Saturday 23 September 2017

பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு



பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு


எசாயா 55:6-9 பிலிப்பியர் 1:20இ-24,27அ; மத் 20:1-16

மறையுரை மொட்டுக்கள்-அருள்பணி Y இருதயராஜ்


கணக்குக்கும் காதலுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? இருபத்து ஒன்றையும் பதினெட்டையும் கூட்டினால் அது கணககு இருபத்து ஒன்று பதினெட்டைக் கூட்டிக்கொண்டு ஓடினால் அது காதல். அதாவது 21 வயது ஆண் 18 வயது பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓடினால் அது காதல், தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உதறித் தள்ளிவிட்டு ஒரு பையனை நம்பி அவனோடு ஒரு பெண் ஓடுவது ஏன்? காதலுக்குக் கண்ணில்லை. மற்றவர்கள் கணிப்பில் காதலர்கள் மடையர்கள். காதலர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் செயல் ஒரு சாதனை.

அன்பே உருவான கடவுளின் காதலுக்கும் கண்ணும் இல்லை, கணக்கும் இல்லை. காதலர்கள் வழி தனிவழி. அவ்வாறே கடவுளின் வழியும் தனிவழி. அவரது வழியும் செயல்பாடுகளும் முற்றிலும் வேறுபட்டவை என்று கடவுளே இன்றைய முதல் வாசகத்தில் கூறுகிறார். "என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல. உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல" (எசாயா 55:3)

கடவுளின் வழிகளும் பண்புகளும் என்ன? என்பதை இன்றைய பதிலுரைப் பாடல் பட்டியலிட்டுக் காட்டுகிறது ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர் பேரன்பு கொண்டவர் ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர் தான் உண்டாக்கிய அனைததின் மீதும் இரக்கம் காட்டுபவர்" (திப 158:9).
கடவுள் நீதியுள்ளவர். ஆனால் அவர் தமது நீதியை இரக்கத்தின் மூலம் காட்டுகிறார். இந்த அடிப்படையான இறையியல் உண்மையைக் கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாள்களை அமர்த்திய நிலக்கிழார் உவமை வாயிலாக வெளிப்படுத்துகிறார் (மத் 20:1-6) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அதாவது 12 மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும் அதே கூலி மாலை 5 முணி முதல் 6 மணி வரை, அதாவது 1 மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும் அதே கூலி கனக்கு அடிப்படையில் அது அப்பட்டமான அநீதி ஆனால் காதல் அடிப்படையில் இது முற்றிலும் சரியானது.

"திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாள்களை அமர்த்திய நிலக்கிழார்" உவமையில் பொதிந்துள்ள இறையியல் உண்மையை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை. அதாவது 12 மணி நேரம் வேலை செய்தவர்கள் இஸ்ரயேல் மக்கள் கடவுள் அவர்களுக்கு மீட்பளிக்கிறார் மாலை 5 மணி முதல் 6 மணி வரை மட்டும் வேலை செய்தவர்கள் பிற இனத்தவர்கள் அவர்களுக்கும் கடவுள் மீட்பளிக்கிறார். இதில் அநீதி ஒன்றுமில்லை.

ஏனெனில் மீட்பு என்பது உழைப்புக்குக் கிடைக்கும் கூலியல்ல மாறாக, அது கடவுள் மனிதருக்கு வழங்கும் இலவசக் கொடை அதை எவரும் தமது சொந்த முயற்சியால் பெற இயலாது.அனைவர்க்கும் இலவசமாக மீட்பை வழங்குவதன் மூலம் கடவுள தமது நீதியை வெளிப்படுத்துகிறார். கடவுள் நீதிவேறு மனித நீதிவேறு. மனித நீதி சட்டத்தை அடிப்படையாகக் கொணடது. கடவுள் நீதி இரக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட பரிசேயரின் ஒழுக்கத்தைவிட அன்பை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டிய கிறிஸ்துவின் சீடர்கள் ஒழுக்கம் உயர்ந்திருக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் விண்ணரசுக்குள் புகமுடியாது என்று கிறிஸ்து தெளிவுபடக் கூறியுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது (மத் 5:20) கடவுளிடம் ஒருதலைச் சார்பு கிடையாது அவர் எல்லார்க்கும் தந்தை அனைவரும் மீட்படைய வேண்டுமென்று அவர் விரும்புகிறார் (திமொ 2:1). கடவுள் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் தமது மழையையும் கதிரவனையும் கொடுக்கிறார் (மத் 5:45) கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை. எல்லா இனத்தவரிலும் கடவுளுக்கு அஞ்சி நடப்போர் மீட்படைவது உறுதி (திப 10:34). கடவுளின் இத்தகைய உலகளாவிய மீட்பின் திட்டத்தைக் கண்டு நாம் பொறாமைப்படக்கூடாது எல்லார்க்கும் சமமான கூலி கொடுத்த நிலக்கிழாரிடம் முணுமுணுத்த வேலையாள்களிடம் நிலக்கிழார்: "நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" (மத் 20:15) என்று கேட்கிறார். ஒருவருடைய பெரிய பகைவன் பொறாமை, அவருக்கு வேறு பகைவர்கள் இல்லையென்றாலும் அவரை அழிப்பதற்கு பொறாமை ஒன்றே போதும் என்கிறார் வள்ளுவர்.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு என்பது (குறள் 65)

நமக்குக் கிடைக்கும் நன்மை பிறருக்கும் கிடைப்பதைக் கண்டு நாம் மகிழ வேண்டும். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதே நமது நிலைப்பாடாக இருக்க வேண்டும் "வானகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நாமும் இரக்கம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும்" (லூக் 8:36)

ஒரு வீட்டிலே மனைவி கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடவில்லை. ஏனெனில் அவருடைய கணவர் அவருக்கும், அவரது மாமியாருக்கும் மற்றும் அவ்வீட்டு வேலைக்காரிக்கும் ஒரே விலையில் பட்டுப்புடவை வாங்கி விட்டார். ஆத்திரம் அடைந்த மனைவி கணவரிடம், "என்னையும் வேலைக்காரியையும் ஒரே மாதிரி நடத்தலாமா?" என்று கேட்டு கணவரைச் சரமாரியாகத் திட்டினார்.

தனக்குக் கிடைத்த புடவை வேலைக்காரிக்கும் கிடைத்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு வீட்டில் ஒருநாள் வேலைக்காரி வேலைக்கு வரவில்லை. மனைவி கணவரிடம், "என்னங்க! வேலைக்காரி வரல எனக்குக் கையே ஒடிஞ்சுபோச்சு" என்றார். ஆனால் கணவர் மனைவியிடம், "உனக்காவது கை ஒடிஞ்சுபோச்சு எனக்கு மனசே ஒடிஞ்சுபோச்சு" என்றார். இதைக் கேட்ட மனைவி தன் தலையில் இடி விழுந்ததைப் போன்று அதிர்ந்து போனார். வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்துக்கொள்வது ஒரு முறைகேடான செயல்: கண்டனத்திற்கு உரியது. ஆனால் வேலைக்காரியையும் மரியாதையுடன் நடத்துவது பாராட்டுதற்குரியது. பிறப்பின் அடிப்படையிலும் மீட்பின் அடிப்படையிலும் அனைவரும் சமம்.

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்
அவ்வாறே மீட்பும் ஒக்கும் எல்லா மனிதர்க்கும். (குறள் 92 )

"இது எனது உடன்படிக்கையின் இரத்தம் பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்" (மத் 26:28).




அவரும், அவர்களும்!

அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை

'அறிவோடு இருப்பதை விட அதிர்ஷ்டத்தோடு இருப்பது நன்று!' - இப்படி ஒரு குறுஞ்செய்தி நேற்று என் மொபைலுக்கு வந்தது. கொஞ்ச நாள்களாக நடக்கும் அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது இந்த குறுஞ்செய்தி உண்மை எனவும் தோன்றுகிறது. இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் நற்செய்தி வாசகத்தின் (காண். மத் 20:1-16) பின்புலத்தில் பார்க்கும்போது இதைக் கொஞ்சம் மாற்றிப் புரிந்துகொள்ளலாம்: 'உழைப்போடு இருப்பதை விட அதிர்ஷ்டத்தோடு இருப்பது நன்று!'

