Friday 25 August 2017

பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு


பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு
எசாயா 22:19-25, உரோமர் 11:33-36, மத்தேயு 16:13-20
 

மறையுரை மொட்டுகள்

அருள்பணி Y இருதயராஜ் -

 
18-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசராக இருந்த ஒருவர் காலையில் வெளியே சென்றவர் நள்ளிரவு வீடு திரும்பினார். அரசி கதவைத் தாளிட்டுத் தூங்கிவிட்டார் அரசர் கதவைத் தட்ட அரசி, "யார் அது" என்று கேட்க, அரசர், "நான்தான் இங்கிலாந்து அரசர்" என்று கூற அரசி கதவைத் திறக்கவில்லை மறுபடியும் அரசர் கதவைத் தட்ட "யார் அது" என்று அரசி கேட்க, அரசர் "நான்தான் முப்படைகளின் தலைவர்" என்று கூற அரசி கதவைத் திறக்கவில்லை. ஆத்திரமடைந்த அரசர் மூன்றாம் முறைச் சற்றுக் கோபத்துடன் கதவைத் தட்ட அரசி, "யார் அது?" என்று கேட்க, அரசர், "நான் தான் உன் அன்புக் கணவர்" என்று சொன்னவுடன் அரசி கதவைத் திறந்து அரசரைக் கட்டி அனைத்து முத்தம் கொடுத்தார். ஒருவர் அரசராகவும் முப்படைத் தலைவராகவும் இருக்கலாம். ஆனால் அரசிக்கு அவர் முதலில் கனாவர். அதன் பிறகுதான் மற்றெல்லாம்.

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து, "நான் யார்?" என்று கேட்ட கேள்விக்கு அவருடைய சீடர்கள், மக்கள் நடுவில் அவரைப் பற்றி நிலவிய கருத்துக்களைப் பிரதிபலித்து கிறிஸ்துவைத் திருமுழுக்கு யோவான் என்றும், எரேமியா, எலியா, இறைவாக்கினருள் ஒருவர் என்றும் பதில் கூறினர். ஆனால் இதெல்லாம் உண்மையான பதில் இல்லை. அந்நிலையில் பேதுரு, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று சொன்னவுடன் கிறிஸ்து அவரிடம் விண்ணகத்தின் திறவுகோலை ஒப்படைக்கிறார் கட்டவும் கட்டவிழ்க்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கிறார்.

அரசியைப் பொறுத்தமட்டில் அரசர் முதலில் அவரது கணவர், அவ்வாறே கிறிஸ்துவைப் பொறுத்தமட்டில் அவர் முதல் முதல் கடவுளின் மகன். அதன் பின்தான் அவருடைய மற்றப் பணிகள், கிறிஸ்து "நான் யார்?" என்று கேட்கிறார், "எனது பணி என்ன?" என்று கேட்கவில்லை. ஒருவருடைய இயல்பிலிருந்து அவருடைய செயல்கள் பிறக்கின்றன. இந்த அடிப்படையான மெய்யியல் உண்மையை மறந்து ஒருசில இறையியலார்கள் கிறிஸ்துவின் இறைத்தன்மையை ஓரங்கட்டிவிட்டு அவருடைய பணிகளை மையப்படுத்தி அவரை ஒரு புரட்சியாளராக வெளிச்சம் போட்டுக் காட்டுவது முழுமையான இறையியலாக இருக்க முடியாது. அன்று மகதலா மரியா அழுதுகொண்டு, "என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர் அவரை எங்கு வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை" (யோவா 20:13) என்று கேட்டதைப் போல் கேட்கவேண்டியுள்ளது.

கிறிஸ்துவை கடவுளுடைய மகனாக ஏற்றுக்கொள்வதற்கு மனித அறிவு மட்டும் போதாது இறைவெளிப்பாடு தேவைப்படுகிறது எனவேதான் கிறிஸ்து பேதுருவிடம் கூறுகிறார். "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தினார்" (மத் 16:17). கிறிஸ்துவிடம் வருவதற்குக் கடவுளின் தனிப்பட்ட அருள் தேவைப்படுகிறது. "என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது" (யோவா 6:65) என்று கிறிஸ்து யூதர்களிடம் கூறியது இதை எண்பிக்கிறது.

பேதுருவின் நம்பிக்கை அறிக்கையின் மீது தமது திருச்சபையைக் கட்டி எழுப்புவதாகக் கிறிஸ்து கூறுகின்றார் கிறிஸ்து பேதுருவைப் பாறை என்று அழைக்கின்றார் விவிலியம் கடவுளைப் பாறை என்று அழைக்கிறது. "என் கற்பாறையும் கோட்டையும் நீரே! (திபா 31:3). பாறை உறுதியானது, அதைவிட உறுதியானது கடவுளின் அன்பு "மலைகள் நிலைசாயினும், குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலைசாயாது" (எசா 54:10) கடவுள் உண்மையுள்ளவர், கிறிஸ்துவும் உண்மையுள்ளவர் கிறிஸ்துவுக்கு ஆமென்" என்று பெயர் ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர் உண்மையான சாட்சி (திவெ 314). அவ்வாறே திருச்சபையும் உண்மையானது திருத்தூதர் பவுல் திருச்சபையைக் "கடவுளின் வீடு" என்றழைத்து, "திருச்சபை உண்மைக்குத் தூணும் அடித்தளமுமாய் இருக்கிறது" (1 திமொ 3:14-15) என்கிறார்.

இன்றைய முதல் வாசகம் பின்வருமாறு கூறுகிறது. தாவீது குடும்பத்தின் திறவுகோலைக் கடவுள் கிறிஸ்துவுக்குக் கொடுப்பார் அவருக்குத் திறக்கவும் பூட்டவும் அதிகாரம் இருக்கும் (எசா 22:19-23). கிறிஸ்து தமக்குள்ள அதிகாரத்தைப் பேதுருவுக்குக் கொடுக்கிறார் பேதுருவின் வழித்தோன்றல்கள் திருத்தந்தையர்கள். திருத்தந்தையர்களின் தலையான பணி விசுவாசிகளை உறுதிப்படுத்தும் பணி (லூக் 22:32) பேதுரு மட்டுமல்ல முழுத் திருச்சபையும் கிறிஸ்துவிடமிருந்து திறவுகோலைப் பெற்றது என்கிறார் புனித அகுஸ்தின் இரண்டாம் வத்திக்கான் சங்கமும் முழுத் திருச்சபையும் விசுவாச அறநெறி கோட்பாட்டில் வழுவா வரம் கொண்டுள்ளது என்று அறிக்கையிட்டுள்ளது "தூயவரான கடவுளால் அருள்பொழிவு பெற்று நம்பிக்கை கொண்டோர் அனைவரின் கூட்டம் நம்பிக்கையிலே தவற முடியாது" (திருச்சபை எண் 12)

