Tuesday, 8 May 2018

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா

திப 1:1-11; எபே 4:1-13; மாற் 16:15-20


கடவுளால் ஆகாதது ஒன்றுமில்ல.

மகிழ்ச்சியூட்டும் மறையுரை

குடந்தை ஆயர் அந்தோனிசாமி


விண்ணகம் எழுந்து செல்வதற்கு முன் இயேசு கிறிஸ்து அவரது சீடர்களுக்கும், உலக மக்களுக்கும் ஓர் அருமையான இரகசியத்தை வெளிப்படுத்திச் சென்றார். அது என்ன இரகசியம்? நம்பிக்கைக்கொள்வோர் மீட்பு பெறுவர் என்பதுதான் அது.

பழைய ஏற்பாட்டில் நோவா வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்டது நம்பிக்கையினால்! ஆபிரகாம் நம்பிக்கை கொண்டோரின் தந்தையாகியது நம்பிக்கையினால்! செங்கடல் இரண்டாகப் பிரிந்தது நம்பிக்கையினால் ! வானத்திலிருந்து மன்னா பொழிந்தது நம்பிக்கையினால்! கற்பாறை இரண்டாகப் பிளந்தது நம்பிக்கையினால்! புதிய ஏற்பாட்டில் மரியா கடவுளின் தாயானது நம்பிக்கையினால்! யோசேப்பு நேர்மையாளரானது நம்பிக்கையினால் நோயாளிகள் உடல் நலம் பெற்றது நம்பிக்கையினால்! பாவிகள் பாவமன்னிப்புப் பெற்றது நம்பிக்கையினால்! இறந்தவர் உயிர்பெற்று எழுந்தது நம்பிக்கையினால்!

ஆம். உலகத்தை எல்லா துன்ப துயரங்களிலிருந்தும் விடுவித்து அதற்கு மீட்பளிக்கும் ஆற்றல் நம்பிக்கைக்கு உண்டு!

அமைதியான நதியினிலே ஓடம்! அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்! காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்! அந்தக் கரைதான் நம்பிக்கை!

இப்படிப்பட்ட நம்பிக்கையை நமது உள்ளத்திற்குள்ளும், இல்லத்திற்குள்ளும் ஊற்றிக்கொள்வோம். முனிவர் ஒருவர் ஒரு வெற்றுப்பானையை அவரது சீடர்கள் முன்னால் வைத்துவிட்டு, அவரது சீடர்களைப் பார்த்து, இதற்குள் என்ன இருக்கின்றது? என்று கேட்டார். சிலர், ஒன்றுமில்லை என்றார்கள். சிலர், இதற்குள் காற்று இருக்கின்றது என்றார்கள்.

முனிவர், காற்று இருக்கின்றது என்று சொன்னவர்களைப் பாராட்டிவிட்டு, இதற்குள் இருக்கும் காற்றை வெளியே எடுக்க முடியுமா? என்று கேட்டார்.

எல்லா சீடர்களும், முடியாது என்றார்கள். முனிவரோ, முடியும் என்றார். எப்படி? என்று சீடர்கள் கேட்டார்கள். அதற்கு முனிவர், இந்தப் பானைக்குள்ளே தண்ணீரை ஊற்றினால், இதற்குள்ளிருக்கும் காற்று வெளியேறிவிடும் என்றார்.

தூய ஆவியாரின் துணையோடு (முதல் வாசகம்) நம்பிக்கையை, அதாவது கடவுளின் வல்லமையால் ஆகாதது ஒன்றுமில்லை (இரண்டாம் வாசகம்) என்ற எண்ணத்தை நமது இல்லத்திற்குள்ளும். உள்ளத்திற்குள்ளும், மனத்திற்குள்ளும் ஊற்றிக்கொள்வோம்! அப்போது நாம் அனைவரும் மீட்கப்பட்டவர்களாய் நிலா போல உலா வருவோம்.

மேலும் அறிவோம் :
செயற்கரிய செய்வார் பெரியர் ; சிறியர்
செயற்கரிய செய்கலா தார் (குறள் : 26).

பொருள் : பிறரால் செய்வதற்கு அரிய பெருமைதரும் நல்ல செயல்களை நிறைவேற்றுபவர் பெரியவர் என்று பாராட்டப்படுவர். சிறுமையான செயல்களை மட்டுமே செய்து பெருமையான நற்பணிபுரியாதவர் சிறியவர் ஆவர்!


மறையுரை மெட்டுக்கள்

அருள்பணி இருதயராஜ்


மறைக்கல்வி வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம், “விண்ணகம் செல்ல விரும்புவர்கள் கைகளை மேலே உயர்த்துங்கள் " என்று கேட்டார், ஒரு மாணவனைத் தவிர மற்ற எல்லா மாணவர்களும் கைகளை உயர்த்தினர். கையை உயர்த்தாத மாணவனிடம், "ஏப்பா, உனக்கு விண்ணகம் செல்ல விருப்பம் இல்லையா?” என்று ஆசிரியர் கேட்டபோது, அவன், "விண்ணகம் செல்ல எனக்கு விருப்பம் தான்; ஆனால், இன்று பள்ளி முடிந்தவுடன் வேறு எங்கும் போகாமல் நேராக வீட்டிற்கு வரும்படி எங்கப்பா சுன்ண்டிப்பாய்ச் சொல்லியிருக்கிறார் " என்றான், நமக்கு விண்ணகம் செல்லப் பிரியம் என்றாலும், இந்த மண்ணகத்தை விட்டுப் போகப்பிரியமில்லை!

அன்னைத் தெரசா இறக்கும் வேளையில், அவரிடம் ஏழைக்குழந்தைகள், "அம்மா! எங்களை அனாதைகளாக விட்டுவிட்டு விண்ணகம் செல்லாதீர்கள், அங்கே நீங்கள் சேவை செய்ய ஏழைகள் இல்லை" என்று சொல்லி அழுதார்களாம்!

