Monday 16 July 2018

பொதுக்காலம் ஆண்டின் 16-ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 16-ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்:
எரேமியா. 23:1-6
எபேசியர் 2:13-18
மாற்கு 6:30-34



இயேசு என் மீட்பர் அருள்பணி முனைவர் ம. அருள்


நியூயார்க் நகரிலே எலினா என்ற கிராமப் பகுதியிலே ஒரு நீக்ரோ பெண்மணி தன் 4 வயது குழந்தையை வைத்துக் கொண்டு மணிக்கணக்காகக் காத்து நிற்கிறாள். சிறிய பையனுக்கோ ஒன்றுமே புரியவில்லை . ஓடியாடி விளையாடும் சிறுவன் அம்மாவின் முகத்தைப் பார்க்கிறான். தாயோ சோக நிலையில் ஆவலோடு எதையோ எதிர்நோக்கி காத்திருக்கிறாள். அம்மா ஏன் இங்கு நிற்கிறீர்கள்? வாங்கம்மா வீடு போவோம் எனக் கூப்பிடுகிறான். அதேநேரத்தில் அவள் எதிர்பார்த்த புகைவண்டி நிலையம் வந்து சேர்ந்தது. ஆவலோடு நெருங்குகிறாள். மகனே இங்கே பார்! இங்கே இறந்து கிடக்கும் ஆப்ரகாம் லிங்கன் இவர்தான் உன்னையும் என்னையும் உரிமையோடு இந்த நாட்டிலே வாழ வைக்க உயிர் கொடுத்த மகான். நமக்கு உரிமை பெற்றுத்தர தன் உயிரையே பலியாக்கத் துணிந்துவிட்டார் என்று கண்ணீர் மல்கத் தாய் தன் மகனிடம் கூறினாள். உடலைத் தொட்டு முத்தமிட்டு இடம் நகர்ந்தாள்.

இதேபோல் உலகிலே எத்தனையோ தலைவர்கள் உயிர் கொடுத்துள்ளார்கள். பாரத நாட்டின் உரிமைக்காக உயிர் கொடுத்தார் காந்திமகான் . மாந்தருள் மாணிக்கமாய்த் திகழ்ந்த ஜான் கென்னடி நீதிக்குச் சான்று பகரத் தன் உயிரையும் கொடுத்தார். தென் அமெரிக்காவில் எல் சால்வடோர் மறைமாவட்ட பேராயர் ஆஸ்கார் ரோமோரோ அந்த மறைமாவட்ட ஏழை மக்களுக்கு குரல் கொடுத்ததால் பலி பீடத்தில் நிற்கும்போதே சுட்டுக்கொல்லப் பட்டார். இவர்கள் எல்லாம் நாட்டின் அரசியல் விடுதலைக்காக, உரிமைக்காக உயிர் கொடுத்தவர்கள். ஆனால் சரித்திரத்தில் ஒரே ஒருவர் தான் உலகின் பாவங்களைப் போக்க உயிர் கொடுத்துள்ளார். இவர்தான் இயேசு என்ற நாமம் கொண்ட பெருமகான். 


இவரைப் பற்றி இன்றைய நற்செய்தியிலே புனித மாற்கு என்பவர் 6-ஆம் அதிகாரத்தில் 34- ஆம் வசனத்தில் குறிப்பிடுவதுபோல் ஆடுகளின் மேல் அக்கறையும் இரக்கமும் கொண்டவராக காட்சி தருகின்றார். நெடுநேரம் போதிக்கின்றார். பழைய ஏற்பாட்டிலே இஸ்ரயேல் மக்கள் ஆட்டின் தலையிலே கை நீட்டி தங்கள் பாவங்களை அதன் மேல் சுமத்தி காட்டுக்குள்ளே விரட்டி விடுவார்கள். அது அவர்களின் பாவங்களைச் சுமந்து போகும் பலி ஆடாகும். அதேபோல் அனைத்துப் பாவங்களையும் தன் மேல் சுமந்தவராய் யோர்தான் நதிக்கரையிலே நடந்து வர இவரே உலகின் பாவங்களைப் போக்க வந்த உன்னத செம்மறி என திருமுழுக்கு யோவானால் (யோவா. 1:29) சுட்டிக்காட்டப்படுகிறார். இவர் சென்ற இடமெல்லாம் நன்மையே செய்துகொண்டு சென்றார். எப்படி சந்தனக் கட்டையானது அரைக்கப்பட்டுத் தண்ணீரில் கலக்கப்பட்டால் தன் மணத்தைப் பரப்புகின்றதோ அதேபோல் நல்லாயன் இயேசு ஆடுகளின் மேல் அக்கறை கொண்டவராய் போதிக்கின்றார். ஆடுகளுக்காக உயிர் கொடுக்கும் ஆயனாக மாறிவிட்டார்.

