Tuesday 16 October 2018

பொதுக்காலம் ஆண்டின் 29-ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 29-ஆம் ஞாயிறு



இன்றைய வாசகங்கள்


எசா 53:10-11
எபிரேயர் 4:14-16
மாற்கு 10:35-45

சாய்ந்து கொள்ள தேவை ஒரு தோள் !


ஓர் ஊரிலே எல்லாருக்கும் நல்லவராக மனிதநேயம் மிகுந்த பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். காலையிலே சூரியோதயமாகவும், மாலையிலே சந்திரோதயமாகவும் விளங்கிய அவருக்கு ஒரு மகன். அவனுக்கு வயது பத்து இருக்கும். ஒருநாள் அவன் அவனது தாயைப் பார்த்து, அம்மா, அப்பாவைப்போலவே நானும் ஒருநாள் எல்லாராலும் போற்றப்படும் பெரிய மனிதராக வாழ விரும்புகின்றேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்றான்.
தாய் மகனைப் பார்த்து, "மகனே, நான் உன்னை ஒரு கேள்வி கேட்கின்றேன். நீ சரியான பதிலைச் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்கின்றேன்” என்றாள். "சரி" என்றான் மகன். "உன் உடலிலே உள்ள உறுப்புகளில் மிகவும் உயர்ந்தது எது?" மகன் சொன்ன எந்த பதிலையும் தாய் சரியானது என ஏற்றுக்கொள்ளவில்லை. மகன் தோல்வியை ஏற்றுக்கொண்டு, "நீங்களே பதிலைச் சொல்லி விடுங்கள் அம்மா” என்றான்.
தாய் மகனைப் பார்த்து, "மனித உடலிலே மிகவும் உயர்ந்த உறுப்பு அவனது தோள்தான். காரணம் அதுதான் சோர்ந்துகிடக்கும் மனிதர்களையெல்லாம் தாங்கிப்பிடித்து ஆறுதல் அளிக்கின்றது. நீ உயர்ந்த மனிதனாக வாழ விரும்பினால், ஆறுதல் தேடும் தலைகளுக்கு உனது தோள்கள் மீது சாய அனுமதி அளி. அப்போது ஊரும், உலகும் உன்னைப் போற்றும் " என்றாள். இதே உண்மையைத்தான் இன்றைய நற்செய்தியிலே இயேசு சுட்டிக் காட்டுகின்றார். தொண்டுகளிலே சிறந்த தொண்டு துவண்டு விழும் தலையை நமது தோள் மீது சுமப்பதாகும் (முதல் வாசகம்).
இயேசு, தொண்டர்களாக வாழ முன் வாருங்கள், அப்போது உலகம் உங்களை வணங்கும் என்று போதித்ததோடு நிறுத்திக்கொள்ளவில்லை. போதித்ததைச் சாதித்தும் காட்டினார். "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத் 11:28) என்று சொன்ன இயேசு, வார்த்தையை வாழ்வாக்கி, வலுவற்றவர்களின் மீது இரக்கத்தைப் பொழிந்து (இரண்டாம் வாசகம்) மக்களின் உடல் பாரத்தை (மத் 9:27-31), மன பாரத்தை (லூக் 7:36-50) இறக்கி வைத்தார். இயேசு பலரின் பாவத்தைச் சுமந்தார் (எசா 53:12). "சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே (இயேசுவே), சுமந்தார்” (1 பேதுரு 2:24) என்கின்றார் புனித பேதுரு. "எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார். நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார் என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது" (மத் 8:16இ-17) என்கின்றார் புனித மத்தேயு.

இதுவே நமது செபமாக இருக்கட்டும்:
“இறைவா, நடந்து, நடந்து கால்கள் களைத்துவிட்டன ! ஏந்தி, ஏந்தி கைகள் சோர்ந்துவிட்டன!
பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துவிட்டன!
இப்போது எங்களுக்குத் தேவையானதெல்லாம்
சாய்ந்துகொள்ள ஒரு தோள்! ஒரு தொண்டர்! என்று சொல்லி அழுகின்ற இடிந்துபோன இதயங்களுக்கு நான் இதம் தர,
நான் தோள் கொடுக்க, எனக்கு
உமது இரக்கத்தையும், ஆசியையும் தந்தருளும். ஆமென்."

மேலும் அறிவோம் !

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7). 


பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.






