Friday 6 April 2018

பாஸ்கா கால 2-ஆம் ஞாயிறு

பாஸ்கா கால 2-ஆம் ஞாயிறு 



திப 4:32-35; 1 யோவா 5:1-6; யோவா 20:19-31




மகிழ்ச்சியூட்டும்  மறையுரைகள்
குடந்தை ஆயர் அந்தோனிசாமி



அச்சங்கள் பலவகை சீடர்களின் அச்சத்தைத் தீர்த்து வைப்பவராக இன்றைய நற்செய்தியிலே இயேசு காட்சி அளிக்கின்றார். அன்று யூதர்களுக்கு அஞ்சி அவர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவுகளை மூடி வைத்திருந்தனர்.


பச்சை மரமாகிய இயேசுவுக்கே இந்த மக்கள் மரண தண்டனை அளித்து விட்டார்கள். நம்மை என்னச் செய்யப்போகின்றார்களோ? என்பதை எண்ணி சீடர்கள் பயந்தார்கள். இயேசு பட்ட பாடுகள் அனைத்தும் அவர்கள் கண் முன்னால் நின்று அவர்களை அச்சுறுத்தின.


அச்சம் அந்தச் சீடர்கள் மனத்திலிருந்ததால் அவர்களிடம் மகிழ்ச்சி இல்லை. அச்சமிருக்கும் இடத்திலே அமைதியிருக்காது. அமைதியில்லா இடத்திலே மகிழ்ச்சி இருக்காது.


நான் ஒரு நாள் மாலை நேரத்தில் வங்கக் கடலோரத்தில் நடந்து கொண்டிருந்தேன். அங்கே ஓர் அழகான ஆண் குழந்தை, அந்தச் சிறுவனுக்கு வயது நான்கு இருக்கும். அவனுடைய பெற்றோர் அந்தக் கடற்கரையிலிருந்த மணல் மேடுகளில் ஒன்றின் மீது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சிறுவனோ கடலைப் பார்த்தோ , கடலலைகளைப் பார்த்தோ பயப்படாமல் கடலோரத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். தாயும், தந்தையும் தன் அருகிலிருப்பதால், தனக்கு எந்த ஆபத்தும் நேராது ; அப்படியே நேர்ந்தாலும் தனது தாயும், தந்தையும் தன்னைக் காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் அவன் அப்படி அச்சமின்றி விளையாடிக்கொண்டிருந்தான்.


நம்மை அன்பு செய்யும் ஒருவர் நம் அருகில் இருக்கும்போது, அதுவும் அன்போடு கலந்த ஆற்றல் மிக்க ஒருவர் நம்மோடு இருக்கும்போது நாம் எதற்கும் அஞ்சுவதில்லை.


இன்றைய நற்செய்தியில் சீடர்களை அன்பு செய்த இயேசு அவர்கள் அருகில் நின்றபோது சீடர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதைக் காண்கின்றோம்.

நம்பிக்கையில் உயிரை ஊற வைப்போம்!ஒரு மனிதனை இல்லாமை அச்சுறுத்தலாம்; இயலாமை அச்சுறுத்தலாம்;கல்லாமை அச்சுறுத்தலாம்; அறியாமை அச்சுறுத்தலாம்; நோய் அச்சுறுத்தலாம்; பேய் அச்சுறுத்தலாம்!


வாழ்க்கையிலே எத்தனையோ வகையான அச்சங்கள்! 

வானம் இடிந்து போகுமோ என்ற அச்சம்! 

பூமி தூர்ந்துபோகுமோ என்ற அச்சம்! 

கடல் தொலைந்து போகுமோ என்ற அச்சம்!

சூரியன் சுண்டிப் போகுமோ என்ற அச்சம்! 

சந்திரன் சரிந்து போகுமோ என்ற அச்சம்! 

இதோ உயிர்த்த ஆண்டவர் நம்முன்னே நின்று நம் ஒவ்வொருவரையும் பார்த்து இவ்வாறு கூறுகின்றார்:


வறுமையிலிருந்து மக்களை நான் விடுவித்திருக்கின்றேன் (யோவா 2:1-11). பசியிலிருந்து மக்களை நான் விடுவித்திருக்கின்றேன் (யோவா 6:1-13). பாவத்திலிருந்து மக்களை நான் விடுவித்திருக்கின்றேன் (லூக் 7:36-50), மரணத்திலிருந்து மக்களை நான் விடுவித்திருக்கின்றேன் (யோவா 11:1-44). நான் உன்னோடு இருந்தால் அச்சம் தரக்கூடிய எதுவும் உன்னருகில் வராது. நீ எல்லா நம்பிக்கையையும் என் மீது வைத்து தொடக்க கால கிறிஸ்தவர்களைப் போல வாழ முற்படு (முதல் வாசகம்); உலகை வெல்வது நம்பிக்கையே என்ற என் அடியார் யோவானின் கூற்றுக்குச் செவிமடு (இரண்டாம் வாசகம்). அப்போது நீ துணிந்து நிற்பாய், நிமிர்ந்து நிற்பாய் ! 


