Friday 5 April 2019

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எசாயா43: 16-21
பிலிப்பியர் 3: 8-14
யோவான் 8:1-11






''உங்களில் பாவமில்லாதவர் முதல் கல்லை எறியட்டும்" என்று இயேசு சொல்லி முடிந்தவுடன் வானத்தில் இருந்து ஒரு கல் விழுந்தது என்று வேடிக்கையாகச் சொல்வது உண்டு. ஏனெனில் கடவுள் ஒருவர்தான் நல்லவர், பரிசுத்தர். பிறரைத் தீர்ப்பிடுவதற்கு கடவுள் ஒருவர்தான் தகுதியானவர் என்ற செய்தி இன்றைய நற்செய்தியிலே வழங்கப்படுகிறது.

இன்றைய நற்செய்திக்கு வாருங்கள். இயேசுவின் முன்பாக விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் கூனிக் குறுகிப் போய் நிற்கும் காட்சி. தங்களை நீதிமான்களாக நல்லவர்களாகக் கருதிக் கொண்ட பரிசேயர் மறைநூல் அறிஞர் மறுபுறம் நிற்கின்றனர். நடுவே இயேசு தரையில் ஏதோ எழுதுவது போன்ற காட்சியில் அமர்ந்திருக்கிறார். இந்தக் காட்சியை இன்று நடப்பது போல கண்முன் கொண்டு வாருங்கள்.

பெண்ணின் விபச்சாரம் என்ற பாவமானது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் பரிசேயர், மறைநூல் அறிஞர்களின் பாவங்களோ யாருக்கும் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆனால் உள்ளங்களை ஆய்ந்தறிகின்ற கடவுளின் மகனாம் இயேசுவுக்கு இந்தப் பரிசேயர், மறைநூல் அறிஞர்களின் பாவங்கள் நன்றாகத் தெரியும். உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை எறியட்டும் என்று சொன்னதின் மூலம் சங்கப் பரிவாரங்களாகிய பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் விபச்சாரத்தில் பிடிபட்டப் பெண்ணை விட பெரிய பாவிகள் என்பதை இயேசு தெளிவாகக் காட்டுகிறார்.

பரிசேயர், மறைநூல் அறிஞர்களின் பாவங்கள் யாவை?

முதல் குற்றம், பிறரின் குற்றங்களைப் பெரிதுபடுத்தி தங்களின் குற்றங்களை மூடி மறைக்க முயற்சி செய்தது. ஊதாரி மைந்தன் உவமையில் வரும் மூத்த மகன் (லூக். 15:25), ஆலயத்தில் செபித்த பரிசேயர் (லூக். 18:9-14) இவர்களைப்போல, பிறரது குறைகளையும், குற்றங்களையும் மட்டுமே பேசித் தங்களை நல்லவர்களாக நீதிமான்களாகக் காட்ட முனைந்தனர்.

ஒரு கணவனுக்குத் தன் மனைவியின் காது வர வர மந்தமாகிக் கொண்டு வருவது போல் தோன்றியது. ஒரு தடவை தன் மனைவி சமைத்துக் கொண்டிருந்தபோது அவளுக்குத் தெரியாத வகையில் பின்புறமாக 10 அடி தூரத்தில் நின்று நான் பேசுவது கேட்கிறதா என்று மெதுவாகக் கேட்டான். பதில் இல்லை. 5 அடி தூரத்தில் நின்று கேட்டான். பதில் இல்லை . இறுதியாக ஒரடி தூரத்தில் நின்று நான் பேசுவது கேட்கிறதா என்று கேட்டான். அதற்கு மனைவி, நீங்கள் ஏற்கனவே இரு முறை கேட்ட கேள்விக்குச் சொன்ன பதிலையே இப்போதும் சொல்கிறேன் - நன்றாகவே கேட்கிறது என்றாள். பார்த்தீர்களா? காது மந்தம் மனைவிக்கு அல்ல. கணவனுக்குத்தான். இந்தக் கணவனைப் போலத்தான் இந்தப் பரிசேயக் கூட்டம். இன்றைய உலகில் உள்ள பரிசேயர் கூட்டமும் பிறரின் குறைகளை மிகைப்படுத்திப் பேசித் தங்கள் குற்றங்களை மறைப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். பிறர் பெயர் கெட்டாலும் பரவாயில்லை தாங்கள் நல்லவர்கள் என்று பிறர் நினைக்க வேண்டும் என்று செயல்படுகிறார்கள்.

இரண்டாவதாக பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் திட்டமிட்டு சூழ்ச்சி செய்து பிறரைக் கெடுக்க, அழிக்க நினைப்பவர்கள். பரிசேயர் விபச்சாரப் பெண்ணை இயேசுவிடம் கொண்டு வந்தது பாவத்தின் மீது இருந்த வெறுப்பின் காரணமாகவோ, சட்டத்தின் மீது இருந்த பிடிப்பின் காரணமாகவோ அல்ல. இயேசுவிடம் ஏதாவது குற்றம் கண்டுபிடிக்கப் பரிசேயர் வகுத்த சூழ்ச்சி அது. மோசே சட்டப்படி வேசித்தனம் செய்தவர் கல்லால் எறியப்பட்டு கொல்லப்பட வேண்டும். ஆனால் யூதர்களோ உரோமையருக்கு அடிமையாக இருந்ததால், உரோமையரின் சட்டம் இதை அனுமதிக்கவில்லை. இத்தகைய மரணத் தண்டனையை உரோமைச் சட்டம் தடை செய்து இருந்தது. எனவே யூதச் சட்டத்தை ஆதரித்தார் என்றால் உரோமைக்கு எதிரியாக்கிவிடலாம். யூதச் சட்டத்திற்கு மதிப்புக் கொடுக்கவில்லையென்றால் யூதச் சட்டத்தை எதிர்ப்பவர் என்று இயேசுவைச் சிக்க வைக்க நினைத்த கூட்டம்தான் இந்தப் பரிசேயர் கூட்டம்.

அண்மையில் நமது பாரத நாட்டிலே அரியானா மாநிலத்திலே செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக, புனிதப் பசுவைப் பங்கப்படுத்தினார்கள் என்று கூறி மதவெறியர்கள் ஐந்து தலித் சகோதரர்களைக் கொலை செய்தார்களே, இதுதான் திட்டமிட்டு அடிக்கத் துடிக்கும் பரிசேயத்தனம்.

மூன்றாவதாக சட்டத்தைக் கையிலே எடுத்துக்கொண்டு பரிசேயர்கள் மக்களின் வாழ்வை வளப்படுத்துவதற்குப் பதிலாக மக்களை ஒடுக்கவும், குற்றம் கண்டு பிடிக்கவும் பயன் படுத்தினார்கள். ஓய்வுச் சட்டங்கள், தூய்மை முறைச் சட்டங்கள், ஒழுக்க நெறிச் சட்டங்கள் முதலியவற்றால் மக்களின் வாழ்வில் சுமையை ஏற்றினார்களேயொழிய அவர்களின் வாழ்வுக்கு வளமை கொண்டு வரவில்லை. எனவேதான் இயேசு சொன்னார்: சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் வைக்கிறார்கள் (மத். 23:4) என்று. இதுதான் நம் நாட்டில் நடக்கும் தடாச் சட்டம், பொடாச் சட்டம், எஸ்மா சட்டம், கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம். இப்படிச் சட்டங்களை இயற்றி எளியவரை ஒடுக்கி, பதவிக்காரர், பணம் படைத்தோர், அரசியல்வாதிகள் இன்று சட்டத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

1) ஆனால் இயேசு இத்தகைய அநியாயச் சட்டங்களைத் தூக்கி எறிந்தவர்.

2) இயேசு பரிசேயர்களின் பாவங்களை நன்றாக அறிந்து தெரிந்து இருந்தாலும் அவர் தீர்ப்பிடவில்லை. விபச்சாரப் பெண்ணை மன்னித்ததுபோல் மன்னிக்கத் தயாராக இருந்தார். உங்களில் பாவமில்லாதவர் முதல் கல்லை எறியட்டும் என்று இயேசு குறிப்பிட்டதோ தாங்கள் மறைத்து வைத்திருக்கும் குற்றங்களை ஏற்று மனம் திரும்பி வர வேண்டும் என்பதற்காகவே. ஆனால் பரிசேயர்களோ அதைச் செய்யவில்லை. அடடா! இதுவரை மற்றவர்ளைத்தான் பாவி என்று பார்த்தோம். அந்தப் பட்டியலில் நம்மையும் அல்லவா சேர்த்துவிட்டார் என்று சொல்லி கையில் இருந்த கல்லைக் கீழே போட்டார்களே தவிர மனம் மாறி இயேசுவிடம் வராது ஓடிவிட்டார்கள்.

கூனிக் குறுகி நின்ற பெண்ணைப் பார்த்து, நிபந்தனையற்ற இரக்கத்தோடும் அன்போடும் சொல்கிறார் இயேசு: உன் பாவங்கள்
மன்னிக்கப்பட்டன. நான் உன்னைத் தீர்ப்பிடவில்லை, சமாதானமாகப் போ. இனி பாவம் செய்யாதே என்றார் (யோவா. 8:11).
இன்று இயேசு உன்னைப் பார்த்துச் சொல்கிறார்.
1) உன்னை யாரும் தீர்ப்பிடவில்லையா?
2) பாவம் இல்லாதவர் பிறர் மீது முதல் கல்லை எறியட்டும்.
3) இயேசு மனமாற்றத்திற்கு அழைக்கிறார். பாவிப் பெண் பெற்ற மன்னிப்பைப் பெற நீ தயாராக இருக்கிறாயா? ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறு. இயேசுவை மன்னிக்கும் தேவனாகக் காண்பாய்.






 இயேசு நமது பாவங்களை மன்னித்துவிடுவார்
நமது ஆண்டவராம் இயேசு கிறிஸ்து பாவத்தை வெறுக்கின்றார். ஆனால் எந்தப் பாவியையும் அவர் வெறுப்பதில்லை.
அந்தப் பெற்றோருக்கு அவன் ஒரே மகன், அவன் ஒரே பிள்ளை . ஒரே மகன் என்பதால் அவனை கண்ணே மணியே என்று நாளும் போற்றி வளர்த்தார்கள். அவன் வளர்பிறை போல் வளர்ந்தான். வளர்ந்தவன் அவனது பெற்றோர் சம்பாதித்த செல்வத்தைத் தவறாகப் பயன்படுத்தினான்.

தவறான நண்பர்கள் சேர்ந்தார்கள். தவறான பழக்கவழக்கங்கள் அவனை ஒட்டிக்கொண்டன. கண் போன போக்கிலே அவன் மனம் போனது ; மனம் போன போக்கிலே அவன் கால் போனது.

பெற்றோர் இப்படித்தான் வாழவேண்டும் என்றார்கள். ஆனால் கல்மனம் படைத்த மகனுக்கு அவர்கள் கூறியது பிடிக்கவில்லை . சிற்பிகளான அவனது பெற்றோரை விட்டு அவன் ஒரு நாள் ஓடிப்போனான். ஓடிப்போகும் போது வீட்டில் இருந்த பணம் அனைத்தையும் எடுத்துச் சென்றுவிட்டான்.

அவன் வீட்டைவிட்டுச் சென்ற நாளிலிருந்து அவனுடைய பெற்றோர் சரியாக உண்ணவும் இல்லை, உறங்கவும் இல்லை. என்றாவது ஒரு நாள் மகன் திரும்பி வருவான் என்று கண்விழித்துக் காத்திருந்தார்கள். அவன் திரும்பி வரவேயில்லை.

ஒரு நாள் தகப்பன் தன் வயதான மனைவியை விட்டுவிட்டு ஒரு வயதான குதிரை மீது ஏறி மகனைத் தேடிச்சென்றார். ஓடிப்போன மகன் தீய வழியில் பணத்தை, சொத்தை செலவழித்துவிட்டு தனிமரமாக நின்றான். அவனை விட்டு அவன் நண்பர்கள் ஓடிவிட்டனர்.

அதன்பிறகு அவன் தீய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள பணம் தேவைப்பட்டதால் திருட்டுத் தொழிலில் இறங்கினான்; பெரும் வழிப்பறித் திருடனானான்.

தந்தை மகனைத் தேடுவதை நிறுத்தவில்லை. 10 ஆண்டுகள் தொடர்ந்து தேடினார். அன்று பெரிய காட்டின் வழியாகப் பயணம் செய்யவேண்டிய சூழ்நிலை.

நடுக்காடு! இரவு நேரம் எங்கிருந்தோ குரலொலி ஒன்று கேட்டது. டேய், உன் பயணத்தை நிறுத்து. அந்த தகப்பன் நின்றார். ஒரு முரட்டுத் திருடன் ஓடி வந்தான். அந்தத் திருடன் அந்த தகப்பனைப் பிடித்து, உன்னிடமிருக்கும் பணத்தை எடு என்றான். அந்த தகப்பனோ, என்னிடம் ஏது பணம்? நான் ஓர் ஏழை. சாப்பிடாமல் என் பயணத்தைத் தொடர்ந்து வருகின்றேன் என்றார். அந்தத் திருடனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. பணம் இல்லாத நீ பிணமாவதுதான் நல்லது என்று சொல்லிவிட்டு அந்தத் தகப்பனை வெட்டுவதற்கு அரிவாளை எடுத்து, தனது இடது கையை ஓங்கினான். அப்போது அந்தத் தகப்பனுக்கு ஒரு சந்தேகம்! என்ன சந்தேகம்? காணாமல் போன அவருடைய மகன் இடது கை பழக்கமுடையவன். ஆகவே அந்தத் திருடனைப் பார்த்து, தகப்பன், சற்றுப் பொறு , என் தலையை வெட்டுவதற்கு முன் நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விழைகின்றேன் என்றார். அதற்கு அந்தத் திருடன், என்ன சொல்ல விரும்புகின்றாய்? சீக்கிரம் சொல் என்றான். தகப்பன், நீ யார்? என்றார். அதற்கு அந்தத் திருடன், நான் யாராக இருந்தால் என்ன? முதலில் நீ யார்? என்று சொல் என்றான். அந்தத் தகப்பனோ, நான் காணாமல் போன மகனைத் தேடி அலையும் தகப்பன் என்றார். உடனே திருடன் அவன் முன்னே நிற்பது யார் என்பதை அறிந்து கொண்டான். தகப்பனின் காலில் விழுந்து, அப்பா நீங்கள் தேடும் அந்த மகன் நான் தான். நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா? என்னைத்தான் நீங்கள் தேடிவந்திருக்கிறீர்கள் என்றான்.

பிரிந்தவர் கூடினர்! தந்தையும் மகனும் வீட்டிற்கு வந்தனர்!

இந்தக் கதையில் வந்த தகப்பனைப் போன்றவர்தான் நம் ஆண்டவராம் இயேசு.

பாவம் என்பதற்கு திருட்டு என்ற பொருளும் உண்டு.

இயேசு ஒரு திருடரைத் தேடி எரிகோ நகருக்குச் சென்றார். இன்னொரு திருடனைத் தேடி கல்வாரி மலைக்குச் சென்றார்.

முதல் திருடரை இயேசு ஒரு மரத்தின் மீது சந்தித்தார். லூக் 19:1-10 முடிய உள்ள பகுதி : சக்கேயு என்னும் குள்ள மனிதர் ஒருவர் எரிகோ என்னும் நகரிலே வாழ்ந்து வந்தார். அவர் குள்ளனாகவும் பாவியாகவும் இருந்ததால் ஒரு மரத்தின் மீது அமர்ந்து இயேசுவைப் பார்க்க நினைத்தார். தன்னைப் பார்க்க நினைத்தவரைப் பார்த்தார் இயேசு. அந்த மரத்திலிருந்த சக்கேயு அருகில் நின்று, இழந்து போனதை தேடி மீட்கவே நான் வந்தேன் என்று சொல்லி, அவரை மரத்தை விட்டு கீழே இறங்கச் சொன்னார். உன் பாவத்தை உடனே கைவிடு என்றார்.

