Tuesday, 12 June 2018

ஆண்டின் பொதுக்காலம் 11-ஆம் ஞாயிறு



பொதுக்காலம் 11-ஆம் ஞாயிறு 17/06/2018


எசே 17:22 -24: 2 கொரி 5:6-10; மாற் 4:26-34



மறையுரைமொட்டுக்கள்
அருள்பணி Y. இருதயராஜ்

பிரஞ்சு புரட்சி பற்றி ஒரு நூல் வெளியிடும் எண்ணத்துடன் 'ஸ்டுவர்ட் மில்' என்பவர் அதற்கான கைப் பிரதிகளைத் தயாரித்தார். அவற்றை தன் அறையில் ஒரு மூலையில் வைத்திருந்தார். அவருடைய வீட்டு வேலைக்காரி அப்பிரதிகளைப் பழைய காகிதம் என்று நினைத்து அடுப்பில் போட்டு எரித்து விட்டார், பல ஆண்டுகளின் உழைப்பு சாம்பலாகிவிட்டது. இருப்பினும் அவர் மனம் உடைந்து போகாமல், மீண்டும் கைப் பிரதிகளைத் தயாரித்து, அவற்றை நூலாக வெளியிட்டு உலகப் புகழ்மிக்க வரலாற்று ஆசிரியர் என்ற பெருமையை அடைந்தார்.
வாழ்க்கையில் நாம் தோல்வியைத் தழுவும்போது. துவண்டு விடாமல் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும். இன்றைய முதல் வாசகம் நம்பிக்கை இழந்து போன இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறது, அவர்கள் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு அடிமைகளாக அல்லற்பட்டனர், அம்மக்கள் மீண்டும் தங்கள் தாயகம் திரும்புவர் என்ற நம்பிக்கையை முதல் வாசகம் அளிக்கிறது. ஒரு மரத்தை வெட்டி விட்டாலும் , அதன் அடிமரம் துளிர்விட்டு மீண்டும் மரமாகும். அவ்வாறே இஸ்ரயேல் மக்கள் பல்வேறு நாடுகளில் சிதறுண்டு போனாலும் அவர்களில் 'எஞ்சி இருப்பவர்கள் கடவுளுடைய திட்டத்தை நிறைவேற்றுவர் என்பது இறைவாக்கினர் எசாயாவின் இறையியல் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது: "ஆண்டவர் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவது" (திபா 92:13).  நம்புவோர் செழித்தோங்குவர், அவர்கள் பட்டமரம் தளிர்ப்பதுபோல் புத்துயிர் பெறுவர். இது கடவுளின் செயல்; நமது கண்ணுக்கு வியப்பளிக்கும் செயல்.

இன்றைய நற்செய்தியில், இறை ஆட்சியின் வளர்ச்சியைக் கிறிஸ்து விதை உவமை மூலம் விளக்குகிறார். இந்த குறிப்பிட்ட உவமை மாற்கு நற்செய்தியில் மட்டும் காணக்கிடக்கிறது. நிலத்தில் விதைக்கப்பட்ட விதை முளைத்து, வளர்ந்து, பலன் தருவது அவ்விதையை விதைத்தவரைப் பொறுத்ததன்று. அது தன் இயல்பிலேயே வளர்ந்து பலன் தருவது உறுதி. அவ்வாறே இறையரசின் வளாச்சியை எவரும் தடைசெய்ய முடியாது.

சிறையில் அடைக்கப்பட்ட திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "கடவுளின் வார்த்தையைர் சிறைப்படுத்த முடியாது." (2 திமொ 2:9). திருப்பலியாளர்களை, நற்செய்தியாளர்களைச் சிறைப்படுத்த முடியும்: ஆனால் நற்செய்தியை எவரும் சிறையிட முடியாது. காற்று அது விரும்பும் திசையில் வீசுவதுபோல, ஆவியாரும் அவர் விரும்பும் திசையில் வீசுவார், ஆவியாசின் செயல்பாட்டை எவரும் தடைசெய்ய முடியாது (காண், யோவா 3:8), எனவே, எத்தகைய எதிர்ப்பையும் கண்டு அஞ்சாமல், நற்செய்தியை நாம் அறிவிக்கவேண்டும்.

"நான் நட்டேன். அப்பொல்லோ நீர் பாய்ச்சினார். கடவுளே விளையச் செய்தார்" (1 கொரி 3:8). எனவே நடுவதும், நீர் பாய்ச்சுவதும் நமது கடமை; விளையச் செய்வது கடவுளின் செயல், மருந்து கொடுப்பது மருத்துவர் பணி, குணப்படுத்துவது கடவுளின் செயல். அவ்வாறே நற்செய்தியை அறிவிப்பது நமது பணி: இறை ஆட்சியின் வளர்ச்சி கடவுளின் செயல்,

இன்றைய நற்செய்தியில் இறை ஆட்சியின் வளர்ச்சியை கடுகு விதை உவமை மூலம் கிறிஸ்து விளக்குகிறார். அது சிறிய விதையானாலும், பெரியதாக வளர்த்து வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளை விடுகிறது. கிறிஸ்து பன்னிரண்டு சீடர்களுடன் இறை ஆட்சியைத் தொடங்கினார். அவர்கள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது. அவர் விண்ணகம் சென்றபின். தூய ஆவியின் வருகைக்காக மன்றாடிய சீடர்களின் எண்ணிக்கை 120. தூய ஆவியாரின் பெருவிழாவில் திருமுழுக்குப் பெற்றவர்களின் எண்ணிக்கை 3000. பின் அது 5030 ஆனது. இன்று எல்லா நாடுகளிலும், எல்லா மொழிகளிலும், எல்லாப் பண்பாட்டிலும் நற்செய்தி வேருன்றியுள்ளது. இது கடவுளின் செயல்; நமது கண்ணுக்கு வியப்பளிக்கும் செயல்.

