Saturday 2 September 2017

பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறு

மறையுரை மொட்டுகள்

அருள்பணி Y இருதயராஜ் -


இரண்டு பேர் கிணற்றில் குதித்தனர். அவர்களில் ஒருவர் தண்ணீல் மூழ்கிச் செத்தார். ஏனெனில் அவர் தலைக்களம் பிடித்தவர். மற்றவர் தண்ணீர் மேல் மிதந்தார். ஏனெனில் அவர் மரமண்டையர். கிறிஸ்துவின் சீடர்களில் ஒரு சிலர் தலைக்கணம் பிடித்தவர்களாக இருந்தனர். எனவேதான் அவர்கள் தங்களுக்குளே யார் பெரியவர் என்று வாக்குவாதம் செய்தனர் (மாற்கு 9:34). மேலும் அவர்கள் மரமண்டைகளாகத் திகழ்ந்தனர். ஏனெனில் கிறிஸ்து சிலுவை மரணம் பற்றிக் கூறியதை அவர்களால் புரிந்து ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவேதான் கிறிஸ்து எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்களிடம் "அறிவிலிகளே இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா?" என்றார் (லூக் 24:25).
இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து தம் பாடுகளைப் பற்றி முதன் முறையாக அறிவித்தார் ஆனால் பேதுருவால் அதைப் புரிந்து ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே கிறிஸ்துவையே அவர் கடிந்து கொள்கிறார். மெசியாவும் சிலுவையும் படி இணைந்து செல்ல முடியும் என்று அவர் கேட்கிறார். கிறிஸ்துவை அவர், "மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று அறிக்கையிட்டார். ஆனால் அவர் நினைத்த மெசியா மகிமையின் மெசியா, இஸ்ரயேல் மக்களை ஆளவிருக்கும் மெசியா, சிலுவையில் அறையப்படவேண்டிய மெசியா அல்ல. சிலுவை எப்பொழுதும் சீடர்களுக்கு இடறலாக இருந்தது.
திருத்துதர் பவுல் கூறுகிறார். "நாங்கள் அறிவிப்பது சிலுவையில் அறையப்பட்ட மெசியா, சிலுவையோ யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாகவும் உள்ளது. ஆனால் சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து கடவுளின் வல்லமை கடவுளுடைய ஞானம்" (1கொரி 1:23-24)
சிலுவையின்றிக் கிறிஸ்து இல்லை சீடத்துவமும் இல்லை. கிறிஸ்துவின் சீடராக இருக்க விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் (மத் 18:24). சிலுவையைச் சுமக்காத எவரும் கிறிஸ்துவின் சீடராக இருக்கமுடியாது, (லூக்கா 14:27).
திருமணத்தின்போது மணமகன் கழுத்தில் கட்டப்படும் மெல்லிய மஞ்சள் நிறத் தாலிக் கயிற்றை அகற்றிவிட்டு, கெட்டியான தங்கத் தாலிச் சங்கிலி கட்டப்படுவதுபோல, பேதுருவின் முதல் உறுதியுற்ற அழைத்தல் அவரே இரண்டாவது அழைத்தலால் உறுதி அடைகின்றது. மீன் பிடித்துக் கொண்டிருந்த பேதுருவை "என் பின் வா" (மத் 4:19) என்று கிறிஸ்து அழைத்தார். ஆனால் பேதுரு கிறிஸ்துவை மூன்று முறை மறுதலித்து தனது அழைத்தலை இழந்தார். கிறிஸ்து அவரை மன்னித்து இரண்டாம் முறை, "என்னைப் பின்தொடர்" (யோவா 21:19) என்றார் பேதுருவுடைய சீடத்துவம் அவருடைய சிலுவைச் சாவால் நிறைவு அடையும் என்பதையும் கிறிஸ்து அவருக்குச் சுட்டிக்காட்டினார் (யோவா 21:18).
கடவுளால் சிறப்பான அழைப்புப் பெற்றவர்கள் மற்றவர்களைவிட அதிகம் துன்புறுகின்றனர். இன்றைய முதல் வாசகத்தில் பல்வேறு துன்பங்களுக்கு இலக்கான இறைவாக்கினர் எரேமியா கடவுளிடம் பின்வருமாறு முறையிடுகிறார்: "ஆண்டவரே நீர் என்னை ஏமாற்றி விட்டீர் நானும் ஏமாந்து போனேன்" (எரே 267) ஆயுள் முழுவதும் அருங்கொடையில் தன்னைக் கரைத்துக் கொண்ட ஒரு பெண்மணி புற்றுநோயால் இறந்து கொண்டிருந்தார். அவர் என்னிடம், "சாமி இயேசு என்னைக் கைவிட்டு விட்டார்" என்று சொல்லி அழுதார். அவரிடம் நான் "அம்மா இயேசுவே சிலுவையில் என் இறைவா என் இறைவா! ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று கூறினார். ஆனால் இறுதியில், "தந்தையே என ஆவியை உமது கையில் ஒப்படைக்கிறேன்" என்று கூறினார். அவ்வாறே நீங்களும் கடவுளிடம் சரணடையுங்கள்" என்றேன் அவரும் அமைதியாக மரணம் அடைந்தார்.
துன்பத்தைக் கடவுளின் சாபமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், "ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார் " (எபி 12:6). கிறிஸ்து சிலுவையால் மாட்சிமை அடைந்தார் சிலுவையில் அவர் உயர்த்தப்பட்டார் சிலுவையிலிருந்து மாந்தர் அனைவரையும் தம்பால் ஈர்த்துக் கொண்டார் (யோவா 12:32). ஒவ்வொரு துன்பமும் நம்மைப் புடமிட்டுத் தூய்மைப்படுத்தி மாட்சிமை அடையச் செய்கிறது.
ஒருவர் தன் மகளுக்குத் திருமணம் செய்து அவரை மருமகனிடம் ஒப்படைத்து "மாப்பிள்ளை என் மகள் கண் கலங்காமல் பார்த்துக்கொள்" என்றார். அதற்கு மருமகன் "கவலைப்படாதே மாமா வெங்காயத்தை நானே உரிக்கிறேன்" என்றாம்! வெங்காயத்தை நறுக்கும்போது கண் கலங்குகிறது. நறுக்கப்பட்ட வெங்காயம் தன்னை நறுக்கியவரைப் பார்த்து, "நறுக்கப்பட்ட நானே கண்ணீர் சிந்தவில்லை அப்படியிருக்க நறுக்கிற நீ ஏன் கண்ணி சிந்த வேண்டும்?" என்று கேட்டதாம் துன்பத்தை கண்டு நாம் பயப்படாமல் இருந்தால், துன்பம் நம்மைக் கண்டு பயந்து ஓடிவிடும் என்கிறார் வள்ளுவர்.
இடும்பைக்கு இடும்பபடுப்பவர் இடும்பைக்கு
இடும்பைபடாஅதவர் (குறள் 623)

தன்னைச் சிலுவையிலிருந்து பிரிக்க நினைத்த பேதுருவைக் கிறிஸ்து "சாத்தானே" என்று அழைத்தார் அன்று கிறிஸ்துவை கோபுரத்திலிருந்து குதிக்கச் சொன்ன சாத்தான், அவரைக் கடைசியாகச் சிலுவையிலிருந்து இறங்கிவரச் சொன்னான் ஆனால் சிலுவையிலிருந்து கீழே இறங்கி வரவில்லை மாறாகச் சிலுவையில் தொங்கி நம்மை மீட்டார் கிறிஸ்து நம்மைச் சிலுவையிலிருந்து விடுவிக்கமட்டார். ஆனால் சிலுவையின் மூலம் விடுவிப்பார் சிலுவை கடவுளுடைய ஞானம் கடவுளுடைய வல்லவை!
திருத்தூதர் பவுலின் யூபிலி ஆண்டில் அவர் சிலுவையைப் பற்றி கொண்டிருந்த மனநிலை நம்மிடம் இருப்பதாக "நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்டமாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்த வரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தமட்டில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்" (கலா 6:14)


ஞாயிறு இறைவாக்கு

அருள்திரு முனைவர் .அருள்.