அழகான பாவ அறிக்கையில் சக்கேயு சொன்னது என்ன? ஆண்டவரே என் உடைமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகின்றேன் ; நான் யார் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகின்றேன் என்றார். சக்கேயு ஒரு பாவி; அவரை இயேசு மன்னிக்கின்றார்.

கல்வாரியிலே ஒரு திருடன். லூக் 23:38-43 முடிய உள்ள பகுதி. இரண்டு திருடர்களில் ஒருவன், நாம் துன்பப்படுவது முறையே என்று சொல்லிவிட்டு மனம் மாறி இயேசுவைப் பார்த்து, என்னை ஏற்றுக்கொள்ளும் என்றான். உடனே இயேசு அவன் பாவத்தை மன்னித்தார்.

இன்றைய நற்செய்தியிலே யோவா 8:1-8 - இல் ஒரு பாவியின் மனம் இயேசுவைத் தேடுகின்றது. அவர் ஒரு திருடி. தன் அழகை வைத்து எத்தனையோ பேரின் தூய மனத்தைத் திருடியவர்! ஆனால் இயேசு அவரை மன்னித்துவிடுகின்றார்.

இந்த உலகத்திலே சிலர் தங்களுடைய பாவங்களை மறைத்து மற்றவர்களுடைய குற்றங்களைக் கண்டுபிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் பதவியை, பட்டத்தை, பணத்தை, பரிசை பிறரிடமிருந்து கவர்ந்துகொள்கின்றார்கள்.

சிலர் நல்ல பெயரைக் கவர்ந்துகொள்கின்றார்கள்!
 சிலர் நீதியைக் கவர்ந்துகொள்கின்றார்கள்!
சிலர் நேர்மையைக் கவர்ந்துகொள்கின்றார்கள்!
சிலர் மகிழ்ச்சியைக் கவர்ந்துகொள்கின்றார்கள்!
சில சின்னப் பிள்ளைகள் முறுக்கைத் திருடி இருப்பார்கள்; கெட்டி உருண்டையைத் திருடி இருப்பார்கள் ; பென்சிலைத் திருடி இருப்பார்கள் ; பேனாவைத் திருடி இருப்பார்கள்.

ஓர் அப்பாகிட்ட வாத்தியார், உங்கள் பையன் தினமும் பென்சிலைத் திருடிகிட்டு வீட்டுக்கு வர்றான் அப்படின்னாரு. அதற்கு அந்த அப்பா, மகனைப் பார்த்து, நான் தினமும் ஆபீஸ்ஸிலிருந்து பேனாவைத் திருடிக்கிட்டு வர்றேனே! அது பத்தாதா? என்றார். நாம் எல்லாருமே பாவிகள்தான்.

நற்கருணை உருவிலே நம்மைத் தேடிவரும் இயேசுவின் பாதத்திலே விழுந்து, சுவாமி நான் பாவி என்போம்.

முதல் வாசகம் கூறுவது போல நடந்ததை மறந்துவிட்டு, இரண்டாம் வாசகம் கூறுவது போல கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதி வாழ்வில் தொடர்ந்து முன்னேறுவோம். இயேசு அப்போது நமது பாவங்களையெல்லாம் மன்னித்து தமது பிள்ளைகளாக நம்மை ஏற்றுக்கொள்வார்.

மேலும் அறிவோம் :
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை ; கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு (குறள் : 290).

பொருள்: களவு செய்வோர்க்கு உயிரோடு வாழும் நிலையும் விரைவில் தவறிப்போகும்! கள்வை உள்ளத்தாலும் நினைத்துப் பாராதவர்க்குத் தேவருலகு ஆகிய வானகம் தவறாது கிடைக்கும்.




இயேசுவின் நிமிர்ந்த பார்வை

“அக்கினிப் பிரவேசம்” - இது ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை.
கல்லூரியில் படிக்கும் இளம்பெண் பேருந்துக்காகக் காத்து நிற்கிறாள். இருட்டிவிட்டது. இடியுடன் கூடிய மழைவேறு. ஒரு வழியாக பேருந்து வருகிறது; ஆனால் நிற்காமல் போய் விடுகிறது! தனியே தவிக்கிறாள்.

படகுக்கார் ஒன்று வந்து உரசுவதுபோல் பக்கத்தில் நிற்கிறது. ஓட்டி வந்த இளைஞன் கதவைத் திறந்து விடுகிறான். செய்வது இன்னதென்று அறியாமலேயே காருக்குள் நுழைகிறாள். ஒரு பங்களா முன் கார் நிற்கும்போதுதான் ஒருவாறு அவளுக்குப் புரிகிறது - புலியின் பிடியில் புள்ளி மானாகிவிட்ட அவளது கற்பு சூறையாடப்படுகிறது.

அழுகையோடும் இனமறியா மனஉளைச்சலோடும் நடந்தவை யெல்லாம் ஒன்றுவிடாமல் தன் தாயிடம் ஒப்பிக்கிறாள். அதிர்ச்சிதான்! ஆனால் யார் குற்றவாளி? நடந்தவையெல்லாம் கெட்ட கனவாக மறக்கச் சொல்லி வெந்நீரால் மக்களைக் குளிப்பாட்டுகிறாள். ''நீ சுத்தமாயிட்டே... உன் மனத்தை எவனும் கொடுக்கவில்லையே! உடல் தானே கெட்டது. கழுவி விட்டேன்” என்று தாய் தனக்குள் முணுமுணுத்துக் கொள்கிறாள்.

இதுதான் அக்கினிப் பிரவேசம்!

கற்பு என்பது மனத்தளவில் தான். "ஒரு பெண்ணை இச்சையோடு நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று” (மத். 5:28). மிக முக்கியம் மனநிலை.

விபச்சாரச் செயலுக்குப் பொறுப்பேற்கும் பல புறசக்திகள்வறுமை, அறியாமை, வன்முறை, பாலியல் ஆகியவை. ஆனால் விபச்சார எண்ணத்துக்கு அவரவரே பொறுப்பேற்க வேண்டும். உள்ளத்தின் நிறைவால் வாய் பேசும். மனத்தில் எதை அசைபோடுகிறோமோ, அதுவே நம்மையும் அறியாமல் வெளிப்படுகிறது. நம் மனம் அசைபோடும் அழுக்குகளை வைத்தே நாம் பிறரையும் எடை போடுகிறோம். பாலியல் தொடர்பாவை பற்றிச் சொல்லவே வேண்டாம். அவல் கிடைத்த மாதிரி.

தவறு செய்வதற்குச் சூழ்நிலையை உருவாக்கிவிட்டு தவறியவனைத் தண்டிப்பதற்குத் தயாராகும் சமூகம், சட்டத்திற்குள் தன்னை - தனது பொறுப்பற்ற தன்மையை மறைத்துப் பாதுகாத்துக் கொள்கிறது.

உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, அதை மீட்க வந்தவர் இயேசு (யோ. 3:17). நம் கவனத்தை ஈர்ப்பது இயேசு அந்தப் பெண்ணைத் தீர்ப்பிடவில்லை என்பது மட்டுமல்ல. தீர்ப்பிட வந்தவர் எவரையும் தீர்ப்பிடவில்லை என்பதுதான். ''உங்களில் குற்றமில்லாதவன் முதற்கல்லை எறியட்டும். தீர்ப்பிட வேண்டும் என்று வந்தவர்களுக்குத் தீர்ப்பிட வாய்ப்பளிக்கிறார். ஆனால் தீர்ப்பிடத் தகுதியற்றவர்கள் என்று அவர்களை உணர வைத்ததுதான் இயேசு நிகழ்த்திய மாபெரும் அற்புதம்.

நாம் அனைவரும் பாவிகள். (1 யோ. 18). ''என் இதயத்தைத் தூய தாக்கிவிட்டேன். நான் பாவம் நீக்கப் பெற்றுத் தூய்மையாய் இருப்பவன் என்று யாரால் சொல்லக் கூடும்?" நீதிமொழிகள் 20:9 விடும் சவால் இது!

"நல்லவர்கள் எல்லோரும் வெள்ளையாகவும் தீயவர்கள் எல்லோரும் கருப்பாகவும் கடவுளின் படைப்பில் இருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் நாம் எப்படி இருப்போம்?" என்று ஆசிரியர் கேட்க ஒரு மாணவன் சொன்னானாம்: 'வரிக்குதிரை போல இருப்போம் வரி வரியா கோடு கோடா கருப்பும் வெள்ளையுமாகக் கலந்து". அறிவார்ந்த பதில்! எந்த மனிதனும் முழுமையாக நல்லவனுமில்லை. முழுமையாகக் கெட்டவனுமில்லை.

தன்னிலை உணர்ந்தவர்களாய் நாமும் ''கடந்ததை மறந்துவிட்டு முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்" (பிலி 3:13-14)

"நானும் தீர்ப்பிடேன் - இனிப் பாவம் செய்யாதே". எவ்வளவு பொருத்தமான பதில்! இது அவளுக்குப் பாவம் செய்யக் கொடுக்கப்பட்ட அனுமதிச் சீட்டு அன்று, மறுவாழ்வு தந்த மாமருந்து!

பாவிகள் எல்லோரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்பது இயேசுவின் புதிய சட்டம்.

நேற்றையப் பொழுதை இறை இரக்கத்துக்கு விட்டுவிடு
இன்றையப் பொழுதை இறையன்பில் செலவிடு
நாளையப் பொழுதை இறை நம்பிக்கையில் விடியவிடு.

mm
ஒரு மாணவன் ஒழுங்காகப் படிப்பதில்லை . ஆசிரியர் அவன் ஏன் ஒழுங்காகப் படிப்பதில்லை ? என்று கேட்டதற்கு அவன், "சார்! என் அப்பாவும் அம்மாவும் இரவும் பகலும் சண்டை போடுகின்றனர். எனவே, என்னால் படிக்க முடியலை" என்றான், "யாருடா உன் அப்பா?" என்று ஆசிரியர் கேட்டதற்கு அவன், "அதைப் பற்றித் தான் சார் ஒவ்வொருநாளும் சண்டை நடக்கிறது” என்றான்.

சில தம்பதியருடைய தவறா னே நடத்தையால் அவர்களுடைய வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களுடைய பிள்ளைகளின் வாழ்வும் பாதிக்கப்படுகிறது. எனவே தான் விபசாரத்தைத் தடை செய்துள்ளார் கடவுள்,
"விபசாரம் செய்யாதே" {இச 5:18) என்றும், "பிறர் மனைவியைக் காமுறாதே" (இச 5:21) என்றும் கடவுள் கட்டளை கொடுத்தார். ஒருவர் உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் விபசாரம் செய்யக்கூடாது. (ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தில் ஏற்கெனவே பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று" (மத் 5:27) என்று கிறிஸ்து தமது மலைப்பொழிவில் கூறியுள்ளார்.

பிறருடைய மனைவியை விரும்பி நோக்காதிருப்பதுவே ஓர் ஆணுக்கு ஆண்மை (வலிமை), அறம் மற்றும் நிறை ஒழுக்கமும் ஆகும் (குறள் 148). ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதுதான் இல்லற நெறி, ஒருத்தனின் உள்ளத்தில் ஒருத்தி மட்டும் இருக்க வேண்டும். அதை விடுத்து, "நினைவெல்லாம் நித்யா, மனமெல்லாம் மல்லிகா, உடலெல்லாம் உஷா. ஆயுளெல்லம் ஆஷா, பகலெல்லாம் பாமா, இரவெல்லாம் இரம்யா " என்று ஆறுபே கரை வைத்திருக்கக்கூடாது. அவ்வாறே ஒரு பெண்ணின் உள்ளத்திலும் ஓர் ஆண் மட்டுமே இருக்க வேண்டும்.

ஓர் ஆசிரியர் மாணவர்களிடம், "கண்ணகி மதுரையை தீயினால் சுட்டு எரித்தாள். இதிலிருந்து என்ன தெரிகிறது?" என்றார். மாணவர்கள், "சார்! கண்ணகி காலத்தில் தீயணைக்கும் படை இல்லை என்பது தெரிகிறது " என்றார்கள்! கணவனையே கண்கண்ட தெய்வமாகத் தொழும் பெண். "மழை பெய்யட்டும்" என்றால் மழை பெய்யும் (குறள் 55), கற்பு நெறி பெண்ணுக்கு அணிகலனும் அரணுமாகும்.

ஆனால், இன்றைய நற்செய்தியில் ஒரு பெண் வருகிறார். அவர் விபசார குற்றத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவர். மோசேயின் சட்டப்படி. விபசாரக் குற்றத்தில் ஈடுபட்ட ஆண்-பெண் ஆகிய இருவருமே கொலை செய்யப்பட வேண்டும் (லேவி 20:10). பரிசேயரும் மறைநூல் அறிஞரும் விபசாரம் செய்த ஆணை விட்டுவிட்டு, பெண்ணை மட்டும் இயேசுவிடம் கொண்டுவந்து அவரின் தீர்ப்பை எதிர்பார்த்து கையில் கற்களுடன் காத்திருக்கின்றனர். இயேசுவோ மோசேயின் சட்டம் சரியில்லை என்றோ அல்லது அப்பெண் விபசாரம் செய்யவில்லை என்றோ கூறவில்லை, மாறாக, மக்கள் கூட்டத்திடம், "உங்களுள் பாவம் இல்லாதவர் இப்பெணமேல் கல் எறியட்டும்” என்கிறார். எல்லாரும், பெரியவர் முதலாக சிறியவர் ஈறாக, கற்களைக் கீழே போட்டுவிட்டு தலையைக் கீழே போட்டுக்கொண்டு வீடு திரும்புகின்றனர். அத்தனை பேரும், தங்கள் கண்ணிலிருந்த மரக்கட்டயைப் பார்க்காமல், அப்பெண்ணின் கண்ணிலிருந்த துரும்பை எடுக்க முற்பட்ட வெளிவேடக்காரர்கள் (மத் 7:3). தமக்கு முன்பாகக் கூனிக்குறுகி நின்ற அப்பெண்ணைப் பார்த்து கிறிஸ்து. "இனி பாவம் செய்யாதீர்” (யோவா 8:10) என்கிறார். யூதர்கள் அப்பெண்ணுக்கு விதிக்கத் துடித்த மரண தண்டனையை, இயேசு ஆயுள் தண்டனையாக மாற்றி எழுதுகிறார்.

மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய ஓர் அறிஞர் அதற்கான காரணத்தைப் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார், "மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் வாழ்க்கைப் புத்தகத்தில் ஒரு சில பக்கங்கள் கிழித்து எறியப்படுகின்றன. அப்பக்கங்களைத் திருத்திப் புதிய பதிப்பை வெளியிடும் வாய்ப்பு அவருக்கு மறுக்கப்படுகிறது.” ஆழமான அழகான சிந்தனை முத்து!

பாவிகளின் அழிவை அல்ல, அவர்கள் மனம்மாறி வாழ்வதையே கடவுள் விரும்புகிறார் (எசே 18:23). "தவறு என்பது தவறிச் செய்வது; தப்பு என்பது தெரிந்து செய்வது; தவறு செய்தவன் வருந்தி ஆகணும்; தப்பு செய்தவன் திருந்தப் பார்க்கணும்" (திரைப்படப் பாடல்).

ஒருமுறை நாம் திருந்திய பின், மறுபடியும் நமது பழைய பாவ வாழ்வை நினைக்கக்கூடாது. கடவுள் நமது பாவங்களை எல்லாம் ஆழ்கடலில் எறிந்துவிட்டார். கடவுள் நம் பாவங்களை கணிப்பொறியில் ஏற்றுபவர் அல்லர். இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் கூறுவதென்ன? "முன்பு நடந்தவற்றை மாறந்துவிடுங்கள்; முற்கால முயற்சி பற்றிச் சிந்திக்காதீர்கள். இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்" (எசா 43:18-19). இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார், "கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசு பெறவேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்" (பிலி 3:13-14).

