Monday, 7 January 2019

ஆண்டவரின் திருமுழுக்கு விழா

 

*ஆண்டவரின் திருமுழுக்கு விழா**இன்றைய நற்செய்தி வாசகங்கள்.*

எசாயா 40:1-5,9-11
தீத்து. 2:11-14,3:4-7
லூக்கா 3: 15-16,21-22


 இதோ என் ஊழியன்! இவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன் (எசா. 42:1) என்று எசாயா ஒலித்த குரல், இதோ என் அன்பார்ந்த மகன். இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் (மாற் 1:11) என்று இயேசுவைப் பார்த்து ஒலித்தது. இயேசுவின் திருமுழுக்கில் கடவுளின் குரலை இயேசு புரிந்து கொள்கிறார். இதனால் இறைவனின் வல்லமை, ஆற்றல், சக்தி இறங்கி வந்து இயேசுவைப் புதிய தலைவராக உலகிற்குப் பிரகடனப்படுத்தி உலகத்திற்குள் அவரை அனுப்பி வைத்தது. புதிய உலகம் படைக்க, அதாவது மக்களினங்களுக்கு நீதி வழங்க, அறத்தை நிலைநாட்ட, குருடர்களுக்குப் பார்வை அளிக்க, கட்டுண்டவர்களை விடுவிக்க, இருளில் வாழ்வோருக்கு ஒளியாகத் திகழ இயேசு புறப்படுகிறார்.
மனித வாழ்வில் இயேசு சில நேரங்களில் போதிக்கிறார். சில நேரங்களில் வாதாடுகிறார். சில நேரங்களில் அமைதி காக்கிறார். சில நேரங்களில் நழுவிச் சென்றுவிடுகிறார். இவை அனைத்திற்கும் காரணம் அவர் பெற்ற திருமுழுக்கும், மன உறுதியும்தான் காரணமாகிறது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அகதியாகச் சென்ற ஒருவர் கடினமாக உழைத்து ஓர் அழகிய வீட்டைக் கட்டினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு உள் நாட்டுக் கலவரத்தில் ஊரே சூறையாடப்பட்டது. ஊரோ யுத்த பூமியானது. அதில் இவரது வீடும் தரைமட்டமாக்கப்பட்டது. அப்போது இவரது மனைவி அழுகிறாள். பிள்ளைகள் கதறுகிறார்கள். இவர் மட்டும் அமைதியாக இருக்கிறார். இவரது நண்பர்கள் இவருக்கு ஆறுதல் சொன்னபோது அவர் சொன்னார்: இந்தியாவிலிருந்து நான் அகதியாக வந்தபோது எதையும் நான் கொண்டு வரவில்லை. அனைத்தையும் இங்கேயே மன உறுதியுடன் உழைத்துச் சம்பாதித்தேன். அதை இப்போது இழந்துவிட்டேன். என் வீட்டை மட்டும்தான் இழந்துள்ளேன். ஆனால் என் அறிவையோ, மன உறுதியையோ, திறமையையோ இழக்கவில்லை. என் மனைவி, மக்களை இழக்கவில்லை. நான் எதை இங்கு இழந்தேனோ அதை நிச்சயம் பெறுவேன் என்ற மன உறுதி எனக்குள்ளது என்றார். ஆம்! நம் ஆண்டவர் இயேசு தந்தையே! உமது கரங்களில் எனது ஆவியை ஒப்படைக்கிறேன் (லூக். 23:46) என்று சொல்லும்வரை மன உறுதியோடு மனித குல அநீத சக்திகளோடு போராடினார். சாதனை படைக்கும் சரித்திர நாயகனாக திகழ்ந்தார். மன உறுதியோடு பசித்தவர்க்கு உணவு கொடுக்கவும், வறுமையில் உள்ளவர் வளமை பெறவும், இருளில் இருப்பவனை ஒளிக்குக் கொண்டு வரவும், இருட்டடிப்பு செய்யப்பட்ட சமூகம் விடுதலை பெறவும் தம்மையே அர்ப்பணித்துக் கொண்டார்.

நாம் பெற்ற திருமுழுக்கு அனுபவம் நீதியை நிலைநாட்டவும், மன உறுதி பெறவும், சோதனைகளை வென்று சாதனை படைக்கவும், இறையரசுப் பணியில் ஈடுபடவும் நம்மை அழைக்கிறது. இயேசுவின் பணியில் நாம் தவறினால் நாம் பெற்ற திருமுழுக்கு வெறும் அர்த்தமற்ற சடங்காகிவிடும். அது தூய ஆவியை நமக்கு அளித்து, நம்மைப் புதுப்படைப்பாக மாற்றி நம்மை புதிய உலகம் படைக்க அழைக்கும் ஓர் இறை அழைப்பு.


என் அன்பு மகன் நீயே!


இறைத் தந்தைக்கு இயேசுவை மிகவும் பிடிக்கும் (முதல் வாசகம்). காரணம் அவரது அன்பை நூற்றுக்கு நூறு பிரதிபலித்தவர் இயேசு (இரண்டாம் வாசகம்).

நன்மையைத் தவிர வேறு எதையும் இயேசு செய்யவில்லை (இரண்டாம் வாசகம்). இதோ ஓர் அழகான கதை ! இது நூற்றுக்கு நூறு கட்டப்பட்ட கதை : ஒருமுறை புனித யோசேப்பு, மரியா, புனிதர்கள், புனிதைகள், வானதூதர்கள் எல்லாரும் இயேசுவிடம் போய், பூலோகத்திற்கு ஒருநாள் பிக்னிக் போயிட்டு வரலாம் அப்படின்னு சொன்னாங்க.

சரின்னு ஆண்டவர் டூருக்கு ஏற்பாடு செய்தாரு. மோட்சத்தை பார்த்துகிறணுமே! அதுக்கு புனித பேதுருவை காவலுக்கு வச்சிட்டுப் போயிட்டாங்க. போறதுக்கு முன்னாடி புனித பேதுருவுக்கு ஒரு கட்டளை கொடுத்திட்டு போனாரு இயேசு. நான் வரும்வரைக்கும் யாரையும் மோட்சத்துக்குள்ளே அனுமதிக்கக்கூடாது. இதுதான் கட்டளை. சரின்னாரு பேதுரு.