பன்றியும் பசுவும் நடத்திய உரையாடலை கற்பனையாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கேட்க விரும்புகிறீர்களா? அன்றொரு நாள் பன்றியானது பசுவை நோக்கி பேசியது: ஓபசுவே! எத்தனையோ மக்கள் என்னை வெட்டி சமைத்து நாட்கணக்காக சாப்பிடுகிறார்கள், ஊறுகாய் உண்டாக்கி உலகம் முழுவதும் அனுப்புகிறார்கள். ஆனால் மக்களோ சீ பன்றி என்று கூறி என்னை வெறுக்கிறார்கள். ஆனால் உன்னை ஓ பசுவே என்று பெருமதிப்போடும் பெருமிதத்தோடும் அழைக்கிறார்கள். ஏன் இந்த பாரபட்சமான வித்தியாசம்! சிறிது நேரம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த பசு பேச ஆரம்பித்தது : ஓ பன்றி! நீயும் நானும் மிருகங்கள் தான். ஆனால் ஒன்று, நீ இறந்த பின் மக்களுக்கு பயன்படுகின்றாய். நானோ உயிரோடு இருக்கும்போதே பயன்படுத்தப்படுகின்றேன். எனவே என்னை மக்கள் மதிக்கிறார்கள், விரும்புகிறார்கள் என்று பதில் உரைத்தது. ஆம் அன்புக்குரிய வர்களே நல்லாயனாகிய இறைவன் நமக்குத் தரும் பாடம் உயிரோடு இருக்கும்போதே நல்ல ஆடுகளாக, ஆயனின் குரலுக்குச் செவிமடுக்கும் ஆடுகளாக, ஏன் பலி ஆடாக கூட மாற வேண்டும். அப்போது நாம் நிறை வாழ்வு பெறுவோம்.



 மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்  - குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி


நற்செய்தியாளர்களாக மாறுவோம்.
 

எதற்காகத் தனிமையான இடத்திற்குச் சென்று திருத்தூதர்களை இயேசு ஓய்வெடுக்கச் சொன்னார்? இதற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கலாம். அதில் ஒரு தலையாய காரணம் அவர்கள் இறைவனை அன்பு செய்ய வேண்டும் என்பதற்காக!

ஒவ்வொரு செயலுக்கும் நேரம் ஒதுக்குவதுபோல, இறைவனோடு தனித்திருக்கவும் நாம் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற உண்மையை இயேசு நமக்கு இன்று சுட்டிக்காட்டுகின்றார்.

ஞான முத்துக்கள் (Pearls of Wisdom) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட உவமை இது.

எல் பெத்தேல் (EI Bethel) என்பவர் ஒரு மடாதிபதியைச் சந்தித்தார். அவருக்குத் துறவியாக ஆசை. அவர் துறவற மடத்திற்குள் நுழைவதற்கு முன்னால் ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள விரும்பினார். எல் பெத்தேல் மடாதிபதியைப் பார்த்து, ஏன் துறவிகள் தனிமையில் வாழ வேண்டும்? கடவுள்தான் எல்லா இடங்களிலும் இருக்கின்றாரே! அவரை எங்கு வேண்டுமானாலும் அன்பு செய்யலாமே! என்றார்.

மடாதிபதி பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு மெழுகுதிரியை ஏற்றி அதை எல் பெத்தேலிடம் கொடுத்து, குடிசைக்கு வெளியே நின்று இதை அணையாமல் பார்த்துக்கொள் என்றார்.

எத்தனை முறை ஏற்றினாலும் அத்தனை முறையும் மெழுகுதிரி காற்றில் அணைந்துவிட்டது. அப்போது எல் பெத்தேல், இது குடிசைக்குள் மட்டுமே அணையாது எரியும் என்றார். அதற்கு மடாதிபதி, நீ கேட்ட கேள்விக்கு நீயே பதில் சொல்லிவிட்டாய். இறை அன்பு என்பது இந்த மெழுகுதிரியைப் போன்றது. சத்தமும், சந்தடியும், பராக்குகளும், சோதனைகளும் நிறைந்த உலகத்திலே அதனால் எளிதாக எரிய முடியாது; அமைதியில்தான் அது எரிய முடியும் என்றார். எல் பெத்தேல் ஞானம் பெற்று துறவற மடத்தில் சேர்ந்தார்.

சீடர்கள் மனத்தில், இதயத்தில் இறை அன்பு சுடர்விட்டு எரிய வேண்டும். அந்த இறை அன்பில் அவர்கள் மனம், இதயம் வெதுவெதுப்பாகி இறை அன்பை உலகுக்கு அவர்கள் பிரதிபலிக்க வேண்டும் என இயேசு விரும்பினார். இதனால்தான் தனிமையான இடத்திற்குச் செல்லுமாறு அவர்களுக்கு அன்புடன் கட்டளையிட்டார். அவரே தனிமையை நாடி, அவரது சீடர்களுக்கு முன்மாதிரியாய் விளங்கினார் (மாற் 1:35).

தனிமையில் நமது மனமும், இதயமும் இறை அன்பால் பற்றி எரியும்போது நாம் உள்ளொளி பெற்று நீதி நிறைந்த ஆயர்களாக (முதல் வாசகம்), அமைதி நிறைந்த நற்செய்தியாளர்களாக (இரண்டாம் வாசகம்) மாறுவோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை !

மேலும் அறிவோம் :
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்(கு)
என்புதோல் போர்த்த உடம்பு (குறள் : 80).

பொருள் : அன்பு நிறைந்த உள்ளத்துடன் இயங்குவதே உயிருடன் கூடிய உடலாகும். அன்பு நெஞ்சம் இல்லாத உடல், உயிரற்ற எலும்புக்கூட்டைத் தோலால் போர்த்திய வெற்றுடல் ஆகும்.


