Tuesday, 27 November 2018

திருவருகைக்கால முதல் ஞாயிறு - மூன்றாம் ஆண்டு

                                  

 திருவருகைக்கால முதல் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு.இன்றைய வாசகங்கள்

எரேமி. 33:14-16
1 தெச. 3:12- 4:2
லூக். 21:25-28,34-36
 நடுக்கடலில் பாய்மரக் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்த போது, திடீர் என்று சூறாவளி... கப்பல் திக்குமுக்காடுகிறது .... திசைமாறுகிறது. இறுதியில் ஒரு பாறை மீது மோதி நொறுங்குகிறது. நம்பிக்கையுள்ள, விழிப்புள்ள ஒருவன் மட்டும் தப்பிப் பிழைக்கிறான். ஒரு மரத்துண்டைப் பற்றிக் கொண்டு நீந்திக் கரையேறுகிறான். ஒரு சிறிய தீவு அவன் கண்ணில் பட்டது. பரவாயில்லை கடவுள் காப்பாத்திட்டார் என்று சந்தோஷப்பட்டான். அவன் கரையேறிய தீவில் எந்த மனிதனும் இல்லை . கிடைத்த இலை தழைகளைக் கொண்டு ஒரு குடிசையை உருவாக்கினான். அங்கே கிடைத்ததை உண்டான். சொந்த இடத்தை அடைவோம் என்ற நம்பிக்கை அவனில் நிலையாக இருந்தது. ஒரு நாள் வெளியே சென்றபோது அந்த குடிசை தீப்பற்றி எரிந்தது. மூங்கில்களின் உராய்வினால் ஏற்பட்ட தீயால் குடிசை சாம்பலானது. சற்று நேரத்தில் நாலைந்து பேர் அங்கே வந்தார்கள். நாங்கள் மீன் பிடிக்க, படகிலே இந்த பக்கமா வந்துகிட்டிருந்தோம். இந்த தீவிலே புகை தெரிந்தது. யாரோ இருக்காங்க, பார்க்கலாம்னு வந்தோம். அப்போது அவன், எனது நம்பிக்கையும், விழிப்பும் வீண் போகவில்லை என்று கடவுளுக்கு நன்றி கூறினான்.

பல்லாண்டு காலமாகக் காத்திருந்த இஸ்ரயேல் மக்களின் கனவு நனவாக தாவீதின் தளிராக இயேசு இம்மண்ணில் உதயமானார். காத்திருத்தல் என்பது கனவு கண்டு கொண்டிருப்பது அல்ல. நம்பிக்கையோடு நமது கடமைகளை, விழிப்போடு நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகும். மரத்தின் ஆணிவேர் உறுதியாக இருந்தால், அந்த மரம், பல ஆண்டுகள் நிலைத்திருக்கும். எந்த அளவுக்கு நம்பிக்கையோடும், விழிப்போடும், காத்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு மனுமகனோடு இறையரசில் சேர தகுதி பெறுவோம். நாளும் நேரமும் நமக்குத் தெரியாது (மத். 24:36 - 44). ஆனால் நம்பிக்கையோடு இருப்போர் வரவேற்கப்படும் தகுதியைப் பெறுவார்கள். மனுமகனைத் தரிசிப்பார்கள் (மத். 25:10).


முதல் வாசகத்தில் யூதா விடுதலைப் பெறும், எருசலேம் விடுதலையோடும், பாதுகாப்போடும் வாழும் (எரே. 33:16) என்ற வார்த்தைகள் நம்பிக்கை கொடுத்து, வாழ்வு கொடுத்தது, விடுதலை தந்தது. நம் ஆண்டவர் இயேசு நம் தந்தையாம் கடவுளின் முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக (1 தெச. 3:13) என்று புனித பவுல் வாழ்த்துகிறார். நம்பிக்கையோடும், விழிப்போடும் நிலைத்திருப்பவர்களுக்கு மீட்பு நெருங்கி வருகிறது. இதற்கு இயேசு கூறும் வழிமுறை , உங்கள் உள்ளம் குடிவெறியிலும் களியாட்டத்திலும் மந்தமடையாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள் (லூக். 21:34-35) என்பதே.

ஒரு முனிவர் தனது சீடனிடம் கடவுளின் ஞானம் உன்னிலே மாற்றத்தை தருகிறதா...? என்றார். சீடர், நான் கடவுளைப்போல மாறவில்லை என்றார். முனிவர், நீ ஒரு புனிதனாக மாறியிருக்கிறாயா...? என்று கேட்டார். சீடன், இல்லை , நம்பிக்கையுள்ளவனாக மாற முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன் என்றான். முனிவர், பின் எதற்கு இருக்கிறாய் இங்கு ? சீடன், நான் விழிப்புடன் வாழக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்றான். விழிப்பு என்பது விழிகளைத் திறந்து வைத்திருப்பது மட்டுமல்ல. ஒரு மனிதனுடைய எண்ணங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதே முக்கியம். இன்றையச் சூழலில் மனிதன் சுய சிந்தனையை இழந்து, தீமையைக் கூட நன்மையானது என்று நினைக்கிறான். அவனின் ஆன்மீக வாழ்வும், தேக்க நிலையாகவே உள்ளது. பாவம் பற்றிய பயமும், மனசாட்சியைப் பற்றிய அக்கறையும் இருப்பதில்லை . இப்படிப்பட்ட சூழலில் வாழும் மனிதனை, விழிப்போடு வாழ இன்றைய நாள் வழிபாடு அழைக்கின்றது.

