Wednesday 6 June 2018

ஆண்டின் பொதுக்காலம்10- ஆம் ஞாயிறு 10-06-2018

ஆண்டின் 10- ஆம் ஞாயிறு   10-06-2018


இன்றைய நற்செய்தி.:

தொ .நூ. 3:9-15
2 கொரி. 4:13-5:1
மாற்கு   3:20-35



ஞாயிறு இறைவாக்கு
அருள்பணி  முனைவர் அருள்.


தூய ஆவிக்கு எதிராக இழைக்கப்படும் பாவம் மட்டும் மன்னிக்கப்படாது என்கிறது இன்றைய நற்செய்தி.

தூய ஆவி யார் என்பதைப் புரிந்து கொண்டால் தூய ஆவிக்கெதிராக இழைக்கப்படும் பாவம் என்ன என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம்.
தூய ஆவி யார் என்பதற்கு ஓர் அழகான விளக்கத்தை புனித யோவான் அவர் எழுதிய நற்செய்தியில் 16 -ஆம் அதிகாரத்தில் தருகின்றார்.

தூய ஆவிக்கு மறுபெயர் உண்மை (யோவா. 16:13). அவரது பணி , நிறை உண்மையை நோக்கி மனித இனத்தை அழைத்துச் செல்வதாகும் (யோவா. 16:13). இப்பொழுது தூய ஆவிக்கு எதிராக நாம் புரிகின்ற பாவம் என்ன என்பதை நம்மால் ஓரளவு ஊகித்துக் கொள்ள முடியும். தூய ஆவிக்கு எதிரான மாபெரும் பாவம் பொய்யாகும். இந்த உண்மையை திருத்தூதர்கள் காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

தி.ப. 5:1-11: எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இல்லாதார் இல்லாத நிலை வேண்டும் எனச் சொல்லி, தங்கள் நிலம், வீடு ஆகியவற்றை விற்று, பணத்தைக் கொண்டு போய் ஆதிக் கிறிஸ்தவர்கள் திருத்தூதர்களின் பாதங்களில் வைத்தார்கள். அப்படிப் பணத்தை அர்ப்பணம் செய்தவர்களில் அன்னியா, சப்பிரா என்னும் கணவன் மனைவியர் பணத்தில் ஒரு பகுதியைத் தங்களோடு வைத்துக்கொள்ள விரும்பினர்.

நிலத்தை விற்றதில் ஒரு பகுதியை வைத்துக் கொண்டு ஒரு பகுதியை மட்டும் அனனியா திருத்தூதர்களின் பாதங்களில் வைத்தான். அப்போது பேதுரு : அனனியா, நீ நிலத்தை விற்ற தொகையின் ஒரு பகுதியை உனக்கென்று வைத்துக் கொண்டு தூய ஆவியாரிடம் பொய்சொல்லும்படி சாத்தான் உன் உள்ளத்தை ஆட்கொண்டதேன் (தி.ப. 5:3) என்றார். இதைக்கேட்டதும் அனனியா விழுந்து உயிர்விட்டான். இறந்தவன் அடக்கம் செய்யப்பட்டான்.

ஏறத்தாழ மூன்று மணி நேரத்திற்குப் பின் அவன் மனைவி வந்தாள். அவளும் பொய் சொன்னாள். அப்போது பேதுரு: தூய ஆவியாரைச் சோதிக்க நீங்கள் உடன்பட்டதேன்? இதோ உன் கணவனை அடக்கம் செய்தவர்கள் கதவருகில் வந்துவிட்டார்கள். அவர்கள் உன்னையும் வெளியே சுமந்து செல்வார்கள் (தி.ப. 5:9) என்றவுடன் அவளும் இறந்தாள். இந்த நிகழ்ச்சியிலிருந்து தூய ஆவிக்கு எதிராக இழைக்கப்படும் பாவம் பொய் என்பது புலனாகிறது.

