Monday, 5 November 2018

பொதுக்காலம் ஆண்டின் 32-ஆம் ஞாயிறுபொதுக்காலம் ஆண்டின் 32-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்

1 அரசர்கள் 17:10-16;
எபிரேயர் 9:24-28
மாற்கு 12:38-44

 நீ எனக்குத் தேவை


சில ஆண்டுகளுக்கு முன் ஒரிசா மாநிலத்தில் ஏற்பட்ட புயல், பெரு வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, பொருள் இழந்து, உறவினர்களையும் இழந்து அனாதைகள் ஆக்கப்பட்ட காட்சியை நாம் எல்லாப் பத்திரிக்கை, தொலைக்காட்சி மூலமாகக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். இதனால் சக்தி படைத்த பலர் இடம் பெயர்ந்து சென்றதும் உண்டு. ஆனால் ஒரு சிலர் அங்கேயே தங்கி உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பரிதாப நிலை பல நாட்கள் தொடர்ந்த போது சமூகத் தொடர்பினர், செய்தித் தொடர்பினர் உண்மையான செய்தியைச் சேகரிக்கச் சென்றார்கள். இப்படி ஒரு குழு ஒரு கிராமத்தில் நுழைந்தபோது, பல மக்களையும் சந்தித்துச் செய்திகள் சேகரித்தார்கள். இவ்வாறு ஒரு குடிசைக்குள் இக்கூட்டத் தொண்டன் குனிந்து நுழைந்தபோது, வெள்ளத்தில் கணவனை இழந்த ஒரு ஏழைப் பெண், எண்ணெய் இன்றி சப்பாத்தியை நெருப்பில் சுட்டுத் தன் குழந்தைகளுக்குக் கொடுக்க தயாரித்துக் கொண்டிருந்தாள். இவரைக் கண்டவுடன் இன்முகத்தோடு வாருங்கள் என வரவேற்று, தன் குழந்தைகளுக்குக் கொடுக்க இருந்த நெருப்பில் சுடப்பட்ட சப்பாத்தியை இந்தத் தொடர்புச்சாதனக் குழுவினருக்குக் கொடுத்தாள் மகிழ்ச்சியோடு. இந்த நிகழ்ச்சி பல பத்திரிக்கைகளிலும், தொலைத் தொடர்பு சாதனங்களிலும் வெளியானபோது அது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

அன்பார்ந்தவர்களே! இதேபோன்ற ஒரு அழகான நிகழ்ச்சியை நம் ஆண்டவர் இயேசுவின் காலத்தில் நடந்ததாக இன்றைய நற்செய்தியில் வாசிக்கக் கேட்டோம்.


அன்பார்ந்தவர்களே! கொடுப்பது என்பது பெருந்தன்மையைக் குறிக்கும் செயலாகும். இந்த உலகில் ஒரு சிலர் பெருமைக்காகக் கொடுக்கிறார்கள். இது அவர்களின் சுயநலத்தைக் காட்டும் செயலாகும். இதைத்தான் பரிசேயர்கள் செய்தார்கள். அரசியல்வாதிகள் ஒரு சிலர் தொல்லை தாங்க முடியாது கொடுப்பார்கள். இது அவர்களின் இயலாமையைக் காட்டுவதாகும். இதைப்பற்றித்தான் இயேசு கதவைத் தட்டும் மனிதனின் பிடிவாதத்தைக் காட்டுகிறார். இதைத்தான் இன்றைய அரசாங்கம் செய்கிறது.
ஒரு சிலர் கடமைக்காகச் செய்கிறார்கள். இதைத்தான் சக்கேயுவின் வாழ்க்கையில் பார்க்கிறோம். இது சட்டம் ஒழுங்கு ஆட்கொள்ளும் தன்மையைக் காட்டுகிறது. இன்றைய உலகில் இதைத்தான் நாம் செய்துகொண்டே இருக்கிறோம்.

ஆனால் விரல் விட்டு எண்ணும் அளவுக்குத்தான் அன்பினால், மனித மாண்பால் தூண்டப்பட்டுக் கொடுப்பவர் உண்டு. இதில் நாம் இடம் பெற வேண்டும்.

