Friday 11 August 2017

13 ஆகஸ்ட் 2017: ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி -13-08-2017


I. 1 அரசர்கள் 19:9, 11-13

II. உரோமையர் 9:1-5

III. மத்தேயு 14:22-33

மறையுரை-வழங்குபவர் :
அருள்பணி ஏசு கருணாநிதி-மதுரை மறைமாவட்டம்



கைதொடும் கடவுள்

நோக்கியா ஃபோன் பயன்படுத்தியிருக்கிறீர்களா? ஃபோனை ஆஃப் செய்து ஆன் செய்யும் ஒவ்வொரு நேரமும் திரையில் இரண்டு கைகள் ஒன்றை ஒன்று தொட்டுக்கொள்ள நீள்வது போலத் தோன்றி கைகள் தொட்டுக்கொள்ளும். இரண்டு கைகளும் தொட்டுக்கொள்ளும் அந்த நேரத்தில் 'நோக்கியா' என கைகளுக்கு மேலும், 'கனெக்டிப் பீப்பிள்' என கைகளுக்குக் கீழும் எழுத்துருக்கள் தோன்றும்.


இதே போல தொட்டுக்கொள்ளத் துடிக்கும் இரண்டு கைகளை நாம் வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் சிற்றாலய மேற்கூரையில் மைக்கேல் ஆஞ்சலோ அவர்களின் கைவண்ணத்தில் உருவான 'படைப்பு' என்ற ஓவியத்தில் காணலாம். கடவுளின் கையும், ஆதாமின் கையும் ஒன்றையொன்று நோக்கி நிற்க, இரண்டு விரல்களும் தொட்டும் தொடாமலும் இருக்கும்.


கடவுளின் கரமும், நம் கரமும் இணைதலை அல்லது நம் கரங்கள் எட்டிப்பிடிக்கும் தூரத்தில்தான் கடவுள் இருக்கிறார் என்பதை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சொல்கிறது.


நீங்க யாருடைய கையை அல்லது விரலைப் பிடித்திருக்கிறீர்களா? அல்லது எப்பொழுதெல்லாம் நாம் ஒருவர் மற்றவரின் கையை அல்லது விரலை நீட்டிப் பிடிக்கின்றோம்?


நோயுற்ற நம் நண்பர் மருத்துவமனையில் இருக்க அவரைக் காணச் சென்று அவருக்கு ஆறுதல் சொல்லும்போது,

நம் நண்பர் அல்லது உற்றாரின் வீட்டில் இழப்பு அல்லது இறப்பு ஒன்று நிகழ அதற்கு ஆறுதல் சொல்ல நாம் அங்கே செல்லும்போது,

பார்வையற்ற ஒருவர் பாதையைக் கடக்க நாம் உதவி செய்யும்போது,

முன்பின் தெரியாத ஒருவரோடு அறிமுகம் ஆகும்போது,

நீண்ட காலமாக சந்திக்காத நண்பரைச் சந்திக்கும்போது,

நம் அன்பிற்கினியவருடன் டீகுடிக்க ஓட்டலில் அமர்ந்து டீ வரும்வரை அவரின் கையை நம் உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு அவரின் வாட்ச், நகம், நகப்பூச்சு, கைரேகை, உள்ளங்கை மச்சம் என ஐன்ஸ்டீன் ஆராய்ச்சி செய்யும்போது,


என பல நேரங்களில் பல இடங்களில் நாம் ஒருவர் மற்றவரின் கையை நீட்டித் தொடுகிறோம். இப்படித் தொடும்போதெல்லாம் அவரும் நாமும் ஒன்றாகிவிட்ட உணர்வு நம்மிடம் வருகிறது. ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத ஆறுதலை ஒரு கை நீட்டிச் சொல்லிவிடுகிறது. ஆக, கையை நீட்டுதலின் சிம்ப்பிளான அர்த்தம், 'நான் உனக்காக இருக்கிறேன்' என்பதுதான்.


'எனக்காக யார் இருக்கிறார்?' என்ற கேள்வியோடு இன்றைய முதல் வாசகத்தில் எலியாவும், மூன்றாம் வாசகத்தில்  பேதுருவும் (சீடர்களும்) நிற்கின்றனர். 'இதோ நான் இருக்கிறேன். நான் தான்' எனக் கையை நீட்டுகின்றனர் ஆண்டவராகிய கடவுளும், ஆண்டவராகிய இயேசுவும்.


எலியாவின் கையும் கடவுளின் கையும்


இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 அர 19:9, 11-13) ஆண்டவராகிய கடவுள் எலியாவுக்குத் தன்னை வெளிப்படுத்துகின்றார். இதன் பின்புலம் என்ன? எலியா பாகாலின் இறைவாக்கினர்கள் 450 பேரைக் கொன்றுவிடுகின்றார் (காண். 18:16-40). பாகால் வழிபாட்டை முன்நின்று நடத்தியவர் இஸ்ரயேலின் ஏழாவது அரசனான ஆகாபின் மனைவி ஈசபேல். பாகால் வழிபாட்டை வைத்து அரசுக்கு நிறைய வருமானம் வந்தது. இப்போது எலியா அவர்களோடு போட்டியிட்டு, அவர்களை வென்று, அவர்களைக் கொன்றுவிடுகிறார். தன்னோடு உணவருந்திய தன் இறைவாக்கினர்களைக் கொன்றுவிட்டானே என ஆதங்கப்படுகின்ற ஈசபேல் எலியாவை பழிதீர்க்க நினைக்கிறாள். எலியாவைக் கொல்லுமாறு ஆள்களை அனுப்பிவிடுகின்றாள். அவர்களிடமிருந்து தப்பி ஓடுகின்ற எலியா சீனாய் மலையில் தஞ்சம் அடைகின்றார். மனிதர்களிடமிருந்து தப்பி ஓட எலியா தேர்ந்தெடுத்த அடைக்கலம் ஆண்டவரின் மலையே. ஆண்டவரின் மலையை அடைகின்ற எலியாவுக்குத் தற்கொலை எண்ணம் பிறக்கிறது: 'ஆண்டவரே, நான் வாழ்ந்ததுபோதும். என் உயிரை எடுத்துக்கொள்ளும்' (19:4) எனக் கடவுளிடம் மன்றாடுகின்றார். நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத வலி அல்லது துன்பம் வரும்போது நாமும் கடவுளை நோக்கி இப்படித்தான் மன்றாடுகிறோம். ஆனால், கடவுள் தன் வானதூதரை அனுப்பி அவருக்கு உணவும், நீரும் கொடுக்கின்றார். மேலும் வானதூதர், 'நீ செல்ல வேண்டிய பயணம் இன்னும் தூரம்' என எலியாவை அனுப்பிவிடுகின்றார். நாற்பது பகலும், நாற்பது இரவும் பயணம் செய்யும் எலியா ஒரு குகையை வந்தடைகின்றார். அந்நேரத்தில் அவருக்கு இறைவாக்கு அருளப்படுகிறது. மேலும் ஆண்டவர், 'எலியா, வெளியே வா. மலைமேல் என் திருமுன் வந்து நில். நான் உன்னைக் கடந்து செல்லவிருக்கிறேன்' என்கிறார்.


