Tuesday, 4 December 2018

அமல உற்பவி அன்னை மரியா


அமல உற்பவி அன்னை மரியா

டிசம்பர் 8 ஆம் தேதிஇன்றைய வாசகங்கள்


தொடக்கநூல் 3:9-15,20
எபே . 1:3-6, 11-12
லூக். 1:26-38


அருள்திரு முனைவர் ம.அருள்

அன்னை மரியா தூய ஆவியானவரின் அற்புத ஓவியம். ஏனெனில் அவர் அருள் மிகப் பெற்றவர் (லூக். 1:28). பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் (லூக். 1:42). எல்லாத் தலைமுறையினரும் பேருடையாள் எனப் போற்றும் அற்புதப் படைப்பு (லூக். 1:48). கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள். கொடிய போராட்டத்திலும், பெண்ணின் வித்து அலகையை வெல்லக் கூடிய அளவுக்கு அந்த திருமகனைப் பெற்றவள் (திவெ. 12:1).

உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மை கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார் (எபே. 1:4). இத்தகைய உண்மை நமக்கும் உரியது என்றால், அன்னை மரியாவுக்கு எவ்வளவோ அதிகம் பொருந்துமல்லவா. அன்னை மரியா அமல உற்பவம். இந்த சத்தியத்தைத் தான் திருத்தந்தை 9 ஆம் பத்திநாதர் 1854 ஆம் ஆண்டி டிசம்பர் 8 ஆம் தேதி விசுவாச பிரகடனம் செய்தார். இந்த உண்மை அறிவிக்கப்பட்ட நான்கு ஆண்டுகளில் லூர்து நகர் மசபியேல் கெபியில், 'நாமே அமல உற்பவம்' என்று, அன்னை மரியா பெர்னதெத் என்ற சிறுமியின் மூலமாக உலகிற்கு வெளிப்படுத்தினார். இதை இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருச்சபை என்ற கொள்கை வரைவில் (எண்: 56), பாவக்கறை ஏதுமில்லாதவர். கருவான நொடியிலிருந்து கடவுளின் அருளால், மாட்சிமையால் அணி செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கிறது.

அன்னை மரியா உண்மையிலே பாவ மாசு இன்றிப் பிறந்தவர், வாழ்ந்தவர் (லூக். 1:28, 42,48). இரண்டாவது கன்னிமை குன்றாமல் காக்கப்பட்டவர். இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகனைப் பெற்றெடுப்பார் (எசா. 7:14). அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர். அதோடு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” (லூக். 1:34) என்றும் வெளிப்படுத்துகிறார்.

மூன்றாவதாக, தன்னையே முழுமையாக அடிமை நிலைக்கு தாழ்த்தி, அர்ப்பணமாக்கியவர் அன்னை மரியா (லூக். 1:38). ஆகவே இறைவனின் அருட்செல்வம் மிகுதியானது. ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானது என்பதை மனித அறிவால் அறிய முடியாது (உரோ. 11:33) மனித அறிவுக்கும் அப்பாற்பட்டது! அதேபோல் தான் தமக்கு ஏற்புடையவர்களாகச் செய்தவர்களைத் தம் மாட்சிமையில் பங்கு பெறச் செய்கிறார் (உரோ 8:30). இறைவன் என்பது, அன்னை மரியாவுக்கு முழுமையாக பொருந்தும் அன்றோ!


குகைக்குள்ளே...