கிறிஸ்து விண்ணகம் செல்லாமல், எப்போதும் இம் மண்ணகத்தில் வாழ்ந்து மக்களுக்குப் பணிபுரிந்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அவர் ஏன் விண்ணகம் சென்றார், "அவர் விண்ணகம் சென்றது இம்மண்ணகத் துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அல்ல; நம் முதல்வரும் தலைவருமான அவர் சென்ற அதே விண்ணகத்திற்கு, அவருடைய சீடர்களாகிய நாமும் செல்வோம் என்னும் நம்பிக்கையை வளர்ப்பதற்காகவே" என்று இன்றைய திருப்பலியின் நன்றியுரையில் திருச்சபை தெளிவாக எடுத்துரைக்கின்றது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், திருச்சபை கிறிஸ்துவின் உடலென்றும், அவரே அவ்வுடலுக்குத் தலையாய் இருக்கிறார் என்றும் கூறுகிறார் (எபே 1:22-23) எவ்வாறு தலையிலிருந்து உடலைப்பிரிக்க இயலாதோ, அவ்வாறே தலையாகிய கிறிஸ்துவிடமிருந்து அவரது உடலா கிய திருச்சபையைப் பிரிக்க இயலாது. எனவே, நம் தலையாகிய கிறிஸ்து அடைந்த அதே விண்க மகிமையில் அவரது உடலாகிய நாமும் பங்கு பெறுவது. உறுதியாகிவிட்டது.

விண்ணகம் சென்ற கிறிஸ்து மீண்டும் மண்ணகம் திரும்புவார் என்று இன்றைய முதல் வாசகத்தில் வானதூதர்கள் சீடர்களுக்கு அறிவிக்கின்றனர் (திப 1:11). அவர் மீண்டும் வருவார் என்பது எவ்வளவு உறுதியானதோ, அவ்வளவு உறுதியற்றது அவர் எப்போது வருவார் என்பது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை அறியமுயல்வது ஆணவம் மட்டுமல்ல, இறை நிந்தையுமாகும். ஏனெனில், கடவுள் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது நமக்கு உரியது அல்ல (திப 1:7) என்று இயேசுவே குறிப்பிட்டுள்ளார்.

உலகின் முடிவைப் பற்றியும் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையைப் பற்றியும் கத்தோலிக்கத் திருச்சபை போதிய அளவு வலியுறுத்துவதில்லை என்று ஏனைய சபைகள் சுமத்தும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, ஏனெனில், ஒவ்வொரு திருப்பலியிலும் "நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும், எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும்
மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்" என்று திருச்சபை ஓயாது ஓதிக்கொண்டிருக்கிறது!

ஆடிமாதத்தில் பலத்த காற்று வீசுகிறது. ஏனென்றால், ஆடிமாதத்தில் புதிய தம்பதியர்களைப் பிரித்து விடுகின்றனர். அவ்வாறு பிரிக்கப்பட்ட தம்பதிகள் ஒருவர் மற்றவரை நினைத்து ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர். அவர்களுடைய ஏக்கப் பெருமூச்சு தான் பலத்த காற்றாக மாறிவிடுகிறதாம்!

திருச்சபை என்னும் மணமகளும் தனது மனமகனாகிய கிறிஸ்து எப்போது திரும்புவார் என்று எண்ணி எண்ணி ஏக்கப் பெருமூச்சு விடுகின்றது. தொடக்கக் காலக் கிறிஸ்துவர்கள் அடிக்கடி "மாரனாத்தா", அதாவது, "ஆண்டவரே வருக!" என்று கூவி அழைத்தனர் (1கொரி 16:22), விவிலியத்தின் இறுதிவாக்கியம்' "ஆண்டவராகிய இயேசுவே வாரும்" (திவெ 22:20)

தன் கணவர் தன்னை விட்டுப்பிரிந்து வீடு திரும்பிவராத நிலையில் "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிந்த கணவர் இன்னும் வீடு திரும்பலை." என்று சோகத்துடன் பாடும் மனைவியைப் போல் இராது, திருச்சபை தன்னிடம் கிறிஸ்து ஒப்படைத்துள்ள மீட்புப்பணியை முழு மூச்சுடன் ஆற்றிக் கொண்டிருக்கிறது.
இன்றைய நற்செய்தி உணர்த்தும் உண்மைகள் பின்வருமாறு:

1.விண்ணகம் செல்லுமுன் கிறிஸ்து, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவிக்கும் பொறுப்பைத் திருச்சபையிடம் ஒப்படைத்துள்ளார், கிறிஸ்துவே நற்செய்தியின் முதலும் முடிவுமாவார், ஒவ்வொரு சீடரும் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அறிவிக்கும் திருத்தூதராவார்.

2.முழு மனிதனையும் குணமாக்கும் பணி திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் சீடர்கள் பேய்களை ஒட்டலாம்; நோய்களைக் குணமாக்கலாம்; பயமின்றிப் பாம்பைக் கையால் பிடிக்கலாம்; கொடிய நஞ்சையும் அருந்தலாம், அதாவது, சீடர்களால் மேற்கொள்ள முடியாத தடைகளோ தீயசக்திகளோ இவ்வுலகில் எதுவுமில்லை .

3. திருச்சபை தனது மீட்புப் பணியில் தனித்து இயங்கவில்லை, கிறிஸ்துவே திருச்சபையில் உடனிருந்து செயலாற்றுகிறார். "ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழும் அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப் படுத்தினார்” (மாற் 16:20).

திருச்சபை எவ்வளவுக்கு விண்ணக வாழ்வை எதிர்பார்க்கிறதோ, அவ்வளவுக்கு இம்மண்ணக மாந்தரின் முன்னேற்றத்திற்காக அது உழைக்க அழைக்கப்பட்டுள்ளது. மண்ணசு நலன்களில் அக்கறை கொண்டு, விண்ணக நலன்களை விருப்பமுடன் நாடவேண்டும். "பாச்சி பாச்சி” என்று அழுத குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாததால் "பூச்சி பூச்சி" என்று சொல்லி அக்குழந்தையை ஏமாற்றியதுபோல், தாயாகிய திருச்சபை விண்ணக வாழ்வைச் சுட்டிக்காட்டிவிட்டு மண்ணக வாழ்வை இருட்டடிப்புச் செய்யக்கூடாது. "உமது அரசு வருக!

எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்." எனவே மண்ணக வாழ்வையும் விண்ணக வாழ்வையும் பிரிக்காமல் இரண்டையும் ஒருங்கிணைத்து வாழக் கற்றுக் கொள்வோமாக!