நாளின் வௌ;வேறு நேரங்களில் திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள். முதலில் வந்தவர்கள் தங்களின் உழைப்பிற்கேற்ற ஒரு தெனாரியத்தைப் பெறுகின்றனர். கடைசியில் வந்தவர்கள் தங்களின் அதிர்ஷ்டத்திற்கேற்ற ஒரு தெனாரியத்தைப் பெறுகின்றனர்.

விண்ணரசு என்பதை காமன் மேன் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். கொட்டாவி விட்டவன் வாயில் திருப்பதி லட்டு விழுந்தது மாதிரி மாலை 5 மணி வரை வேலையில்லாமல் வாளாவிருந்தவர்கள் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்து 1 நாள் கூலியைப் பெறுகின்றனர்.

மத்தேயு 20:1-16. இது ஒரு உவமை. விண்ணரசு பற்றிய உவமை மத்தேயு நற்செய்தியில் மட்டுமே வரும் உவமை. இது ஒரு சிக்கலான உவமை. ஏனென்றால், மனித கணிதத்திற்கு எதிராகச் செல்லும் இதன் நிறைவு. 12 மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும், ஒரு மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும் ஒரே சம்பளம் வழங்கும் உவமை இது. வழக்கமாக இதை 'திராட்சைத் தோட்ட வேலையாட்கள் உவமை' என்று அழைக்கிறோம். ஆனால், நான் 'கணிதம் தெரியாத ஒரு ஆண்டவரின் கதை' என்று அழைக்கிறேன்.

மத்தேயு 20:1-16 உள்ள இறைவாக்கு பகுதியின் அமைப்பை முதலில் ஆராய்வோம். வழக்கமாக இந்த உவமையை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்:

20:1-7 வேலையாட்கள் பணியமர்த்தப்படுதல்
20:8-16 வேலையாட்களுக்கு ஊதியம் தரப்படுதல்

இப்படிப் பிரிக்கத் தூண்டுவது 1 மற்றும் 8 வசனங்களில் இருக்கும் 'காலை' மற்றும் 'மாலை' என்ற நேரக்குறிப்புகள். இந்த நேரக்குறிப்புகள் மிக முக்கியமானவைதான். ஆனால், இந்த வகை பிரித்தலில் வேலையாட்கள்தான் முதன்மைப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், வேலையாட்கள் சும்மா வந்து போகக்கூடியவர்கள்தாம். ஆனால், இந்த உவமையின் கதாநாயகன் தோட்ட உரிமையாளர்தான். ஆக, அவரையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த உவமையில் ஐந்து பிரிவுகள் உள்ளன:

20:1அ முன்னுரை
20:1ஆ-7 வெளியே
20:8 உள்ளே-வெளியே
20:9-15 உள்ளே

20:16 முடிவுரை20:1அ வில் இந்த நிகழ்ச்சி இறையாட்சிக்கு ஒப்பிடப்படுவதாகச் சொல்லப்படுவதுதான் முன்னுரை. இத்தோடு இணைந்து செல்வது 20:16ல் இருக்கும் முடிவுரை. இறையாட்சியில் முதன்மையானவர்கள் கடைசியாவார்கள், கடைசியானவர்கள் முதன்மையாவார்கள். 'வெளியே', 'உள்ளே' என்று சொல்வது தோட்டத்தைப் பொறுத்தது. உவமையின் முதல் பகுதியில் தோட்ட உரிமையாளரும், வேலையாட்களும் தோட்டத்திற்கு வெளியில் இருக்கிறார்கள். இரண்டாம் பகுதியில் இந்த இரண்டு பேரும் தோட்டத்திற்கு உள்ளே இருக்கிறார்கள். மேலும், தோட்டத்திற்கு வெளியே, வேலைக்காரர்கள் ஓரிடத்தில் நிற்கின்றார்கள். உரிமையாளர் முன்னும் பின்னும் செல்கின்றார். ஆனால், தோட்டத்திற்கு உள்ளே உரிமையாளர் ஓரிடத்தில் நிற்கின்றார். வேலைக்காரர்கள் முன்னும், பின்னும் செல்கின்றனர். 20:8ல் உரிமையாளர் தன் கணக்கரிடம் அல்லது மேற்பார்வையாளரிடம், 'வேலையாள்களை அழைத்து கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை கூலி கொடும்!' என்கிறார். இதுதான் கதையின் மையம் அல்லது உச்சம். 'கடைசியிலிருந்து தொடங்கி முதலில் வந்தவர் வரை செல்ல வேண்டும்!' - இதே வார்த்தைகள்தாம் 'கடைசியானவர் முதலாவர்' என்று 20:16ல் தீர்வாக அல்லது முடிவுரையாக அமைகிறது.'உள்ளே-வெளியே' என்பது ஸ்டீபன் கோவே அவர்கள் தன் 'தெ செவன் ஹேபிட்ஸ் ஃபார் ஹைலி இஃபக்டிவ் பீப்பிள்' நூலில் உருவாக்கிய ஒரு சொல்லாடல். அதாவது, கான்செப்ட் சிம்பிள்தான். பேண்ட்ல உள்ள பாக்கெட்ல பென்-டிரைவ் போட்டு அது காணாம போயிடுச்சுனு வச்சிக்கிவோம். அதைத் தேடும் முயற்சியில் பேண்டின் பாக்கெட்டை அப்படியே வெளிப்புறமாக எடுத்து தேடுவோம். இதுதான் .... இதற்கு மேல் தேட ஒன்றுமில்லை. ஆக, ஒருவரின் உள்ளக்கிடக்கையை முழுவதுமாகத் தெரிவிப்பதுதான் 'உள்ளே-வெளியே'. 20:8ல்தான் உரிமையாளரின் உள்ளக்கிடக்கை அப்படியே வெளிப்படுகிறது. மேலும் இந்த ஐந்து வகை பிரிவில் நேரக்குறிப்புகள், வேலையாட்கள்-உரிமையாளர், காலை-மாலை, உள்ளே-வெளியே, என எல்லா இருமைநிலைகளும் எளிதில் துலங்குகின்றன.

இயேசு சொல்லும் உவமைகளில் பல கேள்விகளை எழுப்பும் உவமை இது. எட்டு மணி நேரம் வேலை பார்த்தவர்களும், ஒரு மணி நேரம் வேலை பார்த்தவர்களும் ஒரே கூலியைப் பெறுகின்றனர். எட்டு மணி நேரம் வேலை பார்த்தவர்களால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 'இது அநீதி!' என்று கொடிபிடிக்கின்றனர். 'ஆனா தம்பி! நீ ஒத்துக்கிட்டதைத் தான் நான் கொடுத்துவிட்டேனே!' என்கிறார் தோட்ட உரிமையாளர்.

வாழ்க்கையின் அளவு கோல் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு சிலரை வாழ்க்கை கழுத்தை நெரிக்கிறது. ஒரு சிலரை மடியில் போட்டு வீசி விடுகிறது. ஏனென்று கேட்க முடிகிறதா நம்மால்?

இந்த உவமையைக் கொஞ்சம் கோணல், மாணலாக யோசித்துப் பார்த்தால் எப்படி இருக்கும்?

