Wednesday, 30 May 2018

கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழா

இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழா
விப 24:3-8; எபி 9:11-15; மாற் 14:12-16, 22-26தியாகம் தேவை 

குடந்தை ஆயர் அந்தோணிசாமி
 
இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழா ஒரு தியாகப் பெருவிழா. நான்கு வகையான தியாகங்கள் உண்டு:
1. உள்ளதிலிருந்து இழத்தல்
2. உள்ளதையெல்லாம் இழத்தல்
3. உள்ளதையெல்லாம் இழந்து உடலையும் இழத்தல்
4.உடலையும் இழந்து உயிரையும் இழத்தல்

இஸ்ரயேல் மக்கள் மாடுகளை (முதல் வாசகம்), வெள்ளாட்டுக் கிடாய்களை, கன்றுக் குட்டிகளை (இரண்டாம் வாசகம்) கடவுளுக்குப் பலியிட்டார்கள். அவர்களிடம் உள்ளதைக் கடவுளோடும், மனிதர்களோடும் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் இயேசுவோ அவரிடமிருந்த அனைத்தையும், உடல், உயிர் அனைத்தையும் மக்களுக்குக் கையளிக்க முன்வந்து (நற்செய்தி) தியாகச் சிகரமானார்.

இந்தத் திருவிழா அர்த்தமுள்ள திருவிழாவாக நமக்கு அமைய வேண்டுமானால் நாம் இயேசுவைப் போல தியாக வாழ்வு வாழ முன்வர வேண்டும்; நாம் உட்கொள்ளும் நற்கருணை நமது வாழ்வைத் தியாகத்தால் பற்றி எரியச் செய்யவேண்டும்.

ஒன்று மட்டும் உண்மை !

எங்கே தியாகம் இருக்கின்றதோ அங்குதான் மீட்பு இருக்கும்; விடுதலை இருக்கும்; சுதந்தரம் இருக்கும்.

இதோ ஒரு கதை!

எலிகள் மாநாடு நடந்தது 1 சுதந்தரமாக வாழ ஆசைப்பட்ட அந்த எலிகள் நடுவே பூனைக்கு மணிகட்டுவது யார்? என்ற கேள்வி எழுந்தது! சின்ன ரப்பர் வளையத்தில் சின்ன மணி தயாராக இருந்தது.யாரும் முன்வரவில்லை பூனைக்கு மணிகட்ட! இறுதியாக ஒரு குட்டி எலி முன் வந்தது! வரவேண்டிய நேரத்தில் பூனை வந்துவிட்டது!
குட்டி எலியைத் தவிர மற்ற எல்லா எலிகளும் ஓடி ஒளிந்து கொண்டன!

தன்னை நோக்கி வந்த குட்டி எலிமீது பூனை பாய்ந்தது! குட்டி எலி  பூனையின் வாயில் சிக்கியது. ஆனால் குட்டி எலி மின்னல் வேகத்தில் ரப்பர் வளையத்தை பூனையின் கழுத்தில் மாட்டிவிட்டு உயிர் துறந்தது!
அன்றிலிருந்து மற்ற எல்லா எலிகளுக்கும் மீட்புக் கிடைத்தது. விடுதலை கிடைத்தது, சுதந்தரம் கிடைத்தது.


விதை மண்ணில் விழுந்து மடிந்தால்தான் செடி முளைக்கும்.

மூங்கில் காயப்பட்டால்தான் இசை பிறக்கும்..

ஒரு ஊதுவர்த்தி எரிந்தால்தான் மணம் பிறக்கும்.

வீட்டிலுள்ளவர்கள் ஒருவர் மற்றவர்க்காகத் தியாகம் செய்ய முன்வரும் போதுதான் அந்த வீட்டுக்குள்ளே வாழ்வு பிறக்கும், நீதி பிறக்கும், அமைதி பிறக்கும், மகிழ்ச்சி பிறக்கும், இறையரசு பிறக்கும். (உரோ 14:17)

இந்த இந்தத் திருவிழா தொட்டும் தொடாத, பட்டும் படாத திருவிழாவாக இல்லாமலிருக்க நாம் ஒவ்வொருவரும் தியாக மழை பொழியும் மேகமாவோம்

மேலும் அறிவோம்:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று) ஆங்கே
பசும்புல் தலைகாண்(டி) அரிது (குறள் : 16).

பொருள் : வான்வெளியாம் மேகத்திலிருந்து மழை நீர் நிலத்தில்
விழுந்தால்தான் ஓரறிவு உயிராகிய பசும்புல் கூடத் துளிர்க்கும்!
மழைத்துளி இல்லாவிட்டால் புல்லும் தளிர்க்காது!வணங்கவா, வழங்கவா?
கல்லறைக்கு அப்பால்...

அருள்பணி இ.லூர்துராஜ்

அப்பல்லோ 13 என்றால் என்ன தெரியுமா? வெண்ணிலவு நோக்கி அமெரிக்கா செலுத்திய விண்வெளிக் கப்பல் என்றா சொல்கிறீர்கள்? அல்ல.

அறிவியலுக்கு இறைவன் கொடுத்த சாட்டையடி! அப்பல்லோ 11, 12 என்று வெற்றி மேல் வெற்றி கண்டு விஞ்ஞானம் வீறுநடைபோட்ட நேரம். அதற்குத் தன்னிலை உணர்த்த, அதன் சக்தியின் எல்லையை வரையறுத்துக்காட்ட இறைவன் விடுத்த எச்சரிக்கையே அப்பல்லோ 13இன் வீழ்ச்சி .

அப்பல்லோ 13இல் ஜேம்ஸ் லோவல் தலைமையில் மூவர் பயணம் செய்தனர். திடீரென்று பிராண வாயுக்கலம் வெடித்து விட்டது. நிலவில் இறங்கியதும் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த இருவருக்கென வைத்திருந்த கலத்தினுள் மூவரும் நுழைந்து கொண்டனர். கடுங்குளிர், காரிருள், இடிபாடுகள் இவற்றிற்கிடையே உயிருக்கு ஆபத்து' என்ற உண்மையை உணர்ந்தனர்.

அந்த அதிர்ச்சியில் குழுத் தலைவன் ஜேம்ஸ் லோவலுக்கு 76ஆக இருக்க வேண்டிய இதயத் துடிப்பு, 120 ஆக எகிறியது. அமைதிப் படுத்துவதற்காக, கீழே கட்டுப்பாட்டு அமைப்பகத்திலிருந்து செய்தி அனுப்பினார்கள் "பயப்படாதீர்கள். உயிரைக் கொடுத்தேனும் உங்கள் மூவரையும் காப்பாற்றுவோம்” என்று. உடனே ஜேம்ஸ் லோவல் உரக்கக் கூவினாராம்: “நாங்கள் மூவரா? இல்லை நால்வர் இருக்கிறோம். எங்களோடு கடவுள் இருக்கிறார்”.

கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையில் தான் எத்துணை ஆறுதல்! “இதோ, உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத்.28:20) என்ற இறைமகன் இயேசு தன் வாக்குறுதிக்கு இறுதி வடிவம் கொடுத்ததே நற்கருணை வழியாகத் தானே!.

சாது சுந்தர்சிங் என்பவருடைய வாழ்வில் நடந்த நிகழ்வு இது. நற்செய்திப் பணி ஆற்றச் செல்கிறார். குறுக்கே ஆறு - அக்கரையில் உள்ள ஊர்தான் பணித்தளம். ஆற்றைக் கடக்கப் படகோ பாலமோ  இல்லை. "என்ன செய்வது? மக்கள் காத்திருப்பார்களே" என்று அங்கலாய்த்த போது அருகில் இருந்த குடிசையிலிருந்து பெரியவர் ஒருவர் வந்தார். சாது சுந்தர்சிங் அவர்களின் கவலையைப் பற்றி அறிந்ததும், “கொஞ்சம் பொறுங்கள்” என்று சொல்லி விட்டுக் குடிசைக்குத் திரும்பி ஓர் ஏர்ப்பில்லோ வடிவில் ஒரு பெரிய பலூனைக் கொண்டு வந்தார். அதனைக் காற்றால் நிரப்பி உப்பச் செய்து “இதைத் தண்ணீரில் போடுகிறேன். நீங்கள் அதன்மேல் இருந்து செல்லுங்கள்" என்றார். அதன்படியே நடக்கிறது. அக்கரை சென்றடைந்ததும் சாது. சுந்தர்சிங் சிந்திக்கிறார். “இந்தப் பொருள் நம்மை எப்படிக் கரை சேர்த்திருக்கிறது? அதற்குக் காரணம் உள்ளே உள்ள காற்றுத்தானே! உலகம் முழுவதும் தான் காற்று பரந்து விரிந்து பரவிக் கிடக்கிறது. அதனால் நமக்குப் பெரிதும் உதவியில்லை. ஆனால் அதே காற்றை இந்தப் பலூனுக்குள் அடக்கியதும் கரைசேர நமக்கு எவ்வளவு பயன்!”.
அதுபோலத்தான் இறைவனின் உடனிருப்பு, பிரசன்னம் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், இயேசு அந்த உடனிருப்பை நற்கருணை என்னும் அருள்சாதனத்தில் நிறைத்து நம்மைக் கரை சேர்க்கிறார். நமக்குத் துணை நிற்கிறார். இலக்கை அடைய வழி செய்கிறார்.

அன்பெனும் பிடியுள் அகப்படு மலையே
அன்பெனும் குடில்புகு அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே - என்று இறைவனை அன்பின் வடிவாக்கி இரசிக்கும் மனிதன். கிறிஸ்துவைப் பொருத்தவரை மலைப் பொழிவில் நின்று தெய்வ அறிவை வியந்து நிற்கிறானே தவிர, கல்வாரியில்

அந்த அன்புத் தெய்வம் நம்மோடு இருக்க மட்டுமல்ல, நமக்கென தன்னையே கொடுக்கவும் திட்டமிட்டது.
“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்” (யோவான் 6:51). உடனே எழுந்த வாக்குவாதம்: "நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?''.

குழந்தைக்குப் பாலூட்டும் தாயைப் பார்த்ததில்லையா? பாலமுது என்பது என்ன? தன் உடலின் சத்தை, ஒடும் இரத்தத்தைத்தானே பாலாக மாற்றி உயிர் வளர்க்கிறாள் தாய்! ஒரு தாய் செய்வதைத் தாயைப் படைத்த கடவுளால், தாய் மறந்தாலும் நான் மறவேன் என்ற இறைவனால் செய்ய இயலாதா? ஆகட்டும் என்று சொல்லால் அனைத்தையும் படைத்தவருக்கு முடியாதது என்ற ஒன்று இருக்குமா என்ன ?
எவனோ ஒருவன் படைப்பின் நோக்கத்தை இப்படிப் பாடி வைத்தான். “படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக. மனுவைப் படைத்தான் தனை வணங்க" என்று. முதல் வரி பொருள் உள்ளது. மறுவரி பொருத்தமானதா? இறைவனை வணங்குவது மனிதனின் கடமைதான். ஆனால் படைப்பின் இலட்சியமாக இறைவன் எண்ணியிருப்பாரா? இரண்டாவது வரியில் 'ண' என்ற எழுத்தை நீக்கி 'ழ' என்று மாற்றிப் பாடியிருந்தால் எவ்வளவு பொருளும் பொலிவும் நிறைவும் பெற்றிருக்கும்!

படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக
மனுவைப் படைத்தான் தன்னை வணங்க அல்ல, தன்னை வழங்க

இயற்கை வழி, இறைவார்த்தை வழி, இப்படியாகப் பல்வேறு வழிகளில் தோன்றும் இறைவன், அருள்சாதனமாம் நற்கருணை வழித் தன் உடனிருப்பை மட்டுமல்ல, பகிர்தலின் உச்சத்தை உணர்த்துகிறார். நாமும் அங்கே அன்பைப் பெருக்கி நமதாருயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கைப் பார்க்கிறோம். ''வருந்திச் சுமைசுமக்கும் மக்களே, வாருங்கள்... தேற்றுவேன்” என்ற ஆறுதல் மொழியைக் கேட்கிறோம்.

எங்கோ படித்த ஆங்கில வரிகள் நினைவுக்கு வருகின்றன.
Life can be too lonely when nobody helps
Life can be so empty when nobody shares.

வாழ்க்கையில் நமக்குத் தனிமை உணர்வு இல்லை. காரணம்? நற்கருணையில் இயேசு நமக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாழ்க்கையில் நமக்கு வெறுமை விரக்தி இல்லை. காரணம்? நற்கருணையில் இயேசு நமக்காகத் தன்னையே வழங்கிக் கொண்டிருக்கிறார்.

மறையுரை மொட்டுக்கள்
அருள்பணி இருதயராஜ்


தமிழ் ஆசிரியர் ஒருவர் இலக்கண வகுப்பில் மாணவர்களிடம் காதலுக்கும் பாசத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? என்று. கேட்டதற்கு, பிரவீன் என்ற மாணவன்: "சார், நீங்கள் உங்கள் மகளிடத்தில் வைத்திருக்கும் அன்பு பாசம்; உங்கள் மகளிடத்தில் நான் வைத்திருக்கும் அன்பு காதல்" என்றால், அதற்கு ஆசிரியர், "சரியான பதில், உட்காரும் மாப்பிள்ளை" என்றார்.

மனிதரை 'உறவுகளின் முடிச்சு' என்று பொருத்தமாக அழைக்கலாம். எல்லா உறவுகளுக்கும் அடிப்படையாக அமைந்திருப்பது அன்பு. அந்த அன்பு யாரிடம் காட்டப்படுகிறதோ அதற்கேற்ப, அது வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் எடுக்கிறது. இரு நண்பர்களுக்கு இடையே உள்ள அன்பு நட்பு என்றும், கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு காதல் என்றும், பெற்றோர் பிள்ளைகள் மீது காட்டும் அன்பு பாசம் என்றும், தாய் நாட்டின்மீதும் தாய்மொழி மீதும் காட்டப்படம் அன்பு பற்று என்றும், கடவுளிடம் காட்டப்படும் அன்பு பக்தி என்றும், கடவுள் காட்டும் அன்பு அருள் என்றும் அழைக்கப்படுகிறது.

விவிலியத்தில் கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நிலவிய அன்பு உடன்படிக்கை அன்பு என்றழைக்கப்படுகிறது. விவிலியம் காட்டும் கடவுள் உடன்படிக்கையின் கடவுள். இன்றைய முதல் வாசகம் கடவுள் இஸ்ரயேல் மக்களுடன் தம் ஊழியன் மோசே வழியாக மிருகங்களின் இரத்தத்தைக் கொண்டு செய்த உடன்படிக்கையை விவரிக்கிறது (விப 24:3-8). உடன்படிக்கையில் இறுதியில், 'ஆண்டவர் கூறியபடியே அனைத்தும் செய்வோம்' (விப 19:8) என்று இஸ்ரயேல் மக்கள் இறைவனுக்கு வாக்குறுதி அளித்தபோதிலும், அவர்கள் பிற இனத் தெய்வங்களை வழிபட்டு, தங்கள் கடவுளோடு அவர்கள் செய்த உடன்படிக்கை அன்பை முறித்தனர். எனவே, இறைவன் இறைவாக்கினர் எரேமியா வாயிலாக புதியதோர் உடன்படிக்கையை முன்னறிவித்தார் (எரே 31:31).

கடவுள் முன்னறிவித்த இப்புதிய உடன்படிக்கையின் இணைப்பாளர் கிறிஸ்து. இவர், மிருகங்களின் இரத்தத்தைக் கொண்டு அல்ல, மாறாக தமது சொந்த இரத்தத்தினால் புதிய உடன்படிக்கையைச் செய்தார். ஏனெனில் மிருகங்களின் இரத்தம் மனிதரின் பாவங்களைப் போக்கர் சக்தியற்றது. (எபி 9:11-15).

இன்றைய நற்செய்தி கிறிஸ்து தமது சீடரோடு கொண்டாடிய இறுதிப் பாஸ்காவை விவரிக்கிறது. அன்று மாலையில், அதாவது அவர் காட்டிக் கொடுக்கப்பட்ட இரவில், தமது கல்வாரிப்பலியை அப்ப, இரசஅடையாளத்தில் நிலைப்படுத்திப் புதிய உடன்படிக்கையைச் செய்கிறார், "இது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்" (மாற் 14:21).

கிறிஸ்து தமது சிலுவைப் பலியால் முற்காலப் பலிகளை நிறைவு செய்து, அவரே குருவாகவும், பலிபீடமாகவும், செம்மறியாகவும் விளங்கினாம் (பாஸ்கா நன்றியுரை \').

இன்று திருச்சபை கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. கிறிஸ்து தாம் பாடுபடுவதற்கு முன்பு பாஸ்கரா உணவைத் தம் சீடர்களுடன் உண்பதற்கு, 'ஆசை ஆசையாய் இருந்தார் (லூக் 22:16), அவர் நமக்கு வழங்கியுள்ள நற்கருணை என்னும் உயிருள்ளனவை (யோவா 6:51) உன்னை நாமும் 'ஆசை ஆசையாய்' இருக்கிறோமா?

திருச்சபையின் வாழ்வு முழுவதும் நற்கருணை என்னும் மறைபொருளுடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. நற்கருணையின்றித் திருச்சபை இல்லை, திருச்சபையின்றி நற்கருணை இல்லை என்று சொல்லும் அளவிற்குத் திருச்சபையும் நற்கருணையும் இணைந்துள்ளன. இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல, நற்கருணைப் பலிதான். 'கிறிஸ்துவ வாழ்வனைத்தின் ஊற்றும் உச்சியுமாகும்' (திருச்சபை, எண் 11), அதே சங்கம் மேலும் கூறுகிறது: "நற்கருணைப் பல் இரக்கத்தின் அருளடையாளம், ஒற்றுமையின் அடையாளம், அன்பின் பிணைப்பு. பாஸ்கா விருந்து, இவ்விருந்தில் கிறிஸ்து உண்ணாப்படுகிறார்: அகம் அருளால் நிரப்பப்படுகிறது: வரவிருக்கும் மாட்சிமையின் உறுதி மொழி நமக்கு அளிக்கப்படுகிறது (திருவழிபாடு. எண் 47).

நற்கருணைக் கொண்டாட்டத்தில் கிறிஸ்துவின் இறப்பும் உயிர்ப்பும் நினைவு கூரப்படுகிறது (இறந்தகாலம்). அதே மறைபொருள் பிரசன்னமாகிறது: அதில் நாம் அருளடையாள் முறையில் பங்கேற்கிறோம் {நிகழ்காலம்): நற்கருணை விண்ணக மகிமைக்கு அச்சாரமாகவும் உள்ளது (எதிர்காலம் }, எனவே, நற்கருணை முக்காலத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

நற்கருணை: நம்மைக் கிறிஸ்துவுடனும், ஒருவர் ஒருவருடனும் இணைக்கிறது, நற்கருணை நம்மைக் கிறிஸ்துவுடன் நெருக்கமாக இணைக்கின்றது. "எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்" (யோவா 6:56). நற்கருணையை உட்கொள்வதால் நாமும் கிறிஸ்துவாக மாறி, 'இனி வாழ்பவள் நான் அல்ல கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்' (கலா 2:20) என்ற நிலையை அடைகிறோம்.