'என் கடவுள் யார்?' என்ற கேள்வி எலியாவின் உள்ளத்தில் இருந்துகொண்டே இருக்கின்றது. 'பாகாலின் இறைவாக்கினர்களைக் கொன்றுவிட்டோம். பாகால் நம்மை பழிதீர்ப்பார்' என்ற பயம் ஒருபுறம். 'என் கடவுள் இருக்கிறாரா? அல்லது இல்லையா?' என்ற ஐயம் மறுபுறம். இந்த பயத்தையும், அச்சத்தையும் போக்குவதாக இருக்கிறது கடவுளின் வெளிப்பாடு.


கடவுளின் வெளிப்பாடு நான்கு நிலைகளில் நடக்கிறது: (அ) சுழற்காற்று, (ஆ) நிலநடுக்கம், (இ) தீ, மற்றும் (ஈ) மெல்லிய ஒலி. சுழற்காற்று, நிலநடுக்கம், தீ ஆகியவற்றில் தன்னை வெளிப்படுத்தாத கடவுள் மெல்லிய ஒலியில் தன்னை வெளிப்படுத்துகின்றார். எலியாவின் வாழ்வு ஏற்கனவோ 'சுழற்காற்று,' 'நிலநடுக்கம்,' 'தீ' என இருந்ததால் கடவுள் அவைகளில் தம்மை வெளிப்படுத்தாமல், மெல்லிய ஒலியில் தம்மை வெளிப்படுத்துகின்றார். கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்த எலியா போர்வையால் தன் முகத்தை மூடிக்கொள்கின்றார். மேலும், 'சுழற்காற்று,' 'நிலநடுக்கம்,' மற்றும் 'தீ' ஆகியவை அழிக்கக்கூடியவை. ஆக, ஏற்கனேவே அழிவைத் தாங்கி நிற்கும் எலியாவுக்கு மேலும் அழிவைத் தராமல், ஆக்கத்தை தருகின்றார் ஆண்டவராகிய கடவுள்.


கடவுளின் கரம் எலியாவின் அச்சத்தையும், ஐயத்தையும் அகற்றுகிறது. புத்துயிர் பெற்று கீழே வரும் எலியா தன் வாரிசாக எலிசாவைத் தேர்ந்துகொள்கிறார். அதாவது, புதியதொரு வாழ்க்கையை அவர் தொடங்குகிறார். இனி அவரிடம் பயமோ, குற்ற உணர்வோ, ஐயமோ இல்லை.


ஆக, கடவுள் எலியாவை நோக்கி கரம் நீட்டியது கடவுளின் வெளிப்பாடு என்றால், அந்த வெளிப்பாட்டிற்கு ஏற்ற பதிலைத் தந்ததுதான் எலியாவின் நம்பிக்கை.


இயேசுவின் கையும் பேதுருவின் கையும்


இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 14:22-33) இயேசுவின் கையும், பேதுருவின் கையும் இணைகின்றன. இயேசு தண்ணீரில் நடக்கும் நிகழ்வு மாற்கு (6:45-52) மற்றும் யோவான்  (6:16-21) நற்செய்தி நூல்களில் காணக்கிடக்கிறது. இருந்தாலும், இவை மூன்று பதிவுகளும் ஒன்றுக்கொன்று அதிகம் முரண்படுகின்றன. குறிப்பாக, பேதுரு என்னும் கதாபாத்திரம் மற்ற இரண்டு பதிவுகளில் இல்லை.


இயேசு தண்ணீரில் நடக்கும் நிகழ்வு வரலாற்று நிகழ்வா அல்லது இறையியல் நிகழ்வா என்பதைப் பற்றிய ஆராய்சியாளர்களின் கருத்துக்கள் ஐந்து:


அ. இந்த நிகழ்வு வெறும் உருவகங்களை உள்ளடக்கியது: 'தண்ணீர்' (அலகை), 'படகு' (திருச்சபை), 'காற்று' (வேதகலாபனை), 'பேதுரு' (திருச்சபையின் தலைவர்), 'பேய்' (தண்ணீரில் குடியிருக்கும் அலகை). ஆக, இது வரலாற்று நிகழ்வு அல்ல.


ஆ. இது இயேசுவால் தன் பணிவாழ்வில் நிகழ்த்தப்பட்ட ஓர் அறிகுறி. இயேசு புவிஈர்ப்பு விசையின் பிடிப்பையும் தாண்டி நிற்பவர். அவர் மனித பலவீனத்திற்கு உட்பட்டவர் அல்லர்.


இ. தானாக நடந்த ஒரு நிகழ்வு அறிகுறியாக எழுதப்பட்டுள்ளது. சில நேரங்களில் புயல் போன்ற அலைகள் ஏரியில் உருவாவது உண்டு. அந்த நேரத்தில் நிறைய கட்டகைள் கடலில் மிதந்து வரும். அப்படிப்பட்ட ஒரு கட்டையின்மேல் ஏறி நின்று இNயுசு அவர்களை நோக்கி வருகின்றார்.'


ஈ. இயேசுவின் வரலாற்றோடு தொடர்பற்ற ஒரு கiதாயடல்.


உ. இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் நடந்த ஒரு நிகழ்வை நற்செய்தியாளர்கள் இங்கே இடை செருகுகின்றனர். உயிர்ப்புக்குப் பின் இயேசுவின் உடல் புவிஈர்ப்புவிசையின் பிடியிலிருந்து தப்பிவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் இயேசுவால் தண்ணீரின்மேல் நடக்கின்றார்.

இந்த நிகழ்வை ஓர் இறையியல் நிகழ்வாகவே எடுத்துக்கொள்வோம். இந்த நிகழ்வின் வழியாகவே சீடர்கள் இயேசுவை யாரென்று அறிந்துகொள்கிறார்கள்.


'தூரம்' என்ற ஒற்றைச் சொல்லை வைத்து இன்றைய நற்செய்தி வாசகத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்:


அ. ரொம்ப தூரத்தில் கடவுள் (19:22-26)


ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கும் இயேசு (காண். 14:13-21) கூட்டத்தினரை அனுப்பிய வேகத்தில் சீடர்களையும் படகேறித் தமக்குமுன் அக்கறைக்கு அனுப்புகின்றார். இயேசு 'கட்டாயப்படுத்தி' அவர்களை அனுப்பி வைத்தார் என பதிவு செய்கின்றார் மத்தேயு. ஏன் இந்தக் கட்டாயம்? தான் தன் தந்தையோடு செபத்தில் இணைந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்ற இயேசு தன் சீடர்களைக் கட்டாயப்படுத்தி அனுப்புகிறாரா? அல்லது தான் நிகழ்த்தவிருக்கும் அறிகுறிக்காக அவர்களைத் தயாரிக்கிறாரா? எப்படியோ, இயேசு அவர்களைவிட்டு நீங்குவது அவர்கள் அனுபவிக்கப்போகும் தனிமையை முன்குறிக்கிறது. சீடர்கள் கடல் நடுவில் படகில். இயேசுவோ மலை உச்சியில். ரொம்ப தூரத்தில் இருக்கிறார் கடவுள்.