அ. நிதி நிர்வாகம்.
இந்த உவமையில் ஐந்து குழுக்கள் ஐந்து மணிப்பொழுதுகளில் வேலைக்கு வருகின்றனர். முதல் குழுவினர் விடியற்காலையில் வருகின்றனர். காலை 6 மணி என வைத்துக்கொள்வோம். ஏனெனில் இயேசுவின் காலத்தில் நிலவிய கால அளவைப்படி விடியற்காலை என்பது நம் 6 மணி. இரண்டாம் குழுவினர் 9 மணிக்கு வருகின்றனர். மூன்றாம் குழுவினர் மதியம் 12 மணிக்கும், நான்காம் குழுவினர் பிற்பகல் 3 மணிக்கும், ஐந்தாம் குழுவினர் மாலை 5 மணிக்கும் வருகின்றனர். மாலை 6 மணிக்கு வேலை நிறைவு பெறுகிறது. முதல் குழுவினர் 12 மணி நேரம் தலைவனின் திராட்சைத் தோட்டத்தில் இருந்திருக்கின்றனர். 12 மணி நேரமும் வேலை செய்திருக்க வாய்ப்பில்லை. இப்போதுள்ள எட்டு மணி நேர வேலை நிர்ணயமும் அப்போது கிடையாது. அவர்கள் தோட்டத்தில் இருந்த நேரத்தை அப்படியே எடுத்துக்கொள்வோம். இரண்டாம் குழுவினர் 9 மணி நேரமும், மூன்றாம் குழுவினர் 6 மணி நேரமும், நான்காம் குழுவினர் 3 மணி நேரமும், ஐந்தாம் குழுவினர் 1 மணி நேரமும் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதும், திராட்சைத் தோட்டத்தில் என்ன மாதிரியான வேலை என்பதும், திராட்சைத் தோட்டம் எவ்வளவு பெரியதும், எவ்வளவு வெயில் அடித்தது என்றும் உவமையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. முதல் குழுவினரோடு பேசப்பட்ட சம்பளம் 'ஒரு தெனாரியம்'. ஒரு தெனாரியத்தின் மதிப்பு 120 ரூபாய் என வைத்துக்கொண்டால் முதல் குழுவினர் பெற வேண்டிய சம்பளம் 120. இரண்டாம் குழுவினர் 90, மூன்றாம் குழுவினர் 60, நான்காம் குழுவினர் 30 மற்றும் ஐந்தாம் குழுவினர் 10 ரூபாய் பெற வேண்டும். 10 ரூபாய்க்கான வேலையைத் தான் இறுதியாக வந்தவர் செய்கின்றார். ஆனால் அவரே முதலில் ஊதியம் பெறுகிறார். அவரே முழுமையாகவும் பெறுகிறார். இது ஒரு தவறான நிதி நிர்வாகம். இப்படிச் செய்வதால் அவருக்கு எவ்வளவு வருவாய் இழப்பு நேரிடும்?

ஆ. உறவு நிர்வாகம்.
நம் வாழ்க்கையில் உள்ள உறவுகளுக்கும் இது பொருந்தும் என நினைக்கிறேன். திராட்சைத் தோட்டம் என்பது நம் வாழ்க்கை. இதில் விடியற்காலையில் வேலைக்கு வருபவர்கள் நம் பெற்றோர். நம்மோடு நம் வாழ்வில் அதிக ஆண்டுகள் இருப்பவர்கள் இவர்கள் தாம். இரண்டாம் குழுவைப் போல 9 மணிக்கு வருபவர்கள் நம் உடன்பிறந்தவர்கள். நமக்கு அடுத்தடுத்து வந்தவர்கள் இவர்கள். மூன்றாம் குழுவைப் போல 12 மணிக்கு வந்தவர்கள் நம் மாமா, மச்சான், சித்தப்பா, சித்தி போன்ற உறவினர்கள். நான்காம் குழுவைப் போல 3 மணிக்கு வருபவர்கள் நம் நண்பர்கள். இவர்கள் நம்மோடு கொஞ்ச காலம் தான் இருப்பார்கள். மேலும் இந்தக் குழுவில் உள்ளவர்கள் மாறிக்கொண்டும் இருப்பார்கள் - பள்ளியில், கல்லூரியில், பணியிடத்தில், கிளப்பில், சர்ச்சில் என மாறி மாறி வருவார்கள். இறுதியாக ஐந்து மணிக்கு வருபவர்கள் போல வருபவர்கள் தாம் 'மனைவி' அல்லது 'கணவன்'. இவர்கள் இறுதியில் வந்தார்கள் என்பதற்காக இவர்களை ஒரு மணி நேரம் மட்டும், கூடவே இருக்கிறார்கள் என்பதற்காக பெற்றோர்களை 12 மணிநேரமும் அன்பு செய்ய முடியுமா? அது நீதியாகுமா? மேலும் சில குடும்பங்களில் மாமியார்-மருமகள் பிரச்சனை வருவதற்குக் காரணம்; இதுதான். மாப்பிள்ளையின் தாயார் தன் மகனைப் பார்த்து, 'நேற்று வந்த ஒருத்திக்காக கூடவே இருக்கும் என்னை உதாசீனப்படுத்துகிறாயா?' என்று கேட்கும் போது அங்கே அந்த மகன் என்ன சொல்ல வேண்டும் தெரியுமா? 'அம்மா! உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?' நீங்க இப்படிச் சொல்லி உங்க அம்மாகிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டா அதற்கு கம்பெனி பொறுப்பாகாது! ஆனால் இதுவும் உண்மை!

இ. ஆன்மீக நிர்வாகம்
மோட்சம் இருக்கோ. இல்லையோ, ஆனா நம்ம எல்லாருக்குமே மோட்சத்துக்குப் போகனும்னு ஆசை இருக்கு! மோட்சத்துக்குப் போக எப்பவுமே நல்லவங்களா இருக்கனுமா அல்லது எப்பவாச்சும் நல்லவங்களா இருக்கனுமா? 12 மணி நேரம் நல்லவரா இருந்தாலும், 1 மணி நேரம் நல்லவரா இருந்தாலும் ஒன்னுதானேன்னு தோனுது இந்த உவமையைப் பார்த்தா. இதற்கு உதாரணம் இயேசுவோட வாழ்க்கையிலே இருக்கு தெரியுமா? இயேசு இறக்கும் தருவாயில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது, நல்ல கள்வன் சொன்னது நினைவிருக்கிறதா, 'நீர் அரசுரிமை பெற்று வரும் போது என்னை நினைவுகூறும்!' அதற்கு இயேசுவின் பதில் என்ன? 'நீர் இன்றே என்னோடு வான்வீட்டில் இருப்பீர்!' தன் வாழ்நாள் முழுவதும் தீமையே செய்துவிட்டு, கடைசி ஒரு நிமிடம் இயேசுவிடம் செபிக்கிறான். மோட்சத்துக்குச் சென்றுவிடுகிறான். இறைவனின் தோட்டத்தில் இவன் ஒரு நிமிடம் தானே வேலை செய்கிறான். இயேசு இப்படிச் சொல்லியிருக்கலாமே! 'அப்படியாப்பா! உன்னை நினைவுகூறனுமா? நீ நல்லவன் இல்லையே பா! இங்க கீழ பாரு! எங்கம்மா! என் அன்புச் சீடர்! எனக்குப் பணிவிடை செய்தவர்கள்! இவங்கள்லாம் முதலில் வான்வீட்டிற்கு வரட்டும்;. ஏன்னா அவங்க வாழ்க்கை பூரா நல்லவங்களாவே இருந்துட்டாங்க! நீ கொஞ்சம் வெயிட் பண்ணு!' ஆனால் இயேசுவின் சீனியாரிட்டி லிஸ்ட் வித்தியாசமா இருக்கிறது. ஆகையினால் நாம சாகும்போது நல்லவங்களா இருந்தாலே போதும்! நாம எப்போ இறப்போம்னு தெரியாது! ஆகையினால எப்பவுமே நல்லவங்களா இருப்போம்! சரியா?

