Monday 24 September 2018

ஆண்டின் பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்


எண். 11:25-29
யாக். 51-6
மாற் 8:38-48





தூய ஆவியானவரின் செயல்பாடு


ஜோசப், மேரி என்ற படித்த பட்டதாரிகள் இருவரும் திருமண வாழ்வில் கணவன் மனைவியாக தங்களை இணைத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்களின் திருமண வாழ்வு நீடிய நாட்கள் நிலைக்கவில்லை. காரணம் ஜோசப் பரம்பரை சம்பிரதாயத்தில் கலந்தவர், பழமைவாதி. எப்போதும் ஆண் அதிகாரம் காட்டுபவர். ஆனால் மேரியோ காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்ளும் புதுமைப்பெண். அடிக்கடி ஜோசப் சொல்வான்: நான் உன் கணவன். நீ என் மனைவி. நீ எனக்குக் கட்டுப்பட்டுத்தான் இருக்க வேண்டும். இந்த நிலை மேரியைப் பொறுமையற்ற, சகிக்க இயலா நிலைக்கு இட்டுச் சென்றது. 

இதனால் சில மாதங்களிலே திருமண முறிவுக்கு இட்டுச் செல்லப்பட்டார்கள்.
இன்று சகிக்க இயலா நிலைக்குச் சமுதாயத்தில் பலர் தள்ளப்படுகிறார்கள். குடும்பத்திலே கணவன், மனைவி, பெற்றோர் பிள்ளைகள், மாமி, மருமகள் எல்லாரிடமும் இந்த நிலை அதிகமாக நிற்கிறது. இன்றைய இந்தியாவிலே பரம்பரைவாதிகள் தான் பெரும்பான்மையினர், சக்தி வாய்ந்தவர்கள் என்பதை நினைத்து சிறுபான்மையோருக்கு உரிமை கிடையாது என்கின்ற மனநிலை உருவாவதைப் பார்க்கிறோம். இதனால் சிறுபான்மையோரின் உரிமையைப் பறிக்கப் பார்க்கிறார்கள். அரசியலிலும், கலாச்சாரத்திலும் சாதிக் குருக்கள், மற்றவர்களைத் தடை செய்வதை நாம் பார்க்கிறோம்.

காரணம் என்ன?

இதற்கெல்லாம் அடிப்படையாக அமைவது நான் என்ற அகந்தை. அகந்தையான மனிதன் தான் நினைப்பதும், செய்வதும் சரிதான் என கருதுகிறான். என்னை எதிர்ப்பவர் எல்லாம் தவிடுபொடியாவார்கள் என்ற நிலைக்கு இவன் தள்ளப்படுகிறான். 

இதைத்தான் புனித யாகப்பர் ஒரு மனிதனின் துருப்பிடித்த இதயம் அவனை அணு அணுவாகக் கொல்லும் (யாக. 5:3) என்று அழகாக எச்சரிக்கை தருகின்றார். அகங்காரம் கொண்டவன் ஆவியின் தூண்டுதலுக்குத் தன்னை ஆளாக்குவதில்லை (தி. பாடல் 19:13).

இன்றைய நற்செய்திக்கு வாருங்கள். இரண்டுபேர் கூடாரத்தில் இறைவாக்கு உரைத்தபோது ஒருவனைத் தடுக்க யோசுவா மோயீசனைக் கேட்டார். மோயீசனோ அதைக் கடிந்து கொண்டார் (எண் 11:25-29). ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தூதர்கள் மட்டும்தான் பேய்களை ஓட்ட வேண்டும். மற்றவர் கூடாது எனத் தடை போட்ட சீடர்களைப் பார்த்து: தடுக்காதீர்கள், ஆவியானவர் எங்கும் ஆற்றல் புரிபவர் என்றார். நற்செய்தியிலே இரு இடங்களில் ஆண்டவர் இயேசுவின் பெரும் பாராட்டைப் பெற்றவர்கள் யார் தெரியுமா? புறவினத்தார்கள் தான். இஸ்ரயேல் மக்களிடத்தில் இத்தகைய விசுவாசத்தை நான் கண்டதே இல்லை. ஆனால் என்னே இந்த செந்தூரியன் விசுவாசம் (மத். 8:10) என்றார் இயேசு. அம்மா உன் விசுவாசம் பெரிது என்று கனானியப் பெண்ணைப் பார்த்து இயேசு பாராட்டவில்லையா (மத். 15:28).

அன்பார்ந்தவர்களே ஆவியானவரால் நிரப்பப்பட்டு அப்போஸ்தலர்களின் வாரிசான ஆயர்கள், உரோமையில் கூடிய இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் முழக்கமிட்ட ஓர் உண்மையை நாம் மறந்து விடக்கூடாது. அதாவது, மற்ற மறைகளில் மனித மீட்புக்காகச் சிதறிக்கிடக்கும் உண்மைகளைத் திருச்சபை என்றும் ஏற்க மறுக்காது.

ஏன்! நம் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் கடந்த காலங்களில் சகிப்புத் தன்மையற்ற நிலையிலே, ஆணவத்தால் எடுத்த சில நிலைகளுக்குப் பொது மன்னிப்பு கேட்கும் நிலைக்குத் தன்னைத் தாழ்த்தினார் அல்லவா. நாம் இன்று ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்க வேண்டும். நாம் புனித பவுல் அடிகளார் கூறுவதுபோல இயேசுவின் மனநிலையை (பிலி. 2:5) கொண்டிருக்கிறோமா? தன்னையே வெறுமையாக்கி, சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்த நம் ஆண்டவரின் மனநிலை நம்மிடம் உண்டா! அல்லது நம் மனித ஆவியின் தூண்டுதலுக்கு அடிமையாகி அடுத்தவனை வரவிடாது, வாழவிடாது நாம் நினைப்பதும் செய்வதும் தான் சரி என்ற நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறோமா?





கொடுப்பவர்களுக்குக் கொடுக்கப்படும்.


இன்றைய நற்செய்தியின் வழியாக, கொடுப்பவர்களுக்குக் கடவுள் தவறாது கைம்மாறு, பரிசு தருவார் என்ற உண்மையை ஆணித்தரமாக இயேசு நமக்குக் கற்பிக்கின்றார். மீட்பின் வரலாற்றிலே, கொடுத்தவர்கள் அத்தனை பேரையும் கடவுள் தவறாது ஆசிர்வதித்திருக்கின்றார். இதோ சில விவிலியச் சான்றுகள். தொநூ 18:1-14 : ஆபிரகாமுக்கும், சாராவுக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் கொஞ்சி விளையாட பிஞ்சு நெஞ்சம் ஒன்று அந்த வீட்டில் பிறக்கவில்லை ! ஒரு நாள் கவலையால் கலங்கி நின்ற ஆபிரகாம் மூன்று மனிதர்களைக் கண்டார். கூடாரத்தை விட்டு வெளியே சென்று அந்த மூன்று மனிதர்களையும் கூடாரத்திற்கு அழைத்து வந்தார். அவர்களது களைப்பு நீங்க அவர்களுக்கு விருந்து படைத்தார். அந்த மனிதர்கள் மூவரும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள், தங்கள் மீது அன்பைப் பொழிந்த ஆபிரகாமைப் பார்த்து, ஆண் ட வரால் ஆகாதது எதுவும் உண்டோ ? சாராவுக்கு ஒரு மகன் பிறப்பான் என்றார்கள். கடவுளால் வாக்களிக்கப்பட்ட படியே ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் ஈசாக்கு பிறந்தார் (தொநூ 21:1-8). ஆம். கொடுப்பவர்களுக்குக் கொடுக்கப்படும்.

1 அர 17:8-16 : ஊரெல்லாம், நாடெல்லாம் பஞ்சம் ! அப்போது இறைவாக்கினர் எலியா ஒரு கைம்பெண்ணிடம் கொஞ்சம் அப்பமும், தண்ணீரும் கேட்டார். அந்தக் கைம்பெண்ணோ , வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை : பானையில் கையளவு மாவும், கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே உள்ளன. இதோ,

இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன்பின் சாகத்தான் வேண்டும் என்றாள். ஆனால் எலியாவோ, கொடு, உனக்குக் கொடுக்கப்படும் என்றார். அவள் கொடுத்தாள். பானையிலிருந்த மாவும் தீரவில்லை. கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை. ஆம், கொடுப்பவர்களுக்குக் கொடுக்கப்படும்.

யோவான் 2:1-11: கானாவூர் திருமண வீட்டார் இயேசுவிடம் தண்ணீரைக் கொடுத்தார்கள். அவர்களுக்குத் திராட்சை இரசம் கிடைத்தது. யோவான் 6:1-13: கூட்டத்திலிருந்த சிறுவன் ஒருவன் ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொடுத்தான். கூட்டத்திலிருந்த எல்லாருக்கும் உணவு கிடைத்தது. ஆம். கொடுப்பவர்களுக்கு கொடுக்கப்படும். கொடுக்கப்படாதவை அனைத்தும் அழிந்து போகும் ; அழிந்து போனவை கொடுக்காதவர்களின் உயிருக்கு உலை வைக்கும் (இரண்டாம் வாசகம்). நமது கடவுள் எடுக்கின்ற கடவுள் அல்ல ; கொடுக்கின்ற கடவுள். தனது ஒரே மகனையே உலகுக்குக் கொடுத்தவர் நம் கடவுள் (யோவா 3:16). தமது ஆவியை அனைவர் மீதும் பொழிந்தவர் நம் கடவுள் (முதல் வாசகம்). சுயநலவாதிக்கும் சொர்க்கத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.

மேலும் அறிவோம் :
கொடுப்பதூம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் (குறள் : 1005).

பொருள் : பிறருக்கு வழங்கவும் தாம் நுகர்வதும் ஆகிய செல்வத்தின் இரு பயன்பாடும் இல்லாதவரிடம் கோடிக்கணக்கில் பொருள் குவிந்திருந்தாலும் அவை செல்வமாக மதிக்கப்படாமல் போகும்!






கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கும் லூத்தரன் சபைக் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியைக் காண்பதற்காகக் கிறிஸ்துவும் வந்திருந்தார், முதலில் லூத்தரன் சபையினரும் பின்னர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும் 'கோல்" போட்டபோது கிறிஸ்து பலமாகக் கைதட்டி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் அவரிடம், "ஆண்டவரே! நீங்கள் எந்த சபையில் இருக்கிறீர்கள்? கத்தோலிக்க சபையிலா? அல்லது லூத்தரன் சபையிலா?" என்று கேட்டனர், அதற்குக் கிறிஸ்து, "நான் இப்போது கால்பந்து விளையாட்டை ரசித்துக் கொண்டிருக்கிறேன். எந்தச் சபை 'கோல்' போட்டாலும் எனக்கு மகிழ்ச்சியே" என்றார்.

இக்கதை நமக்கு உணர்த்தும் உண்மை ; "கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர், உண்மையும் நன்மையும் எங்கிருந்தாலும் அவை கடவுளுக்கே உரித்தானவை. அவற்றைக் கண்டு கடவுள் மகிழ்ச்சி அடைகிறார்," சுருக்கமாக, "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை. எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்" (திப 10:34). கடவுளின் செயல்பாட்டை ஒரு குறுகிய வட்டத்திற்குள் வரையறுக்க முடியாது என்ற கருத்தை இன்றைய அருள்வாக்கு வழிபாடு உணர்த்துகிறது.

பழைய உடன்படிக்கையில் மோசேவுக்கு உதவி செய்வதற்காக 70 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அவர்களும் மோசேயிடம் இருந்த கடவுளின் ஆவியில் பங்கு பெற்று இறைவாக்கு உரைத்தனர். ஆனால் இக்குழுவைச் சாராத இருவர் இறைவாக்கு உரைத்தபோது, யோசுவா அவர்களைத் தடை செய்யும்படி மோசேயிடம் கேட்டார், மோசே அவ்வாறு தடை செய்யாமல், எல்லாருமே கடவுளுடைய ஆவியைப் பெற்று இறைவாக்கு உரைத்தால் நலமாயிருக்கும் என்றார் (எண்11:2529). தமக்கிருந்த வல்லமை மற்றவர்களிடமும் விளங்கியதைக் கண்டு மோசே பொறாமை அடையாது மகிழ்ச்சி அடைகிறார், அவரிடம் குறுகிய மனப்பான்மை இல்னல்), "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த மனப்பான்மை கொண்டு விளங்கினார்.

இன்றைய நற்செய்தியில், கிறிஸ்துவின் சீடர்களைச் சாராத ஒருவர் கிறிஸ்துவின் பெயரால் பேயோட்டுவதைக் கண்ட சீடர்கள் அவரைத் தடை செய்ய முயன்றனர், ஆனால் கிறிஸ்துவோ அவ்வாறு தடைசெய்ய வேண்டாம் என்று கூறியதோடு, தமக்கு எதிராக இல்லாதவர் தமக்குச் சார்பாக இருக்கின்றார் என்றும் கூறினார் (மாற் 1:39-40),

குருக்கள் மட்டும் தானே நோயாளிகா மீது கைகளை விரித்துக் செபிக்கலாம், ஆனால், இப்போது பொதுநிலையினரும் அவ்வாறு செய்கின்றார்களே என்று ஒரு சிலர் ஆதங்கப் படுகின்றனர். அவர்களுடைய ஆதங்கம் தேவையற்றது. கடவுள் தமது வல்லமையை அருள்பணியாளர்கள் வாயிலாக மட்டுமல்ல, பொதுநிலையினர் வாயிலாகவும் வெளிப்படுத்தலாம். திருமுழுக்குப் பெற்ற அனைவரும் தூய ஆவியால் திருநிலைப்படுத்தப்பட்டு, கிறிஸ்துவின் பொதுக்குருத்துவத்தில் பங்கு பெறுகின்றார், 'நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினார்' (1பேது 2:9), “நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவு உங்களுள் நிலைத்திருக்கிறது" (1 யோவா 2:27), தூய ஆவியாரையும் கடவுளுடைய வார்த்தையையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்த இயலாது. க சற்று தாம் விரும்பும் திசையில் வீசுகிறது. ஆவியின் செயல்பாடும் அவ்வாறே உள்ளது (யோவா 3:8) கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது (2 திமொ 2:9). கடவுள் எல்லாருக்கும் தந்தை; இயேசு கிறிஸ்து எல்லாருக்கும் மீட்பர்,

ஓர் ஊரில் இரண்டு பைத்தியங்கள் இருந்தன. முதல் பைத்தியம், "நான் உலகத்தையே விலைக்கு வாங்கப் போகிறேன்" என்றதற்கு, இரண்டாவது பைத்தியம், "நான் இப்போதைக்கு உலகத்தை விற்கிற மாதிரி இல்லை " என்றது. உலகமெல்லாம் எள் னு டையது என்று நினைப்பது பைத்தியக்காரத்தனம், அவ்வாறே உண்மையெல்லாம் என்னுடையது என் று மார் தட்டுவதும் பைத்தியகாரச் செயலாகும். "மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்" என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சமயங்கள் தங்களிடையே பிணக்குகளை வளர்த்துக் கொள்ளாமல் மனித நேயத்தை வளர்க்க வேண்டும்,

ஓர் இந்து ஆசிரமத்தில் இருந்த தலைமைச் சந்நியாசி முதுமை அடைந்து விட்ட நிலையில், தமது மறைவுக்குப் பிறகு தம்முடைய பத்து சீடர்களில் யாரை ஆசிரமத் தலைவராக நியமனம் செய்வது என்பதை முடிவு செய்ய விரும்பினார். தமது 13 சீடர்களையும் அழைத்து, அவர்களிடம் உணவுப் பொட்டலங்களைக் கொடுத்து, பக்கத்து ஊருக்குச் சென்று, அவ்வூரில் பட்டினியாகக் கிடந்த இந்துக்களுக்கு மட்டும் உணவுப் பொட்டலங்களை வழங்கிவிட்டு வரும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஒன்பது சீடர்கள் இந்துக்களுக்கு மட்டும் உணவு வழங்கினர். பத்தாவது சீடரோ முகமதியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் கூட உணவுப் பொட்டலங்களை வழங்கினார். ஏன் அவ்வாறு செய்தார்? என்று அவரைக் கேட்டதற்கு அவர் கூறிய பதில்: "பசியாய் இருந்தவர்களை நான் இந்துக்களாகவோ முகமதியர்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ பார்க்கவில்லை. அவர்களை மனிதர்களாக மட்டுமே பார்த்தேன்." உடனே அச்சீடரை ஆசிரமத்தின் தலைமைச் சந்நியாசியாக அந்த வயதான சந்நியாசி நியமித்தார்,

மதம், மொழி, இனம், சாதி ஆகிய வேறுபாடுகளைக் கடந்து எல்லாரையும் மனிதர்களாகப் பார்க்கக் கற்றுக் கொள்வதுதான் காலத்தின் கட்டாயம். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" (திருமூலர் ); "யாதும் ஊரே யாவரும் கேளிர்" (கனியன் பூங்குன்றனார்], ஏழைகளை வாழவைப்பதுதான் உண்மையான சமயப்பற்று. உழைப்பவர்களின் கூலியைக் கொடுக்காமல், செல்வத்தை சேமித்து வைக்கும் பணக்காரர் களுக்குப் பேரழிவு காத்துக் கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கிறார் திருத்தூதர் யாக்கோபு (இரண்டாம் வாசகம், யாக் 5:1-5).