ஒரு புண் ஆறிவிட்டது: அதன் மேல் புறத்தோல் காய்ந்துவிட்டது. ஆனால் மறுமடியும் அப்புண்ணைக் கீறிவிட்டுக் காயத்தைப் புதுப்பிப்பது முட்டாள் தனமாகும். நமது பழைய பாவங்களை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவுபடுத்தி நம்மிடம் குற்றப்பழி உணர்வை என்றும் பசுமையாக வைத்திருக்கும்படி அலகை முயற்சி எடுக்கிறது. அலகையின் வேலை என்ன? அல்லும் பகலும் கடவுளின் மக்கள்மீது குற்றம் சுமத்துகிறது (திவெ 12:10). கிறிஸ்துவின் வேலை என்ன? அல்லும் பகலும் கடவுளிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறார் (எபி 7:25). நமது பாவக் கடன் பத்திரத்தைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்துவிட்டார் (கொலோ 2:14),

"நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும். ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்" (1 யோவா 3:20). எனவே, பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிட்டு, புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்வோம் (எபே 4:22-33).
தவக்காலத்தின் இறுதிக் கட்டத்திலுள்ள நமக்குக் கிறிஸ்து கூறுவது: "உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன; இனி பாவம் செய்யாதீர்கள்."





தொடர்ந்து ஓடு!

'ஓடிக்கொண்டே அல்லது நடந்துகொண்டே இருக்கும் நாம் ஒரு கட்டத்தில் செல்ல முடியாதவாறு சாலை அடைக்கப்பட்டிருந்தால்' அந்த இடத்தை 'முட்டுச் சந்து' என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் 'டெட் என்ட்.' அதற்குப் பின் அங்கே பாதை இல்லை. இரண்டே வழிதான் இப்போது: ஒன்று, அங்கேயே நின்று விடுவது, அல்லது வந்த வழி திரும்புவது. அல்லது ஒருவேளை ரொம்பவும் ஆபத்தான நேரத்தில் நாம் முட்டுச் சந்தில் இருக்கிற மதிலை உடைத்து அல்லது தாண்டி அந்தப் பக்கம் தப்புவோம்.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் இப்படி 'டெட் என்டில்' (முட்டுச் சந்தில்) சிக்கிக்கொண்ட மூன்று பேரைப் பார்க்கிறோம்: முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள், இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், நற்செய்தி வாசகத்தில் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண். இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவின் அடிமைத்தனம் என்ற வழியற்ற பாதையில் இருக்கின்றனர். பவுல் தன்னுடைய யூத முதன்மைகள் என்னும் வழியற்ற பாதையில் இருக்கின்றார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் கல்லால் அடிபட்டு மரணம் என்ற வழியற்ற பாதையில் இருக்கின்றார். இவர்கள் மூவருக்கும் இரண்டு தீர்வுகள்: ஒன்று. இருக்குமிடத்திலேயே இருப்பது. இரண்டு, வந்த பாதை திரும்புவது. ஆனால், இந்த இரண்டு தீர்வுகளையும் தாண்டி மூன்றாவது ஒரு தீர்வைத் தருகின்றார் இறைவன்: அதுதான், 'தொடர்ந்து ஓடு!' என்பது. 'தொடர்ந்து ஓடு!' என்ற சொன்ன இறைவன், சொன்னதோடு அல்லாமல், புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்து இந்த மூவரும் தொடர்ந்து பயணிக்க வழிசெய்கின்றார். ஆக, இறைவனைப் பொறுத்தவரையில் 'என்ட்' என்பது ஒரு 'பென்ட்' மட்டுமே என்று நமக்கு ஒரே வரியில் அறிவுறுத்துகிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

முதல் வாசகத்தில் (காண். எசா 43:16-21) பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக்கிடந்த இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் எசாயா வழியாக ஆறுதலின் செய்தியைத் தருகின்றார் ஆண்டவராகிய கடவுள். கடவுள் இஸ்ரயேலருக்குத் தான் செய்த அரும்பெரும் செயல்களை முதலில் நினைவுறுத்துகின்றார்: 'கடலுக்குள் வழியை அமைத்தவரும், பொங்கியெழும் நீர் நடுவே பாதை அமைத்தவரும், தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச் செய்து, திரிகளை அணைப்பதுபோல அணைத்தவருமான ஆண்டவர்' - இவ்வாறாக, அவர்களின் செங்கடலைக் கடத்தல் நிகழ்வில் அவர் செய்த அரும்பெரும் செயல்களைப் பட்டியலிடுகின்றார் இறைவன். விடுதலைப் பயண நூல் 14ல் நாம் இந்நிகழ்வை வாசிக்கின்றோம். முன்னால் கடல், பின்னால் எகிப்தியர், எந்தப் பக்கம் சென்றாலும் மரணம் என்று அவர்கள் பாதை மூடிக்கிடந்த வேளையில், கடலில் பாதையை உருவாக்குகின்றார் கடவுள். 'அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைப் செயலைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனிமேல் என்றும் காணப்போவதில்லை. ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார். நீங்கள் சும்மா இருங்கள்!' (விப 14:13-14) என்கிறார் ஆண்டவராகிய கடவுள். இங்கே தண்ணீர் இஸ்ரயேல் மக்களுக்கு வாழ்வாகவும், எகிப்தியருக்கு அழிவாகவும் மாறுகின்றது. பழையதை நினைவுபடுத்தும் கடவுள், உடனே, 'முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள். முற்கால நிகழ்ச்சி பற்றி சிந்திக்காதிருங்கள். இதோ! புதுச்செயல் ஒன்றைச் செய்கிறேன்' என்கிறார். முற்காலத்தை நினைவுபடுத்தும் கடவுள் ஏன் முற்காலத்தை மறக்கச் சொல்கின்றார். இங்கே முற்காலம் என்பது 'செங்கடல் நிகழ்வையும்' குறிக்கலாம். 'பாபிலோனிய அடிமைத்தன நிகழ்வையும்' குறிக்கலாம். இரண்டாவதைக் குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்வோம். அடிமைத்தனத்தில் இருந்த மக்கள் தாங்கள் அந்த நிலைக்கு அழைத்து வரப்பட்டதன் வடு மிகவும் ஆழமாகவே இருந்தது. அதை நினைத்துக்கொண்டிருந்த அவர்கள் தங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும், கடவுளால்கூட ஒன்றும் செய்ய முடியாது என்றும் நினைத்துக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் கடவுள் 'புதுச்செயலை' வாக்களிக்கின்றார். அங்கே அழிவின் காரணியாக இருந்த தண்ணீர் இங்கே வாழ்வின் காரணியாக மாறுகிறது. தண்ணீர் என்ற உருவகத்தை வைத்து, 'பாலை நிலைத்தில் பாதையும் பாழ்வெளியில் நீரோடையும் உருவாகும்' என்றும், 'இம்மக்களுக்கு அந்நீரைக் குடிக்கக் கொடுப்பேன்' என்றும் சொல்கிறார் கடவுள்.

ஆக, பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்த மக்கள் தங்களுக்கென ஒரு இனிய கடந்த காலம் இருந்தாலும், நிகழ்காலத்தின் துன்பத்தால் எதிர்காலம் பற்றிய கலக்கத்தி;ல் இருக்கிறார்கள். இவர்களுக்கு, கடவுள் புதிய பாதையை உருவாக்கித் தருவதாக வாக்களித்து இவர்களின் பயணத்தில் இவர்கள் தொடர்ந்து ஓடுமாறு பணிக்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (பிலி 3:8-14), பவுல் வாழ்வில் நடந்த மிகப் பெரிய மாற்றத்தை வாசிக்கின்றோம். பவுல் தன்னுடைய முந்தைய வாழ்வை (காண். 3:4-6) விடுத்து புதிய வாழ்வுக்குப் பயணமாகிறார். எட்டாம் நாளில் விருத்தசேதனம் பெற்றவன், இஸ்ரயேல் இனத்தவன், பென்யமின் குலத்தவன், எபிரேயன், பரிசேயன் என்று தன்னுடைய சமய மற்றும் சமூக அடையாளங்களைக் குறித்துப் பெருமை பாராட்டும் பவுல், தொடர்ந்து, 'கிறிஸ்துவின் பொருட்டு எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன்' என்கிறார். மேலும், தன்னுடைய இலக்காக, 'கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புவதை' நிர்ணயித்துக்கொள்கின்றார். இந்நோக்கம் நிறைவேற, 'கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்' என்கிறார் பவுல். பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமடலில், 'பந்தயத்திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிவு பெறுபவர் ஒருவரே. எனவே, பரிசு பெறுவதற்காக நீங்களும் ஓடுங்கள்' (காண். 1 கொரி 9:24) என அறிவுறுத்துகிறார்.

ஆக, தான் எல்லா அடையாளங்களையும் இழந்துவிட்டதால் பாதை அடைக்கப்பட்ட பவுல், தொடர்ந்து ஓடுவதற்குக் காரணம் அவர் முன் இருந்து கிறிஸ்துவின் வல்லமை என்னும் இலக்கு. பழைய பாதையிலிருந்து விலகுகின்ற பவுல் பதிய பாதையாம் கிறிஸ்துவில் தொடர்ந்து ஓடுகின்றார். பாதை முடிந்தது என்ற நினைத்த அவருக்குப் புதிய பாதை கிறிஸ்துவில் விடிகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 8:1-11) யோவான் நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கிறது. பல ஓவியர்களின் ஓவியங்களில், இயக்குநர்களின் திரைப்படங்களில் முதன்மையான இடம் பெற்றிருக்கும் 'விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் கொண்டுவரும் காட்சி' (யோவா 7:53-8:11) பல விவிலியங்களில் அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும்.இந்த நற்செய்திப் பகுதி பல முக்கியமான பிரதிகளில் காணப்படவில்லை. அல்லது சில முக்கியமற்ற பிரதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த நிகழ்வை யோவான் நற்செய்தியின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்வது சிரமமாக இருந்தாலும், 'வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள்' (யோவா 7:24) என்ற இயேசுவின் போதனையின் விளக்கவுரையாகவும், 'நீங்கள் உலகப்போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை' (8:15) என்ற வார்த்தைகளின் சுருக்கமாகவும் உள்ளது இந்நிகழ்வு.

இந்நற்செய்திப் பகுதியை கதையாடல் ஆய்வு என்ற அடிப்படையில் ஐந்து உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) தொடக்கச் சூழல் (8:1), (ஆ) இறுக்கம் (8:2-6), (இ) திருப்பம் (8:7), (ஈ) தளர்வு (8:8-11அ), மற்றும் (உ) இறுதிச் சூழல் (8:11ஆ). ஒலிவ மலையில் இரவு முழுவதும் இருந்த இயேசு பொழுது விடிந்ததும் கோவிலுக்கு வருகின்றார். ஆக, இந்நிகழ்வு நடக்கும் நேரம் அதிகாலை. இடம் கோவில். அதிகாலையில் நிகழ்வு நடப்பதால், அதற்கு முந்தைய இரவில் இந்தப் பெண் விபச்சாரம் செய்து பிடிப்பட்டிருக்கலாம். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் கொண்டுவருகின்றனர் மறைநூல் அறிஞரும் பரிசேயரும். பெண் இங்கே இருக்கிறார்? கூட இருந்த ஆண் எங்கே? என்பதுதான் முதல் கேள்வி. அல்லது ஒருவேளை இந்தப் பெண் தனக்குத்தானே விபச்சாரம் செய்து கொண்டாரா? அப்படிச் செய்தால் அதன் பெயர் தன்னின்பம் தானே. அது எப்படி விபச்சாரம் ஆகும்? இரண்டாம் கேள்வி.இயேசு, 'போதகரே' என யோவான் நற்செய்தியில் இங்கு மட்டுமே அழைக்கப்படுகின்றார் (காண். மத் 8:19, மாற் 9:17, லூக் 3:12). இது இயேசுவை மரியாதையாக விளிக்கும் சொல் அல்ல இங்கு. அவரது போதனையைக் கிண்டல் செய்யும் விதமாக 'போதகரே' என அழைக்கின்றனர். 'இப்படிப்பட்டவர்களை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்று மோசே சட்டம் சொல்கிறது.' மோசே சட்டம் சாட்சிகளோடுதான் ஒரு குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது (காண் இச 17:6, 19:15). ஆனால் இங்கே சாட்சிகள் இல்லை. குற்றச்சாட்டு மட்டுமே இருக்கிறது. மேலும், மோசேயின் சட்டத்திலும், இயேசுவின் காலத்தில் புழக்கத்தில் இருந்த மிஷ்னாவின் சட்டத்திலும், விபச்சாரம் செய்யும் ஆண்தான் தண்டிக்கப்படுகிறார் (காண். லேவி 20:10, இச 22:22). ஆக, இங்கே வந்திருப்பவர்களின் நோக்கம் சட்டத்திற்கு கீழ்ப்படிதலின் அடிப்படையில் அல்ல. 'இயேசுவின் மேல் குற்றம் சுமத்த' அந்தப் பெண்ணைப் பயன்படுத்துகிறார்கள் இவர்கள். 'கல்லால் எறிந்து கொல்லுங்கள்' என்று இயேசு சொன்னால், இயேசு உரோமைச் சட்டத்திற்கு எதிராக செயல்படுபவரகவும், அல்லது கருணையற்ற ரபியாகவும் மாறிவிடுவார். ஏனெனில், இயேசுவின் சமகாலத்தில் கொலை தண்டனை விதிப்பது என்பது உரோமை அரசுக்கும் மட்டும் உரியது என்று இருந்தது. 'எறிந்து கொல்ல வேண்டாம்' என்று சொன்னார் அவர் மோசேயின் சட்டத்தை மீறியவராகக் கருதப்படுவார்.' இயேசு இவர்களின் கேள்வியைத் தவிர்ப்பதற்காக குனிந்து தரையில் எழுதுகின்றார். அவர் தரையில் அவர்களுடைய பாவங்களை எழுதினார் என்று சிலர் சொல்வார்கள். அதனால்தான் என்னவோ, 'பதில் சொல்லும்!' என்று அவரை அவசரப்படுத்துகின்றனர். தீர்ப்பிடுமாறு கூட்டி வந்தவர்களை இப்போது இயேசு கூண்டில் ஏற்றுகின்றார்.'உங்களில் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்!' என்று சொல்லிவிட்டு, மீண்டும் தரையில் எழுதத் தொடங்குகிறார். எல்லாரும் போகின்றனர்.இயேசுவும் அப்பெண்ணும் அங்கே நின்றுகொண்டிருக்கின்றனர். இப்போது இயேசுவே பேச்சைத் தொடங்குகின்றார். 'அம்மா, அவர்கள் எங்கே? உன்னை யாரும் தீர்ப்பிடவில்லையா?' 'இல்லை' என்கிறார் பெண். 'நானும் தீர்ப்பளிக்கவில்லை. நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர்' என பெண்ணிடம் இயேசு சொல்வதுடன் நிறைவடைகிறது நிகழ்வு.

அவர்கள், 'இவள்' என்று சொன்னவரை, இயேசு, 'அம்மா' என மரியாதையுடன் அழைக்கிறார். இந்த ஒற்றைச் சொல்லிலேயே அவர் அவருக்குப் புதுவாழ்வு தந்துவிடுகின்றார். அத்தோடு நில்லாமல், 'இனி பாவம் செய்யாதீர்!' என அறிவுறுத்துகின்றார். ஆக, 'பாதை ஒரு முறை அடைக்கப்பட்டுவிட்டது. நான் உமக்கு புதிய பாதை ஒன்றைத் தொடங்குகிறேன். மீண்டும் பாவம் செய்து அதை அடைத்துவிடாதீர்!' என்று சொல்லி அனுப்புகிறார் இயேசு. தன் வாழ்வுப் பாதையில் அவர் தொடர்ந்து ஓடுமாறு பணிக்கிறார் இயேசு.

இவ்வாறாக, இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களுக்குப் புதிய பாதையை அமைத்தும், இரண்டாம் வாசகத்தில் புதிய இலக்கை பவுலுக்குத் தந்தும், நற்செய்தி வாசகத்தில் பெண்ணுக்கு மன்னிப்பு அளித்தும், இவர்கள் தொடர்ந்து ஓடுமாறு செய்கின்றார் இறைவன்.