வாழும் போதே மறுமைக்கு வசதி செய்து கொள்வோம்
கல்லறைக்கு அப்பால்
அருள்பணி இ. லூர்துராஜ்

1917ம் ஆண்டு மே 13ம் நாள். நண்பகல் வேளை. போர்த்துக்கல் நாட்டில் ஃபாத்திமா என்ற சிற்றூருக்கருகில் லூசியா, ஜெசிந்தா என்ற இரு சிறுமிகளும் ஃபிரான்சிஸ் என்ற சிறுவனும் கண்ட காட்சி. உடல் எல்லாம் ஒளிக்கதிர் பாய, வார்த்தைக்கோ வருணனைக்கோ அடங்காத வனப்போடு தோன்றிய அந்த அழகுப் பெண்மணியிடம் - அன்னை மரியாவிடம் - அச்சிறுவருள் சற்று மூத்தவளான லூசியா உரையாடிக் கேட்ட கேள்விகளும் பெற்ற பதில்களும்:

''நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?''
"நான் மோட்சத்திலிருந்து வருகிறேன்''.
“உங்களுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?''
"தொடர்ந்து ஆறுமாதம் ஒவ்வொரு மாதமும் 13ம் நாள் இதே நேரம் இதே இடத்துக்கு வர வேண்டும் .
"நான் மோட்சத்துக்குப் போவேனா?"
"ஆம் நீ போவாய்" "ஜெசிந்தா?"
"அவளும் போவாள்"
"பிரான்சிஸ்?” “அவனும் போவான், ஆனால் அதற்கு முன் அவன் சிறிது ஆழமாக செபிக்க வேண்டும்”

இது நடந்து முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு திருப்பயணிகள் ஃபிரான்சிஸிடம் கேட்ட கேள்விகள்!
“தம்பி எதிர்காலத்தில் நீ என்ன செய்யப் போகிறாய்?” "தச்சுத் தொழிலில் ஈடுபாடா?" "இல்லை ''
"பட்டாளத்தில் பணியா?" "இல்லை". “மருத்துவ மேற்படிப்பா?" "இல்லை" "குருவாக ஆசையா?" "இல்லை "
"திருப்பலி நிறைவேற்ற, பாவ சங்கீர்த்தனம் கேட்க, கோவிலில் செபிக்க இதையெல்லாம் நீ விரும்பவில்லையா?"
''விரும்பவில்லை , குருவாக விருப்பமில்லை .” “அப்போ, நீ என்னதான் செய்யப் போகிறாய்?''
''நான் இறக்க வேண்டும். மோட்சத்துக்குப் போக வேண்டும்”.

அத்தனை சிறிய வயதில் அந்தப் பிஞ்சு மனதில் இத்தனை ஆசைகள் - விண்ணகம் செல்ல வேண்டும், கடவுளைச் சென்றடைய வேண்டும் என்று!

பிறந்த 40ஆம் நாள் ஆலயத்தில் அர்ப்பணம். அந்த அர்ப்பணம் நிறைவில் உயிர்த்த 40ஆம் நாள் ஒலிவமலையில் விண்ணேற்றம். இயேசு விண்ணேறிச் சென்றது இரண்டு காரணங்களுக்காக:

1. நமக்கென ஓர் உறைவிடத்தைத் தயார் செய்ய: “என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன... நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின், திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். (யோவான் 14:2,3). வாழ்க்கை என்பதே ஒரு பயணம். நாமெல்லாம் வழிப்போக்கர்கள், “ஏனெனில் நிலையான நகர் நமக்கு இங்கு இல்லை, வரப்போகும் நகரையே நாம் நாடிச் செல்கிறோம்” (எபி.13:14).

2, தந்தையிடம் நமக்காகப் பரிந்து பேச: "தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை, அவர் முற்றும் மீட்க வல்லவராய் இருக்கிறார். அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்” (எபி.7:25) “ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து (1 யோ .2:1).


நற்செய்தி ஊழியர் ஒருவர், 'இன்ன நாளில் இறப்பு' என்று எழுதுவதை விடுத்து இன்ன நாளில் விண்ணேற்பு' என்று கல்வெட்டில் பொறிப்பதில் தனி ஆறுதல் காண்பாராம். நம்பிக்கையாளருக்கு சாவு என்பது அறியாத உலகை நோக்கிய இருண்ட பயணம் அல்ல. மகிமைக்கான வாசல். நாம் சாகும் போது நம் உடல்தான் புதைக்கப் படுகிறது. ஆன்மா? அது விண்ணேறிச் செல்கிறது. அதனால்தான் பவுல் சொல்வார்: “நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம். இவ்வுடலை விட்டு அகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறேன். எனவே நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் அதிலிருந்து குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராய் இருப்பதே நம் நோக்கம்” (2 கொரி. 5:7-9)

விண்ணக வாழ்வுக்கான உரிமைப் பேற்றை திருமுழுக்கின் வழியாகவே பெற்றோம். நம் நன்மைத்தனத்தின் பொருட்டு அல்ல, இந்த அரிய பேற்றினை இறைவன் நமக்குக் கொடுத்தது அவரது எல்லையற்ற இரக்கத்தினால் மட்டுமே!

எப்படியாவது மோட்சத்துக்குச் சென்று விட முடிவெடுத்தான் ஒருவன். அதற்கான வழியைத் தேடி அலைந்தான். துறவு வாழ்வைத் தழுவினால் பேரின்ப வீட்டை அடைய முடியும் என்ற முடிவுக்கு வந்தான். துறவு வாழ்வு கடினமானது என்றனர் பலரும். இருப்பினும் துறவு வாழ்வைக் கடைப்பிடிக்க இயலாது என்று உணர்ந்தும் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்கிறான்: "நான் இப்போது துறவியாகி விட்டேன். இது மோட்சத்தில் ஒரு கால் வைத்து விட்டதற்குச் சமம். துறவு வாழ்வை என்னால் முற்றிலும் வாழ முடியா விட்டாலும், நான் மோட்சம் போவது உறுதி”.

இந்த மனிதனைப் போலவே நம்மில் பலர் இருக்கிறோம். திருமுழுக்குப் பெற்றதனாலேயே மோட்சத்திற்குப் பயணச்சீட்டு வாங்கி விட்டதாக நினைக்கிறோம். ஆனால் மாட்சி பெற்ற இயேசுவின் மனிதத் தன்மையோடு, நமது மனிதத் தன்மையும் ஐக்கியமாகவில்லையென்றால் நம் பயணச்சீட்டு செல்லாமல் போய்விடும்.

