Thursday, 28 June 2018

ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறுஆண்டின் பொதுக்காலம்  13-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்
சா.ஞா. 1:13-12:23-24
2 கொரி. 8:7,9,13-15
மாற். 5:21-43

ஞாயிறு இறைவாக்கு - அருள்பணி முனைவர் ம. அருள்


திருமணம் முடித்த ஒரு வாரம் கடந்து முல்லா என்பவர் தன் மனைவியோடும், உறவினர்களோடும் ஒரு தீவைக் கடக்க படகில் பயணம் செய்து கொண்டிருந்தான். திடீரென புயல் அடித்து படகு திக்கு முக்காடியது. அனைவரும் அஞ்சி நடுங்கினர். ஆனால் முல்லா மட்டும் கவலைப்படாமல் மகிழ்ச்சியோடு இருந்தான். உமக்கு பயமில்லையா? என்று அவன் மனைவி கேட்டாள். அதற்கு முல்லா ஒரு கத்தியை உருவி தன் மனைவியின் கழுத்தை நோக்கி ஓங்கினான். மனைவியோ எவ்வித பயமுமின்றி இருந்தாள். உனக்கு பயமில்லையா? என்று முல்லா கேட்டபோது, கத்தி பயமானதுதான். ஆனால் அதைத் தாங்கி இருக்கும் கரம் என் ஆருயிர் கணவரின் கரம் அல்லவா என்று கூறினாள். ஆம்! இந்த அலைகள் ஆபத்தானவை தான். ஆனால் அதை ஆட்டுவிப்பவர் இறைவன் அல்லவா! அவர் அன்புமயமானவர். எனவே எனக்கு பயமில்லை என்றார் முல்லா.
ஆம்! நம்பிக்கைதான் மனித வாழ்வுக்கு மகிழ்ச்சியும் வெற்றியும் தருகிறது. இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மனிதனுக்குப் பயமும், பதற்றமும் தேவை இல்லை என்பதை இன்றைய இறைவார்த்தை நிகழ்ச்சிகள் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதோ இன்றைய இறை வார்த்தையில் இயேசு மரணத்தின் மீது வெற்றி கொண்டவராக, தன்னை மீறிய சக்தி ஒன்று இவ்வுலகில் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.

செபக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயீர் என்பவரின் மகள் இறந்துவிடுகிறாள். இறந்தாள் என்ற செய்தி இயேசுவுக்கு அறிவிக்கப்படுகிறது. இயேசு சிறுமியின் தகப்பனைப் பார்த்து, அஞ்சாதீர் நம்பிக்கையை மட்டும் விடாதீர் (மாற் . 5:36) என்று கூறிவிட்டு யார் வீட்டுக்குச் சென்று சிறுமி சாகவில்லை உறங்குகிறாள் (மாற் 5:39) என்கிறார். அவர் சொன்னதைக் கேட்ட அனைவரும் அவரை ஏளனம் செய்தனர். ஏனெனில் உலக முறைப்படி அவள் ஏற்கெனவே இறந்துவிட்டாள். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும், மாண்டவர் வருவாரோ இம்மாநிலத்தில் என்று ஒளவையார் பாடிய பாட்டிற்கு ஏற்ப இது நடக்காது என்று நினைத்து ஏளனம் செய்தனர். ஆனால் எது நடக்காது என்று நினைத்தார்களோ அது நடந்தது. இயேசு, "தாலித்தாகூம்” "சிறுமியே எழுந்திரு” என்றதும் எழுந்து அமர்ந்தாள்.

அருமையான சகோதரனே! சகோதரியே! நாம் சாகமாட்டோம். ஆம்! நாம் சாகவே மாட்டோம். காரணம், இன்றைய முதல் வாசகத்திலே சாலமோன் நூலில் வாசித்ததுபோல (சா.ஞா. 1:13-14) நாம் சாக வேண்டும் என்பது கடவுள் விருப்பம் அல்ல. சாவையும் கடவுள் படைக்கவில்லை. அவர் வாழ்வைத்தான் படைத்தார். நாம் வாழ வேண்டுமென்று விரும்புகிறாரேயொழிய, நாம் அழிய வேண்டும் என்று அல்ல. அப்படி நாம் சாக மாட்டோம் என்றால் அன்றாடம் நிகழும் சாவுக்கு விவிலியம், வேதம் தரும் விளக்கம் என்ன?

இயேசு இந்த உலகச் சாவை உறக்கம் என்று அழைக்கின்றார். ஏனெனில் ஆண்டவர் தரும் வாக்குறுதி, புனித பவுல் (1 கொரி. 15:22) கூறுவதுபோல ஒரு நாள் நாம் எல்லோரும் உயிர்ப்பிக்கப் படுவோம். ஏனெனில் ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்கு வருவது போல கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர் என்கிறார் பவுல் அடிகளார். இதை உணர்ந்துதான் மீட்பின் வரலாற்றில் எத்தனையோ மறைசாட்சியர்கள் துணிந்து சாவை எதிர் கொண்டார்கள்.

ஆண்டவர் இயேசு கூறுகிறார்: “என்னை நம்புவோர் என்றுமே சாகமாட்டார்" (யோவா. 6:47). திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார் : (தி.பா. 121:3-4) உம் கால் இடறாதபடி அவர் உன்னைப் பார்த்துக் கொள்வார். உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிட மாட்டார். இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை. உறங்குவதும் இல்லை .