அருள்திரு இ.லூர்துராஜ்


இருள் அடர் பவமே நீ ஓடு

இறந்த இயேசுவைத் தன் மடியில் ஏந்திய மரியாவைச் சிலையாக வடித்தவர் உலகப் பெரும் சிற்பி மைக்கேல் ஆஞ்சலோ. சிலைக்கு பியத்தா என்று பெயர். அவரது வேலைப்பாட்டினைப் பாராட்டிய ஒருவர் ஒரு குறையாகச் சுட்டிக்காட்ட விரும்பி, “ஐயா, அன்னை மரியாவின் முகத்தை நீர் செதுக்கிய விதத்தைக் காணும் போது, அது 33 வயது மகனுக்குத் தாயாக இருக்கக்கூடிய முதிய தோற்றம் இல்லாது, மிகவும் இளமையாக, சிறுபெண்ணின் முகம் போல் உள்ளதே" என்றாராம். அதற்கு மைக்கேல் ஆஞ்சலோ சொன்ன பதில் என்ன தெரியுமா? ''பாவமும் பாவச் சிந்தனையும் உள்ளவர்களுக்குத்தான் மூப்பின் தன்மை வெளிப்படும், அன்னை மரியாவோ பாவமாசற்றவள். பாவச் சிந்தனையற்று அதன் நிழல்கூட தன்னை தீண்டாமல் வாழ்ந்தவள். எனவே அவள் எப்பொழுதும் இளமையாகத்தான் இருப்பாள்”.

மரியே, அழகின் முழுமை நீயே. உன்னிடம் பிறவிப்பாவம் என்பதே இல்லை ' (Tota pulchra es et macula Orginalis non est in te) என்று திருச்சபை என்றும் வியந்து பாடுகிறது. தமிழில் முதல் வழிபாட்டுப் பாடல்களைத் தந்த சந்தியாகப்பர் சுவாமிகள் சாவுக்குச் சவால் விட்டு முழங்குவார்:

இருள் அடர் பவமே நீ ஓடு - இனி
இருப்பது உனக்குச் சாக்காடு
அருள் பிரவாக உதயம் போல் - இதோ
அமல மாமரி உதிக்கின்றாள்.

தாஜ்மகால் - மனிதனது அன்பின் சாதனை. மனிதன் கட்டி எழுப்பியதே உலகப் பெரும் அதிசயங்களில் ஒன்றானால் இறைவன் எழுப்பும் ஆலயம் எப்படி இருக்கும்? உண்மையில் இறைவன் தன் திருமகனுக்கு ஓர் ஆலயம் எழுப்பினார். அதனை முதல் நற்கருணைப் பேழையாக்கினார். அதுதான் அன்னை மரியா. அந்தப் பேழையின் மீது எப்படிப் பாவத்தின் கறை படிய முடியும்? அன்பான ஷாஜகான் கட்டிய தாஜ்மகால் அன்பின் விளக்கம் என்றால் தூய்மையே உருவான இறைவன் கட்டிய கோயில் தூய்மையின் இலக்கணம் தானே!

வேதநாயகர் பாடினார்:
"வாசமலர்களைக் கள்ளி தரா - துயர்
மாங்கனி வேம்புதராதே - நல்ல
மாணிக்கப் பாத்திரமன்றித் தேவா மிர்தம்
மண்கலந் தன்னில் இராதே - ஒரு
மாசில்லான், மாசை வெறுப்பவன் - மாசுகள்
மாற்ற வந்தோன் புவி மீதே - ஒரு
மாசில்லாக் கன்னியல்லாது பிறரிடம்
வந்து பிறக்க வொண்ணாதே!”

இப்பொழுது புரிகிறதா அன்னை மரியாவின் அமல உற்பவத்திற்கான அடித்தளம்?

''தம்மால் முன்பே தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன் குறித்து வைத்தார். தாம் முன் குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார். தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார். தமக்கு ஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்குபெறச் செய்தார்" (உரோமை 8:29-30)

வரலாற்றைப் புரட்டுவோம். கி.பி.12ஆம் நூற்றாண்டில் ஒரு சர்ச்சை எழுந்தது. பிறவிப் பாவம் தீண்டியிருந்தால் மரியா பசாசுக்கு ஒரு நொடியாவது அடிமையாகி இருப்பாள். அபச்சாரம்! பிறவிப்பாவம் தீண்டாவிடில் அவளுக்கு இயேசுவின் மீட்புப் பயன் இல்லை. அபத்தம்! இதற்கு Decuit, Potuit, ergo fecit என்று நான்கு இலத்தீன் வார்த்தைகளில் பதில் சொன்னார் இறையியல் அறிஞர். இறையாற்றல் செய்ய முடிந்தது. இறையன்பு செய்ய விழைந்தது. எனவே மரியா கருவான கணம் தொடங்கி களங்கம் எதுவும் தீண்டாத அமலியாகத் திகழுகின்றார். இது நமக்கு நம்பிக்கைக் கோட்பாடு. திருச்சபையின் படிப்பினை.

