Thursday 11 October 2018

பொதுக்காலம் ஆண்டின் 28-ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 28-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்


சாலமோனின் ஞானம் 7:7-11
எபிரேயர் 4:12-13
மாற்கு 10:17-30
 
 
 
 

கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனுக்கு திடீரென ஒரு அச்சம் தோன்றியது: கடலில் விழுந்து விட்டால் தான் எப்படி உயிர் பிழைப்பது என்ற எண்ணம் அவனை வாட்டியது. கப்பல் தலைவனிடம் சென்று தன் அச்சத்தை விளக்கினான். கவலைப்படாதே , உனக்குத்தான் நன்கு நீந்தத் தெரியுமே என்றான் கப்பல் தலைவன். உடனே அவன், இல்லை ! நேற்று கூட நன்கு நீந்தத் தெரிந்த ஒருவன் கடலில் விழுந்து மூழ்கி இறந்து போனானே என்றதற்கு கப்பல் தலைவன் அம்மனிதன் கடலில் வீழ்ந்தபோது தன்னுடைய பொருட்கள் அடங்கிய இரண்டு பெட்டிகளை தன் இரு கைகளிலும் பிடித்திருந்தான். அப்பெட்டிகளின் எடை அவனை நீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. எனவேதான் எங்களால் கூட அம்மனிதனைக் காப்பாற்ற இயலவில்லை என்று சொன்னான். இக்கதை தரும் பாடத்தை நமக்கு அளிப்பதே இன்றைய வாசகங்கள். மனிதன் படைக்கப்பட்ட போது கள்ளங்கபடம் இல்லாமல் (Innocence) இருந்தான். அவன் வளர வளர அவனுக்குள் பல மூட்டைகள் ஏறிக் கொண்டன. நல்லவைகள் பஞ்சு மூட்டையைப் போல இலேசாக இருந்தன. தீயவையே பாறாங்கற்களைப்போல கடினமாயின. இதுபோன்ற மூட்டைகள் அவனுக்குள் இருக்கும் வரை குழப்பம்தான்.

கட்டளைகளை யெல்லாம் கடைப்பிடித்த இளைஞன் ஒருவனுக்குத் தனக்கு நிலைவாழ்வு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆண்டவர் இயேசுவிடம் சென்று வினவினான். பாதி கிணற்றைத் தாண்டும் சக்தி கொண்ட அவுனுக்கு மீதிப் பாதி கிணற்றைத் தாண்ட ஆண்டவர் வழிவகைச் சொன்னார். உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் (மாற்.10:21) என்றார். ஆண்டவர் காட்டிய வழி அவனுக்கு உகந்ததாக இல்லை. நீ கட்டளைகளையெல்லாம் கடைப்பிடிப்பதால் மீட்பு அடைந்துவிட்டாய் என்று இயேசு சொல்வார் என்று எண்ணி வந்த இளைஞனுக்கு, இன்னும் அதிகமாக, எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்தையும் இழக்கச் சொல்கிறாரே என்று முகம் வாடி வருத்தத்தோடு சென்றான்.

நாமும் மீட்படைய வேண்டும் என்று விரும்புகிறோம். நம்மை மீட்க வேண்டும் என்பது இறைத்தந்தையின் விருப்பம். அவ்விருப்பத்தை நிறைவேற்ற இயேசு தன்னுயிரைத் தந்தார். இன்னும் குறைவாக இருப்பது என்ன? நம் ஒத்துழையாமை. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நாம் சேகரித்தவற்றை, நாம் அடைந்தவற்றைக் காப்பாற்றுவதற்காக நாம் நடத்துகின்ற போராட்டம் பெரிது. நாம் சேர்த்தவைகள்: பணம், பதவி, படிப்பு, பட்டம், பகைமை, சொத்து, சொந்தம்... போன்ற சுமைகளே நம்மை மூழ்கடிக்கும். இவற்றையெல்லாம் விடுத்துக் கள்ளம் கபடற்ற முதல் நிலைக்கு நாம் செல்ல வேண்டும். அறிவு நம்மை அனைத்தையும் துறக்க வைக்கும். வளர்ந்தாலும், பெரியவரானாலும் ஞானம் என்கிற கொடை நம்மைக் குழந்தைகளாக்கும். இது தனி மனித முயற்சியால் இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் (மாற் 10:27). பின்பு வந்து என்னைப் பின்பற்றும் (மாற் 10:21) என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து ஞானத்தைப் பெறுவோம். இலவசமாய் இறைவன் தரும் நிறை வாழ்வைப் பரிசாகப் பெற்றுக்கொள்வோம்.
 