மேலும் அறிவோம் :

அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தற்(கு) இயல்பு (குறள் : 382).


பொருள் : அச்சம் எதுவுமில்லாத துணிவு, தேவைப்படுவோர்க்கு வேண்டியவற்றை வழங்கும் கொடைச் சிறப்பு, வருமுன் காக்கும் அறிவாற்றல், அயர்வில்லாத ஊக்கம் ஆகிய நான்கும் நாடாளும் வேந்தனுக்கு உரிய இயல்புகள் ஆகும்.


அடையாளப்படுத்தும் காயங்கள்

கல்லறைக்கு அப்பால்
அருள்பணி இ.லூர்துராஜ்

திருத்தூதர்களில் மூன்று பேருடைய கல்லறைகளின் மீது மட்டும் பேராலயங்கள் கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றன. இன்றும் அவை புகழ்பெற்று விளங்குகின்றன.

1. இத்தாலியின் உரோமை மாநகரில் பேதுரு பேராலயம்
2. ஸ்பெயினில் கம்பொஸ்டெல்லா மாநகரில் யாக்கோபு பேராலயம்
3. இந்தியாவில் சென்னை மாநகரில் தோமா பேராலயம்.
சென்னை தூய தோமா பேராலயம் இன்று தேசியத் திருத்தலமாகித் திரள் திரளாகத் திருப்பயணிகளை - சுற்றுலாப் ஆர்வலர்களை ஈர்க்கிறது.

இந்தியத் திருநாட்டின் மீது இயேசு கொண்டிருக்கும் அன்புக்கு எடுத்துக்காட்டு தூய தோமா. தன் திருத்தூதர்களில் ஒருவரை - அதுவும் தூய தோமாவை இந்த நாட்டில் நம்பிக்கைத் தீபம் ஏற்ற அனுப்பினார் எனில், இயேசு நம்நாட்டை எவ்வளவு நேசித்திருக்க வேண்டும்! தோமாவை நினைத்தாலே நம் நெஞ்சமெல்லாம் பெருமிதத்தால் விம்மி எழும்.

உயிர்த்த இயேசு சீடர்களுக்குத் தோன்றினார். அப்போது தோமா அங்கு இல்லை. இயேசுவின் தழும்புகளைப் பார்த்து “ஆணிகள் இருந்த இடத்தில் என் விரலை விட்டால் ஒழிய நம்ப மாட்டேன்” என்றார். தோமாவின் ஐயப்பாட்டினை நீக்க இயேசு மீண்டும் தோன்றினார். தோமாவை அழைத்து “இதோ என் கைகள். இங்கே உன் விரலை விடு” என்று கூறினார். மகிமையான அந்தக் காயங்கள் தோமாவில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கிச் சரணடைய வைத்தது! நம்பாத தோமாவை நம்ப வைத்தது இயேசு தன் காயங்களைக் காட்டித்தானே!

இயேசுவின் உயிர்ப்பை முதலில் நம்ப மறுத்தார் தோமார். ஆனால் உயிர்த்த இயேசுவை நேரில் கண்டதும் அவரது நம்பிக்கை உச்சத்தை அடைந்தது. "நீரே என் ஆண்டவர். நீரே என் கடவுள்" என்றார். நற்செய்தியில் தோமாவைத் தவிர வேறு எவருமே இயேசுவைக் கடவுள் என்று நேரடியாக அழைத்ததில்லை. இவ்வாறு தோமா நம்பிக்கைக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

கோடி அற்புதர் தூய அந்தோனியாரின் பார்வையில் இயேசுவை அடையாளப்படுத்தும் தோமாவின் காயங்கள். ஒருநாள் அலகை இயேசுவின் உருவில் பதுவை அந்தோனியாருக்குத் தோன்றி, “எதற்கும் ஒருகாலம் உண்டு என்று விவிலியம் சொல்ல வில்லையா? இந்த இளம் வயதிலேயே இப்படி ஒரு கடும்தவம் தேவைதானா? முதிர்ந்த வயதில் அதில் முனைப்பைக் காட்டலாமே!" என்று சோதித்ததாம். இந்தக்காட்சியின் உண்மைத் தன்மையைச் சந்தேகித்த அந்தோனியார் கேட்டாராம்: “'நீ உண்மையில் இயேசு என்றால் உன் கைகளையும் கால்களையும் துளைத்திருக்கும் காயங்களைக் காட்டு", "நான் விண்ணிலிருந்து வருகிறேன் என் மகிமையான உடலில்" என்று அலகை சொல்ல, “சாத்தானே, அப்பாலே போ, வடுக்கள் இல்லாக் கிறிஸ்து, கிறிஸ்து அல்ல” என்றாராம் அந்தோனியார். சவாலைச் சந்திக்கச் சக்தியற்ற பேய் தலைதெறிக்க ஓடி மறைந்ததாம்.

