Thursday 6 December 2018

திருவருகைக் காலம் 2ஆம் ஞாயிறு

திருவருகைக் காலம் 2ஆம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்.

பாரூக்கு 5:1-9 ;
பிலி 1:4-6, 8-11 ;
லூக்கு 3:1-6 


ஒரு பெரிய பணக்காரன் செல்வச் செழிப்போடும், பெரும் மகிழ்வோடும் வாழ்ந்து வந்தான். காலப்போக்கில் கொள்ளைக் காரனாகவும் மாறிவிட்டான். ஆனால், அவ்வப்போது ஏழைகளுக்கு சில உதவிகளையும் செய்வான். ஒரு நாள் கடவுள் அவன் கனவில் தோன்றி ஒரு நாள் உன் வீட்டுக்கு வரப்போகிறேன் என்று சொல்லி மறைந்துவிட்டார். பணக்காரனும் ஏற்பாடு செய்தான். ஒரு நாள் கடவுள் வந்தார். பணக்காரன் மகிழ்வோடு வரவேற்று, எனது வீட்டிலுள்ள பணம், பொன், பொருட்கள் எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றான். கடவுள் உனது வீட்டிலுள்ள அனைத்தும் என்னிடமும் உள்ளது. ஆனால் என்னிடம் இல்லாத ஒன்று மட்டும் உன்னிடம் உள்ளது. அதை மட்டும் என்னிடம் கொடுத்து விடு. நீ வாழும் கரடு முரடான வாழ்க்கை , நீ செல்லும் தவறான பாதை, உனது தவறான செயல்பாடுகள், இவைகளுக்கு காரணமான உனது பாவத்தை மட்டும் என்னிடம் கொடுத்து விடு என்றார். அதை உணர்ந்த பணக்காரன் தனது பாவத்தை அறிக்கையிட்டு தன்னையும் தனது செயல்பாடுகளையும் செம்மைப்படுத்திக் கொண்டான்.

மக்களின் சீர்குலைந்த பாதச்சுவடுகளைச் செம்மைப்படுத்தி அவர்களின் மனங்களை மாற்றியமைத்து, இயேசுவின் வருகையை முன்னறிவிக்கின்றார் புனித திருமுழுக்கு யோவான். நாம் நடந்து வந்த பழைய பாதையைத் திரும்பிப் பார்க்க இன்றைய வாசகங்கள் அழைப்பு விடுக்கின்றன. பாவச்சூழலில் இருக்கும் இதயத்தை, புதிய பாதைக்குத் திருப்புவதே மனம் திரும்புதலாகும். இங்கு நாம் செம்மைப்படுத்த வேண்டியது கரடுமுரடான இடத்தையோ, மேடு பள்ளங்களையோ அல்ல. மாறாக நமது உள்ளங்களையே!

ஆண்டவருடைய வழிகளை ஆயத்தம் செய்யவும், பள்ளத்தாக்குகள் நிரப்பப்படவும், குன்றுகள் தாழ்த்தப்படவும்,
கரடுமுரடானவை சமதளமாக்கப்படவும் இவைகளில் நிறைவாக மனமாற்றம் காணவும் இன்றைய நற்செய்தி அழைக்கின்றது. மனம் மாறுதல் என்பது பழைய பாவ வாழ்வை, செயல்பாடுகளை முழுவதும் விட்டுவிடுதலாகும். திருமுழுக்குப் பெறுதல் என்பது புதிய சிந்தனைகளை, செயல்பாடுகளைத் தழுவிக் கொள்வதாகும்.

பழைய ஏற்பாட்டில் தாவீது அரசர் பாவம் செய்தபோது நாத்தான் இறைவாக்கினர் வழியாக இறைவன் சுட்டிக் காட்டியுள்ளார். அரசனும் இறைவா என் குற்றங்களை நான் உணர்கிறேன். உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன் என்று அறிக்கையிட்டார் (தி.பா. 51:3). தீயவர் தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு நீதியையும், நேர்மையையும், கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி என்கிறார் எசேக்கியல் (எசே 18:21). எருசலேமே உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் களைந்துவிட்டு, கடவுள் உனக்கு அருளும் மாட்சியின் பேரழகை என்றென்றும் ஆடையாக அணிந்து கொள் (முதல் வாசகம்). கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழவேண்டும். மனிதர் அனைவரும் மனமாறி கடவுள் அருளும் மீட்பைக் காண வேண்டும் என்கிறார் திருமுழுக்கு யோவான். அனைத்தையும் உய்த்துணரும் பண்பில் வளர, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்பட, நீதியின் செயல்களால் நிரப்பப்பட்டு நேர்மைக்குப் பாதை அமைக்க அழைப்பு விடுக்கிறார் புனித பவுல்.

இன்றையச் சூழலில் நமது இதயத்தில் நிரப்பப்பட வேண்டியவைகள் அன்பு, அமைதி, மகிழ்வு. அகற்றப்பட வேண்டியவை சுயநலம், பொறாமை, வைராக்கியம் போன்றவைகளே ! கரடு முரடான பாதையை, நேரிய பாதையாகவும், கோணலான சிந்தனைகளையும், குறுக்குப் பாதைகளையும் அகற்றி, புதிய பாதை உருவாக்க முன் வருவோம். இவைகளை நமதாக்கிக் கொண்டால் நமக்குள்ளே இருக்கும் பிளவுகள், தடைச்சுவர்கள் அகற்றப்படும் என்பதையும் உணர்வோம். தங்களின் பழைய பாவ இயல்பை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருந்த பரிசேயர்களைப் போல் இல்லாமல், ஏமாற்றி வாங்கியதை நான்கு மடங்காக திருப்பிக் கொடுக்க முன்வந்து, மனமாறிய சக்கேயுவைப் போல (லூக். 19:1-10) தனது வாழ்வைச் செம்மைப்படுத்தி, பிறரையும் இயேசுவிடம் அழைத்து வந்த, சமாரியப் பெண்ணைப் போல (யோவா. 4:25-42). நாம் மனமாறி வாழ, நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் நமக்காக பத்தடி எடுத்து வைப்பார் என்பதை உணர்வோம். எருசலேமே எழுந்திரு! கீழ் திசை நோக்கு! ஏனெனில் இது விடியல் வரும் காலம் (பாரூக் 5:5) என்பதற்கு ஏற்ப நமது இதயத்தில் இறைவனை ஏற்க, தடையாக உள்ள அனைத்தையும் அப்புறப்படுத்திச் செப்பனிட்ட புதிய பாதை அமைக்க, முன் வருவோம்.