சுவாமி விவேகானந்தர் அமெரிக்க மக்களுக்குச் சொற்பொழிவு ஆற்றப் புறப்படும் முன், தன் குருவின் (இராமகிருஷ்ணனின்) மனைவி சாரதா மணி தேவியிடம் ஆசி பெற விரும்பி அவர் வீடு சென்றார். உள்ளே சென்றபோது அம்மையார் சமையல் செய்து கொண்டிருந்தார். ஆசி பெற வந்த விவேகானந்தரைப் பார்த்து அந்தக் கத்தியை எடுத்துத் தா என்றார்கள். அப்படியே விவேகானந்தர் செய்தார். காய் நறுக்கும் கத்தியைப் பெற்ற சாரதா மணி அம்மையார் உனக்கு என் நல்வாழ்த்துக்கள்! நீ வெற்றி பெறுவாய். போய் வா மகனே! என்றார்கள். கத்திக்கும், வெற்றிக்கும் என்ன தொடர்பு என்று அறிந்துகொள்ள விரும்பிய விவேகானந்தர் இதன் அர்த்தம் என்ன என்று கேட்டார். மகனே! உன்னை சோதிக்கவே கத்தியை எடுத்துத் தரச் சொன்னேன். பெரும்பாலும் கத்தியை தருபவர் கைப்பிடியைப் பிடித்துக் கூர்மையான கத்திப் பகுதியை நீட்டுவார்கள். நீயோ, கூர்மையான பகுதியை நீ பிடித்துக் கொண்டு, கைப்பிடிப் பகுதியை என்னிடம் கொடுத்தாய். பிறருக்குத் துன்பம் விளைவிக்காமல் துன்பத்தைத் தானே தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள்தான் இப்படிச் செய்வார்கள். எனவே நீ வெற்றி பெறுவாய், போய் வா மகனே! என வாழ்த்தி அனுப்பினார் சாரதா மணி அம்மையார்.



துன்பத்திற்கும் வெற்றிக்குமிடையே ஒரு தொடர்பு உண்டு. துன்பத்திற்கும், உயிர்ப்பிற்குமிடையே ஒரு தொடர்பு உண்டு. இதனால்தான் இன்றைய நற்செய்தியிலே துன்பம் வேண்டாம் என்ற பேதுருவைப் பார்த்து இயேசு, "என் கண் முன் நில்லாதேசாத்தானே! நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய். நீ எண்ணுவதெல்லாம் மனிதனுக்கு ஏற்றவை பற்றியே" (மத். 16:23) என்று கடிந்து கொண்டார்.



கரும்பு, ஆலைக்குள் புக அச்சப்பட்டால் அதிலிருந்து எப்படி சர்க்கரை பிறக்கும்? சந்தன மரம், காயப்பட மறுத்தால் அதிலிருந்து எப்படி மணம் பிறக்கும்? தீக்குச்சி, தன்னையே எரித்துக்கொள்ள மறுத்தால் எப்படி அதிலிருந்து ஒளி பிறக்கும்? கடலுக்குள் மூழ்கத் தயாராக இருப்பவர் மட்டுமே முத்தை எடுக்க முடியும். சுரங்கத்தில் நுழையத் தயாராய் இருப்பவர் மட்டுமே தங்கத்தை எடுக்க முடியும். அதேபோல் துன்பத்தைச் சந்திக்கத் தயாராய் இருப்பவர் மட்டுமே வெற்றியைச் சுவைக்க முடியும்.



இதனால் இயேசு அன்று பேதுருவைப் பார்த்து, என் கண் முன் நில்லாதே என்றார். இன்றைய முதல் வாசகத்திலே துன்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தத்தளித்துத் தடுமாறும் இறைவாக்கினர் எரேமியாவைச் சந்திக்கிறோம். புனித பவுல் அடிகளார் இன்றைய இரண்டாம் வாசகத்திலே துன்பத்தைத் தாங்கிக் கொள்ள நமக்கோர் அற்புதமான வழியைக் காட்டுகிறார். கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களை ஒப்படையுங்கள் (உரோ. 12:1) என்கிறார் திருத்தூதர் பவுல்.



இறைவார்த்தை, தன்னை ஏற்றுக்கொண்டவர்களுக்குத் துன்பமும், துயரமும் தருவது எதற்காக? அவர்கள் வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்காகவா? நிச்சயம் இல்லை! இன்னும் பயனுள்ள கருவிகளாக, இறைவனின் பணியாட்களாக மாற்றுவதற்காகவே.



ஒருவர் மூங்கில் மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் கத்தியோடு சென்றார். அவரைப் பார்த்தவுடன் மூங்கில் மரங்கள் பயந்து நடுங்கின. எங்கே தன்னை வெட்டி விடுவாரோ என்று அஞ்சின. ஒவ்வொரு மூங்கிலையும் பார்த்து வந்த மனிதர், தனக்குத் தேவையான மூங்கில் ஒன்று அங்கு இருப்பதைப் பார்த்தவுடன், அதை வெட்ட ஆரம்பித்தார். அந்த மூங்கில், தன் தலைவிதியை நினைத்து வேதனைப்பட்டது. அழ ஆரம்பித்தது. தொடர்ந்து வெட்டிய மனிதர் வீட்டிற்குக் கொண்டு வந்து நெருப்பில் வாட்ட ஆரம்பித்தார். வேதனையால் அந்த மூங்கில் இன்னும் அதிகமாகத் துடித்தது. அந்த மனிதரோ இதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் அந்த மூங்கிலில் துளை போட ஆரம்பித்தார். வேதனையால் நொந்துபோனது அந்த மூங்கில். அந்த மனிதரையும் சபிக்க ஆரம்பித்தது. ஆனால் துளையிட்ட மூங்கிலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தவுடன், புல்லாங்குழலாக மாறி தேனினும் இனிய இசையை எட்டுத் திக்கும் பரப்பியது. இப்போது அந்த மூங்கில் அந்த மனிதரை நன்றியோடு பார்த்தது!



மனிதரும் ஒரு மூங்கில்தான். துன்பங்கள் அவரை வாட்டி அவருக்குள் துளை போடவில்லையென்றால் அவர் மூடிய மூங்கிலாக இருப்பார். வாழ்வில் துன்பங்களால்துளையிடப்படாத மனிதர், இசை என்ற மகிழ்ச்சியான வாழ்வை எழுப்ப முடியாது. வாழ்வைப் பிறருக்கும் வழங்க முடியாது. இந்தசெய்தியைத்தான் ஆண்டவர் இயேசு இன்றையநற்செய்தியிலே, என்னைப் பின் செல்ல விரும்புகிற எவரும் தன்னலம் துறந்து, தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். என்பொருட்டுத் தன் வாழ்வை இழப்பவர் எவரும் வாழ்வடைவார் (மத் 16:24)என்கிறார். எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே (தி.பா. 119:71) என்கிறார் திருப்பாடலின் ஆசிரியர்.



ஆகவே அருமையானவர்களே! சிலுவையை, ஒரு துன்பத்தை, ஒரு நோயை இறைவன் அனுமதிக்கிறார் என்றால் நம்மை மகிமைப்படுத்தவே எனப் புரிந்து கொள்வோம். நாம் ஒரு சிலுவையை முழு மனத்தோடு ஏற்றுக்கொண்டால் அது சுகமான சுமையாக மாறிவிடும். செல்வம், பெயர், புகழ், அதிகாரம் இவற்றை மட்டுமே ஆதாயமாக்கிக் கொள்ள ஆயிரக்கணக்கானோர் அலைமோதுகிறார்கள். ஆனால் இறைவன் விரும்புவது அடுத்தவர் நலனை முன் நிறுத்தி ஆண்டவரை ஆதாயமாக்கிக் கொள்ள நாம் அழைக்கப்பட்டவர்கள். இதில் துன்பம், துயரம்,சுமைகள், தோல்விகள், வேதனைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெற இன்றையத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.


உம்மீது கொள்ளும் அன்பால்!

அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை

போனவாரம் பூசைக்கு வந்துட்டு இந்த வாரமும் பூசைக்கு வந்தவங்க இன்றைய நற்செய்தியைக் கேட்டா ரொம்பவே ஷாக் ஆயிடுவாங்க. பேதுருவைப் பார்த்து போன வாரம், 'ஐயா, மகனே, ராசா, நீ பெரிய ஆளுப்பா, உன் மைன்ட் மனித மைன்ட் அல்ல, கடவுளோட மைன்ட்' என புகழாரம் சூட்டிய இயேசு, 'அப்பாலே போ சாத்தானே' என இரட்டைச் சொற்களில் (கிரேக்கத்தில்) முடித்துவிடுகிறார். 
நம்ம இயேசுவை நாம எப்படித்தான் புரிந்து கொள்றது?
நல்ல கேள்வி. இந்தப் பிரச்சினைதான் பேதுருவுக்கும் இருந்தது. இயேசுவைப் புரிந்துகொள்ள அவரால் முடியவில்லை. அவரோட கெபாசிட்டி அவ்வளவுதான். எல்.கே.ஜி படிக்கிற குழந்தைக்கு 'நான்கு எருதுகளும், ஒரு சிங்கமும்' என்ற கதைதான் சொல்ல முடியும். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்குத்தான் 'ஆஸ்கர் லைல்ட் உரைநடை' நடத்த முடியும். நல்லா பார்த்தோம்னா, இயேசு எல்.கே.ஜி குழந்தைகளாக இருந்த பேதுருவுக்கும், சீடர்களுக்கும் 'ஆஸ்கர் வைல்ட்' நடத்துகிறார். 11 பேர் புரிந்த மாதிரி அமைதியாக இருக்கின்றனர். இவர் மட்டும் புரியாம, 'ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது' என்கிறார். நம்ம மனசுக்கு புடிச்ச ஒருவர், 'நான் கொஞ்ச நாள்ள கஷ்டப்படப்போறேன். என் சொத்தெல்லாம் அழிஞ்சுடம். எனக்கு கேன்சர் வந்துடும். நான் செத்துப்போவேன்' என்று நம்மிடம் சொல்கிறார் என வைத்துக்கொள்வோம். நாம என்ன பதில் சொல்வோம்? பேதுரு சொன்ன மாதிரிதான் சொல்வோம்: 'ஐயோ, வாய மூடு! உனக்கு இப்படி எல்லாம் நடக்காது' என்று சொல்வோம். நாமளாவது, 'நடக்காது' என்று கடவுளோடு செக்ரட்டரி மாதிரி சொல்வோம். ஆனால், பேதுருவோ, 'நடக்கக் கூடாது' என்ற தன் விருப்பத்தைத்தான் சொல்கிறார். எல்.கே.ஜி குழந்தை 'ஆஸ்கர் வைல்ட்' படிக்கலனு, 'கிளாஸ் ரூமை விட்டு வெளியே போ' என்று சொல்லிவிட்ட இயேசு என்ற ஆசான் தொடர்ந்து வகுப்பில் இருந்த மாணவர்களுக்கு 'ஆஸ்கர் வைல்ட்' மட்டுமே நடத்துகின்றார்: 'பின்பற்றுதல், தன்னலம், சிலுவை, துறத்தல், உயிர், இழப்பு, வாழ்தல், ஆன்மா, வாழ்க்கை, உலகம், ஆதாயம்' என என்னென்னவோ பேசுகின்றார். இலட்சக்கணக்கில் இதற்கான விளக்கவுரை எழுதியே நமக்குப் புரியவில்லை. பாவம், அந்த பச்ச மண்ணுங்களுக்கு எப்படி புரியும்?
ஆக, என்னைப் பொறுத்தவரையில் இயேசு பேதுருவை கடிந்து கொள்ளுதலை நியாயப்படுத்த முடியாது. ஆகையால்தான் மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்தியாளர்கள் இந்த நிகழ்வைப் பதிவு செய்தாலும், பேதுருவோடு உடன்சென்றவரும், அடுத்தவரின் பெயரைக் கெடுக்க விரும்பாதவருமான லூக்கா, இயேசு கடிந்து கொள்வதை எழுதாமல் விடுகின்றார்.
சரி இன்றைய இறைவாக்கு வழிபாட்டை, குறிப்பாக, நற்செய்தியை எப்படி புரிந்துகொள்வது?
இன்றைய திருப்பலியின் சபை மன்றாட்டு நமக்கு தொடக்கத்தளமாக இருக்கிறது:
'உம்மீது கொள்ளும் அன்பால் எங்களுடைய இதயங்களை நிரப்பியருளும்.
நாங்கள் மேன்மேலும் உம்மில் வளரவும்
,
நன்மையானதெல்லாம் எங்களில் மலரவும்
,
இவ்வாறு உமது செயல் எங்கள் வாழ்வில் வெளிப்படவும்...
'
மிக அழகான சபை மன்றாட்டு.
முதல் மூன்று வார்த்தைகள் - உம்மீது கொள்ளும் அன்பால் - இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் அடிநாதமாக இருக்கின்றன. எப்படி?
இன்றைய முதல் வாசகத்திலிருந்து (எரே 20:7-9) தொடங்குவோம்.
நாம நம்ம கோயில்களில் அடிக்கடி தியானப்பாடலா ஒரு பாட்டு பாடுவோம். தெரியுமா? 'ஆண்டவரே, நீரே என்னை மயக்கிவிட்டீர். நானும் மயங்கிப்போனேன்.' இதைப் பாடும்போதெல்லாம் பாடகர் குழுவினரை நான் கவனித்திருக்கிறேன். இது ஏதோ ஒரு காதல் பாடல் போல மிகவும் இரசித்துப் பாடுவார்கள். காதலனும், காதலியும் திருப்பலிக்கு வந்திருந்தால் ஒருவர் மற்றவரின் முகத்தைப் பார்த்து புன்னகை செய்துகொள்வர். ஆனால், எரேமியா நூலில் இது மிகவும் சோகமான பாடல். எப்படி?
ஒரு மனுசன் தன் சொந்த ஊரை விட்டுவிட்டு இன்னொரு ஊருக்குப் போய், 'இந்த ஊரு அழியப்போகுது' என்று சொன்னா, அந்த மனுசனுக்கு என்ன நடக்கும்? ஊரார் அவன்மேல் கோபப்படுவர். அவனை விரட்டுவர். அவனோடு உப்பு, தண்ணீர் புழங்கமாட்டார்கள். அவனைக் கல்லால் எறிவர். இப்படி எருசலேம் மக்களின் - ஆட்சியாளர் (பஸ்கூர்) முதல் அடிமை வரை - எல்லாருடைய சாபங்களையும் பெற்றுவிட்டு ஆண்டவர் முன் செல்கின்ற எரேமியா, விரக்தி, சோர்வு, ஏமாற்றம் என எல்லாவற்றையும் குலைத்து ஒற்றைக்குரலில் பாடும் பாடல்தான் இன்றைய முதல் வாசகம் (காண். 20:7-9). 'ஆண்டவரே, நீர் என்னை ஏமாற்றிவிட்டீர். நானும் ஏமாந்து போனேன்' எனத் தொடங்குகிறார் எரேமியா. எப்போ ஏமாற்றம் வரும்? எதிர்பார்ப்பு இருக்கும் போது ஏமாற்றம் வரும். எரேமியா என்ன எதிர்பார்க்கிறார்? இறைவாக்குப் பணி ஒரு மலர்ப்படுக்கையாக இருக்கும் என நினைக்கிறார். தான் அறிவிப்பது அனைத்தும் நற்செய்தியாக, மகிழ்ச்சியின் செய்தியாக இருக்கும் என நினைக்கிறார். அந்த எதிர்பார்ப்பு பொய்யாகிறது. எரேமியா ஏமாற்றம் அடைகின்றார். தொடர்ந்து, 'நீர் என்னைவிட வல்லமையுடையவர். என்மேல் வெற்றி கொன்றுவிட்டீர்.' தன்னைக் காதலியாகவும், கடவுளைக் காதலனாகவும் உருவகம் செய்கிறார் எரேமியா. எபிரேயத்தில் இந்த ஆள்கொள்ளுதலின் அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கிறது. 
இப்படி முறையிட்டுகொண்டே போனாலும், 'என்னால அமைதியா இருக்க முடியலியே ஆண்டவரே! உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அதை என்னால் அடக்க முடியவில்லை' என்கிறார். அதாவது, ஒருபக்கம் கடவுள் ஏமாற்றிவிட்டார். அதனால, நாமும் அவரைக் கழற்றி விடுவோம் என்ற நினைப்பும், மறுபக்கம், 'அவர் சொன்ன சொல்லை இறைவாக்குரைக்காமல் எப்படி இருக்கிறது' என்ற நினைப்பும் அவரை இருதலைக்கொல்லி எறும்பாக்குகின்றன. 
இறுதியில் முறைப்பாடு எப்படி முடிகிறது? எரே 20:11ல் வாசிக்கின்றோம்: 'ஆண்டவர், வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்.' அதாவது, ஆண்டவர் தன்னைவிட்டுத் தூரமாகப் போய்விட்டார் என்ற எண்ணம், 'கடவுள் என்னோடு இருக்கிறார்' என்ற நம்பிக்கையாக மாறுகிறது.
இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன? 'உம்மீது கொள்ளும் அன்பால்'. எப்படி?