இயேசுவின் காயங்கள் அடையாளப்படுத்துபவை மட்டுமல்ல. நமக்கு அடைக்கலம் தருபவை. தூய பெர்னார்து சொல்வார்: “நீங்கள் அவருடைய விலாவில் கையை விட்டால் மட்டும் போதாது நீங்கள் முழுவதும் நுழைய வேண்டும். அவருடைய விலாவில் உள்ள வாயில் வழியாக இயேசுவின் திரு இருதயத்துக்குள் தஞ்சம் புக வேண்டும்”. அவரது காயங்களில் நாம் புகலிடம் தேடும் போது, உயிர்த்த இயேசுவின் மீது வைக்கும் நம்பிக்கைக்கு இன்றைய வழிபாடு வாக்களிக்கின்ற பரிசுகள் மூன்று .

1. சமாதானம் (அமைதி) உறவின் முறிவு சாவில் வந்து முடிகிறது. உறவின் முறிவுக்கும் சாவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை நாம் மறைநூலில் காணலாம். விலக்கப்பட்ட கனியை உண்டதால் இறைவனோடு உறவு முறிந்தது, அதனால் சாவு நுழைந்தது (தொ.நூல்.2:17) மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு முறிந்ததால் வந்ததும் சாவுதான். அதுதான் முதல் கொலை (தொ.நூ.4:8). இப்படி உறவுகள் முறிந்தாலேயே இறுதியாகக் கிறிஸ்து ஏற்றதும் சாவுதான். இயேசுவின் உயிர்ப்பால் புது உறவு, புது வாழ்வு. அதனால், தான் தோன்றும் போதெல்லாம் “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என வாழ்த்துகிறார்.

2. ஒப்புரவு (பாவ மன்னிப்பு.) “மன்னிப்பைக் கொடு மன அமைதி பெறு” - இது திருத்தந்தை 2ம் அருள்சின்னப்பரின் 1997 உலக அமைதி நாள் செய்தி. இறைவனோடும் அயலாரோடும் இயற்கையோடும் என்னோடும் நான் ஒப்புரவாகிற போது அமைதி என்னில் நிலைபெறும். அமைதி நிலைபெற்றால் ஆனந்தம் என்னைத் தானே வந்தடையும். அது உயிர்ப்பின் மகிழ்ச்சி.

3. தோழமை (சகோதர அன்பு) ஒப்புரவாகி உறவைப்  புதுப்பிக்கின்றோம். அன்பு என்பது ஒன்றிக்கும் ஆற்றல் என்கிறார் தூய அக்வினாஸ் தோமா. ஆக, குடும்பத்தில் பங்கில் சமுதாயத்தில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் நிலவும் போது நாம் உயிர்ப்பின் மக்கள் நேருகிறது ஆகிறோம். கிறிஸ்தவர்களை “அல்லேலூயா மக்கள்" என்பர், ஒரு தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் உண்மையிலேயே அல்லேலூயா மக்களாகத் தான் இருந்தார்கள் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் - விவிலியத்தில் பார்க்கிறோம். அதுவும் உடைமைகளைப் பொதுவாக்கிப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு (தி.ப.2:44). இதுதான் அல்லேலூயா கிறிஸ்தவம். 

இன்றைய நற்செய்தியின் இறுதிவாக்கியம் விவிலியத்தின் தெளிவான நோக்கத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது. "இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் ஒரு பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பட்டன" (யோவான் 20:31). நம்புவதற்காகவும் அதனால் புதுவாழ்வு பெறுவதற்காகவும், அதாவது 
-உயிர்ப்பால் வரும் நம்பிக்கை. நம்பிக்கையின் அடித்தளமே இயேசுவின் உயிர்ப்புத்தான். "கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை  என்றால்... நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பொருளற்றதாய் வார்த்தைகளில் மரியா வெளிப்படுத்தியதும் போராட்டமே! இருக்கும்” (1 கொரி.15:14)

- நம்பிக்கையால் வரும் புதுவாழ்வு. தொடக்க கால திருச்சபையின் வாழ்வுதான் அது. (தி.ப.2:42) பேதுரு சுட்டிக் காட்டும் புதுப்பிறப்பு  (1 பேதுரு 1:3) கிறிஸ்தவ நம்பிக்கையே இயேசுவின் உயிர்ப்பில் வேரூன்றியது.

- தூய தோமாவுடன் இணைந்து நாமும் உயிர்த்த ஆண்டவர் மீது நம்முடைய நம்பிக்கையை ஆழப்படுத்தி அவரிடம் சரணடைவோம். "இயேசு ஆண்டவர் என்று வாயினால் அறிக்கையிட்டு, கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார் என்று உள்ளத்தால் நம்பினால் நாம்  மீட்படைவோம்” (உரோமை 10:9) உங்களுக்கு அமைதி உரித்தாகுக! அல்லேலூயா!



