Friday 4 August 2017

ஆண்டவரின் தோற்றமாற்றம் பெருவிழா 6-08-2017

பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு 06.08.2017

*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


தானியேல் 79-10,13-14
2 பேதுரு 1:16-19
மத்தேயு 17: 1-9

மறையுரை-வழங்குபவர் :
அருள்பணி ஏசு கருணாநிதி-மதுரை மறைமாவட்டம்

இறை நல்லது!


'கறை நல்லது' - இதுதான் சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த சலவைத்தூள் விளம்பரம் சர்ஃப் எக்ஸலுக்கு பயன்படுத்தப்பட்ட கவர்ந்திழுப்புச் சொல்லாடல். விளையாட்டுத்திடல், வகுப்பறை, இல்லம், தோட்டம் என குழந்தைகள் விளையாடி அழுக்காக்கியதைக் காட்டிவிட்டு, 'கறை நல்லது' என நட்பையும் தங்கள் தயாரிப்பையும் ஒருசேர விளம்பரப்படுத்தியது இந்த நிறுவனம். என்னதான் விளம்பர அல்லது வியாபார உத்தி இருந்தாலும், 'கறை நல்லது' என்ற சொல்லாடல் நம் புரிதலிலும் ஒரு மாற்றத்தை உருவாக்குகிறது. இவ்வளவு காலமாக நாம் கறையைக் கெட்டது என்றும், கறை தேவையற்றது எனவும் எண்ணிக்கொண்டிருந்தோம். அந்த எண்ணத்தைச் சற்றே மாற்றியிருக்கிறது இந்த விளம்பரம்.


'இறை நல்லது' - இப்படி நாம் தலைப்பிட்டுக்கொள்வோம் இந்த வார மறையுரையை.


'கறை நல்லது' என்பதும், 'இறை நல்லது' என்பதும் வெறும் ரைமிங்கான பொருத்தம் அல்ல. மாறாக, தாபோர் மலையில் தோற்றம் மாறும் இயேசு தன் சீடர்களுக்கு, 'இறை நல்லது' என விளம்பரம் செய்கின்றார். இந்த விளம்பரம் மற்ற விளம்பரங்களைப் போன்ற பொய்கள் அல்ல. மாறாக, உண்மையாக அனுபவித்து உணரக்கூடிய ஓர் அனுபவம்.


இன்று நம் ஆண்டவரின் உருமாற்ற விழாவைக் கொண்டாடுகிறோம்.


உருமாற்ற நிகழ்வை மத்தேயு, மாற்கு, லூக்கா என்ற ஒத்தமைவு நற்செய்திகள் பதிவு செய்தாலும், அவைகளுக்கிடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த உருமாற்ற நிகழ்வை நேரில் கண்ட யோவான் அமைதியாயிருக்க, பேதுரு மட்டும் அதை தன் திருமடலில் பதிவு செய்கின்றார்.


பேதுருவின் உருமாற்றப் பதிவை இன்றைய இரண்டாம் வாசகத்தில் (2 பேதுரு 1:16-19) வாசிக்கின்றோம். தன் இறையனுபவம் தன் கனவில் நடந்த ஒரு நிகழ்வோ, அல்லது ஒரு புனைகதையோ இல்லை எனச் சொல்லும் பேதுரு, தன் இறையனுபவத்திற்குச் சான்றாக தான் தாபோர் அனுபவத்தைப் பதிவு செய்கின்றார்: 'நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள் ... தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இந்தக் குரலொலியை நாங்களே கேட்டோம்.' ஆக, பேதுருவின் இறையனுபவம் ஒரு காணல் அனுபவமாகவும், கேட்டல் அனுபவமாகவும் இருக்கிறது. இந்த அனுபவத்தைத் தன் திருச்சபையோடு பகிர்ந்துகொள்கின்ற பேதுரு, 'இருள்-ஒளி' என்ற உருவகத்தைக் கையாளுகின்றார். இருண்ட ஓர் இடத்தில் காணப்படும் ஒளி மிகவும் ஒளிமிகுந்ததாக இருக்கிறது. ஆக, இருள் ஒளியின் தன்மையைக் கூட்டிக் காட்டுகிறது. விடிவெள்ளி உதிக்கும்போது நாம் விடிந்துவிட்டது என்கிறோம். அப்படியே ஏதோ ஓரிடத்தில் இருளில் ஒளிந்துகொண்டிருக்கும் இறையனுபவம் என்ற ஒளி ஒவ்வொருவரின் மனதிலும் உதிக்கத் தொடங்கும்போது ஒவ்வொருவரின் உள்ளத்திலும் விடிவெள்ளி ஒளிர்கின்றது.


இந்த ஒளி உருவகத்தை இன்றைய முதல் வாசகத்தில் (காண். தானியேல் 7:9-10, 13-14) நெருப்பு, தீக்கொழுந்து, இரவு, மேகம் என்ற உருவகங்களால் பதிவு செய்கின்றார் இறைவாக்கினர் தானியேல்.


இவ்வாறாக, இரண்டாம் மற்றும் முதல் வாசகங்களில் இறை அனுபவம் அல்லது இறை பிரசன்னம் என்பது இருளில் ஒளிரும் ஒளிக்கும், இருளகற்றும் ஒளிக்கும், அளவிடமுடியாது மாட்சி என்னும் ஒளிக்கும் ஒப்பிடப்படுகிறது.


இயேசுவில் இந்த ஒளி வெறும் உருவகமாக இல்லாமல் அது உண்மையாகவே மாறுகிறது.