தொடக்கத்தில் எரேமியாவின் புலம்பல் எல்லாம் தன்மீது கொண்ட அன்பாகவே இருக்கிறது. 'நான் ஏமாந்து போனேன். நான் நகைப்புக்கு ஆளானேன். என்னை ஏளனம் செய்கிறார்கள். நான் கத்த வேண்டியுள்ளது.' என, 'நான், நான்' என அடுக்கிக்கொண்டே வந்த எரேமியா, 'உம் வார்த்தை' என்று ஆண்டவரின் வார்த்தையை நினைவுகூர்ந்தவுடன் நம்பிக்கை பெறுகின்றார். ஆக, 'என்மேல் கொள்ளும் அன்பால்' என்ற நிலை மாறி, 'உம்மீது கொள்ளும் அன்பால்' என்று நிலைகொள்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்திற்கு (மத் 16:21-27)க்கு வருவோம்.
வாக்கியத்தின் பொருளின் அடிப்படையில் இந்த நற்செய்திப் பகுதியை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
அ. இயேசு தன் இறப்பையும், உயிர்ப்பையும் முதன்முறை முன்னறிவித்தல் (16:21)
ஆ. இயேசு பேதுருவைக் கடிந்து கொள்ளுதல் (16:22-23)
இ. இயேசு சீடத்துவம் பற்றி கற்பித்தல் (16:24-27)
இயேசு தன் இறப்பையும், உயிர்ப்பையும் பற்றி ஏற்கனவே அறிந்திவராயிருக்கிறார். அவரின் இறப்பும், உயிர்ப்பும் கடவுளாகிய தந்தையை நோக்கி 'உம்மீது கொள்ளும் அன்பால்' என்பதுபோல இருக்கிறது. ஆனால், இதே மனநிலை பேதுருவிடம் வரவில்லை. இயேசுதான் 'மெசியா,' 'இறைமகன்' என அறிக்கையிட்டு நல்ல பெயர் வாங்கியவர், மெசியாவின் அரசவையில் நாமும் மந்திரிகளாக இருக்கலாம் என கனவு காண்கிறார். ஏனெனில் அன்று நிலவிய மெசியா நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அப்படித்தான் சொன்னது. ஆக, தான் கற்றதையும் கேட்டதையும் வைத்துக் கனவு காண்கிறார் பேதுரு. இந்தக் கனவின் தவறு என்னவென்றால், இது முழுக்க முழுக்க பேதுருவை - 'என்மீது கொள்ளும் அன்பால்' - மையமாக வைத்த நிலையில் இருக்கிறது. ஏன்? மெசியா கஷ்டப்பட்டா கூட இருக்கிறவர்களும்தான கஷ்டப்படனும். அதனாலதான், 'இது உமக்கு நடக்க கூடாது' என்ற வெளியிலும், 'இது எனக்கு நடக்கக் கூடாது' என்று தனக்குள்ளும் சொல்லிக்கொள்கின்றார் பேதுரு. அதைக் கண்டித்துத் திருத்துகின்ற இயேசு, தொடர்ந்து சீடத்துவத்தின் தன்மை பற்றிச் சொல்கின்றார். சீடத்துவத்தில் 'என்மீது கொண்ட அன்பால்' என்ற நிலைக்கு இடமே இல்லை. நாம் யாரைப் பின்பற்றுகிறோமோ அவர்மேல் கொண்ட அன்பால்தான் வாழ்க்கை இருக்க வேண்டும்.
இதை இன்றைய இரண்டாம் வாசகமும் (உரோ 12:1-2) சொல்கிறது. இயேசுவைப் பற்றிய நீண்ட இறையியல் கட்டுரையை எழுதவிட்டு அதை அறிவுரைப்பகுதியோடு நிறைவு செய்கிறார் பவுல். விவிலியத்தில் எனக்கு மிகவும் பிடித்த சில பகுதிகளில் இதுவும் ஒன்று. தனிமனித மற்றும் சமூக, திருச்சபை அறநெறி பற்றி மிக அழகாக, அழுத்தமாக பதிவு செய்கிறார் பவுல். வழிபாடு என்பது எப்படி இருக்க வேண்டும்? என்று சொல்கின்ற பவுல் 'கடவுளுக்கு உகந்த தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு.' இரண்டு மாதங்களுக்கு முன் உரோமிலிருந்து வந்த வழிபாட்டு விதிமுறைகளுக்கும், பவுலின் விதிமுறைக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. 'அப்பம்' எந்த வடிவத்தில், எவ்வளவு திக்னஸ் கொண்டு, எவ்வளவு மொறுமொறு தன்மை கொண்டு, எவ்வளவு புளிப்பு சேர்க்கப்பட்டு என்ன பத்தி பத்தியாக இருந்தது அந்த வழிபாட்டு விதிமுறை. ஆனால், பவுலின் வழிபாட்டு முறை ரொம்ப சிம்பிள். ஒயின், ஓஸ்தி எதுவும் இல்லாமல், உங்களையே கடவுளுக்குப் படையுங்கள் என்கிறார். ஒயின், ஓஸ்தியைப் படைப்பதை விட நம்மையே படைப்பதுதான் மிகவும் கஷ்டம். 'படையுங்கள்' என்பது தமிழில் உள்ள அழகான வார்த்தை. இந்து ஆலயங்களில் எப்போதெல்லாம் ஒன்றைக் கடவுளுக்குக் காணிக்கையாக்குகிறார்களோ அப்போதெல்லாம் அதைப் 'படைத்தல்' என்பார்கள். காணிக்கைப் பொருள் 'படையல்' எனப்படும். விருந்துக்குச் செல்லும்போது முதலில் செல்லும் ஒருவர் தன் தட்டை முழுவதும் நிரப்பிக்கொண்டு, அடுத்தவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றால், ஒன்றும் கிடைக்காதவர், 'என்ன பெரிய படையலா' இருக்கு என்பார். அதாவது, 'படைத்தல்' என்றால் முழுவதுமாகக் கொடுப்பது. ஆக, 'உங்களுக்கு என்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் உங்களையே முழுமையான பலியாகக் கடவுளுக்குப் படையுங்கள்' என அறிவுறுத்துகிறார் பவுல். ஆக, 'உங்கள் மீது கொள்ளும் அன்பால் அல்ல,' மாறாக, 'கடவுள்மீது கொள்ளும் அன்பால்' என அவர்களின் டிராக்கை மாற்றுகின்றார்.
'என்மேல் கொள்ளும் அன்பு,' 'உம்மேல் கொள்ளும் அன்பாக' மாறுவது எப்படி?
அ. 'எனக்கு சௌகர்யமா' என்ற நிலையிலிருந்து 'எனக்கு சொளந்தர்யமா' என்ற நிலைக்கு மாறுவது
நிறைய விசயங்கள் அல்லது நிறைய மனுசங்க நமக்கு 'கன்வீனியன்ட்டா' (எனக்கு சௌகரியமா) இருக்கணும்னு நினைக்கிறோம். ஆனா, சௌகர்யமா இருக்கிற எல்லாம் சொளந்தர்யமா இருக்கிறது இல்ல. எரேமியாவுக்கு கடவுளிடம் முறையிடுவது சௌகர்யமா இருந்துச்சு. ஆனா சௌந்தர்யம்தான் இறுதியில் வென்றது. கடவுளின் வார்த்தையை அவரால் கட்டுக்குள் வைக்க முடியவில்லை. பேதுருவைப் பொறுத்தவரை இயேசுவுக்கு துன்பம் வேண்டாம் என்பது ரொம்ப சௌகர்யம். ஆனால் சௌந்தர்யம் என்னவென்றால் கடவுளின் திருவுளம். உரோமைத் திருச்சபைக்கு வெளிப்புற வழிபாடு ரொம்ப சௌகர்யமாக இருந்துச்சு. ஆனா, உண்மையான சொளந்தர்யம் உள்ளார்ந்த வழிபாட்டில்தான் இருக்கு என உணர்த்துகிறார் பவுல்.
ஆ. 'தேவைகள்' என்ற நிலையிலிருந்து 'அவசியம்' என்ற நிலைக்கு மாறுவது
'மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?' என இயேசு கேட்பது எனக்கு மதுரை உயர்மறைமாவட்ட அருள்பணியாளர் டைமன்ட் ராஜ் அவர்களை நினைவுபடுத்துகிறது. 1980களின் இறுதி. நம் நாட்டை விசிடி பிளேயர்கள் எட்டிப்பார்க்காத நேரம். அமெரிக்கா சென்றிருந்த அவர் விசிடி பிளேயர் ஒன்றை வாங்கி வந்திருந்தார். 'இரவு சாப்பிட்டுவிட்டு படம் பார்ப்போம்' எனச் சொல்லிவிட்டார். இரவு உணவு முடிந்து எல்லாரும் ஹாலில் கூடிவிட்டனர். 'இந்தா, போய் என் ரூமில் இருக்கும் விசிடி பிளேயரை எடுத்து வா' என அருள்சகோதரர் ஒருவரிடம் சாவியைக் கொடுத்து அனுப்புகிறார். அதைத் தூக்கிக் கொண்டு மாடியிலிருந்து இறங்கிய அருள்சகோதரர் கால் ஸ்லிப்பாகி கீழே விழ, தன் கையில் வைத்திருந்த பிளேயரை கீழே போட்டுவிடுகின்றார். சுக்குநூறாகின்றது பிளேயர். சத்தம் கேட்டு அருள்தந்தையும், மற்றவர்களும் ஓடிவருகிறார்கள். 'அச்சச்சோ!' என்று எல்லாரும் உச் கொட்ட, அருள்தந்தை டைமன்ட் மட்டும், 'தம்பி, உங்களுக்கு ஒன்னும் ஆகலையே!' எனக் கேட்டாராம்.

