Saturday 16 September 2017

பொதுக்காலம் 24-ஆம் ஞாயிறு



பொதுக்காலம் 24-ஆம் ஞாயிறு

சீஞா 2:30-287 உரோ 14:1-8; மத் 18:21-35

மறையுரை மொட்டுக்கள்-அருள்பணி Y இருதயராஜ்

கடவுளிடம் ஒருவர் "கடவுளே! உங்கள் அடையாள அட்டையைக் காட்டுங்கள்" என்று கேட்டாராம். கடவுளின் அடையாள அட்டை என்ன? புனித யோவான் கூறுகிறார் கடவுள் அன்பாய் இருக்கிறார்" (1 யோவா 4:18) மனிதரிடம் அன்பு என்பது ஒரு சிறிய துளி. ஆனால் கடவுளோ அன்புக் கடல் அவருடைய அன்புக்கு ஆழம், அகலம், நீளம் உயரம் என்பது கிடையாது கடவுள் அன்பின் முழுமை. அவரிடம் அன்பைத் தவிர வேறெதுவும் கிடையாது. கடவுளின் தனிப் பண்பைப் பற்றி இன்றைய பதிலுரைப் பாடல் பின்வருமாறு கூறுகிறது "ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர். பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் நம் குற்றங்களை எல்லாம் மன்னிக்கிறார்" (திபா 103) கடவுள் தம் மகன் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பியதன் நோக்கத்தைத் திருத்தூதர் பவுல் பின்வருமாறு கூறுகிறார். "கடவுள் உலகினரின் குற்றங்களை பொருட்படுத்தாமல் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்" (2 கொரி 5-19) எனவே கடவுள் நம் பாவங்களுக்கு ஏற்றபடி நம்மைத் தண்டிக்கவில்லை நமது பாவங்களைக் கடவுள் கிறிஸ்துவின்மேல் சுமத்த அவர் நம் பாவங்களுக்குக் கழுவாய் ஆனார்.
 கடவுள் நம் குற்றங்களை கணிக்காமல் நம்மை மன்னித்தார் என்றால், நாமும் பிறருடைய குற்றங்களைப் பொருட்படுத்தாமல் மன்னிக்க வேண்டுமென்பது இன்றைய அருள்வாக்கு வழிபாட்டின் மையக்கருத்தாகும். இன்றைய முதல் வாசகம் கூறுகிறது "உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு. அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்" (சீஞா 23:2). இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் கூறுகிறார் உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதரிகளை மனமாற மன்னிக்காவிட்டால்,விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்" (மத் 1835)
நமக்கெதிராகக் குற்றம் புரிகின்றவர்களை ஏழுமுறை மட்டுமல்ல, எழுபதுமுறை வழுமுறை மன்னிக்க வேண்டுமெனப் பணிக்கிறார் கிறிஸ்து (மத் 1822). மன்னிப்பதற்கு ஒரு வரையறை இல்லை. இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறும் உவமை வாயிலாகக் கிறிஸ்து நமக்கு உணர்த்தும் உண்மை "கடவுள் நம்முடைய கனமான பாவங்களை மன்னிக்கிறார். அப்படியிருக்க நாம் நமக்கு எதிராகச் சிறுசிறு குற்றங்களை இழைக்கின்றவர்களை மன்னிக்காமல் இருப்பது முறையா?"
ஓர் இளம் பெண் திருமணமாகி ஒரு சில நாள்களே தன் கணவருடன் வாழ்ந்தார். அதன் பிறகு கணவரின் கொடுமை தாங்கமுடியாமல் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து, மண முறிவு கேட்டார் அவரிடம், "உங்கள் கணவரை மன்னித்து அவருக்காகச் செபியுங்கள்" என்றேன். அதற்கு அவர் "என் கணவரை மன்னிக்கத் தயார் ஆனால் அவருக்காகச் செபிக்கச் சொல்லுவது கொஞ்சம் “ஓவராகத் தெரியவில்லையா?" என்று கேட்டார். கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்ததுடன், அவர்களுக்காகத் தம் தந்தையிடம் வேண்டிக்கொண்டார். அவரது இச்செயல் மனிதக் கணிப்பின்படி கொஞ்சம் "ஒவராகத்தான்" தெரிகிறது. ஆனால் அவரது செயல் அவர் உண்மையிலேயே கடவுள் என்பதை வெளிப்படுத்துகிறது. ஏனெனில் தவறிழைப்பது மனிதத்தன்மை. மன்னிப்பது தெய்வத்தன்மை பகைவர்களை மன்னிப்பதுடன் அவர்களுக்காகச் செபிக்கும்படி கிறிஸ்து நமக்கு அறிவுறுத்துகிறார் "உங்கள் பகைவர்களிடம் அன்பு கூருங்கள் உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுகள்" (மத் 5:44)
நாம் பகைவர்களுக்கு நன்மை செய்வதில் நிலத்தைப் போன்று இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர் நிலமானது தன்னை வெட்டிக் காயப்படுத்துபவர்களைத் தாங்குவதோடு அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் கொடுக்கிறது.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை (குறள் 151)
ஒரு பெண்மணிக்கு நீண்ட காலமாக ஆஸ்த்மா நோய். அவள் பல மருத்துவர்களை அணுகியும், பல செபக்கூட்டங்களில் கலந்து கொண்டும் அவருக்குக் குணம் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர் ஒருவரை மன்னிக்க மறுத்துவிட்டார் என்று அவர் தனது பகைவரை மனப்பூர்வமாக மன்னித்தாரோ அன்று அவருக்குப் பூரண குணம் கிடைத்தது. பிறரை மன்னிக்காவிட்டால், நம் மனப்புண் ஆறாது.
மன்னிப்பவரின் உள்ளம்  ஒரு மாணிக்கக் கோவில். மன்னிக்காதவரின் வாழ்வு தடமே இல்லாமல் மறைந்து போகும் என்கிறது ஒரு திரைப்படப் பாடல். 
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம்
மாணிக்கக் கோயிலடா - அதை
மறந்தவன் வாழ்வு தடம் தெரியாமல்
மறைந்தே போகுமடா. 



