Wednesday 30 May 2018

கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழா

இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழா
விப 24:3-8; எபி 9:11-15; மாற் 14:12-16, 22-26



தியாகம் தேவை 

குடந்தை ஆயர் அந்தோணிசாமி
 
இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழா ஒரு தியாகப் பெருவிழா. நான்கு வகையான தியாகங்கள் உண்டு:
1. உள்ளதிலிருந்து இழத்தல்
2. உள்ளதையெல்லாம் இழத்தல்
3. உள்ளதையெல்லாம் இழந்து உடலையும் இழத்தல்
4.உடலையும் இழந்து உயிரையும் இழத்தல்

இஸ்ரயேல் மக்கள் மாடுகளை (முதல் வாசகம்), வெள்ளாட்டுக் கிடாய்களை, கன்றுக் குட்டிகளை (இரண்டாம் வாசகம்) கடவுளுக்குப் பலியிட்டார்கள். அவர்களிடம் உள்ளதைக் கடவுளோடும், மனிதர்களோடும் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் இயேசுவோ அவரிடமிருந்த அனைத்தையும், உடல், உயிர் அனைத்தையும் மக்களுக்குக் கையளிக்க முன்வந்து (நற்செய்தி) தியாகச் சிகரமானார்.

இந்தத் திருவிழா அர்த்தமுள்ள திருவிழாவாக நமக்கு அமைய வேண்டுமானால் நாம் இயேசுவைப் போல தியாக வாழ்வு வாழ முன்வர வேண்டும்; நாம் உட்கொள்ளும் நற்கருணை நமது வாழ்வைத் தியாகத்தால் பற்றி எரியச் செய்யவேண்டும்.

ஒன்று மட்டும் உண்மை !

எங்கே தியாகம் இருக்கின்றதோ அங்குதான் மீட்பு இருக்கும்; விடுதலை இருக்கும்; சுதந்தரம் இருக்கும்.

இதோ ஒரு கதை!

எலிகள் மாநாடு நடந்தது 1 சுதந்தரமாக வாழ ஆசைப்பட்ட அந்த எலிகள் நடுவே பூனைக்கு மணிகட்டுவது யார்? என்ற கேள்வி எழுந்தது! சின்ன ரப்பர் வளையத்தில் சின்ன மணி தயாராக இருந்தது.யாரும் முன்வரவில்லை பூனைக்கு மணிகட்ட! இறுதியாக ஒரு குட்டி எலி முன் வந்தது! வரவேண்டிய நேரத்தில் பூனை வந்துவிட்டது!
குட்டி எலியைத் தவிர மற்ற எல்லா எலிகளும் ஓடி ஒளிந்து கொண்டன!

தன்னை நோக்கி வந்த குட்டி எலிமீது பூனை பாய்ந்தது! குட்டி எலி  பூனையின் வாயில் சிக்கியது. ஆனால் குட்டி எலி மின்னல் வேகத்தில் ரப்பர் வளையத்தை பூனையின் கழுத்தில் மாட்டிவிட்டு உயிர் துறந்தது!
அன்றிலிருந்து மற்ற எல்லா எலிகளுக்கும் மீட்புக் கிடைத்தது. விடுதலை கிடைத்தது, சுதந்தரம் கிடைத்தது.


விதை மண்ணில் விழுந்து மடிந்தால்தான் செடி முளைக்கும்.

மூங்கில் காயப்பட்டால்தான் இசை பிறக்கும்..

ஒரு ஊதுவர்த்தி எரிந்தால்தான் மணம் பிறக்கும்.

வீட்டிலுள்ளவர்கள் ஒருவர் மற்றவர்க்காகத் தியாகம் செய்ய முன்வரும் போதுதான் அந்த வீட்டுக்குள்ளே வாழ்வு பிறக்கும், நீதி பிறக்கும், அமைதி பிறக்கும், மகிழ்ச்சி பிறக்கும், இறையரசு பிறக்கும். (உரோ 14:17)

இந்த இந்தத் திருவிழா தொட்டும் தொடாத, பட்டும் படாத திருவிழாவாக இல்லாமலிருக்க நாம் ஒவ்வொருவரும் தியாக மழை பொழியும் மேகமாவோம்

மேலும் அறிவோம்:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று) ஆங்கே
பசும்புல் தலைகாண்(டி) அரிது (குறள் : 16).

பொருள் : வான்வெளியாம் மேகத்திலிருந்து மழை நீர் நிலத்தில்
விழுந்தால்தான் ஓரறிவு உயிராகிய பசும்புல் கூடத் துளிர்க்கும்!
மழைத்துளி இல்லாவிட்டால் புல்லும் தளிர்க்காது!



வணங்கவா, வழங்கவா?
கல்லறைக்கு அப்பால்...

