Tuesday, 23 October 2018

பொதுக்காலம் ஆண்டின் 30-ஆம் ஞாயிறு


 பொதுக்காலம் ஆண்டின் 30-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்

எரேமியா 31:7-9;
எபிரேயர் 5:1-6;

மாற்கு 10:46-52
ஓர் இளைஞன் 21 வயதில் வியாபாரத்தைத் தொடங்கினான். பெரும் இழப்பு. சட்ட சபைக்குப் போட்டியிட்டார். மண்ணைக் கவ்வினார். தொழில் தொடங்கினார். தோல்வியைத் தழுவினார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். படுதோல்வி . நாற்பத்து ஏழாவது வயதில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்விக்கு மேல் தோல்வி. ஆனால் 52 வயதில் ஜனாதிபதி தேர்தலில் குதித்தார். வெற்றி அவரை முத்தமிட்டது. அவரின் புகழ் உலகெங்கும் பரவியது. அவர் யார் தெரியுமா? தன்னம்பிக்கை இழக்காது, தோல்வியைக் கண்டு துவளாது , தடைக்கற்களைக் கண்டு தடுமாறாது, விடா முயற்சியோடு போராடி இறுதி இலக்கை தன் வசப்படுத்திக் கொண்ட மாமனிதர்! அவர்தான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக திகழ்ந்த ஆப்ரகாம் லிங்கன்.

என்னால் முடியும் என்ற ஒரு மனநிலை வேண்டும். அதைத்தான் ஆன்மீக மொழியில் விசுவாசம், நம்பிக்கை என்றழைக்கிறோம்.
சைக்கிளை ஓட்டாமல் ஒருவர் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முடியுமா? நீரில் இறங்காமல், நீச்சல் கற்றுக்கொள்ள முடியுமா? அதேபோல், ஆண்டவரில் விசுவாசம் வைக்காமல் அவரிடம் எப்படி நன்மை பெற முடியும்?

இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கடவுளாக சித்தரிக்கப்படுகிறார். சிதறிக் கிடக்கும் மக்களை ஒன்று சேர்க்கும் கடவுளே யாவே! இறைவனின் இந்த நல்ல, வல்ல செயல்களில் இஸ்ரயேல் மக்கள் நம்பிக்கை கொள்ள அழைப்பதே இன்றைய முதல் வாசகத்தின் மையப் பொருள்.

இன்றைய நற்செய்தியிலே தரப்படுகின்ற பார்த்திமேயு என்ற குருடனைப் பாருங்கள். ஏராளமானோர் இயேசுவின் பின்னால்
கூட்டமாகச் சென்றதைப் பொருட்படுத்தாமல் கூக்குரலெழுப்பிக் கத்துகின்றான். யார் என்ன சொன்னாலும் பொருள் படுத்தவில்லை. ஆண்டவர் இயேசுவையே நோக்குகிறான். மற்றவர்கள் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. ஆண்டவர் மட்டுமே தெரிந்தார். பார்த்திமேயு குரல் எழுப்பியபோது மற்றவர்கள் தடுத்தார்கள், அதட்டினார்கள். பார்த்திமேயு முடங்கவில்லை. மீண்டும் அதிகமாகக் கத்தினான். தன் முயற்சியில் வெற்றி கண்டான். ஆண்டவரின் கவனத்தைக் கவர்ந்தான். ஆண்டவர் அவனைக் கூப்பிட்டு, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் (மாற் 10:51) என்று கேட்கிறார்.

நான் பார்வை பெற வேண்டும் என்றான். கேட்டது கிடைத்தது. கேளுங்கள் கொடுக்கப்படும் (லூக். 11:9) என்ற ஆண்டவர் தன் வார்த்தைகளைப் பொய்யாக்கவில்லை. பார்த்திமேயு கேட்டது கிடைத்தது.

பிச்சை கேட்பவன் கெளரவம் பார்க்க முடியுமா? நமக்கோ கேட்பதற்கு கஷ்டம்! எனக்கு என்ன தேவையென்று ஆண்டவருக்கு தெரியாதா? என்ற வீண் வம்பு பேசியே வீணாகிப் போகிறோம்.

வாய்ப்புக்களை இழக்கின்றவர்கள் வாழ்வை இழக்கிறார்கள். மற்றவர்கள் அதட்டுகிறார்கள் என்று அமைதி காத்திருந்தால் பார்த்திமேயு என்ற கதாபாத்திரம் விவிலியத்தில் இல்லாமலேயே போயிருக்கக் கூடும்.