மனைவி ஒருவர் தன் கணவரிடம், "என்னங்க என்னை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" என்று கேட்டதற்கு கணவர் அவரிடம், "நீ போட்டிருக்கிற நகையெல்லாம் எனக்குப் பிடிச்சிருக்கு" என்றார். அதற்கு மனைவி, "அத்தனையும் கல்யாணி கவரில் நகை" என்றார். இன்று "கவரிங் நகை" போன்ற போலியான சபைகள் மக்களைக் கவர்ந்து ஈர்க்கின்றன போலிப் போதகர்களின் கவர்ச்சியான போதகத்தில் மயங்கிக் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து விலகாதிருக்க விழிப்புடன் இருக்க வேண்டும். கிறிஸ்தவர்களுடைய முக்கியமான கடமைகளில் ஒன்று திருச்சபையின் ஒன்றிப்பில் நிலைத்திருப்பது என்று திருச்சபைச் சட்டம் கூறுகிறது. "கிறிஸ்தவ விசுவாசிகள், தங்கள் செயல்பாட்டு முறையிலும் கூடத் திருச்சபையோடு உள்ள உறவு ஒன்றிப்பை எப்பொழுதும் பேணிக் காக்கக் கடமைப்பட்டுள்ளனர் " (தி. ச. 209, ப. 1). திருச்சபையில், திரு மேய்ப்பர்களிடம் பல குறைகள் இருக்கலாம். ஆனால், திருத்தந்தை ஆறாம் பவுல் கூறியதுபோல, "திருச்சபை நோயுற்றிருப்பதற்காகவே அதை நாம் அதிகம் அன்பு செய்ய வேண்டும்." "தமது சிறு மந்தையாகிய" (மத் 12:32) திருச்சபையைக் கிறிஸ்து கைவிட மாட்டார். "பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா" (மத் 16-18).


இருவகை அனுபவம்: இரத்தமும்-சதையும், வெளிப்பாடும்..

அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ஆனந்தவிகடனில் 'வலைபாயுதே' என்ற பக்கத்தில் இரசம் பற்றிய ஒரு துணுக்கு இருந்தது: 'நம் தட்டுக்களை எளிதாக கழுவுவதற்கு உதவியாக ஏதோ ஒரு தமிழ்ப்பெண் கண்டுபிடித்த கண்டுபிடிப்பே இரசம்.' அதாவது, இரசம் ஊற்றி சாப்பிட்ட தட்டைக் கழுவுவது எளிதாக இருக்கும். இதே இரசம் பற்றிய மற்றொரு பதிவில், 'இரசம் என்பது சாமானியர்களின் மதுபானம்' என எழுதியிருந்தது. தண்ணீர், மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி, உப்பு என சேர்த்து நல்ல கொதிநிலையில் இறக்கி வைக்கும் இரசம் ஒன்றுதான். ஆனால், அதைக் குடிக்கும் அல்லது அதோடு உண்ணும் ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு விதமாக பார்க்கின்றோம். ஆக, ஒன்றின் இருப்பு அல்லது சுவை என்பது அது எப்படி இருக்கிறது அல்லது சுவைக்கிறது என்பதைவிட அதை அனுபவிப்பரைப் பொறுத்தே அமைகின்றது. இந்த அனுபவத்தை முற்சார்பு எண்ணம் (prejudice or pre-understanding) என அழைக்கிறது மெய்யியல். இவ்வாறாக, நாம் அனுபவிக்கும் ஒன்றில் நம் தடத்தை நாம் அப்படியே பதித்துவிடுகின்றோம்.

இதைவிட உயர்ந்ததொரு நிலை இருக்கிறது. அதுதான் வெளிப்பாடு. அதாவது மனிதர்கள் தாங்களாக அனுபவித்திராத ஒன்றைப் பற்றி கடவுள் வெளிப்படுத்துவதுதான் வெளிப்பாடு. வேற்று கிரகத்தார் அல்லது வெளிநாட்டவர் ஒருவரை நம் உணவறைக்கு அழைத்து வந்து ஒரு கப் ரசம் ஊற்றிக் கொடுத்து குடிக்கச் சொல்கிறோம் என வைத்துக்கொள்வோம். அவர் தன் வாழ்வில் ரசம் பற்றி அறிந்திருக்கவே வாய்ப்பில்லை. அவர் குடித்து முடித்தவுடன், இதுதான் 'இரசம்' என சொல்கிறோம். இப்போது இது இரசம் என்பதை அவருடைய முன்அனுபவம் அல்லது முற்சார்பு எண்ணம் சொல்லவில்லை. அவராக, அதை அனுபவித்துப் பார்க்கவும் இல்லை. மாறாக, வெளியே இருந்து ஒருவர் வெளிப்படுத்தியதால் அந்த அனுபவத்தை அவர் பெறுகிறார். மேலும் இதை வெளிப்படுத்திய நாம் அந்த நபருக்கு கடவுளாகவே (புதியதை அறிமுகப்படுத்துபவராக) தெரிகின்றோம்.

இவ்வாறு, வாழ்வில் நாம் பெறும் அனுபவங்களை இரண்டாகப் பிரிக்கலாம்: (அ) இரத்தமும், சதையும் சார்ந்தது. (ஆ) கடவுள் சார்ந்தது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 16:13-20) பேதுருவின் நம்பிக்கை அறிக்கையை வாசிக்கக் கேட்கின்றோம். இயேசுவின் மலைப்பொழிவு, உவமைப்பொழிவு, அற்புதங்கள் நிகழ்வு என மூன்று கட்டங்களில் இயேசுவை சீடர்களுக்கு அறிமுகப்படுத்திய மத்தேயு நற்செய்தியாளர் தனது இந்த அறிமுகம் சீடர்கள் மேல் எத்தகையை பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அறியும் நிகழ்வே இது. இந்த நிகழ்வு மாற்கு (8:27-30) மற்றும் லூக்கா (9:18-20) நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுதான் ஒத்தமைவு நற்செய்திகளின் மையமாக இருக்கிறது.

இயேசு என்ற ஒரு நபர் நிற்கின்றார். அவரை இரண்டு வகையானவர்கள் பார்க்கின்றார்கள்: (அ) முதல் வகையினர் மக்கள். இவர்கள் இரத்தமும், சதையும் நிலையிலிருந்து பார்க்கின்றனர். (ஆ) இரண்டாம் வகையினர் சீடர்கள். இவர்கள் விண்ணகத்தந்தை வெளிப்படுத்தும் வெளிப்பாடு நிலையிலிருந்து பார்க்கின்றனர்.

