Tuesday 16 January 2018

பொதுக் கால 3- ஆம் ஞாயிறு

பொதுக் காலம் 3- ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி

யோனா 3:1-5, 10 கொரி 7: 29-31: மாற் 1:14-20


அருள்பணி Y.இருதயராஜ் - மறையுரை மொட்டுக்கள்

தகப்பன் ஒருவர் 10-வது படிக்கும் தன் மகனிடம், "உன்னை இந்த ஜென்மத்தில் திருத்த முடியாது என்றார். அதற்கு அவன், நான் என்ன பரிட்சைப் பேப்பரா திருத்துவதற்கு உங்க வேலையைப் பாத்துக்கிட்டு போப்பா" என்றான். விடைத்தாள் களைத்தான் திருத்த முடியும், மனிதர்களைத் திருத்த முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டான் அந்த இளைஞன். மனிதர்கள் திருந்த வேண்டும், மனிதர்கள் மனமாற்றம் அடைய வேண்டும். இன்றைய அருள்வாக்கிள் மையக்கருத்து மனமாற்றமாகும்.

இறைவாக்கினர் யோனாவின் எச்சரிக்கைக்குச் செவிமடுத்து, நினிவே நகர மக்கள் சாக்கு உடுத்தி, சாம்பலில் அமர்ந்து உண்ணாமலும் குடியாமலும் நோன்பு இருந்தனர். அவர்கள் மனமாறியதைக் கண்ட கடவுள் அவர்களை அழிக்காமல் பாதுகாத்தார். பிற இனத்தைச் சார்ந்த நினிவே மக்களும் கடவுளுக்கு அஞ்சி மனமாறினர். மனிதர் மனமாற முடியும், மனமாறவும் வேண்டும்

"காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி விட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" (மாற் 1:15) தமது நற்செய்திப் பணியின் தொடக்கத்தில், கிறிஸ்து மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தார்.

மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை, "என் பின்னே வாருங்கள்" (மாற் 1:17) என்று அழைத்தார். அவர்களும் உடனே தங்கள் படகுகளையும் வலைகளையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர், அவர்கள் நம்பியிருந்த கடலை விட்டுவிட்டு முன்பின் தெரியாத கிறிஸ்துவைப் பின்பற்ற முன் வந்தது மனமாற்றமல்லவா? மனிதர் மனமாறவேண்டும், மனமாறவும் முடியும்,

விவிலியம் சுட்டிக்காட்டும் மனமாற்றம் ஆழமான அடிப்படையான மனமாற்றம் அது உள்மனமாற்றம், இதயமாற்றம், "நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ளவேண்டாம் இதயத்தைக் கிழித்துக் கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்" (யோவே 2:13). கடவுள் ஒருவரையே நமது வாழ்வின் மையமாகவும் ஒப்பற்ற செல்வமாகவும் கருதி வாழ்வதே உண்மையான மனமாற்றம் கடலையும் மீனையும் நம்பி வாழ்ந்த மீனவர்கள் இயேசுவைப் பின்பற்றத் துணிவுடன் முன்வந்தனர். இனி அவர்கள் வாழ்வின் மையம்கடல் அல்ல. கடவுளே!

இன்றைய மனிதரின் மையம் பணமே, இன்றைய உலகின் பாவத்தை "அங்காடியின் சிலைவழிபாடு" என்கிறார் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், உலகச் சந்தையும் உலக வங்கியும் தான் இன்று நாடுகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. ஒருவர் எப்படி இருக்கிறார் என்பதைவிட அவர் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்பதே முக்கியம். சமூக ஊடகங்களும் தேவையற்ற தேவைகளை உருவாக்கி, நுகர்வுக் கலாசாரத்திற்கு மனிதரை அடிமையாக்கிவிட்டது.
பணம் வாழ்வுக்குத் தேவைதான் "இனிமையான இல்லறத்திற்குத் தேவையானது பணமா? பாசமா?" என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில், பணம்தான் தேவை என்று பேசியவர், "பொருட்பால் இல்லையென்றால், காமத்துப்பாலும் வாங்கமுடியாது. ஏன், ஆவின்பால் கூட வாங்கமுடியாது" என்று அடித்துப் பேசினார். கணவனிடம் பணம் இருந்தால்தான் அவன் 'அத்தான்", இல்லையென்றால் அவர் செத்தான்!

இவ்வுலகச் செல்வங்களை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அறிவுறுத்துகின்றார் புனித பவுல், "உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர்போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பதுபோல் நெடுநாள் இராது" (1கொரி 7:31)

இவ்வுலக இன்பங்களைத் துய்க்கும்போது அதிலே மயங்கி விடலாகாது ஒரு பாம்பின் வாயில் ஒரு தவளை. அத்தவளையின் வாயில் ஒரு வண்டு; அந்த வண்டு சிறிது நேரத்திற்கு முன்பு பூவிலிருந்து தேனை எடுத்துத் தன்வாயில் வைத்துக் கொண்டிருக்கிறது. தான் தவளை வாயிலும், தவளை பாம்பின் வாயிலும் இருப்பதை உணராமல், தனக்கு வரவிருக்கும் பேராபத்தைப் பற்றிச் சற்றும் எண்ணாமல், அந்த வண்டு தன் வாயில் இருக்கும் தேனைச் சுவைத்து மயங்கி இருக்கிறது. அவ்வாறு நாமும் இருப்பது அறிவுடமையாகுமா?

இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து விடுவிக்கக் கடவுளுக்கு ஒரு இரவு மட்டும் தேவைப்பட்டது. ஆனால் எகிப்தை அவர்களது இதயத்திலிருந்து விடுவிக்கக் கடவுளுக்கு 40 ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆம், எகிப்து நாட்டின் வெள்ளரிக்காய், வெங்காயம், வெள்ளைப்பூண்டு. இறைச்சி அம்மக்களின் இதயத்தை விட்டு அகலவே இல்லை. ஏனெனில், "வயிறே அவர்கள் தெய்வம்" (பிலி 319) எனவே இவ்வுலகச் செல்வங்களை ஞானத்துடன் பயன்படுத்தி விண்ணக நலன்களைப் பெறவேண்டும். "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (மத் 6:24). ஆண்டவரின் இந்த அருள்வாக்கு நமது மனமாற்றத்திற்கு ஓர் அறை  கூவல்

ஒவ்வேர் ஆண்டும் நமது நாட்டின் குடியரசு விழா கொண்டாடும் பொழுது நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே மற்றவர்களை  விட நாட்டுப்பற்று அதிகம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். "இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள்" (திமோ 2:2)
இரண்டு ஆண் குழந்தைகளுக்கு இலஞ்சராஜ் - ஊழல் ராஜ் என்றும், இரண்டு பெண் குழந்தைகளுக்கு சுரண்டல் ராணி - சுருட்டல்ரானி என்றும் ஒரு பெரியவர் பெயர் சூட்டினார். இலஞ்சமும் ஊழலும், சுரண்டலும் சுருட்டலும் பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்து நமது நாட்டையே உலுக்கி, நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டைகளாக உள்ளன.

நாட்டுத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மனமாற்றம் அடையவேண்டும். அடுத்தத் தேர்தலைப் பற்றிக் கவலைப்படுகிறவன் அரசியல்வாதி அடுத்தத் தலைமுறையைப் பற்றிக் கவலைப்படுகிறவன் தேசீயவாதி, அரசியல் தலைவர்கள் தங்களது கட்சியின் நலனை நாடாது. நாட்டின் நலனை நாட வேண்டும். வன்முறையும் பயங்கரவாதமும் முடிவுக்கு வந்து, அன்பும் சகோதரத்துவமும் தழைத்தோங்க மன்றாடுவோம்.

பாரதப் பூமி பழம்பெரும்பூமி
நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர் - பாரதி
 



மனம் திரும்புவோம்

குடந்தை ஆயர் அந்தோணிராஜ் - மகிழ்ச்சியூடும் மறையுரைகள்


பாவி ஒருவன் இறந்த பிறகு விண்ணகம் சென்றான். அங்கு செல்பவர்களுக்கு தீர்ப்பு வழங்க கடவுளால் நியமிக்கப்பட்ட நான்கு பேர் இருந்தார்கள்.
ஒருவர் ஆபிரகாம், மற்றொருவர் தாவீது, இன்னொருவர் புனித பேதுரு, நான்காமவர் புனித லூக்கா. பாவிதன் பாவங்களுக்காக வருந்தி
அழுது கொண்டு அவர்கள் முன்னால் நின்றான். அவர்கள் பாவியைப் பார்த்து, நீ செய்திருக்கும் பாவங்கள் பத்துக் கற்பனைகளுக்கு எதிரான பயங்கரப் பாவங்கள். அதனால் உன்னை மோட்சத்திற்குள்ளே விடமுடியாது என்றார்கள்.


உடனே அந்தப்பாவி, ஆபிரகாம், உங்களைப் பற்றி கொஞ்சம்  நினைச்சுப் பாருங்க அரசனிடம் உங்கள் மனைவியை உங்க சகோதரின்னு சொல்லி நீங்க பொய் சொல்லலெ என்றான்.

தாவீதைப் பார்த்து, தாவீதே, நீங்க மாற்றான் மனைவியை உங்க மனைவியாக்கிக்கொண்டு, அவளது கணவனைப் போர்க்களத்திற்கு அனுப்பி கொலை செய்யலெ. அதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் என்றான்.

பேதுருவே, நீங்க மூன்று முறை ஆண்டவர் இயேசுவை மறுதலிக்கலெ என்றான் பாவி,

லூக்கா, நீங்கள் உங்க நற்செய்தியிலே ஊதாரிப் பிள்ளை உவமையை எழுதி வச்சிருக்கலெ என்றான்.

அந்த சமயம் பார்த்து, கடவுள் அந்தப் பக்கமாகச் சென்றார். அங்கே என்ன நடக்குது? அப்படின்னு  கேட்டாரு. நீதிபதிகள் நான்கு பேரும், அந்தப் பாவியோட பாவங்களைப் பட்டியல் போட்டு காட்டினாங்க.

அப்போது கடவுள், உங்க நாலுபேரையும் நான் மோட்சத்துக்குள்ளே விட்டப்போ, நான் எதுவுமே கேட்கலியே, சொல்லலியே அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு.

அந்த நாலு பேரும் ஒரே குரலில் பாவியைப் பார்த்து, நீ மோட்சத்துக்குள்ளே வரலாம் அப்படின்னாங்க. 

மேலும் அறிவோம் :
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு?   (குறள் 436).

பொருள்: முதலில் தன் குறையை அறிந்து அதனைப் போக்கிக்கொண்டு, பிறகு பிறர் குறையைக் காணும் வல்லமை வாய்ந்த ஆட்சியாளர்க்கு எந்தக் குறையும் வராது...


அருள்திரு முனைவர் ம. அருள் 

 

எரியும் புதரில் மோயீசனை அழைத்தார் இறைவன்.

மெல்லிய காற்றில் எலியாசை அழைத்தார் இறைவன்

இடியின் ஒலியில் பவுலை அழைத்தார் இறைவன்

கடலில் வலை விரித்த அந்திரேயா, பேதுரு இவர்களை அழைத்தார் இயேசு!

மீன்பிடித்துக் கொண்டிருந்த சாதாரண மக்களாகிய இவர்களை அழைத்த உடன் அவர்களும் உடனே தம் படகையும், வலைகளையும் விட்டு முன்பின் தெரியாத இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அலெக்ஸ், ஷிலா என்ற இரு இளம் மருத்துவர்கள் வாழ்க்கைக்கு ஒப்பந்தம் செய்து கணவன் மனைவியாகத் தங்களை அர்ப்பணிக்க முடிவெடுத்தார்கள், பெற்றோர் இந்தத் திருமணத்தை ஆடம்பரமாகக் கொண்டாடத் திட்டமிட்டனர். பலரும் இந்த ஆடம்பரத் திருமணத்திற்காக ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக மருத்துவத் துறையில் இருந்து ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. 40 மருத்துவர்கள் கொண்ட ஒரு குழு மலேரியாக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்கா மக்களுக்கு மருத்துவப் பணி புரிய ஆறு மாதம் தங்க வேண்டும். அதில் இவர்கள் இருவர் பெயரும் இடம் பெற்றன. எனவே ஆடம்பரத் திருமணத்தை ரத்து செய்து தாங்கள் பணி புரிந்த மருத்துவமனை சிற்றாலயத்தில் அருட்தந்தை ஒருவரால் எளிமையாகத் திருமணம் நிறைவேற்றி, குறிப்பிட்டத் தேதியில் ஆப்பிரிக்கா புறப்பட்டார்கள் இந்த இளம் தம்பதிகள்.