 
 

 


கிரேக்க நாட்டுத் தத்துவமேதை ஒருவர் தம் வீட்டிற்கு முன்புறம், "ஞானம் இங்கே விற்கப்படும்" என்று ஒரு விளம்பரப் பலகையில் எழுதி வைத்திருந்தார், இந்த நூதனமான விளம்பரத்தைப் படித்த ஒரு பணக்காரர் தமது வேலைக்காரரிடம் பணம் கொடுத்து, ஞானம் வாங்கி வரும்படி அவரை அம்மேதையிடம் அனுப்பினார். அம்மேதை அப்பணத்தை வாங்கிக் கொண்டு, ஒரு காகிதத் துண்டில், "நீ எதைச் செய்தாலும் தன் இறுதி முடிவை நினைத்துக்கொள்” என்று எழுதிக் கொடுத்தார், அப்பணக்காரர் அவவாக்கியத்தைப் பொன் எழுத்துக்களால் பொறித்து, சட்டம் கட்டி, தம் வீட்டின் மையப் பகுதியில் தொங்கவிட்டு, நாள்தோறும் படித்து, வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, தம் செல்வத்தின் பெரும் பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்து உதவி, உண்மையில் ஞானியாக வாழ்ந்து நல்ல மரணமடைந்தார்.

நாம் எதைச் செய்தாலும் நம் வாழ்வின் இறுதி முடிவை நம் கண்முன் நிறுத்த வேண்டும். “இருப்பது பொய், போவதுமெய்." இதுதான் வாழ்வு. "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள் ளை, கடைசிவரை யாரோ?" திலையற்ற வாழ்வை எண்ணிப்பார்த்ததால்தான் பலர் ஞாளிகளாக மாறினர். இன்றைய பதிலுரைப் பாடலும், "எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்போது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்" (திபா 30:12) எனக் கூறுகிறது.

இன்றைய முதல் வாசகம் ஞானத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றது. ஞானத்திற்கு ஈடு இணையானது இவ்வுலகில் வேறெதுவுமில்லை. ஞானத்திற்கு முன் வெள்ளி வெறும் களிமண்; தங்கம் வெறும் தவிடு; செல்வம் வெறும் குப்பை: அழகு வெறும் மாயை; புகழ் வெறும் புகை.

அறிவு ஞானமாகக் கனிய வேண்டும். அறிவைப் புத்தகம் வாயிலாகவும் பல்கலைக் கழகங்கள் மூலமாகவும் பெற முடியும். நவீனக்கலையைக் கலைக்கணிப் பொறிவாயிலாகக் கற்றுக் கொள்ள முடியும், இவ்வுலகம் முழுவதையும் இணையதளம் மூலமாக இணைக்க முடியும். சின்னத் திரைகளும் பெரிய திரைகளும் நமக்குக் கேளிக்கைகளை வழங்க முடியும். ஆனால் ஞானமானது கடவுள் நமக்கு அளிக்கும் மேலான கொடை; தூய ஆவியார் நம் மீது பொழியும் ஒப்புயர்வற்ற வரம் சாலமோன் அரசர் கடவுளிடமிருந்து செல்வத்தையோ புகழையோ ஆயுளையோ கேட்காமல் ஞானத்தைக் கொடையாகக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். பகுத்தறிவு இறைஞானமாகக் கனிய வேண்டும். மெய்யறிவு சூன்யத்தில் அல்ல, பூரணத்தில் சங்கமிக்கும்: கடவுளிடம் சரண் அடையும்.
பழங்காலத்தில் அறுவது வயது நிறைவடைந்த கணவனும் மனைவியும் இல்லறம் துறந்து வனவாசம் மேற்கொள்ளக் காட்டுக்குச் சென்றனர். முன்னே சென்ற கணவர் தரையில் கிடந்த ஏதோ ஒரு பொருளைக் காலால் மணலைக் கொண்டு மறைத்தார். அதைக் கவனித்த மனைவி அவரிடம், "எதைக் காலால் மூடி மறைக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு, கணவர், "தரையில் மாணிக்கக் கல் ஒன்று கிடக்கிறது. அதை உன் கண்களில் படாதபடி மூடி மறைத்தேன்" என்றார், அதற்கு மனைவி, “ என்னங்க, துறவறம் மேற்கொண்ட பிறகும், உங்களுக்கு மண்ணுக்கும் மாணிக்கத்திற்கும் வேறுபாடு தெரிகிறதா?" என்று கேட்டார். ஞானத்தில் தம் கணவரையே விஞ்சி விட்டார் அந்த மனைவி!

கடவுளை யார் தேடுவர் ? மண்ணையும் மாணிக்கத்தையும் சமமாகப் பார்ப்பவர்கள். ஒட்டையும் செல்வத்தையும் ஒன்றாகக் காண்பவர்கள் தான் கடவுளை நாடுவர் என்கிறார் தாயுமானவர்.
"ஓடும் இருநிதியம் ஒன்றாகக் கண்டவர்கள் நாடும் பொருளான நட்பே பராபரமே".