புனித தோமா அக்குவினா வாழ்ந்த துறவற மடம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தபோது, அவர் நற்கருணைப் பேழையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, "ஆண்டவரே! நாங்கள் வெந்து சாம்பலாகிக் கொண்டிருக்கிறோம்" என்று கதறினார், என்ன புதுமை! தீயானது தானாகவே அமைந்துவிட்டது. நற்கருணை தான் நமது காமத்தீ. காய்மகாரத்தீ, போட்டித்தீ, பொறாமைத்தீ, பேராசைத்தீ முதலிய பல்வேறு தீக்களை அணைக்கக்கூடிய ஆற்றல்மிகு அருளடையாளம்.

நற்கருணை நம்மைக் கிறிஸ்துவோடு மட்டுமல்ல, ஒருவர் ஒருவருடனும் இணைக்கிறது. "அப்பம் ஒன்றே, ஆதலால் தாம் பரலாயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்" (1 கொரி 10:17). எனவே, 'கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்கு கொள்ளும் நாமனைவரும் தூய ஆவியால் நிரப்பப்பட்டு, கிறிஸ்துவுக்குள் ஒரே. உடலும் உயிருமாக விளங்கவேண்டும்' (நற்கருணை மன்றாட்டு 3),

கிறிஸ்துவர்களிடையே நிலவிவரும் பாகுபாடு, குறிப்பாக சாதி வேறுபாடு ஓர் உயிர்க்கொல்லி நோய்: குணப்படுத்த முடியாத புற்றுநோய். சாதி வேறுபாட்டுடன் நாம் உட்கொள்ளும் நற்கருணை நமது உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் தரும் மருந்தாக அமையுமா? அல்லது நம்மை நீதித் தீர்ப்புக்கும் தண்டளைக்கும் உள்ளாக்கும் சாபக்கேடாக அமையுமா? நம்மை ஓட ஓடத் துரத்திக் கொண்டுவரும் கேள்வி இது. இக்கேள்விக்கு பதில் என்ன?மண்குடத்தில் தண்ணீர்!

 அருள்பணி ஏசு கருணாநிதி
இன்றைய நற்செய்திப் பகுதியில் வரும் ஒரு பெயரில்லாக் கதைமாந்தரிடமிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம்: 'மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள்.'

யார் இவர்? இவர்தான் மாற்கு நற்செய்தியாளரின் பதிவில் இயேசுவின் பாடுகளுக்கு 'உ' வரைபவர். புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது என்றும், அந்த நாளில் ஆட்டுக்குட்டி பலியிடப்படும் என்றும் பதிவு செய்கின்ற மாற்கு நற்செய்தியாளர், பாஸ்கா விருந்திற்கான ஏற்பாடு பற்றி எழுதுகின்றார். எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும்? என்ற சீடர்களின் கேள்விக்கு விடையாக வருபவர்தாம் இந்தக் கதைமாந்தர்.

'மண்குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு ஓர் ஆள் (ஆண்)'

பெண்கள் தாம் மண்குடத்தில் தண்ணீர் எடுப்பார்கள் என்பது இக்காலத்தைப் போல அக்காலத்திலும் பரவலாக இருந்த ஒன்று. ஆகையால்தான் இயேசுவை சந்திக்க வந்த அல்லது இயேசு கிணற்றடியில் சந்தித்த சமாரியப்பெண்ணும் மண்குடத்தை கிணற்றடியில் போட்டுவிட்டு ஊருக்குள் ஓடுகின்றாள். இயேசுவின் சமகாலத்தில் செல்வந்தர்கள் தங்கள் வீட்டு வேலைகளுக்கு ஆண் அடிமைகளை வைத்திருந்தனர். இவர்களின் வேலை தண்ணீர் எடுப்பது. ஆக, இயேசு குறிப்பிடும் இந்தக் கதைமாந்தர் ஓர் ஆண் அடிமையாக இருந்திருக்கலாம். இவரின் தலைவருக்காக இவர் தண்ணீர்குடம் சுமந்திருக்கலாம். பல ஆண் அடிமைகள் இங்கும் அங்கும் தண்ணீர் குடம் சுமந்து கொண்டிருக்க இவரை மட்டும் எப்படி தனியாக சீடர்கள் அடையாளம் கண்டிருப்பார்கள்? - இந்தக் கேள்வி நமக்குள் எழலாம். ஆனால் கேள்வியை அப்படியே விட்டுவிடுவோம்.

இந்த தண்ணீர் சுமக்கும் ஆள் கிணற்றடிக்கும் வீட்டிற்கும் நடக்கிறார். ஆக, கிணற்றடிக்கும் வீட்டிற்குமான ஒரு சதைப்பாலம் இவர். இப்படிப் பாலமாக இருக்கும் ஒருவரே தான் விரைவில் நிகழ்த்தப் போகும் கல்வாரிப் பலியின் முன்னடையாளம் என இயேசு நினைத்திருக்கலாம். ஆகையால்தான் இந்த ஆளைத் தேர்ந்தெடுக்கிறார் இயேசு. சீடர்கள் 'அ' என்ற இடத்திலிருந்து 'ஆ' என்ற இடம் நோக்கிச் செல்கின்றனர். தண்ணீர் குடம் கொண்டு வருபவர் 'ஆ' என்ற இடத்திலிருந்து 'அ' என்ற இடம் நோக்கி - அதாவது, 'எதிரே' வருகிறார். இப்போது சீடர்கள் அவர் பின்னே செல்ல வேண்டும் என்பது இயேசுவின் கட்டளை. அதாவது, அவர்களும் 'ஆ' விலிருந்து 'அ' நோக்கி அல்லது எல்லாரும் சேர்ந்து 'இ' ('இல்லம்') நோக்கிச் செல்ல வேண்டும். இவ்வாறாக, இந்த பெயரில்லாத ஆள் இயேசுவின் சீடர்களின் வழியைத் திருப்புகின்றார்.

இந்தப் பின்புலத்தில் பார்த்தால் இந்த ஆள் இயேசுவின் உருவகம் என்றும், இவர் சுமக்கும் தண்ணீர் இயேசுவின் உடன்படிக்கையின் இரத்தத்தின் உருவகம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. எப்படி?

1. இயேசு தந்தையின் திருவுளம் நிறைவேற்றுபவர் - அடிமை தலைவரின் திருவுளம் நிறைவேற்றுபவர்.
2. இயேசுவின் தந்தை பெரிய வீட்டின் உரிமையாளர் - அடிமையின் தலைவர் பெரிய இல்லத்தை தயாராக வைத்திருக்கின்றார்.
3. இயேசு சீடர்களின் பாதையைத் திருப்புகின்றார் - அடிமை சீடர்களின் பாதையைத் திருப்புகின்றார்.
4. விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையேயான சதைப்பாலம் இயேசு - வீட்டிற்கும் கிணற்றுக்குமான சதைப்பாலம் அடிமை.
5. இயேசு மேலிருக்கும் தந்தையின் இல்லத்திற்கு வழி காட்டுகிறார் - அடிமை மேலறையைக் காட்டுகிறார்.
6. இயேசு இரத்தத்தின் கிண்ணத்தைக் கையிலெடுத்தார் - அடிமை தண்ணீரின் மண்குடத்தைக் கையில் எடுத்தார்.
7. இயேசு தம் சீடர் பருகக் கொடுத்தார் - அடிமை தலைவரின் தாகம் தணிக்கிறார்.
8. இங்கே இது இயேசுவின் உடல், இரத்தம் - அங்கே அது அடிமையின் உடல், இரத்தம், வியர்வை.
9. இங்கே இயேசுவின் உடன்படிக்கை முத்திரையிடப்படுகிறது - அங்கே அடிமை என்றென்றும் தன் தலைவருக்கான ஒப்பந்தத்தில் முத்திரையிடப்படுகிறது.

ஆக, இன்று நாம் கொண்டாடும் ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவின் சிந்தனையை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால்: 'நம் கையில் உள்ளதை வைத்து முன்னும் பின்னும் நடந்து பாலம் ஆவதே நற்கருணை.'

அது என்ன முன்னும் பின்னும் நடப்பது?

தொநூ 15:9-21ல் கடவுள் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையை வாசிக்கின்றோம். இங்கே உடன்படிக்கை முத்திரையப்படும்போது ஆபிராம் பலிப்பொருள்களை இரண்டாக வெட்டி வைத்து நடுவில் ஒரு பாதை விடுகின்றார். இந்தப் பாதையின் ஊடாக அவர் முதலில் நடக்கின்றார். பின் ஆண்டவராகிய இறைவன் நெருப்பு வடிவத்தில் நடக்கின்றார். இவ்வாறாக, முன்னும் பின்னும் நடக்கும்போது நடப்பவர்களுக்கு இடையே இருக்கின்ற ஒப்பந்தத்தை அங்கிருக்கின்ற பலிப்பொருள்கள் உறுதி செய்கிறது. இப்படி உறுதி செய்யப்பட்ட நிலையில் உடன்படிக்கை செய்பவர்கள் இந்த உறுதியை மீறினால் அவர்களும் பலிப்பொருள்கள் போல இரண்டாகக் கிழிக்கப்படுவர் என்பதே பொருள்.

இன்றைய முதல் வாசகத்தில் (விப 24:3-8) ஆண்டவராகிய இறைவனுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நடக்கும் உடன்படிக்கை வாசிக்கின்றோம். உடன்படிக்கை இரண்டு நிலைகளில் நடக்கின்றது. முதலில், மோசே உடன்படிக்கையின் ஏட்டை வாசிக்கின்றார். இரண்டாவதாக, பலிப்பொருள்களின் இரத்தை எடுத்து முன்னும் பின்னும் சென்று பீடத்தின்மேலும் மக்களின் மேலும் தெளிக்கின்றார்.

இதே ஃபார்முலாவைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (மாற் 14:22-26) பார்க்கின்றோம். முதலில் இயேசு கடவுளைப் போற்றி, அப்பத்தையும், இரசத்தையும் எடுத்து சீடர்களிடம் பேசுகின்றார். இரண்டாவதாக, முன்னும் பின்னும் அவர்களுக்குப் பரிமாறுகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்திலும் (எபி 9:11-15) இயேசுவின் கல்வாரிப் பலியை எருசலேம் ஆலயத்தின் பலியாக உருவகிக்கும் எபிரேயர் நூலின் ஆசிரியர், இயேசுவே உள்ளும் புறமும் சென்று தன் சொந்த இரத்தத்தால் 'புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராயிருக்கிறார்' என்கிறார்.

ஆக, இன்றைய திருநாளின் மையமாக இருக்கும் செயல் 'முன்னும் பின்னும் செல்வது' - 'ஒன்றையும் மற்றொன்றையும் இணைப்பது.'

மண்குடத்தில் தண்ணீர் சுமந்தவர் தலைவரையும் கிணற்றையும் இணைத்தார்.

மோசே ஆண்டவரையும் மக்களையும் இணைத்தார்.

தலைமைக்குரு கடவுளையும் பாவிகளையும் இணைத்தார்.

இயேசு கடவுளையும் அனைவரையும் இணைத்தார்.

நீங்களும் நானும் ஒருவர் மற்றவரை இணைக்கும்போது - நற்கருணை ஆகின்றோம்!

ரொம்ப எளிதான லாஜிக்.

இதை வாழ்வாக்குவது எப்படி?

மீண்டும் மண்குடத்தின் கதைமாந்தருக்கே வருவோம்.

அ. தண்ணீர் சுமப்பவரின் கவனம் கிணற்றின்மேலும், தன் வீட்டின்மேலும், தன் தண்ணீர் குடத்தின்மேலும் இருக்க வேண்டும். இவற்றில் ஒன்று தவறினாலும் தண்ணீர் வந்து சேரவேண்டிய இடத்திற்கு வந்து சேராது. இயேசுவின் கவனம் தன் தந்தையின் திருவுளம் மேலும், தான் மீட்க வந்த இந்த உலகின்மேலும், தன் கல்வாரிப் பலியின்மேலும் இருந்தது. ஆகையால்தான் அவரின் பலி சாத்தியமாயிற்று. ஆக, அவரின் பலியில் பங்கேற்கும் நம் கவனமும் இப்படித்தான் இருக்க வேண்டும். நம் ஊற்றாகிய இறைவன் மேலும், நாம் அன்றாடம் உறவாடும் நம் உலகின்மேலும், நாம் சுமக்கும் வாழ்க்கை மேலும். இவற்றில் ஏதாவது ஒன்றில் கவனம் தவறினாலும், அல்லது ஏதாவது ஒன்று நம் அதிக கவனத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கே தாகம் தணிவதில்லை.

ஆ. மண்குடத்தில் தண்ணீர் சுமக்கும் ஆள் மிகக் குறைந்த ஆடைகளையே அணிந்திருப்பார். மண்குடத்தை தோளில் சுமப்பதை விட தலையில் சும்மாடு கூட்டி சுமப்பதே எளிது. இப்படி சுமக்கும்போது கைகளை உயர்த்தி தாங்கிப் பிடிக்க வேண்டும். இப்படிப் பிடிக்க வேண்டுமானால் தளர்வான மேலாடை அணிதல் அல்லது மேலாடை அகற்றுதல் வேண்டும். தன் மேலாடையை அகற்ற முன்வரும் ஒருவரே தலையில் தண்ணீர்குடம் சுமக்க முடியும். தன் மேலாடை அகற்றி, தன் சீடர்களின் காலடிகளின் தண்ணீர் ஊற்றிக் கழுவியபோது இயேசு செய்ததும் இதுவே. மேலாடை என்பது என் ஆடம்பரம். மேலாடை என் அவசியம் அல்ல. இன்று அவசியங்களை விட ஆடம்பரங்களே நம் வாழ்வில் அதிகம் குறுக்கே வருகின்றன. ஆடம்பரங்களுக்காகத்தான் இன்று மனிதர்கள் தன்னலம் நாடுகிறார்கள். ஆக, மேலாடை அகற்றுவது என்பது தன்னலம் அகற்றுவது. மேலாடையை அகற்றாத வீட்டுத் தலைவர் தன் வீட்டுக்குள்ளேதான் இருப்பார். மேலாடையை அகற்றத் துணியும் அடிமைதான் கிணற்றடிக்கும் செல்வார். ஆக, மேலாடை என்பது நம்மைக் கட்டியிருக்கும் சங்கிலி. இன்று நான் அகற்ற விரும்பும், ஆனால், அகற்றத் தயங்கும் மேலாடை எது?

இ. முற்றிலும் பலியாவது. முதல் வாசகத்தில், மோசே உயிரோடிருக்கிறார். மக்கள் உயிரோடிருக்கின்றனர். ஆனால் மாடுகள் பலியாகின்றன - இறந்துவிடுகின்றன. இரண்டாம் வாசகத்தில், தலைமைக்குரு உயிரோடிருக்கிறார். பாவிகள் உயிரோடிருக்கின்றன. ஆனால், ஆடு பலியாகின்றது - இறந்துவிடுகின்றது. நற்செய்தி வாசகத்தில், கடவுள் உயிரோடிருக்கிறார். சீடர்கள்-நாம் உயிரோடிருக்கின்றோம். ஆனால், இயேசு பலியாகின்றார் - இறந்துவிடுகின்றார். மூன்று இடங்களிலும் இரத்தம் சிந்தப்படுகிறது. இரத்தத்தில்தான் உயிர் இருப்பதாக நம் முன்னோர் நம்பினர். விவிலியமும் அதே நம்பிக்கையைத்தான் கொண்டிருக்கிறது (காண். லேவி 17:11). பலியாகின்ற ஆடு, மாடு, ஆள் - இவர்களுக்குக் குரல் கிடையாது. இவர்கள் குரல்வளை நெரிக்கப்படுகிறது. ஏனெனில் தொண்டையில்தான் உயிர் இருக்கிறது என்பது மனுக்குலத்தின் முதல் நம்பிக்கை. ஆகையால்தான் நாம் இறக்கும்போது நம் வாய் அகலத் திறக்கிறது (!). ஆனால், பலியாகின்றவர்கள் மற்றவர்களின் குரலுக்காக தங்கள் குரலை நெரித்துக்கொள்கின்றனர். மண்குடம் சுமந்த அந்த அடிமை போல. ஆகையால்தான் இயேசுவம், 'அவர் அறையைக் காட்டுவார்' என்கிறார். நற்கருணையின் நிறைவான பொருள் இதுதான். நம் குரலை ஒடுக்கி அடுத்தவர்களின் குரலை ஒலிக்கச் செய்வது - நம் வாழ்வை அழித்தாவது.

இறுதியாக,

இன்று நாம் நம் குரல்வளை நெரிக்கப்பட்டு பலியாகி உடன்படிக்கையின் பலிப்பொருளாகவில்லை என்றாலும், அந்த அநாமிகா அடிமை போல நாம் அன்றாடம் சுமக்கும் நம் வாழ்வின் மண்குடங்களைத் தூக்கிக்கொண்டு முன்னும் பின்னும் சென்று, புன்னகையின் பாலமாக இருந்தாலே போதும்.

'ஆமென்' என்று வாய் திறந்து, பெற்று, மூடிக்கொள்ளும் நற்கருணை நம் வாழ்வில் பொருள்தரும்.

மண்குடத்தில் தண்ணீர் - கவனம் ரொம்ப தேவை. தவறினால் குடமும் உடைந்து விடும், தண்ணீரும் உடைந்துவிடும், சுமப்பவரும் காயம் படுவார். உடன் வருபவரும் அடிபடுவார்.

ஆண்டவரின் திருவுடலும், இரத்தமும் அப்படியே!Tuesday, 22 May 2018

மூவொரு கடவுள் பெருவிழா

மூவொரு கடவுள் பெருவிழா 

இச 4:32-34, 39-40; உரோ 8:14-17; மத் 28:16-20


மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்

குடந்தை ஆயர் அந்தோனிசாமி


தவமின்றி அழகில்லை ; வரமில்லை
மூவொரு இறைவன் யார்?