எல்லாரும் பூமிக்கு டூர் கிளம்பிட்டாங்க. அந்தச் சமயம் பார்த்து ஒரு டெய்லர் மோட்சத்துக்கு வந்திட்டார். தையல்காரர் மோட்சத்துக் கதவைத் தட்டினாரு. நீங்க இயேசு வரும்வரைக் காத்திருக்கணும் ! ஆண்டவரோடும், மாதாவோடும் எல்லாரும் டூர் போயிருக்காங்க, அவுங்க வந்தாத்தான் நீங்க உள்ளே போகமுடியும். ஆண்டவருடைய உத்தரவு இல்லாம யாரையும் நான் உள்ளே விடக்கூடாது. இது ஆண்டவரின் கட்டளை என்று சொன்னார் பேதுரு.

அதற்கு டெய்லர், என்னை உங்களுக்கு அடையாளம் தெரியலியா? நான் வருஷா வருஷம் குழந்தை இயேசுவுக்குச் சட்டை தச்சிக்கொடுக்கிற டெய்லர். என்னை உள்ளே விட்டிடுங்க. இயேசு ஒன்னும் சொல்லமாட்டாரு அப்படின்னாரு.

ஓ! அந்த டெய்லரா நீங்க? சரி எப்படியோ நான் இயேசுவை சமாளிச்சிக்கிறேன்; நீங்க யாருக்கும் தெரியாம இந்த மூளையிலே அமர்ந்திருங்க அப்படின்னாரு பேதுரு. மோட்சத்தின் கதவு சாத்தப்பட்டது. வழக்கம்போல பேதுருவும் தூங்கிட்டாரு. நம்ம டெய்லர் அந்த சமயம் பார்த்து மோட்சத்தைச் சுத்திப் பார்க்கலாம்னு கிளம்பிட்டாரு.

அவருக்கு ஓர் ஆசை! ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து பூமியைப் பார்த்தாரே! நாமும் ஒருமுறை இந்த மோட்சத்திலிருந்து பூலோகத்தைப் பார்ப்போமேன்னு சொல்லி எட்டிப்பார்த்தார்.

அங்கே ஒரு கடை. எதை எடுத்தாலும் பத்து ரூபா அப்படிங்கிற கடை. அந்தக் கடையிலேயிருந்து 10 ரூபா பொறுமான பொருள் ஒன்றை ஒரு பொடியன் எடுக்கிறதை டெய்லர் பார்த்திட்டார்.

டெய்லருக்கு கோபம் வந்திட்டு. அந்தச் சிறுவனைத் தண்டிக்க விரும்பினாரு. சுத்திப்பார்த்தாரு. அங்கே மேரி பிஸ்கட் பாக்கெட்டுகளை மாதா அடுக்கி வச்சிருந்தாங்க. இயேசுவுக்கு என்ன பிஸ்கட் பிடிக்கும்? மேரி பிஸ்கட் ! ஏன்னா அவுங்க அம்மா பேரு மேரிதானே . பாக்கெட்டுகளில் ஒன்றை எடுத்து திருடின பையனை அடிச்சாரு டெய்லரு. அந்த சமயம் பார்த்து நீர் போனவங்க எல்லாரும் திரும்பி வந்திட்டாங்க. இயேசுவுக்குச் சரியான பசி. மேரி பிஸ்கெட்டை எடுத்து சாப்பிடப் போனாரு. ஒரு பாக்கெட் கொறைஞ்சிருந்ததை இயேசு கண்டுபிடிச்சிட்டாரு. பேதுருவைக் கூப்பிட்டு என்ன நடந்திச்சுன்னு கேட்டார் இயேசு. பேதுரு உண்மையைச் சொல்லிட்டாரு. டெய்லர் போயி இயேசு கால்லே விழுந்து அவருக்கிட்ட தான் செஞ்சதைச் சொல்லிட்டாரு.

அப்போ ஜீஸஸ் சிரிச்சிக்கிட்டே டெய்லருகிட்டே, உலகத்திலே தப்பு செய்றவங்களையெல்லாம் தண்டிக்க நினைச்சீன்னா, இந்த மோட்சத்திலே உள்ள பொருள்கள் உனக்குப் பத்தாது அப்படின்னாரு. அந்த டெய்லர் கொஞ்சம் குறும்புக்காரரு. ஜீசஸைப் பார்த்து, தப்பு செய்றவங்களைப் பார்த்தா உங்களுக்குக் கோபமே வராதா? அப்படின்னாரு.

அதற்கு இயேசு, நான் கோபப்படுவேன். ஆனால் யாரையும் என் கோபம் காயப்படுத்தாது; நான் தண்டிக்கமாட்டேன், கண்டிப்பேன் அப்படின்னாரு. இயேசு- அவர் காயப்பட்டவர்களை நேசிப்பார் ; நேசிப்பவர்களைக் காயப்படுத்தமாட்டார்.

இதனால்தான் நேசமே உருவான , அன்பே உருவான (1 யோவா 4:8) இயேசுவை விண்ணகத் தந்தைக்கு மிகவும் பிடிக்கும் (நற்செய்தி).
அவரைப் போல விண்ணகத் தந்தையின் அன்பான மகள்களாக, மகன்களாக வாழ ஆண்டவர் இயேசு நமக்கு அருள்புரிவாராக.

மேலும் அறிவோம் :
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து (குறள் : 155).

பொருள் : அயலார் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளாமல் அவரைத் தண்டிப்போரைச் சான்றோர் ஒரு பொருளாகக் கருதி மதிக்கமாட்டார்கள். ஆனால் அயலார் செய்திடும் தீமையைப் பொறுத்தாற்றிக் கொள்வோரை அறவோர் அருமையும் அழகும் மதிப்பும் மிக்க பொன்னைப் போன்று போற்றிப் பேணிக்கொள்வர்.
இக்காலத்தில் பிள்ளைகள் பொதுவாகப் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிவதில்லை . ஓர் அம்மா தம் மகனிடம், "நான் உன்னைப் பெத்த அம்மாடா; என் பேச்சைக் கேளுடா" என்றதற்கு அவன், 'என்னைப் பெத்ததினால்தான் நீ 'அம்மா', இல்லேன்னா வெறும் 'சும்மா', பேசாம போமா' என்றான்,
ஒருவருக்கு ஐந்து ஆண்பிள்ளைகள் இருந்தும் அவரை யார் கேட்டாலும் அவர் தமக்கு ஒரே மகன்தான் என்று பதில் சொல்வார். ஏனெனில் அவருடைய ஐந்து மகன்களில் ஒருமகன் மட்டும்தான் அவருடைய பேச்சைக் கேட்டு நடந்தான்.