கிறிஸ்து எங்கோ இருக்கிறார் என்று எண்ணி அவரது வருகைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக நமக்குள்ளே, நம்மோடு நம்மில் ஒருவராக இருக்கிறார் என்பதை உணர்வோம். ஆனால் நாம் தேடும் கிறிஸ்து நம்மில் குடிகொள்ளாமல் போகத் தடையாக இருப்பது குடிவெறி, களியாட்டம். இவைகள் நமக்குள் இருக்கும் கிறிஸ்துவையும், அவரின் சாயலையும் சிதைத்துவிடுகிறது.

சிந்தனைக்கு

வேலைக்காரச் சிறுவனிடம் ஆற்றுக்குச் சென்று இந்தப் பானையில் தண்ணீர் கொண்டு வா , தவறுதலாகக் கீழே போட்டு உடைத்தால், கடுந்தண்டனை கிடைக்கும் என்று சொல்லி அவன் தலையில் ஓங்கி கொட்டினார் முல்லா. இதைக் கண்ட நண்பர் பானையை உடைக்கும் முன்பே ஏன் அடித்தீர் என்று கேட்க பானை உடைந்தப் பின் தண்டித்து என்ன பயன்? பானையும் உடைந்து, தண்ணீரும் வீணாகிப் போன பின், தண்டித்து ஒரு பயனும் இல்லை. முன்னரே தண்டித்தால், பயத்துடன், கவனத்துடன், விழிப்பாக இருந்து பானையை உடைக்காமல் தண்ணீரோடு கொண்டு வந்து சேர்ப்பான் என்றார் முல்லா.


காத்திரு


"சித்தார்த்தா” - ஆங்கில நாவல் இது. அதில் இப்படி ஒரு காட்சி. சித்தார்த்தா என்ற அந்த இளைஞன் ஒருத்தியைக் காதலிக்கிறான். அவள் எங்கே சென்றாலும் பின்னாலேயே சுற்றுகிறான். திடீரென்று ஒருநாள் தன்னைச் சுற்றித் திரியும் அவனைப் பார்த்து அவள் கேட்கிறாள்: "என்னைக் காதலிக்க உனக்கு என்ன அருகதை உண்டு?” ஒருகணம் அதிர்கிறான். "என்ன கேள்வி இது? என்றாலும் இதோ பதில்" என்று அவளைக் காதலிக்கத் தனக்கு உள்ள தகுதியைப் பட்டியலிடுகிறான்.
1. என்னால் உன்னை நேசிக்க முடியும். I can love you. 2. என்னால் உன்னை நினைக்க முடியும். I can think of you,
3. எல்லாவற்றிற்கும் மேலாக என்னால் உனக்காகக் காத்திருக்க முடியும். Above all I can wait for you.
இறைவனை அன்பு செய்கிறேன் என்பதற்கான அடையாளங்களில் ஒன்று அவனுக்காகக் காத்திருத்தல். அன்பு இல்லையென்றால் காத்திருத்தல் எரிச்சலாக இருக்கும். அன்புடன் என்றால் அதில் ஒரு 'த்ரில்' இருக்கும். காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு. காக்க வைப்பதில் சுகம் உண்டு',
நம் வாழ்வில் பெரும்பகுதி காத்திருக்கிறோம் - பயணத்தில் பஸ்ஸுக்காக, படுக்கையில் உறக்கத்துக்காக, வாசலில் நண்பனுக்காக, வரிசையில் (Q) திரைப்பட நுழைவுச் சீட்டுக்காக... இப்படி ஏதோ ஒன்றுக்காக, யாரோ ஒருவருக்காக.

ஆனால் இறைவனுக்காக எந்த அளவு, எவ்வளவு நேரம் காத்திருக்கிறோம்?

"ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப் போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்த (லூக்.2:26),

சிமியோன் எப்படியெல்லாம் இஸ்ராயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலுக்காகக் காத்திருந்தார்! “உமது மீட்பை என் கண்கள் கண்டு கொண்டன” என்ற அவரது உற்சாக வார்த்தைகளில் எத்துணை மகிழ்ச்சி, மன நிறைவு! மீட்பர் அரசியல் தலைவன் அல்ல துன்புறும் ஊழியன் என்ற உண்மையின் வெளிப்பாடு அல்லவா அன்றே அவர் கண்டது!

அன்னை மரியா எப்படியெல்லாம் காத்திருந்தாள்?
- மனிதர் அவளுக்கு வழங்கும் அடை மொழிகள் எத்தனை எத்தனை! விண்ணகத்தின் வாயிலே, விடியற்கால விண்மீனே, நீதியின் கண்ணாடியே, மறைபொருளின் ரோஜா மலரே இப்படியாக.
- கடவுள், தூதன் கபிரியேல் வழியாக வழங்கிய அடைமொழி அருள்மிகப் பெற்றவரே, இறையாசி நிறைந்தவரே என்பது
- மரியா தனக்குத் தானே வழங்கிக் கொண்ட அடைமொழி: 'இதோ ஆண்டவருடைய அடிமை .
அடிமை என்பவன் யார்?
- தலைவனுக்காகக் காத்திருப்பவன். - தலைவனுக்குத் தன்னையே அர்ப்பணித்தவன். - தலைவனுக்கு அனைத்து வகையிலும், பணிவிடை புரிபவன் - தலைவனுக்குக்காகத் தன்னையே இழப்பவன்.
அடிமை என்ற சொல்லில் காத்திருத்தல் மட்டுமல்ல வெறுமையாக்குதலைப் பார்க்கிறோம்.

மனிதனோடு இணைய இறைவன் தன்னையே வெறுமையாக்கினார். (பிலிப்.2:7) இறைவனோடு இணைய மனிதன் தன்னையே வெறுமையாக்க வேண்டும்.
வெறுமையாக்குவது இறைவன் தன் அருளை, மீட்பை, நிறைவைப் பெற மிகவும் இன்றியமையாதது.