நடந்த பாதைகள் தடுமாறினாலும், நடக்கும் பாதங்கள் தளர்ந்தாலும், நமது இதயம் என்ற நிலத்தில், அன்பு, அமைதி, சமாதானம் போன்ற விதைகளை விதைப்போம்.

சிந்தனைக்கு
உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டனிடம் நிருபர், "ஐயா நீங்கள் கண்டுபிடித்த நூற்றுக்கணக்கான விஞ்ஞான கண்டுபிடிப்புகளிலே மிகச் சிறந்த கண்டு பிடிப்பு எது?" என்று கேட்டார். அவரின் பதிலோ கேட்டவரை ஆச்சரியப்பட வைத்தது. அந்த விஞ்ஞானி தன்னையே தாழ்த்திச் சொன்னார், "நான் கண்டுபிடித்த எல்லா கண்டுபிடிப்புகளிலும் பெரிய கண்டுபிடிப்பு, நான் ஒரு பாவி என்று கண்டுபிடித்ததே ஆகும். இரண்டாவது நான் கண்டுபிடித்த மிக முக்கியமான கண்டுபிடிப்பு நாம் அனைவரையும் மீட்கவே இயேசு பிறந்தார். நம் பாவங்களைப் போக்க அவரின் இரத்தமே அல்லாமல் வேறு ஒன்றுமில்லை என்று கண்டு பிடித்தேன்” என்றார். எத்தனை அருமையான பதில்!

நமது குற்றங்களைச் சுட்டிக்காட்டும்போது அக்கறையோடு ஆராய வேண்டும். அவற்றை கேட்டுக்கொள்ளும் மனப்பக்குவமும் நம்மில் வளர வேண்டும்.




நம்மைச் சரிசெய்துகொள்ள முன்வருவோம்


இஸ்ரயேல் நாட்டிலே, மக்களிடம் பணமிருந்தது, பதவி இருந்தது, பட்டம் இருந்தது, பரிசு இருந்தது. எல்லாருக்கும் ஓரளவு உண்ண உணவு இருந்தது, உடுக்க உடை இருந்தது, இருக்க இடமிருந்தது.

கடல் இருந்தது!
நதியிருந்தது!
சீனாய் மலையிருந்தது!

ஆனாலும் இன்றைய முதல் வாசகத்தில் பாரூக்கு இறைவாக்கினர் கூறுவது போல், பலரின் முகத்திலே துயரக் கோலம் !

மக்களைச் சுற்றி மாக்கோலங்கள் இருந்தன! மலர்க்கோலங்கள் இருந்தன! மங்களக்கோலங்கள் இருந்தன!

ஆனால் மனிதர்களின் முகத்திலோ மகிழ்ச்சிக்கோலங்கள் இல்லை !

எங்கு பார்த்தாலும் கரடுமுரடான முகங்கள்!

இதற்கு என்ன காரணம்? திருமுழுக்கு யோவான் சிந்தித்தார்! தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்டு வாழ்ந்த அவருக்குச் சரியான பதில் கிடைத்தது.

இவர்களின் தேவை இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை! அதனால்தான் இவர்கள் முகங்கள் சோகத்தால் நிரம்பி வழிகின்றன! அவர்களுக்குத் தேவையானது என்ன?

மீட்பு ! அதாவது விடுதலை!
தீராத நோயிலிருந்து விடுதலை!
மாறாத பாவத்திலிருந்து விடுதலை!
மரண பயத்திலிருந்து விடுதலை!

அவர்களுக்குத் தேவை ஒரு மீட்பர்!

இயேசு நோயிலிருந்து மக்களுக்கு விடுதலை அளித்தார் (மத் 9:27-31); பாவத்திலிருந்து விடுதலை அளித்தார் (லூக் 7:36-50); மரணத்திலிருந்து விடுதலை அளித்தார் (யோவா 11:1-44).

ஆகவே இயேசுவைப் பற்றி திருமுழுக்கு யோவான் போதிக்கத் தொடங்கினார்! இயேசுவே உங்கள் மீட்பர்! அவர் தரும் விடுதலையைப் பெற உங்கள் இதயங்களைத் தூயதாக்கிக் கொள்ளுங்கள்! அவர் நோயினாலும், பாவத்தாலும், மரணபயத்தாலும் பாதிக்கப்பட்டு கரடுமுரடாகக் காட்சியளிக்கும் உங்கள் உள்ளத்திற்கு விடுதலையளிப்பார் என்றார்.

உங்கள் உள்ளம் சிரிக்கும்போது உங்கள் உதடுகள் சிரிக்கும் என்றார்!

அன்று இயேசுவே மீட்பர் என அறிக்கையிட்ட அதே திருமுழுக்கு யோவான் இன்று நம் முன் தோன்றினால் என்ன சொல்வார்?

2015 ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்ரயேல் நாட்டிலே காணப்பட்ட அதே கரடுமுரடான முகங்களை இன்றும் இந்த உலகத்திலே நான் பார்க்கின்றேன்.

உங்களில் ஒருசிலரே சிரிக்கின்றீர்கள் !

சிலர் சிரிப்பதையே மறந்துவிட்டீர்கள் !

காரணம் இன்றைய 2- வது வாசகத்தில் புனித பவுலடிகளார் கூறுவது போல நீங்கள் குற்றமற்றவர்களாக வாழ இன்னும் முன்வரவில்லை என்பார்.

இன்று, நாம் எல்லாருமே பாவிகள் தான் என்பதை ஏற்றுக்கொண்டு, கரடுமுரடாகக் காட்சியளிக்கும்

நமது கனவுகளை,
நமது எண்ணங்களை,
நமது செயல்களை,
நமது வாழ்க்கை முறைகளை,
நமது நாகரிகங்களை,
நமது பண்பாடுகளை,
சரிசெய்துகொள்ள முன்வருவோம்!

மனம் மாறும்போது,
முகமும் மாறும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!
நமது மனமாற்றம் நாம் தேடும் மகிழ்ச்சியை நமக்குத் தரும்!
அப்போது நாம் ஒவ்வொருவரும்
கடலிடைப் பிறவா அமிழ்தாய்
மலையிடைப் பிறவா மணியாய்
கொடியிடைப் பிறவா மலராய் மாறி


காலையிலே பூபாளம் பாடி
மாலையிலே நீலாம்பரி பாடி
நாளெல்லாம் மகிழ்ந்திருப்போம்!

