Tuesday, 30 October 2018

பொதுக்காலம் ஆண்டின் 31-ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 31-ஆம் ஞாயிறுஇன்றைய வாசகங்கள்


இணைச்சட்டம் 6:2-6
எபிரேயர் 7:23-28
மாற்கு 12:28-34

 


அன்பே நம் வாழ்வு

இறை இயேசுவில் அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே,

இன்றைய உலகம் பலவிதமான முன்னேற்றப் பாதைகளிலே கால் எடுத்து வைத்து 21-ஆம் நூற்றாண்டைக் கடந்து - கொண்டிருக்கிறது.
 மாதக் கணக்காக கடலிலே பயணம் செய்து அமெரிக்காவை அடைந்த மனிதன் இன்று சில மணி நேரங்களிலே ஒரே நாளிலே ஆகாய விமானம் மூலம் அடையத் துடிக்கிறான்.

தன் வீடு விட்டு தன் உறவினர் வீடு செல்ல தனி காரிலே, வாகனத்திலே செல்ல நெடுஞ்சாலையைத் தேர்ந்தெடுக்கிறான். ஏனெனில் தங்கு தடையின்றி தான் நினைக்கும் நேரத்தில் தான் விரும்பும் இடத்தை அடைய முடியும் என்பது அவனது திட்டம்.

வாழ்க்கையிலே இன்று பணம், பதவி, சொகுசான வாழ்வு விரைவில் பெற வேண்டுமானால் மருத்துவராகவோ, கணினி பொறியாளராகவோ, வழக்கறிஞராகவோ விளங்க வேண்டும் என்பதற்குப் படிப்பில் கவனம் செலுத்தி அத்தகையப் பயிற்சியைத் தேடுகின்றான்.

நோயற்ற வாழ்வும், ஆரோக்கியமான உடலும் கொண்டவனாகத் திகழ, தகுந்த தண்ணீரைப் பருகவும், அன்றாட உடல் பயிற்சியும், உணவும் பெற வழிவகைகளைத் தேடுகின்றான் மனிதன். இவ்வாறு மனித சமுதாயம் வாழ்வில் முன்னேற எடுக்கும் பாதைகளை, முயற்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அன்பார்ந்தவர்களே, இதேபோல், இறை இயேசுவின் சீடத்துவ நிலையில் நீங்களும், நானும் நிறைவு பெற்று அவரைப் பின்பற்றும் நமக்குப் பலவிதமான கடமைகள் உண்டு. இவைகளில் எது முக்கியம்? தேவை? என்பதை நம் ஆண்டவரே நமக்குத் தெளிவாகத் தருகின்றார்.

மனிதன் தேடுதலிலே ஈடுபட்டவன். உம்மில் இளைப்பாறும் வரை என் உள்ளம் நிம்மதி காணவில்லையே என்று அகுஸ்தினார் கூறியது போல் மனித உள்ளம் இறைவனைத் தேடுகின்றது. தேடும் இந்த மனித உள்ளம் இறைவனை அடைய சிறந்த வழி என்ன?

இன்றைய வாசகங்கள் மிகத் தெளிவாக அந்த வழியை என்பதை மிக ஆணித்தரமாகத் தருகின்றன. இணைச் சட்டத்திலே (6:5) கூறப்பட்டதுபோல : நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே. இருவர் அல்ல. எனவே உன் முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் அன்பு செய்வாயாக (மாற்கு 12:30). இது முதற் கட்டளை. உன் மீது அன்பு கூறுவதுபோல, உன்னை அடுத்து இருப்பவர் மீதும் அன்பு காட்டுவாயாக (மாற்கு 12:31). இது இரண்டாம் கட்டளை. இவை இரண்டும் மேலான கட்டளை என நம் ஆண்டவர் இன்று நமக்குத் தருகிறார்.

ஆனால் நாம் எவ்வாறு கடவுளை அன்பு செய்கிறோம் என்பதை அறிய முடியும்? சிலர் சொல்லலாம். நான் தினமும் செபிக்கிறேன். செபமாலை சொல்லுகிறேன். விவிலியம் வாசிக்கிறேன். ஞாயிறு திருப்பலியில் தவறாது பங்கெடுக்கிறேன். இதனால் நான் இறைவனை அன்பு செய்கிறேன் என்று நீங்கள் கூறலாம். இவையெல்லாம் நமக்குத் தேவைதான். இவை அந்த அன்புக்கு இட்டுச் செல்லும் செயல்கள் என்பதை மறுக்க முடியாது.

