Sunday, 30 December 2018

01 ஜனவரி 2019 புத்தாண்டு நாள் - அன்னை மரியாள் இறைவனின் தாய்

 இறைவனின் அன்னை பெருவிழா
புத்தாண்டு மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்

எண். 6:22-27
கலா . 4:4-7
லூக். 2:16-21


 
 

இன்று இறைவனின் தாயை நினைவுகூர்கின்றோம். தாய் என்ற சொல்லைக் கேட்டவுடன் நமது நினைவிற்கு வருவது அன்பு!

இதோ ஒரு தாயின் அன்பு எப்படிப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்ட ஓர் உண்மை நிகழ்ச்சி .

1980 - ஆம் ஆண்டு தென்கொரியாவிலுள்ள சியோல் என்னும் நகரிலே வீரத் தாயொருத்தி! அவள் பெயர் கிம் மிஸ். ஒரு மாடி வீட்டில் 13-வது மாடியில் அவள் குடியிருந்தாள். அவளுக்கு இரண்டு வயது குழந்தை ஒன்று.

ஒருநாள் அந்த வீட்டிலிருந்த காசோலை ஒன்று ஜன்னல் வழியாகக் கீழே விழுந்துவிட்டது. அதன் மதிப்பு ரூ.126. அதைக் கவனித்த கிம் மிஸ், தனது குழந்தையை வீட்டில் விட்டு விட்டுக் கீழே விழுந்த காசோலையை எடுப்பதற்காக மாடியிலிருந்து கீழே இறங்கினாள்.

கீழே கிடந்த காசோலையை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தாள். அங்கே அவள் காணக்கூடாத காட்சி ஒன்றைக் கண்டாள்.

வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எப்படியோ வீட்டைவிட்டு வெளியேறி, மதிலேறியது ! தவறியது. 13- வது மாடியிலிருந்து கீழே விழுந்தது. விழுந்து கொண்டிருந்த குழந்தையைத் தாய் பார்த்தாள்.

அபயக்குரல் எழுப்பி ஆட்களை அழைக்க அங்கே நேரமில்லை ! விழுந்த குழந்தைக்கு முன்னால் நின்று தனது இரண்டு கைகளையும் விரித்தாள். குழந்தை கைகளில் விழுந்தது. குழந்தைக்கு எந்த ஆபத்துமில்லை!

குழந்தை தன் மீது விழுந்தால் தனது நிலை என்னவாகும் என அந்தத் தாய் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை!

அவளுடைய இதயத்திலிருந்ததெல்லாம் அவள் குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான்! அவள் அன்பைக் கடவுள் தமது வல்லமையால் ஆசீர்வதித்தார். அவளது கைகள் தெய்வீகச் சக்தியைப் பெற்றன! குழந்தை காப்பாற்றப் பட்டது!

தாய் என்பதற்கு மறுபெயர் அன்பு; தாய் என்பதற்கு மறுபெயர் பரிவு; தாய் என்பதற்கு மறுபெயர் பாசம்; தாய் என்பதற்கு மறுபெயர் நேசம்; தாய் என்பதற்கு மறுபெயர் கருணை .

ஒரு மனிதன் வாழ்க்கையில் தேடி அலைவதெல்லாம் அன்பே! அந்த அன்பை அர்த்தமுள்ள முறையில் மனித குலத்திற்குத் தருபவள் தாய்! இதனால் தான் இயேசு தனது தாயையே நமக்குத் தாயாகக் கொடுக்க கல்வாரியில் முன் வந்தார்!

நமது உலகத் தாய்களுக்கு உள்ள அத்தனை நல்ல பண்புகளும் நமது தேவதாய்க்கு உண்டு. மேலும் மற்ற தாய்களிடம் நின்று நிலவும் பண்பைவிட மேலான பண்பு ஒன்று மரியிடம் உண்டு! அதுதான் அவளிடம் நின்று நிலவும் வல்லமை!

உலகப் பெண்களில் கடவுளுக்குத் தாயாகும் பெருமை மரியாவுக்கு மட்டுமே கிடைத்தது.

கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை இன்றைய மூன்று வாசகங்களும் நமக்குத் தெளிவாக்குகின்றன. அனைவருக்கும் ஆசி வழங்குபவர் கடவுள்; கருணை பொழிபவர் கடவுள் ; அமைதி தருபவர் கடவுள் (முதல் வாசகம்) நம்மை எல்லாத் துன்பங்களில் இருந்தும் மீட்கும் கடவுள் ; நம்மீது ஒளியைப் பொழியும் கடவுள் ; பிள்ளைகளாக்கும் உரிமையை அளிக்கும் கடவுள் (இரண்டாம் வாசகம்) மீட்பர் என்ற பெயர் கொண்ட கடவுள் (நற்செய்தி) - இவை யாவும் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை நமக்கு உணர்த்துகின்றன. கடவுளிடம், இறைமகன் இயேசுவிடம், மரியா கேட்டால், அவர் ஒருபோதும் அவள் கேட்பதை மறுக்கப் போவதில்லை (யோவா. 2:1-11). ஆகவே ஒரு வகையில் மரியாவால் ஆகாதது ஒன்றுமில்லை !

இதை நினைத்து இன்று நாம் பெருமகிழ்ச்சி அடைவோம். நமது விண்ணகத் தாயிடம் அன்பும் உண்டு, வல்லமையும் உண்டு. இதை மனதில் கொண்டு நமக்கு வேண்டிய வரங்களையெல்லாம் கன்னித்தாய் வழியாக இறைவனிடம் வேண்டிப் பெறுவோம்.


சன-1. மரியா இறைவனின் அன்னை


கடவுள் தேடிய பெண் : மரியா துறவி ஒருவருக்குக் கடவுளோடு பேசும் வரம் இருக்கின்றது என்று சொல்லி பலர் அவரிடம் சென்று ஆசி பெற்று வந்தனர்.
ஓர் இளைஞனுக்குத் துறவி கடவுளோடு பேசுவது உண்மையா என்பதை அறிந்து கொள்ள ஆசை! அந்த இளைஞன் துறவியைத் தேடி காட்டுக்குச் சென்றான்.
துறவியிடம், உங்களுக்குக் கடவுளோடு பேசும் வரம் இருப்பதாக எல்லாரும் சொல்கின்றார்கள். அது உண்மையா? என்றான்.

ஆம். கடவுளோடு பேசுகின்றேன், கடவுள் என்னோடு பேசுகின்றார் என்றார் துறவி.

அப்படியானால், நீங்கள் அடுத்த முறை அவரைப் பார்க்கும்போது, நான் செய்த பாவங்கள் என்னென்ன என்று கேட்டுச் சொல்லுங்கள் என்றான் இளைஞன்.
துறவி, சரி என்றார்.

மறுநாள் இளைஞன் துறவியிடம் சென்று, என்ன! கடவுளைச் சந்தித்தீர்களா? அவர் என்ன சொன்னார்? என்றான்.