மேலும் அறிவோம் :
முகத்தின் முதுக்குறைந்த (து) உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும் (குறள் : 707).

பொருள் : உள்ளத்தில் தோன்றும் விருப்பு வெறுப்பு ஆகிய உணர்வுகளை விரைந்து வெளிப்படையாகக் காட்டும் முகத்தை விட பேரறிவு கொண்டது வேறு எதுவும் இல்லை!




ஒருவர் கடவுளிடம் தனக்கு ஏராளமான நிலம் வேண்டும் என்றார். கடவுள் அவரிடம், "நீ காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை எவ்வளவு தூரம் ஓட முடியுமோ அவ்வளவு தூரம் ஓடு, நீ ஓடிய நிலமெல்லாம் உனக்குச் சொந்தம்" என்றார், அந்த மனிதரும் காலை 6 மணியிலிருந்து வேகமாக ஓடினார். மாலை 5.30 மணி ஆனது. மீதியுள்ள அரை மணி நேரத்தில் அதிகமான நிலத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் தலைதெறிக்க ஓடிய அவர், மாலை ஆறு மணிக்குக் கீழே விழுந்து மாரடைப்பால் மாண்டுபோனார். பேராசை அவரது உயிரைக் குடித்துவிட்டது.

தவக்காலத்தைப் போன்று திருவருகைக் காலமும் மனமாற்றத்தின் காலம். திருவருகைக் காலத்தின் தலைசிறந்த போதகரான திருமுழுக்கு யோவான் நம்மை மனமாற்றத்திற்காக அழைக்கின்றார். இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள் காட்டி, பள்ளத்தாக்குகள் நிரப்பப்பட்டு, மலைகளும் குன்றகளும் தாழ்த்தப்பட்டு, கோணலானவை நேராக்கப்பட்டு, கரடு முரடானவை சமதளமாக்கப்பட வேண்டும் என்கிறார் (எசா 40:3-5). பேராசை என்னும் பள்ளத்தாக்கு நிரப்பப்பட வேண்டும்; ஆணவம் என்ற குன்று தாழ்த்தப்பட வேண்டும். நேர்மையற்ற கோணலான வாழ்வு நேரிய வாழ்வாக வேண்டும். கரடு முரடான உறவுகள் சரிசெய்யப்பட்டு செம்மையான உறவு மலர வேண்டும்.

குறிப்பாக, இன்றைய மனிதர்களை ஆட்டிப் படைக்கும் பேராசை என்னும் பள்ளத்தாக்கு நிரப்பப்பட வேண்டும். ஆசை இருக்க வேண்டும். ஆனால் பேராசை இருக்கக்கூடாது. “எவ்வகைப் பேராசைக்கும் இடம் கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள்" (லூக் 12:15). "பொருளாசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர்” (1 திமொ 6:10).

பணம் வேண்டும். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. கருவறை முதல் கல்லறை வரை சில்லரை தேவை. பொருள் பால் இல்லாமல் காமத்துப்பாலும் வாங்க முடியாது, ஆவின் பாலும் வாங்க முடியாது. ஆனால் பணத்தைக் கொண்டு எல்லாமே வாங்க முடியாது. பணத்தைக் கொண்டு உணவை வாங்கலாம், ஆனால் பசியை வாங்க முடியாது. பணத்தைக் கொண்டு பஞ்சு மெத்தை வாங்கலாம், ஆனால் உறக்கத்தை வாங்க முடியாது. பணத்தைக் கொண்டு மருந்துகள் வாங்கலாம், ஆனால் மன அமைதியை வாங்க முடியாது.

திருமுழுக்கு யோவான் எளிமை வாழ்வு வாழ்ந்தார். வசதி நிறைந்த நகரத்தில் வாழாமல், வசதி ஏதுமில்லா பாலைநிலத்தில் வாழ்ந்தார். ஆடம்பர உடை அணியாது ஒட்டக முடியிலான ஆடை அணிந்தார். தொகை தொகையாக செலவழித்து வகை வகையான உணவை உண்ணாமல், வெட்டுக் கிளியையும் காட்டுத் தேனையும் உண்டு வந்தார். மேலும், தங்களுக்குள்ள உணவையும் உடையையும் இல்லாதவர்களுடன் பகிரவும், கையூட்டு வாங்காமல் கிடைக்கும் ஊதியம் போதும் என்னும் மனநிறைவுடன் வாழ மக்களுக்கு அறிவுறுத்தினார் (லூக் 3:11-14).

பேராசைக்கு மாற்று மருந்து நமக்குள்ளதை ஏழை எளியவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் மனப்பாங்காகும். பணக்காரர் ஒருவர் எவருக்கும் எதுவும் ஈயாமல் படு கஞ்சனாக வாழ்ந்தார். ஓர் இரவு திருடர்கள் அவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய காலையும் கையையும் கட்டிவிட்டு வீட்டிலுள்ள பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். அப்போது அப்பணக்காரர். அழுதுகொண்டு, "ஐயோ! நான் வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சம்பாதித்ததை எல்லாம், இப்ப என் காலைக் கட்டி. கையைக்கட்டி வாரிக்கிட்டு போயிட்டாங்களே" என்றார்.

தங்களுடைய பொருள்களைச் சேர்த்து வைத்துப்பின் அவற்றை இழப்பவர்கள் பிறர்க்குக் கொடுப்பதில் உள்ள இன்பத்தை அறியாதவர்களா? என்று கேட்கிறார் வள்ளுவர்,

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்தாம் உடைமை
வைத்து இழக்கும் வன்கணவர் | (குறள் 228)

தண்ணீர் மேல் படகு சென்றால் அது உல்லாசம், படகுக்குள் தண்ணீர் சென்றால் கைலாசம். பணம் நமக்கு அடிமையாக இருந்தால் சொர்க்கம், பணத்துக்கு நாம் அடிமையானால் நரகம், மேலை நாட்டுப் பணக்காரர்கள் அமைதியைத் தேடி நமது நாட்டுக்கு வருகின்றனர். ஆனால் இந்தியர்களோ பணத்தைத் தேடி மேலை நாடு செல்கின்றனர், இது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