"மன்னியுங்கள், மன்னிப்புப் பெறுவீர்கள்" (லூக் 6.37)



மன்னிக்கும் மனம் - அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை

டெகார்ட் என்ற பிரெஞ்சு மெய்யியலாளரின், 'கோஜிட்டோ எர்கோ சும்' என்ற சொல்லாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. மறுமலர்ச்சி காலம் தொடங்கியபொழுது, 'நான் சிந்திக்கிறேன். எனவே நான்' என்று பொருள்கொள்ளும் இந்தச் சொல்லாடல் மெய்யியலின் போக்கையே மாற்றிப்போட்டது.
1990 களில் பொதுவுடைமை மறைந்து பொருளாதாரத்தில் உலகமயமாக்கல் அல்லது முதலாளித்துவம் தலைதூக்கியபோது, 'சுமோ எர்கோ சும்' என்ற சொல்லாடல் உருவானது. 'நான் வாங்குகிறேன். எனவே நான்' என்பது இதன் பொருள்.
ஆனால், 2000 ஆண்டுகளாக கிறித்தவத்தின் அடிநாதமாக இருக்கும் சொல்லாடல் 'திமித்தோ எர்கோ சும்'. அதாவது, 'நான் மன்னிக்கிறேன். எனவே நான்.'
கிறித்தவத்தின் பிதாமகன் இயேசு, 'தந்தையே இவர்களை மன்னியும்' என்று தன் வாழ்வின் கடைசி நேரத்தில் அனைவரையும் மன்னித்தவர், 'மன்னிப்பு' ஒன்றையே தன் இறையாட்சியின் மையப்பொருளாகவும், தன் போதனையின் கருப்பொருளாகவும் கொண்டிருந்தார். மன்னிப்பு என்பது கோழைத்தனம் என்று சிலர் எண்ணலாம். உண்மையில், மன்னிப்பதற்குத்தான் அதிக மனத்திடமும், தைரியமும் தேவை.
இயேசுவின் மன்னிப்பு போதனை யூதக் காதுகளுக்கு அலர்ஜியாக அல்லது வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும். 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' என்று பழகிப்போன அவர்களுக்கு, 'உங்கள் பகைவர்களையும் மன்னியுங்கள்' என்று இயேசு சொன்னது கண்டிப்பாகப் புரிந்திருக்காது. 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' என்பது அவர்களைப் பொறுத்தவரையில் பழிதீர்த்தல் அல்ல. மாறாக, திருப்பிக் கொடுத்தல். 'எனக்கு வருவதை நான் திருப்பிக் கொடுக்க வேண்டும்' என்று அவர்கள் நினைத்தது சரிதான். ஏனெனில் இதைத்தான் நியூட்டனின் மூன்றாம் விதியும் சொன்னது: 'ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு.' இப்படித்தான் இயற்கையும் நடப்பதாக அவர்கள் நம்பினார்கள். 'மன்னிப்பு' என்ற வார்த்தையால் இயேசு இயற்கையின் போக்கையே திருப்புகின்றார்.
