Saturday, 16 December 2017

திருவருகைக் காலம் முன்றாம் ஞாயிறு - 17-12-2017


திருவருகைக் காலம் முன்றாம் ஞாயிறு - 17-12-2017

இன்றைய வாசகங்கள்:


காலி மனத்தோடு காத்திருப்போம்

மகிழ்வுட்டும் மறையுரை
குடந்தை அந்தோணிசாமி


இதோ திருமுழுக்கு யோவான் தன்னைப் பற்றி என்ன சொல்கின்றார் பாருங்கள் !
நாள் மெசியா அல்ல (யோவா 1:19). நான் எலியா அல்ல (யோவா :2அ). நான் வரவேண்டிய இறைவாக்கினர் அல்ல (யோவா 1:2 ஆ) எனக்குப் பின்வருபவர் என்னைவிட வலிமை மிக்கவர் (மாற் 1:7).
எனக்குப்பின் வருபவரின் மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை (யோவா :27).
எனக்குப்பின் வருபவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர் [ Gulumsum ill:3094).
வரவிருப்பவரை வெளிப்படுத்தவே நான் வந்துள்ளேன் (யோவா l:3).
நான் மெசியாவிற்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்(யோவா 3:28).
நம் நடுவே வந்திருப்பவரின் செல்வாக்குப் பெருகவேண்டும்; எனது செல்வாக்குக் குறையவேண்டும் (யோவா 3:30).
திருமுழுக்கு யோவான்தன்னைப் பற்றிக் கூறியுள்ளதையெல்லாம்
கூட்டி, பெருக்கி, கழித்து, வகுத்துப்பார்த்தால் நமக்கு ஓர் உண்மை வெளிப்படும். அது என்ன உண்மை? தூய ஆவியாரால் அருள்பொழிவு
செய்யப்பட்ட ஆண்டவராகிய இயேசுவே! நான் ஒன்றுமில்லாதவன்,
வெறுமையே உருவானவன் என்று திருமுழுக்கு யோவான் சொல்லாமல்
சொன்னார்.
தன்னையே வெறுமையாக்கிக் கொண்டு, தன்னிடம் வருபவரின் நிறை ஆசியைப் பெற திருமுழுக்கு யோவான் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு, காலி மனத்தோடு காத்திருந்தார். இயேசுவுக்கு வெறுமை என்றால் மிகவும் பிடிக்கும். நரிகளுக்குப் பதுங்கு குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை (லூக் 9:58) என்றவர் இயேசு.
எல்லாரையும்விட அவரையே நாம் அதிகம் அன்பு செய்ய வேண்டும் (மத் 10:37) என்று விரும்புகின்றார் இயேசு.
என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரே அதைக் காத்துக்கொள்வர் (மத் 10:39) என்றவர் இயேசு.
தன்னையே வெறுமையாக்கிக் கொண்டவர் இயேசு (பிலி 2:7).
தனக்குப் பிரியமான ஒன்றைத் தந்த திருமுழுக்கு யோவானுக்கு எண்ணற்ற வரங்களை இயேசு அளித்தார்.
தனக்கு முன் சென்று மனிதர்களின் மனதைச் செம்மைப்படுத்தும் முன்னோடியாக திருமுழுக்கு யோவானைத் தேர்ந்துகொண்டார் இயேசு (யோவா 1:23).
தன்னை உலகுக்கு அறிமுகப்படுத்திவைக்கும் பேற்றினைத் திருமுழுக்கு யோவானுக்கு இயேசு தந்தார் (யோவா 1:29).
தனக்குத் திருமுழுக்குக் கொடுக்க திருமுழுக்கு யோவானை இயேசு தேர்ந்துகொண்டார் (யோவா 1:32-34).
தன்னை இறைமகன் என அறிந்துகொள்ளும் ஞானத்தைத் திருமுழுக்கு யோவானுக்கு இயேசு தந்தார் (யோவா :34).