முடிவுரை
உங்கள் சிந்தனைக்காக இறுதியாக இதைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு துறவியிடம் சீடன் ஒருவன் இறந்த பிறகு 
வாழ்க்கை தொடருமா? என்று கேட்டான். அதற்குத் துறவி அருகில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைக் காட்டி, இதில் நெருப்பு வைக்கும் முன் தீ எங்கிருந்தது என்று கேட்க, விடை தெரியாமல் திகைத்தான் சீடன். தீயை அணைத்துவிட்டு, இப்போது தீ எங்கே போனது என்றும் கேட்டார் துறவி சீடனை நோக்கி. தெரியவில்லை என்றான் சீடன். அதேபோல நாம் எங்கிருந்தோம், இறந்த பிற்பாடு எங்கே செல்லுகிறோம் என்றெல்லாம் சிந்தித்து தடுமாறுவதை விட்டு, பயனுள்ள வகையில், மற்றவரின் வளர்ச்சிக்காக உழைப்பால், உணர்வால், உடைமைகளால் என்ன செய்கிறோம் என்று சிந்திப்பதே சிறந்தது என்றார் துறவி. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்திலே புனித பவுல் அடிகளார் (2 கொரி. 8:13,14) இல்லாதவர்களை இருப்பவர்களாக மாற்றும் வாழ்க்கையில் இறங்கி மற்றவர்களையும் சமநிலைக்குக் கொண்டு வர அன்புத் தொண்டு புரிய அழைக்கிறார். எனவே இயேசுவைப்போல நாமும் உறவுக்குக் கரம் கொடுத்து இல்லாதவர்களை இருப்பவர்களாக்கி, சொத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உயிர் கொடுக்கப் புறப்படுவோம்.


மகிழ்ச்சியூட்டும் மறையுரை -குடந்தை ஆயர் F. அந்தோனிசாமி

சொர்க்க வாசல் திறக்கும் இது ஒரு கற்பனை. விண்ணகத்திலே எங்கு பார்த்தாலும் தோரணங்கள்! ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நிறைந்த பெரிய விழா ஒன்றிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது அந்தப் பக்கமாக வந்த கடவுள் வானதூதர்களைப் பார்த்து, எதற்கு இந்த ஏற்பாடுகள்? என்றார். அதற்கு அவர்கள், இஸ்ரயேலரைத் துரத்தி வந்த எகிப்தியர்கள் அனைவரும் கடலிலே மூழ்கி இறந்துவிட்டார்கள். அந்த வெற்றியைக் கொண்டாடத்தான் இந்த ஏற்பாடுகள் என்றனர். அதற்குச் கடவுள், என் மக்கள் அங்கே இறந்து கிடக்கின்றார்கள். நீங்கள் இங்கே விழாவிற்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கின்றீர்களா? நிறுத்துங்கள் உங்கள் ஏற்பாடுகளை என்றார்.
இது ஒரு கற்பனையாக இருந்தாலும் ஒரு பெரிய பாடத்தை நமக்குக் கற்றுத்தருகின்றது. என்ன பாடம்? மனிதர்கள் அழிந்து போவதை கடவுள் ஒருபோதும் விரும்புவதில்லை. இந்த உண்மையைத்தான் முதல் வாசகம் நமக்குக் கற்றுத்தருகின்றது. சாலமோனின் ஞானம், சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை ; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை (சாஞா 1:13) என்று கூறுகின்றது.
சாலமோனின் ஞானம் கூறுவது முற்றிலும் உண்மை என்பதை ஆண்டவர் இயேசு நிரூபித்துக்காட்டினார். எங்கெல்லாம் அழிவின் அறிகுறி தெரிந்ததோ அங்கெல்லாம் இயேசு தோன்றி அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றினார்.
அழிந்து கொண்டிருந்த உடலுக்கு இயேசு சுகமளிப்பதையும், பிரிந்த உயிரை மீண்டும் உடலோடு சேர்த்துவைத்து சிறுமிக்கு 
உயிர்கொடுப்பதையும் இன்றைய நற்செய்தியிலே வாசிக்கின்றோம்.

நமது கடவுள், இயேசு ஆண்டவர் ஏழைகளுக்கு ஏழையாகி (இரண்டாம் வாசகம்), அழுவாரோடு அழுது பாவம் தவிர (எபி 4:15) மற்ற அனைத்திலும் மனிதரைப் போல வாழ்ந்து, மனிதர்கள் நலமுடன் வாழ வலம் வந்தார்.

எந்த இயேசு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மக்களை எல்லாவிதமான வேதனைகளிலிருந்தும் விடுவித்தாரோ (மாற் 1:32-34) அதே இயேசு நற்கருணை வழியாக இன்றும் நம்மைச் சந்திக்கின்றார். அவர்மீது நம்பிக்கை வைத்து ஒவ்வொரு திருப்பலியிலும் வாழ்வு பெறுவோம்.
நம் இயேசுவை நாம் நம்பிக்கையோடு சந்திக்கும்போது நமது இதயப் பறவைக்கு சிலிர்க்கும் சிறகுகள் முளைக்கும்! நமது மின்னல் மனத்திற்கு இனிய கனவுகள் கிடைக்கும்! நமது வழிதேடும் வாழ்விற்கு சொர்க்க வாசல்கள் திறக்கும்!

