Tuesday 10 July 2018

ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்
ஆமோஸ் 7:12-15
எபி. 1:3-14
மாற்கு 6:7-13

ஞாயிறு இறைவாக்கு- அருள்பணி முனைவர் ம.அருள்
குடும்பத்தைக் கட்டி எழுப்பு


நாம் வாழும் இன்றைய காலக் கட்டத்திலே திறமையும், சக்தியும் வாய்ந்த மனிதர்களைத் தேடிச் செல்கின்றது இன்றைய சமுதாயம். திறமை மிக்க ஆசிரியர்களைத் தேடுகிறார்கள் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க சக்தியும், திறமையும் வாய்ந்த மருத்துவரை நாடுகின்றான் ஒரு நோயாளி. திறமை வாய்ந்த சமையல் கலைஞனை தேடுகின்றான் ஓர் உணவக உரிமையாளன். திறமை வாய்ந்த ஓட்டுநரை நாடுகின்றான் ஒரு அதிகாரி தன் காரை ஓட்ட. இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் திறமையை நாடுகின்றோம். ஆனால் திறமையானது பிறப்பிலே வந்துவிடுவதும் இல்லை. புத்தக அறிவால் நிறைவு பெறுவதும் இல்லை. மாறாக மனிதனின் அன்றாட அனுபவத்தில் நிறைவு காண்பதுதான் திறமை. பழமொழி ஆகமம் 24- ஆம் அதிகாரம், 3-4 வசனங்கள் தருவது போல எந்த ஒரு செயலும் முதலில் ஞானத்தோடு திட்டமிடுவதால், அறிவோடு செயல்படுவதால், காலக்குறிகளுக்கு ஏற்றவாறு அமைப்பதால் திறமை மிக்க செயலாகும் என்று நிரூபிக்கப்படுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஞானத்தின் இருப்பிடமாகத் திகழ்ந்த இயேசு என்ற திறமை மிக்க ஒப்பற்ற தலைவர் திறமை மிக்கவர்களைத் தேடவில்லை. ஆனால் சாதாரண, படிப்பறிவில்லா பாமரராக கடலிலே தொழில் நடத்திய மீனவர்களை அழைத்தார். தன் ஞானத்திலே பயிற்சி கொடுத்தார். ஆவியின் சக்தியிலே பலப்படுத்தினார். திறமை மிக்க சீடர்களாக உருவாக்கினார். தான் கொடுத்த நற்செய்தியை அறிவிக்க இருவர் இருவராக அனுப்பினார். நற்செய்தியை அறிவிக்க திறமை மிக்க பாத்திரங்களாக மாறினார்கள். சாட்சி பகரும் உண்மை வீரர்களாக மாறினார்கள். இவர்கள் ஆற்றிய அரும்பெரும் செயல்களை நற்செய்தி ஏட்டிலே நாம் காணலாம். வாசித்து மகிழலாம்.

இன்றைய நாட்களிலே இறைவன் உன்னையும் அழைக்கலாம். தனியாக அல்லது குடும்பமாக . எதற்காக? குடும்பங்களைக் கட்டி எழுப்ப உன்னை அழைக்கலாம். இன்று எத்தனையோ குடும்பங்கள் பிளவுபட்டுக் கிடக்கின்றன. கணவன் மனைவிக்குள்ளே பிரிவு. பெற்றோர் பிள்ளைகளுக்குள்ளே விரிசல். திருமணத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்படுகின்றன அல்லது மறைக்கப்படுகின்றன. கணவன் குடித்து குடும்பத்தின் பொறுப்பற்ற நிலையிலே வாழும் காட்சி. அதனால் மனைவி கண்ணீர் கடலிலே தவிக்கும் காட்சி. மனைவி கணவனை மதிக்காத நிலையிலே தான்தோன்றித் தனமாக மாறும் காட்சி. பணம், பதவி, இன்பம் இவைகளுக்கு இடம் கொடுத்து, உண்மை அன்புக்கு இடமின்றி வறண்ட பாலைவனமாக இன்று எத்தனையோ குடும்பங்கள் காட்சித் தருகின்றன. இத்தகைய குடும்பங்களைக் கட்டி எழுப்ப இறைவன் உன்னையும் உன் வாழ்க்கை துணைவர், துணைவியையும் அழைக்கலாம்.

சென்னை மாநகரத்திலே எனக்குத் தெரிந்த சாதாரண கூலி வேலை செய்யும் ஒரு குடும்பம் உண்டு. நல்லதோர் குடும்பம். கணவனும் மனைவியும் இன்பத்திலும், துன்பத்திலும் ஒன்றுபட்டு வாழும் தம்பதிகள். என்னைச் சந்தித்தபோது அவர்களின் பணி வாழ்வில் ஒன்றை என்னிடம் மகிழ்ச்சியோடு கூறினார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் மாலையில் சில குடும்பங்களை நாங்கள் கணவன் மனைவியுமாக சந்திக்கின்றோம். இறைவன் அன்றாட வாழ்வில் எங்களுக்குச் செய்த இணையற்ற கொடைகளை எடுத்துச் சொல்லுகின்றோம். எப்படி எங்கள் வாழ்வில் துன்பங்களையும், சவால்களையும் சந்திக்கின்றோம் என்பதையும் பகிர்ந்து கொள்ளுகிறோம். நாங்கள் சந்திக்கும் குடும்பங்கள் எங்களிடம் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சிகளைக் கவனத்தோடு நாங்கள் செவிமடுக்கின்றோம். இறுதியாக எங்களுக்குத் தெரிந்த சிறிய செபத்தால் குடும்பத்தோடு சேர்ந்து செபிக்கின்றோம். இது எங்களைப் பலப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்கள்.