விண்ணகத்தில் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இஸ்ரயேல் மக்களிடமிருந்து மட்டும் 1,44,000 பேர். இந்த எண்ணிக்கை எப்படி வந்தது? 12 123 1000 1,44,000, பன்னிரண்டு முழுமையைக் காட்டும்; அது இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களையும் குறிக்கும். அவர்களுடன் எல்லா நாட்டையும் குலத்தையும் இனத்தையும் சார்ந்த எண்ண இயலாத பெருந்திரளான மக்கள் இருந்தனர் என்று திகுவெளிப்பாடு நூல் கூறுகிறது (திவெ 4:9), எனவே பலர் மீட்கப்படுவர். இது கடவுளின் செயல், நமக்கு வியப்பூட்டும் செயல்.

நற்செய்தி நம்பிக்கையில் நற்செய்தி, நாம் மற்றவர்களுக்கு, குறிப்பாக நமது பிள்ளைகளுக்கு, இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும், அவர்களை மட்டம் தட்டி மனம் உடைந்துபோகச் செய்யக்கூடாது. பரிணாம வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆசிரியர் கேட்டார், அசோக் என்ற மாணவன் எழுந்து கூறியது: நான்தான் பரிணாம வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஏனெனில் நான் சிறுவனாக இருந்தபோது என்னை "வாடா, கண்ணுக்குட்டி" என்று அழைத்த என் அப்பா, இப்போது 'வாடா எருமைமாடு" என்று அழைக்கிறார், பிள்ளைகளை நாயே, பேயே. எருமைமாடு என்று கூப்பிடுவது பெரிய அநீதியாகும்.
இக்காலத்துப் பிள்ளைகள் நம்மைவிட பல துறைகளில் அறிவுமிக்கவர்களாய் உள்ளனர். அதைக்கண்டு நாம் பெருமிதம் அடைய வேண்டும் என்கிறார் வள்ளுவர்,

உணவு உட்கொள்வதில்லையா? திரும்பத் திரும்பக் குளிப்பதில்லையா? திரும்பத் திரும்பப் பார்த்துப் பார்த்து, திரும்பத் திரும்பப் பேசிப் பேசிக் காதலிப்பதில்லையா? திரும்பத் திரும்பப் பாவம் செய்வது மனிதப் பலவீனம்; திரும்பத் திரும்ப மன்னிப்பது இறைவனின் இரக்கம்.
ஒப்புரவு அருள் அடையாளத்தை அணுகும் ஒவ்வொரு முறையும் நாம் நாம் எவ்வளவு தீயவர்கள் என்பதை உணர்வதைவிட, கடவுள் எவ்வளவு நல்லவர் என்பதை உணர வேண்டும். 'ஆண்டவரைப் போற்றுங்கள், ஏனெனில் அவர் நல்லவர்'.

"தவறு என்பது தவறிச் செய்வது,
தப்பு என்பது தெரிந்து செய்வது,
தவறு செய்தவன் வருந்தி ஆகனும்,
தப்பு செய்தவன் திருந்தப் பார்க்கணும்





மகிழ்ச்சியூட்டும் மறையுரை
குடந்தை ஆயர் F. அந்தோனிசாமி

நாம் தேடும் இறையரசு எங்கேயிருக்கின்றது?

இறைவனுடைய ஆட்சி என்பதுதான் இறையாட்சி! இறையாட்சியை ஒரு மரத்திற்கு ஒப்பிடலாம். இந்த மரம் தரும் கனிகள்தான் அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை , கனிவு, தன்னடக்கம் (கலா 5:22-23) ஆகியவையாகும்.


கடவுள் நமது மீட்பை நாமே சம்பாதித்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகின்றவர் ! ஆகவே கடவுள் நமது உள்ளங்களில் மரங்களை நடாமல், விதைகளை விதைத்திருக்கின்றார்!


நமது உள்ளத்திற்குள்ளே திருமுழுக்கு நாளன்று கடவுள் அவரது தூய ஆவியாரை பொழிந்திருக்கின்றார் ! அவரது கனிகளை நாம் துய்க்க வேண்டுமானால், ஆவியார் நமக்குள் விதைத்திருக்கும் விதைகள் முதலில் முளைக்க வேண்டும்!


