மாறாத ஒன்றில் கட்டிக்கொள்ள வேண்டும் நம் நம்பிக்கையை. எரேமியா தன் ஆண்டவரின் மேல், பவுல் இயேசுவின் மேல், இயேசு தன் தந்தையின் மேல் நம்பிக்கையைக் கட்டியிருந்தனர்.

(இ) 'இலக்குத் தெளிவு' - நான் எதற்காக இங்கே இருக்கிறேன்? நான் எதை நோக்கிச் செல்கின்றேன்? என்ற கேள்விகள்தாம் இலக்கைத் தெளிவுபடுத்துகின்றன. எரேமியா, பவுல், இயேசு மூவரும் தங்கள் இலக்கை முன்வைத்து நடந்தனர். எதிர்ப்புகளைக் கண்டு அவர்கள் இலக்குகளோடு சமரசம் செய்துகொள்ளவில்லை. திரும்பச் செல்லவில்லை. எரேமியா தன் கோவில் திரும்பவில்லை. பவுல் தன் தர்சு நகரம் திரும்பவில்லை. இயேசுவும் நாசரேத்தூர் திரும்பவில்லை.

வாழ்வில் 'எதிராளி' நிலை என்பது நம் மாற்றத்திற்கான வளர்ச்சிநிலை. மருத்துவர் நோயாளிக்கு எதிராளியாய் நின்றால்தான் நோயைக் குணமாக்க முடியும். எடுக்கின்ற மாத்திரை நோய்க் கிருமிக்கு எதிராளியாக இருந்தால்தான் நோய் குணமாகும். நம்மில் போரடிக்கொண்டிருக்கும் ஒன்றிற்கு ஒன்று முரணான இயல்புகள் எதிராளியாக இருந்தால்தான் நாம் வளர முடியும்.

'பாம்பு பாம்பாக இல்லை என்றால் சிறுவர்கள் விறகோடு சேர்த்துக் கட்டிவிடுவார்கள்' என்பது ஆப்பிரிக்க பழமொழி. எதிராளியாக இல்லாதவரின் நிலையும் அப்படியே!


Tuesday 22 January 2019

ஆண்டின் பொதுக் காலம் 3-ஆம் ஞாயிறு

 ஆண்டின் பொதுக் காலம் 3-ஆம் ஞாயிறு
 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-

நெகேமியா 8:2-4 அ, 5-6, 8-10
1 கொரிந்தியர் 12:12-30
லூக்கா 1:1-4, 4:14-21
 





அன்று ஓய்வு நாள் . செபக்கூடத்திற்குச் சென்ற இயேசு வாசிக்க எழுந்தார். அவர் கையில் எசாயா எழுதிய இறைவாக்குகளின் ஏட்டுச் சுருள் தவழ்ந்தது. அதை விரித்தார், படித்தார். இயேசுவின் விளக்கம் தேன் என்று சொல்லும் அளவுக்கு இதமாக இருந்தது. மக்களுக்கு மறு வாழ்வு கொடுக்கத் தான் பாடுபடப்போவதாக இயேசு உரைத்தபோது இருந்தவர்கள் எல்லையில்லா பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.

இயேசு தான் போதித்ததைச் சாதித்துக் காட்டிய ஒரு சாதனை நாயகன். நேர்மையாளரை வெள்ளி காசுக்கும், வறியவரை இரு காலணிக்கும் விற்கிறார்கள் என்று ஆமோஸ் (ஆமோ. 2:6) எழுதி வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட வறியவர்க்கே நற்செய்தி போதிக்க வந்ததாக இயேசு கூறுகிறார்.

ஆம்! அன்று பாவச் சிறையிலிருந்த மகதலா மரியா (லூக். 7:36-40), நல்ல கள்ளன் (லூக். 23:43) போன்றவர்களுக்கு சுதந்திரம் அளித்தார் இயேசு. நேர்மையாளரைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் (லூக். 15:7) என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். ஏழை எளியவருக்கு உதவாத எந்த இதயமும் இயேசுவுக்கு ஏற்புடையது அல்ல என்பது இங்கே நமக்குப் புலனாகிறது. இன்றைய முதல் வாசகமும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறது.

நம்மைச் சுற்றியுள்ளவர்களை நாம் வெறுத்தால் அது நம்மையே வெறுத்ததற்கு ஒப்பாகும். காரணம் மனித சமுதாயம் என்பது ஓர் உடலைப் போன்றது. அந்தச் சமுதாயத்தில் உள்ள அனைவரும் உடலின் உறுப்புகள் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் கோடிட்டுக் காட்டுகிறது. கிறிஸ்தவ வாழ்வில் பொறாமை, அநீதி, அக்கிரமம், வஞ்சகம், சூழ்ச்சி, சுயநலம் என்ற சொற்களுக்கே இடமில்லை .


கடையிலே இரண்டு பெண்கள் பூ வாங்கினார்கள். ஒருத்தி வாங்கிய பூவை தலையிலே சூடி, பொழுது விடிந்ததும் குப்பையிலே தூக்கி எறிந்தாள். அடுத்தவளோ வாங்கிய பூவை தெய்வத்திற்கு வைத்தாள். பொழுது விடிந்ததும் பக்தர்கள் தெய்வத்திற்கு படைக்கப்பட்ட பூவை குருவிடமிருந்து பெற்றுச் சென்று பெட்டியிலே பத்திரமாக பூட்டி வைத்தார்கள். ஒன்றுதான். ஆனால் ஒரு முழம் குப்பையிலே . மறு முழம் பெட்டியிலே. வாழ்க்கை முறைக்கு ஏற்ப அந்த வாழ்க்கையின் அர்த்தம் தாழ்ந்தோ, உயர்ந்தோ நிற்கும்.

ஏழை, எளியவர்களை அன்பு செய்து, ஆண்டவராம் நம் இயேசு வாழ்ந்த அர்த்தமுள்ள வாழ்க்கை என்றும் விடிவெள்ளியாக நம் வாழ்க்கையில் சுடர் விடுவதாக.




வருத்தத்தைப் போக்கி கிறிஸ்து வளமையோடு நம்மை வாழவைப்பார்


இன்றைய பாரதத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 125 கோடி. இவர்களில் பல கோடி மக்கள் ஒருவேளை உணவோடு உறங்கச் செல்கின்றார்கள்! இன்று பல வீடுகளில் கூரை வழியாக வறுமை எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கின்றது.

பாவம் தலைவிரித்தாடுகின்றது. 30.12.2006 தேதியிட்ட தமிழ் நாளேடு ஒன்றில் வந்த செய்தி இது. சென்னையில் நடந்த கொடூரம் இது! செல்ஃபோன் வாங்கவேண்டுமென்பதற்காக ஒருவனுடைய மூன்று நண்பர்கள் அவனைக் கடத்திச்சென்று அவனைக் குத்திக் கொலை செய்திருக்கின்றார்கள். மூன்று பேரும் 18 வயதிற்கு உட்பட்டவர்கள்.

சர்க்கரை வியாதியின் சாம்ராஜ்யமாக மாறிக்கொண்டு வருகின்றது இந்தியா!

மரணம்! இன்று நம் நடுவே எத்தனை கார் விபத்துக்கள், இரயில் விபத்துக்கள், விமான விபத்துக்கள்! நான் பயணம் செய்யும்போது தவறாது செய்யும் மன்றாட்டு: கடவுளே என்னையும் இந்த வாகனத்தை ஓட்டும் ட்ரைவரையும் காப்பாற்றும் என்பதாகும்! பயணம் செய்து திரும்பி வரும்போது அப்பாடா பிழைத்தோம் என பெருமூச்சு விட வேண்டியிருக்கின்றது.

நம்மைச் சுற்றி ஒரு புறம் வறுமை! மறு புறம் நோய்! வேறொரு புறம் மரணம்! நமது வாழ்க்கையில் எத்தனைக் கீறல்கள்! இறுக்கத்திலிருந்தும், தயக்கத்திலிருந்தும் விடுபட்டு நாம்
சுதந்தரப் பறவைகளாக சிறகடித்துப் பறக்க முடியாதா? ஏன் முடியாது? முடியும் என்கின்றது இன்றைய நற்செய்தி ! இன்று இயேசு நற்செய்தியிலே தோன்றி, ஆண்டவருடைய ஆவி என்மேலே. அவர் என்னை அருள்பொழிவு செய்துள்ளார். எளியோர்க்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர்க்கு விடுதலை வாழ்வு வழங்கவும், அடிமைகளுக்கு உரிமை வாழ்வு கொடுக்கவும், கண்ணொளி இழந்தவர்க்குப் பார்வை வழங்கவும், அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும் தாம் அனுப்பப்பட்டதாகக் கூறுகின்றார்.

இவர் போதித்ததைச் சாதித்துக் காட்டியவர்!

யோவா 2:1-11: கானாவூர் கல்யாணம்! அங்கே பஞ்சம்! வறுமை ! திருமணத்திற்குத் தேவையான திராட்சை இரசம் வேண்டும்.

இயேசு என்னும் மீட்பர் அங்கே தோன்றி, புதுமை செய்து கல்யாண வீட்டின் இறுக்கத்தையும் புழுக்கத்தையும் போக்கினார்.

மத் 9:27-31: அவர்கள் இருவரும் பார்வை இழந்தவர்கள்! ஆகவே பாதையோரத்தில் தள்ளப்பட்டார்கள். மீட்பர் இயேசு அவர்களைச் சந்திக்க, அங்கே புதுமை ஒன்று நடந்தது. அவர்களது இறுக்கமும் புழுக்கமும் நீங்கின.

லூக் 7:36-50: அவள் ஒரு பாவத் தொடர்கதை! எங்கோ , எப்படியோ, மன நிம்மதியைத் தொலைத்துவிட்டாள். இயேசு என்னும் மீட்பரை அவள் சந்தித்தாள்! அவள் வாழ்க்கையிலே வசந்தம் பிறந்தது. அவளிடமிருந்த இறுக்கமும் புழுக்கமும் மறைந்தன.

யோவா 11:1- 44 : இலாசரை அடக்கம் செய்துவிட்டார்கள்! இலாசர் அடக்கம் செய்யப்பட்டபோது அவரது சகோதரிகளின் மகிழ்ச்சியும் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இயேசு என்னும் மீட்பர் தோன்றினார்! இலாசர் உயிர்பெற்று எழுந்தார்! அந்த சகோதரிகளின் மனத்திலிருந்த இறுக்கமும் நடையிலிருந்த தயக்கமும் மறைந்தன.


அன்று அப்படிப் புதுமை செய்த இயேசு இன்றும் நம் நடுவிலே நற்கருணை உருவிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே!

லூக் 11 : 9: கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள் என்றவரிடம்,

மத் 21: 22: நீங்கள் நம்பிக்கையோடு கேட்பதையெல்லாம் பெற்றுக்கொள்வீர்கள் என்றவரிடம்,

திவெ 3:20: இதோ நான் கதவருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கின்றேன். நீங்கள் கதவைத் திறந்தால் உள்ளே வந்து உணவருந்துவேன் என்றவரிடம்

நாம் நமக்கு வேண்டியதைக் கேட்க வேண்டும்; அவரது ஆசியை, உதவியை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

டி.வி.யில் கோடீஸ்வரன், குரோர்பதி நிகழ்ச்சியைப் பார்த்திருக்கின்றோம். அதில் ஒரு காலக்கட்டத்தில் ஹெல்ப் லைன்ஐ அதாவது வெளியே இருந்து நமக்குக் கிடைக்கக்கூடிய உதவியைப் பயன்படுத்திக்கொள்கின்றீர்களா? என்று கேட்பார்கள்.

நாம் அன்றாட வாழ்க்கையிலே 3 ஹெல்ப் லைன்களைத்தான் பயன்படுத்துகின்றோம். அதாவது மூன்று உதவிகளைத்தான் நாம் பயன்படுத்திக்கொள்கின்றோம்.

ஒன்று இயற்கையின் வளங்களை, பொன்னையும், மண்ணையும், மணியையும் பயன்படுத்தி நமது வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளப்பார்க்கின்றோம்.

இரண்டாவதாக நமது திறமைகளைப் பயன்படுத்தி நமது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளப்பார்க்கின்றோம்.


மூன்றாவதாக நமது சொந்தங்களையும் பந்தங்களையும் நண்பர்களையும் அன்பர்களையும் பயன்படுத்தி நமது வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ள விரும்புகின்றோம்.

நான்காவது ஹெல்ப் லைன் ஒன்று உண்டு! அது ஹியூமன் ஹெல்ப் லைன் அல்ல ! அது டிவைன் ஹெல்ப் லைன் ! அது ஒரு தெய்வீக உதவி! அது மீட்பராம் இயேசுவிடமிருந்து வரும் அற்புத உதவி, ஆனந்த உதவி, அதிசய உதவி. அந்த உதவியைப் பெற நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே!

ஆண்டவரை உதவிக்கு அழைத்தால் போதும்!

வறுமையும் நோயும் பாவமும் மரண பயமும் சூழ்ந்து நின்று நம்மை அச்சுறுத்தும்போது கூனிக்குறுகிப்போய் கலக்கத்திற்கும் கவலைக்கும் கண்ணீருக்கும் இடம் கொடுக்காமல் எல்லா ஆற்றலும் மிக்க இயேசு ஆண்டவர் பக்கம் நமது நம்பிக்கை நிறைந்த கண்களைத் திருப்புவோம். நாம் கிறிஸ்துவின் உடல் (இரண்டாம் வாசகம்). ஆகவே அவர் நமது உடலிலுள்ள எந்த உறுப்பையும் துன்புற விடமாட்டார். அவர் நமது அழுகையை அழித்து, வருத்தத்தைப் போக்கி, நம்மை வளமுடன் வாழவைப்பார் (முதல் வாசகம்).