நாம் நமது செல்வத்தை வங்கியில் அல்ல, ஏழைகளின் வயிற்றில் சேமித்து வைக்கவேண்டும், ஏழைகளின் வயிறே நமது பொருளைக் காக்கும் வங்கி, பாதுகாப்புப் பேழை என்கிறார் வள்ளுவர்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அல்லது ஒருவன் 
பெற்றான் பொருள்வைப்புழி (குறள் 226)



Monday 17 September 2018

ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு





ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்

சாலமோனின் ஞானம்  2:12,17-20; 
யாக்கோபு  3:16-4:3;
 மாற்கு 8:30-37




துன்பம் இன்பம் 

அன்புக்குரிய சகோதரர்களே!

ஒரு நாள் இயேசு தன் சீடர்களைப் பார்த்து நான் கொல்லப்பட வேண்டும். ஆனால் என்னை அடக்கம் செய்த மூன்று நாட்களுக்குப் பின் (மாற். 9:13) உயிர்த்தெழுவேன் என்றார். அப்படி இயேசு சொன்னது சீடர்களுக்கு விளங்கவில்லை. ஆனால் நமக்கு விளக்கம் தேவை இல்லை. ஏனெனில் இயேசு உயிர்த்து நம்மோடு வாழ்கின்றார்.

ஆனால் இன்று அந்த இயேசுவின் பாடுகள் நம் வாழ்வில், உடல் நோயாலோ, எதிர்பாராத ஆபத்தாலோ, உறவுகள் முறிவுகளாலோ, பொறாமையின் சக்தியாலோ, நம் வாழ்வில் குறிக்கிடுகின்றன. நாம் அனைவரும் இதற்கு உட்பட்டவர்கள் தான். ஆனால் அதை நாம், எவ்வாறு எதிர்நோக்குகிறோம் என்பதில்தான் வித்தியாசம் உண்டு.

ஒரு சிலர் துன்பங்களால், வெட்கத்திற்குரிய வேதனைகள், தாங்க முடியாத மனநிலையில் தள்ளப்பட்டு, மனத்தளர்ச்சி அடைந்து, குறை கூறும் நிலைக்குச் செல்லலாம். ஒரு சிலருக்குத் துன்பங்கள் தைரியத்தையும், சகிப்புத் தன்மையையும் சவாலாக ஏற்றுக்கொள்ளச் செய்யலாம். இன்னும் சிலர் துன்பத்தை அமைதியுடனும், சாந்தமுடனும் எதிர்நோக்கி, பதில் காண நுழையலாம். முடியாதெனில், பொறுமையுடன் மனம் தளராமல், குழப்பத்திற்கும் கீழ்த்தர ஆசைகளுக்கும் இடம் தராது ஏற்று நடக்க முயற்சி எடுப்பார்கள்.

அரபு நாட்டிலே ஒரு நினைவாலயம். அது புனித ஜெரோனிமாவின் கல்லறை. 1569 - ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி. அவனை நாயைப் போலக் கட்டி இழுத்து வாருங்கள் என்றான் அரசன்.

உன்னை நாயைப்போல இழுத்துச் செல்ல எனக்கு அதிகாரம் - உண்டு என்றான் அரசன் - அங்கே அமைதி.

உன்னைக் கொன்று பிணமாகப் புதைக்க எனக்கு அதிகாரம் உண்டு - அங்கே அமைதி.

சாட்டை அடிகள் அவர் மேல் விழுந்தன. கைகள் கட்டப்பட்டன. எட்டி உதைத்தனர். ஏளனம் செய்தனர். ஆலயத்தை விட்டு வெளியே இழுத்துச் செல்லப்பட்டார் - இறுதியாக அரசன் கேட்டான்: " நீ உயிர் வாழ விரும்பினால் உன் கடவுளை விட்டுவிடு." ஜெரோனிமா : இயேசுவே உயிரும் உயிர்ப்பும். அவரை இழந்த பிறகு என்னில் உயிர் எப்படி இருக்க முடியும் என்றார். நீங்கள் எனக்குக் கல்லறை கட்டுங்கள். இயேசுவே என் கல்லறை. அவரில் நான் இன்று அடக்கம் செய்யப்படுவேன். அவரைப் போல நானும் உயிர்த்தெழுவேன், வாழ்வேன் என்று புன்னகை பூத்தார். ஆனால் அவருக்கு உயிரோடு சமாதி கட்டியது அரபு நாடு. ஆனால் சாவே உனக்கு சாவு வராதோ என்று குமுறிய ஆன்றோர் மொழிக்கேற்ப,

அவர் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டார்;
அவர், கல்லறையில் பூத்த உயிருள்ள மலர்.

முடிவுரை
இன்றைய முதல் வாசகத்திலே கூறப்பட்ட ஞானியைப்போல் (ஞானா. 2:2-17, 20) நாமும் நமது வாழ்வு தரும் உன்னத இறைவனை நம்புவோம். இதுதான் ஜெரோனிமா நமக்குக் காட்டிய பாதை. அவர் இறைமகனாக இருந்தாலும் துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். தமக்குக் கீழ்ப்படிபவர் அனைவருக்கும் என்றென்றும் மீட்படையக் காரணமானார் (எபி. 5:8-9).



உண்மையான தொண்டர் யார் ?
இன்றைய நற்செய்தியின் வழியாக , ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவருக்கும் தொண்டராக இருக்க முன்வர வேண்டும் என்கின்றார் இயேசு.

ஓர் உண்மையான தொண்டர் எப்படியிருக்க வேண்டும் ? என்பதை இந்தக் கதை நமக்குச் சுட்டிக்காட்டும்.
அது ஓர் அழகான கிராமம். அந்தக் கிராமத்திற்குப் பக்கத்திலே ஓர் அழகான மாமரம். அந்தக் கிராமத்திலிருந்த சிறுவன் ஒருவன் அந்த மாமரத்தடியில் வந்து விளையாடுவான். அவனைக் கண்டதும் அந்த மரம் பெரும் மகிழ்ச்சி அடையும். ஒவ்வொரு நாளும் அந்த மரம் அவன் வரவுக்காகக் காத்திருக்கும்.
திடீரென ஒரு வாரம் அச்சிறுவன் மரத்தடிக்கு வரவில்லை ! மரம் சோகமானது ! ஒரு நாள் திடீரென அச்சிறுவன் வந்தான் . அவன் முகத்திலே சோகம் 1 அவன் பொம்மை வாங்க வேண்டும் என்றான். மரம் தனது பழங்களைக் கொடுத்தது. அவற்றை விற்று அவன் பொம்மை வாங்கிக்கொண்டான்.

சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அவன் முகத்தில் சோகம் ! அந்த மரம் அவனுக்கு அதன் கிளைகளைக் கொடுத்தது. அதைப் பயன்படுத்தி அவன் விரும்பிய வீட்டைக் கட்டிக்கொண்டான்.
மீண்டும் சில ஆண்டுகள் கழித்து அவன் முகத்தில் சோகம் ! பழுதடைந்திருந்த அவனுடைய படகைச் சரிசெய்து கொள்ள மரம்
தேவைப்பட்டது. அந்த மரமோ அவனைப் பார்த்து, உனக்காக என் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கின்றேன். என்னை அடியோடு பெயர்த்து எடுத்துச்செல் என்றது. அவனும் அப்படியே செய்தான்.

கதையில் வந்த மரம் வாழ்ந்த வாழ்வுக்குப் பெயர்தான் தொண்டு வாழ்வு. அயலாருக்காக நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் கையளிக்க முன்வருவதில்தான் உண்மையான தொண்டு வாழ்வு அடங்கியுள்ளது.

பதுங்கியிருந்து (முதல் வாசகம்) மற்றவர்களுக்கு உரியதை எடுப்பவர்கள் உண்மையான தொண்டர்கள் அல்ல; மாறாக அமைதி பெற்றெடுக்கும் நீதி வழி நின்று (இரண்டாம் வாசகம்) அவரவர்க்கு உரியதை அவரவர்க்குக் கொடுப்பவர்களே உண்மையான தொண்டர்கள்.

மேலும் அறிவோம் :
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் : 228).
பொருள் : வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் மகிழ்வதைக் கண்டு அருளுடையவர் அடையும் இன்பம் பெரிதாகும். அத்தகைய இன்பத்தைப் பற்றித் தெரியாதவரே தாம் சேர்த்த பொருளை ஏழை எளியோருக்கு வழங்காது பிறர் கொண்டு போக இழக்கும் இரக்கம் அற்றவர் ஆவர்!  



ஒரு வீட்டில் அப்பா சாகக் கிடக்கிறார்; மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார். மூச்சுவிட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய கூறு கெட்ட பிள்ளைகள் அவருடைய சொத்துக்காகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர், கிறிஸ்து இரண்டாம் முறையாகத் தமது பாடுகளை முன் அறிவிக்கிறார். ஆனால் சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டைபோட்டுக் கொண்டிருக்கின்றனர்,

முதலிடத்திற்காகச் சண்டையிட்டுக் கொண்டிருந்த தம் சீடர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்கிறார் கிறிஸ்து (மாற் 9:35). பெரியவர்களையும் சிறியவர்களையும் வேறுபடுத்திக் காட்டும் பண்பு பணிவுடமையாகும், பெரியவர்கள் என்றும் பணிவுடன் வாழ்வர்; சிறியவர் என்றும் செருக்குடன் வாழ்வர்,
பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து (குறள் 978).

கடவுளுடைய எண்ணங்களும் வழிமுறைகளும் மனிதருடைய எண்ணங்களிலிருந்தும் வழிமுறைகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டவை (எசா 55:8-9). மனிதனின் வழி ஆணவத்தின் வழி; கடவுளுடைய வழியோ தாழ்ச்சியின் வழி. முதல் பெற்றோரின் பாவம் ஆணவம், அவர்கள் மனிதர்களாக இருந்தும் கடவுளுடைய நிலையைத் தட்டிப்பறிக்க விரும்பினர். எனவேதான் விலக்கப்பட்ட. கனியை உண்டு, பாவத்தையும் சாவையும் இவ்வுலகில் புகுத்தினர், அவர்களின் ஆணவ வழிக்கு மாற்று வழியாகக் கிறிஸ்து தாழ்ச்சியின் வழியைப் பின்பற்றினர். அவர் கடவுள் நிலையிலிருந்தும் மனித நிலைக்குத் தாழ்ந்து வந்தார் (பிலி 2:6-8).

பாவமே அறியாத அவர் உலகின் பாவ மூட்டைகளை எல்லாம் சுமந்து கொண்டு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெறச் சென்றார். அதைக் கண்ட திருமுழுக்கு யோவான் அதிர்ச்சி அடைந்தார். இறுதி இராவுணவின் போது சீடர்களுடைய காலடிகளைக் கழுவினார். அதைக் கண்டு பேதுரு அதிர்ச்சி அடைந்தார், நமது ஆணவத்திற்குத் தேவையான அதிர்ச்சி வைத்தியத்தை (shock treatment) அவர் அளித்தார். நாம் பெரியவர்களாக அல்ல, குழந்தைகளாக மாறவேண்டும்; இல்லையென்றால், விண்ணரசில் நுழைய முடியாது என்றும், ஒரு குழந்தையைப் போலத் தன்னைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் பெரியவர் என்ற புரட்சிகரமான போதனையையும் வழங்கினார் (மத் 18:3-4), "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்" (மத் 11:29) என்று தம்முடைய தனிப்பட்ட பண்பைக் போட்டுக் காட்டினார்.

ஒரு கணவன் தமது பங்குத் தந்தையிடம் சென்று, "சாமி! இந்நாள் வரை எனது மனைவி என்னை வாயால் திட்டிக் கொண்டிருந்தான். ஆனால், இப்போ கையை நீட்டி என்னை அடிக்க வருகிறாள் அவளை எப்படி அடக்குவது என்று கற்றுக் கொடுங்கள்' என்று கேட்டார். அதற்குப் பங்குத்தந்தை, அது தெரிஞ்சா நான் என் மியாராய் வந்தேன்" என்றாராம்! ஒரு கணவர் ஓர் அறிஞரிடம் சென்று, "நான் கிழித்த கோட்டை என் மனைவி தாண்டக்கூடாது. அதற்கு நீங்கள் என்ன ஆலோசனை கூறுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, அந்த அறிஞர், கோட்டை எங்கே கிழிப்பது என்று (முதலில் உங்கள் மனைவியைக் கேட்டுக கிழியுங்கள்" என்றாராம்!

இன்றைய குடும்ப வாழ்விலும் சமுதாய வாழ்விலும் ஒருவர் மற்றவரை அடக்கி ஆள விரும்புகின்றனர். இதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம். அடக்குமுறை மனிதத் தன்மை கொண்டது அல்ல, அது மிருகத் தன்மை வாய்த்தது. காட்டிலே கொடிய விலங்குகள் சாதுவான விலங்குகளை வேட்டையாடுகின்றன. மனிதன் என்பவன் பிறரை அடக்கி ஆளாமல் பிறருக்கு விட்டுக் கொடுக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்த வேண்டும் (கலா 5:15), பிறரை அடக்கி ஆளும் முறை பிற இனத்தாரின் முறை என்றும், இயேசுவின் சீடர்கள் பிறரை அடக்கி ஆனாமல் பிறருக்குத் தொண்டு ஆற்ற வேண்டும் (மத் 20:25-28) என்றும் போதிக்கிறார் கிறிஸ்து.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித யாக்கோபு விண்ணக ஞானத்தையும் மண்ணக ஞானத்தையும் வேறுபடுத்திக் காட்டுகின்றார் (யாக் 3:13-18), மண்ணக ஞானம் பேய்த்தன்மை கொண்டது: அது பொறாமை, மனக்கசப்பு, கட்சி மனப்பான்மை ஆகிய தீய பண்புகளைக் கொண்டது. ஆனால் கடவுளிடமிருந்து வரும் விண்ணக ஞானம் தெய்வத் தன்மையுடையது. அது அமைதி, பொறுமை, இணங்கிப் போகும் தன்மை ஆகிய நற்பண்புகளைக் கொண்டது. கடவுள் தன்மை கொண்டவர்கள் பிறருடன் இணங்கிப் போவர்.

பிறரை அடக்கி ஆள்பவர்கள் தற்காலிகமாக வெற்றி அடைந்தாலும் நிரந்தரத் தோல்வியைத் தழுவுவர், மாறாக, பணிந்து போகிறவர்கள் தற்காலிகமாகத் தோல்வி அடைந்தாலும் நிரந்தரமான வெற்றியை அடைவர் என்று இன்றைய முதல் வாசகமும், பதிலுரைத் திருப்பாவும் சுட்டிக் காட்டுகின்றன.

நீதிமானின் பொறுமையையும் கடவுள் பக்தியையும் கடவுள் பயமற்றவர்கள் இழித்துரைக்கின்றனர், நீதிமானுக்கு எதிர்காலம் இல்லை என்று ஏளனம் செய்கின்றனர். ஆனால் கடவுள் நீதிமான்களை எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார். "செருக்குற்றோர் எனக்கு எதிராக எழுந்து என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர். கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கிறார்” (திபா 54:3-4), தீமைக்குத் தீமை செய்பவர்களுக்கு கிடைப்பது ஒருநாள் இன்பம். தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களுக்குக் கிடைப்பதோ நிரந்தர இன்பம்,

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம், பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ் (குறள் 156)


யார் பெரியவர்?

'நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல நன்மை தீமை அறிவீர்கள்' (தொநூ 3:5) என்று அலகை 'உயிர் வாழ்வோர் அனைவருக்கும் தாயான' ஏவாளிடம் சொன்ன முதல் வார்த்தைகள், அவருடைய உள்ளத்தில் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஆழப் பதிந்துவிட்டது. எப்படி? அலகையின் இவ்வார்த்தைகள் பெண்ணின் வயிற்றுப் பசியைத் தூண்டுவதாக இல்லை. மாறாக, அவரின் உள்ளத்து வேட்கையை, உள்ளத்து உந்துணர்வைத் தட்டி எழுப்புவதாக இருக்கிறது. அது என்ன உந்துணர்வு? சிக்மண்ட் ஃப்ராய்ட் என்ற ஆஸ்திரிய உளவியல் அறிஞர், 'மனிதர்களின் அடிப்படையான உந்துணர்வாக வன்முறையையும், பாலியல் உணர்வையும்' முன்வைக்கிறார். இந்த இரண்டு அடிப்படை உந்துணர்வுகளையும் உந்தித் தள்ளுகிற ஓர் உணர்வு இருக்கிறது. அதுதான், 'தன்னை பெரியவர் அல்லது முக்கியமானவர் என்று நினைக்கும் உந்துணர்வு' (basic instinct to feel important).

'நீங்கள் கடவுளைவிட பெரியவராக அல்லது கடவுளைப் போல பெரியவராக இருப்பீர்கள்' என்பதுதான் விவிலியத்தில் மனுக்குலம் எதிர்கொள்ளும் முதல் சோதனை.

காயின் ஆபேலைத் தாக்கக் காரணமாக இருந்தது, 'யார் பெரியவர்?' என்ற உந்துணர்வே.

மக்கள் பாபேல் கோபுரம் கட்ட முனைந்ததும்,

யாக்கோபு ஏசாவை ஏமாற்றி தலைப்பேறு உரிமையைப் பெற்றுக்கொண்டதும்,

யோசேப்பின் சகோதரர்கள் அவரை மிதியானியர்கள் கையில் விற்றதும்,

பாரவோன் இஸ்ரயேல் மக்களை அடிமைப்படுத்தியதும்,

பாரவோன் இஸ்ரயேல் மக்களை மோசே தலைமையில் விடுவிக்க மறுத்ததும்,

... ... ...