முடிவுரை
 
பெருந்தன்மை என்பது நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்ற அளவில் அமைவது அல்ல. மாறாக எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். உன்னிடம் பொருள் இல்லாமல் இருக்கலாம். அதனால் கொடை வள்ளலாக இருக்க வேண்டாம். பிறர் துன்பத்தைக் காது கொடுத்துக் கேட்க முடியாதா? அன்பார்ந்தவர்களே புனித பிரான்சிஸ் பால் போர் கூறுவதுபோல் நாம் நம்மைப் பலவிதமாகப் பிறருக்குப் பகிர்ந்து கொடுக்கலாம். முதலாவது நாம் பிறருக்குக் கொடுக்க வேண்டியது மன்னிப்பு. இரண்டாவது பிரமாணிக்கம். மூன்றாவது நம் வாழ்வால் நல்ல முன் மாதிரியை - மரியாதை. எனவேதான் இயேசு கொடுங்கள் பெற்றுக் கொள்வீர்கள் (லூக். 6:38) என்கிறார். பெருந்தன்மை என்பது அன்பை முன்னிலைப்படுத்தி தியாகத்தை எதிர்பார்க்கிறது. இல்லையென்றால் கொடுக்க முடியாது. இறுதியாகச் சொல்லுகிறேன்.
பொருட்களைக் கொடுத்தவர் இறைவன் - நாம் அல்ல. அதைக் கொடுப்பதில் நமக்குப் பெருமை. அல்ல நாம் நம்மை வழங்க அழைக்கப்படுகிறோம்.
திரும்பி வரும் அன்பு மூன்று வகையான அன்பு உண்டு : 1. உள்ளத்திலிருந்து கொடுத்தல் (லூக் 19:1-10), 2. உள்ளதையெல்லாம் கொடுத்தல் (மாற் 12:41-44), 3. உள்ளதையெல்லாம் கொடுத்து உயிரையும் கொடுத்தல் (இரண்டாம் வாசகம்).

இன்றைய நற்செய்தியிலே வருகின்ற ஏழைக் கைம்பெண் அவரிடம் உள்ளதையெல்லாம் கடவுளுக்குக் கொடுத்து இயேசுவின் புகழ்ச்சிக்கு உரியவராகின்றார்.

நம்மில் யார் யார் தங்களிடம் உள்ளதிலிருந்து அல்லது உள்ளதையெல்லாம் தர்மம் செய்கின்றார்களோ அவர்களெல்லாம் கடவுளால் தவறாமல் உயர்த்தப்படுவார்கள். இந்த உண்மையைச் சுட்டிக்காட்ட விவிலியத்திலிருந்து இதோ இரு உதாரணங்கள்
.
பழைய ஏற்பாட்டுக் காலத்திலே எத்தனையோ விதவைகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட சாரிபாத்து நகரில் வாழ்ந்தார்கள். ஆனால்
கடவுள் அந்நகரிலிருந்த ஒரு கைம்பெண்ணின் வாழ்க்கையை மட்டும்தான் உயர்த்திப் பிடித்தார். காரணம் அவர் உள்ளதிலிருந்து கொடுத்தார் (1 அர 17:10-16).

புதிய ஏற்பாட்டில் எத்தனையோ பெண்கள் வாழ்ந்திருந்தாலும் ஒரே ஒரு பெண்ணை மட்டும் கடவுள் பெண்களுக்குள் ஆசி பெற்றவராக (லூக் 1:42), எல்லாத் தலைமுறையினரின் போற்றுதலுக்கும் உரியவராக (லூக் 1:48) உயர்த்தினார். காரணம் கன்னிமரியா தன்னை முழுவதும் கடவுளுக்குக் கொடுத்து, நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக் 1:38) என்றார். .

திங்கள் பிறந்தாலும்
தீபம் எரிந்தாலும்
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
கண்ணீரில் உப்பிட்டு
காவிரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது காற்றினிலே

என்று வாழுகின்ற ஏழைகள் பக்கம் நமது ஈரம் நிறைந்த கண்களைத் திருப்புவோம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.

தன்னலமற்ற அன்பு பந்து போன்றது. அதை நாம் சமுதாயம் என்னும் சுவற்றில் எறியும்போது அது நம்மிடமே திரும்பி வரும். நாம் பிறரை அன்பு செய்தால், பிறர் நம்மைத் தவறாது அன்பு செய்வார்கள்.

மேலும் அறிவோம் :
ஈத்துலக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் : 228).

பொருள் : வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் மகிழ்வதைக் கண்டு அருளுடையவர் அடையும் இன்பம் பெரிதாகும். அத்தகைய இன்பத்தைப் பற்றித் தெரியாதவரே தாம் சேர்த்த பொருளை ஏழை எளியோருக்கு வழங்காது பிறர் கொண்டு போக இழக்கும் இரக்கம் அற்றவர் ஆவர்!

