Monday, 12 March 2018

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு 18-03-2018
இன்றைய வாசகங்கள்

எரே 31:31 - 34; எபி 5:7-9; யோவா 12:20-33மறையுரை மொட்டுக்கள் –

அருள்பணி Y.இருதயராஜ்


இமயமலையின் மீது ஏறிய இரு நண்பர்கள், கடுமையான குளிர்காற்று வீசியதால், மேற்கொண்டு மலைமேல் ஏற முடியாமல் தரையில் அமர்ந்தனர். அவ்வேளையில் சற்றுத் தூரத்திலிருந்து, "ஐயோ! நான் சாகிறேன். என்னைக் காப்பாற்றுங்கள்" என்னும் அபயக் குரல் கேட்டது. இருவரில் ஒருவர் மட்டும் அபயக்குரல் எழுப்பியவருக்கு உதவி செய்யப் புறப்பட்டார்; மற்றவரோ அவருடன் செல்ல மறுத்து விட்டார். உதவி செய்யச் சென்றவர் அபயக் குரல் எழுப்பினவரின் உடலை நன்றாகத் தேய்த்து விட்டார். அதன் விளைவாக அவரது உடல் சூடேறியது: அவருக்குப் புத்துயிர் வந்தது. தன்னிடமிருந்த சூடான காப்பியையும் அவருக்குக் கொடுத்து, அவரைத் தன் தோள்மேல் சுமந்துகொண்டு மற்ற நண்பரிடம் வந்தபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். இது கதையல்ல. நிஜம்! இந்நிகழ்வு நமக்கு விடுக்கும் செய்தி: "தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பியவர் அதை இழந்து விட்டார். பிறருக்காகத் தன் உயிரை இழக்க முன் வந்தவர் அதைக் காத்துக் கொண்டார் "

மன்னுயிரை மீட்பதற்காகச் சிலுவைச் சாவை ஏற்க முன் வந்த கிறிஸ்து. மண்ணக மாந்தர் வாழ்வு பெற கோதுமை மணியென மண்ணிலே புதைக்கப்பட்டுத் துன்பங்கள் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்று. தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவருக்கும் முடிவில்லா மீட்பின் காரணமான கிறிஸ்து (எபி 5:8-9), இன்றைய நற்செய்தியில் நமக்கு வழங்கும் செய்தி: "தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்" (யோவா 12:25-28).

பிறருடைய துன்பத்தைத் தனது துன்பமாகக் கருதாவிட்டால் பகுத்தறிவினால் என்ன பயன்? என்று வினவுகிறார் வள்ளுவர்,
'அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை! (குறள் 315).

மிருகத்திற்கும் மனிதருக்குமிடையே உள்ள வேறுபாட்டை பின்வருமாறு விளக்குகிறார் தத்துவமேதை சாக்கரட்டீஸ்: "ஒரு மாடு மற்றொரு மாட்டைப் பற்றி அக்கறை கொள் ளாது. ஆனால் ஒரு மனிதன் அடுத்த மனிதனைப் பற்றி அக்கறை கொள்வான் - அடுத்தவனைப் பற்றி அக்கறை கொள்ளாதவன் நன்றாகத் தின்று கொழுத்த பன்றி."

பன்றியும் பசுவும் சந்தித்தன. பன்றி பசுவிடம், "உன்னை எல்லாரும் வீட்டில் வரவேற்கின்றனர். என்னையோ துரத்துகின்றனர் " என்றது. அதற்குப் பசு பன்றியிடம், "நான் உயிருடன் இருக்கும் போதே மக்களுக்குப் பால் தந்து பயன்படுகிறேன். நீயோ செத்த பிறகு தான் மக்களுக்குப் பயன்படுகிறாய்" என்றது.

உயிரோடு இருக்கும்போதே நாம் பிறர்க்குப் பயன்பட வேண்டும். செத்த பிறகு நாம் தேடி வைத்த செல்வம் யாருக்குப் போகும்? "அறிவிலியே, இன்றிரவே உன்னுயிர் உன்னை விட்டுப் பிரிந்து விடும். அப்போது நீர் சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?" (லூக் 12:20).
"உலகிற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது" (1திமொ: 6:8), எனவே, செல்வம் உள்ளவர்கள், "நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்ப்பார்களாக, தங்களுக்கு உள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்து கொள்வார்களாக" (1திமொ 8:18).

"இவ்வுலகை அழிக்க முடியாது; ஏனெனில் இவ்வுலகை அழிக்கும் அளவுக்குப் பெரிய 'ரப்பரை' இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை" என்றாராம் ஒரு மாணவர், இவ்வுலகம் ஏன் இன்றும் அழியாமல் இருக்கிறது? *உண்டாலம்ம இவ்வுலகம்" என்ற கேள்வியைப் புறநானூற்றுப் பாடல் எழுப்பி, அக்கேள்விக்கு அப்பாடல் தரும் பதில்: "இவ்வுலகில் தமக்கென வாழாமல் பிறருக்காக வாழ்கின்றவர்கள் ஒருசிலர் இன்றும் இருப்பதால்தான்." "தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மையானே' (புறம் 182)

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் புதியதோர் உடன்படிக்கையைச் செய்யப் போவதாக இறைவாக்கினர் எரேமியா வாயிலாக வாக்களிக்கின்றார் (எரே 31:31). இந்தப் புதிய உடன் படிக்கையானது கிறிஸ்துவின் இரத்தத்தில் நிறைவேறியது (லூக் 22:20). இப்புதிய உடன்படிக்கையின் தனி முத்திரை பிறரன்புக் கட்டளையாகும். கிறிஸ்து நம்மை அன்பு செய்தது போலவே தாமும் பிறரை அன்பு செய்ய வேண்டும் (யோவா 13:34). கிறிஸ்து தம்மவர்களை இறுதிவரை அன்பு செய்தார் (யோவா 13:1). அன்பின் உச்சக்கட்டம் உயிர்த்தியாகம் (யோவா 15:13),

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து தனது நேரம்' (யோவா 12:27) என்று குறிப்பிடுவது அவர் சிலுவையில் மானிட மீட்பிற்காகத் தம் உயிரைக் கையளித்த நேரமாகும். நாமும் கிறிஸ்துவைப் பின்பற்றி எல்லாரையும் அன்பு செய்ய, இறுதிவரை அன்பு செய்ய, தேவையானால் பிறருக்காக நமது உயிரையும் கையளிக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

நம்மால் நமது வீட்டுக்கும் நாட்டுக்கும் தினையளவாவது நன்மை கிடைக்குமென்றால், நாம் இறக்கும் நாளைத் துக்கநாளாக அல்ல. திருநாளாகக் கொண்டாட வேண்டும்,

எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
தமையீன்ற தமிழ்நாடு நாக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்,
செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும், -
-பாரதிதாசன்

பெரிய வியாழனன்று பசிப்பிணி ஒழிப்பிற்காகச் சிறப்புக் காணிக்கை எடுக்கப்படும், தவக்காலத்தில் தேவையற்றச் செலவினங்களைக் குறைத்துக் கொண்டு நாம் சேமிக்கும் பணத்தை அந்த நல்ல காரியத்திற்காகத் தாராளமாகக் கொடுக்க மனமுவந்து முன்வருவோமாக, தியாக உணர்வு இல்லாத வழிபாடு நாட்டுக்குச் சாபக் கேடாகும்
- காந்தி அடிகள்

குன்று நோக்கி

அருள்பணி லூர்துராஜ் பாளை மறைமாவட்டம்


உடன்படிக்கை ஆன்மீகம்
“கல்வாரி மருத்துவமனை " ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. சாதாரண நோயாளிகளையெல்லாம் அங்கே அனுமதிப்பதில்லை. ஆறு வார காலத்திற்குள் நிச்சயமாய் மரணமடையப் போகும் நோயாளிகள் மட்டுமே அதில் சேர்க்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனையில் நுழையும் போது வாழ்வு முடியப் போகிறது என்ற துயரத்துடன் சேருபவர்கள் ஒரு சில நாட்களுக்குள் தங்கள் மரணத்தைப் பக்குவமான மனநிலையில் எதிர்நோக்கி இருப்பவர்களாகி விடுகின்றனர். இத்தகைய மாற்றம் எவ்வாறு ஏற்படுகிறது என்பது வியப்பானது.

அம்மருத்துவமனையின் உள்சுவர்களில் ஆண்டவர் இயேசுவின் கல்வாரிப் பயணத்தைக் காட்டும் படங்கள் வெளிக் கோடுகளால் (Line drawing) வரையப்பட்டிருக்கின்றன. படத்தின் சித்திரங்கள் கோட்டுக்குள் காலியாக இருக்கின்றன. அப்படங்களுக்கு அடியில் “இயேசுவின் பாடுகளில் இன்னும் குறைவாய் இருப்பதை நிறைவு செய்" என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆம், அந்த மருத்துவமனையில் சேருகின்றவர்கள் அப்படங்களைப் பார்க்கின்றனர். தங்கள் உடல் வேதனைகளையும் நெருங்கிக் கொண்டிருக்கும் மரணத்தையும் இன்முகத்துடன் ஏற்று இயேசுவின் பாடுகளோடு ஒப்புக் கொடுத்து இயேசுவின் பாடுகளை நிறைவு செய்கின்றனர்.

இவ்வாறுதான் மரணத்தின் வாயிலில் நிற்பவனை மகிழ வைத்து சொல்லொண்ணா வேதனையுறுபவனைச் சிரிக்க வைத்து அனைவரையும் தம்பால் ஈர்த்துக் கொள்கிறார்.

திருவிவிலியம் முழுவதுமே இரு உடன்படிக்கைகளின் வரலாறாகும். ) பழைய உடன்படிக்கை - மோசே வழியாக, 2) புதிய உடன்படிக்கை - இயேசு வழியாக.

1. அனைவரையும் ஈர்க்க ஓர் உடன்படிக்கை. (முதல்வாசகம் எரே 31:31). அது சீனாய் மலையில் செய்ததுபோல கற்பலகைகளில் அல்ல, மனிதனின் இதயப் பலகையில் எழுதப்படும். அதன் முக்கிய சிறப்பு இனி இறைவாக்கினர் வழியாக அல்ல இறைவனே முன் வந்து போதிப்பார். இன்னொரு சிறப்பு மக்கள் கடவுளை முழுமையாக அறிந்து கொள்வார்கள். “நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்”. நெருக்கமான நேரடி உறவு!
2. அனைவரையும் ஈர்க்க ஒரு சிலுவைப்பலி (நற்செய்தி: பழைய உடன்படிக்கை விலங்குகளின் இரத்தத்தால் முத்திரையிடப்பட்டது. (வி.ப.24:3-8). புதிய உடன்படிக்கையோ பாவ மன்னிப்புக்காக இயேசுவின் இரத்தத்தில் நிலைப்படுத்தப்படுவது (லூக்.22:20, 1 கொரி.11:25), புதிய இஸ்ரயேலைப் பிறப்பிக்கும் புதிய உடன்படிக்கை இயேசுவின் இறப்பும் உயிர்ப்புமே! 
"என் இரத்தத்தின் ஒவ்வொரு துளியையும் என் நாட்டுக்காகச் சிந்துவேன்” என்று சொன்ன ஓரிரு நாட்களில் இந்திரா காந்தி கொடுமையாகக் கொல்லப்பட்டார். தன் சாவை நினைத்துத்தான் இந்த வார்த்தைகளைச் சொன்னாரா? சந்தேகம்தான். ஆனால் இயேசு “நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் சர்த்துக் கொள்வேன்" (யோ.12:32) என்றார். அடுத்துவரும் வசனத்திலேயே தாம் எவ்வாறு இறக்கப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார் என்பார் யோவான்.

இயேசு மாட்சிபெறும் நேரம் வந்துவிட்டது. அந்த நேரம் விந்தையானது. அந்த நேரத்தில் எல்லாமே எதிர்மாறான முரண்பாடாகவே பொருள்படும். இறப்பு என்பது வாழ்வாகும். இழப்பு என்பது ஆதாயமாகும். ஒன்றின் இறப்பு என்பது இன்னொன்றின் பிறப்பு என்பது இயற்கை நியதி. மலரின் மரணம் கனியின் பிறப்பு. “கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்”.

மரணத்தின் வழியாக மாட்சி பெறும் அந்த நேரத்தைச் சந்திப்பது இயேசுவுக்கு எளிதாகப்படவில்லை. யோவானின் பார்வையில் இது கெத்சமெனிப் போராட்டம். “இப்பொழுது என் உள்ளம் கலக்க முற்றுள்ளது” (யோ.12:27). தான் மடிந்தால்தான் மனித இனம் வாழ்வு பெறும் என்ற உணர்வில் இறைத் திருவுளத்திற்குத் தன்னையே கையளிக்கிறார்.

கிறிஸ்துவின் மீட்பை உலகம் தனதாக்கிக் கொள்ள வேண்டும். அங்கு அநீதி ஒழிந்து நீதி நிலவ வேண்டும். பாவம் மறைந்து அன்பு அரியனை ஏறவேண்டும். துக்கம் நீங்கி மகிழ்ச்சி பொங்க வேண்டும். பகைமை வற்றிப் பாசம் துளிர்க்க வேண்டும். அடிமைத்தனம் அகன்று விடுதலை மலர வேண்டும். இதற்கு விதையாக நாம் மண்ணில் விழுந்து மடிய வேண்டும். தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்து இறப்பதுதான் கிறிஸ்தவம். இதுவே புதிய உடன்படிக்கையின் சாரம்.

அந்தியோக்கு நகரின் ஆயரான தூய இஞ்ஞாசியார் கி.பி.108இல் காட்டு விலங்குகளுக்கு இரையாகி இயேசுவின் இரத்த சாட்சியான கதை நாம் அறிந்ததே. ஒருவேளை ரோமையில் இருந்த சில கிறிஸ்தவர்களின் செல்வாக்கால் தான் விடுதலை பெற்று இயேசுவுக்காக உயிர்ப்பலியாகும் பொன்னான வாய்ப்பை இழக்க நேருமோ என்று அஞ்சி ஆதிக் கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதம் புகழ் பெற்றது: "காட்டு விலங்குகளுக்கு இரையாகும்படி என்னை விட்டுவிடுங்கள். என் இறைவனைச் சென்றடைய எனக்குள்ள வழி அது ஒன்றே. இறைவனுக்குரிய கோதுமை மணி நான். காட்டு விலங்குகளின் பற்களால் நன்றாக அரைக்கப்பட்டு நான் கிறிஸ்துவுக்கு எற்ற தூய அப்பமாக (பலிப் பொருளாக) மாற வேண்டும். இக்காட்டு விலங்குகளே எனக்குக் கல்லறையாகுமாறு அவற்றைத் தூண்டிவிடுங்கள்', இத்தகையோரது இரத்தத்தில் செழித்ததே தொடக்க காலத் திருச்சபை.
நமது மன அரியணையில் சுயம் அமர்ந்திருந்தால் இயேசு சிலுவையில் தொங்குவார். இயேசு நம் மன அரியணையில் அமர வேண்டுமா? சுயம் சிலுவையில் தொங்க வேண்டும்!

மகிழ்வுட்டும் மறையுரை:

குடந்தை ஆயர் அந்தோணிசாமி


துன்பத்தின் வழியாய் இன்பம்
அது ஒரு மலையடிவாரம். அங்கு அந்த ஊர் மக்கள் ஆண்டவனுக்கு ஓர் அழகான கோயிலைக் கட்டினார்கள். அந்தக் கோயிலுக்குள் வைக்க கடவுளின் சுரூபம் ஒன்று தேவைப்பட்டது. சுரூபம் செய்யும் பணியை ஒரு சிற்பியிடம் ஒப்படைத்தார்கள்.

அந்தச் சிற்பி சுரூபம் செய்யப் பொருத்தமான கல்லைத்தேடி அலைந்தான். அவனுடைய கண்களிலே அந்த மலையடிவாரத்தில் கிடந்த இரண்டு கற்கள் தென்பட்டன. முதல் கல்லிடம் தனது விருப்பத்தைச் சொல்லி, அதன் சம்மதத்தைக் கேட்டான். அந்தக் கல்லோ: என்னை நீ உளியால் உடைப்பாய். நீ அப்படிச் செய்யும்போது என் உருவமும் சிதைந்து போகும். எனக்கு வலியும் ஏற்படும். நான் மிகுந்த வேதனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும். நான் மடிய வேண்டியிருக்கும். இதற்கெல்லாம் நான் தயாராக இல்லை. நானிருக்கும் நிலையிலேயே சுகமாக வாழ விரும்புகின்றேன். என்னை விட்டுவிடு என்றது. ஆகவே அந்தக்கல்லின் மீது அந்தச் சிற்பி கைவைக்கவில்லை. பக்கத்தில் கிடந்த கல்லோ: என்னை நீ பயன்படுத்திக்கொள். எனக்காக நான் வாழவிரும்பவில்லை ! இந்த ஊர் மக்களுக்காக நான் வாழ ஆசைப்படுகின்றேன். என் மீது உன் உளி விழட்டும்! வலியால் என் உடல் அழலாம்; ஆனால் என் உயிர் அழாது என்றது. இப்படிச் சொன்ன கல்லிலிருந்து ஓர் அழகான கடவுளின் சுரூபம் உருவானது; அது கோயிலின் மையப் பகுதியில் வைக்கப்பட்டது.

அந்தக் கடவுளுக்கு காணிக்கை செலுத்த வந்தவர்கள் தேங்காய் உடைப்பதற்காக உளி விழ மறுத்த, சிற்பிக்கு ஒத்துழைப்பு தர விரும்பாத முதல் கல்லைப் பயன்படுத்திக்கொண்டார்கள்! ஒரு கல்லிலே கலை வண்ணம் பிறக்கவேண்டுமானால் அந்தக் கல் தன்னையே ஒரு வகையிலே அழித்துக்கொள்ள முன்வரவேண்டும். இந்த உண்மையைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியிலே, கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும்; அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கின்றேன்; தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர்; இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர் (யோவா 12:24-25) என்ற வார்த்தைகளால் சுட்டிக்காட்டுகின்றார்.

இறப்பிற்குப் பிறகுதான் உயிர்ப்பு! துன்பத்திற்குப் பிறகுதான் இன்பம்! இரவுக்குப் பிறகுதான் பகல்!