ஆனால் இவைகள் நான் சரியான பாதையில் கடந்து செல்கின்றேன் என்பதற்குச் சாட்சியாக இருக்க முடியாது. ஏனெனில் நான் உங்களுக்குப் புதியதொரு கட்டளை கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல், நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். இந்த அன்பால் நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வார்கள் (யோவா. 13:34) என்றார். சின்னஞ்சிறிய ஒருவருக்குச் செய்தபோதெல்லாம் நீ எனக்கே செய்தாய் (மத். 25:40) என்கிறார் ஆண்டவர்.

ஆனால் அன்புக்குரியவர்களே இன்று மனிதன் மதத்தால், மொழியால், இனத்தால், சாதியால் கூறுபோட்டு சங்கங்கள், கட்சிகள் என்று சுற்றுச் சுவரை எழுப்பி மனித மாண்பையே கொலை செய்து கொண்டிருக்கிறான். சாத்தானின் கூட்டங்கள் இரவும், பகலுமாக இந்த அழிவுப் பாதையிலே இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.

அன்பார்ந்தவர்களே! அழைக்கப்பட்டவர்களாகிய நாம் வாழ்வது எப்படி? அழுகிய நாற்றமெடுத்த தொழுநோயாளியின் புண்களையே கழுவித் துடைத்து கொண்டிருந்த அன்னை தெரெசாவைப் பார்த்து ஒருவன் கேட்டான், அம்மா! நான் 10000 ரூபாய் கொடுத்தாலும் இதைச் செய்ய மாட்டேன். உங்களால் இதைச் செய்ய எவ்வாறு முடிந்தது என்று. அன்னை சொன்னார்கள்: 'துன்புறும் கிறிஸ்துவையல்லவா இவனிடத்தில் நான் காண்கிறேன்' என்று. ஏன்! கிறிஸ்மஸ் நள்ளிரவில் திருப்பலிக் காண அன்னைத் தெரெசா தன் சகோதரிகளோடு இரவில் கல்கத்தாவில் நடந்து சென்றபோது அருகில் உள்ள மருத்துவமனையில் பக்கத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தை குளிரிலே நடுங்கி அழும் சப்தம் கேட்டு திடுக்கிட்டார்கள். குழந்தையைத் தூக்கிக் கொண்டு மடத்திற்கு வந்து சுத்தம் செய்து புதிய ஆடை உடுத்தி அந்தக் குழந்தையைச் சுற்றி அமர்ந்து தாலாட்டுப் பாடி மகிழ்ந்தார்கள். ஆம் இந்த அன்பைத்தான் நம் ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். 

புனித பவுல் அடிகளார் (1 கொரி. 13:4) கூறுவது போல இந்த அன்பு பொறுமையுள்ளது, கனிவுள்ளது, பொறாமைப் படாது, இறுமாப்பு அடையாது, இழிவானதைச் செய்யாது, தன்னலம் நாடாது, தீங்கு நினையாது. மாறாக இந்த அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்.

இறுதியாகப் புனித அசிசியாரோடும் சேர்ந்து செபிப்போம். ஓ! தெய்வீகக் குருவே ஆறுதல் பெறுவதைவிட ஆறுதல் கொடுக்கவும், பிறர் என்னைப் புரிந்துகொள்வதை விட பிறரைப் புரிந்து கொள்ளவும், பிறர் அன்பைத் தேடுவதைவிட, பிறருக்கு அன்பு காட்டவும் எனக்கு அருள் புரியும்.

தேவை திசை மாறாத அன்பு கடவுளை நாம் முழு இதயத்தோடும், முழு அறிவோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்கின்றோமா? ஒரு பங்குத் தந்தையிடம் அவரது பங்கு மக்களில் ஒருவர் வந்து, "சுவாமி, எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்" என்றார். "செபிக்கும்போது ஏதாவது ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக செபிப்பது நல்லது. ஆகவே எந்தக் கருத்துக்காக செபிக்கவேண்டுமென்று கூறினால் நன்றாக இருக்கும்" என்றார் பங்குத் தந்தை, வந்தவரோ, "என் மனைவி என்னை அன்பு செய்ய வேண்டும்" என்று செபியுங்கள் என்றார். பங்குத் தந்தையோ, "ஏன், உங்களுக்கும், உங்கள் மனைவிக்குமிடையே ஏதாவது பிரச்சினையா?” என்றார். அதற்குக் கணவர், "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சுவாமி. என் மனைவி நான் விரும்புகின்ற அளவுக்கு என்னை அன்பு செய்வதில்லை" என்றார்.