நம்மைச் சந்திக்க வரும் இயேசு திருமுழுக்கு யோவானை ஆசிர்வதித்ததுபோல நம்மையும் ஆசிர்வதிக்க விரும்பினால், அமைதி அருளும் ஆண்டவரால் நமது உள்ளமும், ஆன்மாவும், உடலும் முழுமை பெற விரும்பினால் (1 தெச 5:23-24), வெறுமை நிறைந்த, தாழ்ச்சி நிறைந்த காலியான மனத்தோடு இயேசுவுக்காகக் காத்திருக்க வேண்டும்.


நீங்கள் அறியாத ஒருவர்

அருள்பணி ஏசு கருணாநிதி மதுரை

நம் சமகாலத்தில் வாழ்ந்த சிறந்த ஆன்மீகவாதி இயேசுசபை அருள்தந்தை அந்தோனி டிமெல்லோ அவர்கள் 'சாதனா' என்ற நிறுவனத்தின் வழியாக ஜென் வகை புத்தமதத்தை கிறிஸ்தவம் கலந்து கொடுத்து தம் புதிய சிந்தனைகள் வழியாக இந்த உலகிற்கு அறிமுகமானவர். அவர் தன் 'ஒன் மினிட் விஸ்டம்' என்ற நூலில் பின்வரும் நிகழ்வை பதிவு செய்கின்றார்:
புத்த மடாலயம் ஒன்றில் நிறைய புத்த பிக்குகள் தங்கியிருந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வந்துகொண்டே இருந்தன. ஒருநாள் வேறொரு நாட்டுப் புத்த பிக்கு ஒருவர் இந்த மடாலயம் வழியே பயணம் செய்ய நேர்கிறது. தன் பயணம் நீண்ட பயணம் என்பதால் இந்த மடாலயத்தில் தங்கி ஓய்வெடுத்துவிட்டுப் புறப்படலாம் என இங்கே தங்குகின்றார். அங்கே நடந்த சண்டை சச்சரவுகளால் இரவில் அவரால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. காலையில் எழுந்து தன் பயணத்தைத் தொடருமுன் மடாலயத்தில் இருந்த புத்த பிக்குகளில் ஒருவரை அழைத்து, 'புத்தர் இங்கே இருக்கின்றார். நீங்கள் அவர்களை அறியவில்லையா?' என்று கேட்டு விட்டுத் தன் வழியே புறப்பட்டுச் செல்கின்றார். 'புத்தர் நம் நடுவே இருக்கின்றார்' என்ற செய்தி அனைத்து பிக்குகள் மத்தியிலும் வேகமாகப் பரவுகின்றது. 'இவர் புத்தராக இருப்பாரோ!' 'அவர் புத்தராக இருப்பாரோ!' என்று ஒருவர் மற்றவரை நினைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் அன்புடனும், நட்புடனும், மரியாதையுடனும் பழகத் தொடங்குகின்றனர். அந்த மடலாயம் தான் தொலைத்த மகிழ்வை மீண்டும் கண்டுகொள்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 1:6-8,19-28) எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, 'நீர் யார்?' என்று கேட்டபோது, இறுதியாக, ' நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்' என்று இயேசுவைக் குறித்து திருமுழுக்கு யோவான் சான்று பகர்கின்றார். 'அறிதல்' என்பது யோவான் நற்செய்தியில் மிக முக்கியமான வார்த்தை. ஏனெனில் 'அறிதல்' என்பது ஒருவருக்கு நிலைவாழ்வைக் கொடுக்கும் என்பது யோவான் நற்செய்தியாளரின் புரிதல். இதை நாம் யோவா 17:3ல் வாசிக்கின்றோம்: 'உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் 'அறிவதே' நிலைவாழ்வு.'