“தெய்வீகப் பிச்சைக்காரன்" என்ற தலைப்பில் வங்க கவி தாகூர் ஒரு கவிதை எழுதியுள்ளார். அக்கவிதையில் அவர் கூறுவது: ஓர் அரசர் மாறுவேடத்தில் ஓர் ஊருக்குச் சென்று அங்கு ஒரு பாத்திரம் நிறைய கோதுமை மாரிகளை வைத்திருந்த ஒரு பிச்சைக்காரனிடம் பிச்சை கேட்டார். அவனோ ஒரே ஒரு கோதுமை மானியை மட்டும் கொடுத்தான். அரசர் அவனுடைய பிச்சைப் பாத்திரத்தில் ஒரு கோதுமை மணி அளவு தங்கம் போட்டுவிட்டு மாயமாக மறைந்துவிட்டார். ஒரு கோதுமை மணி அளவு தங்கத்தைப் பார்த்த அப்பிச்சைக்காரன் தன்னை நொந்துகொண்டு, "நான் எல்லாக் கோதுமை மணிகளையும் கொடுத்திருந்தால், பாத்திரம் நிறைய தங்கம் கிடைத்திருக்குமே" என்று சொல்லி தனது கஞ்சத்தனத்தை எண்ணிக். கண்ணீர் விட்டான்.

நாம் மற்றவர்களுக்கு எவ்வளவு கொடுக்கின்றோமோ, அவ்வளவுக்குக் கடவுள் நமக்குத் திருப்பிக் கொடுப்பார். இதைக் கிறிஸ்துவே பின்வருமாறு கூறியுள்ளார்: "கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். அந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்" (லூக் 6:38)

இன்றைய முதல் வாசகமும் நற்செய்தியும் தாராள உள்ளம் கொண்ட இரு கைம்பெண்களைப்பற்றிக் கூறுகிறது. பழைய ஏற்பாட்டில் கைம்பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை. மற்றவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் கடவுளை மட்டும் நம்பி வாழ்ந்த இறைவனின் ஏழைகள்' என்று அழைக்கப்பட்ட 'அனாவிம்' வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக விளங்கினர். கடவுள் கைம்பெண்களைச் சிறப்பாக ஆதரிப்பதாக இன்றைய பதிலுரைப்பாடல் கூறுகிறது: “ஆண்டவர் அனாதைப் பிள்ளைகளை யும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்" (திபா 146:9).

இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற சரிபாத்து கைம்பெண் பஞ்சகாலத்தில் இறைவாக்கினர் எலியாவுக்குக் குடிக்கத் தண்ணீரும், சாப்பிட அப்பமும் கொடுக்கிறார். தன்னைப் பற்றியோ தனது மகனைப்பற்றியோ அவர் கவலைப்படவில்லை , கடவள் அவரை அபரிமிதமாக ஆசிர்வதிக்கிறார். பஞ்ச காலம் முடியும்வரை அவர் பானையில் மாவும் குறையவில்லை; கலயத்தில் எண்ணெயம் {குறையவில்லை, "அனாதைகளைப்பற்றிக் கவலைப்படாதே, நான் அவர்களை வாழவைப்பேன் உன் விதவைகள் என்னில் நம்பிக்கை வைக்கட்டும்" (எரே 49:11) என்று கடவுள் எரேமியா வாயிலாகக் கூறியது சரிபாத் கைம்பெண் வாழ்வில் நிறைவேறுகிறது.


இன்றைய நற்செய்தியில் வருகின்ற ஏழைக் கைம்பெண் தன்னிடமிருந்த இரண்டு செப்புக்காககளை உண்டியல் பெட்டியில் போட்டுவிடுகிறார், எல்லாருடைய காணிக்கைகளிலும் கைம் பெண்ணின் காணிக்கையே பெரியது என்று கிறிஸ்துவே பாராட்டுகிறார், ஏனெனில் மற்றவர்கள் தங்களிடம் உபரியாக இருந்ததைக் காணிக்கையாகக் கொடுத்தனர். ஆனால் ஏழைக் கைம்பெண் அவரது வாழ்வாதாரம் அனைத்தையும் காணிக்கையாகச் செலுத்திவிட்டார். அவர் நாளையைப் பற்றிக் கவலைப்படவில்லை. நாளையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், "நாளையக் கவலையைப் போக்க நாளை வழிபிறக்கும்" (மத் 6:34) என்ற ஆண்டவரின் அருள் வாக்கைக் கடைப்பிடித்தார்,

அருளாளர் அன்னை தெரசாவிடம், "உங்கள் சபைக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?" என்று கேட்டதற்கு, "கடவுள்தான் என்னுடைய பாதுகாப்பு" என்றார், அவருடைய சபையின் எதிர்காலம் பற்றிக் கேட்டதற்கு, "இது என்னுடைய வேலையாக இருப்பின் அழிந்துவிடும், கடவுளின் வேலையாக இருப்பின் எனக்குப் பிறகும் என் சபை நீடிக்கும்" என்றார், இறைப்பராமரிப்பில் அவர் முழுக்க முழுக்க நம்பிக்கை வைத்திருந்தார்.