நிகழ்ச்சியில் வந்த கணவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே உள்ள பிரச்சினையைப் போன்றதுதான் நமக்கும் கடவுளுக்குமிடையே உள்ள பிரச்சினை. கடவுளைப் பார்த்து, "கடவுளே உமது மக்கள் நீர் விரும்பும் அளவுக்கு உம்மை அன்பு செய்கின்றார்களா?" என்று கேட்டால், கடவுள் என்ன பதில் சொல்வார்? "என் மக்கள் நான் விரும்பும் அளவுக்கு என்னை அன்பு செய்கின்றார்கள்” என்று கடவுள் கூறினால் (முதல் வாசகம், நற்செய்தி) நாம் மகிழ்ச்சி அடைவோம். அப்படிச் சொல்லமாட்டார் என்றால், நமது வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக்கொள்வோம்.

நமது இதயம் (உணர்வுகளின் கூட்டு) எப்பொழுதும் சூரியனைப் பார்த்திருக்கும் சூரியகாந்திப் பூவைப் போல் இறைவனைப் பார்த்திருக்க வேண்டும். நமது அறிவு (எண்ணங்களின் கூட்டு) எப்பொழுதும் ஞாயிறைப் பார்த்திருக்கும் தாமரையைப் போல கடவுளைப் பார்த்திருக்க வேண்டும். நமது ஆற்றல் (நமது செயல்களின் கூட்டு) நாளும், பொழுதும் ஆண்டவரைப் போற்றிக்கொண்டேயிருக்க வேண்டும். நமது இறை அன்பு | திசை மாறினால், நமது பிறர் அன்பு திசை மாறும் ! நமது இறை அன்பு திசை மாறும்போது மீட்பராம் இயேசுவின் துணையை நாடுவோம் (இரண்டாம் வாசகம்).

மேலும் அறிவோம் :
அன்பகத்(து) இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த்(து) அற்று (குறள் : 78).

பொருள் : உள்ளத்தில் அன்பு இல்லாமல் குடும்பம் நடத்துவது என்பது பாலைவனத்தில் பட்ட மரம் மீண்டும் துளிர்விட்டுத் தளிர்த்தது என்று கூறுவது போலாகும்! அன்பில்லாமல் குடும்பம் நடத்துவது கொடுமை மிக்கது!
ஒரு வழக்கறிஞருக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டது, ஏனென்றால், அவர் சட்டத்தைக் கரைத்துக் குடித்து விட்டாராம்! கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த சட்ட வல்லுநர்களுக்கும் அடிக்கடி சட்ட வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அவர்கள் கடவுள் தந்த பத்துக் கட்டளைகளை 613 சட்டங்களாகப் பெருக்கினர். இவற்றில் 248 சட்டங்கள் மனிதர் என்னென்ன செய்ய வேண்டும் என்று விதித்த நேர் மறைச் சட்டங்கள், எஞ்சியிருந்த 365 சட்டங்கள் மனிதர் என்னென்ன செய்யக்கூடாது என்று தடை செய்த எதிர்மறைச் சட்டங்கள். இச்சட்டங்கள் மனிதர் தாங்க முடியாத பெருசுமையாகிவிட்டன. மறைநூல் அறிஞர்களும் பரிசேயரும் "சுமத்தற்கரிய பழுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் வைக்கிறார்கள்" (மத் 23:4) என்ற கிறிஸ்துவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில் இன்றைய நற்செய்தியில் மறைநூல் அறிஞர் ஒருவர் கிறிஸ்துவை அணுகி வந்து அவரிடம், "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" (மாற் 12:28) என்ற கேட்டது நியாயமான கேள்வி, கிறிஸ்து எல்லாச் சட்டங்களின் சாரத்தை இரண்டே கட்டளைகளில் அடக்கிவிட்டால், விவிலியத்தை மேற்கோள் காட்டியே அவர் பதிலளிக்கிறார், இணைச்சட்ட நூலை மேற்கோள் காட்டி, கடவுளை முழு உள்ளத்துடன் அன்பு செய்வது முதன்மையான கட்டளை என்று அறிக்கையிடுகின்றார் (இச 8:4 5). லேவியர் நூலை மேற்கோள் காட்டி நம்மை நாம் அன்பு செய்வது போல் அடுத்திருப்பவரையும் அன்பு செய்வது இரண்டாம் கட்டளை என்று கூறுகிறார் (லேவி 19:18).

