Saturday, 30 September 2017

பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு

            எசேக்கியல்18 25-26 பிலிப்பியர் 2 1-11 மத்தேயு 21 28-32

மறையுரை மொட்டுக்கள்-அருள்பணி Y இருதயராஜ்

ஒரு குட்டியானை அம்மா யானையிடம் தனக்கு ஒரு நீளமான கால்சட்டை வாங்கிக் கொடுக்கும்படி கேட்டது. அவ்வாறே அம்மா  அதற்கு ஒரு நீளக் கால்சட்டை வாங்கி கொடுத்தது. குட்டியானை அம்மா யானையிடம் "கால்சட்டையில் ஒரு பை இருந்தால், அலைபேசி (Cell Phone) வைக்க வசதியாக இருக்கும்" என்றதாம். இக்காலத்தில் யானைக்குக்கூட அலைபேசி தேவைப்படுகிறது.  ஒரு பிச்சைக்காரி ஒரு வீட்டில் "அம்மா பழைய செல்போன் இருந்தால் போடுங்கம்மா" என்றாராம். பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்து காணப்படுவது கடவுள் அல்ல. மாறாக அலைபேசி. ஆலயத்தில்கூட அலைபேசி ஒலிக்கிறது. ஒரு கோவிலின் முகப்பில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது. "அலைபேசி கொண்டுவராமல் இருப்பது உத்தமம்; அலைபேசி கொண்டுவந்து அதைப் பயன்படுத்தாமல் இருப்பது

மத்திமம். அலைபேசி கொண்டுவந்து அதைப் பயன்படுத்துவது அதர்மம்". அலைபேசி மூலம் பலருடன் தொடர்பு கொள்கிறோம். அது காலத்தின் கட்டாயம். ஆனால் கடவுளுடன் தொடர்புகொண்டு அவர் பேசுவதைக் கேட்கிறோமா? அவர் சொற்படி நடக்கிறோமா? என்பதுதான் சிந்தனைக்குரியது.

பழைய ஏற்பாட்டில் கடவுள் இஸ்ரயேல் மக்களுடன் பேசினார் அவர்களுடன் உடன்படிக்கை செய்தார்: அவர்களுக்குக் கட்டளைகள் கொடுத்தார். அம்மக்கள் "ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்"  விப 2437) என்று கூறினர்.

ஆனால் அவர்கள் கடவுளுடைய கட்டளை கடைப்பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல கடவுளுடைய வழிகள் சரியல்ல என்றும் கூறினார்கள். எனவே, இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இறைவாக்கினர் எசேக்கியேல் மூலம் கூறுகிறார்: "என் வழி சரியானது. உங்கள் வழிதான் சரியல்லை. தீய வழியில் செல்லாமல், என் வழியில் சென்றால், நீங்கள் சாகமாட்டீர்கள் வாழ்வீர்கள்" (எசே 18:25-28). இருப்பினும் இஸ்ரயேல் மக்கள் கடவுளுடைய பேச்சைக் கேட்டுக் கடவுள் வழியில் செல்லவில்லை. பாம்புகுட்டி குறும்பு பண்ணினால் அம்மா பாம்பு என்ன சொல்லும்? "ஒழுங்கா நட இல்லேன்ன தேலை உரிச்சுப்பிடுவேன்" என்று கூறுமாம். குறும்பு செய்த தன் மகனிடம் அம்மா கூறினார் "சொன்ன பேச்சை கேட்கவில்லை என்றால், தோலை உரிச்சி உப்பைத் தடவிப்பிடுவேன்!"


தமது பேச்சைக் கேட்காத இஸ்ரயேல் மக்களைக் கடவுள் அழிக்கவில்லை. மாறாக அவர்களிடம் மிகுந்த பொறுமையைக் காட்டினார். இன்றையப் பதிலுரைப் பாடல் கூறுகிறது "ஆண்டவரே உமது இரக்கத்தையும் பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில் அவை தொடக்கமுதல் உள்ளவையே (திபா 25:8). தொடக்க முதல் கடவுள் தம்முடைய மக்களுக்குத் தமது இரக்கத்தையும் பேரன்பையும் காண்பித்தார். ஆனால் அம்மக்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இருப்பினும் கடவுள் தமது வழியையும் மாற்றிக் கொள்ளாமல் அம்மக்களிடம் தம் ஒரே மகனை அனுப்பினார். "பலமுறை பல வகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாட்களில் தம் மகன் வழியாக நம்மிடம் (எபி 1:1). கடவுளின் விருப்பம் நாம் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிய வேண்டும்; அவர் செல்வதைக் கேட்க வேண்டும். "என் அன்பார்ந்த மைந்தர் இவரே இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்" (மத் 17:5). திருமுழுக்கு யோவானும் கிறிஸ்துவும் மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தபோது வரிதண்டுவேரும் விலைமகளிரும் அவர்களுக்குச் செவிசாய்த்தனர். மனம் மாறினர். ஆனால் மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மனம் மாறவில்லை. இந்தக் கசப்பான உண்மையைக் கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் இரு புதல்வர்கள் உவமை" மூலம் வெளிப்படுத்துகிறார் (மத் 21:28-32)மூத்த மகன் முதலில் அப்பாவுக்குக கீழ்ப்படியமாட்டேன் என்று சொன்னாலும், பிறகு மனம்மாறித் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றான். ஆனால் இளைய மகன் முதலில் அப்பாவுக்குக் கீழ்ப்படிவதாகச் சொன்னாலும். கடைசியில் அப்பாவுக்குக் கீழ்ப்படியவில்லை.

தோட்டத்திற்கு வேலைசெய்யப் போகவில்லை. மூத்த மகன் பாவிகளின் பிரதிநிதி, இளைய மகன் பரிசேயரின் பிரதிநிதி விலைமாதர்கள் மனம் மாறினர் பரிசேயர் மனம் மாறவில்லை. ஆரம்பத்தில் தீய வாழ்க்கை வாழ்ந்தவர் மனம் மாறி நல்வழியில் சென்றால், அவர்கள் வாழ்வர். மாறாக ஆரம்பத்தில் நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள் கடைசியாகப் பாவத்தில் வீழ்ந்தால் அவர்கள் சாவார்கள் என்று கடவுள் எச்சரிக்கிறார் (ота 18-21-24)
கிறிஸ்து கூறிய "இரு புதல்வர்கள் உவமையில்" அவர் குறிப்பிடாத மூன்றாவது மகனையும் நாம் நினைத்துப் பார்ப்பதில் தவறு இல்லை,
அம் மூன்றாம் மகன் அப்பாவிடம் நான் வேலைக்குப் போகிறேன்" என்று சொன்னதுமட்டுமல்ல வேலைக்குப் போகவும் செய்தார். அவர்தான் கிறிஸ்து. இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது. "கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்தார்" (பிலி 28) கிறிஸ்து ஒரே நேரத்தில் "ஆம்" என்றும் "இல்லை" என்றும் பேசுபவர் அல்ல (2 கொரி 119) அவர் எப்பொழுதும் கடவுளுடைய விருப்பத்திற்கு ஆம் என்று சொல்லி அதன்படி நடந்த அன்பு மகன். கடவுளுக்கு அவர் கீழ்ப்படிந்து சிலுவைச் சாவை ஏற்றதால் கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்து மகிமைப்படுத்தினர் எவரும் எளிதாக வாக்குறுதி கொடுத்துவிடலாம். ஆனால் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது மிகவும் கடினம் என்கிறார்

வள்ளுவர்.
சொல்லுதல் யாவர்க்கும் எளிய அரியஆம்
சொல்லிய வண்ணம் செயல்  (குறள் 664)

திருப்பலியில் ஆமென் என்று சொல்லிக் கிறிஸ்துவின் உடலை உட்கொள்ளும் நாம், அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் அவருக்கு ஆமென் என்று சொல்லுகிறோமா?