நம் மனித உடலும், உள்ளமும் இயல்பாகவே திருப்பிக் கொடுப்பதற்கே பழகியிருக்கிறது. இதைத்தான் நாம் உடலியல் படிப்பில் 'ரிஃப்ளக்ஸ்' என்கிறோம். நாம் ஒருவர் மற்றவரை மன்னிப்பதற்கு 'ரிஃப்ளக்ஸ்' என்னும் நிலையிலிருந்து 'ரிஸ்பான்ஸ்' என்ற நிலைக்குக் கடந்து செல்வது அவசியம் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 18:21-35) நமக்கு அறிவுறுத்துகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தின் சூழல் பேதுருவின் கேள்வி: 'ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறையா?' யூதப் போதனையும் மன்னிப்பைப் பற்றி பேசியது. ஆனால், மூன்றுமுறை மன்னித்தால் போதும் என வரையறுத்தது. பேதுரு கொஞ்சம் அதிகம் சென்று, 'ஏழு முறை போதுமா?' எனக் கேட்கிறார். நிறைவு அல்லது முழுமை என்பதைக் குறிக்கும் எண் ஏழு. இந்த நிறைவு போதுமா? எனக் கேட்பது போல இருக்கிறது பேதுருவின் கேள்வி. 'எண்ணிக்கை வேண்டாம். நீ சுவாசிக்கும் சுவாசத்திற்கு எண்ணிக்கை உண்டா?' என்று கேட்பது போல இருக்கிறது இயேசுவின் பதில்: 'ஏழுமுறை மட்டுமல்ல. எழுபது முறை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன்.' சொல்லி முடித்தவுடன் மன்னிப்பைப் பற்றிய ஓர் உவமையையும் சொல்கிறார் இயேசு.
'மன்னிப்பு' என்று தொடங்குவதற்குப் பதிலாக, 'விண்ணரசு பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்' எனத் தொடங்குகிறார் இயேசு. இவ்வாறாக, விண்ணரசின் முதற்கூறாக இருப்பது 'மன்னிப்பு' என்பதையும் உணர்த்திவிடுகிறார் இயேசு. இயேசுவின் உவமையில் மூன்று முக்கிய கதைமாந்தர்கள் இருக்கிறார்கள்: 'அரசன், பணியாளன் எக்ஸ், பணியாளன் ஒய்.' அரசனுக்கும் பணியாளன் எக்ஸ்க்கும் உள்ள உறவு மேல் கீழ் உறவு. பணியாளன் எக்ஸ்க்கும், பணியாளன் ஒய்க்கும் உள்ள உறவு சமநிலை உறவு. மேல் கீழ் உள்ள உறவில் பணியாளன் எக்ஸ் கடன்பட்டிருக்கும் தொகை 10000 தாலந்து (10 கோடி என வைத்துக்கொள்வோம்). சமநிலை உறவில் பணியாளன் ஒய் கடன்பட்டிருக்கும் தொகை 100 தெனாரியம் (1000 ரூபாய் என வைத்துக்கொள்வோம்). இரண்டு தொகைகளுக்கும் உள்ள வித்தியாசம் நம்மை மலைக்க வைக்கிறது. இரண்டு பணியாளர்களுமே தாங்கள் கடன் பட்டவர்களிடம் முறையிடுகின்றனர். பணியாளன் எக்ஸை மன்னித்துவிடுகின்றார் அரசன். பணியாளன் ஒய்யை மன்னிக்க மறுக்கின்றான் பணியாளன் எக்ஸ். இது அரசனுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அரசன் தன் மன்னிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்கின்றார். ஆக, மன்னிப்பை அவன் மற்ற பணியாளனுக்குத் தராததால் அவன் பெற்ற மன்னிப்பு திருமப் பெறப்படுகின்றது. அல்லது மேலிருந்து கீழாக மன்னிப்பு பெற்ற ஒருவர் அதை சமநிலையில் இருக்கும் மற்றவரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே இயேசு சொல்லும் மன்னிப்பு பாடம். 'வானகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள்' (மத் 5:48) என இயேசு சொல்வதன் பொருளையும் இங்கே உணரமுடிகிறது.