கிறிஸ்துவினுடைய போதனையின் புதிய அம்சம், அவர் இறையன்பையும் பிறரன்பையும் வெவ்வேறாகப் பிரித்துக் காட்டாமல், இரண்டையும் இணைத்துக் காட்டுகிறார். மேலும் பிறரன்புக் கட்டளை, இரண்டாம் கட்டளை முதலாவது கட்டளைக்கு இணையானது என்று கூற அவர் தயங்கவில்லை ) (மத் 22:39). உண்மையில் பிறரன்புதான் இறை அன்பின் வெளிப்பாடாகும்.

'அபு பென் ஆடம்' என்பவர் கண்ட ஒரு காட்சியில் ஒரு வானதூதர் கடவுளை அன்பு செய்வோரின் பட்டியலைக் காட்டினார். அதில் தன்னுடைய பெயர் இடம் பெறாததைக் கண்டு ஏமாற்றம் அடைந்த அவர் வானதூதரிடம் : "அபு பெண் ஆடம் தனது அயலாரை அன்பு செய்யும் மனிதன்" என்று எழுதும்படி கேட்டுக் கொண்டார். அடுத்த நாள் அதே வானதூதர் காட்சியில் இறையடியார்கள் பட்டியலைக் காட்டினார். அதில் அடி பென் ஆடத்தின் பெயர் முதலிடத்தில் இருந்தது. கண்ணுக்குப் புலப்படுகின்ற மனிதர்களை அன்பு செய்ய முடியாதவர்கள் கண்ணுக்குப் புலப்படாத கடவுளை அன்பு செய்ய இயலாது. அப்படி அவர்கள் சொன்னால், அது பச்சைப் பொய் என்கிறார் புனித யோவான் ( 1 யோவா 4:19),

இக்காலத்தில் அடுத்தவர்களுடைய பிரச்சினைகளைக் குறைந்த அளவு பொறுமையுடன் கேட்டால், அதுவே மாபெரும் அன்பாகும். இன்றைய மனிதர் பரபரப்பான உலகில் இயந்திரமயமான வாழ்க்கை நடத்துகின்றனர், அவர்களுக்கு மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்க மனமில்லை . "எல்லாரிடமும் கைக்கடிகாரம் உள்ளது; ஆனால் எவருக்குமே நேரம் இல்லை " {Everybady have a 'watch; but nobady has time.) ஒருவர் தன் நண்பருடன் ஒருமணி நேரம் பேசித் தன் பிரச்சினைகளைக் கொட்டித் தீர்த்தார். இறுதியில், "நன்றி நண்பா! என் தலைவலி எல்லாம் போய் விட்டது” என்றார், அதற்கு நண்பர் அவரிடம், "உன் தலைவலி எங்கும் போகவில்லை : எனக்கு இப்ப உன்னுடைய தலைவலி வந்துவிட்டது" என்றார், பிறருடையப் பிரச்சினைகளைக் கேட்பதால் நமக்குத் தலைவலி வந்தாலும் பரவாயில்லை, அவர்களுக்குப் பொறுமையுடன் செவிசாய்க்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது நாம் கிறிஸ்துவை நம் வாழ்வில்  பிரதிபலிக்கின்றோம். “மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; தமது துன்பங்களைச் சுமந்து கொண்டார்” (எசா 53:4),


கடவுளை அன்பு செய்கிறோம். ஆனால் இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் கேட்பதைப்போல் அவரை முழு உள்ளத்துடன் அன்பு செய்கின்றோமா ? கடவுளை அன்பு செய்வதில் நாம் இருமனப்பட்டவர்களாய் இருக்கின்றோம். ஒரு பாட்டி ஆலயத்திகுச் சென்றபோதெல்லாம், மிக்கேல் வானதூதரைத் தொட்டுக் கும்பிடுவார்; அதே நேரத்தில் அத்தூதரின் காலடியில் கிடக்கும் லூசிப்பேயையும் தொட்டுக் கும்பிடுவார். ஏன் அவர் அவ்வாறு செய்தார்? என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில்: “விண்ணகம் சென்றால், மிக்கேல் தூதர் கவனித்துக் கொள்வார்; நரகம் சென்றால் லூசிப்பேய் கவனித்துக் கொள்ளும். இருவரையும் திருப்திப்படுத்துவது நல்லது.