ஏழைகளும் ஏழையரின் உள்ளத்தினரும்தான் இறையாட்சியின் அருளடையாளங்கள், அவர்களே இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் பாரூக் குறிப்பிடும் விண்ணக எருசலேமின் மகிமையை அடைவர். அவர்கள் தான் கிறிஸ்துவின் நாளை எதிர்நோக்கிக் குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்பவர்கள் (பிலி 1:11), கண்ணீரோடு விதைக்கும் அவர்களே மகிழ்வுடன் அறுவடை செய்வர். அவர்களுக்கே கடவுளுடைய அரசு உரித்தானது (மத் 5:3). அவர்களே கடவுள் தரும் மீட்பைக் காண்பர் (லூக் 1:5). இன்றைய நுகர்வு கலாச்சாரத்திற்கு மாற்றுக் கலாச்சாரத்தை வகுத்துக் கொடுப்பர்கள்தான் ஏழ்மை வார்த்தைப்பாட்டை எடுத்த துறவறத்தார். ஆனால், இன்றைய துறவறத்தார் அக ஏழ்மையைக் கடைப்பிடிக்கும் | அளவுக்கு புற ஏழ்மையைக் கடைப்பிடிப்பதில்லை. புற ஏழ்மை இல்லாத அக ஏழ்மை பொருளற்றது.

ஒரு துறவற இல்ல விழாற்கு விருந்தினராக அழைக்கப்பட்ட ஒரு பொதுநிலையினர், அங்கு கொடுக்கப்பட்ட விதவிதமான அறுசுவை உணவை உண்டபின், "ஏழ்மை வார்த்தைப்பாடே இவ்வளவு ருசியாக இருந்தால், கற்பு வார்த்தைப்பாடு எவ்வளவு ருசியாக இருக்குமோ?" என்று கூறினாராம்! கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்,

இன்றைய விளம்பர உலகில் தேவையற்ற பொருள்களை எல்லாம் கவர்ச்சியுடன் விளம்பரம் செய்து நம்மை அவற்றிற்கு அடிமைகள் ஆக்குகின்றனர். தேவைகளைப் பெருக்குவதால் மன அமைதி வராது. தேவைகளைக் குறைப்பதால்தான் மன அமைதி கிடைக்கும்.

ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள்
ஆசைப்படப்பட்ட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தமாயே             (திருமூலர்)




காத்திரு

''சித்தார்த்தா " - ஆங்கில நாவல் இது. அதில் இப்படி ஒரு காட்சி. சித்தார்த்தா என்ற அந்த இளைஞன் ஒருத்தியைக் காதலிக்கிறான். அவள் எங்கே சென்றாலும் பின்னாலேயே சுற்றுகிறான். திடீரென்று ஒருநாள் தன்னைச் சுற்றித் திரியும் அவனைப் பார்த்து அவள் கேட்கிறாள்: ''என்னைக் காதலிக்க உனக்கு என்ன அருகதை உண்டு?" ஒருகணம் அதிர்கிறான். "என்ன கேள்வி இது? என்றாலும் இதோ பதில்" என்று அவளைக் காதலிக்கத் தனக்கு உள்ள தகுதியைப் பட்டியலிடுகிறான்.
1. என்னால் உன்னை நேசிக்க முடியும். 1 can love you.
2. என்னால் உன்னை நினைக்க முடியும். I can think of you.
3. எல்லாவற்றிற்கும் மேலாக என்னால் உனக்காகக் காத்திருக்க முடியும். Above all1 can wait for you.

இறைவனை அன்பு செய்கிறேன் என்பதற்கான அடையாளங்களில் ஒன்று அவனுக்காகக் காத்திருத்தல். அன்பு இல்லையென்றால் காத்திருத்தல் எரிச்சலாக இருக்கும். அன்புடன் என்றால் அதில் ஒரு த்ரில்' இருக்கும். 'காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு. காக்க வைப்பதில் சுகம் உண்டு',

நம் வாழ்வில் பெரும்பகுதி காத்திருக்கிறோம் - பயணத்தில் பஸ்ஸுக்காக, படுக்கையில் உறக்கத்துக்காக, வாசலில் நண்பனுக்காக, வரிசையில் (2) திரைப்பட நுழைவுச் சீட்டுக்காக... இப்படி ஏதோ ஒன்றுக்காக, யாரோ ஒருவருக்காக.

ஆனால் இறைவனுக்காக எந்த அளவு, எவ்வளவு நேரம் காத்திருக்கிறோம்?

"ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப் போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்த (லூக்.2:26) சிமியோன் எப்படியெல்லாம் இஸ்ராயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலுக்காகக் காத்திருந்தார்! “உமது மீட்பை என் கண்கள் கண்டு கொண்டன" என்ற அவரது உற்சாக வார்த்தைகளில் எத்துணை மகிழ்ச்சி, மனநிறைவு! மீட்பர் அரசியல் தலைவன் அல்ல துன்புறும் ஊழியன் என்ற உண்மையின் வெளிப்பாடு அல்லவா அன்றே அவர் கண்டது!

அன்னை மரியா எப்படியெல்லாம் காத்திருந்தாள்?
- மனிதர் அவளுக்கு வழங்கும் அடைமொழிகள் எத்தனை எத்தனை! விண்ணகத்தின் வாயிலே, விடியற்கால விண்மீனே, நீதியின் கண்ணாடியே, மறைபொருளின் ரோஜா மலரே இப்படியாக.

- கடவுள், தூதன் கபிரியேல் வழியாக வழங்கிய அடைமொழி அருள்மிகப் பெற்றவரே, இறையாசி நிறைந்தவரே என்பது

- மரியா தனக்குத் தானே வழங்கிக் கொண்ட அடைமொழி: 'இதோ ஆண்டவருடைய அடிமை'.

அடிமை என்பவன் யார்?
- தலைவனுக்காகக் காத்திருப்பவன்.
- தலைவனுக்குத் தன்னையே அர்ப்பணித்தவன்.
- தலைவனுக்கு அனைத்து வகையிலும், பணிவிடை புரிபவன்
- தலைவனுக்குக்காகத் தன்னையே இழப்பவன்.
அடிமை என்ற சொல்லில் காத்திருத்தல் மட்டுமல்ல வெறுமை யாக்குதலைப் பார்க்கிறோம்.

மனிதனோடு இணைய இறைவன் தன்னையே வெறுமையாக்கினார். (பிலிப்.2:7) இறைவனோடு இணைய மனிதன் தன்னையே வெறுமையாக்க வேண்டும்.

வெறுமையாக்குவது இறைவன் தன் அருளை, மீட்பை, நிறைவைப் பெற மிகவும் இன்றியமையாதது.