''உன் பாத்திரம் களிமண்ணால் நிறைந்திருந்தால் இறைவன் மாற்றும் பால் அதில் விழும் போது தெறித்துச் சிதறும். எவ்வளவுக்கு எவ்வளவு அது காலியாக, வெறுமையாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு இறைவன் ஊற்றும் பாலால் நிரம்பும்" என்ற சிலுவை அருளப்பரின் கூற்று திருவருகைக்காலச் சிந்தனைக்கு ஏற்றது.

அயர்லாந்து நாட்டில் ஒரு கிறிஸ்துமஸ் பழக்கம் உண்டு. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னிரவு வீட்டில் உள்ள கதவுகளையெல்லாம் திறந்து வைப்பார்கள். முன் கதவுக்கருகில் ஒரு மெழுகுதிரியை ஏற்றி வைப்பார்கள். பெத்லகேமில் அன்று இரவு மரியாவும் சூசையும் வீடுதேடி அலைந்ததன் நினைவாக அவர்களை வரவேற்க ஆயத்தமாக இருப்பது போல இப்பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

திருவருகைக் காலத்தில் மீட்பரின் வருகைக்காக நமது இதயக் கதவு திறந்திருக்கிறதா? அருள்வாழ்வு என்னும் விளக்கு அங்கு ஒளிர்கிறதா? “இதோ நான் கதவருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால் நான் உள்ளே சென்று அவர்களோடு உணவருந்துவேன். அவர்களும் என்னோடு உணவருந்துவார்கள்” (தி.வெ.3:20) என்கிறார் ஆண்டவர்.

வர இருப்பவர் எரேமியா பார்வையில் நீதியின் தளிர். (எரே.33:15)
எசாயா பார்வையில் அமைதியின் ஊற்று. (எசா.9:6)

 அந்த நீதியின் தளிர் செழித்து வளர, அந்த அமைதியின் ஊற்று சுரந்து பாய நம் வாழ்வில் “ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்”. (புலம்பல் 3:26)

"கலைமானைக் கண்ணியில் சிக்க வைத்துப் பிடிக்க முடியாது. ஏனெனில் அதற்குக் கூர்மையான பார்வை உண்டு. ஒரு பறவை விழிப்பாய் இருந்தால் வெகு எளிதில் வலையில் சிக்காமல் தப்பித்துக் கொள்ள முடியும். இவ்வாறு மிருகங்களெல்லாம் தங்களையே காத்துக் கொள்ள விழிப்பாய் இருக்கின்றபோது நீ மட்டும் ஏன் விழிப்புடன் இருப்பதில்லை ?" - புனித பசிலியார்.

 கிறிஸ்து பிறக்கும்போது அவர் நம்மிடம் என்ன கேட்பார்?

இது திருவருகைக் காலம்!
நம்மைத் தேடி வரும் இயேசு நமக்கு அருளைத் தருவாரா?
பொருளைத் தருவாரா?
உடல் நலத்தைத் தருவாரா?
உள்ள அமைதியைத் தருவாரா?
உண்ண உணவைத் தருவாரா?
உடுக்க உடையைத் தருவாரா?
இருக்க இடத்தைத் தருவாரா?
இறைவாக்கினர் எரேமியா போல் நீதியைத் தருவாரா?

அவர் கேட்கப்போகும் கேள்விக்கு நாம் சரியான பதிலைச் சொன்னால் நாம் கேட்பதை அவர் நமக்குத் தருவார்!

பதில்களிலே இரண்டு வகையான பதில்கள் உள்ளன! ஒன்று சரியான பதில் ; மற்றொன்று தவறான பதில்!

ஓர் ஆசிரியர் மாணவனைப் பார்த்து, எத்தனைக் கடவுள் இருக்கின்றார்? என்றார். அந்த மாணவனோ, ஒரே கடவுள் என்றான்.

அவர் எங்கே இருக்கின்றார்? என்றார் ஆசிரியர். மாணவனோ, எங்கும் இருக்கின்றார் என்றான். இன்னொரு கடவுள்

இருக்கமுடியாதா? என்றார் ஆசிரியர்.

ஒரு கடவுள்தான் எல்லா இடங்களிலும் இருக்கின்றாரே! இரண்டாவது கடவுள் இருக்க எங்கே இடமிருக்கும்? என அந்த

மாணவன் கேட்டான்! ஒரு கேள்விக்கு ஒரு கேள்வியால் அந்த மாணவன் பதில் சொன்னான்.

இது சரியான பதில்!

தவறான பதிலுக்கு ஓர் உதாரணம்!

ஓர் ஆசிரியை!

அவருக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் ஒரு மாணவனைப் பார்த்து, நீ தேறவே மாட்டே என்றார். உங்க கிளாசிலே இருக்கும்

வரை நான் எப்படித் தேறுவேன்? என்றான் மாணவன். இது தவறான பதில்!

நாம் இயேசுவுக்குத் தவறான பதிலை அல்ல சரியான பதிலைத் தந்து நாம் கேட்கும் வரங்களை இயேசுவிடமிருந்து பெற்று

பெருவாழ்வு வாழலாம்.

கிறிஸ்துமஸ் நாளன்று நம்மைப் பார்த்து இயேசு என்ன கேள்வி கேட்பார்?

இன்று குழந்தை இயேசுவாகிய என்னைத் தொட்டுத் தொட்டு கும்பிடுகின்றீர்களே! மண்ணுக்குள் நான் இருப்பதாக நம்பி

தொட்டுக்கும்பிடும் நீங்கள், மண்ணைவிட உயர்ந்த கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களுக்குள் நான் இருக்கின்றேன்

என்பதை நம்பி திருவருகைக் காலத்தில் அவர்களைத் தொட்டு வணங்கினீர்களா ? என்று கேட்பார்.