இன்று நம் வாழ்வில் நாம் எதிர்கொள்கின்ற பாதை முடிவுற்ற நிலைகள் எவை? அவற்றைக் கடந்து நாம் எப்படி ஓடுவது? மூன்று வழிகளைச் சொல்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

1. கடந்ததை மறந்துவிடுவது

மூன்று வாசகங்களிலும் இந்தச் சொல்லாடல் நேரிடையாகவும் மறைமுகமாகவும் வருகிறது. அடிமைத்தனம் என்னும் கசப்பான அனுபவத்தை மறக்கச் சொல்லி அழைக்கிறது முதல் வாசகம். சமய சமூக அடையாளங்களை மறக்கச் சொல்கிறது இரண்டாம் வாசகம். பாவ வாழ்வை மறக்கச் சொல்கிறது நற்செய்தி வாசகம். 'மறத்தல்' நம் வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. நம் குழந்தைப் பருவம் தொடங்கி இன்றுவரை நடந்தவை எல்லாம் நமக்கு நினைவில் இருந்தால் நாம் பைத்தியமாகிவிடுவோம். நம் மூளை எதை வைத்துக்கொள்ள வேண்டுமோ அதை வைத்துவிட்டு மற்றதை மறந்துவிடுகிறது. கடந்த காலத்தில் நம்முடைய மனத்தைக் கட்டியிருக்கும்போது நம்மால் முன்னேறிச் செல்ல முடியவில்லை. அதாவது, யானையைச் சிறிய சங்கிலியால் கட்டுவதுபோல. யானை மிகவும் பலம் வாய்ந்தது. ஆனால், அதை எப்படி பாகானால் சிறிய சங்கிலியைக் கொண்டு கட்ட முடிகிறது? குட்டியாக இருக்கும்போதே யானைக்குக் கட்டப்படும் சங்கிலி அதனால் உடைக்க முடியாததாக இருக்கிறது. ஆக, 'என்னால் உடைக்க முடியாது' என்ற கடந்த கால அனுபவம் யானைக்கு ஆழமாக மூளையில் பதிந்துவிடுவதால், இறுதிவரை அது சங்கிலியை உடைக்கும் முயற்சியில் ஈடுபடுவதே இல்லை. கடந்த காலத்தை மறக்கும்போது கடந்த காலம் நம்மில் விதைத்த எதிர்மறை எண்ணங்கள், உணர்வுகள், அனுபவங்கள் ஆகியவற்றை மறக்க வேண்டும்.

2. இலக்கு நிர்ணயம்

பழையதை மறந்துவிட்டால் மட்டும் போதுமா? புதியது நோக்கி நகர வேண்டும். இல்லை என்றால் நாம் அப்படியே தேங்கி விடுவோம். புதியது என்பது புதிய இலக்கு. பவுல் தன் பழையதை மறக்க புதியது ஒன்றோடு தன்னை இணைத்துக்கொள்கிறார். 100 மீட்டர் ஓட்டத்தில் அல்லது உயரம் தாண்டுதல் அல்லது நீளம் தாண்டுதலில் பங்கேற்பது போல. விளையாட்டு வீரர் தன் 'உந்தியக்கப் பலகையை' மறப்பதோடல்லாமல் இலக்கை மனத்தில் கொண்டால்தான் வெற்றி பெற முடியும். நம் வாழ்க்கை வழியற்ற பாதையை அடைந்துவிட்டால், அதையும் தாண்டி நம்முடைய இலக்கைப் பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆக, அடுத்தடுத்த என்று இலக்கு மாறிக்கொண்டே இருக்க வேண்டும். புதிய இலக்குகள் நமக்கு புதிய வேகத்தைத் தரும். திடீரென்று வேலை பறிபோய்விட்டதா. உடனடியாக, ஓய்வு நேரத்தை எப்படி பயன்படுத்துவது? என்ற இலக்கு வேண்டும். உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டதா. அதை ஓய்வுக்கான வாய்ப்பாக பயன்படுத்தி அடுத்துச் செய்ய வேண்டிய வேலைகளைத்திட்டமிட வேண்டும். ஆக, 'டெட் என்ட்' என்பது நமக்கு அன்றாடம் வரலாம். ஓடிக்கொண்டே இருக்கும் நமக்கு எதிரே சுவர் வந்துவிட்டதால் வருத்தப்பட வேண்டுமா? இல்லை. அந்தச் சுவரில் ஓவியம் வரையக் கற்கலாமே! அப்படிக் கற்றால், தடையே நமக்கு இலக்காக மாறிவிடும்.

3. வாழ்க்கையைப் பற்றிய பார்வையை அகலமாக்குவது

மற்றவர்கள் அந்தப் பெண்ணின் பழைய வாழ்வைப் பார்த்தார்கள். ஆனால், இயேசுவோ அவளின் புதிய வாழ்வைப் பார்க்கிறார். நாகேஷ் அவர்கள் ஒரு திரைப்படத்தில் சொல்வதுபோல. பிரச்சினை என்பது சிறிய கூழாங்கல் போன்றது. அதை நம் கண்ணுக்கு அருகில் வைத்துப் பார்த்தால், அது பெரியதாகத் தெரிவதோடு, நம்முடைய பார்வையை மறைத்துவிடும். கொஞ்சம் தள்ளி வைத்துப் பார்த்தால் சின்னதாகத் தெரியும். அப்படியே நம் முதுகிற்குப் பின் எறிந்துவிட்டால் அது மறைந்துவிடும். 'பாவம்' என்பதை, 'தவறுதல்' என்பதைச் சின்னக் கல்லாகப் பார்க்கும் இயேசு அதை பின்னால் எறிந்துவிடுகிறார். மற்றவர்களோ தங்கள் கண்களுக்கு மிக அருகில் வைத்துப் பார்க்கின்றனர். பார்வை அகலமாகும்போது பாதை இன்னும் விரிவாகும். நம்மால் தொடர்ந்து ஓட முடியும். இங்கே இயேசு, தீர்ப்பிட வந்தவர்களின் பார்வையையும் அகலமாக்குகின்றார். பெண்ணின் பார்வையையும் அகலமாக்குகிறார். வாழ்வில் அனைத்தையும் அனைவரையும் சிறு சிறு புள்ளிகளாக இணைத்துப் பார்க்கிற ஒருவரால்தான் வாழ்வு என்னும் முழு ஓவியத்தைப் பார்க்க முடியும். இயேசுவால் பார்க்க முடிகிறது அப்படி. இயேசுவின் பார்வை நமக்கு இருந்தால் நம்மாலும் அது முடியும்.

இறுதியாக,

இன்று 'டெட் என்ட்' - பாதை முடிவு - வந்தே தீரும். நம் தனிப்பட்ட வாழ்வில், உடல்நலத்தில், உறவுநிலைகளில், பணியில், படிப்பில். இப்படி பாதை அடைக்கப்பட்டது என்று எண்ணியவர்கள் எல்லாம் - அன்னை தெரசா, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், நம் அப்பா, அம்மா - நெடும் பயணம் கடந்து சென்றார்கள். முடிந்துவிட்ட பாதையில் அமர்ந்து கண்ணீர் வடிக்கவில்லை. ஏனெனில், அவர்களுக்குத் தெரியும் - அவரோடு கைகோர்க்கும்போது முடிவு என்பது விடிவு என்று.



தீர்ப்பிடாது வாழ்வோம்

  ஓர் ஊரில் ஞானி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவரிடத்தில் ஒருவன் வந்து, “குருவே என்னுடைய பாவங்களை எல்லாம் மன்னித்தருள்க” என்று கெஞ்சிக் கேட்டான். அதற்கு அவர், “முதலில் நீ என்ன பாவம் செய்தாய் என்று சொல், அதன்பிறகு அது மன்னிக்கக்கூடிய குற்றமா? இல்லையா? என்று சொல்கிறேன்” என்றார். அவன், ‘ஐயா! நான் இந்த ஊரில் இருக்கக்கூடிய எல்லா மனிதர்களைப் பற்றியும் தீர்ப்பிட்டுக் கொண்டும், அவதூறு பேசிக்கொண்டும் இருப்பேன். இதுதான் நான் செய்த மிகப்பெரிய பாவம்” என்றான்.

எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுவிட்டு குரு அவனிடம், “முதலில் நீ போய் உன்னுடைய வீட்டில் இருக்கக்கூடிய தலையணையை எடுத்துக்கொண்டுவந்து, அதிலுள்ள பஞ்சை எல்லாம் தெருவில் வைத்து, காற்றில் பறக்கவிட வேண்டும். அதன் பின்னர் வந்து என்னைப் பார்” என்றார். அவனும் தன்னுடைய வீட்டிற்குச் சென்று தலையணை எடுத்துவந்து, அதிலுள்ள பஞ்சை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, குருவிடம் திரும்பி வந்தான்.

  “குருவே! நீங்கள் சொன்னது போன்று நான் எல்லாவற்றையும் செய்துவிட்டேன், இப்போது என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டதுதானே!” என்றான். அதற்கு அவர், “பஞ்சைக் காற்றில் பறக்கவிட்டால் உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று யார் சொன்னது?. இப்போது மீண்டுமாக நீ போய், காற்றில் பரந்த பஞ்சை எல்லாம் சேகரித்துக்கொண்டு வா” என்றார். அவனும் போய் காற்றில் பரந்த பஞ்சை திரும்ப சேகரிக்கச் தொடங்கினான். அவனால் எல்லாற்றையும் சேகரிக்க முடியவில்லை. அது அவனுக்குக் கடினமாக இருந்தது. இதனால் அவன் வருத்தத்தோடு திரும்பிவந்து, குருவிடம் தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொண்டான்.
 
அப்போது ஞானி அவனிடம், “காற்றில் பரந்த பஞ்சை மீண்டுமாக சேகரிப்பது கஷ்டம்தானே, அதுபோன்றுதான் இதுவரைக்கும் நீ பரப்பிய அவதூறுகளை, தவறான தீர்ப்பிடல்களைத் திரும்பப் பெறவதும். ஆதலால் உன்னுடைய குற்றங்களை மன்னிக்கவே முடியாது” என்று சொல்லி அங்கிருந்து அவனை திரும்பிப் போகச் சொன்னார். ஒருவரைப் பற்றி நாம் பரப்பும் அவதூறு, தவறான தீர்ப்பிடல்கள் எல்லாம் எந்தளவுக்கு கொடியது என்பதால்தான், அப்படிப்பட்ட குற்றம் மன்னிக்க முடியாது என்றார் அவர்.
 
தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாள் வாசகங்கள் “தீர்ப்பிடாது வாழவோம்” என்றதொரு அழைப்பைத் தருகிறது. இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதற்காக பாவத்தில் பிடிப்பட்ட பெண் ஒருவரை மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள் அவரிடம் கொண்டுவருகிறார்கள். ஆனால் இயேசு அவர்களின் தீய எண்ணத்தை அறிந்துகொண்டு “உங்களில் பாவம் செய்யாதவர் இப்பெண்ணின் மீது முதலில் கல் எறியட்டும்” என்று சொல்கிறார். உடனே சிறுவர் தொடங்கி, பெரியவர் வரை யாவருமே அவ்விடத்திலிருந்து களைந்துபோய்விடுகின்றனர். அதன்பிறகு இயேசு அப்பெண்ணைப் பார்த்து, “நானும் உன்னைத் தீர்ப்பிடேன், இனிமேல் பாவம் செய்யாதீர்” என்று சொல்லி அனுப்புகிறார்.
 
இங்கே ஒருவரைப் பற்றித் தீர்ப்பிட, கடவுளைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை என்று ஆண்டவர் இயேசு மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறார். மனிதர்களாகிய நாம் ஒருவரைப் பற்றிய முழுமையாகத் தெரியாமலே தீர்ப்பிடுகிறோம். இன்னும் சில நேரங்களில் நம்முடைய தவறை மறைப்பதற்காக பிறரைத் தீர்ப்பிடுகிறோம். பிறருடைய தவறைப் பெரிதுபடுத்துகிறோம். அதனால் ஆண்டவர் இயேசு கூறுகிறார், “பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள், அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்” என்று (மத் 7:1). இயேசு தொடர்ந்து சொல்வார், “உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?” என்று.

  ஆதலால் பிறரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கும் முன்னால் நாம் தீர்ப்பளிக்கத் தகுதியானவர்கள்தானா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். விபசாரித்தில் பிடிபட்ட பெண்ணை ஆண்டவர் இயேசு தீர்ப்பிட்டிருக்கலாம். ஏனென்றால் அவர் பாவமற்றவர். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக அப்பெண்மணியை, அவளுடைய பாவங்களை மன்னித்து, இனிமேல் பாவம் செய்யாதே” என்று சொல்லி அனுப்பிக்கிறார்.

ஆம், தீயோர் அழிவுற வேண்டும், கெட்டு மடியவேண்டும் என்பதல்ல, மாறாக அவர்கள் மனம்மாற வேண்டும் என்பதுதான் கடவுளின் மேலான விரும்பாக இருக்கிறது. இதைதான் நாம் விவிலியத்தின் பல இடங்களில் குறிப்பாக எசேக்கியல் 33:11 ல் வாசிக்கின்றோம்.
 
நம் கடவுள் நமது அழிவில் மகிழ்கின்ற கடவுள் அல்ல, மாறாக நாம் அனைவரும் வாழவேண்டும் என்று விரும்புகின்ற கடவுள்.
 
நமது அண்டை மாநிலமான கேரளாவில் நாத்திக அலை பரவியிருந்த நேரம் அது. அப்போது ஓரிடத்தில் சமய பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சமய சொற்பொழிவு நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடிரென்று கூட்டத்திலிருந்து எழுந்த ஒருவன், “கடவுள் என்பது ஒரு கற்பனை, கடவுள் என்று ஒருவர் இந்த உலகத்தில் இல்லவே இல்லை. கடவுளை நம்புகிறவன் முட்டாள். ஒருவேளை கடவுள் இந்த உலகில் இருக்கிறார் என்று சொன்னால், அவர் என்னை மூன்று நிமிடத்திற்குள் அடித்துக் கொல்லட்டும்” என்று திரண்டிருந்த கூட்டத்தினர் முன்பாகச் சவால் விட்டான். இதைப் பார்த்து மக்கள் வியப்படைந்தனர்.
 
ஒரு நிமிடம் ஆனது, இரண்டு நிமிடம் ஆனது, மூன்று நிமிடமும் ஆனது. ஆனால் அவன் அப்படியே உயிரோடு இருந்தான். உடனே அவன் மக்கள் கூட்டத்தைப் பார்த்து, “பார்த்தீர்களா! கடவுள் இல்லை என்பது இப்போது நிரூபணம் ஆகிவிட்டது. கடவுள் ஒருவேளை இருந்திருந்தால் நான் இந்நேரம் இறந்திருப்பேனே!” என்று கூட்டத்தைப் பார்த்து ஏளனமாகப் சிரித்தான். மக்களும் அவனுடைய பேச்சை நம்ப ஆரம்பித்தார்கள். இதனால் கூட்டத்தில் மிகப்பெரிய குழப்பமே ஏற்பட்டது
 
அப்போது அங்கே இருந்த இட்டிவரா என்ற சாது மக்கள் கூட்டத்தைப் பார்த்து, “கடவுள் தந்தையும், தாயுமானார். இன்னும் சொல்லப்போனால் நம் தந்தை தாயைவிட நம்மீது மேலான அன்புகொண்டிருப்பவர், அப்படிப்பட்ட கடவுள் நாம் அழிவுறவேண்டும் என்று விரும்புவாரா?. ஒருபோதும் இல்லை. கடவுள் நம்மைக் காப்பாவரே அன்றி, அழிப்பவர் அல்ல” என்று முடித்தார்.
 
திரண்டிருந்த மக்கள்கூட்டம் இதைக் கேட்டு கடவுள் உண்மையிலே இருக்கிறார் என்று நம்பத் தொடங்கினார்கள்.
 
ஆம், நம் கடவுள் நாம் அழிவுறவேண்டும் என்று அல்ல, மாறாக வாழவேன்றும் என்று விரும்புகிறார். அதனால் இயேசு விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை பாவி என்று தீர்ப்பிடாமல், அவளை மனதார மன்னித்து, அவள் புதிய ஒரு வாழ்க்கை வாழ வழிவகுக்கின்றார்.
 