"உன் பாத்திரம் களிமண்ணால் நிறைந்திருந்தால் இறைவன் ஊற்றும் பால் அதில் விழும் போது தெறித்துச் சிதறும். எவ்வளவுக்கு எவ்வளவு அது காலியாக, வெறுமையாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு இறைவன் ஊற்றும் பாலால் நிரம்பும்” என்ற சிலுவை அருளப்பரின் கூற்று திருவருகைக்காலச் சிந்தனைக்கு ஏற்றது.

அயர்லாந்து நாட்டில் ஒரு கிறிஸ்துமஸ் பழக்கம் உண்டு. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னிரவு வீட்டில் உள்ள கதவுகளையெல்லாம் திறந்து வைப்பார்கள். முன் கதவுக்கருகில் ஒரு மெழுகுதிரியை ஏற்றி வைப்பார்கள். பெத்லகேமில் அன்று இரவு மரியாவும் சூசையும் வீடுதேடி அலைந்ததன் நினைவாக அவர்களை வரவேற்க ஆயத்தமாக இருப்பது போல இப்பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

திருவருகைக் காலத்தில் மீட்பரின் வருகைக்காக நமது இதயக் கதவு திறந்திருக்கிறதா? அருள்வாழ்வு என்னும் விளக்கு அங்கு ஒளிர்கிறதா? “இதோ நான் கதவருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால் நான் உள்ளே சென்று அவர்களோடு உணவருந்துவேன். அவர்களும் என்னோடு உணவருந்துவார்கள்” (தி.வெ.3:20) என்கிறார் ஆண்டவர்.

வர இருப்பவர் எரேமியா பார்வையில் நீதியின் தளிர். (எரே.33:15)
எசாயா பார்வையில் அமைதியின் ஊற்று. (எசா.9:6)

அந்த நீதியின் தளிர் செழித்து வளர, அந்த அமைதியின் ஊற்று சுரந்து பாய நம் வாழ்வில் “ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்”. (புலம்பல் 3:26)

''கலைமானைக் கண்ணியில் சிக்க வைத்துப் பிடிக்க முடியாது. ஏனெனில் அதற்குக் கூர்மையான பார்வை உண்டு. ஒரு பறவை விழிப்பாய் இருந்தால் வெகு எளிதில் வலையில் சிக்காமல் தப்பித்துக் கொள்ள முடியும். இவ்வாறு மிருகங்களெல்லாம் தங்களையே காத்துக் கொள்ள விழிப்பாய் இருக்கின்றபோது நீ மட்டும் ஏன் விழிப்புடன் இருப்பதில்லை ?" - புனித பசிலியார்.







புதிய பாதை

மதுவுக்கு அடிமையாகிக் கிடந்து, பின் ஒருநாள், 'இனி நான் குடிப்பதே இல்லை' என்ற முடிவெடுத்து, மதுவிலிருந்து விலகி நிற்கும் ஒரு இனியவரைக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சந்திக்க நேர்ந்தது. 'ஃபாதர் நான் இன்னைக்கு ஒரு டிரைவரா இருக்கேன். கொஞ்ச வருடங்களுக்கு முன் நான் இப்படி இல்லை. ஒருமுறை இரவு ஊருக்குத் திரும்புமுன் பேருந்தில் ஏறுவதற்கு முன் நன்றாகக் குடித்தேன். கடையிலிருந்து பேருந்து நிலையம் தூரத்தில் தெரிந்தது. சீக்கிரம் போய் பேருந்து ஏற வேண்டும் என்று என் மனம் சொன்னாலும், கொஞ்ச நேரத்தில் என் கால்கள் தடுமாறுவதுபோல உணர்ந்தேன். ஒரே மயக்கமாக இருந்தது. அப்படியே விழுந்துவிட்டேன். நான் இறந்துவிட்டதாகவே நினைத்தேன். காலையில் கண் விழித்துப் பார்க்கும்போது மருத்துவமனையில் ஒரு கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தேன். நான் எப்படி இங்கே வந்தேன் என்று விசாரித்தேன். இரவில் ஒருவர் இங்கே கொண்டுவந்து சேர்த்ததாகச் சொன்னார்கள். கடவுளே எனக்கு இன்றைய இரண்டாம் வாழ்வைக் கொடுத்தார் என எண்ணினேன். அன்று குடியை நிறுத்தினேன்.' எல்லாம் முடிந்தது என்று நினைத்த அந்த நொடியில் ஒரு கனவுபோல எல்லாமே அவர் வாழ்வில் மாறிவிட்டது. போதையின் பாதை புதிய பாதையாக மாறியது.

நம் வாழ்வின் பாதை ஒன்றாக இருக்க, அங்கே புதிய பாதை ஒன்றை உருவாக்க இறைவன் வருவதாக இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சொல்கிறது. நம் எல்லாருடைய வாழ்விலும் இரண்டு பாதைகள் இருக்கின்றன. ஒரு பாதை நாம் அவரையும், அவரின் செயல்களையும் அறிய முற்படுவதற்குமுன் உள்ள பாதை. மற்றொரு பாதை அவரைக் கண்டவுடன் நாம் மேற்கொள்ளும் பாதை.

இன்றைய பதிலுரைப்பாடலிலிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம். 'ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல்கள் புரிந்துள்ளார்' (திபா 126) என்று அக்களிக்கின்றார் திருப்பாடல் ஆசிரியர். 'சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றியபோது நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்' என எழுதுகிறார். பாபிலோனிய நாடுகடத்தலின் பின்புலத்தில் பாடப்பட்ட இத்திருப்பாடலில் ஆசிரியர் தன் குழு அனுபவித்த ஒட்டுமொத்த வலியைப் பதிவு செய்கின்றார். தங்களுடைய நகரம், ஆலயம் என எல்லாம் அழிந்து தாங்கள் வேற்றுநாட்டுக்கு அடிமைகளாக நடத்திச் சென்றதை ஒரு இறப்பு அனுபவமாக, உறக்க அனுபவமாக நினைக்கின்ற ஆசிரியர், ஆண்டவர் தங்களை மீண்டும் தங்களின் நாட்டிற்கு அழைத்து வந்ததை ஒரு கனவு போல நினைத்துப்பார்க்கிறார். 'எல்லாம் முடிந்தது' என்ற அவர்களின் முந்தைய பாதை இருக்க, இறைவன் புதிய பாதையை அவர்களுக்கு வடிவமைத்துக்கொடுக்கின்றார்.