கங்கைக் கரையில் இருந்த அந்த அரசில் விந்தையான ஒரு வழக்கம். பட்டத்து யானை மாலை போட்டு அரசனைத் தேர்ந்தெடுக்கும். அவன் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்வான். பின் அவனை அக்கரையில் உள்ள காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவார்கள். அங்கே தன்னந்தனியாய் பட்டினி கிடந்து மடிய வேண்டியதுதான். ஐந்து ஆண்டுகள் ஆனந்த அனுபவம், முடிவில் அலறி அழுது புலம்புவது. வாடிக்கையாக நடப்பது இது.

ஆனால் ஒருமுறை அக்கரை செல்லப் படகேறிய அரசன் பாடிக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தான். அவனால் எப்படி ஆனந்தமாக இருக்க முடிகிறது என்று அமைச்சன் வியந்து கேட்டபோது "என்னோடு வந்து பார்" என்றான் அந்த முன்னாள் மன்னன். கூடச் சென்று பார்த்த போது அங்கே காடுகள் இல்லை, மாட மாளிகை, செல்வச் செழிப்பு! அரசனாக இருந்த போதே அவன் செய்து கொண்ட முன்னேற்பாடுகள்.

இம்மையில் இன்பம் துய்க்கும் போதே மறுமைக்கும் வசதி செய்து கொள்வது எவ்வளவு அறிவுடைமை!விண்ணேற்றம் - பின்புலங்களும், தடைகளும், புரிதல்களும்

அருள்பணி ஏசு கருணாநிதி மதுரை மறைமாவட்டம்


'ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர்,

பாவத்தையும் இறப்பையும் தோற்கடித்த வெற்றி வீரர்,

வானதூதர் வியப்புற வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார்.

இவ்வாறு அவர் சென்றது

எங்கள் தாழ்நிலையை விட்டு அகல வேண்டும் என்பதற்காக அன்று.

மாறாக, எங்கள் தலைவரும் முதல்வருமாகிய அவர்

முன்னரே சென்ற அவ்விடத்திற்கு

அவர் உறுப்பினர்களாகிய நாங்களும்

அவரைப் பின் தொடர்ந்து செல்வோம் என்று

நம்பிக்கை கொள்வதற்காகவே'

இன்றைய திருப்பலியின் தொடக்கவுரையில் (பழைய மொழிபெயர்ப்பு) நாம் காணும் தூய அகுஸ்தினாரின் இவ்வார்த்தைகள் இன்றைய நாளின் பொருளை மிக நேர்த்தியாக நமக்கு எடுத்துரைக்கின்றன.

இயேசுவின் விண்ணேற்றம் பற்றி இரண்டாம் ஏற்பாட்டில் நாம் மூன்று இடங்களில் வாசிக்கின்றோம்: மாற்கு 16:19-20, லூக்கா 24:50-53 மற்றும் திப 1:9-11. இதில் விநோதம் என்னவென்றால் விண்ணேற்றத்தின்போது உடனிருந்த சீடர்களான மத்தேயுவும், யோவானும் இந்த நிகழ்வை பதிவு செய்யாமலே விடுகின்றனர். மேலும், மாற்கு 16:9-20 இறைவாக்குப் பகுதியை (இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி) விவிலியத்தில் பார்த்தால் இந்தப் பகுதி அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும். காரணம், இது மாற்குவின் உண்மையான நற்செய்திப் பகுதியில் இல்லை. மாறாக, பின்னர் அவரது சீடர்கள் சேர்த்துக்கொண்ட பிரதியில்தான் இருக்கிறது. மத்தேயு நற்செய்தியாளர் ஏன் பதிவு செய்யவில்லை? என்ற கேள்விக்கு ஆய்வாளர்கள் சொல்லும் பதில் என்னவென்றால், 'கடவுள் நம்மோடு' என வந்த இயேசு எப்படி திரும்பிச் செல்ல முடியும்? அவர் என்றும் நம்மோடுதான் இருக்கிறார் என்று மத்தேயு இதன் வழியாக இயேசுவின் உடனிருப்பைச் சொல்கிறாராம் நமக்கு.

லூக்கா தன் நற்செய்தியிலும், தன் திருத்தூதர் பணிகள் நூலிலும் இந்த நிகழ்வை எழுதுகின்றார். ஆனால், இரண்டு இடங்களிலும் வௌ;வேறு விதமாக எழுதுகின்றார். விண்ணேற்றம் பெத்தானியாவில் நிகழ்வதாக நற்செய்தியில் எழுதும் லூக்கா, திருத்தூதர் பணிகள் நூலில் எருசலேமில் நிகழ்வதாக எழுதுகிறார். (மதுரைக்கும், தூத்துக்குடிக்குமான தூரம் இது!) நற்செய்தியில் இயேசு ஆசீ கூறுகின்றார். ஆனால், இங்கே பேசிக்கொண்டிருக்கிறார். அங்கே சீடர்கள் வணங்கிவிட்டு எருசலேம் திரும்புகிறார்கள். ஆனால் இங்கே வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மிக முக்கியமாக, அங்கே இயேசுவே விண்ணிற்கு ஏறிச்செல்கின்றார் (செய்வினை). ஆனால் இங்கே அவர் விண்ணிற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றார் (செயப்பாட்டுவினை).

இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட பதிவுகள் இருக்க இயேசு விண்ணேற்றம் அடைந்தாரா? என்ற கேள்வியும் எழுகின்றது.

இயேசுவின் விண்ணேற்றம் ஒரு வரலாற்று நிகழ்வு என்று சொல்வதை விட இறையியல் நிகழ்வு என்றே நான் சொல்வேன். லாஜிக் இதுதான்! கீழே வந்த இயேசு, மேலே ஏறிச்செல்ல வேண்டும். அவர் இறக்க முடியாது. ஏன்னா அவர் கடவுள். இங்கேயே இருக்கவும் முடியாது. ஏன்னா, வர்ற யாரும் இங்கே நிரந்தரமாகத் தங்கிவிடமுடியாதுதானே. ஆக, இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட ஒன்றுதான் விண்ணேற்றம்.