பொய் உரைப்பவன் தான் பாவி என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. ஒருவன் நான் பாவி இல்லை என்று சொல்லும் போது அவன் பாவங்களைக் கடவுள் எப்படி மன்னிப்பார்? கடவுள் யாரையும் மனம் வருந்தும்படி, மனம் திரும்பும்படி பலவந்தப் படுத்துவதில்லை .

பொய் சொல்பவனின் பாவம் மன்னிக்கப்படாததால் அவன் மன்னிப்பின்றி விடப்படுகிறான். மன்னிக்கப்படாத பாவம் அவனுள் நிலைத்திருந்து அவனைச் சாவுக்கு அழைத்துச் செல்கிறது! முதலில் பொய்யுரைப்பவனின் உள்ளம் சாக, பின் கொஞ்சம் கொஞ்சமாக அவன் உடல் பாதிக்கப்படுகிறது!

முதல் மனிதன் ஆதாம் தனது குற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து தன் மனைவி மீது குற்றத்தைச் சுமத்தியபோது அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படாத பாவங்களாக மாறின! உண்மை மறைக்கப்பட அங்கே உயிர்ப்பு உதயமாகவில்லை ! அவர்கள் மனம் மன்னிக்கப்படாத சூழ்நிலையில் அகப்பட்டுக் கொண்டது!

சூழ்நிலை மாறியதால் இறைவனால் வகுக்கப்பட்ட சூழ்நிலைக்குள் அந்த முதல் மனிதர்களால் வாழ முடியவில்லை ! இறைவன் என்னும் மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளைகளைப் போலானவர்களின் வாழ்க்கை சருகுபோல் ஆனது. இன்ப வனத்தை விட்டு வெளியேறிய பிறகு அவர்கள் பட்ட பாடுகள் என்னவென்று நமக்குத் தெரியும்!

மன்னிக்கப்படாத பாவம் - அது குணமாக்கப்படாத புற்றுநோய் போன்றது!
எல்லா பாவங்களுக்கும் தாயாக விளங்குவது பொய்தான்! ஆதி மனிதர்களை ஏமாற்ற தீயசக்தி பயன்படுத்திய கருவி பொய். பாம்பு பெண்ணிடம், நீங்கள் சாகவே மாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப்போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும் (தொ.நூ. 3:4-5) என்றது. இப்படிப் பாம்பு கூறியது அப்பட்டமான பொய். இப்படிப்பட்ட பொய்யால் வரலாற்றில் எத்தனை மரணங்கள் நிகழ்ந்தன், நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை நாமறிவோம்.
ஒரு நாள் ஆசிரியர் ஒருவர் குறும்புக்கார சிறுவன் ஒருவனைப் பார்த்து திருடுவாயா? என்றார். திருடமாட்டேன் என்ற பதில் வந்தது! காப்பி அடிப்பாயா? காப்பி அடிக்க மாட்டேன். கோள் சொல்வாயா? சொல்ல மாட்டேன்! சண்டை போடுவாயா? போடமாட்டேன்.

சரி கேட்பதெற்கெல்லாம் இல்லை என்கிறாயே, உன்னிடம் எந்தத் தீய குணமும் கிடையாதா என்றார் ஆசிரியர். அதற்கு அந்தச் சிறுவன் அப்பப்போ கொஞ்சம் பொய் சொல்வேன் என்றான். ஆசிரியர் அப்படியானால் இப்பொழுது நீ சொன்னதெல்லாம் பொய்யா? என்று கேட்டதற்கு அந்த மாணவன் சற்றும் தயங்காமல் : இருக்கலாம் என்றான்.

ஒரு மனிதன் தவறு செய்துவிட்டு தனது தவற்றை ஏற்றுக் கொள்ளும்போது அவன் பொய்யிலிருந்து உண்மைக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அப்படி அழைத்துச் செல்லப்படும்போது அவனது அகக்கண் சற்று மருள், புறக்கண் சற்று மிரளும்!