அதவாது, பார்க்காத ஒன்றைப் பார்க்க வேண்டும், விசிடி பிளேயர் தொழில்நுட்பத்தைப் பார்க்க வேண்டும் என்பது தேவைதான். ஆனால் அவசியமானது எது? ஒரு மனித உயிர். இயேசு சொல்வதும் இதுதான். 'இது தேவை. அது தேவை.' என நீங்கள் அடுக்கிக்கொண்டே போகிறீர்கள். ஆனால் அவசியமானது ஆன்மா தானே. நிறைய பொருள்கள் வைத்திருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது என்கிறார் இயேசு. ஆக, தேவையானதை விட்டுவிட்டு அவசியத்தை மட்டும் பற்றிக்கொள்வது இரண்டாம் படி.
இ. 'பழையவை' என்ற நிலையிலிருந்து 'புதியவை' என்ற நிலைக்கு
இன்றைய இரண்டாம் வாசகத்தில் உலகத்தின்படி ஒழுகுதலை பழைய நிலை என்று அழைக்கும் பவுல், 'உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக' என்கிறார். இந்த புதிய நிலைதான் 'கடவுளின் திருவுளம் என்ன என்பதைக் காட்டுகிறது.' அத்தோடு, 'எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதையும் தெளிவாகக்' காட்டுகிறது. நாம் பழையவற்றைப் பற்றிக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில் பழையவை நமக்குப் பழக்கப்பட்டவை. பழையவை தன் மையம் கொண்டிருக்கிறது. புதியவை பிறர்மையம் கொண்டிருக்கிறது. இந்த மாற்றமே மூன்றாவது படி.
இறுதியாக, 'என்மீது கொள்ளும் அன்பால்' என்ற நிலை 'உம்மீது கொள்ளும் அன்பால்' என மலர்ந்தால், இன்றைய சபை மன்றாட்டு சொல்வது போல, 'நாங்கள் மேன்மேலும் உம்மில் வளர்வோம். நன்மையானதெல்லாம் எங்களில் மலரும். உமது செயல் எங்கள் வாழ்வில் வெளிப்படும்.'


கிறிஸ்துவுக்காக தன்னை இழப்போர் வாழ்வு பெறுவர்
அருள்பணி மரிய அந்தோணிராஜ் - பாளையங்கோட்டை

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆப்ரிக்கக் கண்டங்களில் ஒன்றான சோமாலியாவில் உள்ள மோகடிசு (Mogadishu) என்ற கிராமத்தில் ஆன்மீகப் பணியும் மருத்துவப் பணியும் செய்தவர் வலேரி பிரைஸ் (Valerie Price) என்பவர். இவர் ஐரோப்பாலிருந்து வந்தவர். வலேரி பிரைஸ் ஏழை எளியவரின் வாழ்வு சிறக்க தன்னுடைய வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தார். குறிப்பாக அங்கே இருந்த மக்களுக்கு போதிய உணவு கிடைக்கவும், மருத்துவ வசதிகள் கிடைக்கவும் வழிவகை செய்தார்.
ஒருநாள் அவர் தற்செயலாக மக்கள் அதிகமாக வாழும் தெருக்களில் நடந்துசென்று கொண்டிருந்தபோது ஏதோ ஒரு சிந்தனை வயப்பட்டவராய் இம்மக்களுக்கு மருத்துவப் பணியோடு ஏன் கல்விப்பணியையும் செய்யக்கூடாது என்று சிந்தித்துப் பார்த்தார். அந்த யோசனை அவருக்கு சரியெனப் பட்டது. எனவே அவர் ஊரின் மையப்பகுதியில் ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கினார். அதில் ஏராளமான குழந்தைகள், மாணவ மாணவிகள் சேர்ந்து கல்வி கற்கத் தொடங்கினார். வருடங்கள் செல்லச் செல்ல அவர் கொடுத்த கல்வியின் பயனாக அம்மக்களுடைய வாழ்வில் ஒரு மாற்றத்தை உணர்ந்தார். அவர்கள் சுயமாக சிந்திக்கத் தொடங்கினார்கள். குறிப்பாக எதற்காக இன்னும் தாங்கள் அடிமைகளாகவும் ஏழைகளாகவும் இருக்கிறோம் என்று சிந்திக்கத் தொடங்கினார்கள். இதனால் அதிகார வர்க்கத்தைக் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள்.
மோகடிசு மக்களின் திடீர் வளர்ச்சியைக் கூர்ந்து கவனித்த அதிகார வர்க்கம், இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் என்று சிந்தித்துப் பார்த்தது. இறுதியாக வலேரி பிரைஸ் என்ற வெளிநாட்டுப் பெண்மணிதான் இவற்றிற்கெல்லாம் காரணம் என உறுதிசெய்து கொண்டது. ஒருநாள் இரவு மர்மக் கும்பல் ஒன்று வலேரி பிரைசை அவர் இருந்த பள்ளிக்கூடத்திற்கு முன்பாக இழுத்துப் போட்டு படுகொலை செய்தது. இச்செய்தியைக் கேட்டு அவ்வூர் மக்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.