வாய்ப்புக்களைப் பயன்படுத்தி வாழத் தெரியாத சிலர் கூறுவதுண்டு. இந்த சாமியார் இருக்கும் வரை நான் கோவில் பக்கமே போகமாட்டேன். யாருக்கு நட்டம்? பார்த்திமேயு இயேசுவை மட்டும் சிந்தித்தானா அல்லது மற்றவர்கள் அதட்டுகிறார்களே என்று சிந்தித்தானா? கடவுளைச் சந்திக்க யாரும் தடையாக இருக்க முடியாது, உன்னைத் தவிர. முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதை பர்த்தலோமேயு நமக்குக் காட்டுகிறார். முதல் முயற்சியிலே வெற்றியில்லையே என்று சோர்ந்துவிடாதே! வெற்றி பெறும்வரை, தொடர்ந்து இறுதி இலக்கையே நோக்கிய வண்ணமாகப் புறப்பாடு என்பதையும் இன்று பார்த்திமேயு நமக்குப் பாடமாகத் தருகிறார்.

இயேசுவின் கருணை உள்ளம் பார்த்திமேயு வழியாக இன்று நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது.

உதவிக்கரம் நீட்ட எத்தனையோ முறை உங்களுக்கு வாய்ப்புக்கள் கிடைத்தும், நல்ல சமாரித்தனைப் போல நீங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லையென்றால் நாம் பார்வை அற்றவர்களே! நன்மைகள் செய்ய வாய்ப்பு இருந்தும் நன்றாக அறிந்திருந்தும் அதைச் செய்யாவிட்டால் பாவம்.

இறுதியாக பார்த்திமேயு தனது அழுக்கடைந்த மேலாடையை வீசி எறிந்துவிட்டு துள்ளிக் குதித்து இயேசுவிடம் வந்தது போல, நாமும் நமது பழைய பாவ இயல்பைக் களைந்துவிட்டு புதிய வாழ்வைத் தொடங்க (எபே. 4:22-24) புறப்படுவோம். புதிய பார்வை பெற்று புதுப்படைப்பாக மாறுவோம்.
 


நமது பிரச்சினைகளை இயேசு தீர்த்துவைப்பார். 

விடுதலை தேடும் உலகம் இது! 
இல்லாமையிலிருந்து விடுதலை; கல்லாமையிலிருந்து விடுதலை;
அறியாமையிலிருந்து விடுதலை; வெள்ளத்திலிருந்து விடுதலை;
பூகம்பத்திலிருந்து விடுதலை; நோயிலிருந்து விடுதலை;
பாவத்திலிருந்து விடுதலை; மரணத்திலிருந்து விடுதலை.

இதுவே இன்றைய மனிதனின் மூச்சும் பேச்சும். விடுதலை நிறைந்த இறையரசிலே (உரோ 14:17) நாமெல்லாம் கானத்து மயிலாக, வானத்துக் குயிலாக ஆடிப்பாடி வாழ விரும்புகின்றோம். இதோ நாம் தேடும் விடுதலையை, நமக்குத் தரும் ஆற்றல்மிக்க இயேசுவை இன்று நமக்கு இன்றைய நற்செய்தி சுட்டிக்காட்டுகின்றது.

அவர் பெயர் பார்த்திமேயு. அவர் பார்வை அற்றவர். அவர் காலதேவன் கண் திறப்பான் எனக் காத்திருந்தார். காத்திருந்த காலம் அவருக்குக் கனிந்தது! மீட்பர் வந்தார் ! பார்வையற்றோர் பார்வை பெறுவார் (லூக் 4:18) என முழக்கமிட்டவர் வந்தார். மகன் உங்களுக்கு விடுதலை அளித்ததால் நீங்கள் உண்மையிலேயே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள் (யோவா 8:36) என்றவர் வந்தார். யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும். என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும் (யோவா 7:37) என்று உரைத்தவர் வந்தார். பார்த்திமேயு தாகத்தோடு உடல் நலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தார்; விடுதலை அடைந்தார் ; இயேசுவுடன் வழி நடந்தார்.

இயேசு இன்றும் அரும் அடையாளங்கள் பல செய்துகொண்டுதான் இருக்கின்றார். இதற்கு லூர்து நகரிலும் வேளாங்கண்ணியிலும் பூண்டியிலும் நடக்கும் புதுமைகள் சாட்சி சொல்லும். விடுதலையை விரும்பும் நாம் அனைவரும் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! அது என்ன? நமது முழு நம்பிக்கையையும் இயேசுவின் மீது வைக்க வேண்டும்.