அ. இரத்தமும், சதையும்

'இரத்தமும், சதையும்' என்பது கிரேக்க மொழியிலிருந்து இலத்தீன் மற்றும் ஆங்கிலத்திற்குள் நுழைந்திருக்கும் ஒரு சொல்லாடல். 'மனித உடல்' அல்லது 'மனிதர்' அல்லது 'மனித வலுவின்மை' ஆகியவற்றைக் குறிக்கும் சொல்லாக இது இருக்கிறது. எபிரேய மற்றும் தமிழ் இலக்கியங்கள் 'இரத்தமும், சதையும்' என்பதற்குப் பதிலாக, 'எலும்பும், சதையும்' (காண். தொநூ 2:23 மற்றும் பட்டினத்தாரின் உடற்கூற்றுவண்ணம் வ. 1,24) எனக் குறிப்பிடுகின்றன. ஆணின் விந்து அல்லது சுக்கிலம் எலும்பை உருவாக்குகிறது என்பதும், பெண்ணின் விந்து அல்லது சுரோணிதம் சதையை உருவாக்குகிறது என்ற புரிதலும் இதன் பின்புலத்தில் இருக்கிறது. இந்தப் புரிதல் நமக்கு ஏற்புடையதாகவும் இருக்கிறது. ஏனெனில் 'இரத்தமும், சதையும்' என்ற சொல்லாடல் மனித உடலின் 'மென்மைத்தன்மையை' மட்டுமே முன்வைக்கின்றனவே தவிர, 'வன்மைத்தன்மை' பற்றி ஒன்றும் சொல்வதில்லை. ஆக, கிரேக்க அல்லது ஆங்கில சொல்லாடலை விட எபிரேயம் அல்லது தமிழ் சொல்லாடல் முழுமையானதாகத் தெரிகிறது.

சொல்லாடல் ஆராய்ச்சி விட்டு, விவிலியப் பொருளுக்கு வருவோம்.

'மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?' எனக் கேட்கின்றார் இயேசு. மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள், 'நான் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?' என இயேசு கேட்பதாகப் பதிவு செய்கின்றனர். ஆனால் மத்தேயு, 'நான்' என்பதை விடுத்து, 'மானிட மகன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்.

'சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் சிலர் எலியா எனவும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்' என மறுமொழி பகர்கின்றனர் சீடர்கள். இயேசுவின் சமகாலத்தவர்கள் திருமுழுக்கு யோவானைக் கண்டவர்கள். மெசியா என மக்கள் சந்தேகப்பட்ட ஒருவர் திடீரென ஏரோதால் கொலைசெய்யப்படுகின்றார். கொலைசெய்யப்பட்ட ஒருவர் மீண்டும் உயிர்பெற்று வரலாம் என சில பரிசேயர்கள் நம்பினர். சதுசேயர்களுக்கு இத்தகைய நம்பிக்கை கிடையாது. அடுத்ததாக, எலியா. இஸ்ரயேல் மக்களின் மாபெரும் இறைவாக்கினர் எனப் போற்றப்பெறும் இவ்விறைவாக்கினர் தம் பணிவாழ்வில் பாகால் இறைவாக்கினர்களைக் கொன்றழித்தவர். தன் யாவே கடவுளே உண்மையான கடவுள் என அறிக்கையிட்டவர். இதன் முத்தாய்ப்பாக இவர் இறக்காமல் அப்படியே வானிற்கு தங்கத்தேரில் எடுத்துக்கொள்ளப்படுகின்றார். இப்படி வானிற்கு ஏறிச்சென்ற இவர் மீண்டும் வருவார் என சிலர் நம்பினர். அடுத்ததாக, எரேமியா. பாபிலோனியாவிற்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் மீண்டும் நாடு திரும்பி புத்துயிர்பெற்றதை பதிவு செய்தவரும், 'புதிய உடன்படிக்கை' என்ற கருத்தியலை இஸ்ரயேல் மக்களுக்குச் சொன்னவரும் இவரே. தான் அறிவித்த 'புதிய உடன்படிக்கையை' மீண்டும் நிலைநிறுத்த இவர் பிறக்கலாம் எனவும் சிலர் நம்பினர். இறுதியாக, சிலர் தொட்டும் தொடாமல் 'இறைவாக்கினருள் ஒருவர்' எனச் சொல்கின்றனர். இந்த எல்லா புரிதல்களிலும் என்ன தெரிகிறது என்றால் இயேசு என்பவர் ஏற்கனவே இருந்த ஒரு நபரின் தொடர்ச்சி என்பதுதான்.

இதுதான் இரத்தமும், சதையும் அல்லது மனித உள்ளம் கொண்டிருக்கிற புரிதல். காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு வாழும், உட்பட்டு சிந்திக்கும் நாம் எல்லாவற்றையும் காலத்தின் தொடர்ச்சியாக அல்லது இடத்தின் நீட்சியாகவே பார்க்கின்றோம். ஆக, இரத்தமும் சதையும் எண்ணும் சிந்தனை காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டதாக இருக்கிறது. இந்த சிந்தனை மூளையிலிருந்து செயல்படும். 'இதன் தொடர்ச்சி அது, அதன் தொடர்ச்சி வேறொன்று' என மூளைதான் வரையறுக்கிறது.

இந்த வகை சிந்தனை நம் உறவுநிலைகளிலும் இருக்கலாம். அதாவது நாம் அன்பு செய்யும் நபரை நாம் காலத்திற்கு உட்படுத்தியே பார்க்கின்றோம். ஆகையால்தான், நேற்று 10 நிமிடம் பேசிய நபர் இன்று 5 நிமிடம் பேசினால் அல்லது நேற்று விறுவிறுப்பாக பேசிய நபர் இன்று சோர்வாகப் பேசினால் நம் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. நேற்று 10 நிமிடம் பேசியவர் என்று 15 நிமிடம் பேச வேண்டும் என்றும் நேற்று விறுவிறுப்பாக பேசியவர் இன்னும் அதிக விறுவிறுப்பாக பேச வேண்டும் எனவும் விரும்புகிறோம்.