'மன்னிப்பு' - இதை நாம் எளிதாகச் சொல்லிவிடுகிறோம். ஆனால் இதை வாழ்வாக்குவது மிகவும் கடினம். நம்ம வாழ்க்கையில சில நேரங்களில் மேலிருந்து கீழ் அல்லது கீழிருந்து மேல் மன்னித்து விடுகிறோம். உதாரணத்திற்கு, என் அறையில் வேலை செய்யும் பெண் எனக்குத் தெரியாமல் ஒரு 100 ரூபாயை எடுத்துக்கொண்டால் அதை மன்னித்துவிடுவது எளிது. அல்லது அலுவலகத்தில் எனக்கு மேலிருக்கும் பாஸ் என்மேல் தவறாகக் கோபப்பட்டுவிட்டால் அவரை மன்னிப்பது எளிது. இந்த இரண்டு நிலைகளிலும் ஒரு சார்பு நிலை இருக்கிறது: வேலைக்காரப் பெண் என்னைச் சார்ந்திருக்கிறார். நான் என் பாஸை சார்ந்திருக்கிறேன். மன்னிப்பு எங்கே கடினமாகிறது என்றால் சமநிலையில் இருப்பவர்களிடம்தான்.

மன்னிக்கும் மனம் பெறுவது எப்படி?
இதற்கான பாடங்களை இன்றைய முதல் (காண். சீஞா 27:30-28:7) மற்றும் இரண்டாம் (காண். உரோ 14:7-9) வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன. கடவுளிடமிருந்து நாம் இரக்கம் பெற வேண்டுமென்றால் ஒருவர் மற்றவருக்கு இரக்கத்தைக் காட்ட வேண்டும் எனவும், கடவுளிடமிருந்து நாம் மன்னிப்பைப் பெற வேண்டுமென்றால் ஒருவர் மற்றவரை மன்னிக்க வேண்டும் எனவும் சொல்கின்ற சீராக்கு மன்னிப்பதற்கு எளிதான வழியைக் கற்றுக்கொடுக்கின்றார்.
நாம் மற்றவரை மன்னிக்கத் தடையாக இருப்பது எது தெரியுமா? நம் நினைவுதான்.
அதாவது, அடுத்தவர் நமக்கு இழைத்த தவறு நம் மனதில் நீங்காமல் நினைவாகப் பதிவாகிவிடும்போது நம்மால் அடுத்தவரை மன்னிக்க முடிவதில்லை. இதற்கு மாற்றாக சீராக்கு நினைவு முழுவதும் மற்றதைக் கொண்டு நிரப்பிவிட்டால் அடுத்தவரின் தவற்றை நினைவுகூர நமக்கு நேரமும் இடமும் இல்லை என்கிறார்.
அந்த மற்றது எது?
நான்கு: (அ) நம் முடிவு, (ஆ) நம் சாவு, (இ) கடவுளின் கட்டளைகள், (ஈ) கடவுளின் உடன்படிக்கை.
அ. நம் முடிவை நினைவில் கொள்ள வேண்டும்
தொடங்கியது எல்லாம் முடிய வேண்டும் என்பது இயற்கையின் நியதி. நம் தொடக்கம் எப்படி நம் கையில் இல்லையோ அதுபோலவே நம் முடிவும் நம் கையில் இல்லை. அப்படி இருக்க நாம் எதற்காக மற்றவர்களின் தவறுகளையும், அவர்கள் இழைத்த காயங்களையும் கையில் பிடித்துக்கொள்ள வேண்டும். எல்லாரையும், எல்லாவற்றையும் ஒருநாள் இறக்கிவைக்க வேண்டும். அப்படி இருக்க ஏன் எல்லாரையும், எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டே செல்ல வேண்டும்.

ஆ. நம் இறப்பை நினைவில் கொள்ள வேண்டும்
இறப்புக்குப் பின் ஒருவேளை வாழ்வு இருப்பதாக வைத்துக்கொள்வோம்(!). சீராக்கின் காலத்தில் இந்த சிந்தனை இல்லை. அந்த வாழ்வை அடைய நாம் தூய்மையாக இருக்க வேண்டும். மன்னிக்காத மனம் தூய்மையாக இருப்பதில்லை. இறப்பு நமக்கு எப்போது வரும் என்பது நமக்குத் தெரியாது. ஆக, எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றால் தூய்மையான மன்னிக்கின்ற உள்ளம் அவசியம்.

இ. கடவுளின் கட்டளைகளை நினைவில் கொள்ள வேண்டும்
இங்கே 'கட்டளைகள்' என்று சொல்லப்படுவது மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவராகிய கடவுள் வழங்கிய 'பத்துக்கட்டளைகளே.' இந்த பத்துக்கட்டளைகளில் 'மன்னிப்பு' என்ற வார்த்தை அல்லது 'கட்டளை' இல்லை என்றாலும், இந்தப் பத்துக்கட்டளைகளைக் கடைப்பிடித்தால் மன்னிப்புக்கான தேவையே இல்லாமல் போய்விடுகிறது.

ஈ. கடவுளின் உடன்படிக்கையை நினைவில் கொள்ள வேண்டும்
'நாம் உங்கள் கடவுளாய் இருப்போம். நீங்கள் எம் மக்களாய் இருப்பீர்கள்' என உடன்படிக்கை செய்தார் கடவுள். நாம் சேர்ந்து இருக்கும்போதுதான் கடவுள் நம் கடவுளாய் இருக்கிறார். சேர்ந்து இருப்பதற்கு மன்னித்தல் அவசியமான ஒன்று.

இவ்வாறாக, இந்த நான்கு நினைவுகூர்தல்கள் வழியாக மன்னிப்பு சாத்தியம் என்பதை உணர்த்துகிறார் சீராக்கு.

உ. அனைவரும் கிறிஸ்துவுக்குள்
இதைத் தொடர்ந்து தூய பவுலடியாரும் உரோமை நகர திருச்சபைக்கு எழுதுகின்ற அறிவுரைப் பகுதியில், 'நாம் இருந்தாலும், இறந்தாலும் கிறிஸ்துவுக்குள்ளே இருக்கிறோம்' என்கிறோம். அதாவது, நாம் உறவு நிலைகளில் இருந்தாலும், இறந்தாலும் கிறிஸ்துவே இணைக்கின்றார் அனைவரையும். ஆகையால்தான், தூய அகுஸ்தினாரும் நாம் வைத்திருக்கும் உறவுகளை எல்லாம் கடவுளில் அன்பு செய்ய வேண்டும் என்கிறார். அப்படி அன்பு செய்யும் போது எந்தவொரு எதிர்மறையான நிலைகளுக்கும் அங்கே இடமில்லாமல் போய்விடுகிறது.
இப்படியாக, இந்த ஐந்து நிலைகளில் நாம் மன்னிப்பின் அவசியத்தை உணர்ந்துகொள்ள முடியும்.சரி.