மறையுரை மொட்டுக்கள் அருள்பணி Y. இருதயராஜ்


பங்குத் தந்தை ஞாயிறு திருப்பலியில் மறையுரை ஆற்றிக் கொண்டிருந்தபோது மக்கள் தங்குவதைக் கண்டு, "ஐயோ! தீ. தீ" என்று கத்த, மக்கள் கோவிலைவிட்டு ஓட ஆரம்பித்தனர், ஆனால், எங்குமே தீயைக் காணாத அவர்கள் பங்குத் தந்தையிடம், 'சாமி, தீ எங்கே?' என்று கேட்க, அவர், "நரகத்தில் " என்று அமைதியாகச் சொன்னார். மக்கள் கோபமும் ஆத்திரமும் அடைந்து அவரை மனதாரத் திட்டினார்கள். அப்போது பங்குத் தந்தை அவர்களிடம், “நான் பிரசங்கத்தில் உண்மையைச் சொல்லும்போது தூங்கி விழுகிறீர்கள்; பொய் சொன்னால் விழித்துக் கொள்கிறீர்கள்" என்றார்.

ஆம், இன்றைய உலகில் பொய்க்கு இருக்கிற வரவேற்பு உண்மைக்குக் கிடையாது. இன்றைய விளம்பர உலகில் பொய் மெய்யாகி விடுகிறது; மெய் பொ யயாகி விடுகிறது. பழங்காலத் தமிழ்ப்பாடல் பின்வருமாறு உள்ளது:
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையால்
மெய்போலும்மே மெய்போலும்மே
மெய்யுடை ஒருவன் சொல்லமாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே

ஒருவர் பேசுவதெல்லாம் பச்சைப்பொய்; ஆனால் அவர் கவர்ச்சியாகப் பேசுகிறார். எனவே அவரது பொய்யையும் மக்கள் மெய்யென நம்புகின்றனர். மாறாக, மற்றொருவன் உண்மை பேசினாலும், அவருடைய பேச்சில் கவர்ச்சி இல்லாததால், அவருடைய மெய்யும் பொய்யாகிவிடுகிறது. வழியும் வாழ்வும் உண்மையும் உயிருமான இயேசு கிறிஸ்து (யோவா 14:6) உண்மையை எடுத்துரைக்கவே இவ்வுலகிற்கு வந்த இயேசு கிறிஸ்து (யோவா 3:37). உண்மையினால் தம் சீடர்களை இறைவனுக்கு அர்ப்பணமாக்கிய இயேசு கிறிஸ்து (யோவா 17:17-19), இன்றைய தற்செய்தியில், மக்கள், 'ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார் (மாற் 6:34) என்று வாசிக்கிறோம்,

இன்றைய உலகம் பொய்யாலும் பொய்மையின் பிறப்பிடமான சாத்தான் பிடியிலும் (யோவா 8:44) சிக்கித் தவிக்கின்றது. எனவே, இன்றைய உலக மக்களுக்குத் தேவை உண்மை, முழுமையான உண்மை. திருமேய்ப்பர்கள் மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்க வேண்டும். இன்றைய முதல் வாசகத்தில். ஆடுகளை மேய்க்காமல், அவற்றைச் சிதறடிக்கும் போலி மேய்ப்பர்களைக் கடவுள் சபிக்கின்றார். ஆனால், அதே நேரத்தில் ஆடுகளின்மேல் உண்மையான அக்கறை கொண்டுள்ள நல்ல மேய்ப்பர்களை மக்களுக்குக் கொடுக்கப் போவதாகவும் வாக்களிக்கின்றார் (எரே 23:1-4).

நல்லாயர் தனது ஆடுகளைப் 'பசும்புல் வெளிக்கும். அமைதியான நீர் நிலைக்கும் அழைத்துச் செல்வார்; புத்துயிர் அளிப்பார்; நீதி வழி நடத்துவார், சுவையான விருந்தளிப்பான் (பதிலுரைப்பாடல், திபா 23:1-5).

நல்லாயர் கிறிஸ்துவைப் பின்பற்றி, திருமேய்ப்பர்கள் மக்களுக்குச் சுவையான விருந்தை நலமிக்கப்போதனையை வழங்க வேண்டும். இறைவார்த்தையில் வேரூன்றியிராத எவ்விதப் போதனையும் போலியானது; பொய்யானது: வஞ்சகமானது. அத்தகைய மறையுரை. மக்களைத் தவறான வழியில் இட்டுச் செல்லும்; மனமாற்றத்திற்கும் புதுவாழ்வுக்கும் வழிவகுக்காது. வாழ்வு தரும் வார்த்தையைத் தேடி வருகிற மக்களுக்கு வெறும் தவிட்டைக் கொடுத்து ஏமாற்றுவது அநீதியாகும்.

இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுகிறது : "இறைமக்களுக்கு இறைவார்த்தைப் பந்தியில் நிறைவான 2,ணவு வழங்கப்பட வேண்டும். விவிலியத்தின் கருவூலம் தாராளமாகத் திறந்து விடப்படவேண்டும். மறையுரை திருவழிபாட்டின் ஒரு பகுதி: இதில் நம்பிக்கையின் மறை பொருளும் வாழ்க்கை நெறிகளும் விளக்கப்பட வேண்டும்" (திருவழிபாடு. 51-52)

நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் பங்குத் தந்தையை எழுப்பி, *சுவாமி, உடனடியாக எங்க வீட்டுக்கு வாங்க; என் மகள் நீங்கள் இல்லாமல் தூங்கமாட்டேன் என்று அடம்பிடிக்கிறாள்" என்றார், பங்குத் தந்தை அதிர்ச்சியுற்றவராய், "ஏன் அவ்வாறு சொல்லுகிறாள்?" என்று கேட்டதற்கு அப்பெண், "சாமி நாங்கள் அவளுக்கு எத்தனையோ தக்க மாத்திரைகள் கொடுத்தும் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. நீங்கள் வந்து ஐந்து நிமிடம் பிரசங்கம் வைத்தால், உடனடியாகத் தூக்கம் வந்துவிடும் என்கிறாள்" என்றார்,

பங்குத் தந்தையர்களின் மறையுரை மக்களைத் தூங்க வைக்கும் தூக்க மாத்திரையாக அமையாமல். சமுதாயத் தீமைகளுக்கு வேட்டு வைக்கும் வெடி மருந்தாகவும், பாவ நோய்ககுக் குணமளிக்கும் அருமருந்தாகவும் அமைய வேண்டும்.

இன்றைய உலகிற்குத் தேவை 'அமைதியின் நற்செய்தி. இயேசு கிறிஸ்துவே நமது அமைதி : அவர் யூத இனத்திற்கும் பிற இனத்திற்கும் இடையே இருந்த பகைமை என்ற தடைச் சுவரைத் தமது சிலுவையால் தகர்த்துவிட்டு, இரு இனத்திலுமிருந்து புதியதொரு மனித குலத்தைப் படைத்து, அமைதியை நற்செய்தியாக அறிவித்தார் (எபே 2:13-14) என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்துரைக்கிறார் புனித பவுல். திருப்பணியாளர்கள் திரும்பத் திரும்ப அமைதியின் நற்செய்தியைத் தங்களது மறையுரையில் விளக்க வேண்டும்,

கடவுள் மனிதரைக் கிறிஸ்து வழியாகத் தம்முடன் ஒப்புரவாக்கி, அந்த ஒப்புரவுச் செய்தியைத் திருச்சபையிடம் ஒப்படைத்துள்ளார் (2 கொரி 5:19-20), திருச்சபை ஒரே நேரத்தில் ஒப்புரவு அடைந்த சமூகமாகவும், ஒப்புரவை வழங்கும் சமூகமாகவும் திகழ்கிறது.

இன்று எங்கும் எதிலும் போர். கடமைக்கும் உரிமைக்கும் இடையே போர்: காமத்திற்கும் காதலுக்கும் இடையே போர்; கொள்கைக்கும் நடத்தைக்கும் இடையே போர், தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே போர், இவ்வுலகே ஒரு போர்க்களம். இன்று மனிதன் சமுதாயம் என்ற நிலத்தில் பகைமை என்ற விதையை ஊன்றி, வெறுப்பு என்ற திரைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறான். அதன் விளைவாக வேற்றுமை என்ற மரம் வளர்ந்து, பொறாமை என்ற பூ பூத்து. கலகம் என்ற காய் காய்த்து. வன்முறை என்ற பழம் பழுத்துக் கொண்டிருக்கிறது.

"மங்கை தீட்டுப்பட்டால் கங்கையில் நீராடலாம்; கங்கையே தீட்டுப்பட்டால் எங்கே நீராடுவது? ஆம், உலகம் பிளவுபட்டால் திருச்சபை அப்பிளவைச் சரி செய்யலாம். திருச்சபையே பிளவுபட்டு நின்றால், பிளவுபட்ட திருச்சபை அமைதியின் நற்செய்தியை எவ்வாறு உலகிற்கு அளிக்க முடியும்?

திருப்பணியாளர்களும் மக்களும் இனம், மொழி, நிறம், சாதி அடிப்படையில் மக்களை, அரசியல்வாதிகள் போல், பிளவுபடுத்தாமல் ஆடுகளைச் சிதறடிக்காமல் திருச்சபையை மாபெரும் அன்பியமாகக் கட்டி எழுப்பத் தங்கள் சொல்லாலும் செயலாலும் உழைக்க வேண்டும்.

வேற்றுமை வேலிகளை வேரறுப்போம்;
பிரிவினைக் கவர்களைப் பிளந்தெரிவோம்;
ஒற்றுமையை உருவாக்குவோம்
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போர் புரியும் உலகை வேரோடு சாய்ப்போம்,
பொய்மையின் முகமூடியைக் கிழித்தெறிவோம்;
ஆவியிலும் உண்மையிலும் கடவுளைத் தொழுவோம்.


பரிவின் பரிமாணங்கள்- அருள்பணி ஏசு கருணாநிதி


'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள்ஒளி பெருக்கி, உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே, சிவபெருமானே
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன், எங்கு எழுந்தருளுவது இனியே?'

இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் வாசகங்களைப் படிக்கும்போது மேற்காணும் மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்தான் (திருவாசகம், எட்டாம் திருமுறை, பாடல் எண் 9) நினைவிற்கு வருகிறது. இந்தப் பாடலின் பொருளறிந்து, பின் இதன் பொருத்தத்தை அறிவோம்.

குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய பாலை நினைவுகூர்ந்து ஊட்டும் தாயைவிட பரிந்து, இரக்கம் காட்டி, பாவி எனது உடலை உருக்கி, உள் ஒளியை பெருக்கி, அழிவில்லாத மகிழ்ச்சி என்னும் தேனைப் பொழிந்து, எனக்கு வெளியே நான் தேடிய என் செல்வமே உன்னைத் தொடர்ந்து வந்து இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன் - என்னுள்ளே உன்னைக் கண்டேன். இனி நீ எங்கே எழுந்தருள்வாய்?