"என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என்  தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்" (மத் 7:21)
எண்ணங்களை மாற்றி!

அருள்பணி எசு கருணாநிதி -மதுரை

ரிச்சர்ட் கார்ல்ஸன் அவர்கள் எழுதிய, 'நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் எந்த நிலையிலும்' (யூ கேன் பி ஹேப்பி நோ மேட்டர் வாட் யூ வான்ட்) என்ற நூலில் யூரிபிடஸ் என்ற மெய்யியலாளர் மற்றும் வரலாற்று அறிஞரின் வார்த்தை ஒன்றை மேற்கோள் காட்டியிருக்கின்றார்: 'இரண்டாம் எண்ணங்கள் எப்போதும் ஞானம் மிக்கவை' ('Second Thoughts are Ever Wiser'). நாங்கள் குருமாணவர்களாக ஆன்மீகப் பயிற்சி ஆண்டில் இருந்தபோது சொல்லிக்கொடுக்கப்பட்ட பல தியானப் பயிற்சிகளில் ஒன்று, 'எண்ணங்களைத் துரத்துவது.' அதாவது, நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். கண்களை மெதுவாக மூடிக்கொள்ள வேண்டும். நம் சிந்தனையை நம் சிந்தனைகளில் பதிவு செய்ய வேண்டும். அதாவது இந்த நொடியில் என்ன யோசிக்கிறேன் என்று யோசிக்க வேண்டும்.

தான் யோசிப்பதையே யோசிக்கக்கூடிய உயிரினம் மனித உயிரினம் மட்டும்தானே! (யாருக்குத் தெரியும்?!) அப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நிமிடத்தில் அதாவது 60 நொடிகளில் நாம் 200 முதல் 300 விஷயங்கள் பற்றிச் சிந்திக்கிறோம். ஆச்சர்யமாக இருக்கிறது. இவற்றில் எந்த எண்ணம் உண்மை எந்த எண்ணம் பொய் என்பதெல்லாம் கிடையாது. எல்லாமே எண்ணங்கள்தாம். எல்லாமே நம் உள்ளத்தில் தோன்றி மறைபவைதாம். 'வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளது அனையது உயர்வு' என்கிறது திருக்குறள். எண்ணங்களின் ஊற்றும், உறைவிடமும் உள்ளமே. 'எண்ணம்போல் வாழ்வு' என்று பல தியான மையங்களில் சொல்லப்படுகிறது.

நம் எண்ணங்கள் இயல்பாகவே மாறக்கூடியவை என்பது ஒருபுறம்.நம் எண்ணங்களை நாமாக மாற்ற முடியும் என்பது மறுபுறம்.இன்றைய இறைவாக்கு வழிபாடு இந்த இரண்டாம் புறத்தைப்பற்றியதாக இருக்கிறது.

எண்ணங்களை நாமாக மாற்றுவது என்றால் எப்படி?இந்தியா முழுக்க ஜியோ சிம்மையும், ஃபோனையும் அறிமுகப்படுத்தி எல்லாரையும் தன் உள்ளங்கைக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறது ரிலையன்ஸ் கம்பெனி. ரிலையன்ஸ் கம்பெனி சிம்மைப் பயன்படுத்திய ஒரு கசப்பான அனுபவத்தால் இன்றுவரை ரிலையன்ஸ் என்ற பெயரைக் கேட்டாலே கடுப்பாகிவிடுகிறது. என் நட்பு வட்டாரத்தில் பலர், 'நீயும் ஜியோ சிம் வாங்கிக்கொள்ளலாமே!

ஒரு நாளைக்கு ஒரு ஜிபி இலவசம்!' என்று ரெகமன்டேஷன் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு நாளைக்கு ஒரு ஜிபி எனக் கொடுப்பதை உறுதி செய்யும் நம் இந்திய அரசால் ஒரு நாளைக்கு ஒரு கிலோ அரிசியை நமக்கு உறுதி செய்ய முடியவில்லை என்பதுதான் வெட்கக்கேடு. ஸ்மார்ட்ஃபோன் நம் பசியாற்றாது என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்? நேற்றைய தினம்

ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைக்குச் சென்றபோது என்னை அறியாமல் ரிலையன்ஸ் ஜியோ மேல் ஒரு ஈர்ப்பு. இதை வாங்கி அலுவலகத்தில் வைத்தால் நிறைய ஃபோன் பில்லைக் குறைத்துவிடலாம் என மனம் எப்படி எப்படியோ கணக்குப் போட்டது. ஏறக்குறைய அதை விற்பனை செய்பவரின் அருகில் சென்றுவிட்டேன். 'ஜியோ சிம் எடுக்குறீங்களா சார்?' எனக்கேட்டார் விற்பனையாளர். 'இல்லை. சும்மா பார்க்க வந்தேன்' என்று சொல்லிவிட்டு இடம் பெயர்ந்தேன். ஒரு பொருளைக் குறித்த எண்ணம் சில நாள்களில் நமக்கு
மாறிவிடுகிறது.

அதே போலவே ஆள்களைப் பற்றிய எண்ணங்களும் மாறுகின்றன. 'அவனை நான் என்னவோ மோசமானவன்னு நினைச்சேன். ஆனா அவன் நல்லவன்' என்றும், 'அவனை எவ்வளவு நல்லவன்னு நினைச்சேன். ஆனா அவன் இவ்வளவு மோசமானவனா' என்றும் பிறரைப் பற்றிய நம் எண்ண ஓட்டங்கள் மாறியிருப்பதை நாமே உணர்ந்திருக்கிறோம். அல்லது கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆக, எண்ணங்கள் மாறக்கூடியவை என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

இன்றைய நற்செய்தி வாசகத்திற்கு (காண். மத் 21:28-32) முந்தைய பகுதியில் இயேசுவின் அதிகாரம் கேள்விக்குட்படுத்தப்படுகிறது. இயேசு தன் அதிகாரம் மற்றும் ஆற்றலின் இரகசியத்தை பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், மற்றும் கேள்வி கேட்டவர்களோடு பகிர்ந்து கொண்டாலும் அவர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்வதாக இல்லை. இந்தப் பின்புலத்தில்தான்,இந்த நிகழ்ச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று 'இரு புதல்வர்கள் உவமையை' சொல்கிறார் இயேசு. இந்த உவமை விண்ணரசு பற்றியது அன்று. இதற்குப் பின் வரும் திராட்சைத் தோட்ட குத்தகைதாரர்கள் உவமை விண்ணரசு பற்றியது. மேலும் இந்த உவமை மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கிறது. வழக்கமாக 'இரு புதல்வர்கள்' எடுத்துக்காட்டுக்களில் 'இளையவர் சிறப்பானவராகவும், மூத்தவர் கண்டிக்கத்தக்கவராகவும் சித்திரிக்கப்படுவார்' (எ.கா. ஊதாரி மைந்தன் உவமை). ஆனால் இங்கே சற்றே
வித்தியாசமாக, 'மூத்தவர் நல்லவராகவும் இளையவர் கண்டிக்கத்தக்கவராகவும்' சித்தரிக்கப்படுகின்றனர்.இந்த உவமையை இரண்டு உரையாடல்களாகப் பிரிக்கலாம்.