அதற்கு அந்த முனிவர், சந்தித்தேன் மகனே! உன் பாவங்களைப் பற்றியும் கேட்டேன். அதற்குக் கடவுள், அந்த இளைஞனுடைய பாவங்களை எல்லாம் மன்னித்து மறந்துவிட்டேன். இப்போது அவனுடைய பாவங்கள் எதுவும் என் ஞாபகத்திலில்லை என்று சொல்லிவிட்டார் என்றார்.

அதைக் கேட்டு அந்த இளைஞன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

ஆம். நமது கடவுள் நமது பாவங்களை மன்னித்து, அவற்றை மறந்துவிடும் கடவுள்.

இப்படிப்பட்ட கடவுள் தமது நிபந்தனையற்ற ஆழமான அன்பை உலக மக்களுக்கு வெளிப்படுத்தத் திருவுளமானார்.

தமது திருவுளத்தை நிறைவேற்றிக் கொள்ள, மனிதனாகப் பிறந்து, மனிதர்களை நேருக்கு நேர் சந்தித்து அவர்கள் பாவங்களை மன்னித்து, மறந்து அவர்களை வளமுடன் வாழவைக்க, மக்களினத்தைக் காப்பாற்ற, அனைவர் மீதும் அருள்பொழிய, தம் திருமுகத்தை உலகின் பக்கம் திருப்ப (முதல் வாசகம்) தாயொருவர் தேவைப்பட்டார். அவரைக் கடவுள் தேடினார். தேடிய பெண் (இரண்டாம் வாசகம்) கிடைத்தார். அவர்தான் மரியா! மேலும் அறிவோம்:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).

பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.


 

வேண்டும் மூன்றுவித நம்பிக்கைகள்


இயேசு ஒருநாள் பேதுருவோடு பூமிக்கு வந்து உலகைச் சுற்றிப் பார்க்க விரும்பினார். இருவரும் புறப்பட்டனர். இறைமக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க ஆசை.

போகிற வழியில் எதிரே ஒரு குதிரைவண்டி மணலில் சிக்கிக் கொண்டதைப் பார்த்தனர். வண்டியை அப்படியே விட்டுவிட்டுப் பாதையோரத்தில் வண்டிக்காரன் முழந்தாளிட்டுச் செபித்துக் கொண்டிருந்தான்: “இறைவா, என் வண்டியை ஓடவிடு. நீ நினைத்தால் இந்த அற்புதத்தைச் செய்யலாம். உன்னால் முடியாதது உண்டா என்ன?" உருக்கமான அவன் செபத்தைக் கேட்டதுமே செப வேளையில் தூங்கியே பழக்கப்பட்ட பேதுருகூடச் சிலிர்த்துப் போனார். இயேசுவைப் பார்த்து "ஆண்டவரே, அவனுடைய செபம் உம் மனத்தைத் தொட வில்லையா? உதவி செய்யும்" என்று கெஞ்சினார். இயேசுவோ பேதுருவை முறைத்து அமைதியாக இரு' என்ற சொல்லிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்.

சிறிது தொலைவு சென்றதும் இன்னொரு குதிரை வண்டி தலைகீழாக உருண்டு கிடந்ததைக் கண்டனர். வண்டிக்காரனோ சொல்லக்கூடாத பொல்லாத வார்த்தைகளைச் சொல்லித் திட்டிக் கொண்டும் தெய்வ நிந்தனை செய்து கொண்டும் விழுந்து கிடந்த வண்டியை நிமிர்த்தப் பாடுபட்டுக் கொண்டிருந்தான். வேர்த்து விறுவிறுக்க அவன் உழைக்கும் உழைப்பெல்லாம் பயனற்றுப் போகிறதே என்று பேதுரு பரிதாபப்பட்டு “ஆண்டவரே, இவன் இப்படிப் பாடுபடுகிறானே, பயனளியும்" என்று மன்றாடினார். இரவு முழுவதும் உழைத்தும் எதுவும் கிடைக்காத நிலையில் விடியல் வேளையில் கரைமேல் நின்று கொண்டே வலைகிழிய மின்படச் செய்தவர் அல்லவா இயேசு என்ற நினைவு பேதுருவுக்கு வந்தது. “பேதுரு, பேசாமல் இருக்க மாட்டே” என்று இயேசு கடிந்ததும் வாயடங்கி நின்றார் பேதுரு.

கொஞ்சத்தூரம் போனதும் இன்னொரு குதிரை வண்டி சேற்றில் மாட்டிக் கொண்டதைப் பார்த்தனர். வண்டிக்காரனோ கடவுள் உதவி செய்வார் என்ற உறுதிப்பாட்டோடு 'இயேசுவே' என்று இறைவன் நாமத்தைத் துதித்துக் கொண்டு நுகத்தடியைப் பிடித்து அசைத்து இழுக்க முயன்று கொண்டிருந்தான். அதைக்கண்ட பேதுருவுக்கு இயேசுவிடம் உதவி கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் கேட்கும் துணிவில்லை. முந்தைய அனுபவங்களின் காரணமாக பேசவே பயந்தார். ஆனால் இயேசுவோ பேதுருவைப் பார்த்து “நீ அந்தச் சக்கரத்தைப் பிடி, நான் இந்தச் சக்கரத்தைப் பிடித்துக் கொள்கிறேன், இரண்டு பேரும் அவனோடு சேர்ந்து தள்ளுவோம்" என்றார். வண்டி நகர்ந்தது.

பேதுருவுக்கு ஒன்றுமே புரியவில்லை. மூன்று நிகழ்ச்சிகளிலும் இயேசு நடந்து கொண்ட முறை புதிராக இருந்தது. வியப்பாகவும் இருந்தது. விளக்கம் கேட்க விரும்பினார். தயங்கினார். அவரது கலக்கத்தைப் பார்த்த இயேசு விளக்கத் தொடங்கினார்.

"முயற்சி எதுவுமின்றி முதல் வண்டிக்காரன் செபித்துக் கொண்டிருந்தான். திண்ணையில் இருந்து கொண்டே தெய்வத்தை நினைப்பவனுக்கு நான் எப்போதும் படியளக்க விரும்புவதில்லை. இரண்டாவது வண்டிக்காரனோ தெய்வ சிந்தனை இன்றியே உழைத்ததனால் அவன் உழைப்பு வெறுமையைக் கண்டது. அவனன்றி அணுவை அசைக்க முயன்றவன் அவன். ஆனால் மூன்றாவது மனிதனோ தன்னம்பிக்கையோடும், தெய்வ நம்பிக்கையோடும் செயல்பட்டவன். தெய்வ நம்பிக்கையோடும் தன்னம்பிக்கையோடும் எவன் உழைக்கிறானோ அவனுக்கு வலிய தேடிச் சென்று உதவக் காத்திருக்கிறேன்”

கடவுளால் மட்டுமே முடியும் என்பது போல செபித்திடு மனிதனால் மட்டுமே முடியும் என்பது போல உழைத்திடு

வெற்றி உனதே! அத்துடன் நல்லது நடக்கும் என்ற பொது நம்பிக்கையை வளர்த்துக் கொள். இறைவா, நீயும் நானும் இணைந்து கையாள முடியாத எதுவும் எனக்கு இந்த ஆண்டில் நடக்கப் போவதில்லை என்பதை எனக்கு நினைவூட்டிக் கொண்டே இரும்!