இது இயற்கையின் சட்டம், இறைவனின் திட்டம். இயற்கையின் சட்டத்திற்கும், இறைவனின் திட்டத்திற்கும் எதிராகச் செயல்படுகின்றவர்களுக்குப் புதுவாழ்வு, நிலைவாழ்வு கிடைக்காது !

துன்பத்தின் வழியாகத்தான் இன்பம் என்ற இறைத்திட்டத்தை நிறைவேற்ற இயேசு கடைசி மூச்சுவரை துன்பப்பட, பாடுபடத் தயாராக இருந்தார் (எபி 5:8). இந்தத் தவக்காலத்தில் துன்பங்களை உதறித்தள்ளிய, துன்பங்களை விட்டு ஓடிய, துன்பங்களுக்காக இறைவனைத் தூற்றிய நேரங்களுக்காக மனம் வருந்துவோம். மனம் வருந்தும் நமது பாவங்களை மன்னிக்கவும், மறக்கவும் இறைவன் தயாராக இருக்கின்றார் (எரே 31:34).

மேலும் அறிவோம் :
துன்பத்திற்கு யாரே துணைஆவார் தாம் உடைய
நெஞ்சம் துணைஅல் வழி (குறள் : 1299).

பொருள் : ஒருவருக்குத் துன்பம் வரும்போது தம்முடைய நெஞ்சமே துணை புரியவில்லை என்றால், அவருக்கு வேறு யார் துணைபுரிவார்? எவரும் துணைபுரியார்!
.இயேசுவைக் காண விரும்புகிறோம்!

அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை


இயேசுவும் அவருடைய திருத்தூதர்களும் பாஸ்கா விழாவுக்காக எருசலேம் வந்திருக்கின்றனர். அதே நேரத்தில் அதே திருவிழாவுக்கு சில கிரேக்கர்களும் வந்திருக்கிறார்கள். கிரேக்கர்கள் ஏன் யூதர்களின் திருவிழாவுக்கு வந்திருந்தார்கள் என்பது தெரியவில்லை. இந்த கிரேக்கர்கள் ஒருவேளை எல்லா மதங்களையும் ஏற்றுக்கொள்பவர்களாக இருந்திருக்கலாம். அல்லது அந்த திருவிழாவில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்தில் வந்திருக்கலாம். அல்லது வேறு வேலையாக வந்திருக்கலாம். வந்த இடத்தில் திருவிழா நடந்து கொண்டிருக்கலாம். எது எப்படியோ இவர்கள் வந்த நேரம் திருவிழா நடக்கிறது. திருவிழா நடக்கிற நேரம் இவர்கள் வருகிறார்கள்.

இப்படி வந்த கிரேக்கர்கள் பெத்சாய்தா ஊரைச் சார்ந்த பிலிப்பிடம் - அவரை ஒரு பி.ஆர்.ஓ என நினைத்திருக்கலாம் - 'ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்!' என்கின்றனர்.

இவர்களின் இந்தத் தேடலை, விருப்பத்தை நாம் நமது இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்'

இந்த ஆண்டு பேராயரின் செயலராக நான் ஏற்ற தொலைபேசி அழைப்புகளில், அல்லது மக்களின் வருகையில் நான் கேட்ட வார்த்தைகளும் இவையே:

'ஃபாதர், நாங்கள் பேராயரைக் காண விரும்புகிறோம்'

மக்கள் பேராயரைக் காண ஏன் விரும்புகின்றனர்?

'தங்கள் குறைகள் தீர்க்கப்பட,' 'குறைகள் தீர்க்கப்பட்டதற்கு நன்றி சொல்ல,' 'உதவி கேட்க,' 'அவரை வாழ்த்த,' 'பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்க,' 'முடிவுகள் எடுப்பதில் அறிவுரை கேட்க' -

இப்படியாக ஒவ்வொரு விருப்பத்தின் பின்னாலும் ஒரு நோக்கம் இருக்கும்.

நோக்கம் இல்லாத விருப்பம் மிகக் குறைவே.

'சும்மா பார்க்க வந்தேன்' என்று சொல்வதெல்லாம் சும்மா சொல்வதாக இருக்கிறது.

கிரேக்கர்கள் இயேசுவைக் காண்பதற்காக தெரிவிக்கும் விருப்பத்திற்கு எந்தவொரு நோக்கமும் இல்லாமல் இருப்பது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

ஆக, 'நோக்கத்தோடு கூடிய விருப்பத்திலிருந்து' 'நோக்கம் இல்லாத விருப்பத்தை நோக்கி' செல்வதற்கான அழைப்பாக இருக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

ஒரு குழந்தை தன் தாயைக் காண விருப்பம் தெரிவிக்கிறது என்றால், அந்த விருப்பத்திற்கென நோக்கம் எதுவும் இருப்பதில்லை.

ஒரு தந்தை தன் குழந்தையைக் காண குழந்தை படிக்கும் விடுதிக்குச் செல்கிறார் என்றால் அந்த விருப்பத்திற்கென நோக்கம் எதுவும் இருப்பதில்லை.

கடவுளைத் தேடுவதிற்கான நம் விருப்பம் பல நேரங்களில் நோக்கம் கொண்டதாக இருக்கிறது. இப்படி இருப்பது ஒரு தொடக்க நிலையே தவிர முதிர்நிலை அல்ல என்பதை இன்று நாம் உணர்ந்துகொள்வோம்.

எப்படி?

இன்றைய பதிலுரைப்பாடலாக திருப்பாடல் 51ன் ஒரு பகுதியை வாசிக்கின்றோம்.

'தாவீது பத்சேபாவிடம் முறைதவறி நடந்தபின் இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் வந்தபோது அவர் பாடியது' என்று திருப்பாடல் 51க்கு முன்னுரை தரப்பட்டுள்ளது.

தன் பாவத்தால் தான் தன் இறைவனிடமிருந்து அந்நியமாக்கப்பட்டுவிட்டதையும், தன் திருப்பொழிவு நிலை மாசுபட்டதையும் எண்ணுகின்ற தாவீது மனம் வருந்தி இறைவனின் இரக்கத்தை மன்றாடுகின்றார்.

கடவுளை தாவீதுக்கு ரொம்ப பிடிக்கும். கடவுளுக்கும் தாவீதை ரொம்ப பிடிக்கும். ஆக, எந்நேரமும் அவரைக் காண்பதையே தன் விருப்பமாகக் கொண்டிருந்த தாவீது தான் பத்சேபாவிடம் கொண்ட தவறான உறவினால் அந்த விருப்பத்திற்கு திரையிட்டுக்கொள்கின்றார். தாவீது பத்சேபாவை அடைய நினைத்தது அக்கால வழக்கப்படி தவறு அல்ல. ஏனெனில் அரசனுக்கு அவனது நாட்டில் உள்ள எல்லாரும், எல்லாமும் சொந்தம். கடவுளின் முறைப்பாடு என்னவென்றால், 'உன்னிடமிருந்து நிறைவைக் காண்பதை விட்டு, உன்னிடம் இல்லாத ஒன்றை அல்லது உனக்கு வெளியே இருக்கும் ஒன்றை நீயாக அடைய நினைத்தது' என்பதுதான். 'நீ என்னிடம் கேட்டிருக்கலாமே!' என்றுதான் கடவுள் வருத்தப்படுகின்றார்.

இந்தத் தவற்றால் கடவுளிடமிருந்து விலகிப்போன தாவீது கடவுளிடம் நான்கு விருப்பங்களை முன்வைக்கின்றார்:

அ. தூயதோர் உள்ளம்
ஆ. உறுதிதரும் ஆவி
இ. மீட்பின் மகிழ்ச்சி
ஈ. தன்னார்வ மனம்

இந்த நான்கும் இருந்தால் கடவுளைக் காண தாவீது மட்டுமல்ல. நாம் எல்லாருமே விருப்பம் கொள்வோம். ஏனெனில் இந்த நான்கிற்கும் கடவுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எப்படி?

அ. தூயதோர் உள்ளம் - 'தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்' (மத் 5:8) என்பது இயேசுவின் மலைப்பொழிவு. தூய்மை என்பது முழுமை. வெள்ளைத் துணியை தூய்மையாக இருக்கிறது என நாம் எப்போது சொல்கிறோம்? துணி முழுவதும் வெண்மையாக இருக்கும்போது. ஆக, ஒன்றின் இயல்பின்மேல் மற்றது படிந்திருந்தால் அது தூய்மையற்றதாகிறது. லட்டு வாங்கி வருகிறோம். சிகப்பு கலரில் இருக்கிறது. நான்கு நாள்கள் கழித்து அதன் மேல் வெள்ளையாக அல்லது பழுப்பு நிறத்தில் ஏதோ ஒன்று படிகிறது. உடனே 'கெட்டுவிட்டது' என நாம் அதை தூக்கி வெளியே போடுகிறோம். முழுமையான உள்ளம் கடவுளை மட்டுமே தேடும். ஆகையால்தான் 'பிளவுண்ட மனம்' தவறு என பவுலடியார் சொல்கின்றார் (காண். 1 கொரி 7:34).

ஆ. உறுதிதரும் ஆவி - தவறு செய்யும் மனம் தவறுக்கான வாய்ப்பு இல்லாதவரை உறதியாக இருக்கும். எனக்கு ஃபோர்னோகிராஃபி பார்க்கும் பழக்கம் உள்ளது என வைத்துக்கொள்வோம். கணிணி இல்லாதவரை, அல்லது இணைய இணைப்பு இல்லாத வரை என் மனம் 'அதை பார்க்கக்கூடாது' என உறுதியாக இருக்கும். ஆனால், கணிணியும், இணையமும், தனிமையான இடமும் கிடைத்தவுடன் முதல் வேலையாக 'அதைப் பார்க்கும்.' ஆக, உறுதியாக இருந்த மனம் சூழல் மாறியவுடன் உறுதியை இழந்துவிடுகிறது. தாவீது கேட்கும் ஆவி உறுதியை தரக்கூடிய ஆவி.

இ. மீட்பின் மகிழ்ச்சி. அதாவது, தான் பத்சேபா வழியாக பெற்றது இன்பம் என்றும், இறைவனிடமிருந்து வரும் மீட்பால் கிடைப்பது மகிழ்ச்சி என்றும் சொல்கிறார் தாவீது. ஒருமுறை தவறு செய்துவிட்டு அந்தத் தவறிலிருந்து வெளிவந்து கடவுளின் மன்னிப்பை பெற்றவுடன் மனதில் ஒருவிதமான பெருமிதம் அமர்ந்துகொள்கிறது. அந்த பெருமிதமே மகிழ்ச்சி. மேலும் தாவீது, 'மீண்டும் எனக்குத் தந்தருளும்!' என்று தான் இழந்ததை திரும்ப பெற்றுக்கொள்ள விழைகின்றார்.

ஈ. தன்னார்வ மனம். கடந்த வாரம் என் நண்பர் ஒருவரிடம் அருள்பணி வாழ்வு கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் சொன்னார்: 'நீயா விரும்பித்தானே வந்தாய்!' அவ்வளவுதான். நான் ஞானம் பெற்றேன். யாரும் நிர்பந்தித்து நான் இந்த வாழ்வைத் தேர்ந்துகொள்ளவில்லை. ஆக, நான் ஏன் நிர்பந்திக்கப்படுவதாக உணர வேண்டும். தன்னார்வ மனம் என்பது நிர்பந்தம் இல்லாத மனம்.

இந்த நான்கு பண்புகள் வழியாக நாமும் அந்த கிரேக்கர்களைப் போல, 'ஐயா, நாங்கள் கடவுளை (இயேசுவை) காண விரும்புகிறோம்' என்று சொல்ல முடியும்.

கடவுளைக் காண விரும்புகிறோம் என்றால் அவர் எங்கே இருக்கிறார்?

இந்தக் கேள்விகளுக்கான விடை இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்களில் இருக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 31:31-34) புதிய உடன்படிக்கை பற்றி பேசுகின்ற எரேமியா இறைவாக்கினர், இறுதியாக, 'இனிமேல் எவரும் 'ஆண்டவரை அறிந்துகொள்ளும்' எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில் அனைவரும் என்னை அறிந்துகொள்வர்' என்று யாவே இறைவன் சொல்வதாக இறைவாக்குரைக்கின்றார். இவ்வாறாக, கடவுளை வெளியே தேடும் நிலை மறைந்து, கடவுள் ஒவ்வொருவரின் உள்ளத்தில் தோன்றும் நிலை உருவாகிறது. ஆக, கடவுளை அறிவது என்பது அவர் நம் உள்ளத்தில் எழுதியிருக்கும் சட்டத்தை, உடன்படிக்கையை அறிவது மட்டுமல்ல. அதற்கு மேலும், 'நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்' என்ற உணர்வை பெற்றுக்கொள்வது. அதாவது, ஒரு தாயின் கருவறைக்குள் இருப்பது போன்றது. தாயின் கருவறைக்குள் இருக்கும் குழந்தை கேட்கும் ஒலி தன் தாயின் ஒலி மட்டுமே. மேலும், கருவறையில் இருக்கும் குழந்தை தன் தாயின் ஒரு பகுதியாகவே நினைக்கும். அங்கே தாய்க்கும், சேய்க்கும் வேற்றுமை இல்லை.

இயேசு கொண்டுவந்த மீட்பின் இரகசியம் இதுதான். கடவுளுக்கும் மனிதருக்கும் உள்ள தூரத்தை இல்லாமல் செய்துவிட்டார்.

ஆக, கடவுளைக் காண்பதற்கு நாம் கண்களைத் திறக்கத் தேவையில்லை. கண்களை மூடினாலே போதும். அவரை நாம் நம் அகத்துள் உணர்ந்துகொள்ள முடியும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளைப் பற்றிய தேடல் நம் அன்றாட வாழ்க்கை நிலைகளிலும் தெரிகிறது என்பது தெளிவாகிறது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைப்பதற்கு முன் அவர் பெற்றிருந்த நிறைவை, 'அவர் இறைமகனாயிருந்தும் துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவரானார்' என எழுதுகிறார். ஆக, கடவுளுக்கான விருப்பம் நம் வாழ்வின் துன்பங்களிலிருந்தும் ஊற்றெடுக்கும்.

இவ்வாறாக, கடவுளை நோக்கிய நம் தேடல் நமக்கு வெளியிலிருந்தும், நமக்கு உள்ளிருந்தும் வருகிறது.

மீண்டும், கிரேக்கர்களின் வார்த்தைகளுக்கே வருவோம்:

'ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்'

இந்த வார்த்தைகளோடு நம் சிந்தனையை நிறைவு செய்வோம்:

இயேசுவை அவரின் வாழ்நாளில் மூன்று வகையான மக்கள் காண விரும்புகின்றனர்:

1. ஏரோது வகையினர். இயேசுவை தந்தை ஏரோதும் தேடுகிறார். மகன் ஏரோதும் தேடுகிறார். இயேசு பிறந்த போது யூதேயாவை ஆட்சி செய்த தந்தை ஏரோது இயேசுவைக் கொல்லத் தேடுகிறார் (மத்தேயு 2:16). இயேசுவின் பாடுகளின் போது கலிலேயாவை ஆண்ட மகன் ஏரோது அவரிடம் அறிகுறி எதிர்பார்த்துக் காண விரும்புகின்றார் (லூக்கா 23:8).

2. சக்கேயு வகையினர். சக்கேயு (லூக்கா 19:1-10) இயேசுவைக் காண விரும்பியதன் நோக்கம் ஒரு பேரார்வம். மனமாற்றம் இயேசுவைச் சந்தித்தபின் வந்ததுதான். இயேசுவைத் தேடி வந்த நோயுற்றோர், பேய்பிடித்தவர், தொழுநோயாளர், பார்வையற்றவர் எல்லாரும் இவ்வகையில் அடங்குவர்.

3. கிரேக்கர் வகையினர். இவர்களைத் தான் இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கின்றோம். தங்களின் முகத்தை மறைத்துக் கொண்டு இயேசுவின் முகத்தைத் தேடியவர்கள். இயேசுவிடமிருந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதவர்கள். இயேசுவை தங்கள் எதிரியாகவோ, உபகாரியாகவோ பார்க்காதவர்கள்.

இன்று நாம் நம்மைப் பார்த்துக் கேட்க வேண்டிய முதல் கேள்வி: நான் இயேசுவைக் காண விரும்புகிறேனா? விரும்புகிறேன் என்றால், நான் இந்த மூன்றில் எந்த வகையைச் சார்ந்தவர். முதல் இரண்டு வகைத் தேடலிலும், இயேசுவைக் கண்டவுடன் பயணம் முடிந்து விடுகிறது. ஆனால், மூன்றாம் வகையில் மட்டும் தான் பயணம் தொடர்கிறது. முதல் வகையினர், எதிரிகள். இரண்டாம் வகையினர் பக்தர்கள். மூன்றாம் வகையினர் சீடர்கள். இன்று இயேசுவுக்கு நாம் எதிரிகளா, பக்தர்களா அல்லது சீடர்களா? எதிரிகளாகக் கூட இருந்துவிடலாம். ஆனால், பக்தர்களாக இருப்பதுதான் மிகவும் ஆபத்தானது. ஆலயத்திற்கு வந்தோம், மெழுகுதிரி ஏற்றினோம், கைகளைக் கும்பிட்டோம், வழிபட்டோம், சென்றோம் என்று நாம் இருக்கும் போது இயேசுவை நம்மிடமிருந்து, அல்லது நம்மை இயேசுவிடமிருந்து அந்நியப்படுத்திவிடுகிறோம். நாம் சீடர்களாக அல்லது கிரேக்க வகையினராக இயேசுவைத் தேட வேண்டும்.

இரண்டாம் கேள்வி: இந்தக் கிரேக்கர்களைப் போலத் தேடுவது என்றால் எப்படி?

இயேசுவே இதற்கான பதிலை மூன்று நிலைகளில் தெரிவிக்கின்றார்:

1. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிய வேண்டும்.
2. தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதவராக இருக்க வேண்டும்.
3. என்னை (இயேசுவை) பின்பற்ற வேண்டும்.