அ. தந்தை மற்றும் மூத்த மகன்

இங்கே தந்தை தன் மகனை, 'மகனே' என அழைக்கிறார். 'நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்' என்ற கட்டளையை மகனுக்குத் தருகின்றார் தந்தை. மகன், 'நான் போக விரும்பவில்லை' என்கிறான். இங்கே நன்றாகக் கவனிக்க வேண்டும். 'நான் போகவில்லை' என்று சொல்லவில்லை மகன். மாறாக, 'போவதற்கான விருப்பம்கூட இல்லை' என்கிறான் மகன். அதாவது, 'பொருள்காட்சி போகவில்லை' என்று சொல்வதைவிட, 'பொருள்காட்சி போக வேண்டும் என்ற விருப்பம்கூட இல்லை' என்கிறான் மகன்.

ஆ. தந்தை மற்றும் இளைய மகன்

இளைய மகனும், மூத்த மகனும் ஒரே வீட்டில் அல்லது ஒரே இடத்தில் இருந்தார்களா அல்லது அவர்களுக்கிடையே இட இடைவெளி இருந்ததா என்பது நமக்குத் தெரியவில்லை. மூத்தவனிடம் சென்ற தந்தை இளையவனிடமும் செல்கின்றார். இங்கே அவர் என்ன சொன்னார் என்பது பதிவு செய்யப்படவில்லை. 'அப்படியே சொன்னார்' என பதிவு செய்கிறார் மத்தேயு. 'மகனே' என்று சொன்னாரா என்பதும் தெரியவில்லை. ஆனால், இளைய மகனது பதில், 'நான் போகிறேன் ஐயா' என்று இருக்கிறது. மூத்த மகன் தன் தந்தையை 'ஐயா' 'ஆண்டவரே' என்று அழைக்கவில்லை. ஆனால் இரண்டாம் மகன் வாய்நிறைய அழைக்கிறான்.உரையாடல் முற்றுப்பெற்றுவிட்டது.இப்போ திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்கு யார் சென்றார் என்பதையும் சொல்கின்றார் இயேசு. 

மூத்தவன் தன் மனத்தை மாற்றி;க்கொண்டு திராட்சைத் தோட்டத்துக்குச் செல்கிறான் இளையவனும் தன் மனத்தை மாற்றிக்கொண்டு வீட்டிலேயே இருந்துவிடுகிறான்.

மூத்தவனின் உள்ளத்து மாற்றம் அவனைத் தந்தைக்கும், திராட்சைத் தோட்டத்திற்கும் நெருக்கமாக்குகிறது.இளையவனின் உள்ளத்து மாற்றம் அவனைத் தந்தைக்கும், திராட்சைத் தோட்டத்திற்கும் அந்நியமாக்குகிறது. இந்தக் கதையை உடனே அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்கின்றார் இயேசு. 'வரிதண்டுவோரும், மகளிரும்' 'மூத்தவன்' எனவும், 'யூதர்களும், மறைநூல் அறிஞர்களும்' 'இளையவன்' எனவும், இரண்டாமவர்கள் யோவானின் நீதிநெறிக்கும் செவிமடுக்கவில்லை, முன்னவர்களின் செயல்களைக் கண்டும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்கிறார் இயேசு.

ஆக, எண்ணங்களை மாற்றிக்கொள்வது - நல்லதுக்காக என்றால் - அதில் தவறில்லை.'எண்ணங்களை மாற்றும்போது நம்பிக்கை பிறக்கிறது' என்பது இயேசு சொல்லும் பாடம்.

ஒருவேளை தந்தை மாலையில் வீட்டிற்கு வந்து இரண்டு மகன்களையும் சந்திக்கிறார் என வைத்துக்கொள்வோம். மூத்தமகன் அவரிடம் தான் செய்த வேலை பற்றியும், தோட்டத்து தொழிலாளர்கள் நிலை பற்றியும், தோட்டத்தின் நிலை பற்றியும் பகிர்ந்து கொள்வான். இளைய மகனோ தான் வர முடியாமல் போனதற்காக சாக்குப் போக்குகளை, காரணங்களைப் பட்டியலிடுவான்.

இன்று நாம் பல நேரங்களில் நம் வேலைகளைச் செய்து முடிப்பதற்குப் பதிலாக, அதைச் செய்யாமல் இருந்ததற்கான சாக்குப் போக்குகளைக் கண்டுபிடிக்கிறோம்.இப்படிப்பட்ட ஒரு நிலைதான் இன்றைய முதல் வாசகத்தில் (எசே 18:25-28) இருக்கிறது.

பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக்கிடக்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். இவர்கள் தங்களின் இந்த நிலைக்குக் காரணம் தங்களின் மூதாதையரின் பாவம் என்றும் தாங்கள் இயல்பிலேயே குற்றமற்றவர் என்று எண்ணிக்கொண்டு, 'கடவுள் நேர்மையற்றவர். அவர் நம் முன்னோர்களின் பாவங்களுக்காக நம்மைத் தண்டித்துவிட்டார். அவர்களின் குற்றப்பழியை நம்மேல் சுமத்திவிட்டார்' என்று கடவுளின்மேல் குற்றம் சுமத்துகின்றனர். இவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு கடவுள் தரும் விடையே இன்றைய முதல்வாசகம்.

'இஸ்ரயேல் வீட்டாரே, கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை' என்று சாடிவிட்டு, 'அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால் அவர்கள் வாழ்வர்' என்கிறார் ஆண்டவராகிய கடவுள். அதாவது, தங்களின் எண்ணத்தை மாற்றவேண்டும் இஸ்ரயேல் மக்கள். இந்த எண்ண மாற்றமே உண்மையைக் கண்டுணர்தல்.

இந்த மாற்றம் நிகழாதவரை என்ன நடக்கும்? இஸ்ரயேல் மக்கள் தங்கள் செயல்கள் சரி என்று நிரூபிக்கக் காரணங்கள் அல்லது சாக்கு போக்குகள் தேடிக்கொண்டிருப்பர்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (பிலி 2:1-11) பிலிப்பு நகர திருச்சபைக்கான மடலில் தன் அறிவுரையைத் தொடரும் பவுலடியார் அவர்களிடையே விளங்கிய 'கட்சி மனப்பான்மை' மற்றும் 'வீண்பெருமை' ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, 'அவர்கள் தாழ்மையோடும், தன்னலமற்றவர்களாயும் இருக்க வேண்டும்' என அறிவுறுத்தும் பவுல், 'கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும்  இருக்கட்டும்!' என அடிக்கோடிடுகின்றார். அதாவது, அவர்கள் கொண்டிருக்கிற எண்ணம் மாற்றம் பெற்று அது கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையாக மாற வேண்டும். அந்த மனநிலை என்ன என்பது ஒரு கிறிஸ்தியல் பாடல் வழியாகத் தெளிவுபடுத்துகின்றார் பவுல்.

ஏற்கனவே தாங்கள் கொண்டிருக்கின்ற மேட்டிமை அல்லது உயர்வு மனப்பான்மை உணர்வை பிலிப்பு நகர திருச்சைபயினர் மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் மாற்றாதபோது தங்கள் உணர்வுகள் மற்றும் செயல்களை நியாயப்படுத்த அவர்கள் சாக்குப் போக்குகளைக் கண்டுபிடிப்பார்கள்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

1. கொஞ்சம் நீட்டிப் பார்ப்போம்

இன்றைய நற்செய்தியில் வரும் 'இரு புதல்வர் உவமையை' கொஞ்சம் முன்னும், பின்னும் நீட்டித்துக் கற்பனை செய்து பார்ப்போம். ஒரு அப்பாவிற்கு நான்கு மகன்கள் இருந்தனர்: எல்லாரையும் ஒன்றாக அழைத்து, 'நீங்கள் என் தோட்டத்திற்கு வேலைக்குப் போங்கள்!' என்கிறார். மகன் 1 'போகிறேன்' என்று சொல்லவுமில்லை. போகவுமில்லை. மகன் 2 'போகிறேன்' என்று சொல்கிறான். ஆனால் போகவில்லை. மகன் 3 'போகிறேன்' என்று சொல்லவில்லை. ஆனால் போகிறான். மகன் 4 'போகிறேன்' என்று சொல்கிறான். போகிறான்.