ஒளவையார், அங்கவை, சங்கவை என்ற இரு பெண் குழந்தைகளை வளர்க்க ஒரு வெள்ளாடு தேவைப்பட்டது. அதற்காகச் சேர மன்னனிடம் சென்று பால் கொடுக்கும் ஒரு வெள்ளாடு கேட்டார், அரசரோ பொன் வெள்ளாடு கொடுக்க, ஒளவையார் அரசரிடம்: *பொன் வெள்ளாடு பால் கொடுக்காதே" என்றார். அரசரும் அவரிடம், "பால் கொடுக்கும் வெள்ளாட்டை உங்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டேன். பிச்சைக் கேட்பவர் எதையும் பெற்றுக்கொள்வர்; ஆனால் பிச்சைக் கொடுப்பவரோ தனது தகுதிக்கேற்ப பிச்சையிட வேண்டும்" என்றார். ஒளவையார் அரசரின் வள்ளல் தன்மை வியந்து பாடினார்.

நாம் எவ்வளவு குறைவாக உண்டியலில் காசு போட்டாலும், உண்டியல் அதை ஏற்றுக்கொள்ளும், ஆனால் நாம் நமது தகுதிக்கேற்பக், காணிக்கைக் கொடுக்க வேண்டாமா?
கைம்பெண்கள் சமுதாயத்தில் மதிக்கப்படுவதில்லை, அவர்கள் சுமங்கலிகள் அல்ல, நல்ல காரியங்களை முன்நின்று நடத்தக்கூடாது. இத்தகைய பிற்போக்கான சிந்தனைகளுக்கு இன்றைய அருள்வாக்கு வழிபாடு சவுக்கடி கொடுக்கிறது. தாராள உள்ளம் கொண்ட இரண்டு கைம்பெண்கள் நமக்கு கொடுத்துக்காட்டாக நிறுத்தப்படுகின்றனர், அவர்களைப் பின்பற்றிக் கடவுளுக்கும் பிறர்க்கும் தாராளமாகக் கொடுப்போம். கடவுள் நம்மை இம்மை, மறுமை நலன்களால் நிரப்புவார்.

வெறுங்கை முழம் போடுமா?

கைம்பெண்கள் - நாம் எதிர்கொள்ளும் கேள்விக்குறிகள், ஆச்சர்யக்குறிகள்!

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் இரண்டு கைம்பெண்களை (சாரிபாத்து, எருசலேம் நகர்) பார்க்கின்றோம். இவ்விரண்டு கைம்பெண்களையும் இரண்டு இறைவாக்கினர்கள் (எலியா, இயேசு) சந்திக்கின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தை கொஞ்சம் முன்னும் (1 அர 17:1-9), பின்னும் (1 அர 18) நீட்டிப் பார்த்தால்தான் இந்த வாசகத்தில் குறிப்பிடப்படும் நிகழ்வை முழுவதும் புரிந்து கொள்ள முடியும். சாரிபாத்து நகரில் எலியா இறைவாக்கினர் கைம்பெண் ஒருவரால் பசியாறப்பெறுகின்றார். இதுதான் ஒற்றைவரியில் முதல் வாசகம். ஆனால் இதன் பின்புலம் பாகால் வழிபாடு. சாலமோனுக்குப் பின் ஒருங்கிணைந்த அரசு வடக்கு, தெற்கு என பிரிந்து போக, எலியா வடக்கே, அதாவது இஸ்ராயேலில் ('தெற்கு', யூதா என அழைக்கப்பட்டது) இறைவாக்குரைத்தார். வடக்கே ஆட்சி செய்த ஆகாபு தன் நாட்டில் இருந்த பாகால் வழிபாட்டைத் தடுக்க முடியவில்லை. மக்கள் தங்கள் இறைவனாம் யாவேயை மறந்துவிட்டு இந்தப் புதிய கடவுள்பின் செல்கின்றனர். யாவே இறைவன் இதனால் கோபம் கொண்டு மழையை நிறுத்திவிடுகின்றார். மூன்றரை ஆண்டுகள் கடும் பஞ்சம். தண்ணீர்நிலைகள் வற்றிக்கொண்டிருக்கின்றன. காகங்கள் வழியாக எலியாவுக்கு உணவளித்து வந்த இறைவன் இப்போது சாரிபாத்து நகர் ஏழைக்கைம்பெண்ணிடம் அனுப்புகின்றார். அப்படி சாரிபாத்துக்கு வந்த எலியா, ஏழைக்கைம்பெண்ணைச் சந்திக்கும் நிகழ்வே இன்றைய முதல் வாசகம்.