மறையுரை மொட்டுக்கள் அருள்பணி இருதயராஜ்


வித்தை காட்டுபவர் ஓர் ஊருக்குச் சென்று, இரண்டு இரும்புக் கம்பங்களை நீண்ட இடைவெளி விட்டுத் தரையில் ஊன்றி, இரு கம்பங்களுக்குமிடையே ஒரு பெரிய இரும்புக் கம்பியைக் கட்டி, பஜார் மக்களை வித்தைக்கு அழைக்க, அவர்களும் திரண்டு வந்தனர், அம்மக்களிடம், "நான் இந்த இரும்புக் கம்பியின் மீது ஒரு "சைக்கிளைத் தூக்கிக் கொண்டு நடக்கமுடியும் என்று நம்புகிறீர்களா?" என்று கேட்டபோது. அனைவரும், "உங்களால் முடியும்" என்று சொல்ல, அவரும் சைக்கிளைத் தூக்கிக் கொண்டு இரும்புக் கம்பியின் மீது நடக்க, அனைவரும் கரவொலி எழுப்பி அவரைப் பாராட்டினார். அடுத்து அவர் அவர்களிடம், "ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு இந்த இரும்புக் கம்பியின் மீது நடக்கமுடியும் என்று நம்புகிறீர்களா?" என்று கேட்டபோது. அனைவரும், "உங்களால் நிச்சயமாக முடியும்" என்றனர். ஆனால் யாருமே அவரை நம்பித் தங்கள் குழந்தையை அவரிடம் கொடுக்க முன்வரவில்லை! அவர்கள் அவரை எண்ணத்தளவில் நம்பினாலும் மனத்தளவில் நம்பவில்லை!

நாமும் கடவுளைக் கொள்கையளவில் நம்பி, அவரை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் மனத்தளவில் அவரிடம் நம்மை முழுமையாகக் கையளிக்க இன்னும் பக்குவமடையவில்லை. நமது கடவுள் நம்பிக்கை முழுமையடையவில்லை.

இயேசுவின் உயிர்ப்பை முதலில் நம்ப மறுத்தார் தோமா. ஆனால் உயிர்த்த இயேசுவை அவர் நேரில் கண்டபோது அவரது நம்பிக்கை உச்சக் கட்டத்தை அடைந்தது. உயிர்த்த ஆண்டவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்" (யோவா 20:29) என்றார், அவர் கூறியது உண்மையிலேயே விசுவாச அறிக்கையாகும். நற்செய்தியில் தோமாவைத் தவிர வேறு யாருமே இயேசுவைக் 'கடவுளே' என்று நேரடியாக அழைக்கவில்லை. இவ்வாறு தோமா நம்பிக்கைக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

புனித தோமாவுடன் இணைந்து நாமும் உயிர்த்த ஆண்டவர் மீது நமக்குள்ள நம்பிக்கையை ஆழப்படுத்தி அவரிடம் சரணடைவோம். 'இயேசு ஆண்டவர்' என்று வாயினால் அறிக்கையிட்டு, கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார் என்று உள்ளத்தால் நம்பினால் நாம் மீட்படைவோம் (உரோ 10:9).

நம்பிக்கையைத் தொடங்கி வைப்பவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது நமது கண்களைப் பதியவைத்து, மனந்தளராது எவ்வித இன்னல் இடையூறுகளையும் மேற்கொள்ள வேண்டும் (எபி 12:2-3). இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித யோவான் குறிப்பிடுவதுபோல, தமது நம்பிக்கைதான் உலகை வெல்லுகிறது (1யோவா 5:4). நம்பிக்கையைக் கேடயமாகக் கொண்டுதான் நாம் தீயோனை வெல்ல முடியும் (எபே 6:16).

நமது நம்பிக்கையைச் செயலில் காட்டவேண்டும், கிறிஸ்துவ. வாழ்வு என்பது, 'அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை' (கலா. 5:6), செயலற்ற நம்பிக்கை பயனற்றது (யாக் 2:20)...