இயேசுவின் உருமாற்றத்தை 'மெட்டாமார்ஃபாசிஸ்' என்ற கிரேக்க வார்த்தையை செயப்பாட்டு வினைச்சொல்லாகப் பயன்படுத்திப் பதிவு செய்கின்றார். கூட்டுப்புழு பட்டுப்பூச்சியாக அல்லது வண்ணத்துப்பூச்சியாக மாற்றம் பெறுவதை நாம் 'மெட்டாமார்ஃபாசிஸ்' என அழைக்கின்றோம். இதன் தமிழ்பதம் 'தோற்ற மாற்றம்'. கூட்டுப்புழு வண்ணத்துப் பூச்சியாக தோற்றம் மாறுகிறது. ஆனால், தோற்றம் மாறினாலும் மாற்றம் பெற்ற உயிரினம் தன் முந்தைய உயிரினத்தில் இல்லாத சில குணங்களையும் பெறுகிறது. உதாரணத்திற்கு, கூட்டுப்புழுவால் பறக்க முடியாது. ஆனால் வண்ணத்துப் பூச்சியால் பறக்க முடியும். ஆக, தோற்றம் மற்றும் மாறவில்லை. குணத்திலும் மாற்றம் இருக்கிறது.


தான் மனித உருவில் தன் சீடர்கள் நடுவில் நடந்த இயேசு, தனக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்த மூன்று சீடர்களை (பேதுரு, யோவான், யாக்கோபு) மட்டும் அழைத்துக்கொண்டு சென்று அவர்கள்முன் தோற்றம் மாறுகின்றார். இந்த தோற்ற மாற்றம் சீடர்களுக்கு ஓர் அடித்தள அனுபவமாக இருந்தது. இந்த அடித்தள அனுபவமே இயேசுவைப் பற்றிய அவர்களின் பார்வையை மாற்றுகின்றது.


ஆறு நாள்கள், மலை, எலியா, மோசே, மூன்று பேர், கூடாரங்கள், மேகம் போன்ற சொல்லாடல்கள் முதல் ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் கொண்டிருந்த யாவே இறைவனின் சந்திப்புக்கூடார அனுபவத்தை நினைவுபடுத்துகின்றன. யாவே இறைவனின் இறைமை தங்களோடு உடனிருந்ததை இஸ்ரயேல் மக்கள் உணர்ந்ததுபோல இயேசுவின் சீடர்களும் இந்த அனுபவத்தை அனுபவிக்க அழைக்கப்படுகின்றார்கள்.


உருமாற்ற நிகழ்வுகளில் பரிமாறப்படும் உரையாடல்களோடு நம் வாழ்வை இணைத்துச் சிந்தித்து நம் வாழ்விற்கான பாடங்களை எடுத்துக்கொள்வோம்:


1. 'ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா?' (மத்17:4)
இவ்வார்த்தைகள் பேதுருவின் வார்த்தைகள். இவர் இவற்றை இயேசுவை நோக்கிச் சொல்கின்றார்.
இறைவனின் பிரசன்னம் மட்டுமே தங்களுக்குப் போதுமானது என மனிதர்கள் நினைப்பது இங்கே ஒன்றும் புதிதல்ல. முதல் ஏற்பாட்டில் இதே எண்ணம் கொண்டிருந்தவர்கள் இருக்கிறார்கள்.
அ. மோசே. சீனாய் மலையில் ஆண்டவருக்கும் மோசேக்குமான உரையாடல் இப்படி நடக்கிறது: 'அதற்கு ஆண்டவர், 'எனது பிரசன்னம் உன்னோடு செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் அளிப்பேன்' என்று கூற, மோசே அவரிடம், 'உமது பிரசன்னம் கூட வரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச் செய்யாதீர். நானும் உம் மக்களும் உம் பார்வையில் தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்? நீர் எங்களோடு வருவதாலும் நானும் உம் மக்களும் மண்ணுலகில் உள்ள அனைத்து மக்களினங்களினின்றும் வேறுபட்டு நிற்பதாலும் அன்றோ?' என்றார்' (காண். விப 33:14-16). மோசே இறைவனின் பிரசன்னம் தனக்கு அவசியம் என்றும், அதுவே தன் மக்களுக்கு அடையாளம் தருகின்றது என்றும் கூறுகின்றார்.


ஆ. தாவீது அல்லது சாலமோன். திபா 84ன் ஆசிரியர் தாவீதா அல்லது சாலமோனா? என்ற கேள்வி இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது. ஆனால் இத்திருப்பாடலின் தலைப்பில் பாடகர் தலைவர்க்கு என்று கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர்தான் இந்தப் பாடகர் தலைவர். இந்தப் பாடகர் தலைவர் இஸ்ரயேலின் அரசர். இஸ்ரயேலின் அரசருக்கு ஆசை எப்படி இருக்கிறது? 'வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களிலும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒருநாளே மேலானது. பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது' (திபா 84:10). நாட்டை ஆளும் அரசன் தான் கடவுளது இல்லத்தின் வாட்ச்மேனாக இருப்பதே இனிமையானது எனப் பாடுகின்றார். ஆக, தன் அரண்மனை தராத ஓர் அனுபவத்தை இறைவனின் பிரசன்னம் அவருக்குத் தருகின்றது.


இ. பேதுரு. பேதுருவை பல இடங்களில் இருப்பதாக நாம் பார்க்கிறோம். கடற்கரையில் மீன்பிடிக்கிறார். மாமியாரின் வீட்டில் இருக்கிறார். இயேசுவோடு யாயிரின் வீட்டில் இருக்கின்றார். செசரியா பிலிப்பி பகுதியில் இயேசுவைப் பற்றிய அறிக்கை செய்கின்றார். இறுதி இராவுணவில் இருக்கின்றார். கெத்சமேனித் தோட்டத்தில் தூங்குகின்றார். ஆளுநரின் மாளிகையில் மறுதலிக்கின்றார். சேவல் கூவக் கேட்டு கண்ணீர் விடுகின்றார். இயேசுவால் பாராட்டப்படுகின்றார். 'சாத்தானே' என கடிந்துகொள்ளப்படுகின்றார். 'அவர்தான் இயேசு' என்றவுடன் அப்படியே கடலுக்குள் குதிக்கின்றார். 'எனக்கு உன்மீது அன்பு உண்டு என்பது நீ அறியாத ஒன்றா!' என இயேசுவிடம் சரணாகதி அடைகின்றார். இப்படி பல இடங்களில் பல நிலைகளில் இருந்தாலும், அவர் விரும்பக்கூடிய அல்லது அவர் தங்கக்கூடியதாக நினைக்கும் இடமும், நிகழ்வும் இயேசுவின் உருமாற்றமே. 