இதை நாம் கடவுளுக்குப் பொருத்திப் பார்த்தோம் என்றால், போன வருடம் 10 லட்சம் கொடுத்த கடவுள் இந்த வருடம் 20 லட்சம் கொடுக்க வேண்டும், போன வருடம் காய்ச்சலை குணமாக்கிய கடவுள் இந்த வருடம் கேன்சரைக் குணமாக்கவும் வேண்டும் என செபிக்கின்றோம். இவ்வாறாக, இரத்தமும் சதையும் அனுபவம் குறுகியதாக இருப்பதோடல்லாமல், அடுத்தடுத்து நீட்டிக்கொண்டு போவதாகவும் இருக்கிறது. மேலும் இவ்வகையான அனுபவத்தை நாம் எல்லா மனிதர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்கின்றோம். இப்படித்தான் எல்லாரும் சிந்திக்கிறார்கள் என்ற ஒரு கட்டமைப்பும் இங்கே இருக்கிறது.

ஆ. வெளிப்பாடு

இயேசுவின் கேள்வி திரும்பவும் வருகிறது. ஆனால் இம்முறை சற்றே மாறுபடுகிறது: 'ஆனால் நீங்கள், நான் யாரெனச் சொல்கிறீர்கள்?'

'அவர்கள்' என்ற வார்த்தை 'நீங்கள்' என மாறிவிட்டது. மூன்றாம் நபர் நிலையிலிருந்து கேள்வி இரண்டாம் நபர் நிலைக்கு மாற்றப்படுகிறது. 'மானிட மகன்' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'நான்' என வெளிப்படையாகச் சொல்கின்றார் இயேசு.

சீடர்களின் பிரதிநிதியாக முன்வருகின்ற பேதுரு, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' என பதில் சொல்கின்றார். மாற்கு நற்செய்தியில் பேதுருவின் பதில், 'நீர் மெசியா' என்றும், லூக்கா நற்செய்தியில், 'நீர் கடவுளின் மெசியா' என்றும் உள்ளது.

பேதுருவின் இந்தப் பதிலைக் கேட்டவுடன், 'யோவானின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த இரத்தமும் சதையும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. மாறாக, விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்' என பாராட்டுகின்றார்.

விண்ணகத்தந்தையின் வெளிப்பாடு காலத்திற்கும், நேரத்திற்கும் அப்பாற்பட்டது. ஆகையால்தான், இயேசுவை காலத்தின் வளர்ச்சி அல்லது இடத்தின் நீட்சியாகப் பார்க்காமல், 'நீர் மெசியா' என்ற புதிய கோணத்தில் பார்க்கிறார் பேதுரு. 'ஆயிரக்கணக்கான வருடங்களாய் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்' என்று மெசியாவின் வருகைக்காக காத்திருந்தது இஸ்ரயேல் சமூகம். ஆனால் யாருக்கும் கிடைக்காத வெளிப்பாடு சீடர்களுக்குக் கிடைக்கிறது. அவர்கள் இயேசுவை மெசியாவாக கண்டுகொள்கின்றனர். இந்தக் கண்டுகொள்ளுதல்தான் அவர்களின் நம்பிக்கைப் பயணத்தின் உச்சம்.

ஆக, நம்பிக்கைப் பயணத்தில் ஒரு கட்டத்தில் எரியும் சின்ன ஆயிரம் வாட்ஸ் பல்ப்தான் வெளிப்பாடு. இந்த வெளிச்சத்தில் நம் முன் இருப்பவர் யார் என்று நமக்குத் தெரிந்துவிடுகிறது.

இதை நம் உறவு நிலைகளுக்குப் பொருத்திப்பார்ப்போம். நாம் அனைவரும் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு நேரத்தில் பிறந்து நம் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள். நம் ஒவ்வொருவருக்கும் குடும்பம், பின்புலம் என இருக்கிறது. இந்தப் பின்புலத்தை மட்டும் பார்த்து நாம் உறவாடினால் உறவு நீடிப்பதில்லை. மற்றவரின் குடும்பமும், பின்புலமும் நமக்குப் பிடிக்காமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், வெளிப்பாடு அல்லது நம்பிக்கை என்ற ஒளி பிறக்கும்போது அடுத்தவரைப் பற்றிய ஒரு புதிய பிம்பம் நம் மனதில் பதிகிறது. நம் மனது அதை அப்படியே எடுத்துக்கொள்கிறது. இந்த புதிய பிம்பமே நாம் ஒருவர் மற்றவரோடு உறவாட நம்மைத் தூண்டுகிறது.

கடவுளோடு நாம் கொள்ளும் உறவிற்கும் இதைப் பயன்படுத்தலாம். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, இயேசு, அகுஸ்தினார் போன்றவர்களின் கடவுள் அனுபவங்கள் இப்படித்தான் இருக்கின்றன. இவர்கள் கடவுளிடம், 'இது வேண்டும், அது வேண்டும்' எனக் கேட்பதில்லை. மாறாக, ஒரு குறிப்பிட்ட இடத்தில் நேரத்தில் தாங்கள் காணும் ஒளியில் கடவுளை அப்படியே பற்றிக்கொள்கின்றனர்.

இவ்வாறாக, நம் மனித அனுபவம் இரண்டு நிலைகளில் நடந்தேறுகிறது.

முதல் நிலையில் அல்லது இரத்தமும் சதையும் நிலையில் நம் அனுபவம் இருந்தால் என்ன நடக்கும்? என்ற கேள்விக்குப் பதிலாக வருகிறது இன்றைய முதல் வாசகம் (காண். எசா 22:19-23). யூதா நாட்டின் செபுனா என்ற அரண்மனைப் பொறுப்பாளன் தன் இரத்தமும் சதையும் என்ற நிலையில் சிந்திக்கிறவனாய் இருக்கிறான். அவனை எசாயா இறைவாக்கினர் வழியாகக் கண்டிக்கின்ற யாவே இறைவன், 'உன்னை உன் பதவியிலிருந்து இறக்கி விடுவேன். உன் நிலையிலிருந்து கவிழ்த்துவிடுவேன்' என்கின்றார். அதாவது, 'இதுதான் நான். இப்படித்தான் எனக்கு எல்லாம் நடக்கும்' என்று யாரும் கணிக்க முடியாது. இருந்தாலும் இப்படிக் கணித்து வாழ முற்படுகிறான் செபுனா. ஆகையால் இறைவனால் தண்டிக்கப்படுகிறான்.

ஆனால், இரண்டாம் நிலையில் அல்லது வெளிப்பாட்டு நிலையில் அனுபவம் கொண்டிருக்கின்ற எலியாக்கிமிற்கு லக்கி ப்ரைஸ் அடிக்கிறது: 'அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோள்மேல் வைப்பேன். அவன் திறப்பான். எவனும் பூட்ட மாட்டான். அவன் பூட்டுவான். எவனும் திறக்கமாட்டான்' என்கிறார் ஆண்டவராகிய கடவுள். இதே நிலைதான் இன்றைய நற்செய்தியிலும் உள்ளது. பேதுருவின் சிறப்பான பதிலைப் பாராட்டுகின்ற இயேசு, 'உன் பெயர் பேதுரு. இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் ... விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்' என்கிறார்.