இன்றைய முதல்வாசகம் இயேசுவின் சீடர்கள் எவ்வாறு தங்களது நம்பிக்கைக்குச் செயல் வடிவம் கொடுத்தனர் என்பதை விவரிக்கிறது. நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் வாழ்ந்தனர். அவர்களுக்கு எல்லாமே பொதுவுடைமையாக இருந்தது, செபக்கூடத்தில் அப்பத்தைப் பிட்டுப் பகிர்ந்தது போலவே, வீட்டிலும் தங்களது உணவை மற்றவர்களுடன் கபடற்ற உள்ளத்துடன் பகிர்ந்தனர் (திப 4:32-35), அவர்களுடைய வழிபாட்டிற்கும் வாழ்க்கைக்கும் இடையே முரண்பாடில்லை, தொடக்கத் திருச்சபையில் நாம் காண்பது சமத்துவபுரம், சம்பந்தி,

ஒருவர் தனது நண்பர் வீட்டிற்குச் சென்றபோது, நண்பர் அவருக்குச் சுவையான சூப்புக் கொடுத்தார். அதில் கொஞ்சம் மீதி வைத்துக் கொண்டார். அந்த விருந்தினர் தொடர்ந்து மூன்று நாள் வத்தார். ஒவ்வொரு நாளும் முதல் நாளில் மீதியிருந்த சூப்பில் தண்ணீரைச் சேர்த்துச் சுட வைத்துக் கொடுத்தார். நான்காம் நாள். குப்பைக் குடித்த விருந்தினர் நண்பரிடம், "இதுஎன்ன! சூப்பா?" என்று கேட்டதற்கு, அவரிடம் நபர் கூறினார்: "இது சூப்பல்ல, சூட்பினுடைய சூப்பினுடைய சூப்பினுடைய சூப்பு."
நாம் இப்போது கடைப்பிடிப்பது நற்செய்தியில்லை, மாறாக, நற்செய்தியினுடைய, நற்செய்தியினுடைய, நற்செய்தியினுடைய நற்செய்தி, நற்செய்தியில் கலப்படம் செய்து அதன் வீரியத்தைக் குறைத்து விட்டோம். நாம் இன்று கடைப்பிடிக்கும் நற்செய்தி சாரமற்றச் சக்கை, எனவே, "நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்" (1யோவா 3:18).
தோமா தனது நம்பிக்கையை இழக்கக் காரணம், அவர் மற்றச் சீடர்களிடமிருந்து விலகித் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டார், அவர் மீண்டும் மற்றச் சீடர்களுடன் இணைந்தபோதுதான் உயிர்த்த ஆண்டவர் அவருக்குத் தோன்றினார். இயேசு தோமாவுக்குத் தனிப்பட்ட முறையில் தோன்றவில்லை.

சிலர் இன்று தங்கள் நம்பிக்கையை இழப்பதற்குக் காரணம், அவர்கள் திருச்சபையின் உறவு ஒன்றிப்பிலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கின்றார், தாயிறு திருவழிபாட்டிற்குக் கூட அவர்கள் வருவதில்லை. அவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கிறார் பிரேய திருமடலின் ஆசிரியர், "சிலர் வழக்கமாக நமது சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது. ஒன்று கூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக" (எபி 10:25),

எனவே, குறைந்த அளவு ஞாயிறு தோறும் திருவழிபாட்டில் கலந்து கொண்டு, * திருக்கட்டத்திலும் அருள்வாக்கிலும் திருப்பணியாளரிடத்திலும், சிறப்பாக அப்பம் பிடுதலிலும் கிறிஸ்துவை அடையாளம் கண்டு, நமது நம்பிக்கையும் அன்பும் வலிவும் பொலிவும் மிக்கதாக மாற்றுவோமாக.




தோமாவின் அழைப்பு

அருள்பணி ஏசு கருணாநிதி


திருவழிபாட்டு ஆண்டின் பாஸ்கா காலத்தின் 2ஆம் ஞாயிற்றை அலங்கரிக்கும் நாயகன் திருத்தூதர் தோமா. இந்த நாயகனின் அழைப்பை நம் இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். நற்செய்தி நூல்களில் 4 திருத்தூதர்களின் (பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு) அழைப்பு மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளது. உயிர்ப்புக்குப் பின் தோமாவுக்குத் தோன்றும் நிகழ்விற்கும் மோசேயின் அழைப்பு நிகழ்விற்கும் (விப 3) ஏதோ தொடர்பு இருப்பதாகவே நான் உணர்கிறேன். இதில் என்ன விந்தை என்றால், மற்ற திருத்தூதர்களின்  அழைப்பு அவர்களுக்கான அழைப்பாக மட்டுமே இருக்கிறது. ஆனால், தோமாவின் அழைப்பு நம் ஒவ்வொருவருக்கான அழைப்பாக இருக்கிறது.

எப்படி?

முதலில் தோமா என்ற கதைமாந்தரைப் புரிந்துகொள்வோம்.

தோமா பேசியதாக யோவான் நற்செய்தியாளர் (மட்டும்) மூன்று இடங்களில் பதிவு செய்கின்றார்:

முதலில், இலாசர் உயிர்ப்பு நிகழ்வு. இலாசரை உயிர்ப்பிக்க விரும்பிய இயேசு, 'மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்' என்கிறார். 'ரபி, இப்போதுதானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்' என்று மற்ற சீடர்கள் தயக்கம் காட்டியபோது, 'நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்' (யோவா 11:16) என்று துணிந்து சொல்கிறார் தோமா.