ஒரு விதை எப்போது முளைக்கின்றது? என்பது நமக்குத் தெரியும்! அமைதியில்தான் எப்போதும் விதைகள் முளைக்கின்றன என்பதை நாம் நன்கு அறிவோம்! அமைதி தேவை, மண் தேவை, தண்ணீர் தேவை, ஒளி தேவை; இவை அனைத்தும் ஒன்றுபட்டு செயல்படும்போது நமக்குள் விதைகள் முளைத்து, விருட்சங்கள் வளரும், கனிகள் பிறக்கும்!


ஓர் ஊரில் நீண்டகாலமாக மழை பெய்யவில்லை! நிலங்கள் வரண்டுவிட்டன! மரங்கள் பட்டுப்போகத் துவங்கின! விதைக்கப்பட்ட விதைகள் முளைக்கவில்லை! ஆகவே அந்த ஊர் மக்கள் காட்டில் வாழ்ந்த முனிவர் ஒருவரிடம் சென்று முறையிட்டார்கள்!

அந்த முனிவர் ஒரு நிபந்தனை விதித்தார்! “திறந்தவெளியில் ஒரு குடிசை கட்டித்தர வேண்டும்! பின் மூன்று நாள்கள் நான் தனியாயிருக்க உதவ வேண்டும்! உணவும் தண்ணீரும் தேவையில்லை! அப்போதுதான் என்னால் மழையை வரவழைக்க முடியும்" என்றார். மக்கள் அந்த முனிவர் சொன்னபடியே செய்தனர். மூன்றாவது நாள் மழை பெய்தது!

நன்றி சொல்ல அவர் குடிசை முன்னால் பெருங்கூட்டம் கூடியது! அவர்கள் அந்த முனிவரைப் பார்த்து, "மழையை எப்படி வரவழைத்தீர்கள்?” என்று கேட்டனர்!


அதற்கு முனிவர் சொன்னார், "மழையை வரவழைப்பது மிகவும் எளிது! மழை வேண்டும் என்ற எண்ணத்திற்கு மட்டும் மனத்தில் இடம் கொடுத்து, மற்ற எண்ணங்களையெல்லாம் மறந்துவிட வேண்டும்! நான் மூன்று நாள்களும் மழையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். என் எண்ணங்கள் வானத்தில் மிதந்து சென்ற வெள்ளை மேகங்களைப் பாதித்தன ! என் மனத்திலிருந்து, இதயத்திலிருந்து பிறந்த அதிர்வுகள் மேகங்களை அதிர வைத்தன; மழை பெய்தது " என்றார்.
நமது இதயத்திலிருந்து, மனத்திலிருந்து பிறக்கும் அதிர்வுகளால் வானத்தைக்கூட புரட்டிப்போட முடியும்!

நமக்குள்ளே தூய ஆவி என்னும் ஆற்றல்மிகு சக்தி உண்டு! அந்த சக்தியால் விதைகளை முளைக்க வைக்க முடியும்! தூய ஆவியால் எல்லாம் ஆகும் என்று நாம் எண்ணத்துவங்கினால் அந்த எண்ணம் மிக எளிதில் செயல்வடிவம் பெறும்! நாம் எதை எண்ணுகின்றோமோ அதுவாக நாம் மாறிவிடுவோம்!
நாம் அடைய விரும்பும் இறையரசை நினைத்து அமைதியாக அமர்ந்திருந்தால் நாம் தேடும் இறையரசு நமக்குள் மலரும்!

நம் வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் கனிகளை நாம் என்ன செய்வது? இந்த உலகில் நாம் படைக்கப்பட்டதே மற்றவர்களுக்கு உதவி செய்யத்தான் என்பதை உணர்ந்து பழுத்த மரமாக வாழ நாம் முன்வரவேண்டும்! இன்றைய இரண்டாம் வாசகம் கூறுவதுபோல இந்த உலகிலே நாம் செய்யும் நற்செயல்கள் மறு உலக வாழ்வை நிர்ணயிக்கும் (2 கொரி 5:10).
நாம் விதைக்கப்படாத நிலமல்ல; விதைக்கப்பட்ட நிலம்! கடவுளின் உதவியோடு இன்றைய முதல் வாசகத்தில் எசேக்கியேல் கூறுவது போல கனிதரும் மரங்களாக நம்மால் வாழமுடியும், பறவைகளின் சரணாலயங்களாக நம்மால் திகழமுடியும்.
விதைக்கு உயிர்தரும் கடவுளுக்கு நாம் ஆழ்ந்த அமைதியையும், நல்ல ஆன்மிக அதிர்வுகளையும் தந்தால் போதும்.

நாம் கடுகு விதைபோல இருக்கலாம் (நற்செய்தி). ஆனால் கடவுள் காட்டும் அமைதி வழியில், ஆன்மிக வழியில் நடந்தால் நாம் வானத்துப் பறவைகள் தங்கும் அளவுக்கு வளர்வோம்; நமது உறவுகள் என்னும் கிளைகள் சிறகுகளாக விரியும்!
மேலும் அறிவோம் :

வெள்ளத்(து) அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து) அனையது உயர்வு (குறள் : 595).