மன்னித்தால் என்ன நடக்கிறது?

அ. நாம் மன்னிக்காதபோது இறந்த காலத்தில் வாழ்கின்றோம். நம் காயத்தில் வாழ்கின்றோம். சில நேரங்களில் மன்னிக்காத நாம் கஷ்டப்படுவோம். தவறு செய்த மற்றவர் ஜாலியாக இருப்பார். ஆக, அடுத்தவர் செய்யும் தவறுக்கு நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும்? மன்னித்துவிடுவோம்.
ஆ. மன்னிக்கும் உள்ளம் இருந்தால் நன்றாக தூக்கம் வரும். மன்னிக்காத போது பழிவாங்குதல் எண்ணம் வரும். பழிவாங்குதல் எண்ணம் கோபத்தைத் தூண்டும். கோபம் வெளிப்பட முடியாதபோது அது விரக்தியாக அல்லது இயலாமையாக மாறும். அந்த இயலாமை நம்மேல் நமக்குக் கோபத்தை வருவிக்கும். இப்படி குழப்பமான உள்ளம் இருக்கும் இடத்தில் உடலும் கஷ்டப்படும். தூக்கம் வராது. மன்னிப்பின் கனி தூக்கம்.
இ. மன்னிக்கும்போது நாம் அரசனாகின்றோம். அதாவது சமநிலையில் இருந்து மேல் நிலைக்கு உயர்கின்றோம். நம் நிலையை அல்லது கான்ஃபிடன்ஸ் லெவலை உயர்த்துவது மன்னிப்பு.
நிற்க.
கடைசியா அரசனுக்கு ஒரு கேள்வி.
அரசரே, உங்ககிட்ட நிறைய பணம் இருக்கு. அதனால, நீங்க 10000 தாலந்து என்ன, 10 லட்சம் தாலந்தையும் மன்னிப்பீங்க. ஏன்னா அது உங்க காசு இல்லைல. எவனோ ஒருவன் சம்பாதிச்ச காசு தான.
ஆனா, உங்க பணியாளன் எக்ஸ் ஏதோ ஒருவகையில் உங்ககிட்ட கடன் வாங்கி, இப்போ அதையும் இழந்து நிற்கிறான். இப்ப இவன் உழைத்து சம்பாதித்த 100 தெனாரியத்தை (100 நாள் கூலியை) சக பணியாளன் ஒய்க்கு கடன் கொடுக்கிறான். வாங்கியதும் போச்சு. உள்ளதும் போச்சு என்றால் இவன் என்ன செய்வான்? அடித்துத்தானே வாங்கணும். இது இவன் உழைத்த காசு அல்லவா?
ஆக, இன்னொருத்தன் காசை அல்லது நான் உழைக்காத காசை மன்னித்துவிடுவது எளிது. நான் உழைத்த காசை மன்னிப்பது கடினம்.
அரசன் உழைப்பதில்லை. ஆக, மன்னிப்பது எளிது.
பணியாளன் உழைத்தான். ஆக, மன்னிப்பது கடினம்.
நிற்க.




கடவுள் உங்களை நடத்துவது போலவே மற்றவர்களை நடத்திடுக

மறையுரை வழங்குபவர் Fr. Freddy is a Redemptorist priest belonging to the Province of Bangalore. Currently he is attached to the Archdiocese of St. Louis, Missouri state, U.S.A.
முன்னுரை:

     கொல்கத்தாவில் அன்னை தெரேசாவின் இல்லத்திற்கு அருகிலிருந்த இந்து கோவிலின் அர்ச்சகர் ஒருவர் அன்னையின் அறச்செயல்களை தீவிரமாக எதிர்த்து வந்தார். அன்னைக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டி கலவரம் செய்தார். சில மாதங்கள் கழிந்தன.  அன்னைக்கு எதிராக செயல்பட்ட அந்த காளிக் கோவில் அர்ச்சகர் தொழுநோயினால் பீடிக்கப்பட்டு, மரணப்படுக்கையிலிருந்தார். அவருடைய சொந்த குடும்பத்தார் அவரை வீட்டிலிருந்து புறந்தள்ளி, வெளியே தெருவில் போட்டுவிட்டார்கள். அவருடைய சக அர்ச்சகர்கள் அவரை சுத்தமற்றவராகக் கருதி, அருவருத்து வெறுத்து ஒதுக்கிவிட்டார்கள். இதனைக் கேள்விப்பட்டு, அந்த அர்ச்சக்கரைத் தேடித் சென்ற அன்னை தெரேசா, அவரைக் கண்டுபிடித்து, தன் இல்லத்திற்கு எடுத்துவந்து, எந்தவிதமான நிந்தனை உணர்வுமின்றி, அந்த அர்ச்சகருக்கு தானே சிகிச்சை அளித்து பராமரிக்க ஆரம்பித்தார்.