இன்றைய நாள் வாசகங்கள் நமக்குத் தரும் அடுத்த சிந்தனை. நாம் நமது கடந்தகால வாழ்வை மறந்துவிட்டு, புதியதொரு வாழ்க்கை வாழவேண்டும் என்பதுதான். எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் கூறுகிறார், “முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சி பற்றிச் சிந்திக்காதீர்கள்; இதோ புதுச்செயல் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது” என்று கூறுகிறார். இன்றைய இரண்டாம் வாசகத்திலும்கூட பவுல் பிலிப்பியருக்கு எழுதுகிறபோது கூறுகிறார், “கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதை கண்முன் கொண்டு, பரிசு பெறவேண்டிய இலக்கை நோக்கி தொடர்ந்து ஓடுகிறேன்” என்று.
 
ஆகையால் இந்த தவக்காலத்தில் நமது கடந்தகால - பாவமான வாழ்வை -முற்றிலுமாக மறந்துவிடுவோம்.  புதியதொரு வாழ்க்கை வாழ முயற்சி எடுப்போம். ஏனென்றால் கடவுள் நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்துவிட்டார், நம்மை தூய, மாசற்றவர்களாக மாற்றிவிட்டார்.
 
முதல் உலகப்போரின்போது இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்தவர் லீயோட் ஜார்ஜ் என்பவர். ஒருநாள் அவர் தன்னுடைய நண்பரோடு வீட்டுக்குப் பின்பக்கம் இருக்கக்கூடிய கோல்ப் மைதானத்தில் கோல்ப் ஆடிவிட்டு, புல்வெளி மைதானத்தின் கதவைக் கடந்துவந்தார். அவருக்குப் பின்னால் வந்த நண்பர்  கதவை மூடாமலே விட்டுவிட்டார்.
 
அதைக் கவனித்த பிரதமர், திரும்பி வந்து கதவை அடைத்துவிட்டு, “கதவைக் கடந்து வந்துவிட்டால், அதை அடைத்துவிடுவது எனது பழக்கம்” என்று சொல்லிவிட்டுச் சொன்னார், “உங்களுக்கு  மனநிம்மதி வேண்டுமெனில் உங்களுக்குப் பின்னால் உள்ள கதவை மூடிவிடுங்கள்; உங்களது கவலைகளை அங்கேயே விட்டுவிடுங்கள்; கடந்ததைத் தொடாதீர்கள்; நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்” என்று சொல்லி முடித்தார்.

ஆம், நாம் ஒவ்வொருவரும் நமது கடந்த கால வாழ்க்கையை மறந்துவிட்டு, புதியதொரு வாழ்க்கை வாழ முயற்சி எடுப்போம். அதுவே இந்தத் தவக்காலத்தில் இறைவன் தரும் அழைப்பு.


  “கடந்த காலம் என்பது கனவு; எதிகாலம் என்பது கற்பனை; இன்று நன்றாக வாழ்ந்தால் ஒவ்வொரு கடந்த நாளும் சந்தோசக் கனவாகும், நாளைய நம்பிக்கையை கற்பனையாக்கும். இன்றைய நாளை மட்டும் பாருங்கள், இன்று மட்டுமே வாழுங்கள்” என்பார் காளிதாசர் என்ற மகான். ஆண்டவர் இயேசுகூட நாளைக்காக கவலைப்படாதீர். ஏனெனில் நாளைய வழி பிறக்கும்” என்று இந்த நாளில் வாழச் சொல்வார் (மத் 6:34).

ஆகவே இந்த தவக்காலத்தில் நாம் நமது கடந்த கால வாழ்வை மறப்போம். புதியதொரு வாழ்க்கை வாழ முயற்சிப்போம். குறிப்பாக பிறரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடும் மனநிலையிலிருந்து மனம் மாறுவோம். இறைவனின் அளவு கடந்த அன்பை உணர்ந்து, இறைவழியில் நடப்போம். இறையருளை நாமும் நிறைவாய் பெறுவோம்.

  எனவே தீர்ப்பிடாது வாழ்வோம். இறைவன் தரும் அருளை நிறைவாய் பெறுவோம்.


Tuesday 26 March 2019

தவக்காலத்தின் 4-ஆம் ஞாயிறு

தவக்காலத்தின் 4-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்:


யோசுவா. 5:9-10,12
2 கொரிந்தியர். 5:17-21
லூக்கா. 15:1-3, 11-32



ஜெர்மன் நாட்டு ஓவியர் ஒருவர் இயேசுவைப் போல சிறுவன் ஒரு படத்தை வரைவதற்கு மாதிரிக்காக ஒரு சிறுவனைப் பல இடங்களில் தேடினார். இறுதியில் ஒரு சிறுவனைக் கண்டுபிடித்து அவனை வரைந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசைப் போன்ற தோற்றத்தில் உள்ள ஒரு மனிதனை ஓவியமாக வரைய வேண்டும் என்று தேடி ஒருவனைக் கண்டுபிடித்தார். வரைந்து முடிக்கும்போது அவனைப் பார்த்து சில ஆண்டுகளுக்கு முன் இயேசுவைப் போன்று வரைந்த சிறுவனின் முகச்சாயல் உன்னிடம் சிறிது தெரிகிறது என்றார் அந்த ஓவியர். அதற்கு அந்த மனிதன், நான் சிறுவனாக இருக்கும்போது, அன்பும், இரக்கமும் உள்ள தந்தையும், சகோதர பாசம் கொண்ட சகோதரனும் எனக்கு இருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் வளர்ந்தபின் மனம் போன போக்கில் வாழ்ந்து இன்று இந்த நிலைக்குத் தள்ளப்பட்டேன் என்றான் அந்த மனிதன்.

பெற்றோர்களின் அன்புக்கு நன்றியுடன் நடந்து கொள்ளாத பிள்ளைகளே இன்று அதிகம். ஊதாரி மகன் அன்புள்ள தந்தையிடமிருந்து பிரிந்து சென்றான். இவனது அன்பு உறவுகளிலிருந்து பிரிந்து செல்கிறான். இப்படி தந்தையின் இல்லத்தை விட்டுப் பிரிந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை விடுப்பதே இன்றைய வழிபாட்டின் மையக் கருத்தாகும்.

பழைய ஏற்பாட்டிலே இஸ்ரயேல் மக்கள் எவ்வளவு குற்றம் புரிந்தாலும் கடவுள் தனது மாறாத அன்பினால் மன்னித்து தேனும், பாலும் பொழியும் புதிய நாட்டையே பரிசாக வழங்கினார்.

ஊதாரி மகன் தந்தையிடமிருந்து பிரிந்து சென்று பன்றியோடு சேர்ந்து பன்றியாக, இழிவான நிலைக்குத் தள்ளப்படுகிறான். இந்த நிலையில் சிந்திக்கிறான். அறிவுத் தெளிவு பெற்று தந்தையின் அன்பைத் திரும்பப் பெற விரும்புகிறான். இதற்கு மூன்று செயல்பாடுகள் உதவியாக அமைந்தன:

1) சுய ஆய்வு செய்தல் 2) எழுதல் 3) ஒப்புரவாகுதல்

புதிய வாழ்வு பெற முடியும் என்ற நம்பிக்கையோடு, பாவத்தையும், தீய எண்ணங்களையும் தீயிட்டுக் கொளுத்திவிட்டு தந்தையோடு ஒப்புரவாக திரும்புகிறான். தந்தையும் வாஞ்சையோடு வரவேற்கிறார். மூத்த மகனைத் தவிர குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளது.

மூத்த மகன் தான் நல்லவன் என்பதை பல சான்றுகளுடன் சுட்டிக்காட்டுகிறான். உம் கட்டளையை மீறியது இல்லை. அடிமை போன்று உமக்கு ஊழியம் செய்த எனக்கு ஒரு ஆட்டுக்குட்டி கூட கொடுத்ததில்லையே என்று குற்றம் சாட்டுகிறான். தந்தையின் இரக்கத்தையும், பெருந்தன்மையையும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மகிழ்ச்சியடைய முடியவில்லை. தம்பியை மன்னிக்கும் மனம் இல்லை. ஏற்றுக்கொள்ளும் இதயம் இல்லை.

இறைவன் பாவிகளை வெறுப்பதில்லை . மாறாக மனம் மாறி வரும் பாவிகளை குணமாக்கும் மருத்துவர் தான் இறைவன் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஊதாரி மகனின் தந்தையிடம் இருந்த அன்பையும், பாசத்தையும், மன்னிப்பையும் நம் இதய வரிகளாக்குவோம்.

இந்த தவக்காலம் நம்மில் கிடக்கும் சுயநலம், பாவம் போன்ற ஆன்ம அழுக்குகளை அப்புறப்படுத்த அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது. நம்மில் மாற்றம் காணவும், பிறரை மன்னிக்கவும் முன் வருவோம்.





பாவத்தை விட்டுவிடுவோம் எப்போதும் நாம் மனத்தூய்மையுடையவர்களாய் வாழ என்ன செய்யவேண்டும்? என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஒரு கதை!

அவன் ஒரு பாவி! அவனுக்கு ஒரு நாள் தான் ஒரு புனிதனாக வேண்டும், அக ஒளி பெற்றவனாக, தூய்மை நிறைந்த மனம் படைத்தவனாக மாற ஆசை வந்தது.

எல்லாருக்கும் நல்வழி காட்டும் புனிதர் ஒருவர் காட்டுக்குள் வாழ்வதாக அவன் அறிந்து, அந்தப் புனிதரைத் தேடி காட்டுக்குள் சென்றான்.

அவரிடம் போய் அந்தப் பாவி, சுவாமி, நான் ஒரு பெரிய பாவி ! மனம் திரும்பி நல்லவனாக வாழ ஆசைப்படுகின்றேன். எனக்கு நல்வழி காட்டுங்கள் என்றான். அந்தப் பாவியைப் பார்த்து அந்த முனிவர், நீ போய் ஒரு வெங்காயத்தாமரைச் செடியைக் கொண்டு வா என்றார். அவனும் கொண்டு வந்தான். அந்த முனிவர், இந்தச் செடியைக் கொண்டு போய் கடலில் எறிந்து விட்டு வா என்றார். அதை எடுத்துக்கொண்டு அவன் கடற்கரைக்குச் சென்றான். அவன் எத்தனை முறை அந்தச் செடியை கடலுக்குள் எறிந்தாலும் அத்தனை முறையும் அந்தச் செடியைக் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தன அந்தக் கடலலைகள்.

பாவி திரும்பி வந்தான். நடந்ததை முனிவரிடம் சொன்னான். அதற்கு அந்த முனிவர், மகனே! அந்தக் கடலுக்கு நன்றாகத் தெரியும். ஒரு செடி கடலுக்குள் புகுந்தால் போதும் ! அது வளர்ந்து, படர்ந்து கடல் முழுவதையும் அடைத்துவிடும். அதனால்தான் அந்தச் செடி உள்ளே வராதபடி அந்தக் கடலலைகள் அதைத் தூக்கி எறிந்திருக்கின்றன.

உன் மனம் முழுவதையும் பாவத்தால் நிரப்ப ஒரு சிறு பாவம் போதும் ! ஆகவே ஒரு சிறு பாவம் கூட உனக்குள் நுழையாமல் பார்த்துக்கொள், பாவம் உன் பக்கத்தில் வரும்போது அதைத் தூக்கி எறிந்துவிடு என்றார்.

அவனும் அவ்வாறே செய்தான். புனிதனானான். கடவுளுக்கு ஏற்புடையவனானான்.

மேலும் அறிவோம்.
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல (குறள் :39)

பொருள்: அறச்செயல்களால் வருவது மட்டுமே உண்மையான இன்பம் ஆகும். புகழையும் தரும். அதற்கு மாறான வழியில் வருபவை இன்பம் போலத் தோன்றினாலும் துன்பம் ஆகும் ; புகழையும் கெடுக்கும்.



இதோ இன்னொரு பரிசேயன்

 வானகத்தில் ஒருநாள் கடவுள் உலா வந்தார். தன்னையே அவரால் நம்ப முடியவில்லை . அவருக்கே ஒரே ஆச்சரியம். இறந்தவர் அனைவரும் மோட்சத்தில்! எவருமே இல்லை நரகத்தில்!

இது எப்படி? இறைவன் சிந்தனையில் சிறிது குழப்பம். “அப்படி என்ன, உலகில் அத்தனை பேருமா யோக்கியர்களாகி விட்டனர்? இல்லை, ஒருவேளை நாம்தாம் நீதியின் தேவனாகச் செயல்பட வில்லையா? எது எப்படி இருந்தாலும் எவருமே செல்லவில்லை யென்றால் நரகம் தான் எதற்கு? நமது தீர்ப்பை மறுசிந்தனை செய்ய வேண்டும்''.

வானதூதர் கபிரியேலை அழைத்தார். "அனைவரையும் மீண்டும் நம் நீதி அரியணைக்கு முன் வரச்சொல், பத்துக் கட்டளைகளை எடுத்து ஒவ்வொன்றாகப் படி" :

கபிரியேல் வாசித்தார். முதல் கட்டளை - "நாமே உன் கடவுள். எம்மைத் தவிர வேறு தெய்வங்கள் கூடாது. இந்தக் கட்டளைக்கு எதிராக என்று இறைவன் தொடங்கியதும் எங்கோ மூலையில் ஒருவன் முணுமுணுத்தான்: “ஞாயிறுக்கு ஞாயிறு ஒரே சருவேசுரனை விசுவசிக்கிறேன் என்று சொல்வது உம் காதில் விழவில்லையா?” "என்ன சொன்னாய்?" அதட்டலோடு கேட்டார் ஆண்டவர் "ஆலயத்தில் தான் ஒரே சருவேசுரன். அன்றாட வாழ்வில் மணமுடிக்க முகூர்த்த நேரம், நோய் வந்தால் தாயத்து, பயணம் செய்தால் சகுணம்... இப்படி ஓராயிரம் சருவேசுரன்கள் என்பதை மறைத்து யாரிடம் கதை விடுகிறாய்?” எங்கும் ஒரே அமைதி. இந்த முதல் கட்டளையை மீறியவர்கள் நரகத்துக்குச் செல்லுங்கள் என்றதும் சிலர் எழுந்து சென்றனர்.

இப்படியே கட்டளை-2, கட்டளை-3, கட்டளை-4, கட்டளை-5 என்று இடையிடையே சிறிது விளக்கிச் சொன்னதும் உள்ளம் உறுத்தப் பலர் சென்றனர் நரகம் நோக்கி.

கட்டளை-6 என்று கபிரியேல் சொல்லத் தொடங்குமுன்னேயே அங்கிருந்த அத்தனைபேரும் தலைகுனிந்தபடி புறப்பட்டு விட்டனர் - ஒருவரை, கட்டையாய் கருப்பாய் வழுக்கையாய் மொழுக்கையாய் ஒரு சந்நியாசியைத் தவிர.
கடவுள் பார்த்தார். மோட்சமே காலியாகிவிட்டது தரும் சங்கடமாய் இருந்தது. அதனால் கபிரியேலிடம் சொன்னார் “மீண்டும் அனைவரையும் மோட்சத்திற்குள் வரச்சொல்". கேட்டதும் அந்த சந்நியாசி சத்தமாகக் கத்தினாராம் "என்ன நீதி இது? இப்படி நடக்கும் கான்று முன்கூட்டியே சொல்லியிருக்கக் கூடாதா?" முன்னதாகத் தெரிந்திருந்தால் தானும் கொஞ்சம் இந்த ஆறாம் கட்டளையை அசைபோட்டிருக்கலாமே என்ற ஏக்கமோ என்னவோ!

இதோ இங்கே இன்னொரு பரிசேயன், இன்னொரு மூத்த மகன். இதுதான் தங்களையே நீதிமான்களாக நினைத்துக் கொள்ளும் புண்ணியவான்களின் புனிதம்.

பாவிகளுக்காக அல்ல பரிசேயர்களுக்காகவே இயேசு சொன்ன கதை தானே ஊதாரி மைந்தன் உவமை (லூக்.15:2,3). பாவி மனந்திரும்பிய கதை மட்டுமல்ல, தன்னையே நேர்மையாளன் என்று நினைப்பவன் மனம் திரும்ப வேண்டிய கதை.