பொருள் : நீரின் மிகுதிக்கு ஏற்றவாறு நீர்ப்பூவாகிய தாமரைத் தண்டின் நீளம் அமையும்; அதுபோன்று மக்கள் ஊக்கத்திற்குத் தக்கவாறு வாழ்வின் உயர்வு விளங்கும்!




ஞாயிறு இறைவாக்கு
அருள்பணி  முனைவர் அருள்.


பெருஞ்செல்வந்தன் ஒருவனுக்கு வாழ்வில் மகிழ்ச்சியும் இல்லை. நிம்மதியும் இல்லை. தனக்கு எல்லாம் இருந்தும் ஏன் நிம்மதி இல்லை என்று யோசித்துக் கொண்டு தன் செல்வங்கள் அனைத்தையும் ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்று. அதனை ஒரு துறவியின் காலடியில் வைத்து, அவரிடம் இதயத்தில் மகிழ்ச்சி காண வழியைக் கேட்டான். துறவியோ அந்த மூட்டையை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடத் தொடங்கினார். போலி துறவியிடம் ஏமாந்துவிட்டதாக நினைத்த அச் செல்வந்தன் அவரை துரத்திக்கொண்டே ஓடினான். திடீரென ஓட்டத்தை நிறுத்திய துறவி, என்ன! பயந்துவிட்டாயா...? இந்தா உன் செல்வம். நீயே வைத்துக்கொள் என்று கூறி அவனிடம் கொடுக்க, அவனோ இழந்த செல்வத்தைப் பெற்றதால் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். அப்போது துறவி அவனிடம் இங்கு வருவதற்கு முன்னால் கூட இந்தச் செல்வம் உன்னிடம்தான் இருந்தது. இருந்தும் அப்போது உனக்கு மகிழ்ச்சி இல்லை. இப்போது உன்னிடம் இருப்பதும் அதே செல்வம்தான். ஆனால் இப்போது உனக்குள் மகிழ்ச்சி இருக்கிறது. எனவே மகிழ்ச்சி என்பது, நிம்மதி என்பது, வெளியே இல்லை. அது எங்கு கிடைக்கும் என்று தேட வேண்டியதும் இல்லை. அது உனது இதயத்துக்குள்ளே தான் இருக்கிறது. அதை நீயே கண்டுபிடித்தால் உனக்குள் நிம்மதி நிரந்தரமாக இருக்கும் என்றார் துறவி.

இறையரசு என்பது மனித இதயம் என்னும் நிலத்தில் நீர் பாய்ச்சி, அதில் அன்பு, அமைதி, நீதி போன்ற விதைகளைப் பயிரிட்டு, இறுதியில் மகிழ்வை அறுவடை செய்வதாகும். மனிதன் தேடும் அமைதியும், மகிழ்வும் அவன் இதயத்துக்குள்ளேதான் இருக்கிறது. மனித இதயத்தில் தான் விதைக்கப்படுகிறது (கலா. 5:22). எந்த மனிதன் நான், எனது, எனது குடும்பம், நமது சமூகம் என்பதை இதயத்தில் பதியம் போடுகிறானோ, அங்கே, தானாக முளைத்து வளர்ந்து, பலருக்கும் பயன்தரும் மரம் போல இறையரசு உதயமாகிறது. இறைவனையும், இறைச்சிந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளத் தொடங்கும்போதே, இறையரசு இதயத்தில் குடிகொள்ள தொடங்குகிறது என்றே கூறலாம்.
மகிழ்ச்சி. நம்பிக்கை என்ற விதைகளை விதைக்கிறார் இயேசு. கடுகு விதையின் தோற்றத்தை வைத்து, தீர்க்கமாக தீர்மானிக்க முடியாது. இறையரசு தோற்றத்தில் எளிமையாக இருந்தாலும், அதன் வளர்ச்சி நம்மை வியக்கச் செய்கிறது. காரணம், அது கடவுளின் செயல்திட்டமாகும். இறையரசு என்பது இறைச் சிந்தனைகளை செயலாக்கம் பெற வைப்பதேயாகும். இறையரசின் பண்புகள் இதயத்தில், மனித உறவுகளில் நிலைத்திருக்க வேண்டுமானால், நாம் இறை நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும். நன்மைகளை, உண்மைகளை, நேர்மை யானவைகளை தன்னிலே கொண்டவர்கள் இறையரசுக்கு உரியவர்கள் ஆவார்கள். இதற்கு எதிராகச் செயல்படக்கூடியவர்கள் இறையரசை இதயத்தில் காணாது இருட்டடிப்பு செய்கிறார்கள் என்றே கூற வேண்டும். இன்றைய முதல் வாசகம் கூறுவதுபோல, மனித வாழ்க்கை வளர்ந்து அது பூக்களாகவும், காய்களாகவும், கனிகளாகவும் பல மடங்கு பயன் தரும் மரமாக வேண்டும் (முதல் வாசகம்). நம்பிக்கை இழந்த இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கை என்னும் விதையை அவர்களின் இதயங்களில் விதைத்தார் இறைவாக்கினர் எசேக்கியேல்.
இயேசுவின் உவமையில் வரும் விவசாயி, விதைகளை விதைத்துவிட்டு, நிம்மதியாக இரவில் தூங்குகிறான். நாட்கள் நகர விதைகள் தானாக முளைத்து வளர்கிறது (மாற். 4:27). விதையானது தன்னகத்தே கொண்ட ஆற்றலால் தானாக வளர்ந்து பலன் தருகிறது. இயற்கையாக நிகழும் விதையின் வளர்ச்சியை இறையரசின் வளர்ச்சிக்கு இயேசு ஒப்பிடுகிறார். இறை வார்த்தைகளை இதயத்தில் விதைத்துவிட்டு, பலனுக்காகப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என்று இயேசு உணர்த்துகிறார்.
விதையோ சிறிது, மரமோ பெரிது.