  அந்த அர்ச்சகர் அன்னை தெரேசாவை நோக்கி, "அம்மா, மன்னித்துவிடுங்கள். அன்றைய தினம் நாங்கள் உங்களுக்கெதிராக மிகப் பெரிய பாவம் செய்தோம். நாங்கள் பாவிகள், அம்மா.. மன்னியுங்கள்" என்று அரற்றினார். அன்னை அவரைப் பார்த்து, "எல்லோருமே உன்னத கடவுளின் குழந்தைகள் தான். யாரும் பாவம் செய்ததாக எனக்குத் தெரியவில்லை. யாரும் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. 'நிர்மல் ஹ்ருதய்' என்னும் எங்கள் இல்லத்தின் கதவுகள் எல்லாருக்கும் எப்போதும் திறந்தே இருக்கின்றன" என்று கூறினார். பலநாள்களுக்கு பின்னர் தன் உயிர் பிரியும் நிலையிலிருந்த அந்த அர்ச்சகர், தன்னை அணைத்துக் கொண்டிருந்த அன்னையைப் பார்த்து, "அம்மா, எங்கள் கோவிலில் காளிக்கு பல ஆண்டுகளாக சேவை செய்து வந்தேன். காளியின் முகத்தை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. இப்போது அந்த காளியை நேரிலே பார்க்கிறேன். நீதான் அந்த தேவதை" என்று மொழிந்தார்.

   அன்னை தெரேசா அந்த அர்ச்சகரை மன்னித்ததோடு அல்லாமல், அதற்கும் மேலானவற்றையும் செய்தார். அந்த அர்ச்சகரை ஏற்றுக் கொண்டு, அவருக்கு கண்ணியமான முறையில் இறப்பதற்கான வாய்ப்பை அன்னை தெரேசா அளித்தார். கடவுளை தரிசிப்பதற்காக அவருடைய கண்களைத் திறந்ததோடு, அவருடன் சமாதானம் செய்து கொள்வதையும் சாத்தியமாக்கினார். கடவுள் தன்னை நடத்துவதை போல, அன்னை தெரேசா அந்த அர்ச்சகரை நடத்தினார். கடவுளிடமிருந்து தான் பெற்ற இரக்கத்தை, ஒரு கண்ணாடியைப் போல அன்னை பிரதிபலித்தார்.

இறைவார்த்தை:

  தன் பணியாளர் ஒருவரை கடவுள் இரக்கத்தோடு நடத்திய விதத்தையும், அதே பணியாளர் தனது உடன் பணியாளர் ஒருவருக்கு அத்தகைய இரக்கத்தை தர மறுத்ததையும், இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கிறது. மன்னிப்பைக் குறித்து பேதுரு எழுப்பிய கேள்விக்கு மறுமொழியாக இயேசு சொல்கின்ற இந்த உவமை அமைந்துள்ளது.

1. பணியாளரின் நிலைமை: அந்தப் பணியாளர் பத்தாயிரம் தாலந்து கடன்பட்டிருந்தார். 'கி.மு. நாலாம் நூற்றாண்டில், யூதேயா, இதுமேயா மற்றும் சமாரியா ஆகிய நாடுகளிலிருந்து வசூலிக்கப்பட்ட மொத்த வரியின் தொகை அறுநூறு தாலந்து மட்டுமே' என்று வரலாற்று ஆசிரியரான ஜோஸேஃபஸ் (Josephus - Ant 17.11.4, 317-20) கூறுகிறார். இயேசு தனது உவமையில் குறிப்பிடுகின்ற தொகை பத்தாயிரம் தாலந்து ஆகும். அந்த வகையில், அந்த பணியாளர் கடன்பட்ட தொகை பல கோடி ரூபாய் மதிப்பிலானது. இங்கே சொல்லுக்கு நிகரான எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல. எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட தொகை என்பதே இங்கு பொருள். நடைமுறையில் கணிப்பதற்கு இயலாத ஒரு தொகை என்றே கொள்ளவேண்டும். தனது வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும், அவனால் அந்தக் கடனை திருப்பி செலுத்த முடியாது. எந்தக் காலத்திலும் மீண்டெழ முடியாத ஒரு இக்கட்டான நிலைமையில் அந்தப் பணியாளர் இருந்தார்.

2. அரசரின் நடவடிக்கை: அரசர் இப்போது கணக்குப் பார்க்கத் தொடங்கினார். 'கணக்குப் பார்த்தல்' என்பது ஒரு இறுதி கட்ட நிகழ்வு. கடன்பட்ட தொகையை திருப்பி செலுத்த இயலாத நிலையில் அந்தப் பணியாளர் இருந்ததால், அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைத்திட வேண்டுமென்ற தண்டனையை அரசர் விதித்தார். 'ஒருவனை, அவன் குடும்பத்தாரோடும், உடைமைகளோடும் விற்றுவிடுதல்' என்பது இயேசுவின் காலத்தில் வழக்கத்திலிருந்த ஒரு தண்டனை முறையாகும்.