மனிதமும், மனிதம் சார்ந்தவையும் தராத ஏதோ ஒன்றை இறைமை தருகின்றது. ஆகையால்தான் இறைமை நிறைந்திருக்கும் இடம் நமக்குப் பிடிக்கிறது. அல்லது இன்னும் அதிகமாக அது நம்மைப் பிடித்துக்கொள்கிறது. இன்று என்னை இறைமை பற்றிக்கொள்கிறதா? நான் இறைமையைப் பற்றிக்கொள்கிறேனா?


2. 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்' (மத் 17:5)


இவ்வார்த்தைகள் வானகத் தந்தையின் வார்த்தைகள். இவர் இவற்றை சீடர்களை நோக்கிச் சொல்கின்றார்.


மேகம் நிழலிடும்போதெல்லாம் இறைவனின் பிரசன்னம் நிரம்புகிறது என்பது இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கை அனுபவம் (காண். விப 40:16-21, 34-38). ஆகையால்தான் மேகம் நிழலிட்டபோது எழுகின்ற குரலை கடவுளின் குரல் எனக் கண்டுகொள்கின்றனர் சீடர்கள். கடவுளின் குரல் மூன்று நிலைகளில் உள்ளது: (அ) இயேசுவுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு பற்றிய அறிமுகம், (ஆ) இயேசுவின் பண்பு, (இ) சீடர்களுக்கான அழைப்பு. இயேசுவை தன் மகன் என அறிக்கையிடம் வானகத் தந்தை அவரில் தான் மகிழ்வதாக முன்மொழிகின்றார்.


எந்த மகன் தன் தந்தைக்கும் தாய்க்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறாரோ அந்த மகனே சிறந்தவர் என்கின்றன ஞானநூல்கள்: 'ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தையை மகிழ்விக்கின்றனர். அறிவற்ற மக்களோ தம் தாய்க்குத் துயரமளிப்பர்' (நீமொ 10:1). 'குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு. அவரது வாழ்நாளெல்லாம் அவர் உள்ளத்திற்குத் துயரம் தராதே' (சீஞா 3:12). இயேசுவின் மனுவுருவேற்றல் தந்தையின் பூரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.
சீடர்களுக்கு இங்கே ஒரு கட்டளையும் தரப்படுகிறது: 'செவி கொடுங்கள்' என்ற கட்டளை இஸ்ரயேலின் காதுகளுக்கு, 'ஷெமா இஸ்ரயேல்' என்ற தங்களின் மேன்மையான கட்டளையை (காண். இச 6:4) நினைவுபடுத்தும். 'கேள்' அல்லது 'செவி கொடு' என்ற எபிரேய வினைச்சொல்லுக்கு, 'கீழ்ப்படி' என்ற பொருளும் உண்டு. தமிழ்மொழியிலும் இந்த நிலை உண்டு. 'அவன் என் பேச்சைக் கேட்கவில்லை' என்ற வாக்கியத்தை, 'நான் பேசியது அவன் காதுகளில் விழவில்லை' என்றும், 'அவன் என் பேச்சிற்குக் கீழ்ப்படியவில்லை' என்றும் பொருள் கொள்ளலாம்.


இயேசு கடவுளின் மகன் என்றால், அவர் நம் சகோதரர் என்றால், நாமும் கடவுளின் பிள்ளைகளே. நம்மைக் குறித்தும் கடவுள் மகிழ்ச்சியாக இருக்கின்றார். இந்த மகிழ்வில் நாம் நம் மூத்த சகோதரர் இயேசுவுக்குச் செவிமடுத்தல் அவசியம்.


3. 'எழுந்திருங்கள். அஞ்சாதீர்கள்'


இவ்வார்த்தைகள் இயேசுவின் வார்த்தைகள். இவர் இவற்றைத் தம் சீடர்களிடம் கூறுகின்றார்.


மேகத்தைப் பார்த்தவுடன், குரலைக் கேட்டவுடன் சீடர்கள் முகங்குப்புற விழுகின்றனர். விவிலியத்தில் முகங்குப்புற விழுதல் என்பது கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்து கொள்ளுதல் அல்லது ஏற்றுக்கொள்ளுதல் என்று பொருள்படும். கடலின்மேல் நடந்து வந்த இயேசு படகில் ஏறியவுடன் சீடர்கள் முகங்குப்புற விழுகின்றனர் (காண். மத் 14:22-33). இயேசு விண்ணேற்றமடையுமுன் சீடர்கள் முகங்குப்புற விழுகின்றனர் (காண். மத் 28:17). இங்கே உருமாற்ற நிகழ்விலும் சீடர்கள் முகங்குப்புற விழுகின்றனர். அவர்களை ஒருவகையான அச்சம் ஆள்கொள்கிறது.


கடவுளின் அனுபவத்தை வரையறுக்கின்ற ருடால்ஃப் ஓட்டோ என்ற மெய்யியலாளர், 'மிஸ்தேரியும் திரமெந்தும் எத் ஃபாசினான்ஸ்' எனக் குறிப்பிடுகின்றார். அதாவது இறை என்னும் மறைபொருள் அச்சத்திற்குரியதாகவும், ஆச்சர்யத்திற்குரியதாகவும் இருக்கிறது. 


அச்சப்பட்டு முகங்குப்புற விழுந்தவர்களைத் தூக்கிவிடுகின்ற இயேசு, 'எழுந்திருங்கள். அஞ்சாதீர்கள்' என்கிறார். மிகுதியான மீன்பாட்டைக் கண்ட சீமோன் பேதுரு, 'ஆண்டவரே என்னைவிட்டு அகலும்' எனச் சொல்லி இயேசுவின் பாதங்களைப் பற்றிக்கொள்கின்றார் (காண். லூக் 5:8).