வலேரி பிரைஸ் என்ற பெண்மணி தற்போது உயிரோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் மோகடிசு என்ற ஊரில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். அம்மக்கள் தாங்கள் பெற்ற கல்வியின் பயனாக இன்றைக்கு பல்வேறு தளங்களில் உயர்ந்திருக்கிறார்கள், தன்னிறைவு பெற்றிருக்கிறார்கள். இது எல்லாவற்றிற்கும் காராணம் வலேரி பிரைசியே ஆகும். உண்மையான கிறிஸ்தவ வாழ்வு சாதாரண வாழ்வு கிடையாது, அது துன்பங்களும் சவால்களும் நிறைந்தது. அப்படிப்பட்ட வாழ்க்கை வாழும்போது நாம் நமது உயிரையும்கூட இழக்கலாம். ஆனாலும் நிலையான வாழ்வினைப் பெற்றிடுவோம் என்பதைத்தான் வலேரி பிரைசின் வாழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

பொதுக்காலத்தின் இருப்பத்தி இரண்டாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசங்கள் தரும் சிந்தனை கிறிஸ்துவுக்காக தன்னை இழப்போர் வாழ்வு பெறுவர்என்பதாகும். இன்றைக்கு மக்கள் துன்பமில்லா, கஷ்டமில்லா வாழ்க்கை வாழ நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கிறிஸ்துவின் கொள்கைகள் முழுமையாக அறிந்துகொள்ளவில்லை என்பதுதான் இன்றைய இறைவார்த்தை எடுத்துரைக்கும் உண்மையாகும். உண்மையான கிறிஸ்தவ வாழ்வு எது?, அதற்காக நாம் என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்து சற்று விரிவாக சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்கிறார். இதைக் கேட்ட பேதுரு, “இது வேண்டாம், இப்படி உமக்கு நடக்கவே கூடாதுஎன்கிறார். அதற்கு இயேசு, “என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய். ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்என்கிறார். இங்கே பேதுருவின் வார்த்தைகளையும் இயேசுவின் வார்த்தைகளையும் கவனமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். 

பேதுருவோ துன்பமில்லா, கஷ்டங்கள் இல்லா வாழ்க்கை வாழ நினைக்கிறார். ஆனால் ஆண்டவர் இயேசுவோ துன்பத்தின் வழியாகத்தான் தூயகத்தை விண்ணகத்தை அடைய முடியும் என்கிறார்.
மனிதர்களாக நாம் நிறைய நேரங்களில் பேதுருவைப் போன்று துன்பமில்லா வாழ்க்கை வாழ நினைக்கிறோம். ஆனால் துன்பமில்லாமல் இன்பமில்லை என்பதுதான் இயேசுவின் படிப்பினையாக இருக்கின்றது. இயேசு கூறுவார், “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்என்று (யோவான் 12: 24). ஆகவே கிறிஸ்தவர்களாகிய நாம் துன்பங்களைத் துணிவோடு தாங்கிக்கொண்டு இயேசுவின் பின்னால் செல்லவேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில்கூட இயேசு பேதுருவைக் கடிந்துகொண்ட பின்பு சொல்வார், “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்என்று. எனவே நாம் மனித விருப்பமான இன்பமயமான வாழ்க்கை வாழ நினைக்காமல், இறை விருப்பமான சவால்கள் நிறைந்த வாழ்க்கை வாழ முற்படுவோம்.

நிறைய மனிதர்கள் கஷ்டமே இல்லாத வாழ்க்கை வாழ நினைக்கிறார்கள். இவர்களைப் பார்த்து மால்ஹான்காக் என்ற எழுத்தாளர் குறிப்பிடுவார், “புதிதாக எதையும் முயற்சித்துப் பார்க்கும் தைரியமில்லை என்றால் நமது வாழக்கைக்கு அர்த்தம் என்ன? எந்த ஆபத்தும் இல்லாத பத்திரமான இடம் வேண்டுமென்றால் பேசாமல் கல்லறையில் போய் படுத்துக்கொள்ளலாம்என்று. எனவே சிலுவைகள்தான் சிம்மாசனத்திற்கான வழி என உணர்ந்து வாழ்வோம்.

அடுத்ததாக சிலுவையே சிம்மாசனத்திற்கான வழி எனப் புரிந்துகொண்ட நாம் அதன்படி வாழமுயலவேண்டும், மீண்டும் பழைய வாழ்விற்கு அதாவது மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கு திரும்பிப் போகக்கூடாது. தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுவார், “இந்த உலகப் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்என்று.

இந்த உலகம் இன்பமாக, மகிழ்ச்சிகரமாக வாழ நினைப்பவர்களைத் தான் உயர்வாகத் தூக்கிப்பிடிக்கின்றது. நற்செய்தியின் பொருட்டும், உண்மையின் பொருட்டும் துன்பங்களை ஏற்றுக்கொள்பவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள், லாயகற்றவர்கள் என வசைபாடுகின்றது. இந்தப் பின்னணியில்தான் நாம் பவுலடியாரின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளவேண்டும். அவர் கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளியுங்கள் என்கிறார். ஆகவே கடவுளின் திருவுளமான பாடுகளையும் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை வாழும்போது கடவுளால் ஆசிர்வதிக்கப்படுவோம் என்பது உறுதி.

இப்படி கடவுளின் திருவுளம் எது என அறிந்து, அதற்கேற்ப வாழ்க்கை வாழ்ந்தவர்தான் இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற இறைவாக்கினர் எரேமியா. எரேமியா இறைவாக்கினர் சிறுவயதினனாக இருந்தாலும் இறைவார்த்தையை எல்லா மக்களுக்கும் அறிவித்தார். அதனால் ஆட்சியாளர்கள், அதிகாரம் படைத்தோர் ஆகியோரால் துன்புறுத்தப்பட்டார்; கிணற்றில் தூக்கிவீசப்பட்டார்; சாவின் விளிம்புவரை சென்று வந்தார். அப்போதுதான் அவர் கடவுளைப் பார்த்து, “ஆண்டவரே நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்; நானும் ஏமாந்து போனேன். ... ஆதலால் இனிமேல் உம் பெயரைச் சொல்லமாட்டேன்; உம் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்என்கிறார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் மீண்டும் சொல்கிறார், “உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது.. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாதுஎன்று. அதன்பின்னர் தொடர்ந்து அவர் இறைவாக்குப் பணியைச் செய்கின்றார்.
இறைவாக்குப் பணியில் கிறிஸ்தவ வாழ்வில் நமக்கு இழப்புகள், துன்பங்கள் வரலாம். ஆனாலும் ஒருநாள் நாம் இறைவன் தரும் விண்ணக மகிமையை பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.

பிரான்சு நாட்டில் வாழ்ந்த ஒரு மிகச் சிறந்த ஓவியக் கலைஞன் ரெனோயிர் (Renoir) என்பவர். அவருடைய ஓவியங்கள் இன்றைக்கும் காலம் கடந்து பேசப் படுகின்றன. ஆனால் அவர் தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியை பக்கவாதம் என்ற துன்பத்திலே செலவழித்தார். அவருடைய உடலின் வலப்பகுதி செயலிழந்து போனது. அதனால் அவர் எங்கு செல்ல விரும்பினாலும் அவருடைய உதவியாளர் ஒருவர்தான் வீல்சேரில் வைத்து அவரைக் கூட்டிக்கொண்டு போவார்..
ஒருநாள் அவருடைய நண்பர் மாடிஸ் (Matisse) ரெனோயிரின் நிலையை கேள்விப்பட்டு அவரைப் பார்ப்பதற்காகச் சென்றார். அப்போது ரெனோயிர் தன்னுடைய அறையில் வேதனைகள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு தனது இடது கையில் தூரிகையைப் பிடித்துக்கொண்டு ஓவியம் வரைந்துகொண்டிருந்தார். இதைப் பார்த்த அவருடைய நண்பர் ரெனோயியிடம், “எதற்காக இத்தனை வலிகளைகளையும் வேதனைகளையும் பொறுத்துக்கொண்டு ஓவியம் வரைகிறார்கள். நீங்கள்தான் நிறைய பேரையும் புகழையும் சம்பாதித்துவிட்டீர்களே, பிறகு எதற்கு இப்படி உங்களையே வருத்திக்கொண்டு ஓவியம் வரைகிறீர்கள்என்று கேட்டார்.