தற்பெருமை, சுய சார்பு எண்ணங்கள், பொறாமை, போட்டி மனப்பான்மை போன்ற தீய வலைகளைக் கிழித்துவிட்டு, பகிர்வு,

பாசம், தியாகம், தாழ்ச்சி போன்ற வலைக்குள், நாம் நுழையும் போதுதான் இயேசுவை நாம் பற்றிக்கொள்ள முடியும். இவ்வாறு தான் சீடர்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். உள் மாற்றத்தையே பெற்று சாதாரண மீனவர்களாக கடலில் உயிரோடு இருந்த மீன்களை கரையிலே கொண்டு சாகடித்தவர்கள், பாவத்தால் இறந்த மனிதர்களை, உயிருள்ள வாழ்வுக்குக் கொண்டு வர உயர்த்தப்பட்டார்கள். மனமாற்றம் அடைந்தார்கள். இதனால் கடல் அல்ல எங்கள் வாழ்வு, கடவுள்தான் எங்கள் வாழ்வின் மையம் என்பதை உணர்ந்தார்கள்.

'ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா'

இறைவன் ஒருவரே நிலையானவர். எதை எதைப் பெற வேண்டும் எனத் திட்டமிடாதே. மாறாக எதை எதை இழக்க வேண்டும் என்று சிந்தித்துப் பார்!




போகிற போக்கு

அருள்பணி ஏசு கருணாநிதி - மதுரை


நம் தமிழ் மரபில் நாம் சந்திக்கும் யாரையும், 'நீங்க நல்லா இருக்கீங்களா?' எனக் கேட்கிறோம். விவிலிய எபிரேய மரபில் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போது, 'நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?' என்று கேட்பார்கள் (காண். தொநூ 16:18, நீத 19:17). இக்கேள்வியின் பின்புலம் இரண்டு: (அ) எபிரேயர்கள் அல்லது இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் குடியிருந்தனர். வீடுகள் மிகவும் தூரமாக இருந்தாலும், ஒருவர் மற்றவரோடு உள்ள தொடர்பு மிகக் குறைவாக இருந்ததாலும், ஒருவரின் வருகையையும், செல்கையையும் கேட்கும்போது அவரின் தொடக்கம் மற்றும் முடிவை அறிந்து கொண்டனர். வருகின்ற நபர் தங்களுக்கு ஆபத்து எதுவும் தராதவர் என்பதை இவ்வாறு உறுதி செய்துகொண்டனர். (ஆ) இவர்கள் தங்கள் வாழ்வை ஒரு பயணமாககே கருதினர். ஒவ்வொரு பயணத்திற்கும் இந்த இரண்டு கேள்விகளும் அவசியம். இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை தெரியாதவர் சும்மா உழன்றுகொண்டே இருப்பர். ஆக, வாழ்வின் எந்த நிலையிலும் இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை அவசியம் என்பதை இவர்கள் உறுதியாக நம்பினர்.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டு சிந்தனைக்கு, 'போகிற போக்கு' என்று தலைப்பிட்டுக்கொள்வோம். 'போக்கு' என்றால் 'போகுதல்' அல்லது 'செல்லுதல்.' 'போகுதல்' என்பது ஒரு வழியை உள்ளடக்கியிருக்கிறது. இந்த வழிக்கு தொடக்கம் ஒன்று உண்டு, இலக்கு ஒன்று உண்டு. இந்த இரண்டும் தெளிவாக இருக்கும்போது போதல் எளிதாகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். யோனா 3:15,10) நினிவே மக்கள் 'போகிற போக்கை' இறைவாக்கினர் யோனா மாற்றிப் போடுகின்றார்.

இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 7:29-31) வாழ்வின் இயலாமை பற்றிப் பேசுகின்ற தூய பவுலடியார் நாம் 'போகிற போக்கு' நிலையானது அல்ல என்றும், அது மிக வேகமாக மாறக்கூடியது என்றும் அறிவுறுத்துகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 1:14-20), 'காலம் நிறைவேறிவிட்டது' என்று தன் பணிவாழ்வைத் தொடங்கும் இயேசு, அனைத்து மக்களின் 'போகிற போக்கை' மனமாற்றத்தின் வழியாகவும், முதற்சீடர்களின் 'போகிற போக்கை' சீடத்துவ அழைப்பின் வழியாகவும் மாற்றிப் போடுகின்றார்.

'போகிற போக்கை' ஒவ்வொரு வாசகத்திற்கும் சென்று சற்று விரிவாகப் பார்ப்போம்:

முதல் வாசகம்: 'யோனாவின் போக்கும், நினிவேயின் போக்கும்'