ஆக, வாழ்க்கைக்கு வேண்டும் மூன்று நம்பிக்கைகள்:

தெய்வ நம்பிக்கை: கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்ற உணர்வு - மத்.19:26.
தன்னம்பிக்கை : எனக்கு உறுதியூட்டும் இறைவனருளால் என்னால் சாதிக்க இயலாதது எதுவுமில்லை என்ற உறுதி - பிலி.4:13.
பொது நம்பிக்கை : என்ன ஆனாலும் நல்லது நடக்கும் என்ற எண்ணம் -1 தெச.5:18

நம்புங்கள். செபியுங்கள். நல்லது நடக்கும். நம்பிக்கை என்பதே மனிதனுக்கு உயிரூட்டும் உயிர்ச்சத்து.

“ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களேயன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல என்கிறார் ஆண்டவர் (எரேமி.29:11).

புத்தாண்டில் மூன்று விதமான இறையாசீர் நம்மோடு இருக்க வேண்டுமென்று எண்ணிக்கை நூலாசிரியர் வாழ்த்துகிறார் (எண்.6:2426):
1. ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
2. ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன் மீது அருள் பொழிவாராக!
3. ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! இன்பமாயிருக்கப் போதுமான இனிமைகளும் உறுதியாயிருக்கப் போதுமான முயற்சிகளும் இதயத்துடன் இருக்கப் போதுமான துக்கங்களும் துள்ளிப்பாடப் போதுமான தன்னம்பிக்கையும் ஆண்டவனை நேசிக்கவும் அயலானை நேசிக்கவும் போதுமான இறையருளும் புத்தாண்டு அருளட்டும்!
மரியன்னை இறைவனின் தாய்


புத்தாண்டின் முதல் நாள் உலக அமைதி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அமைதி எங்கே இருக்கிறது என்பதை ஓர் ஓவியர் பின்வருமாறு படம் வரைந்து காட்டிப் பரிசு பெற்றார். மரங்கள் நிறைந்த அடர்த்தியான காடு; அமாவாசை இருட்டு; கோடை இடி; கண்ணைப் பறிக்கும் மின்னல்; சிங்கம், சிறுத்தைப்புலி மற்றும் கொடிய விலங்குகளின் சீற்றம்; பேய் மழை. இப்பயங்கரமான காட்டில் ஒரு பெரிய மரம்: அம்மரத்தின் நடுவில் ஒரு பொந்து: அப்பொந்தில் ஒரு தாய்ப்பறவை; அதன் இறக்கைக்கு அடியில் ஒரு சேய்ப்பறவை பயமின்றி நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது. அப்பொந்துக்குக் கீழ் : “இங்கேதான் அமைதி தவழ்கின்றது" என்று ஓவியர் எழுதியுள்ளார்.

காரிருள் சூழ்ந்த பயங்கரமான காட்டில் ஒரு சேய்ப்பறவை அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம்: அது தன் தாயின் இறக்கைக்கு அடியில் உள்ளது. அச்சமும் திகிலும் நிறைந்த நம் வாழ்வில் நாம் அமைதியுடன் வாழவேண்டுமென்றால், நாம் இறைவனில் நம்பிக்கை கொண்டு, அவரது அன்பான அரவணைப்பில் இருப்பதை உணர வேண்டும். திருப்பா 91 கூறுவதை இப்புத்தாண்டின் தாரக மந்திரமாகக் கொள்வோம்: “அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின் கீழ் நீர் புகலிடம் காண்பீர் - தீங்கு உமக்கு நேரிடாது. வாதைஉம் கூடாரத்தை நெருங்காது" (திபா 91:1, 10),

புத்தாண்டாகிய இன்று குழந்தை இயேசு பிறந்த எட்டாம் நாள், இன்று குழந்தை இயேசுவுக்கு அதன் பெற்றோர்கள் விருத்தசேதனம் செய்து, இயேசு என்ற பெயரைச் சூட்டியதாக இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். அக்குழந்தை இந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் கூறுவது: "நான்தான்: அஞ்சாதீர்கள்" (யோவா 6:20). இன்பமோ துன்பமோ, வெற்றியோ தோல்வியோ, அழுகையோ சிரிப்போ, உடல் நலமோ நோயோ - எத்தகைய சூழலிலும் குவலயம் போற்றும் குழந்தை இயேசு நம்முடன் இருந்து, நம்மை வழிநடத்திக் காத்து வருகிறார்,

இன்று திருச்சபை, "மரியா இறைவனின் தாய்" என்ற பெருவிழாவைக் கொண்டாடுகிறது. மரியா மீட்பரின் தாய் மட்டுமல்ல, நம்முடைய தாயும்கூட, எனவே, இறைவனின் தாயும் நமது தாயுமான மரியன்னையின் பாத கமலத்தில் இப்புத்தாண்டை வைப்போம். அந்த அன்பு அன்னை நம்மை கரம்பிடித்து, கவலைகளைப் போக்கி, கண்ணீரைத் துடைத்து, நம்மைக் கரைசேர்ப்பார் என்பது உறுதி.

மரியாவின் படத்திற்கு முன் ஒருவர் மண்டியிட்டு, “அம்மா! உம்மை எனக்குத் தாயாகக் காட்டமாட்டாயா?" என்று கேட்க, மரியா அவரிடம், "மகனே! உன்னை எனக்குப் பிள்ளையாக காட்டமாட்டயா?" என்று கேட்டார். மரியா என்றும் நமக்குத் தாயாக இருக்கிறார். ஆனால் நாம் என்றும் அவருடைய பிள்ளைகளாக இருக்கின்றோமா? என்பதுதான் பிரச்சினை!

| மரியன்னையின் பிள்ளைகளாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? "என் ஆண்டவரின் தாய்" (லூக் 1:42) என்று மரியாவை அழைத்த எலிசபெத் அவரிடம், "ஆண்டவர் உமக்குச் சென்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" (லூக் 1:45) என்று கூறினார், மரியா பேறு பெற்றவர்; ஏனெனில் அவர் கடவுளின் வார்த்தையை நம்பினார். "கன்னி நம்பினார்; நம்பி கருவுற்றார். உடலால் கருவுறுமுன் உள்ளத்தால் கருவுற்றார்" (புனித அகுஸ்தின்).