அப்பாட்டி போன்று நாமும் இருமனப்பட்டவர்களாய் உள்ளோம், ஒவ்வொரு கனமான பாவமும் ஒரு வகையில் சிலை வழிபாடு எனலாம். சிலைவழிபாட்டிற்குத் திருத்தூதர் பவுல் கூறும் இலக்கணம்; "படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்குப் பணிவிடை செய்தார்கள்; படைத்தவரை மறந்தார்கள் " (உரோ 1:25). அதே திருத்தூதர் பொருளாசையைச் சிலைவழிபாட்டிற்கு ஒப்பிடுகிறார், கிறிஸ்துவும், நாம் இரு தலைவர்களுக்கு, ஊழியம் செய்ய முடியாது என்கிறார், "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய் முடியாது" (மத் 5:24)

இன்றையப் பதிலுரைப்பாடல் (திபா 18) கூறுகிறது: "கடவுளே நமது ஆற்றல், கற்பாறை, மீட்பர், கேடயம், அரன்," அவரை முழுமையாக அன்புகூர நமக்கு அழைப்பு விடுக்கிறது,

எனவே கடவுளை முழுமையாக அன்பு செய்து, நம்மை நாம் அன்பு செய்வதுபோல நமக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்வோம். இறை அன்பு இல்லாத பிறர் அன்பு வேரற்ற மரம், பிறர் அன்பு இல்லாத இறை அன்பு கனிகொடாத மரம், பிறர்க்கு உதவி செய்வதைவிட பிறரிடம் இனிமையாகப் பேசுவது சிறந்ததாகும்.
.
அகார், அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன் நிசாலன் ஆகப்பெறின்
(குறள் 92)
அன்பின் வழியது உயிர்நிலை


1971ஆம் ஆண்டு வெளிவந்த 'ஃபிட்லர் ஆன் தெ ரூஃப்' என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு.

கதாநாயகனும் கதாநாயகியும் தங்களின் திருமணத்தின் 25ஆம் ஆண்டு (வெள்ளி விழா) விழாவைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருப்பார்கள். விருந்திற்கு நிறைய விருந்தினர்களும், நண்பர்களும் வந்து கொண்டிருப்பார்கள். கதாநாயகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பார். அந்த நேரத்தில் கதாநாயகன் கதாநாயகியிடம், 'டார்லிங், டு யு லவ் மீ?' என்று கேட்பார். 'விளையாடாதீங்க. விளையாட இது நேரமா?' எனக் கேட்டுவிட்டு கதாநாயகி அங்கிருந்து ஓடிவிடுவார். சில நிமிடங்கள் கழித்து அவரை மீண்டும் சந்திக்கும் கதாநாயகன், 'டு யு லவ் மீ?' என்று கேட்பார். அப்போது கதாநாயகி அவரின் கைகளைக் பிடித்துக்கொண்டு, '25 ஆண்டுகள் உனக்கு உணவு சமைத்தேன். உனக்கு துணிகள் துவைத்தேன். உன் இன்ப துன்பங்களில் பங்கேற்றேன். உன்னோடு அழுதேன். உன்னோடு சிரித்தேன். உன்னோடு குழந்தைகள் பெற்றுக்கொண்டேன். உன்னோடு அவர்களை வளர்த்தேன். உன்னோடு வேலை செய்தேன். இது எல்லாம் அன்பென்றால், அந்த அன்பைத்தான் நான் உனக்குச் செய்தேன். அன்பே, ஐ லவ் யூ' என்பார்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு முழுவதும் (இரண்டாம் வாசகம் தவிர) 'அன்பு' என்ற ஒற்றைச் சொல்லால் கட்டப்பட்டிருக்கிறது. நாம் அதிகமாகப் பயன்படுத்தியதால் பயனை இழந்த சில சொற்களில் 'அன்பு' என்ற சொல்லும் ஒன்று. அன்பிற்கு நிறைய பரிமாணங்கள் உண்டு. கடவுள் மனிதனிடம் காட்டும் அன்பு கருணை. மனிதன் கடவுளிடம் காட்டும் அன்பு பக்தி. கணவன் மனைவியிடையே உள்ள அன்பு காதல். நண்பர்களிடையே உள்ள அன்பு நட்பு. பெற்றோர் பிள்ளைகளிடையே உள்ள அன்பு பாசம். இருப்பவர் இல்லாதவருக்குக் காட்டும் அன்பு இரக்கம். இல்லாதவர் இருக்கிறவருக்குக் காட்டும் அன்பு நன்றி. மேலிருப்பவர் கீழிருப்பவருக்குக் காட்டும் அன்பு வரவேற்பு. கீழிருப்பவர் மேலிருப்பவருக்குக் காட்டும் அன்பு மரியாதை. ஆக, இன்று நாம் எந்த அன்பைப் பற்றிப் பேசுவது என்பது முதல் கேள்வியாக இருக்கிறது. மேலும், இன்று 'அன்பு' என்ற வார்த்தையின் ஆங்கிலப் பதம் உணர்வையும் தாண்டி விருப்பு வெறுப்புக்களைக் குறிக்கவும் பயன்படுகிறது: 'ஐ லவ் பீட்சா,' 'ஐ லவ் மை பைக்,' 'ஐ லவ் மை மாம்' என பீட்சா, பைக், அம்மா என அனைத்தையும் ஒரே தளத்தில் நிறுத்திவிடுகிறது ஆங்கில 'அன்பு.'