1854 டிசம்பர் 8ஆம் நாள் திருத்தந்தை 9ம் பத்திநாதர் தனக்குக் கடவுள் தந்த தனி அதிகாரத்தோடு "மீட்பர் இயேசுவின் பேறு பலன்களை முன்னிட்டு எல்லாம் வல்ல இறைவனின் அருளாலும் தனிப்பெரும் சலுகையாலும் பேறுபெற்ற மரியா தனது உற்பவத்தின் முதல் நொடி முதல் பிறவிப் பாவத்தின் எந்த ஒரு மாசும் அணுகாமல் பாதுகாக்கப்பட்டாள்" என்று அறிக்கை செய்தார்.

1858 பிப்ரவரி 11ஆம் நாள் லூர்து நகர்த் திருக்காட்சிகளில் "நாமே அமலோற்பவம்” என்று தன்னை அறிமுகம் செய்து திருத்தந்தையின் அறிக்கைக்கு வலுச் சேர்த்தார் அன்னை மரியா.

விளைவு? இன்று மாசுபடிந்த மனித இயல்பின் தனிப்பெரும் மகிமை நீயே என்று உலகம் மரியாவைப் போற்றுகிறது. Our tainted nature's solitary boast! - ஆங்கிலக் கவிஞன் Wordworth - பிரிந்த கிறிஸ்தவச் சபையை, அன்னை மரியா பற்றி ஆர்வமற்ற மட்டுமல்ல, அவளைப் பழிப்பதில் தனி இன்பம் காணும் சபையைச் சார்ந்த ஒருவர் அன்னைக்குத் சூடிய புகழ்மாலை இது! எவ்வளவு அழகாக, தெளிவாக, சுருக்கமாக, பொருத்தமாகப் பாடியிருக்கிறார்!

ஆம் நாம் வாழும் உலகம் கறைபடிந்தது. அங்கே களங்கமில்லா வெண்ணிலா அவள்! நமது மனித இயல்பு களங்கமுற்றது. அதன் தன்னிகரில்லா சீரும் சிறப்பும் அவள்!

உலகில் வாழ்ந்த காலத்தில் 'தான் அமல உற்பவி' என்ற உணர்வு மரியாவுக்கு இருந்திருக்குமா? இருந்திருக்காது. அது அவள் செயல் அல்ல, மீட்புக்கான கடவுளின் தயாரிப்பு. ஆனால் அப்பால் ஏதோ ஒரு இலட்சியம், ஒரு வாழ்வு, ஒரு பணி - அதனை உணர்ந்து வாழ்ந்திருப்பாள். அவள் பெற்ற அதே புனித நிலையைத் திருமுழுக்கில் நாமும் பெற்றோம். அவளுக்கு இருந்த அந்த உள்ளுணர்வோடு நாம் செயல்படுகிறோமா?

பாவத்தின் நிழல்தான் படியவில்லையே தவிர பாவத்தின் விளைவுகள் (துன்பம், சாவு முதலியன) அத்தனைக்கும் ஆளானாள்.

எனவே அமல உற்பவி என்ற உண்மை அவளை ஏதோ கனவுக் கன்னியாக்கிக் கற்பனை உலகில் உலவுபவளாக தோற்றுவிக்கக் கூடாது. வானத்தில் வாழும் வழிபாட்டுக்குரிய தேவதை அல்ல, வாழ்க்கையோடு ஒட்டிய, வழிகாட்டக்கூடிய தாய் அவள்!

No comments:

Post a Comment