இன்றைய நற்செய்தியில், கடவுளுடைய ஞானம் எனப்படும் கிறிஸ்துவை (1கொரி 1:24) பணக்கார வாலிபர் ஒருவர் மேலோட்டமாகப் பின்பற்ற விரும்பினார். ஆனால் கிறிஸ்துவோ தம்மை வேரோட்டமாக, நெருக்கமாகப் பின்பற்ற அவருக்கு அழைப்பு விடுத்தார், அவருடைய உடமைகளை எல்லாம் விற்று, அவற்றை ஏழைகளுக்கு வாரி வழங்கிவிட்டு, வெறுங்கையுடன் தம்மைப் பின்பற்ற அழைத்தார், ஆனால் அப்பணக்கார வாலிபர் தமது உடமைகளைத் துறக்க மனமின்றி முகவாட்டத்துடன் போய் விட்டார், அவருக்கு மண்ணக அறிவு இருந்தது. ஆனால் விண்ணக ஞானமில்லை . கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் புரிய அவர் விரும்பினார். ஆனால் கிறிஸ்துவோ, "எவரும் கடவுளுக்கும் செல்வத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது" (மத் 6:24) என்பதை அவருக்குத் திட்டவட்டமாக உணர்த்தினார்.

கிறிஸ்து இவ்வுலகச் செல்வத்தின் அவசியத்தை மறுக்க வில்லை. பொருட்பால் இல்லை என்றால், காமத்துப் பாலும் வாங்க முடியாது. ஏன், ஆவின்பால் கூட வாங்க முடியாது என்பது கிறிஸ்துவுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், கிறிஸ்துவோடு ஒப்பிடும் போது, இவ்வுலகச் செல்வங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இரண்டாம் நிலையை அடைகின்றன, கிறிஸ்து எல்லாவற்றையும் இரண்டாம் நிலைக்குத் தள்ளி விடுகிறார். இவ்வுண்மையைத் திருத்தூதர் பவுல் தன்குனர்ந்திருந்தார், எனவே தான் அவர், “கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பையாகக் கருதுகிறேன்” (பிலி 3:8) என்றார். இவ்வுலக செல்வங்களுக்கு அடிமை ஆகிறவர்கள் கடவுளுக்கு அடிமை ஆகமுடியாது.

அரிது, அரிது, பணக்காரர் விண்ணரசில் நுழைவது அரிது என்று ஆணித்தரமாக அறிக்கையிடும் கிறிஸ்து, பணக்காரர்களும் இறையருளால் விண்ணகம் செல்ல முடியும் என்பதையும் எடுத்துக்கூறத் தயங்கவில்லை , பணக்கார சக்கேயு ஓர் ஊழல் பெருச்சாளி: இறையருளால், அதாவது கிறிஸ்துவின் பிரசன்னத்தால் மனமாற்றம் அடைந்தார். அதன் விளைவாகத் தாம் இழைத்த அநீதிகளுக்கு நான்கு மடங்கு ஈடு செய்யவும், தமது செல்வத்தில் பாதியை ஏழைகளுக்கு வழங்கவும் முன் வந்தார்; மீட்படைந்தார் (லூக் 19:8-10).
எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் செல்வப் பெருக்கால் வாழ்வு வந்துவிடாது. (லூக் 12:15). நிலையற்ற செல்வத்தை ஏழைகளுக்குக் கொடுத்து அதன்மூலம் நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் (லூக் 18:9), உலகச் செல்வத்தைப் பயன்படுத்தும் போது அவற்றில் மூழ்கி ஆன்மாவை இழக்காமல் இருக்கக் கற்றுக்கொள்வதுதான் வாழ்க்கைக் கலையாகும் (1 கொரி 7:31).