அருள்பணி இ.லூர்துராஜ்

அப்பல்லோ 13 என்றால் என்ன தெரியுமா? வெண்ணிலவு நோக்கி அமெரிக்கா செலுத்திய விண்வெளிக் கப்பல் என்றா சொல்கிறீர்கள்? அல்ல.

அறிவியலுக்கு இறைவன் கொடுத்த சாட்டையடி! அப்பல்லோ 11, 12 என்று வெற்றி மேல் வெற்றி கண்டு விஞ்ஞானம் வீறுநடைபோட்ட நேரம். அதற்குத் தன்னிலை உணர்த்த, அதன் சக்தியின் எல்லையை வரையறுத்துக்காட்ட இறைவன் விடுத்த எச்சரிக்கையே அப்பல்லோ 13இன் வீழ்ச்சி .

அப்பல்லோ 13இல் ஜேம்ஸ் லோவல் தலைமையில் மூவர் பயணம் செய்தனர். திடீரென்று பிராண வாயுக்கலம் வெடித்து விட்டது. நிலவில் இறங்கியதும் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த இருவருக்கென வைத்திருந்த கலத்தினுள் மூவரும் நுழைந்து கொண்டனர். கடுங்குளிர், காரிருள், இடிபாடுகள் இவற்றிற்கிடையே உயிருக்கு ஆபத்து' என்ற உண்மையை உணர்ந்தனர்.

அந்த அதிர்ச்சியில் குழுத் தலைவன் ஜேம்ஸ் லோவலுக்கு 76ஆக இருக்க வேண்டிய இதயத் துடிப்பு, 120 ஆக எகிறியது. அமைதிப் படுத்துவதற்காக, கீழே கட்டுப்பாட்டு அமைப்பகத்திலிருந்து செய்தி அனுப்பினார்கள் "பயப்படாதீர்கள். உயிரைக் கொடுத்தேனும் உங்கள் மூவரையும் காப்பாற்றுவோம்” என்று. உடனே ஜேம்ஸ் லோவல் உரக்கக் கூவினாராம்: “நாங்கள் மூவரா? இல்லை நால்வர் இருக்கிறோம். எங்களோடு கடவுள் இருக்கிறார்”.

கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையில் தான் எத்துணை ஆறுதல்! “இதோ, உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத்.28:20) என்ற இறைமகன் இயேசு தன் வாக்குறுதிக்கு இறுதி வடிவம் கொடுத்ததே நற்கருணை வழியாகத் தானே!.

சாது சுந்தர்சிங் என்பவருடைய வாழ்வில் நடந்த நிகழ்வு இது. நற்செய்திப் பணி ஆற்றச் செல்கிறார். குறுக்கே ஆறு - அக்கரையில் உள்ள ஊர்தான் பணித்தளம். ஆற்றைக் கடக்கப் படகோ பாலமோ  இல்லை. "என்ன செய்வது? மக்கள் காத்திருப்பார்களே" என்று அங்கலாய்த்த போது அருகில் இருந்த குடிசையிலிருந்து பெரியவர் ஒருவர் வந்தார். சாது சுந்தர்சிங் அவர்களின் கவலையைப் பற்றி அறிந்ததும், “கொஞ்சம் பொறுங்கள்” என்று சொல்லி விட்டுக் குடிசைக்குத் திரும்பி ஓர் ஏர்ப்பில்லோ வடிவில் ஒரு பெரிய பலூனைக் கொண்டு வந்தார். அதனைக் காற்றால் நிரப்பி உப்பச் செய்து “இதைத் தண்ணீரில் போடுகிறேன். நீங்கள் அதன்மேல் இருந்து செல்லுங்கள்" என்றார். அதன்படியே நடக்கிறது. அக்கரை சென்றடைந்ததும் சாது. சுந்தர்சிங் சிந்திக்கிறார். “இந்தப் பொருள் நம்மை எப்படிக் கரை சேர்த்திருக்கிறது? அதற்குக் காரணம் உள்ளே உள்ள காற்றுத்தானே! உலகம் முழுவதும் தான் காற்று பரந்து விரிந்து பரவிக் கிடக்கிறது. அதனால் நமக்குப் பெரிதும் உதவியில்லை. ஆனால் அதே காற்றை இந்தப் பலூனுக்குள் அடக்கியதும் கரைசேர நமக்கு எவ்வளவு பயன்!”.
அதுபோலத்தான் இறைவனின் உடனிருப்பு, பிரசன்னம் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், இயேசு அந்த உடனிருப்பை நற்கருணை என்னும் அருள்சாதனத்தில் நிறைத்து நம்மைக் கரை சேர்க்கிறார். நமக்குத் துணை நிற்கிறார். இலக்கை அடைய வழி செய்கிறார்.