மேலும் அறிவோம் :
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (குறள் : 8). 
பொருள் : அறக்கடலாகத் திகழும் சான்றோனாகிய இறைவன் அடியொற்றி நடப்பவர், ஏனைய பொருளும் இன்பமும் ஆகிய கடல்களை எளிதாகக் கடந்து செல்வர்; ஏனையோர் பிற துன்பங்களிலிருந்து மீள முடியாது தவிப்பர்.மறையுரை மொட்டுக்கள் -அருள்பணி Y. இருதயராஜ்

மறைக்கல்வி ஆசிரியர், "விண்ணகம் செல்ல விரும்புவோர் கையை மேலே உயர்த்துங்கள்" என்றார், மோகன் என்ற ஒரு மாணவனைத் தவிர மற்றளைவரும் கையை மேலே தூக்கினர், ஆசிரியர் மோகனிடம். "விண்ணகம் செல்ல உனக்கு விருப்பமில்லையா?" என்று கேட்டார். மோகன், "விண்ணகம் செல்ல விருப்பம்தான். ஆனால் இன்று நான் பள்ளிக்கு வரும்போது என் அப்பா, பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்கு நேராக வந்துவிடவேண்டும்; வேறு எங்கும் போகக்கூடாது என்று சொல்லி அனுப்பினார்" என்று பதில் சொன்னான், எல்லாரும் விண்ணகம் செல்ல விரும்புகின்றனர். ஆனால் எவருமே சாக விரும்புவதில்லை ,
சாவை எவரும் தவிர்க்க முடியாது: வேண்டுமானால் அதைக் கொஞ்சக்காலம் தள்ளிப் போடலாம். "நேற்று உயிரோடு இருந்தவள் இன்று இல்லை" என்று கூறும் நிலையாமைதான் இவ்வுலகின் பெருமை என்கிறார் வள்ளுவர்.
நெகுநெல்உள்ஒருவன் இன்றஇல்லை என்னும் பெருமை) 94% அது இவ்வுலகு
(குறள் 3.36). சாவை மனிதர் மட்டுமல்ல, கடவுளும் விரும்புவதில்லை , அவருடைய சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர் சாகா மல் வாழ்வதையே கடவுள் விரும்புகிறார், அலசையில் பொறாமையால்தான் சாவு உலகில் நுழைந்தது. எனத் தெளிவுபடக் கூறுகிறது முதல் வாசகம் (சாஞா 2:23-24).
கிறிஸ்து சாவை அளித்து விட்டார், இன்றைய அல்லேலூயா பாடல் கூறுகிறது: "நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்" (2 திமொ 1:10). கிறிஸ்து நாம் அனைவரும் சாகாமல் இருக்க அவர் சாவை ஏற்றார், தமது சாவினால் நமது சாவை அழித்தார்,
இன்றைய நற்செய்தியில் தொழுகைக்கூடத் தலைவர் யாயிர் என்பவருடைய பன்னிரண்டு வயது நிரம்பிய மகள் இறந்துவிட்டார், அவளுடைய வீட்டில் அனைவரும் ஓலமிட்டு அழுகின்றனர். ஆனால் கிறிஸ்துவோ, "சிறுமி இறக்கவில்லை ; உறங்குகின்றாள்" என்கிறார். அதைக்கேட்டு மற்றவர்கன் ஏ ளளமாகச் சிரிக்கின்றனர், பெத்தானியாவில் இலாசர் இறந்து அவரைக் கல்லறையில் அடக்கம் செய்துவிட்டனர். அந்நிலையிலும் இயேசு தம் சீடர்களிடம், 'நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்" (யோவா 11:11) என்கிறார் கிறிஸ்து சாவை ஒரு நெடிய தூக்கமாகவே கருதுகிறார். வள்ளுவரும் இறப்பைத் தாக்கத்திற்கும், பிறபைத் தூக்கத்திலிருந்து விழிப்பதற்கும் ஒப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உறங்குவது போலும் சாக்காடு; 
உறங்கி விழிப்பது போலும் பிறக்க
(குறள் 369) 
இறந்தவர்கள் கல்லறையில் துயில் கொள்கின்றனர். கடவுள் அவர்களை எழுப்பி வாழ வைக்கிறார் என்கிறார் கிறிஸ்து (யோவா 5:21), 12 வயது சிறுவன் பாம்பு கடித்து இறந்து விட்டான். அவன் அடக்கத்தில் நான் கலந்து கொண்டேன், அவனுடைய அம்மா என் காலைப் பிடித்து. "சாமி! இலாசரைக் கிறிஸ்து உயிர்த்தெழச் செய்ததுபோல் என் மகனையும் உயிர்த்தெழச் செய்யுங்கள்” என்று கதறினார். ஆனால் என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை. ஆனால் அவளைக் கல்லறையில் வைத்து பின்வரும் செபத்தைத்தான் சொல்ல முடிந்தது : "இவர் உருவான மண்ணிற்கே திரும்பிச் செல்லும்படி நிலத்திற்கு கையளிக்கிறோம். இறந்தோரிடமிருந்து தலைப்பேறாக உயிர்த்தெழுந்த கிறிஸ்து தாழ்வுக்குரிய உடலை) மாட்சிக்குரிய தம் உடலின் சாயலாக உருமாற்றுவார் .... இவரது உடலையும் இறுதி நாளில் மகிமையுடன் உயிர்த்தெழச் செய்வார்."
ஒரு சிறுவனிடம் "உனக்கு சாகப் பயமில்லையா?" என்று கேட்டதற்கு அவன் அமைதியாக, "நேரம் வந்தால் போக வேண்டியது தான் என்றான். எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு, பிறக்க ஒரு காலம் உண்டு; இறக்க ஒரு காலம் உண்டு, ஆனால் "காலம் வருகிறது அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர், நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர். தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்" (யோவா 5:28-29). அல்லவை அகற்றி நல்லவை செய்தால், நாம் வாழ்வு பெற உயிர்த்தெழுவோம்.
இன்றைய பதிலுரைப்பாடல் கூறுகிறது: "ஆண்டவரே நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர். சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர்” (திபா 30:3), சாவு என்ற படகு இம்மை வாழ்வின் இக்கரையிலிருந்து மறுமை வாழ்வு என்ற அக்கரைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.)
தொழுகைக்கூடத் தலைவரிடம் கிறிஸ்து. “அஞ்சாதீர், நம்பிக்கை மட்டும் விடாதீர்" (மாற் 5:36) என்கிறார். கிறிஸ்து தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டுக்கு வரும் வழியில் பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் அவதியுற்ற பெண் கிறிஸ்துவின் ஆடையைத் தொட்டு குணமடைகிறார். கிறிஸ்து அவரிடமும், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று" (மாற் 5:34) என்கிறார், இதிலிருந்து கிறிஸ்து நமக்குக் கூறுவது என்ன? எங்கே நம்பிக்கை இல்லையோ அங்கே கடவுள்கூட புதுமை செய்ய முடியாது, கிறிஸ்து நாசரேத் ஊர் மக்களிடம் நம்பிக்கை இல்லாததால் அவரால் அங்க புதுமை செய்ய முடியவில்லை என்கிறது நற்செய்தி. "அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்கு பல வல்லச் செயல்களைச் செய்யவில்லை " (மத் 13:5-8). நமது நம்பிக்கையின்மையால் வல்லமைமிக்கக் கடவுளின் கரங்களைக்கூட நாம் கட்டிப்போடுகிறோம். அவரைச் செயல் இழக்கச் செய்கிறோம். உடற்பிணயிலிருந்து குணம் பெறுவதற்கும் மனநலம் பெறுவதற்கும் வேறுபாடு உண்டு. லூர்து நகருக்குச் செல்லும், அனைவருமே உடற் பிணியிலிருந்து குணம் பெறுவதில்லை. ஆனால் அங்கு செல்லும் அனைவருமே மனநலம் பெறுகின்றனர், உடலரீதியான புதுமைகளைவிட மனரீதியான புதுமைகளே பெரியது. மனமாற்றமே மாபெரும் புதுமை.
கிறிஸ்துவை நற்கருணை வழியாக நம்பிக்கையுடன் தொடுவோம்; நலம் பெறுவோம்.

