Friday 18 August 2017

20 ஆகஸ்ட் 2017: ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு - 20 ஆகஸ்ட் 2017:



I. எசாயா 56:1,6-7
II. உரோமையர் 11:13-15,29-32
III. மத்தேயு 15:21-28




பிள்ளைகளும், நாய்க்குட்டிகளும்!


மறையுரை-வழங்குபவர் :
அருள்பணி ஏசு கருணாநிதி-மதுரை மறைமாவட்டம் 


'ஹோம் ஒர்க் செய்ய, காய்கறி நறுக்க, பால்கனியில் அமர்ந்து பேப்பர் பார்க்க, லேப்டாப் வச்சி வேலை பார்க்க, வயசானவங்க டிவி பார்த்துகிட்டே டிஃபன் சாப்பிட, 3 ஆங்கிள், 6 உயரம் என மொத்தம் 18 வகையாக பயன்படும் டேபிள் மேட் அவங்க வீட்டுல இருக்க, இவங்க வீட்டுல இருக்கு, உங்க வீட்டுல இருக்கா?' என்ற விளம்பரத்தை நாம் பார்த்திருப்போம்.

டேபிளில் அமர்ந்து உண்ணும் பழக்கம் நடுத்தர வீடுகளிலும் இப்போது வேகமாக பரவிக்கொண்டு வருகின்றது.

மேசை - இந்த ஒற்றைச் சொல்லை மையமாக வைத்து இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் இருக்கின்றன. நான் இத்தாலியில் படித்தபோது ஆச்சர்யப்பட்ட ஒன்று மேசைப் பழக்கம். உணவு மேசையில் எப்படி இருப்பது? என்று ஒரு நாள் வகுப்பே நடத்தப்பட்டது. மேசையில் அமர்ந்திருக்கும்போது எந்தக் காரணத்தைக் கொண்டும் அடுத்தவரைத் தொடக்கூடாது. ஸ்பூன் அல்லது ஃபோர்க் கீழே விழுந்தால் எடுக்கக் கூடாது. ஒருவர் தூரத்தில் இருக்கும் கூடையிலிருக்கும் ரொட்டியில் ஒன்றைக் கேட்டால், கூடை முழுவதையும் தூக்கிக் கொடுக்க வேண்டும். தண்ணீரை கிளாஸில் ஊற்றும்போது புறங்கை கொண்டு ஊற்றக் கூடாது. இவை எல்லாவற்றிக்கும் மேலாக எந்த இடம் உனக்குக் குறிக்கப்பட்டிருக்கிறதோ அந்த இடத்தில்தான் நீ உட்கார வேண்டும்.

இத்தாலிய வீடுகளில் தங்களுக்கு பிடித்தமான அருள்பணியாளர் அல்லது அருள்சகோதரி வரும்போது அவரை முதன்மையான இருக்கையில் அமர வைத்து 'காப்போ தாவோலா' (மேசையின் முதல்வர்) என அறிவித்து மகிழ்வர். மேலும், ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு மேசைகள் இருக்கும். வீட்டு உரிமையாளர்கள் அல்லது விருந்தினர்கள் அமர்ந்து சாப்பிட ஒரு மேசை. வழிப்போக்கர்கள் அல்லது பணியாளர்கள் அமர்ந்து சாப்பிட மற்றொரு மேசை. எந்தக் காரணத்திற்காகவும் வழிப்போக்கர்களும், முன்பின் தெரியாதவர்களும், பணியாளர்களும் முதல் மேசையில் அமர அனுமதிக்கப்படவே மாட்டார்கள்.

ஆக, மேசை என்பது ஒருவரின் உரிமையைக் காட்டுகிறது. இதே நிலை நம் ஊர் அரச அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் பார்க்கலாம். 'என் டேபிளுக்கு இன்னும் வரல!' என்று அலுவலகங்களில் சொல்வார்கள். அதாவது, என் உரிமைக்கு இன்னும் வரவில்லை என்பதே இதன் அர்த்தம். என் பள்ளியின் ஆசிரியை ஒருவரது மேசையை மற்ற ஒருவர் திறந்தபோது அவர் குய்யோ முறையோ என அலறினார். தன் மேசையைத் திறந்தது பெரிய குற்றம் என்றார். ஆக, மேசையின் மேல் நாம் கொண்டாடும் உரிமை இயல்பானது. மேலும், மேசை என்பது நம் வேலையை அடையாளப்படுத்துவதோடு அது சில நேரங்களில் நம் அடையாளமாகவும் மாறிவிடுகிறது.

இந்தப் பின்புலம் தெளிவானால் இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் பொருள் தெளிவாகும்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 56:1,6-7) நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் மீண்டும் திரும்பிவருவர் என்றும், ஆண்டவரின் ஆலயம் மீண்டும் கட்டப்படும் என்றும் இறைவாக்குரைக்கின்ற எசாயா இறைவாக்கினர், ஆண்டவரின் திருமலை நோக்கி யூதரும், யூதரல்லாத புறவினத்தாரும் வருவர் என முன்மொழிகின்றார். ஆண்டவரின் திருமலை யூதர்களின் வழிபாட்டுத்தலம். இந்த இடத்திற்கு புறவினத்தார்கள் எப்படி அனுமதி பெறுவர்? யூதர்களுக்கு தங்களின் பிறப்புரிமையாக வருகின்ற இந்த உரிமை மற்றவர்களுக்கு எப்படி வருகிறது? மற்றவர்கள் செய்யும் நற்செயல்களால் இந்த உரிமை உருகிறது.

இந்த உரிமையைப் பெற மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பட்டியலிடுகின்றார் எசாயா:

அ. தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொள்ள வேண்டும்
ஆ. ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாமல் கடைப்பிடிக்க வேண்டும்
இ. கடவுளின் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ள வேண்டும்

இந்த மூன்று பண்புகளையும் பெற்றிருக்கும் பிற இனத்தவர்கள் ஆண்டவரின் மேசையின் மேல் - பலிபீடத்தின்மேல் - வழிபட உரிமை அல்லது தகுதி பெறுவார்கள். பிறப்பால் வழிபடும் உரிமையைப் பெற்றிருக்கும் யூதர்களோடு இணைகின்றனர் செயல்களால் உரிமை பெற்றவர்கள். இந்த உரிமைகளில் உயர்ந்தது எது, தாழ்ந்தது எது என்பது கிடையாது. இறைவின் இணைவதே அல்லது ஒன்றுசேர்ப்பதே முக்கியமானது.