மோசே காலத்தில் மாபெரும் செயல்களைப் புரிந்தவரே தந்தை இறைவன் (முதல் வாசகம்).
எப்படிப்பட்ட கட்டளைகளைப் பின்பற்றி வாழவேண்டும் என்பதைக் கற்பித்தவர் மகன் இயேசு (நற்செய்தி).
நம்மைக் கடவுளின் பிள்ளைகளாக்கி, இன்று வழிநடத்தி வருபவர் தூய ஆவியார் (இரண்டாம் வாசகம்).
மூவொரு இறைவனால் நமக்குக் கிடைக்கும் வரங்கள் யாவை?
1. நமக்குள் அதிசயங்கள் நிகழும்.
2. நாம் எப்படி வாழவேண்டும் என்ற உண்மை நமக்கு விளங்கும்.
3. நாம் கடவுளின் மக்களாகும் பேற்றினைப் பெறுவோம்.
மூவொரு இறைவனைப் பற்றிய அறிவை எப்படிப் பெறுவது?
பட்டாம்பூச்சியும், தட்டாம்பூச்சியும் ஒருநாள் சந்தித்துக்கொண்டன. தட்டாம்பூச்சி பட்டாம்பூச்சியைப் பார்த்து : பூப்பூவா பறந்துபோகும் பட்டுப்பூச்சி அக்கா ... நீ பளபளன்னு போட்டிருப்பது யாருகொடுத்த சொக்கா? என்றது!
மேலும் ஒரு கேள்வி ! என் சிறகுகள் வெள்ளையாக இருக்கின்றன! ஆனால் உன்னுடைய சிறகுகள் மட்டும் எப்படி இப்படி கலர் கலரா இருக்கின்றன? என்றது தட்டாம்பூச்சி!
அதற்கு பட்டாம்பூச்சி: நீ உன் தாயின் வயிற்றிலிருந்து நேரடியாக வந்துவிடுகின்றாய்! நான் அப்படி அல்ல. பிறக்கும்போது புழுவாகப் பிறந்து, பிறகு கூட்டுப்புழுவாகி, கூட்டுக்குள் நாற்பது நாள்கள் கடும் தவம் செய்தேன். தவத்தின் முழுமையை அடைந்தபோது கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்தேன். தவமின்றி அழகில்லை; வரமில்லை என்றது.

நமது அறிவு அழகுள்ளதாகி அழகே உருவான மூவொரு இறைவனின் பாதங்களை அடைய விரும்பினால் நாம் தவம் செய்யவேண்டும். அதாவது அமைதியான இடத்திலே அமர்ந்து தியானம் செய்யவேண்டும்.

தியானத்திற்குக் கீழ்க்கண்ட விவிலியப் பகுதிகளைப் பயன்படுத்தலாம் :
மத் 3:11, 12:32, 28:19, மாற் 13:11, 14:36, லூக் 4:1, 6:36, 10:21, 11:13, யோவா 1:33, 3:35, 6:44, 8:41, 10:30, 14:26, 20:22.
மேலும் அறிவோம் :
உற்றநோய் நோன்றல் உயிர்க்(கு)உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்(கு) உரு (குறள் : 261).

பொருள் : தமக்கு நேரும் துன்ப துயரங்களைத் தாங்கிக் கொள்வதும், பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதுமே தவத்திற்குரிய வடிவமாகும்.


கல்லரைக்கு அப்பால்

அருள்பணி இ.லூர்துராஜ்


ஓதற்கு அரியவன் இறைவன்

திரினிடாட் (Trinidad) என்ற தீவு ஒன்று உண்டு. திரித்துவத்தின் (மூவொரு கடவுளின்) பெயரால் அழைக்கப்படுகிறது அத்தீவு. அத்தீவிற்கு அப்பெயரைச் சூட்டியவர் கிறிஸ்டோபர் கொலம்பஸ். எந்த ஒரு வேலையைத் தொடங்கு முன்னும், எந்த ஒரு கடிதத்தை எழுதுமுன்னும் தூய திரித்துவத்தின் பெயரால்' என்று தான் தொடங்குவார். புதிய உலகைக் கண்டுபிடிக்கும் தனது திட்டம் பற்றி அறிவியல் அறிஞர்கள், இறையியல் வல்லுனர்கள் கூடியுள்ள குழுவில் விளக்கும் போது "மூவொரு கடவுளின் பெயரால் உங்கள் முன்னே நிற்கிறேன்" என்றார். 1598 ஆம் ஆண்டில் தனது மூன்றாம் கடற்பயணத்தைத் தொடங்கினார். "தான் கண்டுபிடிக்கும் முதல் இடத்தைத் திரித்துவத்திற்கு அர்ப்பணிப்பேன்" என்று நேர்ந்தார். அவ்வாறு முதல்முதலில் அவர் கண்டுபிடித்த இடத்திற்கு அவர் இட்ட பெயர்தான் திரினிடாட்.

மூவொரு கடவுளின் வெளிப்பாடு கிறிஸ்தவ வாழ்வின், நம்பிக்கையின் மையம். நியூட்டன் போன்ற மேதைகள் மூவொரு கடவுளின் மீது வைத்திருந்த பற்று, பக்தி, நம்பிக்கை ஆழமானது. விவிலியத்திலும் வாழ்விலும் தம்மை வெளிப்படுத்திய மூவொரு இறைவனை அனுபவித்து உணர்ந்தவர்கள். அன்பு மயமான இறைவனின் அன்பிற்குள் மூழ்கித் திளைத்துத் தம் வாழ்வின் ஆழத்தைக் கண்டு பிடித்தவர்கள்.

தூய தாமஸ் அக்குவினாஸ் கடவுளைப் பற்றிய தன்னுடைய சிந்தனைகள், புரிதல்களை “Summa Theologica” என்ற தலைப்பில் மூன்று பகுதிகளாக எழுதியிருக்கிறார். முதலிரண்டு பகுதிகளை முடித்து விட்டு மூன்றாவது பகுதியை எழுதிக் கொண்டிருந்த நேரம், 1273 டிசம்பர் 6ஆம் நாள் நேப்பிள்ஸ் நகரில் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது இறையனுபவத்துக்கு ஆட்பட்டு விடுகிறார். இந்த இறையனுபவத்துக்கு ஆட்பட்ட பின்பு, தனது நூலின் மூன்றாவது பகுதியைத் தொடர்ந்து எழுத ஆர்வம் காட்டவில்லை. மூன்றாவது பகுதியை விரைவில் முடித்து விடுவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது சபையினருக்கு இது ஏமாற்றமாக இருந்தது.

எனவே அவரைக் கட்டாயப்படுத்தி அவரது அறையில் அமர வைத்து எழுதச் சொல்லியும் அவர் எழுத ஆர்வம் காட்டவில்லை. கடைசியாக, சபைத் தலைவர் "கீழ்ப்படிதல் என்ற வார்த்தைப் பாட்டின் பெயரால் நீர் எழுதத் தொங்கிய அந்த நூலை முடிக்கும்படி உமக்கு நான் ஆணையிடுகிறேன் என்று சொன்னபோது தாமஸ் அக்குவினாஸ் இவ்வாறு பதிலளித்தாராம்: "தலைவர் தந்தை அவர்களே, என்னை ஆட்கொண்ட அந்தக் குறுகிய கால இறைஅனுபவத்தோடு ஒப்பிடும் போது, நான் கடவுளைப் பற்றி எழுதியவை அனைத்தும் ஒன்றுமில்லாமைக்குச் சமம் - எல்லாம் தூசும் வைக்கோலும் போல.

எப்படி மூன்று ஆட்கள் ஒரே கடவுளாக இருக்க முடியும் என்று புரிந்து கொள்ள முயற்சி செய்வதனாலோ, விவாதிப்பதனாலோ நாம் கடவுளைப் புரிந்து கொள்ளப் போவதில்லை, மாறாக, செபம் மற்றும் தியானம் வழியாக இறைவனால் ஆட்கொள்ளப்படும் போது, இறைவனை அனுபவப் பூர்வமாக உணரும் போது, நம்முடைய அறிவுப் பூர்வமான குழப்பங்கள் நம்மை விட்டு அகல ஆரம்பிக்கின்றன.

மூவொரு கடவுள் ஆய்வுக்குரியவரல்லர். அனுபவத்துக்குரியவர். தூய தாமஸ் அக்குவினாஸ் சொல்வார்: “கடவுளைப் பற்றிப் பேசாமல் நம்மால் இருக்க முடியாது. ஆனால் அவ்வாறு பேசும் போது, நம்மால் உளறத்தான் முடியுமேயொழிய தெளிவாகப் பேச முடியாது'.

வாய் வார்த்தைகளால் கடவுளை நிரூபிப்பது கடினம். ஏன் அப்படி? அது, நிழல் என்றால் என்ன என்று ஒரு பார்வையற்றவருக்கு விளக்க முயற்சி செய்வது போன்ற செயல். பார்வையற்றவர் வெளிச்சத் தையே பார்த்திராதவர் அல்லவா! எனவே அவருக்கு ஒளி என்றாலே என்னவென்று தெரியாது. அப்படியிருக்கும்போது ஒளி உருவாக்கும் நிழலைப் பற்றி அவருக்கு எப்படி விளக்குவது? கடவுளின் படைப்பையே வார்த்தைகளால் விளக்கி விவரிக்க முடியாதெனில், அதைப் படைத்த கடவுளை எப்படி விவாதத்தால் வார்த்தைகளால் புரிய வைக்க முடியும்? அதனால்தான் "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் இறைவன்" என்கிறது பெரிய புராணம்.

உச்சரிப்புக்கு அடங்காத உயிர் மூச்சு ஒன்று ஆன்மாவின் ஆழத்தில் ஊன்றப்பட்டுள்ளது. அதற்குப் பெயர்தான் அனுபவம் ஆராய்ச்சியைக் கடந்தது.

அன்பு என்றால் என்ன? பதில் சொல்லுங்கள்! அறிவுக்கோ விளக்கத்துக்கோ உரிய பொருள் அல்ல அது. அனுபவத்திற்குரிய பொருள். அழகும் அவ்வாறே. கற்பும் அவ்வாறே.

கடவுளும் அத்தகையவரே! ஆராய்ந்து அல்ல, அனுபவித்து உணரப்பட வேண்டியவர். “நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது" (யோவான் 16:12). கடவுள் ஒருமறைபொருள் என்பதே அதன் பொருள். எனவே இயேசு தொடர்ந்து சொல்வார்: “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார்” (16:13).

"அம்மையப்பன்” ''சத்(உண்மை ) சித் (அறிவு) ஆனந்தன் (இன்பம்)” இவையெல்லாம் கடவுள் பற்றிய மனிதக் கண்ணோட்டங்கள். இறைவன் தாமே தன்னைப் பற்றி வெளிப்படுத்தியது: "தந்தை, மகன், தூய ஆவி' என்ற திரித்துவத் தத்துவம்.

ஜூனாய்டு என்ற ஞானியிடம் சீடன் ஒருவன் வந்து கேட்டான் "உங்களிடம் கடவுள் ஞானம் என்கிற முத்து இருப்பதை உணர்கிறேன். மற்றவர்களும் அதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அந்த முத்து எனக்குக் கொஞ்சம் தேவை. அதை எனக்கு விலைக்கோ அல்லது இலவசமாகவோ கொடுங்கள்'' ஞானி என்ன பதில் சொன்னார் தெரியுமா?

''சீடனே, உனக்கு நான் அதை விற்க முடியாது. ஏனென்றால் அதன் விலையை உன்னால் கொடுக்க முடியாது. இனாமாகக் கொடுக்கலாம் என்றால், அதை நீ மதிக்க மாட்டாய். அதனால் என்னைப் போலவே நீயும் கடவுள் என்ற அந்த ஆழ்கடலில் மூழ்கி எழுந்திரு. நீயும் ஒரு முத்து எடுத்து வரலாம் என்றார்.

14ஆம் நூற்றாண்டில் மெய்ஸ்டர் எக்ஹார்ட் என்ற துறவி சுவைத்துச் சொன்னார்:"கடவுள் சிரித்தார். திருமகன் பிறந்தார் தந்தையும் மகனும் சிரித்தார்கள். தூய ஆவி பிறந்தார்.
தந்தை மகன் தூய ஆவி மூவரும் சிரித்தார்கள். இந்த உலகம் பிறந்தது''.மறையுரைமொட்டுக்கள்

அருள்பணி Y.இருதயராஜ்


வேதியர் ஒருவர் திருமண ஒலை எழுதுவதற்கு வந்த மாப்பிள்ளைக்குத் தேவையான மந்திரங்களைக் கற்றுக் கொடுத்து, அவரைப் பங்குத் தந்தையிடம் அழைத்துச் சென்றார். வேதியர் பங்குத் தந்தையின் பின்புறம் நிற்க, மாப்பிள்ளை பங்குத் தந்தையின் முன்புறம் நின்றார். பங்குத் தந்தை மாப்பிள்ளையிடம், "ஒரே கடவுள் எத்தனை ஆட்களாக இருக்கிறார்? என்று கேட்டார். மாப்பிள்ளை பதில் கூறமுடியாமல் மேலும் கீழும் விழித்தார். பங்குத் தந்தையின் பின்புறம் நின்று கொண்டிருந்த வேதியர் மூன்று விரலைக் காட்டினார். அதைப் பார்த்த மாப்பிள்ளை பங்குத் தந்தையிடம், "சாமி! வேதியர் ஏற்கெனவே என்னிடமிருந்து மூன்று ரூபாய் வாங்கிக் கொண்டார். இப்போது மறுபடியும் மூன்று ரூபாய் கேட்கிறார். இது சரியா?" என்றார்!


 கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதைப் பகுத்தறிவுள்ள எவரும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஆனால், ஒரே கடவுள் மூன்று ஆள்களாக, அதாவது, தந்தை, மகன், தூய ஆவியராக இருப்பதைப் பகுத்தறிவால் மட்டும் அறிய இயலாது. அதற்கு இறை வெளிப்பாடு தேவை, "கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை), தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள் தன்மை கொண்டவருமால் ஒரே மகளே அவரை வெளிப்படுத்தினார்" (யோவா 1:18) "தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியாம் , மகனும், அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமின்றி, வேறு எவரும் தந்தையை அறியார்" (மத் 11:27).

கிறிஸ்துவே மூவொரு கடவுளை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். தாம் தந்தையிடமிருந்து வந்ததாகவும், தந்தையிடம் திரும்பிப் போவதாகவும், விண்ணகம் சென்றபின் தூய ஆவியாரை அனுப்ப இருப்பதாகவும் சீடர்களுக்கு அவர் தெள்ளத் தெளிவாகக் கூறினார் (யோவா 14:13-16). இன்றைய நற்செய்தியில், உயிர்த்த ஆண்டவர் விண்ணகம் செல்லுமுன் தம் சீடர்களிடம், "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் என் சீடராக்குங்கள். தந்தை மகள் தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்" (மத் 28:19) என்று கூறுகிறார்.

எனவே, கிறிஸ்துவே அதை நமக்கு வெளிப்படுத்தியால், கடவுளைப் பொருத்தமட்டில் 'ஆள் வகையில் தனித் தன்மையையும், இறையியல்பில் ஒருமையையும், மகத்துவத்தில் சமத்துவத்தையும் ஏற்றுக் கொண்டு, இருந்தவரும், இருக்கிறவரும் வரவிருக்கிறவருமான (திவெ 1:18), தந்தை , மகன், தூய ஆவியாரை ஆராதித்து மகிமைப்படுத்துவோம்.

மூவொரு கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவை திருத்தூதர் பவுல் தமது வாழ்த்துரையில் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்: "ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக" (2கொரி 13:13), இந்த வாழ்த்துரையைத் தான் திருச்சபையும் திருப்பலியின் ஆரம்பத்தில் நமக்கு வழங்குகிறது.

தந்தையின் தனிப்பண்பு அன்பு: மகனின் தனிப்பண்பு அருள்; தூய ஆவியாரின் தனிப்பண்பு நட்புறவு, தந்தை நம்மை அன்பு செய்து, நம்மைத் தொடர்ந்து பாதுகாக்கின்றார். கிறிஸ்து தமது அருளால் நம்மை மீட்டுக் கொண்டிருக்கிறார். தூய ஆவியார் தமது நட்புறவால் நம் உள்ளத்தில் குடியிருந்து நமக்குப் புத்துயிர் அளித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு மூவொரு கடவுளோடு நமது வாழ்வு என்றுமே பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது.

மூவொரு இறைவன் நாம் வணங்குவதற்குரிய மறைபொருள் மட்டுமல்ல, நமது அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய மறைபொருளுமாவார், தந்தை தமது மகனை முழுமையாக அன்பு செய்து, அவருக்குத் தம்மை முழுமையாக கையளிக்கிறார், அவ்வாறே மகனும் தந்தையை அன்பு செய்து, அவருக்குத் தம்மை முழுமையாகக் கையளிக்கிறார். இவர்களுடைய பரஸ்பர அன்பிலிருந்து பிறப்பவர்தான் தூய ஆவியார். மூவொரு இறைவனின் அன்பு வாழ்வைக் குடும்ப வாழ்வும் பிரதிபலிக்கிறது. கணவனும் மனைவியும் ஒருவர் மற்றொருவரை அன்பு செய்து தங்களை முழுமையாகக் கையளிக்கின்றனர். இவ்விருவரின் பரஸ்பர அன்பின் கனிதான் குழந்தை. எனவே ஒவ்வொரு குடும்பமும் மூவொரு இறைவனின் குடும்பத்தை அடித்தளமாகக் கொண்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

மேலும், மூவொரு கடவுள், தந்தை மகன் ஆவியார், ஒருவர் மற்றவருடைய தனித்தன்மையை மதிக்கின்றனர். ஒருவர் மற்றவரை மகிமைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றனர். தத்தை மகனையும், மகன் தந்தையையும். தூய ஆவியார் மகனையும் மகிமைப்படுத்துகின்றனர்.
இம்மூவொரு கடவுளைப் பின்பற்றி நமது குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் ஒருவர் மற்றவருடைய தனித்தன்மையை ஏற்று, மதித்து, நமது மகிமையைத் தேடாமல் மற்றவர்களின் மகிமையைத் தேடி, பிறர்க்கு நம்மை முழுமையாகக் கையளித்து ஒருவருக்கொருவர் 'அன்பின் அடிமைகளாக' (கலா 5:13) வாழக்கற்றுக் கொள்ளலாம்.

ஒரு வறண்ட ஆற்றில், ஒரு சிறிய குழியில் மட்டும் சிறிதளவு தண்ணீர் இருந்தது. அதில் ஒரு பெரிய மீன் ஆனந்தமாக நீந்திக் கொண்டிருந்தது. அதைப்பார்த்த ஒரு குரங்கு, மீன் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்று திளைத்து, அதற்கு முதல் உதவி செய்யும் எண்ணத்துடன், அதைத் தண்ணிரிலிருந்து வெளியே எடுத்துத் தரையில் போட்டது. சிறிது நேரத்தில் மீன் துடிதுடித்து செத்துவிட்டது. அதைக்கண்ட குரங்கு, “மீன் சாக வேண்டிய நேரம் வந்து விட்டதால், அது செத்துவிட்டது. ஆனால், அது மறையுரை மொட்டுக்கள்.