இரண்டாவதாக, இறுதி இராவுணவில் தம் சீடர்களின் பாதங்களைக் கழுவிய இயேசு, யாருக்கும் புரியாததுபோல 'நான் அங்க போறேன். இங்க போறேன். வழி தெரியாது. வகை தெரியாது. உறைவிடம் இருக்கு. தந்தை இருக்காரு' என்று சொல்லிக்கொண்டே போக, தோமா குறுக்கிட்டு, 'ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்திற்கான வழியை நாங்கள் எப்படி தெரிந்துகொள்ள இயலும்?' (யோவா 14:5)
என்கிறார். 

மூன்றாவதாக, தாங்கள் உயிர்த்த இயேசுவைக் கண்டதை மற்ற சீடர்கள் தோமாவிடம், 'நாங்கள் ஆண்டவரைக் கண்டோம்' என்று சொல்ல, 'அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்' (யோவா 20:25) என்கிறார்.

மேற்காணும் மூன்று நிகழ்வுகளின் பின்புலத்தில் தோமாவின் மூன்று பண்புகளை நாம் முன்வைக்கலாம்:

அ. தோமா பயம் இல்லாதவர். அச்சங்கள் தவிர்த்தவர்

வாரத்தின் முதல் நாள் மாலையில் இயேசு சீடர்களுக்குத் தோன்றியபோது, சீடர்கள் யூதர்களுக்கு அஞ்சி கதவுகளை அடைத்துக்கொண்டு அறையில் ஒளிந்துகொண்டு இருக்கின்றனர். ஆனால், தோமா அவர்களோடு இல்லை. ஆக, அவர் வெளியில்தான் இருந்திருக்கின்றார். ஒருவேளை நகரில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க அவர் வெளியில் சென்றிருக்கலாம். அல்லது தனக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் தங்கியிருக்கலாம். அல்லது யூதாசுக்கு என்ன நடந்தது என்ற பார்க்கச் சென்றிருக்கலாம். எப்படியோ அவர் அவர்களோடு இல்லை. அவரின் தனிமை அவர் பயமற்றவர் என்பதைக் காட்டுகிறது.

ஆ. தோமா ப்ராக்டிகல் ஆனவர்

வானத்தில் தெரியும் ஆகாய தாமரையைவிட கையில் இருக்கும் மல்லிகைப்பூ பெரிது என நினைத்தவர் தோமா. ஆகையால்தான் இயேசு தன் வான் வீட்டிற்கான வழியைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, 'நீர் போகிற இடமே தெரியாதபோது வழி எப்படித் தெரியும்?' எனக் கேட்கிறார். மேலும், இயேசுவின் உயிர்ப்பின்போது பல இறைமக்களின் உடல்கள் உயிர்த்தெழுந்ததாகவும் அவர்கள் எருசலேமில் பல இடங்களில் தோன்றினார்கள் எனவும் மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். ஆக, தோமாவைப் பொறுத்தமட்டில் சீடர்களுக்குத் தோன்றியது இவர்களில் யாராவது ஒருவருடைய உடலாக இருக்கலாம். ஏன்? யூதாசு கூட தோன்றியிருக்கலாம். விலாவில் காயம், கரங்களில் காயம்பட்ட உடல் இயேசுவின் உடலாகத்தான் இருக்க முடியும். இவ்வாறாக, நம்புவதற்கும் லாஜிக் வேணும், பக்தியிலும் கொஞ்சம் ப்ராக்டிகாலிட்டி வேணும் என நினைக்கிறார் தோமா.

இ. தோமா உள்மனச்சுதந்திரம் கொண்டவர்

'நாங்கள் ஆண்டவரைக் கண்டோம்' என்று சீடர்கள் சொன்னவுடன், தான் அந்த வாய்ப்பை தவற விட்டோம் என்ற வருத்தமோ, குற்ற உணர்வோ, அல்லது 'இவர்கள் எல்லாம் பார்த்துவிட்டார்களே' என்று தன் சக திருத்தூதர்கள்மேல் பொறாமையோ இல்லை. மேலும் 'நீங்கள் உயிர்த்த ஆண்டவரைப் பார்த்த பாக்கிசாலிகள்' என்று அவர்களை மேலே உயர்த்திக் கொண்டாடவும் இல்லை. வெளிப்புறத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் தன் உணர்வைப் பாதிக்காத ஒருவரே உள்மனச்சுதந்திரம் கொண்டவர். அதை நிறைவாகப் பெற்றிருக்கிறார் தோமா.

நிற்க.