இங்கே இது சைவத்திருமுறையின் பாடல் அல்லது சிவனை நோக்கிய பாடல் என்ற குறுகிய பார்வையை நாம் விலக்கி, நம் தமிழ்மண்ணில் எழுந்த ஓர் ஆன்மீகப்பாடல் என்று நம் பார்வையை விரித்தால்தான் இதன் பொருளை நாம் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியும்.

எப்படி?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 6:30-34) இயேசு பணிக்கு அனுப்பிய சீடர்கள் அவரிடம் திரும்பி வருகின்றனர். திரும்பி வந்து தாங்கள் சொன்னது, செய்தது அனைத்தையும் இயேசுவிடம் ஒப்புவித்தபோது, 'நீங்கள் பாலைநிலத்திலுள்ள ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்' என்கிறார். இது இயேசுகாட்டும் பரிவின் முதல் பகுதி. அதாவது, வேலை, மக்கள், பணி, ஓட்டம், பேய், நோய் என்று இருந்தவர்கள்மேல் பரிவுகாட்டும் இயேசு அவர்களை ஓய்விற்கு அழைக்கின்றார்.

இந்த ஓய்வு எதற்காக? 'இவ்வளவு நாள் உண்பதற்குக் கூட நேரமில்லை. இனி உண்ணுங்கள்' என்று சொல்வதற்காகவா? இல்லை. இயேசு ஓய்விற்கு அனுப்பும் இடம் பாலைவனம். அவர் அவர்களை பழமுதிர்ச்சோலைக்க அனுப்பினால் அவர்கள் உடல் பெருகும். ஊட்டம் கிடைக்கும். ஆனால் பாலைவனத்தில் ஒன்றும் கிடைக்காது. அங்கே ஊன் (உடல்) உருகும். உள்ஒளி பெருகும். ஆக, மாணிக்கவாசகரின் இறைவன் அவருடைய 'ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, அழிவில்லாத ஆனந்தம் அருள்வதாக' பாடுகிறார். பாலைநிலத்தில் திருத்தூதர்கள் இந்த மூன்றையும் தான் பெற்றுக்கொள்கிறார்கள்: (அ) அவர்களின் உடல் உருகும் - ஆக, உடலையும் கடந்த ஒன்று இருப்பதாக அவர்கள் கண்டுணர்வார்கள், (ஆ) உள் ஒளி பெருகும் - நம் உள்ளத்தில் இருக்கும் இயல்பாகவே அங்கே இருக்கிறது. அது எப்போது பெருகுகிறது என்றால், நாம் தனியாக அமர்ந்து நம்மையே ஆய்ந்து, 'நான் இது அல்ல. அது அல்ல' என்று ஒவ்வொரு அடையாளத்தைக் களையும்போது. (இ) அழிவில்லாத ஆனந்தம் - திருத்தூதர்கள் தங்கள் பணி அனுபவத்தில் கண்ட அல்லது பெற்ற அனுபவங்கள் எல்லாம் அழியக்கூடியவை. ஒரு இடத்தில் நேர்முக அனுபவம் கிடைத்து, வேறிடத்தில் எதிர்மறை அனுபவம் கிடைத்தால், அல்லது ஒரு இடத்தில் மக்கள் தங்களை ஏற்றுக்கொள்ள, மற்றோர் இடத்தில் வெறுத்து விலக்கினால் மகிழ்ச்சி சட்டென மறைந்துவிடுகிறது. ஆனால் பாலைநிலத்தில் தனிமையில் கிடைக்கும் மகிழ்ச்சி அழிவில்லாதது. அது இடத்தையும், நேரத்தையும், நபரையும் சாராதது. மேலும் சீடர்கள் இதுவரை தங்கள் இறையனுபவத்தைத் தங்களுக்கு வெளியே தேடினார்கள். ஆனால் அவர்கள் கண்டுகொண்டது பாலைவனத்தின் தனிமையில்தான். 'உணவு எப்படி உடலுக்கோ, அப்படியே தனிமை ஆன்மாவுக்கு' என்கிறார் அரிஸ்டாட்டில். இவ்வாறாக, தனிமையில்தான் ஆன்மா உண்மையான இறைமையைக் கண்டுகொள்கிறது.