பள்ளி ஆய்வாளர் ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவர்களிடம், "எந்தப் பாடத்திலும் 'பெயில்' ஆகாத மாணவர்கள் மட்டும் வலது கையை உயர்த்திப் பிடியுங்கள்" என்றார். ஒரே ஒரு மாணவன் மட்டும் கையை உயர்த்தினான், அதைப்பார்த்த மற்ற மாணவர்கள் சிரித்தனர், அவர்கள் ஏன் சிரிக்கின்றனர்? என்று ஆய்வாளர் கேட்டார். அதற்கு மாணவர்கள், "சார், அவன் ஒரு பாடத்திலும் தேர்வு எழுதவில்லை " என்றனர். ஒரு பாடத்திலும் தேர்வு எழுதவில்லை யென்றால், 'பெயில்' ஆகமுடியாது. ஆனால் அது ஒரு சாதனையா?

துறைமுகத்தில் இருக்கும் கப்பல் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக இருக்கும். ஆனால் துறைமுகத்தில் இருப்பதற்காக எத்தக் கப்பலும் செய்யப்படுவதில்லை , கப்பல் கடலில் பயணம் செய்யவேண்டும்: கடல் கொந்தளிப்பு, புயல், பனிப்பாறை முதலிய பல்வேறு தடைகளையும் மேற்கொள்ள வேண்டும், தனது இலக்கை அடைந்து சாதனை படைக்க வேண்டும், அவ்வாறே மனிதர்களும் தங்கள் வாழ்வில் எழும் பல்வேறு சவால்களைச் சமாளித்து சாதனை புரிய வேண்டும்.

பறவை பிறந்தது பறப்பதற்காக: மனிதன் பிறந்தது துன்புறுவதற்காக (யோபு 5:7). கிறிஸ்துவும் துன்புறுவதற்காகவே இவ்வுலகிற்கு வந்தார். அவர், "எல்லாவகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர், எனினும் பாவம் செய்யாதவர்” (எபி 4:15) என்று. இன்றைய இரண்டாவது வாசகம் தெளிவாகக் கூறுகிறது.

இறைவாக்கினர் எசாயா என்பவர் கிறிஸ்துவைத் 'துன்புறும் ஊழியனாகச் சித்தரித்து நான்கு கவிதைகள் எழுதியுள்ளார், துன்புறும் ஊழியனைப் பற்றிய நான்காம் கவிதையின் ஒருபகுதி இன்றைய முதல் வாசகமாக அமைந்துள்ளது. கடவுள் கிறிஸ்துவைப் பலருடைய பாவங்களுக்காக வதைத்தார்; கிறிஸ்து பிறருடைய பாவங்களுக்காகத் தம்மைப் பரிகாரப்பலியாக்கினார். ஆனால் இறுதியில் உயர்வடைந்து. தமது வாழ்வின் நிறைவை எய்தினார், சிலுவை அவரை வீழ்த்தவில்லை, மாறாக, சிலுவையைக் கொண்டே பாவத்தையும் பாவத்திற்குக் காரணமான அலகையையும் அவர் வீழ்த்தினார்.

கிறிஸ்துவின் சீடர்களுக்குச் சிலுவை விருப்பப்பாடமல்ல), கட்டாயப்பாடம், "என்னைப் பின்பற்ற விரும்புவர் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (லூக் 9:23). தமது சிலுவைச் சாவைக் கிறிஸ்து மூன்று முறை முன்னறிவித்தார். மூன்று முறையும் சீடர்கள் அதைப்புரிந்து கொள்ளவில்லை. முதன்முறை. பேதுரு கிறிஸ்துவிடம், "ஆண்டவரே, இதுவேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" (மத் 16:22) என்றார், இரண்டாம் முறை, சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று வாதாடினர் (மாற 9:34), மூன்றாம் முறை, யாக்கோபும் யோவானும் விண்ணகத்தில் தங்களுக்கு முதல் இரண்டு இடங்களை ஒதுக்கீடு செய்து கொடுக்கும்படி கிறிஸ்துவிடம் விண்ணப்பித்தனர் (மாற் 10:37) வீடுபற்றி எரியும்போது பீடிக்கு நெருப்புக் கேட்ட கதை!