1. கோதுமை மணி

இயேசு சொல்லும் இந்த உருவகம் ஒரு விவசாய உருவகம். நாம் விவசாயம் செய்து விதைகள் விதைக்கும் போது, நாம் செய்யும் விவசாயத்தின் நோக்கம் நாம் தெளிக்கும் விதைகள் எல்லாம் நம் வயலின் மேல் கிடந்து அதை அலங்கரிக்க வேண்டும் என்பதா? இல்லை. விதைக்கப்படுகின்ற விதைகள் போராட வேண்டும். முதலில் விதை மண்ணோடு போராட வேண்டும். மண்ணைத் துளைத்து உள்ளே சென்று தன்னையே மறைத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, தன்னை மறைத்துக் கொள்ளும் விதை மடிய வேண்டும். தன் இயல்பை முற்றிலும் இழக்க வேண்டும். மூன்றாவதாக, அதே போராட்டத்துடன் மண்ணை முட்டிக் கொண்டு மேலே வர வேண்டும். இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் விதையின் போராட்டம் தடைபட்டாலும் விதை பயனற்றதாகிவிடுகிறது. 'இல்லை! நான் என்னை மறைக்க மாட்டேன். கீழே போக மாட்டேன். என்னை எல்லாரும் பார்க்க வேண்டும்!' என்று அடம்பிடித்தால் வானத்துப் பறவைக்கு உணவாகிவிடும். அல்லது கதிரவனின் சூட்டில் கருகிவிடும். மடிய மறுத்தாலோ அல்லது போராடி உயிர்க்க மறுத்தாலோ அது மட்கிப்போய் விடுகிறது. இயேசுவின் வாழ்வையும் விதையின் இந்த போராட்டத்தைப் போலத்தான் இருக்கிறது: பாடுகள் படுகின்றார், இறக்கின்றார், உயிர்க்கின்றார். இயேசுவைக் காண விரும்பும் நம் மனநிலையும் இப்படித்தான் இருக்க வேண்டும். கோதுமை மணி போல மடிவது என்றால் நம் உயிரை மாய்த்துக்கொள்வது அல்ல. நாம் எதற்காக படைக்கப்பட்டோமோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவது. நாம் விதியினாலோ. இயற்கையின் விபத்தினாலே வந்தவர்கள் அல்லர். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. வெறும் 10 ரூபாய் கொடுத்து 10 நிமிடம் செல்லும் பயணத்திற்கே இலக்கும் நோக்கமும் இருக்கிறது என்றால் பல வருடங்கள் பயணம் செய்கின்ற நம் வாழ்க்கைப் பயணத்திக்கு இலக்கும், நோக்கமும் இல்லாமல் இருக்குமா? இயேசுவின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வாழ்க்கை 'சராசரி' வாழ்க்கையாக இருந்துவிடக் கூடாது. நம் முழு ஆற்றலும் வெளிப்படுகின்ற வகையில் நம் வாழ்க்கை ஓட்டம் அமைய வேண்டும். மாணவராக இருக்கிறோமா! முழு அர்ப்பணத்துடன் படிக்க வேண்டும். டாக்டராக, ஆசிரியராக, அன்றாட கூலியாக நாம் என்னவாக இருந்தாலும் அதில் நாம் முழுமையாக மடிய வேண்டும். பலன் தர வேண்டும்.

2. தமக்கென்று வாழ்வோர் - தமக்கென்று வாழாதோர்

இரண்டாவதாக, இயேசு இரண்டு வகை மனிதர்களைக் குறிப்பிடுகின்றார்: 'தமக்கென்று வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுகின்றனர்', 'தம் வாழ்வை ஒருபொருட்டாகக் கருதாதவர் நிலைவாழ்வு பெறுகின்றனர்'. இரண்டும் ஒன்றிற்கொன்று தொடர்பு இல்லாததுபோல இருக்கிறது. இரண்டாவது வாக்கியம் லாஜிக் படி பார்த்தால், 'தமக்கென்ற வாழாதோர்' என்றுதானே இருக்க வேண்டும். இயேசுவின் இந்தப் போதனையின் நோக்கம் நாம் நமக்காக வாழ வேண்டுமா அல்லது பிறருக்காக வாழ வேண்டுமா என்பதல்ல. மாறாக, வாழ்வின் மேலான நம் கண்ணோட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதுதான். 'ஒருவர் உலகம் முழுவதும் தமதாக்கிக் கொண்டாலும், தன் வாழ்வை இழந்து விட்டால் அதனால் வரும் பயன் என்ன?' (மத்தேயு 16:26) என்னும் இயேசுவின் போதனை இப்போது முரண்படுகிறது போல தெரிகிறதல்லவா! வாழ்வை ஒரு பொருட்டாகக் கருதாதது என்றால் சரியாகக் குளிக்கக் கூடாது, நல்ல டிரஸ் போடக்கூடாது, எம்.பி.3 ப்ளேயரில் பாட்டுக் கேட்கக் கூடாது என்பதல்ல. மாறாக, எதற்கும் நான் உரிமையாளன் அல்ல என்ற நிலையில் வாழ்வது. நாம் நம் வாழ்விற்கும், நம் உயிருக்கும், நம் உறவுகளுக்கும் கண்காணிப்பாளர்கள் தாம். நம் மேலும், நம் உறவுகள் மேலும் நமக்கு உரிமையில்லை. நம் வாழ்வில் அருட்பணி நிலையில் ஒரு பங்கோ, பொதுநிலை வாழ்வில் கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ தரப்பட்டிருக்கிறது என்றால் அவர்கள் மேல் ஆட்சி செலுத்துவதற்கும், உரிமை கொண்டாடுவதற்கும் அல்ல. மாறாக, கண்காணிப்பதும், பராமரிப்பதும் தான் நம் வேலை. 'எது இன்று உன்னுடையதோ, அது நாளை வேறொருவனுடையது!' என்ற கீதையின் சாரமும் இங்கே நினைவுகூறத்தக்கது. எதன்மேலும் உரிமையில்லை என்பதற்காக, 'வந்த மாட்டையும் கட்ட மாட்டேன், போன மாட்டையும் தேட மாட்டேன்' என்ற கண்டுகொள்ளாத மனநிலையிலும் இருந்துவிடக்கூடாது.

3. எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும்

இயேசுவின் சீடரோ அல்லது இயேசுவைக் காண விரும்புவரோ இருக்க வேண்டிய இடம் இயேசு இருக்கும் இடம்தான். ஒழுக்கம் என்றால் என்ன? 'இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டிய பொருள் இருப்பதும், செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டிய வேலையைச் செய்வதும்தான்!' உதாரணத்திற்கு, படிக்கின்ற மாணவர்கள் திங்கள் கிழமை காலை 10 மணிக்கு வகுப்பறையில் இருக்க வேண்டும் என்பது ஒழுக்கம். அதே மாணவர்கள் திங்கள் கிழமை 10 மணிக்கு தியேட்டரில் இருந்தால் அது ஒழுங்கீனம். இயேசு இருக்க வேண்டிய இடத்தில் அவரைத் தேடுவோரும் இருப்பதும், இயேசு கொண்டிருந்த மனநிலையைக் கொண்டிருப்பதும் தான் ஒழுக்கம். இயேசுவைப் பின்பற்றுவது என்றால் என்ன? பின்பற்றுவது அல்லது ஃபாலோ செய்வது என்றால் உடனடியாக நம் நினைவிற்கு வருவது டுவிட்டர்தான். டுவிட்டரில் நாம் சிலரைப் பின்பற்றுகிறோம். அல்லது சிலர் நம்மைப் பின்பற்றுகிறார்கள். நாம் யாரைப் பின்பற்றுகிறோமோ அவர்களின் கருத்தியலைப் பகிர்ந்து கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், படிப்பு, வேலை என எல்லாத் தளங்களிலும் நாம் சிலரைப் பின்பற்றுகிறோம். நாம் பின்பற்றும் நபர்கள் நம்மையறியாமலேயே நம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். டுவிட்டரில் அடுத்தவர்களைப் பின்பற்றுவதற்கு மெனக்கெடும் நாம் இயேசுவைத் தேடுவதற்கும், பின்பற்றுவதற்கும் மெனக்கெடுவதில்லை என்பதுதான் வேதனையான விஷயம். அன்று கிறிஸ்தவராக மாறுவது கடினம். ஆனால் வாழ்வது எளிது. இன்று, கிறிஸ்தவராக மாறுவது எளிது. ஆனால், வாழ்வதுதான் கடினம்.

'நான் இயேசுவைக் காண விரும்புகிறேன்!' - இது ஒன்றே இன்று என் மன்றாட்டாக, ஆசையாக, தேடலாக இருந்தால் எத்துணை நலம்!
Friday, 9 March 2018

தவக் கால 4-ஆம் ஞாயிறு2 குறி 36:14-16, 19-23; எபே 2:4-10; யோவா 3:14-21மூன்றாவது கை தேவை

மகிழ்ச்சியுட்டும் மறையுறைகள் குடந்தை ஆயர் F.அந்தோணிசாமி
 
சில மனிதர்களின் இதயங்கள்
ஈசல்களின் இறகுகள்!
கொஞ்ச நேரம்
படபடத்து விழுந்துவிடுகின்றன!
காரணம்? தனிமனித வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் அவர்களுக்கு உண்டாகும் நெரிசல்கள், மனவடுக்கள், மோதல்கள். முரண்பாடுகள், நோய்கள், நொடிகள், ஏமாற்றங்கள், குழப்பங்கள்!

இதோ, வாடிவதங்கிக் கிடப்பவர்களுக்கு இன்று இயேசு வழிகாட்டுகின்றார். அவர் நம் ஒவ்வொருவரையும் பார்த்து : என்மீது நம்பிக்கைக் கொள். நீ அழியாத நிலைவாழ்வு பெறுவாய் என்கின்றார் (நற்செய்தி).
நம்பிக்கை என்றால் என்ன? காயப்படுத்தும் இறைவன் குணமாக்குவார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்குப் பெயர்தான் நம்பிக்கை. கல்தேயரின் மன்னன் வழியாக கோயிலை எரித்த கடவுள், பாரசீக மன்னன் சைரசு வழியாக அதைக் கட்டியெழுப்ப ஏற்பாடு செய்ததாக 2 குறி 36:14-23 கூறுகின்றது. காயப்படுத்தினாலும் கட்டுப் போடுபவர் அவரே; அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே என்கின்றது யோபு நூல் (யோபு 5:18). புனித பவுலடிகளாரோடு இணைந்து கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர், அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார் (எபே 2:4) என்று அறிக்கையிடுவதற்குப் பெயர்தான் நம்பிக்கை.
நம்பிக்கை நம்மை நலமாக்கும் என்பதற்கு இதோ ஓர் உதாரணம்.

சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் அருங்கொடை மாநாடு மூன்று நாள்கள் நடைபெற்றது. இறுதி நாளில் குணமளிக்கும் வழிபாட்டில் கலந்துகொள்ள அந்நகரைச் சேர்ந்த, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் வெகு ஆவலாய் இருந்தாள்.

இயேசு தன்னைக் குணப்படுத்துவார் என்று நம்பினாள். அவளை அவளது உறவினர் செபக்கூட்டம் நடக்கும் இடத்திற்குக் கொண்டு சென்றனர். போகும் வழியில் ஒரு கடையில் தன் கால்களுக்கு ஏற்ற ஒரு ஜோடி காலணிகளை அவள் வாங்கினாள். குணம் பெற்று திரும்பி நடந்து வரும்போது அவை வேண்டுமே என அவள் எண்ணினாள். அவளின் நம்பிக்கை வீண்போகவில்லை. குணமளிக்கும் வழிபாட்டில் அவள் பூரண சுகமடைந்து நடக்க ஆரம்பித்தாள். திரும்பிச் சென்றபோது காலணிகளை அணிந்துகொண்டு வீட்டுக்குச் சென்றாள்.

உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர இயேசுவால் அவரது சொந்த ஊரில் வேறு வல்ல செயல் எதையும் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார் என்று நற்செய்தியில் படிக்கின்றோம் (மாற் 6:5-6அ).
நாம் நமது மன்றாட்டின் வழியாக நலம் பெற நமக்கு இரண்டு கைகள் இருந்தால் பற்றாது ; மூன்றாவது கை ஒன்று வேண்டும் - அதுதான் நம்பிக்கை. மேலும் அறிவோம் :
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு (குறள் : 734).
பொருள் : கொடிய பசி, நீங்காத நோய், அழிவு செய்யும் பகை ஆகிய தீமைகள் வராமல் அமைதியாக இயங்குவதே நல்ல நாடாகும்!
சிலுவையில் தொங்கும்  இயேசுவைப் பார்
குன்று நோக்கி... அருள்திரு இ.லூர்துராஜ்


சில ஆலயங்கள் வழிபாட்டுக்குரிய புனிதத் தலங்களாக மட்டுமல்ல கருத்தாழமிக்கக் கலைக் கூடங்களாகவும் காட்சி தருகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்னே இங்கிலாந்து நாட்டில் ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக் கழகச் சிற்றாலயம் ஒன்றில் அமைந்திருந்த கண்ணாடிச் சித்திரம் அதற்குச் சான்று. பீடத்துப் பின் சுவரில், நுழைந்ததும் கண்ணில் பட்டு ஈர்க்கும் வகையில் இருந்தது அந்த ஒவியம். கண்ணாடியின் வெளிப்புறம் பழைய ஏற்பாட்டு நிகழ்வும் 12.ள்புறம் அதற்கு இணையான புதிய ஏற்பாட்டு நிகழ்வும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருந்தன. வெளியிலிருந்து ஒளி கண்ணாடியை உடுருவுகிற போது இரண்டு காட்சிகளும் ஒருங்கிணைந்து ஒன்றுக் கொன்று நிறைவும் பொருள் விளக்கமும் தருவதாகத் தெரியும்.

ஆலயத்தில் உள்ளே இருந்து அந்தக் கண்ணாடியை உற்றுப் பார்த்தால், மோரியா மலையில் ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலி கொடுக்க ஓங்கிய கையோடு இருப்பது மென்மையான ஒளியின் பின்னணியில் தெரியும். அதே நேரத்தில் கல்வாரிச் சிலுவையும் தெரியும். சிறிது அசைந்து வேறொரு கோணத்தில் கம்பத்தில் உயர்த்திய வெண்கலப் பாம்பையும் பார்க்கலாம்.

இயேசுவின் தியாக மரணம் பழைய ஏற்பாட்டில் நிழலாடும் நிகழ்வாகவும் புதிய ஏற்பாட்டில் நிறைவு காணும் நிகழ்வாகவும் இறைவனின் ஒட்டு மொத்த மீட்புத் திட்டத்தை எப்படித் தெளிவு படுத்துகின்றன!

திருவிவிலியம் முழுவதுமே மனித மீட்புக்காகத் தன்னுயிர் ஈந்த இயேசுவின் சிலுவையை நோக்கியது, மையமாகக் கொண்டது. கொள்ளி வாய்ப் பாம்புகளால் கடியுண்ட இசரயேல் மக்கள் சாவினின்று விடுதலை பெற கோவில் உயர்த்திய வெண்கலப் பாம்பை நோக்கியது போல, நிலைவாழ்வு காண சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கி மனத்தைத் திருப்பத் தவக்காலம் நம்மை அழைக்கிறது.

"பாம்புகளும் ஏணிகளும் என்ற விளையாட்டு தெரியுமா? வீடு நோக்கிய பயணம். பாதை முழுவதும் சிறிதும் பெரிதுமாக பாம்புகளும் ஏணிகளும், தாயத்தை உருட்டிப் போட அதில் வரும் எண்களுக்கேற்ப, காயை நகர்த்துகிறோம், யார் முதலில் வீட்டை அடைவது என்பதுதான் போட்டி. காய் ஏணியைத் தொட்டால் மேலே கிடுகிடுவென ஏறும். பாம்பின் வாயில் பட்டால் மடமடவெனக் கீழே இறங்கும், வீட்டை நெருங்கிய நேரத்தில் கூட பாம்பால் கடியுண்டு கீழே படுபள்ளத்தில் இறங்க நேரிடும்.

வாழ்க்கையும் அப்படித்தான். நமக்குப் பாம்பு எது, ஏணி எது?

பழைய உடன்படிக்கையில் பாலைவனத்தில் இறைவனுக்கும் மோசேக்கும் எதிராகக் கைகளை உயர்த்தியவர்களை, குரல் எழுப்பியவர்களைக் கொள்ள வாய்ப் பாம்புகள் கடிக்க, இறைவனின் ஆணைப்படி மோசே வெண்கலத்தால் பாம்பு ஒன்றைச் செய்து அதை உயர்த்திப் பிடித்தார். அதை உற்று நோக்கியவர்கள் உயிர் பிழைத்தனர் (எண்.24:4-9)

உலக மருத்துவத் துறை தனது சுகம் அளிக்கும் தொழிலின் அடையாளச் சின்னமாகக் கொண்டிருப்பது இந்தக் "கோலில் சுற்றிய பாம்பு”.

விவிலியத்தில் பாம்பு 1. பாவத்தின் சின்னமாகச் சித்திரிக்கப் படுகிறது. (ஏதேன் தோட்டத்தில் ஏவாளை வஞ்சித்த காரணத்தால்) 2. பாவத்தின் தண்டனையாகக் குறிக்கப்படுகிறது. (கொள்ளிவாய்ப் பாம்புகளைக் கொண்டு இசர யேலரைக் கடிக்க வைத்ததால்) 3.பாவத்தின் கழுவாயாக ஆக்கப்படுகிறது (வெண்கலப் பாம்பை பார்த்தவர்களை சாவினின்று விடுவித்ததால்). இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புபடுத்தி, மனித இனம் வாழ்வு பெற "பாலை நிலத்தில் மோசே யால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்" என்கிறார் இயேசு.

சிலை வழிபாட்டை வீரியத்துடன் எதிர்த்த இறைவன் வெண்கலப் பாம்பைச் செய்ய ஆணையிட்டது வியப்பைத் தருகிறது. இதனால் வெண்கலப் பாம்பைச் சிலுவையின் முன் அடையாளமாக இறைவன் மனத்திலிறுத்தி இந்த ஆணையைத் தந்திருக்க வேண்டும்,

நிழலின் அருமை வெயிலில் தெரியும். இறைவனின் அன்பு சிலுவையில் தெரியும். சிலுவை ஒருபக்கம் பாவத்தின் கொடுமையை வெட்ட வெளிச்சமாக்குகிறது. மறுபக்கம் எல்லையற்ற இறையன்பை வெளிப்படுத்துகிறது.

மீட்பு என்பது என்ன? இறையன்பின் அரவணைப்பிலிருந்து விலகிச் சென்ற நாம், மீண்டும் மனந்திரும்பி அந்த அன்பின் அரவணைப்புக்குள் வருவதுதான். அதற்குப் பாலைவனப் பாம்பாக இயேசு சிலுவையில் உயர்த்தப்படுகிறார். அவரைப் பார்த்து அவரோடு ஒன்றிக்கும்போது நாம் மீட்படைகிறோம்.