பொழுது விடிந்ததும் மனைவி கணவரே கண்கண்ட தெய்வம் எனச் சொல்லி அவரைத் தொட்டு வணங்கவேண்டும். கணவரோ,

மனைவி கொடுக்கின்ற உணவை உண்டு, அவருடைய திருக் கைகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு இந்தக் கைகளால்தானே

இப்படிப்பட்ட சுவையான உணவைப் படைத்தாய் எனச் சொல்லி அவரது கைகளை முத்தமிட வேண்டும்.

பேரனும், பேத்தியும், போட்டி போட்டுக்கொண்டு, தாத்தா பாட்டியின் கண்ணங்களிலே முத்தமிட வேண்டும்.

இன்றைய இரண்டாவது வாசகத்தில் புனித பவுலடிகளார் கூறுவது போல அன்பு நமது இல்லங்களையும், உள்ளங்களையும்

ஆட்சி செலுத்தவேண்டும். நாம் ஒருவரையொருவர் மதிப்போடும், மரியாதையோடும் நடத்த வேண்டும். மனிதனை மனிதனாக

மதிக்கவேண்டும். இந்தத் திருவருகைக் காலத்தில் மனிதநேயம் நமக்குள் வளரவேண்டும்.

அண்மையிலே புதுக்கவிதை ஒன்றைப் படித்தேன்.

ரோஜா சொல்கின்றது!

என் செடியிலிருந்த முள்கள் என்னைக் காப்பாற்றும் என நினைத்தேன்!
அவைகளால் என்னைக் காப்பாற்ற முடியவில்லை!
ஆகவே நான் முள்ளாக மாறிவிட்டேன்.

இந்த உலகில் எந்த ரோஜாவும் முள்ளாக மாறக்கூடாது! ஒருவரையொருவர் மதிப்போடும், மரியாதையோடும் நடத்தி, பெற்றோரும்,

குழந்தைகளும், தலைவர்களும், சீடர்களும், நீங்களும், நானும் ஒருவரையொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு அன்பு செய்வோம்.

இன்றைய நற்செய்தி கூறுவதுபோல அன்பு செய்வதில் எல்லாரும் விழிப்பாயிருப்போம்! அப்போது நாம் தேடும் புதுவாழ்வை,

புத்துயிரை பிறக்கப் போகும் குழந்தை இயேசு நமக்களித்து நம்மை வாழ்வாங்கு வாழவைப்பார்.

மேலும் அறிவோம் :
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் (குறள் : 91).
பொருள் : அன்பு கலந்து, வஞ்சகம் எதுவுமின்றி மெய்ப்பொருளாம் அறம் உணர்ந்த பெருமக்கள் வாயிலிருந்து வருவதே

இனிய சொல் ஆகும்.
இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய முக்காலங்களைப் பற்றி விளக்கியபின் தமிழ் ஆசிரியர் மாணவர்களிடம், "நாளை மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். இது என்ன காலம்?" என்று கேட்டதற்கு மாணவர்கள், "சார்! இது எங்கள் போதாத காலம்" என்று பதிலுரைத்தனர்.
உண்மையில் நம்மில் பலருக்குப் போதாத காலம். தனி வாழ்விலும், குடும்ப வாழ்விலும், பொது வாழ்விலும் பல்வேறு பிரச்சினைகள் நம்மைக் கசக்கிப் பிழிந்தெடுக்கின்றன. நிம்மதியாக இருப்பவர் இரண்டே பேர், "ஒருவர் இன்னும் பிறக்கவில்லை ; மற்றவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். " உயிருடன் இருப்பவர்களுக்கெல்லாம் போதாத காலம். மனிதர் மட்டுமல்ல, இயற்கை அனைத்தும் பேறுகால வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது (உரோ 8:22-23).

இப்போதாத காலத்தில் திருச்சபை இன்று திருவருகைக் காலத்தைத் தொடங்குகிறது. திருவருகைக் காலம் எதிர்பார்ப்பின் காலம், நம்பிக்கையின் காலம், திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கக் காலம். கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவிற்காக நம்மைத் தயாரிக்கும் காலம்.
அன்று இஸ்ரயேல் மக்கள் கிறிஸ்துவின் முதல் வருகைக்காக வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருந்தனர். மெசியா நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார் என்று ஏங்கினர் (முதல் வாசகம்). தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கினர் (இரண்டாம் வாசகம்).
உலக நாடுகளைச் சமாதானத்தில் ஒன்று சேர்க்க கிறிஸ்து வந்து, தமது சாவினாலும் உயிர்ப்பினாலும் வான்வீட்டின் கதவுகளத் திறந்து விட்டார். அவரது இறுதி வருகையின்போது நமக்கு நிறைவான மீட்பை அளிப்பார். ஆனால், நிகழ்காலத்தில் அருள்வாக்கு அருள் அடையாளங்கள்.

அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் ஆகியவற்றின் வாயிலாக அவர் வந்து கொண்டு இருக்கிறார்.

ஆடி மாதத்தில் ஏன் பலத்த காற்று வீசுகிறது? புதிதாக திருமணம் செய்த தம்பதியர்களை ஆடி மாதத்தில் பிரித்து விடுகின்றனர். இவ்வாறு பிரிக்கப்பட்டவர்கள் ஒருவர் மற்றவரை நினைத்து விடுகின்ற ஏக்கப் பெரு மூச்சு பலத்த காற்றாக வீசுகிறதாம்! அவ்வாறே, மண மகனாம் கிறிஸ்துவைப் பிரிந்த மணமகளாம் திருச்சபையும் அவரது இரண்டாவது வருகையை நினைத்து ஏக்கப் பெரூமூச்சு விடுகிறது. "மாரனாத்தா, ஆண்டவரே வருக" (1 கொரி 16:22): "ஆண்டவராகிய இயேசுவே வாரும்" (தி வெ 22:20) என்று திருச்சபை இயேசு கிறிஸ்துவைக் கூவி அழைக்கிறது. "எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையை மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கின்றோம்” என்று திருவழிபாட்டில் திருச்சபை உருக்கமாக மன்றாடுகிறது.