ஆ. கொஞ்ச தூரத்தில் கடவுள் (19:27-30)

சீடர்களின் படகு அலைகளால் அலைக்கழிக்கப்படும்போது அவர்களை நோக்கி நெருங்கி வருகின்றார் இயேசு. ஆனால், கடல் என்பது பேய்கள் வாழும் இடம் என்பதால் கடலில் தோன்றிய இயேசுவின் உருவத்தைப் பார்த்து, 'பேய்' எனச் சொல்கின்றனர் சீடர்கள். 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பார்கள். இங்கே அரண்ட சீடர்களின் கண்களுக்கு ஆண்டவரும் பேயாகத் தெரிகின்றார். உடனே இயேசு, 'நான்தான். அஞ்சாதீர்கள்' என்கிறார். இதைக் கேட்டவுடன், தனக்கும் இயேசுவுக்கும் உள்ள தூரத்தை குறைத்துக்கொள்ள நினைத்து கடலில் குதித்து இயேசுவிடம் செல்கின்றார் பேதுரு.


இ. கையருகில் கடவுள் (19:31-33)

இன்னொரு அலை அடிக்க, 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்' என பேதுரு கதற, கையை நீட்டி அவரைத் தூக்குகின்றார் இயேசு. இதற்கிடையில் படகும் அருகில் வந்துவிடுகிறது. இயேசுவைக் கண்ட சீடர்கள் அவரைப் பணிந்து வணங்குகின்றனர். 'உண்மையாகவே நீர் இறைமகன்' என அறிக்கையிடுகின்றனர்.


சீடர்களின் அச்சம் மறையக் காரணம் இயேசுவின் கை அவர்களின் கைகளைப் பற்றிக்கொண்டதுதான்.


இவ்வாறாக, இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் 'கைதொடும் கடவுளை' நமக்குக் காட்டுகின்றன. இன்றைய இரண்டாம் வாசகம் (காண். உரோ 9:1-5) இஸ்ரயேல் மக்களின் கடவுள் அனுபவத்தையும், தொடக்கத் திருச்சபையின் கடவுள் அனுபவத்தையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது. அதாவது, தொடக்கத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தன் இனமாக தெரிந்து கொள்கிறார். அந்த தெரிந்துகொள்ளப்பட்ட இனத்திலிருந்து தோன்றிய கிறிஸ்து எல்லாவற்றுக்கும் மேலான கடவுளாக இருக்கிறார் என அறிக்கையிடுகின்றார் பவுல். கடவுள் கிறிஸ்துவழியாக அல்லது கிறிஸ்துவில் தூரத்திலிருக்கும் மக்களின் அருகில் வருகிறார். இவ்வாறாக, கிறிஸ்துவின் வருகையால் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள தூரம் மிகவே குறைகிறது.


இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?


1. கடவுளின் தூரம்


எலியாவும், சீடர்களும் அனுபவித்த ஓர் உணர்வு 'கடவுளின் தூரம்.' நம் தனிமை, அச்சம், ஐயம் போன்ற நேரங்களல் கடவுளின் தூரத்தை நாம் அதிகமாக உணர்கிறோம். இவ்வாறு நாம் உணரும் பொழுதுகள் நம் வாழ்வில் சுழற்காற்றாக, நிலநடுக்கமாக, தீயாக, புயலாக நம்மை அலைக்கழிக்கின்றன. ஆனால், வீசி எறியப்படும் பந்து அதிகமான தூரம் சென்றால்தான் அதிகமான வேகத்தில் திரும்பி வரும் என்பது அறிவியல். ஆக, அதிக தூரம் செல்லும் கடவுள் அதிக நெருக்கமாக நம்மோடு ஒட்டிக்கொள்வார் என்ற வாக்குறுதியை தருகின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு. நம் கிணறு வற்றும் நேரம், நம் வாளி தரை தட்டும் நேரம், நம் வண்டி எரிபொருள் இழக்கும் நேரம் தான் கடவுளின் தூரம்.


2. மெல்லியவைகளின் கடவுள்


கடவுள் எலியாவுக்கு மெல்லிய ஒலியில் தன்னை வெளிப்படுத்துகின்றார். இயேசு தன் சீடர்களுக்கு வெளிப்படுத்தும் வார்த்தைகளும், 'நான்தான்' என்ற மெல்லிய ஒலியாக இருக்கிறது. சுழற்காற்றின், நிலநடுக்கத்தின், தீயின் பின்புலத்தில் எலியா எப்படி மெல்லிய ஒலியைக் கேட்டறிந்தார்? அல்லது கடல் அலைகளின் இரைச்சலுக்கு நடுவே இயேசுவின் மெல்லிய ஒலி அவர்கள் காதுகளில் எப்படி விழுந்தது? வலிமையானவற்றில் அல்ல, மென்மையாவனற்றிலம், மெல்லியவற்றிலும், மெலிந்தவற்றிலும், மெலிந்தவர்களிலும்தான் இருக்கிறது இறைவனின் கரம். வல்லியது எல்லாம் வன்மம் செய்யக்கூடியது. மெல்லியது தழுவக்கூடியது. நம் கடவுள் மெல்லியவைகளின் கடவுள் என்றால் நாம் நம் வாழ்வில் மெல்லியர்களாக, மென்மையானவர்களாக இருக்கலாமே!


3. இயேசு என்னும் பாலம்


முதல் ஏற்பாட்டிற்கும், இரண்டாம் ஏற்பாட்டிற்கும் பாலமாக இருக்கின்றார் இயேசு. அவரின் கரம் பிடித்தே நாம் பழைய உடன்படிக்கையிலிருந்து புதிய உடன்படிக்கைக்குக் கடந்து செல்கிறோம்.


4. துணிவோடிருங்கள். நான்தான். அஞ்சாதீர்கள்


இயேசுவின் 'நான்தான்' என்ற சொல்லாடலைச் சுற்றி அச்சம் நீக்கும் இரண்டு வார்த்தைகள் உள்ளன: 'துணிவோடிருங்கள்,' 'அஞ்சாதீர்கள்.' இவை இரண்டின் பொருள் ஒன்றுதான். அச்சம் களையும்போதுதான் கடவுளின் கரம் நம் கண்களுக்குத் தெரிகிறது. சீடர்கள் அச்சம் கொண்டிருக்க, பேதுருவோ, 'ஐயம்' கொண்டிருக்கிறார். இயேசுவின் உடனிருப்பு தன்னோடு தொடர்ந்து இருக்குமா, இருக்காதா என்ற ஐயமே அவரைத் தண்ணீரில் ஆழ்த்துகிறது.