மேலும் அறிவோம்:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் (கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).
பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர்
மனக்கவலை மாறாது.



எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் வகுப்பு ஆசிரியர் அவர்களுடைய முக்கியமான பிரச்சினை என்னவென்று கேட்டதற்கு அவர்கள்: "எங்கள் பெற்றோர்கள்" என்றனர். பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற விரும்புகின்றனர். கல்லூரி மாணவர்களின் தாரக மந்திரம்: "கல்லூரிக்குக் 'கட்' அடிப்போம்; தேர்விலே 'பிட்' அடிப்போம்; பெண்களைச் 'சைட்' அடிப்போம்", இது கல்லூரி மாணவர்களின் கனாக்காணும் காலங்கள்! ஒரு கணவர் தம் மனைவியிடம், "நீ என்னை உன் நாயைப் போல் நடத்து; நாயோடு கொஞ்சி விளையாடுவதுபோல் என்னுடனும் கொஞ்சி விளையாடு: நாயுக்கு வயிறு நிறைய சாப்பாடு போடுவது போல எனக்கும் வயிறு நிறைய சாப்பாடு போடு, எல்லாவற்றிற்கும் மேலாக, நாயை இரவிலே அவிழ்த்து விடுவதுபோல, என்னையும் அவிழ்த்துவிடு: தேடாதே" என்றார். இது ஒரு கணவர் காணும் விடுதலை வாழ்வு!

இன்றைய உலகிலே எல்லாருமே எவ்விதக் கட்டுப்பாடு மின்றிச் சுதந்திரப் பறவையாகப் பறக்க விரும்புகின்றனர். ஆனால், விடுதலைப் பெருமூச்சு விடுவதற்குப் பதிலாக ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர். விடியலைத் தேடுபவர்கள் அமாவாசை இருட்டில் அகப்பட்டு அவதிப்படுகின்றனர். எங்கே விடுதலை? என்று வினவுகின்றனர், இவ்வினாவுக்கு விடையளிக்கிறது இன்றைய அருள்வாக்கு வழிபாடு. கடவுள் இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, அவர்களுடன் உடன்படிக்கை செய்தார். ஆனால் அந்த மக்களோ கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், அவருடைய கட்டளைகளை மீறி, பிற இனத்தெய்வங்களை வழிபட்டனர். அதன் விளைவாகப் பல்வேறு நாடுகளுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். கி.மு. 5ஆம் நூற்றாண்டில் பாபிலோனியாவுக்கு யூதர்கள் அடிமைகளாகச் சென்றனர்.

50 ஆண்டுகள் அடிமை வாழ்வுக்குப் பின்னர், சீருஸ் மன்னர் அவர்களுக்கு விடுதலை அளித்தார். அவர்கள் 61 ருசலேம் திரும்பி, ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பி ஆண்டவரை வழிபட முயற்சி எடுத்தனர், எஸ்ரா என்ற சட்ட வல்லுநர் மக்களுக்குச் சட்ட நூலை வாசித்தபோது அவர்கள் அழுதனர் (முதல் வாசகம்). கடவுளும் அவருடைய அருள் வாக்கு அடங்கிய மறைநூலும் அவர் களுக்கு விடுதலை கொடுத்தது. கடவுளை விட்டு அகலும் எவரும் அடிமைகளாகின்றனர்; கடவுளை நெருங்கும் எவரும் விடுதலை பெறுகின்றனர். கடவுளுக்கு வெளியே தேடும் விடுதலை வெறும் பகற்கனவே! இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து நாசரேத்து தொழுகைக் கூடத்தில் இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து தம்மைக் குறித்து எழுதப்பட்ட பகுதியை (எசா 61:1-2) வாசித்து, மக்களிடம் கூறியது: "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" (லூக் 4:21). மறைநூலின் மையம் கிறிஸ்து. மறைநூலில் எழுதப்பட்ட எல்லா இறைவாக்குகளும் கிறிஸ்துவில் நிறைவடைகின்றன, மறைநூல் கிறிஸ்துவுக்குச் சாட்சியம் அளிக்கிறது (யோவா 5:39). முற்காலத்தில் இறைவாக்கினர் வாயிலாக முன்னோரிடம் பேசிய கடவுள் இறுதிக் காலத்தில் கிறிஸ்து வழியாகப் பேசியுள்ளார் (எபி 1:1).

கிறிஸ்து மக்களுக்கு வழங்கிய செய்தி விடுதலைச் செய்தி. எளியவர்களுக்கு நற்செய்தி சொல்லவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமை வாழ்வு வழங்கவும் அவர் இவ்வுலகிற்கு வந்தார், கிறிஸ்து கொண்டு வந்த விடுதலை வெறும் புறவிடுதலை மட்டுமல்ல, மாறாக அக விடுதலை, ஆன்மீக விடுதலை, அவர் யூதர்களிடம் கூறியது: "பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை. மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால்தான் நீங்கள் உண்மையில் விடுதலை பெற்றவராய் இருப்பீர்கள்" (யோவா 8:34-36). கிறிஸ்து தான் உலகின் பாவங்களைப் போக்கும் உண்மை யான செம்மறி (யோவா 1:29), அவர் பலருடைய பாவ மன்னிப்புக்காக இரத்தம் சிந்தினார் (மத் 26:28). நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். 38 ஆண்டுகளாகத் தீராத நோயால் அவதிப்பட்ட ஒருவரைக் குணப்படுத்திய கிறிஸ்து, மீண்டும் அவரைப் பார்த்த போது அவரிடம் கூறியது: "பாரும்! நீர் நலமடைந்துள்ளீர். இதை விடக் கேடான எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப்பாவம் செய்யாதீர்" (யோவா 5:14). ஒரு தீய செயல் மற்றொரு தீய செயலுக்கு வித்திடுவதால், தீக்குப் பயப்படுவதை விடத் தீய செயலுக்குப் பயப்பட வேண்டும்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும் (குறள் 202)

அழிவுக்குச் செல்லும் அகலமான பாதையில் செல்லாது. வாழ்வுக்கு இட்டுச் செல்லும் இடுக்கமான வாயிலின் வழியாகச் செல்ல அழைப்பு விடுக்கிறார் ஆண்டவர் (மத் 7:13-14). பாவங்களில் எல்லாம் கொடிய பாவம் வடிகட்டிய தன்னலம். பிறரைப் பற்றி அலட்டிக் கொள்ளாத நிலை. இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் திருச்சபையை, இறைமக்கள் சமூகத்தை ஓர் உடலுக்கு ஒப்பிடுகிறார். உடலில் ஒர் உறுப்பு துன்புற்றால், உடல் முழுவதும் துன்புறுகிறது. உடலில் ஓர் உறுப்பு இன்புற்றால், முழு உடலும் இன்புறுகிறது (1 கொரி 12:26). அவ்வாறே நாமும் பிறருடைய துன்பத்தை நம்முடைய துன்பமாகவும், பிறருடைய இன்பத்தை நம்முடைய இன்பமாகவும் கருதி. அழுவாரோடு அழுது மகிழ்வாரோடு மகிழ வேண்டும் (உரோ 12:15) நமக்குச் சமுதாய அக்கறை வேண்டும். பிறருடைய துன்பத்தை நம்முடைய துன்பமாகக் கருதாவிட்டால், நம்மிடம் பகுத்தறிவு இருந்தும் அது பயனற்றது.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய்போல் போற்றாக் கடை             (குறள் 315)

ஒரு பெரியவர் ஒரு குடும்பத் தலைவரிடம், “மனிதராகப் பிறந்ததற்கு நாலு பேருக்கு நன்மை செய்ய வேண்டும்" என்றார். அதற்குக் குடும்பத் தலைவர், "நானும் நாலு பேருக்கு நன்மை செய்கிறேன். அவர்கள் எனது மனைவியும் எனது மூன்று பிள்ளைகளும்” என்றார், நமது அன்பு நமது குடும்பம் என்னும் குறுகிய வட்டத்துக்குள் முடங்கிவிடாமல் மற்றவர்களையும் அரவணைக்கும் உலகளாவிய அன்பாக இருக்கவேண்டும். புறநானூற்று ஆசிரியர் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருப்பதற்குக் கூறும் காரணம்: இவ்வுலகில் இன்னும் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழும் மனிதர் ஒரு சிலர் இருப்பதால்,

"உண்டால் அம்ம இவ்வுலகம்... தமக்கென முயலா நோன்தான்,
பிறர்க்கென முயலுநர் உண்மையானே”  (புறம் 182)

பாவத்திலிருந்து குறிப்பாகத் தன்னலத்திலிருந்து விடுதலை அடைந்து, உலகம் தரமுடியாத அமைதியைப் பெற்று மகிழ்வோம்.




துணிவுள்ள இறைவாக்கினர்களாவோம்

 
நிகழ்வு
 
         விவேகானந்தர் அமெரிக்கா சென்றிருந்த தருணம், அங்கிருந்த பல இடங்களுக்குச் சென்று அவர் சொற்பொழிவு ஆற்றிவந்தார். அவ்வாறு அவர் சென்ற இடங்களிலெல்லாம், ‘இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழவேண்டும், அப்படி வாழ்கின்றபோது எதைக் குறித்தும் பயப்படத் தேவையில்லை’ எனப் பேசிவந்தார்.

இதை நுட்பமாகக் கவனித்துவந்த ஒருசில இளைஞர்கள், ‘இந்த மனிதர் செல்லும் இடங்களிலெல்லாம் இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழவேண்டும், துணிவோடு இருக்கவேண்டும் என்று போதித்துக்கொண்டு வருகிறாரே, உண்மையில் இவர் துணிவுள்ள மனிதர்தானா? என்பதை சோதித்துப் பார்ப்போம்’ என்று அதற்கான வேலைகளில் அவர்கள் இறங்கினார்கள்.

ஒருநாள் விவேகானந்தர் ஒரு பெரிய அரங்கில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடிரென்று அந்த அரங்கத்திற்குள் நுழைந்த ஒருசில முகமூடி அணிந்த மர்ம நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார்கள். இப்படியொரு திடீர் தாக்குதலை யாரும் எதிர்பாராததால், அரங்கில் இருந்த எல்லாரும்  அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள். ஒருசில பெண்கள் துப்பாக்கிச் சத்தம் கேட்டு அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார்கள். ஆனால் ஒரே ஒருவர் மட்டும் தான் இருந்த இடத்தை விட்டு நகராமல், அப்படியே இருந்தார். அது வேறுயாருமல்ல, விவேகானந்தர்தான்.

ஏறக்குறைய பத்து நிமிடங்களுக்கு மேல் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் ஒருவழியாக ஓய்ந்தது. அதிர்ஷ்டவசமாக யார்மீதும் குண்டுகள் பாயவில்லை. இதற்குப் பின்பு எல்லாரும் அரங்கத்திற்குள் வந்ததும், விவேகானந்தர் எந்தவொரு பதட்டமோ, பயமோ இல்லாது  தான் விட்ட இடத்திலிருந்து பேசத் தொடங்கினார். எல்லாரும் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தார்கள். அந்நேரத்தில் அங்குவந்த ஒருசிலர் இளைஞர்கள் விவேகானந்தரிடம் சென்று, “சுவாமி! எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். நாங்கள்தான் இந்தத் துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபட்டோம்... நீங்கள் எத்துணைத் துணிவுள்ளவர் என்பதைச் சோதித்துப் பார்க்கவே இவ்வாறு செய்தோம்... துப்பாக்கிச் சத்தம் கேட்டு எல்லாரும் ஓடி ஒழிந்தபோது, நீங்கள் மட்டும், எதற்கும் பயப்படாமல், அப்படியே இருந்தீர்கள் அல்லவா!. உண்மையில் நீங்கள் துணிவுள்ள மகன்தான்” என்று அவரை வெகுவாகப் பாராட்டினார்கள்.

இறைவனைப் பற்றிப் போதிப்பவர்கள், இறைவார்த்தையை எடுத்துரைக்கும் இறையடியார்கள், எதற்கும் அஞ்சாமல் துணிவோடு இருக்கவேண்டும். அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டுதான் இந்த நிகழ்வு.

இயேசு என்னும் பெரிய இறைவாக்கினர்

பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கின்ற நமக்கு இன்றைய இறைவார்த்தை, நாம் ஒவ்வொருவரும் துணிவுள்ள இறைவாக்கினராக வாழவேண்டும் என்றொரு அழைப்பைத் தருகின்றது. நாம் எப்படி இயேசுவைப் போன்று துணிவுள்ள இறைவாக்கினர்களாக வாழலாம் என்று இறைவார்த்தையின் ஒளியில் சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு நாசரேத்தில் உள்ள  தொழுகைக்கூடத்திற்கு சென்று கற்பிக்கின்றார். லூக்கா நற்செய்தியில் இடம்பெறுகின்ற இந்த நிகழ்வு இயேசுவை இறைவாக்கினருக்கெல்லாம் பெரிய இறைவாக்கினராகவும், இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரும் அவர்போன்று எப்படி நடக்கவேண்டும் என்ற சிந்தனையையும் நமக்குத் தருகின்றது.