யோவானின் இறையியல் பார்வையில் இயேசு சிலுவையில் அறையப் படவில்லை; உயர்த்தப்பட்டார். அதாவது மாட்சிமை அடைந்தார். சிலுவைச் சாவு இயேசுவுக்கு மகிமையின் வாயில், மரணமடையும் நேரத்தை மாட்சிமை பெறும் நேரம் என்றே சொல்வார் (யோ. 12:23) துன்புறும் இறைஊழியன் பற்றி கவிதையிலும் எசாயா அதே சிந்தனையைத் தருவார் (எசா.52:13)

கிறிஸ்து மூன்றுமுறை தன் பாடுகளை முன்னறிவிப்பதாக மத்தேயு எழுதுகிறார் (மத்.16:21, 17:33, 20:18). இயேசு மூன்று முறையும் உயர்த்தப்படுவதாகவே குறிப்பிடுகிறார். (யோ. 3:14, 8:28, 12:32)

சிலுவையில் உயர்த்தப்பட்டவரை உற்றுநோக்குங்கள் பாவ நஞ்சு நீங்கும், உயிர் பெற்று வாழ்வோம்.

பாவ இருளின் பிடியில் நாம் சிக்கி அழியா வண்ணம் “நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில் தான் அன்பின் தன்மை விளங்குகிறது” (1 யோ.4:9,10)

அன்பே கடவுள். நம்பிக்கையே வாழ்வு.மறையுறை மொட்டுகள் 

அருள்பணி Y.இருதயராஜ்

சாமிநாதர் சபைக்குருவும், இயேசு சபைக்குருவும், கப்புச்சின் சபைக் குருவும் உணவறைக்குச் சென்றனர். அங்கு ஒரு பெரிய பொரித்த மீன் மட்டும் இருந்தது. ஒரு பாத்திரத்தில் குழம்பும் இருந்தது. பொருத்தமான விவிலிய வசனத்தை யார் சொல்லுகிறாரோ, அவர் மட்டும் அந்த மீனைச் சாப்பிடலாம் என்று மூவரும் ஒத்துக்கொண்டனர். சாமிநாதர் சபைக்குரு கத்தியை எடுத்து "முதலும் முடிவும் நானே" என்று சொல்லி, மீனின் தலையையும் வாலையும் வெட்டி எடுத்துக் கொண்டார். இயேசு சபைக்குரு, "நானோ உயர்த்தப்பட்டபின் அனைத்தையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்" என்று சொல்லி மீதியிருந்த மீன் முழுவதையும் எடுத்துக் கொண்டார், கப்பூச்சின் சபைக்குரு வேறு வழியின்றி, தனது நீண்ட தாடியைக் குழம்பில் தோய்த்து, "ஆண்டவரே! ஈசோப் புல்லினால் என்மேல் தெளித்தருளும்" என்றார்.

இயேசு சபைக்குரு கூறிய விவிலிய வாக்கு இன்றைய நற்செய்தியில் முக்கிய இடம் பெறுகிறது. 'மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்' பழைய உடன்படிக்கையில் பாலைவனத்தில் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசியவர்கள் கொள்ளிவாய்ப் பாம்புகளால் கடிபட்டு இறக்கும் நிலையில் இருந்தனர். கடவுள் கேட்டுக் கொண்டபடி, மோசே வெண்கலப் பாம்பு ஒன்றைச் செய்து, அதை ஒரு கோலில் உயர்த்திப் பிடித்தார், அப்பாம்பைப் பார்த்தவர்கள் உயிர் பிழைத்தனர் {எண் 21:4-9). கிறிஸ்து இந்நிகழ்ச்சியை நினைவிற் கொண்டு நிக்கதேமுவிடம் "மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்" என்கிறார்.

ஒத்தமைவு நற்செய்திகளில் கிறிஸ்து தம் பாடுகளை மூன்று முறை முன்னறிவிக்கின்றார் (எ.கா. மத் 16:21; 17:22; 20:18). ஆனால் யோவான் நற்செய்தியில் இயேசு மும்முறை மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்,
"மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்" (யோவா 3:14); "நீங்கள் மானிட மகளை உயர்த்திய பின்பு, இருக்கிறவர் நானே , , என்பதை அறிந்து கொள்வீர்கள்" (யோவா 8:28); "நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன்" (யோவா 12:32),
யோவானின் இறையியல் கண்ணோட்டத்தில் கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை, மாறாக உயர்த்தப்பட்டார், அதாவது மாட்சிமையடைந்தார். சிலுவைச்சாவு மகிமையின் வாயில், கிறிஸ்து பாடுபடவேண்டிய நேரம் அண்மையில் வந்தபோது, "மானிட மகன் மாட்சிமை பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்

(யோவா 12:23), துன்புறும் இறை ஊழியனைப் பற்றிய கவிதையிலும் இறைவாக்கினர் எசாயா, "இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார்" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது (எசா 52:13).
சிலுவையானது யூதருக்குத் தடைக்கல்; பிற இனத்தவருக்கு மடமை. ஆனால், உண்மையில் சிலுவை கடவுளின் வல்லமை, கடவுளின் ஞானம் (1 கொரி 1:23 24). கடவுள் தம் மக்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. கடவுளைக் கைவிட்ட இஸ்ரயேல் மக்கள் பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த இக்கட்டான காலத்திலும், கடவுள் பிற இன மன்னர் சைரசு  வழியாக அவர்களுக்கு விடுதலையை அளிக்கிறார். அவர்கள் திரும்பவும் தங்கள் தாயகமாகிய எருசலேம் செல்ல மன்னர் அனுமதிக்கிறார் (முதல் வாசகம்).

கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர்; அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார் (இரண்டாம் வாசகம் எபே 2:4). இத்தகைய அன்பும் இரக்கமும் கொண்ட கடவுள், எவரும் அழியாமல் நிலை வாழ்வு பெறத் தம் ஒரே மகனையே கையளிக்கும் அளவுக்கு உலகின்மேல் அன்பு கூர்ந்தார் (யோவா 3:16), ஆனால் அந்த அன்பு மகன் துன்புறும் ஊழியனாகச் சிலுவையின் வழியாகவே உலகை மீட்க வேண்டுமென்பதே, அவர் வகுத்த வழி, கிறிஸ்து கடவுளின் திட்டத்தை ஏற்று. சாவை ஏற்கும் அளவுக்கு. அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்தார். எனவேதான் கடவுள் அவரை உயிர்ப்பின் மூலம் உயர்த்தி மாட்சி பெறச் செய்தார் (பிலி 2:6-11), நாம் மீட்படைய கடவுளின் திட்டத்தை ஏற்கவேண்டும், சிலுலை வாயிலாகவே நமக்கு மீட்பு உண்டு. சிலுவையிலிருந்து விடுதலை அளிக்காமல், சிலுவையின் வாயிலாகவே விடுதலையளித்தார் கிறிஸ்து.

புனித வெரோனா பீட்டர் ஒரு காட்சி கண்டார். அக்காட்சியில் இயேசு ஒரு பாரமான சிலுவையைச் சுமந்துகொண்டு ஒரு பேராலயத்தின் வாயிலிலிருந்து பீடத்தை நோக்கி நடந்தார், பீடத்தை அடைந்தவுடன் அவருடைய சிலுவையே சிம்மாசனமாக மாற, அதில் அவர் அமர்ந்தார். அவரைப் பின்தொடர்ந்து அன்னை மரியாவும் இலட்சக்கணக்கான மக்களும் தங்களுடைய சிலுவையைச் சுமந்துகொண்டு பீடத்தை அடைந்தவுடன், அவர்களுடைய சிலுவைகளும் சிம்மாசனங்களாக மாற, அவர்களும் அவற்றில் அமர்ந்தனர். சிலுவையே மகிமையின் வழி என்பதை இக்காட்சி மூலம் அறிந்தார் வெரோனா பீட்டர். இவ்வுலகில் இருக்கும்வரை நம் வாழ்வில் சிலுவை, துன்பங்கள் ஏதாவது ஒரு வடிவத்தில் வந்தே தீரும். அச்சிலுவையை நாம் வாழ்வின் வைகறையாகப் பயன்படுத்த வேண்டும்.

பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த காலத்தில், இஸ்ரயேல் மக்களால் ஆண்டவருடைய பாடலை அன்னிய நாட்டில் பாட முடியவில்லை; அவர்களுடைய தாயகமாகிய எருசலேமை மறக்க இயலவில்லை (பதிலுரைப்பாடல், திபா 137:4-5).
விண்ணக எருசலேமை நோக்கிப் பயணிக்கும் நாமும் ஒருவகையில் இவ்வுலகிற்கு அன்னியர்களாக இருக்கின்றோம். "இவ்வுலகில் நீங்கள் அன்னியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி வாழுங்கள் " (1 பேது. 1:17), விசுவாசத்திற்காகத் தங்கள் வாழ்வையே பணயம் வைத்தவர்கள், "இவ்வுலகில் தாங்கள் அன்னியர்கள் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் சிறப்பான ஒரு நாட்டை அதாவது விண்ணக நாட்டையே நாடுகிறார்கள்” (எபி 11:13,16).

விண்ணகமே நமது தாய்நாடு (பிலி 3:28), எனவே பயணம் செய்யும் திருச்சபையில் வழிப்போக்கர்களாய் உள்ள தாம், ஒருபோதும் சிலுவைக்குப் பகைவர்களாக வாழாமல் (பிலி 3:18), சிலுவையின் மறைபொருளை மேன்மேலும் ஆழமாக உணர்ந்து அதற்கேற்ப வாழ்வோம்,

பாலைவனத்தில் பாம்பால் கடிபட்டவர்கள் உயர்த்தப்பட்ட வெண்கலப் பாம்பைப் பார்த்துக் குணமடைந்தனர். அந்த வெண்கலப் பாம்பு சிலுவையின் முன்னடையாளம். சிலுவையில் உயர்த்தப்பட்டவரை, நம் பாவங்களுக்காக ஊடுருவக் குத்தப்பட்டவரை உற்று நோக்கி (யோவா 19:37), பாவக் காயங்களிலிருந்து விடுதலை பெற்று, திறை வாழ்வடைவோம் சிலுவையே மகிமையின் வாயில்,
'ஆண்டவரே, உலகின் மீட்பரே எங்களை மீட்டருளும்; உமது சிலுவையினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டவர் நீரே."

 

Thursday, 1 March 2018

தவக் காலம் மூன்றாம் ஞாயிறு

தவக் காலம் மூன்றாம் ஞாயிறு
விப 20:1 -17 ; 1 கொரி 1:22-25 ; யோவா 2:13-25
பாவங்களின் இருப்பிடம் சுயநலம்

மகிழ்ச்சியுட்டும் மறையுறைகள் குடந்தை ஆயர் F.அந்தோணிசாமி

இயேசு - அவர் மிகவும் அன்பானவர்.
அவர் - அழுதால் அரும்புதிரும்
அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரித்தால் முத்துதிரும்
வாய் திறந்தால் தேன் சிதறும்
அவர் இருக்கும் இடத்திலே
காலையிலே பூபாளம் ஒலிக்கும்
மதியத்திலே கல்யாணி ஒலிக்கும்
இரவினிலே நீலாம்பரி ஒலிக்கும்
அவர் கண்ணுக்குள் கங்கை உண்டு!
கைக்குள் காவிரி உண்டு!
இதயத்துக்குள் இமயம் உண்டு!

இப்படிப்பட்ட இயேசு இன்றைய நற்செய்தியிலே சாட்டை பின்னி. கோயிலில் வியாபாரம் செய்பவர்களை துரத்துவதைப் பார்க்கின்றோம்.
தன் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கின்றவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார் (மத் 5:22) என்றவர் இங்கே சினங்கொள்வதை, கோபப்படுவதைப் பார்க்கின்றோம்.
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத் 11:28) என்ற இயேசுவை, மக்களைத் துரத்தும் இயேசுவாக இன்று சந்திக்கின்றோம்.
சினத்திலே இரண்டு வகை : பாவமான சினம், பாவமில்லாத சினம். சுயநலத்திற்காகக் கோபப்பட்டால் அது பாவமான சினம்; பிறர்நலத்திற்காகக் கோபப்பட்டால் அது பாவமில்லாத சினம். அனைத்துப் பாவங்களின் இருப்பிடமாகத் திகழ்வது சுயநலம்; அனைத்துப் புண்ணியங்களுக்குத் தாயாக விளங்குவது பிறர் நலம்.
இதோ பாவமான கோபத்திற்கு விவிலியத்திலிருந்து இரு உதாரணங்கள்:
நல்ல சமாரியர் உவமையையும் (லூக் 10:25-37) காணாமற்போன மகன் உவமையையும் (லூக் 15:11-32) நமக்குத் தந்த கருணை முகில் இயேசு இடியாக மாறி வியாபாரிகள் மடிமீது விழுவதை இங்கே காண்கின்றோம்.
கோயிலில் வியாபாரம் செய்பவர் மீது கோபப்பட்டது போல நீதிக்கும், அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் (உரோ 14:17) எதிராகச் செயல்பட்ட சில பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர், ஏரோதியர் மீது இயேசு சினங்கொண்ட நேரங்கள் உண்டு (மாற் 3:1-6).
இந்த இடத்திலே, இயேசுவைப் போல நாமும் சினம் கொள்ளலாமா? கோபப்படலாமா? என்ற கேள்வி நம்மில் பலரது மனத்திலே எழுந்து மறையலாம்.
இந்தக் கேள்விக்கு புனித பவுலடிகளார் பதில் கூறுகின்றார். சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தெளியட்டும். அலகைக்கு இடம் கொடாதீர்கள் (எபே 4:26-27) என்கின்றார்.
காயினையும், அவன் காணிக்கையையும் கடவுள் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே காயின் கடும் சினமுற்றான். கடவுள் அவனைப் பார்த்து, நீ ஏன் சினமுற்றாய்? என்று கேட்டார் (தொநூ 4:5-7). காயினின் கோபம், அவனுடைய தம்பி ஆபேல்மீது கொண்டிருந்த பொறாமையிலிருந்து பிறந்த பாவமாகும்.
காணாமற்போன மகன் உவமையில், மூத்த மகன் சினமுற்று விருந்து நடந்துகொண்டிருந்த வீட்டிற்குள் புக விருப்பமின்றி நின்றான் (லூக் 15:28). அவனது சினம், கோபம் அவனது சகோதரன்மீது அவன் கொண்டிருந்த வெறுப்பிலிருந்து பிறந்தது.
இப்படி பொறாமையிலிருந்து, வெறுப்பிலிருந்து, பாவத்திலிருந்து, சுயநலத்திலிருந்து பிறக்கும் சினத்திற்கு, கோபத்திற்கு கிறிஸ்தவ மறையில் இடமே கிடையாது.
இயேசுவிடம் நின்று நிலவிய கோபம் சுயநலத்திலிருந்து பிறந்தது அல்ல; அது பிறர் நலத்திலிருந்து பிறந்தது; அவர் அவரது தந்தையின் மீது கொண்டிருந்த மாறாத அன்பிலிருந்து பிறந்தது (யோவா 2:16).

ஆகவே பிறர் நலத்திற்காக, பிறரன்புக்காக, நீதிக்காக, அமைதிக்காக, மகிழ்ச்சிக்காக, இறையரசின் மதிப்பீடுகளுக்காக நாம் கோபப்பட வேண்டும். சினம் கொள்ள வேண்டிய நேரத்திலே நாம் சினம் கொள்ளவில்லை என்றால், நாம் கடமையில் தவறிய பாவத்தைப் புரிந்தவர்களாகிவிடுகின்றோம்.
பத்துக் கட்டளைகள் (முதல் வாசகம்) கேள்விக் குறிகளாகும் போது நாம் கோபப்படலாம்; குழந்தைக்கு வைத்திருக்கும் பாலை பூனை குடிக்க நினைத்தால் பூனையின் மீது கோபப்படலாம்; பாமரர்கள் ஏமாற்றப்பட்டால், ஏமாற்றுகிறவர்கள் மீது கோபப்படலாம்.
எப்போது சினம் கொள்ளலாம், எப்போது சினம் கொள்ளக்கூடாது என்பதை அறிந்துகொள்ள போதிய ஞானத்தை (இரண்டாம் வாசகம்) இறைவனிடம் கேட்டு மன்றாடுவோம்.
மேலும் அறிவோம்
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை (குறள் : 310).
பொருள் : வரம்பு கடந்த கோபம் கொள்பவர் உயிரோடு இருந்தாலும் இறந்தவராகவே கருதப்படுவார்! கோபத்தை முழுமையாக நீக்கியவர் பற்றற்ற துறவிக்கு ஒப்பாவார்!