கிறிஸ்து தம் சீடர்களின் மடமையைக் கண்டு மனவருந்தி, அவரோடு விண்ணக மகிமையில் பங்குபெற விழைகின்றவர்கள் அவருடைய துன்பக் கலத்தில் பருக வேண்டுமென்றும், அவருடைய பாடுகளின் திருமுழுக்கைப் பெறவேண்டுமென்றும் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், கிறிஸ்துவின் சீடர்கள் மற்றவர்களிடமிருந்து பணிவிடை ஏற்காமல், மற்றவர்களுக்குப் பணிபுரிய வேண்டும் என்றும் சீடர்களுக்கு அறிவுறுத்தினார்.

இன்றைய காலக்கட்டத்தில் இல்லறத்தாரும் துறவறத் தாரும் ஆடம்பர வாழ்வையும் சொகுசு வாழ்வையும் விரும்புகின்றனர், இறையரசுக்காகவோ மற்றவர்களுடைய நலனுக்காகவோ உழைக்கவும் ஊழியம் புரியவும் விரும்புவதில்லை . பணிவிடை பெறவே விரும்புகின்றனர்: பணிவிடை புரிய முன்வருவதில்லை . சுருக்கமாக, கிறிஸ்துவின் மனநிலை (பிலி 2:5) நம்மிடம் இல்லை .

ஒரு குடும்பத்தில் கணவர் தம் மனைவியிடம் சமைக்கும் படி கேட்டதற்கு அவர், "நான் உங்கள் மனைவி மட்டுமே; சமையல்காரி அல்ல" என்று நறுக்கென்று பதில் சொன்னார். அன்று இரவு திருடன் வீட்டில் புகுந்து மனைவியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்தான். கணவர் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தார், மனைவி அவரிடம், "என்னங்க, சும்மா பார்த்துக்கொண்டு இருக்கிறீங்க; திருடனை அடிச்சு விரட்டுங்க” என்றதற்கு. கணவர், "நான் உனக்குக் கணவன் மட்டுமே; காவற்காரன் அல்ல; போலிசைக் கூப்பிடு" என்று பதிலடி' கொடுத்தார்!

கணவனும் மலைவியும் கடமை, உரிமை என்ற குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டு, ஒருவர் மற்றவர் மீது வஞ்சகம் தீர்த்துக் கொள்ள விரும்பினால், இல்லறம் நரகமாகி விடும். பழி வாங்குவதில் அல்ல, பணிவிடை புரிவதில் ஒருவர் மற்றவருடன் போட்டிபோட வேண்டும். "உணவு விடுதியில் சாப்பிடும் இட்லிக்கும் வீட்டில் சாப்பிடும் இட்லிக்கும் உள்ள வேறுபாடு என்ன?" என்று ஒரு கணவரிடம் கேட்டதற்கு அவர், உணவு விடுதியில் இட்லி சாப்பிட்ட பிறகு மாவு ஆட்டுவேன்: வீட்டில் மாவு ஆட்டியபின் இட்லி சாப்பிடுவேன்" என்றார் வீட்டு வேலையில் மனைவிக்கு உதவி செய்வது கணவனுக்கு இழிவு அல்ல. அது அவருடைய கடமையாகும்,

பயிற்சி காலத்தில் குருவானவர்களும் நவகன்னியர்களும் கிராமங்களுக்குக் களப்பணிபுரிய மகிழ்ச்சியுடன் செல்வர். ஆனால் குருக்களாகவும் கன்னியர்களாகவும் மாறியபின் அவர்கள் அத்தகைய பணிகளை மேற்கொள்ளவதில்லை. தாழ்ச்சி அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறது; தலைக்கனம் ஏறிவிடுகிறது. இருப்பினும், வித்தியாசமான துறவிகளும் இருக்கின்றனர். ஓர் அருள்சகோதரி ஒரு பணக்காரரிடம் சென்று தனது அனாதைக் குழந்தைகளுக்காக நன்கொடை கேட்டார். அப்பணக்காரர் அந்த அருள்சகோதரி முகத்தில் காரித் துப்பி, அவருடைய கன்னத்தில் அறைந்தார். ஆனால் அந்த அருள்சகோதரியோ மிகவும் பணிவுடன், புன்னகை பூத்த முகத்துடன் பணக்காரரிடம், "இது நீங்கள் எனக்கு அளித்த பரிசு; என் அனாதைக் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்” என்று கேட்டார். பணக்காரர் அச்சகோதரியிடம் மன்னிப்புக் கேட்டு, அவருக்குத் தேவையான பணத்தைக் கொடுத்தார், அவர் தான் அன்னை தெரசா!