எலியா நகரின் நுழைவாயிலை அடையும்போது கடைசிக் கள்ளிகளைப் பொறுக்கிக்கொண்டிருக்கிறாள் கைம்பெண். 'பாத்திரத்தில் தண்ணீர் கொடு' என்கிறார் எலியா. அந்தக் கைம்பெண்ணின் வீட்டில் ஒருவேளை ஒரேயொரு பாத்திரம் மட்டும்தான் இருந்திருக்க வேண்டும். கைம்பெண்கள் வீட்டில் யாரும் தண்ணீர் கேட்டு வருவதில்லை. ஆகவே, அவர்கள் தனி சொம்பு அல்லது டம்ளர் வைத்திருக்க வாய்ப்பில்லை. இப்போது எலியாவுக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டுமென்றால் மாவு இருக்கும் பாத்திரத்தைக் காலி செய்து அதிலிருந்துதான் கொண்டு வர முடியும். முதலில் தண்ணீர் கேட்டவர், கூடவே அப்பமும் கேட்கிறார். ஒன்றுமில்லா கைம்பெண் தனக்கென்று வைத்திருந்த எல்லாவற்றையும் இந்த எலியா கேட்டுவிடுகிறார். இறைவன் கேட்டால் நம்மிடம் அப்படித்தான் கேட்கிறார். கொடுத்தால் எல்லாவற்றையும் கொடு. அல்லது ஒன்றையும் எனக்குக் கொடுக்காதே. 'எனக்கு கொஞ்சம், உனக்கு கொஞ்சம்' என இறைவனிடத்தில் நான் பேச முடியுமா? முடியாது. கொடுத்தால் அப்படியே முழுமையாகக் கொடுக்க வேண்டும்.

'அதன் பின் சாகத்தான் வேண்டும்'. கைம்பெண்ணின் இந்தச் சொல் நம் உள்ளத்தையும் பிசைந்து விடுகிறது. எல்லா இடத்திலும் பஞ்சம் அதிகரித்து மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கதாசிரியர் இந்த ஒற்றை வரியில் பதிவு செய்கிறார். 'என்னையும், என் மகனையும் சுவாசிக்க வைத்திருப்பது இந்த அப்பம்தான். இதன்பின் பசியும், இறப்பும்தான்' என முன்பின் தெரியாத ஒருவரிடம் தன் நிலை பற்றி சொல்கின்றார் கைம்பெண். வாழ்வில் இதற்குமேல் ஒன்றுமில்லை என்ற கட்டத்திற்கு வந்துவிட்டால் நாமும் முன்பின் தெரியாதவரிடம்கூட நம் மனதை அப்படியே திறந்து காட்டுவிடுவோம்தானே. மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். ஒரு விளக்கு அணையப்போகிறது என்று நினைத்தவுடன் கடவுள் அங்கே சரியான நேரத்தில் தன் இறைவாக்கினரை அனுப்புகின்றார். ஏற்கனவே அவளின் வாழ்வில் கணவன் என்ற விளக்கு அணைந்து போய்விட்டது. இன்னும் இருக்கும் நம்பிக்கை மகனில் எரிந்து கொண்டிருக்கிறது. மகன் ஒருவேளை சிறு பையனாக இருக்கலாம். ஆகையால்தான் இன்னும் தாயே அவனுக்கு உணவு தந்து கொண்டிருக்கிறாள். இவளின் வாழ்வு என்னும் விளக்கு அணையும்போது, 'இனி உன் வீட்டில் விளக்கே அணையாது' என்று அவளின் அடுப்பை என்றென்றும் எரிய வைக்கின்றார்.