தீமையா?... சீறி

குன்று நோக்கி... அருள்திரு இ.லூர்துராஜ்

தாவோசு என்பது தனி மாநிலம். மலைப் பகுதி, அங்கே உலகப் பொருளாதார மாநாடு (World economic forum) ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் நடைபெறும். World economic forum என்பது ஒரு மிகப் பெரிய கழகம். உலகின் தலைசிறந்த தலைவர்கள், தொழிலதிபர்கள், அறிவியல் அறிஞர்கள் இவர்களை ஒன்று கூட்டி உலக அளவில் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும், வழிகாட்டும் மாபெரும் மன்றம் அது. 819 உலகக் கம்பெனிகள் இதில் உறுப்பினர்கள். Everybody who is somebody இந்த ஆண்டுக் கூட்டத்துக்கு வருவார்கள். 1994 ஆம் ஆண்டில் இந்தியாவின் மீது வெளிச்சமிட்டு நம்நாட்டின் பொருளாதாரக் கொள்கை மாற்றங்களைக் கவனித்து அன்றைய இந்தியப் பிரதமர் நரசிம்மராவை இறுதிக் கூட்டத்தில் பேச அழைத்திருந்தார்கள்.
அப்பொழுது நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் வீசல்லின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அவர் சொன்னார்: ''உண்மைக்கு எதிரி பொய் அல்ல, நன்மைக்கு எதிரி தீமை அல்ல. முன்னேற்றத்துக்கு எதிரி பிற்போக்கு அல்ல. எல்லாவற்றுக்குமே ஒரு பொது எதிரி உண்டு. அதுதான் அலட்சியப் போக்கு (Indifference). அதுவே நமது மிகப் பெரிய எதிரி. பணக்காரர்கள் ஏழைகளை அலட்சியப்படுத்துவது, முன்னேற்ற நாடுகள் பின்தங்கிய நாடுகளை அலட்சியப்படுத்துவது... எந்தப் பாவத்திலும் பொது அம்சம் இந்த அலட்சியம்” அருமையான உன்னதமான பேச்சு! ஒருவன் அலட்சியமாக இருக்கவில்லை என்பதை அவனுடைய சினம் - சீற்றம் - சீறி எழும் ஆவேசம் வெளிப்படுத்தும்.
ஒரு சிற்றூரை ஒட்டிய முட்புதரில் ஒரு பாம்பு நடமாடியது. அந்த வழியாகப் போவோர் வருவோரையெல்லாம் கடித்துத் துன்புறுத்து - வதாகப் பரவலாக ஒரு பேச்சு. ஒருநாள் முனிவர் ஒருவர் அந்தப் பாம்மைப் பார்த்தார். ''ஏன் இப்படிக் கடித்து மக்களைத் துன்புறுத்துகிறாய்? உன் இயல்பைக் கொஞ்சம் மாற்றி எவருக்கும் தீங்கு செய்வதை விட்டுவிடு" என்று முனிவர் கேட்டுக் கொள்ள அந்தப் பாம்பும் பணிந்தது.
சில நாட்களுக்குப் பின் மீண்டும் முனிவர் அந்த வழியே வந்தார். அந்தப் பாம்மைப் பார்த்தார். பரிதாபமாக இருந்தது. அதன் உடம்பு முழுவதும் இரத்தக் காயங்கள். குற்றுயிராய் நகரக் கூட முடியாத படி கிடந்தது. "என்ன ஆச்சு?" என்று கேட்டதற்கு, அந்தப் பாம்பு முணங்கியது: ''நீங்கள் சொன்னபடி நடந்ததற்கு எனக்குக் கிடைத்த பரிசு இது. நான் கடிப்பதில்லை என்று கண்டதும் கண்டவன் எல்லாம் கல்லெறிந்து காயப்படுத்திவிட்டுச் செல்கிறான். அதைக் கேட்ட முனிவர் கோபத்தோடு சொன்னார்: "கொத்த வேண்டாம் என்றுதானே சொன்னேன் குமுறக் கூடாது என்றேனா? தீங்கு இழைக்காதே என்றுதான் சொன்னேன் . தீங்கு இழைப்பதைக் கண்டு நீ சீறி எழுந்திருக்க வேண்டாமா?
பொய்மை காணும் போது கோபம் வேண்டும். தீமை எதிர்ப்படும் போது கோபம் வேண்டும். அநீதி ஆட்சி செய்யும் போது கோபம் வேண்டும்.
எருசலேம் ஆலயம் கள்வர் குகையானபோது, வணிகக் கூடமான போது இயேசுவுக்குக் கோபம் வந்தது. கைக்குச் சாட்டை வந்தது. சிறுமை கண்டு பொங்கினார். சீறி எழுந்தார்.
ஆலயம் என்பது ஆண்டவனின் உறைவிடம். மனிதனும் இறைவனும் சந்தித்து உறவாடும் ஆன்மீக அனுபவத்தளம். உலகக் கடமைகள், பொறுப்புகள், தடைகள், சவால்கள் இவற்றிற்கிடையே சிக்கித் தவிக்கும் மனிதனுக்குத் தாயின் மடியில் தலை சாய்ப்பது போல ஒரு சுக அனுபவம் தரும் புனித தலம். சமத்துவம், சகோதரத்துவம் என்ற இறையாட்சி விழுமியங்கள் மணம் பரப்பும் மலர்த்தோட்டம்.
ஆலயம் இருப்பது இறைவழிபாட்டுக்காக, இறை நம்பிக்கையை வளர்ப்பதற்காக, வழிபாடுகள் நம்மை வாழ்வு மாற்றங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக. அந்த நோக்கம் நிறைவேறாத போது வாழ்வு வேறு வழிபாடு வேறு என்று ஒன்றுக்கு ஒன்று பொருந்தாத நிலையில் “உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன். உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை" (ஆமோசு 5:21) என்று வெறுப்பை உமிழ்கின்றார் இறைவன்.
இயேசு வெகுண்டெழுந்தது தந்தையின் இல்லத்தைச் சந்தை யாக்குகிறார்களே என்பதற்காக மட்டுமா? கடவுளின் பெயரால் ஏழைகளின் வயிற்றில் அடித்து அநியாயமாக அவர்களைத் துன்புறுத்தியதற்காக "நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக! (ஆமோசு 5:24) என்ற வேட்கையில் இயேசுவின் கோபம் தகுதியான முறையில் வெளிப்படுத்திய நியாயமான உணர்வு.
கோபப்படுவது யாருக்கும் எளிது. ஆனால் சரியான நபர் மீது சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான நோக்கத்துடன் சரியான வழியில் கோபப்படுவது அவ்வளவு எளிதல்ல.
மூன்று வகையான கோபம் பற்றி தந்தை மைக்கிள் ஜெயராஜ், சே.ச. குறிப்பிடுகிறார். ) அகச்சினம் (தன்னையே கடிந்து கொள்வது) 2. புறச்சினம் (பிறர்மீது கோபம் கொள்வது) 3. அறச்சினம் (ஒடுக்கப் பட்டோருக்கு ஆதரவாக அநீதி கண்டு சீறி எழுவது). அறச்சினம் பிறர் நலத்தில் பிறக்கும் அன்பின் வெளிப்பாடு. சமுதாய அக்கறையின் சின்னம். விடுதலை வாழ்வின் ஆணிவேர்.
கோபம் ஓர் உந்து சக்தி. கோபம் கொடிது என்று கூறினும் கோபம் கனலைப் போன்று பலனளிக்க வல்ல எரிசக்தி. எனினும் ''சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள். பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்” (எபே.4:26)
கோபம் உள்ள இடத்தில் குணமிருக்கும் என்பார்கள் - ஏதோ கோபமும் குணமும் மாறுபட்டதுபோல. கோபமே குணமாகலாம் என்பது இயேசுவின் வெளிப்பாடு - நிலைப்பாடு.

 

மறையுறை மொட்டுகள் 

அருள்பணி Y.இருதயராஜ்
ஒரு வீட்டிற்கு நான் சென்றபோது, அவ்வீட்டில் டோனி என்ற ஒரு சிறுவன் தட்டிலிருந்த உளுந்தவடைகளைத் தின்றுகொண்டிருந்தான். நான் அவனிடம், 'இதுவரை எத்தனை வடைகள் தின்றாய்?' என்று கேட்டதற்கு அவன் ஏழு என்று பதில் சொன்னான். நான் அவனிடம், 'அருள் அடையாளங்களே ஏழுதான்; நிறுத்திக்கொள்' என்று சொன்னேன், அவன், 'என்ன பாதர் பத்துக்கட்டளைகளை மறந்துவிட்டீர்களே!' என்று கேட்டபோது வீட்டிலிருந்த அனைவரும் சிரித்தனர், அச் சிறுவன் வேடிக்கையாகச் சொன்னதில் ஓர் ஆழமான உண்மை பொதிந்துள்ளது. வழிபாட்டில் ஏழு அருள் அடையாளங்களைக் கொண்டாடிவிட்டு வாழ்க்கையில் பத்துக் கட்டளைகளை மறந்துவிடுகிறோம்.

இன்றைய உலகம் பத்துக்கட்டளைகளைக் கடைப்பிடிக்க மறந்துவிட்டதால்தான், காமம். குடிவெறி, களியாட்டம், கொலை, கொள்ளை, இலஞ்சம், ஊழல், பாலியல் பலாத்காரம், சிசுக்கொலை முதலிய பாதகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள் ளன. இன்றைய உலகை அழிவிலிருந்து பாதுகாக்கப் பத்துக்கட்டளைகள் தேவை. தனி மனிதருடைய நலனுக்காகவும் பொது நலனுக்காகவும் தான் கடவுள் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தார் (முதல் வாசகம்). பத்துக்கட்டளைகள் உறவை மையமாகக் கொண்டுள்ளன. முதல் மூன்று கட்டளைகள் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே நிலவும் உறவைப் புனிதப்படுத்துகின்றன. எஞ்சியுள்ள ஏழு கட்டளைகளும் மனிதருக்கும் மனிதருக்குமிடையே நிலவும் உறவைப் புனிதப் படுத்துகின்றன, பத்துக்கட்டளைகள் வாழ்வு தரும் வார்த்தைகள், "ஆண்டவரே முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" (பதிலுரைப்பாடல், யோவா 6:68), முடிவில்லா வாழ்வடைய பத்துக்கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்படி இயேசு பணக்கார இளைஞனிடம் கூறினார் (மத் 19:16-19),

பத்துக்கட்டளைகள் உடன்படிக்கை என்னும் மோதிரத்தில் பதிக்கப்பட்ட வைரக்கற்கள், சீனாய் உடன்படிக்கையின் வெளிப்பாடே பத்துக்கட்டளைகளாகும். எனவே, பத்துக்கட்டளைகளை மீறுவது வெறும் பாவம் மட்டுமன்று; உடன்படிக்கையை மீறுவதாகும், கிறிஸ்து பத்துக் கட்டளைகளை அழிக்காமல் அதை நிறைவு செய்தார் (மத் 5:17) கொலை செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது, கொலையின் காரணமான கோபத்தையும் தவிர்க்க வேண்டும் (மத் 5:21-22). விபச்சாரம் செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது, விபச்சாரத்திற்குக் காரணமான காம இச்சையுடன் கூடிய பார்வையையும் தவிர்க்க வேண்டும் (மத் 5:27-28). ஒரு நோயைக் குணப்படுத்த வேண்டுமென்றால். அந்நோயின் மூலகாரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
"நோய்நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி, வாய்ப்பச் செயல்" (குறள் 948),

கட்டளைகளை வெறும் எழுத்து வடிவத்தில் கடைப்பிடிப்பது பரிசேயரின் ஒழுக்கம். ஆனால், கட்டளைகளை அவற்றின் உள் நோக்கம் அறிந்து கடைப்பிடிப்பது கிறிஸ்துவ ஒழுக்கமாகும். முந்தைய ஒழுக்கம் சாவையும், பிந்தைய ஒழுக்கம் வாழ்வையும் விளைவிக்கும். எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு: தூய ஆவியால் விளைவது வாழ்வு (2 கொரி 3:6). எனவே, பத்துக் கட்டளைகளை கிறிஸ்து தமது மலைப்பொழிவில் விளக்கியதற்கு ஏற்ப அவற்றைக் கடைப்பிடிப்பது நமது முதன்மையான கடமையாகும், பழைய உடன்படிக்கை கற்களில் எழுதப்பட்டது. ஆனால் புதிய உடன்படிக்கையோ மனித இதயத்தில் எழுதப்பட்டது (எரே 31:33). புதிய உடன்படிக்கையின் இணைப்பாளரான கிறிஸ்து கொண்டு வந்தது புதிய வாழ்வு, புதிய ஆலயம், புதிய வழிபாடு, புதிய கட்டளை. இன்றைய நற்செய்தியில் இயேசு எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தி, தாமே புதிய ஆலயம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு சிலருக்கு ஆலயம் என்றாலே ஒருவகையான ஒவ்வாமை நோய் வந்துவிடுகிறது. ஒருவர் ஆலயத்திற்குச் செல்வதில்லை. காரணம் கேட்டதற்கு, அவர் சொன்ன பதில் : "என் மனைவியை முதன் முதல் ஆலயத்தில்தான் பார்த்தேன். இவ்வளவு மோசமான ஒரு பெண்ணை ஆலயத்தில் எனக்குக் காட்டிய அந்த ஆண்டவன் முகத்தில் ஆயுள் முழுவதும் முழிக்கமாட்டேன்! "பாவம் கசப்பான அனுபவம். இத்தகைய கசப்பான அனுபவங்களால் ஒருசிலர் ஆலயம் செல்வதில்லை. இது தவறான முடிவாகும். ஏனெனில், நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி! கிறிஸ்து ஆலயத்தையோ ஆலய வழிபாட்டையோ எதிர்க்கவில்லை. அவருடைய பெற்றோர்கள் ஆண்டு தோறும் பாஸ்கா விழாவிற்கு எருசலேம் ஆலயத்திற்குச் சென்றனர். இயேசுவும் பன்னிரண்டு வயதில் எருசலேம் ஆலயத்திற்குச் சென்றார், ஆலயத்தை அவருடைய தந்தையின் இல்லமென்றார் (லூக் 2:41-42, 49). ஆனால் ஆலயத்தைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்துவதை அவர் எதிர்த்தார். செபவீடாகிய கடவுளின் இல்லத்தைச் சந்தையாகவும் (யோவா 2:16), கள்வர் குகையாகவும் (மாற் 11:17) மாற்றப்படுவதை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

நாத்திகர்கள் ஆத்திகர்களிடம், "கடவுளை மற, மனிதனை நினை' என்று சொல்லுமளவிற்கு இன்று ஆலயமும் ஆலய வழிபாடும் தரம் தாழ்ந்து, தறிகெட்டுச் சென்றுக்கொண்டிருக்கிறது. ஆலயங்கள் வாணிபக் கூடமாகக் காட்சியளிக்கின்றன. திருத்தலங்களில் பணம் மையப்படுத்தப்படுகிறது.

குழந்தை இயேசுவின் கையில் என்ன இருக்கின்றது? என்று சிறுவர்களை நான் கேட்டபோது அவர்கள் உண்டியல் பெட்டி என்றார்கள்.
குழந்தை இயேசுவின் திருத்தலப் பங்குத் தந்தையிடம் நான் சிரித்துக் கொண்டே குழந்தை இயேசுவை வயசுக்கு வர விடமாட்டார்களா? என்று கேட்டதற்கு அவரும் சிரித்துக்கொண்டே குந்த இயேசு வயசுக்கு வந்துவிட்டால் வருமானம் போய்விடும். என்றார். ஆலய வழிபாட்டில் பண ஆதிக்கம் செலுத்தாமல், பக்தி நெறி ஆதிக்கம் செலுத்த வேண்டும். நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.

உயிருள்ள ஆலயங்களாவோம்!

அருட்பணி மரிய அந்தோணிராஜ்  பாளையங்கோட்டை


அது ஒரு கிறிஸ்தவக் குடும்பம். கூட்டுக்குடும்பமும் கூட. அந்தக் குடும்பத்தில் இருந்த வயதான பாட்டி மட்டும் வாரவாரம் தவறாமல் ஆலயத்திற்குச் சென்று, திருப்பலியில் கலந்துகொண்டு வருவார்.  இது அந்தக் குடும்பத்தில் இரண்டு சிறுவர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. ஒருநாள் அந்தச் சிறுவர்களில் ஒருவனாகிய ஜான் பாட்டியிடம், “பாட்டி! நீங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆலயத்திற்குச் சென்று திருப்பலியில் கலந்துகொண்டு வருகின்றீர்கள். அது தொடர்பாக உங்களிடத்தில் நான் ஒருசில கேள்விகளைக் கேட்கவேண்டும்” என்றான். “சரி கேள்” என்றாள் அவள்.

“பாட்டி! கடந்த வாரம் பங்குத்தந்தை அவர்கள் என்ன மறையுரை ஆற்றினார்கள். அதைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றான் ஜான். “அதெல்லாம் எனக்கு மறந்துபோய்விட்டதுபா. ஆனால் அவர் ஆற்றிய மறையுரை மிகவும் அருமையாக இருந்தது” என்றாள். “பங்குத்தந்தை என்ன மறையுரை ஆற்றினார்கள் என்றுகூடச் சொல்லவேண்டாம், எதைப் பற்றி மறையுரை ஆற்றினார்கள். அதைப் பற்றியாவது சொல்லுங்கள்” என்றான் ஜான். அதற்குப் பாட்டி அவனிடம், “பங்குத்தந்தை எதைப் பற்றி மறையுரை ஆற்றினார்கள் என்பதெல்லாம் எனக்கு மறந்துபோய்விட்டதப்பா, ஆனால், அவர் ஆற்றிய மறையுரை என்னுடைய உள்ளத்தைத் தொடுவதாக இருந்தது” என்றாள்.

“பங்குத்தந்தை என்ன மறையுரை ஆற்றினார்கள் என்பதும் தெரியவில்லை, எதைப் பற்றி மறையுரை ஆற்றினார்கள் என்பதும் தெரியவில்லை. பிறகு எதற்கு ஒவ்வொரு வாரமும் ஆலயத்திற்குப் போகின்றீர்கள்?” என்று கேட்டான் ஜான். ஜான் இவ்வாறு பேசியதைத் தொடர்ந்து பாட்டி சிறுது நேரம் அமைதியாக இருந்தாள். பின்னர் அவள் அவனிடத்தில், “தம்பி! கடந்த ஆண்டு இதே நாளில் இந்தக் காலை வேளையில் என்ன உணவு சாப்பிட்டாய் என்று சொல்” என்றாள். “கடந்த ஆண்டு இதே நாளில், இதே நேரத்தில் என்ன உணவு சாப்பிட்டேன் என்று நான் எப்படிச் சொல்ல முடியும். அது எனக்கு மறந்து போய்விட்டது என்றான் அவன். “கடந்த ஆண்டு என்ன உணவு சாப்பிட்டாய் என்று கூடச் சொல்லவேண்டும். கடந்த மாதம் இதே தேதியில் என்ன உணவு சாப்பிட்டாய் என்பதை மட்டும் சொல்” என்றாள். அதுவும் என்னைக்குத் தெரியாது” என்றான் ஜான்.

அப்போது பாட்டி அவனிடத்தில், “கடந்த ஆண்டும் ஏன் கடந்த மாதமும் நீ என்ன உணவு சாப்பிட்டாய் என்பது உனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நீ சாப்பிட்ட உணவு உனக்கு ஆரோக்கியத்தையும் வலுவினையும்  தந்திருக்கும். இதை நீ ஏற்றுக்கொள்கின்றாயா?” என்று கேட்டாள். அவன் ஆமாம் என்பது போல் தலையாட்டினான். தொடர்ந்து பாட்டி அவனிடத்தில் சொன்னாள், “குருவானவர் என்ன மறையுரை ஆற்றினார், எதைப் பற்றி மறையுரை ஆற்றினார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நான் ஒவ்வொரு வாரமும் ஆலயத்திற்குச் சென்று திருப்பலியில் கலந்துகொண்டு வருகின்றபோது நான் இறைவனின் வல்லமையையும், அவர் தருகின்ற ஆறுதலையும் பெற்றுக்கொள்வதை உணர்கின்றேன்” என்றாள். பாட்டி ஜானுக்கு சரியான பதிலளித்ததைத் தொடர்ந்து அவன் பாட்டியிடம் எந்தவொரு கேள்வியையும் கேட்கத் துணியவில்லை.