இரத்தமும் சதையும் நிலையிலிருந்து விடைபகர்ந்த மக்களுக்கு எந்தக் கைம்மாறும் இல்லை. ஆனால் கடவுளின் வெளிப்பாட்டிற்குத் தம்மையே திறந்து கொடுத்த பேதுருவுக்கு கைம்மாறு கிடைக்கிறது.

கைம்மாறு பெற்றுத்தரும் கடவுளின் வெளிப்பாடு என்பது ஒரு கொடை. ஆகையால்தான், 'ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?' என இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண் உரோ 11:33-36) மேற்கோள் காட்டுகின்றார் பவுல்.

இந்த இருவகை அனுபவங்கள் நமக்கு வைக்கும் சவால்கள் இரண்டு:

1. நம் உறவுநிலைகள்

எனக்கும் எனக்குமான உறவு, எனக்கும் பிறருக்குமான உறவு, எனக்கும் இறைவனுக்குமான உறவு என்ற இந்த மூன்று நிலைகளின் தரத்தை நிர்ணயிப்பவை மேற்காணும் அனுபவங்களே. எப்படி? 'இரத்தமும் சதையும்' என்ற நிலையில் மட்டுமே நான் உறவு கொண்டால் என்னை தாழ்வாக மதிப்பிடுபவனாகவும், அல்லது மிக உயர்வாக மதிப்பிட்டு ஆணவம் கொண்டவனாகவும், பிறரை அவர்களின் பின்புலத்தோடு மட்டும் பார்ப்பவனாகவும், இறைவனை அடுத்தவர்கள் காட்டும் அடையாளங்கள் வழி மட்டுமே பார்ப்பேன். ஆனால் 'வெளிப்பாடு' நிலையில் இருந்தால் நான் என்னை முழுமையாக ஏற்றுக்கொள்வேன். பிறர்மேல் பரிவும் பொறுமையும் காட்டுவேன். கடவுளோடு நான் இரண்டறக் கலந்துவிடுவேன்.

2. வெளிப்பாடும் கண்டுகொள்பவரும்

எல்லார் மேலும் நிலா ஒளிர்ந்தாலும் அதை வெகு சிலரே கண்டுகொள்கின்றனர். இயேசு எல்லாருக்கும் பொதுவான மனிதராக வலம் வந்தார். போதித்தார். நோய்களைக் குணமாக்கினார். அறிவுரைகள் தந்தார். ஆனால் எல்லா மக்களும் அவரை மெசியாவாக கண்டுகொள்ளவில்லை. சீடர்கள் மட்டுமே கண்டுகொள்கின்றனர். கடவுள் வெளிப்படுத்தும் புள்ளியும், நாம் புரிந்து கொள்ளும் புள்ளியும் இணையுமிடத்தில்தான் கண்டுகொள்தல் தோன்றுகின்றது. ஆக, என்னையும் இறைவனையும் நான் எப்படி இணைத்துக்கொள்கிறேன்.

இறுதியாக, இரத்தமும் சதையும் - இந்த இரண்டால்தான் நீங்களும், நானும் கட்டப்பட்டிருக்கிறோம். ஆனால் இதிலிருந்து கடக்கும் ஆற்றலும் நமக்கு உண்டு. அந்த ஆற்றலே வெளிப்பாட்டைக் கண்டுகொள்ள உணர்கிறது.

என் வாழ்வு, வளர்ச்சி, உறவு, நம்பிக்கை என எல்லாப் பயணங்களிலும் 'இரத்தமும் சதையும்' நிலையிலிருந்து, 'வெளிப்பாடு' நிலைக்கு உயர்ந்தால் என் அனுபவமும் இறையனுபவமே ... இனிய அனுபவமே!







நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்


அருள்திரு முனைவர் .அருள்.

நிகழ்ச்சி

பல ஆண்டுகளாக ஒருவர் மேஸ்திரியாக ஒரு காண்ட்ராக்டரிடம் வேலை செய்து வந்தான். அவரின் செயல்பாடுகள், நேர்மைக் குணம் முதலாளிக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மேஸ்திரி முதலாளியிடம் சென்று, "ஐயா! நான் அடுத்த மாதத்திலிருந்து வேலையைவிட்டு நின்றுவிடலாம் என நினைக்கிறேன்" என்றான். முதலாளி கோபமாக, "இப்படி திடீரெனச் சொன்னால் எப்படி? இன்னும் ஆறு மாதங்கள் நீ என்னிடம் வேலை செய்துதான் ஆக வேண்டும்என்றார். "உன் குடிசைக்கு எதிரே உள்ள பாறை மீது ஒரு நவீன மாடலில் ஒரு வீடு கட்ட வேண்டும். அதை முடித்துவிட்டு வேலையிலிருந்து நீ நின்றுகொள்என்றார். சரி என்று சொல்லி ஆறு மாதத்திற்குள் பாறைமீது அழகான ஒரு வீட்டைக் கட்டி முடித்துக் கொடுத்தார் அந்த மேஸ்திரி. அப்போது முதலாளி அந்த மேஸ்திரியைப் பார்த்து, நீ பல ஆண்டுகளாக என்னிடம் வேலை செய்தவர். சில நேரங்களில் உனக்கு என் மீது நம்பிக்கை இல்லாமல் போயிற்று. பல சமயங்களில் என்னை நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இருப்பினும் இத்தனை ஆண்டுகள் என்னைவிட்டுப் பிரியாமல், பலவிதமான துன்பங்களோடு என்னோடு இருந்து, எனக்கு ஆறுதல் தந்தாய். காலப்போக்கில் மனதளவில் நீ என்னை மற்றவர்களைவிட நன்கு புரிந்துகொண்டாய். அதற்கு வெகுமதியாக உனக்கு நான் பரிசு கொடுக்க வேண்டும். அதனால் பாறைமீது நீ கட்டிய வீட்டை உனக்கே பரிசாகத் தருகிறேன் என்று கூறி, புதிய வீட்டுச் சாவியை அந்த மேஸ்திரியிடம் கொடுத்தார் அந்த முதலாளி.