  1. வழிபாடுகளில் தவறாது கலந்துகொண்ட இயேசு   

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,  

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தமது வழக்கப்படி, ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்றார் என்று வாசிக்கின்றோம் (4:16). அப்படியானால், அவர் வழிபாடுகளில் தவறாது கலந்துகொண்டு, ஆண்டவரோடு கொண்டிருந்த உறவில், அன்பில் நிலைத்திருந்தார் என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த நிகழ்வு மட்டும் கிடையாது. பனிரெண்டு வயது நிரம்பிய ஒவ்வொரு யூதரும் எருசலேமில் ஆண்டுதோறும் நடைபெறும் பாஸ்கா விழாவில் கலந்துகொள்ளவேண்டும். இயேசு அதில் தவறாது கலந்துகொண்டார் என்பதை விவிலியம் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது (லூக் 2:41-42, யோவா 2:13). இயேசுவுக்கு பரிசேயர்கள் பின்பற்றி வந்த சடங்குமுறைகளில் மாற்றுக்கருத்து இருந்தாலும்கூட, அதைக் குறித்து காரசாரமாக அவர்கோடு அவர் விவாதித்தாலும்கூட, வழிபாடுகளில் தவறாது கலந்துகொண்டு இறை மனித உறவில் நிலைத்திருந்தார்.

இன்றைக்கு ஒருசிலர், நான் ஏன் ஆலயத்திற்குச் சென்று ஆண்டவனை வழிபடவேண்டும்? என்று பிதற்றுவதைப் பார்க்க முடிகின்றது. இத்தகையோர் இயேசுவின் வாழ்வை ஆழமாக படித்துப் பார்ப்பது நல்லது. நாம் ஏன் வழிபாடுகளில் கலந்துகொள்ளவேண்டும் என்பதற்கான தெளிவாக பதிலை எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் இன்னும் அழகாக எடுத்துரைப்பார். “சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது; ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக; இறுதிநாள் நெருங்கிவருவதைக் காண்கின்றோம்; எனவே இன்னும் அதிகமாக ஊக்கமூட்டுவோம்” என்று. (எபி 10:25). ஆம், வழிபாடு என்பது இறைவனைத் தொழுவதற்காக மட்டுமல்ல, நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொள்ளவும்தான். இதனை நாம் உணர்ந்து செயல்படுவது நல்லது.

  1. ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை எடுத்துரைத்த இயேசு   

தொழுகைக்கூடத்திற்குச் செல்கின்ற இயேசு, எசாயாவின் சுருளேட்டை எடுத்து வாசிக்கத் தொடங்கிவிட்டு, அதற்கு விளக்கம் கொடுக்கத் தொடங்குகின்றார். வழக்கமாக யூதர்களின் தொழுகைக்கூடத்தில் வழிபாடனது இறைவேண்டலோடு தொடங்கி, இறைவார்த்தை வாசிக்கப்பட்டு, அதற்கு விளக்கம் கொடுக்கப்படும். பின்னர் குருவானவர் (ரபி) இருந்தால் ஆராதனையோடு நிறைவுபெறும் (இச 6:4-9,11:13-21) இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்றபோதும் அப்படித்தான் நடைபெறுகின்றது. இதை ஒட்டி இன்னொரு விஷயம், இயேசு வாசித்த எசாயாவின் சுருளேட்டை வாசிக்கின்றவர்கள், அதற்கு விளக்கம் கொடுக்கின்றபோது மெசியாவைக் குறித்து விளக்கம் கொடுப்பார்கள். ஆனால் இயேசுவோ, ‘நீங்கள் கேட்ட வாக்கு இன்று நிறைவேறிற்று’ என்கின்றார். அதுமட்டுமல்லாமல் ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை எடுத்துரைக்க நான் வந்திருக்கிறேன் என்கின்றார்.


அருள்தரும் ஆண்டு அல்லது ஜூபிலி ஆண்டினைக் குறித்து லேவியர் புத்தகம் 25 அதிகாரம் எடுத்துச் சொல்கின்றது. ஏழு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஐம்பதாம் ஆண்டில் அடிமைகள் விடுவிக்கப்பட்டு, கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யவும், நிலைத்திற்கு ஓய்வு கொடுக்கப்படவும் வேண்டும். இத்தகைய அருள்தரும் ஆண்டினை எடுத்துச் சொல்லும் இயேசு தன்னுடைய பணிவாழ்வில் செய்துகாட்டுகின்றார். பொருளாதார ரீதியில் அல்ல, ஆன்மீக ரீதியில் மக்களுடைய பாவங்களை மன்னித்து, மக்களுக்கு இளைப்பாற்றி வழங்குவதன் வழியாக.


இயேசு கிறிஸ்து, ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிப்பதோடு மட்டுமல்லாமல், இன்னபிற காரியங்களையும் செய்வேன், அதுவும் எலியா, எலிசா இறைவாக்கினர்களைப் போன்று எல்லா மக்களுக்கு செய்வேன் என்று சொன்னதும், தொழுகைக்கூடத்தில் இருந்த யூதர்கள் கொதித்தெழுகிறார்கள்.
 

  1. துணிவுள்ள (பெரிய) இறைவாக்கினர் இயேசு

மெசியா என்பவர் யூதர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைத்துக்கொண்டிருந்த யூதர்கள் மத்தியில், மெசியாவாகிய தான் யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுக்கும் சொந்தம், எல்லாருக்கும் மத்தியிலும் தன்னுடைய பணி இருக்கும் என்று சொல்வதனால் தனக்குப் பெரிய பிரச்சனை வரும் என்று இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் அவர் துணிவோடு தன்னுடைய பணியென்ன, தன்னுடைய பனியின் இலக்கு மக்கள்  யார்? யார்? என்று எடுத்துரைக்கின்றார். இதனால் யூதர்கள் இயேசுவை மலைமீது இருந்து தள்ளிவிட்டு கொல்லமுயல்கின்றார்கள்.

  ஏற்கனவே இயேசுவை தச்சர் மகன் என்று புறக்கணிக்கும் யூதர்கள், அவர் எல்லாருக்கும் மத்தியிலும் பணிசெய்வேன் என்று சொல்வதைக் கேட்டு அவரைக் கொல்லமுயல்கிறார்கள். அதற்காக பயந்துவிட்டு தன்னுடைய கொள்கையிலிருந்து அவர் பின்வாங்கிவிடவில்லை. மாறாக இறுதிவரைக்கும் துணிவுடன் இருந்து ஆண்டவரின் வார்த்தையை எடுத்துரைக்கின்றார். இயேசுவின் வழியில் நடந்து, இறைப்பணியை செய்கின்ற ஒவ்வொருவரும் எதிர்வரும் சவால்களைக் கண்டு பயந்துவிடாமல், துணிவோடு இருந்து இயேசுவுக்கு சான்று பகரவேண்டும் என்பதுதான் அவர் இந்நாளில் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற ஒன்றாக இருக்கின்றது.

  சிந்தனை

 
இறைவாக்கினருக்கு ஏச்சுக்களும் பேச்சுக்களும் இலவசம் என்பதுபோல, இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவருக்கும், அவர் பணிசெய்கின்ற ஒவ்வொருவருக்கும் அவரைப் போன்று ஏச்சுக்களும் பேச்சுக்களும் உண்டு. அதற்காக நாம் கலந்கிவிடாமல், அவர்மீது நம்பிக்கை வைத்து, துணிவோடு இறைவாக்கினர் பணியைச் செய்யவேண்டும். அப்போதுதான் நாம் துணிவுள்ள இறைவாக்கினர்களாக மாறமுடியும்.

  ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், துணிவுள்ள இறைவக்கினர்களாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.





அறியாமையிலிருந்து விடுதலை

இம்முறையும் பரிச்சயமான ஒரு கதையுடன் தொடங்குவோம். ஜென் துறவி கிம்கானிடம் ஒரு இளைஞன் வருகிறான். 'சுவாமி! எனக்கு வாழ்க்கை ரொம்பக்     கஷ்டமாக இருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆபத்து இருப்பது போல இருக்கிறது. யாரும் என்னைக் கண்டுகொள்வதில்லை. யாரைப் பார்த்தாலும் எனக்குப் பயமாக இருக்கிறது' என்று புலம்புகிறான். அப்போது கிம்கான் ஒரு உவமை சொல்கிறார்: 'காட்டு வழியே பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனை ஒரு புலி துரத்துகிறது. எப்படியாவது புலியிடமிருந்து தப்பி ஓடவிட வேண்டும் என நினைத்த அவன் வேகமாக ஓடுகிறான். ஓடும் வழியில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு. பின்னால் புலி. முன்னால் பள்ளத்தாக்கு. இருந்தாலும் பள்ளத்தாக்கில் குதிக்கிறான். குதித்து கீழே போய்க்கொண்டிருக்கும் வழியில் ஒரு மரத்தின் வேரைப் பற்றிக் கொள்கிறான். அப்பாடா! என்று பெருமூச்சு விட்டவாறு கீழே பார்க்கிறான். அங்கே புலி அவனுக்காகக் காத்திருக்கிறது. அண்ணாந்து மேலே பார்க்கிறான். இரண்டு எலிகள் அவன் பற்றியிருந்த வேரைத் தோண்டிக் கொண்டிருக்கின்றன. தன் அருகில் ஒரு ஸ்ட்ராபெரிக் கொடி. அழகான பழங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றைப் பறித்து வாயில் போட்டு 'என்ன சுவையாய் இருக்கின்றது இந்தப்பழம்' என்றான் அவன்.' உடனே ஞானம் பெற்றான் இளைஞன்.

ஜென் கதைகள் பெரும்பாலும் நிறைவு பெறும்போது 'உடனே ஞானம் பெற்றான் சீடன்' என்றே முடிகின்றன. மதம் சார்ந்த போதனைகள் என்றாலும் சரி, மதம் சாராத போதனைகள் என்றாலும் சரி, பெரும்பாலும் இவை அனைத்தும் மனிதர்களை அறியாமையிலிருந்து விடுவிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. அல்லது அறியாமை என்பது ஞானம் அடைவதற்கான தடையாக இருக்கிறது. அல்லது அறியாமை அகலும்போது ஞானம் பிறக்கிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாடு 'அறியாமையிலிருந்து விடுதலை' என்ற மையக்கருத்தைக் கொண்டு சுழல்கிறது.

இன்றைய முதல் வாசகம் (காண். நெகே 8:2-4,5-6,8-10) நெகேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய கி.மு. 450ல் நெகேமியா ஆளுநராக இருந்தபோதுதான் சிதைந்து கிடந்த எருசலேம் நகரையும் ஆலயத்தையும் கட்டி எழுப்புகின்றார். எருசலேம் நகரின் மதில்களைக் கட்டி முடித்த அவர், ஏழைகளின் கடன்களை செல்வந்தர்கள் மன்னிக்க வேண்டும் என்று சமூகப் புரட்சியும், ஆலயத்தின் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தவும் செய்தார். இவரோடு தோள் கொடுத்து நின்றவர் மறைநூல் அறிஞரும் குருவுமான எஸ்ரா. இருவரும் இணைந்து யூதா நாட்டை குழப்பத்திலிருந்தும், சமய கண்டுகொள்ளாத்தன்மையிலிருந்தும், ஏழ்மையிலிருந்தும் காப்பாற்றுகின்றனர்.

இந்தப் பின்புலத்தில் எஸ்ரா செய்த ஒரு முக்கியமான செயலைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று எருசலேம் திரும்பி ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு கடந்தாலும், அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஆன்மீக, அரசியல், பொருளாதார, சமய நிலைத்தன்மையைப் பெற முடியவில்லை. கடவுள் தங்களைத் தண்டித்துவிட்டதாக எண்ணிய பலர் தங்களின் சமயத்தைக் கைவிடவும், தங்களின் சமகாலத்தில் மேலோங்கி நின்ற உலகியல் தத்துவங்களாலும் இழுக்கப்படுவும் செய்தனர். சமய மறுமலர்ச்சி காலத்தின் தேவையாக இருந்தது. எஸ்ரா தொடங்கிய மறுமலர்ச்சி ஒரு சமூக நிகழ்வாகத் தொடங்குகிறது. அனைத்து தண்ணீர் வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் ஒன்றுகூட்டுகிறார் எஸ்ரா. அவர்கள் முன் திருச்சட்டத்தை வாசிக்கின்றார். 'ஒரே ஆளென மக்கள் கூடிவந்தார்கள்' எனப் பதிவு செய்கிறார் ஆசிரியர். அதாவது, இவ்வளவு நாள்கள் தங்களுக்குள் மக்கள் வேறுபட்டுக் கிடந்தாலும், அவர்களின் வெறுமை மற்றும் அடிமைத்தன அனுபவம் எல்லாரையும் ஒன்றுகூட்டி, அவர்களுக்குள் இருந்த வேற்றுமைகளைக் களைகின்றது. 'ஆண்களும், பெண்களும், புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்க சிறுவர்களும்' என அனைவரும் இணைந்து வருகின்றனர். இந்தச் சொல்லாடல் இரண்டு முறை பயன்படுத்தப்படுகிறது. எருசலேம் ஆலயம் ஆண்களை மட்டுமே உள்ளே அனுமதித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் நிறுத்தப்பட்டனர். ஆனால், தோரா என்னும் இறைவார்த்தையை கேட்க எல்லாரும் அழைக்கப்படுகின்றனர். மேலும், தோரா முன் எல்லாரும் சமம் என்னும் நிலை உருவாகிறது.

எஸ்ரா திருச்சட்ட நூலை வாசிக்க, மக்கள் அறியாமையிலிருந்து விடுதலை பெறும் நிகழ்வு மூன்று பகுதிகளாக நடக்கிறது: (அ) 'திருநூலைத் திறந்தபோது எல்லாரும் எழுந்து நின்றார்கள்,' (ஆ) 'எஸ்ராவோடு இணைந்து கடவுளை வணங்கினர்,' (இ) 'வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்துகொண்டனர்.' 'எழுந்து நிற்றல்' மக்களின் தயார்நிலையையும், 'முகங்குப்புற பணிந்து வணங்குதல்' அவர்களின் சரணாகதியையும், 'பொருளைப் புரிந்துகொள்ளுதல்' அவர்கள் பெற்ற தெளிவையும் குறிக்கிறது. திருச்சட்ட நூலின் பொருள் புரிந்த மக்கள் அழுது புலம்பியதாகவும் அவர்களை எஸ்ரா ஆறுதல் படுத்துவதாகவும் பதிவு செய்கிறார் ஆசிரியர்.