‘ஆலயம் தொழுவது சாலமும் நன்று’ என்ற மூத்தோர் வாக்கினைப் போல், நாம் ஆலயம் செல்வதனால் எத்தகைய பலனைப் பெறுகின்றோம் என்று உண்மையை இந்த நிகழ்வு மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது. தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நம்மை ‘உயிருள்ள ஆலயங்களாக வாழ அழைக்கின்றது. நாம் அதைக் குறித்து சிறுது நேரம் சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவிலுக்குச் செல்கின்றார். அங்கு ஆடு மாடு, புறா விற்போரையும், நாணயம் மாற்று வோரையும் கண்டு, கயிறுகளால் சாட்டை பின்னி அவர்களை விரட்டியடிக்கின்றார்.  சாந்தமே உருவான இயேசு, இவ்வளவு சினத்தோடு கோவிலில் வாணிபம் செய்தவர்களை விரட்டியடிக்கின்ற செயல் நமக்கு வியப்பினைத் தருவதாக இருக்கின்றது. இயேசுவின் இத்தகைய செயலுக்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன என்று நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிக்கின்றோம்.

“என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறை மன்றாட்டின் வீடு’ என அழைக்கப்படும்” என்பார் இறைவாக்கினர் எசாயா (எசா 56:7). இறைவாக்கினர் எசாயா கூறிய வார்த்தைகளை இயேசு நன்கு அறிந்து அறிந்திருப்பார். அது மட்டுமல்லாமல், இயேசு எருசலேம் திருக்கோவிலைத் தன்னுடைய தந்தையின் இல்லமாகத்தான் பார்த்தார். அதனால்தான் அவர் கோவிலில் வழிபாடு நடைபெறாமல், வாணிபம் நடைபெறுவதைப் பார்த்து, சினம் கொண்டு அவர்களை விரட்டியடிக்கின்றார்.

எருசலேம் திருக்கோவிலில் நடந்த முறைகேடுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவற்றை விளக்கிச் சொன்னால், சொல்லிக்கொண்டே போகலாம். ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய பாஸ்கா விழாவிற்கு உலகெங்கிலும் உள்ள யூதர்கள் எருசலேம் ஆலயத்தை நோக்கி வருவார்கள். இருபது இலட்சத்திற்குள் மேல் வருவார்கள் என்பார் வில்லியம் பார்க்லே என்னும் இறையியலாளர். இப்படி பெரும் எண்ணிக்கையில் வரும் ஒவ்வொரு யூதரிடமிருந்தும் அரை செக்கேல் கோவில் வரியாக வசூலிக்கப்படும். இந்தக் கோவில் வரியினை அவர்கள் வேற்று நாட்டு நாணயங் களில் செலுத்தமுடியாது, யூதர்கள் பயன்படுத்திய நாணயத்தில்தான் செலுத்தவேண்டும். எனவே நாணயப் பரிமாற்றமானது நிகழ்ந்தது. நாணய மாற்றத்தின்போது, அத்தொழிலைச் செய்து வந்தோர் 1/6 என்ற விகிதத்தில் பணத்தைப் பெற்றனர். இதனால் நாணயம் மாற்றும் தொழிலில் கொழுத்த இலாபம் கிடைத்தது. இதற்கெல்லாம் பொறுப்பாக இருந்தவர்கள் தலைமைக்குருக்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

எருசலேம் திருக்கோவில் நடந்த இரண்டாவது முறைகேடு ஆடு, மாடு, புறா விற்றல் ஆகும். யூதர்கள் ஆலயத்திற்கு வருகின்றபோது ஆடு, மாடுகள், புறாக்களை காணிக்கையாக செலுத்தினார்கள். இயேசுவின் பெற்றோர்களும் காணிக்கை செலுத்தினார்கள் என்று லூக்கா நற்செய்தி எடுத்துக்கூறுகின்றார் (2: 24). இப்படி காணிக்கை செலுத்துவதற்காக ஆடு மாடுகள் விற்பனை செய்யப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், மக்கள் ஆலயத்திற்கு வெளியே விற்கப்படும் ஆடு மாடுகளை, புறாக்களை வாங்கக்கூடாது, ஆலய வளாகத்திற்குள்ளே விற்பனை செய்யப்படும் ஆடு மாடுகளைதான் வாங்கவேண்டும். ஆலய வளாகத்திற்கு உள்ளே விற்பனை செய்யப்பட்ட ஆடு, மாடுகள், வெளியே விற்பனை செய்யப்பட்ட ஆடு மாடுகளைவிட பன்மடங்கு அதிகமாக இருந்தது. இதன் வழியாகும் ஆலய நிர்வாகம் செய்துவந்த தலைமைக் குருக்கள் பெரும் இலாபம் அடைந்தார்கள்.

எருசலேம் திருக்கோவில் நடந்த மூன்றாவது குளறுபடி கோவிலில் வாணிபம் செய்துவந்தவர்கள் புறவினத்தாரின் வழிபாட்டுக்குரிய பகுதியை அபகரித்துக் கொண்டதாகும். ஆலயம் எல்லா மக்களுக்கும் உரியது என்று எசாயா இறைவாக்கினர் கூறியதை மேலே பார்த்தோம். அப்படியானால், எருசலேம் திருக்கோவில் யூதர்களுக்கு மட்டுமல்ல, புறவினத்தாரும் சொந்தம் என்பதுதான் உண்மை. எனவே, அவர்கள் வழிபடுகின்ற பகுதியை அவர்களுக்குக் கொடுப்பதுதான் தகுதியும் நீதியுமாகும். ஆனால், கோவிலில் வாணிபம் செய்துவந்தவர்களோ புறவினத்தாரின் வழிபாட்டுப்பகுதி யில் வாணிபம் செய்து, அவர்கள் வழிபாடு செய்வதற்கு மிகப்பெரிய தடையாய் இருந்தார்கள். அதனால்தான் இயேசு அங்கு வாணிபம் செய்து வந்தவர்களை கயிறுகளால் சாட்டை பின்னி அவர்களை விரட்டி அடிக்கின்றார்.

இயேசு செய்த இந்த தீரமிக்க செயலைப் பார்த்துவிட்டு யூதர்கள், “இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன” என்று கேட்கின்றார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், “இக்கோவிலை இடித்து விடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” என்கின்றார். இயேசு சொன்னது யூதர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்காது. அவர் தன் உடல் என்னும் கோவிலைப் பற்றித் தான் பேசுகின்றார். நான் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழும் இறைமகன்’ என்பதுதான் இயேசு யூதர்களுக்குக் கொடுக்கும் அடையாளமாக, பதிலாக இருக்கின்றது. வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், இயேசு தன்னுடைய உயிர்தெழுதலை அவர்களுக்கு அடையாளமாகக் கொடுக்கின்றார்.

இயேசு தன்னுடைய உடலைக் கோவிலாக உருவகப்படுத்துவது நம்முடைய ஆழமான சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. இதோடு பவுலடியார் கூறுகின்ற வார்த்தைகளை நாம் ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்த்தால் அது ஆழமான அர்த்தத்தைத் தரும் என்பதுதான் உண்மை. “உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்கு பெருமை சேருங்கள்” ( 1 கொரி 6: 19, 20) என்பார் தூய பவுல். ஆகையால், நமது உடல் தூய ஆவியார் வாழும் கோவில் என்பதை உணர்ந்து, நமக்காக வாழாமல் கடவுளுக்காக வாழ்வதுதான் மிகச் சிறப்பானதாகும்.

கடவுள் தந்த இந்த உடலை வைத்து எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வது என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. முதல் வாசகத்தில் பத்துக்கட்டளைகளைக் குறித்து வாசிக்கின்றோம். பத்துக் கட்டளைகளை இறையன்பு, பிறரன்பு என்னும் இரண்டு கட்டளைகளில் அடக்குகின்றோம். எனவே, தூய ஆவியானவர் தங்கி இருக்கும் நம் உடல் என்னும் கோவிலை வைத்து கடவுளை முழுமையாய் அன்பு செய்ய வேண்டும், அதே நேரத்தில் மனிதர்களையும் அன்பு செய்யவேண்டும். அப்படி நாம் அன்பு செய்யும்போது உயிருள்ள ஆலயங்களாக இருப்போம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

எனவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளைகளைக் கடைபிடித்து ஆலயங்களுக்கு மட்டுமல்ல, உயிருள்ள ஆலயங்களுக்கும் முக்கியத்துவம் தருவோம். அதன்வழியாய் இறையருள் நிறைவாய் பெறுவோம்.
அடிமை வீடா? தந்தையின் இல்லமா?

அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை


முதல் ஏற்பாட்டில் எங்கெல்லாம் எகிப்து பற்றிய வர்ணனை வருகிறதோ அங்கெல்லாம் பெரும்பாலும் விவிலிய ஆசிரியர் 'அடிமை வீடாகிய எகிப்து நாடு' என்று வர்ணனை செய்கின்றார். இவ்வாறாக, எகிப்து என்பது இஸ்ரயேல் மக்களின் அடிமைத்தனத்தின் அடையாளமாக இருக்கிறது. அடிமை வீடாகிய எகிப்தில் அவர்கள் பாரவோனுக்கு அடிமைகளாக இருந்தனர். வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்கள் யாவே இறைவனின் உரிமை மக்களாக மாறுகின்றனர். ஆக, அடிமை வீட்டிலிருந்து அவர்கள் தந்தையின் இல்லத்திற்குக் கடந்து செல்கின்றனர்.

ஆனால், ஒருவர் தந்தையின் இல்லத்திற்குள் நுழைய வேண்டுமென்றால் அவர் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பத்துக்கட்டளைகளைப் பட்டியலிடுகின்றது இன்றைய முதல் வாசகம். இந்த பத்துக் கட்டளைகள் சொல்வது ஒற்றைச் சொல்தான்: 'புனிதம்.'

'புனிதம்' என்ற வார்த்தையை மையமாக வைத்து பத்துக்கட்டளைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

கட்டளை 1: கடவுள் என்னும் புனிதம்
கட்டளை 2: வார்த்தை என்னும் புனிதம்
கட்டளை 3: நேரம் என்னும் புனிதம்
கட்டளை 4: அதிகாரம் என்னும் புனிதம்
கட்டளை 5: உயிர் என்னும் புனிதம்
கட்டளை 6: அன்பு என்னும் புனிதம்
கட்டளை 7: உரிமை என்னும் புனிதம்
கட்டளை 8: உண்மை என்னும் புனிதம்
கட்டளை 9: திருப்தி என்னும் புனிதம்
கட்டளை 10: நிறைவு என்னும் புனிதம்

இந்த 10 புனித வாயில்களில் நாம் நுழையும்போது தந்தையின் இல்லத்திற்குச் சென்றுவிடலாம்.

அடிமை வீடா? தந்தையின் இல்லமா? - எதைத் தேர்ந்து கொள்வது என்ற கேள்வி இன்றைய நற்செய்தி வாசகத்தில் தொடர்கிறது. இயேசு எருசலேம் ஆலயத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்வு நான்கு நற்செய்தி நூல்களிலும் நாம் காணும் ஒன்று. யோவான் இந்த நிகழ்வை நற்செய்தி நூலின் தொடக்கத்திலும், மற்றவர்கள் ஏறக்குறைய இறுதியிலும் பதிவு செய்கின்றனர்.

எருசலேம் ஆலயம் அடிமை வீடாக இருக்கிறது. எப்படி?

இயேசுவின் சமகாலத்தில் எருசலேம் ஆலயம் ஒரு வியாபார ஸ்தலமாக மாறிவிட்டது. கடவுளையும், கடவுள் சார்ந்தவற்றையும் காசாக்கும் வித்தைகள் கற்றிருந்தவர்களின் கருவூலமாக ஆலயம் இருந்தது. இவ்வாறாக, மக்களையும், கடவுளையும் இணைக்கவேண்டிய ஆலயம் இவ்விருவருக்கும் இடையே பெரிய பொருளாதார, சமூக, சமய, அரசியல் பிளவை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், இவ்வாறாக இவ்வாலயம் இருந்தததால் இவ்வாலயம் சுயநலம், குறுக்குவழி வணிகம், தாறுமாறான லாபம், ஏமாற்றுவேலை, இலஞ்சம், ஊழல் என்னும் காரணிகளுக்கு அடிமைகளாக இருந்தவர்களின் வீடாக மாறிவிட்டது. இயேசு இதைத் தூய்மைப்படுத்துகிறார்?

'நீர் யார் இதைச் செய்ய?' என்று யூதர்கள் கேட்டபோது, தன்னையே 'தந்தையின் இல்லம்' என்னும் கோவில் என்று அடையாளம் காட்டுகின்றார்.

ஆக, அடிமைத்தன வீட்டை அழிக்க தந்தையின் இல்லமாக வாழும் ஒருவரால் தான் முடியும்.

இன்று நான் என்னையே கேட்டுப்பார்க்கிறேன்:

எப்போதெல்லாம் என் உடல் என்னும் ஆலயம் அடிமைத்தன வீடாக இருந்தது? நான் எவற்றிற்கெல்லாம் அடிமையாக இருந்தேன்?

அல்லது என் உடல் தந்தையின் இல்லமாகவே இருந்திருக்கிறதா?

இல்லம் வலுவில்லாமல் இருந்தாலும் அது தந்தையின் இல்லமாக இருந்தால் அது வலுவுள்ளது என்பதை, 'மனித வலிமையைவிட அவரின் வலுவின்மை வலிமை மிக்கது' என்கிறார் தூய பவுல்.

இறுதியாக,

என் உடல் தந்தையின் இல்லம் என்பதை அறிவுறுத்துகின்ற இயேசு இந்த உடலில் உறையும் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் தூய்மைப்படுத்துகின்றார். இவற்றின்மேல் நாம் உரிமை கொண்டிருக்க அழைக்கப்படுகிறோமே தவிர, இவற்றின் அடிமைகளாக, இவற்றிற்கு நம்மை விற்றுவிட அல்ல.

ஒவ்வொரு கட்டளை சொல்லும் புனிதம் இந்த இல்லத்தின் வாழ்வாக நான் என்ன செய்கிறேன்?

வலுவான ஒரு வீடாக என் உடல் இருந்து அது அடிமைத்தனத்தின் வீடாக இருப்பதைவிட, வலுவற்றதாயினும் அது தந்தையின் இல்லமாக இருந்தால் சால்பு.
Friday, 23 February 2018

தவக் கால 2-ஆம் ஞாயிறு

தவக் கால 2-ஆம் ஞாயிறு
தொநூ 22:1-2, 9-13, 15-18; உரோ 8:31ஆ-34; மாற் 9:2-10

கீழ்ப்படிதலே பெரிது !
குடந்தை ஆயர் அந்தோணிசாமி.

கடவுளின், பரமதந்தையின் அன்புக்குரியவர்களாக வாழ விரும்பினால் நாம் என்ன செய்யவேண்டும்? என்பதற்கு இன்றைய வாசகங்கள் பதில் தருகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் எப்படி இறைவனின் அன்புக்கு உரியவரானார் என்பதைப் பற்றி நாம் படிக்கின்றோம். அவர் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்ததால், இறைவனுடைய விருப்பத்தின்படி அவர் நடக்க முன்வந்ததால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவரானார்.

இன்றைய நற்செய்தியிலே இறைத் தந்தை, இயேசுவைக்குறித்து, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" (மாற் 9:7) என்கின்றார். இதற்குக் காரணம் இயேசு சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார் (பிலி 2:8). இயேசு, என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பது மே என் உணவு (யோவா 4:34) என்கின்றார். யோவா 5:30-இல் "என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகின்றேன்” என்கின்றார் இயேசு.

கடவுளுக்கு மிகவும் பிரியமானது கீழ்ப்படிதலே (1 சாமு 15:22). பரம தந்தை விரும்பிய கீழ்ப்படிதலை அவருக்குக் கொடுத்த இயேசு, அவரின் அன்புக்குரியவரானார்.

கீழ்ப்படிதலின் தாயாக விளங்குவது எது? நம்பிக்கைதான் கீழ்ப்படிதலின் தாய். நம்பிக்கை என்றால் என்ன? இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடிகளார் கேட்பதுபோல, "கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ?" (உரோ 8:31-32) என்று கேட்பதற்குப் பெயர்தான் நம்பிக்கை. பால் குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கியவள் தன் பிள்ளை மீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கமாட்டேன் (எசா 49:15) என்ற இறைவார்த்தைகளை நமது வாழ்வின் மையமாக்கிக்கொள்வதற்குப் பெயர்தான் நம்பிக்கை.

கடவுள்மீது நம்பிக்கை வைப்பவர்களை எந்தச் சக்தியாலும் எதிர்க்க முடியாது !

ஓர் அடர்ந்த காட்டின் வழியே ஒரு வழிப்போக்கன் சென்றுகொண்டிருந்தான். திடீரென அவன் முன்னே வந்த ஒரு பெரிய பூதம் அந்த மனிதனைப் பார்த்து, "உன்னை நான் ஒரு கேள்வி கேட்பேன். அதற்குச் சரியான பதிலைச் சொன்னால் உன்னை விட்டுவிடுகின்றேன்” என்றது. அதற்கு அந்த மனிதன், "சரி, கேள்" என்றான். அந்தப் பூதம் அவனைப் பார்த்து, இந்த உலகத்திலேயே மிகவும் பலம் வாய்ந்த மனிதன் யார்?” என்றது.

"கடவுள் மீது முழுநம்பிக்கை வைத்திருப்பவனே, இந்த உலகத்திலேயே பலம் வாய்ந்த மனிதன்” என்று பதில் வந்தது. அதைக் கேட்டதும், அந்தப் பூதம், “இவன் மீது கைவைத்தால், என் மீது கடவுள் கைவைத்துவிடுவார்” எனச் சொல்லி அந்த இடத்தைவிட்டு மறைந்துவிட்டது.