அண்மையில் ஓர் அபூர்வக் காட்சி ஒன்றை சாலையொன்றில் கண்டேன். அந்த மோட்டார் சைக்கிளில் நான்குபேர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். சைக்கிளை ஓட்டியவர் பின்னால் இரண்டு பேர் அவருக்கு முன்னால் ஒருவர்! மோட்டார் சைக்கிளை ஓட்டிய அப்பா முன்னால் அவரது நான்கு வயது மகன் அமர்ந்திருந்தான். மக்கள் நெருக்கம் நிறைந்த குறுகிய சாலை அது! அப்பா மிகக் கவனமாக, பய பக்தியோடு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார். ஆனால் மகனோ, அந்தச் சிறுவனோ டைட்டானிக் ஸ்டைலில் இரண்டு கைகளையும் விரித்து சிரித்தபடி பயணம் செய்தான். அவனுக்கு அச்சமே இல்லையா? கொஞ்சம் கூட அச்சமில்லை! காரணம் அப்பா மோட்டார் சைக்கிளை ஓட்டுகின்றார் என்ற உள் உணர்வு. இப்படிப்பட்ட உள் உணர்வுக்குப் பெயர்தான் நம்பிக்கை.

இருளும் ஒளிதான் எனக்கு (திபா 139 : 5,12) என்று திருப்பாடல் ஆசிரியரோடு சேர்ந்து பாடுவதற்குப் பெயர்தான் நம்பிக்கை. இயேசுவின் மீது நமது முழு நம்பிக்கையையும் வைக்கும்போது அவர் நமது பிரச்சினையை அவரது பிரச்சினையாக மாற்றிக்கொள்வார்.

மேலும் அறிவோம் :
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும் (குறள் : 71).

பொருள் : ஒருவர் உள்ளத்தில் கொண்டிருக்கும் அன்பினைத் தாழ்ப்பாள் இட்டு அடைத்து வைக்க இயலாது. அன்பரின் துன்பத்தைக் காணும்போது சிந்திடும் கண்ணீர்த்துளியே அந்த அன்பைப் பலரும் அறியச் செய்துவிடும்.கண்மருத்துவரிடம் ஓர் இளைஞன், "டாக்டர் எனக்கு ஆண்கள் சுத்தமாகத் தெரியலை. பெண்கள் மட்டும், அதுவும் வயசுப் பெண்கள் மட்டும் தெரியுது. என் பார்வை கிட்டப் பார்வையா? அல்லது எட்டப் பார்வையா? என்று கேட்டதற்கு, மருத்துவர், "உன் பார்வை கெட்டப் பார்வை" என்றார், நம்மில் பலருக்குப் பார்வைக் கோளாறு உள்ளது. நாம் யாரைப் பார்க்க விரும்புகிறோமா, எப்படிப் பார்க்க விரும்புகிறோமோ அப்படித் தான் பார்க்கிறோம். நமக்குத் தேவையான நலமான பார்வையை இன்றைய அருள்வாக்கு வழிபாடு அளிக்கிறது,

இன்றைய நற்செய்தியில் பர்த்திமேயு என்ற பார்வையற்ற பிச்சைக்காரருக்குக் கிறிஸ்து பார்வை அளிக்கிறார். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா, அரீரியாவில் அடிமைகளாய்ச் சிதறிக்கிடந்த எஞ்சிய இஸ்ரயேல் மக்களைக் கடவுள் மீண்டும் எருசலேமுக்கு அழைத்து வருவார் என்றும், அவர்களில் பார்வையற்றவரும் அடங்குவர் என்றும் முன்னறிவிக்கிறார். அப்படித் திரும்பி வருபவர்கள் மகிழ்ச்சி நிறைந்தவர்களாகக் காணப்படுவர், கண்ணீரோடு விதைப்பவர்கள் மகிழ்ச்சியுடன் அறுவடை செய்வது போல் (பதிலுரைப்பாடல், திபா 126:5) அகதிகளாக அவதிப்பட்ட இஸ்ரயேல் மக்கள் மகிழ்ச்சியுடன் தாயகம் திரும்புவர்.