இயேசுவின் இந்த எழுப்புதல், 'போதும். வாங்க போவோம்' என சீடர்களை அழைப்பது போலவும் இருக்கிறது. ஆக, மலையனுபவம் என்பது நம்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அனுபவமாக இருக்க வேண்டுமே அன்றி, அங்கேயே நம்மைத் தேக்கிவிடக்கூடாது என்பதே பாடம்.


இறுதியாக,


'அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத் தவிர வேறு யாரையும் காணவில்லை' (மத் 17:8) என நிகழ்விற்குத் திரையிடுகிறார் மத்தேயு.


இதுதான் மிக முக்கியமான நிகழ்வு.


இனி இவர்கள் கண்களுக்குத் தெரிவதெல்லாம் இயேசு மட்டும்தான். 


வில்வித்தை கற்கின்ற அர்ச்சுனக்கு பறவையின் கண் மட்டுமே தெரிந்தது. பறவையின் உடலோ, இலைகளோ, கிளைகளோ, மரமோ தெரியவில்லை. இயேசுவின் மேல் மட்டுமே கண்களைப் பதிய வைக்கும்போது நம் வாழ்வின் இலக்கும், பயணமும் தெளிவாகிறது.


ஆக, இன்று நாம் கொண்டாடும் இயேசுவின் உருமாற்றப் பெருவிழா நம்மில் குடிகொண்டிருக்கும் இறையையும், நம் அடுத்தவரின் மேல் கொண்டிருக்கும் இறையையும் நமக்கு நினைவூட்டுவதாக. நான் எனக்கு அடுத்திருப்பவரில் இறையைக் கண்டேன் என்றால் அங்கே எதிர்மறை உணர்வுகளுக்கு இடமில்லாமல்போய்விடும். அங்தே இறைமை-மனிதம் சங்கமம் அறியப்பட்டால் மனித மாண்பு காக்கப்படும்.


நமக்கு இறைவனை அடையாளம் காட்டும் தாபோர் எது? அந்த மலையில் ஏறிச்செல்லும் நாம் அங்கே அவரைக் கண்டு மீண்டும் நம் வாழ்விற்கு இறங்கி வருவோம். அவரின் மேல் நம் கண்களைப் பதிய வைப்போம். அவரின் ஒளியில் நாம் ஒளி பெறுவோம்.


இறை நல்லது! இன்றும். என்றும்.