5. பாதிவழியும், மீதிவழியும்


எலியாவின் கரத்தைத் தொடுகின்ற ஆண்டவராகிய கடவுள் இன்னும் அவர் செல்ல வேண்டிய வழியைக் காட்டுகின்றார். பேதுருவின் கையைத் தொடுகின்ற ஆண்டவராகிய இயேசு அவரோடு மீண்டும் படகிற்குள் ஏறுகின்றார். கடவுளின் கரத்தைத் தொட்டவுடன் நம் பயணம் முடிந்துவிடுவதில்லை. மீதிவழியும் நாம் செல்ல வேண்டும். அந்த மீதிவழியில் நம் வழியும் வழித்துணையுமாய் இருப்பவர் கடவுள்.


இறுதியாக,


அவர் கரமும், நம் கரமும் ஒன்றானால் அங்கே அறிகுறி நடக்கும்.

அச்சமும், ஐயமும் அகன்றால் அவரின் கரம் நம் அருகில் வரும்.

அவரின் கரம் அச்சம், ஐயம் அகற்றும்.

கைதொடும் தூரத்தில் கடவுள்...

கைதொடும் கடவுள்.

 

அஞ்சாதீர்கள், துணிவோடிருங்கள்!

மறையுரை-வழங்குபவர் :
அருள்பணி மரிய அந்தோணிராஜ்-பாளை மறைமாவட்டம்

 