முதல் ஏற்பாட்டில் முதன்முதலாக விண்ணேற்றம் அடைந்தவர் ஏனோக்கு என்றாலும் (தொநூ 5:24), தொடர்ந்து வந்த மோசே (இச 34) மற்றும் எலியா (2 அரச 2:2) தான் விண்ணேற்றம் அடைந்தவர்கள் எனச் சொல்லப்படுகின்றனர். மோசேயின் இறப்பு பற்றியும், அவருடைய கல்லறை எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது என்றும் இச 34 சொன்னாலும், அவர் விண்ணேற்றம் அடைந்ததாகவே இரபிக்களின் நூல்கள் சொல்கின்றன. ஆக, இயேசுவின் உருமாற்ற நிகழ்வின்போது அவருடன் உடனிருந்த மோசே மற்றும் எலியாவைப்போலவே இயேசுவும் விண்ணேற்றம் அடைந்துவிட்டார் என இயேசுவை புதிய மோசேவா, புதிய எலியாவாக முன்வைக்கின்றார் லூக்கா.

ஆக, விண்ணேற்றம் இயேசுவுக்கு தேவைப்பட்டதோ இல்லையோ, இயேசுவின் சீடர்களுக்கும், அவரைத் தொடர்ந்து வந்த திருச்சபைக்கும் தேவைப்பட்டது. இன்னும் தேவைப்படுகிறது.

விண்ணேற்றம் பற்றிய புரிதலுக்கு மூன்று பின்புலங்கள் தேவை:

பின்புலம் 1: இருதுருவ சிந்தனை

ஒளி-இருள், பகல்-இரவு, நன்மை-தீமை என இருதுருவ சிந்தனைக்குப் பழக்கப்பட்டது மனித மனம். இந்த இருதுருவ சிந்தனையின் படி, இறங்கி வரும் யாரும் ஏறிச் செல்ல வேண்டும். ஆக, இறங்குதல்-ஏறுதல் அவசியம். இயேசு, கடவுளின் மகன், பிறந்து, இறங்கி வந்தார் என்றால், அவர் இறந்து, ஏறிச் செல்ல வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை வட்டம் முழுமை அடையும்.

பின்புலம் 2: அடுக்கு உலக சிந்தனை

கிரேக்க சிந்தனையாளர் பிளேட்டோ தொடங்கி காலங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது 'அடுக்கு உலகம்.' அது என்ன அடுக்கு உலகம்? இந்த உலகத்தில் மூன்று அடுக்குகள் உள்ளன. மேல் அடுக்கு வானம், நடு அடுக்கு பூமி, கீழ் அடுக்கு பாதாளம். கடவுளர்கள், குட்டிக் கடவுளர்கள், தூதர்கள் ஆகியோரின் உறைவிடம் மேல் அடுக்கு. தீயவர்கள், கொடியவர்கள், தீமை இவர்களின் உறைவிடம் கீழ் அடுக்கு. இந்த இரண்டிற்கு நடுவில் உள்ள அடுக்கில் இருப்பவர்கள் இரண்டு பண்புகளையும் தங்களுக்குள் கொண்டிருப்பவர்கள். ஆனால் இந்த அடுக்கு ஒரு நிழல் அடுக்கு. இங்கு காணும் எல்லாம் மேல் மற்றும் கீழ் அடுக்குகளின் ஜெராக்ஸ் பிரதிகள். மேல் அடுக்கிலிருந்து நடு அடுக்கிற்கு வந்த இயேசு, தன் இறப்பால் கீழ் அடுக்கையும் சந்தித்துவிட்டு, மீண்டும் மேல் அடுக்கிற்கு ஏறிச் செல்கின்றார். நடு அல்லது கீழ் அடுக்கு அவரைத் தன்னகத்தே வைத்துக்கொள்ள இயலாது. ஏனெனில் அவர் மேலடுக்கைச் சார்ந்தவர்.

பின்புலம் 3: மறைதல்-நிறைதல் சிந்தனை

மருத்துவத்தின் முக்கியமான கூறு 'மறைதல்-நிறைதல்.' புரியலையா? நமக்கு வரும் நோய்களுக்கு காரணம் என்ன? 'இருக்க வேண்டிய ஒன்று மறைந்தால்' (எ.கா. இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல்) 'இருக்கக் கூடாத ஒன்று நிறைந்தால்' (எ.கா. இரத்தத்தில் சர்க்கரை நிறைதல்) அது நோய். மருத்துவரின் பணி என்ன? 'குறையை நிறைவு செய்வது,' 'நிறைதலை கரைத்துக் குறைப்பது.' அதிகம் மறைந்தாலும் ஆபத்து. அதிகம் நிறைந்தாலும் ஆபத்து. இயேசு மறைய வேண்டும். சீடர்கள் நிறைய வேண்டும். ஆனால், இயேசுவும் முழுமையாக மறைந்துவிடக் கூடாது. சீடர்களும் முழுமையாக நிறைந்துவிடக் கூடாது. இந்த இரண்டையும் சமன்படுத்த தேவை விண்ணேற்றம்.

ஒரு சின்ன அறையில் லேன் நெட்வொர்க் கனெக்ஷன் வழியாக இயேசுவை சீடர்களோடு இணைத்து வைத்திருந்த நற்செய்தியாளர்கள், அவரை அப்படியே தூக்கி உயரமான ஒரு வைஃபை ரவுட்டராக மாற்றிவிடுகின்றார். இப்போது இயேசுவோடு யாரும் தங்களை இணைத்துக் கொள்ள முடியும். தேவையானதெல்லாம் 'நம்பிக்கை' என்ற ஐந்தெழுத்து பாஸ்கோட் மட்டுமே.

இந்த மூன்றும் விண்ணேற்றம் என்பதைப் புரிந்து கொள்ள நமக்குப் பின்புலமாக இருந்தாலும், விண்ணேற்றத்தை ஏற்றுக்கொள்ளவும், நம்பவும், புரிந்து கொள்ளவும் மூன்று கூறுகள் தடைகளாக நிற்கின்றன:

தடை 1: இயேசுவின் உடல்

மனித உடல் அல்லது உரு ஏற்றதால் இயேசு பிறந்தார். வளர்ந்தார். சாப்பிட்டார். காணாமல் போனார். கிடைத்தார். நடந்தார். பேசினார். சிரித்தார். அழுதார். இறந்தார். எப்படியோ உயிர்த்தும் விட்டார். உயிர்த்தவர் வெறும் ஆவியாக வராமல் உடலோடு வந்தார். சீடர்களுக்குத் தோன்றினார். தன் உடலைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார். சாப்பிட்டார். வழிநடந்தார். அப்பம் பிட்டார். இதுவரைக்கும் சரி. ஆனால், விண்ணேற்றம் அடையும்போது அவர் உடலோடு மேலே சென்றாரா? ஆம் என்று சொல்கிறது எருசலேம் விண்ணேற்ற ஆலயம். அங்கே இயேசுவின் இரண்டு அகன்ற பாதத்தடங்கள் இருக்கின்றன. ஒரு ராக்கெட் மேலெழும்பி செல்வதுபோல, புவிஈர்ப்பு விசையை வென்று, புவிஈர்ப்பு மண்டலத்தைக் கடந்து அவர் மேலே சென்றிருக்க வேண்டும். சரி போய்விட்டார். ஆனால், மனித உடலை வைத்து அவர் அங்கே என்ன செய்வார்? தந்தைக்கு உடல் இல்லை. தூய ஆவியானவருக்கு உடல் இல்லை. இவருக்கு மட்டும் உடல் இருக்குமா? இன்னும் அந்த உடலில் காயங்கள் இருக்குமா? (இருக்க வேண்டும் - ஏனெனில் மாறாதவராக இருந்தால்தானே அவர் கடவுள்!) உடல் என்று ஒன்று இருந்தால் உடை என்ற ஒன்றும் இருக்க வேண்டும். உடை இல்லாத மனித உடலை அதுவும் கடவுள்-மனிதனின் உடலை நாம் நினைத்துப் பார்க்கவும் முடியுமா? மாற்று உடைக்கு இயேசு என்ன செய்வார்? அல்லது பாதி வழி சென்ற இயேசுவின் உடல் மறைந்து ஆவியாக மாறிவிட்டதா? மனித உடலோடு இயேசு சென்றார் என்று நாம் சொல்வதே, மற்ற விலங்குகள், பறவைகள், தாவரங்களின் உடலுக்கு நாம் இழைக்கும் தீங்கு இல்லையா? மனித உடலே சிறந்தது என ஹோமோ ஸேபியன்ஸ் ஸேபியன்ஸ் தற்பெருமை கொள்வது முறையா? இவ்வாறாக, இயேசுவின் உடல் அவரின் விண்ணேற்றத்தை நாம் புரிந்து கொள்ள தடையாக இருக்கிறது.

தடை 2: காலம்-இடம்; கூறு

மாற்கு நற்செய்தியாளர் இயேசுவின் விண்ணேற்றம் பற்றி எழுதும்போது, 'இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்' (16:19) என எழுதிவிட்டு, உடனே, 'ஆண்டவரும் திருத்தூதர்களோடு உடனிருந்தார்' (16:20) என முரண்படுகின்றார். காலத்தையும், இடத்தையும் கடந்து கடவுளோடு வலப்புறம் அமர்ந்திருக்கும் ஒருவர், காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்ட திருத்தூதர்களோடு எப்படி உடனிருக்க முடியும்? உண்மையாகவே உடனிருந்தாரா? அல்லது உடனிருப்பு என்பது திருத்தூதர்களின் ஒரு உள்ளுணர்வு போல இருந்ததா? அதாவது, இறந்து போன என் அப்பா என்னுடன் இருக்கிறார் என்று நான் சொல்கிறேன் என்றால், 'என் கம்ப்யூட்டர் என்னுடன் இருக்கிறது' என்பது போன்ற 'இருப்பு' அல்ல அது. மாறாக, அது ஒரு உள்ளுணர்வு. ஆக, காலமும்-இடமும் இயேசுவின் உடலை ஒட்டிய இரண்டாம் தடை.

தடை 3: பார்த்தவர்கள் எழுதவில்லை, எழுதியவர்கள் பார்க்கவில்லை

இயேசுவின் விண்ணேற்றம் பற்றி மாற்கும், லூக்காவும் மட்டுமே எழுதுகின்றனர். மத்தேயுவின் இயேசு இம்மானுவேலன் ('கடவுள் நம்மோடு') என்பதால், மத்தேயு இயேசுவை நம்மோடு தங்க வைத்து விடுகிறார். மத்தேயுவின் இயேசு விண்ணேற்றம் அடைவதில்லை (காண். மத் 28:20). விண்ணேற்றத்தைப் பார்த்த திருத்தூதரும் நற்செய்தியாளரும் இயேசு அன்பு செய்த சீடருமான யோவான் இந்த மாபெரும் நிகழ்வு குறித்து மௌனம் காக்கின்றார். 'பிள்ளைகளே சாப்பிட வாருங்கள்' என்று இயேசு அழைத்தார் என சின்ன சின்ன உரையாடலையும் பதிவு செய்த யோவான் இதைப் பற்றி ஏன் எழுதவில்லை? அல்லது இயேசு விண்ணேறிச் செல்லவில்லையா? மேலும், இந்த நிகழ்வை தன் நற்செய்தியிலும் (24:50-53), தன் திருத்தூதர் பணிகளிலும் (1:6-11) பதிவு செய்யும் லூக்கா, இந்த நிகழ்வு நடந்த நேரத்தை முரண்டுபட்டு எழுதுகின்றார்: இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப்பு நாள் அன்று நடந்ததாக நற்செய்தியிலும் (24:51), நாற்பது நாட்களுக்குப் பின் நடந்ததாக திருத்தூதர் பணிகளிலும் (1:9-11) எழுதுகின்றார்.

இந்தத் தடைகளை ஒட்டி ஒரு வார்த்தைச் சிக்கலும் இருக்கிறது: 'விண்ணேற்றமா?' (செய்வினை) அல்லது 'விண்ணேற்பா?' (செயப்பாட்டுவினை)

முதல் ஏற்பாட்டில் ஏனோக்கு (தொநூ 5:24) மற்றும் இறைவாக்கினர் எலியாவும் (2 அர 2:2), இரண்டாம் ஏற்பாட்டில் இயேசுவும் விண்ணேற்றம் அடைந்தனர் என்றும், திருத்தந்தை 12ஆம் பயஸ் அவர்களின் 1950 நவம்பர் 1 பிரகடனத்தின்படி அன்னை மரியாள் விண்ணேற்பு அடைந்தார் என்றும் கூறுகின்றோம். இங்கே 'விண்ணேற்றம்' என்பது செய்வினை. 'விண்ணேற்பு' என்பது செயப்பாட்டுவினை. விண்ணேற்றம் அடைந்தவர்கள் தாங்களாகவே, தங்களின் ஆற்றலால் ஏறிச் செல்கின்றனர். இவர்களுக்கு மற்றவர்களின் துணை தேவையில்லை. ஆனால் மரியாவோ கடவுளால் அல்லது தூதர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றார். அவர் ஏறிச் செல்ல மற்றவர்களின் துணை தேவைப்படுகிறது. முன்னவர்கள் ஆண்கள் என்பதால் தாங்களாகவே ஏறிச்சென்றார்களோ? ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்த வார்த்தை மாற்றங்களோ? தெரியவில்லை!