இயேசு தொடங்கிய இறையரசு கடுகுமணிபோல் சிறிதாக இருந்தும், அவரது போதனைகள், புதுமைகள், வழியாக நன்கு வளரத் தொடங்கியது. கடுகுமணி போல் இருந்த இறையரசு அவரின் உயிர்ப்புக்குப் பிறகு பெரிதும் வளரத் தொடங்கியது. கடுகு விதை சிறிதாக இருந்தாலும், அது விதைக்கப்பட்ட பின், வளர்ந்து, பெரிதாகி பலருக்கும் பயன் தருகிறது. வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் கொண்டது (மாற். 4:32). தொடக்க கால திருச்சபை கடுகுமணி போல் உதயமானாலும், காலப்போக்கில் பல நாட்டவருக்கும், இனத்தவருக்கும் அடைக்கலம் கொடுக்கும் வகையில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில்
இருள் முழுவதையும் உடனே ஒளியாக்க வேண்டும் என்று நினைக்காமல், சிறிய விளக்கில் முதலில் ஒளியேற்றுவோம். அது சுடர்விட்டுப் பிரகாசித்து இறுதியில் இருள் முழுவதையும் வெல்லும் என்பதை உணர்வோம்.
நமது இதயத்தில் வேற்றுமை, சுயநலம் போன்ற கிளைகளைக் களைந்துவிட்டு, அதை நீதி, அன்பு, மகிழ்ச்சி போன்ற இறையரசின் கூறுகனை உள் வாங்கி, பூத்துக் குலுங்கும் பூக்காடாக்குவோம். அவ்வாறு செயல்பட்டால், நமது இதயம் இறையரசுக்கு உரிய , பக்குவப்பட்ட, பண்பட்ட, பயனுள்ள, தோட்டமாக மலர்ந்து மணம் வீசும். அப்போது நாம் தேடும் இறையரசு நமது இதயத்துக்குள் வசப்படும்.

சிந்தனைக்கு
இறையரசு இங்குள்ளது, அங்குள்ளது என்று தேடிக் கொண்டிருக்காமல், நமது இதயத்துக்குள் உள்ளது என்பதை உணர வேண்டும். அதை உள்வாங்கி, எப்படி வெளிப்படுத்துவது என்பதை பற்றிச் சிந்திக்க வேண்டும். சூழ்நிலை அமைந்தால் குயில் பாடுகிறது, முள் மரத்தில் இருந்தாலும் குயில் குயில் தான். அது போலதான் இறையரசு சூழ்நிலைக்கு ஏற்ப வளர்கிறது. உன்னால் முடியும் தம்பி எல்லாம் உனக்குள் இருக்கும் உன்னை நம்பி என்ற திரைப்படப் பாடலுக்கு ஏற்ப நமக்குள் இருக்கும் இறையரசைக் கண்டுபிடித்து அதில் நிறைவான மகிழ்ச்சி காண முயல்வோம்.


வலிமையற்ற வலிமை, உருவற்ற உரு - இறைவனால், என்னால்!
அருள்பணி ஏசு கருணாநிதி

கடந்த சில நாள்களுக்கு முன்பாக என் நண்பர் ஒருவருக்கு பிறந்த குழந்தையைப் பார்க்கச் சென்றிருந்தேன். பிறந்து 9 நாள்கள் ஆகியிருந்த அந்த ஆண் குழந்தையை நாங்கள் போவதற்குச் சற்று நேரத்திற்கு முன் குளிப்பாட்டி, சாம்பிராணி புகை போட்டு, பிங் கலரில் னாட்-பிஹைன்ட் போட்டு, கைக்கு கருப்பு வளையல், வசம்புக் கயிறு, சின்ன டயப்பர் அணிவித்து 'ஐ லவ் யு சோ மச்' என்று சின்ன சின்னதாய் பிரின்ட் போட்ட மஞ்சள் கலர் துண்டில் கிடத்தியிருந்தார்கள். என் உடன் நண்பர் அந்தக் குழந்தையைப் பார்த்தவுடன் அப்படியே வாரி எடுத்துக்கொண்டார். 'கழுத்து, கழுத்து' என்ற மற்றவர்கள் கத்தினார்கள். ஆனால், வெகு இலகுவாக பிறந்த குழந்தையின் கழுத்தை அசையாமல் சேர்த்துப் பிடித்துக்கொண்டார் அவர். கையில் எடுத்தவர் குழந்தையை இரசக்க ஆரம்பித்தார். 'சின்ன உதடு, சின்ன விரல், சின்ன நகம், சின்ன மூக்கு' என வர்ணனை நீண்டுகொண்டே வந்தது. 'இறைவனின் படைப்பே அற்புதம். நமக்குத் தேவையான எல்லாவற்றையும் எப்படி குட்டி குட்டியாக வைத்திருக்கின்றார்' என ஆச்சர்யப்பட்டார் அவர். நாம் பிறந்தபோது நமக்கு இல்லாமல் பாதியில் வருவது பல் மட்டும்தான் என நினைக்கிறேன். பாதியில் வருவதால் தான் என்னவோ அது பாதியிலேயே போய்விடுகிறது.