உலக மக்கள் அனைவருமே கடவுளுடைய பிள்ளைகள் என்றாலும், கடவுளால் சிறப்பாக அன்பு செய்யப்பட்டு அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட இஸ்ரயேல் "இறைமக்கள்" என்று அழைக்கப் பட்டனர். ஆனால், அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியா மல், அவருடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறி, திமிர் பிடித்தவர் களாகவும் வணங்காக் கழுத்துடையவர்களாகவும் வாழ்ந்தனர்.

இஸ்ரயேல் மக்களைப் பற்றி இறைவன் இறைவாக்கினர் எசாயா வாயிலாகக் கூறியுள்ளது நமது நெஞ்சத்தைக் கனக்கச் செய்கிறது. “விண்வெளியே கேள்; மண்ணுலகே செவிகொடு ... பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன். அவர்களே! எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள்.., கேடுகெட்ட மக்கள் இவர்கள், ஆண்டவரைப் புறக்கணித்து விட்டார்கள்” (எசா 1:2-4).

இந்நிலையில், "என் கடவுளே உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகிறேன்" (எபி 10:7) என்று கூறிக்கொண்டே இவ்வுலகுக்கு வந்த கிறிஸ்து ஒருவரே கடவுளுக்கு உகந்த மகன். எனவேதான் கிறிஸ்து திருமுழுக்குப் பெற்றபோது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (லூக் 3:21) என்று கடவுள் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்தார்.

கிறிஸ்து கடவுளுக்கு உகந்த மகன். ஏனெனில் அவர் 'கடவுளின் துன்புறும் ஊழியன்.' உண்மையில், கிறிஸ்து திருமுழுக்குப் பெற்றபோது, இறைவாக்கினர் எசாயா கடவுளின் துன்புறும் ஊழியன் குறித்து எழுதியுள்ள நான்கு கவிதைகளையும் நிறைவு செய்ய முன்வந்தார். அக்கவிதைகளில் ஒன்றுதான் இன்றைய முதல் வாசம். துன்புறும் ஊழியனின் சிறப்புப் பண்புகள் வருமாறு:
1. அவர்மீது கடவுளுடைய ஆவி தங்கும் (எசா 42:1).
2. நாள்தோறும் அவர் கடவுளுக்குச் செவிமடுப்பார் (எசா 50:4-5).
3, மனிதருடைய பாவங்களுக்குக் கழுவாயாக அவர் தம்மையே பலியாக ஒப்புக்கொடுப்பார், அதன் விளைவாகக் கடவுள் அவரை மகிமைப்படுத்துவார் (எசா 53:4-7). -

கிறிஸ்து யோர்தான் ஆற்றில் பெற்றத் திருமுழுக்கு அவர் கல்வாரியில் சிலுவையில் பெறவிருந்த திருமுழுக்குக்கு முன் அடையாளமாகத் திகழ்ந்தது. "நான் பெறவேண்டிய திருமுழுக்கு ஒன்று உண்டு. அது நிறைவேறும் அளவும் நான் மிகவும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்" (லூக் 12:50) என்று கிறிஸ்து கூறியது மேலே கூறப்பட்டுள்ள உண்மையை உறுதி செய்கிறது. | கிறிஸ்துவைப்பற்றி எபிரேயர் திருமுகம் கூறுவது நமது ஆழ்தியானத்துக்கு உரியது. "அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்; அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்” (எபி5:8-9).

நாம் கிறிஸ்துவின் மகிமையில் பங்குபெற வேண்டு மென்றால் அவருடன் துன்புறுவது இன்றியமையாத ஒன்றாகும். "நாம் கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும். அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்குபெறுவோம்" (உரோ 8:17).

திருமுழுக்கு வாயிலாக நாம் கடவுளின் பிள்ளைகளாகும் பேறுபெற்றுள்ளோம், கடவுள் நமக்கு அச்சத்தின் மனப்பான்மையை அருளாமல், கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனநிலையைக் கொடுத்துள்ளார். எனவே அவரை அப்பா, தந்தையே என அழைக்கிறோம் (உரோ 8:15). நாம் பெயரளவில் மட்டுமல்ல, உண்மையிலேயே கடவுளுடைய மக்கள் (1 யோவா 3:1), எனவே, நாம் எங்கும், எதற்கும் அஞ்சக்கூடாது. உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படக்கூடாது,
மனநோயாளி ஒருவர் தன்னை எலியென்று நினைத்து, பூனையைக் கண்டால் பயந்து ஓடுவார், மனநல மருத்துவர் அவரிடம், "நீ மனிதன், எலி அல்ல" என்றார், அதற்கு அவர், "டாக்டர்! நான் மனிதன். எலி அல்ல என்பது உங்களுக்குத் தெரியும்; எனக்குத் தெரியும்; ஆனால் அது அந்தப் பூனைக்குத் தெரியுமா?" என்று கேட்டு அழுதார்.

நாம் கடவுளின் மக்கள் என்பது பேய்க்குத் தெரியுமா? என்றுக் கேட்டு நம்மில் பலர் அஞ்சி அஞ்சி சாகிறோம். இது தேவையா? கிறிஸ்து அலகையை இவ்வுலகின் தலைவன் என்று குறிப்பிட்டு, "இவ்வுலகின் தலைவன் வந்து கொண்டிருக்கிறான், அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை " (யோவா 14:31) என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

எவ்வாறு அலகைக்குக் கிறிஸ்துவின்மேல் அதிகாரம் இல்லையோ, அவ்வாறே அதற்கு நம்மீதும் அதிகாரம் இல்லை. நாம் இடம் கொடுக்கவில்லையென்றால், அலகை நமக்குள் நழைய முடியாது. "அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்போது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும். கடவுளை அணுகிச் செல்லுங்கள். அவரும் உங்களை அணுகி வருவார்” (யாக்கோபு 4:7).