இந்த நிகழ்வையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். பாரூக் 5:1-9) வாசிக்கின்றோம். பாரூக்கு எரேமியா இறைவாக்கினரின் செயலர். பாரூக்கு நூல் கத்தோலிக்க விவிலியத்தின் இணைத்திருமுறை பகுதியில் இருக்கிறது. இதன் கிரேக்க மூலம் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கிறது. கிரேக்க மொழியில் எழுதப்பட்ட முதல் ஏற்பாட்டு நூல்களை யூதர்களும், பிரிந்த சகோதரர்களும் 'வெளிப்படுத்தப்பட்ட நூலாக' ஏற்றுக்கொள்வதில்லை.

பாபிலோனியாவுக்கு இஸ்ராயேல் மக்கள் அடிமைகளாக நாடுகடத்தப்பட்டபோது இவரும் உடன் சென்றவர். அதாவது, எருசலேமில் எழுதப்படிக்கத் தெரிந்த அனைவரையும் நெபுகத்னேசர் தன் அரண்மனைக்கு எடுத்துச்சென்றுவிட்டான். ஆக, பாரூக்கு அடிமைத்தனத்தின் கோரத்தை நேருக்கு நேர் கண்டவர். அரண்மனையில் இருந்ததால் அவர் அனுபவித்திருக்கும் வாய்ப்பில்லை.

'புரட்டிப்போடுதல்' - இதுதான் பாரூக்கின் இறைவாக்கின் மையம். இன்று இருக்கும் நிலையை நாளை ஆண்டவர் புரட்டிப்போடுவார் என்ற நம்பிக்கையைத் தருகிறார் பாரூக்கு.

பாரூக்கு ஐந்து வகை புரட்டிப்போடுதல்களை முன்வைக்கின்றார்:

1. துன்ப துயர ஆடை களையப்பட்டு, மாட்சியின் பேரழகு அணிவிக்கப்படும்.
2. ஒன்றுமில்லாத வெறுந்தலையில், ஆண்டவரின் மாட்சி மணிமுடியாகச் சூட்டப்படும்.
3. பெயரில்லாதவர்களுக்கு, தங்கள் பெயர்களை இழந்தவர்களுக்கு, 'ஐரின் டிகாயுசனேஸ்' ('நீதியில் ஊன்றிய அமைதி') என்றும் 'டோக்ஸா தெயோசேபெயாஸ்' (இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி') என்றும் பெயர்கள் சூட்டப்படும்.
4. நடந்து சென்றவர்கள் பல்லக்கில் மன்னர்போல் தூக்கிவரப்படுவார்கள்.
5. மலைகள், குன்றுகள், பள்ளத்தாக்குகளில் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் சமமும், நறுமணமும் மிகுந்த சாலைகளில் நடத்திவரப்படுவர்.

இந்தப் புரட்டிப்போடுதலையே நாம் 'பழைய பாதை,' 'புதிய பாதை' என்னும் சொல்லாடல்கள் வழியாகப் புரிந்தால், அடிமைத்தனத்தின் முந்தையை பாதைக்கு எதிர்மறையாக இருக்கிறது இறைவன் அமைத்துத் தரும் புதிய பாதை.

பழைய பாதை அவர்களை நிர்வாணமாக நடத்திச் சென்றது. 'ஷின்லர்ஸ் லிஸ்ட்' அல்லது 'லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்' திரைப்படங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஜெர்மானிய நாசிப்படைகள் யூதர்களைக் கைது செய்து வதை முகாம்களுக்கு அழைத்துச் செல்லும்போது முதலில் செய்யப்படுவது 'ஆடைகள் களையப்படுதல்'. அதாவது, இதுவரை இருந்த அடையாளம் அழிக்கப்பட்டு, புதிய அடையாளம் தரப்படுகின்றது. இன்றும் நம் சிறைச்சாலைகளிலும் கைதிகளுக்கு அவர்களின் ஆடைகள் களையப்பட்டு, சிறையின் சீருடைகள் வழங்கப்படுகின்றன. மேலும் அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு ஆடைகள் மறுக்கப்பட்டன. உரோமின் கிளாடியேட்டர்கள் என்று சொல்லப்படும் போரிடும் அடிமைகள்கூட நிர்வாணமாகவே அழைத்துச் செல்லப்பட்டனர். நிர்வாணமாகவே போரிட்டனர். பண்டைக்கால ரோம் மற்றும் கிரேக்க நாடுகளில் வீடுகளில் பணிபுரிந்த ஆண்-பெண் அடிமைகள் ஆடைகள் மறுக்கப்பட்டனர். நம்ம ஊர் திருவாங்கூர் சமஸ்தானத்தில் நம்பூதிரி பெண்கள் தவிர மற்ற பெண்கள் மேலாடை மறுக்கப்பட்டனர் என்பதும் நாம் அறிந்த ஒன்று. இப்படி பாபிலோனியாவில் நிர்வாணமாக நின்றவர்களை தன் மாட்சி என்னும் பேரழகால் உடுத்துகின்றார் இறைவன். புதிய பாதை அவர்களுக்கு ஆடை அணிவிக்கிறது. கடவுள் அருளும் மாட்சியின் பேரழகே அவர்களின் ஆடையாக இருக்கிறது.

பழைய பாதையில் அவர்கள் தலைமுடி மழிக்கப்பட்டது. அடிமைகளின் தலைமுடி மழிக்கப்படும். எதற்காக? சுகாதாரத்திற்காக. குளிப்பதற்கும், தலை முடியைப் பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும், எண்ணெய் தேய்ப்பதற்கும் நேரம் அளிக்கப்படாது. மேலும், நம் தலைமுடிதான் நமக்கு மணிமுடி. கடவுளுக்கு நாம் மொட்டை எடுப்பதும் இதற்காகவே. நாம் மணிமுடி எனக் கருதும் ஒன்றைக் கழற்றி இறைவனின் திருவடியில் வைக்கிறோம். போரில் தோற்ற அரசன், வெற்றி பெற்ற அரசனின் காலடிகளில் தன் தலைமகுடத்தை கழற்றி வைக்க வேண்டும். இந்தப் பிண்ணனியில் அடிமைகளுக்குத் தலைமுடியும் மறுக்கப்படுகின்றது. இப்படி மொட்டைத் தலையாய் இருந்தவர்களுக்கு மணிமகுடம் அணிவிக்கிறார் இறைவன். புதிய பாதையில் அவர்கள் மாட்சியை மணிமுடியாகச் சூடியிருக்கின்றனர்.