தந்தையின் அன்புத் தழுவுதலுக்காக அறிவு தெளிந்து வீடு திரும்பும் தம்பியாக மட்டுமல்ல மனந்திரும்பி வரும் பாவியை மகனாக அணைத்து ஆட்கொள்ளும் தந்தையாக, தம்பியாக ஏற்று மகிழும் அண்ணனாக மாற, வாழ மனமாற்றத்துக்கு நம்மை அழைக்கும் காலமே தவக்காலம்.

நம் கடவுள் மன்னிக்கும் தந்தை. “அவர் உன் குற்றங்களை யெல்லாம் மன்னிக்கிறார். உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்” (தி.பா.103:3) என்று தெம்போடு பாடும் திருப்பாடல் ஆசிரியர் தொடர்கிறார் “அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை. நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை (தி.பா.103:10) ஆறுதலும் புதுவாழ்வும் தரும் வார்த்தைகள்.

ஆனால் அடுத்து வரும் தி.பா.103:12 தான் நம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. “மேற்கினின்று கிழக்கு எத்துணை தொலைவில் உள்ளதோ அத்துனை தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அகற்றுகிறார்"

மேற்கு எங்கே இருக்கிறது, கிழக்கு எங்கே இருக்கிறது? இதுதான் மேற்கு இதுதான் கிழக்கு என்று நிருணயிப்பது எது? ஒருவன் தான் நிற்கும் நிலையை வைத்தே, மேற்கு, கிழக்கு, மேற்குக்கும் கிழக்குக்கும் உள்ள தொலைவு எல்லாமே தீர்மானிக்கப்படுகின்றன. நிலைப்பாட்டில் கொஞ்சம் அசைந்து நகர்ந்தால் மேற்கு கிழக்காகலாம், கிழக்கு மேற்காகலாம். ஆக, நாம் எடுக்கும் நிலைப்பாடே இறைவனின் இரக்கத்துக்கும் மன்னிப்புக்கும் நம்மை உரித்தாக்குகிறது.

“என் தந்தையிடம் செல்வேன்” - இளையமகன் எடுத்த நிலைப்பாடு தந்தையிடம் கொண்டு போய்ச் சேர்த்தது - அடிமையாக அல்ல, மகனாக. மூத்த மகன் எடுத்த நிலைப்பாடோ, தந்தை வருந்தி அழைத்தும் அடிமை போன்று வீட்டுக்கு வெளியே நிற்க வைத்தது.

“அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்" - இளையமகனின் இந்த நிலைப்பாடு, அவனது உள்ளத்தில் பாவ உணர்வை கிளர்ந்தெழச் செய்தது. அந்தக் குற்ற உணர்வு வளர்ச்சிக்கானது (பேதுருவுடையது போன்றது) அழிவுக்கானது அன்று (யூதாசுடையது போன்றது) தன்னை நீதிமானாக நினைத்த மூத்த மகனுடைய வாழ்வோ மந்த வாழ்வு, கடமைக்காக வாழும் பரிசேய வாழ்வு, பாதுகாப்போடு வாழும் போலியான வாழ்வு.

பசியே ஊதாரி மகனைத் தன்னிலை உணர வைத்தது. ஆன்மீகப் பசியோடு தாகத்தோடு இத்தவக்காலத்தில் தந்தையை நாடுவோம். அந்த ஒப்புரவு அருட்சாதனம் பெறத் தேவையானவை மூன்று என்பார். ஒப்புரவுப் பணியையே குருத்துவப் பணியாகக் கொண்ட தூய வியான்னி: 1. குருவானவரில் பிரசன்னமாக இருக்கும் கடவுளைக் காண விசுவாசம். 2. கடவுள் மன்னிப்புக்கான அருளைக் கொடுப்பார் என்ற நம்பிக்கை. 3. பாவத்தால் கடவுளைப் புண்படுத்தியதற்காக வருந்தவும் அவரை நேசிக்கவும் அன்பு.



நவீன், பிரவீன் என்ற இரு மாணவர்கள் வகுப்பில் சண்டை போட்டனர். அவர்கள் ஏன் சண்டையிடுகின்றனர்.? என்று ஆசிரியர் கேட்டபோது, நவீன் என்ற மாணவன், "சார், பிரவீன் என்னை முட்டாள் என்று திட்டுகிறான்” என்றான். ஆனால், பிரவீன் அவன் சொன்னதை மறுத்து, "இல்லை சார்! நவீன் தான் முதலில் என்னை முட்டாள் என்று திட்டினான்” என்று கூறினான். அதற்கு ஆசிரியர். "ஏண்டா நான் இங்கே ஒருத்தன் இருக்கின்றேன் என்பதை மறந்து விட்டீர்களா?" என்று கேட்டார். ஆசிரியரும் ஒரு முட்டாள்?

ஒரு வகையில் நாமனைவருமே முட்டாள்கள். நாம் செய்யும் எத்தனையோ காரியங்கள் முட்டாள் தனமானவை. ஆனால், ஒரு முட்டாள் தான் ஒரு முட்டாள் என்பதை ஏற்றுக் கொள்ளும்போது அவன் அறிவாளியாகின்றான். ஒரு பாவி, தான் ஒரு பாவி என்பதை ஏற்றுக் கொள்ளும்போது அவன் ஒரு நீதிமானாகின்றான். இந்த உண்மையை இன்றைய நற்செய்தி கூறும் "காணமற்போன மகன்" உவமை நன்கு உணர்த்தி, நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறது. கடவுளுடைய நிபந்தனையற்ற அன்புக்கும் மனிதருடைய முழுமையான மனமாற்றத்திற்கும் இவ்வுவமை சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

பாவம் என்பது கடவுளையே வெறுக்கும் அளவுக்கு ஒருவர் தம்மீது அன்பு செலுத்துவதாகும். இளைய மகன் தன்னுடைய தந்தையை வெறுத்தான்; தந்தை இறந்து போனால் நன்று என்று எண்ணினான். ஏனெனில் தந்தை உயிருடன் இருக்கும் வரை அவனுக்குத் தந்தையின் சொத்தில் பங்கு கிடைக்காது. அவன் சுதந்திரப் பறவையாகப் பறக்க முடியாது. அவ்வாறே பாவியும் ஒரு வகையில் 'கடவுள் செத்துவிட்டால் நல்லது: கடவுள் இருப்பது எனக்கு ஓர் இடையூறு. எனது கட்டுப்பாடற்ற வாழ்வுக்கு அவர் ஒரு வேகத்தடை. எனது முன்னேற்றத்துக்கு அவர் ஒரு முட்டு கட்டை' என்று எண்ணி மனக் கசப்படைகின்றான்.

பாவம் என்பது தந்தையாகிய கடவுளிடமிருந்து வெகு தொலைவில் செல்வது. சிற்றின்பப் பன்றிகள் கூட்டத்தில் வாழ்வது; பாவத் தவிட்டால் வயிற்றை நிரப்புவது. சுருக்கமாக, மகன் என்ற 2. யரிய நிலையிலிருந்து அடிமை என்ற இழிநிலைக்குத் தள்ளப்படுவது "பாவம் செய்கிற எவரும் பாவத்துக்கு அடிமை... வீட்டில் அடிமைக்கு நிலையான இடமில்லை " (யோவா 3:34-35).

மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் மல்லாக்கப் படுத்து ஒரு பாட்டைப் பாடினார். திடீரென்ற குப்புறப்படுத்து மற்றோர் பாடலைப் பாடினார். ஏன் அவர் அவ்வாறு செய்தார்? என்று அவரைக் கேட்டபோது அவர், "இசைத் தட்டைத் திருப்பிப் போட்டேன்" என்றார்.

காணாமற்போன இளைய மகன் மனமாற்றம் அடைந்தான். தனது வாழ்வு என்னும் இசைத் தட்டைத் திருப்பிப் போட்டான், மனமாற்றம் என்பது பாவத்தின் மறுநிலை. பாவம் என்பது கடவுளை வெறுக்கும் அளவுக்குத் தன்னை அன்பு செய்வது என்றால், மனமாற்றம் என்பது தன்னையே வெறுக்கும் அளவுக்குக் கடவுளை அன்பு செய்வதாகும்.

ஒரு காலத்தில் தன் தந்தையை வெறுத்த இளைய மகன் தன் இழிவுநிலையை உணர்ந்து தன்னை வெறுக்கத் தொடங்கினான். தன் தந்தையின் அன்பு அவனை உந்தித் தள்ளியது; அறிவு தெளிந்தான்; எழுந்தான்; தந்தையின் இல்லத்தை நோக்கித் திரும்பி நடந்தான். தன் பாவத்தை அறிக்கையிட்டான், தந்தையின் அரவணைப்பில் மூழ்கி அகமகிழ்ந்தான். தன் சுயவினையால் தனக்குத் தானே அவன் தேடிக்கொண்ட திண்டாட்டம், தந்தையின் அன்பு வரவேற்பால் மாபெரும் கொண்டாட்டமாக மாறியது. அவன் புதிய படைப்பாக மாறிவிட்டான். 'ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருந்தால் அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ ! இவையாவும் கடவுளின் செயலே" (2 கொரி 5:17-18).

மனமாற்றம் அடைய நமது அறிவு தெளிந்து, நாம் பாவி என்று எற்றுக் கொள்ள வேண்டும். மன்னன் தாவீது, கொலை, விபசாரம் ஆகிய இருபெரும் பாதகச் செயல்களைச் செய்தார். அவரது கொடிய பாவச் செயல்களை உணர்த்த வந்த இறைவாக்கினர் நாத்தான் கூறிய கதையைக் கேட்டுச் சமூக நீதியை நிலைநாட்டக் கொதித்தெழுந்தார், தன் சுய அநீதியைப் பற்றி அணுவளவும் அலட்டிக் கொள்ளவில்லை , இறைவாக்கினர், "நீயே அம்மனிதன்" (2 சாமு 12:7) என்று அவரது பாவநிலையைச் சுட்டிக்காட்டிய போது, "நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்" (2 சாமு 12:13) என்றார். "கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்" (திபா 51:10) என்று கண்ணீர் சிந்தி மன்றாடினார்.

சமூகப் பாவங்களையும் நிறுவனங்களின் ஊழல்களையும் மட்டுமே சுட்டிக்காட்டி, நமது சொந்தப் பாவநிலையை உணராது மறந்துப்போகும் ஓர் ஆபத்தான நிலையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள இத்தவக்காலத்தில் முயலுவோம்.

மனமாற்றமடைய நாம் கடவுளின் மாபெரும் இரக்கத்தை எண்ணிப் பார்க்க வேண்டும், "ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை. நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை " (திபா 103:8-10). " உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள்
கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்" (2ஆம் வாசகம், 2 கொரி 5:13).

இளைய மகன் எதிர் பார்த்தது வேலைக்காரனுக்குரிய இடம், அடிமையின் உணவு. ஆனால், அவன் தந்தை அவனுக்களித்ததோ மகனுக்குரிய நிலை (கைக்கு மோதிரம், காலுக்கு மிதியடி, முதல் தரமான ஆடை, அன்பின் முத்தம், மாபெரும் விருந்து). கடவுள் பாவியை மன்னித்து ஏற்று. அவரது இல்லமாகிய திருச்சபையில் இடமளித்து, சமாதான முத்தம் அளித்து, நற்கருணைத் திருவிருந்தில் பங்களிக்கிறார். "இனி நீங்கள் அடிமைகள் அல்ல; பிள்ளைகள் தாம்" (கலா 4:7).

ஒப்புரவு அருளடையாளம் நாம் எவ்வளவு பெரிய பாவிகள் என்பதை உணர்த்துவதில்லை. மாறாகக் கடவுள் எவ்வளவு இரக்கம் உள்ளவர் என்பதை உணர்த்துகிறது. "ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கிறது" (திபா 42:7), ஆம், நமது பாவம் என்னும் ஆழ்கடல், கடவுளின் இரக்கம் என்னும் ஆழ்கடலை அழைக்கிறது.

| இறுதியாக, தந்தை மகனை ஏற்றுக்கொள்ளும்போது, அண்ணன் தம்பியை ஏற்க மறுக்கின்றார், பாவியாகிய தம்பி வீட்டுக்குள்ளே இருக்க, நீதிமானாகிய அண்ணன் வீட்டுக்கு வெளியே நிற்கிறார். பிறரின் மனம் மாற்றத்தைக் கண்டு நாம் மகிழவேண்டும்; பழிவாங்கும் எண்ணம் கூடாது. ஏனெனில், "மனமாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்" (லூக் 15:7).



அளவற்ற அன்புகொண்ட ஆண்டவரோடு ஒப்புரவாகுவோம்.

  ஒரு கோடீஸ்வரத் தந்தை இருந்தார். அவருக்கு ஒரே ஒரு மகன். தன்னுடைய மகன் எது கேட்டாலும் அதை உடனுக்குடன் வாங்கித் தருவார், ஒருபோதும் எதையும் அவர் இல்லை என்று சொல்லியதில்லை. அந்தளவுக்கு தந்தை அவனுக்கு செல்லம் கொடுத்து வளர்த்தார்.

  ஒருநாள் அவர் தன்னுடைய மகனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரிடம் சென்று, “என்னுடைய மகன் எப்படிப் படிக்கிறான்?” என்று கேட்ட, ஆசிரியரோ, “உங்கள் மகன் குறைந்த மதிப்பெண்களே எடுக்கிறான்; பணம் இருக்கிற திமிரில் யாரையும் மதிப்பதில்லை. ஊதாரித்தனமாக இருக்கிறான்” என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். இதைக்கேட்ட தந்தை மனம் ஒடிந்துபோனார். தன்னுடைய மகனை எப்படியாவது நல்வழிப்படுத்தவேண்டும் என்று நினைத்தார்.

  மகனுக்குப் பிறந்தநாள் வந்தது. அன்று அவன் தந்தையிடம் வந்து, விலை உயர்ந்த பைக் ஒன்றை பரிசாக தரவேண்டும் என்று கேட்டுவிட்டு தன் நண்பர்களோடு ஊர் சுற்றப் போய்விட்டான். இரவு நீண்டநேரம் கழித்துத்தான் அவன் வீட்டுக்கு வந்தான். அந்நேரம் வரைக்கும் தந்தை அவனுக்காகக் காத்திருந்தார். அவர் அவனிடம் பரிசுப் பொருளைக் கொடுத்துவிட்டு, “அன்பு மகனே! இதில் நீ கேட்ட பரிசுப் பொருளும், கூடவே ஒரு புத்தகமும் இருக்கிறது. இந்தப்  புத்தகம்தான் என் வாழ்வில் மிகப்பெரிய உந்து சந்தியாக இருந்தது. நீயும் ஊதாரித்தனமாக இல்லாமல் கடமை உணர்வோடு வேலை பார்க்க இது உனக்கு உதவியாக இருக்கும்” என்றார். இதைக்கேட்ட மகனால் தந்தையின் பேச்சை பொறுக்க முடியவில்லை. தந்தை தன்னைக் குத்திக்காட்டி பேசுகிறார் என்று நினைத்துக்கொண்டு, அவர் கொடுத்த பரிசுப்பொருளை தூர வீசி எறிந்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறினான்.

  வருடங்கள் பல உருண்டோடின. ஆனால் தந்தையோடு மட்டும் அவன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தன்னுடைய வைராக்கியத்தோடு கூடிய கடின உழைப்பால் அவன் மிகப்பெரிய தொழிலதிபராக மாறி, தன்னுடைய நிறுவனத்தில் பொறுப்புடன் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.
 
ஒருநாள் அவனுக்கு தந்தை இறந்த செய்தி வந்தது. அவனும் இறுதியாக தன்னுடைய தந்தையைப் பார்க்கச் சென்றான். அங்கே தந்தையின் உடல் இருந்த இடத்திற்குப் பக்கத்தில் ஒரு பொட்டலம் இருந்தது. அது முன்பொருநாள் அவனுடைய தந்தை அவனுக்குப் பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தது. அந்தப் பொட்டலத்தை அவன் பிரித்துப் பார்த்தான். அதில் அவன் கேட்ட விலை உயர்ந்த பைக்கின் சாவி இருந்தது. அப்போதுதான் அவன் உணர்ந்தான். தந்தை தன்னை எந்தளவுக்கு அன்பு செய்திருக்கிறார் என்று. காலம் முழுவதும் இப்படித் தந்தையின் உண்மையான அன்பை உணராமல் இருந்துவிட்டோமே என்று மனம் வருந்தி அழுதான்.
 