ஏன் இந்த அமளி?
அருள்பணி ஏசு கருணாநிதி

'ஏன் இந்த அமளி?' - இயேசு தொழுகைக்கூடத் தலைவர் யாயிரின் வீட்டிற்கு வெளியே அவரின் இறந்த மகளுக்காக அழுது புலம்பிய மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கேட்ட இந்தக் கேள்வியோடு இன்றைய சிந்தனையை நாம் தொடங்குவோம்.

'ஏன் இந்த அமளி?' என்ற இந்தக் கேள்வியை ஒற்றை எழுத்தை மாற்றி, 'ஏன் இந்த அமலி?' என்று கேட்டுவிட்டால், 'அமலி' என்ற பெயர் கொண்டவர்கள் எல்லாம் சண்டைக்கு வந்துவிடுவார்கள். 

'அமளி' என்றால் கூச்சல் அல்லது குழப்பம் அல்லது புலம்பல். கூச்சல் மற்றும் குழப்பத்தைவிட புலம்பல் என்ற பொருளே இந்த வார்த்தைக்குச் சரியாகப் பொருந்தும். அதாவது, நடக்கக்கூடாத ஒன்று அல்லது நம் மனதிற்கு ஏற்பில்லாத ஒன்று நடந்துவிடும்போது நம் மனமும், நம் வாயும் உச்சரிக்கும் வார்த்தைகள்தாம் அமளி. ஆக, அமளியில் ஒரு வகையான சோகம், விரக்தி, ஏமாற்றம், சோர்வு இருக்கும். ஆனால் இந்த அமளியினால் ஒரு நன்மையும் இல்லை. இந்த மாதிரியான அமளி என்னும் புலம்பல் நிலை நம்மில் உருவாகப் பல காரணிகள் இருக்கலாம். அவற்றில் மூன்று காரணிகளை முன்வைக்கின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு:

இன்றைய முதல் வாசகத்தில் (காண். சாஞா 1:13-15,2:23-24) ஆசிரியர், 'இறப்பு' எழுப்பும் அமளி பற்றியும்,

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 கொரி 8:7,9,13-15) தூய பவுல், 'குறைவு' எழுப்பும் அமளி பற்றியும்,

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 5:21-43) மாற்கு, 'நலமின்மை' எழுப்பும் அமளி பற்றியும் குறிப்பிடுகின்றார்.

'இறப்பு,' 'குறைவு,' 'நலமின்மை' - இந்த மூன்று காரணிகளால் நாமும்கூட நம் வாழ்வில் இன்று புலம்பிக்கொண்டிருக்கலாம். இப்படிப் புலம்பிக் கொண்டிருக்கும் நம்முன் இயேசு வந்து நம்மிடம் கேட்பதெல்லாம் இந்த ஒற்றைக் கேள்விதான்: 'ஏன் இந்த அமளி?' 'ஏன் இந்தப் புலம்பல்?'

அமளி மற்றும் புலம்பல் வரக் காரணம் நாம் கடவுளின் இருப்பை மறந்துவிடுவதுதான் என்பது இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கின்ற பாடமாகவும் இருக்கிறது.