இறைவாக்கினர் யோனாவின் பணி பயணத்தில்தான் தொடங்குகிறது. ஆண்டவர் அவருக்கு அருளும் முதல் வாக்கே, 'நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய்' என்றுதான் இருக்கிறது. ஆனால் யோனா தன் போக்கில் பயணம் செய்ய முற்படுகின்றார். ஆண்டவர் வடக்கு நோக்கி இவரை அனுப்ப, அதற்கு எதிர்திசையில் தெற்கு நோக்கி பயணம் தொடங்குகின்றார் யோனா. விளைவு கடல் கொந்தளிப்பு. கொந்தளிப்பின் இறுதியில் கடலின் மீனின் வாய்க்குள் விழ, இரண்டாம் முறையாக மீண்டும் அழைப்பு பெற நினிவேக்கு வருகின்றார் யோனா. 'நினிவே ஒரு மாபெரும் நகர். அதை கடக்க மூன்று நாள்கள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்தபின்' என பதிவு செய்கிறார் ஆசிரியர். வேண்டா வெறுப்பாக நினிவேக்குச் செல்கின்ற யோனா, மூன்று நாள் கடக்க வேண்டிய நகரின் தூரத்தை ஒரே நாளில் கடக்கின்றார். அப்படி என்றால் இவர் நடந்திருக்க மாட்டார். ஓடியிருப்பார். வேண்டா வெறுப்பாக, ஓட்டமும் நடையுமாக இறைவாக்குரைத்து முடிக்கின்றார் யோனா. மேலும், மனமாற்றம் பற்றி அவர் போதிக்கவில்லை என்றாலும், நினிவே மக்கள் யோனாவின் செய்தியை மனமாற்றத்திற்கான அழைப்பாக ஏற்று உடனடியாக செயல்படத் தொடங்குகின்றனர். 'இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்' என்ற மொட்டையான செய்தியை 'போகிற போக்கில்' சொல்லிவிடுகின்றார் யோனா. ஆனால், 'போகிற போக்கில்' சொல்லப்பட்ட செய்திதானே என போகிற போக்கில் அதை விட்டுவிடாமல், தாங்கள் போகின்ற போக்கை மாற்ற முடிவு செய்கின்றனர். அந்த மாற்றத்தை உடனே செயல்படுத்துகின்றனர். ஆண்டவரும் அவர்கள் தங்கள் தீய வழியை மாற்றிக்கொண்டதால் தம் மனத்தை மாற்றிக் கொள்கின்றார்.

இரண்டாம் வாசகம்: 'வெளி நோக்கும் போக்கிலிருந்து உள் நோக்கும் போக்கு'

திருமண வாழ்வு பற்றி கொரிந்து நகர திருச்சபைக்கு அறிவுறுத்துகின்ற பவுல் தொடர்ந்து, 'மணமாகாதவர்களும் கைம்பெண்களும் கொண்டிருக்க வேண்டிய வாழ்க்கை முறை' பற்றிப் பேசுகின்றார். பவுல் இந்தக் கடிதத்தை எழுதும் காலத்தில் (கி.பி. 60 - 100) 'பருசியா' என்று சொல்லப்படும் 'இரண்டாம் வருகை' அல்லது 'உலக இறுதி' மிக அருகில் இருப்பதாக மக்கள் நம்பினர். இந்தப் பின்புலத்தில் திருமணம் முடித்தலும், பெண் கொள்தலும், கொடுத்தலும், திருமண உரிமையால் வரும் மகிழ்ச்சியும், பிரிவால் வரும் அழுகையும் என எல்லாம் மாறிப்போகும் அல்லது அழிந்து போகும் என எண்ணுகின்ற பவுல், 'இனியுள்ள காலம் குறுகியதே' என்று தொடங்கி, 'இப்போது இருப்பதுபோல நெடுநாள் இராது' என நிறைவு செய்கிறார்.

குறுகிய காலம்தான் எல்லாம் இருக்கிறது என்றால் நாம் தேவையற்றவைகளை விடுத்துவிட்டு, தேவையானவற்றை மட்டும் பற்றிக்கொள்ள வேண்டும் என்பது பவுலின் அழைப்பாக இருக்கிறது. நாம் நம் வீட்டில் இருக்கும் போது பெரிய வீடு, இடம், தோட்டம் என எல்லாவற்றையும் பயன்படுத்துகிறோம். நம்முடைய ஒருநாள் வாழ்விற்கு மேசை, நாற்காலி, கைகழுவும் இடம், கட்டில், டிவி என நிறைய பயன்படுத்துகிறோம். ஆனால், ஒருநாள் பயணமாக நாம் அமெரிக்க ஐக்கிய நாடுகள் செல்ல விமானம் ஏறும்போது இவை எல்லாவற்றையும் விமானத்தின் ஒற்றை நாற்காலியில் அமர்வதன் வழியாக முடித்துக்கொள்கிறோம். ஆக, நம் வாழ்விற்கு ஒற்றை நாற்காலி இருந்தால் போதுமானதுதான். ஒருநாள் விமானத்தில் இந்த ஒற்றை இருக்கையோடு வாழும் நமக்கு ஓராண்டு முழுவதும் வாழ்வது சாத்தியமில்லையா? ஆக, நம் வாழ்வின் மகிழ்ச்சி என்பது நாம் நிறைய கொண்டிருப்பதிலும், நிறைய அனுபவத்திலும் இல்லை. மாறாக, அது நம் ஒவ்வொருவருக்கும் உள்ளே பொதிந்து இருக்கிறது. ஆக, வெளி நோக்கி நாம் செல்லும் போக்கை உள்நோக்கி திருப்ப வேண்டும் என்பது இரண்டாம் வாசகத்தின் பாடம்.

நற்செய்தி வாசகம்: 'இயேசுவின் போக்கும், சீடர்களின் போக்கும்'

மாற்கு நற்செய்தியாளரின் இயேசுவின் பணி வாழ்வு தொடக்கத்தைப் பதிவு செய்யும்போது, 'யோவான் கைதுசெய்யப்பட்ட பின்' என்று தொடங்குகின்றார். ஆக, 'யோவானுக்கு திரை விழுந்து' 'இயேசுவுக்கு திரை விலகுகிறது.' இதுதான் 'காலம் நிறைவேறிவிட்டது' என்பதன் பொருள். 'யோவானின் காலம் நிறைவேறிவிட்டது,' 'மீட்பற்ற நிலையின் காலம் நிறைவேறிவிட்டது,' 'இனி தொடர்வது எல்லாம் புதிய காலமே' என 'இறையாட்சியின் வருகையை அறிவிக்கின்றார்' இயேசு. இந்த இறையாட்சியை அறிந்து கொள்வது என்பது 'மனம் மாறி நற்செய்தியாகிய இயேசுவை நம்புவதில்' அடங்கியிருக்கிறது. இயேசுவின் போக்கு தன் வாழ்வின் கூட்டு நிலையிலிருந்து வெளியேறி பணி வாழ்வுக்குள் நுழைவதாக இருக்கிறது.