இந்த இரண்டு வகை உரிமைகளையும் இன்றைய நற்செய்தி வாசகம்  (காண். மத் 15:21-28) 'பிள்ளைகள்,' 'நாய்க்குட்டிகள்' என உருவகப்படுத்துகிறது.  கானானியப் பெண்ணின் மகள் நலம் பெறும் நிகழ்வை மத்தேயு மற்றும் மாற்கு (காண். 7:24-30) மட்டுமே பதிவுசெய்கின்றனர். பெண்ணையும், புறவினத்தாரையும் இழிவுபடுத்துவதுபோல இந்நிகழ்வு இருப்பதால் லூக்கா இதை பதிவு செய்ய மறுக்கின்றார். இயேசுவை ஒரு குறிப்பிட்ட இனத்தின் மெசியா போல இது முன்நிறுத்துவதால் யோவான் இதை தன் நற்செய்திக்கு ஒவ்வாததாக நினைக்கின்றார். மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்தியாளரின் பதிவுகளில் சில முக்கியமான வித்தியாசங்களும் இருக்கின்றன. இந்த நிகழ்வு உண்மையில் நிகழ்ந்ததா? என்று கேட்டால், 'ஆம்' என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நெருடலாக இருக்கும் நிகழ்வுகள் அனைத்தும் உண்மையான நிகழ்வுகள் என்பது விவிலிய ஆராய்ச்சியின் ஒரு விதி. இந்நிகழ்வை வாசிக்கும்போது நம்மை அறியாமலேயே ஒரு நெருடல் நம்மில் எழுகிறது. எப்படி?

இன்றைய நற்செய்தியில் வரும் கானானியப் பெண் மூன்று நிலைகளில் தாழ்த்தப்பட்டவளாக இருக்கின்றார்: முதலில் அவர் ஒரு பெண். இரண்டாவது அவர் ஒரு புறவினத்துப்பெண். மூன்றாவது அவர் பேய்பிடித்த மகளின் தாய். அதாவது கடவுளின் சாபத்திற்கு ஆளானவள். இப்படியாக மூன்று நிலைகளில் தாழ்த்தப்பட்ட ஒரு பெண் தன்னிடம் உதவி கேட்டுக் கதறி நிற்க, இயேசுவோ பாராமுகம் காட்டுகின்றார். ஓரிடத்தில் நின்று பதில் சொல்லாமல் நடந்துகொண்டே இருக்கின்றார். சீடர்கள் இவருக்காக பரிந்துபேசியபோது, 'இஸ்ரயேல் குலத்தாருள் காணாமல்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்' என தன் இனத்தைச் சார்ந்துகொண்டு பேசுகிறார் இயேசு. அனைத்திற்கும் மேலாக, இஸ்ரயேல் மக்களை 'பிள்ளைகள்' எனவும், புறவினத்தாரை 'நாய்கள்'   (அப்படித்தான் இருக்கிறது மூலமொழியில்) எனவும் உருவகித்து, 'பிள்ளைகளின் உணவை நாய்களுக்குப் போடுதல் முறையல்ல' என சப்பை கட்டு கட்டுகின்றார் இயேசு. இந்த நிகழ்வும், இயேசுவின் வார்த்தைகளும் இயேசுவை, 'மரியாதை தெரியாதவராக, பெண்ணை மதிக்காதவராக, சாதிப்பற்று அல்லது இனப்பற்று கொண்டவராக, மற்ற சாதி அல்லது இனத்தை வெறுக்கின்றவராக, தலைக்கனம் கொண்டவராக' சித்திரிக்கின்றன. இயேசுவைப் பற்றிய இந்தப் புரிதல் நமக்கு நெருடல்தானே.

இயேசுவின் இந்த நெருடல்தருகின்ற ஆளுமை இன்றுவரை விவிலிய ஆராய்ச்சியாளர்களுக்குப் புரியாத புதிராகவே இருக்கின்றது. இந்த நிகழ்வின் உரையாடல்களைக் கொண்டு நாம் இதன் கதைமாந்தர்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

நிகழ்வில் 'பெண் - இயேசு,' 'சீடர்கள் - இயேசு' என இரண்டு மேடைகளில் உரையாடல்கள் நடக்கின்றன.

மேடை 1:
பெண்: 'ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும். என் மகன் பேய்பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்.'
இயேசு: (ஒருவார்த்தைகூட பதில் பேசவில்லை)
பெண்: 'ஐயா, எனக்கு உதவியருளும்!'
இயேசு: 'பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல'
பெண்: 'ஆம் ஐயா. ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே'
இயேசு: 'அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உனக்கு நிகழட்டும்.'

மேடை 2:
சீடர்கள்: 'நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்!'
இயேசு: 'இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்'

முதல் மேடையில் பெண்ணும் இயேசுவும் மூன்று முறை பேசிக்கொள்கின்றனர். மூன்று முறை பெண் பேசுகின்றார். இரண்டுமுறை இயேசு பேசுகின்றார். மூன்று முறைகளும் இயேசுவைப் பார்த்து, 'ஐயா' என மரியாதையோடு அழைக்கின்றார். ஆனால் இயேசுவோ தொடக்கத்தில் மொட்டை கட்டையாக பெண்ணை அழைத்துவிட்டு, இறுதியாக, 'அம்மா' என மரியாதையோடு அழைக்கின்றார். மேலும், பெண் இயேசுவை, 'தாவீதின் மகனே' என அழைக்கின்றார். நிகழ்வின் தொடக்கத்தில் பேய் பிடித்திருக்கும் பேய் இறுதியில் நீங்குகிறது. 'தாவீதின் மகன்' என அறிக்கையிட்ட பெண்ணின் நம்பிக்கையை, 'உம் நம்பிக்கை பெரிது' என பாராட்டுகின்றார் இயேசு.