தாழ்ச்சியின் அவசியத்தைப் பற்றிக் கிறிஸ்து தமது சீடர்களுக்குப் பலமுறை "கொள்கை விளக்கம்" (Theory) அளித்தார். அது அவர்களது மரமண்டையில் ஏறவில்லை . இறுதியாக அவர் "செய்முறைப் பயிற்சி" (Practical) செய்து காட்டினார், இறுதி இரவு உணவின்போது அவர்களுடைய பாதங்களைக் கழுவி, "நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” (யோவா 13:15) என்றார். இல்லறத்தாரும் துறவறத்தாரும் மற்றவர்மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, மற்றவருக்கு ஊழியம் புரிய முன்வந்தால் இவ்வையகம் வானமாக மாறாதா?

"அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தாளே வந்து எய்தும் பராபரமே" - தாயுமானவர்







இயலும் - இயலாதவர்களுக்காக!
 
 

அருள்பணியாளருக்கு ஆங்கிலத்தில் வழங்கப்படும் சொல்லாடல்களில் ஒன்று, 'விகார்' (vicar) - இந்த வார்த்தையிலிருந்துதான் 'விகர் ஜெனரல்' (குருகுல முதன்மைகுரு), 'விகர் ஃபோரேன்' (வட்டார முதன்மைகுரு) போன்ற அலுவல்சார் சொற்கள் பிறக்கின்றன. 'விகர்' என்பது 'விகாரியுஸ்' என்ற லத்தீன் மூலத்திலிருந்து வருகிறது. 'விகாரியுஸ்' என்றால் 'பிறர் பொருட்டு,' 'பிறருக்காக' என்பது பொருள். இதை இன்றைய தமிழில் 'பகராள்' என்றும் சொல்கிறார்கள். அருள்பணியாளரை 'கிறிஸ்துவின் விகார்' - 'கிறிஸ்துவின் பதில் ஆள், அல்லது பகர் ஆள்' என்றும் அழைத்தார்கள்.

கிறிஸ்துவுக்குப் பதிலாக அல்லது கிறிஸ்துவின் இடத்தில் இருப்பவர் அருள்பணியாளர்.

அது எப்படி? ஒருவர் இன்னொருவர் இடத்தில் இருக்கலாம்.

ஒருவர் மற்றவருக்காக நாம் செயல்படுவதை நிறைய இடங்களில் பார்க்கிறோம். 18 வயது நிரம்பாத ஒருவருக்குப் 'பதிலாக' வயது வந்தவர் ஒருவர் கையொப்பம் இடுவது, பிள்ளைகளுக்குப் 'பதிலாக' பெற்றோர்கள் உழைப்பது, ஒருவருக்குப் 'பதிலாக' மற்றவர் நீதிமன்றத்தில் பிணையாக நிற்பது, இறந்தவருக்குப் 'பதிலாக' திருமுழுக்கு வாங்குவது (தொடக்ககால திருச்சபையில் இருந்த ஒன்று). ஒருவருக்குப் பதிலாக நாம் அவருடைய வேலையைச் செய்யும்போது, அவரின் இயலாமையை நம் இயல்நிலை கொண்டு நிறைவுசெய்கிறோம்.

ஆக, நம் எல்லாருக்கும் 'இயல்நிலை' இருக்கிறது. 'என்னால் இது இயலும்' என்று சொல்கின்றோம்.

'என்னால் இது இயலும்,' 'எனக்கு இது இயலும்' என்று சொல்லும் நம் மனநிலையை, 'என்னால் இயலும்,' ஆனால், 'இது எனக்காக அல்ல, பிறருக்காக' என்று நம் இயல்நிலையை உயர்த்துகிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

இன்றைய நற்செய்திப் பகுதியிலிருந்து (காண். மாற் 10:35-45) நம் சிந்தனையைத் தொடங்குவோம்:

இன்றைய நற்செய்திப் பகுதியை ஒரு நாடகமாக எடுத்து அதை இரண்டு காட்சிகளாகப் பிரிக்கலாம்:

காட்சி 1: இயேசுவும் இருவரும் (10:35-40)
காட்சி 2: இயேசுவும் பதின்மரும் (10:41-45)

காட்சி 1: இயேசுவும் இருவரும் (10:35-40)

திரை விலக, இயேசு அமர்ந்திருக்கிறார் ஒரு நாற்காலியில். அவரிடம் வருகின்றனர் செபதேயுவின் மக்கள் யாக்கோபும், யோவானும். இயேசுவிடம் வந்தது செபதேயுவின் தாய் என்று பதிவு செய்து சீடர்களின் மானம் காக்க முயற்சி செய்கின்றார் மத்தேயு (காண். 20:20-28). லூக்கா மற்றும் யோவான் இந்த நிகழ்வு பற்றி தங்கள் நற்செய்திகளில் மௌனம் சாதிக்கின்றனர்.