ஈ. உளவியல் நிர்வாகம்
இன்றைய நற்செய்தியில் மனிதர்களின் உள் மன உணர்வுகள் மிகத் தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சோர்வு, திருப்தி, கோபம், பொறாமை, முணுமுணுப்பு இவையெல்லாம் இங்கே சொல்லப்பட்டுள்ள உணர்வுகள். ஒரு தெனாரியத்திற்கு ஒத்துக் கொண்டாலும் இன்னும் அதிகம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உணர்வும் இருந்தது. எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தில் ஏமாற்றமும் பாய் விரித்துப்படுத்துக்கொள்கிறது. தாங்கள் பேசிய கூலியை வாங்குவதில் ஏன் முதல் குழுவினருக்கு மகிழ்ச்சி இல்லை. தங்கள் கையிலிருப்பதை மட்டும் பார்த்திருந்தால் அவர்களின் மகிழ்ச்சி பறிபோயிருக்காது. ஆனால் அடுத்தவரின் கையையும் பார்க்கின்றனர். நமக்கு வெளியே மகிழ்ச்சியின் அளவுகோலைத் தேடினால் நாம் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்கவே போவதில்லை. வெளியே பார்க்கும் போது ஒப்பீடும், கோபமும், பொறாமையுமே வருகின்றது.

உ. சமூக நிர்வாகம்
ஒருவேளை வேலை பார்த்த ஐந்து குழுவினரும் பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என வைத்துக் கொள்வோம். சாயங்காலம் வீடு திரும்பியவுடன் சண்டைதான் வரும். சண்டைக்குக் காரணம் பொறாமை. ஒருவர் மற்றவரை முதலில் கேலி பேசுவார்கள்! 'அம்மா! இவன் காலையில இருந்து வேலை பார்த்தான்! ஆனா நான் ஒரு மணி நேரம் தான் வேலை பார்த்தேன். ஆனா எனக்கும் ஒரு தெனாரியம்! அவனுக்கும் ஒரு தெனாரியம்!' என்பான் கடைசியில் வந்தவன். முதலில் வந்தவன் கோபப்படுவான். வலிமையுள்ளவனாயிருந்தால் மற்றவனை அடிப்பான். ஒரு தலைவனின் தாராள குணத்தால் ஒரு குடும்பம் சின்னாபின்னமாகிறது. என்னைப் பொறுத்தவரையில் காயின்கள் உருவாகக் கடவுள்தான் காரணம். தன் பலிபொருள் ஏற்றுக்கொள்ளப்படாததால் காயினுக்கு பொறாமை வருகின்றது. காயின் பதரைக் கொடுத்தான் என்றும் ஆபேல் கொழுத்த ஆட்டைக் கொடுத்தான் என்றும் சொல்லாதீர்கள். பைபிளில் அப்படி ஒன்றும் இல்லை. அப்படிச் சொல்லி நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள்?

மேலும் இந்த ஒரு நாள் நடந்தது போலவே எல்லா நாளும் நடக்குது என வைத்துக் கொள்வோம். அங்கே ஒட்டு மொத்த சமூகத்திலும் சிக்கல் உருவாகும். காலையில் ஒருவன் வேலைக்குப் புறப்பட்டால் பக்கத்து வீட்டுக்காரன் என்ன சொல்வான்? 'டேய்! எங்கடா கிளம்பிட்ட! நீ காலையில வேலை பார்த்தாலும் ஒரே சம்பளம் தான்! சாயங்காலம் வேலை பார்த்தாலும் அதே சம்பளம் தான்! நம்ம சாயங்காலமே போவோம்!' இதனால் நன்றாக வேலை பார்ப்பவர்களின் 'மோட்டிவேஷனும்' கெடுகிறது அல்லவா?

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு கற்பிப்பது என்ன?

1. இன்றைய முதல் வாசகத்தில் தன்னுடைய வழிகள் மனிதர்களின் வழிகளை விட மிக உயர்ந்து நிற்பதாகச் சொல்கிறார் ஆண்டவராகிய கடவுள். பறக்கின்ற விமானத்திலிருந்து பார்த்தால் வானவில் முழுமையான வட்டமாகத் தெரியும் என்கிறார்கள். கீழிருந்து பார்ப்பவர்களுக்கு வானவில் பாதியாக அல்லது கால்வாசியாகத்தான் தெரிகின்றது. ஆக, மேலிருந்து பார்க்கும் போது பார்வை முழுமை அடைகிறது. திராட்சை தோட்ட உரிமையாளரைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவரின் தோட்டத்திற்குள் சென்று, அவரின் காலணிகளுக்குள் நம் கால்களை நுழைத்துக்கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் தங்களின் உழைப்பையும், நேரத்தையும் கணக்கிட்டனர். ஆனால் உரிமையாளரோ ஒவ்வொருவர் வீட்டில் எரிய வேண்டிய அடுப்பைக் கணக்கிட்டார். அனைவருக்கும் வயிறு ஒன்றுதான் என்றும், அந்த வயிற்றை நிரப்ப என்ன தேவையோ அதை அனைவருக்கும் கொடுக்க முற்படுகின்றார் உரிமையாளர். ஆக, இறைவனைப் போல பார்க்க முடியாத அனைவரும் அவரைப் பார்த்து முணுமுணுக்கவே செய்கின்றோம்.

2. இன்றைய இரண்டாம் வாசகத்தில் இழுபறி நிலை பற்றிப் பேசுகின்றார் பவுல். ஒரு பக்கம் தான் இறந்து கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் எனவும், மறுபக்கம் தான் இவ்வுலகில் இருந்து பணி செய்ய வெண்டும் எனவும் விரும்புகின்றார் பவுல். அதாவது, வாழ்வில் நாம் சில நேரங்களில் இரண்டு நல்லவைகளுக்கு நடுவில் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. இதுதான் மிகவும் கடினமான ஒன்று. இறுதியில், கிறிஸ்துவே உங்களை ஆளட்டும் என நிறைவு செய்கின்றார் பவுல். இதுதான் அனைத்தையும் கிறிஸ்துவில் காண்பது. வாழ்வையும், இறப்பையும் அவரில் கண்டுகொண்டால் நமக்கு இரண்டும் ஒன்றே. ஏனெனில் இரண்டும் அவரில்தான் உள்ளன.

3. வாழ்க்கை என்ற திராட்சைத் தோட்டத்தில் நாம் இன்று எத்தனை மணிநேரத்தில் உள்ளே வந்திருக்கிறோம் என எண்ணிப் பார்ப்போம். அடுத்தவரின் உழைப்பையும், இருப்பையும் கணக்கிட்டுக்கொண்டே இருக்கும் நாம் பல நேரங்களில் நம் உழைப்பையும், இருப்பையும் கணக்கிட மறந்துவிடுகின்றோம்.

அவர் தான் விரும்பியதைச் செய்கிறார். ஏனெனில் அவர் கடவுள்.
அவரின் விருப்பத்தின் முன் அறிவும், அதிர்ஷ்டமும் ஒன்றே.
அவரின் பார்வை அவர்களின் பார்வையாக இருந்தது என்றால் அவர்களை அவர் கண்டித்திருக்க மாட்டார்.
நம் பார்வை இன்று அவரின் பார்வையா?

    


கடவுளின் திருவருளும், அருள்நலமும் தான் இறையரசில் நமக்குரிய வெகுமதியை தீர்மானிக்கின்றன.

மறையுரை வழங்குபவர் Fr. Freddy is a Redemptorist priest belonging to the Province of Bangalore. Currently he is attached to the Archdiocese of St. Louis, Missouri state, U.S.A.
 