'மனிதன் மனிதனாகப் பிறக்கிறானா?' அல்லது 'அவன் மனிதனாக மாறுகிறானா?' என்பது சமூகவியலில் கேட்கப்படும் கேள்வி. அதாவது, ஒரு மனிதனின் சூழல்தான் அவனை உருவாக்குகிறது என்பது சமூகவியலின் வாதம். இயல்பாக விட்டுவிட்டால் மனிதர்கள் மனிதர்களாக உருவாவதில்லை என அவர்கள் சொல்வதுண்டு.

வலுவற்ற ஒரு குழந்தை வலுவான ஓர் ஆணாக, பெண்ணாக வளர்ச்சி அடைய எது காரணம்? பெற்றோர், சுற்றத்தார், பின்புலம், பணம், உணவு போன்றவை காரணமாக இருந்தாலும் மனிதர்கள் தாங்களாகவே தங்கள் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் பெற்றிருக்கிறார்கள் என்பதே உண்மை.

ஆக, வலுவற்றவை வல்லமை பெறுவதற்கு வெளிப்புற ஆற்றல் கொஞ்சம் தேவைப்பட்டாலும், அவை தங்களுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொணர்ந்தால் அவை வல்லமை பெற முடியும்.

இன்று நாம் பல நேரங்களில் - நம் உடல் நோய்வாய்ப்படும்போது, நம் இல்லத்தில் வசதி குறைவுபடும்போது, நம் உறவுநிலைகள் நம்மைவிட்டுப் பிரியும்போது, நமக்கப் பிடித்த ஒருவர் இறக்கும்போது, நம் வீடு அல்லது தொழில் ஆகியவற்றை இழக்க நேரும்போது, நாம் எதிர்பாராத விபத்தை சந்திக்கும்போது - நம் வலுவற்ற நிலைகளை உணரலாம். இப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு வலிமையையும், நம் உருவற்ற நேரங்களில் நமக்கு உருவையும் தருவது எது என்பதை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

நேரிடையாகப் பார்த்தால் இன்றைய முதல் வாசகம் (காண். எசே 17:22-24) இஸ்ரயேலின் வளர்ச்சி பற்றியும், இரண்டாம் வாசகம் (காண். 2 கொரி 5:6-10) மனித உடலின் உயிர்ப்பு பற்றியும். மூன்றாம் வாசகம் (காண். மாற் 4:26-34) இறையாட்சி பற்றியும் பேசுகிறது.

ஆனால் இந்த மூன்றின் - இஸ்ரயேல், உடல், இறையாட்சி - பின்னணியில் இருப்பவை எது? அல்லது இந்த மூன்றிற்கும் பொதுவாக இருக்கும் காரணி எது? வலுவின்மை. எப்படி?

பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் தன் மண்ணை இழந்து, தன் ஆலயத்தை இழந்து, தன் திருச்சட்டத்தை இழந்து, தன் கடவுளை இழந்து அநாதையாக வலுவற்று நிற்கிறது.

நாம் இந்த உலகத்தில் குடியிருக்கும் உடல் நோய்வாய்ப்பாட்டு, குறைவுபட்டு, இப்பவோ பிறகோ என்று நம்மைச் சுமந்து சோர்வுற்று வலுவற்று நிற்கிறது.

இயேசு கொண்டு வந்த இறையாட்சி அவரின் இறப்புக்குப் பின் உயிர் பெறுமா? இல்லையா? என்று தயங்கி நிற்கிறது.

இந்த மூன்று நிலைகளும் மாறிப்போகும்: இஸ்ரயேல் வளர்ச்சி பெறும். உயிர் குடிபெயரும். இறையாட்சி வேரூன்றிப் பரவும்.

இப்படியான நம்பிக்கையை இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் உருவகங்கள் நமக்குச் சொல்கின்றன.

உருவகம் 1: நுனிக்கிளை

'தலைவராகிய ஆண்டவர் கூறுவது: உயர்ந்
து கேதுரு மரத்தின் நுனிக்கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன்' எனத் தொடங்குகிறது இன்றைய முதல் வாசகம். கேதுரு மரம் என்பது ஒரு ஊசியிலைத் தாவரம். நம்ம ஊர் நெட்லிங்கம், யூகலிப்டஸ், சவுக்கு மரம் போல. இவைகள் புதிதாக வளர்க்க வேண்டுமென்றால் இதன் தண்டுப்பகுதியை வெட்டி சாணம் பூசி சாக்கில் சுற்றி வைக்க வேண்டும். வெறும் நுனிக்கிளையை வைத்தால் இவை வளர்வதில்லை. ஆனால் ஆண்டவரின் செயல் வித்தியாசமாக இருக்கிறது. அவர் நுனிக்கிளையை வைக்கின்றார்.