சவுல் தாவீது மேல் பொறாமை கொண்டு அவரை அழிக்க விரும்பியதும்,

தாவீதின் மகன்களே ஒருவருக்கு ஒருவர் அரியணை சண்டை இட்டதும்,

சாலமோன் ஞானியாக இருந்தாலும் சிலைவழிபாட்டுக்கு தன்னையே கையளித்ததும்

என எல்லா நிகழ்வுகளிலும் கதைமாந்தர்கள் தங்களுக்குள் எழுப்பிய கேள்வி, 'யார் பெரியவர்?' என்பதுதான்.

இந்தக் கேள்விதான் இந்த உலகின் பெரிய நாடுகள் எடுக்கும் முடிவுகளிலிருந்து, நம் வீட்டிற்குள் நடக்கும் சின்னச் சண்டை வரை அனைத்தின் பின்புலத்தில் இருக்கிறது. 'பெரியவராக' அல்லது 'முக்கியத்துவம்' பெற்றவராக இருக்க நாம் அனைவரும் விரும்புகிறோம். அதைவிட வெறிகொண்டு இருக்கிறோம்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குள் இருக்கும் இந்த 'சிற்றின்ப நாட்டத்தை' சுட்டிக்காட்டுவதோடு, 'பெரியவராக இருப்பது' எதில் அடங்கியிருக்கிறது என்பதையும் அறிவுறுத்துகிறது.

சாலமோனின் ஞானநூல் அலெக்ஸாந்திரியாவில் வாழ்ந்த யூத குழுமத்திற்கு எழுதப்பட்டது. அலெக்ஸாந்திரியா நகரம் கிரேக்க கலாச்சாரத்தை மிகவும் உள்வாங்கி செல்வச் செழிப்பிலும், கல்வி அறிவிலும் மேலோங்கி நின்றது. அந்நகரில் வாழ்ந்த யூதர்கள் கிரேக்க கலாச்சாரத்தினால் ஆச்சர்யப்பட்டு, தங்களின் 'திருச்சட்டம் பின்பற்றும் வாழ்வை' காலாவதியானதாக, உலகிற்கு ஒவ்வாத ஒன்றாகக் கருதினார்கள். காலப்போக்கில், அவர்கள் கிரேக்க கலாச்சாரத்தை ஒட்டி வாழவும் தொடங்கினார்கள். இதே நேரத்தில் மற்றொரு யூதக் குழுமம் கிரேக்க கலாச்சாரத்திற்கு உட்படாமல் தங்களின் சட்டங்களையும், மரபுகளையும் பின்பற்றுவதிலும், தாங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தினர் என்ற சிந்தனையிலும் வாழ்ந்தனர். இந்த இரு குழுமங்களுக்கு இடையே அடிக்கடி கருத்து மோதல்களும், சண்டைகளும் வந்தன. தங்களின் திருச்சட்டத்தை மட்டும் பிடித்துக்கொண்டவர்கள் மற்றவர்களை 'நம்பிக்கையை மறுதலித்தவர்கள்' என்று குற்றம் சாட்டினார்கள். ஆனால், இப்படி குற்றம் சாட்டப்பட்ட முதல் குழுவினர் - அதாவது, யூதர்களாக இருந்தாலும் கிரேக்க கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டவர்கள் - திருச்சட்டத்தைப் பின்பற்றியவர்களின் செய்கை தவறு என்றும், அவர்கள் வைத்திருக்கும் கடவுள் நம்பிக்கை என்பது மூடநம்பிக்கை எனவும் நிரூபிக்க விரும்பினார்கள். எனவே, அவர்கள் கடவுளையும், கடவுளைப் பின்பற்றுபவர்களையும் சோதிக்க விரும்பினார்கள். இப்படி இவர்களைச் சோதிக்கும்போது கடவுள் வருவாரா என்று பார்த்து, கடவுளையும் பொய்யராக்க நினைத்தார்கள். இந்நிகழ்வையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். சாஞா 2:17-20) வாசிக்கின்றோம்: 'நீதிமான்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம். முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால் அவர் அவர்களுக்கு உதவி செய்வார்.'

கிரேக்க கலாச்சாரத்தைப் பின்பற்றிய 'பொல்லாதவர்கள்' தங்கள் அடையாளத்தை வெளிப்புற கிரேக்க சின்னங்களில் தேடுகின்றனர். தாங்கள் கிரேக்கர்களைப் போல இருப்பதால் இவர்கள் தங்களை 'பெரியவர்கள்' என நினைத்தார்கள். மேலும், இதனால் தங்களைச் சாராத மற்றவர்களைப் பழிதீர்க்கவும் விரும்பினார்கள். ஆனால், கடவுளின் திருச்சட்டத்தையும், அவர் தந்த கடவுளின் பிள்ளைகள் என்னும் அடையாளத்தையும் பின்பற்றிய 'நீதிமான்கள்' தங்கள் அடையாளத்தை தங்களுக்கு உள்ளே கண்டனர். இந்த நீதிமான்கள் தங்கள் நீதியான வாழ்வின் வழியாக தாங்கள் 'பெரியவர்கள்' என நினைத்தார்கள்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். யாக் 3:16-4:3) தன் திருச்சபையின் அடுத்த பிரச்சினையான 'பிளவு மற்றும் கட்சி மனப்பான்மையை' கையாளுகின்றார். யாக்கோபின் திருச்சபை பொறாமை மற்றும் தன்னல எண்ணங்களால் துன்பற்றது. பொறாமை மற்றும் தன்னல மையப்போக்கின் வழியாக தங்களையே 'பெரியவர்கள்' என நினைத்துக்கொண்டனர் அத்திருச்சபையில் உள்ள சிலர். ஆனால், இந்த இரண்டிற்கும் மாறாக, 'கடவுளின் ஞானத்தை' அவர்களுக்கு முன்வைக்கிறார் யாக்கோபு: 'ஞானத்தின் பண்பு தூய்மை. அது அமைதியை நாடும். பொறுமை கொள்ளும். இணங்கிப் போகும். இரக்கமும் நற்செயல்களும் கொண்டிருக்கும். நடுநிலை தவறாது. வெளிவேடம் கொண்டிராது.' எல்லாவற்றிற்கும் மேலாக, ஞானத்தின் கனி அமைதி.  யாக்கோபின் திருச்சபையின் பிரச்சினை நம்பிக்கையாளர்களுக்கு வெளியிலிருந்து வரவில்லை. மாறாக, அவர்கள் உள்ளத்தில் உதிக்கிறது. 'நாட்டம்' என்பதும், 'இன்பம்' என்பது ஒரே கிரேக்க வார்த்தையால் குறிக்கப்படுகிறது. ஆக, 'நாட்டம்' என்ற ஒன்று இருக்கக் காரணம் அந்த நாட்டம் கொண்டுவரும் இன்பமே. நாட்டம் கொண்டுள்ள மனிதர் தன்னுள்ளே பிளவுபட்டிருக்கிறார். அது அவருக்கு பெரிய போராட்டமாக இருக்கிறது. இந்தப் பிளவை நிரப்ப அவர் தன் அந்தஸ்து, அதிகாரம், புகழ், அறிமுகம் ஆகியவற்றை நாடுகிறார். இது தொடர் போராட்டத்திற்கும், சண்டை சச்சரவுகளுக்கும், கொலைக்கும் வழிவகுக்கிறது.

'யாரும் பயணம் செய்யாத பாதை' என்ற நூலின் ஆசிரியர் ஸ்காட் பெக் 'க்ராட்டிஃபிகேஷன்' என்ற வார்த்தையை அறிமுகம் செய்தார். இவர் யாக்கோபின் திருமடலில்தான் இந்த சிந்தனையைக் கண்டறிந்திருக்க முடியும். அதாவது, நீண்டகால மதிப்பீடுகள் தரும் மகிழ்ச்சிக்கு காத்திராத மனம், சின்னச் சின்ன சிற்றின்பங்களை நாடி, தன்னையே 'கிராட்டிஃபை' செய்து செய்துகொள்ள நினைக்கிறது. உதாரணத்திற்கு, குழுவாழ்வு என்பது ஒரு நல்ல மதிப்பீடு. எல்லாரும் சேர்ந்து வாழ்வது, சேர்ந்து உழைப்பது, சேர்ந்து சாப்பிடுவது என்பது. ஆனால், இந்த மதிப்பீடு ஒரே நாளில் நாம் அடையக்கூடியதா? இல்லை. இதற்கு பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம். ஆனால், இவ்வளவு நாட்கள் பொறுமையாக இருந்தால் இத்தகைய வாழ்வை நாம் கண்டிப்பாக அடைந்துவிட முடியும். ஆனால், இவ்வளவு நாட்கள் பொறுமை காக்க மறுக்கும் மனம் என்ன செய்கிறது? சிறு சிறு குழுக்களாக மக்கள் பிரிந்து வாழ்வதில் சிற்றின்பம் தேடுகிறது. சாதி அடிப்படையில், மொழி அடிப்படையில், மதம் அடிப்படையில், இன அடிப்படையில், உறவு அடிப்படையில் என சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து இந்தக் குழு தரும் சின்னச் சின்ன பாதுகாப்பு உணர்வில் இன்பம் அடைகிறது. ஆனால், இந்தப் பாதுகாப்பு எந்நேரமும் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பதை அது மறந்துவிடுகிறது. சிற்றின்ப நாட்டம் (செக்ஸ் என்று மட்டும் இதை நினைக்க வேண்டாம்!) உடனடி தீர்வைத் தருகிறது. ஆனால், உடனடித் தீர்வுகள் எப்போதும் நல்ல தீர்ப்புகளாக இருப்பதில்லையே. மேலும், சிற்றின்ப எண்ணங்கள் கொண்டவர்கள் கடவுளிடமிருந்துகூட உதவி பெற முடியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பதுதான் சோகத்தின் உச்சம்.

இப்படியான வாழ்வு ஒருவரின் ஆன்மீக வாழ்வையும் அழித்துவிடுகிறது. இப்படி பிளவுபட்டிருப்பவர்கள், தங்கள் நாட்டங்களால் அலைக்கழிக்கப்படுவதால், கடவுளைச் சார்ந்திருப்பதிலிருந்து முற்றிலும் விலகி விடுகிறார்கள். இவர்கள் கடவுளிடம் 'கேட்பதற்குப்' பதிலாக அவரிடமிருந்து 'பறித்துக்கொள்ள' விரும்புகிறார்கள். மற்றும் சிலர் கடவுளிடம் தவறானவற்றைக் கேட்கின்றனர். தன்மையம் கொண்ட விண்ணப்பங்களுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில் தன் திருச்சபையினர் கடவுளின் ஞானத்தை மட்டும் கேட்கவும், அந்த ஞானத்தின் கனியாக அமைதியை அவர்கள் சுவைக்கவும் அழைப்பு விடுக்கிறார் யாக்கோபு.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற் 9:30-37), 'யார் பெரியவர்?' என்ற கேள்வியை இரண்டு படிநிலைகளில் அணுகுகிறது. நற்செய்தி வாசகத்தில் முதல் பகுதியில் இயேசு தன் இறப்பை இரண்டாம் முறை முன்னறிவிக்கின்றார். ஆனால் அவர் சொன்னது அவரின் சீடர்களுக்கு விளங்கவில்லை. அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. இரண்டாம் பகுதியில் அவர்கள் புரிந்துகொள்ளாததற்கான காரணம் நமக்குத் தெரிகிறது.

இயேசுவும் அவருடைய சீடர்களும் கப்பர்நகூமிற்கு வருகிறார்கள். பல சீடர்களின் சொந்த ஊரும் அதுதான். ஆக, சீடர்கள் தங்கள் சொந்த ஊருக்கு வருகின்றனர். வரும் வழியில் தங்களுக்குள் 'யார் பெரியவர்?' என்று விவாதிக்கின்றனர். தங்கள் சொந்த ஊரில் தாங்கள் பெரியவர் என அவர்கள் காட்ட விரும்பினர். ஒவ்வொருவரும் தாங்கள் செய்த போதனைகள், புதுமைகள், இயேசுவுக்கும் தங்களுக்கும் உள்ள நெருக்கம், தங்களின் இன்றியமையாமை குறித்து தங்களின் அடையாளத்தை மற்றவர்களுக்கு உறுதி செய்ய விரும்பினார்கள். தங்கள் உற்றார், உறவினர், நண்பர்களிடம் தங்களைப் பற்றிச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள விரும்பினார்கள். இயேசு தன்னுடைய தற்கையளிப்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது சீடர்கள் தங்களின் அடையாளத்தையும், தகுதியையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். தன் சீடர்களை வெளிப்படையாகக் கடிந்துகொள்ளாத இயேசு அவர்களுக்கு இந்த நேரத்தில் 'யார் பெரியவர்?' என்று கற்பிக்கிறார்.

முதலில், 'பெரியவராக' இருப்பது என்பது 'பணி ஆற்றுவது' அல்லது 'சேவை செய்வது.' இயேசுவின் இப்போதனை அவரின் சமகாலத்து சிந்தனையை தலைகீழாகப் புரட்டியது. ஏனெனில், சீடர்களைப் பொறுத்தவரையில் 'பெரியவராக' இருப்பது என்பது 'பணிவிடை பெறுவது' என்ற நிலையில்தான் இருந்தது. இரண்டாவதாக, சீடத்துவம் என்பது குழந்தைகளை ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது. குழந்தைகள் அடிமைகளைப் போல அக்காலத்தில் எந்தவொரு அடையாளமும் இல்லாமல் இருந்தவர்கள். தங்களின் பெற்றோர்களின் விருப்பங்கள் மற்றும் தெரிவுகளைச் சார்ந்தே வாழ்ந்தனர். இன்றுதான் நாம் குழந்தை என்றால் 'இன்னசன்ஸ்', 'தாழ்ச்சி', 'இயல்பானவர்கள்' என்று ரொம்ப ரொமான்டிக்காக சொல்கிறோம். குழந்தைகள் என்பவர்கள் யூத மரபில் 'மனிதர்கள் நிலையை அடையாதவர்கள்'. அவர்கள் வெறும் 'பொருட்கள்'. அவர்கள் 'வலுக்குறைந்தவர்கள்'. ஆக, இப்படிப்பட்டவர்களை ஏற்றுக்கொள்ள நிறைய தாழ்ச்சி தேவை. ஆக, குழந்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இயேசு சொல்லும்போது, அவர் தாழ்ச்சியைக் கற்பிக்கின்றார் என்றும் நாம் புரிந்து கொள்ளலாம். ஆக, பெரியவர் என்பவர் யார்? கடைசியில் இருப்பவர். அல்லது தொண்டராக இருப்பவர். இவரால் மட்டும்தான் வலிமையற்ற குழந்தையையும் ஏற்று அரவணைத்துக் கொள்ள முடியும். ஆக, 'பெரியவர் நிலை' என்பது 'தனியே நிற்க முடியாதவர்களுக்கு உறுதுணையாக இருப்பதில்தான் இருக்கிறது' என்றும், சீடர்கள் தங்களுக்குள் படிநிலையை வகுத்து அதில் 'பெரியவர் நிலையை' அடைதலை விடுத்து, தற்கையளிப்பு, பணிவிடைபுரிதல், மற்றவர்கள்மேல் அக்கறை போன்றவற்றில் அதைக் கண்டுகொள்ளவும் அழைக்கின்றார் இயேசு.

இவ்வாறாக, 'முதன்மையாக இருப்பது' அல்லது 'பெரியவராக இருப்பது' என்பது நமக்குள் பரவலாக இருக்கும் ஒரு உந்துணர்வு. இந்த உந்துணர்வின் நேர்முகமான பகுதிதான் நம்மை முன்னேறத் தூண்டுகிறது. ஆனால், இதன் எதிர்மறையான பகுதி அடுத்தவர்களை அழிக்கவும், அடுத்தவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கவும் செய்துவிடுகிறது. ஆகையால்தான், அலெக்ஸாந்திரியாவில் இருந்து யூதர்கள் தங்கள் இனத்தாருக்கு எதிராகவே பழிதீர்க்க முனைந்தார்கள். தங்கள் தெரிவுகளைச் சரி என்று காட்டும் முகத்தான் மற்றவர்கள்மேல் வன்முறையும், கோபமும் காட்டினார்கள். அடுத்ததாக, தனிநபரின் நாட்டம் மையப்படுத்தப்பட்டால் அது ஒட்டுமொத்த குழுமத்தின் நலனைப் பாதிக்கும் என அறிந்திருந்த யாக்கோபு ஒவ்வொருவரும் தங்கள் உள்மனப் போராட்டங்களை வெல்ல அழைக்கின்றார். தொடர்ந்து, சீடத்துவம் பற்றிய தவறான புரிதலைக் கொண்டிருந்த தன் சீடர்களுக்கு 'பெரியவர்நிலை' என்பது 'சிறிதினும் சிறிதில்' இருக்கிறது எனக் காட்டுகிறார் இயேசு. இயேசுவின் இப்புதிய புரிதலை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே, 'என் ஆண்டவரே என் உதவி. அவரே என் வாழ்வுக்கு ஆதாரம்' (காண். திபா 54) என்று பாட முடியும்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு முன்வைக்கும் சவால்கள் எவை?