பழைய பாதையில் இஸ்ரயேல் மக்களுக்குப் பெயரில்லை. அடிமைகளும், சிறைக்கைதிகளும் பெயர் சொல்லி அழைக்கப்படுவதில்லை. அவர்கள் வெறும் எண்கள்தாம். பெயர் என்னும் அடையாளம் இழந்தவர்கள் 'ஐரின்' (அமைதி), 'டோக்ஸா' (மாட்சி) என்ற அழகான பெயர்களைப் பெறுகிறார்கள். இந்த இரண்டு பெயர்களும் அவர்கள் இவ்வளவு நாள் இழந்தவைகளைத் திருப்பி தருவனவாக இருக்கின்றன.

பழைய பாதை இருளாக இருந்தது. புதிய பாதை பேரொளியால் ஒளிர்கிறது.

பழைய பாதை அவர்களை மண்டிபோட வைத்திருந்தது. புதிய பாதை அவர்களை எழுந்து நிற்கச் செய்கிறது.

பழைய பாதை கண்ணீராய் நிறைந்தது. புதிய பாதை மகிழ்வால் நிறைகிறது.

பழைய பாதையில் சங்கிலி கட்டப்பட்டு கால்நடையாக நடத்திச் செல்லப்பட்டனர் மக்கள். 'கால் மண்ணில் படாமல் இருப்பது' மாட்சியின் அடையாளம். நிலம் அழுக்கானது. ஆகையால்தான் கடவுளின் கால்கள் நிலத்தில் படக்கூடாது என நினைக்கிறோம். விலங்குகளிடமிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டுவது நம் காலணிகள். நாம் அணியும் காலணிகள் நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் பல்லக்குகள். இறைவன்தாமே இனி இவர்களை பல்லக்கில் தூக்கி வருவார். புதிய பாதையில் அரியணையில் வீற்றிருக்கும் மன்னர்போல உயர்மிகு மாட்சியுடன் அவர்கள் அழைத்துவரப்படுகிறார்கள்.

பழைய பாதையில் யாருடைய உயிரையும் பற்றி யாரும் கவலைப்படவில்லை. புதிய பாதையில் இறைவன் அவர்களின் உயிரைப் பாதுகாக்கின்றார்.

பழைய பாதை இரத்தம் மற்றும் வியர்வையால் துர்நாற்றம் அடித்தது. எருசலேமிலிருந்து பாபிலோனியாவுக்குச் செல்லும் பாதை கரடு முரடானது. பள்ளத்தாக்குகள், குன்றுகள் நிறைந்தது. இவற்றையெல்லாம் சமன்படுத்துவதோடு இறைவன் இன்னும் ஒருபடி போய், பாதைகளில் சாம்பிராணியும் போடுகின்றார். அடிமைகள் இழுத்துச் செல்லப்பட்ட பாதை இரத்தம், உடலின் அழுகல் என நாற்றம் எடுக்கும். நறுமணம் இந்த நெடியை மாற்றுவதோடு, புத்துணர்ச்சியையும் கொடுக்கும். புதிய பாதையில் நறுமணம் வீசும் மரங்கள் நிழல் தருகின்றன.

இவ்வாறாக, புதிய பாதையின் கூறுகளின் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு இறைவன் செய்த மாபெரும் செயல்களை நாம் கண்டுணர முடிகிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் (பிலி 1:4-6,8-11) பவுலின் சிறைமடல்களில் ஒன்றான பிலிப்பியருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தன் நெஞ்சுக்கு நெருக்கமான பிலிப்பு நகரத் திருஅவைக்கு பவுல் எழுதும் திருமடலின் நடை மற்ற திருமடல்களின் நடையைவிட ஆத்மார்த்தமாக இருக்கின்றது. 'நீங்கள் என் இதயத்தில் இடம்பெற்றுவிட்டீர்கள்' (1:7), 'என் அன்பார்ந்தவர்களே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி, நீங்களே என் வெற்றிவாகை' (4:1) என அன்பில் நீராட்டுகின்றார். தன் திருமடலின் தொடக்கத்தில் அவர்கள் இதுவரை நம்பிக்கையில் நிலைத்து நிற்பதற்காக அவர்களை வாழ்த்திப் பாராட்டுகின்றார். 'உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்வார் என்று உறுதியாக நம்புகிறேன்' என்று அவர்கள்மேல் தான் வைத்துள்ள நம்பிக்கையைப் பதிவுசெய்கின்றார். மேலும், 'கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன்' என ஏங்குகின்றார்.

இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்ளும் வரை பிலிப்பி நகர மக்கள் தங்களின் பழைய பாதையில் இருக்கின்றனர். இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கை அவர்களைப் புதிய பாதைக்கு அழைத்துவருகின்றது. இந்தப் புதிய பாதையில் அவர்கள், 'அறிவிலிலும் அன்பிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுவதாக' முன்மொழிகின்றார். மேலும், அவர்களின் செயல்கள் நீதியின் செயல்களாக வேண்டுமென்று அறிவுறுத்துகின்றார்.

புதிய பாதைக்கு இறைவனின் அருளால் அழைத்துவரப்படுகின்ற பிலிப்பி நகர மக்கள், தங்கள் சொந்த நற்செயல்களால் அந்தப் பாதையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 3:1-6) திருமுழுக்கு யோவானி;ன் பணித்தொடக்கத்தை லூக்கா பதிவு செய்கின்றார். மற்ற நற்செய்தியாளர்கள் போல அல்லாமல், லூக்கா யோவானின் பணியை வரலாற்றுப் பின்புலத்தில் பதிவு செய்கிறார். உரோமைப் பேரரசர் திபேரிய சீசர், யூதேய ஆளுநர் பிலாத்து, மாநில அரசர்கள் ஏரோது, பிலிப்பு, குறுநில மன்னர்கள் இத்துரேயா, லிசானியா, தலைமைக் குருக்கள் அன்னா, கயபா என்று ஒரு சாதாரண, சாமானிய யூதரின்மேல் ஆட்சி செய்த அனைவர் பெயர்களையும் பதிவு செய்கின்றார் லூக்கா. ஒரு சாமானிய யூதர் தனது சமூக, சமய, பொருளாதார வாழ்க்கை நிகழ்வுகளுக்கு இத்தனை பேரைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இவர்கள் அனைவரும் இந்த சாமானிய யூதரின் அன்றாட வாழ்வைத் தீர்மானித்தனர்.