ஆம் நண்பா! நீயும் உன் மனைவியும் இதற்குச் சான்றாகத் திகழலாம் அல்லவா! சகோதரியே! நீயும் உன் கணவனும் இதற்குச் சான்று பகரலாமே! என்ன தகுதி எனக்கு உண்டு? என்ன திறமை எனக்கு உண்டு என்று திகையாதே! இறைவனுக்குத் தகுதியுள்ளவர்கள் தேவையல்ல. தகுதியற்ற உன்னை தகுதியுள்ளவராக்குவார். உறுதியூட்டும் இறைவனால் எனக்கு எதையும் செய்ய ஆற்றல் உண்டு என்று புனித பவுல் அடிகளார் பிலிப்பியருக்கு எழுதிய மடலிலே 4-ஆம் அதிகாரம் 13 - ஆம் வசனத்தில் குறிப்பிடுவது போல் தேவன் உன்னை ஆற்றல் மிக்க பாத்திரமாக மாற்றுவார். ஆனால் ஒன்று, நீ பிற குடும்பங்களுக்கு திருத்தூதராக மாறும்போது முதலில் நீ உன் குடும்பத்திற்கு திருத்தூதராக மாறுவாய். அது உன்னைப் பலப்படுத்தும். உன் குடும்பம் நிறைவும் மகிழ்ச்சியும் பெறும். பலப்படுத்தும் தேவன் உன்னை வழிநடத்துவாராக.




மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் - குடந்தை ஆயர் F. குழந்தைசாமி
துறவு மனத்தவரின் தூயவாழ்வு எப்படி இருக்க வேண்டும்?


இயேசு அவருடைய சீடர்களுக்கு அளித்த அறிவுரை வழியாக மனத் துறவைப் பற்றிய விளக்கமொன்றை நமக்குத் தருகின்றார். அவர் தம் சீடர்களைப் பார்த்து, பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையிலே செப்புக்காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம். அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும் (மாற் 6:8-9) என்கின்றார்.

துறவின் மையம் வெறுமை போல தோன்றும்! ஆனால் துறவு உண்மையிலேயே நிறைவானது, வல்லமை மிக்கது, ஆற்றல் வாய்ந்தது.

இரு நண்பர்கள்! இருவரும் துறவிகள்! ஒருவர் முற்றிலும் துறந்தவர்! மற்றொருவர் சற்றே மாறுபட்டவர். இருவரும் ஓர் ஆற்றைக் கடக்க வேண்டிய சூழ்நிலை! மாலை நேரம்!

முற்றிலும் துறந்தவர், "ஓடக்காரருக்குக் கொடுக்க, என்னிடம் பணமில்லை ; இங்கேயே தங்குவோம். காலையில் யாராவது நமக்கு உதவிசெய்வார்கள்” என்றார். மற்றவரோ, "இது காடு. மிருகங்களால் நமக்கு ஆபத்து ஏற்படலாம். என்னிடம் பணமிருக்கின்றது. ஆற்றைக் கடந்து விடுவோம்" என்றார்.

இருவரும் அக்கரையை அடைந்தார்கள். அப்போது முற்றும் துறந்தவரைப் பார்த்து அவருடைய நண்பர், "உம்மைப்போல நானும் முற்றும் துறந்திருந்தால் ஆற்றைக் கடந்திருக்க முடியாதே" என்றார்.

அதற்கு முற்றும் துறந்தவர் சொன்னார் : "உன் துறவு மனப்பாங்குதான் நம்மை இக்கரை சேர்த்தது. நீ பொருளைப் படகோட்டிக்குக் கொடுக்காமல் இருந்திருந்தால் நாம் வந்து சேர்ந்திருக்க முடியாது. மேலும் என் பையில் பணமில்லாதபோது உன்னுடையது என்னுடையதாயிற்று. எனக்குத் தேவையானது எனக்கு எப்படியும் கிடைத்துவிடுகின்றது. பொருள் இல்லாததால் ஒருபொழுதும் நான் துன்புற்றதில்லை” என்றார்.

இதனால்தான் இயேசு பற்றற்ற வாழ்வுக்கு, துறவு வாழ்வுக்கு நம்மை அழைக்கின்றார். இல்லறத்தில், தனியறத்தில் வாழ்பவர்கள் கூட துறவை மேற்கொள்ளலாம். மனத் துறவு - இது எல்லாருக்கும் பொதுவானது. துறவு மனம் படைத்தோர் ஒருபோதும் ஏமாறுவதில்லை - ஏனென்றால் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை!
துறவு மனம் படைத்தோர் எதையும் இழப்பதில்லை - ஏனென்றால் அவர்கள் எதையும் பற்றிக்கொள்வதில்லை! ( முதல் வாசகம் ).

மேலும் அறிவோம் :
பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள் : 350).