ஆண்டவர் இயேசுவும் தனது மேஸ்திரியாக இருந்த பேதுருவையும் இவ்வாறுதான் எடைபோட்டார். எனவே உன் பெயர் பாறை,  இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். விண்ணகத்தின் திறவுகோல்களை உனக்குத் தருவேன் (மத். 16:18) என்று கூறி அதிகாரத்தின் சாவியை புனித பேதுருவிடம் ஆண்டவர் இயேசு ஒப்படைக்கின்றார். ஏனெனில் தொடக்கத்தில் இயேசுவை அறிவுப்பூர்வமாகப் புரிந்துகொண்ட பேதுரு, காலப்போக்கில் அனுபவத்தின் வழியாக, இதயப்பூர்வமாக உணர்ந்து கொண்டார். எனவேதான் நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் (மத். 16:17) என்று வெளிப்படுத்தினார்.

அன்பார்ந்தவர்களே! மூன்று ஆண்டுகளாகத் தன்னோடு இருந்து, உண்டு, உறங்கி சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து, தான் செய்த வல்ல செயல்களையெல்லாம் கண்ணாரக் கண்ட தன் சீடர்களை நோக்கி, இயேசு ஒரு கேள்வி எழுப்புகிறார். மனுமகனை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள்? நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் (மத். 16:14-15) என்றும் கேட்கிறார். ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்? இதுவரைப் பின்தொடர்ந்த மக்கள் பலர் இயேசுவில் விசுவாசமிழந்தனர். உற்றார், உறவினர் அவர்மேல் இடறல்பட்டனர். சீடர் பலர் இயேசு தன் உடலை உணவாகத் தருவேன் என்றவுடனும் நெருக்கடி நிலை ஏற்பட்டவுடனும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றனர். இந்த சூழலில் தந்தையாகிய இறைவன் இவ்வுலகிற்கு இயேசுவை எதற்காக அனுப்பினார் என்பதை மக்கள் புரிந்துகொண்டனரா, அந்தப் பணியை இந்தச் சீடர்கள் தொடர்ந்து செய்வார்களா? தன்னோடு மூன்று ஆண்டுகள் இருந்து பயிற்சி பெற்ற சீடர்கள் தன்னைப் புரிந்துகொண்டார்களா என்பதை அறிய, ஒரு நேர்முகத் தேர்வு நடத்துகிறார் இயேசு. ஏனெனில் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (உரோ. 11:33) கடவுளின் அருட்செல்வம் ஞானம், அறிவு, தீர்ப்புகள் இவற்றை மனிதன் தன் அறிவினால் அறிய இயலாது. அனைத்தும் அவரிடமிருந்தே, அவருக்காகவே இருக்கின்றன என்கிறார் புனித பவுல் அடிகளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலை வந்தபோது, இயேசுவின் இதயம் எழுப்பிய கேள்விதான், மக்கள் என்னை யாரென்று சொல்லுகிறார்கள். ஆனால் இயேசுவை அனுபவ ரீதியாக அறிந்த பேதுரு, ஒரே வரியில் பதில் சொல்லி, இயேசுவின் இதயத்தில் நிரந்தர இடத்தைப் பிடித்துவிட்டார். இதை அறிந்த இயேசு, பேதுருவை அடித்தளமாகக் கொண்டு திருச்சபையைக் கட்டுவேன் என்கிறார்.


இயேசு எனக்கு யார்? சிலுவையில் தொங்கிய வலது புறத்துக் கள்வன், நான் யார்? ஏன் இப்படி ஆனேன் என்று சிந்தித்தான். விபச்சாரப் பெண் மதலேன் மரியாள் இப்படி ஏன் தள்ளப்பட்டேன் என்று சுய ஆய்வு செய்தாள். சக்கேயுதன் எதிர்கால நிலைப்பாடு என்ன என்று யோசித்தான். இதனால் அறிவு ரீதியாக மட்டுமல்ல, இதயப்பூர்வமாக இயேசுவைச் சொந்தமாக்கிக் கொண்டார்கள் இந்த மூவரும். 


  •  இன்று கிறிஸ்தவர்களாகிய நம்மைப் பிற மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள்? கல்வி, மருத்துவம் போன்ற உதவியால் மதம் மாற்றுபவர்கள், சமூக அக்கறையற்றவர்கள், பிரச்சனையைக் கண்டு கொள்ளாதவர்கள் கோழைகள்! அல்லேலூயா கோஷ்டிகள், பெயரளவில் கிறிஸ்தவர்கள் என்கிறார்களா? அப்படியென்றால் அது உண்மையா?
  • நாம் நம்மைச் சுற்றி எத்தகைய சமூகத்தைக் கட்டி எழுப்புகிறோம்? சாதியம், ஆணாதிக்கம், மத அடிப்படை வாதம், சுய நலம் நிறைந்த அடிமை சமூகத்தையா? அல்லது நீதி, அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்த சமூகத்தையா






மறையுரை வழங்குபவர் Fr. Freddy is a Redemptorist priest belonging to the Province of Bangalore. Currently he is attached to the Archdiocese of St. Louis, Missouri state, U.S.A.

முன்னுரை:
கத்தோலிக்கத் திருச்சபையின் குருவாக இருந்து பின்னர் அதிலிருந்து விலகிச் சென்ற மார்ட்டின் லூதர் 1517 ஆம் ஆண்டு லுத்தரன் சபையை நிறுவினார். மணமுறிவுக்கும், மறுமணம் செய்துகொள்வதற்கும் அப்போதைய பாப்பரசர் அனுமதி தராத காரணத்தால், 1534 ஆம் ஆண்டு அரசர் எட்டாம் ஹென்றி ஆங்கிலிக்கன் சபையை தொடங்கினார். ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த ஜான் நாக்ஸ் என்பவர் 1560 ஆம் ஆண்டு பிரிஸ்பிடேரியன் சபையை (Presbyterian Church) நிறுவினார். மெதடிஸ்ட் சபை (Methodist Church) என்பது ஜான் மற்றும் சார்லஸ் வெஸ்லி என்பவர்களால் 1744 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தொடங்கப்பட்டது. ஆம்ஸ்டர்டாம் நகரில் ஜான் ஸ்மித் என்பவர் 1605 ஆம் ஆண்டு பாப்திஸ்து சபையை (Baptist Church) ஏற்படுத்தினார். “Church of the Nazarene", "Pentecostal Gospel", "Holiness Church", "Pilgrim Holiness Church", "Jehovah's Witnesses" - இது போன்ற பற்பல சபைகளை சார்ந்திருப்பவர்கள் பலர். இந்த சபைகளெல்லாம் கடந்த நூறு ஆண்டுகளில் மனிதர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பல பிரிவுகளில் ஒன்று என்பது தெளிவு.