போகிற போக்கில் நற்செய்தி அறிவித்த யோனா போல அல்லாமல், தம் சீடர்களின் 'போக்கை மாற்றுகின்றார்' இயேசு. இயேசுவுக்கும், யோனாவுக்கும் இன்னும் சில வித்தியாசங்களும் உள்ளன. தம்மிடம் அறிகுறி கேட்பவர்களுக்கு யோனாவின் அறிகுறியை வழங்கும் இயேசு, 'இங்கிருப்பவர் யோனாவைவிட பெரியவர் அல்லவா!' (மத் 12:41) என முழங்குகின்றார். யோனா நகரத்தில் தன் பணியைச் செய்தார். இயேசுவோ கிராமத்தில் செய்தார். யோனாவின் பயணம் மையம் நோக்கி இருந்து. இயேசுவின் பயணமோ விளிம்பி நோக்கி இருந்தது. யோனா ஓட்டமும் நடையுமாக பணி செய்கிறார். இயேசு ஆற அமர பணி செய்கிறார்.யோனா வேண்டா வெறுப்பாகச் செய்கிறார். இயேசு மக்கள் மேல் கொண்ட பரிவினால் செய்கிறார்.இவ்வாறாக, அவர் 'யோனாவைவிட பெரியவராக' இருக்கின்றார்.

இயேசு திருத்தூதர்களை அழைக்கும் நிகழ்வு மாற்கு 3:14-15ல் இருந்தாலும், முதற்சீடர்களை அழைக்கும் நிகழ்வை நாம் மாற்கு 1:14-20ல் வாசிக்கின்றோம். சீமோன் - அந்திரேயா, யாக்கோபு - யோவான் என்னும் இரண்டு ஜோடி சகோதரர்களை அழைக்கின்றார் இயேசு. நான் இந்த நிகழ்வை ஓர் உருவகமாக பார்க்கிறேன். எப்படி?

கடல் என்பது இவ்வுலகில் உள்ள எல்லாரையும் குறிக்கிறது. இவ்வுலகில் உள்ள எல்லாருமே நாம் கடலோரமாய் தான் நின்றுகொண்டிருக்கிறோம். இந்த நின்றுகொண்டிருத்தலில் ஒருவகையான காத்திருத்தலும், எதிர்நோக்கும் இருக்கிறது. இவ்வாறு, காத்திருக்கும் நாம் நம் வாழ்வு என்னும் கடலில் நம் பணிகள், பயணங்கள், படிப்பு, உறவுநிலைகள் வழியாக 'கடலில் வலை வீசிக்கொண்டிருக்கிறோம்.' அதாவது, நம் அன்றாட அலுவல் ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறோம். பிறந்த குழந்தைக்கும்கூட ஏதோ ஒரு அலுவல் அல்லது ஒரு கவலை இந்த உலகில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படி நம் வேலையில் மும்முரமாக இருக்கும் நம்மை நோக்கி கடவுளின் அழைப்பு வருகிறது. ஆக, அந்த அழைப்பு வரும் கணப்பொழுதில் நாம் சட்டென முடிவு எடுக்க வேண்டும். அந்த முடிவிற்காக நாம் பெரிய விலையைக் கொடுக்க வேண்டும். நம் வலைகளை விட்டுவிட வேண்டும். கடலை நோக்கி நம் முதுகைத் திருப்ப வேண்டும். இனி கடல் நம்மிடமிருந்து விடைபெற வேண்டும். பாதி கடல், பாதி கடவுள் என்று நம்மால் பயணம் செய்ய முடியாது. சீமோன் - அந்திரேயா போல வலைகள் என்னும் வேலைகளை விட வேண்டும். யாக்கோபு - அந்திரேயா போல நம் அப்பாவை, உறவுகளை, கூலியாள்களோடு விட வேண்டும். கூலியாள் என்பவர் நம் ஆடம்பரம். நம் வேலையை நாம் செய்வதற்குப் பதிலாக நமக்கு நம் வேலையை செய்யும், நம் அதிகாரத்திற்கு தூபம் போடுபவர்கள்தான் கூலியாள்கள். கூலியாள்களை விட்டுவிடுவது என்பது நம் அதிகாரத்தையே விட்டுக்கொடுப்பது. அப்பாவை விடுவது என்பது எல்லா உறவுகளையும் விடுவது. ஆக, வேலை, உறவு, அதிகாரம் என்ற மூன்றை நோக்கிய நம் போக்கை மாற்றிப்போடுகிறது இயேசுவின் அழைப்பு.

இவ்வாறாக, இன்றைய நம் போக்கு (வழி) என்ன? நாம் போகிற போக்கு சரிதானா? என்பதை மறுஆய்வு செய்ய நமக்கு அழைப்பு விடுக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

இவ்வாறாக, நாம் நம் போக்கை மாற்றுவதால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் எவை?

முதல் வாசகத்தில், தங்கள் போக்கை மாற்றிய நினிவே மக்கள், தங்கள் ஓட்டத்தை நிறுத்தி சாம்பலில் அமர்ந்த நினிவே மக்கள் கடவுளின் தீர்ப்பு அல்லது தண்டனைக்குத் தப்பியவர்களாய் அவரது இரக்கத்தைப் பெறுகின்றனர். இரண்டாம் வாசகத்தில், தங்கள் போக்கை மாற்ற அறிவுறுத்தப்படும் கொரிந்து நகர மக்கள் நிலையான மகிழ்ச்சியாம் ஆண்டவருக்குப் பணிபுரிதலைக் கண்டுகொள்கின்றனர். நற்செய்தி வாசகத்தில், தங்களின் வேலை, அப்பா, வேலையாள்கள் ஆகியவற்றிலிருந்து தங்கள் போக்கை மாற்றும் முதற்சீடர்கள் நற்செய்தியாம் இயேசுவைப் பற்றிக்கொள்கின்றனர்.