ஒரு நள்ளிரவு!. ஜென் குரு தன் அறையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். திடீரென அந்த அறைக்கதவைத் தள்ளிக்கொண்டு திருடன் ஒருவன் உள்ளே நுழைந்தான். அவன் கையில் பளபளக்கும் கத்தி இருந்தது. அவன் அதை நீட்டிக்கொண்டே ஜென் குருவை நெருங்கினான். நிமிர்ந்து அவனை அமைதி தவழப்பார்த்த ஜென் குரு ”உனக்கு என்ன வேண்டும்?, என் உயிரா? அல்லது பணமா?” என்று கேட்டார். அதைக்கேட்ட திருடன் திகைத்தான். அவரை மிரட்டிப் பணம் பறிக்கலாம் என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டதை எண்ணி அவன் சற்று வருந்தினான். ”சரி போகட்டும்! எனக்குப் பணம்தான் வேண்டும்!” என்றான் திருடன்.
ஜென் குரு சிறிதுகூட சஞ்சலப்படாமல் தன்னிடமிருந்த பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டுத் தொடர்ந்து எழுதத்தொடங்கினார். அமைதியான அவரது செயல் திருடனின் மனதை என்னவோ செய்தது. ஆனாலும் அவன் பணத்துடன் வெளியே போவதையே விரும்பினான். அவன் அறையின் வாயிலை நோக்கி நடந்தபோது, ”தம்பி! நீ வெளியே போகும்போது அறைக்கதவை சாத்தி விட்டுப் போ!” என்றார் ஜென் குரு. திருடன் ஒரு கணம் நின்று திரும்பி அவரைப் பார்ததான். பிறகு அறைக்கதவைச் சாத்திவிட்டு வெளியேறினான்.
மிக விரைவிவேயே பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற முதுமொழிப்படி அவன் காவலர்களிடம் பிடிப்பட்டான். அப்போது அவன் காவல் அதிகாரிகளிடம், நீண்ட நாள் தன் மனதை அரித்துக்கொண்டிருந்த ஒரு விஷயத்தைச் சொல்லத் தொடங்கினான்: ”ஐயா.! திருடுவதென் தொழில். கத்தியைப் பார்த்த உடனேயே பலரும் பயத்தால் அலறிப் பார்த்திருக்கிறேன். பலர் மிரட்டலுக்குப் பின்னே பணிந்திருக்கிறார்கள். ஆனால் எதற்குமே பயப்படாத ஒரு குருவை என் வாழ்நாளில் ஒரு முறை பார்த்தேன். அந்த பயங்கரமான சூழ்நிலையிலும் அவர் எப்படி அமைதியைக் கடைப்பிடித்தார். எப்படி பயப்படாமல் இருந்தார் என்பதை இப்போதும் ஆச்சரியத்துடன் எண்ணிப் பார்க்கிறேன். “உயிர் வேண்டுமா? பணம் வேண்டுமா?” என்று அவர் அன்று கேட்டது என் இதயத்தையே அறுத்துக் கூறுபோட்டுவிட்டது. நிச்சயம் அவர் ஒரு மகானாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் என் உடலுக்குத்தான் தண்டனை தரமுடியும். ஆனால் அவர் என் உள்ளத்துக்கே தண்டனை கொடுத்துவிட்டார் என்னை மனிதனாக்கி விட்டார், நான் விடுதலை பெற்றதும், அவரிடம்தான் சரணாகதி அடைந்து, வாழ்நாள் முழுவதும் அவருக்குச் வேவை செய்யப் போகிறேன்!” என்றான்.
ஒரு சந்தர்ப்பத்தில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஜென் குரு மிகவும் மகிந்தார். தன்னிடத்தில் இருந்த யாருக்கும் பயப்படாத குணம் ஒரு திருடனையும் நல்ல மனிதனாக மாற்றிவிட்டதை எண்ணிப் பெருமிதம் கொண்டார்.
பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் சிந்தனை ‘துணிவோடிருங்கள், அஞ்சாதீர்கள்’ என்பதாகும். எனவே நாம் அதனைக் குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
இன்றைக்கு மனிதர்களாகிய நாம் எதற்கெல்லாமோ பயப்படுக்கின்றோம். நோய்நொடி இருள், பேய், தண்ணீர், இயற்கை சீற்றம், மனிதர்கள் என்று பலவற்றைக்கண்டு பயப்படுகின்றோம். இப்படி நாம் பயப்படாத பொருளில்லை என்றுகூடச் சொல்லிவிடலாம். அந்தளவுக்கு நாம் பயத்திலே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இத்தகைய பின்னணில் நாம் நற்செய்தி வாசகத்திற்கு வருவோம். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சீடர்களை தனக்கு முன்பாக படகில் அனுப்பி வைத்துவிட்டு, இரவின் நான்காம் காவல்வேளையில் கடல்மீது நடந்து வருகின்றார். அவரைக் கண்ட சீடர்கள், பேய் என அஞ்சி நடுங்குகிறார்கள். அப்போது இயேசு அவர்களிடம், “துணிவோடிருங்கள், நான்தான் அஞ்சாதீர்கள்” என்கிறார். ஆனால் இயேசுவின் வார்த்தைகளின்மீது நம்பிக்கை கொள்ளாத பேதுரு, “ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்ம்மிடம் வர ஆணையிடும்” என்று சொல்கிறார். இயேசு அவரிடம் ‘வா’ என்று சொல்ல, அவர் கடல்மீது நடந்து வருகின்றார். அப்போது பெருங்காற்று காற்று வீச, அதனைக் கண்டு அஞ்சி அவர் கடலில் விழுகின்றார்.
இங்கே சீடர்களின் குறிப்பாக பேதுருவின் அச்சத்திற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது அவருடைய நம்பிக்கையற்ற தன்மைதான். அதனால்தான் இயேசு அவரைப் பார்த்து, “நம்பிக்கை குற்றியவனே, ஏன் ஐயம்கொண்டாய்” என்று அவரைக் கடிந்துகொள்கிறாய். நம்முடைய வாழ்க்கையில் பல நேரங்களில் நமக்கு ஏற்படும் அச்ச உணர்வுகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது இறைவனிடமும் நம்மிடமும் அயலாரிடமும் நம்பிக்கையில்லாத தன்மையே என்று சொன்னால் அது மிகையாகாது.
மத்தேயு நற்செய்தியில் மட்டும் ஆண்டவர் இயேசு மூன்று இடங்களில் நம்முடைய நம்பிக்கையற்ற தன்மையைக் கடிந்துகொள்கிறார். முதலாவது பகுதி மத் 6:30 ஆகும். இங்கே இயேசு கிறிஸ்து கடவுளின் பாதுகாப்பும் பராமரிப்பும் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் எப்படிக் கிடைக்கின்றன என்பது குறித்துப் பேசுவார். அப்படிப் பேசும்போதுதான் “நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணி செய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்யமாட்டாரா?, ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்” என்கிறார்.
கடவுள் இந்த உலகினை அதில் வாழும் உயிரினங்களை எல்லாம் பாதுகாத்துப் பராமரித்து வருகிறார். அப்படி இருக்கும்போது கடவுள் நம்மையும் பராமரிக்காமல் போகமாட்டார் என்பதனால் இறைவன்மீது நம்பிக்கைக் கொள்ளச் சொல்கிறார் இயேசு.
இயேசு சீடர்களது – நமது – நம்பிக்கையின்மையைக் கடிந்துகொள்ளும் இரண்டாவது பகுதி மத் 8:26 ஆகும். இங்கே இயேசுவும் சீடர்களும் கடல்மீது படகில் பயணப்படுகிறார்கள். திடிரென்று கடலில் கொந்தளிப்பும் சீற்றமும் ஏற்படுகின்றது. அப்போது சீடர்கள் தூங்கிக்கொண்டிருந்த இயேசுவிடம், ஆண்டவரே, காப்பாற்றும், சாகப்போகிறோம்” என்று கத்துகிறார்கள். உடனே இயேசு அவர்கள நோக்கி, “நம்பிக்கை குற்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்? என்று கேட்டு காற்றையும் கடலையும் கடிந்துகொள்கிறார். இங்கே சீடர்கள் இயேசு தங்களோடு இருக்கிறார் என்பதுகூடத் தெரியாமல், அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல், கத்துகிறார்கள். அதனால்தான் இயேசு அவர்களைக் கடிந்துகொள்கிறார்.
பலநேரங்களில் நாமும்கூட கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை அறியாமல் அவர்மீது நம்பிக்கையற்றவராய் இருக்கின்றோம். இத்தகைய ஒரு நிலை மாறவேண்டும். 1 குறிப்பேடு புத்தகம் 22:16 ல் வாசிக்கின்றோம், “எழு, செயல்படு, ஆண்டவர் உன்னோடு இருப்பாராக” என்று. ஆகவே, நாம் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வோடு வாழ்ந்து, எல்லா அச்ச உணர்வுகளிலிருந்தும் விடுதலை பெறுவோம்.
இயேசு நமது நம்பிக்கையின்மையைக் கடிந்துகொள்ளும் மூன்றாவது பகுதி மத் 16:8 ஆகும். இப்பகுதியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம் பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்று சொன்னபோது, சீடர்களோ தாங்கள் அப்பம் கொண்டுவராதைக் குறித்துத்தான் இயேசு பேசுகிறார் என்று நினைக்கிறார்கள். அப்போதுதான் அவர், “நம்பிக்கை குன்றியவர்களே, அப்பமில்லை என்று உங்களிடையே ஏன் பேசிக்கொள்கிறீர்கள்?” என்று கடிந்துகொள்கிறார். இங்கே இயேசு எவ்வளவோ அற்புதங்களைச் செய்தும், அவரது வல்லமையில் நம்பிக்கை கொள்ளாது வாழ்ந்த சீடர்களின் அறியாத தன்மையைக் கடிந்துகொள்கிறார்.
நாமும் எத்தனையோ முறை இறைவனின் வல்லமையையும் அரும்அடையாளங்களை உணர்ந்தபோதும் அவரில் நம்பிக்கை வைத்து வாழாமல், சந்தேகத்தோடு வாழ்கிறோம். ஆகவே ஆண்டவர் இயேசு தோமாவுக்குச் சொன்ன அறிவுரையான ‘ஐயம் தவிர்த்தும், நம்பிக்கைகொள்” என்பதற்கு இணங்க வாழ்வோம் (யோவா 21: 27).
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு அச்சத்திற்குக் காரணமான நம்பிக்கையின்மையை நம்முடைய வாழ்விலிருந்து அகற்றவேண்டும் என்று சொல்லும் அதேவேளையில் நம்மிடம், “துணிவோடிருங்கள்” என்ற அன்புக் கட்டளையும் தருகின்றார். அதாவது நாம் இறைவன் நம் பக்கம் இருக்கிறார், எனவே எதற்கும் அஞ்சிடாது துணிவோடு வாழவேண்டும் என்கிறார். இணைச்சட்ட நூல் 31:23 ல் ஆண்டவர் நூனின் மகனாகிய யோசுவாவைப் பார்த்துக் கூறுவார், “வலிமை பெறு, துணிவு கொள். ஏனெனில் நீ இஸ்ரயேல் மக்களை நான் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறிய நாட்டிற்குள் கொண்டு போவாய், நான் உன்னோடு இருப்பேன்” என்று. ஆகவே, யாராரெல்லாம் கடவுள் தங்களோடு இருக்கிறார் என்பதை உணர்கிறார்களோ அவர்கள் துணிவோடு இருப்பார்கள் என்பது உறுதி.
லியோட் ஜான் ஒகில்வி (Llyod John Ogilvie) என்ற பெண் எழுத்தாளர் தான் எழுதிய Silent Strength of My Life என்ற புத்தகத்தில் தனது வாழ்வில் ஏற்பட்ட அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துகொள்வார்
ஒருமுறை லியோட் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அங்கே காவலர்கள் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் கொண்டுவந்த பொருளைகளை எல்லாம் பரிசோதித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். லியோட் கொண்டுவந்த பொருட்களையும் அவர்கள் பரிசோதித்துப் பார்த்துவிட்டு விமானத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். அப்போது பத்துவயது சிறுவன் ஒருவன் வேகமாக ஓடி லியோடின் இருக்கைக்கு அருகே அமர்ந்தான். அவர் அவனைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். பதிலுக்கு அவனும் புன்முறுவல் பூத்தான். பின்னர் விமானம் தரையிலிருந்து மேலே கிளம்பியபோது எதைக் குறித்தும் பயப்படாமல், தான் கையோடு கொண்டுவந்திருந்த நோட்டில் ஏதோ ஒரு படம் வரையத் தொடங்கினான். லியோட் அவன் செய்வதையே பார்த்துக்கொண்டிருந்தார்.
ஓரிடத்தில் விமானம் மேகமூட்டத்திற்குள் புகுந்து தடுமாறத் தொடங்கியது. அப்போது அங்கிருந்த விமானப் பணிப்பெண் எல்லாரையும் சீட்பெல்ட் போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். உடனே எல்லாரும் சீட்பெல்ட் அணிந்துகொண்டார்கள். ஆனால் அந்த சிறுவன் மட்டும் எதைக் குறித்தும் பயப்படாமல், படம் வரைவதிலேயே தீவிரமாக இருந்தான். இதைப் பார்த்த லியோட் அவனிடம், “உனக்கு விமானம் தடுமாறுகிறது என்பதைக் குறித்த பயமில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவன், “நான் ஏன் பயப்படவேண்டும், ஏனென்றால் என்னுடைய தந்தைதான் விமான ஓட்டி” என்றான். இவ்வார்த்தைகளைக் கேட்டு லியோட் வியந்து நின்றார்.
ஆம் தந்தை தன்னைக் காப்பாற்றுவார் என்று உணர்ந்த அந்தச் சிறுவன் பயமில்லாது, துணிவோடு இருந்தான். அதைப் போன்று நாமும் விண்ணகத் தந்தை நமக்குத் துணையாக இருக்கிறார் என்பதை உணர்ந்து, அவர்மீது அசைக்க முடியாத நம்பிக்கைகொண்டு வாழ்ந்து, அதன்வழியாக எல்லா அச்சத்திலிருந்தும் வெளிவருவோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