பரிவின் இரண்டாம் பகுதியாக, தம்மையும் தம் திருத்தூதர்களையும் பின்பற்றி கால்நடையாகவே கூட்டமாக ஓடி தங்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்த கூட்டத்தினரைப் பார்த்து அவர்கள் மேல் பரிவு கொண்டு அவர்களுக்குக் கற்பிக்கின்றார் இயேசு. இந்த நிகழ்வைக் கற்பனை செய்து பார்த்தாலே நமக்கு ஆச்சர்யம் மேலோங்குகிறது. பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள், குழந்தைகள், கண்பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் என எத்தனைபேர் ஓடியிருப்பர் அந்தப் பாலைவனத்தில்? சிகப்பு கலர் சேலை, மஞ்சள் கலர் பிளவுஸ் அணிந்து ஒரு பெண், ஒழுங்காக தலையைக் கூட சீவாமல், தலைக்கு எண்ணெய் வார்க்காமல், கால்களில் செருப்புகள் அணியாமல், ஒரு வாரமாக சளி பிடித்து, காய்ச்சல் அடித்து, மூக்கொழுகும் மேல்சட்டை அணியாத தன் இரண்டு வயது மகனை இடுப்பில் வைத்துக்கொண்டு, அந்தக் கூட்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து இயேசுவைக் காண ஓடியிருப்பாள்? அன்றைக்கு அவள் வேலை செய்தால்தான் அவள் வீட்டில் அடுப்பெரியும். அந்த வேலையை விட்டுவிட்டு அவளால் எந்த நம்பிக்கையோடு ஓட முடிந்தது இயேசுவைத் தேடி? அவள்வரும் வரை அவள்வீட்டு நாய்க்குட்டிக்கு யார் சோறு வைப்பார்கள்? கோழிக்குஞ்சுளை யார் கூட்டில் அடைப்பார்கள்? அப்படி என்ன அவசரம் அவளுக்கு? எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு ஓட அவளால் எப்படி முடிந்தது? - இவள் ஒருத்திபோல் எண்ணற்றோர் இயேசுவைத்தேடி அந்த மாலை வேளையில் சென்றனர். ஓய்வுக்காகச் சென்ற இயேசு இவர்களைப் பார்த்தவுடன் எரிச்சல்படவில்லை. 'என் தனிமையைக் கெடுக்கிறீர்களே!' என்று எரிந்துவிழவில்லை. அவர்களைத் தொந்தரவாகப் பார்க்கவில்லை. மாறாக, அவர்கள்மேல் பரிவு கொள்கின்றார். அதாவது, அவர்களைப் பார்த்தவுடன் மேற்காணும் அனைத்தையும் தன் மனதில் நொடியில் ஓடவிடும் இயேசுவாக இருந்தால்தான் பரிவுகாட்ட முடியும். தான் தன் குழந்தையைத் தனக்குத் தொந்தரவாக நினைப்பதில்லை. குழந்தையின் இயலாமை தாய்க்கு எரிச்சல் மூட்டுவதில்லை. அவளின் உள்ளத்தில் பரிவை மட்டுமே அது எழுப்புகிறது. ஆகையால்தான், இயேசு தாயினும் சாலப் பரிந்தவராக இருக்கிறார்.

இவ்வாறாக, இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பரிவு இரண்டு பரிமாணங்களில் வெளிப்படுகிறது:

அ. தன் சீடர்களுக்கு ஓய்வு
ஆ. தன்னைத் தேடிவந்த மக்களுக்கு போதனை

பரிவின் இன்னும் இரண்டு பரிமாணங்களை இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்கள் சொல்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 23:1-6) 'மேய்ப்பர்களுக்கு எதிராக' இறைவாக்குரைக்கின்றார் எரேமியா. இங்கே 'மேய்ப்பர்கள்' என்பவர்கள் இஸ்ரயேலின் 'இறைவாக்கினர்கள்' அல்லது 'அரசர்களை' குறிக்கிறது. இதுவரை இருந்த இஸ்ரயேலின் அரசர்கள்மேல் இறைவன் இரண்டு குற்றச்சாட்டுக்களை வைக்கின்றார்: (அ) அவர்கள் மந்தையைச் சிதறடித்தார்கள், (ஆ) அவர்கள் மந்தையின்மேல் அக்கறைகாட்டவில்லை. இவ்வாறாகச் சிதறடிக்கப்பட்ட மந்தை திகில் மற்றும் அச்சம் கொண்டு காணாமல் போயின. இதற்கு மாறாக, தாவீதின் தலைமுறையில் 'தளிர்' ஒன்றை உருவாக்குவேன் என்கிறார் ஆண்டவர். இந்தத் தளிர் உடனடியாக 'செதேக்கியா' ('யாவே நீதியானவர்') என்ற அரசனைக் குறித்தாலும், மெசியாவிற்கான முன்னறிவிப்பாக இந்த இறைவாக்கு திகழ்கிறது. இறுதியில், 'யாவே சித்கேணூ' ('ஆண்டவரே நம் நீதி') என்ற பெயரால் நகர் அழைக்கப்படும். இன்றைய முதல் வாசகம் சொல்லும் பரிவின் மூன்றாம் பரிமாணம் நீதி. அரசனுக்குரியதை மக்கள் அரசனுக்குக் கொடுக்கிறார்கள் என்றால், மக்களுக்குரியதை அரசன் கொடுக்க வேண்டும். தங்கள் ஊதியத்தை வரியாக அரசனுக்குக் கொடுக்கிறார்கள் என்றால், அந்த வரியை வைத்து அரசன் மக்களின் நல்வாழ்விற்கானதைச் செய்ய வேண்டும். அதைவிட்டு, அவர்களை அச்சுறுத்தவோ, அவர்களைச் சிதறடிக்கவோ அவன் செய்தால் அது நீதி அல்ல.

பரிவின் நான்காம் குணம் 'இணைப்பது.' பரிவு காட்டும் மனம் யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபே 2:13-18) நமக்குச் சொல்கிறது. யூதர்கள்-புறவினத்தார்கள், கடவுளுக்கு நெருக்கமானவர்கள்-கடவுளைவிட்டுத் தூரமானவர்கள் என இரண்டு இனமாக சிதறுண்டு கிடந்தவர்கள் கடவுளோடும் ஒருவர் மற்றவரோடும் இணைக்கப்பட்டுள்ளீர்கள் என்று கடவுளின் இரக்கத்தை அல்லது பரிவை 'இணைப்பாக' வெளிப்படுத்துகின்றார் பவுல்.