இவர்கள் ஏன் அழுதார்கள்? 'பல்வேறு நிலைகளில் தங்கள் ஆண்டவர் தங்களை வழிநடத்தியதை மறந்து போன தங்களின் மறதிக்காக' அழுதார்களா? அல்லது 'இறைவன் இவ்வளவு நாள்கள் தங்களை கைவிட்டதற்காக' அழுதார்களா? அல்லது 'இத்திருச்சட்டத்திற்கும் தங்கள் வாழ்விற்கும் இடையே எவ்வளவு பெரிய விரிசல் இருக்கிறது என்ற குற்ற உணர்வால்' அழுதார்களா? இந்த மூன்று காரணங்களுக்காகவும் அழுதிருக்கலாம். ஆனால், இவர்களின் கண்ணீர் இவர்களின் அறியாமையிலிருந்து விடுதலை பெறச் செய்கிறது. ஆகையால்தான், மக்களின் கண்ணீர்ப் பெருக்கைக் கண்ட எஸ்ரா உடனடியாக, 'இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள். எனவே அழுது புலம்ப வேண்டாம். நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள். எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பி வையுங்கள் ... ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை' என அறிவுறுத்துகிறார்.

எஸ்ராவின் இவ்வார்த்தைகளில், (அ) 'அழ வேண்டாம்' என்ற கட்டளையும், (ஆ) இல்லாதவரோடு பகிருங்கள் என்ற கரிசனையும், (இ) 'ஆண்டவரின் மகிழ்வே உங்களின் வலிமை' என்ற வாக்குறுதியும் இருக்கிறது. 'அழவேண்டாம்' என்ற செய்தியானது இங்கே நான்கு முறை சொல்லப்படுகின்றது. 'ஆண்டவரின் மகிழ்வே' என்னும் சொல்லாடலை, 'ஆண்டவர் தரும் மகிழ்வு' அல்லது 'ஆண்டவர் என்னும் மகிழ்வு' என்று பொருள் கொள்ளலாம். இனி இறைவார்த்தையின் வடிவில் விளங்கும் இறைவனின் மகிழ்ச்சியே இஸ்ரயேல் மக்களின் வலிமையாக இருக்கப்போகிறது.

ஆக, இறைவனைப் பற்றிய அறியாமையில் இருந்த மக்கள் அவரின் இருப்பை திருச்சட்ட நூல் வாசிப்பின் வழியாக உணர்ந்ததால், அவர்களின் அறியாமையிலிருந்து விடுதலை பெறுகின்றனர். இதன் விளைவு, ஆண்டவரின் மகிழ்வைத் தங்களின் வலிமையாக மாற்றிக்கொள்கின்றனர்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:12-30), தங்களுக்குள் யார் பெரியவர்? யார் அதிகக் கொடைகள் பெற்றவர்? தங்களுள் யார் மேன்மையானவர்? என்ற பிளவுபட்டு நின்ற கொரிந்து நகரத் திருச்சபைக்கு, உடல் மற்றும் அதன் இருப்பு-இயக்கத்தை உருவமாக முன்வைத்து அனைத்து உறுப்புகளும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகப் பகுதி மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது: முதல் பிரிவில் (12:12-13), தூய ஆவியார் வழியாக ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற அனைவரும் கிறிஸ்துவின் உடலின் உறுப்பினர் ஆகிறார்கள் என்ற இறையியலை முன்வைக்கின்றார் பவுல். இரண்டாம் பிரிவு (12:14-26) மனித உடல், அதன் உறுப்புக்களின் இருப்பு, இயக்கம், இன்றியமையாமை பற்றி விளக்குகிறது. மூன்றாம் பிரிவில் (12:27-30), 'நீங்கள் கிறிஸ்துவின் உடல். ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்' என்று மறுபடியும் வலியுறுத்தி, திருச்சபையின் பல்வேறு பணிநிலைகளை எடுத்துரைக்கின்றார்.

திருச்சபையின் பணிநிலைகள் எல்லாம் படிநிலைகள் என்ற அறியாமையில் இருந்துகொண்டு ஒருவர் மற்றவரோடு சண்டையிட்டுக்கொண்டிருந்த மக்களை அவர்களின் அறியாமையிலிருந்து விடுதலை செய்து, அவர்களின் தனித்தன்மை மற்றும் ஒருங்கியக்கத்தை நினைவூட்டுகின்றார் பவுல். தங்களுக்குள் நிலவிய ஒருமையை அறியாதவாறு அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டிருக்க, அவர்கள் தங்களின் வேற்றுமைகளை மட்டும் முன்னிறுத்தி ஒருவர் மற்றவரைத் தாழ்த்தவும், காயப்படுத்தவும், அழிக்கவும் முயல்வது தவறு என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

ஆக, 'நான்' என்ற அறியாமையிலிருந்து விடுதலை செய்து, 'நாம்' என்ற அறிவிற்குத் தன் திருச்சபையை அழைத்துச் செல்கிறார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 1:1-4, 4:14-21) இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது: (அ) லூக்காவின் நற்செய்தி முன்னுரை (1:1-4), (ஆ) இயேசுவின் பணித் தொடக்கம் (4:14-21).

நான்கு வாக்கியங்களாக தமிழ் மொழிபெயர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள, நான்கு வசனங்களும் கிரேக்கத்தில் ஒரே வாக்கியமாக இருப்பது லூக்காவின் இலக்கியத்திறனுக்கு சிறந்த சான்று. தன் நற்செய்தியை 'மாண்புமிகு தியோபில் அவர்களே' என தொடங்குவதுபோல, தான் எழுதும் திருத்தூதர் பணிகள் நூலையும் இவ்வாறே தொடங்குகிறார். இந்த 'தியோபில்' ஒரு வரலாற்று நபரா, அல்லது இந்த நூலை வாசிக்கும் அனைவருமா என்பது புரியாத புதிராகவே உள்ளது. 'தியோபில்' என்றால் 'கடவுளால் அன்புசெய்யப்படுபவர்' என்பது பொருள். நற்செய்தியை வாசிக்கும் அனைவருமே கடவுளால் அன்பு செய்யப்படுபவர்தாம். அல்லது கடவுளால் அன்புசெய்யப்படுபவர் மட்டுமே நற்செய்தியை வாசிக்க முடியும். மேலும், லூக்கா தன் நற்செய்தி தான் ஆராய்ச்சி செய்ததன் பயனாக எழுதப்பட்டது எனவும், இதன் நோக்கம், தியோபில் அவர்கள் தான் கேட்டதை உறுதி செய்துகொள்வதற்காகவும் என்று சொல்வதன் வழியாக, 'தெயோபில்' அவர்களின் கிறிஸ்துவைப் பற்றிய 'அறியாமையிலிருந்து அவரை விடுதலை செய்வதற்கும்' என்று மொழிகிறார் லூக்கா.

நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பிரிவை இன்னும் மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) இயேசுவின் கலிலேயப் பணி (14:14-15), (ஆ) இயேசு எசாயா இறைவாக்கினர் வாசகத்தை வாசித்தல் (14:16-20), (இ) இயேசுவின் போதனை (14:21).

மாற்கு 6ல் இயேசு நாசரேத்தில் பணி தொடங்குவதை ஒத்ததாக இருக்கிறது லூக்காவின் இந்த படைப்பு. மாற்கு நற்செய்தியாளருக்கும், லூக்கா நற்செய்தியாளருக்கும் இதில் உள்ள பெரிய வேறுபாடு என்னவென்றால் எசாயாவின் இறைவாக்குப் பகுதியை இயேசு வாசிக்கும் நிகழ்வுதான். 'இயேசு தம் சொந்த ஊரான நாசரேத்துக்கு வந்தார்' என லூக்கா நிகழ்வைத் தொடங்குகிறார். நாசரேத்து இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகளில் முக்கியமான ஒரு ஊர் (காண். 1:26, 2:4, 39, 51). இந்த ஊரில்தான் இயேசு 'வளர்ந்தார்'. இயேசு தொழுகைக்கூடங்களில் கற்பித்தார் என 14:15ல் லூக்கா குறிப்பிட்டாலும், இயேசுவின் தொழுகைக்கூட நிகழ்வு இங்கேதான் தொடங்குகிறது. 'வாசிக்க எழுந்தார். போதிக்கும்போது அமர்ந்தார்' (4:20, 5:3). எழுவதும், அமர்வதும் இங்கே நாம் கவனிக்க வேண்டியவை. இயேசுவின் காலத்தில் தொழுகைக்கூடத்தில் என்ன மாதிரியான செப ஒழுங்கு இருந்திருக்கும் என்பது நமக்கு தெரியவில்லை. ஆனால், வழக்கமான வழிபாட்டில், ஷெமா இஸ்ரயேல், பத்துக்கட்டளைகள் வாசித்தல், 18 ஆசியுரைகள், புனிதநூல் வாசகம், திருப்பாடல்கள்,  வாசக விளக்கம், இறுதி ஆசீர் என்னும் ஏழு கூறுகள் இருக்கும். லூக்கா இவற்றில் 'வாசகம்' மற்றும் 'விளக்கம்' என்னும் இரண்டு கூறுகளை மட்டுமே குறிப்பிடுகின்றார்.

இயேசுவின் காலத்தில் தோரா நூல் எழுத்துவடிவத்தில் முழுமை பெற்று, தொழுகைக் கூடங்களில் வாசிக்கப்பட்டது. இறைவாக்கு நூல்கள் வாசிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லையென்றாலும், எசாயா 61 முக்கியமான பகுதியாக இருந்ததால் அது செபக்கூட வாசகத்தில் இடம் பெற்றது. எசாயா 61ல் தான் 'மெசியா', அதாவது 'அருள்பொழிவு பெற்றவர்' என்ற வார்த்தை வருகிறது. ஒட்டுமொத்த யூத நம்பிக்கையின் அடிப்படையே மெசியாவின் வருகையே. இந்தப் பகுதியை இயேசுவே விரும்பி எடுத்தாரா, அல்லது அது விரித்து அவரிடம் கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. மேலும், செபக்கூடத்தில் உள்ள ஏவலரின் பணி மிகவும் முக்கியமானது. இவர் வெறும் எடுபுடி வேலைக்காக இருப்பவர் என்றாலும், இவருக்கு எழுதப் படிக்க தெரியும். எபிரேயம் தெரியும். இயேசு எபிரேயத்தில் வாசித்துவிட்டு, அரமேயத்தில் விளக்கம் தந்திருப்பார். வழக்கமாக மூன்றுபேர் வாசகங்கள் வாசிப்பர். மற்றவர்கள் என்ன வாசித்தார்கள் என்பதும் நமக்கு சொல்லப்படவில்லை.

லூக்கா 4:18-19, எசாயா 61:1 மற்றும் 58:6ன் கிரேக்க பதிப்பிலிருந்து (எழுபதின்மர் நூல்) எடுக்கப்பட்டுள்ளது. இதை அப்படியே எடுத்து பயன்படுத்தாமல், லூக்கா கொஞ்சம் மாற்றம் செய்கின்றார்: 'ஆண்டவரின் ஆவி என்மேல் உள்ளது. ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.ஏழையருக்கு நற்செய்தி அறிவிக்கவும், ('உள்ளம் உடைந்தோரை குணப்படுத்தவும்' என்னும் வாக்கியத்தை விட்டுவிடுகின்றார்), சிறைப்பட்டோருக்கு விடுதலையை பறைசாற்றவும், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என அறிக்கையிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்யவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.' மேலும், 'கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும்...' என்று தொடருமுன் இயேசு சுருளை சுருட்டிவிடுகிறார். இயேசு வாசித்த இந்த இறைவாக்குப் பகுதியில் மையமாக இருப்பது, 'பார்வையற்றோர் பார்வை பெறுவர்' என்பதுதான். இங்கே வெறும் புறக்கண் பார்வையை மற்றும் இறைவாக்கினர் குறிப்பிடவில்லை. மாறாக, 'ஆண்டவரின் ஆவியையும், ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை அறிவிக்க வந்த அருள்பொழிவு பெற்றவரான' இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளும் அகப்பார்வையைத்தான் குறிக்கிறது. ஆகையால்தான், சற்று நேரத்தில், 'நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று' என்று தன்னில் மறைநூல் வாக்கு நிறைவேறுவதாக அறிக்கையிடுகின்றார் இயேசு.

ஆக, தெயோபில் அவர்கள் லூக்காவின் பதிவின் வழியாகவும், நாசரேத்து மக்கள் இயேசுவின் போதனை வழியாகவும் அறியாமையிலிருந்து விடுதலை பெறுகின்றனர்.

இவ்வாறாக, முதல் வாசகத்தில் எஸ்ராவின் திருச்சட்ட நூல் வாசிப்பு எருசலேம் மக்களுக்கும், இரண்டாம் வாசகத்தில் பவுலின் 'உடல் உருவகம்' கொரிந்து நகர மக்களுக்கும், நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் தொழுகைக்கூடப் போதனை நாசரேத்து மக்களுக்கும் 'அறியாமையிலிருந்து விடுதலை' தருவதாக இருக்கின்றது. இம்மூன்றையும் இணைத்து இன்றைய பதிலுரைப் பாடல், 'ஆண்டவரின் நியமங்கள் சரியானவை. அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை. அவை கண்களை ஒளிர்விக்கின்றன' (திபா 19) என்கிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு விடும் சவால் என்ன?