சாரிபாத்து நகரப் பெண் எலியாவின் இறைவனாம் யாவே கடவுளை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், 'வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை!' என எலியாவின் கடவுளை 'வாழும் கடவுளாக' ஏற்றுக்கொள்கிறார். இந்த நம்பிக்கைதான் அவரைச் செயலாற்ற, தன்னிடம் உள்ளதை இழக்கத் துணிவைத் தருகிறது. 'வாழும் கடவுள்' என்னை வாழ வைப்பார் என்ற நம்பிக்கை அவரிடம் முதலில் எழுந்தது. 'பின் சாகத்தான் வேண்டும்' என்று விரக்தியில் இருந்த பெண்ணிடம், 'போய் நீ சொன்னபடி செய். ஆனால் அதற்கு முன் அப்பம் கொண்டு வா' என்று சொல்வது சிறிது புன்னகையை வரச் செய்தாலும், 'நீ சொன்னபடி நடக்காது' என்று எலியா அவரிடம் சொல்லி அனுப்புவது போலத்தான் இருக்கிறது. தன்னிடமிருந்த கையளவு மாவையும், கலயத்தின் எண்ணெயையும் கொடுக்கத் துணிந்த கைம்பெண்ணின் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

இந்த அற்புதம் நிகழக் காரணங்கள் மூன்று:

அ. எலியாவின் ஆண்டவரை வாழும் கடவுளாக ஏற்றுக்கொண்டார்.

ஆ. 'அந்த ஆண்டவர் பார்த்துக்கொள்வார்' என்று நம்பினார்.

இ. 'அவர் பார்த்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. பசித்தவருக்கு உணவு கொடுப்பேன்' தன்னை அடுத்தவருக்காக நொறுக்கினார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற்கு 12:38-44), 'கைம்பெண்களைக் கொள்ளையடிப்பவர் பற்றியும்,' 'முழுவதையும் கொடுத்த கைம்பெண் ஒருவர் பற்றியும்' என இரண்டு பகுதிகளாக உள்ளது.

முதல் பகுதியில், இயேசு மறைநூல் அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கை விடுக்கின்றார். அந்த எச்சரிக்கையின் ஒரு பகுதியாக, 'இவர்கள் கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்' என்கிறார். இதன் பொருள் என்ன? யூத சமூகத்தில் கைம்பெண்கள் மிகவும் நொறுங்குநிலையில் இருந்தவர்கள். ஆகையால்தான் பத்திலொருபாகம் கொடுப்பதற்கான சட்டம் பற்றிய பகுதியின் இறுதியில் மோசே, 'உன் நகரில் வாழும் அந்நியரும், அநாதைகளும், கைம்பெண்களும் உண்டு நிறைவு பெறுமாறு பத்திலொரு பாகத்தை நகரின் வாயிலருகே வை' (இச 14:19) என்கிறார். 'அந்நியருக்கு' தங்க இடம் கிடையாது. அவர்களுக்கு மொழி உட்பட எல்லாம் புதிதாக இருக்கும். அநாதைகள் பெற்றோர்கள் இல்லாததால் செல்லும் இடம் அறியாதவர்கள். கைம்பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை, வருமானத்தை இழந்தவர்கள். கையறுநிலையின் உச்சக்கட்டத்தை உணர்ந்தவர்கள் இம்மூவர். மறைநூல் அறிஞர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? இம்மாதிரி கைம்பெண்ணைக் கவரும் விதமாக நீண்ட செபம் செய்வார்கள். வாழ்வில் ஏற்கனவே நொந்துபோய் இருப்பவர்கள் செபம் செய்பவர்களை எளிதாகப் பிடித்துக்கொள்வார்கள். இப்படியாக, கைம்பெண்ணின் ஆவலைக் கவர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடமிருந்து பணம் பெறுவார்கள். இறுதியில், உனக்காக வாதாடுகிறேன், உன் உரிமைச் சொத்தை மீட்கிறேன், உன் கணவனின் சொத்தில் உனக்கு பங்கைப் பெற்றுத் தருகிறேன் என வாதாடுவதாகச் சொல்லி அவரின் ஒட்டுமொத்த வீடு மற்றும் உடைமைகளையும் பறித்துக்கொள்வார்கள். இந்த நிலையைத்தான் சாடுகின்றார் இயேசு. 'எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம்' என்பதுதான் இவர்களின் லாஜிக்காக இருக்கிறது.