நம்பிக்கை என்பது கடையில் கிடைக்கும் பொருள் அல்ல; மாறாக, அது ஒரு தெய்வீக வாழ்வு (1 கொரி 12:9): அது கேட்பவர்களுக்குக் கொடுக்கப்படும் (லூக் 11:9-13).
நமது மனத்திலே நம்பிக்கை விதை முளைக்குமானால், அது செடியாக வளருமானால், அச்செடியில் கீழ்ப்படிதல் என்னும் மலர் மலர்வது உறுதி !
கீழ்ப்படிதல் இருக்கும் இடத்திலே இறை அன்பு
பாரங்களுக்குப் பாதமாக வரும்!
தோல்விகளுக்குத் தோளாக வரும்!
பாமரர்க்குப் பாரியாக வரும்!
இறை அன்பு - அது
நிழலை நிஜமாக்கும்!
சோதனையைச் சாதனையாக்கும்!
துயரத்தை மகிழ்ச்சியாக்கும்!

மேலும் அறிவோம் :
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் ; அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை (குறள் : 985).
பொருள் : செயல் திறமை என்று போற்றப்படுவது எல்லாருக்கும் பணிந்து நடக்கும் பண்பாகும்! அந்தப் பணிவே சால்புடைய பெருமக்களின் பகைவரையும் நண்பராக மாற்றும் ஆற்றல் வாய்ந்த படைக் கருவியும் ஆகும்!
உருமாற்றத் திருக்காட்சி- 

அருள்பணி லூர்துராஜ் -பாளை மறைமாவட்டம்
என்றோ எங்கோ படித்த புதுக்கவிதை இது!
''இன்றுகூட எல்லாரும்
அரிச்சந்திரன்களாக இருக்க முடியும்.
இறுதியில் இறைவன் வந்து
அருள் புரிவதாய் இருந்தால்!”

ஆபிரகாமின் விசுவாசம் அப்படி ஒரு நம்பிக்கையையா அடிப்படையாகக் கொண்டது? இறுதியில் இறைவன் தன் மகனைப் பரிகொடுக்க விடமாட்டார் என்ற எதிர்பார்ப்பா ஒரேப் மலையை நோக்கி அரை நடக்க வைத்தது?

இருட்டிலே நடந்தார் - எது நேர்ந்தாலும் சரி, இறை விருப்பப்படி எல்லாம் நடக்கட்டும் என்ற மனத் தெளிவோடு! நீதிமானை வாழ பாவக்கும் விசுவாச உறுதியோடு!

அவர் கண்முன்னே நம்பிக்கை ஒளி!

விசுவாசத்தால் மலைகளை அசைக்கலாம், பெயர்க்கலாம், அகற்றலாம், மலைபோல துன்பங்களையும் சோதனைகளையும் கடுகளவு நம்பிக்கை காணாமல் செய்து விடும்.

ஆபிரகாமைப் பொருத்தவரை - கண்ணால் காண முடியாததை யெல்லாம் காண வைக்கும் கண் விசுவாசம், காதால் கேட்க முடியாததை யெல்லாம் கேட்கச் செய்யும் காது விசுவாசம். கரத்தால் தொட்டு உணர முடியாததையெல்லாம் தீண்ட வைக்கும் கரம் விசுவாசம். இயலாது, நடக்க முடியாது என்று எண்ணுவதையெல்லாம் சாத்தியமாக்கும் ஆற்றல் விசுவாசம்.

பறவைகளால் பறக்க முடிகிறது. நம்மால் முடிவதில்லை. ஏன் தெரியுமா? பறவைகளுக்கு நிறைய விசுவாசம் உண்டு. விசுவாசம் என்பது இறக்கையாகும். To have faith is to have wings. விசுவாசமுள்ள மனிதனுக்கு விடிவதெல்லாம் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளில்! அவன் விழித்து எழுவதெல்லாம் புத்துணர்வு கலந்த எதிர்பார்ப்புக்களில்!

வானத்து விண்மீன்கள் போல உன் இனம் பலுகும் பெருகும் என்பது வாக்குறுதி. ஆனால் இருக்கும் ஒரே மகனையும் எனக்குப் பலிகொடு என்பது எதார்த்தம். இது எப்படி?

கடவுள் என்ன நரபலி கேட்கும் பயங்கரப் பேர் வழியா? ஆபிரகாம் வாழ்ந்த காலத்தில் பல சமயங்களிலும் தங்கள் தெய்வங்களுக்கு நரபலி கொடுக்கும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் இறைவன் ஆபிரகாமின் நம்பிக்கையைச் சோதிக்க அவர் மகனைப் பலியிட வேண்டும் என்று கேட்ட போது அது அவருக்குப் பெரும் சோதனையாகத் தோன்றியதே தவிர பெரிய தவறாகத் தோன்றவில்லை.

முடிவில் கதையின் கருவும் நிறைவும் முற்றிலும் வேறுபட்டவை. அதன் உச்சம் ஈசாக் பலியாகவில்லை என்பது தானே! நெஞ்சுருக்கும் அந்த நிகழ்வின் நோக்கம் என்ன?

ஆபிரகாம் எவ்வளவு உண்மையும் நம்பிக்கையும் உள்ளவர், எவ்வளவு பிரமாணிக்கமானவர் என்பதை அறிந்து கொள்ள அல்ல; (முக்காலமும் உணரும் கடவுளுக்கு அது முன்கூட்டியே தெரியும்) மாறாகக் கடவுள் எவ்வளவு பிரமாணிக்கம் உள்ளவர், வார்த்தை தவறாதவர் என்பதை ஆபிரகாமுக்கு உணர்த்தவே இந்தச் சோதனை. ஒவ்வொரு சோதனையிலும் சோதிக்கப்படுவது மனிதன் மட்டுமல்ல, கடவுளும் தான்!

ஈசாக்கை எரிபலியாக்கும் நிகழ்வு தந்தையான கடவுளின் பேரன்புப் பிரதிபலிப்பு. இறைமகன் இயேசு சிலுவையில் பலியான மீட்பு வரலாற்று நிகழ்ச்சிக்கு ஒரு முன்னோட்டம். அதனால்தான் "தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள்" (உரோமை 8:32) ஆபிரகாமின் பலியை மறுசிந்தனை செய்தார். மாற்றுப் பலிப்பொருளுக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் தன்மகன் இயேசு கல்வாரியில் பலியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கு மாற்றுப் பலிப்பொருள் பற்றி சிந்திக்க விரும்பவில்லை. சாவிலும் கூடத் தன் உடன்படிக்கையை முறிக்காத அன்பு இது. இப்படிப்பட்ட அன்பு எப்படி சாக முடியும்? அதனால்தான் அது உயிர்த்தெழுந்தது. அன்பே நிரந்தரம் என்பதற்குச் சாட்சியாக நம் நடுவே அது உயிர் வாழ்கிறது.

மீட்புப் பயணம் சிலுவை வழியே - இறைமகன் இயேசுவுக்கு மட்டுமல்ல, அவரது சீடர்களுக்கும் கூட.
சிலுவை இயேசுவுக்குச் சுமையாகக் கனத்தது;
சீடர்களுக்கு இடறலாக இருந்தது!
இயேசு தபோர் மலையேற... இரு நோக்கங்கள்:

தன் சிலுவையைச் சுமக்க இறையாற்றல் தேடி... தன் தந்தையைப் பார்த்துச் செபிப்பதற்காக. விண்ணரசுக்குக் குறுக்கு வழியில்லை. குறுகிய வழிதான் உண்டு. குறுக்கு வழி சிலுவையைத் தவிர்ப்பது; குறுகிய வழி சிலுவையைச் சந்திப்பது! சவாலாக ஏற்பது! துன்பத்தைக் குடித்துச் சமாளி - இது பாமரன் நிலை! துன்பத்தைச் சிரித்துச் சமாளி! (“இடுக்கண் வருங்கால் நகுக”) - இது வள்ளுவர் தத்துவம் (திருக்குறள் 621) துன்பத்தைச் செபித்துச் சமாளி - இது கிறிஸ்தவ வாழ்க்கை முறை.
சிலுவையின் இடறலை நீக்கித் தன் சீடர்களை நம்பிக்கை வாழ்வில் வலுப்படுத்த... அனுபவிக்கப் போகும் எதிர்கால மகிமையை அவர்களுக்கு உணர்த்தி அவர்களை உறுதிப்படுத்த. சிலுவை யூதர்களுக்கு இடறல். கிரேக்கர்களுக்கு மடமை. அழைக்கப்பட்ட நமக்கோ கடவுளின் ஞானமல்லவா! தெய்வ வல்லமையல்லவா! இறைவனின் பேரன்பு அல்லவா! (1 கொரி.1:2329). சிலுவையின்றி மகிமை ஏது? தியாகமின்றிச் செழுமை ஏது? "அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும். அப்போது தான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்". (ரோமை 8:17).


மறையுரைமொட்டுக்கள்
அருள்பணி இருதயராஜ்


சிறுவன் ஒருவன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்போது, பெரியவர் ஒருவர் அவனிடம், 'பள்ளிக்குச் செல்ல உனக்குப் பிடிக்கிறதா?' என்று கேட்டதற்கு, அச்சிறுவன், "பள்ளிக்குச் செல்லவும், பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பவும் பிடித்திருக்கிறது. ஆனால், இந்த இரண்டிற்கும் இடையே நடப்பதுதான் {வகுப்புகள்) எனக்குப் பிடிக்கவில்லை" என்றான்.

நம்மில் பலருக்குக் கிறிஸ்துவின் பிறப்பும் உயிர்ப்பும் பிடித்திருக்கிறது, ஆனால், இந்த இரண்டிற்கும் இடையே நடந்த அவருடைய பாடுகளும் சிலுவை மரணமும் பிடிக்கவில்லை. கிறிஸ்து முதன் முறையாகத் தமது பாடுகளை முன்னறிவித்தபோது, அவருடைய சீடர்களுக்கு அது பிடிக்கவுமில்லை, விளங்கவுமில்லை. எனவேதான் பேதுரு கிறிஸ்துவைத் தனியாக அழைத்து அவரைக் கடித்து கொன்டார் (மாற் 8:32). மெசியாவின் சிலுவையும் சிலுவை மரணமும் சீடர்களுக்கு மாபெரும் இடறவாக இருந்தன.

எனவே, சிலுவையின் இடறலைச் சீடர்களுடைய மனதிலிருந்து அகற்ற, இயேசு பேதுரு, யாக்கோப்பு, யோவான் ஆகிய மூவருடன் ஒக் உயர்ந்த மலைக்குச் சென்று அவர்கள் முன்பாகத் தோற்றம் மாறி, தமது தெய்வீக மாட்சிமையை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். இந்த மூன்று சீடர்கள் தான் இயேசு கெத்சமனித்தோட்டத்தில் இரத்த வேர்வை வேர்க்கும்போதும் இயேசுவுடன் இருக்கப் போகின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்ந்த மலையும் ஒளிரும் மேகமும் இறைப்பிரசன்னத்தின் வெளிப்பாடாகும். இயேசுவுடன் மோசேயும் எலியாவும் தோன்றுகின்றனர், பழைய உடன்படிக்கையில் சட்டமும் இறைவாக்குகளும் முக்கியத்துவம் பெறுகின்றன, சட்டத்தின் பிரதிநிதியாக மோசேவும் இறைவாக்கினார்களின் பிரதிநிதியாக எலியாவும் தோன்றுகின்றனர். இவ்வாறு சட்டமும் இறைவாக்கும் இயேசுதான் மெசியா என்று சான்று பகர்கின்றன. அத்துடன் தந்தையாகிய கடவுளும் இயேசு தம் அன்பார்ந்த மகன் எனச் சான்று பகர்கிறார். உயர்ந்த மலையில் நிகழ்ந்தது ஓர் இறைத் தோற்றம் அல்லது திருக்காட்சியாகும் (Theophathy).

மோசேயும் எலியாவும் இயேசுவுடன் அவர் எருசலேமில் படவேண்டிய அவருடைய பாடுகளைப் பற்றிச் பேசினர் என லூக்கா குறிப்பிடுகின்றார் (லூக் 9:31). மெசியா பாடுபட்டே மாட்சிமை அடைய வேண்டும் (லூக் 24:26) என்ற இறையியல் உண்மை அப்போது வெளிப்படுத்தப்படுகிறது,

தவக்காலத்தில் சிலுவையின் மறைபொருளை நன்குணரவேண்டும். இறைவனுடைய மீட்புத் திட்டம் இயேசுவின் சிலுவை வழியாகவே நிறைவேறுகின்றது. இயேசுவைப் பின்பற்ற விரும்புவோர் சிலுவை சுமந்தே அவரைப் பின்பற்ற வேண்டும். இயேசுவின் சீடர்களுக்குச் சிலுவை விருப்பப்பாடமில்லை, கட்டாயப்பாடமாகும். ஒருவர் தம்மை இழந்தால்தான் வாழ்வு பெறமுடியும், தம் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புபவர் அதை இழந்துவிடுவார் (மத் 16:24-25).
இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் தமது ஒரே மகன் ஈசாக்கை இழக்க முன்வந்தார். எனவேதான் அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார் இயற்கையில் எந்தவொரு பொருளும் தனது பழைய உருவத்தை இழந்த பின்னர்தான் புதிய உருவைப் பெற இயலும். கோதுமை மணி முளைப்பதற்குமுன் அது மண்ணில் விழுந்து மடிய வேண்டும். சந்தனக் கட்டை மணம் கொடுப்பதற்கு முன் அது அரைக்கப்படவேண்டும், கரும்பு வெல்லமாக மாறுவதற்கு முன், அது பிழியப்படவேண்டும். மெழுகுதிரி ஒளி தருவதற்கு முன் அது கரைந்து உருகவேண்டும், பால் சுவை தருவதற்குமுன் அது காய்ச்சப்பட வேண்டும், தங்கம் ஆபரணமாவதற்குமுன் அது நெருப்பில் சுடப்பட வேண்டும். பெண் பிள்ளைப்பேறு அடைவதற்குமுன் அவர் பேறுகால வேதனையுற வேண்டும். அவ்வாறே நாம் கிறிஸ்துவில் புதுப்படைப்பாக மாறுவதற்குமுன், நமது ஆனவமும் சுயநலமும் இறத்து புதைக்கப்பட வேண்டும்.

அரச பக்திமிக்க ஓர் இளைஞன் ஒவ்வொரு நாளும் தனது உடலிலிருந்து பல துளி இரத்தமெடுத்து, அதைக் கொண்டு அரசருடைய உருவப்படத்தை வரைந்து, அதை அரசருடைய பிறந்த நாளன்று பிறந்தநாள் பரிசாக அவருக்குக் கொடுத்தான். நாமும் அவ்வாறே இரத்தம் சிந்தி, அதாவது தியாகங்கள் செய்து தியாக இரத்தத்தைக் கொண்டு இயேசுவின் உருவத்தை வரைய வேண்டும், அதாவது இயேசுவின் சாவுக்கு ஒத்தவர்களாக உருமாற்றமடைய வேண்டும். " இப்போது நாம் அனைவரும் , ஆண்டவரின் மாட்சிமையைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சிமை பெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம்." ( 2கொரி 3:18).

காக்கா என்றும் கறுப்பாக இருப்பதற்குக் காரணம் என்ன? அது இன்னும் உஜாலாவுக்கு மாறவில்லையாம்! உஜாலா சொட்டு நீலம் ஆடைகளை வெண்மையாக்குகிறது, இயேசு உருமாற்றமடைந்தபோது, அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்தச் சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெண்மையாக ஓளிவீசின (மாற் 8:4),

நாம் திருமுழுக்குப் பெற்றபோது நமது மேன்மையின் அடையாளமாகத் திருச்சபை நமக்கு ஒரு வெண்ணிற ஆடையைக் கொடுத்து அதை மாசு படாமல் விண்ணக வாழ்வுக்குக் கொண்டு, போகும்படி பணித்தது, மீட்படைந்தோர் விண்ணகத்தில் வெண்ணிறஆடை அணிந்திருப்பர். (திவெ 7:9), இவர்கள் தங்கள் ஆடைகளைச் செம்மறியின் இரத்தத்தில் தோய்ந்து வென்மையாக்கிக் கொண்டனர் (திவெ 7:14), இயேசுவின் இரத்தம் நம்மை எல்லாவிதப் பாவங்களிலிருந்தும் விடுவித்து நம்மைத் தூய்மையாக்க வல்லது. இத்திருப்பலியில் நாம் இயேசுவின் திருவுடலை உட்கொள்ளும் போதெல்லாம் திடமடைகிறோம், அவரது இரத்தத்தைப் பருகும்போதெல்லாம் கழுவப்படுகிறோம். இதன் விளைவாக நாம் இயேசுவின் சாயலுக்கு ஒத்தவர்களாய் உருமாறவேண்டும். ஒவ்வொரு நாளும், நமது வாழ்க்கைச் சூழலில், தன்னலம் மறந்து பிறருக்காக வாழ்ந்து நம்மையே நாம் இழக்கும்போது நாம் இயேசுவாக மாறுகிறோம். அந்நிலையில் வாழ்வது நாமல்ல, கிறிஸ்துவே நம்மில் வாழ்கிறார் (கலா 2:20).
நாம் சாவுக்குப் பயப்படத் தேவையில்லை, ஏனெனில், நாம் சாகமாட்டோம், வேற்றுருப் பெறுவோம், அழிவிற்குரிய நம் உடல் அழியாமையையும், சாவுக்குரிய நம் உடல் சாகாமையையும் அணிந்து கொள்ளும் (1 கொரி 15:51-54), இயேசுவின் இரண்டாம் வருகையின்போது, படைப்பனைத்தும் புத்துயிர் பெறும்போது, நாமும் அவரைப்போலவே இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோலவே அவரைக் காண்போம் (1 யோவா 3:2).