எனவே, மரியாவின் உண்மையான பிள்ளைகளாக நாம் நடக்க வேண்டுமென்றால், நாமும் அவரைப்போல் கடவுளை முற்றிலும் நம்பி, கடவுளிடம் சரண் அடைய வேண்டும். மரியா கடவுளை நம்பியதால் கடவுள் அவருக்குத் துன்பம் வராமல் பாதுகாக்கவில்லை . மரியாவைக் கடவுள் சென்மப்பாவம் தீண்டாமல் பாதுகாத்தார்; ஆனால் துன்பம் தீண்டாமல் பாதுகாக்கவில்லை. கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது மரியா சிலுவை அருகில் நின்றுகொண்டிருந்தார் (யோவா 19:25). அப்போது சிமியோன் கூறிய இறைவாக்கு, "உமது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" (லூக் 2:35) நிறைவேறியது. ஆனால் மரியா சிலுவை அடியில் விசுவாசத்தால் நிமிர்ந்து நின்றார். இத்தகைய வீரத் தாயின் புதல்வர்களாகிய நாம் துன்பத்தைக் கண்டு துவண்டு போகலாமா ?

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நாம் அடிமைகள் அல்ல; பிள்ளைகள்" (கலா 4:7). அதே திருத்தூதர் கூறுகிறார்: “கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையைப் பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், அப்பா, தந்தையே என அழைக்கிறோம்" (உரோ 8:15), எனவே, நாம் கோழைகள் அல்ல; கடவுளின் பிள்ளைகள் அவ்விதமே அச்சமின்றி வாழ்வோம்.

மரியா எலிசபெத்தைச் சந்தித்தபோது அவருடைய வயிற்றில் இருந்த திருமுழுக்கு யோவான் பேருவகையால் துள்ளினார் (லூக் 1:44). மரியா நமது மகிழ்ச்சியின் காரணம், மரியாவைப் பின்பற்றி நாமும் இப்புத்தாண்டில் பிறரை மகிழ்விப்பதில் கருத்தாய் இருப்போம். பிறரை நமது சொல்லாலோ செயலாலோ புண்படுத்தாதபடி கவனமாய் இருப்போம். அகம் மலர்ந்து தருமம் செய்வதைவிட, முகம் மலர்ந்து இனிய சொல் கூறுவது சிறந்தது.

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின் (குறள் 92)

இறைவன் உங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்துப் பாதுகாப்பாராக! அவரின் உடனிருப்பு என்றும் உங்களை வழிநடத்தவதாக! உலகம் தரமுடியாத அமைதியால் கிறிஸ்து உங்கள் உள்ளத்தையும் இல்லத்தையும் நிரப்புவாராக!
வாழ்க புனித மரியே! விண்ணையும் மண்ணையும் எக்காலத்தும் ஆளுகின்ற அரசரை ஈன்றவரே வாழ்க!

தாய்மையோடு புத்தாண்டில்


கிரகோரியன் காலண்டரின் படி இன்று ஆண்டின் முதல் நாள். கிரேக்க கடவுள் Janus போல இரண்டு தலை கொண்டவர்களாக - பின்னோக்கியும், முன்னோக்கியும் - நன்றி மற்றும் நம்பிக்கை கொண்டவர்களாக  இன்றைய நாளில் நிற்கின்றோம். ஆக, (1) இன்று புத்தாண்டுப் பெருநாள். (2) இந்த ஆண்டின் தலைநாளான இன்று திருஅவை மரியாளை இறைவனின் தாயாக (2) கொண்டாடுகிறது. மேலும், (3) இந்த நாள் தான் 'இயேசுவுக்கு' பெயர் சூட்டப்பட்ட நாள். (4) இந்த நாள் தான் கிறிஸ்துபிறப்பின் எட்டாம் திருநாள். ஆக, இது கிறிஸ்து பிறப்பின் எட்டாம் திருவிழா. இவ்வாறாக, நான்கு நிலைகளில் முக்கியத்துவம் பெறும் இந்நாளில், 'தாய்மையோடு புத்தாண்டில்' என்ற தலைப்பில் உங்களோடு சிந்திக்க விழைகின்றேன்.

ஐசக் நியூட்டனின் 'அப்சலூட் தியரி' மறைந்து, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் 'ரெலடிவிட்டி தியரி' மேலோங்கி நிற்கும் காலத்தில், எல்லாமே சார்பு அல்லது ரெலடிவ் என்ற நிலைதான் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இன்று 'தாய்மையைக் கொண்டாடுவோம்' என்று நான் சொன்னால், அது சார்பு நிலையில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது அல்ல. ஏனெனில், நான் இப்படிச் சொல்லும்போது, தாய்மையை உடல் அளவில் அடைய முடியாத ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலினர், தாய்மையை தாங்களாகவே துறந்த பெண் துறவியர், தாய்மையை அடைய முடியாத நிலையில் உள்ள பெண்கள், வன்புணர்வால் தாய்மை புகுத்தப்பட்டுத் துன்புறும் பெண்கள், குழந்தைகள், மற்றும் வாடகைத் தாய்மார்கள் என பலரை நான் சிந்தனையிலிருந்து அகற்றிவிடுவேன். ஆக, 'தாய்மை' என்ற வார்த்தையை நான் இங்கே உருவகமாகவே பயன்படுத்துகிறேன். அதே போல, 'புத்தாண்டு' என்ற வார்த்தையும் தனிநபர் சார்ந்ததே. கிரகோரியன் காலண்டர் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே இன்று புத்தாண்டு நாள். தமிழ், தெலுங்கு, சீன, ஆப்பிரிக்க, யூத போன்ற பிற காலண்டர்களைப் பின்பற்றுபவர்களுக்கு இதே ஆண்டின் இன்னொரு நாளே தவிர புத்தாண்டு நாள். ஆக, 'புத்தாண்டு' என்ற வார்த்தையையும் நான் இங்கே உருவகமாகவே பயன்படுத்துகிறேன்.

'தாய்மையோடு புத்தாண்டில்' நுழைவது எப்படி?