கணவர் ஒருவர் தம் மனைவிக்குக் குடைபிடித்துக் கொண்டு போனார், ஏன் அவர் அவ்வாறு செய்தார்? என்று அவரைக் கேட்டதற்கு அவர் தந்த பதில்: "போகும் வழியில் துணிக்கடை, நகைக்கடைகள் உள் ளன், அக்கடைகளை என் மனைவி பார்க்காதப்டி கு கடை யை இருபக்கங்களிலும் வளைத்துப்பிடித்து மிகவும் தந்திரமாக அவளை வீட்டிற்குத் தள்ளிக்கொண்டு போய் விடுவேன்."
இவ்வுலக மாயை நமது கண்களில் பட்டு நம்மைத் திசை திருப்பாமல் செய்ய நமக்கொரு குடை தேவைப்படுகிறது. அதுதான் கடவுளுடைய வார்த்தை : உயிருள்ள, ஆற்றல்மிக்க, இருபக்கமும் வெட்டக்கூடிய கூர்மையான வாளான, உள்ளத்தை சாடுருவுகிற கடவுளுடைய வார்த்தையால் மெய்யறிவும் ஞானமும் பெற்று ஞானிகளாக வாழக் கற்றுக் கொள்வோம். பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களால் நாம் நசுக்கப்பட்டு, பிழியப்பட்டு பெறுகின்ற பட்டறிவினால் நாம் ஞானிகளாக மாறவேண்டும், வாழ்க்கை அனுபவம்தான் நமது சிறந்த ஆசான். கெட்ட பின்னாவது ஞானியாக வேண்டாமா?

தொட்டிலுக்கு அன்னை, கட்டிலுக்குக் கன்னி, பட்டினிக்குத் தீனி, சுட்டபின் நெருப்பு, கெட்டபின் ஞானி! "நீ எதைச் செய்தாலும் உன் இறுதி முடிவை நினைத்துக் கொள்"
 

 



எப்படி பணத்தைப் பயன்படுத்துவது?

அந்தப் பள்ளிக்கூடத்தில் அந்த வகுப்பில் அவன்தான் கணக்கில் முதல் மாணவன். அவன் 99 மதிப்பெண் பெற்று முன்னிலையிலிருந்தான். ஆனால் அவனுடைய கணித ஆசிரியர் அவனைக் கடுமையாகக் கண்டித்தார். கண்டிக்கப்பட்டவன் கண்டிப்புக்குக் காரணம் கேட்டான். ஆசிரியரோ ஒரு வெள்ளைத்தாளில் ஒரு கரும்புள்ளியை வைத்துவிட்டு, மாணவனைப் பார்த்து, நீ பெற்றிருக்கின்ற மதிப்பெண் இந்த வெள்ளைத் தாளிலுள்ள கருப்புப் புள்ளி போல் இருக்கின்றது. நீ முழுவதும் வெள்ளையாக இருப்பதையே நான் விரும்புகின்றேன் என்றார். இயேசு இன்றைய நற்செய்தியிலே அவரைச் சந்திக்க வந்த மனிதரிடம் ஒரு கறுப்புப் புள்ளி இருப்பதை, ஒரு குறை இருப்பதைக் கண்டார். நிலை வாழ்வை, இறைவனுடைய நிறை ஆசியை உரிமையாக்கிக்கொள்ள விரும்பிய அந்தச் செல்வர் மோசே கொடுத்திருந்த கட்டளைகளை அப்பழுக்கில்லாமல் பின்பற்றியவர். இருப்பினும் இயேசுவின் சீடத்துவத்துக்கு ஒவ்வாத ஒன்று அவரிடமிருந்தது. அது என்ன? அவருக்கு அடிமையாக இருக்க வேண்டிய சொத்து அவரை அடிமைப்படுத்தி வைத்திருந்தது.

ஞானம் நிறைந்த (முதல் வாசகம்), உயிருள்ள, ஆற்றல் மிக்க (இரண்டாம் வாசகம்) இயேசுவின் வார்த்தைகள் அந்தப் பணக்காரரின் மனத்துக்குள் புகாதவாறு அவருடைய பண ஆசை அவரைத் தடுத்து நிறுத்திவிட்டது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் பணம் ஒன்றுதான். இயேசுவின் அறிவுரை, விண்ணகம், விண்ணக வாழ்வு போன்ற மதிப்பீடுகளெல்லாம் அவருடைய அகராதிக்கு அப்பாற்பட்டவை. அவர் பணம் பந்தியிலே குணம் குப்பையிலே இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே என்று பாடித்திரிந்தவர். இயேசுவின் சீடர்களாக வாழ விரும்புகின்றவர்கள் நூற்றுக்கு நூறு அவருடைய வார்த்தைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
எவ்வளவுக்கு எவ்வளவு நாம் பற்றற்றவர்களாகத் திகழ்கின்றோமோ அந்த அளவுக்கு அம்மையும், அப்பனுமாகிய கடவுள் நம்மைத் தாங்கிப்பிடித்து வாழவைப்பார். பணத்தைச் சோற்றுக்கு ஊறுகாய் போலப் பயன்படுத்துவது நல்லது.

மேலும் அறிவோம் :
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (குறள் : 341).

பொருள் : ஒருவன் எத்தகைய பொருள்களில் இருந்து வேண்டாம் என்று விட்டு விலகுகிறானோ, அந்தப் பொருள்களால் அவனுக்குத் துன்பம் எதுவும் நேராது!



No comments:

Post a Comment