1. பெரிதினும் பெரிது

நமக்கு இன்பம் தரும், நலம் பயக்கும் அனைத்தையும் நாம் நாடுகிறோம். 'வாழ்க்கை மிகவும் குறுகியது. எனவே உனக்குத் தேவையானதை பெரிய கரண்டியில் எடுத்துக்கொள். ஏனெனில் திரும்ப உனக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது' என்று நமக்கு போதிக்கிறது இன்றைய உலகம். ஆக, நம் வேலை, பதவி, படிப்பு, சமூக நிலை என அனைத்தையும் நாம் பெரிய கரண்டியில் அள்ளிக்கொள்ளவே விரும்புகிறோம். பெரியவராக மாற நினைப்பது தவறா? நம் வாழ்வை நாம் முன்னேற்றிக் கொள்ள விரும்புவது தவறா? இல்லை. பெரியவராக மாற நினைக்காவிட்டால் மனிதன் குரங்காகவே இருந்திருப்பான். ஆக, பெரியவராக மாற நினைப்பதும், முக்கியத்துவம் அல்லது முதன்மைத்துவம் பெற விரும்புவதும் தவறல்ல. ஆனால், அது எப்போது தவறாகிறது என்றால், நான் என்னையே மையப்படுத்தி வாழும்போதும், என் நாட்டங்களுக்கு மற்றவரைப் பயன்படுத்தும்போதும்தான். அடுத்தவரைப் பயன்படுத்தி நான் முன்னேற நினைப்பது தவறு. எடுத்துக்காட்டாக, எனக்கு பணம் நிறையவும், வேகமாகவும் வேண்டும் என்பதற்காக நான் போதைப்பொருள் விற்றால், அது தவறு. நான் அப்படி விற்கும் போது, என் சகோதர, சகோதரிகளை என் தன்னல நோக்கத்திற்காக பயன்படுத்துகிறேன்.

ஆக, பாரதி சொல்வதுபோல, 'பெரிதினும் பெரிது கேள்' என நாம் பெரியவற்றை, மேன்மையானவற்றை விரும்பலாம். ஆனால், அந்த விருப்பம் தன்மையம் கொண்டதாகவும், என் உடன்வாழ்பவரைப் பயன்படுத்துவதாகவும் இருக்கக் கூடாது.

2. பொறாமையும் கட்சி மனப்பான்மையும்

நான் பெரியவர் ஆகும் முயற்சியில் எனக்கு எதிராக அல்லது என்னைவிட பெரிதாக இருப்பவரை நான் பொறாமையுடன் பார்ப்பதோடு, என்னைப் போல பார்ப்பவர்களை ஒரே குழுவாக இணைத்து கட்சி மனப்பான்மையை உருவாக்குகிறேன். என் குழுமத்தில், 'நாம் - அவர்கள்' என்ற பேதத்தை நான் உருவாக்கிவிடுகிறேன். இந்த நிலையில் நான் அவர்களை அழிக்கவும் துணிந்துவிடுகிறேன். ஒருபக்கம் நான் குழுமத்தைச் சார்ந்திருப்பது போலவும் இருந்துகொண்டு, மற்றொரு பக்கம் குழுமத்திற்கு எதிராக செயல்படுகிறேன். இந்தப் போக்கு தவறு என்பதை இரண்டாம் வாசகம் சுட்டிக்காட்டுகிறது. 'நானும் பெரியவர்', 'அவரும் பெரியவர்' என அடுத்தவரின் முக்கியத்துவத்தையும் ஏற்றுக்கொள்ள ஞானம் தேவை. இந்த ஞானம் ஒருவர் மற்றவரோடு நாம் வாழும் வாழ்வில் அமைதியை நமக்கு அளிக்கிறது.

3. கடிவாளம் இல்லா நாட்டம்

நம் நாட்டங்களை நாம் குறைக்க வேண்டும். நாட்டங்கள் இல்லாதவர்கள்தாம் குழந்தைகள். அவர்களுக்கென்று ஆசைகள் இருந்தாலும் அவர்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்ற அடுத்தவர்களை அழிக்க முனைவதில்லை. இயேசு தன் இறப்பை பற்றி சொல்லும்போது, அதைக் கண்டுகொள்ளாத சீடர்கள் தங்களின் நாட்டங்களை மட்டுமே மையப்படுத்தியவர்களாக இருக்கின்றனர். முதன்மைநிலை என்பது படிநிலையில் இல்லை என்றும், அது தாழ்ச்சியிலும், பிளவுபடாத அர்ப்பணத்திலும் இருக்கிறது என்கிறார் இயேசு. 'எனக்கு என்ன கிடைக்கும்' என்ற மனநிலையில் இருந்து, 'நான் எப்படி பணிவிடை புரியலாம்' என்று நினைப்பதே முதன்மைநிலை. 'கடலளவு கிடைத்தாலும் மகிழ்ந்துவிடாமல், அல்லது கையளவே கிடைத்தாலும் வாடிவிடாமல்' இருப்பதே மேன்மை. இயேசுவுக்கு தன் இலக்கும், இறைத்திட்டமும் தெளிவாக இருந்ததால், வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும், இந்த இரண்டின் ஒரு அங்கமாக பார்க்கின்றார். இந்த மனநிலை நமக்கும் இருந்தால் எத்துணை நலம்!

ஆக,

நாம் நமக்குள் எழும் 'முதன்மைநிலை' என்ற உந்துணர்வை ஆய்வுசெய்து பார்ப்போம்.

என் முதன்மைநிலையால் நான் இழந்தவை எவை?
என் முதன்மைநிலைக்காக நான் பொறாமை மற்றும் கட்சி மனப்பான்மை கொண்ட நேரங்கள் எவை?
இயேசு சுட்டிக்காட்டும் முதன்மைநிலைக்கு என்னையே தாழ்த்த தடையாக உள்ள காரணிகள் எவை?

இறுதியாக,

'காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே' (புறநானூறு 192)

என்பது நம் இன்றைய செபமாக, செயலாக இருக்கட்டும்.



Tuesday 11 September 2018

ஆண்டின் பொதுக்காலம் 24-ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 24-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்

எசா 50:5-9 அ .
யாக். 2:14-18
மாற் 8:27-35






மனிதன் மாண்புடன் படைக்கப்பட்டவன். இயற்கையிலேயே மதிப்புடன் படைக்கப்பட்டாலும் பணம், பதவி, பட்டம் போன்ற அணிகலன்கள் இருந்தால் மட்டுமே தான் மதிப்புடன் வாழ்வதாக ஒரு மாய எண்ணம் அவனுக்குள் விதைக்கப்பட்டு, அது வளர்ந்து, விழுது விட்டு பரந்து கிடக்கிறது. இந்த மதிப்புடன் வாழ்தல் என்பதில் துன்பங்களோ , துயரங்களோ, கஷ்டங்களோ இருக்கக் கூடாது என்று நினைக்கிறான். ஏன் இயற்கையான சாவு கூட அவனுக்கு அருகில் வராமல் இருக்க வேண்டும் என்று எண்ணற்ற விதத்தில் போராடுகிறான். இங்ஙனம், மலர்ப் பாதை மட்டுமே வாழ்க்கைப் பாதையாக இருக்க வேண்டும் என்பது மனிதரின் சிந்தனையாகவும், அதுவே மனிதருக்கு ஏற்றவையாகவும் இருக்கிறது.

ஒரு சொல்லால் எல்லாவற்றையும் படைத்தவர், ஒரே மகனை மீட்பிற்காய் தந்தவர், நாம் ஒன்றுபட்டு வாழ்வதில் பெருமகிழ்ச்சியும் கொள்கிற கடவுள், எல்லாவற்றையும் கடந்த அவர் துன்பத்தைத் தன் அக வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டார். தன் ஒரே மகனை பாடுகள் பட அனுமதித்தார். சிலை செதுக்கப்படும்போது உளிக்கு வலிக்கும் என்று செதுக்குபவன் நினைப்பானா? பாறைக்குச் சேதம் ஏற்படுகின்றது என செதுக்காமல் இருப்பானா? கை வலிக்கிறது என எடுத்த வேலையை நிறுத்துவானா? சிற்பியின் கை வலி, உளியின் வெப்பம், பாறையின் சிதைவு இவை அனைத்தின் காரணமாக உருவாகும் அற்புதமே பார்ப்போர் வியக்கும் அற்புதச் சிலைகள். சிரமங்களும், துன்பங்களும், தடைகளும் பிரபஞ்சத்தின் உருவாக்கத்தில், வளர்ச்சியில் இன்றியமையாத காரணிகள். இதை உணருகிற மனிதன் வளர்ச்சிப் பாதையில் இருக்கிறான்.

படைக்கப்பட்டவை அதன் மாண்பிலிருந்து விலகியதை மீட்பதற்காகவே வந்த இறைமகன் சுமைகளைத் தன் மேல் ஏற்றுக் கொள்ளத் தயாரானார். நான் கிளர்ந்தெழவில்லை : விலகிச் செல்லவுமில்லை. அடிப்போக்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை என்ற எசாயாவின் வார்த்தை இதை வெளிப்படுத்துகின்றன. மானிட மகன் பலவாறு துன்பப்படவும், மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும் என்ற இயேசுவின் வார்த்தைகள் மெய்யாகிறது (மத் 16:21).

இயேசுவில் நம்பிக்கையும், அவர்தம் பாடுகள் வழியாக நம்மை மீட்கிறார் என்பதில் விசுவாசமும் கொண்டுள்ள இறைமக்களின் செயல்பாடுகள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? நம்முடைய நம்பிக்கை செயல் வடிவம் பெற வேண்டும். குறிப்பாக சமூகத்தின் விளிம்பிலும், ஒடுக்கப்பட்ட நிலையிலும் இருந்துகொண்டு துன்பமே வாழ்வின் பாதை, துயரமே அனுதின அனுபவம் என்று வாழ்கின்ற மக்களிடத்தில் வார்த்தையை மட்டுமல்ல, நம் தலைவராம், மீட்பராம் இயேசுவைப்போல நம் செயல்பாடுகளின் வழியாக அவர்களின் வாழ்வில் மாறுதலைக் கொணர முற்படுவோம். தான் என்று வாழ்கிறவர் மண்ணோடு மண்ணாகிப் போவர். அதே நேரத்தில் பிறர் நலச் சிந்தனையோடு வாழ்பவர், பிறரின் துன்பத்தில் பங்கேற்பவர், என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார் (மத் 10 : 39) என்ற ஆண்டவரின் வார்த்தையை வாழ்வாக்குவர். வாழ்வோம், வாழ்விப்போம். கிறிஸ்துவே மெசியா என அறிக்கையிடுவோம்.








தன்னலம் துறப்போம்


இன்றைய நற்செய்தியிலே நாம் தன்னலத்தைத் துறந்தவர்களாக வாழ வேண்டும் என்று இயேசு நமக்கு அறிவுரை பகர்கின்றார்.

தன்னலத்தைத் துறத்தல் என்றால் என்ன? என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஓர் உவமை.

ஓர் ஊரிலே பரம ஏழை ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இரவு மணி பன்னிரெண்டு இருக்கும். திடீரென பெரும் மழை பெய்தது. அப்போது அந்த ஏழையின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தார் அந்த ஏழை! வெளியே ஓர் உப்பு வியாபாரி! அந்த வியாபாரி அந்த வீட்டுக்காரரைப் பார்த்து, ஐயா, நான் ஓர் ஏழை உப்பு வியாபாரி! மழை பெய்கின்றது. இரவு மட்டும் நானும், என் கழுதையும் தங்க சற்று இடம் தாருங்கள் என்றார். அந்த ஏழைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! தன் மனைவியைப் பார்த்தார். தன் மனைவியைப் பார்த்து, நான் உன்னை ஒன்று கேட்கலாமா? என்றார். அன்பும், அறனும் படைத்த பண்பு மிக்க அந்தப் பெண்ணோ , எதை வேண்டுமானாலும் கேளுங்கள் என்றார். இப்பொழுது இரவு மணி 12. பொழுது விடிய இன்னும் 5 மணி நேரம் இருக்கின்றது. நீயும், நானும், நமது குழந்தைகளும், தரையில் படுக்காமல், நின்றுகொண்டிருந்தால், இந்த வியாபாரிக்கும், கழுதைக்கும் நம் வீட்டில் இடமிருக்கும் என்றார்.

மனைவி, சரி என்றார். பெற்றோரைப் போல பிள்ளைகள் ! பொழுது விடியும்வரை அந்த வீட்டாரும், உப்பு வியாபாரியும், கழுதையும் அந்த வீட்டுக்குள்ளே நின்றுகொண்டிருந்தனர். எங்கே மனமுண்டோ அங்கே இடமுண்டு!

இந்த உவமையிலுள்ள குடும்பத்தார் அனைவரும் தன்னலத்தைத் துறந்தவர்கள்!

இல்லை என்று வந்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் வாழ்வதே பிறர்நலம் (இரண்டாம் வாசகம்).

தன்னலம் துறத்தலைப் பொறுத்தவரையில், நம்மிடம் உள்ள பொருள்களைப் பிறரோடு பகிர்ந்து கொள்வது ஓரளவு எளிது. ஆனால் நமது உடலையும், உயிரையும் துறப்பது மிகவும் கடினம்!

நம்மையே நாம் மறந்து, நமது விருப்பு, வெறுப்புகளை நாம் கடந்து, குற்றமற்ற நம்மை குற்றவாளிகள் எனத் தீர்ப்பிடுகின்றவர்களை மன்னித்து அவர்களுக்காகச் செபிப்பது மிகவும் கடினம்.

எதற்குமே கிளர்ந்தெழாத (முதல் வாசகம்) நிலையை அடைவது அவ்வளவு எளிது அல்ல! ஆனால் முற்றும் துறந்த வாழ்வை இயேசு வாழ்ந்து காட்டியிருப்பது உண்மைதானே!... முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

மேலும் அறிவோம் :
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு? (குறள் : 987).

பொருள் : தமக்குத் துன்பம் தரும் கொடிய செயல் புரிந்தவர்க்கும் இன்பம் தரும் நல்லவற்றையே செய்யவில்லை என்றால் நிறை பண்பாகிய சால்புடைமையால் எந்தப் பயனும் விளையாது!










முற்றும் துறந்த துறவியாகிய பட்டினத்தார் வயலில் ஒரு வரப்பின்மேல் தலையை வைத்துப் படுத்திருந்தார். அவ்வழியே விமலா, கமலா என்ற இரு பெண்கள் சென்றனர். விமலா கமலாவிடம், "பஞ்சு மெத்தைமேல் படுக்க வேண்டிய இவர் வரப்பின்மேல் படுத்திருக்கிறார்" என்றார். கமலா விமலாவிடம், "பஞ்சு மெத்தையைத் துறந்தாரே தவிர, தலைக்கு உயரமான இடம் வேண்டும் என்ற எண்ணத்தைத் துறக்கவில்லையே" என்றார். அவர் கூறியதைக் கேட்ட பட்டினத்தார் எழுந்து வயலில் சமதளமான இடத்தில் படுத்துக் கொண்டார், மீண்டும் விமலா கமலா விடம், "பாரு, அவருடைய துறவு இப்பொழுது பூரணமாகிவிட்டது” என்றார். கமலா சும்மா விடவில்லை . அவர் கூறினார்: “ஊரார் பேசுவதையெல்லாம் கேட்டு நடக்கும் இவர் ஒரு துறவியா?" அப்பொழுதுதான் பட்டினத்தார் பின்வருமாறு பாடினார்; “வித்தாரமும் கடமும் வேண்டாம், மட நெஞ்சே! செத்தாரைப் போலத் திரி.” அதாவது, மூட நெஞ்சே, பிறருடைய புகழுரையும் பாராட்டும் உனக்குத் தேவையில்லை. செத்தவனைப்போல் இரு, செத்தவன் யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்பதில்லை.

துறவியின் மனநிலை இப்படியிருக்கும்போது, கிறிஸ்து இன்றைய நற்செய்தியில், “மக்கள் என்னை யாரென்று சொல்லுகிறார்கள்?" என்று கேட்கின்றாரா? இது அவருக்குத் தேவையா? “எனக்கு மக்கள் தரும் மகிமை தேவையில்லை " என்று கூறிய அவர் (யோவா 5:34) மக்களின் கருத்துக் கணிப்பைக் கேட்கவேண்டியதன் காரணம் என்ன? ஏனெனில் மக்கள் தம்மைப்பற்றித் தவறான எண்ணம் கொண்டிருப்பதை அவர் விரும்பவில்லை. உண்மையில் மக்களும் சீடர்களும் அவரைப்பற்றித் தவறான கண்ணோட்டம் கொண்டிருந்தனர்,

மாலைக் கல்லூரியில் படித்த இளம் பெண் இரவில் மிகவும் தாமதமாக வீடு திரும்பினார், அவருடைய அம்மா, “ஏண்டி லேட்டாய் வந்தே?" என்று கேட்டார். இதே கேள்வியை அவருடைய அப்பா ஆங்கிலத்திலும், அண்ணன் மலையாளத்திலும், தம்பி தெலுங்கிலும் கேட்டனர். ஏனென்றால் வயசுப் பெண்ணு லேட்டாய் வந்தா, நாலுபேர் நாலு விதமாகப் பேசுவார்களாம்! இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் மக்கள் நாலு விதமாகப் பேசினார்கள், அவரைத் திருமுழுக்கு யோவான் என்றும், எலியா என்றும், இறைவாக்கினருள் ஒருவர் என்றும், மெசியா என்றும் நான்கு விதமாக விமர்சித்தனர்.