ஆனால், லூக்கா நற்செய்தியில் 'அனாஃபெரோ' என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும் ('அனஃபெரெட்டோ'), திருத்தூதர் பணிகளில் 'எபைரோ' என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும் ('எபெர்தெ') உள்ளது. மேலும், ஒரே நிகழ்வைக் குறிக்க லூக்கா வௌ;வேறு வினைச்சொற்களைப் பயன்படுத்துவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகளை நாம் உள்ளபடி மொழிபெயர்த்தால், 'அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்' என்றும் 'அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார்' என்றும் சொல்ல வேண்டும். ஆக, 'இயேசு விண்ணேற்றம் அடைந்தார்' என்பது நம் புரிதலுக்கான மொழிபெயர்ப்பே அன்றி, பாட மொழிபெயர்ப்பு அல்ல.

இவ்வளவு தடைகளும், மொழியியல் சிக்கல்களும் இருக்க, இயேசுவின் விண்ணேற்றத்தை எப்படி புரிந்து கொள்வது?

கேள்வியை மாற்றிக் கேட்டால், பிரச்சினை தீர்ந்துவிடும்.

எப்படி விண்ணேற்பு? என்று கேட்பதை விடுத்து, ஏன் விண்ணேற்பு? என்று கேட்டால் விண்ணேற்பின் பொருள் தெரிந்துவிடும்.

விண்ணேற்றம் இயேசுவின் வாழ்வில் மூன்று நிலைகளில் அர்த்தம் பெறுகின்றது:

1. தன் மண்ணக பணிவாழ்வு முடிந்து, இன்று தன் தந்தையின் இல்லம் திரும்புகின்றார் (காண். பிலி 2:3-6).

2. தன் சீடர்களிடம் தன் பணியை ஒப்புவிக்கின்றார். தன் இறையரசுப் பணியைத் தொடர்ந்தாற்ற அவர்களுக்குக் கட்டளையிடுகின்றார். விண்ணேற்றம் ஒரு பிரியாவிடை நிகழ்வு. விவிலியத்தில் உள்ள பிரியாவிடை நிகழ்வுகளில் மூன்று மட்டுமே மிக நீளமானவை: இஸ்ரயேலின் குலமுதல்வர் யாக்கோபு (தொநூ 49-50), திருச்சட்டம் வழங்கிய மோசே (இச 33-34), புதிய இஸ்ரயேலின் நம்பிக்கை மற்றும் திருச்சட்டத்தின் நிறைவாம் இயேசு (திப 1:1-11). இந்த மூன்று பிரியாவிடைகளும் நான்கு கூறுகளைக் கொண்டுள்ளன: அ) ஆசியுரை, ஆ) பிரிவு, இ) பார்த்தவர்களின் பதில் மற்றும் ஈ) கீழ்ப்படிதல் அறிக்கை. இயேசு கைகளை உயர்த்தி ஆசீர் அளிக்கும் நிகழ்வும் முதல் ஏற்பாட்டு நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே அமைகின்றது (லேவி 9:22, சீஞா 50:20-21). ஆசியளித்தல் தரும் மகிழ்ச்சி லூக்கா நற்செய்தியின் முதல் மற்றும் இறுதி நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது (1:56, 2:20,43,45, 24:9,33, 8:13, 15:7,10). இயேசுவின் சீடர்கள் மகிழ்ச்சியோடு ஆலயம் திரும்பி இறைவனைப் புகழ்கின்றனர்.

3. துணையாளராம் தூய ஆவியானவரை அவர்கள்மேல் அனுப்புவதாக வாக்குறுதி தருகின்றார் (திப 1:4-5).

இயேசுவின் உயிர்ப்பைப் போலவே, அவரின் விண்ணேற்றமும் ஒரு நம்பிக்கையின் மறைபொருளே. 'நம்பிக்கை' என்ற இந்த ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டால், இந்த நிகழ்விற்கும் நமக்கும் தொடர்பே இல்லை. 'விண்ணேற்றம் என்னும் நம்பிக்கையை' நாம் எப்படி வாழ்வாக்குவது? விண்ணேற்றம் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?

பாடம் 1: மறைதலும் மலர்தலும் இறைமை

இயேசுவை மனிதனாக்க அவருக்கு மனுவுருவாதல் தேவைப்பட்டதுபோல, அவரை இறைவனாக்க அவருக்கு விண்ணேற்றம் தேவை. 'தேவை' என்பதால் இவை உருவாக்கப்பட்டவை என்று பொருள் கொள்ளக் கூடாது. மறைந்திருக்கும் வரைதான் அவன் பெயர் மறையவன் அல்லது இறைவன். ஆகையால்தான் இறைவனைப் பற்றிய அறிவை மறை-கல்வி என்கிறோம். தெரிந்துவிட்டால் அவர் இறைவன் அல்ல. கண்களுக்குத் தெரியாததால் அவர் இல்லை என்பதும் அல்ல. கண்களுக்குத் தெரியக்கூடியவை எல்லாம் மாறக்கூடியவை. மாறாதவைகள் கண்களுக்குப் புலனாவதில்லை. நம் உடலின் கண்களை மறைக்கும் அளவுக்கு நம் கன்னம் வீங்கிவிட்டது என வைத்துக்கொள்வோம். நம்மால் எதையும் பார்க்க முடியாது. என்னால் பார்க்க முடியவில்லை என்பதற்காக என் முன் இருப்பவை எல்லாம், இல்லாதவை என ஆகிவிடுமா? ஒருபோதும் இல்லை. 'ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம். ஆனால் அப்போது நேரில் காண்போம்' (1 கொரி 13:12).  இயேசு விண்ணேற்றத்தின்போதுதான் இறைவனாகின்றார். மறையும்போதுதான் இறைவனாகின்றார். மறைந்த இயேசு மீண்டும் மலர்கின்றார். எப்படி? 'ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்து அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்' (மாற் 16:20) என பதிவு செய்கின்றார் மாற்கு. இவ்வாறாக, வாய்ச்சொல்லாக இருந்தவற்றிற்கு ஒரு பிணைப்பத்திரமாக மலர்கிறது இயேசுவின் உடனிருப்பு. விண்ணேற்றம் அடைந்து மறைந்த இறைமை திருத்தூதர்கள் வாழ்வில் உடனிருப்பாக மலர்கிறது.