இரண்டாம் பகுதியில், இயேசு காணிக்கை பெட்டி முன் அமர்ந்திருக்கிறார். எருசலேம் ஆலயத்தில் நிறையக் காணிக்கைப் பெட்டிகள் உண்டு. இயேசு அமர்ந்த இடம் அவற்றில் ஏதாவது ஒன்றின் முன் இருக்கலாம். வரிசையாக வந்தவர்களில் இரண்டு வகை கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்: (அ) செல்வர் வகை - தங்களிடம் இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போடுகின்றனர். (ஆ) கைம்பெண் வகை - தன்னிடம் உள்ளது எல்லாவற்றையும் போட்டுவிடுகின்றார்.இந்த இரண்டு வகை கொடுத்தலை 'உள்ளதிலிருந்து கொடுப்பது', 'உள்ளத்திலிருந்து கொடுப்பது' எனவும் சொல்லலாம். ஒவ்வொரு யூதரும் ஆலயத்தின் மேலாண்மைக்காகவும், பராமரிப்புக்காவும், ஆலயத்தின் குருக்களின் பராமரிப்புக்காகவும் ஆண்டுக்கு இரண்டு செக்கேல்கள் கொடுக்க வேண்டும் என்பது முறைமையாக இருந்தது. இப்பெண் போட்ட காசு - ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகள் - அதாவது, எவ்வளவு போட வேண்டுமோ அதில் 60ல் 1 பங்கு மட்டுமே. ஆனால், இவரிடம் இருந்தது இவ்வளவுதான்.

இயேசுவின் கணக்கு வித்தியாசமாக இருக்கிறது. 'எவ்வளவு' போட்டோம் என்று பார்ப்பதைவிட, 'எந்த மனநிலையில்' போட்டோம் என்று பார்க்கின்றார். அதாவது, 100 கோடி கொண்டுள்ள நான் 1 கோடியை ஆலயத்திற்கு கொடுக்கிறேன் என வைத்துக்கொள்வோம். எனக்கு அருகில் இருப்பவர் தன் ஒரு மாத சம்பளம் 5000 ரூபாயை அப்படியே கொடுத்துவிடுகின்றார். 1 கோடி என்பது 5000 ரூபாயைவிட பெரியதுதான். ஆனால், என்னிடம் இந்த மாதம் செலவுக்கு இன்னும் 99 கோடிகள் இருக்கின்றன. ஆனால் என் அருகில் இருப்பவரிடம் ஒன்றும் இல்லை கையில். எனக்கு அருகில் இருப்பவர்தான் அதிகம் போட்டார் என்கிறார் இயேசு.

பல நேரங்களில் இந்த நற்செய்திப் பகுதியை அருட்பணியாளர்களும், சபைப் போதகர்களும், 'நல்ல கலெக்ஷன்' ஆக வேண்டும் என்பதற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம் என்பதுதான் வருத்தத்திற்குரிய ஒன்று. மாற்கு நற்செய்தியாளரின் நோக்கமும், இயேசுவின் நோக்கமும் 'நிறைய காணிக்கை எடுப்பது எப்படி?' என்று நமக்குச் சொல்வதற்கு அல்ல. மாறாக, கடவுளின் திருமுன் நம் அர்ப்பணம் எப்படி இருக்கிறது என்பதை நமக்குத் தோலுரித்துக் காட்டவே.

இந்தப் பெண்ணும் சாரிபாத்துக் கைம்பெண் போலவே தான் செய்த செயலுக்கு மூன்று காரணங்கள் வைத்திருந்தார்:

அ. ஆண்டவரை வாழும் கடவுளாக ஏற்றுக்கொண்டார்.

ஆ. 'அவர் பார்த்துக்கொள்வார்' என நம்பினார்.

இ. 'அவர் பார்த்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. இதுதான் நான் என என் ஆண்டவரிடம் என்னைக் காட்டுவேன்' என இறைவன்முன் தன்னை நொறுக்கினார்.

இவ்விரண்டு கைம்பெண்களும் நமக்கு முன்வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

1. 'ஒரு கை மாவு - ஒரு கலயம் எண்ணெய் - இரு செப்புக்காசுகள்'