தாவீது மகனும் மெசியாவுமாகிய கிறிஸ்து பார்வையற்ற பர்த்திமேயுவுக்குப் பார்வை அளித்து, இன்னல் நீக்கி இன்பம் கொடுத்து, இருளிலிருந்து மக்களை ஒளிக்குக் கொண்டுவந்து மகிழ்வைத் தருகிறார். பர்த்திமேயு பார்வை பெற்றார் என்பதைவிட அவர் கிறிஸ்துவின் சீடராக மாறி அவரைப் பின்பற்றினார் என்பது நமது கவனத்தை ஈர்க்கிறது. உயிர்த்த கிறிஸ்துவை மகதலா மரியா மட்டும் ஒருமுறை 'ரபூனி', அதாவது, போதகரே என்றழைத்து அவரைப் பற்றிக் கொள்கிறார் (யோவா 20:16-17). பாத்திமேயுவும் கிறிஸ்துவை 'ரபூனி' என்றழைத்து அவரைப் பின்பற்றி அவரது சீடராக உருவெடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்து சிலுவை சுமந்து சென்றபோது அவரைப் பின் தொடர்ந்த ஓர் இளைஞன் தனக்கு ஆபத்து வந்தபோது தன் போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு ஆடையின்றி ஒடினான் (மாற் 14:51-52). ஆனால் பர்த்திமேயுவோ தம் போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு கிறிஸ்துவைப் பின் தொடர்கிறார் (மாற் 10:50-52). பார்வை உள்ளவன் கிறிஸ்துவை விட்டுவிட்டு ஓடுகிறான்; பார்வையற்றவன் கிறிஸ்துவை நெருங்கி வருகிறான். புறப்பார்வை உள்ளவன் ஆன்மீகக் குருடனாகிறான். புறப்பார்வை அற்றவன் ஆன்மீக ஞானியாகிறான். "பார்வையற்றோர் பார் வை பெறவும், பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவும் வந்தேன்" (யோவா 12:39) என்று கிறிஸ்து ஆன்மிகக் குருடர்களாகிய பரிசேயரிடம் கூறியது நினைவு கூறத்தக்கது.

நமது பார்வை எவ்வாறு உள்ளது? ஒருவர் கண் மருத்துவரிடம் சென்று. "எனக்கு எல்லாமே இரண்டு இரண்டாகத் தெரிகிறது என்றதற்கு, மருத்துவர் அவரிடம், அதற்கு ஏன் நான்கு பேர் வந்திருக்கிறீர்கள்? என்று கேட்டாராம்! கண் மருத்துவருக்கே பார்வைக் கோளாறு! மனித இனத்தை ஓரினமாக இணைக்க வேண்டிய கிறிஸ்துவர்களுக்கே பார்வைக் கோளாறு. இக்கோளாறு திருத்தூதர் பவுல் காலத்தில் இருந்தே வருகிற ஒரு தொற்று நோய், அவர் காலத்தில் கொரிந்து திருச்சபையில் நான்கு கட்சிகள் இருந்தன: பவுல் கட்சி, அப்பொல்லோ கட்சி, கேபா கட்சி, கிறிஸ்துவின் கட்சி (1கொரி 1:12}, இத்தகைய கட்சி மனப்பான்மை கொண்ட கிறிஸ்துவர்கள் ஆவியில் வாழ்வதில்லை; ஊனியல்பில் வாழ்கின்றனர் என்று பாடுகிறார் பவுல் (1 கொரி 3:1-4).

அன்றைய நிலையை விட இன்றைய நிலை இன்னும் மோசமாகக் காட்சி அளிக்கிறது. தமிழகத் திருச்சபையில் காணப்படும் சாதி வேறுபாட்டைக் கண்டு, தூய ஆவியாருக்கே மன உளைச்சல் (Ternsion) ஏற்பட்டு, மருத்துவ விடுப்பில் (Madical Leave) போய் விட்டாராம்! வேடிக்கையாக அல்ல, வேதனையாக இருக்கிறது. நெஞ்சுப் பொறுக்குதில்லையே, இந்த இழிநிலையை நினைத்துவிட்டால்.