பேதுரு இயேசுவை 'மெசியா' என்றார். ஆனால் மெசியா சிலுவையில் அறையப்பட வேண்டியவர் என்பதை அவர் ஏற்க மறுத்து, கிறிஸ்துவைக் கடிந்து கொண்டார். கிறிஸ்து அவரைச் சாத்தான் என்று குறிப்பிட்டு, அவருடைய எண்னாம் மனித எண்ணமேயன்றி, கடவுளுடைய எண்ணம் இல்லை என்றார். அப்படியானால், கடவுளுடைய எண்ணம் என்ன? அதைப் பற்றி இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. மெசியா துன்புறும் இறை ஊழியனாக இருப்பார், அவர் பாடுகள் பல படவேண்டியிருக்கும். திந்தனைகளை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் அவர் முகத்தைக் காட்டுவார் (எசா 50:5-9). கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்னும் சீடர்கள் சிலுவையில் அறையுண்ட மெசியாவைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை . எனவேதான், நம்பிக்கை இழந்து, வாடிய முகத்துடன் எம்மாவும் சென்ற இரு சீடர்களிடம் கிறிஸ்து : "அறிவிலிகளே! மெசியா தாம் மாட்சி அடைவதற்கு முன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!" என்ற கூறி கடிந்து கொண்டார் (லூக் 24:25-26)

சிலுவைச் சாவை எற்று, தம்மையே வெறுமையாக்கிய கிறிஸ்துவைப் பின்பற்றி நாமும் நம்மையே மறுத்து. நமது சிலுவையைச் சுமக்க வேண்டுமென்கிறார் கிறிஸ்து. கிறிஸ்தவ வாழ்வில் சிலுவை விருப்பப்பாடமல்ல! கட்டாயப்பாடம், நமது தனிவாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் நம்மை அழுத்துகின்ற பாரமான சிலுவை ஆணவம் என்ற அரக்கன். கிறிஸ்துவைப்போல நாமும் தம்மைத் தாழ்த்தி, மற்றவர்களை நம்மைவிட உயர்வாகக் கருத வேண்டும்.

ஒரு திருமண வரவேற்பில் பங்கேற்ற மக்கள் வாய்விட்டு சிரித்தனர். ஏன்? மணமகன் உயரமானவர்; மணமகள் குட்டையானவர், அவர்கள் மாலை மாற்றிக் கொண்டபோது, மணமகள் தனக்கு மாலையிட வசதியாக மணமகன் மிகவும் குணிந்தார். திருமண நாள் அன்றே, மணமகள் மணமகனைத் தலைகுனிய செய்துவிட்டார். அதைப் பார்த்த நான், "குலியத் தெரிந்த மணமக்களுக்குப் பணியத் தெரியவில்லையே!" என்றேன்.

பிறரை மட்டம் தட்டுவதில் நாம் ஆனந்தம் அடைகிறோம். ஒருவர் தன் நாயுடன் வீதியில் சென்றார். அவருக்கு எதிரில் வந்தவர் அவரிடம், "கழுதையுடன் செல்லுகிறீர்களா? என்று கேட்க அவர், "இல்லை , தாயுடன் செல்கிறேன்" என்றார். அதற்கு மற்றவர், "நான் உங்களைக் கேட்கவில்லை. உங்கள் தாயிடம் கேட்கிறேன்" என்று சொல்லி கடகடவெனச் சிரித்தார்,

சிலுவை என்பது தன்னலம் துறந்து பிறர் நலம் பேணுவதாகும். நாம் நமக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழ வேண்டும். பிறரை வாழவைக்க நாம் தியாகம் செய்ய வேண்டும். இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு கூறுகிறார்: "நம்பிக்கை செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றது." நமது நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்பது நமது அன்புச் செயல்கள்,
"மனிதனாக பிறந்ததற்கு நாலுபேருக்கு நன்மை செய்ய வேண்டும்" என்று ஒருவரிடம் கூறியதற்கு அவர் கூறியது: “தான் நான்கு பேருக்கு நன்மை செய்கிறேன். அவர்கள்: என் மனைவி மற்றும் எனது மூன்று பிள்ளைகள். நமது அன்பு குடும்பம் என்னும் குறுகிய வட்டத்துக்குள் முடங்கிவிடாமல், மற்றவர்களையும் அரவணைக்கும் அன்பாக விரிய வேண்டும்.

சிலுவையில் அறையுண்ட மெசியாவை ஏற்று. நமது அன்றாட வாழ்க்கைச் சிலுவையைச் சுமப்போம். ஆணவத்தை அழித்து மற்றவர்களை நம்மைவிட உயர்ந்தவர்களாக மதிப்போம். தன்னலம் மறந்து பிறர் நலம் பேணுவோம். அன்பில் உயிர் நிலைத்துள்ளது. அன்பிலார் தோலால் போர்த்தப்பட்ட எலும்புக்கூடு.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு   (குறள் 80)











தெரிவும் அர்ப்பணமும்

'இரு மான்களை விரட்டுகிறவன் ஒரு மானையும் பிடியான்' என்பது பழமொழி. 

நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் சரியானவற்றைத் தேர்வு செய்யவும், தேர்ந்து தெரிவு செய்ததற்கு முழுமையாக நம்மை அர்ப்பணம் செய்யவும் இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மை அழைக்கிறது. சரியானவற்றைத் தெரிவதும், தெரிந்து கொண்டபின் அதற்கு முழுமையாக அர்ப்பணிப்பதுமே ஒருவருக்கு வெற்றியைத் தரும். நாம் சரியான தெரிவுகளைச் செய்ய கிறிஸ்தவர்களாகிய நமக்கு துணைநிற்பவை நாம் கொண்டிருக்கிற நம்பிக்கையும், கிறிஸ்துவோடு நாம் கொண்டுள்ள உறவு நெருக்கமுமே.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 50:5-9) 'துன்புறும் ஊழியன்' என்று தலைப்பிடப்படும் நான்கு பாடல்கள் வரிசையின் மூன்றாம் பாடல். 'நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர் கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார். காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார். கற்போர் கேட்பதுபோல் நானும் செவிசாய்க்கச் செய்கின்றார்' (எசா 50:4) என்று தொடங்குகிறது. ஆண்டவரின் ஊழியன் யாரென்றால் இவருக்கு கடவுள்தாமே கற்றுத் தருகின்றார். மேலும், கடவுளின் கற்றுக்கொடுத்தலுக்கு தினமும் அவர் காதுகளைத் திறந்து காத்திருக்கின்றார். ஆனால், இப்படிப்பட்டவருக்கு என்ன நேருகிறது? 'முதுகில் அடிக்கப்படுகின்றார். இவருடைய தாடி பிடுங்கப்படுகிறது. பிடுங்குவதற்கு தாடையையும் இவர் ஒப்புவிக்கின்றார். இவர் நிந்தனை செய்யப்படுகின்றார். காறி உமிழப்படுகின்றார்.' இவ்வாறாக, ஒட்டுமொத்த அவமானத்திற்கும், நிந்தனைக்கும், வேதனைக்கும் ஆட்படுகின்றார். ஏன் இவருக்கு இந்த நிலை? இதற்கான காரணம் தெளிவாக இல்லை என்றாலும், ஒருவேளை இவர் எடுத்த தெரிவுக்காகவும், அந்த தெரிவு கொணர்ந்த அர்ப்பணத்திற்காகவும்தான் இவர் இவ்வளவு துன்பங்கள் அனுபவிக்கின்றார். இருந்தாலும், இவர் தன் தெரிவையும் அர்ப்பணத்தையும் விட்டுவிடவில்லை. தன் எதிரிகளைத் துணிவோடும் மனத்திடத்தோடும் எதிர்கொள்கின்றார். இவர் கடவுள்மேல் கொண்டிருக்கின்ற நம்பிக்கையும், இவருடைய கடவுள்சார்நிலையும், கடவுளின் உடனிருப்பும் தொடர்ந்து போராட இவருக்கு ஆற்றல் தருகின்றது. 'ஆண்டவராகிய தலைவர் உடன் நிற்பதால்' இவருடைய எதிரிகள் ஆற்றல் இழக்கின்றனர். இறுதியாக, 'அவர்கள் அனைவரும் துணியைப் போல் இற்றுப்போவார்கள்.'

இங்கே 'துணியைப் போல இற்றுப்போதல்' என்ற ஒரு உருவகத்தைப் பார்க்கிறோம். நீண்ட காலமாக மண்ணில் கிடக்கும் ஒரு துணி பார்ப்பதற்கு துணிபோல இருந்தாலும், அந்தத் துணியின் நிறம், அந்தத் துணியின் அச்சு எல்லாம் அப்படியே இருந்தாலும், அதை நாம் கையில் எடுக்கத் தொடங்கினால், அது அப்படியே உதிர ஆரம்பிக்கும். அதுதான் இற்றுப்போதல். ஆக, ஒரு காலத்தில் கையால் வலு கொண்டு இழுத்தாலும் கிழியாத துணி, இப்போது பார்ப்பதற்கு முழுமையாக, வலுவானதாக இருந்தாலும் தொட்டவுடன் உதிர்ந்துபோகும் அளவிற்கு அது வலுவற்று இருக்கிறது.

துன்புறும் ஊழியன் பாடலின் பின்புலம் யூதர்களின் எருசலேம் வருகைதான். பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து பாரசீக மன்னன் சைரஸ் அவர்களால் விடுவிக்கப்பட்டு தங்கள் சொந்த ஊர் திரும்புகின்றனர் யூத மக்கள். தங்களின் சொந்த நகரான எருசலேமுக்கு வந்தபோது எருசலேம் நிலைகுலைந்து கிடக்கிறது. இப்போது தங்கள் நகரத்தையும், ஆலயத்தையும் அவர்கள் கட்ட வேண்டும். இப்போது இவர்கள் முன் இரண்டு தெரிவுகள்: ஒன்று, பாரசீக அரசோடு கைகோர்த்துக்கொள்வது. அவர்களின் துணையால் மீண்டும் நகரத்தையும் ஆலயத்தையும் கட்டி எழுப்புவது. இந்த எண்ணத்தைக் கொண்டவர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுத்தார்கள். ஏனெனில், கடவுள் தாமே தங்களை எதிரியிடம் ஒப்படைத்துவிட்டார் என்று கடவுளுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள். இரண்டு, பாரசீக தாக்கத்திலிருந்து விலகி இருப்பது. கடவுளின் உதவியோடு மீண்டும் தங்கள் நகரத்தையும், ஆலயத்தையும் கட்டி எழுப்புவது. இங்கே நாம் காணும் 'துன்புறும் ஊழியன்' இந்த இரண்டாம் குழுவின் தலைவராக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இவரைப் பொறுத்தவரையில் கடவுளின் குரலைக் கேட்பதும், அவரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதுமே நன்மையைப் பெற்றுத்தரும். ஆகையால்தான், இவர் 'நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவும் இல்லை' (50:5) என்கிறார். இவ்வாறாக, சரியான தெரிவும், சமரசம் செய்துகொள்ளாத இவரது அர்ப்பணமும் இவருக்குத் துன்பங்களைத் தந்தாலும், இறுதியில் இவர் கடவுளின் துணை கொண்டு அனைவர்மேலும் வெற்றிகொள்கிறார். தன் உயிரே போகும் நிலை வந்தாலும் இவர் தன் தெரிவிலும், அர்ப்பணத்திலும் உறுதியாக இருக்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். யாக் 2:14-18) தொடக்ககால எருசலேம் திருச்சபையில் நிலவிய ஒரு குழப்பம் பற்றி வாசிக்கின்றோம். '... திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என நாம் அறிந்திருக்கிறோம்' (கலா 2:16) என்ற பவுலின் போதனையைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர் சிலர். இவர்கள், 'நம்பிக்கை' என்பது 'வெளிப்படுத்தப்பட்ட கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வது' என்றும், 'வேறு எந்தச் செயல்களையும் இதற்குச் செய்யத் தேவையில்லை' என்றும் தங்களின் தவறான புரிதலை மற்றவர்களுக்குப் பரப்பினர். மேலும், விருத்தசேதனம், தூய்மைச் சடங்கு, ஓய்வுநாள் சட்டம் அனைத்தையும் வேண்டாம் எனப் புறந்தள்ளினர். அத்தோடு சேர்த்து இறைவனின் கட்டளைகளையும் ஓரங்கட்டினர். ஆக, 'நான் கடவுளை ஏற்றுக்கொண்டால் போதும்' என்று சொல்லிக்கொண்டு, கடவுளின் 'அன்புக் கட்டளையை' புறக்கணித்தனர். ஆனால், பவுல், 'அன்பின் வழியாகச் செயலாற்றும் நம்பிக்கையே இன்றிமையாதது' (காண். கலா 5:6) என்று சொன்னதை அவர்கள் மறந்தார்கள். இத்தகைய தவறான புரிதல் யாக்கோபின் திருச்சபையை மிகவும் பாதித்தது. நம்பிக்கையாளர்கள் என்று தங்களையே கருதியவர்கள், தங்களின் நம்பிக்கை ஒன்றே தங்களுக்கு மீட்பைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில், செயல்களை - பிறரன்புச் செயல்களை - ஓரங்கட்டினர். இப்படிச் செய்வது இவர்களுக்கு மிக எளிதாகவும் இருந்தது. ஏனெனில், இப்படி இருக்கும்போது யாரும் யாரைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. 'நம்பிக்கை' என்ற அக உணர்வு 'நடத்தை' என்ற புறச் செயலில் வெளிப்படவேண்டும் எனச் சொல்கிறார் யாக்கோபு. அப்படி செயல்படாமல் இருக்கிற நம்பிக்கை வெறும் கானல்நீர்தான். கானல்நீர் ஒருபோதும் நம் தாகம் தீர்க்காது. மேலும், தன் திருச்சபையில் உள்ள ப்ராக்டிகலான எடுத்துக்காட்டையும் சொல்கின்றார்: 'உணவும், உடையும் இல்லாத ஒருவர் நம்மிடம் வர, அவரிடம் நாம், 'நலமே சென்று வாருங்கள். குளிர்காய்ந்துகொள்ளுங்கள். பசியாற்றிக்கொள்ளுங்கள்' என்று சொல்வதால் அவருக்குப் பயன் என்ன?' செயல் இல்லாத சொற்கள் வெற்றுச்சொற்களே.

ஆக, நம்பிக்கை என்பதை நாம் தெரிவு செய்கிறோம் என்றால், அந்தத் தெரிவிற்கான அர்ப்பணம் இயேசுவின் மனநிலையை நாமும் பெற்றுக்கொள்வதில்தான் இருக்கிறது. அந்த மனநிலை நம்முடைய பிறரன்பிலும், பிறர்சேவையிலும் வெளிப்பட வேண்டும். அதைவிடுத்து, செயலற்ற நம்பிக்கையை தெரிவு செய்வதும், எந்தவொரு வலியையும் தராத அர்ப்பணத்தைக் கைக்கொள்வதும் சால்பன்று.

நற்செய்தி வாசகத்திற்கு (காண். மாற் 8:27-35) வருவோம்.

'பேதுருவின் அறிக்கை' என்று சொல்லப்படும் இன்றைய நற்செய்தி வாசகப் பகுதிதான் மாற்கு நற்செய்தியின் மையமாக இருக்கிறது. இந்தப் பகுதிதான் மாற்கு நற்செய்திதான் திருப்புமுனை. இதுவரை 'இயேசு யார்?' என்று கேட்டுக்கொண்டே வந்த வாசகர், 'இயேசுவே மெசியா' என்ற புரிதலை இங்கேதான் பெறுகின்றார். இதற்கு முன்னால் உள்ள பகுதியில் இயேசு தீய ஆவிகளை விரட்டினார், நோயாளர்களுக்கு நலம் தந்தார், சீடர்களுக்குப் போதித்தார், தொழுகைக்கூடத்தில் போதித்தார். ஆனால், இவற்றிற்காக இயேசு இவ்வுலகிற்கு வரவில்லை. இயேசுவின் இச்செயல்களைக் கண்ட மக்கள் அவரை இறைவாக்கினரில் ஒருவராக, திருமுழுக்கு யோவானாக, எலியாவாக அல்லது அவர்களுக்கு இணையானவராகப் பார்த்தனர். ஆகையால்தான், 'நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?' என்ற கேள்வியிலிருந்து, 'நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்று கேட்பதன் வழியாக, தன் அடையாளத்தையும், தன் பணியையும் தானே வெளிப்படுத்த தயாராகிறார் இயேசு. பேதுரு சரியாக, 'நீர் மெசியா' என்று சொன்னபோது, தான் வந்ததன் நோக்கத்தையும் வெளிப்படுத்த விளைகிறார் இயேசு.  தன் பணியின் உண்மையான இலக்கு - துன்பம், உதறித் தள்ளப்படுதல், கொலை, உயிர்ப்பு - பற்றி முதன்முதலாக பேச ஆரம்பிக்கிறார். தன் இறப்பு மிக அருகில் இருக்கிறது என்பதை மனித அடிப்படையில் ஏற்றுக்கொள்ள இயேசுவுக்கே கடினமாகத்தான் இருந்திருக்கும். இருந்தாலும், தான் தெரிவு செய்ய வேண்டிய பாதையும், தான் காட்ட வேண்டிய அர்ப்பணமும் அதுவே என்பதில் தெளிவாக இருந்தார் இயேசு. உயிர்ப்பின் மேல் உள்ள நம்பிக்கை அவருக்கு துணிவைக் கொடுத்தாலும், மனிதன் என்ற நிலையில் தான் கொடுக்க வேண்டிய அர்ப்பணத்தின் விலை அவருக்கு அதிகமாகவே தெரிந்திருக்கும்.