ஆண்டவரின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடும் இன்று நமது திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொள்வோம். ஒருமுறை திருமுழுக்குப் பெற்றவர்கள் மீண்டும் திருமுழுக்குப் பெறத் தேவையில்லை, திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொண்டால் போதும். தீமைக்குக் காரணமாகிய அலகையையும் அதன் செயல்பாடுகளையும் விட்டுவிடுவோம். குறிப்பாக, காமம், குடிவெறி, களியாட்டம், போட்டி, பொறாமை, கட்சிமனப்பான்மை, ஜாதிவெறி, மொழிவெறி ஆகியவற்றைத் தூக்கி எறிவோம். கடவுளையும் திருச்சபையையும் நம்பி, புதுப்பிறப்படைந்து புதுவாழ்வு வாழ்வோம். " நாம் நெஞ்சில் நிறுத்த வேண்டியது: “ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது, அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ ” (2 கொரி 5:17). 
 
கரை சேர்க்கும், கரை சேரும் கடவுள்

ரொம்ப பரிச்சியமான ஒரு கதைதான். ஆனால், இன்றைய நாளுக்கு இது பொருந்துவதாக இருப்பதால், அக்கதையுடன் நம் சிந்தனையைத் தொடங்குவோம். ஒரு ஊரில் இருந்த 3 பேர் ஒரு நாள் மாலையில் குடிப்பதற்காக ஆற்றின் அக்கரையிலுள்ள ஓர் ஊருக்குச் செல்கின்றார்கள். பரிசல் ஒன்றை எடுத்து இவர்களே ஓட்டிக்கொண்டு போய் அக்கரையை அடைந்து வெகு நேரம் குடிக்கிறார்கள். நன்றாக இருட்டிவிட, அவர்கள் வீடு திரும்புவதற்காகத் தாங்கள் வந்த பரிசலில் மீண்டும் ஏறி ஊர் திரும்பும் முகத்தான் துடுப்புப் போடுகின்றனர். துடுப்புப் போட்டுக்கொண்டே இருக்க விடிந்து விடிகின்றது. ஆனால், அவர்கள் அக்கரையிலேயே இருக்கின்றனர். போதை தெளிந்த அவர்கள் சற்றே திரும்பிப் பார்க்கிறார்கள். மது மயக்கத்தில் தாங்கள் ஏறி அமர்ந்த பரிசலைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்க்காமலேயே விடிய விடிய தங்கள் ஆற்றலை வீணாக்கியிருப்பதை நினைத்து வருந்துகிறார்கள்.

அவர்களின் மது மயக்கம் அவர்களைக் கரை சேர்க்கவும், கரை சேரவும் விடாமல் தடுத்துவிட்டது. இல்லையா?

ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவோடு கிறிஸ்து பிறப்புக் காலம் நிறைவு பெறுகிறது. திருவருகைக்காலத்தில் 4 மெழுகு திரிகள் ஏற்றி, குடில் ஜோடித்து, நட்சத்திரங்கள் கட்டி, கேரல்ஸ் பாடி, கேக் உண்டு, கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு, திருக்காட்சி என விழாக்களைக் கொண்டாடிய நாம் இன்றோடு நாம் அவற்றை நிறைவு செய்கின்றோம். இவ்வளவு நாளாக நாம் கரையின் இந்தப் பக்கம் இருந்துவிட்டோம். கரையின் இந்தப் பக்கம் மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டமாகவும் இருந்தது. இப்போது கரையின் அடுத்த பக்கமான சாதாரண, பொதுக்காலத்திற்குக் கடந்து செல்கின்றோம். ஆனாலும், இப்போது நாம் செல்லும் கரையின் மகிழ்ச்சி கொஞ்சமும் சாதராணது அல்ல.

இன்றைய நாளின் இறைவாக்கும் வழிபாடு கரை சேர்க்கும் கடவுளாக ஆண்டவராகிய இறைவனையும், கரை சேரும் கடவுளின் மகனாக இயேசு கிறிஸ்துவையும் முன்வைக்கின்றன. திருமுழுக்கின் வழியாக பாவக் கரை-கறையிலிருந்து தூய்மைக்குக் கரைசேர்த்த கடவுளோடு இணைந்து நாம் தொடர்ந்து கரை சேர இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

கி.மு. 586ஆம் ஆண்டு யூதாவில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு அடிமைகளாக நாடுகடத்தப்படுகின்றனர். இறப்பும், இருளும், அழிவும் மேலோங்கி நின்ற அந்த நேரத்திலும் அவர்கள் அந்தப் புதிய நாட்டில் இயல்பான வாழ்க்கை நடத்தக் கற்றுக்கொண்டனர். வாழ்க்கை என்னதான் இயல்பாக இருந்தாலும் அந்நிய மண்ணில் அவர்கள் இருப்பது அவர்களுக்கே ஏற்புடையதாக இல்லை. அவர்கள் அன்பு செய்த யூதா நாடு மிகவும் அழிந்த நிலையில் இருந்தது. 'சொந்த நாட்டிற்கு இனி திரும்ப மாட்டோம்' என்ற நம்பிக்கையின்மையும் விரக்தியும் மேலோங்கி நின்ற நிலையில், இறைவாக்கினர் எசாயா ஆண்டவரின் வாக்கை அவர்களுக்கு அறிவிக்கின்றார்: 'ஆறுதல் கூறுங்கள். என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள்.' இதயத்தில் நம்பிக்கை இழந்த, சிதறுண்டு போன மக்களுக்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் கொண்டு செல்லுமாறு எசாயாவை அனுப்புகிறார் இறைவன். இந்த மிகப்பெரும் நாடுகடத்தப்படுதலுக்குக் காரணமான அவர்களின் பாவங்கள் மறக்கப்பட்டன என்பதையும், அவர்கள் நாடு திரும்பும் நேரம் வந்துவிட்டதையும் அறிவிக்குமாறு பணிக்கின்றார். ஆண்டவர் தாமே சிதறுண்ட மக்களைக் கூட்டிச் சேர்த்துத் திரும்பக் கூட்டிவரும் நிகழ்வில் இயற்கையும் கரம் கோர்க்கிறது: 'பாழ்நிலம் சீராகிறது. பள்ளத்தாக்கு நிரப்பப்படுகிறது. மலை, குன்று யாவும் தாழ்த்தப்படுகிறது, கோணலானது நேராக்கப்பட்டு, கரடுமுரடானது சமதளமாக்கப்படுகிறது.