பொருள் : எவற்றின் மீதும் பற்று வைக்காமல் இருப்பவரிடம் பற்று வைக்கலாம். உலகச் செல்வங்கள் மீது பற்றுக்கொள்வோர் அவை நிலையற்றவை என்பதை உணர்ந்து, பற்றற்றான் ஆகிய இறைவன் மீது பற்று வைப்பர்.




மறையுரை மொட்டுக்கள் -அருள்பணி Y. இருதயராஜ்

பெந்தக்கோஸ்து சபையைச் சார்ந்த கிறிஸ்துவர்கள், "இயேசு வருகிறார் என்ற தலைப்பில் பல துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து அவற்றை ஒரு பேருந்து நிலையத்திலிருந்த பயணிகளுக்குக் கொடுத்தனர். மேலும், ஒரு பேருந்து நடத்துனரிடம் அதைக் கொடுக்க, அவர் அதைப் படித்துப் பார்த்துவிட்டு, "இயேசு வருகிறாரா? யார் வந்தாலும் வரட்டும்; ஆனால், மரியாதையாக 'டிக்கட்' வாங்கிக் கொண்டுதான் பேருந்தில் ஏறவேண்டும்" என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இன்று இயேசுவே வந்தாலும், அவர் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டுதான் பேருந்தில் ஏறமுடியும்: பயணம் செய்ய முடியும், அப்படியிருக்க, இன்றைய நற்செய்தியில், இயேசு தம் சீடர்களை நற்செய்திப் பணிக்காக அனுப்பும்போது, அவர்கள் தங்களுடன் உணவோ, பையோ, காசோ எதுவுமே எடுத்துச் செல்லவேண்டாம் என்று கட்டளையிடுகிறாரே; இது நடைமுறைக்கு ஒத்துவருமா? என்று நாம் கேட்கலாம்,

இன்றைய நற்செய்தியில் இயேசு இரண்டு உண்மைகளை வலியுறுத்துகிறார். ஒன்று, நற்செய்தியை அறிவிப்பவர்கள் பணத்தை அல்ல, கடவுளையே நம்பித் தங்கள் தாதுரைப் பணியை மேற்கொள்ள வேண்டும். இரண்டு, நற்செய்தியைக் கேட்பவர்கள் அதை அறிவிப்பவர்களின் இன்றியமையாத் தேவைகளை நிறைவு செய்யக் கடமைப்பட்டுள்ளாளர்.

நற்செய்தியை அறிவிப்பவர்கள் கடவுளை மட்டுமே நம்பித் தங்கள் பணியை ஆற்றவேண்டும், செல்வமும் சொத்துக்களும் நற்செய்திப் பணிக்கு மாபெரும் இடையூறாகவும் வேகத் தடைகளாகவும் உள்ளன. நற்செய்திப் பணிக்காகச் சொத்துக்களைக் குவிப்பவர்களுக்கு. இறுதியில் அச்சொத்துக்களைக் கட்டிக் காப்பதற்குத்தான் நேரமிருக்கும்; நற்செய்திப் பணிக்கு நேரமிருக்காது.

நற்செய்தி அறிவிப்பவர்கள் ஊர் ஊராகச் செல்லவேண்டும். எவ்வளவுக்கு அதிகமாகப் பொருள்கள் அவர்களிடம் உள்ளதோ, அவ்வளவுக்கு அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லத் தயங்குவார்கள்.

தனது பங்கிலே 100 தென்னம்பிள்ளைகளை நட்டுவளர்த்த பங்குத்தந்தை. அம்மரங்கள் காய்க்கும்வரைத் தன்னை அப்பங்கிலிருந்து மாற்றக்கூடாது என்கிறார். கட்டடம் கட்டிக் கொண்டிருக்கும் பங்குத்தந்தை. அக்கட்டடம் கட்டி முடியும்வரை பணிமாற்றத்தை எதிர்க்கிறார், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, பல இலட்சங்களைத் தனியார் நிறுவனத்தில் கொடுத்து வைத்த துறவறச் சபைக் குரு. அந்நிறுவனம் திவ்லாகி, 'மஞ்சள் நோட்டீஸ் அனுப்பியவுடன் மாரடைப்பால் மரணமடைகிறார்!

"எவரும் இருதலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. நீங்களும் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது” (மத் 8:24). ஆண்டவரின் இவ்வருள் வாக்கை மறந்தத் திருப்பணியாளர்கள் காலப்போக்கில் திருவாளர்களாக மாறிவிடுவதில் வியப்பொன்றுமில்லை, பொருளாளர்கள் அருளாளர்களாக இருப்பது ஒருபோதும் இயலாது. புனித சாமிநாதர் மூன்றாம் 'இன்னசென்ட்' என்ற திருத்தந்தையைச் சந்தித்தபோது, திருத்தந்தை அவரிடம், "பேதுரு தன்னிடம் பொன்னோ வென்ளியோ இல்லை என்றார். ஆனால் நான் அவ்வாறு கூற முடியாது. ஏனெனில் என்னிடம் ஏராளமாகப் பொன்னும் வெள்ளியும் உள்ளன என்றார். அதற்குச் சாமிநாதர் திருத்தந்தையிடம், "உங்களிடம் பொன்னோ வெள்ளியோ இல்லை என்று கூறமுடியாது. ஆனால் நீங்கள் முடவனைப் பார்த்து எழுந்து நட' என்றும் சொல்ல முடியாது" என்று பதிலடி கொடுத்தார். பேதுருவும் ஏனைய திருத்தத்தங்களும் புதுமை செய்தனர்; ஏனெனில் அவர்களிடம் பொன்னும் வெள்ளியுமில்லை. இக்காலத்தில் திருப்பணியாளர்களிடம் ஏராளமாகப் பொன்னும் வெள்ளியும் இருப்பதால் அவர்களால் புதுமை செய்ய இயலவில்லை .
திருப்பணியாளர்கள் தங்கள் அருள் பணிக்குப் பணம் வாங்கக் கூடாது. ஏனெனில் கொடையாக, அதாவது, இலவசமாகப் பெற்றுக் கொண்டதைக் கொடையாக, இலவசமாகவே வழங்க வேண்டும் (மத் 10:8) என்பதுதான் இயேசுவின் விருப்பம்