'நாங்கள் கேட்பதை நீர் செய்ய வேண்டும் என்பது எங்கள் விருப்பம்!' என்று சுற்றிவளைக்கின்றனர் செபதேயுவின் மக்கள். 'என்ன செய்ய வேண்டும்?' என நேரிடையாகக் கேட்கின்றார் இயேசு. 'நீர் ஆயராக அல்லது பேராயராக இருக்கும் போது நாங்கள் துணை ஆயர்களாக இருக்க வேண்டும்!' (நீர் அரசராக இருக்கும்போது நாங்கள் உள்துறை மற்றும் நிதி அமைச்சர்களாக இருக்க வேண்டும்!) என்று கேட்கின்றனர்.

'முடியாது!' என்று சொல்லி முகத்தில் அடிப்பதற்குப் பதிலாக இரண்டு கேள்விகளை அவர்களை கேட்கின்றார் இயேசு. 'நான் குடிக்கும் கிண்ணத்தில் குடிக்க முடியுமா?' 'நான் பெறும் திருமுழுக்கை பெற முடியுமா?' 'முடியாது!' என்று சொல்வார்கள் என நினைத்திருப்பார் இயேசு. ஆனால் இந்த இடியின் மக்கள் 'முடியும்' என்று சொல்லி முடிக்கின்றனர். 'கிண்ணம்' மற்றும் 'திருமுழுக்கு' என்பது இயேசுவின் பாடுகளுக்கான உருவகம். இயேசுவின் இரத்தம் கொள்ளும் கிண்ணம் புதிய உடன்படிக்கையின் அடையாளம் (14:36) எனவும், 'இத்துன்பக்கலம் என்னை விட்டு அகலட்டும்' (14:36) என இயேசுவும் தன் பாடுகளை கிண்ணத்தோடு ஒப்பிடுகின்றார். மேலும் கிண்ணம் என்பது கடவுளின் கோபத்தின் அடையாளமாகவும், அந்தக் கோபத்தை நீக்கும் அடையாளமாகவும் சொல்லப்பட்டுள்ளது (காண். உரோ 3:24-26, 2 கொரி 5:21, கலா 3:13). தண்ணீர் துன்பத்தின் அடையாளம் என்பதை நாம் திபா 42:8 மற்றும் 69:3ல் வாசிக்கின்றோம். ஆக, இயேசுவின் பாடுகள் எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே 'முடியும்' என்று சொல்கின்றனர் இவர்கள். இயேசுவும் அதற்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் இயேசுவுக்குத் தெரியும், தனக்குப் பின் தன் சீடர்களும் துன்புறுவார்கள் என்பது (10:39).

வலப்புறமும், இடப்புறமும் இடம் தருவது கடவுள் என்று இயேசு சொல்லும்போது (10:40) தன் பாடுகளில் ஒளிந்திருக்கும் இறைத்திட்டத்தைச் சுட்டிக்காட்டுகின்றார். இறைத்திட்டம் இல்லாத துன்பம் பயன்தருவதில்லை.

காட்சி 2: இயேசுவும், பதின்மரும் (10:41-45)

காட்சி 1ல் வெறும் பார்வையாளர்களாக நின்றிருந்த, சீடர்கள் இருவரின்மேல் கோபம் கொண்ட பதின்மரை நோக்கித்திரும்புகிறது இயேசுவின் பார்வை. சீடத்துவத்தின் பொருள் என்ன என்பதை பணிவிடை புரிவது என்று விளக்கம் தருகின்றார் இயேசு. 'உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது' (10:43) என்பது புறவினத்தாரைக் குறித்தாலும், செபதேயுவின் மக்கள் போல் சிந்திக்கக் கூடாது என்றும் இயேசு சொல்கின்றார்.