மேலும், மானிடர் தங்கள் வார்த்தைகளில் தவறிப் போவர், ஆனால், 'நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்' என்று தன் வாக்குறுதியின் உறுதித்தன்மையை அறிக்கையிடும் இறைவன், 'ஆயனைப் போல அவர்களை மேய்ப்பதாக' உருவகம் செய்கிறார்.

இறைவன் இஸ்ரயேல் மக்களை பாபிலோனியாவிலிருந்து மீட்டு மீண்டு எருசலேமில் கரை சேர்க்கும் நிகழ்வு மூன்று நிலைகளில் நடந்தேறுகிறது: (அ) 'ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்' - ஆக, ஒவ்வொருவரின் மேலும் இறைவனின் கரம் படும். ஆயன் குச்சியைக் கொண்டு சேர்ப்பதுபோல அவர் சேர்க்க மாட்டார். ஏனெனில், குச்சி தண்டனையின் அடையாளமாகும். தன் கைகளால் சிதறுண்டு போய்க்கிடக்கின்ற அனைத்து ஆடுகளையும் ஒன்று சேர்ப்பார். (ஆ) 'அவற்றைத் தம் தோளில் சுமப்பார்' - அடிமைத்தனத்தால் தங்களின் உடல் மற்றும் உள்ளத்தில் வலுவிழந்தவர்களை, அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டவர்களைத் தம் தோளில் சுமப்பார். (இ) 'சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்' - அதாவது, முதுகில் தட்டி அழைத்துக் கொண்டு போவார். சினையாடுகள் எளிதில் சோர்ந்துவிடக் கூடியவை. அவைகளுக்கு தொடர் அரவணைப்பு அவசியம். அந்த அரவணைப்பை இறைவன் தருவார்.

இவ்வாறாக, சிதறுண்டவர்களை ஒன்று சேர்த்து, வலுவிழந்தவர்களைத் தோள் மேல் சுமந்து, வலுக்குறைந்தவர்களைத் தன் வலது கரத்தால் தாங்கி கரை சேர்க்கின்றார் கடவுள்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஆயர் தீத்து தன் குழுமத்தில் உள்ளவர்கள் எப்படி கண்காணிக்கப்பட வேண்டும் என எழுதுகிறார். 'நாமும் ஒரு காலத்தில் அறியாமையில் இருந்தோம். கீழ்ப்படியாமல் இருந்தோம். நெறிதவறிச் சென்றோம். தீய நாட்டங்களுக்கும் பல்வகைச் சிற்றின்பங்களுக்கும் அடிமைகளாய் இருந்தோம். தீமையிலும் பொறாமையிலும் உழன்றோம். காழ்ப்புணர்ச்சி கொண்டவராய் ஒருவர் மற்றவரை வெறுத்தோம்' (தீத் 3:3) தன் குழுமத்தின் வலுக்குறைந்த பின்புலத்தைச் சுட்டிக்காட்டும் தீத்து, இவ்வலுவின்மையிலிருந்து நாம் விடுபட்டது, 'நம் அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாக ஆண்டவரின் இரக்கத்தை முன்னிட்டே, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுளால் மீட்கப்பட்டோம்' என எழுதுகின்றார்.

ஆக, 'புதுப்பிறப்பு அளிக்கும் நீரும், புதுப்பிக்கும் தூய ஆவியும், இவை இரண்டின் ஊற்றாக இருக்கின்ற கடவுளின் இரக்கமும்' பாவ இயல்பிலிருந்து மனுக்குலத்தை மீட்பு என்னும் கரையில் கொண்டு போய்ச் சேர்ப்பவைகளாக இருக்கின்றன. இங்கே 'நீர்' மற்றும் 'தூய ஆவி' ஒருவர் பெறுகின்ற திருமுழுக்கு அருளடையாளத்தை நினைவுபடுத்துகின்றன.

இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வை, ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் என்று சொல்லப்படும் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் மட்டுமே பதிவு செய்கின்றனர். லூக்கா நற்செய்தியாளர் மற்ற நற்செய்தியாளர்களைவிட மூன்று விதங்களில் முரண்படுகின்றார்: (அ) இயேசுவின் திருமுழுக்கின்போது திருமுழுக்கு யோவான் சிறையில் இருப்பது போல பதிவு செய்கிறார் லூக்கா (காண். 3:20). 'மக்கள் எல்லாரும் திருமுழுக்கு பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்' என்று பதிவு செய்யும் லூக்கா, யார் இயேசுவுக்குத் திருமுழுக்கு கொடுத்தார்கள்? என்பதைப் பதியாமல் விடுகின்றார். (ஆ) மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில், இயேசு ஆற்றை விட்டு வெளியே வந்தவுடன் தந்தையின் குரல் கேட்கிறது. ஆனால், லூக்கா நற்செய்தியில், இயேசு திருமுழுக்குப் பெற்று இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது, 'தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்க' வானத்திலிருந்து ஒரு குரல் ஒலிக்கிறது. (இ) மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் இயேசு 'தண்ணீரால்' மட்டுமே திருமுழக்கு பெறுகின்றார். ஆனால், லூக்காவில், 'தண்ணீர்,' 'தூய ஆவி' என இரண்டு நிலைகளில் திருமுழுக்கு பெறுகிறார் இயேசு.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில் திருமுழுக்கு யோவானிடம் மக்கள் வருகிறார்கள். 'அவர்கள் மீட்பரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என அவர்கள் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.' 'மெசியா எதிர்பார்ப்பு' இயேசுவின் காலத்தில் மிகவும் உச்சநிலையில் இருந்தது. ஏனெனில், இயேசுவின் சமகாலத்து மக்கள் தாங்கள் உரோமையர்களால் அனுபவித்த அரசியல், சமூக, சமய, கலாச்சார துன்பங்களிலிருந்து தங்களை விடுவிக்க மெசியா வர வேண்டும் என மிகவும் எதிர்நோக்கியிருந்தனர். வரவிருக்கும் மெசியா முதலில் ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்துவார் என்பதும் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆகையால்தான், 'மனமாற்றத்தை' அறிவித்து, மனமாற்றத்திற்கான திருமுழுக்கு கொடுத்து வந்த திருமுழுக்கு யோவான் தங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக நினைக்கின்றனர். ஆனால், அதை மறுக்கிறார் யோவான்.