ஒரு பங்கிற்கு உறுதிப்பூசுதல் கொடுப்பதற்காக ஆயர் சென்ற போது, உறுதிப்பூசுதல் பெறும் சிறுவர்கள் ஓர் உறையுள் 10 ரூபாய் வைத்து ஆயருக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டுமென்று பங்குத்தந்தைக் கேட்டிருந்தார், ஓர் உறையுள் 10 ரூபாய் இருந்தது: அத்துடன் ஒரு காகிதத்துண்டில், “பரிசுத்த ஆவியைப் பெறுவதற்குமா இலஞ்சம் கொடுக்க வேண்டும்?" என்று எழுதப்பட்டிருந்தது.

திருப்பலி நிறைவேற்றுவதற்கும் திருவருள் சாதனங்களை வழங்குவதற்கும் இறைமக்களிடமிருந்து பெறப்படுவது இலஞ்சமோ கட்டாயக் கட்டணமோ அல்ல; மாறாக, திருப்பணியாளர்களைப் பராமரிப்பதற்காக இறைமக்கள் கொடுக்கும் விருப்பக் காரிக்கையாகும், திருப்பணியாளர்கள் இழிவான ஊதியத்திற்காகப் பணி செய்யலாகாது (1பேது 5:2). ஆனால், பங்கு மக்கள் தங்களது பங்குப்பாரியாளரைப் பராமரிக்க வேண்டிய கடமையும் உரிமையும் கொண்டுள்ளனர். இக்கடமையை இயேசுவும் புனித பவுலும் வலியுறுத்துகின்றனர்.

'வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே' (மத் 10:10 இயேசு வின் சீடருக்கு ஒரு கிண்ணம் குளிர்ந்த நீர் கொடுப்பவரும் கைமாறு பெறுவார் (காண்க: மத் 10:42) "நற்செய்தியை அறிவிக்கிறவர்கள் அந்நற்செய்தியின் மூலமாகவே பிழைப்புக்கு உரியவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நம் ஆண்டவர் பனரித்திருக்கிறார்" (1கொரி 9:14), “இறைவார்த்தையைக் கற்றுக் கொள்வோர் அதைக் கற்றுக் கொடுப்போருக்குத் தமக்குள்ள நலன்கள் அனைத்திலும் பங்கு அளிக்க வேண்டும்" (கலா 6:6).
ஞாயிறு திருப்பலி முடிந்து, தனது சிறிய மகனுடன் வீடு திரும்பிய ஒரு பெண்மணி, பங்குத் தந்தையின் பிரசங்கத்தைப் பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்து. கண்டபடி அவரைத் திட்டினார். அவருடைய சிறிய மகன் அவரிடம், "ஆமா, நீ போட்ட 10 பைசாவுக்கு இதைவிட நல்ல பிரசங்கம் வேணுமா? பேசாம வாங்கம்மா" என்றாள், 10 பைசா உண்டியலில் போட்டுவிட்டு, 10,000 கேள்விகள் கேட்பார் பலர் உண்டு ,

ஒவ்வொருவரும் தங்கள் மாதவருமானத்தில் 1/10 பகுதியை கொடுக்கவேண்டாம்: 1/100 பகுதியாவது கொடுத்தாலே போதும். பங்குத் தந்தையைக்கூடப் பராமரிக்காத பங்கு மக்கள் கடவுளிடமிருந்து கொடைகளை எதிர்பார்க்க முடியுமா?


*கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்" (லூக் 6:33) "மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலேயோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்குரியவர், கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்பவல்லவர்" (2கொரி 9:7-8),