தண்ணீரில் மூச்சுத் திணறிச் சாகாமல், தரையில் நிம்மதியாகச் சாக, நான் உதவி செய்துள்ளேன்" என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டது.
குரங்கு மீனை அன்பு செய்தால், அம்மீனைத் தண்ணீரில் வைத்துத் தான் அன்பு செய்திருக்க வேண்டும். மாறாக, தானிருப்பது போலவே மீனும் தரையில் இருக்க வேண்டும் என்று விரும்பி, அதை அதன் இயல்பான சூழலிலிருந்து வெளியே கொண்டு வந்து சாகடித்திருக்கக்கூடாது.


நாமும் மற்றவர்களை அன்பு செய்யும் போது. அவர்களுடைய தனித்தன்மையை, விருப்பு வெறுப்புக்களை மதித்து அன்பு செய்ய வேண்டும், அதற்கு மாறாக, அவர்களை நம்மைப்போலாக்க முயற்சிப்பது அவர்களது ஆளுமையைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும். பிறருடைய தனித்தன்மையை மதித்தும், பிறருடன் இணைத்தும் செயல்படும்போது | மூவொரு கடவுளை நம் வாழ்வில் பிரதிபலிக்கிறோம்.


நான் உங்களோடு!

'லைக் தெ ஃப்ளோயிங் ரிவர்' என்ற தனது புத்தகத்தில் பவுலோ கொயலோ பின்வரும் நிகழ்வைப் பதிவு செய்கின்றார்: 'பைஜாமா அணிந்த மனிதர்.' 2005ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் நாள் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரின் ஒரு செய்தித்தாளின் ஆன்லைன் பதிப்பில் 'பைஜாமா அணிந்த ஒருவர் இறந்து கிடந்தார்' என்ற செய்தி வந்தது. யாராவது ஒருவர் இறந்தால் அவர் இல்லத்தில் அல்லது மருத்துவமனையில் தம் நண்பர்கள், உறவினர்கள் சூழ இருந்திருப்பார். அவர் இறந்த இடம் இல்லமோ, மருத்துவமனையோ அல்ல. பாழாய்ப்போய்க் கிடந்த 25 மாடிக் கட்டிடத்தை உடைக்க தொழிலாளர்கள் சென்றபோது ஒரு அறையில் 'பைஜாமா அணிந்த ஒருவர் படுத்துக்கிடந்தார்.' பைஜாமா அணிந்த ஒரு எலும்புக்கூடு படுத்துக்கிடந்தது. அந்த எலும்புக்கூட்டின் அருகே 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் நாள் வெளியான செய்தித்தாள் ஒன்று கிடந்தது. அங்கே விரித்து வைக்கப்பட்டு தூசி நிரம்பியிருந்த மேசை நாட்காட்டியும் அதே நாளைத்தான் காட்டியது.இவர் யார் என்று விசாரித்தபோது, இவர் ஒரு பெரிய பிஸினஸ்மேன் என்றும், இவருடைய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டபின் இவருடைய மனைவி இவரைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்றும், இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை என்றும் கண்டுபிடிக்கின்றனர்.

ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஒருவர் இந்தப் பூமிப்பந்திலிருந்து மறைந்து போயிருக்கிறார். அவரைத் தேடியவர் யாருமில்லை. டோக்கியோ நகரம் மின்னணு இணைப்பில் மேலோங்கி நிற்கின்ற நகரம். இப்படிப்பட்ட நகரத்திலும் தொலைந்துபோன இவரைத் தேடியவர் யாரும் இல்லை.

பைஜாமா அணிந்து கிடந்த இந்த மனிதர் அனுபவித்த ஒரே உணர்வு தனிமை. தனிமை என்பது ஒரு உணர்வு மட்டுமல்ல. அது ஒரு செயல்பாடு. ஏனெனில் அந்த உணர்வு ஒருவருக்கு வந்தவுடன் அவர் மற்றவர்களைவிட்டு தனியே சென்றுவிடுகின்றார். அல்லது தனித்துவிடப்படுகின்றார்.

இன்று மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். தனிமை இனிமை அல்ல என்று நமக்கச் சொல்கிறது இன்றைய பெருவிழா.

'இவ்வாறு, முதலும் முடிவுமற்ற உண்மையான இறைத்தன்மையை அறிக்கையிடும்போது,
ஆள்வகையில் தனித்தன்மையையும்,
இறையியல்பில் ஒருமையையும்,
மகத்துவத்தில் சமத்துவத்தையும் ஆராதிக்கின்றோம்!'
என்று இன்றைய நாளின் மறைபொருளைப் பதிவு செய்கிறது இன்றைய திருப்பலியின் தொடக்கவுரை (பழைய மொழிபெயர்ப்பு).

மூவொரு இறைவனில் காணப்படும் தனித்தன்மையும், ஒருமையும் தனிமை அன்று. மாறாக, 'இதோ நான் உங்களோடு இருக்கிறேன்' என்று அவர்கள் ஒருவர் மற்றவருக்குத் தரும் வாக்குறுதி.

'மனிதன்-மனிதை ஒரு சமூகப் பிராணி - ஆகையால்தான் இவர்கள் தனிமையை உணர்கிறார்கள்' என்கிறது சமூக அறிவியல்.

'குறைவு மனப்பான்மை (sense of lack), இழப்பு (sense of loss), அன்பு (sense of love)' - இந்த மூன்றும்தான் மனித தனிமை உணர்வுக்கான அடிப்படையான காரணிகள் என்கிறது உளவியல். குறைவு மனப்பான்மை என்பது நமக்கு எல்லாம் இருந்தும் நாம் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு, 'நான் அடுத்தவரைப் போல இல்லையே' என்று சொல்லும் மனநிலை. இந்த மனநிலையில் அடுத்தவர் எதிரிபோல நமக்குத் தோன்றுவதால் நாம் அவரிடமிருந்து மெதுவாக விலகிவிடுகிறோம். இழப்பு நமக்கு உரிமையான ஒன்றை அல்லது ஒருவரை இழக்கும்போது வருகிறது. நம்மிடமிருந்த வீடு அல்லது பணம் பறிபோய்விட்டால், அல்லது நமக்குரியவர் ஒருவர் இறந்துவிட்டால் மற்றவர்மேல் - அது கடவுளாக இருந்தாலும் - நாம் நம்பிக்கையை இழந்துவிடுகிறோம். அடுத்தவர் நம்மை ஏமாற்றிவிட்டார் என்ற உணர்வு நம்மைத் தனிமையில் தள்ளிவிடுகிறது. 'குறைவு மனப்பான்மையும்,' 'இழப்பும்' நமக்குத் தனிமையைத் தருகின்றன என்பது சரி. ஆனால், 'அன்பு' எப்படி தனிமையைக் கொண்டுவரமுடியும்? நாம் நமக்கு உரியவரை, விருப்பமானவரை அன்பு செய்தாலும் நம்மிடமிருக்கின்ற அன்பு என்ற அந்த உணர்வு அடங்கிவிடுவதில்லை. 'இன்னும் நான் நிறைய பேரை அன்பு செய்ய வேண்டும்?' 'என் வாழ்வு நிறைய பேரைத் தொட வேண்டும்?' என்ற ஏக்கத்தை அது நம்மில் உருவாக்கிவிடுகிறது. இந்த நிலையில்தான் நாம் புதிய வேலை, புதிய நண்பர்கள், புதிய சுற்றத்தார் என புதியவற்றைத் தேட ஆரம்பிக்கிறோம். இந்தத் தேடலே நம்மைத் தனிமையில் விட்டுவிடுகிறது. ஏனெனில் இந்தப் புதிய தேடலில் நாம் புதியவற்றோடும் இல்லாமல், பழைய நண்பர்களோடும் இல்லாமல் போய்விடுகிறோம். முதல் இரண்டு தனிமை காரணிகளும் சீக்கிரம் மறைந்துவிடும். ஆனால், இந்த மூன்றாம் காரணி நம் வாழ்வு முழுவதும் நம்மைத் தொற்றிக்கொண்டே வருகிறது.

மூவொரு இறைவனின் மறைபொருளை நாம் புரிந்துகொள்ள முடியுமா? விவிலியமும் பாரம்பரியமும் இதற்கு மூன்று முயற்சிகள் எடுத்துள்ளன:

1. விவிலியம் காட்டும் மூவொரு இறைவன். தொநூ 1:1ல் (மற்றும் 1:26, 3:22, 11:7, எசாயா 6:8, 48:16, 61:1) கடவுளின் பெயர் 'எலோஹிம்' (கடவுள்கள்!) எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் மூவொரு இறைவனுக்கு முதல் அடிக்கல். கடவுள் தன்னை ஒருமையில் அல்ல, பன்மையில் அழைக்கிறார். இப்படிப் பலராக இருக்கும் கடவுள் பலர் அல்லர், ஒருவரே என்றும் உறுதியாகச் சொல்கிறது விவிலியம் (இச 6:4, 1 கொரி 8:4, கலா 3:20, 1 திமொ 2:5). சில இடங்களில் தந்தை என்னும் கடவுள் தன் மகனிடம் உரையாடுவதாகவும் நாம் வாசிக்கின்றோம் (எசா 48:16, 61:1, லூக் 4:14-19). இயேசுவின் திருமுழுக்கின் போது தந்தையாகிய இறைவன் பேசுவதாகவும், தூய ஆவியானவர் புறா வடிவில் இறங்குவது போலவும், மகனாகிய இயேசு யோர்தான் நதிக்கரையில் நின்று கொண்டிருப்பதாகவும் எழுதுகிறார் மத்தேயு (3:16-17). 'தந்தை-மகன்-தூய ஆவி' என்று திருமுழுக்கு ஃபார்முலா ஒன்றைச் சொல்லிக்கொடுக்கின்றார் இயேசு (மத் 28:19). 'ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!' என்று கொரிந்து நகரத் திருச்சபையை வாழ்த்தி தன் மடலை நிறைவு செய்கின்றார் பவுலடியார். (இந்தப் பவுலடியாரின் வார்த்தைகளைக் கொண்டே நாம் திருப்பலியின் தொடக்கத்தில் இறைமக்களையும் வாழ்த்துகின்றோம்!). மூவொரு இறைவன் தங்களுக்குள் தனித்தன்மை கொண்டிக்கிறார்கள் (தொநூ 19:24, ஓசே 1:4, திபா 2:7, நீமொ 30:2-4, எண் 27:18) என்றும், தமதிருத்துவத்தின் ஒவ்வொரு நபரும் கடவுள் (யோவா 6:27, உரோ 1:7. 1பேதுரு 1:2, யோவா 1:1, திப 5:3-4, 1 கொரி 3:16) என்றும் நாம் வாசிக்கின்றோம். மேலும் தமதிருத்துவத்தின் ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு பணி இருக்கின்றது (1 கொரி 8:6, திவெ 4:11, யோவா 3:16-17, 14:10). மேலும் ஆபிரகாமை மம்ரே என்ற இடத்தில் கடவுள் சந்தித்த போதும் (தொநூ 18:2), இயேசு தாபோர் மலையில் உருமாறிய போதும் (மத் 17:1-13), அன்னை மரியாளுக்கு மங்கள வார்த்தை அறிவித்த போதும் (லூக் 1:5), இயேசுவின் அருள்மொழிகளிலும் (மத் 11:27, யோவா 1:18) மூவொரு இறைவனின் வெளிப்படுதலை விவிலியத்தில் பார்க்கின்றோம்.

2. தமதிருத்துவத்தை இரண்டு நிலைகளில் புரிந்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன: (அ) இயல்புசார்ந்த தமதிருத்துவம், (ஆ) பணிசார்ந்த தமதிருத்துவம். இயல்புசார்ந்த புரிதலில், தந்தை, மகன், தூய ஆவியார் மூன்றுபேரும் கடவுள் என்பதும், ஒருவரின் பிரசன்னம் மற்றவரோடு தொடர்புடையதல்ல என்றும் சொல்லப்படுகி;றது. பணிசார்ந்த புரிதலில், தமதிருத்துவத்தின் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றனர் (தந்தை - படைப்பது, மகன் - மீட்பது, தூய ஆவி - பராமரிப்பது) என்று சொல்லப்படுகிறது. முதல் ஏற்பாட்டு காலத்தை 'தந்தையின்' காலம் என்றும், நற்செய்தி நூல்களை 'மகனின்' காலம் என்றும், திருத்தூதர் பணிகள் மற்றும் மடல்களை 'ஆவியின்' காலம் என்றும்கூட சிலர் பிரிக்கின்றனர். பணிசார்ந்த புரிதல் இந்து மதத்திலும் இருக்கின்றது. பிரம்மா-விஷ்ணு-சிவா என்னும் மும்மூர்த்திகள் முறையே படைத்தல்-காத்தல்-அழித்தல் வேலைகளைச் செய்கின்றனர். ஆனால், இவர்கள் மூன்று-ஆள்-ஒரு-கடவுள் அல்லர். மாறாக, மூன்று-ஆள்-மூன்று-கடவுள்கள்.

3. தமதிருத்துவமும் உருவகங்களும். ஒன்றின் பொருளை மற்றொன்றோடு தொடர்பு படுத்தி அறியச் செய்பவை உருவகங்கள். தந்தை-மகன்-தூய ஆவி என்பதை கணவன்-மனைவி-பிள்ளை (தந்தை-தாய்-பிள்ளை) என குடும்ப உறவு உருவகம், திடம்-திரவம்-ஆவி என தண்ணீர் உருவகம், ஓடு-வெள்ளை-மஞ்சள்கரு என முட்டை உருவகம், கிளாவர் எனப்படும் இலை உருவகம், முக்கோணம் உருவகம் என நாம் உருவகங்களைக் கையாளுகின்றோம்;. ஆனால் உருவகங்கள் வெறும் நிலவைச் சுட்டிக்காட்டும் விரல்கள்தானே தவிர அவைகள் நிலவு அல்ல என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். உருவகங்கள் எந்த அளவுக்கு எதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றனவோ, அந்த அளவுக்கு எதார்த்தை மறைக்கவும் செய்கின்றன. சில நேரங்களில் உருவகங்கள் ஆபத்தானவைகளாகவும் இருக்கின்றன. உதாரணத்திற்கு, என் அப்பா எந்நேரமும் வீட்டில் சண்டையிடுபவராக, என் அம்மாவை அடிப்பவராக, பிள்ளைகளிடம் கோபப்படுபவராக இருந்தால், நான் எப்படி தந்தை அன்பானவர் என்றும் அந்த அன்பே தூய ஆவியானவர் என்றும் உணர முடியும். மேலும், தந்தை-தாய்-பிள்ளை என தமதிருத்தவத்தை உருவகிக்கும்போது மற்றொரு பிரச்சனையும் வருகிறது. தமதிருத்துவத்தில் வரும் மூன்று பேரும் 'ஆண்கள்'. அவர்களுக்கு 'மனைவி' அல்லது 'தாய்' என்ற உருவகம் எப்படிப் பொருந்தும்?

இப்புரிதல் ஓரளவுக்கு தெளிவாக இருந்தாலும், தொடக்கத் திருஅவையிலும் இன்றும் தமதிருத்துவம் பற்றி ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன:

அ. இயேசு மனிதராகப் பிறந்தபோது தமதிருத்துவத்தில் குறை ஏற்பட்டதா?
ஆ. இயேசு பிறப்பிலேயே கடவுளின் மகனா, அல்லது 'நீ என் அன்பார்ந்த மகன்' என்று திருமுழுக்கின்போது தத்தெடுக்கப்பட்டாரா? (அடாப்ஷன்)
இ. இயேசு சிலுவையில் இறந்தபோது, அவர் மட்டும் இறந்தாரா? அல்லது அவரோடு சேர்ந்து மூவொரு இறைவனும் இறந்தாரா? அவர் மட்டும் இறந்தாhர் என்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும்? மூவொரு இறைவனும் இறந்தார் என்றால், அந்த இரண்டு நாட்கள் நாம் கடவுள் இல்லாமல் இருந்தோமா?
ஈ. இவர்கள் மூவரும் மூன்று கடவுளர்களா?
உ. தந்தை-மகன் என்று நாம் அழைக்கும்போதே, ஒருவர் மற்றவரைவிட மேலாக அல்லது முதன்மையாக இருக்கிறார் என்று ஆகிவிடுகிறது இல்லையா? (சப்ஆர்டினேஷனிசம்)
ஊ. கடவுள் ஒருவர்தான். ஆனால் அவர் மூன்று பேராக தன்னை வெளிப்படுத்தியிருக்கின்றார். முதல் ஏற்பாட்டில் யாவே என்றும், இரண்டாம் ஏற்பாட்டில் இயேசு என்றும், தொடர்ந்து திருச்சபை வரலாற்றில் தூய ஆவி என்றும் தன்னை வெளிப்படுத்துகின்றார். (மோடலிசம்). ஆக, தமதிருத்துவம் என்பது ஒரு வெளிப்பாடே அன்றி அது இறைஇயல்பு அல்லவே?
எ. எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளை மனிதர் என்று சொல்வது மனித இனம் மற்ற உயிர்களிடமிருந்து தன்னைத்தானே உயர்த்திக்கொள்ளும் ஆணவத்தின் வெளிப்பாடு இல்லையா?

இந்தக் கேள்விகளையும் தாண்டி நாம் மூவொரு இறைவன் என்னும் மறைபொருளை நம்பவும், புரிந்துகொள்ளவும் வேண்டுமெனில், நாம், 'தமதிருத்துவம் எப்படி?' என்ற கேட்பதை விடுத்து, 'தமதிருத்துவம் ஏன்?' என்று கேட்க வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் மோசே இஸ்ரயேல் மக்களிடம் ஆண்டவராகிய இறைவனின் அரும்பெரும் செயல்களைத் 'தெரிந்துகொள்ளவும்,' 'நினைவுகூறவும்,' 'பின்பற்றவும்' அழைப்பு விடுக்கின்றார். கடவுளின் இந்தச் செயல்கள் தொடக்கத்தில் அவர், 'நான் உங்களோடு' என்ற வாக்குறுதியை நமக்குத் தருகின்றது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் 'தூய ஆவி அருளும் வாழ்வு' என்றால் என்ன என்பதைப் பற்றி உரோமைத் திருஅவை இறைமக்களோடு தன் கடிதம் வழியாக உரையாடும் பவுலடியார் 'தூய ஆவி என்பது நம்மில் இருக்கும் ஒரு மனப்பான்மை' என்ற புதிய அடையாளத்தை தூய ஆவியானவருக்குக் கொடுக்கின்றார். இந்தத் தூய ஆவியானவர் இறைமக்களின் உள்ளத்தில் இருப்பதால் இறைமக்களுக்குக் கிடைப்பது என்ன? அ. 'கடவுளின் மக்கள்' என்ற அடையாளத்தை இவர் தருகின்றார். ஆ. கடவுளை 'அப்பா, தந்தையே' என அழைக்கும் உரிமையைத் தருகின்றார். இ. நாம் கடவுளின் பிள்ளைகள் என்று மற்றவர்களிடம் சான்று பகர்கின்றார்.