ஆம், உண்மையான வாழ்வு வாழ நாம் முன் வந்தால், அதாவது நாம் பாவி என்ற உண்மையை ஏற்றுக்கொண்டால் துன்பங்கள் நமக்கு வரலாம்! ஆனால் அந்தத் துன்பங்களுக்குப் பிறகு மறைந்து நிற்கும் மனநிம்மதி என்னும் முழுமதி நமது இதய வானிலே எழுந்து இதம் தருவது உறுதி.



மறையுரை மொட்டுக்கள்

அருள்பணி  Y. இருதயராஜ்


ஞாயிறு மறையுரையின்போது தூங்கிக் கொண்டிருந்த ஓர் அம்மாவை எழுப்பிவிடும்படி அந்த அம்மாவின் பக்கத்தில் இருந்த அவரின் மகளைப் பங்குத்தந்தை கேட்டார். அதற்கு அச்சிறுமி, “என் அம்மா நல்லாத்தான் கோவிலுக்கு வந்தாங்க; நீங்கதான் அவர்களை உங்க பிரசங்கத்தால் தூங்க வைச்சிட்டீங்க; நீங்கதான் எழுப்பிவிடுங்க" என்றாள். ஆலயத்திற்கு நல்ல நிலையில் வருபவர்களைத் தூங்க வைப்பவர் பங்குத்தந்தை!

கடவுள் இவ்வுலகை நல்ல நிலையில்தான் படைத்தார். அவர் படைத்த அனைத்தும் நன்றாக, மிகவும் நன்றாக இருக்கக் கண்டார் என்று தொடக்கதால் கூறுகிறது (தொநூ 1:31). அப்படியானால் பாவம் எப்படி இவ்வுலகில் நுழைந்தது? இக்கேள்விக்கு இன்றைய முதல் வாசகத்தில் மனித குலத்தின் முதல் பெண் வாயிலிருந்து வரும் பதில்: "பாம்பு என்னை ஏமாற்றியது." எனவே அலகையின் வெஞ்சகத்தால்தான் பாவமும் அதன் வழியாகச் சாவும், மற்ற எல்லாத் துன்பங்களும் வந்தன, அலகையின் பொறாமையால் சாவு இவ்வுலகில் நுழைந்தது (சாஞா 2:24),

கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தது "அலகையின் செயல்களைத் தொலைக்கவே' (1 யோவா 3:8) என்று கூறுகிறார் புனித யோவான். கிறிஸ்து அலகையை 'இவ்வுலகின் தலைவன்' என்றழைக்கிறார். ஆனால் அதே நேரத்தில் கிறிஸ்துவின்மேல் அலகைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதையும் ஆணித்தரமாகக் கூறுகின்றார் (யோவா 14:30). மேலும் இவ்வுலகத் தலைவன் வெளியே துரத்தப்படுவான்" (யோவா 12:31) என்றும் ஐயத்திற்கு இடமின்றி அறிவிக்கிறார்.

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து பேய்களை ஓட்டுவதைக் கண்ட மறைநூல் அறிஞர்கள், கிறிஸ்து பேய்களின் தலைவனைக் கொண்டே போய்களை ஓட்டுகின்றார் என்று கூறி அவருடைய வல்லச் செயல்களைக் கொச்சைப்படுத்துகின்றனர். அவர்களுடைய செயல் தூய ஆவிக்கு எதிரான, மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார் கிறிஸ்து. தூய ஆவி உண்மையின் ஆவியானவர்; உண்மையை மறுப்பவர்கள் அலகையுடன் கூட்டணி வைத்துக்கொண்டவர்கள் ஆவர்,