அ. இறப்பும் கடவுளின் இருப்பும்

'இந்த உலகில் இறப்பு ஏன்?' 'வாழ்வோர் ஏன் இறக்கின்றனர்?' என்று கேள்விகள் எழுப்பும் சாலமோனின் ஞானநூல் ஆசிரியர், 'அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது' என்றும், 'கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்றே படைத்தார்' என்றும் எழுதுகின்றார். ஆக, இன்று சாவு நம்மைத் தழுவினாலும் கடவுள் நம்மை அழியாமைக்கென்று படைத்திருப்பவர். அவருடைய சாயலில் படைக்கப்பட்டுள்ள நாம் ஒருபோதும் அழிவதில்லை. நாம் பிறந்தது முதல் ஒவ்வொரு நொடியும் இறப்பை நோக்கியே அடியெடுத்து வைக்கின்றோம். இறப்பை நோக்கித்தான் நாம் நகர்கிறோம் என நினைக்கத் தொடங்கினால் நாம் ஒருபோதும் வாழ மாட்டோம். எல்லாம் இறக்கத்தானே போகிறோம் என நினைத்து ஒன்றும் செய்யாமல் ஓய்ந்திருப்போம். ஆனால், இறவாமைக்கான ஆவல்தான் நம்மை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி நோக்கி உந்தித் தள்ளுகிறது. 'இல்லை, உனக்கு எல்லாம் முடிந்துவிட்டது, நீ ஒன்றும் செய்யாதே' என்று நம் உள்ளம் நம்மிடம் பேச ஆரம்பித்தால் அது நமது குரல் அல்ல. மாறாக, பேயின் அல்லது அலகையின் குரல். நம் உள்ளத்தில் ஒலிக்கும் கடவுளின் குரல், 'பரவாயில்லை. தொடர்ந்து செல். போராடு' என்று மட்டும் சொல்லி நம்மை முன்நோக்கித் தள்ளும். ஆக, நாம் உடல் அளவில் இறப்பதற்கு முன் சில நேரங்களில் மனதளவில் இறந்துவிடுகிறோம். நாம் கடவுளின் உடனிருப்பை நம்மில் உணரும்போது இறப்பு என்ற அமளி அடங்கிவிடுகிறது.

ஆ. குறைவும் கடவுளின் இருப்பும்

மாசிதோனிய திருச்சபைக்காக கொரிந்து மக்களிடம் பொருள்கள் சேகரிக்கும் தூய பவுல், அவர்கள் 'நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகியவற்றில் வளர்வதோடு அன்பிலும், அறப்பணியிலும் வளர வேண்டும்' என அறிவுறுத்துகின்றார். இதை வலியுறுத்த பவுல் இரண்டு மேற்கோள்களைக் காட்டுகின்றார்: (1) இயேசுவின் பிறப்பு - 'அவர் செல்வராயிருந்தும் (கடவுளாயிருந்தும்) உங்களுக்காக ஏழையானார் (மனிதரானார்), (2) 'மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை. குறைவாகச் சேகரித்தவருக்கு எதுவும் குறைவுபடவில்லை' (விப 16:18). ஆக, கடவுளின் இருப்பு குறைவானவர்களை நிறைவாக்குகிறது. பசி என்னும் குறையால் வாடி இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவராகிய கடவுள் மன்னா வழங்கியபோது, சிலர் அடுத்த நாளைக்குரிய கவலையினால் மன்னாவைச் சேகரித்து வைத்தபோது, அப்படி வைக்கப்பட்ட மன்னா புழுவாகிவிடுகிறது. மிகுதியாகச் சேர்த்ததால் அவர்களுக்கு எதுவும் மிஞ்சவில்லை. அதேபோல ஒன்றும் சேர்த்து வைக்காதவர்களுக்கு எந்தவொரு குறையும் இல்லை. இவ்வாறாக, நம்மிடம் உள்ள குறைவை நிறைவு செய்வது கடவுளின் இருப்பாகவும், அவரின் அரும்செயலாகவும் இருக்கிறது.

இ. நலமின்மையும் கடவுளின் இருப்பும்

இன்றைய நற்செய்தியில் நலமற்றிருக்கும் இரண்டு மகள்களைப் பற்றி வாசிக்கின்றோம். முதல் மகள் 12 வயதான யாயிரின் மகள். இவள் நலமற்றிருப்பதாகவும், இயேசு வந்து அவள் மீது கைகளை வைக்க வேண்டி அவளுடைய தந்தை இயேசுவிடம் விண்ணப்பிக்கின்றார். இரண்டாம் மகள் 12 ஆண்டுகள் இரத்தப்போக்கினால் நலமற்று இருப்பவள். இவள் தானே வந்து இயேசுவின் மேலாடையைத் தொடுகிறாள். இருவருமே இறப்பு நோக்கிய பயணத்தில் இருக்கின்றனர். சிறுமி சீக்கிரம் இறந்துவிடுகிறாள். பெண்மணி கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருக்கிறாள். இந்த இருவரும் இயேசுவைச் சந்திக்கும் நிகழ்வை மாற்கு மிக அழகாக பதிவு செய்கின்றார்

'இரத்தப்போக்குடைய பெண் நலம் பெறுதலும், சிறுமி உயிர்பெற்றெழுதலும்' என்னும் நிகழ்வை மூன்று ஒத்தமைவு நற்செய்தியாளர்களும் (மத் 9:18-26, மாற் 5:21-43, லூக் 8:40-56) பதிவு செய்கின்றனர். ஆனால், இந்த நிகழ்வில் பிரசன்னமாகியிருந்த யோவான் (காண். மாற் 5:37) இதை பதிவு செய்யவில்லை. மத்தேயு நற்செய்தியாளர் யாயிரின் மகள் முதலிலேயே இறந்துவிடுவதாக எழுதுகின்றார் (மத் 9:18-19). சிறுமிக்கு பன்னிரண்டு வயது என்பது மாற்கு இறுதியில் சொல்கின்றார் (5:42). ஆனால், லூக்கா அதை முதலில் சொல்கின்றார் (8:42). மாற்கு நற்செய்தியில் இயேசு உயிர்பெற்ற குழந்தைக்கு கடைசியாக சாப்பாடு கொடுக்கச் சொல்கின்றார் (8:43). ஆனால் லூக்காவில் அவள் உயிர்பெற்றவுடன் சாப்பாடு கொடுக்கச் சொல்கின்றார் (8:55). ஆக, ஒத்தமவு நற்செய்தியாளர்களின் பதிவு ஒன்றுக்கொன்று மாறுபடுகிறது.