முதல் நிலை 'கண்டுகொள்ளாத நிலை'. இரண்டாம் நிலை 'ஏமாற்று நிலை'. மூன்றாம் நிலை 'பின்புத்தி மனநிலை'. நான்காம் நிலை 'உண்மை மனநிலை'. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மனிதர்கள் தாம் இன்றைய நற்செய்தியில் வரும் மூத்த மற்றும் இளைய மகன்கள். மூத்த மகனுக்கு முதலில் போக விருப்பமில்லை தான். ஆனால் தன் தந்தையின் பேரன்பையும், தாராள உள்ளத்தையும் எண்ணிப்பார்த்து 'சரி! அவருக்காகவாவது போவோம்!' என நினைத்திருக்கலாம். அல்லது 'இந்த வேலையைச் செய்யவில்லையென்றால் வேறு வேலை ஏதாவது கொடுத்து விடுவார். எப்படியோ தப்பித்து ஓடி செய்து விடுவோம்' என நினைத்திருக்கலாம். அல்லது 'இவர் பேச்சைக் கேட்கவில்லையென்றால் நாளைக்கு ஏதாவது தண்டனை கொடுப்பாரோ' என்று பயத்தில் சென்றிருக்கலாம். காரணம் உவமையில் இல்லை. வாசகர்தான் கற்பனை செய்து கொள்ள வேண்டும். இளைய மகன் 'ஏமாற்றினான்' என்று நாம் குற்றம் சாட்ட வேண்டாம். ஆனால் ஏதோ ஒரு வகையில் அவனால் தன் தந்தைக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. இந்த இரண்டு மகன்களின் மனநிலைகள் இரண்டுமே 'பொய் மனநிலைகள்' தாம். உண்மையான மனநிலை 'நான்காவது மகன்' மனநிலை. அத்தகைய மனநிலையைத்தான் திருமுழுக்கு யோவான், அன்னை மரியாள், மற்றும் இயேசு ஆகியோர் கொண்டிருந்தனர். 'செய்கிறேன்' என்று சொன்னார்கள். அதையே செய்து முடித்தார்கள்.

இன்று இயேசுவின் நம் அன்றாட அழைப்பிற்கு நம் பதில் இந்த நான்கில் எப்படி இருக்கிறது? இயேசுவை விட்டுவிடுவோம்.வாழ்க்கை அல்லது உலகம் என்பது ஒரு திராட்சைத் தோட்டம். வாழ்வு என்னும் கொடையை தந்தையாகிய கடவுள் நமக்குக் கொடுத்து இங்கே அனுப்பியிருக்கிறார். அந்த வாழ்வு என்னும் அழைப்பிற்கு நாம் எப்படி பதில் சொல்கிறோம். மகன் 1 போல 'கண்டுகொள்ளாமல்' இருக்கிறோமா? மகன் 2 போல 'ஏமாற்று' மனநிலை கொள்கிறோமா? மகன் 3 போல 'பின்புத்தி மனநிலையில்' பயத்தால் வாழ்வை வாழ்கிறோமா? அல்லது மகன் 4 போல 'சொல்வதைச் செய்பவர்களாகவும், செய்வதைச் சொல்பவர்களாகவும்' இருக்கின்றோமா? மகன் 4க்குரிய மனநிலையை நாம் பெற வேண்டுமெனில் நல்ல முடிவெடுக்கும் திறனும், முடிவெடுத்தபின் மனதை மாற்றாத திடமும், எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் விடாமுயற்சியும் அவசியம். இந்த மூன்றில் ஒன்று குறைந்தால் கூட நாம் உண்மையிலிருந்து தவறி விடுவோம்.

2. எண்ணங்களை மாற்றும்போது நம்பிக்கை பிறக்கிறது


இயேசுவின் சமகாலத்து எதிரிகள் அவர்மேல் நம்பிக்கை கொள்ள முடியாமல் போனதற்கான காரணம் அவர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்பதுதான். இந்த எண்ணமாற்றம் ஒன்று தானாக நடக்க வேண்டும். அல்லது மற்றவர்களின் முன்மாதிரியைக் கண்டு நடக்க வேண்டும். இவர்களுக்கு இந்த இரண்டு மாற்றங்களுமே இல்லை.இன்று கடவுளை நம்புவதற்கு எனக்கு என்ன எண்ண மாற்றம் தேவையானதாக இருக்கிறது?அல்லது எனக்கும் மற்றவருக்கும் இருக்கும் உள்ள உறவில் அவரை நம்புவதற்குத் தேவையான என் எண்ண மாற்றம் என்ன?

3. 'வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை'

'கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.' அதாவது, மற்றொன்றைப் பிடிக்க வேண்டுமென்றால் ஒருவர் தான் ஏற்கனவே பற்றிக்கொண்டிருக்கும் ஒன்றை விட வேண்டும். இயேசு அப்படித்தான் செய்கின்றார். தன் மனுவுரு ஏற்றல் என்பதைப் பற்றிக்கொள்வதற்காக தான் கொண்டிருக்கின்ற கடவுள் தன்மை என்ற பற்றை விடுகின்றார். இன்று நாம் சாக்குப் போக்குச் சொல்வதற்கும், எண்ண மாற்றம் அடைவதற்கும் தடையாக இருப்பது 'வலிந்து பற்றிக்கொள்வதுதான்.' சில நேரங்களில் தவறு என்று தெரிந்தாலும் நம் உயர்வு மனப்பான்மை அல்லது மேட்டிமை உணர்வுக்காக நாம் அவற்றை விட்டுவிடுவதில்லை.

4. வாக்கிங் தி எக்ஸ்டரா மைல்.

நம் வாழ்வின் வெற்றிக்கும், நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம் இதுதான். நம்மிடம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகச் செய்வது. நான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என வைத்துக்கொள்வோம். என்னிடம் எதிர்பார்க்கப்படுவது என்ன? பயணி விரும்பும் இடத்தில் அதற்குரிய தொகையைப் பெற்றுக்கொண்டு அங்கே சென்று அவரை நான் இறக்கி விட வேண்டும். இதையும் விட அதிகமாகச் செய்வது என்றால் என்ன? 'அவரின் உடைமைகளை ஆட்டோவில் இருந்த இறக்க உதவுவது. 'பத்திரமாய்ப் போய்வாங்க!' என்று கனிவுமொழி சொல்வது. 'பயணம் சௌகரியமாக இருந்ததா?' எனக் கேட்பது. இப்படிச் செய்வதால் என்னிடம் ஒன்றும் குறையப்போவதில்லை. ஆனால் அது எனக்கும் என் பயனாளருக்கும் மகிழ்ச்சி தருகிறது. உவமையில் வரும் மூத்த மகன் சொல் அளவில் மட்டும் தாராள உள்ளம் காட்டுகிறான். ஆனால் அவனிடம் செயல் இல்லை. மற்றவன் செயல்படுகிறான். ஆனால் செயல்பாடு தயக்கத்தோடு தொடங்குகிறது. வாழ்வதிலும், நம் உறவு நிலைகளிலும் நம்மிடம் எதிர்பார்ப்பதையும் விட கொஞ்சம் அதிகமாகச் செய்து பார்க்கலாமே?