இன்று நாம் பதிலுரைப்பாடலில் வாசிக்கும் திருப்பாடல் 18 மிக முக்கியமான திருப்பாடல். ஏனெனில், இங்கே ஒரு இடத்தில் தான் (18:1), பழைய ஏற்பாட்டில், மனிதர்கள் கடவுளைப் பார்த்து, 'ஐ லவ் யு ஆண்டவரே' என்று சொல்கிறார்கள்:

'என் ஆற்றலாகிய ஆண்டவரே, உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்!'

இந்தப் பாடலின் சூழலை நாம் 2 சாமு 21-22ல் வாசிக்கிறோம். தாவீது எதிரிகளின் கையினின்று, குறிப்பாக சவுலின் கையினின்று, ஆண்டவர் தம்மை விடுவித்தபோது இந்தப் பாடலைப் பாடுகின்றார்.

இந்தப் பாடலில் வரும் சில உருவகங்களைப் புரிந்துகொண்டால் அன்பின் ஆற்றல் நமக்குப் புரியும்:

'ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர்.
என் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர்.
உம் துணையுடன் நான்
எப்படையையும் நசுக்குவேன்.
என் கடவுளின் துணையால்
எம்மதிலையும் தாண்டுவேன்' (திபா 18:28-29)

மேற்காணும் உருவகங்கள் அன்பின் மூன்று இயல்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன:

அ. அன்பு இருள் இருக்கும் இடத்தில் ஒளி ஏற்றும்
ஆ. அன்பு எதிரியை எதிர்கொள்ளும் துணிவைத் தரும்
இ. அன்பு நாம் உயரே பறக்க இறக்கைகள் அளிக்கும்

இந்த மூன்று இயல்புகளையும் நாம் கருணை, பக்தி, காதல், நட்பு, பாசம், இரக்கம், நன்றி, வரவேற்பு, மரியாதை என்னும் அன்பின் பரிமாணங்களில் பார்க்கலாம்.

அன்பின் திசைகளை வைத்து அன்பை இறையன்பு, பிறரன்பு என்று நாம் பிரிக்கிறோம். மனிதர்கள் தங்களுக்கு மேல் நோக்கி காட்டும் இறையன்பு. மனிதர்கள் தங்களுக்கு நேர்கோட்டில் காட்டும் அன்பு பிறரன்பு. மேலும், இறையன்பு என்று சொல்லும்போது அது இறைவன் செய்யும் அன்பு அல்ல. மாறாக, இறைவனிடம் நாம் காட்டும் அன்பு. அதுபோல, பிறரன்பு என்பது நாம் பிறர் செய்யும் அன்பு அல்ல. மாறாக, பிறரிடம் நாம் கொள்ளும் அன்பு.

பரிசேயர், சதுசேயர் ஆகியோரைத் தொடர்ந்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 12:28-34) மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவிடம் கேள்வி கேட்கின்றார்: 'அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?'