 தனது தலையீட்டைத் தேர்ந்தெடுக்கும் இறைவன்

மறையுரை  வழங்குபவர் Fr. Freddy is a Redemptorist
priest belonging to the Province of Bangalore. Currently he is attached to the
Archdiocese of St. Louis, Missouri state, U.S.A.


முன்னுரை:

தனது வாழ்க்கையை மாற்றியமைக்கும் விதமாக பாலைவனத்தில் நிகழ்ந்த ஒரு அனுபவத்தை  கார்லோ கேரட்டோ என்னும் சகோதரர் தன்னுடைய “Why me, O God?” என்ற நூலில் பகிர்ந்துகொள்ளுகிறார். மலைப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கான தனது மறைப்பணியை தொடங்குவதற்கு முன்னதாக தன்னையே தயாரித்துக் கொள்ள விரும்பிய அவர், பாலைவனமே அதற்கு சரியான இடம் என்று நினைத்தார். இதற்காக கலோவா பாலைவெளியில் அறுநூறு கிலோமீட்டர் தொலைவிற்கு நெடுந்தூர நடைபயணம் மேற்கொள்ளவேண்டிய கட்டத்தில், அவருடைய உடல்நலம் நல்ல நிலையில் இல்லாதிருந்தது. இது குறித்து கார்லோவை கவனித்து வந்த அவருடைய நண்பரான செவிலியர் ஒருவர் மிகுந்த கவலை கொண்டார். "உங்கள் உடல்நலத்தை பராமரித்துக் கொள்ளும் வகையில், சில மருந்துகளை ஊசி மூலம் உங்கள் உடலில் செலுத்துகிறேன்" என்று அந்த நண்பர் சொன்னதை சரியென கார்லோ ஏற்றுக்கொண்டார். இத்தகைய நல்ல நோக்கத்தோடு, அந்த செவிலியர் நண்பர் கார்லோவின் தொடையில் ஊசியைப் பதித்து மருந்தை செலுத்தினார். ஆனால், அந்த மருந்து உடலுறுப்புக்களின் செயல்பாடுகளை முடமாக்குகின்ற கொடிய நஞ்சு என்பதை அந்த நண்பர் அறியவில்லை. அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்திற்குள்ளாக கார்லோவின் கால்கள் முடமாகிப் போயின. அவருடைய நண்பர் செய்த தவறினால், கார்லோ வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றவராக இருக்க வேண்டியதாயிற்று. தவறான மருந்தை பயன்படுத்தியது அந்த நண்பர் செய்த முட்டாள்தனமான செயல். இத்தகைய ஒரு கட்டத்தில் தான் கார்லோ கடவுளை நோக்கிக் கேட்டார்: "கடவுளே, எனக்கு ஏன் இந்த நிலை?" (Why me O God?)



வாழ்நாள் முழுவதும் கால்களை பயனற்றவையாக்கிடும் ஒரு அனுபவத்தை எதிர்கொள்ளுகின்ற நிலையை கடவுள் அவருக்கு கொடுத்தது ஏன்? நண்பருடைய நல்ல நோக்கம் முடிவில் நன்மை பயப்பதாக இல்லை. ஆனால் கார்லோவின் உள்மனதை புதுப்பித்து, துன்பங்களின் ஆழமான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுகின்ற நேரமாக அந்த சம்பவம் இருந்தது. இயேசுவுடனான ஒரு நெருக்கமான அனுபவமாக அது அமைந்துவிட்டது. இந்த அனுபவத்தின் இறுதியில், "கடவுளே, எனக்கு ஏன்?" என்று கேட்பதை விடுத்து, "கடவுளே, எனக்கு இல்லையா?" என்று கார்லோ கேட்க ஆரம்பித்தார்.



அவருடைய கால்களை குணமாக்கிட கடவுள் தலையிடவே இல்லை. மருந்தினை மாற்றி திருத்தியமைத்திட கடவுள் தலையிடவில்லை. கடவுள் எவ்வாறு தலையிடவேண்டுமென்று தொடக்கத்தில் கார்லோ விரும்பினாரோ அந்த வகையில் கடவுள் செயலாற்றவில்லை. ஆனால் ஒரு ஆழமான உறவுநிலையை உருவாக்கிடும் வகையில் கடவுளின் தலையீடு இருந்தது. கார்லோவுடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகின்ற வகையில் கடவுள் தலையிட்டார். கார்லோவின் வாழ்வில் தலையிடவேண்டிய வழிமுறையை கடவுளே தெரிந்துகொண்டார். தனது தலையீட்டு முறைகளை கடவுள் தாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளுகிறார்.



இறைவார்த்தை:

"மக்களுடைய வாழ்வின் நிகழ்வுகளில் தான் தலையிடவேண்டிய வழிமுறைகளை கடவுளே தேர்ந்தெடுக்கிறார்" என்பதை இன்றைய இறைவார்த்தை வாசகங்கள் நமக்கு காட்டுகின்றன.