ஆண்டவரின் பேரன்ப - அருள்பணி  ஏசு கருணாநிதி.
ஒரு நிகழ்வைக் கற்பனை செய்வோம். தீபாவளி நேரம். பேருந்துகள் மற்றும் இரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. மதுரையில் இருக்கும் எனக்கு அன்று காலையில் செய்தி வருகிறது. சென்னையில் இருக்கும் என் நண்பர் ஒருவர் ரொம்பவும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். நான் அவரைக் காண விழைந்து புறப்படுகிறேன். பேருந்துகளில் நெரிசல் அதிகம் இருப்பதால் வைகை எக்ஸ்பிரஸ் எடுத்து செல்லலாம் என நினைத்து இரயில் சந்திப்பு வருகிறேன். கரன்ட் டிக்கெட் எடுக்கும் இடத்திலும் நீண்ட கூட்டம். கூட்டத்தில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து டிக்கெட்டும் வாங்கிவிடுகிறேன். பிளாட்ஃபார்முக்கு வேகமாக செல்கிறேன். எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் என அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. கூட்டம் அதிகமாக இருப்பதால் எல்லாரையும், எல்லா டிக்கெட்டுகளையும் பரிசோதிக்கிறார்கள். அப்படி பரிசோதிப்பவரிடம் என் டிக்கெட்டையும், அடையாள அட்டையையும் காட்டியவுடன், அவர் ஒரு நொடி யோசித்துவிட்டு, 'சார், நீங்க தான் அவரா! வாங்க சார். உங்களுக்காக ஒருத்தர் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏசி புக் பண்ணியிருக்கார். லக்கேஜ் இவ்ளோதானா!' என்று தொடர்ந்தவர், 'தம்பி, வா, சாரோட லக்கேஜ் எடுத்துட்டுப் போ!' என்று போர்ட்டருக்குக் கட்டளையிடுகிறார். நான் ஒன்றும் புரியாமல் நிற்கிறேன். 'சார்! ரொம்ப ஆச்சர்யப்படாதீங்க! உங்க டிக்கெட், போர்ட்டர் கூலி, நீங்க சென்னையில் பயணம் செய்வதற்குக் கார் என அனைத்தையும் அவர் உங்களுக்காக புக்கிங் செய்துவிட்டார். பணமும் கொடுத்துவிட்டார்! நீங்க போய் உங்க சீட்ல உட்காருங்க!' என்கிறார்.

நான் என் இருக்கை நோக்கிச் செல்லும்போது என்னில் எழும் அந்த உணர்வைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 1:3-14) தருகின்றார் தூய பவுல். அதாவது, 'நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாக தேர்ந்தெடுத்தார் ... ... தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்துவைத்தார்' என்கிறார் பவுல். நம் நிலை என்ன என்றே தெரியாதபோது, நம் நிலை இப்படித்தான் இருக்கும் என்று கடவுள் நம்மை மேன்மைப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார் பவுல். இரயில் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே இரயிலில் பயணம் முன்பதிவு செய்துள்ளார் இறைவன். இது இறைவனின் பேரன்பையே காட்டுகிறது.

'ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்' என்று இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 85) திருப்பாடல் ஆசிரியர் வேண்டுகிறார். அதாவது, என்னை அன்பு செய்யும் ஒருவர் என் தேவை அறிந்து எனக்கு இரயிலில் முன்பதிவு செய்கிறார். இந்த செயல் அவரது அன்பின் வெளிப்பாடு என்றால், நான் இந்த உலகில் படைக்கப்பட்டதும், கடவுளால் வழிநடத்தப்படுவதும், அவரது மகனால் மீட்கப்படுவதும் கடவுளின் பேரன்பின் வெளிப்பாடு அன்றோ!

கடவுளின் பேரன்பு இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸின் வாழ்விலும், இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருத்தூதர்களின் வாழ்விலும் செயல்படுவதைப் பார்க்கிறோம். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் சாதாரண ஒரு நிலையிலிருந்து மனிதர்கள் அசாதாரண நிலைக்கு உயர்த்தப்பெறுகின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். ஆமோ 7:12-15) இறைவாக்கினர் ஆமோஸ் பெத்தேலின் குருவாக இருந்த அமட்சியாவின் எதிர்ப்பை சம்பாதிக்கின்றார். இறைவாக்கினர் பணி என்பது காசுக்கான அல்லது பதவிக்கான பணி என எண்ணிய அமட்சியாவுக்குப் பதிலடி கொடுக்கின்ற ஆமோஸ், 'நான் இறைவாக்கினனும் அல்ல. இறைவாக்கினனின் மகனும் அல்ல. ஓர் ஆடு மேய்ப்பவன். தோட்டக்காரன்' என்கிறார். அதாவது, தன் இறைவாக்குப் பணியால் தான் தன் ஆடுகளையும், தன் தோட்டத்தையுடம் இழந்தவன் என்றும், இறைவனின் அழைப்பினால்தான் தான் இறைவாக்குப் பணியை செய்வதாகவும் சொல்கின்றார். ஆக, என் அழைப்பும், என் அனுப்பப்படுதலும் என் சொந்த விருப்பு வெறுப்பினாலோ, என் மனத்தின் உள்ளாசைகளாலோ தோன்றியது அல்ல. மாறாக, என்னை அழைத்தவர் என்னைத் தேர்ந்தெடுத்து, ''என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று இறைவாக்கு உரை' என அனுப்பினார்' எனச் சொல்கின்றார். சாதாரண ஆடு, மாடு மேய்க்கும், தோட்டக்கார வேலையிலிருந்து இறைவாக்கினர் நிலைக்கு ஆமோஸை உயர்த்துகிறது ஆண்டவரின் பேரன்பு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 6:7-13) இயேசு பன்னிருவரை தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்புகின்றார். இயேசுவின் சமகாலத்து ரபிக்கள் தங்களுக்கென சீடர்களை வைத்திருந்தாலும் அவர்களைத் தனியாக பணிக்கு அனுப்புவதில்லை. தங்கள் பெயரே எல்லா இடத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் தாங்களே பணிக்குச் செல்வர். அப்படி தங்கள் சீடர்களை அழைத்துச் சென்றாலும், அவர்களை வெறும் ஏவல் வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார். ஆனால், இயேசு பன்னிருவரை தனியாக அனுப்புவதன் வழியாக அவர்களை தன் உடன்பணியாளர்கள் ஆக்குகிறார். மேலும், ரபிக்கள் தாங்கள் பணிக்குச் செல்லும்போது, தங்களுக்குத் தேவையான உணவு, துணி, பணம் அனைத்தையும் தங்களுடன் எடுத்துச் செல்வர். ஒரே வீட்டில் தங்க மாட்டார்கள். போய்க்கொண்டே இருப்பார்கள். இதற்கெல்லாம் ஒரு மாற்றுக் கலாச்சாரத்தைத் தன் சீடர்களுக்கு இயேசு கற்றுக்கொடுக்கின்றார்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் செயல்களை மூன்று வினைச்சொற்களில் பதிவு செய்கின்றார் மாற்கு:

அ. அனுப்பத் தொடங்கினார்
ஆ. அதிகாரம் அளித்தார்
இ. கட்டளையிட்டார்

அ. 'அனுப்புதல்'. நாணயத்தின் ஒரு பக்கம் 'அழைத்தல்' என்றால், அதன் மறுபக்கம் 'அனுப்புதல்.' இறையழைத்தலின் மறுபக்கம் இறைப்பணி. எனக்கு இறையழைத்தல் இருக்கிறது என்றால், அது வெறுமனே நான் அமர்ந்து அதில் இன்புறுவதற்காக அல்ல. மாறாக, அனுப்பப்படுதலில்தான் அழைத்தல் நிறைவுபெறுகிறது. 'தம்மோடு இருக்க பன்னிருவரை தேர்ந்தெடுத்த இயேசு' (காண். மாற் 3:14) இப்போது அவர்களை இருவர் இருவராக அனுப்புகின்றார். ஆக, இதுவரை பயிற்சி பெற்றவர்கள் இப்போது பணிக்குச் செல்கிறார்கள். கல்லூரிக்கல்வி முடிந்து வேலை அல்லது வாழ்க்கைப்பணி தொடங்குகிறது இவர்களுக்கு.

ஆ. 'அதிகாரம் அளித்தார்'.
'தீய ஆவிகளின்மேல் அதிகாரம் அளிக்கின்றார்' இயேசு. இது இயேசு தீய ஆவிகளின்மேல் கொண்டிருந்த அதிகாரத்தையும் குறிக்கிறது. அதிகாரம் வைத்திருப்பவர் தானே அதை மற்றவர்களுக்கு அளிக்க முடியும். ஆக, அதிகாரம் என்பதன் பொருளை மாற்றுகிறார் இயேசு. அனுப்பப்படுபவர் கொண்டிருக்க வேண்டிய அதிகாரம் மக்கள்மேலோ, பணத்தின் மேலோ, இடத்தின் மேலோ அல்ல. மாறாக, தீய ஆவிகளின்மேல். ஆக, என் அதிகாரத்தைக் கண்டு தீய ஆவிகள் பயப்படலாமே தவிர, நான் பணிசெய்ய செல்லுமிடத்தில் உள்ளவர்கள் பயப்படக்கூடாது.


இ. 'கட்டளையிட்டார்'. என்ன கட்டளை? 'உணவு,' 'பை,' 'செப்புக்காசு' எடுத்துச் செல்ல வேண்டாம் என்னும் கட்டளை. 'உணவு' என்பது இவர்களின் 'உடல் தேவைகளையும்,' 'பை' என்பது இவர்களின் 'அன்புத் தேவைகளையும்,' 'செப்புக்காசு' என்பது இவர்களின் 'பாதுகாப்புத் தேவைகளையும்' குறிக்கிறது. அதாவது, சாதாரணமாக நாம் தேடும் உடல், அன்பு, மற்றும் பாதுகாப்புத் தேவைகள் நம்மை ஒரு இடம் அல்லது நபரோடு கட்டிவைத்துவிடுகின்றன. நாம் எதற்காக நம் வீட்டில் இருக்கிறோம்? உணவுக்காக, உறவுக்காக, பாதுகாப்புக்காக. ஆக, வீடு உணவையும், உறவையும், பாதுகாப்பையும் தந்தாலும், அது அதே நேரத்தில் என்னைக் கட்டியும் வைத்துவிடுகிறது. என் வீட்டைவிட்டு என்னால் வெளியே செல்ல என்னால் முடிவதில்லை. ஆனால், இயேசுவின் கட்டளை திருத்தூதர்களைக் கட்டின்மைக்கு அழைத்துச் செல்கிறது. ரோட்டில் ஒரு நாயை அழைத்துச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். நாய்க்குட்டியின் கழுத்தில் பெல்ட் போட்டு, சங்கிலியின் மறுபக்கத்தை நாம் பிடித்திருந்தாலும், நாம் நாய்க்குட்டியைப் பிடித்திருப்பதுபோல, நாய்க்குட்டியும் நம்மைப் பிடித்துக்கொள்கிறது. நம்மை விட்டு அது எப்படி ஓட முடியாதோ, அதுபோலவே அதைவிட்டும் நான் ஓட முடியாது.