நுனிக்கிளை என்பதன் பொருள் மூன்று:

ஒன்று, நுனிக்கிளை வலுவற்றது. நாம் குளிக்கப் போகும் போது, அல்லது நடக்கும்போது வேப்பமரம் கைக்கு எட்டும் தூரத்தில் கிளைபரப்பி இருந்தால் அதைச் சற்றே வளைத்து நுனிக்கிளையை நாம் உடைத்து பல் துலக்கவோ, அதன் கொழுந்தைச் சாப்பிடவோ செய்கின்றோம். இப்படியாக எந்தவொரு ஆயுதமும் இன்றி நாம் வெறும் விரல்களால் ஒடிக்கும் அளவிற்கு வலுக்குறைந்து இருப்பது நுனிக்கிளை.

இரண்டு, நுனிக்கிளை தேவையற்றது. நம் வீடுகளின் ஜன்னல்களை ஏதாவது ஒரு மரம் உரசினால் அந்த மரத்தின் நுனிக்கிளையை நாம் தறித்துவிடுகிறோம். நுனிக்கிளையை இழப்பதனால் மரம் ஒன்றும் அழிந்து விடுவதில்லை. ஆக, தேவையற்றது என நாம் ஒதுக்குவது நுனிக்கிளையைத்தான்.

மூன்று, நுனிக்கிளைகள் யாரின் பார்வைiயும் இழுப்பதில்லை. நம் கண்முன் நிற்கும் மரத்தைப் பார்த்து, 'எவ்ளோ பெரிய மரம்!' என வியக்கும் நாம், ஒருபோதும் அதன் நுனிக்கிளையைப் பார்த்து, 'எவ்ளோ அழகான நுனிக்கிளை!' என்று நாம் வியப்பதில்லை. நுனிக்கிளைகள் ஒருபோதும் நம் பார்வையை ஈர்ப்பதில்லை.

இப்படித்தான் வலுவற்றதாக, தேவையற்றதாக, யாரின் பார்வையையும் ஈர்க்காததாக இருக்கிறது இஸ்ரயேல். ஆனால் அது இறைவனின் கை பட்டவுடன் எப்படி மாறிப்போகிறது? 'கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மரமாகத் திகழும். அனைத்து வகை பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாக்கிக்கொள்ளும்' என்கிறார் எசேக்கியேல் இறைவாக்கினர். ஆக, தலைவராகிய ஆண்டவரின் கரம் பட்டவுடன் எந்தவித வெளிப்புற சூழலின் உதவியும் இல்லாமல் மரமானது வலுப்பெறுகிறது. தேவையுள்ளதாகிறது. பறவைகளின் கவனத்தை ஈர்க்கிறது.

இறுதியில், 'நானே செய்து காட்டுவேன்' என்று தன் செயலின் ஆற்றலை உலகறியச் செய்கின்றார் இறைவன்.

உருவகம் 2: குடி பெயர்தல்

வாடகை வீட்டில் இருப்பவர்களின் வலி தெரியுமா? அவர்கள் அந்த வீட்டிற்கு எவ்வளவுதான் வாடகை கொடுத்தாலும், எவ்வளவு உரிமையோடு பயன்படுத்தினாலும், அதை தங்களின் முகவரியாகக் கொண்டாலும் அந்த வீட்டின் மேல் அவர்களுக்கு உரிமை இருப்பதில்லை. அவர்கள் அந்த வீட்டைவிட்டு ஒருநாள் வெளியேறியே ஆக வேண்டும்.

நம் உடலை இப்படிப்பட்ட வாடகை வீட்டிற்கு உருவகம் செய்கின்றார் பவுல். நம் உயிர் வாடகைக்கு இருக்கும் வீடுதான் இந்த உடல். இந்த உடலின் நிலையாமை நாம் வளரும்போதும், நோயுறும்போதும், முதுமை அடையும்போதும், இறக்கும்போதும் நமக்குத் தெரிகிறது. காண்கின்ற உடலாக இருப்பதால் இது நிலையற்றதாக இருக்கிறது. நம்பிக்கை உடல் அல்லது காணாத உடல் நிலையானது. ஆக, நாம் இறக்கும்போது நம் உயிர் காண்கின்ற இந்த உடலிலிருந்து காணாத அந்த உடலுக்கு, நிலையற்ற இந்த உடலிலிருந்து நிலையான அந்த உடலுக்கு குடிபெயர்கிறது. ஆக, வாடகை வீட்டிலிருந்து நாம் சொந்தவீட்டிற்குப் போகின்றோம். வலுவற்ற நிலையிலிருந்து வலுவான நிலைக்குப் போகின்றோம். மனிதத்தில் இருந்து இறைமைக்குச் செல்கின்றோம்.