இன்று மரியாளை இறைவனின் தாயாக அழைத்து, அவரின் தாய்மையைக் கொண்டாடுகிறோம். 'இறைவனின் தாய்' என்றால், அவர் 'இறைவனையே பெற்றெடுத்தார்' என்ற பொருளில் அல்ல. ஏனெனில், 'படைக்கப்பட்டவர்' 'படைத்தவரை' பெற்றெடுக்க முடியாது. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நெஸ்டோரியஸ் என்ற கீழைத்திருஅவை (கான்ஸ்டான்ட்டிநோபில்) ஆயர் மற்றும் அவரது சீடர்கள் இயேசுவின் மனித தன்மையை மட்டுமே ஏற்றுக்கொண்டு, மரியாளை 'கிறிஸ்துவின் தாய்' அல்லது 'இயேசுவின் தாய்' என அழைத்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடிய எபேசு பொதுச்சங்கம் (431), 'இம்மானுவேல்தான் கடவுள். இந்த இம்மானுவேலின் தாய் இறைவனின் தாய். இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சபிக்கப்படுக!' என்று அறிவித்தது. ஆக, 'இறைவனின் தாய்' என்னும் தலைப்பு மரியாளுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்பதைவிட, இயேசுவின் இறைத்தன்மைக்கு கொடுக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும். மரியாள் எலிசபெத்தைச் சந்திக்கச் சென்றபோது, அவரை வாழ்த்தி வரவேற்கும் எலிசபெத்து, 'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?' (லூக் 1:43) என்று கேட்கின்றார். 'ஆண்டவரின் தாய்' என்ற இந்தச் சொல்லாடல்தான் 'இறைவனின் தாய்' என்று வந்தது என்றும் நாம் சொல்ல முடியாது. ஆனால், எலிசபெத்து மரியாளை 'ஆண்டவரின் தாய்' என்று அழைக்கின்றார். மற்றபடி மரியாளை இறைவனின் தாய் என அழைக்க வேறு குறிப்புக்கள் விவிலியத்தில் இல்லை.

தாய்மை என்றால் என்ன?

தாய்மைக்கான மிகச் சிறந்த வரையறை விவிலியத்தின் முதல் பக்கங்களில் உள்ளது. தொடக்கப் பெற்றோர் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்து, அவர்கள் கடவுளால் தண்டிக்கப்பட்டபோதுதான் அந்த இனிய நிகழ்வு நடக்கிறது. விவிலிய ஆசிரியர் இப்படிப் பதிவு செய்கிறார்: 'மனிதன் தன் மனைவிக்கு 'ஏவாள்' என்று பெயரிட்டான். ஏனெனில், உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்' (தொநூ 3:20). கொஞ்சப் பகுதிக்கு முன்னால் - அதாவது, பாவம் செய்வதற்கு முன், 'ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால் இவள் 'பெண்' (ஈஷா) என அழைக்கப்படுவாள்' (தொநூ 2:23) என்று வேறு ஒரு பெயர் கொடுக்கப்படுகிறது. ஆக, தாய் என்ற பெயர் ஒரு ரொமான்டிக் பெயர் அல்ல. மாறாக, மனுக்குலத்தின் முதல் தாய் ஏவாள் தாய்மை என்ற பேற்றை அடைவது பிள்ளைப் பேற்றினால் அல்ல. மாறாக, தான் செய்த தவற்றினால்.

இதைக் கொஞ்சம் புரிந்துகொள்வோம். ஏவாளிடம் எனக்குப் பிடித்தவை மூன்று: (அ) பாம்பை எதிர்கொள்ளும் துணிச்சல், (ஆ) கணவனுடன் பகிர்தல், மற்றும் (இ) பொறுப்புணர்வு. முதலில், மனுக்குலத்தின் எதிரியாகிய பாம்போடு நேருக்கு நேர் நின்று உரையாடிவள் ஆண் அல்ல. மாறாக, பெண். விவிலியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் உரையாடலும் இதுவே. மேலும், அவளின் உரையாடல் வெறும் பழத்தைப் பற்றியது அல்ல. மாறாக, உண்மை, நன்மை, தீமை போன்ற பெரிய கருத்தியல்கள் பற்றியது. பாம்பு பெண்ணிடம், 'நீங்கள் சாகவே மாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்' என்றது (தொநூ 3:4-5). பாம்பின் இந்த வார்த்தைகளை நம்பி பெண் பழத்தை உண்ணவில்லை. பின் எதற்காக உண்டாள்? 'அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்கு களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாவும் இருந்ததைக் கண்டு பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள்' (தொநூ 3:6). ஆக, பாம்பு சொல்லவில்லையென்றாலும் ஏவாள் அந்தப் பழத்தை உண்டிருப்பார். ஆக, தானே விரும்பி தன் முடிவை எடுக்கின்றார் ஏவாள். மேலும், தீமையை நேருக்கு நேர் எதிர்கொள்கின்றார். இரண்டாவதாக, 'அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்' (தொநூ 3:6) என்கிறது விவிலியம். தான் செய்த செயலைத் தன் கணவனோடு பகிர்கிறாள். மூன்றாவதாக, தான் உண்டதற்குப் பொறுப்பேற்கிறார் ஏவாள். 'பாம்பு என்னை ஏமாற்றியது. நானும் உண்டேன்' (தொநூ 3:13) என தன் செயலுக்குப் பொறுப்பேற்கிறார் ஏவாள்.

இந்த மூன்று குணங்களும்தான் அவரைத் தாய்மை நிலை அடைய வைக்கிறது. ஆக, தாய்மை என்பது, (அ) தீமையை நேருக்கு நேர் எதிர்கொள்ளுதல், (ஆ) தன்னிடம் உள்ளதைப் பகிர்தல், (இ) பொறுப்புணர்வோடு இருத்தல். இந்த மூன்றிலும் ஒன்று புலப்படுகிறது. அது என்ன? தாய்மை என்பது ஒரு தயார்நிலை. தாய்மை ஒரு இலக்கு அல்ல. மாறாக, இனி வருபவற்றை எதிர்கொள்வதற்கான தயார்நிலை என்னும் வழிமுறை. மரியாளின் தாய்மையும் ஒரு தயார்நிலையே. அத்தயார்நிலையில் (அ) அவர் தீமையை நேருக்கு நேர் எதிர்கொண்டு வெற்றி பெறும் மீட்பரைப் பெற்றெடுத்தார், (ஆ) 'உம் சொற்படியே ஆகட்டும்' என்று தன்னிடம் உள்ளதைக் கடவுளோடு பகிர்ந்தார், (இ) பெத்லகேம் முதல் நாசரேத்துக்கு, நாசரேத்து முதல் எருசலேமுக்கு, நாசரேத்து முதல் கானாவுக்கு, கானா முதல் கல்வாரிக்கு எனத் தன் மகனைப் பொறுப்புணர்வோடு வழிநடத்தினார். இன்று புத்தாண்டில் நுழையும் நமக்கு மரியாள் வைக்கின்ற பாடம் இதுவே: 'தாய்மை என்னும் தயார்நிலை.' மேலும், இத்தாய்மை (அ) பொறுப்புணர்வு (interactive responsibility), (ஆ) அர்ப்பணம் (commitment), (இ) தோல்வி தாங்கும் உள்ளம் (resilience) என மூன்று மதிப்பீடுகளாக வெளிப்பட வேண்டும்.