இங்கே மேசை ஒன்று இருக்கின்றது. அதில் வீட்டின் பிள்ளைகளம் அமர்ந்திருக்கின்றன. மேசைக்குக் கீழே அவர்கள் வளர்க்கும் நாய் படுத்திருக்கிறது. மேசையின்மேல் அமர்ந்து நாயால் உண்ணமுடியவில்லை என்றாலும், மேசையின்மேலிருந்து விழும் துண்டுகளை உண்பதால் நாயும் மேசையின்மேல் உள்ள உணவின் உரிமையாளர் ஆகிறது. இவ்வாறாக, 'பிள்ளைக்குரிய' மேசை உரிமை இயல்பாக வருகிறது. 'நாய்களுக்குரிய' உரிமை அவை மேசைக்கு அடியில் அமர்ந்திருப்பதில் வருகிறது. 'உன் உணவும், என் உணவும்,' 'பிள்ளைகளின் உணவும், நாய்களின் உணவே' எனத் தோலுரிக்கின்றார் கானானியப்பெண்.
தனக்கு இயல்பாக அல்லது பிறப்பால் வராத இறையரசு உரிமையைத் தன் நம்பிக்கையால் வெற்றிகொள்கின்றார் கானானியப்பெண்.

இரண்டாவது மேடையில் சீடர்களும், இயேசுவம் பேசிக்கொள்கின்றனர். தன் இனம் பற்றிய பேச்சை தன் இனத்தாரோடு வைத்துக்கொள்கின்றார் இயேசு. இந்த வகையில் இயேசு பரவாயில்லை. கொஞ்சம் சென்ஸிடிவ்வாக இருந்திருக்கிறார். சீடர்கள் பெண்ணைப் பற்றி இயேசுவிடம் சொல்வது தங்களின் விருப்பத்தால் மட்டுமல்ல. மாறாக, அந்தப் பெண்ணின் தொந்தரவால்தான்.
எது எப்படியோ, நிகழ்வின் தொடக்கத்தில் இருந்த குழந்தையின் பேய் நிகழ்வின் இறுதியில் காணாமல்போய்விடுகிறது. 'பிள்ளைகளைப்' போலவே, 'நாய்க்குட்டிகளும்' தங்கள் நம்பிக்கையால் நலம் பெறுகின்றன.


இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 11:13-15, 29-32) தான் பிற இனத்து மக்களின் திருத்தூதர் என அறிக்கையிடும் பவுல் அதற்காக வருந்தவில்லை எனவும், கடவுளின் இரக்கத்தால் புறவினத்தாரும் உரிமைப்பேறு பெறுகின்றனர் எனவும் சொல்கின்றார். ஆக, 'பிள்ளைகள்' தங்கள் உரிமை என பெற்றுக்கொண்டவற்றை, 'புறவினத்தார்கள்' தங்களின் உரிமையை கடவுளின் இரக்கத்தால் பெற்றுக்கொள்கின்றனர்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு முன்வைக்கும் சவால்கள் எவை?

1. உரிமை
தனக்கு இயேசுவின்மேல் இல்லாத உரிமையை தன் நம்பிக்கையால் பெற்றுக்கொள்கிறார் கானானியப் பெண். கிறிஸ்தவர்களாகிய நம் உரிமை எங்கிருந்து வருகிறது? நாம் பெறுகின்ற திருமுழுக்கால் நாம் பிள்ளைகள் என்ற உரிமையையும், நாம் அறிக்கையிடும் விசுவாசத்தால் நாய்க்குட்டிகள் என்ற உரிமையையும் பெற்றுக்கொள்கின்றோம்.

2. பெண்
நாம் கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு இந்தப் பெண்தான் காரணம். இந்தப் பெண் மட்டும் இல்லை என்றால் இயேசு யூதர்களின் மெசியாவாக மட்டுமே இருந்து மறைந்திருப்பார். இவரிடம் நான் மூன்று நற்குணங்களைப் பார்க்கின்றேன்: (அ) துணிச்சல் - தான் வாழ்ந்த காலத்தின் சமூகம் வைத்திருந்த ஆண்-பெண் வேறுபாடுகளைத் தூக்கி எறிந்து, இயேசுவோடு பேசுகின்றார். (ஆ) விடாமுயற்சி - தன் இலக்கு என்பது தன் மகளின் உடல்நலம் என்பதில் தெளிவாக இருக்கின்ற அவர், அந்த இலக்கை அடையும்வரை போராடுகின்றார். தான் 'நாய்' என அழைக்கப்பட்டாலும் போராடுகின்றார். (இ) தோல்வியைச் சந்திக்கும் மனத்திடம் - இதை ஆங்கிலத்தில் 'ரெஸிலியன்ஸ்' என்பார்கள். அதாவது, தனக்கு ஏற்படுகின்ற எந்த இழப்பையும் பொறுத்துக்கொண்டு அதிலிருந்து நிமிர்ந்து வருவது.

3. எசாயாவின் அழைப்பு
இறைவனின் இல்லத்தை 'இறைவேண்டலின் வீடாக' அறிவிக்கின்ற எசாயா அந்த இல்லத்தை நோக்கி மற்றவர்கள் நகர்நது வர அவர்கள், உள்ளத்தாலும், உடலாலும் தூய்மை பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார். ஆக, எசாயாவின் அழைப்பு வெளிப்புறத்தில் உரிமை போலத் தெரிந்தாலும், உள்புறத்தில் அது கடமையாக இருக்கிறது.

4. நம் குறுகிய கண்ணோட்டம்
'என் இனம் - உன் இனம்,' 'நான் - நீ,' 'நாங்கள் - நீங்கள்' என்ற வேறுபாடு நம்மிடையே இருக்கக்கூடாது. இந்த வேறுபாடு இருக்கும்போது நம்மை அறியாமலேயே நம்மிடம் ஒரு பெருமித உணர்வு வந்துவிடுகிறது. இந்த உணர்வு வந்துவிட்டால் நாம் யாரையும் மதிப்பதும் கிடையாது. ஆக, பிரித்துப் பார்க்கின்ற பார்வை வேண்டாம்.