இந்த மூன்று சொல்லாடல்கள் - 'அனுப்புதல்,' 'அதிகாரம் அளித்தல்,' 'கட்டளையிடுதல்' - இயேசு தன் திருத்தூதர்களை சாதாரண நிலையிலிருந்து அசாதாரண நிலைக்கு உயர்த்துகிறார். இது இயேசுவின் பேரன்பிற்குச் சான்றாகத் திகழ்கிறது. இப்படி உயர்த்தப்பட்டவர்கள் தங்கள் வேலைகளைச் சரியாகச் செய்துமுடிக்கின்றனர் எனவும் மாற்கு பதிவு செய்கின்றார்.

இவ்வாறாக, ஆண்டவரின் பேரன்பு,

முதல் வாசகத்தில், ஆமோஸை 'ஆடுமேய்ப்பவர்' நிலையிலிருந்து 'இறைவாக்கினர்' நிலைக்கும்,
இரண்டாம் வாசத்தில், நம்பிக்கையாளரை 'ஒன்றுமில்லாதவர்' நிலையிலிருந்து 'கடவுளின் மகன்-மகள்' நிலைக்கும்,
மூன்றாம் வாசகத்தில், திருத்தூதர்களை 'உடல்-உறவு-பாதுகாப்பு தேவை கட்டுகள்' நிலையிலிருந்து 'கட்டின்மை' நிலைக்கும் அழைத்துச் செல்கிறது.

இந்த அழைப்பு அல்லது உயர்த்துதல் மற்றொன்றையும் நமக்குச் சொல்கிறது. முழுக்க, முழுக்க இது இறைவனின் அருள்செயலே அன்றி, இதில் மனித முயற்சிக்கும், மனித அறிவுக்கும், மனித ஆற்றலுக்கும் பங்கில்லை. இது ஒருபோதும் உயர்த்தப்படுபவரின் தெரிவு அன்று. மாறாக, உயர்த்தப்படுபவர்மேல் கடவுளே வலிந்து திணிக்கும் ஒரு நிலை.

கடவுளின் பேரன்பிற்கு நாம் தகுதியாக்கிக்கொள்ளத் தேவையில்லை. மாறாக, அவரே அதைக் கொடையாகக் கொடுக்கின்றார்.

அதே வேளையில் கடவுள் காட்டும் பேரன்பை நாம் நம் வாழ்வில் அனுபவிக்க அதற்கேற்ற சூழலை உருவாக்கவேண்டும். இச்சூழலை உருவாக்குவது எப்படி?

1. வேர்களும், விழுதுகளும்
ஆமோஸின் இறைவாக்குப் பணி என்னும் விழுது அமட்சியா என்ற பெத்தேல் அருள்தலக் குருவால் கேள்விக்குட்படுத்தப்படும்போது, ஆமோஸ் ஆடுமேய்க்கும் பணியாகிய தன் வேரை மனத்தில் கொள்கின்றார். விழுது பரப்புவதற்கு, இறைவாக்கு பணி செய்வதற்கு ஆண்டவர்தாம் அனுப்பினார் என்றாலும், இந்த அனுப்புதல் ஆமோசுக்குத் தெரியுமே தவிர, அமட்சியாவுக்குத் தெரியாது. இவ்வாறாக, நாம் அனுப்பப்படும் நிலையை மற்றவர்கள் தங்கள் அறியாமையால் உதறித் தள்ளும்போது நாம் நம் வேர்களைப் பற்றிக்கொள்ள வேண்டும். நம் வேர்களை நாம் நினைத்துப் பார்க்கும் போது நம் இயலாமை நமக்குப் புரியத் தொடங்குகிறது. அதே நேரத்தில் நம் வேர்கள் நம்மைப் பின் நோக்கி இழுக்காவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆமோஸ் அதைச் சரியாகச் செய்கிறார். 'நீ இறைவாக்குரைக்க வேண்டாம்' என்று அமட்சியா சொன்னவுடன், அவர் உடனடியாகத் தன் ஆடுமேய்க்கும் பணிக்குத் திரும்பிவிடவில்லை. கடவுளின் பேரன்பு தன்னை ஆட்கொண்டு தன்னை உயர்த்தியது. தான் கடந்து வந்த நிலை கண்முன் நின்றாலும், கடந்து வந்த பழைய நிலைக்கே திரும்பத் தேவையில்லை. தொடர்ந்து அவர் இறைவாக்குப்பணியைச் செய்கின்றார். ஆக, கடவுளின் பேரன்பை உணர்ந்த ஒருவர் தன் வேர்களை மறக்கவும், அதே வேளையில் தன் கடந்த காலம் நோக்கி பின்செல்லவும் கூடாது.