அலகையின் உண்மையான இயல்பை சிறிஸ்து வெளிப்படுத்துகிறார்: "அலகை பொய்யன், பொய்மைக்குப் பிறப்பிடம்" (யோவா 8:44). ஆதிப் பெற்றோர்களை வஞ்சித்த அலகை இன்றும் பொய்களைப் பரப்பி மக்களைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றான். கிறிஸ்துவையே அவன் ஏமாற்றத் துணிந்து மூன்றுமுறை சோதித்தான். ஆனால் கிறிஸ்து "அகன்று போ சாத்தானே" (மத் 4:10) என்று கூறி அவனை விரட்டினார்,

இன்று அல்கை இருக்கிறதா ? பேய், பிசாசு, பூதங்கள் என்று சொல்வதெல்லாம் உண்மையா? திலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகியவை பஞ்சபூதங்கள் எனப்படுகின்றன, பஞ்சபூதங்கள் எவை? என்ற கேள்விக்கு ஒரு பள்ளி மாணவிகள் எழுதிய பதில்; 1) ஆங்கில ஆசிரியை; 2) கணக்கு ஆசிரியை; 3) வேதியல் ஆசிரியை; 4)இயற்பியல் ஆசிரியை; 5) சமூக அறிவியல் ஆசிரியை.

இன்று பேய்கள் மனித வடிவில் வருகின்றன. அலகை, அலகை வடி வத்தில் வராமல் மனித வடிவத்தில் வந்துதான் மனிதர்களை, வஞ்சித்து, கொடிகட்டிப் பறக்கின்றது. சிலுவைச் சாவை ஏற்க வேண்டாம் என்று தனக்கு அறிவுரை வழங்கிய பேதுருவிடம் கிறிஸ்து கூறுகிறார்: "என் கண்முன் நில்லாதே சாத்தானே. நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்" (மத் 16:23). அவ்வாறே, யூதாசையும் கிறிஸ்து அலகை என்று முத்திரை குத்துகிறார்: "பன்னிருவராகிய உங்களை நான் தேர்ந்து கொண்டேன் அல்லவா? ஆயினும் உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்' (யோவா 6:70). எனவே, யார் யார் கடவுளுடைய திட்டத்திற்கு எதிராகச் செயல்படுகின்றார்களோ அவர்கள் அனைவரும் அலகையின் முகவர்கள் என்பது வெள்ளிடைமலை.

பொய்மைக்கு மா ற்றாகிய அலகையின் செயல்களைத் தொலைக்க வேண்டுமென்றால் நாம் உண்மையை, முழு உண்மையைப் பேச வேண்டும். 

மலைப் பொழிவில் கிறிஸ்து நாம் எப்போதும் உண்மை பேச வேண்டும், உண்மைக்கு எதிரான அனைத்தும் அலகையிடமிருந்து வருகிறது என்று கூறுகிறார்: "நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும், 'இல்லை ' யென்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள், இதைவிட மிகுதியாகச் சொல்லுவது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது" (மத் 5:37).
உண்மையை அறியுங்கள்; உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் (யோவா 8:32) என்று கூறிய கிறிஸ்து, தமது இறுதி வேண்டலில் தமது தந்தையிடம், "உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை " (யோவா 17:17) என்று மன்றாடினார்,

இன்று ஒவ்வொரு துறையிலும் பொய் கொடி கட்டிப் பறக்கிறது ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்துகின்றனர். ஆனால் ஒருசில நாள்களிலே குட்டு வெளுத்து விடுகிறது ஒரு பெண்ணின் நீண்ட கூந்தலில் மயங்கி அவரை ஓர் இளைஞர் காதலித்தார். அவருடைய நீண்ட கூந்தலை அவர் எப்படி பராமரிக்கிறார் என்று அவரிடம் கேட்டார். அப்பெண் கூறினார் : "காலையில் கூந்தலுக்கு சோப்பு போட்டு குளிப்பேன். நண்பகல் சீயக்காய் பவுடர் போட்டுக் குளிப்பேன்; மாலை "ஷாம்போ" போட்டு குளிப்பேன். இரவில் கழற்றி ஆணியில் மாட்டி விடுவேன்," அவர் கூந்தல் செயற்கைக் கூந்தல்!