முதலில் 'தந்தை-மகன்' உறவு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வோம். நம் தமிழில் மற்றவர்ளை அழைக்கும்போது, 'அம்மா' என்று பெண்களிடம் எளிதாக நாம் பயன்படுத்துவதுபோல, 'அப்பா' என்பதை ஆண்களிடம் எளிதாகப் பயன்படுத்துவதில்லை. அல்லது பயன்படுத்த இயலவில்லை. அப்படிப் பயன்படுத்தினாலும், அதில் ஒரு சொல்லமுடியாத தூரம் இருக்கின்றது. நான் என் அப்பாவை, 'அப்பா' என்று அழைப்பதும், என் நண்பனின் அப்பாவை 'அப்பா' என்று அழைப்பதும் ஒன்றா? என் அப்பாவை நான் 'அப்பா' என அழைக்கக் காரணம், அவருக்கும் எனக்கும் உள்ள 'உடல்முறை உறவு' - அதாவது என் அப்பாவின் உயிரணுவின் ஒரு மாற்று வடிவமே நான். என் நண்பனின் அப்பாவை நான் 'அப்பா' என அழைக்கக் காரணம், அவருக்கும் எனக்கும் உள்ள 'உடல்முறை உறவு' அல்ல. மாறாக, எனக்கும் என் நண்பனுக்கும் இடையே உள்ள நட்பு. ஆக, எனக்கருகில் இருக்கும் என் நண்பனோடு இருக்கும் நட்ப, எனக்குத் தூரத்தில் இருக்கும் அவனது அப்பாவையும், 'அப்பா' என்று அழைக்க எனக்கு உரிமை அளிக்கிறது.

இயேசு கடவுளை, 'அப்பா' என அழைப்பதற்கும், நான் கடவுளை, 'அப்பா' என அழைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இயேசு 'அப்பா' என அழைக்கக் காரணம், கடவுளுக்கும், அவருக்கும் இடையே இருக்கும் 'உடல்முறை உறவு'. நான் 'அப்பா' என அழைக்கக் காரணம் இயேசுவுக்கும், எனக்கும் இடையே இருக்கும் 'உடன்பிறப்பு முறை' உறவு அல்லது நட்பு.

இந்தப் பின்புலத்தில் பார்க்கும்போது, தூய ஆவியானவருக்கு 'உறவு' என்ற புதிய அடையாளம் பிறக்கின்றது. எனக்கும், என் நண்பனுக்கும் இடையே உள்ள உறவை நான் 'நட்பு' என பெயரிடுகிறேன். அதேபோல தந்தைக்கும், மகனுக்கும் அல்லது இயேசுவுக்கும் நமக்கும் இடையே இருக்கும் உறவை 'தூய ஆவி' எனப் பெயரிடுகின்றோம். ஆக, தூய ஆவி மேல்நோக்கியும் செயலாற்றுகின்றார். சமநிலையிலும் செயலாற்றுகின்றார். இந்த இரண்டு நிலைகளிலும் அவர் உறவாக இருக்கின்றார்.

அவர் உறவாக இருக்கின்றார் என்று சொல்வது நம்மை அடுத்த கட்ட சிந்தனைக்கு அழைக்கிறது. உறவு என்றால் அங்கே இரண்டு பரிமாணங்கள் உண்டு: ஒன்று, அகப் பரிமாணம். இரண்டு, புறப் பரிமாணம். அகப் பரிமாணத்தில், நான் என் நண்பனோடு கொண்டுள்ள உறவை நட்பாக என் மூளையில் பதிவு செய்கிறேன். புறப் பரிமாணத்தில், நான் அவனோடு பேசுகிறேன், அன்பளிப்பு கொடுக்கிறேன், வெளியே சாப்பிடச் செல்கிறேன் அல்லது சேர்ந்து இருக்கிறேன். இரண்டு பரிமாணமும் இணைந்திருந்தால் தான் உறவு முழுமையடைகிறது.

தூய ஆவியானவரின் பிரசன்னமும் இந்த இரண்டு பரிமாணங்களை என்னில் கொண்டிருக்கின்றது. அகப் பரிமாணத்தில், 'நான் கடவுளின் மகன் அல்லது மகள்' என்ற புத்துணர்வை இது தருகின்றது. புறப் பரிமாணத்தில், கடவுளை 'என் அப்பா' என அழைக்கும் உரிமைப்பேறு தருகின்றது. இந்தப் புறப் பரிமாணம் மற்றவர் முன் ஒரு சான்றாகவும் அமைகின்றது. என்னைப் பார்க்கும் எனக்கு அடுத்திருப்பவர், 'இதோ! இவர் கடவுளின் மகன்! அல்லது மகள்!' என்று சொல்லத் தொடங்குகின்றார்.

இவ்வாறாக, தூய ஆவியானவர் எனக்கு கடவுள் பிள்ளை என்ற உரிமையையும், கடவுளை அப்பா என்று அழைக்கும் பேற்றையும், மற்றவர்கள் என்னைப் பார்த்து 'இவர் கடவுளின் மகன்' என்று சொல்லும் சான்றையும் தருகின்றார்.

மூவொரு இறைவனைக் குறித்த புரிதலில், இன்றைய இரண்டாம் வாசகம் சொல்வது என்னவென்றால், தந்தைக்கும், மகனுக்கும் இடையே இருக்கும் உறவு தூய ஆவி. கடவுளி;ன் மகன் இயேசுவுக்கும், நமக்கும் உள்ள உறவிற்குப் பெயரும் தூய ஆவியே. ஆக, தூய ஆவியானவர் கடவுளைச் சார்ந்தவர் மட்டுமல்லர். உங்களையும், என்னையும் சார்ந்தவர் அவர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விண்ணேற்றம் அடையுமுன் தன் சீடர்களுக்கு மறைத்தூது கட்டளை கொடுத்ததோடு, இறுதிவரை தன் உடனிருப்பையும் வாக்களிக்கின்றார்.

மூவொரு இறைவன் நமக்கு விடுக்கும் செய்தியும் இதுதான்: 'நான் உங்களோடு'

'கடவுள் - நான் - அடுத்தவர்' - இந்த மூன்றும்தான் இன்றைய மூவொரு இறைவனின் உருவகம். அவர் என்னிடம்,  'நான் உங்களோடு' என்று வாக்களிக்கின்றார் என்றால், நான் ஒருவர் மற்றவரிடம் 'நான் உங்களோடு' என்று சொல்லும்போது மூவொரு இறைவன் என்னில் உயிர்பெறுகிறார். 'இம்மானுவேல்' ('கடவுள் நம்மோடு') என்ற கடவுளின் முதல் வாக்குறுதியே இயேசுவின் இறுதி வாக்குறுதியாகவும் இருக்கிறது.

மூவொரு இறைவனைப் பற்றி அறிந்து கொள்வது என்பது, என்னைத் துரத்திக்கொண்டே ஒரு மரத்தைச் சுற்றிக்கொண்டு நான் ஓடுவது போன்றது. நான் எத்துணை வேகமாக ஓடினாலும், என்னை நான் பிடிக்க முடியாது. ஏனெனில் 'நான்' என்பதும், 'எனது' என்பதும் ஒன்றே.

இவ்வாறே, மூவொரு இறைவனைப் பற்றிப் புரிந்து கொள்ள முயலும் ஒவ்வொரு நொடியும் நான் என்னையே புரிந்துகொள்கிறேன். என்னையும், என்னைச் சுற்றி இருக்கும் சமூகத்தையும் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு நொடியும் நான் என் மூவொரு இறைவனையே புரிந்து கொள்கிறேன்.

'நான் உங்களோடு' - இதுவே அவரின் மையம். இந்த மையம் நம் 

 மையமாகட்டும்.

 

Wednesday, 16 May 2018

தூய ஆவியார் பெருவிழா

தூய ஆவியார் பெருவிழா 

திப 2:1-11 ; கலா 5:16-25; யோவா 15:26-27; 16:12-15


மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்

குடந்தை ஆயர் அந்தோனிசாமி


அச்சம் அகற்றி அமைதியில் வாழ்வோம்

1.தூய ஆவியார் நமக்கு என்னென்ன நன்மைகளைச் செய்வார்? கடவுளின் மாபெரும் செயல்களைப் பற்றி நமக்கு எடுத்துரைப்பார் (முதல் வாசகம்).
2.இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்ற உண்மையை நமக்குச் சுட்டிக்காட்டுவார் (இரண்டாம் வாசகம்).
3.நமது மனத்திலிருக்கும் அச்சத்தை அகற்றி அமைதியை அளிப்பார் (நற்செய்தி).

தூய ஆவியார் யார்?
ஒரு கிராமத்திலிருந்து புனித இடங்களையெல்லாம் சுற்றிப்பார்க்க 100 பேர் புறப்பட்டனர். அவர்களுடைய திருப்பயணத்தில் ஒரு நாள். ஒரு காட்டின் நடுவே ஓடிக்கொண்டிருந்த ஆறு ஒன்றில் | குளித்துவிட்டு 100 பேரும் கரையேறினர். பயணத்தைத் தொடர்வதற்கு முன்னால் ஒருவர் எல்லாரையும் எண்ணினார். ஒருவர் குறைந்தார். ஒருவரை ஆறு அடித்துச்சென்றுவிட்டது எனச் சொல்லி அத்தனைபேரும் கண்கலங்கினர். அந்த நேரத்தில் அந்தப்பக்கமாக ஞானமே உருவான குரு ஒருவர் வந்தார்! அந்த ஞானி அவர்களைப் பார்த்து, ஏன் இந்த சோகம்? என்றார். அந்த மக்கள் நடந்ததைச் சொன்னார்கள். குரு எண்ணினார்! சரியாக 100 பேரும் இருந்தார்கள்! குரு, "எண்ணியவர் தன்னை எண்ணிக்கையில் சேர்க்க விட்டுவிட்டார். அதனால்தான் இந்தக் குழப்பம்" என்றார். ஞானம் பெற்ற மக்கள் ஞானிக்கு நன்றி சொல்லி, பயணத்தைத் தொடர்ந்தனர்.

இந்தக் கதையிலே வந்த ஞானியைப் போன்றவர்தான், இல்லை, இல்லை, ஞானிகளுக்கெல்லாம் ஞானியாக விளங்குபவர்தான், இல்லை, இல்லை ஞானத்தின் ஊற்றுதான் தூய ஆவியார்.

நம்மைப்பற்றி எண்ணிப்பார்க்காமல் நாம் வாழ்வதுதான் நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்குக் காரணம்! இந்த உண்மையைச் சுட்டிக்காட்டுபவர்தான் தூய ஆவியார்.

இதோ தூய ஆவியார் நம்மோடு இவ்வாறு பேசுகின்றார் :

உன்னையே நீ உற்றுப்பார் ! திருமுழுக்கு நாளன்று உனக்குள் வாழ வந்த நான் உன்னில் உடனிருப்பதை நீ அறிவாய்! அந்த அறிவு இறைவனின் மாபெரும் செயல்களைப்பற்றி உன்னைச் சிந்திக்க வைக்கும்; இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்பதை உனக்குப் புரியவைக்கும்; அச்சத்தை அகற்றி அமைதியில் உன்னை வாழவைக்கும்.

மேலும் அறிவோம் :
அச்சம் உடையார்க்(கு) அரண்இல்லை ஆங்கில்லை
பொச்சாப்(பு) உடையார்க்கு நன்கு (குறள் : 534).

பொருள் : உள்ளத்தில் அஞ்சி நடுங்குபவர்க்குப் புறத்தே எத்தகைய பாதுகாப்பு இருந்தும் பயனில்லை. அதேபோன்று, மனத்தகத்தே மறதி உடையவர்க்கு எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும் அவற்றால் பயன் எதுவும் விளையாது!
சுடரொளியே வழிகாட்டு


கல்லரைக்கு அப்பால்
அருள்பணி இ.லூர்துராஜ்


நூறு, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னே இத்தாலி யினின்று இங்கிலாந்து நோக்கிப் புறப்பட்டது கப்பல் ஒன்று. அந்தக் கப்பலின் மேல் தளத்தில் அறிவின் சிகரம், மேதை - பிற்காலத்தில் கத்தோலிக்குத் திருச்சபையில் கர்தினாலாக உயர்ந்து நின்ற - நியூ மென் ஒருவித மனக் குழப்பத்தில் அமைதியின்றி நடந்து கொண்டிருக்கிறார். உண்மை எது? அது எங்கிருக்கிறது? இயேசுவின் உண்மை வழியை உணர்த்தும் சபை எது? தான் இதுவரை வாழ்ந்து வந்த ஆங்கிலிக்கன் சபையா? தனக்கு முன் காட்சி தரும் கத்தோலிக்கு சபையா?... அந்த மனப் போராட்டத்தில் அவர் உள்ளம் துடித்துப் பாடியது தான் “Lead kindly light” என்ற அழியாத அமரத்துவம் பெற்ற ஆங்கிலப் பாடல்:

சூழ்ந்திடும் இருளில் ஊழல்கின்றேன்
அன்புச் சுடரொளியே வழிகாட்டு
பாழ்இருள் இரவிது வீடோ தொலைவினில்
பரிவொளியே வழிகாட்டு
பாதையின் முடிவில் உள்ளதோர் காட்சி
பார்த்திட வேண்டிலேன் - இங்கென்
பாதம் பெயர்த்திட ஓரடி போதும்
பரஞ்சுடரே வழிகாட்டு
என்னை நீ அழைத்துச் செல் என நின்னை
ஏழையேன் இறைஞ்சியதில்லை
என்றுமே முரடாய் என்வழி சென்றேன்
என்னினும் வழிகாட்டு
பகட்டொளி உலகப் படரிலே படர்ந்தேன்
பயம் என்னைப் பற்றிய போதும்
அகம்பிடித் தலைந்தேன் அதையெல்லாம் எண்ணாது
அருஞ்சுடரே வழிகாட்டு.

"உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும் போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்” (யோ.16:13) என்ற இயேசுவின் வாக்குறுதியே நியூமெனைப் பாட வைத்தது.

உண்மையின் ஆவியானவர் எப்படியெல்லாம் மனித வாழ்வில் செயல்படுகிறார்!

நியூமென் கத்தோலிக்குத் திருச்சபையைத் தழுவிய போது அவர் விட்டுக் கொடுத்தது ஏதோ ஒரு கொள்கையை மட்டுமல்ல. தனது வழியை, தானே தெரிந்து கொள்ள வேண்டிய உரிமையை முழுதும் தூய ஆவியிடம் ஒப்படைத்தார். அதனால்தான் அவருடைய மனமாற்றத்தைத் தூய பவுல், தூய அகுஸ்தின் போன்றவர்களின் மனமாற்றத்தோடு ஒப்பிடலாம். தனது வாழ்வின் கதியை, தானே நிர்ணயிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பை தூய ஆவியிடம் ஒப்படைக்கத் துணிவும் தியாகமும் வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு கடவுளின் அழைப்பை ஏற்று அவர் எங்கு நடத்திச் சென்றாலும் சரி என்ற மனப்பான்மையோடு அவரைப் பின் சென்றது ஒரு கண நேரத்தில் தோன்றிய உணர்ச்சியின் விளைவு அன்று. அது நீண்ட மனப்போராட்டத்தில் பிறந்த தூண்டுதலே யாகும். இதையே தன்னை முழுவதும் கையளித்தல் என்கிறோம். இயேசு எதிர்பார்க்கும் மனநிலை இது!

தன்னை முழுவதும் தூய ஆவியிடம் கையளித்தல் என்பது உடைத்து உருவாக்க நாம் கொடுக்கும் அனுமதியாகும். அப்போது அச்சுறுத்தும் ஆவியாகக் கூடத் தோன்றுவார். ஆவியானவரைப் பயன்படுத்தும் மக்களாக இல்லாமல் அவரால் பயன்படுத்தப்படும் கருவிகளாக வாழுவோம்.

உயிருள்ள இறைவனின் ஆவியே என்னுள் எழுந்தருளும்
உடையும் என்னை உருவாக்கும்
நிரப்பும் என்னைப் பயன்படுத்தும்
தனியாக ஒருமையிலும் (என்னுள்) குழுவாகப் பன்மையிலும் (எம்முள்) உணர்ந்து அர்ப்பணித்துப் பாட வேண்டிய பாடல் இது.

எதனால் நிரப்புகிறார்? தனது வரங்களினால், கொடைகளினால், கனிகளினால் நிரப்பிப் புத்துயிர் அளிக்கும் ஆற்றலே தூய ஆவி.

ஆவியின் அருங்கொடைகள் 9 என்று பவுல் ஒரு பட்டியல் தருகிறார். ஞானம் நிறைந்த சொல் வளம், அறிவு செறிந்த சொல் வளம், நம்பிக்கை, பிணி தீர்க்கும் அருள்கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்குரைக்கும் வரம், ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் திறன், பரவசப் பேச்சு, அப்பேச்சை விளக்கும் ஆற்றல் (1 கொரி. 12:8-11)

ஆவியின் வரங்கள் (ஆறா? ஏழா?) என இறைவாக்கினர் எசாயா சொல்வது: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத் திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப் பற்றிய அச்சம் (எசாயா 11:2).

ஆவியின் கனிகளோ 9. அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை , கனிவு, தன்னடக்கம். (கலா.5:22)

இவற்றில் வரங்களும் கொடைகளும் மானியம் போல இறைவன் நமக்கு அருள்பவை. அவற்றைவிட முக்கியமானவைகள் கனிகள். இவை தூய ஆவியோடு ஒத்துழைத்து நாமே வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்புகள். கனியைக் கொண்டே மரத்தை அறிகிறோம்,

இந்த வரங்கள், கொடைகள், கனிகள் எந்த அடிப்படையில் தொகுக்கப்பட்டன என்பதே கேள்விக்கும் சிந்தனைக்கும் உரியது. அவை பற்றி எந்தக் குறிப்பும் நற்செய்தி ஏடுகளில் இல்லை. "இயேசு அவர்கள் மேல் ஊதி தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று ஆவியின் கொடையாக வாக்களித்தது ஒன்றே ஒன்றுதான். அது மன்னிக்கும் வரம் "எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப் படும், எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” (யோவான் 20:22,23)

திருச்சபையின் முக்கிய செயல்பாடுகள் இரண்டு. இரண்டுக்குமே ஊற்று தூய ஆவியே.

1. செபம். “தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார். எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது. தூய ஆவியார் தாமே சொல் வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுக்களின் வாயிலாய் நமக்காகப் பரிந்து பேசுகிறார்” (உரோமை. 8:26)

2. அன்பு. (மன்னிக்கும் அன்பு) “நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. (உரோமை 5:5).