5. எதிர்பாராத அழைப்பு

இரண்டு மகன்களுக்குமே அழைப்பு எதிர்பாராத நேரத்தில் தான் வருகிறது. அவர்கள் தயாராக இல்லாததால் ஒருவேளை அழைப்பிற்கு பதில் தரமுடியாமல் போயிருந்திருக்கலாம். நான் பணி செய்த ரோம் நகர் பங்கில் ஒருவர் இருக்கிறார். எப்போது கூப்பிட்டாலும் வருவார். காலையில் வேளைக்குச் செல்வார். மதியம் மாணவர்களுக்கு கிட்டார் சொல்லிக் கொடுப்பார். மாலையில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் முதியவர்களுக்கு பால் மற்றும் உணவுப்பொருட்கள் வாங்கிக் கொண்டு போய்க் கொடுப்பார். எங்க ஏரியாவிற்குள் ஆம்புலன்ஸ் நுழைந்தால் அவரும் உடனடியாக அங்கே வந்து விடுவார். பிக்னிக்குக்கு பஸ் ஏற்பாடு செய்வார். பீட்சா வாங்கி வருவார். பார்ட்டி முடிந்ததும் அவரே அனைத்தையும் சுத்தம் செய்வார். ஒருநாள் அவரிடம் உங்களால் எப்படி இதெல்லாம் முடிகிறது எனக் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்: 'பைபளில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்ன தெரியுமா? கழுதைக் குட்டி. 'ஆண்டவருக்குத் தேவை' என்று எருசலேம் தெரு ஒன்றில் காத்துக் கொண்டே இருக்கிறது. நானும் ஒரு கழுதைக் குட்டிதான். எந்த நேரத்தில் யாருக்கு என்ன தேவையோ நான் ஓடிவிடுவேன். 'அவர்கள் உன்னைப் பயன்படுத்துகிறார்கள்!' என்று உள்மனம் என்னை பின்னடையச் செய்யும். 'அப்படியாவது நான் பயன்படட்டுமே!' என்று எதையும் பொருட்படுத்தாமல் ஓடி உதவி செய்வேன';.

தயார்நிலையே வாழ்வின் வெற்றி நிலை.

இறுதியாக, 'முக்கியமில்லாத ஒன்றிற்கு நீ 'ஆம்' என்று சொல்லும் போதெல்லாம், முக்கியமான ஒன்றுக்கு நீ 'இல்லை' என்று சொல்கிறாய்' என்கிறது மேலாண்மையியல்.

முக்கியமில்லாதவற்றிலிருந்து முக்கியமானதிற்கு என் 'ஆம்' திரும்பினால், என் மாற்றமே எண்ண மாற்றமே! சொல்லும் செயலும் ஒன்றாகட்டும்!

அருள்பணி மரிய அந்தோணி பாளையங்கோட்டை மறைமாவட்டம்

பழங்காலத்தில் புகழ்பெற்ற துறவி ஒருவர் இருந்தார். அவரிடம் சீடராகச் சேரவேண்டும் என்பதற்காகவே நிறைய மாணவர்கள் போட்டிபோட்டார்கள். ஏனென்றால் அவரிடம் சீடராக இருந்து பயிற்சிபெற்றவர்கள் யாவருமே சமுதாயத்தில் பெரிய பெரிய நிலையில் இருந்தார்கள். அந்த துறவியிடத்தில் அருணி என்ற இளைஞன் சீடராகச் சேர்ந்தான். அருணி மிகவும் பின்தங்கிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்தாலும் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாய் இருந்தான். துறவிக்கு அருணி எப்படிப்பட்டவன் என்பதைச் சோதித்துப் பார்க்க ஆசை. அதனால் அவர் அதற்கான சரியான வாய்ப்பினையும் தேடிக்கொண்டிருந்தார்.

ஒருநாள் அவர் தன்னுடைய சீடர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது வெளியே சரியான மழை பெய்துகொண்டிருந்தது. இதுதான் அருணியை சோதிப்பதற்கு சரியான தருணம் என்பதை உணர்ந்த துறவி அவனை அழைத்து, “அருணி! வெளியே அடைமழை பெய்துகொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் இங்கே அடைமழை பெய்கிறதோ அப்போதெல்லாம் நம்முடைய தோட்டத்தின் கரையில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, மழைத்தண்ணீர் மண்ணையெல்லாம் வெளியே இழுத்துக்கொண்டு போய்விடும். ஆகையால், நீ போய் நம்முடைய தோட்டத்தில் ஏதாவது உடைப்பு ஏற்பட்டிருந்தால், அதை அடைத்துவிட்டு வா” என்றார். அதற்கு அருணி, “குருவே! இப்போதே நான் போகிறேன். நம்முடைய தோட்டத்தில் ஏதாவது உடைப்பு ஏற்பட்டிருந்தால் அதை அடைத்துவிட்டு திரும்பிவருகிறேன்” என்றான்.

அருணி வெளியே சென்ற நேரம் மழை ஓயாமல் பேய்ந்துகொண்டிருந்தது. அவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தோட்டத்திற்குச் சென்றான். தோட்டத்தில் துறவி சொன்னதுபோன்று ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டிருந்தன. அவன் தான் கொண்டுவந்திருந்த மண்வெட்டியைக் கொண்டு அவற்றை அடைத்தான். ஓரிடத்தில் மட்டும் உடைப்பு பெரிதாக இருந்தது. எனவே அவன் மண்வெட்டியைக் கொண்டு, மண்ணை அள்ளியள்ளிப் போட்டு உடைப்பை அடைத்துப் பார்த்தான். எவ்வளவோ போராடியும் அவனால் உடைப்பை அடைக்க முடியாவில்லை. அதனால் தானே அந்த உடைப்பின் நடுவே படுத்து, மண்சரிவைத் தடுத்தான்.

இந்த வேளையில் துறவி, தோட்டத்திற்குச் சென்ற அருணி இன்னும் திரும்பவில்லையே, அவனுக்கு என்ன ஆயிற்றோ என்று பதறியடித்துக்கொண்டு தன்னுடைய மற்ற சீடர்களோடு தோட்டத்திற்கு வந்தார். அங்கே அருணி உடைப்பு ஏற்பட்டிருந்த பகுதியில் படுத்து, மயக்கமுற்ற நிலையில் இருந்தான். இதைப் பார்த்த துறவிக்கு ஒருகணம் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பின்னர் அருணியை வெளியே தூக்கி எடுத்து, உடைப்பு இருந்த பகுதியில் எல்லா சீடர்களின் உதவியோடு மண்ணைப் போட்டு நிரப்பினார். பிறகு அருணியை தன்னுடைய துறவு மடத்திற்குத் தூக்கிக்கொண்டு வந்து, அவனுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்து, அவன் மயக்கம் தெளிவுறச் செய்தார். அருணி மயக்கத்திலிருந்து எழுந்த பிறகு துறவி அவனைப் பார்த்துச் சொனார், “அருணி! நீ உண்மையிலே என்னுடைய சீடர்களில் தலை சிறந்தவன். ஏனென்றால், நீ நான் சொல்வதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக உன்னுடைய உயிரையும் கொடுக்கத் துணிந்தாய். அதனால் நீயே ஒரு குருவாக மாறுவதற்கு எல்லாத் தகுதிகளும் உன்னிடத்தில் இருக்கின்றன. இன்றிலிருந்து நீதான் இந்த துறவுமடத்தின் குரு” என்று சொல்லி அவனை ஆசிர்வதித்தார்.