மற்றத் துறைகளில் மட்டுமல்ல, வழிபாட்டிலும் பொய் இடம் பெறுகிறது. எசாயாவை மேற்கோள் காட்டி கிறிஸ்து கூறினார்: " இம்மக்கள் என்னை உதட்டினால் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது" (மத் 15:8). இந்தக் கோவிலுக்குச் செல்பவர்களில் ஒருசிலர் 'அம்பாளைப்' பார்க்கச் செல்கின்றனர்; வேறு சிலரோ 'நம்பாளைப்' பார்க்கப் போகின்றனர்! நாமோ மெய்யடியார்களாகக் கடவுளை அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில் வழிபடுவோம் (யோவா 4:23).

அக இருளை அகற்றவும் புற இருளை அகற்றவும் சிறந்த விளக்கு பொய்யா விளக்கு: அதுவே உண்மையான விளக்கு,

"எல்லோ விளக்கும் விளக்கல்ல, சான்றோர்க்குப் 
பொய்யா விளக்கேவிளக்கு"
(குறள் 299)


பாவிகளை அழைக்க வந்தவர் இயேசு

மகிழ்ச்சியூட்டும்  மறையுரை
குடந்தை ஆயர் அந்தோனிசாமி


  ஒரு குருவுக்குப் பல சீடர்கள். அந்தக் குரு மிகவும் கனிவும், கருணையும் நிறைந்தவர்! அவரிடம் ஞானம் பெற, நன்னெறிகளை கற்றுக்கொள்ள பலர் சென்றனர்! அவரோடு தங்கியிருந்த சீடர்களில் ஒருவன் திருடன். அவன் எப்போதும் எதையாவது திருடிக்கொண்டிருந்தான்.

மற்ற சீடர்கள் ஒவ்வொரு முறையும் அவனைப் பிடித்துக்கொண்டுபோய் குருவிடம் ஒப்படைப்பார்கள்! குரு ஒவ்வொரு முறையும் மன்னித்துவிடுவார்!
ஒருநாள் அந்த திருடும் குணம்படைத்த சீடரைத் தவிர, மற்ற சீடர்கள் அனைவரும் குருவிடம் சென்று, இவனை ஆசிரமத்தைவிட்டு துரத்திவிடுங்கள்! அப்படி நீங்கள் செய்யவில்லை என்றால், நாங்கள் எல்லாரும் ஆசிரமத்தை விட்டுப் போய்விடுவோம் என்றனர்.

அப்போது அந்த குரு என்ன சொன்னார் தெரியுமா? வழிகாட்டும் குரு உங்களுக்குத் தேவையில்லை! நீங்கள் நல்லவர்கள்! நீங்கள் வெளியில் சென்றால் சமுதாயம் உங்களை ஏற்றுக்கொள்ளும்; ஆனால் இவனைத் தண்டிக்கும். இவன் திருத்தப்பட வேண்டும். ஆகவே இவன் இங்கே இருக்கட்டும், நீங்கள் போகலாம் என்று கூறிவிட்டார்.

இந்தக்கதையில் வந்த குருவைப் போன்றவர்தான் நமது ஆண்டவர் இயேசு! இன்றைய நற்செய்தி கூறுவது போல அவர் நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தார்!

மக்களின் பணத்தைத் திருடியவர் மத்தேயு ! அவர் யூதராக இருந்தபோதிலும் பணத்திற்கு ஆசைப்பட்டு அநியாயமாக மக்களின் பணத்தை வசூலித்து அதை இஸ்ரயேலை அடிமைப்படுத்தி வைத்திருந்த உரோமையர்களுக்குக் கப்பமாகச் செலுத்தியவர்; சமுதாயத்தால் வெறுக்கப்பட்டவர்; அனைவராலும் பெரிய பாவியாகக் கருதப்பட்டவர். இயேசு அவரை மன்னித்து விட்டார்.