எல்லாவற்றிற்கும் மேலாக, தூய ஆவியே கடவுள் நமக்குத் தந்த மிகப் பெரிய கொடை. (லூக். 11:13)


மறையுரைமொட்டுக்கள்
அருள்பணி இருதயராஜ்


ஒரு பங்குத் தந்தை தனது பங்கிலே தங்குவதில்லை, ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றியபின் உடனடியாக, "மோட்டார் சைக்கிளில்" மாயமாக மறைந்து விடுவார். ஒரு ஞாயிறு அன்று திருப்பலி திறைவேற்றிய உடனே "மோட்டார் சைக்களில்' வழக்கம் போல் பறந்து சென்ற அவர், ஒரு பெரிய குழியில் விழுந்து விட்டார்; வெளியே வரமுடியாமல் திணறினார், அவ்வழியே சென்று பங்கு மக்கள், "இவர் அடுத்த ஞாயிற்றுக்கிழமை தான் நமக்குத் தேவைப்படுவோர், அதுவரை அவர் இக்குழியிலேயே கிடக்கட்டும்" என்று சொல்லிவிட்டுச் சென்றனர்,

இன்று சுத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து மக்கள் பல்வேறு சபைகளுக்குச் செல்வதற்குப் பல காரணங்கள் கூறுகின்றனர், அக்காரணங்களில் ஒன்று. "பங்குத் தந்தைக்கு மேய்ப்புப்பணி சார்ந்த அக்கறையில்லை, அவர் பங்கில் தங்குவதில்லை, பங்கு மக்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்திப்பதில்லை ."

இப்பின்னணியில் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் 'நல்லாயன் உவமை” முக்கியத்துவம் பெறுகிறது. பழைய உடன்படிக்கையில், கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நிலவிய உறவு ஓர் ஆயனுக்கும் அவருடைய ஆடுகளுக்கும் இடையே நிலவிய உறவுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது (எசா 40:11; எரே 23:3-4; எசே 34:11-18: திபா 23).

நல்லாயனுடைய தனிப்பண்புகள்: "அவர் இரவும் பகலும் தன் ஆடுகளுடன் இருக்கிறார். அவற்றின்மீது அக்கறை கொண்டு, அவற்றின் தேவைகளை நிறைவுசெய்து, அவற்றிற்காகத் தம் உயிரையும் கொடுத்து, அவற்றைக் கொடிய விலங்குகளிடமிருந்து பாதுகாக்கிறார்."

ஆனால், போலி ஆயர்கள் தங்கள் ஆடுகளை மேய்க்காமல் தங்களையே மேய்த்துக் கொண்ட அவலநிலையில் (எசா 24:7-8). 'என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன்' என்று கடவுள் வாக்களித்தார் (எரே 3: 11:5), கடவுளால் வரக்களிக்கப்பட்ட ஒப்புயர்வற்ற ஆயர் இயேசு கிறிஸ்துவே. அவர் தம் ஆடுகள் ஒவ்வொன்றையும் தனிப்பட்ட முறையில் அறிந்து, அன்புசெய்து. அவற்றிற்காகத் தன் இன்னுயிரையும் கையளிக்கிறார். மேலும் அவரது மந்தையைச் சாராத மற்ற ஆடுகளையும் கூட்டிச் சேர்த்து ஒரே மேய்ப்பன் கீழ் ஒரே மந்தையை உருவாக்குகிறார் (யோவா 10:14-16),

நல்லாயன் கிறிஸ்துவைப் பின்பற்றி, திருப்பணியாளர்கள், குறிப்பாக பங்குத்தந்தையர்கள். தங்களுடைய பங்கில் தங்கியிருந்து, சிறுவர்களிடம் அவர், "பரிசுத்த ஆவியார் எப்போது வருகிறார்?" என்று கேட்டார், அதற்கு அவர்கள்: "ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறார்” என்று பதில் சொன்னார்கள். இது கதையல்ல, நிஜம்!

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறவர் தூய ஆவியார் அல்ல. அவர் நம்பிக்கை கொள்வோர் உள்ளத்தில் நிரந்தரமாகக் குடி கொண்டுள்ளார், "தூய ஆவியாரின் நிரந்தரமான இயக்கத்தில் விசுவாசத்தில் வாழ்கிறவரே கிறிஸ்துவர்", கிறிஸ்தவர் களுக்கு அருமையான இலக்கணம் இது! உண்மையில், திருத்தூதர் பவுல், 'கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களோ கடவுளின் மக்கள்' (உரோ 8:14) என்றும், 'கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல' (உரோ 8:9) என்றும், "தூய ஆவியின் தூண்டுதலன்றி 'இயேசு ஆண்டவர்' என்று எவரும் கூற இயலாது' (1கொரி 12:13) என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார். தூய ஆவியார் நம்மை அகநிலையிலும் புறநிலையிலும் இயக்கி வருகிறார், அகநிலையில் நம்முள் குடியிருந்து நம்மை அவரது ஆலயமாக்கிப் புனிதப்படுகிறார். புறநிலையில் நம்மை இயேசுவுக்குச் சாட்சிகளாகத் திகழச் செய்கின்றனர்.

நமது நாட்டு ஞானிகள் நமது உடலைப் பற்றி இழிவாகப் பேசுவர், நமது உடல் 'ஒரு புழுக்கூடு: வெறும் கட்டை.' காற்றடித்தால் கீழே விழுகின்ற தென்னமட்டை; பாம்பு கழற்றிப் போடும் சட்டை; அதை உற்றுப்பார்த்தால் வெறும் லொட லொட்டை' என்றெல்லாம் கூறுவர், ஆனால் தூய பவுல், " நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?" (1கொரி 3:16) என்று கேட்கிறார். மேலும், காமச்சகதியில் புரண்ட கொரிந்தியர்களுக்கு, "உடல் பரத்தமைக்கு அல்ல, ஆண்டவருக்குரியது (1கொரி 6:13) என்று உரைக்கிறார்,

ஒரு 'குண்டு' அம்மா பங்குத் தந்தையிடம், "நானுமா பரிசுத்த ஆவியின் ஆலயம் என்று கேட்டதற்கு, பங்குத் தந்தை அவரிடம், "நீங்கள் பரிசுத்த ஆவியின் 'பசிலிக்கா' என்றாராம்!

தூய ஆவியார் நமது உள்ளத்தின் இனிய விருந்தினர், விருந்தினர்களை மென்மையாக, அனிச்ச மல்) ரைப் போல் நடத்த வேண்டும், வித்தியாசமாக அவர்களைப் பார்த்தால், அவர்கள் முகம் வாடிவிடும் என்கிறார் வள்ளுவர்.

'மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து,
நோக்கக் குழையும் விருந்து' குறள் 90)

நமது உள்ளத்தின் விருந்தினரான தூய ஆவிக்கு நமது முறைகெட்ட சொல்லாலும் செயலாலும் வருத்தம் வருவிக்கவோ (எபே 4:30). அல்லது அவரது செயல்பாட்டைத் தடுக்கவோ (1தெச 5:19) கூடாது.


Tuesday, 8 May 2018

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா

திப 1:1-11; எபே 4:1-13; மாற் 16:15-20


கடவுளால் ஆகாதது ஒன்றுமில்ல.

மகிழ்ச்சியூட்டும் மறையுரை

குடந்தை ஆயர் அந்தோனிசாமி


விண்ணகம் எழுந்து செல்வதற்கு முன் இயேசு கிறிஸ்து அவரது சீடர்களுக்கும், உலக மக்களுக்கும் ஓர் அருமையான இரகசியத்தை வெளிப்படுத்திச் சென்றார். அது என்ன இரகசியம்? நம்பிக்கைக்கொள்வோர் மீட்பு பெறுவர் என்பதுதான் அது.

பழைய ஏற்பாட்டில் நோவா வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்டது நம்பிக்கையினால்! ஆபிரகாம் நம்பிக்கை கொண்டோரின் தந்தையாகியது நம்பிக்கையினால்! செங்கடல் இரண்டாகப் பிரிந்தது நம்பிக்கையினால் ! வானத்திலிருந்து மன்னா பொழிந்தது நம்பிக்கையினால்! கற்பாறை இரண்டாகப் பிளந்தது நம்பிக்கையினால்! புதிய ஏற்பாட்டில் மரியா கடவுளின் தாயானது நம்பிக்கையினால்! யோசேப்பு நேர்மையாளரானது நம்பிக்கையினால் நோயாளிகள் உடல் நலம் பெற்றது நம்பிக்கையினால்! பாவிகள் பாவமன்னிப்புப் பெற்றது நம்பிக்கையினால்! இறந்தவர் உயிர்பெற்று எழுந்தது நம்பிக்கையினால்!

ஆம். உலகத்தை எல்லா துன்ப துயரங்களிலிருந்தும் விடுவித்து அதற்கு மீட்பளிக்கும் ஆற்றல் நம்பிக்கைக்கு உண்டு!

அமைதியான நதியினிலே ஓடம்! அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்! காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்! அந்தக் கரைதான் நம்பிக்கை!

இப்படிப்பட்ட நம்பிக்கையை நமது உள்ளத்திற்குள்ளும், இல்லத்திற்குள்ளும் ஊற்றிக்கொள்வோம். முனிவர் ஒருவர் ஒரு வெற்றுப்பானையை அவரது சீடர்கள் முன்னால் வைத்துவிட்டு, அவரது சீடர்களைப் பார்த்து, இதற்குள் என்ன இருக்கின்றது? என்று கேட்டார். சிலர், ஒன்றுமில்லை என்றார்கள். சிலர், இதற்குள் காற்று இருக்கின்றது என்றார்கள்.

முனிவர், காற்று இருக்கின்றது என்று சொன்னவர்களைப் பாராட்டிவிட்டு, இதற்குள் இருக்கும் காற்றை வெளியே எடுக்க முடியுமா? என்று கேட்டார்.

எல்லா சீடர்களும், முடியாது என்றார்கள். முனிவரோ, முடியும் என்றார். எப்படி? என்று சீடர்கள் கேட்டார்கள். அதற்கு முனிவர், இந்தப் பானைக்குள்ளே தண்ணீரை ஊற்றினால், இதற்குள்ளிருக்கும் காற்று வெளியேறிவிடும் என்றார்.

தூய ஆவியாரின் துணையோடு (முதல் வாசகம்) நம்பிக்கையை, அதாவது கடவுளின் வல்லமையால் ஆகாதது ஒன்றுமில்லை (இரண்டாம் வாசகம்) என்ற எண்ணத்தை நமது இல்லத்திற்குள்ளும். உள்ளத்திற்குள்ளும், மனத்திற்குள்ளும் ஊற்றிக்கொள்வோம்! அப்போது நாம் அனைவரும் மீட்கப்பட்டவர்களாய் நிலா போல உலா வருவோம்.

மேலும் அறிவோம் :
செயற்கரிய செய்வார் பெரியர் ; சிறியர்
செயற்கரிய செய்கலா தார் (குறள் : 26).

பொருள் : பிறரால் செய்வதற்கு அரிய பெருமைதரும் நல்ல செயல்களை நிறைவேற்றுபவர் பெரியவர் என்று பாராட்டப்படுவர். சிறுமையான செயல்களை மட்டுமே செய்து பெருமையான நற்பணிபுரியாதவர் சிறியவர் ஆவர்!


மறையுரை மெட்டுக்கள்

அருள்பணி இருதயராஜ்


மறைக்கல்வி வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம், “விண்ணகம் செல்ல விரும்புவர்கள் கைகளை மேலே உயர்த்துங்கள் " என்று கேட்டார், ஒரு மாணவனைத் தவிர மற்ற எல்லா மாணவர்களும் கைகளை உயர்த்தினர். கையை உயர்த்தாத மாணவனிடம், "ஏப்பா, உனக்கு விண்ணகம் செல்ல விருப்பம் இல்லையா?” என்று ஆசிரியர் கேட்டபோது, அவன், "விண்ணகம் செல்ல எனக்கு விருப்பம் தான்; ஆனால், இன்று பள்ளி முடிந்தவுடன் வேறு எங்கும் போகாமல் நேராக வீட்டிற்கு வரும்படி எங்கப்பா சுன்ண்டிப்பாய்ச் சொல்லியிருக்கிறார் " என்றான், நமக்கு விண்ணகம் செல்லப் பிரியம் என்றாலும், இந்த மண்ணகத்தை விட்டுப் போகப்பிரியமில்லை!

அன்னைத் தெரசா இறக்கும் வேளையில், அவரிடம் ஏழைக்குழந்தைகள், "அம்மா! எங்களை அனாதைகளாக விட்டுவிட்டு விண்ணகம் செல்லாதீர்கள், அங்கே நீங்கள் சேவை செய்ய ஏழைகள் இல்லை" என்று சொல்லி அழுதார்களாம்!

கிறிஸ்து விண்ணகம் செல்லாமல், எப்போதும் இம் மண்ணகத்தில் வாழ்ந்து மக்களுக்குப் பணிபுரிந்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அவர் ஏன் விண்ணகம் சென்றார், "அவர் விண்ணகம் சென்றது இம்மண்ணகத் துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அல்ல; நம் முதல்வரும் தலைவருமான அவர் சென்ற அதே விண்ணகத்திற்கு, அவருடைய சீடர்களாகிய நாமும் செல்வோம் என்னும் நம்பிக்கையை வளர்ப்பதற்காகவே" என்று இன்றைய திருப்பலியின் நன்றியுரையில் திருச்சபை தெளிவாக எடுத்துரைக்கின்றது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், திருச்சபை கிறிஸ்துவின் உடலென்றும், அவரே அவ்வுடலுக்குத் தலையாய் இருக்கிறார் என்றும் கூறுகிறார் (எபே 1:22-23) எவ்வாறு தலையிலிருந்து உடலைப்பிரிக்க இயலாதோ, அவ்வாறே தலையாகிய கிறிஸ்துவிடமிருந்து அவரது உடலா கிய திருச்சபையைப் பிரிக்க இயலாது. எனவே, நம் தலையாகிய கிறிஸ்து அடைந்த அதே விண்க மகிமையில் அவரது உடலாகிய நாமும் பங்கு பெறுவது. உறுதியாகிவிட்டது.

விண்ணகம் சென்ற கிறிஸ்து மீண்டும் மண்ணகம் திரும்புவார் என்று இன்றைய முதல் வாசகத்தில் வானதூதர்கள் சீடர்களுக்கு அறிவிக்கின்றனர் (திப 1:11). அவர் மீண்டும் வருவார் என்பது எவ்வளவு உறுதியானதோ, அவ்வளவு உறுதியற்றது அவர் எப்போது வருவார் என்பது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை அறியமுயல்வது ஆணவம் மட்டுமல்ல, இறை நிந்தையுமாகும். ஏனெனில், கடவுள் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது நமக்கு உரியது அல்ல (திப 1:7) என்று இயேசுவே குறிப்பிட்டுள்ளார்.

உலகின் முடிவைப் பற்றியும் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையைப் பற்றியும் கத்தோலிக்கத் திருச்சபை போதிய அளவு வலியுறுத்துவதில்லை என்று ஏனைய சபைகள் சுமத்தும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, ஏனெனில், ஒவ்வொரு திருப்பலியிலும் "நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும், எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும்
மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்" என்று திருச்சபை ஓயாது ஓதிக்கொண்டிருக்கிறது!

ஆடிமாதத்தில் பலத்த காற்று வீசுகிறது. ஏனென்றால், ஆடிமாதத்தில் புதிய தம்பதியர்களைப் பிரித்து விடுகின்றனர். அவ்வாறு பிரிக்கப்பட்ட தம்பதிகள் ஒருவர் மற்றவரை நினைத்து ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர். அவர்களுடைய ஏக்கப் பெருமூச்சு தான் பலத்த காற்றாக மாறிவிடுகிறதாம்!

திருச்சபை என்னும் மணமகளும் தனது மனமகனாகிய கிறிஸ்து எப்போது திரும்புவார் என்று எண்ணி எண்ணி ஏக்கப் பெருமூச்சு விடுகின்றது. தொடக்கக் காலக் கிறிஸ்துவர்கள் அடிக்கடி "மாரனாத்தா", அதாவது, "ஆண்டவரே வருக!" என்று கூவி அழைத்தனர் (1கொரி 16:22), விவிலியத்தின் இறுதிவாக்கியம்' "ஆண்டவராகிய இயேசுவே வாரும்" (திவெ 22:20)

தன் கணவர் தன்னை விட்டுப்பிரிந்து வீடு திரும்பிவராத நிலையில் "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிந்த கணவர் இன்னும் வீடு திரும்பலை." என்று சோகத்துடன் பாடும் மனைவியைப் போல் இராது, திருச்சபை தன்னிடம் கிறிஸ்து ஒப்படைத்துள்ள மீட்புப்பணியை முழு மூச்சுடன் ஆற்றிக் கொண்டிருக்கிறது.
இன்றைய நற்செய்தி உணர்த்தும் உண்மைகள் பின்வருமாறு:

1.விண்ணகம் செல்லுமுன் கிறிஸ்து, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவிக்கும் பொறுப்பைத் திருச்சபையிடம் ஒப்படைத்துள்ளார், கிறிஸ்துவே நற்செய்தியின் முதலும் முடிவுமாவார், ஒவ்வொரு சீடரும் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அறிவிக்கும் திருத்தூதராவார்.

2.முழு மனிதனையும் குணமாக்கும் பணி திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் சீடர்கள் பேய்களை ஒட்டலாம்; நோய்களைக் குணமாக்கலாம்; பயமின்றிப் பாம்பைக் கையால் பிடிக்கலாம்; கொடிய நஞ்சையும் அருந்தலாம், அதாவது, சீடர்களால் மேற்கொள்ள முடியாத தடைகளோ தீயசக்திகளோ இவ்வுலகில் எதுவுமில்லை .

3. திருச்சபை தனது மீட்புப் பணியில் தனித்து இயங்கவில்லை, கிறிஸ்துவே திருச்சபையில் உடனிருந்து செயலாற்றுகிறார். "ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழும் அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப் படுத்தினார்” (மாற் 16:20).

திருச்சபை எவ்வளவுக்கு விண்ணக வாழ்வை எதிர்பார்க்கிறதோ, அவ்வளவுக்கு இம்மண்ணக மாந்தரின் முன்னேற்றத்திற்காக அது உழைக்க அழைக்கப்பட்டுள்ளது. மண்ணசு நலன்களில் அக்கறை கொண்டு, விண்ணக நலன்களை விருப்பமுடன் நாடவேண்டும். "பாச்சி பாச்சி” என்று அழுத குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாததால் "பூச்சி பூச்சி" என்று சொல்லி அக்குழந்தையை ஏமாற்றியதுபோல், தாயாகிய திருச்சபை விண்ணக வாழ்வைச் சுட்டிக்காட்டிவிட்டு மண்ணக வாழ்வை இருட்டடிப்புச் செய்யக்கூடாது. "உமது அரசு வருக!

எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்." எனவே மண்ணக வாழ்வையும் விண்ணக வாழ்வையும் பிரிக்காமல் இரண்டையும் ஒருங்கிணைத்து வாழக் கற்றுக் கொள்வோமாக!