5. எளியவரும் வலியவரும்
எளிமை அல்லது வலிமை என்பது நாம் நிற்கும் தளத்தைப் பொறுத்தே இருக்கிறது. நம்மைவிட வலிமை குன்றி இருக்கும் குழந்தையை வெகு எளிதாக அடித்துவிடுகிறோம். அந்தக் குழந்தையால் நம்மைத் திருப்பி அடிக்க முடியாது என்பதால்தானே நாம் குழந்தையை வெகு எளிதாக அடித்துவிடுகிறோம். கானானியப்பெண் பெண் என்பதாலும், புறவினத்தாள் என்பதாலும் இயேசு அவரை 'நாய்' என அழைக்கின்றார். நம்மிடம் குச்சி இருக்கிறது என்பதற்காக நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாரையும் குரங்கு என நினைப்பது சால்பன்று.

இறுதியாக,

'நான் பிள்ளையா?' 'நான் நாய்க்குட்டியா?' என்ற கேள்வி எப்போதும் நம் எண்ண ஓட்டத்தில் இருக்க வேண்டும்.

பிள்ளைகளாகும் உரிமை இல்லாதவர்களுக்கும் உரிமை தருவது 'நம்பிக்கை'. இந்த நம்பிக்கையே பெண்ணின் மகளுக்கு நலம் தருகிறது.

மேசையில் விருந்தைத் தயாரித்து வைத்திருக்கும் இயேசு நம்மை இன்று அழைக்கின்றார். நாம் எப்படிச் செல்கின்றோம்? நாம் எந்த உரிமையில் செல்கின்றோம்? நம் உரிமையை நாம் தக்க வைத்துக்கொள்ள என்ன செய்கின்றோம்?

மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 20) பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு

அருள்பணி மரிய அந்தோணிராஜ்  - பாளை மறைமாவட்டம்

‘எல்லா மக்களுக்கும் அருள்பாலிக்கும் இறைவன்’
நியூயார்க் நகரில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற ஆலயம் அது. அந்த ஆலயத்திற்கு வருவோரெல்லாம் பணக்காரர்களும் தொழிலதிபர்களும் இன்னும் மெத்தப் படித்த மேதாவிகளும்தான்.
ஒருமுறை அந்த ஆலயத்தைக் கடந்து சென்ற கருப்பினத்தைச் சேர்ந்த ஓவன் என்ற இளைஞன் ஆலயத்தின் வெளித்தோற்றத்தையும் அழகையும் பார்த்துவிட்டு அந்த ஆலயத்தில் பொறுப்பாளராக இருந்த பாஸ்டரிடம், தன்னையும் ஆலயத்தில் ஓர் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். அதற்கு பாஸ்டர் அவனிடம், “ஓவன்! பிறப்பால் நீ கருப்பினத்தைச் சேர்ந்தவனாக இருப்பதால், உன்னை இந்த ஆலயத்தில் ஓர் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்வதற்கு இங்கே உள்ளவர்கள் யோசிப்பார்கள். ஆகையால் நீ நேராக வீட்டுக்குச் சென்று, இறைவனிடம் இந்த ஆலயத்தில் உறுப்பினராக சேரவா? வேண்டாமா? என்று கேட்டுவா. கொஞ்சம் கால அவகாசம் கூட எடுத்துக்கொள்” என்று சொல்லி அனுப்பிவைத்தார். அப்படியாவது அவனது தொந்தரவு தீரும் என்றுதான் அவர் அனுப்பிவைத்தார்.
ஏறக்குறைய ஒருமாதம் ஆகியும் ஓவன் அந்த ஆலயத்தின் பக்கம் வராததைக் கண்டு பாஸ்டர் மிகவும் சந்தோசப்பட்டார். ஆனால் திடிரென்று ஒருநாள் ஓவன் பாஸ்டரை சென்று சந்தித்தான். அவனைப் பார்த்ததும் அவருக்குத் தூக்கி வாரிப்போட்டது. அப்போது அவர் அவனிடத்தில் கேட்டார், “ஓவன்!, நீ உன்னுடைய வீட்டிற்குச் சென்று கடவுளிடம் இந்த ஆலயத்தில் உறுப்பினராகச் சேர்வதற்காக அவருடைய விருப்பத்தைக் கேட்டாயா? என்று வினவினார். அதற்கு ஓவன், “நான் கடவுளிடம் என்னுடைய கருத்தைக் கேட்டேன். அதற்கு அவர், ‘ஓவன் நீ தயவுசெய்து இந்த ஆலயத்தில் உறுப்பினராகச் சேராதே, ஏனென்றால் நானும்கூட இந்த ஆலயத்தில் ஒரு உறுப்பினராகக்கூட இல்லை. என்னையும் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக உள்ளே வர அனுமதிப்பதில்லை” என்றான். இதைக் கேட்ட பாஸ்டர் அவமானத்தால் வெட்கித் தலை குனிந்து நின்றார்.
ஆலயம் என்பது எல்லா மக்களுக்கும், எல்லா இனத்தாருக்கும் சொந்தமானது. அதை ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு மட்டும் சொந்தம் கொண்டாடுகிறபோது, அங்கே கடவுள் இருப்பதில்லை என்று உண்மையை இந்த நிகழ்வு வேதனையோடு பதிவு செய்கிறது.
பொதுக்காலம் இருபதாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் சிந்தனை ‘எல்லா மக்களுக்கும் அருள்பாலிக்கும் இறைவன்’ என்ற என்பதாகும். ஆம், கடவுள் எல்லா மக்களுக்கும் பொதுவானவர். அவர் தங்கி இருக்கும் திருக்கோவிலானது எல்லாருக்கும் சொந்தமானது. எனவே நாம் இத்தகைய கருத்துகளை சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் பிற இன மக்களைக் குறித்துக் கூறுகின்றார், “அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச்ச்செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப் பலிகளும் என் பீடத்தின்மேல் ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திக்கும் உரிய இறை மன்றாட்டின் வீடு என அழைக்கப்படும்” என்று. இங்கே கடவுள், யூதர்கள் மட்டுமல்ல பிற இனத்தார் எழுப்பும் ஜெபங்களைக் கூட கேட்பார் என்றும், அவர் தங்கியிருக்கும் ஆலயம் எல்லா மக்களுக்கும் உரிய இறைவேண்டலில் வீடு என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். ஆகவே, கடவுளை - அவர் தங்கி வாசம் செய்யும் ஆலயத்தை - ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு, குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் சொந்தம் கொண்டாடுவது மடமையிலும் மடமை என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
சாலமோன் அரசர் எருசலேம் திருக்கோவிலைக் கட்டிமுடித்த பின்பு சொல்லக்கூடிய ஜெபம் இதுவாகத்தான் இருக்கின்றது: இஸ்ரயேல் மக்களைச் சாராத அன்னியர் ஒருவர் உமது பெயரை முன்னிட்டுத் தொலை நாட்டிலிருந்து வந்து, மாண்புமிக்க உமது பெயரையும், வலிமை வாய்ந்த உமது கையையும், ஆற்றம் மிகுந்த உமது புயத்தையும் பற்றிக் கேள்விப்பட்டு வந்து, இந்த கோவிலை நோக்கி வேண்டுதல் செய்தால், உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவருக்குச் செவிசாய்த்து அந்த அன்னியர் கேட்பதை அருள்வாயாக” என்று ( 1 அர 8: 41- 43). ஆதலால்தான் இயேசு கிறிஸ்து எல்லாருக்கும் பொதுவான எருசலேம் ஆலயத்தை ஒரு குறிப்பிட்ட இனத்தவர் சொந்தம் கொண்டாடியபோது, அவர்களை விரட்டியடித்து இறைஇல்லம் எல்லாருக்கும் பொதுவானது என்பதை நிரூபிக்கிறார்.
இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகம் கூட, ஆண்டவர் இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவர் என்பதை நிரூபணம் செய்வதாக இருக்கின்றது. இயேசு புறவினத்தார் அதிகமாக வாழும் தீர், சீதோன் ஆகிய பகுதிகளுக்குச் செல்கிறார். அங்கேதான் கானானியப் பெண்மணி ஒருத்தி பேய்பிடித்து கொடுமைக்குள்ளாகி இருக்கும் தன்னுடைய மகளைக் குணப்படுத்தும்படி கேட்கின்றார். ஆனால் ஆண்டவர் இயேசுவோ அதைக் கண்டுகொள்ளாதவராய், ஏன் அவரை நாயென அழைக்கின்றார். (இயேசுவின் இவ்வார்த்தைகளை மேலோட்டமாகப் பார்க்கும்போது சற்றுக் கடினமாக இருந்தாலும், அவர் அப்பெண்ணின் நம்பிக்கையை சோதிப்பதற்காகக்கூட இப்படிப் பேசியிருக்கலாம் என புரிந்துகொள்ளலாம்). ஆனாலும் அப்பெண்மணி இயேசுவின்மீது உறுதியான நம்பிக்கையோடு இருந்தததால் அவளுடைய மகளுக்கு நலமளிக்கிறார். இங்கே இயேசு தான் ஒரு யூதன் என்பதையும் கடந்து, புறவினத்துப் பெண்மணியின் மகளுக்கு நலமளித்து தான் எல்லாருக்கும் பொதுவானவர், மேலும் நம்பிக்கையோடு கேட்டால், கேட்கிற வரங்களை அள்ளித்தருபவர் என்பதை எண்பித்துக் காட்டுகின்றார்.
இப்பகுதி இயேசுவின் பரந்த உள்ளத்தினைச் சுட்டிக்காட்டும் அதேவேளையில் கானானியப் பெண்மணியின் நம்பிக்கையை நமக்கு எடுத்தியம்புகிறது. கானானிய பெண்மணியோ இயேசு தன்னைக் கண்டுகொள்ளாவிட்டாலும், தன்னை அவர் நாயென அழைத்த பின்பும் அவள் தன்னுடைய நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் தன்னுடைய மகளது நோய் நீங்கப் பெறுகிறார். நம்முடைய வாழ்க்கையில் கனானியாப் பெண்மணியிடம் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறதா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நிறைய நேரங்களில் இறைவனை நோக்கிய நம்முடைய ஜெபம் கேட்கப்படவில்லையென்றால் நாம் நம்பிக்கையில் நம்பிக்கையில் தளர்ச்சியுற்று விடுகின்றோம். ஆனால் தளராத நம்பிக்கைதான் தலைவன் இயேசுவிடமிருந்து எல்லா ஆசிரையும் பெற்றுத் தரும் என்பது உறுதி.
அது ஓர் அழகிய கிராமம். அந்த கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார். அவர் ஊருக்கு மத்தியில் இருந்த ஒரு மரத்தடியில்போய் அமர்ந்தார். சிறுது நேரம் கழித்து அவருக்குத் தாகம் எடுக்க தண்ணீர் வேண்டும் என்று மக்களிடம் கேட்டார். ஆனால் ஊரில் இருந்த யாருமே அவரைக் கண்டு கொள்ளவில்லை. இதனால் அவர் அந்த ஊருக்கு இன்னும் 50 வருடங்களுக்கு மழையே பெய்யாது, வானம் பொய்த்துவிடும்” என்று சாபம் போட்டார்.
இந்த சாபம் பற்றிக் கேள்விப்பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல்
கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று அவர் கூறிவிட்டார். வேறு வழியின்றி
அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர். மேலிருந்து இதைக் கவனித்த வருண பகவான் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்துப் படுத்துவிட்டான். (வருண பகவான் சங்கை எடுத்து ஊதினால்தான் மழை வரும் என்பது நம்பிக்கை). இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான்