தவக்காலத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாள்  வாசகங்கள் “அளவுகடந்த அன்புகொண்டிருக்கும் கடவுளோடு ஒப்புரவாகுங்கள்” என்ற சிந்தனையை வழங்குகிறது. இரக்கமும், அன்பும் கொண்ட ஆண்டவரோடு ஒப்புரவாகவேண்டும் என்பதுதான் இன்றைய நாள் வாசகங்களின் சாராம்சமாக இருக்கிறது.
 
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவின் புகழ்பெற்ற உவமைகளில் ஒன்றான ஊதாரி மைந்தன் உவமையை வாசிக்கின்றோம். இவ்வுவமையை ‘ஊதாரிமைந்தன் உவமை’ என்று சொல்வதைவிடவும், ‘ஊதாரித்தந்தை உவமை’ என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இவ்வுவமை தந்தையின் – தந்தை கடவுளின் – அளவு கடந்த இரக்கத்தையும், அன்பையும் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. இப்போது தந்தை தன் இளைய மகன் மீது அதாவது ஊதாரி மகன்மீது எந்தளவுக்கு இரக்கம் கொண்டிருந்தார் என்பதை சித்தித்துப் பார்ப்போம்.
 
முதலாவதாக இளையமகன் தந்தையிடம் வந்து, சொத்தில் தனக்குள்ள பங்கை பிரித்துத்தருமாறு கேட்கும்போது அவர் அவனுக்கு (அவர்களுக்கு) சொத்தை பகிந்தளிக்கிறார் என்று வாசிக்கின்றோம். பொதுவாக ஒரு யூதத் தந்தையானார் சொத்தை அப்படி பகிர்ந்தளிக்க முடியாது. ஏனென்றால் இணைச்சட்ட நூல் 21:17 ல் சொல்லப்படுகிறது ‘தலைச்சன் பிள்ளைக்கு சொத்தில் இரண்டு பங்குதரவேண்டும்’ என்று. அப்படியானால் உவமையில் வரும் தந்தையானார் சொத்தில் மூத்தவனுக்கு இரண்டு பங்கும், இளையமகனுக்கு ஒருபங்கும் தந்திருக்கவேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் சொத்தை அவர்களுக்குப் சமமாகப் பகிர்ந்தளித்தார் என்றால் இது தன்னைவிட்டுப் பிரிந்துபோகும் இளையமகன் நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இப்படிச் செய்கிறார். இது ஒருவிதத்தில் தந்தையின் இரக்கத்தையே காட்டுகிறது.
 
இரண்டாவதாக ஊதாரித்தனமாக வாழ்ந்த இளையமகன் தன்னுடைய தவறை உணர்ந்து தந்தையிடம் திரும்பிவரும்போது, அவன் தொலையில் வரும்போதே தந்தை பார்த்துவிட்டு ஓடோடிச்சென்று அவனைக் கட்டித்தழுவி முத்தமிடுகிறார். அப்படியானால் தந்தை தன்னுடைய மகன் எப்போது தன்னிடம் திரும்பி வருவான் என்று ஆவலோடு காத்துக்கொண்டிருந்ததைக் காட்டுகிறது.
 
இந்த இடத்தில் நாம் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஓவியரான ரேம்பரன்ட் (Rembrandt) என்பவர் வரைந்த ‘ஊதாரி மைந்தன் ஓவியத்தை’ இணைத்துப் பார்த்து சிந்திப்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் Oil Painting என்ற வகையில் உருவாகி இருக்கும் அந்த ஓவியத்தில் தவறான வாழ்வு வாழ்ந்து, மனந்திரும்பி வரும் இளைய மகன் தன்னுடைய தந்தையின் பாதத்தில் விழுந்து மன்னிப்புக் கேட்கின்றான். அப்போது தந்தையானார் அவனை இருகரத்தால் மார்ப்போடு அணைத்துகொள்கிறார். அந்த இருகைகளில் வலக்கையானது  தாயின் கைபோன்று இருக்கிறது. அதாவது மனம்மாறி வரும் பிள்ளையை கடவுள் ஒருதாயைப் போன்று தேற்றி அரவணைக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.

 மூன்றாவதாக உவமையில் இளையமகன் தந்தையிடம் வந்து, தன்னுடைய தவறை அறிக்கையிட்ட உடன், தந்தையானவர் தன்னுடைய பணியாளர்களிடம், “முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனை உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றை அடியுங்கள். நாம் விருந்துண்டு மகிழ்வோம்” என்கிறார். இங்கே கையில் மோதிரம் அணிவது என்பது இளையமகனை தந்தையானவர் தன்னுடைய மகனாக ஏற்றுக்கொள்வதற்குச் சமமாக இருக்கிறது.
 
ஆக ஊதாரித்தனமாக வாழ்க்கை வாழ்ந்த இளையமகன் தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கும்போது, அவனை அவனுடைய தந்தை மனதார மன்னித்து ஏற்றுக்கொண்டதுபோல, தந்தைக் கடவுளும் நாம் செய்யும் தவறுகளை மனதார மன்னித்து ஏற்றுக்கொள்வார் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.

 விவிலியம் முழுமைக்கும் இந்த உண்மையைத்தான் நாம் தொடர்ந்து வாசிக்கின்றோம், திருப்பாடல் 103: 8 ஆம் வசனம் சொல்கிறது, “ஆண்டவர் இரக்கமும், அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும், பேரன்பும் உள்ளவர்” என்று. எனவே அத்தகைய இரக்கமுள்ள கடவுளிடம் நாம் நமது பாவ வாழ்விலிருந்து மனமாறி, அவரோடு ஒப்புரவாகுவோம்.
 
தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுவார், “கடவுளோடு ஒப்புரவாகுங்கள்” என்று. ஆம், இந்த தவக்காலத்தில் நாம் அனைவருமே கடவுளோடு ஒப்புரவாக வேண்டும் என்றும்தான் இறைவார்த்தையானது நமக்கு அழைப்புத் தருகிறது. ஏனென்றால் இன்றைக்கு மனிதர்கள் உலக செல்வத்திற்குப் பின்னால், உலக காரியத்திற்குப் பின்னால் அலைவதைப் பார்க்கமுடிகிறது. கடவுளை மறந்து, மனம்போன போக்கில் வாழும் மக்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இத்தகைய சூழலில் நாம் கடவுளோடு ஒப்புரவாகுவது சாலச்சிறந்த ஒன்றாகும்.
 
மக்கள்மீது உண்மையான அன்பும், பாசமும், ஈகைக்குணம் கொண்ட அரசன் ஒருவன் இருந்தான். அவன் தன்னுடைய நாட்டில் ஓர் அருங்காட்சியம் வைத்திருந்தான். அதில் ஏராளமான அரியவகைப் பொருட்கள் இருந்தன. அந்த அருங்காட்சியத்திலிருந்து மக்களுக்குத் தேவையான எந்தப் பொருளையும் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வேறு செய்திருந்தான். இதனால் மக்கள்கூட்டம் அங்கே அலைமோதியது. எல்லாரும் அருங்காட்சியத்திலிருந்த அரியவகைப் பொருட்களை எடுப்பதிலே தீவிரம் கட்டினார்கள்.
 
அந்நேரத்தில் சிறுவன் ஒருவன் அங்கே வந்தான். வந்தவன் அங்கே இருந்த படைவீரர்களிடம் சென்று, “இவ்வளவு பொருட்களையும் மக்களுக்கு தாராளமாகத் தரும் நல்ல உள்ளம் படைத்த அரசரைப் பார்க்கவேண்டும்” என்றான். உடனே அந்த சிறுவன் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அரசர் முன்பாக நிறுத்தப்பட்டான்.
 
சிறுவனைப் பார்த்த அரசர், “தம்பி உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், “எனக்கு ஒன்றும் வேண்டாம், எல்லாப் பொருட்களையும் மக்களுக்குத் தாராளமாகத் தரும் நல்ல உள்ளம்கொண்ட உங்களைப் பார்த்ததே போதும்” என்றான். இதைக் கேட்ட அரசர் உள்ளம் மகிழ்ந்து அவனிடம், “பொருள் வேண்டும் என்று அலையும் மக்களுக்கு மத்தியில் அரசரைப் பார்த்தாலே போதும் என்று நினைத்த உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று சொல்லி அவனுக்கு அதிகமாக பொன்னும், பொருளும் கொடுத்து வழியனுப்பினார்.
 
பணம், பணம் என்று அலையும் மக்கள், அத்தகைய வாழ்க்கையை விடுத்து இறைவன் மட்டும்போதும் என்று அவரோடு நல்லுறவு கொண்டு, ஒப்புரவாக வாழ்ந்தார்கள் என்றால் கடவுள் எல்லா ஆசிரையும், அருளையும் தருவார் என்பதை இந்த கதையானது நமக்கு எடுத்துரைக்கிறது.
 
ஆகவே தவக்காலத்தில் இருக்கும் நாம் ஒவ்வொருவரும் கடவுளின் அளவுகடந்த அன்பை உணர்ந்து வாழ்வோம். அவர் நம்மீது இரக்கமும், அருளும் கொண்டவர் என்பதை நமது வாழ்வில் அனுபவித்து, அதனை பிற மக்களுக்கும் எடுத்துப்போம். அதோடு மட்டுமல்லாமல் இறைவனோடு நல்லுறவு கொள்வோம். அப்போது இன்றைய முதல் வாசகத்தில் கேட்பதுபோல இறைவன் நம்மீது இருக்கும் பழிச்சொல்லை நீக்கி, நமக்கு அமைதியையும், இறையருளையும் தருவார்.





அவர் இனியவர்

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றை நாம் 'கௌதேத்தே தொமெனிக்கே' ('மகிழ்ச்சி ஞாயிறு') என்றழைப்பது போல, தவக்காலத்தின் நான்காம் ஞாயிற்றையும் 'தொமேனிக்கா லெயத்தாரே' ('மகிழ்ச்சி அல்லது அக்களிப்பு ஞாயிறு') என்று அழைக்கின்றோம். இன்றைய நாள் திருப்பலியின் வருகைப் பல்லவி மிக அழகாக இதை முன்வைக்கிறது: 'எருசலேமின்மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள். அவளுக்காக புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள் ... நீங்கள் நிறைவடைவீர்கள் ... நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்' (காண். எசா 66:10-11). எருசலேமை இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்போடு நாம் உருவகப்படுத்தினோம் என்றால், அவரோடு அவருடைய பாடுகளுக்காக அழும் நாம், அவருடைய உயிர்ப்பில் அக்களிப்போம் என்பதே நிதர்சனமான உண்மை. ஆக, தவக்காலத்தின் இலக்கு துன்பம் அல்லது பாவம் அல்ல. மாறாக, மகிழ்ச்சி அல்லது வெற்றியே. ஆக, இந்த ஞாயிறு அந்த மகிழ்ச்சியின், வெற்றியின் முன்சுவையாக நமக்குத் தரப்படுகிறது.

ஆஸ்கர் ஒயில்ட் மிக அழகான ஒரு வரிக்குச் சொந்தக்காரர்: 'இறுதியில் இல்லாமே இனிமையாக இருக்கும். அது இனிமையாக இல்லை என்றால் அது இறுதி அல்ல.' ஆக, இயேசுவின் பாடுகளும், இறப்பும் இறுதி அல்ல. ஏனெனில், அவை இனிமை அல்ல. உயிர்ப்பே இறுதி. ஏனெனில், உயிர்ப்பே இனிமை. இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு, 'அவர் (ஆண்டவர்) இனியவர்' என்பதைச் சுட்டிக்காட்டி, அவரின் இனிமையை நாமும் சுவைக்கவும், அதே இனிமையை நாமும் வாழவும் நமக்கு அழைப்புவிடுக்கிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் மையம் இன்றைய பதிலுரைப்பாடலில் இருக்கின்றது: 'ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்' (திபா 34:8). தாவீது அபிமெலக்கின்முன் பித்துப்பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத் துரத்திவிட, அவனிடமிருந்து தப்பி வெளியேறுகின்றார். இந்த நேரத்தில், தன் உயிர் காக்கப்பட்ட இந்த நேரத்தில், கடவுளின் கருணையைப் புகழந்து பாடுகின்றார் தாவீது (காண். 1 சாமு 21:13-15). நம் மனங்கள் சோர்வுறும் நேரத்தில் எல்லாம் இப்பாடலைப் படித்தால் மனம் புத்துயிர்பெறும் என்பது என் தனிப்பட்ட அனுபவம்.

'இனிமை' - இது ஒரு வித்தியாசமான சுவை. சுவை என்பது ஒருவகை நேரடி வேதியல் உணர்வு என வரையறுக்கிறது விக்கிபீடியா. மேற்கத்தியர் சுவை நான்கு என்பர்: இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு. தமிழர் முறைப்படி சுவை ஆறு: இனிப்பு ('கனி'), கார்ப்பு ('மிளகாய்'), கசப்பு ('பாகற்காய்'), புளிப்பு ('புளியங்காய்'), உவர்ப்பு ('உப்பு'), துவர்ப்பு ('பாக்கு'). இந்த அறுசுவைகளும் மனித உடலுக்குத் தேவை என்கிறது சித்த மருத்துவம். இந்த அறுசுவைகளில் இனிப்புக்கு மட்டும் ஒரு தனித்தன்மை உண்டு. அது என்னவென்றால், 'இனிப்பு' மட்டும்தான் நாம் ஒருமுறை சுவைத்தாலும், மீண்டும் சுவைக்கத் தூண்டும் சுவை. மற்ற ஐந்து சுவைகளும் பொதுவாக ஒருமுறை மட்டுமே சுவைக்கக்கூடியவை. மேலும், 'இனிப்பு' சுவைதான் நம் உள்ளத்திற்கு நேர்முகமான உணர்வுகளையும், நம் உடலின் புன்னகைத் தசைநார்களையும் உயிர்க்கவல்லது. ஆகையால்தான், வெற்றி, மகிழ்ச்சி, உடற்பயிற்சி சோர்வு போன்ற நேரங்களில் இனிப்பு சுவை தரப்படுகிறது. இந்தப் பின்புலத்தில்தான் - அதாவது, அடிக்கடி நாம் தேடுவதாலும், அது நமக்குப் புத்துயிர் அளிப்பதாலும் - தாவீது ஆண்டவரை, 'இனியவர்' ('இனிப்பானவர்') என்று அழைக்கின்றார். ஆக, ஆண்டவரின் இனிமையை ஒருமுறை சுவைத்தால் போதும். அவரிடமே நாம் திரும்பத் திரும்பச் செல்வோம். ஆண்டவர் தாவீதை அச்சத்தினின்று விடுவிக்கிறார், அவமானத்திலிருந்து விடுவிக்கிறார், மற்றும் நெருக்கடியினின்று விடுவிக்கிறார்.

ஆண்டவரின் இனிமையை அல்லது ஆண்டவரை இனியவராக இன்றைய மற்ற வாசகங்களும் நமக்கு முன்வைக்கின்றன.