இன்று பல நேரங்களில் நாம் பெற வேண்டிய புற விடுதலைகள் என்று பொருளாதாரம், அரசியல், சமூகம், சமயம் போன்ற தளங்களை ஆராய்கிறோம். ஆனால், இவையெல்லாம் தொடங்க வேண்டியது 'அக விடுதலையில்தான்.' இன்று என் மனத்தில் இருக்கும் அறியாமை இருள் அழிந்தால்தான் என்னால் அடுத்தவரைச் சரியாகப் பார்க்க முடியும். இதையே இயேசு, 'உண்மை உங்களை விடுதலை செய்யும்' என்கிறார்.

இறைவார்த்தை வாசிப்பின் வழியாகவும், இணைந்த திருச்சபை வழியாகவும் நாம் அறியாமையிலிருந்து விடுதலை பெற முடிகிறது. நாம் பெறுகிற இந்த விடுதலை எப்படி வெளிப்பட வேண்டும்?

அ. ஆண்டவரின் மகிழ்வு நம் வலிiமாக வேண்டும். ஏனெனில், நம் மகிழ்வுகள் குறுகியவை. அவை நம் வல்லமையைக் கரைத்துவிடுபவை. ஆனால், ஆண்டவரில் கொள்ளும் மகிழ்வு நமக்கு வலுவூட்டும்.

ஆ. வேற்றுமை பாரட்டாமல் ஒற்றுமையைக் கொண்டாடுவது. இப்படிக் கொண்டாடும்போது நம்மால் ஒருவர் மற்றவரின் திறன்களை மதிக்க முடிகிறது.

இ. தியோபில் போல ஏக்கமும், நாசரேத்து மக்கள் போல 'இயேசுவின்மேல் கண்களைப் பதிய வைத்தலும்' இருத்தல் வேண்டும்.

இறுதியாக, மகிழ்ச்சி, ஒற்றுமை, நம்பிக்கை - இவை மூன்றும் அறியாமையிலிருந்து விடுதலை பெறுபவர் சுவைக்கும் கனிகள்.







Wednesday 16 January 2019

ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு


எசாயா 62:1-5
1கொரி. 12:4-11
யோவா. 2:1-12

 

சில ஆண்டுகளுக்கு முன்னால் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் அருளால் நடந்த அற்புதம் இது. நான் குறிப்பிடும் அந்த தம்பதியர் பாளையங்கோட்டையிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இளம் தம்பதிகள் திருமணம் முடித்து ஐந்து ஆண்டுகளாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தவர்கள். எத்தனையோ மருத்துவத் துறையை நாடியும் பலன் கிடைக்கவில்லை. பெண்ணோ இந்து மதத்திலிருந்து கத்தோலிக்க திருமறைக்கு திருமணத்தின்போது மனம் மாறியவர். குழந்தை இல்லாத நிலையில் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்ததால்தான் இந்த அவல நிலை என்று நினைத்து பரம்பரை கிறிஸ்துவனாக இருந்த கணவரை வற்புறுத்தி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்று திருநீறு பூசி காணிக்கை செலுத்தியும் வந்தார்கள். ஆனால் பலன் இல்லை. இந்த சூழ்நிலையில் மனம் உடைந்த இந்தத் தம்பதியரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவர்களுக்கு ஆறுதல் கூறி, நீங்கள் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலம் சென்று செபித்து வாருங்கள். அன்னை மரியா, கானாவூர் திருமணத்தின் குறையை நீக்கியது போல, உங்கள் குறை நீங்க தன் மகன் இயேசுவிடம் பரிந்து பேசுவார்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். அங்கே, தினமும் ஈர உடையோடு தவம் செய்தும், அங்கே வைக்கப்பட்டுள்ள குணமானவர்களின் காணிக்கைப் பொருட்களைப் பார்வையிட்டும், செபித்தும் இரண்டு மாதங்கள் தங்கி இருந்தார்கள். என்ன ஆச்சரியம்! குழந்தைப் பாக்கியமே கிடைக்காது என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டும் அந்த இரண்டாவது மாதத்திலே வேளாங்கண்ணியிலே கருவுற்று வீடு திரும்பினார்கள் அந்த சகோதரி. அவரும் ஒரு மருத்துவர்! ஆம்! நான் கண்டதையும், கேட்டதையும் உங்களுக்கு அறிவிக்கிறேன். ஓர் ஆண் மகனைப் பெற்றார்கள். அவருக்கு சார்லஸ் பிரேம்குமார் என்று பெயரிட்டார்கள். அவரும் இப்போது ஒரு டாக்டர்.


ஆம்! இயேசு கானாவூரில் மட்டுமல்ல, இன்றும் அவரது தாயின் சொல்லிற்கிணங்க அற்புதங்கள் செய்து வருகிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இன்று நமக்கு எத்தனையோ வரங்கள் தேவைப்படுகின்றன. ஆண்டவரின் கையில் நாம் அழகிய மணி முடியாகவும், அரச மகுடமாகவும் விளங்க வேண்டும். மணமகனைப்போல, மணப்பெண்ணைப் போல மங்களம் நிறைந்தவளாக (எசாயா 62:1-5) நாம் திகழ வேண்டும் என விரும்புகிறோம். இந்த விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள அழகான வழி, அன்னை மரியாவின் பரிந்து பேசுதலுக்காக நாம் நம்பிக்கையோடு அவளை நோக்கி மன்றாடுவதாகும்.

அம்மா! அன்னை கன்னித் தாயே! இதோ உமது பிள்ளைகளாகிய நாங்கள் உம்மிடம் ஓடி வந்தோம். எங்கள் குறை தீரவும், உமது திருமகனின் புகழை நாங்கள் பாடவும், பரிந்து பேசம்மா என்று செபிப்போம்.



இயேசு நம்மோடு இருக்க, நமக்குக் குறையேது?

இயேசு ஒரு போதும் நமது குறையைப் பார்க்கமாட்டார்; நமது நிறையைத்தான் பார்ப்பார். இன்றைய நற்செய்தியிலே வரும் கதாப்பாத்திரங்களைப் பாருங்கள்.

மாதா - நிறைவுள்ளவர்.

சீடர்கள் - நிறைவுள்ளவர்கள்.

பணியாளர்கள் - நிறைவுள்ளவர்கள்.

பணியாளர்களின் தலைவனுக்குத் தெரியுமே திராட்சை இரசம் எங்கிருந்து வந்ததென்று! தெரிந்திருந்தும் அவன் நன்றி சொல்லவில்லை! அவன் நன்றி சொல்ல மறந்தவன்.

கணவனும் மனைவியும் - அவர்களும் நன்றி சொல்லவில்லை!

விருந்தினர்கள் - அவர்களும் நன்றி சொல்லவில்லை.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு என்பார் திருவள்ளுவர்.

திருமண வீட்டில் 3 பேர் நிறைவுள்ளவர்கள் ! 3 பேர் குறையுள்ளவர்கள்! ஆனால், இயேசு குறையைப் பார்க்காமல், நிறையைப் பார்த்து புதுமை செய்தார்.

இயேசு எப்பொழுதுமே நிறைவைப் பார்ப்பவர், நேர்மறையாகச் சிந்திப்பவர்.

மத் 9:9-13 முடிய உள்ள பகுதி :

எல்லாரும் புனித மத்தேயுவிடம் ஒரு பாவியைப் பார்த்தனர். ஆனால் இயேசுவோ அவருக்குள் ஒரு புனிதரை, ஒரு நற்செய்தியாளரைப் பார்த்தார்.

யோவா 4:1-42 முடிய உள்ள பகுதி :

எல்லாரும் அந்த சமாரியப் பெண்ணுக்குள் ஒரு பாவியைப் பார்த்தனர்! ஆனால் இயேசுவோ அவளுக்குள் ஒரு புனிதையை, இறைத் தூதரைப் பார்த்தார்.

எல்லாரும் சவுலிடம் ஒரு சமய விரோதியைக் கண்டார்கள். ஆனால் இயேசுவோ, அவரிடம் ஒரு திருத்தூதரை, மறைச்சாட்சியைக் கண்டார்.

நாம்தான் அடிக்கடி நமது குறைகளை நினைத்துக் கூனிக் குறுகிப் போகின்றோம். ஆனால் இயேசுவோ, நம்மிடம் உள்ள நல்ல குணங்களைப் பார்த்து நம்மை ஆசிர்வதிக்கக் காத்துக்கொண்டிருக்கின்றார்.

இந்த உண்மை , மன்னிப்பே உருவான , அன்பே உருவான, கருணையே உருவான, பரிவே உருவான, பாசமே உருவான இயேசுவின் பக்கம் நம்மை உந்தித் தள்ளட்டும்.

இயேசு நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார் (முதல் வாசகம்) ; தள்ளிவிடமாட்டார். அவரது மன்னிப்பில் தூய்மை பெற்று, அவரது வரங்களால் நிரப்பப்பட்டு (இரண்டாம் வாசகம்) புத்தாண்டில் நாம் புது வாழ்வைத் தொடங்குவோம்.
மேலும் அறிவோம் :
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் (குறள் : 104).

பொருள் : நன்றி பாராட்டும் பண்புடையவர், பிறர் தமக்குச் சிறிதளவே உதவினாலும் அதனைப் பெருமை பொருந்திய பனையளவாகக் கருதிப் போற்றுவர்.




இரண்டு சிறுவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் மற்றவனிடம், "வீட்டிலே யார் பெரியவங்க? அப்பாவா அல்லது அம்மாவா?" என்று கேட்டான். அதற்கு மற்றவன், "நிச்சயமாக அம்மா தான் பெரியவங்க. ஏனென்றால், எங்கள் அப்பா தனது தொழிற்சாலையிலே 100 பேரை அடக்கி ஆள்கிறார். ஆனால், வீட்டிலே அம்மா எங்க அப்பாவையே அடக்கி ஆளுகிறாங்க" என்றான். இச்சிறுவன் கூறியதைப் போலவே புனித ஜான் மரி வியான்னி பின்வருமாறு கூறியுள்ளார்: "கடவுளை விடச் சக்தி வாய்ந்த ஒருவரை எனக்குத் தெரியும். அவர் தான் செபிக்கத் தெரிந்த மனிதர். கடவுள் உலகையே ஆளுகிறார், ஆனால் செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளையே ஆளுகிறார். கடவுள் 'முடியாது' என்று சொன்ன பிறகும், செபிக்கத் தெரிந்தவர் கடவுளை 'முடியும்' என்று சொல்ல வைக்கிறார்”, புனித வியான்னியின் கூற்று முழுக்க முழுக்க உண்மை என்பது கானாவூர் திருமணத்தில் புலனாகிறது. மரியாவின் வேண்டுகோளுக்குக் கிறிஸ்து முதலில் முடியாது: எனது நேரம் இன்னும் வரவில்லை ' என்று சொல்லிவிட்டார். ஆனால், மரியா மனந்தளராது. பணியாளர்களிடம் 'இயேசு சொல்வதைச் செய்யுங்கள்' என்று கூறியபின், இயேசுவால் தம் தாயின் விண்ணப்பத்தை மறுக்க முடியவில்லை. தமது முதற் புதுமையைச் செய்கிறார். 'முடியாது' என்ற சொன்ன இயேசுவை 'முடியும்' என்று சொல்ல வைக்கிறார் மரியா.

நாம் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் (லூக் 18:1). நமக்குத் தேவையானது கிடைக்கும்வரை நாம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; தட்டிக் கொண்டே இருக்க வேண்டும்: தேடிக்கொண்டே இருக்க வேண்டும் (லூக் 11:9-10). புனித மோனிக்கா தமது மகன் அகுஸ்தினார் மனமாற்றத்திற்காக 16 ஆண்டுகள் தொடர்ந்து கண்ணீர் சிந்திச் செபித்தார். அவருடைய வேண்டுதல் கேட்கப்பட்டது. ஒரு திரு மணவிருந்தில் நான்கு பந்திகளிலும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து பந்தி பரிமாறியவர், "என்னப்பா நாலு பந்தியிலும் தொடர்ந்து சாப்பிடுற; எனக்கு ஞாபக சக்தி இல்லை என்றா நினைக்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு அந்தச் சாப்பாட்டு ராமன். "என்ன செய்கிறது? உங்களுக்கோ ஞாபக சக்தி அதிகம்; எனக்கோ ஜீரண சக்தி அதிகம்" என்றார்! பலருக்கு ஜீரண சக்தி அதிகம். சாப்பாட்டிலேயே அவர்கள் குறியாக இருக்கின்றனர். அடுத்தவர்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. ஆனால், மரியாவுக்கு ஞாபக சக்தி அதிகம். பிறருடைய தேவைகளைக் குறிப்பறிந்து உணர்ந்து அவற்றைப் போக்கத் தீவிரமாகச் செயல்படுகிறார். "பெண்கள் வல்லினமா? மெல்லினமா? இடையினமா?" என்று ஓர் அறிஞரைக் கேட்டதற்கு அவர், “பெண்கள் செலவினம்" என்றார். ஆனால், உண்மையில் பெண்கள்
"மரியினம்": மரியாவின் வாரிசுகள். மரியாவைப் போன்று மென்மையான தாய்மை உணர்வுடன், "உண்டி கொடுத்தார், உயிர் கொடுத்தார்" என்ற கொள்கைக்கேற்ப, பசித்தவர்களுக்கு உணவளித்து உயிர் கொடுப்பவர்கள் பெண்கள். பெண்ணாகப் பிறப்பது ஒரு சாபக்கேடு அல்ல, மாறாக அது ஒரு மாபெரும் பேறு; ஏனெனில் தாமரை போன்ற அவர்களது கைகளால் தான் உலகில் அறங்கள் வளரும்.