இயேசுவின் இரண்டாம் வருகை எப்போது நிகழும்? அந்த நாளும் வேளையும் எவருக்கும் தெரியாது (மத் 24:36), காலங்களையும் நேரங்களையும் அறிவது நமக்கு உரியது அல்ல (திப 1:7),
இறுதி நாள்களில் இயற்கையில் பல்வேறு குழப்பங்களும் கொந்தளிப்பும் நிகழும் என்பதை முன்னறிவித்து, எப்போதும் விழிப்பாக இருந்து மன்றாடும்படி இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து அறிவுறுத்துகிறார். நாம் தூங்கக் கூடாது; நமக்கு விழிப்புணர்வு தேவை.

ஒரு மாணவன் தேர்வில் தூங்கிக் கொண்டிருந்தான். ஏன் அவன் தூங்குகிறான்? என்று அவனைக் கேட்டதற்கு, "தேர்வில் கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை என்றால் முழிச்சிக்கிட்டு இருக்காதே" என்று அவர் அப்பா சொன்னாராம்.

வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாதவர்கள் அவற்றிலிருந்து தப்பி ஓடுகின்றனர். குடிவெறியிலும் களியாட்டத்திலும் ஈடுபடுகின்றனர், குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவர் திருப்பலியில் "அல்லேலூயா" என்று பாடுவதற்குப் பதிலாக, "கள்ளே லூயா, கள்ளேலூயா கள்ளேலூயா. பத்து ரூபாய்க்குக் கள் குடித்தேன். போதை வரவில்லை . மேலும் பத்து ரூபாய்க்குக் கள் குடி என்கிறார் ஆண்டவர்" என்று பாடினாராம்.

ஒரு பாம்பு சிறிது நேரத்திற்கு முன் ஒரு தவளையைப் பிடித்து வாயில் வைத்துக் கொண்டிருக்கிறது. அத்தவளையோ சற்று நேரத்திற்குமுன் ஒரு வண்டைப் பிடித்து தனது வாயில் வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வண்டோ சற்று நேரத்திற்கு முன் ஒரு பூவிலிருந்து சிறிது தேனை உறிஞ்சி வாயில் வைத்துக் கொண்டிருக்கிறது. அத்தவளை தனக்கு வரப்போகிற ஆபத்தை உணராது தனது வாயில் இருக்கும் வண்டைச் சுவைத்து மெய் மறந்த நிலையில் உள்ளது. அவ்வாறே, நாமும் நமக்கு வரவிருக்கிற பேரழிவை உணராது இவ்வுலக இன்பங்களைச் சுவைத்து நினைவிழந்த நிலையில் இருக்கிறோம். தொலைநோக்குடன் வாழ வேண்டியவர்கள் தொலைக் காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து நமது முகவரியைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இவ்வுலக இன்பங்களைத் துய்ப்போர் அவற்றிலேயே மூழ்கி விடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறார் திருத்தூதர் பவுல் (1 கொரி 7:29-30).

"நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிட மகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும், எப்போதும்
விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" (லூக் 21:36) என்று இன்றைய நற்செய்தியில் அறிவுறுத்துகிறார் நம் ஆண்டவர்.
நாம் செபிக்க வேண்டும், செபத்திற்கும் வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாம் எப்படி செபிக்கின்றோமோ அப்படியே வாழ்கிறோம். நாம் எப்படி வாழ்கின்றோமோ அப்படியே செபிக்கின்றோம். நன்றாக செபிக்கவில்லை என்றால், நாம் நன்றாக வாழவில்லை. நன்றாக வாழவில்லை என்றால் நாம் நன்றாகச் செபிக்கவில்லை.

ஒரு மருத்துவர் ஒரு நோயாளியை ஆறாவது படுக்கையிலிருந்து நூறாவது படுக்கைக்கு மாற்றினார். ஏன்? என்று கேட்டதற்கு, "ஆறிலும் சாவு, நூறிலும் சாவு" என்றார். ஆம், நாம் எப்போது சாவோம் என்பது நமக்குத் தெரியாது. எனவே நாம் எப்போதும் விழிப்பாக இருந்து செபிப்போம்.
ஆபத்து வருமுன் அதைத் தடுத்து நிறுத்தாதவருடைய வாழ்வு நெருப்பு முன் வைக்கோல் போல் எரிந்து சாம்பலாகவிடும் என்று அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தாறு பேலக் கெடும்   (குறள் 435)