இந்த மூன்று போக்கு மாற்றங்களுக்கும் இவர்கள் பெரிய விலையைக் கொடுக்க வேண்டும். அந்த விலை என்னவென்றால், 'ஒருமுறை விட்ட வழியில் அவர்கள் மீண்டும் செல்லக்கூடாது.' நினிவே மக்கள் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்புதல் கூடாது. கொரிந்து நகர மக்கள் இவ்வுலக வாழ்வின் கவலைகளில் தங்களை ஆழ்த்தக் கூடாது. முதற்சீடர்கள் தங்கள் வலைகளையும், அப்பாவையும், கூலியாள்களையும் நாடிச் செல்லக்கூடாது. (இந்த சோதனை சீடர்களுக்கு இயேசுவின் இறப்பிற்குப் பின் வருகிறது - காண். யோவா 21:3. ஆனால் இந்த சோதனையும் அவர்களின் கடவுளின் பிரசன்னம் வெளிப்படும் நிகழ்வாக மாறுகிறது).

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?

1. நாம் 'போகிற போக்கில்' வாழ்கிறோமா? அல்லது 'போக்கையே மாற்றி' வாழ்கிறோமா?

யோனாவிடம் ஓர் இனம்புரியாத கோபம் இருக்கிறது. தன்மேல், தன்னைச் சுற்றியிருப்பவர்கள்மேல், தன் கடவுள்மேல். இந்தக் கோபம் இருப்பதால் அவரால் வாழ்வை முழுமையாக வாழ முடியவில்லை. ஆனால், அதற்கு எதிர்மாறாக இயேசுவிடம் பரிவு மட்டுமே இருக்கிறது. கோபம் குடிகொள்ளும் யோனா தன்னை மையப்படுத்தியவராக இருக்கிறார். பரிவு குடிகொள்ளும் இயேசு பிறரை மையப்படுத்தியவராக இருக்கிறார். இன்று என் வாழ்வை முழுமையாக வாழ்வதற்கு தடையாக இருக்கும் காரணி எது? அது எங்கே இருக்கிறது?

2. 'எங்கள் சொல்லும் செயலும் உமக்கு உகந்தனவாக அமைய எங்களுக்கு வழிகாட்டும்'

இன்றைய சபை மன்றாட்டில் நாம் இப்படித்தான் செபிக்கின்றோம். நம் சொற்களும், செயல்களும் அவருக்கு உகந்தனவாக இருக்க அவர் தான் வழிகாட்ட வேண்டும். ஆக, நம் வாழ்வின் ஓட்டம் அவர் கைகளில் இருக்கிறது. இதுவே இன்றைய பதிலுரைப்பாடலில் திருப்பாடல் ஆசிரியரின் செபமாக இருக்கிறது: 'ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும். உம் வழிகளை எனக்கு கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்கு கற்பித்தருளும்' (திபா 25:4-5). ஆண்டவரின் வழிகளை நம்மால் கற்றுக்கொள்ள முடியுமென்றால் நாம் திறந்த உள்ளம் கொண்டிருக்கிறோமா?

3. 'பொருள்களை வாங்குவோர் அது இல்லாதவர் போலவும் இருக்கட்டும்'

இருந்தாலும் இல்லாதவர் போல, இல்லை என்றாலும் இருப்பவர் போல வாழ்வது என்றால் என்ன? இப்படி இருப்பதாக நடிப்பது அல்லது யூகிப்பது அல்ல. மாறாக, நாம் கொண்டிருக்கும் பொருள்கள் அல்லது நபர்கள் நம் வாழ்வைக் கூட்டுவதோ, குறைப்பதோ இல்லை என உணர்வது. பவுல் 'மனைவி உள்ளவர் மனைவி இல்லாதவர்போல' இருக்கட்டும் என்கிறார். பவுல் அளவிற்கு நம்மால் புரட்சிகரமாக எல்லாவற்றையும் ஒதுக்கிவைக்க முடியவில்லை என்றாலும், கொஞ்சம் கொஞ்சமாக பற்றுக்களை குறைத்துக்கொள்தல் நலம். இதைப் புரிந்துகொள்ளவே கடவுளின் தூண்டுதல் அவசியம் என நினைக்கிறேன். நம்ம வாழ்வையே நினைத்துப் பார்ப்போம். ஒவ்வொரு கால கட்டத்தில் நாம், 'இதுதான் உலகம்' என பிடித்துக்கொண்டிருந்தது, அடுத்த கட்டத்திற்குள் நுழையும்போது நம்மை அறியாமலேயே நம் கை நழுவிப் போய்விடுகிறது. வாழ்வின் போக்கிற்கு ஏற்ப நம் போக்கை அமைத்துக்கொள்வது.

இயேசு வருவார் என்று சீமோனும், பேதுருவும், யாக்கோபும், யோவானும் வழிமேல் விழி வைத்து ஓய்ந்திருக்கவில்லை. வலைகளை வீசிக்கொண்டும், படகுகளை பழுதுபார்த்துக்கொண்டும்தான் இருந்தனர். அதே வேளையில் இயேசு வந்தவுடன் தங்கள் உலகமாக அவர்கள் நினைத்த வலைகளையும், படகுகளையம், அப்பாவையும், கூலியாள்களையும் விட தயாராக இருந்தனர். ஆக, எல்லாவற்றிற்கும் 'ஆம்' என்று சொல்லும் தயார் மனநிலை இது. அவ்வாறே, யோனாவின் வருகையை நினிவே மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் வந்தவுடன் மனமாற்றத்திற்கு தாமதிக்கவில்லை. வாழ்க்கை சில நேரங்களில் எல்லாவற்றையும் settle செய்வதற்கு நமக்கு நேரம் கொடுப்பதில்லை. இருக்கும்போதே அப்படியே போட்டுவிட்டு அடுத்த நிலைக்குச் செல்ல அழைக்கிறது. இப்படி செல்வதற்கு கட்டின்மை வேண்டும்.

அவரின் வழி என் வழியாக, அவரின் போக்கே நான் போகிற போக்காக இருந்தால் எத்துணை நலம்!





மனம் மாறுங்கள் நற்செய்தியை நம்புங்கள்!

அருள்பணி மரிய அந்தோனிராஜ்


ஓர் ஊரில் ஜாக் என்னும் இளைஞன் இருந்தான். ஆலயங்களுக்கு வண்ணம் பூசுவதுதான் அவனுடைய பிரதான வேலையே. அவன் ஆலயங்களுக்கு வண்ணம் பூசுகின்றபோது அதிக விலைக்குப் பொருட்கள் வாங்குவதாகச் சொல்லிக்கொண்டு, மிகவும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி வண்ணம் பூசி வந்தான்.


ஒரு சமயம் அவனுக்கு மிகப்பெரிய ஆலயத்திற்கு வண்ணம் பூசக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. வழக்கம் போல அவன் மிகவும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி, வண்ணம் பூசிக்கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் ஆலயத்தின் மேல் கூரையில் வண்ணம் பூசிக்கொண்டிருந்தபோது திடிரென்று இடி இடித்தது. இதனைச் சிறிதும் எதிர்பார்த்திராத ஜாக், நிலை தடுமாறு கீழே விழுந்தான். அதிஷ்டவசமாக அவருடைய உடலில் பெரும் காயங்கள் எதுவும் ஏற்படாமல், சிறு காயங்களோடு உயிர் தப்பினான்.


அப்போது அவன் அண்ணார்ந்து பார்த்து, “ஆண்டவரே! நான் செய்த தவறுகளுக்கு இது தேவைதான். இப்போது நான் என்னுடைய குற்றங்களை உணர்கின்றேன். அடுத்து நான் என்ன செய்வது?” என்று கேட்டான். அதற்கு மேலிருந்து, “மனமாறு! மலிவான விலைவில் தரம் குறைந்த பொருட்களைப் பயன்படுத்தி வண்ணம் பூசாதே! நல்ல முறையில் வண்ணம் பூசு” என்று ஒரு குரல் ஒலித்தது. அன்றிலிருந்து ஜாக் மனம்மாறி, கடவுளுக்குப் பயந்து தன்னுடைய தொழிலை மிக நேர்த்தியாக செய்யத் தொடங்கினான்.


பாவ வழியில் நடக்கும் ஒவ்வொருவரும் மனம்மாறவேண்டும். அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை வாசகங்கள் அனைத்தும் ‘மானமாற்றம்’ என்னும் செய்தியைத்தான் தாங்கி வருகின்றன. நாம் அதனைக் குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.


மனமாற்றத்தைக் குறித்து சொல்கின்றபோது மாக்சிமுஸ் என்னும் புனிதர் இவ்வாறு சொல்வார், “கடவுள் நாம் ஒவ்வொருவரும் மீட்படையவேண்டும் என்றுதான் விரும்புகின்றார். எனவே, நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, மனம்மாறி அவரிடம் திரும்பி வருகின்றபோது அவர் அடைகின்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆம், பாவி ஒருவர் மனம்மாறி ஆண்டவரிடத்தில் செல்கின்றபோது கடவுளுக்கு அதைவிட மகிழ்ச்சி தரக்கூடிய காரியம் வேறொன்றும் இல்லை.


நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு நாற்பது நாட்கள் நோன்பிருந்து தன்னைத் தயாரித்துக்கொண்டு தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்குகின்றார். அப்படி அவர் தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்குகின்றபோது போதிக்கின்ற முதல் போதனை ‘காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்பதுதான். இயேசு கிறிஸ்து இந்த பூவுலகில் பிறந்ததே இறையாட்சியின் தொடக்கம்தான். எனவே, மக்கள் அவருடைய வருகைக்காகத் தங்களையே தயாரிப்பது அவருக்கு ஏற்ற செயலாகும். ஆகையால், காலத்தை விரையமாக்காமல், கடவுளிடம் திரும்பி வருவதுதான் கடவுளுக்கு ஏற்ற செயலாகும்.


தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (இரண்டாம் வாசகம்) காலம் எத்துணை குறுகியது என்று சொல்கின்றபோது இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இருக்காது” என்கின்றார். ஆகையால், குறுகிய காலத்தில் நாம் கடவுளிடம் திரும்பி வருபது என்பதுதான் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.


இறையாட்சி வருவதற்கான காலம் எத்துணை குறுகியது என்று சிந்தித்துப் பார்த்த நாம், எது உண்மையான மனமாற்றம்?, நாம் ஏன் மனமாறவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்போம். மனமாற்றம் என்று சொல்கின்றபோது ஒருமனிதன் அதுவரை வாழ்ந்து வந்த பாவ வழியிலிருந்து முற்றிலுமாக திரும்பி வருவது. ஆங்கிலத்திலே U turn என்று சொல்கின்றோம். ஆம், பாவ வழியில் நடக்கின்ற ஒருவர் தன்னுடைய குற்றங்களை உணர்ந்து, கடவுளிடத்தில் திரும்பி வரவேண்டும். அதுதான் மனமாற்றத்திற்கான முதல்படியாக இருக்கின்றது.


இறைவாக்கினர் யோனா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் யோனா கடவுளால் இரண்டாம் முறையாக அழைக்கப்படுகின்றார். கடவுளால் அழைக்கப்பட்ட அவர் பாவ வழியில் வாழ்ந்து வந்த நினிவே நகர மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பப்படுகின்றார். நினிவே நகரோ யூதர்கள் வாழ்ந்த நகரம் கிடையாது. அது புறவினத்தார் வாழ்ந்த நகரம். அப்படிப்பட்டவர்களிடம்தான் இறைவாக்கினர் அனுப்பப்படுகின்றார். இங்கே நாம் இன்னொரு உண்மையை உணர்ந்துகொள்ளவேண்டும். அது என்னவென்றால், யூதர் மட்டும்தான் மீட்படைய வேண்டும் என்பதல்ல, எல்லா மக்களும் மீட்படைய வேண்டும் என்பதுதான் கடவுளின் கடவுளின் விரும்பம். அதனால்தான் புறவினத்தார் வாழ்ந்த பகுதியாக நினிவே நகருக்கு இறைவாக்கினர் யோனாவை அனுப்பி வைத்து, அவர்களுக்கு மனமாற்றச் செய்தியை அறிவிக்கச் செய்கின்றார்.