திருவருகைக்காலத்;தின் மூன்றாம் ஞாயிற்றை நாம் 'மகிழ்ச்சி ஞாயிறு' என்று கொண்டாடுகின்றோம். இன்றைய திருப்பலியின் தொடக்கப் பல்லவி 'கௌதேத்தே' ('மகிழ்ந்திருங்கள்') என்று சொல்வதால் இந்த ஞாயிறு 'கௌதேத்தே' ஞாயிறு அல்லது மகிழ்ச்சி ஞாயிறு என அழைக்கப்படுகின்றது.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசாயா 61:1-2,10-11) 'மகிழ்ச்சி' என்ற கருத்துரு, 'பெருமகிழ்ச்சி,' 'பூரிப்பு,' என்ற நேரடியான வார்த்தைகளாலும், 'விடுதலை,' 'நேர்மை,' 'துளிர்த்தல்,' 'முளைத்தல்' போன்ற மறைமுகமான வார்த்தைகளாலும் சொல்லப்படுகிறது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 தெச 5:16-24) தூய பவுல் 'மகிழ்ச்சி' என்ற கருத்துருவை 'எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்' என்ற அறிவுரை வழியாக முதன்மைப்படுத்துகின்றார். நற்செய்தி வாசகத்தில் 'மகிழ்ச்சி' என்ற வார்த்தை நேரடியாக இல்லை என்றாலும் திருமுழுக்கு யோவானின் சான்று பகர்தல் அவரை மகிழ்ச்சிநிறை மனிதராக முன்வைக்கின்றது.
இன்றைய வாசகங்களின் பின்புலத்தில் மகிழ்ச்சிக்கான வழி என்ன என்பதைப் பார்ப்போம்:
1. ஆண்டவரே மகிழ்ச்சியின் ஊற்று
இன்றைய முதல் வாசகத்தில் 'மகிழ்ச்சி' என்பது ஆண்டவர் வழங்கும் கொடையாகத் திகழ்கின்றது. அதாவது, பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள் நாடு திரும்பிய பின் நடக்கும் நிகழ்வுகளை இறைவாக்குரைக்கின்ற அல்லது பதிவு செய்கின்ற எசாயா, மூன்றாம் ஊழியர் பாடலில் ஆண்டவரின் அருள்பொழிவு தன்னிடம் இருப்பதாக உருவகிக்கின்றார். இது மெசியாவைக் குறித்த முன்னறிவிப்புப் பாடலாக இருந்தாலும், இங்கே இறைவாக்கினரும், இஸ்ரயேல் மக்கள் ஒவ்வொருவரும் தங்களையே 'ஊழியர்' என்று கருதிக்கொள்ள அழைக்கப்படுகின்றனர்.
ஆண்டவரால் அருள்பொழிவு பெற்ற நிலையில் இருக்கும் ஒவ்வொருவரும் 'ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலை பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும்' அழைப்பு பெறுகின்றார். இப்படிப்பட்ட பணியைச் செய்யும் யாவரும் கடவுளின் மகிழ்ச்சியைக் கண்டுகொள்கின்றனர்.
இப்படி பணி செய்யும் ஒருவர், 'ஆண்டவரில் நான் மகிழ்ச்சி அடைவேன். என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்' என்று தன் மகிழ்ச்சியை ஆண்டவரில் கண்டுகொள்வார்.
இவ்வளவு நாளாக இருளிலிலும், இறப்பின் பிடியிலும் நின்ற இஸ்ரயேல் இப்போது 'மலர்மாலை அணிந்த மணமகன்போலும், நகைகள் அணிந்த மணமகள் போலும்' ஜொலிக்கிறது. 'மலர்மாலை அணிதலும்,' 'நகைகள் அணிதலும்' நிறைவையும், தயார்நிலையையும் குறிக்கிறது. இங்கே மணமகன் அணிசெய்யப்படுவது 'விடுதலை' மற்றும் 'நேர்மை' என்னும் ஆடைகளால். 'விடுதலை' என்பது கட்டின்மையையும், 'நேர்மை' என்பது 'ஆண்டவரின் நீதியையும்' குறிக்கிறது.
இவ்வாறாக ஆண்டவர் இஸ்ரயேலை தன் ஊழியராக ஏற்று அருள்பொழிவு செய்து அதற்கு தன் விடுதலை மற்றும் நேர்மை வழியாக மகிழ்ச்சியைக் கொடையாகக் கொடுக்கிறார்.
2. மகிழ்ச்சியின் ஃபார்முலா
'எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்' என்பதே கிறிஸ்து இயேசு வழியாக கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் என இன்றைய இரண்டாம் வாசகத்தில் அறுதியிட்டுக் கூறுகிறார் தூய பவுல். இந்த மூன்று சொற்றொடர்களை நாம் நன்கு கவனித்தோமெனில், 'இறைவனிடம் வேண்டுவதற்கும்,' 'நன்றி கூறுவதற்கும்' அடிப்படையாக இருக்கும் ஓர் உணர்வு 'மகிழ்ச்சி.'