   "எல்லாவற்றையும் திருப்பித் தந்து விடுகிறேன்" என்று கூறி, அந்த பணியாளர் அரசரிடம் பணிந்து யாசித்தபோது, அரசர் அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார். ஒருவரை ஏழுமுறை மன்னிப்பதைக் குறித்து பேதுரு கேள்வி எழுப்பியிருந்தார். மறைநூலின் மரபினில், 'ஏழு முறை' என்பது முழுமையைக் குறிக்கின்ற எண்ணிக்கையாகக் கருதப்பட்டது. ஒரு குற்றத்திற்கு மன்னிப்பு வழங்குவதற்கு, ஒருவர் மூன்று மன்னித்தல் போதும் என்று யூத மதகுருக்கள் கருதினார்கள். "எழுபது தடவை ஏழுமுறை" என்ற பதம் 'எழுபது - ஏழு' என்ற எண்கள் குறிக்கின்ற கணித வரையறையையோ அல்லது 490 தடவை என்பதையோ சுட்டிக் காட்டுவதல்ல; மாறாக, எண்ணிக்கையில் அடங்காத ஒரு அளவையைக் குறிப்பதாகும். அந்தப் பணியாளரின் கடனைத் தள்ளுபடி செய்வதில், கற்பனைக்கு எட்டாத கருணையோடு அரசர் நடந்து கொண்டார்.

3. பெற்ற கருணையை பகிர்ந்துகொள்ள தவறுதல்: கற்பனைக்கு எட்டாத கருணையை அரசரிடம் பெற்றுக் கொண்ட பணியாளர், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்ட தனது உடன் பணியாளர் ஒருவரை, அதே போன்ற கருணையுடன் நடத்துவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. ஒரு தெனாரியம் என்பது ஒரு பணியாளரின் சராசரி ஒருநாள் ஊதியம் ஆகும். ஆறாயிரம் தெனாரியம் கொண்டதே ஒரு தாலந்து. இங்கே அரசரிடம் இரக்கத்தைப் பெற்ற பணியாளர், தனது உடன் பணியாளர் ஒருவரை, அரசர் தன்னை நடத்தியது போல நடத்திட மறுக்கிறார். தன்னிடம் கடன்பட்டவனை விட 6,00,000 மடங்கு அதிகமான அளவு கடனை அரசர் தனக்கு தள்ளுபடி செய்திருக்கிறார் என்பதை இவர் மறந்துவிட்டார். கடனை திருப்பி வாங்குகின்ற வேட்கையில், உடல்ரீதியாக வன்முறையில் ஈடுபடவும் இவர் முனைகிறார்.

4. இரக்கம் திரும்பப் பெறப்படுத்தல்: தான் இரக்கம் காட்டிய பணியாளர், தன் உடன் பணியாளருக்கு செய்ததைக் கேள்விப்பட்ட அரசர், அவனை "பொல்லாதவன்" என்று சொன்னதோடு, அனைத்துக் கடனையும் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார். ஆனால், கடன் முழுவதையும் திருப்பி செலுத்துவது என்பது நிச்சயமாக இயலாத காரியம். அந்தப் பணியாளர் அரசருக்குத் தரவேண்டிய கடன்தொகையை வைத்து மதிப்பிடும்போது, அவருக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனை நிரந்தரமானது. காலவியல் (Eschatology) அடிப்படையில், நிரந்தரமான சிறைவாழ்க்கை என்பது மிக நீண்ட கால தண்டனையாகும். பாவங்களுக்காக கடவுளிடம் மன்னிப்பைப் பெற்ற சீடர் எவரும், இந்த உவமையில் சுட்டிக் காட்டப்படுகின்ற பணியாளரைப் போல, தன்னோடு இருக்கின்ற மற்றொரு சீடரின் பாவங்களை மன்னிக்க மறுத்தால், கடவுளும் தான் ஏற்கனவே அளித்த மன்னிப்பை திரும்ப பெற்றுக் கொள்வார் என்பது திண்ணம்.

இரக்கம், மன்னிப்பு, இறையருள் - இவற்றோடு கடவுள் தன் சீடர்களை நடத்துகிறார். அதே போல, தனது சீடர்களும் மற்றவர்களை நடத்தவேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். கடவுள் தங்களை நடத்துவது போல சீடர்கள் மற்றவர்களை நடத்த தவறும்போது, தான் ஏற்கனவே அருளிய மன்னிப்பையும், இரக்கத்தையும் திரும்பப் பெற கடவுள் தயங்கமாட்டார்.

பயன்பாடு:

கடவுள் தன் மக்களை எவ்வாறு நடத்துகிறார்?