சொன்ன சொல்லைக் கடைப்பிடிக்கவேண்டும். அதுதான் ஓர் உண்மையான சீடனுக்கு அழகு என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் இருபத்தி ஆறாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நமது சொல்லும் செயலும் ஒத்துப்போகவேண்டும் – ஒன்றாகவேண்டோம் என்ற சிந்தனையை வழங்குகின்றது. அது எப்படி என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய உவமையில் முதலாவது மகனோ ‘தோட்டத்திற்குப் போகமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு, பின்னர் மனம்மாறி தோட்டத்திற்குச் சென்று, வேலைபார்க்கிறான். ஆனால் இரண்டாவது மகனோ, ‘தோட்டத்திற்குப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு போகாமல் இருக்கிறான். இந்த இரு புதல்வர்களும் ஒருவிதத்தில் சொன்னது போன்று செய்யவில்லைதான். ஆனாலும் முதலாவது மகனோ போகவில்லை என்றுசொல்லிவிட்டு பின்னர் போகிறான். அந்த விதத்தில் அவனை தந்தையின் திருவுளத்தினை நிறைவேற்றியவன் என்று சொல்லலாம். இரண்டாவது மகனோ தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றாமல் தன்னுடைய மனம்போன போக்கில் போனான். அதனால் அவன் தந்தைக் கடவுளிடமிருந்து தண்டனையைப் பெறுவான் என்பது உறுதி.

கிறிஸ்தவர்களாகிய நாம் சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் வல்லவர்களாக இருக்கவேண்டும். அதுதான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. மத்தேயு நற்செய்தி 7:21 ல் வாசிக்கின்றோம், “என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்” என்று. ஆகவே, நாம் இறைவார்த்தையை கேட்பவர்களாக, இறைவனை பெயருக்குத் தொழுபவர்களாக மட்டும் இருந்து விடாமல், இறைவனின் வார்த்தையின் படி வாழ்ந்துகாட்டுபவர்களாகவும் இருக்கவேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவனுக்கு அழகு.

தூய பவுல் பிலிப்பியவருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெறவில்லையா?” என்று (பிலி 2:1) கூறுவார். கிறிஸ்து இயேசு வாழ்வதைப் போதித்தார், போதித்ததை வாழ்ந்துகாட்டினார். ஆகவே, கிறிஸ்தவர்களாக நாம் வாசிப்பதை வாழ்வாக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் நாம் சொல்வதற்கும், செய்வதற்கும் பாரதூர வித்தியாசம் இருக்கின்றது. இத்தகைய ஓர் இடைவெளியை நாம் நம்முடைய வாழ்விலிருந்து அகற்றவேண்டும்.

நம்முடைய முன்னாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், “இன்றைய உலகில் மக்கள் போதனையாளர்களுக்கு யாரும் செவிமடுத்து வாழ்வதில்லை. ஒருவேளை மக்கள் போதனையாளர்களுக்கு செவிமடுத்து வாழ்கிறார்கள் என்றால், அவர்கள் வெறுமனே போதனையாளர்களாக மட்டும் நின்றுவிடுவதில்லை. அவர்கள் போதிப்பதை வாழ்வாக்குகிறார்கள்” என்று. ஆம், நமது வாழ்வு இறைவனுக்குப் பிரியமுள்ளதாக இருக்கவேண்டுமென்றால் நாம் இறைவார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல், அதை வாழ்ந்து காட்டவும் வேண்டும்.

இறைவார்த்தையை நாம் வாழ்ந்துகாட்டுவதற்கு நம்மிடத்தில் என்னென்ன தடைகள் இருக்கின்றன என்று சிந்தித்துப் பார்க்கும்போது நம்முடைய பாவங்கள், குற்றங்குறைகள்தான் தடையாக இருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. உடலில் அதிகமாக எடை வைத்திருக்கின்ற ஒருவர் மேலே ஏறிச்செல்வது எவ்வளவு கடினமோ, அதுபோன்றதான் தன்னகத்தில் குற்றங்குறைகள் உள்ள மனிதர் இறைவனைச் சேர்வதும் ஆகும்.. நாம் நம்மிடம் இருக்கும் குற்றங்குறைகளை அகற்றாவிட்டால் இறைவனை அடைவது மிகவும் கடினமாகும்.

இப்போது இறைவனை அடைவதற்கு என்ன செய்வது என ஆராந்து பார்ப்போம். இறைவாக்கினர் எசேக்கியேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், “நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச்சாவர். பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைபிடித்தால், தம் உயிரைக் காத்துக் கொள்வர்” என்று வாசிக்கின்றோம். ஆகவே, கடவுளை விட்டு வெகுதொலைவில் சென்ற ஒருவர் தன்னுடைய தவற்றை உணர்ந்து, இறைவனிடம் திரும்பி வரும்போது அவர் வாழ்வினைப் பெற்றுக்கொள்வார் உறுதி. நாம் நமது தீய வழியிலிருந்து விலகி, இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதற்கு முதலும் முடிவுமாக நாம் செய்யவேண்டியது இறைவனின் குரலுக்கு செவிசாய்த்து அல்லது கீழ்படிந்து வாழ்வதாகும்.

திருப்பாடல் 81:13 ல் வாசிக்கின்றோம், “என் மக்கள் எனக்குச் செவி சாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருக்கும்” என்று. ஆகவே, நாம் இறைவனின் குரலுக்கு செவிசாய்த்து, நம்முடைய பாவ வாழ்க்கையை விட்டொழித்து தூய வாழ்க்கை வாழ முயற்சி எடுப்போம்.

ஓர் ஊரில் புகழ்பெற்ற பிரசங்கியார் ஒருவர் இருந்தார். அவருடைய போதனையை கேட்க மக்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் வந்து போனார்கள். அவருடைய போதனையைக் கேட்ட நிறைய மக்கள் மனம்மாறினார்கள்.

ஒருநாள் அவர் மக்களுக்கு வித்தியாசமான ஒரு போதனை நிகழ்த்தினார். அவர் மக்களிடத்தில், “நீங்கள் வைத்திருக்கும் இரண்டு சக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ பழுதடைந்துவிட்டால், அதை நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கு மக்கள், “வாகனத்தை சரி செய்துவிட்டு மீண்டுமாக ஓட்டத் தொடங்குவோம்” என்றார்கள். “உங்கள் வீட்டில் இருக்கும் விலையுயர்ந்த தொலைக்காட்சி பழுதடைந்துவிட்டால், என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கும் அவர்கள், “தொலைக்காட்சியிலுள்ள பழுதை நீக்கிவிட்டு, பார்ப்போம்” என்றார்கள.

இறுதியாக அவர் அவர்களிடத்தில், “உங்களுடைய வாழ்க்கையே பாவத்தில் சிக்குண்டு, பலவீனமாகக் கிடக்கிறதென்றால் அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். மக்கள் யாருமே அதற்குப் பதில் சொல்லவில்லை. அங்கே பெரிய அமைதி நிலவியது. அப்போது அவர் மக்களைப் பார்த்துச் சொன்னார், “உங்கள் வாகனமோ அல்லது தொலைக்காட்சியோ பழுதடைந்துவிட்டால் அதனை உடனே சரிசெய்யும் நீங்கள், உங்களுடைய வாழ்க்கையே பாவத்தால் பழுதடைந்திருக்கும்போது, அதை ஏன் யாருமே சரிசெய்ய முன்வருவதில்லை” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட மக்கள் அனைவரும், “நாங்கள் பாவத்தால் பலவீனமடைந்திருக்கும் எங்களுடைய வாழ்க்கையை மறுசீரமைப்போம். நல்வழியில் நடப்போம்” என்று உறுதியளித்தார்கள்.