யோனானின் செய்தியைச் கேட்ட நினிவே நகர மக்கள் - சிறுவர் முதல் பெரியவர் வரை - சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து நோன்பிருக்கின்றார்கள். இறைவன் அவர்களுடைய செயல்பாடுகளைப் பார்த்து, தன்னுடைய முடிவினை மாற்றிக்கொண்டு அவர்களை அழிக்காமல் விட்டுவிடுகின்றார். இறைவனின் விரும்பம் நாம் அழிந்து போகவேண்டும் என்பதல்ல, மாறாக நாம் அனைவரும் மனம்மாறி, அவரிடம் திரும்பி வரவேண்டும் என்பதே ஆகும். அதனை இன்றைய முதல் வாசகம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. ஆகையால், ஓர் உண்மையான மனமாற்றம் என்பது வெறுமனே பேச்சுக்காக மனம்மாறிவிட்டேன் எனச் சொல்வதாக இருக்காமல், செயலில் வெளிப்படுவதாக இருக்கவேண்டும். அதுதான் உண்மையான மனமாற்றம் ஆகும்.


திருமுழுக்கு யோவான் தன்னிடம் திருமுழுக்கு பெற வருகின்றவர்களிடம், “நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயலில் காட்டுங்கள்” (மத் 3: 8) என்பார். ஆம், மனமாற்றம் என்பது செயலில் வெளிப்படவேண்டும். பேச்சளவில் தங்கிவிட்டால் அது ஒருபோதும் உண்மையான மனமாற்றமாக இருக்காது.


சில ஆண்டுகளுக்கு முன்பாக பசிபிக் தீவுப் பகுதியில் ஒரு குருவானவர் தங்கி, அங்கிருந்த மக்களுக்குப் போதித்து வந்தார்.


ஒருநாள் அவரைப் பார்க்க அந்தப் தீவில் வாழ்ந்து வந்த ஓர் இளம்பெண் தன்னுடைய இரண்டு கைகளிலும் கடற்கரை மணலை அள்ளிக்கொண்டு வந்தார். அந்த மணல் மிகவும் ஈரமாக இருந்தது, மட்டுமல்லாமல் அதிலிருந்து தண்ணீர் மெல்ல வடிந்துகொண்டிருந்தது. நேராக வந்த அந்தப் இளம்பெண் குருவானவரிடம் சென்று, “இது என்ன?” என்று கேட்டார். அவர் “கடற்கரை மணல்” என்றார். “எதற்காக இந்த மணலை அள்ளிக்கொண்டு வந்திருக்கின்றேன் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். குருவானவர் தெரியாது என்று சொல்ல, அதன் இளம்பெண், “இந்த கடற்கரை மணல்தான் என்னுடைய பாவங்கள். இந்த மணலை எப்படி எண்ண முடியாது. அந்தளவுக்கு நான் பாவங்கள் செய்திருக்கின்றேன். நான் செய்த இவ்வளவு குற்றங்களையும் இறைவன் மன்னிக்கவே மாட்டார்” என்றார்.


அதற்குக் குருவானவர் அவரிடம், “அப்படி நினைக்காதே! இறைவன் நீ செய்த குற்றங்கள் அனைத்தையும் மன்னிப்பார்” என்று சொல்லிவிட்டு, அவர் அந்த இளம்பெண்ணிடம், “இந்த மணலை கடற்கரையிலிருந்து தானே எடுத்துவந்தாய்?” என்று கேட்க, அவர் ஆம் என்று பதில் சொன்னார். “அப்படியானால், இந்த மணலை வைத்து கடற்கரையில் ஒரு சிறிய வீடு கட்டினால், அது என்னவாகும்?” என்று கேட்டார். அந்த இளம்பெண்ணோ, “அந்த வீட்டை சிறிது நேரத்திலே கடல் அலை வந்து அடித்துக்கொண்டு போய்விடும்” என்றார்.


“நீ சொல்வது மிகச் சரி. எப்படி கடற்கரையில் கட்டப்படும் வீட்டை கடலலை வந்து அடித்துக்கொண்டு போய்விடுமோ, அது போன்றுதான் நீ செய்த குற்றங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்துப் போக்கிவிடுவார். ஏனென்றால், கடவுளின் இரக்கமும் அன்பும் கடலைவிடப் பெரியது. அதற்கு முன்பாக உன்னுடைய குற்றங்கள் எல்லாம் ஒன்றமில்லை” என்றார். குருவானவர் இவ்வாறு சொன்னதைக் கேட்ட அந்த இளம்பெண் தன்னுடைய குற்றங்களுக்காக மனம் வருந்தி, மனம் திரும்பிய பெண்ணாக வாழத் தொடங்கினார்.


ஆம், உண்மையான மனமாற்றம் செயலில் வெளிப்படவேண்டும்.


நிறைவாக நாம் மனமாறுவதால் என்ன நடக்கின்றது என்றும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். லூக்கா நற்செய்தியில் ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாக எடுத்துக்கூறுவார், “மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்” (லூக் 15: 7) என்று. இது முற்றிலும் உண்மை. எப்படி என்றால் பாவ வழியில் வாழக்கூடிய ஒருவன் மனமாற்றம் அடைகின்றபோது முதலில் அவனுக்கு அது நலம் பயப்பதாக இருக்கின்றது, அடுத்ததாக அவனைச் சார்ந்த அவனுடைய பெற்றோர், உற்றார், உடன்பிறப்புகள் ஆகியோருக்கும் நலம் பயப்பதாக இருக்கின்றது. அதை விடவும் ஆண்டவருக்கும், அவருடைய வானதூதர்களுக்கும் நலம் பயப்பதாக இருக்கின்றது. ஏனென்றால் கடவுள் தீயோரின் அழிவில் மகிழ்கின்ற கடவுள் அல்ல, அவர் அவனுடைய மனமாற்றத்தில் மகிழ்கின்ற கடவுள். ஆகையால், தீய வழியில் நடக்கின்ற நாம் மனமாற்றம் அடைகின்றபோது அது எல்லாருக்கும் நல்லது.


எனவே, மனமாற்றம் அடைவதற்கான காலம் மிகக் குறுகியது என்பதை உணர்வோம். கடவுளின் மேலாக அன்பையும், இரக்கத்தையும் எப்போதும் நினைத்துப் பாப்போம். மனம் மாறிய மக்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.




No comments:

Post a Comment