1.எலியாவின் வாழ்க்கைப் போராட்டத்தில்: தங்கள் தெய்வத்தின் மேன்மையை எண்பிக்கத் தவறிய பாகாலின் பொய்வாக்கினர் 450 பேரை எலியா கொன்று போட்டார். இதற்கு பழிவாங்கும் விதமாக எலியாவைக் கொன்றுவிட இஸ்ரயேலின் அரசியான ஈசபேல் முடிவு செய்தாள். தனது உயிரைக் காத்துக்கொள்ளுமாறு, ஓரேபு மலைக்கு எலியா ஓடிப்போனார். மலையின் மேலே இருந்த எலியா, யாவே கடவுள் தன்னோடு பேசவேண்டுமென்று காத்திருந்தார். முதலில் பெருங்காற்று சுழன்றடித்தது; ஆனால் அந்தக் காற்றில் யாவே இல்லை. அதன் பிறகு, நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் யாவே இருக்கவில்லை. மூன்றாவதாக  பெருந்தீ கிளம்பிற்று. தீயிலும் யாவே கடவுள் இருக்கவில்லை. இறுதியாக, அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது. அந்த மெல்லிய ஒலியினூடாக கடவுள் பேசினார். மூன்று வெவ்வேறு வழிமுறைகளில் கடவுளின் தலையீட்டை எலியா எதிர்பார்த்தார். "அடக்கமான மெல்லிய ஒலி" என்னும் வழியையே யாவே கடவுள் தேர்ந்தெடுத்தார்.

2.சீடர்களின் வாழ்க்கைப் போராட்டத்தில்: இயேசு தனது சீடர்களை படகேறி கடலின் அக்கரைக்குச் செல்லுமாறு அனுப்பினார். படகு கரையிலிருந்து நெடுந்தொலைவு சென்றுவிட்டிருந்த நிலையில், பலமாக வீசிய சுழற்காற்றில் சிக்கிய சீடர்களின் படகு அலைகளால் அலைக்கழிக்கப்பட்டது. தான் இருந்த மலைப்பகுதியிலிருந்தே ஒரு வார்த்தையைச் சொல்லி இயேசு கடலை அமைதிப்படுத்தியிருக்கலாம். தங்களைக் காப்பாற்றுவதற்காக கடல்நீரின் மேலே நடந்துவந்து இயேசு தலையிடுவார் என்று சீடர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களோடு இருப்பதற்காக இயேசு தண்ணீரின் மீது நடந்து வருவதை தேர்ந்தெடுத்தார். சீடர்களை காப்பாற்றுவதற்காக எவ்வாறு தலையிடவேண்டும் என்பதை அவரே தேர்ந்து கொண்டார்.

3. பேதுருவின் வாழ்க்கைப் போராட்டத்தில்: இயேசுவை நோக்கிச் செல்லுவதற்கு தண்ணீரின் மேல் நடந்து போக பேதுரு விருப்பம் கொண்டார். ஆனால், அவருடைய அச்சத்தின் விளைவாக தண்ணீரில் மூழ்கினார். அந்நேரத்தில் பேதுரு, "ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று கத்தினார். அது மீட்பிற்கான கூக்குரல். தண்ணீரில் மூழ்காமல் பேதுருவை எவ்வாறு காப்பாற்றுவது என்பதையும் இயேசு தேர்ந்தெடுத்தார். தனது கையை நீட்டி  பேதுருவை காப்பாற்றிட முடிவுசெய்த இயேசு அந்த வழியைத் தெரிவுசெய்தார்.

யாவே கடவுள் தலையிடவேண்டிய முறையை எலியா தேர்ந்துகொள்ளவில்லை. இயேசு  தலையிடவேண்டிய முறையை சீடர்கள் தேர்ந்துகொள்ளவில்லை. இயேசு தலையிடவேண்டிய முறையை பேதுரு தேர்ந்துகொள்ளவில்லைஆனால், யாவே கடவுள் அடக்கமான மெல்லிய ஒலியில் பேசுவதை தேர்ந்துகொண்டார். சீடர்களோடு இருப்பதற்காக, இயற்கையை மீறி தண்ணீரின் மீது நடந்து வருவதை இயேசு தேர்ந்துகொண்டார். தனது கையை நீட்டி பேதுருவை காப்பாற்றுவதை இயேசு தேர்ந்துகொண்டார். தான் தலையிடவேண்டிய முறையை கடவுளே தேர்ந்தெடுக்கின்றார்.



பயன்பாடு:

வெள்ளம் பெருக்கெடுத்தோடிய ஒருபொழுதில், ஒரு மனிதன் தன் வீட்டினுள்ளே சிக்கிக்கொண்டான். தன்னைக் காப்பாற்றிட வேண்டுமென்று கடவுளிடம் அவன் வேண்டினான். கடவுளே நேரில் வந்து தன்னைத் தூக்கிக் காப்பாற்றுவதாக அவன் ஒரு காட்சியைக் கண்டான். அவனுடைய வீட்டினுள் வெள்ளநீரின் மட்டம் உயர்ந்துகொண்டிருந்தது. உடனே வீட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்ட அவனது பக்கத்து வீட்டுக்காரர், அவனை பாதுகாப்பான இடத்திற்கு கூட்டிச்செல்ல வாகன வசதியும் தர முன்வந்தார். ஆனால், அந்த மனிதன், "கடவுள் வந்து என்னை காப்பாற்றுவதற்காக நான் காத்திருக்கிறேன்" என்று கத்தினான்.  காத்திருந்த வாகனத்தை ஓட்டிக் கொண்டு பக்கத்து வீட்டுக்காரரும் அங்கிருந்து சென்றுவிட்டார். வெள்ளத்தின் அளவு இன்னும் உயர்ந்தபோது, அவனை காப்பாற்றி அழைத்துச் செல்ல ஒரு படகு அவ்வழியே வந்தது. அந்தப் படகில் ஏறவும் அவன் மறுத்துவிட்டான். அந்த மனிதன் இன்னும் கடவுளை நோக்கி வேண்டிக்   கொண்டிருந்தான். அவனைக் காப்பாற்றுவதற்காக ஒரு ஹெலிகாப்டர் வீட்டிற்கு மேலே பறந்து வந்தது. அதில் ஏறுவதற்கும் அவன் மறுத்துவிட்டான். இறுதியாக, வீட்டின் கூரைக்கும் மேலாக பாய்ந்த வெள்ளம் அவனை அடித்துச் சென்றது. வெள்ளத்தில் மூழ்கிய அவன் இறந்து போனான். விண்ணகத்திற்கு சென்ற அவன், கடவுளை பார்த்து, "கடவுளே, ஏன் என்னைக் காப்பாற்ற வரவில்லை? உமக்காக நான் காத்திருந்தேனே? என்னை ஏன் நீர் கைவிட்டீர்?" என்று கேட்டான். அப்போது கடவுள், "உன்னைக் காப்பாற்ற ஒரு வாகனத்தையும், ஒரு படகையும், பிறகு ஒரு ஹெலிகாப்டரையும் அனுப்பி வைத்தேன். ஆனால், நீ இவை எல்லாவற்றையும் மறுத்துவிட்டாய். இதைவிட உனக்கு வேறென்ன நான் செய்ய முடியும்?" என்று கேட்டார். கடவுளின் தலையீட்டு வழிமுறைகளைத் தேர்ந்து கொள்ள மறுப்பது அந்த மனிதன் மட்டுமல்ல.