இந்த நற்செய்திப் பகுதியை வெறும் இலக்கியப் பகுதியாக வாசித்தாலும் அங்கே ஒரு பிரச்சினை இருக்கிறது. என்ன பிரச்சினை? இயேசுவின் இரண்டு புதுமைகள் (பெண் நலம் பெறுதல், சிறுமி உயிர்பெறுதல்) வௌ;வேறு இடத்தில் சொல்லப்பட்டவை, பிற்காலத்தில் பிரதி எடுப்பவர்களின் தவற்றால் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டதா? அல்லது வேறு வேறு வாய்மொழியாக வந்த கதைகளை நற்செய்தியாளர்கள் ஒன்றாக இணைத்துவிட்டனரா? இயேசுவோடு பயணம் செய்த பெரிய கூட்டம், யாயிரின் வீடு வரவர குறைந்து போவதன் காரணம் என்ன? கதைத்தளமும், அந்தத் தளத்தில் பிரசன்னமாகியிருக்கும் நபர்களும்கூட மாறுபடுகின்றனர். சாலை, கூட்டம், நெரிசல் என இருந்த கதைதளம், திடீரென வீடு, மூன்று சீடர்கள், சிறுமி என மாறிவிடுவதன் பொருள் என்ன?

இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்?

அ. மாற்கு நற்செய்தியாளரின் இலக்கிய உத்தி. என்ன இலக்கிய உத்தி? ஒப்புமை. அதாவது, ஒற்றுமை-வேற்றுமையின் வழியாக ஒரு பொருளை உணர்த்துவது. இந்த நற்செய்திப் பகுதியில் இரண்டு அறிகுறிகள் அல்லது புதுமைகள் நடக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை - ஒருவர் நலம் பெறுகிறார். மற்றவர் உயிர் பெறுகிறார். இரண்டு பேரும் பெண்கள். ஒருவர் வறுமையில் வாடியவர். மற்றவர் செல்வச் செழிப்பில் திளைத்தவர். இருவருக்குமே பொதுவாக இருப்பவை 12 ஆண்டுகள் - முதல் பெண்ணுக்கு 12 ஆண்டுகள் துன்பம், இரண்டாம் பெண்ணுக்கு 12 ஆண்டுகள் மகிழ்ச்சி. முதல் பெண்ணுக்கு பரிந்து பேச எவரும் இல்லை. ஆனால் இரண்டாம் பெண்ணுக்கு பரிந்து பேச தந்தை, இறந்த நிலையில் அழ வந்திருந்த நண்பர்கள், உறவினர்கள். இருவரையும் குணமாக்குவது இயேசுவின் தொடுதல்: முதல் நிகழ்வில் பெண் இயேசுவைத் தொடுகின்றார். இரண்டாம் நிகழ்வில் இயேசு சிறுமியைத் தொடுகின்றார். முதல் நிகழ்வில் கூட்டம் மௌனம் காக்கிறது. இரண்டாம் நிகழ்வில் கூட்டம் மலைத்துப் போகிறது. 

ஆ. இரண்டாம் நிகழ்வு நடப்பதற்கு முதல் நிகழ்வு தளத்தைத் தயாரிக்கிறது. அல்லது முதல் நிகழ்வின் தாமதம்தான் இரண்டாம் நிகழ்வு நடக்க காரணமாக அமைகிறது. முதல் நிகழ்வு நடப்பதற்கு முன் சிறுமி உடல்நலம் இல்லாமல் இருக்கிறாள். ஆனால், அந்தச் சிறுமி இறக்கவும், இறப்பு செய்தி அவளின் அப்பாவைத் தேடி வருவதற்கும், இறந்தவுடன் அழுவதுற்கு அவளின் குடும்பத்தார் கூடி வருவதற்கும் நேரம் தேவைப்படுகிறது. இந்த நேரத்தை உருவாக்கிக்கொடுக்கிறது முதல் நிகழ்வு. ஆக, முதல் நிகழ்வில் வரும் இரத்தப்போக்குடைய பெண், கூட்டம், நெரிசல் அனைத்தும் கதையின் கரு வளர்ச்சிக்கு உதவி செய்கின்றன. 

இ. பயணநடை இலக்கிய உத்தி. நற்செய்தியாளர்கள் பயன்படுத்தும் மற்றொரு உத்தி 'பயணநடை'. அதாவது, இயேசுவின் வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் அவரின் பயணத்தில் நடப்பதாக எழுதுவது. மிக நல்ல உதாரணம், இயேசுவின் எம்மாவு பயணம். இந்த நடையின் உட்கூறுகள் என்ன? பயணத்தின் தொடக்கம், பயணம், மற்றும் பயணத்தின் முடிவு. இன்றைய நற்செய்தியில் இயேசு மறுகரையிலிருந்து யாயிரின் இல்லத்திற்குப் பயணம் செய்கிறார். பயணத்தின் தொடக்கத்தில் சீடர்கள் அல்லது கூட்டம் இயேசுவின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றது. பயணத்தின் இறுதியில் கூட்டம் இயேசுவைக்கண்டு மலைத்துப்போய் அவரில் மேல் நம்பிக்கை கொள்கிறது. ஆக, நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு இயேசு மக்களை பயணம் செய்ய வைக்கின்றார். இந்தப் பயணத்தின் மையமாக இருப்பது நம்பிக்கை பற்றிய இயேசுவின் வார்த்தைகள்: குணம்பெற்ற பெண்ணிடம் இயேசு, 'மகளே, உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று!' என்கிறார் (5:34). உயிர்பெற வேண்டிய மகளின் தந்தையிடம், 'அஞ்சாதீர். நம்பிக்கையை மட்டும் விடாதீர்!' என்று கூறுகிறார் (5:36). ஆக, இந்த மையம் தெளிவானால், பயணநடை தெளிவாக விளங்குகிறது.