கேட்கின்ற அவருக்கே விடையும் தெரியும். ஏனெனில், ஒவ்வொரு யூதரும் இணைச்சட்ட நூல் 6:4,5 மற்றும் லேவியர் நூல் 19:18 ஆகிய இரண்டு கட்டளைகளையும் இரண்டு கண்களாகக் கொண்டிருந்தனர். ஒருவேளை, இந்த இரண்டில் முதன்மையானது என்பது பற்றி அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம். ஒருவேளை இயேசு, 'இறையன்பை' முதன்மையானது எனச் சொன்னால், அவரை 'பிறரன்பு' மற்றும் சமூகநீதிக்கு எதிரானவர் என்று குற்றம் சுமத்தலாம். அல்லது, 'பிறரன்பை' முதன்மையானது எனச் சொன்னால், அவர் இறைவனைப் பழிக்கிறார் என்றும், அவர் இறைமகன் அல்லர் என்றும் குற்றம் சுமத்தலாம். ஆனால், இயேசு மிகத் தெளிவாக முதல்-இரண்டு என கட்டளைகளைக் கொடுத்து, அவற்றை ஒரே தளத்தில் நிறுத்துகின்றார். இயேசுவின் பதிலை கேள்வி கேட்டவரும் ஏற்றுக்கொள்கின்றார். அப்படி ஏற்றுக்கொண்டவரை, 'நீர் இறையாட்சியினின்று தொலைவில் இல்லை' எனப் பாராட்டுகிறார் இயேசு.

அ. முதன்மையான கட்டளை

'இஸ்ரயேலே கேள். உன் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே' என்ற பகுதியை மட்டும் இயேசு, 'நம் ஆண்டவராகிய கடவுள்' என மாற்றுகின்றார். இவ்வாறாக, தன்னையும் மானிடரோடு ஒருங்கிணைத்துக்கொள்கின்றார். இத்தகையை ஒருங்கிணைத்தலையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 7:23-28) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் தலைமைக்குரு என்னும் உருவகம் வழியாக முன்வைக்கின்றார்.

'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும்' என நான்கு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் இயேசு (மாற்கு). ஆனால், இணைச்சட்ட நூலில் (6:4), 'முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும்' என்ற மூன்று வார்த்தைகளாகப் பார்க்கிறோம்.

'இதயம்' என்பது ஒருவரின் சிந்தனையையும், 'உள்ளம்' என்பது ஒருவரின் தெரிவையும், 'மனம்' என்பது ஒருவரின் உயிரையும், 'ஆற்றல்' என்பது ஒருவரின் உடல் வலிமையையும் குறிக்கிறது. இவ்வாறாக, ஒருவரின் முழு ஆளுமை முழுவதும் இறைவனை நோக்கி இருக்க வேண்டும்.

ஆக, இறைவனை அன்பு செய்வது என்பது வெறும் வழிபாட்டு முறைமைகள் அல்லது சட்ட முறைமைகள் பற்றியது அன்று.

ஆ. இரண்டாவது கட்டளை

'உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக.' பழைய ஏற்பாட்டில், 'அடுத்தவர்' என்ற வார்த்தை சக யூதர் அல்லது சக குலத்தவரைக் குறித்தது. ஆனால், இதை நாம் 'எல்லாரும்' என விரித்தும் பொருள் கொள்ளலாம்.

இந்த அன்பு ஒற்றைச் சொல் நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?

1. இறையன்பு - பிறரன்பு

'இறையன்பு' எப்படி இருக்க வேண்டும்?

'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் இருக்க வேண்டும்.'

'பிறரன்பு' எப்படி இருக்க வேண்டும்?

'என்னை அன்பு செய்வதுபோல பிறரை நான் அன்பு செய்ய வேண்டும்.'

ஒருவேளை இந்த முறைமைகளை மாற்றி அமைத்தால் என்ன ஆகும்?

ஒருவேளை, நான் பிறரை 'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும்' அன்பு செய்தால் என்ன ஆகும்? எனக்கு விரக்திதான் மிஞ்சும். ஏனெனில், குறைவான நான் குறைவான மற்றவரை முழுமையாக அன்பு செய்ய முடியாது.

ஒருவேளை, நான் இறைவனை 'என்னை அன்பு செய்வது போல அன்பு செய்தால்' என்ன ஆகும்? என் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ற கடவுளையும் ஆட்டுவிக்கத் தொடங்குவேன்.