ஆம், நாம் நம்முடைய வாழ்வில் இருக்கின்ற பாவக்கறைகளை அகற்றுக்கின்றபோதுதான் நாம் இறைவனுக்கு உகந்த வழியில் நடக்க முடியும்.

ஆகவே, இறைவார்த்தை சொல்வதைப் போன்று நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். அதற்கு நம்முடைய வாழ்வில் இருக்கும் பாவக்கறைகளை எல்லாம் அகற்றிடுவோம். இறைவனுக்கு மட்டும் கீழ்படிந்து வாழ்வோம். அதன்வழியாக் இறையருள் பெறுவோம்.
இறைத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மனமாற்றம் சாத்தியமே

மறையுரை வழங்குபவர் Fr. Freddy is a Redemptorist priest belonging to the Province of Bangalore. Currently he is attached to the Archdiocese of St. Louis, Missouri state, U.S.A.
முன்னுரை:
    1995 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் நாளன்று அருள்சகோதரி ராணி மரியா அவர்களை சாமுந்தர் சிங் என்பவர் கத்தியால் குத்திக் கொன்றார். அந்த அருள்சகோதரி, 'பிரான்சிஸ்கன் க்ளாரிஸ்ட்' சபையைச் சேர்ந்த ஒரு துறவி. ஒரு பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அதிலிருந்த எல்லா பயணிகள் முன்னிலையில், அந்த அருள்சகோதரியை சாமுந்தர் சிங் 54 தடவை கத்தியால் குத்தினார். குற்றுயிராகக் கிடந்த ராணி மரியாவின் உடலை பேருந்திலிருந்து இழுத்து சாலையில் போட்டுவிட்டு, சாமுந்தர் சிங் அந்த இடத்தைவிட்டு அகன்றார். "அந்த அருள்சகோதரியைக் கொடுமையான முறையில் நான்தான் கொன்றேன். அதற்கான முழுப்பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்ளுகிறேன். வேறு எவராலோ தூண்டப்பட்டதாக நான் சொல்லமாட்டேன். ஏனெனில், என்னுடைய இந்தக் கைகளாலேயே அவரை மீண்டும் மீண்டும் குத்தினேன். என்னுடைய அந்தச் செயலுக்காக இறக்கும் நாள் வரையிலும் நான் வருந்திக்கொண்டே இருப்பேன்" என்று பின்னாளில் சாமுந்தர் சிங் கூறினார். சாமுந்தர் சிங் பதினோரு ஆண்டுகாலம் சிறைத் தண்டனை அனுபவித்தார். அந்த சமயத்தில் கொலைசெய்யப்பட்ட துறவியின் உடன் பிறந்த சகோதரியான அருள்சகோதரி செல்மி பால், சிறைக்குச் சென்று சாமுந்தரை சந்தித்தார். சாமுந்தர் சிங்கை "சகோதரர்" என்றழைத்த அருள்சகோதரி செல்மி பால், அவரைத் தழுவிக்கொண்டார். அதுவே சாமுந்தருடைய மனமாற்றத்திற்கான தருணமாக அமைந்தது. சிறையிலிருந்து விடுதலையான பிறகு, அருள்சகோதரி ராணி மரியாவின் குடும்பத்தை தன்னுடையக் குடும்பமாகவே எண்ணி நடத்தினார், சாமுந்தர் சிங். "அவ்வப்போது அருள்சகோதரியின் கல்லறைக்கு நான் தவறாமல் சொல்லுகிறேன். அந்த இடம் எனக்கு சமாதானமும், மனவலிமையும் தருகின்ற ஒரு புகலிடமாக உள்ளது" என்று சாமுந்தர் சிங்.கூறினார். இன்று அவர் கிராமம் கிராமமாகச் சென்று, அங்குள்ள மக்களுக்கு கிறிஸ்துவை அறிவிக்கிறார். இதனால் தான் கொலை செய்யப்படலாம் என்று அவருக்குத் தெரியும் என்றாலும், அவர் தன் பணியை நிறுத்தவில்லை. "இந்தியாவுக்கான ஒரே நம்பிக்கை, கிறிஸ்துவர்களே" என்று அவர் வலியுறுத்துகிறார்.

மாற்றம் என்பது அந்த மனிதருக்கு சாத்தியமாயிற்று. கடின இதயம் கொண்ட மத அடிப்படைவாதியாக இருந்த அவர், இப்போது நற்செய்தியின் போதகராகவும், நண்பராகவும் இருக்கிறார். இறைத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மனமாற்றத்தை அடைவது, அந்த மனிதருக்கு சாத்தியமாயிற்று.

இறைவார்த்தை:

இறைத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மனமாற்றம் என்பது சாத்தியமே என்னும்  கருத்தை, இன்றைய நற்செய்தி வாசகம் முன்வைக்கிறது.  இரண்டு முக்கிய அம்சங்களை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம்.

1. தந்தையின் அழைப்பு:                                          
இன்றைய நற்செய்தியில், நான்கு வெவ்வேறு வகையான மனிதர்களுக்கு இறைத்தந்தை அழைப்பு விடுக்கிறார். தனது மூத்த மகனிடம், "மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்" என்று அழைக்கிறார், தந்தை. தனது இரண்டாவது மகனையும் அவ்வாறே அழைக்கிறார். யூதத் தலைவர்களுக்கும், வரி தண்டுவோருக்கும், விலை மகளிருக்கும் அவர் விடுத்த அழைப்பு இதுவே. அழைப்பு என்பது எல்லோருக்கும் ஒன்றே.

2. மனமாற்றத்திற்கான சாத்தியக் கூறு:                      
"நான் போக விரும்பவில்லை" என்று சொல்லுகின்ற மூத்த மகனின் எதிர்மறையான மறுமொழி, முழுமையான நிராகரிப்பையும், தந்தையின் அதிகாரத்திற்கு எதிரான கிளர்ச்சி மனப்பாங்கையும் சுட்டிக் காட்டுகின்றது.

"தந்தையின் சொல்லுக்கு கீழ்படிவது மட்டுமே சரியான பண்பு" என்றிருந்த அக்கால நிலையில், மூத்த மகனின் இத்தகைய கூற்று ஏற்புடையதல்ல. ஆனால், அவன் தன் மனதை மாற்றிக் கொண்டான். இந்த மனமாற்றம், அவன் மனம் வருந்தி, திருந்தும் நிலையைக் குறிக்கிறது. தந்தையின் வேண்டுகோளுக்குப் பணிந்து, திராட்சைத் தோட்டத்திற்கு அவன் சென்றான். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மனமாற்றம் அங்கே நிகழ்ந்தது.

மனமாற்றத்திற்கான அழைப்பை திருமுழுக்கு யோவான் மக்களுக்கு விடுத்தபோது, வரி தண்டுவோரும், விலைமகளிரும் மனம் மாறி, திருமுழுக்குப் பெற்றனர். வரி தண்டுவோருக்கும், விலைமகளிருக்கும் அவர்களுடைய பாவங்களின் பரிமாணம், 'உள்ளங்கை நெல்லிக்கனி' போல அவர்களுக்கே தெளிவாகத் தெரிந்த காரணத்தால், அவர்களுடைய மனமாற்றம் எளிதாக நடந்தேறியது. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மனமாற்றம் அங்கே நிகழ்ந்தது.      