இப்படி இருக்க அந்த ஊரில் ஓர் அதிசயம் நடந்தது. ஆம், அந்த ஊரில் இருந்த ஒரே ஓர் உழவன் மட்டும் தினமும் கலப்பையை எடுத்து, வயலுக்குச் சென்று வந்துகொண்டிருந்தான். அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர். மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. ஒருநாள் அவனிடம் அவர்கள் கேட்டே விட்டனர். “நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா?” என்று. அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம். 50 வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும். உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்படி என்றே எனக்கு மறந்து போயிருக்கும். அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன்” என்றான்.
இது வானத்தில் இருந்த மழைக் கடவுளான வருணபகவானுக்குக் கேட்டது. அவரும் யோசிக்க ஆரம்பித்தார், ”50 வருசம் சங்கு ஊதாமல் இருந்தால் எப்படி ஊதுவது என்று மறந்து போயிருமே” என்று நினைத்து சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார். உடனே இடி இடித்தது.மழை பெய்ய ஆரம்பித்தது இறுதியாக அந்த உழவனின் நம்பிக்கை ஜெயித்து விட்டது. ஆம், நாம் நம்பிக்கையோடு வாழும்போது கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நன்மைகள் ஏராளம்.
இறைவாக்கினர் எரேமியாப் புத்தகம் 39:18 ல் வாசிக்கின்றோம். அங்கே ஆண்டவர் எரேமியாவைப் பார்த்துக்கூறுவார், “நான் உறுதியாக உன்னைக் காப்பாற்றுவேன்; நீ வாளால் மடிய மாட்டாய்; உன் உயிரே கொள்ளைப்பொருளாய் அமையும். ஏனெனில், நீ என்னில் நம்பிக்கை வைத்துள்ளாய்” என்று. ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவும் அவர்மீது முழுமையான நம்பிக்கை கொண்டு வாழ்வோம், அதைபோன்று அவர் எப்படி யூதர் என்று புறவினத்தார் என்று பிரித்துப் பார்க்காமல் பரந்த பார்வைகொண்டு வாழ்ந்தாரோ, நாமும் அப்படி பரந்த பார்வை கொண்டு வாழ்வோம்.
உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார், தாம் புறவினத்தருக்கு பணிசெய்வதைக் குறித்து பெருமையாகச் சொல்கிறார். அவரைப் போன்று, நம் ஆண்டவர் இயேசுவைப் போன்று இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர், அவர் நம்முடைய அம்மையப்பன், நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற உணர்வோடு வாழ்வோம். நம்பிக்கையில் நிலைத்திருந்து இயேசுவுக்கு சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

எல்லைகளின் தடைகளை தகர்த்திடுதல்

மறையுரை  வழங்குபவர் Fr. Freddy is a Redemptorist
priest belonging to the Province of Bangalore. Currently he is attached to the
Archdiocese of St. Louis, Missouri state, U.S.A.

முன்னுரை:
கிழக்கு ஜெர்மனியின் கம்யூனிச அரசு 1961 ஆம் ஆண்டு ஆகஸ்டு 13 ஆம் நாளன்று, பெர்லின் நகரத்தின் கிழக்கு - மேற்கு பகுதிகளுக்கிடையே முள்கம்பி வெளியுடன் கூடிய பலமான கான்கிரீட் சுவரை கட்டி எழுப்பியது. மேற்கு ஜெர்மனியிலிருந்த பாசிச கொள்கையாளர்கள் கிழக்கு ஜெர்மனியினுள் நுழைந்து, அந்நாட்டின் பொதுவுடைமை அரசுநிலையை சீர்குலைத்துவிடாமல் காப்பதே இத்தகைய தடுப்புச் சுவர் கட்டியதன் நோக்கமாகும். ஆனால், கிழக்கு ஜெர்மனி அரசின் கொள்கைகளை புறக்கணித்து, மேற்கு ஜெர்மனிக்கு பெருமளவில் மக்கள் நாடு கடந்து செல்வதை தடுப்பதற்கே இந்த நெடுஞசுவர் முக்கியமாகப் பயன்பட்டது. பன்னிரண்டு அடி உயரமும், நான்கு அடி அகலமும் கொண்ட இந்த வலுவான கான்கிரீட் சுவரின் மேற்பகுதியில் பெரிய குழாய்கள் பொறுத்தப்பட்டிருந்ததால், ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு ஏறி குதிப்பது இயலாத காரியமாக இருந்தது. அந்தச் சுவரின் கிழக்கு ஜெர்மனி நாட்டு பகுதியையொட்டி நீளமான "அழிவுத் தடம்" (Death Strip) அமைக்கப்பட்டிருந்தது. இந்த அழிவுத் தடத்தில், காலடிச்சுவடுகளை தெளிவாக காட்டுகின்ற மென்மையான மணற்பரப்பும், பேரொளி பாய்ச்சும் விளக்குகளும், கொடூரமான வேட்டைநாய்களும், தானியங்கி இயந்திர துப்பாக்கிகளும், தயாராக இருந்தன. மேலும், தப்பி ஓடுபவர்களை கண்டதும் சுடுவதற்கான கட்டளையோடு, ராணுவ வீரர்கள் எந்நேரமும் அந்தப் பகுதியில் காவலிருந்தர்ர்கள்.



கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சூழ்ந்திருந்த மறைமுகமான "பனிப்போர்" மெல்ல விலக ஆரம்பித்திருந்த காலகட்டத்தில், 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் நாளன்று, மேற்கு பகுதிகளுடனான உறவுகளில் மாற்றங்களை அறிவித்த கிழக்கு பெர்லின் நகர கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தி தொடர்பாளர், "அன்றைய தினம் நள்ளிரவு முதல் கிழக்கு ஜெர்மனியின் குடிமக்கள் நாட்டின் எல்லையை கடந்து செல்வதற்கு தடையேதுமில்லை" என்று கூறினார். இதனைத் தொடர்ந்து, கிழக்கு மற்றும் மேற்கு பெர்லின் மக்கள், கைகளில் மதுபான வகைகளை ஏந்தியவண்ணம், "வாயிற்கதவுகளைத் திறவுங்கள்" (Tur auf..!) என்று கூவியபடி சுவரின் இருமருங்கிலும் திரளாக ஒன்றுகூடினார்கள். அன்று நள்ளிரவில், சோதனைமையங்களின் அருகே வெள்ளமென மக்கள் திரண்டு நின்றார்கள்.



 தங்களை பிரித்துவைத்தத் தடைகளைத் தகர்த்தெறிய மக்கள் தீர்மானித்தபோது, பெர்லின் நகரத்தின் பெரும்சுவர் தரைமட்டமானது. தங்களை பிளவுபடுத்தி வைத்திருந்த எல்லையின் தடைகளை மக்கள் உண்மையிலேயே உடைத்தெறிந்தார்கள்.