வாழும் போதே மறுமைக்கு வசதி செய்து கொள்வோம்
கல்லறைக்கு அப்பால்
அருள்பணி இ. லூர்துராஜ்

1917ம் ஆண்டு மே 13ம் நாள். நண்பகல் வேளை. போர்த்துக்கல் நாட்டில் ஃபாத்திமா என்ற சிற்றூருக்கருகில் லூசியா, ஜெசிந்தா என்ற இரு சிறுமிகளும் ஃபிரான்சிஸ் என்ற சிறுவனும் கண்ட காட்சி. உடல் எல்லாம் ஒளிக்கதிர் பாய, வார்த்தைக்கோ வருணனைக்கோ அடங்காத வனப்போடு தோன்றிய அந்த அழகுப் பெண்மணியிடம் - அன்னை மரியாவிடம் - அச்சிறுவருள் சற்று மூத்தவளான லூசியா உரையாடிக் கேட்ட கேள்விகளும் பெற்ற பதில்களும்:

''நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?''
"நான் மோட்சத்திலிருந்து வருகிறேன்''.
“உங்களுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?''
"தொடர்ந்து ஆறுமாதம் ஒவ்வொரு மாதமும் 13ம் நாள் இதே நேரம் இதே இடத்துக்கு வர வேண்டும் .
"நான் மோட்சத்துக்குப் போவேனா?"
"ஆம் நீ போவாய்" "ஜெசிந்தா?"
"அவளும் போவாள்"
"பிரான்சிஸ்?” “அவனும் போவான், ஆனால் அதற்கு முன் அவன் சிறிது ஆழமாக செபிக்க வேண்டும்”

இது நடந்து முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு திருப்பயணிகள் ஃபிரான்சிஸிடம் கேட்ட கேள்விகள்!
“தம்பி எதிர்காலத்தில் நீ என்ன செய்யப் போகிறாய்?” "தச்சுத் தொழிலில் ஈடுபாடா?" "இல்லை ''
"பட்டாளத்தில் பணியா?" "இல்லை". “மருத்துவ மேற்படிப்பா?" "இல்லை" "குருவாக ஆசையா?" "இல்லை "
"திருப்பலி நிறைவேற்ற, பாவ சங்கீர்த்தனம் கேட்க, கோவிலில் செபிக்க இதையெல்லாம் நீ விரும்பவில்லையா?"
''விரும்பவில்லை , குருவாக விருப்பமில்லை .” “அப்போ, நீ என்னதான் செய்யப் போகிறாய்?''
''நான் இறக்க வேண்டும். மோட்சத்துக்குப் போக வேண்டும்”.

அத்தனை சிறிய வயதில் அந்தப் பிஞ்சு மனதில் இத்தனை ஆசைகள் - விண்ணகம் செல்ல வேண்டும், கடவுளைச் சென்றடைய வேண்டும் என்று!

பிறந்த 40ஆம் நாள் ஆலயத்தில் அர்ப்பணம். அந்த அர்ப்பணம் நிறைவில் உயிர்த்த 40ஆம் நாள் ஒலிவமலையில் விண்ணேற்றம். இயேசு விண்ணேறிச் சென்றது இரண்டு காரணங்களுக்காக:

1. நமக்கென ஓர் உறைவிடத்தைத் தயார் செய்ய: “என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன... நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின், திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். (யோவான் 14:2,3). வாழ்க்கை என்பதே ஒரு பயணம். நாமெல்லாம் வழிப்போக்கர்கள், “ஏனெனில் நிலையான நகர் நமக்கு இங்கு இல்லை, வரப்போகும் நகரையே நாம் நாடிச் செல்கிறோம்” (எபி.13:14).

2, தந்தையிடம் நமக்காகப் பரிந்து பேச: "தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை, அவர் முற்றும் மீட்க வல்லவராய் இருக்கிறார். அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்” (எபி.7:25) “ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து (1 யோ .2:1).


நற்செய்தி ஊழியர் ஒருவர், 'இன்ன நாளில் இறப்பு' என்று எழுதுவதை விடுத்து இன்ன நாளில் விண்ணேற்பு' என்று கல்வெட்டில் பொறிப்பதில் தனி ஆறுதல் காண்பாராம். நம்பிக்கையாளருக்கு சாவு என்பது அறியாத உலகை நோக்கிய இருண்ட பயணம் அல்ல. மகிமைக்கான வாசல். நாம் சாகும் போது நம் உடல்தான் புதைக்கப் படுகிறது. ஆன்மா? அது விண்ணேறிச் செல்கிறது. அதனால்தான் பவுல் சொல்வார்: “நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம். இவ்வுடலை விட்டு அகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறேன். எனவே நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் அதிலிருந்து குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராய் இருப்பதே நம் நோக்கம்” (2 கொரி. 5:7-9)

விண்ணக வாழ்வுக்கான உரிமைப் பேற்றை திருமுழுக்கின் வழியாகவே பெற்றோம். நம் நன்மைத்தனத்தின் பொருட்டு அல்ல, இந்த அரிய பேற்றினை இறைவன் நமக்குக் கொடுத்தது அவரது எல்லையற்ற இரக்கத்தினால் மட்டுமே!

எப்படியாவது மோட்சத்துக்குச் சென்று விட முடிவெடுத்தான் ஒருவன். அதற்கான வழியைத் தேடி அலைந்தான். துறவு வாழ்வைத் தழுவினால் பேரின்ப வீட்டை அடைய முடியும் என்ற முடிவுக்கு வந்தான். துறவு வாழ்வு கடினமானது என்றனர் பலரும். இருப்பினும் துறவு வாழ்வைக் கடைப்பிடிக்க இயலாது என்று உணர்ந்தும் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்கிறான்: "நான் இப்போது துறவியாகி விட்டேன். இது மோட்சத்தில் ஒரு கால் வைத்து விட்டதற்குச் சமம். துறவு வாழ்வை என்னால் முற்றிலும் வாழ முடியா விட்டாலும், நான் மோட்சம் போவது உறுதி”.

இந்த மனிதனைப் போலவே நம்மில் பலர் இருக்கிறோம். திருமுழுக்குப் பெற்றதனாலேயே மோட்சத்திற்குப் பயணச்சீட்டு வாங்கி விட்டதாக நினைக்கிறோம். ஆனால் மாட்சி பெற்ற இயேசுவின் மனிதத் தன்மையோடு, நமது மனிதத் தன்மையும் ஐக்கியமாகவில்லையென்றால் நம் பயணச்சீட்டு செல்லாமல் போய்விடும்.

கங்கைக் கரையில் இருந்த அந்த அரசில் விந்தையான ஒரு வழக்கம். பட்டத்து யானை மாலை போட்டு அரசனைத் தேர்ந்தெடுக்கும். அவன் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்வான். பின் அவனை அக்கரையில் உள்ள காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவார்கள். அங்கே தன்னந்தனியாய் பட்டினி கிடந்து மடிய வேண்டியதுதான். ஐந்து ஆண்டுகள் ஆனந்த அனுபவம், முடிவில் அலறி அழுது புலம்புவது. வாடிக்கையாக நடப்பது இது.

ஆனால் ஒருமுறை அக்கரை செல்லப் படகேறிய அரசன் பாடிக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தான். அவனால் எப்படி ஆனந்தமாக இருக்க முடிகிறது என்று அமைச்சன் வியந்து கேட்டபோது "என்னோடு வந்து பார்" என்றான் அந்த முன்னாள் மன்னன். கூடச் சென்று பார்த்த போது அங்கே காடுகள் இல்லை, மாட மாளிகை, செல்வச் செழிப்பு! அரசனாக இருந்த போதே அவன் செய்து கொண்ட முன்னேற்பாடுகள்.

இம்மையில் இன்பம் துய்க்கும் போதே மறுமைக்கும் வசதி செய்து கொள்வது எவ்வளவு அறிவுடைமை!விண்ணேற்றம் - பின்புலங்களும், தடைகளும், புரிதல்களும்

அருள்பணி ஏசு கருணாநிதி மதுரை மறைமாவட்டம்


'ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர்,

பாவத்தையும் இறப்பையும் தோற்கடித்த வெற்றி வீரர்,

வானதூதர் வியப்புற வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார்.

இவ்வாறு அவர் சென்றது

எங்கள் தாழ்நிலையை விட்டு அகல வேண்டும் என்பதற்காக அன்று.

மாறாக, எங்கள் தலைவரும் முதல்வருமாகிய அவர்

முன்னரே சென்ற அவ்விடத்திற்கு

அவர் உறுப்பினர்களாகிய நாங்களும்

அவரைப் பின் தொடர்ந்து செல்வோம் என்று

நம்பிக்கை கொள்வதற்காகவே'

இன்றைய திருப்பலியின் தொடக்கவுரையில் (பழைய மொழிபெயர்ப்பு) நாம் காணும் தூய அகுஸ்தினாரின் இவ்வார்த்தைகள் இன்றைய நாளின் பொருளை மிக நேர்த்தியாக நமக்கு எடுத்துரைக்கின்றன.

இயேசுவின் விண்ணேற்றம் பற்றி இரண்டாம் ஏற்பாட்டில் நாம் மூன்று இடங்களில் வாசிக்கின்றோம்: மாற்கு 16:19-20, லூக்கா 24:50-53 மற்றும் திப 1:9-11. இதில் விநோதம் என்னவென்றால் விண்ணேற்றத்தின்போது உடனிருந்த சீடர்களான மத்தேயுவும், யோவானும் இந்த நிகழ்வை பதிவு செய்யாமலே விடுகின்றனர். மேலும், மாற்கு 16:9-20 இறைவாக்குப் பகுதியை (இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி) விவிலியத்தில் பார்த்தால் இந்தப் பகுதி அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும். காரணம், இது மாற்குவின் உண்மையான நற்செய்திப் பகுதியில் இல்லை. மாறாக, பின்னர் அவரது சீடர்கள் சேர்த்துக்கொண்ட பிரதியில்தான் இருக்கிறது. மத்தேயு நற்செய்தியாளர் ஏன் பதிவு செய்யவில்லை? என்ற கேள்விக்கு ஆய்வாளர்கள் சொல்லும் பதில் என்னவென்றால், 'கடவுள் நம்மோடு' என வந்த இயேசு எப்படி திரும்பிச் செல்ல முடியும்? அவர் என்றும் நம்மோடுதான் இருக்கிறார் என்று மத்தேயு இதன் வழியாக இயேசுவின் உடனிருப்பைச் சொல்கிறாராம் நமக்கு.

லூக்கா தன் நற்செய்தியிலும், தன் திருத்தூதர் பணிகள் நூலிலும் இந்த நிகழ்வை எழுதுகின்றார். ஆனால், இரண்டு இடங்களிலும் வௌ;வேறு விதமாக எழுதுகின்றார். விண்ணேற்றம் பெத்தானியாவில் நிகழ்வதாக நற்செய்தியில் எழுதும் லூக்கா, திருத்தூதர் பணிகள் நூலில் எருசலேமில் நிகழ்வதாக எழுதுகிறார். (மதுரைக்கும், தூத்துக்குடிக்குமான தூரம் இது!) நற்செய்தியில் இயேசு ஆசீ கூறுகின்றார். ஆனால், இங்கே பேசிக்கொண்டிருக்கிறார். அங்கே சீடர்கள் வணங்கிவிட்டு எருசலேம் திரும்புகிறார்கள். ஆனால் இங்கே வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மிக முக்கியமாக, அங்கே இயேசுவே விண்ணிற்கு ஏறிச்செல்கின்றார் (செய்வினை). ஆனால் இங்கே அவர் விண்ணிற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றார் (செயப்பாட்டுவினை).

இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட பதிவுகள் இருக்க இயேசு விண்ணேற்றம் அடைந்தாரா? என்ற கேள்வியும் எழுகின்றது.

இயேசுவின் விண்ணேற்றம் ஒரு வரலாற்று நிகழ்வு என்று சொல்வதை விட இறையியல் நிகழ்வு என்றே நான் சொல்வேன். லாஜிக் இதுதான்! கீழே வந்த இயேசு, மேலே ஏறிச்செல்ல வேண்டும். அவர் இறக்க முடியாது. ஏன்னா அவர் கடவுள். இங்கேயே இருக்கவும் முடியாது. ஏன்னா, வர்ற யாரும் இங்கே நிரந்தரமாகத் தங்கிவிடமுடியாதுதானே. ஆக, இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட ஒன்றுதான் விண்ணேற்றம்.

முதல் ஏற்பாட்டில் முதன்முதலாக விண்ணேற்றம் அடைந்தவர் ஏனோக்கு என்றாலும் (தொநூ 5:24), தொடர்ந்து வந்த மோசே (இச 34) மற்றும் எலியா (2 அரச 2:2) தான் விண்ணேற்றம் அடைந்தவர்கள் எனச் சொல்லப்படுகின்றனர். மோசேயின் இறப்பு பற்றியும், அவருடைய கல்லறை எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது என்றும் இச 34 சொன்னாலும், அவர் விண்ணேற்றம் அடைந்ததாகவே இரபிக்களின் நூல்கள் சொல்கின்றன. ஆக, இயேசுவின் உருமாற்ற நிகழ்வின்போது அவருடன் உடனிருந்த மோசே மற்றும் எலியாவைப்போலவே இயேசுவும் விண்ணேற்றம் அடைந்துவிட்டார் என இயேசுவை புதிய மோசேவா, புதிய எலியாவாக முன்வைக்கின்றார் லூக்கா.

ஆக, விண்ணேற்றம் இயேசுவுக்கு தேவைப்பட்டதோ இல்லையோ, இயேசுவின் சீடர்களுக்கும், அவரைத் தொடர்ந்து வந்த திருச்சபைக்கும் தேவைப்பட்டது. இன்னும் தேவைப்படுகிறது.

விண்ணேற்றம் பற்றிய புரிதலுக்கு மூன்று பின்புலங்கள் தேவை:

பின்புலம் 1: இருதுருவ சிந்தனை

ஒளி-இருள், பகல்-இரவு, நன்மை-தீமை என இருதுருவ சிந்தனைக்குப் பழக்கப்பட்டது மனித மனம். இந்த இருதுருவ சிந்தனையின் படி, இறங்கி வரும் யாரும் ஏறிச் செல்ல வேண்டும். ஆக, இறங்குதல்-ஏறுதல் அவசியம். இயேசு, கடவுளின் மகன், பிறந்து, இறங்கி வந்தார் என்றால், அவர் இறந்து, ஏறிச் செல்ல வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை வட்டம் முழுமை அடையும்.

பின்புலம் 2: அடுக்கு உலக சிந்தனை

கிரேக்க சிந்தனையாளர் பிளேட்டோ தொடங்கி காலங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது 'அடுக்கு உலகம்.' அது என்ன அடுக்கு உலகம்? இந்த உலகத்தில் மூன்று அடுக்குகள் உள்ளன. மேல் அடுக்கு வானம், நடு அடுக்கு பூமி, கீழ் அடுக்கு பாதாளம். கடவுளர்கள், குட்டிக் கடவுளர்கள், தூதர்கள் ஆகியோரின் உறைவிடம் மேல் அடுக்கு. தீயவர்கள், கொடியவர்கள், தீமை இவர்களின் உறைவிடம் கீழ் அடுக்கு. இந்த இரண்டிற்கு நடுவில் உள்ள அடுக்கில் இருப்பவர்கள் இரண்டு பண்புகளையும் தங்களுக்குள் கொண்டிருப்பவர்கள். ஆனால் இந்த அடுக்கு ஒரு நிழல் அடுக்கு. இங்கு காணும் எல்லாம் மேல் மற்றும் கீழ் அடுக்குகளின் ஜெராக்ஸ் பிரதிகள். மேல் அடுக்கிலிருந்து நடு அடுக்கிற்கு வந்த இயேசு, தன் இறப்பால் கீழ் அடுக்கையும் சந்தித்துவிட்டு, மீண்டும் மேல் அடுக்கிற்கு ஏறிச் செல்கின்றார். நடு அல்லது கீழ் அடுக்கு அவரைத் தன்னகத்தே வைத்துக்கொள்ள இயலாது. ஏனெனில் அவர் மேலடுக்கைச் சார்ந்தவர்.

பின்புலம் 3: மறைதல்-நிறைதல் சிந்தனை

மருத்துவத்தின் முக்கியமான கூறு 'மறைதல்-நிறைதல்.' புரியலையா? நமக்கு வரும் நோய்களுக்கு காரணம் என்ன? 'இருக்க வேண்டிய ஒன்று மறைந்தால்' (எ.கா. இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல்) 'இருக்கக் கூடாத ஒன்று நிறைந்தால்' (எ.கா. இரத்தத்தில் சர்க்கரை நிறைதல்) அது நோய். மருத்துவரின் பணி என்ன? 'குறையை நிறைவு செய்வது,' 'நிறைதலை கரைத்துக் குறைப்பது.' அதிகம் மறைந்தாலும் ஆபத்து. அதிகம் நிறைந்தாலும் ஆபத்து. இயேசு மறைய வேண்டும். சீடர்கள் நிறைய வேண்டும். ஆனால், இயேசுவும் முழுமையாக மறைந்துவிடக் கூடாது. சீடர்களும் முழுமையாக நிறைந்துவிடக் கூடாது. இந்த இரண்டையும் சமன்படுத்த தேவை விண்ணேற்றம்.

ஒரு சின்ன அறையில் லேன் நெட்வொர்க் கனெக்ஷன் வழியாக இயேசுவை சீடர்களோடு இணைத்து வைத்திருந்த நற்செய்தியாளர்கள், அவரை அப்படியே தூக்கி உயரமான ஒரு வைஃபை ரவுட்டராக மாற்றிவிடுகின்றார். இப்போது இயேசுவோடு யாரும் தங்களை இணைத்துக் கொள்ள முடியும். தேவையானதெல்லாம் 'நம்பிக்கை' என்ற ஐந்தெழுத்து பாஸ்கோட் மட்டுமே.