முன்னுரை:

ஒரு பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய ஒருவர், இறந்த பின்னர் விண்ணுலகிற்கு வந்தார். விண்வீட்டின் வாயில் வழியாக உள்ளே நுழைந்துகொண்டிருந்த அவரை வழிமறித்து நிறுத்திய பேதுரு, "அய்யா, அங்கேயே நில்லும். எங்கே போகிறீர்?" என்று வினவினார். அதற்கு அந்த ஆசிரியர், "நான் உள்ளே செல்லவேண்டும்" என்று சொன்னார். இப்போது பேதுரு, "அது அவ்வளவு சுலபமல்ல. உங்கள் பள்ளியில் கல்விமுறையில் தேர்ச்சி பெற நீங்கள் பல நிலைகளை வைத்திருப்பது போல, விண்ணகத்தில் நுழைவதற்கான தகுதியை முடிவு செய்வதற்கு சில அளவுகோல்கள் உள்ளன" என்றார். "ஆஹா, இது எனக்குத் தெரியாதே?" என்று பதிலுரைத்த ஆசிரியர், "சரி, அந்த அளவுகோல்கள் என்ன? உள்ளே செல்வதற்கு நான் எத்தனை மதிப்பெண்கள் பெறவேண்டும்?" என்று கேட்டார். "விண்ணுலகில் நுழைவதற்கு ஒருவர் ஆயிரம் மதிப்பெண்கள் பெறவேண்டும் என வரையறுத்திருக்கின்றோம்" என்று கூறிய பேதுரு, "இப்போது உங்களைப் பற்றி சொல்லுங்கள். வான்வீட்டினுள் நுழைந்திட உங்களிடம் உள்ள தகுதிகள் என்ன?" என்று கேட்டார். தான் ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதை உணர்ந்த ஆசிரியர், பெருமூச்செறிந்தபடி யோசித்தார். பின்னர், "கடந்த நாற்பது ஆண்டுகளாக நாள்தோறும் காலையில் தவறாது திருப்பலியில் பங்கெடுத்துள்ளேன்" என்று சொன்னார். "சரி... அதற்கு ஒரு மதிப்பெண்" என்றார் பேதுரு. அதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன ஆசிரியரை நோக்கி, "மேலும் சொல்லுங்கள்.. உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் வேறு என்ன செய்திருக்கிறீர்கள்?" என்று பேதுரு கேட்டபோது, அந்த ஆசிரியர் வாயடைத்துப் போனார்.

"வின்சென்ட் தெ பவுல் சபையில் உறுப்பினராகி, பல அறச்செயல்கள் செய்வதில் ஈடுபட்டிருந்தேன். அறச்செயல்களுக்காக நிதி திரட்டுவதில் நிறைய பணம் சேகரித்துக் கொடுத்துள்ளேன்" என்றவரிடம், "எவ்வளவு பணம் சேகரித்தீர்கள்?" என்று பேதுரு கேட்டார். "சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் அளவுக்கு நான் பணம் வசூல்செய்து கொடுத்திருக்கிறேன்" என்றார் ஆசிரியர். இதைக் கேட்ட பேதுரு, "நன்று, நீங்கள் மேலும் ஒரு மதிப்பெண் பெறுகிறீர்கள்" என்று சொன்னார். இதை கேட்டு முற்றிலும் தளர்ந்து போன ஆசிரியர், "இந்த நிலையில் போனால், என்னால் வான்வீட்டின் கதவின் அருகே கூட செல்லமுடியாதே? கடவுள் அருள் இருந்தால் மட்டுமே நான் உள்ளே போகமுடியும் என்பது திண்ணம்" என்று மெதுவாக தனக்குள் முணுமுணுத்தார்.  இதனை செவிமடுத்த பேதுரு புன்முறுவலோடு, ஆசிரியரை நேராகப் பார்த்து, "நீங்கள் நினைத்தது மிகவும் சரியானதே. இறைவனின் அருளும், அவருடைய ஆவியின் துணையும் இருந்தால் மட்டுமே நீங்கள் விண்ணக வீட்டினுள் நுழைந்திட இயலும். கடவுளின் திருவருள் மீது நாட்டம் கொண்ட நீர் ஆயிரம் மதிப்பெண்கள் பெற்றுவிட்டீர். ஆகவே, அன்பரே, இப்போது நீங்கள் உள்ளே செல்லலாம்" என்றுரைத்தார்.

 ஆம் விண்ணுலகில் நுழைவதற்கான அனுமதியை நமக்குப் பெற்றுத் தருவது, நாம் செய்கின்ற செயல்கள் அல்ல; இறைவனின் திருவருளே நம்மை விண்ணகத்திற்குள் அனுமதிக்கிறது. அவருடைய அருள்நலமே உன்னத இறையரசிற்கு நம்மை அழைத்துச் செல்லுகிறது.

இறைவார்த்தை:

இயேசுவைப் பின்பற்றுவதற்கு கிடைக்கின்ற வெகுமதியைப் பற்றிய பிரச்சினையை இன்றைய நற்செய்தி வாசகம் விளக்குகிறது. மத்தேயு நற்செய்தி 19:27-ல், "நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?" என்ற ஒரு முக்கியமான கேள்வியை பேதுரு முன்வைக்கிறார். இன்றைய நற்செய்தியில் சொல்லப்படுகின்ற உவமை, பேதுருவின் இந்தக் கேள்விக்கு இயேசுவின் ஒரு மறுமொழியாக அமைகின்றது.

1. திராட்சைத் தோட்டத்திலுள்ள அவசர நிலைமை: வேலையாட்களை வேலைக்கு அமர்த்துவதற்காக காலை 6 மணிக்கும், காலை 9 மணிக்கும், மதியம் 12 மணிக்கும், மீண்டும் பிற்பகல் 3 மணிக்கும் வெளியே சென்ற நிலக்கிழார், "நேர்மையான கூலியை உங்களுக்குத் தருவேன்" என்று உறுதியளித்து, அவர்களைத் தன் திராட்சைத் தோட்டத்திற்கு அனுப்பினார். வேலைக்கு ஆள்களை அமர்த்துவதற்காக ஒரே நாளில் ஐந்து தடவை அவரே சந்தை வெளிக்கு நேராகச் சென்றார். பொழுது சாய்கின்ற மாலை நேரத்திலும் கூட சென்று, கடைசி குழுவாக சில வேலையாட்களை தனது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக அனுப்புகிறார். இவ்வாறு, நிலக்கிழாரே ஐந்து தடவை வெளியே சென்று இயன்ற அளவுக்கு எல்லா வேலையாட்களையும் அனுப்பி வைப்பதற்கு, இறையரசுப் பணியிலிருக்கின்ற அவசர நிலைமையே காரணமாகும்.

2. தகுதியற்ற வேலையாட்கள்: இயேசு வாழ்ந்த காலத்தில், யாராவது ஒருவர் தங்களை வேலைக்கு அமர்த்துகின்ற வரையில், ஒவ்வொரு நாளும் வேலையாட்கள் சந்தை வெளியில் காத்திருப்பது வழக்கமாக இருந்தது. காலை 9 மணிக்கும், மதியம் 12 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கும், மறுபடியும் மாலை 5 மணிக்கும் பலர் வேலையின்றி நிற்பதை நிலக்கிழார் கண்டார். சந்தை வெளியில் தான் வேலை தேடி நிற்கின்ற ஆள்களை கண்டறிந்து வேலைக்கு அமர்த்த முடியும். நேர்மையான கூலி தரப்படும் என்ற ஒப்பந்தத்தோடு தான், இந்த வேலையாட்கள் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். இறுதிக் கட்டமாக, மாலை ஐந்து மணிக்கு வேலைக்கு அமர்த்தப்படுகின்ற ஆள்கள், "எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை" என்று சொல்கிறார்கள். "வேலைக்குத் தகுதியற்றவர்கள்" என மற்ற நிலக்கிழார்களால் கைவிடப்பட்டவர்களே இவர்கள் என்பதையே இவர்களுடைய பதில் எடுத்துக் காட்டுகின்றது. இதே காரணத்திற்காகத் தான் மற்றும் பலரும் வேலை செய்வதற்கு அழைக்கப்படவில்லை போலும். இயேசுவால் இறையரசின் பணிக்கு அழைக்கப்பட்ட வரிதண்டுவோரும், விலைமாதரும் இந்த வகையைச் சார்ந்தவர்களே.