இந்த மகிழ்ச்சிக்கான மூன்றடக்கு ஃபார்முலா ஒன்றைக் கொடுக்கிறார் பவுல்:
அ. அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள்.
ஆ. நல்லதைப் பற்றிக் கொள்ளுங்கள்.
இ. தீயதை விட்டு விலகுங்கள்.
ஆக, நம் வாழ்க்கை நிகழ்வுகள் அல்லது தேர்வுகள் ஒவ்வொன்றிலும் இந்த மூன்று அடுக்கு ஃபார்முலாவை பொருத்திப்பார்த்துச் செயல்பட்டால் அங்கே மகிழ்ச்சி தானாக வந்துவிடும். இந்த மூன்றடுக்கில் ஏதாவது ஒன்றில் நாம் தடுமாறும்போதுதான் மகிழ்ச்சியை இழந்துவிடுகிறோம்.
அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்காமல் நாம் அவசரப்படும்போதும், நல்லதைப் பற்றிக்கொள்வதற்குப் பதிலாக தீயதைப் பற்றிக்கொள்ளும்போதும், விட்டு விலக வேண்டிய தீமையிடம் ஒட்டி உறவாடும்போதும் நான் என் மகிழ்ச்சியை இழக்கிறேன்.
இந்த இடத்தில் நாம் மகிழ்ச்சிக்கும், இன்பத்திற்கும் உள்ள வித்தியாசத்தையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். சில நேரங்களில் நம் தவறான முடிவுகள் அல்லது தேர்வுகளின் போது வெளிப்படும் சின்ன இன்ப உணர்ச்சியை நாம் மகிழ்ச்சி உணர்வாக எடுத்துக் குழப்பிக் கொள்கின்றோம். இது தவறு.
3. நீங்கள் அறியாத ஒருவர்
இயேசு, திருமுழுக்கு யோவான், குருக்கள், லேவியர் அனைவரும் ஒரே காலம் மற்றும் இடத்தில் வாழ்ந்தாலும் திருமுழுக்கு யோவான் மட்டுமே இயேசுவை அறிந்துகொள்கிறார். ஏன் திருமுழுக்கு யோவானுக்கு மட்டும் இது சாத்தியமானது? அவருடைய பிறப்பும் முன்னறிவிக்கப்பட்டது என்பதலா? இல்லை. அதையும் தாண்டிய ஏதோ சில காரணிகள் இருந்திருக்க வேண்டும்.
அந்தக் காரணிகளில் மூன்றை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்திலிருந்து நம்மால் எடுத்துக்கொள்ள முடியும்:
அ. தன்னை அறிந்தவர்
திருமுழுக்கு யோவான் தான் யார் என்று முதலில் தெளிவாக அறிந்திருந்தார். 'நான் மெசியா அல்ல,' 'நான் எலியா அல்ல,' 'நான் இறைவாக்கினர் அல்ல' என தான் என்னவெல்லாம் 'இல்லை' என்பதை முதலில் அறிந்திருக்கின்றார். தான் இல்லாத ஒன்றை தான் என்று முகமூடி அணிந்து கொள்ள அவருக்கு விருப்பமில்லை. ஏனெனில் முகமூடிகள் சில மணிநேரங்கள் நிலைக்கக் கூடியவை. முகமூடிகள் சிலரை சில நேரம் ஏமாற்றலாம். ஆனால், எல்லாரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முகமூடிகள் திறமையற்றவை. அவை கிழிந்து போகும். அல்லது அவை கிழிக்கப்படும். தனக்கு நன்மை தரக்கூடிய அந்த முகமூடிகள்கூட தனக்கு வேண்டாம் என நினைக்கிறார் திருமுழுக்கு யோவான்.