இயேசுவின் உருமாற்றப் பெருவிழா

மறையுரை-வழங்குபவர் :
அருள்பணி மரிய அந்தோணிராஜ்-பாளை மறைமாவட்டம்



இயேசுவின் உருமாற்றப் பெருவிழா
இன்று திருச்சபையானது ஆண்டவர் இயேசுவின் உருமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இவ்விழா கி.பி.நான்காம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரையிலான காலக் கட்டத்திலிருந்து கொண்டாடப் பட்டு வருகிறது. ஆனால் 1456 ஆம் ஆண்டு கிறித்தவர்கள் துருக்கியவர்களை வெற்றிகொண்டதன் பேரில் அப்போது திருத்தந்தையாக இருந்த முதலாம் கலிஸ்டஸ் என்பவர்தான் இதனை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்துதான் இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருவதாக வரலாறு சொல்கிறது.
இப்போது ஆண்டவர் இயேசுவின் உருமாற்றப் பெருவிழா நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
முதலாவதாக இவ்விழா ஆண்டவர் இயேசுவின் விண்ணக மகிமையை அவருடைய சீடர்களும், அவருடைய மக்களாகிய நமக்கும் எடுத்துரைப்பதாக இருக்கின்றது. நற்செய்தியின் இந்த பகுதிக்கு முன்பாக இயேசு தன்னுடைய சீடர்களிடம் தான் அடைய இருக்கும் சிலுவைச் சாவு, மரணம் ஆகியவற்றைப் பற்றி பேசுகிறார். இதனால் குழம்பிபோன இயேசுவின் சீடர்கள் ‘இயேசு உண்மையிலே மெசியாதானா ? என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய குழப்பத்தைப் போக்கவே இயேசுவின் இந்த உருமாற்ற நிகழ்வு ஏற்படுகின்றது.
தூய பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் அவர் கூறுவார், “நாங்கள் இயேசுவின் மாண்பை நேரில் கண்டவர்கள். ‘என் அன்பார்ந்த மகன் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைக்கிறேன்’ என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப் பற்றிய குரல் ஒலித்தபோது தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும், மாட்சியும் பெற்றார். தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணகத்திலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்” என்று. ஆக, இயேசுவின் உருமாற்ற நிகழ்வு, இயேசுவின் சீடர்கள் அவரை இறைமகன், மெசியா என ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக நிகழ்ந்தது என்று கூடச் சொல்லலாம்.
அடுத்ததாக இயேசுவின் உருமாற்ற நிகழ்வு, எருசலேமில் அவர் (இயேசு) அடைய இருக்கும் துன்பம், சிலுவைச் சாவு போன்றவற்றின் முன் அடையாளமாக இருக்கின்றது. அதைக் குறித்துப் பேசத்தான் மோசேயும், எலியாவும் அங்கு வந்தார்கள் என்று விவிலிய அறிஞர்கள் சொல்வார்கள். இயேசு தான் அனுபவிக்கப் போகும் பாடுகள், சிலுவைச் சாவு போன்றவற்றைக் கண்டு பயப்படவில்லை. மாறாக அதனைத் துணிவுடன் ஏற்றார். அதன்வழியாக நமக்கு மீட்பினைப் பெற்றுத் தந்தார். ஆகவே இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாமும் நமது வாழ்வில் வரும் துன்பங்களைத் துணிவுடன் தாங்கிக்கொண்டு தொடர்ந்து நடப்போம். இந்த மண்ணுலகிற்கு உப்பாக, ஒளியாக மாறுவோம்.
அகில உலகத் திருச்சபையின் தலைவராக, பாப்பரசராக இருபத்து ஏழு ஆண்டுகள் இருந்தவர் முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள். 2005 ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த மண்ணுலகை விட்டுச் சென்றவர். அவருக்கு புற்று நோய், இடுப்பு வலி, முதுகு வலி, உடல் நடுக்கம் போன்ற பல்வேறு வியாதிகள் இருந்தன. அப்படியிருந்தும் அவர் திருச்சபையை சிறப்பாக வழிநடத்தி வந்தார்.’
ஒருமுறை நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஒரு இளம் பத்திரிக்கையாளர் அவரிடம், “திருத்தந்தை அவர்களே, உங்களுக்கு ஏராளமான நோய்கள் இருக்கின்றன. உடலில் அடிக்கடி நடுக்கம் ஏற்படுகிறது. வயது வேறு ஆகிக்கொண்டிருக்கிறது. அதனால் நீங்கள் திருத்தந்தை பொறுப்பை விட்டு விலகி, அதனை வேறொருவருக்குக் கொடுக்கலாமே?” என்று கேட்டார்.
அதற்கு திருத்தந்தை அவர்கள், “இயேசு சிலுவையில் வேதனையை அனுபவித்தபோது உங்களால் அவரை இறக்கிவிட முடிந்ததா? இல்லை அவர்தான் சிலுவையே வேண்டாம் என்று இறங்கி வந்தாரா?. அவர் சிலுவைச் சாவை துணிவுடன் ஏற்றுக்கொண்டார். அதுபோன்றுதான் நானும் எனக்கு வந்த நோய் என்னும் துன்பத்தை துணிவோடு ஏற்றுக்கொண்டு இயேசுவுக்காக சான்று பகர்வேன்” என்றார்.
இதைக் கேட்டு கேள்வி கேட்டவர் அமைதியானார். ஆம், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் தனக்கு வந்த துன்பத்தை துணிவோடு ஏற்றுக்கொண்டார். அதனால்தான் கடவுளால் அவர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். நாமும் வாழ்வில் நமக்கு வரும் துன்பங்களைத் துணிவோடு தாங்கிக்கொள்வோம். இயேசு விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து செய்வோம்.
நிறைவாக இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவைப் பார்த்து, “இவரே என்னுடைய அன்பார்ந்த மைந்தன். இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலிக்கிறது. இயேசு கிறிஸ்து எப்போதும் தந்தையின் திருவுளம் என்ன? அவருடைய மீட்புத் திட்டம் என்ன? என எல்லாவற்றையும் உணர்ந்து, அதன்படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தார். அதனால்தான் கடவுளிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு பாராட்டைப் பெறுகிறார். நாமும் இறைவனின் திருவுளம் என்ன என்பதை அறிந்து, அதன்படி நம்முடைய வாழ்வை அமைத்துகொள்ளும்போது, நாமும் கடவுளுக்கு உகந்த அன்பார்ந்த மக்களாகின்றோம்
ஆகவே, இயேசுவின் உருமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் இயேசுவே இறைமகன் என நாம் ஏற்றுக்கொண்டு வாழ்வோம். அவரைப் போன்று துன்பங்களை துணிவுடன் ஏற்கத் துணிவோம். அதன்வழியாக கடவுளின் அன்பார்ந்த மக்களாவோம், இறையருள் நிறைவாய் பெறுவோம். 

வாழ்க்கையை விடவும் மேலானதொரு விழிப்புணர்வை அவர்களுக்குத் தந்தார்

மறையுரை  வழங்குபவர் Fr. Freddy is a Redemptorist
priest belonging to the Province of Bangalore. Currently he is attached to the
Archdiocese of St. Louis, Missouri state, U.S.A.
முன்னுரை:

1978 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் நாளன்று தனது மறையுரையில் பேராயர் ரொமெரோ, "நெருக்கடிகளைத் தூண்டாதத் திருச்சபை உண்டா? நிலைகுலையச் செய்யாத நற்செய்தியால்மனிதனின் உடலை ஊடுருவிச் செல்லாத இறைவார்த்தையால் அல்லது அறிவிக்கப்படுகின்ற சமூகத்தின் பாவக்கறைகளை தொட்டுணர்த்தாத இறைவார்த்தையால் பயன் என்ன?" என்ற கேள்விகளை எழுப்பினார்.



இந்த பேராயர் தனது வாழ்நாளின் இறுதிநாள்களில் ஒரு மறையுரையின்போது, "சிலுவையில் அறையப்பட தன்னையே கையளித்த இயேசு கிறிஸ்துவின் அன்பின் வலிமை என்னும் வன்முறை மற்றும் நமது சுயநலத்தையும், நம்மிடையே நிலவுகின்ற குரூரமான ஏற்றத்தாழ்வுகளையும் வென்றெடுத்திட நாம் கையாளவேண்டிய ஒழுக்க நெறி என்னும் வன்முறை - இவற்றைத் தவிர, வேறுவிதமான வன்முறையை நாம் ஒருபோதும் கற்பித்ததில்லை. நாம் போதிக்கின்ற வன்முறை என்பது வெறுப்பின் அடிப்படையில், வாள்களைக் கொண்டு நடத்தப்படுகின்ற வன்முறையல்ல; மாறாக அன்பையும், சகோதரத்துவத்தையும் தூண்டுகின்ற, போர் ஆயுதங்களை தொழில் கருவிகளாக மாற்றியமைக்கின்ற வன்முறையாகும்" என்று கூறினார்.