3. உரிமையாளரின் அருளை அடிப்படையாகக் கொண்டதே, வெகுமதி: "சாதனைக்கு நிகரான பரிசு, பணிக்கு ஏற்ற ஊதியம்" என்னும் வழக்கமான எதிர்பார்ப்புகளுக்கு எதிரானதாக இந்த உவமை காணப்படுகிறது.  "பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கியபடி", நீண்ட நேரம் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்தவர்கள் எனக் குறிப்பிடப்படுவோர், யூத மக்கள். மாலை 5 மணிக்கு கடைசியாக அழைத்து வரப்பட்டவர்கள் என குறிப்பிடப்படுவோர், புதிய கிறிஸ்தவர்கள். இவர்களில் பெரும்பாலோர் தங்களுக்கென எந்தவிதமான வழிமரபும், சடங்கு முறைகளும், தெய்வ நம்பிக்கையும் இல்லாத நிலையிலும், இறையரசின் அனைத்து பயன்களையும் பெற்றுக் கொண்ட பிற இனத்தவர் ஆவர். ஆனால், கடைசியாக வந்தவர் முதற்கொண்டு அனைவருமே ஒருநாளுக்கான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.கடைசியாக வந்தவர்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதியத்திற்கு தகுதியானவர்கள் அல்லர்; மற்றவர்களுக்கு சமமாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதியம், திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளருடைய மேலான அருளை அடிப்படையாகக் கொண்டதாகும். மற்றவர்களுக்கு நிகரான ஊதியத்தை கொடுத்ததோடு, முதலில் வந்தவர்களோடு இறுதியாக வந்தவர்களையும் சரிசமமாக அந்த உரிமையாளர் பாவித்தார். அதனால் தான் நிலத்தின் உரிமையாளர், அவருக்கு எதிராக முணுமுணுத்த முதலில் வந்தவர்களை பார்த்து, "நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்று கேட்கிறார். எனவே, முற்றிலும் தலைவருடைய அருள்நலத்தையும், பேரருளையும் அடிப்படையாகக் கொண்டதே, வெகுமதி என்பது.

இறையரசில் நமக்கு கிடைக்கின்ற வெகுமதி என்பது, திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளராகிய கடவுளுடைய திருவருளையும், அருள்நலத்தையும் அடிப்படையாகக் கொண்டதே. அத்தகைய வெகுமதி, ஒருவருடைய திறமை, வேலை நேரம் அல்லது வேலைப்பளு ஆகியவற்றைச் சார்ந்ததல்ல.

பயன்பாடு:

ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை உண்டு என்பதை நாம் நமது இளமைப் பருவத்திலேயே கற்றுக் கொள்கிறோம். எதுவுமே இலவசமாக வருவதில்லை. எனவே, எவ்வளவு அதிகமாக பொருள் ஈட்ட முடியுமோ, அந்த அளவு சம்பாதிப்பதில் குறியாயிருக்கிறோம். நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து, நம்மிடம் இருப்பதை எல்லாம் சம்பாதித்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்வதில் நாம் பெருமையடைகிறோம். நீங்கள் சம்பாதிப்பது உங்களுக்கு கிடைக்கிறது. நீங்கள் எதையும் சம்பாதிக்கவில்லை என்றால், எதையும் அடைந்திட உங்களுக்குத் தகுதியில்லை என்றாகிறது. அன்றாட வாழ்க்கையில், இதுவே நமது மனப்பாங்கு. இந்த வகையில் தான் நாம் வளர்கிறோம். மற்றவர்கள் நம்மை விட சுலபமாக சிலவற்றை அடைவதை காணப் பொறுக்காதவர்கள் சிலர் உண்டு. இன்றைய நமது வாழ்வில், நாம் கையாளுகின்ற அளவுகோல் இதுவே.

ஆனால், இறையரசின் வழிமுறைகள் வேறுபட்டவை. கடவுளின் வெகுமதிகளை நாம் சம்பாதிக்க முடியாது. அவை இறைவன் நமக்குத் தருகின்ற கொடைகள் ஆகும். "கடவுள் தாராள மனமுடையவர்; இது முதல் விதி. இந்த முதல் விதியைக் கற்றுத் தேர்வதே இரண்டாவது விதி" - இது முன்னர் ஒருவர் கூறிய முதுமொழி. "என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல" என்று கூறுகின்ற கடவுளை பற்றி பேசுகின்ற இறைவாக்கினர் எசாயா, இறுதியில் இரத்தின சுருக்கமாக, "மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன" என்று கடவுள் கூறுவதாக முடிக்கிறார்.

மரபுவழியே சொல்லப்படுகின்ற பழங்கதை ஒன்று உண்டு. விண்ணகத்தில் பதினோரு திருத்தூதர்களையும் ஒன்றுசேர்த்த இயேசு கிறிஸ்து, தன்னோடு "இறுதி இராஉணவு" கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். அவர்களும் உடனே சம்மதித்தார்கள். இரவு உணவில் கலந்து கொள்ள வந்த திருத்தூதர்களை வரவேற்ற இயேசு, அவர்களை இருக்கைகளில் அமரும்படி கேட்டுக் கொண்டார். அங்கே பதிமூன்று இருக்கைகள் போடப்பட்டிருப்பதைக் கண்டு, திருத்தூதர்கள் வியப்படைந்தார்கள். எல்லாம் தயார்நிலையிலிருந்த போதும், கொண்டாட்டத்தை ஆரம்பிக்காமல், தாமதம் செய்தார் இயேசு. "சற்று பொறுத்திருப்போம்" என்பது போல அனைவரையும் காத்திருக்க வைத்தார். வெகுநேரம் ஆன பிறகு, இறுதியாக அங்கே யூதாஸ் வந்துசேர்ந்தார். அவரைப் பார்த்ததும் இயேசு, தனது இருக்கையை விட்டெழுந்து சென்று, யூதாஸை வரவேற்றார். அவரை முத்தமிட்ட இயேசு, "நண்பரே, நீண்ட நேரமாக நாங்கள் உமக்காக காத்திருக்கிறோம். வாரும்" என்று இன்முகத்தோடு அழைத்து வந்தார். அங்கிருந்த மற்ற எல்லோருக்கும் யூதாஸ் அழிவைக் குறிப்பவராக தென்பட்டார். ஆனால், தன்னுடைய இராஉணவில் ஒரு பங்கேற்பாளராக இயேசு யூதாஸைக் கண்டார்.


முதன்முதலாகச் சென்று, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திராட்சைத் தோட்டத்தில் பணியாற்றுகின்ற வேலையாட்களாக ஒருவேளை நாமும் இருக்கலாம். ஆனால். இறைவனின் திராட்சைத் தோட்டம் என்பது, மணமாகாத அன்னையர், மணமுறிவு பெற்றவர்கள், மறுமணம் புரிந்தோர், மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானோர், விலைமாதர், எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டோர், ஓரின சேர்க்கையாளர் போன்ற வழிதவறிச் சென்ற மக்களுக்கும் உரியது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளரான இறைவன், தனது தோட்டத்தில் பணியாற்றுவதற்காக இறுதிக் கட்டத்தில் யாரை அழைப்பார் என்பது நமக்குத் தெரியாது. கடவுளை பொருத்தவரையில், எதுவுமே காலங்கடந்த நிலையல்ல. திருத்தூதர் பேதுரு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உழைத்தவர். கல்வாரியில் வலதுபக்கத்து சிலுவையில் இருந்த கள்வனோ கடைசி நேரத்தில் வந்தவர். ஆனால், இறையரசில் இருவரும் ஒரே மாதிரியான வெகுமதியையே பெற்றார்கள்.

முடிவுரை:

உதவியற்ற நிலையிலிருக்கின்ற நமது சொந்த வலிமை மற்றும் நமது திறமை ஆகியவற்றை மட்டும்  கொண்டு, விண்ணகம் செல்வதற்கான வழிமுறைகளை நாம் மேற்கொள்ள முடியாது என்பதை, இன்றைய நற்செய்தி உவமை எடுத்துரைக்கின்றது. முடிவில்லா நிலைவாழ்வின் வெகுமதியை அடைந்திட போதுமான நற்செயல்களை இவ்வுலக வாழ்வில் நாம் செய்திடல் இயலாது. அதனால் தான் அவருடைய திருவருளோடு ஒத்துழைத்து நாம் செயலாற்ற வேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கிறார். திராட்சைத் தோட்டத்தின் அதிபரான இறைவனுடைய எண்ணங்களும், வழிமுறைகளும், நம்முடைய எண்ணங்கள் - வழிமுறைகளிலிருந்து வேறுபட்டவை. இறைவனின் வழிகளை உணர்ந்து, பின்பற்றுவதற்கு தேவையான ஞானத்தை தூய ஆவி நமக்கு அருள்வாராக.