இயேசுவின் திருமுழுக்கு அனுபவம் இரண்டு நிலைகளில் இருக்கிறது: ஒன்று, அவர் திருமுழுக்கு யோவானின் திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றார். ஏன்? தன்னிடம் பாவம் இருப்பதால் அல்ல. மாறாக, 'மனமாற்றம்' என்பது 'கரைக்குத் திரும்புவது' என அறிந்திருந்தார் இயேசு. இதுவரை நாசரேத்தில் மறைந்து வாழ்வு வாழ்ந்த இயேசு, தண்ணீரில் மறைந்திருப்பது போல மறைந்து நின்ற இயேசு, இப்போது கரை சேர்கின்றார். முற்காலத்தில் இதே யோர்தானைக் கடந்துதான் யோசுவா தலைமையில் இஸ்ரயேல் மக்கள் பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குக் கரை ஏறினார்கள். இந்த 'கரை சேரும் நிகழ்வு' வழியாகத் தன் பொதுவாழ்வையும் பணிவாழ்வையும் தொடங்ககிறார் இயேசு. இரண்டு, இயேசு தூய ஆவியால் திருமுழுக்கு பெறுகிறார். இத்தூய ஆவியால்தான் இயேசுவின் பணி உந்தித் தள்ளப்படுகிறது. தன் உயிர்ப்புக்குப் பின் இதே தூய ஆவியைத் தம் திருத்தூதர்கள்மேல் பொழிகிறார் இயேசு.

தங்களைக் கரை சேர்க்க யாராவது வர மாட்டார்களா? என்று மெசியா எதிர்நோக்கில் மேலோங்கியிருந்தவர்கள் நடுவே, தூய ஆவியால் நிரப்பப்பட்டவராய்க் கரை சேருகிறார் இயேசு.
இவ்வாறாக, பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்தவர்களை எசாயா இறைவாக்கினர் வழியாக எருசலேம் என்னும் கரை சேர்க்கிறார் ஆண்டவராகிய கடவுள். பாவத்திலும் தீமையிலும் உழன்றவர்களை மீட்பு என்ற கரையில் சேர்க்கின்றார் கடவுள். 'மெசியா வந்து எங்களை மீட்பார்' எனக் காத்திருந்தவர்களில், 'நீ இறைவனின் அன்பார்ந்த மகன்-மகள்' என்று கடவுள் சாயலைத் தூண்டி எழுப்பி, பணிவாழ்வு என்னும் கரை சேர்ந்து மற்றவர்களைக் கரை சேர்க்க கரம் குவிக்கின்றார் இயேசு.

இப்படிப்பட்ட இறைச் செயலையே இன்றைய பதிலுரைப்பாடலில் திருப்பாடல் ஆசிரியர், 'ஆண்டவரே! நீர் எத்துனை மேன்மைமிக்கவர்! ... உமது ஆவியை நீர் அனுப்பி மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்' (திபா 104:1,30) எனப் பாடுகின்றார்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?

1. அக்கரைக்கும் இக்கரைக்குமான வாழ்க்கை

கிறிஸ்து பிறப்புக் காலம் என்னும் அக்கரையில் இருந்த நாம், பொதுக்காலம் என்னும் இக்கரைக்குள் வருகின்றோம். மகிழ்ச்சி, கொண்டாட்டம் விடுத்து வாழ்வைத் தொடங்குவது கொஞ்சம் கடினமாகவே இருக்கும். பழையவற்றின் நினைவுகள் நம்மை இழுக்கும். பழைய நினைவுகள் மகிழ்ச்சி தந்தால் பரவாயில்லை. சில நேரங்களி;ல் நாம் காயப்பட்ட நினைவுகள் நம்மைப் பின் நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கும். நாம் அனைவருமே காயப்பட்டிருக்கிறோம். காயப்படுத்தியிருக்கிறோம். வருத்தம் தரும் தவறுகள் செய்திருக்கின்றோம். ஆனால், நாம் எந்த நிலையில் இருந்தாலும் அவைகளிலிருந்து விடுபட்டு 'மகிழ்ச்சி' என்ற கரையை அடைவது சாத்தியம் எனச் சொல்கிறார் கடவுள். நாம் தயங்கி நிற்கும்போது அவரே முன்வந்து நம்மைக் கரைசேர்க்கத் தன் கரத்தை நீட்டுகின்றார்.

2. புதுப்பிறப்பு அளிக்கும் நீர், புதுப்பிக்கும் தூய ஆவி

திருமுழுக்கு பெற்ற நாம் ஒவ்வொருவரும் புதுப்பிறப்பளிக்கும் நீரினால் கழுவப்பட்டுள்ளோம், தூய ஆவியால் புதுப்பிக்கப்பட்டும் உள்ளோம். மேலும், கடவுளின் இரக்கத்தை முன்னிட்டு நாம் மீட்கப்பட்டுள்ளோம். அந்த இரக்கத்தின் துணையால் நாம் பழைய கட்டுக்களை அவிழ்த்துவிடவும், பழைய இயல்புகளைக் களைந்துவிடவும் முடியும். அக்கரைக்குப் பரிசலில் சென்றவர்கள் பரிசலின் கயிற்றை அறுக்காமல் விடிய விடிய துடுப்புப் போட்டதுபோல, நானும் சில நேரங்களில் என் கயிறுகளை அவிழ்த்துவிடாமல், அக்கரையிலேயே கட்டிவிட்டு நிற்கலாம். ஆனால், என் பழைய இயல்பு என்னும் கயிற்றை நான் அறுக்கும்போது, அவரின் அருள்துணையால் நான் அக்கரை அடைவேன்.