சுற்றுமுற்றும் பார்த்தார்கள்!
அருள்பண் ஏசு கருணாநிதி - மதுரை

இன்றைய முதல் வாசகத்தில் மோரியா நிலப் பகுதியின் மலையில் நடக்கும் ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடும் நிகழ்வும், நற்செய்தி வாசகத்தில் எருசலேமிற்கு அருகில் உள்ள ஒரு மலையில் நெருங்கிய அன்புச் சீடர்கள் முன்னிலையில் நடக்கும் இயேசுவின் உருமாற்ற நிகழ்வும் நமக்கு வாசகப் பகுதிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இன்றைய நம் சிந்தனைக்கு இரண்டு பேரை எடுத்துக்கொள்வோம்: (அ) ஆபிரகாம், (ஆ) சீடர்கள்: பேதுரு, யாக்கோபு, யோவான். முதலாம் நபர் தனிநபராகவும், இரண்டாம் நபர் ஒரு குழுவாகவும் இருக்கின்றார். இவர்களுக்கு குறிப்பிட்ட இந்த நாளில் நடந்தேறிய நிகழ்வின்போதும், நிகழ்விற்குப் பின்னும் உள்ள கடவுள் அனுபவம் நம் சிந்தனையின் மையப்பொருளாக இருக்கட்டும்.

'கடவுள் அனுபவம்'

'அந்த அனுபவம்தான் நான்' என்று கடவுள் சொல்வதாக வாழ்வின் அனைத்து அனுபவங்களிலும் கடவுள் இருப்பதாக பதிவு செய்கின்றார் கவிப்பேரரசு கண்ணதாசன்.

இத்தவக்காலத்தில் நாம் தொடங்கியுள்ள தவமுயற்சிகளின் இறுதி இலக்காக இருப்பது கடவுள் அனுபவமே. நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் கடவுள் அனுபவம் பெற ஏங்கிக்கொண்டிருக்கின்றோம். ஆலயத்திற்குச் செல்வதும், செபிப்பதும், நோன்பு இருப்பதும், பிறரன்புச் செயல்கள் செய்வதும், நம் வேலையை இன்னும் அதிக பொறுப்புடன் செய்வதும் என எண்ணற்ற நிலைகளில் கடவுள் அனுபவம் பெற்றுக்கொண்டிருக்கின்றோம். இவைகள்வழியாக கடவுள் அனுபவம் கிடைக்குமா? அல்லது இவைகள் வழியாக மட்டுமே கடவுள் அனுபவம் கிடைக்குமா? என்றும் ஏங்கிக்கொண்டிருக்கின்றோம்.

கடவுள் அனுபவம் என்பது கடவுளின் வெளிப்பாடு வழியாகவும் கிடைக்கலாம் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன. இந்த வெளிப்பாடு எங்கே நிகழ்கின்றன:

1. 'ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார்'

'கடவுள் ஆபிரகாமை சோதித்தார்' என்று இன்றைய முதல் வாசகம் தொடங்குகின்றது. கடவுள் மனதரைச் சோதிக்கும் நிகழ்வுகள் எல்லாமே கடவுளின் வெளிப்பாட்டு நிகழ்வுகளாகவே அமைகின்றன. அப்படித்தான் இங்கும் நடக்கின்றது. 'உன் மகனை, நீ அன்புகூறும் ஒரே மகன் ஈசாக்கை அழைத்துக்கொண்டு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின்மேல் எரிபலியாக அவனை நீ பலியிட வேண்டும்!' என்று கடவுள் ஆபிரகாமிடம் சொல்கின்றார்.

'நீ அன்பு கூறும் ஒரே மகன்' என்ற சொல்லாடலில்தான் கடவுளின் சோதனை அடங்கியுள்ளது: 'உனக்கு எது பெரிது? நீ என்மேல் வைக்கும் அன்பா? அல்லது ஈசாக்கின்மேல் வைக்கும் அன்பா?' தான் கடவுள்மேல் வைத்துள்ள அன்பே என்று கடவுளைக் கட்டிக்கொள்கின்றார் ஆபிரகாம். அவர் எடுக்கும் அந்த முடிவே அவரின் தொடர் செயலாக மாறுகின்றது. குழந்தைகளை எரிபலியாகக் கொடுக்கும் சமய வழக்கம் கீழைத்தேய மற்றும் மெசபதோமிய நாடுகளில் நிலவியுள்ளது என்பதற்கு தொல்லியல் சான்றுகள் நிறைய உள்ளன. ஆக, இந்த நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆபிரகாம் மலைக்கு தன் மகனை அழைத்துச் செல்கின்றார். தன் மகனையே விறகுகளைச் சுமக்க வைக்கின்றார். கட்டைகளின் மேல் கிடத்துகின்றார். வெட்டுவதற்கு கையை நீட்டி கத்தியை எடுக்கின்றார். 'எரிபலியாகத்தானே கேட்டார் கடவுள். அப்புறம் ஏன் ஆபிரகாம் வாளை எடுத்து வெட்டினார்?' என்ற கேள்வி உங்களுக்கும், எனக்கும் எழலாம். வெட்டியபின்தான் பலியை எரிப்பது என்பது எரிபலியின் ஒரு கூறு (காண். 1 அரசர்கள் 18:33, 38). கையை உயர்த்தும்போதுதான் அந்த அதிசயம் நடக்கிறது: 'பையன்மேல் கையை வைக்காதே. அவனுக்கு எதுவும் செய்யாதே. உன் ஒரே மகனையும் நீ பலியிட தயங்கவில்லை என்பதிலிருந்து கடவுளுக்கு நீ அஞ்சுபவன் என இப்போது நான் அறிந்துகொண்டேன்' என்று கடவுள் பலியைத் தடுக்கின்றார். அதிசயம் இதுவல்ல. இதற்குப் பின் வருவதுதான்: 'ஆபிரகாம் கண்களை உயர்த்திப் பார்த்தார். முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் காண்கின்றார். தன் மகனுக்குப் பதிலாக அதை பலியிடுகின்றார்.'

கொம்பு மாட்டிக்கொண்டு கிடந்த இந்த ஆடு - இதை ஆபிரகாம் கண்டுகொள்வதுதான் கடவுள் அனுபவம். 'கண்களை உயர்த்திப்பார்க்கும் ஆபிரகாம்' அதைக் கண்டுகொள்கின்றார். அப்படி என்றால் இவ்வளவு நேரம் இவர் அதைப் பார்க்கவில்லையா? இல்லை.

கொம்பு மாட்டிக்கொண்டு கிடக்கும் ஆடு கத்திக்கொண்டே இருக்கும். மலையின்மேல் ஆபிரகாம் மற்றும் ஈசாக்கைத் தவிர வேறு யாருமில்லை. அங்கு நிலவிய மௌனத்தில் கண்டிப்பாக ஆபிரகாமின் காதில் ஆட்டுக்குட்டியின் கதறல் குரல் விழுந்திருக்கும். ஆனால், அந்தக் குரல் அவருடைய சோகத்தை ஊடுருவ முடியவில்லை. நாமும் ரொம்ப சோகமாக அமர்ந்திருக்கும்போது அருகில் கிடக்கும் செல்ஃபோன் அழைப்பு சத்தம்கூட நம் காதுகளில் விழுவதில்லை. இல்லையா?

ஆபிரகாமின் சோகம் கடவுளின் வார்த்தையைக் கேட்டவுடன் மறைகிறது. நம் வாழ்வில் இயல்பாக எழும் ஓர் உணர்வு சோகம். இந்த சோகம் நாம் எதையாவது இழந்தால் அல்லது இழந்துவிடுவோமோ என்ற பயந்தால் வந்து நம்மைத் தொற்றிக்கொள்கிறது. தன் மகன் தன்னைவிட்டுப் பிரியப்போகிற சோகத்தில் குனிந்துகொண்டே நடந்த ஆபிரகாமின் கண்களுக்கு ஆடு தெரியவில்லை. சோகம் மறைந்தவுடன் மலையில் இருக்கும் அனைத்தும் தெரிகிறது. ஆக, ஆபிரகாம் மலையின் இந்தப் பக்கத்தில் தன் மகனை ஏற்றிக்கொண்டு வரும்போது, கடவுள் மலைக்கு அந்தப் பக்கத்தில் ஓர் ஆட்டை ஏற்றிக்கொண்டுவருகின்றார். இதுதான் வாழ்வின் ஆன்மீகம். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் பாருங்களேன். நாம் பாதியைத்தான் செய்கிறோம். மற்ற பாதியை கடவுள் செய்கிறார்.

நான் அரிசி வாங்க கடைக்குச் செல்கிறேன். கடவுள் யார் வழியாகவோ அந்த அரிசியை விளையச் செய்து அங்கே கொண்டுவந்திருக்கின்றார்.

நான் பேருந்தில் ஏறச் செல்கிறேன். கடவுள் யார் வழியாகவோ அந்தப் பேருந்தை இயக்கி அந்த இடத்திற்குக் கொண்டுவருகின்றார்.

நான் தேவை என்று தேடுகிறேன். 'இதுவா என்று பார்!' என்று கடவுள் யார் வழியாகவோ என் தேவையை நிறைவு செய்கின்றார்.

ஆனால், நான் அரிசி வாங்க வேண்டும், பேருந்தில் ஏற வேண்டும், தேவை நிறைய இருக்கிறது என்று மலையின் இந்தப் பக்கத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கின்றேன். ஆனால், மலைக்கு அந்தப் பக்கம் நடக்கும் நிகழ்வுகளைக் கண்களை உயர்த்திப்பார்க்க மறந்துவிடுகின்றேன்.

ஆக, கடவுள் அனுபவம் என்பது கண்களை உயர்த்திப் பார்த்து கொம்பு மாட்டியிருக்கும் ஆட்டை அடையாளம் கண்டுகொள்வது.

கடவுள் அனுபவம் பெற்ற ஆபிரகாம் உடனடியாக அந்த ஆட்டைப் பலியிடுகின்றார்.

இதுதான் கடவுள் அனுபவத்தின் இரண்டாம் நிலை.

'மகனும் கிடைத்தான். வந்ததற்கு ஒரு ஆடும் கிடைத்தது' என்று ஆபிரகாம் ஆட்டையும், மகனையும் கூட்டிக்கொண்டு கீழே இறங்கவில்லை. வாழ்வின் அடுத்த முடிவை எடுக்கின்றார். 'ஆடா?' 'மகனா?' என்று கேட்டு, மேலானதைப் பெற கீழானதை இழக்க வேண்டும் என்று தான் கண்ட ஆட்டைப் பலியிடத் துணிகின்றார் ஆபிரகாம்.

இவ்வாறாக, முதல் வாசகத்தில் கடவுள் அனுபவம் என்பது 'கண்களை உயர்த்திப் பார்ப்பதிலும்,' 'தான் கண்ட முக்கியமில்லாத ஒன்றை, தான் கருதும் முக்கியமான ஒன்றிற்காக தியாகம் செய்வதும்' ஆகும்.

2. 'அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள்'

உருமாற்ற நிகழ்வில் வரும் சீடர்கள் என்னுள் எப்போதும் ஒரு பாவ அல்லது பரிதாப உணர்வையே தூண்டுகின்றனர். திடீர்னு உங்களையும் எங்களையும் ஒருத்தரு மலைக்குக் கூட்டிப்போய் திடீரென அவர் ஒரு பெரிய அமெரிக்க அதிபர் போல மாறி, அவருக்கு அருகில் பழைய அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர்கள் நின்றிருந்தால் எப்படி இருக்கும்?

'யார்ரா இவரு?' 'இவரா அமெரிக்க அதிபர்?' 'அமெரிக்க அதிபரை நாம ஏன் பார்க்கணும்?' இப்படி நிறைய கேள்விகள் நம்முள் எழும்.

இயேசுவின் உருமாற்ற நிகழ்வை ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் பதிவு செய்ய, இதை நேரில் கண்ட யோவான் பதிவு செய்யாமல் விடுவது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

இயேசுவின் உருமாற்றம் மூன்று அடையாளங்களில் நடந்தேறுகிறது: (அ) யாரும் வெளுக்க முடியாத வெள்ளை வெளேரென ஒளி வீசும் ஆடைகள், (ஆ) எலியா மற்றும் மோசேயின் உரையாடல், (இ) மேகத்தினின்று குரல். இந்த மூன்றும் இயேசுவின் உருமாற்றத்தை அல்லது வெளிப்பாட்டை அடையாளப்படுத்துகின்றன. இந்த அடையாளங்களை சீடர்கள்தாம் விரைவில் புரிந்துகொள்ள வேண்டும். 'ஒளி வீசும் ஆடை' சீயோன் மலையை நிரப்பும் யாவே இறைவனின் பிரசன்னம் என்றும், எலியா மற்றும் மோசே அனைத்து இறைவாக்கு மற்றும் சட்டங்களின் திலகம் என்றும், அவற்றை நிறைவு செய்ய வந்திருப்பவர் இயேசு என்றும், தந்தையின் குரல் இயேசுவின் அப்பா அனுபவத்தின் முன்னோடி என்றும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அவர்களின் புரிதல்கள் வேறு மாதிரியாக இருக்கின்றன: (அ) சீமோன் பேதுரு முந்திக்கொண்டு, 'நாம் இங்கேயே இருப்பது நல்லது' என்கிறார். (ஆ) 'இறந்து உயிர்த்தெழுதல்' என்றால் என்ன? என்று பேசிக்கொள்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரையில் சீடர்களின் கடவுள் அனுபவம் வெளிச்சத்திலும், புதிய நபர்களின் வருகையிலும், தந்தையின் குரலிலும் இல்லை. பின் எதில் இருக்கிறது?

'அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தபோது தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை'

இதுதான் அவர்களுக்குக் கிடைத்த கடவுளின் வெளிப்பாடு.

வெளிச்சமும், புது நபர்களும், தந்தையும் மறைத்து இயேசு தனியாக நிற்பவராக வெளிப்படுத்தப்படுகின்றார். ஆபிரகாம் எப்படி கொம்பு மாட்டிக்கொண்டிருந்த ஆட்டைக் கண்டாரோ அப்படியே அவர்கள் இயேசுவையும் கண்டுகொள்கின்றனர். அவர்கள் கண்முன் இருந்தவை மறைந்துபோகின்றன. மற்றவைகள் மறைந்துபோன பின் தோன்றும் 'ப்ளைன்' இயேசுதான் அவர்களின் அனுபவம்.

இங்கே சீடர்களின் எண்ணம், ஏக்கம் அனைத்தும் ஒன்றாக இருக்கிறது: 'இயேசுவோடு நாம் தங்க வேண்டும். அல்லது இயேசு நம்மோடு தங்க வேண்டும்.' 'இங்கே கூடாரம் அமைப்போம்' என்று பேதுரு சொல்லும்போது தான் பெற்ற கடவுள் அனுபவத்தை அவர் அப்படியே உறைபனியாக்க நினைக்கின்றார். ஆனால், இயேசு அவரின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை.

'இங்கேயே இருப்பது நல்லது. மூன்று கூடாரங்கள் அமைப்போம்' என்று சொன்னவர்தான் மூன்றுமுறை இயேசுவை மறுதலிக்கின்றார். சில நேரங்களில் கடவுள் அனுபவத்தை நாம் அதிகமான வெளிச்சத்திலும், அந்த வெளிச்சம் நடத்தும் அற்புதங்களிலும் காண நினைக்கின்றோம். ஆனால் இது எல்லாவற்றையும் விட தனிமையில்தான் இறைவன் தெரிகின்றார். முதல் வாசகத்தில் சோகத்தில் தன் கடவுள் அனுபவத்தை இழந்த ஆபிரகாம் போல, நற்செய்தி வாசகத்தில் தனிமையில் இறைவனனின் அனுபவம் பெறுகின்றனர்.

இந்த இரண்டும் நமக்கு உந்துசக்தியும், ஊக்கமும் தருகின்றன. இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் அடிகளாரும், 'கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக யார் வாதாட முடியும்?' என்று கேட்கின்றார்.

இவ்வாறாக, கடவுள் அனுபவம் நம்மை அவரோடு மட்டுமல்லாமல் ஒருவர் மற்றவரோடும் ஒன்றிணைக்கச் செய்கிறது.

இன்று நாம் நம் கடவுளை எப்படி தேடுவோம்?

அ. ஆபிரகாம் போல கண்கள் உயர்த்தி

ஆ. சீடர்கள்போல சுற்றுமுற்றும்

'மேலே உயர்த்துவதும்,' 'சுற்றுமுற்றும் பார்ப்பதும்' சிலுவையின் இரண்டு மரத்தண்டுகள் போல இருக்கின்றன. மேல் நோக்கி இருக்கும் மரத்துண்டு நாம் அவரை நோக்கி உயர்த்துவதையும் (இறையன்பு), சுற்றுமற்றும் பார்ப்பது ஒருவர் மற்றவரை நோக்கி கரம் நீட்டுவதையும் (பிறரன்பு) குறைக்கிறது.

மேலே பார்க்க நமக்குத் தடையாக இருப்பது சோகம்.

சுற்றுமுற்றும் பார்க்க நமக்குத் தடையாக இருப்பது அச்சம் மற்றும் அவசரத்தனம்.

இவ்விரண்டும் களைதலே தவக்காலத்தின் இரண்டாம் வாரத்தின் நம் செயல்களாக இருக்கட்டும்!

இயேசுவின் உருமாற்றம் நிகழ்ந்த அதே நிகழ்வில் சீடர்கள் உளமாற்றம் அடைகின்றனர். ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடும் நிகழ்வில் அவர் தன்னையே கடவுளுக்கு உகந்த பலிப்பொருளாக மாற்றுகின்றார். ஆக, கடவுள் அனுபவம் நாம் பெறும் உளமாற்றத்திலும், நாம் பலிப்பொருளாக மாறுவதிலும் இன்னும் சிறப்படைகிறது.

இயேசுவின் ஆடை கறுப்பாக மாறினாலும், சிவப்பாக மாறினாலும், அல்லது மோசேக்குப் பதிலாக யோசுவாவும், எலியாவுக்குப் பதிலாக எலிசாவும் வந்தாலும், கடவுளின் குரல் ஆண்பிள்ளைக் குரலாகவோ, பெண்பிள்ளைக் குரலாகவோ மாறினாலும் இயேசுவின் உருமாற்றம் நிகழும்.

இயேசுவின் உருமாற்றம் இயேசுவுக்கு அல்ல. மாறாக, சீடர்களுக்கு.

ஆபிரகாமின் பலி கடவுளுக்கு அல்ல. மாறாக, ஆபிரகாமுக்கு.

நம் உருவத்தை மாற்றிக்கொள்வதில் காட்டும் அக்கறையை நம் உள்ளத்தை நோக்கி சற்றே திருப்புவோம். அங்கே ஓர் ஆடு கொம்பு மாட்டி நிற்கும். அங்கே ஒரு இயேசு தனியே நின்றுகொண்டிருப்பார்.