பாடம் 2: சீடர்களின் பணி

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன் சீடர்களின் பணி என இயேசு குறிப்பிடுவது ஒன்றே ஒன்று: 'நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.' 'நற்செய்தி' என்ற வார்த்தைக்கான வரைமுறையை 'இயேசுகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்' (1:1) என்று பதிவு செய்து, இந்த வசனத்திற்குப் பின் வரும் அனைத்துமே நற்செய்தி என்கிறார் மாற்கு. ஆக, நற்செய்தி அறிவிப்பு என்பது இNயுசுவின் வரலாற்ற உடனிருப்பையும், செயல்பாடுகளையும் மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது. தொடர்ஓட்டத்தில் ஒரு வீரரின் கையிலிருந்து மற்ற வீரரின் கைக்கு மாறும் குச்சியைப்போல, ஒலிம்பிக் தீப ஓட்டத்தில் ஒருவரின் கையிலிருந்து அடுத்தவரின் கைக்கு மாறும் தீபம் போல விண்ணரசுப் பணி இயேசுவின் கையிலிருந்து இன்று நம் கைக்கு மாறுகின்றது. எந்த அளவிற்கு இது ஒரு கொடையோ, அந்த அளவிற்கு இது ஒரு கடமை. 'விளையாட்டு வீரர் எவரும் விதிமுறைகளுக்குட்பட்டு விளையாடினால் மட்டுமே வெற்றிவாகை சூட முடியும' (2 திமொ 2:5)

பாடம் 3: எதிர்நோக்கு

'அவர் மீண்டும் வருவார்' (திப 1:11) என்ற வார்த்தைகள்தாம் நாம் காத்திருப்பதற்கான எதிர்நோக்கை நமக்குத் தருகின்றன. எதிர்நோக்கில் தயக்கம் அறவே கூடாது (எபி 10:23). நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் உந்தித் தள்வது எதிர்நோக்கே. காலையில் எழுவோம் என்ற எதிர்நோக்கு இருப்பதால் தான் இரவு தூங்கச் செல்லுமுன் 'வேக்அப் கால்' வைக்கின்றோம். படிப்பது, பயணம் செய்வது, வேலை தேடுவது, தேடிய வேலையில் சம்பாதிப்பது, திருமணம் முடிப்பது, அருள்நிலை வாக்குறுதி கொடுப்பது என எல்லா வாழ்க்கை நிகழ்வுகளிலும், நிழல்களிலும் எதிர்நோக்கி இழையோடியிருக்கின்றது. இந்த எதிர்நோக்குகளுக்கெல்லாம் தாயாக இருப்பது, 'அவர் மீண்டும் வருவார்' என்ற எதிர்நோக்கும், 'நாமும் அங்கு செல்வோம்' என்ற எதிர்நோக்கும்தான். வெறும் மண்ணோடு மண்ணாக முடியப்போகும் வாழ்க்கைக்கா நாம் இவ்வளவு மெனக்கெடுகிறோம்? நாம் மண்ணைச் சார்ந்தவர்கள் அல்லர். விண்ணைச் சார்ந்தவர்கள். ஆக, எதிர்நோக்கு என்னும் விளக்கு எந்நேரமும் எரிந்துகொண்டிருக்கட்டும். மேலும், நாம் விண்ணைச் சார்ந்தவர்கள் என்பதால் நம் எண்ணங்களும் உயர்ந்த எண்ணங்களாகவே இருக்கட்டும் (காண். கொலோ 3:1).

பாடம் 4: அண்ணாந்து பார்க்காதீங்க!

'கலிலேயரே, ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்?' (திப 1:11) என்ற கேள்வி நம்மைப் பார்த்தும் கேட்கப்படுகிறது. அண்ணாந்து பார்க்கும் ஆன்மீகம் வேண்டாம். குனிந்து வாழ்வைப் பார்க்கும் ஆன்மீகம் அவசியம். 'அவர் வருகிறார்!' என்பதற்காக அவரைத் தேடி வீட்டைவிட்டு ஓட வேண்டாம். அண்ணாந்து பார்க்க வேண்டாம். சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து சாப்பிடுங்கள். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்களா. தொடர்ந்து செய்யுங்கள். பஸ்ஸில் இருக்கிறீர்களா, தொடர்ந்து பயணம் செய்யுங்கள். ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறீர்களா, தொடர்ந்து நில்லுங்கள். நோயுற்ற ஒரு நபரோடு மருத்துவமனையில் பேசிக்கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பேசுங்கள். டிவி பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பாருங்கள். விளையாடிக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து விளையாடுங்கள். ஏனெனில், அவர் இவற்றிலும் வருகின்றார். எல்லாவற்றிலும் அவரால் வர முடியும்.

பாடம் 5: புறப்பட்டுச் செல்தல்

இயேசுவின் பிரிவை அனுபவிக்கும் சீடர்களின் முதல் உணர்வு 'அடுத்து என்ன?' என்பதுதான். நடந்தவற்றை திறனாய்வு செய்துகொண்டோ, அல்லது 'அவர் இன்னும் இங்கே இருந்திருக்கலாம்' என்று புலம்பிக்கொண்டோ இருக்கவில்லை. உடனே புறப்டுகின்றனர். 'அழுதுகிட்டே இருந்தாலும் உழுதுகிட்டே இருக்கணும்' என்பது கிராமத்துச் சொலவடை. அழுகை நம் பசி தீர்க்குமா? உழுதல்தான் தீர்க்கும். இவ்வாறாக, நம் அன்றாட வாழ்வில் நாம் பிறர்நோக்கிப் புறப்பட்டுச்சென்று நம்பிக்கையின் விதையை விதைக்க நம்மை அழைக்கிறார் இயேசு.

'நம்மேல் கொண்ட பரிவினால் அவர் விண்ணிலிருந்து இறங்கி வந்தார்.

இன்று அவர் தனியே விண்ணேறிச் சென்றாலும், அவரோடு நாமும் உடன் செல்கிறோம்.

ஏனெனில் அருளால் நாமும் அவரோடு இணைந்துள்ளோம்!' (தூய அகுஸ்தினார்)

விண்ணேற்றப் பெருநாள் வாழ்த்துக்களும், செபங்களும்!


No comments:

Post a Comment