பேதுரு இயேசுவின் தெரிவையும், அர்ப்பணத்தையும் கடிந்துகொள்கின்றார். ஏனெனில், பேதுரு இயேசுவைப் பற்றி வேறு எண்ணங்கள் வைத்திருந்தார். மேலும், இயேசுவின் தெரிவு மற்றும் அர்ப்பணத்திலிருந்து அவரை விலக்கிவிடத் துடிக்கின்றார். ஆனால், இயேசு பேதுருவை 'சாத்தானே' என கடிந்துகொள்கின்றார். ஏனெனில், பேதுருவின் வார்த்தை இயேசுவின் தெரிவை மாற்றுவதாகவும், அவரின் அர்ப்பணம் என்னும் பாதையில் குறுக்கே நிற்பதாகவும் இருக்கிறது. 

இந்த நிலையில் இயேசு சீடத்துவத்தின் விலை என்ன என்பதைப் பற்றித் தன் சீடர்களோடு பகிர்ந்துகொள்கின்றார். தன் தெரிவும் அர்ப்பணமும் மட்டுமல்ல. மாறாக, தன் சீடர்களின் தெரிவும் அர்ப்பணமும் தான் தேர்ந்துகொண்டதை ஒட்டியதாகவே இருக்க வேண்டும் எனக் கற்பிக்கின்றார். இயேசு இறப்பைத் தேடிச் செல்லவில்லை. மாறாக, இறப்பை தழுவிக்கொள்வதால்தான் வாழ்வை அடைய முடியும் என்பதைப் புரிந்துவைத்திருந்தார். இந்தக் காரணத்திற்காகவே அவர் உலகிற்கு வந்தார். இப்பாதை துன்பத்தின் பாதை என்றாலும் இதைத் தெரிந்துகொண்டார். 

இவ்வாறாக, இன்றைய இறைவாக்கு வழிபாடு நாம் சரியானவைகளைத் தெரிவு செய்யவும், சரியானவற்றிற்கு நம்மை அர்ப்பணம் செய்யவும் தூண்டுகிறது. 

எசாயாவின் காலத்தில், கடவுளுக்கு எதிரான பாதையைத் தெரிவு செய்யப் பலர் நினைத்தனர். ஆனால், துன்புறும் ஊழியன், 'கடவுள்' என்னும் பாதையைத் தெரிவு செய்து, அதற்குத் தன்னை அர்ப்பணிக்கிறார்.

யாக்கோபின் திருச்சபையில், வெறும் கோட்பாடுகளை நம்பிக்கையாக ஏற்றுக்கொள்ளும் எளிய பாதையைத் தெரிவு செய்த நம்பிக்கையாளர்கள், தம் சகோதர, சகோதரிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தனர். அவர்களை நற்செயல்களோடு கூடிய நம்பிக்கை என்னும் பாதையைத் தெரிவு செய்யவும், ஒவ்வொரு பொழுதும் தங்கள் நம்பிக்கையை நற்செயல்களால் வெளிப்படுத்தும் அர்ப்பணத்தைப் பெற்றுக்கொள்ளவும் அவர்கள் தூண்டுகிறார் யாக்கோபு.

பேதுருவுக்கு துன்பம் மற்றும் சிலுவையின் தெரிவும், அர்ப்பணமும் 'மெசியா' என்னும் இயேசுவுக்குத் தேவையற்றதாகத் தெரிந்தது. ஏனெனில், இயேசுவை ஓர் 'அரச' அல்லது 'அருள்பணியாளர் மெசியாவாக' அவர் கற்பனை செய்திருந்தார். ஆனால், இயேசு தன் தெரிவும், அர்ப்பணமும் சிலுவையே என்பதை பேதுருவுக்கும், சீடர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் தெளிவாகச் சொல்கின்றார்.

இப்படிப்பட்ட சரியான தெரிவுகளைச் செய்பவர்களும், சரியான தெரிவுகளுக்குத் தங்களையே அர்ப்பணம் செய்பவர்களுமே, இன்றைய பதிலுரைப் பாடல் சொல்வதுபோல, 'உயிர் வாழ்வோர் நாட்டில் ஆண்டவரின் திருமுன் வாழ முடியும்' (திபா 116).

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு விடுக்கும் சவால்கள் எவை?

நம் வாழ்வில் நமக்கு முன் பல தெரிவுகள் உள்ளன. எந்நேரமும் நம் கண் முன் நிறைய விருப்பங்கள், நம் காதுகளில் நிறைய ஒலிகள், நிறைய வசீகரங்கள், நிறைய மயக்கங்கள் நம்மை இங்கும் அங்கும் அலைக்கழிக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில், நம்பிக்கையாளர் உறுதியான தளத்தில் நிற்க வேண்டும். அந்த தளத்தில் இருந்து தன் தெரிவில் உறுதியாக இருக்க வேண்டும். நாம் சரியான தெரிவை மேற்கொள்ளவும், சரியான அர்ப்பணத்தைக் கொண்டிருக்கவும் இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மை அழைக்கிறது. 

நாம் சரியான தெரிவை மேற்கொள்ளும்போது, அந்தத் தெரிவிற்கு ஏற்ற அர்ப்பணத்தைக் கொண்டிருக்கும்போது இறைவன் நம் அருகில் இருக்கிறார் என்பதை முதல் வாசகத்தின் துன்புறும் ஊழியன் நமக்குச் சொல்கிறார். ஊழியனின் விடாமுயற்சியும் அர்ப்பணமும் அவரை எதிரிகளின் நிலையிலிருந்து உயர்த்தியது. அவருக்கு கடவுளின் பாதுகாப்பு எப்போதும் உடனிருந்தது. அவர் தன் அர்ப்பணத்திற்கு கொடுக்க வேண்டிய விலை அதிகமாக இருந்தாலும் அவர் பெற்ற பரிசு பெரிதாக இருந்தது. நாம் இங்குமங்கும் அலைக்கழிக்கப்படும்போது கடவுளை நோக்கி குரல் எழுப்பினால் அவர் அருகில் வருவார். நாம் சரியான தெரிவுகளை மேற்கொள்ள அவர் நமக்கு உள்ளொளி தருவார்.

இரண்டாவதாக, நம் நம்பிக்கை நம் நற்செயல்களில் வெளிப்பட வேண்டும். நம்பிக்கை என்பது வாழ்க்கை. இந்த வாழ்க்கை மற்றவரோடு உள்ள உறவில் வெளிப்பட வேண்டும். அன்றாடம் நம் கண்முன் நிறைய மக்களைப் பார்க்கிறோம் - பசித்தவர்கள், இருப்பிடம் இல்லாதவர்கள், தேவையில் இருப்பவர்கள். இவர்களைக் காணும்போதெல்லாம் நாம் தெரிவு எப்படி இருக்கிறது? நம்முடைய இயலாமையிலும் அவர்களுக்கு நம் உடனிருப்பைக் காட்ட முடிகிறதா? அவர்களோடு கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடக்க முடிகிறதா நம்மால்?

மூன்றாவதாக, இயேசுவின் வாழ்வு மற்றும் பணியின் திருப்புமுனையில் அவர் எடுக்க வேண்டிய தெரிவு மற்றும் அர்ப்பணத்தை இன்றைய நற்செய்தி வாசகத்தில் கண்டோம். அவரின் தெரிவையும் அர்ப்பணத்தையும் கண்ட நாம் அலைக்கழிக்கப்படும் நம் வாழ்வில் நாம் மேற்கொள்ளும் தெரிவும் அர்ப்பணமும் எப்படி இருக்கிறது?

இறுதியாக,

நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் சரியான தெரிவை எடுக்கவும், அதற்கேற்ற அர்ப்பணத்தைக் கொடுக்கவும் வேண்டும். இதை நாம் எப்படிச் செய்வது? என் குருமட வாழ்வில் எனக்குப் பயிற்சியளித்த ஒரு வயதான அருள்தந்தை இப்படிச் சொன்னார்: 'ஏதாவது முடிவு எடுக்குமுன், கண்களை மூடி உனக்குப் பரிச்சயமான இயேசுவின் முகத்தை மனத்திரையில் கொண்டுவா. அந்த முடிவை எடுக்கும்போது அந்த முகம் சிரித்தால் அது சரியான முடிவு. அந்த முகம் மௌனம் காத்தால் அது தவறான முடிவு.' இந்தப் பயிற்சி எனக்குப் பல நிலைகளில் பலன் தந்திருக்கிறது. 

நான் என் வாழ்வில் சரியானவற்றைத் தெரிவு செய்யாமல், சரியானவற்றுக்கு என்னை அர்ப்பணம் செய்யாமல் இருக்கும்போது, நான் இரண்டு மான்கள் பின்னால் ஓடுகிறான். விளைவு, என்னால் ஒரு மானையும் பிடிக்க முடிவதில்லை.







 


Friday 7 September 2018

ஆண்டின் பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறு



இன்றைய வாசகங்கள்

எசாயா 35:4-7அ;
யாக்கோபு 2:1-5;
மாற்கு 7:31-37






உயிர் இல்லா உடல் பிணம், உயிர் இருந்தும் ஐம்புலன்கள் செயல்படாவிட்டால் அவர்கள் ஜடம், ஐம்புலன்களை அதன் நோக்கில் விடுபவர் மிருகம், ஐம்புலன்களைக் கட்டி, நேர்படுத்தி, செவ்வனே பயன்படுத்துபவர் மனிதர். கண்ணிருந்தும் பார்க்க இயலவில்லையே, காதிருந்தும் கேட்க இயலவில்லையே என ஏங்கும் மனிதர்கள் ஏராளம். கண்ணிருந்தும் பார்க்காமல், காதிருந்தும் கேட்காமல் இருப்போர் எண்ணிக்கை அதைவிட அதிகம். ஐம்புலன்களைக் கொடையாகத் தந்து அதன் வழியாக இறைத் தன்மையை அடைய அழைப்பு விடுப்பது இன்றைய வாசகங்கள்.

பார்வையற்ற தன்மையையும், கேட்க இயலாத நிலையையும், பேச முடியாத தன்மையையும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று பிறப்பினாலோ, விபத்தினாலே இக்குறைபாடு ஏற்படுதல், மற்றொன்று பேச , பார்க்க, கேட்க முடிந்தும் தனக்குத் தேவையானதையும், பிடித்ததையும் மட்டும் பேசுதலும், பார்த்தாலும், கேட்டலும் ஆகும்.

முதல் வகைக் குறைபாடு உடையோர் அதிலிருந்து விடுபட அதிக ஆர்வமுடையவர்களாயும், அதற்காக இறைவனிடம் மன்றாடுபவர்களாயும் இருப்பர். இப்படிப்பட்டவர்களின் வாழ்வில் இறைவனின் வல்லமை எளிதில் செயல்படும். இரண்டாம் வகையானவரோ அதிலிருந்து எந்த வகையிலாவது மாறி விடுவோமோ என்று அஞ்சி தங்களுக்குள்ளேயே பூட்டி வைத்திருப்பர். இவர்கள்தான் உள்ளத்தில் உறுதியற்றவர்கள்.

உள்ளத்தில் உறுதியற்ற இவர்கள் திருத்தூதர் கூறுவதுபோல இனம், மொழி, வசதி, அறிவு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரித்துப் பார்ப்பர். இத்தகைய தரம் பிரிப்பது என்பது அச்சத்தால், தன்னம்பிக்கை இன்மையால்,
தன்னிலை அறியாததால் நிகழ்வதாகும். இவ்வகையான உள்ளத்தினரை நோக்கி ஆண்டவர் தரும் கட்டளை 'திறக்கப்படு' என்பதாகும். அதாவது உள்ளம் திறக்கப்படட்டும் என்று கட்டளையிடுகிறார்.

ஆண்டவர் இயேசு இனம், மொழி, வசதி, அறிவு, பால் என்று எந்தவித வேறுபாடுகளும் பார்க்காமல் அனைவரையும் சமமாகப் பார்த்து, குணமளித்து, வாழ்வித்து, வழிகாட்டித் தன் இறைத்தன்மையை உலகறியக் காட்டுகிறார்.

வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும், மனித மனப் பிளவுகளும் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று. இயற்கையால் நாம் அனைவரும் மனித நேயத்தோடு படைக்கப்பட்டவர்கள். அந்நிலையை நாம் மீண்டும் அடைய இயற்கையான, செயற்கையான குறைபாடுகள் நீங்க நமக்குத் தேவையான அடிப்படை குணம் அன்பு ஆகும். அன்பு என்கின்ற உயரிய பண்பில் நாம் வளரும்போது பாலை நிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும், வறண்ட பாலை நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும், கனல் கக்கும் மணற்பரப்பு நீர் தடாகம் ஆகும், தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும். ஐம்புலன்களை ஒருங்கிணைப்போம். கொடையாகப் பெறப்பட்ட சக்திகளை இறை மகிமைக்காகப் பயன்படுத்துவோம். பாரினில் நாம் அனைவரும் இறைச்சாயல்கள் என்பதில் உறுதி பெற்று இறைவனின் பிள்ளைகளாகப் பாகுபாடும், குறைகளுமற்ற வாழ்வு வாழ்வோம்.








ஊனம் மறையட்டும்


இன்றைய நற்செய்தியிலே காது கேளாதவரும், திக்கிப் பேசுபவருமான ஒருவரைக் குணமாக்கும் இயேசுவை நாம் சந்திக்கின்றோம். புதுமை நடந்ததும் அவரைச் சுற்றியிருந்தவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகின்றார்! காது கேளாதோர் கேட்கவும், பேச்சற்றோர் பேசவும் செய்கின்றாரே! என்று பேசிக்கொண்டனர் (மாற் 7:37).

அன்று புதுமைகள் செய்த இயேசு, இன்றும் நம் நடுவே வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றார்; புதுமைகள் செய்து கொண்டுதானிருக்கின்றார்.

இதற்கு ஓர் உதாரணம். தஞ்சை மறைமாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்திலுள்ள ஒரு கிராமம். அக்கிராமத்திலே தாயொருத்திக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது! ஆண்டுகள் பத்து உருண்டோடியும் சிறுவன் பேசவில்லை! எத்தனையோ மருத்துவ முறைகள்; பேச்சுப் பயிற்சிகள் எத்தனையோ! தஞ்சை, சென்னை போன்ற இடங்களிலுள்ள மருத்துவக் கல்லூரிகள்! எத்தனையோ கோயில்கள்! பாவம் அந்தச் சிறுவன் ! ஓரிரு வார்த்தைகள் கூட அவனால் பேச முடியவில்லை !

கடைசியாக அந்தச் சிறுவனின் பெற்றோருடைய கண்கள் வேளாங்கண்ணியை நோக்கித் திரும்பின. வேளாங்கண்ணிக்குச் சென்றனர். அவர்கள், மாதாவே ! மாதர்குல மாணிக்கமே ! எங்கள் குழந்தை பேச வேண்டும். உலகின் ஒளியைக் கையிலேந்தி பாருக்கெல்லாம் அருள்புரியும் அன்பு அன்னையே, அருள்புரியும் தாயே! என மெழுகென உருகி மன்றாடினர். அன்று இரவு அனைவரும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த நேரம்! சிறுவன் திடீரென எழுந்து, அம்மா! அம்மா! என்று அலறிக்கொண்டு அறைக் கதவைத் திறந்து கொண்டு அன்னையின் பேராலயத்தை நோக்கி ஓடினான். பெற்றோர் வேளாங்கண்ணியில் ஒரு வாரம் தங்கி ஏழைகளுக்கு உணவளித்துச் சென்றனர்.

நம் ஆண்டவராம் இயேசு இன்றும் புதுமைகள் செய்துகொண்டிருக்கின்றார் என்ற உண்மை நம்மை திடப்படுத்தவேண்டும் (முதல் வாசகம்). உங்களில் ஊனம் மறைய வேண்டுமா? பாலை நிலம் சோலை நிலமாக வேண்டுமா ? மனிதம் புனிதமாக வேண்டுமா? நீங்கள் நம்பிக்கையில் செல்வராகுங்கள் (இரண்டாம் வாசகம்); அப்போது நீங்கள் தேடுவது உங்கள் வீடு தேடிவரும் என்கின்றார் இயேசு. 


மேலும் அறிவோம் :
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).

பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.



 

ஒரு சிறுவன், "எனது தாத்தாவுக்கு நான்கு கைகளும் மூன்று காதுகளும் உள்ளன என்றான். அவன் குறிப்பிட்ட நான்கு கைகள்: வலக்கை, இடக்கை, வழுக்கை, பொக்கை. அவன் குறிப்பிட்ட மூன்று காதுகள் : வலக்காது, இடக்காது. கேட்காது.

வயதானவர்களுக்குத் தலை வழுக்கையாகவும் வாய் பொக்கையாகவும் காது மந்தமாகவும் மாறுவது இயல்பு. ஆனால் ஒரு சிலருக்குக் காது இருந்தும் அவர்கள் கேளாதவர்களாக இருப்பதுதான் வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. கல்வி கேள்வியால், ஆன்றோர்களுடைய அருள்வாக்கால் துளைக்கப்படாத செவிகள் செவிட்டுத் தன்மையுடையன.