இந்த மூன்றும் விண்ணேற்றம் என்பதைப் புரிந்து கொள்ள நமக்குப் பின்புலமாக இருந்தாலும், விண்ணேற்றத்தை ஏற்றுக்கொள்ளவும், நம்பவும், புரிந்து கொள்ளவும் மூன்று கூறுகள் தடைகளாக நிற்கின்றன:

தடை 1: இயேசுவின் உடல்

மனித உடல் அல்லது உரு ஏற்றதால் இயேசு பிறந்தார். வளர்ந்தார். சாப்பிட்டார். காணாமல் போனார். கிடைத்தார். நடந்தார். பேசினார். சிரித்தார். அழுதார். இறந்தார். எப்படியோ உயிர்த்தும் விட்டார். உயிர்த்தவர் வெறும் ஆவியாக வராமல் உடலோடு வந்தார். சீடர்களுக்குத் தோன்றினார். தன் உடலைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார். சாப்பிட்டார். வழிநடந்தார். அப்பம் பிட்டார். இதுவரைக்கும் சரி. ஆனால், விண்ணேற்றம் அடையும்போது அவர் உடலோடு மேலே சென்றாரா? ஆம் என்று சொல்கிறது எருசலேம் விண்ணேற்ற ஆலயம். அங்கே இயேசுவின் இரண்டு அகன்ற பாதத்தடங்கள் இருக்கின்றன. ஒரு ராக்கெட் மேலெழும்பி செல்வதுபோல, புவிஈர்ப்பு விசையை வென்று, புவிஈர்ப்பு மண்டலத்தைக் கடந்து அவர் மேலே சென்றிருக்க வேண்டும். சரி போய்விட்டார். ஆனால், மனித உடலை வைத்து அவர் அங்கே என்ன செய்வார்? தந்தைக்கு உடல் இல்லை. தூய ஆவியானவருக்கு உடல் இல்லை. இவருக்கு மட்டும் உடல் இருக்குமா? இன்னும் அந்த உடலில் காயங்கள் இருக்குமா? (இருக்க வேண்டும் - ஏனெனில் மாறாதவராக இருந்தால்தானே அவர் கடவுள்!) உடல் என்று ஒன்று இருந்தால் உடை என்ற ஒன்றும் இருக்க வேண்டும். உடை இல்லாத மனித உடலை அதுவும் கடவுள்-மனிதனின் உடலை நாம் நினைத்துப் பார்க்கவும் முடியுமா? மாற்று உடைக்கு இயேசு என்ன செய்வார்? அல்லது பாதி வழி சென்ற இயேசுவின் உடல் மறைந்து ஆவியாக மாறிவிட்டதா? மனித உடலோடு இயேசு சென்றார் என்று நாம் சொல்வதே, மற்ற விலங்குகள், பறவைகள், தாவரங்களின் உடலுக்கு நாம் இழைக்கும் தீங்கு இல்லையா? மனித உடலே சிறந்தது என ஹோமோ ஸேபியன்ஸ் ஸேபியன்ஸ் தற்பெருமை கொள்வது முறையா? இவ்வாறாக, இயேசுவின் உடல் அவரின் விண்ணேற்றத்தை நாம் புரிந்து கொள்ள தடையாக இருக்கிறது.

தடை 2: காலம்-இடம்; கூறு

மாற்கு நற்செய்தியாளர் இயேசுவின் விண்ணேற்றம் பற்றி எழுதும்போது, 'இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்' (16:19) என எழுதிவிட்டு, உடனே, 'ஆண்டவரும் திருத்தூதர்களோடு உடனிருந்தார்' (16:20) என முரண்படுகின்றார். காலத்தையும், இடத்தையும் கடந்து கடவுளோடு வலப்புறம் அமர்ந்திருக்கும் ஒருவர், காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்ட திருத்தூதர்களோடு எப்படி உடனிருக்க முடியும்? உண்மையாகவே உடனிருந்தாரா? அல்லது உடனிருப்பு என்பது திருத்தூதர்களின் ஒரு உள்ளுணர்வு போல இருந்ததா? அதாவது, இறந்து போன என் அப்பா என்னுடன் இருக்கிறார் என்று நான் சொல்கிறேன் என்றால், 'என் கம்ப்யூட்டர் என்னுடன் இருக்கிறது' என்பது போன்ற 'இருப்பு' அல்ல அது. மாறாக, அது ஒரு உள்ளுணர்வு. ஆக, காலமும்-இடமும் இயேசுவின் உடலை ஒட்டிய இரண்டாம் தடை.

தடை 3: பார்த்தவர்கள் எழுதவில்லை, எழுதியவர்கள் பார்க்கவில்லை

இயேசுவின் விண்ணேற்றம் பற்றி மாற்கும், லூக்காவும் மட்டுமே எழுதுகின்றனர். மத்தேயுவின் இயேசு இம்மானுவேலன் ('கடவுள் நம்மோடு') என்பதால், மத்தேயு இயேசுவை நம்மோடு தங்க வைத்து விடுகிறார். மத்தேயுவின் இயேசு விண்ணேற்றம் அடைவதில்லை (காண். மத் 28:20). விண்ணேற்றத்தைப் பார்த்த திருத்தூதரும் நற்செய்தியாளரும் இயேசு அன்பு செய்த சீடருமான யோவான் இந்த மாபெரும் நிகழ்வு குறித்து மௌனம் காக்கின்றார். 'பிள்ளைகளே சாப்பிட வாருங்கள்' என்று இயேசு அழைத்தார் என சின்ன சின்ன உரையாடலையும் பதிவு செய்த யோவான் இதைப் பற்றி ஏன் எழுதவில்லை? அல்லது இயேசு விண்ணேறிச் செல்லவில்லையா? மேலும், இந்த நிகழ்வை தன் நற்செய்தியிலும் (24:50-53), தன் திருத்தூதர் பணிகளிலும் (1:6-11) பதிவு செய்யும் லூக்கா, இந்த நிகழ்வு நடந்த நேரத்தை முரண்டுபட்டு எழுதுகின்றார்: இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப்பு நாள் அன்று நடந்ததாக நற்செய்தியிலும் (24:51), நாற்பது நாட்களுக்குப் பின் நடந்ததாக திருத்தூதர் பணிகளிலும் (1:9-11) எழுதுகின்றார்.

இந்தத் தடைகளை ஒட்டி ஒரு வார்த்தைச் சிக்கலும் இருக்கிறது: 'விண்ணேற்றமா?' (செய்வினை) அல்லது 'விண்ணேற்பா?' (செயப்பாட்டுவினை)

முதல் ஏற்பாட்டில் ஏனோக்கு (தொநூ 5:24) மற்றும் இறைவாக்கினர் எலியாவும் (2 அர 2:2), இரண்டாம் ஏற்பாட்டில் இயேசுவும் விண்ணேற்றம் அடைந்தனர் என்றும், திருத்தந்தை 12ஆம் பயஸ் அவர்களின் 1950 நவம்பர் 1 பிரகடனத்தின்படி அன்னை மரியாள் விண்ணேற்பு அடைந்தார் என்றும் கூறுகின்றோம். இங்கே 'விண்ணேற்றம்' என்பது செய்வினை. 'விண்ணேற்பு' என்பது செயப்பாட்டுவினை. விண்ணேற்றம் அடைந்தவர்கள் தாங்களாகவே, தங்களின் ஆற்றலால் ஏறிச் செல்கின்றனர். இவர்களுக்கு மற்றவர்களின் துணை தேவையில்லை. ஆனால் மரியாவோ கடவுளால் அல்லது தூதர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றார். அவர் ஏறிச் செல்ல மற்றவர்களின் துணை தேவைப்படுகிறது. முன்னவர்கள் ஆண்கள் என்பதால் தாங்களாகவே ஏறிச்சென்றார்களோ? ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்த வார்த்தை மாற்றங்களோ? தெரியவில்லை!

ஆனால், லூக்கா நற்செய்தியில் 'அனாஃபெரோ' என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும் ('அனஃபெரெட்டோ'), திருத்தூதர் பணிகளில் 'எபைரோ' என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும் ('எபெர்தெ') உள்ளது. மேலும், ஒரே நிகழ்வைக் குறிக்க லூக்கா வௌ;வேறு வினைச்சொற்களைப் பயன்படுத்துவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகளை நாம் உள்ளபடி மொழிபெயர்த்தால், 'அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்' என்றும் 'அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார்' என்றும் சொல்ல வேண்டும். ஆக, 'இயேசு விண்ணேற்றம் அடைந்தார்' என்பது நம் புரிதலுக்கான மொழிபெயர்ப்பே அன்றி, பாட மொழிபெயர்ப்பு அல்ல.

இவ்வளவு தடைகளும், மொழியியல் சிக்கல்களும் இருக்க, இயேசுவின் விண்ணேற்றத்தை எப்படி புரிந்து கொள்வது?

கேள்வியை மாற்றிக் கேட்டால், பிரச்சினை தீர்ந்துவிடும்.

எப்படி விண்ணேற்பு? என்று கேட்பதை விடுத்து, ஏன் விண்ணேற்பு? என்று கேட்டால் விண்ணேற்பின் பொருள் தெரிந்துவிடும்.

விண்ணேற்றம் இயேசுவின் வாழ்வில் மூன்று நிலைகளில் அர்த்தம் பெறுகின்றது:

1. தன் மண்ணக பணிவாழ்வு முடிந்து, இன்று தன் தந்தையின் இல்லம் திரும்புகின்றார் (காண். பிலி 2:3-6).

2. தன் சீடர்களிடம் தன் பணியை ஒப்புவிக்கின்றார். தன் இறையரசுப் பணியைத் தொடர்ந்தாற்ற அவர்களுக்குக் கட்டளையிடுகின்றார். விண்ணேற்றம் ஒரு பிரியாவிடை நிகழ்வு. விவிலியத்தில் உள்ள பிரியாவிடை நிகழ்வுகளில் மூன்று மட்டுமே மிக நீளமானவை: இஸ்ரயேலின் குலமுதல்வர் யாக்கோபு (தொநூ 49-50), திருச்சட்டம் வழங்கிய மோசே (இச 33-34), புதிய இஸ்ரயேலின் நம்பிக்கை மற்றும் திருச்சட்டத்தின் நிறைவாம் இயேசு (திப 1:1-11). இந்த மூன்று பிரியாவிடைகளும் நான்கு கூறுகளைக் கொண்டுள்ளன: அ) ஆசியுரை, ஆ) பிரிவு, இ) பார்த்தவர்களின் பதில் மற்றும் ஈ) கீழ்ப்படிதல் அறிக்கை. இயேசு கைகளை உயர்த்தி ஆசீர் அளிக்கும் நிகழ்வும் முதல் ஏற்பாட்டு நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே அமைகின்றது (லேவி 9:22, சீஞா 50:20-21). ஆசியளித்தல் தரும் மகிழ்ச்சி லூக்கா நற்செய்தியின் முதல் மற்றும் இறுதி நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது (1:56, 2:20,43,45, 24:9,33, 8:13, 15:7,10). இயேசுவின் சீடர்கள் மகிழ்ச்சியோடு ஆலயம் திரும்பி இறைவனைப் புகழ்கின்றனர்.

3. துணையாளராம் தூய ஆவியானவரை அவர்கள்மேல் அனுப்புவதாக வாக்குறுதி தருகின்றார் (திப 1:4-5).

இயேசுவின் உயிர்ப்பைப் போலவே, அவரின் விண்ணேற்றமும் ஒரு நம்பிக்கையின் மறைபொருளே. 'நம்பிக்கை' என்ற இந்த ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டால், இந்த நிகழ்விற்கும் நமக்கும் தொடர்பே இல்லை. 'விண்ணேற்றம் என்னும் நம்பிக்கையை' நாம் எப்படி வாழ்வாக்குவது? விண்ணேற்றம் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?

பாடம் 1: மறைதலும் மலர்தலும் இறைமை

இயேசுவை மனிதனாக்க அவருக்கு மனுவுருவாதல் தேவைப்பட்டதுபோல, அவரை இறைவனாக்க அவருக்கு விண்ணேற்றம் தேவை. 'தேவை' என்பதால் இவை உருவாக்கப்பட்டவை என்று பொருள் கொள்ளக் கூடாது. மறைந்திருக்கும் வரைதான் அவன் பெயர் மறையவன் அல்லது இறைவன். ஆகையால்தான் இறைவனைப் பற்றிய அறிவை மறை-கல்வி என்கிறோம். தெரிந்துவிட்டால் அவர் இறைவன் அல்ல. கண்களுக்குத் தெரியாததால் அவர் இல்லை என்பதும் அல்ல. கண்களுக்குத் தெரியக்கூடியவை எல்லாம் மாறக்கூடியவை. மாறாதவைகள் கண்களுக்குப் புலனாவதில்லை. நம் உடலின் கண்களை மறைக்கும் அளவுக்கு நம் கன்னம் வீங்கிவிட்டது என வைத்துக்கொள்வோம். நம்மால் எதையும் பார்க்க முடியாது. என்னால் பார்க்க முடியவில்லை என்பதற்காக என் முன் இருப்பவை எல்லாம், இல்லாதவை என ஆகிவிடுமா? ஒருபோதும் இல்லை. 'ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம். ஆனால் அப்போது நேரில் காண்போம்' (1 கொரி 13:12).  இயேசு விண்ணேற்றத்தின்போதுதான் இறைவனாகின்றார். மறையும்போதுதான் இறைவனாகின்றார். மறைந்த இயேசு மீண்டும் மலர்கின்றார். எப்படி? 'ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்து அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்' (மாற் 16:20) என பதிவு செய்கின்றார் மாற்கு. இவ்வாறாக, வாய்ச்சொல்லாக இருந்தவற்றிற்கு ஒரு பிணைப்பத்திரமாக மலர்கிறது இயேசுவின் உடனிருப்பு. விண்ணேற்றம் அடைந்து மறைந்த இறைமை திருத்தூதர்கள் வாழ்வில் உடனிருப்பாக மலர்கிறது.

பாடம் 2: சீடர்களின் பணி

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன் சீடர்களின் பணி என இயேசு குறிப்பிடுவது ஒன்றே ஒன்று: 'நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.' 'நற்செய்தி' என்ற வார்த்தைக்கான வரைமுறையை 'இயேசுகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்' (1:1) என்று பதிவு செய்து, இந்த வசனத்திற்குப் பின் வரும் அனைத்துமே நற்செய்தி என்கிறார் மாற்கு. ஆக, நற்செய்தி அறிவிப்பு என்பது இNயுசுவின் வரலாற்ற உடனிருப்பையும், செயல்பாடுகளையும் மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது. தொடர்ஓட்டத்தில் ஒரு வீரரின் கையிலிருந்து மற்ற வீரரின் கைக்கு மாறும் குச்சியைப்போல, ஒலிம்பிக் தீப ஓட்டத்தில் ஒருவரின் கையிலிருந்து அடுத்தவரின் கைக்கு மாறும் தீபம் போல விண்ணரசுப் பணி இயேசுவின் கையிலிருந்து இன்று நம் கைக்கு மாறுகின்றது. எந்த அளவிற்கு இது ஒரு கொடையோ, அந்த அளவிற்கு இது ஒரு கடமை. 'விளையாட்டு வீரர் எவரும் விதிமுறைகளுக்குட்பட்டு விளையாடினால் மட்டுமே வெற்றிவாகை சூட முடியும' (2 திமொ 2:5)

பாடம் 3: எதிர்நோக்கு

'அவர் மீண்டும் வருவார்' (திப 1:11) என்ற வார்த்தைகள்தாம் நாம் காத்திருப்பதற்கான எதிர்நோக்கை நமக்குத் தருகின்றன. எதிர்நோக்கில் தயக்கம் அறவே கூடாது (எபி 10:23). நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் உந்தித் தள்வது எதிர்நோக்கே. காலையில் எழுவோம் என்ற எதிர்நோக்கு இருப்பதால் தான் இரவு தூங்கச் செல்லுமுன் 'வேக்அப் கால்' வைக்கின்றோம். படிப்பது, பயணம் செய்வது, வேலை தேடுவது, தேடிய வேலையில் சம்பாதிப்பது, திருமணம் முடிப்பது, அருள்நிலை வாக்குறுதி கொடுப்பது என எல்லா வாழ்க்கை நிகழ்வுகளிலும், நிழல்களிலும் எதிர்நோக்கி இழையோடியிருக்கின்றது. இந்த எதிர்நோக்குகளுக்கெல்லாம் தாயாக இருப்பது, 'அவர் மீண்டும் வருவார்' என்ற எதிர்நோக்கும், 'நாமும் அங்கு செல்வோம்' என்ற எதிர்நோக்கும்தான். வெறும் மண்ணோடு மண்ணாக முடியப்போகும் வாழ்க்கைக்கா நாம் இவ்வளவு மெனக்கெடுகிறோம்? நாம் மண்ணைச் சார்ந்தவர்கள் அல்லர். விண்ணைச் சார்ந்தவர்கள். ஆக, எதிர்நோக்கு என்னும் விளக்கு எந்நேரமும் எரிந்துகொண்டிருக்கட்டும். மேலும், நாம் விண்ணைச் சார்ந்தவர்கள் என்பதால் நம் எண்ணங்களும் உயர்ந்த எண்ணங்களாகவே இருக்கட்டும் (காண். கொலோ 3:1).

பாடம் 4: அண்ணாந்து பார்க்காதீங்க!

'கலிலேயரே, ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்?' (திப 1:11) என்ற கேள்வி நம்மைப் பார்த்தும் கேட்கப்படுகிறது. அண்ணாந்து பார்க்கும் ஆன்மீகம் வேண்டாம். குனிந்து வாழ்வைப் பார்க்கும் ஆன்மீகம் அவசியம். 'அவர் வருகிறார்!' என்பதற்காக அவரைத் தேடி வீட்டைவிட்டு ஓட வேண்டாம். அண்ணாந்து பார்க்க வேண்டாம். சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து சாப்பிடுங்கள். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்களா. தொடர்ந்து செய்யுங்கள். பஸ்ஸில் இருக்கிறீர்களா, தொடர்ந்து பயணம் செய்யுங்கள். ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறீர்களா, தொடர்ந்து நில்லுங்கள். நோயுற்ற ஒரு நபரோடு மருத்துவமனையில் பேசிக்கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பேசுங்கள். டிவி பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பாருங்கள். விளையாடிக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து விளையாடுங்கள். ஏனெனில், அவர் இவற்றிலும் வருகின்றார். எல்லாவற்றிலும் அவரால் வர முடியும்.

பாடம் 5: புறப்பட்டுச் செல்தல்

இயேசுவின் பிரிவை அனுபவிக்கும் சீடர்களின் முதல் உணர்வு 'அடுத்து என்ன?' என்பதுதான். நடந்தவற்றை திறனாய்வு செய்துகொண்டோ, அல்லது 'அவர் இன்னும் இங்கே இருந்திருக்கலாம்' என்று புலம்பிக்கொண்டோ இருக்கவில்லை. உடனே புறப்டுகின்றனர். 'அழுதுகிட்டே இருந்தாலும் உழுதுகிட்டே இருக்கணும்' என்பது கிராமத்துச் சொலவடை. அழுகை நம் பசி தீர்க்குமா? உழுதல்தான் தீர்க்கும். இவ்வாறாக, நம் அன்றாட வாழ்வில் நாம் பிறர்நோக்கிப் புறப்பட்டுச்சென்று நம்பிக்கையின் விதையை விதைக்க நம்மை அழைக்கிறார் இயேசு.

'நம்மேல் கொண்ட பரிவினால் அவர் விண்ணிலிருந்து இறங்கி வந்தார்.

இன்று அவர் தனியே விண்ணேறிச் சென்றாலும், அவரோடு நாமும் உடன் செல்கிறோம்.

ஏனெனில் அருளால் நாமும் அவரோடு இணைந்துள்ளோம்!' (தூய அகுஸ்தினார்)

விண்ணேற்றப் பெருநாள் வாழ்த்துக்களும், செபங்களும்!