தன்னுடைய "எல் சல்வதோர்" நாட்டு மக்களுக்கு தெளிவான சிந்தனையோடு கூடிய விழிப்புணர்வை (Vision) ஊட்டுவதற்காகவே பேராயர் ரொமெரோ மேற்சொன்ன கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். நற்செய்திக்காகவும், இயேசுவுக்காகவும், ஏழை-எளிய மக்களுக்காகவும், அவர்களுடைய விடுதலைக்காகவும் வீறுகொண்டு எழுவதற்கான விழிப்புணர்வை பேராயர் ரொமெரோ இதன் வாயிலாக முன்னெடுத்து வைத்தார். இந்த விழிப்புணர்வே, இராணுவ அடக்குமுறையாளர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றிட மக்களை ஒன்றிணைத்து போரிடுவதற்கு தூண்டுகோலாக அமைந்தது.



இறைவார்த்தை:

இன்றைய நற்செய்தி வாசகத்தில், தன்னைக் குறித்த, இறைத்தந்தையைக் குறித்த, எதிர்காலத்தைக் குறித்த தெளிவான சிந்தனையையும், வாழ்க்கையை விட மேலானதொரு விழிப்புணர்வையும் (Vision) தனது சீடர்களுக்கு இயேசு எடுத்துக் காட்டுகிறார்.

1. அனைவரையும் மலைஉச்சிக்கு அழைத்துச் செல்லுகின்ற இறைவனைக் குறித்த விழிப்புணர்வு: தனக்கு மிகவும் நெருக்கமான பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூன்று சீடர்களை இயேசு தன்னோடு மலைஉச்சிக்கு கூட்டிக்கொண்டு செல்லுகிறார். தாங்கள் காணப் போகின்ற காட்சி பற்றிய எதிர்பார்ப்பு எதுவும் பெரிதாக அவர்களிடம் இல்லை. "அங்கே நிகழப்போவது என்ன" என்பதுவும் அவர்களுக்குத் தெரியாது. ஆயினும், இயேசு மலையின் உச்சிக்கு அவர்களைக் கூட்டிச் சென்றார். தனது மக்களை உயரத்திற்கு கூட்டிச் செல்கின்ற இறைவனின் மேலான நோக்கமே இங்கு வெளிப்படுகிறது.  

2. "வரலாற்றின் நடுநாயகன் இயேசுவே" என்ற விழிப்புணர்வு: மலைஉச்சியில் அவர்கள் இறைவேண்டல் செய்துகொண்டிருந்தபோது, இயேசு தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டார். "அவரது முகம் ஒளிர்ந்தது" என்று நற்செய்தியாளர் மத்தேயு சிறப்பாக குறிப்பிடுகிறார். இதே போன்று ஒளிமயமான முகத்தோடு காணப்பட்ட மற்றொரு மனிதர், மோசே மட்டுமே (விடுதலைப் பயணம் 34:29-35) இன்றையத் திருக்காட்சியின்போது, ஒளிரும் முகத்தோடு இயேசு தோன்றுகிறார்.

திருச்சட்டங்களைக் குறிப்பவராக மோசேவும், இறைவாக்கினர்களை குறிப்பவராக எலியாவும் இங்கே தோன்றுகிறார்கள். அவர்கள் இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பிறகு, நடுநாயகமாக இருக்கப்போவது திருச்சட்டங்களோ, இறைவாக்கினார்களோ அல்ல; மாறாக எல்லாவற்றிற்கும் மையப்பொருளாக இருக்கப்போவது இயேசுவே. திருச்சட்டங்களுக்கும், இறைவாக்கினர்களுக்கும் தொடர்ச்சியாக இயேசு இருக்கிறார். இதற்கு மேல், வரலாற்றின் நடுநாயகமாக இருக்கப்போவது இயேசுவே.



3. இறைத்தந்தையின் அறிக்கையைக் குறித்த விழிப்புணர்வு: பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மோசேயுடன் மேகத்தினின்று பேசியது போலவே, இப்போதும் மேகத்தினின்று இறைத்தந்தை பேசுகிறார். "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (மத்தேயு 3:17) என்று இயேசுவின் திருமுழுக்கின்போது மொழிந்த அதே வார்த்தைகளையே இப்போதும் இறைத்தந்தை கூறுகிறார். இயேசுவின் அடையாளத்தையும், அவருடையக் குறிக்கோளையும் இதன் வழியாக இறைத்தந்தை உறுதிப்படுத்துகிறார்.

"இயேசுவுக்கு செவிசாயுங்கள்" என்ற கட்டளையை இறைத்தந்தை சீடர்களுக்கு கொடுக்கிறார். இதுநாள்வரையிலும் அவர்கள் மோசேவுக்கும், இறைவாக்கினர்களுக்கும் செவிசாய்த்து வந்தார்கள். இதன் பிறகு, அவர்கள் செவிசாய்த்துப் பின்பற்ற வேண்டியவர் இறைமகனாகிய இயேசு ஒருவர் மட்டுமே.

4. கடவுளின் உடனிருப்பைக் குறித்த விழிப்புணர்வு: மோசேவும் எலியாவும் இப்போது காணப்படவில்லை. மீட்புத்திட்டத்தின் வரலாற்றில் தங்களுடைய பங்கை அவர்கள் இருவரும் நிறைவேற்றிய பின்னர், இப்போது அவர்கள் ஆற்றவேண்டிய பணி ஏதுமில்லை. திருத்தூதர்களோடு இணைந்து செயலாற்றிட இயேசு ஒருவரே இப்போது இருக்கிறார். ஆகவே தான், இயேசு அவர்களைத் தொட்டு எழுப்பி, "அஞ்சாதீர்கள்" என்று சொல்லுகிறார். மலையிலிருந்து கீழே இறங்கிய பிறகு, அன்றாட அலுவல்களை செய்திட அவர்களுடன் இருக்கப் போகிறவர் இயேசு மட்டுமே. நடுநாயகமாக இருக்கப் போவதும், மீட்புத்திட்டத்தை அதன் இலக்கை நோக்கி நடத்திச் செல்லப் போவதும் இயேசுவே.