இளவரசன் உதய குமாரனை மயக்கிய மணிமேகலை அழகி. ஆனால் தன் தலையை மொட்டை அடித்து, காவி உடை அணிந்து, அமுத சுரபியைக் கொண்டு மக்களின் பசி போக்கிய மணிமேகலை பேரழகி, எப்பொழுதெல்லாம் பெண்கள் பிறரை வாழ வைக்கின்றார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் பேரழகிகளாகத் திகழ்கின்றனர். பெண்களிடம் தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. ஆண்களுடன் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் தனித்தன்மையை இழந்து விடக்கூடாது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுவதுபோல, கடவுள் எல்லாருக்கும் ஒரே விதமான கொடைகளைக் கொடுப்பதில்லை. மாறாக, வெவ்வேறு வரங்களைப் பொது நன்மைக்காகப் பகிர்ந்தளிக்கிறார் (1 கொரி 12:4- 11). பெண்ணிடத்தில் தாய்மைப் பண்பு மற்ற எல்லாப் பண்புகளைவிட விஞ்சி நிற்க வேண்டும். கானாவூர் திருமணத்தில் இயேசு செய்த புதுமையின் இறுதிப் பயன் என்ன என்பதை யோவான் அழுத்தமாகக் கூறியுள்ளார். "இதுவே இயேசு செய்த முதல் அரும்அடையாளம், இது கலிலேயாவிலுள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சிமையை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்" (யோவா 2:11).

ஒருதாய் தம் மகளுக்குப் பரத நாட்டியம் கற்றுக் கொடுத்து, கடைசியில் மகளின் பரத நாட்டியத்தை அரங்கேற்றம் செய்து பெருமிதம் அடைகிறார். அவ்வாறே மரியாவும் தம் மகன் கிறிஸ்துவினுடைய மீட்பின் நற்செய்தியைக் கானாவூரில் அரங்கேற்றம் செய்து எல்லையில்லா ஆனந்தம் அடைகிறார், கிறிஸ்துவின் மாட்சிமை வெளிப்படவும் அவருடைய சீடர்கள் அவரிடம் விசுவாசம் கொள்ளவும் மரியா மூலகாரணமாக இருக்கிறார். எனவே, மரியா கிறிஸ்துவின் மகிமையை மறைக்கிறவர் அல்ல, மாறாக அதை வெளிச்சத்துக்குக் கொண்டு வருபவர். மரியாவைப் பின்பற்றி, மரியாவின் திருத்தலங்கள் மக்களின் நம்பிக்கையை வியாபாரமாக மாற்றிக் காசு சம்பாதிக்காமல், கிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்தும் புனிதத் தலங்களாகத் திகழவேண்டும்,

ஒருவர் போலிப் போதகரா? அல்லது உண்மையான போதகரா? என்பதை அறிந்து கொள்ள உதவும் அமிலப் பரிசோதனை என்ன? போலிப்போதகர்கள் தங்களை மையமாக வைத்து தங்களுக்கு விளம்பரம் தேடுவார்கள். ஆனால், உண்மையான போதகர்கள் மரியாவைப் போன்று கடவுளை மையப்படுத்தி அவரை மகிமைப்படுத்துவார்கள். திருமுழுக்கு யோவானைப் போன்று உண்மையான போதகர்கள், "அவரது (கிறிஸ்துவின்) செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்" (யோவா 3:30) என்னும் மனநிலையைக் கொண்டிருப்பர். மரியாவின் இறுதிக் கட்டளை; "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவா 2:5).

மரியா கிறிஸ்துவின் தாய் என்பதைவிட கிறிஸ்துவின் தனி முதற் சீடர் ஆவார். கிறிஸ்துவின் சீடராகத் திகழ வேண்டுமென்றால், அவரின் வார்த்தையைக் கடைப்பிடிக்க வேண்டும். “என் வார்த்தையை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்தால், என் சீடராய் இருப்பீர்கள்" (யோவா 8:31). நாம் கிறிஸ்துவின் விசிறிகளா? அல்லது அவருடைய சீடர்களா? கடவுள் இஸ்ரயேல் மக்களோடு திருமண உடன்படிக்கை செய்து கொண்டார் (முதல் வாசகம், எசா 62:1-5). கிறிஸ்து புதிய உடன் படிக்கையின் மணமகன், அவர் கொண்டு வந்த இறையாட்சி ஒரு திருமண விருந்தாகும். அவர் தமது முதல் புதுமையை ஒரு திருமணத்தில் செய்தது மிகப் பொருத்தமானது. அவர் கொடுத்த முதல் தரமான இரசம் நற்கருணை என்னும் அன்பு விருந்துக்கு அடையாளம், அதில் பங்கு பெறும் நாம் பேறுபெற்றோர். சட்டமென்னும் பழைய சித்தையில் அன்பு என்னும் புதிய இரசத்தை ஊற்றாது. புதிய சித்தையில் புதிய இரசத்தை மாற்றுவோம். இனி நாம் சட்டத்திற்கு அடிமைகள் அல்ல, மாறாக அன்பின் அடிமைகள். அன்பே அனைத்திலும் சிறந்த நெறி (1 கொரி 12:31)



தூய ஆவியின் கொடைகள் பொது நன்மைக்காகவே!

அருள்பணி மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


அமெரிக்காவில் வாழ்ந்த மிகப்பெரிய செல்வந்தர் வில்லியம் ஆலன் ஒயிட். மிகுந்த தாராள உள்ளமும், இரக்க குணமும் உடையவர். ஒருமுறை அவர் தனக்கென்று  இருந்த 50 ஏக்கர் நிலத்தையும் தன்னுடைய ஊர் மக்களுக்காக எழுதி வைத்தார். இதை அறிந்த அவருடைய உறவுக்காரர் ஒருவர் அவரிடம், “எதற்காக இவ்வளவு நிலத்தையும் ஊர் மக்களுக்கு எழுதி வைக்கிறீர்கள்” என்று கேட்டார்.

அதற்கு அவர், “நான் என்னிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கிறபோது மூன்றாவது விதமான மகிழ்ச்சியை அனுபவிக்கிறேன்” என்றார். “அது என்ன மூன்றாவது விதமான மகிழ்ச்சி. அதைக் கொஞ்சம் எனக்குத் தெளிவாக விளக்குங்கள்” என்று கேட்க, வில்லியம் ஆலன் ஒயிட் மறுமொழியாக, “பணம் மூன்றுவிதமான மகிழ்ச்சிகளைத் தருகிறது. முதலாவது பணத்தைச் சேர்ப்பதில் மகிழ்ச்சி; இரண்டாவது கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை பாதுகாப்பதில் மகிழ்ச்சி; மூன்றாவது மற்ற எல்லாவற்றையும்விட சிறந்தது, அது நம்மிடம் இருப்பவற்றை பிறருக்குக் கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி.

பலர் தாங்கள் பெற்ற செல்வத்தை; திறமைகளை; கடவுள் கொடுத்த ஆசிர்வதங்களை தங்களுக்குள்ளே வைத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் மூன்றாவது விதமான மகிழ்ச்சியை அடைவதில்லை. ஆனால் நான், என்னிடம் இருப்பதை பிறருக்குக் கொடுப்பதால் அதை அனுபவிக்கிறேன்” என்றார்.

நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி மற்ற எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்பதை இந்நிகழ்வு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் அழைப்பு  “நமக்குக் கொடுக்கப்பட்ட கொடைகள் பிறரது நம்மைக்காகவே” என்பதே. கடவுள் கொடுத்த திறமைகள், கொடைகள், வாய்ப்பு வசதிகள் யாவற்றையும் நமது சொந்த தேவைக்காகவே பயன்படுத்தி வாழும் நமக்கு, இன்றைய வாசகங்கள் அவற்றைப் பொதுநலத்திற்காக பயன்படுத்த அழைப்புத் தருகிறது.

கொரிந்தியருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், ‘கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமையைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஒரு சிலருக்கு ஞானம் நிறைந்த சொல்வன்மை, அறிவுநிறைந்த சொல்வன்மை, நம்பிக்கை, வல்ல செயல்கள் புரியும் ஆற்றல், பரவசப் பேச்சுப் பேசும் ஆற்றல், இன்னும் ஒருசிலருக்கு அவற்றை விளக்கும் ஆற்றல் இவையெல்லாம் கொடுத்திருக்கலாம். ஆனால் நாம் அதனை பிறருக்காக, பொது நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றதொரு அழைப்பினை விடுக்கிறார் (1 கொரி 12:7).

ஆனால் நடைமுறையில் கடவுள்/ தூய ஆவியார்  கொடுத்த திறமைகளை, கொடைகளை பொது நன்மைகாகப் பயன்படுத்தாமல் தன்னுடைய சுயநலத்திற்காக, தன்னுடைய பெயர் விளங்கச் செய்வதற்குத்தான் மக்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. வெறுமனே பணம், பொருள் என்று மட்டுமல்லாமல் இறைவனின் பணி செய்ய கடவுள் கொடுத்திருக்கும் ஆற்றலையும், திறமையையும்கூட இன்றைக்கு மக்கள் தங்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.  இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

ஒருமுறை மராட்டிய மன்னர் சிவாஜி பகைவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு பெரிய கோட்டையைக் கட்டிக்கொண்டிருந்தார். அந்த கோட்டையைக் கட்டும் பணியில் ஏராளமான மக்கள் ஈடுபட்டிருந்தார்கள். அரசர் அவர்கள் எல்லாருக்கும் உணவு கொடுத்து, அவர்களை பராமாரித்துக் கொண்டும் வந்தார். இது அவருடைய உள்ளத்தில் ஒருவிதமான கர்வத்தை உண்டுபண்ணியது. ‘நான்தான் எல்லாருக்கும் உணவு கொடுக்கிறேன். நான் எவ்வளவு பெரிய மன்னர்’ என்ற கர்வம் அவருடைய பேச்சிலே அடிக்கடி தெறித்தது.

இதைக் கண்ணுற்ற அவருடைய குரு மன்னருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் அவர் மன்னரிடம், “மன்னர் மன்னா! எனக்காக அருகே இருக்கக்கூடிய பாறையை உடைத்து, அதை இங்கே கொண்டுவர முடியுமா?” கேட்டார். அதற்கு மன்னரும் தன்னுடைய வேலையாட்களிடம் பாறையை உடைத்துக்கொண்டு வரச்சொல்ல, அவர்களும் அதைக் கொண்டுவந்தார்கள்.

அப்போது அந்த பாறைக்குள் இருந்து ஒரு தேரை (தவளை) வெளியே ஓடியது. உடனே குரு மன்னரை பார்த்து, “மன்னா! எல்லாருக்கும் உணவிடுகிறீர்கள், இந்த பாறைக்குள் இருந்த தேரைக்கும் நீங்கள்தானே உணவிடுகிறீர்கள்” என்று சொன்னதும், மன்னருக்கு, குரு தன்னுடைய ஆணவத்தான் சுட்டிக் காட்டுகிறார் என்பதை உரைத்தது. அதன்பிறகு ஆணவம் இல்லாது செயல்படத் தொடங்கினார்.

கடவுள் கொடுத்திருக்கும் கொடைகள்/பொறுப்புகள் எல்லாம் கடவுளின் பேர் விளங்கப் பயன்படுத்த வேண்டுமே ஒழியே அதனை தன்னுடைய பெயர் விளங்கப் பயன்படுத்துவது தவறு என்பதை இந்த நிகழ்வானது அழகாக எடுத்துரைக்கிறது.

ஆக, நம்மிடம் இருக்கும் எல்லாமும் நாம் பிறருக்காக பயன்படுத்த, இறைவன் கொடுத்த கொடைகள் என்பதை நாம் உணரவேண்டும். இதற்கு நம்மிடம் இருக்கக்கூடிய அடிப்படையான மனநிலை, நாம் அனைவரும் ஒரே உடலின் உறுப்புகள்,  இந்த உடலின் உறுப்புகளுக்குத் தலையாக இருப்பவர் கிறிஸ்துவே என்பதை நாம் உணரவேண்டும். உடலில் காலோ அல்லது தலையோ அடிபட்டிரும்போது கை சும்மா இருக்காது. உடனே அது உதவி செய்ய விரைந்து வரும். அதுபோன்றுதான் கிறிஸ்து என்ற உடலில் உறுப்புகளாக இருக்கும் நாம் அனைவரும், நம்மோடு வாழக்கூடிய மக்களின் நிலை அறிந்து, உதவி  செய்ய விரைந்து வரவேண்டும்.

அந்த வகையில் கடவுள் கொடுத்த எல்லா ஆசிர்வாதங்களையும் பொது நன்மைகாகப் பயன்படுத்திய ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால் அது இயேசுவைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. இன்று படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம் அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.

கானாவூர் திருமணத்திற்கு தன்னுடைய தாய் மற்றும் சீடர்களுடன் செல்லும் இயேசுக் கிறிஸ்து, அங்கே திருமண விருந்தின்போது திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்பதை தன்னுடைய தாயின் வழியாகக் கேள்விப்படுகிறார். தாயின் வேண்டுதலின் பேரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றி, மணவீட்டாருக்கு நேரிட இருந்த அவப்பெயரைப் போக்குகிறார்.

இங்கே இயேசுக் கிறிஸ்து கடவுள் கொடுத்த அருளை தனது பெயர் விளங்கப் பயன்படுத்தவில்லை. மாறாக மணவீட்டாரின் அவல நிலை நீங்கவும், கடவுளின் பெயர் விளங்கவுமே அப்படிச் செய்கிறார். நற்செய்தியின் இந்த பகுதியில் மட்டுமல்லாது, எல்லா இடங்களிலும் இயேசு தன் அருளை பிறரது நலனுக்காகவே பயன்படுத்துகிறார். அதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது ‘எல்லா மக்களும் இறைவனின் பிள்ளைகள்’ என்ற எண்ணமே. நாமும் இப்படி கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கொடையை பிறருக்காகப் பயன்படுத்தும்போது அதைவிடச் சிறந்த பேறு வேறு எதுவும் இருக்க முடியாது.