இங்கு, தோமாவுக்குத் தோன்றிய இயேசுவின் மூன்று பண்புகளையும் பற்றிச் சுருக்கமாகச் சொல்லிவிடுவோம்:

அ. இயேசு தன் சீடர்களைக் கடிந்துகொள்ளவில்லை

வாரத்தின் முதல் நாள் மாலை தோன்றியபோதும், எட்டாம் நாள் தோன்றியபோதும் இயேசு தம் சீடர்கள் தம்மைவிட்டு ஓடியதற்காகவோ, அல்லது தம்மை அவர்கள் மறுதலித்ததற்காகவோ, பூட்டிய வீட்டிற்குள் ஒளிந்துகொண்டிருப்பதற்காகவோ அவர்களைக் கடிந்துகொள்ளவில்லை. 'எல்லாரும் இங்க இருக்க, நீ மட்டும் எங்க போன?' என்று தோமாவையும் கடிந்துகொள்ளவில்லை. மாறாக, அவர்களைக் காணும்போதெல்லாம், 'அமைதி' (ஷலோம்) என்று மட்டுமே சொல்கின்றார். சிலுவையிலேயே அவர் எல்லாக் காயங்களையும் மன்னித்துவிட்டதால் என்னவோ அவருக்கு இங்கே மன்னிக்க ஏதும் இல்லை.

ஆ. இயேசு தன் சீடர்களின் எண்ணங்களை அறிந்திருந்தார்

ஆகையால்தான் தோமா தன் சக திருத்தூதர்களிடம் பேசியது அவருக்குத் தெரிந்தது. சீடர்களின் பயம், கலக்கம், திகில், அச்சம், வியப்பு, மகிழ்ச்சி என அவர்களின் எல்லா உள்ளுணர்வுகளையும் அறிந்திருந்தார் இயேசு.

இ. இயேசு நேரத்தையும் இடத்தையும் கடந்தவராக இருந்தார்

பூட்டிய அறைக்குள் நுழையும் வகையிலும், அதே நேரத்தில் எதையும் தொட்டு உணரும் நிலையிலும் இயேசு இருந்தார். இயேசுவின் சமகாலத்தின் கிரேக்க புரிதல்படி ஆவிக்கும் மனித உடலுக்கும் உள்ள வேற்றுமை 'பார்த்தல்,' 'கேட்டல்,' 'தொடுதல்' என்னும் மூன்று உணர்வுகளில் இருந்தது. இயேசு இந்த மூன்று உணர்வுகளையும் கொண்டவராக இருக்கிறார்.

இந்த மூன்று பண்புகளுக்காகத்தான் என்னவோ, இயேசு தன் முன் தோன்றி, 'இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு' என்ற சொன்னவுடன், 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!' என சரணாகதி அடைகின்றார்.

மற்றவர்கள் எல்லாம் இயேசுவில் ஆண்டவரைக் கண்டனர். ஆனால், தோமா மட்டுமே அவரில் கடவுளைக் காண்கிறார். தோமாவின் மிகப்பெரிய நம்பிக்கை அறிக்கை இது.

இந்த நம்பிக்கை அறிக்கையோடு யோவானும் தன் நற்செய்தியை நிறைவு செய்கிறார்.

இந்த இடத்தில் மோசேக்கும், தோமாவுக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பதிவு செய்வோம்:

அ. அழைக்கப்பட்டபோது மோசேயும், தோமாவும் தனியே இருக்கின்றனர்.

ஆ. எகிப்தில் இஸ்ரயேல் மக்களின் துன்பங்களைக் கண்டு, அவர்கள் துயரங்களின் ஒலியைக் காதால் கேட்டதால் இறங்கி வருகின்றார் கடவுள். இங்கே தோமாவின் ஏக்கத்தைக் கண்டு, எதிர்பார்ப்பு வார்த்தைகளைக் கேட்டவுடன் இறங்கி வருகின்றார் இயேசு.

இ. அந்த நிகழ்விலும் யாவே இறைவனின் பெயர் 'ஆண்டவர்' என்றும் 'கடவுள்' என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கேயும் அதே சொற்களால் இயேசுவை அழைக்கின்றார் தோமா.

ஈ. அங்கே இஸ்ரயேல் மக்கள் யாவே இறைவனைக் தங்கள் கடவுள் என ஏற்றுக்கொள்கின்றனர். இங்கே தோமா இயேசுவைத் தன் கடவுள் என ஏற்றுக்கொள்கின்றார்.

உ. அங்கே மோசே தயக்கம் காட்டுகிறார். இங்கே தோமாவும் தயக்கம் காட்டுகிறார்.

ஊ. மோசே கடவுளை முட்புதரில் கண்டார். நம்பினார். ஆனால், அவர் சொன்னதைக் கேட்ட மக்கள் காணாமலே நம்பினர். இங்கே தோமா இயேசுவைக் கண்டார். நம்பினார். இவர்(கள்) சொன்னதைக் கேட்ட, கேட்கின்ற நாம் இன்றுவரை இயேசுவை நம்புகின்றோம்.