அன்பெனும் பிடியுள் அகப்படு மலையே
அன்பெனும் குடில்புகு அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே - என்று இறைவனை அன்பின் வடிவாக்கி இரசிக்கும் மனிதன். கிறிஸ்துவைப் பொருத்தவரை மலைப் பொழிவில் நின்று தெய்வ அறிவை வியந்து நிற்கிறானே தவிர, கல்வாரியில்

அந்த அன்புத் தெய்வம் நம்மோடு இருக்க மட்டுமல்ல, நமக்கென தன்னையே கொடுக்கவும் திட்டமிட்டது.
“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்” (யோவான் 6:51). உடனே எழுந்த வாக்குவாதம்: "நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?''.

குழந்தைக்குப் பாலூட்டும் தாயைப் பார்த்ததில்லையா? பாலமுது என்பது என்ன? தன் உடலின் சத்தை, ஒடும் இரத்தத்தைத்தானே பாலாக மாற்றி உயிர் வளர்க்கிறாள் தாய்! ஒரு தாய் செய்வதைத் தாயைப் படைத்த கடவுளால், தாய் மறந்தாலும் நான் மறவேன் என்ற இறைவனால் செய்ய இயலாதா? ஆகட்டும் என்று சொல்லால் அனைத்தையும் படைத்தவருக்கு முடியாதது என்ற ஒன்று இருக்குமா என்ன ?
எவனோ ஒருவன் படைப்பின் நோக்கத்தை இப்படிப் பாடி வைத்தான். “படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக. மனுவைப் படைத்தான் தனை வணங்க" என்று. முதல் வரி பொருள் உள்ளது. மறுவரி பொருத்தமானதா? இறைவனை வணங்குவது மனிதனின் கடமைதான். ஆனால் படைப்பின் இலட்சியமாக இறைவன் எண்ணியிருப்பாரா? இரண்டாவது வரியில் 'ண' என்ற எழுத்தை நீக்கி 'ழ' என்று மாற்றிப் பாடியிருந்தால் எவ்வளவு பொருளும் பொலிவும் நிறைவும் பெற்றிருக்கும்!

படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக
மனுவைப் படைத்தான் தன்னை வணங்க அல்ல, தன்னை வழங்க

இயற்கை வழி, இறைவார்த்தை வழி, இப்படியாகப் பல்வேறு வழிகளில் தோன்றும் இறைவன், அருள்சாதனமாம் நற்கருணை வழித் தன் உடனிருப்பை மட்டுமல்ல, பகிர்தலின் உச்சத்தை உணர்த்துகிறார். நாமும் அங்கே அன்பைப் பெருக்கி நமதாருயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கைப் பார்க்கிறோம். ''வருந்திச் சுமைசுமக்கும் மக்களே, வாருங்கள்... தேற்றுவேன்” என்ற ஆறுதல் மொழியைக் கேட்கிறோம்.

எங்கோ படித்த ஆங்கில வரிகள் நினைவுக்கு வருகின்றன.
Life can be too lonely when nobody helps
Life can be so empty when nobody shares.

வாழ்க்கையில் நமக்குத் தனிமை உணர்வு இல்லை. காரணம்? நற்கருணையில் இயேசு நமக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாழ்க்கையில் நமக்கு வெறுமை விரக்தி இல்லை. காரணம்? நற்கருணையில் இயேசு நமக்காகத் தன்னையே வழங்கிக் கொண்டிருக்கிறார்.





மறையுரை மொட்டுக்கள்
அருள்பணி இருதயராஜ்


தமிழ் ஆசிரியர் ஒருவர் இலக்கண வகுப்பில் மாணவர்களிடம் காதலுக்கும் பாசத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? என்று. கேட்டதற்கு, பிரவீன் என்ற மாணவன்: "சார், நீங்கள் உங்கள் மகளிடத்தில் வைத்திருக்கும் அன்பு பாசம்; உங்கள் மகளிடத்தில் நான் வைத்திருக்கும் அன்பு காதல்" என்றால், அதற்கு ஆசிரியர், "சரியான பதில், உட்காரும் மாப்பிள்ளை" என்றார்.

மனிதரை 'உறவுகளின் முடிச்சு' என்று பொருத்தமாக அழைக்கலாம். எல்லா உறவுகளுக்கும் அடிப்படையாக அமைந்திருப்பது அன்பு. அந்த அன்பு யாரிடம் காட்டப்படுகிறதோ அதற்கேற்ப, அது வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் எடுக்கிறது. இரு நண்பர்களுக்கு இடையே உள்ள அன்பு நட்பு என்றும், கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு காதல் என்றும், பெற்றோர் பிள்ளைகள் மீது காட்டும் அன்பு பாசம் என்றும், தாய் நாட்டின்மீதும் தாய்மொழி மீதும் காட்டப்படம் அன்பு பற்று என்றும், கடவுளிடம் காட்டப்படும் அன்பு பக்தி என்றும், கடவுள் காட்டும் அன்பு அருள் என்றும் அழைக்கப்படுகிறது.

விவிலியத்தில் கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நிலவிய அன்பு உடன்படிக்கை அன்பு என்றழைக்கப்படுகிறது. விவிலியம் காட்டும் கடவுள் உடன்படிக்கையின் கடவுள். இன்றைய முதல் வாசகம் கடவுள் இஸ்ரயேல் மக்களுடன் தம் ஊழியன் மோசே வழியாக மிருகங்களின் இரத்தத்தைக் கொண்டு செய்த உடன்படிக்கையை விவரிக்கிறது (விப 24:3-8). உடன்படிக்கையில் இறுதியில், 'ஆண்டவர் கூறியபடியே அனைத்தும் செய்வோம்' (விப 19:8) என்று இஸ்ரயேல் மக்கள் இறைவனுக்கு வாக்குறுதி அளித்தபோதிலும், அவர்கள் பிற இனத் தெய்வங்களை வழிபட்டு, தங்கள் கடவுளோடு அவர்கள் செய்த உடன்படிக்கை அன்பை முறித்தனர். எனவே, இறைவன் இறைவாக்கினர் எரேமியா வாயிலாக புதியதோர் உடன்படிக்கையை முன்னறிவித்தார் (எரே 31:31).

கடவுள் முன்னறிவித்த இப்புதிய உடன்படிக்கையின் இணைப்பாளர் கிறிஸ்து. இவர், மிருகங்களின் இரத்தத்தைக் கொண்டு அல்ல, மாறாக தமது சொந்த இரத்தத்தினால் புதிய உடன்படிக்கையைச் செய்தார். ஏனெனில் மிருகங்களின் இரத்தம் மனிதரின் பாவங்களைப் போக்கர் சக்தியற்றது. (எபி 9:11-15).

இன்றைய நற்செய்தி கிறிஸ்து தமது சீடரோடு கொண்டாடிய இறுதிப் பாஸ்காவை விவரிக்கிறது. அன்று மாலையில், அதாவது அவர் காட்டிக் கொடுக்கப்பட்ட இரவில், தமது கல்வாரிப்பலியை அப்ப, இரசஅடையாளத்தில் நிலைப்படுத்திப் புதிய உடன்படிக்கையைச் செய்கிறார், "இது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்" (மாற் 14:21).

கிறிஸ்து தமது சிலுவைப் பலியால் முற்காலப் பலிகளை நிறைவு செய்து, அவரே குருவாகவும், பலிபீடமாகவும், செம்மறியாகவும் விளங்கினாம் (பாஸ்கா நன்றியுரை \').

இன்று திருச்சபை கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. கிறிஸ்து தாம் பாடுபடுவதற்கு முன்பு பாஸ்கரா உணவைத் தம் சீடர்களுடன் உண்பதற்கு, 'ஆசை ஆசையாய் இருந்தார் (லூக் 22:16), அவர் நமக்கு வழங்கியுள்ள நற்கருணை என்னும் உயிருள்ளனவை (யோவா 6:51) உன்னை நாமும் 'ஆசை ஆசையாய்' இருக்கிறோமா?

திருச்சபையின் வாழ்வு முழுவதும் நற்கருணை என்னும் மறைபொருளுடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. நற்கருணையின்றித் திருச்சபை இல்லை, திருச்சபையின்றி நற்கருணை இல்லை என்று சொல்லும் அளவிற்குத் திருச்சபையும் நற்கருணையும் இணைந்துள்ளன. இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல, நற்கருணைப் பலிதான். 'கிறிஸ்துவ வாழ்வனைத்தின் ஊற்றும் உச்சியுமாகும்' (திருச்சபை, எண் 11), அதே சங்கம் மேலும் கூறுகிறது: "நற்கருணைப் பல் இரக்கத்தின் அருளடையாளம், ஒற்றுமையின் அடையாளம், அன்பின் பிணைப்பு. பாஸ்கா விருந்து, இவ்விருந்தில் கிறிஸ்து உண்ணாப்படுகிறார்: அகம் அருளால் நிரப்பப்படுகிறது: வரவிருக்கும் மாட்சிமையின் உறுதி மொழி நமக்கு அளிக்கப்படுகிறது (திருவழிபாடு. எண் 47).

நற்கருணைக் கொண்டாட்டத்தில் கிறிஸ்துவின் இறப்பும் உயிர்ப்பும் நினைவு கூரப்படுகிறது (இறந்தகாலம்). அதே மறைபொருள் பிரசன்னமாகிறது: அதில் நாம் அருளடையாள் முறையில் பங்கேற்கிறோம் {நிகழ்காலம்): நற்கருணை விண்ணக மகிமைக்கு அச்சாரமாகவும் உள்ளது (எதிர்காலம் }, எனவே, நற்கருணை முக்காலத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

நற்கருணை: நம்மைக் கிறிஸ்துவுடனும், ஒருவர் ஒருவருடனும் இணைக்கிறது, நற்கருணை நம்மைக் கிறிஸ்துவுடன் நெருக்கமாக இணைக்கின்றது. "எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்" (யோவா 6:56). நற்கருணையை உட்கொள்வதால் நாமும் கிறிஸ்துவாக மாறி, 'இனி வாழ்பவள் நான் அல்ல கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்' (கலா 2:20) என்ற நிலையை அடைகிறோம்.

புனித தோமா அக்குவினா வாழ்ந்த துறவற மடம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தபோது, அவர் நற்கருணைப் பேழையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, "ஆண்டவரே! நாங்கள் வெந்து சாம்பலாகிக் கொண்டிருக்கிறோம்" என்று கதறினார், என்ன புதுமை! தீயானது தானாகவே அமைந்துவிட்டது. நற்கருணை தான் நமது காமத்தீ. காய்மகாரத்தீ, போட்டித்தீ, பொறாமைத்தீ, பேராசைத்தீ முதலிய பல்வேறு தீக்களை அணைக்கக்கூடிய ஆற்றல்மிகு அருளடையாளம்.

நற்கருணை நம்மைக் கிறிஸ்துவோடு மட்டுமல்ல, ஒருவர் ஒருவருடனும் இணைக்கிறது. "அப்பம் ஒன்றே, ஆதலால் தாம் பரலாயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்" (1 கொரி 10:17). எனவே, 'கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்கு கொள்ளும் நாமனைவரும் தூய ஆவியால் நிரப்பப்பட்டு, கிறிஸ்துவுக்குள் ஒரே. உடலும் உயிருமாக விளங்கவேண்டும்' (நற்கருணை மன்றாட்டு 3),

கிறிஸ்துவர்களிடையே நிலவிவரும் பாகுபாடு, குறிப்பாக சாதி வேறுபாடு ஓர் உயிர்க்கொல்லி நோய்: குணப்படுத்த முடியாத புற்றுநோய். சாதி வேறுபாட்டுடன் நாம் உட்கொள்ளும் நற்கருணை நமது உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் தரும் மருந்தாக அமையுமா? அல்லது நம்மை நீதித் தீர்ப்புக்கும் தண்டளைக்கும் உள்ளாக்கும் சாபக்கேடாக அமையுமா? நம்மை ஓட ஓடத் துரத்திக் கொண்டுவரும் கேள்வி இது. இக்கேள்விக்கு பதில் என்ன?



மண்குடத்தில் தண்ணீர்!

 அருள்பணி ஏசு கருணாநிதி




இன்றைய நற்செய்திப் பகுதியில் வரும் ஒரு பெயரில்லாக் கதைமாந்தரிடமிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம்: 'மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள்.'

யார் இவர்? இவர்தான் மாற்கு நற்செய்தியாளரின் பதிவில் இயேசுவின் பாடுகளுக்கு 'உ' வரைபவர். புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது என்றும், அந்த நாளில் ஆட்டுக்குட்டி பலியிடப்படும் என்றும் பதிவு செய்கின்ற மாற்கு நற்செய்தியாளர், பாஸ்கா விருந்திற்கான ஏற்பாடு பற்றி எழுதுகின்றார். எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும்? என்ற சீடர்களின் கேள்விக்கு விடையாக வருபவர்தாம் இந்தக் கதைமாந்தர்.

'மண்குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு ஓர் ஆள் (ஆண்)'

பெண்கள் தாம் மண்குடத்தில் தண்ணீர் எடுப்பார்கள் என்பது இக்காலத்தைப் போல அக்காலத்திலும் பரவலாக இருந்த ஒன்று. ஆகையால்தான் இயேசுவை சந்திக்க வந்த அல்லது இயேசு கிணற்றடியில் சந்தித்த சமாரியப்பெண்ணும் மண்குடத்தை கிணற்றடியில் போட்டுவிட்டு ஊருக்குள் ஓடுகின்றாள். இயேசுவின் சமகாலத்தில் செல்வந்தர்கள் தங்கள் வீட்டு வேலைகளுக்கு ஆண் அடிமைகளை வைத்திருந்தனர். இவர்களின் வேலை தண்ணீர் எடுப்பது. ஆக, இயேசு குறிப்பிடும் இந்தக் கதைமாந்தர் ஓர் ஆண் அடிமையாக இருந்திருக்கலாம். இவரின் தலைவருக்காக இவர் தண்ணீர்குடம் சுமந்திருக்கலாம். பல ஆண் அடிமைகள் இங்கும் அங்கும் தண்ணீர் குடம் சுமந்து கொண்டிருக்க இவரை மட்டும் எப்படி தனியாக சீடர்கள் அடையாளம் கண்டிருப்பார்கள்? - இந்தக் கேள்வி நமக்குள் எழலாம். ஆனால் கேள்வியை அப்படியே விட்டுவிடுவோம்.

இந்த தண்ணீர் சுமக்கும் ஆள் கிணற்றடிக்கும் வீட்டிற்கும் நடக்கிறார். ஆக, கிணற்றடிக்கும் வீட்டிற்குமான ஒரு சதைப்பாலம் இவர். இப்படிப் பாலமாக இருக்கும் ஒருவரே தான் விரைவில் நிகழ்த்தப் போகும் கல்வாரிப் பலியின் முன்னடையாளம் என இயேசு நினைத்திருக்கலாம். ஆகையால்தான் இந்த ஆளைத் தேர்ந்தெடுக்கிறார் இயேசு. சீடர்கள் 'அ' என்ற இடத்திலிருந்து 'ஆ' என்ற இடம் நோக்கிச் செல்கின்றனர். தண்ணீர் குடம் கொண்டு வருபவர் 'ஆ' என்ற இடத்திலிருந்து 'அ' என்ற இடம் நோக்கி - அதாவது, 'எதிரே' வருகிறார். இப்போது சீடர்கள் அவர் பின்னே செல்ல வேண்டும் என்பது இயேசுவின் கட்டளை. அதாவது, அவர்களும் 'ஆ' விலிருந்து 'அ' நோக்கி அல்லது எல்லாரும் சேர்ந்து 'இ' ('இல்லம்') நோக்கிச் செல்ல வேண்டும். இவ்வாறாக, இந்த பெயரில்லாத ஆள் இயேசுவின் சீடர்களின் வழியைத் திருப்புகின்றார்.

இந்தப் பின்புலத்தில் பார்த்தால் இந்த ஆள் இயேசுவின் உருவகம் என்றும், இவர் சுமக்கும் தண்ணீர் இயேசுவின் உடன்படிக்கையின் இரத்தத்தின் உருவகம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. எப்படி?

1. இயேசு தந்தையின் திருவுளம் நிறைவேற்றுபவர் - அடிமை தலைவரின் திருவுளம் நிறைவேற்றுபவர்.
2. இயேசுவின் தந்தை பெரிய வீட்டின் உரிமையாளர் - அடிமையின் தலைவர் பெரிய இல்லத்தை தயாராக வைத்திருக்கின்றார்.
3. இயேசு சீடர்களின் பாதையைத் திருப்புகின்றார் - அடிமை சீடர்களின் பாதையைத் திருப்புகின்றார்.
4. விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையேயான சதைப்பாலம் இயேசு - வீட்டிற்கும் கிணற்றுக்குமான சதைப்பாலம் அடிமை.
5. இயேசு மேலிருக்கும் தந்தையின் இல்லத்திற்கு வழி காட்டுகிறார் - அடிமை மேலறையைக் காட்டுகிறார்.
6. இயேசு இரத்தத்தின் கிண்ணத்தைக் கையிலெடுத்தார் - அடிமை தண்ணீரின் மண்குடத்தைக் கையில் எடுத்தார்.
7. இயேசு தம் சீடர் பருகக் கொடுத்தார் - அடிமை தலைவரின் தாகம் தணிக்கிறார்.
8. இங்கே இது இயேசுவின் உடல், இரத்தம் - அங்கே அது அடிமையின் உடல், இரத்தம், வியர்வை.
9. இங்கே இயேசுவின் உடன்படிக்கை முத்திரையிடப்படுகிறது - அங்கே அடிமை என்றென்றும் தன் தலைவருக்கான ஒப்பந்தத்தில் முத்திரையிடப்படுகிறது.

ஆக, இன்று நாம் கொண்டாடும் ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவின் சிந்தனையை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால்: 'நம் கையில் உள்ளதை வைத்து முன்னும் பின்னும் நடந்து பாலம் ஆவதே நற்கருணை.'

அது என்ன முன்னும் பின்னும் நடப்பது?

தொநூ 15:9-21ல் கடவுள் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையை வாசிக்கின்றோம். இங்கே உடன்படிக்கை முத்திரையப்படும்போது ஆபிராம் பலிப்பொருள்களை இரண்டாக வெட்டி வைத்து நடுவில் ஒரு பாதை விடுகின்றார். இந்தப் பாதையின் ஊடாக அவர் முதலில் நடக்கின்றார். பின் ஆண்டவராகிய இறைவன் நெருப்பு வடிவத்தில் நடக்கின்றார். இவ்வாறாக, முன்னும் பின்னும் நடக்கும்போது நடப்பவர்களுக்கு இடையே இருக்கின்ற ஒப்பந்தத்தை அங்கிருக்கின்ற பலிப்பொருள்கள் உறுதி செய்கிறது. இப்படி உறுதி செய்யப்பட்ட நிலையில் உடன்படிக்கை செய்பவர்கள் இந்த உறுதியை மீறினால் அவர்களும் பலிப்பொருள்கள் போல இரண்டாகக் கிழிக்கப்படுவர் என்பதே பொருள்.

இன்றைய முதல் வாசகத்தில் (விப 24:3-8) ஆண்டவராகிய இறைவனுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நடக்கும் உடன்படிக்கை வாசிக்கின்றோம். உடன்படிக்கை இரண்டு நிலைகளில் நடக்கின்றது. முதலில், மோசே உடன்படிக்கையின் ஏட்டை வாசிக்கின்றார். இரண்டாவதாக, பலிப்பொருள்களின் இரத்தை எடுத்து முன்னும் பின்னும் சென்று பீடத்தின்மேலும் மக்களின் மேலும் தெளிக்கின்றார்.

இதே ஃபார்முலாவைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (மாற் 14:22-26) பார்க்கின்றோம். முதலில் இயேசு கடவுளைப் போற்றி, அப்பத்தையும், இரசத்தையும் எடுத்து சீடர்களிடம் பேசுகின்றார். இரண்டாவதாக, முன்னும் பின்னும் அவர்களுக்குப் பரிமாறுகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்திலும் (எபி 9:11-15) இயேசுவின் கல்வாரிப் பலியை எருசலேம் ஆலயத்தின் பலியாக உருவகிக்கும் எபிரேயர் நூலின் ஆசிரியர், இயேசுவே உள்ளும் புறமும் சென்று தன் சொந்த இரத்தத்தால் 'புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராயிருக்கிறார்' என்கிறார்.

ஆக, இன்றைய திருநாளின் மையமாக இருக்கும் செயல் 'முன்னும் பின்னும் செல்வது' - 'ஒன்றையும் மற்றொன்றையும் இணைப்பது.'

மண்குடத்தில் தண்ணீர் சுமந்தவர் தலைவரையும் கிணற்றையும் இணைத்தார்.

மோசே ஆண்டவரையும் மக்களையும் இணைத்தார்.

தலைமைக்குரு கடவுளையும் பாவிகளையும் இணைத்தார்.

இயேசு கடவுளையும் அனைவரையும் இணைத்தார்.

நீங்களும் நானும் ஒருவர் மற்றவரை இணைக்கும்போது - நற்கருணை ஆகின்றோம்!

ரொம்ப எளிதான லாஜிக்.

இதை வாழ்வாக்குவது எப்படி?

மீண்டும் மண்குடத்தின் கதைமாந்தருக்கே வருவோம்.

அ. தண்ணீர் சுமப்பவரின் கவனம் கிணற்றின்மேலும், தன் வீட்டின்மேலும், தன் தண்ணீர் குடத்தின்மேலும் இருக்க வேண்டும். இவற்றில் ஒன்று தவறினாலும் தண்ணீர் வந்து சேரவேண்டிய இடத்திற்கு வந்து சேராது. இயேசுவின் கவனம் தன் தந்தையின் திருவுளம் மேலும், தான் மீட்க வந்த இந்த உலகின்மேலும், தன் கல்வாரிப் பலியின்மேலும் இருந்தது. ஆகையால்தான் அவரின் பலி சாத்தியமாயிற்று. ஆக, அவரின் பலியில் பங்கேற்கும் நம் கவனமும் இப்படித்தான் இருக்க வேண்டும். நம் ஊற்றாகிய இறைவன் மேலும், நாம் அன்றாடம் உறவாடும் நம் உலகின்மேலும், நாம் சுமக்கும் வாழ்க்கை மேலும். இவற்றில் ஏதாவது ஒன்றில் கவனம் தவறினாலும், அல்லது ஏதாவது ஒன்று நம் அதிக கவனத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கே தாகம் தணிவதில்லை.

ஆ. மண்குடத்தில் தண்ணீர் சுமக்கும் ஆள் மிகக் குறைந்த ஆடைகளையே அணிந்திருப்பார். மண்குடத்தை தோளில் சுமப்பதை விட தலையில் சும்மாடு கூட்டி சுமப்பதே எளிது. இப்படி சுமக்கும்போது கைகளை உயர்த்தி தாங்கிப் பிடிக்க வேண்டும். இப்படிப் பிடிக்க வேண்டுமானால் தளர்வான மேலாடை அணிதல் அல்லது மேலாடை அகற்றுதல் வேண்டும். தன் மேலாடையை அகற்ற முன்வரும் ஒருவரே தலையில் தண்ணீர்குடம் சுமக்க முடியும். தன் மேலாடை அகற்றி, தன் சீடர்களின் காலடிகளின் தண்ணீர் ஊற்றிக் கழுவியபோது இயேசு செய்ததும் இதுவே. மேலாடை என்பது என் ஆடம்பரம். மேலாடை என் அவசியம் அல்ல. இன்று அவசியங்களை விட ஆடம்பரங்களே நம் வாழ்வில் அதிகம் குறுக்கே வருகின்றன. ஆடம்பரங்களுக்காகத்தான் இன்று மனிதர்கள் தன்னலம் நாடுகிறார்கள். ஆக, மேலாடை அகற்றுவது என்பது தன்னலம் அகற்றுவது. மேலாடையை அகற்றாத வீட்டுத் தலைவர் தன் வீட்டுக்குள்ளேதான் இருப்பார். மேலாடையை அகற்றத் துணியும் அடிமைதான் கிணற்றடிக்கும் செல்வார். ஆக, மேலாடை என்பது நம்மைக் கட்டியிருக்கும் சங்கிலி. இன்று நான் அகற்ற விரும்பும், ஆனால், அகற்றத் தயங்கும் மேலாடை எது?

இ. முற்றிலும் பலியாவது. முதல் வாசகத்தில், மோசே உயிரோடிருக்கிறார். மக்கள் உயிரோடிருக்கின்றனர். ஆனால் மாடுகள் பலியாகின்றன - இறந்துவிடுகின்றன. இரண்டாம் வாசகத்தில், தலைமைக்குரு உயிரோடிருக்கிறார். பாவிகள் உயிரோடிருக்கின்றன. ஆனால், ஆடு பலியாகின்றது - இறந்துவிடுகின்றது. நற்செய்தி வாசகத்தில், கடவுள் உயிரோடிருக்கிறார். சீடர்கள்-நாம் உயிரோடிருக்கின்றோம். ஆனால், இயேசு பலியாகின்றார் - இறந்துவிடுகின்றார். மூன்று இடங்களிலும் இரத்தம் சிந்தப்படுகிறது. இரத்தத்தில்தான் உயிர் இருப்பதாக நம் முன்னோர் நம்பினர். விவிலியமும் அதே நம்பிக்கையைத்தான் கொண்டிருக்கிறது (காண். லேவி 17:11). பலியாகின்ற ஆடு, மாடு, ஆள் - இவர்களுக்குக் குரல் கிடையாது. இவர்கள் குரல்வளை நெரிக்கப்படுகிறது. ஏனெனில் தொண்டையில்தான் உயிர் இருக்கிறது என்பது மனுக்குலத்தின் முதல் நம்பிக்கை. ஆகையால்தான் நாம் இறக்கும்போது நம் வாய் அகலத் திறக்கிறது (!). ஆனால், பலியாகின்றவர்கள் மற்றவர்களின் குரலுக்காக தங்கள் குரலை நெரித்துக்கொள்கின்றனர். மண்குடம் சுமந்த அந்த அடிமை போல. ஆகையால்தான் இயேசுவம், 'அவர் அறையைக் காட்டுவார்' என்கிறார். நற்கருணையின் நிறைவான பொருள் இதுதான். நம் குரலை ஒடுக்கி அடுத்தவர்களின் குரலை ஒலிக்கச் செய்வது - நம் வாழ்வை அழித்தாவது.

இறுதியாக,

இன்று நாம் நம் குரல்வளை நெரிக்கப்பட்டு பலியாகி உடன்படிக்கையின் பலிப்பொருளாகவில்லை என்றாலும், அந்த அநாமிகா அடிமை போல நாம் அன்றாடம் சுமக்கும் நம் வாழ்வின் மண்குடங்களைத் தூக்கிக்கொண்டு முன்னும் பின்னும் சென்று, புன்னகையின் பாலமாக இருந்தாலே போதும்.

'ஆமென்' என்று வாய் திறந்து, பெற்று, மூடிக்கொள்ளும் நற்கருணை நம் வாழ்வில் பொருள்தரும்.

மண்குடத்தில் தண்ணீர் - கவனம் ரொம்ப தேவை. தவறினால் குடமும் உடைந்து விடும், தண்ணீரும் உடைந்துவிடும், சுமப்பவரும் காயம் படுவார். உடன் வருபவரும் அடிபடுவார்.

ஆண்டவரின் திருவுடலும், இரத்தமும் அப்படியே!











No comments:

Post a Comment