தாய்மை என்பது எப்படி தயார்நிலையோ, அதுபோல புத்தாண்டு என்பதும் தயார்நிலையே. புத்தாண்டு என்பது நம் இலக்கு அல்ல. மாறாக, நம் இலக்கை அடைவதற்கான வழியே புத்தாண்டு. புத்தாண்டை நாம் கொண்டாடக் காரணம் நாம் காலத்திற்கு உட்பட்டிருப்பதால்தான். காலத்திற்கு உட்படாத கடவுளுக்கும், வானதூதர்களுக்கும், இறந்த நம் முன்னோர்களுக்கும் புத்தாண்டு இல்லை. ஆக, நம் வரையறையை நினைவுகூறும், கொண்டாடும் நாள்தான் இந்நாள்.

காலத்தின் வரையறைக்குள் கடவுளும் வந்ததால், காலம் புனிதமாக மாறியது. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். கலா 4:4-7), புனித பவுல், 'காலம் நிறைவேறியபோது, திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகளாக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்' என மொழிகிறார். காலத்தையும் இடத்தையும் கடந்தவர் கடவுள். காலத்திற்குள்ளும், இடத்திற்குள்ளும் இருப்பவர்கள் நாம். நம் இருப்பிற்குள் கடவுள் வரவேண்டுமென்றால், அவருக்கு நேருமும் இடமும் தேவை. இந்த நேரத்தையே, பவுல், 'காலம் நிறைவுற்றபோது' என்றும், இந்த இடத்தையே, 'பெண்ணிடம்' என்றும் குறிப்பிடுகிறார். மேலும், திருச்சட்டம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டது என்பதால், கடவுளின் மகனும் திருச்சட்டத்திற்கு உட்படுகின்றார். 'கடவுளின் மகன்' என்று இயேசுவைச் சொல்வதன் வழியாக, மறைமுகமாக மரியாளை 'கடவுளின் தாய்' எனச் சொல்கின்றார் பவுல். மேலும், காலத்திற்கு உட்பட்ட கடவுள், 'இனி நீங்கள் அடிமைகள் அல்ல. பிள்ளைகள்தாம்' என்று கடவுளின் பிள்ளைகளுக்குரிய உரிமைப்பேற்றைக் கொடுக்கின்றார்.

கடவுளே நுழைந்த காலத்தின் நீரோட்டத்தின் ஒரு பகுதியே 2019ஆம் ஆண்டு. இந்த ஆண்டிற்குள் நுழையும் நமக்கு கடவுள் தரும் ஆசீரைப் பட்டியலிடுகின்றது இன்றைய முதல் வாசகம் (காண்.எண் 6:22-27). 'யோம் கிப்பூர்' நாளில் பரிகாரப் பலி செலுத்திவிட்டு, திருத்தூயகத்திலிருந்து வெளிவரும் தலைமைக்குரு அங்கே கூடியிருக்கும் மக்களுக்கு வழங்கும் ஆசியுரையே இது. இந்த ஆசீரின் இரண்டு முக்கிய கூறுகள் அருளும், அமைதியும். இந்த ஆசீரை இறைவனே மோசே வழியாக ஆரோனுக்கு கற்றுத் தருகின்றார். எபிரேயத்தில் 'ஆசீர்' என்றால் 'செல்வம்' அல்லது 'வளமை' என்பது பொருள். ஆக, ஒருவர் செல்வந்தராக இருக்கிறார் என்றால் அவர் இறைவனின் ஆசீர் பெற்றவர் என்று நாம் சொல்லலாம். அதற்காக செல்வம் இல்லாதவர்கள் எல்லாம் ஆசீர் இல்லாதவர்கள் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

தமிழ் மொழிபெயர்ப்பில் சின்ன சிக்கல் இருக்கிறது. அதாவது, 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!' என்பது 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!' என்று இருக்க வேண்டும். ஒருவேளை எபிரேயத்தின் மொழிநடை எல்லாவற்றையும் பிரித்து எழுதுகிறதோ என்னவோ. மேலும், எபிரேய வாக்கிய அமைப்பில் முதல் ஆசியில் மூன்று வார்த்தைகளும், இரண்டாம் ஆசியில் ஐந்து வார்த்தைகளும், மூன்றாம் ஆசியில் ஏழு வார்த்தைகளும் இருக்கின்றன. மூன்று - ஐந்து - ஏழு என ஆசீர் வளர்கிறது. ஆக, இது சும்மா 'நல்லா இரு!' என்று சொல்லப்பட்ட ஆசீர் அல்ல. மாறாக, யோசித்து, நிறுத்தி, நிதானமாக எழுதப்பட்டுள்ளது.

மூன்று ஆசிகள். ஒவ்வொரு ஆசியிலும் இரண்டு கூறுகள்: (1) 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!' இதில் ஆண்டவர்தான் செயலாற்றுபவர். ஆண்டவர் தான் ஆசீர் அளிப்பவர். 'உனக்கு' என்பது இரண்டாம் நபர் (முன்னிலை) ஒருமை. ஆக, இது மொத்தமாக கூட்டத்தின்முன் வழங்கப்பட்டாலும், ஆசி ஒவ்வொரு தனிநபருக்கும் உரியது. ஆக, ஆண்டவரின் பிரசன்னத்தில் கூட்டம் போடுவதற்கே இடமில்லை. ஒவ்வொருவரும் அவரின் பார்வையில் விலைமதிப்பு உடையவர். 'பராகா' என்பது இறைவன் மனிதர்களுக்கு ஆசீர்வதிப்பதையும் குறிக்கிறது. 'காத்தல்' என்பதை 'கண்களைப் பதித்தல்.' ஒரு ஆயன் தன் மந்தையைக் காக்கிறான் என்றால், அவன் தன் மந்தையின் மேல் தன் கண்களைப் பதிய வைக்கிறான். (2) 'ஆண்டவர் அவர் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்வாராக! உனக்கு அருள்கூர்வாராக!' 'ஒளி' என்பது விவிலியத்தில் வாழ்வைக் குறிக்கும். ஆண்டவரின் முகம் எப்போதும் ஒளிரக் கூடியது. இந்த முகம் மனிதர்கள்மேல் படும்போது அவர்களும் ஒளி பெறுகின்றனர். வாழ்வு பெறுகின்றனர். மேலும், உருவகத்தின் அடிப்படையில் 'திருமுகம் ஒளிர்தல்' என்பது 'அருள்கூர்தல்' என்றும் பொருள் படும். 'ஹனான்' ('அருள்') என்ற வார்த்தை 'தன் குழந்தையை கூர்ந்து பார்க்கும் தாயின்' செயலைக் குறிக்கிறது. (3) 'ஆண்டவர் தன் திருமுகத்தை உயர்த்துவாராக! உனக்கு அமைதி தருவாராக!' மீண்டும் ஆண்டவரின் திருமுகமே இங்கு செயலாற்றுகிறது. 'தாழ்ந்து போன முகம்,' அல்லது 'குனிந்த முகம்' அவமானத்தை அல்லது கோபத்தைக் குறிக்கும் (தொநூ 4:6,7). மேலும், வேறுபக்கம் முகத்தை திருப்பிக் கொள்ளுதல் கோபத்தையும், ஒருவரிடமிருந்து விலகி நிற்பதையும், கண்டுகொள்ளாததையும் குறிக்கும் (இச 31:18, திபா 30:8, 44:25). ஆண்டவர் தன் முகத்தை தாழ்த்திக் கொள்ளாமல், வேறு பக்கம் திருப்பிக் கொள்ளாமல் உன் பக்கம் திருப்புகிறார். இறுதியாக அவர் 'ஷலோம்' ('அமைதி, நிறைவு, நலம்') தருகிறார்.