வானிலிருந்து வந்த இருவரும் அங்கிருந்து அகன்றுவிட்டனர்; ஆனால், இயேசு மட்டுமே அங்கு தனியாக இருக்கிறார். வானிலிருந்து வந்த துணைவர்கள் உடன் இல்லாமல், விண்ணகத்தின் மகிமையும் இல்லாமல், அவரே திருஉறைவிடமாக, உண்மையான கடவுளின் நிரந்தரமான உடனிருப்பாக நம்மோடு என்றும் இருக்கிறார். "கடவுள் நம்முடன் இருக்கிறார்" என்ற பொருள் தருகின்ற இம்மானுவேல் என்னும் இறைவன் நானே என்பதை சீடர்களுக்கு உணர்த்தும் வகையில், மலையிலிருந்து கீழே இறங்கிவந்து திருத்தூதர்களுடன் ஒன்றாக நடந்து வருகின்றார்.



வாழ்க்கையை விடவும் மேலானதொரு விழிப்புணர்வை, தன்னைக் குறித்த விழிப்புணர்வை இயேசு தன் திருத்தூதர்களுக்கு இன்றைய தினம் தருகின்றார். "வாழ்வின் மையமாக இருப்பவர் இயேசுவே" என்னும் இந்த விழிப்புணர்வு தான் இயேசுவின் இறப்பிற்கும், உயிர்த்தெழுதலுக்கும் பிறகு சீடர்களையும், தொடக்க கால கிறிஸ்தவர்களையும் விசுவாசத்தில் நிலைத்திருக்கச் செய்தது. இந்த விழிப்புணர்வு தான் இவர்கள் இயேசுவுக்காக இரத்தம் சிந்தவும், தங்கள் உயிரை தியாகம் செய்யவும் தூண்டுகோலாக இருந்தது.    



பயன்பாடு:

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் டென்னெஸீ மாநிலத்திலுள்ள மெம்ஃபிஸ் நகரத்தில் "மேசன்" ஆலயத்தில், 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் நாள் உரையாற்றிய மார்ட்டின் லூதர் கிங் (ஜுனியர்) கீழ்க்கண்டவாறு கூறினார்: "கடினமான சில நாள்கள் நமக்கு முன்பாக இருக்கின்றன. ஆனால், உண்மையில் இதை ஒரு பொருட்டாக நான் கருதவில்லை; ஏனெனில், நான் மலைஉச்சியில் இருக்கிறேன். எனக்கு கவலை இல்லை. எல்லாரையும் போல நானும் நீண்டநாள் வாழ ஆசைப்படுகிறேன். நெடுநாள் வாழ்க்கை என்பது அதன் போக்கிலே நடக்கிறது. அதை குறித்தும் எனக்கு அக்கறை இல்லை. கடவுளின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்ற நான் விரும்புகிறேன். அவரே என்னை மலையின் உச்சிக்கு வருவதற்கு அனுமதித்திருக்கிறார். இங்கிருந்து சுற்றிலும் நோக்கினேன். வாக்களிக்கப்பட்ட பூமியைக் கண்டேன். உங்களோடு சேர்ந்து அங்கே நான் வராமல் போகலாம். ஆனால், ஒன்றிணைந்த மக்களாக நாம் அந்த வாக்களிக்கப்பட்ட பூமியை சென்றடைவோம் என்பதை நீங்கள் இன்றிரவு தெரிந்து கொள்ளவேண்டுமென விரும்புகிறேன்! ஆகவே, இன்றைய இரவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் எதை பற்றியும் கவலைப்படவில்லை. எந்தவொரு மனிதனைக் கண்டும் நான் அஞ்சவில்லை. ஆண்டவருடைய வருகையின் மகிமையை என் கண்கள் கண்டுகொண்டன!!"



அதுவே எதிர்காலத்தைக் குறித்து கடவுள் அவருக்குக் கொடுத்த விழிப்புணர்வு. கிங் (ஜுனியர்) அவர்களை உன்னதமான இடத்தில் நிலைநிறுத்தி வைத்தது அந்த விழிப்புணர்வு தான். மக்களின் விடுதலைக்கு வித்திட்டதும் அந்த விழிப்புணர்வு தான். இத்தகைய விழிப்புணர்வையே இறைத்தந்தை வழங்குகிறார்.



"எங்கே இறைவெளிப்பாடு இல்லையோ, அங்கே குடிமக்கள் கட்டுங்கடங்காமல் திரிவார்கள்; நீதி போதனையின்படி நடப்பவர் நற்பேறு பெற்று மகிழ்வார்" (நீதிமொழிகள் 29:18). வாழ்க்கையை விடவும் மேலானதொரு விழிப்புணர்வை இன்று கடவுள் நமக்குத் தருகிறார். உலகத்தினுடைய, உலக வரலாற்றினுடைய நடுநாயகமாக இருக்கிறவர் அவரே என்னும் விழிப்புணர்வை அவர் தருகிறார். திருச்சபையிலும், நம் ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்வின் போராட்டங்களிலும் நடுநாயகமாக இருக்கிறவர் அவரே என்னும் விழிப்புணர்வை அவர் தருகிறார். இறைத்தந்தையைக் காண்பதற்கு நம் ஒவ்வொருவரையும் மேல்நோக்கி அழைத்துச் செல்வது இந்த விழிப்புணர்வே. "கடவுள் நம்முடன் இருக்கிறார்" என்னும் பொருள்படும் இம்மானுவேலாக இயேசுவை ஆக்குவதும் இந்த விழிப்புணர்வு தான்.