கிறிஸ்துவக் கண்ணோட்டத்தில் யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமை என்றும் உரிமைக் குடிமகன் என்றும், ஆண் என்றும் பெண் என்றும் இல்லை (கலா 3:28). கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருக்கிறார் (கொலோ 3:11). இத்தகைய பார்வை என் இன்னும் நமக்கு வரவில்லை? 'ரபூனி நான் பார்வை பெறவேண்டும்.' நாம் நமது இலக்கை அடையும் வரை மனந்தளராது போராட வேண்டும் என்பதற்குப் பர்த்திமேயு ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறார். கிறிஸ்துவிடம் வராமல் அவரைத் தடுக்க மற்ற மக்கள் முயன்றனர். ஆனால் பாத்திமேயு அத்தடைகளை எல்லாம் தாண்டி கிறிஸ்துவிடம் ஓடி வந்தார்; தமது இலக்கை அடைந்தார்; பார்வை பெற்றார். நாம் நினைப்பதெல்லாம் உயர்வாக இருக்கவேண்டும்; நாம் விரும்பியது கிடைக்கவில்லை என்றாலும் நாம் நம் இலக்கிலிருந்து பின் வாங்கக்கூடாது.

"உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல், மற்றும் அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து" (குறள் 596)

ஆர்த்தி என்ற ஒரு சிறுமி கூட்டத்தில் அம்மாவை விட்டுப் பிரிந்து விட்டாள். அவள் 'அம்மா அம்மா' என்று கத்துகிறாள், அவளுடைய அம்மாவும் 'ஆர்த்தி ஆர்த்தி' என்று கத்துகிறாள். அவ்வாறே நாம் கடவுளைத் தேடும்போது கடவுளும் நம்மைத் தேடுகிறார். பர்த்திமேயு 'தாவீதின் மகனே எனக்கு இரங்கும்' என்று கத்துகிறார், கிறிஸ்துவும் அவரைக் கூப்பிடுங்கள்" என்கிறார், கடவுளை நோக்கி நாம் இரண்டு அடி எடுத்து வைத்தால், கடவுள் நம்மை நோக்கி இருபது அடி எடுத்து வைக்கிறார். ஆழம் ஆழத்தை அழைக்கிறது (திபா 42:7) என்பதற்கிணங்க, 'அவலம்' என்ற ஆழத்தில் அமிழ்ந்து அவதிப்படும் நாம், 'இரக்கம்' என்ற கடவுளின் இணையற்ற ஆழத்தை அழைக்கவேண்டும். 'ஆண்டவரே எனக்கு இரங்கும்' என்பது தான் நமது அன்றாட மன்றாட்டு.

பழைய பாவ இயல்பைக் களைந்து எறிந்துவிட்டு, புதியதொரு வாழ்வைத் தொடங்குவது எவ்வாறு என்பதையும் பார்த்திமேயு நமக்கு உணர்த்துகிறார். தமது மேலுடையை வீசி எறிந்துவிட்டு, துள்ளிக் குதித்துக் கொண்டு கிறிஸ்துவிடம் வருகிறார்; பார்வை பெறுகிறார்: புதிய மனிதராகிறார்; இயேசுவின் சீடராகிறார். இயேசுவைப் பின் தொடர்கிறார், நாமும் புதுப்படைப்பாக மாற வேண்டும். "ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ" (2கொரி 5:17).

கந்தல் ஆடை அணிந்து என்னிடம் வந்த ஒரு பிச்சைக் காரருக்குப் புதிய வேட்டியும் புதிய சட்டையும் கொடுத்தேன். ஒரு வாரம் கழித்து அவர் பழைய கந்தல் ஆடையுடன் வந்ததைக் கண்டு அவரிடம், "புதிய வேட்டியும் சட்டையும் எங்கே?" என்று கேட்டதற்கு அவர்: "புதிய வேட்டி கட்டிக்கிட்டுப் பிச்சை கேட்டால், யார் பிச்சை போடுவார்?" என்றார். அவருடைய பிச்சைக்காரப் புத்தி அவரைவிட்டு அகலவில்லை. கந்தலை அகற்றிக் கண்ணியமாக வாழ அவருக்குக் கண்பார்வை இல்லை,

நமது நிலை என்ன? பழைய சித்தையில் புதிய இரசத்தை மாற்றிக் கொண்டிருக்கிறோம். அடிப்படையில் மனமாற்றமின்றி ஆயிரம் அமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மனம் மாற்றமின்றி அமைப்புகளை மட்டும் மாற்றுவதால் ஒரு பயனும் விளையாது. பர்த்திமேயுவைப் பின்பற்றிப் புதிய பார்வை பெறுவோம்; புதுப்படைப்பாக மாறுவோம்: புத்துலகம் படைப்போம்,

"ரபூனி நான் பார்வை பெற வேண்டும்."

No comments:

Post a Comment