தன்னிடம் வந்த தன் சீடர்களின் - யாக்கோபு, யோவான் - கோரிக்கையை இயேசு முழுமையாக நிராகரிக்கவில்லை. அவர்களின் விருப்பம் வெறும் உயரவா (அம்பிஷன்)-ஆக இருக்கிறதா? அல்லது அதில் செயல்பாடு (ஆக்ஷன்) இருக்கிறதா? என ஆய்வுசெய்கின்றார் இயேசு. அதனால்தான், 'உங்களால் இயலுமா?' என இரண்டுமுறை அவர்களிடம் கேட்கின்றார். அவர்கள், 'இயலும்' என்று சொன்னவுடன், அவர்களின் எண்ணத்தை இன்னும் உயர்த்துகின்றார் இயேசு.

எப்படி?

உங்களால் இயலுமா? - அப்படியானால் உங்களால் இயல்வதை உங்களுக்காக செய்யாதீர்கள். இயலாதவர்களுக்காக செய்யுங்கள் என அவர்களின் வட்டத்தை, பார்வையை விரிவுபடுத்துகின்றார் இயேசு.

இப்படி இயேசுவே செய்தார் என்பதைத்தான் இன்றைய முதல் (காண். எசா 53:10-11) மற்றும் இரண்டாம் (எபி 4:14-16) வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன.

துன்புறும் ஊழியனின் இறுதிப்பாடலை (மொத்தம் நான்கு பாடல்கள் - எசா 42:1-4, 49:1-6, 50:4-9, 53) நாம் எசாயா 53ல் வாசிக்கின்றோம். நீதியோடு இருந்த ஒரு ஊழியன் அநீதியால் துன்புறுகிறான் என்பதுதான் இந்தப் பாடலின் சாரம். 'அநீதி வென்றுவிட்டது, நீதி தோற்றுவிட்டது' என மேலோட்டமான வாசிப்பில் தோன்றினாலும், ஆழ்ந்து வாசிக்கும்போது இந்தப் பாடல் தரும் நான்கு வாக்குறுதிகள் மேலோங்கி நிற்கின்றன: 'நாடுகளுக்கு ஒளி தோன்றும்,' 'சிதறுண்டவர்கள் ஒன்றுகூட்டப்படுவர்,' 'பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும்,' மற்றும் 'ஆண்டவரின் நீங்காத உடனிருப்பு.'

இன்றைய முதல்வாசகம் வெறும் இரண்டு வசனங்களை மட்டும் கொண்டிருந்தாலும், அதில் சொல்லப்படும் கருத்துக்கள் ஐந்து:

1. ஊழியன் துன்புறுவது ஆண்டவரின் திருவுளத்தால்தான்
2. அவரின் உயிர் குற்றநீக்கப்பலியாக செயல்படுகிறது
3. அவரின் அறிவு பலரை நேர்மையாளராக்குகிறது
4. அவரின் துன்பம் மற்றவரின் துன்பத்திற்கு பொருள் தருகின்றது
5. மற்றவர்களின் தீச்செயல்களை அவர் சுமந்து கொள்கிறார்

துன்புறும் ஊழியனின் துன்பம், 'பிறருக்காக' - பிறரின் (இறைவனின்) திருவுளத்தால், பிறரின் (சக மனிதர்களின்) குற்றநீக்கப் பலியாக, பிறரை நேர்மையாளராக்க, பிறரின் துன்பத்திற்குப் பொருள்தர, பிறரின் தீச்செயல்களை நீக்க என பிறர்மையம் கொண்டிருப்பதாக இருக்கிறது.

இவ்வாறாக, துன்புறும் ஊழியன், தன்னால் 'இயலும்' என தான் உணர்வது அனைத்தையும், 'இயலாத' பலருக்காக, பலரின் நல்வாழ்வுக்காகச் செய்கின்றார்.

இயேசுவை ஒப்பற்ற தலைமைக்குருவாக முன்வைக்கின்ற எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடல் (இன்றைய இரண்டாம் வாசகம்), இயேசு, தான் வலுவற்ற நிலையைத் தழுவிக்கொண்டது தனக்காக அல்ல, மாறாக, வலுவற்றவர்கள் வலுவான இறைவனை, அவரின் அரியணையை அணுகிச்சென்று பற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே என மொழிகின்றது. இயேசு இரக்கம் காட்டுகிறவர் என்பதால் நாம் துணிவுடன் அவரை அணுகிச்செல்ல முடியும். மற்றவரை அணுகிச் செல்லும் துணிவு என்றால் என்ன? நாம் ஒருவரிடம் உதவி கேட்க வேண்டியிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த உதவியை நாம் பெற முதலில் அவரின் அருகில் செல்ல வேண்டும்? அணுக முடியாத ஒருவரின் அருகில் நாம் செல்ல முடியுமா? இல்லை. இயேசுவின் மனித இயல்பும், அந்த மனித இயல்பில் அவர் வெளிப்படுத்திய இரக்கமும் அவரை அணுகிச்செல்லும் துணிவை நமக்குத் தருகிறது.