இறைவார்த்தை:

இன்றைய நற்செய்தியில் காணப்படுகின்ற "எல்லைகளின் தடைகளைத் தகர்த்திடுதல்" என்னும் கருத்தைப் பற்றிய சில சிந்தனைகளை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். தடைகளை தகர்த்திட்ட இருவரை - அதாவது இயேசு மற்றும் கானானியப் பெண் ஆகிய இரண்டு நபர்களை - நாம் இங்கே காண்கிறோம். நற்செய்தி வாசகம் காட்டுகின்ற சம்பவம் தீர், சீதோன் பகுதிகளிலே நிகழ்கிறது. அரேபிய மொழியில் "மீன்பிடித்தல்" என்னும் பொருள்படும் "ஸாயிதா"  (Saida) என்ற பெயரால் இந்நாளில் அழைக்கப்படுகின்ற சீதோன், அந்த பகுதியில் குடியேறி வாழ்ந்துவந்த கானானின் தலைமகனான சீதோனின் (தொடக்க நூல் 10:15) வழிமரபினரால் அந்தப் பெயரைப் பெற்றது. சீதோனுக்கு தெற்கே இருபது மைல் தொலைவில் அமைந்துள்ள “தீர்”, அரேபிய மொழியில் "சோர்" (Sour) என்று இப்போது வழங்கப்படுகிறது. இஸ்ரேல் நாட்டிற்கு வடக்கே ஐம்பது மைல் தூரத்தில்  லெபனான் நாட்டில் இன்றைக்கும் தீர், சீதோன் பகுதிகள் இருக்கின்றன.



  • இயேசு தடைகளை உடைக்கிறார்:

  1. நாடுகளின் எல்லைகளை இயேசு உண்மையாகவே உடைத்தெறிந்தார்: கடவுள் நம்பிக்கையற்று, எல்லாவகையான தீமைகளும் கொண்டு குற்றமிழைக்கும் இனமாக கானானியர்களை இணைச்சட்ட நூலும், அதனையடுத்து வந்த இலக்கியங்களும் சித்தரிக்கின்றன. முற்றிலும் அழிக்கப்படவேண்டிய நாட்டின் மக்களாக கானானியர்கள் பார்க்கப்பட்டார்கள். கானானியர்களோடு கலந்து உறவாடுதல் யூதர்களுடைய பொதுவான வழக்கமல்ல. இந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் தீய நடத்தையும், சிலைவழிபாடும் இறைவாக்கினரால் கண்டிக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் இந்த நகரின் இறுதி அழிவை முன்னறிவித்திருந்தார்கள். யூதர்களையும். அவர்களுடைய அண்டைநாட்டுக்காரர்களையும் பிரித்து வைத்திருந்த புவியியல் எல்லைகளை இயேசு உடைத்துவிட்டார்.



  1. "தனிப்பட்டதன்மை" என்ற மனப்பாங்கினை இயேசு உடைத்தெறிகிறார்: உதவி வேண்டுமென்று அந்தப் பெண் கேட்டபோது, "இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்" என்று இயேசு பதிலிறுக்கிறார். "மெசியா இஸ்ராயேலின் தனிப்பட்ட சொத்து" என்று யூதர்கள் நினைத்தார்கள். மேலும் இயேசு, "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்று கூறுகிறார். உணவு என்பது இந்த இடத்தில் மீட்பைக் குறிக்கின்றது. மீட்பு என்பது தங்களுக்கு மட்டுமே சொந்தமான தனிப்பட்ட ஒன்று என்று யூதர்கள் நம்பினார்கள். இறுதியாக, அந்தப் பெண் வேண்டியதை இயேசு நிறைவேற்றியபோது, "தனிப்பட்டத்தன்மை" என்ற யூதர்களின் மனப்பாங்கின் எல்லைகளை உடைத்தெறிந்து, மெசியாவும், மீட்பும் அனைவருக்குமே உரியன என்ற கருத்தை நிலைநிறுத்துகிறார்.



  • எல்லைகளின் தடைகளையும் கானானியப் பெண் உடைக்கிறார்:

  1. சமூக எல்லைகளை இந்தப் பெண் உடைத்தெறிகிறார்: இயேசுவும் அவருடைய குழுவினர்  அனைவரும் யூதர்களாகவும், ஆண்களாகவும் இருந்தனர். அத்தகைய ஒரு கூட்டத்தினரை நெருங்கிச் செல்வதற்கு, அயல்நாட்டவரான இந்த கானானியப் பெண் மிகுந்த துணிவுடன் செயல்பட்டார். யூதர்களுக்கும், கானானியர்களுக்கும் இடையில் இருந்த முரண்பாடுகள் மிகவும் தொன்மையானவை. பகைவரின் அரணை ஊடுருவிச் செல்லுகின்ற வகையில் ஆபத்தான ஒரு வழியை இந்தப் பெண் தேர்ந்தெடுத்தார். இயேசுவிடம் உதவி பெறுவதற்காக, தனக்குப் பழக்கமான பாதுகாப்புச் சூழலை விடுத்து, மன அழுத்தம் தரக்கூடிய ஒரு செயலை செய்திட துணிவுகொண்டார். எந்தவொரு ஆண் துணையுமின்றி, அவர் இயேசுவிடம் வந்தது, அக்கால வழக்கத்திற்குப் புறம்பான ஒன்று. இயேசுவை சந்திப்பதற்காக எல்லாவிதமான சமூகத் தடைகளையும் இந்தப் பெண் உடைத்துவிட்டார்.



  1. மௌனம் என்னும் தடையை இந்தப் பெண் உடைத்தெறிகிறார்: தான் அன்பு செய்கின்ற தன் மகளின் உடல்நிலை குணமடைவதற்காக, அவளுடைய துயரத்தை தன் துயரமாக ஏற்றுக்கொண்ட இந்த கானானியப் பெண், தன்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அதனையும் ஏற்றுக்கொள்ளுகின்ற மனநிலையோடு இருக்கிறார். தான் அங்கு இருப்பதையும், தனது வேண்டுகோளையும் இயேசு கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தியது, அவளுக்கு பெருத்த அவமானம் தான். இயேசுவிடமிருந்த மௌனம் என்னும் தடையை இந்தப் பெண் உடைத்துவிட்டார்.