இந்த மூன்று ஆசிகளையும் ஒருசேர வாசிக்கும்போது என்ன தோன்றுகிறது? எனக்கு வெளியில், என்னில், எனக்கு உள்ளே என்று மூன்று எதார்த்த நிலைகள் உள்ளன. இறைவனின் ஆசிமொழி எனக்கு வெளியே தொடங்கி, என்மேல் ஒளிர்ந்து, எனக்குள் பாய்கின்றது. ஆக, இறைவனின் ஆசி முழுமையான ஆசியாக இருக்கிறது. புத்தாண்டு தரும் தயார்நிலையை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் (லூக் 2:16-21) பின்புலம் இதுதான்: இயேசு பெத்லகேமில் பிறந்துவிட்டார். இந்த பிறப்பு செய்தி வானதூதர் ஒருவரால் இடையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. பின் வானதூதர் அணி வானில் பாடல் பாடுகின்றது. இந்த பாடல் முடிந்தவுடன், இடையர்கள் என்ன செய்தார்கள் என்பதும், இடையர்களின் வருகை மரியாவில் ஏற்படுத்திய மாற்றம் என்ன என்பதுமே இன்றைய நற்செய்தி வாசகம். இன்றைய நற்செய்தி வாசகத்தை நான்கு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) இடையர்களின் வருகை, (ஆ) இடையர்களின் வியப்பு, (இ) மரியாளின் பதிலுணர்வு, (ஈ) இடையர்களின் செல்கை, மற்றும் (உ) இயேசுவின் விருத்தசேதனம். இவற்றில் மையமாக இருப்பது மரியாளின் பதிலுணர்வு.மரியாளின் பதிலுணர்வு மௌனமும், தியானமும். எல்லா யூதர்களையும்போல மரியாளுக்கும் மெசியா பற்றிய காத்திருத்தல் இருந்திருக்கும். இந்தக் காத்திருத்தல் நிறைவு பெற்றதை தன் உள்ளத்தில் உணர்ந்தவராய் அப்படியே உறைந்து போகின்றார்.இங்கே 'சும்பல்லூசா' என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு 'தியானித்தில்' அல்லது 'உள்ளத்தில் இருத்துதல்' அல்லது 'மனனம் செய்தல்' என்பது பொருள் அல்ல. மாறாக, 'ஒன்றுகூட்டுதல்' என்பதே பொருள். அதாவது, ரெவன்ஸ்பர்கர் ஆட்டத்தில், சிதறிக்கிடக்கும் படத் துண்டுகளை ஒவ்வொன்றாக அதனதன் அடத்தில் சேர்த்து பெரிய படத்தை உருவாக்குவதுபோல, மரியாள் இப்போது தன் கையில் கிடைக்கப்பட்டுள்ள புதிய துண்டை ஆச்சர்யமாக பார்க்கிறாள்.

ஆக, இன்று நாம் கொண்டாடும் மரியாளின் தாய்மை, புத்தாண்டில் நுழையும் நமக்கு, தாய்மை என்ற தயார்நிலையைத் தருகின்றது. ஏவாளின் தாய்மையும், மரியாளின் தாய்மையும் 'ஸ்மைல்' (smile) மற்றும் 'ஸைலன்ஸ்' (silence) என்ற இரண்டு 'எஸ்' ('s') களில் அடங்கியுள்ளன. பாம்பைப் பார்த்துச் சிரித்தார் ஏவாள். வானதூதரைப் பார்த்துச் சிரித்தார் மரியாள். தான் சபிக்கப்பட்டவுடன் மௌனம் காக்கிறார் ஏவாள். இடையர்கள் வாழ்த்தியபோது மௌனம் காக்கிறார் மரியாள்.

தாய்மையும், புத்தாண்டும் இலக்குகள் அல்ல. மாறாக, என் வாழ்வின் நிறைவை நான் அடைய திறக்கப்படும் வழிகள். இவ்வழிகளில் 'ஸ்மைல்' - அது இல்லாதபோது 'ஸைலன்ஸ்' என இரண்டு கால்களால் நடந்தால் பயணம் இனிதாகும். 2019 என்னும் இரயில் நம் வாழ்க்கை என்னும் நடைமேடைக்கு வர சில மணித்துளிகளே உள்ளன.

'உங்கள் கவலைகள் எல்லாம் உங்கள் புத்தாண்டு வாக்குறுதிகள் போல மறைந்துபோவனவாக' என்பது இத்தாலியப் பழமொழி. மரங்கள், மனிதர்கள், கவலைகள், வாக்குறுதிகள் மறைய இரயில் வேகமாக ஓடும். ஓட்டத்தின் இறுதியில் இலக்கை அடையும்.

உங்கள் பயணம் சிறக்க இனிய வாழ்த்துக்கள்!

 அன்னையின் வாக்கு வலிக்கும்


  மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். www.arulvakku.com

         உலகப் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோ. அவருடைய சிறுவயதில் அவரது தாயார் அவரிடம், “என் அன்பு மகனே! நீ வளர்ந்து பெரியவனாகும்போது, ஒரு படைவீரன் ஆனாயெனில், பின்னாளில் இந்த உலகமே கண்டு வியக்கும் மாவீரன் ஆவாய். ஒருவேளை நீ துறவியானாய் எனில், பின்னாளில் அகில உலகத் திருஅவையையே தலைமை தாங்கி வழிநடத்தும் திருத்தந்தை ஆவாய். ஒருவேளை நீ வளர்ந்து பெரியவனாகும்போது ஓர் ஓவியனானாய் எனில், பின்னாளில் நீ படிப்படியாக வளர்ந்து உலகம் போற்றும் ஓவியனாவாய்” என்றார்.
 
பிக்காசோவும் வளர்ந்து ஓர் ஓவியரானார். பின்னாளில் படிப்படியாக வளர்ந்து உலகம் போற்றும் ஓவியரானார். ஆம், அன்னையின் வாக்கு பொய்யாகாது, அவளுடைய வாக்கு நிச்சயம் பலிக்கும்; அவளுடைய ஆசிர்வாதம் தன் பிள்ளைகளுக்கு எப்போதும் உண்டு.