    ஒருவருடைய வயதை கடவுள் பெரிதாகக் கொள்வதில்லை; ஆபிரகாமை அவர் ஆசீர்வதித்தது வியப்பல்ல.
    ஒருவருடைய அனுபவத்தை கடவுள் பெரிதாகக் கருதுவதில்லை; தாவீதை அவர் தேர்ந்தெடுத்தது வியப்பல்ல.
    பாலின வேறுபாடுகளை கடவுள் பெரிதாக மதிப்பதில்லை; எஸ்தருக்கு உயர்வான வாழ்க்கையை அவர் தந்தது வியப்பல்ல.
    ஒருவருடைய பழைய வாழ்க்கைமுறை குறித்து கடவுள் கவலைப்படுவதில்லை; பவுலடியாரை திருத்தூதராக அவர் தெரிவு செய்தது வியப்பல்ல.
    ஒருவருடைய உடல் தோற்றத்தை கடவுள் ஒரு பொருட்டாக கருதுவதில்லை; குட்டையான தோற்றமுடைய சக்கேயுவை அவர் தேர்ந்தெடுத்தது வியப்பல்ல.
    ஒருவருடைய சரளமாக பேசும் திறமையை கடவுள் பெரிதாகக் கொள்வதில்லை: மோசேயை அவர் தேர்ந்தெடுத்தது வியப்பல்ல.
    ஒருவருடைய பணி அல்லது தொழிலைப் பற்றி கடவுள் கவலைப்படுவதில்லை; மகதலா மரியாவை அவர் தன் சீடராக ஏற்றுக்கொண்டார்.
    வர்க்கம் - இனம் சார்ந்த பாகுபாடுகளை கடவுள் மதிப்பதில்லை; தனது ஒரே பேறான மகனை இந்த உலகத்திற்கு அவர் அனுப்பியதில் வியப்பில்லை!

    தான் நிறைவேற்ற முடியாத எந்தவொரு உறுதிமொழியையும் கடவுள் நமக்குத் தருவதில்லை.
    தான் உதவி செய்ய இயலாத நபராக கடவுள் யாரையும் பார்ப்பதில்லை.
    எந்த ஜெபத்தையும் பதிலிறுக்க இயலாததாக அவர் நோக்குவதில்லை.
    எந்தவொரு ஆன்மாவையும் தான் அன்பு செய்ய முடியாததாக அவர் காண்பதில்லை.
    தன்னிடம் மன்னிப்பு பெற இயலாதவர் என்று எந்த பாவியையும் அவர் பார்ப்பதில்லை.

இதுவே தன்னுடைய மக்களை கடவுள் நடத்துகின்ற வழிமுறை.

   மேலும், நாம் மற்றவர்களைத் தீர்ப்பிடாமல் கருணையோடு நடத்திட வேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கின்றார். "இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புதான் கிடைக்கும்" என்று திருத்தூதர் யாக்கோபு தனது திருமடலில் (2:13) கூறுகிறார். மன்னிக்கும் மனப்பாங்குடன் நாம் மற்றவர்களை நடத்திட வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கின்றார். இதைத் தான் சீராக் ஞான நூலிலிருந்து தரப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம், "பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப்பழியே பெறுவர். ஆண்டவர் அவர்களுடைய பாவங்களைத் திண்ணமாய் நினைவில் வைத்திருப்பார். உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும் போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்" என்று எடுத்துரைக்கின்றது. "வலிமையற்றோர் ஒருபோதும் மன்னிப்பதில்லை; மன்னித்தல் என்பது வலியோரின் பண்பு" என்று மகாத்மா காந்தி கூறினார். கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (13:5), புனித பவுல், "அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது" என்று கூறுகிறார். அனைத்து கணிப்புகளும் அப்பாற்ப்பட்ட வகையிலான மன்னிக்கும் மனப்பான்மையே நம்மிடம் எதிர்பார்க்கப்படுகின்றது.

  கடவுள் நம்மை நடத்துவதை போல் நாம் மற்றவர்களை நடத்த தவறும்போது, கடவுள் நமக்கு தந்த இரக்கம், மன்னிப்பு, இறையருள் ஆகியவற்றை அவர் திரும்ப எடுத்துக் கொள்ளுகின்ற நிலை உண்டாகிறது.

முடிவுரை:

  "நம்மிடமிருந்து செல்வதே நமக்கு வந்து சேர்கிறது" என்பது ஒரு சொல்வழக்கு. நாம் எவ்வாறு மற்றவர்களை நடத்துகிறோமோ, அவ்வாறே நாமும் நடத்தப்படுவோம். கண்ணியம், கருணை, மன்னிப்பு, இறையருள் கலந்த உன்னத வழிகளில் கடவுள் நம்மை நடத்தி வருகின்றார். இதே வழிகளில் நம் அயலாரை நடத்துகின்ற மதிநுட்பத்தை நாமும் பெறுவோமாக. மற்றவர்கள் நமக்கு கடன்பட்டிருப்பதை விட மிகவும் அதிகமாக வேறு ஒருவருக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம் என்பதை எப்போதும் நினைவில் கொள்வோமாக.


No comments:

Post a Comment