ஆக, இலக்கிய அடிப்படையில் அல்லது கதையியல் அடிப்படையில் பார்த்தால் ஒரே நிகழ்வுதான் இரண்டு தளங்களில் வளர்ச்சி பெறுகின்றது. ஆக, இவைகள் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.

முதல் புதுமை: இரத்தப்போக்குடைய பெண் நலம் பெறுதல் (5:24-34). 

யாயிரின் வேண்டுதலுக்கு இணங்கிய இயேசு அவரின் இல்லம் நோக்கிப் புறப்படுகிறார். வாசகரின் மனம் யாயிரின் மகளுக்கு என்ன ஆகுமோ என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், புதிய கதாபாத்திரத்தை உள்நுழைக்கின்றார் மாற்கு. இரத்தப்போக்கினால் வருந்திய பெண்ணின் பெயர் குறிப்பிடப்படவில்லை. கூட்டத்தில் ஒருவராக அவர் நிற்கிறார். கூட்டத்தில் நிற்கும்போது நமக்கு பெயர் தேவைப்படுவதில்லைதானே. அவரைப் பற்றி மூன்று விடயங்களைக் குறிப்பிடுகிறார் மாற்கு: அவள் பன்னிரண்டு ஆண்டுகளாய் அவதிப்படுகிறாள், மருத்துவரிடம் தன் பணத்தையெல்லாம் இழந்துவிட்டாள், இப்போது இன்னும் கேடுற்ற நிலையில் இருக்கிறாள். இப்படிப்பட்ட ஒரு பெண் மற்றவர்களைத் தொடுவது தீட்டு என்று சொன்னது லேவியர்நூல் 15:19-33. 'இயேசுவைத் தொட்டால் நலம் பெறுவேன்!' என அவள் சொல்லிக்கொள்கிறாள். ஒருவரின் தொடுதல்கூட குணமாக்க முடியும் என அக்காலத்தவர் நம்பினர். ஏன் ஒருவரின் நிழல் பட்டால்கூட நலம் பெற முடியும் என அவர்கள் நம்பியதால் தான் பேதுருவும், யோவானும் சாலையில் செல்லும்போது நோயுற்றவர்களை கட்டிலில் கொண்டுவந்து கிடத்துகின்றனர் (காண். திப 5:15). கூட்டத்தின் நடுவே வந்து தொடும் அவளின் துணிச்சல் அவள் எந்தவிதத் தடைகளையும் தாண்டத் தயாராக இருந்தாள் என்பதையும், எந்த அளவிற்கு தன் நோயினால் கஷ்டம் அனுபவித்திருப்பாள் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. இயேசு தன் உடலிலிருந்து ஆற்றல் வெளியேறுவதை உணர்கிறார். வழக்கமாக, மற்றவர்களின் மனதில் இருப்பவற்றை இயேசு உணர்வார் என்று சொல்லும் மாற்கு, இங்கு இயேசு தன்னில் நடப்பதை தான் உணர்வதாகச் சொல்கின்றார். 'யார் என்னைத் தொட்டது?' என்ற இயேசுவின் கேள்விக்கு, சீடர்கள், 'இவ்வளவு கூட்டம் நெரிசலாக இருக்கிறது! இங்க போய் யார் தொட்டது? யார் இடிச்சதுன்னு? கேட்குறீங்களே?' என்று பதில் சொல்கின்றனர் சீடர்கள். இயேசுவின் சீடர்கள் அமளி கொள்கின்றனர். புலம்புகின்றனர்.இது ஒரு 'முரண்பாடு' - என்ன முரண்பாடு? இயேசுவுக்கு அருகில் இருக்கும் சீடர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், தூரத்தில் இருக்கும் ஒரு பெண் அவரைக் கண்டுகொள்கின்றார். பயம் தொற்றிக்கொள்கிறது அந்தப் பெண்ணை. இரண்டு வகை பயம்: ஒன்று, தான் 'திருடியது' கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பது. மற்றொன்று, தான் இயேசுவைத் தீட்டாக்கிவிட்டோம் என்பது. ஆனால், இயேசு தூய்மை-தீட்டு பற்றி கவலைப்படுபவர் அல்லர். இயேசு அந்தப் பெண்ணை இப்போது அடுத்தநிலை குணமாக்குதலுக்கு அழைத்துச் செல்கின்றார். அவரின் நம்பிக்கையைப் பாராட்டுகின்றார். 'மகளே' என்று அவரை அழைப்பதன் வழியாக தன் இறையரசுக் குடும்பத்தில் உறுப்பினராக்குகின்றார் இயேசு. 

முதல் புதுமையில் இந்தப் பெண்மணி இரண்டு தடைகளைக் கடக்கின்றார்: (அ) முதலில் கூட்டம் என்னும் தடை. (ஆ) இரண்டாவது, அச்சம் என்னும் தடை.