ஆக, இறைவனின் பரிவு

அ. திருத்தூதர்களுக்கு ஓய்வு
ஆ. மக்களுக்குப் போதனை
இ. சிதறடிக்கப்பட்ட மந்தைக்கு நீதி
ஈ. அந்நியப்படுத்தப்பட்ட புறவினத்தாருக்கு இணைப்பு
என்ற நான்கு பரிமாணங்களாக இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் வெளிப்படுகிறது. இந்த நான்கு பரிமாணங்களையும் நாம் நம் வாழ்க்கைக்கு எப்படி பொருத்திப் பார்ப்பது?

அ. ஓய்வு என்னும் பரிவு

ஓய்வு என்பது நான் எனக்குக் காட்டும் பரிவு. (அ) திருத்தூதர்கள் இயேசுவிடம் திரும்பி வருகின்றனர், (ஆ) பாலைவனத்திற்குச் செல்கின்றனர், (இ) தனிமையை அனுபவிக்கின்றனர். ஆக, மக்களோடும் மக்கள் சார்ந்தவற்றோடும் இருந்தவர்கள் இறைவனை நோக்கித் திரும்புகின்றனர். இது ஓய்வின் முதற்படி. இரண்டு, இவர்கள் பாலைவனம் செல்கின்றனர். பாலைவனம் என்பது வெறுமையின், இல்லாமையின் அடையாளம். அதாவது, 'எங்களால் எல்லாம் முடியும்!' 'எங்களால் தீய ஆவிகளை விரட்ட முடியும்,' 'எங்களால் நோய்களைக் குணமாக்க முடியும்' என்று தங்கள் வெற்றிகளால் நிரம்பி வழிந்தவர்களை வெறுமையாக்க அனுப்புகின்றார் இயேசு. பாலைவனத்தில் அவர்களால் எதுவும் 'முடியாது' என்ற நிலையில் அவர்கள் தங்கள் இயலாமையை, இல்லாமையை உணர்வார்கள். மேலும், அந்தத் தனிமையில் அவர்கள் தங்களோடு உறவாடுவார்கள். இன்று நம்மிடம குறைந்துவருவது ஓய்வு. ஆகையால்தான், நாம் இறைவனிடம் திரும்பிவருவதில்லை. பாலைநிலத்தை உணர்வதில்லை. நம் தனிமையைக் கொண்டாடுவதில்லை. இது எப்போது சாத்தியம்? ஓய்வு என்ற ஒன்று இருக்கும்போது. இன்று நேரத்தை மிச்சமாக்க நாம் நிறைய கண்டுபிடித்துவிட்டோம். இருந்தாலும் நமக்கு நேரம் போதவில்லை. இன்றைய ஊடகமும், தகவல் தொழில்நுட்பமும் நம்மை நிறைத்துக்கொண்டு, 'அடுத்து இது,' 'அடுத்து அது' என்று பரபரப்பாக ஓடவைத்துக்கொண்டே இருக்கின்றன. ஓய்வு என்பது வேலையற்ற நிலை அல்ல. மாறாக, அது வேலைகள் ஒருங்கிணைக்கப்பட்ட, இறைவனிடம் ஒப்புவிக்கப்பட்ட நிலை. தூங்கும்வரை ஃபோன், தூங்கும்போதும் ஃபோன், தூங்கி எழுந்ததும் ஃபோன் என்று நம் தனிமையை ஃபோனுக்கும் அதன் செயலிகளுக்கும் விற்றுவிடுவதைத் தவிப்பது ஓய்விற்கான ஒரு வழி. பிறருக்கு நாம் பரிவு காட்டுவதை விட எனக்கு நானே முதலில் ஓய்வு என்னும் பரிவைக் காட்ட வேண்டும். இப்படிக் காட்டியதால்தான் நல்ல சமாரியனால் கள்வர் கையில் அகப்பட்டவனுக்கு உதவி செய்ய முடிந்தது. 'என் வேலை, என் பணம், என் முதலீடு, என் இலாபம்' என அவன் ஓடினால் அவனால் மற்றவருக்குப் பரிவுகாட்ட முடியாது. இந்த ஓய்வில்தான் நான் என்னுடைய ரம்பத்தைக் கூர்மையாக்க முடியும்.