 ‘என் வழிமுறைகள் உங்கள் வழிமுறைகள் அல்ல’

அருள்பணி மரியஅந்தோணிராஜ்-பாளையங்கோட்டை


முன்பொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகச்சிறந்த ஞாபகசக்தி உடையவன்; அதோடு கூர்மையான அறிவும் நிரம்பப் பெற்றவன். ஒரு கவிதையை ஒருமுறை கேட்டால் போதும்; அதை வரிமாறாமல், வார்த்தை மாறாமல் அப்படியே திருப்பிச்சொல்ல அவனால் முடியும். அவன் சபையில் விதூஷகன் ஒருவன் இருந்தான். அவனும் நினைவாற்றலில் சிறந்தவன்தான். எதையும் இரண்டு முறை கேட்டால், அப்படியே திருப்பிச் சொல்லும் சக்தி உடையவன் அவன். அந்த அவையில் அடிமைப்பெண் ஒருத்தி இருந்தாள். மூன்றுமுறை கேட்டால், அதை அட்சரம் பிசகாமல் திருப்பிச் சொல்வாள் அவள்.

அந்த அரசன் ஓர் நயவஞ்சகன். எந்தப் புலவன் வந்து மன்னனைப் புகழ்ந்து பாடினாலும், 'நீ பாடவிருக்கும் பாடல் இதுவரை நான் கேள்விப்படாத, உன்னுடைய சொந்தப் பாடலாக இருந்தால், தகுந்த சன்மானம் தருவேன்” என்பான்.

வந்த புலவனும், தன் கவிதையைப் படிப்பான். ஒருமுறை கேட்டதுமே மன்னனுக்குத்தான் அது மனப்பாடம் ஆகிவிடுமே! எனவே, ஏதோ ஒரு பெயரைக் குறிப்பிட்டு, “அந்தக் கவிதை அவர் எழுதியது; நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன்” என்று சொல்லி, அதை அப்படியே மளமளவென்று ஒப்பிப்பான். புலவன், ''இல்லை. இந்தக் கவிதை என் சொந்தக் கவிதை'' என்று சாதித்தால், “கிடையவே கிடையாது! இந்தக் கவிதை என் விதூஷகனுக்குக்கூடத் தெரியும்” என்று சொல்லி, விதூஷகனைப் பாடச்சொல்வான் மன்னன். புலவன் பாடி ஒருமுறை, மன்னர் திரும்பச் சொல்லி ஒருமுறை என விதூஷகன் அந்தக் கவிதையை இரண்டு முறை உன்னிப்பாகக் கவனித்திருப்பதால், அவனும் அதை வரி மாறாமல் சொல்லுவான். அப்போதும், ''இருக்க முடியாது! இந்தக் கவிதையை நான் நேற்றுத்தான் புனைந்தேன்!'' என்று புலவன் அழாக்குறையாகச் சொன்னால், “இல்லை. நீ பொய் சொல்கிறாய். என்னுடைய அடிமைப்பெண்கூட இந்தக் கவிதையைச் சொல்வாள்” என்று சொல்லி, அவளைச் சொல்லச் சொல்லுவான் அரசன். மூன்று முறை கேட்டதால், அவளும் வார்த்தை பிசகாமல் அந்தக் கவிதையைத் திரும்பச் சொல்ல, புலவன் குழம்பிப்போய் சித்தம் கலங்கி, புத்திசுவாதீனத்தை இழக்கும் அளவுக்கு வந்துவிடுவான்.

'அல் அஸ்மாய்' என்கிற கவிஞனுக்கு மட்டும் இந்த உண்மை தெரியும். அரசனுடைய நினைவாற்றல் குறித்தும் தெரியும். எனவே, இதுவரை யாரும் உபயோகிக்காத வித்தியாசமான சொற்களைப் பயன்படுத்தி, அவர் ஒரு கவிதையைத் தயார் செய்தார். அதை அரசனோ, விதூஷகனோ, அடிமைப்பெண்ணோ மனப்பாடம் செய்து திரும்பச்சொல்லவே முடியாது என்கிற அளவில் மிகக் கடினமான ஒரு கவிதையை உருவாக்கினார் அவர். பின்பு, ஒரு வழிப்போக்கரைப்போல மாறுவேடம் பூண்டு, அரசவைக்குச் சென்றார்.

“மன்னரே, நான் உங்களைப் புகழ்ந்து ஒரு கவிதை தயாரித்திருக்கிறேன். உங்களுக்கு படித்துக்காட்ட விரும்புகிறேன்” என்றார். அதற்கு அரசர், “புலவரே! என் நிபந்தனை உங்களுக்குத் தெரியும் அல்லவா?” என்றார். “நன்றாகத் தெரியும். அந்த நிபந்தனைக்கு நான் ஒப்புக் கொள்கிறேன்” என்று சொல்லி அவர் அந்தப் பாடலைப் பாடிக் காண்பித்தார். கடினமான பதங்களுடன்கூடிய, கரடுமுரடான வரிகள் கொண்ட அந்தப் பாடலைக் கேட்ட மன்னனால், திருப்பிச் சொல்ல முடியவில்லை. மன்னரே தடுமாறியதால், விதூஷகனும் மலங்க மலங்க விழித்தான். அடிமைப்பெண்ணாலும் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் மன்னன் தன்னுடைய மன்னன் தோல்வியை ஒப்புக்கொண்டான். 'அல் அஸ்மாய்’ என்ற அந்த கவிஞனின் வழிமுறை, எண்ணம், அணுகுமுறை எல்லாம் வித்தியாசமாக இருந்தது. அதனாலேயே அவரால் நயவஞ்சக அரசனை வெற்றிக்கொள்ள முடிந்தது.

பொதுக்காலத்தின் இருபத்து ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் அனைத்தும் ‘கடவுளின் வழிமுறைகள், எண்ணங்கள் எல்லாம் மனிதரின் வழிமுறைகள், எண்ணங்கள் அனைத்தையும் விட உயர்வானது என்ற சிந்தனையை வழங்குகின்றது. அது எப்படி என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கூறுகின்ற திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமையில், வேலையாட்கள் திராட்சைத் தோட்டத்தில் உழைப்பதற்காக விடியற்காலை, காலை ஒன்பது மணி, பகல் பன்னிரண்டு மணி, பிற்பகல் மூன்று மணி, மாலை ஐந்து மணி என வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். ஆனால் கூலிகொடுக்கப்படும்போது எல்லாரும் சமமான கூலி பெறுகிறார்கள். இதனால் முன்கூட்டியே வேலைக்கு வந்தவர்கள் முணுக்கிறார்கள். ஆனால் திராட்சைத் தோட்ட உரிமையாளரோ, எல்லாருக்கும் சமமான கூலி கொடுப்பது தன்னுடைய விருப்பம் என்று சொல்லி அவர்களுடைய வாயை அடைக்கின்றார்.