ஆ. தன் வரையறை அறிந்தவர்
'அவர் அந்த ஒளி அல்ல. மாறாக, ஒளியைக் குறித்து சான்று பகர வந்தவர்' என திருமுழுக்கு யோவானைப் பற்றி நற்செய்தியாளர் யோவான் எழுதுகின்றார். ஒளியைக் குறித்துச் சான்று பகர்கிறவர் ஒளிக்கு அருகில்தான் நிற்க வேண்டும். ஆக, ஒளிக்கும் சான்று பகர்பவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இருந்தாலும் தன்னை ஒளியிலிருந்து விலக்கி நிற்கின்றார் திருமுழுக்கு யோவான். ஆக, தன் வரையறையை தானே வகுத்ததோடல்லாமல் அந்த வரையறைக்குள் தன்னை நிறுத்திக்கொள்வதில் உறுதியாயிருக்கிறார்.
இ. மிதியடிவாரை அவிழ்க்க
மிதியடிவாரை அவிழ்ப்பது என்பது மணமகன் நிலையை ஏற்பதற்குச் சமம். யூதர்களின் லெவிரேட் திருமண முறையில் திருமணம் முடிக்கத் தயாராகும் ஆண் அதற்குச் சாட்சியாக தன் மிதியடிகளைக் கழற்றிக் கொடுப்பார் (காண். ரூத்து 4:7). தான் மிதியடிவாரை அவிழ்க்கத் தகுதியற்றவர் என்று சொல்வதன் வழியாக தான் மணமகன் அல்ல என்பதையும் வெளிப்படையாகக் கூறுகின்றார் திருமுழுக்கு யோவான்.
இந்த மூன்று நிலைகளிலும் இவர் தெளிவாக இருந்ததால் 'அவர்கள் அறியாத ஒருவரை' திருமுழுக்கு யோவான் அறிந்துகொள்கின்றார்.
இவ்வாறாக, இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு மூன்று வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது:
1. மகிழ்வனைத்தின் ஊற்று அவரென்று உணர்வது
2. மூன்றுஅடுக்கு மந்திரத்தைக் கையாளுவது
3. அறிவது - தன்னை, தன் வரையறையை, பிறரை
இன்று 'நாம் அறியாத ஒன்றாக' மகிழ்ச்சி விரலிடுக்களில் ஒளிந்து மறைந்துவிடுகிறது.
திருமுழுக்கு யோவான் நமக்கு மாதிரியாக நிற்கட்டும் - மகிழ்ச்சிக்கு!


இயேசுவுக்கு சான்று பகர்ந்த திருமுழுக்கு யோவான்

அருள்பணி அந்தோணிராஜ் -பாளை மறைமாவட்டம்

ஒருமுறை ஒரு பங்குத்தளத்தில் தியானப் பிரசங்கம் நிகழ்த்துவதற்காக இறையடியார் பரதேசி பீட்டருக்கு அழைப்பு வந்தது. அப்போது அவர், தான் பிரசங்கம் செய்ய இருக்கும் நாளுக்கு முந்தைய நாளிலேயே அங்கு வருவதாக அந்தப் பங்குத்தந்தையிடம் சொன்னார், பங்குத்தந்தையும் அதற்குச் சரியென்று ஒத்துக்கொண்டார்.
தியான பிரசாங்கத்திற்கான வேலைகளும் வெகுவிமரிசையாக நடந்தன. ஆனால் பரதேசி பீட்டர், தான் கூறியபடி அன்றையநாளில் வரமுடியவில்லை. இரவு நீண்டநேரம் ஆகிவிட்டது,
இனி அவர் காலையில்தான் வருவார் என்று பங்குதந்தையும் கோவில் கதவுகளை அடைத்துவிட்டு தூங்கச் சென்றுவிட்டார். ஆனால் பரதேசி பீட்டர் வந்த பேருந்து விபத்துக்குள்ளாக, விபத்து நடந்த இடத்தில் இருந்து வேறு பேருந்து கிடைக்காததால் அவர் நடந்தே நடு இரவில் ஆலயம் வந்து சேர்ந்தார். அங்கு ஆலயம் பூட்டப்பட்டு இருந்தது. வெளிக்கதவும் பூட்டப்பட்டு இருந்தது. காவலரையும் காணவில்லை. எனவே, அவர் வெளிக் கதவிலே தலைவைத்து நன்கு தூங்கிவிட்டார்.