அதற்கு ரெனோயிர் நண்பரைப் பார்த்துச் சொன்னார், “நண்பா! நீ என்னைப் பார்ப்பதற்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறாயே, அதை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கின்றது. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள் இப்போது நான் படும் துன்பங்கள், வேதனைகள் அனைத்தும் தற்காலிகமானவை. ஆனால் நான் வரையும் ஓவியங்களோ என்றென்றைக்கும் நிரந்தரமானவைஎன்று. இப்பதிலைக் கேட்டு ரெனோயிரின் நண்பர் அவரை வாழ்த்திவிட்டுக் சென்றார்.

உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும், வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்என்பான் பா.விஜய் என்ற கவிஞன். இயேசுவும் என் பொருட்டு தம்மையே அழித்துகொள்கிற எவரும் வாழ்வடைவர்என்பார்.

ஆகவே நாம் இயேசுவின் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் பாடுகளையும் துன்பங்களையும் தாங்கிகொள்வோம். அதன்வழியாக இறைவன் தரும் அருளை நிறைவாய் பெறுவோம்.



சீடத்துவத்தின் விலை
மறையுரை வழங்குபவர் Fr. Freddy is a Redemptorist priest belonging to the Province of Bangalore. Currently he is attached to the Archdiocese of St. Louis, Missouri state, U.S.A.
முன்னுரை:
    போஸ்னியா ஹெர்ஸகோவினா நாட்டில் "மெட்ஜுகோரியே' (Međugorje) ஊரிலிருந்து ஒருமணி நேர பயண தூரத்திலிருக்கின்ற " ஸிரோகி பிரிஜேக்" (Široki Brijeg) நகரத்திலுள்ள பிரான்சிஸ்கன் மடாலயத்திற்கு ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் வருகிறார்கள். 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் நாளன்று இந்த மடாலயத்திற்கு வந்த கம்யூனிச இராணுவ வீரர்கள், "கடவுள் இறந்துவிட்டார்; கடவுள் என்று யாரும் இல்லை; பாப்பரசர் என்று யாரும் இல்லை; திருச்சபையும் இல்லை; எனவே, உங்களை போன்ற மதகுருக்களுக்கு எந்த அவசியமும் இல்லை. நீங்களும் ஊருக்குள்ளே சென்று வேலை செய்யுங்கள்" என்று கூறினார்கள். ஆனால், அந்த மடாலயத்திலிருந்த பிரான்சிஸ்கன் சபை குருக்கள் ஒவ்வொருவரும் தத்தம் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அந்த இராணுவ வீரர்கள் மறந்துவிட்டார்கள். அந்த குருக்களில் அநேகர் அருகிலிருந்த பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்தார்கள். அந்த பிரான்சிஸ்கன் சபை குருக்களில் சிலர் புகழ்வாய்ந்த பேராசிரியர்களாகவும், சிறந்த நூலாசிரியர்களாகவும் இருந்தார்கள்.
  தங்களுடைய மேலுடையான அங்கியை அந்த குருக்கள் அணியக்கூடாதென கம்யூனிஸ வீரர்கள் நிர்பந்தித்தபோது, அந்த குருக்கள் மறுத்துவிட்டார்கள். கோபங்கொண்ட ஒரு படைவீரன், அங்கிருந்த திருச்சிலுவையை தரையிலே வீசி எறிந்தான். "வாழ்வு அல்லது சாவு, இந்த இரண்டில் ஒன்றை நீங்கள் இப்போது தெரிந்து கொள்ளவேண்டும்" என்று அந்த வீரன் கூறினான். அந்த குருக்கள் ஒவ்வொருவரும் முழந்தாளிட்டு, திருச்சிலுவையை தழுவிக்கொண்டு, "என் இறைவன் நீரே; எல்லாமும் எனக்கு நீரே" என்று உரைத்தார்கள். பிரான்சிஸ்கன் சபையைச் சார்த்த அந்த முப்பது குருக்களும் வெளியே இழுத்துச் செல்லப்பட்டு, கொலைசெய்யப்பட்டார்கள். அருகிலிருந்த குகையில் அவர்களுடைய சடலங்கள் எரிக்கப்பட்டன. தீக்கிரையான பின்னர் பல ஆண்டுகளாக அந்த குகையில் கிடந்த எஞ்சியிருந்த உடலுறுப்புகள், இன்று பிரான்சிஸ்கன் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இயேசு தம் சீடரைப் பார்த்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" என்று கூறினார். ஆம், படைவீரர்கள் வீசியெறிந்த சிலுவையை உண்மையாகவே தூக்கிக் கொண்ட அந்த குருக்கள், சீடர்களாக இருப்பதற்கான விலையைக் கொடுத்தார்கள்.
இறைவார்த்தை:
சீடத்துவத்தின் விலையைக் குறித்து இன்றைய மறைநூல் வாசகங்கள் பேசுகின்றன.
1. இயேசுவை முன்னிறுத்தி, அவரைப் பின்பற்றிச் செல்வதே சீடத்துவம்: தனது பாடுகளைக் குறித்து இயேசு மூன்று முறை முன்னறிவித்தார். அந்த மூன்றில், முதலாவது முன்னறிவிப்பையே இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கிறது. இயேசுவின் வார்த்தைகளுக்காக பேதுரு அவரை கடிந்துகொள்கிறார். நல்ல நோக்கத்தோடும், தான் என்ன சொல்லுகிறோம் என்பதை அறியாதவராகவும், அலகையின் பணியை பேதுரு இங்கே செய்கிறார் - அதாவது, இறைத்தந்தையால் இயேசுவுக்கென்று விதிக்கப்பட்டிருந்த பாடுகளின் பாதையிலிருந்து அவரை திருப்பிவிட முனைகிறார் பேதுரு. கோபத்துடன் கூடிய இயேசுவின் மறுமொழி எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது. இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, "என் கண்முன் நில்லாதே, சாத்தானே!" என்று கூறுகிறார். "தான் விட்டுச் செல்லவிருக்கின்ற திருச்சபைக்கு தலைமை ஏற்கவேண்டும்" என பேதுருவை பார்த்து சற்று முன்னர் தான் இயேசு கூறியிருந்தார். அத்தகைய பேதுருவை நோக்கி இப்போது இயேசு சொன்ன வார்த்தைகள் கடினமானவைதான். 
       ஒரு தடங்கலாக, இடையூறாக, பாதையில் தடுமாறி விழவைக்கின்ற தடைக்கல்லாக பேதுரு பார்க்கப்படுகின்றார். "தனது திருச்சபையின் அடித்தளம்' என்று சற்று முன்னர் இயேசு கூறிய "பாறை"தான், அவருடைய பணிக்கும், குறிக்கோளுக்கும் "தடை"யாக பார்க்கப்படுகின்றது. பாலைநிலத்தில் தான் சோதிக்கப்பட்டபோது, அலகையைப் பார்த்துக் கூறிய "அகன்று போ, சாத்தானே" என்னும் வார்த்தைகளை இயேசு இப்போது சொல்லவில்லை. "என் பின்னே வா" என்று உணர்த்தும் வகையில், "என் கண்முன் நில்லாதே" என்றுதான் சொல்லுகிறார். ஒரு சீடனோ, சீடத்தியோ தன் தலைவனுக்கு முன்பாக தான் செல்வதில்லை. எந்த சீடனும் இறைவனின் விருப்பத்தை கேள்வி கேட்பதில்லை. இயேசுவை முன்னிறுத்தி அவரை பின்பற்றிச் செல்வதால்தான் ஒருவர் சீடராகிறார். பேதுருவும் இயேசுவை முன்னிறுத்தி, அவரை பின்பற்றிச் செல்வார். 