இன்றைய முதல் வாசகம் (காண். யோசு 5:9,10-12) இஸ்ரயேல் மக்கள் யோசுவாவின் தலைமையில் யோர்தான் ஆற்றைக் கடந்து பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குள் நுழைந்த பின் நடந்த முதல் நிகழ்வுகளைச் சொல்கிறது. இரண்டு நிகழ்வுகள் நடக்கின்றன: முதலில், பாலைநிலத்தில் பிறந்த ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது. இவர்கள் இந்தச் சடங்கால் ஆண்டவருக்கு அர்ப்பணமானவர்கள் ஆகின்றார்கள். இவர்களின் பெற்றோர் பாலைநிலத்தில் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராக முணுமுணுத்ததால் கடவுளால் கொல்லப்படுகின்றனர். இந்தச் சடங்கு முடிந்ததுதும், ஆண்டவர் யோசுவாவிடம், 'இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்' என்கிறார். அது என்ன பழிச்சொல்? இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டவுடன் அவர்களைப் பின்தொடர்ந்து வருகின்ற எகிப்தியர், 'இஸ்ரயேல் மக்கள் மூடர்கள். ஏனெனில், தாங்கள் அறியாத ஒரு கடவுளைப் பின்பற்றிச் சென்று பாலைவனத்தில் நாடோடிகளாகத் திரிகிறார்கள். அவர்கள் கடவுளும் பொய். அவர்களுடைய கடவுளின் வாக்குறுதியும் பொய்' என பழித்துரைக்கின்றனர். ஆனால், இன்று, யோர்தானைக் கடந்து கானானில் மக்கள் குடியேறியவுடன் அவர்களின் பழிச்சொல் பொய்யாகிறது. கடவுள் தன் வாக்குறுதியை நிறைவேற்றி தன்னை உண்மையான கடவுள் என்று இஸ்ரயேல் மக்களுக்கும் எகிப்தியருக்கும் உணர்த்துகின்றார். இரண்டாவதாக, கில்காலில் இஸ்ரயேல் மக்கள் தங்கள் முதல் பாஸ்காவைக் கொண்டாடுகின்றனர். வாக்களிக்கப்பட்ட நாட்டில் கொண்டாடப்படும் முதல் பாஸ்காவும் இதுவே. இங்கே இவர்கள் நிலத்தின் விளைச்சலை உண்ண ஆரம்பிக்கின்றனர். உண்ட மறுநாளிலிருந்து மன்னா பொழிவது நின்றுவிடுகிறது. இது அவர்களுடைய வாழ்வில் ஒரு புதிய தொடக்கம். இதுவரை யாவே இறைவனோடு இருந்த தொப்புள் கொடி அறுந்து, இன்று இவர்கள் தாங்களாகவே தங்களின் சொந்தக் கால்களில் நிற்கத் தொடங்குகின்றனர். இவ்வாறாக, இறைவன் இவர்களைக் 'குழந்தைகள்' நிலையிலிருந்து 'பெரியவர்கள்' என்ற நிலைக்கு உயர்த்துகின்றார்.

ஆக, இறைவனின் இனிமை இங்கே இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: ஒன்று, அவர் பழிச்சொல் நீக்குகின்றார். இரண்டு, அவர்களுக்கு புதிய தொடக்கத்தைத் தருகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 கொரி 5:17-21) பவுலடியார் தான் பெற்றிருக்கின்ற ஒப்புரவுத் திருப்பணி பற்றி கொரிந்து நகர மக்களுக்கு எடுத்தியம்புவதாக அமைந்துள்ளது. இவ்வாறாக, தன் திருத்தூதுப்பணியின் ஒரு முக்கிய அங்கமாக ஒப்புரவுப் பணியை முன்வைக்கின்றார். பாவம் இயல்பாகவே என்னைக் கடவுளிடமிருந்தும் ஒருவர் மற்றவரிடமிருந்தும் பிரித்துவிடுகிறது. கடவுளுக்கும் நமக்கும் பாவத்தால் எழுப்பப்பட்ட சுவரை உடைத்து, இருவரையும் இணைக்கும் பாலமாக கிறிஸ்து விளங்குகின்றார். ஆக, 'கிறிஸ்துவோடு ஒருவர் இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தது அன்றோ! இவை யாவும் கடவுளின் செயலே' என்று சொல்லும் பவுலடியார், இந்த ஒப்புரவு முழுக்க முழுக்க கடவுளின் முன்னெடுப்பாக இருக்கிறது என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். ஏனெனில், 'நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்கிறார்.' அதாவது, கிறிஸ்து பாவநிலையை ஏற்றாரெனில், பாவத்தின் விளைவான இறப்பை ஏற்றார். ஆனால், அந்த இறப்பிலிருந்து அவர் உயிர்த்ததால் நம்மையும் அவரோடு இணைந்து புதுப்படைப்பாக்குகிறார்.

ஆக, இறைவனின் இனிமை இங்கேயும் இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: ஒன்று, கிறிஸ்து வழியாக இவ்வுலகைத் தம்மோடு ஒப்புரவாக்கி அதற்கு புத்துயிர் தருகின்றார். இரண்டு, இந்தப் பணி மற்றவர்களுக்கு அறிவிக்கப்படுமாறு திருத்தூதர்களிடம் இந்த ஒப்புரவுச் செய்தியை ஒப்படைக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 15:1-3,11-32) நமக்கு மிகவும் அறிமுகமான ஓர் உவமை. 'ஒரு தந்தையும் இரண்டு மகன்களும்' எனப்படும் இந்த எடுத்துக்காட்டை இயேசு, பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞரின் முணுமுணுப்பிற்கு எதிர்சான்றாக வைக்கின்றார். ஆனால், பல நேரங்களில் இந்த எடுத்துக்காட்டை நாம் ஒப்புரவு வழிபாட்டிற்கு எடுத்து, இளைய மகனைப் போல மனம் திரும்ப வேண்டும் என்று சொல்லி இதன் பொருளை நீர்த்துப்போகச் செய்துவிடுகிறோம். இங்கே, கவனமையம் அல்லது கவனக்குவிப்பு இளைய மகனோ அல்லது மூத்த மகனோ அல்ல. மாறாக, தந்தையே. இக்கதையில் வரும் தந்தை தொடக்கமுதல் இறுதிவரை இனியவராக, கனிவுடையவராக, இரக்கம் உடையவராக இருக்கிறார். இயேசு தன் சமகாலத்தில் இரண்டு வகை மக்களோடு உறவாடுகிறார்: ஒன்று, வரிதண்டுபவர்கள், பாவிகள். இவர்கள் யூத சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். இரண்டு, யூதச் சட்டம் மற்றும் முறைமைகளுக்கு பிரமாணிக்கமாய் நடந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும். இந்த இரண்டாம் குழுவினர், இயேசு முதல் குழுவினரோடு உறவாடுவதைக் கண்டு இடறல்பட்டனர். இந்த இரண்டு குழுக்களும் இரண்டு மகன்களையும் குறிக்க, உவமையில் வரும் தந்தை இயேசுவின் அல்லது கடவுளின் உருவகமாகிறார்.

இக்கதை நமக்குத் தெரியும். சுருக்கமாகச் சொன்னால், தூரத்திற்குச் செல்கின்ற இளைய மகன் இல்லம் திரும்புகிறான். வீட்டிற்குள்ளேயே இருக்கின்ற மூத்த மகன் இல்லம் திரும்ப மறுக்கிறான். இவ்விரண்டு கதைமாந்தர்களுக்காகவும் வீதிக்கு வருகின்றார் தந்தை: முதல் மகனை அரவணைத்துக் கொள்ளவும், இரண்டாம் மகனை அழைத்துச் செல்லவும். இக்கதையில் அப்பாதான் கதாநாயகன். ஏனெனில், இரண்டு மகன்கள் வீட்டிற்கு வரும் நேரத்தில் தந்தை அங்கு இருந்தார். இளையமகன் வீட்டைவிட்டுப் புறப்பட்ட நாளிலிருந்து தந்தை இவனுக்காக ஊருக்கு வெளியில் நிற்கின்றார். எல்லாவற்றையும் இழந்து அவன் வரும்போது ஊரார் கேலிபேசிவிடக்கூடாது என்ற அக்கறையில் அங்கேயே நிற்கிறார் தந்தை. இளையமகனைத் தந்தை எதிர்கொண்டது ஏதோ ஒரு விபத்தால் - சான்ஸ் - அல்ல. மாறாக, விருப்பத்தால் - சாய்ஸ். தானே, தெரிந்து, நின்று, தழுவி, அரவணைத்து, அள்ளிக்கொள்கின்றார் தந்தை. இதுதான் இந்தப் பெயரில்லாத் தந்தையின் இனிமை. இந்த இனிமை இரக்கத்தோடு காத்திருக்கிறது. தன் மகன் ஏற்படுத்தி பொருள்செலவைப் பெரிதாகப் பார்க்கவில்லை. தன் மகனைத் தீர்ப்பிடவில்லை. தன் பெயரைக் கெடுத்தாலும் அதை பொருட்படுத்தவில்லை. சேறு, சகதி, அழுக்கு என வந்த மகனிடம், 'நீ போய் முதலில் குளித்து வா!' என்று சொல்லவில்லை. அவன் தனக்குரியது என எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போனாலும், அவனுக்குரிய முதல்தர ஆடை, கைக்கு மோதிரம், காலுக்கு மிதியடியைத் தயாராக வைத்திருக்கிறது இந்த இனிமை. தன் மூத்த மகன் இல்லம் நுழைய மறுத்தாலும் அவனைக் கடிந்துகொள்ளாமல் அவனுக்கு விளக்கம் தருகிறது அவனுடைய பார்வையை அகலப்படுத்துகிறது இந்த இனிமை.

ஆக, இறைவனின் இனிமை இங்கேயும் இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: இளைய மகனுக்கு இரக்கமாக, கனிவாக, தழுவலாக, கரிசனையாக வெளிப்படுகிறது. மூத்த மகனுக்கு, விளக்கம் சொல்லிப் புரிய வைத்து, அவனுடைய கண்ணோட்டத்தை மாற்றுகிறது.

இவ்வாறாக, இன்றைய முதல், இரண்டு, மற்றும் மூன்றாம் வாசகங்கள், திருப்பாடலோடு இணைந்து 'இறைவனின் இனிமையை' அல்லது 'அவர் இனியவர்' என்பதை நமக்குக் காட்டுகின்றன. 'அவர் இனியவர்' என்றால் 'அந்த இனிமையை' நாம் அனுபவிக்கிறோம் என்றால், அவரைப் போல, 'நாம் இனியவர்' ஆவது எப்படி?

1. பழிச்சொல் நீக்கும் இனிமை

இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழையும்போது அவர்கள் வெளிப்புறத்தில் அவர்களுக்கு உணவு, பாதுகாப்பு, உடைகள், வீடு  என எல்லாம் இருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் ஒரு நெருடல் இருக்கிறது. அதுதான் எகிப்தியரின் பழிச்சொல். அந்தப் பழிச்சொல் அவர்கள் எந்த நன்மையையும் சுவைத்து அனுபவிக்க, அவர்களின் மகிழ்ச்சியை எதிர்கொள்ள அவர்களுக்குத் தடையாக இருக்கின்றது. இறைவன் இந்தப் பழிச்சொல்லைத் துடைக்கின்றார். 'நீங்கள் முட்டாள்கள், ஏமாளிகள், உங்கள் கடவுள் பொய்யர், நீங்கள் அழிந்துபோவீர்கள்!' என்ற பழிச்சொல்லைத் துடைக்கின்றார். இன்று நாம் அறிந்துகொள்ள வேண்டியதும் இதுதான். இறைவன் நம்மேல் உள்ள பழிச்சொல் அனைத்தையம் துடைக்க வல்லவர். 'இதோ என் அன்பார்ந்த மகன்-மகள்' என்று அவர் உங்களையும் என்னையும் அழைக்கும் அந்த நொடியே அனைத்துப் பழிச்சொல்லையும் துடைத்துவிடுகிறார். ஊரார் நம்மை 'விலைமாதுகளுடன் உறவு கொண்டவன்,' 'பன்றி மேய்த்தவன்,' 'பன்றியின் உணவை உண்டவன்,' 'தந்தை சொல் கேளாதவன்' என்று சொன்னாலும், சொந்த அண்ணனே, 'உம் மகன்' என்று மூன்றாம் நபராகப் பார்த்தாலும் இறைவன் பழிச்சொல்லை நீக்குகிறார். 'நான் உன் வீட்டு வேலைக்காரன்' என்று சொன்ன வாயெடுத்தவனை அதற்கு மேல் பேசவிடாமல் மகனுக்குரிய நிலையில் வைத்துக்கொள்கிறார். ஆக, இறைவன் என் பழிச்சொல்லை நீக்குகிறார் என்றால், நான் அவருடைய இனிமையை உணர்கிறேன் என்றால் என் நாவில் இத்தகைய சொற்கள் ஒருபோதும் வரக்கூடாது. இன்னா சொற்கள் விடுத்து இனிய சொற்கள் பேசும்போது நாமும் இனியவரே.

2. பழையன கழிக்கும் இனிமை

கிறிஸ்துவோடு உலகை ஒப்புரவாக்கும் இறைவன் பழையன அழித்தையும் அழிக்கின்றார். முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களின் மன்னாவை நிறுத்துவதன் வழியாக மக்களின் பழைய சார்புநிலையை அழிக்கின்றார். நற்செய்தி வாசகத்தில், தந்தை இரண்டு மகன்களின் பழைய இயல்பையும் அழிக்கின்றார். இளைய மகன் கடந்த நாள்களில் என்ன செய்தான் என்றோ, எவ்வளவு கையிருப்பு கொண்டுவந்துள்ளான் என்றோ, அடுத்த என்ன ப்ளான் என்றோ கேட்கவில்லை. மூத்த மகன் வைத்திருந்த முற்சார்பு எண்ணத்தையும் அழிக்கிறார். ஆக, பழையது நமக்கு உற்சாகம் தந்தால் நலம். ஆனால், நம்மைக் கட்டிவைத்து நகர முடியாமல் செய்தால் அது கழிக்கப்பட வேண்டும். பழையதை மறந்து இன்றில் இப்பொழுதில் வாழும்போது இறைவனின் இனிமையை அனுபவிக்கவும் அதை மற்றவருக்கு வழங்கவும் முடியும். ஏனெனில், இறைவனுக்கு இன்று மட்டுமே உண்மை.

3. தழுவிக்கொள்ளும் இனிமை

இன்றைய நற்செய்தியில் வரும் தந்தையின் கணிதமும் லாஜிக்கும் வித்தியாசமாக இருக்கிறது. அவர் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் பார்த்து வருத்தப்படாமல், நிகழ்வின் மொத்தத்தைப் பார்க்கிறார். 'நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும்' - இதுதான் இவருடைய மிஷன் ஸ்டேட்மண்டாக இருக்கிறது. அவன் போனான், அழித்தான், திரும்பினான். அதனால் என்ன? நடந்ததைப் பற்றி என்ன செய்ய முடியும்? அடுத்து என்ன செய்வது? 'மகிழ்நது கொண்டாடு' என்று இளைய மற்றும் மூத்த மகனை ஒருசேரத் தழுவிக்கொள்கிறார். இது யாரால் முடியும் என்றால், இறுதியை மனத்தில் வைத்துச் சிந்திப்பவரால் மட்டும்தான். 'ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது' என்கிறார் சபை உரையாளர். இறுதியில் எல்லாம் இனிமையாகும். ஆக, நிகழ்வுகளை இந்த இறுதியோடு இணைத்துப் பார்த்தால் இறைவனின் இனிமை நமக்குச் சொந்தமாகும்.

இறுதியாக, மகிழ்ச்சியின் ஞாயிற்றைக் கொண்டாடும் நாம், இறைவனின் இனிமையை அனுபவித்து மகிழ்வுறும் நாம், அதே இனிமையை மற்றவருக்கும் வழங்கும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும். காலையில் கூட்டைவிட்டுப் புறப்படும் பறவை மாலை கூட்டிற்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையால்தான் சுற்றித் திரிகிறது. சுற்றித் திரிதல் தவறல்ல. கூடு திரும்பாமல் இருப்பதுதான் தவறு. இஸ்ரயேல் மக்கள் கானான் நாடு என்னும் கூடு திரும்பினர். கொரிந்து நகர மக்கள் ஒப்புரவு என்னும் கூடு திரும்பினர். இரு மகன்களும் தந்தையின் இல்லம் என்னும் கூடு திரும்பினர். இவர்கள் கூடு திரும்பக் காரணம் இவர்கள் அங்கே இனிமையைக் கண்டவர். இனிமையைக் காணும் இடம் நோக்கி நம் இதயம் சாயும் என்பது நம் மரபியல் ஊட்டம். அந்த இனிமை இறைவனிடம் என்றால் பயணம் இனிதாகும். ஏனெனில், அவர் இனியவர் - உங்களையும் என்னையும் போல!