இரண்டாம் புதுமை. யாயிரின் மகள் உயிர் பெறுதல். தன் மகளுக்கு சுகம் வேண்டி வந்தவர், தன் மகளின் உயிர் பெறுகிறார். இரத்தப்போக்குடைய பெண்ணின் எதிர்ப்பதமாக நிற்கிறார் யாயிர். தொழுகைக்கூடத் தலைவர். ஆக, கடவுளை யார் பார்க்கலாம், பார்க்கக்கூடாது என்று சொல்லக்கூடியவர் இவர். நிறைய பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர். தனக்கென வேலையாட்களையும் வைத்திருக்கின்றார். ஆனாலும், எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு தன் மகளுக்கு நலம் கேட்டு இயேசுவின் காலடியில் கிடக்கின்றார். தொழுகைக்கூடத்தலைவர் இயேசுவின் காலில் விழுகிறார் - இயேசு உயிர்த்த சில ஆண்டுகள் கழித்து, புதிய நம்பிக்கை கொண்டவர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் யூதர்களின் தொழுகைக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். மாற்கு நற்செய்தியாளரின் திருச்சபையும் இப்படி வெளியேற்றப்பட்டிருக்கலாம். ஆனால், தொழுகைக்கூட தலைவரையே இயேசுவின் காலில் விழ வைப்பதன் வழியாக இயேசுவை தொழுகைக்கூடத்தை விட மேலானவர் என்றும், இயேசுவைச் சந்திக்கு தொழுகைக்கூடம் தேவையில்லை, சாலையோரம் கூட அவரைச் சந்திக்கலாம் என்ற மாற்று சிந்தனையை விதைக்கின்றார் மாற்கு. முதல் புதுமை இரண்டாம் புதுமையின் இடையில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் யாயிரின் மகள் இறந்து, அந்த இறப்பு செய்தி யாயிரின் காதுகளையும், இயேசுவின் காதுகளையும் எட்டுகிறது. 'துணிவோடிரும்! நம்பிக்கை கொள்ளும்!' என தைரியம் தருகிறார் இயேசு. யாயிரின் வீடு வருகிறது. தன் நெருக்கமான மூன்று சீடர்களுடன் (காண். 9:2, 14:33) உள் நுழைகிறார். இடையில் கூட்டத்தினரின் தடை - அதாவது, அவர்களின் கிண்டல். சிறுமியைத் தொட்டு எழுப்புகிறார். மக்கள் வியக்கின்றனர்.

இரண்டாம் புதுமையில் யாயிர் தன் உள்ளே அச்சம் கொண்டிருந்தாலும் அவருக்கு வெளியேயும் இரண்டு தடைகள் இருக்கின்றன: (அ) முதலில், வேலையாள்கள். 'உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் தொந்தரவு செய்கிறீர்?' இவர்களின் வேலை மகளின் இறப்பு செய்தியை சொல்வது மட்டும்தான். ஆனால், 'போதகரை தொந்தரவு செய்யாதீர்' என தம் தலைவருக்கே அறிவுறுத்துகின்றனர். மேலும், இவர்கள் இயேசுவை நலம் தரும் கடவுளாகப் பார்க்காமல் வெறும் போதகராக மட்டுமே பார்க்கின்றனர். (ஆ) யாயிரின் வீட்டு வாசலில் இருந்த கூட்டம். இந்தக் கூட்டத்தினர் அழுது ஓலமிட்டுப் புலம்புகின்றனர். ஓலம் என்பது உச்சதொனியின் குரல். இறந்தவுடன் நம்மை விட்டுத் தூரப் போகும் ஒருவரிடம் மெதுவாக பேசினால் அவருக்குக் கேட்காது. ஆகையால்தான் நாம் ஓலமிட்டு, கூக்குரலிட்டு அவர்களை அழைக்கிறோம். இந்த ஓலத்தைக் கடிந்து கொள்கின்ற இயேசு, 'சிறுமி தூங்குகிறாள்' என்கிறார். கூட்டம் நகைக்கிறது. 'என்னப்பா இவ்வளவு சத்தத்திலா ஒருவர் தூங்க முடியும்!' என்று கேட்பதுபோல இருக்கிறது அவர்களின் நகைப்பு. இந்த இரண்டு தடைகளும் கடவுளின் இருப்பை உணர்ந்துகொள்ள யாயிருக்கு தடையாக இருக்கின்றன.

இவ்வாறாக, 'இறப்பு,' 'குறைவு,' 'நலமின்மை' என்ற மூன்று காரணிகளால் எழும் அமளி மற்றும் புலம்பலுக்கு கடவுளின் இருப்பு விடையாக இருக்கிறது.

கொஞ்ச நேரம் மௌனமாக அமர்ந்து நான் என்னையே ஆராய்ந்து பார்த்தால், எனக்குள்ளும் அந்த அமளி இருப்பது தெரியும். நூலகம்போல அமைதியாக இருக்க வேண்டிய நம் மனம் மீன் மார்க்கெட் போல கூச்சல் குழப்பமாக இருக்கிறது. நம் மூளை சில நேரங்களில், 'இது இப்படித்தான். போதகரை ஏன் தொந்தரவு செய்கிறீர்?' என்று கடவுளிடமிருந்து நம்மை அந்நியமாக்கிவிடத் தூண்டும். ஆனால், இந்தப் போதகரை நாம் தொந்தரவு செய்வோம். அவர் கூட்டத்தின் நடுவே இருந்தாலும். அல்லது தனியே இருந்தாலும். நாம் அவரைத் தேடிச் செல்லும் நாம் அவரின் இருப்பை நம்மில் உணர்ந்தோம் என்றால் அந்த இருப்பை இறப்பு, குறைவு, நலமின்மை கொண்டிருக்கும் மற்றவர்களை நாடிச் சென்று அவரின் இருப்பை அவர்களுக்கு நம் இருப்பால் உறுதி செய்யவேண்டும்.

சின்னச் சின்ன சீண்டல்கள் என்னுள்ளும், வெளியிலிருந்தும் வந்தால், நான் இன்று கேட்பது,

'ஏன் இந்த அமளி?'

No comments:

Post a Comment