2. தன்னலம் துறந்து சிலுவையைத் தூக்கிக் கொள்வதே, சீடத்துவம்: இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினராக இருப்பதற்கு கடவுளால் தான் அழைக்கப்பட்டதற்காக, எரேமியா வருத்தப்படுகிறார். "ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்; நானும் ஏமாந்து போனேன்" என்று சொல்லுகிறார். அவர் வாய் திறக்கின்ற ஒவ்வொரு முறையும், கடவுளின் மக்களுக்கு நேரிடவிருக்கின்ற "வன்முறை", "அழிவு" இவற்றைப் பற்றியே எச்சரிக்க  வேண்டியிருந்தது. எரேமியாவின் இந்த போக்கு, அன்றைய அரசியல் தலைவர்களையும், மதத்தலைவர்களையும் எரிச்சல் மூட்டியதால், இறைவாக்கினர் எரேமியா துன்புறுத்தப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார். தன்னுடைய அழைப்புக்கு உண்மையாக நடந்துகொண்டதால், அவர் துன்பப்பட்டார். அழிவைப் பற்றி தன் மக்களிடம் எடுத்துரைப்பது, சிலுவையை தூக்கிக் கொள்வதற்கு ஒப்பாகும். அரசியல் மற்றும் மதத் தலைவர்களின் கோபத்திற்கு ஆளாவதால், தனக்குத் தேவையான "மனித பாதுகாப்பு" என்னும் அடிப்படையை எரேமியா இழந்து நிற்கிறார். 
     இதைத் தான் இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகிறார்: "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்".
3. வாழ்வை இழத்தல்: "தன்னைப் போலவே பேதுருவும் கொலை செய்யப்படுவார்" என்று யோவான் நற்செய்தியின் இறுதியில் பேதுருவிடம் இயேசு கூறுகிறார் (யோவான் 21:18, 19). உரோமை நகரத்தில் தூய பேதுரு பேராலயம் அமைந்துள்ள இடத்திற்கு இடதுபுறத்தில் சிலுவையில் அறையப்பட்ட பேதுரு, அருகிலிருந்த ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். பேதுருவின் இந்தக் கல்லறை இப்போது தூய பேதுரு பேராலயத்தின் மையப்பகுதியிலுள்ள உயர்பீடத்தின் கீழே உள்ளது. "தன் தலைவரும் ஆண்டவருமான இயேசுவைப் போல சிலுவையில் அறையைப்பட தான் தகுதியற்றவன்" என்று பேதுரு கருதியதால், தன்னை தலைகீழாக சிலுவையில் அறையவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாக பாரம்பரியம் கூறுகிறது. 
     கசையால் அடிக்கப்பட்ட அந்திரேயா, இறப்பதற்கு முன் நெடுநேரம் துன்பப்படவேண்டும் என்பதற்காக, சிலுவையில் ஆணிகளால் அறையப்படாமல், கயிறுகளால் சிலுவையோடு கட்டிப் பிணைக்கப்பட்டார். யாக்கோபு வாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். கசையால் அடிக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்ட பிலிப்பு, கி.பி.54 ஆம் ஆண்டு எகிப்து நாட்டில் சிலுவையில் அறையப்பட்டார். எத்தியோப்பியா தேசத்தில் மத்தேயு மறைசாட்சியாக மரித்தார். 
   இயேசுவின் வார்த்தைகளை ஆன்மீகம் சார்ந்த ஒன்றாக இவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. திருத்தூதர்களின் வாழ்வில் இயேசுவின் வார்த்தைகள் உண்மையாகிப் போயின. அவர்கள் தங்கள் உயிரை இழந்தார்கள். "ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்".
இயேசுவை முன்னிறுத்தி, அவரைப் பின்பற்றிச் செல்வதே சீடத்துவம். தன்னலம் துறந்து, சிலுவையைத் தூக்கிக் கொள்வதே சீடத்துவம். இயேசுவுக்காக, இயேசுவில் தன் வாழ்வை இழப்பதே சீடத்துவம்.
பயன்பாடு:
            ஜெர்மனி நாட்டில் நாஸி கட்சியின் கொள்கைகளுக்கும், இராணுவ இயக்கத்திற்கும் எதிர்ப்பாளராக இருந்த மறைப்பணியாளரும், இறையியலாளருமான  டீட்ரிச் போன்ஹோஃபர் (Dietrich Bonhoeffer) 1945 ஆண்டு நாஸி கட்சியினரால் கொல்லப்பட்டார்.  "சீடத்துவத்தின் விலை" என்னும் நூலை அவர் எழுதினார். இந்த நூலில் இவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்: "பாவியை அல்லாமல், பாவத்தை மட்டுமே நியாயப்படுத்துவது, 'மலிவான அருள்' ஆகும். மனத்துயர் தேவைப்படாத மன்னிப்பு, திருச்சபை ஒழுங்குமுறை இல்லாத திருமுழுக்கு, ஒப்புரவு இல்லாத நற்கருணை, தனிப்பட்ட ஒப்புரவு இன்றி அளிக்கப்படும் பாவமன்னிப்பு - இவற்றைப் பற்றியெல்லாம் உரையாற்றுவதும் "மலிவான அருள்" தான். சீடத்துவம் இல்லாத அருளும், சிலுவை இல்லாத அருளும், வாழும் இறைஅவதாரமாகிய இயேசு கிறிஸ்து இல்லாத அருளும் "மலிவான அருள்" என்ற வகையைச் சார்ந்தவையே".
    சிலுவை இல்லாத சீடத்துவம், இயேசு இல்லாத அருள் - இதுபோன்ற மலிவான அருள்களினால் முழுமையாக திருப்தி அடைகின்ற கிறிஸ்தவர்களாக நாம் இருக்கிறோமோ என்று நான் அஞ்சுகிறேன். சீடர்களாக இல்லாமல், நாம் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. சீடத்துவத்திற்கு கொடுக்கவேண்டிய விலையைத் தராமல், நாம் சீடர்களாக இருக்க முடியாது.
  • நாம் சீடர்களாக இருந்தால், நமது குடும்ப வாழ்வின் வெற்றிக்கான அடிப்படை தேர்வுகளிலும், விதிமுறைகளிலும் நாம் முரண்பட்டிருப்பதைக் காண்போம்.
  • நாம் சீடர்களாக இருந்தால், நமது வேலையை இழப்பதாக இருந்தாலும், அநீதியான வணிக நடத்தைகளை மேற்கொள்ள மறுத்துவிடுவோம்.
  • நாம் சீடர்களாக இருந்தால், "வெகுளியாக இல்லாமல், யதார்த்தமாக இரு" என்று நம்மை எச்சரிக்கும் குரல்களுக்கு எதிராக மன்னிப்பை தெரிவு செய்வோம்.
  • நாம் சீடர்களாக இருந்தால், நாம் கண்காணிக்கப்படாத நேரத்திலும், "மற்ற எல்லாரும் இப்படித்தான் செய்கிறார்கள்" என்று நமக்கு சிலர் சொல்லித்தருகின்ற வேளைகளிலும், ஒருநாளின் பணியை நேர்மையாக செய்து முடிப்போம்.
  • நாம் சீடர்களாக இருந்தால், நமது உடன் உழைப்போரின் பணித்திறன்கள், கல்வித் தகுதிகள், சமூக அந்தஸ்து - இவற்றை பொருட்படுத்தாமல், அவர்களை மரியாதையோடு நடத்துவோம்.
  • நாம் சீடர்களாக இருந்தால், நமது சமூக உறவுத்தளங்களில் புதிதாக வந்துசேருபவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்று, அவர்களை நம்மில் ஒருவராக நடத்திடுவோம்.                                   

முடிவுரை:

சிலுவையைத் தூக்கிக் கொண்டு, இயேசுவை பின்பற்றுதல், அவருக்காக வாழ்வையும் இழப்பதற்கு தயாராக இருத்தல் - இவற்றை விடவும், தன்னுடைய சீடத்துவத்தின் நம்பகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டே திருச்சபை தீர்ப்பிடப்படும். நமது சீடத்துவத்தின் அடிப்படையிலேயே நாமும் தீர்ப்பிடப்படுவோம். 



1 comment: