Friday, 5 January 2018

திருக்காட்சி விழா 07-01-2018

திருக்காட்சி விழா

 இன்றைய வாசகம் 
எசா 60:1-6, எபே 3:2-3அ, 5-6; மத் 2:1-12

மறைமொட்டுகள் அருள்தந்தை Y.இருதயராஜ்
இத்துக்களுக்கு ஒரு கடவுன், இஸ்லாமியருக்கு ஒரு கடவுள், கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடவுள் என்று மூன்று கடவுள் இல்லை. கடவுள் ஒருவரே. அவர் எல்லா மனிதரும் மீட்படைய விரும்புகிறார் (1 திமொ 2:4-5). மேலும் பேதுரு கூறுவதுபோல, "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை; எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடப்பவர் அவருக்கு ஏற்புடையவர்" (திப 10:34-35).
மீட்பு என்பது யூத இனத்தாருக்கு மட்டும் உரிய தனியுடைமை அல்ல; மாறாக, அது எல்லா இனத்தாருக்கும் உரிய பொது உடைமை என்பதை இன்றையப் பெருவிழா நமக்கு உணர்த்துகின்றது. யூதர்கள் அவர்கள் மட்டுமே மீட்படைவர், மற்றவர் மீட்படையமாட்டார்கள் என்று தவறாக எண்ணினர். ஆனால் உண்மையில் பிற இனத்தவர் மீட்பரை ஏற்றுக் கொண்டனர்; யூத இனத்தார் மீட்பரை ஏற்றுக் கொள்ளவில்லை. "அவர் தமக்குவியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை" (யோவா 1:11).
இன்றைய அருள்வாக்கு வழிபாடு பிற இனத்தாரும் மீட்படைவர் என்ற உண்மையை எடுத்துரைக்கின்றது. இன்றைய முதல் வாசகம் கூறுகிறது: "பிற இனத்தார் உன் ஒளியை நோக்கி வருவார்கள்" (எசா 60:3). பதிலுரைப்பாடல் கூறுகிறது. "மக்களினத்தார் அனைவரும் அவரை வணங்குவர்" (திபா 72:11). இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "பிற இனத்தாரும் யூத இனத்தாருடன் ஒரே உரிமைப்பேற்றிற்கு வாரிசுகள்" (எபே 3:6). இன்றைய நற்செய்தியில், பிற இனத்தைச் சார்ந்த ஞானிகள் குழந்தை இயேசுவை அதன் தாய் மரியாவுடன் கண்டு. ஆவரை ஆராதித்து, அவருக்குக் காணிக்கை செலுத்துகின்றனர் (மத் 2:11).
நாம் அனைவரும் பிற இனத்தைச் சார்ந்தவர்கள். கடவுள் தமது அளப்பரிய அன்பிலே நம்மையும் மீட்புக்குத் தகுதியுள்ளவர்களாகத் தேர்ந்து கொண்டார். எனவே அவருக்கு நமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிப்போம். "பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும்ஆண்டவரைப் போற்றுங்கள்" (திபா 117:1).
ஓர் இளைஞன் ஓர் இளம் பெண்ணைக் காதலித்தான், பெண் வீட்டார் அவர்களின் காதலுக்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் காதலன் தன் காதலியிடம், "நீ கட்டிய புடவையுடன் வா: காலமெல்லாம் உன்னைக் கன் கலங்காமல் காப்பாற்றுவேல்" என்று உறுதி அளித்தான், ஆனால் அந்தப் பெண் 10 புடவைகளுடன் வந்தாள், ஏன் என்று கேட்டதற்கு, "இந்தப் பத்துப் புடவைகளும் நான் கட்டிய புடவைகள்" என்றாள்!
ஒரு பெண் தன் காதலனை நம்பித் தன்னுடைய பெற்றோர், உற்றார் உறவினர் ஆகிய அனைவரையும் விட்டு விட்டுக் கட்டிய புடவையுடன் வர முடியும் என்றால், நாம் கடவுளை நம்பி அவரிடம் என் சரண் அடையக் கூடாது? கீழ்த்திசை ஞானிகள் தங்களுடைய சொந்தம் பந்தம், சொத்துப் பத்து எல்லாவற்றையும் விட்டு விட்டு விண்மீனை நம்பி தங்கள் நம்பிக்கைப் பயணத்தை மேற்கொண்டனர். கிறிஸ்தவ வாழ்வு ஒரு துணிச்சலான பயணம். அதனை மேற்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோமா?
கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ளத் திருத்துதர் பவுல் அனைத்தையும் குப்பையெனக் கருதினார் (பிலி 3:8). கடந்ததை மறந்துவிட்டு முன் இருப்பதைக் கண்முன் கொண்டு இலக்கை நோக்கி ஓடினார் (பிலி 3:13-14), இறுதியாக ஓட்டத்தை முடித்துக் கொண்டு வெற்றிவாகைசூடினார் (2திமொ4:7-8). வேதனையோ நெருக்கடியோ, சாவோ வாழ்வோ எதுவுமே அவரைக் கிறிஸ்துவிடமிருந்து பிரிக்க முடியவில்லை (உரோ 8:35-39).
வாழ்க்கையில் எழும் தடைகளைக் கண்டு மலைத்துப்போய் மனமுடைந்து போகிறவர் மனிதர் அல்லர் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடக் கற்றுக்கொள்ள வேண்டும் தண்ணி ஓடும் திசையில் செத்த பிணம்கூடச் சிரமமின்றிப் போகும். ஆனால் தண்ணீர் ஓடும் திசைக்கு எதிராக நீந்த வேண்டுமென்றால் அதற்குத் துணிச்சல் வேண்டும். இதுவரை பலர் நடந்த பழைய பாதையில் நடப்பது எளிது. ஆனால் இதுவரை எவருமே நடக்காத புதிய பாதையில் சென்றவர்கள்தான் சாதனையாளர்களாக மாறினார்கள். மற்றவர்கள் முகவரியில்லாமல் மறைந்தனா. கீழ்த்திசை ஞானிகள் பல தடைகளைச் சந்தித்தனர். இருப்பினும் அவற்றையெல்லாம் கடந்து தங்களது குறிக்கோளை அடைந்தனர். இலக்குத் தெளிவு உடையவர்கள், துணிச்சலுடன் செயல்படுபவர்கள், இலக்கை அடைவர் என்பது உறுதி.


எண்ணியார் எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப்பெறின். ( குறள் 666)

 
கீழ்த்திசை ஞானிகள் கிறிஸ்துவைச் சத்திக்க விண்மீன் உதவியதுபோல, நம்மைச் சுற்றி வாழ்கின்ற பிற சமயத்தினர் கிறிஸ்துவிடம் வர நம் வாழ்வு ஒரு விண்மீனாக அமைவதாக, "உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிக்க" (மத் 5:18).மூன்று வித மனிதர்கள்

அருள்தந்தை இ.லூர்துராஜ் பாளை மறைமாவட்டம்

ஆங்கிலத் தத்துவ மேதை பெர்ட்ரான்று ரசல் ஒரு நாத்திகர். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களைக் கண்டு எள்ளி நகையாடுபவர். கடவுளை நம்புகிறவர்கள் கற்பனைத் திறனற்றவர்கள், கடவுள் இல்லாத உலகத்தையே நினைத்துப் பார்க்க அஞ்சுபவர்கள் என்றெல்லாம் சொல்லிச் சிரிப்பார். நண்பர் ஒருவர் அவரைப் பார்த்துக் கேட்டார். "நீங்கள் இறந்தபின் இறைவனைச் சந்திக்க நேர்ந்தால் என்ன கேட்பீர்கள்? இரசல் சொன்ன பதில் என்ன தெரியுமா? அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அந்த இறைவனைப் பார்த்து நான் கேட்பது இதுவாகத்தான் இருக்கும். கடவுளே, உலகில் நான் உயிர் வாழும்போதே ஐயமற்ற வகையில் உம்மைப் பற்றிய தெளிவான சான்றை ஏன் வெளிப்படுத்தவில்லை?”
இன்று நாம் கொண்டாடும் திருக்காட்சித் திருவிழா கடவுள் தந்த அந்தச் சான்று பற்றியது தான். திருக்காட்சி என்றாலே இறைத் தோற்றம், இயேசுவில் தனது மீட்கும் இறைப்பிரசன்னத்தை உலக மக்களுக்கெல்லாம் உணர்த்தும் இறைவெளிப்பாடு.
விவிலியக் கண்ணோட்டத்தில், இறைப் பிரசன்னத்தை ஏற்றுக் கொள்பவனே ஞானி, இறைப் பிரசன்னத்தை ஏற்றுக் கொள்ளாதவன் எவ்வளவுதான் பெரிய ஆற்றலும் திறமையும் உள்ளவனாயினும் அவன் ஒர் அறிவிலியே 'கற்றதனால் ஆயப் பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்?’ (திருக்குறள் )
`கடவுள் இல்லை என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்” (திபா14:1531) என்ற திருப்பாடலின் வரிகள் ஆழ்ந்த சிந்தனைக்குரியவை
கடவுள் மனிதருக்கு அவரவர் தன்மை, நிலைக்கு ஏற்பத் தன்னை வெளிப்படுத்துகிறார்.
மூன்று வித மனிதர்கள் : படித்த முட்டாள்கள், படிக்காத மேதைகள், படித்த ஞானிகள்


 பரிசேயர், மறைநூல் அறிஞர்.
இப்படிப் படித்தவர்களுக்கு மறைநூல் வழியாகக் கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறார். மறைநூலை நன்கு கற்றவர்கள். மறைநூலுக்கு விளக்கம் தரும் திறன் பெற்றவர்கள். பழைய ஏற்பாட்டில் மெசியா பற்றிய குறிப்புக்களையெல்லாம் தெரிந்து கொண்டவர்கள்; ஆனால் உண்மையின் ஊற்றிடம் செல்வது பற்றி அக்கறையற்றவர்கள். எனவே மீட்பரைப் பற்றிய பற்றோ, பாசமோ, பகையோ இல்லாதவர்கள். இவர்களிடம் உண்மையில்லை, நேர்மை இல்லை, திறந்த மனமில்லை. இவர்கள் படித்த முட்டாள்கள்.வயல்லவளியில் இடையர்கள். 


இப்படிப் பாமரர்களுக்கு வானதூதர் வழியாகக் கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறார். ஏழைகள் என்றாலும் எளிமை, தாழ்ச்சிமிக்கவர்கள். வறியவர்கள் என்றாலும் வஞ்சகம் சூது இல்லாதவர்கள். "இடையர்கள் தாங்கள் கண்டவை கேட்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே திரும்பிச் சென்றார்கள்” (லூக்.2:20). இவர்கள் படிக்காத மேதைகள்!

கீழ்த்திசை ஞானிகள்.

இப்படி அறிஞர்களுக்கு விண்மீன் வழியாகக் கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறார் - பிற இனத்தாருக்கு இருளகற்றும் ஒளியாக (லூக்.2:32). அறிஞர்கள் என்றாலும் அகந்தை இல்லாதவர்கள். இறைவனைத் தேடுவதே அறிவின் பயன் என்பதை உணர்ந்து செயல்பட்டவர்கள். ஞானத்தின் இருப்பிடத்தைத் தேடி அலைந்தவர்கள். இவர்கள் படித்த ஞானிகள்.


கடவுள் உண்டு என்று சொல்பவர்களை நம்பலாம். கடவுள் இல்லை என்று சொல்பவர்களைக் கூட நம்பலாம். கடவுளை நம்புவது போல் நடிப்பவர்களை நம்ப முடியாது, நம்பக் கூடாது
சிலர் கடவுளை நம்புவர், வணங்குவர். அவருக்கேற்ற செயல்களைச் செய்வர். இவர்கள் ஆத்திகர்கள். இவர்களால் ஆபத்தில்லை.
சிலர் கடவுள் இல்லை என்பர். ஆனாலும் மனிதம் வாழச் சிறப்பான செயல்களைச் செய்வர். இவர்கள் நாத்திகர்கள். இவர்களாலும் ஆபத்தில்லை.
சிலர் கடவுளை நம்புவது போல் நடிப்பர். ஆலயத்துக்குச் செல்வர். ஆண்டவனை வணங்குவர். ஆனால் கடவுளுக்கும் மனிதருக்கும் எதிராக அஞ்சாது செயல்படுவர். இவர்கள் மிகமிக ஆபத்தானவர்கள்.
சந்தேகப் பேர்வழியான ஏரோது தனக்கு அடுத்த வாரிசு விரைவில் வரக்கூடாது என்பதற்காகத் தன் உறவினர்களையே கொலை செய்தவன். யூதர்களின் அரசர் எங்கே பிறந்துள்ளார் என்று ஞானிகள் கேட்டதும் ஆடிப்போனான். நயவஞ்சகமாய் ஞானிகளிடம் தன் நடிப்பைப் புலப்படுத்துகிறான். 'வணங்கிவிட்டு வந்து சொல்லுங்கள். நானும் வணங்குகிறேன்” என்கிறான்! அவனது கபடநாடகத்தை ஆண்டவரின் தூதர் கனவில் விளக்க ஞானிகள் வேறுவழியில் திரும்புகின்றனர். கொடூர மனம் கொண்ட ஏரோது ஆண் குழந்தைகளையெல்லாம் கொன்றொழிக்கும்படி கட்டளை இடுகிறான்.
“பிற இனத்தார் உன் ஒளியை நோக்கி வருவர்” (எசா.60:3). இந்த இறைவாக்கு கிறிஸ்து பிறப்பில் செயல்படத் தொடங்கியது.
ஒளியானது பாவ இருளைச் சுட்டெரிக்கும். இருண்ட இதயத்தில் நம்பிக்கைத் தீபத்தை ஏற்றும். அப்படிப்பட்ட ஒளியாய் இயேசுவைக் கண்டு வணங்கி மகிழ்ந்தனர். பிற இனத்து ஞானிகள். ஆனால் இயேசுவைத் தவறாகப் புரிந்து கொண்ட ஏரோது போன்றவர்கள் கலங்கினர். கொல்லவும் திட்டமிட்டனர். இயேசு வந்தது எவருடைய அரசையும் வீழ்த்த அல்ல, எல்லா மக்களும் வாழ்வு பெற வேண்டும் என்றே.
திருக்காட்சித் திருவிழா கீழ்த்திசை ஞானிகள் பெற்ற இறைவெளிப்பாட்டைக் கொண்டாடுவதற்காக அன்று நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்து கொண்டிருப்பது பரிசேயா இடையரா, ஏரோதா, கீழ்த்திசை ஞானியா என்பதைத் தேர்ந்து தெளிவதற்காக!நாம் திருக்காட்சியாக மாறுவோம்.