பசித்திரு! தனித்திரு! விழித்திரு! செபித்திரு! இதுவே இத்திருவருகைக் காலம் முழுவதும் நம்மை நெறிப்படுத்தும் தாரக மந்திரமாக அமையட்டும்.
உம்மை நோக்கியே உள்ளம்கார்த்திகை மாதம் பாதிக்கடக்குமுன்னே மார்கழிக் குளிர் நம் உடலைத் தழுவ ஆரம்பித்துவிட்டது. குளிர்காலத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இலைகளை உதிர்த்து குளிரை எதிர்கொள்ள வேண்டிய மரங்கள், இலைகளை உதிர்க்கவா, தளிர்களைத் துளிர்க்கவா என்று குழம்பிக் கொண்டிருக்கின்றன. காலநிலைகள் மாற்றங்கள் நம் ஊரில் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அமெரிக்கா, ஐரோப்பாக் கண்டங்களில் இவை தெளிவாகத் தெரியும். இலையுதிர் காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும் நேரம் இது. மரங்கள் வெறும் குச்சிகளாக நின்று குளிரை, 'வந்து பார்' என எதிர்நோக்கியிருக்கும் இக்காலத்தை நம் தாய்த்திருச்சபை, 'மாரநாதா, என் ஆண்டவரே வாரும்' என்று கிறிஸ்துவின் வருகைக்கு எதிர்நோக்கியிருக்கும் திருவருகைக்காலமாகக் கொண்டாடுகிறது.ஒளி அல்லது வெப்பம் என்றால் உயிருக்கு வளர்ச்சி. இருள் அல்லது குளிர் என்றால் உயிருக்குத் தளர்ச்சி. தளர்ச்சி, சோர்வு, மதமதப்பு, நீண்ட இரவு, நடுக்கும் குளிர், உடல்நலத்தில் தேக்கம் அல்லது பின்னடைவு என்று மனித உடலும், உயிரும் கலங்கும் குளிர்காலத்தில் திருவருகைக்காலம் ஏனோ?குளிர் என்பது குறுகிய இறப்பு. குளிரில் இக்குறுகிய இறப்பை அனுபவிக்கும் உயிர்களுக்குள் இறக்காமல் இறப்பது நம்பிக்கையே - வசந்தம் வரும் என்ற நம்பிக்கையே. இந்த நம்பிக்கைக்கான காத்திருத்தல் எதிர்நோக்காக மாறி, இந்த எதிர்நோக்கு நம்மை அன்பில் உந்தித் தள்ளுகிறது. நம் கண்களுக்குத் தெரியும் எல்லா மரங்களிலும் மூன்று கூறுகள் உள்ளன: வேர், தண்டு, கிளைகள். இந்த மூன்றில் ஒன்று இல்லை என்றாலும் மரம் இறந்ததாகவே கருதப்படும். நம் ஒவ்வொருவரின் வாழ்வையும் மரத்திற்கு ஒப்பிட்டால், நம்மில் வேராக நம்பிக்கையும், தண்டாக எதிர்நோக்கும், கிளைகளாக அன்பும் இருக்கின்றன. இம்மூன்றும் இருந்தாலும், சில நேரங்களில் நாமும் குளிர் தாங்கும் குச்சி மரமாக நிற்கத்தான் செய்கின்றோம். இப்படி நிற்கும் நமக்கு ஊட்டம் தருவதே திருவருகைக்காலம்.இன்றைய பதிலுரைப்பாடலோடு (திபா 25) நம் சிந்தனையைத் தொடங்குவோம்:'ஆண்டவரே, உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்' என்று பாடுகிறார் தாவீது.குளிரில் தவிக்கும் தாவரங்களும், உயிர்களும் கதிரவனின் வருகையை நோக்கிக் கண்களை உயர்த்துவதுபோல, துன்பத்தில் இருக்கும் தாவீது ஆண்டவரை நோக்கித் தன் உள்ளத்தை உயர்த்துகின்றார்.திருவருகைக்காலத்தில் ஆண்டவரை நோக்கி நம் உள்ளம் மூன்று நிலைகளில் உயர்ந்து நிற்கின்றது:ஒன்று, அவரது முதல் வருகையின் நினைவுகூர்தலை நோக்கி நெஞ்சம் நிறை நன்றியோடும், மகிழ்ச்சியோடும்,இரண்டு, அவரது இரண்டாம் வருகையை எதிர்பார்த்து கண்கள் நிறை விழிப்போடும், கவனமோடும்,மூன்று, அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலும், நபர்களிலும் வரும் அவரின் உடனிருப்பு நோக்கி எண்ணம் நிறை பரிவோடும், பகிர்வோடும்.திருவருகைக்காலத்தின் ஒற்றைச் செய்தியும் இதுதான்: 'அவரை நோக்கி நம் உள்ளம்'அவரை நோக்கி நம் உள்ளம் இருக்க வேண்டும் என்றால், முதலில் இப்போது நம் உள்ளம் எதை நோக்கி இருக்கிறது என்று காணுதல் அவசியம். நாம் எதை நோக்கி இருக்கிறோமோ நாம் அதன் பிரதிபலிப்பாக மாறுகிறோம். இல்லையா?இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 33:14-16) இறைவாக்கினர் எரேமியா இஸ்ரயேல் மக்களுக்கான ஆறுதல் செய்தியைத் தருகின்றார். எரேமியா இறைவாக்கினர் நூலில் மட்டும்தான் நாம் அழிவு மற்றும் ஆறுதல் என்ற இரண்டு செய்திகளையும் பார்க்கிறோம். பாபிலோனிய அடிமைத்தனத்தால் யூதா அழியும் என்று இறைவாக்குரைக்கும் அவரே, இன்று, 'தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன்' என்று ஆறதலும் தருகின்றார். அந்நாளில் எருசலேம் புதிய பெயரைப் பெறும். 'யாவே சித்கேனூ' என்பதே அப்பெயர். 'யாவே சித்கேனூ' என்றால் 'ஆண்டவரே நமது நீதி' என்று பொருள். 