அதிகாலையில் திருப்பலிக்கு மக்கள் வருவார்கள் என்பதால் காவலர் தூங்கி எழுந்து கதவைத்திறந்தார். அங்கு பரதேசி பீட்டர் எளிய கோலத்தில் ஒரு பரதேசி போன்று தூங்கிக்கொண்டு இருந்தார். அவரை இதுவரை பார்த்திராத காவலர் அவரைத் தட்டி எழுப்ப, அசதி மிகுதியால் அவர் எழுந்திரிக்க முடியவில்லை. அதனால் அந்த காவலர் அவரை கோபத்தோடு காலால் எத்தி, “இன்று இங்கு எவ்வளவு பெரிய மனிதர் வர போகின்றார்?, நீ இங்குவந்து இப்படித் தூங்கிகொண்டு இருக்கின்றாய்?” என்றார். அதற்கு அவர், “வருவோர் போவோருக்கு தொல்லை இல்லாமல் நான் இங்கு சற்றுத்தள்ளி சிறிதுநேரம் படுத்துக்கொள்கிறேன்” என்றார். அதற்கு அந்த காவலாளி அவர் வைத்திருந்த சோல்னா பையை பறித்துத், தூர எறிந்தார். அப்போது அதற்குள் இருந்த திருமறை நூலும் வெளியே வந்துவிழுந்தது. பின் காவலாளி வேறு பக்கம் சென்றுவிட்டார்.
இவர் கீழே விழுந்த திருமறை நூலை எடுத்து தட்டிக்கொண்டு இருக்கும் வேளையில், இவர் வருகின்றாரா என்று பார்க்க வந்த குருவானவர் நடந்த நிகழ்ச்சிகள் தெரியாமல் அவரை பார்த்து சந்தோசம்கொண்டு, அவரை உள்ளே அழைத்துச்சென்று தகுதியான ஓய்வு எடுக்க, அறையொன்றை கொடுத்து ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு ஆலயத்திற்கு சென்றார்.
தியான பிரசங்கம் சரியாக பத்து மணிக்கு ஆரம்பமானது. ஆலயத்தின் பீடத்தருகில் பரதேசி பீட்டர் பிரசங்கிக்க உள்ளே வந்துநின்றார். அப்போது பிரசங்கியார் யார் என்பதைக் காண விரும்பிய காவலாளி ஆலயத்தின் உள்ளே சென்று பார்க்கும்போதுதான், யாரை காலால் உதைத்து வெளியே தள்ளினாரோ அவர்தான் அங்கு அனைவராலும் பாராடடப்பட்டுக்கொண்டு இருந்தார். அதைக்கண்டு நடுங்கிப்போன காவலாளி, உடனே பங்கு தந்தையிடம் சென்று நடந்ததை கூறி கதறி அழுதார். பங்கு தந்தைக்கும் கவலையாகி போய்விட்டது. மாலை வேளையில் பிரசங்கம் முடிந்தவுடன் காவலாளி பரதேசி பீட்டரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அப்போது பரதேசிப் பீட்டர் அவரிடம், “நான் கடவுளல்ல, கடவுளைப் பற்றி எடுத்துத்துரைக்கும் ஒரு சாதாரண மனிதர், எதற்காக என்னுடைய காலில் விழுகிறாய்?” என்று சொல்லி அவரை மன்னித்து, இதைக்குறித்து தான் ஒன்றும் கவலைப்படவில்லை என்று சொல்லி அங்கிருந்த எல்லோரையும் பரவசப் படுத்தினார்.