ஆ. கற்பித்தல் என்னும் பரிவு

தன்னைத் தேடி ஓடி வந்தவர்களுக்கு அப்படியே உணவு கொடுத்து, உபசரித்து, நோய் நீக்கி திருப்பி அனுப்பிவிடவில்லை இயேசு. மாறாக, அவர்களுக்குக் கற்பிக்கிறார். உணவு, நோய், உடல்நலம் ஆகியவற்றையும் கடந்து உள்ளத்திற்கு ஊட்டம் தருகின்றார். அன்றைய மக்களுக்கு உணவைவிட நல்ல போதனைதான் தேவைப்பட்டது. இன்று நான் மற்றவர்களுக்குக் கற்பிக்கின்றேனா? இன்று நாம் கற்றலைச் சுருக்கிவிட்டோம். 'எல்லாம் சரி. ஒவ்வொருவருக்கும் ஒரு அறநெறி' என்ற நிலைக்கு நாம் கடந்து போவதால் நாம் செய்யும் அனைத்திற்கும் காரணம் கண்டுபிடிக்கிறோம். இன்று ஒருவர் மற்றவருக்குக் கற்பிக்கத் தயங்குகிறோம். அல்லது தவறானவற்றைக் கற்பிக்கிறோம். இன்றைய சமூகம் 'பணம்' என்ற ஒற்றைச் சொல்லைத்தான் கற்பிக்கிறது. வசிக்க வீடு, பேச ஃபோன், போக கார், வங்கியில் சேமிப்பு, ஓட்டல், பெட்ரோல் என பணம் என்ற ஒன்றைச் சுற்றியே நம்மை ஓடவைக்கிறது. 'எப்படியாவது பணத்தைச் சேர்த்துக்கொள்' என்பதுதான் இன்றைய அரசும், ஆட்சியாளர்களும் நமக்குக் கற்பிக்கும் பாடமாக இருக்கிறது. தம்மைத் தேடிவந்த மக்களுக்கு இயேசு 'பலவற்றைக் கற்பித்தார்' எனப் பதிவுசெய்கிறார் மாற்கு. அவை எவை என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், தன்னிடம் எழுந்த பரிவு என்னும் உணர்வால் இயேசு உந்தப்பட்டதால், ஆயனில்லா அவர்கள் நிலையை அறிந்ததால் அழியா மகிழ்ச்சி பற்றியே அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருப்பார். ஆக, இன்று நான் நல்லதைக் கற்க வேண்டும். கற்பிக்க வேண்டும்.

இ. நீதி என்னும் பரிவு

அவரவருக்கு உரியதை அவரவருக்குக் கொடுப்பது என்பது 'நீதி' என்னும் சொல்லாடலின் பொருள். இஸ்ரயேலின் மேய்ப்பர்கள் மந்தைக்கு உரியதை மந்தைக்குக் கொடுக்காமல் தங்களுக்கே கொடுத்துக்கொண்டனர். தங்களைப் பராமரித்துக்கொண்டு மந்தையைச் சிதறடித்தனர். தாங்கள் உண்டுகொழுத்து மந்தையைப் பட்டினிபோட்டனர். இவ்வாறாக, நீதிக்குப் பதிலாக அநீதியைத் தழுவிக்கொண்டார்கள். நீதி உள்ளம் கொண்டவரால்தான் பரிவு காட்ட முடியும். கள்வர் கையில் அகப்பட்டவன் குற்றுயிராய்க் கிடந்தபோது, அவனுக்கு உரிய பொருளும், உயிரும் மறுக்கப்பட்டபோது அதை அவனுக்கே வழங்க முற்படுகின்றான் நல்ல சமாரியன். அவனிடமிருந்தே நீதி என்னும் உணர்வு அவனைப் பரிவிற்கு அழைக்கிறது. தன் சொத்தை தன்னிடமிருந்து பிரித்து, வெளியூர் சென்று ஊதாரித்தனமாக செலவழித்து, தன் இல்லத்திற்கு வெறுமையாக வந்தாலும், மகனுக்கு உரியதை மகனுக்கே வழங்க முற்படுகின்றார் தந்தை. இந்தப் பரிவின் பின்புலத்தில் இருப்பது நீதி. ஆக, நம் வீடுகளில் பிள்ளைகளுக்கு உரியதை பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கு உரியதை பெற்றோருக்கும் அவரவருக்கு உரியதை அவரவருக்கும் கொடுக்கும்போது நீதியும், பரிவும் கரம்கோர்க்கின்றன.

ஈ. இணைப்பு என்னும் பரிவு

யூதர்கள் தேர்ந்துகொள்ளப்பட்ட இனம் என்றும், புறவினத்தார் ஒதுக்கப்பட்ட இனம் என்ற எண்ணத்தில் யூதர்களுக்கும் புறவினத்தாருக்கும், புறவினத்தாருக்கும், கடவுளுக்கும் இடையே இருந்த சுவற்றை உடைக்கின்றார் இயேசு. ஆக, பரிவில் இணைப்பு நிகழ்கிறது. நல்ல சமாரியன் நிகழ்விலும், ஊதாரி மகன் நிகழ்விலும், காயப்பட்டவரும், மகனும் முறையே தங்கள் சமூகத்தோடும், தங்கள் குடும்பத்தோடும் இணைக்கப்படுகின்றனர். பரிவு இல்லாத இடத்தில் பகைமையும், விரிசலும் இருக்கும். ஏனெனில் அங்கே ஒருவர் மற்றவருக்கான வேற்றுமை மட்டுமே பார்க்கப்படும், பாராட்டப்படும். ஆனால், பரிவில் ஒருவர் மற்றவர் தங்களுக்கிடையேயான ஒற்றுமைகளை மட்டுமே பார்ப்பர்.

இறுதியாக,

'தாயினும் சாலப் பரியும்' இறைவனின் பரிவுள்ளம் ஓய்வு, கற்பித்தல், நீதி, மற்றும் இணைப்பு என தன்னையே விரித்துக்காட்டுகிறது. இன்றைய நம் ஓட்டத்தையும், போட்டியையும், போராட்டங்களையும் கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு நான் என்னோடும், நான் ஒருவர் மற்றவரோடும் பரிவு காட்டப் பழகினால் நலம். வேகம் குறைத்தலும், வேகமாய் ஓடிவருவோரை ஆற்றுப்படுத்துவதும், வேகமாய் சிதறடிக்கப்படுவோரைக் கூட்டிச் சேர்ப்பதும் பரிவு.

 
 

No comments:

Post a Comment