நம்முடைய வாழ்விலும், நம்முடைய நாட்டு நடப்பிலும், கடவுளின் தலையீடு எவ்வாறு இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துவது நமக்கெல்லாம் சகஜமான ஒன்று. ஒரு குறிப்பிட்ட விதமான வேலைவாய்ப்பையே கடவுள் நமக்குத் தரவேண்டும் என்று நாம் எண்ணுகிறோம்; ஆனால் அது நடப்பதில்லை. ஒவ்வொருவரும் தன்னுடைய குறிப்பிட்ட ஜாதி, மதம், மொழியினம் - இவற்றின் அடிப்படையிலேயே அவரவர் திருமணம் நடக்கவேண்டுமென்று நினைக்கிறோம்; அதுவும் நடப்பதில்லை. நிறைவான உடல்நலத்துடன் பிறப்பிலிருந்து இறப்பு வரை நம்மையெல்லாம் இறைவன் ஆசீர்வதிக்கவேண்டுமென்று நாம் ஆசிக்கிறோம். ஆனால் அது உண்மைநிலைக்கு அப்பாற்ப்பட்ட ஒன்று. நமது நாட்டில் நிலவுகின்ற நிச்சயமற்றதன்மைகள் எல்லாம் மறைந்திட வேண்டுமென்று விரும்புகிறோம்; ஆனால், அவையெல்லாம் வளர்ந்துகொண்டே இருப்பதன்றி குறைவுபடுவதில்லை. மதச் சுதந்திரம் வேண்டுமென்று கடவுளிடம் நாம் பிரார்த்திக்கிறோம்; ஆனால், மதத்தின் பெயரால் நாமே பலரைக் கொலை செய்திருக்கிறோம் என்பதை உணர்வதில்லை. நீராதாரங்களை எல்லாம் தகர்த்துவிட்டு, மழைக்காகவும், தண்ணீருக்காகவும் கடவுளிடம் வேண்டுகிறோம்; ஆனால், தண்ணீர் என்பது ஒரு போர்க்காலப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இத்தனை குழப்பங்களை நம் வாழ்விலும், நாட்டிலும் வைத்துக்கொண்டு, இவற்றிலெல்லாம் கடவுளின் தலையீடு எவ்வாறு இருக்கவேண்டும் என்று நாம் கடவுளிடம் சொல்லுகிறோம்



கடவுளின் தலையீடு குறித்து நமக்கு இத்தனை எதிர்பார்ப்புகள் இருந்தாலும், அதனை நாம் தேர்ந்தெடுக்க இயலாது என்பதை நாம் உணர்வதே இல்லை. கடவுளின் தலையீடு என்பது, அவருடைய நேரத்தில், அவருடைய பாணியில், அவருடைய முடிவற்ற ஞானத்தின் வழிமுறையில் அவராலே தேர்ந்து கொள்ளப்படுகின்றது.



முடிவுரை:

நமது வாழ்விலும், நமது நாட்டிலும் கடவுளின் தலையீடு நிகழவேண்டுமென்று நாம் ஜெபிப்போம். கடவுளுடைய தலையீட்டுக்கான நிபந்தனைகளை நாம் அவருக்குச் சொல்லித்தர முற்படக்கூடாதென நாம் மன்றாடுவோம். எவ்வாறு, எப்போது, எங்கே தன் தலையீடு இருக்கவேண்டும் என்பதை அவரே தேர்ந்து கொள்ளுகிறார்.



When you are one with Jesus, you do what he does!

 

Fr.Sahaya G. Selvam, sdb-Nairobi

The gospel narrative of the 18th Sunday in Cycle A is about feeding the five thousand with five loaves and two fish.  (This year since the Feast of Transfiguration felt last Sunday, we did not listen to that episode.) The story in the gospel reading of today is what follows immediately after that feeding.  To understand the meaning of the reading of today, we need to ask an intriguing question: in whose hands did the miracle of the loaves really take place?  What do I mean?  Did Jesus take the loaves and the fish, put a veil around them, and say the magic words, ‘Abracadabra’ (by the way, this is Aramaic - the mother-tongue of Jesus, the equivalent of the Indian version, ‘zee-boom-bah’), pull away the veil, and behold, an abundance of bread and fish! 



No! That would be magic.  And Jesus is not a magician – though some people expect Jesus to be one, even today. On the other hand, what actually happened was, “taking the five loaves and the two fish he looked up to heaven, and blessed, and broke and gave the loaves to the disciples, and the disciples gave them to the crowds” (Mt 14:19). Yes, the disciples gave them to the crowds, and the miracle happened even as they gave out the loaves.  The miracle happened in the hands of the disciples. 



Were not the disciples able to calm the sea? After the miracle of loaves, Jesus “made the disciples get into the boat and go before him to the other side” (Mt 14:22). What is Jesus up to – isolating himself from the community of disciples? Sure enough, the boat struggles “beaten by the waves; for the wind was against them” (Mt 14:24).  But there was no need for the disciples to panic.  The miracle of loaves had taken place in their hands, they had received the bread – blessed and broken – and Jesus was with them.  They just had to believe.  As if this was not sufficient, Jesus would walk on the water to show that he is still in control.  But they panic. “They were terrified, saying, "It is a ghost!" And they cried out for fear” (Mt 14:26).



The Jews were basically nomadic pastoralists.  They were not sea-farers.  The inhabitants around Galilee had, in time, ventured into this lake – to the ridicule of the Jews of Judea – and yet their relationship with the ‘waters of the sea’ still remained mystery-laden.  They believed that the restless ‘waters’ of the sea was the home to monsters and ghosts.  Hence, it was also a symbol of evil. Jesus walking on the water was a didactic-action; he was teaching them by his action that he was in control of evil that threatens them.



You too can conquer evil! Peter conditionally recognises this.  Only conditionally: "Lord, if it is you, bid me come to you on the water" (Mt 14:28). As if to ask, if you are truly with me, is it also possible for me to conquer evil?  And Jesus said, “Come!” (Mt 14:29).  What follows is a drama of the test of the faith of Peter.  When Peter is overcome with the fear of the wind, he sinks.  He had not understood the miracle of the loaves, as the Gospel of Mark would have it (Mk 6:52).  Interestingly, even in that sinking Peter has a grain of faith: Lord, save me, he cries out. Then there is a happy conclusion: “And those in the boat worshiped him, saying, "Truly you are the Son of God" (Mt 14:33).



Today, Jesus invites me to come out of the security of my boat, to move towards him in faith, with a willingness to overcome evil that is within me and all about me.  I am not alone.  He is with me.  With him near me, there is multiplication of the loaves and there is calming of the sea.

Sahaya G. Selvam

No comments:

Post a Comment