'கேட்பினும் கேளாத் தகையவே
கேள்வியால் தோக்கப்படாதசெவி" (குறள் 418)
கிறிஸ்து இம்மையில் வாழ்ந்தபோது விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பல்வேறு உவமைகள் வாயிலாகப் போதித்தார். ஆனால் அவருடைய போதனையை மக்கள் உணரவில்லை; உணர்ந்து மனம் மாறவில்லை. அவருடைய போதனை செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. எனவேதான் அவர் இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள்காட்டி அம்மக்களைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்: “இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது. காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டனர்." (மத் 13:15)

பாவங்களிலெல்லாம் கொடிய பாவம் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டாலும் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்வதாகும், எனவேதான், நீங்கள் இன்று கடவுளுடைய குரலைக் கேட்டால் உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கிறது. திருப்பாடல் 95:8.

கடவுளுடைய வார்த்தையைக் காதால் கேட்கவும் அவருடைய புகழை நாவால் அறிக்கையிடவும் இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது.

இன்றைய முதல் வாசகம் மெசியாவின் காலத்தில் பார்வையற்றோர் பார்ப்பர்; காது கேளாதவர் கேட்பர் என அறிவிக்கின்றது (எசா 35:4-7). இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள்காட்டி, தாமே வரவிருக்கும் மெசியா என்பதற்குச் சான்று அளித்தார் கிறிஸ்து; அதாவது, பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்: காது கேளாதோர் கேட்கின்றனர் (லூக் 7:22).

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து, காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைக் குணப்படுத்துகிறார், அவருக்குக் குணமளிக்கும் முன், அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைக்கிறார்; தம் விரல்களை அவர் காதுகளில் இடுகிறார்; உமிழ் நீரால் அவர் நாவைத் தொடுகிறார்; வானத்தை அண்ணாந்து பார்க்கிறார்; பெருமூச்சுவிடுகிறார். அதன் பிறகு, "எப்பத்தா" அதாவது "திறக்கப்படு' என்று கூறி அவரைக் கேட்கும்படியும் பேசும்படியும் செய்கிறார்,

கிறிஸ்துவின் இப்பல்வேறு செயல்கள் அருளடையாளத் தன்மை கொண்டவை, அருள் அடையாளங்கள் நம்பிக்கையின் அருள் அடையாளங்கள், அருள் அடையாளங்கள் பயனளிக்க வேண்டுமென்றால் அதற்கு நம்பிக்கை முன்னதாகவே தேவைப் படுகிறது. எனவேதான் இயேசு கிறிஸ்து பல்வேறு செயல்களின் மூலம் படிப்படியாக அம்மனிதரிடத்தில் நம்பிக்கையை வளர்த்து அதன்பிறகே அவரைக் குணப்படுத்துகிறார்,

கிறிஸ்துவின் அதே வழிமுறையைத்தான் திருச்சபையும் பின்பற்றுகிறது. ஒவ்வொரு அருளடையாளத்திலும் முதலில் அருள்வாக்கு மூலமாக நமது நம்பிக்கையை வளர்த்து அதன்பிறகே அருளடையாளச் சடங்குகளை நிறைவேற்றுகிறது. திருப்பலியிலும் அருள்வாக்கு வழிபாடு முடிந்தபின்னே நற்கருணை வழிபாடு தொடங்குகிறது.

திருமுழுக்குப் பெறுவோரின் காதையும் வாயையும் குரு தொட்டுப் பின்வருமாறு கூறுகிறார் ! *செவிடர் கேட்கவும் ஊமையர் பேசவும் ஆண்டவர் செய்தருளினார். நீர் விரைவில் அவரது வார்த்தையைக் காதால் கேட்கவும், அவ்விசுவாசத்தை நாவால் அறிக்கையிடவும் செய்தருள்வாராக."

நாம் கடவுளுடைய வார்த்தையைக் காதால் கேட்கவேண்டும், ஏனெனில் கேட்பதால்தான் நம்பிக்கை உண்டாகும், "அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்" (உரோ, 10:17), கேள்வியால் நாம் பெற்ற நம்பிக்கையை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். "நாங்கள் கடதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது" (திப 4:20) என்று துணிவுடன் கூறிய பேதுருவின் ஆர்வம் நம்மை ஆட்கொள்ள வேண்டும்.

கடவுளின் குரலைக் கேட்பவர்கள் மற்றவர்களின், குறிப்பாக, நலிவடைந்தவர்களின் குரலைக் கேட்பார்கள், மலையில் ஒருவர் பிறந்தநாள் 'கேக்' வெட்டுகிறார். அவரைச் சுற்றி இருப்பவர்கள் அவரிடம் என்ன திரைப்படப்பாடல் பாடுவார்கள் ? "மலையோரம் வீசும் காற்று, மனசோட பாடும்பாட்டு கேக்குதா, கேக்குதா!" 'கேக்குதா' என்ற சொல் காதால் 'கேக்கு தா' என்ற பொருளையும் நீங்கள் வெட்டுகிற கேக்கைத் தாருங்கள் 'கேக்குத் தா' என்ற பொருளையும் கொண்டுள்ளது ஏழைகளின் அபயக்குரல் நமக்குக் கேட்குதா?


"மாண்டவர்களுக்காக அழாதே
கூனிக் குறுகி ஏழ்மையில் இருக்கிறானே
அந்த மனிதனுக்காக இரங்கு
வாய்பேச இயலாத அந்தக் கொத்தடிமைகள்
உலகின் வேதனையைக் காண்கிறார்கள்;
தவறுகள் அவர்கள் கண்ணுக்குப் படுகிறது
ஆனால் அவர்கள் வாய் திறக்க முடியவில்லை
அந்தத் துணிச்சலும் அவர்களுக்கில்லை"
(திருமதி இந்திராகாந்தியைக் கவர்ந்த கவிதை)

துன்புறுவோரின் அபயக்குரலைக் கேட்டு ஆவன செய்யவில்லை என்றால், நாம் காது இருந்தும் கேளாத செவிடர்கள்!

நமது காதுகள் கூர்மையாக இருக்க வேண்டும். அவ்வாறே தமது பார்வையும் நேரிய பார்வையாக இருக்க வேண்டும். பணக்காரர்களை ஒருவிதமாகவும் ஏழைகளை வேறொருவிதமாகவும் பார்த்து. ஒருதலைச் சார்பாக நாம் நடக்காமல் இருக்கும்படி இன்றைய இரண்டாம் வாசகத்தில் நம்மை எச்சரிக்கிறார் புனித யாக்கோபு.

இன்றைய நற்செய்தியில், இயேசுவின் புதுமையைக் கண்ட மக்கள் "இவர் எத்துணை நன்றாய் யாவற்றையும் செய்து வருகிறார்" (மாற் 7:37) என்று வியப்படைந்தனர். கடவுள் உலகத்தைப் படைத்தபோது தாம் படைத்ததை உற்று நோக்கினார், அவர் படைத்தவை மிகவும் நன்றாக இருந்தன (தொநூ 1:31). இந்த முதல் படைப்பு பாவத்தால் சீரழிந்த நிலையில் கடவுள் தம் மகன் கிறிஸ்து வழியாக மீண்டும் உலகைப் படைக்கிறார். இப்புதுப்படைப்பு முதல் படைப்பை விடச் சிறந்ததாக உள்ளது என்ற ஆழமான இறையியல் உண்மையையும் இப்புதுமை உணர்த்துகிறது.


திருமுழுக்கினால் புதுப்படைப்பாக மாறியுள்ள நாம். கடவுளுடைய வார்த்தையைக் காதால் கேட்போம். அதன் எதிரொலியாக ஏழைகளின், ஒடுக்கப்பட்டவர்களின் குரலையும் கேட்டு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்.










அவரைப் போல பார்க்க


சில வாரங்களுக்கு முன் கட்செவியில் ஆங்கிலத்தில் வலம் வந்த ஒரு தகவல். அதை அப்படியே தமிழில் மொழிபெயர்க்கிறேன்: 'ஒருநாள் மாலை நான் என் காரில் பயணம் செய்துகொண்டிருந்தேன். எனக்கு முன் ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. நான் அந்தக் காரை முந்துவதற்கு முயன்று பாதை தருமாறு ஹார்ன் அடித்தேன். ஆனால், அந்தக் கார் விலகுவதாகவும் இல்லை. வேகமாகச் செல்வதாகவும் இல்லை. பொறுமை இழந்த நான் இன்னும் தொடர்ந்து ஹார்ன் அடித்துக்கொண்டே அந்தக் காருக்கு மிக அருகில் சென்றேன். அப்போதுதான் அந்தக் காரின் பின் கண்ணாடியில் இருந்த ஸ்டிக்கர் என் கண்களில் பட்டது. 'நான் ஒரு மாற்றுத்திறனாளி. தயவுசெய்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள்!' அந்த ஸ்டிக்கர் வாசகம் என் கன்னத்தில் அறைவது போல இருந்தது. 'நான் ஏன் இன்று இவ்வளவு பொறுமை இழந்தேன்?' என யோசித்து, என் காரின் வேகத்தைக் குறைத்தேன். என் வாழ்வில் பொறுமையைக் கற்றுக்கொடுத்த அந்த ஸ்டிக்கர் காரின் பின்னால் மெதுவாக நானும் நகர்ந்தேன். இவர் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார். ஆகையால் நான் பொறுமையைக் கற்றுக்கொண்டேன். என் முன்னால்  இப்படி ஸ்டிக்கர் ஒட்டாமல் எத்தனை பேர் நடந்துகொண்டிருக்கிறார்கள்: 'நான் ஒரு அநாதை. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்,' 'நான் சாப்பிட்டு நான்கு நாள்கள் ஆகின்றன. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்,' 'நான் அகதியாக இங்கு இருக்கிறேன். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்,' 'நான் விவாகரத்து பெற்றவள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்,' 'நான் ஒரு குழந்தை. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்,' 'நான் ஒரு சிறைக்கைதி. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்,' 'போன வாரம் என் வேலை போய்விட்டது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்' - இப்படி நிறையபேர் ஸ்டிக்கர் இல்லாமல் என் கண்முன்னால் வந்து போகிறார்கள். ஸ்டிக்கரைக் கண்டதால் நான் பொறுமையாக இருந்தேன். காணாத ஸ்டிக்கர் முன்னாலும் நான் இனிமேல் பொறுமையாக இருப்பேன்.'

நிற்க.

நாம் அடுத்தவர்களைப் பார்க்கிறோம். அடுத்தவர்களை நாம் நினைப்பதுபோல பார்க்கிறோம். சிலவற்றிற்கு நாம் பாராமுகமாக இருக்கிறோம். சிலவற்றை ரொம்ப விரும்பி ஆழமாகப் பார்க்கிறோம். சிலவற்றை ஏனோ தானோ என்று மேலோட்டமாகப் பார்க்கிறோம். இதைத்தான் தூய பவுலும், 'ஏனெனில், இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல மங்கலாய்க் காண்கிறோம். ஆனால், அப்போது நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன். அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல முழுமையாய் அறிவேன்' (1 கொரி 13:12). 'அன்பு' என்ற வார்த்தையை வைத்து மிக அழகான ஒரு பாடலை எழுதிவிட்டு, 'பார்த்தல்' அல்லது 'அறிதல்' பற்றி தூய பவுல் எழுதக் காரணம் என்ன? நாம் பார்க்கும் விதத்திலிருந்து கடவுள் பார்க்கும் விதத்திற்குக் கடந்து செல்ல விரும்புகிறார் பவுல். ஆக, நாம் குறைவாகப் பார்க்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.

இன்றைய இறைவாக்கு வழிபாடு கடவுள் பார்ப்பதுபோல நாம் மற்றவர்களைப் பார்க்க அழைக்கிறது. ஒன்றைப் பார்க்க வேண்டுமென்றால் நாம் அதைத் தெரிவு செய்ய வேண்டும். கூடை நிறைய கொய்யா பழங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. நான் எதைத் தெரிவு செய்து நான் கையில் எடுக்கிறேனோ, அதைத்தான் நான் பார்க்கிறேன். மற்ற பழங்கள் என் கண்முன் இருந்தாலும் நான் அவற்றைப் பார்ப்பதில்லை. இதுதான் நம் குறைவான பார்வை. ஆனால், கடவுள் எல்லாரையும், எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கிறார். இந்தப் பார்வை நமக்கு வரும்போது நம் தெரிதலும், புரிதலும் அகலமாகிறது.

இரண்டாம் வாசகத்திலிருந்து (காண். யாக் 2:1-5) நம் சிந்தனையைத் தொடங்குவோம்.

ரொம்ப ப்ராக்டிக்கலான ஒரு நிகழ்வைப் பதிவு செய்கிறார் திருத்தூதர் யாக்கோபு. தொடக்க கிறிஸ்தவர்களின் சபை கூட்டம் நடக்கிறது. கூட்டம் தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. அப்போது பணக்காரர் ஒருவர் குதிரை வண்டியில் வந்து இறங்குகிறார். பளபளப்பான ஆடை, கண்களைப் பறிக்கும் மோதிரம், காலில் அழகிய செருப்பு, நேர்த்தியான தலைசீவல், பத்து அடிக்கு முன்னால் பாய்ந்து வரும் பெர்ஃப்யூம் வாசனை என வாசலில் வந்து நிற்கிறார். எல்லாருடைய கண்களும் வாசலை நோக்கி திரும்புகின்றனர். கூட்டத்தில் உள்ள எல்லாரும், 'இங்க வாங்க, இங்க வாங்க, இங்க உட்காருங்க' என உபசரிக்கிறார்கள். உபசரிப்பு முடிந்து கூட்டம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்க, பாதி ஆடை, நகக்கண்களில் வேலை செய்த அழுக்கு, பிய்ந்து சணல் கயிறால் கட்டிய செருப்பு, சீவாத தலைமுடி, வியர்வை நாற்றம் என ஒருவர் வாசலில் வந்து நிற்கின்றார். அப்போதும் எல்லாருடைய கண்களும் வாசலை நோக்கித் திரும்புகின்றனர். ஆனால், இப்போது, 'அடேய். அங்கே நில்!' 'டே நீ வராத!' 'இங்க வா, கால்பக்கம் உட்கார்' என்று ஆளாளுக்குக் கத்துகிறார்கள். சிலர் அவரை விரட்டிவிடவும் நினைக்கின்றனர். இந்த நிகழ்வைப் பதிவு செய்கின்ற யாக்கோபு, 'நீங்கள் ஆள்பார்த்து செயல்படுகிறீர்கள்' என்று தன் திருச்சபையாரைக் கடிந்துகொள்கிறார். மேலும், இந்த வேறுபாட்டிற்குக் காரணம் அவர்களின் தீய எண்ணத்தோடு உள்ள மதிப்பிடுதல் என்றும் சொல்கிறார். அத்தோடு, 'உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும், உரிமைப்பேறு பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா?' எனவும் கேட்கின்றார். என்ன தீய எண்ணம்? எதற்காக பணக்காரர் கவனிக்கப்படுகிறார்? அவரை வைத்து ஆளுநரிடம் எதாவது சிபாரிசு பெறலாம் அல்லது அவர் சபைக்கு ஏதாவது செய்வார் அல்லது அவரிடம் நாம் 'நல்ல பிள்ளையாக' இருந்தால் நாளை அவரை வைத்து நாம் ஏதாவது காரியம் சாதித்துக் கொள்ளலாம் - இந்த மூன்றிலுமே நன்றாகக் கவனித்தால் பணக்காரரை மற்றவர்கள் பயன்படுத்துகிறார்களே தவிர அன்பு செய்வதில்லை. இது ஒரு தவறான அணுகுமுறை. இதை உற்சாகப்படுத்துவது இந்த பணக்காரருக்கும் ஆபத்தானது. ஏழையை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அவரே அடுத்தவர்களைச் சார்ந்துதான் இருக்கிறார். இதில் அவரிடம் என்ன கிடைக்கும்? ஆக, 'இவரிடம் எனக்கு என்ன கிடைக்கும்!' என்ற அடிப்படையில் உறவு கொள்வது தவறு என்பதும் இந்தப் பகுதியின் மறைமுகப்பாடம்.