'தளிர்' என்பது இறைவாக்கினர் நூல்களில் மெசியாவின் வருகையைக் குறிக்கும் (காண். செக் 3:8). இஸ்ரயேல் மக்களை வழிநடத்த வரும் மெசியாவின் முதல் பண்பு 'நீதி' என முன்வைக்கிறது இன்றைய முதல் வாசகம்.'ஆண்டவரே நமது நீதி' - எதற்காக இந்தப் புதிய பெயர்?வேப்பமரத்திலிருந்து புதிய தளிர் வந்தால் அதை நாம் புளிய மரம் என்று வேறு பெயர் சூட்டுவதில்லையே. அப்படி இருக்க, ஏன் இங்கே புதிய பெயரைக் கொடுக்கின்றார் இறைவாக்கினர்?யூதாவை செதேக்கியா மன்னன் ஆண்டபோதுதான் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். 'செதேக்கியா' என்றால் 'யாவே நீதியானவர்' என்பது பொருள். அதே பெயரின் மூலத்தை எடுத்து, 'யாவே நமது நீதி' எனப் பெயர் மாற்றுகின்றார் இறைவன். ஏன்? ஆண்டவரின் முதல் நீதி தண்டனையாக இஸ்ரயேல் மக்களுக்கு வெளிப்பட்டது. அவரின் இரண்டாம் நீதி இரக்கமாக பொழியப்படுகிறது. ஆக, முதல் தண்டிலிருந்து புதிய தளிர் வந்தாலும், அது புதிய பெயரைப் பெற்றுக்கொள்கிறது.இரக்கத்தில் கனியும் நீதி - இதுதான் வரவிருக்கும் மெசியாவின் பண்பு.இதையே தாவீதும், 'ஆண்டவரே, உமது இரக்கத்தையும் உமது பேரன்பையும் நினைந்தருளும்' (திபா 25:6) என்று உரைக்கின்றார்.'இரக்கத்தில் கனியும் நீதி' என்ற மெசியாவின் பண்பு இயேசுவுக்கு வடிவாகப் பொருந்துவதை நாம் நற்செய்தி நூல்களில் பார்க்கிறோம். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண், சக்கேயு, பாவியான பெண், தொழுநோயாளர், பேய்பிடித்தோர் போன்றோரை இயேசு எதிர்கொள்ளும் நிகழ்வுகளில் எல்லாம் நீதி என்பது இரக்கத்தில் கனிகிறது. 'தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என்பது நீதியாக இருந்தாலும், 'அவர்களை இரக்கத்தால் மன்னிப்பதும் நீதியே' என்கிறது இயேசுவின் செயல்பாடு.மத்தேயு நற்செய்தியாளரின் பதிவின்படி உள்ள இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்படும், யோசேப்பும் இத்தகைய நீதியைக் கொண்ட நேர்மையாளராகவே காட்டப்படுகின்றார். சட்டத்தை மதிக்கும் நேர்மையைவிட இறைத்திருவுளம் நிறைவேற்றும் நேர்மையைத் தழுவி, நீதிக்குப் புதிய பரிமாணம் கொடுக்கிறார் யோசேப்பு.'அவரை நோக்கி நம் உள்ளம்' இருக்கும்போது நாம் பெறுகின்ற முதல் கொடையும் இதுவே: 'இரக்கத்தில் கனியும் நீதி.'இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 தெச 3:12-4:2) புனித பவுல் தெசலோனிக்கியருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டு நூல்களில் முதன்மையாக எழுதப்பட்ட நூல் இந்நூலே. தெசலோனிக்கா நகரில் பவுல் மூன்றே முறைதான் (மூன்று ஓய்வுநாள்கள்) நற்செய்தி அறிவிக்கிறார் (காண். திப 17:1). ஆனால், அந்த மூன்று நாள்களிலேயே நிறையப்பேரைக் கிறிஸ்துவை நோக்கித் திருப்புகின்றார். அவர்கள் மீண்டும் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்பாவண்ணம் அவர்களை மீண்டும் சந்திக்கவும், அவர்களுக்கு கடிதங்கள் (இரண்டு) எழுதவும் செய்கின்றார். இக்கடிதங்களில் மேலோங்கி நிற்கும் கருத்துரு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. பவுலும், அன்றைய திருச்சபையாரும் கிறிஸ்துவின் வருகை மிக அருகில் இருப்பதாகவும், அது தங்கள் காலத்திலேயே நடந்தேறும் என்று நம்பினர். இந்தப் பின்புலத்தில்தான், அவரின் வருகைக்கான தயாரிப்பை அறிவுரையாகத் தருகின்றார் பவுல்: '... நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு, அவர்கள் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!'இவ்வாறாக, 'அவரை நோக்கி இருக்கும் உள்ளம்' தூய்மையில் உறுதியாக இருக்கும் என்கிறார் பவுல். இத்தூய்மை எதில் ஊற்றெடுக்கும்? 'ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பு ஆண்டவரால் வளர்க்கப்படும்போது.' இங்கே அன்பிற்கான புதிய பொருளை பவுல் தருகின்றார்: 'அன்பை ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக!'மனிதர்களிடமிருந்து மனிதர்களை நோக்கிப் புறப்படும் அன்பு நாளாக நாளாக வேகமும், ஆழமும் குறைந்துவிடும். ஏனெனில், ஒரு குறைகுடத்தால் இன்னொரு குறைகுடத்தை நிரப்பவே முடியாது. ஆண்டவரால் வளர்க்கப்படும் அன்பு நிறைவிலிருந்து புறப்படுவதால் அது எங்கு சென்றாலும் எல்லாரையும் நிறைத்துக்கொண்டே செல்லும். இந்த அன்பு யாரையும் பயன்படுத்தாது, யாரையும் பயமுறுத்தாது, எதையும் எதிர்பார்க்காது, எதையும் பொறுத்துக்கொள்ளும், எல்லாவற்றையும் நேர்முகமாகப் பார்க்கும்.'