“சமுதாயச் சேவையை சட்டையாக மாற்றாதீர்கள்; உங்கள் உடம்பின் சதையாக மாற்றுங்கள்” என்பார் கவிஞர் வைரமுத்து. நாம் சமுதாயத்திற்கு ஏதோ ஒருசில நன்மைகளை மட்டும் செய்து திருப்திப்பட்டுக் கொள்ளாமல், எப்போதுமே இயேசுவைப் போன்று இறைபணி/சமூகப்பணி செய்ய வேண்டும் என்பதுதான் அவர் சொல்ல விரும்பும் கருத்து.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில், பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் ஒரு காலைப் பொழுதில், காரில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர் பனிப்பொழிவில் மாட்டிக்கொண்டார். எவ்வளவுதான் அவர் சத்தம் போட்டாலும் யாருமே அவருக்கு உதவ முன்வரவில்லை.

அப்போது அங்கு வந்த ஓர் இளைஞர், தன்னுடைய கையில் இருந்த இரும்புக் கம்பியால் பனிக்கட்டிகளை எல்லாம் உடைத்து, அகற்றிவிட்டு, அவரை அதிலிருந்து காப்பாற்றினார். தனக்கு தக்க நேரத்தில் வந்து உதவியதற்காக, அன்பளிப்பாக ஏதாவது தரலாம் என்று நினைத்த அந்தக் கணவான், தன்னுடைய பையிலிருந்து கொஞ்சம் டாலரை எடுத்து அதை அவரிடம் நீட்டினார்.

ஆனால் அந்த இளைஞர் பணத்தை வாங்க மறுத்துவிட்டுச் சொன்னார், “நான் DO UNTO OTHERS” என்று மன்றத்தில் உறுப்பினராக இருக்கிறேன். இந்த மன்றத்தின் முக்கியமான நோக்கம் தேவையில் இருப்பவருக்கு ஓடோடிச் சென்று உதவுவதுதான் என்று சொன்னதும், காரில் வந்திரந்த அந்த கணவான் நன்றிப் பெருக்கோடு அவரைக் கைகூப்பி வணங்கிவிட்டு, அங்கிருந்து சென்றார்.

நாம் ஒவ்வொருவருமே தேவையில் இருப்பவருக்கு, அதுவும் யாராக இருந்தாலும் உதவவேண்டும்; கடவுள் கொடுத்த கொடைகளை பிறர் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

இப்படியெல்லாம் ஒரு மனிதர் வாழ்கிறபோது கடவுள் எத்தகைய ஆசிர்வாதத்தைத் என்று இன்றைய முதல் வாசகத்தில் (எசாயா புத்தகம் 62) படிக்கின்றோம்.

“அவர்களது வெற்றியையும், மேன்மையையும் புறவினத்தார் காண்பார்கள்; புதிய பெயரால் அழைக்கப்படுவார்கள்; இறைவனின் கையில் அழகிய மணிமுடி போன்றும், அரச மகுடம் போன்றும் இருப்பார்கள்” என்று இறைவாக்கினர் எசாயா கூறுகிறார். ஆம், இறைப்பணி நல்ல உள்ளத்தோடு செய்யும்போது இறைவனும் நம்மை ஆசிர்வதிப்பார் என்பதே உண்மை.

எனவே நாம், நமது ஆண்டவர் இயேசுவைப் போன்று கடவுள் நமக்குக் கொடுத்திர்க்கும் திறமைகளை/ கொடைகளை இறைவனின் பெயர் விளங்கவும், பொது நன்மைகாகவும் பயன்படுத்துவோம். அதன் வழியாக இறைவனின் அன்புப் பிள்ளைகள் ஆவோம். அவரது ஆசியை நிறைவாய் பெறுவோம்.

 
 
தலைவனின் தழுவல்

பழைய பொருட்கள் விற்கும் ஒரு கடையில் வயலின் ஒன்று பல நாட்களாக விற்காமல் கிடந்தது. அதை விலைகுறைத்தாலும் யாரும் வாங்குவதாகயில்லை. 'இதை வைத்து அடுப்பெரிக்கக்கூட முடியாது' என்று யாரும் வாங்காமல் ஒதுங்குகினர். அந்நேரம் அங்கே டிப்டாப்பாக ஒரு முதியவர் வந்தார். அந்த வயலினைத் தன் கையில் எடுத்து தான் வைத்திருந்த துணியால் மெதுவாகத் துடைத்தார். பின் அங்கேயே அமர்ந்து அதை வாசிக்கத் தொடங்குகினார். வயலினிலிருந்து புறப்பட்ட இசை கேட்டு கடை வீதியே ஸ்தம்பித்துத் திரும்பிப் பார்த்தது. வயலினை வாசித்து முடித்த முதியவர் அதை அதே இடத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டார். அவர் சென்ற சற்று நேரத்தில், 'அது எனக்கு, அது எனக்கு' என அந்த வயலினை வாங்கப் பலர் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்தனர். கேட்பாரற்றுக் கிடந்த அந்தப் பழைய வயலினுக்கு இப்போது ஏன் போட்டி? அந்த வயலினுக்கு மதிப்பைத் தந்தது எது? 'தலைவனின் தழுவல்' ('master's touch').

இசைத்தலைவன் தொட்டவுடன் வயலினின் மதிப்பு கூடுகிறது.

தலைவராம் இறைவன் தழுவும் பொருள்களும், நபர்களும் புதிய மதிப்பு பெறுகின்றனர் என்று நமக்கு முன்மொழியும் இன்றைய இறைவாக்கு வழிபாடு, அந்தத் தழுவலுக்கு நம்மை சரணாகதியாக்க அழைக்கின்றது.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 61:1-5) எசாயா நூலின் மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கி.மு. 539ஆம் ஆண்டு பாரசீக அரசன் சைரசு பாபிலோனியாவில் சிறைப்பட்டுக் கிடந்த மக்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பலாம் என்று கட்டளை பிறக்கின்றார். சிலர் பாபிலோனியாவியே தங்கிவிட, சிலர் மட்டும் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புகிறார்கள். திரும்பி வந்தவர்கள் தங்கள் நாடும், நகரும், ஆலயமும் சிதைந்து கிடந்ததைக் கண்டு மிகவும் துயருற்றனர். தரை மட்டமாகக் கிடந்த தங்கள் வீடுகள், ஆலயம், சாம்பலாகக் கிடந்த தங்கள் வயல்கள் என நிலம் வறண்டு கிடந்தது. 'எல்லாவற்றையும் சீக்கிரம் கட்டி எழுப்பிவிடலாம்' என்ற நம்பிக்கை சிறிது சிறிதாகக் கரைய ஆரம்பிக்கிறது. சோர்வும்,தோல்வியும், ஏமாற்றமும், சந்தேகமும் கவ்விக் கொள்கிறது. தங்கள் கடவுள் தங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யா? என்ற கேள்வியும் எழ ஆரம்பிக்கிறது. இந்தப் பின்புலத்தில்தான் இன்றைய எசாயாவின் இறைவாக்கு அங்கே உரைக்கப்படுகின்றது. முழு நம்பிக்கையாடும், தடுமாற்றமில்லா உறுதியோடும் எருசலேமின் புதிய மாட்சி பற்றி இறைவாக்குரைக்கின்றார் எசாயா.

'ஆண்டவரின் வாயிலிருந்து வரும் புதிய பெயர்' என்பதுதுதான் இறைவாக்கின் மையமாக இருக்கிறது. விவிலியத்தில் பெயர் மாற்றங்கள் இரண்டு பொருள்களைத் தருகின்றன: ஒன்று, பெயர் மாற்றம் பெறுகிற அந்த நபர் புதிய பணிக்கான அல்லது புதிய வாழ்க்கைமுறைக்கான அழைப்பைப் பெறுவார். இரண்டு, புதிய பெயரைத் தருவதன் வழியாகக் கடவுள் அந்த நபரின் மேல் புதிதாக உரிமை கொண்டாடுவார். இன்றைய முதல் வாசகத்தை, (அ) புதிய பெயர் (62:1-4), (ஆ) புதிய வாழ்க்கை நிலை (62:5), (இ) புதிய பாதுகாப்பு (62:6) என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். யூதர்களின் திருமணக் கொண்டாட்டம் மூன்று நிகழ்வுகளாக நடைபெறும். முதலில், வாக்குறுதி பத்திரம் எழுதப்படும். இரண்டு, மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையே உடன்படிக்கை செய்யப்படும். மூன்று, மணமகனும் மணமகளும் உடலால் இணைவர். இரண்டாவது நிகழ்வான உடன்படிக்கை அல்லது வாக்குறுதி பத்திரத்தில்தான் மனைவியின் பெயர் மாற்றப்படும். அதே போல, இங்கே ஆண்டவரும் இஸ்ரயேலை மணப்பதற்கு முன், தழுவிக்கொள்ளுமுன், அவளுக்கு பாபிலோனிய அடிமைத்தனத்தில் வழங்கப்பட்ட 'அசுவா' (கைவிடப்பட்டவள்), 'ஷெமமா' (பாழ்பட்டது) என்ற பெயர்களை மாற்றி, 'எப்சி-பா' (என் மகிழ்ச்சி அவளிடம்), 'பெயுலா' (மணமுடித்தவள்) என்ற புதிய பெயர்களை அளிக்கின்றார். நாடிழந்து நிற்கும், இழப்பை சரிசெய்ய முடியாமல் தவிக்கும் இஸ்ரயேல் மக்களை இறைவன் உரிமையாக்கிக் கொண்டு அவர்களுக்குப் புதிய வாழ்க்கை நிலையை வாக்களிக்கின்றார். மணமகளுக்கு பாதுகாப்பு தரும் மணமகன் போல இஸ்ரயேலுக்குப் பாதுகாப்பு தருவார் இறைவன். திருமணத்தில் மணமக்கள் ஒருவர் மற்றவருக்குத் தரும் உரிமை அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பது போல, இறைவன் இஸ்ரயேல் மக்கள் மேல் கொண்டாடும் உரிமை அவர்களின் பாதுகாப்பு அரணாக இருக்கின்றது.

ஆக, தவிடு பொடியாய்க் கிடந்த எருசலேம் நகரமும், அந்த நிலையில் கிடந்த நகரத்திற்குத் திரும்பிய மக்களும் தலைவனின் தழுவலால் புதிய பெயரும், புதிய வாழ்க்கை நிலையும், புதிய பாதுகாப்பும் பெறுகின்றனர்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 12:4-11) பவுல் கொரிந்த நகரத்திருச்சபையின் பிளவுகளில் ஒன்றான 'கொடைகள் பிளவு' பற்றியதாக இருக்கின்றது. கொரிந்த நகரத் திருச்சபை போட்டி, பொறாமை, பிளவு நிறைந்த சபையாக இருக்கிறது. அதன் பிளவுக்கான பல காரணங்களில் ஒன்று 'அருள்கொடையும்' அக்கொடையினால் வரும் 'திருத்தொண்டும்.' 'ஞானம் நிறைந்த சொல்வளம்,' 'அறிவுசெறிந்த சொல்வளம்,' 'நம்பிக்கை,' 'பிணிதீர்க்கும் அருள்கொடை,' 'வல்ல செயல் செய்யும் ஆற்றல்,' 'இறைவாக்குரைக்கும் ஆற்றல்,' 'ஆவிக்குரிய பகுத்தறியும் ஆற்றல்,' 'பரவசப் பேச்சு,' 'பேச்சை விளக்கும் ஆற்றல்' என கொரிந்து நகரத் திருச்சபை பெற்றிருந்த அருள்கொடைகளைப் பார்க்கும்போது நமக்மே ஆச்சர்யமாகவும் பொறாமையாகவும் இருக்கிறது. தொடக்கத் திருச்சபையில் துலங்கிய அருள்கொடைகள் இன்று நம்மிடையே இல்லாதது அல்லது குறைவாயிருப்பது ஏன்? ஆவியானவரின் செயல்பாடுகள் இன்று குறைந்துவிட்டனவா? அல்லது அவருடைய செயல்பாட்டிற்கு இன்றைய திருச்சபையின் இயல்பு தடையாக இருக்கின்றதா?

அருள்கொடைகள் இப்படிப் பலவாக இருந்தாலும், அவைகள் ஒரே புள்ளியில் சங்கமிக்கின்றன: அந்தப் புள்ளிக்கு இரண்டு முகங்கள் உண்டு: ஒன்று, 'ஆவியானவர்' என்னும் ஊற்று, இரண்டு, 'பொதுப்பயன்பாடு' என்னும் நோக்கம். ஆக, எல்லா அருள்கொடைகளும் ஒரே ஆண்டவரால் தழுவப்பட வேண்டும். அப்படி தழுவப்பட்டால்தாம் அவைகளால் பயன் உண்டு. அப்படிப் தழுவப்பட்ட கொடைகள் ஒட்டுமொத்த குழுமத்தின் வளர்ச்சிக்குப் பயனுள்ளவைகளாக அமைதல் அவசியம். பவுலின் மூவொரு இறைவன் தத்துவம் இங்கே காணக்கிடக்கிறது: 'அருள்கொடைகள் பல. தூய ஆவியார் ஒருவரே. தொண்டுகள் பல. ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பல. கடவுள் ஒருவரே' என, தூய ஆவி, மகன், தந்தை என தலைகீழாக மூவொரு இறைவனை புதிய கோணத்தில் தருகின்றார். அதாவது, கடவுளை மேலிருந்து கீழ் வருபவராகக் காட்டாமல், கீழிருந்து மேலேற்றுகிறார். இதை வைத்து பவுலை ஒரு மார்க்சிஸ்ட் என்று சொல்லலாம்! பவுலின் இரண்டாவது மார்க்கிய சிந்தனை இது: அருட்கொடைகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடைமை என்றாலும், அது பயன்படுத்தப்பட வேண்டியது பொது நன்மைக்காக. கொடைகளை முன்னிறுத்தும்போது நாம் நமக்குள் ஒருவர் மற்றவரை ஒப்பீடு செய்யத் தொடங்குகிறோம். ஆனால், ஊற்றையும், நோக்கத்தையும் பார்த்தால் ஒப்பீடுகள் மறைந்துவிடும்.