'இதுதான் நான்' - முன்பின் தெரியாத எலியாவிடம் தன் பீரோவைத் திறந்து காட்டி, 'இதுதான் நான்' என்று சொல்ல சாரிபாத்துக் கைம்பெண்ணால் எப்படி முடிந்தது? 'என்னிடம் உள்ளது இவ்வளவுதான்' என்று தன் உள்ளங்கை ரேகைகளை விரித்துக்காட்ட எருசலேம் கைம்பெண்ணால் எப்படி முடிந்தது? இவர்கள் இருவரும் தங்களை அறிந்த ஞானியர். பல நேரங்களில் நான் என் இருப்பை இல்லாததையும் சேர்த்துக் கூட்டிக்கொள்கிறேன். என் படிப்பு, குடும்பம், அழைப்பு, பணி, பொறுப்பு ஆகியவற்றை என் இருப்பாக்கிக் கொண்டு நான் என்னையே மிகைப்படுத்தி இறைவன் முன் நிற்கிறேன். ஆக, என்னிடம் மிகைப்படுத்துதல் இருப்பதால் என்னையே இழக்க என்னால் முடியவில்லை. நான் என்னையே நொறுக்காததால் நொறுங்குநிலை என்றால் என்ன என அறியாமல் இருக்கிறேன். இன்று என் அடையாளங்களை நான் இழக்க முன்வர வேண்டும். இது முதல் பாடம்.

2. 'எனக்கு இன்னும் வேண்டும்'

'எனக்கு இன்னும் வேண்டும்' என்று சிறுவன் ஆலிவர் கேட்டவுடன் ஆலிவர் டுவிஸ்ட் நாவல் ஒரு புதிய வேகத்தைப் பெறுகிறது. அப்படிக் கேட்டதற்காக அந்தச் சிறுவன் கொடுமைப்படுத்தப்படுகிறார். இன்று நாம் எதையாவது வாங்கிக்கொண்டே இருக்க விழைகின்றோம். 'எனக்கு இன்னும் வேண்டும்' - என்பதே என் தேடலாக இருப்பது. இது உறவு நிலைகளிலும், 'எனக்கு இன்னும் புதிய நண்பர் வேண்டும்' என்ற நிலையிலும், அல்லது 'என் நண்பரிடமிருந்து எனக்கு இன்னும் வேண்டும்' என்ற நிலையிலும் சேகரிப்பதாகவே இருக்கிறது. ஆனால், இன்று நாம் இறைவாக்கு வழிபாட்டில் காணும் கைம்பெண்கள் இந்த மனநிலைக்கு எதிராக ஒரு புரட்சி செய்கின்றனர். 'பெரிதினும் பெரிது கேள்' என்பதற்கு மாற்றாக, 'சிறிதினும் சிறிது பார்' என இழப்பதில் இருப்பைக் காண்கின்றனர். 'போதும் என்றால் இதுவே போதும். போதாது என்றால் எதுவும் போதாது' - இதுவே இவர்கள் தரும் இரண்டாம் பாடம். இதுவே இயேசுவின் சீடத்துவப் பாடமும்கூட.

3. 'கேள்விகள் கேட்காத சரணாகதி'
'எங்க ஊருக்கு மட்டும் ஏன் பஞ்சம்?' 'எங்க ஊருல மட்டும் என் வறட்சி?' 'என் கணவர் மட்டும் ஏன் சாகணும்?' 'எனக்கு மட்டும் ஏன் எதுவும் இல்லை?' 'என் ஆடை ஏன் கிழிஞ்சுருக்கு?' 'என் வீடு மட்டும் ஏன் ஓட்டையாயிருக்கு?' - இப்படி நிறையக் கேள்விகள் இரண்டு கைம்பெண்கள் மனத்திலும் ஓடியிருக்கும். ஆனாலும், தங்கள் கேள்விகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு சரணாகதி அடைகின்றனர். கேள்வி கேட்காத மனமே சரண் அடையும். கேள்வி கேட்காத மனமே பகிர்ந்து கொடுக்கும். இவர்களின் சரணாகதி இறைவன் முகத்தில் இவர்கள் ஓங்கி அறைவதுபோல இருக்கிறது. வாழ்வில் பல கேள்விகளுக்கு விடைகள் இல்லை. அல்லது நாம் விரும்புகின்ற விடைகள் இல்லை. அந்நேரங்களில் சரணடைவதே சால்பு.

இறுதியாக,

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 9:24-28) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் மற்ற தலைமைக்குருக்களின் பலிகளிலிருந்து இயேசுவின் பலியை வேறுபடுத்திக் காட்டுகின்றார். மற்றவர்கள் கைகளில் ஆடுகளை எடுத்துச் சென்றனர். ஆனால் இயேசு வெறுங்கையராய்ச் சென்றார். அதுவே உயர்ந்த பலியானது.

வெறுங்கை முழம் போடுமா? என்பது பழமொழி.

ஆனால், வெறுங்கைதான் முழுவதும் போடும் என்பது இன்றைய இறைமொழி.

No comments:

Post a Comment