ஆனால், இறைமகன் இயேசு கிறிஸ்துவால் கி.பி.33 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது "கத்தோலிக்கத் திருச்சபை" என்பதும், இந்தத் திருச்சபை இன்றைக்கும் மாறுதலின்றி அதே சபையாகவே இருக்கிறது   என்பதும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களாகிய நமக்குத் தெரியும். இந்தத் திருச்சபையை ஏற்படுத்திய இறைவன் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருப்பதுபோல, அவரால் நிறுவப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையும் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் வருங்காலம் ஆகிய எல்லாக் காலங்களிலும் மாறாத ஒன்றாக இருக்கிறது.

இறைவார்த்தை:
"திருச்சபை" (Church) என்ற சொல், இன்றைய நற்செய்தி வாசகத்திலும், மத்தேயு நற்செய்தி 18:17 என்ற பகுதியிலும் காணப்படுகிறது. "சொல்பிறப்பியல்" முறைப்படி, "church" என்ற பதம் "அழைக்கப்படுத்தல்" என்பதைக் குறிப்பதாகவும், பண்டைய கிரேக்க நாட்டில் ஆங்காங்கே நடைபெற்ற உள்ளூர் அரசியல் கூட்டங்களைக் குறிப்பதாகவும் கையாளப்பட்டது. திருச்சபையின் வெவ்வேறு சிறப்பம்சங்களை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கிறது.

  1. அனைத்து அதிகார மையங்களுக்கிடையில், திருச்சபையே கிறிஸ்துவின் வல்லமை: கலிலேயக் கடலிலிருந்து வடக்கே இருபது மைல் தொலைவிலிருக்கின்ற பிலிப்பு செசாரியா பகுதியில் இன்றைய நற்செய்தி சம்பவம் நிகழ்கிறது. பாகால், பான் ஆகிய வேற்றுமத கடவுளர்களின் வழிபாட்டு மையமாக இந்தப் பகுதி இருந்தது. இந்த இடத்தில் அகஸ்டஸ் சீசருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆலயத்தை அரசர் ஏரோது கட்டியிருந்தார். அரசியல் அதிகாரத்திற்கும், அந்நிய கடவுளர்களின் சக்திக்கும் அடையாளமாக இந்த இடம் இருந்தது. மற்ற அனைத்து அதிகாரங்களையும் மாற்றியமைக்கின்ற விதமாக, தமது திருச்சபையை இயேசு இந்த இடத்தில் நிறுவுகிறார்.

பாதாளத்திற்கு எதிராகவும் இயேசுவின் திருச்சபை மேலோங்கி நிற்கும். பான் என்ற கடவுளுக்கான கோவில் அமைந்திருந்த குகையின் நுழைவாயில், பாதாளத்தின் வாயிற்கதவுகளாகக் கருதப்பட்டது. வேற்றுமதத்தினர் செலுத்திய பலிப்பொருள்கள் இந்தக் குகையினுள் வீசப்பட்டன. இந்தக் குகையில் நுழைவதற்கான வழி, நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழியாகக் கருதப்பட்டது. திருச்சபையில் இருக்கின்ற கிறிஸ்துவின் அதிகாரத்தை, அலகையின் அதிகாரம் ஒருபோதும் வெற்றிகொள்ள இயலாது.

  1. பேதுருவின் விசுவாச அறிக்கையே திருச்சபையின் தொடக்கமாக அமைந்தது: "மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று இயேசு தன் சீடர்களைக் கேட்டார். இந்த முதல் கேள்விக்கு சீடர்கள் அளித்த மறுமொழி, இயேசுவின் கவனத்தை ஈர்க்கவில்லை. அவர்களுடைய கூற்றுக்கு இயேசு பதில் கூறவுமில்லை. "ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்ற அவருடைய கேள்விக்கான பதிலே இயேசுவின் இலக்காக இருந்தது.  "நீரே மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று பேதுரு உரைத்ததன் பின்னரே, இயேசு தமது திருச்சபையைக் குறித்து பேச ஆரம்பிக்கிறார். இயேசுவுக்காக தன் உடலையும், இரத்தத்தையும் இழந்த பேதுருவின் தியாகத்தில் அல்லாமல், விண்ணகத் தந்தையின் வெளிப்பாடான பேதுருவின் விசுவாச அறிக்கையோடு தான் திருச்சபையின் தொடக்கமும் அமைந்தது.

  1. "திருச்சபையின் பாறை" இறைவனாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டது: "சீமோன்" என்ற பெயரை இயேசு மாற்றியமைக்கிறார். சீமோன் என்ற எபிரேய சொல்லுக்கு, "செவிமடுத்தல்", "நாணல் போன்ற" "புல் போன்ற" என்று நேரிடையான அர்த்தங்கள் உண்டு. சீமோன் என்னும் மனிதருடைய வலுவின்மையையும், கடுங்காற்று போன்ற உலகியல் முறைமைகள் எவ்வாறு சுலபமாக இவரை வீழ்த்திவிடும் என்பதையும், இந்தப் பெயர் குறிப்பால் உணர்த்துவதாக இருந்தது. சீமோன் என்னும் சொல் அரமேய மொழியில் மணற் துகள்களைக் குறிப்பதாகும். இத்தகைய பெயர் கொண்ட ஒருவரை இயேசு பாறையாக மாற்றுகிறார். கடவுள் ஆபிரகாமைப் பார்த்தபோது, "இந்த உலகை கட்டியெழுப்புவதற்கான பாறையைக் கண்டுகொண்டேன்" என்று வியந்து கூறியதாக, பழங்கால யூத மதகுருக்கள் சொல்லுவதுண்டு. இப்போது பேதுரு திருச்சபையின் புதிய ஆபிரகாமாக இருக்கிறார். பேதுருவின் வடிவில் புதியதொரு பாறையை இயேசு காண்கிறார். யூத மரபின்படி, பாறையின் மீது கட்டப்பட்டிருந்த எருசலேம் தேவாலயம் உலகத்தின் மையமாகக் கருதப்பட்டது. இன்று இந்த இடத்தில் Dome of the Rock என்ற இஸ்லாமிய தொழுகைக் கூடம் அமைந்துள்ளது. புதிய தேவாலயமாகிய திருச்சபையைக் கட்டியெழுப்பிட பேதுரு பாறையாகிறார். திருச்சபையின் தலைவரான பேதுரு, கடவுளாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  1. இறையரசின் திறவுகோல்களை கொண்டிருக்கும் ஒரே திருச்சபை: "அனுமதிப்பது", "தடைசெய்வது" - இவையெல்லாம் போதனை செய்வதற்கு தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைக் காட்டுவதற்காக யூத மதகுருக்கள் கையாண்ட சொல்லாடல்கள் ஆகும். திருச்சட்டங்களுக்கு விளக்கம் அளிக்கவும், அதனைக் குறிப்பிட்ட இடங்களில் பயன்படுத்தவும், எதை அனுமதிப்பது அல்லது தடைசெய்வது என்பதை எடுத்துச் சொல்லவும் தங்களுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்பது அவர்களுடைய எண்ணம். பழைய ஏற்பாட்டில், திறவுகோல்களின் காப்பாளர் அந்த வீட்டின் பொறுப்பாளர் மற்றும் ஆசிரியருக்கான அதிகாரத்தைக் கொண்டிருந்தார் (எசாயா 22:25). விசுவாசத்தை விளக்கிச் சொல்லும் ஆசிரியராகவும், தனது மக்களை வழிநடத்துகின்ற பொறுப்பாளராகவும், பேதுருவை இயேசு ஏற்படுத்தினார். பேதுருவுக்குப் பிறகு, விசுவாசத்தை விளக்கிச் சொல்லுகின்ற அதிகாரம் படைத்த ஆசிரியராகவும், மக்களை நிர்வகிக்கும் பொறுப்பாளராகவும் இருப்பது, திருச்சபையே.