“நான் கடவுளல்ல, கடவுளைப்பற்றி எடுத்துரைக்கும் ஒரு சாதாரண மனிதர்” என்ற இறையடியார் பரதேசிப் பீட்டர் வார்த்தைகள் நமது சிந்தனைக்கு உரியது. திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் சிந்தனை ‘திருமுழுக்கு யோவானைப் போன்று இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்வோம்’ என்பதாகும். நாம் எப்படி இயேசுவுக்கு சான்றுபகர்ந்து வாழ்வது எனச் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
திருவருகைக் காலம் தொடங்கியதிலிருந்தே நாம் திருமுழுக்கு யோவானைக் குறித்து அதிகமாக வாசிக்கின்றோம். இன்றைய நாளிலும் நாம் அவரைக் குறித்துத்தான் சிந்தித்துப் பார்க்க இருக்கின்றோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் எருசலேமிலுள்ள யூதர்கள் அனுப்பிய குருக்களும் லேவியர்களும் நீர் யார்? என்று கேட்கின்றபோது அவர் நான் மெசியாவும் அல்ல, எலியாவும் அல்ல மாறாக மெசியாவைக் குறித்து சான்றுபகர வந்தவன் என்று மிகத் திட்டவட்டமாகக் கூறுகின்றார். வீண் பெருமைகளையும், அடுத்தவருக்குச் சேரவேண்டிய பேரையும் புகழையும் தானே அனுபவிக்கும் மக்களுக்குக் மத்தியில், திருமுழுக்கு வித்தியாசமான மனிதராகத் திகழ்கின்றார். அவர் தான் உண்மையிலே மெசியா அல்ல, மெசியாவைக் குறித்துச் சான்று பகரவந்தவன் என்ற முழங்குகின்றார்.
திருமுழுக்கு யோவான் நினைத்திருந்தால், தான்தான் மெசியா எனச் சொல்லியிருக்கலாம், மக்களும் அதை நம்பி இருப்பார்கள். ஏனென்றால் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் மெசியாவின் வருகைக்காக ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். அத்தகைய சூழலை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு திருமுழுக்கு யோவான் தன்னை மெசியா என மக்களிடத்தில் கூறியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் தான் ஒளியைக் குறித்து சான்றுபகர வந்தவனே ஒழியே, தான் ஒளி அல்ல என்பதைத் திட்டவட்டமாக அறிவிக்கின்றார்.
திருமுழுக்கு யோவானின் இத்தகைய ஒரு பெருந்தன்மைக்குப் பின்னால் இருந்த மனநிலை என்னவென்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நிச்சயமாக தன்னை முழுமையாக ஏற்றுக்கொண்ட, முழுமையாக அன்புசெய்த ஒருவரால்தால் இப்படிச் செய்யமுடியும்.
திருமுழுக்கு யோவான் தன்னை முழுமையாக ஏற்றுக்கொண்டார்; முழுமையாக அன்புசெய்தார். அதனால்தான் அவர் அப்படிச் சொன்னார். ஆகவே, இறைப்பணியைச் செய்யும் ஒவ்வொருவரும் தன்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடியவராகவும், முழுமையாக அன்பு செய்யக்கூடியவராக இருக்கவேண்டும். தன்னை ஏற்றுக்கொள்ளாத ஒருவரால் பிறரையும் ஏற்றுக்கொள்ள முடியாது, பிறரை அன்புசெய்யமுடியாது ஆழமான உண்மை.
திருமுழுக்கு யோவானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய அடுத்த பாடம்: தன்னை முன்னிலைப்படுத்தாமல், தன் தலைவனாகிய இயேசுவை முன்னிலைப்படுத்தக் கூடிய ஒரு பண்பாகும். ஒரு இறையடியாருக்கு இருக்கவேண்டிய தகுதியே இதுதான். ‘கடவுளின் மகிமையையும், பெருமையையும் விளங்கிச் செய்ய தான் ஒரு கருவி என்ற மனப்பான்மையோடு வாழவேண்டும். இதற்கு அடிப்படையாக இருப்பது தாழ்ச்சி என்ற குணம்தான். திருமுழுக்கு யோவான் சொல்கிறார், “நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்று. இப்படியெல்லாம் சொல்வதற்கு திருமுழுக்கு யோவானிடத்தில் நிறைய தாழ்ச்சி இருந்திருக்கவேண்டும். எனவே, இறையடியார் ஒவ்வொருவரும், இறைப்பணி செய்கின்ற ஒவ்வொருவரும் ‘தான் ஒன்றுமில்லை, எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்ற மனநிலையோடு வாழவேண்டும். அதற்குத் தான் என்ற ஆணவத்தை அல்ல, தாழ்ச்சியை ஆடையாக அணியவேண்டும்.