3. நீரே என் அன்பார்ந்த மகன்-மகள்

இயேசுவின் வாழ்வில் திருமுழுக்கு ஓர் அடித்தள அனுபவம். இந்த அனுபவம் அவருடைய ஒட்டுமொத்த வாழ்வை அப்படியே முழுவதுமாகப் புரட்டிப் போட்டுவிடுகிறது. 'நீரே என் அன்பார்ந்த மகன்' எனத் தன் தந்தையாகிய கடவுளால் அழைக்கப்பட்டதால், ஒருவர் மற்றவரை, 'நீர் என் சகோதரர், சகோதரி' என அழைக்கிறார் இயேசு. இப்படி அவர் மற்றவர்களை அழைப்பதற்காக வெட்கப்படவில்லை. ஆகையால் தான் அவரின் பார்வையில் அனைவரும் - யூதர்கள், சமாரியர்கள், புறவினத்தார்கள், பெண்கள், குழந்தைகள், தொழுநோயாளர்கள், கண்பார்வையற்றோர், முடக்குவாதமுற்றோர், இறந்தோர் – சமமாகத் தெரிகின்றனர். அனைவரோடும் அவரால் பழக முடிகின்றது. இறைவனின் அரசு அனைவருக்கும் சொந்தம் எனவும் அது சமத்துவத்திலும், சகோதரத்திலும், சுதந்திரத்திலும் அடங்கியுள்ளது எனவும் கற்பிக்கின்றார். 'நான் இறைவனின் மகன்' என்ற அனுபவம் அவரின் முழு ஆளுமையையும் ஆட்கொள்கின்றது. இறப்பு வரை அவருக்கு இருந்த ஒரே அடையாளமும் இதுதான். ஆகையால் தான், 'இவன் தன்னையே இறைமகனாக்கிக் கொண்டான்' என குற்றம் சுமத்தப்படுகின்றார். நாம் பெற்ற திருமுழுக்கின்போதும் நமக்கு இதே அனுபவம் கிடைக்கிறது. ஆனால், அதை நாம் உள்வாங்கியிருக்கிறோமா? திருமுழுக்கில் நாம் பாவம் என்னும் கரையைக் கடந்து தூய வாழ்வு என்னும் கரை சேர்கிறோம். அப்பயணத்தில் நாம் தாங்கியிருக்கும் இறையியல்பு நம்மில் புதுப்பிக்கப்படுகிறது. திருமுழுக்கில் நாமும் நம் இறைத்தன்மையை மீட்டெடுப்பு செய்வதால், நாமே கடவுளாக கரை சேர்கிறோம்.

இறுதியாக, நம்மைக் கரை சேர்க்கும் கடவுள் நமக்கு ஆறுதலும், கனிமொழியும் கூற, அவரின் இரக்கம் அன்றாடம் நம்மைப் புதுப்பிக்கிறது. இயேசுவோடு இணைந்து நாமும் கரை சேர்ந்தால் நாமும் இறைவனின் அன்பார்ந்த பிள்ளைகளே.

இந்த அனுபவத்திற்கு நாம் மற்றவர்களை அழைத்துச் செல்லும்போது நாமும் கரை சேர்க்கும், கரை சேர்க்கும் கடவுள்களே!


நம்பிக்கைக்கு செயல்வடிவம் கொடுப்போம்


 

நிகழ்வு         
         சீனாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் எட்டு வயது சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் ஒருநாள்கூடத் தவறாமல் ஆலயத்திற்குச் சென்றுவிடுவாள். ஆலயத்தில், குருவானவர் (Missionary) ஜெபிப்பதையும், மறையுரை ஆற்றுவதையும் மிக நுணுக்கமாகக் கவனித்து வந்தாள். இது மட்டுமல்லாமல், குருவானவர் ஊரில் இருக்கக்கூடிய நோயாளிகளைச் சந்திப்பதையும், அவர்களிடத்தில் ஆறுதலான வார்த்தைகளைப் பேசுவதையும், ஏழை எளிய மக்களுக்கு உதவுவதையும், பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லாரிடத்திலும் அன்புடன் பழகுவதையும் அவள் தொடர்ந்து கவனித்து வந்தாள்.  

இதற்கிடையில் அவளுக்கு பள்ளியில் விடுமுறை நாட்கள் வந்தன. எனவே அவள் விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காக தூரத்தில் இருந்த தனது பாட்டி வீட்டுக்குச் சென்றாள். ஒரு ஞாயிற்றுக்கிழமையின்போது அவளுடைய பாட்டி அவளை அந்த ஊரில் இருந்த ஆலயத்திற்குக் கூட்டிக் கொண்டுபோனாள். ஆலயத்தில் குருவானவர் இல்லாததால், ஒரு அருட்சகோதரி எல்லாருக்கும் மறைக்கல்வி சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். எனவே பாட்டி சிறுமியை மறைக்கல்வி வகுப்பில் விட்டுவிட்டு, மறைக்கல்வி வகுப்பு முடியும் மட்டும் வெளியே அவளுக்காகக் காத்திருந்தார்.  

அந்த நாளில் அருட்சகோதரி ஒரு கதையோடு மறைக்கல்வி வகுப்பைத் தொடங்கினார். ஓர் ஊரில் ஒரு மனிதர் இருந்தார். அவர் இறைவனிடத்தில் நம்பிக்கையோடு ஜெபிக்கக்கூடியவர். அதே நேரத்தில் மக்களையும் அவர் அளவுகடந்த விதமாய் அன்பு செய்யக்கூடியவர். நோயாளிகள், ஏழைகள், பெரியவர், சிறியவர் என எந்தவொரு வித்தாசமில்லாமல் எல்லாரிடத்திலும் அன்பாய் பழகக்கூடியவர்... இயேசுவின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப வாழக்கூடிய இப்படிப்பட்ட ஒரு மனிதரை யாராவது, எங்காவது பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.  உடனே விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு வந்திருந்த அந்த சிறுமி, “சிஸ்டர், நீங்கள் சொன்னது போன்று நான் ஒரு மனிதரைப் பார்த்திருக்கிறேன். அவர் வேறு யாருமல்ல, எங்கள் ஊரில் இருக்கின்ற குருவானவர்” என்றார்.  

“அருமை” என்று சொல்லி அந்தச் சிறுமியைப் பாராட்டிய அருட்சகோதரி, திருமுழுக்குப் பெற்றிருக்கின்ற நீங்கள் ஒவ்வொருவரும் அந்த குருவானவரைப் போன்று இயேசுவின் மதிப்பீடுகளின்படி வாழவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை சொன்னார்.  

வாட்ச்மேன் நீ (Watchman Nee) என்ற பிரபல எழுத்தாளர் சொல்வார், “நம்பிக்கைக்கு செயல்வடிவம் கொடுப்பதே திருமுழுக்கு”  (Baptism is Faith in Action) என்று. எவ்வளவு அர்த்தம் நிறைந்த வார்த்தைகள் இவை.