ஆக, முறைமைகள் மாறாமல் அன்பு செய்தல் வேண்டும்.

'இறைவன்' என்பவர் யார்? நான் கண்களை மூடி இறைவன் என்று சொல்லும்போது என் உள்ளத்தில் எழும் உருவம் என்ன? அல்லது யார்? இந்த உருவத்தை நோக்கி என்னால் என் முழு இதயத்தை, உள்ளத்தை, மனத்தை, ஆற்றலை திருப்ப முடியுமா?

'பிறர்' என்பவர் யார்? என் நண்பரா? உறவினரா? எனக்குப் பிடிக்காதவரா? அல்லது எல்லாருமா? என்னை அன்பு செய்வதுபோல, என்னால் அடுத்தவரை அன்பு செய்ய முடியுமா? முதலில் என்னை அன்பு செய்வது என்றால் என்ன? என்னை நான் ஏற்றுக்கொள்கிறேனா? என்னையே நான் மதிக்கிறேனா?

2. அறிவுத்திறன்

மறைநூல் அறிஞர் 'அறிவுத்திறனோடு' பதில் தந்ததைக் கண்டு இயேசு அவரைப் பாராட்டுகின்றார். 'காதலுக்கு கண்ணில்லை' என்பார்கள். அல்லது 'கண்மூடித்தனமான அன்பு' என்று சொல்வார்கள். ஆனால், அன்பில் தான் அறிவுக்கு நிறைய வேலை உண்டு. அறிவுத்திறன் இல்லாத ஒருவரால் அன்பு செய்ய முடியாது. அன்பில் ஒருவர் தன் முழு அறிவுத்திறனையும் பயன்படுத்த வேண்டும். இங்கே அறிவு என்பது வெறும் மூளை சார்ந்த, பிரித்துப் பார்க்கும் அறிவு அல்ல. மாறாக, மனம் சார்ந்த, ஒருங்கிணைக்கும் அறிவு.

3. கேள்

நம் மேல் இருக்கும் இறைவனும், நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களும் நாம் கேட்கும் குரல்களாக நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். ஆக, இக்குரல்களைக் கேட்டால்தான் இவர்களை அன்பு செய்ய முடியும். 'இஸ்ரயேலே, பார்' என்று சொல்லாமல், 'கேள்' என்று கட்டளையிடுகிறார் இறைவன். நாம் பார்க்கும் கண்கள் தாங்களாகவே மூடிக்கொள்ளும் இயல்புடையவை. ஆனால், காதுகள் அப்படி அல்ல. நாமே மூடினாலே ஒழிய அவைகள் திறந்தே இருக்கும். மற்றவர்களின் குரல் அதில் விழுந்துகொண்டேதான் இருக்கும். இக்குரல்களைக் கேட்கும் ஒருவர்தான் அன்பிற்கு இதயத்தைத் திறக்க முடியும்.

இறுதியாக,

'அன்பின் வழியது உயிர்நிலை' என்கிறார் திருவள்ளுவர் (குறள் 80). 'இறையன்பு' என்ற வேரையும், 'பிறரன்பு' என்ற கிளையையும் முன்வைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. உயிர்நிலை இறைவனில் புறப்பட்டு நம் வழியாக ஒருவர் மற்றவரிடம் செல்கிறது. ஆக, இறைவனை நான் என்னில் அனுபவித்து, அதே இறைவனை நான் பிறரில் அனுபவிக்கிறேன். ஆக, இறைவன் மற்ற இறைவனோடு செயலாற்ற என் உடல், உள்ளம், இதயம், மனம் வாய்க்காலாக இருக்கின்றது.

துரமாக இருப்பவர்களை, இருப்பவற்றை அன்பு செய்வது எளிது. 'நான் அமெரிக்கர்களை அன்பு செய்கிறேன்' என்று என்னால் எளிதாகச் சொல்ல முடியும். ஆனால், 'என் அடுத்த அறையில் இருப்பவரை நான் அன்பு செய்கிறேன்' என்று சொல்வது அவ்வளவு எளிதல்ல.

அன்பை ஒரு ரொமான்டிக் அனுபவமாக பார்க்காமல், அதை அன்றாட வாழ்வியல், செயல்முறை எதார்த்தமாகப் பார்த்தால், அடுத்தவருக்கும் எனக்கும் உள்ள உள்ளத்தின் தூரமும் குறையும்.


 


No comments:

Post a Comment