இயேசுவே எல்லாவற்றிற்கும் மையமாக இருக்கிறார் என்பதே அந்த விழிப்புணர்வு. இது, மறைவான  பல செயல்திட்டங்களை உள்ளடக்கியுள்ள அரசியல் சித்தாந்தங்களை மையப்பொருளாகக் கொண்டதல்ல. இது, மனித இனத்திற்கும், இந்த பூமியின் இயற்கை வளங்களுக்கும் என்ன நேர்ந்தாலும் கவலைப்படாமல், தங்கள் இலாபத்தை பெருக்குவது ஒன்றையே நோக்கமாகக் கொண்ட பெருவணிக நிறுவனங்களை மையப்பொருளாகக் கொண்டதல்ல. இது, ஊரும் பேரும் தெரியாத ஒரு முதலாளியை இன்னும் பணக்காரனாக்கி, தொழிலாளியை ஏழையாக்குகின்ற செயல்திட்டங்களை மையமாகக் கொண்டதல்ல. நாம் எடுக்கின்ற எல்லா முடிவுகளிலும், நமது குடும்பங்களிலும், நமது குழந்தைகளிலும், நமது சமுதாயத்திலும் இயேசுவே மையப்பொருள் என்ற நிலைப்பாடே இந்த விழிப்புணர்வு.



முடிவுரை:

திருத்தூதர்களுக்கு கடவுள் அளித்த விழிப்புணர்வில் நாமும் பங்கேற்கவும், "இயேசுவே நடுநாயகம்" என்ற விழிப்புணர்வு நம் வாழ்வின் அனுபவமாக அமைந்திடவும் அருள் வேண்டி மன்றாடுவோம்
 

 


Transfiguration: Experience of God in Jesus

Fr.Sahaya G. Selvam, sdb-Nairobi


Mountains are seen as locations of God-experience in many traditional cultures, and in many of the world religions.  It is not by chance then that one of the classical works of St John of the Cross is called, The Ascent of Mount Carmel (1579); and more recently, Thomas Merton entitles his autobiography as, The Seven-Story Mountain (1948).   



 The narration from Matthew describing the transfiguration clearly has three parts:

  1. Going up the mountain
  2. The moment of grace on top of the mountain
  3. Coming down the mountain with the fruits of that experience



Let us reflect on these three aspects of the gospel story and see what they could mean for us today:





1. Going up the mountain: the stage of preparation



What does the gospel text of today tell us about going up the mountain, more precisely, about Christian prayer?  At least three things become clear to me:  Firstly, it is Jesus who “took with him Peter and James and his brother John went up a high mountain where they be alone.”  It is God himself who enables us to pray.  Just as it was God who invited Abram to enter into a covenant with Him, as we heard in the first reading of today (Gen 12:1-4), just like, it was God who invited Moses to the mountain (Ex 24:12-18; 34:2), just as it was God who invited Elijah to the mountain (1Kings 19:11-13), it is God who invites us to enter into a relationship with Him in prayer.  Secondly, in contrast to the Old Testament accounts of the encounter of God with individuals like Abram, Moses and Elijah, in the New Testament, Jesus takes three of his apostles with him. There is a community on top of the mountain.  Even if God invites us personally to encounter him, this is often unfolded in the context of the community.  And thirdly, it is up to us to respond to the invitation of God.  Peter and John and James respond to the invitation of Jesus to go up the mountain.


2. On the mountain-top: an experience of the uniqueness of Jesus



On top of the mountain the three disciples are privileged to witness a theophany despite their own inability to be present to God. Other Gospels tell us, “Peter and his companions were heavy with sleep…” (Lk 9:32). They see Jesus in the company of two great men in the history of Israel: Moses and Elijah.  Moses stands for the Law and Elijah for the Prophets, thus showing that Jesus is the fulfilment of the Old Testament.  Matthew tells us that “they were talking with him” (Mt 17: 3), he says nothing about the subject of their conversation.  Whereas Luke would tell us that  they were discussing “his passing which he was to accomplish in Jerusalem” (Lk 19:31). This ‘passing’, or as in some other translations, the ‘departure’ of Jesus could refer to his being taken up to heaven, because Moses and Elijah were taken up to heaven.  It could also refer to the ‘passover’ - which would be associated with the paschal mystery of the crucifixion and death of Jesus.



Initially Peter is all taken up by the appearance of Jesus as the superstar.  “Lord,” he said, “it is wonderful for us to be here; if you want me to, I will make three shelters here, one for you, one for Moses and one for Elijah” (Mt 17:4).  He equates Jesus to Moses and Elijah. What follows then is a clearer demonstration of who Jesus really is:  “a bright cloud came and covered them with shadow” (v.5); from the tradition of the book of Exodus, ‘cloud’ is a powerful symbol of the presence of God (Ex 13:21-22).  As if this was not enough, “suddenly from the cloud there came a voice which said, 'This is my Son, the Beloved; he enjoys my favour. Listen to him'” (v.5)! This was for the disciples an experience God in the person of Jesus. The reaction of the apostles to this theophany is “fear” (awe) and a total prostration: “the disciples fell on their faces” (Mt 17:6).  This is similar to the reaction of the Magi at the sight of the baby Jesus: “they saw the child with his mother Mary, and falling to their knees they did him homage” (Mt 2:11).



Going up the mountain is our choice of will, in responding to the invitation of God.  But what actually happens on the mountain-top is the Grace of God.  It is not up to us control it.  The specific experience of God may be transient. We are not able to hold on to it. We are not able to pitch our tents on the mountain-top.  But its after-effect is what we carry forward to our daily encounters.



3. Coming down the mountain: contemplating and reaching out



How does this happen? Firstly, through silence and contemplation.  The Gospels tell us: “As they came down from the mountain Jesus gave them this order, 'Tell no one about this vision until the Son of man has risen from the dead'” (Mt 17:9).  God experience invites us to silence and contemplation, so that the effects of the experience could be deepened, at least until the right time.



Secondly, this silence is not necessarily a permanent isolation from the world.  It is also something that is carried forward to the market place, to our daily life, to our homes, to the place of work and study. This is the significance of coming down the mountain.



The feast of today, thus, captures the essence of Christian life.


Sahaya G. Selvam, SDB,

No comments:

Post a Comment