இவ்வாறாக, அவர் வலுவின்மை ஏற்றதன் பலன் தனக்காக அல்ல, மாறாக, இயலாத பிறருக்காக என்கிறார் ஆசிரியர்.

'இயலாதவர்களுக்காக இயலும்' என்பதை 'பணிவிடை புரிதல்,' 'துன்புறுதல்' என்ற இரண்டு செயல்களால் முன்வைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. இன்று நாம் இதிலிருந்து பெறும் வாழ்க்கைச் சவால்கள் எவை?

1. இயுலும் என்னும் உயரவா (உயர்-அவா, உயர்ந்த ஆசை)

ஷேக்ஷ்பியரின் ஜூலியஸ் சீசர் நாடகத்தில், சீசரைத் தான் கொன்றது அவருடைய உயரவாவிற்காகவே எனச் சொல்கின்றார் ப்ரூட்டஸ். ஆனால், சீசரின் நண்பர் மார்க் ஆண்டனி, 'சீசர் அத்தகு உயரவா' கொண்டிருக்கவில்லை என்கிறார். 'உயரவா' என்பது கிறிஸ்தவ மரபில் தேவையற்ற ஒன்று, அல்லது, பாவம் என்றே கருதப்படுகிறது. ஏனெனில், முதல் பெற்றோர், தாங்கள் கடவுளைப் போல இருக்க விரும்பியதை நாம் அவர்களின் உயரவா என எடுத்துக்கொள்கிறோம். இந்த உயரவா இருந்ததால்தான் குரங்கிலிருந்து மனிதன் வந்தான். அல்லது அவன் இன்றும் குரங்காகத்தான் இருந்திருப்பான். 'என்னால் எது இயலும்' என எனக்கு அடையாளம் காட்டுவது என்னுடைய உயரவாதான். இன்றைய நற்செய்தியில் நாம் காணும் யாக்கோபும், யோவானும் இத்தகைய உயரவா கொண்டிருக்கின்றனர். இயேசுவுக்கு வலப்புறமும், இடப்புறமும் இடம் கேட்கும்போது, இவர்களின் அவா மட்டும் உயரவில்லை. மாறாக, இயேசுவின் நிலையையும் இவர்கள் உயர்த்துகின்றனர். இயேசுவை அரசர் என்று நினைத்தது அவர்களின் புரிந்துகொள்ளாமை என நினைக்கிறோம். ஆனால், இவர்கள் புரியாமல் இப்படிக் கேட்டார்கள் என்றால், இயேசுவின் கேள்விகளுக்கு, 'இயலும்' என எப்படி பதில் மொழிந்தார்கள்? இவர்களின் உயரவா பற்றி ஆச்சர்யப்படுகின்ற இயேசு, இவர்களின் இந்தப் பதிலிலிருந்து தொடங்கி, சீடத்துவம் பற்றியும், பிறருக்கான துன்பம் மற்றும் பணிவிடை செய்தல் பற்றியும் பேசுகின்றார் இயேசு. தனிமனித உயரவா தனிமனிதனை மட்டும் மையமாக வைத்திருந்தால் அது சமுதாயத்தின் வீக்கமாக மாறிவிடும் என நினைக்கின்ற இயேசு, 'இயலும்' என தாங்கள் நினைக்கிறவர்கள், 'இயலாதவர்களைத்' தூக்கிவிட வேண்டும் என அறிவுறுத்துகின்றார். பிறஇனத்து ஆள்பவர்கள் தங்களால் 'இயலும்' என்ற நிலையை வைத்து, இயலாதவர்களை அடிமைப்படுத்துகின்றனர் என்று சொல்லி, 'உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது' என எச்சரிக்கின்றார் இயேசு. தொண்டராய் இருக்கும் ஒருவர் தன் தலைவரின் கால்களைத் தன் கைகளில் ஏந்துகிறார். இந்த ஏந்துதல் அடிமையின் அடையாளம் அன்று. மாறாக, 'என்னால் இயலும் - உன்னால் இயலாது' என்ற தன்மதிப்பின் அடையாளம். ஆக, 'இயலும்' என்னும் என் உயரவா இயலாதவர்களை உயர்த்த வேண்டும்.