உலகின் பார்வை வேறு. கடவுளின் பார்வை வேறு. உலகின் பார்வை கடவுளின் வெளித்தோற்றத்தை மையமாக வைத்து இருக்கிறது. அவர் எந்த நிறத்தில், எந்த உருவில், எந்த அளவில், எந்த உறுப்புக்கள் எப்படி, எந்த ஆடை, எந்த அணிகலன், எந்த சிகையழகு கொண்டிருக்கிறார் என்பதை மையமாக வைத்து இருக்கிறது. ஆனால், கடவுளின் பார்வை இந்த எதில்மேலும் இல்லாமல் அவரின் அகத்தை மையப்படுத்தியதாக இருக்கிறது. கடவுள் அப்படி உள்ளத்தைப் பார்ப்பதால்தான் அவரால் 'பாரபட்சம்' இன்றி எல்லாரையும் அன்பு செய்ய முடிகிறது. ஆக, 'ஆள்பார்த்து செயல்படாதீர்கள்!' அல்லது 'பாரபட்சம் காட்டாதீர்கள்!' 'முகத்தாட்சண்யம் பார்க்காதீர்கள்!' என்றால், ஒவ்வொரு நபரையும் ஒரே அளவுகோல் கொண்டு அளப்பது என்பதுதான் இதன் அர்த்தம். 'பாரபட்சம் பார்த்தல்' என்பது நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ளும் ஒரு ஊனம் அல்லது தடை. இதை வெற்றிகொள்ள இயேசுவிடம் இருக்கும் பார்வை நமக்கும் தேவை. 'ஏழை-பணக்காரர்' பேதம் நாமாக உருவாக்கி வைத்திருக்கும் ஒரு பிறழ்வு. இயற்கை சிலரை பணக்காரராகவும், மற்றவரை ஏழையராகவும் படைக்கவில்லைதானே! ஆக, இயற்கையில் நாம் ஏற்படுத்தியுள்ள காயத்தை நாம்தான் நம் பார்வையால் குணமாக்க வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 35:4-7) மெசியாவின் வருகையின்போது காணப்படும் சில அறிகுறிகளைப் பட்டியலிடுகின்றார் இறைவாக்கினர் எசாயா. எசாயா 34ல் கடவுள் பழிதீர்ப்பார் என்ற அழிவின் செய்தியையும், 38ல் அசீரியாவின் போர் அறிவிப்பையும் சொல்லி கலக்கம் மற்றும் பயம் உண்டாக்கும் எசாயா, 37ல் நம்பிக்கையின், புத்துணர்ச்சியின், மாற்றத்தின் செய்தியைச் சொல்கின்றார். கலக்கமும், நம்பிக்கையும் கலந்ததே வாழ்க்கை என்பதை இப்படிச் சொல்கிறார்போல!  மெசியாவின் அறிகுறிகளில் ஒன்று, 'பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்' என்பதாகும். மேலும், பார்வையுள்ளவர்கள் இன்னும் அதிகம் காண்பார்கள். எப்படி? 'பாலைநிலத்தில் நீரூற்றுகள் எழுவதையும், வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடுவதையும், கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆவதையும், தாகமுற்ற தரை நீரூற்றுக்களால் நிறைந்திருப்பதையும் காண்பார்கள்.' அதாவது, இதுவரை பார்க்காததை அவர்கள் பார்ப்பார்கள். இறைவன் அவர்கள் பார்வையை அகலமாக்குகிறார். இதுவே, மெசியா கொண்டுவரும் விடுதலையாகவும் இருக்கிறது.

மெசியாவின் வருகையில் முதலில் ஒரு உற்சாகம் தரப்படுகிறது - 'திடம் கொள்ளுங்கள்!' 'அச்சம் தவிருங்கள்!' தொடர்ந்து, மானிடமும், இயற்கையும் புத்துயிர் பெறுவதாக முன்னுரைக்கப்படுகிறது. 'பார்வையற்றோர் பார்வை பெறுவர், காதுகேளாதோர் கேட்பர், காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர், வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்' என்னும் இந்த வாக்கியத்தை மனித உடல்குறைபாடுகளில் இருந்து இறைவன் தரும் விடுதலை என நேரிடையாகவும் எடுத்துக்கொள்ளலாம், அல்லது இவைகள் யாவும் அடிமைத்தனத்தின் அடையாளங்கள் என உருவகமாகவும் எடுத்துக்கொள்ளலாம். பார்வை, செவித்திறன், இயக்கம், பேசும்திறன் - இந்த நான்கும்தான் முதல் ஏற்பாட்டு காலத்தில் மனித உணர்வுகள் என்று கருதப்பட்டவை. இந்த நான்கில் குறைபாடு உள்ளவர்கள் நிறைவு காண்பார்கள் என்கிறார் இறைவன். மேலும், இஸ்ராயேல் மக்கள் அசீரியாவிலும், பாபிலோனியாவிலும் அடிமைப்பட்டுக் கிடந்தபோது இந்த நான்கு திறன்களும் இழந்தவர்களாய் இருந்தனர். ஆக, இறைவன் தரும் விடுதலையை அனுபவிக்கும்போது இந்த நான்கு திறன்களும் அவர்களிடம் திரும்ப வரும்.

இந்த முதல் வாசகம் நமக்குத் தரும் செய்தி என்ன? மாற்றம் ஒன்றே மாறாதது. 'இந்த நிலையும் மாறிப்போகும்!' என்றால், 'நாம் இன்று பார்க்கும் நிலையும் மாறலாம்,' 'நாமும் நம் பார்வையை மாற்றிக்கொள்ளலாம்' என்ற வாழ்க்கைத் தத்துவத்தைப் போதிக்கிறது இது. அச்சம், ஊனம், வறட்சி இந்த மூன்றும் நம் உடலில் இருந்தாலும், உள்ளத்தில் இருந்தாலும், இவை நாம் பார்க்கும் பார்வையை மறைத்தாலும், நமக்குப் பார்வை மாற்றம் சாத்தியமே;.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற் 7:31-37). அப்பம் பலுகுதல் தொடங்கி (6:30-34), மாற்கு நற்செய்தியாளர் தொடர்ந்து இயேசு செய்த பல புதுமைகளை பதிவு செய்கிறார்: கடல்மீது நடத்தல் (6:45-52), கெனசரேத்தில் பலர் நலம்பெறுதல் (6:53-55), கானானியப் பெண்ணின் மகள் நலம் பெறுதல் (7:24-30), காதுகேளாதவர் நலம் பெறுதல் (7:31-37), பார்வையற்றவர் நலம் பெறுதல் (8:22-26) - இப்படியாகத் தொடரும் இயேசுவின் புதுமைகள் பேதுருவின் 'மெசியா அறிக்கை'யில் (8:29) முழுமை பெறுகின்றன. இந்தப் புதுமைகள் நடக்கும்போதெல்லாம் இயேசுவின் சீடர்கள் அவரை நம்ப இயலாமல் தவிக்கின்றனர். இவர்களின் மனப்போராட்டம்தான் காதுகேளாதவர், பார்வையற்றவர் என்ற உருவகங்களால் முன்வைக்கப்படுகிறது. 'இன்னுமா உணராமலும், புரிந்து கொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா?' (8:17-18) என்று தன் சீடர்களின் கடின உள்ளத்தைக் கடிந்து கொள்கின்றார்.

ஆக, இன்று நாம் நற்செய்தியில் வாசிக்கும் 'காதுகேளாதவர் நலம் பெறுதல்' முதலில் புதுமை என்றும், பின் உருவகம் என்றும் சிந்திப்போம்.

இன்றைய நற்செய்தியை புதுமை என்ற கோணத்தில் பார்த்தால், 'எங்கே?' 'என்ன?' 'எதற்காக?' என்ற மூன்று கேள்விகளை வைத்து மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

அ. எங்கே?

சீதோன் வட எல்லையில் இருக்கிறது. கலிலேயாக் கடல் தென்கிழக்கில் உள்ளது. இயேசு இதற்கு இடையே உள்ள தீர் பகுதியில் இருக்கிறார். தீர் பகுதியில் இருந்து கீழே வராமல் சீதோன் நோக்கி மேலே செல்கின்றார். இப்படி மேலும், கீழும் மாற்கு இயேசுவை அலைக்கழிக்கிறார். தெக்கப்போலி என்றால் 'பத்து நகரங்கள்' (டெக்கா, போலிஸ்) என்பது பொருள். இந்த நகரங்கள் யோர்தானை ஒட்டிய பகுதியிலிருந்து தமாஸ்கு வரை பரவிக்கிடந்தன. இது அதிகமாக புறவினத்தார்கள் வாழ்ந்த குடியேற்றப் பகுதி. 'தெக்கப்போலி' (7:31) என்று குறிப்பிட்டு மாற்கு எழுதுவது இயேசு புறவினத்தாரோடு தம்மை ஒன்றித்துக்கொண்டதையே காட்டுகிறது.

ஆ. என்ன?

காதுகேளாதவரும், வாய்திக்கிப் பேசுபவருமான ஒருவரை சிலர் இயேசுவிடம் கொண்டுவருகின்றனர். புதுமை காணப்போகிறவர் வழக்கமாக மற்றவர்களால் அழைத்து வரப்படுவது மாற்கு நற்செய்தியாளரின் ஸ்டைல் (காண். 2:1-12). அழைத்துவந்தவர்கள் யார் என்று நமக்குத் தெரியாது. ஆனால் அழைத்துவரப்பட்டவர் ஒரு யூதராக இருக்கலாம். ஏனெனில் புறவினத்தாராக இருந்தால் அவர் புறவினத்தார் என்று மாற்கு குறிப்பிட்டிருப்பார் (காண். 7:26). மேலும், 'கைவைத்துக் குணமாக்குமாறு' (7:32) இயேசுவை வேண்டுகின்றனர். 'கைவைத்து மன்றாடுதல்' யூத ஸ்டைல். ஆனால், இதில் யாரும் இயேசுவின்மேல் நம்பிக்கையை வெளிப்படையாக அறிக்கையிட்டதாக இன்னும் சொல்லப்படவில்லை.

காதுகேளாமையும், வாய்பேசாத அல்லது திக்கிப்பேசும் நிலையும் வழக்கமாக சேர்ந்தே இருக்கும் என்பது அறிவியல் மற்றும் மருத்துவ உண்மை. வார்த்தைகளை அவர்கள் கேட்க முடியாததால் அவைகளை உச்சரிக்கவும் அவர்களால் முடிவதில்லை. இந்த மனிதர் பிறவியிலேயே காதுகேளாதவர் அல்லர். அவர் முன்னால் கேட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆகையால்தான், அவர் திக்கிப்பேசுபவராக இருக்கிறார்.

கானானியப் பெண்ணின் மகளை தூரத்திலிருந்து குணமாக்கிய இயேசு இவரிடம் வித்தியாசமாக நடந்து கொள்கிறார். கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, அவரின் காதுகளில் விரலை இடவும், உமிழ்நீரால் அவரின் நாக்கைத் தொடவும் செய்கின்றார். தொடுதலும், உமிழ்நீர் பயன்படுத்துவதும் வழக்கமாக மருத்துவர்கள் பயன்படுத்தும் செயல்கள்தாம். இதே போன்ற செயலை இயேசு பார்வையற்றவருக்கு நலம் தரும்போதும் (8:22-26) செய்கின்றார். கானானியப் பெண்ணை நாய்க்குட்டி என்று சொன்னது எப்படி நம்மை முகம் சுளிக்க வைக்கிறதோ, அதுபோல இயேசுவின் இந்த உமிழ்நீர் செயலும் நம்மை முகம் சுளிக்க வைக்கிறது.

வானத்தை அன்னாந்து பார்க்கும் இயேசு, தன் தந்தையின் துணையை அழைத்தவராய், 'எப்பத்தா' என்று அரமேயத்தில் சொல்கிறார். அதை மாற்கு தன் இறைமக்களுக்கு 'திறக்கப்படு' என்று மொழிபெயர்க்கின்றார். உடனே, அவரின் நா கட்டவிழ்கின்றது.

இ. எதற்காக?

புதுமை முடிந்த அந்த மனிதரின் நா கட்டவிழ்ந்தவுடன் இயேசு செய்யும் வேடிக்கை என்னவென்றால், '(இதைப்பற்றி யாரிடமும்) நீ பேசக்கூடாது!' என்கிறார். அவரும் இயேசுவின் கட்டளைக்கு நேர்மாறாக எல்லாரிடமும் சொல்கின்றார்.

இயேசுவின் இந்தப் புதுமை மக்களிடம் ஒரு நம்பிக்கை அறிக்கையைத் தூண்டுகிறது: 'இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!' என்று பேசிக்கொள்கின்றனர். இயேசுவின் புதுமையின் நோக்கம் இதுதான். மக்களிடம் நம்பிக்கையைத் தூண்டி எழுப்புவது. இதில் விநோதம் அல்லது முரண்பாடு என்னவென்றால், இயேசுவின் அருகில் இருப்போர் அவரை நம்ப மறுக்கின்றனர். ஆனால், தூரத்தில் இருப்பவர்கள் நம்புகின்றனர்.

இப்போது இந்த நிகழ்வை ஒரு உருவகமாகப் பார்ப்போம்.

அ. சீதோன் என்னும் புறவினத்துப் பகுதி இயேசுவுக்குத் தூரமாக இருப்பவர்கள். இயேசுவை நம்பவும், ஏற்றுக்கொள்ளவும் தூரம் ஒரு தடை அல்ல. இது திருத்தூதர்களின் நற்செய்திப்பணிக்கு மிகவும் தேவையாக இருந்தது. தூரம் கூடினாலும் இயேசு அருகில் வர முடியும்.

ஆ. காதுகேளாத தன்மை சீடர்களின் கண்டுகொள்ளாத்தனத்தையும், திக்கிப்பேசும் குணம் அவர்களின் அரைகுறை நம்பிக்கையையும் குறிக்கின்றது.

இ. 'எப்பத்தா' - திறக்கப்படு. இயேசுவின் திருமுழுக்கின்போதும், உருமாற்றத்தின்போதும் வானம் திறக்கப்பட்டு, தந்தையின் குரலொலி இயேசுவே இறைமகன் என்று சான்றுபகர்கின்றது. அதுபோல, இப்போது திறக்கப்படும் இவரின் காதுகளும் சான்றுபகரும்.

ஈ. 'தனியே அழைத்துச் செல்லுதல்' - இயேசுவால் நலம்பெறும் நிகழ்வு ஒரு தனிப்பட்ட வாழ்க்கை அனுபவம். ஒவ்வொருவரும் இயேசுவைத் தனியாய்ச் சந்தித்தால் மட்டுமே நலம்பெற முடியும்.

உ. 'எத்துணை நன்றாகச் செய்கிறார்' என்னும் மக்களின் வாழ்த்தொலி இயேசுவை ஒரு புதிய படைப்பின் கடவுளாக முன்வைக்கின்றது. முதல் ஏற்பாட்டில் ஒவ்வொரு படைப்புச் செயலின் முடிவிலும் கடவுள் 'அனைத்தையும் நன்றாகக் காண்கிறார்!' (தொநூ 1:31). மேலும் மக்களின் இரண்டாம் வாழ்த்தொலி இயேசுவை எசாயா இறைவாக்குரைத்த (35:5-6) மெசியாவாக மக்களுக்கு அறிமுகம் செய்கிறது.

இன்றைய நற்செய்தியில் நான் அதிகம் வியப்பது இயேசு அந்த நபருக்காக எடுத்துக்கொள்ளும் நேரமும், காட்டும் பொறுமையும்தான். நாம் யார் காதுக்குள்ளேயாவது கையை விடுவோமா? நம் எச்சிலைத் தொட்டு இன்னொருவர் வாயின் எச்சிலில் தொடுவோமா? ஒருவேளை நாம் அன்புசெய்பவர்களிடம் இப்படிச் செய்வோம். ஆனால், முன்பின் தெரியாத, உடல்நலக்குறைவு உள்ள, அழுக்கான ஒருவரிடம் செய்ய நம்மால் இயலுமா? என்னால் இயலாது. இயேசு அவரை மற்றவர்களைப் பார்ப்பதுபோல பார்க்கிறார். இயேசுவின் பார்வையில் அவருடைய அம்மா, அப்பா, நண்பர், திருத்தூதர், தெரிந்தவர், தெரியாதவர், நல்லவர், கெட்டவர், உடல் நலம் உடையவர், உடல் நலமற்றவர், குறையில்லாதவர், குறையுள்ளவர் என எல்லாருமே ஒன்றுதான். மேலும், தான் பார்ப்பதுபோல மற்றவர்கள் பார்க்கமாட்டர்கள் என்று நினைக்கின்ற இயேசு அந்த மனிதரின் மதிப்பை மனத்தில்கொண்டு அவரை மற்றவர்களின் பார்வையிலிருந்து தனியே அழைத்துச் செல்கின்றார். இது இயேசுவின் பரிவின் அடையாளம். தனியே குறையுடன் அழைத்துச் சென்ற நபரை நிறைவாக்கி அனுப்புகின்றார் இயேசு. இதைக் கண்ட கூட்டத்தினர், 'இவர் அனைத்தையும் எத்துணை நன்றாகச் செய்கின்றார்!' என வியந்து மகிழ்கின்றனர். இதுதான் மக்கள் பெற்ற புதிய பார்வை. இதுவரை இயேசுவிடம் விண்ணப்பத்தோடு வந்தவர்கள் இப்போது வியப்போடு வருகிறார்கள். நம் வாழ்க்கையில் வியப்புக்கள் கூடினால் விண்ணப்பங்கள் குறைந்துவிடும். எடுத்துக்காட்டாக, 'எனக்கு உடல்நிலை சரியில்லை. நல்ல உடல்நலம்தா' என கடவுளிடம் விண்ணப்பம் செய்வதற்குப் பதிலாக, 'அடடே, எனக்கு உடல்நிலை சரியில்லையே!' என்று வியந்தால் விண்ணப்பத்திற்கான தேவை குறைந்துவிடுகிறதே.

இறுதியாக,

நாம் சந்திக்கும் அனைவரும் தங்கள் உள்ளத்தில் ஒரு லேபிள் அல்லது ஸ்டிக்கர் கொண்டிருக்கின்றனர். அந்த ஸ்டிக்கரை நாம் பார்க்க ஆரம்பித்தால், அவர்களிடம் பாரபட்சம் காட்ட மாட்டோம், குறைகளை நிறைவு செய்வோம், மற்றும் நலமற்றதை நலமாக்குவோம். அவரின் பார்வை அடையாளங்களைக் கடந்த பார்வை. அடையாளங்கள், நிறைகள், குறைகள், இருப்பு, இல்லாமை என அனைத்தும் நிலையற்றவை என உணர்ந்த அவர், நிலையானதை நிறைவாகப் பார்த்தார். அவரின் பார்வை நம் பார்வை ஆனால், நாமும் பொறுமை காட்ட முடியும்
.