  1. அவமானத்தின் தடைகளை இந்தப் பெண் உடைத்தெறிகிறார்: இந்தப் பெண்ணை அனுப்பிவிடும்படி சீடர்கள் இயேசுவிடம் சொல்லுகிறார்கள். அவளுடைய வேண்டுகோளுக்கு இது ஒரு பெரிய அவமானம். கடவுளின் கட்டளைகளை பின்பற்றாததாலும், கடவுளின் உடன்படிக்கையின் வரம்பிற்குள் அவர்கள் இல்லாததாலும், புறவினத்தாரை யூதர்கள் செருக்குடனும், மரியாதையின்றியும் பாவித்து, "அழுக்கடைந்த நாய்"களாக அவர்களை கையாண்டார்கள். கிரேக்க சமூகத்தில், "நாய்" ஒரு அவமரியாதையின் சின்னமாகவும், வெட்கமற்ற, துடுக்கான பெண்ணைக் குறிப்பதாகவும் கருதப்பட்டது. சொல்வழியே வரக்கூடிய இதுபோன்றத் தடைகளையும்  இந்தப் பெண் உடைத்துவிட்டார்.



  1. தனது நம்பிக்கையின் தடைகளை இந்தப் பெண் உடைத்தெறிகிறார்: பல கடவுளர்களை வழிபடுகின்ற  மதத்தை இந்தப் பெண் பின்பற்றி வந்தார். இறந்துவிட்ட குடும்பத்தினரையும் கடவுள்களாக வணங்குவது இவருடைய சமூக மரபு. பாகால், யேல் மற்றும் அஷுரா ஆகியவை இவருடைய முக்கிய தெய்வங்கள். இதுவே இவருடைய அடிப்படையான நம்பிக்கை. ஆனால், இன்று இவர் இயேசுவைப் பார்த்து, "ஐயா, தாவிதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கூறுகிறார். இரண்டாம் முறையாக இயேசுவின் முன் வந்து பணிந்து, "ஐயா, எனக்கு உதவியருளும்" என்றார். மூன்றாம் முறையாக, "ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே" என்று சொல்லுகிறார். மூன்று தடவையும் இயேசுவை மெசியாவாக, ஆண்டவராக இந்தப் பெண் ஏற்றுக்கொள்ளுகிறார். இயேசுவிடமிருந்து தன்னைப் பிரித்து வைத்த தன்னுடைய மதம் சார்ந்த நம்பிக்கை என்னும் தடைகளையும் இந்தப் பெண் உடைத்துவிட்டார்.  

யூதர்களை விட மேலான நம்பிக்கையை வெளிப்படுத்திய ஒரு பெண்ணின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக, எல்லாத் தடைகளையும் தகர்த்துவிட்ட கடவுளைக் குறித்து இன்றைய நற்செய்தி நிகழ்வு எடுத்துரைக்கிறது. தனது மெசியாவாக, மீட்பராக ஏற்றுக்கொண்ட இயேசுவிடம் சென்றடைவதற்காக எல்லாத் தடைகளையும் தகர்த்துவிட்ட ஒரு பெண்ணைப் பற்றியதே இந்த சம்பவம்.
  
பயன்பாடு:

நமக்கு நாமே கட்டிவைத்துள்ள எல்லைகளின் தடைகளை இன்று நாம் எண்ணிப் பார்ப்போம்.

  • தனிப்பட்டத்தன்மையின் அடிப்படையில், மற்றவர்களை குறைத்து மதிப்பிடுகின்ற பற்பல  தடைகளை நாம் உண்டாக்கி வைத்துள்ளோம்.



  • நமது அயலாருக்கு எதிராக தடைகளை ஏற்படுத்தியுள்ளோம். முன்னர் எப்போதும் இல்லாத வகையில், நமது அயலாரைக் கண்டு நாம் அச்சப்படுகிறோம். விண்வெளியில் நம்மால் பயணம் செய்யமுடியும். ஆனால், நமது அயலாருக்கு அருகாக நம்மால் நடந்து செல்ல இயலாது.



  • மதங்களின் அடிப்படையில் தடைகளை ஏற்படுத்தியிருக்கிறோம். நம்முடைய மதத்தைச் சாராத எவரும் நம்மைவிட தாழ்ந்தவர் என்றும், ஒரு மேம்பட்ட கடவுள் நம்பிக்கையையும், பண்பாட்டையும் அவர் கற்றுக் கொள்வது அவசியம் என்றும் நாம் எண்ணுகிறோம்.



  • அறிவியல், தர்க்கவியல், சுற்றுசூழல், பொது அறிவு - இவற்றின் அடிப்படையில் தடைகளை கட்டியெழுப்பியுள்ள நாம், அறியாமை, அரசியல், முன்னேற்றம், மற்றும் அரசியல் தலைவர்கள்  இவற்றிற்கெல்லாம் அழிவின் பலிபீடத்தில் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறோம்.



  • நமது தோல் நிறத்தின் அடிப்படையில் பல தடைகளை நாம் உண்டாக்கி வைத்திருக்கிறோம். அறிவாற்றல், உயரிய மதிப்பீடுகள், மரியாதை இவற்றையெல்லாம் தோலின் நிறத்திற்கு சமமாக்கி நாம் வைத்திருக்கிறோம். நிறத்தின் தரத்தை அறியாதார், கிறிஸ்துவையும் அறிவதில்லை என்பதை நாம் உணர தவறிவிடுகிறோம்.



  • பாலியல் நெறிகளின் அடிப்படையில் தடைகளை உண்டாக்கி, மக்களை "சபிக்கப்பட்டோர்" என்றும், "மீட்கப்பட்டோர்" என்றும் பாகுபடுத்தி வைத்துள்ளோம். மேலும், "நல்லவர் - கெட்டவர்", "புனிதமுடையோர் - புனிதமற்றவர்", "சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுவோர் - ஏற்றுக்கொள்ளப்படாதோர்" - இவற்றின் அடிப்படையிலெல்லாம் மக்களுக்கு தடைகளை தயார் செய்துள்ளோம்.



"தடைகளைத் தகர்த்தெறிய நான் வந்துள்ளேன்" என்று இயேசு சொல்லுகிறார். "எல்லைகளின் தடைகளை ஏற்படுத்தவே நாங்கள் இருக்கிறோம்" என்று நாம் சொல்லுகிறோம்.



முடிவுரை:

மக்களை பிரித்தாளுகின்ற எல்லைகளின் தடைகளையெல்லாம், இயேசு ஒருவரால் மட்டுமே தகர்த்திட முடியும். இயேசுவோடு இணைந்து செயலாற்றுவதற்கு நமக்கு உதவிட வேண்டுமென்று இறைவனின் ஆவியிடம் மன்றாடுவோம்.


No comments:

Post a Comment