இரண்டாவது மகன், "நான் போகிறேன் ஐயா!" என்று சொல்லி, தோட்டத்திற்கு செல்ல சம்மதம் தெரிவித்தான். இத்தகைய சம்மதம், மறைநூலின் மரபினில், உடன்பாட்டிற்கான ஒரு முன்மொழிவு ஆகும். அவன் தன் தந்தையை "ஐயா" என்று விளித்தான். ஆனால், அவன் போகவில்லை. அவனுடைய இதயத்தின் கடினத்தன்மையே, அவன் மனமாற்றத்திற்கான சாத்தியத்தை தடுத்துவிட்டது. இயேசு, அந்த இரண்டாவது மகனோடு யூதத் தலைவர்களை ஒப்பிட்டு இங்கு குறிப்பிடுகிறார். அவர்கள் திருச்சட்டத்தை பெற்று அதனை அறிந்திருந்தாலும், அதற்கு கீழ்ப்படிந்து நடக்கவில்லை. திருமுழுக்கு யோவான் வந்து, மனமாற்றத்தின் அவசியம் குறித்து அறிவித்தபோதும், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மனமாற்றத்தை தங்கள் இதயங்களில் ஏற்படுத்திக்கொள்ள யூதத் தலைவர்கள் மறுத்துவிட்டார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக இருப்பதோ, மோசேயின் திருச்சட்டங்களை அல்லது திருச்சபையின் சட்டங்களை கடைபிடித்து ஒழுகுவதோ இறையரசில் நுழைவதற்கான அனுமதியை பெற்றுத் தராது. இறையரசில் நுழைவதற்கான அனுமதி என்பது, இறைத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மனமாற்றத்தை சார்ந்ததாகவே இருக்கிறது.

பயன்பாடு:

ஒருவருடைய வாய்மொழியாக வருகின்ற வாக்குறுதிகளை விட, அவருடைய செயல்பாடே மேலானதாக இருக்கிறது. ஒருவருடைய நயமான பேச்சு, அவருடைய நற்செயல்களுக்கு ஈடாகாது. வாடிக்கையாளர் சேவை, உற்பத்திப் பொருளின் தரம், குடிமை ஒருமைப்பாட்டு உணர்வு, மக்களை முதன்மைப்படுத்துதல் - இவையே தங்களுடைய உயர்நோக்கங்கள் என்று பல நிறுவனங்கள் அறிவிக்கின்றன. ஆயினும், இத்தகைய நிறுவனங்கள் பலவற்றின் சேவையும், பொருள்களின் தரமும், ஒருமைப்பாட்டு உணர்வும், தொழிலாளர் உறவும் குறைபாடு மிகுந்ததாகவே இருப்பதைக் காண்கிறோம். நேர்மையான செயல்பாட்டை விட, வாய்ப்பேச்சு மட்டுமே இன்றைய
காலக்கட்டத்தின் ஒழுங்குமுறையாக காணப்படுகிறது.

குழந்தையின் திருமுழுக்கின்போது, பெற்றோரும், ஞானப் பெற்றோரும், "தங்கள் குழந்தைகளை விசுவாச நெறிகளில் வளர்ப்போம்" என்பதாக புனிதமான ஒரு வாக்குறுதியை அளிக்கிறார்கள். தங்கள் குழந்தைகளின் சார்பாக 'விசுவாச அறிக்கையை' சொல்லி மன்றாடுகிறார்கள். திருமுழுக்கு சமயத்தில் நாம் அளித்த இந்த புனிதமான வாக்குறுதி என்னவாயிற்று என்பது கேள்விக்குறியே.

இரண்டாவது மகனுடையக் கூற்றை போல, இதுவும் வெறும் வாய்ப்பேச்சாகவே இருக்கிறது. வாழ்க்கையில் உண்மையான செயல்பாடு இல்லாமல், வெறும் வாய்ப்பேச்சோடு நின்றுவிடுவது, "திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்க" என்னும் இறைத்தந்தையின் அழைப்பை அவமதிப்பதாகும்.

இந்தக் கருத்தைத் தான், "என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்" (மத்தேயு 7:21) என்று இயேசு கூறுகிறார்.

இன்றைய காலகட்டத்தில், வெவ்வேறு தோற்றங்களில் இந்த உண்மையான முதல் மகன் நம் முன்னே காட்சி தருகிறான். குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்து திருந்தியவராக, போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீண்டு வந்தவராக, வறுமையில் வாடுகின்ற தன்னுடைய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்ற திருச்சபையாக, தன்னுடைய பங்குமக்களை உண்மையான மனமாற்றத்திற்கு அழைக்கின்ற குருவாக, மற்றவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்ற ஒரு கிறிஸ்தவராக, தனது திருமணம் வரை கற்பு நெறியை கடைபிடிக்கின்ற இளைஞர்-இளம்பெண்ணாக - இப்படி பலருடைய வடிவங்களில், இறைத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மனமாற்றத்திற்கு சம்மதிப்பவர்கள் எல்லாருமே, இன்றைய நற்செய்தியில் கூறப்படுகின்ற முதல் மகனைப் போல இருக்கிறார்கள்.

பல வடிவங்களில் அந்த இரண்டாவது மகனையும் நம் கண்முன்னே காண்கிறோம். வாழ்க்கையில் மாற்றத்திற்கான தேவையை உணராமல், ஆலயத்தின் இருக்கைகளில் அமர்ந்து மன்றாட்டுகளை ஏறெடுக்கிறவர், 'வாழ்வில் நடப்பது எல்லாமே நன்றாகவே நடக்கிறது' என்று நினைத்துக் கொண்டு, மாற்றம் அவசியம் என்பதை அறியாமல் இருப்பவர், 'பெரிய அளவிலான எந்தவொரு பாவத்தையும் நான் வாழ்க்கையில் செய்ததில்லை' என்று நினைப்பவர், நீதி - இரக்கம் இவற்றை புறக்கணிக்கின்ற திருச்சபை - இவ்வாறு உள்ளத்தின் ஆழத்தில் உணராமல், வெளித்தோற்றத்தில் மட்டும் உண்மையானவராக காட்டிக் கொள்ளுகின்ற எல்லாருமே இந்த இரண்டாவது மகனை ஒத்திருக்கிறார்கள் என்பது நிஜம்.

ஒரு பாலியல் தொழிலாளியின் ஜெபத்தோடு இன்றைய சிந்தனையை நிறைவு செய்கிறேன். இந்த ஜெபத்தை தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவு செய்திருந்தார். அவருடைய அனுமதியோடு அந்த ஜெபத்தை இங்கு சமர்ப்பிக்கிறேன். "அன்பான இறைவா, என்னுள் இருள் சூழ்ந்திருப்பவற்றில் ஒளியேற்றுக!.என்னுள் பலவீனமாக இருப்பவற்றிற்கு வலுவூட்டுக! என்னுள் நொறுங்கி இருப்பவற்றை சீர் செய்திடுக! என்னுள் காயம் அடைந்திருப்பவற்றிற்கு மருந்திடுக! என்னுள் நோயுற்றிருப்பவற்றை ஆற்றிடுக! இறுதியாக, சமாதானமும், அன்பும் மறைந்து, மரித்து போன என் உள்ளத்தை உயிரூட்டி புதுப்பித்திடுக!" இவர் ஒரு பாலியல் தொழிலாளியாக இருக்கலாம். ஆனாலும், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மனமாற்றத்தை நாடுகின்ற ஒரு நபராக இவர் விளங்குகிறார்.

முடிவுரை:


இறைத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மனமாற்றத்தை நாம் அடைந்திடவும், அதன் பயனாக இறையரசில் நாம் சேர்ந்திடவும், தூய ஆவியாம் இறைவன் நமக்கு வலிமை அளிப்பாராக. இறைஅன்னை மரியா நமக்காக பரிந்து பேசுவாராக.No comments:

Post a Comment