ஒரு ஞானியிடத்தில் சீடராகச் சேர்வதற்கு இளைஞர் ஒருவர் தன்னுடைய இரண்டு கைகளிலும் தாமரை மலர்களை ஏந்தி வந்தார். அப்போது அந்த ஞானி அவரிடத்தில், “கீழே போடு” என்று கத்தினார். தாமரை மலரை இடது கையில் வைத்திருப்பது அமங்களம் என்பதற்காகத்தான் ஞானி கீழேபோடு என்று சொல்கிறாரோ என நினைத்த அந்த இளைஞர், தன்னுடைய இடது கையிலிருந்த தாமரை மலரைக் கீழே போட்டார். அப்போதும் அந்த ஞானி ‘கீழே போடு’ என்று கத்தினார். தன்னுடைய வலது கையில் இருக்கும் தாமரை மலரையும் கீழே போடச் சொல்கிறாரோ என்னவோ என நினைத்த அந்த இளைஞர் தன்னுடைய வலது கையிலிருந்த தாமரை மலரையும் கீழே போட்டார். அப்போதும் ஞானி அந்த இளைஞரைப் பார்த்து ‘கீழே போடு என்று கத்தினார்.
கையிலிருந்த இரண்டு மலர்களையும் கீழேபோட்டாயிற்று. இன்னும் எதைக் கீழே போடுவது என்று குழம்பிப்போன இளைஞர் ஞானியிடத்தில், “இன்னும் எதைக் கீழே போடுவது?” என்று கேட்டார். அதற்கு ஞானி, “நான் கீழேபோடச் சொன்னது தாமரை மலர்களை அல்ல, தான் என்ற ஆணவத்தை” என்றார். அப்போதுதான் அந்த இளைஞர் உண்மையை உணர்ந்தார். சீடராக இருப்பதற்கு முதன்மையான தகுதியே தான் என்ற ஆணவத்தை அகற்றுவதுதான்.
ஆகவே, திருமுழுக்கு யோவான் எப்படி தாழ்ச்சியோடு வாழ்ந்தாரோ அதைப்போன்று இறைப்பணி செய்யும் நாம் ஒவ்வொருவரும் தாழ்ச்சியோடு வாழவேண்டும்.
நிறைவாக கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கடைபிடித்து வாழக்கூடிய பண்பு ; எல்லாச் சூழ்நிலைகளிலும் நன்றிசொல்வதாகும். தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் படிக்கின்றோம்,
“எல்லாச் சூழ்நிலையிலும் நன்றிகூறுங்கள்’ என்று. ஆம், கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம் ஒடுக்கபட்டவருக்கு நற்செய்தியை அறிவிக்கின்றபோது, உள்ளம் உடைந்தவரைக் குணப்படுத்துகிறபோது, சிறைப்பட்டவருக்கு விடுதலையைப் பறைசாற்றுகின்றபோது... (முதல் வாசகம்) பல்வேறு சவால்களை, பிரச்சனைகளை சந்திக்கலாம். அத்தகைய தருணங்களில் நாம் மனம் உடைந்துபோகக்கூடாது, மாறாக நாம் நன்றிசெலுத்தவேண்டும்.
ஏனென்றால் நாம் எல்லாவற்றிற்கும் நன்றிசெலுத்துகின்றபோது வாழ்க்கையை எதிர்மறையாக அல்ல, நேர்மறையாக பார்க்கப் பழகிவிட்டோம் என்று அர்த்தமாகும்.
கவிஞன் ஒருவன் சொல்வான், “கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள், காலுக்கு செருப்பு எப்படி வந்தது ? முள்ளுக்கு நன்றி சொல்” என்று. ஆகவே நாம் எல்லாச் சூழ்நிலைகளிலும் இறைவனுக்கு நன்றிசொல்ல கற்றுக்கொள்வோம். அதைவிடவும் திருமுழுக்கு யோவானைப் போன்று நம்மை முழுமையாய் ஏற்றுக்கொள்வோம், தாழ்ச்சியோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். No comments:

Post a Comment