2. புள்ளிகளை இணைத்தல்

நாம் ஒரு புள்ளியில் பிறந்து மறு புள்ளியில் இறக்கின்றோம். ஒரு நாளில் பிறந்து இன்னொரு நாளில் இறக்கின்றோம். நாம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு வாழ்கின்றோம். பிறக்கும்போது ஒரு ஊர், வளரும்போது இன்னொரு ஊர், பணி செய்ய இன்னொரு ஊர், இறக்கும்போது இன்னொரு ஊர் என நம் வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இடமும், ஒவ்வொரு மனிதரிடமும் நாம் நகரும்போது நாம் ஒவ்வொரு புள்ளியை விட்டுக்கொண்டே செல்கின்றோம். கொஞ்ச நேரம் உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் அந்தப் புள்ளிகள் மிக அழகாக இணைவதை நம்மால் பார்க்க முடியும். நமக்கு நடந்தது எதுவும் விபத்தில்லை. எல்லாமே ஏதோ ஒரு திட்டத்தில்தான் நடந்திருக்கிறது என்றும் தோன்றும். இதுதான் நம் வாழ்க்கை நிலை. இந்த நிலையை அப்படியே இன்னும் கொஞ்சம் உயர்த்துகிறார் தூய பவுல். நம் பிறப்பை உலகின் தொடக்கம் என்ற புள்ளியோடு இணைக்கின்றார். ஆக, உலகின் தொடக்கத்திலேயே நம் வாழ்க்கைப் புள்ளியும் தொடங்கி தொடர்கிறது. படைப்பு என்ற தாயோடு உள்ள தொப்புள்கொடி நம்மில் நீண்டுகொண்டே இருக்கிறது. அந்த தொப்புள்கொடிதான் நம் வாழ்வின் இலக்கோடு நம்மை இணைக்கின்றது. நம் வாழ்வில் இறைவன் வைத்திருக்கும் நோக்கம் என்னவென்றால், 'நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் அவர் திருமுன் விளங்குவது, அவரின் பிள்ளைகளாக இருப்பது'. அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு கடிகாரம் அதை வடிவமைத்தவரின் திறமையைக் காட்டுகிறது. அதுபோல, நாம் வாழ்கின்ற நல்ல வாழ்க்கை நம்மை உருவாக்கிய இறைவனுக்குப் புகழ்சேர்க்கிறது. ஆக, இத்தகைய புகழுக்குரிய வாழ்வை வாழ்வது நம் கடமையாக இருக்கிறது. இவ்வாறாக, கடவுளின் பேரன்பு நமக்குக் கொடையாக வந்தாலும், அதற்கேற்ற வாழ்வை வாழ்வது நம் கடமையாகவும், நம்மேல் சுமத்தப்பட்ட பொறுப்பாகவும் இருக்கிறது. கொடை என்ற புள்ளியை, நம் பொறுப்புணர்வு என்ற புள்ளியோடு இணைக்கும்போது நாம் இறைவனோடு இன்னும் நெருக்கமாகின்றோம்.

3. தங்குங்கள், உதறுங்கள்
'அழைக்கப்பட்ட' திருத்தூதர்கள் இயேசுவால் 'அனுப்பப்படுகின்றனர்,' 'அதிகாரம் கொடுக்கப்படுகின்றனர்,' மற்றும் 'உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றனர்'. இவ்வாறாக, அவர்களின் இந்த முன்னேற்றம் அவர்கள் விருப்பத்தால் நிகழ்வது அல்ல. மாறாக, அது அவர்கள் மேல் திணிக்கப்படுகிறது. அவர்களின் விருப்பு வெறுப்பு இங்கே கருத்தில் கொள்ளப்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் இயேசுவின் அழைப்புக்கு 'ஆம்' சொன்ன அந்த நிமிடமே தங்கள் விருப்பங்களை இயேசுவிடம் ஒப்படைத்துவிடுகின்றனர். இயேசுவின் அன்பு தங்களை ஆட்கொள்ள விட்டுவிடுகின்றனர். இப்படி ஆட்கொள்ளப்பட்டவர்களுக்கு இயேசு இரண்டு வார்த்தைகளில் அறிவுறுத்துகின்றார்: 'ஏற்றுக்கொண்டால் தங்குங்கள்,' 'ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் உதறுங்கள்.' இந்த இரண்டையும் மாற்றிப் போட்டால் எப்படி இருக்கும்? நம்மை ஏற்றுக்கொள்கிறவரை நாம் உதறவும், நம்மை ஏற்றுக்கொள்ளாதவரிடம் நாம் தங்கவும் செய்தால் வாழ்க்கை ரொம்பவும் கலவரமாகிவிடும். மற்றவரோடு தங்குவதற்கு நிறைய பொறுமையும், தாராள உள்ளமும் தேவை. மற்றவரிடமிருந்து விலகிச் செல்வதற்கு நிறைய துணிச்சலும், மனத்திடமும் தேவை. இந்த இரண்டு செயல்களின் ஊற்றாக அல்லது அளவுகோலாக ஒருவர் வைத்துக்கொள்ள வேண்டியது இறைவனின் பேரன்பு.

இறுதியாக,

நம் வாழ்வை ஒரு நொடியில் புரட்டிப்போடும், பறக்க வைக்கும் இறைவனின் பேரன்பிற்கு நன்றிகூறும் இந்நாளில், அவர் விடுக்கும் அழைப்பு ஒவ்வொருவரையும் நோக்கி வருகிறது. அந்தப் பேரன்பே நம்மை ஆட்கொண்டுள்ளதால் அவர் அனுப்பும்போது அவரின் பேரன்பு நம் வழியாக யாவரையும் ஆட்கொண்டால், நாம் எல்லாரும் தூயோராய், மாசற்றோராய், அவரின் பிள்ளைகளாய் அவர்முன் இருப்போம்.

அவர் அன்பு நம்மை ஆட்கொண்டால் அன்றாடம் வளர்ச்சியே, வெற்றியே, மகிழ்ச்சியே!

'ஆண்டவரே, உமது பேரன்பை உங்களுக்குக் காட்டியருளும்!'



No comments:

Post a Comment