அவரை நோக்கி நம் உள்ளம்' இருக்கும்போது நாம் பெறுகின்ற இரண்டாவது கொடை இதுவே: 'ஆண்டவர் வளர்த்தெடுக்கும் அன்பு.'இன்றைய நற்செய்தி வாசகம் (காண். 21:25-28, 34-36) நாம் மூன்று நாள்களுக்கு முன் கேட்ட நற்செய்தி வாசகமும், அதன் நீட்சியுமே. மானிட மகனின் வருகையின்போது கதிரவனிலும், நிலவிலும், விண்மீன்களிலும், வான்வெளிக் கோள்களிலும் நிகழும் மாற்றங்களைப் பட்டியலிடும் இயேசு (லூக்கா), 'உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது' என்ற அவசரமான ஆறுதலையும், ஆறுதலான அவசரத்தையும் தந்து, 'உங்கள் உள்ளங்கள் குடிவெடி, களியாட்டம், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினால் மந்தம் அடையாதவாறு காத்துக்கொள்ள' அறிவுறுத்துகின்றார்.நம் உள்ளம் 'குடிவெறி, களியாட்டம், கவலை' ஆகியவற்றை நோக்கி இருக்கும்போது மந்தம் அடைகிறது. எப்படி? 'மந்தநிலை' என்பதை நாம் தேக்கநிலை என்று அறிகிறோம். தட்பவெப்பநிலை மந்தமாக இருக்கக் காரணம் கதிரவனின் ஒளி தேக்கநிலை அடைவதுதான். பங்குச்சந்தை மந்தமாக இருக்கக் காரணம் நிறுவனங்களின் விற்பனை தேக்கநிலை அடைவதுதான்.ஆக, நகர்ந்து கொண்டிருக்கும் நம்மைத் தேங்க வைப்பவை மேற்காணும் மூன்றே: 'குடிவெறி, களியாட்டம், கவலை.' நாம் குடிவெறியில் இருக்கும்போது அல்லது நிறைய மது அருந்தும்போது நம் மூளை இருப்பை அப்படியே தக்க வைக்க நினைக்கிறது. முன்னும், பின்னும் நகராமல் தடுக்கப் பார்க்கிறது. ஆனால், அப்படி ஒரு நிலை சாத்தியமே அல்ல. ஏனெனில், குடி போதை இறங்கியவடன் நாம் மீண்டும் எதார்த்தத்தiயும் அதன் மாற்றத்தையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். 'களியாட்டம்' என்பது எல்லாவகை நுகர்வு இன்பங்களையும் இங்கே குறிக்கிறது. நுகர்வு இன்பங்கள் நம்மை நிகழ்காலத்தில் வாழ விடாமல் எதிர்காலத்திற்குக் கூட்டிச்சென்றுவிடுகின்றன. எடுத்தக்காட்டாக, ஒரு திரைப்படம் பார்க்கும்போது இருக்கும் இன்பம், அத்திரைப்படம் காட்டும் நல்உலகம் இன்றே வந்துவிட்டதுபோன்ற ஒரு பிரம்மையை உருவாக்கி நம்மை இரண்டு மணிநேரங்கள் எதிர்காலத்தில் வாழச் செய்கிறது. 'கவலை' இதற்கு நேர்மாறானது. இது நம்மை நம் கடந்தகாலத்தோடு கட்டிவிடுகிறது.இவ்வாறாக, 'குடிவெறி' நம்மை நிகழ்காலத்திலும், 'களியாட்டம்' நம்மை எதிர்காலத்திலும், 'கவலை' நம்மை இறந்தகாலத்திலும் நம்மைக் கட்டிவிடுவதால் நாம் அப்படியே தேங்கி விடுகிறோம். இதுதான் நம் வாழ்வின் மந்தநிலை. இந்த மந்தநிலையின் எதிர்ப்பதம்தான் 'விழிப்பாயிருந்து மன்றாடுதல்.' மற்ற நற்செய்தியாளர்கள் எல்லாம், 'விழிப்பாயிருங்கள்' என்று பதிவு செய்ய, லூக்கா மட்டும், 'விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்' என்று இறைவேண்டலையும் உடன் நிறுத்துகின்றார். போதை மறுவாழ்வ மையங்களில் சொல்லப்படும் முதல் பாடமே, 'இறைவனின் துணையை நாடுங்கள்' என்பதுதான். எதற்காக? சில நேரங்களில் நம் மனம் உறுதியில்லாமல் இருக்கிறது. தடுமாறும் மனத்திற்கு உறுதியைத் தருவது இறைவனே. ஆக, 'குடிவெறி, களியாட்டம், கவலை' ஆகியவற்றை எதிர்கொள்ள ஒரே வழி விழிப்பாயிருத்தல். அவ்விழிப்பு கண் அசரும்போது அவரை நோக்கிய நம் மன்றாட்டு.'அவரை நோக்கி நம் உள்ளம்' இருக்கும்போது நாம் பெறுகின்ற மூன்றாவது கொடை இதுவே: 'விழித்திருத்தல்.'ஆக,திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு வழியாக புதிய திருவழிபாட்டு ஆண்டுக்குள் நுழையும் நம் எண்ணம் இது ஒன்றாக இருக்கட்டும்: 'அவரை நோக்கி என் உள்ளம்.'புதிய வீட்டிற்குள் நுழையும்போது நாம் எப்போதும் கண்களை கதவுநிலைகளை நோக்கி உயர்த்தியே நுழைகிறோம். அப்படியே இப்புதிய ஆண்டிற்குள் நுழைதலும் இருக்கட்டும்.திருப்பாடல் ஆசிரியர்போல, 'உம்மை நோக்கியே என் உள்ளம் ஆண்டவரே' என்று அவரைப் பார்க்க, அவர் நமக்கு, 'இரக்கத்தில் கனியும் நீதி,' 'அவர் வளர்க்கும் அன்பு,' 'விழிப்பு' என மூன்று கொடைகளால் நம்மை அணி செய்வார். தளர்ச்சியில், குளிர்ச்சியில் நிற்கும் நம் வேர், தண்டு, கிளை இம்மூன்று கொடைகளால் தளிர்க்கட்டும்.


'ஆண்டவரே, உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்.' (திபா 25:1)

No comments:

Post a Comment