குடந்தை ஆயர் F. அந்தோணிசாமி

ஹென்றி வாண்டைக் என்பவரால் எழுதப்பட்ட ஒரு கதை இதோ! இயேசுவை மூன்று ஞானிகள் அல்ல, நான்கு ஞானிகள் தேடிச்சென்றார்கள். நான்கு பேரும் திரளான செல்வத்தை ஏந்திச்சென்றார்கள் (முதல் வாசகம்). அவர்களுடைய பைகளிலும், கைகளிலும் பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் இருந்தன (நற்செய்தி). அவர்கள் கிழக்கிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறந்திருந்த - இயேசுவைத் தேடிச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் சென்ற பாதையிலே ஏழைகளும் இருந்தார்கள், பணக்காரர்களும் இருந்தார்கள்! பணக்கார ஞானிகளைப் பார்த்ததும் ஏழைகளின் இதயத்திலே ஏக்கங்கள். சிலர் உண்ண உணவு கேட்டார்கள்; சிலர் உடுக்க உடை கேட்டார்கள் : சிலர் இருக்க இடம் கேட்டார்கள்! முன்னே சென்ற மூன்று ஞானிகளும் எந்த ஏழையின் கூக்குரலுக்கும் செவிமடுக்கவில்லை! அவர்கள் இதயத்தில் நிரம்பியிருந்ததெல்லாம் இயேசுவின் மீது அவர்கள் வைத்திருந்த ஆசை. கவனத்தை வேறுபக்கம் திருப்பினால் விண்மீனின் வழிகாட்டுதலைத் தவறவிட்டுவிடுவோமோ என்ற பயம்! நான்காவது ஞானி - அவர் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் மனம் படைத்தவர். தன்னிடம் பேச விரும்பிய ஏழைகளோடு பேசினார்; இல்லை என்று சொன்னவருக்கு இல்லை என்று சொல்லாது தன்னிடம் இருந்ததை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டார். மற்ற மூன்று ஞானிகளும் அவருக்காகக் காத்திருக்க விரும்பவில்லை! விண்மீன் பின்னால் சென்றுவிட்டார்கள். வாரி வழங்கிய வள்ளலான நான்காவது ஞானி 33 ஆண்டுகள் இயேசுவைத் தேடி அலைந்தார். இறுதியாக சிலுவையை ஏந்திச் சென்ற இயேசுவை அவர் சந்திக்கின்றார். இயேசுவின் நிலைகண்டு கண்ணீர் சிந்துகின்றார். ஐயோ, உமக்கு இந்த நேரத்தில் கொடுக்க ஒன்றுமேயில்லையே என்கின்றார். இயேசுவோ அவரைப் பார்த்து, அப்படிச்சொல்லாதே; 33 ஆண்டுகளுக்குமுன்பே எனக்குப் பிரியமானதை
எனக்குக் கொடுத்துவிட்டாய் என்றார். உம்மை நான் இப்போதுதான் இயேசுவே சந்திக்கின்றேன் என்று ஞானி சொல்ல, இயேசு, ஏழைகளுக்குச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தாய் என்றார். இன்று இயேசு நம்மைச் சுற்றி வாழும், நம் நடுவே வாழும் ஒவ்வோர் ஏழைக்குள்ளும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். இன்று நம்மால் இயேசுவைத் தேடி பெத்லகேமிற்குச் செல்ல முடியாமலிருக்கலாம்! ஆனால் நம் பக்கத்திலுள்ள ஏழைகளைத் தேடிச் சென்று அவர்களுக்குள் இயேசுவைக் கண்டு, அவர்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களுக்குப் பரிசுப் பொருள்களை அளிக்கலாமே! அன்று தன்னை பிற இனத்தவர்க்கு வெளிப்படுத்திய இயேசு, இன்று நம் வழியாகத் தம்மைப் பிற இனத்தவர்க்கு வெளிப்படுத்த விரும்புகின்றார். திருச்சபையின் ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். திருத்தூதர் பணிகள் தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை (திப 4:34) என்கின்றது. அவர்கள் நடுவே நீதி, அமைதி, மகிழ்ச்சி அனைத்தும் களிநடனம் புரிந்தன அவர்கள் அவர்களைச் சுற்றியிருந்த மக்கள் அனைவருக்கும் நீதியின் கதிரவனாகவும், அமைதியின் ஊற்றாகவும், மகிழ்ச்சியின் மகுடமாகவும் திகழ்ந்தனர். இவர்கள் எப்படி ஒருவரையொருவர் அன்பு செய்து, அகமகிழ்ந்து வருகின்றனர்! வாருங்கள் நாமும் அவர்கள் குடும்பங்களோடு சேர்ந்து வாழ்வோம் எனச் சொல்லி பிற இனத்தவர் கிறிஸ்தவ மறையில் சேர்ந்தனர் (திப 2:47). அன்றைய கிறிஸ்தவர்களின் அன்பு வாழ்வு, பாச வாழ்வு, நேச வாழ்வு, கருணை வாழ்வு பிற இனத்தவர்க்கு ஒரு மாபெரும் நற்செய்தியாக (இரண்டாம் வாசகம்) அமைந்திருந்தது. நாம் ஒவ்வொருவரும் நமது நினைவாலும், சொல்லாலும், செயலாலும், திருக்காட்சியாக மாற முயல்வோம். மேலும் அறிவோம் : அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்லைப் புழி (குறள் : 228). பொருள் : பசியால் வாழத் துன்புறும் வறியவர் பசிக் கொடுமையைப் போக்க வேண்டும். அச்செயலே ஒருவன் தான் தேடித்திரட்டிய செல்வத்தைப் பிற்காலத்தில் உதவுவதற்காகச் சேமித்து வைக்கத்தக்க கருவூலமாகும்!No comments:

Post a Comment