மரியா இறைவனின் தாய் 
         ஆண்டின் முதல் நாளான இன்று, அன்னையாம் திரு அவை, மரியா இறைவனின் தாய் என்றொரு விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நொஸ்டோரியஸ் என்றொரு ஆயர், மரியா இயேசுவின் தாய்தானே ஒழிய, இறைவனின் அல்ல என்று சொல்லிவந்தார். இவருடைய கருத்தை 431 ஆம் ஆண்டு, எபேசு நகரில் கூடிய பொதுச்சங்கமானது கடுமையாக எதிர்த்து, ‘மரியா இறைவனின் தாய்’ என்று பிரகடனம் செய்தது. அன்று முதல் இன்றுவரை மரியா இறைவனின் தாய் என்று திரு அவை கொண்டாடி மகிழ்கின்றது.

ஆண்டின் தொடக்கத்தில் அன்னையின் ஆசிர்வாதம்
         பொதுவாக நல்ல நாட்களின்போதும், குடும்பத்தில் நடைபெறுகின்ற முக்கியமான நிகழ்வுகளின்போதும் நாம் நம்முடைய குடும்பங்களில் இருக்கின்ற பெரியோர்களிடமிருந்தும் பெற்றோரிடமிருந்தும் ஆசிர்வாதம் பெறுவது வழக்கம். நாம் ஆசிர்வாதம் பெறுகின்றபோது, அவர்கள் நம்மை நிறைவாக ஆசிர்வதித்துவிட்டு (சில சமயங்களில்) கையில் பணம்கூடத் தருவார்கள். ஆண்டின் முதல் நாளான இன்று, அன்னைக்கு விழாக்கு விழாக் கொண்டாடுகின்ற இந்த மகிழ்ச்சியான தருணத்தில், நம் அன்னையானவள் நமக்கு என்னென்ன ஆசிர்வாதங்களைத் தருகின்றார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
 
  1. தீமையிலிருந்து காக்கின்றார்

பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா, நம்முடைய நாட்டில் நாம் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பது பற்றிச் சொல்லும்போது, “கண்ணிவெடிகள் இருக்கின்ற பகுதியை எப்படி நாம் கவனமாகக் கடந்துசெல்லவேண்டுமோ, அது போன்று நம்முடைய இந்திய நாட்டில் ஒவ்வொருநாளையும் மிகக் கவனமாகக் கடத்தவேண்டி இருக்கின்றது” என்று குறிப்பிட்டார். இது அப்பட்டமான உண்மை. இது நம்முடைய நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் இதுதான் நடந்துகொண்டிருக்கின்றது.

  எப்போது என்ன நடக்குமோ, யார் யார்மீது சண்டை செய்வார்களோ என்ற அச்சத்தில்தான் ஒவ்வொருநாளும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அன்னையின் விழாவைக் கொண்டாடுகின்ற இந்த நேரத்தில், ஆண்டவர் நமக்கு பாதுக்காப்பைத் தருவதாக வாக்குறுதி வழங்குகின்றார். எண்ணிக்கை நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக” என்று கடவுள், ஆரோன் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு பாதுகாப்பை – காக்கின்ற பணியைச் செய்வதாக – வாக்குறுதி வழங்குகின்றார். அன்று இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கிய ஆசிர்வாதத்தை, இறைவன் இன்று தன் திருத்தாய் வழியாக நமக்கு வழங்குகின்றார். ஆகவே, இறைவன் நம்மைக் காத்திடுவார் என்ற நம்மையோடு வாழ்வோம்.
 
  1. அருளை பொழிகின்றார்

அன்னையானவள், தம் பிள்ளைகளாகிய நமக்கு தருகின்ற இரண்டாவது ஆசிர்வாதம், அவர் தன்னுடைய அருளைப் பொழிவதுதான். முதல் வாசகத்தில் ஆண்டவர் தொடர்ந்து கூறும்போது, “ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து, அருள் பொழிவாராக” என்பார். இதையே நாம் அன்னையானவள் இன்று நமக்குத் தருகின்ற ஆசிர்வாதமாக எடுத்துக்கொள்ளலாம். மரியா, வானதூதரால் ‘அருள்மிகப் பெற்றவளே’ என்று வாழ்த்தப்பட்டவள். அப்படிப்பட்ட அன்னை நமக்கு தன்னுடைய அருளை நிறைவாகப் பொழிவது  உறுதி.


சில நாட்களுக்கு முன்பாக, ஒரு காவல்த்துறை அதிகாரி, காட்டில் விவசாய வேலை பார்த்துக்கொண்டிருக்கும் தன்னுடைய தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகின்ற மாதிரியான ஒரு படம் இணையத்தில் ட்ரென்டிங்கானதை  பார்த்திருப்போம். இந்தப் படத்தில் வருகின்ற காவல்துறை  அதிகாரி கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் தன்னுடைய பணியில் பதவி உயர்வு பெற்றார் என்றும் செய்திகள் சொல்கின்றன. அன்னையின் ஆசீர்வாதம் ஒருவருக்கு இருக்கும்போது அவர் தன்னுடைய வாழ்வில் மேலும் மேலும் உயர்வார் என்பதுதானே உண்மை.

  அன்னை மரியா இன்று நம்மீது பொழிகின்ற அருள், நம்மை மேலும் மேலும் உயர்வடையச் செய்யும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

  1. அமைதியை அருள்கின்றார்
பாதுகாப்பையும் அருளையும் தருகின்ற மரியன்னை, நிறைவாக நமக்கு அமைதியையும் அருளுகின்றார். முதல் வாசகத்தில், “ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக” என்று ஆண்டவர் சொல்வதாக வாசிக்கின்றோம். ஆம், ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதியை - வெளி அமைதி மட்டுமட்ல்ல, மன அமைதியையும் – நிறைவாகத் தருகின்றார். இதே அமைதியை மரியன்னை நமக்குத் தருகின்றார். இத்தகைய அமைதி நமக்குக் கிடைக்கின்றபோது நம்முடைய வாழ்வில் என்பதும் மகிழ்ச்சிதான்.

நிறைவாக 

‘அன்னை என்றால் ஒரே அன்னைதான், உன் அன்னை, என் அன்னை என்ற வேறுபாடு இல்லை” என்பார் லா.சா.ரா என்ற தமிழ் சிறுகதை எழுத்தாளர். ஆமாம், நமக்கு மரியா என்ற அன்னை இருக்கின்றார். அவர் நமக்கு பாதுகாப்பையும் அருளையும் அமைதியையும் இன்னும் பல்வேறு நலன்களையும் வழங்குகின்றார். ஆகவே, அப்படிப்பட்ட அன்னையின் பெருவிழாவைக் கொண்டாடும் நாம், அவர் நமக்குச் சொல்வதுபோல், ‘இயேசு சொல்வதுபோல செய்வோம், வாழ்ந்து காட்டுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

1 comment:

  1. All the sermons are really good. Special thanks to Navarajan sir. God bless all ur endeavors. Fr. Yesu karunanithi's sermon is very profound . Hats off to you father.

    ReplyDelete