ஆக, இங்கேயும் இறைவனின் கரம்தான் செயலாற்றுகிறது. உயிரை இந்த உடலில் வாடகைக்கு வைத்த இறைவன் அதை ஒரு நேரத்தில் எடுத்து வேறு ஒரு உடலில் வைத்துவிடுகின்றார். நிலையற்ற ஒன்றை நிலையானதாக்குகின்றார்.

இவ்வாறாக, இங்கே செயலாற்றுபவர் இறைவன்.

உருவகம் 3: தானாக வளரும் விதை, கடுகு விதை

இரண்டு உருவகங்களாக இவை தெரிந்தாலும் 'தானாக வளரும் கடுகு விதை' என இதைச் சுருக்கிவிடலாம். கடுகை விதைத்த விதைப்பவர் அதை அப்படியே மறந்துவிடுகின்றார். அது சிறியதாக இருந்தாலும், அதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அது வளர்கிறது - தளிர், கதிர், தானியம் என விரிகிறது. 'பயிர் விளைந்ததும் அரிவாளோடு புறப்படுகிறார் விதைப்பவர்.'

இங்கே விதைப்பவர் விதைப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. விதை தான் பெற்றிருக்கின்ற ஆற்றலால் அப்படியே வளர்கிறது. ஆற்றல் உள்ள விதையைக் கண்டுபிடித்து விதைத்தவர் அதன் உரிமையாளர். ஆக, உருவம் சிறியதாக இருந்தாலும், அது வித்திடப்பட்டதை  உரிமையாளரே மறந்து போனாலும், அல்லது அதன் இருப்பை 'சிறிது' என்று மற்றவர்கள் ஒதுக்கிவிட்டாலும் அது வளர்கிறது. தான் பெற்றிருக்கின்ற தன் ஆற்றலின் முழு வளர்ச்சியை அது உணர்ந்துகொள்கிறது.

இவ்வாறாக, கடந்த உருவகங்களில் இறைவனின் அருள்கரமும், இங்கே வலிமையற்றது தான் இயல்பாகவே பெற்றிருக்கின்ற உள்ளாற்றலும் செடியின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைகின்றன.

இவ்வாறாக, வலிமையற்றது வலிமை பெற இரண்டு காரணிகள் அவசியம்: (அ) இறைவன், (ஆ) விதை.

இந்த விதையை நான் என் வாழ்வின் வலுவின்மைக்கு ஒப்பிடுகிறேன் என வைத்துக்கொள்வோம். என் வாழ்வை நுனிக்கிளையாக ஊன்றி வைத்தவரும், இந்த உடல் என்னும் வாடகை வீட்டில் என்னைக் குடிவைத்தவரும் இறைவன். அதே நேரத்தில் நான் உருவில் சிறியதாக இருந்தாலும், என் உரு மற்றவர்களின் பார்வையில் சிறியதாக இருந்தாலும் வளர்ந்து கிளை பரப்பி, அடுத்தவரை என்னிடம் ஈர்த்துக்கொள்ளும் ஆற்றல் என்னகத்தே உண்டு.

இவ்வாறாக, வலிமையற்றது வலுப்பெறுதலும், உருவற்றது உருப்பெறுதலும் இறைவன் கையிலும், என் கையிலும் உள்ளது.

இதன் உள்பொருள் அல்லது வாழ்வியல் சவால்கள் மூன்று:

அ. நான் இறைவனின் கையில் என்னை சரணாகதி ஆக்க வேண்டும். அவர் என்னை எங்கே நட விரும்புகிறாரோ அங்கே அவர் என்னை நட என் கைகளை விரித்துக்கொடுக்க வேண்டும்.

ஆ. என் பின்புலம், என் சூழல், என் நட்பு வட்டம், என் அழைப்பு எனக்கு சில மேலோட்டமான அடையாளங்களைத் தந்தாலும் அவற்றையும் தாண்டி என்னை உந்தித் தள்ளுவது என்னுள் இருக்கும் ஆற்றலே. இந்த ஆற்றலை நான் அடையாளம் கண்டு அதை முழுமையாகச் செயல்படுத்துதல் அவசியம்.

இ. வளர்ச்சி என்றால் வலியும் அங்கே சேர்ந்தே இருக்கும். விதை தன் சொகுசான கூட்டை உடைக்க வேண்டும். வேர் மண்ணைக் கீறி உள்ளே செல்ல வேண்டும். வாடகைக்கு இருந்து விட்டு மாறிச் செல்லும்போது நிறைய சுமக்க வேண்டும். உடைதல், கீறுதல், சுமத்தல் அனைத்தும் வலி தருபவை. ஆனால், வலி மறைந்துவிடும். அந்த வலியினால் வந்த வளர்ச்சி நிலைத்து நிற்கும்.

வலுவற்ற, உருவற்ற என்னை, உங்களை அவர் கைகளில் சரணாகதி ஆக்குவோம். அவரின் கை பட்டவுடன் நம் ஆற்றல் நம்மை அறியாமலேயே நம்மிலிருந்து வெளிப்படும்.

அவரின் கரமும், என் ஆற்றலும் இணைந்தால் வலுவற்றவை வலிமை பெறும், உருவற்றவை உருவம் பெறும்.


No comments:

Post a Comment