வேலைக்குத் தகுந்தவாறுதான் கூலிகொடுக்கவேண்டும் என மனித கண்ணோட்டத்தில் நாம் சொல்லலாம். ஆனால் கடவுளது பார்வை அப்படிக்கிடையாது, அது இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிப்பதுபோல ‘கடவுளின் எண்ணங்கள் மனிதர்களின் எண்ணங்களைவிட உயர்ந்ததாக, கடவுளின் வழிமுறைகள் மனிதர்களின் வழிமுறைகளைவிட உயர்ந்ததாக இருக்கின்றது. உவமையில் கடவுளின் எண்ணம் எந்தளவுக்கு மனிதர்களின் எண்ணங்களை விட உயர்ந்து நிற்கின்றது என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஏற்கனவே சொன்னதுபோல மனிதர்களாகிய நாம் வேலைக்குத் தகுந்த கூலியைத்தான் தருகின்றோம். ஆனால் ஆண்டவராகிய கடவுளோ அதற்கு மேலும் சென்று கூலியைத் தருகின்றார். இந்த உவமையைக் குறித்து சொல்கிறபோது ஒருசில விவிலிய அறிஞர்கள், “திராட்சைத் தோட்ட உரிமையாளர் கடைசியில் வந்த கூலியாட்களுக்கும் ஒரு தெனாரியம் கொடுக்கக் காரணம், அந்த கூலியாட்களை நம்பி அவர்களுடைய குடும்பம் இருக்கிறது. எனவே ஒரு தெனாரியத்திற்கும் குறைவாக ஊதியம் கொடுத்தால் அவர்களுடைய குடும்பம் பட்டினியில் வாடக்கூடும் என்பதற்காகத்தான் திராட்சைத் தோட்ட உரிமையாளர் இப்படிச் செய்தார்” எனக் கூறுவார்கள்.

அப்படியானால் விடியற்காலையிலிருந்தே வேலைபார்க்கும் கூலியாட்களுக்கு ஒரு தெனாரியம் என்ற கூலி அநீதியாக இல்லையா? என்று நாம் கேள்வி கேட்கலாம். அதற்கு உவமையிலே பதில் இருக்கின்றது. திராட்சைத் தோட்ட உரிமையாளார் தனக்கு எதிராக முணுமுணுத்தவர்களைப் பார்த்துச் சொல்கிறார், “நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விரும்பம்” என்று. ஆகவே திராட்சைத் தோட்ட உரிமையாளர் யாருக்கும் அநீதி இழைக்கவில்லை, மாறாக கடைசியில் வந்த கூலியாட்கள்மீது, அவர்கள் குடும்பத்தின்மீது கொண்ட இரக்கத்தினால் பெருந்தன்மையோடு நடந்துகொண்டார் எனப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆண்டவராகிய கடவுளும் எளியவர், சமுதாயத்தில் உள்ள வறியவர்பால் அதிக அன்பும், கரிசனையும் கொண்டு இருக்கிறார் என்றால், பணம்படைத்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் கடவுள் அநீதியாக நடந்துகொள்கிறார் எனப் புரிந்துகொள்ளக்கூடாது. மாறாக எளியவரும், வறியவரும் தங்களுடைய வாழ்வில் ஏற்றம் பெறவேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் இப்படிச் செயல்படுகின்றார் எனப் புரிந்துகொள்ளவேண்டும். (இடஒதுக்கீட்டையும் இங்கே இணைத்துப் பார்த்து புரிந்துகொள்ளவேண்டும்)

பல நேரங்களில் மனிதர்கள் அப்படியிருப்பதில்லை. கடவுளின் தயவு எளியவருக்குக் கிடைத்துவிட்டால் வலியவர்கள் அதைக்கண்டு பொறாமை கொள்கிறார்கள். உவமையிலும்கூட திராட்சைத் தோட்ட உரிமையாளர் கடையில் வந்த கூலியாட்களுக்கு ஒரு தெனாரியம் கொடுத்ததை முதலில் வந்தவர்கள் பொறாமைக் கண்கொண்டு பார்க்கிறார்கள். அதனால்தான் அவர், “நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?” என்கிறார். ஆகவே வாழ்க்கையில் எத்தகைய தருணத்திலும் ஒரு மனிதரின் வளர்ச்சியைக் கண்டு மகிழவேண்டுமே ஒழிய பொறாமைப்படக் கூடாது. பின்னர் பொறாமையே அம்மனிதரின் அழிவுவுக்குக் காரணமாகிவிடும்.

ஓர் ஊரில் துணி துவைப்பவனும் மண்பானை செய்கின்ற குயவனும் அருகருகே வசித்து வந்தார்கள். துணி துவைப்பவனோ வசதியாக இருந்தான். இதைக் கண்டு குயவனுக்குத் தாங்கமுடியவில்லை. ஒவ்வொரு நாளும் குயவன் துணி துவைப்பவனை பொறாமைக் கண்கொண்டு பார்த்தான். குயவன் துணிதுவைப்பவனை எப்படியாவது ஒழித்துக்கட்டவேண்டும் எனத் தீர்மானித்தான்.

ஒருநாள் அவன் அந்நாட்டு அரசனிடம் சென்று, நயவஞ்சகமாகப் பேசி அவரைத் தன்பக்கம் இழுத்து, அழுக்குத் துணிகளை வெள்ளை வெளேரென வெளுக்கும் துணி துவைப்பவனை அரண்மனையில் இருக்கும் பட்டத்து யானையை வெள்ளை வெளேரென ஆக்கும்படி கேட்டுக்கொண்டான். அரசரும் குயவனுடைய பேச்சில் மயங்கி, துணி துவைப்பவனை அழைத்துக்கொண்டு வரச் சொல்லி அவனை யானையை வெள்ளையாக வெளுக்கும்படி கேட்டுக்கேட்டான். இதைக் கேள்விப்பட்ட துணி துவைப்பவன் இவையெல்லாம் தன்னுடைய வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் குயவனின் வேலையாகத் தான் இருக்கும் எனப் புரிந்துகொண்டான். எனவே அவன் அரசனிடம், “மன்னா! இந்த யானையை வெள்ளையாக ஆக்கவேண்டுமென்றால், அதற்கு ஒரு பெரிய மண்பானை தேவைப்படும். அந்த மண்பானையில் வைத்துத்தான் இந்த யானையை குளிப்பாட்டி, வெள்ளையாக்க முடியும்” என்றான்.

உடனே அரசன் குயவனிடம், யானையைக் குளிப்பாட்டும் அளவுக்கு ஒரு மண்பானையை செய்துகொண்டு வருமாறு கேட்டுக்கொண்டான். குயவனும் ஒருமாத காலம் கடுமையாகப் போராடி, யானை குளிக்கும் அளவுக்கு ஒரு மண்பானையைக் கொண்டுவந்தான். பின்னர் அரசன் அங்கே இருந்த சேவகர்களிடம், யானையை தூக்கி மன்பானைக்குள் இறக்கிவைக்குமாறு கேட்டுக்கொண்டான். சேவகர்களும் மன்னர் சொன்னதற்கு இணங்க யானையைக் கட்டி, மண்பானையில் இறக்கி வைத்தார்கள். ஆனால் அந்தோ பரிதாபம் யானையின் எடை தாங்காமல் மண்பானை உடைந்து போனது. இதைப் பார்த்த அரசன் குயவனிடம் இன்னொரு மண்பானை செய்துகொண்டு வருமாறு கேட்டுக்கொண்டான். அதற்கு குயவனோ, “அரசே! என்னால் இன்னொரு மண்பானை செய்யமுடியாது. துணி துவைப்பவன் மீது கொண்ட பொறாமையினால்தான் நான் இப்படி யானையை வெள்ளையாக்கும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் அது எனக்கே வினையாகும் என்று நினைக்கவில்லை என்று சொல்லி, தன்னுடைய தவற்றை உணர்ந்து வருந்தி அழுதான்.

பொறாமையோடு வாழ்பவன் தன் பொறாமையினாலே அழிவான் என்பது இந்தக் கதை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

ஆகவே, பிறர் வளர்ச்சியடையும்போது பொறாமைப்படாமல், மகிழ்ச்சியுறுவோம். ஆண்டவர் எப்படி எளியவர்மீது அதிகமாக அன்பும், இரக்கமும், கரிசனையும் கொண்டு வாழ்கிறாரோ அதைப் போன்று நாமும் எளியவர், வறியவர்மீது அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். 



No comments:

Post a Comment