2. துன்பம் ஏற்பது

மனிதக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதன் படும் துன்பத்தைக் குறைக்க உருவானவை. உணவைப் பச்சையாக உண்பது துன்பமாக இருந்தது. நெருப்பு உருவானது. இருள் துன்பமாக இருந்தது. மின்விளக்கு வந்தது. தகவல் பரிமாற்றம் துன்பமாகத் தெரிந்தது. தொலைபேசி வந்தது. ஒரே இடத்தில் அமர்ந்து பேசுவது துன்பமாகத் தெரிந்தது. அலைபேசி வந்தது. முகம் தெரியாமல் பேசுவது துன்பமாகத் தெரிந்தது. காணொளி அழைப்பு வந்தது. இப்படியாக துன்பம் போக்க நாம் கண்டுபிடித்துக்கொண்டேயிருக்கின்றோம். கண்டுபிடிப்புகள் துன்பத்தைக் குறைத்தாலும், துன்பத்தை அழித்துவிடுவதில்லை. புதிய துன்பங்களையே அவை கொண்டுவருகின்றன. துன்பம் என்பது மனிதகுலத்தோடு இணைந்த ஒன்று. இது எதிர்மறையான ஒன்றல்ல. மாறாக, நம்மை அடையாளம் காட்டுவதுதான் துன்பம். கிறிஸ்தவர்களாகிய நாம் சில நேரங்களில் துன்பத்திற்கு ஆன்மீகப்பொருள் அல்லது அறநெறிப் பொருள் கொடுத்துவிடுகிறோம். அல்லது துன்பத்தை ரொமான்ட்டிசைஸ் செய்ய ஆரம்பிக்கிறோம். துன்பம் என்பது இன்பத்தைப் போல ஒரு எதார்த்தம். அவ்வளவுதான். ஆக, துன்பத்தை இன்பமாக மாற்ற வேண்டிய தேவையில்லை. துன்பம் பிறருக்காக என்று இருக்கும்போது அதன் மதிப்பு இன்னும் கூடுகிறது.

3. இரக்கம் காட்டுவது

இன்று சக மனிதர்கள்மேல், உயிர்கள்மேல், இயற்கைமேல் நமக்கு இரக்கம் வேகமாக குறைந்துகொண்டே வருகிறது. 'என்னால் இயலும். எனவே, எனக்குத்தான் எல்லாம்' என்ற நிலை, நம்மை ஒருவரிடமிருந்து தூரமாக்கிவிடுகிறது. 'என்னால் இயலும் என்றால், உன்னாலும் இயலும். நீ முயற்சி செய்' என்று நாம் அடுத்தவருக்கு அறிவுறுத்தவும், 'நீ ஒரு சோம்Nபுறி. அதனால்தான் உன்னால் இயலவில்லை' என்று அடுத்தவரை நாம் குற்றம் சுமத்தவும் செய்யும்போதும் நாம் இரக்கம் காட்ட மறுக்கிறோம். வல்லவர்க்கெல்லாம் வல்லவரான இயேசு தன் வல்லமையோடு மனித வலுவின்மையை ஒப்பிட்டு, மனித வலுவின்மையை அவர் சாடவில்லை. மாறாக, வலுவின்மையோடு தன்னை ஒன்றிணைத்துக்கொள்கின்றார். இறங்கி வருதலே இரக்கம் என்கிறார் இயேசு.

இறுதியாக,

'என்னால் இயலும்' என்று இன்று நாம் கருதுபவற்றையெல்லாம் பட்டியல் இடுவோம். இயன்றதைவிட இன்னும் முயற்சி செய்வோம். 'என்னால் இயலும்' என நான் நினைப்பது எல்லாம் 'இயலாதவர்களுக்காக' என்று, துன்பம் ஏற்பதிலும், பணிவிடை புரிவதிலும், பிறரின் கால்களை நம் உள்ளங்கைகளில் ஏந்துவோம்.

தன் சீடர்களின் பாதங்களைக் கைகளில் ஏந்திய இயேசு இதையே பாடம் சொன்னார்.

அவரால் இயலும் எனில், அவரோடு வாழும் நமக்கும் இயலும்!

No comments:

Post a Comment