இயேசுவால் நிறுவப்பட்ட திருச்சபையே, கிறிஸ்துவின் வல்லமை. இயேசுவில் கொண்டிருக்கும் விசுவாசத்தை அறிக்கையிடும் திருச்சபை இதுவேகாலத்தின் சோதனைகளை வென்று நிற்கின்ற பாறையும் இந்தத் திருச்சபை தான். இறைமக்களுக்கு கற்பிக்கவும், அவர்களை வழிநடத்தவும் அதிகாரம் படைத்த திறவுகோல்களின் காப்பாளராக இருப்பதுவும் இந்த திருச்சபையே.
  
பயன்பாடு:
நாம் சார்ந்திருப்பது இந்தத் திருச்சபையைத்தான். இன்றைய நாள்களில், திருச்சபையின் தவறான போக்குகளை சுட்டிக்காட்டி, மக்கள் திருச்சபையின் மீது குற்றம் சுமத்துகிறார்கள். இவ்வாறு சுட்டிக்காட்டப்படும் தவறான போக்குகள் பலநேரங்களில் உண்மையாகவே இருக்கின்றன. நாம் செய்கின்ற செயல்களில் மக்கள் திருப்தி அடைவதில்லை. மனித வலுவின்மையின் அடிப்படையில் குருக்கள் மீது குற்றம் சாட்டுகிறோம். அதிக அளவில் சட்டங்களுக்கும், சடங்கு-சம்பிரதாயங்களுக்கு மதிப்பளிப்பதாகவும், உலகத்தின் உண்மைநிலைகளுடன் தொடர்பற்று இருப்பதாகவும் திருச்சபையின் மீது நாம் குற்றம் சுமத்த முடியும்.

கடவுளின் மக்களை, திருச்சபையை எதுவும் அழித்திடவில்லை. பாப்பரசர் ஏழாம் பயஸ் அவர்களை  சிறைபிடித்த பேரரசர் நெப்போலியன், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையை நசித்துவிடுவதாக எச்சரித்தார். பேரரசரின் அறியாமையை எண்ணி மிகுந்த வருத்தமுற்ற வத்திக்கான் திருப்பீடத்தின் செயலரான  கர்தினால் கொன்சால்வி, "கடந்த 1800 ஆண்டுகளில் இந்தத் திருச்சபையை அழித்திட இந்த மதத்தின் குருக்களான எங்களாலேயே முடியவில்லையே? உன்னால் முடியும் என்று உண்மையாகவே நீ நினைக்கிறாயா?" என்று கேட்டார்.

திருச்சபையை மீண்டும் புதிதாகக் கட்டியெழுப்புவதே இன்று நம்முடைய தேவையாக இருக்கிறது. இத்தாலியில் அசிசி நகரிலுள்ள புனித தமியான் ஆலயத்தில் (Church of San Damiano) அசிசி நகர் புனித பிரான்சிஸ் ஜெபித்துக் கொண்டிருந்தபோது, "பிரான்சிஸ், என்னுடைய ஆலயத்தை செப்பனிட்டு சீர்திருத்திடு" (Repair my Church) என்று இயேசு தன்னிடம் கூறுவதைக் கேட்டார். இயேசுவின் அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, தனது தந்தையின் சொத்துக்களை விற்று, தன் கையாலேயே அந்த ஆலயத்தை செப்பனிட ஆரம்பித்தார், பிரான்சிஸ். ஆனால், "repair my church" என்று இயேசு சொன்னது புனித தமியான் ஆலயத்தைக் குறித்து அல்ல: உள்ளேயே பெருகி வந்த தவறான போக்குகள் - பேராசைகள் இவற்றாலும், வெளியில் வளர்ந்திருந்த திருமறைக்கெதிரான கொள்கைகளாலும் சீரழிந்து கொண்டிருந்த உலகளாவிய திருச்சபையைக் குறித்து தான்” என்பதை புனித பிரான்சிஸ் உணர்ந்து கொள்ளவில்லை. எதிர்மறையான கண்ணோட்டத்துடன் திருச்சபையை அணுகுவது இன்றைய காலகட்டத்தில் எளிதுதான். ஆனால், புனித பிரான்சிஸை போல நாமும் திருச்சபையைக் கட்டியெழுப்புவர்களாக இருத்தல் இயலும்.

இறைவாக்கினர் எரேமியா கூறுகிறார்: "ஆண்டவர் கூறுவது இதுவே; சாலைச் சந்திப்பில் நின்று நோக்குங்கள்; தொன்மையான பாதைகள் எவை? நல்ல வழி எது? என்று கேளுங்கள்; அதில் செல்லுங்கள். அப்போது உங்களுக்கு அமைதி கிடைக்கும்" (எரேமியா 6:16). தொன்மையான பாதை என்பது திருச்சபையே. நல்ல வழியும் திருச்சபை தான். அதன் வழியில் நடக்கின்றபோது, எப்போதுமே நம் உள்ளங்களுக்கு அமைதி கிட்டும். 

முடிவுரை:
நீங்களே திருச்சபை என்பதால், நெஞ்சை நிமிர்த்தி, தலையை உயர்த்தி நடைபோடுங்கள். இறைவனின் மிக உயரிய படைப்பான திருச்சபையில் நீங்களும் ஒரு உறுப்பினர் என்பதை எண்ணி பெருமை கொள்ளுங்கள். மரியாதையும், பெருமையும் மேலோங்க நமது விசுவாசத்திற்காக, நமது திருச்சபைக்காக துணிந்து பேசுங்கள். ஏனெனில், இந்தத் திருச்சபையைப் பார்த்து தான் இயேசு, "உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார்.  


No comments:

Post a Comment