மத் 27 : 38, லூக் 23:39-43 ஆகிய பகுதிகளில் இரண்டு திருடர்களை கல்வாரியிலே நாம் சந்திக்கின்றோம். கடவுளின் கருணைமீது நம்பிக்கை வைத்து இயேசுவிடம் விண்ணகத்தைக் கேட்ட திருடனுக்கு இயேசு பேரின்ப வீட்டை அளிக்கின்றார்.

பாவம் என்றால் என்ன? பிறருக்கு உரிமையானதை தனதாக்கிக்கொள்வதுதான் பாவம்! அநீதிதான் பாவம்! நேர்மையற்ற வாழ்வு பாவம் நிறைந்த வாழ்வு!

ஆதாமையும், ஏவாளையும் பற்றி இன்றைய முதல் வாசகம் பேசுகின்றது! அவர்கள் செய்த பாவம் என்ன? அவர்கள் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்! அவர்கள் கடவுளுக்கு உரிய கீழ்ப்படிதலை தங்களுக்கு உரியதாக்கிக் கொண்டார்கள்!

அவர்கள் கீழ்ப்படிதலைத் திருடிய திருடர்கள்! அவர்கள் பாவிகள்தான்! ஆனால் கடவுள் அவர்களைக் கைவிட்டுவிடவில்லை! மீட்பர் ஒருவரை அனுப்புவேன் என்ற ஆறுதல் தரும் வாக்குறுதியை கடவுள் அவர்களுக்கு அளித்தார்.

இயேசு பிறந்தது பாவிகளுக்காக!
 இயேசு வளர்ந்தது பாவிகளுக்காக! 
இயேசு வாழ்ந்தது பாவிகளுக்காக! 
இயேசு இறந்தது பாவிகளுக்காக! 
இயேசு உயிர்த்தது பாவிகளுக்காக! 
இயேசு நம் நடுவே இன்று வாழ்ந்து கொண்டிருப்பதும் பாவிகளுக்காகவே!


இந்தப் பேருண்மை நமது கண்களை இயேசுவின் பக்கம் திருப்ப நம்மை உந்தித் தள்ள வேண்டும்.

இன்றைய இரண்டாவது வாசகத்தில் புனித பவுலடிகளார் நம்பிக்கையாளர்களின் தந்தை என அழைக்கப்படும் ஆபிரகாமைப்பற்றி பேசும்போது, தமக்கு ஏறத்தாழ நூறு வயது ஆகிவிட்டதால் தமது உடலும் சாராவுடைய கருப்பையும் செத்தவைபோல் ஆற்றலற்றுப் போய்விட்டதை எண்ணிப்பார்த்தபோதுகூட, அவர் நம்பிக்கையில் உறுதி தளரவில்லை. கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஐயப்படவே இல்லை (உரோ 4:19-20) என்கின்றார்.

தமது வாக்குறுதி மீது நம்பிக்கை வைப்பவர்களைக் கடவுள் ஒருபோதும் கைவிடுவதில்லை .

இன்றைய நற்செய்தியில் இயேசு, நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் (மத் 9:13ஆ) என்கின்றார்.

இயேசுவின் வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து நமது நம்பிக்கை நிறைந்த கண்களை அவர் பக்கம் திருப்புவோம். அப்போது செத்தவனைப் போல் நமது வாழ்க்கை ஆற்றலற்றுக் கிடந்தாலும் அவர் அதை உயிர்ப்பித்து நம்மை வளமுடன் வாழவைப்பார்.

மேலும் அறிவோம் :

நண்பாற்றார் ஆகி நயம்இல செய்வார்க்கும்

பண்பாற்றார் ஆதல் கடை (குறள் : 998). 


பொருள் : நட்புக்கு உரியவராக விளங்காமல் தீமையே செய்பவர்க்கும் பண்பாளராக அமைந்து நல்லது செய்யாது போனால் பண்புடைய சான்றோர்க்கு அச்செயல் இழிவாகும்!














No comments:

Post a Comment