Tuesday 3 October 2017

பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு


*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

மறையுரை மொட்டுக்கள்-அருள்பணி Y இருதயராஜ்


ஒருவர் தன் நண்பரிடம், "ஒரு பத்திரிகையால் என் வாழ்வு பாழாப் போச்சு" என்றார். "அது என்ன பத்திரிகை?" என்று நண்பர் அவரிடம் கேட்டதற்கு "திருமணப் பத்திரிகை" என்றார். ஒரு சிலர்க்குத் திருமணம் சொர்க்கம் வேறு சிலர்க்கு அது நாகம், ஒரு சிலர்க்குக் காதல் சாதாரணம்; வேறு சிலர்க்கு அது அசதாரணம். காதலில் வெற்றி அடைந்தவர்களை விடத் தோல்வி அடைந்தவர்களே அதிகம். ஒருவர் ஒரு பெண்ணைக் காதலித்தார். அவர் கல்லறையில் வந்து விழுந்தன மலர் வளையங்கள்.
மனிதர் மட்டும் காதலில் தோல்வி அடைவதில்லை. கடவுளும் கூடக் காதலில் தோல்வி அடைந்ததாக இன்றைய முதல் வாசகத்தில் (எசா 5:1-7) கடவுளே கூறுவது நமக்கு வியப்பாகவும் வேதனையாகவும் உள்ளது. கடவுள் தமது வேதனையை ஒரு காதல் பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார். அவர் நல்லதொரு திராட்சைத் தோட்டத்தை நட்டு வளர்த்தார். ஆனால் அத்தோட்டமோ கனி தரவேண்டிய காலத்தில், நற்கணிகளைக் கொடுப்பதற்குப் பதிலாகக் காட்டுக் கனிகளைக் கொடுத்தது. திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் மக்களே அவர்களிடமிருந்து கடவுள் எதிர்பார்த்தக் கனி நீதி, ஆனால் அவர்கள் தந்த கனியோ வன்முறை கடவுள் அவர்களிடம் நேர்மை என்ற கனியை எதிர்பார்த்தார். அவர்கள் கொடுத்த கனியோ முறைப்பாடு.

முதல் வாசகத்தின் கருத்தையே கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் திராட்சைத் தோட்ட உவமை வாயிலாக விளக்குகிறார் நிலக்கிழார் ஒருவர் தமது திராட்சைத் தோட்டத்தைக் தொழிலாளர்களிடம் குத்தகைக்கு விட்டுவிட்டு வெளியூர் சென்றார். பழம் பறிக்கும் காலம் வந்தவுடன் தமக்குரிய பழங்களைப் பெற்று வரும்படி அவர் அனுப்பிய பணியாளர்களைத் தோட்டத் தொழிலாளர்கள் அடித்துத் துன்புறுத்துகின்றனர். கடைசியாக அவர் அனுப்பிய அவருடைய சொந்த மகனையும் அவர்கள் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டனர். இதைக்கண்ட நிலக்கிழார் அக்கொடிய தோட்டத் தொழிலாளர்களை ஒழித்துவிட்டு, முறையாகக் குத்தகை கொடுக்கும் வேறு தொழிலாளர்களிடம் தமது திராட்சைத் தோட்டத்தை ஒப்படைக்கிறார்.


இந்த உவமையின் உட்பொருள் கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் நீதி, நேர்மை, அன்பு பிரமாணிக்கம் என்ற கனிகளைப் பெறத் தமது இறைவாக்கினர்களை அனுப்பினார். ஆனால் அம்மக்களோ அவர்களைத் துன்புறுத்திக் கொன்றனர். கடைசியாகக் கடவுள் தமது ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை அனுப்பினார். ஆனால் அவர்கள்கிறிஸ்துவையும் எருசலேம் நகருக்கு வெளியே சிலுவையில் அறைந்து கொன்றனர்.