இவ்வாறாக, மோசேக்கு கிடைத்த முட்புதர் அனுபவம் அவரை பாரவோன் முன்னிலையில் நிறுத்தியதுபோல, தோமாவுக்கு கிடைத்த இந்த அனுபவம் அவரைக் கண்டங்களைக் கடந்து செல்லும் திருத்தூதர் ஆக்குகிறது.

இயேசு-தோமா நிகழ்வு நமக்கு ஒரு அழைப்பையும், ஒரு ஆறுதலையும் விடுக்கிறது:

அழைப்பு: 'நம்பிக்கையற்றவனாய் இராதே! நம்பிக்கை கொள்!'

நம்பிக்கை என்பது ஒரு சாய்ஸ். நான் நம்பிக்கையற்றவனாகவும் இருக்கலாம். நம்பிக்கையாளனாகவும் இருக்கலாம். முந்தைய நிலையிலிருந்து பிந்தைய நிலைக்குக் கடந்து வருகின்றார் தோமா. தோமாவின் இந்தப் பயணம் ஒரு போராட்டமாக, தயக்கமாக, ஐயமாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்களும் மோசேயையும், மோசே சொன்ன கடவுளையும் உடனே முழுமையாக நம்பிவிடவில்லை. அவர்களும் தயக்கம் காட்டுகின்றனர். சந்தேகம் கொள்கின்றனர். நம்பிக்கையில் பின்வாங்குகின்றனர். மோசேக்கும் கடவுளுக்கும் எதிராக முணுமுணுக்கிறார்கள். 

இந்த நம்பிக்கை எனக்கு ரொம்ப அவசியம். என் நாளை நகர்த்த உதவுவது இதுவே. 

கடவுள் மேல் உள்ள நம்பிக்கை மட்டும் நம்பிக்கை அல்ல. பிறர்மேல், தன்மேல் வைப்பதும் நம்பிக்கையே. 'நம்பிக்கை' என்பது 'எமேத்' என்று சொல்கிறது எபிரேயம். 'எமேத்' என்றால் பாறை. அதாவது, தளர்ச்சியின் எதிர்ப்பதம் இது. தளராத, நொறுங்காத, அசையாத எதுவும் நம்பிக்கையே. தளராத, நொறுங்காத, அசையாத ஒன்றின்மேல்தான் நாம் அதைவிட மேலானதைக் கட்ட முடியும். 

இன்று இறைநம்பிக்கை, பிறர்நம்பிக்கை, தன்நம்பிக்கை என்னும் முக்கோணத்தில் நான் நம்பிக்கையற்றவனாய் இருக்கக் காரணமாக இருப்பது எது? அதை நான் எப்படி களைகின்றேன்?

ஆறுதல்: 'காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'

'காண்பதையும், கேட்பதையும், தொடுவதையம் தாண்டிய ஒரு உலகம் இருக்கிறது' எனச் சொல்கிறது இயேசுவின் இந்த ஆறுதல். நம் வீடுகளில் இறந்த நம் அப்பாவோ, அம்மாவோ நம்மோடு இப்போது இல்லை என்றாலும், அவர்களின் நினைவு நமக்கு ஒருவித ஆற்றலைத் தருகிறதே. ஏன்? காண்கின்றவர்கள் தரும் ஆற்றலைவிட காணாத அவர்கள் எனக்கு எப்படி நம்பிக்கை தர முடிகிறது? ஆக, வாழ்வை விரித்து, விசாலமாகப் பார்த்தல் அவசியமாகிறது.

இயேசுவைச் சுற்றி கால வட்டங்கள் வரைந்துகொண்டே சென்றால் நாம் இப்போது 2018ஆம் வட்டத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். தோமாவும் அவருடைய சக திருத்தூதர்களும் இயேசுவைக் காண்கின்றனர். நம்புகின்றனர். ஆனால், நமக்கு அந்த முதல் நேரிடை அனுபவம் கிடையாது. நாம் நம்புவது சீடர்களின் சீடர்களின் சீடர்களின் சீடர்களின் ... சீடர்களையே. ஆக, நீங்க, நான், அவர் என எல்லாருமே காணாமலே நம்புவோர்தாம்.

இறுதியாக,

காண முடியாதவற்றையும் கண்டு நம்பக் கற்றுக்கொண்டோமென்றால், காண்கின்ற எந்த மனிதரோடும் நம்மால் இணக்கமாகவும், அமைதியாகவும், பகிர்ந்துகொண்டும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் வாழ முடியும். அந்த நிலையைத்தான் இன்றைய முதல் வாசகம் (திப 4:32-35) நமக்குப் படம்பிடித்துக்காட்டுகிறது.

தோமாவின் அழைப்பு - அவருக்கும், உங்களுக்கும், எனக்கும் - நம்பிக்கை கொள்ள, காண முடியாதவற்றைக் காண!





No comments:

Post a Comment