ஆனால், இப்படிப்பட்ட சமூக, சமய, பொருளாதாரப் பாதை ஒரு யூதரை வழிநடத்திக்கொண்டிருக்க, கடவுளின் வார்த்தை விந்தையாக பாலைநிலத்தில் வாழ்ந்து வந்த செக்கரியாவின் மகன் யோவானுக்கு அருளப்படுகின்றது. ஆக, இறைவன் தேர்ந்தெடுக்கும் பாதை சாமானிய பாதையிலிருந்து முழுவதும் வித்தியாசமாக இருக்கிறது. இதுதான் இறைவனின் விந்தை.

புதிய பாதையை முன்னுரைக்கின்ற திருமுழுக்கு யோவான், 'ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள். அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள். பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும். மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும். கோணலானவை நேராக்கப்படும். கரடு முரடானவை சமதளமாக்கப்படும். மலை குன்று யாவும் தாழ்த்தப்படும். கோணலானவை நேராக்கப்படும். கரடு முரடானவை சமதளமாக்கப்படும்' எனப் புதிய பாதைக்கான தயாரிப்பு வேலைகளை முன்னெடுக்க அறைகூவல் விடுக்கின்றார். மேலும், 'இந்தப் புதிய பாதையில் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்' என்ற ஆறுதல் செய்தியையும் தருகின்றார்.  

இந்த நிகழ்வு நமக்கு ஆண்டவர் காட்டும் புதிய பாதையை சுட்டிக் காட்டுகிறது. ஒரு சாமானிய யூதர் பெற்றிருந்த சமய, சமூக, பொருளாதார கட்டுகளிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது.

இங்கு குறிக்கப்படுகின்ற சொல்லாடல்களை உருவகங்களாக எடுத்துக் கொள்வோம்:

பாலைநிலம்: நம் மனம் இறைவன் இல்லாமல், ஒளி இல்லாமல், மகிழ்ச்சி இல்லாமல், நிறைவு இல்லாமல் காய்ந்திருக்கும் நிலை. தமிழ் மரபில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலங்களை வகைப்படுத்தி, இந்நிலங்கள் தங்களின் இயல்பை இழக்கின்ற போது அவை பாலையாக மாறுகின்றன. ஆக, பாலை என்பது ஒரு குறைவு. பேரரசர், ஆளுநர், குறுநிலமன்னர்கள், தலைமைக்குருக்கள் என பளிங்குத் தரைகளில் வலம் வந்தவர்களுக்கு எட்டாத ஆண்டவரின் குரல், பாலைநிலத்தில் வாழ்ந்த திருமுழுக்கு யோவானை எட்டுகிறது. நம் வாழ்விலும் குறை மேலோங்கி நிற்கும் போது இறைவன் குரல் நம்மை எட்டுகிறது.

வழி: இது ஆண்டவர் அமைத்துத் தரும் புதிய பாதையைக் குறிக்கிறது. வழி நம் முன்பாக இருந்தாலும் அந்த வழிக்கான பயணத்தை மேற்கொள்ளும்போது தான் அந்த வழி அர்த்தம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக நாம் பயணிக்கும் நான்கு வழிச் சாலைகள், வாகனங்கள் இல்லாத போது வெறும் காட்டுப்பகுதியே. பயன்பாட்டில் தான் வழியானது வழியாக மாறுகிறது.

ஆயத்தமாக்குதலும் செம்மையாக்குதலும்: ஆயத்தமாக்குதல் புதிய முயற்சியையும், செம்மையாக்குதல் புதுப்பிக்கும் முயற்சியையும் குறிக்கிறது. நாம் நம் வாழ்வில் சில நேரங்களில் புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கிறோம். சில வேளைகளில் ஏற்கனவே உள்ள பாதையைப் புதுப்பிக்கின்றோம். புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க துணிவு தேவை. பழைய பாதையைப் புதுப்பிக்க உள்ளுணர்வு தேவை.

பள்ளத்தாக்குகள் நிரப்பப்படும், மலை, குன்று யாவும் தகர்க்கப்படும்: பள்ளத்தாக்குகள் என்பவை என் வாழ்வில் உள்ள குறைவு மனநிலைகள். மலை என்பது என் வாழ்வில் உள்ள மேட்டிமை எண்ணங்கள். பள்ளத்தாக்குகள் நமக்குப் பயம் தருகின்றன. மலை நம் பார்வையை மறைக்கின்றது.

கோணலானவை நேராக்கப்படும். கரடுமுரடானவை சமதளமாக்கப்படும். கோணலானவை என்பவை நமக்கு நாமே நாம் சொல்லும் பொய்கள். இவை, நம் மனவுறுதியைக் குலைக்கின்றன. கரடுமுரடானவை என்பவை நம்மைத் தொற்றிக் கொண்டிருக்கும் பிறழ்வுகள்.

இவற்றை எல்லாம் சரி செய்யும்போது, 'நாம் கடவுள் அருளும் மீட்பைக் காண்கிறோம்.' ஆக, லூக்காவைப் பொறுத்தவரையில், 'மீட்பு' என்பது இறப்புக்குப் பின் அல்லது மறுவுலக வாழ்வில் நடக்கும் நிகழ்வு அன்று. மாறாக, இன்றே, இங்கேயே நடக்கக் கூடியது.

இறுதியாக, 'கதிரவன் உதிக்கும் என்ற நம்பிக்கை மாலைப் பொழுதின் இருள் தரம் பயத்தை நாம் எதிர்கொள்ளத் துணை செய்கிறது.' புதிய பாதை பிறக்கும் என்ற நம்பிக்கை நம் பழைய பாதையின் அசௌகரியங்களைப் பொறுத்துக் கொள்ளவும், அவற்றைச் சரி செய்யவும் நம்மை அழைக்கிறது.

இன்று நாம் ஏற்றும் மெழுகுதிரி குறித்துக் காட்டுவது அமைதி. அமைதிக்கான சிறந்த வழி பாதை மாற்றம். அணு ஆயுதங்கள் செய்து கொண்டே உலக அமைதி பற்றிப் பேசுவது எப்படிப் பயனற்றதோ, அப்படியே, எந்த ஒரு அகப் பாதை மாற்றமும் செய்யாமல் புறப்பாதை இனிமையாக இருக்கும் என்று யோசிப்பதும் பயனற்றது. அகம் மாற முகம் மாறும். அந்த முகத்தில் மீட்பு ஒளிரும். அந்த முகம் புதிய பாதையை வெற்றியுடன் பார்க்கும். அந்த வெற்றியே அமைதி.




No comments:

Post a Comment