ஆக, தலைவனின் தழுவல் நம்பிக்கையாளர்களுக்கு நற்கொடைகளை வழங்குகிறது. இந்நற்கொடைகள் திருச்சபையின் பொதுநலத்திற்காகக் கையாளப்படுகின்றன.

'இயேசு கானாவூர் திருமண விழாவில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய நிகழ்வை' இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 2:1-11) காண்கிறோம். நமக்குப் பரிச்சயமான இவ்வாசகப் பகுதியை கொஞ்சம் நெருக்கமாகப் பார்ப்போம்:

அ. பழைய புரிதல்களும், புதிய கேள்விகளும்

1. யோவான் நற்செய்தியில் வரும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இரண்டு அடுக்கு அர்த்தங்கள் உண்டு: ஒன்று, மேலோட்டமானது. இரண்டு, ஆழமானது. உதாரணத்திற்கு, கானாவூர் திருமண விழாவில் மேலோட்டமான அர்த்தம் என்னவென்றால், இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியது. ஆனால், ஆழமான அர்த்தம் என்னவென்றால், இதன்வழியாக இயேசுவின் மாட்சிமை வெளிப்படுகிறது. இரண்டு அர்த்தங்களையும் நாம் அலசிப் பார்ப்பது அவசியம்.

2. மரியாள் பரிந்து பேசுபவரா? 'மரியாள் வழி இயேசுவிடம்' என்ற ஒரு சொல்லாடல் கேட்டிருப்போம். இந்த சொல்லாடல் உருவானதன் பின்புலம் கானாவூர் நிகழ்வுதான். மரியாள் கானாவூர் திருமண விழாவில் பரிந்து பேசுகிறார் என நாம் பல நேரங்களில் சொல்கிறோம். எனக்கு இந்த அர்த்தத்தில் உடன்பாடு இல்லை. மரியாள் இல்லையென்றாலும் இயேசுவின் முதல் அற்புதம் அன்று நடந்தேறியிருக்கும். இதற்காக, நான் மரியாளை தள்ளி வைக்கிறேன் என எண்ண வேண்டாம். தொழுநோயால் வருந்திய நாமானை இஸ்ரயேலுக்குச் சென்று நலம்பெறுமாறு அவரின் மன்னன் கடிதம் கொடுத்து அனுப்புகிறான். இதில் மன்னன் அனுப்புகிறான்தான். ஆனால், குணம் பெறக் காரணமாக இருந்தவர் எலிசா. மன்னன் கடிதம் கொடுத்ததால்தான் நாமான் நலம் பெற்றார் எனச் சொல்ல முடியுமா? இல்லை. கானாவூர் நிகழ்வை இலக்கிய அடிப்படையில் பார்த்தால் மரியாளின் வேலை, ஒரு ஏஜன்ட். அதாவது, ஒரு நிகழ்வு நடக்குமுன் நிகழ்ச்சி தொகுப்பாளர் தொகுத்து வழங்குவதுபோல. நிகழ்ச்சி தொகுப்பாளர் இல்லையென்றால் நிகழ்ச்சியே நடக்காது என்று நாம் சொல்ல முடியுமா?

3. திருமணம் என்று நிகழ்வு தொடங்குகிறது. ஆனால், மணமக்கள் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. பாரம்பரியத்தில் இந்த திருமணம் யூதா ததேயுவின் திருமணம் என்பது பலரின் கருத்து. நற்செய்தியாளரின் உள்ளார்ந்த பொருளின்படி இயேசுவே இங்கே மணமகனமாகவும், ஒட்டுமொத்த மானுடம் மணமகளாகவும் இங்கே உருவகிக்கப்படுகிறது.

4. 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்?' 'அம்மா' என்பது இங்கே பெண்களை மரியாதை நிமித்தம் அழைக்கும் வார்த்தையே அன்றி, 'தாய்' என்ற அர்த்தம் அல்ல. மேலும், தொடர்ந்து, 'உனக்கும், எனக்கும் என்ன?' என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பாக இருக்க முடியும். மேலும் முதல் ஏற்பாட்டில் இந்த சொல்லாடல் மிகுந்து கிடக்கிறது. ஒருவர் மற்றவரை தொந்தரவு செய்யும்போது, தொந்தரவு செய்யப்படுபவர், தொந்தரவு செய்பவரைப் பார்த்துக் கேட்பதாகவோ (நீத 11:12), அல்லது சம்பந்தப்படாத ஒருவரை ஒன்றில் வலுக்கட்டாயமாக சம்பந்தப்படுத்தும்போது, அவர் கழுவுற மீனுல நழுவுற மீனா ஓடும்போது சொல்வதாகவோ (2 அர 3:13) பயன்படுத்தப்பட்டுள்ளது.

5. 'நேரம்.' யோவான் நற்செய்தியில் இரண்டு வகை நேரம் குறிப்பிடப்படுகிறது. ஒன்று, 'க்ரோனோஸ்.' அதாவது, நாம் அன்றாடம் பயன்படுத்தும் நொடி, நிமிடம், மணி, நாள், வாரம் சம்பந்தப்பட்டது. இதன்படி, இந்த நிகழ்வு நடக்கும் நாள் 'மூன்றாம் நாள்.' இரண்டு, 'கைரோஸ்.' அதாவது, மீட்பு நேரம். இயேசு குறிப்பிடும் நேரம் இந்த இரண்டாம் நேரமே.

6. 'அறிகுறி.' யோவான், மற்ற நற்செய்தியாளர்கள் பயன்படுத்தும் 'அற்புதம்' (miracle) என்ற வார்த்தையை விடுத்து 'அறிகுறி' (sign) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்;. இயேசு எப்படிப்பட்டவர், அவர் எதற்காக வந்தார் என்பதற்கான அறிகுறியாக அவரின் செயல்கள் இருந்தன என்பதைச் சுட்டிக்காட்டத்தான் யோவான் இச்சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். அதாவது, அற்புதங்கள் செய்யப்பட்டதன் நோக்கம் அற்புதங்கள் அல்ல. மாறாக, அவற்றின் வழியாக என்ன வெளிப்பட்டது என்பதுதான் முக்கியம். இங்கே, சீடர்கள் இந்த அறிகுறியின் வழியாக இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்கின்றனர்.

ஆ. சமய, சமூக பின்புலம்

யூத மரபில் திருமணம் என்பது எட்டு நாள்கள் நடக்கின்ற ஒரு குடும்ப, சமூக நட்பு விழா. இதில் மையமாக இருப்பது 'திராட்சை இரசம்.' உணவுப் பொருட்களில் தயாரிப்பிற்கு அதிக நாட்கள் எடுக்கும் பொருள் திராட்சைரசம் தான். ஆகையால் ஒரு திருமணம் என்றால் குறைந்தது ஆறு மாதத்திற்கு முன்னே திட்டமிட்டு திராட்சை ரசம் செய்யத் தொடங்க வேண்டும். அதற்கு ஆறு மாதத்திற்கு முன் திராட்சை பயிரிடவும் வேண்டும். ஆகையால் கானாவூரின் இந்தக் குடும்பம் ஏறக்குறைய ஒரு வருடமாக இந்தத் திருமணத்திற்கான தயாரிப்பை நிகழ்த்தியிருக்கவேண்டும். ஏதோ ஒரு காரணத்தால் திராட்சைரசம் தீர்ந்துவிட்டது. விருந்தினர்களுக்கு 'இல்லை' என்று சொன்னால் நன்றாக இருக்காது. அதுவும் சொந்தங்களுக்கு 'இல்லை' என்று சொன்னால் என்ன நடக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். நமக்கு அறிமுகமாகாத மூன்றாம் நபரும், நம் நண்பர்களும் 'இல்லை' என்ற சொல்லை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் நம் சொந்தக்காரர்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நம்மைக் குறைத்துப் பேச மற்றொரு 'டாபிக்' கிடைத்ததாக எண்ணுவார்கள். இந்த இக்கட்டான சூழலில்தான் இயேசுவின் அறிகுறி நிகழ்கின்றது.

இ. வாழ்வும், வாக்கும்

'தன்னைப் படைத்தவரைக் கண்ட தண்ணீர் வெட்கத்தால் தன் முகம் சிவந்து இரசமாய் மாறியது' என்று கவிதையாகச் சொல்கின்றார் ஒரு ஆங்கிலக் கவிஞர்.இன்றைய நற்செய்திப்பகுதியில் வருகின்ற 'தூய்மைச்சடங்கிற்கென வைக்கப்பட்ட ஆறு கற்தொட்டிகள்' என்னும் சொல்லாடலில், இந்த ஆறு கற்தொட்டிகளுக்கு ஒரு பெயரெச்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. யூத, இசுலாமிய, அல்லது சில இந்து மரபு வழிபாட்டுத்தலங்களுக்குச் சென்றால் வெளியே தண்ணீர்த்தொட்டி இருப்பதை நாம் பார்க்கலாம். இப்போது நவீனமாக திருகு-குழாய்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தொட்டியில் சேமிக்கப்பட்டிருக்கும். உள்ளே செல்பவர்கள் தங்கள் காலணிகளைக் கழற்றிவிட்டு இத்தண்ணீரில் இறங்கி பின் வழிபாட்டிற்குள் செல்வார்கள். கீழைமரபில் உள்ள மற்றொரு பழக்கம் - இரண்டு வகையான தண்ணீரைப் பயன்படுத்துதல்: குடிக்க ஒன்று, சுத்தம் செய்ய மற்றொன்று. குடிக்க வைத்திருக்கும் தண்ணீர் பாதுகாப்பாக இருக்கும். சுத்தம் செய்ய வைக்கப்படும் தண்ணீர் கேட்பாரற்றுக் கிடக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நிலை எப்படியிருந்திருக்கும்? அதுவும் பாலஸ்தீனம் போன்ற வெப்பபூமியில் தண்ணீர் கிடைத்திருக்குமா? கிடைத்திருக்கும் தண்ணீரின் தரம் எப்படி இருந்திருக்கும்? தரம் தாழ்ந்த தண்ணீரைத் தலைவன் இயேசு தழுவியதால் அத்தண்ணீர் புதிய இயல்பு பெற்றது.

இன்றைய முதல் சிந்தனை: நாம் திராட்சை ரசமாக, இனிமையாக மாறுவதற்கு 'நீ இப்படி இருக்க வேண்டும், அப்படியிருக்க வேண்டும்' என்று இயேசு நம்மிடம் சொல்வதில்லை. நாம் எப்படி இருந்தாலும், எந்தப் பின்புலத்தில் வந்தாலும் அவர் தொட்டால் நாம் திராட்சை இரசமாக மாறமுடியும். இரண்டாவதாக, தண்ணீர் இரசமாக மாற வேண்டுமென்றால் தன் இயல்பை இழக்க முன்வர வேண்டும். 'இல்லை. நான் இப்படியே இருக்கிறேன். தூய்மைச் சடங்கிற்கு பயன்படும் தண்ணீராக மட்டும் இருக்கிறேன்' என்று தன்னையே சுருக்கிக் கொள்ளாமல், மற்றவர்கள் தங்கள் கைகளில் ஏந்தும் மதிப்பிற்குரிய பொருளாக மாறவேண்டுமானால் தன் இயல்பை இழக்க வேண்டும். நம் வாழ்விலும் நம் எண்ணங்கள் நிறைவேற வேண்டுமானால் நம் இயல்பை, தாழ்வு மனப்பான்மையை, குறுகிய எண்ணங்களை இழக்க வேண்டும். ஆன்மீகம் என்பது நம் இயல்பை மாற்றுவது. நம் கூட்டை உடைத்து வெளியேறுவது. மூன்றாவதாக, தலைவன் தழுவியவுடன் விளிம்பு மையமாகிவிடுகிறது. மையம் விளிம்பாகிவிடுகிறது. பணியாளன் திராட்சை இரசத்தின் ஊற்றை அறிகிறான். ஆனால், வீட்டுத் தலைவனுக்கு அது மறைபொருளாக இருக்கிறது.

ஆக, தலைவனின் தழுவல் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதோடல்லாமல், கடவுளின் ஆட்சி வெளிப்படவும், இதன் வழியாகச் சீடர்கள் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவும் காரணமாக அமைகிறது.

இவ்வாறாக, தலைவனின் தழுவல் முதல் வாசகத்தில் எருசலேமிற்கு புதிய பெயரையும் பாதுகாப்பையும், இரண்டாம் வாசகத்தில் நம்பிக்கையாளர்களுக்கு அருள்கொடைகளையும், நற்செய்தி வாசகத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாகவும் மாற்றுகிறது.

என் இன்றைய இயல்பும், இருப்பும் எப்படிப்பட்டதாக இருந்தாலும், என் தலைவன் என்னைத் தழுவும்போது என்னில் மகிழ்ச்சியும், வாழ்வும், நிறைவும் பொங்கி எழும். என் தலைவன் என்னைத் தழுவி மாற்றம் பெற்ற நான், என் தழுவலால் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியும், வாழ்வும், நிறைவும் தரும்போது நானும் அவரைப் போன்ற தலைவனே!