  பாவிகளுக்காகக் கொடுக்கப்பட்ட திருமுழுக்கை, பாவமற்ற இயேசு ஏன் பெறவேண்டும்?
 
         இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழாவை அல்லது ஆண்டவர் இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றதை நினைவுகூர்ந்து பார்க்கின்றோம்.  ‘மக்கள் யாவரும் பாவமன்னிப்புப் பெற்று, மனம்மாறவேண்டும்’ (லூக் 3:3) என்பதற்காக யோவான் திருமுழுக்குக் கொடுத்து வந்துகொண்டிருந்த வேளையில், ஒரு பாவமும் அறியாத இயேசு திருமுழுக்குப் பெறுவது முறையா? என நாம் கேள்வி எழுப்பலாம். இது ஒருபக்கம் இருந்தாலும், இயேசு பெற்ற திருமுழுக்கு எந்தெந்த விதத்திலெல்லாம் முக்கியத்துவம் பெறுகின்றது? அது என்னென்ன செய்திகளை நமக்கு எடுத்துச் சொல்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு பெற்ற திருமுழுக்கு நமக்கு மூன்று முதன்மையான செய்திகளை எடுத்துச் சொல்கின்றது. ஒன்று, அவர் மக்களில் ஒருவராகத் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வதற்காகத் திருமுழுக்குப் பெறுகின்றார் என்பதாகும். முன்னமே பார்த்ததுபோல, பாவிகள் யாவரும் மனம்மாறி, ஆண்டவரிடத்தில் திரும்பிவர வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்ட திருமுழுக்கில், இயேசு பங்கு பெறுவதன் வழியாக மனிதர்களில் ஒருவராகி, அவர்களுடைய சுய துக்கங்கள், கஷ்ட, நஷ்டங்களில் கலந்துகொள்ளத் தயாராகின்றார்.

இரண்டு, இயேசு பெற்ற திருமுழுக்கு, அவர் தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கியதன் அடையாளமாக இருக்கின்றது. எப்படியென்றால், இயேசு யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெற்றபிறகு பாலைவனத்திற்குச் சென்று, நாற்பது நாட்கள் நோன்பிருக்கின்றார். அதற்குப் பின்பு அவர் ‘மனம்மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ என்று நற்செய்தியைப் பறைசாற்றத் தொடங்கிவிடுகின்றார் (மத் 4:17). ஆகையால், இயேசு பெற்ற திருமுழுக்கு அவர் தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்குவதற்கான ஓர் அடையாளம் என உறுதியாகச் சொல்லலாம். மூன்றாவதாக, இயேசு பெற்ற திருமுழுக்கு, அவர் கல்வாரி மலையில் மானிடர் யாவருடைய மீட்புக்காக, தன்னை பலியாகத் தருவதன் ஒரு வெளிப்பாடாக இருக்கின்றது (மத் 20:22). இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வாழ்வினைக் கொடுக்க வந்தார். அந்த வாழ்வினை அவர் உறுதியாகத் தரப்போகிறார் என்பதை எடுத்துக் காட்டுவதன் அடையாளமாக இருப்பதுதான் அவர் யோர்தானில் பெற்ற திருமுழுக்கு ஆகும்.
 

இயேசுவின் திருமுழுக்கு நமக்குக் கொடுக்கும் அழைப்பு என்ன?  
 யோர்தான் ஆற்றில் இயேசு திருமுழுக்குப் பெறும்போது, தூய ஆவியார் அவர்மீது புறவடிவில் இறங்கி வருவதையும், தந்தைக் கடவுள், “இவரே என்னுடைய அன்பார்ந்த மைந்தர், இவர் பொருட்டு நான் பூரிப்படைபடைகிறேன்” என்று சொல்வதையும், பின்னர் இயேசு நற்செய்தி அறிவிக்கத் தொடங்குவதையும் நாம் நற்செய்தியில் வாசிக்கின்றோம். திருமுழுக்கின் வழியாக பாவங்கள் கழுவப்பட்டு, ஆண்டவரின் அன்பு மக்களாக மாறுகின்ற நாம் ஒவ்வொருவரும், இயேசுவின் – இறையாட்சியின் - மதிப்பீடுகளின்படி வாழவேண்டும் என்பதுதான் இந்த நாள் நமக்குத் தருகின்ற மேலான அழைப்பாக இருக்கின்றது.

 

இதைக் குறித்துக் காட்டும் விதமாகத்தான் திருமுழுக்கு அருளடையாளக் கொண்டாட்டத்தின்போது குருவானவர், ‘சாத்தானை விட்டுவிடுகிறீர்களா?’ என்று கேட்டுவிட்டு,  ‘இவை இவையெல்லாம் நம்புகிறீர்களா?’ என்று கேட்பார். ஆம், நாம் ஒவ்வொருவரும் பாவத்திற்கு மரித்து, கிறிஸ்துவால் உயிர்பெற்று, கிறிஸ்துவின் மதிப்பீடுகளான அன்பு, இரக்கம், பரிவு, பாசம், மன்னிப்பு போன்றவற்றின்படி நடக்கவேண்டும். அப்போதுதான் நாம் பெற்ற திருமுழுக்கு முழுமை பெறும்.
 
சிந்தனை
 
         ரேய்மென்ட் ப்ரவுன் என்ற அறிஞர் சொல்வர், “ஒருவர் குருவாகவோ அல்லது ஆயராகவோ அருட்பொழிவு செய்யப்பட்ட நாளைவிடவும், அவர் திருமுழுக்குப் பெற்ற நாள் மிகவும் முக்கியமானது” என்று. இவ்வார்த்தைகளை நாம் ஆழமாக சிந்தித்துப் பார்த்தோம் எனில், திருமுழுக்கின் முக்கியத்துவம் நமக்குப் புரிந்துவிடும். ஏனெனில், திருமுழுக்கின்போது ஒருவர் மறுபிறப்பு அடைகிறார். எனவே அத்தகைய மறுபிறப்பினை நாம் அர்த்தமுள்ளதாக மாற்ற, இயேசுவின் மதிப்பீடுகளின்படி நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். 
  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

No comments:

Post a Comment