மறைக்கல்வி வகுப்பில் அரட்டை அடித்துக்கொண்டு ஆசிரியரைப் பாடம் நடந்த விடாமல் செய்த மாணவர்களிடம் ஆசிரியர் லூக்கா நற்செய்தி பிரிவு 19, சொற்றொடர் 41-ஐ வாசிக்கக் கேட்டார். அதில் என்ன எழுதி இருந்தது?"இயேசு எருசலேம் நெருங்கி வந்ததும் அதைப்பார்த்து அழுதார்" (லூக் 19:41) கிறிஸ்து எருசலேமைப பார்த்து புலம்பிக் கூறியது: "எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே. உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே கோழி தன் குஞ்சுகளைத தன் இறைக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பது போல நானும் உன் மக்களை அரவணைத்துக் கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே இதோ உங்கள் இறை இல்லம் கைவிடப்பட்டுப் பாழடையும்" (மத் 23:37) கடவுள் அழுதார்; அவர் தம் காதல் தோல்வி அடைந்துவிட்டதே என்று அழுதார்

இருப்பினும் கடவுளுடைய மீட்பின் திட்டம் தோல்வி அடையவில்லை. இஸ்ரயேல் மக்களுக்குப் பதிலாக புதிய இறைமக்களைத் தேர்ந்து கொண்டு அவர்களிடம் தமது திராட்சைத் தோட்டத்தை (இறை ஆட்சியை) ஒப்படைத்தார். அப்புதிய இறைமக்கள் கிறிஸ்துவின் விசுவாசிகள் என அழைக்கப்படும் திருச்சபை நாம் பலன் தரவேண்டும், அது நிலைத்திருக்க வேண்டும் என விரும்பி நம்மைத் தேர்ந்து கொண்டார் (யோவா 15:16).
நாம் கொடுக்க வேண்டிய கனிகள் என்ன என்பதைத் திருந்தூதர் பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். அவை முறையே உண்மை, கண்ணியம், நேர்மை, தூய்மை, பாராட்டுக்குரியவை, நற்பண்புகள் போற்றுதற்குரியவை ஆகியவை,

இறந்தவர்கள் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் ஒட்டி வைப்பதேன்? வாழும்போது நாணயம் இல்லாது வாழ்ந்தவர்கள் செத்த பிறகாவது நாணயத்துடன் போகவேண்டும் என்பதற்காக நாம் நாணயம் உள்ளவர்களாக, கண்ணியவான்களாக வாழ வேண்டும் கண்ணியமாக வாழ்வது எப்படி என்பதைத் தூய பவுல் பின்வருமாறு கூறுகிறார்: "பகலில் ஒழுகுவதுபோல் கண்ணியமாக நடக்க வேண்டும், காமம், குடிவெறி, களியாட்டம், ஒழுக்கக்கேடு சண்டை, பொறாமை ஆகியவற்றைத் தவிர்த்து ஆண்டவர் இயேசுவை அணிந்து கொள்ளுங்கள்" (உரோ 13:13)
நற்பண்புகள் நம்முடைய வாழ்வில் இடம் பெற வேண்டும்.
அவையாவை? இங்கும் உள்ளம், பரிவு தாழ்ச்சி, சாந்தம், பொறுமை, மன்னிப்பு அன்பு ஆகியவை" (கொலோ 3:12-15).

இவ்வுலகை விரைவில் அழிக்க முடியாது. ஏனெனில் இவ்வுலகில் நற்பண்பு உடையவர்கள் இருக்கின்றனர். அவர்கள் இல்லையென்றால், இவ்வுலகம் எப்போதோ அழிந்து போயிருக்கும் என்கிறார் வள்ளுவர்.

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வதுமன் (குறள் 998)

நாம் காட்டுக் கனிகளைக் கொடுக்காமல் நற்பண்புகள் எனப்படும் நற்கனிகளைக் கொடுப்போம். கடவுளை மகிமைப்படுத்துவோம். உலகம் அழியாமல் பாதுகாப்போம்.

"படைகளின் கடவுளே மீண்டும் வாரும் இந்தத் திராட்சைக்
கொடிமீது பரிவு பாட்டும்" (திபா 80:14)







No comments:

Post a Comment